Digital Library
Home Books
அகிலத்திரட்டு அம்மானை (Akilathirattu Ammanai) is the primary scripture of the அய்யா வழி (Ayyavazhi) religion, which originated in South India. It is considered a divine work that narrates the history of the world, the past, present, and future, focusing especially on the incarnation of அய்யா வைகுண்டர் (Ayya Vaikundar), the principal figure of Ayyavazhi. The scripture was written by ஹரி கந்தம்பரண் (Hari Gopalan Seedar) as per the revelations given by அய்யா வைகுண்டர்.
சிவலோகத்தார் மனுப்பிறப்பு
அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள்
நந்த சிவனுகத்தோர் நாடும்வா னோர்களையும்
வாருங்கோ பிள்ளாய் வானோரே என்றுசொல்லி
ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றா ரெம்பெருமாள்
அப்போது வானோர் எல்லோரு மேமகிழ்ந்து
செப்புகிறா ரந்தச் சிவனாதி தன்னோடு
மாயவரே தூயவரே மற்றொப்பில் லாதவரே
ஆயரே உம்முடைய அறிவின் படியாலே
அமையு மமைத்தால் அதுமனதா மெங்களுக்கு
சமயம் வழுவாத சாதித் திருமாலே
என்றேதான் வானோர் இதுவுரைக்க அய்யாவும்
நன்றென வேமனது நன்றா யகமகிழ்ந்து
காலக் கலிதான் கலிமூழ்கி வையகமும்
மேல யுகம்வரையும் மூழ்கியது கண்டீரே
ஆனதா லீரேழு அவனி இருள்மூடி
மான மழிந்து வரம்பழிந்து மானிடரும்
ஆதி முதல்சாதி அடங்கல்வரை தேவரெல்லாம்
நீதி நிலைமாறி நின்றதுவுங் கண்டீரே
ஆனதா லிந்த அன்னீத இருள்தனையும்
ஏனமென்ன பார்த்தேன் இதையறுக்க வேணுமென்று 20
பார்க்கும்போ திந்தப் படூரநீ சக்கலியை
ஆர்க்கும் செயிக்க அடங்காது கண்டீரே
ஆனதால் நாமள் எல்லோரு மின்னமொரு
மானமாய்ப் பிறந்தால் மாளுங்கலி யல்லாது
கலிக்குள்ளகப் பட்டசடம் கலியழிக்கக் கூடாது
பெலிக்குக் கலியையிட பிறந்தல்லா லேலாது
ஆனதால் நாங்கள் அம்புவி யில்வருவோம்
வானவரே யுங்களுட வளப்பமென்ன சொல்லுமென்றார்
அப்போது வானோர் எல்லோரு மேபயந்து
செப்புவ தேதோ திருமாலே நாங்களினி
சிவன்முதலே திருமால் திருவுக் கிதுவானால்
எவனையாப் பூமியிலே இனிப்பிறக்கோ மென்பதுதான்
ஆனதால் பின்னும் அடியார்க கொருவிதனம்
ஈனமே கண்டு இரங்குதையா எங்கள்மனம்
அவ்விதத்தைச் சொல்வோம் அடியார்க் கின்னபடி
எவ்விதத்தி லேயும் இசைந்தனுப்பு மெங்கோவே
என்றுவா னோர்பணிந்து இயம்புவா ரன்போரே
அன்றுமுத லின்றுவரை அடியார்க ளெல்லோரும்
சிவனுக் கடிமை செய்திந்தப் பூமியிலே
எவனுக்கும் பதறாது இருந்தோமே இவ்வுலகில் 40
மாய்கையில்லை எங்களுக்கு மக்கள்பெண்டீர் தானுமில்லை
சாய்கைத் துயிலுமில்லை தகையுமில்லை எங்களுக்கு
இளைப்பில்லை தாகம் இல்லை பசிதாகமதும்
வளப்பில்லை தேகம் மறுவில்லை நோவுமில்லை
அலந்தா சையில்லை ஆணில்லை பெண்ணுமில்லை
கலந்தா சையில்லை காமக் கழிவுமில்லை
இத்தனையு மில்லாது ஈசன ருட்செயலால்
நித்திய மனப்பூவால் நிமலன் பதம்போற்றி
இன்பதுன்ப மற்று இருவினைகள் தானுமற்று
வன்பத்து சம்பத்து வாக்குடனே போக்குமற்று
மலமற்றுச் சலமற்று மயமும் சயமுமற்றுப்
பெலன்பொறி யற்றுப் பேரற்று ஊருமற்று
இத்தனையு மற்று இருந்தசிவத் தொண்டரிடம்
புத்திகெட்ட மாகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே
சொன்னமொழி மாறாமல் சுவாமிவிண் ணப்பமென்றார்
என்னவித மாகிடினும் இரட்சிக்க வேணுமையா
என்றந்த வானோர் இறைஞ்சித் தொழுதிடவே
நன்றென்று கேட்டாதி நாரா யணருரைப்பார்
நல்லதுகாண் வானவரே நானினிமேல் செய்பிறவி
இல்லறத்தை விட்டுத்தவம் இல்லைகாண் வேறொன்று 60
ஆனதால் பேடென்றும் அருளியிருளி யென்றும்
மானமில்லா ரென்றும் வாராது மேற்பிறவி
ஆணுக்கொரு பெண் அன்றூழி காலமெல்லாம்
தோணுதலா யொன்றாய்த் தொல்லூழி காலம்வரை
வாழ்ந்திருப்பா ரென்றும் மக்கள் கிளையோடும்
தாழ்ந்திருப்பார் பேராய்த் தழைத்தோங்க எந்நாளும்
பேரு தழைக்க பெருமையாய் வாழ்ந்திருப்பார்
ஊரொன் றுகமொன்று உரையொன்றுக் குள்ளாக்கி
இறவாமல் பெண்ணோடு இருந்துமிக வாழ்வதல்லால்
பிறவியற்று வாழ்வார் பெண்ணுடனே யல்லாது
ஊர்மறந்து பேர்மறந்து உற்றக் கிளைமறந்து
பார்மறந்து தேசப் பவிசு மிகமறந்து
ஆடல் மிகமறந்து ஆயிழையைத் தான்மறந்து
பாடல் மறந்து பக்கத் துணைமறந்து
அன்ன மறந்து அதிக மணமறந்து
சொர்ண மறந்து சுகசோ பனமறந்து
நலமறந்து தேக நளினமிக மறந்து
மலசல மறந்து வளருந்தவப் பேறுமில்லை
இத்தனை நன்மைகள் எல்லாமிகக் கொண்டாடிச்
சித்திரமாகத் திரும்பிப் பிறப்பற் றவராய் 80
என்பிள்ளை ஏழும் எடுத்தவழி ஓரினமாய்
அன்புள்ள பேராய் அரசாள்வோம் கண்டாயே
என்று மகாமால் இப்படியே சொல்லிடவே
அன்றந்த வானோர் எல்லோரு மேயிரங்கி
நன்மை பலதோடும் நன்னுதலாள் தன்னோடும்
மேன்மை பலபெறவே மேற்பிறக்கச் செய்வோமென்று
சொன்னீரே அய்யா சுகம்பெற்றோம் நாமளென்று
பன்னீர்க் குணம்போல் பச்சம்வந்து வானோர்கள்
ஆதியே எங்களையும் அதிலமைக்க வேணுமென்று
சோதியே என்று தொழுநின்றார் வானோர்கள்
நல்லதுதா னெனவே நாட்டமுற் றெம்பெருமாள்
வல்லமக்க ளான வாய்த்தசா ணார்குலத்தில்
ஏழு மக்களிலும் ஏற்றவா னோர்வழியில்
மாளுவந்தா லுமதிலே மாறாப் பிறக்கவென்றும்
நாரா யணர்புவியில் நல்லமக்க ளேழ்வரையும்
சீராக வந்தேற்றுச் செய்தவினை யும்நீக்கி
ஊழூழி காலம் உயிரழியா வண்ணமும்தான்
ஆழிக்கரை யான்மகவு அரசாள்வா ரென்றுசொல்லி
சொல்லிப் பிறவி செய்தார்காண் சாணாராய்
நல்லதென்று வானோர் நாடி யகமகிழ்ந்து 100
சாணா ராய்வந்து தானுதித்தார் வையகத்தில்
வாணா ளறிந்து வானோர் மிகப்பிறந்தார்
பரலோகத்தார் மனுப்பிறப்பு
அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள்
சொந்தப் பரலோகச் சுத்தமுனி வோர்களையும்
எல்லோ ரையுமழைத்து எம்பெருமாள் ஏதுரைப்பார்
வல்லோரே உங்கள் வளப்பமென்னச் சொல்லுமென்றார்
நீங்க ளெனைமறந்து நீணிலத்தி லில்லையென்று
நாங்கள் மிகவறிய நன்றிகெட்டுச் சொன்னீரே
ஆனதா லுங்களுக்கு அதிகப்பிழை யாச்சுதல்லோ
ஏனமென்ன பார்த்து இயம்பு முனிவோரே
அப்போது மாமுனிவர் எல்லோரும் தாம்பயந்து
செப்புவ தேதோ சிவனுலகோர் செய்திகண்டால்
கற்பனைக்குள் ளல்லால் கடருவமோ நாங்களினி
அற்பரல்லோ கற்பனைக்கு அல்லவென்று சொல்வதுகாண்
என்றுமுனி சொல்லி இயம்புவார் பின்னுமுனி
எல்லா வுரையும் எடுத்துரைத்தீர் வானோர்க்கு
நல்லா யறிந்தோம் நாதனேயவ்வகைபோல்
படைத்தனுப்பு மும்முடைய பால ருடவழியில்
நடத்தை யதிகமுள்ள நாராயணப் பொருளே
என்று முனிவோர் இப்படியே சொல்லிடவே 120
அன்று பெருமாள் அவர்க்கேது சொல்லிடுவார்
எல்லோரு மென்மகவாய் இனத்தில் பிறந்திருங்கோ
வல்லோரே யுங்களைநாம் வந்தெடுப்போ மஞ்சாதே
என்மக்க ளேழும் ஈன்றவழிச் சான்றோரை
பொன்மக்க ளான பூமக்கள் தங்களுக்கு
என்சொத்து மீந்து என்பேரையுங் கொடுத்துத்
தன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன்
இறப்பு பிறப்பு இல்லாம லென்மகவைப்
பிறப்பிறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன்
ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி
மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை
என்றாணை யாதி நாரா யணர்கூற
நன்றாக மாமுனிவர் நல்லதென்று சம்மதித்து
அய்யா வுமது அருளின் படியாலே
மெய்யா வுமது விந்து வழிக்குலத்தில்
படையுமையா சாணாராய்ப் பரமனே யென்றுநின்றார்
சடையு மணிந்தமுனி தானுரைக்க அய்யாவும்
நல்லதுதான் பிள்ளாய் நாடுவது கருமம்
வல்லவரே சான்றோர் வழியிலுங்கள் தம்மினத்தில்
பிறக்கப்போ மென்று பெருமுனிவரை யனுப்பிச் 140
சிறக்கச் சிவனோடு செப்புவா ரெம்பெருமாள்
திருமால் சிவனிடம் மேல்நடப்புரைத்தல்
ஆதியே நாதி ஆனந்த மைத்துனரே
சோதியே சான்றோராய்த் தொல்புவி ஏழிலுள்ளே
சங்கமுதல் தெய்வ சத்திபர லோகம்வரை
அங்கவரைச் சாணாராய் அவதரித்தார் பூமியிலே
என்மக்க ளான இப்பூமி ஏழிலுள்ள
பொன்மக்க ளெல்லாம் பொறுமையுள்ள சாணாராய்ப்
பிறந்தார் புவிதனிலே புகலுமையா நம்மள்செய்தி
கலிக்குள் ளகப்பட்டோர் கடந்துகரை யேறவென்றால்
வலிக்கு வலுவான வகையல்லோ வேணுமையா
தீட்டுக்குள் சென்றால் திரும்பக் குளியாமல்
வீட்டுக்குள் போவாரோ மேதினியோர் நாமறிய
இனிமேல் செய்தி இன்னதென் றீசுரரே
கனியான மைத்துனரே கட்டுரைக்க வேணுமென்றார்
அப்போது ஈசர் அச்சுதரைத் தான்பார்த்துச்
செப்புவது நாமறியோம் செய்கரும மங்கேயல்லால்
நம்மோடே சொல்ல நாரணரே ஞாயமில்லை
தம்மோடே சொன்ன சத்தியத் தின்படியே
நடத்தும் நீரென்று நவின்றாரங் கீசுரரும்
திடத்திருமா லானோர் செப்புவார் பின்னாலே 160
தர்மயுகச் சிறப்பு
இவ்வுகமும் நீசன் இனக்குலமும் நாமழித்துச்
செவ்வுகத்த நம்மனுவோர் சிறந்ததர்மத் தாரணியும்
புதுயுகம் புதுவிருச்சம் புதுமனு புதுநினைவும்
நெதிவுசற்று மில்லாது நின்றிலங் கும்பதியும்
புதுவாயு புதுவருணன் புதுமுகில் புதுமதியும்
புதுமிருகம் புதுப்பறவை புதுவூர் வனங்கள்முதல்
தர்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துவெல்லாம்
நன்மையினித் திட்டித்து நடத்திடவும் வேணுமல்லோ
இப்படியே ஞாயம் இருப்பதுவு மல்லாமல்
முப்படித்தா னுள்ள முறைகேளு மீசுரரே
துரியோ தனனைத் தொலைத்துக் கலிவருமுன்
பதிரங்க மேவிப் பள்ளிகொண்டு நானிருந்தேன்
ஸ்ரீரங்க மீதில் சிறந்திருக்கு மப்பொழுது
நீதங்கள் கெட்டகலி நீணிலத்தில் வந்ததினால்
நீதநெறி மானுபமும் நிசமான தர்மமதும்
சாதமுள்ள வெள்ளானை தலையைந்து கொண்டதுவும்
கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன்
வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில்
நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம்
வல்ல வெண்ணரிகள் வளரும்வெண் காக்கைகளும் 180
ஆழியோடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும்
வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள்
வெண்கற்றா வெண்போத்து வெண்தோகை வெண்பறவை
பண்புற்ற பட்சி பலமிருக மூர்வனமும்
இத்தனையும் நீசனுக்கு எற்றுக் கொடாதபடி
புத்தி யறிவோடு புவனமதை விட்டேகிக்
கானகமே நடந்து கதறி யெனைவருந்தி
மானுவமாய் நின்று வருந்தித் தவம்புரிந்தார்
ஆனதா லூர்வனத்தில் ஐந்துதலை வெண்சாரை
ஈனமில்லா மிருகம் ஏற்றவெள் ளானைகற்றா
வெண்ணாடை வெண்ஞாளி வெண்முத்தி வெண்மிருகம்
வெண்பட்சி யான மேல்பட்சி யானதிலே
பொன்பட்சி வெண்பட்சி பூணுநிறத் தானபட்சி
தென்பட்சி அன்பட்சி செந்தா மரையின்பட்சி
இப்பட்சி யோடு இம்மிருக மூர்வனமும்
அப்பட்சி யோடே அனைத்து மனுகூலமுமாய்க்
கூடிக் குழையும் கொடிப்பிதிரு மொன்றதுபோல்
தேடரிய அந்தத் தேதிதனில் தோன்றிவரும்
விருச்சம் படைக்க வேணு மதுவிபரம்
புரச்ச மதுபார்த்துப் புகலுது ஆகமந்தான் 200
என்பிள்ளை ஏழும் இயாபிக்க நாமீந்த
மின்விருச்ச மான மிகவிருச்சம் நிலையாய்
வன்னமது பூகம் வாசமது விருச்சம்
தென்னை விருச்சம் செறியும்புன் னைவிருச்சம்
ஆதி விருச்சம் அடர்ந்த பெருவிருச்சம்
சோதி விருச்சம் சுபசோபன விருச்சம்
தேச விருச்சம் செம்பொன் னிறவிருச்சம்
ஆகமத்தி லுள்ள அனேக விருச்சமதும்
வந்து மிகத்தோன்றும் வைத்திருக்குந் தேதிதனில்
சிந்து பயில்வானம் சிறந்தவொரு வெண்வானம்
வான மதிலுறையும் வளர்நிலவும் நேராக
ஈனமில் லாததுதான் இலங்குமெந் நேரம்வெளியாய்
சேத்திரங்க ளொன்று தினமு மதுவிளக்காய்
சாத்திர வேதம் சமயமொன்றாய் நின்றிலங்கும்
