இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


ஆசாரக் கோவை

Acharakovai is a classic Tamil literary work that is part of the Patinenkilkanakku anthology, a collection of eighteen didactic texts from the post-Sangam period. The title "Acharakovai" translates to "Guide to Good Conduct," reflecting its focus on moral and ethical instructions.

ஆசாரக்கோவை

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்

(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)



ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். 'ஆசார வித்து' (1) என்று தொடங்கி, 'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என முடியும் நூறு செய்யுட்களில் தாம் கூறப் புகுந்த ஆசாரங்களை ஒரு நெறிப்பட ஆசிரியர் கோவை செய்துள்ளார். பொது வகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டிய கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார். அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகளும் அதிகம் காணப்படுகின்றன. இந் நூல் வடமொழி ஸ்மிருதிக் கருத்துக்களைப் பின்பற்றி எழுந்தது என்பது,

ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்
எனவரும் சிறப்புப் பாயிரச் செய்யுள் மூலம் தெரியவருகிறது.

இந் நூலின் ஆசிரியரையும், இவர்தம் தந்தையார் பெயரையும், இவர் வாழ்ந்த ஊரையும், இவரது மதச் சார்பையும் சிறப்புப் பாயிரச் செய்யுள் நமக்கு அறிவிக்கின்றது. இவரது முழுப்பெயர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாய் என்பது இவரது தந்தையார் பெயர் போலும்! கயத்தூரின் ஒரு பகுதியாகிய பெருவாயிலில் வாழ்ந்தவர் என்றோ, கயத்தூரை அடுத்த பெருவாயிலில் வாழ்ந்தவர் என்றோ எண்ணவும் இடமுண்டு. இவர் வாழ்ந்த ஊர் கயத்தூர். இவ் ஊரைத் 'திரு வாயில் ஆய திறல் வண கயத்தூர்' என்று பாயிரப் பாடல் சிறப்பிக்கின்றது. இது கொண்டு செல்வமும், திறலும், வண்மையும் ஓங்கிய ஊர் இது என்பது விளங்கும். இவ் ஊர் எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 'ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி' என்பதனால், இவர் சைவ சமயத்தார் என்பதும் விளங்கும்.

இந்நூலில் சிறப்புப் பாயிரம் நீங்கலாக 100 செய்யுட்கள் உள்ளன. வெண்பாவின் வகையாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா, என்பன இதில் உள்ளன.

ஆசார வித்து (பஃறொடை வெண்பா)
நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து. 1
பொறையுடைமை - பொறுமையும்
நட்டல் - நட்பு செய்தல்
நன்றி மறவாமை, பொறுமை, இன்சொல், பிற உயிர்களைத் துன்புறுத்தாமை, கல்வி, ஒப்புரவு அறிதல், அறிவுடைமை, நல்ல இயல்புள்ளவர்கள் நட்பு இவை எட்டும் அறிஞர்களால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களாகும்.

ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள் (இன்னிசை வெண்பா)
பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை,
இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். 2
நெடு வாழ்க்கை - நீண்ட வாழ்நாள்
நிலக்கிழமை - நிலத்திற்கு உரிமை
நற்குடிப்பிறப்பு, நீண்ட வாழ்நாள், செல்வம், அழகுடைமை, நிலத்திற்கு உரிமை, சொல் மேன்மை, படிப்பு, பிணியில்லாமை இவை எட்டையும் ஒழுக்கம் தவறாதவர்கள் அடைவர்.

தக்கணை முதலியவை மேற்கொள்ளல் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தக்கிணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும்
முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால்,
எப் பாலும் ஆகா கெடும். 3
தக்கிணை - காணிக்கை
வேள்வி - யாகம்
ஆசிரியர்க்கு தட்சணை கொடுத்தலும், யாகம் பண்ணுதலும், தவம் செய்தலும், கல்வியும், இந்நான்கினையும் காத்து வாழ வேண்டும். இல்லையென்றால் எந்த உலகத்திலும் பயன் இல்லை.

முந்தையோர் கண்ட நெறி (இன்னிசை வெண்பா)
வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -
முந்தையோர் கண்ட முறை. 4
வைகறை - விடியற்காலம்
யாமம் - பின்சாமம்
விடியற்காலையில் விழித்தெழுந்து, மறுநாள் செய்ய வேண்டிய அறச்செயல்களையும், வருவாய்க்கான செயல்களையும், சிந்தித்து, தாயையும் தந்தையையும் தொழுது ஒரு செயலைச் செய்ய அறிவுடையோர் சொல்லிய முறையாகும்.

எச்சிலுடன் தீண்டத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
'எச்சிலார், தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு, இவை' என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். 5
எச்சிலார் - எச்சிலையுடையாராய்
திட்பத்தால் - யாப்புற
பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை எச்சிலையுடையார் எவரும் தீண்டார்.

எச்சிலுடன் காணக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சிலார், நோக்கார் - புலை, திங்கள், நாய், நாயிறு,
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து. 6
திங்கள் - மதி
ஞாயிறு - சூரியன்
புலையும், மதியும், நாயும், சூரியனும், மீனும் ஆகியவற்றை எச்சிலையுடையார் கண்ணால் காண மாட்டார்.

எச்சில்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்-
விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு. 7
விழைச்சு - எச்சில்
மல மூத்திரங்கள் இயற்றிய இயக்கம் இரண்டொடு, இணை எச்சில், வாயினால் வழங்கிய எச்சில் ஆகிய நான்கினையும் பாதுகாக்க வேண்டும்.

எச்சிலுடன் செய்யக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,
ஓதார், உரையார், வளராரே, - எஞ் ஞான்றும்
மேதைகள் ஆகுறுவார். 8
ஓதார் - ஒழுகாதவர்
வளரார் - கண்துயிலார்
இந்நான்கு எச்சிலையும் கடைப்பிடித்து ஒன்றினையும் ஒழுகாதவர், வாயால் எதையும் சொல்லார், கண்துயிலார் எப்போதும் அறிவுடையவராக இருப்பர்.

காலையில் கடவுளை வணங்குக! (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நாள் அந்தி, கோல் தின்று கண் கழீஇத், தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி. 9
நாள் அந்தி - சிறுகாலையில்
கண் கழீஇ - கண் கழுவி
விடியற்காலையில் பல் சுத்தம் செய்து, கண் கழுவி கடவுளை வணங்கித் தொழ வேண்டும். பின் நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொடங்க வேண்டும். மாலையில் கடவுளை வணங்குதல் குற்றமாகும்.

நீராட வேண்டிய சமயங்கள் (பஃறொடை வெண்பா)
தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல், - ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்! 10
தீக்கனா - தீய கனவைக் கண்டபோது
நீர் ஆடுக - நீராடல் செய்க
தெய்வத்தை வழிபடும்போதும், தீய கனவைக் கண்டபோதும், தூய்மை குன்றிய காலத்தும், வாந்தி எடுத்த போதும், மயிர் களைந்த போதும், உண்ணும் பொழுதும், பொழுதேற ‏உறங்கிய விடத்தும், புணர்ச்சியான காலத்திலும், கீழ் மக்கள் தீண்டிய போதும், மலசலங் கழித்த காலத்தும் நீராட வேண்டும்.

பழைமையோர் கண்ட முறைமை (இன்னிசை வெண்பா)
உடுத்து அலால் நீர் ஆடார்; ஒன்று உடுத்து உண்ணார்;
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார்; - என்பதே
முந்தையோர் கண்ட முறை. 11
விழுத்தக்கார் - சிறப்பு பொருந்தியவர்
அவைபுகார் - அவையின்கண் செல்லார்
நீராடும் போது ஓர் ஆடையும், உண்ணும் போது இரண்டு ஆடையும் அணியாமல் இருக்கக் கூடாது. நீரில் ஆடையை பிழியமாட்டார். ஒரு ஆடை உடுத்தி அவையின்கண் செல்லக்கூடாது. இது பழையோர் கண்ட முறைமையாகும்.

செய்யாமல் தவிர்க்க வேண்டியவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்;
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு,
குறை எனினும், கொள்ளார், இரந்து. 12
மாசுணியும் - அழுக்காடையும்
கொள்ளார் - காலில் அணிய மாட்டார்
தலையில் தேய்த்த எண்ணெயினால் யாதொரு உறுப்பையும் தீண்டக்கூடாது. பிறர் உடுத்திய ஆடையும், பிறர் தொட்ட செருப்பும் அணிந்து கொள்ள கூடாது.

செய்யத் தகாதவை (இன்னிசை வெண்பா)
நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை. 13
நோக்கார் - பாரார்
இரா - இரவில்
நீரில் தம் நிழலை விரும்பி பார்க்கமாட்டார். நிலத்தை கீற மாட்டார். இரவில் மரத்தின் கீழ் நிற்கமாட்டார். நோய்பட்டபோதும் நீரைத் தொடாமல் எண்ணெயை உடம்பில் தேய்க்க மாட்டார். எண்ணெய் தேய்த்த பின் தம் உடம்பின் மேல் நீரை தெளித்துக் கொள்ளாது புலையை தம் கண்ணால் பார்க்க மாட்டார்.

நீராடும் முறை (இன்னிசை வெண்பா)
நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,-
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவினவர். 14
எஞ் ஞான்றும் - ஒரு நாளும்
திளையார் - அமுங்கியிருக்கமாட்டார்
ஆராய்ந்த அறிவுடையார் நீராடும் பொழுது நீந்தமாட்டார், எச்சிலை உமிழ மாட்டார், அமுங்கியிருக்க மாட்டார், விளையாட மாட்டார், எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் கழுத்தளவு அமிழ்ந்து குளிக்க மாட்டார்.

உடலைப் போல் போற்றத் தக்கவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஐம் பூதம், பார்ப்பார், பசு, திங்கள், ஞாயிறு,
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண்
ஐம் பூதம் அன்றே கெடும். 15
இகழ்வானேல் - இகழ்வானாயின்
அன்றேகெடும் - அன்றே கெட்டகன்றுபோம்
நிலம் முதலிய ஐம்பூதங்களையும், பார்ப்பாரையும், பசுவையும், சந்திரனையும், சூரியனையும் போற்றாதவர், உடம்பில் உள்ள ஐம்பூதத்தையுடைய தெய்வங்கள் அகன்று போய்விடும்.

யாவரும் கூறிய நெறி (சவலை வெண்பா)
'அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைப் போலத் தொழுது எழுக!' என்பதே-
யாவரும் கண்ட நெறி. 16
தம்முன் - தனக்கு மூத்தோனும்
நெறி - வழி
அரசனும், குருவும், தாயும் தந்தையும், தனக்கு மூத்தோரும், நிகரில்லா உறவினராவார். இவர்களை தேவர்களைப் போல தொழ வேண்டும். இவர்கள் சொல்லிய சொல்லை கடந்து செய்யார், அதனை மறந்து நடக்கமாட்டார், நல்லறிவாளர்.

நல்லறிவாளர் செயல் (இன்னிசை வெண்பா)
குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்' என்பதே-
நல் அறிவாளர் துணிவு. 17
இகந்து - கடந்து
தீர - மிக
அறிவாளர், குரவர்கள் சொல்லிய சொல்லை மீறி எதனையும் செய்யமாட்டார். குறை விரதத்தை மறக்கமாட்டார். அம்மாவாசை அன்று பல் துடைப்பதும், மரம் வெட்டுதலும் செய்ய மாட்டார்.

உணவு உண்ணும் முறைமை (இன்னிசை வெண்பா)
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர்; அது எடுத்துக்
கொண்டார் அரக்கர், குறித்து. 18
நீர் ஆடி - குளித்து
அரக்கர் - அசுரர்
நீராடி, காலைக் கழுவி, வாய் துடைத்து, உண் கலத்தை சுற்றி, நீரிரைத்து உண்பவரே உண்பார். இப்படி செய்யாமல் உண்டாரைப் போல் வாயை கழுவி போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொள்வார்.

கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
காலின் நீர் நீங்காமை உண்டிடுக! பள்ளியும்
ஈரம் புலராமை எறற்க!' என்பதே-
பேர் அறிவாளர் துணிவு. 19
உண்டிடுக - பொருந்தி
துளங்காமை - அசைந்தாடாமல்
கால் கழுவின ஈரம் உலர்வதற்கு முன்னே உணவு உண்ண வேண்டும். கால் ஈரம் உலர்ந்த பிறகே படுக்கைக்கு செல்ல வேண்டும். இதுவே அறிவாளர்களின் கொள்கையாகும்.

உண்ணும் விதம் (இன்னிசை வெண்பா)
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து,
தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு,
உண்க, உகாஅமை நன்கு! 20
அமர்ந்து - பொருந்தி
துளங்காமை - அசைந்தாடாமல்
ஒருவன் உண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து, தூங்காமல், அசையாமல், வேறொன்றினையும் பார்க்காமல், பேசாமல், உண்கின்ற உணவை கையாலெடுத்து சிந்தாமல் நன்றாக உண்ண வேண்டும்.

ஒழுக்கம் பிழையாதவர் செய்வது (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை,
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். 21
சிறை - பறவைகளும்
பிழையாதவர் - தவறாத பெரியோர்கள்
நல்லொழுக்கத்தினின்று தவறாத பெரியோர்கள், விருந்தினர்க்கும், மூத்தோர்களுக்கும், பசுக்களுக்கும், பறவைகளுக்கும், பிள்ளைகளுக்கும் உணவு அளிக்காமல் தான் உண்ணமாட்டார்.

பிற திசையும் நல்ல (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல;
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார்; இகழ்ந்தார்,
முகட்டு வழி கட்டில் பாடு. 22
முகட்டு வழி ஊண் - உச்சிப் பொழுதில் உண்ணுதல்
முகட்டு வழி - வாயிற்படிக்கு நேராக
கிழக்கு திசையும், ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் மற்ற திசைகளும் நல்லவைகளாகும். உச்சிப் பொழுதில் உண்ணுதல் நலம். ஆனால் வாயிற்படிக்கு நேராக கட்டிலிட்டு படுத்தல் ஆகாது.

உண்ணக் கூடாத முறைகள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று! 23
சிறந்து - விரும்பி
இறந்து - நெறியைக் கடந்து
படுத்தோ, நின்றோ, வெளியிடத்தில் நின்றோ உண்ணல் ஆகாது. விரும்பி மிகுதியாக உண்ணலும் ஆகாது. கட்டில் மேலிருந்து உண்ணுதல் கூடாது.

பெரியோருடன் இருந்து உண்ணும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முன் துவ்வார்; முன் எழார்; மிக்கு உறார்; ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார்; - தம்மின்
பெரியார் தம்பால் இருந்தக்கால். 24
முன் எழார் - முந்தி எழுந்திரார்
தம்பால் - தம் பக்தியில்
தம்மிலும் பெரியாருடன் உண்ணும்போது அவர்க்கு முன்னே தாம் உண்ண மாட்டார். முந்தி எழுந்திருக்க மாட்டார். அவரை நெருங்கி அமர்ந்து உண்ணமாட்டார். எல்லா செல்வமும் பெறுவதாயினும் வலப்புறம் அமர்ந்து உண்ணார்.

கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக,
துய்க்க, முறை வகையால், ஊண். 25
தித்திப்ப - தித்திக்கும்
தலை - முதலாகவும்
உணவை உண்ணும்போது கசப்பானவைகளை கடைசியிலும் தித்திப்பான பண்டங்களை முதலாகவும் மற்றவைகளை இடையிலும் உண்ண வேண்டும்.

உண்ணும்கலம் (இன்னிசை வெண்பா)
முதியவரைப் பக்கத்து வையார்; விதி முறையால்
உண்பவற்றுள் எல்லாம் சிறிய கடைப்பிடித்து,
அன்பின் திரியாமை, ஆசாரம் நீங்காமை,
பண்பினால் நீக்கல், கலம்! 26
விதிமுறையால் - ஒழுங்குப்படி
கடைப்பிடித்து - உறுதியாக கொண்டு
தம்மைவிட மூத்தாருடன் உண்ணுதல் கூடாது. அப்படி உண்ணும்போது ஒழுங்குப்படி சிறிய கலங்களை கொண்டு ஒழுக்கம் தவறாமல் உண்டு அக்கலங்களை உடனே முறைப்படி நீக்க வேண்டும்.

உண்டபின் செய்ய வேண்டியவை (பஃறொடை வெண்பா)
இழியாமை நன்கு உமிழ்ந்து, எச்சில் அற வாய்
அடியோடு நன்கு துடைத்து, வடிவு உடைத்தா
முக் கால் குடித்துத் துடைத்து, முகத்து உறுப்பு
ஒத்த வகையால் விரல் உறுத்தி, வாய்பூசல் -
மிக்கவர் கண்ட நெறி. 27
எச்சில் அற - எச்சில் அறும்படி
முக்கால் குடித்து - முக்குடி குடித்து
வாயை நன்றாக கொப்புளித்து, நன்றாக துடைத்து, முக்குடி குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும்.

நீர் குடிக்கும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இரு கையால் தண்ணீர் பருகார்; ஒரு கையால்,
கொள்ளார், கொடாஅர், குரவர்க்கு; இரு கை
சொறியார், உடம்பு மடுத்து. 28
பருகார் - குடியார்
கொள்ளார் - வாங்கார்
இரண்டு கைகளாலும் தண்ணீர் குடியார். ஒரு கையால் பெரியோர்க்கு கொடுக்க மாட்டார், வாங்க மாட்டார். இரண்டு கைகளையும் வைத்து சொறிய மாட்டார்.

மாலையில் செய்யக் கூடியவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
அந்திப் பொழுது, கிடவார், நடவாரே;
உண்ணார், வெகுளார், விளக்கு இகழார்; முன் அந்தி
அல்கு உண்டு அடங்கல் வழி. 29
அந்திப்பொழுது - மாலைப் பொழுதில்
கிடவார் - படுத்துத் தூங்கார்
மாலைப் பொழுதில் படுத்துத் தூங்குவதும், உண்ணுதலும், நடத்தலும் கூடாது. மாலையில் உண்ணமாட்டார், கோபப்படமாட்டார். முற்பொழுது விளக்கு ஏற்றி இரவில் உண்டு உறங்குதல் நன்று.

உறங்கும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடக்குங்கால், கை கூப்பித் தெய்வம் தொழுது,
வடக்கொடு கோணம் தலை வையார்; மீக்கோள்
உடல் கொடுத்து, சேர்தல் வழி. 30
கிடக்குங்கால் - படுக்கும்பொழுது
தலைசெய்யார் - தலைவைக்காமல்
படுக்கும்பொழுது கடவுளை வணங்கி, வடதிசையில் தலை வைக்காமல், மேலே போர்த்துக் கொள்ளப் போர்வையை போர்த்திப் படுத்தல் ஒழுக்கமாகும்.

இடையில் செல்லாமை முதலியன (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இரு தேவர், பார்ப்பார், இடை போகார்; தும்மினும்,
மிக்கார் வழுத்தின், தொழுது எழுக! ஒப்பார்க்கு
உடன் செல்க, உள்ளம் உவந்து! 31
தும்மினும் - ஒருவர் தும்மினாலும்
உள்ளம் உவந்து - மனம் மகிழ்ந்து
இரண்டு தெய்வங்களுக்கு இடையிலும், பார்ப்பார் பலர் நடுவும் போகக் கூடாது. தும்மும்போது பெரியார் வாழ்த்தினால் அவரை வணங்க வேண்டும். வெளியில் செல்லும் போது நண்பர் எதிர்பட்டால் மனம்மகிழ்ந்து அவருடன் செல்ல வேண்டும்.

மலம், சிறுநீர் கழிக்கக் கூடாத இடங்கள் (இன்னிசை வெண்பா)
புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவகுலம், நிழல், ஆன் நிலை, வெண்பலி, என்று
ஈர்-ஐந்தின்கண்ணும், உமிழ்வோடு இரு புலனும்
சோரார்-உணர்வு உடையார். 32
பைங்கூழ் - பயிருள்ள நிலத்தினும்
ஆப்பி - பசுவின் சாணத்தின்
அறிவுடையார் புல்லின் மீதும், பயிர் நிலத்தும், பசுவின் சாணத்தின் மேலும், சுடுகாட்டிலும், வழியிலும், தண்ணீரிலும், ஆலயங்களிலும், நிழலுள்ள இடத்திலும், சாம்பலிலும் ஆகிய பத்து இடங்களில் எச்சில் உமிழ்தலையும், மலசலங்கழித்தலையும் செய்ய மாட்டார்.

மலம் சிறுநீர் கழிக்கும் முறை (குறள் வெண்பா)
பகல் தெற்கு நோக்கார்; இரா வடக்கு நோக்கார்;
பகல் பெய்யார், தீயினுள் நீர். 33
இரா - இரவில்
வடக்கு நோக்கார் - வடக்கு நோக்காமலும்
பகல் பொழுதில் தெற்கு நோக்காமலும், இரவில் வடக்கு நோக்காமலும், மலசலங் கழித்தல் நல்லது.

மலம் சிறுநீர் கழிக்கும் முறை (இன்னிசை வெண்பா)
பத்துத் திசையும் மனத்தால் மறைத்தபின்,
அந்தரத்து அல்லால், உமிழ்வோடு இரு புலனும்,
இந்திர தானம் பெறினும், இகழாரே-
'தந்திரத்து வாழ்தும்!' என்பார். 34
உமிழ்வோடு - உமிழ்நீரையும்
பத்து திசையினையும் மறைத்துக் கொண்டு, அந்தரத்தில் செய்வதாக நினைத்துக் கொண்டு எச்சில் உமிழ்தலும், மலங்கழித்தலும் செய்ய வேண்டும். இந்திர பதவியே கிடைத்தாலும் வெளிப்படையாக செய்யக்கூடாது.

வாய் அலம்ப ஆகாத இடங்கள் (இன்னிசை வெண்பா)
நடைவரவு, நீரகத்து நின்று, வாய்பூசார்;
வழி நிலை, நீருள்ளும் பூசார்; மனத்தால்
வரைந்து கொண்டு அல்லது பூசார், கலத்தினால்
பெய் பூச்சுச் சீராது எனின். 35
நடைவரவு நின்று - நடக்காமல்
பூசார் - வம்பலப்பார்
நீரிடத்தில் நடக்காமல் நின்று வாயலம்புதல் கூடாது. தேங்கியிருக்கும் நீரிலும் வாயலம்பார். கலத்துள் முகந்து பிறர் பெய்ய வாயை அலம்ப முடியாது.

ஒழுக்கமற்றவை (பஃறொடை வெண்பா)
சுடர் இடைப் போகார்; சுவர்மேல் உமியார்;
இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்;
படை வரினும், ஆடை வளி உரைப்பப் போகார்;
பலர் இடை ஆடை உதிராரே; - என்றும் கடன் அறி காட்சியவர். 36
மாசுணி - பிறர் உடுத்த அழுக்கு உடை
படை வரினும் - படை வந்ததாயினும்
விளக்குக்கும் ஒருவருக்கும் நடுவே போகமாட்டார். சுவரின் மேல் உமிழார். நோய் வரினும் பிறர் உடுத்த அழுக்கு உடையைப் படுக்கவும் போர்த்தவும் பயன்படுத்தமாட்டார். படை வந்தாலும், தம் ஆடை பிறர்மேல் படும்படி செல்ல மாட்டார். அறிவுடையார் பலர் நடுவில் உடையை உதறமாட்டார்கள் கடமை உடைய பெரியவர்கள்.

நரகத்துக்குச் செலுத்துவன (நேரிசை வெண்பா)
பிறர் மனை, கள், களவு, சூது, கொலையோடு,
அறன் அறிந்தார், இவ் ஐந்தும் நோக்கார் - திறன் இலர் என்று
எள்ளப் படுவதூஉம் அன்றி, நிரயத்துச்
செல்வுழி உய்த்திடுதலான். 37
நிரயத்து - நரகத்துக்கு
அறன் அறிந்தார் - ஒழுக்கம் அறிந்தவர்
ஒழுக்கம் அறிந்தவர் பிறருடைய மனையாளை விரும்புவதும், கள் குடிப்பதும், களவு செய்வதும், சூதாடுவதும், கொலை செய்தலும் ஆகிய தீய செயல்களை மனதாலும் நினையார்.

எண்ணக் கூடாதவை (இன்னிசை வெண்பா)
பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்; சிந்திப்பின்,
ஐயம் புகுவித்து, அரு நிரயத்து உய்த்திடும்;
தெய்வமும் செற்றுவிடும். 38
குறளை - கோட்சொல்லுதல்
அழுக்காறு - பொறாமை
அறிவுடையார் பொய் பேசுதலும், கோள் சொல்லுதலும், பிறர் பொருளை விரும்புதலும், பொறாமை கொள்ளுதலும் செய்ய மாட்டார். அப்படிச் செய்தால் இம்மையில் வறுமையும், மறுமையில் நரகமும் வாய்க்கப்படும்; தெய்வமும் அழிந்துவிடும்.

தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க! (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தமக்கு என்று உலை ஏற்றார்; தம்பொருட்டு ஊன் கொள்ளார்;
அடுக்களை எச்சில் படாஅர்; மனைப் பலி
ஊட்டினமை கண்டு உண்க, ஊண்! 39
ஊண் கொள்ளார் - உணவு உட்கொள்ளார்
அடுக்களை - அட்டிலின் கண்
பிறர்க்காக அன்றி தனக்காக உலை வையார், உணவு உட்கொள்ளார், எச்சிற்படுத்தார், மனையில் இருக்கும் தெய்வங்களுக்கு ஊட்டினதை அறிந்து பின் தாம் உண்பார்.

சான்றோர் இயல்பு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உயர்ந்ததின் மேல் இரார்; - உள் அழிவு செய்யார்,
இறந்து இன்னா செய்தக்கடைத்தும்; - குரவர்,
இளங் கிளைகள் உண்ணும் இடத்து. 40
இளம் ‏கிளைகள் - புதிய சுற்றத்தார்
குரவர் - பெரியோர்
புதிய சுற்றத்தார் தம்மொடு சேர்ந்து உண்ணும் போது பெரியார் உயர்ந்த இடத்தில் அமரமாட்டார், துன்பம் தரும் செயல்களைச் செய்ய மாட்டார், முறை கடந்து இன்னாதவற்றைச் செய்யமாட்டார்.

சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கண் எச்சில் கண் ஊட்டார்; காலொடு கால் தேயார்;
புண்ணிய ஆய தலையோடு உறுப்பு உறுத்த! -
நுண்ணிய நூல் உணர்வினார். 41
காலொடு கால் - தங்காலோடு காலை
ஒருவன் தன் கண்ணிற்கு மருந்தெழுதிய கோல் கொண்டு பிறர் கண்ணிற்கு உபயோகப் படுத்தல் கூடாது. காலொடு கால் தேய்க்கக் கூடாது. புண்ணியப் பொருள்களைத் தலையிலும், பிற உறுப்புகளிலும் ஒற்றிக் கொள்ளக் வேண்டும் என்பர் நுட்பமான அறிவினை உடையவர்கள்.

மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
'தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்; நீர் ஆடியபின்,
ஈர்-ஆறு நாளும் இகவற்க!' என்பதே -
பேர் அறிவாளர் துணிவு. 42
ஈர் ஆறு நாளும் - பன்னிரண்டு நாள் அளவும்
இகவற்க - அகலாதொழிக
தம் மனைவியர்க்கு பூப்பு நிகழ்ந்தால், நாள் மூன்றும் அவரை நோக்கார், நீராடியபின் பன்னிரண்டு நாளும் அகலாது இருத்தல் நன்மையாகும் என்பர் மிக்க ஆராய்ச்சியாளர்.

உடன் உறைதலுக்கு ஆகாத காலம் (இன்னிசை வெண்பா)
உச்சிஅம் போழ்தோடு, இடை யாமம், ஈர்-அந்தி,
மிக்க இரு தேவர் நாளோடு, உவாத்திதி நாள்,
அட்டமியும், ஏனைப் பிறந்த நாள், இவ் அனைத்தும்
ஒட்டார்-உடன் உறைவின்கண். 43
ஈர் அந்தி - மாலையும் காலையும்
ஒட்டார் - உடன்படார்
நடுப்பகலிலும், மாலையிலும், காலையும், ஆதிரையும், ஓணமும், அட்டமியிலும், பிறந்த நாள் அன்றும், பௌர்ணமியிலும், தம் மனைவியரோடு சேர்ந்திருக்க மாட்டார் நல்லோர்.

நாழி முதலியவற்றை வைக்கும் முறை (இன்னிசை வெண்பா)
நாழி மணைமேல் இரியார்; மணை கவிழார்;
கோடி கடையுள் விரியார்; கடைத்தலை,
ஓராது, கட்டில் படாஅர்; அறியாதார்-
தம் தலைக்கண் நில்லாவிடல்! 44
நாழி - படி
கோடி - புத்தாடை
நாழியை மணைமேல் வைக்கக் கூடாது. மணையைக் கவிழ்த்து வைத்தல் கூடாது. புத்தாடையைத் தலைக்கடியில் வைக்கமாட்டார். பலர் செல்லும் இடத்தில் கட்டிலில் படுக்க மாட்டார். தம்மை அறியாதவனெதிரில் நிற்க மாட்டார்.

பந்தலில் வைக்கத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துடைப்பம், துகட் காடு, புல் இதழ், செத்தல்
கருங் கலம், கட்டில் கிழிந்ததனோடு, ஐந்தும்,
பரப்பற்க, பந்தரகத்து! 45
செத்தல் - பழைமையான
கருங்கலம் - கரிச்சட்டி
துடைப்பமும், பூஜிதமும், கரிச்சட்டியும், கிழிந்த கட்டிலும் மணப்பந்தலின் கீழ் பரப்பாதிருக்க வேண்டும்.

வீட்டைப் பேணும் முறைமை (பஃறொடை வெண்பா)
காட்டுக் களைந்து கலம் கழீஇ, இல்லத்தை
ஆப்பி நீர் எங்கும் தெளித்து, சிறுகாலை,
நீர்ச் சால், கரகம், நிறைய மலர் அணிந்து,
இல்லம் பொலிய, அடுப்பினுள் தீப் பெய்க-
நல்லது உறல் வேண்டுவார்! 46
நல்லது உறல் - நன்மையடைதலை
இல்லம் - வீடு
நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலை துயில் எழுந்து, வீடு பெருக்கி, கலங்களைக் கழுவி நீர் நிறைக்கும் சாலையும், கரகங்களையும் பூ அணிவித்து அடுப்பினுள் தீ உண்டாக்க வேண்டும்.

நூல் ஓதுதற்கு ஆகாத காலம் (இன்னிசை வெண்பா)
அட்டமியும், ஏனை உவாவும், பதினான்கும்,
அப் பூமி காப்பார்க்கு உறுகண்ணும், மிக்க
நிலத் துளக்கு, விண் அதிர்ப்பு, வாலாமை, - பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள். 47
அட்டமியும் - எட்டா நாளும்
உவாவும் - அமாவாசையும், பௌர்ணமியும்
அட்டமியும், அமாவாசையும், பௌர்ணமியும், பதினான்காம் நாளும் அரசர்க்குத் துன்பம் வரும் காலமாகும். இந்நாட்கள் பூமி அதிர்ச்சி உள்ள நாட்கள், மேக முழக்கமும் தூய்மை அல்லாத நாட்கள். எனவே அந்தணர்கள் வேதம் ஓதாத நாட்களாகும்.

அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கலியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி, என்று
ஐவகை நாளும், இகழாது, அறம் செய்க!
பெய்க, விருந்திற்கும் கூழ்! 48
இகழாது - இகழாதே
அறம் செய்க - கொடையறம் செய்க
தன் கல்யாண நாளிலும், தேவர்க்கு சிறப்பான நாளிலும், பிதிருக்களுக்கு சிறப்பு செய்யும் நாளிலும், விழா நாளிலும், வேள்வி செய்யும் நாளிலும், விருந்தினர்க்கு சோறிட்டுக் கொடை அறம் செய்ய வேண்டும்.

நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடை, நடை, சொற் செலவு, வைதல், இந் நான்கும் -
நிலைமைக்கும், ஆண்மைக்கும், கல்விக்கும் தத்தம்
குடிமைக்கும், தக்க செயல்! 49
உடை - உடுத்தலும்
சொற் செலவு - சொற்களைச் சொல்லுதல்
தங்களுடைய பதவிக்கும், கல்விக்கும், ஆற்றலுக்கும், குடிப்பிறப்புக்கும் ஏற்பவே உடை, நடை, சொற்கள், திட்டுதல் இவை அமையும்.

கேள்வியுடையவர் செயல் (இன்னிசை வெண்பா)
பழியார்; இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவு இன்றி,
இல்லாரை எள்ளி, இகந்து உரையார்; - தள்ளியும்,
தாங்க அருங் கேள்வியவர். 50
இசைவு இன்றி - முறையில்லாமல்
தள்ளியும் - தவறியும்
நன்கு கற்றுத் தேர்ந்தவர், பலருள் ஒருவரைத் தூற்றார், படுத்துத் தூங்கார், தமக்குப் பொருந்தாத செயல்களை ஒப்புக் கொண்டு பின்னர் செய்யாது விடமாட்டார், வறியவரை இழிவாகப் பேச மாட்டார்.

தம் உடல் ஒளி விரும்புபவர் செய்யத் தக்கவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மின் ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும்,
தம் ஒளி வேண்டுவார் நோக்கார்; பகற் கிழவோன்
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று. 51
வீழ்மீனும் - விழுகின்ற எரிநட்சத்திரத்தையும்
முன் ஒளியும் - காலை ஒளியும்
தம் கண்ணின் ஒளியும் புகழும் கெடாமல் இருக்க, மின்னலையும், எரிநட்சத்திரத்தையும், வேசியரது ஒப்பனையையும், காலை ஒளியையும், மாலை ஒளியையும் பார்க்கக் கூடாது.

தளராத உள்ளத்தவர் செயல் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
படிறும், பயனிலவும், பட்டி உரையும்,
வசையும், புறனும், உரையாரே - என்றும்
அசையாத உள்ளத்தவர். 52
அசையாத - ஒழுக்கத்தினின்று தவறாத
படிறும் - வஞ்சனை சொல்லையும்
நல்லொழுக்கம் உடையவர், வஞ்சனை சொல்லையும், பயனில்லாத சொல்லையும், பழிச்சொல்லையும், புறங்கூறுதலையும் சொல்ல மாட்டார்.

ஒழுக்கமுடையவர் செய்யாதவை (இன்னிசை வெண்பா)
தெறியொடு, கல்லேறு, வீளை, விளியே,
விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம்
பயிற்றார் - நெறிப்பட்டவர். 53
கல்லேறு - கல் எறிதல்
வீளை - கனைத்தல்
ஒழுக்கமுடையோர், கல் எறிதல், கனைத்து அழைத்தல், ஒருவனைப் போலவே தாமும் இகழ்ந்து செய்து காட்டுதல், தன் உறுப்புகளை அழித்தல், கோபம், ஒளித்தல் ஆகியவற்றைச் செய்ய மாட்டார்.

விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முறுவல் இனிதுரை, கால், நீர், மணை, பாய்,
கிடக்கையோடு, இவ் ஐந்தும் என்ப - தலைச் சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு. 54
முறுவல் - புன்சிரிப்பு
தலை - தம்மிடத்து
அறிவுடையோர் தம் நண்பர்க்கு, புன்சிரிப்புடன் கால் கழுவ நீர் அளித்து, உட்கார மணை கொடுத்து, உணவளித்தலோடு, படுக்க பாயும், இருக்க இடமும் கொடுத்து உதவுவர்.

அறிஞர் விரும்பாத இடங்கள் (பஃறொடை வெண்பா)
கறுத்த பகை முனையும், கள்ளாட்டுக்கண்ணும்
நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும்,
குணம் நோக்கிக் கொண்டவர் கோள் விட்டுழியும், -
நிகர் இல் அறிவினார் வேண்டார் - பலர் தொகு
நீர்க்கரையும், நீடு நிலை. 55
கறுத்த - கோபித்த
கோள் - கோட்பாட்டை
அறிவுடையோர், பகைவரிடத்திலும், கள் குடித்து ஆடும் இடத்திலும், மனமில்லாத வேசியருடனும், தெருவிலும், நட்பு கொண்டவர் விலகிச் செல்லும் இடத்திலும், பலர் ஒன்று கூடும் தண்ணீர்த் துறையிலும் நிற்க விரும்ப மாட்டார்.

தவிர்வன சில (பஃறொடை வெண்பா)
முளி புல்லும், கானமும், சேரார்; தீக்கு ஊட்டார்;
துளி விழ, கால் பரப்பி ஓடார்; தெளிவு இலாக்
கானம், தமியர், இயங்கார்; துளி அஃகி,
நல்குரவு ஆற்றப் பெருகினும், செய்யாரே,
தொல் வரவின் தீர்ந்த தொழில். 56
கானமும் - காட்டினிடத்தும்
துளி விழ - மழை பெய்கையில்
முற்றிய புல்லிடமும், காட்டினிடத்தும் சேரமாட்டார்; அவற்றை நெருப்பிலிட்டு அழித்து விடார்; மழையில் ஓடமாட்டார்; காட்டில் தனியாக செல்ல மாட்டார்; வறுமையிலும் தமது ஒழுக்கத்திலிருந்து மாறமாட்டார், அறிவுடையோர்.

நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை (இன்னிசை வெண்பா)
பாழ் மனையும், தேவ குலனும், சுடுகாடும்,
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்; -
நோய் இன்மை வேண்டுபவர். 57
பாழ்மனையும் - பாழான வீட்டினுள்ளும்
ஊர் இல்வழி - ஊரில்லாத இடத்தில்
நோயற்ற வாழ்வு வாழ விரும்புவோர், பாழ் வீட்டிலும், கோயிலிலும், சுடுகாட்டிலும், ஊரில்லாத இடத்தில் உள்ள மரத்திடமும் பகல் பொழுதில் தூங்கமாட்டார்.

ஒருவர் புறப்படும்போது செய்யத் தகாதவை (இன்னிசை வெண்பா)
எழுச்சிக்கண், பின் கூவார், தும்மார்; வழுக்கியும்,
எங்கு உற்றுச் சேறிரோ?' என்னாரே; முன் புக்கு,
எதிர் முகமா நின்றும் உரையார்; இரு சார்வும்;
கொள்வர், குரவர் வலம். 58
வழுக்கியும் - மறந்தும்
என்னார் - என்று கேளார்
ஒருவர் எழுந்து போகும்போது அழைக்க மாட்டார், தும்ம மாட்டார், எங்கே செல்கின்றீர் என்று கேட்க மாட்டார். அவர் எதிர் நின்று பேசமாட்டார். அவருக்கு இருபுறத்திலும் பேசுவார். அவரைச் சுற்றிச் செல்வார்.

சில தீய ஒழுக்கங்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
'உடம்பு நன்று!' என்று உரையார்; ஊதார், விளக்கும்;
அடுப்பினுள் தீ நந்தக் கொள்ளார்; அதனைப்
படக் காயார், தம்மேல் குறித்து. 59
நந்த - அவியும்படி
கொள்ளார் - எடுக்க மாட்டார்
பிறரைப் பார்த்து, உமது உடல் நன்றாயிருக்கிறதென்று சொல்லமாட்டார். விளக்கையும், அடுப்பிலுள்ள நெருப்பையும் அணைக்க மாட்டார். அந்நெருப்பிடம் குளிர் காய மாட்டார்.

சான்றோருடன் செல்லும் போது செய்யத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
யாதொன்றும், ஏறார், செருப்பு; வெயில் மறையார்; -
ஆன்ற அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்கு
ஓர் ஆறு செல்லும் இடத்து. 60
ஆன்ற - மிகுந்த
அவிந்த - அமைதியடைந்த
பெரியாருடன் செல்லும்போது எதன் மேலும் ஏறிச் செல்ல மாட்டார். காலில் செருப்பு அணிய மாட்டார். குடை பிடித்துச் செல்ல மாட்டார்.

நூல்முறை உணர்ந்தவர் துணிவு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வால் முறையான் வந்த நான் மறையாளரை
மேல் முறைப் பால் தம் குரவரைப்போல் ஒழுகல் -
நூல் முறையாளர் துணிவு. 61
ஒழுகல் - நடத்தல்
துணிவு - கொள்கை
வேதங்களை ஓதும் அந்தணரை, பெரியோரைப் போல நடத்தல் கற்றவர்களின் கொள்கைகளாகும்.

சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கால்வாய்த் தொழுவு, சமயம், எழுந்திருப்பு,
ஆசாரம் என்ப, குரவர்க்கு இவை; இவை
சாரத்தால் சொல்லிய மூன்று. 62
கால்வாய் - காலின் கண்
ஆசாரம் - ஒழுக்கம்
பெரியோர்க்குச் செய்யும் ஒழுக்கம், காலில் தொழுதலும், நிற்றலும், அவரைக் கண்டவுடன் எழுந்திருத்தலும் ஆகும்.

கற்றவர் கண்ட நெறி (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துறந்தாரைப் பேணலும், நாணலும், தாம் கற்ற
மறந்தும் குரவர் முன் சொல்லாமை, மூன்றும்,
திறம் கண்டார் கண்ட நெறி. 63
துறந்தாரை - துறவிகளை
நாணலும் - பழிக்கு அஞ்சுதலும்
துறவிகளைப் போற்றுதலும், பழிக்கு அஞ்சுதலும், பெரியோர் முன் தான் கற்றவற்றைச் சொல்லாது இருத்தலும் சிறந்த ஒழுக்கமாகும்.

வாழக்கடவர் எனப்படுபவர் (இன்னிசை வெண்பா)
பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார்,
மூத்தார், இளையார், பசு, பெண்டிர், என்று இவர்கட்கு
ஆற்ற வழி விலங்கினாரே - பிறப்பினுள்
போற்றி எனப்படுவார். 64
தவரே - தவசியரும்
இளையார் - பிள்ளைகளும்
அந்தணரும், தவசியரும், சுமையுடையவரும், நோய்வாய்ப்பட்டவரும், பெரியோர்களும், பிள்ளைகளும், பசுக்களும், பெண்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு வழிவிட்டுப் போனவர்களே மக்களாகப் பிறந்தவர்களுள் மற்றவர்களால் போற்றப்படுவர்.

தனித்திருக்கக் கூடாதவர் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஈன்றாள், மகள், தன் உடன்பிறந்தாள், ஆயினும்,
சான்றார் தமித்தா உறையற்க - ஐம் புலனும்
தாங்கற்கு அரிது ஆகலான்! 65
ஐம்புலனும் - ஐந்து புலன்களையும்
ஈன்றாள் - தாய்
அறிவால் மிகுந்தவர்கள் ஐந்து புலன்களையும் தடுத்தல் அரிது என்பதால் தம்முடைய தாயுடனும், உடன் பிறந்தவளுடனும், மகளுடனும் தனியாகத் தங்க மாட்டார்.

மன்னருடன் பழகும் முறை (இன்னிசை வெண்பா)
கடை விலக்கின், காயார்; கழி கிழமை செய்யார்;
கொடை அளிக்கண் பொச்சாவார்; கோலம் நேர் செய்யார்;
இடை அறுத்துப் போகி, பிறன் ஒருவற் சேரார்; -
'கடைபோக வாழ்தும்!' என்பார். 66
கடை - அரசருடைய வாயிலில்
காயார் - வெகுளார்
அரசருடைய வாயிலில் காவலர் தடுத்தால் கோபம் கொள்ள மாட்டார். அவருக்குக் கொடுக்க வேண்டிய இறை பொருளைக் கொடுக்காமல் இருக்க மாட்டார். அரசன் போலத் தம்மை அணி செய்து கொள்ள மாட்டார். அரசவையில் நடுவே சென்று மற்றொருவனைச் சேர மாட்டார்.

