இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கண்ணப்ப நாயனார்

Kannappa Nayanar, also known as Kannappa, is one of the 63 Nayanmar saints in Tamil Shaivism. He is renowned for his extreme devotion to Lord Shiva and is celebrated for a legendary act of self-sacrifice that demonstrated his unwavering faith.


உடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி நாட்டிலுள்ள சிற்றூர். இத்தலத்தைச் சுற்றி ஓங்கி உயர்ந்த மலைகள் சூழ்ந்திருந்தன. யானைத் தந்தங்களை வேலியாகக் கொண்டதும், பெரிய மதில் அரண்களையும் உடையதுமான இவ்வூர் வேடர்களின் தனி நாடாய்த் திகழ்ந்தது. இவர்கள் மறவர் குலத்திற்கு ஏற்ப வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தனர். தோலுடை தரித்து, ஊனை உண்டு, கொடுந்தொழில் புரியும் இவ்வேடர் குலத்திற்குத் தலைவனாக இருந்தவன்தான் நாகன். இவனது மனைவி தத்தை என்பவள். வாள் வலிமையும், தோள் வலிமையும் ஒருங்கே பெற்ற நாகன், குற்றம் புரிவதையே தொழிலாகக் கொண்டவன்.

அம்மறக்குடி மங்கையும் கணவனைப் போலவே வீரமும், வலிமையும் கொண்டு, பெண் சிங்கம் போலிருந்தாள். இருவரும் பல்வகைச் சிறப்புக்களோடும் வாழ்ந்து வந்தனரே தவிர, அவர்களுக்கு மன நிம்மதியில்லை. நாகனுக்கும், தத்தைக்கும் திருமணமாகிப் பல காலமாகியும் மக்கட்பேறு இல்லை. அதற்காக இருவரும் பக்தர்கள் குறை தீர்க்கும் எல்லாம்வல்ல முருகக் கடவுளைப் பல வழிகளில் அனுதினமும் வழிபட்டு வந்தனர். இவர்களது இடையறாத பக்திக்கு சுந்தரக் கடவுளும் கருணைக் காட்டினார். குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரவேள், நாகனுக்கும், தத்தைக்கும் குழந்தைச் செல்வத்தை அருளினார். முருகப் பெருமானின் திருவருளால் மறவர்குடி மங்காது விளங்க, தத்தை ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்து மகிழ்ந்தாள். பிறக்கும்போதே குழந்தையைக் கைகளில் தூக்கமுடியாத அளவிற்குத் திண்ணமாய் இருந்ததால் அவர்கள் அக்குழந்தைக்கு திண்ணன் என்று சிறப்புப் பெயர் வைத்தனர். வேடர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி ஆரவாரித்தனர்.

புலிக்குட்டிபோல் வீரத்தோடு பிறந்த திண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரலானான். வேடர் குல முறைமைக்கு ஏற்ப உரிய பருவத்தில் திண்ணன் வில் வித்தையை முறையோடு பயின்று, உரிய காலத்தில் வல்லவனாக விளங்கினான்.பிரபஞ்சம் திண்ணனைப் பதினாறு பிராயம் நிரம்பப் பெற்ற வாலிபனாக்கியது. முதுமையை அடைந்த நாகன், தலைமைப் பதவிக்குத் தன் மகனை மாற்ற எண்ணி அதனை வேடர்களிடம் தெரிவத்தான். அவர்களும் நாகனின் விருப்பப்படியே திண்ணனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள இசைந்தனர். திண்ணனாரும் வேடர்களுக்கு ஈடு இணையற்ற வீரத்தலைவர் ஆனார்.

உள்ளமும், உடலும் பூரித்துப்போன நாகன், தேவதைகளுக்குப் பூசை செய்யும் தேவராட்டியை வரவழைத்து குல வழக்கத்திற்கு ஏற்பத் தேவதைகளுக்குப் பூஜை செய்யுமாறு கட்டளையிட்டான். தேவராட்டி வழிபாடு செய்து, திண்ணன் தந்தையினும் மேம்பட்டவனாய் விளங்குவான் என்று ஆசி கூறினாள். ஒருநாள் குல வழக்கப்படி வேட்டைக்குப் புறப்பட எண்ணினார் திண்ணனார். இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு மற்றவர்களோடு வேட்டைக்குப் புறப்பட்டார். மேகம் போல் வேடர் கூட்டம் சூழ, திண்ணனார் வேட்டையாடக் காட்டிற்குள் புகுந்தார். குகைவிட்டுக் கிளம்பும் கொடும் புலியைப்போல் திண்ணனார் வேட்டையாடத் தொடங்கினார். பறவைகளும், கொம்புகளும் பெரு முழக்கமிட்டன. வேடர்களால் வாயால் சீழ்க்கையடித்தனர். கைகளைத் தட்டி ஓசை எழுப்பினர். வேடர்களின் ஆர்ப்பாட்டத்தில் காடே அதிர்ந்தது சிங்கங்கள் கர்ஜித்து வந்து, வேடர்களின் குத்தீட்டிகளுக்குப் பலியாயின. பாய்ந்து வந்து புலிகள் அம்பினால் தாக்கப்பட்டு உயிர் நீத்தன.

துள்ளித் துள்ளி வந்த மான்கள் பல மடிந்து வீழ்ந்தன. மற்றும் பல வனவிலங்குகளும் வேடர்களின் கணைகளுக்குப் பலியாயின. இந்தச் சமயத்தில் திடுக்கிடும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. வலையை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய பெரிய பன்றி ஒன்று வேட்டை நாய்களிடமிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டதோடல்லாமல் வேடர்கள் கணைகளுக்கும் தப்பி அதி வேகமாக ஓடத் தொடங்கியது. வேடர்கள் பன்றியைத் துரத்திக் கொண்டு ஓடினர். பன்றி சிக்கவில்லை. அனைவரும் களைப்பு மேலிடப் பின்தங்கினர். ஆனால் திண்ணனார் மட்டும் உறுதியோடு பன்றியைப் பின்தொடர்ந்து கற்களையும், முட்களையும், பாறைகளையும் பாராமல் காட்டு முயல்போல் பாய்ந்தோடியவாறு பன்றியைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். திண்ணனின் மெய்க்காவலர்களாகிய நாணன், காடன் என்ற இருவர் மட்டும் அவரைப் பின்தொடர்ந்து ஓடினர். எல்லோரையும் ஏமாற்றிவிட்டுக் காற்றினும் கடுகப் பாய்ந்தோடிய பன்றியைப் பிடித்தார். உடைவாளால் வெட்டி, அதனைத் துண்டு துண்டாக்கினார் திண்ணனார். திண்ணனாரின் பின்னால் ஓடிவந்த நாணனும், காடனும் திண்ணனார் இருக்குமிடத்தை அடைந்து, தலைவரது ஆற்றலைக் கண்டு வியந்தனர். திண்ணனாரின் வீரத்திற்குத் தலைவணங்கிய அவ்விருவரும், அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினர். அம் மூவருக்கும் நேரம் அதிகமானதாலும் ஓடிவந்த களைப்பினாலும் பசி மேலிட்டது.

மூவரும் பன்றியை நெருப்பில் சுட்டு தின்று, தண்ணீர் அருந்திச் செல்ல தீர்மானித்தனர். ஆனால் திண்ணனாருக்குத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற ஐயம் எழவே அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதற்கு முன், பல தடவை வேட்டைக்கு வந்து பழக்கப்பட்ட நாணன், திண்ணனிடம், சற்று தொலைவில் உள்ள தேக்குமரத் தோப்பினைக் கடந்து சென்றால் குன்றுகளின் அருகாமையில் பொன்முகலி என்னும் ஆறு ஓடுகிறது. என்று விளக்கினார். நாணனின் பேச்சைக் கேட்டு பூரித்துப்போன திண்ணனார், அப்படியா ! நாம் அனைவரும் அங்கேயே போவோம். இந்த பன்றியையும் தூக்கிச் செல்வோம் என்று சொல்லி முன்னால் புறப்பட, நாணனும் காடனும் பன்றியைத் தூக்கிக் கொண்டு திண்ணனாரை வழிநடத்திச் சென்றனர். செல்லும் வழியே திண்ணனார் காளத்தி மலையைக் கண்டார். திண்ணனார் ஒரு வினாடி அப்படியே அசைவற்று நின்றார். காளத்தி மலையைப் பார்க்க பார்க்க அவருக்கு மெய் சிலிர்த்தது. எதனாலோ, அவர் உடம்பில் புதுச் சக்தி பிறந்தது. மலை மீது ஒளிப்பிழம்பு தெரிவது போன்ற பிரமை அவரைப் பற்றிச் சற்று நேரம் மெய்மறக்கச் செய்தது. குன்றின் அழகையே பார்த்துக் கொண்டிருந்த திண்ணனார் செவிகளில் மட்டும் விழும்படியாக, மலைமீது ஐந்த தேவ துந்துபிகள் கடல் ஒலிபோல் முழக்கம் செய்தன. அந்த ஒலியைக் கேட்கும் பேறு பெறாத நாணன் செவிகளில், தேனீக்கள் தேனடையைச் சூழ்ந்து கொண்டும் எழுப்பும் ஓசைதான் ஒலித்தது. திருமலையில் திருவுள்ளம் பதிந்து போன திண்ணனார், நாணா ! அக்குன்றுக்குச் செல்வோமா ? என்று உணர்ச்சி மேலிடக் கேட்டார். ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சி ஒன்று திண்ணனாரைத் தடுத்தாட்கொண்டது. ஓ, போகலாமே ! அம்மலையிலே நல்ல காட்சிகள் பலவற்றைக் காணலாம், அத்தோடு அம்மலையிலுள்ள குடுமித்தேவர் கோவிலுக்குச் சென்று, அவரையும் கும்பிட்டு வராலம் என்று நாணன் கூறினான். அவன் மொழிந்தது கேட்டு திண்ணனார் களிப்படைந்தார் அவர் உடம்பில் பேரின்பச் சக்தி பிறந்தது. திண்ணனாருக்குச் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. மலையைப் பார்க்கப் பார்க்க உலக பாõரம் குறைவது போன்ற ஒரு புத்துணர்வு திண்ணனாருக்கு ஏற்பட்டது. குடுமித்தேவரைக் காணவேண்டும் என்ற ஆசை பள்ளத்தில் பாய்ந்த வெள்ளம்போல் அவர் உள்ளத்தில் புகுந்து ஓடியது.

குடுமித் தேவரைக் கும்பிட வேண்டுமென்ற எண்ணம், அவரை மேலும் விரைந்து செல்லத் தூண்டியது. நடந்து சென்று கொண்டிருந்த திண்ணனார், ஆசை மேலிட, ஆவல் உந்திட, ஓட ஆரம்பித்தார். நாணனும் காடனும் கூடவே விரைந்தனர். சற்று நேரத்தில் மூவரும் பொன் முகலி ஆற்றின் கரையை அடைந்தனர்.திண்ணனார், காடனை நோக்கி, காடா ! நீ, தீ மூட்டி, இப்பன்றியைச் சுட்டுச் சாப்பிடுவதற்குப் பக்குவமாகச் செய்து வை. அதற்குள் நானும், நாணனும் மலைக்குப் போய் வருகிறோம் என்று கூறினார். திண்ணனாரும், நாணனும் வேக வேகமாக பொன்முகலி ஆற்றைக் கடந்து மகிழ்ச்சியுடன் திருக்காளத்தி மலைச்சாரலை அடைந்தனர்.பகலெல்லாம் பாரிலே பவனி வந்த பகலவன் கடமையை முடித்த களிப்பிலே, களைப்பு நீங்கக் கடல் வாயிலை அடைந்து கொண்டிருக்கும் நேரம் !மாலைக் கதிரவனின் மஞ்சள் வெயில் திருக்காளத்தி மலையைப் பொன்மயமாக்கியது. நாணன், திண்ணனாருக்குப் பாதை காட்டும் பொருட்டு முன்னால் நடந்து சென்றான். திண்ணனார் அவனைப் பின் தொடர்ந்தார். மலையின் மீது படிகளைக் கடந்து செல்லும் நேரம் உலகத் தத்துவங்கள் என்னும் படிகளைக் கடப்பது போன்ற ஒருவித மன உணர்வு பூண்டார் திண்ணனார். வேணிநாதரின் முடி மேலிருக்கும் வெண்ணிலாவின் தன்மைபோல் திண்ணனார் நெஞ்சம் குளிர்ந்தது. ஒவ்வோர் படி மீதும் அடி எடுத்து வைக்கும் போதும், அவரது உள்ளத்தில் எதனாலோ பக்தி வளர்ந்தது. முருகனைப் போற்றும் திண்ணனார், சிவத்தை சாரும் சிவயோகி போலானார். திண்ணனார், முற்பிறப்பில் செய்த தவத்தின் பெருக்கம் அவரது உள்ளத்தில் அன்பைப் பெருக்கியது. ஆண்டவன் மீது ஆராக காதலைப் பொங்கி எழச் செய்தது. காளத்தி மலையின் உச்சியில் முழுங்கும் பஞ்சதேவதுந்துபிகளின் ஒலியைக் கேட்க கேட்க ஆசை பொங்கி வழிந்தது. உள்ளம் ஏதோ ஒரு சொல்ல முடியாத விருப்பத்தை அடைந்தாற்போல் தோன்ற மெய் சிலிர்த்தது. மலை மீதேறிய திண்ணனார் அங்கு எழுந்தருளியிருக்கும் குடுமித் தேவரைக் கண்டார். அவரது வடிவெல்லார் புளகம் பொங்கியது. அருள் வழிகளில் ஆனந்தக் கண்ணீர் அருவிபோல் பாய்ந்தது.