வாயுவே பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும்
ஆயுங் கலைதமிழும் அறிவொன்று போல்பரவும்
நம்மனுவோர் தர்மபதி நாளுமிகத் தழைக்கும்
தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்கள்
ஒக்க ஒருஇனம்போல் உவந்திருந்து வாழ்வார்கள்
மிக்கத் திருச்சாதி மேற்சாதி சான்றோராய் 220
இருப்பார் வயது எண்ணிக்கையில் லாதபடி
பருப்பார் பழமும் பாலு மிகஅருந்திப்
புண்ணிய முள்ளோராய்ப் பூமிதனை யாண்டிருப்பார்
மண்ணெல்லாந் தர்ம வயல்போல் விளைந்திருக்கும்
தர்ம புவியிலுள்ள தண்ணீர் கலைக்கியானம்
நன்மைவெள்ளங் காட்ட நாடுங் கருணைவெள்ளம்
இப்படியே தர்மபதி இராச்சியமொன் றுண்டாக்கிச்
செப்படிய பொன்பதிகள் திட்டித்து வைக்கவென்றும்
முன்னமே யென்றனக்கு உகந்ததுவ ராபதியில்
பொன்னம் பதியும் பெரியதங் கப்பதியும்
உண்டுகா ணப்பதியும் உவரியதுக் குள்ளிருக்கு
கண்டு கொள்ளார்கள் கலிமாசு கொண்டவர்கள்
ஆனதா லப்பதிதான் ஆகுவது மக்களுக்குத்
தான முடனமைக்கத் தர்மசாஸ்திரத்தி லுற்றிருக்கு
தர்ம புவிகண்டு தானிருக்கு மக்களுக்கு
வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை
தர்மபுவி வாழ்வார்க்குச் சத்தி விதிக்கணக்கும்
நம்மிடத்தி லல்லால் நாட்டில் கணக்குமில்லை
சாத்திர வேதம் சமயம்போ தித்தருளி
சேத்திரவிப ரிப்புரைக்கச் செல்லநம் மனுவோரும் 240
காலனெனுஞ் சித்திரக் கணக்கனெனும் பேர்களுக்கு
ஏலமே தவசு இடறாக நிற்கிறார்காண்
ஆனதா லவர்கள் அழிவாகிப் போகுமையா
ஊனக் கிரகம் ஒன்பது பேர்களையும்
அழித்துவே றொன்றுக்குள் அருள்கொண் டிருக்குதுகாண்
முன்னூலின் சாத்திர முறையெல்லாந் தப்பவைத்துப்
பின்னூல்பு ராணமொன்று போதிப் பொருவனுமாய்
இந்தப் படியேயான் நிச்சித் திருப்பதினால்
அந்தப்படி யுள்ளதெல்லாம் ஆகுமந்தத் தேதிதனில்
அதுக்குமுன்னே நாம் அமைப்பதெல் லாமமைத்துக்
கதுக்கெனவே பார்ப்போம் கலியை யழிப்பதற்கு
அம்மைமார் தவநிறைவு
என்று விசாரித்து இருக்கின்ற நாளையிலே
சான்றவரைப் பெற்ற தையல்தெய்வக் கன்னியர்கள்
தவத்தி லவர்நின்று தலைவரையுங் கால்வரையும்
உபத்திர மால்விருச்சம் உடலெல் லாமேமூடி
கன்னியர்கள் ரோமம் கனத்தபுவி யில்வேராய்
உன்னியே லோகமதில் ஓங்கிப் பரந்ததுவே
நின்ற தவந்தான் நிலைத்து நிறைவேறி
நன்றினியக் கன்னியர்கள் நாடுந் தவத்தருமை
பார்த்தன் தவமதிலும் பத்துரெட்டிக் கூடவுண்டே
ஏற்றரிய சீதை இருந்த தவமதிலும் 260
ஒட்டிரெட்டிக் கூடவுண்டே ஓவியத்தார் தந்தவங்கள்
ஏட்டி லடங்காது இவர்தவசைச் சொல்லவென்றால்
பொறுத்து முகியாதப் பெரிய தவத்தருமை
மறுத்துரைக்கக் கூடாமல் வளர்ந்துதவ முற்றியதே
சத்தி உமையாட்கும் சதாசிவ மானதுக்கும்
முத்திக்கும் மாலுக்கும் முகுந்தன் பிரமனுக்கும்
மனதில் மிகஅறிந்து மாதுசத்தி யேதுரைப்பாள்
காட்டிலேழு பெண்கள் கனநாள் தவசுபண்ணி
தாட்டிமையாய்ப் பெண்கள் சடைத்தார்காண் ஈசுரரே
பெண்கள் தவசியல்லோ பொறுக்கமிகக் கூடலையே
அங்கேபோய் நாமள் அவர்தவசு பார்ப்போமென்றாள்
என்று உமையிரங்கி இப்படியே சொல்லிடவே
அன்று அறம்வளர்த்தாள் அவள்பங்க ரேதுரைப்பார்
நல்ல உமையே நாடும்பெண் ணார்தவத்தில்
செல்லவென்றால் நாரணரும் தேனேவர வேணுமென்றார்
அப்போது நாரணரை அடிவணங்கி மாதுமையும்
ஒப்போ டுறவணங்கி உரைக்கிறா ளன்போரே
அண்ணரே கோவே ஆதிநா ராயணரே
கண்ணரே கார்வண்ணரே காட்டிலேழு கன்னியர்கள்
தவசுதனி லிருந்து சடைத்தார் கனநாளாய் 280
சிவனே அவர்கள்தவம் செப்பப் பொறுக்காது
நாமள்போய்ப் பார்த்து நல்லபெண்க ளேழ்வரையும்
ஆமான பதவி அருளவே வேணுமையா
என்றுநா ராயணரை எழுந்தருளச் செய்துஉமை
அன்று சிவனாரும் ஆதிநா ராயணரும்
அம்மை உமையாளும் அரம்பை ஸ்திரிமாரும்
செம்மையுட னடந்து சென்றார் வனமதிலே
வனத்தி லவர்கள்வர மாதரேழு கன்னியர்கள்
இனத்திலுள்ள மாதுமையை எல்லோருங் கண்டாவி
தாயே வுனது தாள்கண்டு எத்தனைநாள்
வாயே புவிக்குடைய மாதாவென் தாயாரே
எனதேர மெங்களைநீர் இகழ்ந்து கடத்தாமல்
தனதாக எங்கள் தயவில் குடியிருந்து
கற்பகலாக் காத்த கண்ணெங்கள் மாதாவே
உற்பனமா யெங்களைநீர் உலகில் தவறவிட்டு
இருந்தாயே தாயே எங்கள்விதி நாயகமே
அருந்தாமல் வாடினோமே அறமில்லார் தங்களைப்போல்
காத்திருந்தா யென்றிருந்தோம் எங்களுட கட்டழியப்
பார்த்திருந்த ஞாயமென்ன எங்களுட பார்வதியே
எந்நேர மீசுரர்க்கும் என்னம்மை யுங்களுக்கும் 300
சொன்ன பணிமறந்து சொல்தப்பி நின்றோமோ
ஈசருட சட்டம் யாங்கள் மிகமறந்து
தேச மதில்வரவே சிந்தை யிச்சித்ததுண்டோ
கற்பினை மறந்தோமோ காராவைக் கொன்றோமோ
அற்புதவேள் தாயே அடியார் தமக்கருளும்
என்றுகன்னி யெல்லாம் இப்படியே தானுரைக்க
அன்று அறம்வளர்த்த அம்மை மனதிரங்கி
நல்லதுகாண் பெண்ணேயுங்கள் ஞாயமெல் லாமுரைப்போம்
வல்ல சிவனாரே வார்த்தையொன்று நீர்கேளும்
தவத்தை நிறைவேற்றித் தார்குழலா ளேழ்வரையும்
அகத்தே வரவழையும் ஆதியே யென்றுரைத்தாள்
அப்போ சிவனார் ஆனகன்னி ஏழ்வரையும்
கொப்போடு சூழ்ந்துநின்ற குழையெல்லாமே யுதிர்த்தி
நிறைவேற்றித் தவத்தை நேரிழைமா ரேழ்வரையும்
சிறைமாற்றிப் பெண்களையும் சிவனார் வரவழைத்து
வந்து மடவார் மறையொத்த மூவரையும்
சந்துஷ்டி யாகத் தாழ்ந்து நமஸ்காரமிட்டுக்
கனகத் திரவியக் கப்பல்கரை சேர்ந்தாற்போல்
மனமகிழ்ந்து மாதுமையை மாமடவார் முத்திமுத்திக்
கொண்டாடிக் கொண்டாடிக் கூறுவார் கன்னியர்கள் 320
சென்றாடிச் சென்றாடிச் சிவனை மிகப்போற்றி
வந்தனே வந்தாய் போற்றி மாதுமைக் கணவா போற்றி
சந்தன மயிலே போற்றி சண்முகன் தாயே போற்றி
நந்தகோ வேந்தே போற்றி நாதனே நீதா போற்றி
சிந்தரென் கணவா போற்றி சிவசிவா போற்றிப் போற்றி
மாதவா போற்றிப் போற்றி மறைமூடி காணா வல்ல
நீதவா போற்றிப் போற்றி நிசரூபச் சித்தா போற்றி
சீதவா ளுமையே போற்றித் தெய்வநன் மணியே போற்றி
பாதவா வனத்தில் தொட்ட பாங்கனே போற்றிப் போற்றி
மூவர் தேடியு முற்றாத முதலே யுனதுபதம் போற்றி
தேவர்க் கரியத் திரவியமே தெய்வ மணியே சிதம்பரமே
காவக் கானக வனமதிலே கற்பை யழித்துக் கைவிட்டகன்ற
தாவத் துணையே யென்கணவா தவமே யுனதுபதம் போற்றி
மாட்டி லேறும் மகாபரனே மாது உமையாள் பங்காளா
காட்டி லடியா ரேழ்பேரும் கற்றா விழந்த பசுவதுபோல்
ஊட்டி உறக்கா ரில்லாமல் ஊமை கண்டக் கனாவதுபோல்
வாட்ட மறிந்து மனதிரங்கி வந்தாய்க் கவலை தீர்ந்தோமே
தீர்ந்தோமினி எங்களைத் தானும் திரும்பக் கயிலைக் கழையாமல்
ஈந்தோர் பிள்ளை ஏழ்வரையும் இனமு மேழுங் குறையாமல்
சாந்தோ ரெங்கள் கணவரையும் தந்தே தரணி யரசாண்டு 340
வாழ்ந்தே யிருக்க வரமருளும் மாயா திருக்கு மறைமுதலே
அய்யா முதற்பொருளே ஆனந்த மானவரே
மெய்யான மூல மேல்வீட்டி ருப்போனே
தூணாக அண்டபிண்டத் தூரைக் கடந்தோனே
கோணவட்டத் துள்ளே குடியிருக்குங் கோவே
ஈசரே யெங்களுட இளைப்பெல்லாம் நீர்மாற்றித்
தேசமதில் வாழச் செல்ல வரந்தாரும்
பெற்றமக்க ளேழும் பிள்ளை யதுவழியும்
கொத்துக் கொடியும் குலவம்மி சமுழுதும்
சான்றோர் வழிமுழுதும் தற்காத்து எங்களையும்
பண்டூசல் செய்த பாரமுனி வன்பதத்தில்
சேர்ந்திருக்க வுமவரின் திருப்பாத முந்தொழுது
தாழ்ந்திருக்க வுஞ்சிவனே தாரும்வர மென்றுரைத்தார்
அப்போது நல்ல ஆதிசிவ மேதுரைக்கும்
இப்போது நாரணரே இக்கன்னி கேட்டதற்கு
இன்னவித மென்று இசைந்து வரங்கொடுவும்
சொன்னவிதங் கேட்டுச் சொல்லுவார் நாரணரும்
கேட்ட வரமதுதான் கெட்டிதான் ஈசுரரே
நாட்டமிந்தப் பெண்களுக்கு நான்சொல்ல நீர்துணையாய்
மடமாதே பெண்ணரசே மடந்தைக் கிளிமொழியே 360
தடமான பொய்கையிலே தண்ணீர் தனைச்சுருட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து
வாசமுடன் நாடோறும் வருகின்ற வேளையிலே
இன்றேநீர் கொண்டு ஏகின்ற நீரையெல்லாம்
இன்றென் தலையில் இயல்பாய் விடுவுமென்றேன்
இரந்து திரியும் ஈசருக் கல்லாது
பரந்தபுவி மாயனுக்குப் படாதே எனவுரைத்தீர்
அப்போது உங்களைநான் ஆகட் டெனவுறுக்கி
இப்போது பாரென்று இத்தனையுஞ் செய்தனல்லோ
வண்ணத் திருமாலிவ் வகையுரைக்க மாதரெல்லாம்
கண்ணையவர் பொத்திக் கவிழ்ந்துமிக நாணிநின்றார்
அப்போது எம்பெருமாள் அவர்களுட னேதுரைப்பார்
ஒப்போடு வொத்த ஓவியங்க ளேகேளும்
நீர்பெற்ற பிள்ளைகள்தாம் நீணிலத்தி லேபெருகி
வானத் தமிர்த மதுபா லமுதருந்தி
வாழ்ந்தார் சிலநாள் மன்னரெனக் கோட்டையிட்டார்
ஆழ்ந்ததொரு சோழன் அவன்பழிகள் ரண்டேற்றான்
பின்னுள்ள சான்றோர்க்குப் பிறகுவந்த மாநீசன்
அந்நீசன் சாபமிட்டு அவர்கள் துயரமுற்றார்
துயரமுற்றுச் சான்றோர் துற்கலிக் குள்ளாகி 380
அயர்ந்து மிகவாடி ஆட்போலே நீசனுக்குத்
தாழ்ந்து பணிவிடைகள் சான்றோர்கள் செய்தாலும்
வாழ்ந்துமிகக் கெட்டகலி வைது மிகஅடித்து
ஆருமற்றார் போலே அலையுகிறார் சான்றோர்கள்
சேருமிட மில்லாமல் தியங்குகிறார் சான்றோர்கள்
அப்ப னானிருக்க அவரம்மை நீயிருக்க
அப்பனம்மை யில்லையென்று அடிக்கிறான் நீசனெல்லாம்
நீரு மித்தனைநாள் நின்றுவிட்டீ ரித்தலத்தில்
நானும் பரதேசம் நடந்துவந்தே னித்தனைநாள்
சான்றோர் துயரம் தான்கேட்பா ராருமில்லை
மீண்டே நாம்கேட்கவென்று மேதினியில் போகவென்றால்
இச்சொரூபங் கொண்டு ஏகினால் மாகலியன்
பொய்ச்சொரூபத் துள்ளே புக்கிடுவோ மல்லாது
என்றையா நாதன் எடுத்துரைக்கக் கன்னியர்கள்
அன்றவர்கள் தலையில் அடித்துக்கீழ் வீழ்ந்தழுதார்
அழுதாரே பெண்கள் அருவரைகள் தானிளக
ஒழுகான பெண்கள் ஓலிமிட் டேயழுதார்
அய்யோயெம் மக்கள் ஐந்திரண் டானதிலே
பொய்யோமெய் யோசோழன் பொன்றிவிட்ட ஞாயமது
கற்பழியாக் கன்னியெங்கள் கற்பையெல்லாம் நீரழித்து 400
உற்பனமாய்ப் பெற்றபிள்ளை ஒன்றுபோல் நீர்பார்த்து
வளர்க்காமல் மக்களையும் மாளக் கொடுத்தீரே
பழவினையோ யெங்களுட பாவக் குறைச்சலிதோ
கற்பிழந்தோ மென்றும் கௌவையில்லா தேயிருக்க
இப்பிழையோ வந்து எமக்குத் தலைவிதிதான்
மக்க ளிருபேரை வதைத்தகொடுஞ் சோழனுட
அக்கபக்க மெல்லாம் அறாதோ எம்சிவனே
மாபாவிச் சோழனுட வம்மிசங்க ளானதெல்லாம்
தீயாவிக் கொண்டு செத்திடா தோசிவனே
எம்மக்கள் தம்மை இடுக்கஞ்செய் தேயடித்த
வன்மக்கலி நீசனெல்லாம் வாழ்விழந்து சாகானோ
பழிசெய்த சோழனூர் பகலநரி ஓடாதோ
வழிசோழ வம்மிசங்கள் வன்னரகில் மாளாதோ
நீசக் குலங்கள் நெருநெரெனத் தானொடிந்து
தோசப் புழுக்குழியில் தோயாதோ யெம்சிவனே
பெற்றநா ளன்றுமுதல் பிள்ளைகளைக் காணாமல்
நித்தம் பால்சுரந்து நெகிழுதே யெம்சிவனே
பெற்றபிள்ளை ஏழுடைய பேருடம்பு தன்னிறத்தைச்
சற்று மறிந்திலமே தலையிலேழு துஞ்சிவனே
கொதிக்குதே யெங்கள் கும்பிமிகக் குமுறிக் 420
கதிக்குதே யெங்களுட கண்மணியைக் காணாமல்
ஏழுகன்னி மாரில் யார்பெற்ற கண்மணியோ
கோளுரைத்துப் பாவி கொன்றானோ யெம்சிவனே
கொன்னவன்தா னின்னம் கொடுநரகில் வீழாமல்
இன்ன மிருப்பானோ இறந்தானோ யெம்சிவனே
பாவியவன் செத்துப் பஸ்பமாய்ப் போனாலும்
ஆவியைக் கண்டாலும் ஆக்கினைகள் செய்திடுவோம்
மக்கள்ரண்டு பேரும் மணஞ்செய்து வாழ்ந்தவரோ
பக்குவ வயசதிலோ பாழறுவான் செய்தவினை
கலியாணஞ் செய்த கண்மணிக ளானாக்கால்
வலியான மங்கையர்கள் மனஞ்சலித்து வாடுவரே
இட்ட வுடைமை இறக்கா திருப்பாரோ
கட்டின மங்கிலியம் கழற்றா திருப்பாரோ
இத்தனையுங் கழற்றாது இருக்கச் சிவன்செயலால்
புத்தி தனைக்கொடுத்துப் பெண்ணரசைக் காப்பாரோ
ஏதென் றறிந்திலமே எங்களுட தாயாரே
கோதண்ட மாதாவே கோவேயெந் தாயாரே
வனத்தில்வந் தெங்களுட வாட்டமெல்லாம் தீர்த்தீரென்று
புனத்தில்கனி கண்டதுபோல் பிரியமுற்றோ மாதாவே
கைப்பிடித்த பண்டாரம் கட்டுரைத்த சொற்கேட்டு 440
மெய்ப்பிடித்த மெல்லாம் மிகவுழறு மாதாவே
கன்னிப் பருவமதில் கைமோச மானதினால்
உன்னி மனதில் உளறி யுளங்கலங்கிப்
பாராமல் மக்களையும் பார்மீதி லேகிடத்திச்
சீரா கவனத்தில் சென்றோ மிகநாணி
பாவி கெடுவான் பழிசெய்வா னென்றுசொல்லித்
தாவியே யெங்கள்மனம் சற்று மறியாதே
எங்களையு மீடழித்து எம்மக்க ளேழ்வரையும்
சங்கை யழிக்கத் தலையெடுத்தா ரிக்கூத்தர்
நச்சுக் களையாய் நாங்கள்வா ழுமிடத்தில்
சச்சுருவ மிட்டுவந்து சதித்தாரே பண்டாரம்
எங்களுக் கென்றிவரைப் படைத்தா ரோபிரமன்
கங்கை யணிசிவனார் கேட்டு மகிழ்ந்தாரோ
இத்தனைக் கூத்தும் இக்கூத்தெல் லாம்பார்க்கக்
கூத்துவன்போல் தோன்றி கோலங்கொண்ட பண்டாரம்
இனியெங்க ளையேற்று ஈன்றபிள்ளை ஏழ்வரையும்
மனுவேழ் குறையாமல் மக்களேழு வழியும்
குறையாமல் தந்து குவலயத்தை மக்களுக்குத்
திறவானத் தங்கத் திருமுடியுஞ் செங்கோலும்
கொடுத்தெங்கள் மக்கள் குவலயத்தை யாண்டிருக்க 460
அடுத்துச் சிலநாளில் ஆக்கிவைக்கா திருந்தால்
ஏழுபெண் பாவம் ஏற்பீர்காண் பண்டாரம்
நாளு கடத்தாமல் நடத்தி மிகத்தாரும்
எங்களையுங் கற்பழித்து இந்த வனந்தனிலே
மங்கள சோபனமும் மறந்து மயிர்விரித்துத்
தூங்காமல் வாடி தினமும் மிகவுணர்ந்து
ஆங்கார மேமறந்து அவனியா சையறுத்துத்
தலைவிரித்துக் கலையைச் சதமென்று எண்ணாமல்
உலையில் மெழுகதுபோல் உறுவனத்தி லேநிலையாய்
வெயில்பனியிலு மேகத் துளிர்விழிக் குள்ளாகிக்
குயில்கூவும் வனத்தில் கோதையேழு பேரும்
நின்றோமே காட்டில் நீர்செய்த மாயமதால்
இனியெங்கள் மக்கள் ஏழ்வரையு மேழ்வழியும்
அநியாய முமடக்கி ஆனமக்கள் வம்மிசத்தைக்
கொத்தோடே சேர்த்தெடுத்துக் குறுங்கலியை யடக்கி
அரசாள மக்களுக்கு ஆனபதி ஈயும்வரைக்கும்
எங்களைப்போல் சுகமற்று இருப்பீர்காண் பண்டாரம்
மங்களமல் லால்கலி மாளும்வரை வாராது
என்று சபித்தார் ஏற்றகன்னி ஏழ்பேரும்
அன்றுநா ராயணரும் அவர்கேட்டுத் துக்கமுற்று 480
என்னசொல்லப் போறோம் யாம்தா மினியெனவே
வன்னத் திருமேனி மனதுநொந் தேதுசொல்வார்
பெண்ணேநீ ரேழ்பேர்க்கும் பிரமா அமைத்தபடி
எண்ணம் வந்ததல்லால் யானென்ன செய்தேனடி
ஆனால் கலியை அழிந்துமக்கள் தம்வழியை
நானாகச் சென்றெடுத்து நலங்கொடுக் கும்வரைக்கும்
துயர மெனக்குத் தொடுக்குமெனச் சாபமிட்டீர்
அசுரக் குடும்பம் அறுக்கும்வரை முன்னாளில்
ஈசரிட்ட சாபம் ஈதோடே வாய்த்துதடி
மாசங் கடந்து வரும்வரைக்கும் நீங்களுந்தான்
எங்கே போயிருக்க ஏழ்பேர்க்குஞ் சம்மதங்காண்
கொங்கை யினியழகக் கோதையரே சொல்லுமென்றார்
அப்போது கன்னி அவரெல்லா மாராய்ந்து
செப்புகிறா ரந்தச் சிவபத்தர் தன்னுடனே
மக்கள்ரண்டு பேர்கள் மாண்டாரவ ருயிரை
அக்கமது செய்தீரோ அயலோவது ஞாயமென்ன
என்றுகன்னி ஏழ்பேரும் இரங்கித் தொழுதிடவே
அன்றுநா ராயணரும் ஆதிசிவ னுமையும்
தாதா மனமகிழ்ந்து சதுர்முகனைத் தானழைத்து
வேதாவே மக்கள்ரண்டை வெற்றியுள்ள வைகையிலே 500
கொன்றானே சோழன் குருநன்றி யைமறந்து
சென்றாரே மக்கள் சென்றவுயி ரெவ்விடங்காண்
அப்போது வேதா அவர்தான் மிகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று செப்பினா ரன்போரே
இறந்தபிள்ளை ரண்டின் ஏற்றவுயி ரானதையும்
அறந்தழைக்கு மாகயிலை அறைக்குள் ளடைத்திருக்கு
மால்மக்க ளென்று மனமகிழ்ந்து நான்பதறி
வாலைமுனி யுயிரும் வானவர்கள் தன்னுயிரும்
ஆனதினால் பிறவி அமைக்கப் படாதெனவே
நானிதற் கஞ்சி நற்பதியில் வைத்திருக்கு
என்றுவே தாவுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார்
அன்று படைத்திலையே அநேகமனு வாகுமல்லோ
அஞ்சுமக்கள் பிள்ளை அவனியைம்பத் தாறதிலும்
மிஞ்சிப் பரந்து மேல்சான் றோர்பெருக்காய்
இப்பிள்ளை ரண்டும் ஏலமே நீர்படைத்தால்
கொப்புநூ றாயிரம்போல் கூடிப்பெ ருக்குமல்லோ
பாவி கெடுத்தான் படையாமல் நீர்கெடுத்தீர்
தாவிக் கெடுத்தான் சளக்கலியன் மாபாவி
இனியென் மக்களுயிர் இன்பமுடன் நீர்காத்து
மனுவராய்ப் பூமியிலே வைகைக்கூ டவ்வோடு 520
எழுப்ப வேணுமென்று யாம்நிச்சித்தி ருப்பதினால்
வெளுப்பாக அவ்வழியில் மேலுகத்தோர் தாம்பிறந்து
இன்பமுள்ள வானவரும் இவ்வழியில் வாழ்வதினால்
அவ்வழியி லவ்வழிகள் அநேகம் பெருகிடவே
செவ்வாக நிருமிப்போ திடீர்திடீ ரெனப்படையும்
என்றுசொல்ல மூலம் இசைந்துநல்ல வேதாவும்
நன்று நன்றென்று நருள்பிறவி செய்தனராம்
இப்படி யேபிறவி இவர்செய்வோ மென்றுசொல்லி
அப்பிறவி வேதா அமைத்தார் மனுப்பெருக
உடனேநா ராயணரும் உள்ளங் களிகூர்ந்து
திடமான கன்னியர்கள் செய்முகம்பார்த் தேதுரைப்பார்
நீர்கேட் டதற்கு நிண்ணயங்கள் கண்டீரே
இனிநான் கேட்பதற்கு இன்னதென்று சொல்லிடுவீர்
உங்களைப்பூ லோகமதில் உடைய வழிக்குலத்தில்
நீங்களும் போய்ப்பிறக்க நிச்சித் திருப்பதினால்
ஏதுபெண்கா ளுங்கள்மனம் ஏதென்று டனேசொல்லும்
மாதுக ளெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடி
எங்களுட நாயகமே எமையாளும் ரத்தினமே
செங்கருட வாகனவா தேவி மணவாளா
நீர் நிச்சித்த நினைவெள்ளுப் போலளவும் 540
சீர்பரன் முதலாய்த் தெரியாத சூட்சியதே
எங்களைப்பூ லோகமதில் எங்கள் வழிக்குலத்தில்
மங்களமாய்ப் பிறவி வகுப்போ மெனவுரைத்தீர்
பிறவிய துநாங்கள் பெண்மனுப் போல்பிறந்தால்
இறவி யாகாமல் இருக்க அருள்வீரோ
அல்லாமல் பின்னும் அடியார் மிகப்பிறந்தால்
வல்லாத நாயகமே வந்துநீ ரேற்குமட்டும்
மாதவிடை மாமணங்கள் மலர்ந்துறக்க மில்லாமல்
சீதமாய் மனுவோடு உறவாடிச் சேராமல்
மூடாம லாடை முகமினுக்கிச் சேராமல்
பாடாம லந்திசந்தி படுத்துத் துயிலாமல்
நன்மை யறியாமல் நளிப்பேச்சுக் கேளாமல்
தின்மை யறியாமல் தீன்ரசத்தைத் தேடாமல்
கொய்து புடவை குக்குளித்துச் சூடாமல்
மயிரு வளர்க்க மனதுவே றெண்ணாமல்
கொங்கை திரளாமல் கூறுடம்பு வீசாமல்
செங்கனிவாய்த் தேமல் தேகமதில் வீழாமல்
பக்குவ ஞாயப் பருவம்வந்து வாய்க்காமல்
மிக்குவ மான மிகுவாழ்வு சேராமல்
சுற்றுக் கிளைகள் தொடுத்தன்பு கொள்ளாமல்
ஒற்றுப் பிதற்றாமல் ஒருவர்முகம் பாராமல் 560
அல்லல்நோய் பிணிகள் அனுப்போலும் வாராமல்
தொல்லை வாராமல் சுகமுமிக வாராமல்
இந்த விதிப்படியே எங்களையும் நீர்படைத்துச்
சொந்தமுடன் வந்துநீர் தொட்டெடுத்து நன்மைதந்து
இரச்சிப்போ மென்று எமக்கு உறுதிபண்ணி
நிச்சித்துத் தர்மகுலம் நீர்பார்த்து தான்படையும்
என்றுகன்னி ஏழ்பேரும் இப்படியே சொல்லிடவே
அன்றுஆ திநாதன் அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதுதான் பெண்ணேநீர் நம்மோடே கேட்டபடி
வல்லவித மானாலும் மாறாதென வுரைத்தார்
வாக்குரைக்க கன்னியர்கள் மனமகிழ்ந்து கொண்டாடி
நாக்குரைப்பார் பின்னும் நாரா யணரோடு
நாங்கள்போய்ப் பிறந்தால் நம்முடைய நாயகமே
தாங்கள்வரு மென்றதற்குத் தருணமே தென்றுரைத்தார்
அப்பொழுது அய்யா நாராய ணருரைப்பார்
செப்புகிறார் கன்னியர்க்குச் சிறந்த தருணமது
ஆயிரத்தெட் டம்பலமும ஆன திருப்பதியில்
வாயிதமோ ரம்பலமும் வளர்பதியி லொன்றதுவும்
கெங்கையுட கண்ணும் கேள்விமன்னர் தஞ்சாவும்
சங்கை யழிந்து தலையழிந்த தவ்வாண்டு 580
வருவேன் தென்சுவர்க்க வடமேற்கு மூலையிலே
லிங்கமொன்றி லேமூன்று இணையாகத் தோன்றினவென்(று)
எங்கும் பிரகாசம் இட்டவ்வாண் டேவருவோம்
கண்டிடநீர் நான்வருகக் காரண மநேகமுண்டு
விண்டுரைக்கக் கூடாது மெல்லியரே யித்தருணம்
சொன்னத் தருணம் செவிகேட்டு நீங்களெல்லாம்
என்னை நினைந்து இருங்கோ வொருநினைவாய்
இத்தருணங் கேட்ட இப்பொழு தேமுதலாய்
வடமேற்கு மேற்கும் வடக்குங்கால் நீட்டாதுங்கோ
என்று தருணம் இதுவுரைத்தார் கன்னிகட்கு
அன்று மடவார் அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதுகா ணெங்களையும் நாயகமே நீர்படையும்
வல்லப் பொருளே மறைமுதலே யென்றுரைத்தார்
உடனையா நாதன் ஓவியத்தா ரேழ்வரையும்
திடமான பூமியிலே செய்தர்ம அவ்வழியில்
பிறவிசெய்தார் மூவர் பிறந்தார்கள் கன்னியர்கள்
திறவி யொளிமாதர் தேசம தில்பிறக்க
நாரா யணரும் நல்லசிவ னுமையும்
சீராரும் நல்ல தெய்வத் திருமாதும்
கயிலை தனிலேகிக் கட்டான மண்டபத்தில் 600
ஒயிலாகக் கூடி உவந்திருக்கு மப்போது
காளி சிறை
மாகாளி யென்ற வடபத்தி ரகாளி
ஓகாளி யென்ற உயர்ந்த பலக்காரி
சென்றாள் கயிலை சிவஅய்யா நாதனிடம்
நன்றான கன்னி நாரா யணரிடத்தில்
வந்து விழுந்து மண்ணி லவள்புரண்டு
சந்துபயில் மாயவரே தான்பிழைத்தேன் நானுமக்கு
உன்மக்கள் சான்றோர் உற்றமக்க ளேழதிலே
நன்மையற்ற சோழன் நாடும்பழி ரண்டேற்றான்
கண்டு அடியாள் கரிகாலச் சோழனுட
மன்னுதனில் பன்னிரண்டு ஆண்டுமழை பெய்யாமல்
சாபித்தேன் சோழனூர் தட்டழியப் பட்டுழற
பாவியவ னூரைப் பகலநரி ஓடவைத்தேன்
அல்லாமல் சோழனுட அக்கமறச் சாபமிட்டேன்
பொல்லாத சோழன்வழி பொடிப்படவே சாபமிட்டேன்
இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்துவிட்டுப்
புத்திரரின் செய்திசொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள்
அப்போத னாதி அய்யாநா ராயணரும்
செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார்
கேட்கலையோ யென்றன் கிருபைச் சிவனாரே 620
ஏற்கலையே யிந்த ஏந்திழையாள் சொன்னதுதான்
பிள்ளைக்கோர் தீங்கு பிழையாம லெப்போதும்
வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேனா னென்றுசொல்லி
மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும்
திருட்டுமொழி பேசும் செய்தியைநீர் கேட்டீரோ
நான்தனிமை யல்லவே நால்பேரு முண்டல்லவோ
தான்தனிமை யாகிடினும் தப்பிதமென் றேபுகல்வார்
வானவருந் தானவரும் மறையவரும் சாட்சியதாய்
நானவளோ டேவாக்கு நவின்றல்லோ தான்கொடுத்தேன்
மக்களுக்கோர் தீங்கு வந்ததே யுண்டானால்
மிக்கச் சிறையுனக்கு மேவு மெனவுரைத்து
ஈந்தோ மதலை இவள்கையில் ஈசுரரே
மாய்ந்தவுட னாகிடினும் வந்துரைத்தா ளோசிவனே
சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள்
புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென் றேகிவந்தாள்
தன்மதலை யென்றால் தலைவைத் திருப்பாளோ
என்மதலைக் கிவள்தான் இடறி விழுவாளோ
ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ
கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்குப்
பெற்றகும்பி யல்லோ பெருங்கனல்போல் மீறுவது 640
மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ
பாவியவன் கொன்று பன்னிரண் டாண்டுவரை
ஆவி யறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே
தாய்தகப்ப னில்லார்போல் தயங்கினது கண்டோமோ
சேய்பரனுக் கேராத செய்த பழவினையோ
என்றாதி நாதன் ஏந்திழையைத் தான்பார்த்துச்
சென்றாதி வேந்தர் செடத்தோ டுயிர்திரும்பி
எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறைதனிலே
குளிர்ந்த திருமேனி கூறினா ரந்தரிக்கு
கேட்டுமா காளி கிலேச மிகவடைந்து
தீட்டும்வட வாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில்
இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே
வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம்
நாச்சியார்க் கிச்சிறையால் நமக்கென்ன கேடோகாண்
கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம்
என்று சிலபேய்கள் எண்ணியெண்ணி யேதிரியும்
மூன்று முறுக்குள்ள மூளிப்பே யேதுசொல்லும்
கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால்
மெய்வாய்த்து தென்று விளியிட்டுக் கொண்டோடும்
இப்படியே பேய்கள் எண்ணஞ்சில திண்ணமுமாய் 660
அப்படியே காளி அவள்சிறையி லேயிருக்க
நல்லநா ராயணரும் நாடுஞ் சிவனாரை
வல்லப் பொருளே மறைகாணா தோவியமே
காளி சிறைதான் கவிழ்ந்திருக்கும் ஞாயம்வந்தால்
ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம்வாய்க்கும்
முதற்றான் கலியை முடிக்கப் பரகாளி
விதத்தமுள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்கப்
பார்த்துநா மிங்கிருக்கப் படுமோகா ணீசுரரே
சாற்றும்நீ ரின்னதென்று சத்திகொண்ட ஈசுரரே
உடனேதான் ஈசர் உரைக்கிறா ரன்போரே
கடனோகா ணென்னோடு கலங்குமொழி பேசுவது
நானோ தடுத்தேன் நாட்டுக்கலி தீட்டறுக்க
ஏனோகாண் மைத்துனரே என்னோடு பேசுவது
எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு
எப்போ தருவீரென்று எண்ணிமிக வாடுறோமே
தீட்டை மிகக்கழித்துச் சிவஞான முத்திதந்து
வீட்டையெப்போ கயிலை விளக்குவீ ரென்றுமிக
தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும்
குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ
என்றே காபரமும் எடுத்துரைக்க எம்பெருமாள் 680
நன்றென்றா கட்டெனவே நாரணருங் கொண்டாடி
மகாலெட்சுமி மகரமாதல்
லட்சுமியைத் தானழைத்து ஏதுரைப்பா ராதிமுதல்
சச்சுடராய் நின்ற தருணத் திரவியமே
இதுமுன் பிறப்பு இருந்தா யுருப்பிணியாய்
மதுவினியப் பெண்ணே மாயக் கலியறுக்க
நான்நிச்சித் திருப்பதினால் நாயகியே நீயுமொரு
பூனிரைச்சப் பொன்மகரப் பெண்மயில்போல் நீவளர
அலையி லறுமுகவன் அவன்பதியி னாழிதனில்
நிலையிலே நின்று நீவளரு கண்மணியே
நீவளரச் சூழ நிறைந்ததங்க மாமணியால்
பவளக்கால் மண்டபமும் பவளமணி மேடைகளும்
தேனினிய மண்டபமும் தேரும்பூங் காவனமும்
சூழ அரங்குவைத்துத் தெய்வரம்பை சூழவைத்து
காளமொடு பேரிகையுங் கண்ணாளர் சூழ்ந்துநிற்க
அகரத் தெருவும் அரம்பையர்கள் தந்தெருவும்
சிகரத் தெருவும் சேர்த்துவைப்பே னுன்சூழ
நித்தம் வலம்புரிகள் நின்றுவுனைச் சூழ்ந்து
தித்தியென வேமுழங்கி சேவிக்க வைத்திடுவேன்
கோட்டைகள் சூழக் கோடிமண்டப முகித்து
வீட்டலங் காரம்போல் வேலையிலுந் தருவேன்
உந்தனுட மேனி உரைக்கெளிதாத் தங்கமெனச் 700
செந்தழல்போல் மகரச் சிலைபோல் வளர்ந்திருநீ
கலியுகத்தை முடிக்கக் கண்ணான ஒருயிரை
வலியுடனே யுன்னுடைய வயிற்றில் பிறவிசெய்து
நாட்டு நருளின் நகர்சோ தனைபார்த்துத்
தீட்டுக் கலியறுத்துச் செவ்வுமனு தானெடுத்துத்
நாடுன் மகன்றனக்கு நல்லமுடியுங் கொடுத்துத்
தேடுந் தர்மச்சீமை செலுத்தசெங் கோல்கொடுத்து
அரசாள வைக்கவொரு ஆண்பிள்ளை நீபெறவே
துரைசானி போவெனவே சொன்னார்கா ணம்மையுடன்
கேட்டுமிக லட்சுமியும் கிளிமொழிவாய் தான்திறந்து
நாட்டுக் குடையவரே நாரா யணப்பொருளே
மகரச் சிலையாய் வாரிதனில் நான்வளர்ந்தால்
சிகரநற் கோபுரமே திருவுளமே நீர்தானும்
வருகுவ தென்னவித மாக வுருவெடுத்து
அருகில் நீர்வருக அடையாள மென்னவென்றாள்
அப்போது அய்யா ஆனந்த மேபெருகி
செப்புகிறோ மென்று திருவோ டிதுவு ரைக்க
மூன்று சடையில் முறுக்குச்சடை யொன்றெனவும்
பண்டுள்ள சூரியர்கள் பதிந்திருக்கு மென்விழியில்
நெற்றி தனில்பிறையும் நெடியவட அக்கினியும் 720
சுற்றிக் கனல்மேனி துய்யமாற்றெண் ணாயிரமாம்
பளிரெனவே லோகம் பதினாலுக் கோருருவாய்த்
துளிரெனவே வாரிச் சூழல வெகுகனலாய்க்
காதம் பன்னிரண்டில் கண்டகலி யன்றெரிய
தீதக் கனலாய்ச் செயகுண்டமும் பதித்துக்
காலில் தர்மமணியைக் கலிரெனவே தண்டையிட்டு
மேலில்பல வேதமதை மின்னுடம்பாக விரித்துப்
பெண்ணரசே நான்வருகும் பெருமைக் கடையாளம்
கண்ணரசே நீயுமென்மேல் கருத்திருந்தால் பிழைப்பாய்
அப்படித்தா னென்பிறவி அருகே வருகையிலே
இப்படியே வந்து இருபேரு மோர்பிள்ளைபெற்று
நாட்டுச் சோதனைக்கு நாமனுப்பித் தாம்பார்த்துக்
கோட்டிசெய்த பாவி குறுங்கலியைத் தானெரித்து
அதின்மே லுனக்கும் எனக்குமிகு ஆனந்தம்
மதுவாக ஈன்ற மதலைநா டாளுமடி
என்று பிறவிக்கு ஏற்றஅடையா ளமுரைத்து
நன்றினிய மாதே நடப்பதற்குச் சங்கடமேன்
உடனேதான் லட்சுமியும் உரைக்கிறா ளாதியுடன்
திடமான கோவே செய்ய மணிவிளக்கே
என்னை மகரச் சிலைபோல் பிறவிசெய்ய 740
என்ன விதமாய் இசைவீர்கா ணென்கோவே
என்றுரைக்க அம்மை ஏதுரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று பெண்ணே நமக்குத்தொழி லோகடிது
அலையி லுனையும் ஆமதியப் பொன்மகரச்
சிலைபோல் வளருவெனச் சிந்தித்தா ரெம்பெருமாள்
வடகயிலை வாசலிலே வந்தலைந்த வாரிதிரை
மடமடென வந்து வாரியெடுத் தாயிழையைச்
செந்தூ ரலைவாரி திரைமே லெடுத்திருத்தி
அந்தூரு வாரி அம்மை தனையெடுத்துச்
சந்தன வாரி சமுத்திரத்தி னுள்ளிருத்திப்
பந்தியாய் வைத்த பரமமணிக் கோட்டையதுள்
தெய்வரம்பை சூழத் தேவரெல்லா மோலமிட
மெய்பரமக் கன்னியர்கள் மிகுவாய்க் குரவையிட
இடம்மான மெக்காளம் டகுடகா வென்றிடவே
மடம்மான வாத்தியங்கள் மடமடென வேயதிர
வலம்புரிக ளெல்லாம் மாதுவந்தா ளென்றூத
சிலம்புனைந்த ரத்தினங்கள் சில்விளக் கேந்திநிற்க
முத்துகள் சிப்பி முன்வந் தொளிவீச
கொத்துக் கொத்தாகக் கோமேதகஞ் சூழ
கன்னிமா ரெல்லாம் கால்கவரி வீசிநிற்க 760
தன்னிகரில் லாமறையோர் சாஸ்திரங்க ளோதிநிற்க
மகரச் சிலையாள் மாதுதிரு லட்சுமியாள்
சிகரகோ புரத்தாள் திருவுருவந் தான்வளர்ந்தாள்
பார்பதி மாதுமையும் பரமேஸ்வரித் தாயும்
சீர்பதியு மங்கே தினமூன்று நேரம்வர
ஈஸ்வரனும் வேதா இவர்கள் தினம்வரவே
வாசவனும் வானவரும் வந்துநிதம் போற்றிசெய்ய
செய்ய அமரரெல்லாம் சிவசிவா வென்றுநிற்க
வெய்யவனுஞ் சந்திரனும் மெல்லிபதம் போற்றிநிற்க
புஷ்ப மலர்தூவிப் பொன்னுலகத் தோர்சூழ
செப்பமுள்ள மகரச் சிலைபோல் திருவளர்ந்தாள் 771
மாதுதிரு லட்சுமியாள் மகரச் சிலைபோலே
ஒது மணியலைக்குள் ஒவியம்போ லேவளர
மாதை மகரச் சிலையாய் வளரவிட்டுத்
தாதணியும் நாதன் சங்கரரோ டேதுரைப்பார்
கூட்டுக்கிளி போலிருந்த கொடியிடையைப் போகவிட்டு
நாட்டி லிருப்பேனோ நம்முடைய மைத்துனரே
சீதை மகரச் சிலைபோ லங்கேவளரப்
பாதையது தேடாமல் பதிந்திருக்க ஞாயமுண்டோ
அப்போ துசிவனார் அவரேது சொல்லலுற்றார்
செப்போடு வொத்த திருமாலே நீர்கேளும்
நடத்தும்படி யுள்ள ஞாயமெல்லா மிப்போது
சடைத்து இருக்காமல் தானடத்து மென்றுரைத்தார்
சம்பூர்ணத் தேவன் பரதேவதை மனுப்பிறப்பு
அந்தப் பொழுதில் ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு
நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில்
வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில்
பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய்
மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க
உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே
ஆனதா லவரை அவனிதனி லேபிறவி
ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால் 20
நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ
என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே
அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும்
இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே
தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும்
மூவர் நடுவன் முத்தனரி நாரணரின்
சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால்
எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச்
சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று
நாடி யகமகிழ்ந்து நாரா யணருடனே
சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே
கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்
மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில்
இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப்
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள் 40
வல்லான நீத வையகத்தை யாண்டிருந்தால்
எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன்
வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ
என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும்
நன்றுநீர் சொன்னமொழி நல்லா யிருக்குதுகாண்
அப்படித்தா னம்மை ஆதிசிவன் படைத்தால்
இப்படியும் படைத்தோர் இறவா திருப்பாரோ
என்றுபெண் ணாளுரைக்க ஏற்றசம் பூரணனும்
அன்று பெருமூச்சு அலைபோ லெறியலுற்றான்
அந்தப் பொழுதில் ஆதி சிவமுதலும்
வந்தங்கு நின்றார் மாகிருஷ்ண மாலவரும்
கண்டந்தத் தேவன் கைமறந்த நிஷ்டையோடு
தண்டமிழ்சேர் பதத்தைத் தையலும்வந் தேவணங்கி
இத்தனைநாள் யாங்கள் நின்றதவம் கண்டிரங்கிச்
சித்த மிரங்கிச் சிவனேநீர் வந்தீரோ
எந்தன் பெருமானே இறையவரே வந்தீரோ
நந்தகோ பால நாரணரே வந்தீரோ
குருவே அரிநாதா கோபாலா வந்தீரோ
முருகக் குருபரனே முத்தாநீர் வந்தீரோ
செல்வக் கடலே சீமானே வந்தீரோ 60
கல்விக் கடலான கறைக்கண்டா வந்தீரோ
அரவணிந் தத்திவுரித்(து) அணிந்தோரே வந்தீரோ
பரமசிவ மான பச்சைமால் வந்தீரோ
இப்படியே மானாளும் ஏற்றசம் பூரணனும்
அப்படியே வந்தோர் அடிபணிந்து போற்றிடவே
மாய பரனும் மனமகிழ்ந்து கொண்டாடி
ஆயனைப் பார்த்து அருளுவா ராதியுமே
மாயவரே கேட்டீரோ வாய்த்தஇத் தேவனுந்தான்
தூயவரே நின்றதவம் துலைத்தறுத்தா னில்லையிவன்
முற்றுந் தவமும் முழுதும்நிறை வேறுகையில்
சிற்றின்ப மாகித் திருமுடிமே லிச்சைகொண்டு
வாடி யயர்ந்தான் மங்கையருந் தேவனுமே
நாடி யிவன்தனக்கு நல்வளமை யேதுசொல்வீர்
அப்போது நாரணரும் அகமகிழ்ந்து கொண்டாடிச்
செப்புகிறா ரந்தச் சிவனோடு எம்பெருமாள்
ஏது விதமாய் இருந்ததவ மேகுறைய
தீதுவந்த ஞாயம் செப்பிடீ ரென்றுரைத்தார்
அப்போ சிவனார் அகமகிழ்ந்து தேவனோடு
இப்போ துன்சிந்தை எண்ணமெல்லாஞ் சொல்லுவென்றார்
தேவ னதைக்கேட்டுச் சிந்தை மிகக்கலங்கி 80
ஆவி மறுகி அவனேது சொல்லலுற்றான்
காரணரே நாங்கள் கருத்தில் நினைத்ததெல்லாம்
பூரணமா யங்கே புகுந்துதோ யென்சிவனே
ஐயோநான் சொன்னேனென் ஆயிழையோ டல்லாது
கையோ கண்ணாலே காணேனே மற்றொருவர்
ஊமை மொழிபோல் ஒதுக்கி லுரைத்தாற்போல்
நாமறியப் பெண்ணறிவாள் நாடறியா தென்றிருந்தோம்
இவர்க ளறிவதற்கு யார்சொல்லிப் போட்டாரோ
எவர்களும் நாம்பேசுகையில் இங்குவரக் காணோமே
ஆர்சொல்லிப் போட்டாரோ அறியோமே யென்சிவனே
தார்சிறந்த என்சிவனே சர்வ தயாபரனே
பூரணனே வாசவனே பொறுத்தினிக் கொள்ளுமையா
நாரணரே என்சிவனே நாடிப் பொறுவுமையா
என்றுசொல்லித் தேவன் ஏற்ற விருத்தமதாய்
நன்றினிய முப்பொருள்மேல் நற்போற்ற லேபடிக்கப்
பரதே வதையான பைங்கிளியு மப்போது
திரமான தாயார் சிவசக்தி பேரதிலும்
சிவநாமப் பேரதிலும் ஸ்ரீகிருஷ்ணர் பேரதிலும்
விவமான ஆசிரிய விருத்தம்போல் போற்றலுற்றாள் 100
காரணா அரிநாரணா கவிபூரணா
வெகுதோரணா கவிஞோர் தொழும் வாரணா
கருணகரத் தருணாவெகு தருணா
கவிவருணா கவிமால் சிவாபோற்றி
காயாம்பூவின் மேனிநிறமாயா சிவசிவாயா
கருவா யுருவுருவா யுனைத்
தினமே யருள் நியாயா
குறிமத்தகா கருணாகரா போற்றி
குணசீரா வெகுதீரா நலிவீரா
புவிநாதா திருவோடுறு மார்பா
சிறியார்மிக அறியாச்செய்த வெறியானதைச்
சிறிதாக்கியே சேர்ப்பாய் முகம்பார்ப்பாய்
முடிவானதை யறியாமலே மோகமாய்
வெகுதாகமாய் உளறித் தவங்குளறியே
உன்சொற்பதம் அஞ்சல்லென ஒஞ்சிப்பத
மஞ்சினோம் உன் செயல்தந் தருள்வாயே
இப்படியே கன்னி ஏற்றபர தேவதையும்
அப்படியே ஆசிரிய விருத்தமொன்று பாடிடவே
கேட்டு அரிநாரணரும் கிளிமொழியைத் தான்பார்த்து
மெட்டுக் கொடியிடையே மின்னிடையே நீகேளு
உன்புருஷ னங்கே உற்றஎம லோகமதில்
இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால்
அவனைநீ மறந்து ஆனதெய்வப் பூரணனை
இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும்
நிறைவேற மாட்டாமல் நினைத்தகே டித்தனையால்
பிறபோநீ பூமிதனில் பெரியசான் றோர்வழியில்
எமவழியி லோர்பிறவி என்மகவா யங்கிருக்க
அமைப்பா னதற்கு அவ்வழிதா னாயிழையே 120
இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து
முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங் கழித்து
அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து
குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ் சரசமற்று
எந்நேர முன்றனக்கு ஏக்கமுட னழுந்தி
மின்னேகே ளிந்த மிகத்தேவ னுன்வழியில்
கொண்டபச்சத் தாலே கோதைய ரேயுனையும்
கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால்
கருவா லுருவைக் கைக்குள் வசமாக்கிப்
பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு
இருவ ரொருவரென இச்சைமிகக் கூர்ந்து
குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து
தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து
வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து
சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து
சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று
முற்புரு ஷன்தனக்கு மூலக்கருக் கேடணைத்து
இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறியக்
கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக்
கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து 140
மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும்
கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து
உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த்
தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால்
வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய்
நாட்டை யரசாண்டு நாச்சியார் போலிருப்பாய்
என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து
அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார்
அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க
எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம்
மாது புவியில் வளரப் பிறந்தபின்பு
தாது கரமணிந்த சங்கு சரத்தாமன்
தேவன் தனைப்பார்த்துச் செப்புவா ரெம்பெருமாள்
பூவுலகி லுன்றனுட பெண்பிறக்கப் போனதல்லோ
ஏதுநீ தேவா இனியுனது செய்தியென்ன
சீரொத்தத் தேவன் திருப்பாட்டு ஓதலுற்றான்
ஆறுசெஞ்சடை சூடிய ஐயனே
அலையிலேதுயி லாதி வராகவா
நீறுமேனி நிரந்தரம் பூசிவா
நீசிவாசிவ மைத்துன ராகவா
வீறுசத்தி மணவாள ரானவா
வீரலட்சுமி மன்னரரி ராகவா
ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா
எமையாட்கொள் ளும்நாரணா போற்றியே 160
சீதமாங்குணச் செல்வனே போற்றி
சிவசிவா சிவனே போற்றி
நீதவா நட்பெய்துவா போற்றி
நீசிவா சிவராகவா போற்றி
மாதவா அரிகேசவா போற்றி
வல்லனே அரிசெல்லனே போற்றி
ஆதவா அரிநாரணா போற்றி
அனாதியேயுன் றன்போற்றிப் போற்றியே
அய்யனேதவம் யானிற்கும் போதிலே
அந்திராணி மன்னனிந்திர னானவன்
பொய்யின் மாய்கைநினை வதினாலவன்
பொற்பக்கிரீடமீ துற்பனத் தாசையால்
மெய்யின்ஞா னத்தவம் விட்டுவாடினேன்
வித்தகாவுன் சித்த மிரங்கியே
செய்யும் பாவவினை தவிர்த்தாண்டருள்
சிவசிவா சிவசிவா சிவாபோற்றியே
போற்றியென் றேத்தித் தேவன் பொற்பதம் வணங்கி நிற்க
ஆத்தியே சூடும் வேதன் ஆகமே மகிழ்ச்சை கூர்ந்து
தீத்திய ஆய னோடு செய்தியே தெனவே கேட்க
நாற்றிசை புகழுந் தெய்வ நாரண ருரைக்கின் றாரே
தேவன் வணங்கித் திருப்பாதம் போற்றிடவே
ஆயனோ டந்த ஆதிசிவ மேதுரைக்கும்
அச்சுதரே தேவனுக்கு ஆன வளமையது
நிச்சயமாய்ச் சொல்லி நீரனுப்பு மென்றுரைத்தார்
அப்போது நாரா யணரு மகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று தேவனுக்கங் கேதுரைப்பார்
கேளாய்நீ தேவா கீழான மங்கையரைத்
தாழாத மேல்வகையில் சரியாக்க வேணுமென்று 180
நின்றாய் தவத்தில் நினைவொன்றைத் தானாட்டி
சண்டாளா நீநினைத்த நினைவுதவத் தொத்திடுமோ
சூழ வினையறுத்துச் சுருதிநே ருள்ளாக்கி
நீளநூ லிட்டு நீதவசு நிற்கையிலே
ஆசை நினைவாமோ அறிவுகெட்ட மாதேவா
பாச மறுத்தல்லவோ பரகெதியைக் காணுவது
ஏதுகா ணுன்றனக்கு இந்நினைவு வந்ததினால்
மாது பிறந்ததுபோல் வையகத்தில் நீபிறந்து
இந்த நினைவதற்கு இனிப்பிறந்து நீசிலநாள்
தொந்துயர மெல்லாம் தொல்புவியி லேதொலைத்துக்
கண்டந்த மங்கையரைக் கருவால் வசமாக்கிக்
கொண்டு திரிந்து கோதையரின் தன்னாலே
நஞ்சுதின் றானாலும் நாண்டுகொண் டானாலும்
உன்சீவன் மாய்க்க உனக்கு மனதாகிப்
பின்னுஞ்சில நாள்கழித்துப் பெண்ணோ டுறவாடித்
தன்னோவியம் போல் தானிருக்கும் நாளையிலே
உன்துயரந் தீர்த்து உன்னையெடுத் தென்மகவாய்
என்துயர மெல்லாம் யானேநீ மாற்றல்செய்து
என்வரிசை தானம் எல்லாமுனக் களித்துப்
பொன்னரசு தந்து புவியாள வைத்திடுவேன் 200
என்றுமா கிருஷ்ணர் இப்படியே சொல்லிடவே
அன்றந்தத் தேவன் அவரடியைத் தான்போற்றி
அய்யாவே பூமிதனில் அவதரிபோ என்றீரே
பொய்யா னகலியன் பூமிதனி லேபிறந்தால்
பிறந்த வழியும் பிதிருமந் தக்குலமும்
அறந்தழைக்கு மாலே அதுவுமென் னாற்கெதிதான்
பெற்றுக்கொள் ளும்படியாய்ப் புத்தி கொடுத்தருளிப்
பற்றுத லாகப் பலன்கொடுப்போ மென்றுசொல்லும்
அல்லாம லென்னைவந்து ஆட்கொள்ளும் நாளதுதான்
எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமையா
அப்பொழு தந்த ஆதிநா ராயணரும்
செப்புகிறா ரந்தத் தேவன் தனக்குத்திடம்
தெச்சணா பூமிதனில் தேசபர சோதனைக்கு
நிச்சயமாய் நான்வருகும் நிசத்துக் கடையாளம்
பூமியி லோர்திக்குப் பொருந்தி மிகவாழும்
சாமிவே தமறந்து சுழல்வேத முண்டாகும்
சாதி வரம்பு தப்பி நிலைமாறும்
பாரிகட்கு மூப்புப் பார்மீதி லுண்டாகும்
நீசக் குலங்கள் நெளுநெளெனப் பூமிதனில்
தூசியிடத் தெண்டம் தொடர்ந்து பிடிப்பார்கள் 220
வானத் திடிகள் வருடவரு டந்தோறும்
நீணிலத்தில் வீழும் நின்று மலைமுழங்கும்
சீமை தென்சோழன் சீர்பயிரு மேவிவரும்
இலைகள் கருகும் இருவேதம் பொய்யாகும்
தலைக்கண் படலம் தட்டழிய ஓடிநிற்கும்
நச்சேத் திரமுதிரும் நடக்கும் வழிகுறுகும்
பொய்ச்சேத் திரக்குருக்கள் பூமிதனில் மேவிவரும்
நவ்வா துலுக்கு நாட்டில் கலசல்வரும்
சிவ்வா லயங்கள் தேய்ந்து சுவரிடியும்
கிணறு பாழாகும் கீழூற்றுப் பொய்யாகும்
இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள்
மனுக்கள் தங்களுக்கு மாகலச லுண்டாகும்
மாமோக ஆசையினால் மாசண்டை யாகிவரும்
காமோக வெறியால் கனபழிக ளுண்டாகும்
மாதாவைப் பிள்ளை வைப்பு நினைத்துநிற்கும்
தாதாவை வேலை சந்ததிகள் கொண்டிடுவார்
மாடாடு தன்வயிற்றில் மனிதர்போல் தான்பிறக்கும்
கோடா னதுபெருத்துக் கொல்வார் சிலபேரை
காணிக்கை வேண்டல் கைக்கூலி தான்மீறும் 240
மாணிக்கத் தங்கம் வையிர மிகமறையும்
நீணிலத்தில் பேய்கள் நிரந்துமிகக் கோட்டிசெய்யும்
மாநிலத்தில் வேளாண்மை மழையில் மிகக்கேடுவரும்
பேதையர்கள் பிள்ளை பிறக்கு மதிசயம்போல்
கோதையர்கள் கொங்கை கூடாம லேவாழ்வார்
கூடப் பிறப்பைக் கொடும்பகைபோ லெண்ணிடுவார்
வான முறுமும் மழைகீழ்ச் சொரியாது
தான மழியும் சாஸ்திரங்கள் பொய்யாகும்
ஈனருக்குக் காலம் ரெம்பரெம்ப வுண்டாகும்
வீணர் பெருப்பார் வீடதனைக் கெடுப்பார்
தாணருட வேதம் தலையழிய விட்டிடுவார்
பொய்வேதம் பூமிதனில் பெருத்துமிக வுண்டாகும்
மெய்வேதந் தன்னை விரும்பா திகழ்ச்சிசெய்வார்
கள்ளர் பெருப்பார் கறியுப்பு மேமலியும்
கொள்ளையாய்ச் சம்பை கோடாமுக் கோடியுமாய்
நாணி யிறப்பார் நஞ்சித்தின் றேயிறப்பார்
கேணிக்குள் ளேயிறப்பார் கீறிக்கொண் டேசாவார்
வயிர முழுங்கி மாள்வார் சிலபேர்கள்
துயரம் பொறுக்காமல் தோயமதி லேவிழுவார்
ஈக்கள் பெருகும் எறும்பு மிகப்பெருகும் 260
காய்கள் பெருகும் கஞ்சா அபின்பெருகும்
சன்னாசி நிஷ்டை தவறி யலைவார்கள்
ஒன்னாமது சாதி உலைமெழுகு போலலைவார்
கட்டழிந்து பெண்கள் கற்பு மிகத்தவறும்
சட்ட மழியும் சந்தியம்பல மிடியும்
கூட்டங் குலையும் குடும்பம் பகையாகும்
நாட்டை யரசாங்கம் நாலுரண்டு மூன்றாகும்
கோட்டை யழியும் குச்சிக்கட் டைமதிலாம்
சீவசெந் தெல்லாம் தீனில்லாத் தட்டழியும்
சூவை பெருக்கும் சூறா வளிமீறும்
அக்கினியால் தண்ணீரால் அநேக சீமையழியும்
முக்கியமாய் லோகமதில் வாந்தி மிகமீறும்
இப்படித்தா னல்லாமல் இன்னு மநேகவளம்
செப்பத் தொலையாது செப்புவேன் பின்னுனக்கு
நீகேட் டதற்கு நிலையாக இத்தனையும்
நான்தேட் டமாக நாடியுன் னோடுரைத்தேன்
உன்பேரால் நானும் உள்ளாசை கொண்டிருந்துன்
தன்பேரா லென்றனக்குத் தலைச்சிறைதான் மாறுமென்று
சொன்னே னுனக்குச் சொல்லுவே னின்னமுமே
என்ன இனிப்பிறக்க ஏதுனக்குச் சங்கடங்கள் 280
என்றுரைக்க நாதன் இசைந்ததே வனுரைப்பான்
அய்யாவே யென்னுடைய ஆதித் திருவுளமே
பொய்யா னகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே
சாதி பதினெண்ணாய்த் தான்பிரித்தா னேநீசன்
ஆதித்தா திதனிலே அமையுமையா என்கோவே
அல்லாம லுன்றனக்கு ஆதிவரை யெந்நாளும்
நல்லாகத் தொண்டுபண்ணி நவ்வியிருக்கு மனுவில்
படையுமையா யென்றன் பிதாவே யெனப்பணிந்தான்
குடையொன் றாற்பெரிய குருவு மகிழ்ந்துரைப்பார்
நல்லதுகாண் தேவாநீ நம்மக்கள் ஏழ்பேரில்
வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகவித்தாய்
அவ்வழியி லம்மனுவில் ஆனசான் றோர்குலத்தில்
மெய்வழியி லங்கே மிகப்பிறக்கப் போநீயென்றார்
நல்லதுதா னென்று நவிலுவான் தேவனுமே
வல்லவரே மூவருக்கும் மைத்துனராய் நிற்போரே
என்னைப் பிறவி இப்போது செய்யுமென்று
வன்னத் தேவாதி வணங்கிநின்றான் மாயவரை
ஆத்ம ஜெயம்
அப்பொழுது அய்யா நாராயணர் மகிழ்ந்து
முப்பொழுது வுள்ள முறைமையது கூறலுற்றார்
ஆறுதரம் நம்மை அகம்வைத்துக் கொண்டசடம் 300
பேதுபெற்ற தில்லையே பேறுநா மீந்திலையே
அச்சடல மம்மலையில் அருந்தவசு பண்ணினதே
இச்சடல மீடேற இந்தநாள் வந்துதென்று
தேவன் சடலமதைத் திக்கென் றழித்துவிட்டு
மூவர் நடுவருட முச்சடலக் கூடதையும்
வரவழைத்து வாருமென்று மறையோரைத் தானேவி
விரைவாக வாருமென்று விடைகொடுத்தா ரெல்லோரும்
நடந்து மறையோர் நல்ல மலைபார்த்துச்
சடம் வீற்றிருந்த தங்கமலை மீதில்வந்தார்
மலைமீதில் வந்து மலைப்புதுமை தான் பார்த்து
அலைமீதில் வாழ்துவரா ஆனபதி தன்னுடைய
வடவாசல் நேரே வாழு மலையிதுதான்
தடவரை யிம்மலையில் தானிருக்கும் நதிகள்
தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக் கிணறுடனே
சங்கமகி ழிம்மலையின் தடாகமிது நன்றெனவே
கரைகாணாத் தேவர் காட்சியிடு மிம்மலைதான்
விரைவான மாமுனிவர் வீற்றிருக்கு மிம்மலைதான்
மரித்தோரைத் தானெழுப்பும் வாய்த்தசஞ்சீ விவளரும்
பதித்தான மிம்மலையின் பகுத்துரைக்கக் கூடாது
என்றுசொல்லித் தேவர் ஏற்றமலைக் குள்ளேகி 320
நன்றுநன் றென்று நாடியவர் பார்க்குகையில்
கண்டாரே காயாம்பூ கண்ணர்முக் கூடதையும்
கொண்டாடிக் கூடதையும் குளிர்ந்தரத மீதேற்றி
நடந்தார் கயிலை நாதர்திருக் கூட்டமதில்
வடந்தார மார்பன் வாய்த்த அரிநாரணரும்
பார்த்துச் சடலமதைப் பதிந்தமுகத் தோடணைத்துத்
தேற்றி உயிர்க்கொடுத்துச் செப்புவார் கூடுடனே
எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச் சுமந்து
அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகிப்
பூமி கடலும் பொருப்புப்பூ லோகமெல்லாம்
நேமித் தெனைச்சுமந்து நேட்டமுடன் திரிந்தாய்
நீசெய்த நன்றி நினக்குரைக்கக் கூடாது
நானுனக்குச் செய்யும் நன்றி மிகக்கேளு
இத்தனை நாளும் எனைச்சுமந்து பாடுபட்டாய்
புத்திரனாய் நீயெனக்குப் பெரியதெய்வ உயிரில்
பிறந்து புவிமீதில் பின்னுஞ்சில நாட்கழித்துச்
சிறந்த முகூர்த்தமதில் சேர்த்தே உனையெடுத்து
உன்றனக்குப் புத்தி உபதேசங் களுரைத்து
என்றன் துயரமாற்ற யுகசோதனைக் கனுப்பி
உன்றன்துயர மாற்றி உகத்துயர மும்மாற்றி 340
என்றன்துயர மாற்றி ஈசர்துயரம் மாற்றி
கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச்
சலிவில்லாத் தர்ம தங்கநவ ரத்னபதி
முத்துநவ ரத்தின முடியுனக்கு நானருளி
எத்திசையு மெய்க்க ஏற்றமனு அன்போர்கள்
கட்டியங் கூறிக் காட்சியிட்டு வுன்றனக்கு
எட்டுத்திக்கும் நின்றேத்த ஏற்றகுடை யொன்றுதந்து
அரசாண்டு நீயும் அழியாத் திருவுளம்போல்
வீரசான்றோர் சூழ வீரக் கொடிநிறுத்திச்
செங்கோற்கு தர்ம சிவசெங்கோ லுமருளி
எங்கோ லரசு என்நாமச் சக்கரத்தால்
சீமையைம்பத் தாறுமுன் சொல்லொன்றுக் குள்ளாக்கிப்
பூமுகச்சிங் காசனமும் பொன்முகச்சிங் காசனமும்
கோமுகச்சிங் காசனமும் குணமுகச்சிங் காசனமும்
மாமுகச்சிங் காசனமும் மயில்முகச்சிங் காசனமும்
அன்னமுகச் சிங்கா சனமீதோ டாகவேதான்
பொன்னம் பலம்போல் பெரியசிங் காசனந்தான்
முப்பத்தி ரண்டும் முழுது முனக்கருளி
செப்பொத்த மாணாக்கர் சேவிக்க வுன்றனக்குத்
தருவேனா னுன்னுடைய தாயார்பே ராணையதாய் 360
என்றையா நாதன் எடுத்தவர்க் கேவுரைக்க
நன்றெனவே வானோர் நற்பூரணனைக் கொண்டாடிப்
பேறுபெற்ற சென்மம் பிராணனிது நன்றெனவே
பூருவத்தி லுள்ள பூசாந்திர மிவ்வளமை
என்னதவஞ் செய்தாரோ இத்தேவன் தாய்தகப்பன்
பொன்னப்ப நாரணர்க்கு பிள்ளையென வந்துதிக்க
நாரண ரைப்பெறவே நல்ல தசரதரும்
பூரணமாய் நின்றதவம் புகன்றிடவே கூடாது
பன்னீரா யிரம்வருசம் பாரத் தவசுபண்ணி
முன்னூறு வாரமதாய் உலகளந்தோர் ராமருரு
கண்ணாளர் தந்தமக்கு கற்பகம்போ லித்தேவன்
மதலையாகப் பிளந்து வையகத்தை ஆள்வானென்று
கதலிவாய் நாதன் கற்பித்தா ரிப்படியே
ஆருபெற்ற பேறும் அல்லப்பே றிப்பலன்தான்
பேறுபெற்ற வரிவர்தான் பிறந்த இனமதிலே
நாம்பிறந்தா லும்பெரிய நலங்கிட்டு மென்றுசொல்லித்
தாம் பிறப்போமென்று சான்றோராய்த் தான்பிறந்தார்
அவர்கள் பிறக்க ஆனதெய்வப் பூரணனை
திவசமது பார்த்துச் செய்தார் பிறவியது 380
செய்யச் சிவமும் சிவவேதனும் மகிழ்ந்து
வைய மளந்த மாலும்பிறவி செய்தார்
கர்மக்கடன் கழிக்க கலியுகத்திலே பிறக்கத்
தர்மச்சம் பூரணனைத் தரணிப் பிறவிசெய்தார்
செய்த சடமதையும் சுமக்கச் சடம்பார்த்து
மெய்யிசையும் நாதன் மேதினியில் செய்தனராம்
சடம்பிறக்க லோகம் தட்டுமிக மாறி
உடன்பிறக்கச் செய்தார் உலகளந்தோர் கற்பினையால்
அன்று பிறவிசெய்தார் அவனிசோ தனைக்கெனவே
எண்ணமில்லை யென்று ஈசுரரு மாயவரும்
கொண்டாடி ஈசுரரைக் கூறுவா ரச்சுதரும்
கெண்டையக்கண் ணீசுரரே கேட்டீரோ யென்றனெண்ணம்
திருமால் கலைமுனிக்கு அருளல்
பஞ்சவர்க்கு அஞ்சல்செய்து பார்மீதில் நானிருக்க
வஞ்சகநீ சக்கலியன் வந்ததுகண் டேபதறி
நடுநடுங்கி நானோட நல்லகலைக் கோட்டுமுனி
பொடுபொடென வந்தான் போற வழிதனிலே
ஏன்காணும் மாயவரே எய்த்திளைத் தோடுவதேன்
கண்காணாப் போறேனென கலைக்கோட்டு டனுரைத்தேன்
என்ன விதத்தாலே என்றே யவனிசைய
சொன்னதுறு கலியன் சூட்சியினா லென்றவுடன் 400
அப்போ முனியும் அவனேது சொல்லலுற்றான்
இப்போநீ ரோடுகிறீர் இவனை யழிப்பதற்கு
எப்போ வருவீர் இசையுமென்றான் மாமுனிவன்
அப்போ முனியோடு அருளினது நீர்கேளும்
மாமுனியே நீகேளு வஞ்சகநீ சக்கலியை
நாமுன்னின்று கொல்ல ஞாயமில்லை கேட்டிடுநீ
கலியனுட கண்ணு கண்டால் பவஞ்சூடும்
திலிய அவனுயிரைச் செயிக்கயெவ ரால்முடியும்
முன்னின்று கொல்ல மூவரா லுமரிது
பின்னின் றவனவனால் பேசாதே மாழவைப்பேன்
வல்லமையுங் காட்டேன் மாநீசன் கண்ணின்முன்னே
உற்பனமுங் கொடேன் ஒன்றறியா நின்றிடுவேன்
வந்தேனெனச் சொல்வார் வரவில்லை யென்றிடுவார்
என்றன்பே ரோகாணும் யாரோஎனச் சொல்வார்
இதோவந்தா னென்பார் இவனில்லை யென்றிடுவார்
அதோவந்தா னென்பார் அவனில்லை யென்றிடுவார்
இப்படியே சூட்சமொன்று எடுப்போம்நாம் மாமுனியே
எப்படியு முள்ளறிவோர் எனையறிவார் மாமுனியே
அறிந்தோ ரறிவார் அறியாதார் நீறாவார்
செறிந்தோர்கள் வாழ்வார் சேராதார் போய்மாழ்வார் 420
சாத்திரத்தி லுந்தோன்றேன் சதுர்மறையைத் தாண்டிநிற்பேன்
சேத்திரத்தி லுமடங்கேன் செய்தவத்தி லுமடங்கேன்
அன்பிலு மடங்கேன் அறத்திலு மேயடங்கேன்
வம்பிலு மடங்கேன் வணங்கிடி லுமடங்கேன்
கும்பிடி லுமடங்கேன் குவித்திடி லுமடங்கேன்
நம்பிடி லுமடங்கேன் ஞானத்தி லுமடங்கேன்
யோகக் கிரியை உறுசரிதை யிலடங்கேன்
விற்பனத்தி லடங்கேன் வினோத மதிலடங்கேன்
சொற்பனத்தி லடங்கேன் தெரிசனத் திலடங்கேன்
கனாவி லடங்கேன் கைகாட்ட லிலடங்கேன்
அனாவி லடங்கேன் அச்சரத்திலு மடங்கேன்
இத்தனையிலு மடங்காது இருந்து பகைமுடிப்பேன்
என்றுநான் சொல்ல ஏற்றகலைக் கோட்டுமுனி
மன்றுதனில் வீழ்ந்து மறுகியழு தேபுலம்பி
மண்ணிலு மடங்கா மரத்திலு மடங்கா
மறையிலு மடங்கா பலவசத்திலு மடங்கா
கண்ணிலு மடங்கா கருத்திலு மடங்கா
கவியிலு மடங்கா பலவிதசெபிப் பிலுமடங்கா
எண்ணிலு மடங்கா இகத்திலு மடங்கா
இறையினி லடங்கா இரங்கிலு மடங்கா
ஒண்ணிலு மடங்காத உனைவந் தடைந்திட
உரைத்திட மருளென பதத்தடிமிசை விழுந்தான்
மறையினி லடங்கா இறøயினி லடங்கா
வணங்கிலு மடங்கா பலவகையிலு மடங்கா
துறையினி லடங்கா தொல்வியி லடங்கா
சுகயினி லடங்கா சுருதியி லடங்கா
உறவிலு மடங்கா ஒளியிலு மடங்கா
உகத்திலு மடங்கா ஒருவிதத்திலு மடங்கா
புறத்திலு மடங்கா அகத்திலு மடங்கா
புகழ்ந்துனை யடைந்திட வகுத்துரையென பதத்தடிவிழுந்தான் 440
சரியையி லடங்கா கிரியையி லடங்கா
சையோகத்தி லடங்கா ஞானத்தி லடங்கா
கருத்தினி லடங்கா கலைக்கியானத் திலடங்கா
கனாவிலு மடங்கா கருவிலு மடங்கா
உருவிலு மடங்கா உருகினு மடங்கா
ஒன்றிலு மடங்காத உனைவந் தடியாருன
தருகினி லடங்கிட அருளுரைத் திடுவென
அருள்முனி பதத்தடிமிசை விழுந்தான்
உகத்திலு மடங்கா ஓதிலு மடங்கா
உணர்விலு மடங்கா உற்பனத் திலுமடங்கா
தவத்திலு மடங்கா தழுவிலு மடங்கா
தனத்திலு மடங்கா தயவிலு மடங்கா
அகத்திலு மடங்கா புறத்திலு மடங்கா
அசத்திலு மடங்கா புசத்திலு மடங்கா - மனத்
தகத் தடக்கியுன் பதத்தடி பணிந்திட
வகுத்துரை யருளென பதத்தடிமிசை விழுந்தான்
ஓரெழுத்து மீரெழுத்தும் உற்றபர மூன்றெழுத்தும்
ஆறெழுத்து மஞ்செழுத்தும் ஆனா அரியெழுத்தும்
ஏதெழுத்திலு மடங்காது இருந்துபகை முடிப்பேனென
ஓதினீரே அய்யா உலகளந்த பெம்மானே
எட்டாப் பொருளே எங்கும் நிறைந்தோனே
கட்டாக் கலியைக் கருவறுக்க வந்தீரால்
நாங்களுமைக் கண்டு நலம்பெறுவ தெப்படித்தான்
தாங்கள் மனதிரங்கித் தான்சொல்ல வேணுமென்றான்
அப்போ முனிக்கு அருளினது நீர்கேளும்
இப்போது மாமுனியே இன்றுநீ கேட்டதுதான்
ஒருவ ரறியாத உபதேசங் கண்டாயே
கருதி வருந்தினதால் கட்டுரைப்பேன் கேட்டிடுநீ 460
எனக்கா கும்பேர்கள் இனங்கேளு மாமுனியே
புனக்கார மில்லை பூசை முறையுமில்லை
கோவில்கள் வைத்துக் குருபூசை செய்யார்கள்
பூவதுகள் போட்டுப் போற்றியே நில்லார்கள்
ஆடு கிடாய்கோழி அறுத்துபலி யிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கித் திரியார்கள்
என்பேரு சொல்லி யாரொருவர் வந்தாலும்
அன்போ டவரை ஆதரிக்கும் பேராகும்
இரப்போர் முகம்பார்த்து ஈவதுவே நன்றாகும்
பரப்போரைக் கைசேர்த்துப் பணிவதுவே நன்றாகும்
என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும்
அன்போராய் வாழ்ந்தாலும் அறிவுநினை வொன்றானால்
நாம்வந்தோ மென்ற நாமமது கேட்டவுடன்
தாம்வந்து வேடமிட்டோர் சாதியது நன்றாகும்
அல்லாமற் கேளு அரிய முனியேநீ
எல்லா அமைப்பும் ஏலமே விட்டகுறை
எச்சாதிக் காச்சோ அச்சாதி நன்றாகும்
எவர்க்கு மிகஈந்து இருப்போரே நன்றாகும்
அவர்க்குதவி செய்வோர் அவ்வினமும் நன்றாகும்
தாழ்மையாய் வாழ்ந்த சாதியது நன்றாகும் 480
ஏழ்மையாய் வருவோம் இரப்பன் பரப்பனென
இரப்பனைக் கைகொண்டோர் எனையேற்றார் மாமுனியே
பரப்பனைக் கைகொண்டோர் பரமேற்றார் மாமுனியே
சினமு மறந்து செடமுழிக்கும் பேர்மனுக்கள்
நினைவுக்குள்ளே நாம் நிற்போங்காண் மாமுனியே
இனத்தோடே வொத்து இருந்துமிக வாழ்ந்தாலும்
சொன்ன நினைவதுக்குள் துயிலாமல் வாழ்வோங்காண்
மாசுக் கலியை மனதூடா டாதேயறுத்து
வாசு நினைவில் வந்துநிற்போம் மாமுனியே
பின்னுமொன்று கேளு ஒருவர்க்கோர் வாரமுமாய்
நின்றோ முனியேயினி நீசக் கலியறுக்கச்
சென்றோமே யானால் செய்யுந் தொழில்கேளு
காலுக்குள் ளேதிரியாம் கையதுக்குள் ளேதிரியாம்
மேலுக்குள் ளேதிரியாம் விழியதுக்குள் ளேதிரியாம்
கண்டெடுத்தார் வாழ்வார் காணாதார் வீணாவார்
பண்டைப் பழமொழிபோல் பார்மீதி லாட்டுவிப்பேன்
கண்டெடுத்துக் கொண்டோர் கரையேறு வாரெனவும்
தொண்டனெனக் கண்டு சொன்னேனா னுன்னோடு
தாய்தமர்க ளென்றும் தனது கிளைகளென்றும் 500
வாயுரமாய்ச் சொல்லும் வம்பரென்றும் பார்ப்பதில்லை
அன்பாகி வந்தவரை அலைச்சல்செய் தேற்பதுண்டு
வம்பான மாற்றானை வளர்த்தே யறுப்பதுண்டு
எட்டியு மெட்டாத எழைக் குணம்போலும்
கட்டியுங் கட்டாத கடிய சொரூபமதும்
வேளைக்கு வேளை விதக்கோல முமணிந்து
நாளுக்கு நாளாய் நடக்கு மதிசயமாய்
இரப்ப வடிவாய் இருந்து கலிதனையும்
சங்கி லிரந்து தான்வளர்ப்பே னன்போரை
என்றுரைக்க நாதன் எடுத்துமுனி யேதுரைப்பான்
மன்று தனையளந்த மாயத் திருமாலே
இந்த விதமாய் எழுந்தருளி வந்திருப்ப(து)
எந்தச் சொரூபம் எடுத்தணிவீ ரெம்பொருமாள்
கேட்டான் முனியும் கீர்த்தியுள்ள ஈசுரரே
நாட்டான மாமுனிக்கு நானுரைத்தது கேளும்
எகாபரத்தை நானினைத்து ஏழுபிள்ளை ஈன்றெடுத்து
மகாபரனார் செயலால் மக்களுக்குச் சொத்தீய
நானுப தேசித்து நாட்டில் மிகவிருத்தி
மானுவஞ் சோதிக்க மகற்கு அருள்கொடுத்து
மாசுக் கலியறுத்து மக்களொரு மித்தவுடன் 520
பாசு பதங்கொடுத்துப் பாலன்கை யால்விளக்கிக்
கூப்பிடுத லொன்றில் குவலயத்தைத் தான்கிறக்கிச்
சாப்பிடுவே னஞ்சைத் தன்பாலை யாளவைப்பேன்
என்று கலைமுனிக்கு இயம்பிவந்தே னீசுரரே
அன்று மொழிந்ததுக்கு அமைத்ததுகா ணிம்மகவு
சந்தோச மாச்சுதுகாண் சங்கரரே நீருமிப்போ
வெந்தோசந் தீர்ந்துதென்று வெள்ளிக் கயிலையிலே
ஒருவிடத்தி லெக்கியத்தை ஊட்டிக் கனலெழுப்பித்
திருநடன மாடுமென்று செப்பினா ரொப்புடனே
அப்படியே நல்லதென்று அரனு முமையாளும்
முப்படியே மாலினிக்கு ஒன்பதாம் பேறெனவும்
வேதனுக்கோ ராயிரம் பிறவி யாச்சுதென்றும்
மாது உமைக்கு வளர்பிறவி ஏழெனவும்
திதுவுக்கோர் பத்தாம் செய்யப் பிறவியென்றும்
சதுர்மறைக் கேழெனவும் சாஸ்திரத்துக் கோர்நான்கும்
வானவர்கோன் றனக்கு வளர்பிறவி மூன்றெனவும்
தானவர்க் கேழெனவும் சரசுபதிக் காயிரமாம்
தொண்டர் தமக்கு சூல்பிறவி யொன்றெனவும்
அண்டர்கள் மெய்க்க அரனடன மாடலுற்றார்
திருநடன உலா
நாதன் முறையார்க்கு நற்பிறவி யொன்றுபத்தாம் 540
வேதன் றனக்குப்பிறவி ஆயிரமாம் - வெண்டரள
மாதுக்கு மாயிரமாம் மாதுமைக் கோரேழாம்
சீதுக்குப் பத்தெனவே செப்பு
இந்திரற்கு மூன்றெனவும் இறையவருக் கேழெனவும்
சந்திரற் கோரேழாம் சாற்று - நன்றியுள்ள
மறையதுக்கு மோரேழாம் மானமுள்ள தொண்டருக்கு
இறப்பிறப்பில் லாப்பேறென் றியம்பு
என்றிவகை ளெல்லா மிப்படியே வந்துதென்று
ஒன்றியுள்ள சித்தாதி ஓதினான் - பண்டையுள்ள
தாவடத்தை மேவிடத்திக் கோவிடத்தி லோமிடத்தி
நாவிடத்திப் பூண்டாடி னார்
தன்னாலே முளைத்த சற்கணையின் றண்வாங்கிப்
பின்னாலே யோர்கணைப் பீறி - பின்னாளே
பீறுங் கணையதினால் பெரும்புவியெல் லாந்தோன்றிச்
சீறுங் கலிவயதால் சென்றுதோ
வானத்தளவில் வளர்ந்த கம்பத் தண்ணருளால்
சேனைச் செகம்படைத்த செல்வமோ - மானத்த
மாகலிய னேதுவினால் வாழ்விழந் திவ்வுகமும்
போகத்தருணம் வந்து பூட்டினதிப் போது
நல்லாறு சாஸ்திரமும் நாலுமறை வேதமதும் 560
பொல்லாக் கலியினால் பொய்ச்சூடி - பொல்லாப்
பொடியக் கலியோடு பொன்றியடி வேரறவே
இடியத்தான் வந்தொத்த தின்று
பக்கம் பதினைந்தும் பார்மேடம் பன்னிரண்டும்
வக்கணைக் கோளொன்பதுவு மங்கி - அக்கிகொண்(டு)
அழிந்த கலியோ டலமாந் தழிந்திடவே
சுழிந்தகன லாறுவந்து சுற்றிச்சோ
மாந்திர தந்திரத்தை வைத்திய வாகடத்தைச்
சூழ்ந்திருந்த அட்சரத்தைச் சோதித்து - ஏய்ந்திருந்த
இழகு கலியோ டிம்முறையெல் லாமொடுக்கிக்
களவறுக்கச் சோதியொன்று காணுதோ
அய்யமிட் டுண்ணாத அரும்பாவி யாவரையும்
பொய்யரையும் வெட்டிப் பெலியாக்கி - மெய்யிழந்து
நையுங் கலியோடு அனலாவிக் கொண்டெரிக்க
வெய்யவன்போல் சோதியொன்று மேவுதோ
பத்திசோ தித்தே பலநாளுங் காத்திருந்த
வித்தகனை வந்து வேண்டார்மேல் - வீடிழந்து
செத்திறந்து தீநரகச் சீக்கூட்டி லேயடையக்
கொத்தியருந் தப்புழுக்கள் கொஞ்சுதோ
பாங்கலிய னேதுவினால் பண்டுண்டு செய்ததெல்லாம் 580
மூங்கிக் கலியதனுள் மூடி - மூச்சுவிட்டு
ஓங்குவ தோங்கி உறங்குவது தானுறங்கி
மூங்கிக் குளிப்பதுநாள் முற்றுதோ
இலச்சைகெட்ட பாவி யென்றுவந்தா னன்றுமுதல்
நற்சடலங்கள் நல்வகைகள் நாடிழந்து - நாணமுற்றுப்
பட்சிமுதல் மாமிருகம் பால்நரிகள் கற்றாவும்
அச்சமற்று வாழ்புவியொன் றாகுதோ
பொல்லாத் துரங்கள்கொண்ட பேய்ச்செடிகள் தானொழிந்து
கல்லாத புல்லர் கருவொழிந்து - எல்லாம்
நல்லோராய்ச் சாகாமல்நாளும் நகரொன் றானதுக்குள்
சொல்லொன்றாலாள சோதியொன்று தோணுதோ
தாணுமால் வேதன் தற்பொருளாய் முப்பொருளும்
ஆணுவமா யொன்றி லடங்குதோ - அஞ்செழுத்தும்
ஆனா அரியெழுத்தும் ஆங்கார மூன்றெழுத்தும்
ஓநமோ வென்றதுக்குள் ளொடுங்குதோ
ஆகாத்த வஸ்துவெல்லாம் அழித்துநர கத்திலிட்டு
வாகாய்க் குழிமூட வந்துதோ - சாகாத
சனங்கள்பல வஸ்துவையும் தர்மபதி ராச்சியத்தில்
இனங்களொன்றாயாள ராசாவொன் றாகுதோ
பொன்னூற்றுத் தன்னூற்றுப் புரவுதன்னால் விளையூற்று 600
முன்னூற்று யோசனை யுலாவுசுழி - பன்னூற்றுப்
பாலூற்று மேலூற்றுச் சேலூற்று வாலூற்று
மாலூற்று மாபதியு மாகுதோ
செப்பொத்த பொன்னும் சிவமேடைசிங் காசனமும்
முப்பத்தி ரண்டறமு மோங்குதோ - ஒப்பற்ற
ஊர்தெருவு மொன்றதுக்குள் ஓர்யோசனைத் தெருக்கள்
சீர்பதினா யிரத்தெண் சேருதோ
தெருக்கள்பதி னாயிரத்தெண் செந்திருமால் வாழ்பதிக்குக்
குருக்களொன்று விஞ்சையொன்று கூறுதலோ - மருக்கள்
மாறாமல் வாழ்பதிக்கு மணங்கொடுத்து நிற்பதல்லால்
வேறார்க ளும்பறிக்க வேண்டுமோ
பொற்மைப் பதியில் பொன்வாச லொன்றதிலே
தர்மமணி யொன்று தாங்குதோ - தருமமனு
மணியினது கூறறிய மணிகணீரென் றதல்லால்
இனியிரு ளில்லா தேகுதோ
அலைந்தலைந்த சூரியனும் அவனலையச் சாயாமல்
நிலந்தெரிய எப்போதும் நேரே - குலைந்தலைந்த
கார்மேகத் தட்டதெல்லாம் கூண்டுடைந்து வானமதில்
ஊர்மேகமெல்லம் ஒருமேக மாகுதோ
தோணிக்கச் சிந்தை துலங்கிவெளி காட்டுமல்லால் 620
காணிக்கை யென்றயிறை காணாதோ - மாணிக்கக்
கல்லால் வளர்ந்தபதி காணுமொளி யல்லாது
பொல்லாரெனப் பேச்சுப் போச்சுதோ
ஈசர் நடன மிருபத்து ஒன்றதுக்குள்
தேசமது தீதுநலஞ் செப்பினார் - வாசமுடன்
வன்னி யமர்த்தி மாதுமையைத் தானோக்கி
உன்னிச் சிவமுரைப் பார்
ஈசர் மகிழ்ந்து ஏந்திழையைத் தானோக்கி
வாச முடனீசர் வகுப்பா ரம்மாதோடு
முன்னே மொழிந்த முற்றாண்ட வமதுக்குப்
பொன்னே யிந்நேரம் புரிந்ததுநீ கண்டாயே
அப்பொழுது ஈஸ்வரியும் அரனை மிகப்போற்றி
இப்பொழுது என்னுடைய இராச மகாபரனே
செப்போடு வொத்தச் சிவனே சிவபரனே
ஆடினீரே தாண்டவந்தான் அநேக வளங்கள்சொல்லிப்
பாடினீரே அய்யா பாட்டு வழுகாதே
தாண்டவ மாடிப்புரிந்தால் சத்திசிவம் வரைக்கும்
மாண்டாரைப் போற்கிடந்து மறுத்தெழும்ப வேணுமல்லோ
அல்லாம லென்னுடைய அண்ணர் நினைப்பதிலே
நல்லவரே கொஞ்சம் நானறிந்தது கேளும் 640
காரணமா யண்ணர் கலியுகத் தைமுடிக்க
நாரணர்தான் பூமியிலே நடப்பது நிசமானால்
நம்மையு மிங்கிருக்க ஓட்டார்காண் நாரணரும்
எம்மழையி லானாலும் எவ்வெயிலி லானாலும்
கொந்தலி லானாலும் கூர்பனியி லானாலும்
கந்தத் துணிகள்தந்து கையில்திரு வோடுதந்து
என்றனக்கு நல்ல இளங்குறத்தி வட்டிதந்து
மைந்தன் சரவணற்கு மறிப்பு மிகக்கொடுத்துப்
பிரமனுக்குக் கோலமிட்டுப் பிசாசுத னைவிரட்டி
வரமுள்ள தேவதைக்கு மாற்றி யுருக்கொடுத்து
லோகமதில் நம்மையும் உகக்கோலங் களிட்டி
வேகத்துடனே மேதினியெல் லாந்திரிந்து
கலிக ளகலக் காண்டங் கழிக்கவென்று
பலிகாண வைப்பார் பரசோ தனைக்கனுப்பி
இப்படியே தோணுதுகாண் என்னுடைய சிந்தையிலே
எப்படியும் வந்து இதுசமையு மீசுரரே
என்று உமையாள் ஈசர்தனை வணங்கி
அன்று மொழிந்து அவள்நிற்கும் வேளையிலே
நாரா யணரும் நல்ல சிவனிடத்தில்
சீராக வந்து தெண்டனிட்டுத் தானிருந்தார் 660
இருந்து மாலோனும் இருதயத்தி னுள்மகிழ்ந்து
பொருந்துவிழி தங்கையோடு புகலுவா ரம்மானை
என்னுடைய தங்கையரே எனைமேனி யாக்குவளே
உன்னுடைய தன்பொருட்டால் உலகளந்தோ னானாகி
நாட்டி லென்பேரு நடத்திவைத்த நன்னுதலே
கோட்டு வரையாளே கோவே யென்தங்கையரே
நீயும் நம்மீசுரரும் நீணிலத்தில் போகவென்று
நானும் நினைத்திருந்தேன் என்று நவின்றாயே
ஈஸ்வரிக்கு மீசுரர்க்கும் இந்த நினைவானால்
தேசமதில் போக வேண்டாமென்று சொல்வாரோ
நானுங் களைவலிய நாட்டிற்போ மென்றிலனே
தானுங்கள் தம்நினைவில் தரித்ததுபோ லேபோவும்
நீங்கள் நடப்பதென்றால் எனக்குவெகு சந்தோசம்
தாங்கள் மனதிரங்கி சாற்றிமிகப் போவுமென்றார்
அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தானோக்கி
மைப்போடுங் கண்ணினிய மைத்துனரே யென்றாவி
சொல்லுச் சொல்லாதபடி சொல்லுதற்கு உம்மையல்லால்
அல்லும் பகலும் அலைந்தாலுங் கிட்டாது
போங்களென்று சொல்லாமல் புத்திசொன்னாப் போலேநீர்
தாங்கி யுரைத்தீரோ சத்தியுள்ள மைத்துனரே 680
புத்தியிது நன்று புண்ணியநா ராயணரே
தத்தியுட னடக்க தருணமெப்போ தென்றுரைத்தார்
நடக்கக் கருமமிது நல்லதுதா னென்றுசொல்லி
அடக்க முடனே அய்யாநா ராயணரும்
ஒத்திருந்து தங்கள் உற்பனமா யாராய்ந்து
புத்திபோல் வாசகங்கள் பூத்தான மாயெழுதி
நாட்டு நருளறிய நடைசீவ செந்தறிய
காட்டு மரமறிய கல்லப்பு தானறிய
புற்பூ டறிய பூமிதெய் வாரறிய
நற்பறிந்து பேய்கள் நடுங்கி மிகஅறிய
சேட னறிய சிறுவாய்வு தானறிய
மேக மறிய மேலோர்கள் தாமறிய
பூக மறிய பொழுதுசந் திரனறிய
நட்சேத் திரமறிய நமனறிய கொளறிய
பொய்ச்சரியை கிரியை பேர்நா லுந்தானறிய
வேத மறிய விளங்கு மறையறிய
வாதை யறிய மன்றுபதி னாலறிய
சங்கறிய முத்தறிய சகலமச்ச முமறிய
அங்கறிய நாம்படைத்த எல்லோருந் தானறிய
எழுதி விடுவோங்காண் ஏற்றரிய புத்திவைத்து 700
பழுதுவைத்தா ரென்று பார்பலதுஞ் சொல்லாமல்
நம்பேரில் குற்றம் நகத்தளவு மில்லாமல்
பம்முதலாய் நாமும் பரிந்தெழுதி தான்விடுவோம்
என்று திருமாலும் இறவாத ஈசுரரும்
மன்று படைத்த மறையோனும் பார்வதியும்
சரசு பதியும் சத்தியுள்ள லட்சுமியும்
விரசு முனிமாரும் வேத மறையோரும்
சாஸ்திரரும் கின்னரரும் சங்கத் துறைவோரும்
பார்த்திவனுந் தெய்வ பாவாணர் தாமுதலாய்
வானவருந் தேவர்களும் மற்றுஞ்சித் தாதிகளும்
தானவரும் வேதத் தம்புருக் காரர்களும்
சங்கம் வரையும் தாண்டவர்கள் தாமுதலாய்
எங்கெங்கு முள்ள இருஷிமுதல் தான்வருத்தி
எல்லோருங் கயிலை இடம்விட் டெழுந்தருளி
வல்லோர்கள் வாழும் வைகுண்ட மீதில்வந்து
கங்கைநதி கண்டு கறைக்கண்டர் தேவர்வரை
கங்கை தீர்த்தமாடி கிருஷ்ணர் பதிபுகுந்து
மேடை விதானமிட்டு மிகுமேடை பொன்னழுத்தி
வாடை கமழவிட்டு வானவர்கள் பாடவிட்டு
எக்காள டம்மானம் எங்கு முழங்கவிட்டு 720
மிக்க புராணக்கலை மிகுமறையோர் போற்றவிட்டு
ஆகமங்கள் போற்றவிட்டு அரம்பையர்கை காட்டவிட்டுப்
போகமுனி சித்தரெல்லாம் புராணகவி யோசையிட்டு
மும்முதற்குத் தேவரெல்லாம் முறையிட்டு வாழ்த்தவிட்டுச்
சங்குத் தொனிகளிட்டு சகலோரும் போற்றவிட்டு
இத்தனை நற்சிறப்பும் இதமா யலங்கரித்து
வித்தையருள் தண்டரள விழியாளைத் தான்வருத்தி
அப்போ சரசுபதி ஆனந்த மேபெருகி
இப்போ எழுந்தருளி இன்பமுடன் போகவென்று
கங்கை நதிமூழ்கி கிரணப்பச்சை யாடைபெய்து
சங்கையுட னாபரணம் சரசு பதியணிந்து
குழல்முடித்து குழையில் குவிந்ததங்கத் தோடணிந்து
வளையல் முறுக்குமிட்டு மாதுசந் தோசமுடன்
பச்சைநிறக் காப்பணிந்து பவளமணித் தண்டையிட்டு
மச்சமதில் மையெழுதி மகிழ்ந்து மூக்குத்தியிட்டுக்
கொண்டைதனில் தேமலரைக் குவிய மிகச்சூடி
பொற்சரிகைச் சேலை பெரியயேத் தாப்புமிட்டு
அச்சரக்கைத் தோழி அரம்பையர்முன் னாடிவர
அன்ன நடைநடந்து அனல்கொழுந் திட்டாப்போல்
வன்ன அழகுடனே வந்தாள்திரு முன்பதிலே 740
மாது வரவே மறையோனும் மாயோனும்
ஏதுகோ லமெனவே எண்ணமதி லுன்னினராம்
உன்னித் திடமாய் உளமகிழ்ந்து மாயவனும்
கன்னி தனைப்பார்த்துக் கறைக்கண்டர் தானுரைப்பார்
வன்னத் திருவடிவே மறையோனி னோவியமே
அன்ன மடமாதே அரசுக் குகந்தவளே
கருத்துடைய சோதி கவியுடையீ ருந்தனையும்
வருத்தின காரியந்தான் வகுக்கக்கே ளொண்ணுதலே
நாட்டிலொரு நீசன் நன்றியறியாப் பிறந்து
மேட்டிமையாய் லோகமெல்லாம் மெய்யழித்தான் கண்டாயே
கோட்டிப் பவம்பிறந்து குருநீதி யைக்கெடுத்தான்
கேட்டிருக்கக் கூடாது கெடுநீசன் பொல்லாங்கு
நம்மை நினையாததுதான் நமக்குசற் றெண்ணமில்லை
செம்மையுள்ள சான்றோரைச் செய்தபங்க மேற்கலையே
தெய்வப் பிறவியல்லொ திசைவென்ற சான்றோர்கள்
மெய்வரம்பை யெல்லாம் மிகக்கெடுத்தான்மாபாவி
கற்பகலாப் பெண்களுட கற்புக்கிரங் காதிருந்தால்
உற்பனமோ நாமள் உடையபர னென்றாமோ
எளியவனை வம்பால் இடுக்கஞ்செய் தேயடித்தால்
விளியிட் டழுதாலும் மேதினியிற் கேட்பதில்லை 760
கேளாத காரணத்தால் கீர்த்திகொண்ட பேரெளியோர்
நாளான நாள்வழியாய் நம்பிநம்பேரில் வைத்தார்
அல்லாமல் நம்முடைய அரிதன்மகா நாமமதை
இல்லாம லேமறைத்தான் இயல்புகெட்ட மாநீசன்
ஆனாலும் பாரமில்லை அன்னீதம் பொறுக்கரிது
மானாபர ஞாயமதை வரம்பழித்தான் மாநீசன்
ஆகமத்தைக் கூறழித்தான் அன்னீத மாபாவி
தாக மடைந்தார்கள் தவசுமுனி மார்களெல்லாம்
நீசப் பாசாசு நீணிலத்தைக் கொள்ளைகொண்டு
தோசப் பயலோடு துணையாய் மிகக்கூடிக்
கெடுக்குதுகாண் பசாசு கேட்பார்க ளில்லாமல்
கொடுக்கவொன் றில்லா நருட்பார்த்துக் கொல்லுதுகாண்
அதுவே யொருகொடுமை அநேகம் பொறுக்கரிது
எதுவும் வரம்புதம்பி இருக்குதுகாண் வையகத்தில்
ஆனதால் நாங்கள் அவனிதனிற் போயிருந்து
மானமுறை சோதித்து மனுவிடுக்கந் தான்தீர்த்து
நாட்டிலுள்ள குற்றம் நாங்கள்பார்த் துத்தீர்த்து
ஓட்டுவதை யோட்டி உறைப்பதை யுறைப்பித்து
நாடையொரு சொல்லதுக்குள் நலமாக வாழ்விக்கவே
பேடையன்ன மாமயிலே பெண்ணரசே இப்போது 780
நாங்கள் நடப்பதற்கு நாளான நாளிதுவே
ஆனதால் பாவி அவனிழுக்குச் சொல்லாமல்
மானமுள்ள புத்தியைப்போல் வாசகமொன் றேயெழுதி
வருவோமென அயச்சால் மாபாவி தானறிந்து
கருவி குழறி கற்பினைக்குள் ளாகுவதும்
என்னவோ வென்று இடும்புசெய்வ துமறிய
அவனறிய விட்டதுபோல் அவனிபதி னாலறிய
எவரும்புற் பூண்டுவரை எவ்வகையுந் தானறிய
எழுதியொரு வாசகந்தான் இப்போவிட வேணுமென்று
முழுது முன்னிங்கே ஓடிவா வென்றதுதான்
அப்போ சரசுபதி ஆனஅயன் மாமயிலும்
இப்போ திவ்வகைக்கு யானென்ன செய்கருமம்
எல்லாங் கிருபை எம்பரனே யுன்செயலு
அல்லாம லென்றனக்கு ஆகுமோ ஏதாலும்
ஆட்டுவதும் நீயல்லவோ ஆடுவானும் நீயல்லவோ
ஓட்டுவதும் நீயல்லவோ ஓடுவானும் நீயல்லவோ
சொல்லுவதும் நீயல்லவோ சொல்லவைப்பானும் நீயல்லவோ
அல்லும்பகல் நீயல்லவோ அழியாத வனும்நீயல்லவோ
எல்லா முமது கிருபை யெனக்கல்லாது
சொல்லீது வந்ததென்ன சுவாமியெனப் பணிந்தான் 800
மாது திருமால் மலர்ப்பாதம் போற்றிடவே
ஆதித் திருமால் அவரேது சொல்லலுற்றார்
நீயுரைக்க நானெழுதி நீணிலத்தில் விட்டதுண்டால்
வாயுரைக்கக் கூடாது மற்றோர்க ளாராலும்
வம்புரைக்கக் கூடாது வம்புரைத்தால் வன்னரகம்
உம்பதுவே யல்லால் உறுகெதிகள் காணார்கள்
ஆனதா லுன்வாக்கும் அரியச்சரமுங் காண்பித்தால்
மானமென்ன வாகுமென்று வகுத்துரைத்துப் பார்ப்போம்நாம்
அப்போ சரசுபதி அன்போ டுளமகிழ்ந்து
செப்புகிறாள் நல்ல திருவாசகந்தா னம்மானை
கலையொடு கலையைத் தாக்கிக் கண்ணின்மேல் கருணை நாட்டி
மலையொடு மலையைத் தாண்டி வளர்ந்தவன் பதமே கண்டு
சிலையொடு சிலையி னாளும் சிவபரா கிருபை யென்றே
அலைதலை முழக்கம் போலே அவளுரை கூற லுற்றாள்
கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத் தோர்கள் காண
மீறிய மொழிகள் சொல்லி விளம்புவர் நாச மாகும்
தேறிய பூதத் தோடு தேர்ந்துணர்ந் தவரே வாழ்வார்
கூறிய வாசகத்தை யுள்ளங் கொண்டவர் குருவைக் காண்பார்
ஒருதிரு விபூதி யுண்டை ஒருயிரு மிச்ச மாகும்
ஓருதிடத் தேங்காய்ப் போலும் ஒருமனத் திரணை போட்டுக் 820
கருதிட வெற்றிலை பாக்கும் கனிந்திடு வோர்க்கு மூவர்
வருகிட ஞாய மெய்யின் வழியிது வாகுந் தானே
மனுமொழி யிதுவா மென்று மதத்துடன் பேசு வோர்க்கு
இனிதல்ல வீண்தா னென்று இயம்பிய பகைஞர் தம்மை
குனிதவள் துர்க்கை சென்று கொன்றவள் நரகம் பூத்தி
கனிதுடன் துர்க்கை வாரி கடல் தீர்த்த மாடுவாளே
வேறு
எறும்புகடை யானைமுதல் எண்பத்துநான் குயிர்கள்
எழுகடல் பதினாலு புவிகளும்
இரதிமதி சூரியர்கள் பருதி பாலாழியும்
இயல்வானம் வாயு முதலாய்
தெறும்பு மாமலை மாமரச் சோலையும்
சேடனுந் தலைமோடனு மறியவே
தென்கீழத் தேவரு மிங்குள்ள மூவரும்
தேசதெய் வேந்திர னறியவே
வாச முனிவோர்களும் வேதசன் னாசியும்
மறையாறு சாஸ்திர மறியவே
மண்டல மளந்தகை கொண்டெழுதும் வாசகம்
மண்டலர்க ளெவரு மறியவே
வறும்பகல் தொளாயிரத்து தொண்ணூற் றெட்டாண்டினில்
வளர்ஸ்ரீ சாம்பசிவ மூர்த்தியும்
பராபர ஸ்ரீராமரும் பதியேறும் மூர்த்தியும்
பார்த்திந் தக்கலி யுகத்தில்
படூரநீ சக்கலியால் வரும்வாறு வண்மையாய்ப்
பகர்ந்து திருவாசக மெழுதிப்
பலநூ லறிந்தவ ரெவர்க ளாயினும்
பக்தியுட னெக் காலமும்
பணிந்துதிரு வாசகத்தை முத்தியணைந் தோர்க்கு
மிகுபல னுண்டாம் பகரக்கேளு
நத்தியுடன் பூலோகக் கலியுகா தேசத்தில்
நடக்கு முறைதானுங் கேளீர்
திருவாசம் - 1
நல்ல வீரபுரந்தரத் தர்மராசா வங்கிசத்திலே நாடும் ஒரு மதலை பிறந்து வந்தவுடன் நல்ல அருணாசலத்திலே வாலிபப் பிள்ளையாயிருக்கிறார். அந்தப் பூலோகக் கலியுகத்திலே ஆசாரமாயிருக்கிற பேர்களும் அழுக்கான புத்திமதியா யிருக்கிற பேர்களும் அவரவர் ஆங்காரமாகியே அழிந்து போவார்கள். அதின்மேல் பதினெட்டுத் துர்க்கையம்மாள் பிறந்து அந்தக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே வருகிறார்கள். வந்தவுடனே மூன்றுநாள் இருள்மூடி ஆனைத் துதிக்கைபோல் மழைபெய்யும். அதிலே சில துர்ச்சனர்களெல்லாம் மாண்டு போவார்கள். அதின்மேல் பக்தியாயிருக்கிற பேர்களுக்கும் பிள்ளை யில்லாமலிருக்கிற பேர்களுக்கும் கண்ணில்லாமலிருக்கிற பேர்களுக்கும் தனமில்லாமலிருக்கிற பேர்களுக்கும் பராபர மூர்த்தியும் சாம்பசிவ மூர்த்தியும் ஸ்ரீராமச்சேயரும் தீட்சையாகித் திருமனதிரங்கிப் பக்திகாரணங்களைச் சோதித்துப் பகிர்ந்து அவரவர் கேட்ட வரங்களைக் கொடுப்பார்கள்.
இன்னுஞ்சிறிது நாளையிலே சிலபேர்கள் தெய்வீகமாய்ப் போவார்கள். முன்னுக்கு மழைதட்டும் உலகிற்பல பல வஸ்துவும் பலிக்குமென வகுத்தார். சிலநீசர் மிகக் கறுப்பை நினைவில்லாத்தொட்டு மிகப் பாசமடைந்து அலைந்து அழிந்து போவார்கள். வாலி சுக்ரீபனும் பண்டாரமாகிப் போவார்கள். வாச்சி கொழு கலப்பையெல்லாம் நாசமாகிப் போய்விடும். முன்னாலே துலுக்கர் தம்மை நாசம் பண்ணுகிறதற்காகவே துர்க்கையம்மாளைப் பிறவி செய்தனுப்புகிறோம். பிராமணர் நன்றாய் சுகத்துடன் வாழ்வார்கள். புவியில் முகத்துலிங்க மில்லாத பேர்க்குப் பிரமதேவரை யனுப்புகிறோம். பிரமதேவர் புவிமீதில் வந்து பக்தி காரணங்களைச் சோதித்துப் பொல்லாத பேரைத் தெரிந்து பிடித்துப் புதுக்கிராம தேசத்தில் வாழுந் தேவதைக்குப் பூசைப்பண்ணிப் போடுவாரெனப் புகட்டினார்.
காவேரியாற்றுக்குள்ளே மூன்று பொதி மங்கிலியம் கவிழ்ந்து அடையவேணுமென்றும் காசினியில் ஒரு ஏழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை அடர்ந்து பிடிப்பார் களென்றும், அறுத்த மங்கிலியத்தை மிகுத்துக் கட்டுவார்களென்றும், இன்னுஞ்சிறிது நாளையிலே கேள்விகேளாமலிருக்கிற பேர்களும் துர்ச்சனராயிருக் கிறபேர்களும் வர்த்தகனாயிருக்கிற பேர்களும் தம்மில் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு மாண்டுபோவார்கள், போனபேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷரைத் தெரிசனம் பண்ணிக் கொண்டு சர்வபாக்கியத்திலே யடைவார்கள்.
மூன்று லோகத்துக்கு ஒரு வால்வெள்ளி யுண்டாக்கி நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம். அதினால் மானிடரெல்லாம் உறழ்ந்து உட்கொள்ளைப் பிறக்கொள்ளை யடிப்பார்களென்று நமக்கு நன்றாய்த் தெரியும். நாமதற்குமேல் பூலோகக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே பண்டார வேசமாய் வருகிறோம். நாம் வருகிறபோது மண்ணெல்லாம் கிடுகிடென்றாடும், மலையும் வானமும் முழங்கித் திடுக்கிடும், அப்போது அதிலே அநேக துர்ச்சனர்களெல்லாம் மாண்டு போவார்கள். போனபேர்கள் போக இருக்கிறபேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். மந்திர தந்திர வைத்தியங்களெல்லாம் மறைந்து போய்விடும். வாதை பேய்களெல்லாம் வட கயிலாசத்திலே போய்ச் சட்டுத்தீர்ந்து போவார்கள். ஏழு சமுத்திரத்திலே மூன்று சமுத்திரம் நீருள்வாங்கிப் போய்விடும். ஒரு சேர்வை விபூதி ஆறு சக்கரத்திற்கு விற்கவும், ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும், ஒரு கழஞ்சிச் சலமெடுக்கவும், இரண்டு நாழிகை வழிக்கு ஒரு தண்ணீர் பந்தலும், மூன்று நாழிகை வழிக்கு ஒரு தர்மசாலை மடமும் நன்றாய் முடியும்.
தர்மங்கொடுக்கிற பேர்களுண்டு வாங்கிறபேர்களில்லை யென்று சொல்லுகிற வெயிலாள் மடக்கொடியாள் வயிற்றிலே நாடுமொரு மதலை பிறந்து பத்து வருசமாச்சுது. நாங்களும் மகா அருணா சலத்திலே வாலிபப் பிள்ளையா யிருக்கிறோம். அந்த வாலிபப் பிள்ளை என்ன சொல்கிறா ரென்றால் வீர புரந்தர தர்மராசா வழியிலே விகிநாராயணர் இங்கே வந்து மூன்று மாதத்துக்குத் தவசுபண்ணி இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார். வந்தவுடனே அந்நியோன் னியக் கலகமாகும். அந்தக் கலகத்திலே ஒருவருக்கொருவர் சத்தியமாய்ப் போவார்கள். போன பேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பாக்கியத்தைக் கொடுப்போம்.
பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழு வோர்க்கு
நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்து வாழ்வார் 840
தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே
தினமொரு நேர மெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்
துணிவுடன் கேட்டோ ருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே
வாசித்தோர் கேட்டோ ருற்றோர் மனதினி லுணர்ந்து கற்றோர்
ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார்
திருமொழி வாசகந் தன்னைத் தேசத்தில் வருமுன் னாக
வருவது திடனா மென்று வழுத்தினோம் தொளாயிருத்து 98ல்
ஒருதிருக் கூட்ட மாக ஓராயிரத் தெட்டா மாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே
வருத்தினோ மம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கிக்
கருத்தினுள் ளகமே கொண்டு கவனித்தோ ரவர்க்கே தக்கும்
உருத்தில்லாக் கேட்போ ரெல்லாம் ஓருரை வெளியே காணார்
சிரித்துரைக் கேட்போ ரெல்லாம் சிவபொருள் வெளியே காண்பார்
உலகில் மனுக்கள் தமிழாலே உவமை யுரைத்து விட்டாப்போல்
கலக முடனே யென்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை 860
அலகைத் துளைத்து நரகதிலே ஆணி யறைந்து அவனிதனில்
குலையக் குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே
எந்தன் மொழியு மென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரியத் திறமா யெழுதி வைத்தேன்
எந்தன் பெருமான் திருமொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும்
சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியுங் காண்பாரே
காண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரண மில்லாமல்
காண்பா ரென்றுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி
காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராய்க் கவ்வையற்றுக்
காண்பா ரென்றுங் கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே
இந்த மொழியைத் தூஷணித்த இடும்பர் படும்பா டதுகேளு
கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணு முருகிக் காலுழன்று
குந்தக் குடலும் புறம்பூற கொப்புள் சிலந்தி யுண்டாகி
எந்த இடமும் அலைந்தழிவார் என்னாணை இது தப்பாதே
தப்பா தெனவே சாபமிட்டேன் சத்திபேரி லுண்மை யதாய்
எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன்
ஒப்பா ரொருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பா நாத னெழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே
என்றே யிந்தத் திருவாசகம் இயம்பச் சரசு பதிமாது
கன்றே மேய்த்தோ னெழுதிமிகக் கலியுக மதிலே விட்டிடவே
நன்றோர் மறையோ னிடமேகி நாட்டி லறியச் செய்யெனவே
அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே 882
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |