Books / பன்னிரு திருமுறைகள்


இரண்டம் திருமுறை


1,2,3 திருமுறைகளில் திருஞான சம்பந்தர் 4146 பாடல்கள் பாடியுள்ளார். அதில் இரண்டாம்  திருமறையில் திருஞான சம்பந்தர் பாடிய  1331 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

137. பூந்தராய் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1. செந்நெல் அங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.

தெளிவுரை : நெல் வளமிக்க வயல்கள் சூழ்ந்து விளங்கி செழிப்பினைத் தருகின்ற பூந்தராய் என்னும் பதியில் வெண்துகிலில் செம்மை நிறம் கொண்ட பவளம் பதிந்ததைப் போன்றும், புன்னை மலர்கள் விளங்கும் தன்மையைப் போன்றும், தேவர்கள் முடியின் மிசை தோயும் செம்மைக்கழல் உடைய பெருமானே ! சிவந்த சடையில் வெண்மையான பிறைச் சந்திரனும் பாம்பும் பொருந்த வைத்த பாங்கு என்கொல்  ? சொல்வீராக.

2. எற்று தெண்டிரை யேறிய சங்கினொடு இப்பிகள்
பொன்தி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொற்கழ லீர்சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.

தெளிவுரை : கடல் அலைகள் மூலமாகக் கரையில் மோதி வந்த சங்குகளும் சிப்பிகளும் பொன்போன்ற தாமரை மலர்கள் சூழ மேவும் பூந்தராய் என்னும் பதியில் உள்ள பொய்கையில் விளங்க, அத்தகைய பதியில் சூழப்போந்து தேவர்கள் தொழுது ஏத்தும் பொன் போன்ற கழலையுடைய பெருமானே ! இடப வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பது சிறப்புடையதாகுமோ ! சொல்வீராக.

3. சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பதே.

தெளிவுரை : சங்கும் பவளமும் முத்தும் தாங்கி வரும் அலைகளைச் சேர்க்கும் திரைகடல் வளம் பெருக்கும் பூந்தராய் என்னும் பதியின்கண் விளங்கும் பெருமானே ! அஞ்ஞானத்தால் உயர்ந்து நின்று பொருதல் செய்த யானையில் தோலை உரித்து உகந்து போர்த்து உமையவளைக் கூறு எனக் கொண்டு தேகத்தோடு உடனாகி அர்த்தநாரி ஈசுவரனாக விளங்கிய மாண்பினைச் சொல்வீராக.

4. சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம் ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மரவும் தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.

தெளிவுரை : நல்ல பாதுகாப்புப் பொருந்திய மதில்களும், பூக்கள் நறுமணம் கமழ அளிக்கும் உயர்ந்த பொழில்களும் உடைய பூந்தராய் என்னும் பதியில் சந்திரனும் அரவும் விளங்கும் சிவந்த சடையுடைய பெருமானே ! மன்மதன் சாம்பலாகுமாறு கண் சிவந்தது எதற்கு ? விளம்புவீராக !

5. பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளு நாள்தொறும் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளு மான்மறி யேந்திய செங்கையின் னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.

தெளிவுரை : பள்ளத்தில் இருக்கும் நீரில் வாழும் மீனை இரையாகக் கொள்ளும் நாரையானது, வாசம்புரியும் பொழில் சூழ்ந்திருப்பது பூந்தராய் என்னும் பதி. அப்பதியின்கண் துள்ளுகின்ற மானைக் கரத்தில் ஏந்தி விளங்கும் பெருமானே ! பெருவெள்ளமாக மேவும் கங்கையைச் சிவந்த சடையின்கண் வைத்த ஆற்றல்தான் என்னே ! விளம்புவீராக.

6. மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கெலாம்
போதிலங்கம லம்மது வார்புனல் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணிவீர்சொலீர்
காதில் அங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே.

தெளிவுரை : நாட்டியக் கலையில் பெருமை பெற்றுத் திகழும் மங்கையர் நடனம் புரிய, அழகிய தாமரை மலரிலிருந்து பெருகும் தேன் பாயும் நீர் வளம் மிக்க சிறப்புடையது பூந்தராய் என்னும் பதி. அப்பதியின் கண் பேரொளி காட்டும் திருமேனியில் வெண்ணீறு அணிந்து விளங்கும் பெருமானே ! ஒரு காதில் அழகிய குழையும் மற்றொன்றில், அணிகலனாகத் தோடும் அணிந்து இருக்கும் தன்மைதான் யாது ! விளம்புவீராக.

7. வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்துஅருள் ஆக்கிய ஆக்கமே.

தெளிவுரை : கூடி வாழும் இனத்தைச் சேர்ந்த ஆண் குரங்குகளும் பெண் குரங்குகளும், சோலைகளில் உள்ள தருக்கன் தரும் கனிகளைச் சுவைத்து, பெருக உண்ணும் வளம் உடைய பதி பூந்தராய். அத்தகைய பதியின்கண் இடப வாகனத்தில் விளங்கும் அடிகேள் ! தன்முனைப்பு கொண்ட அரக்கனின் ஆற்றலை ஒடுக்கி அருளாக மாறச் செய்த ஆக்கம் தான் என்னே ! விளம்புவீராக.

8. வரிகொள் செங்கயல் பாய்யுனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடநி லாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மால்அயன் நேடி உமைக்கண் டிலாமையே.

தெளிவுரை : அழகிய கயல்கள் பாயும் நீர்வளமும் உயர்ந்த மதில்களையுடைய மாடமாளிகைகளும் விளங்கும் பூந்தராய் என்னும் பதியில், வேதாகமங்களை விரித்து விளங்கும் பெருமானே ! திருமாலும் பிரமனும் உம்மைத் தேடியும் கண்டிலாத தன்மை எதன் பொருட்டு ! விளம்புவீராக.

9. வண்டல்அங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனல்
புண்டரீகமலர்ந்து மதுத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.

தெளிவுரை : நிலவளம் சேர்க்கும் உரம்மிக்க வண்டல் மண் உடைய கழனிகளும், மடையில் வாளை மீன்கள் திகழ விளங்கும் நீர்வளமும், தாமரை மலர்கள் பெருக்கும் தேன் சுவையும் உடைய பூந்தராய் என்னும் பதியில், தொண்டர்கள் வந்து வணங்கிப் போற்றும் அருட்கழல் உடைய பெருமானே ! சமணர்களும் சாக்கியர்களும் பொருளல்லாதவற்றை உரைப்பது என்னே ! விளம்புவீராக.

10. மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாயப்ப
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைபப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுடன் ஆவரே.

தெளிவுரை : சுறாமீன் விளங்கும் கடலின் மணல் சேரும் சோலைகளையுடைய புகலியின் ஞானசம்பந்தன், எழில்மிகு பூந்தராய் என்னும் திருநாமம் தாங்கிய பதியின் இறைவரைப் பரவிப் போற்றிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள், தீவினை யாவும் நீங்கப் பெற்றவராயும் நல்வினை நாடிச் சேரப்பெற்றவராயும் திகழ்வர்.

திருச்சிற்றம்பலம்

138. திருவலஞ்சுழி (அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

11. விண்டெ லாமலர் அவ்விரை
நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யால்இசை
பாடும் வலஞ்சுழித்
தொண்டெ லாம்பர வும்சுடர்
போல்ஒளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி
பாடல் பயின்றதே.

தெளிவுரை : போதுகள் நன்கு விரியவும், வண்டுகள் அதனை வட்டமிட்டு விருப்பத்துடன் தேன் அருந்தி மகிழ்ந்து இசை பாடவும் உள்ள வலஞ்சுழியில், தொண்டர்கள் கூடிப் பரவிப் போற்ற, சுடர் மிகும் ஒளியாய் விளங்கும் பெருமானே ! பிரம கபாலம் ஏந்திப் பலியேற்கத் தேர்ந்து, பாடலும் கூறி ஆற்றியது என்னே ! விளம்புவீராக.

12. பாரல் வெண்குரு கும்பகு
வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை
தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறு வன்னகு
மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுலகு
ஒக்க உழன்றதே.

தெளிவுரை : நீண்ட அலகுகளையுடைய வெண்ணிறக் கொக்கும் நாரையும், நீர் அலையின்கண் இரையை நாடுகின்ற வளம் மிக்க வலஞ்சுழியில், தலைமாலையுடன் விளங்கும் பெருமையுடையவரே ! பிரம கபாலம் ஏந்தி உலகிடைப் பலியேற்று அலைந்தது எதற்கு ? விளம்புவீராக.

13. கிண்ண வண்ணமல ருங்கிளர்
தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம்
வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய்
பூசவல் லீர்சொலீர்
விண்ணவர்தொழ வெண்டலை
யிற்பலி கொண்டதே.

தெளிவுரை : கிண்ணம் போன்று குழிந்த வடிவத்தை உடைய வண்ணத் தாமரையின் தாதுக்கள் நுண்மையான பொடி மணலின்மீது பரவ, அவ் வண்ணக் கலவையின்மீது அன்னப் பறவைகள் தங்குகின்ற  சிறப்பினையுடையது வலஞ்சுழி. அத்தகைய பதியில் விளங்கும் வெண்பொடியைத் திருமேனியில் பூசும் வல்லமையுடைய பெருமானே ! தேவர்கள் எல்லாம் தொழுது வணங்குமாறு கபாலம் ஏந்தி, பலியேற்றது எதற்கு ? விளம்புவீராக.

14. கோடெ லாநிறை யக்குவ
ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண
நாறும் வலஞ்சுழிச்
சேடெ லாம்உடை யிர்சிறு
மான்மி யீர்சொலீர்
நாடெ லாம்அறி யத்தலை
யில்நறவு ஏற்றதே.

தெளிவுரை : நீர்க் கால்வாய்களின் கரையில் உள்ள குவளை மலர்களின் நறுமணம், நீரில் மணக்கும் வளம் பொருந்திய வலஞ்சுழியில் எல்லாவிதமான பெருமைகளும் கொண்டு விளங்கும் பெருமானே ! மானைக் கரத்தில் ஏந்தி விளங்குபவரே ! நாட்டில் உள்ளவர்கள் எல்லாரும் அறியுமாறு, கபாலம் கொண்டு பிச்சை ஏற்றுத் திரிந்தது எதற்கு ? விளம்புவீராக.

15. கொல்லை வென்றபுனத் திற்குரு
மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேலனம்
வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறு வல்நகை
யாள் ஒளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி
கொண்டுழல் செல்வமே.

தெளிவுரை : புறக்கடலைப் பகுதியின்கண் விளங்கும் வண்ணமிகும் சிறப்பான மணிகளைப் பொடி மணலில் விரவி வைக்கும் அன்னப் பறவைகள் திகழும் வலஞ்சுழியில், முல்லை யொத்த முறுவல் நகையுடைய பெருமானே ! சிறுமையுடைய கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிவது செழுமையாகுமோ ! விளம்புவீராக.

16. பூச நீர்பொழி யும்புனற்
பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர்
தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு
மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி
கொள்வது இலாமையே.

தெளிவுரை : பூசத் திருநாளில் அபிடேகப் பெருமை கொள்ளும் காவிரித் தீர்த்தமானது நீராடுவோருடைய இடர் தீர்க்கும் சிறப்பினையுடைய வலஞ்சுழியில், ஒளியும் செல்வமும் உடைய நன்னீராக விளங்கும் பெருமானே ! மானைக் கரத்தில் ஏந்திய ஈசனே ! பலரும் ஏசுமாறு பிச்சையேற்பது இன்மை பற்றியதோ ! விளம்புவீராக.

17. கந்த மாமலர்ச் சந்தொடு
காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வார்இடர்
தீர்க்கும் வலஞ்சுழி
அந்த நீர்முதல் நீர்நடு
வாம்அடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுஉல
கிற்பலி கொள்வதே.

தெளிவுரை : மணம் மிகுந்த மலர்களும் சந்தன மரங்களும், கரிய அகிலும் சேர வரும் தீர்த்த மகிமை பொருந்திய நீரில் (காவிரி) குடைந்து நீராடி, மகிழும் அடியவர்தம் இடர் தீர்க்கும் வலஞ்சுழியில், அந்தமும் ஆதியுமாகி நடுவும் ஆகியவர் நீவிரே ஆவீர். அத்தகைய அடிகேள் ! மன்னுயிர்க்கே உரிய பந்தம் கொள்வதைப் போன்று உலகில் பலி கொள்வது என்னே ! விளம்புவீராக.

18. தேனுற்ற நறு மாமலர்ச்
சோலையில் வண்டினம்
வானுற்ற நசை யாலிசை
பாடும் வலஞ்சுழிக்
கானுற்ற களிற் றின்னுரி
போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற்ற தலை கொண்டுலகு
ஒக்க உழன்றதே.

தெளிவுரை : தேனும் நறுமணமும் கொண்ட மலர்களை உடைய சோலையில் வண்டுகளின் இனம் பேருவகை கொண்டு இசை பாடும் வலஞ்சுழியில், யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொள்ளும் வல்லமை உடையவராய் விளங்கும் பெருமானே ! கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக் கையில் ஏந்தி, பிறரைப் போன்று உழன்றது என்னே ! விளம்புவீராக.

19. தீர்த்த நீர்வந்து இழிபுனற்
பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வார்இடர்
தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை
அன்றுஅடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி
கொள்வதும் சீர்மையே.

தெளிவுரை : புண்ணிய தீர்த்தங்கள் பல வந்து கலக்கப் பெற்ற புனிதமாகியதும் இத் திருத்தலத் தீர்த்தமாக விளங்குவதும் ஆகிய காவிரியில், பன்மலர்கள் சேர்ந்து நறுமணம் கமழ்ந்து விளங்க, அதில் நீராடுபவர்களுடைய இடர் தீர்க்கும் வலஞ்சுழியின்கண், ஆர்த்து வந்த அரக்கனாகிய இராவணனை அடர்த்த பெருமானே ! புகழ்மிக்க பிரமனுடைய கபாலம் ஏந்திப் பலி கொள்வதும் புகழ்க்குரியதே ! விளம்புவீராக.

20. உரம னும்சடை யீர்விடை
யீர்உமது இன்னருள்
வரம னும்பெற லாவதும்
எந்தை வலஞ்சுழிப்
பிரம னும்திரு மாலும்
அளப்பரி யீர்சொலீர்
சிரம்எ னுங்கல னிற்பலி
வேண்டிய செல்வமே.

தெளிவுரை : பெருமைமிக்க சடையுடையவரே ! இடப வாகனத்தை உடையவரே ! வலஞ்சுழி நாதரே ! எமது தந்தையே ! உம்மிடம் வரம்பெறுதல் சிறப்பானது. பிரமனும் திருமாலும் அளப்பதற்கு அரிய பெருமானே ! பிரம கபாலம் ஏந்தி வேண்டிய செல்வம்தான் யாது கொல் ? விளம்புவீராக.

21. வீடு ஞானமும் வேண்டுதி
ரேல்விர தங்களால்
வாடின் ஞானமென் னாவதும்
எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்த
செந்தமிழ் கொண்டுஇசை
பாடு ஞானவல் லார்அடி
சேர்வது ஞானமே.

தெளிவுரை : முத்திப் பேறும் அதனை அடைவதற்கு உரிய ஞானமும் வேண்டுவீராயின், அது உணவைத் தவிர்த்து, விரதங்கள் மேற்கொள்வதால் ஆவது அன்று. உடல் வாட்டம் ஞானத்தை நல்காது, எந்தை யாகிய சம்பந்தரது செம்மை மிகுந்த இத்திருப்பதிகத்தை இசையுடன் பாடும் ஓதுவாமூர்த்திகளிடம் பொருந்தி இருப்பது ஞானமாகும்.

திருச்சிற்றம்பலம்

139. திருத்தெளிச்சேரி (அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிச்சேரி, காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

22. பூவ லர்ந்தன கொண்டுமுப்
போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு
மிகுதெளிச் சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு
கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது
போலுநும் பான்மையே.

தெளிவுரை : நன்கு மலர்ந்த மலர்களைக் கொண்டு மூன்று காலங்களிலும் தேவர்கள் உம்முடைய பொற்கழலை வணங்குமாறு அணிமிகும் தெளிச்சேரி என்னும் பதியில் வீற்றிருக்கும் பெருமானே ! உலகினைத் தன் கருணை வயத்தால் காத்தருளுகின்ற உமாதேவியோடு பன்றியின் பின்னால் வேடுவத் திருக்கோலம் ஏற்று நின்ற பான்மை, விந்தையதே.

23. விளைக்கும் பத்திக்கு விண்ணவர்
மண்ணவர் ஏத்தவே
திளைக்கும் தீர்த்தம் அறாத
திகழ்தெளிச் சேரியீர்
வளைக்கும் திண்சிலை மேல்ஐந்து
பாணமுந் தானெய்து
களிக்குங் காமனை எங்ஙன
நீர்கண்ணிற் காய்ந்ததே.

தெளிவுரை : ஈசனார்மீது பக்தி எழுதல் காரணமாகத் தேவர்களும், பூவுலக மாந்தர்களும் தொழுகின்றனர். அடியவர்களின் குறைகளைத் தீர்த்து, வேண்டிய வரங்களைத் தந்தருளி, மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே ! உறுதியுடன் வில்லை வளைத்து ஐந்து விதமான மலர்கணை நெற்றிக் கண்ணால் எரித்தது எங்ஙனம் ஆனது !

24. வம்ப டுத்த மலர்ப்பொழில்
சூழ மதிதவழ்
செம்ப டுத்த செழும்புரி
சைத் தெளிச் சேரியீர்
கொம்ப டுத்ததொர் கோல
விடை மிசைக் கூர்மையோடு
அம்ப டுத்தகண் ணாளொடு
மேவல் அழகிதே.

தெளிவுரை : மணம் மிகுந்த மலர்ப்பொழில் சூழ, நிலவு தவழுமாறு உயர்ந்த செம்பு கலந்த மதில்கள் கொண்ட தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே ! கொம்பு உடைய அழகிய இடபத்தின் மீது, கூரிய அழகிய திருவருள் நோக்குடைய உமாதேவியுடன் மேவிய அழகுதான் என்னே !

25. காரு லாம்கடல் இப்பிகண்
முத்தம் கரைப்பெயும்
தேரு லாநெடு வீதிய
தார்தெளிச் சேரியீர்
ஏரு லாம்பலிக் கேகிட
வைப்பிடம் இன்றியே
வாரு லாமுலை யாளையொர்
பாகத்து வைத்ததே.

தெளிவுரை : மேகம் தவழும் கடலில் இருந்து சிப்பிகள் வெளிப்பட்டுக் கரையில் முத்துக்களைக் கொழிக்கவும், தேர் செல்லும் அகன்ற நெடிய வீதிகளையுடையதும் ஆகிய தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே ! எழுச்சி கொண்டு பிச்சை ஏற்கும்போது, உமாதேவியைத் தங்குமாறு செய்யத் தகுந்த இடம் வேறு இன்றி உமது பாகமாகக் கொண்டு இருக்கச் செய்தது தான் என்னே !

26. பக்க நுந்தமைப் பார்பதி
யேத்திமுன் பாவிக்கும்
செக்கர் மாமதி சேர்மதில்
சூழ்தெளிச் சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை
மால்செய்து வெளவவே
நக்க ராயுலகு எங்கும்
பலிக்கு நடப்பதே.

தெளிவுரை : உமாதேவியார், உம்மைப் பக்கத்தில் இருந்து பூசிக்க, மதிதவழ் மதில் சூழ்ந்த தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே ! தாருகவனத்து மாதர்கள் நின்பால் பேதலித்து மயக்கம் கொண்டு கையில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று விழுமாறு மெலியச் செய்து, அவர்களைக் கவரும் வகையில் ஆமையற்றவராய் உலகெங்கும் பிச்சையேற்று நடந்தது தான் என்னே !

27. தவள வெண்பிறை தோய்தரு
தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடம்
திகழ்தெளிச் சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென
வந்து குறுகிய
கவள மால்கரி எங்ஙன
நீர்கையிற் காயந்ததே.

தெளிவுரை : அழகிய வெண் பிறைச் சந்திரன் தோழும் பொழில் சூழவும், மணிமாடங்கள் திகழவும் உள்ள தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே ! குவளைக் கண்ணியாகிய உமாதேவியார் துண்ணென்று திகைக்க, வந்து தாக்கிய யானையைத் திருக்கரத்தினால் மாய்த்தது எங்ஙனம் நிகழ்ந்தது !

28. கோட டுத்த பொழிலின்
மிசைக்குயில் கூவிடும்
சேட டுத்த தொழிலின்
மிகுதெளிச் சேரியீர்
மாட டுத்தமலர்க் கண்ணினாள்
கங்கை நங்கையைத்
தோட டுத்த மலர்ச்சடை
என்கொல்நீர் சூடிற்றே.

தெளிவுரை : மலர்க் கொம்புகள் மல்கும் பொழிலில் குயிலின் இசை பெருக, பெருமை மிக்க நாட்டு வளம் பெருக்கும் புறத்தொழிலும், அருள் வளம் பெருக்கும் வேள்வி புரிதல், வேதகீதங்கள் பாடுதல், திருவிழாக்கள் நடத்துதல் போன்றனவும், மிகுந்து மேவும் தெளிச்சேரியின்கண் வீற்றிருக்கும் பெருமானே ! கங்கை என்னும் நங்கையை, இதழ் கொண்டு விளங்கும் கொன்றை தரித்த செஞ்சடையில் பொருந்துமாறு சூடியது என்கொல் ?

29. கொத்தி ரைத்த மலர்க்குழ
லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை
சூழ்தெளிச் சேரியீர்
வித்த கப்படை வல்ல
அரக்கன் விறற்றலை
பத்தி ரட்டிக் கரநெரித்
திட்டதும் பாதமே.

தெளிவுரை : கொத்தாக உள்ள மலர்கள் இரைந்தது போன்ற அடர்ந்த மென்மையான கூந்தலும், குயில் போன்று இனிமையான இசைக் குரலும், சித்திரக் கொடி போன்ற நுண்மைöõன இடையும் கொண்ட மகளிர் விளங்கும், மாளிகைகள் கொண்ட தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பெருமானே ! பிரமதேவனால் வரம் பெற்று, உயர்ந்த படைகள் கொண்ட இராவணின் வலிமை பொருந்திய தலைகள் பத்தும், அதனை இரட்டித்தவாறு ஆகிய இருபது கரங்களும் நெரியுமாறு செய்து, அருள் புரிந்தது உமது திருப்பாதமே !

30. காலெ டுத்த திரைக்கை
கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழ
னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமல
ரான்முடி தேடியே
ஓல மிட்டிட எங்ஙனம்
ஓருருக் கொண்டதே.

தெளிவுரை : கடற்காற்றானது அலைகளாகிய கைகளால் கரைக்கும் நீரை அள்ளி வீச, கானலும் சேல் என்னும் மீன்கள் பாயும் வயல் வளமும் விளங்கும் தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பெருமானே ! திருமால் உமது திருவடியும், பிரமன் உமது திருமுடியும் தேடியும் காணப்பெறாமல் ஓலம் இட்டு வருந்தி நிற்குமாறு, ஓர் உருவத்தைக் கொண்டு விளங்கியது எங்ஙனம் !

31. மந்தி ரந்தரு மாமறை
யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர்
சேர்தெளிச் சேரியீர்
வெந்த லாகிய சாக்கிய
ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித்
தீர்ஓர் சதிரரே.

தெளிவுரை : வேத மங்திரங்களைக் கூறும் அந்தணர்கள், தவம் மிக்கவர்கள், செந்து என்னும் இசையின் வகையாய்ப் பக்தியின் வழி மொழி நவிலும் மாதர்கள் ஆகியோர் விளங்கும் தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பெருமானே ! பயனற்றவனாகிய சாக்கியர், சமணர் ஆகியோரின் செயலை நீக்குவித்த ஈசனே, நீரே வித்தகர் !

32. திக்கு லாம்பொழில் சூழ்தெளிச்
சேரிஎம் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம்
பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும்வல்
லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ
இருப்பவர் சொல்லிலே.

தெளிவுரை : எட்டுத் திக்கிலும் பொழில் சூழ விளங்கும் தெளிச்சேரியில் வீற்றிருக்கும் எமது செல்வமாகிய பரமனை, எக் காலத்திலும் மிக்க விளங்கும் காழிப் பதியில் விளங்கும் ஞானசம்பந்தன் விளம்பிய தகைமை பொருந்திய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், புகழ்மிக்க தேவர்கள் சூழ விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

140. திருவான்மியூர் (அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

33. கரையு லாங்கட லிற்பொலி
சங்கம்வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக
ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுலகு
ஆளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுடன்
ஆகிய மாண்பதே.

தெளிவுரை : கடலின் அலைகள் வலிமையாக வீசி, சங்குகளும், முத்துச் சிப்பிகளும், மீன்களும் திரண்டு விளங்கும் சிறப்புடையது, திருவான்மியூர் என்னும் பதி. அப்பதியின்கண் வீற்றிருந்து உலக்தைப் புரந்தருளும் பெருமானே ! மலைமகளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு அம்மையப்பராகவும் அர்த்தநாரியாகவும் விளங்கும் ஈசனே ! அவ்வாறு விளங்குவதன் பொருள் யாதுகொல் ? விளம்புவீராக.

34. சந்து யர்ந்தெழு காரகில்
தண்புணல் கொண்டுதம்
சிந்தை செய்தடி யார்பர
வும்திரு வான்மியூர்ச்
சுந்த ரக்கழல் மேற்சிலம்பு
ஆர்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிறம்
ஆக்கிய வண்ணமே.

தெளிவுரை : சந்தனமும் அகிற் புகையும், குளிர்ந்த தூய நீரும் கொண்டு பூசித்தும், தியானித்தும் பரவிப் போற்றியும், மனம் வாக்கு காயத்தால் வழிபடும் அடியவர்கள் மிகுந்த சிறப்புடையது, திருவான்மியூர். அப்பதியின்கண் அழகிய கழலும், சிலம்பும் ஒலிக்க விளங்கும் பெருமானே ! அந்தியின் வண்ணம் போன்று, செம்மையான வண்ணத்துடன் உமது திருமேனியின் நிறமானது கொள்ளச் செய்தது எதன் பொருட்டு ? விளம்புவீராக.

35. கான யங்கிய தண்கழி
சூழ்கட லின்புறம்
தேன யங்கிய பைம்பொழில்
சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கமர் ஆடையி
னீர்அடி கேள்சொலீர்
ஆனை யங்கவ்வுரி போர்த்தனல்
ஆட உகந்ததே.

தெளிவுரை : கடற்கரைச் சோலையும் உப்பங்கழியும் சூழும் கடற்புறத்தில் தேன் பொழியும் பசுஞ்சோலையும் சூழ விளங்குவது திருவான்மியூர். அப்பதியின்கண், தோலாடையை அங்கத்தில் நயந்து அணிந்த அடிகேள் ! யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திக் கொண்டதும், நெருப்பைக் கரத்தில் ஏந்தி நடனம் புரிந்து உகந்ததும் யாதுபற்றி ! விளம்புவீராக.

36. மஞ்சு லாவிய மாடம
திற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி
லுந்திரு வான்மியூர்த்
துஞ்சு வஞ்சிருள் ஆடல்
உகக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க்கு
இன்னருள் வைத்ததே.

தெளிவுரை : மேகம் தவழும் உயர்ந்த மாட மாளிகைகளும், செம்மையான நூல்களைக் கற்றுத் தேர்ந்து, அதன் பொருளுணர்ந்த பெருமக்களும் விளங்குகின்ற பதி, திருவான்மியூர். ஆங்கு நள்ளிருளின்கண் ஆடல் உகந்து புரியவல்ல பெருமானே ! தீமை பயக்கும் கொடிய நஞ்சினை உட்கொண்டு தேவர்களுக்கு இனிமையான நல்லருளைப் புரிந்த மாண்புதான் யாதுபற்றியது ! விளம்புவீராக.

37. மண்ணி  னிற்புகழ் பெற்றவர்
மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி
லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி
தைத் தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை
வைத்த வியப்பதே.

தெளிவுரை : பூவுலகத்தில் கற்பென்னும் ஆற்றல் கொண்டு விளங்கும் மங்கையர்கள் பயிலும் இடமாகவும், நெடியவனவாயும் அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய மதில்கள் கொண்டதும் ஆகிய, திருவான்மியூர் என்னும் பதியின்கண் வீற்றிருந்து, பிட்சாடனராகத் திரியும் கோலத்தை ஏற்ற பெருமானே ! வானத்தில் திகழும் வெண்பிறையைச் செஞ்சடையில் வைத்து மிளிர்ந்த அதிசயம் தான் யாது ? விளம்புவீராக.

38. போது லாவிய தண்பொழில்
சூழ்புரி சைப்புறம்
தீதில் அந்தணர் ஓத்தொழி
யார்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர்
பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி
யூட்டிய மொய்ம்பதே.

தெளிவுரை : மலர் அரும்புகள் மிக்க விளங்கும் குளிர்ந்த பொழில்களைச் சூழ்ந்து மதில்கள் விளங்கவும், எவ்விதமான மாசும் கூறமுடியாத அந்தணர்கள் ஓய்தல் இன்றி தேவங்களை ஓதும் பெருமை பெற்ற திருவான்மியூரில் உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் பெருமானே ! முப்புரத்தை எரியூட்டிய வல்லமையை விளம்புவீராக.

39. வண்டி ரைத்த தடம்பொழி
லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கடல் ஓதமல்
குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந்து ஏத்திய
தொல்கழ லீர்சொலீர்
பண்டு இருக்கொரு நால்வர்க்கு
நீர்உரை செய்ததே.

தெளிவுரை : வண்டுகள் ரீங்காரம் செய்து விளங்கும் அகன்ற பொழிலின்கண் கடலலைகளின் ஓதம் பெருகிக் குளிர்ச்சியை நல்கும் திருவான்மியூரின் கண், திருத்தொண்டர்கள் கூடி அர அர என்று பேரொலி எழுப்பி நின்னைப் போற்றிப் பரவும் கழலின் மாட்சிமையுடைய பெருமானே ! பண்டைய நாளில் தட்சணாமூர்த்தியின் வடிவத்தில் விளங்கி சனகாதி முனிவர்களாக விளங்கிய நால்வர்க்கு இருக்கு முதலான நான்கு வேதப் பொருள்களையும் உணர்த்தி உரை செய்தது யாதுகொல் ! விளம்புவீராக.

40. தக்கில் வந்த தசக்கிரி
வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த்
தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந்
தீர்அருள் என்சொலீர்
பக்க மேபல பாரிடம்
பேய்கள் பயின்றதே.

தெளிவுரை : தகுந்த நெறியில்லாத இராவணனுடைய பத்துத் தலைகளும் நலிந்து திக்குகள் தோறும் முறையிட்டு அலறும்படி அடர்த்த பெருமானே ! திருவான்மியூரின்கண் உமாதேவியுடன் உடனாகி வீற்றிருப்பவரே ! பலவகையான பூத கணங்கள் புடைசூழவும் பேய்கள் கூத்தாடவும் விளங்குவதன் காரணம் அருளிச் செய்து விளம்புவீராக.

41. பொருது வார்கடல் எண்டிசை
யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல்
குந்திரு வான்மியூர்ச்
சுருதி யாரிரு வர்க்கும்
அறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொடு உழன்றுகந்து
இல்பலி யேற்றதே.

தெளிவுரை : கடல் அலைகள் கரையில் மோதிப் பெருஞ் செல்வத்தை வழங்கவும், புகுழ் பெருகவும் உள்ள திருவான்மியூரின்கண், வேதத்தில் கூறப்படும் பிரமன், திருமால் ஆகிய இருவருக்கும், அறிதற்கு எட்டாதவராக விளங்கும் பெருமானே ! இடபவாகனத்தில் மீது இவர்ந்து, உகந்து, தாருக வனத்து மாதர்களின் இல்லந்தோறும் சென்று பலி÷ற்றது யாது காரணம்பற்றியது ? விளம்புவீராக.

42. மைத ழைத்தெழு சோலையின்
மாலைசேர் வண்டினர்
செய்த வத்தொழி லாரிசை
சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய
மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர்
கட்டுரைக் கின்றதே.

தெளிவுரை : மேகம் தவழும் தன்மையில் அடர்ந்த பசிய சோலைகளில் பூத்த மலர்களின் மாலைகளில் வண்டினம் ஒலிக்கவும், வேதங்கள் கூறும் மறையொலியின் இசை பெருகவும் உள்ள திருவான்மியூரின்கண், திருமேனியில் வெண்பொடி பூசி விளங்கும் பெருமானே ! சமணர் சாக்கியர் பொய்யுரை பகர்வது யாது பற்றி ? விளம்புவீராக.

43.மாதொர் கூறுடை நற்றவ
னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள்
செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுண்
ஞானசம் பந்தன்சொல்
நீதி யால்நினை வார்நெடு
வானுலகு ஆள்வரே.

தெளிவுரை : உமாதேவியைக் கூறுடைய நற்றவன் ஆன, திருவான்மியூரில் விளங்கும் ஆதியாகிய எம் பெருமானை, அருள் செய்யும் பொருட்டு வினாவுரையாக ஓதும் காழியின் ஞானசம்பந்தனின் இப்பதிகத்தை ஓதுபவர்கள் வானுலகை ஆள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

141. திருஅனேகதங்காவதம் (அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

44. நீடன் மேவுநிமிர் புன்சடை
மேலொர் நிலாமுளை
சூடன் மேவுமறை யின்முறை
யாலொர் கலாவழல்
ஆடன் மேவுமவர் மேயஅ
னேகதங் காவதம்
பாடன் மேவு மனத் தார்வினை
பற்றறுப் பார்களே.

தெளிவுரை : நீண்டு மேவும் மெல்லிய சடையின் மீது பிறைச் சந்திரனைச் சூடி, வேதமுறையில் விதித்தபடி ஆடல் புரியும் தன்மையால், கரத்தில் விளங்கும் நெருப்பானது சுழல அனேகதங்காவதம் என்னும் மலையின்கண் மேவும் ஈசனை விரும்பி இசைப் பாடலால் துதித்துப் போற்றும் அடியவர்களுடைய வினைப்பற்றானது அறுந்து வீழும்.

45. சூலம் உண்டுமழு உண்டவர்
தொல்படை சூழ்கடல்
ஆலம் உண்டபெரு மான்றன்
அனேகதங் காவதம்
நீலம் உண்டதடங் கண்ணுமை
பாக நிலாயதோர்
கோலம் உண்டள வில்லை
குலாவிய கொள்கையே.

தெளிவுரை : ஈசனார்க்குத் தொன்மை வாய்ந்த படையாகச் சூலமும் மழுவும் உண்டு, அத்தகைய பெருமான், ஆலகால விடத்தினை உண்டு அனேகதங்காவதத்தில் வீற்றிருக்கின்றார். நீலோற்பல மலரைப் போன்ற கண்ணுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு அழகிய திருகோலம் கொண்டு விளங்கும் அப்பெருமான், அளவற்ற அன்புடன் பெருந்துபவராவர்.

46. செம்பி னாருமதில் மூன்றெரி
யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி
அனேகதங் காவதம்
கொம்பி னேரிடை யாளொடும்
கூடிக்கொல் லேறுடை
நம்பன் நாமம்நவி லாதன
நாவென லாகுமே.

தெளிவுரை : செம்பு எனும் உலோகத்தில் ஆன மூன்று மதில்களை எரிக்குமாறு, திருமால் அம்பாகவும், அக்கினி தேவன் அதன் முனைப் பகுதியாகவும் விளங்கி நிற்க மேருமலையை வில்லாகக் கொண்டு விளங்கும் பரமன் அனேகதங்காவதம் என்னும் பதியில் கொம்புபோன்ற இடையுடைய உமாதேவியுடன் மேவி, இடப வாகனத்தில் விளங்கும் நம்பன் ஆவர். அப் பெருமானுடைய திருநாமத்தை நவிலாத நாவானது நாவெனலாகாது.

47. தந்தத் திந்தத்தடம் என்றரு
வித்திரன் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு
மாசறு திங்களார்
அந்தம் இல்லஅளவுஇல்ல
அனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி
வார்க்கிட மாவதே.

தெளிவுரை : தம் தத்திம் தத்தண்தம் எனும் ஓசையின் குறிப்புத் தோன்ற அருவிகள் மலைச் சாரலிலிருந்து வீழ, வெங்கதிரும் மாசற்ற திங்களும், எல்லையும், அளவும் அற்றுத் திகழும் அனேகதங்காவதம் என்னும் திருத்தலம், எந்தை ஈசன் திருவெண்ணீறு பூசி விளங்குகின்ற இடமாகும்.

48. பிறையு மாசில்கதி ரோன்அறி
யாமைப் பெயர்ந்துபோய்
உறையும் கோயில் பசும்பொன்
னணியா சும்பார்புனல்
அறையும் ஓசை பறைபோலும்
அனேகதங் காவதம்
இறையெம் மீசன் எம்மான்
இடமாக உகந்ததே.

தெளிவுரை : பிறைச் சந்திரனும் குற்றமில்லாத கதிரவனும் கோயிலின்மீது பரவிச் செல்லுதலைத் தவிர்த்துப் பெயர்ந்து விலகிப் பக்கம் சூழ்ந்து செல்ல, நீர்த்துளிகள் வீழும் ஓசையானது பறையொலித்தல் போன்று விளங்கும் அனேகதங்காவதம் என்னும் பதியை, எம் ஈசன் இடமாக உகந்து விளங்குபவர்.

49. தேனை யேறுநறு மாமலர்
கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சாரல்
அனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண
ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள்
செய்வதும் வானையே.

தெளிவுரை : தேன் விளங்கும் நறுமலர் கொண்டு திருவடியில் சாற்றி வணங்குபவர்களே ! யானைகள் ஏறும் மலைச் சாரலையுடைய அனேகதங்காவதம் என்னும் தலத்தில் விளங்கும் ஈசன்பால் சேரும் உயர்ந்த நெறியானது, பசுவிலிருந்து கிடைக்கப்பெறும் பூசனைப் பொருள்களாகிய பால், தயிர், நெய் முதலான பஞ்சகவ்வியம் கொண்டு பூசனை ஆற்றுவதாகும். அவ்வாறு ஆற்றுதல் சிறப்பினைத் தரும்.

50. வெருவி வேழமிரி யக்கதிர்
முத்தொடு வெண்பளிங்கு
உருவி வீழவயி ரங்கொழி
யாவகில் உந்திவெள்
அருவி பாயுமணி சாரல்அ
னேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல்
சேர்வது வாய்மையே.

தெளிவுரை : அனேகதங்காவதம் என்னும் மலையில் அருவி பாயும் நிலையைக் கண்டு யானை வெருவி அஞ்சி ஓடவும், அருவியின் வாயிலாக மலையிடைப் பிறந்த சுடர் முத்தும், வயிரமும், அகிலும், ஓய்வின்றிப் பெருகிக் கொழிக்கவும் விளங்குகின்றது. அத்தகைய இடத்தில் வீற்றிருக்கும் பெருமான் கழல் சேர்வதுதான் மேலானது.

51. ஈரம் ஏதும்இல னாகி
எழுந்த இராவணன்
வீரம் ஏதும்இல னாக
விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்பது அணிவான்றன்
அனேகதங் காவதம்
வாரம் ஆகிநினை வார்வினை
யாயின மாயுமே.

தெளிவுரை : உள்ளத்தில் அன்பு சிறிதும் இல்லாதவனாய் எழுச்சியுற்ற இராவணன், விவேகம் இன்மையின் காரணமாகவும் தினவுகொள்ளும் தன்மை மட்டும் உடைமையால் வீரம் சிறிதும் இல்லாதவனாய் ஆக்கிய கயிலைமலை நாயகனாகிய சிவபெருமான் பாம்பினை மாலையாக அணிபவன். அப்பெருமானுடைய திருத்தலமாகிய அனேகதங்காவதம் என்னும் பதியின்பால் அன்பு பூண்டு நினைப்பவர்தம் வினை யாவும் மாயும்.

52. கண்ணன் வண்ணமல ரானொடும்
கூடியோர்க் கையமாய்
எண்ணும் வண்ணம்அறி யாமை
எழுந்ததோர் ஆரழல்
அண்ணல் நண்ணும்அணி சாரல்
அனேகதங் காவதம்
நண்ணும் வண்ணம்உடை யார்வினை
யாயின நாசமே.

தெளிவுரை : திருமால், வண்ணத் தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனோடு சேர்ந்து, பிறரால் தாழ்மையாக நினைக்கப்படுமாறு அணியாமையுடன் இருக்க, நெருப்புப் பிழம்பு போல் எழுந்து பேரொளியாகிய அண்ணலான ஈசன், நண்ணுகின்ற அழகிய சாரல் அனேகதங்காவதம் ஆகும். அதனை நாடும் எழில் மிக்கவர்தம் வினை யாவும் அழியும்.

53. மாப தம்மறி யாதவர்
சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு
மாந்துழல் வார்கள்தம்
ஆப தம்மறி வீருளி
ராகில னேகதங்
காப தம்அமர்ந் தான்கழல்
சேர்தல் கருமமே.

தெளிவுரை : சிறப்பான பதவிகளைப் பற்றி அறியாதவர்களும், தொடக்க நிலையில் கற்கும் தன்மையுடையவர்களும், சாக்கியர்களும், இகழப்படுமாறு நின்று, தினவின் வயப்பட்டுத் திரிபவர்கள் ஆவர். விரைவில் கைவரப் பெறும் நற்பதம் வாயத்தலை அறிந்து கொள்ள வேண்டும் என்று விழைவீராயின், அனேகதங்காவதம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற ஈசன் திருக்கழலை வணங்குதல் இன்றியமையாதது எனத் தெளிவீராக.

54. தொல்லையூ ழிப்பெயர் தோன்றிய
தோணிபு ரத்திறை
நல்லகேள் வித்தமிழ் ஞானசம்
பந்தனல் லார்கண்முன்
அல்லல் தீரவுரை செய்த
அனேகதங் காவதம்
சொல்ல நல்லஅடை யும்மடை
யாசுடு துன்பமே.

தெளிவுரை : ஊழிக் காலத்திலும் நிலைத்திருக்கும் தொன்மை மிக்க தோணிபுரத்தின் இறைவனால் அருளப்பெற்ற நல்ல வேதம் வல்ல, இனிமை மிக்க ஞானசம்பந்தன், ஈசன்பால் வழிபாடு செய்யும் நல்லோர் முன்பு, தமிழ் உரை கொண்டு அலலல் தீர்க்கின்ற தன்மையில் அனேகதங்காவதம் என்னும் திருத்தலத்தைப் பற்றயதான இத்திருப்பதிகத்தைச் சொல்பவர்களுக்கு, நல்லன யாவும் வந்து அடையும். வருத்தம் தருகின்ற துன்பம் அடையாது.

திருச்சிற்றம்பலம்

142. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

55. கோடல்கோங் கங்குளிர் கூவிள
மாலை குலாயசீர்
ஓடுகங் கையொளி வெண்பிறை
சூடும் ஒருவனார்
பாடல் வீணைமுழ வங்குழல்
மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : வெண்காந்தள் மலர், கோங்கு, வில்வமாலை ஆகியவை தரித்துக் கங்கையும் வெண்பிறைச் சந்திரனும் சூடி விளங்கும் ஒப்பற்றவராகிய ஒருவர், இசைப் பாடலும் வீணையின் நாதமும், முழவு, புல்லாங்குழல், மொந்தை ஆகியனவும் இசைய பண்ணோடு பொருந்துகின்ற நடனம் புரிய வல்லவர். அவர் ஐயாற்றை இடமாக உடைய தலைவன் ஆவார்.

56. தன்மை யாரும்அறி வார்இலை
தாம்பிறர் என்கவே
பின்னு முன்னுஞ்சில பேய்க்கணம்
சூழத் திரிதர்வர்
துன்ன ஆடை உடுப்பவர்
சுடலைப்பொடி பூசுவர்
அன்னம் ஆளுந்துறை யானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : ஈசனாரின் மெய்த்தன்மையை யாரும் அறிபவர்கள் இல்லை. அவர், பிறர் ஏளனம் செய்யுமாறு முன்னும் பின்னும் பேய்க் கணங்கள் சூழத் திரிபவர்; கந்தல் ஆடையைக் கோவணமாக உடுப்பவர்; சுடலையில் மல்கும் சாம்பலைப் பூசுபவர். அப்பெருமான், அன்னப் பறவைகள் ஒலித்து ஆடும் துறையுடைய ஐயாற்றை இடமாக உடைய தலைவன் ஆவார்.

57. கூறு பெண்ணுடை கோவணம்
உண்பது வெண்டலை
மாறி லாருங்கொள் வாரிலை
மார்பில் அணிகலம்
ஏறும் ஏறித் திரிவர்இமை
யோர்தொழுது ஏத்தவே
ஆறு நான்கும்சொன் னானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும், சந்தோவிசிதி, கற்பசூத்திரம், வியாகரணம், சிட்சை, சோதிடம், நிருத்தம் ஆகிய ஆறு அங்கங்களும் விரித்தவராகிய ஐயாறுடைய ஐயன், உமாதேவியைக் கூறாக உடையவர்; கோவணத்தை உடையாகக் கொண்டவர்; உண்கின்ற கலனாகக் கபாலம் உடையவர். இதனை ஒரு மாறுதலுக்குக்கூட யாரும் கொள்பவர் இல்லை. மார்பில் ஆமையோடும், பாம்பும், பன்றியின் கொம்பும் அணிகலமாகக் கொண்டுள்ள இப்பெருமான், தேவர்கள் வாழ்த்தித் தொழுமாறு இடப வாகனத்தில் ஏறித் திரிபவர்.

58. பண்ணில் நல்லமொழி யார்பவ
ளத்துவர் வாயினார்
எண்ணில் நல்லகுணத் தாரினை
வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம்
வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந் தானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : பண்கலந்து பாடும் தமிழிசைவல்ல மகளிர் எண்ணரும் நற்குணத்தினராய், வேலினைவென்ற கூர்மையான விழி நோக்குடையவராய், ஈசன் அருள் வண்ணமும் ஆற்றல் வண்ணமும் பாடி, வேத கீதம் பாட, அதனை இசைப் பிரியனாய்ச் செவிமடுத்து உகந்தவர், ஐயாறுடைய தலைவன் ஆவர்.

59. வேன லானை வெருவவுரி
போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி
சூடிய மைந்தனார்
தேனெய் பால்தயிர் தெங்கிள
நீர்கரும் பின்தெளி
ஆனஞ்சு ஆடுமுடி யானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : உமாதேவியும் அச்சம் கொள்ளுமாறு வெம்மைமிகும் சீற்றத்துடன் வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்து, வானைக் கிழித்துச் செல்லும் சந்திரனைச் சடை முடியில் சூடிய அழகனார், தேன், நெய், பால், தயிர், தென்னை இளநீர், கரும்பின் சாறு, எனவும் ஆவின் பஞ்சகவ்வியமும் ஐயாற்றை இடமாக உடைய தலைவன் ஆவார்.

60. எங்கும் ஆகி நின்றானும்
இயல்புஅறி யப்படா
மங்கை பாகங் கொண்டானும்
மதிசூடு மைந்தனும்
பங்கமில் பதினெட் டொடு
நான்குக்கு உணர்வுமாய்
அங்கம் ஆறும்சொன் னானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : எல்லா இடங்களிலும் வியாபித்துப் பரவி அண்டமாய் விளங்குபவனும், அவ்வாறு உடையதன்மையில் விளங்கும் பொருளாகி, அறியப் படாதவளாயும் திகழும் உமையவளை, ஒருபாகமாகக் கொண்டுள்ள ஈசன் வெண்பிறை சூடிப் பதினெட்டு புராணங்களும், நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும், ஆகியவற்றின் உணர்வாகவும், பொருளாகவும் விளங்கி, விரித்தவனாகியும் திகழ்பவன், ஐயாற்றை இடமாகக் கொண்டுள்ள தலைவன் ஆவார்.

61. ஓதி யாரும்அறி வாரிலை
ஓதி உலகெலாம்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச்
சேதியுட் சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண்
ணோடுஎரி காற்றுமாய்
ஆதி யாகிநின் றானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : ஈசன், யாராலும் ஓதப்பெற்று மன்னுயிர்களை அறிவது இல்லை. தானே அவற்றுக்கு ஓதி அறிவிப்பவன். உயிர்களையும் தானாகவே அறிபவன் அவன். யாண்டும் சோதியாய் நிறைந்துள்ள பெருமானாய்ச் சூரிய, சந்திர, அக்கினி ஆகிய சுடர்களுக்கும் சோதி தருபவனாய், வேதவடிவினனாய் ஆகி, விண்ணாகி, மண்ணோடு நெருப்பும் காற்றுமாகி, யாவற்றுக்கும் ஆதியாகி நின்றவன் ஐயாறு உடைய தலைவன்.

62. குரவ நாண்மலர் கொண்டடி
யார்வழி பாடுசெய்
விரவு நீறணி வார்சில
தொண்டர் வியப்பவே
பரவி நாள்தொறும் பாடநம்
பாவம் பறைதலால்
அரவம் ஆர்த்துகந் தானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : அன்றலர்ந்த குராமரத்தின் பூக்களால் அடியவர்கள நீறணிந்து பூசிக்கவும், தொண்டர்கள் நாள்தோறும் புகழ்ப் பாடல்களைப் பாடவும், நம் பாவம் நீங்கப் பெற அரவம் அணிந்து மகிழ்ந்தவன் ஐயாற்றின்கண் வீற்றிருக்கும் தலைவன் ஆவன்.

63. உரைசெய் தொல்வழி செய்தறி
யாஇலங் கைக்குமண்
வரைசெய் தோளடர்த் துமதி
சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட
பாலது காதலான்
அரைசெய் மேகலை யானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : ஈசனை வழிபடுதல் வேண்டும் என்கிற தொன்மையான வழியறிகிலனாய், மலையெடுத்த இராவணின் தோளை அடர்த்த பிறை சூடியாகிய அழகனார், காவிரியின் வடபால் உள்ள கரையில், ஆடையினை அரையில் கட்டியவனாய் விருப்பத்துடன் ஐயாற்றினை இடமாகக் கொண்டு விளங்கும் தலைவர் ஆவர்.

64.மாலும் சோதி மலரானும்
அறிகிலா வாய்மையான்
காலங்காம்பு வயிரங்
கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழுந்து ஈன்று
பவளம் திரண்டதோர்
ஆல நீழலு ளானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : ஈசன், திருமாலும் பிரமனும் அறிதற்கு இயலாத பெருமையுடையவன்; சிறப்பான துகிலை உடையவன்; பொற்கழல் மாண்பினன்; பவளம் போன்று செவ்வொளியானவன்; ஆல நீழலில் உள்ளவன்; அப்பெருமான் ஐயாற்றை இடமாகக் கொண்ட தலைவன்.

65. கையில் உண்டுழல் வாரும்
கமழ்துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்தழல் வாரும்
உரைப்பன மெய்பல
மைகொள் கண்டத்தெண் டோள்முக்க
ணான் கழல் வாழ்த்தவே
ஐயந் தேர்ந்தளிப் பானும்ஐ
யாறுடை ஐயனே.

தெளிவுரை : கையின்கண் உணவை ஏந்தி உண்ணும் தன்மையுடையவரும், துவர் ஆடையைப் போர்த்திக் கொண்டுள்ளவரும் ஆகிய வேற்றி நெரியினர் உரைக்கும் கருத்துக்கள் பொய்யன்று. மை போன்ற கரிய கண்டத்தைக் குறிக்கும் திருநீல கண்டனாகவும், எட்டுத் தோள்களையுடைய பெருமானும், மூன்று கண்களைக் கொண்டுள்ளவனும் ஆகியவன் பரமன். அப்பெருமான் திருவடியைப் போற்றி வாழ்த்த ஐயங்களைத் தீர்த்துத் தெளிடு செய்பவன். அத்தகைய சிறப்புடைய பெருமான் ஐயாற்றை இடமாகக் கொண்டுள்ள தலைவன் ஆவான்.

66. பலிதி ரிந்துகழல் பண்டங்கள்
மேயவை யாற்றினைக்
கலிக டிந்தகை யான்கடற்
காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ்
பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய
சீர்பெறு வார்களே.

தெளிவுரை : பலியேற்பதற்காகத் திரிந்து உழன்று பண்டரங்கம் என்னும் திருக்கூத்தைப் புரிந்து மேவிய ஐயாற்றினை, வேதம் ஓதி இன்னல்கள் யாவும் தீருமாறு செய்த தகைமைசார்ந்த காழிப்பதியின் அறக்காவலனாகிய, அரநாமத்தைச் சந்தம் மல்க ஒலிக்கும் ஞானசம்பந்தனின் ஒளிமிக்க சிவஞானத் தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், வளம் மிக்க விண்ணவர் உலகத்தில் சிறப்பான புகழைப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

143. திருவாஞ்சியம் (அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

67. வன்னி கொன்றைமத மத்தம்
எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை யிற்பொலி
வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை
செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட
மாக உகந்ததே.

தெளிவுரை : வன்னிப் பத்திரம், கொன்றை மலர், ஊமத்தம் மலர், எருக்கம் பூ, வில்வம் ஆகியவற்றைப் பொன் போன்று ஒளிரும் சடையின் மீது, பொலியுமாறு செய்த பழம் பொருளாய் விளங்கும் புராணனார், என்னை ஆளாகக் கொள்ளவும், அப்பெருமானுக்கு யான் உடைமையாக இருக்கவும், வண்டினங்கள் தென்ன என்று இசை செய்யும் திருவாஞ்சியம் என்னும் பதியினை இடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருப்பவர்.

68. கால காலர்கரி கானிடை
மாநட மாடுவர்
மேலர் வேலைவிடம் உண்டிருள்
கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன்
னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப் பொலி
கோயில் நயந்ததே.

தெளிவுரை : ஈசர், இயமனாகிய காலனுக்குக் காலனாக இருப்பவர்; மயானத்தில் சிறப்பான நடனம் ஆடுபவர்; முற்படுகின்ற எப்பொருளுக்கும் மேலானவராக விளங்குபவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு கருமையான மிடற்றினை உடையவர். உலகு எலாம் வந்து பணியுமாறு மாலை மதிதோயும் மாடங்களையுடைய திருவாஞ்சியம் என்னும் பதியில் அப்பெருமான் கோயில் கொண்டு விளங்குபவர்.

69. மேவில் ஒன்றர் விரிவுற்ற
இரண்டினர் மூன்றுமாய்
நாவில் நாலர்உடல் அஞ்சினர்
ஆறர்ஏ ழோசையர்
தேவில் எட்டர்திரு வாஞ்சிய
மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர்
தம்மடி யார்கட்கே.

தெளிவுரை : ஈசன் ஒப்பற்ற ஒருவனாய் விளங்கி எல்லாவற்றிலும் ஒன்றி இருப்பவர்; விரிந்து பரந்து இரட்டித்த தன்மையாயும் சிவம் சக்தி என்னும் இரண்டின் வகையாயும் இருப்பவர்; இச்சை, ஞானம் கிரியை என்று வழங்கப்பெறும் மூன்றும் ஆகுபவர்; நான்கு வேதங்களையும் விரிப்பவர்; பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற ஐந்தும் உடலாகக் கொண்டு விளங்குபவர்; வேதத்தின் ஆறு அங்கங்களும் ஆகுபவர்; ஏழுவகையான ஓசை தருகின்ற சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் (ச,ரி,க,ம,ப,த,நி) எனத் திகழ்பவர்; எண்குண்த்தனாகிய இயற்கை உணர்வினனாதல், தூய உடம்பினனாதல். இயற்கை உணர்வினனாதல், முற்றுணர்தல், இயல்பாகவே பாங்களிலிருந்து நீங்குதல், பேரருளுடைமை. முடிவில் ஆற்றலுடைமை, வரம்பில் இன்பமுடைமை என்னும் எட்டுக் குணங்களை உடையவர். அவர் திருவாஞ்சியம் என்னும் பதியின்கண் மேவிய செல்வராக விளங்கித் தமது திருவடியைத் தொழும் அடியவர்களின் பாவத்தைத் தீர்த்துப் பழியைப் போக்குபவர் ஆவர்.

70. சூலம் ஏந்திவளர் கையினர்
மெய்சுவண் டாகவே
சால நல்லபொடிப் பூசுவர்
பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு
குந்திரு வாஞ்சியம்
ஆலம் உண்டஅடி கள்ளிட
மாக அமர்ந்ததே.

தெளிவுரை : ஈசன், சூலப் படையைத் திருக்கரத்தின் கண் ஏந்தியவர்; அருள்வழங்கும் கையினர்; திருமேனியில் மணம் மிக்க திருவெண்ணீறு பொருந்துமாறு பூசி விளங்குபவர்; வேதங்களை விரித்து மன்னுயிர்களுக்கு ஞானமும், தெளிவும் வழங்குபவர்; ஆசாரம் பெருகுகின்ற புகழால் விளங்கும் திருவாஞ்சியம் என்னும் பதியில் ஆலம் அருந்தி தேவர்களைக் காத்து அருள் புரிந்த அடிகளாக விளங்கி வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

71. கையி லங்குமறி யேந்துவர்
காந்தள்அம் மெல்விரல்
தையல் பாகம்உடை யார்அடை
யார்புரம் செற்றவர்
செய்ய மேனிக்கரி யமிடற்
றார்திரு வாஞ்சியத்து
ஐயர் பாதம்அடை வார்க்குஅடை
யாஅரு நோய்களே.

தெளிவுரை : ஈசனார், கையில் மான் ஏந்துபவர்; காந்தன் போன்று மென்மையான விரல்களையுடைய உமையவளை ஒரு பாகமாக உடையவர்; நன்னெறியை நாடாதவராய்ப் பகைமை கொண்ட முப்புரத்தின் அசுரர்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; சிவந்த திருமேனியராக உள்ள தன்மையில் நஞ்சினைத் தேக்கிய கரிய வண்ணம் பொருந்திய கண்டத்தை உடையவர். அப்பெருமான் திருவாஞ்சியம் என்னும் பதியில் வீற்றிருப்பவர். தலைவராகிய அவர்தம் திருவடியைச் சார்ந்து வணங்கிப் போற்றுகின்றவர்களுக்கு, நீங்குவதற்கு அரியதாகிய பிறவி போய் முதலானவை சாராது.

72. அரவம் பூண்பர்அணி யும்சிலம்பு
ஆர்க்க அகந்தொறும்
இரவில் நல்லபலி பேணுவர்
நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின்
றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்த மட மாதொடு
நின்றஎம் மைந்தரே.

தெளிவுரை : ஈசனார், நாகத்தை ஆபரணமாகப் பூண்டு இருப்பவர்; திருப்பாதத்தில் சிலம்பு அணிந்து, அது ஆர்த்து ஒலி எழுப்ப விரும்பிப் பிச்சை ஏற்பவர்; அச்செயல் மேவுதலையொட்டி எவ்வகையான நாணமும் கொள்ளாதவர். உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருக்கும் அழகியராகிய அப்பெருமான், தன் திருநாமத்தைக் கூறிப் போற்றி வழிபடுபவர்களின் வினை தீர்த்து அருள்புரியத் திருவாஞ்சியம் என்னும் பதியின்கண் வீற்றிருக்கின்றனர்.

73. விண்ணி லானபிறை சூடுவர்
தாழ்ந்து விளங்கவே
கண்ணி னால்அநங் கன்னுட
லம்பொடி யாக்கினார்
பண்ணி லானஇசை பாடல்மல்
கும்திரு வாஞ்சியத்து
அண்ண லார்தம்மடி போற்றவல்
லார்க்கு இல்லை அல்லலே.

தெளிவுரை : விண்ணில் விளங்கி ஒளி தந்து வலம் பெறும் சந்திரனைச் செஞ்சடையில் சூடி விளங்கும் ஈசனார், மன்மதனை நெற்றிக் கண்ணினால் எரித்துச் சாம்பல் ஆக்கியவர்; பண்ணுடன் இசைந்த பாடல்கள் எக் காலத்தும் போற்றி வளர மல்கும் திருவாஞ்சியத்தின்கண் வீற்றிருக்கும் அண்ணல் ஆவார். அப்பெருமானுடைய திருவடிகளைப் போற்றித் துதிப்பவர்களுக்கு எக் காலத்திலும் துன்பம் இல்லை.

74. மாட நீடுகொடி மன்னிய
தென்னிலங் கைக்குமன்
வாடி ஊடவரை யால்அடர்த்து
அன்று அருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சிய
மேவிய வேந்தரைப்
பாட நீடுமனத் தார்வினை
பற்றுஅறுப் பார்களே.

தெளிவுரை : உயர்ந்த மாடமாளிகைகளும் நீண்ட தோரணம் முதலான கொடிகளும் சிறப்பாக விளங்கிய தென்னிலங்கையின் மன்னவனாகிய இராவணன், மனத்தின்கண் உள்ள தெளிவு மறைந்து வாட்டம் உற, அதனால் சினங்கொண்டு மலையை எடுக்க, அந்த மலையினால் அவ் அரக்கன் வதைப்பட்டு பக்தி வயத்தினால் வேண்டுதல் செய்யுமாறு அடர்த்தவர் ஈசன். பின்னர் அவர் அருள்புரிந்து ஆட்கொண்டு, நீண்ட ஆயுளும், வாட்படையும் வழங்கியவர். அப்பெருமான், அர்ச்சுனருக்குப் பாசுபதம் என்னும் தெய்வ அத்திரத்தை வழங்குவதற்காக, வேட்டுவ வடிவத்தைக் கொண்டவர். அவர் திருவாஞ்சியம் என்னும் பதியின் மேவி நம்மைக் காப்பவர். அத்தகைய ஈசனை, உள்ளார்ந்த மனத்துடன் பாடிப் போற்ற வினையும் பற்றும் நீங்கும்.

75. செடிகொள் நோயின்அடை யார்திறம்
பார்செறு தீவினை
கடிய கூற்றமும் கண்டக
லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடுஅயன் ஏத்தநின்
றார்திரு வாஞ்சியத்து
அடிகள் பாதம்அடைந் தார்அடி
யார்அடி யார்கட்கே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் போற்றித் துதித்து வணங்கும் இறைவராகிய திருவாஞ்சியம் என்னும் பதியில் மேவும் அடிகளை - வாஞ்சி நாதேஸ்வரரை வணங்கும் அடியவர்களைப் போற்றும் பெருமக்கள், நோய் அற்றவராய், உறுதி படைத்தவராய் விளங்குவார்கள். அவர்களுடைய தீவினையானது தாமே நீங்கப்பெறும்; இயமனின் துன்பம் அணுகாது; வீடு பேறும் கைகூடும்.

76. பிண்டம் உண்டுதிரி வார்பிரி
யுந்துவர் ஆடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்பல
பொய்யிலை எம்மிறை
வண்டு கெண்டிமரு வும்பொழில்
சூழ்திரு வாஞ்சியத்து
அண்ட வாணன்அடி கைதொழு
வார்க்கு இல்லை அல்லலே.

தெளிவுரை : பேருணவு கொண்டு திரிந்து தருக்கம் புரியும் உரைகள் மெய்ம்மையாகாதன. பொய்மையற்றவராகிய பொழில் சூழ்ந்த திருவாஞ்சியம் என்னும் பதியில் வீற்றிருந்து அண்டம் முழுவதிலும் வியாபித்து இருக்க, அப் பெருமானைக் கைதொழுது வணங்குபவர்களுக்குத் துயரம் இல்லை.

77. தென்றல் துன்றுபொழில் சென்றணை
யும்திரு வாஞ்சியத்து
என்று நின்றஇறை யானை
உணர்ந்துஅடி யேத்தலால்
நன்று காழிமறை ஞானசம்
பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம்உடை யார்அடை
வார்உயர் வானமே.

தெளிவுரை : இனிமையான தென்றல் காற்று மருவி விளங்குகின்ற பொழிலின்கண் சென்று திகழும் திருவாஞ்சியத்தில், எக்காலத்திலும் வீற்றிருக்கும் இறைவனை ஞானத்தால் நன்கு உணர்ந்து திருவடியைப் போற்றி உரைக்கப் பெற்ற ஞானசம்பந்தர் செந்தமிழ்த் திருப்பதிகத்தை ஒன்றிய உள்ளத்தினராய் ஏத்துபவர்கள், உயர்ந்ததாகிய வீடுபேறு அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

144. திருச்சிக்கல் (அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

78. வானு லாவுமதி வந்துல
வும்மதின் மாளிகை
தேனு லாவுமலர்ச் சோலைமல்
கும்திகழ் சிக்கலுள்
வேனல் வேளைவிழித் திட்டவெண்
ணெய்ப்பெரு மானடி
ஞான மாகநினை வார்வினை
யாயின நையுமே.

தெளிவுரை : வானில் மகிழ்ந்து உலவுகின்ற சந்திரன் வந்து உலவும் தன்மையுடைய அகன்று உயர்ந்த மாளிகையும் மதில்களும், தேன் சொரியும் மலர்ச் சோலைகளும் பெருகி விளங்கும் சிக்கல் என்னும் பதியில், மன்மதனை, நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கி எரித்துக் சாம்பலாக்கிய வெண்ணெய்ப் பெருமான் திருவடியைச் சார்ந்து, அத்திருவடியையே அறியக்கூடிய மெய்ஞ்ஞானமாக நினைப்பவர்தம் வினை யாவும் நைந்து அழியும்.

79. மடங்கொள் வாளைகுதி கொள்ளு
மணமலர்ப் பொய்க்கைசூழ்
திடங்கொள் மாமறை யோரவர்
மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்துவெண் ணெய்ப்பெரு
மானடி மேவி
அடைந்து வாழும்அடி யார்அவர்
அல்லல் அறுப்பரே.

தெளிவுரை : வாளை மீன் துள்ளிக் குதிகொள்ளும் மணம் தரும் மலர்கள் உடைய பொய்கை சூழவும், ஈசனே உறுதிப்பொருள் என நவிலும் மாமறையாளர்கள் பெருகி விளங்கவும் திகழும் சிக்கல் என்னும் பதியில் நீலகண்டனாக விளங்கும் வெண்ணெய்ப் பெருமானின் திருவடியைப் பொருந்தி வாழும் அடியவர்கள் துன்பம் அற்று விளங்குவார்கள்.

80. நீல நெய்தல்நில விமல
ருஞ்சுனை நீடிய
சேலுமா லுங்கழ னிவ்வள
மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர்
பாகன்வெண் ணெய்ப்பிரான்
பாலவண் ணன்கழல் ஏத்தநம்
பாவம் பறையுமே.

தெளிவுரை : நீல வண்ணமுடைய நெய்தல் பூக்கள் நிலவும் சுனையும், நீண்ட சேல்கள் (மீன்), மகிழ்ச்சிப் பெருக்கத்தில் விளங்கும் நீர்வளம் மிக்க கழனிகளும் மல்கிய சிக்கல். இத் தலத்தில் மேல் நெடுங்கண்ணி என்னும் திருப்பெயர் தாங்கி வீற்றிருக்கும் உமா தேவியை உடனாகக் கொண்டுள்ள வெண்ணெய்ப்பிரான் என்னும் திருநாமம் தாங்கியுள்ள ஈசன் திருக்கழலை ஏத்தி வழிபட, நம் பாவம் யாவும் நீங்கி மறைந்துவிடும்.

81. கந்த முந்தக் கைதைபூத்துக்
கமழ்ந்துசே ரும்பொழிற்
செந்துவண் டின்னிசை பாடல்மல்
கும்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்
பிரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின
தேய்வது திண்ணமே

தெளிவுரை : நறுமணத்தை முந்திப் பரவச் செய்யும் தாழை பூத்து விளங்கும் பொழிலின்கண், வண்டானது செந்து என்னும் இசையை எழுப்பி இனிமை திகழ விளங்கும் பதி சிக்கல் ஆகும். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வெண்ணீற்றண்ணலாகிய வெண்ணெய்ப் பிரான் நறுமணம் கமழும் திருக்கழலைச் சிந்தித்து வணங்குபவர்கள், வினையாயின யாவும் தேய்ந்து அழிவது உறுதி.

82. மங்குல் தங்கும் மறை  யோர்கண்மா
டத்தய லேமிகு
தெங்கு துங்கப்பொழிற் செல்வமல்
கும்திகழ் சிக்கலுள்
வெங்கண் வெள்ளேறுடை வெண்ணெய்ப்
பிரானடி மேவவே
தங்கு சேற்சர தந்திரு
நாளும் தகையுமே.

தெளிவுரை : மேகம் தவழும் உயர்ந்த மாடங்களில் மறையவர்கள் விளங்கவும், தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்து விளங்கும் சோலைகள் செல்வம் கொழித்துத் திகழவும் இருப்பது சிக்கல். இத் திருத்தலத்தின்கண் இடப வாகனத்தில் விளங்கும் வெண்னைப் பிரான் திருவடியைத் தரிசித்து வணங்க, மெய்ம்மை திகழும் செல்வம் நிலைபெற்று ஓங்கும்.

83. வண்டி ரைத்தமது விம்மிய
மாமலர்ப் பொய்கைசூழ்
தெண்டி ரைக்கொள்புனல் வந்தொழு
கும்வயற் சிக்கலுள்
விண்டி ரைத்தமல ராற்றிகழ்
வெண்ணெய்ப் பிரானடி
கண்டி ரைத்துமன மேமதி
யாய்கதி யாகவே.

தெளிவுரை : வண்டுகள் ஒலிப்பதனால் தேன் துளிர்க்கும் செழுமை மிக்க மலர்கள் திகழும் பொய்கை சூழ, தெளிந்த நீரானது வயல்களில் சென்று பாயும் சிக்கல் என்னும் தலத்தில், திருமால் பூசித்த மலராய் திகழும் வெண்ணெய்ப் பிரான் என்னும் திருநாமம் தாங்கிய ஈசனின் திருவடியைத் தரிசித்து வணங்கி, மனமே ! மக்கட் பிறவியின் சிறப்பினை நன்கு அறிந்து நற்கதி அடைவாயாக.

84. முன்னுமா டம்மதில் மூன்றுட
னேஎரி யாய்விழத்
துன்னுவார் வெங்கணை ஒன்று
செலுத்திய சோதியான்
செந்நெல் ஆரும்வயற் சிக்கல்வெண்
ணெய்ப்பெரு மானடி
உன்னி நீடும்மன மேநினை
யாய்வினை ஓயவே.

தெளிவுரை : உயர்ந்த, மதில்களையுடைய முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு, கொடிய கணை ஒன்று செலுத்திய சோதி வடிவானவன், செந்நெல் பெருகும் வயல் வளம்மிக்க சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் ஆவார். அப்பெருமானை, மனமே ! நன்கு தியானித்து வணங்கி மகிழ்க. அது வினையை நீக்கும்.

85. தெற்றலாகிய தென்னிலங்
கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு
தோள்கள் நெரியவே
செற்ற தேவனஞ் சிக்கல்வெண்
ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை
யாயின ஓயவே.

தெளிவுரை : இடறிய தன்மையில் கயிலையைப் பற்றி இராவணனுடைய முடிகள் பத்தொடு தோள்களும் நெரிபட்டுக் கலங்குமாறு அடர்த்த இறைவன், நம் சிக்கல் வெண்ணைப் பிரான் ஆவார். அப்பெருமான் திருவடியை உற்று, மனமே ! நினைத்து வணங்குக. அது உன் வினையைத் தீர்க்கும்.

86. மாலி னோடுஅரு மாமறை
வல்ல முனிவனும்
கோலி னார்குறு கச்சிவன்
சேவடி கோலியும்
சீலந் தாமறி யார்திகழ்
சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப்
பறையுநம் பாவமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் ஈசனைக் காணவேண்டும் என்று முயன்றனர். அத்தகைய முயற்சியில் ஈடுபட்டும் காண்கிலாராய் அயர்ந்தனர். அப்பெருமான் சிக்கல் என்னும் திருத்தலத்தில் விளங்கும் வெண்ணெய்ப் பிரான் ஆவார். அப் பெருமானைப் பால் அபிடேகம் செய்து பூசித்தும் மலர் கொண்டு தூவிப் போற்றியும் வணங்க நம் பாவம் நீங்கும்.

87. பட்டை நற்றுவர் ஆடையி
னாரொடும் பாங்கிலாக்
கட்ட மணகழுக் கள்சொல்
வினைக்கரு தாதுநீர்
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு
மான்செழு மாமறைப்
பட்டன் சேவடி யேபணி
மின்பணி போகவே.

தெளிவுரை : துவராடை கொண்ட சாக்கியரும் சமணரும் உரைசெய்யும் பாங்கற்ற சொற்களைக் கருதாது சிக்கல் என்னும் தலத்தில் வீற்றிருந்தும் அருள்புரியும் மறைவல்லராகிய ஈசன் திருவடியையே பணிமின். பிணிக்கப்பட்டுள்ள நோய், வினை முதலான தீயவை அனைத்தும் நீங்கும்.

88. கந்த மார்பொழில் காழியுண்
ஞானசம் பந்தநல்
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண்
ணெய்ப்பெரு மானடிச்
சந்த மாச்சொன்ன செந்தமிழ்
வல்லவர் வானிடை
வெந்த நீறணி யும்பெரு
மானடி மேவரே.

தெளிவுரை : நறுமணம் மிக்க பொழில் திகழும் சீகாழியில் விளங்கும் ஞானசம்பந்தன் பூம்பொழில் திகழும் சிக்கல் என்னும் தலத்தில் மேவும் வெண்ணெய்ப் பெருமான் திருவடியை தண்மை மிக்க செந்தமிழால் சந்த இசை பரவச் சொன்ன இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர், திருவெண்ணீறு தரித்த எந்தைபிரானாகிய ஈசன் திருவடியாகிய முத்திப் பேற்றினை அடைவர்.

திருச்சிற்றம்பலம்

145. திருமழபாடி (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

89. களையும் வல்வினை யஞ்சல்நெஞ்
சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தான்உயர்
மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கிஎய்
தான்மதுத் தும்பிவண்டு
அலையும் கொன்றையந் தார்மழ
பாடியுள் அண்ணலே.

தெளிவுரை :  நெஞ்சமே ! கொடிய வினையின் காரணமாக உண்டாகும் துன்பத்தை எண்ணி அஞ்சற்க. ஈசனை வணங்காது பகைமை கொண்ட முப்புரத்து அசுரர்களை, உயர்ந்த பெருமை மிக்க மேருமலையை நல்ல வில்லாக அமைத்து வளைத்துக் கொடிய சரத்தினைத் தொடுத்து அழித்த ஈசன், வண்டுகள் சூழும் கொன்றை மாலையுடைய மழபாடியுள் வீற்றிருக்கும் அண்ணல் ஆவார். அப்பெருமான் வினையின் உபாதையை நீக்க வல்லவர்; அவரை வணங்கி மகிழ்க என்பது குறிப்பு.

90. காச்சி லாதபொன் னோக்கும்
கனவயி ரத்திரள்
ஆச்சி லாத பளிங்கினன்
அஞ்சுமுன் ஆடினான்
பேச்சி னால்உமக்கு ஆவதென்
பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ
பாடியை வாழ்த்துமே.

தெளிவுரை : நெருப்பில் இட்டுக் காய்த்து வடிக்கப்படாத பொன்னோடு சேரும் கனத்த வயிரத் திரட்சி போன்று, குற்றம் இல்லாத தன்மையில் பளிங்கு போன்றவனாகிய ஈசன், பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர் எனப்படும் பஞ்சகவ்வியம், மகிழ்ந்து ஆடியவன். பயனற்ற சொற்களை மொழிவதனால் ஆவது ஏதுமில்லை. எனவே, பேதைமை கொண்டு காலத்தை வீணாக்காமல் இறைவனைப் பேணி வழிபடுக. வாசம் மிக்க மாளிகைகள் சூழ்ந்த மழபாடியைப் போற்றி வாழ்த்துவீராக.

91. உரங்கெ டுப்பவன் உம்பர்கள்
ஆயடர் தங்களைப்
பரங்கெ டுப்பவ னஞ்சை
உண்டுபக லோன்றனை
முரண் கெடுப்பவன் முப்புரந்
தீயெழச் செற்றுமுன்
வரங்கொ டுப்பவன் மாமழ
பாடியுள் வள்ளலே.

தெளிவுரை : தக்கன் செய்த யாகத்தில் பங்கேற்ற தேவர் முதலானோரின் வலிமையை வீரபத்திரர் திருக்கோலத்தால் அடர்த்தவன் ஈசன். அப்பெருமான், சூரியனுடைய பற்கள் உகுக்குமாறு செய்தவன்; முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கியவன்; ஆங்கு நிலவிய மூன்று அசுரர்களுக்கு வரங்கொடுத்து அருள் புரிந்த பெருமான் ஆவன், மழபாடியுள் வீற்றிருக்கும் வள்ளல்.

92. பள்ளம் ஆர்சடை யிற்புடை
யேயடை யப்புனல்
வெள்ள மாதரித் தான்விடை
யேறிய வேதியன்
வள்ளன் மாமழ பாடியுண்
மேய மருந்தினை
உள்ள மாதரி மின்வினை
யாயின ஒயவே.

தெளிவுரை : சடை முடியின் இடையில் மேவும் பள்ளத்தில் கங்கையைத் தரித்த வேத நாயகராகிய வள்ளல் மழபாடியுள் மேவி விளங்கும் மருந்தாவார். அப்பெருமானை உள்ளம் ஒன்றி தியானிக்க வினை யாவும் செயலற்றதாகி நீங்கும்.

93. தேனு லாமலர் கொண்டுமெய்த்
தேவர்கள் சித்தர்கள்
பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன்
ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு
மாமழ பாடியெங்
கோனை நாள்தொறும் கும்பிட
வேகுறி கூடுமே.

தெளிவுரை : தேன் விளங்கும் மலர்கொண்டு மெய்த்தேவர்களும், சித்தர்களும் பால் நெய் முதலான பஞ்சகவ்வியம் கொண்டு பூசனை செய்யப்படுபவனாகிய பால் போன்ற திருநீற்று மேனியராகிய ஈசன், வானநாடர்கள் கை தொழுது போற்றும் சிறப்பு மிக்க மழபாடியில் விளங்குகின்ற எம் தலைவர். அப்பெருமானை, நாள்தோறும் கும்பிட்டுப் போற்ற, அப்பெருமானின் திருவடிப் பேறு கைகூடும்.

94. தெரிந்த வன்புர மூன்றுடன்
மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர்
தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை ஒன்றுடை
யான்மழ பாடியைப்
புரிந்து கைதொழு மின்வினை
யாயின் போகுமே.

தெளிவுரை : முற்றும் உணர்ந்தவனாகிய ஈசன், முப்புரங்களை மாயச் செய்த ஆற்றலையுடைய பரமன். அப்பெருமான், தன்னை அன்புடன் தொழுகின்ற அடியவர்களுடைய மனத்தில் நிறைந்து வீற்றிருப்பவன். மேருமலையை வில்லாக வரித்த இறைவன். அப்பெருமான், மழுவாடீசராகத் திருப்பெயர் தாங்கி இருக்க, அவன் கருணை வளத்தை நன்கு நெஞ்சில் இருத்தி பக்தியுடன் கைதொழுக. உமது வினைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

95. சந்த வார்குழ லாள்உமை
தன்னொரு கூறுடை
எந்தை யான்இமை யாதமுக்
கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ
பாடிம ருந்தினைச்
சிந்தி யாஎழு வார்வினை
யாயின தேயுமே.

தெளிவுரை : நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒரு கூறாக உடைய எம் தந்தை, இமைக்காத முக்கண்ணுடையவராகிய எம்பெருமான், அழகராய் அழகிய பொழில் சூழந்த மழபாடியில் வீற்றிருக்கும் வைத்தியநாதர். அவரைச் சிந்தையில் பதித்துத் தியானிப்பவர் வினை யாவும் அற்றொழியும்.

96. இரக்கம் ஒன்றும் இலான்இறை
யான்திரு மாமலை
உரக்கை யால்எடுத் தான்தனது
ஒண்முடி பத்திற
விரல்த லைந்நிறு வியுமை
யாளொடு மேயவன்
வரத்தை யேகொடுக் கும்மழ
பாடியுள் வள்ளலே.

தெளிவுரை : பக்தி ஏதும் இல்லாதவனாய், இறைவனாகிய சிவபெருமானுடைய திருமலையாகிய கயிலையை, வலிமை மிகுந்த கையால் எடுத்த இராவணனுடைய பத்துத் தலைகளும், துன்புறுமாறு. தம் தலை விரலாகிய பெருவிரலால் ஊன்றி உமாதேவியோடு விளங்கிய இருப்பவர், வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் மேவும் வள்ளலாகிய பரமன் ஆவார்.

97. ஆலம் உண்டுஅமு தம்
அமரர்க்கருள் அண்ணலார்
காலன் ஆருயிர் வீட்டிய
மாமணி கண்டனார்
சால நல்லடி யார்தவத்
தார்களும் சார்விட
மால யன்வணங் கும்மழ
பாடியெம் மைந்தனே.

தெளிவுரை : ஆலகால விடத்தைத் தான் உட்கொண்டு, அமுதத்தைத் தேவர்கள் அருந்துமாறு அருள் புரிந்த அண்ணலாகிய ஈசன், இயமனின் உயிர் வீழ்த்திய நீலகண்டர் ஆவார். அத்தகைய அழகர், பக்தி செய்யும் நற்பண்பு நிறைந்த அடியவர்ளும், தவத்தின் ஆற்றல் மிக்க தவயோகிகளும் சார்ந்து திருமாலும், பிரமனும் வணங்கும் மழபாடியில் வீற்றிருப்பவர்.

98. கலியின் வல்லம னும்கருஞ்
சாக்கியப் பேய்களும்
நலியு நாள்கெடுத் தாண்டவென்
னாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ
வும்பல ஓசையும்
மலியு மாமழ பாடியை
வாழ்த்தி வணங்குமே.

தெளிவுரை : வன்மை பொருந்திய சமணர்களும் சாக்கியர்களும் நலிவு செய்து துன்புறுத்திய காலத்தில், அதனைத் தடுத்து ஆட்கொண்ட என் தலைவனார் வாழ்கின்ற பதியாகிய, தானம், இசை, முழவு முதலான ஓசைகள் பெருகிய சிறப்புப் பொருந்திய மழபாடியைப் புகழ்ந்து போற்றுவீராக.

99. மலியு மாளிகை சூழ்மழ
பாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ்கடற்
காழிக் கவுணியன்

(இப்பாட்டு முற்றுப் பெறவில்லை.)

தெளிவுரை : மாட மாளிகைகள் சூழும் மழபாடியுள் விளங்கும் வள்ளலாகிய ஈசனைப் போற்றியவர் வலிமை மிக்க பெரிய மதில் சூழ் கடற்கரையுடைய காழியில் மேவும் கவுணியக் கோத்திர மரபில் தோன்றிய ஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்

146. திருமங்கலக்குடி (அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

100. சீரி னார்மணி யும்அகில்
சந்தும் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி
வடமங் கலக்குடி
நீரின் மாமுனி வன்னெடுங்
கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டியர்ச் சிக்க
இருந்த புராணனே.

தெளிவுரை : புகழ் மிக்க மணிகளும், அகில், சந்தனம் ஆகியனவும் செறிந்த மலையிலிருந்து வாரிக் கொண்டு வரும் காவிரியின் நீர் பெருகி மிளிர்வது மங்கலக்குடி. முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர் காவிரியாற்றில் இருந்தவாறு தமது திருக்கரங்களால் புனித நீர் கொண்டு பூசித்துப் போற்ற இருந்த புராணர் இங்கு எழுந்தருளியுள்ள பெருமான் ஆவர்.

101. பணங்கொள் ஆடரவு அல்குல்நல்
லார்பயின்று ஏத்தவே
மணங்கொள் மாமயில் ஆலும்
பொழில்மங் கலக்குடி
இணங்கி லரமறை யோர்இமை
யோர்தொழுது ஏத்திட
அணங்கி னோடுஇருந் தான்அடி
யேசரண் ஆகுமே.

தெளிவுரை : படங்கொண்ட அரவம் போன்ற அல்கும் உடைய மகளிர், நாள்தொறும் ஏத்திச் சிறப்புற, மயில்கள் அசைந்து ஆடும் பொழில்கள் விளங்கும் தலம் மங்கலக்குடி. ஆங்கு எழுந்தருளியுள்ள ஈசனைத், தேடியும் நெருங்கமுடியாத வேதத்தினை ஓதும் அந்தணர்களும், தேவர்களும் தொழுது ஏத்தி, உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் அப்பெருமானது திருவடியைத் தஞ்சம் அடைவீராக.

102. கருங்கை யானையின் ஈருரி
போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாமண மார்பொழில்
சூழ்மங் கலக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையி
னான்அடி அன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை
யாயின வீடுமே.

தெளிவுரை : கரிய வலிமை மிக்க வஞ்சனையுடைய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திக் கொண்ட பரமன் மணம் மிக்க பொயில் சூழும் மங்கலக்குடியில் வீற்றிருப்பவர். ஆங்கு கொன்றை மலர் தரித்து விளங்கும் அப்பெருமானை அன்புடன் விரும்பி ஏத்த வல்லவர்களின் வினை யாவும் அழியும்.

103. பறையி னோடொலி பாடலும்
ஆடலும் பாரிடம்
மறையி னோடுஇயல் மல்கிடு
வார்மங் கலக்குடிக்
குறைவி லாநிற வேகுணம்
இல்குண மேஎன்று
முறையி னால்வணங் கும்அவர்
முன்னெறி காண்பரே.

தெளிவுரை : வாத்தியங்கள் முழங்க, பூத கணங்கள் பாடவும் ஆடவும் செய்து மகிழவும், மறைவல்ல அந்தணர்கள் இயல்பினராய் வேதகீதங்களை ஓதவும் விளங்கும் பதி மங்களக்குடி. இத் திருத்தலத்தின்கண் குறைவில்லாத நிறைவாகவும் குணங் கடந்த நிற்குணனாகவும் விளங்கும் பரிபூரணனே என்று ஈசனைப் போற்றி வழிபடும் பக்தர்கள், உயர்ந்த நெறியைக் காண்பவர்கள் ஆவர்கள்.

104. ஆனில் அம்கிளர் ஐந்தும்
அவிர்முடி ஆடிஓர்
மானில் அங்கையி னான்மணம்
ஆர்மங் கலக்குடி
ஊனில் வெண்டலைக் கையுடை
யானுயர் பாதமே
ஞான மாகநின்று ஏத்தவல்
லார்வினை நாசமே.

தெளிவுரை : பசுவின் வாயிலாக அழகுடன் தோன்றும் பால், தயிர், நெய், கோமயம், கோசலம் என்று வழங்கும் ஐந்தும் கொண்டு பூசனை ஏற்று மானைக் கரத்தில் ஏந்தி விளங்கும் ஈசன், மணம் கமழும் மங்கலக்குடியில் கபாலம் ஏந்தி இருக்க, அப்பெருமானின் திருப்பாதமே அடையப் பெறுகின்ற ஞானமாகக் கொண்டு ஏத்துபவர்களுடைய வினையானது நீங்கிச் செல்லும்.

105. தேனு மாய்அமு தாகிநின்
றான்தெளி சிந்தையுள்
வானு மாய்மதி சூடவல்
லான்மங் கலக்குடி
கோனை நாள்தொறும் ஏத்திக்
குணங்கொடு கூறுவார்
ஊன மானவை போயறும்
உய்யும் வகையதே.

தெளிவுரை : ஈசன், தெளிந்த சித்தம் உடையவர்களுக்குத் தேனாகவும் அமுதமாகவும் விளங்குபவன்; ஞான வெளியாகவும் விளங்குபவன். சந்திரனைச் சூடியுள்ள அப்பெருமான், மங்கலக்குடியின்கண் தலைவனாய் விளங்க, நாள்தோறும் ஏத்திப் போற்றுபவர்களுக்கு, அவர்கள் உய்யும் வகையில், ஊனமாக இருக்கும் குறைபாடுகள் யாவும் நீங்கும்.

106. வேள்ப டுத்திடு கண்ணினன்
மேருவில் லாகவே
வான ரக்கர் புரமெரித்
தான்மங் கலக்குடி
ஆளும் ஆதிப் பிரானடி
கள்ளடைந் தேத்தவே
கோளு நாளவை போயறும்
குற்றமில் லார்களே.

தெளிவுரை : மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணுடைய பரமன், மேரு மலையை வில்லாகக் கொண்டு கொடிய அரக்கர்களாகிய முப்புரத்து அவுணர்களை எரித்த மங்கலக்குடியில் ஆதிப் பிரானாக வீற்றிருந்து அருளாட்சி புரிபவன். அப் பெருமானுடைய திருவடிகளை வணங்கி ஏத்த நவக்கிரகங்களாலும், விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) முதலியவற்றாலும் உண்டாகும் தீமைகள் நீங்கும்; மனம், மொழி, மெய் ஆகியவற்றாலும் உண்டாகும் குற்றத்தினையும் இழைக்க மாட்டார்கள்.

107. பொலியு மால்வரை புக்கெடுத்
தான் புகழ்ந்து ஏத்திட
வலியும் வாளொடு நாள்கொடுத்
தான்மங் கலக்குடிப்
புலியின் ஆடையி னான் அடி
யேத்திடும் புண்ணியர்
மலியும் வானுல கம்புக
வல்லவர் காண்மினே.

தெளிவுரை : பொலிவுடன் திகழ்ந்து விளங்கும் பெருமை மிக்க கயிலையை அடைந்து அதனை எடுத்த இராவணன், நலிந்து ஞான்று புகழ்ந்து ஏத்திட வலிமையும், மந்திரவாளும், நீண்ட வாழ்நாளும் கொடுத்த பரமன், புலித்தோல் ஆடை தரித்து மங்கலக்குடியில் வீற்றிருக்கின்றனன். அப்பெருமானுடைய திருவடியை ஏத்திப் பரவும் புண்ணியர்கள் சிறந்ததாகிய முத்திப் பேற்றை எளிதாக வாய்க்கப் பெறும் வல்லவர் ஆவர்.

108. ஞான முன்படைத் தானளிர்
மாமலர் மேலயன்
மாலும் காண்வொ ணாஎரி
யான்மங் கலக்குடி
ஏல வார்குழ லான்ஒரு
பாகம் இடங்கொடு
கோல மாகிநின் றான்குணம்
கூறும் குணமதே.

தெளிவுரை : உலகினைப் படைத்த பிரமனும், திருமாலும் காணமுடியாத சோதிப் பிழம்பாகிய பரமன், மணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியாரை ஒரு பாகத்தில் இடங்கொண்டு மங்கலக்குடியில் அழகுடன் வீற்றிருப்பவன். அப் பெருமானின் சிறந்த புகழைக் கூறுவது, மன்னுயிர்க்குரிய நற்பண்பாகும்.

109. மெய்யின் மாசினர் மேனி
விரிதுவர் ஆடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர்
சேர்மங் கலக்குடிச்
செய்ய மேனிச் செழும்புனற்
கங்கை செறி சடை
ஐயன் சேவடி யேத்தவல்
லார்க்கு அழ காகுமே.

தெளிவுரை : உடலின் மாகம் துவராடையும் கொண்டு மேவும் பிற சமயத்தவர்தம் பொய்யுரைகளை ஒதுக்கி நீக்குகின்ற புண்ணிய மாந்தர்கள் சேர்ந்து விளங்கும் மங்கலக்குடியில், சிவந்த திருமேனியராய்ச் செழுமையான கங்கை செறிந்த சடையுடையவராய், விளங்கும் தலைவராகிய ஈசன் சேவடியை ஏத்த வல்லவர்களுக்கு, அழகு கைவரப் பெறும்.

110. மந்த மாம்பொழில் சூழ்மங்
கலக்குடி மன்னிய
எந்தை யைஎழி லார்பொழிற்
காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு
ஞானசம் பந்தன்சொல்
முந்தி யேத்தவல் லார்இமை
யோர்முதல் ஆவரே.

தெளிவுரை : மந்த மாருதம் (மென்காற்று) திகழும் பொழில் சூழும் மங்கலக்குடியில் வீற்றிருக்கும் எந்தை ஈசனை, எழில் மிக்க பொழில் திகழும் சீகாழிப்பதியின் காவலன் சிந்தை செய்து திருவடிக்குச் சேர்த்திடும் விருப்பத்துடன் ஏத்த வல்லவர்கள், தேவர்தம் முதல்வனாய் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

147. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

111. நல்லானை நான்மறை யோடியல் ஆறங்கம்
வல்லானை வல்லவர் பால்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொல்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குளது இன்பமே.

தெளிவுரை : நல்லதெல்லாம் ஆகி நின்று புரிபவனை, நான்கு மறைகளோடு அதன் ஆறு அங்கங்களும் நன்கு விரித்தானை, ஆற்றல் பொருந்திய வேதங்களை ஓத வல்லவர்களாகிய மறையவர்பால் விளங்கும் வாய்ச் சொல்லாக விளங்குபவனை, சீகாழிப் பதியினைத் தனது இடமாக உள்ள ஈசனை, ஏத்தி நின்று வழிபடும் அடியவர்களுக்கு இன்பம் எக் காலத்திலும் நிலைத்து இருக்கும்.

112. நம்மானை மாற்றி நமக்கரு ளாய்நின்று
பெம்மானைப் பேயுடன் ஆடல்பு ரிந்தானை
அம்மானை அந்தணர் சேரும் அணிகாழி
எம்மானை யேத்தவல் லார்க்கு இடர் இல்லையே.

தெளிவுரை : நமக்குப் பிறவியின்வழி மானமாய் இருக்கும் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகியனவற்றை நீக்கிப் பேரருளாய் நிலைத்துள்ள ஈசன் பேய்க்கணங்களுடன் ஆடல் புரிபவன். அந்தணர்கள் எல்லாரும் சேர்ந்து வேதம் ஓதி வழிபடுகின்ற அப்பெருமானை ஏத்திப் பரவுபவர்களுக்கு இடர் ஏதும் இல்லை.

113. அருந்தானை அன்புசெய்து ஏத்தகில் லார்பால்
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதியர் ஓதம்இடை காழி
இருந்தானை யேத்துமி னும்வினை யேகவே.

தெளிவுரை : தனக்கென்று உண்ணும் பொருள் ஏதும் இல்லாதவனை, அன்பு செய்யாதவர்பால் பொருந்தாதவனை, பொய்யடிமை பூண்டவர்க்குப் புதியவனாய் இருப்பவனை, வேதியர்கள் ஓதுகின்ற காழிப் பதியில் மேவும் ஈசனை, நும்வினை யாவும் விட்டு விலகுமாறு வணங்குவீராக.

114. புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

தெளிவுரை : புற்றாகியும் புற்றில் வாழும் அரவத்தை அரையில் சுற்றியவனாகவும் தொண்டு செய்து விளங்கும் தன்முனைப்பு அற்றவர்பால் பொருந்துபவனை, வேதம் ஓதும் அந்தணர்கள் விளங்கும் காழிப்பதியில் விளங்கிப் பற்றாய் இருந்து அருள் புரியும் பெருமானாகிய ஈசனைப் பற்றி வழிபடுபவர்களுக்குப் பாவம் இல்லை.

115. நெதியானை நெஞ்சிடங் கொள்ளநி னைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமி னும்வினை பாறவே.

தெளிவுரை : அரிய செல்வனாயும், நெஞ்சில் தியானம் செய்பவருக்கு உள்நின்று உணர்த்தி விதிப்பவனாயும், தேவர்கள் எல்லாம் தொழும் நெறியாயும், மேகம் தவழும் பொழில் சூழும் காழிப்பதியில் மேவும் ஈசனாயும் விளங்கும் பெருமானைப் பாடிப் போற்றி வணங்குமின். நும் வினை யாவும் அழிந்து துன்பம் நீங்கும்.

116. செப்பாள மென்முலை யாளைத் திகழ்மேனி
வைப்பாளை வார்கழல் ஏத்தி நினைவார்தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்ட செம் மேனியனாய்த் திருக்கழலை நினைத்து வணங்கி மகிழும் அடியவர்கள்பால் விளங்கி, அவர்களுடைய விழைவிளை ஏற்று அருள் புரிபவன், கடலலையின் ஓதம் நிலவும் காழிப்பதியின் மெய்ப்பொருள் ஆகிய பரமன். அப்பெருமானை வழிபடும் மாந்தர்கள், புகழ் பெற்றவர் ஆவார்கள்.

117. துன்பானைத் துன்பம் அழித்தருள் ஆக்கிய
இன்பானை ஏழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.

தெளிவுரை : எப்பொருளும் ஆகும் தன்மையில் துன்பமும் அத்தகைய துன்பத்தைத் தீர்க்கும் இன்பமும் ஆகி, ஏழிசையின் வடிவாகியும், பேணும் அடியவர்தம் அன்பில் உறைபவனாய், அழகிய பொழில்கள் விளங்கம் காழி நகர் மேவிய சிவனை நண்ணி வணங்குபவர்கள் வினை யாவும் அழிந்துவிடும்.

118. குன்றானைக் குன்றெடுத் தான்புய நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடும் காழியுள்
நன்றானை நம்பெரு மானை நணுகுமே.

தெளிவுரை : எக்காலத்திலும் குறைவு படாதவனாய்க் குன்றுபோல் உறுதியாக விளங்குபவன் ஈசன். அப்பெருமான், கயிலையைப் பெயர்த்த இருபது தோள் உடைய இராவணனைப் பெருவிரலால் அடர்த்து அன்புடைய பக்தனாக்கி வென்றவன்; திருமாலும் பிரமனும் தன்னைத் தேடி அலையுமாறு செய்தவன்; உமாதேவியோடு சீகாழிப் பதியில் நன்று எல்லாம் ஆகி அருள் செய்பவன். அத்தகைய பெருமானை அடைந்து வணங்குக.

119. சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னான்அடி கூறுமே.

தெளிவுரை : வாதம் புரிவதில் தொய்வும் வீழ்ச்சியும் ஏற்படும் நிலையிலும் பழித்துக் கூறும் சாக்கியர் முதலானோர் சொற்களைக் கேட்டு, வெகுண்டு எழுதல் வேண்டாம். பூ எனச் சிறப்புடன் திகழும் கொன்றை மலரைச் சூடிய இறைவன், நீர்வளம் மிக்க காழிப்பதியின் ஈசனாய் விளங்குபவன். அப்பெருமானை வணங்குவதும் அவன் திருப்புகழைப் போற்றி மகிழ்வதும் கொள்கையாகக் கொள்ளுக. அது எல்லா நன்மைகளும் தரும் என்பது குறிப்பு.

120. கழியார்சீர் ஓதமல் கும்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானை உகந்துள்கித்
தழியார் ஞானசம் பந்தன் தமிழார
மொழிவார்கண் மூவுல கும்பெறு வார்களே.

தெளிவுரை : உப்பங்கழிகள் உடையதும் சீரான கடல் அலைகளின் ஓதம் கொண்டதும் ஆகிய சீகாழியில் நீக்கமற நிறைந்து கோயில் கொண்டுள்ள இறைவனை, மகிழ்ச்சியுடன் உருகித் தழைக்கும் அன்பு விளங்க ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தை இனிமையுடன் மொழிபவர்கள், மண்ணுலகம், விண்ணுலகம், பாதாளம் ஆகிய மூன்று உலகத்தின் கண்ணும் உள்ள சிறப்பினைப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

148. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

121. மறையானை மாசிலாப்புன் சடைமல்குவெண்
பிறையானைப் பெண்ணொடுஆணா கியபெம்மானை
இறையானை ஏர்கொள்கச்சித் தருவேகம்பத்து
உறைவானை யல்லது உள்காது எனது உள்ளமே.

தெளிவுரை : வேத வடிவானவனை, மாசில்லாத சடையின்கண் வெண்பிறை சூடியவனை, பெண்ணும் ஆணும் ஆகி விளங்கும் அர்த்தநாரியாகிய பெருமானை, இறைவனை, அழகு பொருந்திய கச்சியில் (காஞ்சிபுரம்) திருவேகம்பம் என்று வழங்கப்பெறும் திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஏகம்பநாதனை அல்லாது எனது உள்ளம் வேறு நினைக்காது.

122. நொச்சியே வன்னிகொன்றை மதிகூவிளம்
உச்சியே புனைதல்வேடம் விடையூர்தியான்
கச்சியே கம்பமேய கறைக்கண்டனை
நச்சியே தொழுமினும்மேல் வினைநையுமே.

தெளிவுரை : நொச்சி, வன்னி ஆகிய பத்திரங்களும், கொன்றை மலரும், வெண்பிறைச் சந்திரனும், வில்வஇதழும் திருமுடியில் புனைந்த திருக்கோலத்துடன், இடப வாகனத்தில் காட்சி நல்கும் கச்சி ஏகம்பன் நீலகண்டனாக விளங்குபவன். அப் பெருமானை விரும்பித் தொழுமின் ! நும் வினை நைந்து அழியும்.

123. பாராரு முழவமொந்தை குழலியாழொலி
சீராலே பாடலாடல் சிதைவில்லதோர்
ஏரார்பூங் கச்சியேகம் பனையெம் மானைச்
சேராதார் இன்பமாய அந்நெறிசேராரே.

தெளிவுரை : உலகத்தில் சிறந்து நிலவும், முழவு, மொந்தை குழல், யாழ் ஆகியவற்றுடன் இறைவன் புகழ்மிக்க பாடல், ஆடல் ஆகியன, விதியிலிருந்து சிதைவுபடாது அவ்வவ் இயல்பிற்கு ஏற்றவாறு சிறந்து ஓங்கும் கச்சியில் விளங்கும் ஏகம்பப் பெருமானை நாடித் துதியாதவர், பேரின்ப நெறி சேரும் சிறப்பற்றவர்; ஏகம்பனைத் தொழுபவர் சிறப்படைவர் என்பதாம்.

124. குன்றேய்க்கு நெடுவெண்மாடக் கொடிகூடிப்போய்
மின்தேய்க்கு முகில்கள் தோயும் வியன்கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீரான் மலியேகம்பம்
சென்றேய்க்கும் சிந்தையார் மேல் வினைசேராவே.

தெளிவுரை : குன்றினை நிகர்த்த வலிமையான உயர்ந்த மாடமாளிகைகளில் விளங்கும் கொடியானது, மின்னல்கள் ஒளிரும் மேகங்களில் பொருந்தும் பெருமை உடைய கச்சியுள், சிறப்பால் பெருகும் புகழ் மிக்க ஏகம்பம் சென்று வழிபடும் உள்ளம் ஒன்றிய அடியவர்கள் மேல் வினையானது எக்காலத்திலும் அணுகாது.

125. சடையானைத் தலைகையேந்திப் பலிதருவார்தம்
கடையேபோய் மூன்றும்கொண்டான் கலிக்கச்சியுள்
புடையேபொன் மலருங்கம்பைக் கரையேகம்பம்
உடையானை யல்லது உள்காது எனதுள்ளமே.

தெளிவுரை : சடை முடியுடையவனை, அழகிய கரத்தில் பிரம கபாலம் ஏந்தித் தாருகவனத்து முனி பத்தினிகள் கடைவாயிலில் நின்று அவர்களிடம் உடல் பொருள் ஆவி என மூன்றினையும் கொண்டு கச்சி நகருள் கொன்றை மலரும் கம்பை நதிக்கரையில் விளக்கும் ஏகம்பநாதனை அல்லாது எனது நெஞ்சமானது வேறு எதனையும் நாடாது.

126. மழுவாளோடு எழில்கொள்சூலப் படைவல்லார்தங்
கெழுவாளோர் இமையர் உச்சி உமையாள்கங்கை
வழுவாமே மல்குசீரால் வளர்ஏகம்பம்
தொழுவாரே விழுமியார்மேல் வினைதுன்னாவே.

தெளிவுரை : மழுவும் வாளும் சூலமும் படையாகக் கொண்டுள்ள ஈசன், பெருமை மிக்க ஒளிபொருந்திய மலையரசன், மகளாகிய உமையவளும், கங்கையும் விளங்கவும் சீர்மல்கும் ஏகம்பத்தில் வீற்றிருக்க, தவறாமல் அப் பெருமானைத் தொழுபவரே சிறப்புடையவர். அத்தகையோர்பால் வினையானது நெருங்காது.

127. விண்ணுளார் மறைகள்வேதம் விரித்தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல்வார் கரிகாலனை
நண்ணுவார் எழில்கொள்கச்சி நகர் ஏகம்பத்து
அண்ணலார் ஆடுகின்ற அலங்காரம்மே.

தெளிவுரை : உயர்ந்து விளங்கும் மறைகளாகிய வேதத்தை விரித்து ஓதுவார்கண் விளங்கும் ஈசன், காலனைத் திருக்கழலாய் உதைத்து வெற்றி கண்டவர். கச்சி நகரில் ஏகம்பத்தின்கண் மேவிய அப்பெருமானை நண்ணி வணங்குபவர்கள் எழில் பெறுவார்கள். அப் பெருமான் பூசனைப் பொருள்கள் கொண்டு ஆடும் சிறப்பு அலங்காரமாகத் திகழ்வதாகும்.

128. தூயானைத் தூயவாயம் மறையோதிய
வாயானை வாளரக்கன் வலிவாட்டிய
தீயானைத் தீதில்கச்சித் திருவேகம்பம்
மேயானை மேவுவார்என் தலைமேலாரே.

தெளிவுரை : ஈசன், தூயவன்; தூய்மையாகிய சிறந்த மறையை விரித்த பெருமையுடையவன்; இராவணனுடைய வலிமையை வீழ்த்தியவன்; தீயினைக் கரத்தில் ஏந்தியவன்; தீமை அறுத்து விளங்கும் கச்சித் திருவேகம்பத்தில் விளங்குபவன்; அப்பெருமானைச் சார்ந்து வணங்குபவர்கள், நான் உயர்வாகக் கருதக் கூடியவர்கள் ஆவர்.

129. நாகம்பூண் ஏறதுஏறல் நறுங்கொன்றைதார்
பாகம்பெண் பலியும்ஏற்பர் மறைபாடுவர்
ஏகம்ப(ம்) மேவியாடும் இறையிருவர்க்கு
மாகம்பம் அறியும் வண்ணத் தவனல்லனே.

தெளிவுரை : ஈசனார், நாகத்தை அணிகின்ற ஆபரணமாக உடையவர்; இடப வாகனத்தில் ஏறுபவர்; மணம் பொருந்திய கொன்றை மாலையுடையவர்; உமா தேவியைப் பாகமாக உடையவர்; கபாலம் ஏந்திப் பிச்சை கொள்பவர்; வேதம் விரித்து ஓதுபவர்; திருவேகம்பத்தில் மேவி விளங்கும் இறைவர். அப்பெருமான், திருமால், பிரன் ஆகிய இருவருக்கும் அறிந்து கொள்ளும் வண்ணம் அற்றவராய் பெரிய தீப்பிழம்பு அணைய தூண்போன்று நெடிது ஓங்கியவர் ஆவார்.

130. போதியார் பிண்டியார்என்று இவர்பொய்ந்நூலை
வாதியா வம்மினம்மா வெனுங்கச்சியுள்
ஆதியார் மேவியாடுந் திருவேகம்பம்
நீதியால் தொழுமினும் மேல்வினை நில்லாயே.

தெளிவுரை : பௌத்தர்களும் சமணர்களும் கூறும் பொய்ந்நூலை அடிப்படையாகக் கொண்டு வாதம் புரியாது வம்மின். பெருமையும் வளமையும் உடைத்தெனப் போற்றப்பெறும் கச்சியுள், முழுமுதற்பொருளாயும் ஆதிப்பிரானாயும் மேவி, நடம்பயிலும் திருவேகம்ப நாதரை நியதிப்படி தொழுமின். நுமக்கு வினையானது சாராது.

131. அந்தண்பூங் கச்சியேகம் பனையம்மானைக்
கந்தண்பூங் காழியூரன் கலிக்கோவையால்
சந்தமே பாடவல்ல தமிழ்ஞானசம்
பந்தன்சொற் பாடியாடக் கெடும்பாவமே.

தெளிவுரை : அழகிய குளிர்ச்சி மிக்க கச்சியில் அழகிய தலைவனாக விளங்கும் ஏகம்பப் பெருமானை, வாசனை கமழும் அழகிய சீகாழி என்னும் ஊரில் விளங்குபவனாய் ஒலிமாலையாம் சொல் மாலையைச் சந்தம் மல்கப் பாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன் பாடி இத் தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் பாடித் தன்னை மறந்து ஆடும் அன்பர்களுக்குப் பாவமானது கெடும்.

திருச்சிற்றம்பலம்

149. திருக்கோழம்பம் (அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்)
திருச்சிற்றம்பலம்

132. நீற்றானை நீள்சடைமேல் நிறைவுள்ளதோர்
ஆற்றானை அழகமர்மென் முலையாளையோர்
கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பமேவிய
ஏற்றானை யேத்துமின் நும்இடரேகவே.

தெளிவுரை : திருவெண்ணீறு பூசிய பெருமானை, நீண்ட சடையின் மீது கங்கை தரித்தவனை, உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனை, குளிர்ச்சியான பொழில் திகழும் கோழம்பம்மேவிய இடப வாகனனை ஏத்தி வழிபடுமின். உம் இடர் தீரும்.

133. மையான கண்டனைமான் மறியேந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்பமேவிய
செய்யானைத் தேனனெய்பாலுந் திகழ்ந்தாடிய
மெய்யானை மேவுவார்மேல் வினைமேவாவே.

தெளிவுரை : கரிய கண்டத்தை உடையவனை, மான் ஏந்திய கரத்தையுடையவனை, மணம் கமழும் சோலை சூழ்ந்த கோழம்பம் மேவிய செம்மேனியுடைய நாதனைத் தேனும், நெய்யும், பாலும் திகழப் பூசனை கொள்ளும் திருமேனியுடைய ஈசனை நாடி வணங்குவர்பால் வினை நாடாது.

134. ஏதனை ஏதமிலா இமையோர் தொழும்
வேதனை வெண்குழை தோடு விளங்கிய
காதனைக் கடிபொழிற்கோ ழம்பமேவிய
நாதனை யேத்துமினும் வினைநையவே.

தெளிவுரை : ஏதப்பொருளாய் இருப்பதற்குக் காரணப்பொருளாகிய ஈசனை, குற்றமில்லாத யோகியர் தொழும் வேதப் பொருளாகியவனை, வெண்குழையும் தோடும் விளங்கும் காதினனை, மணம் கமழும் பொழில்களையுடைய கோழம்பம் என்னும் பதியில் மேவிய நாதனை ஏத்தி வழிபடுமின். நும் வினை யாவும் நைந்து அழியும்.

135. சடையானைத் தண்மலரான் சிரமேந்திய
விடையானை வேதமும்வேள் வியுமாயநன்கு
உடையானைக் குளிர்பொழில்சூழ் திருக்கோழம்பம்
உடையானை உள்குளின்உள் ளங்குளிரவே.

தெளிவுரை : சடையுடையவனை பிரம கபாலம் ஏந்திய இடப வாகனனை, வேதமும் வேள்வியும் ஆகிய நன்மை உடையவனை, குளிர்ச்சியான பொழில் சூழ்ந்த திருக் கோழம்பம் என்னும் பதியுடையவனை மனதாரப் போற்றுமின். அவ்வாறு செய்தால் உள்ளம் மகிழ்ச்சி அடையும்.

136. காரானைக் கடிகமழ்கொன் றையம்போதணி
தாரானைத் தையலொர்பால் மகிழ்ந்தோங்கிய
சீரானைச் செறிபொழிற்கோ ழம்பமேவிய
ஊரானை யேத்துமின் நும்மிடர்ஒல்கவே.

தெளிவுரை : மேகம் போன்று குளிர்ந்து அருள்பவனை, மணம் கமழும் கொன்றை மலரை மாலையாக உடையவனை, உமாதேவியை ஒரு பாகமாக மகிழ்ந்து ஓங்கிய சிறப்புடையவனை, பொழில் சூழும் கோழம்பம் என்னும் கோயிலை இடமாகக் கொண்டவனை ஏத்தி வணங்குமின். உமது இடர் யாவும் கெடும்.

137. பண்டாலின் நீழலானைப் பரஞ்சோதியை
விண்டார்கள் தம்புரமூன் றுடனேவேவக்
கண்டானைக் கடிகமழ்கோ ழம்பங்கோயிலாக்
கொண்டானைக் கூறுமின் உள்ளங்குளிரவே.

தெளிவுரை :  பண்டைய நாளில் சனகாதி முனிவர்கள் நால்வர்க்கு உபதேசம் செய்யும் பொருட்டு ஆலமர நீழலில் அமர்ந்த பெருமானை, பரஞ்சோதியை, பகைவராகிய முப்புர அசுரர்களும் கோட்டைகளும் ஒருசேர உடனே எரியுமாறு செய்தவனை, கோழம்பத்தைக் கோயிலாகக் கொணடவனைப் போற்றி வாழ்த்த உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கும்.

138. சொல்லானைச் சுடுகணையால் புரமூன்றுஎய்த
வில்லானை வேதமும்வேள் வியும்ஆனானைக்
கொல்லானை யுரியானைக்கோ ழம்பமேவிய
நல்லானை யேத்துமின் நும்மிடர்நையவே.

தெளிவுரை : ஈசன், மந்திரச் சொல்லாக விளங்குபவன்; அக்கினி என்னும் கணைதொடுத்து முப்புரங்களை எய்து எரியுமாறு செய்த வில்லை உடையவன்; வேதமும் வேள்வியும் ஆனவன்; கொல்லும் தன்மை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன்; கோழம்பம் என்னும் கோயிலின்கண் விளங்கும் நல்லவன். அப்பெருமையுடைய பரமனை நும் இரை நைந்து கெடும்பொருட்டு ஏத்தி வழிபடுக.

139. விற்றானை வல்லரக்கர் விறல்வந்தனைக்
குற்றானைத் திருவிரலாற் கொடுங்காலனைச்
செற்றானைச் சீர்திகழுந் திருக்கோழம்பம்
பற்றதனைப் பற்றுவார்மேல் வினைபற்றாவே.

தெளிவுரை : விற்படை கொண்ட அரக்கர்களின் தலைவனாகிய இராவணனை, அவன் செயல் கூடாதவாறு தடுத்து அடர்த்தும், கொடிய காலனைத் திருப்பாதத்தால் செற்று அழித்தும், சீர் திகழும் திருக்கோழம்பம் என்னும் இடத்தில் வீற்றிருக்கும் ஈசனைப் பற்றாகக் கொண்டு வணங்குபவர்களுக்கு, வினையானது சாராது. வினையே துன்பத்திற்குக் காரணமாக இருப்பதால் வினை இல்லாத நிலையில் இம்மையில் துன்பமற்ற வாழ்வும், மறுமையில் சிவப்பேறாகிய பேரின்ப வாழ்வும் கைகூடும் என்பதாம்.

140. நெடியானோடு அயனறி யாவகை நின்றதோர்
படியானைப் பண்டங்க வேடம் பழின்றானைக்
கடியாருங் கோழம்ப மேவிய வெள்ளேற்றின்
கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் அறியாத வகையில் நின்ற வடிவினனை, பண்டரங்கம் எனப்படும் கூத்துக் சூரிய வேடம் தாங்கினவனை நறுமணம் கமழும் கோழம்பம் மேவி இடபக் கொடியுடைய ஈசனைப் போற்றி வாழ்த்துமின், நும் உள்ளமானது மகிழும்.

141. புத்தரும் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்
கொத்தவர் தண்பொழிற் கோழம்ப மேவிய
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.

தெளிவுரை : புத்தரும் சமணரும் பேசும் சொற்கள் ஏற்கப்பெறும் பேச்சு ஆகாது. கொத்தாக மலர் தரும் குளிர்ந்த பொழில்கள் கொண்டு பெருமை மிகுந்து விளங்கும் கோழம்பம் மேவிய கடவுளை ஏத்துமின். உமது துன்பம் யாவும் தீரும்.

142. தண்புனல் ஓங்குதண் ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம் பந்தனம் பானுறை
விண்பொழிற் கோழம்ப மேவிய பத்திவை
பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.

தெளிவுரை : குளிர்ந்த நீர்வம் கொண்ட, சீகாழி நகரில் நட்டு மிக்க ஞானசம்பந்தன், பொழில்சூழ் கோழம்பம் மேவிய ஈசனைப் பாடிய இத் திருப்பதிகத்தைப் பண்ணொடு பாடவல்லவர்களுக்கு, உலகில் எத்தகைய பாவமும் அணுகாது.

திருச்சிற்றம்பலம்

150. திருவெண்ணியூர் (அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில்வெண்ணி, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

143. சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை உடைதலை யிற்பலி கொண்டுஊரும்
விடையானை விண்ணவர்தாம்தொழும் வெண்ணியை
உடையானை அல்லதுஉள் காதுஎனது உள்ளமே.

தெளிவுரை : சடை முடியுடையவனை, வெண்திங்களும், சிவந்த கண்களையுடைய பாம்பும் உடையவனை, உடைந்த தலையாகிய பிரம கபாலம் கொண்டு இடப வாகனத்தில் வருபவனை, தேவர்கள் தொழுது போற்றும் வெண்ணி என்னும் பதியில் வீற்றிருந்து அருள் வழங்கும் நாதனாகிய ஈசனை அல்லாது எனது உள்ளம் பிறவற்றை நினைக்காது.

144. சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டஎம்
ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத
வேதியை வேதியர் தாம்தொழும் வெண்ணியை
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.

தெளிவுரை : சோதி வடிவானவனை, வெண்மையான திருநீறு அணிந்த ஆதியை, ஆதியும் முடிவும் இல்லாத வேதநாயகனை, வேதம் ஓதும் மறையோர் தொழுது போற்றும் வெண்ணிநானை, அறத்தின் நாயகனாகிய ஈசதன நினைத்துப் போற்றுபவர்கள்பால், வினையானது நிற்காது.அத்தகைய பெருமக்கள் துன்பம் அற்று விளங்குவார்கள்.

145. கனிதனைக் கனிந்தவ ரைக்கலந்து ஆட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவர் ஏதுமி லாதாரே.

தெளிவுரை : நினைத்துப் போற்றும் அடியவர்கள் நெஞ்சில் கனிபோன்று சுவையாக விளங்குபவனை, உள்ளம் அன்பினால் கனிந்து போற்றும் பக்தர்கள் நெஞ்சிற் கலந்து ஆட்கொள்ளும் இறைவனை, மூவுலகங்களும் ஒப்பற்ற தலைவனாக விளங்கும் மூர்த்தியை, நனிசிறந்து மேவும் ஈசனை, நல்லொழுக்கமும் சீலமும் மிக்க ஞானிகள் தொழுகின்ற வெண்ணியில் மேவும் இனிமையாய் அருள் வழங்கும் பரமனை ஏத்தி வழிபடுபவர், குற்றம் அற்றவராய் விளங்குவார்கள்.

146. மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்
காத்தானைக் கனிந்தவரைக் கலந்து ஆளாக
ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்தன்றை
ஏத்தாதார் என்செய்வார் ஏழையப் பேய்களே.

தெளிவுரை : முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளாய் டவளங்கும் தொன்மையுடையவனை, மூன்று உலகங்களுக்கும் ஒப்பற்ற மூர்த்தியாகிக் காத்தருள் புரியும் கடவுளை, உண்மையான அன்புடையவராய்க் கனிந்து உருகும் மனத்தினர்தம் உள்ளத்தில் கலந்து அடியவர்களாக்கி மகிழ்ந்து அருள் நாதன்தன்னை ஏத்தாதவர் என் செய்வாரோ ! கீழ்மைத்தனம் மிக்க பேய்களாய்த் திரிபவர் ஆவரே !

147. நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத் தையலொர் பாகமு டையானைச்
சீரானைத் திகழ்தரு வெண்ணி யமர்ந்துறை
ஊரானை உள்கவல் லார்வினை ஓயுமே.

தெளிவுரை : சோதி வடிவினனாய், நிறைபுனலாகிய கங்கை சூழ, நீண்ட கொன்றைமாலை சூடி, உமாதேவியை ஒருபாகமாகக் கொண்ட புகழ் மிக்க ஈசன், பெருமை திகழும் வெண்ணி என்னும் தலத்தில் வீற்றிருப்பவன். அப் பெருமானைத் தியானம் செய்து வணங்குபவர் வினை, செயலற்றதாகிக் கெடும்.

148. முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத்
தொத்தினைத் துளக்கம் இலாத விளக்காய
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனை அடையவல் லார்க்கில்லை அல்லலே.

தெளிவுரை : முத்து, வயிரம், மாணிக்கம் என்று உயர்ந்த தன்மையுடைய செல்வமாகக் திகழும் ஈசன், அணையா விளக்கெனவாய், எல்லாப் பொருள்களும் தோன்றி வெறிப்படுவதற்குரிய வித்தாகித் தேவர்கள் தொழுது போற்றும் வெண்ணியில் விளங்குகின்றான். அக் கடவுளை வணங்கும் அடியவர்களுக்குத் துன்பம் இல்லை.

149. காய்ந்தானைக் காமனை யும்செறு காலனைப்
பாயந்தானைப் பரியகை மாவுரித் தோன்மெய்யில்
மேய்ந்தானை விண்ணவர் தாம்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.

தெளிவுரை : மன்மதனை எரித்துக் காலனை வீழ்த்திப் பெரிய தோற்றமுடைய யானையின் தோலை உரித்துத் திருமேனியில் போர்த்திக் கொண்டவன், தேவர்கள் தொழுது வணங்கும் சிறப்பு மிக்க வெண்ணியில் வீற்றிருக்கும் ஈசன். அக் கடவுளை நினைத்து வழிபடுபவர்களிடம் வினையானது சேராது.

150. மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்
செறுத்தானைத் தேசுஅழி யத்திகழ் தோள்முடி
இறுத்தானை எழிலமர் வெண்ணிஎம் மானெனப்
பொறுத்தானைப் போற்றுவர் ஆற்றல் உடையாரே.

தெளிவுரை : அகந்தையால் பகைமை கொண்டு கயிலை மலையை மதியாது பெயர்த்த இராவணனுடைய வனப்பு அழியுமாறு தோள்களையும் முடிகளையும் துன்புறுத்தியவன், எழில் மேவும் வெண்ணியில் விளங்கும் இறைவன். அப்போது அவ்வரக்கன், எம் தலைவனே ! காப்பாற்றுவீராக என்று கலங்கி அழுது வேண்டி முறையிட, குற்றத்தைப் பொறுத்து அருள் புரிந்தவன் பரமன். அப் பெருமானைப் போற்றி வணங்குபவர்களுக்கு எல்லாவிதமான ஆற்றலும் கைவரப் பெறும்.

151. மண்ணினை வானவ ரோடு மனிதர்க்கும்
கண்ணினைக் கண்ணணு நான்முக னுங்காணா
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே.

தெளிவுரை : ஈசனுடைய எட்டு மூர்த்தங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகியவற்றுள், முதலாவதாகக் கூறப்படும் மண்ணாக விளங்கி, தேவர்களுக்கும் பூவுலகத்தவர்களுக்கும் கண்ணாக இருப்பவன் ஈசன். அப்பெருமான் கண்ணனாகிய திருமாலும், நான்முகனாகிய பிரமனும் காணுதற்கு ஒண்ணாத நிலையில் விண்ணென உயர்ந்து ஓங்கியவன். அவன், தேவர்கள் தொழும் வெண்ணியில் வீற்றிருக்கும் அண்ணல், அப்பெருமானை அடைந்து வணங்குவோர்க்குத் துன்பம் ஏதும் இல்லை. இம்மையில் நலமுடன் வாழ்வார்கள் என்பது குறிப்பு.

152. குண்டரும் குணமிலாத சமண் சாக்கிய
மிண்டர்கண் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டராய் ஏத்தவல் லார்துயர் தோன்றாவே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் இடக்கான சொற்கள் கண்டு சினங்கொள்ளேல், பகைவராகிய முப்புராரிகளை வென்ற ஈசன் விளங்கம் வெண்ணி என்னும் திருத்தலத்தில் திருத்தொண்டராய் விளங்கி அப் பெருமானை வணங்குபவர்களுக்கு எக் காலத்திலும் துயரம் இல்லø.

153. மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருவாருந் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை
உருவாரும் ஒண்தமிழ் மாலை இவைவல்லார்
பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.

தெளிவுரை : மணம் நிறைந்த சீகாழியில் விளங்கும் ஞானசம்பந்தன், செல்வம் பெருகும் வெண்ணியில் வீற்றிருக்கும் ஈசனைப் போற்றி, ஒளிமிக்கதாக உரைத்த இத்தமிழ் மாலையைச் சொல்லவல்லவர்கள் பொருந்தி விளங்கும் சிவலோகத்தில் சார்ந்து மகிழ்ந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

151. திருக்காறாயில் (அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

154. நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் தான்தொழும்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே என்பவர் ஊனமி லாதாரே.

தெளிவுரை : கங்கை தரித்த பெருமானே ! நீண்ட சடையின் மீது வரிசையாக உள்ள கொன்றை மாலையை உடையவனே ! தாமரை மலரின்மேல் விளங்கும் பிரமன் தொழுது போற்றும் பெருமை உடையவனே ! சிறப்புமிக்க திருக்காறாயில் என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஈசனே ! என்று போற்றி வணங்கும் அடியவர்கள், குறைபாடு ஏதும் இன்றி உலகில் நன்கு விளங்குவார்கள். வினைத் துன்பம் இல்லை என்பது குறிப்பு.

155. மதியானே வரியர வோடுடனச் மத்தம்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாம்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்ந்திருக் காறாயில்
பதியானே என்பவர் பாவமி லாதாரே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சூடிய பெருமானே ! அழகிய அரவமும், ஊமத்த மலரும் தரித்துள்ளவனே ! மன்னுயிர்களுக்கு ஊழின்வழி விதிக்கும் கர்த்தராக இருப்பவனே ! வேதவிதிப்படி விளங்கம் அந்தணர்கள் தொழுது போற்றும் செல்வனே ! நீர்வளமும், வயல் வளமும் பெருகிச் சூழ்ந்த திருக்காறாழயில் என்னும் பதிக்கு உரிய ஈசனே ! என்று போற்றி வணங்கும் அடியவர்கள், பாவம் சாராது உலகில் நன்கு திகழ்வார்கள். வினையின் உபாதை இல்லை என்பதாம்.

156. விண்ணானே விண்ணவர் ஏத்தி விரும்பும்சீர்
மண்ணானே மண்ணிடை வாழும் உயிர்க்கெல்லாம்
கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்
எண்ணானே என்பவர் ஏதமி லாதாரே.

தெளிவுரை : வானாகிய பெருமானே ! தேவர்கள் தொழும் சிறப்புடைய மண்ணுலகம் ஆகியவனே ! பூவுலகத்தில் வாழ்கின்ற உயிக்கெல்லாம் கண்ணாக விளங்கும் பரம்பொருளே ! மணம் பொருந்திய பொழில் சூழந்த திருக்காறாயில் என்னும் பதியின்கண் கருதி வீற்றிருக்கும் ஈசனே என்று போற்றி வணங்கும் அடியவர்கள், குற்றமற்றவராய் விளங்குவார்கள்.

157. தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே ஆயநல் லன்பர்க்கு அணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே என்பவர் மேல்வினை மேவாவே.

தெளிவுரை : தாயாக விளங்கும் பெருமானே ! தந்தையும் ஆகி விளங்குபவனே ! நல் மனத்துடன் கூடிய அடியவர்களுக்கு அண்மையில் இருந்து அருள் புரியும் நாதனே ! மற்றையோர்க்கும் சேய்மையில் விளங்கிப் புரந்தருள் செய்யும் பரமனே ! புகழ்மிக்க திருக்காறாயில் என்னும் பதியில் மேவும் ஈசனே என்று போற்றித் துதிக்கும் அடியவர்கள்பால், வினையானது மேவாது.

158.கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே என்பவர் மேல்வினை நில்லாவே.

தெளிவுரை : வேத சாத்திரங்களாகிய பெருமானே ! அழகுமலிந்த செம்பொற் கயிலாய மலையாய் விளங்குபவனே ! பகைமை பூண்டு வெகுண்டு எழுந்த முப்புரத்தை மாய்த்து எரித்த மேரு மலையை வில்லாக உடையவனே ! புகழ் மிக்க திருக்காறாயில் என்னும் பதியில் நிலையாகி விளங்கும் ஈசனே என்று, போற்றி வணங்குபவர்களிடம் வினையானது நிற்காது. வினை சார்தல் இன்றி, தானே மறைந்து விலகும் என்பது குறிப்பு.

159. ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடரவு
ஏற்றானே ஏழுல கும்இமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே என்பவர் மேல்வினை நில்லாவே.

தெளிவுரை : யாவும் ஆகி விளங்கும் பெருமானே ! கங்கை தரித்த சிவந்த சடையும் ஆடுகின்ற அரவும் ஏற்று விளங்கும் நாதனே ! ஏழு  உலகத்தவர்களும். யோகியர்களும் துதித்துப் போற்றப்படும் பரமனே ! பொழில் திகழும் திருக்காறாயில் என்னும் பதியில் விளங்கும் திருநீற்றனாய் மேவும் ஈசனே என்று, போற்றி வழிபடும் அடியவரகள் மீது, வினை சார்ந்து நிற்காது.

160. சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வார்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழந்திருக் காறாயில்
ஆர்த்தானே என்பவர் மேல்வினை ஆடாவே.

தெளிவுரை : பல பிறவிகள் வாயிலாகச் சேர்ந்த தீயவினைகள் யாவும் அற்று நீங்கும்படி செய்த பெருமானே ! தேவர்களால் ஏத்திப் புகழப்படும் தேவனே ! போற்றிவழிபடும் மேன்மையுடைய முனிவர்களுக்கு எவ்விதமான இடரும் நேராதவாறு காத்தருளும் பரமனே ! வயல் வளம் பெருகும் திருக்காறாயில் என்னும் தலத்தின்கண் நிறைந்து விளங்கும் ஈசனே என்று, பரவும் அடியவர்கள்பால் வினையானது செயலற்றதாகும்.

161. கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்
எடுத்தான÷ யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
அடுத்தானே என்பவர் மேல்வினை யாடாவே.

தெளிவுரை : மார்க்கண்டேயர் உயிரைக் கவர வந்த காலன் உயிரைக் காலால் உதைத்துக் கவர்ந்த நாதனே ! கயிலாயம் எடுத்த இராவணனுக்குத் துன்பமும் நன்முனிவர்களுக்கு இடர் கெடுத்தும் விளங்கும் பரமனே ! ஒளி திகழும் திருக்காறாயில் என்னும் திருத்தலத்தில் பொருந்தி விளங்கும் ஈசனே என்று, பரவி வணங்குபவர்களிடம் வினையானது செயலற்றதாகும்.

162. பிறையானே பேணிய பாடலொடு இன்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே எழில்திக ழும்திருக் காறாயில்
உறைவானே என்பவர் மேல்வினை யோடுமே.

தெளிவுரை : பிறைச் சந்திரனை உடையவனே ! போற்றிப் பரவும் பாடலுடன் இன்னிசையாய் விளங்கும் மறையவனே ! திருமாலும் நான்முகனும் அறியாதவனாயச விளங்கிய இறைவனே ! எழில் திகழும் திருக்காறாயில் என்னும் தலத்தில் உறையும் ஈசனே என்று, பரவிப் போற்றும் அடியவர்பால், சார்ந்துள்ள வினையானது நீங்கி அழியும்.

163. செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
குடியாரும் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.

தெளிவுரை : சமணர் முதலானோர் சொற்கள் பயன் அற்றவையாகும். மணம் கமழும் பூம்பொழில் சூழ்ந்த திருக்காறாயில் என்னும் தலத்தில் குடியிருக்கும் செம்மையுடைய சீலர்களுக்கு ஆணவம் முதலான குற்றங்கள் இல்லை.

164. ஏய்ந்தசீர் எழில்திக ழுந்திருக் காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவாறு ஏத்துவார் வானுலகு ஆள்வாரே.

தெளிவுரை : பொருந்திய சிறப்பும் எழிலும் திகழ்கின்ற திருக்காறாயிலின்கண், மெய்ம்மை மிக்க வேத ஆகமங்களால் மொழியப்பட்ட புகழுக்கு உரியவனாகிய ஈசன் திருவடியைப் பரவி, அருள் நலம் வாய்க்கப் பெற்ற, நீர் வளம்மிக்க சீகாழியில் விளங்கும் ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஏத்துவார், உயர்ந்த உலகினைப் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

152. திருமணஞ்சேரி (அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

165. அயிலாரும் அம்பத னால்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாள்ஒரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

தெளிவுரை : கூர்மையான, அம்பினால் முப்புரத்தை எய்து எரியுமாறு செய்து, உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு மயில்கள் மருவி விளங்கும் சோலையுடைய மணஞ்சேரியில், அடியவர் பெருமக்கள் வணங்கிப் போற்ற அருள் நல்கி விளங்கும் ஈசனைப் பற்றாகக் கொண்டு, உறுதியுடன் இருப்பவர்களுக்குப் பாவம் சாராது.

166. விதியானை விண்ணவர் தாந்தொழுது ஏத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.

தெளிவுரை : யாவற்றுக்கும் நெறிமுறையாகவும், விதிக்கும் விதியாகவும் விளங்கும் பெருமானை, தேவர்கள் தொழுது ஏத்தும் செல்வனை, நீண்ட சடைமுடியின் மீது சந்திரனை விளங்கமாறு செய்த பரமனை, வளம் மிக்க பொழில் சூழ்ந்த மணஞ்சேரி என்னும் பதியில் விளங்கும் ஈசனைப் பாடிப் போற்றுபவர்கள், வினையானது அழியும்.

167. எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலாய் என்னையும் ஆள உரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.

தெளிவுரை : வயிற்றுணவை மட்டும் மதியாது, இறைவனைத் தியானித்து விரதம் பூண்டு இளைத்த மேனியராய்ப் பக்தியுடன் விளங்கும் அடியவர்களுக்கு இன்புறுமாறு தேன் போன்று இனிய அருள் பெருகுமாறு செய்து, என்னை ஆளாக உரிமையுடையவன் ஈசன். அப்பெருமான், உறுதி வாய்ந்த மாடங்களை உடைய மணஞ்சேரியின் மெய்ப்பொருளாக விளங்குபவன். அப் பரமனை மேவி வணங்குபவர் வினை அழியும். இது துன்பத்தை தீர்க்கும் என்பதாம்.

168. விடையானை மேலுலகு ஏழும்இப் பாரெலாம்
உடையானை ஊழிதோ றூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடையவல் லார்க்கில்லை அல்லலே.

தெளிவுரை : இடப வாகனத்தை உடையவனாகிய பரமனை, மேலுலகு ஏழும், இவ்வுலகம் யாவும் விரிந்து விளங்குபவனை, ஊழிக்கோலங்கள்தோறும் உள்ளதாகிய ஞானவாள் படையுடையவனை, இசைப் பண் விளங்குமாறு பொலியும் மணஞ்சேரியில் வீற்றிருக்கும் ஈசனை அடைந்து போற்றும் அடியவர்களுக்குத் துயர் இல்லை.

169. எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
மாறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.

தெளிவுரை : ஒளிவீசும் பூங்கொன்றை மாலையும், ஊமத்தம் பூவும் மணம் கமழும் செஞ்சடையில் நிரம்பச் சூடி, மானைக் கரத்தில் ஏந்தியவன் மணஞ்சேரியில் திட்பமாய் வீற்றிருக்கும் ஈசன். அப்பெருமானைப் போற்றிப் பாட வல்லவர்களுக்கு இடையூறு இல்லை.

170. மொழியானை முன்னொரு நான்மறை ஆறங்கம்
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவர் ஏத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே.

தெளிவுரை : உயர்ந்ததாகிய வேதத்தை மொழித்தவனை, அம்மொழிக்கு உரிய விளக்கத்தை நன்கு விரித்து அருளியவனை, நன்னெறிகள் யாவும் ஆகியவனை, தேவர்கள் ஏத்திப் பரவும் மணஞ்சேரியில் விளங்கும் ஈசனைக் குறைவுபடாது ஏத்துபவர்கள் இம்மையில் இன்பம் பெறுவர். இது மறுமைக்கும் பொருந்தும்.

171. எண்ணானை எண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.

தெளிவுரை : எண்ணங்களுக்கெல்லாம் கடந்து விளங்கும் பரமனை, எண்ணத்தில் பதித்து இருத்திக் காணும் புகழ்மிக்க யோகியர்களுக்கு ஞானக் கண்ணாகியவனை, முக்கண் உடையவனை, அட்ட மூர்த்தகளுள் மண் (பிரித்திவி) என விளங்குபவனை, சிறப்பான வயல்கள் சூழ்ந்த மணஞ்சேரியில் உமாதேவியைக் கூறாக உடைய ஈசனைப் புகழ்ந்து பேசுபவர்கள், பெருமக்கள் என்று சொல்லப்படும் பெரியோர் ஆவர்.

172. எடுத்தானை எழில்முடி எட்டும் இரண்டும்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே.

தெளிவுரை : மலையை எடுத்தவனாகிய இராவணனுடைய பத்துத் தோள்களையும் வலியிழக்கச் செய்த பெருமானை, அழிதல் இல்லாத சிறப்பினையுடைய ஈசனை, வண்டுகள் அணுகி இசைபாடும் மணஞ்சேரி யில் விளங்கும் ஈசனை விருப்பத்துடன் பற்றி மனதாரப்  போற்றி விளங்கும் அடியவர்கள் பெரியோர்களாகத் திகழ்வார்கள்.

173. சொல்லானைத் தோற்றங்கண் டானு நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவர் ஏத்து மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே.

தெளிவுரை : வேத்தின் சொல்லாக விளங்கும் பெருமானை, படைப்புத் தொழில் மேவும் பிரமனும் நெடிய திருமாலும் காண முடியாத கடவுளை, ஈசன் புகழ்ப் பாடல்களைக் கருதிச் சொல்லித் துதித்து ஓங்கும் பெருமக்களும், நற்றவமாந்தர்களும் ஏத்துகின்ற மணஞ்சேரியில் எம்பெருமானே, எல்லாமாய் விளங்கும் ஈசனை ஏத்தி அவன் அடி பரவுவீராக.

174. சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாயே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் தமது உரைகள் பயனற்ற தன்மையில் ஆகுமாறு, வண்ணம் பொருந்திய செம்மையுடைய ஈசனை, வற்றாத நீர் நிலைகள் சூழ்ந்த மணஞ்சேரியில் வாழ்பவர்கள் பற்றாகக் கொண்டிருக்க, அவர்கள்மேல் வினையானது பற்றாது.

175. கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க் கில்லை பாவமே.

தெளிவுரை : கண்ணுக்கினிய காட்சி நல்கும் காழியின் தலைவனாகிய ஈசன் கருத்து, உள்ளத்தில் பொருந்துமாறு செய்து உணர்வித்த ஞானசம்பந்தன் தமிழ் மாலை, மண்வளம் பெருகும் வயல் சூழந்த மணஞ்சேரியைப் பண்ணாரப் பொலிய, அதனைப் பாட வல்லவர்களுக்குப் பாவம் அணுகாது.

திருச்சிற்றம்பலம்

153. திருவேணுபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

176. நிலவும்புன லும்நிறை வாளரவும்
இலகுஞ்சடை யார்க்கிட மாம்எழிலார்
உலவும்வய லுக்கொளி யார்முத்தம்
விலகுங்கட லார் வேணுபுரமே.

தெளிவுரை : பிறைச் சந்திரனும், கங்கையும், கொடிய அரவமும் விளங்கும் சடையுடைய ஈசனார்க்கு இடமாக விளங்குவது, எழில் மிக்க உழத்திய மகளிர் உலவும் வயல்களில் கடலிலிருந்து விலகிச் சென்று அடையும் ஒளிமிக்க முத்துக்களையுடைய வேணுபுரம் ஆகும்.

177. அரவார்கர வன்னமை யார்திரள்தோள்
குரவார்குழ லாள்ஒரு கூறனிடம்
கரவாதகொ டைக்கலந் தாரவர்க்கு
விரவாகவல் லார் வேணுபுரமே.

தெளிவுரை : அரவத்தைக் கரத்தில் கங்கணம் போன்று பொருந்திய ஈசன், மூங்கில் போன்ற தோளும் குராமலர் நிகர்த்த மணம் கமழும் கூந்தலும் உடைய உமாதேவியை ஒரு பாகமாக உடைய பெருமான். அப் பெருமான் வீற்றிருக்கும் இடம், குறைவின்றிக் கொடை வழங்கும் வள்ளல்கள் விளங்க அத்தகையோர்க்கு நெருக்கமாகத் திகழவல்லவர்கள் வாழும் வேணுபுரம் ஆகும்.

178. ஆகம்மழ காயவள் தான்வெருவ
நாகம்முரி போர்த்தவன் நண்ணுமிடம்
போகந்தரு சீர்வயல் சூழ்பொழில்கண்
மேகந்தவ ழும் வேணுபுரமே.

தெளிவுரை : அழகிய திருமேனியுடைய உமாதேவி வெருவுமாறு, வீரத்துடன் யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட ஈசன் வீற்றிருக்கின்ற இடம், மூன்று போகமும் வளங்கொழிக்கும் செழுமையான வயல்களும் ஓங்கி வளர்ந்த பொழின்கண் மேகம் தவழும் இயல்பும் உடைய வேணுபுரம் ஆகும்.

179. காசக்கட லில்விடம் உண்டகண்டத்து
ஈசர்க்கிட மாவது இன்னறவ
வாசக்கம லத்தனம் வன்திரைகள்
வீசத்துயி லும் வேணுபுரமே.

தெளிவுரை : பொன்வளம் மிக்க பாற்கடல் தோன்றிய விடத்தை உட்கொண்ட ஈசனார்க்கு இடமாக விளங்குவது, இனிய தேன் விளங்கும் தாமரை மலரில் திகழும் அன்னமானது வலிமையான அலைகள் வீசும் காரணமாகத் துயில்சாரும் வேணுபுரம் ஆகும்.

180. அரையார்கலை சேரன மென்னடையை
உரையாஉகந் தானுறை யும்இடமாம்
நிரையார்கமு கின்னிகழ் பாளையுடை
விரையார்பொழில் சூழ் வேணுபுரமே.

தெளிவுரை : நன்கு பொருந்திய மேகலையும் அன்னம் போன்ற நடையழகும் உடைய உமாதேவிக்கும், வேத சாத்திர மெய்ம்மைகளை உரைத்து மகிழும்  ஈசனார் உறையும் இடமாவது, கமுக மரங்களும் மணம் கமழும் பொழில்களும் சூழும் வேணுபுரம் ஆகும்.

181. ஒளிரும்பிறை யும்முறு கூவிளவின்
தளிருஞ்சடை மேலுடை யானிடமாம்
நளிரும்புன லின்னல செங்கயல்கண்
மிளிரும்வயல் சூழ் வேணுபுரமே.

தெளிவுரை : ஒளி தரும் பிறைச்சந்திரனும், வில்வ இதழும் சடைமேல் தரித்துள்ள ஈசனின் இடமாவது, குளிர்ந்த நீரில் வளம்மிக்க கயல்கள் (மீன்கள்) மல்கி விளங்கும் வயல்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.

182. ஏவும்படை வேந்தன் இராவணனை
ஆவென்றல றஅடர்த் தான்இடமாம்
தாவும்மறி மானொடு தண்மதியம்
மேவும்பொழில் சூழ் வேணுபுரமே.

தெளிவுரை : தான் இருந்த நிலையிருந்தவாறு ஏவிப் பிறரை அழிக்கவல்ல படையுடைய இராவணனை, ஆ என்று அலறிக் கலங்குமாறு அடர்த்த ஈசன் விளங்கம் இடமாவது, தாவும் இளமானும் குளிர்ந்த பொழிலும் சூழும் வேணுபுரம் ஆகும்.

183. கண்ணன்கடி மாமல ரில்திகழும்
அண்ணல் இருவர்அறி யாஇறையூர்
வண்ணச்சுதை மாளிகை மேற்கொடிகள்
விண்ணில் திகழும் வேணுபுரமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் அறியாத இறைவன் விளங்கும் ஊரானது, வண்ணம் கொண்டு விளங்கும் மாளிகைகளின் உச்சியில் திகழும் கொடிகள் தேவலோகத்தில் பொலியும் சிறப்புடைய வேணுபுரம் ஆகும்.

184. போகம்மறி யார்துவர் போர்த்துழல்வார்
ஆகம்மறி யாஅடியார் இறையூர்
மூகம்மறி வார்கலை முத்தமிழ்நூன்
மீகம்மறி வார் வேணுபுரமே.

தெளிவுரை : சாக்கியர் முதலானோர் அறியாத நிலைகண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூற, அடியவர்கள் அத்தகையோரை நோக்காதவராய் இறைவனை நோக்கும் தன்மையராவர், அவ் இறைவன் விளங்கும் ஊர், மௌனமாக இருந்து தியானம் செய்ய வல்லவர்களும், வேதம் மற்றும் முத்தமிழ் நூல்களையும் மேன்மையாக அறிந்தவர்களும் திகழும் வேணுபுரம் ஆகும்.

185. கலமார்கடல் போல்வள மார்தருநற்
புலமார்தரு வேணு புரத்திறையை
நலமார்தரு ஞானசம் பந்தன் சொன்ன
குலமார்தமிழ் கூறுவர் கூர்மையரே.

தெளிவுரை : கடல் போன்று பெருகும் நல்ல வளந்தரும் வயல்கள் திகழும் வேணுபுரத்தில் வீற்றிருக்கும் இறைவனை, நலந்திகழ் ஞானசம்பந்தன் சொன்ன மேன்மையான இத் திருப்பதிகத்தை உரைப்பவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

154. திருமருகல் (அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

186. சடையாயெனு மால்சரண் நீயெனுமால்
விடையாயெனு மால்வெரு வாவிழுமால்
மடையார்குவ ளைமமல ரும்மருகல்
உடையாய்தகு மோஇவள் உள்மெலிவே.

தெளிவுரை : நீர்மடைகளில குவளைப்பூ மலரும் மருகல் என்னும் பதியில் வீற்றிருக்கும் பெருமானே ! சடைமுடியுடைய நாதனே ! இடப வாகனத்தை உடையவனே ! உன் திருவடியே சரணம் என்ற, வெதும்பித் துயர் கொள்ளும் இப் பெண்ணின் மனவேதனை தகுமோ !

187. சிந்தாஎனு மால்சிவ னேஎனுமால்
முந்தாஎனு மால்முதல் வாஎனுமால்
கொந்தார்குவ ளைகுல வும்மருகல்
எந்தாய்தகு மோஇவள் ஏசறவே.

தெளிவுரை : கொத்தாகப் பூக்கும் குவளை மலர் விரவி நிலவும் மருகல் என்னும் பதியில் வீற்றிருக்கும் எம் தந்தையே ! சிந்தையில் கோயில் கொண்டுள்ள பெருமானே ! சிவபெருமானே ! முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே ! யாவற்றுக்கும் தலைவனாக விளங்கும் ஈசனே ! என்று மனம் கசிந்து போற்றித் தன்னை மறந்து வாடுகின்ற இப்பெண் துன்புறுதல் தகுந்ததோ ! துன்பம் தீர்த்து அருள்புரிவீராக என்பது குறிப்பு.

188. அறையார்கழ லும்அழல் வாயரவும்
பிறையார்சடை யும்உடை யாய்பெரிய
மறையார்மரு கல்மகிழ் வாய்இவளை
இறையார்வளை கொண்டெழில் வவ்வினையே.

தெளிவுரை : ஒலித்து ஆர்க்கும் வீரக்கழலும், நஞ்சுடைய அரவும், பிறைச் சந்திரன் பொருந்திய சடை முடியும் உடைய, மறைவிளங்கும் மருகலில் மகிச்சியுடன் வீற்றிருக்கும் ஈசனே ! இந் நங்கையைத் துன்புறுமாறு செய்து, கைவளை நெகிழ்ந்து விழுமாறு எழிலைக் கவர்ந்தனையே !

இது பொருந்தாது, அருள் புரிந்து இந் நங்கையின் துன்பத்தைத் தீர்ப்பீராக என்பது குறிப்பு.

189. ஒலிநீர்சடை யிற் கரந் தாய்உலகம்
பலிநீதிரி வாய்பழி யில்புகழாய்
மலிநீர்மரு கல்மகிய் வாய்இவளை
மெலிநீர்மையள் ஆக்கவும் வேண்டினையே.

தெளிவுரை : முழக்கம் செய்து ஆர்ப்பரித்து வரும் கங்கையைச் சடையில் ஏற்றுக் கரந்தும், உலகத்தில் கபாலம் ஏந்திப் பலியேற்றுத் திரிந்தும், பழியற்ற புகழுடன், நீர்வளம் பெருகும் மருகலில மகிழ்ந்து விளங்கும் பெருமானே ! இந்த நங்கையைத் துன்பத்தால் மெலியுமாறு ஆக்குலும் விரும்பினையே !

190. துணிநீலவன் ணம்முகில் தோன்றியன்ன
மணிநீலகண் டம்உடை யாய்மருகல்
கணிநீலவண் டார்குழ லாள்இவள்தன்
அணிநீலஒண் கண்ணயர் வாக்கினையே.

தெளிவுரை : நீலகண்டனாக மருகலில் விளங்கும் ஈசனே ! அழகிய வண்டுகள் பரவும் குழலையுடைய இப் பெண் மகள் கண்கள் அழுது அயர்வடையுமாறு புரிந்தனையே.

191. பரும்பர வப்படு வாய்சடைமேல்
மலரும்பிறை ஒன்றுடை யாய்மருகல்
புலருத்தனை யும்துயி லாள்புடைபோந்து
அலரும்படு மோஅடி யாள்இவளே.

தெளிவுரை : அடியவர்கள் பலரும் சேர்ந்து துதிக்கப்படும் பெருமானே ! சடையின்கண் வளர்கின்ற பிறைச் சந்திரனை உடைய ஈசனே ! மருகல் எனப்படும் இப்பதியில் பொழுது புலர்ந்து விடியும் அளவும் நித்திரை இன்றி நின்பக்கம் சார்ந்து இவ் அடியவள் பழிச்சொல்லுக்கு ஆட்படுதல் நன்றாகுமோ !

192. வழுவால்பெரு மான்கழல் வாழ்க எனா
எழுவாள்நினை வாள்இர வும்பகலும்
மழுவாளுடை யாய்மரு கற்பெருமான்
தொழுவாள்இவ ளைத்துயர் ஆக்கினையே.

தெளிவுரை : பெருமான் திருக்கழல் வாழ்க என்கின்ற ஒலியானது காதால் கேட்டதும் எழுந்து ஈசனை நினைத்துத் துதிப்பவளாவாள், இவ் அடியவள். சைவ நெறியிலிருந்து மாறுபடாத கொள்கை உடையவளாய் எவ்விதமான குறைபாட்டுக்கும் இடந்தராது வழிபாடு செய்பவள், இரவும் பகலும் நின்னையே நினைத்து வழிபடுபவள். மழுப்படையுடைய மருகற் பெருமானே ! இந் நங்கையைத் துயரில் ஆழ்த்தினையே !

இவ் அடியவள் துயரைத் தீர்க்க வேண்டும் என்பது குறிப்பு.

193. இலங்கைக்கிறை வன்விலங் கல்எடுப்பத்
துலங்கவ்விரல் ஊன்றலும் தோன்றலனாய்
 வலங்கொள்மதில் சூழ்மரு கற்பெருமான்
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே.

தெளிவுரை : இலங்கைக்கு அரசனாகிய இராவணன், கயிலை மலையை எடுக்க, அருள் விளங்கும் திருப்பாத விரலை ஊன்றி அடர்த்ததும், நெரிப்பட்டு ஏதும் தோன்றாது ஈசனைப் பணிந்து போற்றித் துதிக்கலாயினன். அத்தகைய அருளாற்றல் உடைய பெருமானய், மதில் சூழ்ந்த மருகலில் வீற்றிருப்பவனே ! பூமாலை போன்று மென்மை உடைய இவ் அடியவளைத் துயருள் ஆக்கினையே !

194. எரியார்சடையும் அடியும் இருவர்
தெரியாததொர் தீத்திரள் ஆயவனே
மரியார்பிரி யாமரு கற்பெருமான்
அரியாள்இவ னைஅயர் வாக்கினையே.

தெளிவுரை : சோதி வடிவாக விளங்கும் சடை முடியும், திருவடியும்; திருமால், பிரமன் ஆகிய இருவரும் தெரிந்து கொள்ளாத வடிவில் ஒப்பற்ற தீத் திரட்சியாகிய நாதனே ! இறப்பினை அடையாதவராய் ! நின்பாத கமலத்தைப் பிரியாத சிவன் முத்தர்கள் விளங்கும் மருகலில் மேவும் நாதனே ! நின்பால் நெருக்கம் பூண்டு பக்தி செய்யும் இவ் அடியவளைத் துயரம் கொண்டவளாய் ஆக்கினையே !

195. அறிவிலசம ணும்அலர் சாக்கியரும்
நெறியல்லன செய்தனர் நின்றுழல்வார்
மறியேந்துகை யாய்மரு கற்பெருமான்
நெறியார்குழ லிநிறை நீக்கினையே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் சிவநெறியற்றன செய்து உழன்று நிற்க, மானேந்திய கரத்துடைய மருகற் பெருமானே ! நன்னெறியுடைய இவ் அடியவளின் மன உறுதியை விலகுமாறு செய்தனையே !

196. வயஞானம்வல் லார்மரு கற்பெருமான்
உயர்ஞானம் உணர்ந்துஅடி உள்குதலால்
இயல்ஞானசம் பந்தன பாடல்வல்லார்
வியன்ஞாலமெல் லாம்விளங் கும்புகழே.

தெளிவுரை : எண்குணத்தில் வழங்கப்பெறும் தன் வயத்தினராக வல்ல மருகற் பெருமான், திருக்குறிப்பின் வழி மேவும் ஞானத்தை உணர்ந்த, அப் பெருமானின் திருவடியை நெஞ்சில் பதித்த இயல்பினால், அருள் செய்யப்பெற்ற ஞானசம்பந்தரின் இத் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள், உலகில் மிக்க புகழுடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

155. திருநெல்லிக்கா (அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

197. அறத்தாலுயிர் காவல் அமர்ந்தருளி
மறத்தான்மதில் மூன்றுடன் மாண்பழித்த
திரத்தால்தெரி வெய்திய தீ வெண்திங்கள்
நிறத்தானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : அறக் கருணை விளங்குமாறு மன்னுயிர் களைத் துன்பத்திலிருந்து காத்தருளும் நெறியாக, மறக் கருணை விளங்குமாறு, மும்மதில்களை உடைய அசுரர்களை அழித்தவன், ஈசன். அப்பெருமான், தெளிவு எய்திய செம்மையும் வெண்மையும் உடைய வண்ணத்தானாய் நெல்லிக்கா என்னும் திருத்தலத்தில நிலவி விளங்கும் பரமன் ஆவன்.

198. பதிதான்இடு காடுபைங் கொன்றைதொங்கல்
மதிதானது சூடிய மைந்தனுந்தான்
விதிதான்வினை தான்விழுப் பம்பயக்கும்
நெதிதா(ன்) நெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : ஈசன் இருக்கின்ற இடம் சுடுகாடு. அழகிய கொன்றை மாலையயும், பிறைச் சந்திரனையும் சூடிய வலிமை மிக்க அழகனாய், விதிக்கப்படும் விதியாகவும், விளைவாகிய வினையாகவும், மேலானதாகிய செல்வமாகவும் விளங்கும் அப் பரமன், நெல்லிக்காவுள் நிலவி விளங்குபவன்.

199. நல்ந்தானவ(ன்) நான்முகன் றன்தலையைக்
கலந்தானது கொண்ட கபாலியுந்தான்
புலந்தான் புக ழால்எரி விண்புகழும்
நிலந்தானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : மன்னுயிர்களுக்கும் நலம் செய்பவன், ஈசன். அப்பெருமான், பிரமனது தலையைப் பிச்சை ஏற்கும் பாத்திரமாகக்கொண்டு பிச்சை ஏற்றவன்; பெருஞானத்தின் புகழாய் விளங்குபவன்; தேவர்கள் மற்றும் சூரியன் முதலானவர்கள் புகழ்ந்து போற்றும் தலமாகிய நெல்லிக்கா என்னும் பதியில் நிலவுபவன்.

200. தலைதானது ஏந்திய தம்மடிகள்
கலைதான்திரி காடிட நாடிடமா
மாலைதானெடுத் தான்மதில் மூன்றுடைய
நிலைதானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : கபாலம் ஏந்திய அடிகளாகிய ஈசன், மானைக் கரத்தில் ஏந்தி நாட்டிலும், சுடுகாட்டிலும் திரியும் மாண்புடையவன். முப்புரத்தையுடைய அசுரர்களை அழிப்பதற்காக மேருமலையை வில்லாக எடுத்த அப் பெருமான், நெல்லிக்கா என்னும் திருத்தலத்தில் நிலவுபவன்.

201. தவந்தான்கதி தான்மதி வார்சடைமேல்
உவந்தான்கற வேந்தன் உருவழியச்
சிவந்தான்செயச் செய்து செறுத்துலகில்
நிவந்தானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : ஈசன், தவமாகவும் விளங்கி அவற்றின் முடிந்த பயனாகவும் இருப்பவன். அப்பெருமான், சந்திரனை அழகிய சடையின் மேல் தரித்து மகிழ்ந்தவன்; மன்மதனை எரிந்து சாம்பலாகுமாறு சினந்தவன்; உலகில் நெல்லிக்கா என்னும் தலத்தில் நிலவி விளங்குபவன்.

202. வெறியார்மலர்க் கொன்றையந் தார்விரும்பி
மறியார்மலை மங்கை மகிழ்ந்தவன்றான்
குறியார்குறி கொண்டவர் போயக்குறுகும்
நெறியானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : மணம் கமயும் கொன்றை மாலையை விரும்பி அணிந்தவனாய், மான்கள் விளங்கும் மலையரசன் மகளாகிய உமாதேவியை மணங்கொண்டு மகிழ்ந்தவன் ஈசன். அப்பெருமான், நற்பேறு குறித்தும் அதனைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தாலும், சூரியன் சந்திரன் முதலானவர்களும் திருமால் பிரமன் ஆகியோரும் குறியாகக் கொண்டு சென்று அடைகின்ற நெறியின் காரணத்தால், நெல்லிக்காவில் நிலவி விளங்கி இருப்பவன்.

203. பிறைதான்சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்
இறைதான்குற வாக்கயி லைமலையான்
மறைதான்புனல் ஒண்மதி மல்குசென்னி
நிறைதா னெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : பிறைச் சந்திரனை சடையில் சேர்த்தருளிய எந்தை பெருமானாகிய இறைவன் யாண்டும் மலர்ந்து விளங்கும் கயிலை மலைக்கு உரியவன். அப்பெருமான் வேதங்களும் மேலாக விளங்க, குளுமையாய் ஒளிரும் சந்திரன் பூசித்து வழிபட்டு மேன்மையின் நிறைவுடன் திகழும் நெல்லிக்காவுள் நிலவி விளங்குபவன்.

204. மறைத்தான்பிணி மாதொரு பாகந்தன்னை
மிறைத்தான்வரை யாலரக் கன்மிகையைக்
குறைததான்சடை மேற்குளிர் கோல்வளையை
நிறைத்தானெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : நெல்லிக்கா என்னும் பதியில் நிலவும் ஈசன், உமாதேவியைப் பிணித்துக் கூறுடைய அர்த்தநாரியாகவும், மறைத்து வேறாகவும் விளங்குபவன். அப்பெருமான், குற்றம் புரிந்த இராவணனுடைய தருக்கினையும், வலிமையையும் குறைத்தும், குளிர்ந்த கங்கையைச் சடையிற் கரந்தும் விளங்குபவன்.

205. தழ்தாமரையான் வையம் தாயவனும்
கழல்தான் முடி காணிய நாணொளிரும்
அழல்தான்அடி யார்க்கரு ளாய்ப்பயக்கும்
நிழல்தா(ன்) நெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : நெருப்பின் வண்ணத்தைப் போன்ற செம்மையான தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், நெடியவனாய் ஓங்கி வையம் அளந்த திருமாலும், திருப்பாதமும் திருமுடியும் காண்பதற்கு முனைந்த நாளில் ஒளிர்ந்து ஓங்கும் தீப்பிழம்புதான் அவர்களுக்கு அருளாகி மேலோங்கியது. அப் பேரொளியே நெல்லிக்கா என்னும் தலத்தில் நிலவும் பெருமான்.

206. கனத்தார்திரை மாண்டழற் கான்றநஞ்சை
எனத்தாஎன வாங்கிஅது உண்டகண்டன்
மனத்தாற்சமண் சாக்கியர் மாண்பழிய
நினைத்தா னெல்லிக் காவுள் நிலாயவனே.

தெளிவுரை : பேரலைகள் கொண்ட பாற்கடலில், கொடிய நஞ்சு வெளிப்பட்ட ஞான்று, தேவர்கள் என் அத்தனே ! காவாய் எனத் தொழுது வேண்டி நிற்க, அதனை வாங்கி உட்கொணடு நீலகண்டனாகியவன் ஈசன். சமணரும் சாக்கியரும் தம் மாண்பு கெடுமாறு, அப்பெருமான் திருக்குறிப்பு கொண்டு நெல்லிக்கா என்னும் திருத்தலத்தில் நிலவி விளங்குகின்றவன்.

207. புகர்ஏதும் இலாதபுத் தேளுலகில்
நிகராநெல்லிக் காவுள் நிலாயவனை
நகராநல ஞானசம் பந்தன்சொன்ன
பகர்வார்அவர் பாவம் இலாதவரே.

தெளிவுரை : மாசு இல்லாத தேவர் உலகத்துக்கு நிகராண நெல்லிக்கா என்னும் திருத்தலத்தில் நிலவும் ஈசனை, எக் காலத்திலும் அழிதல் இல்லாத நலத்தினை உடைய ஞானசம்பந்ன், முன் இருத்திச் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதும் அடியவர்கள், பாவம் அற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

156. திருஅழுந்தூர் (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

208. தொழுமாறுவல் லார்துயர் தீரநினைந்து
எழுமாறுவல் லார்இசை பாடவிம்மி
அழுமாறுவல் லார்அழுந் தைமறையோர்
வழிபாடுசெய் மாமட மன்னினையே.

தெளிவுரை : இறைவன், நிஷ்காமியமாகத் தொழுபவர்கள், தமது துயர் தீர வேண்டும் என்னும் கருத்தில் தியானம் செய்து வணங்கி எழுகின்றவர்கள், பக்திப் பெருக்கினால் இசை பாடி உள்ளம் கசிந்து காதலாகிக் கண்ணீர் மல்கி அழுது போற்றுகின்றவர்கள், அழுந்தூர் என்னும் பதியில் விளங்கும் மறையோர் ஆகிய பெருமக்கள் வழிபாடு செய்கின்ற மாமடம் சார்ந்து வீற்றிருப்பவன் ஆவன்.

209. கடலேறிய நஞ்சமுது உண்டவனே
உடலேஉயி ரேஉணர்வே எழிலே
அடலேறுடை யாய்அழுந்தை மறையோர்
விடலேதொழு மாமட மேவினையே.

தெளிவுரை : பாற்கடலில் தோன்றி நஞ்சினை அமுதம் என உட்கொண்டு மன்னுயிர்களுக்கு உடலாகவும், உடலுள் நிலவும் உயிராகவும், அதனை இயக்கும் உணர்வாகவும், எழிலாகவும் விளங்கும் பெருமானே ! இடப வாகனத்தையுடைய ஈசனே ! அழுந்தை நகரில் மறையோர்கள் போற்றித் தொழும் தலைவனே ! மாமடத்தில் மேவி விளங்கி அருள்பவனாயினை.

210. கழிகாடல னேகனல் ஆடலினாய்
பழிபாடில னேஅவை யேபயிலும்
அழிபாடில ராய்அழுந் தைமறையோர்
வழிபாடுசெய் மாமட மன்னினையே.

தெளிவுரை : சுடுகாட்டின் பகுதியில், கரத்தில நெருப்பு ஏந்தி ஆடுபவனாய், பழித்தல் அற்றவனாய் விளங்கும் ஈசனை, அவ்வாறே பழியற்ற தன்மையில் திகழும் அழுந்தை நகரில் மேவும் மறையவர்கள் அழிபாடு நேராதவாறு வழிபாடு செய்கின்றனர். அத்தகைய மாமடம் தன்னில் சிறப்புடன் வீற்றிருந்து அருள்புரிபவன் இறைவன்.

211. வானேமலை யேஎன மன்னுயிரே
தானேதொழு வார்தொழு தாள்மணியே
ஆனேசிவ னேஅழுந் தையவர்எம்
மானேஎன மாமட மன்னினையே.

தெளிவுரை : மன்னுயிரானது ஈசனை, வானாகி விளங்குபவனே ! கயிலை மலையானே ! என்று போற்றித் தொழ விளங்கும் ஈசன், தொழுபவரை ஆட்கொண்டு அருளுகின்ற ஒளியாகவும், உயிராகவும், சிவனாகவும் அழுந்தை நகரில் விளங்கும் தலைவனாகவும் மாமடம் தன்னில் பொலிந்து விளங்குபவன்.

212. அலையார்புனல் சூழ்அழுந் தைப்பெருமான்
நிலையார்மறி யுந்நிறை வெண்மழுவும்
இலையார்படை யும்இவை யேந்துசெல்வ
நிலையாவது கொள்கென நீநினையே.

தெளிவுரை : அலைகள் விளங்கும் நீர்நிலைகள் சூழந்த அழுந்தை என்னும் நகரில் எழுந்தருளியுள்ள பெருமானே ! நிலை பொருந்திய மானைக் கரத்தில் ஏந்தி ஒளி மிக்க மழுவும் சூலமும் படையாகவும் கொண்டு, அவற்றையே நிலையாகத் தரித்து விளங்கும் திருக்குறிப்பு ஆக்கி விளங்குவாதாயினை.

213. நறவார்தலை யின்னய வாவுலகில்
பிறாவாதவ னேபிணி யில்லவனே
அறையார்கழ லாய்அழுந் தைமறையோர்
மறவாதெழ மாமட மன்னினையே.

தெளிவுரை : ஈசன், தலைமாலை அணிந்தவன்; உலகில் கருவில் வயப்படும் பிறவியற்றவன்; பிணிக்கப்படும் வினை முதலானவற்றால் ஆட்படாத நின்மலன்; ஒலிக்கும் கழலைத் திருப்பாதத்தில் அணிகலனாகக் கொண்டவன்; அழுந்தை என்னும் நகரில் மறையவர்கள் மறவாது எழுச்சியுடன் போற்றுமாறு மாமடம் தன்னில் மன்னி விளங்குபவனாயினன்.

214. தடுமாறுவல் லாய்தலை வாமதியம்
சுடுமாறுவல் லாய்சுடர் ஆர்சடையில்
அடுமாறுவல் லாய்அழுந் தைமறையோர்
நெடுமாநகர் கைதொழ நின்றனையே.

தெளிவுரை : காண வேண்டும் என்று தேடிச் செல்பவர்களுக்குக் காணப்பெறாமல் தடுமாற்றம் செய்ய வல்லவனாகிய ஈசனே ! நம் தலைவனே ! சுடர்போல் ஒளி வீசும் சடை முடியில் சந்திரனைச் சூடி மகிழும் பெருமானே ! பெருக்கெடுத்து வேகமாகச் செல்லும் ஆறாகிய கங்கையைத் தரித்த கங்காதரனே ! அழுந்தை மாநகரின்கண் விளங்கும் மறையவர்கள் கைதொழுது போற்றித் துதிக்குமாறு வீற்றிருந்து அருள்புரிபவன் ஆயினை.

215. பெரியாய்சிறி யாய்பிறை யாய்மிடறு
கரியாய்கரி காடுயர் வீடுடையாய்
அரியாய்எளி யாய்அழுந் தைமறையோர்
வெரியார்தொழ மாமட மேவினையே.

தெளிவுரை : முன்னைப் பொருட்கும் முன்னைப் பொருளாய் விளங்கும் பெரியோனாய் விளங்கும் பெருமை உடையவனே ! யாவற்றுக்கும் நுண் பொருளாய் இருப்பவனே ! பிறைச் சந்திரனை அணிந்த சந்திரசேகரனே ! மிடற்றில் கறை ஏற்ற நீலகண்டனே ! சுடுகாட்டினை இருப்பிடமாகக் கொண்ட பரமனே ! யாவருக்கும் அறியவனாகின்ற இறைவனே ! அன்பின்வழி நின்று வணங்குபவர்களுக்கு எளிமையாக விளங்குபவனே ! அன்புடைய மறையவர்கள் தொழுது போற்ற அழுந்தை நகரில் மாமடம் மேவி விளங்கியவன் ஆயினை.

216. மணிநீண்முடி யான்மலை யைஅரக்கன்
தணியாதுஎடுத் தான்உட லந்நெரித்த
அணியார்விர லாய்அழுந் தைமறையோர்
மணிமாமட மன்னி இருந்தனையே.

தெளிவுரை : மணிகள் பதித்த நெடிய கிரீடத்தையுடைய இராவணன் சினம் மிகுந்து கயிலை மலையை எடுக்க, அவன் உடலைத் திருப்பாத விரலால் நெரித்த ஈசனே ! அழுந்தை நகரில் மறையோர்தம் மணி மாமடம் பொலிந்து இருப்பதாயினை.

217. முடியார்சடை யாய்முன நாள்இருவர்
நெடியான்மல ரானிகழ் வால்இவர்கள்
அடிமேலறி யார்அழுந் தைமறையோர்
படியால்தொழ மாமடம் பற்றினையே.

தெளிவுரை : சடை முடியுடைய பெருமானே ! திருமாலும் பிரமனும் ஆகிய இவர்கள் திருமுடியும் திருவடியும் காணற்கு இயலாதவராய் விளங்கும் நின்னை, காணற்கு இயலாதவராய் விளங்கும் நின்னை, அழுந்தையில் உள்ள மறையவர்கள் வேதமுறைப்படி தொழுது போற்றுமாறு மாமடம் மேவி வீற்றிருப்பதாயினை.

218. அருஞானம்வல் லார்அழுந் தைமறையோர்
பெருஞானம் உடைப்பெரு மானவனைத்
திருஞானசம் பந்தன் செந்தமிழ்கள்
உருஞானம்உண் டாம்உணர்ந் தார்தமக்கே.

தெளிவுரை : அருமையான மறைஞானம்வல்ல மறையோர் தொழும் அழுந்தை நகரின் பெருஞானப்பிரானா விளங்கும் ஈசனை, திருஞானசம்பந்தன் செந்தமிழ் மாலைகளால் ஓதி உணர்ந்தவர்கள் உண்மையான ஞானததைப் பெற்று விளங்கியவர்கள் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

157. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

219. புனலாடிய புன்சடை யாய்அரணம்
அனலாக விழித்தவ னேஅழகார்
கனலாடலி னாய்கழிப் பாலையுளாய்
உனவார்கழல் கைதொழுது உள்குதுமே.

தெளிவுரை : கங்கை தரித்த சடையுடையவனே ! முப்புரக் கோட்டைகள் எரிந்து சாம்பலாகுமாறு நோக்கியவனே !  நெருப்பைக் கரத்தில் ஏந்தி அழகுமிக்க ஆடல் புரிபவனே ! திருக்கழிப்பாலை என்னும் தலத்தில் மேவும் ஈசனே ! உனது அருள் பொருந்தும் திருக்கழலைப் போற்றிக் கைதொழுது தியானம் செய்கின்றனம்.

220. துணையாகவொர் தூவள மாதினையும்
இணையாக உகந்தவ னேஇறைவா
கணையார்எயில் எய்கழிப் பாலையுளாய்
இணையார்கழல் ஏத்த இடர்கெடுமே.

தெளிவுரை : தூய வளம் மிகுந்தவளாய் விளங்கும் உமாதேவியை உடனாகவும், உடலின் ஒரு கூறாக இணைத்து அர்த்தநாரியாகவும் உகந்த இறைவனே ! கணை தொடுத்து முப்புரக் கோட்டைகளை எய்து எரித்த பரமனே ! திருக்கழிப்பாலையில் மேவும் நாதனே ! நின் திருக்கழலைப் போற்றி வழிபடும் அடியவர்களுடைய துன்பம் கெடும்.

அத்தகைய அருள்வண்ணம் உடையவன் ஈசன் என்பது குறிப்பு.

221. நெடியாகுறி யாய்நிமிர் புன்சடையின்
முடியாகடு வெண்பொடி முற்றணிவாய்
கடியார்பொழில் சூழ்கழிப் பாடையுளாய்
அடியார்க்குஅடை யாஅவ லம்அவையே.

தெளிவுரை : நீண்டு அண்டமெல்லாம் பெருகி விளங்குபவனாகவும், நுணுக்கரிய நுண்ணுணர்வினனாகவும் விளங்கும் நாதனே ! சடை முடியுடைய பெருமானே ! திருவெண்ணீறு அணிந்த பரமனே ! மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் அமர்ந்தவனே ! நின்னுடைய அடியவர்களுக்கு அவலம் அடையாதவாறு அருள் புரிபவன் நீயே ஆயினை.

222. எளியாய்அரி யாய்நில நீரொடுதீ
வளிகாயம்எ னாவெளி மன்னியதூ
ஒளியாய்உனை யேதொழுது உன்னுமவர்க்கு
அளியாய்கழிப் பாலை அமர்ந்தவனே.

தெளிவுரை : யாவர்க்கும் அறிவரியனாகவும் அன்பர்க்கு எளிமையானவனாயும், அட்ட மூர்த்தலங்களுள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆக விளங்கும் பொருளாயும், தூய ஒளியாயும், உன்னையே தொயுழும் அடியவர்களுக்கு மிக்க அன்புடையவனாயும் விளங்குபவன் திருக்கழிப்பாலையில் மேவும் ஈசனாகிய நீயே ஆவன்.

223. நடநண்ணியொர் நாகம் அசைத்தவனே
விடநண்ணிய தூமிட றாவிகிர்தா
கடல்நண்ணு கழிப்பதி காவலனே
உடனண்ணி வணங்கவன் உன்னடியே.

தெளிவுரை : நடம் புரிவதை விரும்பிச் செய்து, ஆபரணமாகப் பாம்பும் அசையுமாறு செய்த பரமனே ! பாற்கடல் விளைவித்த ஆலகால விடத்தைத் தூய மிடற்றில் இருத்தி நீலகண்டனாக விளங்குபவனே ! அன்பின் முறையால் அன்றி அறிதல் ஒண்ணாத விகிர்தனே ! கடலின் கழியில் விளங்கும் திருக்கழிப்பாலை öன்னும் திருத்தலத்தில் மேவும் நாதனே ! நின் திருவடியைக் காயத்தால் பதித்து வணங்குவன்.

224. பிறையார்சடை யாய்பெரி யாய்பெரிய
மறையார்தரு வாய்மையி னாயுலகில்
கறையார்பொழில் சூழ்கழிப் பாலையுளாய்
இறையார்கழல் ஏத்த இடர்கெடுமே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைத் தரித்த சடைமுடியுடையவனே ! முதற்பொருளாய் விளங்கும் பெரியோனே ! பெருமை விளங்கும் வேதத்தால் வினையும் சிறந்த வாய்மையாய் இருப்பவனே ! பொழில் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் ஈசனே ! தெய்வத்தன்மை பொருந்திய நின் திருவடியை ஏத்துபவர்கள் இடம் தீரும்.

225. முதிரும்சடை யின்முடி மேல்விளங்கும்
கதிர்வெண்பிறை யாய்கழிப் பாலையுளாய்
எதிர்கொள்மொழி யால்இரந்து ஏத்துமவர்க்கு
அதிரும்வினை யாயின ஆசுஅறுமே.

தெளிவுரை : முற்றிய சடை முடியின்மேல் ஒளிவிடும் வெண்பிறைச் சந்திரனைச் சூடியுள்ள பெருமானே ! திருக்கழிப் பாலையில் வீற்றிருக்கு நாதனே ! நின்ன வணங்கி நின்பால் தமது குறையைத் தெரிவித்து அவற்றை நீக்க வேண்டும் என்று கோரும் அடியவர்களின் கொடிய வினைகளும் குற்றங்களும் தாமே விலகும் தரத்ததாம்.

226. எரியார்கணை யால்எயில் எய்தவனே
விரியார்திரு வீழ்சடை யாய்இரவில்
கரிகாடலி னாய்கழிப் பாலையுளாய்
உரிதாகிவ ணங்குவன் உன்னடியே.

தெளிவுரை : அக்கினி தேவனைக் கணையாகக் கொண்டு, முப்புர அசுரர்களுடைய கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கிய பரமனே ! நாற்புறமும் விரிந்து பரவும் சடையுடைய பெருமானே ! இரவு காலத்தில் சுடுகாட்டில் ஆடி மகிழ்பவனே ! திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் நாதனே ! நின் திருவடியே அருள் புரிவதற்கு உரித்தானதாகக் கொண்டு நான் எப்போதும் வணங்குபவன் ஆவன்.

227. நலநாரண னான்முக னண்ணலுறக்
கனலானவ னேகழிப் பாலையுளாய்
உனவார்கழ லேதொழுது உன்னுமவர்க்கு
இலதாம்வினை தான்எயில் எய்தவனே.

தெளிவுரை : முத்தொழிலில், காக்கும் நலம் சேர் தொழிலை மேவும் திருமாலும் பிரமனும் நண்ணும் போது, தீப்பிழம்பாக மிளிர்ந் நாதனே ! திருக்கழிப் பாலையில் மேவும் நாயகனே ! முப்புரத்தை எரித்தவனே ! நின் திருவடியை நினைத்துப் போற்றுபவர்களுக்கு வினையில்லை. துன்பம் இல்லை என்பது குறிப்பு.

228. தவர்கொண்ட தொழிற்சமண் வேடரொடும்
துவர்கொண்டனர் நுண்துகில் ஆடையரும்
அவர்கொண்டன விட்டடி கள்உறையும்
உவர்கொண்ட கழிப்பதி உள்குதுமே.

தெளிவுரை : தவ வேடத்தைப் புனைந்தவராய் இருப்பினும், சமணர் சாக்கியர் கொண்ட கொள்கைகளைக் கைவிட்டுக் கடற்கரையில் உள்ள திருக்கழிப்பாலை என்னும் பதியில் உறையும் ஈசனை வணங்கித் துதிப்பீராக.

229. கழியார்பதி காவல னைப்புகலிப்
பழியாமறை ஞானசம் பந்தன்சொல்
வழிபாடிவை கொண்டடி வாழ்த்தவல்லார்
கெழியார்இமை யோரொடு கேடிலரே.

தெளிவுரை : உப்பங்கழியின் கரையில் விளங்கும் பதியாகிய திருக்கழிப்பாலையின் நாதனாகிய ஈசனை, புகலி நகரில் விளங்கும், குறைவற்ற மறை வல்ல ஞானசம்பந்தர் போற்றிய இத் திருப்பதிகம் வழிபாடு ஆகும். இதனக் கொண்டு ஈசனைப் போற்ற வல்லவர்கள் சிறப்பு மிக்க தேவர்களோடு குறைவற்று மகிழ்ந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

158. திருக்குடவாயில் (அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

230. திகழுந்திரு மாலொடு நான்முகனும்
புகழும்பெரு மானடி யார்புகல
மகிழும்பெரு மான்குட வாயின்மன்னி
நிகழும்பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : பெருமையுடன் திகழும் திருமாலும், பிரமனும் புகழும் பெருமான் ஈசன். அப் பெருமானை, அடியவர்கள் போற்றிப் புகழ்ந்து மகிழ்கின்றனர். அதனால் மகிழ்ந்த பெருமானாகிய இறைவன், குடவாயில் என்னும் பதியில் விளங்கிப் பெருமை மிக்க கோயிலில் வீற்றிருக்கின்றான்.

231. ஓடும்நதி யும்மதி யோடுஉரகம்
சூடும்சடை யன்விடை தொல்கொடிமேல்
கூடுங்குழ கன்குட வாயில்தனில்
நீடும்பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : கங்கையும், சந்திரனும், பாம்பும் சடையில் சூடியவன் ஈசன்; அப் பெருமான் இடபத்தைக் கொடியாகக் கொண்ட அன்பினன். குடவாயிலில் பெருமையுடன் கோயில் கொண்டு நிலவுபவன்.

232. கலையான்மறை யான்கனல் ஏந்துகையான்
மலையாளவள் பாக மகிழ்ந்தபிரான்
கொலையார்சில யான்குட வாயில்தனில்
நிலையார்பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : மானையும், நெருப்பையும் கரத்தல் ஏந்திய ஈசன், மறை வல்லவன்ந மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்த பெருமான்; முப்புரத்தை எரிப்பதற்கு உடனாகிய மேருமலையை வில்லாக உடையவன்; குடவாயில் தன்னில் நிலைத்த பெருமை உடையவனாய்க் கோயில் கொண்டு வீற்றிருந்து விளங்குபவன்.

233. கலவும்சடை யான்கடு காடிடமா
நலமென்முலை யாள்நகை செய்யநடம்
குலவும்குழ கன்குட வாயில்தனில்
நிலவும்பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : விரிந்து பரவும் சடையுடைய ஈசன், சுடுகாட்டை இடமாகக் கொண்டு உமாதேவி மகிழுமாறு நடம்புரியும் அன்பினன். குடவாயிலில் பெருமையுடன் கோயில் கொண்டு நிலவுபவன்.

234. என்றன்னுள மேவி இருந்தபிரான்
கன்றன்மணி போல்மிட றன்கயிலைக்
குன்றன்சூழ கன்குட வாயில்தனில்
நின்றபெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : என்னுடைய உள்ளத்தில் மேவி விளங்குகின்ற ஈசன் நீலகண்டனாய், கயிலையில் விளங்கும் அழகனாய்க் குடவாயிலில் பெருமையுடன் கோயில் கொண்டு நிலவும் பரமன் ஆவன்.

235. அலைசேர்புனலன் அனலன் அமலன்
தலைசேர்பலி யன்சது ரன்விதிரும்
கொலைசேர்படை யன்குட வாயில்தனில்
நிலைசேர் பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : அலை திகழும் புனலாகிய கங்கையைச் சடையில் தரித்தவன் ஈசன். அப்பெருமான் நெருப்பைக் கையில் ஏந்தியவன்; மும்மலம் அற்றவனாகிய அமலன்; பிரம கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றவன்; சர்வ வல்லமையுடையவன். மாற்றாரை விதிர்க்குமாறு நடுங்கச் செய்யும் கொடிய, வல்லமை மிக்க படைக் கலம் உடையவன்; குடவாயிலில் நிலைத்த பெருமையுடையவனாய்க் கோயில் கொண்டு நிலவுபவன்.

236. அறையார்கழலன் அழலன் இயலின்
பறையாழ்முழ வும்மறை பாடநடம்
குறையாஅழ கன்குட வாயில்தனில்
நிறையார்பெருங் கோயில் நிலாயவனே.

தெளிவுரை : ஈசன், ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்தவன்; நெருப்பினை உடையவன். இயைய வரும் பறையின் ஒலியும், உடன் கலக்கும் முழவு, யாழ் ஆகியனவும் ஒலிக்க, வேதங்கள் இசைக்க, குறைவற்ற நடனத்தைப் புரியும் அழகனாகிய அப் பெருமான், குடவாயிலில் நிறைந்து, பெருமை விளங்கக் கோயில் கொண்டு நிலவுபவன்.

237. வரையார்திரள் தோள்அரக் கன்மடியவ்
வரையார்ஓர் கால்விரல் வைத்தபிரான்
வரையார்மதில் சூழ்குட வாயில்மன்னும்
வரையார்பெருங் கோயில் மகிழ்ந்தவனே.

தெளிவுரை : மலை போன்ற உறுதியான திரண்ட தோளையுடைய அரக்கனாகிய இராவணன் வீழ்ச்சியடையக் கயிலை மலை முழுவதும் பரவி விளங்குமாறு திருப்பாத விரலால் ஊன்றிய ஈசன், மலை போன்ற மதில் சூழ்ந்த குடவாயில் என்னும் பதியில் மலை போன்று உயர்ந்த பெருங்கோயிலில் மகிழ்ந்து வீற்றிருப்பவன்.

238. பொன்னொப்பவ னும்புயல் ஒப்பவனும்
தன்னொப்புஅறி யாத்தழ லாய்நிமிர்ந்தான்
கொன்னற்படை யான்குட வாயில்தனில்
மன்னும்பெருங் கோயில் மகிழ்ந்தவனே.

தெளிவுரை : பொன்னை ஒத்தவனாகிய பிரமனும் புயலாகிய மேகம் போன்ற வண்ணத்தவனாகிய திருமாலும், அறிய முடியாதவாறு, தனக்கு யாரும் இணைஇல்லாத நிலையுடையவனய்த், தீப்பிழம்பாக ஓங்கி உயர்ந்த ஈசன், கொல்லுதல் போன்ற வலிமையான நற் படைக்கலன்கள் விளங்க, குடவாயிலில் பொலியும் பெருங்கோயில்கண் மகிழ்ந்தவன்.

239. வெயிலின்னிலை யார்விரி போர்வையினார்
பயிலும்முரை யேபகர் பாவிகள்பால்
குயிலன்குழ கன்குட வாயில்தனில்
உயரும்பெருங் கோயில் உயர்ந்தவனே.

தெளிவுரை : பிற சமயத்தார் உரைகளில் பதியாதவனாகிய ஈசன், குழையும் அன்பினனாய்க் குடவாயிலில் உயர்ந்த பெருங்கோயிலில் உயர்ந்த பீடத்தில் விளங்குபவனாயினன்.

இது ஈசனார் இத்திருக்கோயிலில் உயர்ந்த பீடத்தில் உள்ள திருக்கோலத்தைக் குறிப்பதாயிற்று.

240. கடுவாய்மலி நீர்குட வாயில்தனில்
நெடுமாபெருங் கோயில் நிலாயவனைத்
தடமார்புக லித்தமி ழார்விரகன்
வடவார்தமிழ் வல்லவர் நல்லவரே.

தெளிவுரை : நீர்வளம் பெருகும் குடவாயிலில் பெருஞ்சிறப்புடைய பெருங்கோயிலின்கண் நிலவும் ஈசனை, புகலியில் விளங்கும் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் மேலான தமிழ் மாலைகள் சொல்ல, அதனை ஓதுபவர்கள் நல்லோர் ஆவர். இது எல்லா நன்மைகளையும் பெற்றவர் ஆதலையும் உணர்த்தும்.

திருச்சிற்றம்பலம்

159. திருவானைக்கா (அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

241. மழையார்மிட றாமழு வாளுடையாய்
உழையார்கர வாஉமை யாள்கணவா
விழவாரும் வெணாவலின் மேவியஎம்
அழகாஎனும் ஆயிழை யான்அவனே.

தெளிவுரை : மேகம் போன்ற கரிய மிடற்றை உடைய பெருமானே ! மழுப் படையை உடைய நாதனே ! மானைத் திருக்கரத்தில் ஏற்றவனே ! உமாதேவியின் நாயகனே ! விழாக்கள் மல்கிப் பெருகும் ஜம்புகேச்சரத்தில் மேவி விளங்கும் எம் அழகனே என்று தேவியாரால், நீவிர் போற்றப்படுகின்ற பெருமான்.

242. கொலையார்கரி யின்னுரி மூடியனே
மலையார்சிலை யாவளை வித்தவனே
விலையால்எனை யாளும் வெணாவலுளாய்
நிலையாஅரு ளாய்எனு நேரிழையே.

தெளிவுரை : கொலைத் தன்மையுடைய யானையின் தோலை உரித்துப் போர்வையாக்கிக் கொண்ட பெருமானே ! மேரு மலையை வில்லாக வளைத்த ஈசனே ! என்னை ஆட்கொண்டு நாவல் மரத்தின்கீழ் (ஜம்புகேச்சரம்) விளங்கும் நாதனே ! நிலைத்த தன்மையை அருள் புரிவீராக எனத் தேவியரால், நீவிர் போற்றப் படுபவர்.

243. காலால்உயிர் காலனை வீடுசெய்தாய்
பாலோடுநெய் யாடிய பால்வணனே
வேலாடுகை யாஎம் வெணாவலுளாய்
ஆலார்நிழ லாய்எனும் ஆயிழையே.

தெளிவுரை : திருப்பாதத்தால் காலனுடைய உயிரை வீழ்த்திய பெருமானே ! பாலும் நெய்யும் அபிடேகமாக ஏற்று ஆடிய பால்போன்ற திருவெண்ணீற்று வண்ணம் திகழுமாறு திருமேனியில் பூசி விளங்கும் ஈசனே ! சூலப் படையினைக் கரத்தில் ஏந்திய நாதனே ! ஜம்புகேச்சரத்தில் வீற்றிருப்பவனே ! கல்லால மர நிழலில் வீற்றிருந்து அறம் உரைத்த நாயனே ! என்று தேவயால் போற்றப்படும் தலைவன் ஆயினீர்.

244. கறவக்கொடி கொண்டவன் நீறதுவாய்
உறநெற்றி விழித்தஎம் உத்தமனே
விறன்மிக்க கரிக்கருள் செய்தவனே
அறமிக்கது என்னும்என் ஆயிழையே.

தெளிவுரை : மீனக்கொடியுடைய மன்மதனைச் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணை விழித்து நோக்கிய உத்தமனே ! உறுதி வாய்ந்த பக்தியுடன் பூசித்த யானைக்கு அருள் செய்த பெருமானே ! என்னுடைய அன்னை யாகும் தேவியால் அறப்பாங்குடையவனாய்ப் போற்றப்படும் நாதன் ஆயினை.

245. செங்கடபெயர் கொண்டவன் செம்பியர்கோன்
அங்கட்கரு ணைபெரி தாயவனே
வெங்கண்விடை யாஎம் வெண்நாவலுளாய்
அங்கத்துஅயர் வாயினள் ஆயிழையே.

தெளிவுரை : சிலந்தியாக இருந்து பூசிக்கப் செவ்வையுறு மறுமையில் செங்கண் கொண்ட சோழமன்னர்களின் சிறப்பானவனாகக் கருணையுடன் ஆக்குவித்த பெரியோனே ! இடப வாகனத்தை உடையவனே ! வெண்நாவல் மரத்தின்கீழ் விளங்கும் நாதனே ! எனப் போற்றி தேவியானவள் நின் திருமேனியின் அங்கத்தில் விரும்பித் திகழ்ந்தனன்.

246. குன்றேயமர் வாய்கொலை யார்புலியின்
தன்தோலுடை யாய்சடை யாய்பிறையாய்
வென்றாய்புர மூன்றை வெணாவலுளே
நின்றாயரு ளாய்எனு நேரிழையே.

தெளிவுரை : கயிலை மலையில் வீற்றிருப்பவனே ! புலித் தோலை உடுத்திய ஈசனே ! சடை முடி உடையவனே ! பிறைச்சந்திரனைத் தரித்தவனே ! முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கி வெற்றி கொண்ட நாதனே ! ஜம்புகேச்சரத்தில் வீற்றிருக்கும் பெருமானே அருள் புரிக என்று உமாதேவியாரால் போற்றப்படுபவன் நீவிர்.

247. மலையன்றெடுத் தவ்வரக் கன்முடிதோள்
தொலையவ்விரல் ஊன்றிய தூமழுவா
விலையால்எனை யாளும் வெணாவலுளாய்
அலசாமல்நல் காய்எனும் ஆயிழையே.

தெளிவுரை : கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனுடைய முடியும் தோளும் நலியுமாறு விரல் ஊன்றிய பெருமானே ! மழுப்படையைக் கொண்டுள்ளவனே ! அன்பினால் என்னை ஆட் கொள்ளும் பொருட்டு வெண்ணாவல் மரத்தின்கீழ் விளங்கும் நாதனே ! யான் வருந்தாதவாறு அருள் நலம் புரிக என்று தேவியால் ஏத்தப் பெறுபவர் நீவிர்.

248. திருவார்தரு நாரண னான்முகனு
மருவாவெரு வாஅழ லாய்நிமிர்ந்தாய்
விரையாரும் வொணாவலுள் மேவியஎம்
அரவாஎனும் ஆயிழை யாள்அவளே.

தெளிவுரை : ஆயிழையாளாகிய உமாதேவியார், நின்னை, திருமாலும் பிரமனும் காண்பதற்கு நெருங்கி வர அவர்கள் அஞ்சுமாறு தீப்பிழம்பாய் ஓங்கினை ! மணம் கமழும் வெண்நாவல் மரத்தின்கீழ் மேவி விளங்கும் அரனே ! என்று ஏத்திப் பரவும் பரமன் ஆகியவன், நீவிர்.

249. புத்தர்பல ரோடுஅமண் பொய்த்தவர்கள்
ஒத்தவ்வுரை சொல்லிவை ஓரகிலார்
மெய்த் தேவர் வணங்கும் வொணாவலுளாய்
அத்தாஅரு ளாய்எனும் ஆயிழையே.

தெளிவுரை : புத்தரும் சமணர்களும் பொய்யுரை கூறுதலும் நல்லுரைழை உணராதவரும் ஆவர். மெய்ம்மை கண்டுற் தேவர்களால் வணங்கப்பெறும் வெண்நாவல் மர நிழலில் விளங்கும் அத்தனே ! என தேவியால் ஏத்தப் பெறுபவனே ! அருள் புரிவாயாக.

250. வெண்ணாவல் அமர்ந்துறை வேதியனைக்
கண்ணார்கமழ் காழியர் தம்தலைவன்
பண்ணோடு இவைபாடிய பத்தும்வல்லார்
விண்ணோரவர் ஏத்த விரும்புவரே.

தெளிவுரை : வெண் நாவல் மரத்தின்கீழ் வீற்றிருக்கும் வேதப் பொருளாகிய ஈசனைப் பாடிய ஞானம் விளங்கும் சீகாழியின் தலைவனாகிய ஞானசம்பந்தரின் பண்ணொடு மேவும் இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள், தேவர்களால் விரும்பி ஏத்தப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

160. திருநாகேச்சுரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

251.பொன்னேர்தரு மேனிய னேபுரியும்
மின்னேர்சடை யாய்விரை காவிரியின்
நன்னீர்வயல் நாகேச் சுரநகரின்
மன்னேஎன வல்வினை மாய்ந்தறுமே.

தெளிவுரை : பொன் போன்று அழகுடன் ஒளிரும் திருமேனியனே ! மின் போன்ற சிவந்த சடையுடைய பெருமானே ! மணம் மிக்கதும் வேகமாக ஓடும் நீர்ப்பெருக்கு உடையதும் ஆன காவிரியின் நன்னீர் பாயும் வயல்கள் சூழ்ந்த நாகேச்சுர நகரின்கண் விளங்கும் தலைவனே ! என்று ஈசனைப் பரவித் தொழ, நம்மைப் பற்றி, வலிந்து இடர்தரும் வினையானது மடிந்து அற்றுவிடும். வினையை அறுமாறு செய்து துன்பத்øத் தீர்க்கும் என்று உணர்த்துவதாகும்.

252. சிறவார்புர மூன்றெரி யச்சிலையில்
உறவார்கணை உய்த்தவ னேஉயரும்
நறவார்பொழில் நாகேச் கரநகருள்
அறவாஎன வல்வினை ஆசறுமே.

தெளிவுரை : சிறப்பினை இழந்தவர்களாகிய மூன்று அசுரர் புரங்கள், எரிந்து சாம்பலாகுமாறு, மேருமலையை வில்லாகக் கொண்டு, அதற்குப் பொருந்துமாறு திருமாலைக் கணையாகக் கொண்டு செலுத்தியவனே ! தேன் சொரியும் பொழில் விளங்கும் நாகேச்சுர நகருள் வீற்றிருக்கும் அறத்தின் வடிவான வனே என வணங்கி நிற்க வன்மையுடைய வினையும், அதனால் விளையும் குற்றமும் அற்று ஒழியும்.

253. கல்லால்நிழல் மேயவ னேகரும்பின்
வில்லானஎழில் வேல விழித்தவனே
நல்லார்தொழு நாகேச் சுரநகரில்
செல்வாஎன வல்வினை தேய்ந்தறுமே.

தெளிவுரை : கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைப்பதற்குத் தடசணா மூர்த்தியாகிக் காட்சி நல்கிய பெருமானே ! கரும்பு வில் ஏந்திய மன்மதனுடைய எழில் மிகுந்த வடிவம் கண்ணுக்குப் புலனாகாதவாறு வெந்து சாம்பலாகும்படி நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கிய ஈசனே ! நற்குணவான்களாக விளங்கும் மாந்தர் தொழும் நாகேச்சுர நகரில் வீற்றிருக்கும் செல்வா ! என்று வணங்கித் துதிக்க, வலிய வினையானது தேய்ந்து அழியும்.

254. நகுவாண்மதி யோடுஅர வும்புனலும்
தகுவார்சடை யின்முடி யாய்தளவம்
நகுவார்பொழில் நாகேச் சுரநகருள்
பகவாஎன வல்வினை பற்றறுமே.

தெளிவுரை : மலர்ந்து ஒளி நல்கும் சந்திரனும், பாம்பும், கங்கையும் தகுந்தவாறு சடை முடியில் தரித்துள்ளவனே ! செம்முல்லை விளங்கம் பொழில் சூழந்த நாகேச்சுர நகருள் வீற்றிருக்கும் பகவனே ! என்று வணங்கி ஏத்த, வலிய வினையின் பற்றானது அறும்.

255. கலைமான்மறி யும்கனலும் மழுவும்
நிலையாகிய கையிலா னேநிகழும்
நலமாகிய நாகேச் சுரநகருள்
தலைவாஎன வல்வினை தானறுமே.

தெளிவுரை : மான் கன்றும், நெருப்பும், மழுவும் நிலையாக விளங்குமாறு கரத்தில் ஏந்திய பெருமானே ! இம்மை நலம் நிகழ விளங்கும் நாகேச்சுர நகருள் வீற்றிருக்கும் தலைவா ! எனத் தொழுது போற்ற, வலிமையான வினை அற்றொழியும்.

256. குரையார்கழல் ஆட நடங்குலவி
வரையான்மகள் காண மகிழ்ந்தவனே
நரையார்விடை யேறுநா கேச்சுரத்துஎம்
அரைசேஎன நீங்கும் அருந்துயரே.

தெளிவுரை : மலையரசன் திருமகளாகிய உமையவள் காண, ஒலியார்க்கும் கழல் அணிந்து திருநடம் புரிந்து மகிழ்ந்த பெருமானே ! வெண்மையான இடபத்தில் ஏறும் நாகேச்சுரத்துள் விளங்கும் அரசே ! என்று தொழுது போற்ற, அரியது என்று நினைக்கூடிய துயர் யாவும் நீங்கும்.

257. முடையார்தரு வெண்டலை கொண்டுலகில்
கடையார்பலி கொண்டுழல் காரணனே
நடையார்தரு நாகேச் சுரநகருள்
சடையாஎன வல்வினை தான்அறுமே.

தெளிவுரை : பிரம கபாலம் ஏந்த, தாருகாவனத்து முனிவர்கள் வீட்டு வாயிலில் நின்று பரி கொண்டு உழலும் பெருமானே ! எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக விளங்கும் ஈசனே ! நல்லொழுக்கம் மிக்க சீலத்தவர் விளங்கும் நாகேச்சுர நகருள் வீற்றிருக்கும் சடையா ! என்று அழைத்து வணங்கி ஏத்த, வலிமை மிகுந்த வினை யாவும் அழியும்.

258. ஓயாத அரக்கன் ஒடிந்தலற
நீயாரருள் செய்து நிகழ்தவனே
வாயார வழுத்துவர் நாகேச்சுரத்
தாயேஎன வல்வினை தானறுமே.

தெளிவுரை : ஆணவ மலத்தின்பால் ஓய்தல் இன்றி உறவாடிய அரக்கனாகிய இராவணன் முடிகள் இற்று அலறுமாறு, புரிந்து நிகழ்த்தினீர் ! பின்னர் நீவிரே நல்லருள் புரிந்தீர் ! அத்தகைய கருணை வயம் மேவும் பெருமானே ! நும்மை வாயார வாழ்த்திப் போற்றும் அடியவர்கள் விளங்கும் நாகேச்சுரத்துள் வீற்றிருக்கும் தாய் போன்றவனே ! என்று வணங்கித் தொழுபவர்களின் வலிமையான வினையானது அறம்.

259. நெடியானொடு நான்முக னேடலுறச்
சுடுமாலெரி யாய்நிமிர் சோதியனே
நடுமாவயல் நாகேச் சுரநகரே
இடமாவுறை வாய்என இன்புறுமே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேடி அலையும் ஞான்று, அனல் வீசும் தீப்பிழம்பாக நிமிர்ந்து ஓங்கிய சோதிப்பொருளே ! வயல் வளம் மிக்க நாகேச்சுர நகரினை இடமாகக் கொண்டு வீற்றிருக்கும் பெருமானே ! என்று வணங்கித் தொழ மகிழ்ச்சி உண்டாகும். இம்மையில் இன்புற்ற விளங்குவர் என்பது குறிப்பு.

260. மலம்பாவிய கையொடு மண்டையதுண்
கலம் பாவியர் கட்டுரை விட்டுலகில்
நலம்பாவிய நாகேச் சுரநகருள்
சிலம்பாஎனத் தீவினை தேய்ந்தறுமே.

தெளிவுரை : மாற்றுச் சமயத்தினரின் உரைகளை நீத்துக் கைவிட்டு, நலம் விளங்கும் நாகேச்சுர நகரில் விளங்குகின்ற பெருமானை, சிலம்பு அணிந்த நாதனே ! எனப் போற்றி வணங்கத் தீய வினைகள் யாவும் தேய்ந்து அழியும்.

261. கலமார்கடல் சூழ்தரு காழியர்கோன்
தலமார்தரு செந்தமி ழின்விரகன்
நலமார்தரு நாகேச் சுரத்தரனைச்
சொலன் மாலைகள் சொல்ல நிலாவினையே.

தெளிவுரை : மரக்கலன்கள் விளங்கும் கடல் சூழந்த தலமாகிய காழியில் விளங்கும் செந்தமிழ் விரகன் - திரு ஞானசம்பந்தன், நலம் விளங்க மேவும் நாகேச்சுர நகரின் பெருமானை, சொல் மாலையாய் அமைத்த இத் திருப்பதிகமாகிய தமிழ்ப் பாடல்களை ஓதுபவர்களுக்கு வினை இல்லை.

திருச்சிற்றம்பலம்

161. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

262. உகலியாழ்கடல் ஓங்குபாருளீர்
அகலியாவினை அல்லல்போயறும்
இகலியார்புரம் எய்தவன்னுறை
புகலியாநகர் போற்றிவாழ்மினே.

தெளிவுரை : ஒலிதிகழ் கடல் சூழ்ந்த உலகில் விளங்குபவர்களே ! பகைமை கொண்ட முப்புர அசுரர்களை மாய்த்தவனாகிய புகலி நகரில் வீற்றிருக்கும் இறைவனைப் போற்றுக. அகலுதற்கு அரிதாகிய வினையும் துன்பமும் நீங்கம். இனிது வாழ்வீராக.

263. பண்ணியாள்வதோர் ஏற்றர்பால்மதிக்
கண்ணியார்கமழ் கொன்றைசேர்முடிப்
புண்ணியன்உறை யும்புகலியை
நண்ணும் இன்னலம் ஆனவேண்டிலே.

தெளிவுரை : இனிய நலங்கள் அடைய வேண்டும் எனக் கருதுவீராயின், விருப்பத்துடன் ஏறி இடப வாகனத்தை உடையவனாய், வெண்மதி சூடி, மணங்கமழும் கொன்றை மலரும் தரித்து விளங்கும் புண்ணியனாகிய ஈசன் உறையும் புகலியை அடைவீராக.

264. வீசுமின்புரை காதன்மேதகு
பாசவல்வினை தீர்த்த பண்பினன்
பூசுநீற்றினன் பூம்புகலியைப்
பேசுமின்பெரிது இன்பமாகவே.

தெளிவுரை : மின்னலைப் போன்று வேகமாக வீசி, மிகுந்த விருப்பத்தினை வயமாய் விளங்கிப் பற்றுகின்ற வலிய வினையைத் தீர்த்தருளும் பண்பினனாகி திருநீற்று மேனியன் விளங்குகின்ற பூம்புகலியைப் புகழ்ந்து போற்றுவீராக. பேரின்பம் கைகூடும்.

265. கடிகொள்கூவிள மத்தம்வைத்தவன்
படிகொள்பாரிடம் பேசும்பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்புகலியுள்
அடிகளை அடைந்து அன்புசெய்யுமே.

தெளிவுரை : மணம் கமழும் வில்வம், ஊமத்த மலர் ஆகியவற்றைச் சூடிய இறைவன் பூத கணங்களால் புகழப்படுபவன். திருநீற்று மேனியானாகிய ஈசனைப் புகலியின்கண் நாடி அடைந்து பக்தியுடன் தொழுவீராக.

266. பாதத்தார்ஒலி பல்சிலம்பினன்
ஓதத்தார்விடம் உண்டவன்படைப்
பூதத்தான்புக லிந்நகர்தொழ
ஏதத்தார்க்கிடம் இல்லைஎன்பரே.

தெளிவுரை : ஈசன் திருப்பாதத்தில் சிலம்பினைப் பொருந்த அணிந்தவன்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அருந்தியவன்; பூத கணங்களைப் படையாக உடையவன். அத்தகைய பெருமானின் புகலி நகரைத் தொழ, துன்பத்திற்கு இடம் இல்லை.

267. மறையினான்ஒலி மல்குவீணையன்
நிறையினார் நிமிர் புன்சடையன்எம்
பொறையினான்உறை யும்புகலியை
நிறையினால் தொழ நேசம் ஆகுமே.

தெளிவுரை : ஈசன், வேதம் ஆனவன்; இனிய ஓசை எழுப்பும் வீணை உடையவன்; நிறைவு கொண்டு மென்மையான சடையுடையவன்; என் உள்ளத்தில் உறுதி பயக்கும் வலிமையானவன்; புகலி நகரில் உறைபவன். அப் பெருமானை நிறைவாகத் தொழும் அன்பர்களுக்கு மேன்மேலும், சிவபக்தியும் மன்னுயிர் பால் நேசமும் உண்டாகும்.

268. கரவிடைமனத் தாரைக்காண்கிலான்
குரவிடைப்பலி கொள்ளும்எம்மிறை
பொருடடையுயர்த தான்புகலியைப்
பரவிடப் பயில் பாவம்பாறுமே.

தெளிவுரை : ஈசன், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் வஞ்சகருடைய மனத்தில் பதிந்து தோன்றாதவன்; இரவில் பலி ஏற்றவன்; இடப வாகனத்தில் அமர்ந்து விளங்குபவன். எமது இறைவனாகி அப்பெருமான் வீற்றிருக்கும் புகலியைப் பரவிப் போற்றித் துதிக்கப் பாவம் அழியும்.

269. அருப்பினான்முலை மங்கைபங்கினன்
விருப்பினான்அரக் கன்னுரஞ்செகும்
பொருப்பினான் பொழிலார் புகலியூர்
இருப்பினான்அடி ஏத்தி வாழ்த்துமே.

தெளிவுரை : உமாதேவியை விரும்பிப் பாகமாக உடையவனாகிய ஈசுன், இராவணனுடைய வலிமையை அழித்த கயிலை மலையை உடையவன். அப்பெருமான், பொழில் நிறைந்த புகலியை இருப்பிடமாக உடையவன். அவன் திருவடியை வணங்கிப் போற்றுவீராக.

270. மாலுநான்முகன் தானும்வார்கழற்
சீலமும்முடி தேடநீண்டெரி
போலுமேனியன் பூம்புகலியுள்
பாலதாடிய பண்பனல்லனே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் நீண்ட சீலம் மிக்க திருவடியும் திருமுடியும் தேட, நீண்டதோர் சோதிப் பிழம்பாகிய திருமேனியின் புகலி நகரில், பால் அபிடேகம் ஏற்று அருள் வழங்கும் பண்பின் மிக்கோனாக விளங்கும் ஈசன்.

271. நின்றுதுய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்றதாகவே யாவுணர்வினுள்
நின்றவன்னிக ழும்புகலியைச்
சென்றுகைதொழச் செல்வமாகுமே.

தெளிவுரை : சமணர், தேரர் சொற்கள் மதிக்கத் துகுந்தவையல்ல, நம் உணர்வில் கலந்து விளங்கும் இறைவன் வீற்றிருக்கும் புகலியை அடைந்து வணங்கச் செல்வம் பெருகும்.

272. புல்லமேறிதன் பூம்புகலியை
நல்லஞானசம் பந்தனாவினாற்
சொல்லுமாலையீ ரைந்தும் வல்லவர்க்கு
இல்லையாம்வினை இருநிலத்துளே.

தெளிவுரை : இடப வாகனத்தையுடைய ஈசனின் பூம்புகலியை, நல்ல ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்க்கு இப்பூவுலகில் வினை இல்லை.

இது, ஆகாமிய கர்மம் இல்லை என்பதும், பிராரத்த கர்மமும் இல்லாமை ஆகும் என்பதும் குறிப்பால் உணர்த்தப் பெற்றது.

திருச்சிற்றம்பலம்

162. திருநெல்வாயில் (அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

273. புடையினார்புள்ளி கால்பொருந்திய
மடையினார்மணி நீர்நெல்வாயிலார்
நடையினார்விரற் கோவணந்நயந்து
உடையினார்எமது உச்சியாரே.

தெளிவுரை : மடையின்கண் தெளிந்த நீர் விளங்குகின்ற நீர்வளம் மிக்க நெல்வாயில் என்னும் பதியில் நெறிமிகும் நால்விரற் கோவண ஆடை உகந்து வீற்றிருப்பவர் உச்சிநாதேஸ்வரர்.

274. வாங்கினார்மதிண் மேற்கணைவெள்ளம்
தாங்கினார்தலை யாயதன்மையர்
நீங்குநீரநெல் வாயிலார்தொழ
ஓங்கினார்எமது உச்சியாரே.

தெளிவுரை : முப்புரத்தை எரித்தச் சாம்பலாக்கிக் கங்கையைச் சடை முடியில் தாங்கிய ஈசன், மேலானவர். அப் பெருமான் நீர்வளம் மிக்க நெல் வாயிலில் அடியவர் தொழ உச்ச நாதேஸ்வரராய் ஓங்குபவர்.

275. நிச்சலேத்துநெல் வாயிலார்தொழ
இச்சையாலுறை வார்எம் ஈசனார்
கச்சை யாவதோர் பாம்பினார்கவின்
இச்சையார்எமது உச்சியாரே.

தெளிவுரை : நித்தம் தொழப்பெறும் நெல்வாயில் உடையவர் விருப்பத்துடன் வீற்றிருந்து அருள் புரியும் ஈசன். அவர் பாம்பை அரையில் கட்டும் இயல்பினர்; எழில் பொருந்திய இச்சையால் மேவுபவர். அவர் உச்சி நாதேஸ்வரர் ஆவார்.

276. மறையினார்மழு வாளினார்மல்கு
பிறையினார்பிறை யோடிலங்கிய
நிறையினார்நெல் வாயிலார்தொழும்
இறைவனார்எமது உச்சியாரே.

தெளிவுரை : ஈசன், வேதமாய் விளங்குபவர்; மழுப்படையுடையவர்; பிறைச் சந்திரனை உடையவர்; பக்திப் பெருக்கினால் நெஞ்சம் நிறைவுடைவராய் வணங்கித் தொழும் திருத்தொண்டர்கள் மேவும் நெல்வாயில் என்னும் பதியில் விளங்குபவர். அவர் எமது உச்சி நாதேஸ்வரப் பெருமானே ஆவார்.

277. விருத்தனாகிவெண் ணீறுபூசிய
கருத்த னார்கனல் ஆட்டுகந்தவர்
நிருத்தன்ஆரநெல் வாயிலார்தொழும்
இறைவனார்எமது உச்சியாரே.

தெளிவுரை : மூத்து விளங்கும் விருத்தனாகித் திருவெண்ணீறு பூசிவராக விளங்கும் ஈசன், நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடுபவராய் நெல்வாயில் விளங்கி, யாவராலும் மனதாரத் தொழப்படுபவர். அவர் எமது உச்சிநாதேஸ்வரர் ஆவார்.

278. காரினார் கொன்றைக் கண்ணியார்மல்கு
பேரினார்பிறை யோடிலங்கிய
நீரினாரநெல் வாயிலார்தொழும்
ஏரினார்எமது உச்சியாரே.

தெளிவுரை : ஈசன், கார்காலத்தில் மலரும் கொன்றை மலரைத் தரித்துள்ளவர்; புகழ்மிக்க திருநாமங்களை உடையவர்; பிறைச் சந்திரனும் கங்கையும் தரித்த சடை முடியினை உடையவர்; நெல்வாயில் என்னும் பதியில் பொருந்தி விளங்குபவர்; யாவராலும் தொழப்பெறும் சிறப்புடையவர். அவர் எமது உச்சி நாதேஸ்வரர் ஆவார்.

279. ஆதியார்அந்தம் ஆயினார்வினை
கோதியார்மதில் கூட்டுஅழித்தவர்
நீதியாரநெல் வாயிலார்மறை
ஓதியார்எமது உச்சியாரே.

தெளிவுரை : ஈசன், ஆதியாகவும் அந்தமாகவும் விளங்குபவர்; தீமை செய்யும் மூன்று அசுரர்களின் சேர்க்கையை அழித்துக் கோட்டை மதில்களை எரித்தவர்; நற்பண்பு நிறைந்து ஆசார சீலம் பொலியும் நெல்வாயில் என்னும் பதியில் விளங்குபவர்; வேதங்களால் போற்றப்படுபவர். அவர் எமது உச்சிநாதேஸ்வரர் ஆவார்.

280. பற்றினான்அரக் கன்கயிலையை
ஒற்றினார்ஒரு கால்விரல்உற
நெற்றியாரநெல் வாயிலார்தொழும்
பெற்றியார்எமது உச்சியாரே.

தெளிவுரை : கயிலை மலையைப் பற்றிய இராவணன் தலைமுடி நன்கு நெரிந்து துன்புறுமாறு திருப்பாத மலரால் ஊன்றிய பெருமான் ஈசன். அவர் நெல் வாயில் என்னும் பதியில் யாவரும் தொழுது போற்றுமாறு வீற்றிருக்கும் எமது உச்சி நாதேஸ்வரர் ஆவார்.

281. நாடினார்மணி வண்ணனான்முகன்
கூடினார்குறு காதகொள்கையர்
நீடினார்நெல் வாயிலார்தலை
ஓடினார்எமது உச்சியாரே.

தெளிவுரை : தன்னைக் காண வேண்டும் என்னும் நாட்டத்தை உடைவர்களாகிய மணிவண்ணனாகிய திருமாலும், நான்முகனாகிய பிரமனும் ஒன்று சேர்ந்து தேடியும் காண முடியாதவாறு நெடிது ஓங்கிய தன்மையில் தீப்பிழம்பாக விளங்கியவர் நெல்வாயில் பொருந்தி வீற்றிருக்கும் ஈசனார். அவர் பிரம கபாலத்தைக் கையில் உடைய எமது உச்சிநாதேஸ்வரர் ஆவார்.

282. குண்டுஅமண்துவர்க் கூறைமூடர்சொல்
பண்டமாகவை யாதபண்பினர்
விண்தயங்குநெல் வாயிலார்நஞ்சை
உண்டகண்டர்எம் உச்சியாரே.

தெளிவுரை : சமணர்களும், துவராடை கொண்டுள்ள சாக்கியரும் நற்பொருளை வழங்காத கொள்கையினர். அவர்களுடைய சொற்களைக் கொள்ளற்க. உயர்ந்த சிறப்புக் கொண்ட நெல்வாயிலில் விரும்பி வீற்டருந்து, நஞ்சினை உட்கொண்டு நீலகண்டராய் விளங்கும் எம் உச்சி நாதேஸ்வரரை வணங்குவீராக.

283. நெண்பயங்குநெல் வாயில்ஈசனைச்
சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
பண்பயன் கொளப் பாடவல்லவர்
விண்பயன் கொளும் வேட்கையாளரே.

தெளிவுரை : ஆழ்ந்த இணக்கம் பெருகச் செய்யும் நெல்வாயில் என்னும் நகரில் விளங்கும் ஈசனைச் சீகாழிப் பதியின் திருஞானசம்பந்தன் சொல்லிய பண் வழங்கும் இத் திருப்பதிகத்தை ஓதி, பண்ணின் இசை விளங்கப் பாட வல்லவர்கள், மேலான விண்ணுலகம் வாய்க்கப் பெறுவர். அவர்கள் இம்மையில் கொள்கின்ற வேட்கைகள் யாவும் நிறைவேறும்.

திருச்சிற்றம்பலம்

163. திருஇந்திரநீலப்பருப்பபதம் (அருள்மிகு நீலாச்சல நாதர் திருக்கோயில், இந்திரநீலப்பருப்பதம், இமயமலைச்சாரல்)

திருச்சிற்றம்பலம்

284. குலவுபாரிடம் போற்றவீற்றிருந்து
இலகு மான்மழு ஏந்தும்அங்கையர்
நிலவும்இந்திர நீலபர்ப்பதத்து
உலவினான்அடி உள்க நல்குமே.

தெளிவுரை : பூத கணங்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து போற்றி துதி செய்ய, மான், மழு ஆகியவற்றை ஏந்திய அழகிய கரத்தினராய் வீற்றிருந்து, பெருமையுடன் நிலவும் இந்திர நீல மலையில் மேவும் ஈசனின் திருவடியை எண்ணித் துதிக்க, விரும்புவன யாவும் கைகூடும்.

285. குறைவிலார்மதி சூடியாடல்வண்டு
அறையுமாமலர்க் கொன்றைசென்னிசேர்
இறைவன்இந்திர நீலபர்ப்பதத்து
உறைவினான்றனை ஓதி உய்ம்மினே.

தெளிவுரை : குறைவு நீங்கி வளர்ந்து ஒளி தரும் பிறைச் சந்திரனைச் சூடி, வண்டுகள் தேனருந்தி ஒலிக்கும் கொன்றை மாலையை முடியில் அணிந்த இறைவன் இந்திரநீல பருப்பதத்தில் உறைபவன். அப்பெருமானைப் போற்றி நற்கதி அடைவீராக.

286. என்பொன்என்மணி என்னஏத்துவார்
நம்பனான்மறை பாடுநாவினான்
இன்பன்இந்திர நீலபர்ப்பதத்து
அன்பன்பாதமே அடைந்து வாழ்மினே.

தெளிவுரை : என்னுடைய பொன்னே ! மணியே ! என்று உயர்வாகப் போற்றிப் பரவப்படும் ஈசன் மறையோதும் பெருமான்; உயிர்களுக்கெல்லாம் இன்பம் தருபவன். அவ் இறைவன் இந்திர நீல பருப்பதத்தில் வீற்றிருக்கின்றான். அன்பனாகிய அப் பெருமான் திருவடியை அடைந்து வாழ்வீராக.

287. நாசமாம்வினை நன்மைதான்வரும்
தேசமார்புக ழாயசெம்மைஎம்
ஈசன்இந்திர நீலபர்ப்பதம்
கூசிவாழ்த்துதும் குணமதாகவே.

தெளிவுரை : பிறவிக்கும் பிறவியில் நேரும் துன்பத்திற்கும் காரணமாகும் வினையானது நாசமாகவும், எல்லா வினைகளும் - சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியவை, தீய்ந்து அழியப் பெறுவதால் உண்டாகும் நன்மை வரவும், ஒளி மிக்க புகழும் செம்மையும் உடைய எமது ஈசன் இந்திர நீலபருப்பதத்தில் விளங்கி நிற்க, அப்பெருமானை நற்பண்பு மேவுபவராய்ச் சிறப்புடன் வாழ்த்துவீராக.

288. மருவுமான்மட மாதொர்பாகமாய்ப்
பரவுவார்வினை தீர்த்தபண்பினான்
இரவன்இந்திர நீலபர்பதத்து
அருவிசூடிடும் அடிகள் வண்ணமே.

தெளிவுரை : மானைக் கரத்தில் ஏந்தி, உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, போற்றி வணங்குபவரின் வினை தீர்க்கும் இயல்பினனாகி, பலி ஏற்றுக் கங்கை தரித்து இந்திர நீலபருப்பதத்தில் விளங்குகின்றவர், ஈசன்.

289. வெண்ணிலாமதி சூடும் வேணியன்
எண்ணிலார்மதில் எய்தவில்லினன்
அண்ணல்இந்திர நீலபர்ப்பதத்து
உள்நிலாவுறும் ஒருவனல்லனே.

தெளிவுரை : வெண்மையான நிலவும் சந்திரனைச் சூடிய இறைவன், மனத்தால் நினைந்து போற்றாதவர்களாகி, பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் கோட்டைகளை, மேருவை வில்லாகக் கொண்டு, எய்து சாம்பலாக்கியவன். அவ்வண்ணல் இந்திர நீல பருப்பதத்தில் விளங்கி மேவும் ஒருவனே அல்லவா !

290. கொடிகொள் ஏற்றினர் கூற்றுதைத்தவர்
பொடிகொள் மேனியிற் பூண்டபாம்பினர்
அடிகள்இந்திர நீலபர்ப்பதம்
உடையவாணன் உகந்த கொள்கையே.

தெளிவுரை : ஈசனார், இடபத்தைக் கொடியாக உடையவர்; காலனை உதைத்தவர்; திருநீற்றினைப் பூசிய திருமேனியர்; பாம்பினை அணிகலனாகப் பூண்டவர். அப் பெருமான் இந்திர நீலபருப்பதத்தில் விரும்பி வீற்றிருப்பவர்.

291. எடுத்தவல்லரக் கன்கரம்புயம்
அடர்த்ததோர்விர லானவனையாட்
படுத்தன்இந்திர நீலபர்ப்பதம்
முடித்தலம்உற முயலும் இன்பமே.

தெளிவுரை : மலை எடுத்த இராவணனை அடர்த்த திருவிரலால் அவனை ஆட்படுத்திய பெருமான் இந்திர நீல பருப்பதத்தில் வீற்றிருக்கும் ஈசன், அப்பெருமான் விளங்கும் திருமலையை அடைந்து வழிபடப் பேரின்பம் கையுறும்.

292. பூவினானொடு மாலும்போற்றுறும்
தேவன்இந்திர நீலபர்ப்பதம்
பாவியாஎழு வாரைத் தம்வினை
கோவியாவரும் கொல்லும் கூற்றமே.

தெளிவுரை : பிரமனும், திருமாலும் போற்றி அடைகின்ற இடம், மகாதேவனாக விளங்கும் ஈசனார் வீற்றிருக்கும் இந்திரநீல பருப்பதம் ஆகும். அப் பெருமானை மனத்தில் எண்ணிப்  போற்றாதவர்களைக் கூற்றுவன் சினந்து துன்புறுத்துவான்.

293. கட்டர்குண்டமண் தேரர்சீரிலர்
விட்டர்இந்திர நீலபர்ப்பதம்
எட்டனை நினை யாதது என்கொலோ
சிட்டதாயுறை யாதிசீர்களே.

தெளிவுரை : சமணர்களும் பௌத்தர்களும் சீரும் சிறப்பும் விட்டவர்கள். ஈசன் விளங்கும் இந்திர நீல பருப்பதத்தை எள் பிரமாண அளவும் நினைத்துப் போற்றாது இருப்பது என்கொல் ! ஆதிமூர்த்தியாக விளங்கும் அப் பெருமானுடைய சிறப்புகள் அறிவு மயமாய்த் திகழ்வதாகும்.

294. கந்தமார்பொழில் சூழ்ந்தகாழியான்
இந்திரன்தொழு நீலபர்ப்பதத்து
அந்தம்இல்லியை ஏத்துஞானசம்
பந்தன்பாடல் கொண்டு ஓதிவாழ்மினே.

தெளிவுரை : இந்திரன் வழிபட்ட நீலபருப்பதத்தில் வீற்றிருக்கும் ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை, மணம் கமழும் பொழில் சூழ்ந்த சீகாழிப் பதியில் விளங்கும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இத் திருப்பதிகத்தை, ஆதாரமாகப் பற்றி ஓதி வாழ்வீராக.

திருச்சிற்றம்பலம்

164. திருக்கருவூரானிலை (அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

295. தொண்டெலாமலர் தூவியேத்த நஞ்சு
உண்டலாருயிர் ஆயதன்மையர்
கண்டனார்கரு வூருள்ஆனிலை
அண்டனார்அருள் ஈயும்அன்பரே.

தெளிவுரை : திருத்தொண்டர்கள் எல்லாரும் மலர் தூவி ஏத்த, மன்னுயிர்களுக்கெல்லாம் ஆருயிர் ஆகிய தன்மையராய் நஞ்சினை உண்ட கண்டத்தினராய்க் கருவூருள் விளங்கும் ஆனிலை என்னும் திருக்கோயிலுள் வீற்றிருக்கும், அண்டங்களுக்கெல்லாம் உடைவராகிய ஈசர், அருள் செய்யும் அன்பினர் ஆவர்.

296. நீதியார்நினைந்து ஆயநான்மறை
ஓதியாரொடுங் கூடலார்குழைக்
காதினார்கரு வூருள்ஆனிலை
ஆதியார்அடி யார்தம்அன்பரே.

தெளிவுரை : ஆசார ஒழுக்க சீலம் உடையவர்கள் எக்காலத்திலும் போற்றி வேதங்களை ஓதி விளங்க, அவர்களுடன் இயைந்து மேவும் ஈசன், குழை அணிந்த காதினர் ஆவர். அப் பெருமான், கருவூரில் விளங்கும் ஆனிலை என்னும் கோயிலின்கண், அடியவர்களின் அன்பினராய் வீற்றிருக்கும் ஆதிப்பிரான்.

297. விண்ணுலாமதி சூடிவேதமே
பண்ணுளார்பரம் ஆய பண்பினர்
கண்ணுளார்கரு வூருள்ஆனிலை
அண்ணலார்அடி யார்க்கு நல்லரே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சூடி, வேதத்தின் பொருளாய் ஆகியவர், நடம் பயிலும் ஈசர். அப்பெருமான் கருவூரின் ஆனிலையில் கோயில் கொண்டு அடியவர்களுக்கு நன்மை புரிபவர்.

298. முடியர்மும்மத யானைஈர்உரி
பொடியர்பூங்கணை வேளைச் செற்றவர்
கடியுளார்கரு வூருள்ஆனிலை
அடிகள் யாவையும் ஆயஈசரே.

தெளிவுரை : ஈசன், யானையின் தோலை உரித்துத் திருநீறு பூசிச் சடைமுடியுடையவராய், மன்மதனை எரித்த பெருமான். பூசையின் சிறப்பு மிக்க கருவூர் ஆனிலையில் கோயில் கொண்டுள்ள அப்பெருமான், யாவும் தாமாகும் ஈசன் ஆவர்.

299. பங்கயம்மலர்ப் பாதர்பாதியோர்
மங்கையர்மணி நீலகண்டர்வான்
கங்கையார்கரு வூருள்ஆனிலை
அங்கைஆடர வத்துஎம்மண்ணலே.

தெளிவுரை : ஈசனார், தாமரை மலர்போன்ற மென்மையான திருப்பாதம் கொண்டவர்; உமாதேவியை ஒரு பாகம் கொண்டவர்; நீலகண்டம் உடையவர்; கங்கையைச் சூடியவர். அப்பெருமான், கருவூர் ஆனிலையில், அழகிய திருக்கரத்தில், ஆடுகின்ற அரவத்துடன் விளங்கும் அண்ணல் ஆவர்.

300. தேவர்திங்களும் பாம்பும் சென்னியின்
மேவர் மும்மதில் எய்தவில்லியர்
காவலர்கரு வூருள் ஆனிலை
மூவராகிய மொய்ம்பர்அல்லரே.

தெளிவுரை : சிறப்புடைய சந்திரனும் பாம்பும் சென்னியில் மேவி விளங்கி, முப்புரத்தைச் சாம்பாலக்கிய மேருவில்லை உடைய ஈசர், காக்கும் கடவுளாய்க் கருவூருள் ஆனிலை மேவி, மும்மூர்த்திகளும் தாமேயாகும் சக்தி மிக்கவர் அல்லவா !

301. பண்ணினார்படி யேற்றர்நீற்றர்மெய்ப்
பெண்ணினார்பிறை தாங்குநெற்றியர்
கண்ணினார்கரு வூருள்ஆனிலை
நண்ணினார்நமை யாளுநாதரே.

தெளிவுரை : ஈசர், பண்ணின் இசையாயும், படியும் இடப வாகனத்தை உடையவராகவும், திருநீறு பூசியவராகவும், அங்கத்தில் உமாதேவியைப் பாகங்க கொண்டவராகவும், பிறைச்சந்திரன் தரித்தவராகவும், நெற்றிக் கண் உடையவராகவும், கருவூர் ஆனிலையில் வீற்றிருந்து நம்மை ஆட்கொண்டு அருள்புரியும் நாதராகவும் விளங்குபவர்.

302. கடுத்தவாளரக் கன்கயிலையை
எடுத்தவன்றலை தோளுந் தாளினால்
அடர்த்தவன்கரு வூருள்ஆனிலை
கொடுத்தவன்னருள் கூத்தனல்லனே.

தெளிவுரை : சினங்கொண்ட இராவணன் கயிலையை எடுக்க, அவனுடைய வன்மையான தலையும் தோளும், திருப்பாத விரலால் அடர்த்தவன், கருவூர் ஆனிலையில் வீற்றிருக்கும் நம்மையெல்லாம் ஆட்கொள்ளும் நாதராகிய ஈசன்.

303. உழுதுமாநிலத்து ஏனமாகிமால்
தொழுதுமாமல ரோனும் காண்கிலார்
கழுதினான்கரு வூருள் ஆனிலை
முழுதுமாகிய மூர்த்திபாதமே.

தெளிவுரை : பூமியைத் தோண்டிப் பன்றி வடிவில் சென்ற திருமாலும், பிரமனும, காணதவராய்ப் பேய்க் கூட்டத்தையுடைய ஈசன், கருவூர் ஆனிலையின் மூர்த்தியாய் விளங்குபவன். அப்பெருமான் திருவிடயே உலகில் யாவுமாய்த் திகழ்வதும் ஆகும்.

304. புத்தர்புன்சமண் ஆதர்பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சைவிட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூருள்ஆனிலை
அத்தர்பாதம் அடைந்துவாழ்மினே.

தெளிவுரை : புத்தர், சமணர் ஆகியோர் கூறுவதாகிய பொய்யுரைகளை ஒதுக்கி, மெய்ம்மையாய்ப் பக்தி செய்யும் அன்பர்கள் சேர்கின்ற கருவூர் ஆனிலையின் அத்தனாகிய ஈசன் திருப்பாதத்தை வணங்கி இவ்வுலகில் நலம் செறிந்த வாழ்க்கையை அடைவீராக.

305. கந்தமார்பொழிற் காழிஞானசம்
பந்தன்சேர்கரு வூருள்ஆனிலை
எந்தை யைச்சொன்ன பத்தும்வல்லவர்
சிந்தையில்துய ராயதீர்வரே.

தெளிவுரை : நறுமணம் வீசும் பொழில்கள் உடைய சீகாழியில் விளங்கும் ஞானசம்பந்தன், கருவூர் என்னும் தலத்தில், ஆனிலை என்று வழங்கப் பெறும் திருக்கோயிலின்கண் சென்று, எந்தையாகிய ஈசனைப் போற்றிச் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்களின் மனத்துயர் தீரும்.

திருச்சிற்றம்பலம்

165. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

306. முன்னிய கலைப்பொருளு மூவுலகில்வாழ்வும்
பன்னிய ஒருத்தர் பழவூர்வினைவின்ஞாலம்
துன்னியிமையோர்கள் துதிசெய்துமுன்வணங்கும்
சென்னியர்விருப்புறு திருப்புகலியாமே.

தெளிவுரை : முன்னின்று ஓங்கும் கலைகளானவையும், மூன்று உலகங்களிலும் அமைகின்ற வாழ்க்கைத் தன்மையும், பொருந்த அளிக்கும் ஒரு தலைவர் விளங்கும் பழைமையான ஊர் யாது என வினவினால், இப் பூவுலகத்தை அடைந்து தேவர்கள் துதிசெய்து எதிர் நின்று வணங்க, தலையானவராய் விளங்குகின்ற ஈசன், விரும்பி வீற்றிருக்கும் திருப்புகலியாகும். இத் திருப்பாட்டு வினா உரையாதலும் காண்க.

307. வண்டிரை மதிச்சடை மிலைத்தபுனல்சூடிப்
பண்டெரிகையாடு பரமன்பதியது என்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தொண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.

தெளிவுரை : பிறைச்சந்திரனும் கங்கையும் சடையில் விளங்குமாறு சூடி, நெருப்பைக் கையில் ஏந்தி ஆடும் பரமன், வீற்றிருக்கும் பதி என்று சொல்லப்பெறுவது, தாமரை மலரின் மணமும், சோலைகளில் உள்ள மலரின் மனமும், அலைகள் வீசும் கடலின் வளமும், பொலியும் திருப்புகலியாகும்.

308. பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவும் அந்தணன் விருப்பிடமதென்பர்
பூவணவு சோலையிருண் மாலையொதிர்கூரத்
தேவணவிழாவளர் திருப்புகலியாமே.

தெளிவுரை : ஈசர், பக்திப் பாடல்களைப் பாடும் பக்தர்களின் சிந்தையில் விளங்குபவர்; பக்தர்கள் கூடி நின்று அரவொலி முதலான நாவாரப் போற்றும் புகழ்மிகும் சொற்களில் தோய்ந்த அந்தணர் எனப் பெறும் இறைவர். அப்பெருமான், விருப்பத்துடன் வீற்றிருக்கும் இடம் என்று யாவராலும் சொல்லப்படுவது, பூக்கள் நிரம்பிய சோலையும், பெரிய மலை சாற்றித் தெய்வ வழிபாடு செய்யும் திருவிழாக்கள் நாளும் பெருகி வளரும் திருப்புகலியாகும்.

309. மைதவழு மாமிடறன் மாநடமதாடி
கைவலையினாளொடு கலந்தபதிஎன்பர்
செய்பணி பெருத்தெழும் உருத்திரர்கள்கூடித்
தெய்வமது இணக்குறு திருப்புகலியாமே.

தெளிவுரை : கருமையான வண்ணம் கொண்ட கண்டத்தை உடைய ஈசன், சிறப்பான நடனம் புரிந்து, உமாதேவியுடன் உடனாகி வீற்றிருக்கும் பதி என்று சொல்லப்படுவது, திருத்தொண்டு மிகுதியாகச் செய்து விளங்கும் சிவகணத்தவர் கூடி நிற்க, தெய்வ நலம் பெருகி இணக்கம் உறுகின்ற சிறப்புடைய திருப்புகலி ஆகும்.

310. முன்னம்இருமூன்று சமயங்களவை யாகிப்
பின்னை அருள்செய்த பிறையாளன் உறைகோயில்
புன்னையமலர்ப்பொழில்கள் அக்கின்ஒளிகாட்டச்
செந்நெல்வயலார்தரு திருப்புகலியாமே.

தெளிவுரை : ஆறு சமயங்களும் ஆகி அவற்றுக்கு அருள் செய்பவனாகிய பிறைமதி சூடும் பெருமான் உறைகின்ற கோயில், புன்னை மலர்ப் பொழில்கள் சூழந்து, சங்கு மணி போன்று ஒளிகாட்டவும், செழுமையான வயல்களும் நிறைந்த திருப்புகலியாகும்.

311. வங்கமலியுங்கடல் விடத்தினைநுகர்ந்த
அங்கணன் அருத்திசெய்து இருக்கும்இடம் என்பர்
கொங்குஅணவியன்பொழிலின் மாசுபனிமூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலியாமே.

தெளிவுரை : பாற்கடலில் தோன்றி நஞ்சினை உட்கொண்ட அழகு மிக்க முக்கண்ணுடைய ஈசன், விரும்பி வீற்றிருக்கும் இடம் என்பது, தேன் பெருகும் பெருமைமிக்க பொழிலில் பனி மூடி விளங்கத் தென்னை மரங்களிலிருந்து தேன் பெருகித் திகழும் திருப்புகலி ஆகும்.

312. நல்குரவும் இன்பமும் நலங்கள் அவையாகி
வல்வினைகள் தீர்த்தருளு மைந்தன் இடம்என்பர்
பல்கும் அடியார்கள் படியாரஇசைபாடிக்
செல்வ மறை யோருறை திருப்புகலியாமே.

தெளிவுரை : இன்பத்திற்கும், துன்பத்திற்கும் அவனே காரணகர்த்தராகிக் கொடிய வினைகள் தீர்த்து நலங்கள் ஆக்கியும் அருள்புரியும் அமுதனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம் எனப்படுவது, அடியவர்கள் பல்கிப் பெருகி உலகமெல்லாம் உவந்து மகிழுமாறு இசைப் பாடல்கள் பாடவும், செல்வமாக விளங்கும் மறைவல்லவர்கள் உறையவும் திகழும் திருப்புகலியாகும்.

313. பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை அடர்த்தருளும் அண்ணல் இடம்என்பர்
நெருக்குறு கடல்திரைகள் முத்தமணிசிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலியாமே.

தெளிவுரை : விரிந்து பரவும் புகழும் பெருமையும் உடைய ஈசன், கயிலை மலையால் இராவணனை அடர்த்து அருள்புரிந்த அண்ணல் ஆவர். அப்பெருமான் விளங்கி மேவும் இடம் என்பது, கடலலைகள் முத்தும் மணிகளும் வாரிக் கொணர்ந்து, பெருமை உடைய பொழிலின்கண் வீச, பொலிந்து செல்வச் செழிப்புடன் விளங்கும் திருப்புகலி நகர் என்று சொல்வார்கள்.

314. கோடலொடுகூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளும் அப்பன், இருவர்க்கும்
நேடஎரியாகிஇரு பாலும்அடிபேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலியாமே.

தெளிவுரை : கோடல் மலரும் பிறைச் சந்திரனும் சூடிய சடைமுடியில், ஆடுகின்ற அரவத்தை வைத்து அருள்புரியும் எம் தந்தை, திருமால் பிரமன் ஆகியோருக்குத் தீப்பிழம்பாகி, இருபக்கமும் திருவடி பேணி, விளங்கும் திருப்புகலியாகும்.

315. கற்றுமணர் உற்றுலவு தேரர்உரை செய்த
குற்றமொழி கொள்கையது இலாதபெருமானூர்
பொற்கொடி மடந்தையரு மைந்தர் புலன்ஐந்தும்
செற்றவர் விருப்புறு திருப்புகலியாமே.

தெளிவுரை : மெய் நூல்களை உரையாத மொழிகளைக் கற்ற சமணர், தேரர்கள் சொற்களை ஏற்காத கொள்கை உடையவராகிய பெருமான், விளங்குகின்ற ஊரானது, மகளிரும், ஆடவரும், புல் வழியில் மனத்தைச் செலுத்தாது வென்று, ஞானிகளாய் விளங்குகின்றவர்கள் விரும்புகின்ற திருப்புகலியாகும்.

316. செந்தமிழ்பரப்புறு திருப்புகலிதன்மேல்
அந்தமுதலாகிநடு வாயபெருமானைப்
பந்தனுரை செய்தமிழ்கள் பத்தும்இசைகூர
வந்தவணம் ஏத்துமவர் வானமுடையாரே.

தெளிவுரை : தெய்வத்தைப் பற்றி இனிய செம்மையான தமிழ் உரை செய்து பரப்பும் திருப்புகலியில், அந்தமும் ஆதியும் நடுவும் ஆகிய பெருமானை, ஞானசம்பந்தன் உரைசெய்த இத்திருப்பதிகத்தால் இசையுடன் ஓதுபவர்.

திருச்சிற்றம்பலம்

166. திருப்புறம்பயம் (அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பிறம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

317. மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை
நிறம்பசுமை செம்மையொடு இசைந்தனது நீர்மை
திறம்பயன் உறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க்கு
அறம்பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : மன்னுயிர்களைத் துன்புறுத்தும் கொடிய செயலைப் புரிந்த முப்புரத்தினை உடைய அசுரர் கோட்டைகளை, எரித்துச் சாம்பலாக்கிய பெருமானே ! பசுமை நிறமுடைய உமாதேவியும் செம்மை நிறம் உடைய நீவிரும் இன்புற இசைந்து, உம்முடைய தன்மையின் திறமாகிய அறப்பொருளை சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு உரைத்தருளிய குருநாதரே ! நீவிர் புறம்பயம் என்னும் பதியின்கண் வீற்றிருந்து அருள்புரிபவராயினீர்.

318. விரித்தனை திருச்சடை அரித்தொழு குவெள்ளம்
தரித்தனை யதன்றியு மிகப்பெரி யகாலன்
எருத்திற வுதைத்தனை இலங்கிழை யொர்பாகம்
பெருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : திருமுடியில் விளங்கும் சடை விரித்து நடம் புரிந்த நாதனே ! கங்கையைத் தரித்திருப்பவனே ! காலன் ஒடிந்து மாயுமா திருப்பாதத்தால் உதைத்த பெருமானே ! உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு உடனாகி விளங்குபவனே ! நீவிரே புறம்பயம் அமர்ந்து திகழ்பவர்.

319. விரிந்தனை குவிந்தனை விழுங்குயிர் உமிழ்ந்தனை
திரிந்தனை  குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : யாவிலும் விரிந்து பெருகியும், நுண்பொருளாயும் விளங்குபவனே ! மன்னுயிர்களுக்கு வினையின் வழிப் பயன்களைச் செய்பவனாய் மேவும் முதலோனே ! குருந்த மரத்தை ஒடித்த திருமால், மோகினி வடிவமாய் விளங்க, உடன் திரிந்த அன்பனே ! மயானத்தில் நடம் புரியும் நாதனே ! நீவிரே புறம்பயம் அமர்ந்து மகிழ்ந்து விளங்குகின்றவர்.

320. வளர்கெழு கடும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
துளங்கமர் இளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுட லைநீறு
புளங்கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : வளம் பெருகும் கங்கையைச் சடையில் ஒடுங்குமாறும், இளைய பிறைச்சந்திரன் தரித்தும், இறந்தவர்களைச் சுடுகின்ற மயானத்தின் (சுடலை) நீறு பூசியும் விளங்கும் பெருமானே ! நீரே புறம்பயத்தில் வீற்றிருப்பவர்.

321. பெரும்பிணி பிறப்பினொடு இறப்பிலையொர்பாகம்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழந்தோய்
சுரும்புண அரும்பவிழ் திருந்தியெ ழுகொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்தஇ றையோனே.

தெளிவுரை : பிறப்பொடு இறப்பும் பிணியும் இல்லாத பெருமானே ! கரும்பன்ன சொல்லி என்னும் திருநாமம் தாங்கிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து விளங்கும் நாதனே ! வண்டுகள் ரீங்காரம் செய்து மலரும் கொன்றையை விரும்பிச் சூடிய இறைவனே ! புறம்பயத்தில் உள்ளவர் நீவிரே !

322. அனல்படு தடக்கையவர் எத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப்பகை யுநீயே
தற்படு சுடர்ச்சடை தனிப்பிறை யொடுஒன்றப்
புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : வேத நெறிப்படி வேள்வி புரியும் தகைமை உடையவரும் மற்றும் எத் தொழிலை மேற்கொள்வராயினும் உம்மை நினைத்து வழிபடுவாராயின், அவர்கள் துன்பத்திற்குக் காரணமாகிய வினையைத் தீர்ப்பவர் நீவிரே ஆவர். நெருப்புப் போன்று சுடர்விடும் சிவந்த சடையில் ஒப்பற்ற வெண்பிறைச் சந்திரனும், கங்கைøயும் திகழுமாறு உள்ள நாதரே ! நீரே புறம்பயம் அமர்ந்துள்ளீர்.

323. மறத்துறை மறுத்தவர் தவத்தடி யருள்ளம்
அறத்துறை ஒறுத்தனது அருட்கிழ மைபெற்றோர்
திறத்துள் திறத்தினை மதித்தக லநின்றும்
புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : மறம் தோய்ந்த கொடிய தன்னை இல்லாதவர்களும், தவத்தின்வழி நிற்கும் அடியவர்களும், தேவரீர்தம் அருளுரிமை பெற்ற சிவஞானிகளும் அவ்வவர்களின் தகுதியைப் போற்றி மதித்து அவற்றுடன் பொருந்தி விளங்கியும் வேறாகவும் உடைய நீவிர், புறம்பயம் அமர்ந்துள்ளீர் !

324. இலங்கையர் இறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைகள் அடர்த்திட லும்அஞ்சி
வலங்கொள எழுந்தவ னலங்கவி னவஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணன் கயிலை மலையின் கீழ் நெறியுற்றுக் கதறுமாறும், திரட்சியான பெரிய கரங்கள் துன்புற்று வருந்தவும் அடர்த்திட, அவ்அரக்கன் அச்சம் கொண்டு எழுந்து ஐம்புலன்களை அடக்கி வழிபடுமாறு செய்தவர் புறம்பயம் அமர்ந்த தேவரீர்.

325. வடங்கெட நுடங்குண இடந்தஇ டைஅல்லிக்
கிடந்தவன் இருந்தவன் அளந்துண ரலாகார்
தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள் செய்தொன்றினை புறம்பயம் அமர்ந்தோய்.

தெளிவுரை : ஆலிலையில் பள்ளி கொண்ட திருமாலும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தும் உணர இயலாதவராய்த் தீப்பிழம்பாக ஓங்கிய தேவரீர், இவ் இருவரும் வணங்கி நிற்க, அருள் புரிந்து, புறம்பயம் அமர்ந்துள்ளீர். அவர்கள் தத்தர் வாகனத்தில் பெருமை யோடு விளங்கச் செய்தவன் ஈசன் என்பது குறிப்பு.

326. விடக்கொரு வர்நன்றென விடக்கொரு வர்தீதுஎன
உடற்குடை களைந்தவர் உடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமை யொர்பாகம்
அடக்கினை புறம்பயம் அமர்ந்தவு ராவோனே.

தெளிவுரை : ஊன் நல்லது எனவும் அல்லது எனவும் கூறுகின்ற தன்மை உடையவர்களாய் விளங்குபவர்கள் உரை கொள்ளாது, உமாதேவியைப் பாகங்கொண்டு தேவரீர் புறம்பயம் அமர்ந்துளீர்.

327. கருங்கழி பெருந்திரை கரைக்குல வுமுத்தம்
தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழ மைஞானன்
சுரும்பவிழ் புறம்பயம் அமர்ந்தத மிழ்வல்லார்
பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே.

தெளிவுரை : உப்பங்கழியின் வாயிலாகப் பேரலைகள் முத்துக்களைக் கொண்டு கரை சேர்க்க விளங்குகின்ற கழுமலத்தின் நாதன் - தமிழின் உரிமை கொண்ட ஞானசம்பந்தன், புறம்பயம் அமர்ந்த பெருமானைப் போற்றிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், பிணி அற்றவராய் இம்மையில் விளங்கி, மீண்டும் பிறவியை அடையாதவராய் வீடு பேறு அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

167. திருக்கருப்பறியலூர்  (அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

328. சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்தக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : பந்த பாசங்களைத் தயக்கமின்றி அறுத்து, மனத்தின்கண் மாசு இல்லாத நற்குணங்கள் நிறைந்த அடியவர்களொடு கூடி, ஈசனைத் தொழுது போற்றும் அன்பர்களை வீடுபேறு அடையச் செய்யும் அருள்பாங்கினன் வீற்றிருப்பது, கருப்பறியலூர் ஆகும்.

329. வண்டனை செய்கொன்றையது வார்சடைகண் மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
விண்டனைசெய் மும்மதிலும் வீழ்தரவொர் அம்பால்
கண்டவன்இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : வண்டுகள் சூழும் கொன்றை மலரைச் சடை முடியின்மேல் பொருந்தச் சூடி, வலிமை மிக்க அரவத்தை உடன் தரித்த விளங்குகின்ற ஈசன், இடம் பெயர்ந்து சென்று வஞ்சனையால் மன்னுலகத்தினைத் துன்புறுத்திய மூன்று கோட்டை மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு, ஓர் அம்பைச் செலுத்திய பெருமான். அப் பெருமான் வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும்.

330. வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
நாதனென நள்ளிருள்முன் ஆடுகுழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : மறையவர்கள் வேதம் ஓதவும், வேள்வி முதலான நற்செயல்கள் அந்தந்தக் காலத்தில் முறையாகப் புரியவும், மலரின் அரும்புகள் கொண்டு தூவி அர்ச்சனை கொள்ளும் தலைவன், நள்ளிருளில் நடம் புரியும் பெருமான். அதுபோது திருச்செவியில் அணிந்துள்ள குழையானது தாழ்ந்து விளங்கும் தன்மையில் விளங்க, அப் பெருமான் வீற்றிருக்கும் இடம் கருப்பறியலூர் ஆகும்.

331. மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : முற்றும் துறந்த முனிவர்கள் விளங்கும் கயிலை மலைக்கு அதிபனாகிய ஈசன், உமாதேவியை ஒரு பாகமாக உடையவன். உடம்பினை விடுத்து, மறையோனாகிய மார்க்கண்டேயனுடைய உயிரைக் கவர்ந்து செல்ல வேண்டும் என்று தொடர்ந்த காலனுடைய உயிரை மாய்க்க, ஒரு காலால் உதைத்து வென்றவனாகிய  அப் பெருமான் வீற்றிருப்து கருப்பறியலூர் ஆகும்.

332. ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய
விருத்தனவன் வேதமென அங்கமலை ஓதும்
கருத்தனவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : மனம் ஒருமித்தவளாகிய உமாதேவியை, ஒரு பாகத்தில் கொண்டு விளங்கும் ஈசன், நியதியின் தன்மையினன்; நித்தியமானவன்; நடனம் புரியும் நெறியில் யாவற்றையும் இயங்கச் செய்பவன்; முன்னைப் பொருட்கும் முன்னைப் பழம்பொருளாகியவன்; வேதமும் அதன்  ஆறு அங்கங்களையும் விரிவு செய்தவன்; அவற்றை ஓதும் கருத்தினனாயும் அவற்றின் பொருளாகவும் இருப்பவன். அப்பெருமான் வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும்.

333. விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்ணமரு மென்மொழியி னாளையணை விப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : தேவர்கள் துயர் தீர வேண்டும் என்னும் நோக்கத்தில், மலையரசன் மகளாகி, தேனை ஒத்த பண் மருவும் மென்மொழியினளாகிய பார்வதியை ஈசனுக்கு மணம் புரிவிக்க வேண்டும் என்று எண்ணிய மன்மதன் உடல் வெந்து எரியுமாறு நோக்கிய நெற்றிக் கண்ணுடைய பெருமான் வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும்.

334. ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : ஆதிநாயகனாகிய ஈசன், திருவடியை வணங்கிப் புனித தீர்த்தத்தால் அபிடேகம் செய்து மலர் சாற்றிக் தூப தீபங்கள் ஆகியவற்றால் ஆராதித்த மார்க்கண்டேயருக்குத் தீமை செய்ய வந்த காலனை, உதைத்து அழித்த பெருமான். அப்பெருமான் வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும். காலனின் பிடியிலிருந்து அந்தணச் சிறுவனைக் காத்தருளிய ஐயாற்று நாதனின் அருள்வண்ணமும் உணர்த்துவதாகும்.

335. வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்தபுயம் அத்தனையும் இற்றுவிழ மேனாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : புண்ணியம் செய்து வாய்த்த புகழ்மிக்க தேவர்களும், பூவுலக மாந்தர்களும் அஞ்சுமாறு பாய்ந்த வீரத்துடன் போர் செய்யும் இயல்புடைய இலங்கை நகரின் வேந்தனாகிய இராவணனுடைய உறுதியான அத்தனை தோள்களும் நலியுமாறு சினந்தவனாகிய ஈசன் வீற்றிருப்பது, கருப்பறியலூர் ஆகும்.

336. பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
நிரந்தர நிரந்திருவர் நேடியறி யாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : விரிந்து பரந்து சீராகப் பெருகும் அலைகளை உடைய கங்கையைச் சடை முடியில் தரித்து மகிழுமாறு வைத்த ஈசன், இடைவிடாமல் திருமாலும் பிரமனும் தேடியும் நெருக்கம் கொள்ளாதவராய் மறைந்த பெருமான். அப்பெருமான் வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும்.

337. அற்றமறை யாவமணர் ஆதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றமதி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறிய லூரே.

தெளிவுரை : திகம்பரர்களும் புத்தர்களும், சீரிய சொற்கள் அறியாதவர்களாய் இருக்க, அத்தகையோர் சொற்களை ஏற்காது, குற்றத்தைப் பொருட்டாகக் கொள்ளாத பெருமான், கொகுடிக்கோயிலில் உறுதியாக வீற்றிருப்பது கருப்பறியலூர் ஆகும்.

338. நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி பத்தும்இவை கற்று
வலந்தரும் அவர்க்குவிளை வாடல்எளி தாமே.

தெளிவுரை : நலன்கள் தருகின்ற நீர்வளம் மிக்க புகலியில் விளங்கும் ஞானசம்பந்தன், கலந்த அன்பினராய்க் கருப்பறியல் என்னும் தலத்தில் மேவிய ஈசனை, பலன் அளிக்கும் இத் தமிழ்ப் பதிகத்தால் ஏத்த வல்லவர்களுக்கு, வினையானது எளிதாய் மறைந்து விடும்.

திருச்சிற்றம்பலம்

168. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

339. திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
விருப்புடைய அற்புதர் இருக்கும்இடம் ஏரார்
மருத்திகழ் பொழிற்குலவு வண்திருவை யாறே.

தெளிவுரை : செல்வம் திகழும் மலையரன் மகளாகிய உமாதேவியுடன் வீற்றிருக்கும் ஒளி வடிவானவராகிய ஈசர் அழகுதிகழ விளங்குகின்ற எழில்மிகும் கயிலையில் வீற்றிருப்பதற்கு விருப்பம் உடவய அற்புதர் ஆவர். அப்பெருமான் மேவும் இடம், மணம் கமழும் பொழில் சூழ்ந்த வள்ளல் தன்மையுயை திருவையாறு ஆகும்.

340. கந்தமர வுந்துபுகை உந்தலில் விளக்கேர்
இந்திரன் உணர்ந்துபணி எந்தையிடம் எங்கும்
சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு வண்திருவை யாறே.

தெளிவுரை : நறுமணமும், தூண்டா மணி விளக்காய செம்பொற்சோதியும் ஆகி விளங்கும் ஈசனைப் பணிந்து போற்றியவன் இந்திரன். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, சந்தன மரங்கள் பெருகி விளங்க, அப்பொழிலிலிருந்து வீசும் காற்றானது அடைந்து மருவும் வண்மையுடைய திருவையாறு ஆகும்.

341. கட்டுவடம் எட்டுமுறு வட்டமுழ வத்தில்
கொட்டுகரம் இட்டவொலி தட்டும்வகை நந்திக்கு
இட்டமிகு நட்டமலை இட்டவர் இடம்சீர்
வட்டமதி லுள்திகழும் வண்திருவை யாறே.

தெளிவுரை : வடத்தைக் (வார்) கொண்டு கட்டப்பெற்ற முழவு ஒலிக்கவும், கரங்களால் தட்டித் தாள ஒலி எழுப்பவும் நந்தவேருக்கு விருப்பமான திருக்கூத்து ஆடும்பெருமான் இடமாவது, சிறப்புகள் யாவும் உள்கொண்டு ஓங்கும் வண்மை திகழும் திருவையாறு ஆகும்.

342. நண்ணியொர் வடத்திநிழல் நால்வர்முனி வர்க்கன்று
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம்சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொடு உந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண்திருவை யாறே.

தெளிவுரை : கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து தட்சணாமூர்த்தி திருக்கோலந் தாங்கிச், சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு அறம் உணர்த்தி, அதன் வாயிலாக எண்ணற்ற வேதப்பொருளை விவரித்து, மோனத்தாலும் சின்முத்திரை காட்டியும் உபதேசம் செய்த பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, குளிர்ந்து விளங்கும் சந்தனமும் அகிலும் தம் அலைகளால் உந்தி வரும் காவிரி கரையின் மீது அவற்றை ஈர்த்து விளங்கச் செய்யும் திருவையாறு ஆகும்.

343.வென்றிமிகு தாரகனது ஆருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகதம் ஓவ
நின்று நடம் ஆடியிட நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள் வண்திருவை யாறே.

தெளிவுரை : தாரகாசுரன், வரபலம் கொண்டு உலகத்தைத் துன்புறுத்தி அழிவினை உண்டாக்கிய போது, பராசக்தி சினங்கொண்டு அவ் அசுரனை வதைத்து உலகினைக் காத்தருளினள். அதுபோது, தேவியின் சீற்றம் தணியமாறு, நடனம் புரிந்து மகிழ்வித்த இறைவன் விளங்கும் இடம், மலரின் மணம் சூழ்ந்து பெருகும் பொழில்கள் உடைய திருவையாறு ஆகும்.

344. பூதமொடு பேய்கள்பல பாடநடம் ஆடிப்
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
கோதையர் இடும்பலி கொளும்பரன் இடம்பூ
மாதவி மணங்கமழும் வண்திருவை யாறே.

தெளிவுரை : பூதகணங்களுடன் பேய்க்கணங்களும் பாட, அதற்கு ஏற்ற வகையில் ஆடி, பாத முதல் முடி வரையில் ஆடுகின்ற அரவத்தை அணிகலனாகக் கொண்டு, தாருக வனத்து மாதர்கள் இடுகின்ற பிச்சைப் பொருட்களை ஏற்ற பரமன் இடமாவது, மாதவிப் பூக்களின் மணம் கமழும் வண்மைமிக்க திருவையாறு ஆகும்.

345. துன்னுகுழல் மங்கைஉமை நங்கைகளி வெய்தப்
பின்னொருத வம்செய்துழல் பிஞ்ஞகனும் அங்கே
என்னசதி என்றுரைசெய் அங்கணன் இடம்சீர்
மன்னுகொடை யாளர்பயில் வண்திருவை யாறே.

தெளிவுரை : நெருங்கி கூந்தலையுடைய உமாதேவியார் மனம் வருந்துமாறு நிகழ, அதனை ஒட்டித் தேவியான தவம் செய்து போற்ற, ஈசன் ஆங்கே எழுந்தருளி மணம் புரிந்து தேவியாகக் கொள்ளுதல் ஒரு தன்மையாயிற்று. அவ்வாறு புரியும் ஈசன் விளங்குகின்ற இடம் புகழ்மிக்க கொடையாளர்கள் திகழும் வண்மை மிக்க திருவையாறு ஆகும்.

346. இரக்கமில் குணத்தொடுஉல கெங்குநலி வெம்போர்
அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்
துரக்கவிர லிற்சிறிது வைத்தவர் இடம்சீர்
வரக்கருணை யாளர்பயில் வண்திருவை யாறே.

தெளிவுரை : இரக்கம் அற்றவனாய் உலகம் எல்லாம் நலியுமாறு கொடி போர் செய்யும் தன்மையுடைய அரக்கனாகிய இராவணன் முடிகளும் தோள்களும் துன்புற்று நலியுமாறு திருப்பாத விரலால் சிறிது ஊன்றிய ஈசனார் இடம், சிறப்புகளும் தெய்வ வரபலமும் கருணைத் திறமும் ஒருசேரப் பெற்றுத் திகழும் பெருமக்கள் விளங்கும் வண்மை மிக்க திருவையாறு ஆகும்.

347. பருத்துருவ தாகிவி ணடைந்தவனொர் பன்றிப்
பெருத்துருவ தாயுலகு இடந்தவனும் என்றும்
கருத்துருவொ ணாவகை நிமிர்ந்தவன் இடம்கார்
வருத்துவகை தீர்கொள் பொழில் வண்திருவை யாறே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியஞான்று, அவர்கள் கருத்துக்கு அறியவொண்ணாத வகையாய் ஓங்கி, தீத்திரட்சியான ஈசன் இருக்கும் இடம், மேகத்திலிருந்து தருக்கள் தமக்குத் தேவையான அளவு நீரை மழை கொண்டு தருவித்து ஈர்த்துக் கொள்ளும் எழில் உடைய திருவையாறு ஆகும்.

348. பாக்கியமது ஒன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்கள் என்றுடல் பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய தத்துவன் இடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண்திருவை யாறே.

தெளிவுரை : ஈசனை வணங்கும் பாக்கியத்தை விட்டவர்கள் சமணரும் சாக்கியரும் ஆவர். அவர்களால் நோக்குதற்கு அரியவன் ஈசன். அப்பெருமான் இடம், உலகில் நீடுவளர்ந்த பொழில்கள் மேகத்தைத் தொடும் திருவையாறு ஆகும்.

349. வாசமலி யும்பொயில்கொள் வண்திருவை யாற்றுள்
ஈசனை எழிற்புகலி மன்னவமெய்ஞ் ஞானப்
பூசுரன் உரைத்ததமிழ் பத்தும்இவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மலன் அடிக்கே.

தெளிவுரை : நன்மணம் கமழும் பொழில்கள் விளங்கும் வண்மை திகழும் திருவையாற்றுள் விளங்கும் ஈசனை, எழில் மிகும் புகலியின் மன்னவனாயும், மெய்ஞ்ஞான அந்தணனாயும் விளங்கும் ஞானசம்பந்தன் உரைத்த தமிழ்ப் பதிகம் கொண்டு ஓத வல்லவர்கள், நின்மலனாக உள்ள அப் பெருமானின் நேசம் மிகுந்த பக்தர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

169. திருநள்ளாறு (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால், புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

350. ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி
மாடவல செஞ்சடையெ மைந்தன்இடம் என்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி  வாசமீது வீசியநள் ளாறே.

தெளிவுரை : இதழ்கள் மலிந்த கொன்றை, பாம்பு, பிறைச் சந்திரன், வன்னிப் பத்திரம் ஆகியவற்றை, சிறப்புடைய சிவந்த சடையில் தரித்த அழகனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம் என்பது, கோங்கு, குரவம், புன்னை ஆகிய மலர்களின் வாசனை பெருகி விளங்கும் நள்ளாறு ஆகும்.

351. விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த
புண்ணியன் இருக்கும்இடம் என்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடுஇசை பாடும்அடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய் நள் ளாறே.

தெளிவுரை : வானத்தில் விளங்கும் சந்திரனும், ஒலித்து விளங்கும் கங்கையும் சடையில் தரித்துள்ள புண்ணியனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம் என்பது, இறைவன் புகழ் கூறும் இசைப் பாடலும், அதற்கு ஏற்ப நடனமும் கொண்டு, அடியவர்கள் மனம் ஒருமித்துப் போற்றி வழிபாடு செய்யும் நள்ளாறு ஆகும்.

352. விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்து
உளங்கொள இருத்திய ஒருத்தன்இடம் என்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.

தெளிவுரை : அன்பால் குழையும் இயல்பினனாகிய மலைமகளை ஒரு பாகமாக விரும்பி ஏற்ற இறைவன் வீற்றிருக்கும் இடம் என்று சொல்லப்படுவது, தூப, தீபங்களுடன் மலர் தூவிப் போற்றிய நளன், நாள் தோறும் வழிபட்ட நள்ளாறு ஆகும்.

353. கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்
செக்கரவர் சேருமிடம் என்பர்தட மூழ்கிப்
புக்கரவர் விஞ்ஞையரும் விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.

தெளிவுரை : ஈசன் கொக்கின் இறகு, அரவம், வளைந்த பிறைச் சந்திரன், கோபிக்கும் நெற்றிக்கண் ஆகியவற்றை கொண்டிருப்பவர்; சிவந்த திருமேனியர். அப்பெருமான் பொருந்தி வீற்றிருக்கும் இடமாவது, பாதாளத்தில் உள்ள நாகலோகத்தினரும், வித்தியாதரர், திகம்பரர் முதலானோரும் திருநாமத்தை ஓதி அதன் பயனாய் எய்திய நள்ளாறு ஆகும்.

354. நெஞ்சமிது கண்டுகொள் உனக்கென நினைந்தார்
வஞ்சமது அறுத்தருளு மற்றவனை வானோர்
அஞ்சமுது காகியவர் கைதொழ எழுந்த
நஞ்சமுது செய்தவன் இருப்பிடநள் ளாறே.

தெளிவுரை : தன்னை நினைத்துப் போற்றுபவர்கள் நெஞ்சத்தில் தோன்றி காட்சி தருபவனாகிய ஈசன், வஞ்சமாகிக் கண்ணுக்குப் புலனாகாத வினையைத் தீர்ப்பவன். புறங்காட்சி ஓடிய வானவர்கள் அஞ்சி ஈசனைத் தொழுது வேண்ட, நஞ்சினை அமுது எனக் கொண்டு அருந்தி அபயம் அளித்த அப்பெருமான் வீற்றிருக்கும் இடம், நள்ளாறு ஆகும்.

355. பாலனடி பேணஅவன் ஆருயிர் குறைக்கும்
காலனுடல் மாளமுன் உதைத்தஅரன் ஊராம்
கோலமலர் நீர்க்குடம் எடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.

தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலன் மாயுமாறு உதைத்த ஈசன் இருக்கும் ஊரானது, நன்னீர் கொண்டும் புது மலர் கொண்டும் பூசித்து, வேதத்தின் நெறிமுறையில் வாழும் மறையவர்கள் பேணுகின்ற நள்ளாறு ஆகும்.

356. நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை
வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
ஓதியர னாமமும் உணர்த்திடுநள் ளாறே.

தெளிவுரை : ஈசன், நீதிமுறையாய் விளங்குபவர்; உயர்ந்த பண்புடையவர்; நீண்டு உயர்ந்த கயிலை மலையை உடையவர்; உமாதேவியை ஒரு பாகத்தில் வரித்து அர்த்தநாரியாகக் காட்சி தருபவர்; பரஞானமாகிய தெய்வ அறிவாகவும், அபரஞானமாகிய உலகப் பொருள்களின் கலை அறிவாகவும் விளங்குபவர்; தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக மகாதேவனாக விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருப்பது, அந்தணர்கள் வேள்வியை இடைவிடாது புரிந்து வேதங்கள் ஓதி, அரனுடைய திருநாம மகிமையை உணர்த்தும் நள்ளாறு ஆகும்.

357. கடுத்துவல் அரக்கன்மு(ன்) நெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்துமிகு தோளும்
அடர்த்தவர் தமக்கிடமது என்பர்அளி பாட
நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.

தெளிவுரை : தீய செயலை மேற்கொள்ளும் கொடிய எண்ணத்தால் சினம் கொண்ட அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க, அவனது பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு அடர்த்த இறைவர் தமது இடமாகக் கொண்டு விளங்குவது, வண்டுகள் இசைத்து ரீங்காரம் செய்ய அதனால் மகரந்தத் தூள் உதிர்ந்து கலந்து திரட்சி கொள்ளும் சிறப்புடைய நள்ளாறு ஆகும்.

358. உயர்ந்தவன் உருக்கொடு திரிந்துலக மெல்லாம்
பயந்தவ(ன்) நினைப்பரிய பண்பன்இடம் என்பர்
வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழில் எங்கும்
நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.

தெளிவுரை : உலகத்தை அளப்பதற்காக நெடிது உயர்ந்து ஓங்கிய - திருவிக்கிரம அவதாரமாகிய திருமாலும் உலகத்தைப் படைத்த பிரமனும், நினைப்பதற்கு அரிவனாகிய ஈசன் இடம் என்று சொல்லப்படுவது, தேவர்கள் எல்லாம், கருணைத் திறத்தினை வியந்து போற்ற, மலர்கள் பெருகும் பொழில் விளங்கவும், நன்னயமும் தருமமும் காக்கும் வேதத்தின் ஒலி திகழவும் உள்ள நள்ளாறு ஆகும்.

359. சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவம் என்னும்
பந்தனை அறுத்தருள நின்றபர மன்னூர்
மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
சந்தம்விர லிப்பொழில் முழங்கியநள் ளாறே.

தெளிவுரை : சமணர், பௌத்தர் ஆகியோர் மாறுபட்ட இயல்புடையவராய், மேவும் தவத்தின் கட்டறுத்து அருள்புரியும் ஈசன் வீற்றிருக்கும் ஊர் எனப்படுவது, இனிமையான முழவின் ஒலியுடன், விழாக்களின் ஒலியும், வேத கீதங்களின் ஒலியும் பரவ, பொழில் திகழும் நள்ளாறு ஆகும்.

360. ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்
நாடுமலி வெய்திட இருந்தவனள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரை அடையாபழிகள் நோயே.

தெளிவுரை : ஆடும் இயல்புடைய அரவத்தைச் சடையில் கொண்ட ஈசன் உமாதேவியை உடனாகக் கொண்டு நாடித் தொழும் அடியவர்கள் எல்லாச் செல்வங்களையும் எய்துமாறு வீற்றிருக்கும் நள்ளாற்றினை, மாட மாளிகைகள் திகழும் சீகாழியில், விளங்கும் திருஞானசம்பந்தரின் செம்மையான திருப்பதிகத்தால் பாடிப் போற்றுபவர்களைப் பழி சாராது; அவர்கள் நோயின்றி நல்வாழ்வு பெறுவார்கள். இது பிறவி நோய் தீர்த்தலையும் குறிக்கும்.

திருச்சிற்றம்பலம்

170. திருப்பழுவூர் (அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

361. முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தன்எமை யாளுடைய அண்ணல்இடம் என்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.

தெளிவுரை : ஈசன், மலமற்ற நின்மலர்; மூன்று இலைகளையுடைய சூலப்படை உடையவர்; விரித்துச் சொல்லப்படும் தத்துவங்களை உரைக்கும் வேதம் ஆகியவர்; அன்பின் மிக்க தலைவர்; எம்மை ஆளாகப் பெற்ற அண்ணல்; அப்பெருமான் வீற்றிருக்கும் இடம், பசுமையான இலைகளை உடைய, உயர்ந்து ஓங்கிய பெரும் பொழிலின் நறுமணம் வீசவும், பக்தி பெருக வழிபடும் அடியவர்களும் சித்தர் பெருமக்களும் விளங்கும் பழுவூர் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

362. கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மானதிடம் என்பர்
மாடமலி சூளிகையில் ஏறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே.

தெளிவுரை : வெண்காந்தள், கோங்கு ஆகிய மலர்களைச் சடைமுடியில் நன்கு விளங்குமாறு சூடி, ஆடு கின்ற அரவம் வைத்த பெருமானுடைய இடம், மாளிகையின் மேல்தளத்தில் ஏறி மகளிர், ஈசன் புகழ்ப் பாடல்களைக் கவினுற இசைக்கின்ற பழுவூர் என்பர்.

363. வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
போலிய ஒருத்தர்புரி நூலரிடம் என்பர்
வேலியின் விரைக்கமலம் அன்னமுக மாதர்
பாலென மிழற்றிநடம் ஆடுபழு வூரே.

தெளிவுரை : வலிமைமிக்க முப்புரம் எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஒருவர் முப்புரி நூல் அணிந்த ஈசன். அவர் வீற்றிருக்கும் இடம் தாமரை மலர்போன்ற அழகிய முகத்தையுடைய மாதர், பால் போன்ற தூய்மையான இனிய பாட்டிசைத்து நடம் புரியும் பழுவூர் என்பர்.

364. எண்ணுமொர் எழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுது லாயகட டுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே.

தெளிவுரை : எண்ணும் எழுத்தும் அதை உரைக்கும் சொல்லும் ஆகி அதற்கு முதற்பொருளும் ஆகிய கடவுளாகிய ஈசன் விளங்கும் இடம் என்பது, பூவுலகில் மலை நாட்டினர் ஏத்திப் பண்ணொடு போற்றிப் பரவும் பழுவூர் ஆகும்.

365. சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாத(ன்)நமை யாளுடைய நம்பன்இடம் என்பர்
வேதமொழி சொல்லிமறை யாளர்இறை வன்றன்
பாதமவை யோதநிகழ் கின்றபழு வூரே.

தெளிவுரை : மயானத்தில் நடம்புரியும் நாதன் நம்மையெல்லாம் ஆட்கொண்டு அருள் வழங்கும் ஈசன் ஆவர். அப் பெருமான் விளங்குகின்ற இடம் என்பது, அந்தணர்கள் வேத கீதங்கள் ஓதி, வேதங்களுக்கெல்லாம் தலைவனாகிய ஈசனைப் போற்றி வணங்கும் பழுவூர் ஆகும்.

366. மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாவயர அன்றுஉரிசெய் மைந்தன்இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே.

தெளிவுரை : ஓரிடத்தில் சென்று பொருந்தி அழிவை ஏற்படுத்தும் மாயையும் வஞ்சனையுமுடைய முப் புரத்தை வெந்து சாம்பலாகுமாறு செய்து யானை வெருவுமாறு அடர்த்து அதன் தோலை உரித்த அழகிய வீரனாகிய ஈசன் விளங்குகின்ற இடமாவது, மடந்தையர்கள் நாகணவாய்ப் பறவையின் வாயிலாகப் புகழ்ச் சொற்கள் சொல்லுதலும் பாவையர்கள் கற்பொடு பொலிந்து மேம்படுதலும் உடைய பழுவூர் என்பர்.

367. மந்தணம் இருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிடம் என்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்டஅகில் மட்டார்
பைந்தொழிநன் மாதர்சுவடு ஒற்றுபழு வூரே.

தெளிவுரை : ஈசனைப் புறம்பாக வைத்த தக்கனது யாகம் அழியுமாறு, வீரபத்திரர் திருக்கோலத்தில் திருவிளையாடல் புரிந்த சிவலோக நாதனாகிய ஈசன் விளங்குகின்ற இடமாவது, அந்தணர்கள் வேள்விச் சாலையில் இட்ட அகிற்புகை தேன் போன்ற இனிய சொல்லுடைய மாதர்கள் பாதங்கள் தழையப் பெருகி வந்து விளங்குகின்ற பழுவூர் என்பர்.

368. உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்று
அரக்கனை அடர்த்தருளும் அப்பன்இடம் என்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
பரக்குறு புனற்செய்வினை யாடுபழு வூரே.

தெளிவுரை : சிறப்பு மிக்க பாற்கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் வைத்து, இராவணனைக் கயிலை மலையில் விளங்கும் இடம், மணம் மிகுந்த பொழிலின் மீது அமர்ந்து, கனிகளை உண்டு மகிழ்ந்த குரங்கினங்கள் விரிந்து பரந்த நீர் கொண்ட வயல்களில் விளையாடும் பழுவூர் என்பர்.

369. நின்றநெடு மாலுமொரு நான்முகனு நேட
அன்றுதழ லாய்நிமிரும் ஆதிஇடம் என்பர்
ஒன்றும்இரு மூன்றுமொரு நாலும்உணர் வார்கள்
மன்றினில் இருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.

தெளிவுரை : உலகத்தை அளந்து நின்ற திருமாலும், பிரமனும், தேடவும் தோன்றாதவனாகிப் பின்னர் தழலாய் ஓங்கிய ஆதிசிவன் விளங்கும் இடம், ஒன்றென ஏகப் பொருளாய் விளங்கும் ஈசனையும், இரு மூன்று எனவாகும் ஆறு அங்கமும், நான்கு வேதமும் உணர்ந்தவர்கள் அரங்கத்தில் கூடி மகிழும் சிறப்புடையது பழுவூர் ஆகும்.

370. மொட்டையம ணாதர்துகில் மூடுவிரி தேரர்
முட்டைகண் மொழிந்தமுனி வான்றன்இடம் என்பர்
மட்டைமலி தாழையின நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே.

தெளிவுரை : சமணர்களும் பௌத்தர்களும் சொல்கின்ற பொருந்தாத மொழிகளை வெறுக்கும் ஈசன் இடம், தாழை, தென்னை, பாக்கு ஆகியன செழித்து ஓங்கும் பழுவூர் என்பர்.

371. அந்தணர்கள் ஆனமலை யாளர்அவர் ஏத்தும்
பந்தமலி கின்றபழு வூர்அரனை ஆரச்
சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி
வந்தவணம் ஏத்துமவர் வானமுடை யாரே.

தெளிவுரை : மலை நாட்டு அந்தணர்கள் ஏத்திப் பக்தியுடன் வழிபடுகின்ற ஈசனை, நிறைவாகவும் சந்தம் மிகுந்ததாகவும், ஞானம் உணர்ந்த ஞானசம்பந்தன் சொல்லி உரைத்தவாறு ஏத்தி வழிபடுகின்றவர்கள் சிறப்புடையவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

171. தென்குரங்காடுதுறை (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

372. பரவக்கெடும் வல்வினை பாரிடம் சூழ
இரவிற் புறங் காட்டிடை நின்றெரி யாடி
அரவச் சடை அந்தணன் மேய அழகார்
குரவப்பொழில் சூழ்குரங் காடு துறையே.

தெளிவுரை : பூத கணங்கள் சூழ, இரவில் மயானத்தில் நின்று எரிகின்ற நெருப்பைக் கரத்தில் ஏந்தித் திருநடம் புரிந்து, அரவத்தைச் சடையில் கொண்டு விளங்கும் அந்தணனாகிய ஈசன் மேவி விளங்கும், அழகிய குரவ மலர் பூக்கும் பொழில் சூழ உள்ள குரங்காடு துறையைப் பரவித் தொழுது போற்ற, இடர் தரும் வலிமையான வினை யாவும் கெட்டு அழியும்.

373. விண்டார்புர மூன்றும் எரித்த விமலன்
இண்டார்புறங் காட்டிடை நின்றெரி யாது
வண்டார்கரு மென்குழல் மங்கையொர் பாகம்
கொண்டா(ன்) நகர் போல்குரங் காடுதுறையே.

தெளிவுரை : பகைமை கொண்ட முப்புரத்தை எரித்த விமலனாகிய ஈசன், இண்டு மிகுந்த மயானத்தில் நெருப்பேந்தி நடம் புரிந்து வண்டார்க்கு மென் குழலம்மையாகிய உமையவனை ஒரு பாகம் கொண்டு விளங்கும் நகர் குரங்காடுதுறை.

374. நிறைவில்புறங் காட்டிடை நேரிழை யோடும்
இறைவில்லெரி யான்மழு வேந்திநின்றாடி
மறையின்னொலி வானவர் தானவர் ஏத்தும்
குறைவில்லவன் ஊர்குரங் காடு துறையே.

தெளிவுரை : எக்காலத்திலும் நிறைவு கொள்ளாத இயல்புடைய மயானத்தில், இறவாது எஞ்ஞான்றும் எரியும் நெருப்பும் மழுவும் கரத்தில் ஏந்தி உமாதேவியோடு நடம் புரியவும், வேதங்களின் ஒலியும் வானவர்களும் அசுரர்களும் தொழுது போற்றி நிற்க, குறைவற்றவனாகிய ஈசன் விளங்குகின்ற ஊர், குரங்காடுதுறை ஆகும்.

375. விழிக்கும்நுதல் மேலொரு வெண்பிறை சூடித்
தெழிக்கும் புறக் காட்டிடைச் சேர்ந்தெரி யாடிப்
பழிக்கும்பரி சேபலி தேர்ந்தவன் ஊர்பொன்
கொழிக்கும் புனல் சூழ்குரங் காடு துறையே.

தெளிவுரை : நெற்றியில் விளங்கும் நெருப்பு விழிக்கு மேல் வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடி, யாவற்றையும் அடங்கச் செய்யும் மயானத்தில் நின்று, நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடல் செய்து, பிறர் பழிக்கும் தன்மையில் பிச்சை ஏற்ற ஈசன் விளங்கும் ஊர் என்பது, பொன்போன்ற சிறப்பும், செல்வமும் கொழிக்கும் புனல் வளம் பொருந்திய குரங்காடுதுறை ஆகும்.

376. நீறார்தரு மேனிய(ன்) நெற்றியொர் கண்ணன்
ஏறார்கொடி எம்மிறை ஈண்டுஎரி யாடி
ஆறார்சடை அந்தணன் ஆயிழை யாளோர்
கூறா(ன்) நகர் போல்குரங் காடு துறையே.

தெளிவுரை : ஈசன், திருவெண்ணீற்றைத் திருமேனியில் தரித்தவன்; நெற்றியில் நெருப்புக் கண் உடையவன்; இடபத்தைக் கொடியாகக் கொண்ட எம் இறைவன்; நெருப்பினைக் கரத்தேந்தி ஆடல் புரிபவன்; கங்கையைச் செஞ்சடையில் பொருந்திய அந்தணன்; உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு அர்த்த நாரியாய் மேவுபவன். அப்பெருமான் விளங்கும் நகர், குரங்காடுதுறை.

377. நளிரும்மலர்க் கொன்றையும் நாறு கரந்தைத்
துளிருஞ்சுல விச்சுடு காட்டெரி யாடி
மிளிரும்அர வார்த்தவன் மேவிய கோயில்
குளிரும்புனல் சூழ்குரங் காடு துறையே.

தெளிவுரை : கொன்றை மலரும், மணம் வீசும் திருநீற்றுப் பச்சையும் தரித்துச் சுடுகாட்டில் நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடல் செய்து, ஒளிரும் நாகத்தை அணிந்த ஈசன் மேவும் கோயில், குளிர்ச்சியான நீர் சூழ்ந்த குரங்காடுதுறையாகும்.

378. பழகும்வினை தீர்ப்பவன் பார்ப்பதி யோடும்
முழவம் குழல் மொந்தை முழங்குஎரி யாடும்
அழகன் அயில்மூவிலை வேல்வலன் ஏந்தும்
குழகன் னகர் போல்குரங் காடு துறையே.

தெளிவுரை : உயிரைத் தொடர்ந்து பற்றிப் பழகித் துன்பம் நல்கும் வினையைத் தீர்ப்பவன், உமாதேவியுடன், முழவும் புல்லாங்குழலும், மொந்தையொலியும் முழங்க நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடல் செய்யும் ஈசன். அப் பெருமான், கூர்மையான சூலப்படை ஏந்திய அன்பன். அவன் வீற்றிருக்கும் நகர் குரங்காடு துறை ஆகும்.

379. வரைஆர்த்து எடுத்தவ் அரக்கன்வலி ஒல்க
நிரையார்விர லால்நெரித் திட்டவன் ஊராம்
கரையார்ந்திழி காவிரிக் கோலக் கரைமேல்
குரையார்பொயில் சூழ்குரங் காடு துறையே.

தெளிவுரை : கயிலை மலையை ஆரவாரித்து எடுத்த இராவணனுடைய வலிமை அழியுமாறு, ஒலி முழக்கம் செய்து அருள் வழங்கும் திருப்பாத மலரின் விரலால் நெரித்த ஈசன் விளங்குகின்ற ஊர் கரையின் சிறப்புடைய காவிரியின் அழகிய கரைமேல் செறிந்து விளங்கும் பொழில் சூழந்த குரங்காடுதுறை ஆகும்.

380. நெடியானொடு நான்முகனும்நினை வொண்ணாப்
படியாகி பண்டங்க னின்றெரி யாடி
செடியார்தலை யேந்திய செங்கண்வெற் ளேற்றின்
கொடியானகர் போல்குரங் காடு துறையே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காண முடியாதவாறு விளங்கியும், நெருப்பைக் கரத்தில் ஏந்திப் பண்டரங்கம் என்னும் ஆடல் செய்தும், பிரம கபாலம் ஏந்தியும் இடபக் கொடியும் உடைய ஈசன் நகர், குரங்காடுதுறையாகும்.

381. துவராடையர் வேடமலாச் சமண் கையர்
கவர்வாய்மொ ழிகாதல் செய் யாதவன் ஊராம்
நவையார்மணி பொன்னகில் சந்தன முந்திக்
குவையார்கரை சேர்குரங் காடு துறையே.

தெளிவுரை : பௌத்தர் மற்றும் சமணர் கூறுகின்ற ஐயம் தரும் சொற்களை விரும்பாத ஈசன் ஊர், நவமணிகளும் பொன்னும் அகிலும் சந்தனமும் முந்திச் கொண்டு சேர்க்கும் குரங்காடுதுறை ஆகும். இது நகரின் செல்வ வளமும் ஈசன் புகழ் வளமும் உணர்த்துவாதாயிற்று.

382. நல்லார்பயில் காழியுள் ஞானசம் பந்தன்
கொல்லேறுடை யான்குரங் காடு துறைமேல்
சொல்லார்தமிழ் மாலைபத் தும்தொழு தேத்த
வல்லாரவர் வானவ ரோடுறை வாரே.

தெளிவுரை : நற்பண்பாளர்கள் விளங்குகின்ற சீகாழி நகரில் மேவும் ஞானசம்பந்தர், இடப வாகனத்தை உடைய ஈசன் வீற்றிருக்கும் குரங்காடுதுறை என்னும் தலத்தின் மீது, சொற்களில் சிறப்பான தமிழ்மாலையாக உரைத்த இத் திருப்பதிகம் கொண்டு தொழுது ஏத்த வல்லார், சிறப்பான முத்திப் பேற்றினை அடைந்து ஆங்கு உள்ளவர்களோடு மகிழ்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

172. திருஇரும்பூளை (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

383. சீரார் கழலே தொழுவீர் இது செப்பீர்
வாரார்முலை மங்கையொடும் உடன்ஆகி
ஏரார் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
காரார்கடல் நஞ்சமுது உண்ட கருத்தே.

தெளிவுரை : ஈசனாரின் சிறப்பான புகழ்க் கழலைத் தொழுபவர்களே ! உமாதேவியை உடனாகக் கொண்டு அழகிய இரும்பூளை என்னும் தலத்தை இடமாகக் கொண்ட ஈசன், பாற்கடலில் தோன்றிய கொடிய நஞ்சினை அமுது என உண்டு உயிர்களைக் காத்தருள் புரிந்த கருத்து யாது என்று உரைப்பீராக.

384. தொழலார் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார்மொழிக் கோல்வளை யோடுடன் ஆகி
எழிலார் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
கழல்தான்கரி கானிடையாடு கருத்தே.

தெளிவுரை : தொழுது வணங்குதற்குரிய ஈசனார் திருக்கழலைத் தொழுது போற்றும் திருத்தொண்டர்காள் ! குழல் போன்ற இனிய மொழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு எழில் பெருகும் இரும்பூளை என்னும் பதியை இடமாகக் கொண்டு விளங்கும் ஈசனார் திருக்கழல், மயானத்தில் நடமாடும் கருத்து என்கொல் எனப் பகர்வீராக.

385. அன்பாலடி கைதொழுவீரறி யீரே
மின்போல் மருங்குல் மடவாளொடு மேவி
இன்பாய் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
பொன்போற் சடையிற்புனல் வைத்த பொருளே.

தெளிவுரை : அன்புடன் ஈசனார் திருவடியைக் கைதொழுது போற்றும் அன்பரீர் ! மின்னலைப் போன்ற இடை உடைய உமாதேவியுடன் மேவி மன்னுயிர்களுக்கு இன்பம் நல்கும்முகத்தான் இரும்பூளை ! என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான், பொன் போன்ற சடையின்கண் கங்கை வைத்த சிறப்பினை ஏத்திப் பரவுவீராக.

386. நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி
இச்சித்து இரும் பூளை இடங்கொண்ட ஈசன்
உச்சித்தலை யிற்பலி கொண்டுழல் ஊணே.

தெளிவுரை : பெருமானை விரும்பித் தொழுது போற்றுகின்ற பெருமக்களே ! திருக்கச்சியில் பொலிவுடன் முப்பத்திரண்டு அறங்கள் செய்தும் பூசித்தும் மகிழும் காமாட்சியுடன், தழுவக் குழைய வீற்றிருந்து மிகுந்த இச்சையுடன் இரும்பூளை என்னும் தலத்தில் இடம் கொண்டு வீற்றிருக்கும் ஈசன் பிரம கபாலம் ஏந்தி, உணவு பலி கொள்ளும் கருத்து யாது என, நமக்கு விளம்புவீராக.

387. சுற்றார்ந்தடியே தொழுவீர் இது சொல்லீர்
நற்றாழ்குரல் நங்கையொடும் உடனாகி
எற்றே இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
புற்றாடரவோ டென்பு பூண்ட பொருளே.

தெளிவுரை : அடியார்கள் சூழ இருந்து திருவடி மலரைத் தொழுது போற்றும் சீலர்களே ! நன்று நீண்ட குழல் உடைய உமாதேவியுடன் வீற்றிருந்து இரும்பூளை என்னும் பதியில் மேவும் ஈசன் புற்றில் விளங்கும் அரவமும் எலும்பும் அணிகலனாகக் கொண்டு விளங்கும் பொருள் யாது என உரைப்பீராக.

388. தோடார்மலர் தூய்த்தொழு தொண்டர்கள் சொல்லீர்
சேடார்குழற் சேயிழை யோடுடனாகி
ஈடா இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
காடார்கடு வேடுவன் ஆன கருத்தே.

தெளிவுரை : இதழ்கள் விளங்கும் மலர்களைத் தூவி இறைவனைத் தொழுது போற்றும் திருத்தொண்டர்காள் ! அழகு திகழும் அடர்த்தியான கூந்தலை உடைய உமாதேவியை உடனாகக் கொண்டு பெருமையாக இரும்பூளையில் வீற்றிருக்கும் ஈசன், கானகத்தில் அர்ச்சுனருக்குப் பாசுபதம் அளிக்கும் மாண்பில் வேடுவ வடிவம் கொண்ட கருத்து யாது என விளம்புவீராக.

389. ஒருக்கும்மனத் தன்பருள் ளீர்இது சொல்லீர்
பருக்கைமத வேழம் உரித்துஉமை யோடும்
இருக்கை இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
அரக்கன்னுரந் தீர்த்தரு ளாக்கிய வாறே.

தெளிவுரை : மனத்தைப் புலன் வழிச் செல்ல விடாது அடக்கிக் காத்து அன்புடைய பக்தர்கள் இடையில் விளங்கும் மெய்யன்பர்களே! பெரிய துதிக்கையுடைய மதம் கொண்ட யானையின் தோலை உரித்து உமாதேவியோடு இரும்பூளை என்னும் பதியில் வீற்றிருக்கும் ஈசன், இராவணன் மலையைப் பெயர்த்தபோது அவனுடைய வலிமையை அடக்கிப் பின்னர் அவன் செயலே நல்லருள் புரிவதற்குக் காரணமாக்கிய சிறப்பு என்னே என விளம்புவீராக.

390. துயராயின நீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
கயிலார் கருங்கண்ணியொடும் உடனாகி
இயல்பா இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரியாகிய மொய்ம்பே.

தெளிவுரை : வினைப்பயன் காரணமாய் நேரும் துன்பம் யாவும் களையப்பெற்றுத் தொழுது மகிழும் திருத் தொண்டர்கள் ! கயல் போன்று அருள் நோக்கால் மன்னுயிர்களப் பேணிக் காக்கும் கண்கள் உடைய உமாதேவியுடன், இயல்புடன் இரும்பூளை என்னும் பதியில் வீற்றிருக்கும் ஈசன், தேடிச் சென்றவர்களாகிய திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் தீப்பிழம்பாகிய சிறப்பு என்னே ! விளம்புவீராக.

391. துணைநன்மலர் தூய்தொழுந் தொண்டர்கள் சொல்லீர்
பணைமென் முலைப் பார்ப்பதியோடுட னாகி
இணையில் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே.

தெளிவுரை : நன்மலர்களால் தூவித்தொழுது போற்றும் திருத்தொண்டர்கள் ! பார்வதி தேவியை உடனாகக் கொண்டு இணையில்லாத இரும்பூளையில் வீற்றிருக்கும் ஈசன், சமணர் சாக்கியர் ஆகியோர் சார்ந்து அணைந்து வழிபடாதவாறு ஆக்கியது என்கொல் ! விளம்புவீராக.

392. எந்தை இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
சந்தம்பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்திவை வல்லார்
பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே.

தெளிவுரை : எம் தந்தையாகிய, இரும்பூளை என்னும் பதியை இடமாகக் கொண்டு வீற்றிருக்கும் ஈசன்பால், சந்தப் பாடல்கள் கொண்டு விளங்கும் சண்பை நகர் மேவிய ஞானசம்பந்தரின் செந்தண்மை கொண்ட இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், மாயையால் பீடிக்கப்படும் பந்த பாசத்திலிருந்து நீங்கியவர் ஆவர்.


திருச்சிற்றம்பலம்

173. திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

393. சதுரம்மறை தான்துதி செய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ்மறைக் காட்டுரை மைந்தா
இது நன்கிறை வைத்தருள் செய்க எனக்குன்
கதவம்திருக் காப்புக்கொள்ளுங் கருத் தாலே.

தெளிவுரை : ஒன்றுக்கொன்று மாறுபாடு இன்றிப் பொருந்த விளங்கி மேவும் நான்மறை துதிசெய்து வணங்குகின்ற சிறப்புடைய பொழில் சூழந்த பதி திருமறைக்காடு. இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அழகனே ! திருக்கதவம் காப்பிடுமாறு அருள்புரிக.

394. சங்கம்தர ளம்அவை தான்கரைக்கு எற்றும்
வங்கக்கடல் சூழ்மறைக் காட்டுறை மைந்தா
மங்கைஉமை பாகமு மாகஇது என்கொல்
கங்கைசடை மேலடை வித்த கருத்தே.

தெளிவுரை : சங்கு, முத்து ஆகியவை கரைக்கு உந்தித் தள்ளும் வங்கக் கடல் சூழும் மறைக்காட்டில் வீற்றிருக்கும் ஈசனே ! உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கி இருக்கக் கங்கையைச் சடைமேல் சேர்ந்து இருக்குமாறு செய்த கருத்து என்கொல் !

395. குரவம்குருக் கத்திகள் புன்னைகள் ஞாழல்
மருவும் பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா
சிரமும் மல ருந்திகழ் செஞ்சடை தன்மேல்
அரவம்மதி யோடுஅடை வித்தல் அழகே.

தெளிவுரை : குராமரம், குருக்கத்தி (மாதவி), புன்னை, புலிநகக் கொன்றை ஆகியனை மருவி ஓங்கும் பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் வீற்றிருக்கும் ஈசனே ! தலை மாலை அணிந்து மலர் சூடியும் திகழும் செஞ்சடையின் மீது அரவமும், சந்திரனும் பொருந்தி இருக்குமாறு செய்த அழகுதான் என்னே !

396. படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
மடலம் பொழில்சூழ்மறைக் காட்டுறை மைந்தா
உடலம்உமை பங்கம தாகியும் என்கொல்
கடல்நஞ்சுஅமு தாவது உண்ட கருத்தே.

தெளிவுரை : செம்பவளமும் முத்துக்களும் கொண்டு விளங்கி, அகன்ற இலைகள் கொண்ட பொழில் சூழும் மறைக்காட்டில் மேவும் ஈசனே ! உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு இருந்து பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமென உட்கொண்ட கருத்து என் கொல் !

397. வானோர்மறை மாதவத் தோர்வழி பட்ட
தேனார்பொழில் சூழ்மறைக் காட்டுறை செல்வா
ஏனோர்தொழு தேத்த இருந்தநீ என்கொல்
கான்ஆர்கடு வேடுவன்ஆன கருத்தே.

தெளிவுரை : தேவர்களும், மறைகளும், மாதவத்தை உடைய முனிவர்களும் வழிபட்ட தேன் சொரியும் பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் வீற்றிருக்கும் செல்வனே ! ஏனைய அன்பர்கள் தொழுது ஏத்த இருந்த தேவரீர், காட்டில் விளங்கும் கடுமை மிகுந்த வேடுவக் கோலம் கொண்டு விளங்கிய கருத்து என் கொல்.

398. பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய் மாமறைக் காடா
உலகேழுடை யாய்கடை தோறுமுன் னென்கொல்
தலைசேர்பலி கொண்டதில் உண்டது தானே.

தெளிவுரை : பல காலம் வேதங்கள் தேவரீரின் திருப்பாதங்களைப் போற்ற மலர் தூவி வழிபாடு செய்யும் சிறப்பு மிக்க மறைக்காட்டில் விளங்கும் ஈசனே ! ஏழு உலகங்களும் உடைய பெருமானே ! தாருக வனத்து முனிவர் இல்லங்கள்தோறும் சென்று பலி ஏற்று உண்டது என்கொல்.

399. வேலாவல யத்தய லேமிளிர் வெய்தும்
சேலார்திரு மாமறைக் காட்டுறை செல்வா
மாலோடயன் இந்திரன் அஞ்சமுன் என்கொல்
காலார்சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே.

தெளிவுரை : கடலால் சூழப்பட்டு அதன் பக்கத்தில் மிளிர்ந்து விளங்கியும் சேல்கள் பெருகும் நீர் வளம் கொண்டுள்ள செழிப்பு மிகுந்த மறைக் காட்டில் விளங்குகின்ற செல்வப் பெருந்தகையே ! திருமாலும், பிரமனும், இந்திரனும் அஞ்சுமாறு, காலனைப் போன்று உயிரை வாட்டுகின்ற பாணத்தை எய்யும் வில்லை உடைய மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய கருத்து என்கொல்.

400. கலங்கொள்கடல் ஓதம் உலாவு கரைமேல்
வலங்கொள்பவர் வாழ்த்திசைக் கும்மறைக் காடா
இலங்கையுடை யான்அடர்ப் பட்டிடர் எய்த
அலங்கல்விரல் ஊன்றி அருள்செய்த வாறே.

தெளிவுரை : மரக்கல்ங்கள் செல்லும் கடலின் கரையில் விளங்கி, வலம் வரும் அடியவர்களின் வாழ்த்தொலிகளை முழுக்குகின்ற மறைக்காட்டில் விளங்கும் பரமனே ! இராவணன் கயிலை மலையின்கீழ் இடர் உற்று துன்பம் எய்திட மலர் போன்ற திருப்பாத விரல் ஊன்றி அருள் செய்த மாண்பு என்னே !

401. கோனென்றுபல கோடி உருத்திரர் போற்றும்
தேனம்பொழில் சூழ்மறைக் காட்டுமறை செல்வா
ஏனங்கழு கானவர் உன்னைமுன் என்கொல்
வானந் தல மண்டியும் கண்டிலா வாறே.

தெளிவுரை : தலைவன் என்று பலகோடி உருத்திரர் போற்றும் தேன் சொரியும் பொழில் சூழும் மறைக்காட்டில் விளங்குகின்ற செல்வப் பெருந்தகையே ! பன்றியாகிய திருமாலும், கழுகாகிய பிரமனும் முறையே பூமியைத் தோண்டிக் குடைந்தும் வானத்தில் உயர்ந்து பறந்தும் தேவரீரைக் கண்டிலாத தன்மை என்கொல் !

402. வேதம்பல வோமம் வியந்தடி போற்ற
ஓதம் உலவும்மறைக் காட்டில் உறைவாய்
ஏதில்சமண் சாக்கியர் வாக்கிவை என்கொல்
ஆதரொடு தாமலர் தூற்றிய வாறே.

தெளிவுரை : வேதங்கள் வேள்விகள் புரிந்து திருவடியைப் பேற்ற கடல் அலைகளின் ஓதம் நிலவும் மறைக்காட்டில் விளங்குகின்ற பெருமானே ! சமணரும் சாக்கியரும் பழிச் சொற்களைக் கூறித் தூற்றுவது என் கொல்.

403. காழிந்தக ரான்தலை ஞானசம் பந்தன்
வாழிம் மறைக் காடனை வாயந்தறி வித்த
ஏழின்னிசை மாலையீ ரைந்திவை வல்லார்
வாழியுல கோர்தொழ வானடை வாரே.

தெளிவுரை : சீகாழி நகரினை உடைய, வேதத்தை உணர்ந்த ஞானசம்பந்தர், உயிர்களை வாழ வைக்கும் மறைக்காட்டு நாதனைத் தரிசிப்பதற்குத் திருக்கதவம் திறக்கப்பெறும் அருள் பெற்றுத் தரிசித்து அறிவித்த ஏழிசை மல்கும் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் நனி வாழ்வார்களாக; உலகத்தோர் யாவராலும் போற்றப்பெறுமாறு புகழுடன் திகழ்வார்களாக; மறுமையில் சிறப்பான வீடு பேறு அடைவார்களாக.

திருச்சிற்றம்பலம்

174. திருச்சாய்க்காடு (அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

404. நித்த லுந்நிய மஞ்செய்து நீர்வலந் தூவிச்
சித்தம் ஒன்றவல் லர்க்குஅருளும்சிவன் கோயில்
மத்த யானையின் கேடும்வண் பீலியும் வாரித்
தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே.

தெளிவுரை : நித்தமும் நியமத்துடன் பெருகி ஒழுகும் தியானமும் மந்திர உச்சாடனம் செய்து சித்தம் ஒன்றி வழிபாடு செய்பவர்களுக்கு அருள் புரியும் சிவபெருமான் விளங்குகின்ற கோயில், யானைத் தந்தமும் மயிற்பீலியும் வாரித் தந்து மேவும் காவிரி நீர் பாயும் சாய்க்காடு ஆகும்.

405. பண்த லைக்கொண்டு பூதங்கள் பாட நின்றாடும்
வெண்த லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.

தெளிவுரை : பூத கணங்கள் பண்களில் பொருந்தி விளங்கும் இசைப் பாடல்களைப் பாட, மண்டை ஓடுகள் மல்கும் சுடுகாட்டில் நின்று ஆடும் வேதநாயகனாகிய ஈசன் திருக்கோயில் மேகம் திகழ்ந்து விளங்கவும், பேரிகை போன்ற இடி முழக்கம் பரவி விளங்க, மகிழ்ந்து தண்டலை மயில்கள் ஆட விளங்கும் சாய்க்காடு ஆகும்.

406. நாறு கூவிள நாகிள வெணமதி யத்தோடு
ஆறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலைத்
தாறு தண்கத லிப்புதல் மேவுசாயக் காடே.

தெளிவுரை : நறுமணம் கமழும் வில்வம் இளம்பிறைச் சந்திரன் ஆகியவற்றுடன் கங்கை சூடுகின்ற, தேவர் தலைவனாகிய சிவபெருமான் உறையும் கோயில் சுவை மிகும் தென்னை, மாமரங்களின் சோலைகளும் குலைகள் மேவும் வாழை மரங்களின் புதர்களும் பெருகி விளங்கும் சாய்க்காடு ஆகும்.

407. வரங்கள் வண்புகழ் மன்னியஎந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்க லோசையும் ஈட்டிய சரக்கொடும் ஈண்டித்
தரங்க நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.

தெளிவுரை : வள்ளல் தன்மையும் புகழும் விளங்குமாறு வரங்கள் தந்து பெருமையுடன் திகழும் எம் தந்தையாகிய சிவபெருமான், அன்பு கலந்து ÷ பாற்றி வழிபடுதல் செய்யாது பகை கொண்டு திரிந்த அசுரர்களின் புரங்கள் மூன்றினையும் சாம்பலாகுமாறு கணையால் எய்த பெருமான் ஆவார். அப் பரமன் கோயில் கொண்டு விளங்குவது, மரக்கலன்கள் வழியாகக் கடலில் இருந்து கரையில் பொருட்களை இறக்கிவைப்பதும் ஈட்டிய பொருள்களை மீண்டும் உப்பங்கழிகளின் வாயிலாகக் கரை சேர வைக்கும் சாயக்காடு ஆகும்.

408. ஏழை மார்கடை தோறும் இடும்பலிக்கு என்று
கூழை வாளரவு ஆட்டும் பிரான் உறை கோயில்
மாழை ஒண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
தாழை வெண்மடற் கொய்துகொண் டாடுசாய்க் காடே.

தெளிவுரை : தாருக வனத்தில் உறைகின்ற முனிவர்கள் இல்லந்தோறும் சென்று மாதர்கள் இடுகின்ற பிச்சை ஏற்கும் தன்மையில் அழகிய ஒளிமிக்க பாம்பினை ஆட்டுகின்ற பரமன் உறைகின்ற கோயிலானது, மான் போன்ற ஒளிமிக்க கணணும் வளையணிந்த கையும் உடைய நுளைச்சியப் பெண்கள் நீண்ட பூப்போன்ற தாழை மடல்களைக் கொய்து மகிழ்ந்து அணிந்து நறுமணம் திகழ விளங்கும் சாய்க்காடு ஆகும்.

409. துங்க வானவர் சூழ்கடல் தாம்கடை போதில்
அங்கொர் நீழல் அளித்தஎம் மான்உறை கோயில்
வங்கம் அங்குஒளிர் இப்பியு முத்து மணியும்
சங்கும் வாரித் தடங்கடல் உந்துசாயக் காடே.

தெளிவுரை : உயர்ந்த நிலை கொண்ட வானவர்கள் பாற்கடலைச் சூழ்ந்து கடைந்தபோது வெளிப்பட்ட நஞ்சின் வெம்மை கொடுமை செய்ய, அபயம் அளித்து அதனை உட்கொண்டு இனிமையளித்த ஈசன் உறையும் கோயில், வங்கக் கடலில் ஒளிர்ந்து விளங்கும் சிப்பியும் முத்தும், மணியும், சங்கும் வாரி அலைகளில் வாயிலாக உந்திச் சேரும் சாய்க்காடு ஆகும்.

410. வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதன்வண் டாடிய புன்னைத்
தாது கண்டு பொழில் மறைந்து ஊடுசாய்க் காடே.

தெளிவுரை : ஈசன், வேதத்தை விரித்து ஓதும் திருநாவினர்; வெண்மையான பளிங்கு போன்ற குழைழைக் காதில் அணிந்துள்ளவர்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அணிகலனாகத் திகழும் கண்டத்தை உடையவர். அப்பெருமான் உறைகின்ற கோயில், ஆடி குருக்கப் புன்னை மரத்தின் மகரந்தத் தாது கண்டு பொழிலில் மறைந்து நின்று ஊடுதல் கொள்ளும் சாய்க்காடு ஆகும்.

411. இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன்று எடுத்த
அரக்கன் ஆக நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக்கு லாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக்கு லாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே.

தெளிவுரை : புகழும் பொலிவும் விளங்கி மேவும் நீண்ட கயிலை மலையைப் பற்றி ஆராவாரம் செய்து எடுத்த இராவணன் உடல் நெரித்துப் பின்னர் அவன் மனங் கசிந்து போற்ற அருள் செய்த பரமன் விளங்கும் கோயில், நறுமணம் குலவி விளங்கும் மல்லிகை, சண்பகம் மற்றும் மலர்களை வரையாது வழங்கும் தருக்கள் மிகுந்த தண்பொழில் நிறைந்த சாய்க்காடு ஆகும்.

412. மாலி னோடயன் காண்டற்கு அரியவர் வாய்ந்த
வேலை யார்விடம் உண்டவர் மேவிய கோயில்
சேலி னேர்விழி யார்மயிலாலச் செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றமாய்க் காடே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியவராகவும், எதிர் நோக்காத நிலையில் பாற்கடலில் தோன்றி விடத்தை உண்டு காத்தருள் செய்த ஈசன் மேவும் கோயில், சேல் போன்ற விழியுடைய மகளிர் மயில் போன்ற நடை கொண்டு விளங்கவும், செருந்தியும், பொன்போன்ற மஞ்சள் வண்ணம் கொண்ட மலர்கள் பூத்தொளிரும் சாய்க்காடு ஆகும்.

413. ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க்கு என்றும்
ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழந்து பொலிந்தசாயக் காடே.

தெளிவுரை : சமணர்களுக்கும் சாக்கியர்களுக்கும் பிரியமாக அறிவதற்கு அரியவனாகிய ஈசன் உறைகின்ற கோயில், மாட மாளிகைகள் சூழ்ந்து விளங்குகின்ற சிறப்புடையதும் பூக்கள் நிறைந்த தூய்மையான நீர்வளம் மிக்க குளங்களும் சூழ்ந்து விளங்கும் சாய்க்காடு ஆகும்.

414. ஏனை யோர்புகழ்ந்து ஏத்திய எந்தைசாய்க் காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோனவில் பத்தும்
ஊனம் இன்றி யுரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடினிது ஆள்வர்இம் மானிலத் தோரே.

தெளிவுரை : உபமன்யு முனிவர் முதலாகப் பெருமக்கள் பலரும் புகழ்ந்து பூசித்து மகிழ்ந்த எந்தை சாய்க்காட்டு நாதனை, ஞானசம்பந்தராகிய காழியர்கோன் நவின்ற இத் திருப்பதிகத்தைக் குறைவுபடாது ஓதுபவர்கள் மறுமையில் வானவர் நாட்டில் விளங்குவார்கள்; இம்மையில் - இப்பூவுலகில் புகழுடன் எல்லா வளங்களையும் உற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

175. திரு÷க்ஷத்திரக் கோவை (பொது)

திருச்சிற்றம்பலம்

415. ஆரூர்தில்லை யம்பலம் வல்லம் நல்லம்
வடகச்சியும் அச்சிறு பாக்கநல்ல
கூரூர்குட வாயில் குடந்தை வெண்ணி
கடல்சூழ்கழிப் பாலைதென் கோடிபீடார்
நீரூர்வயல் நின்றியூர் குன்றியூருங்
குருகாவையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர்நன் னீர்ளவயல் நெய்த் தானமும்
பிதற்றாய் பிறை சூடிதன் பேரிடமே.

தெளிவுரை : திருவாரூர், தில்லையம்பலம், வல்லம், நல்லம், மேலான திருக்கச்சி, அச்சிறுபாக்கம், நன்மையின் கூர்ப்புடைய குடவாயில், குடந்தை, வெண்ணியூர், திருக்கழிப்பாலை, தென்கோடிக்கரை, பீடுடைய நீர் வளமும் வயல் வளமும் பொலியும் நின்றியூர், குன்றியூர், குருகாவூர், நாரையூர், கானப்பேரூர், வயல்விளங்கு திருநெய்த்தானம் ஆகிய தலங்கள்தோறும் எழுந்தருளியுள்ள பிறை சூடிய பெருமானைத் தன்னிலை மறந்து தியானம் செய்ம்மின்.

416. அண்ணாமலை ஈங்கோயு மத்தி முத்தாறு
அகலாமுது குன்றம் கொடுங்குன்றமும்
கண்ணார்கழுக் குன்றம் கயிலை கோணம்
பயில்கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான்
பரங்குன்றம் பருப்பதம் பேணி  நின்றே
எண்ணாயிர வும்பகலும் ....................
இடும் பைக்கடல் நீநதலாம் காரணமே.

தெளிவுரை : திருவண்ணாமலை, ஈங்கோய் மலை, திருமுதுகுன்றம், கொடுங்குன்றம், திருக்கண்ணார் கோயில், திருக்கழுக்குன்றம், திருக்கயிலை, திரிகோணமலை, திருக்கற்குடி, திருக்காளத்தி, திருவாட் போக்கி, பண்ணார் மொழி மங்கையாகிய உமாதேவியை பாகமாகக் கொண்டு விளங்கும் திருப்பரங்குன்றம், திருப்பருப்பதம் ஆகிய திருத்தலங்களைப் பேணி நின்று இரவும் பகலும் எண்ணித் துதிக்கத் துயர்க் கடலிலிருந்து கரையேறுதல் ஆகும்.

417. அட்டானம்என்று ஓதிய நாலிரண்டும்
அழகன்னுறை காவனைத் தும்துறைகள்
எட்டாம்திரு மூர்த்தியின் காடொன்பதும்
குளமூன்றும் களம்அஞ்சும் பாடிநான்கும்
மட்டார்குழ லாள்மலை மங்கைபங்கன்
மதிக்கும்இட மாகிய பாழிமூன்றும்
சிட்டானவன் பாசூர்என் றேவிரும்பாய்
அரும்பாவங்கள் ஆயின தேய்ந்தறவே.

தெளிவுரை : ஈசன், வீரட்டானம் என்ற சொல்லப்படும் திருக்கண்டியூர், திருக்கடவூர், திருப்பறியலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி, திருவதிகை, திருக்கோவலூர், திருவழுவை திருத்தலங்களில் வீற்றிருக்கும் அழகன்; திருக்கோலக்கா, திருக்குரக்கா, திருக்கோடிக்கா, திருவானைக்கா, திருநெல்லிக்கா என்ற வழங்கப் பெறும் தலங்களில் வீற்றிருப்பவன்; அன்பில் ஆலந்துறை, திருமாந்துறை, திருபாற்றுறை, கடம்பந்துறை, பராய்த்துறை, பேணு பெருந்துறை, வெண்துறை, அரத்துறை எனத் துறைகள் எட்டும் விளங்குபவன், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, தலைச்சங்காடு, கொள்ளிக்காடு, திருமறைக்காடு, திருநெறிக்காரைக்காடு, திருவாலங்காடு, திருவேற்காடு, தலையாலங்காடு எனக் காடு ஒன்பதிலும் விளங்குபவன்; குளம் என்று வழங்கப்பெறும் கடிக்குளம் முதலானன மூன்ற தலங்களிலும் விளங்குபவன்; களம் என வழங்கப்பெறும் திருவேட்களம், நெடுங்களம், திருவஞ்சைக்களம் போன்ற தலங்கள் ஐந்திலும் வீற்றிருப்பவன்; பாடி என வழங்கப் பெறும் திருஎதிர்கொள்பாடி, திருமழபாடி, திருவாய்ப்பாடி, திருவலிதாயம் (பாடி என வழங்கப்படுவது) நான்கு திருத்தலங்களிலும் வீற்றிருப்பவன்; தேன் கமழும் கூந்தலை உடைய மலைமகளைப் பாகம் கொண்டு விரும்பி வீற்றிருக்கும் பாழி என வரும் அரதைப் பெரும்பாழி முதலான மூன்றிலும் விளங்குபவன். அப்பெருமான் திருப்பாசூர் என்னும் தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்க, விரும்பி ஏத்திப் பரவுபவர் தம் பாவங்கள் யாவும் விலகும்.

418. அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள்ளைப்
பொடிபூசி ஆறறி வானமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
திரு நனி பள்ளிசீர் மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான்
விரும்பும் மிடைப் பள்ளிவணி சக்கரமால்
உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி
உணராய்மட நெஞ்சமே உன்னி நின்றே.

தெளிவுரை : ஈசன், அறத்தின் இடமாக உள்ள அகத்தியான்பள்ளியில் திருநீறு பூசி விளங்குபவன்; கங்கை தரித்துத் திருக்காட்டுப் பள்ளியில் உறைபவன்; சிறப்பை அள்ளி வழங்கும் சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திருநனிபள்ளி, சீர் பெருகு மயேந்திரப் பள்ளியில் வீற்றிருப்பவன். பிறப்பற்றவனாக விளங்கும் அப்பெருமான், கங்கையைச் சடையில் தரித்து விளங்க, ஆழிப் படை உடைய திருமால் அன்பால் திருவடி போற்றி வணங்கி நிற்க, பின்னும் பள்ளி என வழங்கப் பெறும் தலங்களில் விளங்கும் திருத்தலங்களை உணர்ந்த, நெஞ்சமே, போற்றித் திகழ்வாயாக.

419. ஆறைவட மாகற லம்பரையாறு
அணியார் பெரு வேரூர் விளமர்தெங்கூர்
சேறைதுலை புகலூர் அகலாது
இவை காதலித் தானவன் சேர்பதியே.

தெளிவுரை : திருமாகறல், அம்பர்மாகாளம், திவையாறு, பெருவேளூர், இளமர், திருத்தெங்கூர், திருச்சேறை புகலூர் ஆகிய திருத்தலங்கள் ஈசன் சேர்பதியாகும்.

420. மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரு
மதிகூர் திருக்கூடலில் ஆலவாயும்
இனவஞ் சொல்இலா இடைமா மருதும்
இரும்பைப் பதிமாகாளம் வெற்றியூரும்
கனமஞ்சின மால்விடை யான்விரும்பும்
கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென் சொலில் தஞ்சம்என் றேநினைமின்
தவமாமலம் ஆயின தானறுமே.

தெளிவுரை : வஞ்சம் கொண்ட மனத்துடையவர்கள் எதிர் நிற்பதற்கு அஞ்சி வெளியேற, அழகு பொருந்திய ஞானிகள் மிகுந்துள்ள கூடல் நகரில் விளங்கும் திருஆலவாயும் வன்மையான சொல் கலவாத சிறப்புடைய திருவிடைமருதூரும், இரும்பை மாகாளமும், வெற்றி மிக்க இடபத்தை வாகனமாகக் கொண்ட ஈசன் விரும்பி மேவும் தலமாகும். திருக்கருகாவூர், நல்லூர் பெரும்புலியூர் ஆகிய திருத்தலங்களில் அத்தன்மையில் விளங்கும் ஈசனைத் தஞ்சம் என்று நினைமின். அது சிறப்புடைய தவம் ஆகும்; மும்மலங்களும் அற்றுவிலகும்.

421. மாட்டூர்மடப் பாச்சி லாச்சிராம
மயின் பீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம்பூர் படம் பக்கம் கொட்டும்
கடல்ஒற்றியூர் மற்றுறை யூரவையும்
கோட்டூர் திருவா மாத்தூர்கோ ழம்பமும்
கொடுங் கோவலூர் திருக்குண வாயில்

தெளிவுரை : செல்வம் தழைக்கும் பாச்சிலாச்சிராமம், மயிண்டீச்சரம், வாதவூர், வாரணாசி, காட்டூர், கடம்பூர், திருவொற்றியூர், உறையூர், கோட்டூர், திருவாமாத்தூர், கோழம்பம், கொடுங்கோவலூர், திருக்குணவாயில், முதலான தலங்களில் ஈசன் விளங்குபவர்.

422. குலாவுதிங்கட் சடையான் குளிரும் பரிதிநியமம்
போற்றூர்அடி யார்வழிபா டொழியாத்தென்
புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்றூர்வரை யன்றுஎடுத் தான்முடிதோள்
நெரித்தான்உறை கோயில்என்று என்றுநீ கருதே.

தெளிவுரை : திங்களைச் சடையில் தரித்து மகிழ விளங்கும் ஈசன், பரிதி நியமத்தில் விளங்குபவன். போற்றி வழிபடும் அடியவர்கள் ஓய்வின்றித் தொழுகின்ற புறம்பயம், பூவணம், பூழியூர் ஆகிய திருத்தலங்கள், கயிலையைப் பெயர்த்த அரக்கனின் தோளும் முடியும் நெரித்த ஈசன் உறைகின்ற திருத்தலம் என என்றென்றும் கருதுமின். நினைத்துப் போற்றி வழிபடுமின்.

423. நெற்குன்றம் ஓத் தூர்நிறை நீர்மருகல்
நெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுர
நளிர்சோலையும் சேனைமா காளம்வாய்மூர்
கற்குன்றம் ஒன் றேந்தி மழை தடுத்த
கடல்வண்ணனு மாமல ரோனும் காணாச்
சொற்கென்றும் தொலைவிலா தானுறையும்
குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.

தெளிவுரை : நெற்குன்றம், திருவோத்தூர், திருமருகல், நெடுவாயில், திருக்குற்றாலம், வலம்புரம், திருநாகேச்சுரம், மாகாளம், திருவாய்மூர் என மேவும் தலங்களும் திருமாலும் பிரமனும் காணாத பெருமான் உறையும் குடமூக்கும் ஆகும் என ஏத்தித் தொழுமின்.

424. குத்தங்குடி வேதி சூடி புனல்சூழ்
குருந்தங்குடி தேவன் குடிமருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியும்
அலம் புஞ்சலந்தன் சடை வைத்துகந்த
நித்தன் நிம லன்உமை யோடுங்கூட
நெடுங்காலம் உறைவிடம்  என்று சொல்லாப்
புத்தர்புறங் கூறிய புன்சமணர்
நெடும் பொய்களை விட்டு நினைத்துய்மினே.

தெளிவுரை : குத்தங்குடி, வேதிகுடி, குருந்தங்குடி, தேவன்குடி என ஈசன் தங்கி விளங்கி மேவும் வண்மைமிகு குடி என மருவும் பதிகளும், பாவம் தீர்க்கும் மகிமை உடைய கங்கையைத் தன் சடையில் வைத்து உகந்த நித்தியன், நிமலன் உமாதேவியுடன் வீற்றிருக்கும் இடம் என்று புகலாத பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் கூறும் பொய்யுரைகளை ஒதுக்கி, ஈசனையும் அவன் மேவும் திருத்தலங்களையும் எண்ணித் தொழுது உய்வீராக.

425. அம்மானை அருந்தவ மாகிநின்ற
அமரர்பெநரு மான்பதியான வுன்னிக்
கெய்மாமலர்ச் சோலை குலாவு கொச்சைக்
கிறைவன் சிவஞானசம்பந்தன் சொன்ன
இம்மாலையீ ரைந்தும் இருநிலத்தில்
இரவும் பகலும் நினைந் தேத்தி நின்ற
விம்மாவெரு வாவிரும்பும் அடியார்
விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.

தெளிவுரை : அன்பின் தலைப்பட்டு அழகுடன் விளங்குபவனை, தவமாகிய தேவர் பெருமானை, பதிகள் தோறும் வீற்றிருக்கும் சிறப்பினை மனத்தால் தியானம் செய்து, கொச்சை என வழங்கப்பெறும் சீகாழியின் நாதனாகிய சிவஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகத்தை இரவும் பகலும் நினைந்து ஏத்தவல்ல அடியவர்கள், விதி செய்யும் ஆளுமையுடையவர்களாவர் - தலையானவர் ஆவர்; சிவபெருமான் திருவடித் தாமறைரயின்கீழ் விளங்கி மகிழ்ந்திருப்பர்.

திருச்சிற்றம்பலம்

176. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

426. எம்பிரான் எனக்கமுதம்
ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும்
தழலேந்து கையானும்
கம்பமா கரியுரித்த
காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம
புரத்துறையும் வானவனே.

தெளிவுரை : எமது தலைவனாகிய ஈசன் எனக்கு அமுதமாக விளங்குபவர்; தன்னை வணங்கி அடைக்கலமாகுபவர்களுக்குத் தலைவர்; நெருப்பு ஏந்திய கையினர்; யானையின் தோலை உரித்தவர்; கபாலம் ஏந்திய கரத்தினர்; நீலகண்டர்; மணங்கமழும் பொழில் திகழும் பிரமபுரத்தில் வீற்றிருக்கும் பெருமை உடையவர்.

427. தாம்என்று மனந்தளராத்
தகுதியராய் உலகத்துக்கு
ஆம்என்று சரண் புகுந்தார்
தமைக் காக்கும் கருணையினான்
ஒம் என்று மறைபயில்வார்
பிரமபுரத்து உறைகின்ற
காமன்றன் னுடல்எரியக்
கனல் சேர்ந்த கண்ணானே.

தெளிவுரை : உலகில் நேரும் துன்பங்களைக் கண்டு துவளாது, யாவற்றுக்கும் இறைவனே காரணகர்த்தராய் இருந்து, திருக்குறிப்பின் வழியே நடைபெறும் தன்மைத்து எனத் தேர்ந்து அடைக்கலம் புகுந்தவர்களைக் காக்கின்ற கருணையுடையவர், ஈசன். அப் பெருமான் ஓம் என்று மறையவர்களால் போற்றப்படுகின்ற இறைவன். அவர் மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணுடையவராய் விளங்கிப் பிரமபுரத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

428. நன்னெஞ்சே உனைஇரந்தே
நம்பெருமான் திருவடியே
உன்னஞ்செய் திருக்கண்டாய்
உய்வதனை வேண்டுதியேல்
அன்னம்சேர் பிரமபுரத்து
ஆரமுதை எப்போதும்
பன்னஞ்சீர் வாயதுவே
பார்கண்ணே பரிந்திடவே.

தெளிவுரை : நல்ல நெஞ்சமே ! நின்னை இறைவனுக்கு அடைக்கலமாக்கி, நீ உய்தி பெற வேண்டுமென்று கருதினால் அன்னப் பறவை விளங்குகின்ற பிரமாபுரத்தில் வீற்றிருக்கும் அமுதம் போன்ற ஈசனை எப்போதும் வாயார வாழ்த்தி அவன் திருக்கோலத்தைக் கண்ணாரக் காண்பாயாக.

429. சாநாளின்றி மனமே
சங்கைதனைத் தவிர்பிக்கும்
கோன்ஆளும் திருவடிக்கே
கொழுமலர்தூ வெத்தனையும்
தேனாளும் பொழிற்பிரம
புரத்துறையும் தீவணனை
நாநாளு நன்னியமம்
செய்தவன்சீர் நவின்றேத்தே.

தெளிவுரை : மனமே ! சாகும் நாள் வரும் என்று சந்தேகம் கொள்ளற்க. அதனைத் தவிர்க்கும் பெருமான் நின்னை ஆள்பவன். அவன் திருவடிக்கே வளமையான மலர் தூவி எவ்வகைத் தன்மையாலும் ஏத்துக. தேன் விளங்கும் பொழில் கொண்ட பிரமபுரத்தில் உறையும் தீவண்ணம் உடைய நாதனை நாவானது நாள்தோறும் நியமத்துடனும் ஆசார சீலத்துடனும் நவின்று ஏத்துக.

430. கண்ணுதலான் வெண்ணீற்றான்
கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமாம் உருவத்தான்
பிஞ்ஞகன் பேர் பலஉடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப்
பிரமபுரம் தொழவிரும்பி
எண்ணுதலாம் செல்வத்தை
இயல்பாக அறிந்தோமே.

தெளிவுரை : ஈசன், நெற்றியில் கண்ணுடையவன்; திருநீற்றைப் பூசிய மேனியுடையவன்; மணம் மிக்க சடை உடையவன்; இடப வாகனத்தில் வீற்றிருப்பவன்; மங்கையோர் கூறுடைய அர்த்தநாரியாய் விளங்குபவன்; பிஞ்ஞகன் முதலான பேர் ஆயிரம் உடையவன், அப்பெருமான் பெருமையுடன் உயர்வு கொண்டு விளங்கும் புகழ்மிக்க பிரமபுரத்தைத் தொழ வேண்டும் என்னும் எண்ணம் கொள்ளுதலே சிறப்பான செல்வமாகும். அதனை நாம் இயற்கையாக அறிந்தனம்.

431. எங்கேனும் யாதாகிப்
பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கே என்ற அருள்புரியும்
எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயு மலர்ச்சோலைக்
குளிர்பிரம புரத்துறையும்
சங்கேயொத்து ஒளிர்மேனிச்
சங்கரன்றன் தன்மைகளே.

தெளிவுரை : எந்த இடத்தில் எவ்வகையில் பிரந்தாலும் தன்னடியார்க்கு அருள் புரியும் பெருமான், இடப வாகனத்தில் ஏறி தேன் மலர்ச் சோலை சூழ் பிரமபுரத்தில் வீற்றிருக்கும் சங்கு போன்று ஒளிர்கின்ற திருமேனியுடைய சங்கரன் ஆவான்.

432. சிலையதுவெஞ் சிலையாகத்
திரிபுரமூன்று எரிசெய்த
இலைநுனை வேற் றடக்கையன்
ஏந்திழையாள் ஒருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத்து
அருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வ
நீடுலகிற் பெறலாமே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த சூலப்படையுடைய ஈசன், உமாதேவியை ஒரு கூறாக உடையவன். நீர் சூழ்ந்த பிரமபுரத்தில் வீற்றிருக்கும் அருமணியைப் போன்று மேவும் அப் பெருமானைப் பணிந்து போற்ற நிலைத்த தன்மையுடைய பெருஞ் செல்வமானது இவ்வுலகில் பெறலாம். இது இம்மை நலம் சார்தலை நன்கு உணர்த்திற்று. அருளால் பெரும் செல்வம் மறுமைக்கும் நிலைக்களமாகும் என்பது குறிப்பு.

433. எரித்த மயிர் வாளரக்கன்
வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளும் சிவமூர்த்தி
நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான்
உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும்
பெறுவார்தாம் தக்காரே.

தெளிவுரை : மலை எடுத்த இராவணனுடைய தோளும் தாளும் நெரித்தும், பின்னர் அருள் நல்கியும், நீறணிந்த மேனியனாகிய சிவமூர்த்தி புலித்தோலை உடையாகக் கொண்டவன். அப் பெருமான் உறைகின்ற பிரமபுரத்தை எப்போதும் மனத்தில் எண்ணித் துதிப்பவர்கள், தக்க பெருந்தகையாளர்களாக எக் காலத்திலும் திகழ்வார்கள்.

434. கரியானு நான்முகனும்
காணாமைக் கானலுருவாய்
அரியானாம் பரமேட்டி
அரவம்சேர் அகலத்தான்
தெரியாதான் இருந்துறையும்
திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தாம் ஏழுலகும்
உடன்ஆள உரியாரே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காண முடியாத கனலுருவாய் அரியவனாய் விளங்கும் பரமன், அரவம் பூண்ட திருமார்பினன்; மனத்திற்கும் அறிவிற்கும் தெரியாத தத்துடன்; பிரமபுரத்தில் வீற்றிருக்கும் பெருமான். அத்தகைய ஈசனை வணங்கித் தொழுபவர்கள் ஏழுலகத்திலும் ஆளும் உடமையுடையவர் ஆவர்.

435. உடையிலார் சீவரத்தார்
தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்தலைக்கை
மூர்த்தியாம் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும்
பொழிற்பிரம புரத்துøயும்
சடையிலார் வெண்பிறையான்
தாள்பணிவார் தக்காரே.

தெளிவுரை : சமணரும், சாக்கியரும் உணர்தற்கு அரியவனாகிய ஈசன் பிரம கபாலம் ஏந்திய மூர்த்தியாகிய கோலம் உடையவன். வண்டுகள் சூழ்ந்த பொழிலுடைய பிரமபுரத்தில் உறையம் அப்பெருமான் சடையில் வெண்பிறை சூடி விளங்க, அவன் திருத்தாளைப் பணிபவர்கள் எல்லாத் தகுதிகளும் உடையவராய் விளங்கவார்கள்.

436. தன்னடைந்தார்க்கு இன்பங்கள்
தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம
புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன்
மொழிபத்தும் இவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள்
பலவடைந்தார் புண்ணியரே.

தெளிவுரை : தன்னைச் சரண் அடைந்தவர்களுக்கு இன்பம் நல்கும் தத்துவன் பிரமபுரத்துறையும் பரமன். அப் பெருமானை முதற்கண் சார்ந்த ஞானசம்பந்தர் பொழிந்த திருப்பதிகத்தை ஓதுவல்லவர்கள் பொன்னுலகத்தை அடைந்து பெற்ற போகங்கள் யாவும் இம்மையில் பெற்றவர்களாயும், மறுமைக்குரிய நறபேற்றுக்குப் புண்ணியர்களாயும் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

177. திருசாய்க்காடு (அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

437. மண்புகார் வான்புகுவர்
மனம்இளையார் பசியாலும்
கண்புகார் பிணியறியார்
கற்றாரும் கேட்டாரும்
விண்புகார் என வேண்டா
வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந்
தலைவன்தான் சார்ந்தாரே.

தெளிவுரை : நெடுமாட வீதிகளை உடைய சாயக்காட்டில் வீற்றிருக்கும் பெருமானைச் சார்ந்தவர்கள், மண்ணில் உளைந்து வருந்த மாட்டார்கள்; சிறப்பான வானுலகம் சென்று மகிழ்வர்; மனத்தில் வருத்தம் அடையாதவர்; பசியாலும் வருந்த மாட்டார்கள்; பிணி காணாதவர். அப்பெருமானைத் தரிசித்து மகிழ்ந்தவரும் விண்ணுலகம் சென்று நலம் பெற வேண்டும் என்னும் வரம்பு இன்றி இவ்வுலகிலேயே அனைத்தும் வாய்க்கப் பெறுவார்கள்.

438. போய்க் காடே மறைந்துறைதல்
புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக
உடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே
இடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும்
பெரியோர்கள் பெருமானே.

தெளிவுரை : வனத்தின்கண் மறைந்து உறையும் தன்மை உடையவனும், பூம்புகாரின் புடை விளங்கும் சாய்க்காடு என்னும் பதியில் வீற்றிருப்பவனும், இடப வாகனத்தை உடையவனும், இடுகாட்டில் இருந்து பேய்க் கூட்டத்தின் இடையில் ஆடல் புரிந்த பெருமானும், பெரியவர்கள் எல்லாரும் வணங்கிப் போற்றும் ஈசன் ஆவார்.

439. நீநாளு நன்னெஞ் சே
நினைகண் டாய் ஆரறிவார்
சாநாளும் வாழ்நாளும்
சாயக்காட்டெம் பெருமாற்கே
பூநாளும் தலை சுமப்பப்
புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளு நவின்றேத்தப்
பெறலாமே நல்வினையே.

தெளிவுரை : நல்ல நெஞ்சமே ! நாள்தோறும் நினைத்து இறைவனை வணங்கு. சாகின்ற நாளும், உலகில் வாழ்கின்ற நாளும் யாரும் கணக்கிட்டுக் கூற முடியாது. சாய்க்காட்டில் வீற்றிருக்கும் ஈசனுக்கு நாள்தோறும் மலர்கள் சுமந்து சென்றும் அவனுடைய புகழ் மிக்க திருநாமங்களைச் செவிகள் நன்கு கேட்குமாறும் புரிவாயாக. நாவானது நாள்தோறும் அப்பெருமான் திருநாமங்களை நவின்று ஏத்தி வழிபட, நல்வினையைப் பெறலாம்.

440. கட்டலர்த்த மலர்தூவிக்
கைதொழு மின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி
கோங்மரும் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை
முருகுயிர்க்கும் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாயக்காட்டெம்
பரமேட்டி பாதமே.

தெளிவுரை : நன்கு மலர்ந்த மலர்களைச் செருந்தி, கோங்கு முதலானவற்றைக் கொண்டு, அழகு உயிர்க்கும் காவிரிப்பூம்பட்டினத்துப் பக்கம் சார்ந்ததுள்ள பரமேட்டியாய் விளங்கம் சாய்க்காட்டில் வீற்றிருக்கும் பெருமானின் திருப்பாத மலர்களை வழிபடுவீராக.

441. கோங்கன்ன குவிமுலையாள்
கொழும்பணைத்தோள் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான்
படர்சடைமேற் பால்மதியம்
தாங்கினான் பூம்புகார்ச்
சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினார் ஓங்கினார்
எனஉரைக்கும் உலகமே.

தெளிவுரை : கோங்கு மலர் போன்ற தனங்களும், திரண்ட, மூங்கில் போன்ற தோள்களும், கொடி போன்ற மெல்லிய இடையும் உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு உகந்த பரமன், பரந்த சடையின்மேல் பால் போன்ற வெண்மையான சந்திரனைச் சூடி, பூம்புகார் நகரின் மருங்கில் விளங்கும் சாய்க்காட்டுநாதன் திருத்தாள் பணிந்து விளங்குபவர்கள், உலகில் நன்கு ஓங்கியவர்களாவார்கள்.

442. சாந்தாக நீறணிந்தான்
சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாகம் எரிகொளுவச்
செற்றுகந்தான் திருமடிமேல்
ஓய்ந்தார மதிசூடி
ஒளிதிகழு மலைமகள்தோள்
தோய்ந்தாகம் பாகமா
உடையானும் விடையானே.

தெளிவுரை : ஈசன், சாந்தம் தரும் திருநீற்றைக் குழைத்து அணிபவன், சாய்க்காட்டில் வீற்றிருக்கும் அப்பெருமான், மன்மதன் உடலை எரித்துச் சாம்பலாக்கதடை தடித்தவன்; திருமுடியின் மீது, அச்சம் இன்றி, நன்கு விளங்குமாறு சந்திரனைச் சூடி, இருக்கச் செய்தவன். ஒளிதிகழும் மலைமகளாகிய உமா தேவியைத் தமது திருமேனியில் பாகம் கொண்டு விளங்குபவனாகிய அவ் இறைவன், இடப வாகனத்தை உடைய ஈசனே.

443. மங்குல்தோய் மணிமாட
மதிதவழு நெடுவீதிச்
சங்கெலாம் கரைபொருது
திரைபுலம்பும் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டின்
இசைபாடு மலர்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச்
சுவர்கங்கள் பொருளலவே

தெளிவுரை : மேகம் தோயும் உயர்ந்த மணிமாடங்களும், மதிதவழும் ஒளிமிக்க நெடிய வீதிகளும், சங்குகள் கரையில் சேர்ந்து திகழ கடல் அலைகள் வீசும் சிறப்புடைய சாய்க்காட்டில் விளங்குகின்றவன், இறைவன். அப் பெருமான் தேன் அருந்திய வண்டுகள் இசை எழுப்பிச் சூழும், கொன்றை மலர் மாலை அணிந்து விளங்குபவன். அவனை வணங்குகின்ற அடியவர்கள் சொர்க்கலோகத்தைப் பெரிதாகக் கருத மாட்டார்கள்.

444. தொடலரிய தொருகணையாற்
புரமூன்றும் எரியுண்ணப்
படஅரவத்து எழிலாரம்
பூண்டான் பண்டு அரக்கனையும்
தடவரையால் தடவரைத் தோள்
ஊன்றினான் சாய்க்காட்டை
இடவகையா அடைவோம் என்று
எண்ணுவார்க்கு இடரிலையே.

தெளிவுரை : தொடுவதற்கும் அரியதாகிய ஒப்பற்ற கணையைக் கொண்டு மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, படம் கொண்ட அரவத்தை எழில் மிக்க ஆரமாகப் பூண்ட ஈசன், இராவணனுடைய மலை போன்ற தோள்கள் நெரியுமாறு அகன்று விளங்கும் கயிலை மலையால், திருப்பாத விரல் பொருந்தும் வண்ணம் ஊன்றினான். அவ் இறைவன் வீற்றிருக்கும் சாய்க்காட்டினைத் தலவாசம் கொள்வோம் எனக் கருதும் அடியவர்களுக்கு எத்தகைய இடரும் இல்லை.

445. வையநீர் ஏற்றானு(ம்)
மலர்உறையு நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும்
அளப்பரிதால் அவன்பெருமை
தையலார் பாட்டோவாச்
சாய்க்காடெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார்
தெளிவுடைமை தேறோமே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் அளத்தற்கு அரியவனாய் விளங்கிய பரமன், பெருமையுடன், மகளிர் புகழ்ப் பாடல்களாகக் கூறும் சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ளான். அப் பெருமானைத் தெய்வமாகப் பேணி வணங்காதவர், தெளிவுள்ளவர் என்று கருத முடியாது.

446. குறங்காட்டு நால்விரற்
கோவணத்துக் கொலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணரும்
சாக்கியரும் அலர்தூற்றம்
திறங்காட்டல் கேளாதே
தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டில் ஆடலான்
பூம்புகார்ச் சாய்க்காடே.

தெளிவுரை : கோவண ஆடை தரித்துள்ள சமணரும் சாக்கியரும் பழச் சொற்கள் கூறினாலும், அவற்றை ஏற்காது, சிவஞானத்தில் திளைத்திருக்கும் தெளிவுடையீர் ! மயானத்தில் ஆடல் புரியும் பரமன் வீற்றிருக்கும் சாய்க்காடு சென்று வழிபட்டு எல்லாப் பேறுகளையும் அடைந்த மகிழ்வீராக.

447. நொம்பைந்து புடைத்தொல்கு
நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலும்
அரவம் செய் பூங்காழிச்
சம்பந்தன் தமிழ்பகர்ந்த
சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்தம் எனக்கருதி
ஏத்துவார்க்கு இடர்கெடுமே.

தெளிவுரை : சிலம்பு அணிந்த மகளிர் பந்து ஆட, மென்மையான பாதங்களை உடைய அவர்கள் குதித்தாடும் ஒலியும், அழகிய பந்தின் ஒலியும் விளங்கும், மணம் கமழும் சீகாழியில் மேவும் ஞானசம்பந்தர் தமிழ் என வழங்கப் பெறும் இத் திருப்பதிகத்தை, எனக்குப் பற்றாக விளங்கி நன்மை புரிய வல்லது எனக் கருதி ஏத்தி, பாராயணம் செய்யும் அடியவர்களின் இடர் யாவும் நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

178. திருஆக்கூர்- தான்தோன்றிமாடம் (அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

448. அக்கிருந்த ஆரமும்
ஆடரவும் ஆமையும்
தொக்கிருந்த மார்பினான்
தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல் கோயில்
பொய்யில்லா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : எலும்பு மாலையும், ஆடுகின்ற அரவும், ஆமையின் ஓடும் விளங்குகின்ற திருமார்பினனாகிய ஈசன், புலித்தோலை உடையாகக் கொண்டவன்; திருநீறு பூசியவன். அப் பெருமான் வீற்றிருக்கும் தொன்மையான கோயில், மெய்ந்நெறியார் விளங்குகின்ற ஆக்கூரின் தான்தோன்றிமாடம் ஆகும்.

449. நீரார வார்சடையா(ன்)
நீறுடையான் ஏறுடையான்
காரார்பூங் கொன்றையினான்
காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக்
கொண்டயலே கோட்டகத்தில்
தாராமல்கு ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : ஈசன், கங்கை தரித்த சடையுடையவன்; திருநீறு பூசியவன்; இடபத்தை வாகனமாக உடையவன்; கொன்றைமாலை சூடியவன்; அப்பெருமான் விரும்பிய தொன்மையான கோயில், மீன் வகைகளை வாயில் கவ்விய பறவைகள் கரையில் வைத்துப் பெருகும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றிமாடம்.

450. வாளார்கண் செந்துவர்வாய்
மாமலையான் றன்மடந்தை
தோளாகம் பாகமாப்
புல்கினான் தொல்கோயில்
வேளாளர் என்றவர்கள்
வள்ளனமையால் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : ஒளிமிக்க கண்ணும், பவளம் போன்ற வாயும் உடைய மலை அரசன் மகளாகிய உமா தேவியைப் பாகமாகக் கொண்டு, அர்த்தநாரீஸ்வரராகத் திகழும் பரமன் விளங்கும் தொன்மையான கோயில், வேளாளர்கள் வள்ளன்மை மிக்க விளங்கி, அற்றவர்களைத் தாங்கும் தாளாளர்களாய் வாழும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றிமாடம் ஆகும்.

451.கொங்குசேர் தண்கொன்றை
மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர்
வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கம் ஆறோடும்
அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரில்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : தேன் விளங்கும் குளிர்ந்த கொன்றை மாலையுடைய ஈசன், கூற்றுவன் வதைப்படுமாறு சினந்தவன்; மேலான ஒளியைத் தருகின்ற திருவெண்ணீறு தரித்தவன். அப்பெருமான் விளங்குகின்ற கோயில், வேதத்தின் ஆறு அங்கங்களும், அரிய மறைகள் நான்கும், ஐந்து வகையான வேள்விகளும் ஆற்றி ஒழுகும் சீலர்கள் உள்ள ஆக்கூரில் திகழும் தான் தோன்றிமாடம் ஆகும்.

452. வீக்கினான் ஆடரவம்
வீழ்ந்தழிந்தார் வெண்தலைஎன்பு
ஆக்கினான் பலகலன்கள்
ஆதரித்துப் பாகம்பெண்
ஆக்கினான் தொல்கோயில்
ஆம்பலம்பூம் பொய்கைபுடை
தாக்கினார் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : ஈசன், ஆடுகின்ற அரவத்தைக் கச்சையாகக் கட்டி, இறந்தவரின் தலையும் எலும்பும் அணிகலன்களாய்க் கொண்டு, உமாதேவியைப் பாகமாக வைத்து விளங்குபவன். அப்பெருமானின் தொன்மையான கோயில், ஆம்பலும் மற்றும் அழகிய பூக்கள் நிறைந்த பொய்கையும் விளங்க மேவும் ஆக்கூரில் இருக்கும் தான்தோன்றிமாடம் ஆகும்.

453. பண்ணொளிசேர் நான்மறையான்
பாடலினோடு ஆடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான்
காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியம்
தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ணொளிசேர் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : ஈசன், பண்ணின் பெருமையுடன் விளங்கம் நான்மறையானவன்; பாடலும் ஆடலும் உடையவன்; அக்கினியின் ஒளி தரும் கண்ணை நெற்றியில் கொண்டு விளங்குபவன்; அப்பெருமான் விரும்பும் தொன்மையான கோயில், வானில் விளங்கும் வெண்மதி, மாடங்களில் புகுந்து தண்ணொளிகாட்டும் ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடம் ஆகும்.

454. வீங்கினார் மும் மதிலும்
வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள்
வந்திறைஞ்சும் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோடு
ஆறங்கம் பல கலைகள்
தாங்கினார் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : ஆணவமலத்தால் வீங்கிப்பெருத்து மாயை மிகுந்த அசுரர்களின் முப்புரத்தை, மேருமலையை வில்லாகக் கொண்டு, எரிந்து சாம்பலாகுமாறு செய்து வானவர்கள் வந்து தொழுது போற்றும் ஈசனார் விளங்கும் தொன்மையான கோயில், நான்கு மறைகளும் ஆறு அங்கங்களும் வல்ல மறையவர்கள் விளங்கும் ஆக்கூரில் இருக்கும் தான்தோன்றிமாடம் ஆகும்.

455. கன்னெடிய குன்றெ டுத்தான்
தோள் அடரக் காலூன்றி
இன்னருளால் ஆட்கொண்ட
எம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாள்தோறும்
பூவோடு நீர்சுமக்கும்
தன்னடியார் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : கல்லின் கடினம் கொண்ட நெடிய கயிலை மலையை எடுத்த இராவணனின் தோள் நெரியுமாறு, திருப்பாதம் ஊன்றி, அருள் புரிந்து ஆட்கொண்ட எம்பெருமானாகிய ஈசன் விளங்கும் தொன்மையான கோயில், பரமன் திருவடிக்கே நாள்தோறும் பூக்களும், அபிடேக நீர்க்குடமும் சுமக்கும் அடியவர்கள் மேவும். ஆக்கூரின் தான்தோன்றிமாடம் ஆகும்.

456. நன்மையா னாரமனு
நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றம்கேடு
இல்லாதான் தொல்கோயில்
இன்மையால் சென்றிரந்தார்க்கு
இல்லை என்னாது ஈந்துவக்கும்
தன்மையோர் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : நன்மை செய்யும் தொழிற்கர்த்தராய் விளங்கும் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரிய தொன்மைப் பொருளாகிய ஈசன், தோற்றமும் இறுதியும் அற்றவன். அப்பெருமான் விளங்கும் தொன்மையான கோயில், இல்லை என்று வருவோர்க்கு இல்லை என்னாது வழங்குகின்ற, சான்றோர் பெருமக்கள் வாழும் ஆக்கூரின்கண் உள்ணுள, தான்தோன்றிமாடம் ஆகும்.

457. நாமருவு புன்மை
நவிற்றச் சமண் தேரர்
பூமருவு கொன்றையினான்
புக்கமரும் தொல்கோயில்
சேல்மருவு பங்கயத்துச்
செங்கழு நீர் பைங்குவளை
தாமருவும் ஆக்கூரின்
தான்தோன்றி மாடமே.

தெளிவுரை : சமணரும் தேரரும் புன்மையான சொற்களைக் கூறினும், கொன்றைமாலை சூடிய ஈசன் மருவி விளங்கும் தொன்மையான கோயில், சேல் (மீன்) மருவி தாமரைமலர்களும் குவளை மலர்களும், செங்கழுநீர்ப் பூக்களும் விளங்க நீர் வளம் மிக்க ஆக்கூரின் தான்தோன்றிமாடம் ஆகும்.

458. ஆடல் அமர்ந்தானை
ஆக்கூரிற் றான்றோன்றி
மாடம் அமர்ந்தானை
மாடஞ்சேர் தண்காழி
நாடற்கு அரியசீர்
ஞானசம் பந்தன்சொல்
பாடல் இவை வல்லார்க்கு
இல்லையாம் பாவமே.

தெளிவுரை : ஆடல் புரிவதில் விரும்பிய ஈசன் ஆக்கூரின் தான்தோன்றிமாடத்தில் அமர்ந்துள்ள பரமன். அப்பெருமானை, மாடமாளிகைகள் கொண்ட சீகாழியில் விளங்கும், நாடுதற்கு அரிய சிறப்புடைய ஞானசம்பந்தர் சொற்பாடலால் சொல்ல, அதனை ஓத வல்லவர்களுக்குப் பாவம் என்பது இல்லாமை ஆகும்; வினையாயின யாவும் தீரும் என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

179. திருப்புள்ளிருக்குவேளூர் (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

459. கள்ளார்ந்த பூங்கொன்றை
மதமத்தம் கதிர்மதியும்
உள்ளார்ந்த சடைமுடியெம்
பெருமானார் உறையும் இடம்
தள்ளாய் சம்பாதி
சடாயுயென்பார் தாமிருவர்
புள்ளானார்க்கு அரையன்இடம்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : தேன் விளங்கும் பூங்கொன்றை, ஊமத்த மலர்களும், ஒளிக்கதிர் வீசும் சந்திரனும் பொருந்திய சடைமுடியுடைய எம்பெருமானாகிய ஈசன் உறையும் இடம், சம்பாதி சடாயு என்னும் இரு பறவைப் பிறப்புடைய இருவரும் வழிபாடு செய்த புள்ளிருக்கு வேளூர் ஆகும்.

460. தையலார் ஒருபாகம்
சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந்து உழல்வாரோர்
அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை
மேலோடி ஈடழித்துப்
பொய்சொல்லாது உயிர்போனான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : தையல் நாயகி என்னும் திருநாமம் தாங்கிய தேவி (திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகையின் பெயர்) ஒரு பாகத்தில் உடனாகி விளங்க, கங்கையைச் சடையில் தரித்து, பிரம கபாலம் ஏந்திப் பிச்சை எடுத்தலைத் தேர்ந்து திரிந்தவரும் வேதியரும் ஆகிய ஈசன் உறையும் இடம், மெய் புகலாத இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது, அவன்மேல் பாய்ந்து செற்றுப் பெருமையை அழித்துப் பொய் புகலாது உயிர் நீத்த சடாயு போற்றி வழிபட்ட புள்ளிருக்குவேளூர் ஆகும்.

461. வாசநலம் செய்திமையோர்
நாடோறு மலர்தூவ
ஈசன்எம் பெருமானார்
இனிதாக உறையும்இடம்
யோசனைபோய்ப் பூக் கொணர்ந்துஅங்கு
ஒருநாளும் ஒழியாமே
பூசனைசெய்து இனதிருந்தான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : தேவர்கள் எல்லாம் நாள்தோறும் மலர் தூவி அர்ச்சனை செய்ய, எம்பெருமானாகிய ஈசன் இனிதாக உறையும் இடம் ஒரு யோசனை தெலைவில் உள்ள காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து தினந்தோறும் பூக்களைக் கொண்டு வந்து சம்பாதி என்னும் புள், பூசனை செய்த புள்ளிருக்குவேளூர் ஆகும்.

462. மாகாயம் பெரியதொரு
மானுரிதோல் உடையாடை
ஏகாய மிட்டுகந்த
எரியாடி உறையுமிடம்
ஆகாயம் தேரோடும்
இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : சிறப்பான திருமேனியில் மான் தோலை உடையாகக் கொண்டு தடையில்லாதபடி நெருப்பேந்தி மயானத்தில் நடம்புரிந்த ஈசன் உறையும் ஈடம், புட்பக விமானத்தில் ஆகாய வழியாகச் சென்ற இராவணனுடைய பலத்தை அழித்த சடாயு வழிபாடு செய்த புள்ளிருக்குவேளூரே ஆகும்.

463. கீதத்தை மிகப்பாடும்
அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழுநின்ற
பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால்
வெண் மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : பக்திப் பாடல்களைப் பாடி பாதத்தையே இருப்பிடமாகக் கொண்டு போற்றும் அடியவர்கள் தொழுது வாழ்த்தும் பரஞ்சோதியாகிய ஈசன் விளங்கும் இடம், மணலைச் சிவலிங்கமாக அமைத்து சம்பாதி வேதமந்திரம் கொண்டு வழிபட்ட புள்ளிருக்குவேளூர் ஆகும்.

464. திறங்கொண்ட அடியார்மேல்
தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம்
உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன்றன்
வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயுஎன்பான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : உறுதியான பற்றுக் கொண்ட அடியவர்மேல் தீவினையானது வாராதவாறு காத்தருள் புரிந்தும், சனகாதி முனிவர்களுக்குக் கல்லால மரநிழலில் வீற்றிருந்து அறம் உரைத்து அருள் புரிந்தும் விளங்கும் ஈசன் அமரும் இடம், அறநெறி நீத்து மறங் கொண்ட இராவணனைப் புறங்காணுமாறு செய்த சடாயு என்பவன் பூசித்து விளங்கும் புள்ளிருக்கு வேளூர் ஆகும்.

465. அத்தியினீர் உரிமூடி
அழகாக அனலேந்திப்
பித்தரைப் போல் பலிதிரியும்
பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப்
பலகாலந் தவம்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்தும், நெருப்பினை அழகு பொலியக் கரத்தில் ஏந்தியும், பித்தரைப் போன்று கபாலம் ஏந்திப் பலி கொண்டு பெருமான் விரும்பும் இடம், சம்பாதி என்னும் பறவை பக்தியுடன் வழிபட்டும் தவம் செய்தும் ஒன்றி விளங்கும் புள்ளிருக்குவேளூர் ஆகும்.

466. பண்ணொற்ற இசைபாடும்
அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கு
மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி
வாணாளது உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : பண் ஒன்றி விளங்குமாறு இறைவன் புகழ்ப் பாடல்களைப் பாடும் அடியவர்கள், நிலைத்து மகிழ்வதற்குப் பூவுலகத்தில் விளங்கும் இம்மை நலன் மட்டுமன்றி, முத்திப் பேற்றையும் கொடுத்து அருள்கின்ற மணிகண்டனாகிய ஈசன் மருவி விளங்கும் இடம், எண்ணும் அளவின்றி முக்கோடி ஆண்டுகள் வாழ் நாளுடைய இராவணனுடைய மேனி புண் கொண்டு துன்புறுமாறு செய்து சடாயு பூசித்து விளங்கும் புள்ளிருக்குவேளூர் ஆகும்.

467. வேதித்தார் புரமூன்றும்
வெங்கணையாய் வெந்தவியச்
சாதித்த வில்லாளி
கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகன்என்ன
அகல்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயுஎன்பான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : பகை கொண்ட முப்புர அசுரர்களின் கோட்டைகளை வலிமையான கணை தொடுத்து வெந்து எரிந்து சாம்பலாகுமாறு செய்த, மேருமலையை வில்லாக உடைய, நெற்றிக்கண் கொண்ட ஈசன், சார்ந்து விளங்கும் இடம், ஆதித்தன் மக்களாகிய சம்பாதி, சடாயு இருவரும் உலகில் போற்றி வழிபட்ட புள்ளிருக்குவேளூர் ஆகும்.

468. கடுத்துவரும் கங்கைதனைக்
கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவர் எம் பெருமானார்
தாம்இனிதாய் உறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன்
மலங்கச் சென்று இராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான்
புள்ளிருக்கு வேளூரே.

தெளிவுரை : சீறிப் பாய்ந்து வரும் கங்கையை, கமழும் சடையில் தளும்பிச் செல்லாதவாறு தடுத்துப் பொருந்திய எம்பெருமானாகிய ஈசன், இனிய பாங்கில் உறையும் இடம், குற்றப்படுத்திய இராவணன் புபுடைத்தவனாகிய சடாயு வணங்கி வழிபட்ட புள்ளிருக்குவேளூர் ஆகும்.

469. செடியாய உடல் தீர்ப்பான்
தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக்கு அடிமை செய்த
புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக்
கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க்கு
இல்லையா மறுபிறப்பே.

தெளிவுரை : குற்றம் நேரும் தன்மையுடைய உடலைக் கொள்கின்ற பிறவியைக் களைந்தும், உடலில் தீவினையால் உண்டாகும் பிணியைத் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குபவன், இத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள வைத்தியநாதன். அப்பெருமான், திருநீற்றினை நன்கு மகிழ்ந்து பூசியவன். அத்தகைய பரமனுக்கு, அடிமை செய்து வணங்கிப் போற்றி புள்ளிருக்குவேளூரை, (புள், இருக்கு (வேதம்), வேள் (முருகப் பெருமான்). ஊர் (சூரியன்)), மணம் கமழும் பொழில் திகழும் சீகாழியின் கவுணியர் கோத்திரத்தின் மரபில் திகழும் ஞானசம்பந்தர் சொல்லிய, இத் திருப்பதிகத்தை விருப்பத்துடன் சொல்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.

திருச்சிற்றம்பலம்

180. திருஆமாத்தூர் (அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

470. துன்னம்பெய் கோவணமும் தோலும் உடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.

தெளிவுரை : தைக்கப் பெற்ற கோவணத்தையும் தோலையும் உடுத்துகின்ற ஆடையாகவும், பின்னிய சடை முடியின்மேல் இளைய பிறைச் சந்திரனைச் சூடியும் அன்னப் பறவைகள் சேர்ந்து வாழும் குளிர்ந்த சோலைகள் உடைய ஆமாத்தூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அழகிய தலைவனாகிய ஈசனின் பொன் போன்ற திருக்கழலைப் போற்றி வணங்காதிருப்பின் குற்றம் எனக் கருதுதல் ஆகும். திருவடி பணிதல் கடமை என உணர்த்தியது.

471. கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதில்எய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்எம்
பெம்மான்என்று ஏத்தாதார் பேயரிற் பேயரே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்ட பரமனே ! பிரம கபாலம் ஏந்திய நாதனே ! முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய முக்கண்ணுடைய முதல்வனே ! என்ப பலவாறு விளங்கும் பெரும் புகழ்ச் செய்லகளைப் போற்றியுரைத்து, அழகிய சிறப்பு மிக்க மலர்ச் சோலையுடைய ஆமாத்தூரில் மேவும் அழகிய நாதரை, எம்பெருமான் என்று ஏத்தி வணங்காதவர் பேய்த் தன்மையுடைய கீழோர் ஆவர்.

472. பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்
ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.

தெளிவுரை : பாம்பினை அரையில் கட்டி, பண்டரங்கம் என்னும் திருக்கூத்து ஆடிய ஈசன், பிறைச் சந்திரனைச் சூடிய சென்னியுடையவன். அப்பெருமான் ஆம்பல் மற்றும் அழகிய பூக்கள் நிறைந்த பொய்கை உடைய ஆமாத்தூரில் வீற்றிருக்கும் அழகிய நாதன். அப்பரமன், விரிந்த மார்பில் திருநீறு கொண்டு விளங்க, அவனைச் சார்ந்து விளங்குதலே மெய்யான சார்பாகும். மற்றது சார்பு ஆகாது.

473. கோணாகப் பேரல்குல் கோல்வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமாப் புல்கி அவளோடும்
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே.

தெளிவுரை : வளைத்த படங்கொண்ட நாகத்தைப் போன்ற அல்குல் உடைய வளையல் அணிந்த மாதரசி ஆகிய உமாதேவியை உடம்பில் பூண்கின்ற அழகிய அணிகலன் போன்று பாகமாகச் சேர்த்து, அப்பிராட்டியோடும், ஆண் வடிவத்தை விரும்பிப் போற்றும் பிருங்கி முனிவர் போற்ற விளங்கும் ஆமாத்தூர் என்னும் பதியில் வீற்றிருக்கும் அழகிய நாதனைக் காணாத கண்கள், உண்மையைக் காண்பதற்கு இயலாத ஊனக் கண்களே ஆகும்.

474. பாட னெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
சூட னெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
ஆட னெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
வேட நெறிநில்லா வேடமும் வேடமே.

தெளிவுரை : போற்றி வணங்குகின்ற வேதம் முதலானவை புகலும் மொழிகளில் விளங்கி நிற்கும் இறைவன், கொன்றைமாலை சூடி, சூலப் படையைக் கையில் கொண்டு திருநடனம் புரியும் நெறியில் விளங்குகின்றவர் ஆமாத்தூரின் அழகிய நாதன். அப் பெருமான் விளங்கும் திருக்கோலத்தில் அமையாது, புறம்பான வேடத்திலும் அலங்காரத்திலும் இருப்பது பொருத்தமன்று.

475. சாமவரை வில்லாகச் சந்தித்து வெங்கணையால்
காவன் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
யாவரும் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைத்
தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த நெற்றிக் கண்ணுடைய ஈசன், யாவரும் சென்று வணங்கும், ஆமாத்தாரில் விளங்கும் பெருமான். தேவர்க்கும் தேவனாகிய அப்பெருமான், வானவர்களால் தொழுது வணங்கப்படுபவராவார்.

476. மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே.

தெளிவுரை : தனது நோக்கத்தில் மாறாதவனாய் மார்க்கண்டேயர் உயிரைக் கவர வந்த கூற்றுவனை வதைத்து, மலைமகளைத் தனது ஒரு பாகமாக வரித்துக் கூறாக்கி அர்த்தநாரித் திருக்கோலத்தில் விளங்கி, நெருப்பைக் கரத்தில் கொண்டு நடம் புரியும் ஆமாத்தூர் நாதனைப் போற்றிப் புகழாத நாவானது, நாவின் சிறப்பற்றது.

477. தாளால் அரக்கன்தோள் சாய்த்த தலைமகன்றன்
நாளத திரையென்றே நம்பன்ற(ன்) நாமத்தால்
ஆளா னார்சென் றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே.

தெளிவுரை : கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய தோள்களைத் தனது திருப்பாதத்தால் வதை செய்த ஈசன் திருநாள் ஆதிரை. ஆதிரையான் என்று, அப் பெருமான் திருநாமத்தைச் சொல்லி, நற்பேறு பெற்ற சீலர்கள், சென்று ஏத்தி வழிபடும் ஆமாத்தூர் மேவிய நாதனையும் அப் பெருமானுடைய சிறப்புக்களையும், செவியில் கொள்ளாத செவிகள் பயனற்றிதாகும்.

478. புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளும் அவன்பெருமை ஒப்பளக்கும் தன்மையதே
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான்எம்
வள்ளல் கழல்பரவா வாழக்கையும் வாழ்க்கையே.

தெளிவுரை : கருடவாகனமும், கரத்தில் தாமரை மலரும் கொண்டுள்ள திருமாலும், தாமரை மலர் மீத விளங்கும் பிரமனும், நினைத்து ஏத்தும் பெருமை அளக்கின்ற தன்மை உடையதோ ! சேறுகொண்டு விளங்கும் வளம் மிக்க கழனிகளையுடைய ஆமாத்தூரில் வீற்றிருக்கும் இறைவன், எம் வள்ளல். அப் பெருமானுடைய திருக்கழலைப் பரவிப் போற்றாத வாழ்க்கையும் வாழ்க்கை ஆகாது. மக்கட் பிறவியின் பெருமை ஈசனை வணங்குதற்கு உரித்து என்பது குறிப்பு.

479. பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
அச்சந்தன் மாதேவிக்கு ஈந்தான்றன் ஆமாத்தூர்
நிச்ச னினையாதார் நெஞ்சமு நெஞ்சமே.

தெளிவுரை : பிரம கபாலம் ஏந்திப் பிறர் இடுகின்ற பிச்சைப் பண்டங்களை விரும்பி ஏற்ற, யானையின் தோலை உரித்துப் போர்த்து உகந்து, உமாதேவி வெருண்டு அச்சப்பட்டு நிற்குமாறு செய்த ஈசன், ஆமாத்தூரில் நித்தியனாய் வீற்றிருக்கும் பெருமான். அப் பெருமானை நினைத்துப் போற்றாத நெஞ்சம் நல்ல நெஞ்சம் எனல் ஆகாது.

480. ஆடல் அரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
கோடல் இரும்புறவிற் கொச்சை வயத்தலைவன்
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : அரவத்தைத் தரித்த ஆமாத்தூர் நாதனை, சீகாழியில் விளங்கம், நாடுதற்கு அரிய சிறப்புடைய ஞானசம்பந்தர் திருப்பதிகமாகிய இத் தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போற்ற வல்லவர்களின் பாவம் விலகும்.

திருச்சிற்றம்பலம்

181. திருக்கைச்சினம் (அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

481. தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றான் மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவேல் ஏந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகத்தில் வரித்தவன்; பிறைச் சந்திரனைச் சூடி சிவந்த சடை உடையவன்; நீலகண்டத்தை உடையவன்; வேதம் விரித்து இசைப்பவன்; சூலப்படை உடையவன்; வேதம் விரித்து இசைப்பவன்; சூலப்படை உடையவன்; பரந்த ஒளி திகழும் தேவேந்திரன் கைரேகை பதியப் பெற்றவன். அப்பெருமான் மேவி விளங்குகின்ற கோயில் கைச்சினம் ஆகும்.

482. விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கு ஆடலினா(ன்) நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.

தெளிவுரை : ஈசன், கண்டத்தில் நஞ்சினை உடையவன்; உமாதேவியை ஒரு பாகம் உடையவன்; படம் கொண்ட பாம்டப அரையில் அசைத்துக் கட்டியவன்; அன்பொடு பற்றி நில்லாது பகைத்த முப்புர அசுரர்களை அழித்தவன்; திருநடனம் புரிந்து ஆடல் புரிபவன்; வேதத்தில் வல்ல அந்தணர்கள் கூறும் பாடலில் தோய்ந்து விளங்கபவன்; மதம் பொருந்திய யானையின் தோலை உரித்தவன். அப்பெருமான் உறையும் கோயில் கைச்சினம் ஆகும்.

483. பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண்மதியும் துன்று கரந்தையொடும்
ஆடலான் அங்கை அனலேந்தி ஆடரவக்
காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : ஈசன், நான்கு மறைகளானவன்; கொன்றை மலர் மாலையும் அரவமும் சூடியவன்; வெண்பிறைச் சந்திரனும், திருநீற்றுப் பச்சையும் தரித்து, அழகிய கையில் நெருப்பு ஏந்தி ஆடுபவன்; மயானத்தில் ஆடல் நிகழ்த்துபவன். அப்பெருமான் உறையும் கோயில் கைச்சினம் ஆகும்.

