விநாயகர் புராணம்

(பகு தி-9)


சிரம்பை காசிக்கு வருவதற்கு முன்பே, மகோற்கடன் அங்கு சென்று சேர்ந்து விட்டார். அவர் காசிராஜனுடன் அரண்மனைக்குள் நுழைய முயன்ற போது, தேவாந்தக, நராந்தகரால் ஏவப்பட்ட கூடன் என்ற அசுரன், ஒரு பெரும்பாறையாக மாறி அரண்மனை முன் வந்து வாசலை அடைத்து விட்டான். காசிராஜனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. மகோற்கடன் இதற்கெல்லாம் அஞ்சுபவரா என்ன? காசிராஜா! இது பாறையல்ல. தேவாந்தக, நராந்தகரால் ஏவப்பட்ட அசுரன். பாறையாக மாறி இங்கே நம்மை வழிமறிக்கிறான். நம் பின்னால் ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்களைக் கொண்டு ஆயிரம் தேங்காய்களை இந்தப் பாறை மீது வீசச்செய், என்றார். உடனடியாக தேங்காய்களைக் கொண்டு வரச்செய்தான் காசிராஜன். எல்லா வீரரும் ஆளுக்கொன்றாக தேங்காய்களை பாறையில் வீசியெறிந்தனர். பாறை தவிடு பொடியாகி விட்டது. இதில் இருந்து தான் விநாயகருக்கு விடலை எனப்படும் சிதறுகாய் போடும் வழக்கம் உருவானது. சிதறுகாயின் நோக்கம், நாம் எடுத்துக்கொண்ட செயலைத் தங்கு தடையின்றி முடிக்கத்தான். குறிப்பாக, மாணவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் தேர்வெழுதவே, சிதறுகாய் அடிக்கிறார்கள்.பின்னர் அவர்கள் அரண்மனைக்குள் சென்றனர். அரண்மனையில் இருந்த புரோகிதரான தருமதத்தர் என்பவர் மகோற்கடனை வரவேற்றார். மகோற்கடன் எப்படி கணபதியின் அவதாரமோ, அதுபோல் தருமதத்தர் பிரம்மாவின் அவதாரமாவார். அவர், பூமியில் பிறந்திருக்கும் விநாயகரான மகோற்கடரை வணங்கும் நோக்கத்திலும், மற்றொரு முக்கிய நோக்கத்துடனும் முதல் ஆளாக வரவேற்பு கொடுத்தார். மகோற்கடன் சிறுவன் அல்லவா? அரண்மனை தோட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளின் குழந்தைகள், காசிராஜன் மகன் திருமணத்திற்கு வந்திருந்த உறவுக்கார குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். காசிராஜனிடம் சொல்லிவிட்டு, அவர்களோடு விளையாடும் ஆசையில் அங்கே ஓடிவிட்டார்.

