Digital Library
Home Books
Ilaiyangudi Maran Nayanar is one of the revered 63 Nayanmars in Tamil Shaivism, celebrated for his profound devotion and commitment to Lord Shiva. His life and contributions are honored for their deep spiritual significance and unwavering devotion.
இளையான்குடி என்னும் நந்நகரம் இயற்கை வளத்தோடு, இறைவனின் அருள் வளமும் பரிபூரணமாக நிறையப் பெற்றிருந்தது. இந்நகரில் வேளாளர் மரபிலே உதித்தவர்தான் மாறனார். இளையான்குடியில் பிறந்த காரணத்தால் இளையாங்குடி மாறனார் என்று அழைக்கப் பெற்றார். இவர், பெருத்த வயல் வளம் உடையவராய் விளங்கினார். எந்நேரமும் எம்பெருமானின் நமச்சிவாய மந்திரத்தையே நினைத்துக் கொண்டிருப்பார் இளையான்குடி மாறனார்.
மாறனாரும், அவர் மனைவியாரும் வள்ளுவர், கூறும் விருந்தோம்பல் அறத்தை நன்கு உணர்ந்து, வாழ்ந்து வந்தனர். அடியார் தம் வீடு நோக்கி வரும் அன்பர்களை இன்முகங்காட்டி இன்சொல் பேசி வரவேற்பர். அடியார்களைக் கோலமிட்ட பலகையில் அமரச் செய்து, பாதபூஜை செய்து வணங்குவர். அடியார்களுக்கு அறுசுவை அமுதூட்டி உளம் மகிழ்வதையே தங்களது வாழ்க்கை பணியாகக் கொண்டிருந்தனர். இவர்கள் இல்லத்தில் இலக்குமி தேவி நிரந்தரமாய்க் குடியிருந்தாள்.
மாறனாரின் உயர்ந்த தன்மையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவனார். மாறனார், வளம் கொழிக்கும் காலத்து மட்டுமின்றி வறுமை வாட்டும் காலத்தும் அடியாரைப் போற்றி பேணும் உணர் நோக்குடையார் என்பதை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி, ஒரு சமயம் அவ்வள்ளலார்க்கு வறுமையை உண்டாக்கினார் எம்பெருமான் !
வறுமையைக் கண்டு நாயனார் சற்றும் மனம் தளரவில்லை. எப்பொழுதும் போலவே அவர் தமது சிவத்தொண்டைத் தட்டாமல் செய்து வந்தார். வீட்டிலுள்ள பொருட்களை விற்றாவது அடியார்க்கு அமுதூட்டும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தார். செல்வம்தான் சுருங்கிக்கொண்டே வந்ததே தவிர அவரது உள்ளம் மட்டும் சுருங்காமல் நிறைவு பெற்றிருந்தது. விற்று விற்று கைப்பொருள்கள் அனைத்தும் தீர்ந்ததும் மாறனார் கையிலிருந்து பணத்திற்கு சிறிதளவு நிலத்தை குத்தகைக்கு வாங்கினார். சிறிதளவு விதை நெல்லை விதைத்தார்.
அன்றிரவு பயங்கர மழை, காற்றோடு கலந்து பெய்யத் தொடங்கியது. பாதை எங்கும் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. மாறனாருக்கு ஒன்றுமே புரியவில்லை. விதை நெல் வீணாகிவிடுமே என்று வேதனைப்பட்டார். மாறனாரும், அவர் தம் மனைவியாரும், பசியாலும், குளிராலும் வாடினர். இரவெல்லாம் உறக்கமின்றி விழித்திருந்தனர். இத்தருணத்தில் சிவபெருமான் சிவனடியார்போல் திருக்கோலம் பூண்டார். மழையில் சொட்டச் சொட்ட நனைந்த வண்ணம் மாறனார் வீட்டிற்குள் வந்து நுழைந்தார். மாறனார் வீடு அடியார்களை எதிர்நோக்கி, இரவென்றும், பகலென்றும், பாராமல், எப்பொழுதும் திறந்தேதான் இருக்கும்.
மழையில் நனைந்து வந்த அடியாரைப் பார்த்து துடிதுடித்துப்போன மாறனார். விரைந்து சென்று அடியாரை வரவேற்று, அவரது பொன்மேனியில் வழிந்து விழும் ஈரத்தை துவட்டச் செய்து ஆசனத்தில் அமரச் செய்தார். மாறனார் அவரிடம், சுவாமி ! சற்று பொறுங்கள்! அமுது சூடாகச் செய்து அளிக்கிறேன் என்றார். பகவானும் அதற்கு சம்மதித்தவர் போல் தலையை அசைத்தார். இந்த நிலையிலும் நமக்கு இப்படியொரு சோதனை வந்துவிட்டதே என்று எண்ணவில்லை நாயனார். அதற்காக மனம் தளரவுமில்லை. எவ்வித வெறுப்பும் கொள்ளவில்லை. வீடு தேடிவந்த அடியாரின் பசியை எப்படிப் போக்குவது என்பதைப் பற்றியே எண்ணலானார். மனைவியிடம் அதுபற்றி வினாவினார்.
சுவாமி ! தங்குளுக்குத் தெரியாதா ? இந்த நள்ளிரவு வேளையில் எங்கு சென்று எவரிடம் நான் என்ன கேட்பேன். கேட்டால்தான் கொடுக்க யாரிருக்கிறார்கள் ? இவ்வாறு கூறிக் கண் கலங்கினாள் மனைவி ! செய்வதறியாது இருவரும் திகைத்தனர். வெளியே இடியும், மழையும் அதிகரித்தது. அப்பொழுது மின்னல் பளிச்சிட்டது. அம்மின்னலைப்போல் மனைவியார் உள்ளத்திலும் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. அம்மங்கை நல்லாள் மணாளனை நோக்கி, சுவாமி எனக்கு ஒரு அரிய யோசனை தோன்றுகிறது, கழனியில் காலையில் விதைத்த முளை நெல்லை வாரிக்கொண்டு வாருங்கள். நொடிப் பொழுதில் குத்தி அரிசியாக்கி அடியார்க்கு அமுதிடலாம் என்றாள்.
தக்க தருணத்தில் துணைவியார் கூறிய மொழிகள் அவரது செவியில் அமிர்தம் போல் பாய்ந்தது. உள்ளமும் உடலும் பூரித்துப்போன மாறனார். பொன் புதையல் கிடைத்தாற்போல் உவகைப் பெருக்கோடு கூடையும் கையுமாகக் கழனியை நோக்கி விரைந்தார். பயங்கர மழை ! திக்குதிசை தெரியாத கும்மிருட்டு, மேடும் பள்ளமும் காண முடியாத அளவிற்குத் தெருவெல்லாம் வெள்ளக்காடு ! இத்ததைய பயங்கர சூழ்நிலையில் அடியார் மீது பூண்டுள்ள அன்பின் பெருக்கால் நாயனார் இடிக்கும், மழைக்கும் அஞ்சாது, கழனியை நோக்கி ஓடினார். நடந்து பழக்கப்பட்ட பாதையானதால், இருளில் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டார். மாறனார் மழையில் நனைந்தார்.
