விநாயகர் புராணம்

(பகுதி-6)


அவளது தவம் நூற்றாண்டுகளைக் கடந்தது. பெண்களின் தவத்திற்கு குறைந்த காலத்திலேயே பலன் கிடைத்து விடும். பல ஆண்கள் உயிருடன் நீண்ட காலம் பூமியில் வாழ காரணமே பெண்கள் தான். அவர்கள் தான் காரடையான் நோன்பு, வரலட்சுமி விரதம், தெய்வங்களின் திருக்கல்யாண தினம் ஆகிய நேரங்களில் தீர்க்க சுமங்கலியாக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். தங்கள் தாலிக் கயிறு என்றும் புதிதாக விளங்க, நித்ய சுமங்கலியாக இருக்க கயிறு மாற்றிக் கொள்கிறார்கள். இதனால், நாத்திகனே கணவனாக அமைந்தாலும் கூட, இந்தப் பெண்ணின் நன்மை கருதி, அவனையும் தீர்க்காயுளுடன் இந்த பூமியில் திரிய விடுகிறான் கடவுள். அதிதியின் தவத்துக்கு நூறு ஆண்டுகளில் பலன் கிடைத்து விட்டது. விநாயகப் பெருமான் அவளது தவத்தை மெச்சி அவள் முன் தோன்றினார். முனி பத்தினியே! என்ன காரணத்திற்காக நூறாண்டுகள் தவம் மேற்கொண்டாய், என்று கேட்டார். வேதாந்தக, நராந்தகர்களால் ஏற்படும் அவலம் பற்றியும், தனக்கு மகனாகப் பிறந்து, அவர்களை அடக்கி வைக்க வேண்டும் என்றும் அதிதி கேட்டுக் கொண்டாள். விநாயகரும் அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து விட்டார். சில காலம் கழிந்தது. வேதாந்தக, நராந்தகர்களின் அட்டூழியம் தீவிரமானது. படைக்கும் கடவுளான பிரம்மாவே மேரு மலை குகையில் ஒளிந்து கொண்டார் என்றால் மற்றவர்களைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? இதுகண்டு பூமிமாதா கதறினாள். நல்லவர்களின் மரணம் அவனை வாட்டியது. அவள் பிரம்மா ஒளிந்திருந்த மேருமலைக்குச் சென்று அவரிடமே முறையிட்டாள். கவலைப்படாதே மகளே! உன் பாரம் வெகு விரைவில் குறையும். விநாயகப்பெருமான் அதிதியின் வயிற்றில் அவதரிக்கப் போகிறார், அவரால் நமக்கு விமோசனம் கிடைக்கும், என்றார். அந்நேரத்தில் அசரீரியும் ஒலித்தது. பூமாதேவியே கலங்காதே! நீ பொறுமையுடன் இரு. விநாயகர் இன்று அதிதியின் மகனாக அவதரிக்கப் போகிறார், என்ற குரல் கேட்டு அவள் மட்டுமல்ல, தேவர்களெல்லாம் மகிழ்ந்தார்கள். பூமாதேவி மகிழ்ச்சியுடன் சென்றாள். அன்று மாலையில் அதிதி விநாயக பூஜையைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஆயிரம் தலைகளுடன், பல ஆயிரம் கைகளுடனும் இன்னும் பல்லாயிரம் உறுப்புகளுடனும் விநாயகர் அவள் முன்னால் வந்து நின்றார். அம்மா என பாசத்தோடு அழைத்தார். விநாயகரின் ஒளிமிக்க அந்த தரிசனம் கண்டு அதிதி மகிழ்ந்தாள்.