தருமதத்தர் அறிவு வாய்ந்த புரோகிதர். வயதில் பெரியவர். வேதஅறிவில், அவரை மிஞ்ச யாருமில்லை என்று சொல்லுமளவு அற்புதமானவர். அப்படிப்பட்ட அறிவுஜீவி, சிறுவனான மகோற்கடரை ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்றார் என காசிராஜன் ஆச்சரியப்பட்டான். விஷயம் இதுதான். தருமதத்தருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். ஒருத்தி சித்தி, மற்றொருத்தி புத்தி. இந்தப் பெண்களை மகோற்கடனுக்கு திருமணம் முடித்து விட வேண்டும் என்பது அவரது விருப்பம். இந்த விருப்பத்தை தருமத்தர் காசிராஜனிடம் தெரிவித்தார். அவனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். காசிராஜனின் மகன் திருமணத்துக்கு முன்னதாகவே, இவர்களது திருமணத்தை நடத்தி விட முடிவெடுத்தனர். உடனே தருமதத்தர், விளையாடிக் கொண்டிருந்த மகோற்கடனை நோக்கிச் சென்றார். மகோற்கடரே! தங்கள் தந்தை காஷ்யபரும், நானும் நெருங்கிய நண்பர்கள். எனக்கு சித்தி, புத்தி என்ற புத்திரிகள் உள்ளனர். தாங்கள், மிக உயர்ந்தவர் என்பதை நான் அறிவேன். தங்களுக்கே என் மகள்களை மணம் முடித்து வைக்க ஆசைப்படுகிறேன். தாங்கள் எனது ஆஸ்ரமத்திற்கு எழுந்தருள வேண்டும், என்றார். மகோற்கடரும் இதற்கு சம்மதித்து புறப்பட்டார். இந்த நேரத்தில் தான் சிரம்பை வந்து சேர்ந்தாள். அவளுக்கு தெரியும்! மகோற்கடனை அவ்வளவு எளிதில் தன்னால் ஜெயிக்க முடியாது என்று! எனவே, மணமகனுக்கு அலங்காரம் செய்யும் பணிப்பெண் போல வேஷம் தரித்து, மகோற்கடரே! தங்களுக்கு வாசனைத் திரவியங்கள் பூசி நீராட்ட வந்திருக்கிறேன். தாங்கள், நீராட்ட அறைக்கு வர வேண்டும், என்றாள். மகோற்கடன் அவளிடம், அம்மா! நான் சிறுவன் தான்! இதோ, இந்த இடத்திலேயே குளிக்கிறேனே, என்று ஒரு பொதுஇடத்தைக் குறிப்பிட்டார். எப்படியோ வந்த காரியம் நடந்தால் சரிதான் என எண்ணிய சிரம்பையும் அதற்கென்ன! அப்படியே ஆகட்டும், என சம்மதித்து விட்டாள்.

மகோற்கட மாப்பிள்ளை நீராடும் காட்சி காண அனைவரும் கூடியிருந்தனர். சிரம்பை மிகவும் புத்திசாலி போல, அந்த திரவியங்களுடன் விஷத்தை சிறிதளவு சேர்த்திருந்தாள். அதை முகத்தில் பூசும்போது, சிறிதளவு உதட்டில் பட்டுவிட்டால் கூட போதும்! உயிர் பிரிந்து விடும்.... அந்தளவுக்கு கொடிய விஷம் அது. மகோற்கடர் சம்மதித்தார். ஒரு தாயே தன் பிள்ளைக்கு வாசனாதி திரவியங்கள் பூசி நீராட்டுவது வழக்கம். எதிரியாயினும், தாய் ஸ்தானத்தில் இருந்து தனக்கு திரவியம் பூசவந்தவளை தடுக்காத மகோற்கடர், அவள் தன் உதட்டருகே கையைக்கொண்டு வந்ததும், அம்மா! தாங்கள் யாரோ எவரோ? இந்த அரிய வாசனாதி திரவியங்களை என் மீது பூசியுள்ளீர்கள். இதற்குரிய பலனை தாங்கள் அனுபவிப்பீர்கள், என்றார் சமயோசிதமாக. அவ்வளவு தான்! விஷம் கடகடவென சிரம்பையின் உடலில் ஏறியது. அவள் விநாயகராகிய மகோற்கடரின் உடலில் கை வைக்கும் பாக்கியம் பெற்றுவிட்டதால், நேரே சொர்க்கம் போய் விட்டாள். அவள் சொர்க்கம் போனதற்கான காரணமறிந்து எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். அவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர், மகோற்கடர் மஞ்சள் நீரில், நீராடி, அங்கவஸ்திரங்கள் அணிந்தார். சிறுமிகளான சித்தி, புத்தியர் அழகு பொங்க அவரருகே அமர்ந்தனர். இருவருக்கும் மங்கலநாண் பூட்டி துணைவியராக ஏற்றார் மகோற்கடர். இதன்பிறகு காசிராஜனின் மகன் திருமண ஏற்பாடுகள் துவங்கின. அப்போது ஒரு அமைச்சர், மன்னரே! தங்கள் மகனின் திருமணத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதுபற்றி தாங்கள் சிந்தித்தீர்களா? என்றார். காசிராஜன் கலவரத்துடன் அவரது முகத்தைப் பார்த்தான்.

