விநாயகர் புராணம்

(பகுதி-5)


சிறுவனே! ஏன் சிரிக்கிறாய்? நீ கணங்களுக்கு அதிபதி என்ற கர்வமா? அல்லது தேவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியமா? இந்தக் கோழைகளை நம்பி மோசம் போய் விடாதே! என்று கஜமுகாசுரன் சொல்லவும், கணபதி பதிலேதும் சொல்லாமல் மீண்டும் சிரித்தார். கஜமுகாசுரனுக்கு கோபம் அதிகமாயிற்று. கோபமாக பேசுபவர்களைப் பார்த்து சிரிப்பது என்பது ஒரு வகையான கலை. இந்த சிரிப்பு மேலும் கோபத்தைத் தூண்டும். கோபம் எங்கே அதிகமாகிறதோ, அங்கே தோல்வி உறுதிப்படுத்தப்பட்டு விடுகிறது. சின்னஞ்சிறுவா! என்னையே கேலி செய்கிறாயா? நான் சிவபெருமானின் அருள் பெற்றவன். மிருகங்களோ, பறவைகளோ, தேவர்களோ என்னை ஏதும் செய்ய முடியாது. அந்தச் சிவனின் சக்தியைத் தவிர வேறு எதுவுமே என்னை அழிக்க முடியாது. என்பதை அறியாமல், இந்த தேவர்களின் ஆயுதங்களை நம்பி வந்து விட்டாய். நீ சிறுவனாய் இருப்பதால் மீண்டும் மன்னிக்கிறேன். போய்விடு, என கர்ஜித்தான். கணபதி கலங்கவில்லை. இந்த கர்ஜனைக்கும் தனது களங்கமற்ற சிரிப்பினையே பதிலாகத் தந்தார். கோபம் உச்சியைத் தொட, தன்னிடமிருந்த சில அம்புகளை கணபதியின் மீது எய்தான் கஜமுகன். கணபதி அவற்றைத் தன் கையில் இருந்த கதாயுதத்தால் தட்டியே நொறுக்கி விட்டார். உம்...உம்... சூரனாகத்தான் இருக்கிறாய். இதோ! இந்த நாகாஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த இந்திராஸ்திரத்துக்கு பதில் சொல், இந்த வருணாஸ்திரத்துக்குப் பதில் சொல், இந்த வாயுவாஸ்திரம், நரசிம்மாஸ்திரம், பிரம்மாஸ்திரம் ஆகியவற்றுக்கு பதில் சொல், என ஒவ்வொரு அஸ்திரமாக அனுப்பினான் கஜமுகன். அவை அனைத்துமே, சிவசொரூபரான கணபதியின் காலடியைத் தழுவி பாவ விமோசனம் அடைந்தன. கஜமுகாசுரன் யோசிக்க ஆரம்பித்து விட்டான். வந்திருப்பவன் சிறுவன் என்றா<லும் சாதாரண மானவன் அல்ல. அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை அறிந்து, சிறுவனே! இந்த மாயவித்தை கண்டெல்லாம் நான் நடுங்கி விட மாட்டேன். யார் நீ, தைரியமிருந்தால் சொல், என்றான்.

கஜமுகா! உனக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். நீ என் தந்தையின் பக்தன் என்பதால், இவ்வளவு நேரமும் பொறுத்திருந்தேன். தேவர்களும், மனிதர்களும், பறவைகளும், மிருகங்களும், அம்பு முதலான ஆயுதங்களும் உன்னை அழிக்க முடியாது என்பது வாஸ்தவம் தான். இந்த வரத்தையே என் தந்தையிடமிருந்து நீ பெற்றிருக்கிறாய். நான் சிவபுத்திரன். அவரது சக்தி. சிவனின் அம்சத்தால் உனக்கு அழிவு என்பதை மறந்து விட்டாயே. மேலும், நானும் மிருக வடிவினனும் அல்ல. தேவனும் அல்ல, பறவையும் அல்ல, மனிதனும் அல்ல. மிருகமும், தேவவடிவும் கலந்தவன். ஒருவேளை, இந்த வடிவாலும் நீ அழிய முடியாது என்ற வரமிருந்தாலும் கூட ஆயுதங்களால் தான் நீ அழிய முடியாது என்று வரம் பெற்றிருக்கிறாயே ஒழிய.. இதோ... என் உறுப்பான தந்தத்தால் அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற வில்லையே. எனவே, உனக்கு சக்தியிருந்தால் இதைத் தடுத்துப்பார், என்ற கணபதி, ஆவேசம் பொங்கியவராக தன் வலதுபுற கொம்பை ஒடித்தார். அப்போது அண்டசராசரமும் கிடுகிடுத்தது. கஜமுகன் முதலான அசுரர்கள் நடுநடுங்கினர். அவர்களால் ஓரிடத்தில் நிற்க முடியாத படி உலகம் அங்குமிங்கும் தள்ளாடியது. கணபதியே சாந்தம் கொள்வீர்! என தேவர்கள் வேண்டிக் கொண்டனர். ஒடித்த கொம்பை கணபதி, கஜமுகாசுரன் மீது வீசி எறிந்தார். அது அவன் உடலை இருகூறாகக் கிழித்தது. ஆனாலும், கணபதியின் தந்தம் பட்டதால் அவனுக்கு ஞானம் பிறந்தது. அது மீண்டும் அவரையே வந்து சேர்ந்து ஒடிந்த பகுதியில் ஒட்டிக் கொண்டது. என்னை மன்னிக்க வேண்டும் பெருமானே! தாங்கள் சிவாம்சம் என்பதை அறியாமல் தங்களுடன் மோதி விட்டேன். எனக்கு முக்தி தர வேண்டும், என அவரது கால்களில் வந்து விழுந்தான். தனது பாதத்தை கஜமுகன் பற்றியதும், கணபதி அமைதியானார்.

கஜமுகனே! மனதில் அசுர குணங்களுடன் இறைவனை வழிபட்டு என்ன பலன்? நீ சிறந்த பக்தன் தான், ஆனால், கெட்ட குணங்கள் உன்னை ஆக்கிரமித்திருந்தன. என் நல்லாசியால், நீ ஞானம் பெற்றாய். பிளவுபட்ட உன் யானை முக உடல், இனி மூஞ்சூறாக மாறும். நீயே எனக்கு வாகனமாக இருந்து என்னை உலகெங்கும் சுமந்து செல்வாய், என அருள்பாலித்தார். கஜமுகாசுரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். கணபதியின் வாகனமாகும் பாக்கியம் பெற்றமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தான். கருணைக்கடலே! தங்களால் என் உயிரை எடுத்து நரகத்திற்கு அனுப்ப முடியும் என்றாலும் கூட, உம் அருள் எம்மைக் காத்தது. பகைவர்க்கும் அருளிய பரம்பொருளே! ஆதியந்தம் இல்லாதவரே! முதல்வரே! உம்மை வணங்குகிறேன், என அவர் முன்னால் தோப்புக்கர்ணம் போட்டான். பின்னர் அவனை மூஞ்சூறாக மாற்றிய கணபதி, அதில் ஏறி, தேவர்கள் புடைசூழ வடதீவுக்குச் சென்றார். அங்கே திருமால், பாம்பாய் மாறி கிடந்தார். கணபதியின் காலடி அங்கு பட்டதும், விமோசனம் பெற்று சுயரூபம் அடைந்தார். மருமகனின் வெற்றியைப் பாராட்டினார். வந்த வேலை சுபமாக வந்த மகிழ்ச்சியில், அவர் வைகுண்டம் திரும்பினார். கணபதியை வணங்கிய தேவர்கள், இதுவரை கஜமுகாசுரனுக்கு போட்ட தோப்புக்கர்ணத்தை தங்களுக்கு போடுகிறோம். இவ்வாறு செய்பவர்களுக்கு தாங்கள் அருள் செய்ய வேண்டும், என வேண்டிக் கொண்டனர். அப்படியே ஆகட்டும், என அருள் செய்த கணபதி, தாய், தந்தையிடம் வெற்றி செய்தியை அறிவித்தார். அவர்கள் அவரை வாழ்த்தினர். இந்நேரத்தில் காஷ்யப முனிவரின் மனைவியான அதிதி, விநாயகரை எண்ணி பூலோகத்தில் தவமிருந்து கொண்டிருந்தாள். விநாயகப் பெருமானே! நீர் என் வயிற்றில் பிறக்க வேண்டும், என்பதே அவளது பிரார்த்தனையாக இருந்தது.

காஷ்யப முனிவருக்கு திதி, அதிதி என்ற இரண்டு பத்தினிகள். இவர்களில் திதி அசுர வம்சத்தவள். அசுரக்குழந்தைகளை அவர் மூலம் பெற்றவள். அதிதி தேவர் குலத்தினரைப் பெற்ற மகராசி. இவளது பிள்ளைகளான தேவர்களுக்கு ஒரு சமயம் பூலோகத்தில் வசித்த இரண்டு வேதியர்கள் மூலமாக கடும் பிரச்சனை ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவள் தவத்தில் ஆழ்ந்திருந்தாள். அங்கதேசத்தில் காத்திரம் என்ற நகரம் இருந்தது. இங்கு ரவுத்திரகேது என்பவன் தன் மனைவி சாரதாவுடன் வசித்தான். சாரதா பண்பிலும், கற்பிலும் உயர்ந்தவள். கணவனுக்கு பணிவிடை செய்வதையே தன் கடமையாகக் கொண்டவள். இந்த அன்புத்தம்பதியருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள். முதலில் பிறந்தவனுக்கு தேவாந்தகன், அடுத்துப் பிறந்தவனுக்கு நராந்தகன் என்று பெயர் வைத்தார்கள். இருவரும் தந்தையை விட வேதக் கல்வியில் உயர்ந்து விளங்கினார்கள். பிள்ளைகள் கல்வியிலும் பிற வித்தைகளிலும் மிகச்சிறப்பாக இருப்பது கண்டு பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி! நிஜம் தானே! எந்தப் பெற்றவன் தான், தன் பிள்ளை நன்றாக படிப்பது கண்டு மகிழ மாட்டான். மாணவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பெற்றவர்களின் ஆசியைப் பெற வேண்டுமானால், நன்றாகப் படிக்க வேண்டும். பெற்றவர்களின் ஆசியைப் பெற்றவனுக்கு, வாழ்நாள் முழுவதும் சொர்க்கம் தான். இறைவனே அவர்களை நேரில் காண வருவான். தேவாந்தகன், நராந்தகன் வாழ்விலும் இப்படி ஒரு திருப்பம் ஏற்பட்டது. தேவாந்தகனும், நராந்தகனும், தங்கள் தந்தையிடம், தந்தையே! நாங்கள் படித்துப் பயனில்லை. கற்ற கல்வியைப் பயன்படுத்தி வாழ்வில் உயர்நிலையை அடைய வேண்டும். அதற்கு தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும், என்றனர். பண்டிதரான ரவுத்ரகேதுவும், பிள்ளைகளின் ஆர்வத்தைப் பார்த்து பூரித்தார்.

மக்களே! உயர்நிலை என்பது இறைவனை அடைவது தான். நீங்கள் நினைத்தால் அதைச் செய்யலாம். உங்களுக்கு சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறேன். அதை நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள். உங்களுக்கு நிச்சயம் உயர்நிலை கிடைக்கும், என்றார். பின்னர் சிவாயநம என்னும் மந்திரத்தைக் கற்றுக்கொடுத்து, அதன் பெருமையைச் சொல்லி, அதையே சொல்லிவரும்படி சொன்னார். தேவாந்தக, நராந்தகர் தந்தையின் சொற்களை மதித்து, காட்டில் போய் தவமிருந்து, சூரியனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, பத்தாயிரம் ஆண்டுகள் சிவாயநம மந்திரத்தைச் சொல்லி வந்தார்கள். இந்த பத்தாயிரம் ஆண்டுகளும் அவர்கள் தண்ணீர் கூட குடிக்கவில்லை. இவர்களது தவத்தின் வலிமை, நெருப்பாக மாறி சிவலோகத்தையே தகிக்கச் செய்தது. தன் பக்தர்களின் தவவலிமை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு வந்தார். ரிஷப வாகன தரிசனம் புண்ணியம் செய்தவர்களுக்கே கிடைக்கும். பக்திக்காக எதையும் செய்யத் துணிந்த நாயன்மார்களுக்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தான் காட்சி தந்தார். ஞானசம்பந்தர் குழந்தையாக இருந்த போது, ரிஷபத்தில் வந்ததை விடையேறி வந்தார் என சம்பந்தப்பெருமானே பாடியிருப்பதைக் காண்கிறோம். உங்கள் ஊரில் சிவாலய திருவிழாக்களில், ரிஷப வாகனத்தில் சுவாமி வந்தால், அதை தவற விடாமல் பார்த்து விடுங்கள். அந்தளவுக்கு உயரிய தரிசனம் அது. அந்த மதிப்புமிக்க தரிசனம், தேவாந்தக, நராந்தகருக்கு கிடைத்தது. அவர்களுக்கு என்ன வரம் வேண்டும் என சிவபெருமான் கேட்டார். இந்த நேரத்தில், விதிப்பயனால், அவர்களுக்கு ஆணவம் தலை தூக்கியது.

சிவபெருமானே! திருமால், பிரம்மா முதலான தேவர்களாலும், மிருகங்கள், ஆயுதங்கள், உலகத்திலுள்ள எல்லா வகையான பொருட்கள் உள்ளிட்ட எதனாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது. இந்த வரத்தை தாங்கள் தர வேண்டும், என்றனர். தன் பக்தர்கள் கேட்டதை தரும் இறைவனும் அவ்வாறே வரம் கொடுத்தார். மக்களே! உங்களுக்கு என் மகன் யானை முகனைத் தவிர வேறு யாராலும் அழிவு கிடையாது, என்று சொல்லி மறைந்தார். இந்த வரம் கிடைத்ததாலும், தங்கள் தவவலிமையாலும் ஆணவம் மேல் ஏற, வேதாந்தகனும், நராந்தகனும் தந்தையிடம் சென்றனர். அவர்களைப் பார்த்த தந்தைக்கும் ஆணவம் ஏற்பட்டு விட்டது.  இருவருக்கும் தன் இஷ்டம் போல, தங்கள் குலத்தில் இருந்து பல கன்னிகளைத் திருமணம் செய்து வைத்தார். மகன்களை அசுரலோகத்திற்கு அனுப்பி, அவர்களைத் தனது நண்பர்களாக்கிக் கொள்ளும்படி கூறினான். அவர்களும் அசுரலோகம் சென்று, அவர்களோடு பேசி, தன் நண்பர்களாக்கிக் கொண்டனர். எல்லாருமாகச் சேர்ந்து, தேவலோகத்தைப் பிடிக்க திட்டம் போட்டனர். இது கண்டு, காஷ்யபரின் மூத்த மனைவி திதி சந்தோஷப்பட்டாள். திட்டமிட்டபடி, அவர்கள் இந்திரலோகம் சென்றனர். தேவர்கள் அவர்களை எதிர்த்தனர். ஆனால், எதிர்த்தவர்களை பந்தாடி விட்டனர். தேவாந்தக, நராந்தகர். அவர்களையெல்லாம் பிடித்து, மாடுகளைக் கொட்டிலில் அடைப்பது போல அசுரலோகத்தின் சிறைகளில் அடைத்து விட்டனர். இது கண்டு மகிழ்ந்த அசுரர்கள், அவர்களுக்கு தங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்களை ஆசைநாயகிகளாக்கி வைத்தனர். அந்தப் பெண்கள் மூலமாக அசுர இனத்தை விருத்தி செய்தனர் தேவாந்தக, நராந்தகர். இப்படி பலம் பெற்று விளங்கிய அவர்களை அடக்க இந்திரனே நேரில் வந்தான். ஆனால், இந்திரன் ஏறி வந்த ஐராவத யானையை ஒரே அடியில் தரையில் சாய்த்து விட்டு, அவனைப் பிடிக்க முற்பட்டபோது, தேவேந்திரன் பயந்து போய் மேருமலையிலுள்ள குகைக்கு ஓடிவிட்டான். அவன் மனைவி பேரழகி இந்திராணியை அவர்கள் கடத்த முயன்றனர். அவள் எப்படியோ தப்பித்து, கணவன் பதுங்கியிருந்த மேருமலை குகைக்கே ஓடிவிட்டாள். இவர்களது அட்டூழியம் கண்டு வருந்திய தேவ மாதா அதிதி, தன் கணவரிடமே யோசனை கேட்டாள். உன் மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால், விநாயகரால் மட்டுமே முடியும். அவர் உன் வயிற்றில் பிறக்க வேண்டும் என தவம் செய். நன்மை நடக்கும், என்றார். இதற்காகத்தான், இப்போது அதிதி தவத்தைத் தொடங்கியிருக்கிறாள்.

© Om Namasivaya. All Rights Reserved.