484. பண்டமரர்கூடிக் கடைந்த படுகடல் நஞ்சு
உண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொன்னகர மூன்றடனே வெந்தவியக்
கண்டபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சை உண்டு அருள்புரிந்த பெருமான் என்று, தேவர்கள் தொழுது ஏத்த, பகைகொண்ட மூன்று அசுரர்களின் கோட்டைகள், எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசன், மேவி விளங்குகின்ற கோயில் கைச்சினம் ஆகும்.

485. தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினான்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினைஓர் கூறுடையான்
காய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்நஞ்சு உண்டு அநங்கைக்
காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : ஈசன், தேயந்து மெலிந்த சந்திரனுக்கு அபயம் அளித்து அதனைச் சூடியவன்; சிவந்த திருமேனியுடையவன்; நன்கு பூசிய திருவெண்ணீற்றினன்; உமாதேவியை ஒரு கூறாக உடையவன்; துன்புற்று அஞ்சிய நிலையில், தேவர்கள் வேண்டுதல் புரியக் கடலில் தோன்டய நஞ்சினை உட்கொண்டவன்; மன்மதனை எரித்தவன். அப் பெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம் ஆகும்.

486. மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்தலையான் ஆடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேல்
கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகம் உடையவன்; புகழ் விளங்கும் வேதத்தை ஓதுபவன்; கையில் பிரம கபாலம் ஏந்தியவன்; ஆடுகின்ற அரவத்தை ஆபரணமாகப் பூண்டு மகிழ்ந்தவன்; சந்திரனும், பாம்பும் அணிந்த சடைமுடியில் கங்கை தரித்தவன். அப்பெருமான் மேவி உறைகின்ற கோயில் கைச்சினம் ஆகும்.

487. வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துகத்த எம்பெருமான்
பொருகடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்
கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : அரவத்தை நாணாகவும், பெருமைமிக்க மேரு மலையை வில்லாகவும், அக்கினியைக் கணையாகவும் கொண்டு, முப்புரங்களை எரித்த எம்பெருமான், சுடுகாட்டில் இருப்பவனாய், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனாய் விளங்குபவன். அப் பெருமான் மேவி உறைகின்ற கோயில் கைச்சினம் ஆகும்.

488. போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
மாதுமையாள் அஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்றாடும்
காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : கொன்றை மலர் திருமுடியில் புனைந்த ஈசன், உமாதேவி அஞ்சுமாறு கயிலை மலையை எடுத்த இராவணன், முறையாக ஏத்தி நிற்க அருள் புரிந்த பெருமான். அப் பெருமான் நடனம் புரிவதில் விருப்பம் உடையவனாய் மேவி உறையும் கோயில் கைச்சினம் ஆகும்.

489. மண்ணினைமுன் சென்றிரந்த மாலு மலரவனும்
எண்ணறியா வண்ணம் எரியுருவம் ஆயபிரான்
பண்ணிசையால் ஏத்தப் படுவான்றன் நெற்றியின்மேல்
கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.

தெளிவுரை : மாவலிச் சக்கரவர்த்தியின்பால் குறள் வடிவில் சென்று, மூன்று அடி மண் விழைந்த திருமாலும், பிரமனும் எண்ணுதற்கு அரியவனாய், சோதிப் பிழம்பாகிய பெருமான், பண்ணின் வழி மேவும் இசையால் ஏத்தப்படுபவன். அப்பெருமான், நெற்றியில் நெருப்புக்கண் உடையவனாய் மேவி உறையும் கோயில் கைச்சினம் ஆகும்.

490. தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையால் ஏத்திப் பயின்ற இவைவல்லார்
விண்ணவராய் ஓங்கி வியனுலகம் ஆள்வாரே.

தெளிவுரை : குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த சீகாழியில் மேவும் தமிழ்ஞானசம்பந்தர், நெற்றிக்கண்ணுடைய, பெருமான் உறையும் கோயிலாகிய கைச்சினத்தை, பண்ணின் இசைவரை ஏத்தியது இத் திருப்பதிகம் இதனை ஓதுபவர்கள், தேவர்களாக ஓங்கிச் சிறந்ததாகிய அவ்வுலகில் பெருமை உடையவராய் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

182. திருநாலூர்மயானம் (அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

491. பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு(ம்) மத்தமும்
மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து
மாலூரும் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.

தெளிவுரை : ஈசன், தன்பால் ஊர்ந்து செல்லும் மலைக்கும் தன்மையுடைய பாம்பும், குளிர்ந்த சந்திரனும், ஊமத்த மலரும் விளங்குகின்ற செஞ்சடையின் மேல் வைத்தவன்; முப்புரிநூல் அணிந்த மார்பினன்; நாலூர் மயானத்தில் மேவும் ஈசன். அப் பெருமான் திருவடியை எண்ணி அன்பு கெழுமிய சிந்தையராய் வணங்குபவர்களுக்கு மறுபிறவி இல்லை.

492. சூடும் பிறைச்சென்னிச் சூழ்காடு இடமாக
ஆடும் பறைசங்கு ஒலியோடு அழகாக
நாடும் சிறப்போவா நாலூர் மயானத்தைப்
பாடும் சிறப்போர்பால் பற்றாவாம் பாவமே.

தெளிவுரை : ஈசன், சென்னியில் பிறைச் சந்திரனைச் சூடியும், சுடுகாட்டினை இடமாகவும் கொண்டு ஆடுபவன். அப் பெருமான் உறையும் இடமான, பறை ஒலியும், சங்கொலியும் விளங்க, நாடும் சிறப்புகள் ஓய்வின்றி விளங்ககின்ற நாலூர் மயானத்தைப் போற்றிப் புகழும் சிறப்புடையவர்பால் பாவம் சேராது.

493. கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்று
எல்லா அறனுரையும் இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுதேத்து நாலூர் மயானத்தைச்
சொல்லா தவரெல்லாம் செல்லாதார் தொன்னெறிக்கே.

தெளிவுரை : கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு எல்லா அறங்களையும் இன்னருளால் உரைத்த பரமன் விளங்குகின்ற, நல்லோர் தொழுது போற்றும் நாலூர் மயானத்தைத் தொழுது உரையாதவர், தொன்மையான நெறியில் நில்லாதவர் எனப்படுவர்.

494. கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோல் ஆடையான்
நீலத்தார் கண்டத்தா(ன்) நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார்பால் சூழாவாம் தொல்வினையே.

தெளிவுரை : ஈசன், அழகிய கொன்றை மலர் மாலை சூடியும், புலித்தோல் ஆடையும் கொண்டு விளங்குபவன்; நீலகண்டமும் நெற்றிக் கண்ணும் உடையவன். அப் பெருமான், உலகத்தவர்கள் போற்றித் துதிக்கின்ற சூலப் படை கொண்ட ஈசனே என்று ஏத்திப் பரவுவார்க்குத் தொல்வினையானது சூழாது.

495. கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கள்
பிறையார் வளர்சடையான் பெண்பாக னண்பாய
நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
இறையான் என்றேத்துவார்க்கு எய்துமாம் இன்பமே.

தெளிவுரை : கறை தோய்ந்த மிடற்றினனாய், கபாலம் ஏந்தியவனாய், மழுப்படை, உடையவனாய், பிறை சூடிய சடை உடையவனாய், உமாதேவியைப் பாகம் உடையவனாய், பொழில்சூழ் நாலூர் மயானத்தில் வீற்றிருக்கும் ஈசனை, இறைவனே என்று ஏத்தி வணங்குபவர்களுக்கு இன்பம் சேரும்.

496. கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்
பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தா(ன்) நாலூர் மயானத்தை
நண்ணா தவர்எல்லா(ம்) நண்ணாதார் நன்னெறியே.

தெளிவுரை : நெற்றிக் கண்ணுடைய ஈசன், நெருப்பினைக் கரத்தில் ஏந்தி ஆடியும், பண்ணொளிரும் வேதம் ஓதியும், விளங்கம் பரஞ்சோதி ஆவார். அப்பெருமான் பகைவராய் வந்த மூன்று அசுரர்களையும் மதில்களையும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அவர் உறையும் பதி நாலூர் மயானதம் ஆகும். அதனை நண்ணாதவர் நன்னெறியாகிய ஞானநெறியை நண்ணாதவரே.

497. கண்பாவு வேகத்தால் காமனைமுன் காய்ந்துகந்தான்
பெண்பாவு பாகத்தான் நாகத்தோல் ஆகத்தான்
நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார்க்கு ஏலா இடம்தானே.

தெளிவுரை : நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியின் வேகத்தால் மன்மதனை எரித்த ஈசன், உமாதேவியைப் பாகமாக உடையவன்; யானையின் தோலை உடம்பில் போர்த்துக் கொண்டவன்; நண்புடைய குணத்தவர்கள் விளங்கும் நாலூர் மயானத்தில் உள்ளவன். அப்பெருமானைச் சிந்தையில் கொண்டு தியானிப்பவர்களுக்கு இடர் இல்லை.

498. பத்துத் தலையோனைப் பாதத் தொரு விரலால்
வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
நத்தின் ஒலியாவா நாலூர் மயானத் தென்
அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.

தெளிவுரை : பத்துத் தலைகளையுடைய இராவணனைத் திருப்பாத விரால்ல ஊன்றி மலையால் அடர்த்த ஈசன், வாளும் நீண்ட வாழ்நாளும் தந்து அரள் புரிந்த பரமன். சங்கின் ஒலி ஓயாது முழங்கும் நாலூர் மயானத்தில் வீற்றிருக்கும் என் தந்தையை நினைத்துப் போற்றுபவர்களுக்கு அல்லல் அடையாது.

499. மாலோடு நான்முகனு(ம்) நேட வளரெரி யாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறங்க(ம்) நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேட, வளர்ந்து ஓங்கும் சோதியாய் விளங்கி, உச்சியும் அடியும் காணாதவாறு ஓங்கியவன், நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகி நூலூர் மயானத்தில் வீற்றிருந்து பாலோடு நெய் கொண்டு பூசனை கொள்ளும் பரமன்; அப்பெருமானின் பாதங்களைப் பரவிப் பணிவோமாக.

500. துன்பாய மாசார் துவராய் போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
இன்பாய் இருந்தானை யேததுவார்க்கு இன்பமே.

தெளிவுரை : மாசுடையவராய்ப் புன்மையான பேச்சுக்களைக் கூறும் புறச் சமயிகள் சொற்களை ஏற்காது, புண்ணியனாக விளங்கும் ஈசனை நண்ணுமின்கள். பேரறிவு வாய்க்கப்பெற்ற இணக்கத்தால் மனம் ஒன்றி சிவாய என்று மொழிந்து நாலூர் மயானத்தில் இன்ப வடிவினனாய் வீற்றிருக்கும் நாதனை ஏத்திப் பரவுமின். அவ்வாறு செய்பவர்களுக்கு இன்பமே உண்டாகும்.

501. ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்தான்
நாலு மறையோது நாலூர் மயானத்தைச்
சீலம் புகழாற் சிந்தேத்த வல்லாருக்கு
ஏலும் புகழ்வானத் தின்பாய் இருப்பாரே.

தெளிவுரை : உலகத்தில் புகழ்கொண்டு விளங்கும் சீகாழிப் பதியில் மேவும் ஞானசம்பந்தர், நான்கு மறைகளும் போற்றும் நாலூர் மயானத்தைச் சீலம் விளங்கும் தன்மையால் சிறந்து ஏத்திப் போற்றத் திகழும் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், புகழ் பெருக வாழ்வார்கள்; வானுலகத்தில் சிறப்புடன் இன்பமாய் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்.

183. மயிலாப்பூர் (அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்,சென்னை)

திருச்சிற்றம்பலம்

502. மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் ஒருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : தேன் துளிர்க்கும் புன்னை விளங்கும் அழகிய சோலை சூழ்ந்த மயிலையில் விருப்பம் கொண்டு கபாலீச்சரத்தில் கோயில் கொண்டு அமர்ந்தவன் ஈசன். அப் பெருமானிடம் அன்பு கொண்டு ஈசன் இரண்டறக் கலந்த அன்பின் பண்பு தோன்ற உருத்திரர் முதலான பலகணங்களைச் சார்ந்தவர்களுக்கு அமுது செய்வித்து ஆற்றுகின்ற சிறப்பினைக் காணாது பூம்பாவையே ! போவாயோ ! போக மாட்டாய். எழுந்து வருவாயாக என்பது குறிப்பு.

503. மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியே பூம்பாவாய்.

தெளிவுரை : மை திகழும் ஒளி மிக்க கண்களை உடைய மகளிர் விளங்கும் சிறப்பின் மிக்க மயிலையில், கையால் எடுத்து அணியப் பயந்த திருவெண்ணீற்றினனாய் அருவப்பொருளாய் மேவும் ஈசன், கபாலீச்சரம் அமர்ந்த பெருமான், பூம்பாவாய் ! அருந்தவத்தைச் செய்து மேன்மை கொண்ட முனிவர்களும் மகிழ்ந்து போற்றுகின்றதாகவும் கண்டு மகிழத்தக்கதாகவும் விளங்கும் ஐப்பசி மாதத்தில் அப்பெருமானுக்கு நிகழும் திருஓண விழாவைக் காணாது போவாயோ ! போகமாட்டாய் ! எழுந்து அத்திருவிழாப் பொலிவைக் காண வருவாய் என்பது குறிப்பு.

504. வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : வளையலைக் கையில் அணிந்து மடப்பம் என்னும் விழுமிய கற்பின் வழி ஒழுகும் பண்புடைய மாதர்கள் விளங்குகின்ற சிறப்புடைய மயிலையின் கபாலீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனின் தொன்மையான கார்த்திகைத் தீபத் திருநாளில் சிறுமிகளும் மாதர்களும் விளங்குகளை வரிசையாக ஏத்திக் கொண்டாடும் திருவிழாவைக் காணாது, பூம்பாவாய் ! போவாயோ ! போகமாட்டாய் ! எழுந்து வருவாய் என்றவாறு.

505. ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்திரு சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : கடலலைகள் ஊர்ந்து சென்று உலவும் மயிலையில் உள்ள நெய்தல் நில மக்கள், கடலில் வாழும் பெரிய மீன்களைத் தம் கைவேல் கொண்டு தரக்கும் சேரியில், வளப்பமான பசுஞ்சோலை சூழந்த கபாலீச்சரத்தில் அமர்ந்த ஈசனார் திருநாளாகிய ஆதிரை நாள் சிறப்பினைக் காணாது, பூம்பாவாய், போவாயோ !

506. மைப்பூசுமச் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : மை திகழும் ஒளிமிக்க கண்களை உடைய மடப்பம் என்னும் விழுமிய கற்பின் வழி ஒழுகும் பண்புடைய மகளிர் விளங்குளம் மயிலையில், கையினால் பூசி அணியப்படும் திருநீற்றுத் திருமேனியனாகிய ஈசன், கபாலீச்சரத்தின்கண் அமர்ந்து விளங்குபவன். அப் பெருமானுக்கு நெய்வார்த்துக் கலந்து சோறு அளைந்து நைவேத்தியம் வழங்கும் தைப்பூச விழாவை நங்கையர்கள் கொண்டாடி மகிழந்து விளங்க, பூம்பாவாய், அதனைக் காணாது போவாயோ !

507. மடலார்ந்த தெங்கின் மிலையார்மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
கடலானேரு ஊரும் அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : அகன்ற மடல் கொண்ட தென்னை மரங்கள் விளங்கும் மயிலையில் சிறப்பாகப் பொலிந்து பெருவிழாவாகத் திகழ்வது மாசி மகத்தில் நிகழும் கடலோடு விழாவாகும். அத்தகைய பெருவிழா காண்பவன், கபாலீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசன். அப்பெருமான் இடப வாகனத்தில் அமர்ந்து அருள் புரியும் அடிகள் ஆவர். அவர் திருவடியைப் பரவி நடனம் ஆடுதலும் காணுதலும் புரியாது, பூம்பாவாய், போவாயோ !

508. மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழா கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : விழாக்கள் நாளும் பெருகி வீதிகள் தோறும் மகளிர் திருத்தொண்டாற்றித் தோரணம், கோலம் முதலான அலங்காரங்கள் புனைந்து, சிறப்புறும் மயிலையில், பெரும் ஆராவாரம் விளங்கும் வீழாக்களைக் கண்டு கபாலீச்சரத்தில் விளங்குபவன் ஈசன். தருப்பைப் புற்களால் காப்பிட்டுக் கொடியேற்றித் திருக்குகளதோறும் பலியாக, அளிந்த அமுதக் கவளம் இட்டு வேதங்கள் மந்திரமாய் ஒலிக்க, முழவும், பறையும் மற்றும் இசை எழுப்பும் ஒலிகளும் நிறைநது ஆரவாரம் செய்ய விளங்கும், பங்குனி உத்திரப் பெருவிழா காணாது, பூம்பாவாய், போவாயோ !

509. தண்ணா அரக்கன்தோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமி நாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : தணிந்து விளங்கும் தன்மையற்ற இராவணனுடைய தோளை நெரித்து மகிழ்ந்த ஈசன், கண்களுக்கு இனிமையாக மயிலைக் கபாலீச்சரத்தில் அமர்ந்த பெருமான் ஆவார். பண்ணின் இசைவல்ல பதினெட்டு கணத்தினர் அப்பெருமானை வாழ்த்திப்(சைவ சமய நெறி பாட்டு 17) அட்டமி நாள் விழா நிகழ்ச்சியைக் கண்ணாரக் கண்டு களிக்காமல் பூம்பாவாய், போவாயோ !

510. நற்றா மரைமலர்மேல் நான்முகனு நாரணனும்
உற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்கள் ஏத்தும் கலாலீச் சரம்அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் உற்றுத் தேடியும் ஆங்கு உணர்தற்கு அரிய மூர்த்தியாகிய ஈசன் திருவடியை, வேதம் வல்ல அந்தணர்கள் நாளும் ஏத்தக் கபாலீச்சரத்தில் அமர்ந்திருப்பவன். அப்பெருமானுக்குப் பொன்னூஞ்சல் கொண்டு திருவிழா எடுக்கும் காட்சியைக் காணாது, பூம்பாவாய் ! போவாயோ !

511. உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் தூற்றி உரைப்பினும், அடர்த்தியான பெரிய சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரத்தில் வீற்றிருக்கும் திருக்கோலக் காட்சியைக் காணாது, பூம்பாவாய், போவாயோ ! எழுந்து வருக என்றவாறு.

512. கானமர் சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழால்
ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

தெளிவுரை : சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்துள்ள ஈசனைப் போற்றிப் பூம்பாவையின் பொருட்டுச் செந்தமிழ்ப் பாட்டாக, ஞானசம்பந்தர் சொன்ன நலம் புகழ்ந்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், உயர்ந்த பேறாகிய முத்திச் செல்வத்தைப் பெற்று விளங்கும் பெருந்தகையாளர்களுடன் கூடி இருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

184. திருவெண்காடு (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

513. கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.

தெளிவுரை : ஈசன், நெற்றிக் கண்ணுடையவன்; கையில் நெருப்பு ஏந்தியவன்; ஒரு பாகத்தில் உமாதேவியைக் கொண்டு விளங்குபவன்; சடையில் பிறைச் சந்திரனைச் சூடியவன்; இசைபாடும் தன்மையன். அப்பெருமான் பயிர்விளங்கி வளர்வதற்கு வளந்தரும் பரம் பொருளானவன். அவன் இடபக் கொடியுடையவனாய் வெண்காட்டில் வீற்றிருக்கும் இறைவன்.

514. பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனவே தோளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே.

தெளிவுரை : மூங்கிலைப் போன்ற தோள் உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்ட வெண்காட்டு நாதரின் திருத்தலத் தீர்த்தமாக விளங்கும் முக்குள நீரில் தோய்ந்து நீராடுபவர்களுக்குத் தீய வினைகள் சாராது; பேய் நாடாது; அஞ்ஞானம் நீங்கும்; புத்திரப் பேற உண்டாகும்; மற்றும் வேண்டிய வரங்களைப் பெறுவார்கள். இவற்றைக் குறித்து எவ்வகையான சந்தேகமும் இல்லை.
இது வழிபாட்டின் பயனை உணர்த்திற்று. திருத்தலத்தின் சிறப்பும் உணர்த்தவதாயிற்று தீர்த்த மகிமையும் காண்க.

515. மண்ணொடுநீர் அனல்காலாடு ஆகாய மதியிரவி
எண்ணில்வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடுஆண் பெருமையொடு சிறுசையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமாய் விரும்பினனே.

தெளிவுரை : ஈசன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய அட்ட மூர்த்தியாகியவன்; இம்மையும் மறுமையும் ஆகி, எண்திசையும் ஆனவன். அர்த்தநாரியென ஆணும் பெண்ணும் கலந்தவனாயும் பிறர் பெருமையாகவும் சிறுமையாகவும் சொல்லும் பேராளனாய் வழிபாடு செய்த வெண்காட்டை இடமாகக் கொண்டு விளங்குபவன்.

516. விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டும் காட்சியதே.

தெளிவுரை : திருநீலகண்டனாக விளங்கும் ஈசன் விளங்குகின்ற வெண்காட்டின மலர்ச் சோலையில், மடல் அவிழ்ந்த தாழையின் நிழலைக் கண்டு நீர் நிலையில் வாழும் கொண்டை மீன்கள், தம்மைக் கொத்திச் செல்லும் குருகுகள் என்று அஞ்சி, நடுக்கம் கொண்டு தாமரைப் பூவின் இடை சென்று ஒளிந்து கொள்ள, அதனைக் காணும், கடலிலிருந்து வெளி வந்த முத்துகள், நகைப்பது போன்று காட்சியடையது ஆகும்.

517. வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறைவென்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றானடியார் என்றடர அஞ்சுவரே.

தெளிவுரை : கடற்கரைச் சோலை சூழ்ந்த வெண்காட்டு நாதன் திருவடியை மலர் தூவி வழிபட்ட மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலன் உயிரைப் போக்கிய பின்னர், காலனுடைய தூதர்கள் சிவனடியார்பால் அணுவதற்கு அஞ்சுவர்.

518. தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவனாமம் பலஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

தெளிவுரை : குளிர்ந்த சந்திரனும், கொடிய நாகமும் சடையில் தாங்கிய ஈசன், உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டுள்ளவன். அப்பெருமான் உறையும் கோயில் ஈசன் திருநாமத்தை ஓதக் கேட்ட கிளிகளக மரத்தின் மீது அமர்ந்து ஓதும் பான்மையது வெண்காடு.

519. சக்கரமாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமேல் அசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக்கு அருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கு
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறைவனே.

தெளிவுரை : சக்கரப்படையைத் திருமாலுக்கு வழங்கியவனும், சலந்தராசுரனை வதை செய்தவனும், எலும்பு மாலையை உடையவனும், தன்னை வழிபட்ட ஐராவதம் என்னும் யானைக்கு அருள் புரிந்தவனும், வெண்காடு என்னும் தலத்திற்கும் அத்தலத்தில் விளங்கும் முக்குளநீர் என்னும் தீர்ததத்திற்கும் உரியவனும் ஆகிய பெருமான் முக்கண்ணுடைய இறைவனே ஆவான்.

520. பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலைஎடுத்த
உண்மத்தன் உரநெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொயத்தபொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

தெளிவுரை : பண்போன்ற இனிய மொழியாளாகிய உமாதேவி அச்சம் கொள்ளுமாறு கயிலையைப் பெயர்த்த இராவணனுக்கு அருள்செய்த ஈசன் உறையும் கோயில், நீல மயில் ஆடவும், கடல் முழங்கி ஒலிக்கவும் பொழிலில் உள்ள வண்டுகள் இசைபாடும் வெண்காடு ஆகும்.

521. கள்ளார்செங் கமலத்தான் கடற்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவம்செய்யு மேதகுவெண் காட்டனென்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை யுணரோமே.

தெளிவுரை : தேன் துளிர்க்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், பாற்கடலில் பள்ளிகொண்டு இருக்கும் திருமாலும் ஆகிய இவர்கள், தாம் பெரியவர் என்று அறியும் நாட்டத்தால் வானத்தில் உயர்ந்த சென்றும் பாதளத்தில் தாழ்ந்து சென்றும் உணர்வதற்கு அரியவனாய் விளங்கியவன் ஈசன். அப்பெருமானை வெள்ளை யானை தவம் செய்து போற்ற அருள்புரிந்த வெண்காட்டு நாதனே, என்று தியானமே செய்து உருகி நிற்காதது என்னே ! அவ்வாறு உருகாதவர்கள் உணர்வுடையவர் ஆகமாட்டார்கள்.

522. போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டான்என்று
ஓதியவர் யாதுமொரு தீதிலர்என்று உணருமினே.

தெளிவுரை : பௌத்தர்களும் சமணர்களும் குதர்க்கமாகப் பொருள் கூறுபவராதலால் அவர்தம் உரைகளைக் கொள்ளற்க. மெய்ஞ்ஞானம் வாய்க்கப் பெற்றவர்களே ! இது கேளுங்கள். வேதத்தில் வல்ல மறையவர்கள் விரும்புகின்ற புகழ் பரவிய திருவெண்காட்டுநாதனே ! என்று ஓதுபவர்களுக்கு எவ்விதமான தீதும் இல்லை என்று உணர்வீராக.

523. தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பொலியப் புகுவாரே.

தெளிவுரை : குளிர்ச்சியான பொழில் சூழ்ந்த சண்பை நகர் எனப் பெயர் தாங்கிய சீகாழியின் கோனாய் விளங்கும் தமிழ்ஞானசம்பந்தர், வெண்பிறைச் சந்திரனைச் சென்னியில் சூடிய விகிர்தன் உறையும் வெண்காட்டைப் பண் பொலிந்த செந்தமிழ் மாலையாய்ப் பாடிய இத் திருப்பதிகத்தினை ஓதவல்லவர்கள், இம்மையில் பூவுலகம் பொலியுமாறு எல்லாச் சிறப்புகளும் பெற்று வாழ்ந்த, வானுலகம் பொலிவுறுமாறு அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

185. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

524. பண்ணி னேர்மொழி மங்கை மார்பலர்
பாடி யாடிய வோசை நாள்தொறும்
கண்ணி னேரயலே பொலியும்
கடற்காழிப்
பெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு
மானை எம்பெரு மான்என்று என்று உன்னும்
குறைவிலரே.

தெளிவுரை : பண்ணின் இசை போன்று இனிமையாக மொழி பயிலும் மங்கையர்கள் பலரும் பாடி ஆடி எழுப்புகின்ற ஓசையானது, நாள்தொறும் பொலிந்து விளங்குகின்ற சிறப்புடையது கடல் சூழந்த காழிப்பதி. அத் திருப் பதியின்கண் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் பெருமானை, எமக்கு அருள் செய்து காக்கும் பிரான் என்று எல்லாக் காலங்களிலும் எண்ணி மகிழ்கின்ற அண்ணலின் அடியவர்கள், அருள் நிரம்ப பெற்று, குறைவற்றவர்களாகத் திகழ்வார்கள்.

525. மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
மோதி மீதெறி சங்க வங்கமும்
கண்ட லம்புடைசூழ் வயல்சேர்
கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்ட லங்கொளி தாமநுதல்
விதியாமே.

தெளிவுரை : கடல் அலைகள் மோதி எறிய, சங்குகள் அலைகள் வாயிலாகத் தாழைகள் சூழ்ந்த வயல்களில் சேரும் பதிவளம் பெருகும் காழியாகும். அப் பதியின்கண், வண்டுகள் ஒலி செய்யக் கொன்றை மாலை அணிந்த ஈசன் திருவடியை, வாழ்த்தி ஏத்திய மாந்தர்தம் வினையாயின் நீங்குவது எளிதாகும். அப்பதியின் தெய்வத் தன்மை ஆங்கு எல்லாக் காலங்களிலும் நல்விதியைப் பெருகச் செய்யும்.

526. நாடெ லாமொளி யெய்த நல்லவர்
நன்றும் ஏத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன்துளிக்கும்
கடற் காழித்
தோடு லாவிய காது ளார்கரி
சங்கவெண்குழை யானென்று என்றுஉன்னும்
வேடங் கொண்டவர்கள் வினை
நீங்கலுற்றாரே.

தெளிவுரை : நாடெல்லாம் புகழ் அடைந்து பெருகவும் நல்ல தன்மை உடையவர்களாய் நல்வினையால் ஏத்தி வணங்கப் பொழில் சூழும் காடுகளில் உள்ள மலர்கள் தேன் விளங்கத் திகழவும் விளக்குவது கடல் சூழ்ந்த காழிப் பதி. அப் பதியில் வீற்றிருக்கும் பெருமான் தோடும், சங்க வெண்குழையும் அணிந்திருப்பவன். எல்லாக் காலத்தில் மனம் ஒன்றி அப் பெருமானை நினைப்பவர்கள், திருநீறு அணிந்த கோலத்தினராய் விளங்குவார்கள். அவர்கள் வினை நீங்கியவர் ஆவார்கள்.

527. மையி னார்பொயில் சூல நீழலில்
வாசமார்மது மல்க நாடொறும்
கையின் ஆர்மலர் கொண்டெழுவார்
கலிக்காழி
ஐய னேஅர னேயென் றாதரித்
தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் லுயர்ந்தா ரின்
னுள்ளாரே.

தெளிவுரை : பசுமையான பொழிலில் நறுமணமும் தேனும் பெருகி விளங்கும் மலர்களை நாள்தோறும் பறித்துப் பக்தியுடன் விளங்குகின்ற காழிப்பதியில், ஐயனே ! அரனே ! என்று கசிந்துருகி ஈசன் திருநாமத்தை ஓதி, விதிப்படி நினைத்து வழிபடுபவர்கள், பிறவி எடுத்ததன் பயனாய் உய்தி பெறும் நெறியில் உயர்ந்து விளங்குபவர்களுடன் இருப்பவர் ஆவர்.

528. மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
வந்த வந்தொளிர் நித்திலம் விழக்
கலிக டிந்தகையார் மருவும்
கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன்
இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியும் தீவினைநோ யவைமேவு
வார்வீடே.

தெளிவுரை : பெருகிச் சேர்ந்து வீசும் கடுமையான கடல் அலைகள் வந்து முத்துக்களைக் குவிக்கத் துன்பம் தரும் வறுமையை மாற்றி, வளம் திகழும் சிறப்புடையது காழிப்பதி. அப்பதியில் வீற்றிருக்கும் பெருமான், வலிமை மிக்க காலனை வீழ்த்தி மாய்த்து, மார்க்கண்டேயரின் உயிரைக் காத்தவன். அவ் இறைவனை வாழ்த்தடத் தீவினை அகலும்; முத்திப்பேறு வாய்க்கும்.

529. மற்றுமிவ் உலகத்து ளோர்களும் வானு
ளோர்களும் வந்து வைகலும்
கற்றி சிந்தையராய்க் கருதும்
கலிக்காழி
நெற்றி மேலமர் குண்ணி னானை
நினைந்தி ருந்திசை பாடு வார்வினை
செற்றமாந் தரெனத் தெளிமின்கள்
சிந்தையுளே.

தெளிவுரை : இவ் உலகத்தில் உள்ளவர்களும் மற்றும் வானுலகத்திவர்களும் வந்து நாள்தோறும் ஈசனை வழிபடும் சிந்தையுடையவராகச் செய்வது கலிக்காழி என்னும் பதி. அப் பதியில் விளங்கும் முக்கண்ணனைப் போற்றி இசைபாடுகின்றவர்கள் வினைமாயும். இதனை நன்கு தேர்ந்து மனத்திற் கொள்ளுமின் என்பதாம்.

530. தான லம்புரை வேதிய ரொடு
தக்க மாதவர் தாம்தொ ழப்பயில்
கானலின் விரைசேர் விம்மும்
கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
வாகி நின்றவொ ருவனேயென்று
ஆனலங் கொடுப்பார் அருள்வேந்தர்
ஆவாரே.

தெளிவுரை : நன்நலமும் பெருமையும் திகழும் வேதம் வல்ல அந்தணர்கள் மற்றும் தவவேந்தர்கள் தொழக்கானலின் நன்மணம் சேர்ந்து அழகுடன் விளங்குவது காழிப்பதி. அப் பதியில் விளங்கும் பெருமானுக்கு, ஊனுள் உயிராக விளங்குபவன் ஈசனே என்னும் கருத்தில் தேர்ந்து, பசுக்களிலிருந்து பால், தயிர் முதலான பஞ்சகவ்வியங்களைப் பூசனைக்குத் தருபவர்கள் அருளின் வேந்தராய்த் திகழ்வார்கள்.

531. மைத்த வண்டெழு சோலை யாலைகள்
சாலி சேர்வயல் ஆர வைகலும்
கத்து வார்கடல் சென்றுலவும்
கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை
யன்ற டர்த்ததுகந் தாயு னகழல்
பத்த ராய்ப் பரவும் பயனீங்கு
நல்காயே.

தெளிவுரை : கரிய வண்டுகள், சோலைகளிலும், கரும்பாலைகளிலும் சாலிசேர் வயல்களிலும் பொருந்தி, யாண்டும் ஒலி எழும் கடலின் ஒலியுடன் சேர்ந்து விளங்குவது, காழிப்பதியாகும். அப் பதியில் விளங்கும் அரனே ! அரக்கனாகிய இராவணனை அடர்த்து உகந்த பெருமானே ! பக்தராக உனது திருவடியைப் பரவிப் போற்றவும் இப்பிறவியில் அருள் புரிவீராக.

532. பரும ராமொடு தெங்கு பைங்கத
லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும் வயல்சூழ்
கலிக்காழித்
திருவி னாயக னாய மாலொடு
செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியான் எனஏத்துதல்
இன்பமே.

தெளிவுரை : பருமையான மரங்களும், தென்னை, வாழை மரங்களும் மருங்கு இருக்க, மந்திகள் கனிகளை உண்ணவும் வரால் மீன்கள் வயல்களில் சூழ்ந்து விளங்குவது காழிப்பதி. திருமகளின் நாயகனாகிய திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் காண்பதற்கு அரியவனாகிய பெருமானே! என்று அவ் இறைவனை ஏத்தி வழிபடுதல் இன்பம் ஆகும்.

533. பிண்டம் உண்டுழல் வார்களும் பிரி
யாது வண்துகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலார் அழகார்
கலிக் காழித்
தொண்டை வாயுமை யோடும் கூடிய
வேட னேசுட லைப்பொடி யணி
அண்ட வாணன்என் பார்க்கு அடையா
அல்லல் தானே.

தெளிவுரை : நீண்ட துகிலையுடைய சாக்கியர்களும், சமணர்களும் கண்டு வணங்காதவராய்ப் புறத்தே இருக்க, அழகிய தன்மையும் விழாக்களின் ஆராவாரம் முழங்குகின்ற சிறப்பும் உடைய காழிப் பதியில், ஈசனார்க்குத் தொண்டு செய்து மகிழும் பாங்குடைய உமாதேவியோடு வேடுவனாய்த் திருக்கோலம் தாங்கியும், சுடலைப் பொடியணிந்தும் விளங்கும் அண்டர் நாயகனே ! என்று துதிப்பவர்களுக்கு அல்லல் இல்லை.

534.  பெயரெனும்இவை பன்னி ரண்டினும்
உண்டெனப் பெயர் பெற்ற வூர்திகழ்
கயலுலாம் வழல்சூழ்ந் தழகார்
கலிக்காழி
நயன டன்கழல் ஏத்த வாழ்த்திய
ஞான சம்பந்தன் செந்த மிழ் உரை
உயருமா மொழிவார் உலகத்து
உயர்ந்தாரே.

தெளிவுரை : பெயர் என்று பன்னிரண்டு உண்டு எனும் சிறப்பினைப் பெற்ற ஊர், கயல் உலவும் வயல் சூழும் அழகிய, அரவாரமும் எழுச்சியும் மிக்க காழிப்பதியாகும். அப்பதியில் மேவும் அருள் வழங்கும் திருநடம் புரியும் ஈசன் கழலை ஏத்தி வாழத்திய ஞானசம்பந்தர் செந்தமிழ்ப் பதிகத்தை, உயர்ந்த சொல்லாகக் கொண்டு மொழிபவர்கள், உலகத்தில் உயர்ந்த பெருமக்களாகத் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

186. திருஆமாத்தூர் (அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

535. குன்றவார்சிலை நாணராவரி வாளிகூர்எரி
காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடையேறும்
வேதியனே
தென்றலார்மணி மாடமாளிகை சூளிகைக்கெதிர்
நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : இடப வாகனத்தில் வீற்றிருந்து அருள்புரியும் வேதநாயகனே ! தென்றல் சேர்ந்த இனிமையான காற்று மாடமாளிகையின்மேல் தளத்தில் தவழ்ந்து மேவ, எதிர்புறத்தில் நீண்டு வளர்ந்த பனைமரத்தின் மீது அன்றில் பறவை சார்ந்து அணைந்து மகிழும் இயல்புடைய ஆமாத்தூரில் வீற்றிருக்கும் இறைவனே ! மேருமலையை நெடிய வில்லாகவும், வாசுகி என்னும் அரவத்தை நாண் ஆகவும், அக்கினியும், வாயுவும் கூர்மையாக விளங்கும் அம்பாகவும் கொண்டு, மும்மதில்களை வென்று எரித்தது எவ்வாறு ? இத் திருப்பாட்டு ஈசன், முப்புரத்தை எரித்த சிறப்பினை வியந்து போற்றியது ஆகும்.

536. பரவி வானவர் தானவர்பல ருங்கலங்கிட
வந்தகார்விடம்
வெருவ உண்டுகந்த அருளென்கொல்
விண்ணவனே
கரவின்மாமணி பொன் கொழித்திழி
சந்துகாரகில் தந்துபம்பைநீர்
அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : கரத்தல் இல்லாத சிறந்த மணிகளும், பொன்னும் கொழித்து சந்தனம், கரிய அகில் ஆகியவற்றையும் தந்த, பம்பை என்னும் ஆற்றிலிருந்து நீர் பெருகி வந்து சேரும் ஆமாத்தூரில் வீற்றிருக்கும் பெருமானே ! தேவர்களும், அசுரர்களும் மற்றும் பலரும் கலங்குமாறு, பரவி வந்த கொடிய நஞ்சினைத் தேவாதி தேவனே ! யாவரும் வெருவி அஞ்சுமாறு உட்கொண்டு, கண்டத்தில் நிறுத்திய அருள் என் கொல் !

537. நீண்டவார்சடை தாழநேரிழை பாடநீறுமெய்
பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை நடமாடு
மாண்பது என்
பூண்டகேழல் மருப்பராவிரி கொன்றைவாள்வரி
ஆமைபூணென
ஆண்ட நாயகனே ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : பன்றியின் கொம்பும், பாம்பும், விரிந்த கொன்றை மலரும், ஆமையின் ஓடும் ஆபரணமாகப் பூண்டு ஆட்கொள்ளும் நாயகனே ! ஆமாத்தூரில் விளங்கும் அழகிய நாதனே ! நீண்ட சடை முடி தாழ்ந்து விளங்கவும், உமாதேவியார் பாடவும், நீவிர் திருநீற்றினை மெய்யில் பூசி, மாலும் அயனும் மாண்ட சுடுகாட்டில் நடம் புரியும் மாண்புதான் என்கொல் !

538. சேலினேரவு கண்ணிவெண்ணகை மான்விழித்திரு
மாதைப் பாகம் வைத்து
ஏலமாதவ நீமுயல்கின்ற
வேடமிதென்
பாலினேர்மொழி மங்கைமார்நட மாடியின்னிசை
பாடநீள்பதி
ஆலைசூழ்கழனி ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : பால்போன்ற இனிமையான மொழி பேசும் மங்கையர்கள் நடனம் ஆடியும் இனிமையான பாடல்களைப் பாடியும் விளங்குகின்ற பதியானது, கரும்பாலை சூழ்ந்த கழனிகளை யுடைய ஆமாத்தூர் ஆகும். அப்பதியில் மேவும் ஈசனே ! சேல் போன்ற கண்ணும், வெண்மையான பற்களும். மான் விழியும் உடைய உமா தேவியாரைப் பாகமாகக் கொண்டு, பொருந்திய தவத்தை யுடையவராய்த் திருக்கோலம் தாங்கியது என் கொல் !

539. தொண்டர்வந்து வணங்கிமாமலர் தூவிநின்கழல்
ஏத்துவார் அவர்
உண்டியால் விருந்த இரங்காதது
என்னைகொலாம்
வண்டலார்கழ னிக்கலந்து மலர்ந்த தாமரை
மாதர் வாள்முகம்
அண்டவாணர் தொழும் ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : வண்டல் மண் பொருந்திய கழனிகளில் கலந்த மலர்ந்த தாமரை போல் அழகிய முகத்தினை உடைய மாதர்கள் தொழுது போற்றும் ஆமாத்தூர் வீற்றிருக்கும் நாதனே ! தேவர்கள் தொழுதேத்தும் பெருமானே ! திருத்தொண்டர்கள் வந்து வணங்கி மாமலர் தூவி நின் கழலைச் சார்ந்திருக்க அவர்கள் பசிப் பிணியுற்று வருந்திய நிலையில் இரக்கம் கொண்டு அருள் புரியாதது என்கொல் !

540.ஓதியாரணம் ஆயநுண்பொருள் அன்றுநால்வர்முன்
கேட்க நன்னெறி
நீதியாலநிழல் உரைக்கின்ற
நீர்மையது  என்
சோதியே சுடரே சுரும்பமர் கொன்றையாய்திரு
நின்றியூருறை
ஆதியே அரனே ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : சோதியாய் ஒளிர்பவனே ! சுடராய் விளங்கபவனே ! வண்டுகள் அமரும் கொன்றை மலர் சூடி பெருமானே ! திருநின்றியூர் என்னும் திருத்தலத்தில் உறையும் ஆதியே ! அரனே ! ஆமாத்தூரில் வீற்றிருக்கும் பெருமானே ! ஐம்புலன்கள் மேவி அடர்த்துத் துன்பத்தில் சேர்க்கும் தன்மை உடைத்தமையால், அது நிலையாத வண்ணம், உறுதியுடன் வென்று விளங்கும் நீவிர், ஒரு பாகத்தில் மாது விளங்குமாறு வரித்து விரும்பி இருத்தல் எனக்கொல் !

541. செய்யதாமரை மேலிருந்தவ னோடுமாலடி
தேடநீள்முடி
வெய்ய வாரழலாய் நிமிர்கின்ற
வெற்றிமை யென்
தையாலாளொடு பிச்சைக்கிச்சை தயங்குதோலரை
யார்த்த டேங்கொண்டு
ஐயம் ஏற்றுகந்தாய் ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : உமாதேவியுடன், விளங்குகின்ற தோலை உடையாகக் கொண்டு, பிச்சை ஏற்பதற்கு விரும்பி ஆமாத்தூரில் வீற்றிருக்கும் நாதனே ! செந்தாமரை மேல் விளங்குகின்ற பிரமனும் திருமாலும், முடியும் திருப்பாத மலரடியும் முறையே தேடியும் காணுதற்கு ஒண்ணாதவனாய், ஆர்த்து எழும் பேரழலாய் ஓங்கிய வெற்றித் தன்மைதான் என்னே !

542. புத்தர்புன்சம ணாதர்பொய்ம்மொழி நூல்பிடித்தவர்
தூற்றிநின்னடி
பத்தர் போணநின்ற பரமாய
பான்மையதென்
முத்தைவென்ற முறுவலாளுமை பங்கனென்றிமை
யோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தார்
அம்மானே.

தெளிவுரை : முத்தின் சிறப்பினை வெல்லும் வெண்முறுவல் மேவும் உமாதேவியைப் பாகங்கொண்டு, தேவர்கள் போற்றும் அத்தனே ! அரியவனே ! ஆமாத்தூர் அம்மானே ! தம்மிடம் உள்ள நூலைக் கொண்டு, பொய்ம்மொழியாற்றி நின் திருவடியைப் பழித்துத் தூற்றினாலும், பக்தர்கள் பேணுகின்ற பரம் பொருளாய் விளக்குகின்ற சிறப்பு என்னே !

543. செய்யதாமரை மேலிருந்தவ னோடுமாலடி
தேடநீள்முடி
வெய்ய வாரழலாய் நிமிர்கின்ற
வெற்றிமை யென்
தையலாளொடு பிச்சைக்கிச்சை தயங்குதோலரை
யார்த்த வேடங்கொண்டு ஐயம் ஏற்றுகந்தாய்
ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : உமாதேவியுடன், விளங்குகின்ற தோலை உடையாகக் கொண்டு, பிச்சை ஏற்பதற்கு விரும்பி ஆமாத்தாரில் வீற்றிருக்கும் நாதனே ! செந்தாமரை மேல் விளங்குகின்ற பிரமனும் திருமாலும், முடியும் திருப்பாத மலரடியும் முறையே தேடியும் காணுதற்கு ஒண்ணாதவனாய், ஆர்த்த எழும் பேரழலாய் ஓங்கிய வெற்றித் தன்மைதான் என்னே !

544. புத்தர்புன்சம ணாதர்பொய்ம்மொழி நூல்பிடித்தலர்
தூற்றநின்னடி
பத்தர் பேணநின்ற பரமாய
பான்மையதென்
முத்தைவென்ற முறுவலாளுமை பங்கனென்றிமை
யோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர்
அம்மானே.

தெளிவுரை : முத்தின் சிறப்பினை வெல்லும் வெண்முறுவல் மேவும் உமாதேவியைப் பாகங்கொண்டு, தேவர்கள் போற்றும் அத்தனே ! அரியவனே ! ஆமாத்தூர் அம்மானே ! தம்மிடம் உள்ள நூலைக் கொண்டு, பொய்ம்மொழியாற்றி நின் திருவடியைப் பழித்துத் தூற்றினாலும், பக்தர்கள் பேணுகின்ற பரம்பொருளாய் விளங்குகின்ற சிறப்பு என்னே !

545. வாடல் வெண்டலை மாலையார்த்து மயங்கிருள்எரி
யேந்தி மாநடம்
ஆடல் மேய தென்னென்று ஆமாத்தூர்
அம்மானைக்
கோடல்நாகம் அரும்புபைம் பொழில் கொச்சை
யாரிறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ்
சேர்வாரே.

தெளிவுரை : கோடல் (வெண்காந்தன்) நாகம் ஆகிய மலர்கள் கொண்ட பசுமையான பொழில் திகழும் கொச்சைவயம் என்னும் சீகாழியின் நாதன் ஞானசம்பந்தர், தலைமாலை கொண்டு மயானத்தில் நெருப்பைக் கரத்தில் ஏந்திப் போராடல் மேவியது என் கொல் ! என்று ஆமாத்தாரில் வீற்றிருக்கும் நாதனைப் பாடிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் ஈசன் உலகத்தில் சேர்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

187. திருக்களர் (அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

546. நீருளார்கயல் வாவிசூழ்பொழில்
நீண்ட மாவயல்ஈண்டு மாமதில்
தேரினார் மறுகில்
விழாமல்கு திருக்களர்
ஊருளார்இடு பிச்சைபேணும்
ஒருவனேயொளிர் செஞ்சடைம்மதி
ஆர நின்றவனே
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : நீர் நிலைகள் மிகுந்த கயல்களின் பெருக்கமும், குளங்கள், பொழில்கள், நீண்ட சிறப்பான வயல்கள் மிகுதியுடன், நீண்ட நெடிய மதில், தேர் செல்லும் வீதிகள் மற்றம் திருவிழாக்கள் மல்கும் திருக்களர் என்னும் ஊருள் மேவும் இறைவனே ! பலி ஏற்கும் பெருமானே ! ஒளிர்கின்ற செஞ்சடையில் சந்திரனை வைத்த நாதனே ! நின்னை அடைக்கலமாகச் சார்ந்த அடியவர்களுக்கு அருள் புரிவீராக.

547. தோளின் மேலொளி நீறுதாங்கிய
தொண்டர்வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளரும்
தவமல்கு திருக்களருள்
வேளினேர் விசயற்கருள்புரி
வித்தகா விரும்பும்அடியாரை
ஆளுகந் தவனே
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : திருத்தொண்டர்கள், தோளின்மீது நீறு அணிந்து திருவடி போற்ற, நெருங்கி தொண்டு புரியும் திருவருள் மிக்கவர் வளரும் தவச் சிறப்புடைய திருக்களருள் மன்மதனை நிகர்த்த அழகுடைய விசயனுக்கு அருள் புரிந்த வித்தகனே ! நின்னை விரும்பி ஏத்தும் அடியவர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கி அருள் புரிந்த பெருமானே ! நின்னை அடைந்து வழிபடுபவர்களுக்கு அருள் புரிவீராக.

548. பாடவல்லநன் மைந்தரோடு
பனிமலர்பல கொண்டு போற்றிசெய்
சேடர் வாழ்பொழில்சூழ்
செழுமாடத் திருக்களருள்
நீடவல்ல நிமலனே யடி
நிரைகழல்சிலம்பு ஆர்க்க மாநடம்
ஆடவல் லவனே
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : பண்ணின் இசையுடன் பாடவல்ல அடியவர்கள், மலர்கொண்டு தூவிப் போற்றும் பெருமக்கள் ஆகியோர் வாழும் பொழில் சூழ்ந்த வளம் மிக்க மாடமாளிகைகள் உடைய திருக்களருள் வீற்றிருக்கும் நிமலனே ! திருவடியில் விளங்கும் கழலும் சிலம்பும் ஒலிக்கச் சிறப்பான நடனம் புரிய வல்லவனே ! நின்னை அடைந்து வணங்குபவர்களுக்கு அருள்புரிவீராக.

549. அம்பினேர்தடங் கண்ணினாருடன்
ஆடவர்பயில் மாடமாளிகை
செம்பொ னார்பொழில்
சூழ்ந்தழகாய திருக்களருள்
என்புபூண்டதோர் மேனியெம்இறைவா
இணையடி போற்றி நின்றவர்க்கு
அன்பு செய்தவனே
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : அம்பு போன்ற கூர்மையான நோக்கு உடையதும், விசாலமாக அகன்று விளங்கும் கண்களை உடைய மகளிரும் ஆடவரும் பொலியும் மாட மாளிகைகளும் அழகிய பொழில்களும் சூழ்ந்து விளங்கும் திருக்களருள், எலும்பினை மாலையாகத் திருமேனியில் தரித்த எம் இறைவனே ! நின் திருவடியைப் போற்றி நின்றவர்களுக்கு அன்பொடு விளங்கி அருள் புரிந்தவனே ! நின்னை அடைந்து வணங்கியவர்க்கு அருள்வீராக.

550. கொங்குலாமலர்ச் சோலை வண்டினம்
கொண்டிமாமது உண்டுஇசைசெயத்
தெங்கு பைங்கமுகம்
புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடும் கூடியமண
வாமனேபிணை கொண்டொர் கைத்தலத்து
அங்கை யிற்படையாய்
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : சோலைகளில் விளங்கும் வண்டினம் மலர்களைக் கெண்டி தேன் உண்டு மகிழ்ந்து செய்யவும் தென்னையும் பாக்கு மரங்களும் பக்கத்தில் புடைசூழ விளங்கும் திருக்களருள் உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் மாணாளனே ! ஒரு கரத்தில் மானும் மற்றொன்றில் மழுப்படையும் உடையவனே ! நின்னை அடைந்து வணங்கியவருக்கு அருள்புரிவீராக.

551. கோலமாமயில் ஆலக்கொண்டல்கள்
சேர்பொழிற்குல வும்வயலிடைச்
சேலிளங் கயலார்
புனல்சூழ்ந்த திருக்களருள்
நீலமேவிய கண்டனேநிமிர்
புன்சடைப்பெரு மான்எனப்பொலி
ஆல நீழலுளாய்
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : அழகிய மயில்கள் ஆடவும் மேகங்கள் சேர்பொழில் விளங்கம் வயல்கள் இடையில் சேலும் கயலும் விளங்குகின்ற நீர் சூழ்ந்த திருக்களருள் நீல கண்டனாய்த் திகழ்பவனே ! சடை விளங்கும் பெருமானாய் ஆல் நிழலில் வீற்றிருந்து அறமுரைத்த நாதனே ! நின்னை அடைந்தவர்க்கு அருள்புரிவீராக.

552. தம்பலம்மறி யாதவர்மதில்
தாங்குமால்வரை யால்அழல்எழத்
திண்பலங் கெடுத்தாய்
திகழ்கின்ற திருக்களருள்
வம்பலர்மலர் தூவிநின்னடி
வானவர் தொழக் கூத்துகந்தபேர்
அம்பலத் துறைவாய்
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : இறைவன் திருமுன்னர், தமது ஆற்றல் பயனற்றதாகும் என்பதை அறியாத அசுரர்கள் பகைத்து நிற்க, அவர்களை, மூன்று கோட்டை மதில்களுடன் எரிந்து சாம்பலாகுமாறு, மேருமலையை வில்லாகக் கொண்டு செற்று, அடர்த்த பெருமானே ! பெருமையுடன் திகழும் திருக்களருள், நறுமணம் பரவும் மலர் தூவி நின்திருவடியை வணங்கிய மேன்மையாளர்கள் காணுமாறு திருநடனம் புரிந்த அம்பல வாணனே ! நின்னை அடைந்தவர்க்கு அருள் புரிவீராக.

553. குன்றடுத்தநன் மாளிகைக்கொடி
மாடநீடுயர் கோபுரங்கண்மேல்
சென்ற டுத்துயர்வான்
மதிதோயும் திருக்களருள்
நின்றடுத்துயர் மால்வரைத்திரள்
தோளினால்எடுத் தான்றன் நீள்முடி
அன்றடர்த் துகந்தாய்
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : குன்றனைய உறுதியும் உயர்வும் கொண்ட மாட மாளிகைகளிலும் கோபுரங்களிலும் விளங்கும் கொடிகள் வானத்தில் உள்ள சந்திரன்பால் தோயும் சிறப்புடைய திருக்களரில், நின்று உயர்ந்த விளங்கும் கயிலை மலையை எடுத்த இராவணனுடைய தோளையும் நீண்ட முடிகளையும் தன் திரப்பாதத்தால் அடர்த்து விளங்கும் ஈசனே ! நின்னை அடைந்தவர்க்கு அருள் புரிவீராக.

554. பண்ணியாழ்பயில் கின்றமங்கையர்
பாடலாடலொடு ஆரவாழ்பதி
தெண்ணி லாமதியம்
பொழில்சேரும் திருக்களருள்
உண்ணிலாவிய ஒருவனே குரு
வர்க்குநின்கழல் காட்சி ஆரழல்
அண்ண லாயஎம்மான்
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : பண்ணில் விளங்கும் யாழ் பயிலும் மங்கையரின் பாடலுடன் ஆடலும் பொருந்தி வாழ் பதியாய்த் தெளிந்த நிலவின் ஒளியும் பொழிலும் சேரும் சிறப்புடைய திருக்களருள், உள்ளிருந்து யாவிலும் நிலவும் ஒருவனாகிய ஈசனாய், திருமால் பிரமன் ஆகிய இருவருக்கும் சோதிப் பிழம்பாய்க் காட்சி நல்கிய அண்ணலாகிய பெருமானே ! நின்னை அடைந்து வணங்கியவர்க்கு அருள் புரிவீராக.

555. பாக்கியம்பல செய்த பக்தர்கள்
பாட்டொடும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார்
சிறந்தாருந் திருக்களருள்
வாக்கினான்மறை யோதினாய்அமண்
தேரர்சொல்லிய சொற்களாபொய்
ஆக்கி நின்றவனே
அடைந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : பாக்கியம் செய்த பக்தர்கள் புகழ் பாடல் களைக் கூறித் துதித்துப் போற்ற வேதம் பயின்ற மறையவர்கள், தீவளர்த்து வேள்வி செய்து, செம்மை புரியும் சிறந்த குணம் உடையவர்களாய்ப் பொலிய விளங்கும் திருக்கருள், சமணர் மற்றும் சாக்கியரின் சொற்களைப் பொய்யுரையாக்கி, திருவாயால் மறை ஓதி நின்ற பெருமானே ! நின்னை அடைந் வணங்குபவர்களுக்கு அருள்புரிவீராக.

556. இந்துவந்தெயு மாடவீதி
எழில்கொள்காழிந் நகர்க்கவுணியன்
செசந்து நேர்மொழியார்
அவர்சேரும் திருக்களருள்
அந்தியன்னதொர் மேனியானை
அமரர்தம்பெரு மானைஞானசம்
பந்தன் சொல்லிவை பத்தும்
பாடத் தவமாமே.

தெளிவுரை : சந்திரனின் குளிர்ச்சி மிக்க வெண்மையான ஒளி சேர் மாடவீதியின் எழில் மிக்க காழி நகரில் மேவும் கவுணியர் மரபில் தோன்றிய ஞானசம்பந்தர், செந்து என்னும் பண்ணிசை பாடும் மகளிர் சேரும் திருக்களருள், அந்திப்போது போன்ற செவ்வண்ண மேனியனாய் விளங்கம் தேவர்தம் பெருமானைச் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதுதல் சிறந்த தவம் ஆகும்.

திருச்சிற்றம்பலம்

188. கோட்டாறு (அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொட்டாரம், திருவாரூர்  மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

557. கருந்தடங்கண்ணின் மாதராரிசை
செய்யக்காரதிர் கின்றபூம்பொழிற்
குருந்த மாதவியின்
விரைமல்கு கோட்டாற்றில்
இருந்தஎம்பெரு மானையுள்கி
யிணையடி தொழுது ஏத்துமாந்தர்கள்
வருந்து மாறறியார்
நெறிசேர்வர் வானூடே.

தெளிவுரை : கருமையான விசாலமான கண்களை உடைய பெண்கள் இசை பாட, அடர்த்திöõன மேகம் போன்ற பூம்பொழில் சூழக் குருந்த மரத்தில் மாதவிக் கொடி படர்ந்து நறுமணம் பரப்பி விளங்கும் கோட்டாற்றில் வீற்றிருக்கும் எம் ஈசனை நினைத்து, திருவடியை வணங்கி ஏத்துகின்ற மாந்தர்கள் உலகத்தில் வருத்தம் அடைமாட்டார்கள்; வீடுபேறு அடைவதற்கு உரிய வழியாக ஞானம் கைவரப் பெறுவார்கள்.

558. நின்றுமேய்ந்த நினைந்து மாகரி
நீரொடும் மலர் வேண்டிவான்மழை
குன்றி னேர்ந்து குத்திப்
பணி செய்யும் கோட்டாற்றுள்
என்று மன்னிய எம்பிரான்கழல்
ஏத்தி வானரக ஆளவல்லவர்
பொன்று மாறறி யார்
புகழார்ந்த புண்ணியரே.

தெளிவுரை : நின்ற வண்ணம் விளங்கி மேவும் பெரிய யானை நீரும் மலரும் கொண்டு வானத்திலிருந்து ஈட்டிப் பூசித்துப் பணிந்த கோட்டாற்றுள், எக்காலத்திலும் பொலிவுடன் விளங்குகின்ற எம்பெருமான் திருக்கழலை ஏத்தி வழிபடுபவர், வானுலகை ஆளும் வல்லமை அடைவர்; அழிவு அற்றவராய் விளங்குவர்; புகழ் மிக்கவராயும் புண்ணியவான்களாயும் திகழ்வர்.

559. விரவி நாளும் விழாவிடைப்பொலி
தொண்டர்வந்து வியந்து பண்செயக்
குரவ மாரு நீழற்
பொழில் மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடை யானையுள்கிநின்று
ஆதரித்துமுன் அன்புசெய்துஅடி
பரவுமாறு வல்லார்
பழிபற்று அறுப்பாரே.

தெளிவுரை : நாள்தோறும் சிறப்பு மிக்க திருவிழாப் பொலிவு காண்கின்ற திருத்தொண்டர்கள் வந்து குழுமி, பண் மிகுந்த பாடல்களைப் பாடிப் பக்திப் பெருக்கில் திளைக்க, குரவ மலர்களின் மணம் கமழும் பொழில் சூழ்ந்த கோட்டாற்றில், அரவம் தரித்த நீண்ட சடையுடைய ஈசனை நினைத்து உருகி நின்று அன்புடன் திருவடியைப் பரவும் அடியவர்கள், பழியில்லாதவர்கள் ஆவார்கள். அவர்க்குப் பற்றறுக்கும் செம்மையும் வாய்க்கும்.

560. அம்பினேர்விழி மங்கைமார் பலர்
ஆடகம்பெறு மாடமாளிகைக்
கொம்பினேர்துகி லின்கொடி
யாடு கோட்டாற்றில்
நம்பனேநட னேநலந்திகழ்
நாதனேயென்று காதல்செய்தவர்
தம்பி னேர்ந்தறி யார்
தடுமாற் றவல் வினையே.

தெளிவுரை : அம்பு போன்ற கூரிய விழியுடைய மங்கையர் பலர் ஆடுகின்ற மாட மாளிகையும் உயர்ந்த கொம்புகளில் கொடிகள் விளங்கிப் பறக்கும் கோட்டாற்றின் சிவனே ! நடனம் புரியும் நாதனே ! என்று மொழிந்து பக்தி செய்தவர்களுக்கு, அஞ்ஞானத்தால் நிகழும் தடுமாற்றமும் இல்லை; வன்மை செய்யும் வினையால் நேரும் துன்பமும் இல்லை.

561. பழையதம்மடி யார்துதி செயப்பாரு
ளோர்களும் விண்ணு ளோர்தொழக்
குழலு மொந்தை விழா
ஒலிசெய்யும் கோட்டாற்றில்
கழலும்வண்சிலம் பும்ஒலிசெயக்
கானிடைக்கணம் ஏத்தஆடிய
அழகன் என்றெழுவார்
அணியாவர் வானவர்க்கே.

தெளிவுரை : பழமையாய்த் தொண்டு செய்து வழிபாடு இயற்றி அடியவர்களாகிய செல்வர்களும் துதி செய்ய, இவ்வுலகத்தின் உள்ள மாந்தர்களும் தேவலோகத்தில் உள்ளவர்களும் தொழுது ஏத்த, குழலும் மொந்தையும் கொண்டு இன்னிசை எழுப்பி விழா நிகழும் சிறப்புடைய கோட்டாற்றில், ஈசன் நனி விளங்குகின்றான். அப் பெருமான், கழலும் சிலம்பும் ஒலிக்க, மயானத்தில் பேயக்கணங்கள் இடையில் ஆடுகின்ற அழகன். அவனை ஏத்தி வணங்குபவர்ள் வானவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுவார்கள்.

562. பஞ்சின்மெல்லடி மாதர்ஆடவர்
பத்தர்சித்தர்கள் பண்புவைகலும்
கொஞ்சி யின்மொழியால்
தொழில்மல்கு கோட்டாற்றில்
மஞ்சனே மணி யேமணி மிடற்று
அண்ணலேயென உள்நெகிழ்ந்தவர்
துஞ்சு மாறறியார்
பிறவார்இத் தொன்னிலத்தே.

தெளிவுரை : பஞ்சுபோன்ற மென்மையான பாதங்களை உடைய மாதர்களும், ஆடவர்களும், பக்தர்களும் சித்தர்களும் ஈசன் திருப்புகழைப் போற்றி அன்பால் இசைத்து இனிய மொழிகளால் வழிபாடு நிகழ்வது கோட்டாறு. அத் திருத்தலத்தில் விளங்கும் நாதனை, மைந்தனே ! நீலகண்டனே ! என மனம் கசிந்து போற்றுபவர்கள், இறப்பு அடைய மாட்டார்கள்; சிவப்பேறு உடையவர்களாய்த் திகழ்ந்து, இவ்வுலகில் மீண்டும் பிறக்க மாட்டார்கள்.

563. கலவமாமயி லாளெர் பங்கனைக்
கண்டுகண்மிசை நீர்நெகிழ்த்திசை
குலவு மாறுவல்லார்
குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவுமாமதி சேர்சடையுடை
நிலவுமாமதி சேர்சடையுடை
நின்மலாவென உன்னுவாரவர்
உலவு வானவரின்
உயர்வாகுவது உண்மையதே.

தெளிவுரை : தோகையுடைய மயில் போன்ற சாயலைஉடைய உமாதேவியைப் பாகங்கொண்ட ஈசனைக் கண்டு, கண்ணீர் மல்கக் கசிந்து உருகி வணங்கும் பக்தர்கள் சூடிகொண்டு விளங்கும் கோட்டாற்றில், பிறை சூடிய சடையுடையவனே ! நின்மலனே ! என் நினைத்த வழிபடுபவர்கள், மகிழ்வு கொண்டு உலவும் இயல்பினையுடைய தேவர்களைக் காட்டிலும் உயர்ந்த வராய் விளங்குவார்கள். இது சத்தியம்.

564. வண்டலார்வயல் சாலியாலை
வளம்பொலிந்திட வார்புனல்திரை
கொண்டலார் கொணர்ந்த
அங்குலவும்திகழ் கோட்டாற்றில்
தொண்டெலாந்துதி செய்யநின்ற
தொயிலனேகழ லால்அரக்கனை
மிண்டெலாந் தவிர்த்து
என்னுகந்திட்ட வெற்றிமையே.

தெளிவுரை : வண்டல் மண் விளங்கம் வயல்களில், நெல்லும் கரும்பும் வளம் பொலிய, நெடிய நீர்வளத்தை மேகமானது கெண்டு வந்து சேர்த்துத் திகழ்வது கோட்டாறு. அத் தலத்தில் தொண்டர்கள் துதி செய்து வழிபட, அருள் வழங்கும் தொழிலில் மேம்பட்டு விளங்கும் பெருமானே ! உன் திருக்கழலால் இராவணனுடைய புன்மை கொண்ட வலிமையை நீக்கி, என்னை உகந்து ஏற்றது வெற்றிச் சிறப்பாகும்.

565. கருதிவந்தடி யார்தொழுது எழக்
கண்ணனோடுஅயன் தேடஆனையின்
குருதி மெய்கலப்ப
உரிகொண்டு கோட்டாற்றில்
விருதினால்ட மாதுநீயும்
வியப்பொடும்உயர் கோயில்மேவிவெள்
எருதுஉகந் தவனே
இரங்காய் உனது இன்னருளே.

தெளிவுரை : அடியவர்கள் நின்னை மனத்தால் கருத்து ஒருமித்துத் தொழுது போற்ற, திருமாலும் பிரமனும் தேடி நிற்க, யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கோட்டாற்றில் பெரும் புகழோடு உமாதேவியுடன், யாவரும் வியந்து போற்றும் சிறப்புடன் கோயில் கொண்டு, வென்மையான இடப வாகனத்தில் உகந்து வீற்றிருப்பவனே ! உனது இனிய அருளைக் கருணையுடன் புரிவாயாக.

566. உடையிலாதுழல் கின்ற குண்டரும்
ஊணருந்தவத் தாயசாக்கியர்
கொடையி லார்மனத்
தார்குறையாரும் கோட்டாற்றில்
படையிலார்மழு வேந்தி யாடிய
பண்பனேயிவர் என்கொலோநினை
அடைகி லாதவண்ணம்
அருளாய்உன் னடியவர்க்கே.

தெளிவுரை : சமணர்களாகிய திகம்பரர்களும், உணவு கொள்ளாது தவம் புரியும் சாக்கியரும் வண்மையற்ற மனத்தினராய்க் குறைகளை நவிலும் தன்மையில், கோட்டாற்றில் படைகளில் வலிமையானதாகிய மழு வேந்தித் திருநடம் புரியும் பண்புடைய பெருமானே ! இப் பெருமான் அருள் வண்ணம் என்கொல் ! என்று நின்னைச் சார்ந்து போற்றாது இவர்கள் வாளா இருப்பதுதான் எதற்கு ? அதன் உண்மையை உன் அடியவர்களுக்கு உணர்த்துவாயாக.

567. காலனைக் கழலால் உதைத்தொரு
காமனைக்கன லாகச் சீறிமெய்
கோல வார்குழலாள்
குடிகொண்ட கோட்டாற்றில்
மூலனைமுடி வொன்றிலாதஎம்
முத்தனைப்பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும்வல்லார்க்கு
எளிதாகும் வானகமே.

தெளிவுரை : காலனைக் காலால் உதைத்து, மன்மதனை நெற்றிக் கண்ணால் சீறி எரித்து, உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருக்கும் கோட்டாற்றில், யாவற்றுக்கும் மூலப்பொருளாயும் முடிவற்றவனாயும் விளங்கும் முத்தனாகிய ஈசனை வணங்கிய ஞானசம்பந்தர், சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், வானுலகினை எளிதாக அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

189. புறவார் பனங்காட்டூர் (அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

568. விண்ணமர்ந்தன மும்மதில்களை
வீழவெங்கணை யாலெய்தாய்விரி
பண்ணமர்ந்தொலி சேர்
புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ணமர்ந்தொரு பாகமாகிய
பிஞ்ஞகாபிறை சேர்நுதலிடைக்
கண்ணமர்ந் தவனே
கலந்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : விண்ணில் பொருந்திய மூன்று மதில்கள் எரிந்து சாம்பலாகி அழியுமாறு கொடிய கணையால் எய்து விளங்கும் ஈசனே ! வேதங்கள் விரித்து ஓத, அவ்வொலியானது சேரம் புறவார் பனங்காட்டூரில் உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்கும் பிஞ்ஞகனே ! பிறைச் சந்திரனைச் சூடிய நெற்றிக் கண்ணுடைய நாதனே ! நின்னை வணங்கும் அன்பர்களுக்கு அருள் புரிவீராக.

569. நீடல்கோடல் அலரவெண் முல்லை
நீர்மலர் நிரைத் தாதளம்செய்
பாடல்வண் டறையும்
புற வார்பனங்காட்டூர்த்
தோடுஇலங்கிய காதயன்மின்
துளங்கவெண்குழை துள்ளநள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே
அடைந் தார்க்கருளாயே.

தெளிவுரை : நீண்ட வெண்காந்தன், வெண்முல்லை மற்றும் உள்ள நீர் மலர்களின் மகரந்தத் தாதுக்களைக் வரிசையாய் விரவிக் குவித்து வைக்கும் வண்டுகள் பாடும் புறவார் பனங்காட்டூர் என்னும் திருத்தலத்தில், தோடு அணிந்து மின்னல் போன்று ஒளிரும் வெண் குழையும் விளங்க, நள்ளிருளில் நடம்புரியும் சங்கரனே ! நின்னைச் சரண் அடைந்து வணங்கும் அன்பர்களுக்கு அருள்வீராக.

570. வாளையும்கய லும்மிளிர்பொய்கை
வார்புனற்கரை யருகெலாம்வயல்
பாளையொண் கமுகம்
புற வார்பனங்காட்டூர்ப்
பூளையுந்நறுங் கொன்றையும்மத
மத்தமும்புனை வாய்கழலிணைத்
தாளை யேபரவும்
தவத் தார்க் கருளாயே.

தெளிவுரை : வாளை, கயல் ஆகிய மீன் வகைகள் மிளிரும் நீர் நிறைந்த பொய்கைக் கரையின் பக்கங்களில் வயல்களும் கமுக மரங்களும் திகழும் புறவார் பனங்காட்டூரில், பூளைப்பூ, கொன்றைமலர், ஊமத்தம் பூ ஆகியவற்றைப் புனைந்த ஈசனே, நின் கழல்களைப் பரவிப் போற்றும் தவத்தினர்க்கு அருள் புரிவீராக.

571. மேய்ந்திளஞ் செந்நெல் மென்கதிர்கல்வி
மேற்படுதலின் மேதிவைகறை
பாய்ந்த தண்பழனப்
புற வார் பனங்காட்டூர்
ஆய்ந்தநான்மறை பாடியாடும்
அடிகள்என்றென்று அரற்றிநன்மலர்
சாய்ந்தடி பரவும்
தவத் தார்க்கு அருளாயே.

தெளிவுரை : எருமையானது மேய்ந்து செந்நெற் கதிர்களைக் கவ்வி இருக்க வைகறையில் வயல்களுக்குச் செல்லும் வளப்பம் மிகுந்த புறவார் பனங்காட்டூரில், விளங்குகின்ற நான்மறை போற்றும் அடிகளே ! என்று அரற்றி, மலர் தூவி வணங்கும் தவத்தினர்க்கு அருள்வீராக.

572. செங்கயலொடு சேல்செருச் செயச்
சீறியாழ்முரல் தேனினத்தொடு
பங்கயம் மலரும்
புற வார்பனங்காட்டூர்க்
கங்கையும்மதி யும்கமழ்சடைக்
கேண்மையாளொடுங் கூடிமான்மறி
அங்கை யாடலனே
அடி யார்க்கருளாயே.

தெளிவுரை : கயலும் சேலும் (மீன் வகைகள்) ஒன்றுக் கொன்று மோதி பொருதலைத் தோற்றுவிக்க, சீறி ஒலி தரும் யாழைப் போன்று வண்டினங்கள் ஒலி செய்ய, தாமரை மலரும் நீர்வளமும் பெருகும் புறவார் பனங்காட்டூரில், கங்கையும் பிறைச் சந்திரனும் மணங்கமழும் சடையில் விளங்க, மிகுந்த அன்புடைய உமாதேவியைப் பாகங் கொண்டு, இளமையான மானைக் கரத்தில் ஏந்தி நடம்புரியும் நாதனே ! அடியவர்களுக்கு அருள் புரிவீராக.

573. நீரினார்வரை கோலிமால்கடல்
நீடியபொழில் சூழ்ந்துவைகலும்
பாரினார் பிரியாப்
புற வார் பனங்காட்டூர்க்
காரினார்மலர்க் கொன்றைதாங்கு
கடவுள் என்றுகை கூப்பிநாள்தொறும்
சீரினால் வணங்கும்
திறத்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : நீர்க்கால் வாய்களால் அகழி போன்ற எல்லை வகுத்துப் பெரிய கடல் போன்ற விரிந்த பொழில் சூழ்ந்து விளங்க, நாள்தோறும் உலக மாந்தர், பிரிவு கொள்ளாத புறவார் பனங்காட்டூரில், கார் காலத்தில் மலரும் கொன்றை மலரைச் சூடுகின்ற கடவுள் என்று கைகூப்பித் தினந்தோறும் அன்பாற் கலந்து வணங்கும் திறத்தார்க்கு, அருள் புரிவீராக.

574. கையரிவையர் மெல்விரல்லவை
காட்டியம்மலர்க் காந்தளங்குறி
பையரா விரியும்
புற வார்பனங்காட்டூர்
மெய்யரி வையொர் பாகமாகவும்
மேவினாய் கழல் ஏத்தி நாடொறும்
பொய்யிலா அடிமை
புரிந்தார்க் கருளாயே.

தெளிவுரை : மகளிர்தம் மெல்லிய விரல்கள் போன்ற காந்தள் மலரும், பாம்பும், படம் போன்று விரியும் மலர்களும் உடைய புறவார் பனங்காட்டூரில், திருமேனியில் உமாதேவியை ஒரு பாகமாக மேவிய ஈசனே ! நும் திருவடியை ஏத்திப் பொய்யற்ற அடிமை பூண்டு, நாள்தோறும் போற்றுகின்ற அன்பர்களுக்கு அருள் புரிவீராக.

575. தூவியஞ்சிறை மென்னடையென
மல்கியொல்கிய தூமலர்ப் பொய்க்கைப்
பாவில் வண்டறையும்
புற வார்பனங்காட்டூர்
மேவியந்நிலை யாயரக்கன
தோளடர்த்தவன் பாடல்கேட்டருள்
ஏவிய பெருமான்
என்பவர்க்கு அருளாயே.

தெளிவுரை : தூய்மையான சிறகுகளையுடைய மென்னடையுடைய அன்னப் பறவைகள் வாழ்கின்ற மலர்கள் மிகுந்த பொய்கையில் வண்டுகள் ஒலி செய்யும் புறவார் பனங்காட்டூரில், கயிலை மலையை எடுத்த இராவணனுக்கு அருள் வழங்கி மேவி விளங்கும் நாதனே ! எம் பெருமானே ! என்று போற்றித் துதிப்பவர்களுக்கு அருள் புரிவீராக.

576. அந்தண்மாதவி புன்னைநல்லஅ
சோகமும்அர விந்தமல்லிகை
பைந்தண்ஞாழல்கள் சூழ்
புற வார்பனங்காட்டூர்
எந் திளம்முகில் வண்ணனான்முகன்
என்றிவர்க்கரி தாய்நிமிர்ந்ததொர்
சந்தமா யவனே
தவத்தார்க்கு அருளாயே.

தெளிவுரை : அழகிய குளிர்ச்சியான மாதவி, புன்னை, நல்ல அசோகு, அரவிந்தம், மல்லிகை, கொன்றை ஆகிய மலர்கள் திகழ விளங்கும் சோலைகளும் பொழில்களும் சூழ்ந்த புறவார் பனங்காட்டூரில், திருமாலும் பிரமனும் ஆகிய இருவர்க்கும், காணுதற்கு அரிதாய் ஓங்கிய அழகனே ! தவம்புரிந்த பெருமக்களுக்கு அருள் புரிவீராக.

577. நீணமார்முரு குண்டுவண்டின
நீலமாமலர் கவ்விநேரிசை
பாணில்யாழ் முரலும்
புற வார்பனங்காட்டூர்
நாணழிந்துழல் வார்சமணரு
நண்பில்சாக்கிய ருந்நகத்தலை
ஊணுரியவனே
உகப்பார்க்கு அருளாயே.

தெளிவுரை : தேனை நெடிது உண்ட வண்டினம், நீல மலர்களைக் கவ்வி, யாழின் இசை போன்று ஒலிக்கும் புறவார் பனங்காட்டூரின்கண், உழல்கின்ற சமணரும் சாக்கியரும் நகைகொள்ளுமாறு, பிரம கபாலம் ஏந்தி உணவு கொண்ட ஈசனே ! நின்னை உகந்து போற்றும் அன்பர்களுக்கு அருள் புரிவீராக.

578. மையினார்மணி போல்மிடற்றனை
மாசில்வெண்பொடி பூசுமார்பனை
பையதேன் பொழில்சூழ்
புறவார் பனங்காட்டூர்
ஐயனைப்புக ழானகாழியுள்
ஆய்ந்தநான்மறை ஞானசம்பந்தன்
செய்யுள்பாட வல்லார்
சிவலோகம் சேர்வாரே.

தெளிவுரை : கரிய மணி போன்று மிடற்றை உடைய நீலகண்டனை, மாசுறாத திருநீறு பூசுகின்ற மார்பினனை, தேன் விளங்கும் பொழில் சூழ் புறவார் பனங்காட்டூர் தலைவனை, புகழ் மிக்க சீகாழியுள் நான்கு மறைகளையும் ஆய்ந்து தேர்ந்த ஞானசம்பந்தர் சொல்லிய செய்யுள் ஆகிய இத் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள் சிவலோகம் இனிது சென்று விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

190. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

579. உருவார்ந்த மெல்லியலோர்
பாகமுடையீர் அடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங்
காட்டிக் கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடல்ஒண்
சங்கம்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே.

தெளிவுரை : அழகிய பொலிவுடைய மென்மையின் இயல்பு உடைய உமாதேவியைப் ஒரு பாகம் உடைய தேவரீர் ! அடைந்து வழிபடு அடியவர்களுக்கு வான் உலகத்தின் சிறப்பினை நன்கு புகட்டுதலும் வழங்குதலும் கருத்தாக உடையீர். கடல் அலைகள் கரையைச் சார்ந்து மோதி சங்குகளைப் பெருக வழங்கும் அழகிய புகலியின்கண் திருவிளங்கும் கோயிலை இடமாகக் கொண்டு திகழ்பவர், நீவிரே ஆவீர்.

580. நீரார்ந்த செஞ்சடையீர்
நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீர்
உழைமான் உரிதோல் ஆடையீர்
பேரார்ந்த தெண்டிரைசென்று
அணையுங் கானற் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.

தெளிவுரை : கங்கை தரித்த சடையுடையவரே ! திருக்கழலின் சிறப்பினைக் காட்டும் பாதம் உடையவரே ! சிறு பொருட்களையும் ஊர் ஊராகச் சென்று பிச்சையாக ஏற்றவரே ! மான் தோலை ஆடையாக உடையவரே ! அலைகள் மோதும் பூம்புகலியில் சீர் கொண்டு விளங்கும் கோயிலின்கண் இடமாகச் சேர்ந்து விளங்கும் பெருமான், நீவிர் ஆவீர்.

581. அழிமல்கு பூம்புனலும்
அரவும் சடைமேல் அடைவெய்த
மொழிமல்கு மாமறையீர்
கறையார் கண்டத்து எண்தோளீர்
பொழில்மல்கு வண்டினங்கள்
அறையும்கானற் பூம்புகலி
எழில்மல்கு கோயிலே
கோயிலாக இருந்தீரே.

தெளிவுரை : மிகுதியாகப் பெருகித் தோன்றும் அழகிய கங்கையும் அரவமும் சடையின் மீது சார்ந்து இருக்க, மொழியின் சிறப்பாக விளங்கும் வேதமாக உள்ளவரே ! கரிய கண்டமும் தோள்களும் உடைய நாதரே ! பொழில்கள் சிறந்து விளங்கவும் வண்டினங்கள் சூழ்ந்து ஒலிக்கவும் உள்ள சோலைகள் விளங்கும் பூம்புகலியில் எழில் பெருகும் திருக்கோயிலை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் நீவிர்.

582. கையில்ஆர்ந்த வெண்மழுவொன்று
உடையீர்கடிய கரியின்தோல்
மயிலார்ந்த சாயல்மட
மங்கை வெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள்
பதியாய் விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே
கோயிலாக இசைந்தீரே.

தெளிவுரை : திருக்கரத்தில் பெருமையாய்த் திகழ்கின்ற மழுப் படையுடைய தேவரீர், கொடிய யானையின் பசுந்தோலை, மயில் போன்ற சாயலையுடைய மங்கையாகிய உமாதேவி வெருவி அஞ்சுமாறு திருமேனியில் போர்த்து உள்ளவர் ஆயினீர் ! வேத விற்பன்னர்களின் நகராக விளங்கும் அழகிய புகலியில், மதில் சிறப்புடைய திருக்கோயில்லை இடமாகக் கொண்டு  இசைந்து விளங்குபவர் ஆனீர்.

583. நாவார்ந்த பாடலீர்
ஆடல்அரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின்
பயன்கள் ஆனீர் அயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும்
வயலும் சூழ்ந்த பொழிற்புகலித்
தேவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே.

தெளிவுரை : நாவானது பொலியுமாறு விளங்கும் வேதமாக உடைய தேவரீர். ஆடுகின்ற அரவத்தை அரையில் கட்டி, பாடல்களின் கருப் பொருளாகயும் மெய்பொருளாயும் நுண்பொருளாயும் விளங்குகின்ற பல்வேறு சிறப்புடைய பொருள்களாகவும், அவற்றின் பயன்களாகவும் ஆயினீர். பிரமன் பேணிப் பூசித்துப் போற்றும் பூக்களும், நீர்வளம் மிக்க பொய்கைகளும், வயல்களும் சூழ்ந்த பொழில்கள் திகழும் புகலி நகரின் தெய்வ விழாக்களும், சிறப்பும், மணமும் கொண்டு விளங்கும் கோயிலை இடமாகக் கொண்டு திகழ்பவர் நீவிரே.

584. மண்ணார்ந்த மண்மழவம்
ததும்ப மலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழ்ப்
பேணி எரிகொண்டு ஆடினீர்
விண்ணார்ந்த மதியமிடை
மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே
கோயிலாகக் கலந்தீரே.

தெளிவுரை : மண்ணுலகத்தில் உள்ள மாந்தர்கள் யாவரும் பெருமையுற்று மகிழுமாறு, மண்ணுலகில் மலையரசன் மகளாகத் தோன்றி வளர்ந்த உமாதேவியாரை, திருமேனி மகிழுமாறு பேணிப் பொருந்தி, திருக்கரத்தில் நெருப்பு ஏந்தி ஆடிய தேவரீர், விண்ணில் பொலியும் சந்திரனுடைய வெண்ணொளி மாட வீதிகளில் நன்கு திகழும் பெருமையுடைய புகலியில், கண்களுக்கு அரிய காட்சியாக விளங்கி மகிழ்வூட்டும் கோயிலை இடமாகக் கொண்டு வீற்றிருந்து கலந்து பொலிந்தவர் நீவிரே.

585.களிபுல்கு வல்லவுணர்
ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர்
அமரர்ஏத்த அருள்செய்தீர்
தெளிபுல்கு தேனினமும்
மலருள் விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே
கோயிலாக உகந்தீரே.

தெளிவுரை : மாயையில் வல்ல ஆணவத்தின் களிப்பில் திளைத்து மூழ்கிய கொடிய அசுரர்களின் மூன்று புரங்கள், எரிந்து சாம்பலாகுமாறு கணை தொடுத்த தேவரீர், வண்டுகள் மொய்க்கும் பூக்களைச் சூடிய முடியுடையவராய்த் தேவர்கள் வணங்கி ஏத்த அருள் செய்தீர். நீவிர், தேன் துளிர்க்கும் நறுமண மலர்கள் விளங்கும் அருள் திண்மையுடைய புகலியில் பெருமையுடன் விளங்கும் கோயிலை இடமாகக் கொண்டு உகந்து விளங்குபவர் ஆயினீர்.

586. பரந்தோங்கு பல்புகழ் சேர்
அரக்கர் கோனை வரைக்கீழ்இட்டு
உரந்தோன்றும் பாடல்கேட்டு
உகவையளித்தீர் உகவாதார்
புரந்தோன்று மும்மதிலும்
எரியச் செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : பரந்த புகழுடைய இராவணனை மலையின் கீழ் நெரிவித்து, அவன் இசைத்த சாம வேதமாகிய வலிமை மிக்க கானத்தைக் கேட்டு உகக்குமாறு அருள் புரிந்த தேவரீர், உகந்து போற்றாத முப்புர அசுரர்களுடைய மூன்று மதில்களும் எரியுமாறு செற்றுப் பூம்புகலியில் வரந்திகழும் கோயிலில் வீற்றிருக்கும் பெருமையில் மகிழ்ந்தவர் ஆயினீர்.

587. சலந்தாங்கு தாமரைமேல்
அயனும்தரணி யளந்தானும்
கலந்தோங்கி வந்திழிந்தும்
காணாவண்ணம் கனலானீர்
புலந்தாங்கி ஐம்புலனும்
செற்றார் வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே
கோயிலாக நயந்தீரே.

தெளிவுரை : தாமரையில் விளங்கும் பிரமனும், உலகத்தை அளந்த திருமாலும் சேர்ந்து காணும் பொருட்டு ஓங்கி பறவையாகவும், இழிந்து பன்றி வடிவாயும், முயன்றும் காணாத வண்ணம் சோதிப் பிழம்பாகிய தேவரீர், செய்யுணர்வு உடையவராகி, ஐம்புலன்களை அடக்கி வாழும் பூம்புகலியில், மன்னுயிர்க்குப் படியளக்கும் நலம் முதற்கொண்டு முத்திப் பேறு அளிக்கும் நலம் ஈறாக, எல்லா நலங்களும் தாங்கி அருள் புரியும் கோயிலில் வீற்றிருந்து விரும்புமாறு விளங்குவீர் ஆயினீர்.

588. நெடிதாய வன்சமணு(ம்)
நிறைவொன்றில்லாச் சாக்கியரும்
கடிதாய் கட்டுரையாற்
கழற மேலோர் பொருளானீர்
பொடியாரு மேனியினீர்
புகலி மறையோர் புரிந்தேத்த
வடிவாரும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கடுமையான சொற்களால் பழித்துப் பேசி நிற்க, மேலாக விளங்கும் மெய்ப் பொருள் ஆகி விளங்கும் தேவரீர், திருநீறு விளங்கும் திருமேனி உடையவராய்ப் புகலியில் விளங்கும் மறைவல்ல அந்தணர்கள் பூசித்துப் பரவி ஏத்த அழகுடன் மிளிரும் கோயிலில் இடமாக வீற்று மகிழ்ந்தவர் ஆயினீர்.

589. ஒப்பரிய பூம்புகலி
ஓங்குகோயில் மேயானை
அப்பரிசிற் பதியான
அணிகொள்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழால்
தெரிந்த பாடல் இவைவல்லார்
எப்பரிசில் இடர்நீங்கி
இமையோர் உலகத்து இருப்பாரே.

தெளிவுரை : ஒப்புமை ஏதும் கூறுவதற்கு அரிய பதியான பூம்புகலியில் ஓங்கி விளங்கும் கோயிலில் மேவிய ஈசனை, அப்பரிசின் நிலையில் ஓங்கி, ஒப்புமை இல்லாத அணிமிகும் ஞானசம்பந்தர், செப்புவதற்கு அரிய தண்மையுடன் மேவும் தமிழால் விளங்கும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் எத்தகைய இடம் நேர்ந்தாலும் நீங்கி, தேவர்களின் இனிய உலகத்தில் இருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

191. திருத்தலைச்சங்காடு (அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்  மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

590. நலச்சங்க வெண்குழையும்
தோடும்பெய்தோர் நால்வேதம்
சொலச் சங்கை யில்லாதீர்
கடுகா டல்லாற் கருதீர்
குலைச் செங்காய்ப் பைங்கமுகின்
குளிர்கொள் சோலைக் குயிலாலும்
தலைச்சங்கைக் கோயிலே
கோயிலாகத் தாழ்ந்தீரே.

தெளிவுரை : நலத்தில் ஆர்ந்து விளங்கும் சங்க வெண்குழையும் தோடும் காதில் அணியாகக் கொண்டு விளங்கும் தேவரீரை, நான்கு வேதங்களும் போற்றித் துதிக்க, ஐயம் அற்றவராய், சுடுகாட்டில் மேவுவராய்த் திரிந்து, கமுக மரங்கள் விளங்கும் சோலையில் குயில்கள் பாடும் தலைச்சங்காட்டில் உள்ள கோயிலை, இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ளவர் ஆயினீர்.

591. துணிமல்கு கோவணமும்
தோலும்காட்டித் தொண்டாண்டீர்
மணிமல்கு கண்டத்தீர்
அண்டர்க் கெல்லா மாண்பானீர்
பிணிமல்கு நூல்மார்பர்
பெரியோர் வாழும் தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே
கோயி லாக அமர்ந்தீரே.கு

தெளிவுரை : துகிலால் ஆன கோவணமும் தோலும் உடையாகக் கட்டி, திருத்தொண்டர்களை ஆட்கொண்டு, நீலகண்டராய்த் தேவர்களுக்கெல்லாம் மாட்சிமையுடைய பெரும் சிறப்பாகிய தேவரீர், பிணைத்து விளங்கும் முப்புரி நூல் அணிந்த திருமார்பினராய், பெரியோர்கள் வாழும் தலைச்சங்காட்டில் அழகு மிகுந்த கோயிலை இடமாகக் கொண்டு வீற்றிருக்கின்றீர்.

592. சீர்கொண்ட பாடலீர்
செங்கண் வெள்ளேறு ஊர்தியீர்
நீர்கொண்டும் பூக்கொண்டு
நீங்காத் தொண்டர் நின்றேத்தத்
தார்கொண்ட நூல்மார்பர்
தக்கோர் வாழும் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே
கோயிலாக இருந்தீரே.

தெளிவுரை : சிறப்பான புகழைத் தெரிவிக்கும் பாடலில் விளங்கும் தேவரீர், இடப வாகனத்தை வாகனமாகக் கொண்டு விளங்குபவராகிய தேவரீர் புனிதமான தீர்த்தத்தால் பூசித்து அபிடேகம் செய்து பூக்கள் தூவி அர்ச்சிக்கும் தொண்டர்கள், நின்று ஏத்தி வழிபடும் மாலை கொண்டும், பூணூல் மார்பில் திகழவும், தலைச்சங்காட்டில் உள்ள சிறப்பு மிக்க கோயிலில் வீற்றிருந்தீர்.

