இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மகாபாரதம் - 1

Mahabharata is one of the two major Sanskrit epics of ancient India, the other being the Ramayana. The Mahabharata is an extensive and complex narrative that encompasses mythology, history, philosophy, and religion, offering deep insights into human nature, morality, and dharma (righteousness).


மகாபாரதம்

கதைக்குள் செல்லும் முன்...

மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு கதாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக இந்த காவியத்தில் இணைத்துக் கொண்ட பெருமை பெற்றது. ஆம்... மகாபாரதத்தின் முக்கியஸ்தர்களான பாண்டுவும், திருதராஷ்டிரனும், விதுரனும் இவருக்குப் பிறந்தவர்களே. தேவமொழி என வர்ணிக்கப்படும் சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர்.

அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார். மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது உறுதி.

ராமபிரான் சூரியவம்சத்தில் அவதரித்தது போல, பஞ்ச பாண்டவர்கள் சந்திர குலத்தில் பிறந்தவர்கள். பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த போது, தோன்றியவன் சந்திரன். 14 கலைகளைக் கொண்ட இவன், தினமும் ஒன்றாக சூரியனுக்கு கொடுப்பான். திரும்பவும் அதை வாங்கிக் கொள்வான். சுட்டெரிக்கும் சூரியன், இவனிடம் பெறும் கலையால் குளிர்ந்து தான் உலகத்தை எரிக்காமல் வைத்திருக்கிறான். இவன் தாரை என்பவளைத் திருமணம் செய்து பெற்ற மகனே புதன். ஒரு முறை மநு என்ற அரசனின் மகனான இளை என்பவன் காட்டுக்கு வேட்டையாட வந்தான்.

இந்தக் காட்டின் ஒரு பகுதியிலுள்ள குளத்தில், ஒருசமயம் சிவபெருமானின் மனைவியான பார்வதி நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஆடவர் சிலர், அவள் குளிக்கும் அழகை ரசித்தனர். கோபமடைந்த பார்வதி அவர்களைப் பெண்ணாகும்படியும், இனி அந்த ஏரிப்பகுதிக்குள் யார் நுழைகிறார்களோ, அவர்கள் பெண்ணாக மாறுவர் என்றும் சபித்துவிட்டாள். அவள் பூவுலகை விட்டு, சிவலோகம் சென்ற பிறகும் கூட அந்த சாபம் மாறவில்லை. இதையறியாத இளன் அந்த ஏரிப்பகுதிக்குள் நுழைந்தானோ இல்லையோ, பெண்ணாக மாறி விட்டான்.

அவள் வருத்தத்துடன் இருந்த வேளையில், அழகுப் பதுமையாக இருந்த அவளை அங்கு வந்த புதன் பார்த்தான். அவளது கதையைக் கேட்ட புதன், அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு இளை என்ற பெயர் ஏற்பட்டது. புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்ற மகன் பிறந்தான். புரூரவஸ் வாலிபன் ஆனான். அழகில் அவனுக்கு இணை யாருமில்லை. ஒருமுறை வான்வெளியில் ஒரு பெண்ணை சில அசுரர்கள் கடத்திச் செல்வதைப் பார்த்தான். அவள் தன் மானத்தைக் காத்துக் கொள்ள கதறினாள். பறக்கும் தேர் வைத்திருந்த புரூரவஸ், அவளைக் காப்பாற்றுவதற்காக மின்னல் வேகத்தில் விண்வெளியில் பறந்து சென்றான். அசுரர்களை எதிர்த்து உக்கிரத்துடன் போரிட்டான்.

அசுரர்கள் அவனது தாக்குதலை தாங்க முடியாமல், ஓடிவிட்டனர். அப்பெண்ணை பார்த்தான். அப்படி ஒரு அழகு... கண்ணே! நீ தேவலோகத்து ஊர்வசியோ? என்றான். அவள் வெட்கத்துடன் தலை குனிந்து, நான் நிஜமாகவே ஊர்வசி தான். என் மானம் காத்த நீங்களே எனக்கு இனி என்றும் பாதுகாவலாக இருக்க வேண்டும், என்றான். ஊர்வசியே தனக்கு மனைவியாகப் போகிறாள் என்று மகிழ்ந்த புரூரவஸ், அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவர்களது இனிய இல்லறத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

ஆயு என்று அவனுக்குப் பெயரிட்டனர். இப்படியாக சந்திர வம்சம் பூமியில் பெருகியபடி இருந்தது. ஆயுவிற்கு நஹுஷன் என்ற மகன் பிறந்தான். இவன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து தேவலோகத்தையே பிடித்துக் கொண்டவன். தேவலோக மன்னனான இந்திரனை விரட்டிவிட்டு, அரசனாகி விட்டான். அதிகார மமதையுடன், காம போதையும் சேர, இந்திரலோகத்தை ஜெயித்ததால், இந்திரனின் மனைவியான இந்திராணியும் தனக்கே சொந்தம் என அவளை ஒரு அறையில் அடைத்து விட்டான். இந்திராணியோ அவனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டாள். ஒருநாள் போதை உச்சிக்கேற, அவளை வலுக்கட்டாயமாக அடைவதற்காக தன் பல்லக்கில் ஏறி புறப்பட்டான் நஹுஷன். பல்லக்கை சுமக்கும்படி முனிவர்களை மிரட்டினான்.

முனிவர்களும் தூக்கிச் சென்றனர். அந்த முனிவர்களில் ஒருவர் அகத்தியர். அவர் குள்ளமாக இருந்ததால், மற்றவர்களைப் போல் வேகமாகச் செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நஹுஷன், ஓய்! மற்றவர்கள் வேகமாகச் செல்லும் போது, உமக்கு மட்டும் என்னவாம்! என்று, முதுகில் ஓங்கி மிதித்தான். அகத்தியர் மகாதபஸ்வியல்லவா! அவருக்கு கோபம் வந்து விட்டது. சிறுவனே! அதிகார மமதை, காமபோதைக்கு ஆட்பட்டு, தபஸ்விகளை துன்புறுத்தினாய். மேலும், வயதில் பெரியவர்களை மதியாமல், காலால் மிதித்தாய். எனவே நீ பாம்பாகப் போ, என சாபமிட்டார். அவன் பாம்பாக மாறி, தேவலோகத்தில் இருந்து பூமியில் விழுந்தான்.

நஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். இவனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால், இவனுக்கு கோபமே வராது. இவனது பொறுமையை வியாசரே பாராட்டினாராம். இந்த பொறுமைசாலிக்கு, அசுரகுரு சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயானையைத் திருமணம் செய்து வைத்தார். அந்த தம்பதியர் இனிதே நடத்திய இல்லறத்தில், யது, துருவஸ் என்ற மகன்கள் பிறந்தனர். பொறுமைசாலியான யயாதிக்கும் இறைவன் சோதனையை கொடுத்தான். ஒருநாள், அசுரகுல மன்னனான விருஷவர்பனை அவர்களின் குலகுரு சுக்ராச்சாரியார் அழைத்தார். விருஷா! என் மகள் தேவயானையை யயாதிக்கு திருமணம் செய்து வைத்துள்ளதை நீ அறிவாய். கணவன் இல்லாத நேரத்தில் அவளுக்கு உற்ற துணை யாருமில்லை.

எனவே, உன் மகள் சன்மிஷ்டை தேவயானையுடன் அரண்மனையில் தங்கட்டும். தேவயானையும், அவளும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர். தோழிகளாகவும் விளங்குவர், என்றார். விருஷவர்பன் குலகுருவின் கட்டளைக்கு அடிபணிந்தான். உடனடியாக சன்மிஷ்டையை தேவயானையின் வீட்டில் கொண்டு சேர்த்தான். அவர்கள் உற்ற தோழிகளாயினர். இந்நேரத்தில் அரசாங்க பணியாக வெளியூர் சென்றிருந்த யயாதி வந்து சேர்ந்தான். தன் அரண்மனையில் ஒரு அழகுச்சிலை நடமாடுவதைக் கண்ட மன்னன் அவளை யாரென்று விசாரித்து தெரிந்து கொண்டான். தோழியின் கணவன் என்ற முறையில், சன்மிஷ்டை யயாதியுடன் அடிக்கடி பேசுவாள். யயாதி பொறுமைசாலி தான்! ஆனால், உணர்வுகள் இல்லாதவன் இல்லையே! தன் மனைவியை விட பேரழகு மிக்க சன்மிஷ்டையை அவன் காதலிக்க ஆரம்பித்தான். சன்மிஷ்டையும், அந்த பேரரசனின் வலையில் விழுந்து விட்டாள். இந்த விஷயம் தேவயானைக்குத் தெரியாது.

காதலர்கள் தனிமையில் சந்தித்தனர். தாலி கட்டி மனைவியாக்கினால், தேவயானைக்குத் தெரிந்து விடும். எனவே, அவளை கந்தர்வ மணம் (மானசீகமாக திருமணம் செய்தல்) செய்து கொண்டான். பிறகென்ன! தம்பதியர் ஒளிவாக வாழ்ந்தனர். ஆனால், காலம் சும்மா இருக்குமா! சன்மிஷ்டை கர்ப்பவதியாகி விட்டாள். பின்னர் தேவயானையை விட்டு பிரிந்து சென்று விட்டாள். அவள் தனி மாளிகை ஒன்றில் குடி வைத்தான் யயாதி. இப்படியாக பல ஆண்டுகள் ஓடிவிட்டன. பூரு, த்ருஹ்யு, அநு என்ற மகன்களைப் பெற்றாள். மூன்று குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் யயாதி தன் முதல் மனைவியிடம் மாட்டி கொள்ளாமல் தான் இருந்தான். ஒருநாள் தந்தையைத் தேடி குழந்தைகள் அரண்மனைக்கு வந்து விட்டனர்.

அவர்கள் தேவயானையின் கண்ணில் பட்டனர். மூவருமே, யயாதியை அச்சில் வார்த்தது போல் இருக்கவே, சந்தேகப்பட்ட தேவயானை இதுபற்றி விசாரித்தாள். சன்மிஷ்டையும், யயாதியும் தனக்கு துரோகம் செய்துவிட்டனர் என்பது புரிந்து விட்டது. அவள் யயாதியுடன் கடுமையாக சண்டை போட்டாள். அழுது புலம்பினாள். மாமன்னரே! நீர் பொறுமைசாலி என்றும், அமைதியானவர் என்றும் பெயர் பெற்றிருந்தீர். உம் அமைதியின் பொருள் இப்போது தானே எனக்கு விளங்குகிறது! வளவளவென பேசுபவர்களை நம்பலாம். வாய்மூடி மவுனிகளை நம்பவே கூடாது என்ற உலக வழக்குச்சொல் உண்மை என நிரூபித்து விட்டீர். இனி உம்மோடு வாழமாட்டேன். என் தந்தை வீட்டுக்குச் செல்கிறேன். சுக்ராச்சாரியார் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறேன், என சபதம் செய்து விட்டு, அவனைப் பிரிந்து விட்டாள். தனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பது யயாதிக்கு தெரிந்து விட்டது. அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த தேவயானை, தகப்பனாரிடம் நடந்ததையெல்லாம் சொல்லி அழுதாள். பெற்ற மகள் கண்ணீர் வடித்தாலும், போம்மா! ஏதோ நடந்து விட்டது.

கட்டியவன் தான் உனக்கு புகல், என்று கூறும் சாதாரண தந்தையா சுக்ராச்சாரியார். அசுரர்களுக்கே அவர் குருவல்லவா! அதிகாரம் மிக்க அவர், யயாதியை தன் வீட்டுக்கே வரச்சொன்னார்.துரோகி! உன்னிடம் இளமை இருக்கும் தைரியத்தில் தானே இப்படி காதல் நாடகம் நடத்தினாய். இனியும், உன்னை விட்டு வைத்தால், என் மகளை போல பல அபலைகளை உருவாக்கி விடுவாய். சன்மிஷ்டை மீது நீ கொண்டது காதல் அல்ல! காமம். அதனால் தானே மூன்று குழந்தைகள் பெறும் வரை இதை மறைத்து வைத்திருந்தாய்! கொடியவனே! உனக்கு இளமை இருக்கும் தைரியத்தில் தானே இப்படி செய்தாய். ஒழியட்டும் உன் இளமை. இனி நீ கிழவனாக பூமியில் வலம் வா! உன்னைப் பார்ப்பவர்கள் காமத்தால் அறிவிழந்த துரோகி என தூற்றட்டும், என்றார். யயாதி உடனடியாக கிழவனானான். அசுரகுருவே! தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

உங்கள் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறேன். தேவயானைக்கு நான் அநீதி இழைத்து விட்டேன். எனக்கு தாங்கள் சாபவிமோசனம் அளியுங்கள், என அவர் காலில் விழுந்தான்.யயாதி! நீ மீண்டும் இளமையைப் பெற ஒரே ஒருவழிதான் இருக்கிறது. உன் முதுமையை ஒரு இளைஞனுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு, அவனுடைய இளமையை நீ வாங்கிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு வழியில்லை, என சொல்லி விட்டான். தேவயானை அவனுடன் வர மறுத்து விட்டாள்.அவன் வருத்தத்துடன் சன்மிஷ்டையிடமே சென்றான். அவள் யயாதியைக் கண்டு அதிர்ந்தாள்.யயாதி பலரிடமும் இளமையை யாசித்தான். யார் தருவார்கள்? அவன் கண்ணீர் வடித்த போது, ஒரு இளைஞன் அவன் முன்னால் வந்து நின்றான்.

வந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்!அப்பா! தாங்கள் அழ வேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கு உதவுவதற்கு இந்த மகன் எப்போதுமே தயாராக இருக்கிறான். சொல்லுங்கள்! நான் என்ன செய்ய வேண்டும்? என்றான். அன்பு மகனே! ஒரு தந்தை மகனிடம் யாசிக்கக் கூடாத ஒன்றை யாசிக்கிறேன். இந்த உலகத்திலேயே கொடூரமான வியாதி பெண்ணாசை. அது என்னிடம் அதிகமாகவே இருக்கிறது. உன் பெரிய அன்னையான தேவயானையை மணம் முடித்திருந்தும் கூட, அவளது தோழியான உன் அன்னை மீதும் ஆசைப்பட்டேன். மன்னர் குலத்துக்கு இது தர்மம் தான் என்றாலும், பெரியவள் கோபித்துக் கொண்டு போய் விட்டாள். என் மாமனார் சுக்ராச்சாரியார் என் இளமையைப் பறித்து விட்டார்.

உடல்தான் முதுமை அடைந்துள்ளதே தவிர, மனதில் இளமை உணர்வு அகல மறுக்கிறது. இந்த நோயில் இருந்து விடுதலை வேண்டுமானால், எனக்கு இளமை மீண்டும் வேண்டும். இளமை திரும்பினால் தான், உன் தாய் என்னை அருகே அனுமதிப்பாள், என்றான் கண்ணீர் வடித்து.தந்தையின் நிலைமைமகனுக்கு புரிந்தது. அவன் தந்தையைக் கட்டியணைத்தான். அருமைத் தந்தையே! தாங்கள் மட்டுமல்ல. இளமை சற்றும் மாறாத லோகத்திலேயே ரூபவதியான என் தாய்க்கும் பெற்ற கடனைத் தீர்க்க நேரம் வந்திருக்கிறது. நான் உங்கள் முதுமையை ஏற்கிறேன். என் இளமையை உங்களுக்கு தருகிறேன். சுக்ராச்சாரியார் சொன்னபடி சாப விமோசனம் பெற்று, என் அன்னையோடு சுகமாக வாழுங்கள். என்று உங்களுக்கு என் இளமையைத் திருப்பித் தர முடியுமோ அன்று தாருங்கள், என்றான்.

மகனைப் பாராட்டிய மன்னன், அவனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டான். பதிலாக தன் மனைவியோடு காலம் கழிப்பதில் மட்டுமே அவன் கவனம் செலுத்தினான். ஒரு கட்டத்தில், ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகனிடம் இளமையைக் கொடுத்து விட்டு முதுமையைப் பெற்றுக் கொண்டான்.இப்படியாக சந்திரவம்சம் தியாக வம்சமாகத் திகழ்ந்தது. பூருவின் வம்சம் விருத்தியாகிக் கொண்டே வந்தது. இவர்களின் பரதன் என்ற மன்னன், மண்ணுலகில் மட்டுமின்றி, விண்ணுலகிலும் வெற்றிக்கொடி நாட்டினான். இந்த வம்சத்தில் வந்த மற்றொரு மன்னனான ஹஸ்தியின் ஆட்சிக்காலம் தான் சந்திர வம்சத்தின் முக்கிய காலம். இவன் தன் பெயரால் ஒரு பட்டணத்தை அமைத்து, அதை தன் நாட்டுக்கு தலைநகர் ஆக்கினான். அவ்வூரே ஹஸ்தினாபுரம் எனப்பட்டது.

ஒரு காலத்தில் கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து காப்பாற்ற திருமால் கருட வாகனத்தில் வந்தார். அந்த யானை, இந்திரத்யுநன் என்ற பெயரிலும், முதலை அநுரு என்ற பெயரிலும் பூமியில் மாமன்னர்களாகப் பிறந்தனர். அவர்களும் சந்திரகுலத்து அரசர்களே. இதன் பின் குரு என்ற மன்னன் பொறுப்பேற்றான். இவன் மிகச்சிறப்பாக ஆட்சி செய்ததால், சந்திரகுலம் என்ற பெயர் மறைந்து குரு குலம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டது.குருகுலத்தில் பிறந்த மன்னன் சந்தனு பேரழகன். வேட்டையாடுவதில் விருப்பமுள்ளவன். ஒருமுறை காட்டில் தாகத்தால் தவித்தவன், குதிரையில் வேகமாக கங்கைக்கரைக்குச் சென்றான். கரையில் ஒரு பெண் ஒய்யாரமாக நடந்து கொண்டிருந்தாள். தண்ணீர் அருந்த வந்த சந்தனு, தாகத்தை மறந்தான். பதிலாக தாபம் அவனைத் தொற்றிக் கொண்டது.

ஆஹா...இப்படி ஒரு பேரழகியா? மணந்தால் இவளைத் தான் மணக்க வேண்டும். இவள் எந்த நாட்டு இளவரசி? இவளைப் பெண் கேட்க வேண்டுமே! என்ற வேட்கை உந்தித்தள்ள, சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே யாருமில்லை. துணிச்சலுடன் அவளருகே சென்றான். அழகுப்பெண்ணே! நீ யார்? யாருமில்லாத இந்த இடத்தில் தனியாகத் திரிகிறாயே! உன் அழகுக்கு உன்னை யாராவது அபகரித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வாய்? உன் இருப்பிடத்தைச் சொல். உன்னைப் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கிறேன், என்றான். அவள் கலகலவென நகைத்தாள். மங்கையர் திலகமே! உன் நன்மை கருதி தான் எச்சரிக்கிறேன். நீயோ கேலி செய்வது போல நகைக்கிறாயே! இருந்தாலும், முத்துகள் சிதறுவது போல், அந்த நகைப்பும் இனிமையாகத்தான் இருக்கிறது! என்று கண் சிமிட்டினான். அவள் திரும்பவும் நகைத்தபடியே, இளைஞனே! எனக்கு பயமா? இன்று நள்ளிரவில் நீ இங்கே இரு. நீ பயப்படுகிறாயா? நான் பயப்படுகிறேனா என்பது உனக்குப் புரியும். இரவும், பகலுமாய் நான் இங்கே தான் இருக்கிறேன். இனியும் இருப்பேன்.

இந்த பூமி உள்ளளவும் இருப்பேன். இன்னும் பல யுகங்கள் இருப்பேன். ஆனால், அழியும் மானிடப்பிறப்பெடுத்த நீ, என்னை இங்கிருந்து போகச் சொல்கிறாய், என்று அலட்சியமாகப் பேசினாள். அப்படியானால் நீ தேவ கன்னிகை தான். சந்தேகமேயில்லை. பூலோகத்தில், இத்தகைய லட்சணமுள்ள பெண்ணை நான் பார்த்ததேயில்லை. சரி...இருக்கட்டும். தேவதையான உன்னை பூமியில் பிறந்ததால், நான் அடைய முடியாதோ? உன்னை அடையும் தகுதி தான் எனக்கில்லையா? என்ற சந்தனுவைப் பார்த்த அப்பெண், தனது தற்போதைய நிலையை நினைத்தாள். அவளது பெயர் கங்கா. ஒரு சமயம் அகம்பாவத்தின் காரணமாக, பூமியில் ஒரு மானிடனிடம் காலம் கழிக்க வேண்டும் என்ற சாபம் பெற்றவள். அதற்கு இவன் சரியான ஆள் தான். அழகாகவும் இருக்கிறான். மன்னனாகவும் விளங்குகிறான். தன் வினைப்பயனை இவனிடமே அனுபவிப்போம் எனக் கருதிய கங்கா, அவன் யார் என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பின்னர் அவள், அன்பனே! என் பெயர் கங்கா. நானே இதோ ஓடும் இந்நதி. நதிகள் பெண்ணுருவமாக இருப்பதை நீர் அறிந்திருப்பீர். ஒரு சாபத்தால் இந்த பூமிக்கு நான் வந்தேன், என்றாள்.

கங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே! நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு அழகுக்கன்னியை நான் என் வாழ்நாளில் பார்த்ததும் இல்லை. நான் இந்த பூவுலகில் மிகச்சிறந்த அரசன். உன்னை மணந்து கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறது. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எனக்கு வேண்டும். என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? என்று சங்கோஜத்துடன் கேட்டான்.அதைக்கேட்டு வெட்கப்பட்ட கங்காதேவி தலை குனிந்து நின்றாள். மவுனமொழி சம்மதத்துக்கு அறிகுறி என்பதைப் புரிந்து கொண்ட சந்தனு, பெண்ணே! உன் மவுனத்தைக் கலைத்து நேரடியாக பதில் சொல், என்றான். அவள் சந்தனுவிடம், மன்னா! உம்மைத் திருமணம் செய்து கொள்ள நான் சம்மதிக்கிறேன். ஆனால், எனது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். அதற்கு சம்மதமென்றால், திருமண ஏற்பாடுகளைச் செய்யலாம், என்றாள். அவளது அழகில் லயித்துப் போயிருந்த சந்தனு, அவள் விதித்த நிபந்தனைகளைக் கேட்டான். மன்னா! நான் உம் மனைவி யான பிறகு, நான் என்ன செய்தாலும் கேள்வி கேட்கக்கூடாது.

அதாவது, நான் உம் மனம் கஷ்டப்படும்படி நடந்தாலும் என்ன ஏதென்று கேட்கக்கூடாது. உலகமே வெறுக்கும் காரியத்தைச் செய்தாலும் ஏன் செய்தாய் என்ற கேள்வி எழக்கூடாது, என்றாள்.மன்னனுக்கு இவற்றை ஏற்பதா வேண்டாமா என்று குழப்பம் இருந்தாலும், பெண்ணாசையின் பிடியில் சிக்கியிருந்த அவன் சரியென சம்மதித்து விட்டான். மகாபாரதத்தின் துவக்கமே மனிதகுலத்துக்கு பாடம் கற்றுத்தருவதாக அமைந்திருப்பதை கவனியுங்கள். பெண்ணாசைக்கு ஒருவன் அடிமையாகக் கூடாது. அப்படி அடிமையாகி விட்டால், அவன் படப்போகும் துன்பங்களின் எல்லைக்கு அளவிருக்காது. இதோ! சந்தனு தன் அழிவின் முதல் கட்டத்தில் அடியெடுத்து வைக்கப்போகிறான். கங்கா! கலங்காதே, நீ என்ன சொன்னாலும் கேட்பேன். நீ நாட்டைக் கேட்டால் உன் பெயரில் எழுதி வைக்கிறேன். அரச செல்வம் உன்னுடையது. நீ என்ன சொல்கிறாயோ, அதன்படி நடக்கிறேன், எனச் சொல்லி அவள் முன்னால் மண்டியிட்டு நின்றான்.

சந்தனு வார்த்தை மாறமாட்டான் என்பதைப் புரிந்து கொண்ட கங்கா, அவனைத் திருமணம் செய்து கொண்டாள். உலகிலேயே சிறந்த அந்த அழகியை அனுபவிப்பதில் மட்டுமே சுகம் கண்ட சந்தனு, ராஜ்ய விஷயங்களைக் கூட மறந்து விட்டான். எல்லாம் கங்காவின் இஷ்டப்படியே நடந்தது.இந்த நிலையில் கங்காதேவி கர்ப்பமானாள். சந்தனுவுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. அவளைக் கண்ணைப் போல் பாதுகாத்தான். அவளது உடல் அதிரக்கூடாது என்பதற்காக மலர்களை பரப்பி அதில் நடக்க வைத்தான். பிரசவ நாள் வந்தது. கங்கா அழகான ஆண்மகனைப் பெற்றாள். சிறிதுநாள் கடந்ததும், குழந்தையை கங்கா எடுத்துக் கொண்டு கங்கைக்கு சென்றாள். இவள் யாரிடமும் சொல்லாமல் எங்கே போகிறாள் என சந்தனு பின்னால் சென்றான். அவள் செய்த செயலைப் பார்த்து அதிர்ந்து நின்று விட்டான். அதுவரை இனிய மொழி பேசும் கிளியாக, சாந்தமே வடிவமாகத் திகழ்ந்த கங்கா, இப்போது அரக்கியாகத் தெரிந்தாள்.

ஆம்...பெற்ற குழந்தையை ஆற்றில் வீசி எறிந்தவளை என்ன சொல்வது? ஆத்திரத்தின் விளிம்பிற்கே போன சந்தனுவிடம் அவனது இதயம் பேசியது. சந்தனு நில்! நீ காம வயப்பட்டு, இவளை மணந்தாய். இவள் தன்னை மணக்கும் முன், நான் என்ன செய்தாலும், கேள்வி கேட்கக்கூடாது. அது கொடூரமான செயலாக இருந்தாலும் சரி... என சொன்னாள் அல்லவா? இப்போது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அவளைக் கேட்கப் போகிறாய்? என்றது.சந்தனு சூழ்நிலைக் கைதியாய் நின்றான். ஏதும் பேசாமல் திரும்பிய அவன், சில நாட்களில் எல்லாவற்றையும் மறந்தான். மீண்டும் கங்காவின் பிடியில் சிக்கினான். அவள் வரிசையாய் ஆறு பிள்ளைகளைப் பெற்றாள். ஆறு குழந்தைகளையும் தண்ணீரில் வீசினாள். அவளைக் கேள்வி கேட்க முடியாமல் தவித்த சந்தனு, எட்டாவது ஆண்குழந்தை பிறந்ததும் கங்கா அதைத் தூக்கிக் கொண்டு கங்கை நதிக்கு போவதைப் பார்த்தான்.

கொடியவளே! நில். இந்த குழந்தையையும் கொல்லப் போகிறாயா? உன்னைக் கேள்வி கேட்கக்கூடாது என்ற நிபந்தனை இத்தனை நாளும் என்னைத் தடுத்தது. நானும் போகட்டும், போகட்டும் என பார்த்தால், உன் கொடூரம் எல்லை மீறி விட்டது. பெற்ற குழந்தைகளைக் கொல்லும் கொடூரக்காரியான உன்னை திருமணம் செய்ததற்காக வெட்கப்படுகிறேன். குழந்தையைக் கொடுத்து விடு, என்றான். இதைக் கேட்டு கங்காவின் கண்கள் கொவ்வைப்பழமாகச் சிவந்தன. மன்னா! நன்றாக இருக்கிறது நீ கேட்பது! நான் என்ன செய்தாலும் கேள்வி கேட்க மாட்டேன் என்ற நிபந்தனைக்கு கட்டுப்பட்டு தானே என்னை மணம் முடித்தாய்.

ஏழு குழந்தைகளைக் கொல்லும் வரை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்காத நீ, இப்போது கேள்வி கேட்கிறாய். ஏனென்றால், பெற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விட காமமே உன் மனதில் நிரம்பி நின்றது. அன்று கேளாதவன் இப்போது கேள்வி கேட்கும் உரிமையை எப்படி எடுத்துக் கொண்டாய். நான் சில காரணங்களால் இப்படி குழந்தைகளைக் கொல்கிறேன். அதைக் கேட்டால் நீ இதை விட அதிர்ச்சியடைவாய். நான் தேவலோகத்து கங்காதேவி, நான் இந்த பூமிக்கு வந்து, இந்தக் குழந்தைகளைக் கொன்றதற்கான காரணத்தைக் கேள், என்று சொல்லி தன் கதையை ஆரம்பித்தாள். அவள் சொல்லச் சொல்ல சந்தனு மயிர்க்கூச் செறிய நின்றான்.

மன்னா! கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த வாயுபகவான் தேவர்களின் மனவுறுதியைச் சோதிப்பதற்காக ஒரு சோதனை செய்தான். என்னுடைய மார்பு தெரியும்படியாக ஆடையை காற்றடித்து பறக்க வைத்தான். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட தேவர்கள் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டனர். ஆனால், வருணன் மட்டும் என் அங்கங்களை ரசித்தான். இதனால், அங்கிருந்த பிரம்மன் கடும் கோபமடைந்தார்.ஏ வருணா! ஒரு பெண்ணை அவளறியாமல் ரசித்த நீ பூமியில் மானிடனாகப் பிறப்பாய் என சாபமிட்டார். என்னை பார்த்து, எந்தச் சூழலிலும் ஒரு பெண் தன் மானத்தைக் காக்க முயன்றிருக்க வேண்டும், காற்றடித்த வேளையில் நீ அதைச் செய்யத் தவறியதுடன், ஒரு ஆண்மகனின் மனம் பேதலிக்கவும் காரணமாக இருந்தாய். எனவே நீயும் பூமியில் மனுஷியாகப் பிறப்பாய். இந்த வருணனுக்கு வாழ்க்கைப்பட்டு சாப விமோசன காலம் வரை வாழ்ந்து, இங்கேமீண்டும் வருவாய் என்றார்.நான் மிகுந்த கவலையுடன் பூலோகம் நோக்கி வந்து கொண்டிருந்தேன்.

அப்போது எட்டு திசைகளின் காவலர்களான அஷ்டவசுக்கள் என் எதிரே வந்தனர். அவர்களில் பிரபாசன் என்பவனும் ஒருவன். அவர்களும் கவலை பொங்கும் முகத்துடன் காட்சியளித்தனர். கவலைக்கான காரணத்தை நான் கேட்டேன்.தாயே! இந்த பிரபாசன் தன் மனைவி மீது மிகுந்த மோகம் கொண்டு, அவள் சொன்னதையெல்லாம் செய்வான். அவள் பேராசைக்காரி. நினைத்ததையெல்லாம் அடைய விரும்புபவள். வசிஷ்டரின் ஆசிரமத்தில் நினைத்ததை தரும் காமதேனு என்ற பசு இருந்தது. அதைப் பிடித்து வந்து தன்னிடம் தரும்படி கணவனிடம் அவள் சொன்னாள். இவனும் அவள் மீதுள்ள ஆசையால், பசுவைத் திருட ஏற்பாடு செய்தான். அவனை கண்டிக்க வேண்டிய நாங்கள், நண்பன் என்ற முறையிலே அவனுக்கு துணை போனோம். வசிஷ்டரின் ஆசிரமத்துக்குள் புகுந்து, காமதேனுவைத் திருடினோம். அவர் கோபமடைந்து, நாங்கள் பூமியில் மானிடர்களாகப் பிறக்க சாபமிட்டார்.

எங்களுக்கான சாப விமோசனம் பற்றி கேட்டோம். நீங்கள் பூமியில் பிறந்தவுடன் இறந்து விட்டால், மீண்டும்திசைக்காவலர் பதவியைப் பெறலாம் என அவர் கருணையுடன் சொன்னார். அதனால் பூமியில் பிறக்கவும், எங்களை உடனே கொல்லும் மனதுடையவளுமான ஒரு தாயை தேடி கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எனக் கேட்டனர்.நானும் என் சாபம் பற்றி அவர்களிடம் சொல்லி, அவர்களிடம் இரக்கம் கொண்டு, குழந்தைகளே! வருணபகவான் பூமியில் சந்தனு என்ற மன்னனாகப் பிறப்பான். நான் அவனது மனைவியாவேன். உங்களை என் வயிற்றில் பிரசவிக்கிறேன். பிறந்த உடனேயே உங்களை ஆற்றில் எறிந்து கொன்று, உங்கள் பதவியை உடனடியாகக் கிடைக்கச் செய்கிறேன் என்றேன். அதன்படியே எனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றேன். மனைவியின் மோகத்தில் சிக்கிய பிரபாசனே இந்த எட்டாவது குழந்தை. வசிஷ்டரின் சாபப்படி இவன் இந்த பூமியில் பெண்ணாசையே இல்லாமல் வாழ்வான்.

உலகம் உள்ளளவும் இவனது புகழ் பூமியில் நிலைத்திருக்கும், என்றாள்.தானே உலகிற்கு மழையளிக்கும் வருணபகவான் என்று சந்தனு மன்னன் சந்தோஷப்பட்டாலும், இப்பிறவியில் தன் குலம் விருத்தியடையாமல் போனது பற்றி வருத்தப்பட்டான்.கங்கா! நம் ஏழு குழந்தைகளும் இறந்து விட்டார்கள். இவனும் பெண்ணாசை இல்லாமல் இருந்தால், நம் சந்திரகுலம் எப்படி விருத்தியடையும்? என்னோடு என் குலம் அழிந்து விடுமே. நாம் இன்னும் குழந்தைகளை பெறுவோம். அதன்பின் இருவருமே தேவலோகம் செல்லலாம், என்றான். கங்கா விரக்தியாக சிரித்தாள். மன்னா! நீ என் நிபந்தனையை மீறி கேள்வி கேட்டாய். எப்போது கேள்வி கேட்கிறாயோ, அப்போது நான் உன்னைப் பிரிந்து விடுவேன் என்று சொல்லித்தானே உன்னைத் திருமணம் செய்தேன். இனி உன்னோடு நான் வாழமாட்டேன். இந்த மகனுடன் நதியில் கலந்து விடுவேன்.

அவன் வாலிபன் ஆனபிறகு உன்னிடம் ஒப்படைப்பேன், என்று கூறி விட்டு கங்கையில் மறைந்து விட்டாள். கங்காவின் நினைவில் சந்தனு மூழ்கி கிடந்தான். அவள் எப்போது வருவாள் என காத்திருந்தான். கங்காதேவிக்கு முன்னதாக அவன் சில பெண்களைத் திருமணம் செய்திருந்தான். அவர்களால் அவனைத் தங்கள் வசப்படுத்த முடியவில்லை. வேட்டைக்கு போய் தன் மனதை அதில் திருப்ப முயன்றான். அப்போது கங்கைக்கரைக்கு போய், தன் மனைவி வரமாட்டாளா என காத்துக்கிடப்பான். ஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள் அவன் கங்கைக்கரையில் நின்ற போது, பூணூல் அணிந்து கையில் வில்லேந்திய வாலிபன் ஒருவனைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் தன் மகன் தான் என்பதை உள்ளுணர்வால் புரிந்துகொண்டான். அவனை நோக்கி ஓடிவந்தான். அந்த வாலிபன் சந்தனு மீது மோகனாஸ்திரத்தை எய்தான்.

அவன் தனது தந்தை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. சந்தனு மயக்கமடைந்து கீழே விழுந்தான். அவன் மீது இரக்கம் கொண்ட கங்கா, தன் மகனுடன் கரைக்கு வந்தாள். அவன் தலையை அன்போடு வருடினாள். தன் மகனிடம், இவர் உன் தந்தை, என்றாள். அவள் கைப்பட்டதுமே அவன் எழுந்தான். அவனை அன்போடு தழுவிக் கொண்ட கங்கா, அரசே! நான் இன்று தேவலோகம் கிளம்புகிறேன். உங்களிடம் சொன்னபடி உங்கள் மகனை ஒப்படைத்து விட்டேன். இவன் பெயர் தேவவிரதன். பரசுராமரின் திருவருளால் அவரது ஆயுதங்களையே பெற்றவன். சிறந்த வில்லாளி வீரன். இவனோடு சேர்ந்து நீங்கள் இனி நாட்டை ஆளலாம், என்று சொல்லிவிட்டு, அவன் பதிலுக்கு காத்திராமல், நதியில் சென்று மறைந்தாள்.

மகன் கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்திலும், மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் சந்தனு கண்ணீர் விட்டான். கங்காதேவியின் செயலிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், சூழ்நிலைக் கைதியாகி விட்ட தன் நிலையை எண்ணி வருந்தினான்.பின்னர் தன் மகனை தேரில் ஏற்றிக் கொண்டு ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்தான். மன்னன் தன் மகனுடன் வருகிறான் என்ற செய்தி ஊருக்குள் பரவி விட்டதால் முக்கியஸ்தர்களும், நாட்டு மக்களும் ஊர் எல்லையில் வந்து தங்கள் இளவரசரை வரவேற்க காத்திருந்தனர். அவர்கள் வந்தவுடன் இளவரசர் தேவவிரதன் வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.சந்தனு தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான். இருவருமாக இணைந்து நல்லாட்சி நடத்தி வந்தனர்.ஒரு சமயம் சந்தனு வேட்டைக்குச் சென்றான்.

இளைப்பாறுவதற்காக யமுனைக்கரைக்கு வீரர்களுடன் வந்த அவனது நாசியில் சந்தன மணம் பட்டது. வரவர மணத்தின் அளவு கூடியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சந்தன மரங்கள் ஏதும் காணப்படவில்லை. பிறகெப்படி வாசம் வருகிறது? சந்தனு குழம்பினான்.கிட்டத்தட்ட ஒரு யோஜனை தூரம் (8கி.மீ.) நடந்தான். நதிக்கரையில் ஒரு பெண் நின்றாள். அவள் பரிசல் ஓட்டுபவள். அவள் நின்ற இடத்தில் இருந்து தான் அந்த மணம் வீசியது. சந்தனு அவளை நெருங்கினான். அவள் உடலில் இருந்து நறுமணம் வீசுவது புரிந்து விட்டது.பெண்ணே! நீ யார்? உன் உடலில் இருந்து சந்தன வாசனை வீசும் மர்மம் என்ன? நீ சந்தனம் பூசியது போலவும் தெரியவில்லையே! என்றான்.ஒரு ஆண்மகன், அதிலும் அரச தோரணையில் இருப்பவன் தன்னிடம் இப்படி கேட்டதும், அப்பெண்ணுக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. நாக்குழறியது. வெட்கத்துடன் தலை குனிந்தாள்.சந்தனு அவளுக்கு தைரியம் சொன்னான்.மாதர் திலகமே! நீ மிகவும் அழகாகவும் இருக்கிறாய். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தயங்காமல் சொல், என்றான்.

அவள் மிகவும் மெதுவாக, பிரபு! என் பெயர் யோஜனகந்தி. நான் இவ்வூர் பரதர் (செம்படவர்) குல தலைவனின் மகள். பிழைப்புக்காக பரிசல் ஓட்டுபவள். தாங்கள் ஆற்றை கடக்க வேண்டுமா பிரபு! நான் அழைத்துச் செல்கிறேன், என்றாள்.சந்தனு அவளது அழகை மேலும் மேலும் ரசித்தான். அவளோ நெளிந்தாள். சற்றுநேரம் அவளையே உற்று பார்த்து விட்டு, தன் தேரோட்டியை அழைத்தான்.சாரதி! நீ இந்தப் பெண்ணின் தந்தையிடம் என்னை அழைத்துச் செல். இவளைப் பார்த்ததும், முன்பு கங்காதேவியைப் பார்த்தவுடனே ஏற்பட்ட மோகம் போல என் உடல் வருந்துகிறது. இவளை மணம் முடிக்க மனம் விரும்புகிறது. நாம் அங்கு சென்றதும், நீ பரதர் தலைவனிடம் என் விருப்பத்தைச் சொல். நயமாகப் பேசி சம்மதம் பெற்று விடு, என்றான்.சாரதி மன்னனுடன் தேரேறி விரைந்தான்.பரதர் குலத்தலைவன் அவர்களை வரவேற்றான்.மாமன்னரே வர வேண்டும். தாங்கள் இந்த ஏழைகளைச் சந்திக்க வந்தது எங்கள் பாக்கியமே, என்றான்.

சமயம் பார்த்து சாரதி சொன்னான்.பரதர் தலைவனே! பாக்கியம் என்றால் சாதாரண பாக்கியமல்ல! உங்கள் குப்பம் இனி சொர்க்கமாகப் போகிறது. காரணம் உன் மகள் யோஜனகந்தியல்லவா இந்த நாட்டின் ராணியாகப் போகிறாள்! என்றான்.பரதர் தலைவன் ஆச்சரியமும், குழப்பமும் விஞ்ச விழித்தான்.பரதர் தலைவா! உன்னை அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. நம் மகாராஜா உன் மகள் யோஜனகந்தியை யமுனைக்கரையிலே பார்த்தார். பார்த்தவுடனேயே அவள் மீது மோகம் கொண்டு விட்டார். இப்போது பெண் கேட்டு வந்திருக்கிறார். மகள் ராணியாகிறாள், நீ இனி பரதர் குல தலைவன் அல்ல! நாடாளும் ராணியின் தந்தை! பொன்னும், பொருளும் உன்னையும், உன்னைச் சார்ந்தோரையும் வந்து குவியப் போகிறது, என்றான்.பரதர் தலைவன் இப்போது சிரித்தான்.

யோஜனகந்தியை மாமன்னர் பார்த்தார், மோகம் கொண்டார், பெண்ணும் கேட்கிறார். மடுவிடம் மலை பெண் கேட்கிறது. எங்கள் மடு இன்னும் மலையாகப் போகிறது. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்! என் மகளை ஹஸ்தினாபுரத்து அரசருக்கு கொடுப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. ஆனால், என் கேள்விக்கு மன்னர் பதில் சொல்ல வேண்டும். ஏற்கனவே மன்னருக்கு தேவவிரதன் என்ற மகன் இருக்கிறான். அவன் இளவரசு பட்டம் சூட்டப்பட்டு சந்தனுவிற்கு பிறகு மன்னனாக பொறுப்பேற்க தயாராக இருக்கிறான். அப்படியானால், என் மகளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் பட்சத்தில் அதன் நிலைமை என்ன? மன்னரே! இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை! நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.

உமக்குப் பிறகு இந்த தேசத்தை என் மகளுக்கு பிறக்கப்போகிறவன் தான் ஆளவேண்டும். சம்மதமா? என்றான்.அவ்வளவு தான்! மன்னனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கே அவன் நிற்கவே இல்லை. விடுவிடுவென்று தேரில் ஏறிவிட்டான். தேர் பறந்தது. ஹஸ்தினாபுரத்து அரண்மனைக்குள் நுழைந்தது.மன்னன் படுக்கையில் போய் விழுந்தான். யோஜனகந்தியை அவனால் மறக்க முடியவில்லை. அவளது நினைவில் அவன் உடலும் மெலிந்து விட்டது. தந்தையை கொஞ்சநாளாகவே கவனித்துக் கொண்டிருந்தான் தேவவிரதன். அவர் ஏதோ பறிகொடுத்ததைப் போல இருந்ததைப் பார்த்தான். வேட்டைக்குச் சென்று வந்த பிறகு தான் இந்த மாற்றம்? எதற்கும் சாரதியிடம் விசாரிக்கலாம் என்று அவனை அழைத்தான்.சாரதி நடந்ததைச் சொன்னான். அடுத்த கணமே தேவவிரதனின் தேர் செம்படவர் பகுதியை நோக்கி விரைந்தது.

இளவரசர் தேவவிரதன் வந்திருக்கிறார் என்ற தகவல் செம்படவர் தலைவனுக்கு எட்டியது. அவன் ஓடிவந்து இளவரசனின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான். இளவரசே! தாங்கள் மீன்வாடை வீசும் எங்கள் பகுதிக்கு வந்தது நாங்கள் செய்த நற்பாக்கியம். இளவலே! தாங்கள் வந்த நோக்கம் தெரிவித்தால், அதன்படி செயல்பட காத்திருக்கிறோம், என்றான்.தேவவிரதன் ஆரம்பித்தான்.பாட்டனாரே! தாங்கள் இவ்வளவு பணிவுடன் என்னுடன் பேச வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், நான் உங்கள் பேரன். என்னை ஒருமையில் பேசும் உரிமை தங்களுக்கு உண்டு, என்ற தேவவிரதனை ஆச்சரியமாகப் பார்த்தான் செம்படவத்தலைவன்.தாத்தா! நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். தங்கள் மகள் யோஜனகந்தி இனி என் தாய். என் தந்தை தங்களிடம் அவளைப் பெண் கேட்டு வந்த போது, தாங்கள் விதித்த நிபந்தனையை சாரதி மூலமாக அறிந்தேன். உங்களுக்கு என்னைப் பற்றிய பயம் வேண்டாம்.

இனி நான் கங்காதேவியின் மகனல்ல. யோஜனகந்தியின் மகன். அவளுக்கு ஒரு குழந்தை பிறக்குமானால், அந்தக் குழந்தையே இந்த நாட்டை ஆளட்டும். நான் என் தம்பிக்கு இந்த நாட்டை விட்டுத் தருகிறேன். நீங்கள், யோஜனகந்தியை தயங்காமல் என் தந்தைக்கு திருமணம் செய்து வையுங்கள். அவள் மீது அவர் மிகுந்த காதல் கொண்டுள்ளார், என்றான் தேவவிரதன். இளவரசே! தாங்கள் சொல்வதை ஏற்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. உங்களுக்கு திருமணம் நடந்து, ஒரு குழந்தை பிறக்குமானால் அதுவும் அரசுரிமை கோருமே. அப்போது, என் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு எப்படி ஆட்சி கிடைக்கும்? அப்போதும் சண்டை தானே வரும்! என்ற செம்படவத் தலைவனிடம், தாத்தா! அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம். நான் பெண்ணாசையைத் துறக்கிறேன். எக்காரணம் கொண்டும் திருமணம் செய்யவே மாட்டேன்.

என் தந்தையின் மீதும், என்னைப் பெற்ற தாய் கங்கா மீதும், எனக்கு தாயாக வரும் யோஜனகந்தி மீதும், இந்த மண்ணின் மீதும், பரந்த ஆகாயத்தின் மீதும், இந்த பூமியிலுள்ள இதர வஸ்துக்களின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன். என் தந்தையின் சுகமே என் சுகம், என்று தேவவிரதன் ஆவேசமாக சபதம் எடுக்கவும், அதை ஆமோதிப்பது போல வானில் இருந்து தேவர்களும், முனிவர்களும், தெய்வப்பெண்மணிகளும் பூமாரி பொழிந்தனர்.பீஷ்மா...பீஷ்மா...பீஷ்மா... என்ற வாழ்த்தொலி எழுந்தது. பீஷ்மன் என்றால் மனஉறுதி உள்ளவன் என்று பொருள். எப்படிப்பட்ட தியாகம் இது? பெற்ற தந்தையின் சொல்லைக் கேளாமல் தறுதலையாய் பிள்ளைகள் இன்று எப்படியெல்லாமோ திரிகிறார்கள். இதில் ஆணென்றும், பெண்ணென்றும் பேதமில்லை. பெற்றவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து படிக்க வைப்பதை எத்தனை மகன்களும், மகள்களும் நினைத்துப் பார்க்கிறார்கள்! இவர்களில் எத்தனை பேர் மோசமான பாதையில் எல்லாம் போகிறார்கள்.

இதோ! இந்த பீஷ்மர் அப்படிப்பட்டவரல்ல. இவர் தன்னைப் பெற்ற தந்தை விரும்பிய பெண்ணையே அவருக்கு மணம் முடித்து வைக்கப் போகிறார்! அதற்காக, தன் வாழ்க்கையையே அழித்துக் கொள்ளப் போகிறார். பெண் சுகமின்றி வாழ எத்தனை இளைஞர்கள் இன்று முன் வருவர்? எவ்வளவு பெரிய தியாகம் இது! நமது இதிகாசங்கள் இப்படிப்பட்ட நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதால் தான் அவற்றை படிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.இப்படியாக தேவவிரதனாக இருந்து பீஷ்மராக மாறிய அந்த இளைஞன் ஊர் திரும்பினான். தந்தையிடம் நடந்ததைச் சொன்னான்.தந்தை சந்தனு கண்ணீர்வடித்தான்.மகனே! எந்த ஒரு பிள்ளையும் இப்படி ஒரு தியாகத்தைச் செய்ய முன் வரமாட்டான். நீயோ, என் உடல் சுகத்திற்காக, உன் உடல் சுகத்தை விட்டுக் கொடுத்தாய். நீ எனக்கு செய்த அளவுக்கு, உனக்கு எதுவும் செய்யவில்லை. இருந்தாலும் ஒரு வரத்தை தருகிறேன்.

நீ எப்போது இந்த உயிரை விடுத்து சொர்க்கத்துக்கு போக வேண்டும் என்று எண்ணுகிறாயோ அப்போது தான் உன்னை மரணம் நெருங்கும். அதுவரை யாராலும் உன்னை அழிக்க முடியாது,என்றான்.திருமண ஏற்பாடுகள் நடந்தன. செம்படவத் தலைவனுக்கு ஓலை பறந்தது. யோஜனகந்தி அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டாள். செம்படவத்தலைவன் சந்தனுவின் காலில் விழுந்து, மாமன்னரே! என் மகள் இனி உங்களுக்கு உரியவள். அதற்கு முன் இவளைப் பற்றிய ஒரு ரகசியத்தையும் சொல்லி விடுகிறேன், என்றவன், இவள் நான் பெற்ற மகளல்ல. வளர்ப்பு மகள், என்றான்.எல்லாரும் ஆவலுடன் அவனை நோக்கித் திரும்பினர்.செம்படவத்தலைவன் மன்னனிடம், மன்னா! தாங்கள் ஒரு மீனவப்பெண்ணைத் திருமணம் செய்கிறீர்களே என்று இங்கிருப்பவர்களில் சிலர் மனக்குறை அடையலாம். உண்மையில் இவள் ஒரு ராஜகுமாரி. தாங்கள் சந்திர குலத்தை சேர்ந்தவர் போல், ஒரு காலத்தில் சேதி என்ற குலம் இருந்தது.

அந்த குலத்தில் வசு என்பவன் இருந்தான். அவன் தேவேந்திரனை நினைத்து தவமிருந்து வானத்தில் பறக்கும் புஷ்பக விமானம் ஒன்றைப் பரிசாகப் பெற்றான். ஒருநாள் அதிலேறி வானத்தில் பறந்த போது, அவனது மனைவி கிரிகை என்பவளின் நினைப்பு வந்து விட்டது. அப்போது உணர்ச்சிவசப்ட்டு சுக்கிலத்தை வெளியிட்டான். அதை ஒரு இலையில் பிடித்து சியேனம் என்ற பறவையிடம் கொடுத்து, அதை கிரிகையிடம் கொடுத்து விடும்படி கூறினான். அந்தப் பறவை பறந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த இன்னொரு பறவை ஏதோ உணவை அந்தப் பறவை கொத்திச் செல்வதாக நினைத்து அதனுடன் சண்டையிட்டது. அப்போது இலை தவறி கீழே விழுந்தது. யமுனை நதிக்குள் விழுந்த அந்த சுக்கிலத்தை ஒரு மீன் விழுங்கி கர்ப்பமானது. உண்மையில் அதுவும் மீனல்ல. தேவர்குலத்தை சேர்ந்த ஒரு பெண், முனிவர் ஒருவரின் சாபத்திற்கு ஆளாகி, மீனாகச் சுற்றிக் கொண்டிருந்தாள்.ஒருநாள் எங்கள் மீனவர்கள் யமுனையில் வலை வீசிய போது அந்த மீன் அகப்பட்டுக் கொண்டது, என்றவன் கதையைத் தொடர்ந்தான்.

நாங்கள் அந்த மீனை தற்செயலாக அறுத்தோம். அதன் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஒன்று ஆண்; மற்றொன்று பெண். சேதி வம்சத்து மன்னன் வசு அந்த ஆண் குழந்தையைப் பெற்றுக்கொண்டான். அந்த குழந்தைக்கு மீனவன் என்று பெயர் வைத்தான். பெண் குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டான். அவளுக்கு யோஜனகந்தி என பெயரிட்டு நான் வளர்த்தேன். அவள்தான் இப்போது உங்களுக்கு மனைவியாகப் போகிறவள். இவளைமீனவப் பெண் என நினைக்க வேண்டாம். உங்களுக்கே உரித்தான அரசர்குலத்தில்தான் பிறந்தவள். எனவே இவளை நீங்கள் தயக்கமில்லாமல் திருமணம் செய்துகொள்ளலாம். இன்று மிகச்சிறந்த முகூர்த்தநாள். இந்த நாளிலேயே இவளை ஏற்றுக்கொள்ளுங்கள், என செம்படவர் தலைவன் சொல்லி முடித்தான். அன்றைய தினமே சந்தனுவுக்கும் யோஜனகந்திக்கும் திருமணம் நடந்தது.

தந்தையார் புதிய மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தியதால், அரசபதவியை பீஷ்மர் ஏற்றுக்கொண்டார். அவரது அரசாட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். சில ஆண்டுகளில் யோஜனகந்திக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இருவருமே சூரியனையும் சந்திரனையும் போன்று ஒளிமிக்கவர்களாக திகழ்ந்தனர். ஒருவனுக்கு சித்ராங்கதன் என்றும், மற்றொருவனுக்கு விசித்திர வீரியன் என்றும் பெயரிட்டனர். தன் சித்தி பெற்றெடுத்த புத்திரர்களை தன் உடன்பிறந்தவர்களாக கருதி பீஷ்மர் அவர்களுக்கு போதிய கல்வியறிவை புகட்டினார்.இதனிடையே சந்தனு இறந்து போனான். சித்தி பெற்றெடுத்தமக்களில் மூத்தவன் சித்ராங்கதனுக்கு பீஷ்மர் முடிசூட்டினார். சித்ராங்கதன் மானிட பிறப்பாக பூமியில் இருந்தாலும் இதே பெயரைக் கொண்ட கந்தர்வன் ஒருவன் வானலோகத்தில் சுற்றிவந்தான். அவனுக்கு தன் பெயரைக்கொண்ட சித்ராங்கதன் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனவே அவனைக் கொன்றுவிட முடிவுசெய்தான். ஆனால் பீஷ்மர் மீதிருந்த பயத்தால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒருமுறை மிகவும் தந்திரமாக அரண்மனைக்குள் சென்று சித்ராங்கதனைக் கொன்றுவிட்டான்.மகன் இறந்த துக்கத்தில் யோஜனகந்தி மிகவும் துயருற்றாள். வேறு வழியின்றி இரண்டாவது தம்பி விசித்திரவீரியனுக்கு முடிசூட்டப்பட்டது. இந்த நேரத்தில் தங்கள் வம்சத்தைப் பெருக்கிடும் வகையில் விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்துவைக்க பீஷ்மர் எண்ணினார். அப்போது காசியை ஆண்ட மன்னன் காசிராஜன் தன் மூன்று புதல்விகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகியோருக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தான். இதற்காக சுயம்வர அறிவிப்பையும் வெளியிட்டிருந்தான். தம்பியையும் அழைத்துக்கொண்டு பீஷ்மர் சுயம்வரத்திற்கு சென்றார். நீண்ட தூரம் பயணம் செய்ததால் பீஷ்மர் கங்கைக்கரையில் மிகுந்த களைப்புடன் தங்கினார்.

அப்போது பீஷ்மரின் தாய் கங்காதேவி நதியிலிருந்து எழுந்து வந்தாள். தன் மகனின் களைப்பைப் போக்கும் வகையில் தண்ணீர் துளிகளை அவர்மேல் தெளித்தாள். பீஷ்மர் தாயை வணங்கிவிட்டு காசி போய் சேர்ந்தார். காசி மன்னனுக்கு பீஷ்மரின் திறமை பற்றி நன்றாக தெரியும். எனவே மற்ற மன்னர்களை வரவேற்றதைவிட பீஷ்மருக்கு தனி மரியாதை கொடுத்து வரவேற்றான்.அங்கு வந்திருந்த மற்ற மன்னர்களுக்கு மனதில் சந்தேகம் ஏற்பட்டது. காலம் முழுவதும் திருமணமே செய்யமாட்டேன் என விரதம் பூண்டிருந்த பீஷ்மருக்கு இங்கு என்ன வேலை? இங்கு சுயவரமல்லவா நடக்கிறது என்பதே அந்த சந்தேகம்.ஒவ்வொருவரும் பீஷ்மரின் பராக்கிரமம் பற்றி பேசியது மூன்று சகோதரிகளின் காதிலும் விழுந்தது. அவர்களில் அம்பா நீங்கலாக மற்ற இரு சகோதரிகளும் பீஷ்மரையே திருமணம் செய்துகொண்டால் என்ன என எண்ணினர். ஆனால் பீஷ்மருக்கு வயதாகிவிட்டது என்ற விஷயம் அவர்களுக்கு தெரியாது. சுயம்வர மண்டபத்திற்கு மாலையுடன் வந்த அவர்கள் பீஷ்மரைத் தேடினர்.

பீஷ்மர் இவர்தான் என அடையாளம் காட்டப்பட்டதும் அவர் அருகில் சென்று பார்த்தபோது தாடி, மீசையுடன் வயதாகிப் போயிருந்ததைப் பார்த்து பின் தங்கினார்கள். விசித்திரவீரியனை அவர்கள் விரும்பவில்லை.அவர்கள் தயங்குவதைக் கண்டு பீஷ்மர் ஓரளவு யூகித்துக்கொண்டார். உடனே மூன்று பெண்களையும் அரண்மனைக்கு வெளியே இழுத்துவந்தார். மற்ற நாட்டு மன்னர்களெல்லாம் கொதித்து எழுந்தனர். யாரையும் பிடிக்காமல் இந்த பெண்கள் பின்வாங்குகின்றனர். இந்த சமயத்தில் பீஷ்மர் அவர்களை இழுத்துச் செல்கிறார் என்றால் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் என பொருமினர்.பீஷ்மரை பின்தொடர்ந்து எல்லா மன்னர்களும் விரட்டினர்.வில்வித்தையில் கைதேர்ந்தவரான பீஷ்மர் பாணங்களால் அந்த மன்னர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினார்.

பிறகு அஸ்தினாபுரம் வந்துசேர்ந்தார். அந்த பெண்களில் ஒருத்தியான அம்பா கண்ணீருடன் காணப்பட்டாள்.மகளே! நீ எதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? உன் மற்ற சகோதரிகளிடம் இதுபோன்ற வருத்தம் காணப்படவில்லையே! என் தம்பி விசித்திரவீரியனுக்காகவே நான் சுயம்வர மண்டபத்திற்கு வந்தேன். அவனைத் திருமணம் செய்துகொள்ள உனக்கு சம்மதம்தானே! என்றார்.அவள் கண்ணீரைப் பெருக்கி, நான் தங்களின் சகோதரனை திருமணம் செய்துகொள்ள இயலாது. ஏனென்றால் நான் சாளுவ தேசத்து அரசன் பிரம்மதத்தனை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்தை என் தந்தை தகர்த்துவிட்டார். அவருடைய கட்டாயத்துக்காகவே சுயம்வர மண்டபத்திற்கு வந்தேன். ஆனால் நீங்களோ என்னைக் கடத்தி வந்துவிட்டீர்கள். என்னை அவரிடமே அனுப்பி வைத்துவிடுவீர்களா? என கேட்டாள்.

அம்பா இப்படி சொன்னதும் பீஷ்மர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.மகளே! காதலை அழிக்கவல்லவர் யார்? காதலைக் கெடுப்பவர்கள் நன்றாக வாழ முடியாது. நீ விரும்பியபடி சாளுவதேசம் செல். உன் காதலனை மணந்து கொண்டு சந்தோஷமாக இரு, என வாழ்த்தி, தக்க படைபலத்துடன் அவளை சாளுவ தேசத்துக்கு அனுப்பி வைத்தார்.அம்பா மிகுந்த மகிழ்ச்சியுடன் சாளுவதேசத்துக்கு சென்றாள். அரண்மனைக்குச் சென்று பிரம்மதத்தனை அப்படியே அள்ளி அணைத்தாள்.மன்னவரே! பீஷ்மரிடம் பிடிபட்டவர்கள் தப்பித்த வரலாறு உண்டா? நான் உங்கள் மீது கொண்ட காதலை அவரிடம் தெரிவித்தேன். அவரது தம்பியை மணந்து நிம்மதியாக வாழ முடியாது. மனதில் ஒருவனையும், வீட்டில் ஒருவனையும் சுமந்து கொண்டு வாழ முடியாது என்றேன். என் கருத்தை பீஷ்மர் ஏற்றார்.

என்னை விடுவித்து விட்டார். பிரம்மதத்தரே! இனி நம்மை பிரிக்க யாருமில்லை. நம் மணநாளைக் குறியுங்கள், என படபடவென பொரிந்தாள். சீ மானம் கெட்டவளே! வெளியே போ, என அரண்மனையே அதிரும் வகையில் கத்தினான் பிரம்மதத்தன். அம்பா அதிர்ந்தாள். ஏ அம்பா! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய். அந்த பீஷ்மன் தன் தம்பி விசித்திர வீரியனுக்காக உன்னை அழைத்துச் சென்றான். அவன் உன்னிடம் உல்லாசமாக இருந்திருப்பான். அங்கே இருந்துவிட்டு இங்கே வர உனக்கு எப்படி தைரியம் வந்தது? இங்கிருந்து ஓடிவிடு. உன்னை நான் இனியும் திருமணம் செய்ய மாட்டேன். ஏற்கனவே ஒருவனால் கடத்தப்பட்ட உன்னை திருமணம் செய்துகொள்ள நான் ஒன்றும் பைத்தியக்காரன் அல்ல, என்று வாய்க்கு வந்தபடி பேசினான்.மனம் உடைந்துபோன அம்பா, தலைகுனிந்து அவமானப்பட்டு அங்கிருந்து அஸ்தினாபுரத்திற்கே திரும்பினாள்.

பீஷ்மரின் முன்னால் சென்ற அவள் நடந்த சம்பவத்தை அழுதபடியே விவரித்தாள். பீஷ்மர் அவளுக்கு ஆறுதல் கூறினார்.அம்பா பீஷ்மரிடம், அன்பரே! உங்களால் கடத்தி வரப்பட்டதால்தான் என்னை திருமணம் செய்ய முடியாது என பிரம்மதத்தன் சொல்லி விட்டான். உங்கள் தம்பியை திருமணம் செய்தால் நீ பிரம்மதத்தனுடன் எத்தனை நாள் இருந்தாய் என அவர் என்னிடம் கேள்வி கேட்பார். இந்த நிலையில் நான் உங்களை மட்டுமே நம்பியுள்ளேன். நீங்கள்தான் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் என் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனக்கு நல்ல பதில் சொல்லுங்கள், என்றாள்.பீஷ்மர் தன் நிலைமையை அவளிடம் விளக்கி சொன்னார். தனது தந்தைக்காக பிரம்மச்சரிய விரதம் ஏற்றிருப்பதையும், இந்தப்பிறவியில் தனக்கு திருமணம் என்ற ஒன்று இல்லை என்றும் அழுத்தமாக சொன்னார்.

அம்பா பிடிவாதம் செய்தாள்.இருந்தாலும், அவளது வாதம் எடுபடாததால் தந்தை காசிராஜனின் வீட்டிற்கே திரும்பிவிட்டாள். மகளின் நிலைமையைக் கண்டு காசிராஜன் நொந்துபோனான். அவளுக்கு ஒரு ஆலோசனை சொன்னான்.மகளே! பீஷ்மர் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருப்பது உண்மையே. ஆனால் அதை உடைக்கும் சக்தி இந்த உலகில் ஒரே ஒருவருக்குத்தான் இருக்கிறது. அவர்தான் பரசுராமர். பரசுராமரிடம் பீஷ்மர் வில்வித்தை கற்றார். குருவின் சொல்லை சீடனால் மறுக்கமுடியாது. மேலும் பரசுராமர் அரசகுலத்திற்கு எதிரானவர். அரசர்கள் ஏதேனும் தவறுசெய்தால் அவர்களை கொல்லவும் தயங்கமாட்டார். நீ பரசுராமரிடம் செல். அவரது பாதங்களில் விழுந்து கதறி அழு. உன் நிலைமையை எடுத்துச்சொல். நிச்சயமாக அவர் உனக்கு உதவுவார். சென்று வா, எனச்சொல்லி வழியனுப்பி வைத்தான்.

அம்பா பரசுராமரின் ஆஸ்ரமத்திற்கு சென்றாள். ஒரு அபலைப்பெண் தன் ஆதரவைத்தேடி வந்திருப்பதை அறிந்த பரசுராமர் அவளிடம் நடந்த விஷயங்களை கேட்டறிந்தார். நிச்சயமாக அவளுக்கு உதவுவதாக வாக்களித்தார். அவளை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தார்.பரசுராமர் தன்னை பார்க்க வருகிறார் என்பதை அறிந்த உடனேயே பீஷ்மர் அவர் வரும் வழியிலேயே சென்று வரவேற்றார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குருவைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரை வெகுவாக விசாரித்தார்.சீடனே! இந்த அம்பாவுக்காக பரிந்துபேச நான் வந்திருக்கிறேன். இவளை நீ திருமணம் செய்ய முடியாது என சொல்வது எந்த விதத்திலும் நியாயம் அல்ல. எந்த ஆண் மகனால் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாளோ, அவனே அவளை ஏற்றுக்கொள்வதுதான் தர்மம். என் சீடனான நீ, தர்மத்தை மீறி நடக்கமாட்டாய் என நம்புகிறேன். உன் குரு என்ற முறையில் அம்பாவை திருமணம் செய்துகொள்ள கட்டளையிடுகிறேன்.

திருமணத்திற்கு ஏற்பாடு செய். நானே இருந்து நடத்தி வைக்கிறேன், என்றார்.குருவின் இந்த வார்த்தைகள் பீஷ்மரின் காதுகளில் அம்பெனப் பாய்ந்தது. அவர், குருவே! என் தந்தைக்காக நான் பிரம்மச்சரிய விரதம் பூண்டுள்ளேன். எனக்கு திருமணம் என்பதே கிடையாது. ஒரு வேளை நான் கங்கா மாதாவின் வயிற்றில் இன்னொரு முறை பிறந்தால் அது நடக்கலாம். நடக்காத ஒன்றுக்காக தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள், என்று பணிவோடு சொன்னார்.பரசுராமருக்கு கோபம் வந்துவிட்டது. கண்களில் அனல் பறந்தது.உனக்கு நான் குருவாக இருந்து சொல்லிக்கொடுத்தது அனைத்தும் இந்த நிமிடத்தோடு வீணாகப் போயிற்று. குரு சொல் கேளாதவன் மனிதனே அல்ல. கடைசியாக சொல்கிறேன். இவளை மணக்க முடியுமா? முடியாதா? என்றார்.பீஷ்மர் மறுத்துவிட்டார்.

அப்படியானால் இந்த பிரச்னைக்கு போர் ஒன்றுதான் தீர்வு. நான் உன்மீது போர் தொடுக்கப் போகிறேன். நீ தோற்றுப்போனால் நான் சொன்னதை ஏற்கவேண்டும், என்று சொல்லியபடியே வில்லையும் அம்பையும் எடுத்தார் பரசுராமர்.

பரசுராமருக்கும், பீஷ்மருக்கும் பத்து நாட்கள் கடும் போர் நடந்தது. பீஷ்மரின் பாணங்களை பரசுராமரால் தாங்க முடியவில்லை. தசரத புத்திரன் ராமன் எப்படி அம்பு மழை பொழிவானோ அதுபோல் பொழிந்தாராம் பீஷ்மர். தன் தோல்வியை சிஷ்யனிடம் ஒப்புக்கொண்ட பரசுராமர் அங்கிருந்து சென்று விட்டார்.அம்பா அழுகையும், கோபமும் ஒன்றையொன்று மிஞ்ச, தனக்கிருந்த ஒரே ஆதரவையும் இழந்து விட்ட நிலையில், அங்கிருந்து காட்டிற்குச் சென்றாள். அவள் கடும் தவம் ஒன்றை இருந்தாள்.இறைவனிடம், கடவுளே! பீஷ்மன் என்னும் அபாரசக்தி கொண்ட ஒருவனால் நான் ஏமாற்றப்பட்டேன். அவனால் என் வாழ்க்கை அழிந்தது. நான் இருக்கும் இந்த தவத்தை ஏற்று அவனை என்றேனும் ஒருநாள் போரில் ஜெயிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும், என வேண்டினாள்.

