இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மகாபாரதம் - 2

Mahabharata is one of the two major Sanskrit epics of ancient India, the other being the Ramayana. The Mahabharata is an extensive and complex narrative that encompasses mythology, history, philosophy, and religion, offering deep insights into human nature, morality, and dharma (righteousness).


அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இருளில் பிறந்ததால் அது கரிய நிறமுடையதாகக் காணப்பட்டது. அந்தக் குழந்தை தான் வியாசன். பிறக்கும் போதே அவனுக்கு ஜடாமுடி இருந்தது. பிறக்கும் போதே அவன் என்னிடம் பேசினான். அம்மா! நீ மீண்டும் கற்பு நிலையை அடையப் போகிறாய். அப்படியிருக்க நான் உன்னோடு இருக்க இயலாது. நான் தவம் முதலானவை இயற்றிக் கொண்டு கானகங்களில் வசிப்பேன். நீ எப்போது என்னை நினைக்கிறாயோ அப்போது உன் முன் தோன்றுவேன். உனக்கு ஏதேனும் சிரமமான சூழ்நிலைகள் வந்தால், என்னை அழை! என்று சொல்லி விட்டு மறைந்து விட்டான்.

இன்று அவன் பெரியவனாக இருப்பான். அவனை நான் வரவழைக்கிறேன். அம்பிகா, அம்பாலிகாவுக்கு அவன் அத்தான் முறை ஆகிறது. முறை பிறழாமல், அரச தர்மத்தை மீறாமல், அவர்களை குழந்தை பெறச் செய்வோம், என்றாள் யோஜனகந்தி. பீஷ்மர் மகிழ்ந்தார். தாயே! இறைவன் யாரையும் கைவிடுவதில்லை. ஒரு பாதை அடைபட்டால், இன்னொரு பாதையைத் திறந்து விடுவான் என்பது இதுதான் போலும். கவலையை விடுங்கள்! நீங்கள் வியாச மாமுனிவரை அழையுங்கள். நம் கவலை நீங்கும், என்றார். யோஜனகந்தி அந்தக் கணமே, மகனே வியாசா, வா என் செல்வமே, என்றாள். மிகப்பெரிய ஜடாமுடி தரையில் புரள, கன்னங்கரிய நிறத்துடன், ஆஜானுபாகுவான ஒரு உருவம் அவள் முன்னால் வந்தது. என்னைப் பெற்றவளே, வணக்கம்.

உத்தரவிடுங்கள் தாயே! கட்டளைக்கு காத்திருக்கிறேன், என்று சாஷ்டாங்கமாக அன்னையின் பாதத்தில் விழுந்தது அந்த உருவம். ஆம்... வியாசர் வந்து விட்டார். மகனை அள்ளியணைத்து உச்சி முகர்ந்தாள் யோஜனகந்தி. மகனே! என் நிலையை நீ அறிவாய். முக்காலமும் உணர்ந்த உனக்கு, எல்லாம் தெரிந்த உனக்கு எதையும் சொல்ல வேண்டியதில்லை. இந்த நாட்டுக்கு வாரிசு வேண்டும். பீஷ்மனால் வாரிசுகளைத் தர இயலாத நிலையில் நீ தான் அம்பிகா, அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகளைப் பெற்று தர வேண்டும், என்றாள். தாய் சொல்லைத் தட்டவில்லை வியாசர். அம்பிகா, அம்பாலிகாவிடமும் நிலைமையை எடுத்துச் சொல்லி, வியாசருடன் மகிழ்ந்திருக்க சம்மதம் பெற்றாள் யோஜனகந்தி. அன்றிரவில், அம்பிகையும், அம்பாலிகாவும் பஞ்சணையில் படுத்திருக்க வியாசர் உள்ளே நுழைந்தார்.

அவ்வளவு நேரமும் அவரைப் பார்க்காத அந்தப் பெண்கள் அதிர்ந்து விட்டனர். வியாசர் என்றால் செக்கச்சிவந்த கோவைப்பழமாக இருப்பார் என நினைத்தோம். குறைந்த பட்சம் ஒரு இளமைத் தோற்றமாவது இருக்கும் என நினைத்தோம். இதென்ன ஜடாமுடியும், தாடியுமாய்... ஐயோ! சுந்தரன் ஒருவன் வருவான் என பார்த்தால், கோரத்தின் சொரூபமாய் ஒருவன் வருகிறானே. வியாசர் அம்பிகாவை நெருங்கினார். அவளை அள்ளி அணைத்தார். அவளோ அவரது உருவத்தைக் காண சகியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள். வேண்டா வெறுப்பாக தன்னை அவரிடம் ஒப்படைத்தாள். அடுத்து அம்பாலிகா விடம் சென்றார் வியாசர். அவளோ பயத்தில் வியர்த்து விறுவிறுத்தாள். உடலில் உள்ள ரத்தமெல்லாம் வற்றி வெளுத்து விட்டது.

அந்த நிமிடமே அவர்கள் குழந்தைகளைப் பெற்றனர். ரிஷிகளுக்கு உடனடியாக குழந்தைகளைக் கொடுக்கும் சக்தி உண்டு என்கின்றன நமது இதிகாசங்களும், புராணங்களும். கந்த புராணத்தில் காஷ்யப முனிவர் அசுரக் குழந்தைகளை உடனுக்குடன் உருவாக்கியதாக தகவல் இருக்கிறது. மகாபாரதத்தில் வியாசர் பிறந்ததும் அப்படியே. அதுபோல், இப்போதும் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். குழந்தைகளை ஆசையோடு எடுத்தார் வியாசர். அந்தக் குழந்தையை அசைக்கவே அவ்வளவு கஷ்டமாக இருந்தது. பத்தாயிரம் யானைகளை ஒரு சேர தூக்க முடியுமா? அவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தது அந்தக் குழந்தை. அதன் கண்களைப் பார்த்த வியாசர், இது பார்வையில்லாமல் பிறந்திருக்கிறதே, பிறந்தும் பயனில்லையே. இந்தக் குழந்தையால் எப்படி நாடாள முடியும்? என்றவராய், அம்பாலிகாவின் குழந்தையைப் பார்த்தார். அதன் முகம் வெளுத்துப் போயிருந்தது. மற்றபடி குறைகள் ஏதுமில்லை.

இதனால் ஆறுதலுடன் வெளியே வந்து, யோஜனகந்தியிடம் நடந்ததை விவரித்தார். பீஷ்மர் தன் தாயிடம், அம்மா! நாடாள நல்லதொரு புத்திரன் வேண்டும். இன்னொரு முறை முயற்சித்துப் பார்ப்போம், என்றார். மூத்தவள் அம்பிகாவுக்கு பார்வையற்ற பிள்ளை பிறந்துள்ளதால், நல்ல குழந்தைக்காக அவளையே அனுப்பி வைக்க எண்ணினர். அவளும் சம்மதிப்பது போல நடித்தாள். ஆனால், துறவியைப் போல் கோரமாய் தோற்றமளிக்கும் இவனுடன் இன்னொரு முறை செல்வதா என வெறுப்படைந்து, தன்னைப் போலவே அலங்கரித்து தன் தோழிப் பெண் மாதுரியை அனுப்பிவிட்டாள். இருளில் அவளை வியாசர் அடையாளம் காணவில்லை. ஒருவேளை அவருக்கே இது தெரிந்திருந்தாலும் கூட, எது விதிக்கப்பட்டதோ அதன்படியே நடந்து கொண்டார். அவள் அந்த மகானை அடைவதை தன் பாக்கியமாகக் கருதி, நல்ல மனநிலையுடன் தன்னை ஒப்படைத்தாள். அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பேரழகுடன் விளங்கினான்.

வியாசரைப் போல் கருப்பாக இல்லாமல், தாயைப்போல் சிவப்பாய் இருந்தான். தாம்பத்ய வாழ்க்கையில் மனமொத்த நிலை வேண்டும். சண்டை போட்டுக் கொண்டோ, குடித்து விட்டோ, விருப்பமில்லாமலோ, இருவரில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் கட்டாயத்துக்காகவோ உறவு கொண்டால், பிறக்கும் குழந்தைகள் உருவத்திலும், குணத்திலும் மாறுபாடு கொண்டதாக இருக்கும். கெட்ட குணமுடையவர்களை உருவாக்குவதே பெற்றவர்கள் தான்.வியாசர் விடை பெற்றார். மீண்டும் தன் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறு தாயிடம் வேண்டினார். முதல் குழந்தைக்கு திருதராஷ்டிரன், அடுத்த குழந்தைக்கு பாண்டு, மூன்றாவது குழந்தைக்கு விதுரன் என பெயர் சூட்டினர்.

குழந்தைகள் மூவரும் இளமைப்பருவம் எய்தினர். திருதராஷ்டிரன் பார்வையற்றவன் என்றாலும் கூட, மூத்தவனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அஸ்தினாபுரத்தின் மன்னர் பதவி வழங்கப்பட்டது. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார் பீஷ்மர். திருதராஷ்டிரனுக்காக காந்தார தேசத்துக்கு சென்றார் பெண் பார்த்தார் பீஷ்மர். அந்நாட்டு மன்னன் சுபலன். அவனுக்கு பீஷ்மர் குடும்பத்தில் பெண் கொடுக்க வேண்டும் என்றால் கசக்கவா செய்யும்? தன் மகள் காந்தாரியை அழைத்தான். அழகுப்பதுமையான அவள் தந்தை முன் வந்து நின்றாள்.

அம்மா! பீஷ்மர் வந்திருக்கிறார். தன் குலம் காக்க வந்த திருதராஷ்டிரனுக்கு உன்னைப் பெண் கேட்க. என்னம்மா சொல்கிறாய்? தந்தையே! இதெல்லாம் என்ன கேள்வி! பெற்றவர்களைப் பெருமைப்படுத்துபவளே பெண். நான் இதில் கருத்து சொல்ல என்ன இருக்கிறது? என் நன்மை என்னை விட தங்கள் கையில் தான் அதிகம் இருக்கிறது, என்றாள் பணிவோடு காந்தாரி. குடும்பத்திற்கேற்ற குலவிளக்கு, என பாராட்டினார் பீஷ்மர். காந்தாரியின் அண்ணன் சகுனி அங்கே வந்தான். காந்தா! தந்தையார் உன்னிடம் சம்மதம் கேட்பதில் ஒரு உட்பொருள் இருக்கிறது. உனக்கு பார்த்துள்ள மாப்பிள்ளைக்கு பார்வை கிடையாது. அதையும் யோசித்துக் கொள்,.

