Digital Library
Home Books
அகிலத்திரட்டு அம்மானை (Akilathirattu Ammanai) is the primary scripture of the அய்யா வழி (Ayyavazhi) religion, which originated in South India. It is considered a divine work that narrates the history of the world, the past, present, and future, focusing especially on the incarnation of அய்யா வைகுண்டர் (Ayya Vaikundar), the principal figure of Ayyavazhi. The scripture was written by ஹரி கந்தம்பரண் (Hari Gopalan Seedar) as per the revelations given by அய்யா வைகுண்டர்.
நாடறிய எம்பெருமாள் நல்லதிரு வாசமிட்டு
லாட மதிலிருந்து வாவுவா ரீசரொடு
வாரமில்லை நமக்கு வஞ்சகங்க ளில்லாமல்
சார முடனே தரணிதனி லோதிவைத்தோம்
அகப்பே ரெனவே அவனிசொல்வ தில்லையினி
உகப்பாரந் தீர்க்க உரைப்பீர்கா ணீசுரரே
லட்சுமியை முன்னம் இருத்தினோஞ்செந் தூர்க்கடலில்
பச்சணியுங் காளிதனைப் பாரச் சிறையில்வைத்தோம்
என்மகவாய்ப் பெறவே இராச்சியத்தி லோர்சடலம்
தன்மகவா யங்கே தான்பிறந்து நல்லவயசு
இருபத்து நாலு என்றாச்சே மாநிலத்தில்
கருவுற்ற முத்தோசம் கழிவதும் நாளின்றாச்சே
விட்டதிரு வாசகந்தான் மேதினியோர் கொள்ளாமல்
கட்டங் கொடிதாய்க் காணுதே தொல்புவியில்
புத்திவரு மென்றிருந்தோம் பிழையாத நீசனுக்கு
சற்று மனதில் தங்குமோ நல்வசனம்
பார்த்திருந்தால் போராது பார்மீதில் மக்களுந்தான்
காத்திருந்து வாடுகிறார் கௌவையுற்று நல்மனுக்கள்
மனுவிடுக்கந் தீர்த்து வாய்த்தசொல் லொன்றதுக்குள்
தோணியேவை குண்டர் சுத்தயுக மாளுதற்கு 20
நாளுண்டோ போவதற்கு நல்வேதச் சொல்லுமுண்டோ
கோளுண்டோ வெற்றியுண்டோ கூறும்நீர் வேதவுரை
அப்போது ஈசர் அகமகிழ்ந்து கொண்டாடி
முப்போது வுள்ள முறைகேட்க வேணுமென்றால்
ஆதி வியாகரரை அழைப்பித்துக் கேளுமென்றார்
சோதி யுரைக்க திருமா லகமகிழ்ந்து
அழைத்தார் வியாகரரை அதுகேட்டு மாமுனியும்
பிழைத்தார்கள் போலே
பொடுபொடென ஓடிவந்து
தெண்டனிட்டு மூவரையும் சுவாமிவிண் ணப்பமென்றார்
கண்டிருந்(த) அய்யா கரியமுனி யைப்பார்த்து
முன்பிறந்த துமகிலம் முடிந்ததுவுஞ் கொல்லிமிகப்
பின்பிறக்கப் போவதுவும் பிசகாமல் சொல்லுமென்றார்
அப்போ வியாசர் ஆதி யருளாலே
செப்புகிறோ மென்று தெண்டனிட்டுச் சொல்லலுற்றார்
வேதவியாசர் முன்னாகமம் கூறல்
குறோணி முதலாய்க் கூறுகெட்ட நீசன்வரை
தரணியுக மாறுஞ் சாற்றியே-சத்தியுடன்
தன்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து
நன்மையுட னாடுவதும் நாட்டினார்
குறோணியொடு நீசன் கோள்பிறவி ஏழ்பிறந்து
தரணியுக மாறோடு தன்னால ழிந்ததுவும் 40
சொல்லி விரித்துச் சுத்த வியாகரரும்
நல்லியல்பு கொண்ட நாரணரோ டேதுரைப்பார்
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற நசுறாணி உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் ஆனவை குண்டராசர்
உற்றொருவர் வந்து உலகாள வேணுமென்றும்
முன்னே பரந்தான் மொழிந் ததின்படியே
தர்ம புவியாள சுவாமிநீ ராகவென்றும்
துர்மக் கடன்கழித்தோர் சுகமாக வாழ்வரென்றும்
ஆகமத்தைப் பார்த்து ஆதிவி யாசுரரும்
நாகத்தணை கிடந்தோன் நாட்டம தாயுரைத்தார்
உரைத்திட வியாசர் தானும் உண்மையாய் மொழிந்த தெல்லாம்
கரைத்திடாக் கயிலை மீது கல்லிலே எழுதி வையும்
நரைத்திடா முனிவன் சொல்லும் நாள்வழி தோறு முற்ற
உரைத்திட முனிக்கு மேலும் உதவிகள் செய்ய வென்றார்
என்று சொல்லிவேத வியாசர் இசைந்ததெல்லாம்
கண்டுகயி லயங்கிரியில் கறைக்கண்டர் நாட்டிவைத்தார்
மாமுனியை யுமனுப்பி மாயத் திருமாலும்
தாமுனிந் தீசுரரைத் தழுவியுறத் தானணைத்துக்
கேதாரம் விட்டுக் கிரிகோவில் வந்திருந்து 60
கோதார மாயன் கூறுவார் சங்கமதில்
செந்தூர்க் கடலில் சென்றுபள்ளி கொண்டிருந்து
விந்து வழிசெய்து வித்தகனை ஈன்றெடுத்துத்
தேசபர சோதனைக்கு தெச்சணத் திலேயனுப்பி
வாசமுட னிங்கே வருவோ மெனவுரைத்தார்
அப்போதீ சுவரியும் ஆனசங்கத் தோரர்களெல்லாம்
இப்போது நாங்கள் ஏகுவோ மும்மோடே
என்றுரைக்கச் சங்கம் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுமறி யாகாதே உற்றவுப தேசமதைத்
தேவன் திருமுதலாய்த் தெய்வகன்னி மார்முதலாய்
மூவர் முதலாய் உள்ளறியா விஞ்சையது
நடந்தா லறிவார் நடக்குமுன் னேயொருவர்
அடக்க மறியாத அருவிஞ்சை யீதல்லவோ
அந்தவகை யானதினால் எல்லோரு மென்கூட
வந்தால் சரியல்லவே வரவேண்டாமென்றால் நோவீர்களே
என்றுரைக்க நாதன் எல்லோரு மேதுரைப்பார்
ஒன்றுமறி யாதிடினும் உம்முடனே வாறொமென்றார்
உடனே திருமால் உற்றலட்சு மிநினைவால்
நடைமேல் நடையெனவே நல்லசெந்தூர் தானோக்கி
உன்னி சிவமும் உற்றசத்தி நல்மாதும் 80
வன்னத் தேவர்முதலாய் மாமுனிவர் கின்னரரும்
சங்கமு மெங்குளோரும் சகலகலை வாணர்களும்
மங்களக் காரர்களும் மாதுசத்தி யைச்சூழ்ந்து
திரைதிரையாய்க் கன்னியர்கள் சேவித்து ஏத்திவர
ஏழு வாச்சியமும் இமலோக ரேற்றிவர
தொழுவார் சிலபேர் தொம்தொ மெனஆடி
கடலிலோர் பிள்ளை கரியமா லீன்றெடுத்து
நடமாடுந் தெச்சணத்தில் நகர்சோதனைக் கனுப்பி
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்மபதி சத்திமக்க ளையாள
வாறாரைய்யா நாதன் வைகுண்ட மும்மூர்த்தி
பேறானோர் காண்பார் பெரியதர் மப்புவியை
என்றுசில வாத்தியங்கள் இசைந்திசைந் தூதிவர
கன்றுதிரை மேய்த்தோரும் கயிலையங் கிரிகடந்தார்
கடந்து திருச்செந்தூர் கடல்காண வேணுமென்று
நடந்தாதி நாதன் நல்லீசர் சத்தியோடு
கூடிக் குணமாய்க் கொலுவார பாரமுடன்
தேடித் திருவைச் சிணமாய் வழிநடந்தார்
நடக்க மறையோர் நாற்றிசையும் போற்றிநிற்க 100
கடற்கரையை நோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்
வழிநடந்து மாயவரும் வல்லபர மேசுரரும்
களிகூர்ந்து மாதுமையும் கந்தன்செந் தூர்கடலின்
அருகேயொரு காதம் அவர்வரக்கண் டாறுமுகன்
கருவி குழறி கடற்கரையோன் தான்கலங்கி
ஆறு முகனும் அங்குள்ள தேவர்களும்
வீறுமயில் வாகனனும் வெற்றிரத மேறாமல்
என்னவித மாமோ என்று மனம்பதறி
மன்ன னறுமுகனும் மனமயங்கித் தான்பதறி
வந்துமா மன்தனையும் மாதா பிதாவையும்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
இம்மூ வரையும் யானெப்போ காண்பேனென்று
எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன்
காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது
பார்த்திருந்த கண்ணின் பாவந் தொலைந்ததின்று
என்று வேல்முருகன் ஈசுரரை யுந்தழுவி
கன்றுதிரை மேய்த்த கண்ணரை யுந்தழுவி
மாதாவை யுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடிச்
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடிச்
சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடி
வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங் காசனத்தில் 120
பாருங்கோ அய்யாஎன் பதியி னலங்காரம்
நீங்க ளிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு
தாங்கள் கிரிபோலே தங்கமலை யிங்குமுண்டு
பாடப் படிக்கப் பாவாண ரிங்குமுண்டு
ஆடக் கைகாட்ட அரம்பையர்க் ளிங்குமுண்டு
பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு
மாலேக்க நல்ல மாதுகன்னி மார்களுண்டு
கண்டு களித்திருக்கக் கனக நிதிகளுண்டு
உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு
பல்லாக்கு முண்டு பதிபோகி மாருமுண்டு
குல்லாக்க ளுண்டு குளிக்கத்தாம்பி ராழியுண்டு
சதுரங்க மேடையுண்டு சண்முக விலாசமுண்டு
பதிரங்க மானப் பாலாழி யுண்டுமையா
மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம்
போத வருங்காண் பொற்சவடி யாபரணம்
வருசமொன் றானதிலே மாலைவட மாயிரந்தான்
கருவலங்க ளின்னதென்று காணாத் தொகையதுதான்
காவடி கோடி காணிக்கை முக்கோடி
பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி
இப்படியே யென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள் 140
எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான்
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண் டசையாமல்
நாட்டமுட னுள்ளத்(து) அடக்கிமறுத் தேதுரைப்பார்
நல்லதுவே மருகன் நலமா யிருப்பதுதான்
பொல்லாது செய்யாமல் புரிந்தாள் வதேபோதும்
என்றுரைத்து அய்யா ஈசரோ டேதுரைப்பார்
பண்டுவிட்ட வாசகச்சொல் பற்றிச்சோ பூமியிலே
வல்லாண்மைக் காரருக்கு மதமிப்ப டியிருக்கும்
இல்லாதெளி மைகட்கு இருக்குமது மேல்தயவு
என்று இருபேரும் இயம்பி மனதடக்கி
நன்றெனவே கந்தனொடு நல்வார்த்தை யும்பேசி
அந்த முடனே எல்லோருந் தானடந்து
செந்தூ ரலைக்கரையில் சேர்ந்தனர்கா ணம்மானை
கடற்கரை தனிலே வந்து கரியமா லீச ரோடும்
மடக்கொடி உமையா ளோடும் மறைமுனி தேவ ரோடும்
குடக்கலை பொருந்தும் வேதக் கூர்முனி ரிஷிக ளோடும்
கடற்கரை தனிலே வந்து கண்டனர் கடலைத் தானே
வந்தவ ரெல்லாப் பேரும் வட்டமிட் டதிலே நிற்கச்
சந்தன வாரி யோரம் தன்னிலே நின்று ரண்டு
சுந்தர முனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு 160
எந்தனின் பிரானே யென்று இருவரும் வணங்கிச் சொல்வார்
கலைமுனி ஞானமுனி வரவு
ஆதியே யெங்கள் அய்யாநா ராயணரே
சோதியே யெங்கள்தவம் சுறுக்கிட் டுருவளர்ந்து
கண்டுகொண் டோமையா கமலப் பொருளேநீர்
பண்டு மொழிந்தபடிப் பார்த்துவரந் தாருமையா
என்று முனியிருபேர் இறைஞ்சித் தொழுதிடவே
மன்று தனையளந்தோர் மறுத்துரைப்பா ரன்போரே
ஏதுகாண் மாமுனியே இங்குநின்ற வாறேது
தாது கரமணிந்த சன்னாசி சொல்லுமென்றார்
அப்போது மாமுனிவர் அவரேது சொல்லலுற்றார்
முப்போது நாங்கள் மும்முதற்சொல் மாறாமல்
மேலோகம் விட்டு மேகவண்ணா வுன்செயலால்
பூலோக மீதிறங்கிப் பொங்குகடல் கண்டணுகிச்
சோதி யுரைத்த சொல்லுரைத்து வாரியிடம்
நீதியாய் நில்லுமென்று நினைவாகச் சட்டமிட்டுக்
கயிலை யதேக கண்ணோக்கும் வேளையிலே
அகில மதிற்கலியன் அனைமிகக் கண்டேதான்
மேலோக மேற மேல்வழிகள் காணாமல்
பூலோக மானதிலே போயிருந்தோங் கண்கவிழ்ந்து
அப்போது ஆயனேநீர் அங்குவந்து எங்களிடம் 180
இப்போது போய்நீங்கள் என்னுடைய செந்தூரில்
வாரிக் கரையதிலே வாய்த்ததவ மாயிருந்து
சூரியப் பிரகாச சுத்தவை குண்டராசர்
இக்கட லில்பிறந்து எங்கள் தமைக்கூட்டிப்
பக்கமதில் வைத்துப் பதவிதர வேணுமென்று
நில்லுங்கோ தவசு நினைவாக வென்றுசொல்லி
பல்லுயி ரும்வளர்த்த பாக்கியவா னேநீரும்
உரைத்தமொழி அய்யாவுன் உள்ள மறியாதோ
கறைக்கண்டர் மைத்துனரே கண்ணா எனத்தொழுதார்
அப்போது அய்யா நாரா யணர்மகிழ்ந்து
