இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


குண்டலகேசி

Kundalakesi is a significant Tamil epic or narrative poem that delves into themes of love, virtue, and personal conflict. The work is attributed to the poet Kundalakesi, whose narrative style and poetic expression have left a lasting impact on Tamil literature.

குண்டலகேசி என்பது தமிழ் இலக்கியத்தில் மிகவும் முக்கியமான நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது சங்ககாலத்தின் புறநானூறு நூல்களில் ஒன்றாகும் மற்றும் குண்டலகேசி என்பவரால் எழுதப்பட்டது.

குண்டலகேசி (குண்டலகேசி விருத்தம்) சமயப்பூசல் அடிப்படையில் தோன்றியது. இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர். இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும். இந் நூல் பௌத்த சமயத்தைச் சார்ந்தது. தேரி காதையின் 46-ஆம் காதை நூலின் வரலாற்றையும், வைசிக புராணத்தின் 34 ஆம் சருக்கம் கதைத் தலைவியின் வரலாற்றையும் கூறுகின்றன.இக்காப்பியத்தில் 19 செய்யுட்கள் மட்டுமே கிடைத்துள்ளன. விருத்தப்பா என்பது இந்நூலின் பா வகையாகும். இக்காப்பியத்தின் தலைவி குண்டலகேசி. இவரது பெயரே நூலுக்கு வைக்கப்பட்டது.

சுருண்ட கூந்தலை உடையவள் என்பது குண்டலகேசி என்பதன் பொருளாகும். இவள் இயற்பெயர் பத்திரை. குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, அரசனால் கொலைகளத்துக்கு அனுப்பப்பட்டான். அப்போது அவனைச் சாளரத்தின் வழியே கண்டு, அவள் அவன் மீது காதல் கொண்டாள். அது அறிந்த அவள் தந்தை அரசனுக்கு பொருள் தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார்.

இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவே, அவளைத் தனியே அருகில் இருந்த சேரர் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். அவன் நடத்தையில் சந்தேகம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான். அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக அவனை ஒருமுறை சுற்றி வந்து வணங்கவிரும்புவதாகக் கூறி அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள். பின்னர் அவள் சமண மதத்தை தழுவினாள். அவள் தலைக் கூந்தல் பனங்கருக்கு மட்டையால் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போல் காட்சி யளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள். அவள் பல இடங்களில் வாதம் புரிந்து, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பவுத்தத் துறவியானாள்.


சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றை ஐம்பெரும்காப்பியங்கள் என்று சான்றோர் போற்றிக் கூறுவர். இவற்றில் முதல் மூன்று காப்பியங்களும் முழுவுருவத்துடன் கிடைத்துள்ளன. இம்மூன்று காப்பியங்களானும் நந்தமிழ்மொழி ஒப்பற்ற பெருமையுடையதாகத் திகழ்கின்ற தென்பதில் சிறிதும் ஐயமில்லை. மற்ற இரண்டு காப்பியங்களான வளையாபதி, குண்டலகேசி என்பவற்றுள் ஒரு சில செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

வளையாபதி, குண்டலகேசி என்னும் காப்பியங்கள் இருந்தன என்பதன் கண்ணும் நமக்கையமுண்டாகாதபடி அப்பெரு நூல்களின் செய்யுள்கள் மேற்கோள்களாகப் பண்டைச் சான்றோரால் கையாளப்பட்டமையாலே நிலைத்திருந்து அவையிருந்தமைக்குச் சான்றாகித் திகழ்கின்றன. குண்டலகேசி என்பது பவுத்தமதச் சார்ப்புபற்றி அம் மதத்திற்குப் பெரும் பகையாக விருந்த ஆருகத சமயக் கொள்கைகளைக் குற்றங்கூறி அவ்வாருகத மதத்தின் இறுமாப்பையடக்க வெழுந்தவொரு சொற்போர் நூலே என்பது ஆராய்ச்சியாற் புலனாகின்றது. ஆருகத சமயம் பற்றி நாதகுத்தனார் என்னும் ஆசிரியரோடு ஆவணம் என்னும் நகரத்திலே குண்டலகேசி என்பவன் சொற்போர் செய்து அவ்வாசிரியரைத் தோற்கச் செய்து பவுத்த சமயத்தை வளர்த்தனன் என்பதும், அவள் வைதிக சமய முதலிய வேறு பல சமயக் கணக்கரோடும் சொற்போர் செய்து வென்று தன் சமயத்தைப் பெருக்கினள் என்பதும் நீலகேசி என்னும் நூலால் இனிது விளங்கும்.

நீலகேசி என்னும் நூல் தானும் குண்டலகேசி ஆருகத சமயத்திற்குக் கூறிய குற்றங்களை நீக்குவதனையும் அக் குண்டலகேசியாற் பரப்பப்பட்ட பவுத்த சமயக் கொள்கைகளுக்குக் குற்றங்கூறி மீண்டும் ஆருகத சமயக் கொள்கைகளை நிலைநிறுத்துதற்கும் எழுந்த நூலேயாம் என்பதனை அதனை ஓதுவோர் எளிதின் உணருவர். மேற்கூறிய நீலகேசியினின்றும் வேறு சில நூல்களினின்றும் இற்றை நாள் நமக்கு முழுவுருவத்திற் கிடைத்துள்ள செய்யுள் பத்தொன்பது மட்டுமே. இப் பத்தொன்பது செய்யுட்களையல்லாமல் நீலகேசியின் உரையாசிரியராகிய சமயதிவாகர வாமன முனிவர் தமதுரையிற் குறிப்பிட்டுள்ள 99 செய்யுள்களின் முதனினைப்புக்களும் உள்ளன. இவர் காட்டும் இக்குண்டலகேசியின் முதனினைப்புடைய செய்யுள்கள் தத்தம் மகத்தே அக்கருத்துக்களைக் கொண்டிருந்தன என்பதனையும் அவருரையை ஆழ்ந்து பயில்வோர் உணர்தல் கூடும். அந்த முதனினைவுகளை மட்டும் ஈண்டுக் காட்டுவாம். அவையாவன.

1. முன்றான்,(இச் செய்யுள் வீரசோழியத்தினின்றும் முழுவுருவத்தோடு கிடைத்துளது),

2. தன்புறத்த,

3.தலைவைத்த,

4. எல்லையுள் விழவினுள்,

5. காசமுங் காலமும்,

6, கருத்தினாற் பெற்றோமோ,

7.உடம்பளவிற்றுயிர்,

8. பழுதையாற் பாம்புண்டு,

9.கலப்பாடி,

10. ஒருவகையால்,

11. எழும்பயிற்றி,

12. காலினாற் சுமந்துய்ப்பான்,

13. மக்கட் பண்பழியா,

14. இயற்றிய வுடம்பிட்டால்,

15. வினைநிற்கப் பயன்,

16. தொல்லைக்கட் செய்யப்பட்டது,

17. அடுப்புத் துடைப்பம்,

18. துடிக்கும் வண்ணத் தின்மையி லுயிர்களை,

19.துன்பந் தீவினையின் பயன்,

20. நின்ற துன்பம்

21. ஓம்பல் வேட்கை,

22. போக வேட்கை,

23. வாயினல் வேட்கை களைவான்,

24. தீவினையின் பயன்றுய்ப்பல்,

25. கொல்லா வேட்கை,

26. பூமைத்தாள்,

27. காமங்கூர்

28. துன்னவூசி,

29. பொய்யையஞ்சி யுரையாமை,

30. இவ்விடத்தோ ரலைக்கோட்சிறை,

31. இந்நிலத்துப் புகுந்திலன்,

32.கோறலையஞ்சி,

33.கொன்று தின்றான்,

34. வாலிதினூணூன்,

35. புயந்துக்க பிலி.

34. ஊன் விற்ப கொள்வ,

37. விலக்குக் கொள்வானை,

38. செய்வினை கொடுத்தார் நிற்ப,

39. விலைக்குவிற் பான்செய் வஞ்சமும் வேண்டி விலைக்குக்கொள் வானே, படவிதியாயோ,

40, பூவினைக் காட்டல்,

41. தின்றபுலால் கொலைநேர் விக்கும்,

42. சுக்கில சோணிதம்,

43. உள்ளங்கொள்ள,

44. ஓதினவுண்பராவது நன்றெனின்,

45. சீவன் பரிணமித்தம்,

46. ஒழிந்த படை பறித்தலென்,

47. பேய் பெற்ற தாய்பற்று,

48. காயந் தன்னை வருத்தல் தவமென்பாய்,

49. வெயிலுணிற்ற லெனவும்,

50. துன்பம் வேண்டில்,

51. மற்றமா மரங்களும்,

52. உறங்குதலான்,

53. நட்டுச் சோறவாவுறு,

54. மெய்தீண்ட விலை,

55. தீயுற்ற கொடியரும்பு,

56 தோற்ற,

57. ஒப்பவற்றாலே,

58 சேர்த்திட,

59 நேரொத்து வாடுறு,

60. மண்களுங் கற்களும்,

61. வந்திங்கு வைகுங்கள்.

62. ஓரறிவா முயிர்,

63. நின்றாகுந் திரிவாகும்,

64. நின்னாற் பிரகாசமேபோல்,

65. நித்ய குணங்களால்,

66. அநித்ய குணங்களால்,

67, குணங்குணி,

68. பல குணமாய்

69. சொல்லேன் யானென்றியே,

70. பரிணமிக்கும் பொருள்,

71. பிறந்த கும்மாயம்,

72. பயற்றது திரிவாக,

73. தோன்றினவுங் கெட்டனவும்,

74. குணியாய்ப் புற்கலம்,

75. புற்கல மிரண்டின்,

76. அங்கையு ணெல்லிக்காய்,

77. கந்திடத்துக் காணாதாயின்,

78. கொல்லேற்றின் கூர்ங்கோடு,

79. ஒரு வகையாற் குழக்கன்று மொருவகையான் முயறானும்,

80. இடக்கை வகையால்,

81. காற்றிறத்காற் கையில்லை,

82. நீயன்றென் றுரைப்ப,

83. உணராமை காரணத்தால்,

84. ஒன்றின தியற்கையால்,

85. பிறிதிடத்துள்ள,

89. ஒரு காலத்துள பொருள்,

87. நூலிரும்பாய்,

88. பிறிதொன்றி னியற்கை,

89. நீயுரைக்கும் வீட்டிடமும்,

90. போர்த்திங்கு வாரல்,

91. உணர்வவர்க்குப் பிறக்குமேல்,

92. கருவியாற் பொருள்கள்,

93. காரணத்தை யிலனாகி,

94. முறையுணரா னென்றியேல்,

95. உடனாகப் பொருள்களை யொருங் குணர்ந்தான்,

96. பொதுவாய குணத்தினால்,

97. வரம்பில்லாப் பொருள்களை,

98. எப்பொழுது மறியானேல்,

99. யோனிமற் றவர்க்குரை

என வருகின்ற இத் தொண்ணூற்றொன்பது முதல்களையுடைய தொண்ணூற்றொன்பது செய்யுளும் குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்துச் செய்யுள்களே என்று ஐயமின்றி அறிகின்றோம் இன்னும் நீலகேசி உரைக்கிடையே வருகின்ற

சென்றெய்து மவத்தையே, சிலவற்றாற் றரப்படுமோ
வன்றியு மப்பொருள்தோ றவ்வவத் தன்மையோ
நின்றதூஉந் திரிந்ததூஉ மன்றாயி னிகழ்வில்லை
யொன்றிய வொருவகையே லொருவகையாற் கேடுண்டோ

என்னும் செய்யுளும் (நீலகேசி 377 ஆஞ் செய்யுளுரை.)

அளவிலாக் கடைப்பிடி யொருநான்கும் பிறப்பென்னுங்
களையறுந் துனபத்துக் கற்பநூ றாயிரமும்
விளைவாய போதியை யுறுமளவும் வினைமடியா
தளர்வின்றி யோடிய தாளினா னல்லனோ

என்னும் செய்யுளும் குண்டலகேசி என்னும் அம்மாபெருங்காப்பியத்துச் செய்யுள்களே என்று ஊகிக்கலாம்.

