விநாயகர் புராணம்

(பகு தி-3)


அசுரேந்திரனின் மனதில் சற்றே நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன், குருவே! மரகதரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். அவர் எப்படிப்பட்டவர்? ஒரு பெண்ணால் அவரை மயக்கி விட முடியுமா? முனிவர்கள் பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் ஆயிற்றே! மரகதர் எப்படி...? என இழுத்தவனிடம், அசுரேந்திரா! சந்தேகம், தயக்கம், காலதாமதம் இம்மூன்றும் வாழ்வின் எதிரிகள். பெரியவர்கள் ஒன்றைச் சொன்னால், அதில் நிச்சயம் அர்த்தமிருக்கும். என் பேச்சை நீ நம்புபவனாக இருந்தால், இதற்குள் ஒரு பேரழகியை, மரகதரிடம் அனுப்பியிருக்க வேண்டும். நீயோ, அரைகுறை நம்பிக்கையுடன் பேசினாய். நம்பிக்கை இல்லாதவனுக்கு கூட ஒருவேளை வெற்றி கிடைத்து விடும். ஏனெனில், அவன் அந்த நம்பிக்கையின்மையிலாவது உறுதியுடன் இருக்கிறான். அரைகுறை நம்பிக்கை ஆபத்தானது, என்றதும், சுக்ராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்ட அசுரேந்திரன், மரகத முனிவரிடம் ஒரு அழகியை அனுப்புவதாக கூறி விட்டு வெளியேறினான்.அசுர குலத்திலேயே பேரழகி ஒருத்தியை தேடும் படலம் ஆரம்பித்தது. அப்போது அமைச்சர் ஒருவர், அரசே! நம் தேசத்தில் எனக்கு தெரிந்து மாபெரும் பேரழகி ஒருத்தி இருக்கிறாள். இரும்பை மட்டுமே காந்தம் ஈர்க்கும். ஆனால், அந்த காந்தத்தையே ஈர்த்து விடும் அவளது கண்கள். உதடுகளைக் கண்டால் வெட்டிய சிவந்த கொய்யாக்கனிகள் வெட்கத்தில் மீண்டும் ஒட்டிக்கொள்ளும். ரோஜாமலர்கள் அவளது கன்னத்தின் சிவப்பழகு காண பிடிக்காமல், முகத்தைத் திருப்பிக் கொள்ளும். இப்படி... அவளது அழகை வர்ணித்துக் கொண்டே போகலாம். விஸ்வாமித்திரரை தன் பிடிக்குள் ஈர்த்த மேனகையை விட ஐநூறு மடங்கு அழகில் உயர்ந்தவள் இவள். அவளை மட்டும்  மரகத முனிவரிடம் அனுப்பி விட்டால், இவ்வுலகில் அசுரர்களின் ஆட்சி முடிவற்றதாக இருக்கும், என்றார். அசுரேந்திரன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.

யார் அவள்? பெயர் என்ன? எங்கிருக்கிறாள்? அவளை உடனே என் முன் நிறுத்துங்கள், என்றதும், அரசே! எள் என்று நீங்கள் சொன்னால், எண்ணெயுடன் வந்து நிற்பவர்கள் உங்கள் சேவகர்களான நாங்கள். இதோ! அந்த மாணிக்கம், என்று திரைமறைவில் நின்ற ஒரு பெண்ணை அழைத்து வந்தார் அமைச்சர். அவள் வெட்கம் ததும்ப அசுரேந்திரன் முன்னால் நின்றான். அசுரேந்திரனே ஒரு கணம் திகைத்து விட்டான். தன் மனதுக்குள், ஆஹா... இவளை மட்டும் மரகதரிடம் அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்திருந்தால், இவள் என் பட்டத்தரசிகளில் முதன்மையானவளாக இருந்திருப்பாள், என சொல்லிக்கொண்டான். அழகு மங்கையை! உன் பெயர் என்ன? என்றதும், பேசியது குயிலா, சிட்டுக்குருவியா என்று வித்தியாசம் தெரியாதபடி, மிக மெதுவாக விபுதா என்றாள். விபு! உன்னிடம் அமைச்சர் எல்லாம் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். நம் குலம் தழைக்க வேண்டும். அதற்கு நீ இந்த தியாகத்தை செய்தே தீர வேண்டும். இதை செய்து விட்டால், அசுரலோகத்தில் எங்கும் சுற்றி வர உனக்கு அனுமதியும், பல பிறவிகள் உன்னைத் தொடர்ந்தாலும், எப்பிறவியிலும் நீ அனுபவிக்கும்படியான செல்வத்தையும் தருவேன், என்ற அசுரேந்திரன், அவளை காட்டில் கொண்டு பாதுகாப்பாக விடும்படி அமைச்சருக்கு உத்தரவிட்டான். பெரிய தேர் ஒன்றில் ஏறிய விபுதா, மரகத முனிவர் தவம் செய்யும் இடத்தருகே இறக்கி விடப்பட்டாள். ஏவலர்களை அவள் அனுப்பிவிட்டு, மரகதரின் அருகில் சென்றார். பெயருக்கு ஏற்றார்போல், அவர் மிகுந்த தேஜசுடன் இருந்தார். அவரது தவத்தின் ஆழத்தைப் பார்த்தால், அவர் அப்போதைக்கு எழுவதாக பெரியவில்லை. விபுதாவுக்கு அவர் அருகில் செல்ல பயம்.

மிகப்பெரிய தபஸ்வியாக இருக்கிறார். இவர் அருகில் சென்று, தவத்தைக் கலைத்தால் கோபத்தில் நம்மை எரித்து விட்டால் என்னாவது? நான் இறந்து போவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இப்படிப்பட்ட தபஸ்விகளால் மரணித்தால் முக்தியே கிடைக்கும். ஆனால், என் எஜமான் சொல்லியனுப்பிய பணி என்னாவது? ஒருவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட பணியை எப்பாடுபட்டேனும் முடித்துக் கொடுத்து விட வேண்டும். இல்லா விட்டால், அது நம்பிக்கை துரோகத்திற்குரிய பாவத்தின் பலனை நமக்குத் தந்துவிடும். சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும். முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். இவர் தபஸ்வி என்றால், நான் தபஸ்வினியாக வேடம் தரித்து விட்டு போகிறேன்! என்றவள், மறைவிடத்திற்குச் சென்று, தபஸ்வினி போல் வேடமிட்டுக் கொண்டு வந்தாள். முனிவரே! நான் கொண்ட கடமையில் தவறாதவள் என்பது உ<ண்மையானால், நிச்சயம் உம்மை அடைந்தே தீருவேன், என்றவள், முனிவரின் அருகில் அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்தாள். ஒரு கட்டத்தில், அவளது தியானம் தவமாக மாறி விட, மரகத முனிவரை அடைய வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடமே சமர்ப்பித்து, அவரையே மனதில் <உறுதியாக எண்ணி தவத்தை வலுப்படுத்தினாள். பல ஆண்டுகள் உருண்டோடின. அவளது தேகம் மெலிந்து விட்டது. தவத்தின் காரணமாக, ஒருமுறை, அவளது உடலில் இருந்து எழுந்த வெப்பம் மரகதரின் தவத்தைக் கலைத்தது. அவர் தவம் கலைந்து எழுந்தார். அருகில் இருக்கும் பெண்ணை அவர் கவனிக்கவில்லை. அதற்கு பதிலாக, ஒரு ஆண் யானையும், பெண் யானையும் சற்று தூரத்தில் குதூகலமாக இருப்பதைப் பார்த்தார். இதைப் பார்த்தவுடனேயே விதிப்பயன் அவரைத் துரத்தியது. ஆண்டவன் நம் தலையில் எழுதியதை மாற்ற முடியாது. எந்த நேரத்தில் என்ன நடக்க வேண்டுமென எழுதியிருக்கிறானோ அது நடந்தே தீரும். இந்த எழுத்தெல்லாம், முன்வினைப் பயனின் காரணமாக எழுதப்படுபவை. அந்த காட்சியைப் பார்த்த அவரது உள்ளத்தில் மோக உணர்வு ஆக்கிரமித்தது. அந்த உணர்வு ஏற்பட்டதுமே, அதுவரை செய்த தவத்தின் சக்தி குறைந்தது. தன் <உணர்வுகளுக்கு வடிகாலை எப்படி தேடுவது என சுற்றுமுற்றும் நோட்டமிட்ட போது, தன்னருகே ஒரு அழகுப் பெட்டகம் அமர்ந்திருப்பதைப் பார்த்தார் மரகதர். பெருமூச்சுடன் அவளை அவர் நெருங்கினார்.

கண்மூடியிருப்பது போல் நடித்த விபுதா, மரகதர் தன்னை நெருங்கட்டுமே என காத்திருந்தாள். மரகதர் அருகில் வந்ததும், மூச்சுக்காற்றின் வெப்பம் அவள் மீது பட, அப்போது தான் விழித்தவள் போல் நடித்த அவள், அவரது பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தாள். அவரது எண்ணம் அவளுக்கு முழுமையாக விளங்கி விட்டதால், பாதங்களில் இருந்து எழுந்த அவள், அவரருகே, நெருங்கி நின்று, சுவாமி! நான் தவம் செய்வதற்காக இங்கு வந்தேன். தங்களைக் கண்டதும், இது எனக்கு பாதுகாப்பான இடமாக இருக்குமென கருதி, இங்கேயே அமர்ந்து விட்டேன். நான் தவமிருக்க துவங்கிய போது, உங்களையே என் மணாளனாக அடைய வேண்டும் என்ற கோரிக்கையை தான் கடவுளிடம் வைத்தேன். முனி பத்தினியாகும் பேறு பெற்றாள், என்னிலும் கொடுத்து வைத்தவள் யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது, என்று ஆசை வார்த்தைகளைப் பேசினாள். மரகதமுனிவர், எதற்காக அவளை நெருங்கினாரோ, அது தானாகவே கனிந்து போனது கண்டு, அவள் மீது மேலும் மோகம் கொண்டார். அவளை அன்புடன் அணைத்துக் கொண்ட அவர், அவளைப் பற்றிய விபரங்களை விசாரித்தார். அவள், தன்னை அசுர குலத்துப் பெண்ணாக காட்டிக் கொள்ளாமல், யாரோ ராஜகுலத்தவள் போல சொல்லி வைத்தாள். மரகதர் அவளிடம், நீ யாராயினும் அழகு உன்னிடம் கொட்டிக் கிடக்கிறது. அது என்னை உன் மீது மோகம் கொள்ளச் செய்து விட்டது. இருப்பினும், தபஸ்விகளான நாம் மனித வடிவில் உறவு கொள்வது நியாயமல்ல. பிறர் பரிகசிப்புக்கு அது வகை செய்யும். அதோ பார்! தூரத்தில் இரண்டு யானைகள் மகிழ்ந்திருக்கின்றன அல்லவா! அதே போல், நாமும் யானைகளாக மாறி மோகிப்போம், என்றவர், தன் கமண்டல நீரை அவள் மீது தெளித்தார். அவள் பெண் யானையாக மாறினாள்.

மரகதரும் தன்னை ஆண் யானையாக மாற்றிக் கொண்டு, இருவரும் கூடி மகிழ்ந்தனர். அப்படி மகிழ்ந்திருந்த சில நிமிடங்களிலேயே யானையாக மாறிய விபுதாவின் கால்களில் இருந்து, ஆயிரக்கணக்கான அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்களில் ஒருவன் யானை முகத்துடன் இருந்தான். பிறக்கும் போதே வாளை வீசிக்கொண்டு பிறந்த அவன், ஆங்காரமாக ஓசை எழுப்பினான். அதிபயங்கரமான அந்த சப்தம் கேட்டு, மோகத்தில் மூழ்கியிருந்த மரகதர் சுதாரித்தார். தன் சுயரூபத்துக்கு திரும்பினார். விபுதாவும் அவ்வாறே மாறினாள். இப்போது அவள், சுவாமி! நான் அசுரகுலத்தைச் சேர்ந்தவள். எங்கள் இனம் விருத்தியடைந்து, நீடித்த புகழுடன் விளங்க வேண்டுமானால், தவசீலரான தங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளால் தான் முடியும் என எங்கள் குலகுரு சுக்ராச்சாரியார் தெரிவித்தார். அதன்படியும், எங்கள் மாமன்னர் அசுரேந்திரனின் ஆணைப்படியும், தங்களைக் கவர்ந்தது, குழந்தைகளைப் பெற நினைத்து வந்தேன். வந்த வேலையை தாங்களே இனிதாக முடித்து விட்டீர்கள். பாருங்கள், நம் செல்வங்களை! பிறக்கும் போதே வாளுடன் பிறந்து, வீர கர்ஜனை செய்கின்றனர். தங்கள் பிள்ளைகள் வித்தைகளில் கை தேர்ந்தவர்களாக இருந்தால், எந்த பெற்றவர்கள் தான் மகிழ மாட்டார்கள்! நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். தாங்களும் அப்படியே இருப்பீர்கள் என்று தான் நம்புகிறேன், என்றதும், பிறந்த அசுரவீரர்கள் எல்லாரும், வாள்களை சுழற்றிக்கொண்டு, மரகதரை வலம் வந்தனர். அவர் நடுங்கினார். அப்போது யானை முகத்துடன் பிறந்த வீர மைந்தன் அவர் முன்னால் வந்தான்.

தந்தையே! ஏனிந்த கலக்கம்! இத்தனை வீர மைந்தர்களைப் பெற்ற தாங்கள் மகிழ்ச்சியுடன் அல்லவா இருக்க வேண்டும், உங்கள் பிள்ளையான எனக்கு உங்கள் வாயாலேயே பெயர் வையுங்கள், என்றதும், பயந்து நடுங்கிக் கொண்டிருந்த மரகதர் வாயேதும் திறக்கவில்லை. விபுதா தன் மகனை அருகில் அழைத்து, மகனே! நீ யானை முகத்துடன் பிறந்தவன் என்பதால், கஜமுகாசுரன் எனப்படுவாய், என பெயர் சூட்டி ஆசியளித்து, வரிசையாக ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கும் பெயர் வைத்தாள். மரகதர் தன் விதியை எண்ணி வருந்தி, விபுதாவை அழைத்தார். பெண்ணே! நீ ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவள் போல் பொய் சொன்னாய். இப்போது, அசுரகுலத்தினள் எனச்சொல்கிறாய். எப்படியிருப்பினும், என் தவவலிமை, காமத்தின் மிகுதியால் பறிபோனது. நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக , மீண்டும் தவம் செய்து வலிமை பெறப்போகிறேன். நீ பொய் சொன்னதால், என்னுடன் தொடர்ந்து வாழும் தகுதியை இழந்து விட்டாய். உன் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு அரண்மனைக்குப் போய் சேர், என்று கோபமாகச் சொல்லிவிட்டு, அவளை நடுக்காட்டிலேயே விட்டுச் சென்றார். விபுதா அதுபற்றி கவலைப்படவில்லை.வந்த வேலை வெற்றிகரமாக முடிந்ததும், அவள் தன் பிள்ளைகள் புடைசூழ அசுரேந்திரனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். அசுரேந்திரன் மகிழ்ந்து, அவளுக்கு புதிய மாளிகை ஒன்றையே பரிசாகக் கொடுத்தான். சுக்ராச்சாரியார், கஜமுகன் உள்ளிட்ட அரக்கர்களைக் கண்டு அதிர்ந்தே போய்விட்டார். அவரே எதிர்பார்க்காத வகையில் பலம் மிக்கவர்களாக அந்த அசுரர்கள் திகழ்ந்தனர். அவர்களை ஆசிர்வதித்து, வித்தைகள் பல கற்றுத்தந்தார். இதன்பிறகு, கஜமுகாசுரன் உலகின் பல பகுதிகளுக்கும் சென்றான். மனிதர்கள் மிருகங்களையெல்லாம் இஷ்டம் போல் பிடித்து தின்றான். முனிவர்கள் யாகம் நடத்தும் இடங்களுக்குச் சென்று, யாக குண்டங்களை பெயர்த்தெறிந்தான். இதனால், தேவர்கள் தங்களுக்குரிய அவிர்பாகம் கிடைக்காமல் சக்தியிழந்தனர். சுக்ராச்சாரியார் இதைக் கண்டு மகிழ்ந்தார். இருப்பினும் கஜமுகா சுரனை அழைத்து, கஜமுகா! உனது இந்த சந்தோஷம் தற்காலிகமானதே! தேவர்களை நிரந்தரமாக வெற்றி கொள்ள வேண்டுமானால், உனக்கு சிவனின் அருள் வேண்டும். நீ அவரை நினைத்து தவமிரு. அசுரகுலம் அழியாத அளவுக்கு வரங்களைக் கேட்டுப் பெறு, என்றார். கஜமுகனும், 4 ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து சிவதரிசனம் பெற்று, அசுரகுலத்தின் அழியாத் தன்மைக்குரிய பல வரங்களைப் பெற்றான். இதன் பிறகு, அசுரேந்திரன் பதவி விலகி, கஜமுகாசுரனை அரக்கர்களின் தலைவனாக்கினான். இந்நேரத்தில், அதே கஜமுகத்துடன் சிவலோகத்திலும் ஒரு குழந்தை பிறப்பதற்குரிய அறிகுறி தென்பட்டது.

© Om Namasivaya. All Rights Reserved.