திண்ணனார் முகத்திலே புதிய பிரகாசம் ஒன்று ஏற்பட்டது. எம்பெருமானின் கருணை கூர்ந்த அருட்திருநோக்கம் அவர் மீது பட்டது. திண்ணனார் ஒப்பற்ற அன்பு வடிவமாய்த் திகழ்ப் புதுப்பிறவி எடுத்தாற்போல் ஆனார். ஞாயிறு தோன்ற நலியும் இருள்போல திண்ணனார் நெஞ்சத்தில் தோன்றிய அருள், அஞ்ஞானத்தை அறவே நீக்கியது. ஞானத்தை ஊட்டியது. சிவகொழுந்தை அப்படியே பார்த்துக் கொண்டேயிருந்தார். அன்பினாலும் பேருவகையினாலும் ஈர்க்கப்பெற்ற திண்ணனார் ஆசை பொங்கி மேலிட அருள் வடிவமான அம்மையப்பரைக் கட்டித் தழுவினார். முத்தமாரி பொழிந்தார். பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். விழி இரண்டும் அருவி போல் ஆனந்த நீரைச் சிந்தின. திண்ணனார் மதுவுண்ட வண்டுபோல் ஆனார் அவரது மொழி குழறியது. உடல் குளிர்ந்தது. உள்ளம் பேருவகை எய்தியது. திண்ணனார் அன்பே உருவானார். அகில உலகத்தையும் மறந்து சிலைபோலானார். சற்று நேரத்தில் மீண்டும் நினைவு பெற்றார். இந்த ஏழைக்கு இவர் அகப்பட்டார். இப்பிறப்பில் நான் பெற்ற பேற்றை வேறு எவருமே பெற்றிருக்க முடியாது என்று உணர்ச்சி பொங்கக் கூறிய திண்ணனார், எல்லையில்லா ஆனந்தப் பெருக்கில் கூத்தாடினார். இறைவனைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து, நெற்றி சிவக்க நிலத்தில் வீழ்ந்து சிவலிங்கத்தை வணங்கினார். திண்ணனாரின் மனத்திலே திடீரென்று ஒரு கலக்கம் குடிபுகுந்தது. அவரது பிஞ்சு மனத்திலே ஒரு கேள்வி பிறந்தது. கரடியும், வேங்கையும், கடும்புலியும், வாழும் இக்கொடிய கானகத்தில் குடுமித் தேவர், துணை எதுவுமின்றித் தனித்து இருக்கிறாரே ! வனவிலங்குகள் வந்து என் எம்பிரானுக்கு ஏதாகிலும் துன்பத்தைக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது ? என்னால் அக்கொடுமையைக் கண்டுகொண்டு எப்படிப் பொறுமையாக இருக்க முடியும் ? இப்படி தமக்குள் எண்ணிப் பார்த்த திண்ணனார், தாங்க முடியாத வேதனையால் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டார், அவரது கையில் இருந்த வில், தானாக நழுவி நிலத்தில் வீழந்தது. அப்பொழுது திண்ணனார் இறைவனின் திருமேனியில் பச்சிலையும், நீரும் இருப்பதைப்பார்த்து, என் ஐயனை இப்படியெல்லாம் செய்தவர் யாராக இருக்கலாம் என்று தமக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். உண்மையை அறிய விரும்பிய திண்ணனார் இதே கேள்வியை நாணனிடம் கேட்டார். நாணன் திண்ணனாரை நோக்கி தலைவா ! இதெல்லாம் யாருடைய வேலை என்பதை நான் நன்றாக அறிவேன் முன்னொரு முறை, நான் உங்கள் தந்தையுடன் இக்கோவிலுக்கு வந்திருந்தேன். அது சமயம் பார்ப்பனர் ஒருவர் இக்குடுமித் தேவருக்குப் பச்சிலையிட்டு நீரை வார்த்துச் செல்வதைக் கண்டேன். இன்றும் அவர்தான் இவ்வாறு செய்திருத்தல் வேண்டும் என்றான்.

நாணன் கூறியதைக் கேட்டு திண்ணனார் இவ்வாறு செய்வதுதான் குடுமித் தேவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய செய்கைகள் ஆகும் என்பதை உணர்ந்தார். தாமும் அவற்றைக் கடைப்பிடித்து அவ்வழி செல்ல முடிவுகட்டினார். ஏன் நாணா !அப்படி என்றால், நாம் அன்போடு எதைச் செய்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார் போலிருக்கிறதே ! என்று ஒன்றுமறியாப் பாலகனைப் போல் கேட்டார். திடீரென்று திண்ணனாருக்குத் தாம் இறைவனைப் பட்டினி போட்டு விட்டோமோ ? என்ற ஐயமும் எழுந்தது. உண்மையிலேயே இறைவன் பசியுடன் தான் இருப்பார் என்ற முடிவிற்கும் வந்தார் திண்ணனார். குடுமித் தேவரே ! என் இறைவனே ! நீர் இங்கு தனியாக அல்லவா இருக்கிறீர் ? உமக்குப் பன்றி இறைச்சியும், குளிர்ந்த தண்ணீரும் கொடுப்பவர் யார் ? என்று புலம்பத் தொடங்கிவிட்டார். உடனே விரைந்து சென்று, இறைவனுக்கு இறைச்சியும், தண்ணீரும் கொண்டு வரும் நோக்கோடு முன்னால் இரண்டடி எடுத்து வைத்தார். சட்டென்று எதையோ மனதில் எண்ணியவாறு ஓடிவந்து இறைவனைக் கட்டித் தழுவிக்கொண்டு, இந்த இடத்தை விட்டுப் பிரிந்து நான் எங்குமே போகமாட்டேன். ஒரு அடி கூட நான் நகர மாட்டேன். என் ஐயனைப் பிரிந்துருக்கவே முடியாது என்று கூறியவாறு இறைவனை விடாது அணைத்தடியே இருந்தார். அந்த இடத்தை விட்டுப் போகவே அப்பொழுது அவருக்கு மனம் வரவில்லை. அப்படியே சென்றாலும் சற்று அடி எடுத்து வைப்பார். மீண்டும் வருவார். சிவலிங்கத் திருமேனியைத் தழுவுவார். உச்சிமோந்து நிற்பார். பேரன்போடு திரும்பிப் பார்த்து நிற்பார். மீண்டும் ஓடிச்சென்று இறைவனைக் கட்டித் தழுவிக் கொள்வார். இறைவனைக் கட்டித் தழுவி, குழந்தைப் போல் கொஞ்சிக் குழைவார். தாய்ப் பசுவை விட்டுப் பிரிய முடியாமல் துடிக்கும் கன்று போல், திண்ணனார் குடுமித்தேவரை விட்டுப் பிரிய முடியாமல் மனம் வாடினார். பிறை சூடிய பெருமானை நினைத்து, புலம்பிப் புலம்பி கலங்கி நின்ற திண்ணனார், பித்தனாகவே மாறிவிட்டார். இறுதியில் எப்படியோ மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். இறைவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே வழி நடந்தார். திண்ணனாரின் ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டே இருந்த நாணன், இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ ? என்று மனதில் எண்ணியவாறே திண்ணனாரைப் பின் தொடர்ந்து சென்றான். திண்ணனார் பற்றற்ற பரம ஞானியைப் போல் நடந்து கொண்டிருந்தார். அவரது கால்கள்தான் நடந்து கொண்டிருந்தனவே தவிர, அவரது எண்ணமெல்லாம் காளத்திமலைக் கோயில் மீதுதான் இருந்தது.

பொன் முகலி ஆற்றைக் கடந்து, காடன் எதிரில் வந்து நின்றதுகூட அவரது உணர்வுக்கு அப்பாற்பட்ட செயலாகவே இருந்தது. அந்த அளவிற்கு அம்பலத்தரசரின் அருள் கயிற்றினால் பிணைக்கப்பட்டிருந்தார் திண்ணனார். திண்ணனாரைப் பார்த்த காடன், அன்போடு தலைவரை எதிரில் வந்து தொழுதான்.நாணன் அவனிடம், குடுமித்தேவரை நம் தலைவர் உடும்புப் பிடியாக அல்லவா பிடித்துக்கொண்டு விட்டார் ! இப்போது இங்கு வந்திருப்பது கூட வீட்டிற்கு போவதற்காக அல்ல; குடுமித்தேவருக்குப் பன்றி இறைச்சியைப் பக்குவப்படுத்திக் கொண்டு போவதற்காகத்தான். தெய்வ மயக்கம் தலைக்கேறிக் குடுமித்தேவரோடு ஐக்கியமாகிவிட்டார் என்று கூறினான். நாணன் மொழிந்ததைக் கேட்டு காடன் நிலை குலைந்தான். நமக்கெல்லாம் தலைவராக இருக்கும் இவர் எதனால் இப்படி மாறிவிட்டார் ? என்று தனக்குள் வேதனையோடு கேட்டுக் கொண்டான். நாணனும், காடனும், திண்ணனாரிடம் நாட்டிற்குப் புறப்படலாம் என்று பல தடவைகள் கேட்டனர் ! திண்ணனார் மவுனமாகவே இருந்தார்.இறைவனின் அருள் வெள்ளத்திலே மூழ்கிய திண்ணனார் இவர்களது கூற்றையெல்லாம் சற்றும் செவி சாய்த்துக் கேட்காது இறைச்சியைப் பக்குவப்படுத்து வதிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்தினார். அம்பினால் பன்றியைக் கிழித்து இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டினார். அவற்றைக் நெருக்கமாக அம்பிலே கோர்த்து, நெருப்பில் நன்றாகக் காய்ச்சித் தக்கபடி பக்குவமாகச் சமைத்தார்.அவற்றை வாயில் இட்டுச் சுவைத்துப் பார்த்தார். வாய்க்குச் சுவையாக இருந்த நல்ல இறைச்சித் துண்டுகளை எல்லாம் தேக்கிலையால் செய்த தொன்னையிலே எடுத்துக் கொண்டார்.திண்ணனாரின் இச்செய்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த காடனுக்கும், நாணனுக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. நாகனையும், தேவராட்டியையும் அழைத்து வந்து தக்க முடிவு காணலாம் என்ற எண்ணத்தோடு, திண்ணனாரிடம் கூடக் கூறலாம் புறப்பட்டனர். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இறைவன் அன்பு மயக்கத்தில் ஐம்புலனையம் ஒருமைப்படுத்தித் தம்மை மறநந்திருந்த திண்ணனார், இவர்கள் பேசியதையும் கவனிக்கவில்லை; இவர்கள் சென்றதையும் கவனிக்கவில்லை. திண்ணனார் தொன்னையில் பன்றி இறைச்சியை நிரப்பிக் கொண்டார். இறைவனை நீராட்டுவதற்காக பொன் முகலி நீரை வாயில் நிறைய முகந்து கொண்டார். பூசிப்பதற்குத் தேவையான நறுமலர்களைக் கால்களினால் பறித்து வந்து தலைமீது ஏந்திக் கொண்டார். ஒரு கையிலே வில், மற்றொரு கையிலே ஆற்றுநீர், தலையிலே மலர்கள், இதயத்திலே இறைவனைப் பற்றிய சிந்தை ! இப்படியாக, சிவ வழிபாட்டிற்குப் புறப்பட்ட திண்ணனார், காளத்தி மலையை நோக்கி வேகமாக ஓடினார். சிவலிங்கப் பெருமானின் திருச்சன்னிதானத்தை அடைந்தார்.

முதல் வேலையாக அரசார் திருமேனியிலிருக்கும் மலர்களையும், பச்சை இலைகளையும் செருப்புக் காலால் அகற்றினார். வாயிலிருந்த பொன் முகலி ஆற்று நீரை ஆண்டவன் மீது உமிழ்ந்தார். இதயத்திலுள்ள எல்லையில்லா அன்பை அரனார் மீது சொரிவதுபோல தலைமீது சுமந்து வந்து நறுமலர்களை இறைவன் மீது பொழிந்தார். கையில் கொண்டு வந்திருந்த ஊன் நிறைந்த தொன்னையை தெய்வத்தின் திருமுன் பயபக்தியோடு வைத்தார், தேவரும், பூதகணங்களும் முனிவரும் போற்றி வணங்கும் மறைமுதல்வன், முன்னால் வைத்த இறைச்சியை, திருவமுதூட்டச் சித்தம் கொண்டார் திண்ணனார்.ஐயனே ! இந்த இறைச்சியை அம்பிலே கோர்த்து, நன்றாக நெருப்பிலிட்டுப் பக்குவமாகச் சமைத்துள்ளேன். அதிலும் நானே நாவால் சுவைத்துப் பார்த்துச் வையுள்ள இறைச்சியை மட்டும் தங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். எம்பெருமானே ! இந்த ஏழையின் ஆசையைப் பூர்த்திசெய்யத் திருவமுது செய்து அருளவேண்டும் என்று மொழிந்தவாறே, ஊனை இறைவனுக்கு அன்போடு ஊட்டத் தொடங்கினார் திண்ணனார். உலகமெங்கும் கங்குல் அரசன் தனது ஆட்சியைத் தொடங்கினான். திண்ணனாருக்குப் பயம் ஏற்பட்டது. ஏற்பட்ட பயமோ தம்மைப்பற்றி அல்ல ! தமது அன்பு அணைப்பிலே அழுந்தி நிற்கும் இறைவனைப் பற்றித்தான்.இரவில் வனவிலங்குகள் வந்து இறைவனைத் துனன்புறுத்தக்கூடுமோ? என்ற பயத்தால் கலங்கிய திண்ணனார், செவ்விய அன்பு தாங்கிய திருக்கையில் வில்லைத் தாங்கிக் காளத்தியப்பரின் அருகினிலேயே அசையாமல் இரவெல்லாம் கண் இமைக்காமல் நேசமுறக் காவல் காத்து நின்றார். மூங்கில்கள் சொரியும் முத்துக்களின் ஒளியாலும், பாம்புகள் உமிழ்ந்த சிவந்த மாணிக்கக் கற்களின் பேரொளியினாலும் ஒளி வீசும் சோதி மரங்களின் விளக்கத்தாலும், குரங்குகள் பொதும்பில் அவைகட்கு விளக்காக வைத்த மணிவிளக்குகளின் ஒளியினாலும், ஐம்புலன்களை அடக்கிய முனிவர்கள்பால் எழும் அரிய பெரிய ஜோதி மயத்தாலும் எங்கும் ஒளிச்சுடர் படர்ந்த வண்ணமாகவே இருந்தன. இருள் புலர்ந்தது. புள்ளினங்கள் ஆர்த்தன. வேள்விச் சாலைகளில் அந்தணர்களின் வேதபாராயணம் ஒலித்தன. ஆலயங்களில் காலை முரசம் முழங்கின. செங்கதிரோன் குணதிசை எழுந்து தனது விரிக்கதிர்களைப் பாரிலே பரப்பினான். அவனது செம்மையான கதிர்கள் திண்ணனார் மீது பட்டன. உறங்காமல் காவம் புரிகின்ற பக்திச் செம்மல் இறைவனைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி கொண்டார். அப்பொழுது அவரது மனதில் இறைவனுக்குத் திரும்பவும் பசி எடுக்குமே! அதற்குள் விரைந்து சென்று இறைச்சியைக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணினார். வேகமாகப் புறப்பட்டார்.

திண்ணனார் திருக்கோயிலை விட்டு வெளியே சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் வழக்கம்போல் பூசை செய்யும் சிவகோசரியார் என்னும் அந்தணர் வழிபாடு செய்வதற்காக மலரும் நீரும் நறுமணப் புகைப்பொருளும் எடுத்து வந்தார். உள்ளே வந்த அந்தணர் இறைவன் திருமுன்னால் இறைச்சியும் எலும்பும் சிதறிக் கிடப்பதைக் கண்டு பதறினார். ஐயையோ ! இத்தகைய இழிவுச் செயல்களைச் செய்தவர் எவரோ ? என்று நிலத்தில் வீழ்ந்து அலறினார். செய்வதறியாது திகைத்தார். கலங்கினார். வேடர்குலத்தவர்தான் இத்தகைய கொடிய பாதகச் செயல்களைச் செய்திருக்க வேண்டும் ! என்று மனதில் எண்ணியவாறு அந்த இடத்தைச் சுத்தம் செய்தார். பொன் முகலிக்குச் சென்று நீராடித் திரும்பி வந்தார் அந்தணர். என்றும் போல் வேதம் ஓதி சைவாகம முறைப்படி இறைவனை நீராட்டினார். மலரிட்டு நறுமணப் புகை காட்டி வழிபட்டார். மனவேதனையோடு தமது வீட்டிற்குத் திரும்பினார். காளத்திமலையை விட்டுப் புறப்பட்ட திண்ணனார். அரனாருக்குப் பலவகை விலங்குகள் மாமிசத்தைச் சமைத்து அமுதூட்ட எண்ணினார். அதற்காக மான், பன்றி, காட்டுமான் முதலியவற்றை வேட்டையாடினார் திண்ணனார். அதன்பிறகு, முந்தைய நாள் போல், அவற்றை அம்பிற் கோர்த்து தீயிலிட்டு வதக்கி எடுத்தார். சுவைத்துப் பார்த்துக் தொன்னை நிறையச் சேர்த்துக் கொண்டார். தேன் அடைகளை பிழிந்து ஊனை கலந்தார். தலையில், மலரையும், வாயில் நீரையும் எடுத்துக் கொண்டு காளத்தியப்பரின் பசியைப் போக்கப் புறப்பட்டார் திண்ணனார். ஆலயத்தை அடைந்த திண்ணனார் இறைவன் முன்னால், பச்சிலையும், தண்ணீரும் இருப்பது கண்டு திகைத்தார். முன்போலவே அவற்றைச் செருப்பு கால்களால் சுத்தம் செய்தார். வாயில் இருந்த தண்ணீரை உமிழ்ந்து இறைவனுக்கு திருமஞ்சன நீராட்டினார். தலையிலிருந்து மலரை உதிர்த்து அர்ச்சனை புரிந்தார். அன்போடு அமுதூட்டி உளம் மகிழ்ந்தார். இப்படியாக தினமும் திண்ணனாரும், சிவகோசரியாரும் மாறி மாறி சிவபூஜை செய்து வரலாயினர்.திண்ணனாரின் ஊன் அமுதும் அன்பும் கலந்த பூசையும், சிவகோசரியாரின் சிவாகமமுறை வழிபாடும் நாள்தோறும் இடைவிடாமல் நடந்த வண்ணமாகவே இருந்தன. இதற்குள், நாணனும், காடனும் ஊருக்குத் திரும்பி நாகனிடம், திண்ணனாரின் நிலையைப் பற்றி விளக்கிக் கூறினர். நாகன் அரவம் தீண்வினாற்போல் துடித்தான். மகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்று அஞ்சி நடுங்கினான். நாகன் தேவராட்டியையும், தத்தையயும் அழைத்துக் கொண்டு, திண்ணனாரைப் பார்க்கக் காளத்தி மலைக்கு புறப்பட்டான். திண்ணனார் குடுமித்தேவரை அணைந்த வண்ணம் இருந்தார். அப்பொழுது அங்கு வந்த நாகனும், தத்தையும் திண்ணனாரிடம், பல வழிகளில் பேசிப் பார்த்தார்கள். பழகிப் பார்த்தார்கள். அவரைப் பிடித்திருக்கும் சாமிப் பைத்தியம் மட்டும் விட்ட பாடில்லை என்பதை உணர்ந்து வருந்தினார்கள். தேவராட்டிøயும் முயற்சித்துத் தோல்வியுற்றாள். நாகனும் தத்தையும் மனம் வருந்தினர். மகனைத் தன்னோடு அழைத்துச் செல்வது என்பது இயலாத காரியம் என்பதைத் திடமாகக் கொண்டனர். இறைவனது கருணைக் கயிற்றிலே கட்டுண்ட திண்ணனார் இவர்கள் முன்னால் வெறும் ஜடமாகவே காணப்பட்டார். அவர்கள் திண்ணனாரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம் என்று வருத்தத்துடன் வந்த வழியே திரும்பினார்கள். குடுமித்தேவருக்கு வேடர் வழிபாடும், வேதியர் வழிபாடும் நான்கு நாட்களாகக் கலந்து கலந்து நிகழலாயின. ஐந்தாம் நாள் வந்தது. அன்றும் வழக்கம்போல், திண்ணனார் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் வந்த சிவகோசரியார் இறைவன் முன்னால் தினமும் காலை தான் வரும்பொழுதெல்லாம் இறைச்சி சிதறிக் கிடப்பதை எண்ணி மனம் தாளாமல் இறைவனிடம் இறைஞ்சினார்.

எம்பிரானே ! தம்பிரானே ! திருக்காளத்தி அப்பனே ! அபச்சாரம். தினம் தவறாது எலும்பையும் இறைச்சியையும் உமது திருமுன்னால் வாரி இறைத்து மாசுபடுத்துவது இன்னாரென்று யான் அறியேனே !தேவரீர் ! திருஉள்ளம் கனிந்து இத்தகைய கொடுமையை இனியும் நேராத வண்ணம் எம்மைக் காத்தருள வேண்டும் என்று பரமனிடம் பிரார்த்தித்தபடியே வழிபாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். அன்றிரவு அவரது கனவில் செஞ்சுடர் வண்ணர் எழுந்தருளினார்.இச்செயலை யாரோ வேடுவன் வேண்டுமென்றே, என்னை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகச் செய்கிறான் என்று மட்டும் எண்ணிவிடாதே. அவனது வடிவமெல்லாம் எப்பொழுதும் நம் பக்கம் அன்பு செலுத்தும் தன்மையானதே.அவனுடைய அறிவும் உணர்வும் நம்மை அறியும் அறிவே ! அவனுடைய செயல் ஒவ்வொன்றும் நமக்கு இனிமை பயக்கக்கூடியதாகும். அவனது செருப்புக் கால்கள் என் மீது தேய்த்துச் சுத்தப்படுத்தும் போது எனக்கு மழலைகளின் சேவடிகள் தடவிச் செல்வது போன்ற இன்பப் பெருக்கை ஏற்படுத்துகிறது. கங்கை, காவிரி முதலிய தூய நதிகளின் நீரைவிடத் தூய்மையான அவன் தனது வாயினின்றும் உமிழ்கின்ற திருமஞ்சன நீர். அவனது முடியிலிருந்து உதிர்ந்து விழும் நறுமலர்கள், அவன் எம்மீது கொண்டுள்ள உயிருக்கு உயிரான அன்பு மலர்ந்து, நம்மீது நழுவி விழுவதைப் போலாகும், அம்மலர்களுக்குத் தேவதேவாதியர்கள் இடும் பாரிஜாத மலர்கள் கூட ஒவ்வா. அவன் ஊட்டும் இறைச்சி மறைவிதிப்படி அளிக்கும் அவிர்பாகத்தைவிடச் சிறந்ததாகும். வேத முனிவர்கள் ஓதும் தோத்திர நாமங்களை விட, அவன் அகம் குளிர அன்புருகிக் கூறும் மொழிகளே மிகமிக நல்லவை; எனக்கு இன்பம் தரத்தக்கவை. அவனது இத்தகைய உயர்ந்த அன்புச் செயலை உனக்குக் காட்டுகிறேன். இதற்காகக் கலங்காதே என்று திருவாய் மலர்ந்தார் எம்பெருமான் ! சிவகோசரியார் கனவு கலைந்து திடீரென்று விழித்தெழுந்தார். எம்பெருமானைப் போற்றி நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதன் பின்னர் உறக்கம் எப்படி வரும் ! கனவில் கண்ட பெருமானின் திருக்கோலத்தை எண்ணியபடியே விடியும்வரை விழித்திருந்தார். அன்று ஆறாம் நாள் ! வழக்கம்போல் திண்ணனார் வேட்டைக்குப் புறப்பட்டார். அந்தச் சமயத்தில் அந்தணர் மன நிறைவோடு திருக்கோயிலுக்கு வந்தார். வழக்கப்படி வேதாகம வழிபாடுகளைச் செய்தார். அதன் பிறகு இறைவன் கனவில் எழுந்தருளி மொழிந்ததற்கு ஏற்பச் சிவலிங்கத்தின் பின்புறமாக ஓரிடத்தில் மறைந்து கொண்டார். வழக்கம்போல், தொன்னையில் இறைச்சியும், தலையில் நறுமலரும், வாயில் பொன்முகலி ஆற்றுத் தெளிந்த நீரும் எடுத்துக் கொண்டு திண்ணனார் திருச்சன்னிதிக்குள் வந்தார். திண்ணனாரின் பக்தியை உலகோர்க்கு உணர்த்தவும், இறைவன் மீது கொண்டுள்ள அன்பை சிவகோசரியாருக்குத் தெரியப்படுத்துவதற்காகவும் வேண்டி குடுமித் தேவர், அந்த ஆனந்தமலை மீது ஓர் அற்புத விளையாடலைத் தொடங்கினார். எம்பெருமான், தமது சிவலிங்கத் திருமேனியில் வலக்கண்ணில் இருந்து இரத்தம் வடிவதைப் போல் காட்டினார்.

சிவபெருமானுடைய திருவிழிகளிலிருந்து குருதி கொட்டுவது கண்டு மதிமயங்கிய திண்ணனார் செயலிழந்தார். வாயிலிருந்த பொன்முகலியாற்று நீர் கீழே விழுந்து சிதறியது. வில்லும் கீழே நழுவின. குடுமியில் சுமந்து வந்த நறுமலர்கள் சோர்ந்தன. அருள் மிகுதியால் நிலை தளர்ந்த திண்ணனர் பதைபதைத்துக் கீழே விழுந்தார். அவரது உள்ளமும், உடலும் நடுங்கியது. நடுக்கத்தால் உடல் வியர்த்தது. அவர் கண்ணீர் வடித்தார் ! கதறினார் ! திடுக்கிட்டு எழுந்தார். எம்பெருமானின் குருதி வழியும் திருக்கண்ணை தமது கையால் துடைத்தார். குருதி மட்டும் நின்றபாடில்லை. செய்வதறியாது, செயல் மறந்து நிலத்தில் வீழ்ந்தார். மீண்டும் எழுந்தார்.எம்பெருமானுக்கு இத்தகைய கொடிய துன்பத்தை செய்தது யார்? காட்டு விலங்குகளானாலும் சரி, மாறாக வேடர்கள் ஆனாலும் சரி, என் ஐயனுக்கு இப்படியொரு துன்பத்தைக் கொடுத்ததை மட்டும் என்னால் பொறுக்கவே முடியாது. இப்பொழுது பழி வாங்கி வருகிறேன் என்று கர்ஜித்த திண்ணனார் கோபத்துடன் எழுந்தார். வில்லும் அம்பும் எடுத்தார். வில்லில் நாணேற்றி குன்றின் சாரலில் அங்குமிங்குமாக நெடுந்தூரம் தேடித் தேடி அலைந்தார். தேடிய இடங்களிலெல்லாம் விலங்குகளையோ வேடர்களையோ காணாது வேதனையோடு திரும்பி வந்தார்.எம்பெருமானின் இரத்தம் சிந்தும் விழிகளைப்ப பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்தார். குடுமித்தேவரை இறுகக் கட்டித் தழுவினார். அன்பும் அருளும் இணைந்தன. பக்தியும், சக்தியும் கலந்தன.வேடர்கள் மூலிகைகளைக் கொண்டு புண்களை ஆற்றுவது திண்ணனார் நினைவிற்கு வந்தது. உடனே காளத்தி மலை அடிவாரத்திற்குச் சென்று தமக்குத் தெரிந்த சில பச்சிலை மூலிகைகளைப் பறித்து வந்தார். அப்பச்சிலைகளைக் கசக்கிப் பிழிந்து சாற்றை இறைவன் திருவிழிகளில் பிழிந்தார். அப்படியும் பெருகி வந்த இரத்தம் மட்டும் சற்றுகூட நிற்கவே இல்லை.அந்த சமயத்தில், ஊனுக்கு ஊனிடல் வேண்டும் என்ற ஆன்றோர்களின் சித்தாந்த மொழி அவரது சிந்தைக்கு எட்டியது.எம்பெருமானுடைய விழிக்கு நேர்ந்த விபத்தைத் தீர்ப்பதற்கு, தம்முடைய விழிகளில் ஒன்றைத் தோண்டி எடுப்பது இரத்தம் சிந்தும் இறைவனின் திருவிழிகளில் வைப்பது என்ற கருத்தினைக் கொண்டார் திண்ணனார். சற்றும் தாமதிக்காமல் கூரிய அம்பினால் தமது வலக்கண்னைத் தோண்டி எடுத்தார். காளத்தி அப்பனின் ரத்தம் வழியும் வலக்கண்ணில் அப்பினார் திண்ணனார். அக்கண்ணில் இருந்து ரத்தம் வழிவது நின்றது. திண்ணனாரின் கண்களிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அவர் அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. வேதனையைப்பற்றி சற்றுகூட எண்ணிக் கதறவில்லை. தாம் தக்க சிந்தனையோடு செய்த செயல் பரமனின் கண்களைக் குணப்படுத்திவிட்டதே என்ற களிப்பில் மலையை ஒத்த தமது தோள்களைத் தட்டிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். திண்ணனாரின் தெளிந்த பேரன்பின் பெருக்கினை மேலும் சோதிக்க தொடங்கிய சிவனார். தமது இடக்கண்ணிலிருந்தும் ரத்தம் வழியுமாறு செய்தார்.

ஆனந்தக் கூத்தாடிக் களித்து நின்ற திண்ணனார் இறைவனின் இடக்கண்ணிலிருந்து ரத்தம் பெருகி வருவது கண்டு, அப்படியே அசைவற்று நின்றார். கண்ணுக்குக் கைகண்ட மருந்தைக் கண்ட பின்னர் திண்ணனார் எதற்காக கண்ட கண்ட மூலிகைகளையும் பச்சிலைகளையும் தேடி அலையப் போகிறார் ! அக் கண்ணிலிருந்து வரும் இரத்தத்தையும் தடுத்து நிறுத்த அப்பொழுது தமது மறுகண்ணையும் அம்பினால் தோண்டி எடுத்து அப்புவது என்ற முடிவிற்கு வந்தார். மறுகண்ணையும் எடுத்துவிட்டால், இறைவனது கண் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுமே என்று நினைத்து தமது காலை, இறைவனின் குருதி கொட்டும் இடக் கண்ணருகே பலமாக ஊன்றிக் கொண்டார்.அம்பை எடுத்தார். அம்பு எடுத்த அன்பர், காளத்தியப்பரை அன்பின் பெருக்கிலே ஒருமுறை பார்த்தார். இந்தக் கண்ணையும் பறித்து இறைவனுக்கு வைத்து விட்டால் பிறகு இறைவனைக் கண்ணால் பார்க்கவே முடியாதே - அன்பு வடிவமான இறைவனின் அருள் முகத்தைக் காணவே முடியாதே ? என்று எண்ணினாரோ என்னவோ, இறைவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.பார்த்துப் பார்த்து மனம் உருகினார்.இனிமேல் என்றும், எப்பொழுதும், ஞானக்கண்களால் இறைவனைக் கண்டுகளிக்கப் போகும் திண்ணனார். தமது ஊனக் கண்களைப் பற்றி கவலைப்படவில்லை. அம்பை எடுத்தார். இடக்கண்ணில் ஊன்றி கண்ணைத் தோண்டப் போனார். இதற்கு மேல் காளத்தியப்பர். தமது அன்புத் தொண்டனைத் துன்புறுத்த விரும்பவில்லை. அருள் வள்ளலார், திண்ணனாரின் அன்பிற்கு அடிமையானார். அன்பர்களைக் காக்கும் அம்பத்தரசன் - கருணைக் கடலான சந்திரக்காலாதரன் - வேதமுதல்வன் திண்ணனாரைத் தடுத்தாட் கொண்டார். எம்பெருமான் தமது திருக்கையால் திண்ணனாரின் கரத்தைப் பற்றினார்.நிற்க கண்ணப்ப ! நிற்க கண்ணப்ப ! அன்புருவே நிற்க ! என்று தமது அமுத வாக்கால் திருவாய் மலர்ந்து அருளினார் எம்பெருமான்.தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். ஆலயம் எங்கும் புத்தொளி பிறந்தது. வேதம் முழங்கியது. திண்ணனார் இறைவனின் அருளிலே அன்பு வடிவமாய், பேரின்பப் பெருக்கெடுத்து நின்று கொண்டிருந்தார்.இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவகோசரியார் திண்ணனாரின் பக்திக்கு தலை வணங்கினார். இறைவன் திருவருளினாலே திண்ணனார், இழந்த கண்ணைப் பெற்றார். கண் பெற்றதோடு கண்ணப்பர் என்ற திருநாமத்தையும் பெற்றார்.கண்ணப்பரின் உண்மையான பக்தியையும், இறைவனின் திருவருளையும் என்ணிப் பார்த்தார் அந்தணர். ஆயுள் எல்லாம் அரனாரை வழிபட்டேன்; என்னால் அவரது அருளைப்பெற முடியவில்லை. ஆறுநாள் பூஜையிலே ஆண்டவனின் அருகிலேயே இருக்கும் இன்பப் பேற்றினைப் பெற்றார் திண்ணனார். அதற்குக் காரணம் வெறும் பூஜை மட்டுமல்ல ! உண்மையான அன்புதான். அன்வே சிவமானார். அன்பில்லாத வழிபாட்டால் ஒரு காரியமும் நடக்காது. இறைவனின் அருளைப் பெறவும் முடியாது.இம்மையில் யாம் முக்தி பெற, இனிமேல் காளத்தியப்பரோடு கண்ணப்பரையும் சேர்த்து வழிபடுவதே சிறந்தது ! என்று உறுதிபூண்டார் வேதியர். நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அருந்தவத்தோர்க்கும் கிட்டாத பரம்பொருளாகிய எம்பெருமான் திருவாய் மலர்ந்து, ஒப்புயர்வற்ற கண்ணப்பா ! நீ எமது வலப்பக்கத்திலே எப்பொழுதும் நிற்பாயாக ! என்று திருவருள் புரிந்தார்.திண்ணனார் கண்ணப்பர் ஆனார். கண்ணப்பர் பரமனுக்குக் கண்கொடுத்து பக்திக்குக் கண்ணாக விளங்கினார்.

குருபூஜை: கண்ணப்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்.


Key Aspects of Kannappa Nayanar
Early Life and Background:

Birth and Heritage: Kannappa was born as Thinnan in a hunter tribe (Naga) in Uduppur, present-day Andhra Pradesh. His upbringing in a hunter community instilled in him qualities of bravery and simplicity.
Unwavering Devotion: Despite his tribal background, Kannappa developed a profound devotion to Lord Shiva, which became the central aspect of his life.

Legend of Devotion:

Act of Sacrifice: The most famous story of Kannappa revolves around his unorthodox yet intense devotion to Lord Shiva at the Kalahasti temple. As the legend goes, Kannappa, upon seeing blood oozing from the eyes of the Shiva Lingam, offered his own eyes to the deity to stop the bleeding. This act of ultimate sacrifice was a test set by Lord Shiva, who then appeared before Kannappa and blessed him, restoring his sight and acknowledging his deep devotion.
Devotional Simplicity: Kannappa's offerings to Shiva were often simple and heartfelt, including forest flowers and meat, which he presented directly, without traditional rituals. This emphasized his genuine love and devotion over ritualistic adherence.

Role in Shaivism:

Symbol of Pure Devotion: Kannappa is revered as a symbol of pure, unpretentious devotion. His story highlights the idea that sincere devotion transcends social status, background, and ritualistic practices.
Inspiration for Devotees: His life and sacrifice serve as an inspiration for countless devotees, illustrating that true devotion lies in the heart's sincerity.

Cultural and Religious Significance:

Temple Worship: The site of his devotion, the Kalahasti temple, remains a significant pilgrimage center, attracting devotees who seek to emulate Kannappa's pure-hearted devotion.
Iconography: Kannappa is often depicted as a tribal hunter, sometimes holding a bow and arrow, and offering his eyes to the Shiva Lingam, symbolizing his ultimate act of devotion.

Legacy:

Honored as a Nayanmar: Kannappa is venerated as one of the 63 Nayanmars, saints who are celebrated for their unwavering devotion to Lord Shiva.
Influence on Bhakti Movement: His story is a poignant example in the Bhakti tradition, which emphasizes love and devotion to God as the highest spiritual path, transcending caste, creed, and ritualistic barriers.

Conclusion

Kannappa Nayanar embodies the essence of bhakti (devotion) in Tamil Shaivism, demonstrating that sincere love for God surpasses all formalities and societal norms. His legacy continues to inspire devotees to seek a direct and heartfelt relationship with the divine.



Share



Was this helpful?