பத்தாண்டுகள் உண்ணாமல், தண்ணீர் கூட குடிக்காமல் பாதம் மீது மற்றொரு பாதத்தை வைத்து கைகளை தலை மேல் கூப்பிய நிலையில் செய்த அவளது தவம் பலித்தது. அவளது மறைவுக்குப் பின் யாகசேனன் என்பவனுக்கு மகனாகப் பிறந்தாள். சிகண்டி என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டினான் யாகசேனன்.இந்த நிலையில் அம்பிகாவையும், அம்பாலிகாவையும் திருமணம் செய்த விசித்திரவீரியன் அவர்களைக் கூடாத நாளே இல்லை என்றாலும், இரண்டு பெண்களுக்கும் கருத்தரிக்கவே இல்லை. அது மட்டுமல்ல! பெண் இன்பத்தை அதிகமாக அனுபவிப்பவர்கள் பெறும் க்ஷயரோக நோயால் அவன் இறந்தே போனான். தாய் யோஜனகந்தி துக்கத்தில் ஆழ்ந்தாள். சந்திரவம்சம் இத்தோடு தொலைந்து விட்டதே, என்ன செய்யலாம்? என்ற ஏக்கத்தில் பீஷ்மரை அழைத்தாள். பீஷ்மா! நான் சொல்வதைக் கேள். நீ உன் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை நாட்டின் நலன் கருதி கைவிட வேண்டிய நிலைமை இப்போது வந்து விட்டது. மேலும், தாயின் அனுமதியுடன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவதில் தவறேதும் இல்லை.

தேவமுறை என்ற தர்மத்தின்படி, சகோதரன் குழந்தையின்றி இறந்து போனால், நாட்டை ஆளும் பொருட்டு, அவனது இன்னொரு சகோதரன் அப்பெண்ணைக் கூடி குழந்தை பெறலாம். அதன்படி நீ அம்பிகா, அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகளைப் பெறு. நாட்டைக் காப்பாற்று. இது என் உத்தரவு, என்றாள். இடியோசை கேட்ட நாகம் போல் நடுங்கி விட்டார் பீஷ்மர்.அம்மா! இது கொடுமை அல்லவா? தம்பியின் மனைவிகளை நான் தொடுவதாவது? மேலும், எந்த நிலையிலும் என் பிரம்மச்சரிய விரதத்தை கைவிடுவதில்லை என்ற சத்தியத்தை உங்கள் தந்தைக்கு செய்து கொடுத்தேன். என் தந்தையிடமும் வாக்கு கொடுத்தேன். வேண்டாம் தாயே. ஆனால், இன்னொரு யோசனை இருக்கிறது. அதை பரிசீலியுங்கள் தாயே! என்றார்.யோஜனகந்தி அவசர அவசரமாக, சொல்! பீஷ்மா, எனக்கு பேரக்குழந்தைகள் பிறக்க வழியிருக்கிறதா? சந்திரவம்சம் அழியாமல் இருக்க மார்க்கம் இருக்கிறதா? நாட்டை ஆள ஒரு புத்திரன் பிறக்கப் போகிறானா? சொல்...சொல்...ஏக்கமும் ஆவலும் என்னை பதட்டமடையச் செய்கின்றன, என்றாள்.

தாயே! பரசுராமர் அரசகுலத்தின் மீது கோபம் கொண்டு, எல்லா அரசர்களையும் வேருடன் கிள்ளி எறிந்து விட்ட காலம் ஒன்று இருந்ததைத் தாங்கள் அறிவீர்கள். அப்போது கணவனை இழந்த அரசிகள் எல்லோரும் ஒன்றுகூடி, முனிவர்கள் மூலமாக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். இது சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. அந்த விதியின் படி அம்பிகா, அம்பாலிகாவைக் குழந்தை பெறச் செய்யலாம், என்றதும், யோஜனகந்தி ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினாள். பல ஆண்டுகளுக்கு முன் தன் வாழ்வில் நடந்த அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள்.அப்போது யோஜனகந்தி மிக மிக அழகாக இருப்பாள். அவளது தொழில் படகோட்டுவது தானே! ஒருநாள் பராசரர் என்ற முனிவர் யமுனைக்கரைக்கு வந்தார். அந்த நேரத்தில் உலகம் அதுவரை கண்டிராத ஒரு அதிர்ஷ்டகரமான கிரகநிலை ஏற்பட்டது.

பராசரர் இதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அந்த கிரகநிலை மாறி விடும். அதற்குள் இந்த பூமியில் ஒரு குழந்தை பிறந்தால், அது உலகம் புகழும்படி வாழும். உலகத்துக்கு அரிய பல கருத்துக்களைத் தரும் என்று அவர் மனதில் பட்டது.யோஜனகந்தியின் படகில் ஏறினார். ஆற்றின் நடுவே சென்ற போது, பெண்ணே! உலகம் இதுவரை கண்டிராத ஒரு அதிசய கிரகநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அதனால் இந்த உலகமே பலனடையும். இங்கே நீயும், நானும் மட்டுமே இருக்கிறோம். நான் உன்னோடு கூடுகிறேன். நீ அந்தக் குழந்தையைப் பெறும் பாக்கியவதி ஆகிவிடு. குழந்தை பிறந்ததும் நீ மீண்டும் கன்னித்தன்மை உடையவளாகி விடுவாய். இது சத்தியம், என்றார்.

யோஜனகந்தி கோபப்பட்டாள்.முனிவரே! உம் தரத்துக்கும் தகுதிக்கும் இந்த வார்த்தைகள் அழகா! கல்வியறிவற்றவள் என நினைத்து தானே என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்! நீர் சொல்வதை நம்ப முடியவில்லை, என்றாள்.நேரம் செல்லச்செல்ல பராசரர் பதட்டப்பட்டார். தனது நிலையில் உறுதியாக நின்றார்.கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையுமல்லவா? யோஜனகந்தியும் கரைந்து விட்டாள். தன் உடலில் இருக்கும் மீன்வாடை அவரை நெருங்க விடாது என அவரிடம் கூறினாள். அந்த மணத்தை அப்படியே மாற்றிய பராசரர் அவளது உடலுக்கு சந்தன மணத்தைக் கொடுத்தார். யோஜனா மகிழ்ந்து போனாள். அதேநேரம், பகிரங்கமாக நட்ட நடு ஆற்றில் உறவு கொள்வது எப்படி என வெட்கப்பட்டாள்.அப்போது பராசரர் தன் சக்தியால் அந்த இடத்தில் இருள் கவியச் செய்தார். அந்த நிலையில் அவர்கள் கூடினர். அவள் கர்ப்பமானாள்.


Overview of the Mahabharata

Attributed Author: Vyasa (also known as Vedavyasa or Krishna Dvaipayana Vyasa)

Language: Sanskrit
Structure: The Mahabharata is the longest epic poem ever written, consisting of about 100,000 shlokas (verses) or over 200,000 individual verse lines, divided into 18 Parvas (books).

Main Storyline

The central narrative of the Mahabharata revolves around the Kurukshetra War, a great battle between two groups of cousins, the Pandavas and the Kauravas, who vie for the throne of Hastinapura.

The Key Characters:

Pandavas:

Yudhishthira: The eldest Pandava, known for his adherence to dharma.
Bhima: The second Pandava, known for his immense strength.
Arjuna: The third Pandava, an unmatched archer and the protagonist of the Bhagavad Gita.
Nakula and Sahadeva: The twin brothers, known for their skills in swordsmanship and knowledge.
Draupadi: The wife of the Pandavas, who plays a crucial role in the narrative, especially in the events leading up to the war.

Kauravas:

Duryodhana: The eldest Kaurava and the main antagonist, known for his jealousy and ambition.
Dushasana: Duryodhana's brother, infamous for his role in the disrobing of Draupadi.
Karna: A warrior of unmatched skill, born to Kunti (mother of the Pandavas) but raised by a charioteer, and a loyal friend of Duryodhana.
Shakuni: The cunning uncle of the Kauravas, who manipulates the events leading to the war.
Krishna: A divine incarnation of Vishnu and the charioteer of Arjuna, Krishna is the guiding force behind the Pandavas and delivers the Bhagavad Gita, a spiritual and philosophical discourse.

Key Events in the Mahabharata:

The Dice Game:

The rivalry between the Pandavas and Kauravas intensifies when Duryodhana, with Shakuni's help, invites Yudhishthira to a dice game. Yudhishthira loses everything, including his kingdom, his brothers, and Draupadi, leading to the humiliation of Draupadi and the eventual exile of the Pandavas.
Exile and Return:

The Pandavas spend 13 years in exile, with the last year to be spent in incognito. They return to Hastinapura after the exile, but Duryodhana refuses to return their kingdom, leading to the Kurukshetra War.

Kurukshetra War:

The war lasts for 18 days, with many key warriors and heroes from both sides falling in battle. The Pandavas ultimately emerge victorious, but at a great cost, with immense loss of life on both sides.

The Bhagavad Gita:

On the eve of the battle, Arjuna, overwhelmed by doubt and moral confusion, refuses to fight. Krishna imparts the teachings of the Bhagavad Gita, which addresses the concepts of duty, righteousness, and the nature of the self.

The Aftermath:

After the war, Yudhishthira is crowned king, but the victory feels hollow due to the immense loss and destruction. The epic concludes with the Pandavas renouncing their kingdom and embarking on a final journey towards the Himalayas, seeking moksha (liberation).

Key Themes of the Mahabharata:

Dharma: The Mahabharata explores the concept of dharma (righteous duty) in complex and nuanced ways, showing that the path of righteousness is often fraught with challenges and moral dilemmas.

Karma: The epic emphasizes the law of karma (action and its consequences) and how one's actions, good or bad, shape their destiny.

Power and Ambition: The destructive nature of power, greed, and ambition is a central theme, exemplified by Duryodhana's unyielding desire for the throne and the resulting devastation.

The Role of Fate: The Mahabharata delves into the interplay between human effort and divine will, suggesting that while individuals have free will, they are also subject to the overarching plans of fate.

Cultural and Religious Significance

Influence on Indian Culture: The Mahabharata has had a profound influence on Indian culture, religion, and philosophy. It has inspired countless adaptations in literature, art, theater, and film across India and beyond.

The Bhagavad Gita: The Bhagavad Gita, a part of the Mahabharata, is considered one of the most important spiritual texts in Hinduism, offering guidance on how to live a righteous life, fulfill one's duties, and achieve spiritual liberation.

Moral and Ethical Lessons: The Mahabharata provides deep moral and ethical lessons, teaching the complexities of human nature, the importance of upholding dharma, and the consequences of one's actions.

The Mahabharata is not just an epic narrative but a comprehensive guide to life, encompassing every aspect of human existence—from the personal and familial to the social and cosmic. It remains a timeless classic, revered for its profound wisdom and its exploration of the eternal struggle between good and evil.



Share



Was this helpful?