இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


அயோத்தியா காண்டம் - 4

Ayodhya Kanda is the second book of the Ramayana. It details the events in Rama’s life in Ayodhya, focusing on the decisions made by his father, King Dasharatha, and the circumstances that lead to Rama's exile into the forest.


ராமாயணம்

அயோத்தியா காண்டம் - 4


அதிகாலை விடிந்ததும் பரத்வாஜ முனிவரின் குடிலை நோக்கி சென்றான் பரதன். தனது நித்திய பூஜைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த பரத்வாஜ முனிவரை பார்த்து வணங்கினான் பரதன். இரவு அளித்த விருந்து உபசாரங்கள் திருப்தியாக இருந்தனவா என்று கேட்டார் பரத்வாஜ முனிவர். படை பரிவாரங்கள முதல் மந்திரிகள் வரை அனைவரும் தாங்கள் அளித்த விருந்தை சாப்பிட்டு சுகமாக தங்கினோம். அனைவரது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன. தேவலோக நந்தவனத்தில் தங்கியது போன்று உணர்ந்தோம். ராமரின் இருப்பிடம் செல்ல வழியும் நாங்கள் இங்கிருந்து செல்ல அனுமதியும் கேட்டு வந்திருக்கின்றேன் என்று வணங்கினான் பரதன்.

பரத்வாஜ முனிவர் பரதனுடன் வந்திருந்த மூன்று பெண்களை தனக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். சுமத்திரை கைகேயி என மூவரையும் ஒருவர் பின் ஒருவராக அறிமுகம் செய்து வைத்து ஆசிபெறச்செய்தான். முதலில் கௌசலையை வரச்செய்து துக்கப்பட்டு பட்டினியால் வாடிய முகத்துடன் நிற்பவர் பட்டத்து ராணி பெயர் கௌசலை இவரே ராமரை பெற்றெடுத்த புண்யவதி என்று அறிமுகம் செய்தான். கௌசலையின் வலது புறத்தில் இருப்பவர் சுமத்திரை இரண்டாவது பட்டத்து ராணி லட்சுமணன் சத்ருக்கணனை பெற்றடுத்த பாக்கியவதி. இடது புறத்தில் நிற்பவர் அரசி வடிவத்தில் இருக்கும் அரக்கி. எங்களுடைய துக்கங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பவள் என்று கைகேயியை அறிமுகம் செய்தான். மூவரும் பரத்வாஜ முனிவரை சுற்றி வந்து வணங்கி நின்றனர்.

கைகேயி கவலையுடன் முகத்தை மறைத்துக்கொண்டு வணங்கி நின்றாள். பரத்வாஜ முனிவர் பரதனிடம் உலகத்தின் நன்மைக்காகவே அனைத்தும் நடந்தது உனது தாயை அப்படி சொல்லாதே என்று கேட்டுக் கொண்டு ராமர் இருக்கும் இடத்திற்கு செல்ல வழியை கூற தொடங்கினார். இங்கிருந்து இரண்டரை யோசனை தூரத்தில் மந்தாகினி நதி ஓடுகின்றது. நதியை தாண்டினால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத காடு இருக்கின்றது. அதன் தெற்கு பகுதியில் சித்ரகூட மலை இருக்கின்றது. மலை அடிவாரத்தில் ஒரு குடில் அமைத்து மூவரும் வசித்து வருகின்றார்கள் என்று செல்வதற்கான வழிமுறைகளை பரதனிடம் சொல்லி வாழ்த்துக்களை கூறி விடை கொடுத்தார்.

பரதன் தன் படை பரிவாரங்களுடன் பரத்வாஜ முனிவர் காட்டிய பாதையில் சென்றான். தூரத்தில் சித்ரகூட மலையும் மலை அடிவாரத்தில் லேசான புகையும் தெரிந்தது. ராமர் இருக்கும் இடம் அது தான் என்று அனைவரும் உற்சாகமடைந்து விரைவாக செல்ல ஆரம்பித்தனர்.

சித்ரகூட மலையின் கம்பீரமும் வனத்தின் அழகும் பறவைகளின் சத்தமும் விலங்குகளின் விளையாட்டும் அவர்களின் உள்ளத்தை கவர்ந்தது. ஊரையும் உறவினர்களையும் பிரிந்த துக்கம் ஏதும் இல்லாமல் ராமர் சீதை லட்சுமணன் மூவரும் மிகவும் மகிழ்ச்சியாக காலம் கழித்துவந்தார்கள். பெரும் தூசி புகை கிளம்பியதையும் கண்டார் ராமர். லட்சுமணனிடம் தம்பி ஏதோ தூரத்தில் ஏதோ பெரும் சத்தம் தூசி படலத்துடன் கிளம்புகின்றது. விலங்குகள் அனைத்தும் நாலாபக்கமும் ஒடுகின்றது. அரச குலத்தவர்கள் யாரேனும் வேட்டையாட வந்திர்க்கின்றார்களா பார் என்றார்.

லட்சுமணன் பெரிய மரத்தில் ஏறிப்பார்த்தான். பெரிய படை ஒன்று சித்ரகூட மலையை நோக்கி வந்துகொண்டிருப்பதை பார்த்தான். மரத்தில் இருந்து ராமருக்கு எச்சரிக்கை செய்தான். அண்ணா தேர்ப்படை யானைப்படை குதிரைப்படை காலாட்படை என்று ஒரு பெரிய படை பட்டாளம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. நாம் மூட்டிய நெருப்பு புகையை வைத்துக்கொண்டு நம்மை நோக்கி வந்து கொண்டிருகின்றார்கள். உடனே நெருப்பை அணைத்து விட்டு சீதையை மலைக்குகையில் பத்திரமாக வைத்துவிட்டு கவசம் உடுத்திக்கொண்டு வில்லும் அம்பு கத்தி எடுத்துக்கொண்டு யுத்தத்திற்கு தயாராவோம் என்றான்.

ராமர் லட்சுமணனிடம் வந்து கொண்டிருக்கும் படையில் முதலாவதாக வரும் தேரில் எந்த நாட்டுக்கொடி இருக்கின்றது கவனித்துப் பார் என்றார். கொடியை பார்த்த லட்சுமணன் கோபமடைந்தான். அண்ணா தேரில் இருப்பது திருவாத்திக்கொடி நம்முடைய அயோத்தி நாட்டுக்கொடி. சூழ்ச்சியால் ராஜ்யத்தை பெற்றதோடு மட்டும் இல்லமால் எதிர்காலத்தில் நம்முடைய தொந்தரவு ஏதும் இருக்கக்கூடாது என்று நம்மை எதிர்த்து கொல்லவும் வருகின்றான் பரதன். இன்று கைகேயியின் மகன் பரதன் என் கையில் அகப்படுவான். அவனை நான் விடப்போவது இல்லை. அறநெறியில் இருந்து விலகிய அவனை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. நம்மை கொல்ல வரும் பகைவனை நாம் கொல்வது பாவமாகாது. இங்கிருந்தே பரதனை எதிர்ப்போமா இல்லை மலை மீது நின்று கொண்டு எதிர்ப்போமா நீங்கள் சொல்லுங்கள். இவன் நமக்கு செய்த கொடுமைக்கு இன்று பழி வாங்கி விடலாம். பரதனை வென்று கைகேயியின் எண்ணத்தை முற்றிலும் அழித்துவிடலாம். இந்த வனத்தில் ரத்த வெள்ளத்தை ஓடச் செய்யப் போகின்றேன். வரும் படைகளை நீர்மூலமாக்குவேன். இந்த காட்டில் உள்ள மிருகங்களுக்கு இன்று நிறைய உணவு கிடைக்கப் போகின்றது எனக்கு உத்தரவு தாருங்கள் அனைத்து படைகளையும் அழித்து விடுகின்றேன் என்று தன்னையும் மறந்து கோபத்தில் பேசிக்கொண்டே இருந்தான் லட்சுமணன்.

லட்சுமணன் சொன்ன அனைத்தையும் கேட்ட ராமர் புன்சிரிப்புடன் அமைதியாக பேச ஆரம்பித்தார். லட்சுமணா நீ ஒரு வெற்றி வீரனாவாய். பரதனுடைய பெரும் படைகளையும் நிர்மூலமாக்குவாய் இதில் எந்த சந்தேகமும் இல்லை. முதலில் கோபத்தை விட்டு அமைதியாக சிறிது யோசனை செய்து பார். பரதனே நேரில் வருகின்றான் என்கிறாய். பரதனை எதிர்த்து வில்லுக்கும் அம்புக்கும் கத்திக்கும் வேலை ஒன்றும் இல்லை. தந்தையின் ஆணையை அழித்தும் பரதனை கொன்றும் ராஜ்யம் சம்பாதித்து நமக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றது. உடன் பிறந்தவர்களை அழித்துவிட்டு கிடைக்கும் சொத்தானது விஷம் கலந்த உணவைப் போன்றது யாருக்கும் உபயோகப்படாது. யாரை சந்தோசப் படுத்துவதற்காக ராஜ்யத்தை சம்பாதித்து நாமும் சந்தோசமாக இருக்கின்றோமோ அவர்களையே அழித்துவிட்டு அந்த ராஜ்யத்தை அடைவதில் பயன் ஒன்றும் இல்லை. அதர்ம வழியில் கிடைக்கும் ராஜ்யம் நமக்கு வேண்டாம். நீயும் பரதனும் சத்ருக்கணனும் என்னுடன் சேர்ந்து அனுபவிக்க முடியாத சுகம் எனக்கு வேண்டாம் என்றார்.

ராமர் லட்சுமணனிடம் தொடர்ந்து பேசினார். பரதன் இப்போது இங்கே ஏன் வருகின்றான் என்பதை நான் அறிவேன். பரதன் எள் அளவும் தருமம் தவறாதவன். நம்மில் யாருக்கும் தீமை செய்யும் எண்ணம் கூட இது வரை பரதனுக்கு வந்தது இல்லை. ராஜ்யத்தை எனக்கு கொடுத்து விடுவதற்காகவே வந்து கொண்டிருக்கின்றான். கைகேயின் மேல் கோபம் கொண்டும் தந்தையை சமாதானம் செய்தும் என்னை அழைத்துப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து கொண்டிருக்கின்றான் பரதன் என்றார் ராமர். பரதனைப்பற்றி நீ கோபமாக பேசியதெல்லாம் அதர்மம் அப்படி பேசக்கூடாது. ராஜ்யத்தை அடைய வேண்டும் என்று ஆசை உன்னிடம் இருக்கின்றதா நீ சொல். பரதன் வந்ததும் அவனிடம் சொல்கிறேன். லட்சுமணனுக்கு ராஜ்யத்தின் மீது ஆசை இருக்கின்றது. அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்துவிடு என்று சொல்கிறேன். இந்த வார்த்தையை கேட்டவுடன் பரதன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ராஜ்யத்தில் உன்னை அமர வைத்துவிடுவான் என்று ராமர் லட்சுமணனிடம் கூறினார்.

லட்சுமணன் வெட்கத்தில் தலை குனிந்து ராமரின் அருகில் சென்று கைகூப்பிய வண்ணம் அமர்ந்தான். நமது தந்தையார் வந்து கொண்டு இருக்கலாம் என்று எண்ணுகிறேன் என்றான் லட்சுமணன். ராமர் கூட்டத்தை பார்த்தார். நாம் இந்த காட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம் என்று எண்ணி நம்மை அழைத்துப்போக தந்தையாரும் இந்த கூட்டத்தில் வந்திருக்கலாம். ஆனால் சக்கரவர்த்திக்கு உண்டான வெண்கொற்றக் குடையை காணவில்லை. ஆகவே தந்தை வந்திருப்பது சந்தேகமே என்றார் ராமர்.

உறவினர்களையும் படைகளை தூரத்தில் நிறுத்திவிட்டு புகை கிளம்பும் இடத்தில் குடில் ஏதும் இருக்கின்றாதா என்று பார்த்து வருமாறு சில வீரர்களை அனுப்பினான் பரதன். புகை வரும் இடத்தில் குடில் இருப்பதை பரதனிடம் உறுதி செய்தார்கள் வீரர்கள். பரதன் படைகளை அங்கேயே இருக்குமாறு உத்தரவிட்டு சிலருடன் மட்டும் ராமர் இருக்குமிடம் சென்றான். புல் தரையில் அமர்ந்திருந்த ராமரை கண்டதும் பரதன் அண்ணா என்று கதறியபடியே ஓடி வந்து ராமரின் காலடியில் வீழ்ந்தான். அண்ணா என்ற வார்த்தைக்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க விம்மி அழுதான். பரதனின் பின்னே சுமந்திரனும் குகனும் வந்து சேர்ந்தார்கள். தபஸ்விகளுக்கன உடை அணிந்தும் உடல் மெலிந்தும் இருந்த பரதனை தூக்கிய ராமர் பரதனை அணைத்துக் கொண்டார். தம்பி அயோத்தியில் தந்தையை தனியாக விட்டுவிட்டு நீ இப்படி வெகுதூரத்தில் இருக்கும் வனத்திற்கு வரலாமா? ஏன் இது போல் உடல் இளைத்து இருக்கிறாய் என்று கேட்டார். பரதன் பேச்சு வராமல் அழுதபடியே இருந்தான். பரதனை மனநிலையை சராசரி நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் ராமர் பரதனிடம் பேசினார். நமது ராஜ்யம் எப்படி இருக்கின்றது. தந்தை தசரதர் தாய் மூவர் மற்றும் நமது உறவினர்கள் அனைவரும் எப்படி இருக்கின்றார்கள் என்று கேட்டார் ராமர்

ராமரிடம் பரதன் பேச ஆரம்பித்தான். ராஜ தர்மத்தைப் பற்றி பேச நான் தகுதியற்றவனாய் நிற்கின்றேன். சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்யம் செய்ய நீங்கள் இருக்கும் போது நான் எப்படி அரசனாவேன். தர்மத்தை மீறி சிம்மாசனத்தில் நான் அமர்ந்தால் அரசனுக்கு உரிய தர்மத்தை என்னால் அனுஷ்டிக்க முடியாது. எனக்கு தெரிந்த தர்மம் தங்களுக்கு அடிமையாக இருந்து தங்களுக்கு சேவை செய்வது மட்டுமே. நீங்கள் காட்டிற்கு வந்து விட்டபடியால் இத்தனை நாட்கள் அதற்கும் பிராப்தம் இல்லாமல் போய் விட்டது. நமது ராஜ குல தருமப்படி மூத்தவரே அரசனாக வேண்டும். பல தலைமுறைகளாக இருக்கும் நமது குலத்தின் பொதுவான தருமம் இது. நாட்டின் நலன் கருதி நீங்கள் அயோத்திக்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கேயே தங்களுக்கு பட்டாபிஷேகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளுடன் வந்திருக்கின்றோம். தயவு செய்து அரச பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய நன்மைகளை செய்யுங்கள் என்றான் பரதன்.

ராமர் பேச ஆரம்பித்தார். கேகய நாட்டில் இருக்கும் நீ அயோத்திக்கு வந்து பின்னர் தந்தையை பிரிந்து வெகு தூரத்தில் இருக்கும் யாராலும் எளிதில் உள்ளே வரமுடியாத அடர்ந்த காட்டிற்குள் வந்திருக்கறாய் என்றால் என்னை பிரிந்த தந்தையார் மனோ தைரியத்துடன் இருக்கின்றார் என்று எண்ணுகின்றேன். தாயார் மூவரின் நலம் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றார்களா சொல் இதனை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன் என்றார் ராமர்.

நான் கேகய நாட்டில் இருந்த போது அரண்மனையில் நடந்த சூழ்ச்சியால் நீங்கள் அயோத்தியில் இருந்து கிளம்பி காட்டிற்கு வந்துவிட்டீர்கள். பற்பல வேள்விகளை செய்தவரும் மாவீரராய் திகழ்ந்தவரும் சான்றோர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட நமது தந்தை தசரதர் உங்களை பிரிந்த துக்கத்தை தாங்க முடியாமல் நோய் வாய்ப்பட்டு உங்கள் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி அழைத்துக்கொண்டே இருந்தார். சுமந்திரன் வரும் போது நீங்களும் அவனுடனேயே திரும்பி வந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார். சுமந்திரன் மட்டும் தனியாக வந்ததை பார்த்ததும் தங்களின் பெயரை கூறிக்கொண்டே சொர்க்கலோகம் புகுந்து விட்டார் நமது தந்தையார் என்று தழுதழுத்த குரலில் கூறினான் பரதன். பரதன் கூறியதை கேட்டதும் கோடாலியால் வெட்டப்பட்ட மரம் போல ராமர் கீழே விழுந்தார்.

ராமரை தாங்கிபிடித்த பரதன் நம்முடைய தந்தையாருக்கு செய்ய வேண்டிய கிரியை கடமைகளை நானும் சத்ருக்கனனும் செய்து விட்டோம். தந்தைக்கு மிக பிரியமானவராக தாங்கள் இருந்தீர்கள். உங்கள் ஞாபகமாகவே தந்தை உடலை விட்டார். நீங்கள் கொடுக்கும் பிதுர்கடனே அவருக்கு சாந்தி தரும். அவருக்கு செய்ய வேண்டி கடமைகளை நீங்களும் லட்சுமணனும் செய்து முடிக்கவேண்டும். தாங்கள் வருந்தவேண்டாம். நீங்களே எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியவர் என்று ஆறுதலாக சொல்லி முடித்தான் பரதன்.

ராஜ குமாரர்கள் நால்வரும் மந்தாகினி ஆற்றங்கரைக்கு சென்றார்கள். அங்கே தசரதருக்கு செய்ய வேண்டிய தர்பணங்களை முறைப்படி செய்தார்கள். ஒருவரை ஒருவர் அணைத்து தங்கள் துயரத்தை தீர்த்துக்கொண்டு குடிசைக்கு திரும்பினார்கள். கௌசலை சுமத்ரை கைகேயி மூவரையும் ராமர் இருக்கும் குடிசைக்கு செல்லலாம் வாருங்கள் என்று வசிஷ்டரரும் அவர்களுடன் கிளம்பினார். வழியில் மந்தாகினி ஆற்றங்கரையில் பித்ருக்களுக்கான தர்ப்பை புல்லும் எள்ளும் வைத்திருப்பதை பார்த்தார்கள். இந்த ஆற்றங்கரையில் இருந்து தான் தங்களுக்கு தேவையான நீரை கொண்டு செல்வார்கள் அருகில் தான் ராமர் இருக்கும் குடிசை இருக்கின்றது என்றார் வசிஷ்டர். எவ்வளவு வசதியாக வாழ்ந்த ராஜ குமாரர்கள் இங்கிருந்து குடிசை வரை தண்ணீர் சுமந்து கொண்டு செல்கின்றார்களா என்று கௌசலை அழ ஆரம்பித்தாள். சுமத்திரை கௌசலையை ஆறுதல் படுத்தினாள். ராமருக்காக லட்சுமணன் தினந்தோறும் தண்ணீரை சுமந்து கொண்டு செல்வதை மகிழ்ச்சியாகவே செய்வான். லட்சுமணனுக்கு இது பெரிய கடினமான காரியம் இல்லை என்று பேசிக்கொண்டே குடிசைக்கு அருகில் வந்தார்கள்.

நான்கு ராஜ குமாரர்களும் பட்டத்து அரசிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அரண்மனையில் சுக போகத்துடன் வாழ்ந்த ராஜகுமாரர்கள் குடியையில் இருப்பதை பார்த்ததும் சக்தியற்றவர்களாக கௌசலையும் சுமத்ரையும் அங்கேயே அமர்ந்து விட்டார்கள். கௌசலையிடம் விரைவாக வந்த ராமர் அவளை தூக்கி தலையில் தடவிக்கொடுத்தார். ராமரின் ஸ்பரிசத்தில் மயங்கிய கௌசலை ஆனந்தத்தில் மூழ்கிப்போனாள். சீதையிடம் வந்த கௌசலை ஜனகருக்கு மகளாகப் பிறந்து அயோத்திக்கு மருமகளாய் வந்து இந்த காட்டில் சிறு குடியையில் தங்கியிருக்கின்றாய். உன்னை பார்த்ததும் நெருப்பில் எரியும் விறகு போல் என் மனம் எரிகிறது என்று சீதையை அணைத்துக்கொண்டாள். சுமித்ரையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி ராமரும் லட்சுமணனும் ஆசி பெற்றனர். நீண்ட கால பிரிவை ஒட்டி ஒருவரை ஒருவர் தங்கள் கண்களில் நீர் வழிய அணைத்துக் கொண்டு ஆனந்தம் கொண்டார்கள்

ராஜ குமாரர்கள் பட்டத்து அரசிகள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிந்தவுடன் படைகள் அனைத்தும் அவர்கள் இருக்குமிடம் நோக்கி விரைந்து வந்தார்கள். தசரதரை இழந்த துக்கத்தில் இருந்த அனைவரையும் ஒன்றாக பார்த்த மக்கள் இனி ராமர் அயோத்திக்கு திரும்பி வந்து விடுவார் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். வசிஷ்டருடைய பாதங்களில் ராமரும் லட்சுமணனுடன் பரதனும் சத்ருக்கணனும் வீழ்ந்து வணங்கி அவருக்கு தங்களுடைய வணக்கத்தை செலுத்தினார்கள். வசிஷ்டர் அவர்களுக்கு ஆசி கூறி ஓரிடத்தில் அமர்ந்தார். அவரை பின்பற்றி அனைவரும் அமர்ந்தார்கள். பரதன் ராமரின் அருகில் வந்து அமர்ந்தான். மக்கள் அனைவரும் பரதன் ராமரிடன் என்ன பேசப்போகின்றார் எப்படி ராமரை அயோத்திக்கு அழைக்கப்போகின்றார் என்ற ஆர்வத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