மாமன்னரே! நம் இல்லத்திற்கு எழுந்தருளியிருக்கும் மகோற்கடர் வேதாந்தக, நராந்தகரின் உறவுக்காரர்களை அழித்து விட்டார். இதனால். இப்போது அவர்கள் நம் மீது கோபமாக இருப்பது <உறுதி. இளவரசருக்கு திருமணம் நடக்கும் வேளையில், அவர்கள் இங்கு வந்து இடையூறு செய்தால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பது உறுதி. திருமணத்துக்கு வருவோர் ஒருவரைக் கூட அவர்கள் உயிருடன் விட்டு வைக்க மாட்டார்கள். இந்த விபரீதத்தை மகோற்கடர் தடுத்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், அந்த சூரர்களின் வதம் முடிந்த பிறகு, இளவரசருக்கு திருமணம் நடத்துவதே நல்லதென நினைக்கிறேன். இதற்காக, ஏற்கனவே குறிக்கப்பட்ட முகூர்த்த நாளை சற்று தள்ளி வைத்தால், கூட தவறில்லை என்பது எனது அபிப்ராயம். தாங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். தங்கள் கட்டளைப் படியே நடக்கிறோம், என்றார் அந்த புத்திசாலி மந்திரி. காசிராஜனுக்கும் மந்திரி சொல்வது சரியென்றே பட்டது. இருப்பினும், குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற, அந்த மகோற்கடரையே சரணடைவதென முடிவெடுத்து, மகோற்கடர் தங்கியிருந்த அறைக்குச் சென்றான். அப்போது, சித்தி, புத்தியருடன் மகோற்கடர் கூடி களித்திருந்தார். சித்தி, புத்தி தேவியர் தங்கள் கணவரிடம் எங்கள் இதய தெய்வமே! தாங்கள் யானை முகத்துடனேயே எப்போதும் இருக்கிறீர்கள். இது பூலோகம். இங்கே, மனித ஜென்மமே உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. எங்கள் கணவர் மனித முகத்துடன் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். தேவையான காலங்களில் மட்டும் தாங்கள் முகத்தை மாற்றிக் கொள்வது நல்லது. யானைத் திருமுகம் உங்களுக்கு அழகூட்டுகிறது என்றாலும், மனித முகத்திலும் தங்களைக் காண வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்கத்தானே செய்யும். தாங்கள் இவ்வுலகில் யாருக்கும் இல்லாத பேரழுகுடன், மனித முகத்துடன் எங்களுக்கு காட்சியருள வேண்டும், என்றனர். மனைவியரின் நியாயமான விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை. தங்கள் கணவர் அழகாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக பெண்களின் நியாயமான விருப்பம் தானே! மகோற்கடர் மனித முகத்துக்கு மாறிவிட்டார். ஒளி வெள்ளம் பொங்கிய பேரழகுடன் அவர் மனைவியருடன் உறவாடிக் கொண்டிருந்த போது, காசிராஜன் அவரது அனுமதி பெற்று அறைக்குள் வந்தான். அவனுக்கு அதிர்ச்சி. இங்கிருந்த யானை முகச் சிறுவனை எங்கே! சித்தி, புத்தியர் ஒரு இளைஞனுடன் இருக்கின்றனரே! என்ற அவனது எண்ண ஓட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மகோற்கடர்.

காசிராஜனுக்கு யானை முகத்துடன் காட்சி தந்தார். காசிராஜா! புதுப்பெண்களான இவர்கள் என்னை மனித முகத்துடன் காண ஆசைப்பட்டனர். அதன் படியே நான் இம்முகத்துடன் விளங்குகிறேன். அது போகட்டும்! என்ன காரணமாக என்னைக் காண வந்தாய்? என்றார்.காசிராஜன் எல்லா விபரத்தையும் எடுத்துச் சொன்னான். காசி மாமன்னனே! இதற்கெல்லாம் கலங்காதே. மகோற்கடனை நம்பியவர்கள் சிரமங்கள் தங்களுக்கு இல்லை என உறுதியாக நம்பலாம். திருமணம் குறித்த நேரத்தில் நல்லபடியாக நடக்கும். நடக்கப்போவதை அமைதியாக இருந்து வேடிக்கை பார், என்றார் மகோற்கடர். காசிராஜன் மிகுந்த மகிழ்ச்சியுடன், மகோற்கடரே! இனி எனக்கு கவலையில்லை. தாங்கள் புதுமணமகன். புது மணமக்களை விருந்துக்கு அழைப்பது எங்கள் பண்பாடு. தாங்கள், தங்கள் துணைவியருடன் இதே மனித முகத்துடன் எங்கள் இல்லத்துக்கு எழுந்தருள வேண்டும், என்றான். மகோற்கடனும் ஒப்புக்கொண்டார். மகோற்கடர் தம்பதியரை அரண்மனையின் அந்தப்புரத்துக்கே அழைத்துச் சென்றனர் காசிராஜன் தம்பதியர். அங்கே தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. தலை வாழை இலை விரித்து மணமக்களுக்கு உணவு பரிமாறினாள் பட்டத்தரசி. அப்போது, அவள் வைத்த உணவு வகைகளுக்கு நடுவே, ஒரு உருண்டை வந்து அமர்ந்தது. சிறிது நேரத்தில் கொண்டைக்கடலை, பொரி என எளியவகை உணவுகள் வந்து அமர்ந்தன. காசிராஜனும், அவன் தேவியும், சுவாமி! இதென்ன அதிசயம்! இந்த உணவுகளை நாங்கள் தயாரிக்கவே இல்லையே! இவை உங்கள் இலைக்கு வந்தது எப்படி? என்றனர். எல்லாம் அந்த புருசண்டியின் வேலை தான், என்றார் மகோற்கடர் கண்களை சிமிட்டியவராய்! சித்தி, புத்தியர் கூட இந்த அதிசயம் கண்டு, இது பற்றி அறிய ஆவல் கொண்டனர். புருசண்டியா! அப்படியென்றால்... என இழுத்த சித்தி, புத்தியரிடம்... தேவியரே! புருசண்டி என்றால் ஏதோ பொருள் அல்ல. அவர் ஒரு முனிவர். தண்டகாரண்யக் காட்டில் வசிப்பவர்.

எனது பக்தர். அவர் ஒவ்வொரு சதுர்த்தி திதியிலும், இதோ இருக்கிறதே! மோதகம் என்னும் உருண்டை... இதையும், கரும்பு, பொரி, கடலை ஆகியவற்றையும் படைத்து என்னை நினைத்து வணங்குவார். அவை என்னை வந்து சேர்ந்து விடும். காசிராஜன் பரிமாறிய ஆடம்பர உணவும் எனக்கு பிடிக்கும்! அதேநேரம், ஏழை ஒருவன் பரிமாறும் பக்தியுடன் பரிமாறும் எளிய உணவும் பிடிக்கும், என்றார். சித்தி, புத்தியரின் ஞானதிருஷ்டியில், தாங்கள் தெய்வப்பெண்கள் என்பதும், இங்கிருக்கும் மகோற்கடர் சாட்சாத் விநாயகப் பெருமான் என்பதும் விளங்கியது. அவர்கள் அவரது இலையில் இருந்த மோதகப் பிரசாதத்தை தாங்களும் பகிர்ந்து கொண்டு, காசிராஜன் தம்பதியருக்கும் கொடுத்தனர். ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று மட்டுமல்ல! எல்லா சதுர்த்தி திதிகளிலும் (அமாவாசை மற்றும் பவுர்ணமி கழிந்த நான்காம் நாள்) விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட்டால், நமக்கு செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம். விருந்துக்குப் பின் தம்பதியர் விடை பெற்றனர். அன்றிரவில் காசிநகரே அல்லோகோலப்பட்டது. காவலர்கள் ஓடோடி வந்து மன்னரிடம், மகாராஜா! மகாராஜா! யாரோ பயங்கர உருவம் கொண்ட அசுரர்கள் மூவர் நம் நகரையே சின்னா பின்னப்படுத்துகிறார்கள். ஒருவன் வாயைத் திறந்தால் நெருப்பைக் கக்குகிறான். இன்னொருவன் புயலாக மாறி கட்டடங்களைத் தகர்க்கிறான். ஒருவன் வானத்தில் ஒரு உதடும், பூமியில் ஒரு உதடுமாக வைத்து போவோர் வருவோரையெல்லாம் பிடித்து விழுங்குகிறான். அவர்களைக் கண்டாலே குலை நடுங்குகிறது. எங்களால் அவர்களுடன் போராட முடியவில்லை. தாங்களே மக்களைக் காக்க வேண்டும் என்றனர்.

காசிராஜனுக்கு நிலைமை புரிந்து விட்டது. இந்நிலையில், தங்களைக் காக்க மகோற்கடரை விட்டால் ஆளில்லை என்பதால், அவர் தங்கியிருந்த அறைக்கு ஓடினான். மகோற்கடரை சித்தி, புத்தியர் மூலம் எழுப்பினான். நடந்து கொண்டிருக்கும் அபாயத்தை விளக்கினான். அப்படியா? என்று சாதாரணமாகச் சொன்ன மகோற்கடர், தன் கமண்டலத்தை எடுத்தார். தீர்த்த நீரை கையில் எடுத்து வீசினார். அந்த நீர்த்துளிகள் பறந்து சென்றது. அங்கே தீயாக மாறி எரிந்து கொண்டிருந்த ஜ்வாலாமுகன் என்ற அசுரன், அந்த நீர்பட்ட மாத்திரத்தில் அணைந்து விழுந்து உயிரை விட்டான். புயலாக மாறி வீசிய விதாரணன் என்பவனும் அந்த புனிதநீரின் வேகத்தைத் தாங்க முடியாமல் ஒடுங்கி சாய்ந்தான். பின்னர் மக்களை விழுங்கிக் கொண்டிருந்த வியாக்ரமுகன்  என்ற அசுரனைக் கொல்ல நேரில் புறப்பட்டார். தன் சக்தியால் கணநேரத்தில் அவன் முன் சென்று, திறந்த வாயை அப்படியே கிழித்து, இரு கூறாக்கி அவனைக் கொன்றார். காசிராஜன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதே நேரம், தன் மக்களில் பலர் உயிர் இழந்ததையும், ஊரின் பெரும்பகுதி தீயாலும், புயலாலும் சேதமடைந்ததையும் கண்டு வருத்தப்பட்டான். அவனது உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட மகோற்கடர், உயிரிழந்த மக்களை எழச்செய்தார். நகரை தன் பார்வையாலேயே முன்பை விட அழகு பெறும்படி செய்து விட்டார்.இப்படி அற்புதம் புரிந்த மகோற்கடரைக் கொல்ல வேதாந்தக, நராந்தக அசுரர்கள் மேகன் என்ற அசுரனை அனுப்பினர். அவன் ஒரு ஜோதிடர் போல மாற்று உருவம் கொண்டு, காசி வந்து சேர்ந்தான். காசிராஜனை சந்தித்த அவன், அரசே! நான் ஒரு கந்தர்வன். கந்தவர்களே என்னிடம் தான் ஜோதிடம் பார்க்கிறார்கள் என்றால், சாதாரண மானிடர்களான உங்கள் எதிர்காலத்தை ஏடே பார்க்காமல், முகத்தைப் பார்த்தே சொல்லி விடுவேன்.