இனி, நீலகேசியாசிரியர் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகிய குண்டலகேசியின்கண், குண்டலகேசி என்பவள் ஆவண நகரத்தின்கண் நாதகுத்தனார் என்னும் ஆருகதரோடு வாதிட்டு ஆருகதசமயக் கொள்கைகட் கெல்லாம் குற்றம் கூறி ஆருகதர் மெய்க்காட்சியுடையாரல்லர் என்று நிலை நாட்டி நாதகுத்தனாரை வென்றதாக வருகின்ற பகுதியில், குண்டலகேசி தம் மதத்திற்குக் கூறிய குற்றங்கட்கெல்லாம் விடையிறுத்தற்பொருட்டே மொக்கலவாதச் சருக்கத்தைப் பாடியிருத்தலை அச்சருக்கத்தை ஓதுவோர் எளிதில் உணரலாம். நூலாசிரியர் கருத்துணர்ந்த உரையாசிரியராகிய சமய திவாகர முனிவரும் மொக்கலவாதச் சருக்கத்தின்கண் மொக்கலன் கூற்று ஒவ்வொன்றற்கும் இஃது இன்ன காதை( செய்யுள்) யை வழி மொழிந்தபடியாம் என்று மேலே கூறிய செய்யுள் முதல்களைப் குறிப்பிட்டுப் போகிறார். மற்று நூலாசிரியர் தாமும் மொக்கலன் நீலகேசியைக் கண்டுழி நீலகேசி யான் இரண்டு பவுத்த சமயக்கணக்கர்களை வென்று வாகை சூடினேன்.

அவருள் ஒருத்தி குண்டலகேசி என்பவள் மற்றொருவன் அருக்கச்சந்திரன் காண் என்றாளாக. அது கேட்ட மொக்கலன் ஏடி! பொய்யே புகன்றனை. குண்டலகேசி பேராசிரியை அவளை நீ வெல்லுதல் எங்ஙனம்? நுங்கள் ஆருகத சமயத்துப் பேராசிரியராகிய நாதகுத்தனாரையே அவள் வென்றனள். அவள் உன்பாற் றோல்வி யுறுவளோ? என்றானாக. அது கேட்ட நீலகேசி, ஏடா! எளியோய் நீ என்னை யறிந்திலை. குண்டலகேசி ஆவண நகரத்துள் நாதகுத்தனாரை வென்றனள் என்று செருக்குறுகின்றனை. ஆவண நகரத்தே குண்டலகேசி நாத குத்தனாரை வென்ற வகையை அவள் கூறியவாறே நீ எனக்குக் கூறிக் காண்! யான் அவள் கூற்றெல்லாம் குற்றமுடையன என்பதனையும் நாத குத்தனார் கூறியவை யெல்லாம் குற்றமற்ற வாய்மைகளே யாதலையும் கூறி எமது ஆருகத சமயச் சிறப்பை இவ்வவையோரறிய நிலைநிறுத்துவல் என, அது கேட்ட மொக்கலனும் அவ்வாறே குண்டலகேசி கூற்றினையே எடுத்து ஒவ்வொன்றாகக் கூறிவந்தான். அவற்றிற்கெல்லாம் நீலகேசி விடைகூறி மொக்கலனைத் தோற்பித்தாள் என்றே கூறக் காண்கின்றோம். இவ்வுண்மையைச் சிறப்பாக நீலகேசி 284,5,6,7,8 ஆகிய ஐந்து செய்யுளானும் பொதுவாக மொக்கலவாதச் சருக்கத்தில் எஞ்சிய செய்யுள்களாலும் நன்குணரலாம். எனவே மேற் காட்டப்பட்ட செய்யுள் முதற் குறிப்பனைத்தும் குண்டலகேசியினின்றும் எடுத்து உரையாசிரியரால் நீலகேசி யுரையிற் குறிக்கப்பட்டவைகளே என்பது துணிவாம்.

இனி, நீலகேசியாசிரியர் தம் நூலில் புத்தமதம் முதலாகப் பூதவாத மதம் ஈறாக ஒன்பது சமயங்களை மறுத்துள்ளாராயினும் பவுத்த சமயத்தை மறுப்பதே அவருடைய முதன்மையான குறிக்கோள் என்பதனை அச் சமயத்திற்காக அவர் நான்கு சருக்கங்களை வகுத்துக்கொண்டமையானும், குண்டலகேசிக் காப்பியத்தை மறுப்பதன் பொருட்டே அவர் குண்டலகேசியையும் அவட்கு ஆசிரியனான அருக்கச் சந்திரனையும் அவனுக்கு ஆசிரியனான மொக்கலனையும் அவனுக்கு ஆசிரியனான புத்தனையும் தம் நூலில் வலிந்திழுத்துப் பாத்திரமாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் இங்ஙனம் மற்றையோரையும் பாத்திரமாக்கியது நூலின்கண் ஒரு சருக்கம் பெரும் பகுதியைக் கவர்ந்துகொள்ளாமைப் பொருட்டும் பயில்வோர்க்குச் சுவை மிகுதற் பொருட்டுமே யாம் என்பதனையும் நீலகேசியை ஓதும் நுண்ணுணர்வுடையோர் எளிதில் உணர்வார் என்க.

உயிர்களுக்கு வருகின்ற துன்பங்களுக்குக் காரணம் காம வெகுளி மயக்கங்களே என்னும் கோட்பாட்டையுடைய பவுத்த நூலாசிரியர் அக்குற்றங்களைத் தமது இலக்கியத் தலைவர்பாலே வைத்துக் காட்டுவதனை யாம் மணிமேகலையினும் காணலாம். மணிமேகலையைப் பின்பற்றி எழுந்த இக் குண்டலகேசியின் வரலாறும் ஓரளவு மணிமேகலை வரலாற்றினையே ஒத்திருத்தல் இயல்பே.

1. கடவுள் வாழ்த்து

முன் தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந் தான் தனக்கென்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன் அவன் தாள் சரண் நாங்களே.

(இதன் பொருள்) முன் தான் பெருமைக்கண் நின்றான் உலகின்கண் பிறர் யாரும் மெய்யுணர்ந்து வீடுபேற்று நெறியின்கண் நிற்றற்கு முன்பே தான் அம்மெய்யுணர்வினை யெய்தித் துறவின்கண் நிலைபெற்று நின்றானாகி; முடிவு எய்துகாறும்-தான் பரிநிருவாணம் என்னும் அவ் வீடுபேற்றினை எய்துமளவும்; நன்றே நினைந்தான் பிறவுயிர்கட்கெல்லாம் நன்மையுண்டாகும் நெறியினையே ஆராய்ந்துணர்ந்தான்; அன்றே- அந்நாளே குணமே மொழிந்தான்- அங்ஙனம் தான் ஆராய்ந்துணர்ந்த நல்லறங்களையே மக்கட்குச் செவியறிவுறுத்தினான்; தனக்கு என்று ஒன்றானும் உள்ளான் தான் தனக்கென்று யாதொரு நன்மையையும் வேண்டுகிலனாய்; பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்- பிறருடைய நன்மையின் பொருட்டே முயன்றனன்; அவன் இறைவன்-அத்தகைய சான்றோனாகிய புத்த பெருமானே எமக்குக் கடவுள் ஆவன்; நாங்கள் சரண் ஆதலால் அவ்விறைவன் திருவடிகளுக்கே அடியேங்கள் அடைக்கலமாகி வணங்குவோம் என்பதாம்.

(விளக்கம்) உலகின்கண் முதன் முதலாக மெய்க்காட்சி பெற்று அக்காட்சிவழி நின்றொழுகியவன் எங்கள் புத்தபெருமானே! என்பாள் முன்றான் பெருமைக்கண் நின்றான் என்றாள். பெருமை, ஈண்டுத் துறவொழுக்கம். என்னை?

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு குறள்-21.

என்பவாகலான். நிற்றலாவது-அவ்வொழுக்கத்திற் பிறழாது ஒழுகுதல். முடிவு-என்றது. பரிநிருவாணத்தை (வீடுபேற்றினை). நன்று-நன்மை தரும் அறம். குணம்-ஈண்டு-நன்மைமேற்று. தனக்கு என்று-தான் இன்புறுதற் பொருட்டு. ஒன்றானும்-யாதொரு பொருளையும்.

இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து குறள், 344.

எனவும் விடல் வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு எனவும் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை எனவும் தலைப்பட்டார் தீரத் துறந்தார் எனவும் ஓதுபவாகலான் தனக்கென்று ஒன்றானும் உள்ளான் எனல் வேண்டிற்று. அன்று ஏ: அசைகள்.

இனி, துறந்தோர் சிலர் காடுபற்றியும் கனவரை பற்றியும் மலை முழைஞ்சு புக்கிருந்தும் தனித் துறைதலும் ஒருவகையாற் றன்னலமே கருதிப் பிறர் நலம் பேணாப் பீழையுடைத்து: எம்மிறைவனோ தான் மெய்யுணர்ந்து நன்றின்கண் நிலைபெற்றுழியும் அவ்வாறு தனித்திராமல் மன்னுயிரின் துன்பமெல்லாம் போக்குதல் வேண்டும் என்னும் பேரருள் காரணமாகப் பெரிதும் முயல்வானாயினன் என்பாள் பிறர்க்கு உறுதிக் குழந்தான் என்றாள் அவன் என்றது அத்தகைய சான்றோனாகிய எங்கள் புத்தபெருமான் என்பது பட நின்றது. அவன் இறைவன், அவன் தான் சரண் என அவன் என்பதனை முன்னுங் கூட்டுக. சரண்-அடைக்கலம். அடைக்கலம் புகுதலாவது அவன் கூறிய அறநெறியிலே உறுதியாக நின்றொழுகுதல். இனி இக் குண்டலகேசிச் செய்யுளை வழிமொழிந்து வருகின்ற நீலகேசிச் செய்யுளும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலது; அது வருமாறு

ஆதிதான் பெரியனா யறக்கெடு மளவெல்லா
மூதியமே யுணர்ந்தவ னுறுதரும மேயுரைத்தான்
யாதனையுந் தான்வேண்டா னயலார்க்கே துன்புற்றான்
போதியா னெம்மிறைவன் பொருந்தினா ருயக்கொள்வான் நீலகேசி, குண்டல, 27

எனவரும்

அவையடக்கம்

2. நோய்க்கு உற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காதல் உடையார் புகைத் தீமை ஓரார்
போய்க்குற்றம் மூன்றும் அறுத்தான் புகழ்கூறு வேற்கு என்
வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல அன்றே.

(இதன் பொருள்) நோய்க்கு உற்ற மாந்தர்- பிணிகட்கு உறைவிடமாகப் பொருந்திய மக்கள்; மருந்தின் சுவை நோக்ககில்லார்-அப்பிணிதீர்தற்குக் காரணமான மருந்தினது சுவை இனிதோ? இன்னாதோ? என்று ஆராய்வாரல்லர், தம் பிணி தீர்தல் ஒன்றே குறிக்கொள்வர்; தீக்கு உற்ற காதல் உடையார்-குளிரால் வருந்தித் தீக்காயும் அவாவுடையோர்; புகைத்தீமை ஓரார்-அத்தீயின் கண்ணதாகிய புகை தமக்குச் செய்யும் தீமையை ஒரு பொருளாகக் கொள்ளார்; போய்க் குற்றம் மூன்றும் அறுத்தான்-அரசவின்பத்தையும் துறந்துபோய் மனமொழி மெய்களால் விளையும் மூவகைக் குற்றங்களையும் அறுத்தவனாகிய புத்ததேவனுடைய; புகழ் கூறுவேற்கு- புகழைப் பாடுகின்ற என்பால்; வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும்-அறியாமை காரணமாக என் வாய்க்கு இயல்பாகவமைந்த சொற்களின் குற்றங்களும்; வழுஅல்ல-அப் புத்தன்பால் அன்புடையாராய் அவனறங் கொண்டுய்யவெண்ணும் சான்றோருக்குக் குற்றங்களாகமாட்டா; என்பதாம்.

(விளக்கம்) நோயக்குற்றமுடைய மாந்தர் எனினுமாம் நோயுடையோர் தம் நோய்தீரக் கருதுவதல்லது அந்நோயின் தீர்வு கருதித் தாமுண்ணும் மருந்து இனிதோ? இன்னாதோ? என்று ஆராய்வதிலர். எனவே, பிறவிப் பிணிக்கு மருந்தாகிய புத்த தேவருடைய அறத்தையே கூறுகின்ற எமது நூலின்கண் அவ்வறத்தையே நோக்குவதல்லது என் அறியாமை காரணமாகவுண்டாகிய குற்றங்களை நோக்கி இந்நூல் இகழ்வாரல்லர் ஆதலால் யானுமிந்நூலைச் செய்யத் துணிந்தேன் என்பது கருத்து. தீக் குற்ற காதல்..............ஓரார் என்பதற்கும் இங்ஙனம் கூறிக்கொள்க.

தீக்குற்ற காதலுடையார் என்றது குளிரால் வருந்தித் தீக்காய அவாவு வோரை. புகைத்தீமை-புகையாலுண்டாகுந் துன்பம். அவை மூச்சு முட்டுதல்: கண்கரித்தல் முதலியன.

போய் என்றது அரசவின்பத்தைத் துறந்துபோய் என்றவாறு.

மூன்று குற்றம்- மெய் மொழி மனம் என்னும் மூன்றிடத்தும் தோன்றுகின்ற மூவகைக் குற்றங்கள் இவற்றுள் மெய்யிற்றோன்றுங் குற்றங்கள் கொலை களவு காமம் என்பன. மொழியிற்றோன்றுவன பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்பன. மனத்திற்றோன்றுவன- வெஃகல் வெகுளல், பொல்லாக் காட்சி என்பனவாம். என்னை?

தீவினை, என்பது யாதென வினவின்
ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையோ வுடம்பிற் றோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில்
சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்
உள்ளத் தன்னில் உறுப்பன மூன்றும்

எனவரும் மணிமேகலையானும் உணர்க

இனிக் குற்றம் மூன்றும் என்பதற்கு காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் எனினுமாம். என்னை?

யாமே லுரைத்த பொருள்கட் கெல்லாம்
காமம் வெகுளி மயக்கங் காரணம் மணி, 30-5-12

எனப் பௌத்தநூல் கூறுதலும் காண்க. இனி, திருவள்ளுவனாரும்

காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய் குறள், 340

என்றோதுதலும் காண்க.

இனி மூன்று குற்றம் என்பதற்குப் பௌத்தர் துறவோர்க்கு மட்டுமே உரிய குற்றங்களாகக் கூறுகின்ற அவாவும் பற்றும் பேதைமையும் ஆகிய மூன்றும் எனினுமாம். என்னை?

குலவிய குற்றமெனக் கூறப் படுமே
அவாவே பற்றே பேதைமை யென்றிவை மணி,30-169-70

என்றும் ஓதுபவாகலான்

இது பேதைமை முதல் பன்னிரண்டாக விரித்துக் கூறியதனை மூன்றாகத் தொகுத்தோதியபடியாம். இவற்றை ஆசிரவம் என்றும் கூறுப என் வாய்க்குற்ற சொல்லின் வழு என்றது, அறியாமை காரணமாக இயல்பாகவே என் வாய்க்குப் பொருந்திய சொற்குற்றம் என்றவாறு (2)

மனந்தூயோர்க்கே இன்பமுளவாகும் எனல்

3. வாயுவினை நோக்கி உள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கி உள வாழ்க்கை அதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத
தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம்.

(இதன் பொருள்) மாண்டவய நாவாய்- மாண்புடைய வலிமைமிக்க மரக்கலங்கள்; வாயுவினை நோக்கி உள- தமது இயக்கத்திற்குக் காற்றினையே பெரிதும் அவாவியிருப்பனவாகும்; வாழ்கை உயிர்களின் வாழ்வு தானும்; ஆயுவினை நோக்கி உள- தமக்கென ஊழ் வகுத்த அகவையையே குறிக்கொண்டிருப்பனவாம்; அது போல்- அங்ஙனமே; துப்புரவும் எல்லாம்- பொறிகளானுகரப்படும் நுகர்ச்சிகளும் பிறவுமாகிய நன்மைகளெல்லாம்; தீயவினை நோக்கும்- தீவினையே நயந்து நோக்கும் நோக்கமும்; இயல் சிந்தனையும்-அத் தீவினை செய்தற்குரிய நெறிகளிலே செல்கின்ற நினைவும்; இல்லாத் தூயவனை- தன்பாற் சிறிதுமில்லாத தூய்மையுடைய சான்றோனையே; நோக்கி உள-தாம் எய்துதற்குரிய இடமாக எதிர்பார்த்திருப்பனவாம் என்பதாம்.

(விளக்கம்) மரக்கலங்கள் தமக்கு ஆதாரமாகக் காற்றை எதிர்பார்த்திருப்பது போலவும், உயிரினங்களின் வாழ்வுகளெல்லாம் தத்தமக்கு ஊழ்வரைந்துள்ள வாழ்நாளையே ஆதாரமாகக் குறிக்கொண்டிருப்பது போலவும் இவ்வுலகத்துள்ள இன்பங்களும் புகழ்களும் தீவினை செய்தற்கண் ஆர்வமும் அவ்வழியியங்கும் எண்ணங்களும் சிறிதுமின்றி மனந்தூயனாகிய நல்லோனையே தமக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளன என்றவாறு.

எனவே மனந்தூயரல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பமும் பிற நலங்களும் உளவாகா என்பது கருத்தாயிற்று. ஆகவே இம்மை யின்பங்களையும் புகழ் முதலியவற்றையும் விரும்புவோர் மனநலம் உடையராகவே அவை யெல்லாந் தாமே வந்தெய்தும். மனத்தூயரல்லார்க்கு இவைகள் எய்தா; ஆதலின் மனந்தூயராய்த் தீவினையை எஞ்ஞான்றும் அஞ்சவேண்டும் என்றறிவுறுத்தவாறாயிற்று, இதனோடு,

மனத்தூயார்க் கெச்ச நன்றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை -குறள், 456

எனவும்,

மனநலம் மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழுந் தரும்

எனவும்

மனநலத்தின் ஆகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து -குறள், 459

எனவும், வரும் அருமைத் திருக்குறள் களையும்,

பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காத்து- மெய்யில்
புலமைந்துங் காத்து மனமா சகற்று
நலமன்றே நல்லா றெனல் -நீதிநெறி விளக்கம், 60

எனவும்

மனத்த கறுப்பெனி னல்ல செயினும்
அனைத்தெவையுந் தீயவே யாகும்-எனைத்துணையும்
தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே
மாசின் மனத்தினவர்
-நீதிநெறி விளக்கம், 58

எனவும் வரும் குமரகுருபரவடிகளார் பொன்மொழிகளையும் ஒப்பு நோக்குக. (3)

மெய்த்தவம்

4. போற்றல் உடை நீக்குதல் பொடித்துகள் மெய்பூசல்
கூர்த்த பனி ஆற்றுதல் குளித்து அழலுள் நிற்றல்
சார்த்தர் இடு பிச்சையர் சடைத் தலையர் ஆதல்
வார்த்தை இவை செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான்.

(இதன் பொருள்) உடை போர்த்தல்-காவி ஆடை முதலியவற்றால் உடம்பினைப் போர்த்துக் கோடலும்; நீக்குதல்-ஆடையுடாது விட்டுவிடுதலும்; பொடித் துகள் மெய்பூசல்- சாம்பல் முதலியவற்றை உடல் நிரம்பப் பூசிக்கோடலும்; கூர்த்த பனி குளித்து ஆற்றுதல்- மிக்க பனியினும் (மழையினும்) நீருட் குளிர்ந்து நின்று அவற்றாலுண்டாகும் துன்பங்களைப் பொறுத்துக் கோடலும்; அழலுள் நிற்றல்-கோடையின்கண் தீயினுள் நிற்றலும்; சார்த்தர் இடு பிச்சையர் ஆதல்- தம் சமயத்தைச் சார்ந்துள்ள இல்லறத்தாரிடுங்கின்ற பிச்சையை ஏற்றுண்டு திரிதலும்; சடைத்தலையார் ஆதல் சடை வளர்த்துக் கட்டிய தலையினையுடைராதலும்(அன்றி மழிந்த தலையையுடையராதலும்) இவை வார்த்தை இன்னோரன்ன செயலெல்லாம் வறிய சொல்லளவே யன்றித் தவவொழுக்க மாகமாட்டா; செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான்-இனி வாய்மையாகச் செய்கின்ற தவவொழுக்கம் யாதெனின் மனம் பொறிகள் வழியாகப் புலன்களிடத்தே செல்லாமல் அடங்கி ஒழுகும் ஒழுக்கமேயாம் என்று கூறினான்; என்பதாம்.

(விளக்கம்) உடை போர்த்தல்-காவியாடை துவராடை முதலியவற்றால் உடம்பு முழுதும் போர்த்தல்.காவியாடை போர்ப்பவர் வேதவாதியர் துவாரடை போர்ப்போர் பௌத்தர். பல்வேறு சமயங்களும் அடங்குதற்கு உடை போர்த்தல் எனப் பொதுவினோதினர். பொடியும் துகளும் என உம்மை விரித்துப் பொடி பூசுவோர் சைவசமயத்தினர் என்றும், துகள் பூசுவோர் வைணவ சமயத்தினர் என்றுங் கொள்ளலாம். ஈண்டுத் துகள்:மண்ணும், சூரணமும் என்க. கூர்த்தல்- மிகுதல். பனி கூறியதனால் மழையும் கொள்க. சடை கூறியதனால் மழித்தலும் கொள்க. பிச்சை கூறியதனால் கிழங்கு தழை காய் கனி சருகு முதலியன உண்ணலும் கொள்க. வார்த்தை ஈண்டுப் பொய்õய புகழ் எனபது பட நின்றது.

இனி, இதனோடு

வீடு வேண்டி விழுச்சடை நீட்டன்மெய்ம்
மூடு கூறையின் மூடுதல் வெண்டலை
ஓடு கோடலு டுத்தலென் றின்னவை
பீடி லாப்பிற விக்குவித் தென்பவே சீவக, 1427

எனவும்,

ஏம நன்னெறி யெந்நெறி யன்னெறி
தூய்மை யின்னெறி யாமுந் துணிகுவம் சீவக, 1428

எனவும்,

தூங்குறிக் கிடந்து காயும் பழங்களுந் துய்ப்ப நில்லா
பாங்கலா வினைகள் என்றார் பகவனா ரெங்கட் கென்னின்
ஓங்குநீண் மரத்திற் றூங்கு மொண்சிறை யொடுங்கல் வாவல்
பாங்கரிற் பழங்க டுய்ப்பப் பழவினை பரியு மன்றே சீவக, 1429

எனவும்,

அல்லியும் புல்லும் உண்டாங் காரழ லைந்து ணின்று
சொல்லிய வகையி னோற்புத் துணியும்வெவ் வினைக ளென்னிற்

எனவும்,

நீட்டிய சடைய மாகி நீர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து
வாட்டிய வுடம்பின் யாங்கள் வரகதி விளைத்து மென்னிற்
காட்டிடைக் கரடி போகிக் கயமூழ்கிக் காட்டி னின்று
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்றுரை விடுமி னென்றான்
சீவக, 1431

எனவும் வரும் சீவகன் மொழிகளும்

மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின் குறள், 280

எனவும்,

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் குறள், 278

எனவும்,

புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து குறள், 277

எனவும் வரும் திருவள்ளுவர் பொன்மொழிகளும்,

நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே- கஞ்சுகம்
எப்புலமும் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது நீதிநெறி விளக்கம், 93

எனவருங் குமரகுருபரவடிகளார் மணிமொழியும் ஒப்புநோக்கற் பாலன (4)

நுகர்வினால் அவாவறுத்தல் கூடாதெனில்

5. வகை எழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும்
புகழ் எழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர்
தொகை எழும் காதல் தன்னால் துய்த்து யாம் துடைத்தும் என்பார்
அகையழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்கல் ஆமோ!

(இதன் பொருள்) வகை எழில் தோள்கள் என்றும்-இலக்கண வகுப்பிற்கியைந்த தோள்கள் இவனுடைய தோள்கள் என்றும்; மணி நிறம் குஞ்சி என்றும்-இவனுடைய மயிர்க்குடுமி நீல மணியினது நிறம் போன்ற நிறமுடைய புகழ் உண்டாகும்படி பலபடப் பாரித்துக் கூறுதற்குக் காரணமான; பொருள் இல் காமத்தை வாய்மையினோக்குவார்க்கு ஒரு சிறிதும் பொருள் இல்லாததாகிய காமவின்பங்களை; மற்று ஓர் தொகை எழும் காதல் தன்னால்-ஒரு தொகுதியாகத் தம்பால் தோன்றுகின்ற காமக் கிளிர்ச்சியாலே; துய்த்து-(அவற்றையெல்லாம் எய்தி) நுகர்ந்து; யாம் துடைத்தும் என்பார்-அக் காமக்குணத்தை அழிக்கக் கடவேம் என்று ஒரு சிலர் கூறாநிற்பர், அங்ஙனம் கூறுவது மடமையேயாம்; என்னை? அகை அழல் அழுவந்தன்னை- எரிகின்ற தீப் பற்றிக்கொண்ட காட்டினை; நெய்யினால் அவிக்கலாமோ- நெய் பெய்து அவித்தல் சாலுமோ? என்பதாம்.

(விளக்கம்) அவாவினை நுகர்ந்து அவித்தல் கூடும் என்று சிலர் கூறுகின்றனர். இவர் கூற்று நெய்யினால் எரி நுதுப்பேம் என்பார் கூற்றுப்போலப் பேதைமையுடைத் தென்றவாறு.

என்பினை நரம்பிற் பின்னி உதிரந்தோய்த்து இறைச்சி மெத்திப் புன்புறந் தோலைப் போர்த்து மயிர் பொலிய வேய்ந்திட்டு,ஒன்பது வாயிலாக்கி ஊன்பயில் குரம்பை என இவ்வுடம்பினியல்பினை உள்ள படியே உணராமல் காமத்தான் மதிமயங்கி வகை எழிற்றோள்கள் என்றும், மணிநிறக் குஞ்சி என்றும் புகழ்எழ விகற்பிக்கின்ற என்றாள். இங்ஙனம் விகற்பித்தற்குக் காமமே காரணமாகலின் விகற்பிக்கின்ற காமம் என்றாள்; காமம்- காமவின்பம். காதல்-காமக் கிளர்ச்சி. அகைதல்-எரிதல். அழுவம்-காடு.

அவிக்கலாமோ என்னும் வினா அவிக்கவொண்ணாது என்னும் அதன் எதிர்மறைப் பொருளை வற்புறத்தி நின்றது. காமத்தை நுகர்ச்சியால் அவித்தல் கூடாது. நுகர்தற்குரிய பொருள்களின் பொல்லாங்கனை இடையறாது நினைந்து காணுமாற்றால் அவற்றின் இழிதகவுணரின் அவற்றின்பாற் செல்லும் அவா அறம் என்பது பௌத்தர் கொள்கை. இதனை, அசுபபாவனை என்பர். அஃதாமாறு:- துறவியானவன் உடம்பானது பலவகை இழித்த பொருளால் ஆக்கப்பட்டதென்றும், சாணியின் குவியலில் தோன்றி வளரும் புழுக்கள்போல் கருப்பையிலுண்டாகின்றதென்றும், மலங்கழிக்குமிடம் போல் வாலாமையின் உறைவிடமாயிருப்பதென்றும், அருவருப்பான அழுக்கின் கசிவுகள் இதன்கண் அமைந்த ஒன்பது வாயிலினும் இடையறாது பெருகுகின்றன என்றும், அங்கணம்போலே வெறுத்தற்குரிய தீ நாற்றத்தையே வெளிப்படுத்துகின்றது என்றும் மறவாது நினைத்திருத்தல் என்ப. இவ்வாறு, இவ்வுடம்பின் இழிதகவினை நினைவூட்டுமிடங்கள் மணிமேகலையிற் பலவிடங்களினும் காணப்படுதலும் நினைக.

இனி, இவ்வுடம்பின் அகவை நாளும் மிகமிகக் குறுகியது என்று நினைதலும் இதன்பாற்படும் என்க.

அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத்
தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்
மணி, 20-254-55

என்பதுமது (5)

இதுவுமது

6. அனல் என நினைப்பிற் பொத்தி அகந் தலைக் கொண்ட காமக்
கனலினை உவர்ப்பு நீரால் கடையற அவித்தும் என்னார்
நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குதும் என்று நிற்பார்
புனலினைப் புனலினாலே யாவர்போகாமை வைப்பார்.

(இதன் பொருள்) அனல் என நினைப்பிற் பொத்தி- நொய்ய விறகினில் தீக்கதுவுமாறுபோல நினைவின்கண் கதுவிக்கொண்டு; அகந்தலைக் கொண்ட காமக் கனலினை- நெஞ்சத்தை யிடமாகக்கொண்டு வளர்கின்ற காமமாகிய பெரு நெருப்பை; உவர்ப்பு என்னும் நீரால்- வெறுப்பு என்னும் நீர் பெய்து; கடையற அவித்தும் என்னார்- எச்சமின்றி அவித்துவிடுவேம் என்று கருதாராய்; நினைவிலாப் புணர்ச்சிதன்னால் நீக்குதும் என்று நிற்பார்- நினைவிழந்து அதுவேயாகி அழுந்துதற்குக் காரணமான புணர்ச்சியினாலேயே அக் காமத்தை அகற்றுவேம் என்று முனைந்து நிற்கின்றார் மடவோர்;புனலினைப் புனலினாலே யாவர் போகாமை வைப்பார்- மிக்குப் பெருகுகின்ற வெள்ளத்தை மற்றுமொரு வெள்ளத்தாலே அணையிட்டுத் தடுத்துவைக்கும் ஆற்றலுடையோர் யாவரே உளர் என்பதாம்.

(விளக்கம்) பொத்துதல்-மூடிக்கோடல். அகம்-நெஞ்சு. உவர்ப்பு நீர்: பண்புத்தொகை. உவர்ப்பு- வெறுப்பு.

காமத்தீ மெய்யுணர்வால் அவிவதன்றி நுகர்ச்சியால் அவியாது என்பதனையும், காமத்தாற் கதுவப்பட்டார் அதனிடத்தே அழுந்தி உலகினையே மறப்பர் என்பதனையும்,

சிற்றிடைச் சீதையென்னு நாமுஞ் சிந்தை தானும்
உற்றிரண் டொன்றா நின்றா லொன்றொழித் தொன்றை யுன்ன
மற்றொரு மனமு முண்டோ மறக்கலாம் வழிமற் றியாதோ
கற்றவர் ஞான மின்றேற் காமத்தைக் கடக்க லாமோ

எனவரும் கம்பநாடர் மொழியானும் உணர்க. (6)

யாக்கை நிலையாமை

7. போதர உயிர்த்த ஆவி புக உயிர்கின்ற தேனும்
ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார்
ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா
காதலால் அழுதும் என்பார் கண் நனி களையல் உற்றார்.

(இதன் பொருள்) போதர உயிர்த்த ஆவி-உடம்பினின்றும் வெளியேறுவதற்கு விடுகின்ற மூச்சானது; புக உயிர்க்கின்றதேனும்- மீண்டும் காற்று உட்புகுந்தற் பொருட்டே விடப்படுகின்றதாயினும்; உணர்வினான் மிக்க நீரார் ஊதியம் என்று கொள்வர்-அங்ஙனம் அக்காற்று மீண்டும் உட்புகுவதனை மெய்யுணர்வினின் மிக்க பெரியோர் ஒரு பேறாகவே கருதாநிற்பர்; ஆதலால் அழிதன்மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா-அங்ஙனமாதலால் அழியுமியல்புடைய உடம்பு முதலியவற்றின் அழிவிற்கு நெஞ்சழிந்து வருந்துதல் வேண்டா; காதலால் அழுதும் என்பார்-இவ்வுடம்பின் கண் பற்றுடைமையாலே அதன் அழிவிற்கு ஆற்றாது அழுவேம் என்று கருதுபவர்; கண் நனி களையல் உற்றார்- தம் கண்களை வாளா வருத்துபவரே யாவர் என்பதாம்.

(விளக்கம்) வெளியேறிய மூச்சு மீண்டும் உட்புகாமற் போயே விடுதலும் கூடும். ஆதலால் மெய்யுணர்வுடையோர் தாம் உள்வாங்கும் ஒவ்வொரு மூச்சும் தமக்கு ஊதியமாகவே கருதுகன்றனர். அத்துணை நிலையாமையுடையது இவ்வுடம்பு. இதன் அழிவுக்கு வருந்துதல் வேண்டா. இதன் அழிவு கருதி அழுபவர் வீணே தம்மை வருத்துபவரே யாவர் என்றவாறு.

சான்றோர் உயிர்கும் மூச்சு உட்புகுவதனை ஊதியமாகக் கருதற்குக் காரணம் பின்னும் பிழைத்திருந்து அதனாலாய பயன் கோடல் கருதியேயாம். பின்னும் வாழ்வேம் என்னும் அவாவாலன்று என்க.

இனி இச்செய்யுளோடு,

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை குறள், 331

எனவும்,

நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு குறள், 336

எனவும்,

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு குறள், 338

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களும்,

சாதலும் பிறந்த றானுந் தம்வினைப் பயத்தி னாகும்
ஆதலு மழிவு மெல்லா மவைபொருட் கியல்பு கண்டாய்
நோதலும் பரிவு மெல்லாம் நுண்ணுணர் வின்மை யன்றே
பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான்

எனவும்,

பிரிந்தவர்க் கிரங்கிப் பேதுற் றழுதநங் கண்ணி னீர்கள்
சொரிந்தவை தொகுத்து நோக்கிற் றொடுகடல் வெள்ள மாற்றா
முரிந்தநம் பிறவி மேனாண் முற்றிழை யின்னு நோக்காய்
பரிந்தழு வதற்குப் பாவா யடியிட்ட வாறு கண்டாய்

எனவும்,

அன்பினி னவலித் தாற்றா தழுவது மெளிது நங்கள்
என்பினி னாவி நீங்க விறுவது மெளிது சேர்ந்த
துன்பத்தாற் றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி
இன்பமென் றிருத்தல் போலு மரியதிவ் வுலகி லென்றாள்

எனவும்,

அன்பினி னவலித் தாற்றா தழுவது மெளிது நங்கள்
என்பினி னாவி நீங்க விறுவது மெளிது சேர்ந்த
துன்பத்தாற் றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி
இன்பமென் றிருத்தல் போலு மரியதிவ் வுலகி லென்றாள்

எனவும்,

மயற்கையிம் மக்கள் யோனிப் பிறத்தலும் பிறந்து வந்தீங்
கியற்கையே பிரிவு சாத லிமைப்பிடைப் படாத தொன்றாற்
கயற்கணி னளவுங் கொள்ளார் கவற்சியுட் கவற்சி கொண்டார்
செயற்கையம் பிறவி நச்சுக் கடலகத் தழுந்து கின்றார்

எனவும்,

இளமையின் மூப்புஞ் செல்வத்
திடும்பையும் புணர்ச்சிப் போதிற்
கிளைநரிற் பிரிவு நோயில்
காலத்து நோயு நோக்கி
விளைமதுக் கமழுங் கோதை
வேலினும் வெய்ய கண்ணாய்
களைதுய ரவலம் வேண்டா
கண்ணிமைப் பளவு மென்றாள்

எனவும் வரும் சீவக சிந்தாமணி செய்யுள்களும் ஒப்புநோக்கியின்புறுக

நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்- நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று நீதிநெறி விளக்கம், 6

என்பது குமரகுருபரவடிகளார் திருமொழி (7)

கூற்றுவன் கொடுமை

8. அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும்
பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் நங்கட்கு
ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார்.