செப்போடு வொத்தாற்போல் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுகாண் பிள்ளாய் நாடுந் தவம்புரிந்தீர்
வல்லவர்தாம் நீங்கள் வாருங்கோ வென்றழைத்து
அருகிலே நில்லுமென்று அகமழிந் தாரன்போரே
குருவான ஈசரொடு கூறுவார் பின்னாலே
நம்முடைய ஈசுரரே நாம்வந்த காரியங்கள்
எம்முதலே யின்னதென்று இயம்புவீ ரீசுரரே
கட்டான ஈசுரரும் காரியத்தைப் பாருமென்று
மட்டான வாரிக் கரையிலே வந்திருந்து
எல்லோருஞ் செந்தூர் இடமெல்லாங் கண்பார்த்து 200
வல்லோர்க ளெல்லாம் வந்திருந்தார் செந்தூரில்
சம்பூர்ணத் தேவனுக்கு நற்பேறு அருளல்
அங்கு சிலநாள் அமர்ந்திருக்கும் வேளைதனில்
சங்குவண்ணர் நேமித்த சடல மதின்பெருமை
உரைக்கிறார் அன்பர் உள்ள மகிழ்வதற்கு
தரையீரேழு மளந்த சுவாமி யுரைக்கலுற்றார்
சீரான நல்ல தெட்சணா புமியிலே
பாரான நல்ல பதிதா மரையூரில்
தவசிக் குகந்த தாமரையூர் நற்பதியில்
சிவசிவா வளரும் தெட்சணா புரிநாடு
பாண்டவரில் விசையன் பாசுபதம் வேண்டுதற்கு
ஆண்டபர மேசுரரை அகம்வைத்துப் போர்விசையன்
நின்று தவமுடித்து நெடியரனை மாதுவையும்
கண்டு பதம்வாங்கிக் கைகண்ட திவ்வூரு
அதியரசன் முன்னாள் அதிகத் தவமிருந்து
பதியரசி யானப் பார்வதியை ஈன்றதுதான்
இவ்வூரு தெச்சணந்தான் ஏற்றதா மரையூரு
செவ்வூரு நல்ல சிறந்தமண வைப்பதிதான்
வானலோ கம்வாழும் வாய்த்ததெய் வேந்திரனும்
தானவரைக் காணத் தவசிருந்த திவ்வூரு
பஞ்சவர்க்கு முன்னம் பசுவா னுதவிசெய்ய 220
அஞ்சல்செய்து நாதன் அமர்ந்திருந்த திவ்வூரு
சாம்பு சிவசான்றோர் தழைத்திருந்த திவ்வூரு
தாம்பிரவர்ணி யாவி தழைத்திருந்த திவ்வூரு
பரராச முனிவன் பாரத் தவசுபண்ணி
விரமான வியாகரரை மிகஈன்ற திவ்வூரு
தவம்புரிய வென்று தானினைத்த பேர்களெல்லாம்
பவமற்ற தாமரையூர் பதியாகு மென்றுரைப்பார்
தவசுக் குகந்த சந்தமுற்ற பேரூரு
பவிசுக் குகந்த பாலதியத் தாமரையூர்
அவ்வூரு தன்னில் ஆதி யருளாலே
செவ்வுமகா விஷ்ணுவும் செய்தசட மேபிறந்து
பிறந்து வளர்ந்து பெருமைப் புகழ்காட்டி
மறந்திடா முன்னமைந்த மாதை யுறவாடிப்
பூலோக மனுக்கள் பிள்ளைபோ லேவளர்ந்து
மாலேற்கப் பூசை மனையில் மறவாமல்
விட்டிணுவைப் போற்றி விளங்கவொரு பீடமிட்டுக்
கட்டுத்தீர்க் காகக் கண்வளர்ந் தார்கலியில்
ஒருவர்க்கோர் பொல்லாங்கு உலகில்மிகச் செய்யாமல்
குருவைக் குருகண்டு கொக்கரித் தேவளர்ந்தார்
எதிர்த் தோரையடக்கி எல்லோர்க்கும் நல்லவராய் 240
உருத்துக் கரியவராய் உலகில் மிகவளர்ந்தார்
எச்சா தியார்க்கும் இவர்நல்ல வரெனவே
அச்சாதி யெல்லாம் அகமகிழத் தான்வளர்ந்தார்
முன்னுதித் துடன்பிறந்தோர் ஒருவர்மூப் பாடாமல்
பின்னுதித்தும் பெரியோராய்ப் பெருமையுட னேவளர்ந்தார்
தாய்தகப் பன்மாமன் சந்தமிந்தத் தம்பியென்றும்
ஞாயவா னென்றும் நாடி மிகவளர்த்தார்
ஊருக்குந் தலைவன் உடையவழிக்குந் தலைவன்
ஆருக்குந் தலைவனென்று அன்னை பிதாவளர்த்தார்
ஞாய மிருப்பதனால் நாடாள்வா னென்றுசொல்லித்
தாய்தமர்க ளெல்லாம் தாங்கி மிகவளர்த்தார்
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத் திலும்பெரியோன்
மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும்பேர் கேட்கவைப்பான் இவன்கீர்த்தி நல்வளமை
பல்லார்க்கும் ஏறிடுவான் பார்முழுதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் நல்லவனாய் இவன்சமைவா னென்றுசொல்லி
எவ்வோருங் கொண்டாட இன்பமுட னேவளர்ந்தார்
அவ்வோருங் கொண்டாட அவர்வளரும் நாளையிலே
பத்து வயது பண்போ டிருபதிலே 260
மற்று நிகரொவ்வா மன்னவர்போ லேவளர்ந்தார்
எல்லாத் தொழிலும் இதமிதமாய்க் கற்றுமிகப்
பொல்லா தாரோடு பெரும்பகைபோ லெசீறி
நல்லாரை யுள்ளில் நாளு மறவாமல்
கல்லாரை யெல்லாம் கண்டுகழித் தேயிருந்தார்
ஈவதற்குத் தர்மனென எளியோரைக் கண்பார்த்து
ஆய்வதற்கு நல்லான் என்றே மிகவளர்ந்தார்
பதினே ழுவயதில் பண்டமைத்த பெண்ணோடு
விதியா னபடியால் மெல்லியர்மே லிச்சைகொண்டு
கூடிக் குணமாய்க் கொண்டவனை யுமகற்றித்
தேடி யிவரோடு செய்யரச மாயிருந்தாள்
வானுபர மேசுரனார் மாயவனா ராணையிட்டு
நானும்நீ யுமாக நலமாக வாழ்வோமென்று
ஆணையிட் டிருபேரும் அகமகிழ்ந் தன்றுமுதல்
நாண மில்லாமல் நாயகன்போ லெவாழ்ந்தார்
மங்கை காணாமல் மறுவூரு தங்கறியாள்
அங்கவளைக் காணாமல் அயலூரு தங்கறியார்
இந்தப் படியாய் இவர்வாழும் நாளையிலே
எந்தநருளுங்கண்டு இவர்க்கிவளை யமைத்ததென்பார்
முன்னாள் அமைத்த ஊழி விதியெனவே 280
சொன்னா ரெவரும் சுவாமி யருளாலே
அன்றைக் கமைத்ததுவே அவளையிவர்க் கல்லாது
என்று நருளெல்லாம் இயம்பி மிகவுரைத்தார்
மன்றீ ரேழுமறிய மங்கையொடு வாழ்கையிலே
உற்ற வயசு ஓரிருபான் ரண்டதிலே
சத்துராதி யோர்நீசன் தானே பிழையேற்க
ஏற்கவே நீசன் இடறுசெய்த ஏதுவினால்
ஆர்க்கம் அடக்கி அமர்ந்து பிணியெனவே
எல்லோரு மறிய இவரிருந்தா ரம்மானை
வெல்லாரு மில்லா விசையடக்கித் தானிருந்தார்
நொம்பலங்க ளென்று நொந்து மிகவுழைந்து
தம்பிலங்க ளடக்கித் தருணம் புலம்பலுற்றார்
கருவுற்ற தோசம் கழிந்து சிவஞானத்
திருவுள மாகி சிவமய மாய்ப் பெறவே
மனதில் மிகவுற்று மாயவரை நெஞ்சில்வைத்துத்
தினமும் வருந்தித் தீனமென வேயிருந்தார்
அப்படி யோர்வருசம் அங்கமதி லூறலெல்லாம்
முப்படி ஞாயமதால் உலகில் கழியவிட்டு
எகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலே
மகாபர னார்செயலால் மாதாவின் கண்ணதிலே 300
சொற்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே வுத்தரவு
உற்பனம்போல் கொண்டு உற்றஅவர் மாதாவும்
மகனே யின்றிரவில் மனஞ்சலித்து நான்வாடி
அகம்வைத்த எண்ணம் அறிந்துசிவ நாரணரும்
வந்துசொன்ன வுத்தரவை மகனேநீ கேளுவென்று
விந்து வழிக்கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்கச்
சொல்லுகிறா ளந்தச் சொற்பனத்தை யன்போரே
நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுவா ளன்போரே
ஆயிரத் தெட்டு ஆண்டிதுவா மிவ்வருசம்
மாசியென்ற மாதமிது வாய்த்ததேதி பத்தொன்பது
இம்மாத மித்தேதி ஏற்றதிருச் செந்தூரில்
நம்மாணை கொடியேறி நல்லதிரு நாள்நடக்கு
அங்குன் மகனை அழைத்துவ ருவாயானால்
எங்குள்ளோ ருமறிய இப்பிணி யுந்தீர்த்து
நல்லபே றுங்கொடுப்போம் நம்மாணை தப்பாதெனச்
சொல்லவே கண்டேன் சுவாமிகரு மேனிநிறம்
நான்கண்ட சொற்பனந்தான் நழுவிமிகப் போகாது
தேன்கண்டாற் போலே சிரித்து மனமகிழ்ந்து
இந்தக் கனாவதற்கு இங்கிருந் தங்கேபோய்
வந்தல்லா தேபிணியும் மாறவகை யில்லையல்லோ 320
என்றுரைக்க எல்லோரும் இன்பமுட னேமகிழ்ந்து
நன்றுநன்று போவதற்கு நடைக்கோப்பு கூட்டுமென்றார்
வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து
ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாஞ் சேகரித்துத்
தானதர்மஞ் செய்ய தனங்கள் மிகவெடுத்துத்
தீன மானவரைத் திடமாகக் கூட்டிவந்து
ஆளுமிகச் சேகரித்து அகலநல்ல தொட்டில்வைத்து
நாளு கடத்தாமல் நடக்கவழி கொண்டனராம்
மாதாவும் மகனும் வாய்த்த நருளுடனே
நிதாவின் பாதாரம் நெஞ்சில் மிகநிறுத்தி
இருந்த பதியும்விட்டு ஏற்றவொரு காதம்விட்டு
வருந்த நருளோடே வழிகொண்டா ரன்போரே
கூடங் குளமும்விட்டுக் குளிர்ந்தசுக்குப் பாரும்விட்டுத்
தோடவழி யாறுங்கண்டு சூறாவழிக் காடும்விட்டு
நடந்து வொருவனத்தில் நல்லதண்ணீ ராவிகண்டு
கொடர்ந்த பலகாரம் கொண்டுதண்ணீர் தான்குடித்து
தகையாறிக் கொண்டு தானிருக்கும் வேளையிலே
வகையான நல்ல வாய்த்தமகா விட்டிணுவும்
பிறவிக்கு ஏற்ற பிள்ளை வருகுதென்று
திறவி முதலோன் தெளிந்துமிகக் கொண்டாடி 340
எதிரே ஆள்விட்டு இங்கழைக்க வேணுமென்று
அருகே தானின்ற ஆதி முனியான
நல்ல முனிவரையும் நாரா யணரழைத்து
வல்லவர்தாம் நீங்கள் வாரு மென அழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே
நேருங்க ளோடு நிகழ்த்துகிறே னோர்வசனம்
நானே மித்த நல்லவுயி ரானதிங்கே
தானே வருகுதுகாண் எந்தன் தவத்தாலே
எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று
பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியயச்சார்
அயச்ச முனிமார் அவ்வாயு போல்விரைவாய்ப்
பயபட்ச முடனே பகர்ந்த இருமுனியும்
எந்த வழியாய் இவர்கள்வரு வாரெனவே
அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்துவந்தார்
வந்து ஒருவழியில் வரவேகண் டம்முனிவர்
சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு
கண்டு குவித்துக் கனக முனிமார்கள்
வண்டுசுற்று மார்பனுட வாய்த்தகரம் ரண்டதையும்
முனியிருபேர் தோளில் உயர்த்தி மிகவேந்தி
துணிவுடனே மாமுனிவர் தோளின்மே லேயிருத்திப் 360
பதியி லிருந்தாற்போல் பார்மன்னனை யிருத்திக்
குதிரைநடை கொண்டாற்போல் கொண்டோடி மாமுனிவர்
கூட நடப்போர் குதித்துக்குதித் தோடிவர
வாடி யிடைந்து மனுநருட்க ளோடிவர
நல்ல பிறவியைத்தான் நன்முனிவர் கொண்டோடி
வல்லசெந் தூர்ப்பதியில் வந்தனர்கா ணன்போரே
வந்த முனிமார்கள் வாழ்த்தியந்த நல்லுயிரைச்
சந்தனா வீதியிலே சடலந்தனை நிறுத்தி
மாமுனிவர் தாமும் மாயோனை வந்துகண்டு
சாமிநீர் கொண்டுவரத் தானுரைத்த நற்சடலம்
அடியா ரெதிரேபோய் அழைத்துவந்தோ மையாவே
திடீரெனவே நாதன் சொன்னமுனி யோடுரைப்பார்
கொண்டுவந்தோ மென்றீரே கூர்மையுள்ள நற்சடலம்
பண்டுமுறை யெல்லாம் பகருவீர் மாமுனியே
அப்போது மாமுனிவர் ஆதி யருளாலே
செப்புகிறோ மென்று செப்பலுற்றா ரன்போரே
நல்ல சடலமிது நாடுமுற் காலமதில்
வெல்லமர்கோன் வாழும் வெற்றிதெய்வ கோலகவுயிர்
பெருசம் பூரணன்தான் பெரிய திறவான்காண்
ஆரொவ்வா ரேயிவர்க்கு ஆதி கிருபையுள்ளோன் 380
அப்படியே தெய்ட லோகமதி லேயிருக்க
இப்படியே யிவர்க்கு எமலோக மானதிலே
இருக்கின்ற பெண்ணதிலே இசைந்தபர தேவதையென்(று)
ஒருகுழலி தன்மேல் உள்ளாசை யாயிவரும்
அவளு மிவர்பேரில் ஆசையாய்த் தானிருந்து
இவளு மிவரும் இருந்துமிக வாழ்கையிலே
தேவருக்குந் தெய்வ லோகமே ழுள்ளவர்க்கும்
யாவருக்கு மோர்பிறவி யாகுகின்ற நாளதுவாம்
இவரையும் வருத்தி என்னவுன் செய்தியென்றார்
அவளுடைய ஆசையினால் அல்லவென்று தான்மறுத்து
இவளையு மென்னோடு இயல்பாய்ப் பிறவிசெய்தால்
குவளையணி மாயவரே குணமெனக் காகுமென்றார்
அப்போது நாதன் அந்தத்தே வன்றனக்குச்
செப்பமுள்ள புத்தி செப்பிமிகப் பார்த்தனரே
அப்போதிவர் கேளாமல் அதுதானது தானென்றார்
மாயனுக்குக் கோபம் மனதில் மிகவாகி
ஆயனப்போ திவர்க்கு அதிகப் பலனுரைத்தார்
நல்லதுநீ கேட்ட ஞாயமீட் டேற்றமதாய்
வல்லவனை நினைந்து மாதுவும் நீதானும்
எங்க ளிருபேர்க்கும் இன்னம் பிறவியிலே 400
மங்கையும் புருசனென மறவாம லாவதற்கு