ராமர் பரதனிடம் பேச ஆரம்பித்தார். தந்தை உனக்கு தந்த ராஜ்யத்தை விட்டு தபஸ்விகளுக்கான உடைகளை அணிந்து கொண்டு ஏன் இங்கு வந்திருக்கிறாய். மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கும் போது கடமையை விட்டு வந்திருக்கும் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் சொல் என்றார். பரதன் பல தடவை பேச ஆரம்பித்து பேச முடியாமல் திக்கி திணறி மெதுவாக பேச ஆரம்பித்தான். உங்களை காட்டுக்கு அனுப்பிவிட்டு யாரும் செய்யத் துணியாத காரியத்தை செய்துவிட்டேனே என்று துக்கத்திலேயே வெந்து மேலுலகம் சென்று விட்டார் தந்தை. என்னை பெற்றவளும் தான் விரும்பிய சந்தோசத்தை பெற முடியாமல் மகா பாவம் செய்து உலகத்தால் பழிக்கப்பட்டு உயிருடன் நரக வேதனை அனுபவித்துக் கொண்டு சோகத்தில் மூழ்கி இருக்கின்றாள். அயோத்தி மக்கள் துக்கமே வடிவமாக மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். மாற்றங்கள் ஏதும் செய்து இனி தந்தையை பெற முடியாது. ஆனால் நீங்கள் அரச பதவியை எற்க சம்மதம் தெரிவித்து உங்களுக்கு உரிய ராஜ்யத்தை நீங்கள் அடைந்தால் அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். தாயார் கௌசலையும் சுமத்ரையும் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். தாயார் கைகேயி இனி வரப்போகும் பழிச்சொல்லில் இருந்து மீள்வார். சூழ்ச்சியால் ராஜ்யத்தை பெற்றேன் என்ற பழிச்சொல் என்னையும் விட்டு நீங்கும். அரச குடும்பத்தில் மூத்தவர் அரசனாக வேண்டும் என்ற நமது குல தர்மம் காப்பாற்றப்படும்.

சொர்க்கம் சென்ற தந்தையும் இதனையே விரும்புவார். உரிய அரசனில்லாமல் அயோத்தி நகரம் தேய்ந்த சந்திரனைப்போல் இருட்டாக இருக்கிறது. அதனை அகற்றி அயோத்தியை பூரண சந்திரனைப்போல் மங்கள நகரமாக்கி வெளிச்சமாக்குங்கள். உங்கள் பாதங்களில் வீழ்ந்து கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அரசனானால் அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூகமான தீர்வு கிடைத்துவிடும். அரச பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்ற தங்களின் வார்த்தையை கேட்க ஆவலுடன் நமது தாயார் மூவர் முதல் மக்கள் வரை காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மறுத்துவிடாதீர்கள் என்று கண்களில் நீர் வழிய ராமரின் காலை பிடித்துக்கொண்டான் பரதன்.

பரதனை தூக்கிய ராமர் தன் அருகில் அமர வைத்து பேச ஆரம்பித்தார். நாம் நால்வரும் நற்குலத்தில் பிறந்தோம். நல்ல முறையில் வளர்க்கப்பட்டோம். நாம் நால்வரும் ஒரு நாளும் தவறு செய்ய மாட்டோம். உன்னிடம் எள் அளவும் குறைகளை நான் இதுவரை கண்டதில்லை. நீ துக்கப்பட வேண்டாம். உனது தாயாரையும் குற்றம் கூற வேண்டாம். நம்முடைய குல பண்பாட்டுக்கு இது தகாது. நம்மை பெற்ற தந்தையும் தாயும் நமக்கு எந்த ஆணையும் இடலாம். அது அவர்களுடைய உரிமை. காட்டிற்கு அனுப்புவதும் ராஜ்யத்தை கொடுப்பதும் அவர்களுடைய உரிமை. அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி தாய் தந்தையை கௌரவிப்பது நமது கடமை. உனக்கு ராஜ்ய பொறுப்பை தந்து எனக்கு 14 ஆண்டுகள் வனத்தின் தவ வாழ்க்கையை வகுத்துக் கொடுத்திருக்கிறார். இதனை நாம் மீறலாகாது. 14 ஆண்டுகள் 14 நாட்கள் போல் கழித்துவிட்டு விரைவில் அயோத்தி திரும்பிவருவேன் என்றார் ராமர்.

ராமருடைய உறுதியான பேச்சைக்கேட்ட பரதனும் மக்களும் பேச வார்த்தை இல்லாமல் தவித்தார்கள். பரதன் மீண்டும் ராமரிடம் சொன்னான். தாங்கள் ராஜ்யத்தை ஏற்க மறுத்தால் என்மேல் விழுந்த பழி தீராமல் போகும். நான் என்ன செய்தாலும் இப்பாவத்தை போக்க இயலாது என்று வருத்தத்துடன் சொன்னான். அதற்கு ராமர் உன்னை நீயே நிந்தித்துக்கொள்ள வேண்டாம். நடந்தவைகள் அனைத்தும் உன்னாலேயே நடந்தது என்று நீ எண்ண வேண்டாம். விதியே அனைத்திற்கும் காரணம். துக்கத்தை விடு. தேவ ராஜனுக்கு சமமான நமது தந்தையார் எனக்கு இட்ட ஆணையை நான் நிறைவேற்றாமல் போனால் அதற்கு பதிலாக இந்த உலகமே எனக்கு கிடைத்தாலும் நான் திருப்தி அடைய மாட்டேன். தந்தையின் ஆணையை என்னால் நிராகரிக்க முடியாது. தந்தையின் கட்டளையை நாம் இருவரும் ஏற்க வேண்டும். உன்னிடம் ஒப்படைத்த ராஜ்ஜியத்தை நீ ஏற்றுக்கொண்டு அரச பதவியை நீ தாங்கியே ஆக வேண்டும். அயோத்திக்கு சென்று அரசனுக்கு உரிய பணியை செய்து மக்களுக்கு நன்மையை செய். உனக்கு உதவியாக சத்ருக்கணன் இருக்கின்றான். எனக்கு உதவியாக லட்சுமணன் இருக்கின்றான். தசரதரின் நான்கு புத்திரர்களாகிய நாம் நால்வரும் தந்தையின் ஆணையை நிறைவேற்றுவோம் என்று உறுதியுடன் கூறினார் ராமர்.

ராமரின் உறுதியையும் ராமருக்கு துணையாக லட்சுமணனேயும் பரதனின் அன்பையும் பரதனுக்கு துணையாக சத்ருக்கணனையும் பார்த்த கௌசலை சுமத்ரை கைகேயி மூவரும் களங்கமற்ற உள்ளத்தை கொண்ட ராஜகுமாரர்களை பெற்றோமே என்று மகிழ்ந்தார்கள். பரதனுடன் வந்த மக்கள் கூட்டத்தில் இருந்த ஜாபலர் என்ற புரோகிதர் இடையில் ராமருக்கு வணக்கம் செலுத்தி பேசினார். தந்தையின் ஆணை என்று திரும்ப திரும்ப சொல்கின்றீர்கள். தசரதர் என்பது ஒரு உடல். அது அழிந்து பஞ்ச பூதங்களுடன் கலந்து விட்டது. இல்லாத ஒரு உருவத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பது போலவே பேசுகின்றீர்கள். இது அறியாமை. கண் எதிரே இருக்கும் சுகங்களை அனுபவிக்காமல் விட்டு விட்டு மூடர்கள் பேசும் பேச்சு போல் இருக்கினது தாங்கள் பேசுவது. துயரத்தில் மூழ்கி கிடக்கும் பெண் ஒருத்தி கூந்தலை வாரி முடிக்காமல் உள்ளது போல் அயோத்தி இப்போது துக்கத்தில் கிடந்து உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பட்டாபிஷேகம் செய்து கொண்டு சுகங்களை அனுபவித்துக் கொண்டு மகிழ்ச்சியாய் இருந்து அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுங்கள் அதுவே இப்போதைய தர்மம். பரதன் சொல்வதை கேளுங்கள் என்றார்.

ராமருக்கு அவர் இவ்வாறு பேசியது அதிருப்தியை உண்டாக்கியது. சத்தியத்தை நீங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று எண்ணுகின்றேன். நீங்கள் நாத்திகம் பேசுவது போல் உள்ளது. இது சரியாக இல்லை. சத்தியத்தை விட உயர்ந்த பொருள் உலகத்தில் இல்லவே இல்லை என்றார் ராமர். வசிஷ்டர் ராமரை சமாதானம் செய்தார். உன்னை எப்படியாவது அயோத்திக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்றும் பரதனுடைய துக்கத்தை போக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் அவ்வாறு பேசினார். அவர் மீது கோபிக்க வேண்டாம் என்றார் வசிஷ்டர்.

வசிஷ்டர் ராமரிடம் பேசினார். ராஜ்யத்தின் அரச பதவியை மூத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உனது குல தர்மம். இன்னொரு பக்கம் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்ற தர்மம். இரண்டில் பெரிய தர்மம் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வேண்டியது என்ற உன்னுடைய செயல் சரியானதாக இருந்தாலும் உன்னுடைய தம்பி தன் மேல் விழுந்த பழி பாவத்திற்கு அஞ்சி உன்னை தஞ்சம் அடைந்திருக்கின்றான். தஞ்சம் அடைந்தவர்களை காப்பாற்றவேண்டும் கைவிட கூடாது என்பது உன்னுடைய விரதமாயிற்றே. நீ உன்னுடைய விரதத்தையும் காப்பாற்ற வேண்டும் ஆகையால் பரதனுக்காக உன்னுடைய தர்மத்திலிருந்து சிறிது இறங்கிவா என்றார்.

தாங்கள் எனக்கு கூறிய சொற்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் என்னால் செய்யக்கூடியதாக இருந்தாலும் இச்செயல் நல்ல வழி போல் தோற்றமளிக்கும். ஆனால் இது தவறான பாதையே ஆகும். அறநூல்களின் உபதேசங்களின் படி நடக்காதவன் தனது ஒழுக்கம் சிந்தனையில் இருந்து வேறுபட்டு பாவங்களை செய்தவன் ஆகின்றான். தந்தையும் தாயும் குழந்தைகளுக்கு செய்யும் சேவைக்கு கைமாறாக அக்குழந்தைகள் வளர்ந்தபின் காலம் முழுவதும் என்ன செய்தாலும் தீர்க்க முடியாது. அதிகபட்சம் அவர் கொடுத்த உத்தரவிற்காவது கட்டுப்பட்டு நடக்க வேண்டும். என் தந்தை எனக்கு காட்டிற்கு 14 வருடங்கள் செல்ல கட்டளையிட்டிருக்கிறார். நான் அவரின் கட்டளைக்கு சம்மதம் தெரிவித்து காட்டிற்கு வந்துவிட்டேன். அவரின் சொல்லை ஒரு போதும் பொய்யாக்க மாட்டேன். இருக்கும் தர்மத்தில் கடைபிடிக்க வேண்டிய பெரிய தர்மம் சத்தியத்தை காப்பாற்றுவதாகும். அவருக்கு கொடுத்த சத்தியத்தை நான் மீற மாட்டேன் என்றார் ராமர்.

ராமர் இவ்வாறு பேசியதும் பரதன் தன்னுடன் வந்தவர்களிடம் முறையிட்டான். எனது அண்ணன் என் மீது சிறிதும் இரக்கம் காட்ட மறுக்கிறார். ஆகையால் இங்கேயே நான் பட்டினி கிடந்து உயிர் துறக்கபோகின்றேன் என்று சொல்லி சுமந்தரனிடம் தர்பை புல்லை கொண்டு வர உத்தரவிட்டான் பரதன். சுமந்திரன் ராமரைப்பார்த்து தயங்கிய படியே நின்று கொண்டிருந்தான். பரதன் தானே சென்று தர்பை புல்லை எடுத்து வந்து ராமரின் முன்பாக போட்டு அமர்ந்தான் சுற்றி இருக்கும் மக்களிடம் பேச ஆரம்பித்தான். ராமர் வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் நான் இங்கேயே பட்டினி இருந்து உயிர் துறப்பேன் என்றான். மக்கள் பரதனிடம் ராமர் சத்தியம் தவறாதவர். தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தன் எண்ணத்தில் அசையாமல் நிற்கின்றார். அவரின் குணம் நமக்கு தெரியும். அவர் அயோத்திக்கு வரமாட்டார். அவரை வற்புறுத்துவதில் பயன் ஒன்றும் இல்லை என்றார்கள்.

ராமர் பரதனை பார்த்து சத்ரிய தர்மத்துக்கு விரோதமான செயலை செய்யாதே எழுத்திரு. அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே செல்வார்கள். நாம் சத்தியத்தை இத்தனை நாட்கள் மீறாமல் காத்தபடியால் மக்களும் சத்தியத்தை மீறாமல் காப்பாற்றுகிறார்கள். மக்களின் பேச்சையும் கேள். அயோத்திக்கு சென்று அரச பதவியை எற்று உனது கடமையை செய் என்றார்.

பரதன் ராமரிடம் பேசினான். தந்தையின் ஆணையை நிறைவேற்றியே தீர வேண்டுமானால் நான் தங்களுக்கு பதிலாக 14 வருடங்கள் காட்டில் இருக்கிறேன். எனக்கு பதிலாக நீங்கள் அயோத்தியில் அரச பதவியை ஏற்றுக்கொண்டு ஆட்சி செய்யுங்கள் என்றான். ராமர் இதனைக்கேட்டு சிரித்தார். பரதா இது என்ன பண்ட மாற்று வியாபாரமா ஒருவன் கடமையை ஆபத்துக்காலங்களில் அவனால் செய்ய முடியவில்லை என்றால் மற்றோருவன் செய்வதுண்டு. நான் எற்றுக்கொண்ட விரதத்திற்கு என் உடல் சக்தியில்லாமல் இருந்து என்னால் செய்ய முடியவில்லை என்றால் தம்பி முறையில் நீ செய்யலாம். ஆனால் நான் திடகாத்திரமான வலிமையோடு இருக்கின்றேன். நான் சக்தியற்றும் நீ சக்தியுள்ளவன் என்றும் உன்னால் சொல்ல முடியுமா என்றார். பரதன் தலை குனிந்து நின்றான். வசிஷ்டர் பரதனிடம் நீ ராமனுடைய அனுமதியை பெற்றுக்கொண்டு அரசாட்சி செய் இதனால் எந்த பழி பாவமும் உன்னை வந்து சேராது. சத்தியமும் தர்மமும் காக்கப்படும் என்றார்.

ராமர் பரதனை அனைத்து அயோத்தியை நான் உனக்கு தந்த ராஜ்யமாக எண்ணி அரசாட்சி செய் என்று தன் அன்பின் சக்தியெல்லாம் அவன் மீது செலுத்தி கட்டளையிட்டார் ராமர். பரதன் ராமரிடம் அண்ணா நீயே என் தந்தை என் தெய்வம் நீ சொல்கின்றபடி செய்கின்றேன். நீங்கள் 14 வருடம் முடிந்ததும் அயோத்திக்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி மொழி தாருங்கள். பின்னர் உங்கள் மிதியடியை தந்தீர்கள் என்றால் உங்கள் மிதியடியை சிம்மாசனத்தின் மீது வைத்து 14 வருடங்கள் கழித்து நீங்கள் வரும் வரை அரசாட்சி செய்வேன். எனது பணிகள் அனைத்தையும் உங்கள் மிதியடிக்கு சமர்ப்பிப்பேன் என்றான் பரதன். அப்படியே என்ற ராமர் தனது மிதியடியை பரதனிடம் கொடுத்தார். பரதன் ராமரின் மிதியடியை பெற்றுகொண்டு தன் தலையில் வைத்துக்கொண்டு அயோத்தி நகரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தாயார் மூவரும் பின் தொடர அனைவரும் அயோத்தி நோக்கி சென்றார்கள்.

அயோத்தி செல்லும் வழியில் பரத்வாஜ முனிவரிடம் நடந்தவற்றை சொல்லி அவரிடம் ஆசி பெற்றான் பரதன். பரதனுடைய குணத்தை பாராட்டிய பரத்வாஜ முனிவர் மழை நீர் பள்ளத்தை நோக்கி பாய்வதை போல உன் குலத்தின் நெறி உன்னை அடைந்திருக்கின்றது. உன்னை பெற்ற தந்தை பெரும் பாக்கியவான். அவர் இறக்கவில்லை உன் சொரூபத்தில் அமரராக இருக்கிறார் என்று சொல்லி வாழ்த்தினார்.

அயோத்தி நகரை அடைந்ததும் பரதன் வசிஷ்டர் மற்றும் மந்திரிகள் அனைவரையும் சபைக்கு வரவழைத்தான். அந்த ராஜ்யம் ராமருடையது. தற்காலிகமாக அவர் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். அண்ணனுக்கு பதிலாக அவரின் மிதியடியை அரசரின் சிம்மாசனத்தில் அமர்த்திருக்கிறேன். ராமர் 14 ஆண்டுகள் கழித்து திரும்பி வரும் வரையில் நான் அருகில் இருக்கும் நந்தி கிராமத்தில் இருந்து ஆட்சி செய்து அவர் எனக்கு இட்ட கட்டளையே நிறைவேற்ற போகின்றேன். தாங்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருந்து நல்வழிகாட்டுகள் என்றான்.

ராமர் வசித்த சித்திரக்கூடம் காட்டுப்பகுதியில் இருந்த ரிஷிகள் ராமரை சந்திக்க வந்தார்கள். இக்காட்டில் ராவணனுடைய இளைய தம்பி கரன் என்ற ராட்சசன் அடிக்கடி வந்து எங்களுக்கு தொல்லைகள் கொடுக்கின்றான். எனவே நாங்கள் வேறு இடத்திற்கு செல்ல முடிவு செய்திருக்கின்றோம். தங்களை ஒரு முறை பார்த்து விட்டு செல்லலாம் என்று வந்தோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாங்களும் எங்களுடன் வந்துவிடலாம் என்றார்கள். ராட்சசனுக்கு பயந்து இங்கிருந்து செல்ல வேண்டாம். இங்கே இருங்கள் வரும் ராட்சசர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ராமர் அவர்களுக்கு தைரியம் சொன்னார். ஆனால் ரிஷிகள் ராமர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். ரிஷிகள் அனைவரும் சென்றவுடன் ராமருக்கு தனது உறவினர்களின் ஞாபகம் வந்தது. பரதன் தனது மூன்று தாயாருடன் வந்ததும் அங்கே தங்கியிருந்து அவர்களிடம் பேசியதும் ராமரின் நினைவை விட்டு செல்லவில்லை. லட்சுமணனிடமும் சீதையிடமும் நமது நாட்டு மக்களும் உறவினர்களும் வந்து சென்றதும் எனக்கு அவர்களின் நினைவு அதிகமாக இருக்கிறது. வேறு இடத்திற்கு சென்றார் நலமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நாமும் இங்கிருந்து கிளம்பி வேறு இடத்திற்கு செல்லலாம் என்றார். லட்சுமணனும் சீதையும் ராமரின் சொல்லை ஆமோதித்து சித்ரகூட மலையில் இருந்து கிளம்ப ஆயத்தமானார்கள்.

சித்ரகூட மலையில் இருந்து கிளம்பியவர்கள் அத்திரி மகரிஷி ஆசிரமத்திற்கு சென்று அவருக்கு வணக்கம் செலுத்தினார்கள். ராமரை வரவேற்ற அத்திரி மகரிஷியும் அவரது மனைவி மகா தபஸ்வியுமான அனுசூசையும் அவர்களை வரவேற்று ஆசிர்வாதம் செய்து உபசரித்தார்கள். அனுசூயை சீதையிடம் காட்டிற்கு செல்ல முடிவெடுத்த கணவருடன் நீயும் வந்து கஷ்டங்களை அனுபவித்து எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருக்கின்றாய் என்று பாராட்டி தன் அன்புக்கு அடையாளமாக ஆபரணங்களும் ஆடைகளும் கொடுத்தாள். அத்திரி மகரிஷியின் வேண்டுகோளின் படி அன்று இரவு அவரின் குடிசையில் தங்கினார்கள்.

அத்திரி மகரிஷியிடம் நாங்கள் சித்ரகூட மலையில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல தீர்மானித்திருக்கின்றோம். நாங்கள் வசிக்க சிறந்த வேறு வனப்பகுதி சொல்லுங்கள் என்று நடந்தவற்றை சொன்னார் ராமர். அதற்கு அத்திரி மகரிஷி அறநெறியில் செல்லும் வனவாசிகளாக தபஸ்விகள் தண்டகாரண்யத்தில் வசிக்கிறார்கள். அந்த காட்டில் இருக்கும் தவசிகளுக்கு அரக்கர்கள் மிகவும் தொந்தரவு கொடுக்கின்றார்கள். பலவிதமான வடிவங்களை எடுத்து துன்புறுத்துகின்றார்கள். மனிதர்களை தின்னும் அரக்கர்களும் அக்காட்டில் இருக்கின்றார்கள். அங்கு சென்று நீங்கள் அந்த அரக்கர்களை அழிக்கவேண்டும். அக்காடு எளிதில் உள்புக முடியாதபடி அடர்ந்த காடாக இருக்கும். ததபஸ்விகள் பழம் பூ வேள்விக்கான பொருள்களை சேகரித்து செல்லும் வழி ஒன்று உள்ளது அதன்வழியாக உள்ளே செல்லலாம் என்று சொல்லி அக்காட்டிற்கு செல்லும் வழியையும் காட்டினார் அத்திரி மகரிஷி. உங்கள் பயணம் நல்லபடியாக அமைந்து செல்லும் காரியம் நிறைவேற வேண்டும் என்று ஆசிர்வதித்தார் அத்திரி மகரிஷி. ராமர் சீதை லட்சுமணனோடு மேக கூட்டத்தில் பிரவேசிக்கும் சூரியனைப்போல் அந்த காட்டில் புகுந்தார்.


அயோத்தியா காண்டம் முற்றியது.



Share



Was this helpful?