(இதன் பொருள்) அரவு இனம்- கொடிய நச்சுப் பாம்பினங்களும் அரக்கர்- இரக்கமென்றொரு பொருளிலாத அரக்கரும்; ஆளியாளி முதலிய வல்விலங்குகளும்; சிறிது தம்மை மருவினால் தீய ஆகா- சிறிது காலம் தம்மோடு யாரும் பழகுமிடத்தே அவர்பால் அன்புடையவாய்த் தீமை செய்வன ஆகாவாம்; வரம்பு இல் காலத்துள் என்றும்- எல்லையில்லாததாய் இறந்தகாலத்திலெல்லாம் நாள்தோறும்; பிரிவு இலம் ஆகி- தன்னோடு பிரிதலிலமாய்; தன்சொற் பேணி ஒழுகும் நங்கட்கு- தன் கட்டளையை மேற்கொண்டு ஒழுகிவருகின்ற மாந்தராகிய நம்பொருட்டு; ஒருபொழுது இரங்கமாட்டா- ஒருசிறிது பொழுதேனும் இரங்குமியல்பில்லாத, கூற்றின்- கூற்றுவனுக்குத் தப்பி; உய்தும் என்பார்- யாங்கள் உய்ந்திருக்கவல்லேம் என்று கூறவல்லார்; யார்- யாவரேயுளர்; ஒருவருமிலர் என்பதாம்.

(விளக்கம்) அரவினம் அரக்கர் ஆளி எனத் திணைவிரவி வந்தது, மிகுதிபற்றி அஃறிணை முடிபேற்றது.

அரவினம் முதலியன கொல்லும் தொழிலினையுடையன வாயினும் தம்மோடு சிறிதுகாலம் பழகுவோர்பால் அன்புகொண்டு அவரைக் கொல்லாமல் விடுதலுமுண்டு. கூற்றுவனோடு யாம் எல்லையற்ற காலமெல்லாம் கூடியிருப்பேமாயினும் அவன் நம்பால் சிறிதும் இரக்கம் கொள்வானலன். ஆதலால் அவனுக்குத் தப்பி உயிர்வாழ்வோர்யாருமிலர் என்றவாறு.

கூற்றுவன் கணம் கணமாக நம்மகவை நாளை நம்மோடிருந்துண்கின்றான் ஆதலால், வரம்பில் காலத்துள் என்றும் பிரிவிலமாகி என்றார். அவன் சொற் பேணுதலாவது, அவன் கட்டளைப்படி கணந்தோறு மிறந்திறந்து வருதல். சிறிதேனும் இரங்குதலிலன் என்பாள். ஒருபொழுது இரங்கமாட்டாக் கூற்று என்றாள். உய்துமென்பார் யார்? என்னும் வினா ஒருவருமிலர் என்பது பட நின்றது. இனி, இதனோடு.

தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோ ரென்னான் இளையோ ரென்னான்
கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ்
வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ

எனவரும் மணமேகலைப் பகதியும்,

கூற்றுவன் கொடிய னாகிக் கொலைத் தொழிற் கருவி சூழ்ந்து
மாற்றரும் வலையை வைத்தான் வைத்ததை யறிந்து நாமும்
நோற்றவன் வலையை நீக்கி நுகர்ச்சியி லுலக நோக்கி
ஆற்றுறப் போத றேற்றா மளியமோஒ பெரிய மேகாண்

எனவரும் சிந்தாமணிச் செய்யுளும்,ஒப்ப நோக்குக. (8)

இதுவுமது

9. பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின் றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ!

(இதன் பொருள்) பாளை ஆம் தன்மை செத்தும்-யாம் நம் முடைய உடம்பு நந் தாய்மாரின் வயிற்றின்கண் கருவாகியிருந்த நிலைமையிலிருந்து இறந்தும்; பாலன் ஆம் தன்மை செத்தும்- பின்னர் எய்திய குழவிப் பருவம் இறந்தும்; காளை ஆம் தன்மை செத்தும்- அப்பருவத்தின் பின் வந்தெய்திய காளைப்பருவம் இறந்தும் காமுறும் இளமை செத்தும்-அதன்பின்னர் வந்ததும் காமுற்று மகளிரை மருவுதற் கியன்றதும் ஆகிய இளமைப் பருவமும் இறந்தும் வந்துள்ளோம்; மீளும் இவ்வியல்பும்-இவ்வாறு மீண்டு மீண்டும் இறக்கின்ற இந்த இயல்பினையே; இன்னே மேல் வரும் மூப்பும் ஆகி- இப்பொழுதே இதற்கு மேலே வருகின்ற முதுமைப் பருவமும் எய்தாநிற்ப; நாளும் நாள் சாகின்றாமால்-இவ்வாறே யாம் ஒவ்வொரு நாளும் இறப்பினை எய்துகின்றோ மல்லமோ?; நமக்கு நாம் அழாதது என்னோ? பிறர் சாகின்றதற்கு அழுகின்ற யாம் நமது சாவிற்கு நாமே அழாததற்குக் காரணந்தான் என்னையோ? என்பதாம்.

(விளக்கம்) யாம் நஞ்சுற்றத்தார் இறந்துழிக் கண்கனிந்து அழுகின்றோம்; ஆனால் யாமோ யாம் கருவிருந்த பருவத்தினின்றும் இறந்தோம். பின்வந்த குழவிப் பருவத்தினின்று மிறந்தொழிந்தோம். அதன் பின்வந்த காளைப் பருவத்தினின்றும் இறந்தோம். அதன்பின்னர் மகளிரைக் காமுற்றக் களிக்குமத் தனியளம்பருவத்தினின்றும் இறந்தொழிந்தோம். இப்போது வந்தெய்துகின்ற இம் மூப்புப் பருவத்தினின்றும் இறத்தல் ஒருதலை. இவ்வாறு நாள்தோறு மிறக்கின்ற நாம் நமது இறப்பிற்கு அழாமைக்குக் காரணம் யாதோ? என்றவாறு. (9)

இதுவுமது

10. கோள்வலைப் பட்டுச் சாவாம் கொலைக்களம் குறித்துச் சென்றே
மீளினும் மீளக் காண்டும் மீட்சி ஒன்றானும் இல்லா
நாள் அடி இடுதல் தோன்றும் நம்முயிர் பருகும் கூற்றின்
வாளின்வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றோம் வாழ்கின்றோமா!

(இதன் பொருள்) கோள்வலைப்பட்டு-பகைவரால் சிறையாகப் பிடிக்கப்பட்டு; கொலைக்களம் குறித்துச் சென்றே- கொலைக்களத்திற் கொடுபோய்க் கொல்லுதலைக் குறித்துச் சென்று; மீளினும் மீளக்காண்டும்- ஒரே வழிக் கொலையுண்ணாமல் மீண்டு வருபவரையும் யாம் காணலாம்; மீட்சி ஒன்றானும் இல்லா-ஆனால் எவ்வாற்றானும் மீள்வதென்பது இல்லாத; நம் உயிர் பருகும் கூற்றின் நாள் அடியிடுதல் தோன்றும்- நம்முடைய உயிரைக் குடித்தொழிதற்குக் கால்கோள் செய்தல் தோன்றாநின்ற; வாளின் வாய்- நாளாகிய அவ் வாளின்கண்; தலை வைப்பாக்கு- நமது தலையை வைத்தற்கு; செல்கின்றோம்-யாம் நாடோறும் செல்வதல்லது; வாழ்கின்றோமோ- யாம் வாய்மையாக வாழ்கின்றோமில்லை என்பதாம்.

(விளக்கம்) யாம் நாள்தோறும் நாள்கள் வருதல் கண்டு அறியாமையால் வாழ்கின்றோமென்று மகிழ்கின்றோம் ஆராய்ந்து பார்க்குமிடத்து யாம் ஒருநாளும் வாழுகின்றோமில்லை. நாள்தோறும் நமது வாழ்நாளை ஈர்கின்ற கூற்றுவன் வாளின்கண் நமது தலையை வைப்பது நன்கு விளங்கும் என்பதாம். ஈண்டு,

நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின் குறள், 334

என்னுந் திருக்குறளை நினைவு கூர்க (10)

யாக்கையின் இழிதகைமை

11. நன்கணம் நாறும் இது என்று இவ் உடம்பு நயக்கின்றது ஆயின்
ஒன்பது வாயில்கள் தோறும் உள் நின்று அழுக்குச் சொரியத்
தின்பது ஓர்நாயும் இழுப்பத் திசைதொறும் சீப் பில்கு போழ்தின்
இன்பநல் நாற்றம் இதன்கண் எவ்வகை யாற்கொள்ள லாமே.

(இதன் பொருள்) இது நன்கனம் நாறும் என்று-இது நன்றாக நறுமணம் கமழ்கின்றது என்று பாராட்டி; இவ்வுடம்பு நயக்கின்றது ஆயின்- இந்த உடம்பு நம்மாற் பெரிதும் விரும்பப்படுமானால்; ஒன்பது வாயில்கள் தோறும் உள்நின்று அழுக்குச் சொரிய- மற்றிவ்வுடம்பே அதன்கண் அமைந்த கண் முதலிய ஒன்பது தொளைகளின் வழிகளானும்; அதனகத்தினின்றும் தீ நாற்றமிக்க அழுக்குகள் ஒழுகா நிற்பவும்; தின்பது ஓர் நாயும்-அதனைத் தின்னுமியல்புடைய நாய்கள்; தீசைதொறும் இழுப்ப- தம்முள்கலாம் கொண்டு வாயாற் கௌவி நாற்றிசைகளினும் இழுத்தலாலே; சீ பில்கு போழ்தின்-இவ்விடம்பினின்றும் சீழ் வடிகின்ற பொழுது; இதன்கண் இன்ப நல் நாற்றம் எவ்வகையால் கொள்ளலாம்-இவ்வுடம்பின்கண் மனமின்புறுதற்குக் காரணமான நறுமணத்தை எவ்வாற்றால் யாம் எய்துதல் கூடும்? கூறுமின்! என்பதாம்.

(விளக்கம்) இவ்வுடம்பு இயற்கையாகவே அருவருக்கத்தக்க தீ நாற்றம் உடையதேயாம் இதன்கண் செயற்கையாலுண்டாகிய நறுமணத்தை அதன் மணிமாகவே கருதி அறிவிலிகளாற் பாராட்டப்படுகின்றது அதனியற்கை தீ நாற்றமே என்பதனை அதன்கண் அமைந்த ஒன்பது தொளைகளும் சொரிகின்ற அழுக்காலும் உயிர் போயவழி நாய் முதலியன பற்றி யிழுக்க அவ்வுடம்பினின்றும் ஒழுகும் சீ முதலியவற்றாலும் உணரலாம். ஆதலால் இவ்வுடம்பு விரும்பத்தகுந்த சிறப்பொன்று மில்லாதது என்பதாம்.

