Digital Library
Home Books
Idankazhi Nayanar is one of the 63 Nayanmars, the revered saints in Tamil Shaivism. He is known for his unwavering devotion to Lord Shiva and his remarkable act of humility and repentance.
இயற்கை வளமும், செயற்கை வளமும், தெய்வ வளமும் மிகுந்த கோனாட்டின் தலைநகரம் கொடும்பாளூர். குறுநில மன்னர் குலத்திலே - கனகசபையின் திருச்சடை மகுடத்தை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழருடைய குடியிலே அவதரித்தார் இடங்கழி நாயனார். பேரும் புகழும் பெற்ற இக் குறுநில மன்னன் விரிசடை அண்ணலின் திருத்தாளினைப் போற்றி வணங்கி வந்ததோடு, அவர் எழுந்தருளியிருக்கும் கோயில்களில் நடக்கும் சிவாகம வழிபாட்டிற்குத் தேவையான நெல்லையும், பொன்னையும் வாரி வாரி வழங்கினார்.
ஆகமத்திலுள்ள சைவ நெறியையும் வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும் தொண்டர்களுக்குப் பல வழிகளில் கணக்கற்ற உதவிகளைச் செய்து அவர்களை கொண்டாடினார் நாயனார். இடங்கழி நாயனாரின் வெண்கொற்றக்குடை நிழலில் எண்ணற்ற சிவனடியார்கள் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தனர். அவ்வாறு சைவம் வளர்த்த சிவனடியார்கள் பலருள் இவரும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்து மகிழும் அருந்தவப் பணியை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார்.
அச்சிவனடியார் புரியும் திருப்பணிக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அமுது அளிப்பதற்குப் போதிய நெல் கிட்டாமல் அவதிப்பட்டார். நெல் தட்டுப்பாட்டால் அவரது விருந்தோம்பல் அறத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சிவத்தொண்டர் செய்வதறியாது சித்தம் கலங்கினார். மனம் தளர்ந்தார். முடிவில் அவர் அரண்மனைக் களஞ்சியத்தில் நெல்லைச் சேமித்து வைத்திருப்பதை உணர்ந்தார். நள்ளிரவு வேளையில் நாயனார் அரண்மனைக்குள் நுழைந்து நெல் கட்டு நிறைகளுள்ளிருந்து நெல்லை கவர்ந்து எடுத்தார்.
திருட்டு தொழிலில் அனுபவம் இல்லாததால் இவ்வடியார் அரண்மனைக் காவலர்களிடம் சுலபமாக மாட்டிக் கொண்டார். அடியாரைக் கைது செய்து, இடங்கழியார் முன் நிறுத்தினார்கள். காவலர் வாயிலாக விவரத்தைக் கேள்வியுற்ற அரசர் அடியாரின் சிவப்பொலிவைக் கண்டு திகைத்தார். ஐயனே ! சிவக்கோலம் தாங்கியுள்ள தேவரீர் இத்தகைய இழிவான தொழிலைச் செய்யக் காரணம் யாது? என்று வேதனையோடு கேட்டார் வேந்தர்! சோழப் பெருந்தகையே! அடியேன் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்து ஒழுகும் திருப்பணியைத் தவறாமல் நடத்தி வந்தேன்.
எமது சிறந்த சிவப்பேற்றிற்கு இடர் ஏற்பட்டது. அதனால் அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள நெல்லைக் கவர்ந்து செல்வது என்ற முடிவிற்கு வந்தேன். சிவனடியார் செப்பியது கேட்டு சிந்தை நெகிழ்ந்த சோழர் பெருமான் அடியவரைக் காவலினின்று விடுவித்து பணிந்து தொழுதார். அடியேனுக்கு இவ்வடியார் அல்லவா களஞ்சியம் போன்றவர் என்று பெருமிதத்தோடு கூறினான் வேந்தன். அவ்வடியார்க்குத் தேவையான பொன்னையும், பொருளையும் கொடுத்தனுப்பினார்.
அத்தோடு அரசர் மன நிறைவு பெறவில்லை. களஞ்சியத்திலுள்ள நெற்குவியல்களையும், பொன் மணிகளையும் தமது நாட்டிலுள்ள சிவனடியார்கள், அவரவர்களுக்குத் தேவையான அளவிற்கு வேணவும் எடுத்துச் செல்லட்டும். எவ்வித தடையும் கிடையாது! என்று நகரமெங்கும் பறைசாற்றுங்கள் என்று மன்னன் கட்டளை இட்டான்.
இவ்வாறு இடங்கழி நாயனார் சிவனடியார்களுக்குப் பொன்னும், பொருளும் எடுத்துச் செல்ல, உள்ள உவகையோடு உத்தரவிட்டு சிவனடியார்களை மேன்மேலும் கவுரவப்படுத்தினான். திருவெண்ணீற்றின் பெருமைக்குத் தலைவணங்கிய குறுநிலக் கொன்றவன் கொன்றை மலர் அணிந்த சங்கரனின் சேவடிகளைப்பற்றி நீடிய இன்பம் பெற்றார்.
குருபூஜை: இடங்கழியார் நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
தான்நம்பி இடங்கழிக்கு அடியேன்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |