இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கருட புராணம்

The Garuda Purana (கருட புராணம்) is one of the eighteen Mahapuranas, a genre of ancient Hindu scriptures. It is named after Garuda, the mythical bird and vehicle (vahana) of Lord Vishnu, who narrates the text. The Garuda Purana is primarily known for its detailed descriptions of the afterlife, funeral rites, and ethical teachings.


கருட புராணம்

1. தோற்றுவாய்:

18 புராணங்களில் ஒன்றான கருட புராணம் 19,000 ஸ்லோகங்கள் கொண்டது. இப்பூவுலகில் தவம் செய்வதற்குச் சிறந்த இடம் நைமிசாரணியம். அங்கிருக்கும் சவுனகாதி முனிவர்களைத் தரிசிக்க சூதமா முனிவர் வந்தார். அவரை முனிவர்கள் வரவேற்று உபசரித்து வணங்கினர். நால்வகை புருஷார்த்தங்களையும் அளிக்கவல்ல விஷ்ணு சம்பந்தப்பட்ட சாத்வீக புராணத்தைச் சொல்லுமாறு வேண்டினர். ஸ்ரீமந் நாராயணனை முன்பொரு சமயம் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வான் பணிந்து உலக நன்மையைக் கருதி ஒரு கேள்வியைக் கேட்க, பகவான் அதற்குத் தக்க விடையளித்தார். அவ்வாறு திருமால் கருடனுக்குக் கூறியதையே உங்களுக்குக் கூறுகிறேன் என்று கூறி கருட புராணத்தைக் கூற ஆரம்பித்தார். கருடபுராணம் அளவில் பெரியதோ, சிறியதோ அல்லாமல் நடுத்தரமானது. இது பூர்வ காண்டம் என்று இருபெரும் பகுதிகளைக் கொண்டது. பல அத்தியாயங்களையும் கொண்டது. ஒவ்வொரு பகுதியிலும் முற்பகுதி பெரியது, பிற்பகுதி சிறியது.

உலகில் ஜீவன்களின் பிறப்பு, இறப்புக்குக் காரணம் என்ன? ஏன் பிரேத ஜன்மம் அடைகிறது? நரகம், சொர்க்கம் அடைவோர் யார்? ஏன்? நற்கதி கிடைப்பதற்கான வழி யாது? என்றெல்லாம் கேட்க, திருமால் புன்னகையுடன் விடை தரலானார்.
பிறந்தவன் இறப்பது நிச்சயம் என்பதை உணர வேண்டும். நமனுக்குப் பயந்து நல்ல தருமங்களை ஆற்றி அறநெறிப்படி வாழவேண்டும். வருணா சிரம தருமப்படி அதாவது அவரவர் குல மரபுப்படி வழுவாது நடப்போர் போகம், யோகம் ஒருங்கே பெற்று நீடுழி வாழ்ந்து இறுதியில் தமக்குரிய உலகை அடைவர். பற்றற்றவர்களாய், அறிஞர்களாகி பகவானைத் தியானித்து நல்வழியில் நற்பேறு பெற முயற்சி செய்ய வேண்டும் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார். இத்தகைய அவர் ஆக்கிய வாழ்வே ஆனந்த வாழ்வாகும்.

2. திருமாலின் அவதாரங்கள்:

காசியப முனிவருக்குக் கருடனே இப்புராணத்தைக் கூறினார். நான் வியாசரிடமிருந்து இதனைக் கேட்டேன் என்று மேலும் கூறலானார். முதலில் மஹாவிஷ்ணுவின் இருபத்து இரண்டு அவதாரங்களைப் பார்ப்போம்.

1. முதன் முதலில் குமாரன் வடிவில் தோன்றி பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து தவம் செய்தார்.

2. பூவுலகை மீட்க வராக அவதாரம் எடுத்தார்.

3. பலவகைத் தந்திரங்களை உலகில் பரப்ப தேவரிஷியாய்த் தோன்றினார்.

4. நரநாராயணனாய் அவதரித்தார். (நரன், ஆவேசாவதாரம், நாராயணன் - அம்சாவதாரம்)

5. கபிலராக அவதரித்து சாங்கிய யோகத்தைத் தனது சீடர் அசூரிக்குக் கற்பித்தார்.

6. அத்திரி, அனுசூயை தம்பதிகளுக்கு மகனான தத்தாத்திரேயர் அவதாரம்.

7. சுவயம்பு மன்வந்ரத்தில் ருசி, ஆகுதியோருக்கு மகனாகத் தோன்றி பல யாகங்களைச் செய்தார்.

8. அடுத்து நபி, மேரு புத்திரனால் உருக்கிரமன் என்ற பெயரில் அவதரித்தது பற்றற்ற நிலையில் இருந்து அனைவர்க்கும் வாழ்வின் நன்னெறிகளைத் போதித்தார்.

9. பிருது என்ற பெயரில் தோன்றி பூவுலகத்திற்குத் தானியங்களையும், மூலிகைகளையும் வழங்கினார்.

10. மச்சாவதாரம் எடுத்து பிரளயத்திலிருந்து வைவஸ்வத மனுவைக் காத்தருளினார். வேதங்களையும் ரக்ஷித்தார்.

11. தேவாசுரர்கள் அமிர்தம் பெறப் பாற்கடலைக் கடைய வாசுகியை நாணாக்கி, மந்தர மலையை மத்தாக்கி கடையும்போது மலை உள்ளே அழுந்திட, அதனை ஆமை வடிவில் நிலைப்படுத்திய கூர்மாவதாரம்.

12. அடுத்து உலகில் மருத்துவம் பரப்ப எடுத்த தன்வந்திரி அவதாரம்.

13. அசுரர்களை ஏமாற்றி தேவர்களே அமுதம் பெறுமாறு பங்கிட எடுத்த அழகிய, கவர்ச்சியான மோஹினி அவதாரம்.

14. இரணியனைக் கொன்று, பக்தன் பிரகலாதனுக்கு அருளிட எடுத்த நரசிம்மாவதாரம்.

15. மகாபலிச் சக்கரவர்த்தியின் கர்வம் அடக்கி அருள மூன்றடி மண் கேட்க எடுத்த வாமனாவதாரம் (திருவிக்கிரமா அவதாரம்)

16. தந்தையாகிய ஜமதக்கினியைக் கொன்ற கார்த்தவீர்யாஜுனனையும், இருபத்தோரு தலைமுறை மன்னர்களையும் அழிக்கத் தோன்றிய பரசுராமர் அவதாரம்.

17. பராசரர், சத்தியவதி இருவருக்கும் மகனாகத் தோன்றிய வேத வியாசர்.

18. நாரதராக அவதரித்து தேவர்களுக்கு வாழ்க்கை முறை தத்துவங்களை உபதேசித்தது.

19. இராமாயணக் காவியத் தலைவனாக விளங்கிய இராமாவதாரம்.

20. கோகுலத்தில் கிருஷ்ணனாக அவதரித்து கம்சன், சிசுபாலன் தந்தவக்கிரர்களை அழித்துப் பாண்டவர்க்கு உதவுதல், கீதோபதேசம் முதலியன.

21. புத்த மதத்தைத் தோற்றுவிக்க புத்தராகத் தோன்றினார் திருமால்.

22. அடுத்து கல்கி அவதாரம் எடுக்கப்போவதும் அவரே.(சனகர், பலராமன் அவதாரமும் அவரே என்று சிலர் கூறுவர்) அத்துடன் கஜேந்திரனுக்கு அருளத் தோன்றியது. வாலகில்யரிஷி (விராட் ஸ்வரூபமாய் விளங்குவது எல்லாம் அவனது அவதாரமே என்பர்.)

புராணத் தோற்றம் பற்றிய வேறுவிதமான வரலாறு

நாரதர், தட்சன், பிருகு முதலிய ரிஷிகள் பிரம்மலோகம் செல்ல அவர்களுக்குப் பிரம்மன் உபதேசம் செய்தார். பறவைகளின் அரசனாகிய கருடன் தவமியற்றி விஷ்ணுவைத் திருப்தி செய்ய, அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று பகவான் கேட்க, கருடன் தான் பெருமானின் வாகனமாக வேண்டும் வரம் கேட்டான். மேலும் பாம்புகள் தன்னைக் கண்டு அச்சமுறவேண்டும் என்றும், புராணம் இயற்றும் ஆற்றல் வேண்டும் என்று கேட்டுப் பெற்றான். இவ்வாறாக கருடன் இப்புராணத்தை விஷ்ணுவிடம் கேட்டு, பின்னர் பிரம்மனுக்குக் கூறினார். பிரம்மனிடம் இருந்து வியாசரும், அவர் மூலம் மற்றோரும் அறிந்தனர்.

3. படைப்பு (அ) சிருஷ்டி மற்றும் உத்தம மார்க்கம்

எங்கும் பிரம்மம் இருந்தது. எங்கும் நீர் சூழ்ந்திருந்தது. திடீரென்று ஒரு பொன் முட்டை (அண்டம்) தோன்றியது. அதனுள்ளிருந்து விஷ்ணு வெளியே வந்து நான்முகனைத் தோற்றுவிக்க, பிரம்மன் படைப்புத் தொழிலைத் துவங்கினார். படைக்க பிரமன், காக்க விஷ்ணு, அழிக்க சிவன் என்று ஆயிற்று. இந்த மூன்று வடிவமும் பிரம்மமே ஆகும். பிரம்மா முதலில் தேவர், அசுரர், மித்ருக்கள், மானவர்களைத் தோற்றுவித்தார். மற்றும் ராக்ஷசர்களும், யக்ஷர்களும், கந்தர்வர்களும் சிருஷ்டிக்கப்பட்டனர். பிரம்மன் முடியிலிருந்து பாம்புகள், மார்பிலிருந்து செம்மறி ஆடுகள், வாயிலிருந்து வெள்ளாடுகள், வயிற்றிலிருந்து பசுக்கள், பாதங்களிலிருந்து குதிரைகள், யானைகள், கழுதைகள், ஒட்டகங்கள் தோன்றின. உடலில் உள்ள உரோமங்களிலிருந்து மூலிகைகள் உண்டாயின. அவர் வாயிலிருந்து அந்தணர்கள், புஜங்களிலிருந்து க்ஷத்திரியர்கள், தொடைகளிலிருந்து வைசியர்கள், பாதத்திலிருந்து சூத்திரர்கள் தோன்றினர்.

விஷ்ணு கருடனுக்குக் கூறிய செய்திகள் : உலகில் உள்ள எண்பத்து நான்கு லக்ஷ யோனி பேதங்களில் இருபத்தோரு லட்சம் முட்டையிலிருந்து தோன்றும் அண்ட சங்கள், செடி, கொடி போன்ற இருபத்தோரு லட்சம் உற்பிச வகையைச் சார்ந்தவை. அடுத்து இருபத்தோரு லட்சம் சராயுச வகையைச் சார்ந்தவை. அதாவது கருப்பையிலிருந்து வெளி வருபவை. கொசு போன்ற வியர்வையிலிருந்து தோன்றுபவை இருபத்தோரு லட்சங்கள் சுவேதசம் எனப்படும்.

சிறந்த மானிடப் பிறவி

அனைத்திலும் மானிடப் பிறவியே சிறந்தது. எல்லா உயிர்களுக்கும் உணவு, உறக்கம், அச்சம், புணர்ச்சி ஆகியன உரியவை. ஞானம் மனிதனுக்கு மட்டும் உரித்தானது. கிருஷ்ணசாரம் என்ற கருப்பு நிற மானிகள் வசிக்கும் இடம் புண்ணிய பூமி. அதில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பர். அந்தப் பூமியும் தேவர்களையும், முனிவர்களையும், பிதுர்க்களையும் பூசிப்பவர்களுக்கு மிக்க நன்மை உண்டாகும். பூதம், பிரேதம், பைசாசங்களுக்கு ஆவியுருவம் மட்டுமுண்டு. தேகம் பெற்ற ஜீவர்கள் சிறப்புடையவர்கள். மானிடர்களில் பிராமணர்கள் சிறப்புடையவர். அவர்களில் பிரம்ம ஞானம் உடையவர்கள் அதிகச் சிறப்புடையவர்கள் ஆவர். சுவர்க்க மோட்சம் அடைய மானிடப் பிறவியே காரணமாகிறது. மண், பெண், பொன் ஆசை கொண்டவன், அதர்மம் புரிபவன், சுயநலக்காரனாகி தீவினைகளைச் செய்பவன் ஆகியோர் நரகத்தை அடைகின்றனர். எனவே கல்வியும், வித்தையும் கற்றவனும் ஞானத்தைப் பெற வேண்டும். ஞானேந்திரியங்கள் நாசமடைய உதவுகின்றன.

உத்தம மார்க்கம்

ஒருவன் செய்த பாவ புண்ணியங்களே ஒருவனுடன் மரணத்துக்குப் பின்னும் செல்லும். எனவே, தான தர்மங்களைப் பக்தி சிரத்தையோடு செய்பவன் பெரும் நன்மையை அடைகிறான். ஆகையால், உள்ளத் தூய்மையோடு, பக்தியுடன் தானதர்மங்கள் செய்வதும், முக்திக்குச் சாதனமான பரம பக்தி பிரபத்தி மார்க்கம் எனப்படும். அதுவே உத்தமமானதென்று பகவான் கருடனுக்குக் கூறுகிறார்.

பிரார்த்தனை

மனித வாழ்வில் பிரார்த்தனை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. கருட புராணம் சூரியன், லக்ஷ்மி, விஷ்ணு பிரார்த்தனை களுக்கான நல்வழியைக் காட்டுகிறது. ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி உன்னைப் பிரார்த்திக்கிறேன். எனது கிழக்குப் பகுதியை உனது சுதரிசனச் சக்கரத்தாலும், தெற்கை கௌமுத்தி கதையாலும், மேற்கை சௌனந்தஹலா என்னும் கலப்பையாலும் காத்திடு. ஹேகமலக்கண்ணா, உன்னையே நான் சரணடைந்தேன். வடக்குப் பகுதியை உனது சதான முசலத்தால் காத்திரு. ஹே விஷ்ணு ! உன்னைத் துதி செய்கிறேன். உனது கத்தியையும் கேடயத்தையும் கொண்டு ஈசானப் பகுதியை (வடகிழக்கு) காத்திடு. அசுரர்களின் பகைவனே ! எனது கோரிக்கையை நிறைவேற்று. எனக்கு வாயவ்ய (வடமேற்குப்) பகுதியை உனது பாஞ்சசன்னயம் என்னும் சங்காலும், அனுத்வேத என்ற தாமரை மலராலும் காக்க. சந்திரஹாச வாளால் தென்கிழக்கைக் காத்திரு. நான் உன்னை வணங்குகிறேன்.

உனது ஸ்ரீவத்சம் என்னும் கழுத்தணி கொண்டு தென்மேற்குப் பகுதியைக் காத்திடுவாயாக. நீ மறைந்துள்ளாய். கருடவாகனனுடன் எழுந்தருளி அடியேனைக் காத்திடுக. நான் உன்னையே சரணடைந்தேன். சிறந்த பிரார்த்தனை ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகும். இந்தப் பாராயணம் செய்யும் அந்தணர்கள் எம்பெருமான் சன்னிதியில் வாழ்வர்; க்ஷத்திரியர்கள் போரில் வெற்றி அடைவர். வைசியர்கள் செல்வம் பெறுவர். மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.

4. பாம்பு கடிக்கு ப்ராணேச்வர மந்திரம்

இது பாம்பு கடிக்குப் பயன்படும் மந்திரம். பாம்பு கடித்த இடத்தை அனுசரித்து அதன் கொடுமையை அறியலாம். ஆற்றில் பாம்பு கடி நிகழ்ந்தால் பிழைப்பது கடினம். மயான பூமியில், பாம்புப் புற்றில், மலைமீதில், கிணற்றில், மரப்பொந்தில் பாம்புகடி ஏற்பட்டால், கடியில் மூன்று பல் அடையாளம் இருந்தால் கடிபட்டவன் இறந்து விடுவான். அக்குள், இடுப்பு, தொண்டை, நெற்றி, காது, வயிறு, வாய், புஜம், முதுகு ஆகியவற்றில் கடித்தால் காப்பாற்றுவது கடினம். படைவீரனும் பிச்சைக்காரனும் பாம்பு கடிக்கப்பட்டால் இறப்பதற்கு அறிகுறி. மற்ற பாம்பு கடிகளுக்கு நிவாரணம் பெற பிராணேஸ்வர மந்திரம் உதவும். அஷ்ட தள தாமரை மலரில் மந்திரத்தின் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சொல்லை எழுத வேண்டும். அதைப் பாம்பு கடித்த ஆள் மீது வைத்து நீராட்ட வேண்டும். சிறிது நெய்யைக் குடிக்க வைக்கவும். உண்மையில் மந்திரத்தைச் செபித்து, அதேசமயம் சர்க்கரைப் கட்டிகளை வீட்டில் சிதறச் செய்யின் பாம்புகள் அந்த வீட்டை விட்டகலும்.

5. சாலக்கிராமம்

விஷ்ணுவின் பிரதி, சாலக்கிராமம் ஆகும். அது ஒருவகைக் கல்லால் ஆனது. கண்டகி ஆற்றங்கரையில் விஷ்ணு கல்லாகுமாறு சபிக்கப்பட்டார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. பலவகை சாலக்கிராமங்கள் பற்றி கருட புராணம் கூறுகிறது. எல்லா சாலக் கிராம கற்களும் புனிதமானவையே. ஒரு சாலக்கிராமத்தைத் தொட்டால் முற்பிறப்பில் செய்யப்பட்ட பாவங்களும் தீரும்.

1. கேசவ சாலக்கிராமம் என்பது சங்கு, சக்கர, கதை, தாமரைக் குறிகள் காணப்படுவது. இவை கூறப்பட்ட வரிசையில் இருக்க வேண்டும்.

2. மாதவ சாலக்கிராமத்தில் சங்கு, சக்கரம், பத்ம, கதை வரிசையில் இருக்கும்.

3. நாராயண சாலக்கிராமத்தில் பத்மம், கதை, சக்கரம், சங்கு என்ற வரிசை இருக்கும்.

4. கோவிந்த சாலக்கிராமத்தில் கதை, பத்மம், சங்கு, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.

5. விஷ்ணு சாலக்கிராமத்தில் பத்மம், சங்கு, சக்கரம், கதை என்ற வரிசை இருக்கும்.

6. மதுசூதன சாலக்கிராமத்தில் சங்கு, பத்மம், கதை, சக்கரம் என்ற வரிசை இருக்கும்.

7. திரிவிக்கிரம சாலக்கிராமத்தில் கதை, சக்கரம், சங்கு, பத்மம் என்று வரிசை இருக்கும்.

8. வாமன வடிவில் சக்கரம், கதை, பத்மம், சங்கம் என்ற வரிசையிலும்

9. ஸ்ரீதரன் வடிவில் சக்கரம், பத்மம், சங்கம், கதை என்ற வரிசையிலும்

10. ஹ்ருஷிகேசன் அமைப்பில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்

11. பத்மநாபன் அமைப்பில் பத்மம், சக்கரம், கதை, சங்கு என்ற வரிசையிலும்

12. தாமோதரன் வடிவில் சங்கு, சக்கர, கதை, பத்மம் என்ற வரிசையிலும்

13. வாசுதேவன் வடிவில் சக்கரம், சங்கு, கதை, பத்மம் என்ற வரிசையிலும்

14. சங்கர்ஷனில் சங்கு, பத்மம், சக்கரம், கதை என்ற வரிசையிலும்

15. பிரத்யும்னனில் சங்கு, கதை, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்

16. அநிருத்தன் அமைப்பில் கதை, சங்கு, பத்மம், சக்கரம் என்ற வரிசையிலும்

17. புரு÷ஷாத்தமன் அமைப்பில் பத்மம், சங்கு, கதை, சக்கரம் என்ற வரிசையிலும்

18. அதோக்ஷஜ வடிவில் கதை, சங்கு, சக்கரம், பத்மம் என்ற வரிசையிலும்

19. நரசிம்மன் உருவில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் என்ற வரிசையிலும்

20. அச்சுதன் அமைப்பில் பத்மம், சக்கரம், சங்கு, கதை என்ற வரிசையிலும்

21. ஜனார்த்தனன் வடிவில் சங்கு, சக்கரம், பத்மம், கதை என்ற வரிசையிலும்

22. உபேந்திரனில் கதை, சக்கரம், பத்மம், சங்கு என்ற வரிசையிலும்

23. ஹரி அமைப்பில் சக்கரம், பத்மம், கதை, சங்கு என்ற வரிசையிலும்

24. ஸ்ரீ கிருஷ்ணனில் கதை, பத்மம், சக்கரம், சங்கு என்ற வரிசையிலும் அமைந்திருக்கும்.

6. தான தருமங்கள் விருஷாற்சனப் பலன்கள்

ஒருவன் தனது மரண காலத்திற்கு முன்பே கோதானம் முதலிய தானங்களைச் செய்வது நல்லது. பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும். தான இடமும் நல் ÷க்ஷத்திரமாக இருக்க வேண்டும். இத்தனையும் கூடியிருக்க ஒருவன் அகத்தூய்மையோடு இருந்தால் ஒரு கோடிப் பயனைத் தரும். எனவே, உத்தமப் பயனடைய, கோதானம் ஆகியவற்றை வேத சாஸ்திரங்களை ஓதி, உணர்ந்த செந்தண்மை பூண்ட அந்தணனான உத்தமனுக்கே கொடுக்கவேண்டும். ஒரு பசுவை ஒருவனுக்கே தானம் கொடுக்க வேண்டும். சாதுக்களிடம் நல்ல பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் செய்பவன் அப்பிறவியிலாவது, மறு பிறவியிலாவது அதற்குரிய பலனைச் சந்தேகமின்றி அடைவான். சொற்ப அளவுடைய தான தர்மம் ஆனாலும் வாழுங் காலத்திலேயே தானமளிப்பவன் செல்வனாகி பலனை அடைந்து விடுவான். அன்னதானம், கோதானம் முதலியவற்றைத் தன் கையாலேயே செய்து விட்டால் மரணத்துக்குப் பின் பசி தாகம் அடையாமல் நல்லுலகைச் சேர்ந்து சுகிப்பான்.

விரு÷ஷாற்சனம் என்ற புண்ணிய கர்மத்தின் மகிமையால் உத்தம காலத்தில், உத்தம தலத்தில், உத்தம பிராமணனுக்கு தானம் கொடுத்தால் அதன் பலன் நிச்சயம் கைகூடும். யாகம் செய்வதையும், கோதானம் முதலிய சிறந்த தானங்களைச் செய்வதையும் விட விரு÷ஷாற்சவம் செய்வது மிகவும் முக்கியமான, உத்தமமான நற்கருமமாகும். எனவே, ஒரு மனிதன் நற்கதி அடைவதற்கு முதற்காரணமாக அமைவது விரு÷ஷாற்சனமே. இந்த விரு÷ஷாற்சனம் சிறந்தவனைக் குறித்துச் செய்யப்பட்டால் உடனடியாக ஏகோதிஷ்ட சிரார்த்தத்தையும் செய்து விடவேண்டும். விரு÷ஷாற்சனம் செய்யாவிட்டால் பிரேத ஜன்மம் பற்றாமல் விடாது.

காமிய விருஷாற்சன சர்க்கம்

முன்பு கூறிய நாட்களில் ஒரு நாள் தலசுத்தி செய்த பிறகு அக்கினிப் பிரதிஷ்டை செய்து ஒரே நிறமாக உள்ள காளைக் கன்று ஒன்றையும், அதற்குச் சிறிதான கிடாரி கன்று ஒன்றையும் மஞ்சள் நீராட்டி ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து, அவற்றின் வாலில் தர்ப்பணம் செய்துவிடுத்து, நாந்தி சிரார்த்தம் செய்து ஒரு பக்ஷம் பதினைந்து நாட்கள் வரையில் பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்து வெள்ளி, திலம், உதகக் கும்பம், ஆடைகள் ஆகியவற்றை தானம் செய்தால் நூற்றொரு தலைமுறையில் உள்ளவர்களும் சுவர்க்கத்தை அடைவர். இதற்கு காமிய விருஷாற்சன சர்க்கம் என்று பெயர். பகவான் மேலும் தான தரும விசேஷங்களையும், விரு÷ஷாற்சனம் பற்றியும் கூறுகிறார்.

ஒருவன் மரித்த பதினொன்றாம் நாளிலாவது சோடச சிரார்த்தத்தைச் சபிண்டி கரணத்துக்கு முன்னதாகவே செய்து ததியாராதனம் செய்து பல தானமும் கொடுக்கவேண்டும். பருத்தி ஆடையின் மீது செம்பினால் வட்டில் செய்து வைத்து அதில் சாளக்கிராமம் வைத்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து ஆராதனை செய்து நற்பிராமணனுக்கு அதையும் தானமாகக் கொடுக்க வேண்டும். வைதரணி நதியைக் கடக்க, கரும்பினால் ஓடம் செய்து வெண்பட்டினால் அதனைச் சுற்றி நெய் நிரம்பிய வெண்கலப் பாத்திரத்தை அதனுள் வைத்து ஸ்ரீமந் நாராயணனை அர்ச்சித்து அந்த ஓடத்தை பிராமணனுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.

சக்தியை அனுசரித்துப் பொருள் கொடுத்துத் தில தானமும், சய்யா தானமும் செய்ய வேண்டும். மரித்தவரைக் குறித்து கிரியைகளைச் செய்யும்போது அந்தணர்களுக்குப் பூரி (தட்சிணை) கொடுப்பவன் தான் வேண்டிய நல்லவற்றை எல்லாம் அடைந்து மகிழ்வான். அவன் பிரேத ஜன்மத்தை அடைய மாட்டான். புண்ணியலோகம் அவனுக்குக் கிட்டும்.
தானங்கள் நான்கு வகைப்படும். அவையாவன :

1. பலனை எதிர்பாராமல் ஓர் உத்தம அந்தணர்க்குச் செய்யும் தானம் நித்திய தானம் எனப்படும்.

2. தீமை நீங்க (அ) தவமாகக் கொடுக்கும் தானம் நைமித்திக தானம் எனப்படும்.

3. புத்திர சந்தானம், வெற்றி, தனம் வேண்டிச் செய்வது காம்ய தானம்

4. பகவானைத் திருப்தி படுத்துவதற்காகவே கொடுக்கப்படும் தானம் விமல தானம் ஆகும்.

7. பிராயச்சித்தம்

ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதே பிராயச்சித்தம் எனப்படும். ஓர் அந்தணனைக் கொல்வதே மிகப் பெரிய பாவம் ஆகும். இந்தப் பாவத்தைச் செய்தவன் இலைகள், சருகுகள், உலர்ந்த புல் போன்றவற்றால் ஒரு குடிசை அமைத்து அதில் பன்னிரண்டு ஆண்டுகள் வசிக்க வேண்டும். (அ) சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும். (அ) மலையிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். தீக்குளித்தல் (அ) நீரில் மூழ்கி இறத்தலும் பிராயச்சித்தமாகும்.

சில சமயம் பிராமணப் பண்டிதர்களுக்கு உணவளித்தல் போன்ற சாதாரண தண்டனைகளும் உண்டு. கங்கை, யமுனை, சரசுவதி சந்திக்கும் திரிவேணி சங்கமம் ஒரு புனித தீர்த்தத் தலமாகும். ஒருவன் மூன்று இரவு, மூன்று பகல் இதில் நீராடி உபவாசம் இருப்பதாலும் மேற்கூரிய பாவத்துக்குப் பரிகாரம் (அ) பிராயச் சித்தம் ஆகும். தங்கத்தைத் திருடும் ஒரு பிராமணனை மன்னன் கதையால் அடித்து, பன்னிரண்டு ஆண்டுகள் குடிசையில் வாழ்வது ஒரு பரிகாரம் ஆகும். ஒரு குடிகாரனுக்கு உரிய பிராயச் சித்தமாக சூடான ஒயினைக் குடித்தலும், அத்துடன் பால், நெய், (அ) கோமியம் குடித்தல். ஒரு புனித தீர்த்தத்தில் ஒருவன் மரணமடைந்தால் அவனுடைய பாவங்களுக்கு அதுவே பரிகாரம் ஆகும். கணவன் செய்த எல்லா பாவங்களும், அவனுடைய மனைவி கணவனுடன் உடன்கட்டை ஏறுவதால் பரிகாரமாகி விடும். மொத்தத்தில் கற்புடைய மனைவி பாவம் எதுவும் செய்யமாட்டாள்.

8. தோஷ பரிகாரங்கள்

பிரேத ஜன்மம் பெற்றவன் தன்னவர் கனவில் தோன்றினாலும், துன்பங்களைச் செய்தாலும் அது பற்றி பெரியோர்களிடம் தெரிவித்து அவர்கள் காட்டும் தர்மவிதிகளில் சித்தம் வைத்துத் தென்னை, மா, சண்பகம், அரசு ஆகிய மரங்களை வைத்துப் பயிர் செய்யலாம். நந்தவனம் அமைக்கலாம். பசுக்களுக்கு மேய்ச்சல் நிலம் அமைக்கலாம். அந்தணர்களுக்குப் பூதானம் செய்யலாம். நீர் நிலைகள் ஏற்படுத்தலாம். பகவத் கைங்கரியம், பாகவத கைங்கரியம் செய்யலாம். புனித நதிகளில் நீராடி தான, தருமங்கள் செய்யலாம். தோஷ காரணமாக எதிலும் நாட்டம் இல்லாமல் போனாலும் ஊக்கமுடன் முயன்று அந்தந்த தர்மங்களைச் செய்து இன்பம் அடையலாம். இவ்வாறு செய்வதால் பிரேத ஜன்மத்தின் பிரேத சரீரம் நீங்கிவிடும். அவன் குலம் விளங்க ஒரு புத்திரன் உண்டாகவும் செய்வான்.

பிரேத ஜன்ம தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் தொலைய பெரியோர்களின் அறவுரையை, அறிவுரையை நம்பி ஏற்க வேண்டும். ஸ்நானம், ஜபதபம், ஹோமம், தானம் முதலியவற்றால் பாவநிவாரணம் அடைந்து நாராயண பலி செய்ய வேண்டும். புண்ணிய காலங்களில் புண்ணியத் தலங்களில் பித்ருக்களைக் குறித்து தானதர்மங்களைச் செய்தால், பூத, பிரேத, பைசாசங்களால் தொல்லையோ, துன்பமோ ஏற்படாது. மாதா, பிதா, குரு ஆகியோரைப் பூசிப்பது ஒருவர்க்குத் தலையாய கடமையாகும். தாய், தந்தை மரித்த பின், அவர்களைக் குறித்துச் செய்யப்படும் தான தர்மங்களின் பயனை அவனே அடைகிறான்.

9. பிரேத ஜன்மம் அடைவதற்கான காரணங்கள்

ஒருவன் பிரேத ஜன்மம் அடைவதற்கான பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே காண்க. பூர்வ ஜன்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜன்மம் அடைவான்.

1. நீர்நிலைகள் ஏற்படுத்துதல், தண்ணீர்ப்பந்தல் வைத்தல். சத்திரம், தேவாலயம் கட்டுதல் போன்ற தருமத்தை ஒருவன் செய்திட, அவன் மரித்தவுடன் அவன் குலத்தில் பிறப்பவன் அவற்றை விற்றுவிட்டால் பிரேத ஜன்மம் பெறுவான்.

2. தருமத்தைச் செய்தவனே விற்றாலும் பிரேத ஜன்மம் பெறுவான்.

3. பிறருக்குரிமையான பூமியை அபகரித்தவன் பெறுவான்.

4. அடிபட்டு, இடிபட்டு, இடி தாக்கி, தீக்குளித்து, தூக்கிட்டுக் கொண்டு, விஷம் உண்டு, மாடு மூட்டி இறந்தவர்கள் சம்ஸ்காரம் செய்வதற்கு நாதியற்றவன், திருடனால் மரித்தவன், அயலூரில் இறந்தவன், பெற்றோர்க்குச் சிரார்த்தம் செய்யாது மரணமடைந்தவன் ஆகியோர் பிரேத ஜன்மத்தை அடைவர்.

5. ஒருவனுடைய அந்திமக் கிரியைகளை அந்தச் சாதியிலுள்ளவரே செய்ய வேண்டும். வேறு ஒருவர் செய்தால் பிரேத ஜன்மமடைவர்.

6. மலையிலிருந்தோ, கட்டிலில் படுத்து உள்ளவாறோ, இறை நாமம் உச்சரிக்காமல் உயிர்விட்டவன், ரஜஸ்வாலை பெண், சண்டாளன் ஆகியோரைத் தீண்டிவிட்டு சூதகத் தீட்டோடு இறந்தவன் பிரேத ஜன்மத்தை அடைவான்.

7. தாய், மனைவி, பெண், மருமகள் முதலியோரின் சரீர தோஷத்தைப் பார்க்காமலேயே, பிறர் சொல் கேட்டு ஜாதிப்பிரஷ்டம் செய்தவன், மனச் சாட்சிக்கு விரோதமாகத் தீர்ப்பு வழங்கியவன், அந்தணர், பசுக்களைக் கொல்பவன், இமிசிப்பவன், மதுபானம் அருந்துவோர், குருபத்தினியைக் கெடுத்தவன், வெண் பட்டு, சொர்ணம் திருடியவன் பிரேத ஜன்மம் அடைவர். பிரேத ஜன்மம் அடைந்தோர் எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவர்.

10. பிரேத ஜன்மத்தால் ஏற்படும் துன்பம்

பிறனில் விழைபவன், பிறர் பொருளைக் கவர்பவன், காற்று வடிவ பிரேத ரூபத்தைப் பெற்று, பசி, தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் மீறி, எங்கும் அலைந்து திரிவான். அவன் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும், உறவினர்களையும் துன்பப்படுத்துவான். பிதுர்க்களின் தினத்தில் வீட்டிற்கு வரும் பிதுர்க்களை உள்ளே போக விடாமல் தடுத்து நிறுத்துவான். அவர்களுக்குத் தரும் அவிசுகளை வாங்கிப் புசிப்பான். தன்னுடைய புத்திரனுக்கும் சந்ததி இல்லாமல் செய்வான். பலவித நோய்களை உண்டாக்குவான். அவன் தான் சார்ந்த குலத்தையே பீடிப்பான். தீய குணம் உடையோர்க்கு அவன் அதிகம் துன்பங்கள் விளைவிப்பான். பாவங்கள் செய்தல், ஆண் வாரிசு பிறவாதிருத்தல், பிறந்து பிறந்து இறத்தல், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, பசுக்களைக் காப்பாற்ற இயலாமை, நண்பருடன் விரோதம், உபவாசம் தடைபடல், நற்காரியங்கள் செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாதல், தாய் தந்தையரை இகழ்தல், அயலாரைக் கொல்ல முயற்சித்தல், அதர்மங்களையே நினைத்தல், பொருள்கள் அழிவு, களவு, மனைவியுடன் வாழ முடியாமை, சண்டை, சச்சரவு ஆகிய அனைத்தும் பிரேத ஜன்மம் அடைந்தவனாலேயே நிகழ்வதாகும்.

தான தர்மங்கள் செய்வோர், ஹரி நாம சங்கீர்த்தனம் செய்வோர், சிரார்த்தங்களைச் செய்வோர், புனிதத் தல யாத்திரை மேற்கொள்வோர் போன்றோர்க்குத் பிரேத ஜன்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது. பிரேத ஜன்மம் அடைந்தவன் பயங்கரமான முகத்தோடும், வாள் போன்ற பற்களோடும் தன் குலத்தோர் கனவில் தோன்றி ஐயையோ ! என்னைக் காப்பாற்றுவதற்கு ஒருவரும் இல்லையா? நான் பசி, தாகத்தினால் அவதிப்படுகிறேனே, என் பிரேத ஜன்மம் நீங்கவில்லையே எனக் கதறுவான். இவ்வாறு எந்தக் குலத்தில் பிரேத ஜன்ம தோஷம் நேரிட்டிருக்கிறதோ அந்தக் குலத்தில் துயரமும் துன்பங்களும் சூழ்ந்து கொண்டே இருக்கும்.

11. பிரேத ஜன்மம் நீங்க வழி

அடுத்து, பகவான் கருடனை நோக்கி பிரேத ஜன்மம் தொலைய என்ன செய்ய வேண்டும் என்று விளக்கலானார். பிரேத ஜன்மம் நீங்க விரும்பும் ஒவ்வொருவரும் தான் இறப்பதற்கு முன்பே தனது கையாலேயே விரு÷ஷாற் சர்க்கம் செய்யவேண்டும். உயிருடன் இருக்கும்போதோ, இறந்த பிறகோ இது செய்யப்பட்டால் அவனுக்குப் பிரேத ஜன்மம் வருவதில்லை. இதைத் தவிர வேறு எந்த கர்மாவினாலும் இதைத் தடுக்க முடியாது.

இதனை ஒருவன் இறந்த பதினொன்றாம் நாளன்று செய்ய வேண்டும். அப்படிச் செய்யப்படின் அவன் பெரியோர்கள் அடையும் உலகை அடைவான். முக்தி தரும் நகரம் ஏழினுள் ஒன்றில் இறந்தவனும் நல்லுலகை அடைவான். இந்தக் கர்மாவைப் புத்திரன், மனைவி, பெண் வயிற்றுப் பிள்ளை, (அ) பெண் செய்யலாம். புத்திரன் இருந்தால் அவன் மட்டுமே செய்ய வேண்டும். பிள்ளை இல்லாமல் இறந்தவன் நரகத்தையே அடைவான். எனவே எத்தகைய அரிய கர்மாவைச் செய்தாகிலும் ஆண்மகன் ஒருவனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நல்வினை செய்யாதவன், புத்திரன் இருந்தும் கிருத்தியங்கள் செய்யாமல் விட்டால், இரவு பகலாக, பசி, தாகத்தோடு அலைந்து திரிந்து பின்னர் பலவகைப் பிறவிகள் எடுத்து மீண்டும் மனிதரில் கடை ஜாதியில் பிறப்பான். எனவே, ஒருவன் நல்லுலகை அடைவதற்குரிய நல்வினைகளைச் செய்யத் தெரிந்தவன் நற்கர்மங்களைச் செய்யக் கடவன் என்று பகவான் கருடனுக்குக் கூறினார்.

12. பிறத்தலும் இறத்தலும்

ஒருவன் மரிக்கும் காலத்தில் அவன் ஜீவனைக் கவர்வதற்காகவே காலன் (அ) இயமன் நியமிக்கப்பட்டிருக்கிறான். உலகில் வாழ்கின்ற ஜீவர்கள் அவரவர் செய்யும் தோஷங்களால் ஆயுள் குறைந்து மரிக்கின்றனர். பாவ காரியங்களைச் செய்பவர்கள் யமலோகத்தில் எப்போதும் நரகத்தில் உழல்வார்கள். அறநெறிகளிலிருந்து நழுவி வாழ்பவர்கள் யமலோகத்தில் வேதனைப்படுகிறார்கள். தேவாராதனை செய்யாத தினம் மஹான்களையும், நல்லவை ஆற்றுவாரையும், வழிபடாமை, சாஸ்திரம் உணராத நாள் வீணேயாம். எந்த ஜீவனுக்கும் அதன் உடல் நிலையானதில்லை. அது கர்ம வினையினால் உண்டானது என்றறிந்து மீண்டும் பிறவாமலிருக்க நற்கருமங்கள் ஆற்றவேண்டும். அழியும் உடல் மீது ஆசை வைக்காமல் பகவத், பாகவத, ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும். பிறப்பினால் ஏற்படும் துன்பம், மற்றும் கர்மாதிகளை எண்ணி ஜீவனானவன் நல்லொழுக்கத்துடனும், நற்பண்பு களுடனும் வாழவேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் நிரதிசய இன்ப வீடாகிய பரமபதத்தை அடைகிறான். பூர்வ ஜன்மத்தில் நன்னெறியில் வாழ்ந்து, தான தர்மங்களைச் செய்து வந்த சேனன் தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகை அடைகிறான். கருவுற்ற ஆறு மாதத்தில் கரு கரைந்து ஒரு திங்களில் விழுந்தால் ஒரு நாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றானால் மூன்று நாட்களும், நான்கானால் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆறானால் ஆறு நாட்களும் கருவுற்ற தாய்க்கு மட்டும் சூதகத் தீட்டு உண்டு. தந்தைக்குத் தீட்டு இல்லை. செய்ய வேண்டிய கர்மாவும் ஒன்றும் இல்லை.

கரு அழியாமல் குழந்தை பிறந்து; மூன்று வயதுக்குள் இறந்துவிட்டால் அதை உத்தேசித்து ஊர் குழந்தைகளுக்குப் பால் சோறும், தயிர் சோறும் கொடுக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து வயதுக்குள் மரித்தாலும் அவ்வாறே பாலர்களுக்கு அன்னம் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தை இறந்தாலும் தீர்த்தம், பால், பாயாசம் கொடுக்கலாம். புனரபி மரணம் என்பதை உணர்ந்து மறுபிறவி இல்லாமல் மீள தான தர்மங்களைச் செய்யாமல் வாழ்நாளை வீண் நாளாக்கினால் ஒருநாளில் ஒரு வேளை கூடப் பசியார உண்ண வழியில்லா வறியோனுக்கு மகனாகப் பிறந்து வருத்தமுற்று மடிந்து மீண்டும் பிறப்பான். அடுத்த பிறவியில் அரசனாக வேண்டும், சகலகலா நிபுணன் ஆக வேண்டும் என்றெண்ணாமல் பிறவியே இல்லாமல் இருப்பதற்கான காரியங்களைச் செய்ய வேண்டும். புனித நீராடி தூய்மை அடையலாம். உண்மை பேசுதல், கீழ்ப்படிதல், இன்சொல் போன்றவை கொண்டு சகல சாஸ்திர சம்பன்னனாக வேண்டும். தனக்குள்ள வருவாய்க்கேற்ப தானதருமங்கள் செய்து வாழ வேண்டும்.

13. பாவ புண்ணியங்களை ஆராயும் பன்னிரு சிரவணர்கள்

சிருஷ்டி தொடங்கி நடைபெற்று வரும்போது எல்லோரும் அவரவர் தொழிலைச் செய்யத் தொடங்கினர்.
யமனது சங்கடம்
ஆற்றல் மிக்க யமதர்மராஜன் ஜைமினி நகரில் அரியாசனத்தில் அமர்ந்து ஜீவர்களின் பாவபுண்ணியங்கள் பற்றி ஆராயத் தொடங்கினான். ஆனால், சேதனர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை அவனால் அறிந்து கொள்ள இயலவில்லை. யமன் நான்முகனை அடைந்து பாவ புண்ணியங்களை அறிந்து கொண்டு, அதற்குத் தக நடக்கவும் தனக்கு அருள் புரியுமாறு வேண்டினான்.

சிரவணர்கள் தோற்றம்

அதைக் கேட்ட பிரம்மன் ஒரு தர்ப்பைப் புல்லைக் கொண்டு நீண்ட கண்கள், அழகு, அகக்கண் கொண்டு புண்ணிய பாவங்களை அறிந்து இயமனுக்கு உதவ பன்னிருவரைத் தோற்றுவித்தார். அவர்களே பன்னிரண்டு சிரவணர்கள். இயமன் அவர்களுடன் தென்புலம் அடைந்து சேதனர்களின் பாவபுண்ணியங்களை அறிந்து அதற்கேற்ப காத்தும், தண்டனை அளித்தும் வரலானான். உலகில் ஒரு ஜீவனின் இறுதிக்காலம் முடிந்தவுடன் அங்குஷ்ட அளவில் வாயு வடிவிலான ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர். தர்மவான்கள் கர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரிக்கு அழைத்துச் செல்லப்படுவர். சான்றோர்க்குப் பொன், பொருள் வழங்கியோர் விமானங்களில் ஏறிச் செல்வர். பெரியோர்கள் விரும்பியவற்றை விரும்பியவாறே அளித்தவர்கள் குதிரை மீதேறிச் செல்வர். வீடுபேற்றை விரும்பி வேத சாஸ்திர புராணங்களை அறிந்த பக்தர்கள் தேவ விமானம் ஏறி தேவருலகம் செல்வர். இவற்றில் சேராத பாவிகள் கால்களால் நடந்தே செல்வர். அவ்வழியில் கூர்மையான இலைகள் கொண்ட செடி, கொடிகளும், வறுத்துக் கொட்டிய மணல்களும் நிறைந்திருக்கும்.

அவ்வழியில் போகும் போது மிகவும் வருத்தம் ஏற்படும். ஜீவன் வாழும்போது சிரவணரைப் பூசித்து இருந்தால் அவர்கள் அந்த ஜீவனின் பாவங்களைப் பொருட்படுத்தாமல், புண்ணியங்களை மட்டுமே யமனிடம் சொல்வார்கள். சிரவணரைப் பூசிப்பவர்களுக்குப் பாவம் செய்ய மனமே இடம் தராது. பன்னிரண்டு கலசங்களில் நீர் நிரப்பி, அன்னம் தயாரித்து அக்கலசங்களைச் சிரவணர்களாகவே எண்ணி அந்தணர்க்குத் தானம் செய்ய வேண்டும். அந்த ஜீவன்களுக்குச் சிரவணர்கள் யமலோகத்தில் எல்லா நன்மைகளையும் செய்வர்.

14. ஜீவன் யமலோகம் செல்லுதல்

மானிடர் உலகத்துக்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம் இடைவெளி உள்ளது. யமதர்ம ராஜன் ஒவ்வொருவர் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப் பிடித்து வரும்படி யம தூதர்கள் மூவகையினரை அனுப்பி வைப்பான். அந்த யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டிப்பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைந்து யமலோகம் கொண்டு செல்வர். அங்கு யமனுக்கு எதிரில் ஆவியுருவச் சீவர்களை அவிழ்த்து நிறுத்தி அவர்கள் ஆணைப்படி நடக்கச் சித்தமாக இருப்பதாகக் கூறுவர். அப்போது கூற்றுவன் யமகிங்கரர்களிடம் அச்சீவன்களை மீண்டும் கொண்டு போய் அவர்கள் வீட்டிலேயே விட்டு விட்டு பன்னிரண்டு நாட்கள் கழித்த பிறகு, முறைப்படி மீண்டும் கொண்டு வருமாறு ஆணையிடுவான். இதனால்தான் இறந்தவன் உடலை உடனே எரிப்பதோ, புதைப்பதோ கூடாது. யமகிங்கரர்களால் அவிழ்த்து விடப்பட்ட வாயு வடிவுடைய ஜீவன் சுடுகாட்டில் தன் சிதைக்குப் பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று திரும்பவும் புகமுடியாதவாறு தீப்பற்றி எரியும் உடலைப் பார்த்து ஓலமிட்டு அழும். புண்ணியம் செய்த ஜீவன் இவ்வுடல் எரிந்து ஒழிந்ததே நல்லது என்று மகிழ்ச்சி அடையும். தேகம் முழுவதும் எரிந்து சாம்பலான உடனே ஜீவனுக்குப் பிண்டத்தாலான சரீரம் உண்டாகும். இறந்தவனின் புத்திரன் முதல் நாள் போடும் பிண்டத்தால் சிரசும், இரண்டாம் நாள் கழுத்தும் தோள்களும், மூன்றாம் நாள் மார்பும், நான்காம் நாள் வயிறும், ஐந்தாம் நாள் உந்தியும், ஆறாம் நாள் பிருஷ்டமும், ஏழாம் நாள் குய்யமும், எட்டாம் நாள் தொடைகளும், ஒன்பதாம் நாள் கால்களும், பத்தாள் நாள் சரீரம் முழுவதும் உண்டாகும்.

ஜீவன் உடலை விட்டுப் பிரியும் முன்பேயே உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்று கதறிக்கொண்டு நிற்கும். பிண்ட உருவைப் பெற்ற பதினொன்றாம் நாளிலும், பன்னிரண்டாம் நாளிலும் புத்திரனால் பிராமண முகமாய் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பதின்மூன்றாம் நாளன்று மறுபடியும் யமகிங்கரர்கள் இழுத்துச் செல்ல திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே யமலோகத்தை அடையும். பயங்கரமான பாதையில் வாள் போன்ற இலைகள் கொண்ட செடி கொடிகள், வறுத்த மணல் இருக்கும் வழியில் செல்ல வேண்டும். இவ்வழியில் செல்லும் ஜீவன் படும் துன்பம் சொல்லத் தரமன்று. சர்வேசுரன் ஒருவன் உண்டென்றும் சுவர்க்கம், நரகர் அடைய நன்னெறி, தீய நெறி உண்டென்றும், பிறப்புக்கு அப்பால் உள்ள வாழ்வுக்கு இதமானவற்றைச் சொல்லுபவர்களோடு முரண்பட்டு சாதுக்களை ஏசித்திருந்தேனே, அவற்றின் பயனை இப்போது உணர்கிறேன் என்றும் ஏகாதசியில் உபவாசம் இருக்கவில்லை. நற்செயல், நல்வினை ஏதும் செய்யவில்லை, என்றெல்லாம் கூறிப் புலம்பும் ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர்.

15. ஜீவன் செல்லும் பாதையில்....

யம தூதர்களால் பாசக்கயிற்றால் பிணைக்கப்பட்டு அவர்களிடம் உதைப்பட்டுச் செல்லும் ஜீவன் தான் மனைவி மக்களுடன் உலகில் வாழ்ந்த காலத்தில் அடைந்த இன்பத்தை எண்ணி எண்ணி துன்பமுறும். தான் செய்த தவறுகளை, அதர்ம காரியங்களை நினைத்துக் கண்ணீர் வடிக்கும். தன்னால், தன் பொருளால் சுகத்தை அனுபவித்த மனைவி மக்கள் எவரும் தற்போது கூட வரவில்லையே. மற்றவர்கள் வயிறெரிய பொருள் சேர்த்தோம். இப்போது நம் வயிறு பற்றி எரிகிறதே என்று அலறித் துடிக்கும். அப்போது யமதூதர்கள் அவன் கன்னத்தில் அறைந்து மனைவி மக்களே நித்தியம் என்று அறம் செய்யாமல் நடத்திய அதர்ம வாழ்க்கை என்ன ஆயிற்று? நீ செய்த புண்ணிய பாவமே உனக்கு இவ்வுலகில் இன்பம், (அ) துன்பத்தைத் தரவல்லது. பிறர் பொருளை அபகரித்தல் போன்ற அதர்மங்களை செய்யாமல் தர்மம் செய்து வாழ்ந்திருந்தால் இப்போது இக்கேடு வராதல்லவா? என்று பலவாறு இடித்துக் கூறி, பாசத்தால் நையப்புடைத்து முசலத்தால் புடைபுடை என்று புடைப்பார்கள். சேதனன் காற்று நிறைந்த வழியில் கடும் புலிகள் நிறைந்த பாதையில் யமகிங்கரர்களுடன் சென்று ஓரிடத்தில் தங்கி, புதல்வனால் இருபத்தெட்டாம் நாளில் செய்யப்படும் ஊனமாச சிரார்த்த பிண்டத்தை உண்டு, முப்பதாம் நாளன்று யாமியம் என்ற நகரத்தை அடைவான். அங்குப் பிரேதக் கூட்டங்கள் இருக்கும். மற்றும் பத்திரை என்ற நதியும், வட விருக்ஷமும் உள்ளன. சிறிது நேரச் சிரம பரிகாரத்துக்காக யமகிங்கரர்களுக்கு அஞ்சி அவ்யாமியம் என்ற நகரில் தங்கி, இரண்டாவது மாசிய பிண்டத்தை உண்டு, தொடர்ந்து யமகிங்கரர்களால் ஆரணியத்தின் வழியே இழுத்துச் செல்லப்பட்டு துன்புற்று, திரைபக்ஷக மாமிச பிண்டத்தை வேண்டி அரசன் சங்கமனின் கௌரி நகரைச் சார்ந்து மூன்றாம் மாசிக பிண்டத்தைப் புசித்து அப்பால் சென்று வழியில் கடுங்குளிரால் வருந்துவான்.

யமகிங்கரர்கள் எறியும் கல் மழையால் வருத்தமுற்று குரூரன் என்ற அரசனின் குரூரபுரம் அடைந்து ஐந்தாவது பிண்டத்தைப் பெறுவான். அடுத்து கிரௌஞ்சம் என்ற ஊரை அடைந்து ஆறாவது மாசிகப் பிண்டத்தை உண்பான். அங்கு அரை முகூர்த்த காலம் சிரமபரிகாரம் செய்து கொண்டு பயங்கரப் பாதையில் செல்கையில் பூவுலக வாழ்வை எண்ணி புலம்ப, யம கிங்கரர்கள் அந்த வாய் மீதே புடைப்பார்கள். அடுத்து இரத்தம், சீழ், சிறுநீர், மலங்கள் நிறைந்த வைதாரணி ஆறு வரும். கோதானம் செய்திருந்தால் அது வந்து படகோட்டிகள் அருகில் உன்னை நதிக்கு அப்புறம் சேர உதவும். கோதானம் செய்யாதவர் அந்த ஆற்றில் நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும். எனவே பாரதத்தில் பிறந்து வாழும் ஒவ்வொரு ஜீவனும் வைதரணி கோதானம் செய்ய வேண்டும். அல்லது அவன் மரித்த பிறகு அவனுடைய புத்திரனாவது செய்ய வேண்டும். அடுத்த நமனுக்கு இளையோனான விசித்திரனது நகரை அடைந்து ஊனஷானி மாசிகப் பிண்டத்தை உண்டு, பிறகு அவ்விடம் விட்டுப் புறப்படுகையில், ஏழாம் மாதம் பிண்டத்தை உண்ணும்போது பிசாசுகள் தோன்றி நம்பினவரைக் கெடுத்த ஜீவன் அந்த அன்னத்தை உண்ணத் தகுதியற்றவன் என்று கூறி பலவந்தமாக பறித்துக் கொண்டு போகும். ஈத்துவக்கும் இன்பம் பெறாத ஜீவன், தன் புத்திரனால் அவனுக்காகக் கொடுக்கப்படும் மாசிகப் பிண்டம் அவனுக்குச் சேராமல் பைசாசங்களைச் சேரும் சாக்காடு நிச்சயம் என்று உணராமல் பிறர் பசிதீர அன்னதானம் செய்யாமல் வாழ்ந்த நான் படுந்தொல்லையை யாரிடம் சொல்வேன்? என்று துயருறும்.

மானிடப் பிறவி அடைந்த ஜீவன் தான, தரும, பூசை முதலியவற்றால் புண்ணியங்களைச் சேர்க்கவேண்டும். அப்பிறவியில் செய்யப்படும் நல்வினைத் தீவினைப் பயன்களையே அது அடையும். ஜீவன் உதககும்பதானம் செய்திருப்பின் அந்த உதக கும்ப நீரைப்பருகி தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் மீண்டும் பயணத்தைத் தொடரும். யமபுரிக்கான பாதையில் பாதி தூரம் கடந்து விட்டதால் அவனுக்குரியவர் பூவுலகில் அப்போது அன்னதானம் செய்யவேண்டும். பிறகு பக்குவப்பதம் என்ற நகரில் எட்டாவது மாசிகப் பிண்டத்தையும், துக்கதம் என்ற ஊரில் ஒன்பதாவது மாத பிண்டத்தையும், நாதாக்கிராந்தம் என்ற நகரில் பத்தாம் மாசிக பிண்டத்தையும் உண்பான். அதபதம் என்ற ஊரை அடைந்து பதினொன்றாம் மாத பிண்டத்தை உண்டு, அடுத்த சீதாபரம் என்ற ஊரை அடைந்து சீதத்தால் வருந்தி, பன்னிரண்டாம் மாத வருஷாப்தி பிண்டத்தை உண்டு, அடுத்து வைவஸ்வத பட்டணம் சேரும் முன்பே ஊனாப்திக பிண்டத்தை உண்டு யமபுரியாகிய அப்பட்டணத்தை ஜீவன் அடையும். பன்னிரண்டு சிரவணர்கள் அங்குதான் இருப்பர். ஜீவன்கள் அந்தப் பன்னிரெண்டு சிரவணர்களையும் ஆராதித்தால், அவர்கள் ஜீவன் செய்த புண்ணியங்களை மட்டும் யமனுக்கு எடுத்துரைப்பர். எனவே அந்தப் பன்னிரு சிரவணர்களை ஆராதித்தல் மறுமையில் நன்மை பயக்கும். இவ்வாறு ஜீவன் செல்லும் பாதையில் அது பரிதவிக்கும் நிலைகள் கூறப்பட்டன.

16. யமபுரியில் யமதர்பார்

அங்குஷ்ட பரிமாணமுள்ள ஜீவன் கர்ம சரீரம் பெற்று வன்னி மரத்தை விட்டு யம கிங்கரர்களுடன் சித்திர குப்தனது பட்டணத்தின் வழியாக யமபுரிக்குச் செல்லும். யமபட்டணம் புண்ணியம் செய்தோர்க்கு மிகவும் அழகாகக் காணப்படும். இறந்தவனைக் குறித்துச் செய்யும் இரும்பு ஊன்றுகோல், உப்பு, பருத்தி, எள்ளுடன் பாத்திரம் ஆகியவற்றை தானம் செய்வதால் யமபுரியிலுள்ள யமபரிகாரர் கள் மகிழ்ந்து காலதாமதம் செய்யாமல் ஜீவன் வந்திருப்பதை யமதர்மனுக்குத் தெரிவிப்பார்கள். எப்போதும் யமதர்மன் அருகிலேயே இருப்பவன் தர்மத்துவஜன். புவியில் இறந்தவனைக் குறித்துக் கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயறு ஆகிய ஏழு வகைத் தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானம் செய்தால் அவன் திருப்தியடைந்து இந்த ஜீவன் நல்லவன். புண்ணியம் செய்த புனிதன் என்று விண்ணப்பம் செய்வான்.
பாவம் செய்தவனுக்கு யமனும், யமதூதர்களும் யாவரும் அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பர். அதைக் கண்டு பாவி பயங்கரமாக ஓலமிடுவான். புண்ணியம் செய்த ஜீவன் யமன் முன் தோன்றினால், அவன் புண்ணியம் செய்தவனாகையால் சூரிய மண்டலம் வழியாக பிரம்மலோகம் சேரத்தக்கவன். ஆகையால் அவனுக்கு யமன், தன் ஆசனத்திலிருந்து எழுந்து மரியாதை செய்வான். யமகிங்கரர்களும் அணிவகுத்து நிற்பர். புண்ணியம் செய்தவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமன் முன் சென்று தேவனாக மாறி தேவருலகம் செல்வான். பாவம் செய்தவனை யமகிங்கரர்கள் யமதர்மராஜன் கட்டளைப்படி நரகத்தில் விழுந்து கிருமி, புழு போன்ற ஜன்மத்தை அடைவான். அந்த ஜீவனும் மிதமாகப் புண்ணியம் செய்திருந்தால் முன்பு போல் மானிடப் பிறவியைப் பெறும்.

17. சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும்

யமலோகக் கணக்கன் சித்திரகுப்தன், ஜீவனின் பாப புண்ணியங்களைச், சிரவணர்கள் மூலம் அறிந்து, யமதர்ம ராஜனுக்கு அறிவித்து, அவன் ஆணைப்படி யம கிங்கரர்களைக் கொண்டு அவர்களுக்கான தண்டனைகளை அவ்வப்போது நிறைவேற்றுவான். ஜீவன், வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் யமபுரிக்குச் செல்லும்போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.

2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.

3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.

4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்

.5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.

6. பெற்றோர், மற்ற பெரியோர்களைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.

7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.

8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.

9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.

10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.

11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.

12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.

13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.

14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.

15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.

17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.

18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.

19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.

20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.

21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.

22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷரகர்த்தமம்.

23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ரக்ஷணம்.

24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.

25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.

26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.

27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.

28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.
உதக கும்பதானத்தால் யமதூதர்கள் திருப்தி அடைவர். மாசிகம், வருஷாப் திகம் முதலியவற்றால் ஜீவனும், யமகிங்கரர்களும் திருப்தி அடைவர்.

18. புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம்

குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை சிசு, மூன்று வயது வரையில் பாலகன், ஆறு வயது வரையில் குமரன், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் எனப்படும். பதினாறு வயது வரையில் கைசோரன் எனப்படுவான். மரித்தவன் பாலகனாயினும், இளைஞனாயினும், விருத்தனாயினும் உதக கும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும். மூன்று வயதுக்குள் இறக்கும் குழந்தையைப் புதைக்க வேண்டும். 24 ஆவது மாதம் முடிந்து 25ஆவது மாதம் பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளை எரிக்கவேண்டும். ஐந்து வயது முடிந்து பூணூல் அணிந்திருந்தாலும், இல்லா விட்டாலும் இறந்தவனுக்குப் பத்து நாட்களுக்கும் பிண்டம் போட வேண்டும். 5 முதல் 12, (அ) 12 நிரம்பியவர் மரித்தால் விரு÷ஷாற்சனம் செய்ய வேண்டும். ஆனால், சபிண்டீகரணம் செய்யலாகாது.

புத்திரனுக்குத் தந்தையும், தந்தைக்குப் புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும். பூணூலை இடது பக்கம் தரித்துக் கொண்டு தருப்பையுடன் ஏகோதிஷ்டம் போன்ற சிரார்த்தங்களைச் செய்தால் மரித்தவன் மறு ஜன்மத்தில் நல்ல குலத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான். பெரும்பாலான பிள்ளைகள் தந்தையைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றனர். தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அமிசங்களில் ஏதேனும் ஒன்று தனயனுக்கும் பொருந்தும். ஒருவன் தனக்குத் தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைக் கண்ணால் பார்த்துவிட்டால் அந்த ஜன்மத்தில் புத் என்னும் நரகத்தை ஆன்மாவில் காணமாட்டான். மணம் புரிந்துகொண்ட ஒருவன் ஒருத்திக்கே புத்திரன் பிறந்தால் அவன் குலத்தில் பிதிர்த் தேவர்கள் எல்லாம் மிக்க மகிழ்ச்சி அடைவர்.

தந்தைக்கு ஈமக்கடன்களைத் தலைச்சனே அதாவது முதல் மகனே செய்யக் கடமைப்பட்டவன் ஆவான். மற்ற புத்திரர்கள் இருந்தால் அவர்கள் தகப்பனுக்கு சிவகர்மங்களையும், சிரார்த்தாதிகளைச் செய்யக் கடவராவர். ஒருவன் தனக்குப் பௌத்திரன் பிறந்து அவனை எடுத்துப் பார்த்த பிறகே மரித்தால் நல்லுலகை அடைவான். கொள்ளுப் பேரனைப் பார்த்தவன் அதைவிட நல்லுலகை அடைவான். பெண்ணுக்கு விலை கொடாமல் கன்னிகாதானம் செய்து கொடுக்க அவளை மணம் புரிந்து, புத்திரனைப் பெற்றால், அந்தப் புத்திரன், காமக் கிழத்தியின் மகன் ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம், தானங்கள் செய்யலாம். சற்புத்திரர்கள் தீர்த்தயாத்திரைச் செய்யலாம். அன்னரூபமாயும், ஆமரூபமாயும், ஹிரண்ய ரூபமாயும் சிரார்த்தம் செய்யலாம்.

19. சபிண்டீகரணம்

உலக வாழ்வை விட்டு, உடலையும் விட்டு மாண்டவனுக்கு வருஷம் முடியும் வரை சகலமும் சாஸ்திரப்படிச் செய்து, சபிண்டீகரணமும் செய்து அவன் குலத்தில் முன்னமே மாண்டவருடைய பிண்டத்தோடு இறந்தவனுக்குரிய பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதுர்த் தேவர்களோடு சேர்ந்து கொள்வான். இறந்த பன்னிரண்டாம் நாள், மூன்றாவது பக்ஷம், ஆறாவது மாதத்திலும் சபிண்டீகரணம் செய்யலாம். சபிண்டீ கரணம் செய்யும் வரையிலும் மரித்தவன் பிரேத தத்துவத்துடனேயே இருப்பான். புத்திரன் இல்லாவிட்டால் இறந்தவனுடைய கனிஷ்டனாயினும், ஜேஷ்டனாயினும், அவர்களில் ஒருவனுடைய புத்திரனாயினும் கர்மம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தாயாதி செய்யலாம். ஒருவரும் இல்லாவிட்டால் புரோகிதனே இறந்தவனுக்குரிய கர்மங்களைச் செய்யலாம்.

ஓராண்டு வரையிலும் ஒருவனே கர்மம் செய்ய வேண்டும். நித்திய சிரார்த்தத்தோடு ஒரு குடத்தில் ஜலம் நிரப்பி உதக கும்பதானம் செய்ய வேண்டும். கர்மங்களைத் தவறாமல் செய்தால் இறந்தவன் விமானம் ஏறி நல்லுலகடைவான். கணவன் நல்லவனாயினும், தீயவனாயினும், அறிஞனாயினும், அறிவிலி ஆயினும், உயிரோடிருக்கும் போதும் இறந்த பிறகும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று பக்தி செய்து கற்பொழுக்கத்தில் நிலை நிற்பவளே உத்தமியாகும். தெய்வ வழிபாடு, அதிதி ஆராதனை, விரத, அனுஷ்டானங்கள் முதலியவற்றை கணவன் செய்வானாகில், அவன் மனைவியும் அவனுக்கு அனு கூலமாக யாவையும் செய்ய வேண்டும். அத்தகைய கற்புக்கரசி இறந்த பிறகு உயர் குலத்தில் பிறந்து உத்தமனான ஒருவனைத் தனது கணவனாக அடைந்து, நன்மக்களும் பெற்று குலவிருத்தி செய்து தந்தைக்கும், கணவனுக்கும் புகழை உண்டாக்கி, சுமங்கலியாகவே மரித்து உத்தம லோகத்தை அடைவாள்.

20. பப்ருவாகனன் வரலாறு

பிரேத ஜன்மம் அடைந்த ஒருவர் வரலாற்றினை பகவான் கருடனுக்குக் கூறினார். திரேதாயுகத்தில் பப்ரு வாகனன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் அஹோதயம் என்ற நகரத்திலிருந்து நீதி, தர்மம், நியமம் தவறாமல் உலகை ஆண்டு வந்தான். அவன் தன் படை வீரர்களுடன் வேட்டையாடச் சென்றான். அவன் பார்வையில் ஒரு புள்ளி மான் காணப்பட்டது. அதன் மீது இரண்டு, மூன்று தரம் அம்பெய்தினான். அதனால், அதன் உடலில் காயம் ஏற்பட்டும் அது தப்பி ஓடிவிட்டது. அதைத் தொடர்ந்து, பலவிடங்களில் தேடிச் சென்ற அரசன் தனியனாகி, சோர்ந்து ஒரு தாமரைப் பொய்கையைக் கண்டு நீராடித், தண்புனல் பருகிக் களைப்பு நீங்கினான். குளக்கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் பரிஜனங்களின் வருகைக்காகக் காத்திருந்தான். அந்தி மங்கி இருட்டிவிட்டது. அப்போது பிரேதம், பல பிரேதங்களோடு இங்குமங்கும் ஓடி, பசி தாகத்தோடு வருந்துவதையும் கண்டான். அதைக் கண்ட அரசன் அச்சமும், அதிர்ச்சியும், வியப்பும் கொண்டான். அப்போது அந்த பிரேத ஜன்மம் அரசனிடம் வந்து அரசே, உன்னை நான் காணப்பெற்றதால் இந்தப் பிரேத ஜன்மம் நீங்கி நற்கதி அடைவேன் என்று நம்புகிறேன் எனக் கூறியது. அப்போது பப்ருவாகன மன்னன் அந்தப் பிரேத ஜன்மத்தைப் பார்த்து அதன் வரலாறு பற்றிக் கேட்க, அது கீழ்க்கண்டவாறு கூறிற்று:

நான் வைதிக நகரில் வைசிய குலத்தில் பிறந்தேன். என் பெயர் தேவன். நான் திருமணம் செய்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வந்தேன். வாழ்நாள் முழுவதும் தேவாராதனை, விரத அனுஷ்டானம், பிராம்மண வழிபாடு, தேவாலய கைங்கரியம், அனாதைகள் ரக்ஷணை போன்ற நன்மைகளையே செய்து வந்தேன்... எனக்கொரு புத்திரனோ, உறவினரோ இல்லை. யாருமே கர்மம் செய்யவில்லை. எனவே இந்தப் பிரேத ஜன்மத்துடன் நான் மரித்த நாளிலிருந்து நெடுங்காலமாக வருந்துகிறேன். அரசே, நீ குடிமக்களின் காவலன், உறவினன். மரித்து பிரேத ஜன்மத்துடன் இருக்கும் எனக்கு நீயே எல்லாக் கர்மங்களையும் செய்யவேண்டும். என்னிடம் உள்ள இந்தச் சிறந்த மாணிக்கத்தை உனக்குக் காணிக்கையாக அளிக்கிறேன் என்று கூறி மாணிக்கத்தைக் கொடுத்தது. அப்போது கர்ம காரியங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டான் மன்னன்.

பிரேதம் சொல்லியது, நாராயண பலி சகிதனாய், ஸ்ரீமந் நாராயணன் மங்கள விக்கிரகம் ஒன்று செய்து, சங்கு, சக்கர, பீதாம்பரங்களைக் கொண்டு அலங்கரித்து, கீழ்த்திசையில் ஸ்ரீதரனையும், தெற்கில் மகாசூரனையும், மேற்கில் வாமனனையும், வடக்கில் கதாதரனையும் நடுவில் அயன், அரனுடன் ஸ்ரீ விஷ்ணுவையும் நிலை நிறுத்தி ஆராதனை செய்து, வலம் வந்து வணங்கி, அக்கினியில் ஹோமம் செய்து, மீண்டும் நீராடி விரு÷ஷார் சர்க்கம் செய்து பதின்மூன்று பிராமணர்களுக்கு குடை, மாரடி, மோதிரம், பலகை, வஸ்திரம், பொன் முதலியவற்றை வழங்கி பிருஷ்டான்ன போஜனம் செய்வித்துச் சய்யாதானம், கடகதானம் ஆகியவை கொடுத்தால் பிரேத ஜன்மத்திலிருந்து விடுபட முடியும் என்றது.

அவ்வமயம் அவனது பரிவாரங்கள், அங்கு வர அது மறைந்துவிட்டது. அரசன் தன் நகரமடைந்து பிரேத ஜன்மத்தைக் குறித்து அதற்குரிய கர்மங்களையும், தர்மங்களையும் முறைப்படிச் செய்து முடிக்க, அந்தப் பிரேத ஜன்மம். ஆவிப்பிறவி நீங்கி நல்லுலகை அடைந்தது. பிரேத ஜன்மம் நீங்க வேறென்னென்ன செய்யலாம் என்பதைப் பகவான் கருடனுக்கு விளக்கினார். எண்ணெய் நிறைந்த குடத்தைப் பெரியோர்களுக்குத் தானம் கொடுத்தால் சகல பாபங்களும் நீங்கி பிரேத ஜன்மம் தொலையும், அவன் இன்பமுடன் மீளாவுலகை அடைவான். பொன்னாலான குடங்களில் பாலும், நெய்யும் நிரப்பி திக்குபாலகரையும், அஜ சங்கரரையும், ஸ்ரீ ஹரியையும் ஆராதனை செய்து அக்குடங்களைப் பிராமண உத்தமர்களுக்குத் தானம் கொடுப்பது மிக்க சிறப்புடையதாகும்.

21. எள், தருப்பை ஏன்?

கருமங்களைச் செய்வதற்கு முன் குறிப்பிட்ட இடத்தை திருவலகால் துடைத்துத் தூய்மை செய்து கோமியத்தால் மெழுக வேண்டும். அவ்வாறு தூய்மையான இடத்தில் கருமம் செய்யத் துவங்கினால் தேவர்கள் அங்கு வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். இல்லாவிடில் அவ்விடத்தை அசுரரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும் கருமங்களைத் தடுத்தி நிறுத்தி விடுவதுடன், இறந்தவன் நரகத்தை அடைய நேரிடும். எள் மிகவும் தூய்மையான ஒரு தானியம். கருப்பு எள், வெள்ளை எள் எதுவானாலும் தானத்துடன் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள். தர்ப்பைப் புல் ஆகாயத்தினின்று தோன்றியது. அதன் ஒரு முனையில் பிரம்மனும், மற்றொன்றில் சிவனும், நடுவில் விஷ்ணுவும் வாசம் செய்கின்றனர். பிராமணர்க்கும் மந்திரத்திற்கும், தர்ப்பைக்கும், அக்கினிக்கும், திருத்துழாய்க்கும் நிர்மாலிய தோஷமில்லை.

ஏகாதசி விரதம், துளசி, பகவத் கீதை, பசு, பிராம்மண பக்தி, ஸ்ரீஹரியின் சரணமும் சம்சார சாகரத்தைக் கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும். இறக்கும் நிலையை அடைந்தவன் கோமயத்தில் மெழுகப்பட்ட தலத்தில், சூரைப்புல்லைப் (தருப்பையை) பரப்பி, அதன் மேல் எள்ளை இரைத்து, அதன்மீது சயனித்து தருப்பை, திருத்துழாய் கையிலேந்தி பகவன் நாமாவை வாயாரப் புகழ்ந்த வண்ணம் மரிப்பவன் அயன், அரியாதியர்க்கும் அரிய நிரதிசய இன்பவீடாகிய பரமபதம் அடைவான். உயிர் நீங்கும் முன்பே திருத்துழாயோடு தனது நல்லுலக வாழ்வைக் கருதி தானங்களைச் செய்துவிட வேண்டும். உப்பு தானம் மிகவும் சிறந்ததாகும். அது விஷ்ணு லோகத்தில் உண்டானது. உப்பு தானம் செய்து மரித்தவன் சொர்க்க லோகத்தை அடைவான்.

22. தானச் சிறப்பும், பலவகை தானங்களும் உயிர் பிரிதல்

உயிரானது மனித உடலை விட்டு நீங்கும் போது கண், நாசி (அ) உரோமக் கால்கள் வழியே நீங்குகிறது. ஞானிகளுக்குக் கபாலம் வெடித்து நீங்கும். பாவிகளுக்கு அபான வழியாக நீங்கும்.

மறுபிறவி

காமக் குரோதர்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் உயிர் நீங்கும் போது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவி அடைகிறான். மாயையோடு கூடிய தேகம் எல்லாப் பிராணிகளுக்கும் உரியதாகும். சமஸ்த லோகங்களுக்கும் உரிய சம்ஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள்.

1. அனைத்துத் தானங்களிலும் சிறந்தது பருத்தி தானம். அதுவே மகாதானம் ஆகும். பூணூலுக்கும், மானங்காக்கும் ஆடைக்கும் பருத்தியே பயனுடையது. ஆதலால் அதுவே சிறப்புடைத்து. மேலும் பருத்தி தானம் செய்தால், வாழ்நாள் முடியும்போது சிவலோக வாசம் பிராப்தியாகும். மேலும், இத்தானத்தால் மாமுனிவர்களும், பிரம்ம, ருத்திர, இந்திராதி தேவர்களும் திருப்தி அடைவர். இத்தானம் செய்தவன் மீண்டும் பிறந்து யாவரும் புகழ நெடுங்காலம் வாழ்ந்து சொர்க்கமடைவான்.

2. திலதானம், கோதானம், புவி தானம், சொர்ணதானம், தானிய தானம், ஆகியவை பாபங்கள் அனைத்தையும் விலக்கிவிடும். இவற்றை உத்தம பிராமணர்களுக்கே தானமாக அளிக்க வேண்டும்.
(தானங்கள் செய்வதற்குச் சிறந்த காலம் ஜீவன் மரிக்கும் காலமே. கிரகண புண்ணிய காலத்திலும் கொடுக்கலாம்)

3. ஒருவன் மரிக்கும்போது திலம், இரும்பு, லவணம், பருத்தி, தானியம், பொன், பூமி, பசு ஆகியவற்றைத் தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும். எள், இரும்பு தானத்தால் யமன் மகிழ்ச்சி அடைவான். லவண தானம் யமபயம் நீக்கும். தானிய தானம் கூற்றுவன். அவன் தூதர்களுக்கு மகிழ்ச்சி தரும். சொர்ண தானம், கோதானம் பாவத்தை அழிக்கும். மரணமடைபவன் பகவானைத் தியானித்து, அவன் நாமம் உச்சரித்தால் அவன் நிரதிசய வீடாகிய வைகுந்தம் அடைவான்.
யமன் ஆயுதங்களாகிய கூடாரம், முசலம், சூரிகை, தண்டம் யாவும் இரும்பால் ஆனவையே. எனவே இரும்புதானம் யமனை மகிழ்விக்கும். அந்தக் கிரகத்தில் யமதூதர்கள் கால் வைக்க அஞ்சுவர். சர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஜம்பூதங்கள், தானப் பொருள்கள், இந்திராதி தேவர்கள் யாவும் பகவான் விஷ்ணுவே. கொடுப்பவனும், எடுப்பவனும் அந்த பகவானே. ஒருவன் புத்தியைப் பாவபுண்ணியங்களில் நாடச் செய்வதும் அந்த விஷ்ணுவே.

23. உடலியல் பற்றிய விளக்கங்கள்

ஒரு சமயம் இந்திரனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் பெண்களிடம் போய்ச் சேர்ந்தது. மாதவிலக்கான மங்கை நான்கு நாட்கள் வரையில் குடிமனைக்குப் புறம்பே இருக்கவேண்டும். அவளைப் பிறர் பார்க்கக் கூடாது. முதல் நாளன்று சண்டாள ஸ்திரீயைப் போலும், இரண்டாம் நாள் பிரமஹத்தி செய்தவள் போலவும், மூன்றாம் நாள் ஒலிப்பான் போலவும் காணப்படுவாள். நான்காவது நாள் ஸ்நானத்திற்குப் பிறகு சிறிது தூய்மை அடைவாள் போலவும் காணப்படுவாள். ஐந்தாம் நாள் சுத்தியடைந்து குடும்பக் காரியங்களைக் கவனிக்கும் தகுதி பெறுவாள்.

6 முதல் 18 நாள் வரை, ஏழு இரட்டை நாளில் அவளோடு கூடி மகிழ்ந்தால் ஆண் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை குணவானாக, தனவானாக, துர்மிஷ்டனாக, விஷ்ணு பக்தி உடையவனாக இருப்பான். ரஜஸ்வாலை ஆன ஐந்தாம் நாள் பாயசம் போன்ற மதுர பதார்த்தங்களையே உண்ண வேண்டும். தம்பதியர் சந்தனம், புஷ்பம், தாம்பூலம் கொண்டு குளிர்ந்த மெய்யினராய் மனதில் மோகமுடையவராய் கூடி மகிழ வேண்டும். அவ்வமயம் சுக்கில, சுரோணிதக் கலப்பால் ஸ்திரீ வயிற்றில். கரு ஏற்படும். சுக்கிலம் அதிகமானால் ஆண் குழந்தையும், சுரோணிதம் அதிகமானால் பெண் குழந்தையும் பிறக்கும்.

புணர்ந்த ஐந்தாவது நாள் கருவறையில் ஒரு குமிழியுண்டாகும். பதினான்கு நாட்களில் தசைகளும், இருபதாவது நாளில் மேலும் தசை அதிகமாகும். இருபத்தைந்தாவது நாளில் புஷ்டி அடையும். ஒரு மாதத்தில் பஞ்சபூத சேர்க்கை உண்டாகும். 2-ஆவது மாதத்தில் தோல், 3-ஆம் மாதத்தில் நரம்புகள் உண்டாகும். 4-ஆம் மாதத்தில் மயிர் புறவடிவம் ஏற்படும். 5-இல் காது, மூக்கு, மார்பு தோன்றும். ஆறில் சிரம், கழுத்து, பற்கள் உண்டாகும். 7-இல் பாலின் குறி தோன்றும். 8-இல் அனைத்து அவயவங்களுடன் ஜீவன் பிரவேசிக்கும். 9-இல் சுழிமுனை நாடி மூலம் பூர்வ ஜன்ம கர்மம் அறியும். பத்தில் குழந்தை பிறக்கும். பஞ்ச பூதாத்மகமாகிய உடல், பஞ்சேந்திரியங்களை அடைந்து இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று முக்கிய நாடிகளும், காந்தாரி, கஜசிம்மஹி, பூழை, அச்சு, அலாபு, குரு, விசாகினி என்ற ஏழுநாடிகளும் உடலில் முக்கியமானவை பெற்று தசவித வாயுக்கள் சேர்ந்துள்ளது. இந்தச் சரீரம். சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் ஆகிய ஆறு கோசங்கள் கொண்டது. உண்ணுகின்ற உணவின் சாரம் உடலில் பரப்புவது வாயு இவ்வாறு அண்டத்திலுள்ளவையெல்லாம் பிண்டத்திலுமுண்டு. பிண்டத்திலுள்ளவை எல்லாம் மனித உடலில் உள்ளன.

மனித உடலில் பதினான்கு உலகங்கள். சப்த குலாசலங்கள், தீவுகள், நவக்கிரகங்கள் இருக்கின்றன. ஒருவன் ஆயுள் அவனுடைய பூர்வ ஜன்ம கர்மானுசாரத்தை அனுசரித்து கருவிலுள்ள போதே பிரமன் நிச்சயித்து விடுகிறான். எனவே தீர்க்க ஆயுளும், உயர்ந்த வித்தையும், யோகமும், மற்ற யாவும் மறு ஜன்மத்திலாவது ஒருங்கே பெற்றிட ஜீவன் நற்கர்மங்களைச் செய்யவேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

24. பிரயோபவேசம், தலயாத்திரை, சுவர்க்கம்

ஒருவன் ஆகார வியவஹாரம் ஒன்றும் செய்யாமல் நியமத்தோடு தர்ப்பாசயனம் செய்து பகவானையே தியானித்துக் கொண்டு மரித்தால் அவன் வைகுந்தம் அடைவான். எனவே பிரயோபவேசம் பகவானுக்கு உகந்ததாகும். பிரயோபவேசம் செய்த நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வேள்வி செய்த பலன் கிடைக்கும். அவன் உலகியலின் உண்மையையும், வாழ்வியலின் இரகசியத்தையும், தெய்வீக இயலின் மெய்ம்மையையும், உணர்ந்து இனி உயிர் வாழ்க்கை வேண்டியதில்லை என்று, இனி மரித்து விடுவோம் எனத் துணிந்து அதை நல்ல முறையில் பிரயோபவேசம் செய்து நல்லுலகை அடைவான்.

தலயாத்திரை

விடு, மனைவி, மக்களை நெடுங்காலம் பிரிந்து, நெடுந்தூரம் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் யாத்திரை செய்பவனுக்குப் பிரம்மாதி தேவர்களெல்லாம் வேண்டியவற்றைக் கொடுக்கிறார்கள். அப்படிச் செய்யும் ஒருவன் வழியில் மரித்தால் அவன் சுவர்க்கம் பெறுவான். மரண காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, ஒருவன், விஷ்ணு ÷க்ஷத்திரம் ஒன்றில் மரிக்க எண்ணி யாத்திரை செய்ய நடந்தால், அவன் நடக்கும் அடி ஒன்றுக்கு ஒரு பசுவைத் தானம் செய்த பயனை அடைவான். தம்மவர்க்கு உதவி, அன்னியருக்கு உதவி செய்வதை விட தன் பெற்றோர்க்கு, உடன்பிறந்தோர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்பது சிறப்புடைத்து, தந்தைக்குக் கொடுத்தல் உத்தம பிராமணனுக்குக் கொடுத்த தான புண்ணியத்தை விட நூறு மடங்கு கிடைக்கும். தாய்க்குக் கொடுத்தால் ஆயிரம் மடங்கு அதிகம். உடன் பிறந்த ஆண், பெண்களுக்குக் கொடுத்தலும் அளவற்ற புண்ணியம் தரும்.

நல்ல ஒழுக்கத்திலும், நன்னெறியிலும் ஒழுகி, உயிரினங்களிருந்து உற்ற சமயத்தில் உதவி, பூதானம் செய்பவனைக் கண்டு புவிமகள் மகிழ்ச்சி அடைவாள். பூதானம் செய்தவனும், புனலில் மூழ்கியவனும், பஞ்சாக்கினி நடுவில் இருந்து தவம் செய்தவனும், வேள்விளைச் செய்தவனும், போரில் புறமுதுகிடாமல் முன்னேறியவனும் இகத்திலும், பரத்திலும் இன்பம் அடைவான்.

சுவர்க்கம் அடைதல்

அயோத்தி, காஞ்சி, மதுரை, மாயா, காசி, அவந்தி, துவாரகா ஆகிய ஏழில் ஒன்றில் மரித்தால் நிரதிசய இன்ப வீடடைவான். சந்நியாசம் பெற்றவன், விஷ்ணு பக்தி செய்பவன், ஸ்ரீராம, கிருஷ்ண நாம உச்சாடனம் செய்வோர், அவ்வாறு செய்து கொண்டே இருக்கையில் மரித்தால் பேரின்ப வீடு அடைவர். திருத்துழாய் பயிரிட்டவன், அதற்கு நீர் பாய்ச்சியவன் நல்லுலகடைவான். ஆபத்திலுள்ள பசு, பிராமணன், குழந்தைகளைத் தன்னுயிரைக் பணயம் வைத்த காப்பாற்றுபவன் தேவர்கள் எதிர் கொள்ள சுவர்க்கம் அடைவான். ஸ்ரீரங்கம், காசி, குரு÷க்ஷத்திரம், பிருகு ÷க்ஷத்திரம், பிரபாசதீர்த்தம், காஞ்சி, புஷ்கரம், பூதேஸ்வரம் ஆகிய புனித நகரங்களில் மாண்டவன் மோட்சமடைவான். வேத சாஸ்திரங்களை உணர்ந்தவர், கன்னிகை, பூமி, கிருகம், பசு, திலம், யானை, தானம் கொடுத்தோர், கிணறு, நடைவாவி, குளம், தேவாலயம் புதுப்பித்தோர் இவற்றைத் தோற்றுவித்தோரைக் காட்டிலும் அதிக புண்ணியம் பெற்று விண்ணுலகடைவர்.

25. ஆசௌம், துர்மரணம், குழந்தை பாபங்கள்

பிராமணனுக்குப் புத்திரன் பிறந்தாலும், பிராமணன் இறந்தாலும், தாயாதிகளுக்கு பத்து நாள் வரையில் தீட்டு (ஆசௌசம்) உண்டு. ஆசௌசமுடையவர்கள் ஓமங்கள், தேவ ஆராதனை செய்யக்கூடாது. அந்த நாட்களில் அவர்கள் வீட்டில் யாரும் உணவருந்தக் கூடாது. அகால மரணம், அயல்நாட்டில் மரணம், மிருகங்களால் மரணம் ஆகியவற்றிற்கு உடனே கருமம் செய்யக்கூடாது. கிரியைகள் துவங்கப்படுகிற அன்று முதலே ஆசௌசம் உண்டாகும். ஒருவன் இறந்த செய்தி கேட்டவுடன் ஸ்நானம் செய்துவிட வேண்டும்.

திருமணக்கோலம் கொண்டிருக்கும் காலத்திலும், யாகஞ்செய்யும் காலத்திலும், உற்சவம் செய்ய கங்கணம் பூண்டிருக்கும் காலத்திலும் ஆசௌசம் இல்லை. ஓர் ஆசௌசம் நேர்ந்த காலத்தில் இடையிலே வேறொரு ஆசௌசம் வந்தால் முன்னதாக வந்ததுடன் பின்னர் வந்த ஆசௌசமும் தாயத்தார்க்கு நிவர்த்தியாகும். பசு, பிராமணர், மங்கையரைப் பாதுகாக்கும் விஷயத்திலும், யுத்த பூமியிலும், ஒருவன் தன் உயிரை இழந்தால் அவனைச் சேர்ந்தவர்களுக்கு ஒருநாள் மட்டுமே ஆசௌசம் உண்டு.

துர் மரணம் அடைந்தால்!

முந்நூற்று அறுபது பலாச இலைகளின் காம்புகளால் மரித்தவனது உடலைப் போல் ஒரு பிரதிமை செய்ய வேண்டும். சிரசுக்கு நாற்பது, கழுத்துக்குப் பத்து, மார்புக்கு இருபது, வயிற்றுக்கு இருபது, தொடைகளுக்கு நூறு, இமைக்கு இருபது. இரு கரங்களுக்கு நூறு, முழந்தாள்களுக்கு முப்பது, இனக்குறிக்கு நாலு, விருஷணங்களுக்கு ஆறு, கால்களுக்குப் பத்தும் வைத்து; மறுபடியும் சிரசுக்குத் தேங்காய், முகத்துக்குப் பஞ்சரத்தினம், நாவுக்கு வாழைப்பழம், மூக்கிற்கு எள்ளுப் பூவும், காதுக்கு எள்ளும், நரம்புக்குத் தாமரைத் தண்டும், தசைக்கு அன்னமும், இரத்தத்திற்குத் தேனும், மயிர்களுக்குச் சவுரியும், தோலுக்கு மான்தோலும், ஸ்தனப் பிரதேசத்திற்குக் குன்றிமணியும், நாபிக்குத் தாமரைப் பூவும், விருஷணர்களுக்குப் பனங்காயும், வைத்து சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து சாஸ்திர முறைப்படிக் கிருத்தியங்கள் செய்தால் துர்மரணம் அடைந்தவன் நற்கதி அடைவான்.

குழந்தைகளின் பாபங்கள்

நான்கு முதல் பன்னிரண்டு வயது வரை குழந்தைகள் செய்கிற பாபங்கள் அவர்களுடைய பெற்றோரையே சேரும். பெற்றோர்கள் இல்லை எனில் காப்பாளர்களைச் சேரும். அத்தகைய பாபங்களுக்காக அவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் பாவம் குழந்தைகளுக்குச் சேராது.

கருட புராணம் முற்றிற்று.

விஷ்ணுவுக்கு கருடன் தந்த வரம்

ஆணவமும், அகங்காரமும் கர்வமும் ஒருவன் புகழையும் பெருமையையும் அழித்து, அவனை மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளிவிடும் என்பது தர்மநியாயம். ஆனால், தன் ஆணவத்தாலும் கர்வத்தாலும் விஷ்ணுவுக்கே சவால் விட்டு, அவரோடு போரிட்டுத் தோற்றுப் போனாலும், பெறற்கரிய பேற்றைப் பெற்றான் ஒருவன். அவன்தான், பகவான் விஷ்ணுவின் வாகனமாகப் பூஜிக்கப்படும் கருடன்.

யார் இந்தக் கருடன்?

சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யப முனிவரின் மனைவிகளில் இருவர் கத்ரு, வினதை என்பவர்கள். இவர்கள் இருவரும் சகோதரிகள் என்றாலும், ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டிருந்தனர். ஒருமுறை, அவர்கள் இருவரும் கஸ்யப முனிவரிடம் குழந்தைகள் பெற வேண்டி வரம் கேட்டனர். கத்ரு, தனக்கு எல்லோரும் கண்டு பயப்படத்தக்க வலிமைமிக்க ஆயிரம் குழந்தைகள் வேண்டும் என வரம் கேட்டாள். கஸ்யபரும் வரத்தைத் தந்தார்.

வினதையும் தன் பங்குக்கு வரம் கேட்டாள். எனது சகோதரிக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட வலிமையும் தேஜஸும் ஆற்றலும் மிக்க ஓரிரண்டு குழந்தைகள் பெற, வரம் வேண்டும் என்று கேட்டாள் அவள். அவளுக்கும், அவள் விரும்பியது கிடைக்க வரமளித்தார் கஸ்யப முனிவர்.

சில காலம் கழித்து, கத்ருவுக்கு ஆயிரம் நாகங்கள் குழந்தைகளாகப் பிறந்தன. வினதை கர்ப்பத்தில் இரண்டு முட்டைகள் தோன்றின. அவற்றில் ஒன்றை அவசரமாக உடைத்தாள் வினதை. அதிலிருந்து இடுப்புக்கு கீழே வளர்ச்சி இல்லாத ஒரு குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே தன் அவசரத்தால் தன்னை ஊனமாக்கிய தாயை, அவள் கத்ருவின் அடிமையாக வாழ்வாள் எனச் சாபமிட்டது குழந்தை. அந்தக் குழந்தைதான் அருணன் எனப் பெயர் பெற்று, சூரிய பகவானின் தேரோட்டியாகி இன்றும் வணங்கப்படுகிறார்.