இதனோடு,

எழுகு றும்பி பெருகு காதை வள்ளையென்ப ரிகழ்கரும்
புழுவ டர்ந்õ குழலி ருண்ட புயல தென்பர் பூளைநீ
ரொழுகு கண்கள் குவளையென்பர் தரளமென்ப ருயிரொடும்
பழுது றும்பல் லென்பை யின்ன பகர்வ தென்ன பாவமே

எனவும்,

எச்சி றங்கு வாய்வி ளிம்பு பவளமென்ப ரெழுமிரண்
டச்சி லந்தி கொங்கை யானை யாகு மென்ப ரதுபெருங்
கச்சி லங்கி ருந்து மாவி கவரு கின்ற தென்பராற்
பிச்சி லங்க வர்க்கு நேர்பி ராந்தர் யாவர் பேசிலே

எனவும்,

நாசி யூறல் கோழை யெச்சி னாறு மாமு கத்தையே
மாசு றாத பூர்ண சந்த்ர வட்ட மென்ப ரொட்டுவைத்
தேசு றாந ரம்பி னைக்கொ டென்பு கட்ட மைத்ததோள்
வீச வீச நெஞ்ச ழிந்து வேணு வென்பர் காணுமே

எனவும்,

குடர்ந ரம்பு தசைவ ழும்பு குருதி யென்பு சுக்கில
முடைகி டந்த பொந்தின் மேலொர் தோல்வி ரித்து மூடியே
யடர்வு றும்பஃ றுளைக டோறு மருவ ருப்ப றாமலம்
படர்தல் கண்டு மதனை யேகொன் மகளி ரென்று பகர்வதே

எனவும்,

கூராரும் வேல்டவிழியார் கோலாக லங்களெல்லாந்
தேராத சிந்தையரைச் சிங்கிகொள்ளு மல்லாமல்
நேராயு ணிற்கு நிலையுணர்ந்து நற்கரும
மாராய் பவருக் கருவருப்ப தாய்விடுமே

எனவும்

வால வயதின் மயக்கு மடந்தையருங்
கால மகன்றதற்பின் கண்டெவரு மேயிகழ
நீல நறுங்குழலு நீடழகு நீங்கியவர்
கோலதொரு கையூன்றிக் கொக்குப்போ லாயினரே

எனவும்,

கிட்டா தகன்மின் கிடப்பதிதிற் பொல்லாங்கென்
றிட்டா ரலரே லிலங்கிழையார் தம்முடம்பிற்
பட்டாடை மேல்விரித்துப் பாதாதி கேசாந்த
மட்டாய் மறைத்துவரு மார்க்கமது வென்கொண்டோ

எனவும்,

வீசியதுர்க் கந்தம் வெளிப்படுந்தம் மெய்யிலெனக்
கூசி மறைப்பதன்றேற் கோற்றொடியா ரங்கமெங்கு
நாசி மணக்க நறுங்குங் குமசுகந்தம்
பூசி முடித்தல்பசி போக்கும் பொருட்டேயோ

எனவும்,

மாற்றரிய தம்மூத்தை வாய்திறக்கு முன்னமெழு
நாற்ற மறைக்கவன்றே னாவழித்துப் பல்விளக்கிக்
கோற்றொடியார் நன்னீருங் கொம்புளித்துப் பாகுசுரு
டீற்றுவது மென்குதலை தீர்க்கு மருந்தென்றோ

எனவும்,

பட்டாடை சாத்திப் பணிமே கலைதிருத்தி
மட்டா யவயவங்கள் மற்றவைக்கு மேற்குவண்ணம்
கட்டாணி முத்தங் கனகமணிப் பூடணங்க
ளிட்டா லலதவருக் கென்னோ வியலழகே

மெய்ஞ்ஞான விளக்கம், 10-19

எனவும் வரும் செய்யுள்கள் ஒப்புநோக்கற்பாலன (11)

இதுவுமது

12. மாறுகொள் மந்தரம் என்றும் மரகத(ம்) வீங்கு எழு என்றும்
தேறிடத் தோள்கள் திறத்தே திறந்துளிக் காமுற்றது ஆயின்
பாறொடு நாய்கள் அசிப்பப் பறிப்பறிப் பற்றிய போழ்தின்
ஏறிய இத் தசைதன் மாட்டு இன்புறல் ஆவது இங்கு என்னோ!

(இதன் பொருள்) மாறுகொள் மந்தரம் என்று- ஒன்றனோடு ஒன்று வலமிடமாக மாறுபட்டிருக்கின்ற இரண்டு மந்திரமலைகளே இவைகள் என்றும்; மரகத வீங்கு எழு என்றும்-பருத்த மரகத மணியாலியன்ற தூண்களே இவைகள் என்றும்; தேறிட- கேட்போர் உணரும்படி; தோள்கள் திறத்தே- ஆடவர்களுடைய தோள்களைக் குறித்து; திறத்துளிக் காமுற்றது ஆயின்- மகளிர் முறையே அவாவுவதானால்; பாறொடு நாய்கள் அசிப்ப- பருந்துகளும் நாய்களும் இவையிற்றை இரையாகத் தின்னுதற் பொருட்டு; பறிப்பறிப் ஏறிய இத்தசைதன் மாட்டு-பருத்துத்திரண்ட இந்த வறுந்தசையின் கண்; இங்கு இன்புறல் ஆவது என்னோ-இவ்வுலகத்து அம்மகளிர் இன்புறுதற்கியன்ற பண்பு யாதோ? கூறுமின் என்பதாம்.

(விளக்கம்) இஃது ஆடவர்பாற் காமங்கொண்டு வருந்தும் மகளிர்க்குக் கூறியபடியாம். ஆடவர் உறுப்புக்களுள் வைத்து மகளிர் நெஞ்சைப் பெரிதும் கவர்வது அவர்தம் தோள்களேயாம். ஆதலால் அத் தோள்களேயாம் கூறினர். மகளிரை ஆடவர் தோள்களே பெரிதும் கவரும் இயல்புடையன எனபதனை,

நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேலிணை
ஆக்கிய மதுகையான் றோளி லாழ்ந்தன
வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும்
தாக்கணங் கனையவ டனத்திற் றைத்தவே மிதிலைக், 36

எனவரும் இராமவதாரத்தானும் உணர்க.

வலத்தோளும் இடத்தோளுமாய் வேறுபட்டிருத்தலின் மாறுகொள் மந்தரம்- மந்தரமலை மரகதம்-ஒரு மணி; மரகதத்தாலியன்ற எழு. வீங்கெழு என்று தனித்தனி கொள்க. எழு-தூண். பாறு-கழுகுமாம்: உளி ஏழாவதன் சொல்லுருபு. பறிப்பறி- பிடுங்கிப் பிடுங்கி என்றவாறு. பறித்தல்- பிவுங்குதல். என்னோ என்னும் வினா ஒன்று மில்லை என்பது படநின்றது (12)

இதுவுமது

13. உறுப்புக்கள் தாம் உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை
மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேல் இவ் வுறுப்புக்
குறைத்தன போல் அழுகிக் குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவதும் உண்டோ !

(இதன் பொருள்) உறுப்புக்கள் தாம் உடன்கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை- கால்கை முதலிய புறத்துறுப்புக்களும் குடர் காற்றுப்பை முதலிய உள்ளுறுப்புக்களும் ஒருசேர ஒருடம்பாக இருந்த இந்தத் தோலாலியின்ற பெரிய பையானது; மறைப்பில்- மேலே தோல் போர்த்துள்ள மறைப்பினாலே; விழைவிற்குச் சார்வாய் மயக்குவதேல்- நந்தம் அவாவிற்குச் சார்பிடமாகி நம்மை மயக்கு மியல்புடையதென்னின்; உறுப்புக் குறைத்தனபோல- மற்றிவ்வுடம்பே உயிர் பிரிந்துழித் தன்னுறுப்புக்கள் துணிக்கப்பட்டன போல்வனவாக; அழுகிக் குறைந்து குறைந்து சொரிய -அழுகி நாளுக்கு நாள் தேய்ந்து தேய்ந்து வீழாநிற்ப; வெறுப்பிற் கிடந்த பொழுதின்- கண்டோர் வெறுப்பிற் கிடனாகிக் கிடந்த காலத்து; வேண்டப் படுவதும் உண்டோ- இவ்வுடம்பின்கண் யாம் அவாவுதற்கியன்ற தன்மையும் உண்டாகுமோ? கூறுதிர் என்பதாம்.

(விளக்கம்) உறுப்பு, கண் முதலிய புறுவுறுப்புக்களும் குடர் முதலிய உள்ளுறுப்புக்களும். தோலாற் போர்த்து மறைக்கப்பட்டடிருத்தலால் இது விழைவிற்குச் சார்வாய் மயக்குவது; அங்ஙனம் போர்க்கப் படாவிடின் அருவருக்கத் தக்கதேயாம் என்பாள்; மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவது என்றாள் அங்ஙனம் மயக்குமேனும் இஃது அழுகிக் குறைந்து குறைந்து சொரியக் கிடந்த பொழுதின் இதன்கண் மயக்குவதற்குரிய தன்மை சிறிதும் இல்லையாம் என்றவாறு.

என்புந் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழுவின் பிண்டம்

என்றார் மணிமேகலையினும். இன்னும், இவ்வுடம்பியல்பினை

காலி ரண்டுநி றுத்தி மேலிரு கைபி ணைத்தொரு புறவெலும்
பாலி ணக்கிமு கட்கு மேல்வளை யடர்ந்த ரம்பெனு மாக்கையாற்
கோலி யிட்டப ழுக்க ழிக்கொரு குறைவு றாமல் வரிந்துமேற்
றோலி ணக்கிய கற்றை வேய்ந்துயர் சுவர்பு லால்கொ டியற்றியே

வந்து போகவி ரண்டு வாசல் வகுத்து மற்றெழு சாளரந்
தந்து சாக்கிர மாதி யீரிரு தளமெ டுத்ததன் மேன்மலர்க்
கொந்து லாவிய மாமு டிக்கன கும்பம் வைத்தவிர் கூந்தலா
முந்து நீள்கொடி மாட நாலு முகக்கண் மாளிகை முற்றினாள்

எனவரும் மெய்ஞ்ஞான விளக்கச் செய்யுள்களும்(அவித்தியா-13-14)

எனபினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப்
புன்புறந் தோலைப் போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந்திட்
டொன்பது வாயி லாக்கி யூன்பயில் குரம்பை செய்தான்
மன்பெருந் தச்ச னல்லன் மயங்கினார் மருள வென்றான்

எனவரும் சீவக சிந்தாமணிச் செய்யுளும்(1577) அறிவுறுத்துதலையும் ஈண்டு நினைக. (13)

இதுவுமது

14. எனதெனச் சிந்தித்தலால் மற்று இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்
தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவும் மூத்தவும் ஆகி
நுனைய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட
இனைய உடம்பினைப் பாவி யான் எனது என்னல் ஆமோ!

(இதன் பொருள்) பாவி- தீவினையாளனே!; எனது எனச் சிந்தித்தலால்- என்னுடையது என்று யான் உரிமை கொண்டாடுதற்கிடனாயிருத்தலாலே; இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்-இந்த உடம்பு யான் இன்புறுதற்குரியதாகும் என்பாயாயின்; இஃது உன்னுடையதாதல் தான் எங்ஙனம்? தினைப்பெய்த புன்கத்தைப் போல- தினையரிசி பெய்து சமைக்கப்பட்ட சோறு போன்று; சிறியவும் மூத்தவும் ஆகி-உருவத்தாற் சிறியனவும் பெரியனவுமாய்; நுனைய- கூர்ந்த வாயினையுடையனவாகிய; புழுக்குலந்தம்மால்- புழுக் கூட்டங்களாலே; நுகரவும் வாழவும் பட்ட- தம்முடையதாகவே கொண்டு உண்ணவும் உறையுளாகக் கொண்டு வாழவும் படுகின்ற; இனைய உடம்பினை-இத் தன்மையான இந்த உடம்பினை யான் என்று என்னால் ஆமோ-யான் என்றாதல் என்னுடையது என்றாதல் கூறுதல் கூடுமோ? கூடாதுகாண் என்பதாம்.

(விளக்கம்) தினையரிசியாலாய சோறு உடலிலுண்டாகும் சிறியவும் பெரியவும் ஆகிய புழுக்களுக்குவமை. புன்கம்- சோறு.

இதனை,

நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்
மரையான் கறந்த நுரைகொ டீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம் புறநானூறு,

எனவரும் செய்யுளினும் காண்க.

இந்த வுடலை யாம் எனதென்று கொள்வேம், இதன்கண் வாழுகின்ற புழுக்குலங்களும் தமதாகவே கொண்டு இதனை உண்டு இதனிடத்தேயே வாழ்கின்றன, ஆதலால் இத்தகைய வுடம்பினை யான் எனது என்று யாம் உரிமை கோடல் பேதைமையேயாம் என்றவாறு.

இன்னும்,

சடமீது கிருமிப்பை தானென்றன் மலமோ
டிடர்மேவு புண்ணோ டெழக்கண்ட துண்டே
யுடன்மீதிவ் வுடல்போலு திக்கின்ற புழுவைத்
திடமான மகவென்று சீராட லென்னே

எனவும்,

ஊறுதுய ருஞ்சுகமு முற்றுனுப விக்கும்
பேறுபெறு தன்னுடலு மாவிபிரி யுங்காற்
கூறுசிறு புள்ளெழு குடம்பையென வப்பால்
வேறுபடு மென்னிலினி மெய்யுறவு யாதே

எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கச் செய்யுள்களும் நியற்னை பாலவாம்.

இறைமாட்சி

15. இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய்
உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான்
பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெண்குடை
அறங்கொள் கோல் அண்ணல் மும்மத யானையான்

(இதன் பொருள்) மும்மத யானையான்- மூன்று மதங்களையும் பொழிகின்ற களிற்றியானையையுடையவனும்; திங்கள் வெள்குடை- நிறைத்திங்கண் மண்டிலம் போன்ற வெள்ளிய தன்குடையினாலே; அறங்கொள் கோல்- அறத்தையே குறிக்கோளாகக் கொண்ட செங்கோன் முறைமையினையுடைய; அண்ணல்- இவ்வேந்தன் இவ்வாற்றால்; இறந்த நற்குணம்-இவ்வுலகத்தை விட்டகன்று போய்விட்ட நல்ல மக்கட் பண்புகள்; எய்தற்கு அரியவாய் மீண்டும் மாந்தர் எய்துதற்கரியனவாகி; உறைந்த தன்மை எல்லாம் இருந்தவற்றை யெல்லாம்; உடன் ஆக்குவான்- மீண்டும் இவ்வுலகத்து மக்களோடே சேர்த்து அவரை யுய்விக்கும்பொருட்டு; பறிந்த மூர்த்தி ஒத்தான்- துடித விமானத்தினின்றும் போந்து இந் நிலவுலகத்திற் றோன்றியருளிய புத்தபெருமானையே ஒத்தவனாய்த் திகழ்ந்தான் என்பதாம்.

(விளக்கம்) இச் செய்யுள் தொடங்கிவருகின்ற செய்யுள்கள் குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்திற் பேசப்படுகின்ற அரசன் மாண்புகள் இந்த அரசனுடைய பிற மாண்புகள் இச் செய்யுளின்முன் பல செய்யுட்களிற் பேசப்பட்டிருத்தல் வேண்டும் என்று நினைத்தற்கிடனுளது. அவை யெல்லாம் கிடைத்தில. இச் செய்யுளின் முற்போந்த செய்யுட்களில் அந்த அரசனுடைய அறமாண்புகளை வருணித்து இச் செய்யுளில் இவ்வாற்றால் இம் மன்னவன் புத்தபெருமானையும் ஒப்பாவான் என்று கூறுகின்றார் போலும்.

புத்தபெருமான் உலகின்கண் அறங்கள்கெட்டு மக்கட்பண்பு அழிந்த காலத்தே உலகிற்றோன்றி அவ்வறங்களை மீண்டும் உலகில் நிறுவினன் என்பவாகலின் இறந்த நற்குணம் எய்தற்கரியவா யுறைந்த தம்மை யெல்லாம் உடனாக்குவான் பிறந்த மூர்த்தி என்று புத்தரைச் சுட்டினார். மக்கள் மேற்கொள்ளாவிடினும் அறம் அழிந்தொழியாமையின் எய்தற்கரியவாய் உறைந்த தம்மையெல்லாம் என்றார். உறைந்த தம்மையெல்லாம் என்றது உறைந்தவற்றை யெல்லாம் என்றவாறு. புத்தர் உலகின் அறமுதலியன நிலைகுலைந்துழி வந்து தோன்றுவர் என்பதனை,

பூமகனே முதலாகப் புகந்தமரர் எண்டிசையும்
தூமலரா லடிமலரைத் தொழுதிரந்து வினவியநாள்
காமமும் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
தீமைசால் கட்டினுக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த
நாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்
சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே
எண்ணிறந்த குணத்தோய்நீ யாவர்க்கு மரியோய்நீ
உண்ணிறைந்த வருளோய்நீ யுயர்பார நிறைத்தோய்நீ
மெய்ப்பொருளை யறிந்தோய்நீ மெய்யறமிங் களித்தோய்நீ
செப்பரிய தவத்தோய்நீ சேர்வார்க்குச் சார்வுநீ
நன்மைநீ தின்மைநீ நனவுநீ கனவுநீ
வன்மைநீ மென்மைநீ மதியுநீ விதியுநீ
இம்மைநீ மறுமைநீ இரவுநீ பகலுநீ
செம்மைநீ கருமைநீ சேர்வுநீ சார்வுநீ
அருளாழி நயந்தோய்நீ அறவாழி பயந்தோய்நீ
மருளாழி துரந்தோய்நீ மறையாழி புரந்தோய்நீ
மாதவரின் மாதவனீ வானவருள் வானவனீ
போதனருட் போதனனீ புண்ணியருட் புண்ணியனீ
ஆதிநீ யமலனீ யயனுநீ யரியுநீ
சோதிநீ நாதநீ துறைவனீ யிறைவனீ
அருளுநீ பொருளுநீ அறவனீ யநகனீ
தொருளுநீ திருவுநீ செறிவுநீ செம்மனீ

எனவரும் பழம் பாடலானும் (வீரசோழியம்: யாப்புப் படலம் 11 ஆம் கலித்துறையின் உரையிற்கண்டவை) இன்னும்

தரும தலைவன் றலைமையி னுரைத்த
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி
அறுகையு நெருஞ்சியு மடர்ந்துகண் ணடைத்தாங்குச்
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்
றுயிர்வழங்கு பெருநெறி யொருதிறம் பட்டது
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டென வுணர்த லல்ல தியாவதுங்
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது
சலாகை நுழைந்த மணித்துளை யகவையின்
உலாநீர்ப் பெருங்கட லோட தாயினு
மாங்கத் துளைவழி யுகுநீர் போல
வீங்கு நல்லற மெய்தலு முண்டெனச்
சொல்லலு முண்டியான் சொல்லுத றோற்றார்
மல்லன்மா ஞாலத்து மக்களே யாதலின்
சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம்
தொக்கொருங் கீண்டித் துடித லோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தன ரிரப்ப
விருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து
விரிகதிர்ச் செல்வன் றோன்றின னென்ன
......................................
புத்த ஞாயிறு தோன்றுங் காலை

எனவரும் மணிமேகலையானும், (12:58-86)

இன்னும்,

துடித விமானத்தினின்றும் போந்து குயிலாலபுரத்துத் தோன்றி உலும்பினி வனத்துப் பிறந்து கபிலபுரத்துப் புத்ததத்துவம் பெற்றுத் தர்மோப தேசம் பண்ணி மகாபோதிப் பிரதேசத்துப் பொன்றக் கெடுதல் புத்தனுக்கு நியதி(மொக்கலவாதச் சருக்கம் 160 ஆம் பாட்டுரை) எனவரும் நீலகேசி யுரையாசிரியர் கூற்றும் ஈண்டு நினைக. (15)

இதுவுமது

16. சீற்றம் செற்றுப்பொய் நீக்கிச் செங்கோலினால்
கூற்றம் காய்ந்து கொடுக்க எனும் துணை
மாற்றமே நவின்றான் தடுமாற்றத்துத்
தோற்றம் தன்னையும் காமுறத் தோன்றினான்.

(இதன் பொருள்) சீற்றம் செற்று-அம்மன்னவன் இப்பேருலகத்தின்கண் ஓருயிர் மற்றோருயிரைச் சினந்து வருத்தாதபடி உயிரினங்களின் சினத்தையும் அகற்றி; பொய் நீக்கி- மாந்தர் பொய் பேசாதவண்ணம் செய்து; செங்கோலினால் கூற்றம் காய்ந்து- தனது செங்கோல் முறைமையாலேயே தனது ஆட்சியின்கண் முறைபிறழ்ந்து மறலியும் புகுந்துயிரைக் கவராதபடி அவனையும் தடுத்து; கொடுக்க எனுந்துணை மாற்றமே நவின்றான்-தான் தன் குடிமக்களுக்கு ஆணை பிறப்பிப்பதாயின் உடையோர் எல்லாம் இல்லோர்க்கு வழங்குமின்! என்னும் இந்நல்லறத்தையே ஆணையாகப் பிறப்பிக்குமளவேயன்றி அவர் வருந்தும்படி பிறிதோர் ஆணையும் இடானாயினான். தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான்- இங்ஙனமிருந்தவாற்றால் இவன் ஆட்சியில் இன்புற்றிருந்தோரெல்லாம் வீடு வேண்டாராய்த் தடுமாற்றத்திற்குக் காரணமான பிறப்பினையும் விரும்புவாராகும்படி தோன்றித் திகழ்வானாயினன் என்பதாம்.

(விளக்கம்) செங்கோன் முறை பிறழாத வேந்தர் ஆளும் நாட்டில் உயிரினங்கள் சினந்தவிர்ந்து அரட்குணமுடையவாய் ஒன்றற்கொன்று தீமைசெய்யாவகலின், செங்கோலினால் சீற்றம் செற்றுப் பொய் நீக்கினன் என்றார்.

இதனை,

..........................பரல் வெங்கானத்துக்
கோல்வ லுளியமுங் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையு மான்கண மறலா
அரவுஞ் சூரு மிரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோற் றென்னவர் காக்கும் நாடு

எனவரும் இளங்கோவடிகளார் மொழியானும்(13:4)

அல்லது கடித்த அறம்புரி செங்கோல்
பல்வேற் றிரையற் படர்குவி ராயின்
கேளவன் நிலையே கெடுகநின் னவலம்
அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்
உருமும் உரறா தரவுந் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யாவேட்டாங்கு
அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச்
சென்மோ இரவல!

எனவரும் பெரும்பாணாற்றுப்படையானும் (36-45) உணர்க.

கருதலரும் பெருங்குணத்தோ ரிவர்முதலோர் கணக்கிறந்தோர்
திரிபுவன முழுதாண்டு சுடர்நேமி செலநின்றோர்
பொருதுறைசேர் வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்
ஒருதுறையி னீருண்ண வுலகாண்டோ னுளனொருவன்

எனவரும் இராமவதாரத்தினும் (குலமறை. 5) இக்கருத்து வருதலுணர்க

இனிச் செங்கோலரசர் நாட்டில் உயிரினங்கள் தத்தமக்கியன்ற அகவை நாளெல்லாம் வாழ்ந்து இயல்பாக இறத்தலன்றி இளம் பருவ முதலிய காலத்தே இறத்தல் இல்லையாகலின், செங்கோலினாற் கூற்றங் காய்ந்து என்றார். இக் கருத்தினை

கூற்ற மில்லையோர் குற்ற மிலாமையால்
சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செய்கையால்
ஆற்ற னல்லற மல்ல திலாமையால்
ஏற்ற மல்ல திழிதக வில்லையே

எனவரும் இராமவதாரத்தானும் (நாட்டுப், 39)

மன்னவன் செங்கோன் மறுத்தலஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் ஆண்மையிற் றிரிந்து எனவரும்(5: 218-20) சிலப்பதிகாரத்தாலும்,

மாறழிந்தோடி மறலியொளிப்ப முதுமக்கட் சாடி வகுத்த தராபதியும் எனவரும் விக்கிரம சோழனுலாவாலும்(7-8)

மறனி னெருங்கி நெறிமையி னொரீஇக்
கூற்றுயிர் கோடலு மாற்றா தாக
வுட்குறு செங்கோ லூறின்று நடப்ப (4.2; 54-6)

எனவரும் பெருங்கதையானும் உணர்க.

இனி, செங்கோன்மை முறையினின்று அருளாட்சி செய்கின்ற வேந்தன் குடை நீழலில் வாழ்பவர் மீண்டும் மீண்டும் அந்நாட்டிற் பிறத்தற் கவாவுதலின் தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான் என்றார். இனி இவ்வறவேந்தனைக் கண்டோர் இத்தகைய அறவோனாய்ப் பிறத்தல் வீடுபேற்றினும் சிறப்புடைத்து ஆதலால் மனித்தப் பிறப்பும் வேண்டுவதே என்று தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத் தோன்றினான் எனினுமாம். (16)

குற்றங் கடிதல்

17. மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டாதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன் மேல் கறையை யார் கறையன்று என்பார்.

(இதன் பொருள்) விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த- வானுலகத்தே வாழுகின்ற தேவர்களும் புகழ்ந்து பாராட்டுதற் கேற்ற; விழுமியோன்- சிறப்பினையுடையவனும்; நெற்றிபோழ்ந்த கண் உளான்- நெற்றியைப் பிளந்து தோன்றிய நெருப்புக் கண்ணை யுடையவனும் ஆகிய சிவபெருமானுடைய; கண்டம் தன்மேல் கறையை- மிடற்றின்கண்ணமைந்த களங்கத்தை; யார் கறை அன்று என்பார் யார்தாம் களங்கம் அன்று என்று கூறுவார்? அங்ஙனமே; குற்றம் மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே அன்று- குற்றம் என்பது இந்நிலவுலகத்தே வாழும் மக்கள் போல்வாரிடத்து மட்டும் உண்டாவதொன்றன்று குற்றம் வாய்மை நண்ணினார் திறத்தும்- குற்றமானது மெய்யுணர்வு பெற்ற மேலோரிடத்துத் தோன்றினும்; குற்றமே-குற்றமாகவே கொள்ளப்படுவதன்றி; நல்ல ஆகா-அவர் மேலோர் என்பதற்காக நல்லனவாகி விடா; ஆதலால் எத்தகையோரும் தம்பாற் குற்றம் நிகழாதபடி விழிப்புட னிருத்தல் வேண்டும் என்பதாம்.

(விளக்கம்) ஆதலால் எத்தகையோரும் தம்பாற் குற்றம் நிகழாதபடி விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பது குறிப்பெச்சம்.

கந்தருவர் அரக்கர் முதலியோரையும் கருதி மண்ணுளார் தம்மைப் போல்வார் என்றார். வாய்மை நண்ணினார் என்றது மெய்யுணர்வு கைவரப் பெற்ற மேலோரை.

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வார் பழிநாணு வார் குறள், 433

எனவும்,

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை குறள், 434

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களையும் நோக்குக. (17)

இடுக்கணழியாமை

18. மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறும் என்று உரைப்பது நன்று.

(இதன் பொருள்) மறிப மறியும்- அழியும் பொருளெல்லாம்
அழிந்தே தீரும்; (அவற்றை யழியாமற் பாதுகாத்த லியலாது) மலிர்ப மலிரும்-அங்ஙனமே வளரும் ஊழுடையன வெல்லாம் வளர்ந்தே தீரும்; (அவற்றை வளராமற் றடுக்கவு மியலாது) பெறுப பெறும்- பயன் பெறுகின்ற ஆகூழுடையன பெற்றே தீரும்; (அப் பயனைப் பெறாவண்ணம் செய்தலு மியலாது); பெற்று இழப்ப இழக்கும்-அங்ஙனமே, பெற்றபயனை இழக்கும் போகூழுடையன அவற்றை இழந்தே தீரும்; (இழவாதபடி செய்ய வியலாது) அறிவது அறிவார்-ஆதலால் அறிதற்குரிய பொருளியல்பினை அறிந்த மேலோர்; அழுங்கார்- தமக்குப் பொருளிழவு நேர்ந்துழி இது பொருளியல் பென்றுணர்ந்து அவ்விழவின்பொருட்டு வருந்துதலிலர். உவவார்-அங்ஙனமே தாம் சிறந்த பேறுகளைப் பெற்ற வழியும் இஃது ஊழின் செயலென் றுணர்ந்து அப்பேறு கருதியும் பெரிதும் களிப்பது மிலராவர்; உறுவது உறுமென்று உரைப்பது நன்று-ஆதலால் வருவது வந்தே தீரும் என்று உலகோர் கூறும் பழமொழி மிகவும் வாய்மையுடையதென்று கொண்மின் என்பதாம்.

(விளக்கம்) உறுவதுறும் என்பது ஒரு பழமொழி

மறிப, மலிர்ப, பெறுப, இழப்ப என்பன பலவறிசொல்.

மெய்யுணர்வுடையோர் யாது நிகழ்ந்தாலும் எல்லாம் ஊழின் செயலென்று கருதி அமைதியுடனிருப்பர். செல்வம் வந்துழிக் களிப்பதிலர் வறுமை வந்துழி வருந்துவதுமில்லை என்றவாறு. இக்கருத்தோடு,

யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீது நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவன்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே

எனவரும் கணியன் பூங்குன்றனார் பொன்மொழியும் (புறநா-192)

மெய்த்தி ருப்பத மேவென்ற போதினும்
இத்தி ருத்துறந் தேகென்ற போதினும்
சித்தி ரத்தி னலர்ந்தசெந் தாமரை
யொத்தி ருந்த முகத்தினை யுன்னுவாள்

எனவரும் கம்பநாடர் கவின் மொழியும் ஒப்பு நோக்கற் பாலன. (18)

இதுவுமது

19. வேரிக் கமழ்தார் அரசன் விடுக என்ற போழ்தும்
தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொழிவு இன்றி நின்றான்
பாரித்தது எல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்.

(இதன் பொருள்) வேரி கமழ் தார் அரசன்- மணங்கமழ்கின்ற மலர் மாலையணிந்த மன்னவன்; விடுக என்ற போழ்தும்- சிறைவீடு செய்க என்று கட்டளையிட்ட காலத்தும்; தாரித்தல் ஆகா வகையால்-இவன்பால் எழுந்த சீற்றம் பொறுக்கலாகாமையாலே; கொலை சூழ்ந்த பின்னும்- கொலை செய்யும்படி கட்டளையிட்ட பின்னரும்; பூரித்தல் வாடுதல் என்று இவற்றால்- உவகையாலே தோன்றும் பூரிப்பாகிய மெய்ப்பாட்டினாலாதல் அல்லது துன்புற்று வாடுதல் என்னும் மெய்ப்பாட்டினாலாதல்; பொலிவு இன்றி- தன் உடம்பின்கண் யாதொரு தோற்றமும் காணப்படுதலின்றி; நின்றான்- அமைதியாக நின்றனன், அஃதெற்றாலெனின்; பாரித்ததெல்லாம்-தனக்கு நுகர்ச்சியாக விரிந்து வருகின்ற நிகழ்ச்சிகள் எல்லாம்; வினையின் பயன் என்ன வல்லான்-தான் முன் செய்த பழவினையின் பயன்களே யன்றிப் பிறவில்லை என்னும் மெய்யுணர்வினால் வன்மையுடையோன் ஆகலின் என்பதாம்.

(விளக்கம்) இதனால் குறிக்கப் படுகின்ற மெய்யுணர்வாளன் யார் என்றும் அவன் சிறைப்படுதற்கும் சிறைவீடு பெறுதற்கும் பின்னர்க் கொலை செய்க என்று மன்னன் கட்டளை யிடுதற்கும் உற்ற வரலாறு சிறிதும் அறிகின்றிலேம் இதனால் குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்தில் இன்னோரன்ன வரலாறுகள் இருந்தன என்று மட்டும் அறிகின்றோம்.

இனி இச் செய்யுளால் ஒரு மன்னன் ஒருவனைச் சிறைப்பிடித்து ஒரு கால் சிறைவீடு செய்க என்றும் பின்னும் (அமைச்சர் முதலியோர் அறிவுரை கேட்டமையாற் போலும்) கொன்று விடுக! என்றும் கட்டளையிட்டான் என்றும்; இதற்கு ஆளாகியவன் தன் மெய்யுணர்வு காரணமாகச் சிறைவீடு செய்க என்றபோது மகிழாமலும் கொலை செய்க என்ற போது வருந்தாமலும் அமைதியுடனிருந்தான் என்றுணருகின்றோம். இச்செய்யுள் இராமகாதையுள் தயரதன் இராமனை அழைத்து இனி நீ இவ்வரசாட்சியை ஏற்றுக் கொள்க என்று வேண்டிய பொழுது,

தாமரைக் கண்ணன்
காதலுற்றிலன் இகழ்ந்திலன் கம்ப- மந்திர-70

எனவரும் கம்பநாடர் மொழியும்; யசோதர காவியத்துள் மாரிதத்தன்
என்னும் மன்னவன் மாரி என்னுந் தெய்வத்திற்குப் பலியிடுதற்குப் படித்து வந்த அபயருசி அபயமதி என்னும் அண்ணனும் தங்கையும் தம்மைப் பலியிடப் போதலறிந்தும் அமைதியுடனிருத்தல் கண்டு அவ்விளந் துறவியை நோக்கி அவ்வேந்தன்:

இடுக்கண் வந்துறவு மெண்ணா
தெரிசுடர் விளக்க னென்கொல்?
நடுக்கமொன்றின்றி நம்பால்
நகுபொருள் கூறகென்ன,

அதுகேட்ட அவ்விளந்துறவி, வேந்தே!

அடுக்குவ தடுக்கு மானால் அஞ்சுதல் பயனின் றென்றே
நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம்

என விடையிறுத்தமையும் நம்நினைவிற்கு வருகின்றன.

இன்னும்,

இடுக்கண்வந் துற்ற காலை யெரிகின்ற விளக்குப் போல
நடுக்கமொன் றானு மின்றி நகுகதா நக்க போழ்தவ்
விடுகணை யரிபு மெஃகா மிருந்தழுதி யாவ ருய்ந்தார்
வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறுங்க ளன்றே

எனவரும் சீவகசிந்தாமணியும் (509)

பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம

எனவும்

நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன் குறள், 319

எனவும் வரும் திருக்குறள்களும் ஈண்டு நினையற் பாலனவாம். (19)

குண்டலகேசி என்னும் பெருங்காப்பித்தின்கண்
பெரும்பாலும் அழிந்தனபோக எஞ்சி நின்று
இற்றைநாள் கிடைத்துள்ள செய்யுள் பத்தொன்பதிற்கும்
பெருமழைப் புலவர். பொ. வே. சோமசுந்தரனார் வகுத்த சொற்பொருள் உரைகளும் விளக்கவுரையும் ஒப்புமைப் பகுதிகளும் முற்றும்.


Key Elements

Plot and Narrative: The narrative of Kundalakesi typically centers around themes of love, virtue, and personal conflict. It often explores the life and adventures of the protagonist, as well as the moral and ethical dilemmas they face.

Protagonist: The central figure in the work, usually depicted with complex emotions and experiences. The protagonist’s journey is central to the narrative, exploring their personal growth, challenges, and moral choices.

Themes: Key themes in Kundalakesi include:

Love and Devotion: The depiction of romantic and devotional love, often intertwined with moral and ethical considerations.

Virtue and Morality: The exploration of virtue, moral dilemmas, and the consequences of personal choices.

Heroism and Conflict: The protagonist’s struggle with external and internal conflicts, showcasing their heroism and personal growth.

Style and Form: The work is characterized by its poetic form, using classical Tamil meter and style. It often employs vivid imagery and elaborate descriptions to convey its themes and narrative.

Cultural and Historical Context: Kundalakesi reflects the cultural and historical milieu of its time, providing insights into Tamil society, values, and literary traditions. It is an important part of Tamil literary heritage and offers a window into the philosophical and moral concerns of the era.

Significance

Literary Value: Kundalakesi is valued for its poetic excellence and narrative depth. It contributes to the rich tradition of Tamil literature, showcasing the artistic and philosophical achievements of Tamil poets.

Cultural Reflection: The work provides valuable insights into Tamil culture and values, offering a perspective on the moral and ethical concerns of the time.

Influence: Kundalakesi has influenced subsequent Tamil literature and continues to be studied and appreciated for its literary and philosophical contributions.

Conclusion

Kundalakesi is a prominent Tamil literary work known for its exploration of love, virtue, and personal conflict. Through its poetic form and rich narrative, it offers insights into Tamil culture, values, and literary traditions. Its significance lies in its artistic excellence and its reflection of the moral and ethical concerns of its time.



Share



Was this helpful?