உனக்கும், உன் காசி ராஜ்யத்துக்கும் கேடு காலம் வருகிறது. உங்களோடு இருக்கிறானே... ஒரு யானை முகன். அவன் உங்களை அழித்து, நாட்டைக் கைப்பற்றவே உங்களுடன் தங்கி, நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்கிறான். அவனை உடனே ஊரை விட்டு விரட்டி விடுங்கள். அவனைக் காட்டிற்கு அனுப்புவது மிக மிக நல்லது, என்றான். காசிராஜனுக்கு அவன் ஏதோ அசம்பாவிதம் செய்யும் நோக்கத்தில் வந்துள்ளான் என்பது புரிந்து விட்டது. இருப்பினும், அவனுக்கு சாதகமானவன் போல நடித்து, மிகவும் சமயோசிதமாக, ஜோதிடரே! அப்படியானால், ஒன்று செய்யுங்கள்! நீங்களே, அந்த யானை முகத்தானை இழுத்துக் கொண்டு போய், காட்டில் விட்டு விடுங்களேன், என்றான். மேகனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவனைக் காவலர்கள் மகோற்கடர் நிற்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவன் அருகே வந்த மகோற்கடர், என்ன ஜோதிடரே! நலம் தானா? என்று கேட்டதும், மேகனுக்கு தூக்கி வாரிப் போட்டது. தான் ஜோதிட வேடமிட்டு வந்தது இவனுக்கு எப்படி தெரிந்தது? என்று குழம்பிய அவனை மேலும் குழப்பினார் மகோற்கடர். ஜோதிடரே! காசி நகரத்துக்கு அழிவும், அபாயமும் இருப்பதாக, காசிராஜனை நீர் எச்சரிக்கை செய்தீராமே! அத்துடன் என்னாலும், இவ்வூருக்கு அபாயம் இருப்பதாகச் சொன்னீராமே! என்றதும், அவன் இன்னும் அதிர்ச்சியும் அடைந்தான். அரண்மனையில் காசிராஜனிடம் தனித்துச் சொன்ன விஷயங்கள் இவனுக்கு எப்படி தெரிந்தது? இவன் நிச்சயமாக ஒரு மாயாவி தான் என்று நினைத்தவன், நல்லவன் போல் நடித்து, மகோற்கடரே! தாங்களும் இவ்வூரில் இருப்பது ஆபத்து தான்! உமக்கு யானைகள், தண்ணீர் இவற்றால் உயிர்க் கண்டம் இருக்கிறது. இதில் தப்பினால், உம்மை விஷம் கொடுத்துக் கொன்று விடுவார்கள். இன்னும் நான்கே நாட்களில் இது நடக்கும். எனவே, நீர் காட்டிற்கு வந்து விடும், நான் அங்கு தான் போகிறேன். நீரும் என்னுடன் வந்தால், இந்த இக்கட்டில் இருந்து தப்பி விடலாம், என்றார். மகோற்கடர் நடுங்குவது போல நடித்து, ஜோதிடரே! எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், என் உயிரைக் காப்பாற்ற ஆவன செய்தீர்.

உம்முடன் நான் காட்டுக்கு வருகிறேன். என் மீது அக்கறை கொண்டு ஜோதிடம் சொன்னதற்குரிய கூலியை உமக்கு நான் கொடுக்க வேண்டாமா? என்றவர், தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையைக் கழற்றி, அவன் கழுத்தில் போட்டார். அந்தக்கணமே, அந்த மாலையில் இருந்து நெருப்பு பற்றி மேகனை அழித்தது. இப்படி பலமுறை வந்த அசுரர்களும், மகோற்கடரின் தாயான அதிதியைப் போலவே மாறுவேடம் அணிந்து வந்த பிரமரை என்ற அரக்கியையும் மகோற்கடர் கொன்றார். இந்நிலையில், காசி நகர மக்கள் அனைவரும் அரண்மனைக்கு வந்து மன்னரைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். உப்பரிகையில் வந்து நின்ற மன்னனை வணங்கிய மக்கள், மாமன்னரே! நம் ஊருக்கு வந்திருக்கும் மகோற்கடர், பல அற்புதங்கள் செய்துள்ளார். மாண்டு போன எங்களைக் கூட உயிருடன் எழுப்பினார். எனவே, அவரை எங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று, விருந்து படைக்க விரும்புகிறோம். தாங்கள் அனுமதியளிக்க வேண்டும், என்றனர். காசிராஜன் தயங்கினான். யாராவது ஒருவர் மகோற்கடரின் உயிருக்கு ஆபத்து விளைவித்து விட்டால், காஷ்யபருக்கு பதில் சொல்வது யார் என்ற பயத்தில், மக்களே! இதெல்லாம் சாத்தியமில்லை. ஏனெனில், மகோற்கடர் நம் ஊரிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்கு தினமும் ஒரு வீடு வீதம் வந்தால் கூட பல ஆண்டுகள் பிடிக்கும். இதெல்லாம், நடக்கிற காரியமா? என்றான். அப்போது மகோற்கடர் அங்கு வந்தார். காசிராஜா! நீ மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்து விடு. எல்லோர் வீட்டுக்கும் போக வேண்டியது என் பொறுப்பு, என்றார். காசிராஜனும் இதற்கு சம்மதிக்கவே, மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வீடுகளுக்கு திரும்பினர். தங்கள் வீட்டுக்கு வரும் மகோற்கடரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால், வித்ருமை என்ற பெண் மட்டும் கவலையுடன் இருந்தாள்.

© Om Namasivaya. All Rights Reserved.