வரந்தாரு மென்று மனதில் நினைவேற்றிப்
பரந்தாண்டி கண்டு பலன்பெறுங்கோ வென்றுசொல்லி
தவசிருக்க விட்டீர்காண் சங்கரரே நீர்கேளும்
சிவசிவா வென்றுதவம் செய்தவர்கள் நிற்கையிலே
தவம்பார்க்க ஈசுரரும் சன்னாசி நீதனுமாய்
அவட மெழுந்தருளி அங்கேகும் வேளையிலே
தெய்வேந் திரனும் திருமுடி யுஞ்சூடி
மையேந்திர னுடைய மலர்பாதங் காணவென்று
அவனுமிக வந்தான் அரனெதிரே அய்யாவே
தவத்துக் கிடறு தான்வருவ தோராமல்
தேவன் மதிமயங்கித் திருமுடிமே லிச்சைகொண்டு
பாவையுட னுரைத்துப் பற்கடித்தான் தேவனுமே
அதையறிந் திசுரருள் அன்றும்மு டனுரைத்தார்
இதையறிந் துநீரும் ஏற்றதேவ னோடுரைத்தீர்
வாய்த்த தவங்குளறி வாய்க்காமல் நின்றதினால்
ஏற்றகீ ழுலகில் என்மகவு சான்றோரில்
நல்லதர் மகுலத்தில் நன்றாக நீபிறந்து
தொல்லையெல் லாந்தீர்த்துச் சூலினழுக் கறுத்து
வளரும் பருவமதில் வந்துன்னை நானெடுத்து 420
இளவரசா யுன்னை ஈன்றெடுத் தேவளர்த்து
ஆளு மரசு அழகாக வுன்றனக்கு
நாளு மிகத்தருவேன் நம்மானை தப்பாதென
உறுதிசொல்லித் தேவனையும் உற்ற சான்றோர் குலத்தில்
பொறுதியுள்ள தர்மப் பிதிரில் பிறவிசெய்தீர்
மாதைப் பிறவிசெய்தீர் மக்கள்சான் றோர்குலத்தில்
சூதஎமக் குலத்தில் தோகையரைத் தோன்றவைத்தீர்
அப்படியே முன்னம் அய்யாவே யிவ்வகைக்கு
இப்படியே பிறந்து இச்சடல மென்றுரைத்தார்
என்றிந்த விவரமெல்லாம் இயல்முனி வோர்கள் சொல்ல
நன்றிந்த விவர மென்றே நாரணர் தயவு கூர்ந்து
சென்றிந்தச் சடலந் தன்னைச் செந்திலம் பதியி லெங்கும்
கொண்டெந்தத் தெருவுங் காட்டிக் குளிர்ப்பாட்டி வாருமென்றார்
மேலுள்ள சடலந் தன்னை மிகுமுனி மாரே நீங்கள்
நாலுள்ள தெருக்கள் தோறும் நடத்தியே தரையி லூட்டிப்
பாலுள்ள பதத்தில் கொண்டு பழவிளை தீரக் காட்டி
மாலுள்ளம் புகுத நாட்டி வாருங்கோ சிணமே யென்றார்
அப்படி முனிமா ரேகி அங்கங்கே கொண்டு காட்டி
முப்படித் தோசம்போக முனைபத மதிலேமூழ்கி
இப்படி யிவரைக் கொண்டு இவர்வரு முன்னேயாகச் 440
செப்படி வித்தை நாதன் செகலினுள் ளகமே சென்றார்
வைகுண்டர் உதயம்
வானவர் தேவர்போற்ற மறைமுனி வோர்கள் பாடத்
தானவர் ரிஷிகளோடு தமிழ்மறை வாணர் போற்ற
ஞானமாம் வீணை தம்பூர் நாற்றிசை யதிர வோசை
ஓநமோ வென்று தேவர் ஓலமிட் டாடி னாரே
மத்தளத் தொனிகள் வீணை மடமடென் றேற்ற வானோர்
தித்திதெய் தித்தி யென்ன தேவியர் பாடி யாடத்
தத்தியாய்ச் சங்க மெல்லாம் சதுர்மறை கூறி நிற்க
முத்திசேர் மாயன் தானும் மூழ்கினர் கடலி னுள்ளே
கடலினுள் ளகமே போந்து கனபதி மேடை கண்டு
மடவிபொன் மகரந் தன்னை வாகுடன் பூசித் தேய்த்து
நிடபதி மாயன் தானும் நிறைந்தபொன் னிறம்போல் வன்னி
வடவனல் போலே வீசி வந்தனர் மகர முன்னே
வந்தனர் மகர முன்னே மாதுபொன் மகரங் கண்டு
செந்தழ லெரியோ வென்று செல்லிடப் பதறி நொந்து
எந்தனின் மான வானோ எரிவட வாச மேர்வோ
கந்தனின் மாய மாமோ என்றவள் கலங்கி னாளே
கலங்கியே மகரந் தானும் கருத்தறிந் தேதோ சொல்லும்
இலங்கியே வருவோ மென்ற என்மன்னர் தானோ யாரோ 460
சலங்கியே யதிரப் பூமி சதிரெனக் கதிரு பாய
துலங்கிய சுடரைப் பார்த்துச் சொல்லுவாள் மகரந் தானே
சுடரே சுடரே துலங்கு மதிசுடரே
கடலே கடலே கடலுட் கனலாரே
அக்கினிக் கேயபயம் அனலே வுனக்கபயம்
முக்கியமாய்க் காந்தல் முனையே யுனக்கபயம்
தீயே யுனக்கபயம் திரிபுர மேயபயம்
நீசுட்டத் தலங்கள் நினக்குரைக்கக் கூடாது
மாசற்ற ஈசன் வல்லவனோ டுள்ளிருந்து
காண்டா வனமெரித்தாய் கடியவில்லி கையிருந்து
ஆண்டஇலங் கையெரித்தாய்அனுமன்கையி லேயிருந்து
முப்புரத்தைச் சுட்டழித்தாய் முதன்மைகையி லேயிருந்து
ஒப்புரவாய் நீயெரித்த உவமைசொல்லக் கூடாது
அனலே வுனக்கபயம் ஆதி யுனக்கபயம்
கனலே யமருமையா காந்தல்தனை மாற்றுமையா
மன்னரரி நாரணர்க்காய் மாறுவீ ரக்கினியே
இந்நியல்பை யெல்லாம் என்மன்ன ரிங்குவந்தால்
சொல்லி யுனக்குச் சொக்கம்வேண் டித்தருவேன்
வில்லிக்கு வல்லவனே விலகி யமருமையா
என்னையென் மன்னவர்தான் இந்தக் கடலதிலே
பொன்னனைய நன்மகரம் ஆகவே போகவிட்டார் 480
வருவோ மென்றநாளும் வந்ததுகா ணக்கினியே
தருவே னுனக்குவரம் தாட்டீகன் வந்ததுண்டால்
அமர்ந்துநீ போனால் அதிகப்பல னுண்டாகும்
சுமந்த பறுவதத்தின் சுகம்பெற்று நீவாழ்வாய்
என்றுமக ரமாது எரியைமிகக் கண்டுளறி
நின்று மயங்குவதை நெடியதிரு மாலறிந்து
அனலைமிக வுள்ளடக்கி ஆதி யுருக்காட்டி
மனைவியேநீ வாவெனவே மாய னருகழைத்தார்
உடனே பொன்மாது உள்ளம் மிகநாணி
தடதடென வந்து சுவாமியடி யில்வீழ்ந்து
எந்தன் பெருமானோ இப்படித்தா னின்றதுவோ
சிந்தை மயக்குதற்கோ தீப்போலே வந்ததுதான்
என்றுமிகப் பொன்மகர இளமாது ஸ்தோத்தரித்து
மன்று தனையளந்தோர் வாநீ யென அழைத்து
அருகில் மிகநிறுத்தி அங்குள்ள தேர்பதியும்
கருதி யிருபேரும் கண்கொண் டுறப்பார்த்து
வச்சிர மேடை மரகதப் பொன்மேடை
எச்சரிக்கை மேடைஎல்லா மிகபார்த்து
மாதே வுனக்கு வளர்பிறவி பத்தெனவும்
சீதே வுனக்குச் சிறந்தபேறு பத்ததிலே 500
பலம்பேறு பேறாய் பார்மகிழ வோர்பாலன்
சிலம்பே றுடையவனாய் சிவனுக் குகந்தவனாய்
எகாபர முமகிழ யானும் நீயுமாக
மகாகுரு வதாக மகிழ்ந்து மகிமையுடன்
தன்மச் சிறப்பதிகத் தலைவன் தனைப்பெறவே
உண்மையாய் நானுனக்கு உபதேச மாயுரைத்தேன்
என்றுரைக்க நாரணரும் இளமகர மேதுசொல்லும்
பண்டு அமைத்திருந்தால் பக்கஞ்சொல் வதோ அடியாள்
சித்தத்துக் கேற்ற செயலெனவே பொன்மகரக்
கற்றைக் குழலி கருதி மிகவுரைத்தாள்
உடனே பொன்மகரம் உள்ளம் மயக்கமிட்டுத்
திடமயக்கிச் சிங்கா-சனத்தில் மிகவிருத்தி
மயங்கியே பொன்மகர மாது மிகவிருக்கத்
தியங்குதே லோகமுதல் திரைவாயு சேடன்முதல்
ஈசர்முத லாதிமுதல் ஏற்றதெய் வார்கள்முதல்
சீதை முதல்மயங்க சீமையீரே ழுமயங்க
மாமோகச் சக்கரத்தை மாயவனார் தான்வீசிச்
சீமை யெழுகடலும் சிணமே மயக்கினரே
மயக்கியந்த மால்மகரம் மாமோக மாயிருக்க
தியக்கியந்த நாரணரும் சென்றார் மதுரமதுள் 520
மகரமுள் சென்று மகனை மிகநினைக்க
உகரமுனி கூட்டிவந்த உற்ற சடலமது
சிணமே கடலுள் சென்றதுகா ணன்போரே
குணமே குணமெனவே கூண்டரியோன் தான்பார்த்து
மகனை மிகவெடுத்து மகரமதி னுள்ளேகொண்டு
அகரத் தெருவறையில் அலங்காரத் தட்டில்வைத்துக்
காலொன்றாய் நிற்கும் கனத்தபொன் மேடையதுள்
நாலொன்றாய்க் கூடும் நல்லசிங் காசனத்தில்
தங்கவை டூரியத்தால் தானிறைந்த மண்டபத்துள்
எங்கும் பிரகாசம் இலங்குகின்ற மண்டபத்துள்
முத்துக்கள் சங்கு முழங்குகின்ற மண்டபத்துள்
பத்தும் பெரியோர்கள் பாவித்த மண்டபத்துள்
தங்கநீ ராவித் தான்வளரு மண்டபத்துள்
சங்கு முழங்கிநிற்கும் சதுரமணி மண்டபத்துள்
மூவாதி கர்த்தன் உகந்திருக்கு மண்டபத்தில்
தேவாதி தேவர் சிறந்திருக்கு மண்டபத்தில்
ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மண்டபத்தில்
தாற்பிரிய மான தாமிரவர்ணி மண்டபத்தில்
எண்ணக் கூடாத இயல்புநிறை மண்டபத்தில்
மண்ணளந்தோர் மகரமதுள் மகனை மிக இருத்திக் 540
கண்ணான மகற்கு கனத்ததங்கச் சட்டையிட்டு
எண்ணவொண்ணா ஆபரணம் எல்லா மெடுத்தணிந்து
தங்கக் குல்லாவும் தலைமேலே தூக்கிவைத்துப்
பங்கமில்லாத் தைலப் பதத்தில் மிகமூழ்கி
வைகுண்ட வெள்ளை மான்பட்டொன் றேயெடுத்துக்
கைகொண்டு பாலனுக்குக் கண்ணர் மிகச்சூடி
மேலுக ளொக்க மினுமினுக்கப் பச்சையிட்டுக்
காலுக ளுக்குத்தங்கக் கழராப் பணிகளிட்டு
மகனை யெடுத்து மடிமீதி லேயிருத்தி
உகமாள வந்தவனோ உடையவனோ என்றுசொல்லிக்
கண்ணைத் தடவி கரிய முகந்தடவி
எண்ணும் வளர்வாயென்று இசைந்தமுகத் தோடணைத்துப்
பாலனைப் போல்காட்டிப் பதினா றுடன்காட்டி
நாலுரண்டு காட்டி நல்ல மகவதுக்கு
நடக்கக் கருமம் நவின்றிடவே நாரணரும்
அடக்க முடனே அருளுவா ரன்போரே
நல்ல வுபதேசம் நன்மகவுக் கேயருளி
வல்லத் திருநாதன் வகுக்கிறா ரன்போரே
விஞ்சையருளல்
தேடிய மறைநூல் வேதன் தேவியர்க் கமல நாதன்
நாடிய இறையோன் ஞானி நாச்சிமார் தேவ ரோடும் 560
கூடிய ரிஷியோர் வானோர் குவலய மறியா விஞ்சை
தேடிய மகனார்க் கென்று செப்பினா ரொப்பில் லானே
மகனே வுனது மனமறிய மறையோ ரறியா விஞ்சைசெய்து
அகமே யருளித் தருவதெல்லாம் அனுப்போ லசலில் விலகாதே
உகமே முடிந்த தின்பிறகு உதிக்குந் தர்மயுகத் தில்வந்தால்
செகமே யறியச் சொல்லிமிகச் சிறந்தே வாழ்ந்து வாழ்வோமே
ஆண்டா யிரத்து எட்டதிலே அதனே மாத மாசியிலே
நான்றாங் கடலின் கரையாண்டி நாரா யணனே பண்டாரம்
கூண்டாந் தெச்ச ணாபுரியில் கொண்டோம் பள்ளி தர்மமுற்று
ஒன்றாம் விஞ்சை யிதுமகனே உரைப்பேன் ரண்டாம் விஞ்சையதே
வேண்டாம் வேண்டாங் காணிக்கையும் மிகவே வேண்டாங் கைக்கூலி
ஆண்டார் நாரா யணன்தனக்கு அனுப்போல் வேண்டாங் காவடியும்
வேண்டா மெனவே நிறுத்தல்செய்து வாய்த்த சிறையாய்க் கவிழ்ந்திருநீ
இரண்டாம் விஞ்சை யிதுமகனே நவில்வேன் மூன்றாம் விஞ்சையதே
கொற்றவர் தானு மாண்டு குறும்புகள் மிகவே தோன்றி
உற்றதோர் துலுக்கன் வந்து உடனவன் விழுந்து வோடி
மற்றதோ ராண்டு தன்னில் வருவோ மென்றா கமம்போல்
முத்தலத் தோருங் காண உரைத்தனர் மூன்றாம் விஞ்சை
நல்ல மகனே நாலாம் விஞ்சைகேளு
வல்ல நடுஞான வாய்த்த வைகுண்டமது 580
பிறந்துகொண் டிருக்கெனவும் புதிய ந÷க்ஷத்திரத்தில்
அறந்தழைக்க நன்றாய் அதுகுதிக்கு மென்றுசொல்லு
மாழுவது மாண்டு மனதுகந்த தேமுழிக்கும்
முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டுகொள்ளும்
ஒருநெல் லெடுத்து உடைக்கநாடு கேட்டுக்கொள்ளும்
இருநெல் லெடுத்து உடைக்கநாடு தாங்காது
மலைக ளுதிர்ந்துவிடும் வான மழிந்துவிடும்
தலைநாட் சேத்திரமும் தானுதிரும் ஆலங்காய்போல்
என்றுநா லாம்விஞ்சை இதுதானே என்மகனே
சத்தமொன் றானதிலே தானிதெல்லா மாகுமென்று
சித்த முடனே செப்பியிரு என்மகனே
ஆயிரத் தெட்டு அதில்வாழுந் தேவருக்கு
வாயிதமாய் விஞ்சை வகுப்பேன்கே ளென்மகனே
நாட்டுக் குடைய நாரா யணர்தானும்
ஆட்டுக் கொடைபூசை அனுப்போலும் வேண்டாமென்று
சொல்லியே தர்மமுற்றுச் சிறையாகத் தானிருக்கத்
தொல்லுலகி லாரேக்கார் பார்ப்போமென்று சொல்லிடுநீ
தூறான பேய்களுக்குச் சொல்லு முறைகேளு
வாறான நாரணர்தான் வாய்த்ததர்ம மேநினைத்துக்
கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தா லோகமெல்லாம் 600
உவந்து திரியும் உயிரிப்பிராணி யாதொன்றையும்
இரத்த வெறிதீபம் தூபமிலைப் பட்டைமுதல்
சற்றும் வெலிபாவம் தான்காண ஒட்டாதெனத்
தர்மம் நினைத்துத் தவசிருக்கேன் நாரணனும்
உற்பனமா யறிந்தோர் ஒதுங்கியிருங் கோவெனவே
வீணப் பசாசறிய விளம்பியிரு என்மகனே
நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம்
மட்டை யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார்
சட்ட மசையாதே தன்னளவு வந்தாலும்
நாட்டைக் கெடுத்த நவின்றகலிச் சக்கரத்தில்
ஓட்டைக் கலத்ததிலும் உக்கு மிரும்பதிலும்
முழியாதே யென்மகனே மும்முதற்கும் நாயகமே
அழிவாகிப் போகும் அன்புகெட்ட நீசருடன்
பொய்யரோ டன்பு பொருந்தி யிருக்காதே
மெய்யரோ டன்பு மேவியிரு என்மகனே
வர்மமதை வதைக்க வந்தேனெனச் சொல்லிமிகத்
தர்ம மதைவளர்க்கத் தரணியில் வந்தேனென்று
இம்முதலே யாறு இருப்பே தவசுபண்ணி
மும்முதலோ னாகி முறைநடத்து என்மகனே
மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி 620
நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே
பரமான பட்டணத்தில் பார்வைகொண் டேநாட்டிச்
சிரமானது விரித்துச் சிறையே யிருமகனே
ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்மேலாகும்
காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே
சந்தன வாடை சாந்துசவ் வாதுபுஸ்பம்
எந்தன் திருமகனே எள்ளளவும் பாராதே
வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில்
நாடை யழித்து நல்லயுக மேபிறந்தால்
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே
கண்டாயோ மகனே கரிய பவிசுஎல்லாம்
கொண்டாயோ விஞ்சை கூடுபிர காசமதாய்
அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார்
இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப்
பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம்
உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரே
தங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும்
பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும்
என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்து
நன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே 640
இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே
உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள்
என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம்
அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப்
பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே
சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல்
யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே
நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால்
செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே
ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமே
ஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே
முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள்
என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ
அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க
நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்து
மேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ
இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி
எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும்
எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார்
பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார் 660
அந்த வுடனே ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக்
கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத்
திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே
எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித்
தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும்
உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய்
சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே
மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால்
தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால்
அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம்
எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே
முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்
நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்
இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்
எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனே
ஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்து
பாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ 680
வத்துவகை சொத்து மனைவீடு வாசல்முதல்
சற்றுமன தெண்ணாமல் தானிருந் தென்மகனே
நன்மையோடு தண்மை ஒன்றுமிகப் பாராமல்
கந்தைத் துணியுடுத்து கைநிமிர்ந்து காட்டாமல்
எந்தப் பேரோடும் இனிப்புமொழி பேசாமல்
பாலல்லால் வேறு பண்டமிக ஏராமல்
காலல்லால் சுத்தம் கழுவ நினையாமல்
மூக்கு நடுவே மும்முதலு முத்திமுத்தி
நாக்குச் சுழிதாங்கி நாரணன் நானெனவே
எகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஓரிருப்பாய்
மகாபரனை நெஞ்சில் மறவாம லெப்போதும்
கண்டிரு என்மகனே கருத்தொன்று தானாட்டி
கொண்டை யமுதுண்டு குவிந்திரு என்மகனே
இப்படியே ஆறாண்டு இருநீ யுகத்தவசாய்
அப்படியே நீயிருந்து ஆறாண் டேகழித்தால்
நினைத்ததெல்லா முனக்கு நிசமாய் முடியுமப்பா
உனைத்தள்ளி வேறே ஒருமூப் புகத்திலில்லை
என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும்
வன்னத் திருமகனே வகையதுதா னென்மகனே 700
நீசெய்த தெல்லாம் நிரப்புத்தா னென்மகனே
நானீயே யல்லால் நடப்பதுவும் வேறில்லையே
தானீத னான சர்வபரா என்மகனே
ஒக்க வுனது உள்ளம் நினைத்தபடி
மிக்க நடத்தி விரும்பியிரு என்மகனே
எண்ணிறந்த கோடி இயல்பாவஞ் செய்தோர்க்கும்
நண்ணியே மோட்சம் நவிலவென்றா லுன்மனந்தான்
முக்கோடி தர்மம் உவந்தளித்த அன்போரைத்
தக்கோடி நரகமதில் தள்ளவென்றா லுன்மனந்தான்
உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகனே
எனக்கேற்க நின்றவரை இரட்சிப்பது முன்மனந்தான்
சிவனும்நீ நாதனும்நீ திருமாலும் நீமகனே
தவமும் வேதனும்நீ சங்கமுத லெங்கும்நீயே
அப்படியே அய்யா அரிநாத னுமுரைக்க
முப்பொருளோர் மெய்க்கும் முதலோன் மகிழ்ந்துரைப்பார்
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்தால்
வாறு மேலென்ன வகுப்பீர்கா ணையாவே
அப்போது நாதன் அன்பா யகமகிழ்ந்து
செப்புகிறார் நல்ல திருமகற்கு அன்போரே
அதிகத் தவசு ஆண்டாறு தான்கழித்தால் 720
இதின்மேல் நடப்பு இயம்பக்கே ளென்மகனே
இம்மூணு தவமும் இயல்பாய் நிறைவேறி
மும்மூவ ருக்கும் முதல்வனாய் வந்தாக்கால்
தானா னாய்நீயும் தலைவனும்நீ என்மகனே
சாணாரின் நாயகமே சாதித்தலை வன்நீயே
எந்தப்படிநீ எண்ணி நினைத்த தெல்லாம்
அந்தப்படி செய்து அவனிதனி லேசிலநாள்
சொந்த விளையாட்டு தொல்புவியிற் கொண்டாடிச்
சிந்தாத நன்மையோடு செகத்திலிரு என்மகனே
அதின் முன்னாக அன்னீத மாபாவி
ஏதுவினை செய்தாலும் எண்ணம்வையா தேமகனே
தாழ்ந்திரு என்மகனே சட்டைக்குள் ளேபதுங்கிச்
சார்ந்திரு என்மகனே தனதில்மிக நினைத்துக்
கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே
பாவத்தைக் காணாதே பாராக்கிரமங் காட்டாதே
ஆக்கிரம மெல்லாம் அடக்கியிரு என்மகனே
தாக்கிரவா னாகிடினும் சற்றும் பகையாதே
எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான்
பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே
வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே 740
சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள்
ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே
ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே
ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே
அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே
மகனே நானுனது மனதுட் குடியிருந்து
சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே
துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன்
நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே
பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை
நீசக் குலங்கள் நின்னையடிக் கவருவார்
சரித்துக் கொடுமகனே சற்றுங் கலங்காதே
ஒருவரோ டும்பிணங்கி உரையாதே என்மகனே
எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வே னென்மகனே
வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே
ஏழையா யிருநீ என்னுடைய கண்மணியே
ஆழ மனதுடைய அதிகமக னேவுனது
விதங்க ளறியாமல் வீணாவார் வம்பரெல்லாம் 760
மதங்க ளடக்க வாக்கெனக்கே ளென்மகனே
தந்தே னுனக்கு தரளமணி முத்திரியும்
கந்தைத் துணியதிலே காட்டாதே வைத்துக்கொள்ளு
மகனே வுனது மனறியக் காட்டினதை
அகமேநீ வைத்து அகமகிழு என்மகனே
பொறுதிதா னென்மகனே பெரியவ ராகுவது
உறுதிமிக வுண்டாகும் உகநாதா என்மகனே
தருமச் சிறப்புத் தான்கண்டா யோமகனே
பொறுமை பெரிது புவியாள்வா யென்மகனே
கண்டாயோ என்மகனே கரியமண் டபச்சிறப்புப்
பண்டையுள்ள தேரும் பதியுமிகக் கண்டாயோ
தேட்ட முடனுனக்குச் செப்பும்விஞ்சை யானதிலே
நாட்ட மறவாதே நாரணா என்மகனே
அப்போது ஆதியுடன் அம்மகவு ஏதுரைக்கும்
இப்போது என்றனக்கு இத்தனையுஞ் சொன்னீரே
கலியுகத் தைமுடித்துக் கட்டானத் தர்மபதி
வலியுகத்தைக் காண்பதெப்போ மாதா பிதாவேயென்றார்
அப்போது மகனை ஆவிமுகத் தோடணைத்து
இப்போது சொல்லுகிறேன் என்மகனே கேட்டிடுநீ
நீபோய்த் தவசு நீணிலத்தில் செய்திருக்க 780
நான்போய் நடத்தும் நல்வளமை கேட்டிருநீ
ஆயிரத் தெட்டு ஆனதிரு மண்டபத்தில்
வாயிதமா யாண்டொன்றில் வைத்தமண்ட பங்களிலே
நூற்றிப் பன்னிரண்டு நொடிப்பே னோராண்டதிலே
தோற்றுவிப்பே னார்க்கும் தூது மிகநடந்து
பத்தாண்டுக் குள்ளே பலசோதனை பார்த்து
வித்தார மேலே விசாரிப்பேன் கண்டாயே
அங்கங்கே நாட்டிவைத்த ஆணிவே ரத்தனையும்
எங்கெங் குமொடுக்கி யானுன் னிடமிருந்து
ஒக்க வொருகுடைக்குள் உன்கையிலே வேருதந்து
துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கி
உன்மூப் புயர்மூப்பாய் உல்லாச மேதருவேன்
பின்மூப் பில்லாமல் பெரியோனின் நாமமதாய்
அடக்குடக் கெல்லாம் அன்றுனக்கு நான்தருவேன்
வடக்கு வெளிவாசல் மலைமீதி லோர்புதுமை
உண்டாகு மகனே உனக்கு நற்காலமதே
தண்டா யுதத்தோடே சத்தமொன் றேபிறக்கும்
மேலக்கால் மண்டபமும் மேல்மூடி தான்கழன்று
காலத்தால் காணும் கண்மணியே யுன்காலம்
தெச்சணா மூலை தென்பாற் கடலருகே 800
மெச்சும் பதிமூலம் விளக்கெரியக் கண்டுனது
கால மிதுமகனே கன்னிதிரு தென்திசையில்
கோபுர மண்டபமும் கொடிமரமும் வீதிகளும்
தாபரமாய்த் தன்னால் தலங்க ளதுதுலங்கும்
கண்டதுவே காலம் கனத்தவலு சூரியனும்
பண்டு முறைதப்பிப் பருதிரத்தக் கண்வெறியாய்
மகனே வுனக்காகா மாநீசப் பாவியெல்லாம்
அகமே கனல்தாவி அன்றாடம் தானழிவார்
உகமீதே தர்மம் உனக்கெனக்கென் றேகுதிக்கும்
மகனே வுனது மாதவத்தோர் காலம்நன்று
கால மிதுமகனே கண்மணியே கேட்டிடுநீ
தூல முரையாதே துலங்கும்நா ளாகுமட்டும்
எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே
தாழக் கிடப்பாரைத் தற்காப்ப தேதருமம்
மாளக் கிடப்பார் மதத்தோர்க ளென்மகனே
இவ்வகைக ளெல்லாம் என்மகனே யுன்காலம்
அவ்வகைக ளெல்லாம் ஆராய்ந்து பார்த்திருநீ
இனத்துக் கினங்கள் இருப்பேனான் சுவாமியென்று
மனதில் வேறெனவே வையாதே யென்மகனே 820
நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே
தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ
தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே
மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே
அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து
எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே
லிங்கமொன் றேதிக்கும் இணையாக ஓர்சோடாய்
தங்கநவ ரெத்தினங்கள் சமுத்திரத்தி லேகாணும்
ஆனையொரு கன்றீனும் அதினா லுலகமெல்லாம்
தானாக ஆளும் தலைவனும்நீ யல்லாது
மலையடி வாரம் வளருமொரு விருச்சம்
அலையதி லும்பெரிதாய் அதுதழையுங் கண்டாயே
சிலையுள்ளே தோன்றி சிவதோத்தி ரமாக
நிலையொன்றா யாகி நீயாள்வா யுன்காலம்
வாரிக் கரையில் மண்டபமொன் றேவளர்ந்து
நாரியர்கள் கூட நாடெங்கும் வாசமிட்டு
ஒருகுடைக்குள் ளாள்வாய் உன்கால மென்மகனே 837
தருமமதாய்த் தாரணியில் தன்னந்தன் னால்வாழ்ந்து
பொறுமைப் பெரியோராய்ப் பூதலமெல் லாம்வாழ்வார்
அப்போது நீயரசு ஆளுவாய் யென்மகனே
வாரிமூன்று கோதி வளைந்திருக்கு மோர்தீவை
சாதியொரு நிரப்பாய்த் தானாள்வா யென்மகனே
கோடுபல வாதும் கோள்நீசப் பாவிகளும்
கேடு வருங்காலம் கிருஷ்ணா வுன்நற்காலம்
வானமது வெள்ளி மாறிவெறும் வானமதாய்
மேன் முகிலற்று வெறுவான மாய்த்தோன்றும்
நல்ல மகனே உனக்குவரும் நற்காலம்
சொல்லத் தொலையாது சூல்மகனே என்கணக்கு
ஒக்க அடக்கி உரைத்திருக்கு வுன்னிடத்தில்
நிற்க நிலைக்க நினைத்ததெல்லா மங்காகும்
பொறுமை பெரிது பெரிய திருமகனே
தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே
எல்லா முனது இச்சையது போல்நடக்கும்
நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி
எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே
பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே
தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 20
வந்தா ரறிவார் வராதார் நீறாவார்
இன்ன முன்காலம் இயம்புவேன் கேள்மகனே
தன்னந் தன்னாலே சாதிக்குச் சாதிமாளும்
நல்ல நினைவோர்க்கு நாளெத்தனை யானாலும்
பொல்லாது வாராமல் புவிமீதில் வாழ்ந்திருப்பார்
நாட்டி லொருஅனுமன் நல்லவனை நானயச்சு
கோட்டிசெய் யென்றுரைப்பேன் கோமகனே வுன்காலம்
முறைதப்பி யாண்ட முகடன் வெறும்நீசன்
குறைநோவு கொண்டு கூடிழப்பா னுன்காலம்
அதிலே சிலபேர் அரசுனக் கெனக்கெனவே
விதியை யறியாமல் வெட்டிக்கொண் டேமாள்வார்
அத்தருண முன்காலம் அதிகமக னேகேளு
இத்தருண மல்லால் இன்ன மெடுத்துரைப்பேன்
எல்லோருங் கைவிட்டு இருப்பாருனைத் தேடாமல்
நல்லோர் மனதில் நாரணா என்றுரைப்பார்
கோல விளையாட்டுக் கொஞ்ச மெடுப்பேனான்
தூல மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
அன்போர்க ளெல்லாம் ஆவியே தான்மறுகி
இன்ப முடனே ஏங்கியேங்கி யழுவார்
இத்தனை நாளும் இவரைநம்பி நாமிருந்து 40
புத்தியது கெட்டோம் என்றுமிகப் பேதலிப்பார்
அப்போது ஆகா அன்னீத மாபாவி
இப்போது கண்டுதென்பார் ஏலமே சொன்னதெல்லாம்
எய்த்தானென்பா னன்போரை இடுக்கஞ்செய் தேயடிப்பான்
சூட்ச முடனே சொரூபமொன்று நானெடுப்பேன்
அதுதா னொருகாலம் அதிகமக னேகேளு
இதுபெரிய சூட்சம் என்மகனே கேட்டிடுநீ
அதின்மேலே அன்போர் அதிகப் பெரியோராய்
இதின்மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே
பின்னுமொரு சூட்சம் பிரமாண மாயெடுப்பேன்
பன்னு மணியே பராபரமே கேட்டிடுநீ
குளத்தைத் தடதடெனக் கொந்துகொந் தாயுடைத்து
சுழற்றக்கன லக்கினியும் துர்க்கைமா துர்க்கையையும்
விட்டயச்சு மாநிலத்தில் விளையாடி யேதிரியும்
கட்டணங்க ளாக கனமாய்க் குழுகுழென
ஓடுவார் பதறி விழுவா ரறமெலிந்து
நாடும் பெரியோர் நலமாக வாழ்ந்திருப்பார்
என்மகனே வுன்காலம் இன்னும் வகுப்பேன்கேள்
பொன்மகனே பூமியிலே பின்னுமொரு காரணங்கேள்
கெட்ட நசுறாணி கெம்பிக் கடைக்காலம் 60
மொட்டைத்தலை யன்வருவான் முளையனவ னோடிடுவான்
ஆடிக் கொண்டாடி அங்குமிங்குந் தானலைந்து
ஓடிக் கொண்டோடி ஒன்றுபோ லேமாள்வான்
மகனே யுன்காலம் மகிழ்ந்திரு என்மகனே
உவமையொன்று சொல்லுகிறேன் உற்பனமாய்க் கேள்மகனே
புத்திரனுக் கேகுருவும் புகன்றதெல்லாம் புகன்றாலும்
சுற்றுமொரு சூட்சத் தொழிலுண்டு மாயானுள்
அத்தனையு மென்னுள் அடக்கமில்லை யென்மகனே
முத்தியெனை யீன்றோர் முதனாளோர் விஞ்சைவைத்தார்
அவ்விஞ்சை மாத்திரமே யானுனக் கீயவில்லை
இவ்விஞ்சை யீவதுதான் எப்போதெனக் கேளு
சீமை யரசு செலுத்தவரும் நாளையிலே
மேன்மை முடிதரிக்கும் வேளையி லென்மகனே
சொல்லுகிற விஞ்சை சுத்தமனே கேட்டிடுநீ
பல்லுயிர் களுக்கும் படியளக்கும் விஞ்சையது
எல்லா முனக்களித்தேன் என்னுடைய நாரணனே
அல்லாமல் நானுனக்கு அருளுகிற விஞ்சையைக்கேள்
பெரியோர்க்கு வாழ்வு பெருகிச் சிறந்தாலும்
மரியாதை யேயிருக்கும் மகனேநீ கேட்டிடுநீ
சற்றோலே வாழ்வு சகடருக் கேவருகில் 80
கற்றோரே யாகிடினும் கண்டறிவேன் போநீயென்பான்
முள்முருக்கம் பூவு மினுக்குமூன் றுநாளை
கள்ளருக்கு வாழ்வு காணுமது போல்மினுக்கு
நல்லோர்க்கு வாழ்வு நாளுங் குறையாமல்
வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருப்பாய்
விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே
துள்ளாத யானை துடியானை யென்மகனே
அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே
கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே
நன்றி மறவாதே நான்பெரிதென் றெண்ணாதே
அண்டின பேரை அகற்ற நினையாதே
ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே
சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்
கோபத்தைக் காட்டாதே கோளோ டிணங்காதே
பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே
பசுவை யடைத்துப் பட்டினிகள் போடாதே
விசுவா சமதிலே விரோதம் நினையாதே
எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ
அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே
தொட்டுப் பிடியாதே தோர்வைவைத்துக் காணாதே 100
விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே
வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே
பரம்பூமி கண்டு பாவித் திருமகனே
இத்தனை புத்தி எடுத்துரைத்தே னென்மகனே
புத்தி விபரீதமாய்ப் பின்னுமா ராயாதே
சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும்
நட்டங் காணாதே நாடாள்வா யென்மகனே
என்மகனே நானுனக்கு இன்னமொரு விஞ்சைசொல்வேன்
பொன்மகனே யுன்னுடைய புத்தியிலே வைத்திருநீ
இச்சட்டந் தன்னில் எள்ளளவு தப்பினதால்
தீச்சட்டம் காய்க்கத் தேதிவரு மென்மகனே
அனுப்போல் மறவாதே யான்வைத்த சட்டமதில்
மனுப்போ லென்றிராதே மனதெண்ண மாயிருநீ
பஞ்சமிர்தே யென்னுடைய பாதைதப்பி நீநடந்தால்
கொஞ்சுங் கிளியே கொன்னெழுப்பு வேனுனையும்
பதறியிரு என்மகனே பம்மியிரு கண்மணியே
பொறுதி மகனே பெரியோரா யாகுவது
உறுதி மகனே உலகமதை யாளுவது
மகனேநா னெத்தனையோ மகாபெலங்கள் கற்றவன்காண்
உகமீதே சொல்லித் தொலையுமோ வுத்தமனே 120
எவ்வுகங் களுக்கும் இப்படியே தர்மமில்லை
செவ்வுமகா விஷ்ணுதான் என்றுசொல்லார் தேசமதில்
இப்போது என்மகனே இக்கலியன் மாய்மாலம்
செப்ப எளிதல்லவே செயிக்க ஏலாதாராலும்
இப்போதுன்னோ டுரைத்த இயல்விஞ்சைக் ககப்படுங்காண்
அப்பனே பம்மலிலே அகப்படுங்கா ணிக்கலியும்
கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே
வலிமாய நினைவு மாய்மால மென்மகனே
ஆனதா லாயுதங்கள் அம்புதடி வேண்டாமே
மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே
இன்னமொரு விஞ்சை இயம்புவேன் கேள்மகனே
முன்னம்வகைக் காரனொடு மோதிப் பகையாதே
பகைத்தா லிருக்க வொட்டான்கா ணவ்விடத்தில்
உகத்தடக்கு முன்னே ஒருவரையுஞ் சீறரிது
தாழ்ந்திருக்க வென்றால் சர்வதுக்குந் தாழணுமே
ஓர்ந்திருக்க வென்றால் ஒருவர்பகை யாகாதே
ஆனதால் நீயும் அவனைப் பகையாதே
நானவனைக் கேட்பேன் ஞாயக்கே டாகிடினும்
வலியோர்க் கொருவழக்கு வைத்துநீ பேசாதே
மெலியோர்க் கொருவழக்கு வீணாய்ப் பறையாதே 140
சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே
வத்தாஸ்தி பெண்ணு வகையென்று எண்ணாதே
நீயெண்ணா தேயிருந்தால் நீணிலங்க ளுமயங்கும்
தானிதின்மே லெண்ணம் தங்குதங் காதேயிரு
சத்துரு வோடும் சாந்தமுட னேயிருநீ
புத்திர ரோடும் பேசியிரு என்மகனே
அன்போர்க்கு மீந்திருநீ ஆகாப்பேர்க்கு மீந்திருநீ
வன்போர்க்கு மீந்திருநீ வழிபோவார்க்கு மீந்திருநீ
சகலோர்க்கு மீந்து தானிருநீ யென்மகனே
வலியோர்க்கு மீயு வழிபோவார்க்கு மீயு
மெலியோர்க்கு மீயு மேன்மையா யென்மகனே
ஆர்க்கு மிகவீந்தால் அந்தத்தர்ம மேகொதிக்கும்
போர்க்கு நினைத்தாரைப் பெலிகொடுக்குந் தர்மமது
தன்மந்தான் வாளு சக்கரங்க ளல்லாது
தின்மையது கேடு செப்பக்கே ளென்மகனே
சாதி பதினெட்டும் தன்னாற்கே டாகுமட்டும்
நீதி யழியாதே நீசாபங் கூறாதே
மகனே வுனக்கு வைத்தவிஞ்சை மனதி லறிந்து கொண்டாயோ
அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடந்து அல்லாமல்
உகமே யழியு முன்னாக ஒருசொல் லிதிலே குறைவானால் 160
சகமோ ரறியத் தீமூழ்கிச் சதியாய் மறுத்து முழிப்பாயே
நல்லோர் மகனே சொல்வதுகேள் நானோ வுரைத்த விஞ்சையெல்லாம்
வல்லோ னான திருமகனே மனதி லறிந்து அறிந்துநட
எல்லாம் நமதுள் ளாச்சுதென்று எண்ணி நடப்பொன் றுன்னாலே
சொல்லால் தாண்டி நடப்பீரால் தீயே குளித்து வருவாயே
கொடுக்கும் வரங்களு னக்கீந்தேன் கொடுத்த வரத்தை பறிப்பதற்கு
உடக்கு வரமுந் தந்தேனான் உன்ற னாணைத் திருவாணை
அடக்கு முடக்குந் தந்தேனான் ஆதி சிவனா ரவராணை
நடக்கும் படியே சட்டமெல்லாம் நாரா யணனே தந்தேனே
தந்த வரங்கள் தவறாது தருணஞ் சடையுந் தரைமீது
எந்தன் மீது மறவாதே என்னாண் டருளு மிறையோனே
அந்தன் மீது மறவாதே ஆயா னெனவே அறிவில்வைத்துச்
சிந்தை மகிழ்ந்து முறைநடந்தால் சிவனு முனக்குள் வசமாமே
தாயா ரோடு சிவமாது சரசு பதியே பொன்மாது
நேயா மாதர் மடமாது நீணில மறிய வந்துனது
பூசா பலன்கள் சொல்லிமிகப் புலம்பித் திரிவார் துயர்தீர
மாயா திருக்கு மகனேவுன் மனமே மகிழ்ந்து மகிழ்ந்திருவே
சொல்ல எளிதோ என்மகனே சொல்லா தனேகம் தோன்றுமினி
வெல்ல எளிதோ என்மகனே மேலோரா ராரா லும்
கொல்ல எளிதோ வுனைமகனே கோவேங் கிரியின் கோனாலும் 180
வெல்ல எளிதோ வுனைமகனே மேலாங் கண்ணே மிகவளராய்
இந்தப் படியே நாரணரும் இயம்ப மகவு ஏதுரைக்கும்
கந்த னுறுவே லென்றகப்பா கடியா வுனது படிநடக்க
எந்தப் படியோ நான்றமியேன் ஏதோ அறியப் போறேனெனச்
சிந்தை மகிழ்ந்துத் தகப்பனுட திருத்தாள் பிடித்துச் செப்பலுற்றார்
தன்னம் பெரிய தாட்டீக வைகுண்டரும்
என்னசொல்வீ ரென்றனக்கு என்றகப்பா நீரெனவே
வணங்கிப் பதம்பூண்டு மாதாவை யுந்தொழுது
இணங்கி யிவர்கேட்க ஏதுசொல்வார் நாரணரும்
நாராணா வைகுண்டா நன்மகனே என்னையினி
வாரணமே நீவணங்கி மகனே கைசேராதே
நீகை குவித்தால் எனக்குமிகத் தாங்கரிது
தானீத னான சர்வபரா என்மகனே
ஒருவருந் தாங்கரிது உன்கை குவித்தாக்கால்
குருதெய்வம் நீயே கோவே குலக்கொழுந்தே
இன்ன முனக்கு இயம்புகிற விஞ்சையதும்
பொன்னம் மகனே பூராய மாய்க்கேளு
சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்
வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு
வரத்தை மிகவேண்டி வைத்துக்கொள் ளென்மகனே 200
சரத்தை மிகவாங்கித் தானனுப்புப் பேய்களையும்
உட்கோள் கிரகம் உறவுகெட்ட பேர்முதலாய்க்
கட்கோள் கருவைக் காணாதே சாபமிடு
செல்வம் பொருந்திச் சிறந்திரு என்மகனே
கொல்லென்ற பேச்சுக் கூறாதே என்மகனே
ஒவ்வொன்றைப் பார்த்து ஊனு ஒருசாபம்
செவ்வென்ற பேச்சுச் செப்பியிரு என்மகனே
உரைத்த விஞ்சையெல்லாம் உனக்குப்போது மோமகனே
விரைத்தமுள்ள வைகுண்டா விற்பனவா நீகேளு
நீபோ யிருக்கும் இடங்களில் என்மகனே
அன்பான பஞ்சவர்கள் அங்கேவுண் டென்மகனே
முன்னே பிறந்த உகத்துக் குகங்களெல்லாம்
என்னைவிட் டகலாது இருந்தார்கள் பஞ்சவர்கள்
ஆனதா லிப்போது யானும்நீ யானதினால்
மானமுள்ள பஞ்சவரை மகனேமுன் விட்டுக்கொள்ளு
அல்லாமற் கேளு அரிநாரணா என்மகனே
நல்லோராய்ப் பெண்கள் நாடியெண்ணக் கூடாது
வல்லோராய் நந்தன் வம்மிசத்தில் வந்திருந்தார்
அப்பெண்ணார்க் கெல்லாம் அதிகப்பலன் தாறோமென்றேன்
இப்பெண்ணார் சிலர்கள் இன்னமங்கே தோன்றிவந்தால் 220
ஆனதால் பெண்ணார்க்கு அழகுகொடு என்மகனே
நின்ற தவசு நிறைவேறி னால்மகனே
ஒண்டொடியார் சிலரை உன்பாரி தானாக்கி
நன்மைகொடு என்மகனே நாரணா நாடாள்வாய்
உன்னை நினைத்தோர்க்கு உதவிகொடு என்மகனே
கட்டை விடாதே கருத்துள்ள என்மகனே
சட்ட மறவாதே சாஸ்திரத்துக் குற்றவனே
பெண்பாவம் பாராதே பேணியிரு என்மகனே
கண்பாரு கண்மணியே கன்னி கணவருக்கு
இன்னமொரு சூத்திரம் இயம்புகிறே னென்மகனே
துன்ன மறியத் தோற்றுவிப்பேன் சாதிதோறும்
அன்புவன்பு பார்க்க ஆரா ரிடத்திலும்போய்
உன்புதுமை சொல்லி உடலை மிகஆட்டி
சாதிசா திதோறும் சக்கிலி புலச்சிவரை
ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன்
காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே
ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு
துலுக்கன்வீ டானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன்
கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும்
பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே 240
நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர்
ஒருவேதந் தொப்பி உலகமெல்லாம் போடுஎன்பான்
மறுத்தொருவே தஞ்சிலுவை வையமெல்லாம் போடுஎன்பான்
அத்தறுதி வேதம் அவன்சவுக்கம் போடுஎன்பான்
குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன்
ஒருவர்க் கொருவர் உனக்கெனக் கென்றேதான்
உறுதி யழிந்து ஒன்றிலுங்கை காணாமல்
குறுகி வழிமுட்டி குறைநோவு கொண்டுடைந்து
மறுகித் தவித்து மாள்வார் சிலபேர்கள்
ஓடுவார் சிபேர் ஒழிவார் சிலபேர்கள்
கேடு வருமே கேள்விகேளாப் பேருக்கெல்லாம்
அதன்மேல் மகனே யானுனக்குச் சொல்வதுகேள்
இதின்மே லுனக்கு ஏகவியா ழம்வரும்
சந்தோச மாகுதுகாண் உனைச்சார்ந்த அன்போர்க்கு
எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணென்மகனே
அதுவரையும் நீதான் அன்பா யிருமகனே
எதுவந் தாகிடினும் எண்ணம்வையா தேமகனே
சுறுக்கிட்டு யானும் ஒவ்வொன்றாய்த் தோன்றவைப்பேன்
இறுக்கும் இறைகளெல்லாம் இல்லையென்று சொல்லிடுநீ 260
வேண்டா மிறைகள் வேண்டாமென்று சொல்லிடுநீ
ஆண்டார் மகனே அதிகத் திருமகனே
நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம்
செல்ல மகனேவுன் சிந்தையிலே பற்றினதோ
போதுமோ விஞ்சை புகலணுமோ என்மகனே
சாருமொரு விஞ்சை தான்சொல்வேன் கேள்மகனே
முவ்விஞ்சை வைத்தேன் உலகமறி யாதவிஞ்சை
இவ்விஞ்சை மாத்திரமே இனம்பிரித்துச் சொல்லாதே
பெற்றோர்கள் கண்டுகொள்வார் பேசரிய என்மகனே
கற்றோர்கள் கண்டுகொள்வார் கண்ணே திருமகனே
கண்ணே மகனே திருமகனே கமலப் பூமா கரிமகனே
எண்ணே யெழுத்தே என்மகனே இறையோர் தொழவே வருமகனே
ஒண்ணே மகனே உயர்மகனே உடைய மகனே கண்மணியே
தண்ணே மகனே தவமகனே சாகா திருக்குஞ் சலமகனே
மகனே தவமே மரகதமே மாதவம் பெரிய மலரோனே
தவமே யுனதுள் வைத்தவிஞ்சை தானே போது மோமகனே
எகமேழ் மகிழ வந்தவனே என்றன் மகனே வளர்வையென
உகமே ழளந்தோ ருரைத்திடவே உயர்ந்த மறையோர் வாழ்த்தினரே
அய்யாநா ராயணரும் ஆதிவை குண்டமென
மெய்யா யுரைத்து விளங்கவே வாழ்த்தலுற்றார் 280
மகனே வுன்தேகமதில் வைத்த நிறங்களெல்லாம்
உகமழியு முன்னே ஒருவர்கண் காணாதென
அகமே வைத்து அகமகிழு என்மகனே
வைகுண்ட மென்றுமிக வாழ்த்தக் குருநாதன்
மெய்குண்டத் தோர்கள் மேலோர்கள் வாழ்த்தலுற்றார்
மகரவுந்தி விட்டு வைகுண்டந் தான்பிறந்து
சிகரமுனி தேவருட சிறப்பதிலே வந்தவுடன் தேவர் திருவானோர் சென்றெடுத்து வைகுண்டரை
மூவர்தே வர்மகிழ்ந்து முதலோனைக் கைகுவித்து
ஏந்தி யெடுத்து இளந்தொட்டில் மீதில்வைத்துச்
சாந்தி கழித்துத் தவலோகச் சட்டையிட்டுச்
சீதை மயக்கமெல்லாம் தீர்ந்திடவே சாபமிட்டு
வீரரையும் வந்து வீரலட்சு மியெடுத்து
மடிமீதில் வைத்து மாதுசர சோதியுடன்
குடியான பேரும் கொண்டங் ககமகிழ்ந்து
பொன்தொட்டி லிட்டுப் பொற்சீதை தாலாட்ட
பைங்கொடி யாள்சரசு பதிமாது தாலாட்டத்
தேவரிஷி வானோர் தேவரம்பை மாதரெல்லாம்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுப் பின்பாட
ஈசர்முதல் சங்கம் எண்ணி மனமகிழச் 300
சார்சர சுபதியாள் தாலாட்ட வேதுணிந்தாள்
பொன்மணிப் பதியி னுள்ளே புனலரி கிருஷ்ணர் பெற்ற
தண்மணிப் பாலன் தன்னைத் தங்கமாந் தொட்டி லிட்டு
மின்மணி கொடிசேர் கன்னி விளங்கிய சோதி மாது
கண்மணி வைந்த ராசர் காணத்தா லாட்டி னாளே
தாலாட்டு
தார தரதர தாராரோ தார தரதர தாராரோ
நாராயணர் தானோ தாராரோ நல்ல நாராயண வைகுண்டமோ
காரணர் தானோ வைகுண்டமோ கயிலாச நாதக் கண்மணியோ
செல்வ முதலான சீமானோ சிவசிவ சிவ சிவமுதலோ
அல்ல லகற்றியே அரசாளும் அரியோன் மிகப்பெற்ற அரிதானோ
தெய்வப் பெருமாள்தான் பெற்றகன்றோ சீதை மாதுதான் பெற்றகன்றோ
மெய்ய னரிநாதன் பெற்றகன்றோ விஷ்ணு மகாபரன் பெற்றகன்றோ
ஈசர் மைத்துனர் பெற்றகன்றோ இறவா திருமாது பெற்றகன்றோ
மாயத் திருவுளம் பெற்றகன்றோ மான வைகுண்ட ராசக்கன்றோ
வேதக் குருநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ
சீதக் குருதாயா ரீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ
கிருஷ்ண மகாநாதன் பெற்றகன்றோ கிருபைக் குருநாதக் கண்மணியோ
விஷ்ணு மகாநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ
நாட்டுக் குடையதோர் நாரணரின் நல்ல பாலனோ வைகுண்டனோ
ஏட்டு முதலானோ தாராரோ ராச வைகுண்ட ராசர்தானோ 320
மூலச் சிவநாதன் பெற்றகன்றோ உலகை யொருகுடைக் காள்வானோ
நாலு வேதமும் தாண்டிமுறை நடத்தி யொருகுடைக் காள்வானோ
ஒருமை மனத்துடை யுத்தமர்க்கு உற்ற பதவிகள் கொடுப்பவனோ
தருமத் திறவானோ தாராரோ தங்க வைகுண்டத் தாட்டீகனோ
மகரச் சீதையாள் வயிற்றுலுற்ற வளர்ந்த வைகுண்ட மாமணியோ
அகரச் சிவகோபுர மழகுபதி அதிகப் பதிகெண்டு வந்தவரோ
தங்கக் கோபுரம் தளிர்மரமும் சதுர மேடைகள் கண்டவரோ
சங்க மகிழவே வந்தவரோ சகல கலைதமி ழாய்ந்தவரோ
உலகம் பதினாலு மொருகுடைக்குள் ஒருசொல் மொழிக்காள வந்தவரோ
இலகு பிரகாச சுவடுகொண்டு இலங்கும் பதியாளப் பிறந்தவரோ
வம்புக் கலியுகக் குலமறுத்து வைந்தப் பதியாள வந்தவரோ
அம்புக் கணையொன்று மில்லாமலே அறுக்க வந்தாரோ கலிதனையும்
கூடப் படைகள்துணை யில்லாமல் குறும்பை யடக்கவே வந்தவரோ
சாடத் தலையாரி யொன்றில்லாமல் சதைக்க வந்தாரோ கலியுகத்தை
வாளு மாயுத மெடுக்காமலே வதைக்க வந்தாரோ கலியுகத்தைக்
கோளு பேய்களைக் கிரகங்களைக் கொல்ல வரம்பெற்ற வைகுண்டரோ
சாணாக் குருநாத வைகுண்டரோ சாதி தற்காக்குந் தலையாரியோ
காணாக் கருவான கருமூலமோ கர்த்தன் கர்த்தாதிக் கடவுள்தானோ
நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ
தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ 340
சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ
நாமம் பெரியதோர் வைகுண்டரின் நாமம் பெறவோங்க வந்தவரோ
தெய்வப் பாலர்கள் சிறந்துபோற்றச் சீமை யரசாள வந்தவரோ
மெய்வ ரம்பதின் முறைநடத்தி மேன்மைச் செங்கோல் முடிதரித்து
பொறுமைப் பெரியோனோ வைகுண்டனோ பெரிய பூமேடைக் கொலுவீரனோ
தரும வரம்புகள் தவறாமலே தரணி யரசாளும் வைகுண்டரோ
திராசு நிறையிலுந் துல்லியமாய்ச் செங்கோல் செலுத்தவே வந்தவரோ
மிராசு மூவர்க்கு முதன்மைதானோ மூலச் சிவமணி குருநாதனோ
சான்றோர் கைகட்டிச் சரணங்கூறத் தரணி யொருகுடைக் காள்வானோ
ஆண்ட மணிநாதன் நாரணர்க்கு ஆன மதலையாய் வந்தவரோ
வைய மளந்ததோர் நாரணர்க்கு மதலை யெனவந்த வைகுண்டரோ
தர்மப் பதியாளும் வைகுண்டரோ சாணர்க் கனுகூல மானவரோ
அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ
சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ
தோணாத் துறைகொண்டு வந்தவரோ துவரா பதியாளப் பிறந்தவரோ
ஏழு யுகபரக் கணக்கையெல்லாம் எடுத்து நடுத்தீர்க்கப் பிறந்தவரோ
ஆளும் வைகுண்டப் பதியாளவே அரிய வைகுண்டம் பிறந்தவரோ
வீர வீராதி வீரன்தானோ வீர சூரனா ரீன்றகண்ணோ
சூர சூராதி சூரன்தானோ சூர சூரனார் பெற்றகண்ணோ
நாத நாரணர் பெற்றகண்ணோ நாக மணிநாதன் பெற்றகண்ணோ 360
சீதக் குணநாதன் பெற்றகண்ணோ சீதை மணவாளன் பெற்றகண்ணோ
மேக நிறத்தண்ண லீன்றகண்ணோ மேலோர் போற்றும்வை குண்டக்கண்ணோ
ஏகச் சிவநாதன் பெற்றகண்ணோ இறவா திருமூர்த்தி பெற்றகண்ணோ
வேறு
சந்திர சுந்தர தந்திர மந்திர சாமிசீர் பாலகனோ
தாயக மாயக நாயக மாகிய தாண்டவ சங்கரனோ
சுந்தர சந்திர யந்திர குஞ்சித சூரியப்பிர பாலகனோ
சூரனோ வீரனோ மாதனோ நீதனின் சூலகலா திபனோ
தந்திர மந்திர இந்திர சுந்தரின் சந்ததி சந்ததியோ
சகடவெலி சண்டரை அகடவெலி செய்திடும் சுக்கிர விக்கிரனோ
கொந்தரி சந்ததின் தந்திர சுந்தர கோசல நாயகனோ
கொடுகலி யறவொரு கடுமுனை கொண்டருள் குலவெங்கிட குண்டமோ
சுத்தனோ கர்த்தனோ நித்தனோ அத்தனோ துலங்கும் தங்கரனோ
சூரனோ வீரனோ தீரனோ நாதனோ சூரியப்பிரகாச வீதனோ
விரனோ காரனோ தாரனோ சாரனோ வெங்கிட ரங்கிடனோ
விகடக டகடக டகுட டடமருள் வேதவிக்கிர சுக்கிரனோ
தீரனோ காரனோ சீரனோ வீரனோ செந்திலம்பதிவளர் சந்திரனோ
திகதிக தரிகிட செகமுக மருள்புரித் திக்கிர விக்கிரனோ
நீதனோ கீதனோ வீதனோ மாதனோ நீதவெங் கோகுலனோ
நெகிடுகலி யகடற விகடுகுடல் கருவற நெக்கிர விக்கிரனோ
இப்படி ஒளவை மாது இயல்புதா லாட்டக் கண்டு 380
செப்படி முனிமா ரெல்லாம் சிவவைந்தர் பதத்திற சென்று
முப்படி முறைபோல் தேவர் முக்கந்தன் பள்ளி கொள்ள
அப்படித் தேவ ரெல்லாம் அவரிசை கூற லுற்றார்
பள்ளி உணர்த்தல்
பல்லவி
பள்ளியுணராய்-சிவமருகா நீ
பள்ளியுணராய்
சரணம்
பள்ளியு ணராய்நீ தெள்ளிமை யாகவே
பாற்கடல் மீதினில் தாக்குட னுதித்தவா
வெள்ளி யுதித்திடப் பள்ளி யுணர்த்தவும்
வேதநா ராயணர் சீதகோ பாலர்க்குக்
கொள்ளி யெனவந்த வைகுண்டக் கோவனே
கோவேங் கிரிவள ரீசர் மருகோனே
வள்ளி மணவாளர் வளர்செந்தூர் வாரியில்
வந்து பிறந்துநல் தெச்சணம் புகுந்தவா (பள்ளி)
வேக முடனொரு சந்தத்து ளாடியே
மேதினி யோர்க்குப காரங்கள் செய்யவே
ஆகாத்த பேர்களை அக்கினியில் தள்ளவும்
ஆகின்ற பேர்க்குப காரங்கள் செய்யவும்
தாகத்துக் கானதோர் தண்ணீர் கொடுத்துநீர்
சஞ்சல நோய்பிணி யஞ்சற்குத் தீர்க்கவும்
ஏகத்துட னாளும் நாரண வேந்தர்க்கு
எம்பி யெனவரும் தம்பிரா னானவா (பள்ளி)
மூர்க்கன் கலியுக ராசனைத் தட்டியே
முடுமுடுக்கஞ் செய்த மூர்க்கரை வெட்டியே
ஆர்க்கமு டன்புவி யைம்பத்தாறு சீமையும்
அடக்கியொரு சொல்லுக் குடைக்குள்ளே யாளவும்
காக்காமகா தர்ம கற்பையுங் காக்கவே
கர்த்தனரி கிருஷ்ணர் புத்திர ராய்வரும்
தாக்கத் திறம்வளர் வைகுண்ட ராசரே
தர்மமதி லுறையும் பொறுமைக் குலதீரா (பள்ளி)
தம்பில மானகு றோணிகுண் டோமனைத்
தத்தியாத் தில்லைமல் லாலனைச் சூரனை
வம்பு இரணிய ராவண சூரனை
மகோதர னானது ரியோதனப் பாவியைக்
கொம்பிலுங் கெம்பிலும் அம்பினாற் கொன்றதோர்
கோபால கிருஷ்ண குழந்தைவை குண்டரே
நம்பின அன்பருக் குபகார சாலியே
நாரணா சீமைக் கரிவரி யானவா (பள்ளி) 400
பள்ளிதா னுணர்த்தத் தேவர் பரிவுடன் கேட்டு வைந்தர்
தெள்ளிவை குண்ட ராசர் சிந்தையி லன்பு கூர்ந்து
நள்ளிய தேவ ரார்க்கும் நயமுடன் தயவ மீந்து
துள்ளியே தகப்பன் பாதம் தொழுதவர் வணங்கிச் சொல்வார்
தேவர் துயரமெல்லாம் தீர்ப்போங்கா ணென்றுசொல்லி
மேவலர்கள் போற்றும் விசயவை குண்டராசர்
தகப்ப னுடபதத்தில் சரண மிகப்பணிந்து
உகப்பரனார் நோக்கி உரைக்கிறா ரன்போரே
என்னை பிதாவே மாதாவே யென்தாயே
எல்லா விவரமதும் எடுத்துரைத்தீ ரென்றனக்கு
நல்லோரே நானினித்தான் நடக்க விடைதாரும்
பண்டுள்ள ஆகமம்போல் பால்வண்ணர் பெற்றிடும்வை
குண்டர் தெச்சணமே கொள்வார்தான் பள்ளியென
ஆதியா கமப்படியே அனுப்பிவையு மம்புவியில்
சோதிமணியே சுவாமி யெனத்தொழுதார்
உடனே மகனை உவந்துமுகத் தோடணைத்துக்
கடலின் சிறப்பைக் கண்டாயோ என்னுசொல்லி
மகனே வுனைவிட்டு மறுவூரு வாழ்வேனோ
நகமுஞ் சதையும்போல் நான்வருவே னுன்கூட 420
எத்தனை கோடி இயல்தர்மஞ் செய்துவுன்னைப்
பெற்றெடுத்தே னுன்கூட பிறகே வருவேனப்பா
நீயொருவ னெனக்கு நிலையென்று காணுமுன்னே
தாயில்லாப் பிள்ளையைப்போல் தட்டழிந்தே னென்மகனே
மகனே வுனைக்கண்டு மனச்சடவெல் லாந்தீர்ந்தேன்
சுகமேபோய் வாவெனவே சொல்லி யனுப்புவேனோ
உன்கூட நானும் ஓடி வருவேனப்பா
என்கூட வுன்தாயும் ஏகி வருவாள்காண்
என்று தாய்தகப்பன் இவர்கள் வழிகொள்ளவே
கண்டு வைகுண்டர் கனமாய் மனமகிழ்ந்து
நீங்கள் வருவதுதான் எனக்குவெகு சந்தோசம்
தாங்கி வருவேன் தமியேனுங்கள் பாதமதை
அப்போது நாரா யணர்மகனே யாவிமிக
இப்போ தென்பாலகனே இயம்புகிற புத்தியைக்கேள்
சீமை யதுகாணச் செல்லோங்கா ணுன்கூட
வாமை மகனே வருவோமுன் கண்காண
மகனே நீநடக்க வைகுண்டம்வை குண்டமென
உகமீ ரேழுங்காண உரைத்துவிடு யாமமது
முன்னடந்து யாமம் மொழிந்துநட என்மகனே
பின்னடந்து நானும் யாமம் பிசகாமல் 440
நடத்திவைப் பேன்மகனே நல்லமணி மரகதமே
அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல்
காட்டுவிப்பேன் மகனே கண்ணேநீ முன்னடநீ
தாட்டிமையா யுன்வாக்கால் தானுரைத்த யாமமெல்லாம்
நடத்திவைக்க வாறேன் நன்மகனே வுன்பிறகே
கடல்திரைவாய்ப் பதிகள் கண்டுசென்று தானிருநீ
தண்ணீர் மண்ணீந்து தானிருபோ என்மகனே
கண்ணி லுருக்காணும் கைக்குளொரு கிள்ளைவரும்
பகைவன் மடிவன் பைங்கிள்ளை யங்காகும்
உகவன் வருவன் ஒருவ னறிவான்காண்
பகவான் சுழற்றும் பாருலக மும்பழுக்கும்
அகங்காணும் பாந்தள் அஞ்சாட்சரங் காணும்
மூசிர சீர்சிரசு முகாசிரசு முன்காணும்
பார்சிரசு கண்டு வாறேனென் பாலகனே
திகையாதே முன்னடநீ சந்தமுனி தன்கூட
பகையாதே என்மகனே பஞ்சவரைக் காத்துக்கொள்ளு
அஞ்சுபூக் கொண்டு ஆசாரஞ் செய்தோர்க்கு
வஞ்சக மில்லாத வாழ்வுகொடு என்மகனே
மகனே நீவாற வழியின் பவிசுகண்டு
தவமுடித்து நீயும் தாண்டியிரு என்மகனே 460
என்றுவை குண்டருடன் இசைந்தமுனி ரண்டுவிட்டு
கொண்டயச்சுக் காத்திருங்கோ குண்டருட பக்கமதில்
சாட்சியாய்ப் பார்த்திருங்கோ தரணி வளப்பமெல்லாம்
காட்சி கொடுத்திடுங்கோ கண்ணரியோன் முன்னிருந்து
கோபங்காட் டாதேயுங்கோ குணமுனிவ ரேகேளும்
சாபங் கொடாதேயுங்கோ சாஸ்திர முனிவர்களே
நாரா யணர்பெலங்கள் நன்றா யறிவீர்களே
சீரான பொறுதி செய்வதுநீர் கண்டிருங்கோ
வைகுண்ட மாமுனிதான் வாழுந் தலத்தருகே
மெய்குண்டமாய் மேற்கு மேன்மூலை யோர்தனுக்கு
வடகீழ் மூலை மாமுனியே ஓர்தனுக்கு
இடமிதுவே சொன்னேன் யார்க்குந்தெரி யாதிருங்கோ
இந்தப் படிகாத்து இருங்கோ தருணம்வரை
சிந்த முனிவர்களே செல்லு மிவர்கூட
என்று முனிகளுக்கு இயம்பச் சிவநாதன்
நன்றுநன் றென்று நன்முனிவர் சம்மதித்தார்
உடனேதான் வைகுண்டர் உள்ள மிகமகிழ்ந்து
கடலை மிகத்தாண்டி கரையிலே செல்லுமுன்னே
தேவாதி தேவரெல்லாம் திருமுறைய மிட்டனரே
ஆவலா தியாக அபயமிட்டார் தேவரெல்லாம் 480
வைகுண்டருக் கேபயம் முறையமிட்டார் மாதேவர்
கைகண்ட ராசருக்குக் காதிலுற அபயமிட்டார்
நாரணருக் கேயபயம் நாதனுக் கேயபயம்
தோரணருக் கேயபயம் சுவாமி யுமக்கபயம்
தேவாரம்
நாராயண நாதாசிவ நாதா உமக்கபயம்
நாடுங்கலி கேடுவரும் நாதா உமக்கபயம்
சீராய்ப்புவி யாளவரு வாயே உமக்கபயம்
சிவசிவனேசர சரணம்மகா சிவனே உமக்கபயம்
பாராயேழை முகமேபரா பரமே உமக்கபயம்
பாலர்தெய்வச் சான்றோர்படுந் துயரந் தனைமாற்றும்
நாராயண தீராநல்ல நாகந் தனில்துயில்வாய்
நலமோவுனக் கிதுநாள்வரை நாங்கள் படும்பாடு
கடல்மேல்துயில் கண்ணாகனி கண்டே கன்றையெறிந்தாய்க்
களமேபெலி கொளவேகூளி களிக்க லங்கையழித்தாய்க்
குடைபோல்குன்றை யெடுத்தாய்முப்புர கோட்டை தனையெரித்தாய்க்
கோனினிடை மாதரிணைக் கோனா கவேவளர்ந்தாய்க்
காடேகாலி மேய்த்தாய்ப்புனல் களியன் தனைவதைத்தாய்க்
கஞ்சன்தனை வதைத்தாய்பெலக் காரர்பெலம் வதைத்தாய்
மாடேமேய்த்துத் திரிந்தாய்வலு மாபலியைச் சிறைவைத்தாய்க்
கோசலாபுவி யாண்டாய்வலுக் குகனை மிகக்கண்டாய்க் 500
குறோணிதனை வதைத்தாய்வலு குண்டோமசா லியைக்கொன்றாய்க்
கொல்லதில்லை மல்லன்கொடுஞ் சூரன் தனைவதைத்தாய்
ஈடாய்வலு இரணியன்குடல் ஆறாயோடக் கொன்றாய்
இரக்கமற்ற துரியோதனன் அரக்கர் குலமறுத்தாய்
இன்னங்கலி நீசக்குலம் கொல்ல வரம்பெற்றாய்
ஏழைக்குடி சாதிகட்கு மீள விடைகொடுத்தாய்
எழுந்துதெட்ச ணாபுவியில் இரங்கி வரவேணும்
மாளக்கலி தாழநரகம் வீழ வரம்பெற்றாய்
வாய்த்தகுல சான்றோரவர்க் கேற்ற வரம்பெற்றாய்
வரவேணுந் தெட்சணாபுரி மலைபோ லுயர்ந்துபோகு
தேசக்கலி தீதுவநி யாயம் பொறுக்கரிதே
சிவனேவைந்த ராசேதெச்ச ணாபு வியில்போவோம்
கேட்பாரில்லை யெனவேபேய்கள் கீழும் மேலுஞ்சாடுது
கிருஷ்ணாமகா விஷ்ணுவேவுன் கிருபை யிரங்கவேணும்
தாண்மைக்குலச் சான்றோருன்னைத் தவத்தால் தேடிவருந்துன்
தாயுமவர் தகப்பன்சுவாமி தானே யல்லாலுண்டோ
சர்வபரா சுவாமிசிவ சுவாமி யுமக்கபயம்
சாணார்படுந் துயரங்கண்டு சுவாமி யெழுந்தருள்வாய்
ஆற்றிலலைக்கோரை யைப்போல் அலைவதுந் தெரியாதோ
அணைப்பாருன்றன் துணையேயல்லால் அவர்க்கே ஏதுமுண்டோ 520
பலநாளவர் படும்பாட்டெல்லாம் பார்த்தே யிருந்தாயோ
பயமோ அவரிடம் போகினுஞ் செயமோ சொல்லுமையா
பாலரவ ருமக்கேயல்லா பாரா திருப்பாயோ
ஆருமற்றார் போலேயவர் அலைவ துந்தெரியாதோ
அரனேசிவ மருகாவுனக் கபயம் உனக்கபயம்
அவரால்நாங்கள் படும்பாடெல்லாம் அறியல் லையோசுவாமி
ஆதிமுறை யாகமத்தை அழித்துச் சொல்லுறோமோ
அதுதான்பொய்யோ மெய்யோவென் றாகமந் தனைப்பாரும்
அண்டரண்டந் தொழவேவரும் ஆதி யுமக்கபயம்
அரகராசிவ அரனேசிவ அரசே யுமக்கபயம்
ஆதிசிவ னாதிதவ மோதி யுமக்கபயம்
ஐயுங்கிலி சவ்வுங்கிண அரனே யுமக்கபயம்
அம்மாஆதி அய்யாசிவ மெய்யா உமக்கபயம்
அரசேதெச்ச ணாபுவியில் வரவேணு முமக்கபயம்
அந்தக்கலி திந்தெய்யென் றறவே வரவேணும்
அத்திடக்கலி செத்திடக்கலி அறவே வரவேணும்
அய்யக்கலி தீயாவியே அறவே வரவேணும்
அவகடக்கலி சவகேடாக அழிக்க வரவேணும்
ஐம்பத்தாறு சீமையொரு குடைக்குள் ஆள்வாயுமக்கபயம்
அத்தாவுமக் கபயம்சிவ முத்தா வுமக்கபயம் 540
ஆதிநா ராயணர்க்குப் பால னானகுணதீரா
ஆதியுமக் கபயம்சிவ சோதி யுமக்கபயம்
அரனேசிவ னார்க்குமருக னான குணபாலா
அலைவாய்க் கரைமடமாம்பதி ஆள்வா யுமக்கபயம்
அய்யாவை குண்டாஅலை கண்டா யுமக்கபயம்
தாணுமா லயனாய்ப்பேரு தழைக்க சிவமுளைக்க
தானாயொரு குடைக்குள்தர்மத் தரணி யாளவந்தாய்
சாணாக்குரு வேதக்குரு தானானா யுமக்கபயம்
தாண்டும்பதி கூண்டப்பதி தானானா யுமக்கபயம்
தவமேதெச்ச ணாபூமியில் தானே வருவாயே
தெச்சண மீதே வந்து தெய்வமா யிருந்து கொண்டு
மிச்சமாய் புதுமை காட்டி மேதினி யெவருங் காண
உச்சமே சான்றோர்க் கீந்து உதவியுஞ் செய்வா யென்று
பச்சமாய்த் தேவ ரெல்லாம் வைந்தரின் பதத்தில் வீழ்ந்தார்
வீழ்ந்திடக் கண்டு வைந்தர் விடையுள்ள தேவர் தம்மைச்
சோர்ந்திட மொழிகள் சொல்லி தேவரே பதற வேண்டாம்
ஓர்ந்திட எனக்கு முன்னே உள்ளது தானே யென்று
கூர்ந்திட வுரைத்தீ ரெல்லாம் குணமுடன் மகிழ்ந்து சொல்வார்
தெய்வ மாதர்கள் தாம்பெற்ற தேவரே சான்றோர்க் கெல்லாம்
மெய்வரம் பதுபோல் ஞாயம் விளம்பிடப் பேறு பெற்றேன் 560
பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றுற வரங்கள் பெற்றேன்
அய்வரைக் காத்துத் தர்ம அரசுக்கும் பேறு பெற்றேன்
ஒருகுடை யதற்குள் ளாள ஒருவிஞ்சை யதிகம் பெற்றேன்
கருவுடை யோர்க்குங் காண கனவரம் பெற்றே னானும்
மறுகிநீர் தவிக்க வேண்டாம் வருவேனான் சான்றோ ரண்டை
குறுகலி யதனைத் தாண்டிக் கொள்வேனென் குலத்தைத் தானே
என்னையே கெணியா வண்ணம் ஏழையா யிருந்த சான்றோர்
தன்னையே பழித்தோ ரெல்லாம் சளமது துயரங் கொண்டு
அன்னீத நரகந் தன்னில் அகப்படத் தள்ளித் தள்ளிக்
கொன்றுநான் சான்றோர்க் கெல்லாம் கொடுப்பேன் மேற்பவிசு தானே
எல்லாஞ் சான்றோர் கையாலே எள்ளும் நீரும் கலிக்கிறைத்து
பொல்லாக் கலியை நரகமதில் புக்க அடித்துப் பேயோடு
கொல்ல விடைகள் கொடுப்பேனான் கூண்ட சான்றோர் கையதிலே
வல்லோர் புகழுந் தேவர்களே மனமே சடைக்க வேண்டாமே
வேண்டா மெனவே தேவருக்கு விடைகள் கொடுத்து வைகுண்டரும்
கூண்டாங் கடலின் கரைதாண்டி குதித்தே கரையி லோடிவந்து
தாண்டாய் முன்னே பெற்றதொரு தாய்க்கோர் சடல வுருக்காட்டி
ஆண்டா ராணை யொருவருக்கும் அகலா தெனவே யாணைகொண்டார்
நானோ பிறந்த சமுத்திரத்தின் நடுமேற் கடலி லன்னாபார்
ஏனோ பதியும் மேடைகளும் எண்ணிப் பாரு தேர்நிறமும் 580
மானோ பொன்னோ மண்டபமோ வறடே யுனக்குச் சாட்சியிது
யானோ காட்டுஞ் சொரூபமெல்லாம் யாதா யிருநீ மறவாதே
பதமோ பதமோ பாற்கடலின் பாலை யகமே கொள்ளுவென
இதமாய் இதமாய்ச் சொல்லிடவே இசையா வண்ணம் வீழ்ந்திடவே
உதயம் உதயம் வெளித்திறந்த உருவை யொருவர்க் குரையாமல்
இதையே யிதையே மறந்துஎன்னை இளப்பம் பேசிநெகிழா தென்றார்
ஆண்டா யிரத்து எட்டுமுன்னே அன்னை யெனவே நீயிருந்தாய்
கூண்டா மெட்டா மாசியிலே குணமாய் நாரா யணர்மகவாய்
சான்றோர் கெதிகள் பெற்றிடவே தர்ம குண்டம் பிறந்துவொரு
கூண்டாங் குடைக்கு ளரசாளக் கொண்டே போறேன் கண்டிருநீ
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள்
பொய்கொண்ட பேரைப் பெலிசெய் தரசாள
கொண்டுநான் போறேன் குலக்கிழடே பாரெனவே
அன்றுவை குண்டர் அவர்நடந்தார் தெச்சணத்தில்
கெங்கைக் குலத்தாயை கிருஷ்ணர் வரவழைத்து
நங்கையே யென்னுடைய நாமமது கேட்டதுண்டால்
பால்போல் பதம்போல் பாவந்தீ ரன்பருக்குச்
சூல்புத்தி வம்பருக்குச் சூதுசெய் மங்கையரே
என்றுவை குண்டர் யாமம் கூறிக்கூறி
இன்றுதெச்ச ணம்போக எழுந்தருளி யேவருக 600
சகல வுலகோரும் சந்தோசங் கொண்டாடப்
புகல எளிதில்லாத பெரியநா ராயணர்க்கு
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள்
மெய்கொண்ட முப்பொருளோர் மேனியொன் றாய்த்திரண்டு
எல்லா வரமும் இவர்க்கு மிகக்கொடுத்து
நல்லோர்க்குக் காலம் நலமாகு மென்றுசொல்லி
வானலோ கம்வாழும் வானவருந் தானவரும்
தானே முன்னாகமங்கள் தப்பாதிடை முனிவர்
வகுத்திருந்த ஆகமங்கள் நிறைவேறி வந்துதென்று
மாமுனிவ ரெல்லோரும் மாசந்தோசங் கொண்டாடி
நாமு மெதிரேபோய் நல்லவை குண்டர்பதம்
கண்டுகொள்வோ மென்று கனமுனிவ ரெல்லோரும்
கொண்டு மலர்ப்பூக்கள் கோமான்கால்மீ தேசொரிந்து
கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து
உற்ற துலுக்கன் உடன்வந் துடனோடி
மற்றொரு பத்தாண்டில் வருவோமென் றாகமத்தின்
வர்த்தமா னம்போலே வந்தவை குண்டரென
எல்லோரும் போற்றி எதிர்நின்று வாழ்த்திடவே
நல்லோரா யெங்களையும் நாரா யணர்மகனே
உன்கிருபை தந்து உதவிதரு வாய்மேலும் 620
முன்கிருபை யெல்லாம் உனக்குள்வச மாச்சுதல்லோ
முப்பொருளும் நீதானாய் உறுவெடுத்தா யானதினால்
எப்பொருளைக் கண்டு இயல்புபெறப் போறோங்காண்
வைகுண்ட மாமுனியே மனதிரங்கிக் காக்கவேணும்
மெய்குண்டர் பதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்தார்
அப்போது வானோர்க்கு ஆதிவைகுண் டருரைப்பார்
இப்போது வானோரே எனையறிந்த தெந்தவிதம்
என்றுவை குண்டர் இயல்பறியச் சொல்லிடவே
அன்று வானோர்கள் எல்லோரு மேதுசொல்வார்
கயிலயங் கிரியிலுள்ள கணக்குமுத லுள்ளதெல்லாம்
ஒயிலாகப் பிறப்பு உயர்கணக் கானதுவும்
தத்துக் கணக்கும் சஞ்ச முதற்கணக்கும்
பத்துக் கணக்கும் பலன்பெற்றோர் தங்கணக்கும்
மோட்சக் கணக்கும் முன்னுள்ள யுகக்கணக்கும்
வாச்சக் கணக்கும் வைகுண்ட நற்கணக்கும்
நரகக் கணக்கும் நடுத்தீருவைக் கணக்கும்
தருமக் கணக்கும் சகலக்கணக் குமுதலாய்ப்
பொறுமைப் பிரமா பூசாந்திரக் கணக்கும்
எல்லாக் கணக்கும் எடுத்துமிகத் தேவரெல்லாம்
வல்லான கயிலைவிட்டு வருவதுகாண் டேயடியார் 640
தியங்கி மனங்கலங்கித் தேவரோ டேகேட்டோம்
மயங்கிமிகக் கேட்டிடவே மாதேவ ரேதுரைப்பார்
நாரா யணர்க்கு நல்லவைகுண் டம்பிறந்து
சீரா யுலகமெல்லாம் சிறந்தே வொருகுடைக்குள்
ஆள வருவதினால் அவர்கைக்குள் ளிக்கணக்கு
நீள அரன்சிவனும் நெடிய மருகோனும்
இந்நாள் முதலாய் ஏழ்ப்பிக்க வேணுமென்று
சொன்னார்கா ணெங்களையும் சுருதிக் கணக்கையெல்லாம்
பொன்னுலோ கம்புகுந்து
பெட்டகத்தோ டேயெடுத்து
வாரு மெனஅயச்சார் மகாபரனும் மாலோனும்
சேரும் வைகுண்டம் சிணம்பிறந்தா ரென்றுசொல்லி
ஆனதினா லிப்போ யாங்கள்கொடு போறோமென்றார்
நானதுகள் கேட்டு நன்றா யறிந்தோமென்றார்
அப்போது வைகுண்ட ராசர் மிகவுரைப்பார்
இப்போது வானவரே எல்லோரு மென்கூட
வாருங்கோ வென்று வைகுண்டர் சொல்லலுற்றார்
சீருங் கோபால சிவனே செயலெனவே
வானவர்கள் தேவர்முதல் மறைமுனிகள் சாஸ்திரிகள்
தானவர்க ளுங்கூட சங்கீதம் பாடிவரச்
சந்திர சூரியர்கள் தம்மானக் குடைபிடிக்கச் 660
சுந்தரஞ்சேர் வைகுண்டம் தோன்றிவந் தாரெனவே
வேத மறையோரும் விசய முனிவர்களும்
நாதாந்த வேதமதை நன்றாய்த் தெளிந்தெடுத்துக்
கோமான் வளரும் கோவேங் கிரிதனிலே
நாமாது வாழும் நல்லதிரு மண்டபத்தில்
தங்க நிறத்தூணில் சதுர்மறையோர் தாங்கூடி
எங்கு மகிழ எழுதினா ரம்மானை 667
திருவாசகம் 2
ஏகமொரு பரமானதும் இம்மென்றொரு வாயுவில் சத்து வளைந்ததும் சத்தில் சிவம் தோன்றியும் சிவத்தில் சத்தி தோன்றியும் சத்தியில் நாதம் தோன்றியும் நாதத்தில் விஷ்ணு தேன்றியும் ருத்திரர் மயேசுரர் உலகம் தோன்றியும் உலகில் அண்டபிண்டம் தோன்றியும் பிண்டத்தில் குறோணி அசுரன் தோன்றியும் குறோணி வானலோகம் விழுங்கவும் கோபத்தால் விஷ்ணு சென்று குறோணியைத் துண்டாறாய் வெட்டி உலகில் தள்ளவும், துண்டமென்றில் குண்டோமசாலி பிறக்கவும் சுகசோபன மண்டபமலைய விளித்ததும் திருமருகரது கேட்கவும் தேவாதிகளை நாங்கிலாக்கி வரையானதைத் தூண்டிலாக்கிக் கடலை ஓடையாக்கிக் காயாம்பு வண்ணர் ஓடமேறியே கறைக்கண்டர் ஓணிதள்ளவே கன்னியிலே தூண்டலுமிட்டு அக்குண்டோமசாலியையும் வதைத்து மறுயுகம் தோன்றியே தில்லைமலாலன் மல்லோசி வாகனென்ற இருபேருடைய அநியாயம் பொறுக்காமலே அவனிருவரையும் சங்காரம் செய்து அடுத்த யுகம் தோன்றியே, சூரன் சிங்கமுகா சூரன் செய்த அநியாயம் பொறுக்காமலே ஆதித்திருநெடுமால் ஆறுமுகக் கடவுளென நாமமுங் கூறியே அவனையும் சங்காரஞ் செய்து அவ்வுகத்திலே பிறந்த அசுரன் இரணியனையும் வதைத்து அந்த யுகமும் அழித்து அடுத்த யுகம் தோன்றியே, அரக்கன் இராவணசங்காரமுஞ் செய்து சீதாப்பிராட்டியினுடைய சிறையையு மீட்டித் தென்னிலங்காபுரி அரக்கரையும் கொன்று அக்கிளையொழிய அக்குலமும் அறுத்து அடுத்தயுகம் தோன்றியே; பஞ்சவர்க்கு பகாரியாகியே பகைத்தத் துரியோதனனையும் வதைத்துப் பஞ்சவர்க்குக் குருநாடு பட்டமுஞ் சூட்டியே அரசாள வைத்து கலிவருவானெனக் காற்று வீசினதைக் காதிலே கேட்டுக் கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கிப் பச்சை மாலை சுமந்திருந்த பயமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்தி, கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்துக் கயிலையங்கிரி சென்று ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திர காளியிடத்தில் பாலரையுங் கொடுத்து ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்ததும்; தேவாதிகளுடைய வாக்கினாலே ஈசுரர் தாமே கலியனையும் பிறவிசெய்து இருநூற்று முப்பது நூறாயிரம் வருஷமாகக் கட்டங்கொடுமை செய்து அவனியரசாண்டு கன்னிமக்களாகிய சான்றோர் படுகிற மறுக்கம் பொறுக்காமலே, வியாகரிடை முனிவர் வகுத்த ஆகமத்தின் படியே மகாபர நாராயணர் தாமே வைகுண்டமாய்ப் பிறந்து ஒரு குடைக்குள் 1008 ஆம் ஆண்டு மாசியிலே அஞ்சி மூவஞ்சி தேதியிலே அவனிமனுவிலே ஆதிச்சாதியிலே மனுநிறமாக வந்திருந்து சாதி பதினெண்ணையும் ஒருதலத்தில் வருத்தியே தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்க்கவும் சந்ததியில்லாத பேர்க்குச் சந்ததி கொடுக்கவும் தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும் சாதைவாதை பேய்களைச் சரிவிலே எரித்துக் கரியச் செய்யவும் தரணியேழு கணக்கையும் கேட்டு மிக சத்தியாய் அன்பு மனிதருக்காகவே தரணியில் நாலுதரம் சளங்கள் படவும் சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்தி பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்; சண்டையாய்க் கலியனைத் தன்னாலே போக்கவும் தர்மமாகத் தரணியோர் குடைக்குள்ளாளவும் தங்கநவரத்தினத் திருமுடி சூடியே சகலமாபதி மேடைகள் பாவிக்கவும் தவசு கிருபை பெறவும், தங்கமணி சக்கராயுதக் கொடி ஒற்றைக்கொடி கட்டவும் சகலரும் புகழவரும் தர்மராசாவாகவும் சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டவும் அஷ்டதிக்குப் பதினாலு லோகமுமறிய அசையா மணியொன்று கட்டியே அரசு பாவிக்கவும், ஆதி சர்வேஸ்வரனாகிய அவனியைம்பத்தாறு சீமையும் அடக்கி அரசாளவும் ஆதிசர்வ காலமும் அழியாத் திருவுளமாயிருந்து அரசாள்வாரெனவும் ஆதிராமச் சந்திர சூரிய நாராயணர்க்கு ஆதியாகமத்தின் படியாகவே ஆதிவைகுண்டம் பிறந்தாரெனவே, அண்டர்களும் முனிவர்களும் தேவர்களும் அதிக சகல மாமுனிவர்களும் எல்லோருங் கூடியிருந்தாராய்ந்து தொண்டர்தமக் கென்றுவளர் கொன்றையணி கயிலையில் மண்டலம் புகழச் சிவனாருடைய கிருபையினாலே என்றவர் கயிலையங்கிரியில் எழுதினார்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |