இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


இனியவை நாற்பது

Iniyavai Narpathu (or Iṉiyavai Nāṟpatu) is a notable classical Tamil literary work from the Sangam period. It is part of the Ettuthokai collection, which is one of the primary anthologies of Sangam literature.


இனியவை நாற்பது

(பூதஞ் சேந்தனார்)


(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)


இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனை துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம்.


அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது. இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.

கடவுள் வாழ்த்து

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே;
தொல் மாண் துழாய் மாலை யானைத் தொழல் இனிதே;
முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.
தாள் - திருவடி
தொழல் - வணங்குதல்
மூன்று கண்களையுடைய சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது.

நூல்
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1
இனிது - நல்லது
சேர்வு - சேர்தல்
பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு. 2
வழக்கு - ஈகை
துறத்தல் - விடுதல்
பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. நிலையாமையை ஆராய்ந்து முற்றும் துறத்தல் நன்கு இனிது.

ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே;
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே;
ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே,
தேரின், கோள் நட்புத் திசைக்கு. 3
ஏவல் - ஏவுதல்
வேளாண்மை - உழவு
சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.

யானையுடைப் படை காண்டல் மிக இனிதே;
ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;
கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே,
மானம் உடையார் மதிப்பு. 4
அடை - முல்லை
அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.

கொல்லாமை முன் இனிது; கோல் கோடி, மா ராயன்,
செய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல்,
எய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு. 5
யார் மாட்டும் - யாவரிடத்தும்
கொல்லாமை முன் இனிது. அரசன் நடுவு நிலைமை தவறி சிறப்பு செய்யாமை இனிது. செங்கோலனாக இருப்பது இனிது. யாவரிடத்தும் திறமையால் கூடியமட்டும் குற்றம் கூறாமை மிக இனிது.

ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
வாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது. 6
மாண்பு - மாட்சிமை
கூடிய மட்டும் தருமம் செய்தல் இனிது. சான்றோர்களின் பயனுடைய சொல் இனிது. கல்விச் செல்வம் அதிகாரம் ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் 'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது.

அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;
தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
கொண்டு அடையான் ஆகல் இனிது. 7
பந்தம் - உறவு
ஆண்மை - வீரம்
பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.

ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்
கார் வரை போல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை,
பேதுறார், கேட்டல் இனிது. 8
கலிமா - குதிரை
தார் - மாலை
வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.

தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே;
அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே;
பங்கம்இல் செய்கையர் ஆகி, பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது. 9
அகல் நிலா - விரிந்த நிலா
காண்பு - காணுதல்
தம்மை ஒட்டி வாழும் நண்பர்கள் செல்வத்துடன் வாழ்தல் இனிது. அழகிய அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணுதல் இனிது. குற்றமில்லாத செய்கை உடையவராய் அன்புடையவராயிருத்தல் இனிது.

கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே;
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே;
மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனை மாண்பும் தான் இனிது நன்கு. 10
நீக்கல் - விலக்குதல்
அஞ்சி - பயம்
கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.

அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே;
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே;
உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப்
பெருமைபோல் பீடு உடையது இல். 11
அதர் சென்று - வழி சென்று
குதர் சென்று - தவறான வழி
தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.

குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே;
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே;
மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்
திருவும், தீர்வு இன்றேல், இனிது. 12
குழவி - குழந்தை
திரு - செல்வம்
குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.

மானம் அழிந்தபின், வாழாமை முன் இனிதே;
தானம் அழியாமைத் தான் அடங்கி, வாழ்வு இனிதே;
ஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது. 13
ஊனம் - குறைபாடு
மானம் அழிந்தபின் வாழாமை மிக இனிது. செல்வம் சிதையாதபடி செல்வத்திற்குள் அடங்கி வாழ்தல் இனிது. குறைபாடு இல்லாத சிறந்த செல்வத்தைப் பெற்று வாழ்வது மிக இனிதாகும்.

குழவி தளர் நடை காண்டல் இனிதே;
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;
வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து,
மனன் அஞ்சான் ஆகல் இனிது. 14
தளர் நடை - தளர்ந்த நடை
குழந்தைகளது தளர்ந்த நடையைக் காணுதல் இனிது. அவர்களின் மழலைச் சொல் கேட்டல் இனிது. தீயவர்களின் சினத்தைக் கண்டபோதும் மனம் அஞ்சாமல் இருப்பது இனிது.

பிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது ஆற்ற;
வறன் உழக்கும் பைங் கூழ்க்கு வான் சோர்வு இனிதே;
மற மன்னர் தம் கடையுள், மா மலைபோல் யானை
மத முழக்கம் கேட்டல் இனிது. 15
பீடு - பெருமை
பிறனுடைய மனைவியை திரும்பிப் பாராத பெருமை இனிது. நீரில்லாமல் வாடும் பசிய பயிர்களுக்கு மழை பொழிதல் இனிது. வீரத்தையுடைய அரசர்களின் அரண்மனையில் பிளிற்றொலியைக் கேட்பது இனிது.

கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;
மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;
எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது. 16
ஈதல் - கொடுத்தல்
கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. அறிவின் மேம்பட்டவர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது. எவ்வளவு சிறிதாயினும் தான் இரவாது பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும் விட இனிதாகும்.

நட்டார்க்கு நல்ல செயல் இனிது; எத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே;
பற்பல தானியத்ததாகி, பலர் உடையும்
மெய்த் துணையும் சேரல் இனிது. 17
நட்டார் - நண்பர்
நண்பர்களுக்கு இனியவற்றைச் செய்தல் இனிது. அதனைவிட எள் அளவும் நட்பு இல்லாதவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது அதனைவிட இனியது. எல்லாவகைப் பொருட்களை உடையவராய் சமயத்தில் உதவும் நண்பர்களைத் துணையாக வைத்துக் கொள்வது இனிது.

மன்றில் முதுமக்கள் வாழும் பதி இனிதே;
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே;
எஞ்சா விழுச் சீர் இரு முது மக்களைக்
கண்டு எழுதல் காலை இனிது. 18
தந்திரம் - நூல்
முதுமக்கள் - அறிவுடையோர்
அறிவுடையவர்கள் வாழுகின்ற ஊரில் வாழ்வது இனியது. அறநூல்படி வாழும் முனிவர்களின் பெருமை இனியது. தாய் தந்தையரைக் காலையில் கண்டு வணங்குதல் இனிது.

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே;
பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் முன் இனிதே;
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது
தக்குழி ஈதல் இனிது. 19
பேணி - பாதுகாத்து
ஈதல் - கொடுத்தல்
நட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியது. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.

சலவரைச் சாரா விடுதல் இனிதே;
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது. 20
சலவரை - வஞ்சகரை
ஞாலத்து - பூமியில்
வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.

பிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல் இனிதே;
அறம்புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே;
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறம் தெரிந்து வாழ்தல் இனிது. 21
வௌவான் - அபகரிக்காமல்
மயரிகள் - அறிவிலிகள்
பிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. தர்மம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
பெரு வகைத்து ஆயினும், பெட்டவை செய்யார்,
திரிபு இன்றி வாழ்தல் இனிது. 22
வழங்கல் - கொடுத்தல்
ஊக்கம் - மனவெழுச்சி
தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய், தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல் இனிது.

காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே;
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே;
பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது. 23
தொட்டல் - வெட்டுதல்
ஆ - பசு
சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.

வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது. 24
வெகுளி - கோபம்
பொறை - பொறுத்தல்
மேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.

ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே;
கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது. 25
வேட்கை - ஆசை
புல்லா - சேராது
ஐந்து வழியால் வருகின்ற ஆசைகளை அடக்குதல் இனிது. கையில் நிற்கக்கூடிய பொருளைப் பெறுவதாக இருந்தாலும் கல்லாதவரை விடுதல் இனிது. இந்த உலகம் நிலையானது என்போரின் நட்பினைக் கை விடுதல் இனியது.

நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே;
உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே;
எத் திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல். 26
நசை - விருப்பம்
பாங்கு - அன்பு
ஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் இனிது. மதிப்பு இல்லாதவிடத்து வாழாதவனின் மனவெழுச்சி இனிது. எப்படியானாலும் பிறருக்குக் கொடுக்கும் பொருளை மறைக்காதவனின் அன்பு மிகப்பெரியது.

தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே;
ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது. 27
ஆண்மை - பெருமை
அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.

ஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே;
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல். 28
ஆற்றானை - செய்யமாட்டாதவனை
கூற்றம் - எமன்
ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.

கயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே;
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
'எளியர், இவர்!' என்று இகழ்ந்து உரையாராகி,
ஒளி பட வாழ்தல் இனிது. 29
கயவரை - கீழ்மக்களை
இகழ்ந்து - அவமதித்து
கீழ் மக்களை நீக்கி வாழ்தல் இனியது. தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது புகழ்பட வாழ்தல் இனிதாகும்.

நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
'அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின், நன்கு இனியது இல். 30
மாண்பு - மாட்சிமை
வௌவாத - அபகரியாத
ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.

அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே;
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது. 31
கூரா - துன்பம்
தம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது இனிது. கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது இனிது. மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது இனிது ஆகும்.

கற்று அறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே;
பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே;
தெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப்
பத்திமையின் பாங்கு இனியது இல். 32
தெற்றனவு - ஆராய்ந்து
கற்று அறிந்தவர்கள் உறும் கருமப் பயன் இனிதாகும். அன்பில்லாத அரசனின் கீழ் வாழாதிருத்தல் இனிதாகும். ஆராயாமல் கெடுதல் செய்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் அன்புடையவராக இருத்தலைப் போன்று இனியது வேறு இல்லை.

ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே;
தானே மடிந்து இராத் தாளாண்மை முன் இனிதே;
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்
தானை தடுத்தல் இனிது. 33
தாள் - முயற்சி
ஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம் இனிதாகும். சோம்பல் இல்லாது முயற்சி உடையவனின் ஆண்மை இனிதாகும். வாள் கலக்குகின்ற போரில் மாறாத பெருமை உடைய அரசர்களின் படைகளை எதிர்த்தல் ஓர் அரசனுக்கு இனிதாகும்.

எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே;
சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே;
புல்லிக் கொளினும் பொருள் அல்லார் தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது. 34
கேண்மை - நட்பு
சோர்வு - மந்தி
இரவில் செல்லாமல் இருப்பது இனியது. சொல்லும் இடத்து மறதியின்று சொல்லுதல் இனிதாகும். தானாக வலிய வந்து நட்புக் கொள்ளும் கயவர்களின் நட்பினைக் கைவிடுதல் இனிதாகும்.

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் மாண்பு இனிதே;
முன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே;
பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல்
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது. 35
ஒற்று - வேவு
உற்று - சமமாக
வெற்றியைத் தருகின்ற பெருமை உடைய அரசன் ஒற்றன் கூறியவற்றை, வேறு ஒற்றராலே ஆராய்ந்து பார்ப்பது இனிது. ஆராய்ந்து பார்த்து நீதி வழங்குதல் இனிதாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.

அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே;
செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று,
வவ்வார் விடுதல் இனிது. 36
அழுக்காறு - பொறாமை
மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;
தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது. 37
கிளைஞர் - சுற்றத்தார்
பணை - மூங்கில்
தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.

சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே;
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே;
எத் துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும்
கற்றா உடையான் விருந்து. 38
நட்டார் - நண்பர்கள்
ஆ - பசு
ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.

பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;
உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது. 39
பிளிற்றாமை - கோபம்கொள்ளாமை
ஒற்கம் - மனத்தளர்ச்சி
பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.

பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல். 40
வித்து - விதை
பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.



Overview of Iniyavai Narpathu

1. Title Meaning:

- Iniyavai means "sweet" or "pleasant," and Narpathu means "forty." Therefore, **Iniyavai Narpathu** translates to "The Forty Pleasant Poems" or "The Forty Sweet Poems," indicating a collection of forty poems known for their pleasing and lyrical quality.

2. Content:

- Structure: The collection consists of 40 poems. These poems are written in a style that blends rich imagery with emotional and philosophical reflections.
- Theme: The central theme of Iniyavai Narpathu revolves around love, nature, and the beauty of life. The poems often explore themes of romantic love, the natural environment, and the emotional experiences of individuals.

3. Themes and Imagery:

- Love and Relationships: Many poems focus on the various aspects of love, including romantic relationships, longing, and devotion. The portrayal of love is often set against the backdrop of natural beauty.
- Nature and Environment: The collection includes vivid descriptions of natural landscapes, emphasizing the beauty of the environment and its impact on human emotions and experiences.
- Emotional Expression: The poems are known for their emotional depth, capturing the complexities of human feelings and experiences in a lyrical and evocative manner.

4. Poetic Style:

- Lyrical Quality: The poems are characterized by their lyrical and melodic quality. The language used is rich and descriptive, enhancing the emotional and aesthetic appeal of the work.
- Traditional Meter: The poems follow traditional Sangam meters, contributing to their rhythmic and musical qualities.

5. Cultural and Historical Context:

- Sangam Literature: Iniyavai Narpathu is part of the broader Sangam literary tradition, which encompasses a wide range of poetry reflecting the cultural, social, and emotional aspects of ancient Tamil society.
- Literary Tradition: The collection exemplifies the Sangam tradition of using poetry to explore and express human experiences, emotions, and relationships.

6. Literary Significance:

- Contribution to Tamil Literature: Iniyavai Narpathu is an important work in Tamil literature, showcasing the lyrical beauty and emotional depth of Sangam poetry.
- Influence on Later Literature: The themes and poetic style of Iniyavai Narpathu have influenced subsequent Tamil literature, particularly in the depiction of love and nature.

Iniyavai Narpathu is celebrated for its lyrical and emotional richness, offering a glimpse into the themes of love, nature, and human experience during the Sangam era. It remains a key text in Tamil literary tradition, reflecting the aesthetic and emotional values of ancient Tamil Nadu.



Share



Was this helpful?