Digital Library
Home Books
Kaliya Nayanar is one of the 63 revered Nayanmars, the saints in Tamil Shaivism known for their deep devotion to Lord Shiva. Kaliya Nayanar's life is celebrated for his unwavering dedication and devotion to the divine.
ஓங்கிய புகழுடைய தொண்டை நன்நாட்டில், எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இங்குள்ள சக்கரப்பாடித் தெருவில் எண்ணெய் வாணிபம் புரியும் வணிகர் குடியில் கலியனார் என்பவர் பிறந்தார். சைவ சமயத்தில் சிறப்புற்று விளங்கிய இச்செம்மல் சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்றார். தமது செல்வத்தைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தி வந்தார் நாயனார்.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள படம்பக்கநாதருடைய கோயிலில் உள்ளும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை இரவும் பகலும் இடுகின்ற பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்திருந்தார் கலிய நாயனாரது பக்தியின் திறத்தினை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு உமைபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தார். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணிய நாயனார் கோயில் திருப்பணிக்காகக் கூலி வேலை செய்து நாலு காசு சம்பாதிப்பதில் ஈடுபடலானார்.
இவர் தமது குலத்தவரிடம் எண்ணெய் வாங்கி விற்று பொருளீட்டி வந்தார். செக்கு ஓட்டி அன்றாடம் கூலி வாங்கும் தொழிலில் ஈடுபட்டார். அதில் கிட்டும் வருவாயைக் கொண்டு கோயில் திருப்பணியைத் தொடர்ந்து இனிது நடத்தி வந்தார். சில காலத்துக்குப் பின் அக்கூலி வேலையும் இல்லாமற் போகவே நாயனார் வீட்டிலுள்ள பண்டங்களை ஒவ்வொன்றாக விற்று பொருள் பெற்றார். இறுதியில் மனையை விற்று, மாண்புடைய மனைவியையும் விற்க முன்வந்தார்.
மனைவியாரை பெற்றுக்கொண்டு பொன் கொடுக்க ஆளில்லாமை கண்டு செய்வதறியாது திகைத்தார்; சித்தம் கலங்கினார் அடிகளார். மன வேதனை தாளாமல் மனை நலமிக்க மங்கை நல்லாளையும் அழைத்துக் கொண்டு படம்பக்கநாதர் திருக்கோயிலை அடைந்தார். எம்பெருமானின் திருமுன் பணிந்தெழுந்து, ஐயனே! திருவிளக்குப் பணி நின்று விடுமாயின் இவ்வெளியேன் மாள்வது திண்ணம். அம்பலத்து ஒளிவிடுகின்ற அகல் விளக்குகளை எண்ணெய் வார்த்து ஏற்ற முடியாது போனால் நான் உதிரத்தை வார்த்து விளக்கேற்றுவேன் என்று மகிழ்ச்சி பொங்க மொழிந்தார்.
திருவிளக்குகளை முறையோடு வரிசையாக அமைத்தார். எண்ணெய்க்குப் பதிலாக உதிரத்தைக் கொடுக்க உறுதிபூண்டிருந்த கலியநாயனார் வாள் எடுத்து வந்து தமது கழுத்தை அரியத் தொடங்கினார். திருத்தொண்டர்களை தடுத்தாட்கொள்ளும் தம்பிரான் எழுந்தருளி நாயனாரது திருக்கரத்தைப் பற்றினார். ஆலயத்துள் பேரொளி எழுந்தது. திருவிளக்குகள் எண்ணெய் வழியப் பிரகாசமாக ஒளிபரப்பின. எங்கும் பிறைமுடிப் பெருமானின் அருள் ஒளி நிறைந்தது.
நாயனார் கழுத்தில் அரிந்த இடம் அகன்று முன்னிலும் உறுதி பெற்றது. நாயனாரும் அவரது மனைவியாரும் மெய்யுருகி நின்றனர். சடைமுடிப் பெருமானார் அன்னையுடன் அலங்கார விடை மீது எழுந்தருளி அன்புத் தொண்டர்க்கு காட்சி கொடுத்தார். கலிய நாயனாரும் அவரது மனைவியாரும் எம்பெருமானை நிலமதில் வீழ்ந்து பலமுறைப் பணிந்து எழுந்தனர். இறைவன் கலிய நாயனாருக்குப் பேரின்பப் பெருவாழ்வு அளித்து இறுதியில் சிவபதம் புகுந்து சிறப்புற்றிருக்குமாறு திருவருள் செய்தார்.
குருபூஜை: கலிய நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
கலியனுக்கு அடியேன்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |