விநாயகர் புராணம்

(பகுதி-8)


மகோற்கடனின் அருகில் வந்ததும் ஐவரும் ஒன்றிணைந்து, தங்கள் கையிலுள்ள அட்சதையை கணபதியின் மீது தூவினர். அட்சதை அரிசி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஆயுதமாக மாறி மகோற்கடனை நோக்கிப் பாய்ந்தது. மகோற்கடன் அவற்றை நோக்கிப் புன்னகைக்கவே அவை அவரது திருவடிகளில் சரணடைந்தன. ஐந்து அரிசிகள் மட்டும் மகோற்கடனின் கைகளில் விழுந்தது. அவற்றை அவர் அசுரர்களின் மீது எறியவே, அவை பாய்ந்து சென்று அவர்களை அழித்தன. முதலில் அதிர்ந்த அனைவரும், மகோற்கடனின் அற்புதச்செயல் கண்டு அவரைப் புகழ்ந்தனர். பின்னர் உபநயன சடங்கை சிறப்புற முடித்தார் காஷ்யபர்.உபநயன சடங்குக்கு வந்தால் பரிசுகள் தர வேண்டாமா? உபநயனத்திற்கு திருமால், பிரம்மா, சிவன், துர்க்கை மற்றும் பல தேவர்கள் வந்திருந்தனர். அவர்களில் சிவன் திரிசூலம், கோடரி எனப்படும் மழு, உடுக்கை, சடை, நிலா ஆகியவற்றைக் கொடுத்தார். துர்க்கை தனது சிங்க வாகனத்தைக் கொடுத்தார். பிரம்மா நவரத்தினங்களால் செய்யப்பட்ட புனிதநீர் செம்பு ஒன்றைக் கொடுத்து தாமரை மலரால் அர்ச்சித்தார். திருமால் தனது சக்ராயுதத்தைக் கொடுத்து அழகிய பட்டாடை ஒன்றையும் வழங்கினார். பிரகஸ்பதியாகிய தேவகுரு ரத்தினங்களையும், வருணன் பாசக்கயிற்றையும், கடலரசன் முத்து மாலையும், எமதர்மன் தண்டாயுதத்தையும் கொடுத்தனர். திருமாலுடன் வந்திருந்த ஆதிசேஷன் அவரது படுக்கையாக மாறி, மகோற்கடனைத் தன்னில் சயனம் செய்ய வைத்தான். ஆனால், தேவர் தலைவனான இந்திரன் மட்டும் மகோற்கடனின் அருகில் வரவும் இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை. காஷ்யபர் அவனை அழைத்தார்.

இந்திரா! இவன் சிவபெருமானின் மைந்தன் என்பதை நீ அறிவாய். எங்களது தவப்பயனால், எங்கள் இல்லத்தில் பிறந்திருக்கிறான். எனவே, இவனை மானிடன் என நினைத்து ஒதுக்கி விடாதே. உன் நன்மைக்கே சொல்கிறேன். தெய்வம் விண்ணில் இருந்தாலும், மண்ணில் இருந்தாலும், தூணில் இருந்தாலும், துரும்பில் இருந்தாலும் அதை வணங்குவதே முறையானது. அதிலும் , விநாயகர் முழுமுதல் கடவுள் என்பதையும் மறந்து விடாதே, என்று புத்திமதி சொன்னார்.சிலருக்கு கெட்ட நேரம் வந்து விட்டால், யார் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. கேட்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் கருத்துக்கு எதிர்க்கருத்தைச்  சொல்வார்கள். இந்திரனும் அப்படித் தான் தேவையற்றதைப் பேசி சிக்கிக் கொண்டான். காஷ்யபரே! நீர் பெரிய மனிதர் ஆவதற்காக, சிவமைந்தனை உம் மகனாகப் பெற்றீர். எப்படியோ, அவன் மானிட வர்க்கத்தில் அவதரித்து விட்டான். ஒரு மானிடனை தேவர் தலைவனான நான் எப்படி வணங்க முடியும்? மேலும், இங்கே எல்லோரும் உம் மகனை ஆசிர்வதிக்கவே வந்துள்ளனர். அவன்  வயதில் சிறியவன். ஆனால், அவனோ பல பொருட்களை பரிசாக ஏற்றுக்கொண்டு, அதைத் தனக்கு தந்தவர்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறான். ஒரு சிறுவனிடம் தேவர்கள் ஆசி பெறுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. இவர்களெல்லாம், தேவலோகத்திற்கு திரும்பியதும், அவர்களை விசாரணை செய்து தக்க தண்டனை கொடுப்பேன். ஒருக்காலும், உம் மகன் மகோற்கடனின் ஆசியைப் பெற மாட்டேன், என்றான். அவன் இப்படி சொன்னதற்காக காஷ்யபர் கோபிக்கவில்லை.

