விநாயகர் புராணம்

(பகு தி-4)


பார்வதிதேவியும் பரமேஸ்வரனும் கயிலாயத்திலுள்ள சித்திர மண்டபத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அன்று மிதமிஞ்சிய மகிழ்ச்சியுடன் இருந்தனர். அந்த மண்டபத்தில் ஒரு ஆண் யானையும், பெண் யானையும் மகிழ்ந்திருப்பது போன்ற சித்திரத்தைக் கண்ட பார்வதிதேவி, மந்திரங்களை மையமாகக் கொண்டு வரையப்பட்ட சித்திரத்தின் மத்தியில், இப்படி ஒரு சித்திரம் வரையப்பட்டிருப்பது ஏனோ? என பரமேஸ்வரனிடம் கேட்டாள். சக்தி! எல்லாம் காரணத்துடனேயே நிகழ்கிறது. கஜமுகாசுரன் என்னும் அசுரன் என் தரிசனம் வேண்டி நாலாயிரம் ஆண்டுகள் கடும் தவமிருந்தான். சற்றும் மனம் பிறழாமல் என்னையே நினைத்து செய்த அந்த தவத்தை மெச்சிய நான் அவன் முன்னால் பிரசன்னமானேன். அவன் என்னிடம், விஷ்ணு முதலான தேவர்களாலும், மனிதர்களாலும், விலங்குகளாலும், இன்ன பிற சக்திகளாலும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்றும், உமது சக்தியால் மட்டுமே இறப்பு வேண்டுமென்றும், அப்படியே இறந்தாலும், பிறவாநிலையான முக்தி வேண்டும் என்றும் கேட்டான். நானும் அவ்வரத்தைக் கொடுத்து விட்டேன். அவ்வாறு வரம் பெற்றவன், உலகமக்களுக்கு நன்மை செய்வான் என எண்ணினேன். ஏனெனில், அசுரர்களிலும் நல்லவர்கள் உண்டு. ஆனால், அவனோ எல்லா தேவர்களையும் வதைத்து, மூவுலகங்களிலும் தன் கொடியைப் பறக்க விட்டிருக்கிறான். கொடுங்கோல் ஆட்சி செய்கிறான். தேவகன்னிகள், நாக கன்னிகள், அசுர கன்னிகளில் அழகிகள் அனைவரையும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான். அதைத் தட்டிக்கேட்டு சென்றவர்களை விழுங்கி விட்டான். பெற்ற வரத்தை தவறாகப் பயன்படுத்துபவன் இவ்வுலகில் வாழ தகுதியற்றவன். அவனை அழிக்க அவனைப் போன்ற யானை வடிவில், இன்னொரு வீர மகன் நமக்கு பிறக்க வேண்டும். அதன் அடையாளமே இந்த சித்திரம், என்றார்.