இல்லை, அவர் பக்தியில் மூழ்கினார் என்றுதான் கூறவேண்டும். மனம் குளிர சிவநாமத்தை ஜபித்தார். மிக்கச் சிரமத்துடன் தண்ணீர் மீது மிதக்கின்ற விதை நெல் முளைகளை வாரிக் கூடையிலே போட்டுக் கொண்டு வீட்டை அடைந்தார். அதற்குள் மனைவியார் தோட்டத்திலிருந்து கீரை பறித்து வந்தாள். விதை நெல்லை கொடுத்தார். விதை நெல்லை மகிழ்வுடன் வாங்கிக்கொண்ட அம்மையார். உணவு சமைக்க விறகு இல்லையே ? என்றதும் மாறனார் சற்றும் மனம் கசப்படையாமல் வீட்டுக் கூரை மீது கட்டப்பட்டிருந்த கொம்புகளை அறுத்தெடுத்து வெட்டிக் கொடுத்தார். அதனால் மழையின் கொடுமை வீட்டிற்குள்ளும் புகத் தொடங்கியது.
அம்மையார் நெல்முளையை நன்றாகப் பக்குவமாக வறுத்து, குத்தி, அரிசியாக்கிப் பதமாகச் சோறாக்கினாள். தோட்டத்திலிருந்து பறித்து வந்த கீரைகளைச் சமைத்துச் சுவையான கறியமுதும் செய்தாள். இன்னல்களுக்கிடையே ஒருவாறாக இன்அமுது சமைத்து பிறகு, மாறனாரும் அவரது மனைவியாரும், ஐயனே! அடியார்களிடம் யாம் பூண்டுள்ள அன்பை அறிந்து எம் இல்லத்திற்கு எழுந்தருளிய பெரியோரே! பிறவிப் பெருங்கடலைக் கடக்க மரக்கலம் இன்றி அழுந்திக் கிடக்கும் இவ்வேழையர் உய்யும் பொருட்டு ஏழையின் மனைக்கு அமுது உண்ண எழுந்தருளும் ! எனப் பணிவன்புடன் வேண்டி நின்றனர். நிலம் கிடந்து நமஸ்கரித்தனர். கண் மூடி தியானித்து நமஸ்கரித்து எழுந்த தெய்வீகத் தம்பதியர் கண் திறந்து பார்த்தபோது அடியாரைக் காணோம் ! சிவத்தொண்டர்கள் செயலற்று போயினர்.
மாறனார் இல்லத்தில், வானளாவிய சொக்கலிங்கக கேயிற் குழலோசையும், மணி ஒசையும், முழ ஓசையும் மாறாமல் ஒலித்தவண்ணமாகவே இருந்தன. பிறைமுடிப் பெருமான் மலைமகளுடன் ரிஷபத்தின் மீது எழுந்தருளினார். மாறனாரும், அவரது மனைவியாரும் இத்திருக்கோலங்கண்டு பக்தி பெருக்கெடுத்ததோட மெய்மறந்து நின்றனர். அன்பனே ! அடியார்க்கு ஈவதே ஈகை என்ற அறவழிக்கு ஏற்ப உன் வறுமையையும் எண்ணிப்பாராது, வந்த விருந்தினருக்குத் திருவமுது செய்விக்க அல்லல்பட்ட உங்களுக்குச் சிவலோக பிராப்தியை அருளுகிறேன். நிலவுலகில் நெடுநாள் வாழ்ந்து அறம்வளர்த்து பக்தி வளர்த்த பிறகு இருவரும் எம்பால் அணைவீர்களாக ! எமது தோழனாகிய குபேரன், சங்கநிதி, பதுமநிதி முதலிய செல்வங்கள் கையிலேந்தியவாறு உங்களுக்கு ஏவல் செய்யக் காத்திருக்கிறான். அவ்வெல்லையில்லாப் பேரின்பத்தைப் பெற்று என்றும் இனிது வாழ்வீர்களாக என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்து அருளினார். மாறனாரும், அவரது மனைவியாரும், உலகத்தில் பல காலம் வாழ்ந்து, திருத்தொண்டர்களைப் பணிந்து பரமனை வழிபட்டு, இறுதியில் செஞ்சடை வண்ணரின் திருவடி நீழலில் தங்கும் சிவபதவியைப் பெற்றார்கள்.
குருபூஜை: இளையான்குடி மாற நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |