இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


ஆரணிய காண்டம்

Aranya Kandam is the third book of the Kamba Ramayanam. This section describes the 14 years of exile that Rama, Sita, and Lakshmana spend in the forest. It includes their encounters with sages, demons, and significant events that lead up to the abduction of Sita by Ravana, setting the stage for the events in the later books.


ஆரணிய காண்டம்
கடவுள் வாழ்த்து

#1
பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா
ஓதி ஓதி உணரும்-தொறும் உணர்ச்சி உதவும்
வேதம் வேதியர் விரிஞ்சன் முதலியோர் தெரிகிலா
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ

1 விராதன் வதை படலம்

#1
முத்து இருத்தி அ இருந்தனைய மொய் நகையொடும்
சித்திர குனி சிலை குமரர் சென்று அணுகினார்
அத்திரி பெயர் அரும் தவன் இருந்த அமைதி
பத்திர பழு மர பொழில் துவன்று பழுவம்
#2
திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன்
கை குறும் கண் மலை போல் குமரர் காமம் முதல் ஆம்
மு குறும்பு அற எறிந்த வினை வால் முனிவனை
புக்கு இறைஞ்சினர் அரும் தவன் உவந்து புகலும்
#3
குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ
அமரர் யாவரொடும் எ உலகும் வந்த அளவே
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன்
தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன்
#4
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும்
பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன்
துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும்
#5
எட்டொடு எட்டு மத மா கரி இரட்டி அரிமா
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின்
கிட்ட இட்டு இடை கிடந்தன செறிந்தது ஒரு கை
தொட்ட மு தலை அயில் தொகை மிடல் கழுவொடே
#6
செம் சுடர் செறி மயிர் சுருள் செறிந்த செனியன்
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில்
பஞ்சு பட்டது பட படியின் மேல் முடுகியே
#7
புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க மழை சூழ்
விண் துளங்கிட விலங்கல்கள் குலுங்க வெயிலும்
கண்டு உளம் கதிர் குறைந்திட நெடும் கடல் சுலாம்
மண் துளங்க வய அந்தகன் மனம் தளரவே
#8
புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உற
பக்கம் மின்னும் மணி மேரு சிகரம் குழைபட
செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து
உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையினொடே
#9
படையொடு ஆடவர்கள் பாய் புரவி மால் கயிறு தேர்
நடைய வாள் அரிகள் கோள் உழுவை நண்ணிய எலாம்
அடைய வாரி அரவால் முடி அனேக வித வன்
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே
#10
குன்று துன்றின என குமுறு கோப மதமா
ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தட கை உதவ
பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால்
மென்று தின்று விளியாது விரியும் பசியொடே
#11
பன்னகாதிபர் பணா மணி பறித்து அவை பகுத்து
என்ன வானவர் விமானம் இடையிட்டு அரவிடை
துன்னு கோளினொடு தாரகை தொடுத்த துழனி
சன்னவீரம் இடை மின்னு தட மார்பினொடுமே
#12
பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் பக்கம் எரிய
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து ஒளி குலாம்
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை எயிறு ஒண்
கிம்புரி பெரிய தோள்_வளையொடும் கிளரவே
#13
தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ
பொங்கு வெம் கொடுமை என்பது புழுங்கி எழ மா
மங்கு பாதகம் விடம் கனல் வயங்கு திமிர
கங்குல் பூசி வருகின்ற கலி காலம் எனவே
#14
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற
சுற்றி வாரண உரி தொகுதி நீவி தொடர
கொற்றம் மேவு திசை யானையின் மணி குலமுடை
கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு ஒளிரவே
#15
செம் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய்
வெம் கண் அங்கவலயங்களும் இலங்க விரவி
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவள
கங்கணங்களும் இலங்கிய கரம் பிறழவே
#16
முந்து வெள்ளிமலை பொன்னின் மலையொடு முரண
பந்து முந்து கழல் பாடுபட ஊடு படர்வோன்
வந்து மண்ணினிடையோன் எனினும் வானினிடையோர்
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன்
#17
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு புதிது என்று
ஓத ஒத்த உருவத்தன் உரும் ஒத்த குரலன்
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணித
பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான்
#18
சார வந்து அயல் விலங்கினன் மரங்கள் தறையில்
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா
வீர வெம் சிலையினோர் எதிர் விராதன் எனும் அ
கோர வெம் கண் உரும் ஏறு அன கொடும் தொழிலினான்
#19
நில்லும் நில்லும் என வந்து நிணம் உண்ட நெடு வெண்
பல்லும் வல் எயிறும் மின்னு பகு வாய் முழை திறந்து
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை
சொல்லும் எல்லையில் முகந்து உயர் விசும்பு தொடர
#20
காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ
தோளில் வெம் சிலை இடம் கொடு தொடர்ந்து சுடர் வாய்
வாளி தங்கிய வலம் கையவர் வஞ்சனை அடா
மீள்தி எங்கு அகல்தி என்பது விளம்ப அவனும்
#21
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலின்
சாதியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல
#22
வீரனும் சிறிது மென் முறுவல் வெண் நிலவு உக
போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும்
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறு சிந்தை தெரிய
பார வெம் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே
#23
இலை கொள் வேல் அடல் இராமன் எழு மேக உருவன்
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர்
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம்
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே
#24
வஞ்சக கொடிய பூசை நெடு வாயில் மறுகும்
பஞ்சர கிளி என கதறு பாவையை விடா
நெஞ்சு உளுக்கினன் என சிறிது நின்று நினையா
அஞ்சன கிரி அனான் எதிர் அரக்கன் அழலா
#25
பேய்முக பிணி அற பகைஞர் பெட்பின் உதிரம்
தோய் முகத்தது கனத்தது சுடர் குதிரையின்
வாய் முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும்
தீ முக திரி சிகை படை திரித்து எறியவே
#26
திசையும் வானவரும் நின்ற திசை மாவும் உலகும்
அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும்
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால்
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே
#27
இற்றது இன்றொடு இ அரக்கர் குலம் என்று பகலே
வெற்ற விண்ணினிடை நின்று நெடு மீன் விழுவ போல்
சுற்று அமைந்த சுடர் எஃகம் அது இரண்டு துணியா
அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே
#28
சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு சிறிதும்
போர் ஒடுங்கலன் மறம்-கொடு புழுங்கி நிருதன்
பார் ஒடுங்கு உறு கரம்-கொடு பரு பதம் எலாம்
வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து விடலும்
#29
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர
கட்டு அமைந்த கதிர் வாளி எதிரே கடவலால்
விட்ட விட்ட மலை மீள அவன் மெய்யில் விசையால்
பட்ட பட்ட இடம் எங்கும் உடல் ஊறுபடலும்
#30
ஓம் அ ராமரை ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி
தாம் அரா_அணை துறந்து தரை நின்றவரை ஓர்
மா மராமரம் இறுத்து அது-கொடு எற்ற வரலும்
#31
ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால்
வேறு வேறு துணி-செய்து அது விழுத்து விசையால்
மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும்
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும்
#32
மொய்த்த முள் தனது உடல்_தலை தொளைப்ப முடுகி
கைத்தவற்றின் நிமிர கடிது கன்றி விசிறும்
எய்த்த மெய் பெரிய கேழல் என எங்கும் விசையின்
தைத்த அ கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே
#33
எரியின் வார் கணை இராமன் விட எங்கும் நிலையாது
உருவி ஓட மறம் ஓடுதல் செயா உணர்வினான்
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி
சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும்
#34
மெய் வரத்தினன் மிடல்_படை விட படுகிலன்
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன்
கை துணித்தும் என முந்து கடுகி படர் புயத்து
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன்
#35
உண்டு எழுந்த உணர்வு அ-வயின் உணர்ந்து முடுகி
தண்டு எழுந்து_அனைய தோள்-கொடு சுமந்து தழுவி
பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகி
கொண்டு எழுந்தனன் விழுந்து இழி கொழும் குருதியான்
#36
முந்து வான் முகடு உற கடிது முட்டி முடுகி
சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன்-அரோ
வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர்
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே
#37
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய்
அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன் அறம்
சிவண அன்ன சிறைமுன் அவரொடு ஏகு செலவித்து
உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ
#38
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின்
போதலோடும் அலமந்தனள் புலர்ந்து பொடியில்
கோதையோடும் ஒசி கொம்பு என விழுந்தனள் குல
சீதை சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள்
#39
பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள்
மின்னை ஏய் இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள்
அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமை விட்டு
என்னையே நுகர்தி என்றனள் எழுந்து விழுவாள்
#40
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன்
தொழுது தேவி துயர் கூர விளையாடல் தொழிலோ
பழுது வாழி என ஊழி முதல்வன் பகர்வுறும்
#41
ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி இனிதின்
போகல் நன்று என நினைந்தனென் இவன் பொரு_இலோய்
சாகல் இன்று பொருள் அன்று என நகும் தகைமையோன்
வேக வெம் கழலின் உந்தலும் விராதன் விழவே
#42
தோள் இரண்டும் வடி வாள்-கொடு துணித்துவிசையால்
மீளி மொய்ம்பினர் குதித்தலும் வெகுண்டு புருவ
தேள் இரண்டும் நெரிய சினவு செம் கண் அரவ
கோள் இரண்டு சுடரும் தொடர்வதின் குறுகலும்
#43
புண்ணிடை பொழி உயிர் புனல் பொலிந்து வரவும்
விண்ணிடை படர்தல் விட்டு எழு விகற்பம் நினையா
எண் உடை குரிசில் எண்ணி இளையோய் இவனை இ
மண்ணிடை கடிது பொத்துதல் வழக்கு எனலுமே
#44
மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய்
நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர்
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று
உதவு சேவடியினால் அமலன் உந்துதலுமே
#45
பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன்
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான்
விட்டு விண்ணிடை விளங்கினன் விரிஞ்சன் என ஓர்
முட்டை தந்ததனில் வந்த முதல் முன்னவனினே
#46
பொறியின் ஒன்றி அயல் சென்று திரி புந்தி உணரா
நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும்
பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும்
அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான்
#47
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ
ஓதம் கொள் கடல் அன்றி ஒன்றினோடு ஒன்று ஒவ்வா
பூதங்கள்-தொறும் உறைந்தால் அவை உன்னை பொறுக்குமோ
#48
கடுத்த கராம் கதுவ நிமிர் கை எடுத்து மெய் கலங்கி
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள உறு துயரால்
அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய்
#49
புறம் காண அகம் காண பொது முகத்தின் அருள் நோக்கம்
இறங்காத தாமரை கண் எம்பெருமான் இயம்புதியால்
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி
கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே
#50
துறப்பதே தொழிலாக தோன்றினோர் தோன்றிய-கால்
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய்
பிறப்பரோ எவர்க்கும் யான் பெற்ற பதம் பெறல் அரிதே
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய்
#51
பனி நின்ற பெரும் பிறவி கடல் கடக்கும் புணை பற்றி
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும் நன்று என்ன
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின்
இனி நின்ற முதல் தேவர் என்-கொண்டு என் செய்வாரே
#52
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி
மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும்
நீ ஆதி முதல் தாதை நெறி முறையால் ஈன்று எடுத்த
தாய் ஆவார் யாவரே தருமத்தின் தனி மூர்த்தி
#53
நீ ஆதி பரம்பரமும் நின்னவே உலகங்கள்
ஆயாத சமயமும் நின் அடியவே அயல் இல்லை
தீயாரின் ஒளித்தியால் வெளி நின்றால் தீங்கு உண்டோ
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ
#54
தாய் தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை
ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய்
#55
பன்னல் ஆம் என்று உலகம் பலபலவும் நினையுமால்
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்-மாட்டு அரும் தெய்வம்
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ
#56
பொரு_அரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர்
இரு வினையும் உடையார் போல் அரும் தவம் நின்று இயற்றுவார்
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால
ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய்
#57
அரவு ஆகி சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால்
ஒரு வாயில் விழுங்குதியால் ஓர் அடியால் ஒளித்தியால்
திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள்
#58
மெய்யை தான் சிறிது உணர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா
#59
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ
பின்னம் ஆய் ஒன்று ஆதல் பிரிந்தேயோ பிரியாதோ
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய்
#60
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து அடியேன் அரும் தவத்தால் அணுகுதலால்
இ பிறவி கடல் கடந்தேன் இனி பிறவேன் இரு வினையும்
துப்பு உறழும் நீர்த்த சுடர் திருவடியால் துடைத்தாய் நீ
#61
இற்று எலாம் இயம்பினான்
நிற்றலோடும் நீ இவ்வாறு
உற்றவாறு உணர்த்து எனா
வெற்றியான் விளம்பினான்
#62
கள்ள மாய வாழ்வு எலாம்
விள்ள ஞானம் வீசு தாள்
வள்ளல் வாழி கேள் எனா
உள்ளவாறு உணர்த்தினான்
#63
இம்பர் உற்று இது எய்தினேன்
வெம்பு வில் கை வீர பேர்
தும்புரு தனதன் சூழ்
அம்பரத்து உளேன்-அரோ
#64
கரக்க வந்த காம நோய்
துரக்க வந்த தோமினால்
இரக்கம் இன்றி ஏவினான்
அரக்கன் மைந்தன் ஆயினேன்
#65
அன்ன சாபம் மேவி நான்
இன்னல் தீர்வது ஏது எனா
நின்ன தாளின் நீங்கும் என்று
உன்னும் எற்கு உணர்த்தினான்
#66
அன்று மூலம் ஆதியாய்
இன்று-காறும் ஏழையேன்
நன்று தீது நாடலேன்
தின்று தீய தேடினேன்
#67
தூண்ட நின்ற தொன்மைதான்
வேண்ட நின்ற வேத நூல்
பூண்ட நின் பொலம் கொள் தாள்
தீண்ட இன்று தேறினேன்
#68
தெறுத்து வந்த தீது எலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை ஊழியாய்
பொறுத்தி என்று போயினான்
#69
தேவு காதல் சீரியோன்
ஆவி போயினான் எனா
பூ உலாவு பூவையோடு
ஏ வலாரும் ஏகினார்
#70
கை கொள் கால வேலினார்
மெய் கொள் வேத மெய்யர் வாழ்
மொய் கொள் சோலை முன்னினார்
வைகலானும் வைகினான்

2 சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்

#1
குரவம் குவி கோங்கு அலர் கொம்பினொடும்
இரவு அங்கண் உறும் பொழுது எய்தினரால்
சரவங்கன் இருந்து தவம் கருதும்
மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம்
#2
செ வேலவர் சென்றனர் சேறல் உறும்
அ வேலையின் எய்தினன் ஆயிரமாம்
தவ்வாது இரவும் பொலி தாமரையின்
வெவ்வேறு அலர் கண்ணினன் விண்ணவர் கோன்
#3
அன்ன செலவின் படி மேல் அயல் சூழ்
பொன்னின் பொலி வார் அணி பூண் ஒளி மேல்
மின்னின் செறி கற்றை விரிந்தன போல்
பின்னி சுடரும் பிறழ் பேர் ஒளியான்
#4
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண்
கானில் படர் கண்_களி வண்டொடு தார்
மேனி திரு நாரதன் வீணை இசை
தேனில் படியும் செவி வண்டு உடையான்
#5
அனையின் துறை ஐம்பதொடு ஐம்பதும் நூல்
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா
முனைவன் முது தேவரில் மூவர் அலார்
புனையும் முடி துன்று பொலம் கழலான்
#6
செம் மா மலராள் நிகர் தேவியொடும்
மும் மா மத வெண் நிற முன் உயர் தாள்
வெம் மா மிசையான் விரி வெள்ளி விளங்கு
அம் மா மலை அண்ணலையே அனையான்
#7
தான் இன்று அயல் நின்று ஒளிர் தண் கதிரோன்
யான் நின்றது என் என்று ஒளி எஞ்சிட மா
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய்
மேல் நின்று என நின்று ஒளிர் வெண்குடையான்
#8
திசை கட்டிய மால் கரி தெட்ட மத
பசை கட்டின கிட்டின பற்பல போர்
விசை கட்டழி தானவர் விட்டு அகல் பேர்
இசை கட்டிய ஒத்து இவர் சாமரையான்
#9
தேரில் திரி செம் கதிர் தங்குவது ஒர்
ஊர் உற்றது என பொலி ஒண் முடியான்
போர் வித்தகன் நேமி பொறுத்தவன் மா
மார்வில் திருவின் பொலி மாலையினான்
#10
செற்றி கதிரின் பொலி செம் மணியின்
கற்றை சுடர் விட்டு எரி கஞ்சுகியான்
வெற்றி திருவின் குளிர் வெண் நகை போல்
சுற்றி கிளரும் சுடர் தோள்_வளையான்
#11
பல் ஆயிரம் மா மணி பாடமுறும்
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை-தாம்
எல்லாம் உடன் ஆய் எழலால் ஒரு தன்
வில்லால் ஒளிர் மேகம் என பொலிவான்
#12
மானா உலகம்-தனில் மன்றல் பொரும்
தேன் நாறு நலம் செறி தொங்கலினான்
மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம்
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான்
#13
வெல்லான் நசையால் விசையால் விடு நாள்
எல் வான் சுடர் மாலை இராவணன் மேல்
நெல் வாலும் அறாத நிறம் பிறழா
வல் வாய் மடியா வயிர படையான்
#14
நின்றான் எதிர் நின்ற நெடும் தவனும்
சென்றான் எதிர்கொண்டு சிறப்பு அமையா
என்தான் இவண் எய்தியவாறு எனலும்
பொன்றாத பொலம் கழலோன் புகலும்
#15
நின்னால் இயல் நீதி நெடும் தவம் இன்று
என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான்
அ நான்முகன் நின்னை அழைத்தனனால்
பொன் ஆர் சடை மாதவ போதுதியால்
#16
எந்தாய் உலகு யாவையும் எ உயிரும்
தந்தான் உறையும் நெறி தந்தனனால்
நந்தாத பெரும் தவ நாடு-அது நீ
வந்தாய் எனின் நின் எதிரே வருவான்
#17
எல்லா உலகிற்கும் உயர்ந்தமை யான்
சொல்லா-வகை நீ உணர் தொன்மையையால்
நல்லாளுடனே நட நீ எனலும்
அல்லேன் என வால் அறிவான் அறைவான்
#18
சொல் பொங்கு பெரும் புகழோடு தொழில் மாய்
சிற்பங்களின் வீவன சேர்குவெனோ
அற்பம் கருதேன் என் அரும் தவமோ
கற்பம் பல சென்றது காணுதியால்
#19
சொற்றும் தரம் அன்று இது சூழ் கழலாய்
பெற்றும் பெறுகில்லது ஓர் பெற்றியதே
மற்று என் பல நீ இவண் வந்ததனால்
முற்றும் பகல்-தானும் முடிந்துளதால்
#20
சிறு காலை இலா நிலையோ திரியா
குறுகா நெடுகா குணம் வேறுபடா
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும்
மறுகா நெறி எய்துவென் வான் உடையாய்
#21
என்று இன்ன விளம்பிடும் எல்லையின்-வாய்
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா
ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார்
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார்
#22
கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிர
கம்ப கரி நின்றது கண்டனமால்
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம்
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா
#23
மானே அனையாளொடு மைந்தனை அ
பூ நேர் பொழிலின் புறமே நிறுவா
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என
தானே அ அகன் பொழில் சாருதலும்
#24
கண்தாம் அவை ஆயிரமும் கதுவ
கண் தாமரை போல் கரு ஞாயிறு என
கண்டான் இமையோர் இறை காசினியின்
கண்தான் அரு நான்மறையின் கனியை
#25
காணா மனம் நொந்து கவன்றனனால்
ஆண் நாதனை அந்தணர் நாயகனை
நாள் நாளும் வணங்கிய நன் முடியால்
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான்
#26
துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரை செற்றும் சுருதி பெரும் கடலின் சொல் பொருள் கற்பித்தும்
திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள்
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான்
#27
தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே தொடக்கு அறுத்தோர் சுற்றமே பற்றி
நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள்
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம்
#28
மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இருள் இல்லை மேல் கீழும் இல்லை
மூவாதமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடையொடு ஈறு இல்லை முன்னொடு பின் இல்லை
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ
#29
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள்
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ
#30
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே
#31
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள்
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற
தொல்லை முதல் முனிவர் சூளுற்ற போதே தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ எந்தாய்
#32
இன்னன பல நினைந்து ஏத்தினன் இயம்பா
துன்னுதல் இடை உளது என நனி துணிவான்
தன் நிகர் முனிவனை தர விடை என்னா
பொன் ஒளிர் நெடு முடி புரந்தரன் போனான்
#33
போனவன் அக நிலை புலமையின் உணர்வான்
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான்
ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான்
தானுடை இட வகை தழுவினன் நுழைவான்
#34
ஏழையும் இளவலும் வருக என இனிதா
வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால்
ஊழியின் முதல் முனி உறையுளை அணுக
ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான்
#35
அ-வயின் அழகனும் வைகினன் அறிஞன்
செவ்விய அற உரை செவி-வயின் உதவ
நவ்வியின் விழியவளொடு நனி இருளை
கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின்
#36
விலகிடு நிழலினன் வெயில் விரி அயில் வாள்
இலகிடு சுடரவன் இசையன திசை தோய்
அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால்
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான்
#37
ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவ
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான்
நீ விடை தருக என நிறுவினன் நெறியால்
காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான்
#38
வரி சிலை உழவனும் மறை உழவனை நீ
புரி தொழில் எனை அது புகலுதி எனலும்
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான்
எரி புக நினைகுவென் அருள் என இறைவன்
#39
யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ
மான் வரு தனி உரி மார்பினை எனலும்
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன்
ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான்
#40
ஆயிர முகம் உள தவம் அயர்குவென் யான்
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன்
போயின இரு வினை புகலுறு விதியால்
மேயினை இனி ஒரு வினை இலை விறலோய்
#41
இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா
வந்தனன் மருவுதி மலர் அயன் உலகம்
தந்தனென் என அது சாரலென் உரவோய்
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன்
#42
ஆதலின் இது பெற அருள் என உரையா
காதலி அவளொடு கதழ் எரி முழுகி
போதலை மருவினன் ஒரு நெறி புகலா
வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன்
#43
தேவரும் முனிவரும் உறுவது தெரிவோர்
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர்
ஏவரும் அறிவினில் இரு வினை ஒருவி
போவது கருதும் அ அரு நெறி புக்கான்
#44
அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனை
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ

3 அகத்திய படலம்

#1
அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின்
இனியவர் இன்னலின் இரங்கும் நெஞ்சினர்
குனி வரு திண் சிலை குமரர் கொம்பொடும்
புனிதனது உறையுள்-நின்று அரிதின் போயினார்
#2
மலைகளும் மரங்களும் மணி கற்பாறையும்
அலை புனல் நதிகளும் அருவி சாரலும்
இலை செறி பழுவமும் இனிய சூழலும்
நிலை மிகு தடங்களும் இனிது நீங்கினார்
#3
பண்டைய அயன் தரு பாலகில்லரும்
முண்டரும் மோனரும் முதலினோர்கள் அ
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனை களிக்கும் சிந்தையார்
#4
கனல் வரு கடும் சினத்து அரக்கர் காய ஒர்
வினை பிறிது இன்மையின் வெதும்புகின்றனர்
அனல் வரு கானகத்து அமுது அளாவிய
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார்
#5
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார்
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர்
தாய் வர நோக்கிய கன்றின் தன்மையார்
#6
கரக்க அரும் கடும் தொழில் அரக்கர் காய்தலின்
பொரற்கு இடம் இன்மையின் புழுங்கி சோருநர்
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு
மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார்
#7
தெரிஞ்சுற நோக்கினர் செய்த செய் தவம்
அரும் சிறப்பு உதவ நல் அறிவு கைதர
விரிஞ்சுற பற்றிய பிறவி வெம் துயர்
பெரும் சிறை வீடு பெற்று-அனைய பெற்றியார்
#8
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய் தவம்
பூண்டுளர் ஆயினும் பொறையின் ஆற்றலால்
மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார்
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ
#9
எழுந்தனர் எய்தினர் இருண்ட மேகத்தின்
கொழுந்து என நின்ற அ குரிசல் வீரனை
பொழிந்து எழு காதலின் பொருந்தினார் அவன்
தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார்
#10
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி இ-வயின்
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம்
தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர்
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான்
#11
எய்திய முனிவரை இறைஞ்சி ஏத்து உவந்து
ஐயனும் இருந்தனன் அருள் என் என்றலும்
வையகம் காவலன் மதலை வந்தது ஓர்
வெய்ய வெம் கொடும் தொழில் விளைவு கேள் எனா
#12
இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார்
நெருக்கவும் யாம் படர் நெறி அலா நெறி
துரக்கவும் அரும் தவ துறையுள் நீங்கினேம்
#13
வல்லியம் பல திரி வனத்து மான் என
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம்
சொல்லிய அற நெறி துறையும் நீங்கினெம்
வில் இயல் மொய்ம்பினாய் வீடு காண்டுமோ
#14
மா தவத்து ஒழுகலெம் மறைகள் யாவையும்
ஓதலெம் ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம்
மூதெரி வளர்க்கிலெம் முறையின் நீங்கினோம்
ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம்
#15
இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின
சிந்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான்
எந்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார்
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால்
#16
உருளுடை நேமியால் உலகை ஓம்பிய
பொருளுடை மன்னவன் புதல்வ போக்கிலா
இருளுடை வைகலெம் இரவி தோன்றினாய்
அருளுடை வீர நின் அபயம் யாம் என்றார்
#17
புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின்
அகல்வரேனும் என் அம்பொடு வீழ்வரால்
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் எனா
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான்
#18
வேந்தன் வீயவும் யாய் துயர் மேவவும்
ஏந்தல் எம்பி வருந்தவும் என் நகர்
மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம்
போந்தது என்னுடை புண்ணியத்தால் என்றான்
#19
அறம் தவா நெறி அந்தணர் தன்மையை
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின்
இறந்துபோகினும் நன்று இது அல்லது
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ
#20
நிவந்த வேதியர் நீவிரும் தீயவர்
கவந்தபந்த களி_நடம் கண்டிட
அமைந்த வில்லும் அரும் கணை தூணியும்
சுமந்த தோளும் பொறை துயர் தீருமால்
#21
ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும்
யாவர்க்கு ஆயினும் எளியவர்க்கு ஆயினும்
சாவப்பெற்றவரே தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார்
#22
சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும்
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான்
#23
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட
இரைத்த காதலர் ஏகிய இன்னலர்
திரித்த கோலினர் தே மறை பாடினர்
நிருத்தம் ஆடினர் நின்று விளம்புவார்
#24
தோன்றல் நீ முனியின் புவன தொகை
மூன்று போல்வன முப்பது கோடி வந்து
ஏன்ற போதும் எதிர் அல என்றலின்
சான்றலோ எம் தவ பெரு ஞானமே
#25
அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம்
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் என
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர்
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான்
#26
ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவண்
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர்
சிந்தை எண்ணி அகத்தியன் சேர்க என
இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார்
#27
விடரகங்களும் வேய் செறி கானமும்
படரும் சில் நெறி பைப்பய நீங்கினார்
சுடரும் மேனி சுதீக்கணன் என்னும் அ
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார்
#28
அருக்கன் அன்ன முனிவனை அ வழி
செருக்கு இல் சிந்தையர் சேவடி தாழ்தலும்
இருக்க ஈண்டு என்று இனியன கூறினான்
மரு கொள் சோலையில் மைந்தரும் வைகினார்
#29
வைகும் வைகலின் மாதவன் மைந்தன்-பால்
செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீ
எய்த யான் செய்தது எ தவம் என்றனன்
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான்
#30
சொன்ன நான்முகன்-தன் வழி தோன்றினர்
முன்னையோருள் உயர் தவம் முற்றினார்
உன்னின் யார் உளர் உன் அருள் எய்திய
என்னின் யார் உளர் இல் பிறந்தார் என்றான்
#31
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர்
நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான்
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை
தவம் எலாம் கொள தக்கனையால் என்றான்
#32
மறைவலான் எதிர் வள்ளலும் கூறுவான்
இறைவ நின் அருள் எ தவத்திற்கு எளிது
அறைவது ஈண்டு ஒன்று அகத்தியன் காண்பது ஓர்
குறை கிடந்தது இனி என கூறினான்
#33
நல்லதே நினைந்தாய் அது நானும் முன்
சொல்லுவான் துணிகின்றது தோன்றல் நீ
செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின்
இல்லை நின்-வயின் எய்தகில்லாதவே
#34
அன்றியும் நின் வரவினை ஆதரித்து
இன்று-காறும் நின்று ஏமுறுமால் அவன்
சென்று சேருதி சேருதல் செவ்வியோய்
நன்று தேவர்க்கும் யாவர்க்கும் நன்று எனா
#35
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள்
மொழியும் மா தவன் மொய் மலர் தாள் தொழா
பிழியும் தேனின் பிறங்கு அருவி திரள்
பொழியும் சோலை விரைவினில் போயினார்
#36
ஆண்தகையர் அ-வயின் அடைந்தமை அறிந்தான்
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான்
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்
#37
பண்டு அவுணர் மூழ்கினர் படார்கள் என வானோர்
எண் தவ எமக்கு அருள்க என குறை_இரப்ப
கண்டு ஒரு கை வாரினன் முகந்து கடல் எல்லாம்
உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான்
#38
தூய கடல் நீர் அடிசில் உண்டு அது துரந்தான்
ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான்
மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான்
#39
யோகமுறு பேர் உயிர்கள்தாம் உலைவுறாமல்
ஏகு நெறி யாது என மிதித்து அடியின் ஏறி
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய்
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான்
#40
மூசு அரவு சூடு முதலோன் உரையின் மூவா
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள்
நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான்
#41
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதி கவியினும் மரபின் நாடி
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண்
தழல் புரை சுடர் கடவுள் தந்த தமிழ் தந்தான்
#42
விண்ணினில் நிலத்தினில் விகற்ப உலகில் பேர்
எண்ணினில் இருக்கினில் இருக்கும் என யாரும்
உள் நினை கருத்தினை உற பெறுவெனால் என்
கண்ணினில் என கொடு களிப்புறு மனத்தான்
#43
இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும்
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு
அரைத்தும் அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று
உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான்
#44
உய்ந்தனர் இமைப்பிலர் உயிர்த்தனர் தவத்தோர்
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனா
வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான்
வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான்
#45
ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து
ஊன் நுகர் அரக்கர் உருமை சுடு சினத்தின்
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான்
வான மழை வந்தது என முந்துறு மனத்தான்
#46
கண்டனன் இராமனை வர கருணை கூர
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான்
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான்
##47
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்
#48
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற
காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல் நீர்
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான்
#49
பொருந்த அமலன் பொழில்_அகத்து இனிது புக்கான்
விருந்து அவன் அமைத்த பின் விரும்பினன் விரும்பி
இரும் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து என்
அரும் தவம் முடித்தனை அருட்கு அரச என்றான்
#50
என்ற முனியை தொழுது இராமன் இமையோரும்
நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும்
உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன்
வென்றனென் அனைத்து உலகும் மேல் இனி என் என்றான்
#51
தண்டக வனத்து உறைதி என்று உரைதர கொண்டு
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன்
எண் தகு குணத்தினை என கொடு உயர் சென்னி
துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்
#52
ஈண்டு உறைதி ஐய இனி-வயின் இருந்தால்
வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய்
தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால்
மாண்டு உக மலைந்து எமர் மன துயர் துடைப்பாய்
#53
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும்
தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார்
ஆழி உழவன் புதல்வ ஐயம் இலை மெய்யே
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான்
#54
செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தி
தருக்கு அழிதர கடிது கொல்வது சமைந்தேன்
வருக்க மறையோய் அவர் வரும் திசையில் முந்துற்று
இருக்கை நலம் நிற்கு அருள் என் என்றனன் இராமன்
#55
விழுமியது சொற்றனை இ வில் இது இவண் மேல்_நாள்
முழுமுதல்வன் வைத்துளது மூ_உலகும் யானும்
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி
குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி
#56
இ புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்
முப்புரம் எரித்த தனி மொய் கணையும் நல்கா
#57
ஓங்கும் மரன் ஓங்கி மலை ஓங்கி மணல் ஓங்கி
பூம் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மி
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின்
பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச
#58
கன்னி இள வாழை கனி ஈவ கதிர் வாலின்
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட
#59
ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான்
மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான்
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின்
போக முனி சிந்தை தொடர கடிது போனான்

4 சடாயு காண் படலம்

#1
நடந்தனர் காவதம் பலவும் நல் நதி
கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன துவன்றின சூழல் யாவையும்
கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே
#2
உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சி சேர்
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம்
தெரிப்புறு செறி சுடர் சிகையினால் சிறை
விரித்து இருந்தனன் என விளங்குவான் தனை
#3
முந்து ஒரு கரு மலை முகட்டு முன்றிலின்
சந்திரன் ஒளியொடு தழுவ சார்த்திய
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய
மந்தரகிரி என வயங்குவான் தனை
#4
மால் நிற விசும்பு எழில் மறைய தன் மணி
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல்
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி
போல் நிறம் பொலிந்து என பொலிகின்றான்-தனை
#5
தூய்மையன் இரும் கலை துணிந்த கேள்வியன்
வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன்
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என
சேய்மையின் நோக்குறு சிறு கணான்-தனை
#6
வீட்டி வாள் அவுணரை விருந்து கூற்றினை
ஊட்டி வீழ் மிச்சில் தான் உண்டு நாள்-தொறும்
தீட்டி மேல் இந்திரன் சிறு கண் யானையின்
தோட்டி போல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான்-தனை
#7
கோள் இரு_நாலினோடு ஒன்று கூடின
ஆளுறு திகிரி போல் ஆரத்தான் தனை
நீளுறு மேருவின் நெற்றி முற்றிய
வாள் இரவியின் பொலி மௌலியான்-தனை
#8
சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை
சிற்பம் கொள் பகல் என கடிது சென்று தீர்
கற்பங்கள் எனை பல கண்டுளான்-தனை
#9
ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று அது
தாங்கலது இரு நிலம் தாழ்ந்து தாழ்வுற
வீங்கிய வலியினில் இருந்த வீரனை
ஆங்கு அவர் அணுகினர் அயிர்க்கும் சிந்தையார்
#10
இறுதியை தன்-வயின் இயற்ற எய்தினான்
அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின்
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ
செறி கழல் வீரரும் செயிர்த்து நோக்கினார்
#11
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை
அனையவன் தானும் கண்டு அயிர்த்து நோக்கினான்
வினை அறு நோன்பினர் அல்லர் வில்லினர்
புனை சடை முடியினர் புலவரோ எனா
#12
புரந்தரன் முதலிய புலவர் யாரையும்
நிரந்தரம் நோக்குவென் நேமியானும் அ
வரம் தரும் இறைவனும் மழுவலாளனும்
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால்
#13
காமன் என்பவனையும் கண்ணின் நோக்கினேன்
தாமரை செம் கண் இ தடம் கை வீரர்கள்
பூ மரு பொலம் கழல் பொடியினோடும் ஒப்பு
ஆம் என அறிகிலென் ஆர்-கொலாம் இவர்
#14
உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும்
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர்
மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ
சிலை வலி வீரரை தெரிகிலேன் எனா
#15
கரு மலை செம் மலை அனைய காட்சியர்
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம்
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
ஒருவனை இருவரும் ஒத்துளார்-அரோ
#16
என பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான்
சின படை வீரர் மேல் செல்லும் அன்பினான்
கன படை வரி சிலை காளை நீவிர் யார்
மனப்பட எனக்கு உரை-வழங்குவீர் என்றான்
#17
வினவிய காலையில் மெய்ம்மை அல்லது
புனை மலர் தாரவர் புகல்கிலாமையால்
கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான்
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் என்றார்
#18
உரைத்தலும் பொங்கிய உவகை வேலையன்
தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன்
விரை தடம் தாரினான் வேந்தர் வேந்தன்-தன்
வரை தடம் தோள் இணை வலியவோ என்றான்
#19
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன்
துறக்கம் உற்றான் என இராமன் சொல்லலும்
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான்
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான்
#20
தழுவினர் எடுத்தனர் தட கையால் முகம்
கழுவினர் இருவரும் கண்ணின் நீரினால்
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும்
அழிவுறு நெஞ்சினன் அரற்றினான்-அரோ
#21
பரவல்_அரும் கொடைக்கும் நின்-தன் பனி குடைக்கும் பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற
கரவல் அரும் கற்பகமும் உடுபதியும் கடல் இடமும் களித்து வாழ
புரவலர்-தம்_புரவலனே பொய் பகையே மெய்க்கு அணியே புகழின் வாழ்வே
இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே
#22
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த
நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின்
நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும்
விலங்கு ஆனேன் ஆதலினால் விலங்கினேன் இன்னும் உயிர் விட்டிலேனால்
#23
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள்
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல்
உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே
#24
எழுவது ஓர் இசை பெருக இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில்
விழுவதே நிற்க மட மெல்லியலார் தம்மை போல் நிலத்தின் மேல் வீழ்ந்து
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான்
#25
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி
இருள் மொய்ம்பு கெட துரந்த தயரதற்கு இன் உயிர் துணைவன் இமையோரோடும்
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன்
தருணம் கொள் பேர் ஒளியீர் சம்பாதி-பின் பிறந்த சடாயு என்றான்
#26
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும்
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார்
பூண்ட பெரும் புகழ் நிறுவி தம் பொருட்டால் பொன்_உலகம் புக்க தாதை
மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார்
#27
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் இ துயரம் மறவேன் என்றான்
#28
உய்விடத்து உதவற்கு உரியானும் தன்
மெய் விட கருதாது விண் ஏறினான்
இ இடத்தினில் எம்பெருமாஅன் எமை
கைவிடின் பினை யார் களைகண் உளார்
#29
தாயின் நீங்க_அரும் தந்தையின் தண் நகர்
வாயின் நீங்கி வனம் புகுந்து எய்திய
நோயின் நீங்கினெம் நுன்னின் என் எங்களை
நீயும் நீங்குதியோ நெறி நீங்கலாய்
#30
என்று சொல்ல இருந்து அழி நெஞ்சினன்
நின்ற வீரரை நோக்கி நினைந்தவன்
அன்று அது என்னின் அயோத்தியின் ஐயன்மீர்
சென்ற பின் அவன் சேர்குவென் யான் என்றான்
#31
வேந்தன் விண் அடைந்தான் எனின் வீரர் நீர்
ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண்
போந்தது என்னை புகுந்த என் புந்தி போய்
காந்துகின்றது கட்டுரையீர் என்றான்
#32
தேவர் தானவர் திண் திறல் நாகர் வேறு
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின்
பூ அராவு பொலம் கதிர் வேலினீர்
சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான்
#33
தாதை கூறலும் தம்பியை நோக்கினான்
சீதை கேள்வன் அவனும் தன் சிற்றவை
மாதரால் வந்த செய்கை வரம்பு இலா
ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான்
#34
உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை
தந்த சொல்லை தலைக்கொண்டு தாரணி
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா
#35
அல்லி தாமரை கண்ணனை அன்பு உற
புல்லி மோந்து பொழிந்த கண்ணீரினன்
வல்லை மைந்த அம் மன்னையும் என்னையும்
எல்லை_இல் புகழ் எய்துவித்தாய் என்றான்
#36
பின்னரும் அ பெரியவன் பெய் வளை
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல்
இன்னள் என்ன இயம்புதியால் என்றான்
#37
அல் இறுத்தன தாடகை ஆதியா
வில் இறுத்தது இடை என மேலை_நாள்
புல் இறுத்தது யாவும் புகன்று தன்
சொல் இறுத்தனன் தோன்றல்பின் தோன்றினான்
#38
கேட்டு உவந்தனன் கேழ் கிளர் மௌலியான்
தோட்டு அலங்கலினீர் துறந்தீர் வள
நாட்டின் நீவிரும் நன்_நுதல்-காறும் இ
காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான்
#39
இறைவ எண்ணி அகத்தியன் ஈந்துளது
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரை
துறையுள் உண்டு ஒரு குழல் அ சூழல் புக்கு
உறைதும் என்றனன் உள்ளத்து உறைகுவான்
#40
பெரிதும் நன்று அ பெரும் துறை வைகி நீர்
புரிதிர் மா தவம் போது-மின் யான் அது
தெரிவுறுத்துவென் என்று அவர் திண் சிறை
விரியும் நீழலில் செல்ல விண் சென்றனன்
#41
ஆய சூழல் அறிய உணர்த்திய
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான்
போய பின்னை பொரு சிலை வீரரும்
ஏய சோலை இனிது சென்று எய்தினார்
#42
வார் பொன் கொங்கை மருகியை மக்களை
ஏற்ப சிந்தனையிட்டு அ அரக்கர்-தம்
சீர்ப்பை சிக்கு_அற தேறினன் சேக்கையில்
பார்ப்பை பார்க்கும் பறவையின் பார்க்கின்றான்

5 பஞ்சவடி படலம்

#1
புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்று ஆகி
அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி
சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர்
கவி என கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்
#2
வண்டு உறை கமல செவ்வி வாள் முகம் பொலிய வாசம்
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின்
தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர்
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு
#3
எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி
பழுவ நாள் குவளை செவ்வி கண் பனி பரந்து சோர
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ
#4
நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள்
#5
ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான்
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கி புதியது ஓர் முறுவல் பூத்தாள்
#6
வில் இயல் தட கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க
எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள்
#7
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர்
பனி தரு தெய்வ பஞ்சவடி எனும் பருவ சோலை
தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட
இனிய பூம் சாலை எய்தி இருந்தனன் இராமன் இப்பால்

6 சூர்ப்பணகை படலம்

#1
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை
மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்
மேலை_நாள் உயிரொடும் பிறந்து தான் விளை
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள்
#2
செம் பராகம் பட செறிந்த கூந்தலாள்
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள்
உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர்
இம்பர்_ஆனவர்க்கும் ஓர் இறுதி ஈட்டுவாள்
#3
வெய்யது ஓர் காரணம் உண்மை மேயினாள்
வைகலும் தமியள் அ வனத்து வைகுவாள்
நொய்தின் இ உலகு எலாம் நுழையும் நோன்மையாள்
எய்தினள் இராகவன் இருந்த சூழல்-வாய்
#4
எண் தகும் இமையவர் அரக்கர் எங்கள் மேல்
விண்டனர் விலக்குதி என்ன மேலை_நாள்
அண்டசத்து அரும் துயில் துறந்த ஐயனை
கண்டனள் தன் கிளைக்கு இறுதி காட்டுவாள்
#5
சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்
இந்திரற்கு ஆயிரம் நயனம் ஈசற்கு
முந்திய மலர் கண் ஓர் மூன்று நான்கு தோள்
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள்
#6
கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால்
இற்றவன் அன்று-தொட்டு இன்று-காறும் தான்
நல் தவம் இயற்றி அ அனங்கன் நல் உரு
பெற்றனனாம் என பெயர்த்தும் எண்ணுவாள்
#7
தரங்களின் அமைந்து தாழ்ந்து அழகின் சார்பின
மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய
உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின்
கரங்களே இவன் மணி கரம் என்று உன்னுவாள்
#8
வில் மலை வல்லவன் வீர தோளொடும்
கல் மலை நிகர்க்கல கனிந்த நீலத்தின்
நல் மலை அல்லது நாம மேருவும்
பொன்_மலை ஆதலால் பொருவலாது என்பாள்
#9
தாள் உயர் தாமரை தளங்கள்-தம்மொடும்
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான்
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள்
#10
அதிகம் நின்று ஒளிரும் இ அழகன் வாள் முகம்
பொதி அவிழ் தாமரை பூவை ஒப்பதோ
கதிர் மதி ஆம் எனின் கலைகள் தேயும் அம்
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால்
#11
எவன் செய இனிய இ அழகை எய்தினோன்
அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான்
நவம் செயத்தகைய இ நளின நாட்டத்தான்
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள்
#12
உடுத்த நீர் ஆடையள் உருவ செவ்வியள்
பிடி தரு நடையினள் பெண்மை நன்று இவன்
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர்
பொடித்தன போலும் இ புல் என்று உன்னுவாள்
#13
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை
காணலனே-கொலாம் கதிரின் நாயகன்
சேண் எலாம் புல் ஒளி செலுத்தி சிந்தையில்
நாணலம் மீமிசை நடக்கின்றான் என்றாள்
#14
குப்புறற்கு அரிய மா குன்றை வென்று உயர்
இ பெரும் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர்
ஒப்பு என உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ
துப்பினில் துப்பு உடை யாதை சொல்லுகேன்
#15
நல் கலை மதி உற வயங்கு நம்பி-தன்
எல் கலை திரு அரை எய்தி ஏமுற
வற்கலை நோற்றன மாசு இலா மணி
பொன்_கலை நோற்றில போலுமால் என்றாள்
#16
தொடை அமை நெடு மழை தொங்கல் ஆம் என
கடை குழன்று இடை நெறி கரிய குஞ்சியை
சடை என புனைந்திலன் என்னின் தையலார்
உடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள்
#17
நாறிய நகை அணி நல்ல புல்லினால்
ஏறிய செவ்வியின் இயற்றுமோ எனா
மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான்
வேறு ஒரு மணியினால் விளங்குமோ என்பாள்
#18
கரந்திலன் இலக்கணம் எடுத்து காட்டிய
பரம் தரு நான்முகன் பழிப்பு உற்றான்-அரோ
இரந்து இவன் இணை அடி பொடியும் ஏற்கலா
புரந்தான் உலகு எலாம் புரக்கின்றான் என்றாள்
#19
நீத்தமும் வானமும் குறுக நெஞ்சிடை
கோத்த அன்பு உணர்விடை குளிப்ப மீக்கொள
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
காத்தவன் புகழ் என தேயும் கற்பினாள்
#20
வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
போன்றனள் புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள்
தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள்
#21
நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்று எனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவென் போக்கு இனி அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்
#22
எயிறு உடை அரக்கி எ உயிரும் இட்டது ஓர்
வயிறு உடையாள் என மறுக்கும் ஆதலால்
குயில் தொடர் குதலை ஓர் கொவ்வை வாய் இள
மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று எனா
#23
பங்கய செல்வியை மனத்து பாவியா
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள்
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள் செவ்வியள்
பொங்கு ஒளி விசும்பினில் பொலிய தோன்றினாள்
#24
பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்
#25
பொன் ஒழுகு பூவில் உறை பூவை எழில் பூவை
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள்
கன்னி எழில் கொண்டது கலை தட மணி தேர்
மின் இழிவ தன்மை இது விண் இழிவது என்ன
#26
கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாச
தேனின் மொழி உற்று இனிய செவ்வி நனி பெற்று ஓர்
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள்
#27
நூபுரமும் மேகலையும் நூலும் அறல் ஓதி
பூ முரலும் வண்டும் இவை பூசலிடும் ஓசை
தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா
கோ மகனும் அ திசை குறித்து எதிர் விழித்தான்
#28
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து
எண் அருளி ஏழைமை துடைத்து எழு மெய்ஞ்ஞான
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான்
#29
பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில்
பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா
ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான்
#30
அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள்
செவ்வி முகம் முன்னி அடி செங்கையின் இறைஞ்சா
வெவ்விய நெடும் கண்_அயில் வீசி அயல் பாரா
நவ்வியின் ஒதுங்கி இறை நாணி அயல் நின்றாள்
#31
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய்
போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ
ஏது பதி ஏது பெயர் யாவர் உறவு என்றான்
வேத முதல் பேதை அவள் தன் நிலை விரிப்பாள்
#32
பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி முப்புரங்கள் செற்ற
சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின்
மா எலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும்
காவலோன் பின்னை காமவல்லி ஆம் கன்னி என்றாள்
#33
அ உரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண்
வெவ் உரு அமைந்தோன் தங்கை என்றது மெய்ம்மை ஆயின்
இ உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான்
#34
தூயவன் பணியா-முன்னம் சொல்லுவாள் சோர்வு இலாள் அம்
மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன்
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன்
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள்
#35
இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின் உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின்
சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை துணையும் இன்றி
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான்
#36
வீரன் அஃது உரைத்தலோடும் மெய்_இலாள் விமல யான் அ
சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும்
ஆரிய முனிவர்-பாலும் அடைந்தனென் இறைவ ஈண்டு ஓர்
காரியம் உண்மை நின்னை காணிய வந்தேன் என்றாள்
#37
அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கு ஒவ்வா
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால்
என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான்
#38
தாம் உறு காம தன்மை தாங்களே உரைப்பது என்பது
ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன்
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள்
#39
சேண் உற நீண்டு மீண்டு செ அரி சிதறி வெவ்வேறு
ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண்
பூண் இயல் கொங்கை அன்னாள் அம் மொழி புகறலோடும்
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றாள்
#40
பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள்
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண்
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும்
ஊசலின் உலாவுகின்றாள் மீட்டும் ஓர் உரையை சொல்வாள்
#41
எழுத_அரு மேனியாய் ஈண்டு எய்தியது அறிந்திலாதேன்
முழுது உணர் முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றி
பழுது_அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏக
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் என்றாள்
#42
நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்
சுந்தரி மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்
அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான்
#43
ஆரண மறையோன் எந்தை அருந்ததி கற்பின் எம் மோய்
தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல்
போர் அணி பொலம் கொள் வேலாய் பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள்
#44
அருத்தியள் அனைய கூற அகத்து உறு நகையின் வெள்ளை
குருத்து எழுகின்ற நீல கொண்டல் உண்டாட்டம் கொண்டான்
வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான்
#45
பராவ_அரும் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது
இராவணன் தங்கை என்றது ஏழைமை பாலது என்னா
அரா_அணை அமலன் அன்னாய் அறிவித்தேன் முன்னம் தேவர்
பராவினின் நீங்கினேன் அ பழிபடு பிறவி என்றாள்
#46
ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன் ஊங்கில்
ஒருவனோ குபேரன் நின்னொடு உடன்பிறந்தவர்கள் அன்னார்
தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார
வெருவுவென் நங்கை என்றான் மீட்டு அவள் இனைய சொன்னாள்
#47
காந்தர்ப்பம் என்பது உண்டால் காதலின் கலந்த சிந்தை
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம்
ஏந்தல் பொன் தோளினாய் ஈது இயைந்த பின் எனக்கு மூத்த
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள்
#48
முனிவரோடு உடையர் முன்னே முதிர் பகை முறைமை நோக்கார்
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த
வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள்
#49
நிருதர்-தம் அருளும் பெற்றேன் நின் நலம் பெற்றேன் நின்னோடு
ஒருவ அரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான்
#50
விண்ணிடை இம்பர் நாகர் விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம்
கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும்
பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர்
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள்
#51
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும்
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியை கண்ணின் கண்டாள்
#52
மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான்
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை
அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள்
#53
பண்பு உற நெடிது நோக்கி படைக்குநர் சிறுமை அல்லால்
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள்
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள்
#54
பொரு திறத்தானை நோக்கி பூவையை நோக்கி நின்றாள்
கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின்
இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் என்றாள்
#55
பொன்னை போல் ஒளிரும் மேனி பூவை பூ வண்ணத்தான் இ
மின்னை போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன்
தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும்
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா
#56
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம்
தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால்
உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென் எய்திடாமல் விலக்குதி வீர என்றாள்
#57
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார்
தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது அம்மா
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா
வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட வீரன் நக்கான்
#58
ஆயிடை அமுதின் வந்த அருந்ததி கற்பின் அம் சொல்
வேய் இடை தோளினாளும் வீரனை சேரும் வேலை
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும்
#59
அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி
பஞ்சின் மெல் அடிகள் நோவ பதைத்தனள் பருவ கால
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன
குஞ்சரம் அனைய வீரன் குவவு தோள் தழுவி கொண்டாள்
#60
வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும்
விளைவன தீமையே ஆம் என்பதை உணர்ந்து வீரன்
உளைவன இயற்றல் ஒல்லை உன் நிலை உணருமாகில்
இளையவன் முனியும் நங்கை ஏகுதி விரைவில் என்றான்
#61
பொற்பு உடை அரக்கி பூவில் புனலினில் பொருப்பில் வாழும்
அற்புடை உள்ளத்தாரும் அனங்கனும் அமரர் மற்றும்
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே
நன் பொறை நெஞ்சில் இல்லா கள்வியை நச்சி என்றாள்
#62
தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் தான் இ
கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் என்னா
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் மிதிலை வேந்தன்
பொன்னொடும் புனிதன் போய் அ பூம் பொழில் சாலை புக்கான்
#63
புக்க பின் போனது என்னும் உணர்வினள் பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள்
தக்கிலன் மனத்துள் யாதும் தழுவிலன் சலமும் கொண்டான்
மை கரும் குழலினாள்-மாட்டு அன்பினில் வலியன் என்பாள்
#64
நின்றிலள் அவனை சேரும் நெறியினை நினைந்து போனாள்
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா
பொன் திணி சரள சோலை பளிக்கரை பொதும்பர் புக்காள்
சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே
#65
அழிந்த சிந்தையளாய் அயர்வாள்-வயின்
மொழிந்த காம கடும் கனல் மூண்டதால்
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே
#66
தாடகை கொடியாள் தட மார்பிடை
ஆடவர்க்கு அரசன் அயில் அம்பு போல்
பாடவ தொழில் மன்மதன் பாய் கணை
ஓட உட்கி உயிர் உளைந்தாள்-அரோ
#67
கலை உவா மதியே கறி ஆக வன்
சிலையின் மாரனை தின்னும் நினைப்பினாள்
மலையமாருத மா நெடும் கால வேல்
உலைய மார்பிடை ஊன்றிட ஓயுமால்
#68
அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையால்
மலை குலங்களின் தூர்க்கும் மனத்தினாள்
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா
மலைக்க நீங்கும் மிடுக்கு இலள் மாந்துவாள்
#69
பூ எலாம் பொடி ஆக இ பூமியுள்
கா எலாம் ஒடிப்பென் என காந்துவாள்
சேவலோடு உறை செம் தலை அன்றிலின்
நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள்
#70
அணைவு இல் திங்களை நுங்க அராவினை
கொணர்வென் ஓடி என கொதித்து உன்னுவாள்
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம்
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குமால்
#71
கைகளால் தன் கதிர் இளம் கொங்கை மேல்
ஐய தண் பனி அள்ளினள் அப்பினாள்
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால்
#72
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள்
குளிக்கும் நீரும் கொதித்து எழ கூசுமால்
விளிக்கும் வேலையை வெம் கண் அனங்கனை
ஒளிக்கல் ஆம் இடம் யாது என உன்னுமால்
#73
வந்து கார் மழை தோன்றினும் மா மணி
கந்து காணினும் கைத்தலம் கூப்புமால்
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும்
வெந்த காந்த வெதுப்பு உறு மேனியாள்
#74
வாம மா மதியும் பனி வாடையும்
காமனும் தனை கண்டு உணரா-வகை
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ்
சேம மால் வரையின் முழை சேருமால்
#75
அன்ன காலை அழல் மிகு தென்றலும்
முன்னின் மும் மடி ஆய் முலை வெந்து உக
இன்னவா செய்வது என்று அறியாது இளம்
பொன்னின் வார் தளிரில் புரண்டாள்-அரோ
#76
வீரன் மேனி வெளிப்பட வெய்யவள்
கார் கொள் மேனியை கண்டனளாம் என
சோரும் வெள்கும் துணுக்கெனும் அ உரு
பேரும்-கால் வெம் பிணியிடை பேருமால்
#77
ஆக கொங்கையின் ஐயன் என்று அஞ்சன
மேகத்தை தழுவும் அவை வெந்தன
போக கண்டு புலம்பும் அ புன்மையாள்
மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாம்-கொலோ
#78
ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் அ
ஏழை ஆவி இறந்திலள் என்பரால்
ஆழியானை அடைந்தனள் பின்னையும்
வாழலாம் எனும் ஆசை மருந்தினே
#79
வஞ்சனை கொடு மாயை வளர்க்கும் என்
நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும்
அஞ்சன கிரியே அருளாய் எனும்
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள்
#80
காவியோ கயலோ எனும் கண் இணை
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்
பாவியேனையும் பார்க்கும்-கொலோ எனும்
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள்
#81
ஆன்ற காதல் அஃது உற எய்துழி
மூன்று உலோகமும் மூடும் அரக்கர் ஆம்
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன்
தோன்றினான் என வெய்யவன் தோன்றினான்
#82
விடியல் காண்டலின் ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள்
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான்
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல்
வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா
#83
வந்து நோக்கினள் வள்ளல் போய் ஒரு மணி தடத்தில்
சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள் தம்பி
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட
கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள்
#84
தனி இருந்தனள் சமைந்தது என் சிந்தனை தாழ்வு உற்று
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா
துனி இருந்த வல் மனத்தினள் தோகையை தொடர்ந்தாள்
கனி இரும் பொழில் காத்து அயல் இருந்தவன் கண்டான்
#85
நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான்
வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த
சில் வல் ஓதியை செம் கையில் திருகுற பற்றி
ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளி கிளர் சுற்றுவாள் உருவி
#86
ஊக்கி தாங்கி விண் படர்வென் என்று உருத்து எழுவாளை
நூக்கி நொய்தினில் வெய்து இழையேல் என நுவலா
மூக்கும் காதும் வெம் முரண் முலை கண்களும் முறையால்
போக்கி போக்கிய சினத்தொடும் புரி குழல் விட்டான்
#87
அ கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை
திக்கு அனைத்தினும் சென்றது தேவர்-தம் செவியும்
புக்கது உற்றது புகல்வது என் மூக்கு எனும் புழையூடு
உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம்
#88
கொலை துமித்து உயர் கொடும் கதிர் வாளின் அ கொடியாள்
முலை துமித்து உயர் மூக்கினை நீக்கிய மூத்தம்
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை
#89
அதிர மா நிலத்து அடி பதைத்து அரற்றிய அரக்கி
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் வெம் கத போர்
எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து ஆண்டு
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள்
#90
உயரும் விண்ணிடை மண்ணிடை விழும் கிடந்து உழைக்கும்
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும்
பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும்
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலா தொல் குடி பிறந்தாள்
#91
ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும்
எற்றும் கையினை நிலத்தினில் இணை தடம் கொங்கை
பற்றும் பார்க்கும் மெய் வெயர்க்கும் தன் பரு வலி காலால்
சுற்றும் ஓடும் போய் சோரி நீர் சொரிதர சோரும்
#92
ஊற்றும் மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதி
சேற்று வெள்ளத்துள் திரிபவள் தேவரும் இரிய
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி
ஆற்றுகிற்கிலள் பற்பல பன்னி நின்று அழைத்தாள்
#93
நிலை எடுத்து நெடு நிலத்து நீ இருக்க தாபதர்கள்
சிலை எடுத்து திரியும் இது சிறிது அன்றோ தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமை சமைப்பதே தழல் எடுத்தான்
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ
#94
புலிதானே புறத்து ஆக குட்டி கோட்படாது என்ன
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும்
சலியாத மூவர்க்கும் தானவர்க்கும் வானவர்க்கும்
வலியானே யான் பட்ட வலி காண வாராயோ
#95
ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர் தானை இந்திரனை பொருது அவனை போர் தொலைத்து
வேர்த்தானை உயிர் கொண்டு மீண்டானை வெரிந் பண்டு
பார்த்தானே யான் பட்ட பழி வந்து பாராயோ
#96
காற்றினையும் புனலினையும் கனலினையும் கடும் கால
கூற்றினையும் விண்ணினையும் கோளினையும் பணி கொண்டற்கு
ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய்
#97
உரு பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும் உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரை சீறுதியோ
நெருப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மத திசை யானை
மருப்பு ஒடிய பொருப்பு இடிய தோள் நிமிர்த்த வலியோனே
#98
தேன் உடைய நறும் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல்
தான் உடைய இராவணற்கும் தம்பியர்க்கும் தவிர்ந்ததோ
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய
மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி அம்மா
#99
மரன் ஏயும் நெடும் கானில் மறைந்து உறையும் தாபதர்கள்
உரனையோ அடல் அரக்கர் ஓய்வேயோ உற்று எதிர்ந்தார்
அரனேயோ அரியேயோ அயனேயோ எனும் ஆற்றல்
கரனேயோ யான் பட்ட கையறவு காணாயோ
#100
இந்திரனும் மலர் அயனும் இமையவரும் பணி கேட்ப
சுந்தரி பல்லாண்டு இசைப்ப உலகு ஏழும் தொழுது ஏத்த
சந்திரன் போல் தனி குடை கீழ் நீ இருக்கும் சவை நடுவே
வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ
#101
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோ
கரன் இருந்த வனம் அன்றோ இவை படவும் கடவேனோ
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ
#102
நசையாலே மூக்கு இழந்து நாணம் இலா நான் பட்ட
வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ
திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ இராவணவோ
#103
கானம்-அதினிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய
மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ
தானவரை கரு_அறுத்து சதமகனை தளை இட்டு
வானவரை பணி கொண்ட மருகாவோ மருகாவோ
#104
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால்
திருகாத சினம் திருகி திசை அனைத்தும் செல நூறி
இரு காலில் புரந்தரனை இரும் தளையில் இடுவித்த
மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ
#105
கல் ஈரும் படை தட கை அடல் கர தூடணர் முதலா
அல் ஈரும் சுடர் மணி பூண் அரக்கர் குலத்து அவதரித்தீர்
கொல் ஈரும் படை கும்பகருணனை போல் குவலயத்துள்
எல்லீரும் உறங்குதிரோ யான் அழைத்தல் கேளீரோ
#106
என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி
பொன் துன்னும் படியகத்து புரள்கின்ற பொழுதகத்து
நின்று அந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான்
#107
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர்
செம் தாரை குருதியொடு செழு நிலத்தை சேறு ஆக்கி
அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால்
எந்தாய் யான் பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள்
#108
விரிந்து ஆய கூந்தலாள் வெய்ய வினை யாதானும்
புரிந்தாள் என்பது தனது பொரு அரிய திருமனத்தால்
தெரிந்தான் இன்று இளையானே இவளை நெடும் செவியொடு மூக்கு
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான்
#109
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான்
வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக
எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள்
#110
தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழிய தவம் இயற்ற
யாம் இருந்த நெடும் சூழற்கு என் செய வந்தீர் எனலும்
வேம் இருந்தில் என கனலும் வெம் காம வெம் பிணிக்கு
மா மருந்தே நெருநலினும் வந்திலெனோ யான் என்றாள்
#111
செம் கயல் போல் கரு நெடும் கண் தே மரு தாமரை உறையும்
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன
கொங்கைகளும் குழை காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால்
அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள்
#112
மூரல் முறுவலன் இளைய மொய்ம்பினோன் முகம் நோக்கி
வீர விரைந்தனை இவள் தன் விடு காதும் கொடி மூக்கும்
ஈர நினைந்து இவள் இழைத்த பிழை என் என்று இறை வினவ
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கி சொல்லுவான்
#113
தேட்டம்தான் வாள் எயிற்றில் தின்னவோ தீவினையோர்
கூட்டம்தான் புறத்து உளதோ குறித்த பொருள் உணர்ந்திலனால்
நாட்டம்தான் எரி உமிழ நல்லாள் மேல் பொல்லாதாள்
ஓட்டந்தாள் அரிதின் இவள் உயிர் கவர்ந்தான் என வந்தாள்
#114
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பா முன் இகல் அரக்கி
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட
மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள்
#115
பேடி போர் வல் அரக்கர் பெரும் குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடி போந்தனம் இன்று தீ மாற்றம் சில விளம்பி
வீடி-போகாதே இ மெய் வனத்தை விட்டு அகல
ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள்
#116
நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர்
கரை இறந்தோர் இராவணற்கு கரம் இறுக்கும் குடி என்றால்
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும்
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள்
#117
ஆக்க அரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை
மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் இனி உமக்கு
போக்கு அரிது இ அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே
#118
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம்
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள்
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின்
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள்
#119
காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார்
ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ
தேவர்க்கும் வலியான் தன் திரு தங்கையாள் இவள் ஈண்டு
ஏவர்க்கும் வலியாள் என்று இளையானுக்கு இயம்பீரோ
#120
மா போரில் புறம் காப்பேன் வான் சுமந்து செல வல்லேன்
தூ போல கனி பலவும் சுவை உடைய தர வல்லேன்
காப்போரை கைத்து என் நீர் கருதியது தருவேன் இ
பூ போலும் மெல்லியலால் பொருள் என்னோ புகல்வீரே
#121
குலத்தாலும் நலத்தாலும் குறித்தனவே கொணர் தக்க
வலத்தாலும் மதியாலும் வடிவாலும் மடத்தாலும்
நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல்
சொலத்தான் இங்கு உரியாரை சொல்லீரோ வல்லீரேல்
#122
போக்கினீர் என் நாசி போய்த்து என் நீர் பொறுக்குவிரேல்
ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகு அமைவென் அருள்கூறும்
பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ
மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ
#123
விண்டாரே அல்லாரோ வேண்டாதார் மனம் வேண்டின்
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ
கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ
கொண்டாரே கொண்டாடும் உரு பெற்றால் கொள்ளீரோ
#124
சிவனும் மலர் திசைமுகனும் திருமாலும் தெறு குலிசத்து
அவனும் அடுத்து ஒன்றாகி நின்று அன்ன உருவோனே
புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும்
அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால்
#125
பொன் உருவ பொரு கழலீர் புழை காண மூக்கு அரிவான் பொருள் உண்டோ
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால்
பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ
#126
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின்
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள்
#127
நாடு அறியா துயர் இழைத்த நவை அரக்கி நின் அன்னை-தன்னை நல்கும்
தாடகையை உயிர் கவர்ந்த சரம் இருந்தது அன்றியும் நான் தவம் மேற்கொண்டு
தோள் தகைய துறு மலர் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றி நின்றேன்
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும்
#128
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு
கரை அளித்தற்கு அரிய படை கடல் அரக்கர் குலம் தொலைத்து கண்டாய் பண்டை
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான்
#129
நெறி தாரை செல்லாத நிருதர் எதிர் நில்லாதே நெடிய தேவர்
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின்
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று
குறித்தாரை யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் என்றான்
#130
கொல்லலாம் மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம் கொற்ற முற்ற
வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின்
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும்
#131
காம்பு உறழும் தோளாளை கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர்
ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செரு செய்வான் அமைந்தீர் ஆயின்
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ
#132
உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும்
களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர்
இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே
#133
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல்
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி
ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும்
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய்
#134
என்றவள் மேல் இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக்கணியா இவளை ஈண்டு
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா
#135
ஏற்ற நெடும் கொடி மூக்கும் இரு காதும் முலை இரண்டும் இழந்தும் வாழ
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ
காற்றினிலும் கனலினிலும் கடியானை கொடியானை கரனை உங்கள்
கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம்கொண்டு போனாள்