பார்வதிதேவி மகிழ்ச்சியுடன் அதைப் பார்த்தாள். பரமேஸ்வரனும் அதையே உற்று நோக்க, அந்த சித்திரத்தில் இருந்து யானை முகத்துடன் ஒரு சிறுவன் அவதரித்தான். அந்த பாலகனை குழந்தாய் என அழைத்து பெற்றோர் உச்சி முகர்ந்தனர். அந்தச் சிறுவன் பெற்றோரிடம் மழலை பேசி சந்தோஷத்தைக் கொடுத்தான். பரமேஸ்வரன் அக்குழந்தையிடம், குழந்தாய்! பிறந்தவுடனேயே உனக்கு வேலை வந்துவிட்டது. என்னருள் பெற்ற கஜமுகாசுரன் என்பவன், மூவுலகிலும் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகிறான். அவனை அடக்க வேண்டியது உன் பொறுப்பு. உன்னைத் தவிர வேறு யாராலும் அது இயலவும் செய்யாது. நீ கயிலாய மலையின் வாசலில் காவல் இரு. அனைத்துக் கணங்களுக்கும் நீயே அதிபதியாகத் திகழ்வாய். இதனால், உன்னை கணபதி என்று அனைவரும் அழைப்பர். கயிலாய வாயிலில் உன்னை வணங்காமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. நானும், <உன் தாயும் கூட இதில் அடக்கம். உனக்கு முதல் மரியாதை செய்த பிறகே, மற்றவர்களுக்கு செய்யப்படும் மரியாதை ஏற்கப்படும். உன்னை மதிக்கத்தவறியவர்களுக்கு, எங்கள் அருள் கடாட்சம் என்றும் கிடைக்காது. ஏன்... நீயாகவே இருந்தாலும் கூட, உன்னைப் போன்ற ஒரு பிம்பத்திற்கு பூஜை செய்த பிறகே எங்களை வணங்க வர வேண்டும், என்றார். (இதன் காரணமாகத்தான் சில கோயில்களில் இரட்டை விநாயகர் சன்னதி அமைக்கப்படும். விநாயகர் தனக்குத்தானே பூஜை செய்து கொள்வதென்பது இதன் தாத்பர்யம்). கணபதி மகிழ்ந்தார். தன்னை முழுமுதல் நாயகனாகவும், ஞால முதல்வனாகவும் அறிவித்த தாய் தந்தையரின் திருப்பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் கயிலாய வாயிலில் அமர்ந்து விட்டார். பார்வதியும் பரமேஸ்வரரும் நந்தவனத்திற்குச் சென்றனர். அப்போது, சகோதரியையும், சகோதரிக்கு மைந்தன் பிறந்திருக்கிறானே என்பதால் அவனையும் பார்க்க திருமால் கயிலைக்கு வந்தார். வாசலில் வீற்றிருந்த கணபதியை அள்ளி அணைத்து கொஞ்சி மகிழ்ந்தார். தாய்க்கு அடுத்த ஸ்தானம் தாய்மாமனுக்கு என்பதால், தன்மீது மிகுந்த பிரியம் கொண்டு வந்த தாய்மாமனுடன் மழலை பேசி மகிழ்வித்தார் கணபதி. பின்னர், திருமால் தன் சகோதரி பார்வதியைச் சந்திக்கச் சென்றார். நந்தவனத்தில் மைந்தன் பிறந்த பூரிப்பில் முகமெல்லாம் பொலிவுடன் திகழ, பார்வதி பரமேஸ்வரர் அமர்ந்திருப்பது கண்டு அவர்களிடம் நலம் விசாரித்தார். சிவபெருமான் இப்போது தான் தன் லீலையை ஆரம்பித்தார்.

பார்வதியிடம், தேவி! நாம் இருவரும் சொக்கட்டான் ஆடி பல நாட்கள் ஆகிறது. இப்போது மைத்துனரும் வந்திருக்கிறார். அவரை நடுவராக வைத்து நாம் விளையாடுவோம். நீ வெற்றி பெற்றால், என்னிடமுள்ள அனைத்து நிதியையும் <உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். நான் ஜெயித்தால், உன்னிடமுள்ள ஆபரணங்களை மட்டும் தந்தால் போதும், என்றதும், பார்வதியும் சம்மதித்தாள். ஆட்டம் தொடங்கியது. தொடக்கம் முதலே அம்பிகையின் கையே ஓங்கியிருந்தது. கடைசியில் அவளே வெற்றியும் பெற்றாள். இந்நேரத்தில், பரமேஸ்வரன் திருமாலை நோக்கி ஜாடை செய்ய, காக்கும் கடவுளான அவர் கஜமுகாசுரனிடமிருந்து உலகைக் காப்பதற்காக தன் பெயரில் பெரிய பழியொன்றை ஏற்றுச்கொள்ளச் சித்தமானார். அடடா! பார்வதி தோற்று விட்டாயே! பார்த்தாயா! மைத்துனர் தான் எப்போதும் எதிலும் வெல்கிறார், என்றார். பார்வதிக்கு கோபம் வந்து விட்டது. அண்ணா! தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? நடுவராக இருப்பவர்கள் தராசு முள்போல் நீதி தவறாமல் இருக்க வேண்டும். நீங்கள் நீதிக்குப் புறம்பாகப் பேசுகிறீர்கள். சரியான தீர்ப்பைச் சொல்லுங்கள். வீணாக என்னைக் கோபப்படுத்தாதீர்கள், என்று ஆக்ரோஷத்தைத் பேசினாள். இந்த ஆக்ரோஷத்தைத் தான் இருபெரும் தெய்வங்களும் எதிர்பார்த்தனர். திருமாலோ தன் தீர்ப்பில் உறுதியாக இருந்தார். பார்வதியின் கண்கள் சிவந்தன. அண்ணா! பொய் சொல்பவர்களின் கண்களை நான் பறித்து விடுவேன். அத்துடன், பாம்பணையில் இதுவரை துயில் கொண்ட நீர், இனி அந்த பாம்பாகவே மாறி காட்டில் திரிவீர், என்றாள். உள்ளுக்குள் மகிழ்ந்தாலும், முகத்தில் அதிர்ச்சியைக் காட்டிக் கொண்ட திருமால், பாம்பாக மாறி ஊர்ந்து சென்றார்.

சிவபெருமானிடம் சென்ற அவர், மைத்துனரே! சக்தியின் இந்த சாபம் எனக்கு எப்போது தீரும்? என்று கேட்டார். அதற்கு சிவன், விஷ்ணுவே! நீர் வடதீவு என்னுமிடத்திற்கு சென்று இதே வடிவில் வசித்து வாரும். கணபதியின் மகிமையை உலகறியச் செய்ய இந்த வடிவத்துடன் நீர் எனக்கு உதவ வேண்டும். கணபதியைக் கொண்டு கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய இருக்கிறேன். அவன் அதை முடித்து விட்டு, வெற்றித்திருமகனாக நீர் பாம்பாக கிடக்கும் பாதையில் வருவான். அவனது திருவடி அந்தத்தீவில் பட்டதுமே சுய உருவை அடைந்து விடுவீர். மேலும், இந்த சம்பவம் உலகோருக்கு ஒரு பாடமாகவும் அமையட்டும். எந்தச்சூழலிலும் தவறான தீர்ப்பு சொல்லவே கூடாது. நடுநிலை தவறக்கூடாது. தவறான தீர்ப்பு சொல்பவர்கள் விலங்காகப் பிறந்து துன்பமடைவார்கள், என்றார். உலகிற்கு ஒரு பாடத்தைக் கற்பித்த மகிழ்ச்சியுடன் விஷ்ணு வடதீவிற்குப் பாம்பு வடிவிலேயே ஊர்ந்து  சென்றார். இந்த சமயத்தில் கஜமுகாசுரனின் அட்டகாசம் அதிகரித்தது. இந்திரன் முதலான தேவர்களையும், நவக்கிரகங்களையும் அவன் ஆட்டி வைத்தான். அவர்கள் தினமும் இருட்டறையில் அடைக்கப்பட்டு தேவையில்லாமல் சித்ரவதை செய்யப்பட்டனர். ஒருமுறை அவர்கள் அனைவரையும், மொத்தமாக ஒரு மைதானத்தில் நிறுத்திய யானை முகம் கொண்ட கஜமுகாசுரன், சுக்ராச்சாரியாரையும், முன்னாள் அசுரத்தலைவனும் தற்போது தனக்கு அமைச்சராக இருப்பவனுமான அசுரேந்திரன் ஆகியோரையும், அசுரத்தளபதிகள், அசுரமக்கள் அனைவரையும் வரவழைத்தான். அசரகுல திலகங்களே! தேவர்கள் நம்மை வென்று விடலாம் எனக்கருதினார்கள். ஆனால், நான் சிவனாரிடம், அவரது சக்தியைத் தவிர வேறு எதனாலும் அழியமாட்டேன் என்ற வரம் பெற்றிருக்கிறேன். எனவே, இந்தத் தேவர்கள் என்னை எதுவும் செய்ய இயலாது. நம்மை பல சமயங்களில் இவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

நம்மை வென்று விட்டதாக மார்தட்டியுள்ளனர். இப்படிப்பட்ட கொடியவர்கள் இப்போது நம்மை வணங்கி நிற்கின்றனர். ஆனால், வணக்கத்திலும் இப்போது ஒரு வித்தியாசத்தைக் காணப்போகிறீர்கள். இதோ! இவர்கள் அனைவரும் தங்கள் காதுகளை மாறுகைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். உட்கார்ந்து உட்கார்ந்து எழ வேண்டும். தோப்புக்கர்ண வழிபாடு என்பது இதற்குப் பெயர். இப்போது தேவர்கள் என் முன்னால் தோப்புக்கர்ணம் போடப் போகிறார்கள். நீங்கள் பார்த்து ரசித்து கைத்தட்டி மகிழுங்கள், என்றான். பின்னர் தேவர்களை நோக்கி உம் என்று அதட்டினானோ இல்லையோ, நடுநடுங்கிப் போன தேவர்கள் 108 முறை தோப்புக்கர்ணம் போட்டு, கால் வலித்து மயங்கிச் சாய்ந்தனர். அவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்து சுக்ராச்சாரியாரும், அசுரேந்திரனும் கைகொட்டி ரசித்தனர். வேடிக்கை பார்க்க வந்த அசுரமக்கள், அவர்கள் மீது கதாயுதங்களை வீசினர். அவை அவர்கள் உடல்களைப் பதம்பார்த்து ரத்தம் கொட்டியது. இப்படி நடந்த கொடுமைக்குப் பிறகு, அவர்களை சிலகாலம் விடுவித்தான் கஜமுகாசுரன். தேவர்கள் இதுதான் சமயமென கைலாயத்தை நோக்கி விரைந்தனர். வாசலில் சின்னக்கணபதி வீற்றிருந்தான். விதிமுறைப்படி அவர்கள் கணபதியைப் பூஜித்தனர். கணபதியே! எங்கள் நிலையைப் பார்த்தீரா! பல தவங்கள் செய்தாலும், இறைவனின் சோதனைக்கு நாங்கள் ஆளாகியுள்ளோம். கஜமுகாசுரனுக்கு தங்கள் தந்தையார் தந்த வரத்தால் நாங்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. காக்கும் கடவுளே! கணபதியே! நீர் தான் எங்களுக்கு அருள வேண்டும். சிவபெருமானை சந்திக்க அனுமதி தர வேண்டும், என்றனர். கணபதி அவர்களை நோக்கி புன்னகைத்தார். தேவர்களே! கவலை வேண்டாம். என்னைத் தஞ்சமடைந்தவர்களை கைவிட மாட்டேன். வாருங்கள், தந்தையாரைப் பார்க்கச் செல்வோம், எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்றார். தேவர்களின் நிலை கண்ட சிவபெருமான் கொதித்துப் போனார்.

தேவர்களே! தேவராயினும், அசுரராயினும் நான் நீண்ட ஆயுள் என்னும் வரத்தைக் கொடுப்பது உலக மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே! கஜமுகாசுரன் நான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால், அவன் சக்தி இழந்தவனாகிறான். இருப்பினும், நான் அவனுக்கு கொடுத்துள்ள வரத்தின்படி, என் சக்தியான கணபதியை அனுப்பி அவனை சம்ஹாரம் செய்கிறேன், என்றதும், ஆஹா... விமோசனம் அடைந்தோம், என்று சொன்ன தேவர்கள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கணபதியைப் புகழ்ந்து பாடினர். பின்னர், தந்தையின் கட்டளைப்படி, கணபதி அசுரர்களின் பட்டினமான மதங்கநகரத்திற்கு படைகளுடன் புறப்பட்டார். அசலன் என்ற பூதகணம் அவரை தன் தோளில் ஏற்றிக்கொண்டது. சின்னக் கணபதியின் வருகை பற்றி, மதங்கநகருக்கு தகவல் தெரிந்து விட்டதுயாரோ ஒரு சிறுவன், போருக்கு வருகிறான் என்பதைக் கேட்ட கஜமுகாசுரனும், சுக்ராச்சாரியார், அசுரேந்திரன் ஆகியோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தேவர்களுக்கு போயும் போயும் ஒரு குழந்தை தானா தலைவனாகக் கிடைத்தான். இந்த அவமானத்தை என்னவென்று சொல்வது? என்று தங்களுக்குள் கேலி பேசிக்கொண்டனர். மதங்கநகரத்தை சின்னக்கணபதி அடையும் முன்பே, கஜமுகாசுரன் தனது படைகளுடன் போர்க்களத்தில் தயாராக நின்றான். கணபதி தேவர்கள் புடைசூழ அங்கு வந்ததும், கஜமுகாசுரன் அவரை நோக்கி, ஏ சிறுவனே! என்னைப் போலவே யானை முகத்துடன் நீ பிறந்துள்ளதால், உன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொள்ளாதே. நீ குழந்தை. பலகாலம் வாழ வேண்டியவன். இந்த தேவர்களின் பேச்சைக் கேட்டு உன் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என் சிறுவிரலின் பலம் கூட நீ இருக்க மாட்டாய். திரும்பிப் போய்விடு. நீ சிறுவன் என்பதால், உன் மீது கருணை கொண்டு உன்னை திரும்பிச் செல்ல அனுமதிக்கிறேன். போய்விடு, என்றான். கணபதி கலகலவெனச் சிரித்தார்.

© Om Namasivaya. All Rights Reserved.