அண்ணா! இதில் யோசிக்க ஏதுமில்லை. என் சகோதரனுக்கும், தந்தைக்கும் தெரியாதது என்ன? அவர் பார்வையில்லாதவராக இருந்தால் என்ன? நானும் இந்தக்கணமே என் பார்வையை இழந்து விடுகிறேன், என்றவள், வேகமாகத் தன் அறைக்குச் சென்று, பொன்னால் செய்யப்பட்ட ஒரு பட்டையை எடுத்து வந்தாள். அதைத் தன் கண்ணில் கட்டினாள். எனக்கு வரப்போகும் கணவரால் எப்படி உலகத்தைப் பார்க்க முடியாதோ, அதே போல நானும் இவ்வுலகத்தைப் பார்க்க மாட்டேன், என சொல்லிவிட்டு குனிந்த தலையுடன் தோழிப் பெண்களின் துணையுடன் தன் அறைக்குப் போய் விட்டாள். மகாபாரதத்தை ஏன் படிக்கச் சொல்கிறோம் இதுபோன்ற நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்ளத்தான்.

பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்கும் பெண்கள் இப்போது குறைந்து போய் விட்டார்கள். குறிப்பாக திருமண விஷயத்தில், பெற்றவர்கள் எடுக்கும் முடிவை பல பெண்கள் ஆமோதிப்பதில்லை. போதாக்குறைக்கு காதல் என்ற படு குழியில் வேறு விழுந்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள். ஒரு பார்வையற்றவனை மணக்கக்கூட அந்தக்காலத்துப் பெண் சம்மதித்திருக்கிறாள். அதற்காக தன் சுகத்தையும் அழித்துக் கொண்டாள் என்று பாரதத்தில் படிக்கும் போது அக்காலப் பெண்களைப் பற்றி நம் நெஞ்சு மகிழ்ச்சியால் விம்முகிறது. இந்த தேசம் இத்தனை வன்முறைகளுக்கு மத்தியிலும் தலை நிமிர்ந்து நிற்கக்காரணம் இவளைப் போன்ற பெண்கள் செய்த தியாகத்தால் தான். பெண்கள் பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்க வேண்டும். காந்தாரியின் சம்மதம் கிடைத்ததும் ஒரு நல்லநாள் பார்க்கப்பட்டது. அக்காலத்தில் மன்னர்கள் பல பெண்களை திருமணம் செய்ய அனுமதி இருந்தது. அதன்படி திருதராஷ்டிரனுக்கு பல மனைவிகள் ஏற்கனவே இருந்தாலும், காந்தாரியே பட்டத்தரசியானாள்.

இங்கே இப்படியிருக்க, சுரதை என்ற பெண்மணி துர்வாச முனிவருக்கு பல சேவைகள் செய்து வந்தாள். துர்வாசர் என்றாலே எல்லாருக்கும் தெரியும். அவர் பெரிய கோபக்காரர் என்று. சுரதை ராஜகுமாரி என்றாலும் கூட, அவர் மனம் கோணாமல் சேவை செய்து வந்தாள். இவள் சூரன் என்ற மன்னனின் மகள். அவளை குந்திபோஜன் என்ற மகாராஜா, தன் மகளாக சுவீகராம் எடுத்துக் கொண்டான். குந்திபோஜனின் அரண்மனைக்குத் தான் துர்வாசர் வந்திருந்தார். வந்தவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள மகளையே நியமித்திருந்தான் மன்னன். குந்திபோஜனின் மகளான பிறகு சுரதைக்கு அவளது சொந்தப் பெயர் மறைந்து விட்டது. அவளுக்கு குந்தி என்று பெயர் நிலைத்து விட்டது. இப்போது குந்தி சிறுமியாகத்தான் இருந்தாள். அவள் தன் தோழியரோடு அம்மானை ஆடுவாள். ஆற்றுக்குச் சென்று தோழியருடன் நீச்சலடித்து மகிழ்வாள். ஊஞ்சல் கட்டி ஆடுவாள். இப்படி விளையாட்டு பருவமுள்ள சிறுமி கோபக்கார துர்வாசருக்கு எப்படி சேவை செய்ய முடியும் என்று மன்னன் கொஞ்சமும் எண்ணி பார்க்கவில்லை.

ஏதோ ஒரு தைரியத்தில் அந்த பணியை ஒப்படைத்துவிட்டான். குந்தியும் தன் விளையாட்டுகளையெல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு, முனிவருக்கு தேவையான பணி விடையை அவரது மனம் கோணாமல் செய்து வந்தாள். துர்வாசருக்கு சந்தோஷம். எப்போதும் கடுகடுவென இருப்பவர்களைக் கூட பொறுமை மகிழ்ச்சிகரமாக்கி விடுகிறது. துர்வாசர் சமயத்தில் கோபபட்டாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் சிறுமி குந்தி சேவை செய்தாள். துர்வாசரே அசந்து விட்டார். அம்மா! குந்தி, நான் புறப்படுகிறேன். இங்கிருந்த காலத்தில் எனக்கு வேண்டிய பணிவிடைகளை நல்ல முறையில் செய்தாய். உன்னைப் போன்ற பொறுமையுள்ள பெண்ணை பூமியில் நான் இதுவரை பார்க்கவில்லை. உபசாரம் என்பது பெரியகலை. பிறர் மனம் கோணாமல் உபசரிப்பவர், சொர்க்கத்திற்கு செல்வார்கள். இந்த உபசரிப்புக்காக பரிசொன்று தரப்போகிறேன்.

நீ பெற்றுக் கொள், என்றாள். என்ன இருந்தாலும் குந்தி குழந்தை தானே! மேலும் அவர் கோபக்கார மகரிஷி. வேண்டாம் என்று சொல்லி அவர் சபித்து விட்டாலோ, தந்தையிடம் புகார் சொன்னாலோ என்னாவது? குந்தி பணிவுடன் கைகட்டி நின்றாள். அவளை அருகில் அழைத்த மகரிஷி, தன் மடியில் இருத்திக் கொண்டு, அம்மா! ஒரு ரகசிய மந்திரம் ஒன்றை உனக்கு கற்றுத் தரப்போகிறேன். இது யாருக்கும் கிடைக்காத அரிய பரிசு. கவனமாகக் கேள், என்றார்.

குந்தி பணிவுடன் அமர்ந்தாள். அவளுக்கு கிடைத்தற்கரிய மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுத்தார் துர்வாசர். சாதாரண மந்திரமா அது? மகளே! தேவர்கள் யாராக இருந்தாலும், இந்த மந்திரத்தைக் கேட்ட மாத்திரத்தில் ஓடோடி வருவார்கள். அவர்களால் நீ கர்ப்பமடைவாய். தெய்வ மைந்தர்களைப் பெறுவாய். அவர்களது புகழ் இந்த உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும். நீயும் தெய்வத்தாய் என்ற அந்தஸ்தைப் பெறுவாய், என்றார். குந்தி அப்போது தான் வயதுக்கு வந்திருந்தாள். தழதழவென்ற உருவம். அவளைப் பார்க்கும் ஆண்களின் கண்கள் பார்வையை விலக்கவே விலக்காது. அவளைத் திருமணம் செய்ய பல நாட்டு மன்னர்களும் துடித்துக் கொண்டிருந்தனர். வயதுக்கு வந்திருந்தாலும், விளையாட்டு புத்தி அந்தப் பெண்ணுக்கு இன்னும் மாறவில்லை. அது மட்டுமல்ல! மனித இனத்திடம் ஒரு பழக்கம் உண்டு.

எதைச் செய்யக்கூடாது எனச் சொல்கிறோமோ அதை செய்து பார்த்தால் என்னவென்று? காலையில் பள்ளிக்கு புறப்படும் பையனிடம் தாய், டேய்! டிபன் பாக்சிலே இன்று உனக்கு பிடித்த ஸ்நாக்ஸ் வச்சிருக்கேன். இங்கேயே திறந்து பார்க்காதே. ஸ்கூலில் போய் பார், என்பாள். பையன் பாதி வழி தான் போயிருப்பான். உடனே டிபன் பாக்சை திறந்து என்ன இருக்கிறது என பார்த்து விடுவான். குறிப்பாக குழந்தைகளிடம் இந்தக் குணம் அதிகமாகவே உண்டு. டிவியில் இன்ன நிகழ்ச்சியைப் பார்க்காதே என்றால், பெற்றவர்கள் அசரும் சமயத்தில், குழந்தை அந்த சானலைக் கண்டிப்பாக திருப்பிப் பார்ப்பான்.

குந்தியும் குழந்தை தானே! அவளுக்கும் ஆசை. இந்த முனிவர் ஏதோ வரம், குழந்தை என்றெல்லாம் சொன்னாரே! சூரியனையும். சந்திரனையும், புதனையும், சுக்கிரனையும், இந்திரனையும், வசுதேவர்களையும் யாரை அழைத்தாலும் வருவார் என்று சொன்னாரே! இன்று யாரையாவது பார்த்தால் என்ன? அப்படியெல்லாம் வரவா செய்வார்கள்! இவர் ஏதோ கதை சொல்லியிருக்கிறார், என்றவளாய், வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.

கண் கூசியது. உயரத்தில் சூரியன் சென்று கொண்டிருந்தான். இந்த சூரியனை அழைத்தால் என்ன! வருகிறானா என்று தான் பார்ப்போமே, என்றவளாய், சூரியனுக்குரிய மந்திரத்தை உபதேசித்தாள். அடுத்த கணமே தேஜஸான முகத்துடன் கொவ்வைப்பழமெனச் சிவந்த நிறத்தில் வந்து நின்றான் ஒரு இளைஞன். அவனைப் பார்த்ததும் குந்திக்கு நாணம். தலை குனிந்து நின்றாள். அவன் அவளது அருகில் வந்தான். அவளை ஏதும் கேட்கவில்லை. முகத்தை தன் ஒற்றை விரலால் தூக்கி அவளது கண்களின் அழகை ரசித்தான். அவள் சுதாரித்து ஒதுங்கினாள். இளைஞரே! திடீரென இங்கு வந்த தாங்கள் யார்? என் அனுமதியின்றி எப்படி என்னைத் தொடலாம்? பெண்கள் கற்புநெறியுள்ளவர்கள் என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்களோ? என்றாள் சிறு கோபத்துடன். அவன் கலகலவென சிரித்தான். அன்பே! நன்றாக இருக்கிறது உன் கூற்று. நீ தானே என்னை அழைத்தாய். அதிலும் உணர்வு களைத் தூண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லி என்னை வரவழைத்து விட்டு, இப்போது ஒதுங்கிப் போனால் நான் என்ன செய்ய முடியும்? தாபத்தால் தவித்து இங்கு வந்தேன் கண்ணே! என்று சொல்லியபடியே, அவளது பதிலுக்கு காத்திராமல், ஆசையுடன் அணைத்தான். அவள் அவனது பிடியில் இருந்து விலகினாள்.