சிறிது காலம் கழித்து, இரண்டாவது முட்டையிலிருந்து மனித உடலுடனும். கழுகின் தலையுடனும் ஓர் அபூர்வ குழந்தை பிறந்தது. கோடி சூர்யப் பிரகாசத்துடனும். எவராலும் வெல்லமுடியாத உடல் பலத்துடனும் தோன்றிய அந்தக் குழந்தைதான் கருடன். அண்ணன் தந்த சாபத்தால் அடிமையான தாயை விடுதலை செய்யப் பிறந்த மகன் இவன்.
ஒருமுறை, கத்ருவுக்கும் வினதைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் வானத்தில் பார்த்த உச்சைசிரவஸ் என்ற தேவலோகக் குதிரையைப் பற்றிய விவாதம் அது. உச்சைசிரவஸ் முழுவதுமாக வெள்ளை நிறமானது என்றாள் வினதை. இல்லை இல்லை.... அதன் உடல்தான் வெள்ளை நிறம், ஆனால் வால் கறுப்பானது என்று வேண்டுமென்றே கூறினாள் கத்ரு.
இருவரில் யார் சொன்னது சரியோ, அவர்களே ஜெயிப்பார்கள்; மற்றவளும் அவள் குழந்தைகளும் ஜெயித்தவளுக்கு அடிமையாக வேண்டும் என்பது பந்தயம்! கத்ருவுக்கு தான் சொன்னது பொய் என்று தெரிந்தும், பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டாள். எப்படியும் வினதையை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தன் பிள்ளைகளான நாகங்களில் கருமை நிறம் கொண்டவற்றை அழைத்து, உச்சைசிரவஸின் வாலைச் சுற்றிக்கொள்ளும்படிக் கட்டளையிட்டாள். அவர்களும் அதன்படியே செய்தார்கள். பிறகு கத்ருவும் வினதையும் உச்சைசிரஸ் குதிரையை உற்றுநோக்கினார்கள். அதன் வால் கறுப்பாகத் தெரிந்தது. தான் தோற்றுவிட்டதாகக் கருதி, தோல்வியை ஒப்புக்கொண்டாள் வினதை. தோல்வியை ஒப்புக்கொண்டதால், வினதையும் அவள் குழந்தைகளான அருணன், கருடன் ஆகியோரும், கத்ருவுக்கும் அவள் பெற்ற நாகங்களுக்கும் அடிமையாயினர்.

இப்படியே சில காலம் கழிந்தது. தாங்கள் ஏன் நாகங்களுக்கு அடிமையாக வாழ்கிறோம் என்பதைத் தாயிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட கருடன், அதிலிருந்து விடுபட வழி உண்டா என்றும் யோசித்தான். தன் சகோதரர்களான நாகங்களை அழைத்து, என்ன செய்தால் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று கேட்டான். மரணமில்லாமல் வாழ வேண்டுமென விரும்பிய கத்ருவும் நாகங்களும் தேவலோக அமிர்தத்தை எடுத்து வந்து எங்களுக்குக் கொடுத்தால்தான் நீங்கள் எல்லோரும் அடிமைத்தளையில் இருந்து விடுபட முடியும் என்று கூறினர்.

அதையடுத்து தேவலோகம் சென்றான் கருடன். இந்திரனைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறி, தேவலோக அமிர்தத்தைத் தருமாறு கேட்டான். நாகங்கள் மரணமில்லா வாழ்வு பெற்றால் உலகம் என்னாவது என்று யோசித்த இந்திரன். அமிர்தத்தைத் தர மறுத்தான்.

தன் பலத்தில் நம்பிக்கை கொண்டிருந்த கருடன், இந்திரனுடன் யுத்தம் செய்து, அவனை வென்று அமிர்த கலசத்தை அடைய விரும்பினான். அதையடுத்து, இருவரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். கருடனுக்கும் இந்திரனுக்கும் நடந்த யுத்தத்தில் கருடனே வென்றான். தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு நாகங்களுக்குக் கொடுக்கப் புறப்பட்டான்.

இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டிருந்த மகாவிஷ்ணு, அதன்பின்னரும் சும்மா இருக்க விரும்பவில்லை. அமிர்த கலசத்துடன் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த கருடனை வழிமறித்தார். விஷ நாகங்களுக்கு அமிர்தம் தந்தால், அவை மரணமில்லாமல் வாழ்ந்து, மனித இனத்தையும் தேவர்களையும் அழித்துவிடும். இது வேண்டாம் என அறிவுரை கூறினார்.
ஆனால், கருடனோ எதற்கும் செவி சாய்க்கவில்லை. அடிமைத் தளையிலிருந்து விடுபடவேண்டும் என்ற வெறியில் அவன் விஷ்ணுவையே துச்சமாகக் கருதினான். இந்திரனை வென்ற ஆணவத்தில், துணிவிருந்தால் என்னோடு போர் புரிந்து ஜெயித்து, அதன்பின்பு அமிர்த கலசத்தை நீங்களே தேவலோகத்தில் கொடுத்துவிடுங்கள் என்று விஷ்ணுவுக்கே சவால் விட்டான்.

சற்று நேரம் விஷ்ணு யோசித்தார். தன் தாயின்மீது கொண்ட பக்தியால் தேவேந்திரனையே எதிர்க்கத் துணிந்த கருடனின் வீரத்தை எண்ணி வியந்தார். அதோடு, அமிர்த கலசம் கையில் இருந்தும், அந்த அமிர்தத்தை தான் அருந்தி அழியாநிலை பெற விரும்பாமல் சென்றுகொண்டிருக்கும் அவனின் தன்னலமற்ற தன்மையை மனத்தால் பாராட்டினார். கருடனுக்குள் ஆணவமும் அகங்காரமும் இருந்தாலும் அவனுக்குள் இருந்த உயர்ந்த பண்புகளையும், அவனது விடுதலை வேட்கையையும் கண்டு வியந்த விஷ்ணு அவனோடு போரிடுவதைப் பெருமையாகக் கருதினார்.

விஷ்ணுவுக்கும் கருடனுக்கும் யுத்தம் ஆரம்பமானது. கஸ்யப முனிவரிடம் தான் கற்ற வித்தைகளையும் மாயா ஜாலங்களையும் காட்டிக் கடும் போர் புரிந்தான் கருடன். ஒரு தாய் தன் குழந்தையோடு விளையாடும்போது, தான் தோற்றுப்போவதுபோல நடிப்பாள். இது குழந்தையைச் சந்தோஷப்படுத்துவதற்காக! அது போல விஷ்ணுவும் கருடனை ஜெயிக்க வைப்பதுபோல நடித்துக்கொண்டு, அவனுடன் போர் செய்துகொண்டிருந்தார். வெற்றி தோல்வி நிர்ணயமாகாமல் 21 நாட்கள் போர் தொடர்ந்தது. அப்போது பகவான் விஷ்ணு கருடனுக்கு நல்வழிகாட்ட மீண்டும் முயற்சி செய்தார்.
கருடா! உன் தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காபாற்ற நீ எடுத்துக்கொண்ட இந்த விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன். இருந்தாலும், எல்லா சாஸ்திரங்களும் கற்ற உனக்கு, தேவலோக அமிர்தத்தை எடுத்து நாகங்களுக்குக் கொடுப்பது தர்மமாகாது என்பது மட்டும் ஏன் தெரியவில்லை? நாம் வீணாகப் போர் புரிவதில் இருவருக்கும் லாபமில்லை. நீ வேண்டும் வரங்களைக் கேள். தருகிறேன்! என்றார்.

இப்போது என் கையில் உள்ள அமிர்த கலசத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றால், என் தாயும், சகோதரனும், நானும் அடிமைத்தளையில் இருந்து விடுபட வழிசெய்யுங்கள் என்று வரம் கேட்டிருக்கலாம் கருடன். ஆனால் கர்வம் தலைக்கேறியிருந்த கருடனுக்கு அப்படிக் கேட்கத் தோன்றவில்லை.

நீ யார் எனக்கு வரம் தர? வேண்டுமானால் நீ ஏதாவது வரம் கேள். நான் தருகிறேன் அதன்பிறகாவது நான் சொல்ல வழிவிடு! என்றான் கருடன், அகம்பாவமாக.

மகாவிஷ்ணு அப்போதும் விட்டுப் பிடித்தார். என்ன வரம் கேட்டாலும் தருவாயா? அப்புறம் வாக்குத் தவறமாட்டாயே? என்று கேட்டார்.  நான் வாக்குத் தவறமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத்தான் உங்களையே எதிர்த்து நிற்கிறேன். என்ன வரமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான் கருடன். அப்படியானால், நீயே எனக்கு வாகனமாகிப் பணிபுரியும் பாக்கியத்தை வரத்தைத் தா! என்றார் விஷ்ணு.
மகாவிஷ்ணுவின் இந்தப் பதிலால் கருடனின் கர்வம் வேரோடு அழிந்தது. அவனின் அகக் கண்கள் திறந்தன. அவன் விஷ்ணுவின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரை எதிர்த்துப் போரிட்டதற்காக மன்னிப்புக் கோரினான். தொடர்ந்து அமிர்த கலசத்தை விஷ்ணுவின் பாதத்தில் வைத்து நமஸ்கரித்தான். அமிர்தம் அருந்தாமலேயே, நீ மரணமில்லாமல் சிரஞ்சீவியாக என்னுடன் இருப்பாய் என்று விஷ்ணு ஆசி கூறினார்.

தொடர்ந்து, தான் கொண்டு சென்ற அமிர்த கலசத்தை தர்ப்பைகள் பரப்பி அதன்மீது வைத்தான் கருடன். அதை அவன் தேவேந்திரனிடம் திருப்பி அளித்த பிறகு, அமிர்த குடம் இருந்த தர்ப்பைகளை நாகங்கள் நக்கின. அப்போது அவற்றின் நாக்குகள் பிளவுபட்டன! ஸ்ரீமகாவிஷ்ணு கருணைகூர்ந்து விஷமில்லா நாகங்கள் பல காலம் வாழும். விஷமுள்ள நாகங்கள் சில காலம் வாழும். நல்ல நாங்களை மனிதர்கள் பூஜித்து வழிபடுவார்கள் என்று அருளினார். தொடர்ந்து.... வினதையும் கருடனும், அவனது சகோதரனும் கத்ரு மற்றும் நாகங்களின் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டனர். கருடன் தன் தாய் வினதை மற்றும் கத்ரு ஆகியோரை வணங்கி ஆசிபெற்று விஷ்ணு சேவையில் தொடர்ந்து ஈடுபட்டான்.

எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் சந்நிதியை நோக்கி வணங்கியபடி நிற்கும் கருடனை நாம் கருடாழ்வார் என்றே அழைத்து பூஜிக்கிறோம். நாகங்களுக்கும் கருடனுக்கும் பகை என்றாலும், விஷ்ணுவின் சந்நிதியில் ஆதிசேஷன் எனும் நாகமும், கருடாழ்வாரும் நட்பு கொண்டே விஷ்ணு சேவை செய்கின்றனர்.


Overview of the Garuda Purana

1. Structure and Composition:

- The Garuda Purana is traditionally divided into two parts: the Purva Khanda (First Part) and the Uttara Khanda (Second Part). It consists of around 19,000 verses, though the exact number can vary. The text is written in the form of a dialogue between Lord Vishnu and Garuda.

2. Topics Covered:

- Afterlife and Eschatology: The Garuda Purana is well-known for its detailed descriptions of what happens after death, including the journey of the soul, the various hells (Narakas), and the process of judgment based on one's karma. It describes the punishments for various sins and the rewards for good deeds.

- Funeral Rites: The text provides guidelines for performing Antyesti (funeral rites), emphasizing the importance of proper rituals for ensuring the peaceful passage of the soul to the afterlife. It covers the procedures for cremation, rituals for the deceased, and the significance of offering food and prayers to ancestors (Shraddha).

- Philosophy and Ethics: The Garuda Purana also includes discussions on Dharma (righteousness), karma (action), and the pursuit of Moksha (liberation). It provides moral and ethical teachings, encouraging a life of virtue, truthfulness, and devotion to God.

- Ayurveda and Astrology: In addition to its religious and philosophical content, the Garuda Purana contains sections on Ayurveda (the traditional Indian system of medicine) and astrology. It offers insights into medical treatments, dietary recommendations, and the influence of celestial bodies on human life.

- Mantras and Hymns: The text includes a variety of mantras, prayers, and hymns for different purposes, such as protection, prosperity, and spiritual growth.

3. Religious and Cultural Significance:

- The Garuda Purana is an important text in Hindu rituals related to death and ancestor worship. It provides a framework for understanding the spiritual aspects of life and death, offering solace and guidance to the living.

4. Ethical and Moral Guidance:

- The Purana emphasizes leading a righteous life in accordance with Dharma, advocating for ethical behavior, honesty, and devotion. It highlights the consequences of actions and the importance of good deeds for a favorable afterlife.

5. Influence and Reception:

- The Garuda Purana has had a significant impact on Hindu practices and beliefs related to death, afterlife, and morality. Its teachings continue to influence the rituals and cultural practices surrounding death and ancestor worship in Hindu society.



Share



Was this helpful?