கணபதியே! வந்து விட்டீர்களா! என்ன பாக்கியம் செய்தேன், என்றவள், அவரது பாதங்களில் அடிபணிய முற்பட்டாள். விநாயகர் விலகி நின்றார். தாயே! உங்கள் பிள்ளை நான். என் காலில் நீங்கள் விழலாமா? உங்கள் காலடியில் அல்லவா நான் ஆசிபெற வேண்டும், என்றார் அடக்கத்துடன். இறைவன் இப்படித்தான்! அவனது அன்பு அளப்பரியது. யார் அவனுடைய திருவடிகளைத் தேடி ஓடுகிறார்களோ, அவர்களைத் தேடி அவன் வந்துவிடுவான். அவர்களது பாதங்களிலும் பணிய தயாராகி விடுவான். ராமாவதராத்திலும் ஸ்ரீமன் நாராயணனின் நோக்கம் அது தானே! தன்னை வணங்கும் ரிஷிகளைத் தரிசிக்கத்தானே காட்டுக்குச் செல்லும்படியான ஒரு சூழ்நிலையையே பகவான் உருவாக்கிக் கொண்டார். கிருஷ்ணாவதாரத்தில், கோபியர்களாகப் பிறந்த தனது பக்தர்களை ஆட்கொண்டார்! இப்படித்தான், இங்கே கணபதியின் பிறப்பும் அமைகிறது. அதிதி பாசத்துடன், குணாநிதியே! தாங்கள் இவ்வளவு பெரிய வடிவத்தில் இருந்தால், தங்களை எப்படி என்னால் வளர்க்க முடியம்? பெற்றவர்களுக்கு பிள்ளையை மடியில் தூங்க வைக்க வேண்டும். தாலாட்ட வேண்டும், பாலூட்ட வேண்டும் என்றெல்லாம் ஆசையிருக்காதா? தாங்கள் பால கணபதியாக ஒற்றை முகத்துடன் உருவெடுத்து என் மடியில் தவழ வேண்டும், என்று கேட்டாள். அந்த பக்தையின் கோரிக்கை அந்தக்கணமே நிறைவேறிவிட்டது. கையில் தாமரையுடன், விநாயகப்பெருமான் பெரிய வயிறுடன், தும்பிக்கையுடன் குழந்தையாக அவள் மடியில் தவழ்ந்தார். உலகையே உள்ளடக்கிய பெருமான் அல்லவா! அதனால் தான் பானை வயிறு அமைந்தது. அதிதி குழந்தையை எடுத்துக்கொண்டு காஷ்யபரிடம் ஓடினாள். விநாயகப்பெருமானே தங்கள் குழந்தையானது கண்டு அவர்கள் மகிழ்ந்தனர். ஊராருக்கு அவர் கணபதி என்ற கடவுள் என்றாலும், இப்போது தங்கள் பிள்ளையாகி விட்டாரே! எனவே, குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என ஆலோசித்தனர். அவரது பெரிய வயிறை மனதில் கொண்டு மகோற்கடன் என பெயர் சூட்டினர். மகோ என்றால் பெரியது. கடம் என்றால் பானை. பானை வயிற்றோன் மகோற்கடன் அவர்களது அன்புச்செல்வமாக வளர்ந்தான். அதிதிக்கு இயற்கையாகவே பால் சுரந்தது. அந்த பாலைக் குடித்து, நற்குண நற்செய்கைகளுடன் மகோற்கடன் வளர்ந்து வந்தான்.

அவனது பிறப்புக்கு பிறகு உலகின் நிலை மாறியது. தவறாமல் மழை, பயிர்களின் செழிப்பு, எல்லாவகையிலும் முன்னேற்றம், குழந்தை பெற தகுதியற்றவர்கள் என ஒதுக்கப்பட்டவர்களுக்கு கூட மகப்பேறு... இப்படி பல சுப பலன்கள் நடந்தன. தேவர்களெல்லாம், தேவாந்தக, நராந்தகர்களின் முடிவு காலத்திற்காக காத்திருந்தனர். பூலோகவாசிகளில் நல்லவர்களுக்கு நன்மை நடக்க, தீயவர்களான அசுரர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவளித்த வேதாந்தக, நராந்தகர்கள் வசித்த பகுதிகளில் ரத்தமழை கொட்டியது. அவர்களது இடது கண்கள் துடித்தன. இடதுகண் துடித்தால் ஆகாது என்பார்கள். இந்த அபசகுனங்கள் கண்டு அரண்டுபோன வேதாந்தக, நராந்தகர் ஜோதிடர்களை வரவழைத்தனர். தங்களுக்கு ஏற்பட்ட அபசகுணங்கள் பற்றி கேட்ட போது, ஜோதிடர்கள், பேரரசர்களே! காஷ்யப முனிவரின் புத்திரனாக ஒரு குழந்தை தோன்றியிருக்கிறான். யானை முகம் கொண்ட அந்தச் சிறுவனால் உங்களுக்கு ஆபத்து. நீங்கள் வேண்டிய ஏற்பாட்டைச் செய்து கொள்ளுங்கள், என்றனர். குழந்தையாவது கொல்வதாவது... என்ன இவர்கள் உளறுகிறார்கள்? என்று நினைத்த வேதாந்தக, நராந்தகர் எதற்கும், அந்தக் குழந்தையை அழித்து விடுவது நல்லது என்றே கருதினர். சுரசை என்ற அரக்கியை அழைத்து, இப்போதே காஷ்யபரின் ஆசிரமத்திற்கு சென்று, அங்கே பிறந்திருக்கும் யானைத்தலை குழந்தையைக் கொன்றுவிடு, என உத்தரவு பிறப்பித்தனர்.

உடனடியாக சுரசை தன் அரக்க வடிவத்தை மாற்றினாள். காஷ்யபரின் ஆஸ்ரமத்திற்கு செல்வதனால், அந்தணப்பெண்ணின் வடிவமே ஏற்றது என முடிவெடுத்தாள். அதுபோலவே தன்னை மாற்றிக் கொண்டு, ஆஸ்ரமத்தை நெருங்கினாள். மகோற்கடன் வாசலில் சக சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவரது தும்பிக்கையை பிடித்து இழுத்து, சிறுவர்கள் கலாட்டா செய்தனர். பலம் மிக்க யானையல்லவா கணபதி! அந்தச்சிறுவர்களுக்கு அதன் மூலம் அளவற்ற மகிழ்ச்சியை அவன் தந்து கொண்டிருந்தான். இந்நேரத்தில் அங்கே வந்த சுரசையை மகோற்கடன் கவனித்து விட்டான். இருப்பினும், தன் போக்கில் விளையாடிக் கொண்டிருந்தான். சுரசை அங்கே வந்து அவனிடம் அன்புமொழி பேசினாள். மற்ற சிறுவர்களிடமும் அவள் அன்பைப் பொழிவது போல நடித்தாள். திடீரென தன் உருவத்தை மாற்றி, குழந்தை மகோற்கடனை தன் வாய்க்குள் போட்டு விட்டாள். சக சிறுவர்கள் அலறியடித்து ஆஸ்ரமத்திற்குள் ஓடினர். குருவே! குருவே! மகோற்கடனை பூதம் விழுங்கிவிட்டது...  பூதம் விழுங்கிவிட்டது என குரல் எழுப்பி ஓடிச் சென்றனர். காஷ்யபரும், அதிதியும் வாசலுக்கு வந்தனர். தங்கள் முன்னால் மிகப்பெரிய வடிவில் ஒரு அரக்கி நிற்பதையும், அவளது முன் பல் இடுக்கில் குழந்தை சிக்கியிருப்பதையும் பார்த்தனர். பெரியவர்கள் எந்தச்சூழலிலும் பதறுவதில்லை. காஷ்யபருக்கு தெரிந்து விட்டது... எல்லாம் அந்த ஆதிமுதலானவனின் திருவிளையாட்டு தான் என்று! ஆனால், பெற்றவளுக்கு பிள்ளைக்கு ஒன்று என்றால் தவித்துப் போவாள். அதிதி அழுது அரற்றினாள். ஏ பாதகி ! நீயும் ஒரு பெண்ணா! என் குழந்தையை விட்டுவிடு. பதிலாக என்னை உன் உணவாக்கிக் கொள், எனக் கதறினாள். சுரசையோ, எதையும் கண்டுகொள்ளாமல் பயங்கர சிரிப்பு சிரித்தாள். ஒரே விழுங்கு... மகோற்கடன் அவளது வயிற்றுக்குள் போய் விட்டான். அதிதி மயக்கநிலைக்கே போய்விட்டாள். காஷ்யபர் இப்போதும் பதறவில்லை. மனைவியைத் தேற்றினார்.

அதிதி! நாம் ஏன் அழ வேண்டும்? நமக்கு பிறந்திருப்பது யார் என்பதையே மறந்து பிள்ளைப் பாசத்தில் தவிக்கிறாயே! அவன் உலகையே ஆளும் ஈசனல்லவா! அந்த ஈசனுக்கும் அவன் இறைவனல்லவா! என் ஆறுதல் மொழிகள் சொன்னார். காஷ்யபர் நினைத்தது போலவே சற்றுநேரத்தில் நிகழ்ந்தும் விட்டது. குழந்தையை விழுங்கிய மகிழ்ச்சியில் பேயாட்டம் போட்ட சுரசையின் வயிற்றுக்குள் சென்ற மகோற்கடன், தன் நெற்றிக்கண்ணைத் திறந்தான். விரசையின் வயிறு எரிந்தது. அவள் அலறித் துடித்தாள். ஏ சிறுவா! உள்ளேயிருந்து என்ன செய்கிறாய்? என் வயிறு சுடுகிறதே, என்று கதறினாள். பிறர் வயிற்றெரிச்சலை சம்பாதிப்பவர்கள், தாங்களும் அதே அவஸ்தைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதற்கு இந்த சுரசையே ஒரு உதாரணம் தான்! இந்த நேரத்தில் வயிற்றுக்குள் இருந்த மகோற்கடன் தன் கால் பெருவிரலால், அவள் வயிற்றை அமுக்கினான். அது கிழிந்து தொங்கியது. ரத்த ஆறு வெளிப்பட்டது. உள்ளிருந்து துள்ளிக் குதித்து வெளிப்பட்டான் மகோற்கடன். சுரசை வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்து மடிந்தாள். அதிதி மகிழ்ந்தாள். காஷ்யபர் தன் திருமகனின் வீரச்செய<லுக்காக பெருமிதப்பட்டார். கடவுளின் கிருபை அலாதியானது. பக்தையான நல்லவளின் வயிற்றில் நேரடியாகப் பிறக்காமல், பெரிய உருவத்துடன் வந்தார். அவளது வேண்டுகோளுக்காக உருவத்தைச் சுருக்கி, பாலலீலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், கெட்டவளான அரக்கியின் வயிற்றுக்குள் ஒரு நிமிடப்பொழுதாவது இருந்து விட்டு, அவளது வயிற்றில் இருந்து மீண்டும் மறு பிறப்பெடுக்கிறார். தவறான நோக்கத்துடன் தன்னை விழுங்கி தாங்கியிருந்தாலும், சுரசையின் வயிற்றில் கணநேரமாவது இருந்துவிட்டதால், அவளுக்கு முக்தியும் தந்தார். அவள் சொர்க்கத்தை அடைந்து பிறவாநிலை பெற்றாள். கடவுள் நல்லவர், கெட்டவர் என பார்ப்பதில்லை. அவருக்கு எல்லாரும் ஒன்றுதான். நல்லவர்களுக்கு நேரடியாக சொர்க்கத்தையும், கெட்டவர்களுக்கு சிறிது அவஸ்தையைக் கொடுத்து அவர்களையும் ஆட்கொள்ளும் தன்மையுடையவர் என்பது இதில் இருந்து தெரிகிறது அல்லவா! குழந்தையை ஆஸ்ரமத்திற்குள் எடுத்துச் சென்று அவரை பலவகை திரவியங்கள், பால், பன்னீர், புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு நீராட்டினாள் அதிதி. பின்னர் சாம்பிராணி புகையிட்டு, தலையைக் கோதி விட்டாள். இதற்குள் விரசை இறந்து போன தகவல், வேதாந்தக, நராந்தர்களை எட்டியது. ஆச்சரியப்பட்டு போனார்கள் அவர்கள். நிச்சயம் அந்தக் குழந்தை சக்தி வாய்ந்தது தான். அவனைக் கொல்ல வேண்டுமானால், பலசாலிகளை அனுப்ப வேண்டும் என முடிவு செய்து, உதத்தன், துந்துபி என்ற இரண்டு சேனாதிபதிகளை வரவழத்தனர்.

சேனாதிபதிகளே! நீங்கள் உடனடியாக காஷ்யபரின் ஆசிரமம் சென்று, அந்த சிறுவனைக் கொண்டு வாருங்கள் அல்லது கொன்று வாருங்கள், என்றனர். ஒரு சிறுவனைப் பிடிக்க இரண்டு பேரா? ஆச்சரியமாக இருக்கிறதே எனக்கருதிய அந்த அரக்கர்கள், காஷ்யபரின் இல்லத்தை கணநேரத்தில் அடைந்தனர். குழந்தையைக் கொல்வதற்காக ஒரு மரத்தில் ஏறி அமர்ந்தனர். தங்கள் வடிவத்தை மாற்றிக்கொண்டால் மகோற்கடனைப் பிடிப்பது எளிதெனக்கருதி, தங்களை கிளிகளாக மாற்றிக்கொண்டனர். அப்போது அதிதி, தன் பாலகனை மடியில் சுமந்து கொண்டு, வெளியே வந்தாள். கிளிகளைக் கவனித்துவிட்டான் மகோற்கடன். புன்னகை பூத்தான். கிளிகளைப் பார்த்து தன் குழந்தை சிரிப்பதைக் கண்ட அதிதி,அவற்றை வேடிக்கை காட்டியபடியே,  குழந்தைக்கு பால்சோறு ஊட்ட ஆரம்பித்தாள். குழந்தை மகோற்கடனோ, அம்மா! எனக்கு அந்தக்கிளிகள் வேண்டும், அவற்றை பிடித்து தா! அவை என் அருகில் இருந்தால் தான் நான் சாப்பிடுவேன், என சாப்பிடாமல் முரண்டு பிடித்தான். அதிதி மகனைக் கண்டித்தாள். குழந்தாய், என்ன இது சேஷ்டை! மரத்தில் இருக்கும் கிளிகளை என்னால் எப்படி பிடிக்க முடியும்? நீ சாப்பிடு! வேடர்கள் இவ்வழியாக வருவார்கள், அவர்களிடம் சொல்லி பிடித்து தருகிறேன், என்று சொல்லவும், அந்த அதிசயம் நிகழ்ந்தது.

© Om Namasivaya. All Rights Reserved.