இந்திரா! நீ அடிக்கடி அசுரர்களிடம் சிக்குபவன். அவர்களிடம் இருந்து மீள வேண்டுமானால், விநாயகரின் ஆசி அவசியம் வேண்டும். அவரை அலட்சியப் படுத்துவதன் மூலம், உனக்கு நீயே கேடு விளைவித்துக் கொள்கிறாய், என்று மீண்டும் புத்திமதி சொன்னார். அப்போதும் இந்திரன் கேட்ட பாடில்லை. போதாக்குறைக்கு, காஷ்யபரே! தேவாதி தேவனான நான் பெரியவனா? இந்தச் சிறுவன் உயர்ந்தவனா? என்பதை இப்போதே நிரூபித்துக் காட்டி விடுகிறேன், என்றவனாய், வாயு பகவானை அழைத்தார். ஏ வாயு! நீ போய் அந்த மகோற்கடனை எங்காவது தூக்கி வீசி விட்டு வா, என்றான். வாயுபகவானுக்கு அதிர்ச்சி. விநாயகப்பெருமானை தூக்குவதாவது, வீசுவதாவது. சூறாவளியாக மாறி வீசினாலும், அதை தன் தும்பிக்கையாலேயே உறிஞ்சி விடுபவர் அல்லவா அந்த மகாசக்தி மைந்தர்! வேறென்ன செய்வது? தலைவன் கட்டளையிட்டு நிறைவேற்றாவிட்டால், அவன் சபித்து விடுவான், என சிந்தித்தவன், விநாயகப்பெருமானே! நீரே என்னைக் காப்பாற்ற வேண்டும், என்று மனதார அவரை வணங்கி, வேகமாக வீசத்துவங்கினான். காற்றின் வேகத்தில் அண்டசராசரங்களும் கிடுகிடுத்தன. சூறாவளியால் கடல்கள் பொங்கின. பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடுவது போன்ற தோற்றம்! மலைகள் தூக்கி வீசப்பட்டன. உலகமே அசைந்தாலும், மகோற்கடன் மட்டும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இதைக்கண்டு சலனமடைந்த இந்திரன், ஏ அக்னி! நீ போ! தேவர்கள் பெரியவரா? இந்த சிறுவன் பெரியவனா? என்று பார்த்து விடுவோம், என்றான்.

அக்னிக்கும் வாயுதேவனுக்கு இருந்த அதே மனநிலையே இருந்தது. இருப்பினும், அவனும் தனது கடமையைச் செவ்வனே செய்தான். எங்கும் நெருப்பு பற்றி வெப்பம் தாளாமல் அலறினர். உலகங்கள் அனைத்தும் உருகிப்போயின. ஆனால், மகோற்கடன் அக்னியை நோக்கிப் புன்னகை செய்ய அது குளிர்ந்து போனது. கோபத்தை அக்னிக்கு ஒப்பிடுவார்கள். கோபப்படுபவர்களிடம் பதிலுக்கு கோபிக்காமல், பணிவுடன் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டால், அவர்களால் மீண்டும் கோபிக்க இயலாமல் அடங்கி விடுவார்கள். அப்படித்தான் அக்னி அயர்ந்து விட்டான். இப்போது, மகோற்கடனாகிய விநாயகர் இந்திரன் அருகே நெருங்கினார். விஸ்வரூபம் எடுத்து விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவருக்கு பத்தாயிரம் தலைகளும், லட்சக்கணக்கான உடலுறுப்புகளும் உருவாயின. அந்த பேருடலுக்குள் உலகமே அடங்கி நின்றதையும், தனது தேவலோகமும் அதில் ஒன்றாக இருப்பதையும் கண்ட இந்திரன் நடுங்கினான். மயக்கநிலைக்குச் சென்று விட்டான். அவன் விஸ்வரூப விநாயகரின் பாதங்களில் விழுந்தான். எம்பெருமானே! மன்னிக்க வேண்டும். நான் சின்னஞ்சிறுவன். உமக்குள் உலக உயிர்கள் அடைக்கலம் என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன். ஆணவத்தால் அறிவிழந்து பேசிய என் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும், என்று சரணடைந்ததும், விநாயகரும் மனம் குளிர்ந்தார். அவருக்கு வஜ்ராயுதம், அங்குசம், கற்பகத்தரு உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக அளித்த இந்திரன், அவரது விஸ்வரூபத்தை சுருக்கி, சாந்தியடையும்படி வேண்டினான். விஸ்வரூப விநாயகரும் மீண்டும் சிறுவனாக மாறினார். இதன்பிறகு, தேவாந்தக, நராந்தகரால் தேவர் உலகத்துக்கு ஏற்பட்டுள்ள இன்னல் பற்றி மகோற்கடனிடம் இந்திரன் எடுத்துரைத்தான். மகோற்கடன் அவனை ஆசிர்வதித்து, சிவபெருமான் கருணை மிக்கவர். வரம் கேட்பவர் யாரென்று பார்ப்பதில்லை. தன்னை வணங்குவோர் அனைவருக்கும் அவர் நன்மையே செய்கிறார். அதிலும் தேவாந்தக, நராந்தகர் சூரியனை கண் மூடாமல் பார்த்து தவம் செய்து வரம் பெற்றவர்கள். அவர்களுக்கு தன் சக்தியைத் தவிர பிறரால், அழியாவரத்தை அவர் அருளியிருக்கிறார். அவ்வரத்தைப் பயன்படுத்தி பெற்ற தீர்க்காயுளை அவர்கள் நல்லமுறையில் பயன்படுத்தியிருந்தால், அவர்கள் மேலும் ஆயுள் பெற்றிருப்பார்கள். ஆண்டவனிடமே பெற்ற அதிகாரமாயினும், அதைத் தவறாகப் பயன்படுத்துபவன் அழிந்து போவான். இந்திரா! நீ கவலைப்படாதே.

நான் விரைவில் காசி செல்லப் போகிறேன். அப்போது, தேவாந்தக, நராந்தகர் அழிவு நிகழும், என்றார். அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே, சொல்லி வைத்தாற்போல் காசிமன்னன் அங்கு வந்து சேர்ந்தான். அவர் காஷ்யபரை வணங்கி ஆசிபெற்று, மாமுனிவரே! எனது மகனுக்கு திருமணம் நடத்த நிச்சயித்துள்ளேன். தாங்களே தலைமைப் புரோகிதராக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும், என கேட்டுக்கொண்டான். காசிராஜா! நான் இப்போது அங்கு வரும் நிலையில் இல்லை. சாதுர்மாஸ்ய விரதம் துவங்கி விட்டது. இந்த நேரத்தில் முனிவர்கள் தீர்த்த யாத்திரை செல்வர். நானும் கிளம்பிவிட்டேன். என் மகன் மகோற்கடன் வேதமனைத்தும் உணர்ந்த ஞானி. அவனை உன்னோடு அனுப்புகிறேன். அவன் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பான், என்றார். வயதில் சிறியவன் என்றாலும், காஷ்யபரின் பிள்ளையல்லவா! தந்தையைப் போலவே மகனும் அறிவில் சிறந்தவனாக இருப்பான் என்பதை நம்பிய காசிராஜன், அவரைத் தனது தேரில் ஏற்றிக்கொண்டு, காசி நோக்கி விரைந்தான். செல்லும் வழியில், ஓரிடத்தில் அசுரன் ஒருவன், சூரியனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தான். உலகத்திலேயே சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றைப் பெற வேண்டும் என்பதே அவனது நோக்கம். அவன் தேவாந்தக, நராந்தகருக்கு சித்தப்பா முறை வேண்டும். பெயர் தூமாட்சன். தேரில் சென்ற மகோற்கடன், அவனைப் பார்த்தார். ஆயுதத்தைப் பெற்று, உலகத்தையே தன் கட்டுக்குள் வைத்திருக்க எண்ணிய அவனது கெட்ட நோக்கத்தைப் புரிந்துகொண்டார் மகோற்கடன். அந்நேரத்தில் அவனது தவம் நிறைவேறி, சூரிய பகவான் வானில் இருந்து அவன் கேட்ட ஆயுதத்தை கீழே போட்டார். அது அவனது கைகளில் அடைக்கலமாக பாய்ந்து வந்தது. அப்போது, தேரில் இருந்து பாய்ந்து வானில் பறந்தார் மகோற்கடன். ஆயுதத்தை வழியிலேயே பிடித்து மடக்கி, அது அந்த அசுரனின் கைகளுக்கு பதிலாக மார்பில் பாயும் வகையில் அவனை நோக்கி எறிந்தார். அவனை அந்த அம்பு தாக்கி அழித்தது. காசிராஜன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவம் தேவாந்தக, நராந்தகருக்கு தெரிந்தால் தன் தலை போய்விடும் என பயந்தான். ஏனெனில், அவன் அவர்களுக்கு கட்டுப்பட்ட சிற்றரசன், காசிராஜன் நடுங்கிய வேளையில் மகோற்கடன் அவனிடம் ஆறுதலாக, காசிராஜா கலங்காதே. காசியை நோக்கி தேரைச் செலுத்து, நான் பார்த்துக் கொள்கிறேன், என மகோற்கடன் சொல்லிவிட்டார்.

மகோற்கடன் சிறுவனாயிற்றே! அவன் விபரமறியாமல் பேசுகிறான் என்று எண்ணிய காசிராஜன், மகோற்கடரே! நீர் உடனே ஊருக்குப் போய்விடும். நான் தேவாந்தக, நராந்தகரிடம் மன்னிப்பு பெற்று உயிர் தப்பிக்கொள்கிறேன், என்றான்.  மகோற்கடன் ஆவேசமானார். காசிராஜா! என்ன இது! உன்னை நம்பியே என்னை என் தந்தை அனுப்பினார். இப்போது என்னை தனிமையில் திரும்பச் சொல்கிறாய். ஒரு வேளை அந்த தேவாந்தக, நராந்தகர் என்னை செல்லும் வழியில் தாக்கினால் என்ன செய்வாய்? என் தந்தையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை மறவாதே, என்று சத்தமாகச் சொன்னார். காசிராஜனுக்கு தர்மசங்கடமாகி விட்டது. ஒருபுறம் தேவாந்தக, நராந்தகர்... மறுபுறம் காஷ்யபர் ! என்ன செய்வது என்று திண்டாடிய காசிராஜனைத் தேற்றிய மகோற்கடன், காசி நோக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டார். தேர் மீண்டும் கிளம்பியது. இதற்குள் தேவாந்தக, நராந்தகருக்கு தங்கள் சித்தப்பா, ஒரு சிறுவனால் கொல்லப்பட்டார் என்பதை அறிந்து ஆச்சரியமும், கோபமும் அடைந்து அவனை பிடிக்கவும், காசிராஜன் தங்களுக்கு துரோகம் செய்து விட்டதால் அவனைக் கொன்று விடவும் வீரர்களுக்கு உத்தரவிட்டனர். முதலில் வந்த சில அசுரர்களை மகோற்கடன் வாயால் ஊதியே சுவர்களில் மோதச்செய்து கொன்று விட்டார். இதனால் மேலும் பலரை சிங்கம், யானை போன்ற பல உருவங்களாக எடுக்கச் செய்து அனுப்பி வைத்தனர். எல்லா அசுரர்களும் கொல்லப்பட்டனர்.இதற்குள் தேர் காசியை அடைந்து விட்டது. மகோற்கடனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மகோற்கடன் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தங்கியிருந்தார். அப்போது, மகோற்கடனால் கொல்லப்பட்ட அசுரன் தூமாட்சனின் மனைவி சிரம்பை என்பவள், மகோற்கடனின் அறை நோக்கி மாறுவேடத்தில் சென்றாள்.

© Om Namasivaya. All Rights Reserved.