விநாயகர் புராணம்

(பகுதி-2)


அந்த தபஸ்வியின் பெயர் சிவனன். பிருகு மகரிஷிக்கும் புலோமைக்கும் பிறந்த செல்வ புத்திரர். அவர், காட்டில் வேதனையுடன் திரிந்த அரச தம்பதியரை பார்த்தார். அழகில் ஊர்வசியையும், ரம்பையையும் கலந்து வடித்தது போன்ற சுதைமையையும், அவளுடன் குரூர வடிவில் இருந்த சோமகாந்தனையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். பரிதாப நிலையில் இருந்த அவர்களை நோக்கி வந்த அந்த இளைஞரிடம், மகனே! நீ யாரப்பா? அழகுத் திருவுருவே! உன்னைப் பெற்றவள் நிச்சயம் புண்ணியவதியாகத் தான் இருக்க வேண்டும். உன் கண்களில் அன்பு பொழிகிறது. இளமை சுகங்களை சுவாசிக்க வேண்டிய இந்த பருவத்தில், தபசு கோலம் பூணக் காரணம் என்ன? என பரிவுடன் கேட்டாள் சுதைமை. அவளது பேச்சில் இருந்த தாய்மை கனிவை உணர்ந்த சிவனன், அம்மா! நான் பிருகு புத்திரன். அருகிலுள்ள என் தந்தையின் ஆஸ்ரமத்தில் பெற்றோருக்கு பணிவிடை செய்து வருகிறேன். தாங்கள் யார்? ஏன் இந்த மனிதருடன் இருக்கிறீர்கள்? என தொழுநோய் பிடித்த சோமகாந்தனை நோக்கி கையை நீட்டினான். அவள் நடந்த கதையை கண்ணீருடன் சொன்னாள். சிவனன் அவர்களுக்கு ஆறுதல் மொழி சொல்லி விட்டு புறப்பட்டார். தந்தை பிருகுவிடம் இதுபற்றி சொன்னார். மகனே! ஆதரவற்றவர்களை ஆதரிக்க வேண்டியது நமது கடமையல்லவா? அவர்களை உடனே அழைத்து வா! வேண்டியதைச் செய்வோம், என்று பிருகு கூறவும், சிவனன் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தார். அவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் ஆஸ்ரமத்துக்கு சென்றார். அந்த ஆஸ்ரமத்தில் எதிரும் எதிருமான மிருகங்களும், பறவைகளும், பூச்சி, புழுக்களும் கூட ஒன்றுபட்டு இருந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தார்.  புலியும் மானும் ஒன்றாக விளையாடின. சிங்க குட்டிகளுக்கு பசுக்கள் பால் கொடுத்தன. பாம்புகளும், மயில்களும் ஒட்டி உ<றவாடின. இந்த அதிசயங்களை எல்லாம் ரசித்தபடியே, அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்தனர். பிருகு முனிவரின் தேஜஸான வடிவைப் பார்த்தவுடனேயே, சோமகாந்தன் தன் வியாதியே தீர்ந்து விட்டது போல் உணர்ந்தான்.

ஐயனே! இந்த நோய் வந்ததற்காக நான் வருந்தியது என்னவோ உண்மை தான். ஆனால், இது மட்டும் வராதிருந்தால், என் வாழ்வில் உங்களைப் போன்ற மகரிஷியைச் சந்திக்கும் பாக்கியத்தை இழந்திருப்பேன், என் உள்ளத்தில் இருந்து எழுந்த உணர்ச்சியை வார்த்தைகளாகக் கொட்டினான். சுதைமை இன்னும் உணர்ச்சி வசப்பட்டாள். மாமுனிவரே! உங்களைப் பார்த்ததுமே இவரது வியாதி தீர்வதற்கான நேரம் வந்துவிட்டதை உறுதியாக நம்புகிறேன். எனக்கு மாங்கல்ய பிச்சை தர வேண்டும். இவர் மீண்டும் தன்னிலை பெற வேண்டும், என்று அழுதாள். பிருகு முனிவர் அவளை ஆசிர்வதித்தார். மகளே! நல்ல நேரம் வரும் போது, ஒவ்வொரு மனிதனும், வர வேண்டிய இடத்திற்கு வந்து விடுகிறான். உனக்கும் நல்ல நேரம், அதனால் தான் இங்கு வந்தாய். கவலை கொள்ளாதே. உன் பர்த்தாவின் முகத்தைப் பார்த்ததுமே, அவனுக்கு பூர்வஜென்ம கருமத்தால் ஏற்பட்டுள்ள இந்த வியாதியைப் புரிந்து கொண்டேன். இதைக் குணப்படுத்துவது எளிது. நீங்கள் இங்கேயே தங்குங்கள். நான் விநாயகரின் சரிதத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த சரிதத்தைக் கேட்பவர்களுக்கு எல்லா நலமும் உண்டாகும். தீராத நோய்கள் தீரும். இழந்த செல்வம், ஆட்சி, அதிகாரம் அத்தனையும் திரும்பக் கிடைக்கும், என்றார். பின்னர் அவர்களை ஆஸ்ரமத்தில் தங்க வைத்து, உணவு, உடை முதலியவற்றுக்கு ஏற்பாடு செய்தார்.  அன்றிரவில், சோமகாந்தனின் மனம் பல்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்தது. இந்த முனிவர் எனக்கு நோய் குணமாகி விடும் என்கிறார். இவரிடம் மூலிகையோ மருந்துகளோ இல்லை. விநாயகரின் சரிதம் கேட்டாலே நோய் நீங்கும் என்கிறார். அதெப்படி சாத்தியமாகும்? நோயாளிகளுக்கு மருந்து வேண்டாமா? இப்படி சந்தேகித்தபடியே தூங்கிப் போனான். மறுநாள் காலையில் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வந்ததும், எங்கிருந்தோ பல பறவைகள் பறந்து வந்தன. சோமகாந்தனை அவை பிடுங்கி எடுத்தன. ஏற்கனவே தொழுநோயால் நைந்து தொங்கிய அவனது உடலில் இருந்து ரத்தமும் சீழும் கொட்டியது. வலி தாளாமல் அவன் அலறினான். மாமுனிவரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே, பிருகுவின் காலில் விழுந்தான்.

மகனே! நீ என்னை நம்பாமல் இருக்கலாம். ஆனால், முழு முதற்கடவுளான விநாயகரையே நேற்றிரவு சந்தேகித்தாயே! அதனால் தான் இப்படி நிகழ்கிறது, என்று முனிவர் சொன்னதும், தன் மனதில் நினைத்தது இவருக்கு தெரிகிறது என்றால், இவரின் தவசக்திக்கு அழிவேது என நினைத்தவன். மகா தபஸ்வி! இந்த அறிவிலியை மன்னியுங்கள். அறியாமல் செய்த பிழைக்காக வருந்துகிறேன். இந்த பறவைகளிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள். வலி உயிர் போகிறது, என்றான். அவன் கதறுவதைக் கேட்டு, சுதைமை ஓடி வந்தாள். முனிவரே! தங்களையே அடைக்கலமென நாடி வந்த எங்களுக்கு உங்கள் இல்லத்தில் ஒரு சோதனை என்றால், நீங்கள் தானே காக்க வேண்டும். என் பர்த்தாவுக்கு ஏதாவது ஆகுமென்றால், அவரது உயிர் பிரியும் முன்பே என் உயிர் தானாக போய் விடும், என முனிவரின் காலைப் பிடித்து கெஞ்சினாள். அறியாமல் தவறு செய்த மன்னனை மன்னிக்க வேண்டும் என சீடர்களும் கெஞ்சினர். அனைவரது கோரிக்கையையும் ஏற்ற பிருகு முனிவர், அந்த பறவைகளை தனது ஒரே சப்தத்தில் விரட்டினார். தனது கமண்டலத்தில் இருந்த புனித நீரை சோமகாந்தன் மீது தெளித்தார். அப்போது பேரரவம் எழுந்தது. அதிபயங்கர சிரிப்பொலிவுடன், சோமகாந்தனின் உடலில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது. பிருகுவைத் தவிர எல்லாரும் நடுங்கினர்.யார் நீ? என அதட்டலுடன் கேட்டார் பிருகு.

பிருகுவின் தவவலிமைக்கு அந்த பூதம் மதிப்பளித்து, முனிவரே! நான் ஒரு அந்தணன். முற்பிறவியில், இந்த சோமகாந்தனால் கொலை செய்யப்பட்டேன். கொடூர மரணமடைந்தவர்களுக்கு சொர்க்கம் இல்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே, பிரம்மஹத்தியாக வடிவெடுத்து, இவனைப் பழிக்குப் பழி வாங்க இவனது உடலிலேயே வசித்தேன். தாங்கள், புனித நீரை இவன் உடல் மீது தெளித்ததால் வெளிப்பட்டேன். இவன் ஒரு காலத்தில் சக்தியற்ற என்னைக் கொன்றான். இப்போது, என்னை எதிர்க்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். பாவம் செய்தவன் அதற்குரிய தண்டனையை அனுபவித்தாக வேண்டும். தாங்களும் இதற்கு உடன்பட வேண்டும். இவனை இப்போதே கொன்று தின்ன வேண்டும். இவனது மனைவியும் எனக்கு இரையாக வேண்டும், என பணிவுடன் கேட்டது. பிருகுமுனிவர் அந்த பூதத்திடம், நான் சொல்வதைக் கேள். அதோ தெரிகிறதே, மரம். அதிலுள்ள புதருக்குள் மறைந்திரு. நான் சற்று நேரம் கழித்து உன்னை அழைப்பேன். வெளியே வந்து இவர்களை உணவாக எடுத்துக் கொள், என்றார். பூதமும் தலை வணங்கி மரப்பொந்தில் நுழைந்தது. உடனே முனிவர் சக்தி வாய்ந்த தன் கமண்டல நீரை மரத்தை நோக்கி தெளித்தார். அந்த மரம் தீப்பற்றி எரிந்தது. அதனுள் புகுந்த பூதம், மீண்டும் முந்தைய அந்தணன் போல் சுயரூபம் பெற்று வெளிவந்தது. முனிவரின் பாதத்தில் அந்த அந்தணர் விழுந்தார். நன்றிப்பெருக்குடன் கண்ணீர் சிந்தினார். அப்போது விநாயகப்பெருமான் ஒரு வான ஊர்தியை அனுப்பி வைத்தார். புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த ஊர்தியில் சில தேவர்கள் இருந்தனர். அவர்கள் அந்தணரை அழைத்துக் கொண்டு சொர்க்கம் சென்றனர். சோமகாந்தனுக்கு ஏதோ ஒரு புத்துணர்வு ஏற்பட்டது. ஆனால் தொழுநோய் மட்டும் அப்படியே இருந்தது. பிருகு முனிவர் சோமகாந்தனிடம், மன்னா! உன்னைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டது. அந்தணர்களைக் கொல்பவர்கள், பசுக்களை வதைப்பார்கள் இந்த கொடிய தோஷத்தை அடைவர். தோஷம் நீங்கிய கையோடு, உனக்கு விநாயகர் சரிதம் சொல்கிறேன். அதைக் கேட்டால், இந்த நோயும் நீங்கிவிடும். நீ மீண்டும் உன் ராஜ்யத்துக்கு செல்லலாம், என்றார்.

சோமகாந்தனுக்கு பிருகுமுனிவர் அருளிய அந்த அருள் தெய்வத்தின் கதையைப் படிக்கும் நாமும் நிச்சயமாக துன்பங்கள் நீங்கி இன்பம் அடைவோம். கைலாயத்தில், பார்வதி சமேதராக சிவபெருமான் வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு கலை மண்டபத்தில், ஒரு ஆண் யானையும், பெண் யானையும் மகிழ்ச்சியாக கூடியிருக்கும் ஓவியம் ஒன்றைக் கண்ட பார்வதி, அதுபற்றி சிவனிடம் விளக்கம் கேட்டாள். பார்வதி! யானைகள் கூடிக்களித்தால் ஒரு குட்டி யானை பிறக்கும். அதுபோல், நமக்கும் ஒரு மகன் பிறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது, என்றதும், பார்வதிதேவி, என்ன அந்தச்சூழ்நிலை? என ஆர்வமாய் கேட்டாள். அவளது குரலில் இருந்த அவசரத்தை ரசித்த சிவபெருமான், தேவி! இன்று உலகில் என்ன நடக்கிறது என்பதை லோகநாயகியான நீயும் அறியாமல் இருக்க மாட்டாய். தேவர்கள் சிரமப்படுகின்றனர். வேதங்களை மறந்து, மக்கள் ஆடம்பரங்களில் மூழ்கி கிடக்கின்றனர். செல்வம் நிலையானதென்றும், ஆண், பெண் உறவு நிரந்தர இன்பம் தரக்கூடியதென்றும் கருதி, அவர்கள் அதனை அடைவதற்காக செய்யும் பாவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பாவம் செய்தவர்கள் அசுரர்களுக்கு சமமானவர்கள். அசுரத்தனத்தை அசுரத்தனத்தாலேயே கையை இப்போது ஓங்கச் செய்திருக்கிறேன்... என அவர் சொல்லவும், இடைமறித்த பார்வதி, சுவாமி! இதென்ன விந்தை. அபாயத்தை ஒழிக்க அபாயத்தையே பயன்படுத்துவதா? தாங்கள் அவர்களுக்கு அபயமளித்து நற்கதியல்லவா அருளியிருக்க வேண்டும், என்றதும், பார்வதி! நீ சொல்வதும் சரியே. இருப்பினும், தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நடந்ததை முழுமையாக கேட்டால், உனக்கு எல்லா விபரமும் புரியும், என்ற சிவன் கதையைத் தொடர்ந்தார்.

அரக்கர் தலைவனான அசுரேந்திரன், தேவர் தலைவனான தேவேந்திரனிடம் பலமுறை அவமானப்பட்டான். தேவர்களுக்கு துன்பம் தந்து அவர்களின் ராஜ்யத்தைக் கவர அவன் நினைத்த போது, இந்திரன் பெரும் படையுடன் சென்று அசுரேந்திரனை தோற்கடித்தான். அவமானமடைந்த அசுரேந்திரன் தன் குருவான சுக்ராச்சாரியாரிடம் ஓடினான். அவர் அவனிடம், அசுரேந்திரா! நீயும் உன் படைகளும் தேவர்களை எதுவுமே செய்ய முடியாது. யாக தியானங்களால் அவர்கள் சிவபெருமானை அன்றாடம் வணங்கி பெரும் பலம் பெற்றுள்ளனர். அவர்களைப் போல, நீயும் சிவனை தியானித்தால், தேவர்களையும் விட உயர்ந்த பலம் பெறலாம். உன்னை ஒடுக்க யாராலும் முடியாது என்றார். அசுரேந்திரனும் குரு சொல் ஏற்று, நாலாயிரம் ஆண்டுகள் காட்டில் தவமிருந்தான். சிவபெருமான் மகிழ்ந்தார். வரம் கொடுக்க வந்தார். திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தெய்வத்தாலும், பிற தேவர்களாலும் அழிவு வரக்கூடாது, என்ற வரத்தை கேட்டான். சிவபெருமான் வரம் தர ஒப்புக்கொண்டாலும், அசுரேந்திரா! உலகில் பிறந்தவர்கள் யாராயினும் அழிவைச் சந்திக்க வேண்டும். நீயும் மரணம் அடைவாய், என்றதும், அப்படியானால், வரம் கொடுத்த உமது சக்தியைத் தவிர வேறு  எதனாலும் அழிவு வரக்கூடாது, என்ற உறுதிமொழியை கேட்டுப் பெற்றான். இதையறிந்த சுக்ராச்சாரியார் மகிழ்ந்தார். அசுரர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டுமானால் ஏராளமான அசுரப்பிள்ளைகளை உருவாக்க திட்டமிட்டார். இந்த திட்டம் நிறைவேற வேண்டுமென்றால் மரகத முனிவரால் மட்டுமே செய்ய முடியும் என்று கணக்கிட்டார். தனது திட்டத்தை அசுரேந்திரனிடம் சொன்னார். யார் அந்த மரகதமுனிவர்? என அசுரேந்திரன் கேட்கவே, அவர் வசிஷ்டரின் வழித்தோன்றல் என்ற சுக்ராச்சாரியார், காட்டில் கண்ணே திறக்காமல் பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருக்கும் அவருக்கு திருமண ஆசையைத் தூண்டினால் அசுரகுலத்தை வாழ வைக்க ஒரு வீரமகன் வருவான், என்றார்.

© Om Namasivaya. All Rights Reserved.