Digital Library
Home Books
Kazharsinga Nayanar is one of the 63 revered Nayanmars in Tamil Shaivism. His life and devotion to Lord Shiva are celebrated for their profound depth and dedication.
பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவர் மணிகண்டப் பெருமானின் பேரருளால் அறநெறி குன்றாது அரசோச்சி வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களை வென்று வாகை சூடி பொன்னும் பொருளும் பெற்றார். இவ்வாறு பெற்ற பெரு நவநிதிகளை ஆலய வழிபாட்டிற்கும், அடியார்கள் வழிபாட்டிற்கும் பயன்படுத்தினார். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைச் சந்திக்க எண்ணினார்.
தமது பிராட்டியாருடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டார். திருவாரூரை அடைந்த நாயனார் பிறைமுடிப் பெருமான் குடிகொண்டிருக்கும் பூங்கோயிலை அடைந்தார். புற்றிடங்கொண்ட நாயகரின் திருமுன் வீழ்ந்து வணங்கி எழுந்தார். பூங்கோயில் புண்ணியரின் அருள்வடிவத்திலே மெய்மறந்து கண்ணிலே நீர்மல்க உள்ளத்திலே அன்பு பொங்கப் பக்தியிலே மூழ்கி வழிபட்டுக் கொண்டிருந்தார் வேந்தர். திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருந்த பட்டத்து நாயகி அழகிய எழில்மிகும் மண்டபங்களைக் கண்டு அதிசயித்தாள்.
அரசியார், மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தாள். அங்கு தொண்டர்கள் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தனர். எண்ணத்தைக் கவரும் வண்ண மலர்களைக் கண்டதும் அரசியார்க்கு ஆனந்தம் மேலிட்டது. நறுமலர் வாசனையில் சற்று நிலை மறந்தாள். தன்னையறியாதவாறு தரையில் கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்து பார்த்தாள். அங்கு கூடியிருந்த தொண்டருள் செருத்துணை நாயனார் என்பவரும் ஒருவர். இவர் அடியார்களுக்கு யாராகிலும், அறிந்தோ, அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார்.
அரசியாரின் செயலைக் கவனித்த செருத்துணை நாயனார் சினம் கொண்டார். அரசியாயிற்றே என்று கூடப் பார்க்கவில்லை; அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை நுகர்ந்து பார்த்துப் பிழை புரிந்த அரசியாரின் மூக்கை வாளால் சீவிவிட்டார் நாயனார்! பூமகள் போன்ற பட்டத்தரசி மயக்கமுற்று மண் மீது வீழ்ந்தாள். பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மன்னர்க்கு இச்செய்தி எட்டியது. மன்னர் அவ்விடத்திற்கு விரைந்த வந்தார். நிலத்தில் துடித்து துவண்டு கிடக்கும் அரசியாரின் பரிதாப நிலையைக் கண்டார். பதை பதைத்துப் போனார். அஞ்சாமல் இக்கொடிய செயலை செய்தது யார்? என்று கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டார்.
அம்மொழி கேட்டு, மன்னவா! இச்செயலை செய்தது நான்தான் என்று துணிந்து சொன்னார் நாயனார். சைவத் திருக்கோலத்திலே நின்றிருந்த செருத்துணை யாரைக் கண்டதும் மன்னரின் மனம் அடியார் சினத்துடன் இச்செயல் செய்ததற்கு எமது தேவியார் செய்த பிழைதான் யாதோ? என்பதை அறியத் துடித்தது. மன்னரின் முகத்தில் எழுந்த கேள்விக் குறியின் சாயலைப் புரிந்துகொண்ட செருத்துணையார், அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை மோந்து பார்த்தார் என்றார். அவர் மொழிந்தது கேட்டு மன்னர் மனம் கலங்கினார். அரசர், கரங்கூப்பி வணங்கி, ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை என்று கூறியவாறே உடைவாளை எடுத்தார்.
மலரை எடுத்த கையை அல்லவா முதலில் தாங்கள் துண்டித்திருக்க வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் சட்டென்று அரசியாரின் மலர்க்கையை வெட்டினார். அரசரின் உயர்ந்த பக்தி நிலை கண்டு செருத்துணை நாயனார், மன்னர்க்குத் தலைவணங்கினார். அப்பொழுது புற்றிடங்கொண்ட பெருமான் மன்னர்க்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, சக்திதேவியோடு ரிஷபத்தில் எழுந்தருளினார். பட்டத்தரிசியாருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் கண்டு அடியார்கள், மன்னரைப் போற்றிப் பணிந்தனர். மன்னரின் புகழ் திக்கெட்டும் பரவியது. மன்னர் கழற்சிங்க நாயனார் பூவுலகில் பல்லாண்டு வாழ்ந்து அறநெறி பிறழாமல் அரசாட்சி புரிந்தார். முடிவில் எம்பெருமான் திருவருளாலே சிவலோகம் அடைந்து இன்புற்றார்.
குருபூஜை: கழற்சிங்கர் நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
காடவற்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |