இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பாலகாண்டம்

Kamba Ramayanam is a Tamil epic that was composed by the poet Kambar in the 12th century. It is a retelling of the Indian epic Ramayana originally written in Sanskrit by Valmiki. The Kamba Ramayanam is highly regarded for its literary elegance and has been divided into six books or "Kandams," each focusing on different parts of Lord Rama's life.


பாலகாண்டம்

கடவுள் வாழ்த்து

#1
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

#2
சிற்குணத்தர் தெரிவு_அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றினுள்
முற்குணத்தவரே முதலோர் அவர்
நல் குண கடல் ஆடுதல் நன்று-அரோ

#3
ஆதி அந்தம் அரி என யாவையும்
ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார்

அவையடக்கம்

#4
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இ
காசு இல் கொற்றத்து இராமன் கதை-அரோ

#5
முத்தமிழ் துறையின் முறை நோக்கிய
உத்தம கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்ன பெறுபவோ

#6
துறை அடுத்த விருத்த தொகை கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மா செவி
பறை அடுத்தது போலும் என் பா-அரோ

#7
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்வி புலமையினோர் புகல்
தெய்வ மா கவி மாட்சி தெரிக்கவே

#8
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே

#9
அறையும் ஆடு_அரங்கும் பட பிள்ளைகள்
தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ

நூல் வழி

#10
தேவபாடையின் இ கதை செய்தவர்
மூவர் ஆனவர்-தம்முளும் முந்திய
நாவினான் உரையின்-படி நான் தமிழ்
பாவினால் இது உணர்த்திய பண்பு-அரோ

இடம்

#11
நடையின்-நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதார பேர்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்-வயின் தந்ததே


1 ஆற்றுப்படலம்

#1
ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலா
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்
#2
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலை திருமங்கை-தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே
#3
பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின் மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே
#4
புள்ளி மால் வரை பொன் என நோக்கி வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்து என தாரைகள்
உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அ
வள்ளியோரின் வழங்கின மேகமே
#5
மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என
ஞானம் முன்னிய நான்மறையாளர் கை
தானம் என்ன தழைத்தது நீத்தமே
#6
தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன்
நிலை நிலாது இறை நின்றது போலவே
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின்_மாதரை ஒத்தது அ வெள்ளமே
#7
மணியும் பொன்னும் மயில் தழை பீலியும்
அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண்
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்
வணிக மாக்களை ஒத்தது அ வாரியே
#8
பூ நிரைத்தும் மென் தாது பொருந்தியும்
தேன் அளாவியும் செம்பொன் விராவியும்
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும்
வான வில்லை நிகர்த்தது அ வாரியே
#9
மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்
அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய
நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே
#10
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பு இகந்து
ஊக்கமே மிகுந்து உள் தெளிவு இன்றியே
தேக்கு எறிந்து வருதலின் தீம் புனல்
வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே
#11
பணை முக களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின்
மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால்
புணரி மேல் பொர போவதும் போன்றதே
#12
இரவி-தன் குலத்து எண்_இல் பல் வேந்தர்-தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது
சரயு என்பது தாய் முலை அன்னது இ
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்
#13
கொடிச்சியர் இடித்த சுண்ணம் குங்குமம் கோட்டம் ஏலம்
நடுக்கு உறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம்
கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய்
அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே
#14
எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி
வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி
அயில் முக கணையும் வில்லும் வாரி கொண்டு அலைக்கும் நீரால்
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே
#15
செறி நறும் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும்
உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே
#16
கதவினை முட்டி மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி
நுதல் அணி ஓடை பொங்க நுகர் வரி வண்டு கிண்ட
ததை மணி சிந்த உந்தி தறி இற தட கை சாய்த்து
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே
#17
முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி
எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே
#18
காத்த கால் மள்ளர் வெள்ள கலி பறை கறங்க கைபோய்
சேர்த்த நீர் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே
#19
கல்லிடை பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம்
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன
தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி
பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே
#20
தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும்
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும்
மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும்
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே

2 நாட்டுப்படலம்

#1
வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்
தீம் கவி செவிகள் ஆர தேவரும் பருக செய்தான்
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்
#2
வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர்
குரம்பு எலாம் செம்பொன் மேதி குழி எலாம் கழுநீர் கொள்ளை
பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர்
கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம்
#3
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை
சாறு பாய் ஓதை வேலை சங்கின் வாய் பொங்கும் ஓசை
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி
#4
தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க
தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ
#5
தாமரை படுவ வண்டும் தகை வரும் திருவும் தண் தார்
காமுகர் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும்
மா முகில் படுவ வாரி பவளமும் வயங்கு முத்தும்
நா முதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ
#6
நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை
#7
படை உழ எழுந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும்
இடறிய பரம்பில் காந்தும் இன மணி தொகையும் நெல்லின்
மிடை பசும் கதிரும் மீனும் மென் தழை கரும்பும் வண்டும்
கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ
#8
தெள் விளி சீறியாழ் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி
வள் விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல்
வெள்ளி வெண் மாடத்து உம்பர் வெயில் விரி பசும்பொன் பள்ளி
எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே
#9
ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும்
சோலை வீழ் கனியின் தேனும் தொடை இழி இறாலின் தேனும்
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ
#10
பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை
உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர்
பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்
#11
புது புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த
கதுப்பு உறு வெறியே நாறும் கரும் கடல் தரங்கம் என்றால்
மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும் மின்னார் மிகுதியை விளம்பலாமே
#12
வெண் தள கலவை சேறும் குங்கும விரை மென் சாந்தும்
குண்டல கோல மைந்தர் குடைந்த நீர் கொள்ளை சாற்றின்
தண்டலை பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும்
வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ
#13
சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம்
மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த
பால் உண்டு துயில பச்சை தேரை தாலாட்டும் பண்ணை
#14
குயில் இனம் வதுவை செய்ய கொம்பிடை குனிக்கும் மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய
பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும்
துயில் எழ தும்பி காலை செவ்வழி முரல்வ சோலை
#15
பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்
பருந்தொடு நிழல் சென்று அன்ன இயல் இசை பயன் துய்ப்பாரும்
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணி விரும்புவாரும்
#16
கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி
உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி
வெறுப்பு இல களிப்பின் வெம் போர் மதுகைய வீர ஆக்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்
#17
எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து
உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும்
#18
முள் அரை முளரி வெள்ளை முளை இற முத்தும் பொன்னும்
தள்ளுற மணிகள் சிந்த சலஞ்சலம் புலம்ப சாலில்
துள்ளி மீன் துடிப்ப ஆமை தலை புடை கரிப்ப தூம்பின்
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும்
#19
முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வ பூதலம் தன்னில் பொன்னின்
நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல்
#20
எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
குறிகொளும் போத்தின் கொல்வார் கொன்ற நெல் குவைகள் செய்வார்
வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார்
நெறிகளும் புதைய பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார்
#21
கதிர் படு வயலின் உள்ள கடி கமழ் புனலின் உள்ள
முதிர் பயன் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள
பதிபடு கொடியின் உள்ள படி வளர் குழியின் உள்ள
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார்
#22
முந்து மு கனியின் நானா முதிரையின் முழுத்த நெய்யின்
செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின்
தம்தம் இல் இருந்து தாமும் விருந்தோடும் தமரினோடும்
அந்தணர் அமுத உண்டி அயில் உறும் அமலைத்து எங்கும்
#23
பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என
கருதி அன்பொடு காமுற்று வைகலும்
மருத வேலியின் வைகின வண்டு-அரோ
#24
வேளை வென்ற முகத்தியர் வெம் முலை
ஆளை நின்று முனிந்திடும் அங்கு ஓர்-பால்
பாளை தந்த மது பருகி பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம்
#25
ஈர நீர் படிந்து இ நிலத்தே சில
கார்கள் என்ன வரும் கரு மேதிகள்
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை
தாரை கொள்ள தழைப்பன சாலியே
#26
முட்டு_இல் அட்டில் முழங்குற வாக்கிய
நெட்டு_உலை கழுநீர் நெடு நீத்தம் தான்
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்
நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே
#27
சூட்டு உடை துணை தூ நிற வாரணம்
தாள் துணை குடைய தகை-சால் மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் என
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம்-அரோ
#28
தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்
தேயும் நுண் இடை சென்று வணங்கவும்
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்
#29
தினை சிலம்புவ தீம் சொல் இளம் கிளி
நனை சிலம்புவ நாகு இள வண்டு பூம்
புனை சிலம்புவ புள் இனம் வள்ளியோர்
மனை சிலம்புவ மங்கல வள்ளையே
#30
குற்ற பாகு கொழிப்பன கோள் நெறி
கற்றிலாத கரும் கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து தம் முன்றிலில்
சிற்றில் கோலி சிதறிய முத்தமே
#31
துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்து என தாக்குறும் ஒல் ஒலி
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே
#32
கன்று உடை பிடி நீக்கி களிற்று_இனம்
வன் தொடர் படுக்கும் வன வாரி சூழ்
குன்று உடை குல மள்ளர் குழூஉ குரல்
இன் துணை களி அன்னம் இரிக்குமே
#33
வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி
துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி
புள்ளி கொள்வன பொன் விரி புன்னைகள்
பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே
#34
கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும் குரவை கடைசியர்
புன் தலை புனம் காப்பு உடை பொங்கரில்
சென்று இசைக்கும் நுளைச்சியர் செவ்வழி
#35
சேம்பு கால் பொர செங்கழுநீர் குள
தூம்பு கால சுரி வளை மேய்வன
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை
பாம்பு நான்று என பாய் பசும் தேறலே
#36
பெரும் தடம் கண் பிறை_நுதலார்க்கு எலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே
#37
பிறை முக தலை பெட்பின் இரும்பு போழ்
குறை நறை கறி குப்பை பருப்பொடு
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசி குவை
உறைவ கோட்டம் இல் ஊட்டிடம்-தோறுமே
#38
கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்
#39
கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால்
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே
#40
நெறி கடந்து பரந்தன நீத்தமே
குறி அழிந்தன குங்கும தோள்களே
சிறிய மங்கையர் தேயும் மருங்குலே
வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே
#41
அகில் இடும் புகை அட்டில் இடும் புகை
நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை
புகலும் வேள்வியில் பூம் புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும்
#42
இயல் புடைபெயர்வன மயில் மணி இழையின்
வெயில் புடைபெயர்வன மிளிர் முலை குழலின்
புயல் புடைபெயர்வன பொழில் அவர் விழியின்
கயல் புடைபெயர்வன கடி கமழ் கழனி
#43
இடை இற மகளிர்கள் எறி புனல் மறுக
குடைபவர் துவர் இதழ் மலர்வன குமுதம்
மடை பெயர் அனம் என மட நடை அளக
கடைசியர் முகம் என மலர்வன கமலம்
#44
விதியினை நகுவன அயில் விழி பிடியின்
கதியினை நகுவன அவர் நடை கமல
பொதியினை நகுவன புணர் முலை கலை வாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம்
#45
பகலினொடு இகலுவ படர் மணி மடவார்
நகிலினொடு இகலுவ நளி வளர் இளநீர்
துகிலினொடு இகலுவ சுதை புரை நுரை கார்
முகிலினொடு இகலுவ கடி மண முரசம்
#46
காரொடு நிகர்வன கடி பொழில் கழனி
போரொடு நிகர்வன பொலன் வரை அணை சூழ்
நீரொடு நிகர்வன நிறை கடல் நிதி சால்
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம்
#47
நெல் மலை அல்லன நிரை வரு தரளம்
சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம்
நல் மலை அல்லன நதி தரு நிதியம்
பொன் மலை அல்லன மணி படு புளினம்
#48
பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்
சந்தன வனம் அல சண்பக வனம் ஆம்
நந்தன வனம் அல நறை விரி புறவம்
#49
கோகிலம் நவில்வன இளையவர் குதலை
பாகு இயல் கிளவிகள் அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம்
#50
பழையர்-தம் மனையன பழ நறை நுகரும்
உழவர்-தம் மனையன உழு தொழில் புரியும்
மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின்
கிழவர்-தம் மனையன கிளை பயில் வளை யாழ்
#51
கோதைகள் சொரிவன குளிர் இள நறவம்
பாதைகள் சொரிவன பரு மணி கனகம்
ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம்
காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்
#52
இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தை போல்
தடம் கொள் சோலை-வாய் மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன தோகை மஞ்ஞையே
#53
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்
#53
எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும்
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்
தள்ளும் நீர்மையின் தலைமயங்குமே
#55
உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினை
பெயரும் பல் கதி பிறக்குமாறு போல்
அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர்
தயிரும் வேரியும் தலைமயங்குமே
#56
கூறு பாடலும் குழலின் பாடலும்
வேறுவேறு நின்று இசைக்கும் வீதி-வாய்
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என
சாறும் வேள்வியும் தலைமயங்குமே
#57
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும் நேர்
தாக்கின் தாக்குறும் பறையும் தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும் மள்ளர்-தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே
#58
தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களை
பாலின் ஊட்டுவார் செம் கை பங்கயம்
வால் நிலா உற குவிவ மானுமே
#59
பொற்பின் நின்றன பொலிவு பொய் இலா
நிற்பின் நின்றன நீதி மாதரார்
அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்
கற்பின் நின்றன கால மாரியே
#60
சோலை மா நிலம் துருவி யாவரே
வேலை கண்டு தாம் மீள வல்லவர்
சாலும் வார் புனல் சரயுவும் பல
காலின் ஓடியும் கண்டது இல்லையே
#61
வீடு சேர நீர் வேலை கால் மடுத்து
ஊடு பேரினும் உலைவு இலா நலம்
கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம் நகரம் கூறுவாம்

3 நகர படலம்

#1
செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல்
எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம்
#2
நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ
இலகு பூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய
மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன்
உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம்
#3
உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல்
கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான்
அமைப்பு_அரும் காதல்-அது பிடித்து உந்த அந்தரம் சந்திராதித்தர்
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ
#4
அயில் முக குலிசத்து அமரர்_கோன் நகரும் அளகையும் என்று இவை அயனார்
பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான்
மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார்
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ
#5
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறை பொருளே
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால்
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல்
#6
தங்கு பேர் அருளும் தருமமும் துணையா தம் பகை புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ
#7
நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய்
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை
நூல் வரை தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நுவல அரும் உணர்வே
போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே
#8
மேவ_அரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால்
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண் பொறி அடக்கிய செயலால்
காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும் சூலத்தால் காளியை ஒக்கும்
யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும்
#9
பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால்
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள்
அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான்
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே
#10
கோலிடை உலகம் அளத்தலின் பகைஞர் முடி தலை கோடலின் மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின்
வேலொடு வாள் வில் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கு_அரு வலத்தின்
சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே
#11
சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின்
இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார்
மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ
#12
பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும்
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர்
சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும்
ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே
#13
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம்
#14
ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா
மேகம் மொண்டு கொண்டு எழுந்து விண் தொடர்ந்த குன்றம் என்று
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே
#15
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள்
கந்தம் நாறு பங்கயத்த கானம் மான மாதரார்
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம்
வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே
#16
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கு இடை கிடந்து பொங்கு இடங்கர் மா
தாழ்ந்த வங்க வாரியில் தடுப்ப ஒணா மதத்தினால்
ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே
#17
ஈரும் வாளின் வால் விதிர்த்து எயிற்று இளம் பிறை குலம்
பேர மின்னி வாய் விரித்து எரிந்த கண் பிறங்கு தீ
சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே
#18
ஆளும் அன்னம் வெண்குடை குலங்களா அரும் கரா
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ
தாள் உலாவு பங்கய தரங்கமும் துரங்கமா
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே
#19
விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி உள்ளுற
பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத்துற படுத்தலின்
தளிந்த கல் தலத்தொடு அ சலத்தினை தனித்துற
தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே
#20
அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்_கிடந்த ஆழியை
துன்னி வேறு சூழ்_கிடந்த தூங்கு வீங்கு இருள் பிழம்பு
என்னலாம் இறும்பு சூழ்_கிடந்த சோலை எண்ணில் அ
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே
#21
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால்
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான்
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே
#22
தா_இல் பொன் தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயிர்த்த கற்பக பொதும்பர் புக்கு ஒதுக்குமால்
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது
ஓவிய புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே
#23
கல் அடித்து அடுக்கி வாய் பளிங்கு அரிந்து கட்டி மீது
எல் உடை பசும்பொன் வைத்து இலங்கு பல் மணி குலம்
வில்லிடை குயிற்றி வாள் விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிட கிடத்தி வச்சிரத்த கால் பொருத்தியே
#24
மரகதத்து இலங்கு போதிகை தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி மீது பொன் குயிற்றி மின் குலாம்
நிரை மணி குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளி மேல்
விரவு கைத்தலத்தின் உய்த்த மேதகத்தின் மீது-அரோ
#25
ஏழ் பொழிற்கும் ஏழ் நில தலம் சமைத்தது என்ன நூல்
ஊழ் உற குறித்து அமைத்த உம்பர் செம்பொன் வேய்ந்து மீ
சூழ் சுடர் சிரத்து நல் மணி தசும்பு தோன்றலால்
வாழ் நில குல கொழுந்தை மௌலி சூட்டி அன்னவே
#26
திங்களும் கரிது என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதை உடை தவள மாளிகை
வெம் கடும் கால் பொர மேக்கு நோக்கிய
பொங்கு இரும் பாற்கடல் தரங்கம் போலுமே
#27
புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை
தள்ள_அரும் தமனிய தகடு வேய்ந்தன
எள்ள_அரும் கதிரவன் இள வெயில் குழாம்
வெள்ளியங்கிரி மிசை விரிந்த போலுமே
#28
வயிர நல் கால் மிசை மரகத துலாம்
செயிர் அற போதிகை கிடத்தி சித்திரம்
உயிர் பெற குயிற்றிய உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன அளவு_இல் கோடியே
#29
சந்திர காந்தத்தின் தலத்த சந்தன
பந்தி செய் தூணின் மேல் பவள போதிகை
செம் தனி மணி துலாம் செறிந்த திண் சுவர்
இந்திர நீலத்த எண்_இல் கோடியே
#30
பாடக கால் அடி பதுமத்து ஒப்பன
சேடரை தழீஇயின செய்ய வாயின
நாடக தொழிலின நடுவு துய்யன
ஆடக தோற்றத்த அளவு_இலாதன
#31
புக்கவர் கண் இமை பொருந்து உறாது ஒளி
தொக்குடன் தயங்கி விண்ணவரின் தோன்றலால்
திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன உம்பர் நாட்டினும்
#32
அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும்
தணிவன அறநெறி தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில பகலை வென்றன
#33
வானுற நிவந்தன வரம்பு_இல் செல்வத்த
தான் உயர் புகழ் என தயங்கு சோதிய
ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா
கோன் நிகர் குடிகள்-தம் கொள்கை சான்றன
#34
அருவியின் தாழ்ந்து முத்து அலங்கு தாமத்த
விரி முகில்_குலம் என கொடி விராயின
பரு மணி குவையன பசும்பொன் கோடிய
பொரு மயில் கணத்தன மலையும் போன்றன
#35
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின
முகிலொடு வேற்றுமை தெரிகலா முழு
துகிலொடு நெடும் கொடி சூலம் மின்னுவ
பகல் இடு மின் அணி பரப்பு போன்றவே
#36
துடி இடை பணை முலை தோகை அன்னவர்
அடி இணை சிலம்பு பூண்டு அரற்று மாளிகை
கொடியிடை தரள வெண் கோவை சூழ்வன
கடி உடை கற்பகம் கான்ற மாலையே
#37
காண்வரு நெடு வரை கதலி கானம் போல்
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன
வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும்
சேண் மதி தேய்வது அ கொடிகள் தேய்க்கவே
#38
பொன் திணி மண்டபம் அல்ல பூ தொடர்
மன்றுகள் அல்லன மாட_மாளிகை
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே
#39
மின் என விளக்கு என வெயில் பிழம்பு என
துன்னிய தமனிய தொழில் தழைத்த அ
கன்னி நல் நகர் நிழல் கதுவலால்-அரோ
பொன்னுலகு ஆயது அ புலவர் வானமே
#40
எழும் இடத்து அகன்று இடை ஒன்றி எல் படு
பொழுது இடை போதலின் புரிசை பொன் நகர்
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை
நிழல் என பொலியுமால் நேமி வான் சுடர்
#41
ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்
தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறு மேல்
பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ
#42
குழல் இசை மடந்தையர் குதலை கோதையர்
மழலை அம் குழல் இசை மகர யாழ் இசை
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை
பழையர்-தம் சேரியில் பொருநர் பாட்டு இசை
#43
கண்ணிடை கனல் சொரி களிறு கால் கொடு
மண்ணிடை வெட்டுவ வாள் கை மைந்தர்-தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன
சுண்ணம் அ குழிகளை தொடர்ந்து தூர்ப்பன
#44
பந்துகள் மடந்தையர் பயிற்றுவார் இடை
சிந்துவ முத்து_இனம் அவை திரட்டுவார்
அந்தம்_இல் சிலதியர் ஆற்ற குப்பைகள்
சந்திரன் ஒளி கெட தழைப்ப தண் நிலா
#45
அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர்
கரும் கடைக்கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல் போல் தேய்வன வளர்வது ஆசையே
#46
பொழிவன சோலைகள் புதிய தேன் சில
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன அன்னவை நுழைய நோவொடு
குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே
#47
இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை
நிறம் கிளர் பாடலான் நிமிர்வ அ வழி
கறங்குவ வள் விசி கருவி கண் முகிழ்த்து
உறங்குவ மகளிரோடு ஓதும் கிள்ளையே
#48
குதை வரி சிலை நுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுக தொழில்-கொடு பழிப்பு_இலாதன
ததை மலர் தாமரை அன்ன தாளினால்
உதைபட சிவப்பன உரவு தோள்களே
#49
பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு என
பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல்
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே
#50
தணி மலர் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன
திணி சுடர் நெய் உடை தீ விளக்கமோ
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே
#51
பதங்களில் தண்ணுமை பாணி பண் உற
விதங்களின் விதி முறை சதி மிதிப்பவர்
மதங்கியர் அ சதி வகுத்து காட்டுவ
சதங்கைகள் அல்லன புரவி தார்களே
#52
முளைப்பன முறுவல் அம் முறுவல் வெம் துயர்
விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்-தொறும்
இளைப்பன நுண் இடை இளைப்ப மென் முலை
திளைப்பன முத்தொடு செம்பொன் ஆரமே
#53
இடை இடை எங்கணும் களி அறாதன
நடை இள அன்னங்கள் நளின நீர் கயல்
பெடை இள வண்டுகள் பிரசம் மாந்திடும்
கட கரி அல்லன மகளிர் கண்களே
#54
தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும் விழும்-தொறும் மண்ணும் கீழ் உற
குழை விழும் அதில் விழும் கொடி திண் தேர்களே
#55
ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன
சூடுவார் இகழ்ந்த அ தொங்கல் மாலைகள்
ஓடுவார் இழுக்குவது ஊடல் ஊடு உற
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே
#56
இளைப்பு_அரும் குரங்களால் இவுளி பாரினை
கிளைப்பன அ வழி கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி அவை ஒளிர மீது தேன்
துளிப்பன குமரர்-தம் தோளின் மாலையே
#57
விலக்க_அரும் கரி மதம் வேங்கை நாறுவ
குல கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ
கல-கடை கணிப்ப அரும் கதிர்கள் நாறுவ
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே
#58
கோவை இ நகரொடு எண் குறிக்கலாத அ
தேவர்-தம் நகரியை செப்புகின்றது என்
யாவையும் வழங்கு இடத்து இகலி இ நகர்
ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே
#59
அதிர் கழல் ஒலிப்பன அயில் இமைப்பன
கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம்
முதிர்வு உற கமழ்வன முத்தம் மின்னுவ
மதுகரம் இசைப்பன மைந்தர் ஈட்டமே
#60
வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின்
கிளை ஒலி முழவு ஒலி கின்னரத்து ஒலி
துளை ஒலி பல்_இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே
#61
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்
பன்ன அரும் கலை தெரி பட்டி மண்டபம்
#62
இரவியின் சுடர் மணி இமைக்கும் தோரண
தெரிவினின் சிறியன திசைகள் சேண் விளங்கு
அருவியின் பெரியன ஆனை தானங்கள்
பரவையின் பெரியன புரவி பந்தியே
#63
சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம்
வாளிகள் அன்னவை மலர்வ மற்று அவை
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே
#64
மன்னவர் கழலொடு மாறு கொள்வன
பொன் அணி தேர் ஒலி புரவி தார் ஒலி
இன் நகையவர் சிலம்பு ஏங்க ஏங்குவ
கன்னியர் குடை துறை கமல அன்னமே
#65
ஊடவும் கூடவும் உயிரின் இன் இசை
பாடவும் விறலியர் பாடல் கேட்கவும்
ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும் பொழுது போம் சிலர்க்கு அ தொல் நகர்
#66
முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்
எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும்
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர்
#67
கரியொடு கரி எதிர் பொருத்தி கை படை
வரி சிலை முதலிய வழங்கி வால் உளை
புரவியில் பொரு_இல் செண்டு ஆடி போர் கலை
தெரிதலின் பொழுது போம் சிலர்க்கு அ சேண் நகர்
#68
நந்தன வனத்து அலர் கொய்து நவ்வி போல்
வந்து இளையவரொடு வாவி ஆடி வாய்
செம் துவர் அழிதர தேறல் மாந்தி சூது
உந்தலின் பொழுது போம் சிலர்க்கு அ ஒள் நகர்
#69
நானா விதமா நளி மாதிர வீதி ஓடி
மீன் நாறு வேலை புனல் வெண் முகில் உண்ணுமா போல்
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீ போய்
வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ
#70
வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர்
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் என செம்பொன் இஞ்சி
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசை குப்பை என்ன
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின ஓங்கல் நாண
#71
காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர்
ஆடும் குளனும் அருவி சுனை குன்றும் உம்பர்
வீடும் விரவும் மண பந்தரும் வீணை வண்டும்
பாடும் பொழிலும் மலர் பல்லவ பள்ளி-மன்னோ
#72
தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும்
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்
கள்வார் இலாமை பொருள் காவலும் இல்லை யாதும்
கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை மாதோ
#73
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லா பெரும் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ
#74
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்_இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி அரும் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து
போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே

4 அரசியற் படலம்

#1
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு_அரசன்
செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்
இ மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய் மாண் கழலோன் தரு நல் அற மூர்த்தி அன்னான்
#2
ஆதி மதியும் அருளும் அறனும் அமைவும்
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்_இல் யாவும்
நீதி நிலையும் இவை நேமியினோர்க்கு நின்ற
பாதி முழுதும் இவற்கே பணி கேட்ப-மன்னோ
#3
மொய் ஆர்கலி சூழ் முது பாரில் முகந்து தான
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை
மெய் ஆய வேத துறை வேந்தருக்கு ஏய்த்த யாரும்
செய்யாத யாகம் இவன் செய்து மறந்த மாதோ
#4
தாய் ஒக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின்
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி
ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான்
#5
ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால்
காய்ந்தே கடந்தான் பகை வேலை கருத்து முற்ற
தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம்
#6
வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர்
உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன்
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர்
வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே
#7
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற
பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி
வாம மாளிகை மலை ஆக மன்னற்கு
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே
#8
யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மே வரும் கை அடை வேலும் தேயுமால்
கோ உடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால்
#9
மண்ணிடை உயிர்-தொறும் வளர்ந்து தேய்வு இன்றி
தண் நிழல் பரப்பவும் இருளை தள்ளவும்
அண்ணல்-தன் குடை மதி அமையும் ஆதலான்
விண்ணிடை மதியினை மிகை இது என்பவே
#10
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்
#11
குன்று என உயரிய குவவு தோளினான்
வென்றி அம் திகிரி வெம் பருதியாம் என
ஒன்று என உலகிடை உலாவி மீமிசை
நின்றுநின்று உயிர்-தொறும் நெடிது காக்குமே
#12
எய் என எழு பகை எங்கும் இன்மையால்
மொய் பெறா தினவு உறு முழவு தோளினான்
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் என காத்து இனிது அரசு செய்கின்றான்

5 திரு அவதாரப்பாடல்

#1
ஆயவன் ஒரு பகல் அயனையே நிகர்
தூய மா முனிவனை தொழுது தொல் குல
தாயரும் தந்தையும் தவமும் அன்பினால்
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ
#2
எம் குல தலைவர்கள் இரவி-தன்னினும்
தம் குலம் விளங்குற தரணி தாங்கினார்
மங்குநர் இல் என வரம்பு இல் வையகம்
இங்கு நின் அருளினால் இனிதின் ஓம்பினேன்
#3
அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இ உலகை ஓம்பினேன்
பிறிது ஒரு குறை இலை என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ
#4
அரும் தவ முனிவரும் அந்தணாளரும்
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்
இரும் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர்
அரும் துயர் வருத்தும் என் அகத்தை என்றனன்
#5
முரசு அறை செழும் கடை முத்த மா முடி
அரசர் தம் கோமகன் அனைய கூறலும்
விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்
#6
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை
மலை என விழி துயில்-வளரும் மா முகில்
கொலை தொழில் அரக்கர்-தம் கொடுமை தீர்ப்பென் என்று
உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே
#7
பாக சாதனந்தனை பாசத்து ஆர்த்து அடல்
மேகநாதன் புகுந்து இலங்கை மேய நாள்
போக மா மலர் உறை புனிதன் மீட்டமை
தோகை பாகற்கு உற சொல்லினான்-அரோ
#8
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ
திரு_இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால்
கரு முகில் என வளர் கருணை அம் கடல்
பொருது இடர் தணிக்கின் உண்டு எனும் புணர்ப்பினால்
#9
திரை கெழு பயோததி துயிலும் தெய்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்
கர கமலம் குவித்து இருந்த-காலையில்
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன்
#10
கரு முகில் தாமரை காடு பூத்து நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி ஏந்து அலர்
திருவொடும் பொலிய ஓர் செம்பொன் குன்றின் மேல்
வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றினான்
#11
எழுந்தனர் கறைமிடற்று இறையும் தாமரை
செழும் தவிசு உவந்த அ தேவும் சென்று எதிர்
விழுந்தனர் அடி மிசை விண்ணுளோரொடும்
தொழும்-தொறும் தொழும்-தொறும் களி துளங்குவார்
#12
ஆடினர் பாடினர் அங்கும் இங்குமாய்
ஓடினர் உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால்
சூடினர் முறைமுறை துளவ தாள் மலர்
#13
பொன்_வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற
என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான்
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி
துன்னு பொன் பீடம் மேல் பொலிந்து தோன்றினான்
#14
விதியொடு முனிவரும் விண்ணுளோர்களும்
மதி வளர் சடை_முடி மழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து அயல் இருந்துழி
கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார்
#15
ஐ_இரு தலையினோன் அனுசர் ஆதியாம்
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன திருவின் நாயக
உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார்
#16
எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார்
பொங்கு மூ_உலகையும் புடைத்து அழித்தனர்
செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல்
நுங்குவர் உலகை ஓர் நொடியில் என்றனர்
#17
என்றனர் இடர் உழந்து இறைஞ்சி ஏத்தலும்
மன்றல் அம் துளவினான் வருந்தல் வஞ்சகர்
தம் தலை அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு
ஒன்று நீர் கேண்ம் என உரைத்தல் மேயினான்
#18
வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்
கானினும் வரையினும் கடி தடத்தினும்
சேனையோடு அவதரித்திடும்-மின் சென்று என
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான்
#19
மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர்
நிசரத கணைகளால் நீறு-செய்ய யாம்
கச ரத துரக மா கடல் கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி
#20
வளையொடு திகிரியும் வடவை தீதர
விளைதரு கடு உடை விரிகொள் பாயலும்
இளையர்கள் என அடி பரவ ஏகி நாம்
வளை மதில் அயோத்தியில் வருதும் என்றனன்
#21
என்று அவன் உரைத்தபோது எழுந்து துள்ளினார்
நன்றி கொள் மங்கல நாதம் பாடினார்
மன்றல் அம் செழும் துளவு அணியும் மாயனார்
இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால்
#22
போயது எம் பொருமல் என்னா இந்திரன் உவகை பூத்தான்
தூய மா மலர் உளோனும் சுடர் மதி சூடினோனும்
சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார்
மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான்
#23
என்னை ஆள் உடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போய
பின்னர் வானவரை நோக்கி பிதாமகன் பேசுகின்றான்
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான்
#24
தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால்
#25
வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர்
காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது
போயிட துணிந்தோம் என்றார் புராரி மற்று யானும் காற்றின்
சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ
#26
அருள் தரும் கமலக்கண்ணன் அருள் முறை அலர் உளோனும்
இருள் தரும் மிடற்றினோனும் அமரரும் இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார்
பொருள் தரும் இருவர் தம்தம் உறைவிடம் சென்று புக்கார்
#27
ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என முனி இதயத்து எண்ணி
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி
தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான்
#28
என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க
மன்னவர்_மன்னன் அந்த மா முனி சரணம் சூடி
உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ
அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான்
#29
மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன் விபாண்டகன் கங்கை சூடும்
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன் இரும் கலை பிறவும் எண்ணின்
தேசு உடை தந்தை ஒப்பான் திருவருள் புனைந்த மைந்தன்
#30
வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை
தரு கலை மறையும் எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன்
திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முக சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும்
#31
பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின்
பூம் தவிசு உகந்து உளோனும் புராரியும் புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான்
#32
ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய
பூம் கழல் தொழுது வாழ்த்தி பூதல மன்னர்_மன்னன்
தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான்
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான்
#33
புத்து ஆன கொடு வினையோடு அரும் துயரம் போய் ஒளிப்ப புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன் தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான்
எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன்
#34
அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக
மின்னி எழு முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும் வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக
பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார்
#35
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார்
#36
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள்
ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய்
பூங்கொடியீர் ஏகும் என தொழுது இறைஞ்சி இரதம் மிசை போயினாரே
#37
ஓசனை பல கடந்து இனி ஓர் ஓசனை
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி
பாசிழை மடந்தையர் பன்னசாலை செய்து
ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார்
#38
அரும் தவன் தந்தையை அற்றம் நோக்கியே
கரும் தடம் கண்ணியர் கலை வலாளன் இல்
பொருந்தினர் பொருந்துபு விலங்கு எனா புரிந்து
இருந்தவர் இவர் என இனைய செய்தனர்
#39
அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து
இருக்க என இருந்த பின் இனிய கூறலும்
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனை தொழா
பொருக்கென எழுந்து போய் புரையுள் புக்கனர்
#40
திருந்து இழையவர் சில தினங்கள் தீர்ந்துழி
மருந்தினும் இனியன வருக்கை வாழை மா
தரும் கனி பலவொடு தாழை இன் கனி
அரும் தவ அருந்து என அருந்தினான்-அரோ
#41
இன்னவன் பல் பகல் இறந்த பின் திரு
நல் நுதல் மடந்தையர் நவை_இல் மாதவன்
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று
அன்னவர் தொழுதலும் அவரொடு ஏகினான்
#42
விம்முறும் உவகையர் வியந்த நெஞ்சினர்
அம்ம ஈது இது என அகலும் நீள் நெறி
செம்மை சேர் முனிவரன் தொடர சென்றனர்
தம் மனம் என மருள் தையலார்களே
#43
வளநகர் முனிவரன் வரும் முன் வானவன்
களன் அமர் கடு என கருகி வான் முகில்
சள சள என மழை தாரை கான்றன
குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே
#44
பெரும் புனல் நதிகளும் குளனும் பெட்பு உற
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட
இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்து போது அரசு உணர்ந்தனன்
#45
காமமும் வெகுளியும் களிப்பும் கைத்த அ
கோமுனி இவண் அடைந்தனன்-கொல் கொவ்வை வாய்
தாமரை மலர் முக தரள வாள் நகை
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்
#46
என்று எழுந்து அரு மறை முனிவர் யாரொடும்
சென்று இரண்டு ஓசனை சேனை சூழ்தர
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவ
குன்றினை எதிர்ந்தனன் குவவு தோளினான்
#47
வீழ்ந்தனன் அடி மிசை விழிகள் நீர் தர
வாழ்ந்தனெம் இனி என மகிழும் சிந்தையான்
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி நீர்
போழ்ந்தனிர் எனது இடர் புணர்ப்பினால் என்றான்
#48
அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை
வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய்
வெருவினர் விண்ணவர் வேந்தன் வேண்டலால்
கரை எறியாது அலை_கடலும் போன்றனன்
#49
வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை
எள்ள_அரு முனிவனை இறைஞ்சி யாரினும்
தள்ள_அரும் துயரமும் சமைவும் சாற்றலும்
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம்-அரோ
#50
அருள் சுரந்து அரசனுக்கு ஆசியும் கொடுத்து
உருள் தரும் தேரின் மீது ஒல்லை ஏறி நல்
பொருள தரும் முனிவரும் தொடர போயினன்
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன்
#51
அடைந்தனன் வள நகர் அலங்கரித்து எதிர்
மிடைந்திட முனியொடும் வேந்தன் கோயில் புக்கு
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி ஓர்
மடங்கல் ஆதனத்தின் மேல் முனியை வைத்தனன்
#52
அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி வேறு
உரைக்குவது இலது என உவந்து தான் அருள்
முருக்கு இதழ் சாந்தையாம் முக_நலாள்-தனை
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன்
#53
வறுமை நோய் தணிதர வான் வழங்கவே
உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள்
செறி குழல் போற்றிட திருந்து மா தவத்து
அறிஞன் ஆண்டு இருக்குநன் அரச என்றனன்
#54
என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா
துன்று கழல் முடி_வேந்தர் அடி போற்ற சுமந்திரனே முதல்வர் ஆய
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி
இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல்
#55
காகளமும் பல்_இயமும் கனை கடலின் மேல் முழங்க கானம் பாட
மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய்
தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே
#56
கொழுந்து ஓடி படர் கீர்த்தி கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன்
செழும் தோடும் பல் கலனும் வெயில் வீச மாகதர்கள் திரண்டு வாழ்த்த
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் அரசை எதிர்கோள் எண்ணி
#57
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண
அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர்_பிரான் இழிந்துழி சென்று அடியில் வீழ
முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க எடுத்து இறுக முயங்கலோடும்
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி இவை உரைத்தான் களிப்பின் மிக்கான்
#58
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன்
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி
தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான்
#59
ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி
பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம் பொன் பீடத்து
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து
தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான்
#60
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும்
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற
செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான்
#61
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது
அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன்
மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான்
#62
புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க பெருந்தகை-தன் புகழில் பூத்த
அறன் ஒன்றும் திருமனத்தான் அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன்
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான்
#63
அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும்
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன்
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ
#64
குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர
வனிதையும் அரு மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும் பொறி மிசை நெறியை முன்னினார்
#65
அந்தர துந்துமி முழக்கி ஆய் மலர்
சிந்தினர் களித்தனர் அறமும் தேவரும்
வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்_முதல்
வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே
#66
தூதுவர் அ வழி அயோத்தி துன்னினார்
மாதிரம் பொருத தோள் மன்னர்_மன்னன் முன்
ஓதினர் முனி வரவு ஓத வேந்தனும்
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன்
#67
எழுந்தனன் பொருக்கென இரதம் ஏறினன்
பொழிந்தன மலர்_மழை ஆசி பூத்தன
மொழிந்தன பல்_இயம் முரசம் ஆர்த்தன
விழுந்தன தீவினை வேரினோடுமே
#68
பிதிர்ந்தது எம் மன துயர் பிறங்கல் என்று கொண்டு
அதிர்ந்து எழு முரசு உடை அரசர் கோமகன்
முதிர்ந்த மா தவம் உடை முனியை கண்களால்
எதிர்ந்தனன் ஓசனை இரண்டொடு ஒன்றினே
#69
நல் தவம் அனைத்தும் ஓர் நவை இலா உரு
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை
சுற்றிய சீரையும் உழையின் தோற்றமும்
முற்றுற பொலிதரு மூர்த்தியான்-தனை
#70
அண்டர்கள் துயரமும் அரக்கர் ஆற்றலும்
விண்டிட பொலிதரும் வினை வலாளனை
குண்டிகை குடையொடும் குலவு நூல் முறை
தண்டொடும் பொலிதரு தட கையான்-தனை
#71
இழிந்து போய் இரதம் ஆண்டு இணை கொள் தாள் மலர்
விழுந்தனன் வேந்தர்-தம் வேந்தன் மெய்ம்மையால்
மொழிந்தனன் ஆசிகள் முதிய நான்மறை
கொழுந்து மேல் படர் தர கொழுகொம்பு ஆயினான்
#72
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட
புயல் பொழி தட கையால் தொழுது பொங்கு நீர்
கயல் பொரு விழியொடும் கலை வலாளனை
இயல்பொடு கொணர்ந்தனன் இரதம் ஏற்றியே
#73
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்
முடி உடை வேந்தன் அ முனிவனோடும் ஓர்
கடிகையின் அடைந்தனன் கமல வாள் முக
வடிவு உடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே
#74
கசட்டுறு வினை தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய
வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும் வேத்தவை பொலிய மேவினார்
#75
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு
தூ மணி தவிசிடை சுருதியே நிகர்
கோ முனிக்கு அரசனை இருத்தி கொள் கடன்
ஏமுற திருத்தி வேறு இனைய செப்பினான்
#76
சான்றவர் சான்றவ தருமம் மா தவம்
போன்று ஒளிர் புனித நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்
யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ
#77
என்னலும் முனிவரன் இனிது நோக்குறா
மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர்
நல் நெடும் தவன் துணை நவை இல் செய்கையால்
நின்னை இ உலகினில் நிருபர் நேர்வரோ
#78
என்று இவை பற்பல இனிமை கூறி நல்
குன்று உறழ் வரி சிலை குவவு தோளினாய்
நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ
இன்று எனை அழைத்தது இங்கு இயம்புவாய் என்றான்
#79
உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியே
தல பொறை ஆற்றினென் தனையர் வந்திலர்
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை
நல புகழ் பெற இனி நல்க வேண்டுமால்
#80
என்றலும் அரச நீ இரங்கல் இ உலகு
ஒன்றுமோ உலகம் ஈர்_ஏழும் ஓம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு என்றான்
#81
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயென கொணர்ந்தனர் நிருபர்க்கு ஏந்தலும்
தூய நல் புனல் படீஇ சுருதி நூல் முறை
சாய்வு_அற திருத்திய சாலை புக்கனன்
#82
முழங்கு அழல் மும்மையும் முடுகி ஆகுதி
வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின்
தழங்கின துந்துமி தா_இல் வானகம்
விழுங்கினர் விண்ணவர் வெளி இன்று என்னவே
#83
முக_மலர் ஒளிதர மொய்த்து வான் உளோர்
அக விரை நறு மலர் தூவி ஆர்த்து எழ
தகவு உடை முனியும் அ தழலின் நாப்பணே
மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ
#84
ஆயிடை கனலின் நின்று அம் பொன் தட்டினில்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று சூழ்
தீ எரி பங்கியும் சிவந்த கண்ணும் ஆய்
ஏயென பூதம் ஒன்று எழுந்தது ஏந்தியே
#85
வைத்தது தரை மிசை மறித்தும் அ வழி
தைத்தது பூதம் அ தவனும் வேந்தனை
உய்த்த நல் அமுதினை உரிய மாதர்கட்கு
அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான்
#86
மா முனி பணித்திட மன்னர்_மன்னவன்
தூம மென் சுரி குழல் தொண்டை தூய வாய்
காமரு கோசலை கரத்தில் ஓர் பகிர்
தாம் உற அளித்தனன் சங்கம் ஆர்த்து எழ
#87
கைகயன் தனையை-தன் கரத்தும் அ முறை
செய்கையின் அளித்தனன் தேவர் ஆர்த்து எழ
பொய்கையும் நதிகளும் பொழிலும் ஓதிமம்
வைகுறு கோசல மன்னர்_மன்னனே
#88
நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடை
நிமி திரு மரபுளான் முன்னர் நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன் சுரர்க்கு வேந்து இனி
சமித்தது என் பகை என தமரொடு ஆர்ப்பவே
#89
பின்னும் அ பெருந்தகை பிதிர்ந்து வீழ்ந்தது
தன்னையும் சுமித்திரை-தனக்கு நல்கினான்
ஒன்னலர்க்கு இடமும் வேறு உலகின் ஓங்கிய
மன்னுயிர்-தமக்கு நீள் வலமும் துள்ளவே
#90
வாம் பரி வேள்வியும் மகாரை நல்குவது
ஆம் புரை ஆகுதி பிறவும் அந்தணன்
ஓம்பிட முடிந்த பின் உலகு காவலன்
ஏம்பலோடு எழுந்தனன் யாரும் ஏத்தவே
#91
முருடொடு பல்_இயம் முழங்கி ஆர்த்தன
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான்
#92
செய்ம் முறை கடன் அவை திறம்பல் இன்றியே
மெய் முறை கடவுளோர்க்கு ஈந்து விண்ணுளோர்க்கு
அம் முறை அளித்து நீடு அந்தணாளர்க்கும்
கைம் முறை வழங்கினன் கனக மாரியே
#93
வேந்தர்கட்கு அரசொடு வெறுக்கை தேர் பரி
வாய்ந்த நல் துகிலொடு வரிசைக்கு ஏற்பன
ஈந்தனன் பல்_இயம் துவைப்ப ஏகி நீர்
தோய்ந்தனன் சரயு நல் துறை-கண் எய்தியே
#94
முரசு இனம் கறங்கிட முத்த வெண்குடை
விரசி மேல் நிழற்றிட வேந்தர் சூழ்தர
அரசவை அடைந்துழி அயனும் நாண் உற
உரை செறி முனிவன் தாள் வணங்கி ஓங்கினான்
#95
அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணையால்
இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா
உரிய பற்பல உரை பயிற்றி உய்ந்தனென்
பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான்
#96
எந்தை நின் அருளினால் இடரின் நீங்கியே
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன்
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி தேர் மிசை
வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான்
#97
வாங்கிய துயர் உடை மன்னன் பின்னரும்
பாங்குரு முனிவர் தாள் பரவி ஏத்தலும்
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா
நீங்கினர் இருந்தனன் நேமி வேந்தனே
#98
தெரிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்த பின்
பொரு_அரு திருமுகம் அன்றி பொற்பு நீடு
உருவமும் மதியமோடு ஒப்ப தோன்றினார்
#99
ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின்
மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட
வேய் புனர்பூசமும் விண்ணுளோர்களும்
தூய கற்கடகமும் எழுந்து துள்ளவே
#100
சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணுளோர்களும்
நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்பு உற
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே
#101
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை
#102
ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற
பூசமும் மீனமும் பொலிய நல்கினாள்
மாசு அறு கேகயன் மாது மைந்தனை
#103
தளை அவிழ் தருவு உடை சயிலகோபனும்
கிளையும் அந்தர மிசை கெழுமி ஆர்ப்பு உற
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற
இளையவன் பயந்தனள் இளைய மென் கொடி
#104
படம் கிளர் பல் தலை பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர மறை நவில நாடகம்
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட
விடம் கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள்
#105
ஆடினர் அரம்பையர் அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர் துவைத்த பல்_இயம்
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால்
ஓடினர் உலாவினர் உம்பர் முற்றுமே
#106
ஓடினர் அரசன்-மாட்டு உவகை கூறி நின்று
ஆடினர் சிலதியர் அந்தணாளர்கள்
கூடினர் நாளொடு கோளும் நின்றமை
நாடினர் உலகு இனி நவை இன்று என்றனர்
#107
மா முனி-தன்னொடு மன்னர்_மன்னவன்
ஏமுற புனல் படீஇ வித்தொடு இன் பொருள்
தாம் உற வழங்கி வெண் சங்கம் ஆர்ப்பு உற
கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான்
#108
இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஓர் ஏழ் நிதி
நிறை தரு சாலை தாள் நீக்கி யாவையும்
முறை கெட வறியவர் முகந்து கொள்க எனா
அறை பறை என்றனன் அரசர் கோமகன்
#109
படை ஒழிந்திடுக தம்பதிகளே இனி
விடை பெறுகுக முடி_வேந்தர் வேதியர்
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக
புடை கெழு விழாவொடு பொலிக எங்கணும்
#110
ஆலையம் புதுக்குக அந்தணாளர்-தம்
சாலையும் சதுக்கமும் சமைக்க சந்தியும்
காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி
மாலையும் தீபமும் வழங்குக என்றனன்
#111
என்புழி வள்ளுவர் யானை மீமிசை
நல் பறை அறைந்தனர் நகர மாந்தரும்
மின் பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால்
இன்பம் என்ற அளக்க_அரும் அளக்கர் எய்தினார்
#112
ஆர்த்தனர் முறைமுறை அன்பினால் உடல்
போர்த்தன புளகம் வேர் பொடித்த நீள் நிதி
தூர்த்தனர் எதிரெதிர் சொல்லினார்க்கு எலாம்
தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே
#113
பண்ணையும் ஆயமும் திரளும் பாங்கரும்
கண் அகன் திரு நகர் களிப்பு கைம்மிகுந்து
எண்ணெயும் களபமும் இழுதும் நானமும்
சுண்ணமும் தூவினார் வீதி-தோறுமே
#114
இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும்
சித்தம் உறும் களியோடு சிறந்தே
தத்தமை ஒன்றும் உணர்ந்திலர் தாவா
மெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான்
#115
சுரா மலைய தளர் கை கரி எய்த்தே
அரா அணையில் துயில்வோய் என அ நாள்
விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக்கே
இராமன் என பெயர் ஈந்தனன் அன்றே
#116
சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறை பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன் உதித்திடு மற்றைய ஒளியை
பரதன் என பெயர் பன்னினன் அன்றே
#117
உலக்குநர் வஞ்சகர் உம்பரும் உய்ந்தார்
நில கொடியும் துயர் நீத்தனள் இந்த
விலக்க_அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்
இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே
#118
முத்து உரு கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழில் உடைய இ ஒளியால்
எ திருக்கும் கெடும் என்பதை எண்ணா
சத்துருக்கன் என சாற்றினன் நாமம்
#119
பொய் வழி இல் முனி புகல்தரு மறையால்
இ வழி பெயர்கள் இசைத்துழி இறைவன்
கை வழி நிதி எனும் நதி கலைமறையோர்
மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல்
#120
காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே
ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர்
ஆவியும் உடலமும் இலது என அருளின்
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன்
#121
அமிர்து உகு குதலையொடு அணி நடை பயிலா
திமிரம்-அது அற வரு தினகரன் எனவும்
தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும்
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள்
#122
சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்று
இ அளவது என ஒரு கரை பிறிது இலவா
உவள் அரு மறையினொடு ஒழிவு_அறு கலையும்
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே
#123
யானையும் இரதமும் இவுளியும் முதலா
ஏனைய பிறவும் அ இயல்பினில் அடையுற்று
ஊன் உறு படை பல சிலையொடு பயிலா
வானவர் தனிமுதல் கிளையொடு வளர
#124
அரு மறை முனிவரும் அமரரும் அவனி
திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு
இரு வினை துணிதரும் இவர்களின் இவண் நின்று
ஒரு பொழுது அகல்கிலம் உறை என உறுவார்
#125
ஐயனும் இளவலும் அணி நில_மகள்-தன்
செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும்
மை தவழ் பொழில்களும் வாவியும் மருவி
நெய் குழல் உறும் இழை என நிலைதிரிவார்
#126
பரதனும் இளவலும் ஒரு_நொடி பகிராது
இரதமும் இவுளியும் இவரினும் மறைநூல்
உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினரே
#127
வீரனும் இளைஞரும் வெறி பொழில்களின்-வாய்
ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்
சோர் பொழுது அணி_நகர் துறுகுவர் எதிர்வார்
கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால்
#128
ஏழையர் அனைவரும் இவர் தட முலை தோய்
கேழ் கிளர் மதுகையர் கிளைகளும் இளையார்
வாழிய என அவர் மனன் உறு கடவுள்
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே
#129
கடல் தரு முகில் ஒளிர் கமலம் அது அலரா
வட வரையுடன் வரு செயல் என மறையும்
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும்
புடை வரும் இளவலும் என நிகர் புகல்வார்
#130
எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன்
முதிர் தரு கருணையின் முக_மலர் ஒளிரா
எது வினை இடர் இலை இனிது நும் மனையும்
மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே
#131
அஃது ஐய நினை எமது அரசு என உடையேம்
இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ்
மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன்
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார்
#132
இ பரிசு அணி நகர் உறையும் யாவரும்
மெய் புகழ் புனைதர இளைய வீரர்கள்
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற
மு பரம் பொருளினும் முதல்வன் வைகுறும்

6 கையடை படலம்

#1
அரசர்-தம் பெருமகன் அகிலம் யாவையும்
விரசு உறு தனி குடை விளங்க வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட முனிவர் ஏத்துற
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள்
#2
நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால்
நினையவும் அரியது விசும்பின் நீண்டது ஓர்
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான்
#3
தூய மெல் அரியணை பொலிந்து தோன்றினான்
சேய் இரு விசும்பிடை திரியும் சாரணர்
நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார்
#4
மடங்கல் போல் மொய்ம்பினான் முன்னர் மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறு அமைத்து தேவரோடு
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனா
தொடங்கிய துனி உறு முனிவன் தோன்றினான்
#5
வந்து முனி எய்துதலும் மார்பில் அணி ஆரம்
அந்தரதலத்து இரவி அஞ்ச ஒளி விஞ்ச
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் என கடிது எழுந்து அடி பணிந்தான்
#6
பணிந்து மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன்
அணிந்த தவிசு இட்டு இனிது அருத்தியொடு இருத்தி
இணைந்த கமல சரண் அருச்சனை செய்து இன்றே
துணிந்தது என் வினை தொடர் என தொழுது சொல்லும்
#7
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என்
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான்
வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என்
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும்
#8
என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால்
பல் நகமும் நகு வெள்ளி பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய்
#9
இன் தளிர் கற்பக நறும் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து
நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான்
#10
உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும்
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய பின் மொழியும் முனிவன் ஆங்கே
#11
தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள்
வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம்
செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான்
#12
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும்
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான்
#13
தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறும் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி
படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை
புடை ஊற்றும் சடையானும் புரந்தரனும் நான்முகனும் புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான்
#14
என்றனன் என்றலும் முனிவோடு எழுந்தனன் மண் படைத்த முனி இறுதி காலம்
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும்
நின்றனவும் திரிந்தன மேல் நிவந்த கொழும் கடை புருவம் நெற்றி முற்ற
சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம்
#15
கறுத்த மா முனி கருத்தை உன்னி நீ
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ எனா வசிட்டன் கூறுவான்
#16
பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலை-வாய் முடுகும் ஆறு போல்
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே
#17
குருவின் வாசகம் கொண்டு கொற்றவன்
திருவின் கேள்வனை கொணர்-மின் சென்று என
வருக என்றனன் என்னலோடும் வந்து
அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான்
#18
வந்த நம்பியை தம்பி-தன்னொடும்
முந்தை நான்மறை முனிக்கு காட்டி நல்
தந்தை நீ தனி தாயும் நீ இவர்க்கு
எந்தை தந்தனென் இயைந்த செய்க என்றான்
#19
கொடுத்த மைந்தரை கொண்டு சிந்தை முந்து
எடுத்த சீற்றம் விட்டு இனிது வாழ்த்தி மேல்
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா
நடத்தல் மேயினான் நவை-கண் நீங்கினான்
#20
வென்றி வாள் புடை விசித்து மெய்ம்மை போல்
என்றும் தேய்வு உறா தூணி யாத்து இரு
குன்றம் போன்று உயர் தோளில் கொற்ற வில்
ஒன்று தாங்கினான் உலகம் தாங்கினான்
#21
அன்ன தம்பியும் தானும் ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என
சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால்
பொன்னின் மா நகர் புரிசை நீங்கினான்
#22
வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ்
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கி போய்
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று
இரங்கு வார் புனல் சரயு எய்தினார்
#23
கரும்பு கால் பொர கழனி வார்ந்த தேன்
வரம்பு மீறிடு மருத வேலிவாய்
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதி போல்
சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார்
#24
தாழும் மா மழை தவழும் நெற்றியால்
சூழி யானை போல் தோன்றும் மால் வரை
பாழி மா முகட்டு உச்சி பச்சை மா
ஏழும் ஏற போய் ஆறும் ஏறினார்
#25
தேவு மாதவன் தொழுது தேவர்-தம்
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால்
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு
யாவது ஈது என்றான் எவர்க்கும் மேல் நின்றான்

7 தாடகை வதை படலம்

#1
திங்கள் மேவும் சடை தேவன் மேல் மார_வேள்
இங்கு நின்று எய்யவும் எரிதரும் நுதல் விழி
பொங்கு கோபம் சுட பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான்
#2
வாரணத்து உரிவையான் மதனனை சினவு நாள்
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம்
ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ
காரண குறி உடை காமன் ஆச்சிரமமே
#3
பற்று அவா வேரொடும் பசை அற பிறவி போய்
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின்
சொற்றவாம் அளவதோ மற்று இதன் தூய்மையே
#4
என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அ-வயின்
சென்று வந்து எதிர் தொழும் செம் நெறி செல்வரோடு
அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன்
குன்றின் நின்று இவர ஓர் சுடு சுரம் குறுகினார்
#5
பருதி_வானவன் நிலம் பசை அற பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால் எரி சுடர் கடவுளும்
கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும்
#6
படியின் மேல் வெம்மையை பகரினும் பகரும் நா
முடிய வேம் முடிய மூடு இருளும் வான் முகடும் வேம்
விடியுமேல் வெயிலும் வேம் மழையும் வேம் மின்னினோடு
இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே
#7
விஞ்சு வான் மழையின் மேல் அம்பும் வேலும் பட
செஞ்செவே செரு_முகத்து அன்றியே திறன் இலா
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ
#8
பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெரும் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா
வேய் பிளந்து உக்க வெண் தரளமும் விட அரா
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம்
#9
பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே
சூரும் ஓடாது கூடாது-அரோ சூரியன்
தேரும் ஓடாது மா மாகம் மீ தேரின் நேர்
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது-அரோ
#10
கண் கிழித்து உமிழ் விட கனல் அரா அரசு கார்
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி வெயில்
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல்
புண் கிழித்திட எழும் குருதியே போலுமே
#11
புழுங்கு வெம் பசியொடு புரளும் பேர் அரா
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்-வாய்
முழங்கு திண் கரி புகும் முடுகி மீமிசை
வழங்கு வெம் கதிர் சுட மறைவு தேடியே
#12
ஏக வெம் கனல் அரசிருந்த காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின
மாக வெம் கனல் எனும் வடவை தீ சுட
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே
#13
கானகத்து இயங்கிய கழுதின் தேர் குலம்
தான் அகத்து எழுதலால் தலை கொண்டு ஓடிப்போய்
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம் எனா
வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே
#14
ஏய்ந்த அ கனலிடை எழுந்த கானல் தேர்
காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்க செய்தது ஓர்
பாய்ந்த பொன் கால் உடை பளிக்கு பீடமே
#15
தா வரும் இரு வினை செற்று தள்ள_அரும்
மூ-வகை பகை அரண் கடந்து முத்தியில்
போவது புரிபவர் மனமும் பொன் விலை
பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே
#16
பொரி பரல் படர் நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின் பெரு வழி விளங்கி தோன்றலால்
அரி மணி பணத்து அரா அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே
#17
எரிந்து எழு கொடும் சுரம் இனையது எய்தலும்
அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை
பொருந்தினர் ஆயினும் பூவின் மெல்லியர்
வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான்
#18
நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை
கோ குமரரும் அடி குறுக நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அ வழி
ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார்
#19
சுழி படு கங்கை அம் தொங்கல் மோலியான்
விழி பட வெந்ததோ வேறுதான் உண்டோ
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான்
#20
என்றலும் இராமனை நோக்கி இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள்
அன்றியும் ஐ_இருநூறு மையல் மா
ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா
#21
மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும்
விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள்
எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர்
பெண் உரு கொண்டு என திரியும் பெற்றியாள்
#22
பெரு வரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும்
உரும் உறழ் முழக்கொடும் ஊழி தீயொடும்
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின்
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே
#23
சூடக அரவு உறழ் சூல கையினள்
காடு உறை வாழ்க்கையள் கண்ணின் காண்பரேல்
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்
தாடகை என்பது அ சழக்கி நாமமே
#24
உள பரும் பிணிப்பு_அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப_அரும் குணங்களை அழிக்குமாறு போல்
கிளப்ப_அரும் கொடுமைய அரக்கி கேடு இலா
வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்
#25
இலங்கை அரசன் பணி அமைந்து ஓர் இடையூறா
விலங்கள் வலிகொண்டு எனது வேள்வி நலிகின்றாள்
அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும்
குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள்
#26
முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு என கருது தன்மையினள் மைந்த
என் இனி உணர்த்துவது இனி சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான்
#27
அங்கு உறுவன் அ பரிசு உரைப்ப அது கேளா
கொங்கு உறை நறை குல மலர் குழல் துளக்கா
எங்கு உறைவது இ தொழில் இயற்றுபவள் என்றான்
சங்கு உறை கரத்து ஒரு தனி சிலை தரித்தான்
#28
கைவரை என தகைய காளை உரை கேளா
ஐவரை அகத்திடை அடைத்த முனி ஐய
இ வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு ஓர்
மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள்
#29
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள் நெளித்த குழி வேலை
சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சி
பிலம் புக நில கிரிகள் பின் தொடர வந்தாள்
#30
இறை கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும்
பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள்
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய்
நிறை கடல் முளைத்து என நெருப்பு எழ விழித்தாள்
#31
கடம் கலுழ் தடம் களிறு கையொடு கை தெற்றா
வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர்
இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் யாவும்
அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள்
#32
ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச
கூர்த்த நுதி மு தலை அயில் கொடிய கூற்றை
பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர்
வார்த்தை உரை-செய்தனள் இடிக்கும் மழை அன்னாள்
#33
கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும்
கெட கருவறுத்தனென் இனி சுவை கிடக்கும்
விடக்கு அரிது என கருதியோ விதிகொடு உந்த
பட கருதியோ பகர்-மின் வந்த பரிசு என்றே
#34
மேகம் அவை இற்று உக விழிந்தனள் புழுங்கா
மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண்
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி அயில் பற்றா
ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள்
#35
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும் ஆவி
உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்
பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான்
#36
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள் தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் பார்க்கிலா
செறிந்த தாரவன் சிந்தை கருத்து எலாம்
அறிந்து நான்மறை அந்தணன் கூறுவான்
#37
தீது என்றுள்ளவை யாவையும் செய்து எமை
கோது என்று உண்டிலள் இத்தனையே குறை
யாது என்று எண்ணுவது இ கொடியாளையும்
மாது என்று எண்ணுவதோ மணி பூணினாய்
#38
நாண்மையே உடையார் பிழைத்தால் நகை
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொல தோற்குமேல்
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே
#39
இந்திரன் இடைந்தான் உடைந்து ஓடினார்
தந்திரம் பட தானவர் வானவர்
மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு
அந்தரம் இனி யாது-கொல் ஆண்மையே
#40
கறங்கு அடல் திகிரி படி காத்தவர்
பிறங்கடை பெரியோய் பெரியோரொடும்
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ
#41
சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து
ஏற்றும் விண் என்பது அன்றி இவளை போல்
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய்
#42
மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து
தின்னும் புன்மையின் தீமையது ஏது ஐய
பின்னும் தாழ் குழல் பேதைமை பெண் இவள்
என்னும் தன்மை எளிமையின் பாலதே
#43
ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவள்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்
ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை
கோறி என்று எதிர் அந்தணன் கூறினான்
#44
ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும்
எய்தினால் அது செய்க என்று ஏவினால்
மெய்ய நின் உரை வேதம் என கொடு
செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான்
#45
கங்கை தீம் புனல் நாடன் கருத்தை அ
மங்கை தீ அனையாளும் மனக்கொளா
செம் கை சூல வெம் தீயினை தீய தன்
வெம் கண் தீயொடு மேற்செல வீசினாள்
#46
புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூ_இலை கால வெம் தீ முனி
விதியை மேற்கொண்டு நின்றவன் மேல் உவா
மதியின் மேல் வரும் கோள் என வந்ததே
#47
மாலும் அ கணம் வாளியை தொட்டதும்
கோல வில் கால் குனித்ததும் கண்டிலர்
காலனை பறித்து அ கடியாள் விட்ட
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர்
#48
அல்லின் மாரி அனைய நிறத்தவள்
சொல்லும் மாத்திரையின் கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியை கைவகுத்தாள் அது
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான்
#49
சொல் ஒக்கும் கடிய வேக சுடு சரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிர குன்ற
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லா
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என போயிற்று அன்றே
#50
பொன் நெடும் குன்றம் அன்னான் புகர் முக பகழி என்னும்
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில்
கல் நெடு மாரி பெய்ய கடையுகத்து எழுந்த மேகம்
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள்
#51
பொடி உடை கானம் எங்கும் குருதி_நீர் பொங்க வீழ்ந்த
தடி உடை எயிற்று பேழ் வாய் தாடகை தலைகள்-தோறும்
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள்
#52
கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு ஒழுகிய குருதி வெள்ளம்
ஆன்ற அ கானம் எல்லாம் பரந்ததால் அந்தி மாலை
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே
#53
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத
காசு உலாம் கனக பைம் பூண் காகுத்தன் கன்னி போரில்
கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி
ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே
#54
யாமும் எம் இருக்கை பெற்றேம் உனக்கு இடையூறும் இல்லை
கோமகற்கு இனி நீ தெய்வ படைக்கலம் கொடுத்தி என்னா
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல்
பூ_மழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினாரே

8 வேள்வி படலம்

#1
விண்ணவர் போய பின்றை விரிந்த பூ_மழையினாலே
தண்ணெனும் கானம் நீங்கி தாங்க_அரும் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்-தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே
#2
ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால்
ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம்
தேறிய மனத்தான் செய்த நல்வினை பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே
#3
மேவினம் பிரிதல் ஆற்றேம் வீர நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும் இளையவன் போல என்று
தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர
பூவை போல் நிறத்தினாற்கு புறத்தொழில் புரிந்த அன்றே
#4
இனையன நிகழ்ந்த பின்னர் காவதம் இரண்டு சென்றார்
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற
முனைவ ஈது யாவது என்று முன்னவன் வினவ பின்னர்
வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான்
#5
எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று
அ முனி புகல கேளா அதிசயம் மிகவும் தோன்ற
செம்மலும் இளைய கோவும் சிறிது இடம் தீர்ந்த பின்னர்
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான்
#6
தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போல தூயது மற்றும் கேளாய்
எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டா
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே
#7
பாரின்-பால் விசும்பின்-பாலும் பற்று அற படிப்பது அன்னான்
பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார்
ஆர் என்பான் அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம்
ஈர்_ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து இப்பால்
#8
ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய்
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்
#9
செய்த பின் வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்
ஐயம் இல் சிந்தையர் அந்தணர்-தம்-பால்
வையமும் யாவும் வழங்க வலித்தான்
#10
ஆயது அறிந்தனர் வானவர் அ நாள்
மாயனை வந்து வணங்கி இரந்தார்
தீயவன் வெம் தொழில் தீர் என நின்றார்
நாயகனும் அது செய்ய நயந்தான்
#11
காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்
நீல நிறத்து நெடுந்தகை வந்து ஓர்
ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான்
#12
முப்புரிநூலினன் முஞ்சியன் விஞ்சை
கற்பது ஓர் நாவன் அனல் படு கையன்
அற்புதன் அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஓர் மெய்க்கொடு சென்றான்
#13
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம்
வென்றவன் முந்தி வியந்து எதிர் கொண்டான்
நிந்தனின் அந்தணர் இல்லை நிறைந்தோய்
எந்தனின் உய்ந்தவர் யார் உளர் என்றான்
#14
ஆண்தகை அ உரை கூற அறிந்தோன்
வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி
நீண்ட கையாய் இனி நின்னுழை வந்தோர்
மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான்
#15
சிந்தை உவந்து எதிர் என் செய் என்றான்
அந்தணன் மூ_அடி மண் அருள் உண்டேல்
வெம் திறலாய் இது வேண்டும் எனா முன்
தந்தனென் என்றனன் வெள்ளி தடுத்தான்
#16
கண்ட திறத்து இது கைதவம் ஐய
கொண்டல் நிற குறள் என்பது கொள்ளேல்
அண்டமும் முற்றும் அகண்டமும் மேல்_நாள்
உண்டவன் ஆம் இது உணர்ந்துகொள் என்றான்
#17
நினைக்கிலை என் கை நிமிர்ந்திட வந்து
தனக்கு இயலா-வகை தாழ்வது தாழ்வு இல்
கன கரியானது கைத்தலம் என்னின்
எனக்கு இதன் மேல் நலம் யாது-கொல் என்றான்
#18
துன்னினர் துன்னலர் என்பது சொல்லார்
முன்னிய நல் நெறி நூலவர் முன்வந்து
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க
என்னின் இவன் துணை யாவர் உயர்ந்தார்
#19
வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்
எள்ளுவ என் சில இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்
#20
மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்
வீந்தவர் என்பவர் வீந்தவரேனும்
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே
#21
அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்
கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று
தடுப்பவரே பகை தம்மையும் அன்னார்
கெடுப்பவர் அன்னது ஓர் கேடு இலை என்றான்
#22
கட்டுரையின் தம கைத்து உள போழ்தே
இட்டு இசைகொண்டு அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்
விட்டிடல் என்று விலக்கினர் தாமே
#23
முடிய இ மொழி எலாம் மொழிந்து மந்திரி
கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்
அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்
#24
கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்
பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர்
வியந்தவர் வெரு கொள விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே
#25
நின்ற கால் மண் எலாம் நிரப்பி அப்புறம்
சென்று பாவிற்றிலை சிறிது பார் எனா
ஒன்ற வானகம் எலாம் ஒடுக்கி உம்பரை
வென்ற கால் மீண்டது வெளி பெறாமையே
#26
உலகு எலாம் உள்ளடி அடக்கி ஓர் அடிக்கு
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம்
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்
சிலை குலாம் தோளினாய் சிறியன் சாலவே
#27
உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய்
விரி திரை பாற்றுடல் பள்ளி மேவினான்
கரியவன் உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் செக்க சிவந்து காட்டிற்றே
#28
ஆதலால் அரு வினை அறுக்கும் ஆரிய
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு
ஈது அலாது இல்லை வேறு இருக்கற்பாலதே
#29
ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம் யான் எனா
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி பின்
வேண்டுவ கொண்டு தன் வேள்வி மேவினான்
காண்தகு குமரரை காவல் ஏவியே
#30
எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினை காக்கின்ற இமையின் காத்தனர்
#31
காத்தனர் திரிகின்ற காளை வீரரில்
மூத்தவன் முழுது உணர் முனியை முன்னி நீ
தீ தொழில் இயற்றுவர் என்ற தீயவர்
ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான்
#32
வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன் மோனியாய்
போர் தொழில் குமரனும் தொழுது போந்த பின்
பார்த்தனன் விசும்பினை பருவ மேகம் போல்
ஆர்த்தனர் இடித்தனர் அசனி அஞ்சவே
#33
எய்தனர் எறிந்தனர் எரியும் நீருமாய்
பெய்தனர் பெரு வரை பிடுங்கி வீசினர்
வைதனர் தெழித்தனர் மழு கொண்டு ஓச்சினர்
செய்தனர் ஒன்று அல தீய மாயமே
#34
ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின
கானகம் மறைத்தன கால மாரி போல்
மீன் நகு திரை கடல் விசும்பு போர்த்து என
வானகம் மறைத்தன வளைந்த சேனையே
#35
வில்லொடு மின்னு வாள் மிடைந்து உலாவிட
பல்_இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை
ஒல் என உரறிய ஊழி பேர்ச்சியுள்
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே
#36
கவர் உடை எயிற்றினர் கடித்த வாயினர்
துவர் நிற பங்கியர் சுழல் கண் தீயினர்
பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
இவர் என இலக்குவற்கு இராமன் காட்டினான்
#37
ஈண்ட அ குமாரனும் கடை கண் தீ உக
விண்-தனை நோக்கி தன் வில்லை நோக்கினான்
அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன என தொழுது சொல்லினான்
#38
தூம வேல் அரக்கர்-தம் நிணமும் சோரியும்
ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ
தாமரை கண்ணனும் சரங்களே கொடு
கோ முனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான்
#39
நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி
செம் சடை கடவுளை அடையும் தேவர் போல்
வஞ்சனை அரக்கரை வெருவி மா தவர்
அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார்
#40
தவித்தனன் கரதலம் கலங்கலீர் என
செவித்தலம் நிறுத்தினன் சிலையின் தெய்வ நாண்
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்
குவித்தனன் அரக்கர்-தம் சிரத்தின் குன்றமே
#41
திருமகள்_நாயகன் தெய்வ வாளிதான்
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனை கடலில் இட்டது அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே
#42
துணர்த்த பூம் தொடையலான் பகழி தூவினான்
கணத்திடை விசும்பினை கவித்து தூர்த்தலால்
பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா
உணர்த்தினர் ஒருவர் முன் ஒருவர் ஓடினார்
#43
ஓடின அரக்கரை உருமின் வெம் கணை
கூடின குறை தலை மிறைத்து கூத்து நின்று
ஆடின அலகையும் ஐயன் கீர்த்தியை
பாடின பரந்தன பறவை பந்தரே
#44
பந்தரை கிழித்தன பரந்த பூ_மழை
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்
சுந்தர வில்லியை தொழுது வாழ்த்தினார்
#45
புனித மா தவர் ஆசியின் பூ_மழை பொழிந்தார்
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த
முனியும் அ வழி வேள்வியை முறைமையின் முற்றி
இனிய சிந்தையன் இராமனுக்கு இனையன இசைத்தான்
#46
பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
போக்கி நிற்கு இது பொருள் என உணர்கிலென் புவனம்
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே
#47
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து
அன்று தான் உவந்து அரும் தவ முனிவரோடு இருந்தான்
குன்று போல் குணத்தான் எதிர் கோசலை குருசில்
இன்று யான் செயும் பணி என்-கொல் பணி என இசைத்தான்
#48
அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர்
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன்
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார்

9 அகலிகை படலம்

#1
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின
நலம் பெய் பூண் முலை நாகு இள வஞ்சியாம் மருங்குல்
புலம்பும் மேகலை புது மலர் புனை அறல் கூந்தல்
சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார்
#2
நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும் கதிரோன்
உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போல் கடல் குளித்தான்
#3
கறங்கு தண் புனல் கடி நெடும் தாள் உடை கமலத்து
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப
பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார்
#4
காலன் மேனியின் கருகு இருள் கடிந்து உலகு அளிப்பான்
நீல ஆர்கலி தேரொடு நிறை கதிர் கடவுள்
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழு மலர் முளைத்து என முளைத்தான்
#5
அங்கு நின்று எழுந்து அயன் முதல் மூவரும் அனையார்
செம் கண் ஏற்றவன் செறி சடை பழுவத்தில் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால் பொன்னியை பொருவும்
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார்
#6
பள்ளி நீங்கிய பங்கய பழன நல் நாரை
வெள்ள வான் களை களைவு உறும் கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் என கருதா
அள்ளி நாண் உறும் அகன் பணை மிதிலை நாடு அணைந்தார்
#7
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின்
கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை
#8
பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால்
எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப
வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி
#9
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்-வாய்
ஓவு இல் குங்கும சுவடு உற ஒன்றோடு ஒன்று ஊடி
பூ உறங்கினும் புன் உறங்காதன பொய்கை
#10
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம்
நறையும் அல்லது நளிர் புனல் பெருகலா நதிகள்
#11
இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கை
மழை கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி
உழக்க வாளைகள் பாளையில் குதிப்பன ஓடை
#12
படை நெடும் கண் வாள் உறை புக படர் புனல் மூழ்கி
கடைய முன் கடல் செழும் திரு எழும்படி காட்டி
மிடையும் வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப மெல்லியலார்
குடைய வண்டு_இனம் கடி மலர் குடைவன குளங்கள்
#13
இனைய நாட்டினில் இனிது சென்று இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடி புரிசையின் புறத்து வந்து இறுத்தார்
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடை கண்டார்
#14
கண்ட கல் மிசை காகுத்தன் கழல் துகள் கதுவ
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப
பண்டை வண்ணமாய் நின்றனள் மா முனி பணிப்பான்
#15
மா இரு விசும்பின் கங்கை மண் மிசை கொணர்ந்தோன் மைந்த
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்
தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான்
#16
பொன்னை ஏய் சடையான் கூற கேட்டலும் பூமி கேள்வன்
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம்
முன்னை ஊழ்வினையினாலோ நடு ஒன்று முடிந்தது உண்டோ
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக என்றான்
#17
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி
செவ்வியோய் கேட்டி மேல்_நாள் செறி சுடர் குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி
நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான்
#18
தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்
#19
புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்
#20
சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அரும் சாபம் வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசை ஆய் போகலுற்றான்
#21
தீ விழி சிந்த நோக்கி செய்ததை உணர்ந்து செய்ய
தூயவன் அவனை நின் கை சுடு சரம் அனைய சொல்லால்
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று
ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம்
#22
எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை
மெல்லியலாளை நோக்கி விலை_மகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி என்றான் கருங்கல் ஆய் மருங்கு வீழ்வாள்
#23
பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால்
அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன
தழைத்து வண்டு இமிரும் தண் தார் தசரதராமன் என்பான்
கழல் துகள் கதுவ இந்த கல் உரு தவிர்தி என்றான்
#24
இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்
#25
தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல்
கோது இலா குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு
மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள்

10 மிதிலை காட்சி படலம்

#1
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண்
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா
#2
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணி கொடிகள் எல்லாம்
தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல
வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார்
#3
பகல் கதிர் மறைய வானம் பாற்கடல் கடுப்ப நீண்ட
துகில் கொடி மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற
முகில் குலம் தடவும்-தோறும் நனைவன முகிலின் சூழ்ந்த
அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார்
#4
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை
யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா
சீதையை தருதலாலே திருமகள் இருந்த செய்ய
போது என பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலை புக்கார்
#5
சொற்கலை_முனிவன் உண்ட சுடர் மணி கடலும் துன்னி
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல
வில் கலை நுதலினாரும் மைந்தரும் வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடும் தெரு-அதனில் போனார்
#6
தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப
ஆறும் ஆய் கலின மா விலாழியால் அழிந்து ஓர் ஆறு ஆய்
சேறும் ஆய் தேர்கள் ஓட துகளும் ஆய் ஒன்றோடு ஒன்று
மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார்
#7
தண்டுதல் இன்றி ஒன்றி தலைத்தலை சிறந்த காதல்
உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல்
பண் தரு கிளவியார் தம் புலவியில் பரிந்த கோதை
வண்டொடு கிடந்து தேன் சோர் மணி நெடும் தெருவில் சென்றார்
#8
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவி தூங்க
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார்
#9
பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கி பொங்க
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட
ஊசலில் மகளிர் மைந்தர் சிந்தையொடு உலவ கண்டார்
#10
வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும்
சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும்
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற கரைகள்-தோறும்
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார்
#11
வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த
கள் என நரம்பு வீக்கி கையொடு மனமும் கூட்டி
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்து என மகளிர் ஈந்த
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார்
#12
கொட்பு உறு கலின பாய் மா குலால் மகன் முடுக்கி விட்ட
மண் கல திகிரி போல வாளியின் வருவ மேலோர்
நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய்
கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார்
#13
தயிர் உறு மத்தின் காம சரம் பட தலைப்பட்டு ஊடும்
உயிர் உறு காதலாரின் ஒன்றை ஒன்று ஒருவகில்லா
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார்
#14
வாளரம் பொருத வேலும் மன்மதன் சிலையும் வண்டின்
கேளொடு கிடந்த நீல சுருளும் செம் கிடையும் கொண்டு
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி
சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார்
#15
பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறும் தேறல் மாந்தி
வெளிப்படு நகைய ஆகி வெறியன மிழற்றுகின்ற
ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல்
களிப்பினை உணர்த்தும் செவ்வி கமலங்கள் பலவும் கண்டார்
#16
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும்
பை அரவு அல்குலார் தம் உள்ளமும் பளிங்கும் போல
மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து
கை புகின் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார்
#17
கடகமும் குழையும் பூணும் ஆரமும் கலிங்க நுண் நூல்
வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச
தொடையல் அம் கோதை சோர பளிக்கு நாய் சிவப்ப தொட்டு
படை நெடும் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார்
#18
பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம்
செம் கிடை தரங்கம் கெண்டை சினை வரால் இனைய தேம்ப
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும்
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார்
#19
இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன
புயங்களில் கலவை சாந்தும் புணர் முலை சுவடும் நீங்கா
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார்
#20
வெம் சினம் உருவிற்று என்னும் மேனியர் வேண்டிற்று ஈயும்
நெஞ்சினர் ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார்
செம் சிலை கரத்தர் மாதர் புலவிகள் திருத்தி சேந்த
குஞ்சியர் சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள் கண்டார்
#21
பாகு ஒக்கும் சொல் பைங்கிளியோடும் பல பேசி
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும்
தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார்
#22
உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி
பம்பி பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன்
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார்
#23
பொன்னின் சோதி போதினின் நாற்றம் பொலிவே போல்
தென் உண் தேனின் தீம் சுவை செம் சொல் கவி இன்பம்
கன்னிமாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள்
#24
செப்பும்-காலை செங்கமலத்தோன் முதல் யாரும்
எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்
அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர்
ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம்
#25
உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சி கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர் காட்சி கரை காணார்
இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால்
அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம்
#26
வென்று அம் மானை தார் அயில் வேலும் கொலை வாளும்
பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள்
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள்
#27
பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை
தரும் தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே
அருந்தா அந்த தேவர் இரந்தால் அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி
#28
அனையாள் மேனி கண்ட பின் அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேல் கண்
இனையோர் உள்ளத்து இன்னலினோர் தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே
#29
மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக
பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார்
அலகு ஓவு இல்லா அந்தணரோ நல் அறமேயோ
உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால்
#30
தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே
அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி
முன்னே முன்னே மொய்ம் மலர் தூவி முறை சார
பொன்னே சூழும் பூவின் ஒதுங்கி பொலிகின்றாள்
#31
பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம் புனை ஆரம்
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில் காண சத கோடி
மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள்
#32
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருக பெண் கனி நின்றாள்
#33
வெம் களி விழிக்கு ஒரு விழவும் ஆய் அவர்
கண்களின் காணவே களிப்பு நல்கலால்
மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள்
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ
#34
இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும்
பழகிய எனினும் இ பாவை தோன்றலால்
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே
#35
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
#36
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன
வீக்கிய கனை கழல் வீரன் செம் கணும்
தாக்கு அணங்கு_அனையவள் தனத்தில் தைத்தவே
#37
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும்
இருவரும் மாறி புக்கு இதயம் எய்தினார்
#38
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கி போய்
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ
#39
அந்தம்_இல் நோக்கு இமை அணைகிலாமையால்
பைம் தொடி ஓவிய பாவை போன்றனள்
சிந்தையும் நிறையும் மெய் நலனும் பின் செல
மைந்தனும் முனியொடு மறைய போயினான்
#40
பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும்
நறை கமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலம் மனம் எனும் மத்த யானையின்
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே
#41
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன்
நூல் உறு மருங்குல் போல் நுடங்குவாள் நெடும்
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய்
பால் உறு பிரை என பரந்தது எங்குமே
#42
நோம் உரும் நோய் நிலை நுவலகிற்றிலள்
ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள்
காமனும் ஒரு சரம் கருத்தின் எய்தனன்
வேம் எரி-அதனிடை விறகு இட்டு என்னவே
#43
நிழல் இடு குண்டலம் அதனின் நெய் இடா
அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள்
சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர
தழல் இடு வல்லியே போல சாம்பினான்
#44
தழங்கிய கலைகளும் நிறையும் சங்கமும்
மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும்
இழந்தவள் இமையவர் கடைய யாவையும்
வழங்கிய கடல் என வறியள் ஆயினாள்
#45
கலம் குழைந்து உக நெடு நாணும் கண் அற
நலம் குழைதர நகில்_முகத்தின் ஏவுண்டு
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர
பொலம் குழை மயிலை கொண்டு அரிதின் போயினார்
#46
காதொடும் குழை பொரு கயல் கண் நங்கை-தன்
பாதமும் கரங்களும் அனைய பல்லவம்
தாதொடும் குழையொடும் அடுத்த தண் பனி
சீத நுண் துளி மலர் அமளி சேர்த்தினார்
#47
தாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள்
பூளை வீ புரை பனி புயற்கு தேம்பிய
தாள தாமரை மலர் ததைந்த பொய்கையும்
வாள் அரா நுங்கிய மதியும் போலவே
#48
மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல்
முலை முகட்டு உதிர்ந்தன நெடும் கண் முத்து_இனம்
சிலை நுதல் கடை உறை செறிந்த வேர்வு தன்
உலை முக புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே
#49
கம்பம் இல் கொடு மன காம வேடன் கை
அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள்
வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப மென் மலர்
கொம்பு என அமளியில் குழைந்து சாய்ந்தனள்
#50
சொரிந்தன நறு மலர் சுரு கொண்டு ஏறின
பொரிந்தன கலவைகள் பொரியின் சிந்தின
எரிந்த வெம் கனல் சுட இழையில் கோத்த நூல்
பரிந்தன கரிந்தன பல்லவங்களே
#51
தாதியர் செவிலியர் தாயர் தவ்வையர்
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர்
யாது-கொல் இது என எண்ணல் தேற்றலர்
போதுடன் அயினி நீர் சுழற்றி போற்றினர்
#52
அருகில் நின்று அசைகின்ற ஆலவட்ட கால்
எரியினை மிகுத்திட இழையும் மாலையும்
கரிகுவ தீகுவ கனல்வ காட்டலால்
உருகு பொன்_பாவையும் ஒத்து தோன்றினாள்
#53
அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும்
வல் எழு அல்லவேல் மரகத பெரும்
கல் எனும் இரு புயம் கமலம் கண் எனும்
வில்லொடும் இழிந்தது ஓர் மேகம் என்னுமால்
#54
நெருக்கி உள் புகுந்து அரு நிறையும் பெண்மையும்
உருக்கி என் உயிரொடு உண்டு போனவன்
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது
கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே
#55
பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்
எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன்
மண் வழி நடந்து அடி வருந்த போனவன்
கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்
#56
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரை தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே
#57
படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்
தடம் தரு தாமரை தாளுமே அல
கடம் தரு மா மத களி நல் யானை போல்
நடந்தது கிடந்தது என் உள்ளம் நண்ணியே
#58
உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன்
விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்
வரி சிலை தட கையா மார்பின் நூலினன்
அரசிளங்குமரனே ஆகல் வேண்டுமால்
#59
பிறந்து உடை நலம் நிறை பிணித்த எந்திரம்
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில்
எறிந்த அ குமரனை இன்னும் கண்ணிற் கண்டு
அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம்
#60
என்று இவை இனையன விளம்பும் வந்து எதிர்
நின்றனன் இவண் எனும் நீங்கினான் எனும்
கன்றிய மனத்து உறு காம வேட்கையால்
ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே
#61
அன்ன மென் நடையவட்கு அமைந்த காம தீ
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என
நல் நெடும் கரங்களை நடுக்கி ஓடி போய்
முன்னை வெம் கதிரவன் கடலில் மூழ்கினான்
#62
விரி மலர் தென்றல் ஆம் வீசு பாசமும்
எரி நிற செக்கரும் இருளும் காட்டலால்
அரியவட்கு அனல் தரும் அந்தி_மாலையாம்
கரு நிற செம் மயிர் காலன் தோன்றினான்
#63
மீது அறை பறவை ஆம் பறையும் கீழ் விளி
ஓத மென் சிலம்பொடும் உதிர செக்கரும்
பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால்
சாதகர் என்னவும் தகைத்து அம் மாலையே
#64
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி
இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய
உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள்
#65
கடலோ மழையோ முழு நீல கல்லோ காயா நறும் போதோ
படர் பூம் குவளை நாள் மலரோ நீலோற்பலமோ பானலோ
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன்
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே
#66
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர்
பை வாய் அந்தி பட அரவே என்னை வளைத்து பகைத்தியால்
எய்வான் ஒருவன் கை ஓயான் உயிரும் ஒன்றே இனி இல்லை
உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ
#67
ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம்
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ
காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து காயத்தின்
மேலும் நிலத்தும் மெழுகியதோ விளைக்கும் இருளாய் விளைந்ததுவே
#68
வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர்-தமை காணேன்
எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ
அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ
#69
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம்
தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய்
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி
தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால் இரவை பகல் செய்தார்
#70
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின்
விரிந்த திவலை பொதிந்த மணி விசும்பின் மீனின் மேல் விளங்க
இருந்த அமரர் கலக்கிய நாள் அமுதம் நிறைந்த பொன் கலசம்
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள்
#71
வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது
பண்டு ஆலிலையின் மிசை கிடந்து பாரும் நீரும் பசித்தான் போல்
உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர்
வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது ஆழி வெண் திங்கள்
#72
புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல்
நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை
கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த
வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால்
#73
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கி கொண்ட விரி நல் நீர்
பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால்
#74
நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடு வெண் திங்கள் எனும் தச்சன்
மீ தன் கரங்கள் அவை பரப்பி மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால்
காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு
பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால்
#75
விரை செய் கமல பெரும் போது விரும்பி புகுந்த திருவினொடும்
குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால்
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட
அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல்
#76
நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய்
ஏங்கா கிடக்கும் எறி கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே
ஓங்கா நின்ற இருளாய் வந்து உலகை விழுங்கி மேன்மேலும்
வீங்கா நின்ற கரு நெருப்பின் இடையே எழுந்த வெண் நெருப்பே
#77
கொடியை அல்லை நீ யாரையும் கொல்கிலாய்
வடு இல் இன் அமுதத்தொடும் வந்தனை
பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே
#78
மீது மொய்த்து எழு வெண் நிலவின் கதிர்
மோது மத்திகை மென் முலை மேல் பட
ஓதிம பெடை வெம் கனல் உற்று என
போது மொய்த்த அமளி புரண்டாள்-அரோ
#79
நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலா கதிர்
தாக்க வெந்து தளர்ந்து சரிந்தனள்
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரை
பூக்கள் பட்டது அ பூவையும் பட்டனள்
#80
வாச மென் கலவை களி வாரி மேல்
பூசபூச புலர்ந்து புழுங்கினள்
வீசவீச வெதும்பினள் மென் முலை
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ
#81
தாயரின் பரி சேடியர் தாது உகு
வீ அரி தளிர் மெல் அணை மேனியில்
காய் எரி கரிய கரிய கொணர்ந்து
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார்
#82
கன்னி நல் நகரில் கமழ் சேக்கையுள்
அன்னம் இன்னணம் ஆயினள் ஆயவள்
மின்னின் மின்னிய மேனி கண்டான் என
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம்

11 கைக்கிளை படலம்

#1
ஏகி மன்னனை கண்டு எதிர்கொண்டு அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட
போக பூமியில் பொன் நகர் அன்னது ஓர்
மாக மாடத்து அனைவரும் வைகினார்
#2
முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்திய பின் இருள்
கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்
தனியும் தானும் அ தையலும் ஆயினான்
#3
விண்ணின் நீங்கிய மின் உரு இ முறை
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே-கொலோ
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்
#4
வள்ளல் சேக்கை கரியவன் வைகுறும்
வெள்ள பாற்கடல் போல் மிளிர் கண்ணினாள்
அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது
உள்ள தாமரையுள் உறைகின்றதே
#5
அருள் இலாள் எனினும் மனத்து ஆசையால்
வெருளும் நோய் விட கண்ணின் விழுங்கலால்
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ்
பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே
#6
பூண் உலாவிய பொன் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதல-என்னினும்
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ
#7
வண்ண மேகலை தேர் ஒன்று வாள் நெடும்
கண் இரண்டு கதிர் முலைதாம் இரண்டு
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்
எண்ணும் கூற்றினும் இத்தனை வேண்டுமோ
#8
கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன்
பொன்னை முன்னிய பூம் கணை மாரியால்
என்னை எய்து தொலைக்கும் என்றால் இனி
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே
#9
கொள்ளை கொள்ள கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் என படரும் நிலா
உள்ள உள்ள உயிரை துருவிட
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்-கொலோ
#10
ஏகும் நல்வழி அல்வழி என் மனம்
ஆகுமோ இதற்கு ஆகிய காரணம்
பாகு போல் மொழி பைம் தொடி கன்னியே
ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே
#11
கழிந்த கங்குல் அரசன் கதிர் குடை
விழுந்தது என்னவும் மேல் திசையாள் சுடர்
கொழுந்து சேர் நுதல் கோது அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும் ஆழ்ந்தது திங்களே
#12
வீசுகின்ற நிலா சுடர் வீந்ததால்
ஈசன் ஆம் மதி ஏகலும் சோகத்தால்
பூசு வெண் கலவை புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே
#13
ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை
சிதையும் மனத்து இடர் உடைய செங்கமல முகம் மலர செய்ய வெய்யோன்
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவை போர்வை போர்த்த
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான்
#14
விசை ஆடல் பசும் புரவி குரம் மிதிப்ப உதயகிரி விரிந்த தூளி
பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய
அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன்
திசை ஆளும் மத கரியை சிந்தூரம் அப்பிய போல் சிவந்த மாதோ
#15
பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின் பொருள்-வயினின் பிரிந்து போன
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும்
கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் போல்
புண்டரிகம் முகம் மலர அகம் மலர்ந்து பொலிந்தன பூம் பொய்கை எல்லாம்
#16
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன
கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம்
#17
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல்
எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை
தொல் ஆழி துயிலாதே துயர் ஆழி நெடும் கடலுள் துயில்கின்றானே
#18
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த
குழி யானையின் எழுந்து தொல் நியம துறை முடித்து சுருதி அன்ன
வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான்

12 வரலாற்றுப்படலம்

#1
முடி சனகர் பெருமானும் முறையாலே பெரு வேள்வி முற்றி சுற்றும்
இடி குரலின் முரச இயம்ப இந்திரன் போல் சந்திரன் தோய் கோயில் எய்தி
எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைம் தார்
வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ
#2
இருந்த குல குமரர்-தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார்
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான்
#3
ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல்
சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப
சாதித்த பெரும் தகையும் இவர் குலத்து ஓர் தராபதி-காண்
#4
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி
மணி அரங்கு நெடு முடியாய் மலர் அயனே வழிபட்டு
பணி அரங்க பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்
#5
தான் தனக்கு வெலற்கு அரிய தானவரை தலை துமித்து என்
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு
ஏன்று எடுத்த சிலையினன் ஆய் இகல் புரிந்த இவர் குலத்து ஓர்
தோன்றலை பண்டு இந்திரன்-காண் விடை ஏறாய் சுமந்தானும்
#6
அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால்
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன்-காண்
நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல்
குரை கடலை நெடு வரையால் கடைந்து அமுது கொடுத்தானும்
#7
கருதல் அரும் பெரும் குணத்தோர் இவர் முதலோர் கணக்கு இறந்தோர்
திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர்
பொருது உறை சேர் வேலினாய் புலி போத்தும் புல்வாயும்
ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன்
#8
மறை மன்னும் மணி முடியும் ஆரமும் வாளொடு மின்ன
பொறை மன்னு வானவரும் தானவரும் பொரும் ஒரு நாள்
விறல் மன்னர் தொழு கழலாய் இவர் குலத்தோன் வில் பிடித்த
அறம் என்ன ஒரு தனியே திரிந்து அமராபதி கரத்தோன்
#9
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும் புகழ்கிற்பாம்
மின் உயிர்க்கும் நெடு வேலாய் இவர் குலத்தோன் மென் புறவின்
மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால்
#10
இடறு ஓட்ட இன நெடிய வரை உருட்டி இ உலகம்
திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர்
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர்
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ
#11
தூ நின்ற சுடர் வேலாய் அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல்
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ ஏடு அவிழ் கொன்றை
பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை
வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண்
#12
கயல் கடல் சூழ் உலகு எல்லாம் கை_நெல்லி கனி ஆக்கி
இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி
முயல் கறை இல் மதி குடையாய் இவர் குலத்தோன் முன் ஒருவன்
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான்
#13
சந்திரனை வென்றானும் உருத்திரனை சாய்த்தானும்
துந்து எனும் தானவனை சுடு சரத்தால் துணித்தானும்
வந்த குலத்திடை வந்த ரகு என்பான் வரி சிலையால்
இந்திரனை வென்று திசை இரு_நான்கும் செரு வென்றான்
#14
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான்
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே
#15
அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன்
பயந்த குல குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு எல்லாம்
நயந்து உரைத்து கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம் பல்
இயம் துவைத்த கடை தலையாய் யான் அறிந்தபடி கேளாய்
#16
துனி இன்றி உயிர் செல்ல சுடர் ஆழி படை வெய்யோன்
பனி வென்றபடி என்ன பகை வென்று படி காப்போன்
தனு அன்றி துணை இல்லான் தருமத்தின் கவசத்தான்
மனு வென்ற நீதியான் மகவு இன்றி வருந்துவான்
#17
சிலை கோட்டு நுதல் குதலை செம் கனி வாய் கரு நெடும் கண்
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல் மின் நுடங்கும் இடையாரை
முலை கோட்டு விலங்கு என்று தொடர்ந்து அணுகி முன் நின்ற
கலை கோட்டு பெயர் முனியால் துயர் நீங்க கருதினான்
#18
தார் காத்த நறும் குஞ்சி தனயர்கள் என் தவம் இன்மை
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால்
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின்
பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான்
#19
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய்
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும்
செவ்வி இளம் சிறுவர்களை தருகின்றேன் இனி தேவர்
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான்
#20
காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப
மா தவரில் பெரியோனும் மற்றதனை முற்றுவித்தான்
சோதி மணி பொன் கலத்து சுதை அனைய வெண் சோறு ஓர்
பூத கணத்து அரசு ஏந்தி அனல் நின்றும் போந்ததால்
#21
பொன்னின் மணி பரிகலத்தில் புறப்பட்ட இன் அமுதை
பன்னு மறை பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால்
தன் அனைய நிறை குணத்து தசரதனும் வரன்முறையால்
நல் நுதலார் மூவருக்கும் நாலு கூறிட்டு அளித்தான்
#22
விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும்
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும்
இரும் கடக கரதலத்து இ எழுத அரிய திருமேனி
கரும் கடலை செம் கனி வாய் கவுசலை என்பாள் பயந்தாள்
#23
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானை பரதன் எனும் பெயரானை
எள்ள_அரிய குணத்தாலும் எழிலாலும் இ இருந்த
வள்ளலையே அனையானை கேகயர்_கோன் மகள் பயந்தாள்
#24
அரு வலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர்
வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திம் எனில் செம்பொன்
பரு வரையும் நெடு வெள்ளி பருப்பதமும் போல்வார்கள்
இருவரையும் இ இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள்
#25
தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய்
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரை போல் பணி செய்ய
கலை ஆழி கதிர் திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும்
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள்
#26
திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழல் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரே-காண்
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து
மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன்-காண்
#27
ஈங்கு இவரால் என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும்
தீங்கு உடைய கொடியோரை கொல்விக்கும் சிந்தையன் ஆய்
பூம் கழலார் கொண்டுபோய் வனம் புக்கேன் புகா முன்னம்
தாங்க_அரிய பேர் ஆற்றல் தாடகையே தலைப்பட்டாள்
#28
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி
#29
செக்கர் நிறத்து எரி குஞ்சி சிர குவைகள் பொருப்பு என்ன
உக்கனவோ முடிவு இல்லை ஓர் அம்பினொடும் அரக்கி
மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன்
புக்க இடம் அறிந்திலேன் போந்தனென் என் வினை முடித்தே
#30
ஆய்ந்து ஏற உணர் ஐய அயற்கேயும் அறிவு அரிய
காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏற சுடுகிற்கும் படை கலங்கள் செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால்
#31
கோதமன்-தன் பன்னிக்கு முன்னை உரு கொடுத்தது இவன்
போது வென்றது என பொலிந்த பொலம் கழல் கால் பொடி கண்டாய்
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால்
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான்

13 கார்முக படலம்

#1
மாற்றம் யாது உரைப்பது மாய விற்கு நான்
தோற்றனென் என மனம் துளங்குகின்றதால்
நோற்றனள் நங்கையும் நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல் இடர் கடல் ஏற்றும் என்றனன்
#2
என்றனன் ஏன்று தன் எதிர் நின்றாரை அ
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என
நன்று என வணங்கினர் நால்வர் ஓடினர்
பொன் திணி கார்முக_சாலை புக்கனர்
#3
உறு வலி யானையை ஒத்த மேனியர்
செறி மயிர் கல் என திரண்ட தோளினர்
அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர்
தறி மடுத்து இடையிடை தண்டில் தாங்கினர்
#4
நெடு நில_மகள் முதுகு ஆற்ற நின்று உயர்
தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற
இடம் இலை உலகு என வந்தது எங்கணும்
கடல் புரை திரு நகர் இரைத்து காணவே
#5
சங்கொடு சக்கரம் தரித்த செங்கை அ
சிங்க ஏறு அல்லனேல் இதனை தீண்டுவான்
எங்கு உளன் ஒருவன் இன்று ஏற்றின் இ சிலை
மங்கை-தன் திருமணம் வாழுமால் என்பார்
#6
கைதவம் தனு எனல் கனக குன்று என்பார்
செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன்
மொய் தவ பெருமையின் முயற்சியால் என்பார்
எய்தவன் யாவனோ ஏற்றி பண்டு என்பார்
#7
திண் நெடு மேருவை திரட்டிற்றோ என்பார்
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார்
அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ என்பார்
விண் இடு நெடிய வில் வீழ்ந்ததோ என்பார்
#8
என் இது கொணர்க என இயம்பினான் என்பார்
மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார்
முன்னை ஊழ்வினையினால் முடிக்கில் ஆம் என்பார்
கன்னியும் இ சிலை காணுமோ என்பார்
#9
இ சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது என்பார்
ந சிலை நங்கை மேல் நாட்டும் வேந்து என்பார்
நிச்சயம் எடுக்கும்-கொல் நேமியான் என்பார்
சிற்சிலர் விதி செய்த தீமை ஆம் என்பார்
#10
மொய்த்தனர் இன்னணம் மொழிய மன்னன் முன்
உய்த்தனர் நிலம் முதுகு உளுக்கி கீழ் உற
வைத்தனர் வாங்குநர் யாவரோ எனா
கைத்தலம் விதிர்த்தனர் கண்ட வேந்தரே
#11
போதகம் அனையவன் பொலிவை நோக்கி அ
வேதனை தருகின்ற வில்லை நோக்கி தன்
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல்-மேயினான்
#12
இமைய வில் வாங்கிய ஈசன் பங்கு உறை
உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய
கமை அறு சின தனி கார்முகம் கொளா
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே
#13
உக்கன பல்லொடு கரங்கள் வீழ்ந்தன
புக்கனர் வானவர் புகாத சூழல்கள்
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின
மு கண் எண் தோளவன் முனிவும் மாறினான்
#14
தாள் உடை வரி சிலை சம்பு உம்பர்-தம்
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ
கோள் உடை விடை_அனான் குலத்துள் தோன்றிய
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான்
#15
கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால்
யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய
தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா
#16
இரும்பு அனைய கரு நெடும் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும்
வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம்
#17
உழுகின்ற கொழு முகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற புவி மடந்தை திரு வெளிப்பட்டு என புணரி
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி
தொழுகின்ற நல் நலத்து பெண் அரசி தோன்றினாள்
#18
குணங்களை என் கூறுவது கொம்பினை சேர்ந்து அவை உய்ய
பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண்
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும்
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார்
#19
சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு செய்வினையால்
வித்தகமும் விதி வசமும் வெவ்வேறே புறம் கிடப்ப
அ திருவை அமரர் குலம் ஆதரித்தார் என அறிஞர்
இ திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார்
#20
கலி தானை கடலோடும் கை தான களிற்று அரசர்
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த
புலி தானை களிற்று உரிவை போர்வையான் வரி சிலையை
வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம்
#21
வல் வில்லுக்கு ஆற்றார்கள் மாரன் வேள் வளை கருப்பின்
மெல் வில்லுக்கு ஆற்றாராய் தாம் எம்மை விளிகுற்றார்
கல் வில்லோடு உலகு ஈந்த கனம் குழையை காதலித்து
சொல் வில்லால் உலகு அளிப்பாய் போர் செய்ய தொடங்கினார்
#22
எம் மன்னன் பெரும் சேனை ஈவு-தனை மேற்கொண்ட
செம் மன்னர் புகழ் வேட்ட பொருளே போல் தேய்ந்ததால்
பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலை காதலித்த
அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால்
#23
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன்
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி
எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என வேந்தர்
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார்
#24
அன்று முதல் இன்று அளவும் ஆரும் இந்த சிலை அருகு
சென்றும் இலர் போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார்
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின்
நன்று மலர் குழல் சீதை நலம் பழுது ஆகாது என்றான்
#25
நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி அறிவனும் தன்
புனைந்த சடை_முடி துளக்கி போர் ஏற்றின் முகம் பார்த்தான்
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து அந்த நெடும் சிலையை நோக்கினான்
#26
பொழிந்த நெய் ஆகுதி வாய்-வழி பொங்கி
எழுந்த கொழும் கனல் என்ன எழுந்தான்
அழிந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார்
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார்
#27
தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம்
சே இழை மங்கையர் சிந்தை-தொறு எய்யா
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான்
#28
காணும் நெடும் சிலை கால் வலிது என்பார்
நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ்
பாணி இவன் படர் செம் கை படாதேல்
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள் என்பார்
#29
கரங்கள் குவித்து இரு கண்கள் பனிப்ப
இரும் களிறு இ சிலை ஏற்றிலன் ஆயின்
நரந்த நறை குழல் நங்கையும் நாமும்
முருங்கு எரியில் புக மூழ்குதும் என்பார்
#30
வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்
கொள் என் முன்பு கொடுப்பதை அல்லால்
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து இ
பிள்ளை முன் இட்டது பேதைமை என்பார்
#31
ஞான முனிக்கு ஒரு நாண் இலை என்பார்
கோன் இவனின் கொடியோன் இலை என்பார்
மானவன் இ சிலை கால் வளையானேல்
பீன தனத்தவள் பேறு இலள் என்பார்
#32
தோகையர் இன்னன சொல்லிட நல்லோர்
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப
மாக மடங்கலும் மால் விடையும் பொன்
நாகமும் நாகமும் நாண நடந்தான்
#33
ஆடக மால் வரை அன்னது தன்னை
தேட அரு மா மணி சீதை எனும் பொன்
சூடக வால் வளை சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான்
#34
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்
#35
ஆரிடை புகுதும் நாம் என்று அமரர்கள் கமலத்தோன் தன்
பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார்
பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே
#36
பூ_மழை சொரிந்தார் விண்ணோர் பொன் மழை பொழிந்த மேகம்
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த
கோ முனி கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற
நாம வேல் சனகற்கு இன்று நல்வினை பயந்தது என்னா
#37
மாலையும் இழையும் சாந்தும் சுண்ணமும் வாச நெய்யும்
வேலை வெண் முத்தும் பொன்னும் காசும் நுண் துகிலும் வீசி
பால் வளை வயிர்கள் ஆர்ப்ப பல்_இயம் துவைப்ப முந்நீர்
ஓல் கிளர்ந்து உவாவுற்று என்ன ஒலி நகர் கிளர்ந்தது அன்றே
#38
நல் இயல் மகர வீணை தேன் உக நகையும் தோடும்
வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர் எழிலி தோன்ற
சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே
#39
உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கரும் கண் மாதர்
புண் உறு புலவி நீங்க கொழுநரை புல்லி கொண்டார்
வெண் நிற மேகம் மேன்மேல் விரி கடல் பருகுமா போல்
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார்
#40
வயிரியர் மதுர கீதம் மங்கையர் அமுத கீதம்
செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம்
பயிர் கிளை வேயின் கீதம் என்று இவை பருகி விண்ணோர்
உயிர் உடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார்
#41
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய அமரர் நாட்டு
தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார்
செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார்
மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார்
#42
தயரதன் புதல்வன் என்பார் தாமரை கண்ணன் என்பார்
புயல் இவன் மேனி என்பார் பூவையே பொருவும் என்பார்
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார்
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார்
#43
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்
கொம்பினை காணும்-தோறும் குரிசிற்கும் அன்னதே ஆம்
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார்
இம்பர் இ நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார்
#44
இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண்
பொன் தொடி மடந்தைக்கு அப்பால் உற்றது புகலல் உற்றாம்
#45
ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கி
பாசிழை மகளிர் சூழ போய் ஒரு பளிக்கு மாட
காசு இல் தாமரையின் பொய்கை சந்திர காந்தம் ஈன்ற
சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள்
#46
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான
வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன்
தண் நறும் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின்
உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே
#47
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும்
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும்
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும்
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம்
#48
விண்தலம் கலந்து இலங்கு திங்களோடு மீது சூழ்
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார் சிலை
கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு என் ஆவியை
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ
#49
பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில்
வெம் சரங்கள் நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே
சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே
#50
இளைக்கலாத கொங்கைகாள் எழுந்து விம்மி என் செய்வீர்
முளைக்கலா மதி கொழுந்து போலும் வாள் முகத்தினான்
விளைக்கலாத வில் கையாளி வள்ளல் மார்பின் உள் உற
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே
#51
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே
#52
அடர்ந்த வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும்
விடம் குடைந்த மெய்யின்-நின்று வெந்திடாது எழுந்து வெம்
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து
உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே
#53
விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இ
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார்
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலென்
கண்ணுளே இருந்த போதும் என்-கொல் காண்கிலாதவே
#54
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று
ஐய பொன் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர் போல்
மொய் கிடங்கும் அண்ணல் தோள் முயங்கிடாது முன்னமே
கைகடக்க விட்டு இருந்த கட்டுரைப்பது என்-கொலோ
#55
ஒன்று கொண்டு உள் நைந்து நைந்து இரங்கி விம்மி விம்மியே
பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்-வாய்
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு குளிர் மனத்து
ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம்
#56
வடங்களும் குழைகளும் வானவில் இட
தொடர்ந்த பூம் கலைகளும் குழலும் சோர்தர
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள்
நெடும் தடம் கிடந்த கண் நீல மாலையே
#57
வந்து அடி வணங்கிலள் வழங்கும் ஓதையள்
அந்தம்_இல் உவகையள் ஆடி பாடினள்
சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்தியும்
சுந்தரி சொல் என தொழுது சொல்லுவாள்
#58
கய ரத துரக மா கடலன் கல்வியன்
தயரதன் எனும் பெயர் தனி செல் நேமியான்
புயல் பொழி தட கையான் புதல்வன் பூம் கணை
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான்
#59
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான்
அரா அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான்
இராமன் என்பது பெயர் இளைய கோவொடும்
பராவ அரு முனியொடும் பதி வந்து எய்தினான்
#60
பூண் இயல் மொய்ம்பினன் புனிதன் எய்த வில்
காணிய வந்தனன் என்ன காவலன்
ஆணையின் அடைந்த வில் அதனை ஆண்தகை
நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே
#61
மாத்திரை அளவில் தாள் மடுத்து முன் பயில்
சூத்திரம் இது என தோளின் வாங்கினான்
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ_மழை
வேத்தவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே
#62
கோமுனியுடன் வரு கொண்டல் என்ற பின்
தாமரை கண்ணினான் என்ற தன்மையால்
ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள்
பூ மிசை விட்டு மண் பொலிந்த பொற்பினாள்
#63
இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும்
மெல்லியல் முலைகளும் விம்ம விம்முவாள்
சொல்லிய குறியின் அ தோன்றலே அவன்
அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள்
#64
ஆசையுற்று அயர்பவள் இன்னள் ஆயினள்
பாசடை கமலத்தோன் படைத்த வில் இறும்
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி அ
கோசிகற்கு ஒரு மொழி சனகன் கூறுவான்
#65
உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான்
விரைவின் இன்று ஒரு பகல் முடித்தல் வேட்கையோ
முரசு எறிந்து அதிர் கழல் முழங்கு தானை அ
அரசையும் இ வழி அழைத்தல் வேட்கையோ
#66
மல் வலான் அ உரை பகர மா தவன்
ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று என
எல்லை இல் உவகையான் இயைந்தவாறு எலாம்
சொல்லுக என்று ஓலையும் தூதும் போக்கினான்

14 எழுச்சி படலம்

#1
கடுகிய தூதரும் காலில் காலின் சென்று
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார்
அடி இணை தொழ இடம் இன்றி மன்னவர்
முடியொடு முடி பொரு வாயில் முன்னினார்
#2
முகந்தனர் திருவருள் முறையின் எய்தினார்
திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது செல்வனை
புகழ்ந்தனர் அரச நின் புதல்வர் போய பின்
நிகழ்ந்ததை இது என நெடிது கூறினார்
#3
கூறிய தூதரும் கொணர்ந்த ஓலையை
ஈறு_இல் வண் புகழினாய் இது அது என்றனர்
வேறு ஒரு புல_மகன் விரும்பி வாங்கினான்
மாறு அதிர் கழலினான் வாசி என்றனன்
#4
இலை முக படத்து அவன் எழுதி காட்டிய
தலை மகன் சிலை தொழில் செவியில் சார்தலும்
நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட
மலை என வளர்ந்தன வயிர தோள்களே
#5
வெற்றி வேல் மன்னவன் தக்கன் வேள்வியில்
கற்றை வார் சடை முடி கணிச்சி வானவன்
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலி-கொலாம் இடித்தது ஈங்கு என்றான்
#6
என்று உரைத்து எதிர் எதிர் இடைவிடாது நேர்
துன்றிய கனை கழல் தூதர் கொள்க எனா
பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான்
குன்று என உயரிய குவவு தோளினான்
#7
வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும்
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம்
சேனையும் அரசரும் செல்க முந்து எனா
ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான்
#8
வாம் பரி விரி திரை கடலை வள்ளுவன்
தேம் பொழி துழாய் முடி செம் கண் மாலவன்
ஆம் பரிசு உலகு எலாம் அளந்துகொண்ட நாள்
சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான்
#9
விடை பொரு நடையினான் சேனை வெள்ளம் ஓர்
இடை இலை உலகினில் என்ன ஈண்டிய
கடையுக முடிவினில் எவையும் கால் பட
புடை பெயர் கடல் என எழுந்து போயதே
#10
சில் இடம் உலகு என செறிந்த தேர்கள்-தாம்
புல்லிடு சுடர் என பொலிந்த வேந்தரால்
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால்
வில் இடும் முகில் என பொலிந்த வேழமே
#11
கால் விரிந்து எழு குடை கணக்கு_இல் ஓதிமம்
பால் விரிந்து இடைஇடை பறப்ப போன்றன
மேல் விரிந்து எழு கொடி படலை விண் எலாம்
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால்
#12
நுடங்கிய துகில் கொடி நூழை கைம் மலை
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என
இடம் பட எங்கணும் எழுந்த வெண் முகில்
தடம் புனல் பருகிட தாழ்வ போன்றவே
#13
இழையிடை இள வெயில் எறிக்கும் அ வெயில்
தழையிடை நிழல் கெட தவழும் அ தழை
மழையிடை எழில் கெட மலரும் அம் மழை
குழைவு உற முழங்கிடும் குழாம் கொள் பேரியே
#14
மன் மணி புரவிகள் மகளிர் ஊர்வன
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன
பொன் அணி புணர் முலை புரி மென் கூந்தலார்
மின் என மட பிடி மேகம் போன்றவே
#15
இணை எடுத்து இடைஇடை நெருக்க ஏழையர்
துணை முலை குங்கும சுவடும் ஆடவர்
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல்
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ
#16
முத்தினால் முழுநிலா எறிக்கும் மொய்ம் மணி
பத்தியால் இள வெயில் பரப்பும் பாகினும்
தித்தியாநின்ற சொல் சிவந்த வாய்ச்சியர்
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
#17
வில்லினர் வாளினர் வெறித்த குஞ்சியர்
கல்லினை பழித்து உயர் கனக தோளினர்
வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி
புல்லிய களிறு என மைந்தர் போயினார்
#18
மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என
துன்று இரும் கூந்தலார் முகங்கள் தோன்றலால்
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம் போல்
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே
#19
மொய் திரை கடல் என முழங்கு மூக்கு உடை
கைகளின் திசை நிலை களிற்றை ஆய்வன
மையல் உற்று இழி மத மழை அறாமையால்
தொய்யலை கடந்தில சூழி யானையே
#20
சூர் உடை நிலை என தோய்ந்தும் தோய்கிலா
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல்
தாரொடும் சதியொடும் தாவும் ஆயினும்
பாரிடை மிதிக்கில பரியின் பந்தியே
#21
ஊடிய மனத்தினர் உறாத நோக்கினர்
நீடிய உயிர்ப்பினர் நெரிந்த நெற்றியர்
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர்
ஆடவர் உயிர் என அருகு போயினார்
#22
மாறு என தடங்களை பொருது மா மரம்
ஊறு பட்டு இடைஇடை ஒடித்து சாய்த்து உராய்
ஆறு என சென்றன அருவி பாய் கவுள்
தாறு என கனல் உமிழ் தறுகண் யானையே
#23
உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருள் கொம்பு ஆயினான்
எழுந்திலன் எழுந்து இடை படரும் சேனையின்
கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே
#24
கண்டவர் மனங்கள் கைகோப்ப காதலின்
வண்டு இமிர் கோதையர் வதன ராசியால்
பண் திகழ் பண்டிகள் பரிசின் செல்வன
புண்டரிக தடம் போவ போன்றவே
#25
பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும்
ஈண்டிய அன்பினோடு ஏகுவான் இடை
காண்டலும் நோக்கிய கடைக்கண் அஞ்சனம்
ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே
#26
பிள்ளை மான் நோக்கியை பிரிந்து போகின்றான்
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம்
புள்ளும் மென் தாமரை பூவும் நோக்கினான்
உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான்
#27
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து அவர்
பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால்
கங்கை யாறு கடுத்தது கார் என
சங்கு பேரி முழங்கிய தானையே
#28
அமரர் அம் சொல் அணங்கு_அனையார் உயிர்
கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல்
குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால்
சமர பூமியும் ஒத்தது தானையே
#29
தோள் மிடைந்தன தூணம் மிடைந்து என
வாள் மிடைந்தன வான் மின் மிடைந்து என
தாள் மிடைந்தன தம்மி மிடைந்து என
ஆள் மிடைந்தன ஆளி மிடைந்து என
#30
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிட
பேர்கிலாது பிறங்கு முகத்தினான்
தேர்கிலான் நெறி அந்தரில் சென்று ஒரு
மூரி மா மத யானையை முட்டினான்
#31
சுழி கொள் வாம் பரி துள்ள ஓர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை ஓர் வள்ளல் தான்
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான்
தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான்
#32
துணைத்த தாமரை நோவ தொடர்ந்து அடர்
கணை கரும் கணினாளை ஓர் காளைதான்
பணைத்த வெம் முலை பாய் மத யானையை
அணைக்க நங்கைக்கு அகல் இடம் இல் என்றான்
#33
சுழியும் குஞ்சி மிசை சுரும்பு ஆர்த்திட
பொழியும் மா மத யானையின் போகின்றான்
கழிய கூரிய என்று ஒரு காரிகை
விழியை நோக்கி தன் வேலையும் நோக்கினான்
#34
தரங்க வார் குழல் தாமரை சீறடி
கரும் கண் வாள் உடையாளை ஓர் காளைதான்
நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினீர்
மருங்குல் எங்கு மறந்தது நீர் என்றான்
#35
கூற்றம் போலும் கொலை கணினால் அன்றி
மாற்றம் பேசுகிலாளை ஓர் மைந்தன்தான்
ஆற்று நீரிடை அம் கைகளால் எடுத்து
ஏற்றுவார் உமை யாவர்-கொலோ என்றான்
#36
தள்ள_அரும் பரம் தாங்கிய ஒட்டகம்
தெள்ளு தீம் குழை யாவையும் தின்கில
உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன
கள் உண் மாந்தரின் கைப்பன தேடியே
#37
அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர்
பரித்த காவினர் பப்பரர் ஏகினார்
திருத்து கூடத்தை திண் கணையத்தொடும்
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே
#38
பித்த யானை பிணங்கி பிடியில் கை
வைத்த மேல் இருந்து அஞ்சிய மங்கைமார்
எய்த்து இடுக்கண் உற்றார் புதைத்தார்க்க்கு இரு
கைத்தலங்களில் கண் அடங்காமையே
#39
வாம மேகலையாரிடை வாலதி
பூமி தோய் பிடி சிந்தரும் போயினார்
காமர் தாமரை நாள்_மலர் கானத்துள்
ஆமை மேல் வரும் தேரையின் ஆங்கு-அரோ
#40
இம்பர் நாட்டின் தரம் அல்லள் ஈங்கு இவள்
உம்பர் கோமகற்கு என்கின்றது ஒக்குமால்
கம்ப மா வர கால்கள் வளைத்து ஒரு
கொம்பு_அனாளை கொண்டு ஓடும் குதிரையே
#41
தந்த வார் குழல் சோர்பவை தாங்கலார்
சிந்து மேகலை சிந்தையும் செய்கலார்
எந்தை வில் இறுத்தான் எனும் இன் சொலை
மைந்தர் பேச மனம் களித்து ஓடுவார்
#42
குடையர் குண்டிகை தூக்கினர் குந்திய
நடையர் நாசி புதைத்த கை நாற்றலர்
கட களிற்றையும் காரிகையாரையும்
அடைய அஞ்சிய அந்தணர் முந்தினார்
#43
நாறு பூம் குழல் நங்கையர் கண்ணின் நீர்
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட
மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து
ஏறு தேர் என கைகள் இழிச்சுவார்
#44
குரைத்த தேரும் களிறும் குதிரையும்
நிரைத்த வார் முரசும் நெளிந்து எங்கணும்
இரைத்த பேர் ஒலியால் இடை யாவரும்
உரைத்த உணர்ந்திலர் ஊமரின் ஏகினார்
#45
நுண் சிலம்பி வலந்தன நுண் துகில்
கள் சிலம்பு கரும் குழலார் குழ
உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால்
உள் சிலம்பிடு பொய்கையும் போன்றதே
#46
தெண் திரை பரவை திரு அன்னவர்
நுண் திரை புரை நோக்கிய நோக்கினை
கண்டு இரைப்பன ஆடவர் கண் களி
வண்டு இரைப்பன ஆனை மதங்களே
#47
உழை கலித்தன என்ன உயிர்-துணை
நுழை கலி கரும் கண்ணியர் நூபுர
இழை கலித்தன இன்_இயமா எழும்
மழை கலித்து என வாசி கலித்தவே
#48
மண் களிப்ப நடப்பவர் வாள் முக
உண் களி கமலங்களின் உள் உறை
திண் களி சிறு தும்பி என சிலர்
கண் களித்தன காமன் களிக்கவே
#49
எண்ண மாத்திரமும் அரிதாம் இடை
வண்ண மாத்துவர் வாய் கனி வாய்ச்சியர்
திண்ணம் மாத்து ஒளிர் செ இளநீர் இழி
சுண்ணம் ஆத்தன தூளியும் ஆத்தவே
#50
சித்திர தடம் தேர் மைந்தர் மங்கையர்
உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர்
இ திறத்தினர் எத்தனையோ பலர்
மொய்த்து இரைத்து வழிக்கொண்டு முன்னினார்
#51
குசை உறு பரியும் தேரும் வீரரும் குழுமி எங்கும்
விசையொடு கடுக பொங்கி வீங்கிய தூளி விம்மி
பசை உறு துளியின் தாரை பசும் தொளை அடைத்த மேகம்
திசை-தொறும் நின்ற யானை மத தொளை செம்மிற்று அன்றே
#52
கேட்க தட கையாலே கிளர் ஒளி வாளும் பற்றி
சூடக தளிர் கை மற்றை சுடர் மணி தட கை பற்றி
ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில்
பாடக காலினாரை பயபய கொண்டு போனார்
#53
செய்களின் மடுவில் நல் நீர் சிறைகளில் நிறைய பூத்த
நெய்தலும் குமுத பூவும் நெகிழ்ந்த செங்கமல போதும்
கைகளும் முகமும் வாயும் கண்களும் காட்ட கண்டு
கொய்து அவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரால்
#54
பந்தி அம் புரவி-நின்றும் பாரிடை இழிந்தோர் வாச
குந்தள பாரம் சோர குலமணி கலன்கள் சிந்த
சந்த நுண் துகிலும் வீழ தளிர் கையால் அணைத்து சார
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார்
#55
குடையொடு பிச்சம் தொங்கல் குழாங்களும் கொடியின் காடும்
இடைஇடை மயங்கி எங்கும் வெளி சுரந்து இருளை செய்ய
படைகளும் முடியும் பூணும் படர் வெயில் பரப்பி செல்ல
இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே
#56
முருக்கு இதழ் முத்த மூரல் முறுவலார் முகங்கள் என்னும்
திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள்
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார்
#57
நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று
காந்தின மணியும் முத்தும் சிந்தின கலாபம் சூழ்ந்த
பாந்தளின் அல்குலார்-தம் பரிபுரம் புலம்பு பாத
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார்
#58
கொற்ற நல் இயங்கள் எங்கும் கொண்டலின் துவைப்ப பண்டி
பெற்ற ஏறு அன்ன புள்ளின் பேதையர் வெருவி நீங்க
முற்று உறு பரங்கள் எல்லாம் முறைமுறை பாசத்தோடும்
பற்று அற வீசி ஏகி யோகியின் பரிவு தீர்ந்த
#59
கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா
வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம்
#60
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய்
விறலியரோடு நல் யாழ் செயிரியர் புரவி மேலார்
நறை செவி பெய்வது என்ன நைவள அமுத பாடல்
முறைமுறை பகர்ந்து போனார் கின்னர மிதுனம் ஒப்பார்
#61
அருவி பெய் வரையின் பொங்கி அங்குசம் நிமிர எங்கும்
இரியலின் சனங்கள் சிந்த இளம் களி சிறு கண் யானை
விரி சிறை தும்பி வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து மாதர்
சுரி குழல் படிய வேற்று பிடியொடும் தொடர்ந்து செல்ப
#62
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி
அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும்
கறை கெழு வேல் கணாரும் மைந்தரும் கவினி ஒல்லை
நெறியிடை படர வேந்தன் நேய மங்கையர் செல்வார்
#63
பொய்கை அம் கமல கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி
ஐ_இருநூறு சூழ ஆய் மணி சிவிகை-தன் மேல்
தெய்வ மங்கையரும் நாண தேன் இசை முரல போனாள்
#64
விரி மணி தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும்
அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து_இரட்டி சூழ
குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன
இருவரை பயந்த நங்கை யாழ் இசை முரல போனாள்
#65
வெள் எயிற்று இலவ செ வாய் முகத்தை வெண் மதியம் என்று
கொள்ளையின் சுற்று மீன்கள் குழுமிய அனைய ஊர்தி
தெள் அரி பாண்டி பாணி செயிரியர் இசை தேன் சிந்த
வள்ளலை பயந்த நங்கை வானவர் வணங்க போனாள்
#66
செம் கையில் மஞ்ஞை அன்னம் சிறு கிளி பூவை பாவை
சங்கு உறை கழித்த அன்ன சாமரை முதல தாங்கி
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில்
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார்
#67
காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார்
வீர வேத்திரத்தார் தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார்
தார் அணி புரவி மேலார் தலத்து உளார் கதித்த சொல்லார்
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார்
#68
கூனொடு குறளும் சிந்தும் சிலதியர் குழாமும் கொண்ட
பால் நிற புரவி அன்ன புள் என பாரில் செல்ல
தேனொடு மிஞிறும் வண்டும் தும்பியும் தொடர்ந்து செல்ல
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார்
#69
துப்பினின் மணியின் பொன்னின் சுடர் மரகதத்தின் முத்தின்
ஒப்பு அற அமைத்த வையம் ஓவியம் புகழ ஏறி
முப்பதிற்று_இரட்டி கொண்ட ஆயிரம் முகிழ் மென் கொங்கை
செப்ப அரும் திருவின் நல்லார் தெரிவையர் சூழ போனார்
#70
செவி-வயின் அமுத கேள்வி தெவிட்டினார் தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ
கவிகையின் நீழல் கற்பின் அருந்ததி கணவன் வெள்ளை
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான்
#71
பொரு களிறு இவுளி பொன் தேர் பொலம் கழல் குமரர் முந்நீர்
அரு வரை சூழ்ந்தது என்ன அருகு முன் பின்னும் செல்ல
திரு வளர் மார்பர் தெய்வ சிலையினர் தேரர் வீரர்
இருவரும் முனி பின் போன இருவரும் என்ன போனார்
#72
நித்திய நியமம் முற்றி நேமியான் பாதம் சென்னி
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும்
பத்தி ஆன் நிரையும் பாரும் பரிவுடன் நல்கி போனான்
முத்து அணி வயிர பூணான் மங்கல முகிழ்ந்த நல் நாள்
#73
இரு பிறப்பாளர் எண்ணாயிரர் மணி கலசம் ஏந்தி
அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி
வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய்
பரு மணி கலாபத்தார் பல்லாண்டு இசை பரவி போனார்
#74
கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார்
குண்டலம் வீழ்ந்தது என்பார் குறுக அரிது இனி சென்று என்பார்
உண்டு-கொல் எழுச்சி என்பார் ஒலித்தது சங்கம் என்பார்
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ
#75
பொன் தொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார் புரவி வெள்ளம்
சுற்றுறு கமலம் பூத்த தொடு கடல் திரையின் செல்ல
கொற்ற வேல் மன்னர் செம் கை பங்கய குழாங்கள் கூம்ப
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான்
#76
ஆர்த்தது விசும்பை முட்டி மீண்டு அகன் திசைகள் எங்கும்
போர்த்தது அங்கு ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமை
தீர்த்தது செறிந்தது ஓடி திரை நெடும் கடலை எல்லாம்
தூர்த்தது சகரரோடு பகைத்து என தூளி வெள்ளம்
#77
சங்கமும் பணையும் கொம்பும் தாளமும் காளத்தோடு
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட
தொங்கலும் குடையும் தோகை பிச்சமும் சுடரை ஓட்ட
திங்கள் வெண்குடை கண்டு ஓட தேவரும் மருள சென்றான்
#78
மந்திர கீத ஓதை வலம்புரி முழங்கும் ஓதை
அந்தணர் ஆசி ஓதை ஆர்த்து எழு முரசின் ஓதை
கந்து கொல் களிற்றின் ஓதை கடிகையர் கவியின் ஓதை
இந்திர திருவன் செல்ல எழுந்தன திசைகள் எல்லாம்
#79
நோக்கிய திசைகள்-தோறும் தன்னையே நோக்கி செல்ல
வீக்கிய கழல் கால் வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப
தாக்கிய களிறும் தேரும் புரவியும் படைஞர் தாளும்
ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகு ஆக்க போனான்
#80
வீரரும் களிறும் தேரும் புரவியும் மிடைந்த சேனை
பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா
நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால்
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ
#81
இன்னணம் ஏகி மன்னன் யோசனை இரண்டு சென்றான்
பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான்
மன்மத களிறும் மாதர் கொங்கையும் மாரன் அம்பும்
தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே

15 சந்திரசயில படலம்

#1
கோவை ஆர் வட கொழும் குவடு ஒடிதர நிவந்த
ஆவி வேட்டன வரி சிலை அனங்கன் மேல் கொண்ட
பூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும் பூட்ட
தேவதாரத்தும் சந்தினும் பூட்டின சில மா
#2
நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும்
சோர்வு இடம்பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல
காரொடும் தொடர் கவட்டு எழில் மராமர குவட்டை
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம்
#3
திரண்ட தாள் நெடும் செறி பணை மருது இடை ஒடிய
புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல
உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை
#4
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறி
பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன் பல் நூல்
விதங்களால் அவன் மெல்லென மெல்லென விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது ஓர் யானை
#5
மாறு காண்கிலதாய் நின்று மழை என முழங்கும்
தாறு பாய் கரி வன கரி தண்டத்தை தடவி
பாறு பின் செல கால் என செல்வது பண்டு ஓர்
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே
#6
பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்து ஓடி
பூத்த ஏழிலை பாலையை பொடிபொடி ஆக
காத்திரங்களால் தலத்தொடும் தேய்ந்தது ஓர் களிறு
#7
அலகு இல் ஆனைகள் அநேகமும் அவற்றோடு மிடைந்த
திலக வாள் நுதல் பிடிகளும் குருளையும் செறிந்த
உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத
தலைவனே ஒத்து பொலிந்தது சந்திரசயிலம்
#8
தெருண்ட மேலவர் சிறியவர் சேரினும் அவர்-தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய இரதம்
#9
கொவ்வை நோக்கிய வாய்களை இந்திர கோபம்
கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள்
நவ்வி நோக்கியர் நலம் கொள் மேகலை பொலம் சாயல்
செவ்வி நோக்கின திரிவன போல்வன திரிந்த
#10
உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி
மெய் கலாபமும் குழைகளும் இழைகளும் விளங்க
தொக்க மென் மர நிழல் பட துவன்றிய சூழல்
புக்க மங்கையர் பூத்த கொம்பு ஆம் என பொலிந்தார்
#11
தளம் கொள் தாமரை என தளிர் அடியினும் முகத்தும்
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய்
விளங்கு தம் உரு பளிங்கிடை வெளிப்பட வேறு ஓர்
துளங்கு பாறையில் தோழியர் அயிர்த்திட துயின்றார்
#12
பிடி புக்கு ஆயிடை மின்னொடும் பிறங்கிய மேகம்
படி புக்கால் என படிதர பரிபுரம் புலம்ப
துடி புக்கு ஆயிடை திருமகள் தாமரை துறந்து
குடி புக்கால் என குடில் புக்கார் கொடி அன்ன மடவார்
#13
உண் அமுதம் ஊட்டி இளையோர் நகர் கொணர்ந்த
துண்ணெனும் முழக்கின துருக்கர் தர வந்த
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன
பண் இயல் வய பரிகள் பந்தியில் நிரைத்தார்
#14
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார்
ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார்
கார் நிரை என களிறு காவிடை நிரைத்தார்
மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார்
#15
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி_விழியாரும்
வடிக்கும் அயில் வீரரும் மயங்கினர் திரிந்தார்
இடிக்கும் முரச குரலின் எங்கும் முரல் சங்கின்
கொடிக்களின் உணர்ந்து அரசர் கோ நகர் அடைந்தார்
#16
மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறு மெய்யை
சுதை கண் நுரையை பொருவு தூசு கொடு தூய்தா
உதிர்த்தனர் இளம் குமரர் ஓவியரின் ஓவம்
புதுக்கினர் என தருண மங்கையர் பொலிந்தார்
#17
தாள் உயர் தட கிரி இழிந்து தரை சேரும்
கோள் அரி என கரிகள் கொற்றவர் இழிந்தார்
பாளை விரி ஒத்து உலவு சாமரை பட போய்
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார்
#18
தூசின் நெடு வெண் பட முடை குடில்கள்-தோறும்
வாச நகை மங்கையர் முகம் பொலிவ வானில்
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும்
வீசு திரை வெண் புனல் விளங்கியன போலும்
#19
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார்
உண் நிற நறும் பொடியை வீசி ஒரு பாகம்
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம்
#20
தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர்
ஆயவரை அ நிலை அறிந்தனர் துறந்து ஆங்கு
ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண்
பாய் பரி விரைந்து உதறி நின்றன பரந்தே
#21
மும்மை புரி வன் கயிறு கொய்து செயல் மொய்ம்பால்
தம்மையும் உணர்ந்து தரை கண்டு விரைகின்ற
அம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும்
செம்மையவர் என்ன நனி சென்றன துரங்கம்
#22
விழுந்த பனி அன்ன திரை வீசு புரை-தோறும்
கழங்கு பயில் மங்கையர் கரும் கண் மிளிர்கின்ற
தழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழும் கயல்கள் என்ன
#23
வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும்
கிள்ள எழுகின்ற புனல் கேளிரின் விரும்பி
தெள்ளு புனல் ஆறு சிறிதே உதவுகின்ற
உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த
#24
துன்றி நெறி பங்கிகள் துளங்க அழலோடும்
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர்
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார்
குன்றின் முழை-தோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார்
#25
நெருங்கு அயில் எயிற்று அனைய செம் மயிரின் நெற்றி
பொரும் குலிகம் அப்பியன போர் மணிகள் ஆர்ப்ப
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும்
கரும் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த
#26
ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா
பக்கம் இனம் ஒத்து அயல் அலைக்க நனி பாரா
மை கரி மதத்த விலை மாதர் கலை அல்குல்
புக்கவரை ஒத்தன புனல் சிறைகள் ஏறா
#27
துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி
பகல் இடைய அட்டிலில் மடுத்து எரி பரப்பும்
அகில் இடு கொழும் புகை அழுங்கலின் முழங்கா
முகில் படு நெடும் கடலை ஒத்து உளது அ மூதூர்
#28
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார்
தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற
குமரரும் மங்கைமாரும் குழுமலால் வழுவி விண்-நின்று
அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம்
#29
வெயில் நிறம் குறைய சோதி மின் நிழல் பரப்ப முன்னம்
துயில் உணர் செவ்வியோரும் துனி உறு முனிவினோரும்
குயிலொடும் இனிது பேசி சிலம்பொடும் இனிது கூவி
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம்
#30
தாள் இணை கழல்கள் ஆர்ப்ப தார் இடை அளிகள் ஆர்ப்ப
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம்

16 வரை காட்சி படலம்

#1
சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணி கனக குன்றை
பற்றிய வளைந்த என்ன பரந்து வந்து இறுத்த சேனை
கொற்றவர் தேவிமார்கள் மைந்தர்கள் கொம்பனார் வந்து
உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே
#2
பம்பு தேன் மிஞிறு தும்பி பரந்து இசை பாடி ஆட
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும்
கொம்புகள் பனை கை நீட்டி குழையொடும் ஒடித்து கோட்டு
தும்பிகள் உயிரே அன்ன துணை மட பிடிக்கு நல்கும்
#3
பண் மலர் பவள செ வாய் பனி மலர் குவளை அன்ன
கண் மலர் கொடிச்சிமார்க்கு கணி தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே
#4
மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம்
கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும்
தேன் உகு மடையை மாற்றி செந்தினை குறவர் முந்தி
வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ
#5
குப்புறற்கு அருமையான குல வரை சாரல் வைகி
ஒப்புற துளங்குகின்ற உடுபதி ஆடியின்-கண்
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம்
அ புறத்தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாதோ
#6
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின்
அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும்
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு
மதியினை வாங்கி ஒப்பு காண்குவர் குறவர் மன்னோ
#7
பேணுதற்கு அரிய கோல குருளை அம் பிடிகள் ஈன்ற
காணுதற்கு இனிய வேழ கன்றொடு களிக்கும் முன்றில்
கோணுதற்கு உரிய திங்கள் குழவியும் குறவர் தங்கள்
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ
#8
அஞ்சன கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற
வெம் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு விஞ்சை வேந்தர்
குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த பசும் சுவடு உடைத்து-மன்னோ
#9
செம் கயல் அனைய நாட்டம் செவி உறா முறுவல் தோன்றா
பொங்கு இரும் கூந்தல் சோரா புருவங்கள் நெரியா பூவின்
அம் கையும் மிடறும் கூட்டி நரம்பு அளைந்து அமுதம் ஊறும்
மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ
#10
கள் அவிழ் கோதை மாதர் காதொடும் உறவு செய்யும்
கொள்ளை வாள் கண்ணினார்-தம் குங்கும குழம்பு தங்கும்
தெள்ளிய பளிக்கு பாறை தெளி சுனை மணியில் செய்த
வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ
#11
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர்
தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை
வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ
#12
மாம் தளிர் அனைய மேனி குறத்தியர் மாலை சூட்டி
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்பு காண்பார்
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி
காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார்
#13
சரம் பயில் சாபம் என்ன புருவங்கள் தம்மின் ஆடா
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம்
மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ
#14
சாந்து உயர் தடங்கள்-தோறும் தாதுராகத்தின் சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும்
காந்து இன மணியின் சோதி கதிரொடும் கலந்து வீச
சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே
#15
நில_மகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை
உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த
#16
கோடு உலாம் நாக போதோடு இலவங்க மலரும் கூட்டி
சூடுவார் களி வண்டு ஓச்சி தூ நறும் தேறல் உண்பார்
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார்
#17
பெரும் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு
பொரும் துணை கொங்கை அன்ன பொரு_இல் கோங்கு அரும்பின் மாடே
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள்
கரும் குழல் களிக்கும் வண்டும் கடிமணம் புணர்தல் கண்டார்
#18
படிகத்தின் தலம் என்று எண்ணி படர் சுனை முடுகி புக்க
சுடிகை பூம் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார்-தம்
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி
கடக கை எறிந்து தம்மில் கரும் கழல் வீரர் நக்கார்
#19
பூ அணை பலவும் கண்டார் பொன் அரி மாலை கண்டார்
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலை தம்பல் கண்டார்
ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை
பாவையர் வைக தீய்ந்த பல்லவ சயனம் கண்டார்
#20
பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார்
#21
சுந்தர வதன மாதர் துவர் இதழ் பவள வாயும்
அந்தம்_இல் கரும்பும் தேனும் மிஞிறும் உண்டு அல்குல் விற்கும்
பைம் தொடி மகளிர் கைத்து ஓர் பசை இல்லை என்ன விட்ட
மைந்தரின் நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார்
#22
அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர்
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல
வில் பகை நுதலினார் தம் கலவியில் வெறுத்து நீத்த
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்ப கண்டார்
#23
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும்
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை
கொய்து இவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரும்
#24
பின்னங்கள் உகிரின் செய்து பிண்டி அம் தளிர் கை கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பி தே மலர் கொய்கின்றாரும்
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார்
அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின்றாரும்
#25
ஈனும் மாழை இளம் தளிர் ஏய் ஒளி
ஈனும் மாழை இளம் தளிரே இடை
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள்
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம்
#26
திமிர மா உடல் குங்கும சேதகம்
திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால்
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார்
அமர மா தரை ஒத்தது அ வானமே
#27
பேர் அவாவொடு மாசுணம் பேர வே
பேர ஆவொடு மா சுணம் பேரவே
ஆர ஆரத்தினோடும் மருவியே
ஆரவாரத்தின் ஓடும் அருவியே
#28
புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம்
புகலும் வாள் அரி கண்ணியர் பூண் முலை
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே
அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே
#29
துன் அரம்பை நிரம்பிய தொல் வரை
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால்
கின்னரம் பயில் கீதங்கள் என்ன ஆங்கு
இன் நரம்பு அயில்கின்றனர் ஏழைமார்
#30
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம்
ஊறுமா கட மா மதம் ஓடுமே
ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே
ஆறு சேர்வன மா வரையாடுமே
#31
கல் இயங்கு கரும் குற மங்கையர்
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம்
வல்_இயங்கள் நெருங்கி மயங்குமே
#32
கோள் இபம் கயம் மூழ்க குளிர் கய
கோளி பங்கயம் ஊழ்க குலைந்தவால்
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி ஏய்
ஆளி பொங்கும் அரம்பையர் ஓதியே
#33
ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி
வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால்
மேக மாலை மிடைந்தன மேல் எலாம்
ஏக மாலை கிடந்தது கீழ் எலாம்
#34
பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அ
துங்க மால் வரை சூழல்கள் யாவையும்
தங்கி நீங்கலர் தாம் இனிது ஆடுவார்
#35
இறக்கம் என்பதை எண்ணிலர் எண்ணும்-கால்
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால்
துறக்கம் எய்திய தூயவரே என
மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம்
#36
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும்
வெம் சாயை உடை கதிர் அங்கு அதன் மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது மற்று அது பாய ஏறு
செம் சோரி என பொலிவுற்றது செக்கர் வானம்
#37
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய
தணியாத நறும் தளிர் தந்தன போன்று தாழ
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின் அங்கம் எங்கும்
மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை இல் குன்றம்
#38
கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும்
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும்
வண்ண கொழும் சந்தன சேதகம் மார்பு அணிந்த
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு இல் குன்றம்
#39
ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர்
தேனும் மிஞிறும் சிறு தும்பியும் பம்பி ஆர்ப்ப
ஆனை இனமும் பிடியும் இகல் ஆளி ஏறும்
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார்
#40
கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண்
கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா
மேல்-பால் மலையில் புக வீங்கு இருள் வேறு இருந்த
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே
#41
மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும்
அம் தார் அரசர்க்கு_அரசன்-தன் அனீக வெள்ளம்
நந்தாது ஒலிக்கும் நரலை பெரு வேலை எல்லாம்
செந்தாமரை பூத்து என தீபம் எடுத்தது அன்றே
#42
தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி
விண்ணில் சுடர் வெண்மதி வந்தது மீன்கள் சூழ
வண்ண கதிர் வெண் நிலவு ஈன்றன வாலுகத்தோடு
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே
#43
மீன் நாறு வேலை ஒரு வெண்மதி ஈனும் வேலை
நோனாது அதனை நுவலற்கு அரும் கோடி வெள்ளம்
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை
#44
மண்ணும் முழவின் ஒலி மங்கையர் பாடல் ஓதை
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை
கண்ணும் முடை வேய் இசை கண்ணுளர் ஆடல்-தோறும்
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே
#45
மணியின் அணி நீக்கி வயங்கு ஒளி முத்தம் வாங்கி
அணியும் முலையார் அகில் ஆவி புலர்த்தும் நல்லார்
தணியும் மது மல்லிகை தாமம் வெறுத்து வாசம்
திணியும் இதழ் பித்திகை கத்திகை சேர்த்துவாரும்
#46
புது கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை
மது கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை
பொது பெண்டிர் அல்குல் புனை மேகலை பூசல் ஓதை
கத கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை
#47
உண்ணா அமுது அன்ன கலை பொருள் உள்ளது உண்டும்
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும்
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல்
கண்ணால் நனி துய்க்கவும் கங்குல் கழிந்தது அன்றே

17 பூ கொய் படலம்

#1
மீன் உடை எயிற்று கங்குல் கனகனை வெகுண்டு வெய்ய
கான் உடை கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி
தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று
மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன்
#2
முறை எலாம் முடித்த மன்னர்_மன்னனும் மூரி தேர் மேல்
இறை எலாம் வணங்க போனான் எழுந்து உடன் சேனை வெள்ளம்
குறை எலாம் சோலை ஆகி குழி எலாம் கழுநீர் ஆகி
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே
#3
அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான்
மடந்தையர் குழாங்களோடு மன்னரும் மைந்தர்-தாமும்
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர்
தடங்களும் மடுவும் சூழ்ந்த தண் நறும் சோலை சார்ந்தார்
#4
திண் சிலை புருவம் ஆக சே அரி கரும் கண் அம்பால்
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற மஞ்ஞை
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப நாணினால் பறந்த கிள்ளை
ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம்
#5
செம்பொன் செய் சுருளும் தெய்வ குழைகளும் சேர்ந்து மின்ன
பம்பு தேன் அலம்ப ஒல்கி பண்ணையின் ஆடல் நோக்கி
கொம்பொடும் கொடி_அனாரை குறித்து அறிந்து உணர்தல் தேற்றார்
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார்
#6
பாசிழை பரவை அல்குல் பண் தரு கிளவி தண் தேன்
மூசிய கூந்தல் மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு
கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம்
வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார்
#7
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி
செஞ்செவே கமல கையால் தீண்டலும் நீண்ட கொம்பும்
தம் சிலம்பு அடியில் மென் பூ சொரிந்து உடன் தாழ்ந்த என்றால்
வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார்
#8
அம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர் கைகள் தீண்ட
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார்
தம் புய வரைகள் வந்து தாழ்வன தளிர்த்த மென் பூம்
கொம்புகள் தாழும் என்றல் கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ
#9
நதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளையோடு
மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலை தும்பி
அதிசயம் எய்தி புக்கு வீழ்ந்தன அலைக்க போகா
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார்
#10
உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி
மலர்ந்த பூம் தொடையல் மாலை மைந்தர்-பால் மயிலின் அன்னார்
கலந்தவர் போல ஒல்கி ஒசிந்தன சில கை வாரா
புலந்தவர் போல நின்று வளைகில பூத்த கொம்பர்
#11
பூ எலாம் கொய்து கொள்ள பொலிவு இல துவள நோக்கி
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி
கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழைய பூட்டி
பாவையர் பனி மென் கொம்பை நோக்கினர் பரிந்து நிற்பார்
#12
துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம்
நறும் கோதையோடு நனை சின்னமும் நீத்த நல்லார்
வெறும் கூந்தல் மொய்க்கின்றன வேண்டல வேண்டு போதும்
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே
#13
மெய் போதின் நங்கைக்கு அணி அன்னவள் வெண் பளிங்கில்
பொய் போது தாங்கி பொலிகின்ற தன் மேனி நோக்கி
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி
கை போதினோடு நெடும் கண் பனி சோர நின்றாள்
#14
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு ஓர் மன்னன்
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண் ஆவி
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள்
#15
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன்
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர
பயில்வாள் இறை பண்டு பிரிந்து அறியாள் பதைத்தாள்
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள்
#16
மை தாழ் கரும் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற
நெய் தாவும் வேலானொடு நெஞ்சு புலந்து நின்றாள்
எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட
கொய்து ஈதி என்று ஓர் குயிலை கரம் கூப்புகின்றாள்
#17
செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை
விம்மா வெதும்பா வெயரா முகம் வெய்து_உயிர்த்தாள்
#18
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள்
மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர்
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள்
#19
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச
சேற்றால் விளையாத செந்தாமரை கைகள் நீட்டி
ஏற்றாரை நோக்கான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான்
மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன்
#20
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன்
மை கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப
மெய்க்கொண்ட சீற்றம் தலைக்கொண்டிட விம்மி மென் பூ
கைக்கொண்டு மோந்தாள் உயிர்ப்பு உண்டு கரிந்தது அன்றே
#21
திண் தேர் அரசன் ஒருவன் குல தேவிமார் தம்
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம்
கண்டு ஆதரிக்க திரிவான் மதம் கவ்வி உண்ண
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான்
#22
சந்தி கலா வெண்மதி வாள் நுதலாள் தனக்கும்
வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி
நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப மென் பூ
சிந்தி கலாப மயிலின் கண் சிவந்து போனார்
#23
வந்து எங்கும் தம் மன் உயிரேயோ பிறிது ஒன்றோ
கந்தம் துன்றும் சோர் குழல் காணார் கலை பேணார்
அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார்
சிந்தும் சந்த தே மலர் நாடி திரிவாரும்
#24
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள் ஓர் இகல் மன்னன்
தாழ தாழாள் தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள்
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும்
சூழற்கே தன் கிள்ளையை ஏவி தொடர்வாளும்
#25
அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக
சிந்தா நின்ற சிந்தையினான் செய்குவது ஓரான்
மந்தாரம் கொண்டு ஈகுதியோ மாதவி என்று ஓர்
சந்து ஆர் கொங்கை தாழ் குழலாள்-பால் தளர்வானும்
#26
நாடி கொண்டாள் குற்றம் நயந்தாள் முனிவு ஆற்றாள்
ஊடி காண காட்டும் நலத்தாள் உடன் நில்லாள்
தேடிதேடி சேர்த்த நறும் பூம் செழு மாலை
சூடிசூடி கண்ணடி நோக்கி துவள்வாளும்
#27
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே வந்து
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர்
விறலிக்கு ஈவாள் ஒத்து இழை எல்லாம் விடுவாளும்
#28
வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றி
கம்பிக்கின்ற நுண் இடை நோவ கசிவாளும்
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி பயில்கின்ற
கொம்பில் கிள்ளை பிள்ளை ஒளிக்க குழைவாளும்
#29
தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல்
துன்ன கண்டாள் தோழமை கொண்டாள் துணை என்றாள்
உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று
அன்ன கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும்
#30
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்-தன் படர் அல்குல்
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சி கொம்பின் ஒதுங்கி துணர் ஈன்ற
சாகை தம் கை கண்கள் புதைத்தே தளர்வாளும்
#31
பொன்னே தேனே பூ_மகளே காண் எனை என்னா
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன்
நல் நீல கண் கையின் மறைத்து நகுவாளும்
#32
வில்லில் கோதை நாண் உற மிக்கோன் இகல் அங்கம்
புல்லி கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி
அல்லின் கோதை மாதர் முக பேர் அரவிந்த
செல்வ கானில் செங்கதிர் என்ன திரிவாரும்
#33
செய்யில் கொள்ளும் தெள் அமுத செம் சிலை ஒன்று
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார் தம்
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலை சொல்
தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும்
#34
சோலை தும்பி மென் குழல் ஆக தொடை மேவும்
கோலை கொண்ட மன்மத ஆயன் குறி உய்ப்ப
நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின்
மாலை போதில் மால் விடை என்ன வருவாரும்
#35
ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்
காக்கல் ஆவது காமன் கை வில் எனும்
வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில்
பூ கொய்வாள் புருவ கடை போதுமே
#36
நாறு பூம் குழல் நன்னுதல் புன்னை மேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள்
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ
#37
சினையின் மேல் இருந்தான் உரு தேவரால்
வனையவும் அரியாள் வனப்பின் தலை
நினைவும் நோக்கமும் நீக்கலன் கைகளால்
நனையும் நாள் முறியும் கொய்து நல்கினான்
#38
வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி ஓர்
தண்டு போல் புயத்தான் தடுமாறினான்
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள்
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே
#39
ஏயும் தன்மையர் இ வகையார் எலாம்
தூய தண் நிழல் சோலை துறு மலர்
வேயும் செய்கை வெறுத்தனர் வெண் திரை
பாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார்

8 நீர் விளையாட்டு படலம்

#1
புனை மலர் தடங்கள் நோக்கி பூசல் வண்டு ஆர்த்து பொங்க
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார்
#2
அங்கு அவர் பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம்
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள்
மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம்
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே
#3
மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த
கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த
செய்ய தாமரைகள் எல்லாம் தெரிவையர் முகங்கள் பூத்த
தையலார் முகங்கள் செய்ய தாமரை பூத்த அன்றே
#4
தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உற தழுவுவாரும்
தோளையே பற்றி வெற்றி திரு என தோன்றுவாரும்
பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும்
வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும்
#5
வண்டு உண கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும்
கொண்டு எதிர் வீசுவாரும் கோதை கொண்டு ஓச்சுவாரும்
தொண்டை வாய் பெய்து தூ நீர் கொழுநர் மேல் தூகின்றாரும்
புண்டரீக கை கூப்பி புனல் முகந்து இறைக்கின்றாரும்
#6
மின் ஒத்த இடையினாரும் வேய் ஒத்த தோளினாரும்
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும்
பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற உளைகின்றாரும்
#7
பண் உளர் பவள தொண்டை பங்கயம் பூத்தது அன்ன
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார்
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர் தடங்கட்கு எல்லாம்
கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும்
#8
தேன் உகு நறவ மாலை செறி குழல் தெய்வம் அன்னாள்
தானுடை கோல மேனி தடத்திடை தோன்ற நோக்கி
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று
ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும்
#9
குண்டலம் திரு வில் வீச குல மணி ஆரம் மின்ன
விண் தொடர் வரையின் வைகும் மென் மயில் கணங்கள் போல
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள்
தண்டுகள் தழுவும் ஆசை புனல் கரை சார்கின்றாரும்
#10
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம்
செம் கயல் அனைய நாட்டம் சிவப்பு உற சீறி போன
மங்கை ஓர் கமல சூழல் மறைந்தனள் மறைய மைந்தன்
பங்கயம் முகம் என்று ஓராது ஐயுற்று பார்க்கின்றானும்
#11
பொன் தொடி தளிர் கை சங்கம் வண்டொடு புலம்பி ஆர்ப்ப
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில்
சுற்றிய நாகம் என்று துணுக்கத்தால் துடிக்கின்றாரும்
#12
குடைந்து நீராடும் மாதர் குழாம் புடை சூழ ஆழி
தடம் புயம் பொலிய ஆண்டு ஓர் தார் கெழு வேந்தன் நின்றான்
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும்
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல-மாதோ
#13
தொடி உலாம் கமல செம் கை தூ நகை துவர்த்த செ வாய்
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து ஒரு குரிசில் நின்றான்
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான்
#14
கான மா மயில்கள் எல்லாம் களி கெட களிக்கும் சாயல்
சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான்
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும்
மீன் எலாம் சூழ நின்ற விரி கதிர் திங்கள் ஒத்தான்
#15
மேவலாம் தகைமைத்து அல்லால் வேழ வில் தட கை வீரற்கு
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடும் கண் ஓர் ஏழை
பாவைமார் பரந்த கோல பண்ணையில் பொலிவாள் வண்ண
பூ எலாம் மலர்ந்த பொய்கை தாமரை பொலிவது ஒத்தாள்
#16
மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன
சுடர் முகத்து உலவு கண்ணாள் தோகையர் சூழ நின்றாள்
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ
கடலிடை தோன்றும் மென் பூம் கற்பக வல்லி ஒத்தாள்
#17
தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை
ஆரிடை சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள்
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர்
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே
#18
மலை கடந்த புயங்கள் மடந்தைமார்
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு
முலைகள் தம்தமின் முந்தி நெருங்கலால்
நிலை கடந்து பரந்தது நீத்தமே
#19
செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்பு உற
மெய் அராகம் அழிய துகில் நெக
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்
பொய்கை காதல் கொழுநரும் போன்றதே
#20
ஆன தூயவரோடு உடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ
தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும்
மீனும் நாறின வேறு இனி வேண்டுமோ
#21
மிக்க வேந்தர்-தம் மெய் அணி சாந்தொடும்
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால்
ஒக்க நீல முகில் தலை ஓடிய
செக்கர் வானகம் ஒத்தது அ தீம் புனல்
#22
காக துண்ட நறும் கலவை களி
ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால்
பாகு அடர்ந்த பனி கனி வாய்ச்சியர்
வேகடம் செய் மணி என மின்னினார்
#23
பாய் அரி திறலான் பசும் சாந்தினால்
தூய பொன் புயத்து பொதி தூ குறி
மீ அரித்து விளர்க்க ஓர் மெல்_இயல்
சே அரி கரும் கண்கள் சிவந்தவே
#24
கதம்ப நாள் விரை கள் அவிழ் தாதொடும்
ததும்பு பூம் திரை தண் புனல் சுட்டதால்
நிதம்ப பாரத்து ஓர் நேர்_இழை காமத்தால்
வெதும்புவாள் உடல் வெப்பம் வெதுப்பவே
#25
தையலாளை ஓர் தார் அணி தோளினான்
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான்
செய்ய தாமரை செல்வியை தீம் புனல்
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே
#26
சுளியும் மென் நடை தோற்க நடந்தவர்
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என
விளிவு தோன்ற மிதிப்பன போன்றன
நளினம் ஏறிய நாகு இள அன்னமே
#27
எரிந்த சிந்தையர் எத்தனை என்கெனோ
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்
தெரிந்த கொங்கைகள் செவ்விய நூல் புடை
வரிந்த பொன் கலசங்களை மானவே
#28
தாழ நின்ற ததை மலர் கையினால்
ஆழி மன் ஒருவன் உரைத்தான் அது
வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல்
தோழி கண்ணில் கடைக்கணில் சொல்லினாள்
#29
தள்ளி ஓடி அலை தடுமாறலால்
தெள்ளு நீரிடை மூழ்கு செந்தாமரை
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது
உள்ளம் நாணி ஒளிப்பன போன்றவே
#30
இனைய எய்தி இரும் புனல் ஆடிய
வனை கரும் கழல் மைந்தரும் மாதரும்
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே
புனை நறும் துகில் பூணொடும் தாங்கினார்
#31
மேவினார் பிரிந்தார் அந்த வீங்கு நீர்
தாவு தண் மதி-தன்னொடும் தாரகை
ஓவு வானமும் உள் நிறை தாமரை
பூ எலாம் குடி போனதும் போன்றதே
#32
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய
ஆன நீர் விளையாடலை நோக்கினான்
தானும் அன்னது காதலித்தான் என
மீன வேலையை வெய்யவன் எய்தினான்
#33
ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும் தம்
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல்
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும்
தோற்ற சந்திரன் மீளவும் தோற்றினான்

19 உண்டாட்டு படலம்

#1
வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும்
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்
தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே
#2
கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய் பிரிந்து
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய் உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்
மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே
#3
ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம்
கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம்
ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி
வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே
#4
எள்ள அரும் திசைகளோடு யாரும் யாவையும்
கொள்ளை வெண் நிலவினால் கோலம் கோடலால்
வள் உறை வயிர வாள் மகர கேதனன்
வெள்_அணி ஒத்தது வேலை ஞாலமே
#5
தயங்கு தாரகை புரை தரள நீழலும்
இயங்கு கார் மிடைந்த கா எழினி சூழலும்
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்
வயங்கு பூம் பந்தரும் மகளிர் எய்தினார்
#6
பூ கமழ் ஓதியர் போது போக்கிய
சேக்கையின் விளை செரு செருக்கும் சிந்தையர்
ஆக்கிய அமிழ்து என அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா மாந்தல் மேயினார்
#7
மீன் உடை விசும்பினார் விஞ்சை நாட்டவர்
ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்
மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார்
தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே
#8
உக்க பால் புரை நறா உண்ட வள்ளமும்
கை கொள் வாள் ஒளிபட சிவந்து காட்ட தன்
மை கணும் சிவந்தது ஓர் மடந்தை வாய் வழி
புக்க தேன் அமிழ்தமாய் பொலிந்த போன்றவே
#9
தாமமும் நானமும் ததைந்த தண் அகில்
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை
ஓம வெம் குழி உகு நெய்யின் உள் உறை
காம வெம் கனலினை கனற்றி காட்டிற்றே
#10
விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்_சொலார் தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண
தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறும் தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள்
#11
அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா
எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள்
#12
புறம் எலாம் நகை-செய்து ஏச பொரு_அரு மேனி வேறு ஓர்
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை
நிற நிலா கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற
நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள்
#13
யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன
கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள்
தாள் கரும் குவளை தோய்ந்த தண் நறை சாடியுள் தன்
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள்
#14
களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனம்_குழை கள்ளின் உள்ளே
வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி
அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள்
#15
அழிகின்ற அறிவினாலோ பேதமையாலோ ஆற்றில்
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன்
பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரை புரைத்து கீழ் வந்து
இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள்
#16
மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி வெள்ளை
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள்
பொன் அரி மாலை கொண்டு புரி குழல் புனையலுற்றாள்
#17
கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி
தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள்
#18
எள் ஒத்த கோல மூக்கின் ஏந்து_இழை ஒருத்தி முன்கை
தள்ள தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும் தேறாள்
உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி
வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள்
#19
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள்
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப
தேன் தரு கமல செவ்வாய் திறந்தனள் நுகர நாணி
ஊன்றிய கழுநீர் நாள தாளினால் ஒருத்தி உண்டாள்
#20
புள் உறை கமல வாவி பொரு கயல் வெருவி ஓட
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள்
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள்
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள்
#21
கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப கூன் நுதல்
ஏற்றி வாள் எயிறுகள் அதுக்கி இன் தளிர்
மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு
சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே
#22
துடித்த வான் துவர் இதழ் தொண்டை தூ நிலா
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி கண்களால்
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய்
பொடித்த வேர் புறத்து உகு நறவம் போன்றவே
#23
கனி திரள் இதழ் பொதி செம்மை கண் புக
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை
தனி சுடர் தாமரை முகத்து சாபமும்
குனித்தது பனித்தது குழவி திங்களே
#24
இலவு இதழ் துவர் விட எயிறு தேன் உக
முலை மிசை கச்சொடு கலையும் மூட்டு அற
அலை குழல் சோர்தர அசதி ஆடலால்
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே
#25
கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை
அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர்
இன மணி கலையினாள் தோழி நீயும் என்
மனம் என தாழ்தியோ வருதியோ என்றாள்
#26
மான் அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்-பால்
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம்
போனவர் போனவர் தொடர போக்கினாள்
தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள்
#27
விரை செய் பூம் சேக்கையின் அடுத்த மீமிசை
கரை செயா ஆசை ஆம் கடல் உளான் ஒரு
பிரைச மென் குதலையாள் கொழுநன் பேர் எலாம்
உரை-செயும் கிள்ளையை உவந்து புல்லினாள்
#28
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல்
தன் துணை கிள்ளையை தழீஇ என் ஆவியை
இன்று போய் கொணர்கிலை என் செய்வாய் எனக்கு
அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள்
#29
வளை பயில் முன்கை ஓர் மயில்_அனாள்-தனக்கு
இளையவள் பெயரினை கொழுநன் ஈதலும்
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது
களகள உதிர்ந்தது கயல் கண் ஆலியே
#30
செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல் வெம்மையால்
பற்றலும் அல்குலில் பரந்த மேகலை
அற்று உகு முத்தின் முன்பு அவனி சேர்ந்தன
பொன்_தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே
#31
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி தோன்றலோடு
ஊடுகெனோ உயிர் உருகு நோய் கெட
கூடுகெனோ அவன் குணங்கள் வீணையில்
பாடுகெனோ என பலவும் பன்னினாள்
#32
மாடகம் பற்றினள் மகர வீணை தன்
தோடு அவிழ் மலர் கரம் சிவப்ப தொட்டனள்
பாடினள் ஒருத்தி தன் பாங்கிமார்களோடு
ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே
#33
குழைத்த பூம் கொம்பு_அனாள் ஒருத்தி கூடலை
இழைத்தனள் அது அவள் இட்ட போது எலாம்
பிழைத்தலும் அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும்
உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே
#34
பந்து அணி விரலினாள் ஒருத்தி பையுளாள்
சுந்தரன் ஒருவன்-பால் தூது போக்கினாள்
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள்
சிந்தனை தெரிந்திலம் சிவந்த நாட்டமே
#35
உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு ஒருத்திக்கு அது அன்பன் தேர்கிலான்
பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவாள்
எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள்
#36
விதைத்த மென் காதலின் வித்து வெம் சிறை
இதை புனல் நனைத்திட முளைத்ததே என
பதைத்தனள் ஒருத்தன் மேல் ஒருத்தி பஞ்சு அடி
உதைத்தலும் பொடித்தன உரோம ராசியே
#37
பொலிந்த வாள் முகத்தினான் பொங்கி தன்னையும்
மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய்
மெலிந்தவா நோக்கி தன் புயங்கள் வீங்கினான்
#38
ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் எய்தினான்
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெம் கணை
பாய்ந்த பூம் பள்ளியில் படுத்த பல்லவம்
தீய்ந்தன நோக்கினன் திசைக்கும் சிந்தையான்
#39
ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால்
நாட்டினை அளித்தி நீ என்று நல்லவர்
ஆட்டு நீர் கலசமே என்னல் ஆன ஓர்
வாள் தொழில் மைந்தற்கு ஓர் மங்கை கொங்கையே
#40
பயிர் உறு கிண்கிணி பரந்த மேகலை
வயிர வான் பூண் அணி வாங்கி நீக்கினான்
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள்
செயிர் உறு திங்களை தீய நோக்கினாள்
#41
ஏலும் இ வன்மையை என் என்று உன்னுதும்
ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு
சோலை மென் குயில்_அனாள் சுற்றி வீக்கிய
மாலையை நிமிர்ந்தில வயிர தோள்களே
#42
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்
மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள்
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர்
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள்
#43
சினம் கெழு வாள் கை ஓர் செம்மல்-பால் ஒரு
கனம் குழை மயில்_அனாள் கடிது போயினாள்
மனம் குழை நறவமோ மாலைதான்-கொலோ
அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே
#44
தொகுதரு காதற்கு தோற்ற சீற்றத்து ஓர்
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து
உகுதலும் உற்றது என் என்று கொற்றவன்
நகுதலும் நக்கனள் நாணும் நீங்கினாள்
#45
பொய் தலை மருங்குலாள் ஒருத்தி புல்லிய
கைத்தலம் நீக்கினள் கருத்தின் நீக்கலள்
சித்திரம் போன்ற அ செயல் ஓர் தோன்றற்கு
சத்திரம் மார்பிடை தைத்தது ஒத்ததே
#46
மெல்லியல் ஒருத்தி தான் விரும்பும் சேடியை
புல்லிய கையினள் போதி தூது என
சொல்லுவான் உறும் உற நாணும் சொல்லலள்
எல்லை_இல் பொழுது எலாம் இருந்து விம்மினாள்
#47
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி தன் உயிர்
மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு
நாறு பூம் கோதை-பால் நவில நாணுவாள்
வேறுவேறு உற சில மொழி விளம்பினாள்
#48
கருத்து ஒரு தன்மையது உயிரும் ஒன்று தம்
அருத்தியும் அ துணை ஆய நீரினார்
ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று என
பொருத்துவர் ஆம் என புல்லினார்-அரோ
#49
வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி வேந்தன் வந்து
எதிர்தலும் தன் மனம் எழுந்து முன் செல
மதி முகம் கதுமென வணங்கினாள் அது
புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்ததே
#50
துனி வரு நலத்தொடு சோர்கின்றாள் ஒரு
குனி வரு நுதலிக்கு கொழுநன் இன்றியே
தனி வரு தோழியும் தாயை ஒத்தனள்
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே
#51
ஆக்கிய காதலாள் ஒருத்தி அந்தியில்
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள்
நோக்கினள் நின்றனள் நுவன்றது ஓர்கிலள்
போக்கின தூதினோடு உணர்வும் போக்கினாள்
#52
மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள்
பிறப்பினொடு இறப்பு என பெயரும் சிந்தையாள்
துறப்ப_அரும் முகிலிடை தோன்றும் மின் என
புறப்படும் புகும் ஒரு பூத்த கொம்பு_அனாள்
#53
எழுத அரும் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு
உழுத வெம் புண்களில் வளை கை ஒற்றினாள்
அழுதனள் சிரித்தனள் அற்றம் சொல்லினாள்
தொழுதனள் ஒருத்தியை தூது வேண்டுவாள்
#54
ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என
வேர்த்தனள் வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள்
பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே
#55
தனங்களின் இளையவர்-தம்மின் மும் மடி
கனம்கனம் இடைஇடை களிக்கும் கள்வன் ஆய்
மனங்களில் நுழைந்து அவர் மாந்து தேறலை
அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமே
#56
நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர்
துறை அறி கலவி செவ்வி தோகையர் தூசு வீசி
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார்
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான்
#57
பொன் அரும் கலனும் தூசும் புறத்து உள துறத்தல் வம்போ
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள்
உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல்
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே
#58
பொரு_அரு மதனன் போல்வான் ஒருவனும் பூவின் மேல் அ
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில்
ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் உயிரும் ஒன்றே
இருவரது உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வார்
#59
கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான்
வள்ள தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும்
கள்ளத்தால் புதைத்தி என்னா முன்னையின் கனன்று மிக்காள்
#60
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள்
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன
மால் உள சிந்தையான் ஓர் மழை உள தட கையாற்கு
மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை ஈந்தாள்
#61
புனத்து உள மயில்_அனாள் கொழுநன் பொய் உரை
நினைத்தனள் சீறுவாள் ஒருத்தி நீடிய
சினத்தொடு காதல்கள் செய்த போரிடை
மனத்து உறை காதலே வாகை கொண்டதே
#62
கொலை உரு அமைந்து என கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள் கணவன் புல்குவாள்
சிலை உரு அழிதர செறிந்த மார்பில் தன்
முலை உருவின என முதுகை நோக்கினாள்
#63
குங்குமம் உதிர்ந்தன கோதை சோர்ந்தன
சங்கு_இனம் ஆர்த்தன கலையும் சாறின
பொங்கின சிலம்புகள் பூசலிட்டன
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே
#64
துனி உறு புலவியை காதல் சூழ் சுடர்
பனி என துடைத்தலும் பதைக்கும் சிந்தையாள்
புனை இழை ஒரு மயில் பொய் உறங்குவாள்
கனவு எனும் நலத்தினால் கணவன் புல்லினாள்
#65
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும் மன்னனும்
கிட்டிய போது உடல் கிடைக்க புல்லினார்
விட்டிலர் கங்குலின் விடிவு கண்டிலர்
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால்
#66
அரும் களி மால் கயிறு அனைய வீரர்க்கும்
கரும் குழல் மகளிர்க்கும் கலவி பூசலால்
நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா
மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே
#67
கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு
இடை உறு திரு என இந்து நந்தினான்
படர் திரை கரும் கடல் பரமன் மார்பிடை
சுடர் மணி அரசு என இரவி தோன்றினான்

20 எதிர்கொள் படலம்

#1
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி
விடா நெறி புலமை செங்கோல் வெண்குடை வேந்தர்_வேந்தன்
படா முக மலையில் தோன்றி பருவம் ஒத்து அருவி பல்கும்
கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான்
#2
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே
#3
ஆண்டு நின்று எழுந்து போகி அகன் பணை மிதிலை என்னும்
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த
தாண்டு மா புரவி தானை தண்ணளி சனகன் என்னும்
தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம்
#4
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க
கந்து அடு களிறும் தேரும் கலின மா கடலும் சூழ
சந்திரன் இரவி-தன்னை சார்வது ஓர் தன்மை தோன்ற
இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான்
#5
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம்
சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார
பங்கயத்து அணங்கை தந்த பாற்கடல் எதிர்வதே போல்
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே
#6
இலை குலாவு அயிலினான் அனிகம் ஏழ் என உலாம்
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம்
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய்
உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே
#7
தொங்கல் வெண்குடை தொகை பிச்சம் உட்பட விராய்
எங்கும் விண் புதைதர பகல் மறைந்து இருள் எழ
பங்கயம் செய்யவும் வெளியவும் பல பட
தங்கு தாமரை உடை தானமே போலுமே
#8
கொடி உளாளோ தனி குடை உளாளோ குல
படி உளாளோ கடற்படை உளாளோ பகர்
மடி இலா அரசினான் மார்பு உளாளோ வளர்
முடி உளாளோ தெரிந்து உணர்கிலாம் முளரியாள்
#9
வார்_முகம் கெழுவு கொங்கையர் கரும் குழலின் வண்டு
ஏர் முழங்கு அரவம் ஏழ் இசை முழங்கு அரவமே
தேர் முழங்கு அரவம் வெண் திரை முழங்கு அரவமே
கார் முழங்கு அரவம் வெம் கரி முழங்கு அரவமே
#10
சூழு மா கடல்களும் திடர் பட துகள் தவழ்ந்து
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ
பூழை ஊடே பொடித்து அப்புறம் போயதே
#11
மன் நெடும் குடை மிடைந்து அடைய வான் மறைதர
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது-அரோ
பொன் இடும் புவி இடும் புனை மணி கலன் எலாம்
மின் இடும் வில் இடும் வெயில் இடும் நிலவு இடும்
#12
தா_இல் மன்னவர்_பிரான் வர முரண் சனகனும்
ஏ வரும் சிலையினான் எதிர் வரும் நெறி எலாம்
தூவு தண் சுண்ணமும் கனக நுண் தூளியும்
பூவின் மென் தாது உகும் பொடியுமே பொடி எலாம்
#13
நறு விரை தேனும் நானமும் நறும் குங்கும
செறி அகில் தேய்வையும் மான் மதத்து எக்கரும்
வெறி உடை கலவையும் விரவு செம் சாந்தமும்
செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம்
#14
மன்றல் அம் கோதையார் மணியினும் பொன்னினும்
சென்று வந்து உலவும் அ சிதைவு இலா நிழலின் நேர்
வென்ற திண் கொடியொடும் நெடு விதானமும் விராய்
நின்ற வெண்குடைகளின் நிழலுமே நிழல் எலாம்
#15
மாறு இலா மதுகையான் வரு பெரும் தானை மேல்
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது
ஈறு இல் ஓதையினொடும் எறி திரை பரவை மேல்
ஆறு பாய்கின்றது ஓர் அமலை போல் ஆனதே
#16
கந்தையே பொரு கரி சனகனும் காதலொடு
உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர்
தந்தையே அனைய அ தகவினான் முன்பு தன்
சிந்தையே பொரு நெடும் தேரின் வந்து எய்தினான்
#17
எய்த அ திரு நெடும் தேர் இழிந்து இனிய தன்
மொய் கொள் திண் சேனை பின் நிற்க முன் சேறலும்
கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான்
ஐயனும் முகம் மலர்ந்து அகம் உற தழுவினான்
#18
தழுவி நின்று அவன் இரும் கிளையையும் தமரையும்
வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய்
எழுக முந்துற எனா இனிது வந்து எய்தினான்
உழுவை முந்து அரி_அனான் எவரினும் உயரினான்
#19
இன்னவாறு இருவரும் இனியவாறு ஏக அ
துன்னு மா நகரின் நின்று எதிர்வர துன்னினான்
தன்னையே அனையவன் தழலையே அனையவன்
பொன்னின் வார் சிலை இற புயம் நிமிர்ந்து அருளினான்
#20
தம்பியும் தானும் அ தானை மன்னவன் நகர்
பம்பு திண் புரவியும் படைஞரும் புடை வர
செம்பொனின் பசு மணி தேரின் வந்து எய்தினான்
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான்
#21
யானையோ பிடிகளோ இரதமோ இவுளியோ
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார்
தானை ஏர் சனகன் ஏவலின் நெடும் தாதை முன்
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே
#22
காவியும் குவளையும் கடி கொள் காயாவும் ஒத்து
ஓவியம் சுவை கெட பொலிவது ஓர் உருவொடே
தேவரும் தொழு கழல் சிறுவன் முன் பிரிவது ஓர்
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான்
#23
அனிகம் வந்து அடி தொழ கடிது சென்று அரசர்_கோன்
இனிய பைம் கழல் பணிந்து எழுதலும் தழுவினான்
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை
தனி நெடும் சிலை இற தவழ் தடம் கிரிகளே
#24
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர்
பன்னு தாரைகள் தர தொழுது எழும் பரதனை
பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உற புல்லினான்
தன்னை அ தாதை முன் தழுவினான் என்னவே
#25
கரியவன் பின்பு சென்றவன் அரும் காதலின்
பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ
பொரு_அரும் குமரர் தம் புனை நறும் குஞ்சியால்
இருவர் பைம் கழலும் வந்து இருவரும் வருடினார்
#26
கோல் வரும் செம்மையும் குடை வரும் தன்மையும்
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல்
மேல் வரும் தன்மையால் மிக விளங்கினர்கள் தாம்
நால்வரும் பொரு_இல் நான்மறை எனும் நடையினார்
#27
சான்று என தகைய செங்கோலினான் உயிர்கள்-தாம்
ஈன்ற நல் தாய் என கருது பேர் அருளினான்
ஆன்ற இ செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற
தோன்றலை கொண்டு முன் செல்க என சொல்லினான்
#28
காதலோ அறிகிலம் கரிகளை பொருவினார்
தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ
கோதை சூழ் குஞ்சி அ குமரர் வந்து எய்தலும்
தாதையோடு ஒத்தது அ தானையின் தன்மையே
#29
தொழுது இரண்டு அருகும் அன்பு உடைய தம்பியர் தொடர்ந்து
அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட எழுந்து
எழுத அரும் தகையது ஓர் தேரின் மேல் ஏகினான்
#30
பஞ்சி சூழ் மெல் அடி பாவைமார் பண்ணையின்
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து இடை விராய்
நஞ்சு சூழ் விழிகள் பூ_மழையின் மேல் விழ நடந்து
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான்
#31
சூடகம் துயல் வர கோதை சோர்தர மலர்
பாடகம் பரத நூல் பசுர வெம் கட கரி
கோடு அரங்கிட எழும் குவி தடம் கொங்கையார்
ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம்
#32
பேதைமார் முதல் கடை பேரிளம் பெண்கள்-தாம்
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார்
ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார்
ஓதியார் வீதி-வாய் உற்றவாறு உரை-செய்வாம்

21 உலாவியற் படலம்

#1
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும்
மீன்_இனம் மிளிர வானில் மின்_இனம் மிடைவ போன்றும்
தேன்_இனம் சிலம்பி ஆர்ப்ப சிலம்பு_இனம் புலம்பி ஏங்க
பூ நனை கூந்தல் மாதர் பொம்மென புகுந்து மொய்த்தார்
#2
விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்ற நோக்கார்
சரிந்த பூம் துகில்கள் தாங்கார் இடை தடுமாற தாழார்
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார்
#3
பள்ளத்து பாயும் நல் நீர் அனையவர் பானல் பூத்த
வெள்ளத்து பெரிய கண்ணார் மென் சிலம்பு அலம்ப மென் பூ
தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும்
உள்ளத்தை பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார்
#4
கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் இ
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார்
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார்
#5
அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும்
விரை கரும் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும்
வரை தடம் தோளும் காண மறுகினில் வீழும் மாதர்
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார்
#6
வீதி-வாய் செல்கின்றான் போல் விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்கு தானே உறு பொருள் உணர்த்திவிட்டான்
#7
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன்
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண்
#8
பயிர் ஒன்று கலையும் சங்கும் பழிப்ப அரு நலனும் பண்பும்
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும் சிந்தையும் உணர்வும் தேசும்
வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும்
உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள்
#9
குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த
தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள்
#10
பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம்
செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையை சேர்ந்தவோ தாம்
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம்
அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால்
#11
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும்
பூம் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி
வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான்
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன் என்றாள்
#12
சொல் நலம் கடந்த காம சுவையை ஓர் உருவம் ஆக்கி
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள்
பொன்னையும் பொருவு நீராள் புனைந்தன எல்லாம் போக
தன்னையும் தாங்கலாதாள் துகில் ஒன்றும் தாங்கி நின்றாள்
#13
வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மி
சுற்று எங்கும் எறிப்ப உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள்
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள்
மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள்
#14
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம்
நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில்
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள்
#15
தாக்கு அணங்கு அனைய மேனி தைத்த வேள் சரங்கள் பாராள்
வீக்கிய கலனும் தூசும் வேறுவேறு ஆனது ஓராள்
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி ஆண்டு அமலன் மேனி
நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள்
#16
களிப்பன மதர்ப்ப நீண்டு கதுப்பினை அளப்ப கள்ளம்
ஒளிப்பன வெளிப்பட்டு ஓட பார்ப்பன சிவப்பு உள் ஊறி
வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம்
குளிர்ப்பொடு காண வந்தாள் வெதுப்பொடு கோயில் புக்காள்
#17
கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலை சூழ் அல்குல்
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும்
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட
மருங்குலின் வெளிகள் ஊடே வள்ளலை நோக்குகின்றாள்
#18
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர்
எரிந்த பூண் இனமும் கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும்
சரிந்த மேகலையும் முத்தும் சங்கமும் தாழ்ந்த கூந்தல்
வரிந்த பூம் தொடையும் அன்றி வெள்ளிடை அரிது அ வீதி
#19
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தட கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்
#20
அலம்பு பார குழலி ஓர் ஆய்_இழை
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள்
புலம்பு சேடியர் கை மிசை போயினாள்
#21
அருப்பு மென் முலையாள் அங்கு ஓர் ஆய்_இழை
இருப்பு நெஞ்சினையேனும் ஓர் ஏழைக்கா
பொருப்பு வில்லை பொடி செய்த புண்ணியா
கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா என்றாள்
#22
மை தவழ்ந்த கரும் கண் ஓர் வாள்_நுதல்
செய் தவன் தனி தேர் மிசை சேறல் விட்டு
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது
கைதவம்-கொல் கனவு-கொலோ என்றாள்
#23
மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர்
தூது பெற்றிலள் இன் உயிர் சோர்கின்றாள்
போது அரி கண் பொலன் குழை பூண் முலை
சீதை எ தவம் செய்தனளோ என்றாள்
#24
பழுது இலா ஒரு பாவை அன்னாள் பதைத்து
அழுது வெய்து_உயிர்த்து அன்பு உடை தோழியை
தொழுது சோர்ந்து அயர்வாள் இந்த தோன்றலை
எழுதலாம்-கொல் இ மன்மதனால் என்றாள்
#25
வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு
எண்ணும்-கால் இ இலக்கணம் எய்திட
ஒண்ணுமோ ஒன்று உணர்த்துகின்றேன் இவன்
கண்ணனே இது கண்டிடும் பின் என்றாள்
#26
கனக நூபுரம் கை வளையோடு உக
மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல்
அனகன் இ நகர் எய்தியது ஆதியில்
சனகன் செய்த தவ பயனால் என்றாள்
#27
நனி வருந்தி நலம் குடிபோயிட
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள்
முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற
தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள்
#28
புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொன்_கொடி
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்
அனங்க_வேள் அது அறிந்தனன் அற்றம்தான்
மனங்கள் போல முகமும் மறைக்குமே
#29
இணை நெடும் கண் ஓர் இந்து_முகத்தி பூ
அணை அடைந்து இடியுண்ட அரா என
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட
உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே
#30
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செ வாய்ச்சியர்
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார்
தேம்பு சிற்றிடை சீதையை போல் சிறிது
ஏம்பல் பெற்றிலர் எங்ஙனம் உய்வரே
#31
வேர்த்து மேனி தளர்ந்து உயிர் விம்மலோடு
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்
தீர்த்தன் இத்தனை சிந்தையின் செம் கணின்
பார்த்திலான் உள் பரிவு இலனோ என்றாள்
#32
வையம் பற்றிய மங்கையர் எண்_இலர்
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால்
எய்யும் பொன் சிலை மாரனும் என் செய்வான்
கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான்
#33
நான வார் குழல் நாரியரோடு அலால்
வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு
ஆன பூசல் அறிந்திலம் அம்பு போய்
வான நாடியர் மார்பினும் தைத்தவே
#34
மருள் மயங்கு மடந்தையர்-மாட்டு ஒரு
பொருள் நயந்திலன் போகின்றதே இவன்
கருணை என்பது கண்டு அறியான் பெரும்
பருணிதன்-கொல் படு கொலையான் என்றாள்
#35
தொய்யில் வெய்ய முலை துடி போல் இடை
நையும் நொய்ய மருங்குல் ஓர் நங்கைதான்
கையும் மெய்யும் அறிந்திலள் கண்டவர்
உய்யும் உய்யும் என தளர்ந்து ஓய்வுற்றாள்
#36
பூக ஊசல் புரிபவர் போல் ஒரு
பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள்
சேகு சேர்தர சேவகன் தேரின் பின்
ஏகும் மீளும் இது என் செய்தவாறு-அரோ
#37
பெருத்த காதலின் பேது உறு மாதரின்
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என்
கருத்தும் அ வழி கண்டது உண்டோ என்றாள்
அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ
#38
நங்கை அங்கு ஒரு பொன் நயந்தார் உய்ய
தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர்
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா
வெங்கண் எங்கண் விளைந்தது இவற்கு என்றாள்
#39
நாமத்தால் அழிவாள் ஒரு நல்_நுதல்
சேமத்து ஆர் வில் இறுத்தது தேரும்-கால்
தூமத்து ஆர் குழல் தூ மொழி தோகை-பால்
காமத்தால் அன்று கல்வியினால் என்றாள்
#40
ஆரமும் துகிலும் கலன் யாவையும்
சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல்
கோர வில்லி முன்னே எனை கொல்கின்ற
மார_வேளின் வலியவர் யார் என்றாள்
#41
மாதர் இன்னணம் எய்த்திட வள்ளல் போய்
கோது இல் சிந்தை வசிட்டனும் கோசிக
வேத பாரனும் மேவிய மண்டபம்
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான்
#42
திருவின் நாயகன் மின் திரிந்தால் என
துருவு மா மணி ஆரம் துயல்வர
பருவ மேகம் படிந்தது போல் படிந்து
இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான்
#43
இறைஞ்ச அன்னவர் ஏத்தினர் ஏவ ஓர்
நிறைஞ்ச பூம் தவிசு ஏறி நிழல்கள் போல்
புறஞ்செய் தம்பியருள் பொலிந்தான்-அரோ
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான்
#44
ஆன மா மணி மண்டபம்-அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன்
மீன் எலாம் தன் பின் வர வெண்மதி
வான் நிலா உற வந்தது மானவே
#45
வந்து மா தவர் பாதம் வணங்கி மேல்
சிந்து தே மலர் மாரி சிறந்திட
அந்தணாளர்கள் ஆசியொடு ஆதனம்
இந்திரன் முகம் நாண் உற ஏறினான்
#46
கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்
சிங்களாதிபர் சேரலர் தென்னவர்
அங்க ராசர் குலிந்தர் அவந்திகர்
வங்கர் மாளவர் சோளர் மராடரே
#47
மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்
ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்
சீனர் தெங்கணர் செம் சகர் சோமகர்
சோனகேசர் துருக்கர் குருக்களே
#48
ஏதி யாதவர் ஏழ் திறல் கொங்கணர்
சேதி ராசர் தெலுங்கர் கருநடர்
ஆதி வானம் கவித்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார்
#49
தீம் கரும்பினும் தித்திக்கும் இன்_சொலார்
தாங்கு சாமரை மாடு தயங்குவ
ஓங்கிஓங்கி வளர்ந்து உயர் கீர்த்தியின்
பூம் கொழுந்து பொலிவன போன்றவே
#50
சுழலும் வண்டும் மிஞிறும் சுரும்பும் சூழ்ந்து
உழலும் வாச மது மலர் ஓதியர்
குழலினோடு உற கூறு பல்லாண்டு ஒலி
மழலை யாழ் இசையோடு மலிந்தவே
#51
வெம் கண் ஆனையினான் தனி வெண்குடை
திங்கள் தங்கள் குல கொடி சீதை ஆம்
மங்கை மா மணம் காணிய வந்து அருள்
பொங்கி ஓங்கி தழைப்பது போன்றதே
#52
ஊடு பேர்வு_இடம் இன்றி ஒன்று ஆம் வகை
நீடு மா கடல் தானை நெருங்கலால்
ஆடல் மா மத ஆனை சனகர் கோன்
நாடு எலாம் ஒரு நல் நகர் ஆயதே
#53
ஒழிந்த என் இனி ஒள்_நுதல் தாதை-தன்
பொழிந்த காதல் தொடர பொருள் எலாம்
அழிந்து மன்றல் கொண்டாடலின் அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே

22 கோலம் காண் படலம்

#1
தேவியர் மருங்கு சூழ இந்திரன் இருக்கை சேர்ந்த
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை
தா_இல் வெண் கவிகை செங்கோல் சனகனை இனிது நோக்கி
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான்
#2
உரை செய தொழுத கையன் உவந்த உள்ளத்தன் பெண்ணுக்கு
அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ
கரை செயற்கு அரிய காதல் கடாவிட கடிது சென்றார்
பிரைசம் ஒத்து இனிய சொல்லார் பேதை தாதியரில் சொன்னார்
#3
அமிழ் இமை துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்குமா போல்
உமிழ் சுடர் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார்
அமிழ்தினை சுவை செய்து என்ன அழகினுக்கு அழகு செய்தார்
இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ
#4
கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு
உள்-நின்றும் கொடிகள் ஓடி உலகு எங்கும் பரந்தது அன்ன
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும்
விண் நின்ற மதியின் மென் பூம் சிகழிகை கோதை வேய்ந்தார்
#5
விதியது வகையால் வான மீன்_இனம் பிறையை வந்து
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார்
#6
வெள்ளத்தின் சடிலத்தான் தன் வெம் சிலை இறுத்த வீரன்
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள்
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார்
#7
கோன் அணி சங்கம் வந்து குடியிருந்து அனைய கண்டத்து
ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார்
மான் அணி நோக்கினார் தம் மங்கல கழுத்துக்கு எல்லாம்
தான் அணி ஆன போது தனக்கு அணி யாது-மாதோ
#8
கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ
பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை யான் புகல்வது என்னோ
#9
மொய் கொள் சீறடியை சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த
தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள
வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண் முத்தம் சிவந்த என்றால்
செய்யவர் சேர்ந்துளாரும் செய்யராய் திகழ்வர் அன்றே
#10
கொமை உற வீங்குகின்ற குலிக செப்பு அனைய கொங்கை
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும்
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே
#11
தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும்
முளரிகள் இராமன் செம் கை முறைமையின் தீண்ட நோற்ற
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார்
#12
சில்_இயல்_ஓதி கொங்கை திரள் மணி கனக செப்பில்
வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும்
இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார்
#13
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல்
புறம் செய் மேகலையின் தாழ தாரகை சும்மை பூட்டி
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து
கறங்குபு திரிய தாமும் கண் வழுக்கு உற்று நின்றார்
#14
ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல்
பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம்
செய்ய பூம் கமலம் மன்ன சேர்த்திய சிலம்பு சால
நொய்யவே நொய்ய என்றோ பலபட நுவல்வது அம்மா
#15
நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள்
அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம்
#16
மொய் வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த முந்நாள்
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப
வையக மடந்தைமார்க்கும் நாகர் கோதையர்க்கும் வான
தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார்
#17
சின்ன பூ செருகும் மென் பூ சேகர போது கோது இல்
கன்ன பூ கஞல மீது கற்பக கொழுந்து மான
மின்ன பூம் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்ப
புன்னை பூம் தாது மானும் பொன் பொடி அப்பிவிட்டார்
#18
நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி
தெய்வமும் பராவி வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன்
ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி
கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார்
#19
கஞ்சத்து களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி
தம் சொற்கள் குழறி தம்தம் தகை தடுமாறி நின்றார்
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ
#20
இழை குலாம் முலையினாளை இடை உவா மதியின் நோக்கி
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்கு உற்று நின்றார்
உழை குலாம் நயனத்தார்-மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார்
#21
சங்கம் கை உடைமையாலும் தாமரை கோயிலாலும்
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்று என்ன
அங்கு அங்கே தோன்றலாலும் அருந்ததி அனைய கற்பின்
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ
#22
பரந்த மேகலையும் கோத்த பாத சாலகமும் நாக
சிரம் செய் நூபுரமும் வண்டும் சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப
புரந்தரன் கோல் கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்து என்ன
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார்
#23
சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல்
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள்
#24
வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம்
மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும்
பல்லவ மலர் தொகை பரப்பினள் என தன்
நல் அணி மணி சுடர் தவழ்ந்திட நடந்தாள்
#25
தொழும் தகைய மென் நடை தொலைந்து களி அன்னம்
எழுந்து இடைவிழுந்து அயர்வது என்ன அயல் எங்கும்
கொழுந்து உடைய சாமரை குலாவ ஓர் கலாபம்
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள்
#26
மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம்
கண் மணி என தகைய கன்னி எழில் காண
அண்ணல் மரபின் சுடர் அருத்தியொடு தான் அ
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள்
#27
கற்றை விரி பொன் சுடர் பயிற்று உறு கலாபம்
சுற்றும் மணி புக்க இழை மிக்கு இடை துவன்றி
வில் தழை வாள் நிமிர மெய் அணிகள் மின்ன
சிற்றிடை நுடங்க ஒளிர் சீறடி பெயர்த்தாள்
#28
பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம்
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்
#29
சமைத்தவரை இன்மை மறை-தானும் எனலாம் அ
சமை திரள் முலை தெரிவை தூய் வடிவு கண்டார்
அமை திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம்
இமைத்திலர் உயிர்த்திலர்கள் சித்திரம் என தாம்
#30
அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான்
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு
இன் அமிழ்து எழ களி கொள் இந்திரனை ஒத்தான்
#31
நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்கு உற்று
அறத்தின் விளைவு ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும்
நிற துவர் இதழ் குயில் நினைப்பினிடை அல்லால்
புறத்தும் உளதோ என மனத்தொடு புகன்றான்
#32
எங்கள் செய் தவத்தினில் இராமன் என வந்தோன்
சங்கினொடு சக்கரம் உடை தனி முதல் பேர்
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும்
மங்கை இவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான்
#33
துன்று புரி கோதை எழில் கண்டு உலகு சூழ்வந்து
ஒன்று புரி கோலொடு தனி திகிரி உய்ப்பான்
என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும்
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான்
#34
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்
வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார்
கைகள் தலைபுக்கன கருத்து உளதும் எல்லாம்
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ
#35
மா தவரை முற்கொள வணங்கி நெடு மன்னன்
பாத மலரை தொழுது கண்கள் பனி சோரும்
தாதை அருகு இட்ட தவிசில் தனி இருந்தாள்
போதினை வெறுத்து அரசர் பொன் மனை புகுந்தாள்
#36
அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான்
பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன்
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால்
இ சிலை கிடக்க மலை ஏழையும் இறானோ
#37
எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடலுற்றாள்
ஐயனை அகத்து வடிவே அல புறத்தும்
கை வளை திருத்துபு கடை கணின் உணர்ந்தாள்
#38
கரும் கடை நெடும் கண் ஒளி யாறு நிறை கண்ண
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும்
அரும் கலன் அணங்கு அரசி ஆர் அமிழ்து அனைத்தும்
ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள்
#39
கணம் குழை கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான்
வணங்கு வில் இறுத்தவன் என துயர் மறந்தாள்
அணங்கு உறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள்
#40
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்
கல்வி கரை உற்ற முனி கௌசிகனை மேலோய்
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம்
எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான்
#41
வாளை உகள கயல்கள் வாவி படி மேதி
மூளை முதுகை கதுவ மூரிய வரால் மீன்
பாளை விரிய குதி கொள் பண்ணை வள நாடா
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான்
#42
சொற்ற பொழுதத்து அரசர் கைதொழுது எழ தன்
ஒற்றை வயிர சுரி கொள் சங்கின் ஒலி பொங்க
பொன் தட முடி புது வெயில் பொழிதர போய்
நல் தவர் அனுச்சை கொடு நல் மனை புகுந்தான்
#43
அன்னம் அரிதின் பிரிய அண்ணலும் அகன்று ஓர்
பொன்னின் நெடு மாட வரை புக்கனன் மணி பூண்
மன்னவர் பிரிந்தனர்கள் மா தவர்கள் போனார்
மின்னு சுடர் ஆதவனும் மேருவில் மறைந்தான்

23 கடிமண படலம்

#1
இடம் படு புகழ் சனகர் கோன் இனிது பேண
கடம் படு களிற்று அரசர் ஆதி இடை கண்டோர்
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள்-காறும்
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார்
#2
தேட அரு நலத்த புனல் ஆசை தெறல் உற்றார்
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார்
ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே
ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள்
#3
உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனா
சுரவே புரிவார் உளரோ கதிரோன்
வரவே எனை ஆள் உடையான் வருமே
இரவே கொடியாய் விடியாய் எனுமால்
#4
கரு நாயிறு போல்பவர் காலொடு போய்
வரு நாள் அயலே வருவாய் மனனே
பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய்
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ
#5
கனை ஏழ் கடல் போல் கரு நாழிகைதான்
வினையேன் வினையால் விடியாவிடின் நீ
தனியே பறவாய் தகவு ஏதும் இலாய்
பனை மேல் உறைவாய் பழி பூணுதியோ
#6
அயில் வேல் அனல் கால்வன ஆம் நிழல் ஆய்
வெயிலே என நீ விரிவாய் நிலவே
செயிர் ஏதும் இலார் உடல் தேய்வு உறுவார்
உயிர் கோள் உறுவார் உளரோ உரையாய்
#7
மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்
மின் தொத்து நிலா நகை வீழ் மலய
குன்றில் குல மா முழையில் குடிவாழ்
தென்றல் புலியே இரை தேடுதியோ
#8
தெருவே திரிவார் ஒரு சேவகனார்
இரு போதும் விடார் இது என்னை-கொலாம்
கரு மா முகில் போல்பவர் கன்னியர்-பால்
வருவார் உளரோ குல மன்னவரே
#9
தெருளா வினை தீயவர் சேர் நரகோ
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ
கருள் ஆர் கடலோ கரை காண்பு அரிதால்
இருளானதுதான் எனை ஊழி-கொலாம்
#10
பண்ணோ ஒழியா பகலோ புகுதாது
எண்ணோ தவிரா இரவோ விடியாது
உள் நோவு ஒழியா உயிரோ அகலா
கண்ணோ துயிலா இதுவோ கடனே
#11
இடையே வளை சோர எழுந்து விழுந்து
அடல் ஏய் மதனன் சரம் அஞ்சினையோ
உடல் ஓய்வு உற நாளும் உறங்கலையால்
கடலே உரை நீயும் ஓர் கன்னி-கொலாம்
#12
என இன்னன பன்னி இருந்து உளைவாள்
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால்
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய்
அனகன் நினைகின்றன யாம் அறைவாம்
#13
முன் கண்டு முடிப்ப அரு வேட்கையினால்
என் கண் துணை கொண்டு இதயத்து எழுதி
பின் கண்டும் ஓர் பெண் கரை கண்டிலெனால்
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே
#14
திருவே அனையாள் முகமே தெரியின்
கருவே கனியே விளை காம விதைக்கு
எருவே மதியே இது என் செய்தவா
ஒருவேனொடு நீ உறவாகலையோ
#15
கழியா உயிர் உந்திய காரிகை-தன்
விழி போல வளர்ந்தது வீகிலதால்
அழி போர் இறைவன் பட அஞ்சியவன்
பழி போல வளர்ந்தது பாய் இருளே
#16
நினையாய் ஒரு கால் நெடிதோ நெறி தான்
வினவாதவர் பால் விடை கொண்டிலையோ
புன மான் அனையாரொடு போயின என்
மனனே எனை நீயும் மறந்தனையோ
#17
தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின்
பல் நோக்கினது என்பது பண்டு கொலாம்
என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார்
மென் நோக்கினதே கடு வல் விடமே
#18
கல் ஆர் மலர் சூழ் கழி வார் பொழிலோடு
எல்லாம் உள ஆயினும் என் மனமோ
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம்
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே
#19
மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக
தேன் அமர் குழலாள்-தன் திருமண_வினை நாளை
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான்
#20
முரசு அறைதலும் மான முதியவரும் இளையோரும்
விரை செறி குழலாரும் விரவினர் விரைகின்றார்
உரை செறி கிளையோடும் உவகையின் உயர்கின்றார்
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார்
#21
அஞ்சன ஒளியானும் அலர் மிசை உறைவாளும்
எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும்
செம் சுடர் இருள் கீறி தினகரன் ஒரு தேர் மேல்
மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான்
#22
தோரணம் நடுவாரும் தூண் உறை பொதிவாரும்
பூரண குடம் எங்கும் புனை துகில் புனைவாரும்
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும்
ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும்
#23
அன்ன மென் நடையாரும் மழ விடை அனையாரும்
கன்னி நல் நகர் வாழை கமுகொடு நடுவாரும்
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும்
பொன் அணி அணிவாரும் மணி அணி புனைவாரும்
#24
சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும் செழு மலர் சொரிவாரும்
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து
அந்தம்_இல் விலை ஆர கோவைகள் அணிவாரும்
#25
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம்
இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும்
விளிம்பு பொன் ஒளி நாற வெயிலொடு நிலவு ஈனும்
பளிங்கு உடை உயர் திண்ணை பத்தியின் வைப்பாரும்
#26
மந்தர மணி மாட முன்றிலின்-வயின் எங்கும்
அந்தம்_இல் ஒளி முத்தின் அகல் நிரை ஒளி நாறி
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன
பந்தரின் நிழல் வீச படர் வெயில் கடிவாகும்
#27
வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதி
செயிர் அற ஒளிர் தீபம் சிலதியர் கொணர்வாரும்
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி மதி தோயும்
எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும்
#28
பண்டியில் நிறை வாச பனி மலர் கொணர்வாரும்
தண்டலை இலையோடு கனி பல தருவாரும்
குண்டலம் வெயில் வீச குரவைகள் புரிவாரும்
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும்
#29
கலவைகள் புனைவாரும் கலை நல தெரிவாரும்
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி
திலகம் முன் இடுவாரும் சிகழிகை அணிவாரும்
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும்
#30
தப்பின மணி காசும் சங்கமும் மயில்_அன்னார்
ஒப்பனை புரி போதும் ஊடலின் உகு போதும்
துப்பு உறழ் இள வாச சுண்ணமும் உதிர் தாதும்
குப்பைகள் என வாரிக்கொண்டு அயல் களைவாரும்
#31
மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும்
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும்
சென்னியர் திரிவாரும் விறலியர் செறிவாரும்
கன்னலின் மண வேலை கடிகைகள் தெரிவாரும்
#32
கணிகையர் தொகுவாரும் கலை பல பயில்வாரும்
பணி அணி இன முத்தம் பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்றுஒன்று அறைதலின் உகும் அம் பொன்
மணி மலை என மன்ன வாயிலின் மிடைவாரும்
#33
கேடகம் வெயில் வீச கிளர் அயில் நிலவு ஈன
கோடு உயர் நெடு விஞ்சை குஞ்சரம் அது போல
ஆடவர் திரிவாரும் அரிவையர் களி கூர
நாடகம் நவில்வாரும் நகை உயிர் கவர்வாரும்
#34
கதிர் மணி ஒளி கால கவர் பொருள் தெரியாவாறு
எதிரெதிர் சுடர் விம்முற்று எழுதலின் இளையோரும்
மது விரி குழலாரும் மதில் உடை நெடு மாடம்
அது இது என ஓராது அலமரல் உறுவாரும்
#35
தேர் மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும்
ஊர்தியில் வருவாரும் ஒளி மணி நிரை ஓடை
கார் மிசை வருவாரும் கரிணியில் வருவாரும்
பார் மிசை வருவாரும் பண்டியில் வருவாரும்
#36
முத்து அணி அணிவாரும் மணி அணி முனிவாரும்
பத்தியின் நிமிர் செம்பொன் பல கலன் மகிழ்வாரும்
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும்
சித்திர நிரை தோயும் செம் துகில் புனைவாரும்
#37
விடம் நிகர் விழியாரும் அமுது எனும் மொழியாரும்
கிடை புரை இதழாரும் கிளர் நகை வெளியாரும்
தட முலை பெரியாரும் தனி இடை சிறியாரும்
பெடை அன நடையாரும் பிடி என வருவாரும்
#38
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிது அம்மா
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண் உறு திருநாளே ஒத்தது அம் மண நாளே
#39
கரை தெரிவு_அரியது கனகம் வேய்ந்தது
வரை என உயர்ந்தது மணியின் செய்தது
நிரை வளை மணவினை நிரப்பு மண்டபம்
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான்
#40
வெண்குடை இள நிலா விரிக்க மின் என
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப ஏகினான்
#41
மங்கல முரசு_இனம் மழையின் ஆர்த்தன
சங்குகள் முரன்றன தாரை பேரிகை
பொங்கின மறையவர் புகலும் நான்மறை
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே
#42
பரந்த தேர் களிறு பாய் புரவி பண்ணையில்
தரம் தரம் நடந்தன தானை வேந்தனை
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர்
புரந்தரன் புடை வரும் அமரர் போன்றனர்
#43
அனையவன் மண்டபம் அணுகி அம் பொனின்
புனை மணி ஆதனம் பொலிய தோன்றினான்
முனிவரும் மன்னரும் முறையின் ஏறினார்
சனகனும் தன் கிளை தழுவ ஏறினான்
#44
மன்னரும் முனிவரும் வானுளோர்களும்
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்
துன்னினர் துவன்றலின் சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது அ பொரு_இல் கூடமே
#45
புயல் உள மின் உள பொரு_இல் மீன் உள
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம்
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே
#46
எண் தவ முனிவரும் இறைவர் யாவரும்
அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று ஆதலால்
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே
#47
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற
விராவின குவிந்தன விளம்ப வேண்டுமோ
அரா அணை துறந்து போந்து அயோத்தி எய்திய
இராகவன் செய்கையை இயம்புவாம்-அரோ
#48
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும்
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்
கங்கையே முதலவும் கலந்த நீரினால்
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே
#49
கோது_அறு தவத்து தம் குலத்துளோர் தொழும்
ஆதி அம் சோதியை அடி வணங்கினான்
காது இயல் கயல் விழி கன்னிமார்களை
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே
#50
அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான்
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என
எழுத_அரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தை
தழுவிய நிலவு என கலவை சாத்தியே
#51
மங்கல முழுநிலா மலர்ந்த திங்களை
பொங்கு இரும் கரும் கடல் பூத்தது ஆம் என
செங்கிடை சிகழிகை செம்பொன் மாலையும்
தொங்கலும் துயல்வர சுழியம் சூடியே
#52
ஏதாம் இல் இரு குழை இரவு தன் பகல்
காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும்
சீதை-தன் கருத்தினை செவியின் உள்ளுற
தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே
#53
கார் விட கறை உடை கணிச்சி வானவன்
வார் சடை புடையின் ஓர் மதி மிலைச்ச தான்
சூர் சுடர் குலம் எலாம் சூடினான் என
வீர பட்டத்தொடு திலகம் மின்னவே
#54
சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி
மொய் கரும் குழலினாள் முறுவல் உள்ளுற
புக்கன நிறைந்து மேல் பொடிப்ப போன்றவே
#55
பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற
அந்தம்_இல் சுடர் மணி அழலின் தோன்றலால்
சுந்தர தோள் அணி வலயம் தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே
#56
கோவையின் பெரு வட முத்தம் கோத்தன
காவல் செய் தட கையின் நடுவண் காந்துவ
மூ-வகை உலகிற்கும் முதல்வன் ஆம் என
ஏ வரும் பெரும் குறி இட்ட போன்றவே
#57
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர்
வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி கற்பகம்
ஈண்டு தன் கொம்பிடை ஈன்றது ஆம் என
காண் தகு தட கையில் கடகம் மின்னவே
#58
தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில்
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான்
மீனொடு சுடர் விட விளங்கும் மேகத்து
வான் இடு வில் என வயங்கி காட்டவே
#59
நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர்
உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான்
தணிவு அரும் கருணையான் கழுத்தில் சாத்திய
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே
#60
மேவ_அரும் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல்
ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என
தேவரும் முனிவரும் தெரிக்கலா முதல்
மூவரும் தான் என முடித்தது ஒத்ததே
#61
சுற்றும் நீள் தமனிய சோதி பொங்க மேல்
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம்
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழ
பொன் தடம் தாமரை பூத்த போன்றதே
#62
மண் உறு சுடர் மணி வயங்கி தோன்றிய
கண்ணுறு கரும் கடல் அதனை கை வளர்
தண் நிற பாற்கடல் தழீஇயது ஆம் என
வெண் நிற பட்டு ஒளி விளங்க சாத்தியே
#63
சலம் வரு தரளமும் தயங்கு நீலமும்
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே
#64
முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகை சுடரும் சுற்றிட
தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன்
நகை இள வெயில் என தொங்கல் நாற்றியே
#65
காசொடு கண் நிழல் கஞல கைவினை
ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின் மகரவாய் விளங்கும் வாள் முகம்
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே
#66
இனி பரந்து உலகினை அளப்பது எங்கு என
தனித்தனி தடுப்பன போலும் சால்பின
நுனிப்ப அரு நுண் வினை சிலம்பு நோன் கழல்
பனி பரும் தாமரை பாதம் பற்றவே
#67
இன்னணம் ஒளிர்தர இமையவர்க்கு எலாம்
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான்
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள்
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான்
#68
மு பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை
இ பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை
அப்பனை அப்பினுள் அமிழ்தை தன்னையே
ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ
#69
பல் பதினாயிரம் பசுவும் பைம் பொனும்
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும்
நல்லவர்க்கு உதவினான் நவிலும் நான்மறை
செல்வர்கள் வழுத்து உற தேர் வந்து ஏறினான்
#70
பொன் திரள் அச்சது வெள்ளி சில்லி புக்கு
உற்றது வயிரத்தின் உற்ற தட்டது
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது
ஒற்றை ஆழி கதிர் தேரொடு ஒப்பதே
#71
நூல் வரும் தகையன நுனிக்கும் நோன்மைய
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய
நாலையும் அனையன புரவி நான்கு ஒரு
பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே
#72
அனையது ஓர் தேரினில் அருணன் நின்று என
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள
குனி சிலை தம்பி பின் கூட ஏனையன்
இனிய பொன் கவரி கால் இயக்க ஏகினான்
#73
அமைவு_அரு மேனியான் அழகின் ஆயதோ
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே
#74
வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி
திரம் பயில் அரக்கர்-தம் வருக்கம் தேய்வு இன்று
நிரம்பியது என கொடு நிறைந்த தேவரும்
அரம்பையர் குழாத்தொடும் ஆடல் மேயினார்
#75
சொரிந்தனர் மலர்_மழை சுண்ணம் தூவினர்
விரிந்து ஒளிர் காசு பொன் தூசு வீசினர்
பரிந்தனர் அழகினை பருகினார்-கொலோ
தெரிந்திலம் திருநகர் மகளிர் செய்கையே
#76
வள்ளலை நோக்கிய மகளிர் மேனியின்
எள்ள அரும் பூண் எலாம் இரிய நிற்கின்றார்
உள்ளன யாவையும் உதவி பூண்டவும்
கொள்ளையில் கொள்க என கொடுக்கின்றாரினே
#77
எஞ்சல்_இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம்
குஞ்சர குழாத்தின் சுற்ற கொற்றவன் இருந்த கூடம்
வெம் சின தனுவலானும் மேரு மால் வரையில் சேரும்
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான்
#78
இரதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இரண்டு கையும்
பரதனும் இளைய கோவும் பரிந்தனர் ஏந்த பைம் தார்
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை
#79
சிலை உடை கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர்
முலை இடை முகிழ்ப்ப தேரின் முன் திசை முளைத்தது அன்னாள்
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள
மலையிடை உதிக்கின்றாள் போல் மண்டபம் அதனில் வந்தாள்
#80
நன்றி வானவர் எலாம் இருந்த நம்பியை
துன்று இரும் கரும் கடல் துவைப்ப தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய
அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்-அரோ
#81
ஒலி கடல் உலகினில் உம்பர் நாகரில்
பொலிவது மற்று இவள் பொற்பு என்றால் இவள்
மலிதரு மணம் படு திருவை வாயினால்
மெலிதரும் உணர்வினேன் என் விளம்புகேன்
#82
இந்திரன் சசியொடும் எய்தினான் இளம்
சந்திர மௌலியும் தையலாளொடும்
வந்தனன் மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே
#83
நீந்த அரும் கடல் என நிறைந்த வேதியர்
தோய்ந்த நூல் மார்பினர் சுற்ற தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான்
#84
தண்டிலம் விரித்தனன் தருப்பை சாத்தினன்
மண்டலம் விதிமுறை வகுத்து மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து எரி குழும் மூட்டினன்
பண்டு உள மறை நெறி பரவி செய்தனன்
#85
மன்றலின் வந்து மண தவிசு ஏறி
வென்றி நெடும் தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்
#86
கோ_மகன் முன் சனகன் குளிர் நல் நீர்
பூ_மகளும் பொருளும் என நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா
தாமரை அன்ன தட கையின் ஈந்தான்
#87
அந்தணர் ஆசி அரும் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை தார் முடி மன்னர்
வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின-மாதோ
#88
வானவர் பூ_மழை மன்னவர் பொன் பூ
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால்
மீன் நகு வானின் விளங்கியது இ பார்
#89
வெய்ய கனல்-தலை வீரனும் அ நாள்
மை அறு மந்திரம் மும்மை வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே
தையல் தளிர் கை தட கை பிடித்தான்
#90
இடம் படு தோளவனோடு இயை வேள்வி
தொடங்கிய வெம் கனல் சூழ் வரு-போதின்
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின்
உடம்பு உயிரை தொடர்கின்றதை ஒத்தாள்
#91
வலம்கொடு தீயை வணங்கினர் வந்து
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி
இலங்கு ஒளி அம்மி மிதித்து எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார்
#92
மற்று உள செய்வன செய்து மகிழ்ந்தார்
முற்றிய மா தவர் தாள் முறை சூடி
கொற்றவனை கழல் கும்பிடலோடும்
பொன்_தொடி கை கொடு நல் மனை புக்கான்
#93
ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம்
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர்
ஆர்த்தன பல் கலை ஆர்த்தன பல்லாண்டு
ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை
#94
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி
ஆய தன் அன்னை அடி துணை சூடி
தூய சுமித்திரை தாள் தொழலோடும்
#95
அன்னமும் அன்னவர் அம் பொன் மலர் தாள்
சென்னி புனைந்தாள் சிந்தை உவந்தார்
கன்னி அருந்ததி காரிகை காணா
நல் மகனுக்கு இவள் நல் அணி என்றார்
#96
சங்க வளை குயிலை தழீஇ நின்றார்
அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்
பெண்கள் இனி பிறர் யார் உளர் என்றார்
கண்கள் களிப்ப மனங்கள் களிப்பார்
#97
எண்_இல கோடி பொன் எல்லை_இல் கோடி
வண்ண_அரும் கலம் மங்கையர் வெள்ளம்
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும்
பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார்
#98
நூல் கடல் அன்னவர் சொல் கடன் நோக்கி
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்
கார் கடல் போல் கருணை கடல் பண்டை
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான்
#99
பங்குனி உத்தரம் ஆன பகல் போது
அங்க இருக்கினில் ஆயிர நாம
சிங்கம் மண தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான்
#100
கொய் நிறை தாரன் குசத்துவச பேர்
நெய் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார்
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார்
மெய் நிறை மூவரை மூவரும் வேட்டார்
#101
வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள்
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்
ஈட்டிய மெய் பொருள் உள்ளன எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான்
#102
ஈந்து அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே
ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும்
வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள
தேய்ந்தன நாள் சில செய்தது உரைப்பாம்

24 பரசுராம படலம்

#1
தான் ஆகிய தகைமை பொருள் சனகன் குயிலுடனே
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய்
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான்
#2
அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா
கை போதகம் நிகர் காவலர் குழு வந்து அடி கதுவ
ஒப்பு ஓத அரு தேர் மீதினில் இனிது ஏறினன் உரவோன்
#3
தன் மக்களும் மருமக்களும் நனி தன் கழல் தழுவ
மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட மிதிலை
தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின்
வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன்
#4
முன்னே நெடு முடி மன்னவன் முறையில் செல மிதிலை
நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய்
மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன்
#5
ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில் இடமும்
காகம் முதலிய முந்திய தடை செய்வன கண்டான்
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான்
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான்
#6
நின்றே நெறி உணர்வான் ஒரு நினைவாளனை அழையா
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன
குன்றே புரை தோளான் எதிர் புள்ளின் குறி தேர்வான்
இன்றே வரும் இடையூறு அது நன்றாய்விடும் என்றான்
#7
என்னும் அளவினில் வானகம் இருள் கீறிட ஒளியாய்
மின்னும்படி புடை வீசிய சடையான் மழு உடையான்
பொன்னின் மலை வருகின்றது போல்வான் அனல் கால்வான்
உன்னும் சுழல் விழியான் உரும் அதிர்கின்றது ஓர் மொழியான்
#8
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய
தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா
வெம்பி திரிதர வானவர் வெருவு உற்று இரிதர ஓர்
செம்பொன் சிலை தெறியா அயில் முக வாளிகள் தெரிவான்
#9
விண் கீழ் உற என்றோ படி மேல்கீழ் உற என்றோ
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ
புண் கீறிய குருதி புனல் பொழிகின்றன புரைய
கண் கீறிய கனலான் முனிவு யாது என்று அயல் கருத
#10
போரின் மிசை எழுகின்றது ஓர் மழுவின் சிகை புகைய
தேரின் மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய
நீரின் மிசை வடவை கனல் நெடு வான் உற முடுகி
பாரின் மிசை வருகின்றது ஓர் படி வெம் சுடர் படர
#11
பாழி புயம் உயர் திக்கிடை அடைய புடை படர
சூழி சடை_முடி விண் தொட அயல் வெண்மதி தோற்ற
ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும்
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான்
#12
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய தனி படரும்
செயிர் சுற்றிய படையான் அடல் மற மன்னவர் திலகன்
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள்
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான்
#13
நிருபர்க்கு ஒரு பழி பற்றிட நில மன்னவர் குலமும்
கரு அற்றிட மழுவாள் கொடு களை கட்டு உயிர் கவரா
இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும்
குருதி புனல் அதனில் புக முழுகி தனி குடைவான்
#14
கமை ஒப்பது ஓர் தவமும் சுடு கனல் ஒப்பது ஓர் சினமும்
சமைய பெரிது உடையான் நெறி தள்ளுற்று இடை தளரும்
அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான்
#15
சையம் புக நிமிர் அ கடல் தழுவும்படி சமைவான்
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான்
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான்
வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை
#16
பொங்கும் படை இரிய கிளர் புருவம் கடை நெரிய
வெம் கண் பொறி சிதற கடிது உரும் ஏறு என விடையா
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர் சென்றான்
அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில்
#17
அரைசன் அவனிடை வந்து இனிது ஆராதனை புரிவான்
விரை செய் முடி படி மேல் உற அடி மேல் உற விழவும்
கரை சென்றிலன் அனையான் நெடு முடிவின் கனல் கால்வான்
முரைசின் குரல் பட வீரனது எதிர் நின்று இவை மொழிவான்
#18
இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென் இனி யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன்
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன்
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன்
#19
அவன் அன்னது பகரும் அளவையின் மன்னவன் அயர்வான்
புவனம் முழுவதும் வென்று ஒரு முனிவற்கு அருள்புரிவாய்
சிவனும் அயன் அரியும் அலர் சிறு மானிடர் பொருளோ
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான்
#20
விளிவார் விளிவது தீவினை விழைவாருழை அன்றோ
களியால் இவன் அயர்கின்றன உளவோ கனல் உமிழும்
ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால்
எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான்
#21
நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும்
தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய்
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா
முனிவு ஆறினை முனிகின்றது முறையோ என மொழிவான்
#22
அறன் நின்றவர் இகழும்படி நடுவின் தலை புணரா
திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ
அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ
மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ
#23
சலத்தோடு இயைவு இலன் என் மகன் அனையான் உயிர் தபு மேல்
உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன்
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன்
குலத்தோடு அற முடியேல் இது குறை கொண்டனென் என்றான்
#24
என்னா அடி விழுவானையும் இகழா எரி விழியா
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என வெம் துயர் உற்றான்
#25
மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான்
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான்
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான்
ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான்
#26
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம்
அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவன-தாம்
இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள்
#27
ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றை ஒன்றை
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான்
என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும்
வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அ நாள்
#28
சீரிது தேவர்-தங்கள் சிந்தனை என்பது உன்னி
வேரி அம் கமலத்தோனும் இயைவது ஓர் வினயம்-தன்னால்
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை
மூரி வெம் சிலை மேல் இட்டு மொய் அமர் மூட்டி விட்டான்
#29
இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும்
வெருவர திசைகள் பேர வெம் கனல் பொங்க மேன்மேல்
செரு மலைகின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன்
வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ
#30
மீட்டும் போர் தொடங்கும் வேலை விண்ணவர் விலக்க வல் வில்
நீட்டினன் தேவர்_கோன் கை நெற்றியில் கண்ணன் வெற்றி
காட்டிய கரிய மாலும் கார்முகம்-தன்னை பாரில்
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்
#31
இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்கு தந்த
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த
குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை யான் குறித்த போரும்
புரிகிலென் நின்னொடு இன்னம் புகல்வது கேட்டி என்றான்
#32
ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால்
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால்
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர்
தானவன் அனைய மன்னன் கொல்ல யான் சலித்து மன்னோ
#33
மூ எழு முறைமை பாரில் முடி உடை வேந்தை எல்லாம்
வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார்
தூ எழு குருதி வெள்ள துறையிடை முறையின் எந்தைக்கு
ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன்
#34
உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன் உறு பகை ஒடுக்கி போந்தேன்
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன்
மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான்
#35
என்றனன் என்ன நின்ற இராமனும் முறுவல் எய்தி
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ
துன்று இரும் சடையோன் அஞ்ச தோள் உற வாங்கி சொல்லும்
#36
பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை என்றாலும்
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய்
ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பது அன்றால்
யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான்
#37
நீதியாய் முனிந்திடேல் நீ இங்கு யாவர்க்கும்
ஆதி யான் அறிந்தனென் அலங்கல் நேமியாய்
வேதியா இறுவதே அன்றி வெண்மதி
பாதியான் பிடித்த வில் பற்ற போதுமோ
#38
பொன் உடை வனை கழல் பொலம் கொள் தாளினாய்
மின் உடை நேமியன் ஆதல் மெய்ம்மையால்
என் உளது உலகினுக்கு இடுக்கண் யான் தந்த
உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்றால்
#39
எய்த அம்பு இடை பழுது எய்திடாமல் என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே என
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன்
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே
#40
எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய்
கண்ணிய யாவர்க்கும் களை_கண் ஆகிய
புண்ணிய விடை என தொழுது போயினான்
#41
அழிந்து அவன் போன பின் அமலன் ஐ உணர்வு
ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை
பொழிந்த பேர் அன்பினால் தொழுது முன்பு புக்கு
இழிந்த வான் துயர் கடல் கரை நின்று ஏற்றினான்
#42
வெளிப்படும் உணர்வினன் விழுமம் நீங்கிட
தளிர்ப்பு உறு மத கரி தானையான் இடை
குளிப்ப அரும் துயர் கடல் கோடு கண்டவன்
களிப்பு எனும் கரை இலா கடலுள் ஆழ்ந்தனன்
#43
பரிவு அறு சிந்தை அ பரசுராமன் கை
வரி சிலை வாங்கி ஓர் வசையை நல்கிய
ஒருவனை தழுவிநின்று உச்சி மோந்து தன்
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான்
#44
பொய்ம்மை இல் சிறுமையில் புரிந்த ஆண்_தொழில்
மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ
மெய்ம்மை இ சிறுவனே வினை செய்தோர்களுக்கு
இம்மையும் மறுமையும் ஈயும் என்றனன்
#45
பூ_மழை பொழிந்தனர் புகுந்த தேவருள்
வாம வேல் வருணனை மான வெம் சிலை
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான்
#46
நண்ணினர் இன்பத்து வைகும் நாளிடை
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான்
அண்ணல் அ பரதனை நோக்கி ஆண்தகை
எண்ண அரும் தகையது ஓர் பொருள் இயம்புவான்
#47
ஆணையின் நினது மூதாதை ஐய நின்
காணிய விழைவது ஓர் கருத்தன் ஆதலால்
கேணியில் வளை முரல் கேகயம் புக
பூண் இயல் மொய்ம்பினாய் போதி என்றனன்
#48
ஏவலும் இறைஞ்சி போய் இராமன் சேவடி
பூவினை சென்னியில் புனைந்து போயினான்
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான்
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே
#49
உளை விரி புரவி தேர் உதயசித்து எனும்
வளை முரல் தானையான் மருங்கு போத போய்
இளையவன் தன்னொடும் ஏழு நாளிடை
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான்
#50
ஆனவன் போன பின் அரசர் கோமகன்
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால்
மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம்-அரோ


Balakandam is the first book of the Kamba Ramayanam. Here's an overview of what it covers:

Balakandam Overview

Birth of Rama and His Brothers:

The Balakandam begins with the story of King Dasaratha of Ayodhya, who is childless and worried about the succession of his kingdom. He performs the Putrakameshti Yagna (a ritual to beget children).
As a result of the Yagna, he receives a divine potion, which he distributes to his three wives: Kausalya, Kaikeyi, and Sumitra. Consequently, they give birth to four sons—Rama (born to Kausalya), Bharata (born to Kaikeyi), and Lakshmana and Shatrughna (born to Sumitra).

Rama's Childhood:

The book describes Rama's childhood, his education, and his early life in the palace. He is depicted as a prince of exceptional qualities, admired by everyone in Ayodhya.

Vishwamitra's Arrival:

Sage Vishwamitra comes to Ayodhya and requests King Dasaratha to send Rama with him to protect his yagna (sacrifice) from demons. Despite his initial reluctance, Dasaratha agrees to send Rama, and Lakshmana accompanies him.
Rama and Lakshmana assist Vishwamitra in defeating several demons, including Tataka and Subahu.

Sita's Swayamvara:

The focus then shifts to Mithila, where King Janaka arranges a swayamvara (a ceremony where a princess chooses her husband from among assembled suitors) for his daughter Sita. He sets a condition that the suitor must string the divine bow of Shiva to marry her.
Many princes fail to lift the bow, but Rama effortlessly strings it and even breaks it in the process, thereby winning Sita's hand in marriage.

Rama's Marriage:

Rama and Sita's wedding takes place with great pomp and ceremony. Rama's brothers also marry Sita's sisters—Bharata marries Mandavi, Lakshmana marries Urmila, and Shatrughna marries Shrutakirti.
After the wedding, they all return to Ayodhya, where they are welcomed with joy.

Significance of Balakandam

Introduction of Key Characters: Balakandam introduces the key characters of the epic, such as Rama, Sita, Lakshmana, and others, setting the stage for the events that follow.
Foundation of Dharma: It establishes Rama's character as the embodiment of dharma (righteousness) and virtue, which are central themes throughout the Ramayana.
Cultural Importance: The stories and incidents in the Balakandam are deeply ingrained in South Indian culture and have been subjects of various folk tales, dances, and dramas.

The Balakandam serves as the foundation for the epic narrative, providing the background and context for the trials and tribulations that Rama will face in the subsequent books of the Kamba Ramayanam.



Share



Was this helpful?