7 திரிசிரா வதை படலம்

#1
இருந்த மா கரன் தாள் இணையின் மிசை
சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பு என
தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர் மேல்
விரிந்த மேகம் என விழுந்தாள்-அரோ
#2
அழுங்கு நாள் இது என்று அந்தகன் ஆணையால்
தழங்கு பேரி என தனித்து ஏங்குவாள்
முழங்கு மேகம் இடித்த வெம் தீயினால்
புழுங்கு நாகம் என புரண்டாள்-அரோ
#3
வாக்கிற்கு ஒக்க புகை முத்து வாயினான்
நோக்கி கூசலர் நுன்னை இ தன்மையை
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள்
மூக்கின் சோரி முழீஇ கொண்ட கண்ணினான்
#4
இருவர் மானிடர் தாபதர் ஏந்திய
வரி வில் வாள் கையர் மன்மதன் மேனியர்
தரும நீரர் தயரதன் காதலர்
செருவில் நேரும் நிருதரை தேடுவார்
#5
ஒன்றும் நோக்கலர் உன் வலி ஓங்கு அறன்
நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார்
வென்றி வேல் கை நிருதரை வேர் அற
கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார்
#6
மண்ணில் நோக்க அரு வானினில் மற்றினில்
எண்ணி நோக்குறின் யாவரும் நேர்கிலா
பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை என்
கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள்
#7
கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு அவர்
துண்டம் ஆக்கினர் மூக்கு என சொல்லினாள்
#8
கேட்டனன் உரை கண்டனன் கண்ணினால்
தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை
காட்டு எனா எழுந்தான் எதிர் கண்டவர்
நாட்டம் தீய உலகை நடுக்குவான்
#9
எழுந்து நின்று உலகு ஏழும் எரிந்து உக
பொழிந்த கோப கனல் உக பொங்குவான்
கழிந்து போயினர் மானிடர் என்னும்-கால்
அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால்
#10
வருக தேர் எனும் மாத்திரை மாடுளோர்
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார்
ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார்
தருக இ பணி எம்-வயின் தான் என்றார்
#11
சூலம் வாள் மழு தோமரம் சக்கரம்
கால பாசம் கதை பொரும் கையினார்
வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார்
ஆலகாலம் திரண்டு அன்ன ஆக்கையார்
#12
வெம்பு கோப கனலர் விலக்கினார்
நம்பி எம் அடிமை தொழில் நன்று எனா
உம்பர் மேல் இன்று உருத்தனை போதியோ
இம்பர் மேல் இனி யாம் உளெமோ என்றார்
#13
நன்று சொல்லினிர் நான் இ சிறார்கள் மேல்
சென்று போர் செயின் தேவர் சிரிப்பரால்
கொன்று சோரி குடித்து அவர் கொள்கையை
வென்று மீளுதிர் மெல்_இயலோடு என்றான்
#14
என்னலோடும் விரும்பி இறைஞ்சினார்
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என
அன்னர் பின் படர்வார் என ஆயினார்
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார்
#15
துமில போர் வல் அரக்கர்க்கு சுட்டினாள்
அமல தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமல பாத நினைவில் இருந்த அ
கமலக்கண்ணனை கையினில் காட்டினாள்
#16
எற்றுவாம் பிடித்து ஏந்துதும் என்குநர்
பற்றுவாம் நெடும் பாசத்தின் என்குநர்
முற்றுவாம் இறை சொல் முறையால் எனா
சுற்றினார் வரை சூழ்ந்து அன்ன தோற்றத்தார்
#17
ஏத்து வாய்மை இராமன் இளவலை
காத்தி தையலை என்று தன் கற்பகம்
பூத்தது அன்ன பொரு_இல் தட கையால்
ஆத்த நாணின் அரு வரை வாங்கினான்
#18
வாங்கி வாளொடு வாளி பெய் புட்டிலும்
தாங்கி தாமரை கண்ணன் அ சாலையை
நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா
வீங்கு தோளன் மலை-தலை மேயினான்
#19
மழுவும் வாளும் வயங்கு ஒளி மு சிகை
கழுவும் கால வெம் தீ அன்ன காட்சியார்
எழுவின் நீள் தட கை எழு_நான்கையும்
தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான்
#20
மரங்கள் போல் நெடு வாளொடு தோள் விழ
உரங்களான் அடர்ந்தார் உரவோன் விடும்
சரங்கள் ஓடின தைக்க அரக்கர்-தம்
சிரங்கள் ஓடின தீயவள் ஓடினாள்
#21
ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள்
குளிறு கோப வெம் கோள் அரிமா அட
களிறு எலாம் பட கை தலை மேல் உற
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள்
#22
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக
வெம் கர பெயரோன் வெகுண்டான் விடை
சங்கரற்கும் தடுப்ப அரும் தன்மையான்
#23
அழை என் தேர் எனக்கு ஆங்கு வெம் போர் படை
உழையர் ஓடி ஒரு நொடி ஓங்கல் மேல்
மழையின் மா முரசு எற்றுதிர் வல் என்றான்
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான்
#24
பேரி ஓசை பிறத்தலும் பெட்புறு
மாரி மேகம் வரம்பு_இல வந்தென
தேரின் சேனை திரண்டது தேவர்-தம்
ஊரும் நாகர் உலரும் உலைந்தவே
#25
போர் பெரும் பணை பொம்மென் முழக்கமா
நீர் தரங்கம் நெடும் தடம் தோள்களா
ஆர்த்து எழுந்தது இறுதியில் ஆர் கலி
கார் கரும் கடல் கால் கிளர்ந்து என்னவே
#26
காடு துன்றி விசும்பு கரந்து என
நீடி எங்கும் நிமிர்ந்த நெடும் கொடி
ஓடும் எங்கள் பசி என்று உவந்து எழுந்து
ஆடுகின்ற அலகையின் ஆடவே
#27
தறியின் நீங்கிய தாழ் தட கை துணை
குறிகொளா மத வேழ குழு அனார்
செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும்
பொறியின் கான் எங்கும் வெம் கனல் பொங்கவே
#28
முருடு இரண்டு முழங்கு உற தாக்கு ஒலி
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக
அருள் திரண்ட அருக்கன் தன் மேல் அழன்று
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே
#29
தலையில் மாசுணம் தாங்கிய தாரணி
நிலை நிலாது முதுகை நெளிப்பு உற
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய
மலை எலாம் ஒரு மாடு தொக்கு என்னவே
#30
வல்லிய குழாங்களோ மழையின் ஈட்டமோ
ஒல் இப தொகுதியோ ஓங்கும் ஓங்கலோ
அல்ல மற்று அரிகளின் அனிகமோ என
பல் பதினாயிரம் படை கை வீரரே
#31
ஆளிகள் பூண்டன அரிகள் பூண்டன
மீளிகள் பூண்டன வேங்கை பூண்டன
ஞாளிகள் பூண்டன நரிகள் பூண்டன
கூளிகள் பூண்டன குதிரை பூண்டன
#32
ஏற்று_இனம் ஆர்த்தன ஏனம் ஆர்த்தன
காற்று_இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும்
பாற்று_இனம் ஆர்த்தன பணிலம் ஆர்த்தன
#33
தேர்_இனம் துவன்றின சிறு கண் செம் முக
கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு
தார்_இனம் குழுமின தடை_இல் கூற்று என
பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே
#34
மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும்
எழுக்களும் தோமர தொகையும் ஈட்டியும்
முழுக்களும் முசுண்டியும் தண்டும் மு தலை
கழுக்களும் உலக்கையும் காலபாசமும்
#35
குந்தமும் குலிசமும் கோலும் பாலமும்
அந்தம்_இல் சாபமும் சரமும் ஆழியும்
வெம் தொழில் வலயமும் விளங்கு சங்கமும்
பந்தமும் கப்பண படையும் பாசமும்
#36
ஆதியின் அருக்கனும் அனலும் அஞ்சுறும்
சோதிய சோரியும் தூவும் துன்னிய
ஏதிகள் மிடைந்தன இமையவர்க்கு எலாம்
வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன
#37
ஆயிரம்_ஆயிரம் களிற்றின் ஆற்றலர்
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்
தீ எரி விழியினர் நிருதர் சேனையின்
நாயகர் பதின்மரோடு அடுத்த நால்வரே
#38
ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம்
கூறின ஒரு படை குறித்த அ படை
ஏறின ஏழினது இரட்டி என்பரால்
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார்
#39
உரத்தினர் உரும் என உரறும் வாயினர்
கரத்து எறி படையினர் கமலத்தோன் தரும்
வரத்தினர் மலை என மழை துயின்று எழு
சிரத்தினர் தருக்கினர் செருக்கும் சிந்தையார்
#40
விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர்
கண் அளவிடல்_அரு மார்பர் காலினால்
மண் அளவிடு நெடு வலத்தர் வானவர்
எண் அளவிடல்_அரும் செரு வென்று ஏறினார்
#41
இந்திரன் முதலினோர் எறிந்த மா படை
சிந்தின தெறித்து உக செறிந்த தோளினார்
அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார்
வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார்
#42
குலமும் பாசமும் தொடர்ந்த செம் மயிர்
சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார்
ஆலமும் வெளிது எனும் நிறத்தர் ஆற்றலால்
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார்
#43
கழலினர் தாரினர் கவச மார்பினர்
நிழல் உறு பூணினர் நெறித்த நெற்றியர்
அழல் உறு குஞ்சியர் அமரை வேட்டு உவந்து
எழல் உறு மனத்தினர் ஒருமை எய்தினார்
#44
மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும்
விருப்புறா முகத்து எதிர் விழிக்கின் வெந்திடும்
உரு பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும்
செரு பெறா தினவு உறு சிகர தோளினார்
#45
குஞ்சரம் குதிரை பேய் குரங்கு கோள் அரி
வெம் சின கரடி நாய் வேங்கை யாளி என்று
அஞ்சுற கனல் புரை மிகத்தர் ஆர்கலி
நஞ்சு தொக்கு என புரை நயனத்தார்களும்
#46
இயக்கரின் பறித்தன அவுணர் இட்டன
மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின
துயக்கு_இல் கந்தர்ப்பரை துரந்து வாரின
நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின
#47
கொடி தழை கவிகை வான் தொங்கல் குஞ்சரம்
படியுறு பதாகை மீ விதானம் பல் மணி
இடையிலாது எங்கணும் இசைய மீமிசை
மிடைதலின் உலகு எலாம் வெயில் இழந்தவே
#48
எழுவரோடு எழுவர் ஆம் உலகம் ஏழொடு ஏழ்
தழுவிய வென்றியர் தலைவர் தானையர்
மழுவினர் வாளினர் வயங்கு சூலத்தர்
உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார்
#49
வில்லினர் வாளினர் இதழின்-மீது இடும்
பல்லினர் மேருவை பறிக்கும் ஆற்றலர்
புல்லினர் திசை-தொறும் புரவி தேரினர்
சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினார்
#50
தூடணன் திரிசிரா தோன்றல் ஆதியர்
கோடணை முரசு_இனம் குளிறு சேனையர்
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர்
பாடவ நிலையினர் பலரும் சுற்றினர்
#51
ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி
வான் தொடர் மேருவை வளைத்ததாம் என
ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன்
தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே
#52
அசும்புறு மத கரி புரவி ஆடக
தசும்புறு சயந்தனம் அரக்கர் தாள் தர
விசும்புறு தூளியால் வெண்மை மேயின
பசும் பரி பகலவன் பைம்பொன் தேர்-அரோ
#53
வனம் துகள்பட்டன மலையின் வான் உயர்
கனம் துகள்பட்டன கடல்கள் தூர்ந்தன
இனம் தொகு தூளியால் இசைப்பது என் இனி
சினம் தொகு நெடும் கடல் சேனை செல்லவே
#54
நிலம் மிசை விசும்பிடை நெருக்கலால் நெடு
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை
தலை மிசை தலை மிசை தாவி சென்றனர்
கொலை மிசை நஞ்சு என கொதிக்கும் நெஞ்சினார்
#55
வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா
பந்த மா வினையம் மாள பற்று_அறு பெற்றியோர்க்கும்
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை
அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக அம்மா
#56
தூரிய குரலின் வானின் முகில் கணம் துணுக்கம்-கொள்ள
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே
#57
வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த வழியில் யாண்டும்
ஓய்வு இல நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின உலைந்த கண்ண
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று
வேய் தெரிந்து உரைப்ப போன்ற புள்ளொடு விலங்கும் அம்மா
#58
தூளியின் படலை வந்து தொடர்வு உற மரமும் தூறும்
தாள் இடை ஒடியும் ஓசை சடசட ஒலிப்ப கானத்து
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா
#59
மின் நின்ற சிலையன் வீர கவசத்தன் விசித்த வாளன்
பொன் நின்ற வடிம்பின் வாளி புட்டிலன் புகையும் நெஞ்சன்
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா
முன் நின்ற பின்வந்தோனை நோக்கினன் மொழியலுற்றான்
#60
நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி
பறிக்குவென் யானே என்னும் பழமொழி பழுதுறாமே
வெறி கொள் பூம் குழலினாளை வீரனே வேண்டினேன் யான்
குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இ குழுவை என்னா
#61
மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை
கரன் படை என்பது எண்ணி கரு நிற கமலக்கண்ணன்
சரம் படர் புட்டில் கட்டி சாபமும் தரித்தான் தள்ளா
உரம் படர் தோளில் மீளா கவசம் இட்டு உடைவாள் ஆர்த்தான்
#62
மீள_அரும் செருவில் விண்ணும் மண்ணும் என் மேல் வந்தாலும்
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே
ஆளியின் துப்பினாய் இ அமர் எனக்கு அருளிநின்று என்
தோளினை தின்னுகின்ற சோம்பினை துடைத்தி என்றான்
#63
என்றனன் இளைய வீரன் இசைந்திலன் இராமன் ஏந்தும்
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான்
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி
நின்றவன் இருந்து கண்ணீர் நிலன் உற புலர்கின்றாள்-பால்
#64
குழையுறு மதியம் பூத்த கொம்பனாள் குழைந்து சோர
தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண
முழையின்-நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான்
#65
தோன்றிய தோன்றல்-தன்னை சுட்டினள் காட்டி சொன்னாள்
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன
தான் தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள்
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே
#66
கண்டனன் கனக தேர் மேல் கதிரவன் கலங்கி நீங்க
விண்டனன் நின்ற வென்றி கரன் எனும் விலங்கல் தோளான்
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி
கொண்டனென் வாகை என்று படைஞரை குறித்து சொன்னான்
#67
மானிடன் ஒருவன் வந்த வலி கெழு சேனைக்கு அம்மா
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை
யானுடை வென்றி என் ஆம் யாவரும் கண்டு நிற்றிர்
ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான்
#68
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி
செவ்வியான் ஒருவன் ஐய செப்புவேன் செருவில் சால
வெவ்வியர் ஆதல் நன்றே வீரரில் ஆண்மை வீர
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான்
#69
குருதி மா மழை சொரிந்தன மேகங்கள் குமுறி
பருதி வானவன் ஊர் வளைப்புண்டது பாராய்
கருது வீர நின் கொடி மிசை காக்கையின் கணங்கள்
பொருது வீழ்வன புலம்புவ நிலம் பட புரள்வ
#70
வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன வயவர்
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன தூங்கி
மீளி மொய்ம்பு உடை இவுளி வீழ்கின்றன விரவி
ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரி குலம் பலவால்
#71
பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம்
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான்
இடியும் வீழ்ந்திடும் எரிந்திடும் பெரும் திசை எவர்க்கும்
முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும்
#72
இனைய ஆதலின் மானிடன் ஒருவன் என்று இவனை
நினையலாவது ஒன்று அன்று அது நீதியோய் நின்ற
வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன்
புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான்
#73
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய
சிரித்து நன்று நம் சேவகம் தேவரை தேய
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள் அமர் வேண்டி
இரைத்து வீங்குவ மானிடற்கு எளியவோ என்றான்
#74
என்னும் மாத்திரத்து எறி படை இடி எனா இடியா
மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம்
துன்னினால் என சுடு சினத்து அரக்கர்-தம் தொகுதி
#75
வளைந்த-காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில்
விளைந்த போரையும் ஆவதும் விளம்புவதும் விசையால்
புளைந்த பாய் பரி புரண்டன புகர் முக பூட்கை
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன
#76
சூலம் அற்றன அற்றன சுடர் மழு தொகை வாள்
மூலம் அற்றன அற்றன முரண் தண்டு பிண்டி
பாலம் அற்றன அற்றன பகழி வெம் பகு வாய்
வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம்
#77
தொடி துணிந்தன தோளொடு தோமரம் துணிந்த
அடி துணிந்தன கட களிறு அச்சோடு நெடும் தேர்
கொடி துணிந்தன குரகதம் துணிந்தன குல மா
முடி துணிந்தன துணிந்தன முளையோடு முசலம்
#78
கருவி மாவொடு கார் மத கைம்மலை கணத்து ஊடு
உருவி மாதிரத்து ஓடின சுடு சரம் உதிரம்
அருவி மாலையின் தேங்கினது அவனியில் அரக்கர்
திரு_இல் மார்பகம் திறந்தன துறந்தன சிரங்கள்
#79
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா
துன்று பத்திய இராகவன் சுடு சரம் துரப்ப
சென்று பத்திர தலையின மலை திரண்டு என்ன
கொன்று பத்தியில் குவித்தன பிண பெரும் குன்றம்
#80
காடு கொண்ட கார் உலவைகள் கதழ் கரி கதுவ
சூடு கொண்டன என தொடர் குருதி மீ தோன்ற
ஆடுகின்ற அறுகுறை அயில் அம்பு விண் மேல்
ஓடுகின்றன உயிரையும் தொடர்வன ஒத்த
#81
கைகள் வாளொடு களம் பட கழுத்து அற கவச
மெய்கள் போழ்பட தாள் விழ வெருவிட நிருதர்
செய்ய மா தலை சிந்திட திசை உற சென்ற
தையலார் நெடு விழி என கொடியன கரங்கள்
#82
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர்
பேர் யாக்கையின் பெரும் கரை வயின்-தொறும் பிறங்க
ஏரி ஆக்கின ஆறுகள் இயற்றின நிறைய
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை
#83
அலை மிதந்தன குருதியின் பெரும் கடல் அரக்கர்
தலை மிதந்தன நெடும் தடி மிதந்தன தட கை_மலை
மிதந்தன வாம் பரி மிதந்தன வய போர்
சிலை மிதந்தன மிதந்தன கொடி நெடும் தேர்கள்
#84
ஆய-காலையில் அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர்
தீய வார் கணை முதலிய தெறு சின படைகள்
மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம்
தூய தாரைகள் சொரிவன ஆம் என சொரிந்தார்
#85
சொரிந்த பல் படை துணிபட துணிபட சரத்தால்
அரிந்து போந்தன சிந்திட திசைதிசை அகற்றி
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய
விரிந்த செம் மயிர் கரும் தலை மலை என வீழ்ந்தான்
#86
கவந்த பந்தங்கள் களித்தன குளித்த கை_மலைகள்
சிவந்த பாய்ந்த வெம் குருதியில் திருகிய சினத்தால்
நிவந்த வெம் தொழில் நிருதர்-தம் நெடு நிணம் தெவிட்டி
உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர்
#87
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர்
கருடன் அஞ்சுறு கண் மணி காகமும் கவர்ந்த
இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ
அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ
#88
பல் ஆயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும்
வில்லாளனை முனியா வெயில் அயில் ஆம் என விழியா
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல்
எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார் வினை செய்தார்
#89
எறிந்தார் என எய்தார் என நினைந்தார் என எறிய
அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான்
செறிந்தாரையும் பிரிந்தாரையும் செறுத்தாரையும் சினத்தால்
மறிந்தாரையும் வலித்தாரையும் மடித்தான் சிலை பிடித்தான்
#90
வானத்தன கடலின் புற வலயத்தன மதி சூழ்
மீனத்தன மிளிர் குண்டல வதனத்தன மிடல் வெம்
கானத்தன மலையத்தன திசை சுற்றிய கரியின்
தானத்தன காகுத்தன சரம் உந்திய சிரமே
#91
மண் மேலன மலை மேலன மழை மேலன மதி தோய்
விண் மேலன நெடு வேலையின் மேல் கீழன மிடலோர்
புண் மேலன குருதி பொழி திரை ஆறுகள் பொங்க
திண் மேருவை நகு மார்பினை உருவி திரி சரமே
#92
பொலம் தாரினர் அனலின் சிகை பொழி கண்ணினர் எவரும்
வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார் சர மழையால்
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார்
அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார்
#93
ஈரல் செறி கமலத்தன இரத திரள் புளினம்
வீர கரி முதல குலம் மிதக்கின்றன உதிக்கும்
பார குடர் மிடை பாசடை படர்கின்றன பலவா
மூரி திரை உதிர குளம் முழுகி கழுது எழுமே
#94
அழைத்தார் சிலர் அயர்த்தார் சிலர் அழிந்தார் சிலர் கழிந்தார்
உழைத்தார் சிலர் உயிர்த்தார் சிலர் உருண்டார் சிலர் புரண்டார்
குழை தாழ் திரை குருதி கடல் குளித்தார் சிலர் கொலை வாய்
மழை தாரைகள் பட பாரிடை மடிந்தார் சிலர் உடைந்தார்
#95
உடைந்தார்களை நகைசெய்தனர் உருள் தேரினர் உடன் ஆய்
அடைந்தார் படை தலைவீரர்கள் பதினால்வரும் அயில் வாள்
மிடைந்தார் நெடும் கடல் தானையர் மிடல் வில்லினர் விரி_நீர்
கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் என கொடியார்
#96
நாக தனி ஒரு வில்லியை நளிர் முப்புரர் முன் நாள்
மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார்
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார்
மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார் செரு விளைத்தார்
#97
எய்தார் பலர் எறிந்தார் பலர் மழு ஓச்சினர் எழுவால்
பொய்தார் பலர் புடைத்தார் பலர் கிடைத்தார் பலர் பொருப்பால்
பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர்
வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார்
#98
தேர் பூண்டன விலங்கு யாவையும் சிலை பூண்டு எழு கொலையால்
பார் பூண்டன மத மா கரி பலி பூண்டன பரிமா
தார் பூண்டன உடல் பூண்டில தலை வெம்_கதிர் தழிவந்து
ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார்
#99
மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம்
பால் பொத்தின நதியின் கிளர் படி பொத்தின படர் வான்
மேல் பொத்தின குழி விண்ணவர் விழி பொத்தினர் விரை வெம்
கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார்
#100
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய்
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால்
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார்
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார்
#101
தலை சிந்தின விழி சிந்தின தழல் சிந்தின தரை மேல்
மலை சிந்தினபடி சிந்தின வரி சிந்துரம் மழை போல்
சிலை சிந்தின கணை சிந்தின திசை சிந்தின திசையூடு
உலை சிந்தின பொறி சிந்தின உயிர் சிந்தின உடலம்
#102
படை பெரும் தலைவரும் படைத்த தேர்களும்
உடை தடம் படைகளும் ஒழிய உற்று எதிர்
விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர் வீரன் வாளியால்
முடைத்த வெம் குருதியின் கடலில் மூழ்கினார்
#103
சுற்றுற நோக்கினர் தொடர்ந்த சேனையில்
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர்
தெற்றினர் எயிறுகள் திருகினார் சினம்
முற்றினர் இராமனை முடுகு தேரினார்
#104
ஏழ் இரு தேரும் வந்து இமைப்பின் முன்பு இடை
சூழ்வன கணைகளின் துணிய நூறினான்
ஆழியும் புரவியும் ஆளும் அற்று அவை
ஊழி வெம் கால் எறி ஓங்கல் ஒத்தவே
#105
அழிந்தன தேர் அவர் அவனி கீண்டு உக
இழிந்தனர் வரி சிலை எடுத்த கையினர்
ஒழிந்தனர் சரங்களை உருமின் ஏறு என
பொழிந்தனர் பொழி கனல் பொடிக்கும் கண்ணினார்
#106
நூறிய சரம் எலாம் நுறுங்க வாளியால்
ஈறுசெய்து அவர் சிலை ஏழொடு ஏழையும்
ஆறினோடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால்
கூறு-செய்து அமர் தொழில் கொதிப்பை நீக்கினான்
#107
வில் இழந்து அனைவரும் வெகுளி மீக்கொள
கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார்
ஒல்லியில் உருத்து உயர் விசும்பில் ஓங்கி நின்று
எல் உயர் பொறி உக எறிதல் மேயினார்
#108
கலைகளின் பெரும் கடல் கடந்த கல்வியான்
இலை கொள் வெம் பகழி ஏழ் இரண்டும் வாங்கினான்
கொலை கொள் வெம் சிலையொடு புருவம் கோட்டினான்
மலைகளும் தலைகளும் விழுந்த மண்ணினே
#109
படை தலை தலைவர்கள் படலும் பல் படை
புடைத்து அடர்ந்து எதிர் அழல் புரையும் கண்ணினார்
கிடைத்தனர் அரக்கர்கள் கீழும் மேலும் மொய்த்து
அடைத்தனர் திசைகளை அமரர் அஞ்சினார்
#110
முழங்கின பெரும் பணை மூரி மால் கரி
முழங்கின வரி சிலை முடுகு நாண் ஒலி
முழங்கின சங்கொடு புரவி மொய்த்து உற
முழங்கின அரக்கர் தம் முகிலின் ஆர்ப்பு-அரோ
#111
வெம் படை நிருதர் வீச விண்ணிடை மிடைந்த வீரன்
அம்பு இடை அறுக்க சிந்தி அற்றன படும் என்று அஞ்சி
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த
கம்பம் இல் திசையில் நின்ற களிறும் கண் இமைத்த அன்றே
#112
அ தலை தானையன் அளவு_இல் ஆற்றலன்
மு தலை குரிசில் பொன் முடியன் முக்கணான்
கைத்தலை சூலமே அனைய காட்சியான்
வை தலை பகழியால் மழை செய் வில்லினான்
#113
அன்னவன் நடுவுற ஊழி ஆழி ஈது
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள்
தன் நிகர் வீரனும் தமியன் வில்லினன்
துன் இருள் இடையது ஓர் விளக்கின் தோன்றினான்
#114
ஓங்கு ஒளி வாளினன் உருமின் ஆர்ப்பினன்
வீங்கிய கவசத்தன் வெய்ய கண்ணினன்
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர்
தாங்கினன் இராமனும் சரத்தின் தானையால்
#115
தாள் இடை அற்றன தலையும் அற்றன
தோள் இடை அற்றன தொடையும் அற்றன
வாள் இடை அற்றன மழுவும் அற்றன
கோள் இடை அற்றன குடையும் அற்றன
#116
கொடியொடு கொடுஞ்சு இற புரவி கூட்டு அற
படியொடு படிந்தன பருத்த தேர் பணை
நெடிய வன் கட கரி புரண்ட நெற்றியின்
இடியொடு முறிந்து வீழ் சிகரம் என்னவே
#117
அற்றன சிரம் என அறிதல் தேற்றலர்
கொற்ற வெம் சிலை சரம் கோத்து வாங்குவார்
இற்றவர் இறாதவர் எழுந்து விண்ணினை
பற்றின மழை என படை வழங்குவார்
#118
கேடக தட கைய கிரியின் தோற்றத்த
ஆடக கவசத்த கவந்தம் ஆடுவ
பாடகத்து அரம்பையர் மருள பல்வித
நாடக தொழிலினை நடிப்ப ஒத்தவே
#119
கவரி வெண்குடை எனும் நுரைய கை_மலை
சுவல் தரு சுறவம் ஆழ் சுழிய தண் துறை
பவர் இனப்படு மணி குவிக்கும் பண்ணைய
உவரியை புதுக்கின உதிர ஆறு-அரோ
#120
சண்ட வெம் கடும் கணை தடிய தாம் சில
திண் திறல் வளை எயிற்று அரக்கர் தேவர் ஆய்
வண்டு உழல் புரி குழல் மடந்தைமாரொடும்
கண்டனர் தம் உடல் கவந்த நாடகம்
#121
ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர்
தூய வெம் கடும் கணை துணித்த தங்கள் தோள்
பேய் ஒரு-தலை கொள பிணங்கி வாய்விடா
நாய் ஒரு-தலை கொள நகையுற்றார் சிலர்
#122
தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர்
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார்
நிருதர்-தம் பெரும் படை நெடிது நின்றவன்
ஒருவன் என்று உள்ளத்தில் உலைவுற்றார் சிலர்
#123
கை களிறு அன்னவன் பகழி கண்டகர்
மெய் குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின
மை கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன்
பொய் கரி கூறிய கொடும் சொல் போலவே
#124
அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தை
தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல்
வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தான்
செம் சர தூய்மையால் தேவர் ஆக்கினான்
#125
வலம் கொள் போர் மானிடன் வலிந்து கொன்றமை
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என
சலம்-கொள் போர் அரக்கர்-தம் உருக்கள் தாங்கின
இலங்கையின் உற்ற அ குருதி ஆறு-அரோ
#126
சூழ்ந்த தார் நெடும் படை பகழி சுற்றுற
போழ்ந்து உயிர் குடித்தலின் புரள பொங்கினான்
தாழ்ந்திலன் மு தலை தலைவன் சோரியின்
ஆழ்ந்த தேர் அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான்
#127
ஊன்றிய தேரினன் உருமின் வெம் கணை
வான் தொடர் மழை என வாய்மை யாவர்க்கும்
சான்று என நின்ற அ தரும மன்னவன்
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான்
#128
தூவிய சரம் எலாம் துணிய வெம் கணை
ஏவினன் இராமனும் ஏவி ஏழ் இரு
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான்
#129
அன்றியும் அ கணத்து அமரர் ஆர்த்து எழ
பொன் தெரி வடிம்பு உடை பொரு_இல் வாளியால்
வன் தொழில் தீயவன் மகுட மா தலை
ஒன்று ஒழித்து இரண்டையும் உருட்டினான்-அரோ
#130
தேர் அழிந்து அ வழி திரிசிரா எனும்
பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன்
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி
கார் இழிந்தால் என கணை வழங்கினான்
#131
ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை
தோற்றிய வில்லொடும் தொடர மீமிசை
காற்று இடை அழித்து என கார்முகத்தையும்
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான்
#132
வில் இழந்தனன்-என்னினும் விழித்த வாள் முகத்தின்
எல் இழந்திலன் இழந்திலன் வெம் கதம் இடிக்கும்
சொல் இழந்திலன் தோள் வலி இழந்திலன் சொரியும்
கல் இழந்திலன் இழந்திலன் கறங்கு என திரிதல்
#133
ஆள் இரண்டு_நூறு உள என அந்தரத்து ஒருவன்
மூள் இரும் பெரு மாய வெம் செரு முயல்வானை
தாள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் தடிந்து
தோள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் துணித்தான்
#134
அற்ற தாளொடு தோளிலன் அயில் எயிறு இலங்க
பொற்றை மா முழை புலால் உடை வாயினின் புகுந்து
பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன் பரிவான்
கொற்ற வார் சரத்து ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான்
#135
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் செறிந்த
நிருதர் ஓடினர் தூடணன் விலக்கவும் நில்லார்
பருதி வாளினர் கேடக தட கையர் பரந்த
குருதி நீரிடை வார் கழல் கொழும் குடர் தொடக்க
#136
கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்ப்ப
பணத்தின் மேல் நிலம் குழியுற கால் கொடு பதைப்பார்
நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர் சிலர் சிலர் நிவந்த
பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் உயிர் கொடு பிழைப்பார்
#137
வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைந்தன வெட்ட
ஓய்ந்துளார் சிலர் உலந்தனர் உதிர நீர் ஆற்றில்
பாய்ந்து கால் பறித்து அழுந்தினர் சிலர் சிலர் பயத்தால்
நீந்தினார் நெடும் குருதி அம் கடல் புக்கு நிலையார்
#138
மண்டி ஓடினார் சிலர் நெடும் கட கரி வயிற்று
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார்
தொண்டை நீங்கிய கவந்தத்தை துணைவ நீ எம்மை
கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார்
#139
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார்
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார்
உச்ச வீரன் கை சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவ
தச்சு நின்றன கண்டனர் அ வழி தவிர்ந்தார்