குற்றம் ஆவன (இன்னிசை வெண்பா)
தமக்கு உற்ற கட்டுரையும், தம்மில் பெரியார்
உரைத்தற்கு உற்ற உரையும், அஃது அன்றிப்
பிறர்க்கு உற்ற கட்டுரையும், சொல்லற்க! சொல்லின்,
வடுக் குற்றம் ஆகிவிடும். 67
கட்டுரையும் - உறுதிமொழியும்
உரைத்தற்கு - சொல்லியதற்கு
தமக்கு உற்ற உறுதிமொழியையும், அரசனால் பெரியராக மதிக்கப்பட்டவர்கள் சொல்லிய சொல்லையும், பிறர்க்குரிய உறுதிச் சொல்லையும் அரசனிடத்துச் சொல்லுதல் பெரிய குற்றமாகும்.

நல்ல நெறி (இன்னிசை வெண்பா)
பெரியார் உவப்பன தாம் உவவார்; இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர்; அறிவு அறியாப்
பிள்ளையேயானும் இழித்து உரையார், தம்மோடு
அளவளாவு இல்லா இடத்து. 68
உவப்பன - விரும்புகின்ற
புகாஅர் - நுழையார்
பெரியோர்கள் விரும்புவனவற்றைத் தாம் விரும்பமாட்டார். கீழ்மக்களை வீட்டினுள் அழைத்துக் கொண்டு வரமாட்டார். தன்னுடைய பிள்ளையே ஆயினும் இழிவாகப் பேசமாட்டார். தம்மோடு நட்பாக இல்லை என்றாலும் மற்றவர்களை இகழ்ந்து பேசமாட்டார்.

மன்னர் செய்கையில் வெறுப்படையாமை முதலியன (இன்னிசை வெண்பா)
முனியார்; துனியார்; முகத்து எதிர் நில்லார்;
தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார்;
'இனியவை யாம் அறிதும்!' என்னார்; கசிவு இன்று,
காக்கை வெள்ளென்னும் எனின். 69
முனியார் - அரசன் செய்தனவற்றை வெறுக்கார்
துனியார் - அவனொடு கலகங்கொள்ளார்
அரசன் செய்பவற்றை வெறுக்கார். அவனோடு சண்டையிட மாட்டார். அரசன் தனிமையாய் இருக்குமிடத்தில் தனது குறையைச் சொல்ல மாட்டார். நாம் அறிவோம் என்று தானே முன்வந்து கூறமாட்டார். காக்கை வெள்ளை என்றாலும் அன்பின்றி வெகுளுமாறு மறுத்து உரையார். அரசன் சொற்படியே நடப்பர்.

மன்னன் முன் செய்யத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உமிவும், உயர்ந்துழி ஏறலும், பாக்கும்,
வகைஇல் உரையும், வளர்ச்சியும், ஐந்தும்
புணரார் - பெரியாரகத்து. 70
உமிவும் - உமிழ்தலும்
உயர்ந்துழி - உயர்வாகிய இடத்தில்
எச்சில் உமிழ்தலும், உயர்வாகிய இடத்தில் ஏறுதலும், தாம்பூலம் போடுதலும், தகுதியில்லாததைச் சொல்லுதலும், தூங்குதலும் ஆகிய இந்த ஐந்திணையும் பெரியோர் அரசர் முன்பு செய்ய மாட்டார்கள்.

மன்னன் முன் சொல்லக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவர் முன், செல்வமும், கல்வியும், தேசும்,
குணனும், குலம் உடையார் கூறார் - பகைவர்போல்
பாரித்து, பல் கால் பயின்று. 71
குலம் உடையார் - நற்குடிப்பிறப்புடையார்
பலகால் - பல முறை
நற்குடியில் பிறந்தார் அரசர் முன், செல்வத்தையும், கல்வியையும், விளக்கத்தையும், குணங்களையும் பல முறை பரப்பிச் சொல்ல மாட்டார்.

வணங்கக்கூடாத இடங்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்,-
வணங்கார் - குரவரையும் கண்டால்; அணங்கொடு
நேர் பெரியார் செல்லும் இடத்து. 72
அணங்கொடு - தெய்வங்களும்,
வணங்கார் - தொழார்
அரசர் மாளிகையிலும், தேவாலயங்களிலும், பெரியோரை வணங்கமாட்டார். அரசரும், தெய்வங்களும் ஊர்வலம் வரும்போதும் பெரியாரை வணங்க மாட்டார்.

மன்னர் முன் செய்யத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நகையொடு, கொட்டாவி, காறிப்பு, தும்மல்,
இவையும் பெரியார் முன் செய்யாரே; செய்யின்,
அசையாது, நிற்கும் பழி. 73
நகையொடு - சிரிப்பும்
அசையாது - குறையாது
சிரிப்பும், கொட்டாவி விடுதலும், காறியுமிழ்தலும், தும்முதலும், அரசர் முன்பு செய்தால் பழி நிலைக்கும்.

ஆசிரியரிடம் நடக்கும் முறைமை (இன்னிசை வெண்பா)
நின்றக்கால், நிற்க, அடக்கத்தால்! என்றும்
இருந்தக்கால், ஏவாமை ஏகார்; பெருந்தக்கார்
சொல்லின் செவி கொடுத்துக் கேட்டீக! மீட்டும்
வினாவற்க, சொல் ஒழிந்தக்கால்! 74
நிற்க - சும்மா இருக்கக் கடவர்
ஏவாமை - அவர் கட்டளையிடாமலிருக்க
நல்ல மாணவர்கள் அடக்கத்தோடு ஆசிரியர் கற்பிக்காத போது சும்மா இருக்க வேண்டும், அவர் முன்பு அவர் கட்டளை இல்லாமல் எழுந்து போகக் கூடாது, அவர் சொல்லிக் கொடுக்கும்போது செவி கொடுத்துக் கேட்டு ஒப்பிக்க வேண்டும். அவர் ஒன்றும் சொல்லாவிட்டால் கேள்வி கேட்கக் கூடாது.

சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடுக்கை இகவார், செவி சொறண்டார்; கை மேல்-
எடுத்து உரையார்; பெண்டிர்மேல் நோக்கார்; செவிச் சொல்லும்
கொள்ளார்; பெரியார் அகத்து. 75
உடுக்கை - உடையை
இகவார் - அவிழ்க்க மாட்டார்
பெரியோர் கூடியுள்ள அவையில் உடையை அவிழ்க்க மாட்டார், காதைச் சொறிய மாட்டார், கையை உயர தூக்கிப் பேசார், பெண்டிரைப் பார்க்க மாட்டார். பிறர் காதில் சொல்லுதலையும் கேட்க மாட்டார்.

சொல்லும் முறைமை (இன்னிசை வெண்பா)
விரைந்து உரையார்; மேன்மேல் உரையார்; பொய் ஆய
பரந்து உரையார்; பாரித்து உரையார்; - ஒருங்கு எனைத்தும்
சில் எழுத்தினானே, பொருள் அடங்க, காலத்தால்
சொல்லுக, செவ்வி அறிந்து! 76
பரந்து உரையார் - விரித்துச் சொல்லார்
சில் எழுத்தின் - சிறிய சொற்றொடரால்
பாரித்து உரையார் - விளக்கிப் பேசமாட்டார்
விரைவாகப் பேசமாட்டார், அடிக்கடி பல தடவை பேசார், பொய்யை விரிவாகப் பேசமாட்டார், விளக்கிப் பேசமாட்டார், சிறிய சொற் தொடரால் சொல்ல வேண்டிய பொருள்களை காலத்துக்கு ஏற்றபடி கேட்போர் சமயம் அறிந்து சொல்ல வேண்டும்.

நல்ல குலப்பெண்டிர் இயல்பு (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தம் மேனி நோக்கார்; தலை உளரார்; கைந் நொடியார்,
எம் மேனி ஆயினும் நோக்கார்; தலைமகன்-
தம் மேனி அல்லால் பிற. 77
அல்லால் - அன்றி
கை நொடியார் - கையை நொடித்தல்
நற்குலப் பெண்டிர், பிற ஆடவரைக் காண மாட்டார். தமது உடல் அழகைப் பார்த்துக் கொள்ள மாட்டார். தலை மயிரைக் கோதுதல், கையை நொடித்தல் முதலியன செய்ய மாட்டார்.

மன்னர் அவையில் செய்யக் கூடாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பிறரொடு மந்திரம் கொள்ளார்; இறைவனைச்
சாரார்; செவி ஓரார்; சாரின், பிறிது ஒன்று
தேர்வார்போல் நிற்க, திரிந்து! 78
மந்திரங்கொள்ளார் - மறைவாக ஆராயார்
சாரின் - நிற்க நேர்ந்தால்
பிறருடன் மறைவாக ஆராய மாட்டார், அரசன் பிறருக்குச் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார். அப்படிப் பேசும் போது வேறொன்றை ஆராய்வார் போல் முகம் மாறி நிற்பர்.

பெரியோரிடம் உள்ள முச்செயல்கள் (நேரிசை வெண்பா)
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள்
இன்ப வகையான் ஒழுகலும், அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமை, - இம் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள. 79
ஒழுகலும் - இன்புற்று நடத்தலும்
இல்லம்புகாமை - வீட்டில் நுழையாமையும்
துன்பம் வந்த காலத்திலும், இன்பம் வந்த காலத்தும் அமைதியாக இருத்தலும், அன்பினின்று வேறுபட்டவர் வீட்டில் நுழையாமையும் பெரியாரிடத்தில் உண்டு.

சான்றோர் பெயர் முதலியவற்றைக் கூறாமை (நேரிசை வெண்பா)
தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார்; இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர்; பெரியாரை
என்றும் முறை கொண்டு கூறார்; புலையரையும்
நன்கு அறிவார் கூறார், முறை. 80
தெறுவந்தும் - வெகுண்டாராயினும்
உறுமி - மனையாளைக் கோபித்து
கோபத்திலும் பெரியோர் பெயரை வாயால் சொல்லமாட்டார். வீட்டில் மனைவியைக் கோபித்து நீண்ட பொழுது இருக்க மாட்டார். பெரியோரையும் கீழ்மக்களையும் முறைமை பாராட்டிப் பேச மாட்டார்.

ஆன்றோர் செய்யாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
புழைக்கடைப் பின் புகார்; கோட்டி, உரிமை,
இவற்றுக்கண் செவ்வியார், நோக்காரே, அவ்வத்
தொழிற்கு உரியர் அல்லாதவர். 81
செவ்வியார் - நற்குணமுடையோர்
புழைக்கடை - ஒருவர் வீட்டின் பின்புற வாயில்
நற்குணமுடையோர் பின் வாயில் வழியாக ஒருவர் வீட்டில் நுழைய மாட்டார். அரசன் அவை கூடியிருக்குமிடத்திலும், மனைவியுடன் இருக்கும்போதும் போய்ப் பார்க்க மாட்டார்.

மனைவியின் உள்ளம் மாறுபடுதல் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வண்ணமகளிர் இடத்தொடு தம் இடம்,
ஒள்ளியம் என்பார், இடம் கொள்ளார்; தெள்ளி,
மிகக் கிழமை உண்டுஎனினும், வேண்டாவே; - பெண்டிர்க்கு
உவப்பன வேறாய்விடும். 82
தெள்ளி - தெளிவுற்று
பெண்டிர்க்கு - மனைவியர்க்கு
அறிவுடையவர்கள், தம்மை அழகு செய்து கொள்ளும் விலை மகளிர் இல்லத்திற்கு அருகில் வாழ மாட்டார். அந்த இடம் தமக்கு உரிமையுள்ள இடம் என்றாலும் மனைவியின் மனத்திற்காக அவ்விடத்தில் வசிக்க மாட்டார்.

கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை (இன்னிசை வெண்பா)
நிரல்படச் செல்லார்; நிழல் மிதித்து நில்லார்;
உரையிடை ஆய்ந்து உரையார், ஊர் முனிவ செய்யார்;
அரசர் படை அளவும் சொல்லாரே; - என்றும்,
'கடைபோக வாழ்தும்!' என்பார். 83
கடைபோக - இறுதியளவும்
நிரல்பட - வரிசைப்பட
எப்போதும் ஒரே தன்மையாக வாழ்பவர்கள் ஒருவருடைய வரிசைப்பட போகமாட்டார். ஒருவருடைய நிழலை மிதித்து நிற்க மாட்டார். பேசும்போது நடுவில் ஆராய்ந்து பேசார், ஊரார் வெறுக்கத்தக்கவைகளைச் செய்யார், அரசர் படைத் தொகையையும் சொல்லமாட்டார்.

பழகியவை என இகழத் தகாதவை (இன்னிசை வெண்பா)
அளை உறை பாம்பும், அரசும், நெருப்பும்,
முழை உறை சீயமும், என்று இவை நான்கும்,
இளைய, எளிய, பயின்றன, என்று எண்ணி,
இகழின், இழுக்கம் தரும். 84
முழை உறை - குகையில் தங்குகின்ற
சீயமும் - சிங்கமும்
புற்றில் வாழும் பாம்பும், அரசரும், தீயும், குகையில் இருக்கும் சிங்கமும், சிறியவை என்றும், எளியனவென்றும், பழகினவென்றும் நினைத்து இகழ்ந்தால் துன்பத்தைத் தரும்.

செல்வம் கெடும் வழி (நேரிசை வெண்பா)
அறத்தொடு, கல்யாணம், ஆள்வினை, கூரை,
இறப்பப் பெருகியக்கண்ணும், திறப்பட்டார்
மன்னரின் மேம்படச் செய்யற்க! செய்பவேல்,
மன்னிய செல்வம் கெடும். 85
திறப்பட்டார் - அறிவுடையோர்
ஆள்வினை - செய்யும் முயற்சிகளையும்
அறிவுடையோர், செல்வம் வந்த காலத்தும் அறச்செயல்களையும், கல்யாணங்களையும், செய்யும் முயற்சிகளையும், வீட்டையும் அரசன் செய்வதையும் அதிகமாகச் செய்யாதிருக்க வேண்டும். செய்வாராயின் அச் செலவம் அழிந்து விடும்.

பெரியவரை 'உண்டது யாது' என வினவக் கூடாது (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உண்டது கேளார், குரவரை, மிக்காரை,
கண்டுழி; கண்டால், முகம் திரியார், புல்லரையும்
உண்டது கேளார் விடல்! 86
கண்டுழி - கண்டவிடத்து
புல்லரையும் - கீழோரையும்
பெரியோரைக் கண்டால், நீங்கள் உண்டது யாது எனக் கேட்கமாட்டார். கீழோரைக் கண்டால் முகம் திரிந்து நீங்கள் உண்டது யாது என்று கேட்க மாட்டார்.

கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்தாரைக் கால் கழுவார்; பூப்பெய்யார்; சாந்தம்
மறந்தானும் எஞ் ஞான்றும் பூசார்; கிடந்தார்கண்
நில்லார், தாம் - கட்டில்மிசை. 87
கிடந்தாரை - படுத்திருப்பவரது
கட்டில்மிசை - கட்டிலின் மீது
எப்பொழுதும் படுத்திருப்பவரது காலைக் கழுவமாட்டார், அவருக்கு பூப்புனையார், அவருக்குச் சந்தனம் பூசார், அருகில் நிற்கவும் மாட்டார்.

பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உதவிப் பயன் உரையார்; உண்டி பழியார்;
அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார்; -
'திறத்துளி வாழ்தும்!' என்பார். 88
பழியார் - இகழ்ந்துரையார்
உள்ளி - நினைந்து
பெரியோரைப் போல ஒழுக்கத்துடன் வாழ விரும்புபவர் உணவை இகழ்ந்து உரைக்க மாட்டார். அறச்செயலையும், தாம் செய்த விரதத்தையும் தாமே புகழ்ந்து உரைக்க மாட்டார். உதவியின் பயனைத் தாமே எடுத்து சொல்ல மாட்டார்.

கிடைக்காதவற்றை விரும்பாமை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எய்தாத வேண்டார்; இரங்கார், இழந்ததற்கு,
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்; -
மெய்யாய காட்சியவர். 89
எய்தாத - தனக்கு கிடைத்தற்கரியவற்றை
இரங்கார் - வருந்தார்
உண்மையாக வாழ விரும்புபவர் தமக்குக் கிடைத்தற்கு அரியவற்றை விரும்பார். தொலைந்து போன பொருளை நினைத்து வருந்த மாட்டார். துன்பத்திலும் மனம் கலங்க மாட்டார்.

தலையில் சூடிய மோத்தல் முதலானவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலைக்கு இட்ட பூ மேவார்; மோந்த பூச்சூடார்;
பசுக் கொடுப்பின், பார்ப்பார் கைக் கொள்ளாரே; என்றும்,
புலைக்கு எச்சில் நீட்டார்; விடல்! 90
மேவார் - தாம் முகவார்
சூடார் - அணியார்
தலையில் முடிந்த பூவையும், மோந்த பூவையும் அணியார். பிராமணர் தானமாக பசுவினைக் கொடுத்தாலும், பெரியோர் அதனை வாங்க மாட்டார். எச்சிலுணவைக் கொடுக்க மாட்டார்.

பழியாவன (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மோட்டுடைப் போர்வையோடு, ஏக்கழுத்தும், தாள் இசைப்பு,
காட்டுளேயானும், பழித்தார் - மரம் தம்மின்
மூத்த உள, ஆகலான். 91
ஏக்கழுத்தும் - இறுமாந்திருத்தலும்
உள ஆகலான் - உளவாயிருப்பதனால்
காட்டினிடத்தில் தம்மினும் மூத்தன இருப்பதால், உடலின் மீது போர்த்தலும், செருக்கோடு இருத்தலும் பாவமாகும்.