சூரிய பகவானே! இதென்ன தகாத செயல். முனிவர் சொன்னாரே என்பதற்காக ஏதோ விளையாட்டாக மந்திரத்தைச் சொன்னேன். அதை நிஜமென நம்பிக் கொண்டு, நீர் இப்படி அடாத செயலைச் செய்வது தேவர் குலத்துக்கு இழுக்கை விளைவிக்கும். போய் விடும், என்று சப்தமாகச் சொன்னாள் குந்தி. சூரியன் அவளை விடவில்லை. மீண்டும் அவளை அணைத்தான். அழகுப்பதுமையே! இம்மந்திரத்தைச் சொன்னவர் மந்திரத்திற்குரிய பலனை அடைந்தே தீர வேண்டும். அப்படி மறுத்தால் மந்திரத்தை உனக்கு யார் கற்றுத் தந்தார்களோ அவருக்கு சாபமிடுவேன். மேலும் மந்திரத்தை சொன்னவரின் குடும்பமும் நாசமாகி விடும். என்ன சொல்கிறாய்? என்றான். குந்தி அவனை கையெடுத்து வணங்கினாள். பகலவனே! என்னை மன்னித்து விடும். அறியாமல் செய்யும் தவறுக்கு இவ்வுலகில் மன்னிப்பு இல்லையென்றால், உலகத்தில் மனிதாபிமானம் செத்துப் போகும். நான் கன்னிப்பெண். உம்மால் நான் கர்ப்பமானால், இந்த உலகம் என்னைப் பழிக்கும். ஒளி மிகுந்த உம்மால் என் எதிர்காலம் இருண்டு போகும். என்னை மன்னித்து விட்டுவிடும், என்று காலில் விழுந்தாள் குந்தி. சூரியன் அவளிடம், பெண்ணே! கலங்காதே. தேவர்களின் உறவால் ஒரு பெண் களங்கப்படமாட்டாள்.

அவளது கற்புநெறி பாதிக்கப்படாது. குழந்தையைப் பெற்ற பிறகும் நீ கன்னியாகவே இருப்பாய். உன் அழகும் இரட்டிப்பாகும். சஞ்சலத்தை அகற்றி மனதை ஒருமைப்படுத்தி என்னோடு இன்பமாக சேர். உலகம் போற்றும் உத்தமன் ஒருவன் உன் வயிற்றில் பிறப்பான். அவனை உலகமே போற்றி வணங்கும், என்றான். குந்தி ஒருவாறு இதை ஏற்றுக் கொண்டாள். சூரியனின் ஆசைக்குப் பணிந்தாள். மலர்கள் தூவிய பஞ்சுமெத்தை படுக்கையை அங்கே வரவழைத்தான் சூரியன். அவளோடு இன்பமாக இருந்த பிறகு அவன் மறைந்தும் விட்டான். அந்த நேரமே அவளது வயிற்றில் கரு உற்பத்தியானது. வீட்டுக்குச் செல்லவில்லை அவள். நதிக்கரை ஒன்றில் இருந்த அரண்மனையில் இருந்த அவள் யாரையும் பார்ப்பதைத் தவிர்த்தாள். சில நாட்களிலேயே கரு முதிர்ந்து விட்டது. குந்தியின் வயிற்றில் இருந்து அழகு குழந்தை ஒன்று வந்தது. குந்தி ஆசையோடு தன் மகனை முத்தமிட்டாள். என்ன ஆச்சரியம்! குழந்தையின் காதுகளில் குண்டலம் ஒளிர்ந்தது. மார்பில் அழகான தங்கக்கவசம் இருந்தது. சூரிய மைந்தனல்லவா! பிறக்கும் போதே வீரச் சின்னங்களுடன் பிறந்திருக்கிறான்!

பெற்ற மகனைப் பார்த்து உள்ளம் பூரித்த அதே வேளையில், குந்திக்கு பயமும் வந்து விட்டது. ஐயோ! தந்தையாருக்கு இது தெரிந்தால் என்னாகும்? குடும்ப மானம் காற்றில் பறக்குமே. சூரியனுக்கு இந்த பிள்ளையைப் பெற்றேன் என்றாலும் கூட, கன்னியாக இருந்து கொண்டே காமலீலை நடத்தினாயடி, கள்ளி, என்று தகப்பனார் திட்டுவார். ஊரார் என்ன சொல்வார்கள்? அட காமந்தகாரி, மனஅடக்கம் இல்லாத நீயா எங்கள் இளவரசி என்று வசை பாடுவார்களே, ஓ என்ன செய்வது? அப்போது அவளது அந்தரங்கத் தோழி வந்தாள். நடந்த விஷயங்கள் அனைத்தும் அவளுக்குத் தெரியும். அவளிடம், என் அன்புத் தோழியே! பெண்கள் ரகசியங்களைப் புதைக்கத் தெரியாதவர்கள் என்பார்கள். ஆனால், நீ அப்படிப்பட்டவள் அல்ல. என் நலத்தை மட்டுமே நாடுபவள். இந்த அந்தரங்கத்தை வெளியே சொல்லமாட்டாய் என நான் அறிவேன்.

நான் மீண்டும் கன்னியாகி விட்டேன். இப்போது இவன் என் குழந்தையல்ல. இவன் தெய்வத்தின் குழந்தை. இவனை இதோ இந்த பாகீரதி (கங்கை) ஆற்றில் விட்டு விடு. ஒரு பெட்டிக்குள் வைத்து விட்டால் ஆபத்தின்றி தப்புவான். யாராவது இவனைக் காப்பாற்றி விடுவார்கள் என நம்புகிறேன், என்றாள். தோழி குந்தியின் நிலையைப் புரிந்து கொண்டாள். இளவரசி! விளையாட்டு வினையாகி விட்டதை நானும் உணர்வேன். உன் நிலையில் நான் இருந்தாலும் இதையே தான் செய்திருப்பேன். என் உயிர் உள்ளவரை இந்த ரகசியம் வெளியே வராது. கவலைப்படாதே, என ஆறுதல் சொல்லி, சித்திரவேலைப்பாடுள்ள ஒரு அழகிய பெட்டியில் குழந்தையை வைத்தாள். குந்தி அன்று அழுது பெருக்கிய கண்ணீரின் அளவு கங்கையையும் தாண்டியது.

அந்த அழகு மகனை அவள் கங்காதேவியிடம் தாரை வார்த்தாள். புனித கங்காமாதா அந்தப் பெட்டியை மிக பத்திரமாக சுமந்து சென்றாள். ஏனெனில், பெட்டிக்குள் இருப்பவன் சூரிய மைந்தன். இந்த தேச மக்கள் சுபிட்சமாக வாழ கேட்டதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாகப் போகிறவன். அலைபுரண்டு ஓடினாலும், சுழல்களுக்குள் சிக்கினாலும் பெட்டி எந்த சேதாரமும் இல்லாமல் சென்றது. நீண்ட தூரம் சென்ற பிறகு ஓரிடத்தில் அதிரதன் என்பவன் தன் மனைவியுடன் புரண்டோடும் பாகீரதி நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அந்நாட்டு தேர்ப்பாகன்களின் தலைவன். அதிரதனின் மனைவி தூரத்தில் ஒரு பெட்டி மிதந்து வருவதைக் கணவனிடம் சுட்டிக்காட்டினாள். வெள்ளமென்றும் பாராமல், நதியில் குதித்து அதை தள்ளிக் கொண்டே வந்து கரைசேர்த்தான் அதிரதன்.

அதிரதனின் மனைவி அவசரமாக பெட்டியைத் திறந்தாள். உள்ளே குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அவனது முகப்பிரகாசத்தை ரசிப்பதா? அல்லது உலகில் எங்கும் இல்லாத அதிசயமாக காதில் குண்டலமும், மார்பில் கவசமும் பளபளத்ததை ரசிப்பதா? இது என்ன ஆச்சரியம்? இவ்வளவு அதிசயமும், அழகும் கொண்ட குழந்தையைப் பெற்றவள் ஏன் தண்ணீரில் மிதக்க விட்டாள்? அவள் ஒரு பெண்தானா? என்றெல்லாம் பலவாறாகப் பேசியபடி குழந்தையை எடுத்து அள்ளி அணைத்தாள் அந்த மாதரசி. இருக்காதா பின்னே! அவர்களுக்கு கடவுள் குழந்தை செல்வத்தை தரவில்லை. மரணத்துக்கு பிறகு பிதுர்க்கடன் செய்ய இதோ ஒரு மகன் வந்து விட்டான். அவர்கள் ஆனந்தப்பட்டனர். குழந்தையையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு இல்லம் போய் சேர்ந்தனர்.

குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசித்தனர். குழந்தையின் கைகள் அடிக்கடி மூடித்திறந்ததைப் பார்த்து, ஓ இவன் வள்ளல். கொடுக்கும் குணமுடையவன். இவனுக்கு கர்ணன் என பெயர் சூட்டுவோம், என முடிவெடுத்தனர். அரசகுலத்தில் பஞ்சு மெத்தையில் அயர்ந்துறங்க வேண்டிய அந்தக் குழந்தை ஒரு ஏழை வீட்டு மரத்தொட்டிலில் படுத்திருந்தான். இங்கே இப்படியிருக்க, இது எதையும் அறியாத குந்தியின் தந்தை விராதன் குந்திக்கு திருமண சுயம்வர ஏற்பாடு செய்தான். பல நாட்டு மன்னர்களும் வந்திருந்தனர். வந்தவர்களில் பாண்டுவும் ஒருவன். அவனை
குந்திக்கு பிடித்து போய் விட்டது. மணமாலையை அவனுக்கே அளித்தாள். திருமணம் சிறப்பாக நடந்தது. குந்தியும், பாண்டுவும் இன்பமாய் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் மன்னர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. பாண்டுவின் பெருமையைக் கேள்விப்பட்டான் மந்திர தேசத்து மன்னன் ருதாயன். அவனுக்கு மாத்ரி என்ற மகள் இருந்தாள். அவளையும் பாண்டுவுக்கு திருமணம் செய்து வைத்தான். மாத்ரியின் சகோதரன் சல்லியனுக்கும் இந்த திருமணத்தில் பெரும் விருப்பம் இருந்தது. தங்கைக்கு நல்ல கணவன் கிடைத்தது கண்டு மகிழ்ந்தான். இந்த ஆண்வர்க்கம் இருக்கிறதே... அதனிடம் ஒரு பலவீனம் உண்டு.

பெண்கள் முன்னால் தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டும் என்றால் விழுந்து விழுந்து காட்டுவார்கள். கிருதயுகம் முதல் கலியுகம் வரை இது இருக்கத்தான் செய்கிறது. பாண்டு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? புதுமனைவியர் இருவரையும் அழைத்துக் கொண்டு அவன் காட்டுக்கு போனான். மனைவிகளை அருகில் வைத்துக் கொண்டு, இதோ பார் புலி, அதைக் கொல்கிறேன், என்று சொல்லி அம்பெய்தி புலியைக் கொன்றான். யானைகளைப் பிடித்தான். சிங்கங்களை அழித்தான். யாழிகள் என்ற இனம் அக்காலத்தில் இருந்தது. சிங்கமுகமும், தும்பிக்கையும் கொண்ட இந்த அதிசய மிருகங்களையும் கொன்றான். இதையெல்லாம் பார்த்த, புதுமனைவியர் தங்கள் கணவனின் வீரம் கண்டு அகம் மகிழ்ந்தனர். ஓரிடத்தில் இரண்டு மான்கள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. குந்தி, மாத்ரி, பாருங்கள். அந்த மான்களை இங்கிருந்தே அடிக்கிறேன், என்றான். தூரத்தில் அந்த இரண்டு மான்களும் தங்களுக்கு எமனாக வரும் அம்பைப் பற்றி அறியாமல் இன்ப சுகத்தில் மூழ்கியிருந்தன. ஆனால், அந்த அம்பு பாண்டுவுக்கும் சேர்த்து எமனாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது என்பதை அவனும், அவனது தேவியரும் அப்போது உணரவில்லை.

பாய்ந்து சென்ற அம்பு அந்த மான்களை ரத்தச்சேற்றில் தள்ளியது. இரண்டும் உயிருக்கு துடிதுடித்தன. பாண்டுவின் மனைவியர் தன் கணவனின் திறமை கண்டு புளகாகிதமடைந்திருந்த வேளையில், அந்த ஆண்மான் ஒரு தவசீலனாக உருவெடுத்தது. அந்த முனிவர் பாண்டுவிடம் கோபத்துடன் வந்தார். பாண்டு அவரிடம், தவசீலரே! நான் பாண்டு மன்னன். வேட்டைக்காக வந்த இடத்தில் மான்களை நோக்கி அம்பெறிந்தேன். ஆனால், நீங்கள் மானிட உருவம்...அதிலும் முனிவராக வந்து நிற்கிறீர்கள். தாங்கள் யார்? என்றான் பதட்டத்துடனும் பணிவுடனும். முனிவர் அவனது பணிவு கண்டு சற்றே கோபம் அடங்கி, மன்னா! என் பெயர் கிந்தமன். முனிவர்களுக்கு எப்போதாவது ஒருமுறை இன்ப உணர்வு தலை தூக்கும். அந்த உணர்வை மன்மதன் என்னிடம் தூண்டி விட்டான். நான் அதை தாங்கமுடியாமல் தவித்தேன்.

இந்த நடுக்காட்டில் என்னால் என்ன செய்ய இயலும்? எனவே, நானும் என் மனைவியும் மான்களாக மாறி கூடி களித்துக் கொண்டிருந்தோம். அந்த வேளையில் நீ எங்கள் மீது அம்பெய்தாய். எங்கள் இன்பத்தை தொலைத்து விட்டாய். உலகிலேயே கொடிய பாவம், இன்பமுற்றிருக்கும் தம்பதிகளைப் பிரிப்பதாகும். அது உனக்குத் தெரியுமல்லவா? என்றார். அறிவேன் முனிவரே! ஆனாலும், இது தெரியாமல் நடந்துவிட்டது. மன்னிக்க வேண்டும் என்னை, என்ற மன்னனிடம் சற்றும் கருணை காட்டிய முனிவர், மன்னா! எங்கள் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் பிரித்து விடும். இந்த கொலைப்பாவம் உன்னை பிடிக்காது என்றாலும், தம்பதிகளைப் பிரித்த நீ, இனி உன் மனைவிகளிடம் சுகம் கண்டால் இறந்து போவாய், என சாபம் கொடுத்து விட்டு இறந்தார்.

பெண் மான் வடிவத்தில் இருந்த அவரது மனைவியும் சுயவடிவம் எடுத்து அக்னியில் விழுந்து மாண்டாள். பாண்டு கலங்கிப் போனான். ஐயோ! இனி நான் தாம்பத்ய வாழ்வு நடத்த முடியாதா? எனக்கு இரண்டு பட்டத்தரசிகள் இருந்தும் அவர்களைத் தொட முடியாதவன் ஆகிவிட்டேனே? இந்த தேசம் என்னாகப் போகிறதோ? அவன் கண்ணீர் வடித்தான். பின்னர் தன் மனைவியருடன் வனத்திற்கு சென்று அங்குள்ள தவசாலை ஒன்றில் தங்கினான். அங்கிருந்த போது அவனுக்கு ராஜாங்க காரியங்கள் இல்லாததால், யோசிக்க அதிக நேரம் கிடைத்தது. நிறைய வேதாந்தங்களையும் கேட்டான். உலகில் மனிதனாகப் பிறந்தவனுக்கு குழந்தை பிறக்காவிட்டால் அவனால் மோட்சத்தை அடைய முடியாது என்று வேதாந்தங்களைப் படித்து தெரிந்து கொண்டான்.

ஆனால், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு வழியையும் தெரிந்து கொண்டான். குந்தியை அழைத்தான். தங்கள் தாய்மார்களான அம்பிகாவும், அம்பாலிகாவும் வியாசர் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது போல, தர்மத்திற்கு உட்பட்டு, குழந்தைகள் பெற்றுக் கொள்ள தன் மூத்த மனைவி குந்தியை வற்புறுத்தினான். கணவனே இப்படி சொல்லும் போது என்ன செய்வது? அவள் யோசித்த வேளையில், பாண்டு அவளிடம், குந்தி! உனக்கொரு விஷயம் தெரியுமா? என் தந்தை வியாசமுனிவர் ஒருநாள் திருதராஷ்டிரனின் அரண்மனைக்கு வந்தார். காந்தாரி அவரிடம் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லையே என வருந்தினாள். அவர் தன் சக்தியால் அவளை கர்ப்பமுறச் செய்தாள். அதன் மூலம் நூறு குழந்தைகள் பெறப்போகும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாள் காந்தாரி.

நமக்கும் சந்ததிகள் வேண்டும். நாம் இறந்த பிறகு பிதுர்காரியங்கள் செய்ய பிள்ளைகள் அவசியம் என்பதை நீயே அறிவாய். நீயும் அரச தர்மப்படி, முனிவர்களைச் சேர்ந்து குழந்தைகளைப் பெறு, என்றான். தயங்கி நின்ற குந்தி, அன்பரே! என்னிடம் ஒரு விசேஷ சக்தி உண்டு. நான் சிறுமியாய் இருந்த போது துர்வாசருக்கு செய்த சேவையால் கிடைத்த சக்தி அது. நான் எந்த தேவனை நினைக்கிறேனோ, அவன் மூலம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதே அது. ஆனாலும், கற்புடைய பெண் எப்படி இதற்கு சம்மதிக்க முடியும்? என்று சொல்லி தயங்கினாள். ஆனால், தனக்கு ஒரு குழந்தை ஏற்கனவே பிறந்ததை மறைத்து விட்டாள். பாண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குந்தி, உடனடியாக செயலில் இறங்கு. நமக்கு உடனே பிள்ளைகள் வேண்டும். உம், தேவர்களை வரவழைத்து அவர்களைத் தழுவு. குழந்தைகளைப் பெறு, என பரபரத்தான். நீண்ட வற்புறுத்தலுக்கு பின் நாட்டுநலன் கருதி இந்த யோசனைக்கு சம்மதித்த குந்திதேவி, கணவனை வணங்கினாள்.

பின்னர் அஞ்சும் தன்மையுடையவனும், அதே நேரம் நீதிமானுமான தர்மராஜாவாகிய எமதர்மனை அழைத்தாள். எமன் வந்தான். குந்தியின் அழகில் சொக்கிப்போய் அவளோவு இணைந்தான். ஒரு குழந்தை பிறந்தது. தர்மராஜாவுக்கு பிறந்த அவனுக்கு யுதிஷ்டிரன் என்று பெயர் சூட்டினாள். இவனே தர்மன் என்றும் அழைக்கப்படுவான். இந்த செய்தி காந்தாரியை எட்டியது. அவள் கர்ப்பமாக இருந்தாளே தவிர, குழந்தை பிறக்கவில்லை. தனக்கு முன்னதாகவே குந்திக்கு குழந்தை பிறந்த செய்தி அவளை வாட்டியது. பொறாமைக்கனல் பொங்கியது. மூத்த மருமகளான நான் குழந்தை பெறும் முன்பு நீ பெற்று விட்டாயா? என்னால் தாங்க முடியவில்லையே, ஆவேசமாக புலம்பினாள். தன் அறையில் அங்குமிங்குமாக தடதடவென நடமாடினாள். கர்ப்பஸ்திரீகள் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அத்தனையும் செய்தாள்.

இங்கே ஒரு அறிவியல் கருத்தும் விளக்கப்படுகிறது. ஒரு பெண் குழந்தை பெறும் சமயத்தில் நல்ல மனநிலையுடன் இருந்தால், பிறக்கும் குழந்தைகளும் நல்லவர்களாக இருப்பார்கள். தங்கள் அறிவை உலகநலனுக்கு பயன்படுத்துவார்கள். அப்படி பிறந்தவன் தான் தர்மன். ஆனால், காந்தாரி என்ன செய்தாள் தெரியுமா? பொறாமையால் தன் வயிற்றில் ஓங்கி அடித்தாள். பொறி கலங்கியது போல் வலி ஏற்பட்டது. வயிற்றில் கர்ப்பம் கலைந்து விட்டது. அவசரப்பட்டு செய்த செய்கைக்காக அவள் அழுது புலம்பினாள். வியாச பகவானே! தங்கள் வரம் பொய்க்கலாமா? எனக்கு கர்ப்பம் கலைந்து விட்டதே, என்ன செய்வேன்? என அரற்றவும், வியாசர் அங்கே தோன்றினார்.

அப்போது காந்தாரியின் வயிற்றில் இருந்த கரு மொத்தமாக கீழே விழுந்து ரத்தம் பெருகியது. காந்தாரி வலியாலும், துக்கத்தாலும் கதறினாள். அவசரப்பட்டு வயிற்றில் அடித்ததற்காக அவள் மனம் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. வியாசர் அவளைத் தேற்றினார். காந்தாரி! கவலை கொள்ளாதே! நீ சாதாரணமானவளா? கணவனுக்கு கண் இல்லை என்பதற்காக உன் கண்ணைக் கட்டிக் கொண்ட கற்புக்கரசியல்லவா? அந்த கற்பின் வலிமை இந்த கர்ப்பத்தைக் காப்பாற்றும், என்றவர், கீழே விழுந்த கருவை துண்டு துண்டாக வெட்டினார். நூறு துண்டுகள் இருந்தன. வெட்டியது போக ஒரு துண்டு மீதி வந்தது. காந்தாரி, நெய் நிரம்பிய நூறு கும்பங்களை எடுத்து வா, என்றார். காந்தாரி அதற்கான உத்தரவைப் பிறப்பிக்கவே, தோழிப்பெண்கள் கும்பங்களை எடுத்து வந்தனர். அவற்றில் துண்டுகள் ஒவ்வொன்றையும் போட்டார் வியாசர். தனியாக இருந்த துண்டை ஒரு பானையில் போட்டு விட்டார். காந்தாரி! இவற்றை நீ பத்திரமாக பாதுகாத்து வா. இவை ஒவ்வொன்றும் வளர்ந்து ஒவ்வொரு குமாரனை உனக்கு தரும். ஆஸ்திக்கு எத்தனை ஆண்கள் பிறந்தாலும், ஆசைக்கு ஒரு பெண் வேண்டுமல்லவா? அந்தப் பானையில் உள்ள கரு பெண்ணாய் பிறக்கும், என சொல்லி விட்டு மறைந்து விட்டார். கருக்கள் வளர்ந்தன. முதல் கும்பத்தில் இருந்து ஒரு குழந்தை பிறந்தது. அவன் தான் துரியோதனன். அவன் பிறந்த போது மங்கலமுரசு முழங்கிக் கொண்டிருந்தது.

அதே நேரம் எங்கிருந்தோ பல நரிகள் ஒன்றுசேர்ந்து ஊளையிட, மங்கலச்சத்தம் அடங்கி விட்டது. கெட்ட நேரத்திற்கு அது அறிகுறியாக இருந்தது. துரியோதனன் பிறந்த விபரமும், அவனைத் தொடர்ந்து காந்தாரிக்கு நூறு குழந்தைகள் பிறக்க இருக்கும் விபரமும் பாண்டுவை எட்டியது. ஆஹா...என் அண்ணியாருக்கு நூறு குழந்தைகள் பிறக்கப் போகிறதாம்! எனக்கு ஒரு குழந்தை தான் இருக்கிறது. குந்தி! மீண்டும் தேவர்களை நினை. அந்த நூறு பேருக்கும் சமமான வலிமையுள்ள குமாரனைப் பெறு, என்றான் பாண்டு. கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த குந்தி, வாயு பகவானுக்குரிய மந்திரத்தைச் சொன்னாள். வாயு வந்தான். இருவரும் கூடிக் கலந்தனர்.

கர்ப்பமானாள் குந்தி. ஒருநாள் நடுப்பகலில் நல்ல முகூர்த்த வேளையில் ஒரு குழந்தை பிறந்தது. அவன் பிறந்த வேளை நல்வேளையாக அமைந்ததால் யாக குண்டங்களில் அக்னி வலப்பக்கமாக எரிந்தது. (கும்பாபிஷேகம் நடக்கும் போது யாக குண்டங்களில் அக்னி வலப்புறமாக எரிந்தால் அந்த ஊருக்கே நல்லது). அந்தக் குழந்தை தான் பீமன். பாண்டுவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இங்கே இப்படியிருக்க, காந்தாரியின் அரண்மனையில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி வழிந்தது. அங்கே கிரகங்கள் மோசமாக இருந்த நிலையில், கொடுமையின் ஒட்டுமொத்த வடிவான துச்சாதனன் பிறந்தான். இவனைத் தொடர்ந்து, வரிசையாக நாளொன்றுக்கு ஒரு குழந்தை வீதம் பிறக்க குழந்தைகளின் அழுகுரலால் அந்த அரண்மனை சிரித்தது. ஹஸ்தினாபுரத்து மக்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். ஆனால், மேகக்கூட்டங்கள் இந்த பூமிக்கு வந்துள்ள அபசகுனத்தை அறிவிக்க ரத்தமழை பொழிந்தன.

பிறந்த குழந்தைகளுக்கு திருதராஷ்டிரன் பெயர் சூட்டினான்.


துரியோதனன்,

துச்சாதனன்,

யுயத்சு,

துச்சகன்,

துச்சலன்,

துர்முகன்,

விளிஞ்சதி,

விகர்ணன்,

சலசந்தன்,

சுலோசனன்,

விந்தன்,

அதுவிந்தன்,

துர்த்தருஷன்,

சுவாகு,

துர்ப்பிரதருஷணன்,

துர்மருஷ்ணன்,

துருமுகன்,

துர்க்கருணன்,

கர்ணன் (துரியோதனாதிகளில் ஒருவனுக்கும் இப்பெயர் உண்டு),

சித்திரன்,

உபசித்திரன்,

சித்திராக்கன்,

சாரு,

சித்ராங்கதன்,

துர்மதன்,

துர்பிரகாஷன்,

விவித்சு,

விகடன்,

சமன்,

ஊர்ணநாபன்,

பத்மநாபன்,

நந்தன்,

உபநந்தன்,

சேனாதிபதி,

சுடேணன்,

கண்டோதரன்,

மகோதரன்,

சித்ரவாகு,

சித்ரவர்மா,

சுவர்மா,

துருவிரோசனன்,

அயோவாகு,

மஹாவாகு,

சித்திரசாயன்,

சுகுண்டலன்,

வீமவேகன்,

வீமபாலன்,

பாலகன்,

வீமவிக்ரமன்,

உக்ராயுதன்.


இப்படி 50 பேருக்கு பெயர் சூட்டப்பட்டது. அடுத்து பிறந்த 50 குழந்தைகளுக்கு,


வீமசரன்,

கனகாயு,

திருஷாயுதன்,

திருஷவர்மா,

திருஷகத்ரன்,

சோமகீர்த்தி,

அநூதரன்,

சராசந்தன்,

திருஷசந்தன்,

சத்தியகந்தன்,

சுகச்சிரவாகு,

உக்ரச்சிரவா,

உக்ரசேனன்,

சேனானி,

மகமூர்த்தி,

அபராஜிதன்,

பண்டிதகன்,

விசாலாக்ஷன்,

துராதரன்,

திருஷகத்தன்,

சுகத்தன்,

வாதவேகன்,

சுவர்ச்சசன்,

ஆதித்யகேது,

வெகுவாதி,

நாகத்தன்,

அநுயாயி,

நிஷல்கி,

கவசி,

தண்டி,

தண்டதரன்,

தனுக்கிரகன்,

உக்கிரன்,

பீமரதன்,

வீரன்,

வீரவாகு,

அலோலுபன்,

அபயன்,

ரவுத்ரகம்மன்,

திருஷரதன்,

அநாதிருஷ்யன்,

குண்டபேதன்,

விராவி,

தீர்க்கலோசனன்,

தீர்க்கவாகு,

மகாவாகு,

வியுகுடாகு,

கனகரங்கதன்,

குண்டசித்து,

சித்திரகன்


என்று பெயர் வைக்கப்பட்டது. பானையில் இருந்த பிறந்த பெண் குழந்தைக்கு துச்சளை என்று பெயர் சூட்டினர். உலகத்திலேயே நூறு அண்ணன்மாரைப் பெற்ற பாக்கியவதியாக அவள் வளர்ந்தாள். பாண்டுவுக்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. குந்தி! என் அண்ணி மிக மிக மகிழ்ச்சியுடன் இருக்கிறாளாம். நூறு பிள்ளை பெற்று விட்டதால் கர்வம். எனக்கு இன்னொரு குழந்தை வேண்டும். உனக்கு பிடித்த இன்னொரு தேவனை கூப்பிடு, என்றான். பொறாமை மனிதனை அழிக்கிறது. பாண்டு நல்லவன் என்றாலும், பிறர் வீட்டில் ஒரு நல்ல விஷயம் என்றால் அவனால் பொறுக்க முடியவில்லை. இந்தப் பொறாமைத் தீ அவனது குழந்தைகளை என்ன பாடு படுத்தப்போகிறது என்பதையும் அவன் உணரவில்லை. குந்தியோ, கணவன் சொல்லுக்கு கட்டுப்பட்டும், அக்கால தர்மப்படியும் தேவர்கள் மூலமாக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருந்தாள். இப்போது அவள் தேவர் தலைவன் இந்திரனை அழைத்தாள். இந்திரன் வந்தான். குந்தியோடு கூடினான். கர்ப்பவதியான குந்தி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் குழந்தையைப் பெற்றெடுத்தான். வெற்றிக்கென்றே பிறந்தான் விஜயன் என்னும் அர்ஜூனன்.

இதோடு விட்டானா பாண்டு... குந்தியை அழைத்தான். அன்பே! உன்னளவில் நீ எனக்கு பெரிதும் உதவியிருக்கிறாய். நமக்கு பிறந்த மூவருமே மைந்தர்கள். உன் சகோதரிக்கு (மாத்ரி) என்னால் குழந்தை பாக்கியம் தர இயலவில்லை. அவளுக்கும் நீ இந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தால், அவளுக்கும் குழந்தை பிறக்க வழி பிறக்குமல்லவா? அன்பே! எனக்காக நீ இதைச் செய்யமாட்டாயா? என்று கெஞ்சலாகக் கேட்ட கணவனின் விருப்பத்திற்கு சம்மதித்தாள் குந்தி. கற்பு நிறைந்த பெண்கள் கணவர் சொல் தட்டுவதில்லை. மாத்ரியை அழைத்தாள். சகோதரி! கணவரின் அனுமதியுடன் தேவர்களுக்கு நான் மூன்று பிள்ளைகளைப் பெற்றேன்.

உனக்கும் அதே மந்திரத்தைக் கற்றுத்தரச் சொல்லியுள்ளார் பாண்டு மன்னர். உனக்கும் குழந்தைகள் பெறும் ஆசை இருக்கத்தானே செய்யும். நான் மந்திரத்தைச் சொல்கிறேன். கேள், என அந்த ரகசிய மந்திரத்தை அவளது காதில் ஓதினாள் குந்தி. மகிழ்ச்சியடைந்தாள் மாத்ரி. தேசத்தின் நலன் கருதி கணவர் அல்லாத மனமாசில்லாத ஒருவரிடம் குழந்தை பெறுவது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று என்பதையும், அதனால் கற்பிற்கு பாதிப்பில்லை என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்ட அவள், அசுவினி தேவர்களை அழைத்தாள். அவர்கள் இவ்வுலகிலுள்ள எட்டு திசைகளின் காவலர்கள். அந்த எட்டு பேரும் வந்தனர். ஒரே உருவம் எடுத்தனர். மாத்ரியை கட்டியணைத்தனர். அவளுக்கு ஆசி வழங்கி விட்டு சென்றனர். கர்ப்பமானாள் மாத்ரி. அவளுக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும் வகையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு நகுலன், சகாதேவன் என்று பெயர் சூட்டினான் பாண்டு.

புத்திரர்கள் ஐவரும் செல்லமாய் இங்கே வளர, அஸ்தினாபுரத்தில் துரியோனாதிகள் நூறு பேரும் இன்னும் செல்லமாக வளர்க்கப்பட்டனர். பாண்டு புத்திரர்களின் நண்பர்கள் யார் தெரியுமா? புலிகளும், சிங்கங்களும். இளம் வயதிலேயே பயத்தை விரட்டுவது என்பது பெரிய கலை. பாண்டு புத்திரர்களான பாண்டவர்கள் ஐவரும் சிறு வயதிலேயே வீரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். ஆயகலைகள் அறுபத்து நான்கும் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டன. வீரம் மிக்கவர்களுக்கு மனிதாபிமானமும் முக்கியம். பாண்டவர்கள் இளம் வயதிலேயே பல தர்மங்களைச் செய்தனர். இந்த பூமியின் அளவை விட அவர்கள் வழங்கிய பொருளின் அளவு அதிகமாக இருந்தது. வாலிப வயதை அடைந்து விட்டார்கள் பாண்டவர்களும், துரியோதனாதிகளான கவுரவர்களும். இந்த நிலையில் ஒரு வசந்தகாலம் வந்தது.

பாண்டுவுக்கு வயது ஏறியிருந்தாலும், அவன் கிந்தம முனிவரிடம் பெற்ற சாபத்தால் அவனால் மனைவியரின் அருகே நெருங்க முடியவில்லை. வசந்த காலத்தின் மன்மத பாணங்கள் அவனைத் துன்புறுத்தியது. ஒருநாள் அந்த பாணங்களின் தாக்குதலுக்கு மிகக் கொடூரமாக ஆளான அவன் முன்னால் மாத்ரி வந்து நின்றாள். அவளது அழகை கண்களால் அள்ளிப்பருகிய பாண்டு, அவளை அணைத்தான். நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு ஏற்பட்ட ஸ்பரிசத்திற்கு மாத்ரியும் கட்டுப்பட்டாள். நடக்கப்போகும் விபரீதம் அவளுக்குத் தெரியவில்லை. சற்றுநேரம் சென்றது. பாண்டு அவள் மீது பிணமாகக் கிடந்தான். இன்பம் பெற வந்த மாமன்னன் துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு, மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்தானே என மாத்ரி கதறினாள்.

ஐயோ! கணவருக்கு புத்திமதி சொல்லாமல், அவரது இச்சைக்குப் பணிந்து அவரது உயிரையே பறித்து விட்டதே! என் இதழ்களில் இருந்து நீங்கள் பருகிய அமுதம் உங்களை விஷமாக்கி கொன்று விட்டதே! மனமொத்த தம்பதிகளை உலகில் யார் ஒருவர் பிரிக்கிறாரோ, அவர்களுக்கு உங்கள் வாழ்க்கை ஒரு பாடமாகி விட்டது. ஆம்...நீங்கள் கிந்தமரிடம் பெற்ற சாபம் தீவினையாக மாறி உங்களை அழித்து விட்டதே! நான் என்ன செய்வேன். ஐந்து புதல்வர்களை வளர்க்கும் பொறுப்பை இரண்டு விதவைகளிடம் ஒப்படைத்து விட்டீர்களே!என புலம்பினாள். மாத்ரியின் புலம்பலைக் கேட்டு வந்த குந்தி, நடந்து விட்ட விபரீதத்தை எண்ணி கதறித்துடித்தாள். இந்த பட்டத்தரசிகளின் ஓலம் கேட்டு பாண்டு புத்திரர்கள் ஓடி வந்தனர். அரண்மனையில் தங்கியிருந்த முனிவர்கள், மகான்கள் எல்லாம் வந்தனர். முனிவர்களில் முதியவரான காஷ்யபர், சதசிருங்கர் போன்றவர்களெல்லாம் வருத்தப்பட்டார்கள்.

மாத்ரியால் கணவனின் இறப்பைத் தாங்க முடியவில்லை. மேலும் அவரது சாவுக்கு காரணமாக அமைந்தது தன்னுடன் இன்பம் துய்த்தது என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் உயிர் வாழ விரும்பவில்லை. தான் பெற்ற பிஞ்சுகளை ஏற இறங்க பார்த்தாள். எப்படியும் குந்தி அவர்களைக் காப்பாற்றி விடுவாள் என்ற நம்பிக்கை பிறந்தது. குந்தி! இனியும் நான் உயிர் வாழமாட்டேன். அவரது பிரிவைத் தாங்கும் சக்தி எனக்கில்லை. மைந்தர்களே! குந்தியின் சொல் கேட்டு நடக்க வேண்டும். நீங்கள் வீர மைந்தர்களாய் வாழுங்கள், என வாழ்த்தி விட்டு, சிதை மூட்டச்சொல்லி உத்தரவிட்டாள். அந்த தீயில் இறங்கி தன் உயிரை விட்டாள். கற்புடைய ஒரு பெண் வேறென்ன செய்வாள்! இதற்குள் இறந்து போன பாண்டு மன்னன் சொர்க்கம் போய் சேர்ந்தான். அங்குள்ள கற்பக மரத்தின் நிழலில் தங்கியிருந்தான்.

மாத்ரியும் அவனை அடைந்தாள். இருவரும் ஆகாயகங்கையில் நீராடினர். மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தனிமையில் ஐந்து புத்திரர்களுடன் என்ன செய்வாள் குந்தி? அவளையும், புத்திரர்களையும் ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்துச் சென்றார்கள் முனிவர்கள். திருதராஷ்டிரன் தன் தம்பி மனைவியையும், குழந்தைகளையும் அன்போடு வரவேற்றான். தங்கள் ஐந்து சகோதரர்களையும் பார்த்து துரியோதன சகோதரர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. பெரியப்பாவின் பாதத்தில் விழுந்து வணங்கினர் பாண்டு புத்திரர்கள். அவர்களைக் கண்ணீரோடு அணைத்துக் கொண்டான் திருதராஷ்டிரன். அப்போது அங்கு வந்தார் பரமாத்மா கிருஷ்ணன்.

பரமாத்மா மட்டுமா வந்தார்! அவரது தந்தை வசுதேவர், தாய் தேவகி, குந்தியின் தந்தை குந்திபோஜன் மற்றும் உறவுகளெல்லாம் வந்தனர். பெரிய துக்கமல்லவா! கண்ணனுக்கு குந்தி அத்தை. ஏனெனில், அர்ஜூனன் கண்ணனின் சகோதரி சுபத்ராவைத் திருமணம் செய்தவன். மைத்துனரின் தந்தையல்லவா மரணமடைந்திருப்பவர். மகளின் துக்கத்தில் பங்குகொள்ள குந்திபோஜனும் வந்துவிட்டான். எல்லோரும் நெருங்கிய சொந்தங்கள்.

பீஷ்மர், விதுரன் ஆகிய மகாத்மாக்கள் கூட குந்தி புத்திரர்களின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். பரமாத்மா கண்ணன் மட்டும் பாரதத்தின் எந்த மூலையிலும், ஏன் அவரது இந்த அவதாரத்தில் எங்குமே கண்ணீர் வடித்ததில்லை. அவர் ஒரு புன்னகை மன்னன். ஏனெனில், நடக்கின்ற சம்பவங்கள் அனைத்துக்கும் காரணமே அவர் தானே! மேலும், அழ வேண்டியதையெல்லாம் இதற்கு முந்தைய அவதாரமான ராமாவதாரத்திலேயே அழுது தீர்த்துவிட்டாரே! போதாதா! கண்ணனின் தாய் தேவகி துக்கத்தில் ஆழ்ந்திருந்த குந்திக்கு சொன்ன ஆறுதல் மொழிகள் கொஞ்ச நஞ்சமல்ல! பெண்கள் ஒருபுறமிருக்க, ஆண்கள் ஒருபுறம் எதிர்காலம் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தார்கள். திருதராஷ்டிரனின் அண்ணன் மகாத்மா விதுரர், கண்ணா! பூபாரம் தீர்க்க வந்தவனே! உன் உதவி இருக்கும்போது பாண்டவர்களுக்கு என்ன கவலை. நீ தான் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும், என்றார். கண்ணனும் அதை ஆமோதித்தார்.

வந்த விஷயம் முடிந்ததும், அவர்கள் திரும்பி விட்டனர். துக்கவீட்டில் ரொம்ப நாள் தங்கக்கூடாது. வந்தோமா, போனோமா என்று இருக்க வேண்டும் என்ற நீதி இங்கே எடுத்துச் சொல்லப்படுகிறது. இப்படியிருக்க, ஆரம்பத்தில் துரியோதன சகோதரர்கள், பாண்டு புத்திரர்களுடன் நன்றாகத்தான் இருந்தனர். ஆனால், பீமன் மட்டும் யாருடனும் ஒத்துப்போக மாட்டான். சிறுவன் தான் என்றாலும், துரியோதன சகோதரர்களை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதற்காக அவன் வம்பு செய்வதில்லை. ஒதுங்கி இருந்து கொண்டான். இந்தப்போக்கு துரியோதனனுக்கு பிடிக்கவில்லை. அவன் தன் மாமா சகுனியிடம் ஓடினான். காந்தாரியின் அண்ணன் தான் இந்த சகுனி. தங்கை வீட்டில் தங்கியிருப்பவன். மாமா! இந்த பீமன் மட்டும் எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. பெரிய முரடன். ஏதாவது பேசினால் முறைக்கிறான்.

வம்புக்கு போனால் வேறு வினையே வேண்டாம். அவன் என் மீது விழுந்தாலே போதும். நான் தரையோடு தரையாக நசித்துப் போய்விடுவேன். அரண்மனையில் வேகும் அரிசியில் பாதிக்கு மேல் இவனுக்கே போய்விடுகிறது. இந்தப்பயலை அடக்க ஒரு வழி சொல்லுங்களேன், என்றான். இந்த சகுனிக்கு பாண்டு புத்திரர்களின் நாட்டையும் சேர்த்து கொள்ளையடிக்க ஆசை. அதற்கு தடையாக இருந்த பாண்டு ஒழிந்து விட்டான். குந்தியோ, இவர்கள் பிடியில். இந்த சிறுவர்களாலும் ஏதும் செய்ய முடியாது. காலம் கனியட்டும் என காத்திருப்பவன். மருமகனே! இதென்ன பிரமாதம்! இதோ! உன் நண்பன் கர்ணன் இங்கே தான் படுத்திருக்கிறான். அவனை துணைக்கு வைத்துக் கொள். பீமன் தூங்கும் போது அவனை கட்டு. அப்படியே தூக்கிக் கொண்டு போய் கங்கையின் நடுவில் வீசிவிடு, என அந்த பிஞ்சுமனத்தில் கொலை வெறியை விதைத்தான்.

கர்ணனும், துரியோதனனும் விரைந்தனர். உறங்கிக் கொண்டிருந்த பீமனை காட்டுக்கொடிகளைக் கண்டு கட்டினர். பீமன் திமிறினான். அவனை ஒரு படகில் ஏற்றி, கங்கையின் நடுவே தள்ளிவிட்டனர். பீமனாவது, இதற்கெல்லாம் மசிவதாவது! தண்ணீரில் மூழ்கியவன், ஏதோ சந்தோஷமாகக் குளிப்பவன் போல தலையை இங்கும் அங்கும் அசைத்தான். தன் பலத்தை ஒன்றுதிரட்டி கையை உதறினான். காட்டுக்கொடி போன இடம் தெரியவில்லை. ஒரே மூச்சில் வெளியே வந்தான். கர்ணனும், துரியோதனனும் அரண்மனைக்குத் திரும்பினர். அவர்கள் வருவதற்கு முன்பே, அரண்மனை சிம்மாசனத்தில் குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருந்தான். ஆசாமிகள் இருவருக்கும் கடும் அதிர்ச்சி! இவனை தண்ணீரீல் வீசினால், நாம் திரும்புவதற்குள் இவன் வந்து விட்டானே. ஏ கர்ணா! இவன் கண்ணில் படாதே. பட்டால், இந்த இடத்திலேயே அடிப்பான். இங்கே வந்தால், நாம் 101 பேரும் சேர்ந்து தான் வரவேண்டும் புரிகிறதா? என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

மறுநாள் பீமனுடன் சமாதானம் செய்வது போல் நடித்துக்கொண்டான். பீமா! நீ எவ்வளவு பலசாலி என்பதை நேற்றே தெரிந்து கொண்டேன். வா! இன்றும் விளையாடப் போகலாம், என்று அழைத்தான். பீமனும் கிளம்பிவிட்டான். அவனுக்குத் தெரியும்! துரியோதனன் ஏதோ சதித்திட்டத்துடன் தான் அழைக்கிறான் என்று! அன்றும் கங்கையில் தான் விளையாட்டு. தண்ணீர் அலைகளை வாரி இறைத்துக்கொண்டு மின்னலென போய்க் கொண்டிருந்தது. முதலில் துரியோதனன் கங்கையில் குதித்து நீராடினான். பீமா! நீ இந்த இடத்தில் குதி, என ஓரிடத்தை நோக்கி கையைக் காட்டினான். பீமனின் கண்கள் ஆழ்ந்த பார்வை கொண்டவை. துரியோதனன் குதிக்க சொன்ன இடத்தில் ஏதோ நீட்டிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. மேற்பகுதியில் ஏதோ வண்டு போலவும் இருந்தது. ஆராய்ந்து பார்த்ததில் அத்தனையும் ஈட்டிகள் என்பதும், பீமன் குதித்ததும் அவை அவனை குத்திக்கிழிப்பது போலவும் நேராக நடப்பட்டிருந்தன. பீமன் சுதாரித்து விட்டான்.

எந்த இடம் வரை ஈட்டிகள் நடப்பட்டிருந்ததோ, அதைத் தாண்டி குதித்து, ஒன்றுமே தெரியாதவன் போல கரையேறி விட்டான். துரியோதனின் இந்த திட்டமும் வீணானது. துரியோதனன் துடிதுடித்தான். இவனுக்கு இதெல்லாம் சரி வராது. இந்தப்பயலைக் கொல்ல ஒரே வழி சாப்பாடு தான். இவனோ சாப்பாட்டு ராமன். சாப்பாட்டில் விஷம் கலந்து விட்டால், இஷ்டத்துக்கு அள்ளித்தின்று எமலோகம் போய்விடுவான் என திட்டமிட்டான். நினைத்தது போலவே நடத்தியும் காட்டினான். உணவில் விஷம் கலந்தது தெரியாமல், பீமன் அத்தனையையும் சாப்பிட்டான். அவனது கண்கள் சுழன்றன.

பீமன் மயங்கி விட்டான். இனி அவன் இறப்பது உறுதி என முடிவு செய்த துரியோதனனுக்கு உள்ளத்தில் திடீரென சந்தேகம் ஏற்பட்டது. யாராவது இவனைப் பார்த்து காப்பாற்றிவிட்டால்.... சந்தேகம் பெரிய வியாதி. அது இருப்பவன் எதிலும் திடமான முடிவெடுக்க முடியாது. அந்த சந்தேகம் அவர்களையே அழித்து விடும். துரியோதனன் என்ற இந்த சந்தேகப்பேர்வழி என்ன செய்தான் தெரியுமா? மயக்கமடைந்த பீமனை கயிறால் கட்டி, மீண்டும் கங்கையில் தூக்கி வீசிவிட்டான். மயக்கமடைந்து விட்ட பீமன், தண்ணீரின் அடிக்கே போய் விட்டான். அவன் போன இடத்தின் அடிப்பாகம் மிகப்பெரிய துவாரமாக இருந்தது. அந்த துவாரத்தினுள் புகுந்து விட்ட அவனை அங்கிருந்த நாகங்கள் கடித்தன.

அதனால் நிலைமை எதிர்மறையானது. நாகங்கள் கக்கிய கடும் விஷம், ஏற்கனவே அவனது உடலில் இருந்த விஷத்தை முறிக்கவே, அவன் மயக்கம் தெளிந்தான். தண்ணீரின் அடியில் கிடப்பதைப் பார்த்து சுதாரித்துக் கொண்டான். தன்னைச் சுற்றிலும் கிடந்த நாகங்களைப் பிடித்து விளையாட ஆரம்பித்து விட்டான். நாகங்கள் அந்த பலசாலியைக் கண்டு நடுங்கின. சில நாகங்கள் ஓடிப்போய் தங்கள் தலைவனிடம் விஷயத்தைக் கூறின. நாகராஜன் விரைந்து வந்தான். வந்திருப்பது பீமன் என்பது அவனுக்குத் தெரியும். அவனது பெயர் வாசுகி. பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது, மேருமலைக்கு மத்தாக இருந்தவன் இந்த வாசுகி. அதற்குப் பரிசாக அமுதத்தை குடம் குடமாகப் பெற்றிருந்தான். அதை கங்கைக்குள் இருக்கும் தன் சாம்ராஜ்யத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தான்.

கங்கையில் அப்படி என்ன விசேஷம் என்பவர்கள் இந்த இடத்தை உற்றுக்கவனிக்க வேண்டும். அமுதம் ஆயுளை அதிகரிக்கக் கூடியது. சாகாவரம் தருவது. தேவர்கள் சாகாமல் இருப்பார்கள். மனிதர்களுக்கு அது கிடைத்தால், தீர்க்காயுளுடன் வாழ்வதுடன், அதன்பின் பிறப்பற்ற நிலையடைந்து பரமானந்தம் பெறுவார்கள். அதனால் தான் கங்கையில் ஒரு தடவையாவது நீராடி விட வேண்டும் என துடிக்கிறார்கள் பக்தர்கள். வாசுகி, பீமனின் பலம் பற்றி அறிந்தவன். அவன் நினைத்தால் தங்கள் இனத்தையே நசுக்கி விடுவான் என அவனுக்குத் தெரியும். அவன் தன் லோகத்துக்கு அவனை அழைத்துச் சென்று குடம் குடமாக அமுதம் கொடுத்து உபசரித்தான். இதைக் குடித்ததால், பீமனின் மேனி ஒளிபெற்றது. அவன் தீர்க்காயுளுடன் வாழும் வரத்தை பெற்று விட்டான். அழிக்க நினைத்து ஆற்றுக்குள் வீசப்பட்டவன் இங்கே ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். வாசுகி அவனை எட்டு நாட்கள் தன்னுடன் தங்க வைத்தான்.

சாப்பிடப் போன பிள்ளை திரும்பவில்லை என்றதும், குந்தி கவலையடைந்தாள். நாட்கள் அதிகமாகவே அழ ஆரம்பித்து விட்டாள். விதுரர் அவளைத் தேற்றினார். அண்ணன் தர்மரும், மற்ற தம்பிகளும் காடு, ஆற்றங்கரை என எங்கெல்லாமோ சுற்றிப்பார்த்து ஆளைக் காணாமல் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தனர். அம்மாவோ பீமன் இல்லாமல் யாரும் வீட்டுப்பக்கம் வரக்கூடாது என விரட்டி விட்டாள். துரியோதனனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம், நாள் எட்டைக் கடந்து விட்டதால். எதுவுமே தெரியாதவன் போல, அவனும் நல்லவன் போல், பீமனைத் தேட ஆரம்பித்தான். அவன் முகத்தை வைத்தே, அவன் தான் பீமனுக்கு தீங்கிழைத்து விட்டான் என்பதை பாண்டவர்கள் புரிந்து கொண்டனர். இருந்தாலும் கேட்க முடியாத நிலை.

இந்நிலையில் குந்தி பிள்ளையை காணாமல் சாப்பிட மறுத்து விட்டாள். பீஷ்மருக்கு தெரிந்து விட்டது. பீமன் பத்திரமாக நாகலோகத்தில் இருக்கிறான் என்று. ஏனெனில், அவர் முக்காலமும் அறிந்த ஞானி. இருந்தாலும், இதை வெளியிடவில்லை. பிற்காலத்தில் அவன் நிகழ்த்தப்போகும் அற்புதங்களுக்கு அவனுக்கு நாகலோகத்தில் கிடைக்கும் அமிர்தமே பலம் என்பதை அவர் அறியாதவரா என்ன! குந்தி! கவலைப்படாதே, பீமன் வந்து விடுவான், என தேற்றினார். இக்காலத்தில் கோயில்களில் சாமியாடி குறி சொல்கிறார்கள் இல்லையா? அந்த வழக்கம் அப்போதும் இருந்தது. அரண்மனையில் உள்ள சில சாமியாடுபவர்கள், ஆட்டம் போட்டு, பீமன் வருவான் என்று குறி சொன்னார்கள்.

இருந்தாலும், பெற்ற மனம் பிள்ளையைக் காணாமல் தவித்தது. அது சரி...கங்கையில் மூழ்கியவனுக்கு மூச்சு அடைக்காதா! அவன் எப்படி தண்ணீருக்குள் அப்படி கிடக்க முடிந்தது, என்றும் நீங்கள் கேட்பீர்கள். பீமன் யாருடைய மகன்? வாயு பகவானின் மகனல்லவா! பிறகென்ன கவலை! காற்றின் மைந்தனை அந்த காற்றே கொல்லுமா? அதனால் அவன் அனாயசமாகத் தண்ணீரில் கிடந்தான். எட்டுநாள் கழிந்ததும், பல வலிமை மிக்க நாகங்களை அழைத்த வாசுகி, பீமனை மேற்பரப்பு வரை சுமந்து சென்று கொண்டுவிட உத்தரவிட்டான். பீமன் அவனிடம் விடைபெற்று, மேலே வந்து சேர்ந்தான். அம்மா தன்னைத் தேடி அழுவாள் என்று அவனுக்குத் தெரியும். ஒரு தாய்க்கு தான் பெற்ற எல்லா குழந்தைகளையுமே பிடிக்கும். அதிலும், அதிகமாகச் சமர்த்தாக சாப்பிடும் பிள்ளைகளை ரொம்பவே பிடிக்கும்.

சில பிள்ளைகள் எனக்கு அவியல் வேண்டாம், எனக்கு சாம்பார் பிடிக்காது, எனக்கு தேங்காய் சட்னி பிடிக்காது, எனக்கு சப்பாத்தி ஒத்துவராது என அடம்பிடிப்பார்கள். இவர்களை சமாதானம் செய்து சாப்பிட வைப்பதற்குள் அம்மாவுக்கு போதும் போதுமென்றாகி விடும். நம்ம பீமன் இருக்கிறானே! அவன் அப்படிப்பட்ட ரகம் கிடையாது. என்ன கொடுத்தாலும் சரி... ஐம்பது, நூறு என வயிற்றுக்குள் அடுக்கி விடுவான். அப்படிப்பட்ட சமர்த்து பிள்ளையைத் தாய் மனம் தேடாதா என்ன! அவன் வேகமாக வந்தான். அம்மாவின் பாதத்தில் விழுந்தான். மற்ற பிள்ளைகள் என்றால் என்ன சொல்வார்கள்? அம்மா! அவன் என்னை ஆற்றுக்குள் பிடித்து தள்ளி விட்டான். அவன் பள்ளிக்கூடத்தில் என்னை கிள்ளி விட்டான், என்று. பீமன் தன் தம்பி அண்ணன் துரியோதனனைக் காட்டிக் கொடுக்கவில்லை. அங்கு போனேன், இங்கு போனேன் என சமாளித்து விட்டான். எப்படியோ, மகன் வந்தானே...என்று குந்தியும் மகிழ்ந்து போனாள்.

துரியோதனனுக்கு கடும் அதிர்ச்சி. இவனுக்கு விஷம் கொடுத்தோம். சாகாவிட்டாலும் பரவாயில்லை. விஷம் தாக்கி கருப்பாகவாவது மாறியிருக்கிறானா? சூரியனைப் போல் செக்கச்செவேலென மின்னுகிறானே! இவன் எப்படி பிழைத்திருக்க முடியும்? என்ன நடந்தது... அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படி சகோதரர்களுக்கு இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்க, தன் பேரக் குழந்தைகளுக்கு வித்தை கற்றுக் கொடுக்க ஆசாரியர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார் தாத்தா பீஷ்மர். கிருபாச்சாரியார் என்பவர் அரண்மனையில் ஏற்கனவே குருவாக இருந்தார். இவர் சாதாரணப்பட்டவர் அல்ல. தவத்தில் சிறந்த கவுதம முனிவரின் பேரன். இவரது தந்தையின் பெயர் சரத்துவான்.

சிறந்த வில்வித்தையாளர். இவரிடம் 105 பேரும் வில்வித்தையை சரளமாகக் கற்றனர். இன்னும் மற்போர், போரில் வியூகம் அமைக்கும் முறை என பல கலைகளையும் கற்றுத்தந்தார் கிருபர். கிருபாச்சாரியாருக்கு ஒரு தங்கை உண்டு. பெயர் கிருபி. இவரைத் துரோணர் என்னும் பெரும் வில்வித்தையாளருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். துரோணர் ஆங்கிரஸ முனிவரின் குலத்தில் தோன்றியவர். ஆங்கிரஸரின் வம்சாவளியில் வந்த பரத்துவாஜ முனிவர், ஒருமுறை கங்கா தீரத்தில் நீராடிக் கொண்டிருந்த போது, தேவகன்னிகையான மேனகையைக் கண்டார். அவளைப் பார்த்தவுடனேயே தவம் மறந்து உடலில் கிளர்ச்சி ஏற்பட்டது. தன் மோகத்தை ஒரு கலசத்தில் செலுத்தினார். அந்த கலசத்தில் இருந்து ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையே துரோணர். ரிஷிகளுக்கு அக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சக்தி இருந்திருக்கிறது.

துரோணரின் இளமைக்கால வரலாறை இந்த இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கிவேச முனிவர் என்பவரிடம் பரத்வாஜர் தன் இளம் மகன் துரோணனை பாடம் கற்க அனுப்பி வைத்தார். அங்கிவேசரின் குருகுலத்தில் தங்கிப் படித்த போது துரோணனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். அவன் பாஞ்சால தேசத்து அரசன் பிருஷதனின் மகன். பெயர் யாகசேனன். இவனை துருபதன் என்று பட்டப்பெயரிட்டு அழைப்பார்கள். அப்பெயரே அவனுக்கு கடைசி வரை நிலைத்தது. நட்பென்றால் அப்படி ஒரு நட்பு. நகமும் சதையும் போல் பிரியாமல் இருவரும் சுற்றித்திரிவார்கள் இந்த சிறுவர்கள். குருகுல படிப்பு முடிந்து அவரவர் இடத்திற்கு திரும்பும்நாளில் நண்பர்கள் இருவரும் மிகவும் வருத்தப்பட்டனர்.

துருபதன் தன் நண்பன் துரோணனை அணைத்தபடி, துரோணா, நீ எப்போது வேண்டுமானாலும் என்னைப் பார்க்க பாஞ்சால தேசத்திற்கு (இன்றைய பஞ்சாப்)வரலாம். என் தந்தையின் ஆட்சிக்காலத்திற்கு பிறகு நான் அரசன் ஆவேன். அப்போது, என் நாட்டில் பாதியை உனக்குத்தந்து உன்னையும் அரசனாக்குவேன். இது சத்தியம், என்றான். நண்பனின் உபசார வார்த்தைகள் கேட்டு துரோணன் நெகிழந்து போனான். இப்படியாக காலம் கழிந்து விட்டது. கிருபி துரோணருக்கு மனைவியானாள். அவர்களுக்கு சிவபெருமானின் பேரருளால் அஸ்வாத்தாமன் என்ற மகன் பிறந்தான். பிறந்தது கடவுளின் அருளால் என்றாலும் கூட, பிராமணரான துரோணரால் மகனை வளர்க்கும் அளவுக்கு சம்பாதிக்க இயலவில்லை. தவம், யாகம், பூஜை என சுற்றிக் கொண்டிருந்த அவர், பாலுக்காக ஏங்கியழும் மகனைக் கண்டு வருத்தப்படுவார். கிருபி அதை விட நூறு மடங்கு வருந்துவாள். ஐந்து வயது வரை அந்தக் குழந்தை எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை.

ஒருநாள் நண்பன் துருபதனின் ஞாபகம் துரோணருக்கு வந்தது. இளம்வயதில் அவன் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வரவே, பாஞ்சால தேசம் நோக்கி புறப்பட்டார் அவர். இப்போது துருபதன் பாஞ்சால தேசத்தின் மன்னனாக இருந்தான். நண்பனிடம் நாடு கேட்பதற்காக அவர் போகவில்லை. ஒரு பசுவை வாங்கி வந்தால், குழந்தை பசித்து அழும்போது பாலாவது கொடுக்கலாமே என்ற எண்ணத்துடன் புறப்பட்டார். அரண்மனைக்குச் சென்று துருபதனைச் சந்தித்தார். நீண்ட காலத்திற்கு பிறகு பார்க்க வருவதால், நண்பன் ஓடோடி வந்து அணைத்துக் கொள்வான் என நம்பிச் சென்றார் துரோணர். அரண்மனைக்குள் சென்றதும், துருபதன் அவரைப் பார்த்தான். அவன் கேட்ட முதல் கேள்வியே துரோணரின் நெஞ்சில் அம்பாய்ப் பாய்ந்தது. அந்தக் கேள்வி என்ன தெரியுமா? நீ யார்? என்பது தான். நீண்ட நாளாகி விட்டதால் அவன் தன்னை மறந்திருப்பானோ என்று, நண்பா! நான் துரோணன்... என்று இழுக்கவே, எந்த துரோணன்? என்று துருபதன் பதில் கேள்வி கேட்கவும் நொந்து நைந்து விட்டார் துரோணர். அப்போது ஜாதி துவேஷத்தைக் கிளப்பினான் துருபதன். நீ ஜாதியில் பிராமணன் என்பது உன்னைப் பார்த்ததுமே தெரிகிறது. நான் க்ஷத்திரியன்.

உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? என்றான். இதன் மூலம் தான் ஒரு மன்னன் என்றும், துரோணர் ஏழை அந்தணன் என்றும் குத்திக்காட்டினான். அடுத்து அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பரிகாசச் சொல்லாய் அமைந்தது. கேவலம் பசி தீர்க்க இவனிடம் உதவி கேட்க வரப்போய் நிலைமை இப்படியாகி விட்டதே! துரோணரின் உடல் கூனிக்குறுகியது. அதுவே ஆவேசமாக பொங்கி எழ, அட நம்பிக்கைத் துரோகியே! நீ எனக்கு இளம்வயதில் நாடு தருவதாகச் சொன்னாய். நான் ஒரு பசுவை யாசகமாக கேட்க வந்தேன். என் ஏழ்மையை பரிகசித்தாய். இப்போது சொல்கிறேன் கேள். நான் உன் நாட்டில் பாதியை நீ சொன்னபடி நிச்சயமாக அடைவேன். உன்னுடன் போர் செய்வேன். உன்னைத் தோற்கடித்து தேர்க்காலில் கட்டி தெருத்தெருவாக இழுத்துச் செல்வேன். இது சத்தியம், என்று சபதம் செய்தார். அப்போது பல நாட்டு அரசர்கள் அவையில் இருந்தனர். துரோணரின் கர்ஜனை அவர்களை அசர வைத்தது. துருபதனின் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டார்.




Share



Was this helpful?