8 தூடணன் வதை படலம்

#1
அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்-மின் என்னா
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே
துனையும் வாம் பரி தேரினன் தூடணன் சொன்னான்
#2
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும்
கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார்
நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ
#3
பூ அராவு வேல் புரந்தரனோடுதான் பொன்றா
மூவரோடுதான் முன் நின்று முட்டிய சேனையில்
ஏவர் ஓடினர் இராக்கதர் நுமக்கு இடைந்து ஓடும்
தேவரோடு கற்றறிந்துளிரோ மனம் திகைத்தீர்
#4
இங்கு ஓர் மானிடற்கு இத்தனை வீரர்கள் இடைந்தீர்
உம் கை வாளொடு போய் விழுந்து ஊர் புகலுற்றீர்
கொங்கை மார்பிடை குளிப்புற களிப்புறு கொழும் கண்
நங்கைமார்களை புல்லுதிரோ நலம் நுகர்வீர்
#5
செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர்
வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த
கொம்பு காட்டுதிரோ தட மார்பிடை
அம்பு காட்டுதிரோ குல மங்கையர்க்கு அம்மா
#6
ஏக்கம் இங்கு இதன்-மேலும் உண்டோ இகல் மனிதன்
ஆக்கும் வெம் சமத்து ஆண்மை அ அமரர்க்கும் அரிதா
தாக்க அரும் புயத்து உம் குல தலைமகன் தங்கை
மூக்கொடு அன்றி நும் முதுகொடும் போம் பழி முயன்றீர்
#7
ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ அயில் வேல்
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர்
தீர வாழ்க்கையின் தெவ்வரை செவிடை பறித்த
வீர வாள் கையீர் எங்ஙனம் வாழ்திரோ விளம்பீர்
#8
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர்
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா
சென்று தாக்கினன் தேவரும் மருள்-கொண்டு திகைத்தார்
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான்
#9
ஊ அறுப்புண்ட மொய் படை கையொடும் உயர்ந்த
கோடு அறுப்புண்ட குஞ்சரம் கொடிஞ்சொடு கொடியின்
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் கதிர் சாலி
சூடு அறுப்புண்ட என கழுத்து அறுப்புண்ட துரகம்
#10
துருவி ஓடின உயிர் நிலை சுடு சுரம் துரந்த
கருவி ஓடின கச்சையும் கவசமும் கழல
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக
உருவி ஓடின கேடக தட்டொடும் உடலம்
#11
ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு அரக்கர்-தம் ஆவி
தோய்ந்த தோய்வு_இலா பிறை முக சரம் சிரம் துமித்த
காய்ந்த வெம் சரம் நிருதர்-தம் கவச மார்பு உருவ
பாய்ந்த வஞ்சகர் இதயமும் பிளந்தன பல்லம்
#12
தூடணன் விடு சுடு சரம் யாவையும் துணியா
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர்
கூடி நின்ற அ குரை கடல் வறள்பட குறைத்தான்
#13
ஆர்த்து எழுந்தனர் வானவர் அரு வரை மரத்தொடு
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி இராமன்
தூர்த்த செம் சரம் திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்து
போர்த்த வெம் சினத்து அரக்கரை புரட்டின புவியில்
#14
தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு
ஊன்றினார் எலாம் உலைந்தனர் ஒல்லையில் ஒழிந்தார்
கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து மெய்ம்மறந்தான்
#15
களிறு தேர் பரி கடுத்தவர் முடி தலை கவந்தம்
ஒளிறு பல் படை தம் குலத்து அரக்கர்-தம் உடலம்
வெளிறு சேர் நிணம் பிறங்கிய அடுக்கலின் மீதா
குளிறு தேர் கடிது ஓட்டினன் தூடணன் கொதித்தான்
#16
அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல்
பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால்
கறங்கு போன்று உளது ஆயினும் பிண பெரும் காட்டில்
இறங்கும் ஏறும் அ தேர் பட்டது யாது என இசைப்பாம்
#17
அரிதின் எய்தினன் ஐ_ஐந்து கொய் உளை பரியால்
உருளும் ஆழியது ஒரு தனி தேரினன் மேகத்து
இருளை நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன்
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன
#18
சென்ற தேரையும் சிலை உடை மலை என தேர் மேல்
நின்ற தூடணன் தன்னையும் நெடியவன் நோக்கி
நன்று நன்று நின் நிலை என அருள் இறை நயந்தான்
என்ற காலத்து அ வெய்யவன் பகழி மூன்று எய்தான்
#19
தூர வட்ட எண் திசைகளை தனித்தனி சுமக்கும்
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்க
பேர விட்டவன் நுதல் அணி ஓடையின் பிறங்கும்
வீர பட்டத்தில் பட்டன விண்ணவர் வெருவ
#20
எய்த காலமும் வலியும் நன்று என நினைத்து இராமன்
செய்த சே ஒளி முறுவலன் கடும் கணை தெரிந்தான்
நொய்தின் அங்கு அவன் நொறில் பரி தேர் பட நூறி
கையில் வெம் சிலை அறுத்து ஒளிர் கவசமும் கடிந்தான்
#21
தேவர் ஆர்த்து எழ முனிவர்கள் திசை-தொறும் சிலம்பும்
ஓவு இல் வாழ்த்து ஒலி கார் கடல் முழக்கு என ஓங்க
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான்

9 கரன் வதை படலம்

#1
தம்பி தலை அற்ற படியும் தயரதன் சேய்
அம்பு படையை துணிபடுத்ததும் அறிந்தான்
வெம்பு படை வில் கை விசய கரன் வெகுண்டான்
கொம்பு தலை கட்டிய கொலை கரியொடு ஒப்பான்
#2
அந்தகனும் உட்கிட அரக்கர் கடலோடும்
சிந்துரம் வய புரவி தேர் திசை பரப்பி
இந்துவை வளைக்கும் எழிலி குலம் என தான்
வந்து வரி வில் கை மத யானையை வளைத்தான்
#3
அடங்கல் இல் கொடும் தொழில் அரக்கர் அ அனந்தன்
படம் கிழிதர படிதனில் பலவித போர்
கடம் கலுழ் தடம் களிறு தேர் பரி கடாவி
தொடங்கினர் நெடுந்தகையும் வெம் கணை துரந்தான்
#4
துடித்தன கட கரி துடித்தன பரி தேர்
துடித்தன முடி தலை துடித்தன தொடி தோள்
துடித்தன மணி குடர் துடித்தன தசை தோள்
துடித்தன கழல் துணை துடித்தன இட தோள்
#5
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண்
தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர்
ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும்
கோளின் வன வன் குழுவினின் குறைபடுத்தான்
#6
தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம்தான்
மீன் உருவும் மேருவை விரைந்து உருவும் மேல் ஆம்
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார்
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ
#7
அன்று இடர் விளைத்தவர் குலங்களொடு அடங்க
சென்று உலைவு உறும்படி தெரிந்து கணை சிந்த
மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரை
கொன்றனர் நுகர்ந்த பொருளின் கடிது கொன்ற
#8
கடும் கரன் என பெயர் படைத்த கழல் வீரன்
அடங்கலும் அரக்கர் அழிவு உற்றிட அழன்றான்
ஒடுங்கல் இல் நிண குருதி ஓதம் அதில் உள்ளான்
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான்
#9
செம் கண் எரி சிந்த வரி வில் பகழி சிந்த
பொங்கு குருதி புணரியுள் புகையும் நெஞ்சன்
கங்கமொடு காகம் மிடைய கடலின் ஓடும்
வங்கம் எனல் ஆயது ஒரு தேரின் மிசை வந்தான்
#10
செறுத்து இறுதியில் புவனி தீய எழு தீயின்
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை
கறுத்த மணிகண்டர் கடவுள் சிலை கரத்தால்
இறுத்தவனும் வெம் கணை தெரிந்தனன் எதிர்ந்தான்
#11
தீ உருவ கால் விசைய செவ்வியன வெவ் வாய்
ஆயிரம் வடி கணை அரக்கர்_பதி எய்தான்
தீ உருவ கால் விசைய செவ்வியன் வெவ் வாய்
ஆயிரம் வடி கணை இராமனும் அறுத்தான்
#12
ஊழி எரியின் கொடிய பாய் பகழி ஒன்பான்
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான்
சூழ் சுடர் வடி கணை அவற்று எதிர் தொடுத்தே
ஆழி வரி வில் கரனும் அன்னவை அறுத்தான்
#13
கள்ள வினை மாய அமர் கல்வியின் விளைத்தான்
வள்ளல் உருவை பகழி மாரியின் மறைத்தான்
உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினார் ஒளித்தார்
வெள் எயிறு இதழ் பிறழ வீரனும் வெகுண்டான்
#14
முடிப்பென் இன்று ஒரு மொய் கணையால் எனா
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான்
பிடித்த திண் சிலை பேர் அகல் வானிடை
இடிப்பின் ஓசை பட கடிது இற்றதே
#15
வெற்றி கூறிய வானவர் வீரன் வில்
இற்ற போது துணுக்கம் உற்று ஏங்கினார்
மற்று ஓர் வெம் சிலை இன்மை மன கொளா
அற்றதால் எம் வலி என அஞ்சினார்
#16
என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம்
சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான்
மன்னர் மன்னவன் செம்மல் மரபினால்
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான்
#17
கண்டு நின்று கருத்து உணர்ந்தான் என
அண்டர் நாதன் தட கையில் அ துணை
பண்டு போர் மழுவாளியை பண்பினால்
கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன்
#18
கொடுத்த வில்லை அ கொண்டல் நிறத்தினான்
எடுத்து வாங்கி வலம் கொண்டு இட கையில்
பிடித்த போது நெறி பிழைத்தோர்க்கு எலாம்
துடித்தவால் இட கண்ணொடு தோளுமே
#19
ஏற்றி நாண் இமையா-முன் எடுத்து அது
கூற்றினாரும் குனிக்க குனித்து எதிர்
ஆற்றினான் அவன் ஆழி அம் தேர் சரம்
நூற்றினால் நுண் பொடிபட நூறினான்
#20
எந்திர தடம் தேர் இழந்தான் இழந்து
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து அம்பு எலாம்
சுந்தர தனி வில்லி-தன் தோள் எனும்
மந்தரத்தில் மழையின் வழங்கினான்
#21
தாங்கி நின்ற தயரத ராமனும்
தூங்கு தூணியிடை சுடு செம் சரம்
வாங்குகின்ற வல கை ஓர் வாளியால்
வீங்கு தோளோடு பாரிடை வீழ்த்தினான்
#22
வல கை வீழ்தலும் மற்றை கையால் வெற்றி
உலக்கை வானத்து உரும் என ஓச்சினான்
இலக்குவற்கு முன் வந்த இராமனும்
விலக்கினான் ஒரு வெம் கதிர் வாளியால்
#23
விராவ_அரும் கடு வெள் எயிறு இற்ற பின்
அரா அழன்றது அனைய தன் ஆற்றலால்
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான்
இராமன் அங்கு ஓர் தனி கணை ஏவினான்
#24
வரம் அரக்கன் படைத்தலின் மாயையின்
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும்
பரம் முருக்கிய பாவத்தினால் வல
கரம் என கரன் கண்டம் உற்றான்-அரோ
#25
ஆர்த்து எழுந்தனர் ஆடினர் பாடினர்
தூர்த்து அமைந்தனர் வானவர் தூய மலர்
தீர்த்தனும் பொலிந்தான் கதிரோன் திசை
போர்த்த மென் பனி போக்கியது என்னவே
#26
முனிவர் வந்து முறைமுறை மொய்ப்பு உற
இனிய சிந்தை இராமனும் ஏகினான்
அனிக வெம் சமத்து ஆர் உயிர் போக தான்
தனி இருந்த உடல் அன்ன தையல்-பால்
#27
விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக
அண்ணல் வீரனை தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார்
#28
மூத்தம் ஒன்றில் முடித்தவர் மொய் புண்ணீர்
நீத்தம் ஓடி நெடும் திசை நேர் உற
கோத்த வேலை குரல் என வானவர்
ஏத்த வீரன் இனிது இருந்தான்-அரோ
#29
இங்கு நின்றது உரைத்தும் இராவணன்
தங்கை தன் கை வயிறு தகர்த்தனள்
கங்குல் அன்ன கரனை தழீஇ நெடும்
பொங்கு வெம் குருதி புரண்டாள்-அரோ
#30
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என்
மூக்கினோடு முடிய முடிந்திலேன்
வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும்
போக்கினேன் கொடியேன் என்று போயினாள்
#31
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற
குலங்கல் வேர் அறுப்பான் குறித்தாள் உயர்
கலங்கு சூறை வன் போர் நெடும் கால் என
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள்

10 இராவணன் அணங்குறு படலம்

#1
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள் போர் இராமன் துங்க
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ
#2
நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல்
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன்
புலன் எலாம் தெரிப்பது ஒரு புனை மணிமண்டபம்-அதனில் பொலிய மன்னோ
#3
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள்
விண் தலங்கள் உற வீங்கி ஓங்கு உதய மால் வரையின் விளங்க மீதில்
குண்டலங்கள் குல வரையை வலம்வருவான் இரவி கொழும் கதிர் சூழ் கற்றை
மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ
#4
புலியின் அதள் உடையானும் பொன்னாடை புனைந்தானும் பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார்
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ
#5
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற ஆன்ற
நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட
கோள் எலாம் கிடந்த நெடும் சிறை அன்ன நிறை ஆரம் குலவ-மன்னோ
#6
ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர்
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால்
தேய்வுறதேய்வுற பெயர்ந்து செம் சுடர்
ஆய் மணி பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே
#7
மூ-வகை உலகினும் முதல்வர் முந்தையோர்
ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல் போல்
தேவரும் அவுணரும் முதலினோர் திசை
தூவிய நறு மலர் குப்பை துன்னவே
#8
இன்ன போது இ வழி நோக்கும் என்பதை
உன்னலர் கரதலம் சுமந்த உச்சியர்
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள்
துன்னினர் முறைமுறை துறையில் சுற்றவே
#9
மங்கையர்-திறத்து ஒரு மாற்றம் கூறினும்
தங்களை ஆம் என தாழும் சென்னியர்
அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர்
சிங்க ஏறு என திறல் சித்தர் சேரவே
#10
அன்னவன் அமைச்சரை நோக்கி ஆண்டு ஒரு
நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்
என்னை-கொல் பணி என இறைஞ்சுகின்றனர்
கின்னரர் பெரும் பயம் கிடந்த நெஞ்சினர்
#11
பிரகர நெடும் திசை பெரும் தண்டு ஏந்திய
கரதலத்து அண்ணலை கண்ணின் நோக்கிய
நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர்
உரகர்கள் தம் மனம் உலைந்து சூழவே
#12
திசை உறு கரிகளை செற்று தேவனும்
வசை உற கயிலையை மறித்து வான் எலாம்
அசைவு உற புரந்தரன் அடர்ந்த தோள்களின்
இசையினை தும்புரு இசையின் ஏத்தவே
#13
சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே
பாணிகள் பணி செய பழுது_இல் பண் இடை
வீணையின் நரம்பிடை விளைத்த தேமறை
வாணியின் நாரதன் செவியின் வார்க்கவே
#14
மேகம் என் துருத்தி கொண்டு விண்ணவர் தருவும் விஞ்சை
நாகமும் சுரந்த தீம் தேன் புனலோடும் அளாவி நவ்வி
தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும்
சீகர மகர வேலை காவலன் சிந்த-மன்னோ
#15
நறை மலர் தாதும் தேனும் நளிர் நெடு மகுட கோடி
முறைமுறை அறைய சிந்தி முறிந்து உகும் மணியும் முத்தும்
தறையிடை உகாத-முன்னம் தாங்கினன் தழுவி வாங்கி
துறை-தொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப-மன்னோ
#16
மின் உடை வேத்திர கையர் மெய் புக
துன் நெடும் கஞ்சுக துகிலர் சோர்வு இலர்
பொன்னொடு வெள்ளியும் புரந்தராதியர்க்கு
இன் இயல் முறைமுறை இருக்கை ஈயவே
#17
சூலமே முதலிய துறந்து சுற்றிய
சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன்
தோல் உடை நெடும் பணை துவைக்கும்-தோறு எலாம்
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே
#18
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல்
வியன் கருப்பூரம் மென் பஞ்சின் மீக்கொளீஇ
கயங்களில் மரை மலர் காடு பூத்து என
வயங்கு எரி கடவுளும் விளக்கம் மாட்டவே
#19
அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து நல்
புதிது அலர் கற்பக தருவும் பொய்_இலா
கதிர் நெடு மணிகளும் கறவை ஆன்களும்
நிதிகளும் முறைமுறை நின்று நீட்டவே
#20
குண்டலம் முதலிய குலம் கொள் போர் அணி
மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால்
உண்டு-கொல் இரவு இனி உலகம் ஏழினும்
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே
#21
கங்கையே முதலிய கடவுள் கன்னியர்
கொங்கைகள் சுமந்து இடை கொடியின் ஒல்கிட
செம் கையில் அரிசியும் மலரும் சிந்தினர்
மங்கல முறை மொழி கூறி வாழ்த்தவே
#22
ஊருவில் தோன்றிய உருப்பசி பெயர்
காரிகையார் முதல் கலாப மஞ்ஞை போல்
வார் விசி கருவியோர் வகுத்த பாணியின்
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே
#23
இருந்தனன் உலகங்கள் இரண்டும் ஒன்றும் தன்
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின்
பொருந்திய இராவணன் புருவ கார்முக
கரும் தடம் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே
#24
தங்கையும் அ வழி தலையில் தாங்கிய
செம் கையள் சோரியின் தாரை சேந்து இழி
கொங்கையள் மூக்கிலள் குழையின் காது இலள்
மங்குலின் ஒலி பட திறந்த வாயினள்
#25
முடை உடை வாயினள் முறையிட்டு ஆர்த்து எழு
கடையுக கடல் ஒலி காட்ட காந்துவாள்
குட திசை செக்கரின் சேந்த கூந்தலாள்
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள்
#26
தோன்றலும் தொல் நகர் அரக்கர் தோகையர்
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார்
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள்
தான் தனியவள் வர தரிக்க வல்லரோ
#27
பொருக்கென நோக்கினர் புகல்வது ஓர்கிலர்
அரக்கரும் இரைந்தனர் அசனி ஆம் என
கரத்தொடு கரங்களை புடைத்து கண்களில்
நெருப்பு எழ விழித்து வாய் மடித்து நிற்கின்றார்
#28
இந்திரன் மேலதோ உலகம் ஈன்ற பேர்
அந்தணன் மேலதோ ஆழியானதோ
சந்திரமௌலி-பால் தங்குமே-கொலோ
அந்தரம் இது என அழல்கின்றார் சிலர்
#29
செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர்
மு புறத்து உலகமும் அடங்க மூடிய
இ புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது
அ புறத்து அண்டத்தோர் ஆர் என்றார் சிலர்
#30
என்னையே இராவணன் தங்கை என்ற பின்
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே
உன்னவே ஒண்ணுமோ ஒருவரால் இவள்
தன்னையே அரிந்தனள் தான் என்றார் சிலர்
#31
போர் இலான் புரந்தரன் ஏவல் பூண்டனன்
ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப்போய்
நீரினான் நெருப்பினான் பொருப்பினான் இனி
ஆர்-கொலாம் ஈது என அறைகின்றார் சிலர்
#32
சொல்_பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ
இல்_பிறந்தார்-தமக்கு இயைவ செய்திலள்
கற்பு இறந்தாள் என கரன்-கொலாம் இவள்
பொற்பு அறையாக்கினன் போல் என்றார் சிலர்
#33
தத்து உறு சிந்தையர் தளரும் தேவர் இ
பித்து உற வல்லரே பிழைப்பு_இல் சூழ்ச்சியார்
மு திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார்
இ திறம் புணர்த்தனர் என்கின்றார் சிலர்
#34
இனி ஒரு கற்பம் உண்டு-என்னில் அன்றியே
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை
முனிவரர் வெகுளியின் முடிபு என்றார் சிலர்
#35
கரை அறு திரு நகர் கரும் கண் நங்கைமார்
நிரை வளை தளிர் கரம் நெரிந்து நோக்கினர்
பிரை உறு பால் என நிலையின் பின்றிய
உரையினர் ஒருவர்-முன் ஒருவர் ஓடினார்
#36
முழவினில் வீணையில் முரல் நல் யாழினில்
தழுவிய குழலினில் சங்கில் தாரையில்
எழு குரல் இன்றியே என்றும் இல்லது ஓர்
அழு குரல் பிறந்தது அ இலங்கைக்கு அன்று-அரோ
#37
கள் உடை வள்ளமும் களித்த தும்பியும்
உள்ளமும் ஒரு வழி கிடக்க ஓடினார்
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார்
தள்ளுறும் மருங்கினர் தழீஇ கொண்டு ஏகினார்
#38
நாந்தக உழவர் மேல் நாடும் தண்டத்தர்
காந்திய மனத்தினர் புலவி கைம்மிக
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக
வேந்தனுக்கு இளையவள் தாளில் வீழ்ந்தனர்
#39
பொன் தலை மரகத பூகம் நோவுற
சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின்
முற்றிய ஆடலில் முனிவுற்று ஏங்கினார்
சிற்றிடை அலமர தெருவு சேர்கின்றார்
#40
எழு என மலை என எழுந்த தோள்களை
தழுவிய வளை தளிர் நெகிழ தாமரை
முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள்
பொழிதர சிலர் உளம் பொருமி விம்முவார்
#41
நெய் நிலைய வேல் அரசன் நேருநரை இல்லான்
இ நிலை உணர்ந்த பொழுது எ நிலையம் என்று
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக
பொய்ந்நிலை மருங்கினர் புலம்பினர் புரண்டார்
#42
மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார்
கனம் தலை வரும் குழல் சரிந்து கலை சோர
நனம் தலைய கொங்கைகள் ததும்பிட நடந்தார்
அனந்தர் இள மங்கையர் அழுங்கி அயர்கின்றார்
#43
அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன்
தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார்
கொங்கை இணை செம் கையின் மலைந்து குலை கோதை
மங்கையர்கள் நங்கை அடி வந்து விழுகின்றார்
#44
இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல என்றும்
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார்
கலங்கல் இல் கரும் கண் இணை வாரி கலுழ்கின்றார்
#45
என்று இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த
நின்றவர் இருந்தவரொடு ஓடு நெறி தேட
குன்றின் அடி வந்து படி கொண்டல் என மன்னன்
பொன் திணி கரும் கழல் விழுந்தனள் புரண்டாள்
#46
மூடினது இருள் படலம் மூ_உலகும் முற்ற
சேடனும் வெருக்கொடு சிர தொகை நெளித்தான்
ஆடின குல கிரி அருக்கனும் வெயர்த்தான்
ஓடின திசை கரிகள் உம்பரும் ஒளித்தார்
#47
விரிந்த வலயங்கள் மிடை தோள் படர மீதிட்டு
எரிந்த நயனங்கள் எயிறின் புறம் இமைப்ப
நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்ற
திரிந்த புவனங்கள் வினை தேவரும் அயர்த்தார்
#48
தென் திசை நமன்-தனொடு தேவர் குலம் எல்லாம்
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்தார்
நின்று உயிர் நடுங்கி உடல் விம்மி நிலை நில்லார்
ஒன்றும் உரையாடல் இலர் உம்பரினொடு இம்பர்
#49
மடித்த பில வாய்கள்-தொறும் வந்து புகை முந்த
துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து
இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான்
#50
கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார்
மீன் உடை நெடும் கொடியினோன் அனையர் மேல் கீழ்
ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா
மானிடர் தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள்
#51
செய்தனர்கள் மானிடர் என திசை அனைத்தும்
எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம்
நொய்து அலர் வலி தொழில் நுவன்ற மொழி ஒன்றோ
பொய் தவிர் பயத்தை ஒழி புக்க புகல் என்றான்
#52
மன்மதனை ஒப்பர் மணி மேனி வட மேரு
தன் எழில் அழிப்பர் திரள் தாலின் வலி-தன்னால்
என் அதனை இப்பொழுது இசைப்பது உலகு ஏழின்
நல் மதம் அழிப்பர் ஓர் இமைப்பின் நனி வில்லால்
#53
வந்தனை முனித்தலைவர்-பால் உடையார் வானத்து
இந்துவின் முகத்தர் எறி நீரில் எழு நாள
கந்த மலரை பொருவு கண்ணர் கழல் கையர்
அந்தம் இல் தவ தொழிலர் ஆர் அவரை ஒப்பார்
#54
வற்கலையர் வார் கழலர் மார்பின் அணி நூலர்
வில் கலையர் வேதம் உறை நாவர் தனி மெய்யர்
உற்கு அலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார்
சொல் கலை என தொலைவு இல் தூணிகள் சுமந்தார்
#55
மாரர் உளரே இருவர் ஓர் உலகில் வாழ்வார்
வீரர் உளரே அவரின் வில் அதனின் வல்லார்
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஐயா
ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார்
#56
ஆறு மனம் அஞ்சினம் அரக்கரை என சென்று
ஏறு நெறி அந்தணர் இயம்ப உலகு எல்லாம்
வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்க
கோறும் என முந்தை ஒரு சூளுறவு கொண்டார்
#57
தராவலய நேமி உழவன் தயரத பேர்
பராவ_அரு நலத்து ஒருவன் மைந்தர் பழி இல்லார்
விராவ_அரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார்
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள்
#58
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால்
அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார்
விருந்து அனைய வாளொடும் விழித்து இறையும் வெள்காது
இருந்தனன் இராவணனும் இன் உயிரொடு இன்னும்
#59
கொற்றம்-அது முற்றி வலியால் அரசு கொண்டேன்
உற்ற பயன் மற்று இது-கொலாம் முறை இறந்தே
முற்ற உலகத்து முதல் வீரர் முடி எல்லாம்
அற்ற பொழுதத்து இது பொருந்தும் எனல் ஆமே
#60
மூளும் உளது ஆய பழி என்-வயின் முடித்தோர்
ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம்
வாளும் உளது ஓத விடம் உண்டவன் வழங்கும்
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ
#61
பொத்துற உடற்பழி புகுந்தது என நாணி
தத்துறுவது என்னை மனனே தளரல் அம்மா
எ துயர் உனக்கு உளது இனி பழி சுமக்க
பத்து உள தலை பகுதி தோள்கள் பல அன்றே
#62
என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான்
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால்
கொன்றிலர்களா நெடிய குன்று உடைய கானில்
நின்ற கரனே முதலினோர் நிருதர் என்றான்
#63
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள்
எற்றிய வயிற்றள் பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள்
சுற்றமும் தொலைந்தது ஐய நொய்து என சுமந்த கையள்
உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள்
#64
சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும்
கல் என்ற ஒலியில் சென்றார் கரன் முதல் காளை வீரர்
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில் என்றாள்
#65
தார் உடை தானையோடும் தம்பியர் தமியன் செய்த
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம்
காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல்
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம்
#66
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான்
#67
என்-வயின் உற்ற குற்றம் யாவர்க்கும் எழுத ஒணாத
தன்மையன் இராமனோ தாமரை தவிர போந்தாள்
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள்
பொன்-வயின் மேனி கொண்டாள் பொருட்டினால் புகுந்தது என்றாள்
#68
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள்
#69
காமரம் முரலும் பாடல் கள் என கனிந்த இன் சொல்
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன
தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள்
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ
#70
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல்
பஞ்சு ஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர்
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்
#71
ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ
வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான்
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா
#72
தெவ் உலகத்தும் காண்டி சிரத்தினில் பணத்தினோர்கள்
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி
வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள்
எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத_ஒணாதால்
#73
தோளையே சொல்லுகேனோ சுடர் முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ
மீளவும் திகைப்பது-அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன்
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ
#74
வில் ஒக்கும் நுதல் என்றாலும் வேல் ஒக்கும் விழி என்றாலும்
பல் ஒக்கும் முத்து என்றாலும் பவளத்தை இதழ் என்றாலும்
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லல் ஆம் உவமை உண்டோ
நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ
#75
இந்திரன் சசியை பெற்றான் இரு_மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையை பெற்றான் தாமரை செங்கணானும்
செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும்
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா
#76
பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி
#77
பிள்ளை போல் பேச்சினாளை பெற்ற பின் பிழைக்கல் ஆற்றாய்
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும்
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே
#78
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர்
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள்
தார் தந்த கமலத்தாளை தருக்கினர் கடைய சங்க
நீர் தந்தது அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே
#79
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால்
#80
தருவது விதியே என்றால் தவம் பெரிது உடையரேனும்
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ
ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள்
இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி நீ எந்தாய்
#81
அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான் முடிந்தது என் வாழ்வும் உன்னின்
சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள்
#82
கோபமும் மறனும் மான கொதிப்பும் என்று இனைய எல்லாம்
பாபம் நின்ற இடத்து நில்லா பெற்றி போல் பற்று விட்ட
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே
#83
கரனையும் மறந்தான் தங்கை மூக்கினை கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி
அரனையும் கொண்ட காமன் அம்பினால் முன்னை பெற்ற
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான்
#84
சிற்றிடை சீதை என்னும் நாமமும் சிந்தை-தானும்
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ
கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கல் ஆமோ
#85
மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான்
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே
#86
விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும்
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்
கதி உறு பொறியின் வெய்ய காம நோய் கல்வி நோக்கா
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே
#87
பொன் மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட
தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே
#88
எழுந்தனன் இருக்கை-நின்று ஆண்டு ஏழ்_உலகத்துள்ளோரும்
மொழிந்தனர் ஆசி ஓசை முழங்கின சங்கம் எங்கும்
பொழிந்தன பூவின் மாரி போயினர் புறத்தோர் எல்லாம்
அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடக கோயில் புக்கான்
#89
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளி பாங்கர்
தேவிமார் குழுவும் நீங்க சேர்ந்தனன் சேர்தலோடும்
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும் குயமும் புக்கு
பாவியா கொடுத்த வெம்மை பயப்பய பரந்தது அன்றே
#90
நூக்கல் ஆகலாத காதல் நூறு_நூறு கோடி ஆய்
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென்
சேக்கை வீ கரிந்து திக்கயங்கள் எட்டும் வென்ற தோள்
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான்
#91
தாது கொண்ட சீதம் மேவு சாந்து சந்த மென் தளிர்
போது கொண்டு அடுத்தபோது பொங்கு தீ மருந்தினால்
வேது கொண்டது என்ன மேனி வெந்து வெந்து விம்மு தீ
ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான்
#92
தாவியாது தீது எனாது தையலாளை மெய் உற
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல்
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால்
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான்
#93
பரம் கிடந்த மாதிரம் பரித்த பாழி யானையின்
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன்
மரம் குடைந்த தும்பி போல் அனங்கன் வாளி வந்துவந்து
உரம் குடைந்து நொந்துநொந்து உளைந்துஉளைந்து ஒடுங்கினான்
#94
கொன்றை நன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான்
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை
தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான்
#95
அன்ன காலை அங்கு நின்று எழுந்து அழுங்கு சிந்தையான்
இன்ன ஆறு செய்வென் என்று ஓர் எண் இலான் இரங்குவான்
பன்னு கோடி தீப மாலை பாலை யாழ் பழித்த சொல்
பொன்னனார் எடுக்க அங்கு ஓர் சோலையூடு போயினான்
#96
மாணிக்கம் பனசம் வாழை மரகதம் வயிரம் தேமா
ஆணி பொன் வேங்கை கோங்கம் அரவிந்தராகம் பூகம்
சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி
பாணி தண் பளிங்கு நாகம் பாடலம் பவளம்-மன்னோ
#97
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான
மீனொடு மலர்கள்-தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர்
பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான்
#98
கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம்
வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும்
இனியன மிழற்றுகின்ற யாவையும் இலங்கை வேந்தன்
முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே
#99
பருவத்தால் வாடை தந்த பசும் பனி அனங்கன் வாளி
உருவி புக்கு ஒளித்த புண்ணில் குளித்தலும் உளைந்து விம்மி
இருதுத்தான் யாது அடா என்று இயம்பினன் இயம்பலோடும்
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே
#100
வன் பணை மரமும் தீயும் மலைகளும் குளிர வாழும்
மென் பனி எரிந்தது என்றால் வேனிலை விளம்பலாமோ
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ
இன்பமும் துன்பம்-தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே
#101
மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல்
வேதனை வெப்பும் செய்ய வேனிலும் வெதுப்பும் காலை
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி
கூதிர் ஆம் பருவம் தன்னை கொணருதிர் விரைவின் என்றான்
#102
கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள்
சீதமும் சுடுமோ முன்னை சிசிரமே காண் இது என்றான்
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான்
#103
என்னலும் இருது எல்லாம் ஏகின யாவும் தம்தம்
பன் அரும் பருவம் செய்யா யோகி போல் பற்று நீத்த
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதல் பாசம் வீசி
துன்_அரும் தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே
#104
கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே
காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ
சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ
#105
நாரம் உண்டு எழுந்த மேகம் தாமரை வளையம் நான
சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு
ஆரம் உண்டு எரிந்த சிந்தை அயர்கின்றான் அயல் நின்றாரை
ஈரம் உண்டு என்பர் ஓடி இந்துவை கொணர்-மின் என்றான்
#106
வெம் சினத்து அரக்கன் ஆண்ட வியல் நகர் மீது போதும்
நெஞ்சு இலன் ஒதுங்குகின்ற நிறை மதியோனை தேடி
அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன
சஞ்சலம் துறந்துதான் அ சந்திரன் உதிக்கலுற்றான்
#107
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து
செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில்
வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல்
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான்
#108
பராவ_அரும் கதிர்கள் எங்கும் பரப்பி மீ படர்ந்து வானில்
தராதலத்து எவரும் பேண அவனையே சலிக்கும் நீரால்
அரா அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன
#109
அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரி
பருகின பரந்து பாய்ந்த நிலா சுடர் பனி மென் கற்றை
நெரி உறு புருவ செம் கண் அரக்கற்கு நெருப்பின் நாப்பண்
உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே
#110
மின் எலாம் திகழும் சோதி விழு_நிலா மிதிலை சூழ்ந்த
செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலா
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என சுட்டது அன்றே
#111
கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் கறுத்து நோக்கி
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன
முருங்கிய கனலின் மூரி விடத்தினை முருக்கும் சீற்றத்து
அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான்
#112
அவ்வழி சிலதர் அஞ்சி ஆதியாய் அருள் இல்லாரை
இவ்வழி தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால்
செவ்வழி கதிரோன் என்றும் தேரின் மேல் அன்றி வாரான்
வெவ் வழித்து எனினும் திங்கள் விமானத்தின் மேலது என்றார்
#113
பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காம
குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான் மதியாலே
தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே
உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான்
#114
தேயாநின்றாய் மெய் வெளுத்தாய் உள்ளம் கறுத்தாய் நிலை திரிந்து
காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ
பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால்
ஓயாநின்றேன் உயிர் காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே
#115
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு
கூற்றாய் நின்ற குல சனகி குவளை மலர்ந்த தாமரைக்கு
தோற்றாய் அதனால் அகம் கரிந்தாய் மெலிந்தாய் வெதும்ப தொடங்கினாய்
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ
#116
என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி
முன்னை பகலும் பகலோனும் வருக என்றான் மொழியா-முன்
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில்
பன்னற்கு அரிய பகலவனும் பகலும் வந்து பரந்தவால்
#117
இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின் அவிர் செம்பொன்
உருக்கி அனைய கதிர் பாய அனல் போல் விரிந்தது உயர் கமலம்
அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா அடாத பொருள் எய்தி
செருக்கி இடையே திரு இழந்த சிறியோர் போன்ற சேதாம்பல்
#118
நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய்
சேணில் நின்று புறம் சாய்ந்து கங்குல் தாரம் பின்செல்ல
பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுத போவான் புகழ் வேந்தர்
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான்
#119
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள்
புணர்ந்தவர் இடை ஒரு வெகுளி பொங்கலால்
கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று
உணர்ந்திலர் கனவினும் ஊடல் தீர்ந்திலர்
#120
தள்ளுறும் உயிரினர் தலைவர் நீங்கலால்
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர்
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர்
கள் உகுவன என கலுழும் கண்ணினார்
#121
அணைமலர் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர்
பணைகளை தழுவிய பவள வல்லி போல்
இணை மலர் கைகளின் இறுக இன் உயிர்
துணைவரை தழுவினர் துயில்கின்றார் சிலர்
#122
அளி இனம் கடம்-தொறும் ஆர்ப்ப ஆய் கதிர்
ஒளிபட உணர்ந்தில உறங்குகின்றன
தெளிவு_இல இன் துயில் விளையும் சேக்கையுள்
களிகளை நிகர்த்தன களி நல் யானையே
#123
விரிந்து உறை துறை-தொறும் விளக்கம் யாவையும்
எரிந்து இழுது அஃகல ஒளி இழந்தன
அரும் துறை நிரம்பிய உயிரின் அன்பரை
பிரிந்து உறைதரும் குல பேதைமாரினே
#124
புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது புல்லியும்
வனைந்தில வைகறை மலரும் மா மலர்
நனம் தலை அமளியில் துயிலும் நங்கைமார்
அனந்தரின் நெடும் கணோடு ஒத்த ஆம்-அரோ
#125
இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும்
நிச்சயம் பகலும் தம் இமைகள் நீக்கல
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா
வச்சையர் நெடு மனை வாயில் மானவே
#126
நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர்
தஞ்சு உற விடுவது ஓர் தயாவு தாங்கலால்
வெம் சிறை நீங்கிய வினையினார் என
நெஞ்சு உற களித்தன நேமிப்புள் எலாம்
#127
நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய
ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர்
பாணரின் தளர்ந்தன பாடல் தும்பியே
#128
அரு மணி சாளரம் அதனினூடு புக்கு
எரி கதிர் இன் துயில் எழுப்ப எய்தவும்
மருளொடு தெருளுறும் நிலையர் மங்கையர்
தெருளுற மெய் பொருள் தெரிந்திலாரினே
#129
ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர்
நாவலர் இயற்றிய நாழி நாம நூல்
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும்
கூவுறு கோழியும் துயில்வு கொண்டவே
#130
இனையன உலகினில் நிகழும் எல்லையில்
கனை கழல் அரக்கனும் கண்ணின் நோக்கினான்
நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால்
அனைய அ திங்களே ஆகுமால் என்றான்
#131
திங்களோ அன்று இது செல்வ செம் கதிர்
பொங்கு உளை பச்சை அம் புரவி தேரதால்
வெம் கதிர் சுடுவதே அன்றி மெய் உற
தங்கு தண் கதிர் சுட தகாது என்றார் சிலர்
#132
நீல சிகர கிரி அன்னவன் நின்ற வெய்யோன்
ஆலத்தினும் வெய்யன் அகற்றி அரற்றுகின்ற
வேலை குரலை தவிர்க என்று விலக்கி மேலை
மாலை பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை என்றான்
#133
சொன்னான் நிருதர்க்கு இறை அம் மொழி சொல்லலோடும்
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை
மு நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால்
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ
#134
குட-பாலின் முளைத்தது கண்ட குணங்கள் தீயோன்
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின்
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே
#135
தாது உண் சடில தலை வைத்தது தண் தரங்கம்
மோதும் கடலிற்கிடை முந்து பிறந்த போதே
ஓதும் கடுவை தன் மிடற்றில் ஒளித்த தக்கோன்
ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே
#136
உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடி
திருமு இ சிறு மின் பிறை தீமை குறைந்தது இல்லை
கருமை கறை நெஞ்சினில் நஞ்சு கலந்த பாம்பின்
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ
#137
கன்ன கனியும் இருள்-தன்னையும் காண்டும் அன்றே
முன்னை கதிர் நன்று இது அகற்றுதிர் மொய்ம்பு சான்ற
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர்
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ
#138
ஆண்டு அ பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம்
தீண்டற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி
வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி
#139
முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என் முற்றும் முற்றி
பொருள் தீங்கு இல் கேள்வி சுடர் புக்கு வழங்கல் இன்றி
குருடு ஈங்கு இது என்ன குறிக்கொண்டு கண்ணோட்டம் குன்றி
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அ அந்தகாரம்
#140
விள்ளாது செறிந்து இடை மேல் உற ஓங்கி எங்கும்
நள்ளா இருள் வந்து அகன் ஞாலம் விழுங்கலோடும்
எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது
உள்ளாது உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் என்றான்
#141
வேலைத்தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும்
ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன்
ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும்
கால கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே
#142
அம்பும் அனலும் நுழையா கன அந்தகார
தும்பு மழை-கொண்டு அயல் ஒப்பு அரிது ஆய துப்பின்
கொம்பர் குரும்பை குலம் கொண்டது திங்கள் தாங்கி
வெம்பும் தமியேன் முன் விளக்கு என தோன்றும் அன்றே
#143
மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ
தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா
இருளூடு இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீல
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே
#144
புடை கொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும்
இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம்
விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்லமெல்ல
மட மங்கையர் ஆய் என் மனத்தவர் ஆயினாரே
#145
பண்டு ஏய் உலகு ஏழினும் உள்ள படைக்கணாரை
கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உரு கண்டிலேனால்
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே
#146
பூண்டு இ பிணியால் உறுகின்றது தான் பொறாதாள்
தேண்டி கொடு வந்தனள் செய்வது ஓர் மாறும் உண்டோ
காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால்
ஈண்டு இப்பொழுதே விரைந்து எங்கையை கூவுக என்றான்
#147
என்றான் எனலும் கடிது ஏகினர் கூவும் எல்லை
வன் தாள் நிருத குலம் வேரற மாய்த்தல் செய்வாள்
ஒன்றாத காம கனல் உள் தெறலோடும் நாசி
பொன் தாழ் குழை-தன்னொடும் போக்கினள் போய் புகுந்தாள்
#148
பொய் நின்ற நெஞ்சின் கொடியாள் புகுந்தாளை நோக்கி
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய்
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர்
இ நின்றவள் ஆம்-கொல் இயம்பிய சீதை என்றான்
#149
செந்தாமரை கண்ணொடும் செம் கனி வாயினோடும்
சந்து ஆர் தடம் தோளோடும் தாழ் தட கைகளோடும்
அம் தார் அகலத்தொடும் அஞ்சன குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள்
#150
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே
கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை
மண்பாலவரே-கொல் விளைப்பவர் மாயை என்றான்
#151
ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள்-தோறும்
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள்
#152
அன்னாள் அது கூற அரக்கனும் அன்னது ஆக
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான்
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான்
அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள்
#153
ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய
வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள்
#154
என்றாள் அகன்றாள் அ அரக்கனும் ஈடழிந்தான்
ஒன்றானும் உணர்ந்திலன் ஆவி உலைந்து சோர்ந்தான்
நின்றாரும் நடுங்கினர் நின்றுள நாளினாலே
பொன்றாது உளன் ஆயினன் அத்துணை-போலும் அன்றே
#155
இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன்
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி
கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான்
#156
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான்
சிந்தாவினை அன்றியும் கைவினையாலும் செய்தான்
அம் தாம நெடும் தறி ஆயிரத்தால் அமைத்த
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண
#157
காந்தம் அமுதின் துளி கால்வன கால மீனின்
வேந்தன் ஒளி அன்றியும் மேலொடு கீழ் விரித்தான்
பூம் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான்
ஏந்தும் மணி கற்பக சீதள கா இழைத்தான்
#158
ஆணிக்கு அமை பொன் கை மணி சுடர் ஆர் விளக்கம்
சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள்
பூணின் பொலிவார் புடை ஏந்திட பொங்கு தோளான்
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான்
#159
அல் ஆயிர_கோடி அடுக்கியது ஒத்ததேனும்
நல்லார் முகம் ஆம் நளிர் வால் நிலவு ஈன்ற நாம
பல் ஆயிர_கோடி பனி சுடர் ஈன்ற திங்கள்
எல்லாம் உடன் ஆய் இருள் ஓட இரித்தது அன்றே
#160
பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற
கற்ப தருவின் கதிர் நாள் நிழல் கற்றை நாற
அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன்
நிற்ப தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ
#161
ஊறு ஓசை முதல் பொறி யாவையும் ஒன்றின் ஒன்று
தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன் செய்கை ஓரான்
வேறு ஆய பிறப்பிடை வேட்கை விசித்தது ஈர்ப்ப
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான்
#162
தண்டல் இல் தவம் செய்வோர் தாம் வேண்டிய தாயின் நல்கும்
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம்பொன்
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான்
#163
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி
வேரி அம் சரள சோலை வேனிலான் விருந்து செய்ய
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே
#164
சாளரத்தூடு வந்து தவழ்தலும் தரித்தல் தேற்றான்
நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான்
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன
கோள் உற கொதித்து விம்மி உழையரை கூவி சொன்னான்
#165
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன
தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான்
#166
அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும்
வெ வழி அமைந்த செம் கண் வெருவுற நோக்கி வெய்யோன்
செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார்
#167
வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால்
மாண்டது போலும் கொள்கை யானுடை வன்மை வல்லை
தேண்டி நீர் திசைகள்-தோறும் சேணுற விசையில் செல்குற்று
ஈண்டு இவன் தன்னை பற்றி இரும் சிறை இடுதிர் என்றான்
#168
காற்றினோன்-தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால்
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால்
ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரை கொணர்திர் என்றான்
#169
ஏவின சிலதர் ஓடி ஏ எனும் துணையில் எங்கும்
கூவினர் கூவலோடும் குறுகினர் கொடி திண் தேர் மேல்
மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய
தேவரும் வானம் தன்னில் தேவரும் சிந்தை சிந்த
#170
வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் தெளிவு_இல் நெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான்

11 மாரீசன் வதை படலம்

#1
இருந்த மாரீசன் அந்த இராவணன் எய்தலோடும்
பொருந்திய பயத்தன் சிந்தை பொருமுற்று வெருவுகின்றான்
கரும் தட மலை அன்னானை எதிர்கொண்டு கடன்கள் யாவும்
திருந்திய செய்து செவ்வி திருமுகம் நோக்கி செப்பும்
#2
சந்த மலர் தண் கற்பக நீழல் தலைவற்கும்
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய்
இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின்
வந்த கருத்து என் சொல்லுதி என்றான் மருள்கின்றான்
#3
ஆனது அனைத்தும் ஆவி தரித்தேன் அயர்கின்றேன்
போனது பொற்பும் மேன்மையும் அற்றேன் புகழோடும்
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா
வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ
#4
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார்
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன் மேல் ஓர்
புன்மை தெரிப்பின் வேறு இனி எற்றே புகல் வேலோய்
#5
திருகு சினத்தார் முதிர மலைந்தார் சிறியோர் நாள்
பருகினர் என்றால் வென்றி நலத்தின் பழி அன்றோ
இரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன்
மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால்
#6
வெப்பு அழியாது என் நெஞ்சம் உலர்ந்தேன் விளிகின்றேன்
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும்
துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு
இ பழி நின்னால் தீரிய வந்தேன் இவண் என்றான்
#7
இ சொல் அனைத்தும் சொல்லி அரக்கன் எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன்
சிச்சி என தன் மெய் செவி பொத்தி தெருமந்தான்
அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான்
#8
மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய்
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன்
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா
சொன்னான் அன்றே அன்னவனுக்கு துணிவு எல்லாம்
#9
அற்ற கரத்தொடு உன் தலை நீயே அனல் முன்னில்
பற்றினை உய்த்தாய் பற்பல காலம் பசி கூர
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ
பெற்றனை செல்வம் பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ
#10
திற திறனாலே செய் தவம் முற்றி திரு உற்றாய்
மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய்
அற திறனாலே எய்தினை அன்றோ அது நீயும்
புற திறனாலே பின்னும் இழக்க புகுவாயோ
#11
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் நடை அல்லா
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும்
தாரம் கொண்டார் என்ற இவர் தம்மை தருமம்தான்
ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா
#12
அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான்
இந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார்
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார்
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய்
#13
செய்தாயேனும் தீவினையோடும் பழி அல்லால்
எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான்
வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும்
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம்
#14
என்றால் என்னே எண்ணலையே நீ கரன் என்பான்
நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை அம்மா
தன் தானை திண் தேரொடும் மாள தனு ஒன்றால்
கொன்றான் முற்றும் கொல்ல மனத்தில் குறிகொண்டான்
#15
வெய்யோர் யாரே வீர விராதன் துணை வெய்யோர்
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் என்றால்
உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும்
நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ
#16
மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய
வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார்
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ
#17
எம்பிக்கும் என் அன்னை-தனக்கும் இறுதிக்கு ஓர்
அம்பு உய்க்கும் போர் வில்லி-தனக்கும் அயல் நிற்கும்
தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன்
கம்பிக்கும் என் நெஞ்சு அவன் என்றே கவல்கின்றேன்
#18
நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையாவால்
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் புலை ஆடற்கு
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான்
#19
கங்கை சடை வைத்தவனோடும் கயிலை வெற்பு ஓர்
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள்
இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன்
வெம் கண் எரிய புருவம் மீதுற விடைத்தான்
#20
நிகழ்ந்ததை நினைத்திலை என் நெஞ்சின் நிலை அஞ்சாது
இகழ்ந்தனை எனக்கு இளைய நங்கை முகம் எங்கும்
அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை ஐயா
புகழ்ந்தனை தனி பிழை பொறுத்தனென் இது என்றான்
#21
தன்னை முனிவுற்ற தறுகண் தகவிலோனை
பின்னை முனிவுற்றிடும் என தவிர்தல் பேணான்
உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய்
என்னை முனிவுற்றிலை இது என் என இசைத்தான்
#22
எடுத்த மலையே நினையின் ஈசன் இகல் வில்லாய்
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள்
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ
#23
யாதும் அறியாய் உரை கொளாய் இகல் இராமன்
கோதை புனையா-முன் உயிர் கொள்ளைபடும் அன்றே
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய்
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ
#24
உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா
நெஞ்சு பறை-போதும் அது நீ நினையகில்லாய்
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார்
நஞ்சு நுகர்வாரை இது நன்று எனலும் நன்றோ
#25
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் மற்றை
தேசம் முதல் முற்றும் ஓர் இமைப்பின் உயிர் தின்ப
கோசிகன் அளித்த கடவுள் படை கொதிப்போடு
ஆசு இல கணிப்பு இல இராமன் அருள் நிற்ப
#26
வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய்
தீது உரை செய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ
மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன்
ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான்
#27
என்ன உரை இத்தனையும் எத்தனையும் எண்ணி
சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான்
அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய்
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ
#28
திக்கயம் ஒளிப்ப நிலை தேவர் கெட வானம்
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும்
சக்கரம் நடத்தும் எனையோ தயரதன் தன்
மக்கள் நலிகிற்பர் இது நன்று வலி அன்றோ
#29
மூ_உலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன்
மேவலர் கிடைக்கின் இதன் மேல் இனியது உண்டோ
ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ
#30
மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால்
ஒறுத்து மனம் உற்றது முடிப்பென் ஒழிகல்லேன்
வெறுப்பன கிளத்தலும் இ தொழிலை விட்டு என்
குறிப்பின் வழி நிற்றி உயிர்கொண்டு உழலின் என்றான்
#31
அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம்
தருக்கினர் கெடுவர் என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ
செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான்
#32
உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது
புன்மையின் நின்ற நீராய் செய்வது புகல்தி என்றான்
#33
என்றலும் எழுந்து புல்லி ஏறிய வெகுளி நீங்கி
குன்று என குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால்
பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ
தென்றலை பகையை செய்த சீதையை தருதி என்றான்
#34
ஆண்டையான் அனைய கூற அரக்கர் ஓர் இருவரோடும்
பூண்ட என் மானம் தீர தண்டகம் புக்க காலை
தூண்டிய சரங்கள் பாய துணைவர் பட்டு உருள அஞ்சி
மீண்ட யான் சென்று செய்யும் வினை என்-கொல் விளம்புக என்றான்
#35
ஆயவன் அனைய கூற அரக்கர் கோன் ஐய நொய்து உன்
தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன்
போய் ஐயா புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ
மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான்
#36
புறத்து இனி உரைப்பது என்னே புரவலன் தேவி-தன்னை
திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும்
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன்
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான்
#37
ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல
தானையும் வேண்டுமோ என் தட கை வாள் தக்கது அன்றோ
ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கும் அன்றே
மானவள் ஆதலாலே மாயையின் வலித்தும் என்றான்
#38
தேவியை தீண்டா-முன்னம் இவன் தலை சரத்தின் சிந்தி
போம் வகை புணர்ப்பன் என்று புத்தியால் புகல்கின்றேற்கும்
ஆம் வகை ஆயிற்று இல்லை ஆர் விதி விளைவை ஓர்வார்
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா
#39
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான்
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான்
மின்னு வேல் அரக்கர்_கோனும் வேறு ஒரு நெறியில் போனான்
#40
மேல்_நாள் அவர் வில் வலி கண்டமையால்
தான் ஆக நினைந்து சமைந்திலனால்
மான் ஆகுதி என்றவன் வாள் வலியால்
போனான் மனமும் செயலும் புகல்வாம்
#41
வெம் சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்
#42
அ காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து
இ காலும் நலிந்தும் ஓர் ஈறு பெறான்
மு காலின் முடிந்திடுவான் முயல்வான்
புக்கான் அ இராகவன் வைகு புனம்
#43
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால்
மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர்
பொன் மான் உருவம் கொடு போயினனால்
நன் மான் அனையாள்-தனை நாடுறுவான்
#44
கலைமான் முதல் ஆயின கண்ட எலாம்
அலை மானுறும் ஆசையின் வந்தனவால்
நிலையா மன வஞ்சனை நேயம் இலா
விலை மாதர்-கண் யாரும் விழுந்து எனவே
#45
பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால்
நையா இடை நோவ நடந்தனளால்
வைதேவி தன் வால் வளை மென் கை எனும்
கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள்
#46
உண்டாகிய கேடு உடையார் துயில்வாய்
எண் தானும் இயைந்து இயையா உருவம்
கண்டார் எனலாம் வகை கண்டனளால்
பண்டு ஆரும் உறா இடர்படறுவாள்
#47
காணா இது கைதவம் என்று உணராள்
பேணாத உளம்-கொடு பேணினளால்
வாழ்நாள் அ இராவணன் மாளுதலால்
வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால்
#48
நெற்றி பிறையாள் முனம் நின்றிடலும்
முற்றி பொழி காதலின் முந்துறுவாள்
பற்றி தருக என்பென் என பதையா
வெற்றி சிலை வீரனை மேவினளால்
#49
ஆணி பொனின் ஆகியது ஆய் கதிரால்
சேணில் சுடர்கின்றது திண் செவி கால்
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால்
காண தகும் என்றனள் கை தொழுவாள்
#50
ஆண்டு அங்கு இளையான் உரையாடினனால்
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா
பூண் துஞ்சு பொலம் கொடியோய் அது நாம்
காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான்
#51
காயம் கனகம் மணி கால் செவி வால்
பாயும் உருவோடு இது பண்பு அலவால்
மாயம் எனல் அன்றி மன கொளவே
ஏயும் இறை மெய் அல என்ற அளவே
#52
நில்லா உலகின் நிலை நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம்
பல் ஆயிர_கோடி பரந்துளவால்
இல்லாதன இல்லை இளம் குமரா
#53
என் என்று நினைத்தது இழைத்து உளம் நம்
கன்னங்களின் வேறு உள காணுதுமால்
பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ்
அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ
#54
முறையும் முடிவும் இலை மொய் உயிர் என்று
இறைவன் இளையானொடு இயம்பினனால்
பறையும் துணை அன்னது பல் நெறி போய்
மறையும் என ஏழை வருந்தினளால்
#55
அனையவள் கருத்தை உன்னா அஞ்சன குன்றம் அன்னான்
புனை_இழை காட்டு அது என்று போயினான் பொறாத சிந்தை
கனை கழல் தம்பி பின்பு சென்றனன் கடக்க ஒண்ணா
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே
#56
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும்
தூக்கிலன் நன்று இது என்றான் அதன் பொருள் சொல்லல் ஆகும்
சேக்கையின் அரவு நீங்கி பிறந்தது தேவர் செய்த
பாக்கியம் உடைமை அன்றோ அன்னது பழுது போமோ
#57
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய்
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ
பல் நக்க தரளம் ஒக்கும் பசும் புல் மேல் படரும் மெல் நா
மின் ஒக்கும் செம்பொன் மேனி வெள்ளியின் விளங்கும் புள்ளி
#58
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற
அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார்
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும்
விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ காணாய்
#59
ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி
காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல்
வேரி அம் தெரியல் வீர மீள்வதே மேன்மை என்றான்
#60
அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும்
கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை
பற்றினை தருதி ஆயின் பதியிடை அவதி எய்த
பெற்றுழி இனிது உண்டாட பெறற்கு அரும் தகைமைத்து என்றாள்
#61
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன்
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும்
வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான்
#62
மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது
காய் சினத்தவரை கொன்று உடன் கழித்தோமும் ஆதும்
தூயதேல் பற்றி கோடும் சொல்லிய இரண்டின் ஒன்று
தீயதே உரைத்தி என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான்
#63
பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம்
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம்
முன் நின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல்
பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான்
#64
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம்
மிகை உடைத்து என்றும் பூண்ட விரதத்தை விடுதும் என்றல்
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான்
#65
அடுத்தவும் எண்ணி செய்தல் அண்ணலே அமைதி அன்றோ
விடுத்து இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும் வில்லால்
தொடுத்த வெம் பகழி தூவி தொடர்ந்தனென் விரைந்து சென்று
படுக்குவென் அது அன்று ஆயின் பற்றினென் கொணர்வென் என்றான்
#66
ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்து-அனைய செய்ய
வாயிடை மழலை இன் சொல் கிளியினின் குழறி மாழ்கி
நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா
சேயரி குவளை முத்தம் சிந்துபு சீறி போனாள்
#67
போனவள் புலவி நோக்கி புரவலன் பொலன் கொள் தாராய்
மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா
வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் விரையலுற்றான்
#68
முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான்
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன் இதனை ஐய
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி
பொன்_அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே
#69
மந்திரத்து இளையோன் வாய்மொழி மனத்து கொள்ளான்
சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி
சிந்துர பவள செ வாய் முறுவலன் சிகர செவ்வி
சுந்தர தோளினான் அ மானினை தொடரலுற்றான்
#70
மிதித்தது மெல்லமெல்ல வெறித்தது வெருவி மீதில்
குதித்தது செவியை நீட்டி குரபதம் உரத்தை கூட்டி
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும்
கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே
#71
நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம்
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா வேறும் ஓர் அண்டம் உண்டோ
ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார்
#72
குன்றிடை இவரும் மேக குழுவிடை குதிக்கும் கூட
சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா
#73
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே
ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே
ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த
மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல்
#74
பற்றுவான் இனி அல்லன் பகழியால்
செற்று வானில் செலுத்தல் உற்றான் என
மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா
உற்ற வேதத்தின் உம்பரின் ஓங்கினான்
#75
அ கணத்தினில் ஐயனும் வெய்ய தன்
சக்கரத்தின் தகைவு அரிது ஆயது ஓர்
செக்கர் மேனி பகழி செலுத்தினான்
புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு எனா
#76
நெட்டிலை சரம் வஞ்சனை நெஞ்சுற
பட்டது அப்பொழுதே பகு வாயினால்
அட்ட திக்கினும் அப்புறமும் புக
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன்
#77
வெய்யவன் தன் உருவோடு வீழ்தலும்
செய்யது அன்று என செப்பிய தம்பியை
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான்
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான்
#78
ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அ
நீசன் மேனியை நின்று உற நோக்கினான்
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே
இவன் என்பதும் தேறினான்
#79
புழைத்த வாளி உரம் புக புல்லியோன்
இழைத்த மாயையின் என் குரலால் எடுத்து
அழைத்தது உண்டு அது கேட்டு அயர்வு எய்துமால்
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான்
#80
மாற்றம் இன்னது மாய மாரீசன் என்று
ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது
ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால்
தேற்றுமால் இளையோன் என தேறினான்
#81
மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன்
சூழ்வது ஓர் பொருள் உண்டு இவன் சொல்லினால்
மூள்வது ஏதம் அது முடியா-முனம்
மீள்வதே நலன் என்று அவன் மீண்டனன்

12 இராவணன் சூழ்ச்சி படலம்

#1
சங்கு அடுத்த தனி கடல் மேனியாற்கு
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்
கொங்கு அடுத்த மலர் குழல் கொம்பனாட்கு
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம்
#2
எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய
செயிர் தலைக்கொண்ட சொல் செவி சேர்தலும்
குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள்
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள்
#3
பிடித்து நல்கு இ உழை என பேதையேன்
முடித்தனென் முதல் வாழ்வு என மொய் அழல்
கொடி படித்தது என நெடும் கோள் அரா
இடிக்கு உடைந்தது என புரண்டு ஏங்கினாள்
#4
குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன்
மற்று அ வாள் அரக்கன் புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல்
நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள்
#5
எண்மை ஆர் உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர்
திண்மையார் உளர் என செப்பல்-பாலரோ
பெண்மையால் உரை-செய பெறுதிரால் என
உண்மையான் அனையவட்கு உணர கூறினான்
#6
ஏழுமே கடல் உலகு ஏழும் ஏழுமே
சூழும் ஏழ் மலை அவை தொடர்ந்த சூழல்-வாய்
வாழும் ஏழையர் சிறு வலிக்கு வாள் அமர்
தாழுமே இராகவன் தனிமை தையலீர்
#7
பார் என புனல் என பவன வான் கனல்
பேர் எனைத்து அவை அவன் முனியின் பேருமால்
கார் என கரிய அ கமலக்கண்ணனை
யார் என கருதி இ இடரின் ஆழ்கின்றீர்
#8
இடைந்துபோய் நிசிசரற்கு இராமன் எவ்வம் வந்து
அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின்
மிடைந்த பேர் அண்டங்கள் மேல கீழன
உடைந்துபோம் அயன் முதல் உயிரும் வீயுமால்
#9
மாற்றம் என் பகர்வது மண்ணும் வானமும்
போற்ற வன் திரிபுரம் எரிந்த புங்கவன்
ஏற்றி நின்று எய்த வில் இற்றது எம்பிரான்
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ
#10
காவலன் ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல்
மூ-வகை உலகமும் முடியும் முந்து உள
தேவரும் முனிவரும் முதல செவ்வியோர்
ஏவரும் வீழ்ந்துளார் மற்று அறமும் எஞ்சுமால்
#11
பரக்க என் பகர்வது பகழி பண்ணவன்
துரக்க அங்கு அது பட தொலைந்து சோர்கின்ற
அரக்கன் அ உரை எடுத்து அரற்றினான் அதற்கு
இரக்கம் உற்று இரங்கலிர் இருத்திர் ஈண்டு என்றான்
#12
என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள்
கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள்
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா
வன் தறுகண்ணினள் வயிர்த்து கூறுவாள்
#13
ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி
எரியிடை கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா
#14
தாமரை வனத்திடை தாவும் அன்னம் போல்
தூம வெம் காட்டு எரி தொடர்கின்றாள்-தனை
சேம வில் குமரனும் விலக்கி சீறடி
பூ முகம் நெடு நிலம் புல்லி சொல்லுவான்
#15
துஞ்சுவது என்னை நீர் சொன்ன சொல்லை யான்
அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி
இஞ்சு இரும் அடியனேன் ஏகுகின்றனென்
வெம் சின விதியினை வெல்ல வல்லமோ
#16
போகின்றேன் அடியனேன் புகுந்து வந்து கேடு
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து
ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின்
வேகின்ற சிந்தையான் விடை கொண்டு ஏகினான்
#17
இரும்பெனேல் எரியிடை இறப்பரால் இவர்
பொருப்பு அனையானிடை போவெனே எனின்
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர்
விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான்
#18
அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம்
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி
துறந்து போம் இதனையே துணிவென் தொல் வினை
பிறந்து போந்து இது படும் பேதையேன் எனா
#19
போவது புரிவல் யான் புகுந்தது உண்டு எனின்
காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும்
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி
தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான்
#20
இளையவன் ஏகலும் இறவு பார்க்கின்ற
வளை எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான்
முளை வரி தண்டு ஒரு மூன்றும் மு பகை
தளை அரி தவத்தர் வடிவம் தாங்கினான்
#21
ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன்
சேண் நெறி வந்தது ஓர் வருத்த செய்கையன்
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என
வீணையின் இசைபட வேதம் பாடுவான்
#22
பூ பொதி அவிழ்ந்தன நடையன் பூதலம்
தீ பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன்
காப்பு_அரு நடுக்குறும் காலன் கையினன்
மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான்
#23
தாமரை கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன்
ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன்
நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய்
#24
தோம் அறு சாலையின் வாயில் துன்னினான்
நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான்
யாவர் இ இருக்கையுள் இருந்துளீர் என்றான்
தேவரும் மருள்தர தெரிந்த மேனியான்
#25
தோகையும் அ வழி தோம்_இல் சிந்தனை
சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால்
பாகு இயல் கிளவியாள் பவள கொம்பர் போன்று
ஏகு-மின் ஈண்டு என எதிர்வந்து எய்தினாள்
#26
வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன்
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன்
பொற்பினுக்கு அணியினை புகழின் சேக்கையை
கற்பினுக்கு அரசியை கண்ணின் நோக்கினான்
#27
தூங்கல்_இல் குயில் கெழு சொல்லின் உம்பரும்
ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும்
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம்
வீங்கின மெலிந்தன வீர தோள்களே
#28
புன மயில் சாயல்-தன் எழிலில் பூ நறை
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின்
இனம் என களித்துளது என்பது என் அவன்
மனம் என களித்தது கண்ணின் மாலையே
#29
சே இதழ் தாமரை சேக்கை தீர்ந்து இவண்
மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு
ஏயுமே இருபது இங்கு இமைப்பு_இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான்
#30
அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும்
புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே
நிரை வளை முன் கை இ நின்ற நங்கையின்
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான்
#31
தேவரும் அவுணரும் தேவிமாரொடும்
கூவல்-செய் தொழிலினர் குடிமை செய்திட
மூ_உலகமும் இவர் முறையின் ஆள யான்
ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான்
#32
உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின்
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும்
தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பென் என் அரசு என்று எண்ணினான்
#33
ஆண்டையான் அனையன உன்னி ஆசை மேல்
மூண்டு எழு சிந்தனை முறை இலோன் தனை
காண்டலும் கண்ணின் நீர் துடைத்த கற்பினாள்
ஈண்டு எழுந்தருளும் என்று இனிய கூறினாள்
#34
ஏத்தினள் எய்தலும் இருத்திர் ஈண்டு என
வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள்
மா திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும்
பூ தொடர் சாலையின் இருந்த போழ்தினே
#35
நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து
அடங்கின பறவையும் விலங்கும் அஞ்சின
படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதக
கடும் தொழில் அரக்கனை காணும் கண்ணினே
#36
இருந்தவன் யாவது இ இருக்கை இங்கு உறை
அருந்தவன் யாவன் நீர் யாரை என்றலும்
விருந்தினர் இ வழி விரகு இலார் என
பெரும் தடம் கண்ணவள் பேசல் மேயினாள்
#37
தயரதன் தொல் குல தனையன் தம்பியோடு
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான்
அயர்வு இலன் இ வழி உறையும் அன்னவன்
பெயரினை தெரிகுதிர் பெருமையீர் என்றாள்
#38
கேட்டனென் கண்டிலென் கெழுவு கங்கை நீர்
நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் மலர்
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள்
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர் என்றான்
#39
அனக மா நெறி படர் அடிகள் நும் அலால்
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான்
சனகன் மா மகள் பெயர் சனகி காகுத்தன்
மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள்
#40
அ வழி அனையன உரைத்த ஆய்_இழை
வெவ் வழி வருந்தினிர் விளைந்த மூப்பினிர்
இ வழி இரு வினை கடக்க எண்ணினிர்
எ வழி நின்றும் இங்கு எய்தினீர் என்றாள்
#41
இந்திரற்கு இந்திரன் எழுதல் ஆகலா
சுந்தரன் நான்முகன் மரபில் தோன்றினான்
அந்தரத்தோடும் எ உலகும் ஆள்கின்றான்
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான்
#42
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை
ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான்
ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள்
பூசல் செய் மருப்பினை பொடி செய் தோளினான்
#43
நிற்பவர் கடைத்தலை நிறைந்து தேவரே
சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால்
கற்பகம் முதலிய நிதியம் கையன
பொற்பு அகம் மான நீர் இலங்கை பொன் நகர்
#44
பொன்னகரத்தினும் பொலன் கொள் நாகர்-தம்
தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து
எ நகரத்தினும் இனிய ஈண்டு அவன்
நல் நகரத்தன நவை இலாதன
#45
தாள் உடை மலர் உளான் தந்த அந்தம்_இல்
நாள் உடை வாழ்க்கையன் நாரி பாகத்தன்
வாள் உடை தட கையன் வாரி வைத்த வெம்
கோள் உடை சிறையினன் குணங்கள் மேன்மையான்
#46
வெம்மை தீர் ஒழுக்கினன் விரிந்த கேள்வியன்
செம்மையோன் மன்மதன் திகைக்கும் செவ்வியன்
எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும்
மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான்
#47
அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர்
எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர்
நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன்
மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான்
#48
ஆண்டையான் அரசு வீற்றிருந்த அ நகர்
வேண்டி யான் சில் பகல் உறைதல் மேவினேன்
நீண்டனென் இருந்து அவன் பிரியும் நெஞ்சிலேன்
மீண்டனென் என்றனன் வினையம் உன்னுவான்
#49
வேதமும் வேதியர் அருளும் வெஃகலா
சேதன மன் உயிர் தின்னும் தீவினை
பாதக அரக்கர்-தம் பதியின் வைகுதற்கு
ஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர்
#50
வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர்
புனல் திரு நாட்டிடை புனிதர் ஊர் புக
நினைத்திலிர் அற நெறி நினைக்கிலாதவர்
இனத்திடை வைகினிர் என் செய்திர் என்றாள்
#51
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார்
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின்
திங்கள் வாள் முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான்
#52
சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார்
தூயவர் அல்லர் சொல்லின் தொல் நெறி தொடர்ந்தோர் என்றாள்
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது
ஆயவள் அறிதல் தேற்றாள் ஆதலின் அயல் ஒன்று எண்ணாள்
#53
அயிர்த்தனள் ஆகும் என்று ஓர் ஐயுறவு அகத்து கொண்டான்
பெயர்த்து அது துடைக்க எண்ணி பிறிதுற பேசலுற்றான்
மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர்
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான்
#54
திறம் தெரி வஞ்சன் அ சொல் செப்பலும் செப்பம் மிக்காள்
அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள்
மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும்
இறந்தனர் முடிவர் பின்னர் இடர் இலை உலகம் என்றாள்
#55
மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்-தம்மை
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின்
யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும் இன்னும்
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான்
#56
மின் திரண்டு அனைய பங்கி விராதனும் வெகுளி பொங்க
கன்றிய மனத்து வென்றி கரன் முதல் கணக்கிலோரும்
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள்
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள்
#57
வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார்
கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும்
நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ
மீள_அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள்
#58
தேனிடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை
தானுடை செவிகளூடு தவழுற தளிர்த்து வீங்கும்
ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான்
#59
சீறினன் உரை-செய்வான் அ சிறு வலி புல்லியோர்கட்கு
ஈறு ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல்
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை
வீறிய பொழுது பூளை வீ என வீவன் அன்றே
#60
மேருவை பறிக்க வேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின்
நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின்
பாரினை எடுக்க வேண்டின் பல வினை சில சொல் ஏழாய்
யார் என கருதி சொன்னாய் இராவணற்கு அரிது என் என்றான்
#61
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ
கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன்
திரண்ட தோள் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்-தன்னில்
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள்
#62
என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில்
சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை
ஒன்றொடு ஒன்று அடித்த மேகத்து உரும் என எயிற்றின் ஒளி
மென்றன வெகுளி பொங்க விட்டது மாய வேடம்
#63
இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும்
தெரிவு அரு நிலையளாக தீ விடத்து அரவம் தானே
உரு கெழு சீற்றம் பொங்கி பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான்
#64
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின்
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும்
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள்
#65
விண்ணவர் ஏவல் செய்ய வென்ற என் வீரம் பாராய்
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய்
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன
எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான்
#66
குலைவு உறல் அன்னம் முன்னம் யாரையும் கும்பிடா என்
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான்
#67
செவிகளை தளிர் கையாலே சிக்குற சேமம்-செய்தாள்
கவினும் வெம் சிலை கை வென்றி காகுத்தன் கற்பினேனை
புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்கு எரி புனிதர் ஈயும்
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா
#68
புல் நுனை நீரின் நொய்தா போதலே புரிந்து நின்ற
என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ
மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம்
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள்
#69
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த
உன் துணை கணவன் அம்பு அ உயர் திசை சுமந்த ஓங்கல்
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால்
குன்றிடை தொடுத்து விட்ட பூம் கணை-கொல் அது என்றான்
#70
அணங்கினுக்கு அணங்கனாளே ஆசை நோய் அகத்து பொங்க
உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர்
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான்
#71
தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும்
கறை வாள் பட ஆவி கலங்கினள் போல்
இறைவா இளையோய் என ஏங்கினளால்
பொறைதான் உரு ஆனது ஓர் பொற்பு உடையாள்
#72
ஆண்டு ஆயிடை தீயவன் ஆய்_இழையை
தீண்டான் அயன் மேல் உரை சிந்தை-செயா
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்
கீண்டான் நிலம் யோசனை கீழ் புடையே
#73
கொண்டான் உயர் தேர் மிசை கோல் வளையாள்
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால்
மண் தான் உறும் மின்னின் மயங்கினளால்
விண்தான் எழியா எழுவான் விரைவான்
#74
விடு தேர் என வெம் கனல் வெந்து அழியும்
கொடி போல் புரள்வாள் குலைவாள் அயர்வாள்
துடியா எழுவாள் துயரால் அழுவாள்
கடிதா அறனே இது கா எனுமால்
#75
மலையே மரனே மயிலே குயிலே
கலையே பிணையே களிறே பிடியே
நிலையே உயிரே நிலை தேடினிர் போய்
உலையா வலியாருழை நீர் உரையீர்
#76
செம் சேவகனார் நிலை நீர் தெரிவீர்
மஞ்சே பொழிலே வன தேவதைகாள்
அஞ்சேல் என நல்குதிரேல் அடியேன்
உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர்
#77
நிருதாதியர் வேரற நீல் முகில் போல்
சர தாரைகள் வீசினிர் சார்கிலிரோ
வரதா இளையோய் மறு ஏதும் இலா
பரதா இளையோய் பழி பூணுதிரோ
#78
கோதாவரியே குளிர்வாய் குழைவாய்
மாதா அனையாய் மன்னே தெளிவாய்
ஓதாது உணர்வாருழை ஓடினை போய்
நீதான் வினையேன் நிலை சொல்லலையோ
#79
முந்தும் சுனைகாள் முழை வாழ் அரிகாள்
இந்த நிலனோடும் எடுத்த கை நால்
ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலைய
சிந்தும்படி கண்டு சிரித்திடுவீர்
#80
என்று இன்ன பலவும் பன்னி இரியலுற்று அரற்றுவாளை
பொன் துன்னும் புணர் மென் கொங்கை பொலன்_குழை போரில் என்னை
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான்
#81
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை
போக்கினாய் புகுந்து கொண்டு போகின்றாய் பொருது நின்னை
காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள்
#82
மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன்
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும்
வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ
#83
மொழிதரும் அளவில் நங்கை கேள் இது முரண் இல் யாக்கை
இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால்
விழி தரும் நெற்றியான்-தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான்
#84
பாவையும் அதனை கேளா தம் குல பகைஞர் தம்-பால்
போவது குற்றம் வாளின் பொருவது நாணம் போலாம்
ஆவது கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம்
ஏவம் என் பழிதான் என்னே இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள்

13 சடா உயிர் நீத்த படலம்

#1
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன்
மின் என விளங்கும் வீர துண்டத்தன் மேரு என்னும்
பொன் நெடும் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான்
#2
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று
பூழியின் உதிர விண்ணில் புடைத்து உற கிளர்ந்து பொங்கி
ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர முழுதும் வீசும்
ஊழி வெம் காற்று இது என்ன இரு சிறை ஊதை மோத
#3
சாகை வன் தலையொடு மரமும் தாழ மேல்
மேகமும் கிரிகளும் விண்ணின் மீச்செல்ல
மாக வெம் கலுழன் ஆம் வருகின்றான் என
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே
#4
யானையும் யாளியும் முதல யாவையும்
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை
மேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால்
வானமும் கானமும் மாறு கொண்டனவே
#5
உத்தமன் தேவியை உலகொடு ஓங்கு தேர்
வைத்தனை ஏகுவது எங்கு வானினோடு
இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு எனா
பத்திர சிறைகளை விரிக்கும் பண்பினான்
#6
வந்தனன் எருவையின் மன்னன் மாண்பு இலான்
எந்திர தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான்
சிந்துர கால் சிரம் செக்கர் சூடிய
கந்தர கயிலையை நிகர்க்கும் காட்சியான்
#7
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான்
மூண்டுற்று எழு வெம் கதம் முற்றிலனாய்
மீண்டுற்று உரையாடலை மேயினனால்
#8
கெட்டாய் கிளையோடும் நின் வாழ்வை எலாம்
சுட்டாய் இது என்னை தொடங்கினை நீ
பட்டாய் எனவே கொடு பத்தினியை
விட்டு ஏகுதியால் விளிகின்றிலையால்
#9
பேதாய் பிழை செய்தனை பேர் உலகின்
மாதா அனையாளை மனக்கொடு நீ
யாது ஆக நினைத்தனை எண்ணம் இலாய்
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ
#10
உய்யாமல் மலைந்து உமர் ஆர் உயிரை
மெய்யாக இராமன் விருந்திடவே
கை ஆர முகந்து கொடு அந்தகனார்
ஐயா புதிது உண்டது அறிந்திலையோ
#11
கொடு வெம் கரி கொல்லிய வந்ததன்-மேல்
விடும் உண்டை கடாவ விரும்பினையே
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் வன்
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால்
#12
எல்லா உலகங்களும் இந்திரனும்
அல்லாதவர் மூவரும் அந்தகனும்
புல்வாய் புலி கண்டது போல்வர் அலால்
வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ
#13
இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும்
வெம்மை தொழில் இங்கு இதன் மேல் இலையால்
அம்மைக்கு அரு மா நரகம் தருமால்
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ
#14
மு தேவரின் மூல முதல் பொருள் ஆம்
அ தேவர் இ மானிடர் ஆதலினால்
எ தேவரோடு எண்ணுவது எண்ணம் இலாய்
பித்தேறினை ஆதல் பிழைத்தனையால்
#15
புரம் பற்றிய போர் விடையோன் அருளால்
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும்
உரம் பெற்றன ஆவன உண்மையினோன்
சரம் பற்றிய சாபம் விடும்-தனையே
#16
வான் ஆள்பவன் மைந்தன் வளைத்த விலான்
தானே வரின் நின்று தடுப்பு அரிதால்
நானே அவண் உய்ப்பென் இ நன்_நுதலை
போ நீ கடிது என்று புகன்றிடலும்
#17
கேட்டான் நிருதர்க்கு_இறை கேழ் கிளர் தன்
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா
ஓட்டாய் இனி நீ உரை செய்குநரை
காட்டாய் கடிது என்று கனன்று உரையா
#18
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி
பெரும் புண் திறவா-வகை பேருதி நீ
இரும்பு உண்ட நிர் மீளினும் என்னுழையின்
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் காணுதியால்
#19
என்னும் அளவில் பயம் முன்னின் இரட்டி எய்த
அன்னம் அயர்கின்றது நோக்கி அரக்கன் ஆக்கை
சின்னம் உறும் இப்பொழுதே சிலை ஏந்தி நங்கள்
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை
#20
முத்து உக்கன போல் முகத்து ஆலி முலை-கண் வீழ
தத்துற்று அயரேல் தலை தால பலத்தின் ஏலும்
கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்றான்
#21
இடிப்பு ஒத்த முழக்கின் இரும் சிறை வீசி எற்றி
முடி பத்திகளை படி இட்டு முழங்கு துண்டம்
கடிப்ப கடிது உற்றவன் காண்தகும் நீண்ட வீணை
கொடி பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான்
#22
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன்
எ காலமும் இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான்
நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன
கை கார் முகத்தோடு கடை புருவம் குனித்தான்
#23
சண்ட பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி
மண்ட சிறகால் அடித்தான் சில வள் உகிரால்
கண்டப்படுத்தான் சில காலனும் காண உட்கும்
துண்ட படையால் சிலை துண்ட துண்டங்கள் கண்டான்
#24
மீட்டும் அணுகா நெடு வெம் கண் அனந்த நாகம்
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின் மீதும்
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால்
கோட்டும் அளவில் மணி குண்டலம் கொண்டு எழுந்தான்
#25
எழுந்தான் தட மார்பினில் ஏழினொடு ஏழு வாளி
அழுந்தாது கழன்றிட பெய்து எடுத்து ஆர்த்து அரக்கன்
பொழிந்தான் புகர் வாளிகள் மீளவும் போர் சடாயு
விழுந்தான் என அஞ்சினர் விண்ணவர் வெய்து உயிர்த்தார்
#26
புண்ணின் புது நீர் பொழிய பொலி புள்ளின் வேந்தன்
மண்ணில் கரனே முதலோர் உதிரத்தின் வாரி
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள
விண்ணில் பொலிகின்றது ஓர் வெண் நிற மேகம் ஒத்தான்
#27
ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள்
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி மூக்கால்
கொத்தா நகத்தால் குடையா சிறையால் புடையா
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான்
#28
அறுத்தானை அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு
செறித்தான் தட மார்பில் செறித்தலும் தேவர் அஞ்சி
வெறித்தார் வெறியா-முன் இராவணன் வில்லை மூக்கால்
பறித்தான் பறவைக்கு இறை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப
#29
எல் இட்ட வெள்ளி கயிலை பொருப்பு ஈசனோடும்
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் என பொலிந்தான்
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார்
#30
மீளா நிறத்து ஆயிரம் கண்ணவன் விண்ணின் ஓட
வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி
தாளால் இறுத்தான் தழல் வண்ணன் தட கை வில்லை
தோளால் இறுத்தான் துணை தாதை-தன் அன்பின் தோழன்
#31
ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில்
மூலம் ஒடிப்புண்டது கண்டு முனிந்த நெஞ்சன்
ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும்
சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் மறம் தோற்றிலாதான்
#32
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று
ஏற்றான் எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பில்
மேல் தான் இது செய்பவர் யார் என விண்ணுளோர்கள்
தோற்றாது நின்றார் தம் தோள் புடைகொட்டி ஆர்த்தார்
#33
பொன் நோக்கியர் தம் புலன் நோக்கிய புன்கணோரும்
இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும்
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல்
#34
வேகமுடன் வேல இழந்தான் படை வேறு எடா-முன்
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர்
பாகம் தலையை பறித்து படர் கற்பினாள்-பால்
மோகம் படைத்தான் உளைவு எய்த முகத்து எறிந்தான்
#35
எறிந்தான்-தனை நோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல்
அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி
பொறிந்து ஆங்கு எரியின் சிகை பொங்கி எழ புடைத்தான்
மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல்
#36
மண் மேல் விழுந்தான் விழலோடும் வயங்கு மான் தேர்
கண் மேல் ஒளியும் தொடரா-வகை தான் கடாவி
விண் மேல் எழுந்தான் எழ மெல்லியலாளும் வெம் தீ
புண் மேல் நுழைய துடிக்கின்றனள் போல் புரண்டாள்
#37
கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான்
அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப
#38
பாய்ந்தான் அவன் பல் மணி தண்டு பறித்து எறிந்தான்
எய்ந்து ஆர் கதி தேர் பரி எட்டினொடு எட்டும் எஞ்சி
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால்
காய்ந்தான் கவர்ந்தான் உயிர் காலனும் கைவிதிர்த்தான்
#39
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி
விண்தான் மறைப்ப செறிகின்றன வில் இலாமை
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள்
பண்டாரம் ஒக்கின்றன வள் உகிரால் பறித்தான்
#40
மா சிச்சிரல் பாய்ந்து என மார்பினும் தோள்கள் மேலும்
ஓச்சி சிறகால் புடைத்தான் உலையா விழுந்து
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் என புகன்றான்
#41
அ வேலையினே முனிந்தான் முனிந்து ஆற்றலன் அ
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான்
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான்
#42
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன்
குலிசம் எறிய சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான்
#43
விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன் மண்ணின் விண்ணோர்
இரிந்தார் இழந்தாள் துணை என்ன முனி கணங்கள்
பரிந்தார் படர் விண்டுவின் நாட்டவர் பைம்பொன் மாரி
சொரிந்தார் அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள்
#44
வெள்கும் அரக்கன் நெடு விண் புக ஆர்த்து மிக்கான்
தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள்
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள்
கொள் கொம்பு ஒடிய கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள்
#45
வன் துணை உளன் என வந்த மன்னனும்
பொன்றினன் எனக்கு இனி புகல் என் என்கின்றாள்
இன் துணை பிரிந்து இரிந்து இன்னல் எய்திய
அன்றில் அம் பெடை என அரற்றினாள்-அரோ
#46
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ
நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே
வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ
இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள்
#47
நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர்
நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம்
ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனை
காணிய வம் என கலங்கி விம்மினாள்
#48
கற்பு அழியாமை என் கடமை ஆயினும்
பொற்பு அழியா வலம் பொருந்தும் போர்வலான்
வில் பழியுண்டது வினையினேன் வந்த
இல் பழியுண்டது என்று இரங்கி ஏங்கினாள்
#49
எல் இயல் விசும்பிடை இருந்த நேமியாய்
சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை
நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியை
புல்லுதியோ என பொருமி பொங்கினாள்
#50
ஏங்குவாள் தனிமையும் இறகு இழந்தவன்
ஆங்குறு நிலைமையும் அரக்கன் நோக்கினான்
வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும்
வீங்கு தோள் மீ கொடு விண்ணின் ஏகினான்
#51
விண்ணிடை வெய்யவன் ஏகும் வேகத்தால்
கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள்
உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள்
மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள்
#52
ஏகினன் அரக்கனும் எருவை வேந்தனும்
மோக வெம் துயர் சிறிது ஆறி முன்னியே
மாகமே நோக்கினென் வஞ்சன் வல்லையில்
போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான்
#53
வந்திலர் மைந்தர் நன் மருகிக்கு எய்திய
வெம் துயர் துடைத்தனென் என்னும் மெய் புகழ்
தந்திலர் விதியினார் தரும வேலியை
சிந்தினர் மேல் இனி செயல் என் ஆம்-கொலோ
#54
வெற்றியர் உளர் எனின் மின்னின் நுண் இடை
பொன் தொடிக்கு இ நிலை புகுதல்-பாலதோ
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன்
சிற்றவை வஞ்சனை முடிய செய்ததோ
#55
பஞ்சு அணை பாம்பணை ஆக பள்ளி சேர்
அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால்
வெம் சின அரக்கனால் வெல்லல்-பாலனோ
வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால்
#56
வேரற அரக்கரை வென்று வெம் பழி
தீரும் என் சிறுவனும் தீண்ட அஞ்சுமால்
ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர்
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால்
#57
பருஞ்சு இறை இன்னன பன்னி உன்னுவான்
அரும் சிறை உற்றனள் ஆம் எனா மனம்
பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும்
இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான்
#58
அம் சிறை குருதி ஆறு அழிந்து சோரவும்
வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும்
செஞ்செவே மக்கள்-பால் சென்ற காதலும்
நெஞ்சுற துயின்றனன் உணர்வு நீங்கலான்
#59
வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய்
செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான்
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை
சிஞ்சுப வனத்திடை சிறைவைத்தான்-அரோ
#60
இ நிலை இளையவன் செயல் இயம்பினாம்
பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய
மன் நிலை அறிக என மங்கை ஏவிய
பின்னவன்-தன் நிலை பேசுவாம்-அரோ
#61
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும்
பருவரல் மீதிட பதைக்கும் நெஞ்சினான்
பெருமகன் தனை தனி பிரிந்து பேதுறும்
திரு நகர் செல்லும் அ பரதன் செய்கையான்
#62
தெண் திரை கலம் என விரைவில் செல்கின்றான்
புண்டரீக தடம் காடு பூத்து ஒரு
கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான்-தனை
கண்டனன் மனம் என களிக்கும் கண்ணினான்
#63
துண்ணெனும் அ உரை தொடர தோகையும்
பெண் எனும் பேதைமை மயக்க பேதினால்
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ
கண்ணனும் இளவலை கண்ணுற்றான்-அரோ
#64
புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் உரை பொய் எனாது புலர்வாள்
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே
#65
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை
பொன் துன்னும் வில் கை இள வீரன் வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில்
மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த விரைவோடு புல்லி உருகா
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான்
#66
இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான்
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள்
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என்
சொல்லால் மனத்தின் அடையாள் சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள்
#67
ஏகாது நிற்றி எனின் யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா
மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் அஞ்சி வஞ்ச வினையேன்
போகாது இருக்கின் இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன்
#68
சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது அதையோ தடுக்க முடியாது
ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள்
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா
#69
வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள்
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய்
முந்தே தடுக்க ஒழியாது எடுத்த வினையேன் முடித்த முடிவால்
அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான்
#70
பாணிக்க நின்று பயன் ஆவது என்னை பயில் பூவை அன்ன குயிலை
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய்
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா
#71
ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூம் சுரி குழலாள்-தனை காணான்
கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா
தேடி வந்து அது கண்டிலது ஆம் என நின்றான்
#72
கைத்த சிந்தையன் கனம் குழை அணங்கினை காணான்
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி
பொய்த்துளோர் கொள திகைத்து நின்றானையும் போன்றான்
#73
மண் சுழன்றது மால் வரை சுழன்றது மதியோர்
எண் சுழன்றது சுழன்ற அ எறி கடல் ஏழும்
விண் சுழன்றது வேதமும் சுழன்றது விரிஞ்சன்
கண் சுழன்றது சுழன்றது கதிரொடு மதியும்
#74
அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர்
திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர்
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின்
நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா
#75
நீல மேனி அ நெடியவன் மன நிலை திரிய
மூல காரணத்தவனொடும் உலகெலாம் முற்றும்
காலம் ஆம் என கடையிடு கணிக்க அரும் பொருள்கள்
மேல கீழுற கீழன மேலுறும் வேலை
#76
தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சி
பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று
ஓரும் தன்மை ஈது என் என்பது உரன் இலாதவர் போல்
தூரம் போதல்-முன் தொடர்தும் என்று இளையவன் தொழலும்
#77
ஆம் அதே இனி அமைவது என்று அமலனும் மெய்யில்
தாம வார் கணை புட்டிலும் முதலிய தாங்கி
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர்
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார்
#78
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை மெய் உற வெந்த
புண்ணினூடு உறு வேல் என மனம் மிக புழுங்கி
எண்ணி நாம் இனி செய்வது என் இளவலே என்றான்
#79
தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர்
மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே வானம்
விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று விம்மி
நிற்கும் நோக்கு இது என் பயத்தது என இளையவன் நேர்ந்தான்
#80
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி
ஏகி யோசனை இரண்டு சென்றார் இடை எதிர்ந்தார்
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான
பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார் மேல்
#81
கண்டு கண்டகரோடும் அ காரிகை பொருட்டால்
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது என்று அயிர்த்தார்
துண்ட வாளினின் சுடர் கொடி துணிந்தது என்று உணரா
புண்டரீக கண் புனல் வர புரவலன் புகல்வான்
#82
நோக்கினால் ஐய நொய்து இவண் எய்திய நுந்தை
மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததால் மொய்ம்பின்
தாக்கினான் நடு அடுத்தது தெரிகிலம் தமியன்
யாக்கை தேம்பிடும் எண்_அரும் பருவங்கள் இறந்தான்
#83
நன்று சாலவும் நடுங்க அரும் மிடுக்கினன் நாமும்
சென்று கூடல் ஆம் பொழுது எலாம் தடுப்பது திடனால்
வென்று மீட்கினும் மீட்குமால் வேறுற எண்ணி
நின்று தாழ்த்து ஒரு பயன் இலை என்றலும் நெடியோன்
#84
தொடர்வதே நலம் ஆம் என படி மிசை சுற்றி
படரும் கால் என கறங்கு என செல்லுவார் பார்த்தார்
மிடல் கொள் வெம் சிலை விண் இடு வில் முறிந்து என்ன
கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார்
#85
சிலை கிடந்ததால் இலக்குவ தேவர் நீர் படைத்த
மலை கிடந்து என வலியது வடிவினால் மதியின்
கலை கிடந்து அன்ன காட்சியது இது கடித்து ஒடித்தான்
நிலை கிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான்
#86
நின்று பின்னரும் நெடு நெறி கடந்து உடன் நிமிர
சென்று நோக்கினர் திரி சிகை கொடு நெடும் சூலம்
ஒன்று பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு
குன்று போல்வன கிடந்த கண்டு அதிசயம் கொண்டார்
#87
மறித்தும் சென்றனர் வானிடை வயங்குற வழங்கி
எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம்
நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின்
பறித்து வீசிய கவசமும் கிடந்தது பார்த்தார்
#88
கான் கிடந்தது மறைதர கால் வய கலி_மா
தான் கிடந்துழி சாரதி கிடந்துழி சார்ந்தார்
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது உலகின்
வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார்
#89
கண்டு அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர் கவின் ஆர்
விண் தலம் துறந்து இறுதியின் விரி கதிர் வெய்யோன்
மண்டலம் பல மண்ணிடை கிடந்து என மணியின்
குண்டலம் பல குலமணி பூண்களின் குவியல்
#90
தோள் அணி குலம் பல உள குண்டல தொகுதி
வாள் இமைப்பன பல உள மணி முடி பலவால்
நாள் அனைத்தையும் கடந்தனன் தமியன் நம் தாதை
யாளி போல்பவர் பலர் உளர் பொருதனர் இளையோய்
#91
திருவின் நாயகன் உரை-செய சுமித்திரை சிங்கம்
தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால்
பொருது தாதையை இத்தனை நெறி கொடு போனான்
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான்
#92
மிடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான்
உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர்
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான்
#93
துள்ளி ஓங்கு செந்தாமரை நயனங்கள் சொரிய
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர் தந்தை
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான்
#94
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று
அயிர்த்த தம்பி புக்கு அம் கையின் எடுத்தனன் அருவி
புயல் கலந்த நீர் தெளித்தலும் புண்டரீக கண்
பெயர்த்து பைப்பைய அயர்வு தீர்ந்து இனையன பேசும்
#95
தம் தாதையரை தனையர் கொலை நேர்ந்தார்
முந்து ஆரே உள்ளார் முடிந்தான் முனை ஒருவன்
எந்தாயே எற்காக நீயும் இறந்தனையால்
அந்தோ வினையேன் அரும் கூற்றம் ஆனேனே
#96
பின் உறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்-தன்
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே
உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன்
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் எந்தாயே
#97
மாண்டேனே அன்றோ மறையோர் குறை முடிப்பான்
பூண்டேன் விரதம் அதனால் உயிர் பொறுப்பேன்
நீண்டேன் மரம் போல நின்று ஒழிந்த புன் தொழிலேன்
வேண்டேன் இ மா மாய புன் பிறவி வேண்டேனே
#98
என் தாரம் பற்றுண்ண ஏன்றாயை சான்றோயை
கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய்
வன் தாள் சிலை ஏந்தி வாளி கடல் சுமந்து
நின்றேனும் நின்றேன் நெடு மரம் போல் நின்றேனே
#99
சொல் உடையார் என் போல் இனி உளரோ தொல் வினையேன்
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா
பல் உடையாய் உன்னை படை உடையான் கொன்று அகல
வில் உடையேன் நின்றேன் விறல் உடையேன் அல்லேனோ
#100
அன்னா பல பலவும் பன்னி அழும் மயங்கும்
தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய்
உன்னா உணர்வு சிறிது உள் முளைப்ப புள்_அரசும்
இன்னா உயிர்ப்பான் இருவரையும் நோக்கினான்
#101
உற்றது உணராது உயிர் உலைய வெய்து_உயிர்ப்பான்
கொற்றவரை கண்டான் தன் உள்ளம் குளிர்ப்புற்றான்
இற்ற இரு சிறகும் இன் உயிரும் ஏழ் உலகும்
பெற்றனனே ஒத்தான் பெயர்த்தேன் பழி என்றான்
#102
பாக்கியத்தால் இன்று என் பயன் இல் பழி யாக்கை
போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று
தாக்கி அரக்கன் மகுட தலை நிகர்த்த
மூக்கினால் உச்சி முறைமுறையே மோக்கின்றான்
#103
வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய
நெஞ்சகமே முன்னே நினைவித்தது ஆனாலும்
அம் சொல் மயிலை அருந்ததியை நீங்கினிரோ
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான்
#104
என்று அவன் இயம்பலும் இளைய கோமகன்
ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறா-வகை
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா
நின்றதும் நிகழ்ந்ததும் நிரப்பினான்-அரோ
#105
ஆற்றலோன் அ உரை அறைய ஆணையால்
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும்
மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை
தேற்றுதல் நன்று என இனைய செப்புவான்
#106
அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ
துதி_அறு பிறவியின் இன்ப துன்பம்தான்
விதி வயம் என்பதை மேற்கொளாவிடின்
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ
#107
தெரிவுறு துன்பம் வந்து ஊன்ற சிந்தையை
எரிவு-செய்து ஒழியும் ஈது இழுதை நீரதால்
பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை
அரிவு-செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ
#108
அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை
விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ
இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார்
தலை கலந்து இரந்தது தவத்தின் பாலதோ
#109
பொங்கு வெம் கோள் அரா விசும்பு பூத்தன
வெம் கதிர் செல்வனை விழுங்கி நீங்குமால்
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர்
திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால்
#110
அந்தரம் வருதலும் அனைய தீர்தலும்
சுந்தர தோளினிர் தொன்மை நீரவால்
மந்திர இமையவர் குருவின் வாய் மொழி
இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ
#111
தடைக்க_அரும் பெரு வலி சம்பர பெயர்
கடை தொழில் அவுணனால் குலிசக்கையினான்
படைத்தனன் பழி அது பகழி வில் வலாய்
துடைத்தனன் நுந்தை தன் குவவு தோளினால்
#112
பிள்ளை சொல் கிளி_அனாளை பிரிவுறல் உற்ற பெற்றி
தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும் தந்ததேயால்
கள்ள போர் அரக்கர் என்னும் களையினை களைந்து வாழ்தி
புள்ளிற்கும் புலன் இல் பேய்க்கும் தாய் அன்ன புலவு வேலோய்
#113
வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால்
படுத்தனன் இங்கு வீழ்ந்தேன் இது இன்று பட்டது என்றான்
#114
கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகா-முன்னம்
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ
ஏறின புருவம் மேல்மேல் இரிந்தன சுடர்கள் எங்கும்
கீறினது அண்ட_கோளம் கிழிந்தன கிரிகள் எல்லாம்
#115
மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல்
விண்ணகம் திரிய மேலை விரிஞ்சனும் திரிய வீரன்
எண்_அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே
#116
குறித்த வெம் கோபம் யார் மேல் கோளுறும்-கொல் என்று அஞ்சி
வெறித்து நின்று உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை
பொறி பிதிர் படலை செம் தீ புகையொடும் பொடிப்ப பொம்மென்று
எறிப்பது ஓர் முறுவல் தோன்ற இராமனும் இயம்பலுற்றான்
#117
பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி
கொண்டனன் ஏக நீ இ கோளுற குலுங்கல் செல்லா
எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை இன்னே
கண்ட வானவர்களோடும் களையுமாறு இன்று காண்டி
#118
தாரகை உதிருமாறும் தனி கதிர் பிதிருமாறும்
பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும்
நீரொடு நிலனும் காலும் நின்றவும் திரிந்த யாவும்
வேரொடு மடியுமாறும் விண்ணவர் விளியுமாறும்
#119
இ கணம் ஒன்றில் நின்ற ஏழினோடு ஏழு சான்ற
மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் வீயுமாறும்
திக்கு உடை அண்ட கோள புறத்தவும் தீந்து நீரின்
மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை
#120
வெம் சுடர் கடவுள் மீண்டு மேருவில் மறையலுற்றான்
எஞ்சல்_இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன
துஞ்சின உலகம் எல்லாம் என்பது என் துணிந்த நெஞ்சின்
அஞ்சினன் இளைய கோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ
#121
இ வழி நிகழும் வேலை எருவைகட்கு இறைவன் யாதும்
செவ்வியோய் முனியல் வாழி தேவரும் முனிவர்-தாமும்
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார்
எ வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான்
#122
நாள்-செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல்
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ
தாள் செய்ய கமலத்தானே முதலினர் தலை பத்து உள்ளாற்கு
ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே
#123
தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து
பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள்
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ
#124
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர்
அம்பு இழை வரி வில் செம் கை ஐயன்மீர் ஆயும் காலை
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ
#125
ஆதலால் முனிவாய் அல்லை அருந்ததி அனைய கற்பின்
காதலாள் துயரம் நீக்கி தேவர்-தம் கருத்தும் முற்றி
வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி வேறும்
தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான்
#126
புயல் நிற வண்ணன் ஆண்டு அ புண்ணியன் புகன்ற சொல்லை
தயரதன் பணி ஈது என்ன சிந்தையில் தழுவி-நின்றான்
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும்
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான்
#127
ஆய பின் அமலன்-தானும் ஐய நீ அமைதி என்ன
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன்
ஓய்வினன் உணர்வும் தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான்
#128
சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே
வேதங்கள் காண்கிலாமை வெளிநின்றே மறையும் வீரன்
பாதங்கள் கண்ணின் பார்த்தால் படிவம் கொள் நெடிய பஞ்ச
பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான்
#129
வீடு அவன் எய்தும் வேலை விரிஞ்சனே முதல மேலோர்
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் அழுது சோர
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த
சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே
#130
அறம்-தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன்
துறந்தனென் தவம் செய்கேனோ துறப்பெனோ உயிரை சொல்லாய்
பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால் பெற்ற தாதை
இறந்தனன் இருந்துளேன் யான் என் செய்கேன் இளவல் என்றான்
#131
என்றலும் இளைய கோ அ இராமனை இறைஞ்சி யாண்டும்
வென்றியாய் விதியின் தன்மை பழுதில விளைந்தது ஒன்றோ
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை
கொன்ற பின் அன்றோ வெய்ய கொடும் துயர் குளிப்பது என்றான்
#132
எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை
சந்த வார் குழலினாளை துறந்தனை தணிதியேனும்
உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லா
சிந்தையை ஆகிநின்று செய்வது என் செய்கை என்றான்
#133
அ வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா
வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன் விளிந்த தாதை
செ வழி உரிமை யாவும் திருத்துவம் சிறுவ என்றான்
#134
இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும்
சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்தி பூவும்
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர்
தந்தனன் தாதை தன்னை தட கையான் எடுத்து சார்வான்
#135
ஏந்தினன் இரு கை-தன்னால் ஏற்றினன் ஈமம்-தன் மேல்
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம்
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான்
#136
தளிர்த்தன கிளர்ந்த மேனி தாமரை கெழுமு செந்தேன்
துளித்தன போல நீங்கா துள்ளி சோர் வெள்ள கண்ணன்
குளித்தனன் கான ஆற்றின் குளித்த பின் கொண்ட நல் நீர்
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான்
#137
மீட்டு இனி உரைப்பது என்னே விரிஞ்சனே முதல மேல் கீழ்
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம்
பூட்டிய கைகளால் அ புள்ளினுக்கு அரசை கொள்க என்று
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே
#138
பல் வகை துறையும் வேத பலி கடன் பலவும் முற்றி
வெல் வகை குமரன் நின்ற வேலையின் வேலை சார்ந்தான்
தொல் வகை குலத்தின் வந்தான் துன்பத்தால் புனலும் தோய்ந்து
செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன்

14 அயோமுகி படலம்

#1
அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார்
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்தது என்ன
வெம் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே
#2
தேன் உக அருவி சிந்தி தெருமரல் உறுவ போல
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல்
மானமும் சினமும் தாதை மரணமும் மைந்தர் சிந்தை
ஞானமும் துயரும் தம்முள் மலைந்து என நலிந்த அன்றே
#3
மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும்
பொய் உறு பிறவி போல போக்க_அரும் பொங்கு கங்குல்
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள
கையறவு உறுகின்றாரால் காணல் ஆம் கரையிற்று அன்றே
#4
யாம் அது தெரிதல் தேற்றாம் இன் நகை சனகி என்னும்
காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய
தாமரை கங்குல் போதும் குவிந்திலா தன்மை என்னோ
#5
பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி-மாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே
#6
வண்டு உளர் கோதை சீதை வாள் முகம் பொலிய வானில்
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல்
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே
#7
களி உடை அனங்க கள்வன் கரந்து உறை கங்குல் காலம்
வெளிபடுத்து உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம்
நளி இருள் பிழம்பு என்று ஈண்டு நஞ்சொடு கலந்த நாக
துளை எயிற்று ஊறல் உற்றதாம் என சுட்டது அன்றே
#8
இடம்படு மான துன்பம் இருள்தர எண்ணின் தீர்ந்தான்
விடம் பரந்து அனையது ஆய வெண் நிலா வெதுப்ப வீரன்
படம் பரந்து அனைய அல்குல் பால் பரந்து அனைய இன் சொல்
தடம் பெரும் கண்ணினாள்-தன் தனிமையை நினையலுற்றான்
#9
மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன்
துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன்
பொடித்த தண் தளிர் பூவொடு மால் கரி
ஒடித்த கொம்பு அனையாள்-திறத்து உன்னுவான்
#10
வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு
பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ எனும்
வீங்கும் வேலை விரி திரை ஆம் என
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான்
#11
தன் நினைந்திலள் என்பது சாலுமோ
மின் நினைந்த விலங்கும் எயிற்றினான்
நில் நில் என்று நெருங்கிய-போது அவள்
என் நினைந்தனளோ என எண்ணுமால்
#12
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின்
வஞ்ச வாயில் மதி என மட்குவாள்
வெம் சினம் செய் அரக்கர்-தம் வெம்மையை
அஞ்சினான்-கொல் என்று ஐயுறுமால் என்பான்
#13
பூண்ட மானமும் போக்க_அரும் காதலும்
தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர்
மீண்டு மீண்டு வெதுப்ப வெதும்பினான்
வேண்டுமோ எனக்கு இன்னமும் வில் என்பான்
#14
வில்லை நோக்கி நகும் மிக வீங்கு தோள்
கல்லை நோக்கி நகும் கடைக்கால் வரும்
சொல்லை நோக்கி துணுக்கெனும் தொல் மறை
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான்
#15
கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன்
வேத வேள்வி விதிமுறை மேவிய
சீதை என்-வயின் தீர்ந்தனளோ எனும்
போதகம் என பொம்மென் உயிர்ப்பினான்
#16
நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான்
என் துணை குல மங்கை ஓர் ஏந்து_இழை-தன்
துயர்க்கு தகவு இலென் ஆயினேன்
நன்று நன்று என் வலி என நாணுமால்
#17
சாயும் தம்பி திருத்திய தண் தளிர்
தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து
ஆயும் ஆவி புழுங்க அழுங்குமால்
வாயும் நெஞ்சும் புலர மயங்குவான்
#18
பிரிந்த ஏது-கொல் பேர் அபிமானம்-கொல்
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை
பொருந்த ஆயிரம் கற்பங்கள் போக்குவான்
இருந்தும் கண்டிலன் கங்குலின் ஈறு-அரோ
#19
வென்றி வில் கை இளவலை மேல் எலாம்
ஒன்று போல உலப்பு இல் நாள்கள்-தாம்
நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான்
இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால்
#20
நீண்ட மாலை மதியினை நித்தமும்
மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்குவாய்
பூண்ட பூணவள் வாள் முகம் போதலால்
ஈண்டு சால விளங்கினை என்னுமால்
#21
நீள் நிலாவின் இசை நிறை தன் குலத்து
ஆணி ஆய பழி வர அன்னது
நாணி நாடு கடந்தனனாம்-கொலோ
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால்
#22
சுட்ட கங்குல் நெடிது என சோர்கின்றான்
முட்டு அமைந்த நெடு முடக்கோனொடு
கட்டி வாள் அரக்கன் கதிரோனையும்
இட்டனன்-கொல் இரும் சிறை என்னுமால்
#23
துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின்
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய்
முடியும் ஆகின் முடியும் இ மூரி நீர்
நெடிய மா நிலம் என்ன நினைக்குமால்
#24
திறத்து இனாதன செய் தவத்தோர் உற
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல்
மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல்
அறத்தினால் இனி ஆவது என் என்னுமால்
#25
தேனின் தெய்வ திரு நெடு நாண் சிலை
பூ நின்று எய்யும் பொரு கணை வீரனும்
மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான்
தான் நின்று எய்யகில்லான் தடுமாறுவான்
#26
உழந்த யோகத்து ஒரு_முதல் கோபத்தால்
இழந்த மேனியும் எண்ணி இரங்கினான்
கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ
பழம் துயர்க்கு பரிவுறும் பான்மையால்
#27
நீலமான நிறத்தன் நினைந்தவை
சூலம் ஆக தொலைவுறும் எல்லையில்
மூல மா மலர் முன்னவன் முற்றுறும்
காலம் ஆம் என கங்குல் கழிந்ததே
#28
வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் துயிலை வெறுத்து அளியும்
கள்ளும் சிலம்பும் பூம் கோதை கற்பின் கடலில் படிவாற்கு
புள்ளும் சிலம்பும் பொழில் சிலம்பும் புனலும் சிலம்பும் புனை கோலம்
உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ
#29
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர
பயிலும் பிடியும் கட கரியும் வருவ திரிவ பார்க்கின்றான்
குயிலும் கரும்பும் செழும் தேனும் குழலும் யாழும் கொழும் பாகும்
அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழியை பிரிந்தான் அழியானோ
#30
முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் முது கங்குல்
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த
கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன்
#31
பொழிலை நோக்கும் பொழில் உறையும் புள்ளை நோக்கும் பூங்கொம்பின்
எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள்
குழலை நோக்கி கொங்கை இணை குவட்டை நோக்கி அ குவட்டின்
தொழிலை நோக்கி தன்னுடைய தோளை நோக்கி நாள் கழிப்பான்
#32
அன்ன-காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும்
சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெம் கானம் போயினரால்
#33
ஆசை சுமந்த நெடும் கரி அன்னார்
பாசிலை துன்று வனம் பல பின்னா
காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார்
யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார்
#34
மண்படி செய்த தவத்தினில் வந்த
கள் படி கோதையை நாடினர் காணார்
உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க
புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார்
#35
ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான்
நாரியை எங்கணும் நாடினன் நாடி
பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா
மேருவின் வெம் கதிர் மீள மறைந்தான்
#36
அரண்டு அருகும் செறி அஞ்சன புஞ்சம்
முரண்டன போல் இருள் எங்கணும் முந்த
தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி
இருண்டன மாதிரம் எட்டும் இரண்டும்
#37
இளிக்கு அறை இன் சொல் இயைந்தன பூவை
கிளிக்கு அறையும் பொழில் கிஞ்சுக வேலி
ஒளி கறை மண்டிலம் ஒத்துளது ஆங்கு ஓர்
பளிக்கு அறை கண்டு அதில் வைகல் பயின்றார்
#38
அவ்விடை எய்திய அண்ணல் இராமன்
வெவ் விடை-போல் இள வீரனை வீர
இவ்விடை நாடினை நீர் கொணர்க என்றான்
தெவ் இடை வில்லவனும் தனி சென்றான்
#39
எங்கணும் நாடினன் நீர் இடை காணான்
சிங்கம் என தமியன் திரிவானை
அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும்
வெம் கண் அரக்கி விரும்பினள் கண்டாள்
#40
நல் மதியோர் புகல் மந்திர நாம
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள்
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள்
#41
அழுந்திய சிந்தை அரக்கி அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள்
புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி
விழுங்குவெனோ என விம்மல் உழந்தாள்
#42
இரந்தனென் எய்திய-போது இசையாது
சுரந்தனனேல் நனி கொண்டு கடந்து என்
முரஞ்சினில் மேவி முயங்குவென் என்று
விரைந்து எதிர் வந்தனன் தீயினும் வெய்யான்
#43
உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் ஒன்ற
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும்
வயிற்றள் வய கொடு மாசுணம் வீசு
கயிற்றின் அசைத்த முலை குழி கண்ணாள்
#44
பற்றிய கோள் அரி யாளி பணிக்கண்
தெற்றிய பாத சிலம்பு சிலம்ப
இற்று உலகு யாவையும் ஈறுறும் அ நாள்
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள்
#45
ஆழி வறக்க முகக்க அமைந்த
மூழை என பொலி மொய் பில வாயாள்
கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால்
ஊழி நெருப்பின் உரு-தனை ஒப்பாள்
#46
தடி தடவ பல தலை தழுவ தாள்
நெடிது அடைய குடர் கெழுமு நிணத்தாள்
அடி தடவ பட அரவம் இசைக்கும்
கடிதடம் உற்றவள் உருமு கறிப்பாள்
#47
நீள் அரவ சரி தாழ் கை நிரைத்தாள்
ஆள் அரவ புலி ஆரம் அணைத்தாள்
யாளியினை பல தாலி இசைத்தாள்
கோள் அரியை கொடு தாழ் குழை இட்டாள்
#48
நின்றனள் ஆசையின் நீர் கலுழும் கண்
குன்றி நிகர்ப்ப குளிர்ப்ப விழிப்பாள்
மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால்
கன்று இருளில் திரி கோளரி கண்டான்
#49
பண்டையில் நாசி இழந்து பதைக்கும்
திண் திறலாளொடு தாடகை சீராள்
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர்
ஒண்_தொடி ஆம் இவள் என்பது உணர்ந்தான்
#50
பாவியர் ஆம் இவர் பண்பு இலர் நம்-பால்
மேவிய காரணம் வேறு இலை என்பான்
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய்
யாவள் அடீ உரை-செய் கடிது என்றான்
#51
பேசினனுக்கு எதிர் பேசுற நாணாள்
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான்
நேசம் இல் அன்பினளாயினும் நின்-பால்
ஆசையின் வந்த அயோமுகி என்றாள்
#52
பின்னும் உரைப்பவள் பேர் எழில் வீரா
முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன்
பொன்னின் மணி தட மார்பு புணர்ந்து என்
இன் உயிரை கடிது ஈகுதி என்றாள்
#53
ஆறிய சிந்தையள் அஃது உரை-செய்ய
சீறிய கோளரி கண்கள் சிவந்தான்
மாறு_இல் வார் கணை இ உரை வாயில்
கூறிடின் நின் உடல் கூறிடும் என்றான்
#54
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால்
செற்றிலள் கை துணை சென்னியில் வைத்தாள்
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள
பெற்றிடின் இன்று பிறந்தனென் என்றாள்
#55
வெம் கதம் இல்லவள் பின்னரும் மேலோய்
இங்கு நறும் புனல் நாடுதி என்னின்
அங்கையினால் எனை அஞ்சலை என்றால்
கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள்
#56
சுமித்திரை சேய் அவள் சொற்றன சொல்லை
கமித்திலன் நின் இரு காதொடும் நாசி
துமிப்பதன் முன்பு அகல் என்பது சொல்ல
இமைத்திலள் நின்றனள் இன்ன நினைந்தாள்
#57
எடுத்தனென் ஏகினென் என் முழை-தன்னுள்
அடைத்து இவன் வெம்மை அகற்றிய பின்னை
உடற்படுமால் உடனே உறும் நன்மை
திடத்து இதுவே நலன் என்று அயல் சென்றாள்
#58
மோகனை என்பது முந்தி முயன்றாள்
மாக நெடும் கிரி போலியை வவ்வா
ஏகினள் உம்பரின் இந்துவொடு ஏகும்
மேகம் எனும்படி நொய்தினின் வெய்யாள்
#59
மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள்
வெம் திறல் வேல் கொடு சூர் அடும் வீர
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள்
#60
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி
பூம் கழல் வார் சிலை மீளி பொலிந்தான்
வீங்கிய வெம் சின வீழ் மத வெம் போர்
ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான்
#61
இப்படி ஏகினள் அன்னவள் இப்பால்
அப்பு இடை தேடி நடந்த என் ஆவி
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா
வெப்பு உடை மெய்யொடு வீரன் விரைந்தான்
#62
வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர்
ஐது ஆதலினோ அயல் ஒன்று உளதோ
நொய்தாய் வர வேகமும் நொய்திலனால்
எய்தாது ஒழியான் இது என்னை-கொலாம்
#63
நீர் கண்டனை இ வழி நேடினை போய்
சார் கொண்டு என இத்துணை சார்கிலனால்
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால்
போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா
#64
அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன்
வஞ்சித்த இராவணன் வவ்வினனோ
நஞ்சின் கொடியான் நடலை தொழிலால்
துஞ்சுற்றனனோ விதியின் துணிவால்
#65
வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால்
தரு சொல் கருதேன் ஒரு தையலை யான்
பிரிவித்தனென் என்பது ஓர் பீழை பொறாது
எரிவித்திட ஆவி இழந்தனனோ
#66
உண்டாகிய கார் இருள் ஓடு ஒருவன்
கண்தான் அயல் வேறு ஒரு கண் இலெனால்
புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவென்
எண்தான் இலென் எங்ஙனம் நாடுகெனோ
#67
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய்
உள்ளாய் ஒரு நீயும் ஒளித்தனையோ
பிள்ளாய் பெரியாய் பிழை செய்தனையால்
கொள்ளாது உலகு உன்னை இதோ கொடிதே
#68
பேரா இடர் வந்தன பேர்க்க வலாய்
தீரா இடர் தந்தனை தெவ்வர் தொழும்
வீரா எனை இங்ஙன் வெறுத்தனையோ
வாராய் புறம் இத்துணை வைகுதியோ
#69
என்னை தரும் எந்தைய என்னையரை
பொன்னை பொருகின்ற பொலம் குழையால்
தன்னை பிரிவேன் உளென் ஆவதுதான்
உன்னை பிரியாத உயிர்ப்பு அலவோ
#70
பொன் தோடு இவர்கின்ற பொலம் குழையாள்-தன்
தேடி வருந்து தவம்புரிவேன்
நின் தேடி வருந்த நிரப்பினையோ
என் தேடினை வந்த இளம் களிறே
#71
இன்றே இறவாது ஒழியேன் எமரோ
பொன்றாது ஒழியார் புகல்வார் உளரால்
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம்
கொன்றாய் கொடியாய் இதுவும் குணமோ
#72
மாந்தா முதல் மன்னவர்-தம் வழியில்
வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர்
தாம் தாம் ஒழிய தமியேனுடனே
போந்தாய் எனை விட்டனை போயினையோ
#73
என்னா உரையா எழும் வீழும் இருந்து
உன்னா உணர்வு ஓய்வுறும் ஒன்று அலவால்
மின்னாது இடியாது இருள்-வாய் விளைவு ஈது
என் ஆம் எனும் என் தனி நாயகனே
#74
நாடும் பல சூழல்கள்-தோறும் நடந்து
ஓடும் பெயர் சொல்லி உளைந்து உயிர் போய்
வாடும் வகை சோரும் மயங்குறுமால்
ஆடும் களி மா மத யானை அனான்
#75
கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று
இமையாதவன் இத்துணை தாழ்வுறுமோ
சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு
அமையாது-கொல் வாழ்வு அறியேன் எனுமால்
#76
அற பால் உளதேல் அவன் முன்னவன் ஆய்
பிறப்பான் உறில் வந்து பிறக்க எனா
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின்-வாய்
#77
பேர்ந்தான் நெடு மாயையினில் பிரியா
ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன்
சோர்ந்தாள் இடு பூசல் செவி துளையில்
சேர்ந்து ஆர்தலுமே திருமால் தெருளா
#78
பரல் தரு கானகத்து அரக்கர் பல் கழல்
முரற்று அரு வெம் சமம் முயல்கின்றார் எதிர்
உரற்றிய ஓசை அன்று ஒருத்தி ஊறுபட்டு
அரற்றிய குரல் அவள் அரக்கியாம் எனா
#79
அங்கியின் நெடும் படை வாங்கி அங்கு அது
செம் கையில் கரியவன் திரிக்கும் எல்லையில்
பொங்கு இருள் அ புறத்து உலகம் புக்கது
கங்குலும் பகல் என பொலிந்து காட்டிற்றே
#80
நெடு வரை பொடிபட நிவந்த மா மரம்
ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம்
சட சட எனும் ஒலி தழைப்ப தாக்கவும்
முடுகினன் இராமன் வெம் காலின் மும்மையான்
#81
ஒருங்கு உயர்ந்து உலகின் மேல் ஊழி பேர்ச்சியுள்
கரும் கடல் வருவதே அனைய காட்சி தன்
பெரும் துணை தம்முனை நோக்கி பின்னவன்
வருந்தலை வருந்தலை வள்ளியோய் எனா
#82
வந்தனென் அடியனேன் வருந்தல் வாழி நின்
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான்
சந்த மென் தளிர் புரை சரணம் சார்ந்தனன்
சிந்தின நயனம் வந்தனைய செய்கையான்
#83
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன்
ஈற்று இளம் கன்றினை பிரிவுற்று ஏங்கி நின்று
ஆற்றலாது அரற்றுவது அரிதின் எய்திட
பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான்
#84
தழுவினன் பல் முறை தாரை கண்ணின் நீர்
கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை
வழுவினையாம் என மன கொடு ஏங்கினேன்
எழு என மலை என இயைந்த தோளினாய்
#85
என்னை ஆங்கு எய்தியது இயம்புவாய் என
அன்னவன் அஃது எலாம் அறிய கூறலும்
இன்னலும் உவகையும் இரண்டும் எய்தினான்
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான்
#86
ஆய்வுறு பெரும் கடல் அகத்துள் ஏயவன்
பாய் திரை வரு-தொறும் பரிதல்-பாலனோ
தீவினை பிறவி வெம் சிறையில் பட்ட யாம்
ஓய்வு_அறு துயர் என நுடங்கல் நோன்மையோ
#87
மூ-வகை அமரரும் உலகம் மும்மையும்
மேவ_அரும் பகை எனக்கு ஆக மேல்வரின்
ஏவரே கடப்பவர் எம்பி நீ உளை
ஆவதே வலி இனி அரணும் வேண்டுமோ
#88
பிரிபவர் யாவரும் பிரிக பேர் இடர்
வருவன யாவையும் வருக வார் கழல்
செரு வலி வீர நின் தீரும் அல்லது
பருவரல் என்-வயின் பயிலல்-பாலதோ
#89
வன் தொழில் வீர போர் வலி அரக்கியை
வென்று போர் மீண்டனென் என விளம்பினாய்
புன் தொழில் அனையவள் புரிந்த சீற்றத்தால்
கொன்றிலை போலுமால் கூறுவாய் என்றான்
#90
துளைபடு மூக்கொடு செவி துமித்து உக
வளை எயிறு இதழொடு அரிந்து மாற்றிய
அளவையில் பூசலிட்டு அரற்றினாள் என
இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான்
#91
தொல் இருள் தனை கொல தொடர்கின்றாளையும்
கொல்லலை நாசியை கொய்து நீக்கினாய்
வல்லை நீ மனு முதல் மரபினோய் என
புல்லினன் உவகையின் பொருமி விம்முவான்
#92
பேர அரும் துயர் அற பேர்ந்துளோர் என
வீரனும் தம்பியும் விடிவு நோக்குவார்
வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு
தாரணி தாங்கிய கிரியில் தங்கினார்
#93
கல் அகல் வெள்ளிடை கானின் நுண் மணல்
பல்லவம் மலர் கொடு படுத்த பாயலின்
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன்
மெல் அடி இளையவன் வருட வீரனே
#94
மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால்
அயில்விலன் ஒரு பொருள் அவலம் எய்தலால்
துயில்விலன் என்பது சொல்லல்-பாலதோ
உயிர் நெடிது உயிர்ப்பிடை ஊசலாடுவான்
#95
மானவன் மெய் இறை மறக்கலாமையின்
ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ
கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்-கால்
சானகி உரு என தோன்றும் தன்மையே
#96
கருங்குழல் சேயரி கண்ணி கற்பினோர்க்கு
அரும் கலம் மருங்கு வந்து இருப்ப ஆசையால்
ஒருங்குற தழுவுவென் ஒன்றும் காண்கிலென்
மருங்குல் போல் ஆனதோ வடிவம் மெல்லவே
#97
புண்டரிக புது மலரில் தேன் போதி
தொண்டை அம் சே ஒளி துவர்த்த வாய் அமுது
உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால்
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ
#98
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும்
எண்ணினும் பெரியது ஓர் இடர் வந்து எய்தினால்
தண் நறும் கரும் குழல் சனகன் மா மகள்
கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே
#99
அ புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ
வெப்பு உடை விரி கதிர் வெதுப்ப மெய் எலாம்
கொப்புளம் பொடித்ததோ கொதிக்கும் வானமே
#100
இன்னன இன்னன பன்னி ஈடு அழி
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான்
அன்னது கண்டனன் அல்கினான் என
துன்னிய செம் கதிர் செல்வன் தோன்றினான்
#101
நிலம் பொறை இலது என நிமிர்ந்த கற்பினாள்
நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய
அலம்புறு பறவையும் அழுவவாம் என
புலம்புறு விடியலில் கடிது போயினார்

15 கவந்தன் படலம்

#1
ஐ_ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான்
எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும்
கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார்
#2
எறுப்பு_இனம் கடையுற யானையே முதல்
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன
வெறிப்பு உறு நோக்கின வெருவுகின்றன
பறிப்பு_அரு வலையிடை பட்ட பான்மைய
#3
மரபுளி நிறுத்திலன் புரக்கும் மாண்பிலன்
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன
வெருவுவ சிந்துவ குவிவ விம்மலோடு
இரிவன மயங்குவ இயல்பு நோக்கினார்
#4
மால் வரை உருண்டன வருவ மா மரம்
கால் பறிந்திடுவன கான யாறுகள்
மேல் உள திசையொடு வெளிகள் ஆவன
சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன
#5
நால் திசை பரவையும் இறுதி நாள் உற
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன
போல் திசை சுற்றிய கரத்து புக்குளார்
#6
தே_மொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார்
நேமி மால் வரை-அது நெருக்குகின்றதே
ஆம் எனல் ஆய கை மதிட்குள் ஆயினார்
#7
இளவலை நோக்கினன் இராமன் ஏழையை
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இ
அளவையது ஆகுதல் அறிதி ஐய நம்
கிளர் பெரும் துயரமும் கீண்டது ஆம் என
#8
முற்றிய அரக்கர் தம் முழங்கு தானையேல்
எற்றிய முரசு ஒலி ஏங்கும் சங்கு இசை
பெற்றிலது ஆதலின் பிறிது ஒன்று ஆம் என
சொற்றனன் இளையவன் தொழுது முன் நின்றான்
#9
தெள்ளிய அமுது எழ தேவர் வாங்கிய
வெள் எயிற்று அரவம்தான் வேறு ஓர் நாகம்தான்
தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து
உள் உற கவர்வதே ஒக்கும் ஊழியாய்
#10
என்று இவை விளம்பிய இளவல் வாசகம்
நன்று என நினைந்தனன் நடந்த நாயகன்
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு ஓங்கல்தான்
நின்று என இருந்த அ கவந்தன் நேர் சென்றார்
#11
வெயில் சுடர் இரண்டினை மேரு மால் வரை
குயிற்றியதாம் என கொதிக்கும் கண்ணினன்
எயிற்று இடைக்கிடை இரு காதம் ஈண்டிய
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான்
#12
ஈண்டிய புலவரொடு அவுணர் இந்துவை
தீண்டிய நெடு வரை தெய்வ மத்தினை
பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின்
நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான்
#13
தொகை கனல் கரு_மகன் துருத்தி தூம்பு என
புகை கொடி கனலொடும் பொடிக்கும் மூக்கினான்
பகை தகை நெடும் கடல் பருகும் பாவகன்
சிகை கொழுந்து இது என திருகு நாவினான்
#14
புரண்டு பாம்பு இடை வர வெருவி புக்கு உறை
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை
முரண் தொகு முழை நுழை முழு வெண் திங்களை
இரண்டு கூறிட்டு என இலங்கு எயிற்றினான்
#15
ஓத நீர் மண் இவை முதல ஓதிய
பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும்
பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான்
#16
வெய்ய வெம் கதிர்களை விழுங்கும் வெவ் அரா
செய் தொழில் இல துயில் செவியின் தொள்ளையான்
பொய் கிளர் வன்மையில் புரியும் புன்மையோர்
வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான்
#17
முற்றிய உயிர் எலாம் முருங்க வாரி தான்
பற்றிய கரத்தினன் பணைத்த பண்ணையில்
துற்றிய புகுதரும் தோற்றத்தால் நமன்
கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான்
#18
ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான்
ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான்
நீல மால் நேமியின் தலையை நீக்கிய
காலநேமியை பொரும் கவந்த காட்சியான்
#19
தாக்கிய தணப்பு இல் கால் எறிய தன்னுடை
மேக்கு உயர் கொடு முடி இழந்த மேரு தேர்
ஆக்கையின் இருந்தவன் தன்னை அ வழி
நோக்கினர் இருவரும் நுணங்கு கேள்வியார்
#20
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ்
பார் புகும் நெடும் பகு வாயை பார்த்தனர்
சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில்
ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார்
#21
அ வழி இளையவன் அமர்ந்து நோக்கியே
வெவ்வியது ஒரு பெரும் பூதம் வில் வலாய்
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும்
செய்வது என் இவண் என செம்மல் சொல்லுவான்
#22
தோகையும் பிரிந்தனள் எந்தை துஞ்சினன்
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்
ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம்
ஏகுதி ஈண்டு-நின்று இளவலே என்றான்
#23
ஈன்றவர் இடர்ப்பட எம்பி துன்புற
சான்றவர் துயருற பழிக்கு சார்வுமாய்
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால்
ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ
#24
இல் இயல்புடைய நீர் அளித்த இன் சொலாம்
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என
சொல்லினென் மலை என சுமந்த தூணியென்
வில்லினென் செல்வேனோ மிதிலை வேந்தன்-பால்
#25
தளை அவிழ் கோதையை தாங்கல் ஆற்றலன்
இளை புரந்து அளித்தல் மேல் இவர்ந்த காதலன்
உளன் என உரைத்தலின் உம்பரான் என
விளைதல் நன்று ஆதலின் விளிதல் நன்று என்றான்
#26
ஆண்டான் இன்ன பன்னிட ஐயற்கு இள வீரன்
ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் இ இடர் வந்து
மூண்டால் முன்னே ஆர் உயிரொடும் முடியாதே
மீண்டே போதற்கு ஆம் எனின் நன்று என் வினை என்றான்
#27
என்றான் என்னா பின்னும் இசைப்பான் இடர்-தன்னை
வென்றார் அன்றே வீரர்கள் ஆவார் மேலாய
தன் தாய் தந்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே
பொன்றான் என்றால் நீங்குவது அன்றோ புகழ் அம்மா
#28
மானே அன்னாள்-தன்னொடு தம்முன் வரை ஆரும்
கானே வைக கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி
தானே வந்தான் என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ
#29
என் தாய் உன்முன் ஏவிய யாவும் இசை இன்னல்
பின்றாது எய்தி பேர் இசையாளற்கு அழிவு உண்டேல்
பொன்றா-முன்னம் பொன்றுதி என்றாள் உரை பொய்யா
நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா
#30
என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும்
நின் பெற்றாட்கும் நிற்கும் நினைப்பு பிழையாமல்
நல் பொன் தோளாய் நல்லவர் பேண நனி நிற்கும்
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால்
#31
ஓதுங்கால் அ பல் பொருள் முற்றுற்று ஒருவாத
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய்
மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும்
பூதம் கொல்ல பொன்றுதி என்னின் பொருள் உண்டோ
#32
கேட்டார் கொள்ளார் கண்டவர் பேணார் கிளர் போரில்
தோட்டார் கோதை சோர் குழல்-தன்னை துவளாமல்
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் செரு வெல்ல
மாட்டான் மாண்டான் என்றலின் மேலும் வசை உண்டோ
#33
தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இ தகை வாளால்
கணிக்கும் தன்மைத்து அன்று விடத்தின் கனல் பூதம்
பிணிக்கும் கையும் பெய் பில வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற என்றான்
#34
என்னா முன்னே செல்லும் இளங்கோ இறையோற்கு
முன்னே செல்லும் முன்னவன் அன்னானினும் முந்த
தன் நேர் இலாத தம்பி தடுப்பான் பிறர் இல்லை
அன்னோ கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால்
#35
இனையர் ஆகிய இருவரும் முகத்து இரு கண் போல்
கனையும் வார் கழல் வீரர் சென்று அணுகலும் கவந்தன்
வினையின் எய்திய வீரர் நீர் யாவர்-கொல் என்ன
நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார்
#36
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான்
பொழிந்த கோபத்தன் பொறி கனல் விழி-தொறும் பொடிப்ப
விழுங்குவேன் என வீங்கலும் விண் உற வீரர்
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார்
#37
கைகள் அற்று வெம் குருதி ஆறு ஒழுகிய கவந்தன்
மெய்யின் மேற்கோடு கிழக்கு உறு பெரு நதி விரவும்
சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான்
#38
ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால்
மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான்
தோளும் வாங்கிய தோமுடை யாக்கையை துறவா
நீளம் நீங்கிய பறவையின் விண் உற நிமிர்ந்தான்
#39
விண்ணில் நின்றவன் விரிஞ்சனே முதலினர் யார்க்கும்
கண்ணில் நின்றவன் இவன் என கருத்துற உணர்ந்தான்
எண்_இல் அன்னவன் குணங்களை வாய் திறந்து இசைத்தான்
புண்ணியம் பயக்கின்றுழி அரியது எ பொருளே
#40
ஈன்றவனோ எ பொருளும் எல்லை தீர் நல் அறத்தின்
சான்றவனோ தேவர் தவத்தின் தனி பயனோ
மூன்று கவடு ஆய் முளைத்து எழுந்த மூலமோ
தோன்றி அரு வினையேன் சாப துயர் துடைத்தாய்
#41
மூலமே இல்லா முதல்வனே நீ முயலும்
கோலமோ யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால்
ஆலமோ ஆலின் அடையோ அடை கிடந்த
பாலனோ வேலை பரப்போ பகராயே
#42
காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி
பூண்பாய் போல் நிற்றியால் யாது ஒன்றும் பூணாதாய்
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்
ஆண்பாலோ பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ
#43
ஆதி பிரமனும் நீ ஆதி பரமனும் நீ
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ
சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற
வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார்
#44
எண் திசையும் திண் சுவரா ஏழ்_ஏழ் நிலை வகுத்த
அண்ட பெரும் கோயிற்கு எல்லாம் அழகு ஆய
மண்டலங்கள் மூன்றின் மேல் என்றும் மலராத
புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை அம்மா
#45
மண்பால்_அமரர் வரம்பு ஆரும் காணாத
எண்பால் உயர்ந்த எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார் பகராய் பரமேட்டி
#46
நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்து எழுந்த
மொக்குளே போல முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ பரம்பரனே
#47
நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள்
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ
என் செய்தேன் முன்னம் மறம் செய்கை எய்தினார்
பின் செல்வது இல்லா பெரும் செல்வம் நீ தந்தாய்
#48
மாய பிறவி மயல் நீக்கி மாசு இலா
காயத்தை நல்கி துயரின் கரை ஏற்றி
பேய் ஒத்தேன் பேதை பிணக்கு அறுத்த எம் பெருமான்
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான்
#49
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல்
ஒன்றாது தேவர் உறுதிக்கு என உன்னா
தன் தாயை கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய்
நின்றானை கண்டான் நெறி நின்றார் நேர் நின்றான்
#50
பாராய் இளையவனே பட்ட இவன் வேறே ஓர்
பேராளன் தானாய் ஒளி ஓங்கும் பெற்றியனாய்
நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை
ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான்
#51
சந்த பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர்
கந்தர்ப்பன் சாபத்தால் இ கடைப்படு பிறவி கண்டேன்
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன்
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான்
#52
கணை உலாம் சிலையினீரை காக்குநர் இன்மையேனும்
இணை இலாள்-தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல்
துணை இலாதவருக்கு இன்னா பகை புலம் தொலைத்து நீக்கல்
#53
பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் பதும பீடத்து
உழி பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே
ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை
#54
ஆயது செய்கை என்பது அற துறை நெறியின் எண்ணி
தீயவர் சேர்க்கிலாது செவ்வியோர் சேர்ந்து செய்தல்
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியை தலைப்பட்டு அன்னாள்
ஏயது ஓர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி
#55
கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட
வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது என்றான்
அதிர் கழல் வீரர்-தாமும் அன்னதே அமைவது ஆனார்
#56
ஆன பின் தொழுது வாழ்த்தி அந்தரத்து அவனும் போனான்
மானவ குமரர் தாமும் அ திசை வழி கொண்டு ஏகி
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார்

16 சவரி பிறப்பு நீங்கு படலம்

#1
கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தரு ஆம் என்ன
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம்
எண்ணிய இன்பம் அன்றி துன்பங்கள் இல்லை ஆன
புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே
#2
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியை தலைப்பட்டு அன்னாட்கு
இன்னுரை அருளி தீது இன்று இருந்தனை போலும் என்றான்
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான்
#3
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன்
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம்
பூண்ட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து-செய்து இருந்த வேலை
#4
ஈசனும் கமலத்தோனும் இமையவர் யாரும் எந்தை
வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய
பூசனை விரும்பி எம்-பால் போதுதி என்று போனார்
#5
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை
பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன
அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள்
வருந்துறு துயரம் தீர்த்தாய் அம்மானை வாழி என்றார்
#6
அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்த பின்றை
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய
துனை பரி தேரோன் மைந்தன் இருந்த அ துளக்கு_இல் குன்றம்
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள்
#7
வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆக
காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம்
கேட்டனன் என்ப-மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும்
தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான்
#8
பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள்
அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி
பொன் அடி கழல்கள் ஆர்ப்ப புகன்ற மா நெறியில் போனார்
#9
தண் நறும் கானும் குன்றும் நதிகளும் தவிர போனார்
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள்
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே
புண்ணியம் உருகிற்று அன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார்


Aranya Kandam Overview

Life in the Forest:

The Aranya Kandam begins with Rama, Sita, and Lakshmana continuing their life in the Dandaka forest. They visit various ashrams of sages, who offer them hospitality and blessings. The sages also tell them about the hardships they face due to the demons in the forest.

Killing of Viradha:

During their travels, they encounter the demon Viradha who tries to abduct Sita. Rama and Lakshmana engage in battle with Viradha, ultimately killing him. This encounter demonstrates Rama's protective nature and his commitment to safeguarding Sita.

Visit to Sage Agastya:

The trio then visits the ashram of the great sage Agastya, who welcomes them warmly. Agastya gives Rama the divine bow of Vishnu, along with an inexhaustible quiver of arrows and a sword, foreseeing the battles that Rama will face in the future.

Panchavati and the Meeting with Shurpanakha:

After leaving Agastya’s ashram, Rama, Sita, and Lakshmana settle in Panchavati, a beautiful and tranquil part of the forest. They build a small hermitage and begin living there peacefully.

It is here that they encounter Shurpanakha, the sister of Ravana. Shurpanakha becomes infatuated with Rama and approaches him with proposals of marriage. When Rama rejects her advances and teases her, she attacks Sita in a fit of rage.

Lakshmana intervenes and, on Rama's instruction, disfigures Shurpanakha by cutting off her nose and ears. Humiliated and enraged, Shurpanakha vows revenge and goes to her brothers Khara, Dushana, and Ravana to seek retribution.

Battle with Khara and Dushana:

Shurpanakha's brothers Khara and Dushana, along with their army of demons, attack Rama, seeking to avenge their sister's humiliation. Rama single-handedly defeats and kills all of them, showcasing his strength and valor.

Abduction of Sita:

Furious over the death of Khara and Dushana, Shurpanakha goes to her elder brother Ravana, the king of Lanka, and describes Sita’s beauty to him, inciting him to abduct her.

Ravana, captivated by the idea of possessing Sita, devises a plan. He enlists the help of the demon Maricha, who transforms into a golden deer to lure Sita. Sita, enchanted by the deer, asks Rama to capture it for her.

Rama chases the deer, leaving Lakshmana to protect Sita. However, when Rama kills the deer, which reverts to Maricha’s true form, Maricha mimics Rama's voice, calling out for help. Sita, hearing this, urges Lakshmana to go after Rama, leaving her alone.

Taking advantage of the situation, Ravana approaches Sita in the guise of an ascetic. When Sita steps out of the protective boundary Lakshmana had drawn, Ravana reveals his true form, abducts her, and flies away to Lanka in his chariot, Pushpaka Vimana.

Jatayu’s Attempt to Save Sita:

During the abduction, the vulture king Jatayu sees Ravana carrying Sita away and tries to rescue her. Despite his bravery, Jatayu is overpowered by Ravana, who severely wounds him and continues on to Lanka with Sita.

Rama and Lakshmana, upon returning to the hermitage and discovering Sita missing, frantically search for her. They eventually come across the dying Jatayu, who informs them about Ravana’s abduction of Sita before passing away.

Meeting with Shabari and Kabandha:

Rama and Lakshmana continue their search and meet the elderly devotee Shabari, who guides them to Sugriva, the monkey king who can help them find Sita.

Along the way, they also encounter Kabandha, a demon who was cursed into a grotesque form. After Rama and Lakshmana free him from the curse by killing him, Kabandha advises them to seek the help of Sugriva.

Significance of Aranya Kandam

Transition to Conflict: Aranya Kandam marks the transition from Rama’s peaceful life to the beginning of his direct confrontation with evil forces. The abduction of Sita by Ravana is the catalyst for the epic battle between Rama and Ravana.

Themes of Virtue and Valor: The book emphasizes Rama's righteousness, strength, and determination to protect those he loves. It also highlights the consequences of desire and revenge, as seen in Shurpanakha’s actions leading to the larger conflict.

Introduction of Key Characters: This section introduces important characters like Ravana, who becomes the main antagonist, and Sugriva and Hanuman, who will play crucial roles in the later parts of the epic.

Aranya Kandam is a pivotal part of the Kamba Ramayanam, setting the stage for the events that will unfold in the later books, particularly the epic battle between Rama and Ravana to rescue Sita.



Share



Was this helpful?