அந்தணரின் சொல்லைக் கேட்க! (நேரிசை வெண்பா)
தலைஇய நற் கருமம் செய்யுங்கால், என்றும்,
புலையர்வாய் நாள் கேட்டுச் செய்யார்; தொலைவு இல்லா
அந்தணர்வாய் நாள் கேட்டுச் செய்க - அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்பது இல! 92
தலைஇய - மேலான
தொலைவு - ஒழுக்கக்கேடு
நற்செயல்களைச் செய்யும்போது, புலையாரிடத்து நாள் கேட்டுச் செய்ய மாட்டார். அந்தணரிடத்தே நாற்கேட்டு, அவர் வாய்மொழிப்படி நற்கருமம் செய்ய வேண்டும்.

சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மன்றத்து நின்று உஞற்றார்; மாசு திமிர்ந்து இயங்கார்;
என்றும் கடுஞ் சொல் உரையார்; இருவராய்
நின்றுழியும் செல்லார்; - விடல்! 93
மன்றத்து நின்று - சாறோர் அவையிலிருந்து
மாசு - அழுக்கு
சான்றோர் அவையில் குறும்பு செய்ய மாட்டார். அழுக்கை உதிர்த்துக் கொண்டு செல்லார். கடுமையான சொல்லைச் சொல்லார். இரண்டு பேராய் நின்று பேசுமிடத்திற்குப் போகமாட்டார். ஆகவே இவைகளைச் செய்யாதிருத்தல் வேண்டும்.

ஐயம் இல்லாத அறிவினர் செய்கை (இன்னிசை வெண்பா)
கை சுட்டிக் கட்டுரையார்; கால்மேல் எழுத்து இடார்,
மெய் சுட்டி, இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார்;
கையில் குரவர் கொடுப்ப, இருந்து ஏலார்; - ஐயம் இல் காட்சியவர். 94
கட்டுரையார் - பேசார்
காட்சியவர் - அறிவுடையவர்
அறிவுடையோர், பெரியோர் முன் கை காட்டிப் பேச மாட்டார். காலின் மேல் எழுதார், கல்வியில்லாதவரோடு மெய்யென சாதித்துப் பேசமாட்டார். பெரியோர் கொடுப்பவற்றை உட்கார்ந்து கொண்டு கையில் வாங்க மாட்டார்.

பொன்னைப் போல் காக்கத் தக்கவை (இன்னிசை வெண்பா)
தன் உடம்பு, தாரம், அடைக்கலம், தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு, இவை நான்கும்,
பொன்னினைப்போல் போற்றிக் காத்து உய்க்க! உய்க்காக்கால்,
மன்னிய ஏதம் தரும். 95
தாரம் - மனைவி
உன்னித்து - நினைத்து
தன்னுடைய உடலும், மனைவியும், அடைக்கலமாக வந்த பொருளும், தன் உயிர்க்கு உதவி என்று வைத்த பொருளும் ஆதரித்துப் பாதுகாக்க வேண்டியவை. இல்லையெனில் துன்பத்தைத் தரும்.

எறும்பு முதலியவை போல் செயல் செய்தல் (இன்னிசை வெண்பா)
நந்து எறும்பு, தூக்கணம்புள், காக்கை, என்று இவைபோல்,
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்
அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப் பெற்றியானும் படும். 96
நந்து எறும்பு - ஆக்கமுள்ள எறும்பும்
தூக்கணம்புள் - தூக்கணாங்குருவியும்
எறும்பு, தூக்கணாங் குருவி, காக்கை, ஆகியவற்றின் குணங்களைப் போல செய்பவர்க்கு எப்போதும் சிறப்பு உண்டாகும்.

சான்றோர் முன் சொல்லும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தொழுதானும், வாய் புதைத்தானும், அஃது அன்றி,
பெரியார்முன் யாதும் உரையார்; பழி அவர்-
கண்ணுளே நோக்கி உரை! 97
தொழுதானும் - வணங்கி நின்றேனும்
அஃது அன்றி - உரைப்பரேயன்றி
பெரியோர் முன்பு, வாய் புதைத்து நின்றேனும், வணங்கியாவது, பேச வேண்டும். அன்றி அவர் முன் ஆராய்ந்து குற்றம் எதுவும் உண்டாகாமல் பேச வேண்டும்.

புகக் கூடாத இடங்கள் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
சூதர் கழகம், அரவர் அறாக் களம்,
பேதைகள் அல்லார் புகாஅர்; புகுபவேல்,
ஏதம் பலவும் தரும். 98
சூதர் கழகம் - சூதாடும் இடம்
பேதைகள் அல்லார் - மூடரல்லாதவர்
சூதாடும் இடத்திலும், பாம்புகள் இருக்குமிடத்திலும் மூடர்களே நுழைவர். பல துன்பங்களையும் பெறுவார்.

அறிவினர் செய்யாதவை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உரற் களத்தும், அட்டிலும், பெண்டிர்கள் மேலும், -
நடுக்கு அற்ற காட்சியார் - நோக்கார், எடுத்து இசையார்,
இல்லம் புகாஅர்; விடல்! 99
அட்டிலும் - மடைப்பள்ளியிலும்
எடுத்து இசையார் - எடுத்துரையார்
அறிவுடையார் ஆரவாரஞ் செய்யுமிடத்தும், மடைப்பள்ளியிலும், பெண்களிடமும், பார்க்க மாட்டார். எடுத்து உரைக்க மாட்டார். இல்லத்துள் செல்ல மாட்டார்.

ஒழுக்கத்தினின்று விலகியவர் (பஃறொடை வெண்பா)
அறியாத தேயத்தான், ஆதுலன், மூத்தான்,
இளையான், உயிர் இழந்தான், அஞ்சினான், உண்பான்,
அரசர் தொழில் தலைவைத்தான், மணாளன், என்று
ஒன்பதின்மர் கண்டீர் - உரைக்குங்கால் மெய்யான்
ஆசாரம் வீடு பெற்றார். 100
ஆதுலன் - வறியவனும்
உரைக்குங்கால் - சொல்லுமிடத்து
அறியாமையுடையவனும், வறியவனும், வயதில் முதிர்ந்தவனும், சிறுவனும், உயிரிழந்தவனும், அஞ்சினவனும், உண்பவனும், அரசரது கட்டளையைத் தாங்கினவனும், மணமகனும், ஆசாரம் நீங்கியவராவார்.

சிறப்புப் பாயிரம்
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான் - தீராத்
திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளி என்பான்.
வண் - வளமை, வலிமை


முப்புறங்களையும் அழித்த சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, ஆரியரிடம் தான் அறிந்த ஆசாரங்களை யாவரும் அறிய ஆசாரக்கோவை என்ற இந்நூலை திருவாயில் எனப் போற்றப்படும் கயத்தூர் அருகில் பெருவாயின் என்ற ஊரில் வாழும் முள்ளியார் தொகுத்துக் கொடுத்தான்.


Overview of Acharakovai

1. Title Meaning:

- Acharakovai combines "Achara" (meaning "conduct" or "morality" in Tamil) and "kovai" (meaning "garland" or "collection"). Thus, it translates to "Garland of Good Conduct" or "Guide to Good Conduct," indicating a collection of teachings on proper behavior and ethics.

2. Structure:

- Content: The work consists of quatrains (four-line verses) that provide guidance on various aspects of personal and social conduct.
- Themes: The main themes of Acharakovai revolve around ethics, moral values, proper social behavior, and the importance of virtues in everyday life.

3. Themes and Content:

- Ethics and Morality: Acharakovai emphasizes the importance of ethical behavior, honesty, and integrity. It instructs on how to lead a life that is in harmony with societal norms and moral values.
- Proper Conduct: The text provides advice on proper conduct in various situations, including family life, social interactions, and governance.
- Virtue and Wisdom: It highlights the significance of cultivating virtues such as humility, kindness, and wisdom, and warns against vices like greed and pride.

4. Poetic and Literary Style:

- Quatrains: The verses are structured as quatrains, allowing for concise and impactful expression of ideas.
- Didactic and Prescriptive: The tone of the work is didactic, aiming to instruct and guide individuals toward a moral and ethically sound life.

5. Cultural and Historical Context:

- Patinenkilkanakku Anthology: Acharakovai is part of the Patinenkilkanakku anthology, known for its focus on ethical and moral teachings. This collection is significant in Tamil literature for providing a comprehensive view of ethical and philosophical thought during the post-Sangam period.
- Historical Influence: The work reflects the cultural and social norms of its time, offering insights into the values and principles that were esteemed in ancient Tamil society.

6. Literary Significance:

- Timeless Wisdom: Acharakovai is valued for its timeless ethical teachings and practical advice. It continues to be studied and respected for its insights into virtuous living and proper conduct.
- Influence on Tamil Literature: The work has played a significant role in shaping Tamil ethical literature and has influenced subsequent writings on ethics and morality.

Acharakovai is an important work in Tamil literature, celebrated for its concise and practical guidance on ethics and proper conduct. It offers a valuable perspective on living a virtuous life, making it a respected text in Tamil literary tradition.



Share



Was this helpful?