593. வேடஞ்சூழ் கொள்கையீர்
வேண்டிநீண்ட வெண்திங்கள்
ஓடஞ்சூழ் கங்கையும்
உச்சி வைத்தீர் தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமும்
குலாயவாசற் கொடித்தோன்றும்
மாடஞ் சூழ் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : அடியவர்களின் செம்மைக்கு ஏற்ப, திருவேடப் பொலிவு பலவாறு தாங்கி, அருள் புரியும் கொள்கையுடைய தேவரீர், பக்தியுடன் வேண்டித் தொழுத பிறைச் சந்திரனையும், கங்கையையும் உச்சியில் வைத்துத் தலைச்சங்காட்டில், கூடங்களும் மண்டபங்களும் கொடி மாடமும் சூழ்ந்த கோயிலில் வீற்று மகிழ்ந்தவராயினீர்.

594. சூலஞ்சேர் கையினீர்
கண்ணவெண்ணீறு ஆடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர்
நீண்ட சடைமேல் நீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கானல்
அன்னமன்னும் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே
கோயிலாகக் கொண்டாரே.

தெளிவுரை : திருக்கரத்தில் சூலத்தை ஏந்தி, திருவெண்ணீற்றினைத் திருமேனியில் நன்கு பொலியுமாறு பூசிய தேவரீர், நீலகண்டம் உடையவராய், நீண்ட சடையில் கங்கையைத் தரித்துக் குளிர்ந்த நீர்நிலை திகழும் சோலையில் அன்னப் பறவைகள் விளங்கும் தலைச்சங்காட்டில் மாடமாளிகைகள் சூழ உள்ள கோயிலின்கண் வீற்றிருந்து மகிழ்ந்தவர் ஆயினீர்.

595. நிலநீரொடு ஆகாசம்
அனல்கா லாகி நின்றுஐந்து
புலநீர்மை புறங்கண்டார்
பொக்கம்செய்யார் போற்றோவார்
சலநீதர் அல்லாதார்
தக்கோர் வாழும் தலைச்சங்கை
நலநீர கோயிலே
கோயிலாக நயந்தீரே.

தெளிவுரை : நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பூதங்கள் ஐந்தின் தன்மையாகவும் விளங்கி மேவும் தேவரீர், ஐம்புலன்களை வென்றும் மனம் வாக்கு காயம் ஆகிய முக்குற்றங்களும் அற்றவராய், ஈசனைப் போற்றித் தொழும் பண்பு நீங்காதவராய் விளங்கும் அன்பர்கள் சூழவும் நீசர்களும் வஞ்சகர்களும் இன்மையராயும் விளங்கும் தலைச்சங்காட்டில் நலத்தின் தன்மையுடைய கோயிலில் விருப்பத்தடன் வீற்றிருப்பவர் ஆயினீர்.

596. அடிபுல்கு பைங்கழல்கள்
ஆர்ப்பப் பேர்ந்தோர் அனல்ஏந்திக்
கொடிபுல்கு மென்சாயல்
உமையோர் பாகம்கூடினீர்
பொடிபுல்கு நூன்மார்பர்
புரிநூலாளர் தலைச்சங்கைக்
கடிபுல்கு கோயிலே
கோயிலாகக் கலந்தீரே.

தெளிவுரை : யாவரும் போற்றித் தொழுகின்ற திருவடிகள் ஆராவாரித்துப் பேர்ந்து விளங்கி நடனம் புரிய மென்மையான உமாதேவியை ஒரு பாகம் கொண்டு திருநீறு அணிந்து, முப்புரி நூல் தரித்த மார்பினராய் மேவும் தேவரீர், வேதம் வல்ல மறையவர்கள் விளங்கும் தலைச்சங்காட்டில் விளங்கும், மணம் கமழும் கோயிலில் இருப்பிடமாகக் கொண்டவர் ஆயினீர்.

597. திரையார்ந்த மாகடல்சூழ்
தென்னிலங்கைக் கோமானை
வரையார்ந்த தோளடர
விரலால் ஊன்று மாண்பினீர்
அரையார்ந்த மேகலையீர்
அந்தணாளர் தலைச்சங்கை
நிரையார்ந்த கோயிலே
கோயிலாக நினைந்தீரே.

தெளிவுரை : இலங்கையில் தலைவனாகிய இராவணனுடைய மலைபோன்ற தோளை விரலால் ஊன்றி அடர்த்த மாண்புடைய தேவரீர், அரையில் மேகலை அணிந்தவராய், அந்தணர்கள் விளங்கும் தலைச்சங்காட்டில் திகழும் கோயிலில் வீற்றிருப்பவர் ஆயினீர்.

598. பாயோங்கு பாம்பணைமே
லானும்பைந்தா மரையானும்
போயோங்கிக் காண்கிலார்
புறநின்றோரார் போற்றோவார்
தீயோங்கு மறையாளர்
திகழும் செல்வத் தலைச்சங்கைச்
சேயோங்கு கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.

தெளிவுரை : பாம்பணையில் பள்ளி கொண்டுள்ள திருமாலும், பிரமனும் தேடிப் போய்க் காண்கிலராய்ப் புறத்தே நின்றும் யாதும் அறிய முடியாதவராகிய தேவரீர், ஓய்வு இன்றிப் போற்றுதல் செய்து வேள்வித் தீ இயற்றி வேதம் புகலும் அந்தணர்கள் திகழ்கின்ற பெருமை வளரும் கோயிலின்கண் வீற்றிருப்பவர் ஆயினீர்.

599. அலையாரும் புனல்துறந்த
அமணர்குண்டர் சாக்கியர்
தொலையாதுஅங்கு அலர்தூற்றத்
தோற்றம்காட்டி ஆட்கொண்டீர்
தலையான நால்வேதம்
தரித்தார் வாழும் தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே
கோயிலாக நின்றீரே.

தெளிவுரை : நீராடுதலைத் துறந்து அமணர்களும் சாக்கியர்களும் ஓய்வில்லாது பழிச் சொற்களைக் கூறி நிற்க, திருக்கோல வடிவினைக் காட்டி ஆட்கொண்ட தேவரீர், தலையானதாய் விளங்குகின்ற நான்கு மறையின் வித்தகர்கள் வாழும் தலைச்சங்காட்டில், நிலை பெற்றுள்ள திருக்கோயிலின்கண் வீற்றிருந்து மேவியவர் ஆயினீர்.

600. நளிரும் புனற்காழி
நல்லஞான சம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை
ஓங்கு கோயில் மேயானை
ஒளிரும் பிறையானை
உரைத்தபாடல் இவைவல்லார்
மிளிரும் திரைசூழ்ந்த
வையத்தார்க்கு மேலாரே.

தெளிவுரை : குளிர்ந்த நீர் பெருகும் காழியில் விளங்கும் நல்ல ஞானசம்பந்தர், அன்பர்கள் மனத்தைக் குளிர்ச்சியாக்கும் இனிமையுடைய தலைச்சங்காட்டில் ஓங்கும் கோயிலில் மேவி வீற்றிருக்கும் பிறை சூடிய பெருமானாகிய ஈசனை உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இவ்வுலகத்தில் மேவும் மாந்தருக்கெல்லாம் மேலானவர்களாகத் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

192. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

601. பொங்குநூல் மார்பினீர்
பூதப்படையினீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர்
சாமவேதம் ஓதினீர்
எங்கும் எழிலார் மறையோர்கள்
முறையால்ஏத்த இடைமருதில்
மங்குல்தோய் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : மேல் விளங்கித் திகழும் முப்புரி நூலினைத் திருமார்பில் உடைய தேவரீர், பூதப்படை உடையவராய், கங்கை தங்கி விளங்கும் சிவந்த சடை முடி உடையவராய், சாம வேதம் ஓதியவராய், வேத விற்பன்னர்களாயும், ஆசார சீலமும் உடைய எழில் மிக்க அந்தணர்கள் ஆகம முறைப்படி ஏத்தும் இடை மருதில், மேகம் தோய்ந்து குளிர்ச்சி தரும் கோயிலே, நீவிர் விற்றிருக்கும் கோயிலாக ஏற்று மகிழ்ந்தவர் ஆயினீர்.

602. நீரார்ந்த செஞ்சடையீர்
நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்
பேரார்ந்த வெண்மழுவொன்று
உடையீர் பூதம்பாடலீர்
ஏரார்ந்த மேகலையாள்
பாகங்கொண்டீர் இடைமருதில்
சீரார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.

தெளிவுரை : கங்கை தரித்த செஞ்சடையுடைய தேவரீர், நெற்றியில் திருக்கண்ணுடையவராய், மழுப்படையைக் கரத்தில் ஏந்தி, பூத கணங்கள் பாடி மகிழ உமா தேவியைப் பாகமாகக் கொண்டு, இடைமருதில் உள்ள சீர்மிக்க கோயிலில் வீற்றிருப்பவர் ஆயினீர்.

603. அழல்மல்கும் அங்கையில்
ஏந்திப் பூதம் அவைபாடச்
சுழல்மல்கும் ஆடலீர்
சுடுகாடல்லாற் கருதாதீர்
எழில்மல்கு நான்மறையோர்
முறையால் ஏத்த இடைமருதில்
பொழில்மல்கு கோயிலே
கோயிலாகப் பொலிந்தீரே.

தெளிவுரை : அழகிய கையில், எரியும் நெருப்பினை ஏந்தியவாறு, பூதகணங்கள் பாடலுக்கு ஏற்பச் சுழன்று ஆடும் நடனத்தைப் புரியும் தேவரீர், மயானத்தைத் தவிர வேறு இடத்தைக் கருதாதவரய் விளங்குகின்றவர். நீவிர்ல ஆசாரசீலத்தின் எழில் கொண்டு மேவும் அந்தணர்ள் வேதாகம முறைப்படி ஏத்த, இடைமருதில் பொழில்கள் நன்கு விளங்கும் கோயிலே கோயிலாக் கொண்டு பொலிபவர் ஆயினீர்.

604. பொல்லாப் படுதலை யொன்று
ஏந்திப் புறங்காட்டாடலீர்
வில்லாற் புரமூன்றும்
எரித்தீர் விடையார் கொடியினீர்
எல்லாக் கணங்களும்
முறையால் ஏத்த இடைமருதில்
செல்வாய கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.

தெளிவுரை : கரத்தில், பொலிதல் இல்லாத மண்டை ஓடு ஏந்தி, மயானத்தில் ஆடல் புரியும் தேவரீர், முப்புரங்களை எரித்தவராயும், இடபக் கொடி உடையவராயும், சிவகணங்கள் முதலாக எல்லாக் கணங்களாலும் முறையாக ஏத்தப்படுபவராயும், இடைமருதில் செல்வம் பெருக்கும் கோயிலே இடமாகக் கொண்டுள்ளவர் ஆயினீர்.

605. வருந்திய மாதவத்தோர்
வானோர் ஏனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூசம்
ஆடி உலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர்
சீரால் ஏத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே
கோயிலாகப் புத்தீரே.

தெளிவுரை : மெய்யினை வருத்தித் தவம் மேற்கொண்ட முனிவர்களும், வானவர்களும் பூவுலகத்தார் மற்றும் ஏனைய அனைவரும் வந்து அடைந்து தைப்பூசத் திருநாளில் நீராடியும், உலக நன்மைக்காக நான்மறையோர் வேதங்களால் ஏத்தியும், விளங்கும் இடை மருதில் தேவரீர், பொருந்தி விளங்கி வீற்றிருப்பவர் ஆயினீர்.

606. சலமல்கு செஞ்சடையீர்
சாந்தநீறு பூசினீர்
வலமல்கு வெண் மழுவொன்று
ஏந்தி மயானத்து ஆடலீர்
இலமல்கு நான்மறையோர்
இனிதாய் ஏத்த இடைமருதில்
புலமல்கு கோயிலே
கோயிலாகப் பொலிந்தீரே.

தெளிவுரை : கங்கை விளங்கும் சடையை உடைய பெருமானே ! மணம் கமழும் நீறு பூசி நாதனே ! வலிமை மிக்க ஒளி பொருந்திய மழுப்படை ஏந்தி, மயானத்தில் ஆடல் புரிபவரே ! ஆசைகளைத் துறந்த நான்மறை வல்ல அந்தணர்கள் இனிதாய் ஏத்த, இடை மருதில் ஞானம் பெருகும் கோயிலிலே கோயில் கொண்டு பொலிபவர் நீவிரே.

607. புனமல்கு கொன்றையீர்
புலியின்அதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர்
இனமல்கு நான்மறையோர்
ஏத்தும் சீர்கொள் இடைமருதில்
கனமல்கு கோயிலே
கோயிலாகக் கலந்தீரே.

தெளிவுரை : கொன்றை மலரும் புலியின் தோலாடையும் உடைய பெருமானே ! பெருமை மிக்க இடப வாகனத்தை உடையவராயும், அதில் கரிய கண்டத்தை உடையவராயும் விளங்கும் ஈசனே ! நான்மறையோர் ஏத்தும் சீர் மிகுந்த இடை மருதில் பெருமை மிகுந்த கோயிலில் கோயில் கொண்டு விளங்குபவர் நீவிரே.

608. சிலையுய்த்த வெங்கணையால்
புரமூன்று எரித்தீர் திறலரக்கன்
தலைபத்தும் திண்டோளு(ம்)
நெரித்தீர் தையல் பாகத்தீர்
இலைமொய்த்த தண்பொழிலும்
வயலும் சூழ்ந்த இடைமருதில்
நலமொய்ந்த கோயிலே
கோயிலாக நயந்தீரே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு வெம்மை மிகுந்த கொடிய கணையை எய்து, புரங்கள் மூன்றினையும் எரித்த ஈசனே ! வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனுடைய பத்துத் தலைகளும், திண்மையான தோள்களும் நெரித்த பெருமானே ! உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவரே ! இலைகள் மிகுந்து விளங்கும் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் எல்லா தலங்களும் ஒரு சேர விளங்கி அன்பர்களுக்கு வழங்குகின்ற சிறப்புடைய கோயிலின்கண் விருப்பம் கொண்டு வீற்றிருப்பவர் ஆயினீர்.

609. மறைமல்கு நான்முகனு(ம்)
மாலும் அறியா வண்ணத்தீர்
கறைமல்கும் கண்டத்தீர்
கபாலமேந்து கையினீர்
அறைமல்கும் வண்டினங்கள்
ஆலும்சோலை இடைமருதில்
நிறைமல்கு கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே.

தெளிவுரை : மறைவல்ல நான்முகனும், திருமாலும் அறியாத வண்ணத்தையுடைய ஈசனே ! கறைமல்கு கண்டத்தை உடைய பரமனே ! கபாலம் ஏந்திய கையினை உடையீர் ! நல்லோசையுடைய வண்டினங்கள் ஒலித்து ரீங்காரம் செய்யும் சோலையுடைய  இடைமருதில் நிறைவுடைய பெருமை கொண்ட கோயிலில் இருப்பிடம் கொண்டவர் நீவிரே.

610. சின்போர்வைச் சாக்கியரும்
ஆசுசேரும் சமணரும்
துன்பாய கட்டுரைகள்
சொல்லி அல்லல் தூற்றவே
இன்பாய அந்தணர்கள்
ஏத்தும் ஏர்கொள் இடைமருதில்
அன்பாய கோயிலே
கோயிலாக அமர்ந்தீரே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் துன்பம் தரும் சொற்களைப் புனைந்து சொல்லி வருத்தம் தோன்றுமாறு தூற்றினாலும், அவற்றைப் பொருட்டாகக் கொள்ளாது அந்தணர்கள் மகிழ்வுடன் ஏத்தும் சிறப்புடைய இடைமருதில், அன்புடன் கோயில் கொண்டுள்ள ஈசனே, நீரே அமர்ந்து விளங்குகின்றீர்.

611. கல்லின் மணிமாடக்
கழு மலத்தார் காவலவன்
நல்ல் அரு மறையான்
நற்றமிழ் ஞானசம்பந்தன்
எல்ல இடைமருதில்
ஏத்து பாடல் இவைபத்தும்
சொல்லு வார்க்கும்
கேட்பார்க்கும் துயரம் இல்லையே.

தெளிவுரை : உறுதி மிக்க மணிமாடங்கள் விளங்கும் கழுமலத்தின் காவலனாய் நலம் விளங்கும் அருமறை வல்ல நற்றமிழ் ஞானசம்பந்தர் ஒளி மிகும் இடைமருதில் ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கும் கேட்டு மகிழ்பவர்களுக்கும் துயரம் இல்லை.

திருச்சிற்றம்பலம்

193. திருநல்லூர் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

612. பெண்ணமருந் திருமேனி
யுடையீர் பிறங்கு சடைதாழ
பண்ணமரு நான்மறையே
பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும்
வயலும் சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமரும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : உமாதேவியைத் திருமேனியில் பாகங்கொண்டு விளங்கும் பெருமையுடையவரே ! சிறப்பினால் விளங்கும் சடை, நீண்டு திகழ்ந்திருக்கப் பண்ணிசையுடன் நன்கு பொலியும் நான்கு மறைகளை ஓதி நீவிர் ஆடலும் புரிபவர் ஆவீர். அடர்ந்து திருநல்லூர் என்னும் தலத்தில் தேவரீர் இப்பூவுலகத்தின் சிறப்புத் தோன்ற விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு வீற்றிருந்து மகிழ்ந்துள்ளீர்.

613. அலைமல்கு தண்புனலும்
பிறையும்சூடி அங்கையில்
கொலைமல்கு வெண்மழுவும்
அனலும் ஏந்தும் கொள்கையீர்
சிலைமல்கு வெங்கணையால்
புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
மலைமல்கு கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : கங்கையும் பிறைச் சந்திரனும் சூடி, அழகிய கையில் வெண்மழுப் படையும் நெருப்புக் கனலும் ஏந்தம் இயல்பினையுடைய நீவிர், மேருமலையை வில்லாகக் கொண்டு வெம்மையான கணை தொடுத்து மலை போன்ற கட்டுமானச் சிறப்புடைய கோயிலே இடமாகக் கொண்டு மகிழ்ந்து விளங்கும்பவரும் தேவரீர் ஆவீர்.

614. குறை நிரம்பா வெண்மதியும்
சூடிக்குளிர்புன் சடைதாழப்
பறைநவின்ற பாடலோடு
ஆடல்பேணிப் பயில்கின்றீர்
சிறைநவின்ற தண்புனலும்
வயலும்சூழ்ந்த திருநல்லூர்
மறைநவின்ற கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைக் கங்கை தங்கிய குளிர்ந்த சடையில் சூடி, பறை முழங்கும் பாடலோடு ஆடலும் புரிந்து விளங்குகின்ற நீவிர், பொய்கைகளும் வயலும் சூழ்ந்து விளங்கும் திருநல்லூர் என்னும் பதியின்கண், வேத ஒலி நனிவிளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு மகிழ்ந்து வீற்றிருப்பவர் ஆவீர்.

615. கூனமரும் வெண்பிறையும்
புனலும் சூடும் கொள்கையீர்
மானமரு மென்விழியாள்
பாகமாகு மாண்பினீர்
தேனமரும் பைம்பொழிலின்
வண்டுபாடும் திருநல்லூர்
வானமரும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : வளைந்த வெண்மையான பிறைச் சந்திரனும், கங்கையும் சூடும் இயல்பினராகிய நீவிர், மான் போன்ற விழியுடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டுள்ள மாண்பினைப் பெற்றவராய்த் தேன் துளிர்க்கும் பொழிலில் வண்டுகள் இசை பாடும் திருநல்லூரில் உயர்ந்த பீடமாகச் சிறப்புடைய கோயிலே இடமாகக் கொண்டு மகிழ்ந்தவர் ஆவீர்.

616. நிணங்கவரு மூவிலையும்
அனலும்ஏந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோடு
ஆடல்மேவும் அழகினீர்
திணங்கவரும் ஆடரவும்
பிறையும்சூடித் திருநல்லூர்
மணங்கமழும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : பிணித்து அழிக்கும் ஆற்றல் கொண்ட சூலப்படையும், நெருப்பும் கரத்தில் ஏந்தி, சுருண்ட கூந்தலையுடைய உமாதேவி உடனாகி விளங்கி, பாடலும் ஆடலும் கொண்டு மேவும் ஆழகுடையவராய்த் திகழும் நீவிர், திண்மையுற்று ஆடும் அரவத்தையும், பிறைச்சந்திரனையும் சூடித் திருநல்லூரில் அருள் மணம் கமழும் கோயிலே இடமாகக் கொண்டு விளங்கி, ஆங்கு மகிழ்வுடன் வீற்றிருப்பவரும் ஆயினீர்.

617. கார்மருவு பூங்கொன்றை
சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள்
பாகமாகு மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக்
கொடிகள் ஆடும் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே
கோயிலாக இருந்தீரே.

தெளிவுரை : கார்காலத்தில் மலரும் கொன்றை மாலை சூடி, நறுமணம் கமழும் சடைமுடி நன்கு விரிந்து தாழ, உமாதேவியைப் பாகம் கொண்டு விளங்கும் மாண்புடைய நீவிர், தேர்கள் செல்லும் நெடிய வீதிகளும், அலங்காரக் கொடிகளும் விளங்கும் திருநல்லூர் என்னும் பதியில் சிறப்பின் மிக்கு விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு இருப்பவராவீர்.

618. ஊன்தோயும் வெண்மழுவும்
அனலேந்தி உமைகாண
மீன்தோயும் திசைநிறைய
ஓங்கியாடும் வேடத்தீர்
தேன்தோயும் பூம்பொழிலின்
வண்டுபாடும் திருநல்லூர்
வான்தோயும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : பகைத்தவர்களை மாய்த்து, ஊன் தோய வெற்றியுடன் மேவும் மழுப்படையும், நெருப்பும் ஏந்தி, உமாதேவி மகிழ்ந்து காணுமாறு வானில் பொருந்தும், தன்மையில் ஓங்கி உயர்ந்து ஆடுகின்ற திருவேடம்தாங்கிய தேவரீர், தேன் கமழும் பூம்பொழிலில் வண்டுபாடும் திருநல்லூரில், சிறப்பு மிக்க கோயிலில் வீற்றிருந்து மகிழ்பவராவீர்.

619. காதமரும் வெண்குறையீர்
கறுத்தஅரக்கன் மலையெடுப்ப
மாதமரு மென்மொழியாள்
மறுகும்வண்ணம் கண்டுகந்தீர்
தீதமரா அந்தணர்கள்
பரவியேந்துந் திருநல்லூர்
மாதமரும் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : காதில் குழையணிந்த ஈசனே ! மனத்டல் இருள் கொண்டு சினமுற்ற இராவணன், கயிலை மலையினை எடுக்க, கலங்கிய அழகிய மென்மொழி உடைய உமாதேவியாரின் வண்ணம் கண்டு உகந்தீர் நீவிர், தீமையின் பாற் சிறிதும் சாராத அந்தணர்கள் பரவியேத்தி வழிபடும் திருநல்லூரில் உள்ள பெருளை விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு மகிழ்ந்தவர் ஆவீர்.

620. போதின்மேல் அயன்திருமால்
போற்றி உம்மைக் காணாது
நாதனே இவன்என்று
நயந்து ஏத்த மகிய்ந்தளித்தீர்
தீதிலா அந்தணர்கள்
தீமூன்று ஓம்பும் திருநல்லூர்
மாதராள் அவளோடு
மன்னுகோயில் மகிழ்ந்தீரே.

தெளிவுரை : தாமரையின்மேல் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் போற்றி உம்மைக் காணாது தலைவனே என்று விரும்பி ஏத்த, மகிழ்ந்து நற்காட்சியைக் காணுமாறு சோதிச் சுடராய்த் தோன்றினீர். நீவிர், தீவினை தீய்ந்த அந்தணர்கள், ஆகவனீயம், காருக பத்தியம், தட்சணாக்கினி என்னும் மூன்று வகையான தீ வளர்ந்து வேள்வியை ஓம்புகின்ற திருநல்லூரில், அழகியவளாகிய உமாதேவியோடு விளங்குகின்ற கோயிலில் மேவி, மகிழ்ந்து வீற்றிருப்பவர் ஆவீர்.

621. பொல்லாத சமணரொடு
புறங்கூறும் சாக்கியர்ஒன்று
அல்லாதார் அறவுறை விட்டு
அடியார்கள் போற்றோவா
நல்லார்கள் அந்தணர்கள்
நாளும் ஏத்தும் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.

தெளிவுரை : சமணர்களும் புறம்கூறும் சாக்கியரும் மனம் ஒன்றி மேவாதவர்களாய் அறவுரைகளை நீத்தவர்களாய் இருக்க, மெய்யான பக்தியுடைய அடியவர்கள் நீங்காது போற்றித் துதிக்கவும், நன்னெறியுடைய அடியவர்கள் நீங்காது போற்றித் துதிக்கவும், நன்னெறிடயுடைய சீலர்களும், வேதம் புகலும் அந்தணர்களும் நாள்தோறும் ஏத்தும் திருநல்லூர் என்னும் தலத்தில், வளம் பெருக்கும் கோயில் இடமாகக் கொண்டு, ஈசனாகிய நீவிர் மகிழ்ந்து வீற்றிருப்பவர் ஆவீர்.

622. கொந்தணவும் பொழில்புடைசூழ்
கொச்மைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன்
சிறைவண் புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள்
பங்கன் றன்னைப் பயில்பாடல்
சிந்தனையால் உரைசெய்வார்
சிவலோகம் சேர்ந்திருப்பாரே.

தெளிவுரை : கொத்துக்களாகப் பூக்கும் பொழில்கள் சூழ்ந்து விளங்கும் கொச்சை வயம் என்னும் சீகாழியின் வேந்தன், செந்தமிழின் இனிய ஞானசம்பந்தர், பொய்ககைகள் நன்கு விளங்கம் திருநல்லூரில் பந்தார் விரலாளாகிய உமையவளைப் பாகம் கொண்டுள்ள ஈசனைப் போற்றியுரைக்கும் இத் திருப்பதிகத்தை, சிந்தை ஒன்றியவராய் உரைப்பவர்கள், சிவலோகத்தில் சேர்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

194. குடவாயில் (அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

623. கலைவாழும் அங்கையீர்
கொங்கையாருங் கருங்கூந்தல்
அலைவாழும் செஞ்சடையில்
அரவும் பிறையும் அமர்வித்தீர்
குலைவாழை கமுகம் பொன்
பவளம் பழுக்கும் குடவாயில்
நிலைவாழும் கோயிலே
கோயிலாக நின்றீரே.

தெளிவுரை : மானைக் கரத்தில் ஏந்தி, தேன் விளங்கும் அலைகளைத் தாங்கி மேவும் கங்கையைச் சிவந்த சடையில் திகழ் வைத்து, அரவும் பிறைச் சந்திரனும் வைத்து, விளங்கும் ஈசனே ! வாழையும், பாக்கும் பெருகவும், பொன்னும் பவளமும் கொழித்து மேவும் குடவாயில் என்னும் பதியில் நிலைகொண்டிருக்கும் கோயிலே இடமாகக் கொண்டுள்ளவர் நீவிர்.

624. அடியார்ந்த பைங்கழலும்
சிலம்பும் ஆர்ப்ப அங்கையில்
செடியார்ந்த வெண்தலையொன்று
ஏந்தி உலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர்
குலாவி யேத்தும் குடவாயில்
படியார்ந்த கோயிலே
கோயிலாகப் பயின்றீரே.

தெளிவுரை : திருவடியில் பொருந்தி விளங்குகின்ற அழகிய கழலும் சிலம்பும் ஆர்த்தி ஒலி செய்ய, அழகிய கையில் கபாலம் ஏந்தி உலகில் பலி ஏற்கும் ஈசனே ! வேதங்களை நன்கு பயின்று விரும்பி ஓதும் அந்தணர்கள் பரவி ஏத்தும் குடவாயில் என்னும் பதியில் நீவிர், உலகில் நன்கு விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவீர்.

625. கழலார்பூம் பாதத்தீர்
ஓதக்கடலில் விடமுண்டன்று
அழலாரும் கண்டத்தீர்
அண்டர்போற்றும் அளவினீர்
குழலார வண்டினங்கள்
கீதத் தொலிசெய் குடவாயில்
 த கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே.

தெளிவுரை : திருக்கழல் நன்கு விளங்கி ஆர்க்கும் திருப்பாதச் செம்மையுடைய ஈசனே! அலைகொண்டு பாற்கடலில் தோன்றிய அழல் போன்று வெம்மை விளைவிக்கும் நஞ்சினை உண்டு கரியதாய் ஆகிய கண்டத்தை உடைபெருமானே ! தேவர்களெல்லாம் போற்றிப் புகழும் அளவின் எல்லை கடந்தவராகிய நாதனே ! வண்டுகள் குழலின் இசை போன்று ஒலித்து, கீதம் இசைக்கின்ற குடவாயிலின்கண், அருளொளி விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு நீவிர் வீற்றிருப்பவர் ஆயினீர்.

626. மறியாரும் கைத்தலத்தீர்
மங்கைபாக மாகச்சேர்ந்து
எறியாரும் மாமழுவும்
எரியும் ஏந்தும் கொள்கையீர்
குறியார வண்டினங்கள்
தேன் மிழற்றும் குடவாயில்
நெறியாரும் கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே.

தெளிவுரை : திருக்கைத்தலத்தில் மான் ஏந்தி, உமாதேவியாரை ஒரு பாகமாகச் சேர்த்து, பகைவரை வீசிச் சாய்க்கும் சிறப்பு மிக்க மழுப்படையும் ஏந்தி, எரியும் ஏந்தி, விளங்கும் ஈசனே ! தேன் விளங்கும் மலர்களைக் கறிப்பாக அடைந்து தேன் சேர்க்கும் குடவாயிலில் வேதாகம நெறியில் விளங்குகின்ற கோயிலே இடமாகக் கொண்டு நீவிர் வீற்றிருப்பவர் ஆவீர்.

627. இழையார்ந்த கோவணமும்
கீளும் எழிலார் உடையாகப்
பிழையாத சூலம்பெய்து
ஆடல்பாடல் பேணினீர்
குழையாரும் பைம்பொழிலும்
வயலும் சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே
கோயிலாக மிக்கீரே.

தெளிவுரை : நூலிழையால் இழைக்கப் பெற்ற கிழிதுகில் மற்றும் கோவணம் உடையாகவும், தனது தாக்குதலில் தவறு ஏற்படாததும், ஈசனார் திருக்குறிப்பின்படி பிழை சிறிதும் உண்டாகாதவாறு விளங்கும் சூலமும் கொண்டு, ஆடலும் பாடலும் பேணி விளங்கும் ஈசனே ! தளிர்கள் விளங்கும் பூம்பொழிலும், வயலும் சூழ்ந்த குடவாயில் என்னும் பதியில், திருவிழாக்களின் பொலிவு பெருகி விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு நீவிர் வீற்றிருக்கின்றவர்.

628. அரவார்ந்த திருமேனி
யானவெண்ணீறு ஆடினீர்
இரவார்ந்த பெய்பலிகொண்டு
இமையோர்ஏத்த நஞ்சுண்டீர்
குரவார்ந்த பூஞ்சோலை
வாசம் வீசும் குடவாயில்
திருவார்ந்த கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே.

தெளிவுரை : அரவம் தவழும் திருமேனியில் ஆக்கம் செய்யும் வெண்ணீறு நனி பூசி, கபாலம் ஏந்திப் பிச்சை கொள்ளவும், தேவர்கள் எல்லாம் ஏத்தி மகிழுமாறு நஞ்சை உண்டு அருள்புரியும் ஈசனே ! நறுமணம் மிக்க குரவ மலர்கள் விளங்கும் பூஞ்சோலையின் மணம் வீசும் குடவாயிலில் செல்வம் விளங்கும் கோயிலே இடமாகக் கொண்டு நீவிர் திகழ்ந்து விளங்குபவர் ஆவீர்.

629. பாடலார் வாய்மொழியீர்
பைங்கண்வெள்ளேறு ஊர்தியீர்
ஆடலார் மாநடத்தீர்
அரிவை போற்றும் ஆற்றலீர்
கேடலார் தும்பிமுரன்று
இசை மிழற்றும் குடவாயில்
நீடலார் கோயிலே
கோயிலாகத் திகழ்ந்தீரே.

தெளிவுரை : வேதங்கள் ஓதும் திருவாய் மொழியுடைய ஈசனே ! வெண்மையான இடபத்தை வாகனமாக உடையவரே ! நடனக் கலையின் பெருமை தோன்ற சிறப்பான நடனம் புரிகின்ற பெருமானே ! உமாதேவியார் போற்றி மகிழும் அருளாற்றல் உடைய நாதனே ! வெண்காந்தன் மலரில் வண்டு சுற்றி இசை எழுப்பும் குடவாயில் என்னும் ஊரில் உயர்ந்து விளங்கும் கோயிலை இடமாகக் கொண்டு நீவிர் திகழ்பவர் ஆவீர்.

630. கொங்கார்ந்த பைங்கமலத்து
அயனும் குறளாய் நிமிர்ந்தாலும்
அங்காந்து தள்ளாட
அழலாய் நிமிர்ந்தீர் இலங்கைக் கோன்
தங்காதன் மாமுடியும்
தாளும் அடர்த்தீர் குடவாயில்
பங்கார்ந்த கோயிலே
கோயிலாகப் பகர்ந்தீரே.

தெளிவுரை : தேன் திகழ்ந்து விளங்கும் தாமரை மலரில் விற்றிருக்கும் பிரமனும், சிறிய குறம் வடிவம் எனப்படும் வாமனனாய்ப் பின்னர் நீண்டு உயர்ந்த திருமாலும், வியப்புற்ற நிலையில் வாய் திறந்து அயர்ந்து தம் நிலை தளர, அழலாய் ஓங்கிய ஈசனே ! இராவணன் முடியும் தாளும் அடர்த்த நாதனே ! குடவாயில் என்னும் தலத்தில், அங்கமாகக் கோயில் கொண்டு நீவிர், வீற்றிருந்து ஒளிர்பவர் ஆயினீர்.

631. தூசார்ந்த சாக்கியரும்
தூய்மையில்லாச் சமணரும்
ஏசார்ந்த புன்மொழிநீத்து
எழில்கொள்மாடக் குடவாயில்
ஆசாரம் செய்மறையோர்
அளவிற் குன்றாது அடிபோற்றத்
தேசார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் இகழ்ச்சியான புல்லிய பொய்யுரைகளைப் பொருளாகக் கொள்ளாது, எழிமிகுந்த மாடங்களையுடைய குடவாயில் என்னும் பதியில் ஆசார சீலத்துடன் வேள்வி புரிதல் முதலான கிரியைகளைச் செய்யும் மறை வல்லவர்களகிய அந்தணர்கள், தமது பக்தியிலும் ஒழுக்க முறையிலும் செய்ய வேண்டிய அளவின் தன்மையிலிருந்து குறையாது திருவடியைப் போற்ற, பெருமை மிகும் கோயிலை நீவிர் இடமாகக் கொண்டு விளங்குகின்றீர்.

632. நளிர்பூந் திரைமல்கு
காழிஞான சம்பந்தன்
குளிர்பூங் குடவாயிற்
கோயில்மேய கோமானை
ஒளிர்பூந் தமிழ்மாலை
உரைத்த பாடல் இவைவல்லார்
தளர்வான தானொழியத்
தகுசீர் வானத்து இருப்பாரே.

தெளிவுரை : குளிர்ச்சியான திரைகள் பெருகும் காழியில் விளங்கும் ஞானசம்பந்தர், குளிர்ச்சியான அருள் விளங்கும் குடவாயிலில் கோயில்கொண்டு மேவும் ஈசனை உரைத்த தமிழ்மாலையால் ஏத்த வல்லவர்கள், தளர்ச்சி அற்றவர்களாய் இம்மையில் விளங்கி, சீர்மிகும் வானுலகத்திலும் சிறப்புடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

195. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

633. நலங்கொள் முத்து மணியும் அணியும் திரளோதக்
கலங்கள் தன்னிற் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொள் மழுவொன்று உடையாய் விடையாய் எனஏத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா வருநோயே.

தெளிவுரை : உயர்ந்த முத்துக்களும் மணிகள் முதலான ஆபரணங்களும் திரளாக மரக் கலங்கள் வழியாகக் கரையில் சேரும் கடல் வழி கொண்ட சிறப்புடைய சீகாழி நகரில், வலிமை மிக்க மழுப்படையும் இடப வாகனமும் உடைய ஈசனே ! என ஏத்தி மலர்மாலை சூட்டுகின்ற அடியவர்களை நோய் அடையாது.

634. ஊரார் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
காரார் ஓதம் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.

தெளிவுரை : ஊர்ந்தி செல்லும் சங்குகளைக் கடல் அலைகள் கரைகளில் சேர்க்கும் சீகாழியில், கங்கை தரித்த சடையுடைய ஈசனே ! நெற்றிக் கண்ணுடைய பெருமானே ! என்று ஆயிரம் மறை அவன் திருநாமத்தை தன்னை மறந்த நிலையில் தியானம் செய்யப் பிணியானது நீங்கும்.

635. வடிகொள் பொழிலின் மழலை வரிவண்டு இசைசெய்யக்
கடிகொள் போதில் தென்றல் அணையும் கலிக்காழி
முடிகொள் சடையாய் முதல்வா என்று முயன்றேத்தி
அடிகை தொழுவார்க்கும் இல்லை அல்லல் அவலமே.

தெளிவுரை : காற்றினைப் பெருக்கும் பொழிலில் இனிய வண்டுகள் இசையெழுப்ப நறுமணம் வீசும் மலர்களில் தென்றல் அணையும் சீகாழியில் விளங்கும் சடைமுடி உடைய நாதனே ! என்று கைகூப்பித் தொழுபவர்களுக்குத் துன்பமும் வறுமையும் இல்லை.

636. மனைக்கே ஏற வளம்செய் பவளம் வளர்முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக்காழிப்
பனைக்கைப் பகட்டுஈர் உரியாய் பெரியாய் எனப்பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.

தெளிவுரை : கடல் அலைகளால் வீசி எறியப்படும் பவளமும் முத்துக்களும் இல்லங்களுக்கே செல்லும் வளப்பம் மிகுந்த சீகாழியில், யானையின் தோலை உரித்துப் போர்த்து விளங்கும் பெருமானே ! எனப் பெருமைகளை மொழிந்து நினைக்கவல்ல அடியவர்கள் நன்மனத்தர் ஆக விளங்குவார்கள்.

637. பரிதி இயங்கும் பாரில் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலிக்காழிச்
சுருதி மறைநான்கு ஆன செம்மை தருவானைக்
கருதி எழுமின் வழுவா வண்ணம் துயர்போமே.

தெளிவுரை : சூரியன் விளங்கி ஒளி தந்து இயங்கும் இவ்வுலகத்தில், சிறப்பு மிக்க அருள் பணிகள் மேவும் செயலைக் கருதி, தேவர்களும் மண்ணுலகத்தவர்களும் விரும்புகின்ற பெருமை மிக்க சீகாழிப் பதியில் நான்கு தேவங்களுடைய கீதமாக வீற்றிருக்கும் ஈசனை நினைத்து வணங்குபவர்களுக்குத் துயர் நீங்கும்.

638. மந்தமருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
கந்த மருவ வரிவண்டு இசைசெய் கலிக்காழிப்
பந்த நீங்க அருளும் பரனே எனஏத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.

தெளிவுரை : தென்றல் மருவி விளங்கும் பொழிலில், சுவை மிக்க தேனை உண்ட வண்டுகள் இசைத்து மகிழும் பெருமை மிக்க சீகாழிப் பதியில், உலகத்தின் பாசத்தால் ஏற்படும் கட்டினை நீங்கச் செய்தருளும் பரனே ! என்று ஏத்தி வணங்குபவர்களின் சிறப்பு எத்தன்மையிலும் நீங்காது நின்று விளங்கிப் புகழ் கொடுக்கும்.

639. புயலார் பூம் நாமம் ஓதிப் புகழ்மல்கக்
கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்
பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்றுமுடுகாதே.

தெளிவுரை : மேகம் சூழ்ந்த இவ்வுலகில் ஈசன் திருநாமத்தை ஓதிப் புகழ் மிக்கு விளங்கும் பாடல்களை, மகளிர் பண்ணிசையுடன் இணைந்து பாடும் பெருமையுடைய காழிப்பதியில் விளங்கும் ஈசனைப் பக்தியுடன் தொழுது ஏத்திப் பணிபவர்பால், காலனுடைய வெம்மை நெருங்காது.

640. அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்
கரக்க கில்லாது அருள்செய் பெருமான் கலிக்காழிப்
பரக்கும் புகழான் றன்னை யேத்திப் பணிவார்மேல்
பெருக்கும் இன்பம் துன்பமான பிணிபோமே.

தெளிவுரை : இராவணனுடைய முடியும் தோளும் நெரிந்து துன்புறுமாறு அடர்த்து, அடியவர்களுக்குக் கரவாது வளமான அரளைப் புரியும் பெருமான், பெருமை மிகுவிழாக்கள் கொண்ட சீகாழிப் பதியில் விளங்கும் ஈசன். அப்பெருமானை ஏத்திப் பணிபவர்கள் இன்பத்தில் பெருகித் திளைத்து மகிழ்வார்கள்; துன்பம் தரும் பிணியானவை யாவும் நீங்கப் பெறுவார்கள்.

641.மாணா உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை குற்றமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணதவாறு தீப்பிழம்பாக ஓங்கிய ஈசன், விழாமல்கும் சீகாழியில், ஆபரணம் நனி கொண்ட உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ள ஈசன் ஆவர். அப்பெருமானைப் புகழ்ந்து ஏத்தி மாறுபாடற்ற மனத்தினராய் வணங்குபவர்கள் குற்றம் இல்லாதவர்களாய் மிளிர்வார்கள்.

642. அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமணாதர்
கஞ்சி காலை யுண்பார்க்கு அரியான் கலிக்காழித்
தஞ்ச மாய தலைவன் றன்னை நினைவார்கள்
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.

தெளிவுரை : அச்சத்தின் காரணமாகத் துன்பர் தரும் சொற்களை மொழியும் சமணர்களுக்கும் சாக்கியர்களுக்கும் அறிவதற்கு அரியவனாகி, விழா  முழக்கம் மிகுந்த சீகாழியில் இருப்பிடமாகக் கொண்டு விளக்கும் ஈசனை நினைத்துப் போற்றுபவர்கள், இறத்தல் இல்லாத நல்ல உலகில் இருக்கப் பெறுவார்கள். இது பேரின்பம் வழங்கும் சிவலோகம் என்பது குறிப்பு.

643. ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்
காழி யீசன் கழலே பேணும் சம்பந்தன்
தாழு மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.

தெளிவுரை : ஊழிக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உயர்ந்த சிறப்பினையுடைய சீகாழியில் வீற்றிருக்கும் ஈசனின் திருக்கழலைப் பேணும் ஞானசம்பந்தர், ஈசனாரைப் பணிந்து உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வாழும் சிறப்பிலிருந்து பிரியாதவர்களாகிய தேவர் உலகத்தில் மகிழ்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

196. திருப்பாசூர் (அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர்,திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

644. சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாளா என்ன மகிழ்வார் ஊர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

தெளிவுரை : என் சிந்தையில் விளங்கி, தலையின்மீது வைகி நின்று, முழுமையும் ஆட்கொண்டு, செம்மையான சொல் பயிலும் வாய்சொல்லாகியும், மைந்தனே ! மணாளனே ! என்று போற்றி ஏத்த மகிழ்பவராகிய ஈசன் விளங்குகின்ற ஊர், பசுமையான குருக்கத்தியில் சோலை சூழ்ந்த பாசூர் என்னும் நகரே போலும்.

645. பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மான்என்று
ஆருந் தனையும் அடியார்ஏத்த அருள்செய்வார்
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.

தெளிவுரை : எத்தகைய செயலையும் தொடங்கும் பொழுதும், நிகழும் பொழுதும் ஈசன் திருநாமத்தை உள்ளார்ந்து, மனம் நிறையக் கூறி மகிழும் அளவும், அடியவர்கள்பால் விளங்கி அருள் புரிபவனாகிய பெருமான், ஊர் செல்லும் அரவத்தை உடையவராய்த் திகழும் ஊரானது, இப்புவியின் மீது இசைப் பாடல்களை ஓய்வின்றி இசைதஅத மகிழும் பாசூர் போலும்.

646. கையால் தொழுது தலைசாய்த்து உள்ள கசிவார்கண்
மெய்யார் குறையும் துயரும் தீர்க்கும் விகிர்தனார்
நெய்யா டுதல்அஞ்சு உடையார் நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.

தெளிவுரை : கைகளால் தொழுது வணங்கித் தலை தாழ்த்தி, உள்ளம் பக்தி கொண்டு கசிந்து உருகி நிற்பவர்பால், உடற்பிணியும் மனக்குறையும் தீர்ப்பவர் சிவபெருமான். நெய் முதலான பஞ்ச கவ்வியம் கொண்டு அபிடேகம் கொள்ளும் அப்பெருமான், நிலவி விளங்குகின்ற ஊரானது, நாகலிங்கம், கோடல் பூக்கள் மல்கியுள்ள பாசூர் போலும்.

647. பொங்கா டரவும் புனலும் சடைமேல் பொலிவெய்தக்
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளம் குளிர்வித்தார்
தங்கா தலியும் தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.

தெளிவுரை : பொங்கி எழுகின்ற அரவமும் கங்கையும் சடைமுடியின் மீது பொலிவுடன் விளங்கி இருக்க, தேன் துளிர்க்கும் கொன்றைமலர் சூடி, என்னுள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தி, உமாதேவியை உடனாகக் கொண்டு வாழும் ஈசன் திகழும் ஊர், முல்லை அரும்புகள் பெருகி ஓங்கும் பாசூர் போலும்.

648. ஆடல் புரியும் ஐவாய் அரவவொன்று அரைச்சாத்தும்
சேடச் செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார்
வாடல் தலையில் பலிதேர் கையார் ஊர்போலும்
பாடல் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

தெளிவுரை : படம் எடுத்து ஆடுகின்ற ஐந்து தலைகளை உடைய அரவத்தை அரையில் கட்டி விளங்கும் பெருமை மிக்கவர், என் சிந்தையில் பிரியாது  எக்காலமும் வீற்றிருக்கும் ஈசன் ஆவர். அப்பெருமான், பிரம கபால் ஏந்திப் பலி தேர்ந்து ஏற்கும் கையுடையவர். அவர் ஊரானது, இசை பாடும் குயில்கள் விளங்குகின்ற பூஞ்சோலை திகழும் பாசூர் போலும்.

649. கால்நின்று அதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்
தோலொன்று உடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்
மால்கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர்போலும்
பால்வெண் மதிதோய் மாடஞ் சூழ்ந்த பாசூரே.

தெளிவுரை : திருப்பாதம் ஊன்றிக் கழல்கள் அதிர்ந்து ஒலிக்கவும், கொடிய விடத்தையுடைய நாகத்தைக் கச்சாகக் கட்டியும், தோலை உடையாகக் கொண்டும். இடப வாகனத்தை உடையவராயும், தொழுபவர்கள் மயக்கத்தை தீர்ப்பவராயும் ஈசன் வீற்றிருக்கும் ஊர், வெண்மதி தோயும் மாடம் சூழ்ந்த பாசூர் போலும்.

650. கண்ணின் அயலே கண்ணொன்று உடையார் கழல்உன்னி
எண்ணுந் தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்
உள்நின்று உருக உகவை தருவார் ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.

தெளிவுரை : இரு கண்களுக்கும் அயலாக நெற்றியில் ஒரு கண்ணுடையவர்; திருவடியை நினைத்து வணங்கும் அடியவர்களுக்கு அருள் செய்பவர்; தியானம் செய்து ஒன்றி நின்று கசிந்து உருகி நிற்பவர்களுக்கு மகிழ்ச்சி தருபவர், ஈசனார் ஆவர். அப்பெருமான், பண்ணுடன் இசைபாடும் அன்பர்கள் விளங்கும் ஊராகிய பாசூர் என்னும் பதியை தமது ஊராகக் கொண்டுள்ளவர் போலும்.

651. தேசு குன்றாத் தெண்ணீர் இலங்கைக் கோமானைக்
கூசஅடர்த்துக் கூர்வாள்கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.

தெளிவுரை : தனது பெருமையிலிருந்து குறைவு படாத நிலையில் இலங்கையின் வேந்தனாகிய இராவணன், வீரத்தின் நாணம் கொள்ளுமாறு அடர்த்து, கூரிய வாளை வழங்கி அருள் செய்தவர்; தம்மைப் போற்றிப் புகழ்பாடி வணங்கும் அன்புடையவர்களுக்குப் பெருமை தருபவர், ஈசன். அவர் ஊரானது, நீர் வளம் மிக்கு விளங்குதலால் உண்டாகும் பாசியின் தடமும் வயலும் சூழ்ந்த பாசூர் போலும்.

652. நகுவாய் மலர்மேல் அயனு நாகத்து அணையானும்
புகுவாய் அறியார் புறநின்று ஓரார் போற்றோவார்
செகுவாய் உகுபல் தலைசேர் கையார் ஊர்போலும்
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.

தெளிவுரை : தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், பாம்பணைமேல் இருக்கும் திருமாலும், ஈசனைக் காண்கின்ற வழி அறியாதவராய்ப் புறத்தே நின்று ஓய்வின்றி போற்றித் துதிக்க, பிரம கபாலம் ஏந்தி விளங்கி கையுடையவராகிய ஈசன், நாரையானது மீன்களைக் கொத்தி வாரிச் செல்லும் நீர் வளத்தை உடைய பாசூர் போலும்.

653. தூயவெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையார்
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்
காவல் வேவக் கணையென்று எய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

தெளிவுரை : வெயிலில் உடலை வருத்தியும் துவராடை கொண்டும் உள்ள புறச் சமயத்தார்கள், கொடிய வார்த்தைகளைக் கூறித் திரிய, அன்பற்றவராயும், பகைமை கொண்டவராயும் இருந்து மூன்று அசுரர்களையும் கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு, கணைதொடுத்த ஈசனாரின் ஊரானது, குரவமலர் விளங்குகின்ற சோலை திகழும் பாசூர் போலும்.

654. ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர்க்
கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்
ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே.

தெளிவுரை : ஞானம் உணர்ந்த, காழியில் மேவும் ஞானசம்பந்தர், வண்டுகள் இன்னிசை பாடும் திருப்பாசூரில் விளங்கும் ஈசனை, திருவடி சேரும் பாடலாகச் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இம்மையில் ஊனம் ஏதும் இல்லாதவராய் விளங்கி, மறுமையில் வானுலகில் நனி விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

197. திருவெண்காடு (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

655. உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
வெண்டா மரைமேல் கருவண்டு யாழ்செய் வெண்காடே.

தெளிவுரை : பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினை உட்கொண்டு காத்தருளிய உமைபங்கனே ! என்று போற்றித் தொண்டுபுரியும் அடியவர்களுக்குத் துயரங்கள் நாடாதவாறு அருள் புரிந்த காக்கும் எந்தையாகிய ஈசன் விளங்கும் ஊரானது, தாமரை மலர்மீது வண்டுகள் அமர்ந்து தேன் அருந்தி யாழ்போன்று இசை எழுப்புகின்ற வெண்காடு போலும்.

656. நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதந்தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத் தொலியால் கிளிசொல் பயிலும் வெண்காடே.

தெளிவுரை : தலைவனாக விளங்கும் பெருமான், நம்மை ஆட்கொண்டு நற்கதியை அருள் புரிவான் என்னும் கருத்தில், பல நாள்கள் பணிந்து போற்றுகின்ற அடியவர்களுடைய குற்றம் தீர்த்து அருளிச் செய்ய வீற்றிருக்கும் ஈசன் ஊரானது, வேதவொலிகளைக் கேட்டுப் பழகிய கிளிகள், அதனைச் சொல்லி விளங்கும் வெண்காடு போலும்.

657. தண்முத்து அரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக்
கண்முத்து அரும்பக்கழல் சேவடிகை தொழுவார்கள்
உண்முத்து அரும்ப உவகை தருவான் ஊர்போலும்
வெண்முத்து அரும்பிப் புனல்வந்த அலைக்கும் வெண்காடே.

தெளிவுரை : குளிர்ந்த முத்துக்களைப் போன்ற நீர்த்திவலைகளையுடைய மூன்று குளங்கள் விளங்கத் திகழும் பெருமானை நினைத்துக் கசிந்து உருகி, பக்தியுடன் கண்ணீர் மல்கிப் பரவியேத்தி, திருக்கழலைப் பணிந்து கை தொழுபவர்கள் உள்ளத்தில் முத்துப்போன்று மலரும் உவகை தருகினற ஈசன் விளங்கும் ஊர், வெண் முத்துக்களைக் கடலலைகள் வாயிலாகச் சேர்த்துக் குவிக்கும் வெண்காடு போலும்.

658. நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா உள்கு வார்கள் உள்ளத்தே
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர்போலும்
விரையார் கமலத்து அன்ன மருவும் வெண்காடே.

தெளிவுரை : மூப்பின் காரணமாகத் தோன்றும் நரைவந்து அணுகும் முன்பாகப் பக்தி உரையிலிருந்து மாறுபாடு கொள்ளாது தியானம் செய்பவர்கள் உள்ளத்தில், அருளுருவாய் விளங்குகின்ற ஈசன் ஊர், மணம் கமழும் தாமரை மலரில் அன்னப் பறவைகள் மருவி வாழும் வெண்காடு போலும்.

659. பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப்போக அருளுந் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச் சுரிசங்கு உலவித் திரியும் வெண்காடே.

தெளிவுரை : இளமையான பிறைச் சந்திரனும், கங்கையும் சூடும் பெருமானை, உள்ளத்தால் ஒன்றி நினைத்து வணங்குபவர்களின் பிணிகள் யாவும் விலகிச் சொல்லுமாறு அருள் புரியும் தலைவனாகிய ஈசன் விளங்குகின்ற ஊரானது, வெண்மையான சங்குகள் கடலலைகள் வாயிலாக வெளியேறிக் கரை கொண்டு திகழும் வெண்காடு போலும்.

660. ஒளிகொள் மேனி உடையாய் உம்ப ராளீயென்று
அளிய ராகி அழுதுற்று ஊறும் அடியார்கட்கு
எளியான் அமரர்க்கு அரியான்வாழும் ஊர்போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.

தெளிவுரை : சோதி வடிவாய் விளங்கித் தேவர்களை ஆட்கொள்ளும் பெருமானே என்று அன்புடைய நெஞ்சினராகி, பக்தியில் நனிதோய்ந்து கண்ணீர் பெருக விளங்கும் அடியவர்களுக்கு, எளியவனாய் விளங்குபவன் ஈசன். அப்பெருமான் தேவர்களுக்கு அரியவனாய் வீற்றிருக்கின்ற ஊரானது, இந்திரனுடைய வெள்ளை யானையாகிய ஐராவதம் வணங்கும் வெண்காடு போலும்.

661. கோள்வித் தனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்
மாள்வித் தவனை மகிழ்ந்துஅங்கு ஏத்த மாணிக்காய்
ஆள்வித்து அமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே.

தெளிவுரை : கொலைத் தன்மையுடைய கூற்றுவனை மாள்வித்து, மார்க்கண்டேய முனிவர் போற்றித் தொழுமாறு சிறந்த பேற்றினை வழங்கிய ஈசன் விளங்குகின்ற ஊரானது, அந்தணர்கள் இயற்றும் வேள்விப் புகையானத வானத்தில் படர்ந்து இருள் போன்று செய்விக்கும் வெண்காடு போலும்.

662. வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியம் சூடி என்று முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான் எந்தையூர் போலும்
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே.

தெளிவுரை : முன்கையில் வளையல் பொருந்திய உமாதேவி வெருவித் தோன்றுமாறு கயிலை மலையைத் திருப்பாதமலரால் ஊன்றி, இளைய பிறைச் சந்திரனைச் சூடிய பெருமானை முப்போதும் குறைவில்லாது போற்றித் துதிக்கப்படுபவனாகிய எந்தையாகிய ஈசன் விளங்குகின்ற ஊர், விளைச்சலை நன்கு தருகின்ற கழனிகளும் பொய்கைகளும் சூழ்ந்த வெண்காடு போலும்.

663. கரியானோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு
உரியான் அமரக் கரியான் வாழும் ஊர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணாதவாறு சோதி வடிவாய் ஓங்கிய எங்கள் பெருமானே ! என்று போற்றி வணங்குபவர்களுக்கு உரியவனாய் விளங்குகினற ஈசன், அமரர்களுக்கு அரியவனாய் வாழும் ஊர், விரிந்து பரவும் பொழிலில் வண்டு இசை பாடும் வெண்காடு போலும்.

664. பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்தேத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி
மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே.

தெளிவுரை : அடியவர் பலரும் சூடிப் பாடிப் போற்றி பரிவுடையவராய்ப் புகழ் மொழிகள் கூற, ஆடுகின்ற அரவத்தை அரையில் கட்டிய பெருமானைச் சமணர்களும், சாக்கியர்களும் உணராத திருக்கோலத்தை உடைய அவ் ஈசன் பதியாவது, வெண்காடு ஆகும்.

665. விடையார் கொடியான் மேவி உறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றும் காழியான்
நடையார் இன்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்கு
அடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே.

தெளிவுரை : இடபக் கொடியுடைய ஈசன் மேவி உறைகின்ற வெண்காட்டை, கடைவாயில் பொருந்திய மாடங்களை உடைய சீகாழியில், ஒழுக்கத்தைப் பெருகச் செய்யும் இனிய சொற்கள் அளிக்கும் ஞானசம்பந்தர், போற்றி உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வினை அற்றவர்கள் ஆவார்கள்; தேவலோகத்தை ஆள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

198. திருமீய்ச்சூர் (அருள்மிகு மேகநாதர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

666. காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன்று அறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரைத் தொழுது வினையை வீட்டுமே.

தெளிவுரை : பஞ்ச பாணம் எனச் சொல்லப்படும் தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்னும் ஐங்கணையால் தாக்கிய மன்மதனின் உடலின் வடிவத்தை எரித்து, கங்கையைப் படர்ந்த சடைமுடியில் ஏற்றுப் பதியுமாறு செய்த மேலான பரம்பொருளாகிய ஈசன், மாயை வல்ல சூரபத்மனை மாய்த்த அழகனாகிய முருகவேளின் தந்தையாவார். அப் பெருமானுடைய மீயச்சூரைத் தொழுது வணங்கி நும்மைப் பற்றியுள்ள வினையை வீழ்த்துவீராக.

667. பூவார் சடையின் முடிமேல் புனலர் அனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண் தலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம்பு எரிவாங்கி
மேவார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.

தெளிவுரை : கொன்றை முதலான பூக்கள் பொருந்திய சடை முடியின் மீது கங்கையையுடைய ஈசன், நெருப்பைக் கரத்தில் கொண்டு விளங்குபவர், நாவார மறை நவிலும் பெருமானாவார்; பிறைச் சந்திரனைத் தரித்து விளங்குபவர்; பிரம கபாலம் ஏந்தியவர். அப்பெருமான், மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினியை நீண்ட அம்பாகத் தொடுத்து, பகைவராய் நின்ற மூன்று அசுரர்களையும் மதில்களையும் எரித்தவர். அவர் மீயச்சூரில் வீற்றிருக்கும் இறைவனே ஆவார்.

668. பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைகள் உடையான் மீயச் சூரானைத்
தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்
அந்நேர் இமையோர் உலகம்எய்தற் கரிதன்றே.

தெளிவுரை : பொன் போன்ற கொன்றை மாலை புரளும் அகன்ற திருமார்பை உடைய ஈசன், மின்னலைப் போன்று சிவந்த ஒளிரும் சடைகளை உடையவனாய், மீயச் சூரானாய், தனக்கு இணையாக வேறு எவரும் இல்லாதவனாய் விளங்குபவன். அப்பெருமானைத் தலையால் வணங்குபவர்களுக்கு இமையோர் உலகத்தில் மேவித் திகழும் சிறப்பு கிடைத்தற்கு அரியதாகாது. தேவருலகம் கிடைத்தற்கு எளியது என்ற குறிப்பு ஆயிற்று.

669. வேக மதநல் லியானை வெருவ உரிபோர்த்துப்
பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட
நாகம் அரைமேல் அசைத்து நடமாடியநம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.

தெளிவுரை : மரம் பொருந்திய யானை வெருவ அதனை உரித்துப் போர்த்து, உமாதேவியைப் பாகமாகக் கொண்டு துதிப்பாடல்களைப் பாட, நாகத்தை அரையில் கட்டி, நடனம் ஆடிய ஈசன், மேகத்தை உரிஞ்சி இழுக்கும் உயர்ந்த பொழில் சூழ்ந்த மீயச்சூரில் விளங்கும் பரமன் ஆவர்.

670. விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாடல் ஆடலார்
பெடையார் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன்று உடையார் மீயச் சூராரே.

தெளிவுரை : ஈசன், இடபக் கொடியுடையவர்; சடை முடியின் மீது பிறைச் சந்திரனைச் சூடியவர்; பூதப் படைகள் சூழ விளங்கிப் பாடுதலும் ஆடுதலும் கொண்டவர்; பெடை சூழ வண்டுகள் சேரும் கொன்றை மாலை அணிந்தவர்; விடை போன்ற பீடுநடையுடைய மீயச்சூரில் விளங்குபவர்.

671. குளிரும் சடைகொள் முடிமேல் கோல மார்கொன்றை
ஒளிரும் பிறையொன்று உடையான் ஒருவன் கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்ட(ம்) நவில்நம்பன்
மிளிரும் அரவம் உடையான் மீயச் சூரானே.

தெளிவுரை : குளிர்ந்த கங்கை தரித்த சடைமுடியின் மீது அழகிய கொன்றை மலர் தரித்து, ஒளிர்கின்ற பிறைச் சந்திரனைச் சூடிய ஒருவன், கையை வளைத்த மென்மையான மாலை கொண்டு நடனம் புரியும் ஈசன் ஆவான். அவன் அரவத்தை உடையவனாய் விளங்கம் மீயச்சூரானே.

672. நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
கோல வடிவு தமதாம் கொள்கை யறிவொண்ணார்
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே.

தெளிவுரை : ஈசனார், நீல மிடற்றினையுடைய அழகர்; தீத்திரட்சியாக நெடிது ஓங்கியவர்; திருவடிவத்தை யாரும் அறியவொண்ணாத தன்மையர்; திருக்கழல் அணிந்த திருவடியுடையர்; யானையின் தோலை உரித்தவர்; மழுப்படை உடையவர்; மேன்மையானவர்; மதி சூடியவர்; விதியாக விளங்குபவர். அவர் மீயச்சூரில் விளங்கும் பெருமானாவார்.

673. புலியின் உரிதோல் ஆடை பூசும் பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற்சுரந்தார் உமையஞ்ச
வலிய திரள்தோள் வண்கண் அரக்கர் கோன்றன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.

தெளிவுரை : ஈசன், புலியின் தோலை ஆடையாகக் கொண்டவர்; திருநீறு மெய்யில் பூசுபவர்; ஆராவாரித்து எழுகின்ற கங்கையைச் சடையில் (கரந்து) மறைத்தவர்; உமாதேவியார் அஞ்சி நிற்குமாறு இலங்கையின் வேந்தனாகிய இராவணன் தோளை நெரித்து மலையின்கீழ் அடர்த்தவர். அவர் மீயச்சூரில் வீற்றிருக்கும் இறைவனே.

674. காதில் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
போதிலவனு(ம்) மாலும் தொழப் பொங்ககொரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.

தெளிவுரை : ஒளிரும் குழையைக் காதில் உடையவராய், கரிய கண்டத்தவராய் விளங்கும் ஈசனார், பிரமனும் திருமாலும் தொழுமாறு எரிகின்ற சோதிப் பிழம்பனவர். அப்பெருமான், வண்டு கோதி ஒலிக்கும் பூக்களையுடைய பொய்கையில் எருமைகள் படிந்து நீரில் மூழ்கித் திளைக்கவும், வயல் சூழ்ந்தும் விளங்கும் மீயச்சூரை உடையவர் ஆவார்.

675. கண்டார் நாணும் படியார் கலிங்கம் உடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகார் உயர்ந்த கொள்கையார்
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரைவில்லா
விண்டார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.

தெளிவுரை : திகம்பரரும் சாக்கியரும் சொல்லும் சொற்களை ஒரு பொருட்டாகக் கொள்ளாது, உயர்ந்த கொள்கையின் தன்மையினால் உமாதேவியைப் பாகமாக உடையவர் ஈசன். அவர் பெரிய மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்தவர். அவர் மீயச்சூரில் வீற்றிருக்கும் இறைவர்.

676. வேட முடைய பெருமான் உறையு மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞானசம் பந்தன்
பாட லாய தமிழீ ரைந்து மொழிந்துள்கி
ஆடும் அடியார் அகல்வான் உலகம் அடைவாரே.

தெளிவுரை : பலபல வேடம் கொண்டுள்ள பெருமானாகிய ஈசன் உறையும் மீயச்சூரைப் போற்றி, விரும்பும் புகழ் யாவும் பொருந்திய புகலி நகரில் விளக்கும் ஞானசம்பந்தர் பாடல்களாகிய இத்திருப்பதிகத்தை ஓதி உள்ளம் பக்தியில் திளைக்கும் அடியவர்கள், அகன்ற வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

199. அரிசிற்கரைப்புத்தூர் (அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

677. மின்னும் சடைமேல் இளவெண்
திங்கள் விளங்கவே
துன்னும் கடல்நஞ்சு இருள்தோய்
கண்டர் தொல்மூதூர்
அன்னம் படியும் புனலார்
அரிசில் அலை கொண்டு
பொன்னும் மணியும் பொருதென்
கரைமேல் புத்தூரே.

தெளிவுரை : மின்னலைப் போன்று ஒளிரும் சடை முடியின் மீது இளமையான பிறைச் சந்திரன் வெண்மையான ஒளி கொண்டு திகழ, கரிய நஞ்சினைக் கண்டத்தில் உடைய ஈசன் வீற்றிருக்கும் பழைமையான ஊர் என்பது, அன்னம் வாழ்கின்ற நீர் மிக்க அரிசில் ஆற்றின் நீர் அலைகள் பொன்னும் மணியும் கொண்டு கரையில் சேர்க்கும் புத்தூர் ஆகும்.

678. மேவா அசுரர் மேவெயில்
வேவ மலைவில்லால்
ஏவார் எரிவெங் கணையால்
எய்தான் எய்தும் ஊர்
நாவால் நாத(ன்) நாமம்
ஓதி நாள்தோறும்
பூவால் நீரால் பூசுரர்
போற்றும் புத்தூரே.

தெளிவுரை : பகைமைகொண்ட அசுரர்கள் பாதுகாப்பு கொண்டு பதுங்கி இருந்த மூன்று கோட்டைகள் வெந்து சாம்பலாகுமாறு மேருலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கொடிய அம்பாகத் தொடுத்து எய்தவனாகிய ஈசனுடைய தொன்மையான ஊரானாது, அந்தணர்கள் நாவினால், நாதன் நாமத்தை நாள்தோறும் ஓதி, பூக்கள் தூவி, நீரால் பூசித்துப் போற்றி வழிபடும் புத்தூர் ஆகும்.

679. பல்லார் தலைசேர் மாலை
சூடிப் பாம்பும் பூண்டு
எல்லா விடமும் வெண்ணீறு
அணிந்தோர் ஏறுஏறிக்
கல்லார் மங்கை பங்க
ரேனும் காணுங்கால்
பொல்லார் அல்லர் அழகியர்
புத்தூர்ப் புனிதரே.

தெளிவுரை : மண்டை ஓடுகளைக் கோர்த்து மாலையாக அணிந்து, பாம்பும் ஆபரணமாகப் பூண்டு, திருமேனி முழுமையும் திருவெண்ணீறு விளங்குமாறு பூசி, ஒப்பற்ற இடபத்தை வாகனமாகக் கொண்டு மலைமகளாகிய உமாதேவியைப் ஒருபாகமாக உடைய அழகர், புத்தூரில் வீற்றிருக்கும் புனிதராகிய ஈசன் ஆவர்.

680. வரியேர் வளையாள் அரிவை
அஞ்ச வருகின்ற
கரியேர் உரிவை போர்த்த
கடவுள் கருதும்ஊர்
அரியேர் கழனிப் பழனம்
சூழ்ந்தங்கு அழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ்
சோலைப் புத்தூரே.

தெளிவுரை : வளையல் அணிந்துள்ள உமாதேவியும் அஞ்சுமாறு சீறி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திய கடவுள் கருதுகின்ற ஊரானது, தவளைகள் விளங்குகின்ற கழனிகளும், குளங்களும் சூழ்ந்ததும் புங்க மரங்கள் பூக்களைச் சொரிகின்றதும் உள்ள சோலைகள் கொண்ட புத்தூர் ஆகும்.

681. என்போடு அரவம் ஏனத்து
எயிறோடு எழில்ஆமை
மின்போல் புரிநூல் விரவிப்
பூண்ட மணிமார்பர்
அன்போடு உருகும் அடியார்க்கு
அன்பர் அமரும் ஊர்
பொன்போது அலர்கோங்கு ஓங்கு
சோலைப் புத்தூரே.

தெளிவுரை : ஈசன், எலும்பு, பாம்பு, பன்றியின் கொம்பு, அழகு மிக்க ஆமை இவற்றுடன் மின்னல் போன்று ஒளிரும் முப்புரிநூல் விரவிப் பூண்ட திருமார்பினர். அப்பெருமான், அன்புடையவர்களாய் மனங் கசிந்து உருகிப் போற்றும் அடியவர்களுக்கு அன்பராய் விளங்குகின்ற ஊரானது, பொன்போன்ற கொன்றை மலரும் கோங்கும் ஓங்குகின்ற சோலையுடைய புத்தூர் ஆகும்.

682. வள்ளி முலைதோய் குமரன்
தாதை வான்தோயும்
வெள்ளி மலைபோல் விடையொன்று
உடையான் மேவும்ஊர்
தெள்ளி வருநீர் அரிசில்
தென்பால் சிறைவண்டும்
புள்ளு மலிபூம் பொய்கை
சூழ்ந்த புத்தூரே.

தெளிவுரை : வள்ளி நாயகியை மணம் புரிந்த முருக வேளின் தந்தையாகிய ஈசன், வானை முட்டும் உயர்ந்த கயிலைபோன்ற கம்பீரமான தோற்றம் கொண்டுள்ள வெள்விடையினை வாகனமாக உடையவர். அப்பெருமான் மேவி இருக்கும் ஊரானது, தெளிந்த நீர் பெருகும் அரிசில் ஆற்றில் தென்பால், சிறகுகளை உடைய வண்டும், பறவைகளும் மலிந்த பூக்கள்திகழும் பொய்கை சூழ்ந்த புத்தூர் ஆகும்.

683. நிலந்த ணீரோடு அனல்கால்
விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கட் சோழ
னாகச் செய்தான்ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு
அன் றோர் காசுஎய்திப்
புலர்ந்த காலை மாலை
போற்றும் புத்தூரே.

தெளிவுரை : நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் தன்மையாக விளங்கும் ஈசன், சிலந்தியாக இருந்து சிவபூசை செய்தமையால் கோச்செங்கட் சோழனாக்கிய அருளாளர். அப்பெருமான் வீற்றிருக்கின்ற ஊரானது, துயரம் கொண்ட அடியவர்க்கு நித்தமும் காசு நல்கி அருள்புரிந்து காலையும் மாலையும் போற்றுகின்ற சிறப்புடைய புத்தூர் ஆகும்.

684. இத்தேர் ஏக இம்மலை
பேர்ப்பன் என்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீழ்
அலறப் பாதந்தான்
வைத்தார் அருள்செய் வரதன்
மருவும் ஊரான
புத்தூர் காணப் புகுவார்
வினைகள் போகுமே.

தெளிவுரை : தேரினைத் தடைப்படுத்திய கயிலை மலையை எடுத்து வேறு இடத்தில் பேர்த்துவைக்கும் நோக்கத்தில் செயல்பட்ட இராவணனை, அலறுமாறு திருப்பாத மலரால் வைத்து அடர்த்து அருள் செய்த பரமன், விரும்புகின்ற ஊரான புத்தூர் என்னும் பதியைக் காணப் புகுபவர்கள் வினையானது நீங்கும்.

685. முள்ளார் கமலத்து அயன்மால்
முடியோடு அடிதேட
ஒள்ளார் எரியாய் உணர்தற்கு
அரியான் ஊர்போலும்
கள்ளார் நெய்தல் கழுநீர்
ஆம்பல் கமலங்கள்
புள்ளார் பொய்கைப் பூப்பல
தோன்றும் புத்தூரே.

தெளிவுரை : முள்ளுடைய தண்டின்மேல் விளங்கும் தாமரையில் விளங்கும் பிரமனும் திருமாலும் திருமுடியும் திருப்பாதமும் தேட, ஒளி மிகுந்த பெருஞ்சோதியாகி, உணர்வதற்கு அரியவனாகி விளங்கிய ஈசனுடைய ஊரானது, தேன் துளிர்க்கும் நெய்தல், கழுநீர் ஆம்பல், தாமரை ஆகிய பூக்களையுடைய பொய்கையும் பறவைகளும் வாழும் புத்தூர் போலும்.

686. கையார் சோறு கவர்குண்
டர்களும் துவருண்ட
மெய்யார் போர்வை மண்டையர்
சொல்லு மெய்யல்ல
பொய்யா மொழியால் அந்தணர்
போற்றும் புத்தூரில்
ஐயா என்பார்க்கு ஐயுறவு
இன்றி அழகாமே.

தெளிவுரை : சமணர்களும், தேவர்களும் கூறும் சொற்கள் மெய்யல்ல. பொய்யா மொழியாகிய வேதத்தால் அந்தணர்கள் போற்றுகின்ற புத்தூரில் வீற்றிருக்கும் ஈசனை, ஐயா தலைவா என்று ஏத்தி வழிபடுகின்ற அடியவர்கள் அழகுடையவராய் விளங்குவார்கள்.

687. நறவம் கமழ்பூங் காழி
ஞான சம்பந்தன்
பொறிகொள் அரவம் பூண்டான்
ஆண்ட புத்தூர்மேல்
செறிவண் தமிழ்செய் மாலை
செப்ப வல்லார்கள்
அறவன் கழல்சேர்ந்து அன்போடு
இன்பம் அடைவாரே.

தெளிவுரை : தேன் மணம் கமழும் பூங்காழியில் மேவும் ஞானசம்பந்தர், படம் எடுத்தாடும் அரவத்தை ஆபரணமாகப் பூண்ட ஈசன் அருளாட்சி புரியும் புத்தூரின் மீது, செறிவான வண் தமிழால் செய்த இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள், அறத்தின் நாயகனாகிய அரன் கழல் சேர்ந்து, அன்பின் வயத்தினராய் விளங்கிப் பேரின்ப நுகர்ச்சியை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

200. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

688. தேவா சிறியோம் பிழையைப்
பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்றுஅங்கு அடியார்
தங்கட்கு அருள் செய்வாய்
ஓவா உவரி கொள்ள
உயர்ந்தாய் என்றேத்தி
மூவா முனிவர் வணங்கும்
கோயில் முதுகுன்றே.

தெளிவுரை : தேவாதி தேவனே ! சிறியவர்களுடைய பிழைகளைப் பொறுப்பவனே ! யாவர்க்கும் முதன்மையனாய் விளங்கும் பெரியோனே ! ஆகும் நெறி கொண்டு மேவும் அடியவர்களுக்கு அருள் செய்பவனே ! ஓய்வில்லாது நிகழும் பிறவி என்னும் கடலில் இருந்து கரையேற்றிக் காத்தல்பொருட்டு உயர்ந்து விளங்கும் நாதனே ! என்று ஏத்தி, பிறவிகளின் தன்மையில் மூவாத முனிவர் பெருமக்கள் வணங்குகின்ற கோயில் முதுகுன்றம் ஆகும்.

689. எந்தை இவன் என்று இரவி
முதலா இறைஞ்சுவார்
சிந்தை யுள்ளே கோயிலாகத்
திகழ்வானை
மந்தி யேறி யினமாய்
மலர்கள் பலகொண்டு
முந்தித் தொழுது வணங்கும்
கோயில் முதுகுன்றே.

தெளிவுரை : எந்தை பிரான் என்று, சூரியன் முதலான தேவர்கள் வணங்கிப் பக்தியுடன் போற்ற, சிந்தையுள் கோயிலாகத் திகழ்பவன் ஈசன். அப் பெருமானை வானர இனங்களும் மலர் கொண்டு, கூட்டம் கூட்டமாக முந்திக் கொண்டு சென்று தொழுது வணங்குகின்ற கோயில் முதுகுன்றம் ஆகும்.

690. நீடு மலரும் புனலும்
கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தை
யுள்ளே திகழ்வானைப்
பாடுங் குயிலின் அயலே
கிள்ளை பயின்றேத்த
மூடுஞ் சோலை முகில்தோய்
கோயில் முதுகுன்றே.

தெளிவுரை : மிகுதியான மலர் கொண்டு அர்ச்சித்தும், தூய நீர் கொண்டு பூசனை செய்தும், மாயை வயப்படுத்தலும் வினை நுகர்தலும் ஆகிய இம் மானுடப் பிறவியிலிருந்து விடுபட்டு, நிரந்தரமாகிய ஈசன் திருவடிப் பேறாகிய முத்திப் பேரின்பத்தை விரும்புகின்ற மெய்யடியார் சிந்தையுள் திகழ்பவன் ஈசன். அப்பெருமான் வீற்றிருப்பது குயில்கள் தம் இனிய குரலால் ஏத்திப் பாடியும்; கிளிகள், வேத கீதங்களைக் கேட்டுப் பயின்று அவற்றால் ஏத்திப் போற்றுதல் செய்யவும் திகழ்கின்ற அடர்ந்த சோலைகள், முகிலினைப் பொருந்துமாறு மேவும் முதுகுன்றம் ஆகும்.

691. தெரிந்த அடியார் சிவனே
என்று திசைதோறும்
குருந்த மலரும் குரவின்
அலரும் கொண்டேந்தி
இருந்து நின்றும் இரவும்
பகலும் ஏத்தும்சீர்
முரிந்து மேகம் தவழும்
சோலை முதுகுன்றே.

தெளிவுரை : நன்கு உணர்ந்த அடியவர்கள், சிவனே என்று தியானித்த, எல்லாத் திசைகளிலிருந்தும் நறுமணம் கமழும் குருந்த மலரும் குரவ மலரும் கொண்டு ஏந்தி, நின்றும், இருந்தும் தூவி, இரவும் பகலும் ஏத்தும் சிறப்புடைய, மேகம் தவழும் சோலை உடைய முதுகுன்றம் ஆகும்.

692. வைத்த நிதியே மணியே
என்று வருந்தித்தம்
சித்தம் நைந்து சிவனே
என்பார் சிந்தையார்
கொத்தார் சந்தும் குரவும்
வாரிக் கொணர்ந்துந்து
முத்தா றுடைய முதல்வர்
கோயில் முதுகுன்றே.

தெளிவுரை : என்னுடைய செல்வமாக விளங்கிக் காக்கும் சிவபெருமானே ! என்று உள்ளம் உருகிப் போற்றி, இதுவரை போற்றுதல் செய்யாது காலத்தைப் போக்கியது குறித்து வருந்தியும் விளங்கும் பக்தர்கள் சிந்தையில் வீற்றிருக்கும் நாதனின் கோயில் சந்தனமும், குரவமும் வாரிக் கொண்டு கரை சேர்க்கும் மணிமுத்தாற்றின் கரையில் திகழும் முதுகுன்றம் ஆகும்.

693. வம்பார் கொன்றை வன்னி
மத்த மலர்தூவி
நம்பா என்ன நல்கும்
பெருமான் உறை கோயில்
கொம்பார் குரவு கொகுடி
முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு
பாடு முதுகுன்றே.

தெளிவுரை : நறுமணம் விளங்குகின்ற கொன்றை மலர், வன்னிப் பத்திரம், ஊமத்த மலர் ஆகியவற்றைத் தூவி நம்பனே ! என்று போற்ற, அருள் புரிஎம் பெருமானாகிய சிவபெருமான் உறைகின்ற கோயிலானது, பூங்கொம்புகளில் விளங்கும் குரவமலரும், சிறப்பான கொகுடி முல்லையும், குவிந்து, வளமையான சோலைகள் திகழ வண்டுகள் இடைபாடும் முதுகுன்றம் ஆகும்.

694. வாசம் கமழும் பொழில்சூழ்
இலங்கை வாழ்வேந்தை
நாசம் செய்த நங்கள்
பெருமான் அமர்கோயில்
பூசை செய்து அடியார்
நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ்
சோலை முதுகுன்றே.

தெளிவுரை : நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கையில் வேந்தனாகிய இராவணனை அடர்த்து, அவனது ஆணவத்தை அழித்து விளங்கி எங்கள் சிவ பெருமான் அமர்ந்து இருக்கும் கோயிலானது, சிவபூசை செய்து அடியவர்கள் உள்ளத்தால் ஒருமித்து நின்று வாயாரப் புகழ்ந்து ஏத்த, வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலையுடைய முதுகுன்றம் ஆகும்.

695. அல்லி மலர்மேல் அயனும்
அரவின் அணையானும்
சொல்லிப் பரவித் தொடர
வொண்ணாச் சோதியூர்
கொல்லை வேடர் கூடி
நின்று கும்பிட
முல்லை அயலே முறுவல்
செய்யு முதுகுன்றே.

தெளிவுரை : தாமரையின் அகவிதழில் வீற்றிருக்கும் பிரமனும், பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலும், காணவேண்டும் என்று சொல்லிக் காணவொண்ணாத சோதியாகிய ஈசன் வீற்றிருக்கின்ற ஊர், வேடர்கள் கூடி விளங்கி ஏத்தி வழிபட, முல்லை அரும்புகள் விளங்கும் முதுகுன்றம் ஆகும்.

696. கருகு முடலார் கஞ்சி
யுண்டு கடுவேதின்று
உருகு சிந்தை இல்லார்க்கு
அயலான் உறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே
வளையச் சிறுமந்தி
முருகின் பணைமேல் இருந்து
நடம்செய் முதுகுன்றே.

தெளிவுரை : சிந்தை செய்யாதவர்களும் புறச் சமயத்தினரும் காண முடியாதவாறு விளங்கும் ஈசன் உறையும் கோயிலானது, முறுக்கிய மூங்கில்கள் வளையுமாறு குரங்கின் குட்டிகள் பாய்ந்து சிறிய கிளையின் மீது குதித்து ஆடும் முதுகுன்றம் ஆகும்.

697. அறையார் கடல்சூழ் அந்தண்
காழிச் சம்பந்தன்
முறையால் முனிவர் வணங்கும்
கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப்
பாட வல்லார்கள்
பிறையார் சடையெம் பெருமான்
கழல்கள் பிரியாரே.

தெளிவுரை : ஒலித்து முழங்கும் கடல் சூழ்ந்த குளிர்ச்சி பொருந்திய அழகிய சீகாழியில் மேவி விளங்கும் ஞானசம்பந்தர், நெறிமுறையின்படி தவமுனிவர்கள் வணங்கும் கோயிலாகிய முதுகுன்றினைக் குறைவிலாப் பதிகமாகப் பாடும் இத் திருப்பதிகத்தை அன்பர்கள் கூடிப் பாட, பிறைச் சந்திரனைச் சூடிய ஈசன் கழலின் கீழ்ப் பிரியாது வீற்றிருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

201. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

698. கறையணி வேலிலர் போலும்
கபாலம் தரித்திலர் போலும்
மறையும் நவின்றிலர் போலு(ம்)
மாசுணம் ஆர்த்திலர் போலும்
பறையுங் கரத்திலர் போலும்
பாசம் பிடித்திலர் போலும்
பிறையும் சடைக்கிலர் போலும்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : சிவபெருமான், பகைவரை வென்று இரத்தக் கரையும் ஊனும் பதிந்த கறையுடைய சூலத்தை உடையவர்; பிச்சை ஏற்கப் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து ஆணவத்தை அழித்து, அத் தலையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டவர்; நான்கு வேதங்களையும் நன்கு ஓதியவர்; பாம்பினை ஆர்த்து விளங்குமாறு தரித்தவர்; டமருகம் என்னும் உடுக்கையைக் கரத்தேந்தி நடம் புரிபவர்; பாசக் கயிற்றைப் பிடித்திருப்பவர்; பிறைச் சந்திரனைச் சடையில் சூடியவர். அப்பெருமான் பிரமபுரத்தில் வீற்றிருப்பவர். (இலர்போலும் என்பது உளர் என்னும் குறிப்பைத் தருவது ஆகும்.) ஈசன் தமது திருக்குறிப்பால் செய்யும் அருட்செயல் மரபு குறித்து வீரச் செயலாக உணர்த்தப்படுவதாம்.

699. கூரம்பது இலர் போலும்
கொக்கின் இறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும்
ஆமை அணிந்திலர் போலும்
தாரும் சடைக்கிலர் போலும்
சண்டிக் கருளிலர் போலும்
பேரும் பலஇலர் போலும்
பிரம புரம் அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினியைக் கூரிய அம்பாக உடையவர்; கொக்கின் இறகு சூடியவர்; மணிமாலை தரித்தவர்; ஆமை ஓட்டினை அணியாகப் பெற்றவர்; சடையில் கொன்றை மாலை சூடியவர்; சாண்டீசருக்கு அருள் செய்தவர்; பேராயிரம் பல உடையவர். அவர் பிரம புரத்தில் வீற்றிருக்கும் பரமன் ஆவார்.

700. சித்தர் வடிவிலர் போலும்
தேசந் திரிந்திலர் போலும்
கத்தி வருங் காளி
கதங்கள் தவிர்த்திலர் போலும்
மெய்த்த நயனம் இடந்தார்க்கு
ஆழி அளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும்
பிரம புரம் அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், சித்தர் வடிவுடைய அழகர்; ஊர்கள் எல்லாம் திரிந்து பிச்சை ஏற்பவர்; சினத்துடன் வந்த காளியின் சீற்றம் தணியுமாறு உருத்திர தாண்டவம் புரிந்து விளங்கியவர்; தனது கண்ணைப் பெயர்த்து அருச்சித்த திருமாலுக்குச் சக்கரப் படையை வழங்கியவர்; பித்தராக வடிவு கொண்டு இருப்பவர். அப்பெருமான் பிரமபுரத்தில் வீற்றிருப்பவர்.

701. நச்சரவு ஆட்டிலர் போலு(ம்)
நஞ்ச மிடற்றிலர் போலும்
கச்சுத் தரித்திலர் போலும்
கங்கை தரித்திலர் போலும்
மொய்ச்சவன் பேயிலர் போலு(ம்)
முப்புரம் எய்திலர் போலும்
பிச்சை இரந்திலர் போலும்
பிரம புரம்அமர்ந்த தாரே.

தெளிவுரை : ஈசன், நஞ்சுடைய அரவத்தை அசைத்த விளங்குபவர்; நஞ்சினை மிடற்றில் உடையவர்; கச்சு அரையில் கட்டியவர்; கங்கையைச் சடை முடியில் தரித்தவர்; வலிமையான பேய்க் கூட்டத்தில் விளங்கி இருப்பவர்; முப்புரத்தை எரித்து அழித்தவர்; கபாலம் ஏந்திப் பிச்சை எடுத்தவர். அப்பெருமான் பிரம புரத்தில் வீற்றிருப்பவர்.

702. தோடு செவிக்கிலர் போலும்
சூலம் பிடித்திலர் போலும்
ஆடுதடக்கை வலிய
யானை யுரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலும்
ஒள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், செவியில் தோடு அணிந்து, இருப்பவர்; சூலத்தைக் கரத்தில் ஏந்தி இருப்பவர்; ஆடுகின்ற பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை உரித்தவர்; திருக்கரத்தில் பிரம கபாலத்தைத் திருஓடாகக் கொண்டு விளங்குபவர்; ஒருகரத்தில் ஒளி விடுகின்ற நெருப்பைக் கொண்டவர். அப்பெருமான், பெருமை மிகுந்தும் செல்வச் செழிப்பும் உடைய பிரமபுரத்தில் வீற்றிருப்பவர்.

703. விண்ணவர் கண்டிலர் போலும்
வேள்வி அழித்திலர் போலும்
அண்ணல் அயன்றலை வீழ
அன்று மறுத்திலர் போலும்
வண்ண எலும்பினொடு அக்கு
வடங்கள் தரித்திலர் போலும்
பெண்ணின மொய்த்துஎழு செல்வப்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், தேவர்களுக்குள் அருள் புரிபவர்; தக்கன் செய்த புன்மையான வேள்வியைத் தகர்த்தவர்; ஐந்து முகத்தையுடைய பிரமனின் ஒரு தலையைக் கொய்து, ஆணவ மலத்தைக் களைந்து நான்முகனாக விளங்கச் செய்தவர்; அழகிய எலும்பு மாலையுடன் உருத்திராக்க மாலையும் தரித்து விளங்குபவர். அப்பெருமான் பெண்டிர் சேர்ந்து, விளங்குகின்ற திருத்தொண்டுகள் புரியும் பிரமபுரத்தில் வீற்றிருப்பவர்.

704. பன்றியின் கொம்பிலர் போலும்
பார்த்தற்கு அருளிலர் போலும்
கன்றிய காலனை வீழக்
கால்கொடு பாய்ந்திலர்போலும்
துன்று பிணஞ்சுடு காட்டில்
ஆடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், பன்றியின் கொம்பினை அணிகலனாகப் பெற்றவர்; அர்ச்சுனருக்குப் பாசுபத அத்திரம் அருளிச் செய்தவர்; மார்க்கண்டேயரின் உயிரைக் கவரும் நோக்கில் சீறி வந்த காலனின் உயிரைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்தவர்; மயானத்தில் ஆடி மகிழ்கின்றவர்; பெருமையும் பிணைப்பும் பெருகும் பிரமபுரத்தில் அவர் வீற்றிருப்பவர்.

705. பரசு தரித்திலர் போலும்
படுதலை பூண்டிலர் போலும்
அரசன் இலங்கையர் கோனை
அன்றும் அடர்த்திலர் போலும்
புரைசெய் புனத்திள மானும்
புலியின் அதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த
பிரம புரம் அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், மழு ஏந்த விளங்குபவர்; தலை மாலை அணிந்து இருப்பவர்; இராவணனை அடர்த்தவர்; இளைய மானை ஏந்தியவர்; புலித் தோலை ஆடையாகக் கொண்டவர். அவர், தேன் கமழும் மலர்ப் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்து விளங்குபவர்.

706. அடிமுடி மாலயன் தேட
அன்றும் அளப்பிலர் போலும்
கடிமலர் ஐங்கணை வேளைக்
கனல விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக் காகப்
பாற்கடல் ஈந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், திருமாலும் பிரமனும், திருப்பாதமும் சடைமுடியும் தேடக் காணவொண்ணாதவர் ! ஐந்து மணம் தரும் மலர்க்கணைகளையுடைய மன்மதனை நெருப்புக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கியவர்; பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடலை ஈந்த பெருமான். அவர் வீற்றிருப்பது பெண் யானை போன்று அழகிய நடையுடைய பிரமபுரம் ஆகும்.

707. வெற்றரைச் சீவரத் தார்க்கு
வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவர் ஆல்நிழல் நால்வர்க்கு
அறங்கள் உரைத்திலர் போலும்
உற்றலர் ஒன்றிலர் போலும்
ஓடு முடிக்கிலர் போலும்
பெற்றமும் ஊர்ந்திலர் போலும்
பிரம புரம்அமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், மாற்றுச் சமயத்தார்க்கு வெளிப்பட்டுக் காணாதவர்; முற்றும் துறந்த சனகாதி முனிவர்களுக்கு ஆல நிழலில் தட்சணாமூர்த்தித் திருக்கோலத்தில் அறம் உரைத்தவர்; பழிச்சொல்லும் தாங்குபவர்; கையில் பிரமகபாலத்தை ஏந்தியவர்; இடப வாகனம் உடையவர். அவர் பிரமபுரத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

708. பெண்ணுரு ஆணுரு அல்லாப்
பிரம புரநகர் மேய
அண்ணல்செய் யாதன எல்லாம்
அறிந்து வகைவகை யாலே
நண்ணி ஞானசம் பந்தன்
நவின்றன பத்தும்வல் லார்கள்
விண்ணவ ரோடினி தாக
வீற்றிருப் பாரவர் தாமே.

தெளிவுரை : பெண்ணாகவும், ஆணாகவும், அதன்பால் இல்லாத வேறாகவும் விளங்கிப் பிரமபுரம் என்னும் நகரில் மேவும் அண்ணல், தானே முனைந்து செய்யாமையும் அருளால்  திரு உள்ளத்தின் பாங்கில் நிகழ்ந்தமையும் நண்ணிவாறு ஞானசம்பந்தர் நவின்ற இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தேவர்களுடன் இனிது வீற்றருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

202. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

709. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே.

தெளிவுரை : திருநீறானது, மந்திரச் சொல் போன்று அச்சம் நீக்கி வேண்டிய நற்பயனைத் தருவது ஆகும். வானவர்கள் திருநீற்றை அணிகின்றனர். மனிதர்களுக்கு இது, வானவர்களைவிட மேலானதாகி விளங்குவது. அழகினைத் தந்து பொலியும் திருநீறு, துதிக்கப்படும் பொருளாக உள்ளது. உமையவனைப் பாகங் கொண்ட ஆலவாய் அண்ணலாகிய ஈசனின் திருநீறு இத்தகையது ஆகும்.

710. வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவத நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

தெளிவுரை : வேதத்தால் சிறப்பாகப் போற்றப்படுகின்ற பெருமையடையது திருநீறு. உலக வாழ்க்கையில், ஐம்புலன்கள் வழி ஏற்படும் பிறி முதலானவற்றால் நேரும் துன்பத்தையும், அந்தக்கரணமாகிய மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகியவற்றின்வழி நேரும் துயரங்களையும் தீர்ப்பது திருநீறு ஆகும். நல்லறிவு தருவதும், அறியாமை மற்றும் பழி முதலியவற்றால் நேரும் புன்மைகளை அகற்றுவதும் திருநீறு ஆகும். திருநீற்றின் செம்மை, ஓதத்தகுந்த பெருமையுடையதும், உண்மைப் பொருளாய் எக்காலத்திலும் நிலைத்திருக்கக்கூடியதும் ஆகும். இது திருவாலவாய் அண்ணலாக விளங்கும் ஈசனுக்கு உரிய திருநீறு.

711. முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே

தெளிவுரை : திருநீறு, முத்தி இன்பத்தைத் தருவது; முற்றும் துறந்த முனிவர் பெருமக்கள் அணியும் பெருமையுடையது; எக் காலத்திலும் மேலானதாக விளங்கிப் பெரும்பேறும் நலமும் இன்பமும் வழங்கும் சத்தியப் பொருளாக இருப்பது. இத்தகைய திருநீற்றை, அதன் மகிமையறிந்து, நன்குணர்ந்த சிவனடியார்கள் புகழ்ந்து பாராட்டிப் போற்றுகின்றனர். திருநீறானது மன்னுயிர்களுக்குச் சிவபக்தியைத் தருவதாகும். அதனைப் போற்றி வாழ்த்த இனிமை நல்கும். வணங்கத்தக்க இனிய பொருளாகித் தெய்வத்தன்மை கொண்டு விளங்கும் திருநீறு, எட்டுவகையான சித்தகளைத் தரவல்லது. அது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்குரிய திருநீறு ஆகும்.

712. காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

தெளிவுரை : திருநீறு அணிந்தவர்களைக் காணும் அன்பர்கள் இனிமை கொள்வார்கள். அத்தகைய பொலிவை அளிக்கவல்ல திருநீற்றை விரும்பிப் போற்றிப் புனிதமாகக் கொண்டு அணிகின்ற பெருமக்களுக்குப் பெருமை கொடுக்கும்; வல்லமை தரும்; இறப்பினைத் தடுக்கும். நல்லறிவையும் சிவஞானத் தெளிவையும் தரும் ஆற்றல் உடையது திருநீறு. மன்னுயிர்களுக்கு மேன்மையையும் உயர்வையும் தரும் ஆற்றல் உடைய இத் திருநீறு, இது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுடைய திருநீறே ஆகும்.

713. பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.

தெளிவுரை : திருநீறு மெய்யில் பூசி அணிய, இனிமையாக்கித் துர்க்கந்தத்தைப் போக்கும் சிறப்பும், நன்மணம் வீசும் வண்ணமும், பிணி நீக்கமும் செய்யவும் புண்ணியத்தின் செய்களால் பெறும் அத்துணைச் சிறப்பினையும் அளிக்கும். திருநீற்றின் செம்மை யாவர்க்கும் இனிமை தருவதால் புகழ்ந்து பேசும் தன்மையில் இனிமை காணும்; பெரிய தவத்தை மேற் கெண்டுள்ள சீலர்களுக்கு உறுதுணையாக, உலக பந்தத்தால் உண்டாகும் ஆசைகளை நீக்கி, உயர்ந்த நிலைக்கு செல்ல வழி வகுக்கும் எல்லாவற்றுக்கும் முடிந்த முடிவாக  அந்தமாகத் திகழ்வது திருநீறு. தேசமெல்லாம் புகழ்ந்து போற்றும் சிறப்புடைய இத் திருநீறு, திரு ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

714. அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

தெளிவுரை : பொன்போன்ற பெரிய செல்வமாக விளங்குவத திருநீறு, அவலமாகும் துன்பத்தைப் போக்குவதும், மனத்தில் வருத்திக் கொண்டிருந்து துன்புறுத்தும் நெஞ்சக் கனலைத் தணித்து விளக்குவதும், சிறப்பினை அளிப்பதும், எல்லா நிலைகளிலும் பொருந்தி விளங்கிச் சிறப்புத் தருவதும் திருநீறு. புண்ணியத் தன்மை கொண்டதுடன், புண்ணியம் செய்த பெருமக்கள் விரும்பிப் பூசி, மேலும் பொலிவு கொள்வதற்கும் காரணமாவது திருநீறு. செல்வம் மிக்க மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயில் வீற்றிருக்கும் ஈசனார்க்கு உரிய திருநீறு, இத்தகைய சிறப்பினை உடையதாகும்.

715. எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

தெளிவுரை : முப்புரத்தை எரித்தச் சாம்பலாக்கியது திருநீறு; இம்மை, மறுமை ஆகிய இரண்டினுக்கும் உயிர்களுக்குத் துணையாக இருப்பது திருநீறு; நித்தியமாயும் உயர்ந்த பொருளாயும் பயின்று, நுகரும் பொருளாக உடையது நீறு; அது பாக்கியமாக இருந்து விளங்கும் சிறப்புடையது; மாயையின் வயப்பட்டும் சோர்வுற்றும் தடைப்படுத்தும் உறக்க உணர்வினைத் தடுத்துப் புத்துணர்ச்சி தந்து தூய்மைப்படுத்தும் இயல்புடையது. அத்தகைய திருநீறு, கூர்மையான சூலப்படையுடைய திருஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

716. இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே.

தெளிவுரை : இராவணன் திருநீறு அணியப் பெருமையுறச் செய்தது; எண்ணத்தால் தகுதியாக்கிப் போற்றி வழிபடுவதற்கு உரியது திருநீறு;  பராபரனைப் போன்று துதிக்கப்படும் பொருளாக விளங்குவது, பாவத்தைப் போக்குவதும் திருநீறு; தராவணமாக இருப்பது திருநீறு. அது தத்துவமாகவும் விளங்கி நிற்பது. அத்தகையது, அரவம் அணைந்து விளங்கும் திருமேனியராகிய திருஆலவாய் அண்ணலுக்கு உரியதாகிய திருநீறு ஆகும்.

717. மாலொ அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் அறிவதற்கு அரியதாகிய வண்ணத்தை உடையது திருநீறு; விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் தமது மெய்யில் பூசி மகிழ்வது திருநீறு ஆகும்; செம்மையான இத் தேகத்தில் நேரும் இடர்களான பிணி முதலான துன்பத்திலிருந்து காத்து அருள் செய்து, இன்பத்தை அவ்வப் புலன் வழி உயிருக்கு அளிக்கவல்லது இத் திருநீறு; அத்தகைய சிறப்புடைய, நஞ்சினையுண்ட மிடற்றுடைய ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

718. குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்ட்த தவர்பணிந் தேத்தும் ஆலவாயான் திருநீறே.

தெளிவுரை : சமணர்களும், சாக்கியர்களும் திகைக்கும் தகைமையில் காட்சி தருவது திருநீறு; திருநீற்றை நெஞ்சில் பதித்த போதும் இனிமையைத் தரவல்ல அத்தகைய தெய்வீகம் உடையது. எண் திசையில் உள்ள சிவமாகிய மெய்ப் பொருளைச் சரணடைந்த பெருமக்களும் ஏத்தும் சிறப்புடையது திருநீறு; அத்தகையது, தேவர்கள் பணிந்து ஏத்தும் திருஆலவாய் அண்ணலாகிய ஈசனார்க்கும் உரிய திருநீறு.

719. ஆற்றல் அடல்விடையேறும் ஆலாவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

தெளிவுரை : வலிமைமிக்க இடப வாகனத்தில் விளங்குகின்ற ஆலவாய் அண்ணலாரின் திருநீற்றைப் போற்றித் துதித்த ஞானசம்பந்தர், மன்னவனாகிய கூன்பாண்டியனுடைய தீமையான பிணி யாவும் தீரும்வகையில் தேற்றிச் சாற்றிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

203. திருப்பெரும்புலியூர் (அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

720. மண்ணுமோர் பாகம் உடையார்
மாலுமோர் பாகம் உடையார்
விண்ணுமோர் பாகம் உடையார்
வேதம் உடைய விமலர்
கண்ணுமோர் பாகம் உடையார்
கங்கை சடையில் கரந்தார்
பெண்ணுமோர் பாகம் உடையார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசனாரின் அகண்ட திருமேனியில் இப்பூவுலகம் அங்கமாக விளங்கும். திருமாலும், விண்ணுலகமும் வேதமும் பாகம் உடைய அப்பெருமான், மலமற்ற நின்மலராய் விளங்கி, யாவற்றையும் நோக்கி மிளரச் செய்யும் தன்மையுடையவர். அவர், கங்கையைச் சடையில் ஈர்த்து வைத்து, உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டு, பெரும் புலியூரில் பிரிதல் இன்றி வீற்றிருப்பவர்.

721. துன்னு கடற் பவளம்சேர்
தூயன நீண்ட திண்தோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலு(ம்)
மேனியி னாளொரு கங்கைக்
கன்னி களின்புனை யோடு
கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : கடலின் பவளம் போன்று ஒளிரும் தூயகொடி போன்ற மேனியும் உறுதியான தோள்களும் உடைய கங்கையின் கிளைகள் யாவும் பதினாறு கலைகளை உடைய திங்களுடன் சடையில் கலந்து பின்னிய ஈசன் விளங்கும் இடம் பெரும்புலியூர் ஆகும்.

722. கள்ள மதித்த கபாலம்
கைதனி லேமிக ஏந்தித்
துள்ள மிதித்துநின்றாடும்
தொழிலர் எழில் மிகு செல்வர்
வெள்ள நகுதலை மாலை
விரிசடை மேல்மிளிர்கின்ற
பிள்ளை மதிப்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : விஞ்சிய ஆணவமலத்தை அகழ்ந்தெடுக்கும் அருள் வண்ணத்தால் பிரமனது ஒரு தலையைக் கொய்து, அதனைக் கபாலமாகத் திருக்கரத்தில்  ஏந்தித் துள்ளி நின்ற, நடம் பயிலும் தன்மையுடைய எழில்மிகு செல்வராகிய ஈசன், வெண்மையான மண்டை ஓட்டு மாலையணிந்து, விரிந்து தாழும் சடைமுடியின்மேல் மிளிர்கின்ற பிறைச் சந்திரனைச் சூடி, பெரும்புலியூரில் பிரிதல் இன்றி வீற்றிருப்பவர்.

723. ஆடல் இலையம் உடையார்
அருமறை தாங்கி ஆறங்கம்
பாடல் இலையம் உடையார்
பன்மை ஒருமைசெய்து அஞ்சும்
ஊடல் இலையம் உடையார்
யோகுஎனும் பேரொளி தாங்கிப்
பீடல் இலையம் உடையார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசன், நடனக் கலையின் இலயம் (லயம்) உடையவராய், அரியதாகிய நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் ஆகிய கீதமாகிய இசை  வண்ணமும் உடையவர். விரிந்து பரந்து சிதைந்து பலவகைப்பட்ட எல்லையற்றதாயும், யாவும் ஒருங்கச் செய்யுமாறு ஏகமாயும் விளங்கும் அப்பெருமான், ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், நாசி, செவி ஆகியவை ஒன்றுக் கொன்று முரணும் தன்மையில் மேவுபவர். யோகம் என்னும் பேரொளி பரவுமாறு திகழ்ந்தும் அப்பெருமான் பெரும்புலியூரில் பிரிதல் இன்றி வீற்றிருப்பவர்.

724. தோடுடை யார்குழைக் காதிற்
சூடுபொடி யார்அனல் ஆடக்
காடுடை யார் எரி வீசும்
கையுடை யார்கடல் சூழ்ந்த
நாடுடை யார்பொருள் இன்ப
நல்லவை நாளு நயந்த
பீடுடை யார்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசன், ஒரு காதில் தோடும், மற்றொன்றில் குழையும் அணிந்தவர்; திருநீறு பூசியவர்; அனல் வீசும் மயானத்தில் கையில் எரியும் நெருப்பின் ஒளி வீசுமாறு ஆடுகின்றவர்; கடலால் சூழப்பெற்ற இவ்வுலகத்தை உடையவர். அடியவர்களுக்குத் தேவையான பொருளும், இன்பமும் மற்றும் உள்ள நன்மை வாய்ந்தவர். அப்பெருமான் பெரும்புலியூரில் வீற்றிருப்பவர்.

725. கற்றது உறப்பணி செய்து
காண்டும்என் பார்அவர் தங்கண்
முற்றிது அரிதும்என் பார்கண்
முதலியர் வேதபு ராணர்
மற்றிது அறிதுமென் பார்கண்
மனத்திடை யார்பணி செய்யப்
பெற்றி பெரிதும் உகப்பார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசனார்தம் அரிய பெருமைகளை நூல்கள் வாயிலாக கற்று, அவ்வழி நின்று வணங்கிப் பணிகள் ஆற்றி ஒழுகும் அன்பர் தங்கள் வயத்தனாய் மேவும் பரமர், முற்றும் அறிதற்கு அரியவர். அவர், யோக நிலையில் விளங்கும் அன்பர்களுக்கு முதற் பொருளாய்த் தோன்றி காட்சி நல்கும் வேதபுராணர்; நன்கு உணர்ந்த ஞானிகள் மனத்தில் விளங்கி ஒளிர்பவர். திருப்பணிகளும் தொண்டுகளும் ஆற்றும் அடியவர் பெருமக்களைப் பெரிதும் விரும்பும் அப்பெருமான், பெரும்புலியூரில் பிரிதல் இன்றி வீற்றிருப்பவர்.

726. மறையுடை யார்ஒலி பாடல்
மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார்
குழகர் அழகர்நம் செல்வர்
கறையடைய யார்திகழ் கண்டங்
கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேல்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசன், வேதத்தை உடையவர்; புகழ்ப் பாடல்களைத் கூறும் அன்பர்கள் திருவடியைத் தொழுது போற்றி வணங்க, குறைகளைத் தீர்ப்பவர்; அன்புடையவர்; அழகுடையவர்; நம் செல்வர்; கறை பொருந்திய கண்டத்தையுடைய திருநீலகண்டர்; கங்கையைச் சடை முடியில் வைத்தவர்; பிறைச் சந்திரனைச் சூடியவர். அப்பெருமான் பெரும்புகலியூரில் விளங்குபவர்.

727. உறவியும் இன்புறு சீரும்
ஓங்குதல் வீடெளி தாகித்
துறவியும் கூட்டமும் காட்டித்
துன்பமும் இன்பமும் தோற்றி
மறவியம் சிந்தனை மாற்றி
வாழவல் லார்தமக்கு என்றும்
பிறவி யறுக்கும் பிரானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : ஈசன்பால் அன்பின் வயப்பட்ட பக்தி உறவும், இன்பம் உறுகின்ற சிறப்பும் ஓங்கிப் பெருகும் பாங்கானது, வீடுபேறு என்று சொல்லப்படுகின்ற முத்தி இன்பத்தை அடைதற்கு எளிதாக்கும் என்னும் வண்ணத்தால் துறவின் வயப்பட்ட மனமும், அடியவர்கள் திருக்கூட்டத்தின் இணக்கமும் காட்டி யருள்பவன் இறைவன். அந்நிலையில் மனம் பக்குவம் அடையும் வண்ணம் துன்பமும் இன்பமும் தோற்றுவித்து, மறத்தல் என்னும் சிந்தனையை மாற்றி, எக்காலத்திலும் பரமன் சிந்தையே கொள்ளுமாறு புரிபவன் அவனே. அத்தகைய நெறியில் வாழும் பண்பினை உடையவர்களுக்கு, எத்தன்மையாலும் மீண்டும் பிறவாமையைத் தந்தருளும் பெருமான் பெரும்புலியூரில் வீற்றிருப்பவர் ஆவார்.

728. சீருடை யார்அடி யார்கள்
சேடர்ஒப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு
நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார்
தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை :  ஈசன், சிறந்த புகழ் உடையவர்; அடியவர்கள் போற்றும் பெருமையுடையவர்; சடை முடியில் கங்கை தரித்தவர்; திருநீறு பூசி அணியும் திருவுள்ளத்தவர்; கொன்றை மாலை தரித்தவர்; இடப வாகனத்தில் ஊர்ந்து வருபவர்; யவார்க்கும் தலைவர்; திருநாமங்கள் பல உடையவர். அப்பெருமான் பெரும்புலியூரில் வீற்றிருப்பவர்.

729. உரிமை யுடையடி யார்கள்
உள்ளுற உள்கவல் லார்கட்கு
அருமை யுடையன காட்டி
அருள்செயும் ஆதி முதல்வர்
கருமை யுடைநெடு மாலும்
கடிமலர் அண்ணலும் காணாப்
பெருமை யுடைப்பெரு மானார்
பெரும்புலி யூர்பிரி யாரே.

தெளிவுரை : உள்ளத்தால் அடிமை பூண்டு உரிமை பூண்ட அடியவர்கள் நெஞ்சுள் மேவி அருமையுடையவராய் அருள்புரியும் ஆதி முதல்வராகிய ஈசன், திருமாலும் பிரமனும் காணாத பெருமையுடையவர்; அவர் பெரும்புலியூரில் வீற்றிருப்பவர்.

730. பிறைவள ரும்முடிச் சென்னிப்
பெரும்புலி யூர்ப்பெரு மானை
நறைவள ரும்பொழிற காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
மறைவள ருந்தமிழ் மாலை
வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சினர் ஆகி
நீடுல கத்திருப் பாரே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சூடிய சடைமுடியுடைய  பெரும்புலியூரில் வீற்றிருக்கும் பெருமானை, தேன் பெருகும் பொழில் சூழ்ந்த காழியில் விளங்கும் நற்றமிழ் ஞானசம்பந்தர் போற்றி வேதம் நிகர்த்ததாய் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தமது துயர் நீங்கி நிறைவான மகிழ்ச்சி கொண்ட நெஞ்சினராய் இவ்வுலகத்தில் நீண்ட வாழ்நாளைப் பெற்று விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

204. கடம்பூர் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

731. வானமர் திங்களு(ம்) நீரு(ம்)
மருவிய வார்சடை யானைத்
தேனமர் கொன்றையி னானைத்
தேவர் தொழப்படு வானைக்
தேவர் தொழப்படு வதனைக்
கானம ரும்பிணை புல்கிக்
கலைபயி லும்கடம் பூரில்
தானமர் கொள்கையி னானைத்
தாள்தொழ வீடெளி தாமே.

தெளிவுரை : சந்திரனும் கங்கையும் மருவி விளங்கும் நீண்ட சடை முடியுடைய ஈசனை, தேன் பொருந்திய கொன்றை மலர்மாலை தரித்தவனாகிய நாதனை, தேவர்களால் தொழப்படும் பெருமானை, கானில் விளங்கும் பிணையோடு ஆண் மான்கள் பயில்கின்ற கடம்பூரில் வீற்றிருக்கும் பரமனைத் தொழுது வணங்க, வீடு பேறு எளிதில் கைகூடும்.

732. அரவினொடு ஆமையும் பூண்டு
அம்துகில் வேங்கை அதளும்
விரவும் திருமுடி தன்மேல்
வெண்திங்கள் சூடி விரும்பிப்
பரவும் தனிக்கடம் பூரில்
பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய
இன்ப(ம்) நமக்கது வாமே.

தெளிவுரை : அரவத்துடன் ஆமையும் அணிகலனாகப் பூண்டு விளங்குபவர் ஈசன். அவர், அழகிய துகில் கொள்ளும் உமாதேவியாரைப் பாகமாகவும், புலித்தோல் கொள்ளும் தமது இயல்பும் விரவப் பெற்று அர்த்தநாரியாகவும், வெண்திங்களைச் சூடி விளங்குபவர். அப்பெருமான், அடியவர்கள் விரும்பிப் பரவு கடம்பூரில் இடப வாகனத்தையுடையவராய் வீற்றிருப்பவர். அவருடைய திருப்பாதத்தை இரவும் பகலும் பணிந்து ஏத்த, நமக்கு இன்பம் விளையும்.

733. இளிபடும் இன்சொலி னார்கள்
இருங்குழல் மேலிசைந் தேறத்
தெளிபடு கொள்கை கலந்த
தீத்தொழி லார்கடம் பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி
ஒண்ணுத லோடுட னாகிப்
புலியத ளாடை புனைந்தான்
பொற்கழல் போற்றது நாமே.

தெளிவுரை : இனிய பண்போன்ற சொல்லுடைய மங்கையரின் கூந்தல் போன்று, வேள்வித் தீயின் புகையானது விளங்கிப் பரவும் கடம்பூரில், வெண்பிறை சூடி, நெற்றிக் கண்ணுடைய ஈசன் உமாதேவியுடன் இனிது வீற்றிருந்து புலியின் தோலை ஆடையாகப் புனைந்து மேவுபவர். அப்பெருமானுடைய பொன் போன்ற கழலைப் போற்றுவோமாக.

734. பறையொடு சங்கம் இயம்பப்
பல்கொடி சேர்நெடு மாடம்
கறையுடை வேல்வரிக் கண்ணார்
கலையொலி சேர்கடம் பூரில்
மறையொலி கூடிய பாட்ல
மருவிநின்று ஆடல் மகிழும்
பிறையுடை வார்சடை யானைப்
பேணவல் லார்பெரி யோரே.

தெளிவுரை : பறை ஒலியும் சங்கின் ஒலியும் ஆரவாரித்து ஓங்க, பலவகையான வண்ணக் கொடிகளையுடைய நெடிய மாடங்களில், மை முதலான வண்ணங்களைத் தீட்டிய வேல் போன்ற அழகிய கூர்மையான கண்களை உடைய மகளிர் நடனம் புரியும் ஒலி சேரும் கடம்பூரில், வேதம் ஒலிக்க, பாடலுக்கு ஏற்ப ஆடல் புரியும் பிறைசூடிய சடையுடைய ஈசனைப் பெருமக்கள் போற்றுகின்றனர்.

735. தீவிரி யக்கழல் ஆர்ப்பச்
சேயெரி கொண்டிடு காட்டில்
நாவிரி கூந்தல்நற் பேய்கள்
நகைசெய்ய நட்ட நவின்றோன்
காவிரி கொன்றை கலந்த
கண்ணுத லான்கடம் பூரில்
பாவிரி பாடல் பயில்வார்
பழியொடு பாவம் இலாரே.

தெளிவுரை : நெருப்புப் போன்ற சிவந்த சடையானது விரியவும், கழல் ஒலிக்கவும், யாங்கணும் செந்தீயானது பரவி எரியும் இடுகாட்டில் நாக்குகளை நீட்டியும் கூந்தலை விரித்தும் பேய்க் கணங்கள் நகை செய்து மகிழுமாறு நடனம் புரிபவன் சிவபெருமான். அப் பெருமான், சோலைகளில் விளங்கும் கொன்றை மலர் சூடி, நெற்றிக் கண்ணுடையவனாய்க் கடம்பூரில் விளங்க, புகழ்ப் பாடல்களைப் பாடிப் போற்றும் அடியவர்கள், பழியும் பாவமும் அற்றவர்கள் ஆவார்கள்.

736. தண்புனல் நீள்வயல் தோறும்
தாமரை மேலனம் வைகக்
கண்புணர் காவில்வண்டு ஏறக்
கள்ளவி ழுங்கடம் பூரில்
பெண்புனை கூறுடை யானைப்
பின்னு சடைப்பெரு மானைப்
பண்புனை பாடல் பயில்வார்
பாவம் இலாதவர் தாமே.

தெளிவுரை : குளிர்ந்த நீர் விளங்கும் வயல்களில் தாமரை பூத்துத் திகழ, அதன் மீது அன்னப் பறவைகள் வாசம் செய்யவும், கண்களுக்கு இனிய விருந்தாக விளங்கும் சோலையில் வண்டுகள் சுழன்று அமர்ந்து தேன் துளிர்க்கவும் திகழும் கடம்பூரில் வீற்றிருக்கும் உமாதேவியைக் கூறுடைய சடைமுடியுடைய ஈசனை இசையுடன் போற்றிப் பாடுபவர்கள், பாவமற்றவர்கள் ஆவர்.

737. பலிகெழு செம்மலர் சாரப்
பாடலொடு ஆடல் அறாத
கலிகெழு வீதி கலந்த
கார்வயல் சூழ்கடம் பூரில்
ஒலிதிகழ் கங்கை கரந்தான்
ஒண்ணுத லாள்உமை கேள்வன்
புலியதள் ஆடையி னான்றன்
புனைகழல் போற்றல் பொருளே.

தெளிவுரை : பூசைக்குரிய செம்மையான மலர்கள் திகழ்ந்து மல்க, பாடலும் ஆடலும் விளங்கும் ஒலி மிக்க வீதிகளும், மேகம் தவழும் வயல்களும் சூழ்ந்த கடம்பூரில் வீற்றிருக்கும் கங்கையைச் சடை முடியில் தேக்கி வைத்து, புலியின் தோலினை ஆடையாகக் கொண்டு உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ள ஈசனின் திருக்கழலைப் போற்றுதல், பயன் தரும் உண்மையான பொருளாம். இது பிறவி எடுத்ததன் பயன் ஈசன் திருவடியை வணங்குதல் என உணர்த்தப் பெற்றது.

738. பூம்படு கிற்கயல் பாயப்
புள்ளிரி யப்புறங் காட்டில்
காம்படு தோளியர் நாளும்
கண்கவ ரும்கடம் பூரில்
மேம்படு தேவியொர் பாக(ம்)
மேவிஎம் மானென வாழ்த்தித்
தேம்படு மாமலர் தூவித்
திசைதொழத் தீய கெடுமே.

தெளிவுரை : அழகிய நீர்நிலையில் கயல் பாயவும், புள்ளினங்கள் திரிந்து செல்லவும், மூங்கில் போன்ற மெல்லிய தோள்களையுடைய மகளிர் விளங்கும் கடம்பூரில் வீற்றிருக்கும் ஈசனை, உமாதேவியுடன் விளங்கும் பெருமானே என வாழ்த்தி மலர் தூவி அருச்சித்துத் தொழ, தீயன யாவும் கெட்டழிந்து நீங்கும்.

739. திருமரு மார்பில் அவனும்
திகழ்தரு மாமல ரோனும்
இருவரு மாயறி வொண்ணா
எரிஉரு வாகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த
கண்ணுத லான்கடம் பூரில்
மருவிய பாடல் பயில்வார்
வானுல கம்பெறு வாறே.

தெளிவுரை : திருமகளை மார்பில் உடைய திருமாலும், திகழ்ந்து விளங்கும் சிறப்பான வண்ணமலராகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் ஆகிய இருவரும், அறிய முடியாதவாறு தீப்பிழம்பாகிய ஈசன், கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த இராவணன் அழுந்து மாறு திருப்பாதத்தால் அடர்த்த கண்ணுதலான் ஆவார். அவர் கடம்பூரில் வீற்றிருக்க, அவரைப் போற்றிப் பாடுபவர்கள், வானுலக வாழ்வைப் பெறும் பேறுடையவர்கள் ஆவார்கள்.

740. ஆடை தவிர்த்துஅறம் காட்டும்
அவர்களும் அம்துவர் ஆடைச்
சோடைகள் நன்னெறி சொல்லார்
சொல்லினும் சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும்
விகிர்தனம் வேத முதல்வன்
காட தனில்நட மாடும்
கண்ணுத லான்கடம் பூரே.

தெளிவுரை : ஆடைகளைத் தவிர்த்துத் திகம்பரர்களாய் விளங்கி அறநெறியைக் காட்டுபவர்களும், அழகிய துவராடை உடுத்தியவர்களும் ஆகிய புறச் சமயத்தினர் நல்ல நெறிக்குரிய சொற்களைச் சொல்லாதவர்கள். அவ்வாறு சொல்லினும் அவை மெய்ம்மையுடைய ஞானம் ஆகாது. பலவாறாகத் திருவேடங்கள் தாங்கி அருள்புரியும் விகிர்தனாகியும், நம் வேத முதல்வனாகியும், முதுகாட்டில் (மயானம்) ஆடும் ஈசனை, கடம்பூரில் வீற்றிருக்கும் கண்ணுதலானைக் கண்டு தொழுமின்.

741. விடைநவி லுங்கொடி யானை
வெண்கொடி சேர்நெடு மாடம்
கடைநவி லுங்கடம் பூரிற்
காதல னைக்கடற் காழி
நடை நவில் ஞானசம் பந்த(ன்)
நன்மையால் ஏத்திய பத்தும்
படை நவில் பாடல் பயில்வார்
பழியொடு பாவம் இலாரே.

தெளிவுரை : இடபத்தைக் கொடியாக உடைய ஈசன், வெண்மையான வண்ணக் கொடிகள் சேர்மாடங்களையடைய கடம்பூரில் மகிழ்ந்து வீற்றிருப்பவன். அப் பெருமானைக் காழி நகரின் ஞானசம்பந்தர் நன்மை விளங்குமாறு ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், பழியும் பாவமும் அற்றவராய்த் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

205. திருப்பாண்டிக்கொடுமுடி (அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி, ஈரோடு மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

742. பெண்ணமர் மேனியி னாரும்
பிறைபுல்கு செஞ்சடை யாரும்
கண்ணமர் நெற்றியி னாரும்
காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரும்
இமையவர் ஏத்தநின் றாரும்
பண்ணமர் பாடலி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவரும், பிறைச் சந்திரனைச் சூடிய செம்மையான சடையுடையவரும், நெற்றிக் கண் உடையவரும், காதில் குழை அணிந்து விளங்குபவரும் எண்குணத்தையுடையவரும், தேவர்களால் போற்றப்படுபவரும், இசை மேவும் பாடலில் விளங்கும் இறைவரும், பாண்டிக் கொடுமுடியில் வீற்றிருக்கும் ஈசனே ஆவார்.

743. தனைக்கணி மாமலர் கொண்டு
தாள்தொழு வாரவர் தங்கள்
வினைப்பகை யாயின தீர்க்கும்
விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார்
நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : மலர்கொண்டு, திருத்தாளைத் தொழுது போற்றும் அடியவர்களுக்கு, வினையானது பகை கொண்டு தீமை புரியாதவாறு காத்து அருள்புரிபவர் ஈசன். தேவர்களும் வித்தியாதரர்களும் நெஞ்சில் நினைத்துப் போற்ற, துயர் தீர்ப்பவர் அப் பெருமான். அவர், உமாதேவியார் அச்சங் கொள்ளுமாறு, பருத்த துதிக்கையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தி, விளங்கும் பாண்டிக்கொடுமுடியில் மேவும் ஈசனே.

744. சடையமர் கொன்றையி னாரும்
சாந்தவெண் ணீறணிந் தாரும்
புடையமர் பூதத்தி னாரும்
பொறிகிளர் பாம்படைத் தாரும்
விடையம ருங்கொடி யாரும்
வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : பாண்டிக்கொடிமுடியில் வீற்றிருக்கும் ஈசன் சடைமுடியில் கொன்றை மலர் சூடியவர்; மணம் கமழும் திருவெண்ணீறு அணிந்தவர்; பூத கணங்கள் புடைசூழ விளங்குபவர்; படம் விரித்தாடும் பாம்பினை இடுப்பில் கச்சையாகக் கட்டியுள்ளவர்; இடபக் கொடியுடையவர்; ஒளிமிக்க மழுவும், மூன்று இலைகளையுடைய சூலமும் படைக்கலனாகக் கொண்டு விளங்குபவர்.

745. நறைவளர் கொன்றையி னாரு(ம்)
ஞாலமெல் லாம்தொழுது ஏத்தக்
கறைவளர் மாமிடற் றாரும்
காடரங்காக்கனல் ஏந்தி
மறைவலர் பாடலி னோடு
மண்முழ வம்குழல் மொந்தை
பறைவளர் பாடலி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருக்கும் ஈசன், தேன் மணக்கும் கொன்றை மாலை அணிந்தவர்; உலகமெல்லாம் தொழுது போற்றும் வண்ணமாக நஞ்சருந்திய நீலகண்டத்தினர்; சுடுகாட்டினை அரங்கமாகக் கொண்டு நெருப்பினைக் கரத்தில் ஏந்தி, மறை திகழும் பாடலும் மண்ணால் ஆன முழுவதும் குழலும், மொந்தையும் இசைத்து முழங்கப் பறை ஒலிக்கவும் விளங்குபவர்.

746. போகமும் இன்பமும் ஆகிப்
போற்றியென் பார்அவர் தங்கள்
ஆகம் உறைவிட மாக
அமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமும் திங்களும் சூடி
நன்னுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : ஈசன், தனு கரண புவன போகங்களைத் தோற்றுவிப்போனும் பேரின்பமும் ஆகியவன்; போற்றித் தொழுகின்ற அடியவர்கள் தேகத்தைக் கோயிலாகக் கொண்டுள்ளவன். அப்பெருமான் கொன்றை மலரும் நாகமும் சந்திரனும் சூடி, உமாதேவியை ஒரு பாகத்தில் இருத்தி உகந்தவர். அவர் பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருக்கும் பரமன் ஆவார்.

747. கடிபடு கூவிள மத்தம்
கமழ்சடை மேலுடை யாரும்
பொடிபட முப்புரம் செற்ற
பொருசிலை யென்னுடை யாரும்
வடிவுடை மங்கைதன் னோடு
மணம்படு கொள்கையி னாரும்
படிபடு கோலத்தி னாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : நறுமணம் விளங்கும் வில்வம், ஊமத்தம் ஆகியவற்றைக் கமழ்கின்ற சடையின்மேல் தரித்தவராய் முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கிய மேருமலையை வில்லாக உடையவராய்த் திகழ்பவர் ஈசன். அப் பெருமான், வடிவுடைநாயகி என்னும் நாமம் கொண்ட அம்பிகையுடனாகி நன்மணம் பொலிய உலகில் தோன்றி, விளக்கும் எல்லா வடிவிற்கும் காரணமாகி விளங்குகின்ற திருக்கோலத்தை உடையவராகி, பாண்டிக் கொடுமுடியில் வீற்றிருப்பவர்.

748. ஊனமர் வெண்டலை யேந்தி
உண்பலிக் கென்றுழல் வாரும்
தேனம ரும்மொழி மாது
சேர்திரு மேனியி னாரும்
கானமர் மஞ்ஞைகள் ஆலும்
காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணி வாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : பிரம கபாலம் கையில் ஏந்தி, உண்பதற்கு எனப் பிச்சை கொண்டு உழல்கின்ற ஈசன் தேன் போன்ற மொழிபயிலும் உமாதேவியைத் திருமேனியில் பாகங்கொண்டு, சோலைகளில் மயில்கள் ஆடக் காவிரியின் அழகிய கரையின் மீது பால்போன்ற திருவெண்ணீற்றுத் திருமேனியராக விளங்கும் அவர், பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

749. புரந்தரன் தன்னொடு வானோர்
போற்றியென்று ஏத்தநின் றாரும்
பெருந்திறல் வாளரக் கன்னைப்
பேரிடர் செய்துகந் தாரும்
கருந்திரை மாமிடற் றாரும்
காரகில் பன்மணி யுந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : தேவேந்திரன் மற்றும் வானவர்களும் ஈசனைப் போற்றித் துதிக்கின்றனர். அந்நிலையில் ஆற்றல் மிக்க இராவணன் கயிலை மலையை எடுக்க, அவனை அடர்த்த அப்பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் இருத்தித் திருநீலகண்டராய் விளங்கி, கரிய அகில் கட்டைகளும், பலவிதமான மணிகளும் உந்திக் கரையில் சேர்க்கும் காவிரியின் பக்கம் மருவிய பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருப்பவர் ஆவார்.

750. திருமகள் காதலி னானும்
திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமக னும்அவர் காணாப்
பேரழல் ஆகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து
வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : திருமகளின் நாயகனாகிய திருமாலும் பெருமை மிக்க தாமரை மலரின் மீது விளங்கும் பிரமனும் காணாதவாறு பேரழல் ஆகிய ஈசன், மணம் மிகுந்த சந்தன மரங்களை உந்தித் தள்ளிக் கரையில் சேர்க்கும் காவிரியின் பக்கத்தில் மணிகள் கொழிக்கும் நீர்த்துறையின்கண் விளங்கும் பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருப்பவர் ஆவார்.

751. புத்தரும் புந்தியி லாத
சமணரும் பொய்ம்மொழி யல்லால்
மெய்த்தவம் பேசிட மாட்டார்
வேடம் பலபல வற்றால்
சித்தரும் தேவரும் கூடிச்
செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும்
பாண்டிக் கொடுமுடி யாரே.

தெளிவுரை : பௌத்தர்களும் சமணர்களும் பொய்யுரை அன்றி மெய்ம்மைத் தவத்தைப் புகலாதவர் ஆவர். பற்பலவாறு திருக்கோலத்தை உடைய சித்தரும் தேவரும் கூடியும் செழுமையான புதுமலர் கொண்டு தூவிப் போற்றியும் பணிந்து ஏத்தும் பெருமையுடையவர் பாண்டிக்கொடுமுடியில் வீற்றிருக்கும் இறைவன் ஆவார். அவரை வணங்குமின்.

752. கலமல்கு தண்கடல் சூழ்ந்த
காழியுற் ஞானசம் பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்திப்
பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்தும்
சொல்லவல் லார்துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தையு ராகி
நன்னெறி யெய்துவர் தாமே.

தெளிவுரை : மரக்கலங்கள் மல்கிய கடல் சூழ்ந்த சீகாழிப் பதியில் மேவும் ஞானசம்பந்தர், பயன் மிகுந்த பிரம கபாலத்தை ஏந்திய பெருமானாகிய ஈசனின் பாண்டிக்கொடுமுடி என்னும் திருத்தலத்தைச் சொற்களில் சிறப்பான பாடலாகச் சொல்லிய இத்திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள் துயர் நீங்கப் பெறுவார்கள்; நலம் திகழும் சிந்தையுடையவர்களாய் மகிழ்ச்சியுற்றவர்கள் ஆவார்கள்; நன்னெறியாகிய ஞான மார்க்கத்தை அடைந்தவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

206. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

753. பிரமனூர் வேணுபுரம் புகலி
வெங்குருப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னம்
சிரபுரம் புறவம் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சைவயம்
உள்ளிட்டங்கு ஆதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக்
கழுமலம் நாம் பரவும் ஊரே.

தெளிவுரை : பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு பெருநீராக, விளங்கும் கடலில் மிதந்த தோணிபுரம், சிறப்பான பூந்தராய், பொன்னென அழகு மிக்க, சிரபுரம், புறவம், சண்பை, அரன் மகிழ்ந்து பொலியும் குளிர்ச்சி மிகுந்த சீகாழி, கொச்சைவயம் ஆகிய பெயரால் சேர்ந்து ஆதியாக விளங்குகின்ற பரமனுடைய ஊர் பன்னிரண்டு பெயர்களாய் விளங்கும் கழுமலம். அது நாம் பரவி இருக்கின்ற ஊர் ஆகும்.

754. வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு
வெங்குரு வெள்ளத் தோங்கும்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச்
சிரபுரம் புறவம் காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சை
வயம் சண்பை கூரும் செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும்
கழுமலர் நாம் கருது மூரே.

தெளிவுரை : வேணுபுரம், பிரமபுரம், புகலி, பெருமைமிகு, வெங்குரு, பிரளய வெள்ளத்தில் ஓங்கி விளங்கும் தோணிபுரம், பூந்தராய், தூய்மையான தீர்த்த மகிமை உடைய சிரபுரம், புறவம், சீகாழி, வளைந்த ஆறு சூழ்ந்த கொச்சைவயம், சண்பை எனப் பெயர் தாங்கி நுண்மையான செல்வமாகவும் பேரோங்கும் சொல்வமாகவும் உலகத்தவர் ஏத்தும் கழுமலம் நாம் கருதி இருக்கும் ஊர்

755. புகலி சிரபுரம் வேணுபுரம்
சண்பை புறவம் காழி
நிகரில் பிரமபுரம் கொச்சைவய(ம்)
நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குரு வோடு அந்தண்
தராய் அமரர் பெருமாற்கு இன்பம்
பகரு நகர்நல்ல கழுமல நாம்
கைதொழுது பாடும் ஊரே.

தெளிவுரை : புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம், சீகாழி, நிகர் இல்லாத பிரமபுரம், கொச்சைவயம், பிரளய காலத்தில் நீரின் மீது மிதந்த தொன்மையான ஊராகிய தோணிபுரம், அகன்ற தன்மையில் விளங்கும் வெங்குரு, என்னும் பெயர்களுடன் குளிர்ச்சி பொருந்திய பூந்தராய், தேவர் பெருமானாகிய ஈசனுக்கு விருப்பத்தைத் தரும் பக்தியில் சிறந்தோங்கும் நகராகிய நல்ல கழுமலம், நாம் கைதொழுது பாடிப் போற்றும் ஊர்.

756. வெங்குருத் தண்புகலி வேணுபுரம்
சண்பை வெள்ளம் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய்
தொகுபிரம புரம் தொல் காழி
தங்கு பொழிற் புறவம் கொச்சை
வயந்தலைபண்டு ஆண்ட மூதூர்
கங்கை சடைமுடிமேல் ஏற்றான்
கழுமலம் நாம் கருதும் ஊரே.

தெளிவுரை : வெங்குரு, புகலி, வேணுபுரம், சண்பை, பிரளயகால வெள்ளத்தில் மிதந்து ஒளிரும் தோணிபுரம், பூந்தராய், பிரமபுரம், சீகாழி, பொழில் சூழ்ந்து விளங்கும் புறவம், கொச்சைவயம், பிரமனது சிரத்தைக் கொண்ட மூதராகிய சிரபுரம், எனக் கொண்டு விளங்கும் கங்கை தரித்த சடை முடியுடைய ஈசனின் கழுமலம், நாம் கருதும் ஊர்.

757. தொன்னீரிற் றோணிபுரம் புகலி
வெங்குருத் துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரந் தராய்
பிரமனூர் எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவம் கொச்சை
வயம்சிலம்ப னகரா நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண்
கழுமலம் நாம் புகழும் ஊரே.

தெளிவுரை : பழைமையாய்ப் பிரளயகாலத்தில் மிதந்த  தோணிபுரம், புகலி, வெங்குரு, மன்னுயிர்களின் துயர் தீர்க்கும் சீகாழி, இனிய பாங்குடைய வேணுபுரம், பூந்தராய், பிரமபுரம், எழில் மிகுந்த சண்பை, நன்மைகள் பொலியும் அழகிய புறவம், கொச்சைவயம், சிரபுரம் எனவாகி நல்ல பொன் வண்ணத்தில் மிளிரும் சடை உடைய நாதனின் கழுமலம் நாம் புகழ்கின்ற நமது ஊர்.

758. தண்ணந் தராய்புகலி தாமரையான்
ஊர்சண்பை தலைமுன் ஆண்ட
வண்ண னகர்கொச்சை வயந்தண்
புறவம்சீர் அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குரு நல் வேணுபுரம்
தோணிபுர மேலால் ஏந்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாம்
கைதொழுது கருதும் ஊரே.

தெளிவுரை : குளிர்ச்சியான பூந்தராய், புகலி, பிரமபுரம், சண்பை, சிரபுரம், கொச்சைவயம், புறவம், சீகாழி, தேவலோகத்தின் சீருடைய வெங்குரு, வேணுபுரம், தோணிபுரம் என மேன்மையாய் விளங்கும் கண்ணுதலானின் நல்ல கழுமலம், நாம் தொழுது கருதும் ஊர்.

759. சீரார் சிரபுரமும் கொச்சைவயம்
சண்பையொடு புறவ நல்ல
ஆராத் தராய்பிரம னூர்புகலி
வெங்குருவொடு அந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந்
தோணிபுரம் என்றென்று உள்கிப்
பேரான் நெடியவனு(ம்) நான்முகனும்
காண்பரிய பெருமான் ஊரே.

தெளிவுரை : சீர் பொருந்திய சிரபுரம், கொச்சைவயம், சண்பை, புறவம், நல்லவை எஞ்ஞான்றும் குறைவின்றி விளங்கும் பூந்தராய், பிரமபுரம், புகலி, வெங்குரு, அழகிய சீகாழி, சிறப்பான கழுமலம், வேணுபுரம், தோணிபுரம் என எக் காலத்திலும் நினைத்து ஏத்தப் போற்றும் பெருமையுடைய திருமாலும் பிரமனும் காண்பரிய ஈசன் கோயில் கொண்டு விளங்கும் ஊர் ஆகும்.

760. புறவம் சிரபுரமும் தோணிபுரம்
சண்பைமிகு புகலி காழி
நறவ மிகு சோலைக் கொச்சை
வயந்தராய் நான்மு கன்றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம்
விசயன் மேலம்பு எய்து
திறலால் அரக்கனைச் செற்றான்றன்
கழுமலம் நாம் சேரும் ஊரே.

தெளிவுரை : புறவம், சிரபுரம், தோணிபுரம், சண்பை, புகலி, சீகாழி, தேன் மணக்கும் சோலை சூழ்ந்த கொச்சை வயம், பூந்தராய், பிரமபுரம், அருளாற்றல் வாய்ந்த வெங்குரு, வேணுபுரம் எனப் பெயர் தாங்கி, அர்ச்சுனனைப் பொருது அருள் செய்தும், இராவணனை நெரியுமாறு, எண்குணங்களில் ஒன்றாகிய முடிவில் ஆற்றல் உடைமை என்னும் தன்மையால், அடர்த்த ஈசன் விளங்கும் கழுமலம் நாம் சேர்ந்து மேவும் ஊர்.

761. சண்பை பிரமபுரம் தண்புகலி
வெங்குருநற் காழி சாயாப்
பண்பார் சிரபுரமும் கொச்சை
வயந்தராய் புறவம் பார்மேல்
நண்பார் கழுமலம்சீர் வேணுபுரம்
தோணிபுர(ம்) நாணி லாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை
வியப்பழித்த விமலன் ஊரே.

தெளிவுரை : சண்பை, பிரமபுரம், புகலி, வெங்குரு, சீகாழி, குறைவற்ற பண்புடைய சிரபுரம், கொச்சைவயம், பூந்தராய், புறவம், மண்ணுலகில் மன்னுயிர்களுக்கு நண்பு பூண்டு நன்மை செய்ய வல்ல கழுமலம், சிறப்புடைய வேணுபுரம், தோணிபுரம் என்ப பயர் வழங்கி நிற்க, சமணர் சாக்கியர் தம் பெருமை குறையுமாறு அருள்புரியும் ஈசன் விளங்குகின்ற ஊர், எமது ஊராகும்.

762. செழுசலிய பூங்காழி புறவம்
சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய
கொழுமலரான் நன்னகரம் தோணிபுரம்
கெச்சைவயம் சண்பை யாய
விழுமியசீர் வெங்குருவொடு ஓங்குதராய்
வேணுபுர மிகுநன் மாடக்
கழுமலம் என்று இன்னபெயர் பன்னிரண்டும்
கண்ணுதலான் கருதும் ஊரே.

தெளிவுரை : செழுமை மிகுந்த சீகாழி, புறவம், சிரபுரம், சிறப்பான புகலி, பிரமபுரம், தோணிபுரம், கொச்சை வயம், சண்பை, மேலோங்கும் சீருடைய வெங்குரு, ஓங்குயரும் பூந்தராய், வேணுபுரம் நல்ல மாடங்கள் கொண்ட கழுமலம் எனப் பன்னிரண்டு பெயர்கள் கொண்டு விளங்கும் ஊர் நெற்றியில் கண்ணுடைய ஈசன் கருதும் ஊர். அதுவே நாம் விளங்கும் ஊராகும்.

763. கொச்சை வயம்பிரம னூர்புகலி
வெங்குருப் புறவங் காழி
நிச்சல் விழவோவா நீடார்
சிரபுர நீள் சண்பை மூதூர்
நச்சினிய பூந்தராய் வேணுபுரந்
தோணிபுர மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான்
கழுமலம் நாம் அமரும் ஊரே.

தெளிவுரை : கொச்சைவயம், பிரமபுரம், புகலி, வெங்குரு, புறவம், சீகாழி, நாள்தோறும் விழாப் பொலிவு ஓயாது விளங்கும் பழைமையான சிரபுரம், சண்பை, விரும்புவதற்கு இனிமையான பூந்தராய் வேணுபுரம், தோணிபுரம் எனவாகி நம்மீது வினைவழி நேரும் பிணி, மூப்பு, இறப்பு, பிறப்பு முதலான அச்சங்களைத் தீர்த்துப் பேரின்பத்தை நல்கி அருளும் பெருமானாகிய ஈசன் வீற்றிருக்கும் கழுமலம் நாம் இருக்கும் ஊர் ஆகும்.

764. காவி மலர்புரையும் கண்ணார்
கழுமலத்தின் பெயரை நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப்
பத்தமையால் பனுவல் மாலை
நாவில்நலம் புகழ்சீர் நான்மறையான்
ஞானசம் பந்தன் சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில்
எண்ணுதலை விருப்பு ளாரே.

தெளிவுரை : கருங்குவளை மலர்கள் விளங்குகின்ற தண்மை சூழ்ந்த கழுமலத்தின் பெயரைப் பன்னிரண்டு என்னும் சிறப்புடையதாகப் பரவிய இப்பாடல்களைப் பக்தியுடன் பரவி ஏத்தி, நான்மறையாளனாகிய ஞானசம்பந்தர் சொன்ன வழி, இசையுடன் ஓதுபவர்கள் தேவர்களுக்கு இணையாவார்கள்.

திருச்சிற்றம்பலம்

207. திருக்குறும்பலா (குற்றாலம்) (அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

765. திருந்த மதிசூடித் தெண்ணீர்
சடைக்கரந்து தேவி பாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற்
காடுறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம்வினவில் ஏலங்கமழ்
சோலையின் வண்டு யாழ்செய்
குருந்த மணநாறும் குன்றிடம்சூழ்
தண்சாரற் குறும்ப லாவே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைப் பொருந்துமாறு சூடி, தெளிந்த நீராகிய கங்கையைச் சடைமுடியில் கரந்து, உமாதேவியைப் பாகமாகத் திருமேனியில் கொண்டு , இடுகாட்டில் இருக்கத் தகுந்த திருவேடத்தைக் கொள்ளாதவராகி விளங்கும் செல்வர் வீற்றிருந்து இடம் யாது என வினவில், நறுமணம் கமழும் சோலையில் வண்டுகள் யாழ் போன்று இமையெழுப்ப, குருந்த மலர்கள் நல்மணம் பரப்ப, குன்றின்பால், சூழ்ந்த குளிர்ச்சியான சாரலில் திகழும் குறும்பலா என்னும் தலம் ஆகும்.

766. நாட்பலவும் சேர்மதியும் சூடிப்
பொடியணிந்த நம்பான் நம்மை
ஆட்பலவும் தானுடைய அம்மான்
இடம்போலும் அந்தண் சாரல்
கீட்பலவும் கீண்டு கிளை கிளையன்
மந்திபாய்ந்த உண்டு விண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவன்
உண்டு உகளும் குறும்ப லாவே.

தெளிவுரை : சந்திரனைச் சடையின் மீது சூடி, திருவெண்ணீறு பூசி அணிந்து மேவும் நம்பன், நம்மை ஆட்கொண்டு விளங்கும் ஈசன், அப் பெருமான் திகழும் இடம், அழகிய சாரலில் பெண் குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிச் செல்லவும், வளைந்த கிளைகளில் உள்ள பலாவின் சுவை மிகுந்த கனியை உண்டு குதிக்கும் ஆண் குரங்குகளும் உள்ள குறும்பலா போலும்.

767. வாடல்தலைமாலை சூடிப்
புலித்தோல் வலித்து வீக்கி
ஆடல் அரவசைத்த அம்மான்
இடம் போலும் அந்தண் சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்தத்
தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக்
கோடல் மணங்கமழும் குன்றிடம் சூழ்
தண்சாரற் குறும்ப லாவே.

தெளிவுரை : மண்டை ஓடுகளை மாலையாகக் கோர்த்து சூடி, புலித்தோலை அழுத்திக் கட்டி ஆடுகின்ற பாம்பினையும் கட்டியுள்ள ஈசன் வீற்றிருக்கும் இடம், அழகிய சாரலில் பாடும் பெண்வண்டு, மலர்களை நன்கு விரியச் செய்ய, நன்கு விரிந்து மகரந்தப்பொடிகள் சிந்தவும், பசும் பொன்னும் உந்தித் தள்ளி, வெண்காந்தள் மலரின் நறுமணத்துடன் குன்று சூழ்ந்து விளங்கும் குளிர்ந்த அருவி சூழ்ந்த குறும்பலா போலும்.

768. பால்வெண் மதிசூடிப் பாகத்தோர்
பெண்கலந்து பாடி யாடிக்
காலன் உடல் கிழியக் காய்ந்தார்
இடம் போலும் கல்சூழ் வெற்பில்
நீல மலர்க் குவளை கண்டிறக்க
வண்டுஅரற்று நெடுந்தண்சாரல்
கோல மடமஞ்சை பேடையொடு
ஆட்டயரும் குறும்ப லாவே.

தெளிவுரை : பால்போன்ற வெண்மையான சந்திரனைச் சூடி, உமாதேவியை ஒரு பாகத்தில் சேர்த்துப் பாடியும் நடனம் புரிந்தும், கூற்றுவனுடைய உடலைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்த ஈசன் விளங்குகின்ற இடமானது, கற்கள் சூழ்ந்த மலையில் கருங்குவளை மலர்கள் மலர்ந்து விளங்க, வண்டுகள் ஒலித்துப் பாடும் நெடிய குளிர்ந்தசாரலில் அழகிய மயில்கள் தன் பெண் மயில்களுடன் ஆடல் புரியும் குறும்பலா போலும்.

769. தலைவான் மதியம் கதிர்விரியத்
தண்புனலைத் தாங்கித்தேவி
முலைபாகங் காதலித்த மூர்ததி
இடம் போலு(ம்) முதுவேய்சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன்
கொழித்திழியு மல்கு சாரல்
குலைவாழைத் தீங்கனியு மாங்கனியும்
தேன்பிலிற்றும் குறும்ப லாவே.

தெளிவுரை : மேலான வானத்தில் விளங்கும் சந்திரனின் குளிர்ந்த கதிர்கள், விரியவும், கங்கை விளங்கவும், முடியில் தாங்கி, உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பி ஏற்ற மூர்த்தி விளங்குகின்ற இடம், முதிர்ந்த மூங்கில்கள் சூழ்ந்த மலைப் பகுதியில் நீர் சொரியப் பசும்பொன் கொழிக்கும் அருவிகள் மல்கி வீழும் சாரலில் கலை வாழையும் மாங்கனியும் தேன் பெருக ஓங்கும் குறும்பலா போலும்.

770. நீற்றே துரைந்திலங்கு வெண்ணூலர்
தண்மதியர் நெற்றிக் கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தார்
இடம்போலும் குளிர்சூழ் வெற்பில்
ஏற்றேனம் ஏனம் இவையோடு
அவை விரவி இழிபூஞ் சாரல்
கோற்றேன் இசைமுரலக் கேளாக்
குயில் பயிலும் குறும்ப லாவே.

தெளிவுரை : ஈசன், திருநீறு நன்கு பொருந்தி விளங்க அணிந்தவர்; முப்புரி நூல் தரித்தவர்; குளிர்ந்த சந்திரனைச் சூடியவர்; நெற்றியில் அக்கினியைக் கண்ணாக உடையவர். கூற்றுவனின் கொட்டம் சிதைந்து அழியுமாறு உதைத்து மாளச் செய்தவர். அப் பெருமான் விளங்கும் இடம், ஆண் பன்றியும், பெண் பன்றியும் திரிந்து பூஞ்சாரலில் இருக்க, தேன் வண்டினங்கள் இசையெழுப்ப, அவ்வினிய இசை கேட்டுக் குயில்கள் இசைபாடும் குறும்பலா போலும்.

771. பொன்தொத்த கொன்றையும் பிள்ளை
மதியும் புனலும்சூடிப்
பின்தொத்த வார்சடையெம் பெம்மான்
இடம்போலும் பிலயம்தாங்கி
மன்றத்து மண்முழவம் ஓங்கி
மணி கொழித்து வயிரம் உந்திக்
குன்றத்து அருவி அயலே
புனல்ததும்பும் குறும்ப லாவே.

தெளிவுரை : பொன்னை ஒத்த கொன்றை மலரும் இளமையான சந்திரனும் கங்கையும் சூடிய சடையுடைய ஈசன். பிரளய காலத்திலும் அழியாது நிலைபெற்று விளங்கும் மலையில், முழவம் போன்ற ஒலியும், மாணிக்கமும் வயிரமும் உந்திக் கொழிக்கும் அருவியும் திகழும் குறும்பலா போலும், பிலயம் தாங்கி  பிரளயக் காலத்தில் நிலைத்து விளங்கும் குற்றாலம் என்னும் தலபுராணச் சிறப்பு இவண் உணர்த்தப் பெற்றது.

772. ஏந்து திணி திண்டோள் இராவணனை
மால்வரைக்கீழ் அடரவூன்றிச்
சாந்தமென நீறணிந்த சைவர்
இடம்போலும் சாரற்சாரல்
பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து
மத்தகத்திற் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியும் களிறும்
உடன் வணங்கும் குறும்பலாவே.

தெளிவுரை : கயிலை மலையை ஏந்திய உறுதியான தோள்களை உடைய இராவணனை, அப் பெரிய மலையின்கீழ் அடர்த்துத் திருப்பாத மலரால் ஊன்றி, அழகும் அமைதியும் தரவல்லது என்னும் சிறப்புடைய திருவெண்ணீறு அணிந்த சைவர்  ஈசன் வீற்றிருக்கும் இடமானது, மழைச் சாரலில் அழகிய மணம் மிக்க வேங்கை மலரின் பூங்கொத்துக்களை முறித்து, மத்தகத்தில் விளங்குமாறு ஏந்தி பெண் யானையும் ஆண் யானையும் வணங்குகின்ற குறும்பலா போலும்.

773. அரவின் அணையானு நான்முகனும்
காண்பரிய அண்ணல் சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க்கு
இடம்போலும் விரிபூஞ்சரால்
மரவம் இருகரையு மல்லிகையும்
சண்பகமு  மலர்ந்து மாந்தக்
குரவ முறுவல்செய்யும் குன்றிடம் சூழ்
தண்சாரற் குறும்ப லாவே.

தெளிவுரை : பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் காணுதற்கு அரிய அண்ணலாகி, சடைமுடியில் சந்திரனைச் சூடும் ஈசனுக்கு இடமாவது, விரிந்து மலர்ந்த பூக்கள் விளங்கும் சாரலில் மரவம், மல்லிகை, சண்பகம், குரவம் ஆகிய மலர்கள் திகழக் குன்று சூழ்ந்த குளிர்ந்த நீர் நிலை உடைய குறும்பலா போலும்.

774. மூடிய சீவரத்தர் முன்கூறுண்டு
ஏறுதலும் பின்கூ றுண்டு
காடி தொடு சமணைக் காய்ந்தார்
இடம் போலும் கல்சூழ் வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவ
னீள்கழைமேல் நிருத்தம் செய்யக்
கூடிய வேடுவர்கள் குய்விளியாக்
கைமறிக்கும் குறும்ப லாவே.

தெளிவுரை : துவராடை நன்கு அணிந்த சாக்கியர்களும் மற்றும் சமணர்களும் தம் கொள்கை ஈடேறாதவாறு செய்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, கற்களால் சூழப் பெற்ற மலையில் நீண்டு உயர்ந்த மூங்கில் வளைந்து இருக்குமாறு பாயும் ஆண் குரங்கு, அதன்மீது ஏறிக் கூத்து ஆட அங்கு உள்ள வேடுவமக்கள் குய்ய் என்ற ஒலியை எழுப்புமாறு கைகளை வாயின் கண்கொண்டு செல்கின்ற குறும்பலா போலும்.

775. கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா
மேவிய கொல்லேற் றண்ணல்
நம்பான் அடிபரவு நான்மறையான்
ஞானசம் பந்தன் சொன்ன
இன்பாய பாடல் இரை பத்தும்
வல்லார் விரும்பிக் கேட்பார்
தம்பால தீவினைகள் போயகல
நல்வினைகள் தளரா அன்றே.

தெளிவுரை : பூஞ்சோலைகள் கொண்டு விளங்கும் குறும்பலா என்னும் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இடப வாகனத்தையுடைய அண்ணலாகிய ஈசன் திருவடியைப் பரவும் நான்மறைவல்ல ஞானசம்பந்தர் சொல்ல, பேரின்பம் நல்கும் இத் திருப்பதிகத்தை ஓதுபவர்களும், சொல்லக் கேட்டு மகிழும் அன்பர்களும், தம்பால் உள்ள தீய வினைகள் யாவும் விலகிச் செல்ல, நல்வினைகள் பெருகப் பெற்றவர்கள்.

திருச்சிற்றம்பலம்

208. திருநணா (அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி,ஈரோடு மாவட்டம்)

776. பந்தார் விரல்மடவாள் பாகமா
நாகம்பூண்டு ஏறது ஏறி
அந்தார் அரவணிந்த அம்மான்
இடம்போலும் அந்தண்
வந்தார் மடமந்தி கூத்தாவ
வார்யாழில் வண்டு பாடச்
செந்தேன் தெளியொளிரத் தேசமாங்
கனியுதிர்க்கும் திருநணாவே.

தெளிவுரை : பந்து பொருந்தும் அழகிய விரல்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, நாகத்தை ஆபரணமாகக் பூண்டு, இடப வாகனத்தில் ஏறி, அழகிய மாலையாக, அரவத்தை அணிந்து விளங்கும் ஈசன் வீற்றீருக்கும் இடமானது, அழகிய குளிர்ச்சி பொருந்திய சாரலில் வந்த குரங்குகள் கூத்து ஆட, நீண்டபொழிலில் வண்டு பாட, செம்மையான தேன் துளிர்த்துப் பெருகச் சுவை மிகுந்த கனி நன்கு பழுத்துத் தானாகவே உதிரும் திருநணா என்னும் தலம் போலும்.

777. நாட்டம் பொலிந்திலங்கு நெற்றினான்
மற்றொருகை வீணை யேந்தி
ஈட்டும் துயர்அறுக்கும் எம்மான்
இடம்போலும் இலைசூழ்கானில்
ஓட்டந் தரும்அருவி வீழும்
விடை காட்ட முந்தூழ் ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும்
திரைசேர்க்கும் திருநணாவே.

தெளிவுரை : ஈசன், நெற்றியில் பொலிந்து விளங்கும் கண்ணுடையவன்; வீணையைக் கரத்தேந்தி மீட்டும் இனியவன்; மன்னுயிர் ஈட்டிச் சேர்க்கும் வினையின் வழி நேரக்கூடிய துன்பத்தைத் தீர்ப்பவன். அத்தகைய தலைவனாகிய ஈசன் விளங்குகின்ற இடமானது, இலைகள் அடர்த்தியாக விளங்கும் சோலைகள் மலிந்த காட்டில், மலைப் பகுதியிலிருந்து வேகமாக விழும் அருவியின் ஓசையும் மூங்கிலில் இருந்து முத்து மணிகள் அடித்துக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் சிறப்பும் உடைய திருநணா போலும்.

778. நன்றாங்கு இசைமொழிந்து
நன்னுதலான் பாகமாய் ஞாலமேத்த
மின்தாங்கு செஞ்சடையெம் விகிர்தர்க்கு
இடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்திரைகள் மோத
மயிலாலும் சாரற் செவ்வி
சென்றோங்கி வானவர்கள் ஏத்தி
அடிபணியும் திருந ணாவே.

தெளிவுரை : நன்மையும் நன்னெறியும் துலங்குமாறு சாம வேதம் முதலான நான்கு வேதங்களையும் கொண்டு விளங்கி, உலகத்திளுள்ளோர் ஏத்தி வணங்குமாறு, மின்னல் போன்ற செஞ்சடையுடைய விகிர்தனாகிய ஈசருக்கும் உரிய இடமாவது, நறுமணம் கமழும் மலையில் குன்று போல் உயர்ந்த வலிமையான அலைகள் மோத, மயில்கள் தோகை விரித்து ஆடும் சாரலில் செவ்வையுடன் சென்று வானவர்கள் ஏத்தித் திருவடியைப் பணியும் திருநணா போலும்.

779. கையில் மழுவேந்திக் காலிற்
சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க்கு
இடம்போலு(ம்) மிடைந்து வானோர்
ஐயவரனே பெருமான்
அருளென் றென்று ஆதரிக்கச்
செய்ய கமலம் பொழிதேன்
அளித்தியலும் திரு நணாவே.

தெளிவுரை : திருக்கரத்தில் மழுப்படை ஏந்தி, திருப்பாதத்தில் சிலம்பு அணிந்து, யானையின் தோலை முழுமையாகத் திருமேனியில் போர்த்து மேவும் விகிர்தருக்கு இடம் என்பது, வானவர்கள் நெருங்கி வந்து, ஐயனே ! அரனே ! பெருமானே ! அருள்வாயாக என்று விரும்பி ஏத்த, செந்தாமரையிலிருந்தும், பொழிலில் இருந்தும் தேன் பெருகித் திகழும் திருநணா என்னும் பதியாகும்.

780. முத்தேர் நகையான் இடமாகத்
தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
தொத்தேர் மலர்சடையில் வைத்தார்
இடம்போலும் சோலை சூழ்ந்த
அத்தேன் அளியுண் களியால்
இசைமுரல ஆலத் தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார்
வினைகெடுக்கும் திரு நணாவே.

தெளிவுரை : முத்துப் போன்ற பற்கள் கொண்ட உமா தேவியை இடப் பாகத்தில் கொண்டு, திருமார்பில் முப்புரி நூல் பூண்டு, கொத்தாகப் பூக்கும் கொன்றை மலரைச் சடையில் வைத்த ஈசன் வீற்றிருக்கும் இடமானது, தேனை உண்ட களிப்பால் வண்டு இசை பாட விளங்கி, மன்னுயிரின் தீவினையைத் தீர்க்கும் திருநணா போலும்.

781. வில்லார் வரையாக மாநாக
நாணாக வேடம் கொண்டு
புல்லார் புரமூன்று எரித்தார்க்கு
இடம்போலும் புலியும்மானும்
அல்லாத சாதிகளும் அங்கழல்மேற்
கைகூப்ப அடியார் கூடிச்
செல்லா அருநெறிக்கே செல்ல
அருள்புரியும் திருந ணாவே.

தெளிவுரை : மேரு மலையை வில்லாகக் கொண்டு வாசுகி என்னும் பாம்பினை நாணாகவும் கொண்டு திருக்கோலம் தாங்கிப் புன்மையான முப்புரத்தின் அசுரர்களை எரித்த ஈசனார்க்கு உரிய இடமாவது புலியும் மானும் பகைமை நீங்கியும், மற்றும் அந்நெறியில் இல்லாத மற்ற விலங்கினங்கள் திருவடியைத் தொழுது வணங்கவும், அடியவர்கள் இறைவனை வணங்கச் செல்லும் பாதையில் குறுக்கீடு நேர்தல் அவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் என்று கருதி வேறு பாதையினை வகுத்துக்கொள்ளும் விலங்கினங்களும் உடைய திருநணா போலும்.

782. கானார் களிற் றுரிவை மேல்மூடி
ஆடரவொன்று அரைமேற் சாத்தி
ஊனார் தலையோட்டில் ஊணுகந்தான்
தானுகந்த கோயில் எங்கும்
நானா விதத்தால் விரதிகள்நல்
நாமமே ஏத்தி வாழ்த்தத்
தேனார் மலர்கொண்ட அடியார்
அடிவணங்கும் திருந ணாவே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்தத் திருமேனியில் போர்த்து, ஆடுகின்ற அரவத்தை அரையில் கட்டி, பிரம கபாலம் ஏந்திப் பலியேற்று உணவைக் கொண்டு மகிழ்ந்த ஈசன் வீற்றிருக்கும் கோயிலானது, எல்லா இடங்களிலும் பலவாறு விரதங்களை மேற்கொள்ளும் அன்பர்கள் திருநாமங்களைப் பக்தியுடன் ஏத்தி வாழ்த்தவும் அடியவர்கள் மலர் கொண்டு போற்றித் திருவடி வணங்குகின்ற திருநணா என்னும் பதியாகும்.

783. மன்னீர் இலங்கையர்தம் கோமான்
வலிதொலைய விரலால் ஊன்றி
முந்நீர்க் கடல்நஞ்சை உண்டார்க்கு
இடம் போலு(ம்) முனைசேர் சீயம்
அன்னீர் மைகுன்றி அழலால்
விழிகுறைய வழியு முன்றில்
செந்நீர் பரப்பச் சிறந்து
கரியொளிக்கும் திருந ணாவே.

தெளிவுரை : இலங்கையின் கோனாகிய இராவணனுடைய வன்மை அழியுமாறு, திருப்பாத மலரால் ஊன்றி, கடலில் தோன்றிய நஞ்சினை அருந்திய ஈசன் வீற்றிருக்கின்ற இடமானது, சிங்கத்தின் விலங்குத் தன்மை குறையவும் யானையின் சேவைத் தன்மை ஒளிரவும் உள்ள திருநணாவாகும்.

784. மையார் மணிமிடறன் மங்கையோர்
பங்குடையான் மனைகள் தோறும்
கையார் பலியேற்ற கள்வன்
இடம்போலும் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி
அளந்தானும் போற்ற ளன்னிச்
செய்யார் எரியாம் உருவம்
உறவணங்கும் திருந ணாவே.

தெளிவுரை : ஈசன், திருநீலகண்டம் உடையவன்; உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்; பிரம கபாலம் ஏந்தி மனைகள்தோறும் பலியேந்திய பெருமானாய்ச் சென்று முனிபத்தினிகள் நெஞ்சில் நின்றவன். அப் பெருமான் வீற்றிருக்கும் இடம் என்பது, பிரமனும் திருமாலும் காணுதற்கு அரியவனாய் நின்று, பின்னர் சோதிப் பிழம்பாய் உருவம் கொண்டு விளங்கி நிற்க வணங்கும் திருநணா ஆகும்.

785. ஆடை ஒழித்தங்கு அமணே
திரிந்துண்பார் அல்லல் பேசி
மூடும் உருவம் உகந்தார் உரை
அகற்று மூர்த்தி கோயில்
ஓடு நதி சேரு(ம்) நித்திலமு(ம்)
மொய்த்தகிலும் கரையிற்சாரச்
சேடர் சிறந் தேத்தத் தோன்றி
ஒளிபெருகும் திருந ணாவே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் பொருந்தாத உரைகளை அகற்றி, மேவும் மூர்த்தியாகிய ஈசன் விளங்கும் கோயிலானது, ஓடுகின்ற ஆற்றிலிருந்து முத்துக்களும், அகில் மரங்களும் கரையில் சார, பெருமை மிக்க சிவஞானிகள் போற்றிப் புகழொளி பெருகும் திருநணா என்னும் பதியாகும்.

786. கல்வித் தகத்தால் திரைசூழ்
கடற்காழிக் கவுணிசீரார்
நல்வித் தகத்தால் இனிதுணரு
ஞானசம் பந்தன் எண்ணும்
சொல்வித் தகத்தால் இறைவன்
திரு நணா ஏத்து பாடல்
வல்வித் தகத்தால் மொழிவார்
பழியிலர்இம் மண்ணின் மேலே.

தெளிவுரை : உறுதி பயக்கும் பெருமையால் விளங்குகின்ற சூழ்ந்த கடல் நகராகிய சீகாழியில் கவுணியர் சீர் மரபில் நல்ல ஞானத்தால் இனிது உணர்ந்த ஞானசம்பந்தர், கருதி மொழிந்த சொற் பெருமையினால் ஈசனின் திருநணா என்னும் தலத்தை ஏத்திய இத்திருப்பதிகத்தை உறுதி பூண்ட அன்பினால் மொழிய வல்லவர்கள், இப் பூவுலகில் எத்தகைய பழிக்கும் ஆளாக மாட்டார்கள்.

திருச்சிற்றம்பலம்

209. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

787. விளங்கிய சீர்ப் பிரமனூர் வேணுபுரம்
புகலிவெங் குருமேற் சோலை
வளங்கவரும் தோணிபுரம் பூந்தராய்
சிரபுரம்வண் புறவமண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயம்
கொச்சைகழு மலமென்றின்ன
இளங்குமரன் றன்னைப் பெற் றிமையவர்தம்
பகையெரிவித்த இறைவ னூரே.

தெளிவுரை : பெருமையுடன் விளங்கும் பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, சோலை வளம் பெருகும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், களங்கமில்லாத சண்பை, சீகாழி, கொச்சைவயம், கழுமலர் எனப் பெயர்கள் தாங்கிய ஊரில், குமாரக் கடவுளைத் தோற்றுவித்துத் தேவர்களுடைய பகைவராகிய அசுரர்களை வாட்டிய இறைவன் வீற்றிருக்கின்றார்.

788. திருவளரும் கழுமலமே கொச்சை
தேவேந்திரனூர் அயனூர் தெய்வத்
தருவளரும் பொழிற்புறவம் சிலம்பனூர்
காழிதகு சண்பை யொண்பா
உருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்
தோணிபுரம் உயர்ந்த தேவர்
வெருவ வளர் கடல்விடமது உண்டணிகொள்
கண்டத் தோன் விரும்பும் ஊரே.

தெளிவுரை : செல்வம் வளரும் கழுமலம், கொச்சை வயம், வேணுபுரம், பிரமபுரம், புறவம், சிரபுரம், சீகாழி, சண்பை, வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம் எனப் பெயர்கள் தாங்கிய ஊர், தேவர்கள் வெருவி அஞ்ச, கடல் விடத்தை உட்கொண்டு நீலகண்டனாக விளங்கும் ஈசன் விரும்புகின்ற ஊர் ஆகும்.

789. வாய்ந்தபுகழ் மறைவளரும் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் வாழூர்
ஏய்ந்த புறவந் திகழும் சண் பைஎழில்
காழியிறை கொச்சையம் பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
மிக்கயனூர் அமரர்கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவது
அரனாலும் அமரும் ஊரே.

தெளிவுரை : புகழ் விளங்கும் மறைவளரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், திகழ்கின்ற சண்பை, எழில் மிகுந்த சீகாழி, இறைமையுடைய கொச்சைவயம், பொன்வேய்ந்த மதிலைக் கொண்ட கழுமலம், தேவர்கள் பணிந்து ஏத்தும் பிரமபுரம், வேணுபுரம், கலைமலிந்த புகலி, வெங்குரு என வழங்கப் பெறும் அவ்வூர் அரன் நாள்தோறும் அமர்ந்து விளங்கும் ஊராகும்.

790. மாமலையாள் கணவன் மகிழ் வெங்குருமாப்
புகலிதராய் தோணிபுரம் வான்
சேமமதில் புடைதிகழும் கழுமலமே
கொச்சை தேவேந் திரனூர்சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம் விறற்
சிலம்பனூர் காழிசண்பை
பாமருவு கலையெட்யெட்டு உணர்ந்தவற்றின்
பய(ன்) நுகர்வோர் பரவும் ஊரே.

தெளிவுரை : பெருமை கொண்டு திகழும் உமாதேவியின் நாயகனாகிய ஈசன் மகிழும் வெங்குரு, சிறப்புமிக்க புகலி, பூந்தராய், தேணிபுரம், உயர்ந்து விளங்கும் பாதுகாப்பினை உடைய மதில் திகழும் கழுமலம் கொச்சைவயம், வேணுபுரம், பிரமபுரம், பொலிவு உடைய புறவம், விறல் மிக்க சிரபுரம், சீகாழி, சண்பை எனத் திகழும் ஊர் அறுபத்து நான்கு கலைகள் உணர்ந்த அறிஞர்கள் பயனை நுகர்வோராகி ஈசனை வணங்கிப் போற்றும் ஊர் ஆகும்.

791. தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
வயங்கொச்சை தயங்கு பூமேல்
விரைச் சேரும் கழுமல மெய் யுணர்ந்தயனூர்
விண்ணவர்தம் கோனூர் வென்றித்
திரைச் சேரும் புனற் புகலி வெங்குருச்
செல்வம் பெருகு தோணி புரஞ்சீர்
உறைச்சேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம்
உலகத்தில் உயர்ந்த ஊரே.

தெளிவுரை : பூவுலகத்தில விளங்கும் தேவர்களாகிய பூசுரர்கள் எனப்படும் அந்தணர்கள் பணிந்து போற்றும் சண்பை, இனிமை பெருகும் சீகாழி, கொச்சைவயம், ஒளிகொண்டு விளங்கும் இம் மண்ணுலகில் நறுமணம் சேர்த்து மேவும் கழுமலம், மெய்ம்மையுணர்ந்த பிரமன் பூசித்த பதியெனும் பிரமபுரம், வேணுபுரம், நீர் அலைகள் சேரும் புகலி, வெங்குரு, செல்வம் பெருகும் தோணிபுரம், புகழ்ச்சொல் விளங்கிப் பரவும் பூந்தராய், சிரபுரம், புறவம் என்று வழங்கப்பெறும் ஊர், உலகத்தில் உயர்ந்து விளங்குகின்ற ஊராகும்.

792. புண்டரிகத்து ஆர்வயல்சூழ் புறவமிகு
சிரபுரம்பூங் காழி சண்பை
எண்டிசை யோர் இறைஞ்சியவெங் குருப்புகலி
பூந்தராய் தோணிபுரஞ்சீர்
வண்டமரும் பொழில்மல்கு கழுமலநற்
கொச்சைவா னவர்தம் கோனூர்
அண்டயனூர் இவைஎன்பர் அருங்கூற்றை
உதைத்துகந்த அப்பனூரே.

தெளிவுரை : தாமரை மலர்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த புறவம், சிரபுரம், சீகாழி, சண்பை, எண்திமைகளிலிருந்தும் இறைஞ்சி ஏத்தும் வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம், சிறப்பான தேனை உறிஞ்சும் வண்டுகள் அமர்கின்ற பொழில் மல்கும் கழுமலம் நல்ல கொச்சைவயம், வேணுபுரம், அண்டுதல் செய்து அயன் பூசித்துப் பேறு பெற்ற பிரமபுரம் ஆகிய பெயர்களைத் தாங்கிய ஊர் என்பர், கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள் செய்து உகந்த எம் தந்தையாகிய ஈசன் வீற்றிருக்கும் ஊர்.

793. வண்மைவளர் வரத்துஅயனூர் வானவர்தம்
கோனூர் வண் புகலிஇஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமிக் கோர்இறைஞ்சு
சண்பை வியன் காழிகொச்சை
கண்மகிழும் கழுமலம்கற் றோர்புகழும்
தோணிபுரம் பூந்தராய் சீர்ப்
பண்மலியும் சிரபுரம்பார் புகழ்புறவம்
பால்வண்ணன் பயிலும் ஊரே.

தெளிவுரை : வண்மை பெருகும் வரங்களைப் பெற்ற பிரமன் பூசித்து விளங்கும் பிரமபுரம், வேணுபுரம், புகலி, திங்கள் ஒளி பரவும் வெங்குரு, ஞானிகள் ஏத்தும் சண்பை, பெருமை திகழும் சீகாழி, கொச்சை வயம், தலத்தின் மகிழ்ச்சியெனப் பேறு கொண்டு விளங்கும் கழுமலம், கற்றோர் புகழும் தோணிபுரம், பூந்தராய், புகழ்மிக்க பண்ணின் இசை பெருகும் சிரபுரம், பார்புகழும் புறவம் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டு விளங்குவது ஈசன் வீற்றிருக்கும் ஊர்.

794. மோடிபுறம் காக்குமூர் புறவம்சீர்
சிலம்பனூர் காழிமூதூர்
நீடியலும் சண்பைகழு மலங்கொச்சை
வேணுபுரம் கமலநீடு
கூடியயந் ஊர்னளர்வெங் குருப்புகலி
தராய்தோணி புரம்கூடப் போர்
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள்
செற்றமலைச் சிலையனூரே.

தெளிவுரை : துர்க்கையன்னை மேவி வீற்றிருந்து காக்கும் புறவம், சீர்மிக்க, சீகாழி, சண்பை, கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், பிரமபுரம், வெங்குரு, புகலி, பூந்தராய் தோணிபுரம் என்னும் பெயர்கள் கொண்டு விளங்குகின்ற ஊரானது போர்புரியும் நோக்கத்தில் உழன்ற அசுரர்களின் திரிபுரங்களை எரித்த, மேருமலையை வில்லாகக் கொண்ட ஈசனின் ஊராகும்.

795. இரக்கமுடை இறையவனூர் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் றன்னூர்
நிரக்கவரு புனற் புறவ நின்றதவத்து
அயனூர்சீர்த் தேவர் கோனூர்
வரக் கரவாப் புகலிவெங் குருமாசி
லாச்சண்பை காழிகொச்சை
அரக்கன் விறல் அழித்தருளி கழுமலம்அந்
தணர் வேதம் அறாதவூரே.

தெளிவுரை : கருணாலயனாக விளங்கும் இறைவனுடைய ஊர் என்பது, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், நீர்வளம் மிக்க புறவம், தவத்தின் பயனாய் மேவி விளங்குகின்ற பிரமன் பூசித்த பிரமபுரம், தேவர்கோன் ஏத்தும் வேணுபுரம், வரங்களைக் கரவாது வழங்கும் புகலி, வெங்குரு, மாசு அடையாத சண்பை சீகாழி, கொச்சைவயம், இலங்கையின் வேந்தனாகி இராவணனை விரலால் ஊன்றி ஆணவத்தை அழித்து, அருள் புரிந்த கழுமலம் ஆகிய பன்னிரண்டு பெயர்களும் கொண்ட ஊர் ஆகும். இத்திருத்தலம் அந்தணர்கள் ஓதும் வேதவொலியை எஞ்ஞான்றும் கொண்டு விளங்கும் சிறப்புடையது.

796. மேலோதும் கழுமல மெய்த் தவம் வளரும்
கொச்சைஇந் திரனூர் மெய்ம்மை
நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார்
குருப்புகலி தராய்தூ நீர்மேல்
சேலோடு தோணிபுரம் திகழ்புறவம்
சிலம்பனூர் செருச்செய்தன்று
மாலோடும் அயனறி யான் வண்காழி
சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே.

தெளிவுரை : மேன்மையாய் ஓதும் புகழுடைய கழுமலம், மெய்ம்மையாகிய முத்தியின்பத்தை நாடும் தவம் பெருகும் கொச்சைவயம், வேணுபுரம், மெய்ம்மை நூல்களாகிய வேதம் முதலான ஞான நூல் ஓதும் சிறப்பு மிக்க பிரமபுரம், நுண்மையான மெய்ஞ்ஞானம் மிளிரும் வெங்குரு, புகலி, பூந்தராய், தூய்மையான தீர்த்த மகிமையுடைய தோணிபுரம், திகழ்ந்து விளங்கும் புறவம், சிரபுரம், தருக்கம் செய்த திருமாலும், பிரமனும் காணுதற்கு அறியாத தகைமையாளனாகிய ஈசனின் சீகாழி, சண்பை என்னும் பன்னிரண்டு திருப்பெயர்கள், கொண்ட இவ்வூர் உலகத்தவர் வாழ்த்தி வணங்கும் ஊர் ஆகும்.

797. ஆக்கமர்சீர் ஊர்சண்பை காழியமர்
கொச்சைகழு மலம் அன்பான்ஊர்
ஒக்கம்உடைத் தோணிபுரம் பூந்தராய்
சிரபுரம் ஒண் புறவ நண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புறந்தரனூர்
புகலிவெங் குருவும் என்பர்
சாக்கியரோடு அமண்கையர் தாம்அறியா
வகைநின்றான் தங்கும் ஊரே.

தெளிவுரை : ஆக்கத்தை நல்கும் சீர்மிக்க ஊரினை, சண்பை, சீகாழி, கொச்சைவயம், கழுமலம், அன்பினனாகிய ஈசன் ஊர் எனவாய் உயர்ந்த நிலை கொண்டு விளங்கும் தோணிபுரம், பூந்தராய், சிரபும், புறவம், பக்தியுடன் பிரமன் மகிழ்ந்து பூசித்த பிரமபுரம், வேணுபுரம், புகலி வெங்குரு என்று போற்றுவர். இத்தகைய ஊர் சாக்கியரும் சமணரும் அறியாத வகையால் ஈசன் வீற்றிருக்கும் ஊராகும்.

798. அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
தோணிபுர மணிநீர்ப் பொய்கை
புக்கரஞ்சேர் புறவம்சீர்ச் சிலம்பனூர்
புகழ்க்காழி சண்பை தொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சை வயம்
வேணுபுரம் அயனூர் மேவிச்
சக்கரஞ்சீர்த் தமிழிவிரகன் தான்சொன்ன
தமிழ்தரிப்போர் தவம்செய் தோரே.

தெளிவுரை : வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம், பொய்கை விளங்கும் புறவம், சீர்மிக்க சிரபும், புகழ் விளங்கும் சீகாழி, சண்பை, தொன்மை மிகுந்த வள்ளன்மேவும் கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், பிரமபுரம் என வழங்கப் பெறும் பன்னிரண்டு பெயர்களைப் பொருந்தப் பெருமையுடன் தமிழ் விரும்பும் ஞானசம்பந்தர் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதுவோர் தவம் செய்தவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

210. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

799. பூமகனூர் புத்தேளுக்கு இறைவனூர்
குறைவிலாப்புகலி பூமேல்
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம்
பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை
புகழ்ச் சண்பை காழி கொச்சை
காமனைமுன் காய்ந்த நுதற் கண்ணுவனூர்
கழுமலம் நாம் கருதும் ஊரே.

தெளிவுரை : தாமரை மலரில் விளங்கும் பிரமன் பூசித்த பிரமபுரம், வேணுபுரம், குறைவு இல்லாத வளம் பெருகி ஓங்கும் புகலி, உலகில் திருமகளின் செல்வச் சிறப்புடைய வெங்குரு, நல்ல தோணிபுரம், பூந்தராய், மதில் விளங்கிப் பாதுகாவல் மேவும் சிரபுரம், சீர்மிகும் புறவம், நிறைபுகழ்மேவும் சண்பை, சீகாழி, மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணுடைய ஈசனின் ஊராகிய கழுமலம், நாம் மனத்திற் கருதி மேவும் ஊர் ஆகும்.

800. கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த்
தோணிபுரம் கனகமாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதராய்
உலகாரும் கொச்சை காழி
திருத்திகழும் சிரபுரம்தே வேந்திரனூர்
செங்கமலத் தயனூர்தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவம் சண்பைசடை
முடியண்ணல் தங்கும் ஊரே.

தெளிவுரை : சிவஞானம் மிக்க மறையவர்கள் சேர்ந்து விளங்குகின்ற கழுமலம், மெய்ம்மையாய் நிலைத்து ஓங்கும் தோணிபுரம், பொன் அனைய அழகிய மாடங்கள் கொண்டு திகழும் வெங்குரு, புகலி, ஓங்கும் சிறப்பு உடைய பூந்தராய், உலகில் பொருந்தி விளங்கும் கொச்சைவயம், சீகாழி, திருமகள் வாசம் புரியும் சிரபுரம், வேணுபுரம், பிரமபுரம், தெய்வத் தருவாகிய கற்பகம் போன்ற தருக்கள் விளங்கும் பொழில் உடைய புறவம் சண்பை ஆகிய பெயர்களையுடைய ஊர் சடை முடியுடைய ஈசன் வீற்றிருக்கும் ஊராகும்.

801. ஊர்மதியைக் கதுவஉயர் மதிற்சண்பை
ஒளிமருவு காழிகொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்
தோணிபுரம் கற்றோர் ஏத்தும்
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப்
புறவம் அயன் ஊர்பூங்கற்பத்
தார் மருவும் இந்திரனூர் புகலிவெங்
குருக்கங்கை தரித்தோன் ஊரே.

தெளிவுரை : வானில் ஊர்ந்து திகழும் சந்திரனைப் பற்றும் உயர்ந்த மதில் கொண்ட சண்பை, ஒளிர்ந்து மேவும் சீகாழி, கொச்சைவயம், மேகம் தவழும் பொழில் சூழ்ந்த கழுமலம், தோணிபுரம், கற்றோர் ஏத்தும் புகழ் பொலிந்த பூந்தராய், சிரபுரம், புறவம், பிரமபுரம், கற்பக மரங்கள் மருவும் வேணுபுரம், புகலி, வெங்குரு எனப் பன்னிரண்டு திருப்பெயர் கொண்டது கங்கை தரித்த ஈசன் வீற்றிருக்கும் ஊர்.

802. தரித்தமறை யாளர்மிகு வெங்குருச் சீர்த்
தோணிபுரும் தரியார் இஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந்
தராய்புகலி இமையோர் கோன்ஊர்
தெரித்த புகழ்ச் சிரபுரம்சீர் திகழ்காழி
சண்பை செழு மறைகள் எல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோன்
ஊர்உலகில் விளங்கும் ஊரே.

தெளிவுரை : மறைவல்லவர்கள் மிகுந்த வெங்குரு, சீர் கொண்ட தோணிபுரம், பகைவராகிய முப்புரம் அசுரர்களின் கோட்டை மதில்களை எரித்த ஈசன் வீற்றிருக்கும் கழுமலம், கொச்சைவயம், பூந்தராய், புகலி, வேணுபுரம், புகழ் விளங்கும் சிரபுரம், சீர்திகழும் சீகாழி, சண்பை, மறை புகழும் புறவம், பிரமபுரம் எனப் பெயர் தாங்கும் இவை, உலகில் நன்கு விளங்குகின்ற ஊர் ஆகும்.

803. விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
வேணுபுர(ம்) மேகமேய்க்கும்
இளங்கமுகம் பொழில் தோணி புரங்காழி
எழிற்புகலி புறவம் ஏரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச்
சிரபுரம் வன் னஞ்சம் உண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலம்
காமன்னுடலம் காய்ந்தோன் ஊரே.

தெளிவுரை : நனி விளங்குகின்ற பிரமபுரம், பூந்தராய் சண்பை, வேணுபுரம், மேகத்தைத் தீண்டும் உயர்ந்த கமுக மரங்கள் சூழ்ந்த தோணிபுரம், சீகாழி, எழில் மிக்க புகலி, புறவம், சிறப்பின் வளம் கொழிக்கும் கொச்சைவயம், வெங்குரு, பெருமைபெறும் சிரபுரம், கொடிய நஞ்சினை உண்டு கறையுடைய கண்டம் உடைய ஈசனின் புகழ்சேர் கழுமலம் என வழங்கும் ஊர், மன்மதனை எரித்த ஈசன் வீற்றிருக்கும் ஊர் ஆகும்.

804. காய்ந்துவரு காலனையன்று உதைத்தவனூர்
கழுமலமாத் தோணிபுரம் சீர்
ஏய்ந்தவெருங் குருப்புகலி இந்திரனூர்
இருங்கமலத்து அயனூரின்பம்
வாய்ந்தபுற வம்திகழும் சிரபுரம்பூந்
தராய்கொச்சை காழி சண்பை
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம்
பகைகெடுத்தோன் திகழும் ஊரே.

தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைக் கவரும் நோக்கில் சினந்து வந்த காலனை உதைத்த ஈசன் ஊரானது, கழுமலம், பெருமை பெறும் தேணிபுரம், சீர்மிகுந்த வெங்குரு, புகலி, வேணுபுரம், பிரமபுரம், பேரின்பம் வாய்ந்த புறவம், திகழும் சிரபுரம், பூந்தராய், கொச்சைவயம், சீகாழி, சண்பை எனப் பன்னிரண்டு பெயர்கள் கொண்டதாகும். அத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசன், குமாரக் கடவுளைத் தோற்றுவித்துத் தேவர்களுக்குப் பகையாகிய அசுரர்களை அழித்த பெருமான் ஆவார்.

805. திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
பிரமனூர் காழிதேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
வயம்கொச்சை புறவம் விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ் சீர்ச் சிரபுரம்வெங்
குருவெம் போர் மகிடற் செற்று
நிகழ் நீலி நின்மலன்றன் னடிஇணைகள்
பணிந்துலகில் நின்றவூரே.

தெளிவுரை : நன்று திகழும் மாடமாளிகைகள் மலிந்த சண்பை, பூந்தராய், பிரமபுரம், சீகாழி, புகழ் மிகுந்த தோணிபுரம், வேணுபுரம், கொச்சைவயம், புறவம், தேவர்கள் புகழ்ந்தேத்தும் புகலி, கழுமலம், சீர்மிகுந்த சிரபுரம், வெங்குரு எனும் பெயர்களைத் தாங்கி, மகிடனைத் செற்று ஈசன் திருவடிகளைப் பணிந்து விளங்கி காளி நின்று விளங்கும் ஊர், அதுவே.

806. நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
புரநிகழும் வேணுமன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி
சண்பைவளர் புறவமோடி
சென்றுபுறங் காக்கும்ஊர் சிரபுரம்பூந்
தராய்புகலி தேவர் கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்கள்
தாங்காக்க மிக்க ஊரே.

தெளிவுரை : மதில்கள் சூழ்ந்து விளங்கும் வெங்குரு, தேணிபுரம், வேணுபுரம், கழுமலம், கொச்சைவயம், உயர்ந்து விளங்கும் சீகாழி, சண்பை, வளர்ந்து ஓங்கும் புறவம், துர்க்கா தேவி காத்து விளங்கும் சிரபுரம், பூந்தராய், புகலி, வேணுபுரம், வெற்றியினை வழங்கும் பிரமபுரம் என்னும் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டு விளங்கும் ஊர், ஐம்பூதங்களும் நன்மை வழங்கிக் காக்கும் ஊராகும்.

807. மிக்ககம லத்தயனூர் விளங்குபுற
வம்சண்பை காழிகொச்சை
தொக்க பொழிற் கழுமலந்தூத் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் சேரூர்
மைக்கொள் பொழில் வேணுபுர மதிற்புகலி
வெங்குருவல் லரக்கன் திண்டோள்
ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதும் ஈடு
அழித்துகந்த எம்மான் ஊரே.

தெளிவுரை : பிரமபுரம் விளங்கும் புறவம், சண்பை, சீகாழி, கொச்சைவயம், பொழில் திகழும் கழுமலம், தூய்மையுறு தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வேணுபுரம், மதில் திகழும் புகலி, வெங்குரு எனத் திருப்பெயர்களைக் கொண்டது இராவணனுடைய இருபது தோளும் பத்துத்தலையும் வலிமை கெடுமாறு செய்து உகந்த ஈசன் வீற்றிருக்கும் ஊர்.

808. எம்மான்சேர் வெங்குருசீர்ச் சிலம்பனூர்
கழுமலநற் புகலியென்றும்
பொய்ம்மாண்பில் ஓர்புறவம் கொச்சை புரந்
தரனூர்நற் றோணிபுரம் போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியன்
ஊர்தராய் சண்பைகாரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்
விளங்கியஎம் மிறைவன் ஊரே.

தெளிவுரை : எம் தலைவனாகிய ஈசன் வீற்றிருக்கும் வெங்குரு, சிரபுரம், கழுமலம், புகலி, பொய்ம்மையற்றதும் மாண்புடையதும் ஆகும் புறவம், கொச்சை வயம், வேணுபுரம், தோணிபுரும், போர் புரியும் நோக்கில் பகைத்து வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட பரமனின் சீகாழி, பிரமபுரம், பூந்தராய், சண்பை, எனப்பெயர் பூண்டது  திருமாலும் பிரமனும் உணராத வகையில் தழலாய் விளங்கிய எம் இறைவன் விளங்கும் ஊர் ஆகும்.

809. இறைவனமர் சண்பையெழிற் புறவம்அயன்
ஊர்இமையோர்க்கு அதிபன்சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி
புரங்குணமார் பூந்தராய்நீர்ச்
சிறைமலிநற் சிரபுரம் சீர்க் காழிவளர்
கொச்சைக்கழு மலம் தேசின்றிப்
பறிதலையோடு அமண்கையர் சாக்கியர்கள்
பரிசுஅறியா அம்மான் ஊரே.

தெளிவுரை : இறைவன் உறையும் சண்பை, எழில் மிகும் புறவம், பிரமபுரம், வேணுபுரம், புகழ் மிகுந்த புகலி, வெங்குரு, தோணிபுரம், நற்குணம் பொருந்தி விளங்கும் பூந்தராய், நீர்வளம் சிறக்கும் சிரபுரம். சீர்பொலியும் சீகாழி, வளரும் இயல்பு சேர்ந்த கொச்சைவயம், கழுமலம் எனப்பன்னிரண்டு பெயர்களையுடையது, சமணர்களும் சாக்கியர்களும் மெய்த்தன்மை அறியாத ஈசன் விளங்கும் ஊர் ஆகும்.

810. அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம் வெங்
குருக்கொச்டச புறவம் அம்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி
தோணிபுரந் தேவர்கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர்
வழிமுடக்கு மாவின் பாச்சல்
தம்மான்ஒன் றியஞான சம்பந்தன்
தமிழ் கற்போர் தக்கோர் தாமே.

தெளிவுரை : ஈசன் வீற்றிருக்கும் கழுமலம், சிறப்புடைய சிரபுரம், வெங்குரு, கொச்சைவயம், புறவம், ஆழகிய பொலிவும் மெய்த் தன்மையுடைய பெருமையும் கொண்டு ஒளிரும் புகலி, சீகாழி, தோணிபுரம், வேணுபுரம், ஈசன் சிறந்து மேவும் சண்பை, பூந்தராய், பிரமபுரம் என வழியுறும் பெயர் உடைமையினைக் கோமூத்திரி என்னும் சித்திரக் கவியின் இயல்பால் அந்தாதியாகப் பரமன் பால் ஒன்றிய ஞானசம்பந்தர் சொல்லியவாறு ஓதுபவர்கள் தக்கவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

211. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

811. விண்ணியங்கு மதிக்கண்ணியான் விரியும்சடைப்
பெண்ணயங்கொள் திருமேனியான் பெருமான் அனல்
கண்ணயங்கொள் திருநெற்றியான் கலிக்காழியுள்
மண்ணயங்கொள் மறையாளர்ஏத்து மலர்ப்பாதனே.

தெளிவுரை : விண்ணில் இயங்கும் சந்திரனைத் தரித்துள்ள ஈசன், விரிந்த சடையுடையவனாய், உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு மேவும் பெருமான் ஆவார். அவர், நெற்றியில் நெருப்புக் கண்ணுடைய பெருமானாய், ஆரவாரத்துடன் பெருமை பூண்டுவிளங்கும் சீகாழிப் பதியில், இப் பூவுலகத்தின் நன்மையைக் கருதி, வேதங்கள் ஓதி, வேள்விகள் இயற்றும் மறையவர்கள் ஏத்தும் திருப்பாதம் உடையவர்.

812. வலிய காலனுயிர் வீட்டினான் மடவாளொடும்
பலிவிரும்பியதொர் கையினான் பரமேட்டியான்
கலியைவென்ற மறையாளர்தம் கலக்காழியுள்
நலியவந்தவினை தீர்த்துகந்த எந் நம்பனே.

தெளிவுரை : ஈசன், மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த வலிமையான காலனுடைய உயிரை, உதைத்து வீழ்த்தியவன்; உமாதேவியைப் பாகமாகக் கொண்ட பிரம கபாலம் ஏந்திப் பலியை விரும்பி ஏற்ற கரத்தை உடையவன்; மேலான பரம் பொருளாகத் திகழ்பவன். அந்த ஈசன், வறுமை முதலான துன்பங்களை வீழ்த்தி வென்ற அந்தணர்கள் நனி விளங்கும் எழுச்சியும் ஆரவாரமும் கூடித் திகழும் சீகாழியில், இப் பிறவியில் நலியச் செய்ய வேண்டும் என்று விதிக்கப் பட்ட பிராரத்த கன்மத்தைத் தீர்த்து மகிழ்ந்த எம் நாதன் ஆவார்.

813. சுற்றலாநற் புலித் தோல் அசைத்து அயன்வெண்டலைத்
துற்றலாயதொரு கொள்கையான சுடுநீற்றினான்
கற்றல்கேட்டல் உடையார்கள் வாழ் கலிக்காழியுள்
மற்றயங்குதிரள் தோள்எம்மைந்தன் அவனல்லனே.

தெளிவுரை : அரையில் புலித் தோலைச் சுற்றிக் கட்டி, பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி உணவு கொள்ளும் குறிக்கோள் உடைய ஈசன், திருவெண்ணீற்றினைத் திருமேனியில் நன்கு பூசியவன். கற்றலும் கேட்டலும் உடைய பெருமக்கள் வாழ்கின்ற, விழாக்கள் பெருகும் சீகாழியில், உறுதியான ஒளி திகழும் திரண்ட தோள் உடைய எம் அழகனாகிய அப்பெருமான் யாவர்க்கும் நல்லன்.

814. பல்லயங்குதலை யேந்தினான் படுகானிடை
மல்லயங்குதிரள் தோள்கள் ஆர நடமாடியும்
கல்லயங்குதிரை சூழநீள் கலிக்காழியுள்
தொல்லயங்குபுகழ் பேணநின்ற சுடர்வண்ணனே.

தெளிவுரை : பிரம கபாலம் ஏந்திச் சுடுகாட்டில் உறுதி வாய்ந்த தோள்கள் ஆர வீசி நடம் புரிந்து, உறுதி மிக்க கரையின் மீது அலை வீசிச் சூழ விளங்கும் விழாப்பொலிவு மிக்க சீகாழிப் பதியுள், தொன்மைப் புகழ் பேண நின்று விளங்குபவன், சுடர் வண்ணனாகிய ஈசன்.

815. தூநயங் கொள்திரு மேனியிற் பொடிப்பூசிப்போய்
நாநயங்கொள்மறை யோதிமாது ஒருபாகமாக்
கானங்கொள்புனல் வாசமார் கலிக்காழியுள்
தேனயங்கொள்முடி யான்ஐந்து ஆடியசெல்வனே.

தெளிவுரை : தூய அன்பின் வடிவமாகிய திருமேனி உடையவனாகிய ஈசன், திரு நீறு பூசி, நாவின் இனிமை தோன்ற வேதங்களை ஓதி, உமாதேவியாரை ஒரு கூறாகக் கொண்டு, சோலைகளின் சிறப்பும், நல்ல நீர் நிலைகளும், நறும்புகழ் மணக்கும் திருவிழாக்களும் மல்கி விளங்கும் சீகாழியில் வீற்றிருக்கும் மேலான விருப்பத்தை யுடையவராகி, பசுவிலிருந்து பெறப்படும் பால் தயிர் முதலானவற்றை அபிடேகமாகக் கொள்பவன்.

816. சுழியி லங்கும்புனல் கங்கையாள்சடை யாகவே
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்
கழியி லங்குங்கடல் சூழும்தண்கலிக் காழியுள்
பழியி லங்குந்துயர் ஒன்றிலாப்பர மேட்டியே.

தெளிவுரை : நீர்ச் சுழிகளை யுடைய கங்கையாள் சடையில் விளங்கி நிற்க, உமாதேவியை உடலின் ஒரு கூறாகக் கொண்டு மகிழ்ந்த பெருமான், உப்பங்கழிகள் இலங்கும் கடல் சூழ்ந்த சீகாழியில், பழிக்கப் படும் துயர் ஏதும் இல்லாத பரம் பொருளாகியவன்.

817. முடியிலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ
வடியிலங்குங் கழல் ஆர்க்கவே அனலேந்தியும்
கடியிலங்கும் பொழில் சூழுந்தண் கலிக்காழியுள்
கொடியிலங்கும் இடை யாளொடுங் குடிகொண்டதே.

தெளிவுரை : மேலான சீரிய சிந்தை கொண்டு முனிவர் பெருமக்கள் தொழுது போற்றத் திருவடியில் பொலியும் கழல்கள் ஆர்த்து ஒலிக்க, அனலை ஏந்தி நடம் புரியும் ஈசன், மணம் மிகுந்த பொழில் சூழ்ந்த காழியில் கொடி போன்ற மென்மையான இடையுடைய உமாதேவியாரொடு வீற்றிருக்கும் இறைவனே ஆவான்.

818. வல்லரக்கன் வரைபேர்க்கவந் தவன்தோள்முடி
கல்லரக்கிவ் விறல் வாட்டினான் கலிகாழியுள்
நல்லொருக்கிய தொர் சிந்தையார் மலர்தூவவே
தொல்லிருக்கும் மறை யேத்துகந்து உடன்வாழுமே.

தெளிவுரை : வன்மையுடைய அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் போர்க்க, அவன் தோளையும் முடியையும் வாட்டிய பரமன், காழி நகரில் ஒருமித்த நல்ல சிந்தனை யுடைய அடியவர்கள் மலர் தூவிப் போற்றவும், தொன்மையான, இருக்கு முதலான நான்கு வேதங்களும் ஏத்தி நிற்கவும் உடனாக இருந்து மகிழ்கின்றனன்.

819. மருவுநான்மறை யோனுமா மணிவண்ணனும்
இருவர் கூடிஇசைந்து ஏத்தவே எரியான்றனூர்
வெருவ நின்றதிரை யோதம் வார் வியன்முத்தவை
கருவை யார்வயற் சங்குசேர் கலிக்காழியே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் சேர்ந்து விரும்பிப் போற்றித் தொழுது நிற்கப் பெரிய சோதிவடியாய் நின்ற ஈசன் விளங்குகின்ற ஊரானது, கடலின் அலைகள் வீசி நிற்க, அதன் ஓதத்தின் வழியாகச் சங்குகளும் முத்துக்களும் வயல்களில் சேரும் காழி நகர் ஆகும்.

820. நன்றியொன்றும் உணராத வன்சமண் சாக்கியர்
அன்றியங்கவர் சொன்னசொல் லவைகொள்கிலான்
கன்று மேதியினம் கானல்வாழ் கலிக்காழியுள்
வென்றி சேர்வியன் கோயில்கொண்ட விடையாளனே.

தெளிவுரை : மனிதப் பிறிவியினைத் தந்து உதவிய நன்றியினை, நன்மையினை, அறியாத சமண் சாக்கியர் நன்றல்லாதனவற்றைக் கூறினும், அவற்றை ஏற்றுக் கொள்ளாத ஈசன், எருமைகள் தம் கன்றுகளுடன் கடற்கரைச் சோலையில் வாழும் தன்மைøயுடைய காழியில் பெருமையுடன் கோயில் கொண்டு விளங்கும் இடபவாகனத்தினனாய் வீற்றிருப்பவன்.

821. கண்ணுமூன்றுமுடை யாதிவாழ் கலிக்காழியுள்
அண்ணலந்தண்ணருள் பேணிஞான சம்பந்தசொல்
வண்ணமூன்றுந்தமி ழிற்றெரிந் திசை பாடுவார்
விண்ணு மண்ணும்விரி கின்றதொல் புகழாளரே.

தெளிவுரை : முக்கண்ணுடைய பெருமானாகிய ஈசன் விளங்கி வீற்றிருக்கின்ற விழாப் பொலிவு மிக்க சீகாழிப் பதியில் அண்ணலாரின், குளிர்ச்சி பொருந்திய அருளைப் போற்றி, ஞானசம்பந்தர் சொல்லிய இத் திருப்பதிகத்தை வண்ண மிகும் இசைகொண்டு பாடும் அடியவர்கள், விண்ணுலகமும், மண்ணுலகமும் விரிந்து பெருகும் சிறந்த புகழுடையவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

212. அகத்தியான் பள்ளி (அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அகஸ்தியன் பள்ளி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

822. வாடிய வெண்டலை மாலை சூடியமங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்கு மாகநிவந்தெரி
ஆடியெம் பெரு மான்அகத்தி யான்பள்ளியைப்
பாடிய சிந்தையி னார்கட்கு இல்லை யாம்பாவமே.

தெளிவுரை : தலை யோட்டினை மாலையாகச் சூடி மயானத்தின் கொள்ளி எரியே விளக்காக அமைய, ஆடும் எம் பெருமான் வீற்றிருக்கும் அகத்தியான் பள்ளியைப் பாடுபவர்களுக்கும் சிந்திப்பவர்களுக்கும் எத்தகைய பாவமும் இல்லை.

823. துன்னங் கொண்ட உடையான் துதைந்த வெண்ணீற்றணினான்
மன்னும் கொன்றைமத மத்தம்சூடி னான்மாநகர்
அன்னம்தங்கு பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியை
உன்னஞ்செய்த மனத் தார்கள்தம் வினையோடுமே.

தெளிவுரை : நன்கு தைத்த கோவண ஆடையுடைய ஈசன், திருவெண்ணீற்றை முற்றுமாகத் தோயப் பூசி விளங்குபவன்; சிறப்பான கொன்றை மலரும் ஊமத்த மலரும் சூடியவன். அப்பெருமான் வீற்றிருக்கும் பெருமை மிக்க சூடியவன். அப்பெருமான் வீற்றிருக்கும் பெருமை மிக்க நகரானது, அன்னப் பறவைகள் தங்கி இருக்கும் பொழில் சூழ்ந்த அகத்தியான் பள்ளி என்னும் தலம். அத்திருத்தலத்தை மனத்தால் நினைத்தவர்கள் வினையாவும் விலகிச் செல்லும்.

824. உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந்துண்பதும்
கடுத்துவந் தயற் காலன்றன்னை யும்காலினால்
அடுத்ததுவும் பொழில் சூழகத்தி யான்பள்ளியான்
தொடுத்ததுவும் சர(ம்) முப்புரம் துகளாகவே.

தெளிவுரை : அகத்தியான் பள்ளி என்னுத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசன், உடுத்தியது, புலித்தோல் ஆடை; உண்பது, கபாலம் ஏந்திப் பிச்சை எடுத்துப் பெற்ற உணவு; கடுத்துச் சினந்தது, கூற்றுவனை; தொடுத்தது, முப்புரத்தை எரிக்கின்ற சரம்.

825. காய்ந்ததுவும் அன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்
பயந்ததுவும் கழற்காலனைப் பண்ணினான் மறை
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான்பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமாவான்மகள் ஒருபாகமே.

தெளிவுரை : மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த ஈசன், காலனைப் பாய்ந்து, திருக்கழலால் உதைத்தவன்; வேதங்களை விரித்து ஓதியவன்; பொழில் சூழ்ந்த அகத்தியான் பள்ளியில் கோயில் கொண்டு விளங்குபவன். அப்பெருமான் திருமேனியில் பொருந்திப் பாகமாகக் கொண்டு விளங்குவது இமவான் மகளாகிய உமாதேவியே ஆகும்.

826. போர்த்ததுவும் கரியின்னுரி புலித்தோலுடை
கூர்த்த தோர்வெண் மழுவேந்திக் கோளரவம்மரைக்
கார்த்ததுவும் பொழில் சூழகத்தி யான்பள்ளியான்
பார்த்ததுவும் மரணம்படர் எரிமூழ்கவே.

தெளிவுரை : ஈசன், யானையை அடர்த்து அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன்; கூர்மையான மழுப்படை ஏந்தியவன்; அரவத்தை அரையில் கட்டியவன். அப்பெருமான் மேகம் அடர்ந்து திகழும் பொழில் சூழ்ந்த அகத்தியான் பள்ளியில் விளங்குபவன். அவன் பார்த்து எரித்தது முப்புர அசுரர்களின் மதில்கள் ஆகும்.

827. தெரிந்ததுவும் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
எரிந்ததுவுமுன் னெழிலார் மலர் உறைவான்தலை
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியான்
புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே.

தெளிவுரை : ஈசன், கணை தொடுத்து முப்புரத்தை எரியுமாறு செய்தனன். அப்பெருமான் எழில்மிக்க தாமரை மலரில் விளங்கும் பிரமனின் ஒரு தலையை அரிந்தனன். பொழில் சூழ்ந்த அகத்தியான் பள்ளியில் வீற்றிருக்கும் அப்பரமன், உமையவளை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவன்.

828. ஓதியெல்லாம் உலகுக்கொரு ஒண்பொரு ளாகிமெய்ச்
சோதியென்று தொழுவாரவர் துயர்தீர்த்திடும்
ஆதியெங்கள் பெருமான்அகத்தி யான்பள்ளியை
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.

தெளிவுரை : வேதங்களை விரித்து ஓதியவனாய் உலகில் ஒப்பற்ற ஒளிப்பொருளாய், மெய் சோதியாய் விளங்கும் பெருமான், தொழுபவர்கள் துயர் தீர்த்திடும் ஆதிக்கடவுளாய் அகத்தியான் பள்ளியில் வீற்றிருப்பவன். அப்பெருமானை நெறி முறையாகத் தொழுபவர்கள் வினை யாவும் நீங்கும்.

829. செறுத்ததுவும் தக்கன் வேள்வியைத் திருந்தார்புரம்
ஒறுத்ததுவும் ஒளி மாமலர் உறைவான் சிரம்
அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.

தெளிவுரை : தக்கனுடைய, தீய வேள்வியைத் தடுத்ததும், முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியதும், மலரில் உறையும் பிரமன் சிரத்தைக் கொய்ததும், அகத்தியான் பள்ளியில் வீற்றிருக்கும் ஈசன் அருட் செயலாகும். அவன் இராவணனின் இருபது தோளையும் வலிமை இழக்கச் செய்தவன் ஆவான்.

830. சிரமும்நல்லமதி மத்தமும் திகழ்கொன்றையும்
அரவுமல்குஞ் சடையான் அகத்தி யான்பள்ளியைப்
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவ வல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.

தெளிவுரை : மண்டையோட்டு மாலை, சந்திரன், ஊமத்தம்பூ, கொன்றைமலர், அரவம் ஆகியன தரித்த சடையுடைய ஈசன் விளங்கும் அகத்தியான் பள்ளியை, பிரமனும் திருமாலும் தேடிய பெருமையைப் பரவிட, மேல் பதிந்த வினை தீரும்.

831. செந்துவராடையி னாரும் வெற்றரையேதிரி
புந்தியிலார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான் பள்ளியைச்
சிந்திமினும் வினை யானவை சிதைந் தோடுமே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் பேசும் பேச்சுக்கள் பொய்ம்மொழியாதல் கண்டு, எங்கள் பிரானாகிய அந்தணன், அகத்தியான் பள்ளியில் வீற்றிருக்கும் ஈசனை சிந்தை செய்மின். உமது தீய வினை யாவும் நீங்கி அழியும்.

832. ஞாலமல்குந் தமிழ் ஞானசம் பந்தன் மாமயில்
ஆலும் சோலை புடைசூழ் அகத்தி யான்பள்ளியுள்
சூல நல்ல படையான் அடி தொழு தேத்திய
மாலை வல்லார் அவர்தங்கள் மேல்வினை மாயுமே.

தெளிவுரை : ஞாலத்தில் பெருமையுடன் விளங்கும் தமிழ் ஞானசம்பந்தன், சிறந்த மயில்கள் ஆடும் சோலை சூழ்ந்த அகத்தியான் பள்ளியில் கோயில் கொண்டுள்ள சூலத்தை நற்படையாகக் கொண்ட ஈசன் திருவடியைத் தொழுது ஏத்திய இத்திருப் பதிகத்தை ஓதவல்லவர்கள் மேல், தங்கியுள்ள வினையாவும் தீரும்.

திருச்சிற்றம்பலம்

213. அறையணிநல்லூர் (அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

833. பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார் சுடலை நீறணிந் தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழுவார்களே.

தெளிவுரை : பெருமை யுடைய சிவஞானிகளாகிய பெரியோர்களும், அஞ்ஞானம் அழிதலுற்றுத் தீமை தரும் மலங்களும் வினைகளும் அற்றதாக விளங்கும் வீடு பேறு கண்டு உயர்ந்தவர்களும், வீழ்ச்சி யடையாத நித்தியத் துவத்தில் விளங்குபவர்கள் ஆவார்கள். அத்தகைமை பூண்டு திகழ்பவர்கள், வெண்மதி சூட, வேதம் விரித்து, சுடலை நீறணிந்து, ஆர் அழல் ஏந்தி ஆடுகின்ற ஈசன் வீற்றிருக்கும் அறையணி நல்லூரை அழகிய கரங்களால் கூப்பித் தொழுவார்கள்.

834. இலையி னார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ
நிலையி னாலொரு காலுறச் சிலையினான்மதில் எய்தவன்
அலையி னார்புனல் சூடிய அண்ணலார் அறை யறிநல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.

தெளிவுரை : இலை போன்ற வடிவத்தையுடைய சூலத்தை ஏந்தி, இடபவாகனத்தை வாகனமாகக் கொண்டு மகிழ்ந்து ஏறித்தேவர்கள் தொழுது போற்ற விளங்கும் பரமன், வாயுதேவன் ஒரு கணையில் விளங்கி நிற்குமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புர அசுரர்களின் மதில்களை எரித்தவன். அப்பெருமான், அலைகள் பெருகி மேவும் கங்கையைச் சடைமுடியில் சூடி அண்ணல் ஆவார். அவர் வீற்றிருக்கும் அறையணி நல்லூரைத் தலையினால் தொழுது வணங்குபவர்கள், ஓங்கி உயர்வார்கள்; தடுமாற்றம் என்னும் ஐயறவு நீங்கப் பெற்றவர் ஆவார்கள்.

835. என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி உச்சியான்
பின்பினாற் பிறங்கும் சடைப்பிஞ்ஞகன் பிறப்பிலியென்று
முன்பினார் மூவர் தாம்தொழு முக்கண் மூர்த்திதன் தாள்களுக்கு
அன்பினார்அறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.

தெளிவுரை : ஈசன், எலும்பு மாலையணிந்தவர்; பகைவர்களை எரிக்கும் சூலப்படை உடையவர்; பொலிந்து விளங்குகின்ற பெருமை மிக்க சந்திரனை உயர்வாகக் கொண்ட சடைமுடியில் சூடியிருப்பவர்; பின் புறமாகத் தாழ்ந்து விளங்கும் ஒளிர்கின்ற சடையுடையவர்; பிஞ்ஞகனாய்  பிறப்பிலயாய்த் திகழ்பவர்; வலிமை மிக்க மும்மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் தொழப்பெறும் முக்கண் மூர்த்தி. அத்தகைய பெருமானுக்கு அன்புடையவர்களாகிய அடியவர்கள், அவன் எழுந்தருளி இருக்கும் அறையணிநல்லூரைக் கைகூப்பித் தொழுவார்கள்.

836. விரவுநீறு பொன் மார்பினில் விளங்கப் பூசிய வேதியன்
உரவுநஞ்சமு தாகவுண்டு உறுதி பேணுவது அன்றியும்
அரவு நீள்சடைக் கண்ணியார் அண்ணலார் அறையணி நல்லூர்
பரவுவார்பழி நீங்கிடப் பறையும் தாம்செய்த பாவமே.

தெளிவுரை : பொன்போன்ற அழகிய திருமார்பில் நன்கு விளங்குமாறு திருநீறு விரவிப் பூசிய வேதியன், கொடிய விடத்தை அமுதம் என விரும்ப உட்கொண்டு தேவர்களின் அச்சத்தைப் போக்கி உறுதி காட்டியவராய், நாகத்தை நீண்ட சடையின்கண் தரித்து விளங்கும் அண்ணலார் ஆவார். அப்பெருமான் வீற்றிருக்கும் அறையணிநல்லூரைப் பரவி வணங்கும் அன்பர்கள் பழியற்றவர்களாய் விளங்கி, பாவமும் நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

837. தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாம்தொழு தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாயனல் அங்கையாய்அறையணிநல்லூர்
மேயினார்தம் தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.

தெளிவுரை : தீயினைப் போன்று பிரகாசமாய்ச் சிவந்து ஒளிரும் திருமேனியுடைய பெருமானே ! தேவர்கள் தொழுது  போற்றும் தேவன் நீவிர் ! கொன்றை மாலை சூடிய நாதனே ! அழகிய கரத்தில் அனல் ஏந்திய ஈசனே ! அறையணிநல்லூரில் மேவி அடியவர்களுடைய தொல்வினையைத் தீர்த்தருள் புரிந்த இறைவனே ! கொடிய காலனைப் பாய்ந்த திருக்கழலை உடைய பரமனே ! தேவரீருடைய திருவடியைப் பணிகின்றனன். அருள்புரிவீராக.

838. விரையினார் கொன்றைசூடியும் வேக நாகமும் வீக்கிய
அரையினார் அறை யணிநல்லூர் அண்ணலார் அழகாயதோர்
நரையினார் விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்
உரையினால்உயர்ந் தார்களும் உரையினால்உயர்ந் தார்களே.

தெளிவுரை : மணம் பெருகும் கொன்றை மலர்சூடியும், வேகமாகப் பரவும் நஞ்சுடைய நாகமும் கட்டிய அரையினையுடைய ஈசன், அறையணி நல்லூரில் விளங்கும் அண்ணலார் ஆவார். அப்பெருமான் அழகுடைய வெள்விடையை வாகனமாக உடையவர். அத்தகைய பரமனைப் புகழ்மிக்க சொற்களால் பாடியும் போற்றியும் உயர்ந்த அடியவர்களும் நற்புகழ் விளங்கப் பெற்றுப் பெருமை உற்றவர் ஆயினர்.

839. வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
ஈரமாகிய உரிவை போர்த்து அரிவைமேற்சென்ற எம்மிறை
ஆரமாகிய பாம்பினார் அண்ணலார் அறையணி நல்லூர்
வாரமாய் நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.

தெளிவுரை : வேதம் விரித்தநாதராகியவரும், அழகரும் ஆகிய ஈசன், யானையின் தோலையுரித்து இரத்தமாகிய ஈரம் கலந்த அதனைப் போர்வையாகக் கொண்டவர். அவர், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; பாம்பினை ஆரமாகப் பூண்டு திகழ்பவர். அத்தகைய அண்ணலார் அறையணி நல்லூரில் வீற்றிருக்க, அன்பு கெழுமிய நெஞ்சினராய்ப் போற்றும் அடியவர்கள் கொடிய வினையாவும் நீங்கப் பெற்றுத் துன்பம் அற்றவராய் இருந்து மகிழ்ந்து விளங்குவார்கள்.

840. தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ
அக்கினோடுஎழில் ஆமைபூண் அண்ணலார் அறையணிநல்லூர்
நக்கனார்அவர் சார்வலால் நல்குசார்விலோ நாங்களே.

தெளிவுரை : தக்கன், செய்த தீயநோக்குடைய வேள்வியைத் தகர்த்த ஈசன், நீண்டு தாழ்ந்த சடை முடியுடையவன்; சூரியனை வலக் கண்ணாகவும், சந்திரனை இடக்கண்ணாகவும் அக்கினியை நெற்றிக் கண்ணாகவும் உடையவன்; வேதம் விரித்து ஓதியவன்; முனிவர் பெருமக்கள் தொழும் மாண்பினன்; எலும்பு மாலையும் ஆமையும் ஆபரணமாகப் பூண்டு திகழும் அண்ணல். அப்பெருமான் அறையணி நல்லூரில் வீற்றிருக்கும் ஈசன். கோவண ஆடை தரித்து மேவும் அப்பரமனைச் சார்ந்து இருத்தலைத் தவிர எமக்கு வேறு புகலிடம் இல்லை.

841. வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப் பிறர் பின்செலார்
செய்வதேயலங் காரமாம் இவைஇவை தேறி யின்புறில்
ஐய மேற்றணும் தொழிலராம் அண்ணலார் அறையணி நல்லூர்
சைவனாவர் சார்வலால் யாதும் சார்விலோ(ம்) நாங்களே.

தெளிவுரை : ஈசன், வெம்மை தரக்கூடிய நோய் முதலான எவ்விதக் குறையும் இல்லாதவர்; தீமை அற்றவர்; தாம் மேற்கொண்ட செய்யும் திருவிளையாடலே அலங்காரமாகக் காண்பவர். அப்பெருமான் செய்யும் தொழில் யாதாகி விளங்கும் எனத் தேறி மகிழ்ந்தால், கபாலம் ஏந்திப் பலி கொண்டு திரிகின்றவராய் உணவு ஏற்ற தொழிலுடையார் எனல் ஆகும். அத்தகைய அண்ணலார் அறையணிநல்லூரில் வீற்றிருக்கும் சிவபெருமான். அவரைச் சார்பு கொண்டு உய்வது அல்லாது வேறு யாதும் புகலிடமாகக் கொள்கிலாதவர்கள் நாங்கள்.

842. வாக்கியம்சொல்லி யாரொடும் வகையலா வகை செய்யமின்
சாக்கியம்சமண் என்றிவை சாரேலும்மர ணம்பொடி
ஆக்கியம்மழு வாட்படை அண்ணலார்அறை யணிநல்லூர்ப்
பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாம்செய்த பாவமே.

தெளிவுரை : வார்த்தைகளால் பொருந்தப் பேசும் தன்மையில் இசைந்து நன்மையல்லாத செயல்களைப் புரியாது விடுக. சாக்கியம் சமணம் என்னும் கொள்கை வழி செல்லற்க. மூன்று மதில்களைப் பொடியாக்கி மழுவாகிய கூரிய படைக்கலத்தை ஏந்திய அண்ணலார் வீற்றிருக்கும் அறையணிநல்லூரில் மேவும் இறைவனை இன்றியமையாப் பொருளாகப் பெற்றிருப்பிராயின் செய்த பாவம் யாவும் கெடும்.

843. கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம் அமர்தொல்பதிப்
பழியிலாமறை ஞானசம் பந்தனல்லதோர் பண்பினார்
மொழியினாலறை யணிநல்லூர் முக்கண் மூர்த்திகள் தாள்தொழக்
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.

தெளிவுரை : உப்பங்கழிகளும் கடற்சோலைகளும் சூழ்ந்த கழுமலம் என்னும் தொன்மையான நகரில் விளங்கும் பெருமையுடையதும், பழித்துக் கூறும் தன்மை யற்றதும் ஆகிய வேதம்வல்ல ஞானசம்பந்தரின் நன்மை திகழும் பண்பின் வயத்தால் விளங்கும் சொல்திரட்சியுடைய இத்திருப் பதிகத்தை ஓதுபவர்கள் அறையணி நல்லூரில் விளங்கும் முக்கண் மூர்த்தியின் திருவடியைத் தொழுது போற்றும் அடியவர் தம்மொடு சிவலோகத்தைச் சார்ந்த வீற்றிருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

214. திருவிளநகர் (அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

844. ஒளிர்இளம்பிறை சென்னிமேல் உடையர்கோவண ஆடையர்
குளிர்இளம்மழை தவழ்பொழில் கோலநீர்மல்கு காவிரி
நளிர்இளம்புனல் வார்துறை நங்கைககங்கையை நண்ணினார்
மிளிர்இளம்பொறி அரவினார் மேயதுவிள நகராரே.

தெளிவுரை : ஒளிர்ந்து விளங்கும் பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய ஈசன், கோவணத்தை ஆடையாக உடையவர்; மழை தாங்கிய மேகம் போல் குளிர்ந்த பொழில் மல்கும் காவிரியின் துறையைக் காட்டியவர்; கங்கையைத் தரித்தவர்; ஒளி திகழும் படத்தையுடைய அரவத்தை உடையவர். அப் பெருமான் மேவி விளங்கும் இடமாவது விளநகர் ஆகும்.

845. அக்கரவ்வணி கலனென அதனொடுஆர்த்ததொ ராமைபூண்டு
உக்கவர்சுடு நீறணிந்த ஒளிமல்குபுனற் காவிரிப்
புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய
மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.

தெளிவுரை : எலும்பும் அரவமும் அணிகலனாகக் கொண்டு, அதனொடு ஆமை ஓட்டினைப் பொருத்தி, மயானத்தில் விளங்கும் சாம்பலைப் பூசி விளங்குபவர் சிவபெருமான். புனித தீர்த்தமாக விளங்கும் காவிரியில் நீராடித் துயர் நீங்கும் தன்மையில் திருவெண்ணீறு அணியும் அடியவர்கள் வழிபாடு செய்ய அப்பெருமான் விளநகர் என்னும் பதியில் மேவி வீற்றிருப்பவர்.

846. வாளிசேர்அடங் கார்மதில் தொலைநூறிய வம்பின்வேய்த்
தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல்கடல் நஞ்சுடன்
காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடினர்
மீளியேறுகந் தேறினார் மேய்துவிள நகரதே.

தெளிவுரை : அடங்காது பொருத பகைவர்களாகிய முப்புர அசுரர்களின் மதில்களை அம்பினால் எய்து எரித்துச் சாம்பலாக்கி, நறுமணம் திகழ விளங்கும் உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டு அமர்ந்த ஈசன், பாற்கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டராகவும், ஒளிவீசும் சடை முடி உடையவராகவும் விளங்குபவர். அப் பெருமான் விளநகரில் மேவி வீற்றிருப்பவர்.

847. கால்விளங்கெரி கழலினார் கையிலங்கிய வேலினார்
நூல்விளங்கிய மார்பினர் நோயிலார்பிறப்பும்இலார்
மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.

தெளிவுரை : ஈசன், காற்றும் நெருப்பும் கொண்டு எரியும் மயாத்தில் ஒலிக்கும் கழல் அணிந்து ஆடுபவர்; கையில் சூலப்படை உடையவர்; முப்புரி நூல் அணிந்த திரு மார்பினர்; மும்மலமும் அற்றநின்மலர்; பிறவி கொள்ளும் தன்மை இல்லாதவர்; பெருமை கொண்டு விளங்கும் குற்றமற்ற நீல மணிமிடற்றினர்; சடையின்மேல் வெண்பிறை தரித்தவர். அப்பெருமான் மேவி வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

848. பன்னினார் மறைபாடினார் பாயசீர்ப் பழம் காவிரித்
துன்னுதண்துறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்
சென்னி திங்களைப் பொங்கராக் கங்கை யோடுடன் சேர்த்தினார்
மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.

தெளிவுரை : ஈசன் வேதங்களை ஆய்ந்து விரித்தவர்; காவிரியின் துறை காட்டிய, துறை காட்டும் வள்ளல் என்னும் திருநாமம் தாங்கியவர்; தாய நெறி பெறும் முகத்தான், சென்னியில் சந்திரனை, பொங்கி எழும் அரவத்தோடு கங்கையும் உடன் சேர்த்துத் தரித்தவர்; ஒளிரும் முப்புரி நூலைத் திருமார்பில் உடையவர்; அப்பெருமான் வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

849. தேவரும்அம ரர்களும் திசைகள் மேலுள தெய்வமும்
யாவரும்அறி யாததோர் அமைதியால் தழல் உருவினார்
மூவரும்அவர் என்னவு(ம்) முதல்வரும்இவர் என்னவும்
மேவரும் பொருள் ஆயினார் மேயதுவிள நகரதே.

தெளிவுரை : தேவர்களும் அமரர்களும், அட்டதிக்குப் பாலர்களும், மற்றும் யாவரும் அறியாத தன்மை உடையவர் சிவபெருமான். அவர் சலனம் இன்றி அமைதியாக விளங்கும் தழல் போன்றவர். மும்மூர்த்திகளும் அப்பெருமானே என்று போற்றவும், யாவர்க்கும் முதல்வராகி விளங்குபவர் அப்பரமனே எனவும், மேவுதற்கு அரிய பொருளாகத் திகழ்பவர். அவர் மேவி வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

850. சொல்தருமறை பாடினார் சுடர்விடும்சடை முடியினார்
கல்தருவடம் கையினார் காவிரித்துறை காட்டினார்
மல்தருதிரள் தோளினார் மாசில் வெண்பொடிப் பூசினார்
வில்தருமணி மிடறினார் மேயதுவிள நகரதே.

தெளிவுரை : ஈசன், நன்மொழி தரும் வேதத்தை விரித்தவர்; சுடர் மிகுந்த சடை முடியுடயவர்; செபமாலை கையில் கொண்டு விளங்குபவர்; காவிரியில் துறையைக் காட்டிய துறை காட்டும் வள்ளல்; ஒளி திகழும் உறுதியான தோளினர். எக்காலத்திலும் மாசு கொள்ளாத சிறப்புடைய திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; ஒளி விளங்கும் நீலகண்டத்தை உடையவர். அப் பெருமான் வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

851.படர்தருஞ்சடை முடியினார் பைங்கழலடி பரவுவார்
அடர்தரும்பிணி கெடுகென அருளுவார் அரவு அரையினார்
விடர்தரும்மணி மிடறினார் மின்னும்பொன்புரி நூலினார்
மிடல்தரும்படை மழுவினார் மேயதுவிள நகரே.

தெளிவுரை : ஈசன், விரிந்து படர்ந்த சடை முடியுடையவர்; தமது திருவடியைப் பரவித் தொழும் அடியவர்கள் அடர்த்து வருத்தும் பணிகள் கெடுமாறு அருள் புரியும் கருணையாளர்; அரவத்தை அரையில் கட்டியவர்; மலையின் பிளப்பிலிருந்து தோன்றும் ஒளி தரும் மணிகளைப் போன்ற கண்டத்தை உடையவர்; மின்னி ஒளிரும் முப்புரி நூலினைத் திருமார்பில் தரித்தவர்; வலிமை மிக்க மழுப்படையைக் கொண்டு விளங்குபவர். அப் பெருமான் மேவி வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

852. கையிலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார்
பையிலங்கு அரவு அல்குலாள் பாகமாகிய பரமனார்
மையிலங்குஒளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மெய்யிலங்குவெண் மீற்றினார் மேயதுவிள நகரதே.

தெளிவுரை : ஈசன், திருக்கையில் சூலப்படை உடையவர்; புலித்தோலினை ஆடையாகக் கொண்டும் யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டும் விளங்குபவர்; மயானத்தில் கரிந்த உடல்களின் ஊடே ஆடுபவர்; படம் விரித்தாடும் அரவம் அன்ன அல்குல் உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; கறை கொண்டும், ஒளி கொண்டும் திகழும் மாசு இல்லாத மணிமிடற்றுடையவர், திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர். அப்பெருமான் வீற்றிருப்பது விளநகர் ஆகும்.

853. உள்ளதன்றனைக் காண்பன்கீழ் என்ற மாமணி வண்ணனும்
உள்ளதன்றனைக் காண்பன்மேல் என்றமாமலர் அண்ணலும்
உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார் தருஞ்சடை முடியின்மேல்
உள்ளதன்றனைக் கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே.

தெளிவுரை : எல்லா இடங்களிலும் உள்ள ஈசனை, கீழ் நோக்கிச் சென்று காண்பன் எனப் பெருமை மிக்க மணிவண்ணனாகிய திருமாலும், மேல்நோக்கிச் சென்று காண்பன் எனத் தாமரை மலரின்மேல் விளங்கும் அண்ணலாகிய பிரமனும் முனைந்தும் காணாதவராய் நிற்க, ஒளிரும் சடை முடியுடைய ஈசனாகிய அப் பெருமான் பேரொளி விளக்கமாக விளநகரில் வீற்றிருப்பவர் ஆவர்.

854.மென்சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த்துறை மேவிய
நன்பிறைநூல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர்
இன்புறுதமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
துன்புறுதுய ரம்இலர் தூநெறிபெறு வார்களே.

தெளிவுரை : மென்மையான சிறகுகளையுடைய வண்டு யாழ் போன்ற இசையெழுப்பும் விளநகர் என்னும் துறை மேவிய, பிறைச் சந்திரனைச் சூடிய அண்ணலாகிய ஈசனை, சண்பையில் மேவும் ஞானசம்பந்தர் புகழ்மிகுந்த இன்பம் திகழும் தமிழாற் சொன்ன இத்திருப்பதிகத்தை ஏத்தி உரைப்பவர்கள், வினையிலிருந்து நீங்கப் பெற்றுத் துன்பமும் துயரமும் அற்றவராய், தூயதாகிய சைவ நெறியில் நன்கு விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

215. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

855. பவனமாய்ச் சோடையாய் நாவெழாப்
பஞ்சுதோய்ச் சட்டவுண்டு
சிவனதாள் சிந்தியாப் பேதைமார்
போலநீ வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந்து
ஏறிய காள கண்டன்
அவனது ஆரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! மேல்மூச்சு வாங்கி, நாக்கு வறட்சி கொண்டு, சொற்கள் குழறி நா எழாமல், பஞ்சில் நீர் தோய்த்து வார்த்துத் தொண்டை நனையுமாறு உள்ள மரண காலத்தில் சிவபெருமான் திருவடியைச் சிந்திக்காத பேதையர் போன்று நாணுதல் கொண்டனையே ! கவனத்துடன் பாய்ந்து செல்லக் கூடிய இடபத்தை வாகனமாக உகந்து ஏறிய நீலகண்டனாகிய ஈசனின் ஆரூரைச் சென்றடைந்து உய்யலாம். எனவே நீ மயங்கி நின்று அஞ்சற்க.

856. தந்தையார் போயினார் தாயரும்
போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற்கே மனம்
வைத்தியால் ஏழை நெஞ்சே
அந்தண்ஆ ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல்நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! தந்தையானவரும் மறைந்தனர். தாயரும் மறைந்தனர். இந்நிலையில் தாமும் இம் மண்ணுலகத்தில் நிலைத்து இருப்பது என்று இல்லாது, போக வேண்டும் என்னும் கொள்கையில் உயிரையும் உடபைலயும் கூறுபடுத்தும் கால தூதர்கள் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர். இந் நிலையில் எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்று மனத்தால் கருதுகின்றனை ! அழகிய குளிர்ச்சி மிக்க ஆரூர் பதியைத் தொழுது வணங்கி உய்வாயாக ! மையங் கொண்டு அஞ்சற்க.

857. நிணங்குடர் தோல்நரம்பு என்புசேர்
ஆக்கைதான் நிலாயதன்றால்
குணங்களார்க்கு அல்லது குற்றநீங்
காதுஎனக் குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர்
வைகலும் மனங்கொடு ஏத்தும்
அணங்கன்ஆ ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : உடலானது, சதை, குடல், தோல், நரம்பு, எலும்பு ஆகியன சேர்ந்து நிலவும் தன்மையால் அத்தன்மையுடைய குணத்தின் வயப்படுவதன்றிக் குற்ற இயல்பு நீங்காது எனக் கருதுகின்ற நெஞ்சமே ! மனம் தளர்ச்சியுற்றுக் குலுங்கி வருந்தினையே ! நீமையல் கொண்டு அஞ்சற்க ! வானவர்களும், அசுரர்களும் நாள்தோறும் மனம் ஒருமித்து வணங்கி ஏத்தும் ஈசனார் விளங்குகின்ற ஆரூரைத் தொழுது உய்தி பெறுக.

858. நீதியால் வாழ்கிலை நாள்செலா
நின்றன நித்த நோய்கள்
வாதியா ஆதலால் நாளுநாள்
இன்பமே மருவி னாயே
சாதியார் கின்னார் தருமனும்
வருணர்கள் ஏத்து முக்கண்
ஆதியா ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! எந்த நெறியில் வாழ வேண்டுமோ அந்த நெறியில் வாழ்க்கை கொள்கிலை. வாழ்நாளானது வீணாகப் பயன் இன்றிக் கழிக்கின்றது. உடற்பிணிகளும் துன்பங்களும் நாள்தோறும் வருத்துகின்றன. ஆதலால் இத்துன்பத்திலிருந்து விடுபட்டு இன்பம் அடைகின்ற நான் எப்போது காண இயலும் என்று ஏங்குகின்றனை ! நீ மையல் கொண்டு அஞ்சுதல் வேண்டாம். கின்னரர், தருமன், வருணர் முதலானோர் ஏத்தும் முக்கண்ணுடைய ஆதி மூர்த்தியாகிய ஈசன் வீற்றிருக்கும் ஆரூரைத் தொழுமின். உய்தி பெறலாம்.

859. பிறவியால் வருவன கேடுள
ஆதலால் பெரிய இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்பநீங்
காதுஎனத் தூங்கி னாயே
மறவன்நீ மார்க்கமே நண்ணியனாய்
தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவன்ஆ ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! பிறவி எடுத்தலால் வருவது யாவும் கேடு தரக்கூடியது. ஆதலால் பேரின்பம் வேண்டுமாயின் யாவற்றையும் துறந்து நிற்கவேண்டும் என்ற மனதில் கொண்டு சோர்வு கண்டனை ! அத்தகைய சோர்வு தேவையில்லை. நீ ஈசனை மறவாமையாகிய சன்மார்க்க நெறியில்  நின்றனை. புனித நீராகிய கங்கை தரித்த சடை முடியுடைய ஈசன் விளங்குகின்ற ஆரூர் தொழுது உய்தி பெறுவாயாக.

860. செடிகொள் நோய்ஆக்கை யைம்பாம்பின்
வாய்த் தேரை வாய்ச்சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத்து இன்புற
லாம்என்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந்து
அன்பராய் ஏத்து முக்கண்
அடிகள்ஆ ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே

தெளிவுரை : நெஞ்சமே ! குற்றமும் பிணியும் உடையது இவ்வுடம்பு. இவ்வுடம்பின்வழி இன்பம் பெறலாம் என்று கருதினை போலும் ! அது, ஐந்து தலைப் பாம்பின் வாயில் தேரையானது சிக்கி இருக்க, அது தன் வாயின் இடையில் வண்டினைப் பற்றி மகிழ்கின்றது. அந்த வண்டானது தான், தேரையின் வாயால் பற்றப்பட்டு அழியும் தன்மையில் உள்ளோம் என்னும் நிலையயும் உணராது, பூவில் விளங்கும் தேனைச் சுவைத்து இன்புறுமாறு உள்ளது. பின்னால் விளையும் துன்பத்தை எண்ணிப்பாராது வாழ்க்கை நடத்தும் இத்தேகத்தைப் பெரிதாகக் கருதினை ! வானவர்கள் தலை தாழ்த்திப் பணிந்து அன்பராய் விளங்கி ஏத்தும் முக்கண்ணுடைய அடிகளாகிய ஈசன் மேவும் ஆரூரினைத் தொழுது உய்தி பெறுக; அஞ்சற்க.

861. ஏறுமால் யானையே சிவிகையந்
தளகம்ஈச் சோப்பி வட்டின்
மாறிவாழ் உடம்பினார் படுவதோர்
நடலைக்கு மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர்
பங்கினர் மதியம் வைத்த
ஆறனா ரூர் தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! பெருமை மிக்க யானை, பல்லக்கு ஆகியவற்றில் ஏறிச் செல்லும் இத்தேகம் பாது காப்புடையதாகக் கருதிப் பிணி முதலானவற்றால் நெந்தும் உடை மாற்றுவதுபோல மாற்றப்பட்டுப் பிறவியின் துன்பத்துக்கு ஆட்படுகின்றனையே. துன்பம் தரும் இந்த தேகத்தைப் பெரிதாகக் கருதி மையல் கொண்டு அஞ்சுகின்றனையே ! உமாதேவியரைப் பாகமாகக் கொண்டு செஞ்சடையில் சந்திரனைச் சூடியும், கங்கையைத் திருமுடியில் தரித்தும் உள்ள ஈசன் விளங்கும் ஆரூரைத்தொழுது உய்தி பெறுவாயாக.

862. என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்
சுவர்எறிந்து இதுநம் மில்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்
பொல்லாமை யான்முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாயதலார்
குரம்பையின் மூழ்கி டாதே
அன்பனா ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! எலும்பினாலும், கொழுத்த சதையினாலும் மண்சுவர் போன்று வீசப்பட்ட இவ்வுடம்பு நமது இல்லமாக உள்ளது. புன்மையான புலால் நாற்றமும் உடைய இத்தேகம், தோலால் போர்க்கப் பெற்று ஒன்பது வாயில்களைக் கொண்ட தாய் இருக்கின்றது. இவ் உடம்பைப் பாதுகாப்பதிலும், அதற்கு அநித்திய இன்பத்தை ஊட்டுதலும் கொண்டு விளங்குகின்றனை. அவ்வாறு செய்தல் உய்வதற்கு உரிய வழியன்ற. அன்பனாகிய ஈசன் கோயில் கொண்டு விளங்கும் ஆரூர் பதியைத் தொழுது உய்தி பெறுவாயாக.

863. தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்
புத்திரர் தாரமென்னும்
பந்தம்நீங் காதவர்க்கு உய்ந்துபோக்
கில்லெனப் பற்றி னாயே
வெந்தநீ றாடியார் ஆதியார்
சோதியார் வேதகீதர்
எந்தைஆ ரூர்தொழுது உய்யலா(ம்)
மையல்கொடு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! தந்தை, தாய் உடன் பிறந்தார், புத்திரர், மனைவி என்று விளங்குகின்ற பந்தபாசங்கள் கொண்டுள்ளவர்களுக்கு, உய்தி பெறும் வழியில்லை என்று கருதுவாயாக. திருநீறு பூசியணிந்த ஆதி மூர்த்தியும் சோதியும் வேத கீதமும் ஆகிய எந்தை ஆரூர் அண்ணலைத் தொழுது உய்தி பெறுக.

864. நெடிய மால் பிரமனு(ம்) நீண்டுமண்
ணிடந்தின்ன நேடிக் காணாப்
படிய னார் பவளம்போல் உருவனார்
பனிவளர் மலையாள் பாக
வடிவனார் மதிபொதி சடையனார்
மணியணி கண்டத்து எண்டோள்
அடிகள்ஆரூர் தொழுது உய்யலா(ம்)
மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! திருமாலும், பிரமனும் தேடியும் காணாத உலகம் முழுமையாக விளங்கிய பவளம் போன்ற செந்நிறத்தினை உடைய ஈசன், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு, திங்கள் பதிந்த சடையுடையவராய், நீலகண்டத்தினராய், எண்தோள் உடையவராய் விளங்குகின்ற ஆரூரைத் தொழுக ! உனது மயக்கம் அழிந்தொழியும் அஞ்சற்க.

865. பல்லிதழ் மாதவி யல்லிவண்
டியாழ்செயும் காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய
ஞானசம் பந்தன் ஆரூர்
எல்லியம் போதுஎரி யாடும்எம்
ஈசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலார்
ஓதநீர் வைய கத்தே.

தெளிவுரை : பல இதழ்களையுடைய மாதவி, அல்லி ஆகிய பூக்களில் உள்ள தேனை உறிஞ்சும் வண்ணம், விளங்குகின்ற அண்ணலாய், நல்லவற்றை நல்லவாறே மொழிந்த ஞானசம்பந்தர், ஆரூரில் வீற்றிருக்கும் எரியாடும் ஈசனை ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், கடலால் சூழப்பெற்ற இவ்வுலகத்தில் தீமையேதும் அணுகப் பெறாதவராய் வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

216. திருக்கடவூர்மயானம் (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

866. வரியமறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியும் உசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர்எம் பெருமான்

தெளிவுரை : சிறப்பு மிக்க வேதத்தை அழகுற விரித்தவர் பெருமான். அவர் பிறைச் சந்திரனைச் சூடியவர்; மேரு மலையை வில்லாக வளைத்து முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு எய்தவர்; எறிந்து வீசப்பெறும் படை உடையவர்; கருமையான கண்டத்தை உடையவர்; கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர்; பெருமை மிக்க இடப வாகனத்தில் அமர்ந்து வருபவர். அப்பெருமான் எம்பெருமானாகிய அடிகள் ஆவார்.

867. மங்கைமணந்த மார்பர் மழுவாள்வலனொன் றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயானம் அமர்ந்தார்
செங்கண்வெள்ளேறு ஏறிச் செல்வம்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; மழுவாட் படையை வலக்கரத்தில் கொண்டு திகழ்பவர்; கங்கையைச் சடையில் கரந்தவர்; கடவூர் மயானம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவர்; அப்பெருமான், வெண்மை நிறம் கொண்ட இடபத்தில் ஏறி அமர்ந்த அடியவர்களுக்குச் செல்வத்தை வழங்க வருபவர். எமது பெருமானாகிய அப்பரமன் அழகிய திருக்கரத்தில் மான் ஏந்தித் திகழ்பவர் ஆவார்.

868. ஈடல்இடபம் இசைய ஏறி மழுவொன்று ஏந்திக்
காடதுஇடமா வுடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
ஆடலரவம் உடையார் அவர்எம் பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், இணையில்லாத இடப வாகனத்தில் விரும்பி ஏறி விளங்கி மழுப்படை ஏந்தி மயானத்தை இடமாக உடையவர். அவர் கடம்பூர் மயானத்தில் அமர்ந்தவர். அப்பெருமான், பாடலும் இசைக்கருவிகளும் பயிலக் கூத்தும் புரிபவர். எமது பெருமானாகிய அவர் ஆடுகின்ற அரவத்தை உடைய அடிகள் ஆவார்.

869. இறைநின்றிலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார்
மறைநின்றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
கறைநின்றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிறைநின்றிலங்கு டையார் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், முன் கையில் வளையல் அணிந்து, எக்காலத்திலும் இளமையுடையவளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; வேத மொழிகளை நன்கு விரித்து அருள்பவர்; தெளிந்த ஞானிகளின் மனத்தின்கண் வீற்றிருப்பவர்; அடர்த்தியான பொழில் சூழ்ந்த கடவூர் மயானத்தில் அமர்ந்து திகழ்பவர். எமது பெருமானாகிய அவர் பிறை விளங்கும் சடையுடைய அடிகள் ஆவார்.

870. வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத்
துள்ளும்இளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக்
கள்ளநகுவெண் தலையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பிள்ளைமதியம் உடையார் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், வெள்விடை மீது அமர்ந்திருப்பவர்; ஒரு காதில் தோடு அணிந்திருப்பவர்; துள்ளுகின்ற பெண் மானைக் கரத்தில் ஏந்தி இருப்பவர். சுடர்விட்டு ஒளிரும் பொன்போன்ற அழகிய சடையானது அசைய விளங்குபவர்; கரத்தில் கபாலம் ஏந்திக் கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர். எமது பெருமானாகிய அவர் இளம்பிறைச் சந்திரனைச் சூடிய அடிகள் ஆவார்.

871. பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்தது உடையார் அதுவே ஊர்வார்
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர்மயானம் அமர்ந்தார்
பின்தாழ் சடையர் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன் பொன்போன்ற தாதுக்களை உதிர்த்து மணம் கமழும் அழகிய கொன்றை மாலை புனைந்தவர்; இடப வாகனத்தை உயர்த்திக் கொடியாக ஏந்தியவர்; இடபத்தையே வாகனமாக உடையவர்; கன்றுகள் உடைய ஆவினங்கள் சூழ்ந்த சோலைகளைக் கொண்ட கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர். எமது பெருமானாகிய அவர் பின்புறத்தில் தாழ்ந்து நீண்டு விளங்கும் சடையுடையவராகிய அடிகள் ஆவார்.

872. பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், உலக பாசங்களிலிருந்தும் பந்தங்களிலிருந்தும் மன்னுயிர்களை மீட்டு அருள்புரிபவர்; பரிவுடன் விளங்கும் அடியவர்களுக்கு அமுதம் போன்று விளங்கிய பேரின்பத்தைத் தரவல்லவர்; மனம் நிரம்பும் வகையில் அடியவர்களுக்கு அருள் புரிபவர்; கம்பீரமாக விளங்கும் இடபவாகனத்தின் மேல் அமர்ந்து காட்சி தருபவர்; நீலகண்டத்தை உடையவர்; கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர். எமது பெருமானாகிய அவர், குருமூர்த்தமாக விளங்கி உபதேசம் செய்யும் அடிகள் ஆவார்.

873. செற்றஅரக்கன் அலறத் திகழ்சேவடிமேல் விரலாற்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர்மயானம் அமர்ந்தார்
மற்றொன் றிணையில் வலிய மாசில்வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : இராவணன் அலறுமாறு விரலால் கயிலை மலையை ஊன்றி அடர்த்த ஈசன் கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர். வேறு எப்பொருளுக்கும் ஒப்புமை கூறப் படாதவகையில் குற்றமில்லா வெள்ளி மலை போன்று திகழும் இடபத்தில் ஏறி வருகின்ற அடிகள், எமது பெருமான் ஆவார்.

874. வருமாகரியின் உரியார் வளர்புன்சடையார் விடையார்
கருமான்உரிதோல் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
திருமாலொடுநான் முகனும் தேர்ந்துங் காணமுன் னொண்ணாப்
பெருமானெனவும் வருவார் அவர்எம்பெருமான் அடிகளே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்த்திய ஈசன், வளர்ந்த சடையுடையவர்; இடப வாகனத்தை உடையவர்; மான் தோலை உடுத்தியவர்; அப்பெருமான் கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர்; திருமாலும், பிரமனும் தேடியும் காணவொண்ணாத பெருமானாய் விளங்கும் அவ்வடிகள், எமது பெருமான் ஆவார்.

875. தூய விடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்
காயவேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
தீயகருமம் சொல்லும் சிறுபுன்தேரர் அமணர்
பேய்பேய்என்ன வருவார் அவர்எம் பெருமான் அடிகளே.

தெளிவுரை : ஈசன், தூய்மையான இடப வாகனத்தின் மேல் வருபவர்; பகைவருடைய மூன்று மதில்களை எரியுமாறு செய்தவர். அவர் கடவூர், மயானத்தில் வீற்றிருப்பவர். பேய் பேய் எனத் தீய செயல்களைப் பற்றிப் பேசும் சமணரும் தேவரும் அஞ்சுமாறு வருகின்ற அவர், எமது பெருமானாகிய அடிகளே ஆவார்.

876. மரவம்பொழில்சூழ் கடவூர் மன்னு(ம்)மயானம் அமர்ந்த
அரவம்அசைத்த பெருமான் அகலமறிய லாகப்
பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொல் மாலை
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.

தெளிவுரை : மரவம் என்னும் மரங்களின் பொழில் சூழ்ந்த கடவூரில், மன்னும் மயானத்தில் வீற்றிருக்கும் ஈசனை விரிவாக அறியுமாறு பரவும் முறையில் சொல்லிய ஞானசம்பந்தர் செஞ்சொல் மாலையை இரவும் பகலும் பரவி நினைப்பவர்கள் வினைகள் நீங்கப்பெற்றவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

217. வேணுபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

877. பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தின் ஒலியொடும் உம்பர்வா னவர்புகுந்து
வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

தெளிவுரை : பூத கணங்களைப் படையாகக் கொண்டு விளங்கும் பெருமானே ! நீவிர் கொன்றை மாலையை அணிந்தவர்; வேதங்கள் ஒலிக்கவும், உம்பர்களும் வானவர்களும் போற்றிப் பரவவும், கடல் அலைகளின் ஆரவார ஒலியுடன் இணைந்து நிற்க, நறுமணம் கமழும் மலர்களால் தேவரீரின் திருப்பாதத்தைத் தொழுகின்றனர். நீவிர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டு வீற்றிருக்கின்றீர்.

878. சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணம்தோல்
உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுஎனும்
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் சுடுகாட்டில் மேவினீர் ! கோவணத்தையும் தோலையும் உடுத்தியவர் ஆயினீர்! உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு விளங்குகின்றீர் ! திருக்கரத்தில் மழு என்னும் படையை ஏற்றுள்ளீர். நீவிர் வேணுபுரத்தினைப் பதியாகக் கொண்டவர்.

879. கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
திங்களோடு இளஅரவம் திகழ்சென்னி வைத்துகந்தீர்
மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேந்தப்
பங்கயம்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

தெளிவுரை : தேவரீர், கங்கையைச் சடை முடியில் சேர்த்தீர் ! காலனை முன் சென்று செற்று வீழ்த்தினீர் ! சந்திரனும், நாகமும் திருமுடியில் வைத்து மகிழ்ந்தீர் ! உமாதேவியை ஒரு பாகம் கொண்டு விளங்குகின்றீர் ! வேதவிற்பன்னர்கள் நிறைந்து ஏத்த, தாமரை மலர்கள் திகழ்ந்து விளங்கும் வேணுபுரத்தில் வீற்றிருப்பவர் ஆயினீர்.

880. நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோடு எழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.

தெளிவுரை : தேவரீர், கங்கை தரித்த சடை முடியின்மீது நீண்டு ஒளிரும் பிறைச் சந்திரனும், பாம்பும், கொன்றை மலரும் ஊமத்தம் பூவும் விளங்குமாறு சூடியிருந்து சிறப்பு மிக்க மாறிகைகளில் விளங்கும் மகளிர் வாழ்த்தி வணங்க வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டு கலந்துள்ளீர்.

881. ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

தெளிவுரை : கரும்பாலைகள் விளங்கவும் குளிர்ந்த கழனிகள் திகழவும் தேனை உட்கொண்ட வண்டுகள் கோயில் சென்று வழிபாடு செய்து போற்றவும், தேவரீர், உமாதேவியுடனாகக் கொண்டு வேணுபுரத்தினைப் பதியாகக் கொண்டு விளங்குகின்றீர்.

882. மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்து
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

தெளிவுரை : தேவரீர், நவரத்தினங்கள் போன்று மிளிரும் பெருமை மிக்க மலையின் மீது உமாதேவியினை உடனாகக் கொண்டு மகிழ்ந்திருந்தும், கோவண ஆடை உடுத்தியும் சுடுகாட்டில் ஆடல் செய்தும், இனிய பணியாற்றும் அந்தணர்கள் போற்றுமாறு வேணுபுரத்தின் திருக்கோயிலே இடமாகக் கொண்டு வீற்றிருக்கின்றீர்.

883. நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் றனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனியழகார் வேணுபுரம் அமரும்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாக் கொண்டீரே.

தெளிவுரை : தேவரீர், நீலகண்டத்தையுடையவர்; நீண்ட சிவந்த சடையுடையவர்; அழகிய இடப வாகனத்தை உடையவர்; கொடிய காலனைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்தவர்; நீர்வளம் மிக்க கழனிகளின் அழகு மிக்க வேணுபுரத்தில் விளங்கும் அழகிய கோயிலில் வீற்றிருப்பவர்.

884. இரைமண்டிச் சங்கேறும் கடல்சூழ்தென் னிலங்கையர் கோன்
விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
கரைமண்டிப் பேரோதம் கலந்தெற்றும் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய முடி நெரியுமாறு திருப்பாதத்தால் கயிலை மலையை ஊன்றிய தேவரீர், பெரிய அலைகளால் கரையை ஏற்றும் கடல் சிறப்பு உடைய கவின்மிகு வேணுபுரத்தில் வீற்றிருந்து அருள்புரிபவர் ஆவீர்.

885. தீயோம்பு மறைவாணர்க்கு ஆதியாம் திசைமுகன்மால்
போயேங்கி இழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையான் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரம் செழும்பதியாத்  திகழ்ந்தீரே.

தெளிவுரை : வேள்வித் தீ ஓம்பும் மறைவர்களுக்கு முதல்வனாகிய பிரமனும், திருமாலும், வானத்தில் உயர்ந்து சென்றும், பூமியில் குடைந்து சென்றும் காணுதற்கு அரியவராகிய திருவடியை உடைய தேவரீர், பாய்மரக்கலங்கள் கடல் அலைகளால் மோதும் தன்மையால் விளங்குகின்ற தலமாயும், உயர்ந்து ஓங்கும் பதியாகவும் திகழும் வேணுபுரத்தில் வீற்றிருக்கின்றீர்.

886. நிலையார்ந்த உண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே
நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும்
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.

தெளிவுரை : ஈசனே ! சமணரும் சாக்கியரும் கூறும் உரையைப் பேணாது தேவரீரின் திருவடியைச் சரண் என்று போற்றும் அடியவர்கள் நன்கு விளங்குமாறு வேணுபுரத்தில் ஆட்கொண்டு விரும்பி வீற்றிருப்பவர் நீவீர்.

(இத் திருப்பதிகத்தில் இறுதிப் பாட்டு கிடைக்கவில்லை.)

திருச்சிற்றம்பலம்

218. திருத்தேவூர் (அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

887. பண்ணலாவிய மொழியுமை பங்கன்எம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி யடைந்தஎம்அல்லல்ஒன் றிலமே.

தெளிவுரை : உமாதேவியைப் பாகமாக உடைய எமது பெருமான், தேவர்களின் தலைவனாகிய தேவேந்திரனால் போற்றப்படும் விமலன்; இடப வாகனத்தை உடையவன்; தெளிந்த நிலவினைத் தொடுகின்ற. மாளிகைகளையுடைய தேவூரில் வீற்றிருக்கும் ஈசன். அப் பெருமானுடைய திருவடியைச் சரணம் என்று யாம் அடைந்தனர். எனவே, அல்லல் ஏதும் இல்லாதவர் ஆனோம்.

888. ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த்
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதி சேவடி யடைந்தனர் அல்லல் ஒன்றிலமே.

தெளிவுரை : உலகத்தில் உள்ளவர்கள் யாவரும் உய்திபெற வேண்டும் என்று, மலைமேல் சோதி வடிவாய்ச் செல்லும் வானவனாகிய சூரியன் போற்றித் துதிக்க மகிழ்ந்த பரமன், நீர்வளம் மிக்க தாமரை போன்ற அழகிய முகமலர் கொண்ட மகளிர் விளங்கும் தேவூரில் வீற்றிருக்க, ஆதியாகிய ஈசனில் திருவடியை வணங்கினவர்களானோம். அதனால் எமக்கு அல்லல் இல்லை.

889. மறைக ளால்மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறவு கொண்டஅக் காலனைக் காய்ந்தஎங் கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பெருவயல் தேவூர்
அறவன் சேவடி அடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.

தெளிவுரை : வேதங்கள் நன்கு ஓதி வழிபாடு செய்து வந்த மார்க்கண்டேயரைக் கொல்ல வேண்டும் என்னும் சினத்தைக் கொண்டு நின்ற காலனைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்த எமது கடவுள், வாளைகளும் சேல்களும் சேற்றில் திகழப் பெருவயல்களையுடைய தேவூரில் அறவாளனாகிய ஈசன் திருவடியை நாம் அடைந்தனம். அதனால் எமக்குத் துயர் இல்லை.

890. முத்தன் சில்பலிக் கூர்தொறு முறைமுறை திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னிட யார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்
அத்தன் சேவடி யடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.

தெளிவுரை : முத்தி நலம் அருளும் பரமன், பலி ஏற்றிட ஊர்தோறும் திரியும் பாங்கினனாய், பித்தனாய், சிவந்த சடையுடைய பிஞ்ஞகனாய், தன்னுடைய அடியவர்களுக்குச் சித்தத்தில் நின்று அருள்பவனாய் விளங்கும் ஈசன், சந்திரனைத் தொடும் அளவு உயர்ந்து விளங்கும் தேவூரில் வீற்றிருக்கும் அத்தன் ஆவான். யாம் அப்பெருமானுடைய திருவடியை அடைந்தனம். அதனால் துயரம் ஏதும் இல்லாதவர் ஆயினம்.

891. பாடுவாரிசை பல்பொருள் பயன்உகந்த அன்பால்
கூடுவார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்
தேடுவார்பொருள் ஆனவன் செறிபொழில் தேவூர்
ஆடுவானடி யடைந்தனம் அல்லல் ஒன்றுஇலமே.

தெளிவுரை : போற்றி பாடும் அன்பர்கள், பலவிதமான பொருள்களை ஆய்ந்து அவை யாவும் மெய்ம்மை ஆகாதன எனத் தேர்ந்து, ஈசனே மெய்ம்மை பயக்கக் கூடியது எனக் கொண்டு கூடுபவராய் விளங்கி, அப்பெருமானையே துணையாகப் பற்றி, வேறு பற்றிலராய் மேவித் திகழ்கின்றனர். பற்றப்படும் பொருளாய் இருந்து யாவராலும் தேடப்பெறும் ஒண்பொருளாகிய ஈசன், செறிந்த பொழில் சூழ்ந்த தேவூரில் வீற்றிருந்து நடம் புரிபவன். யான் அப்பெருமான் திருவடியை அடைந்தனம். அதனால் துயரம் யாதும் இல்லாதவர் ஆனோம்.

892. பொங்குபூண் முலைப்புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர்
அங்கணன்றனை அடைந்தனம் அல்லல்ஒன்று இலமே.

தெளிவுரை : மலைமகளாகிய உமாதேவியைப் பாகமாக உடையவனாகியும், கங்கையை, வளர்கின்ற சடையின் மீது வைத்துச் சந்திரனைச் சூடியவனும் ஆகிய தீ வண்ணம் போன்ற சிவந்த நிறத்தையுடைய கடவுள், தென் தேவூரில் விளங்கும் கருணாலயன். அப் பெருமானை யாம் அடைந்தனம். அதனால் துயரம் தீர்ந்தவர் ஆயினோம்.

893. வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க
தென்த மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தனம் அல்லல்ஒன்றிலமே.

தெளிவுரை : கொடிய அசுரர்களாகிய முப்புர அசுரர்களின் கோட்டைகள் எரிய, தனது புய வலிமையினால் மேரு மலையை வளைத்த ஈசன், அழகிய தமிழ்க் கலையில் வல்லவர்கள் மேவும் தேவூரில் அன்பனாய் வீற்றிருக்க, அப் பெருமானுடைய செம்மையான அடியை அடைந்தனம். ஆதலால், யாம் அல்லல் தீர்ந்தவரானோம்.

894. தருவு யர்ந்தவெற்பு எடுத்தஅத் தசமுக னெரிந்து
வெருவ வூன்றிய திருவிரல்நெகிழ்த்துவாள் பணித்தான்
தெருவு தோறுநல் தென்றல்வந்து உலவிய தேவூர்
அரவு சூடியை யடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.

தெளிவுரை : மரங்கள் உயர்ந்து விளங்கிய மலையினைப் பேர்த்த இராவணன் நெரியுமாறு கயிலையை ஊன்றி, அவன் வெருவுமாறு அடர்த்து, பின்னர் நெகிழ்வு கொண்டு , கருணை வயத்தனாய் மந்திர வாள் தந்து அருள் புரிந்த ஈசன், வீதிகளி தென்றல் காற்று உலவி, மகிழ்வினைத் தருகின்ற தேவூரில், நாகத்தை அணியாகத் தரித்துள்ளவன். அப் பெருமானை யாம் அடைந்தனம். எனவே எமக்குத் துயரம் இல்லை.

895. முந்திக் கண்ணனும் நான்முக னும்அவர் காணா
எந்தை திண்டிறள் இருங்களிறு உரித்தஎம் பெருமான்
செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர்
அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லல் ஒன்றிலமே.

தெளிவுரை : திருமாலும், நான்முகனும் காணாதவர்களாகிய எந்தையாகிய ஈசன், திண்மையான திறத்தை உடைய பெரிய யானையின் தோலை உரித்த பெருமான். நல்ல செந்து என்னும் இசையை வண்டு எழுப்ப விளங்கும் தேவூரில் அப்பெருமான் அந்தி வண்ணம் எனப்படும் சிவந்த திருமேனியனாய்த் திகழ்பவன். அப்பெருமானை யாம் அடைந்தனம். அதனால் யாம் துயரம் அற்றவர் ஆனோம்.

896. பாறு புத்தரும் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநம் செஞ்சடைக் கடவுள் தென்தேவூர்
ஆறு சூடியை அடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.

தெளிவுரை : புத்தரும், தவக் கோலம் பூண்ட சமணரும் பல நாள் கூறி வைத்த சொற்கள் யாவும் பிழையுடையது எனத் தேர்ந்த, சிவந்த சடைமுடியுடைய கடவுள் விளங்கும் அழகிய தேவூரில் வீற்றிருக்கும் ஈசனை அடைந்தனம். கங்கையைச் சடை முடியில் தரித்த அப் பெருமானை அடைக்கலமாகச் சார்ந்தமையால் எமது துயரம் தீர்ந்தது.

897. அல்லல் இன்றிவிண் ணாள்வர்கள் காழியார்க் கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும்வல் லாரே.

தெளிவுரை : காழிநகரின் நாதனாய், நல்ல செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தர், எல்லையற்ற புகழ் மல்கிய எழில் திகழும் தேவூரில் வீற்றிருக்கும் தொன்மை திகழும் பரமனை, சிவனைச் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், அல்லல் இன்றி விளங்கி விண்ணுலகத்தில் சிறப்புடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

219. கொச்சைவயம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

898. நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த
நெடுமாவுரித் தநிகரில்
சேலன கண்ணிவண்ணம் ஒருகூறு உருக்கொள்
திகழ்தேவன் மேவுபதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை
விழவோசை வேதவொலியின்
சாலநல் வேலை யோசை தருமாட வீதி
கொடியாடு கொச்சைவயமே.

தெளிவுரை : நீலகண்டத்தையுடைய ஈசன், சினந்து வந்த யானையின் தோலை உரித்து விளங்கியவன். அப்பெருமான், நிகரற்ற பெருமையுடைய சேல் போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாகத் திகழ்பவர். அவர் மேவுகின்ற பதியானது, வேல் போன்ற நீண்ட கண்களையுடைய மங்கையர்கள் விளையாடும் ஓசையும், அந்தணர்கள் வேதத்தைக் கூறும் ஒலியுடன் கடலலைகளின் ஓசையும் கலந்து தருகின்ற மாட வீதிகள் கொண்டுள்ளதாய், தோரணங்களுடன் திகழும், கொச்சை வயம் என்னும் நகர் ஆகும்.

899. விடையுடை யப்பன்ஒப்பில் நடமாட வல்ல
விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கைதிங்கள்
தகவைத்த சோதி பதிதான்
மடையிடை அன்னம்எங்கும் நிறையப் பரந்து
கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கை யாளர் மறையோர்கள் என்றும்
வளர்கின்ற கொச்சை வயமே.

தெளிவுரை : இடப வாகனத்தை உடைய எம் தந்தையாகிய ஈசன், ஒப்பற்ற நடனத்தை ஆட வல்ல விகிர்தன். திருவடிவத்தைக் கொண்டு விளங்கும் விமலனாகிய அப்பெருமான், சடை முடியில் வெள்ளெருக்க மலரும், கங்கையும், சந்திரனும் பொருந்துமாறு வைத்துச் சோதி வடிவாய்த் திகழ்பவன். அப்பெருமான் விளங்குகின்ற பதியானது மடைகளின் இடையில் அன்னப் பறவைகள் சேர்ந்து இருக்கத் தாமரைகள் விளங்கும் வயல்களில் பறந்து சென்று தங்கக் கொடைத் தன்மை உடையவர்களும் மறையவர்களும் என்றும் வளர்ந்து பெருகுகின்ற கொச்சைவயம் ஆகும்.

900. படஅரவாடு முன்கை யுடையான் இடும்பை
களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்ட லைக்கை பலிகொள்ளும் இன்பன்
இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞை வண்டு மதுவுண்டு பாடு
நளிர்சோலை கோலுகனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
மறையோது கொச்சை வயமே.

தெளிவுரை : படம் விரித்து ஆடும் அரவத்தைக் கையில் அணிந்துள்ள ஈசன் துன்பத்தைக் களைவிக்கும் எங்கள் பரமன் ஆவான். அப் பெருமான் பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலி ஏற்கும் இன்பத்தைக் கண்டவன். அவன் தமது பதியாக வேர் கொண்டு விளங்குவது, மயில்கள் நடனம் ஆட, வண்டு மதுவுண்டு இசைபாடும் குளிர்ந்த சோலை விளங்கவும், பொற்குடத்தில் ஏறி நாகணவாய்ப் பறவை நன்றாக வேதங்களை ஓதுகின்ற பாங்குடையதும் ஆகிய கொச்சைவயம் ஆகும்.

901. எண்டிசை பாலர்எங்கும் இகலிப்புகுந்து
முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டொளி தீபமாலை யிடுதூபமோடு
பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வருநீரபொன்னி
வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயும்ஓசை படைநீட தென்ன
வளர்கின்ற கொச்சை வயமே.

தெளிவுரை : எட்டுத் திக்குகளிலிருந்தும் அன்பர்கள் போந்து, சிந்தையில் அன்பு உடையவர்களாய் ஒளிமிக்க தீபங்கள் ஏற்றியும், மாலை சாற்றியும், தூபங்களின் மணங்கமழவும் பணிந்து போற்றுகின்றனர். அத்தகைய பரமன் விளங்கும் பதி, காவிரியின் வண்டல் மண் சேரவும், வயல்களில் வாளை மீன்கள் குழுமி விளங்கவும், ஆழமாக உள்ள பள்ளங்களில் தண்ணீர் விழும் ஓசையும் சேர, நீண்ட மட்டைகளை உடைய தென்னை வளரும் கொச்சை வயம் ஆகும்.

902. பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
னொடு தோழமைக் கொள்பகவன்
இனியன அல்லவற்றை இனிதாக நல்கும்
இறைவன்னிடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்கள்ஓமம்
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
நிறைகின்ற கொச்சைவயமே.

தெளிவுரை : இமாசல அரசனுக்கு மருகனாகிய ஈசன் குபேரனொடு தோழமை கொள்ளும் இறைவன் ஆவான். இனிமை அற்றதையும் இனிமையாக நல்குமாறு செய்யும் அப் பரமன் கோயில் கொண்டு விளங்குகின்ற இடமானது, தவ வேந்தர்களாகிய முனிவர் பெருமக்கள் மிகுந்தும், ஓமம் செய்து முனியவர் பெருமக்கள் மிகுந்தும், ஓமம் செய்து வேள்வித் தீயை வளர்க்கின்ற மறைவல்ல அந்தணர்கள் கூடித் திகழ்ந்தும் வேள்வி புரிய, அப் புகையானது நிலவின் ஒளியை மறைக்கின்ற வகையில் வானை மறைத்துத் திகழும் கொச்சைவயம் ஆகும்.

903. புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
உடையான் நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்
நலமா இருந்த நகர்தான்
கலிகெட அந்த ணாளர் கலைமேவு சிந்தை
உடையார்நி றைந்து வளரப்
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
வரைமேவு கொச்சை வயமே.

தெளிவுரை : ஈசன், புலித்தோலையும் கோவணத்தையும் உடுத்துகின்ற ஆடையாக உடையவன். அப் பெருமான், நலிவினைத் தொகுத்துச் செய்த முப்புர அசுரர்களை, நினைத்த மாத்திரத்தில் எரித்துச் சாம்பலாக்கியவன். அவன் நலம் திகழ வீற்றிருக்கும் இடமானது, துன்பங்கள் யாதும் உலகில் நேராதவாறு அந்தணர்கள் சிந்தை கொண்டு வேதம் ஓத, மண்டபங்களும் உயர்ந்த மாடங்களும் உடைய கொச்சைவயம் ஆகும்.

904. மழைமுகில் போலுமேனி அடல்வான் அரக்கன்
முடியோடு தோள்கள் நெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் னடிவைத்த பேயொடு
உடனாடி மேய பதிதான்
இழைவலர் அல்குல் மாதர் இசைபாடி யாட
விடுமூசல் அன்ன குமுகின்
குழைதரு கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள்
அடிதேடு கொச்சை வயமே.

தெளிவுரை : இராவணனுடைய தோள்கள் நெரியுமாறு, கயிலை மலையை எடுத்த பிழைக்காகத் திருப்பாதத்தால் ஊன்றிய, பேய்க் கணத்துடன் மயானத்தில் ஆடிய ஈசன் மேவும் பதியானது, மகளிர் இசை பாடி ஆட விளங்கும் கொச்சைவயம் ஆகும்.

905. வண்டமர் பங்கயத்து வளர்வானும் வைய
முழுதுண்ட மாலும் இகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும்
அறியாத சோதி பதிதான்
நண்டுண நாரை செந்நெல் நடுவேயிருந்து
இறைதேர போது மதுவில்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
வயல்மேவு கொச்சை வயமே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியும் காண முடியாதவாறு சோதியாகிய ஈசன் பதியானது, நண்டு என்னும் இரையை உண்ண, நாரை நெல் வயலிடை இருந்து அதனை நோக்க, தேன் விளங்கும் தாமரையுடன் குமுதமும் மலர்ந்து விளங்கும் வயல்களையுடைய கொச்சை வயம் ஆகும்.

906. கையினில்உண்டு மேனி யுதிர்மாசர் குண்டர்
இடுசீவ ரத்தின் உடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாடவல்ல
விகிர்தத்து உருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறாரமிக்க
குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து
மணநாறு கொச்சை வயமே.

தெளிவுரை : கையில் உணவு ஏந்தி உட்கொண்டும், துவர்ஆடை உடையவராயும் உள்ள சமணர், சாக்கியர்கள் மெய்ம்மை உரையாத வண்ணத்தில், திருவிளையாடல் புரியவல்ல ஈசன், வேறுபாடு காட்டும் செம்மையாகக் காட்சி தரும் விமலராகி வீற்றிருக்கின்ற இடமானது, படம் கொண்ட நாகத்தின் பற்கள் போன்று குரவம் என்னும் பூக்கள் மலரவும் வயல்களில் நீல மலர்கள் விரியவும் நறுமணம் கமழும் கொச்சைவயம் ஆகும்.

907. இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளமேவி வளர்கோயில்மன்னி
இனிதா இருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடுமவர் போய்
அறைகழல் ஈசன்ஆளும் நகர்மேவி யென்றும்
அழகா இருப்ப தறிவே.

தெளிவுரை : இறைவனை, இணை கூற முடியாத ஒளி மேனியுடைய நாதனை, பிரளய காலத்தில் ஏழு உலகங்களும் மறைந்தாலும், அழியாமல் நிலைத்து விளங்கும் கொச்சைவயம் மேவும் ஈசனை, குறைவில்லாத ஞானம் மேவும் இனிமை மிக்க ஞானசம்பந்தர் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், ஈசன் ஆளுகைக்கு உகந்த சிவலோகத்தில் மேவி அழகுடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்.

220 திருநனிபள்ளி (அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

908 காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை
படர்தொடரிகள்ளி கவினிச்
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடமர்ந்த
சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வாரி வயன்மேதிவைகு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : காரை முள்செடிகள், கூகை, முல்லை, ஈகை, படரும் கள்ளிகள் சூழ்ந்துள்ள சுடுகாடு அமர்ந்த சிவபிரான் மேவிய சோலை சூழ்ந்த நகர், தேரைகள் சாய்ந்து துள்ளவும் வாளைகள் குதிக்கவும் நாரைகள் மீன்களை வாரிக் கொத்தவும் எருமைகள் வயல்களில் வைகும் நனிபள்ளி போலும்

909 சடையிடை புக்கொடுங்கி யுளதங்குவெள்ளம்
வளர்திங்கள் கண்ணியயலே
இடையிடை வைத்ததொக்கு மலர்தொத்து மாலை
இறைவன்னிடங்கொள் பதிதான்
மடையிடை வளைபாய முகிழ்வாய் நெரிந்து
மணநாறு நீல மலரும்
நடையுடைய யன்னம்வைகு புனலம் படப்பை
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : சடைமுடியில் புகுந்து ஒடுங்கிய கங்கையும் வளர்கின்ற சந்திரனும் விளங்க, இடையில் கொத்தாக விளங்கும் கொன்றை மாலையும் திகழச் சூடிய இறைவன் வீற்றிருக்கும் இடம் என்பது, வயல்களின் மடையில்  வாளை பாய நீலமலர்கள் நறுமணம் கமழ அன்னப் பறவைகள் நீர்நிலை விளங்கும் தோட்டங்களில் வைகி இருக்கும் நனிபள்ளி போலும்

910 பெறுமலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல்
ஒழிபாடிலாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை
யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின்
விடுபோது அலர்ந்த விரைசூழ்
நறுமலர்அல்லி புல்லி ஒலிவண்டுறங்கு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : பெறுதற்கு அரிய மலர்களைக் கொண்டு தொண்டர்கள் வழிபாடு செய்வது ஓய்வின்றி நடைபெறும் தன்மையில் ஈசன் திகழ, கரிய மலர் போன்ற கண்டம் எனவாகும் தன்மையில் விடமுண்ட நாதன் விரும்பி வீற்றிருக்கும் இடமானது, மலரில் உள்ள தேனை உறிஞ்சிய பிறகு அதனை விட்டு அகன்று செல்லும்போது அசைவுறும் மலர்க் கொம்பு பிறிதொன்றில் சார, அதனால் மலரும் பேதுகளும் கொண்டு விளங்க, வண்டுகள் உறங்கும் நனிபள்ளி போலும்

911 குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு
தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக
உடையான் உகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு கயில்பாடல்கேட்ட
பெடைவண்டு தானு முரல
நளிர்தரு சோலை மாலை நரைகுருகுவைகு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : குளிர்ச்சியான கங்கையைச் சடை முடியில் கொண்டு, தலைமாலையும் அணிந்து, ஒளிவிடும் சந்திரனைச் சூடி, உமாதேவியைப் பாகமாக உடைய ஈசன் உகந்த நகரானது, கொம்பன்ன கருவியின் இசையும், குயிலின் இசையும் கேட்ட வண்டு தானும் இசைத்துப் பழகும் சோலையில், வெண்மையான குருகுகள் மகிழ்ந்து விளங்கும் நனிபள்ளி போலும்

912 தோடொரு காதன் ஆகி யொருகாது இலங்கு
சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடும் எந்தை
இடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று
வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுடன் ஆடு செம்மை ஒலிவெள்ளம்ஆரு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : ஒரு காதில் தோடு அணிந்து, மற்றொரு காதில் குழையும் புரள, சுடுகாட்டினை இடமாகக் கொண்டு கனலை ஏந்தி ஆடுகின்ற எம் தந்தை, மிக விருப்பத்துடன் தமது இடமாக வீற்றிருப்பது அந்தணர்கள் சுப காரியங்களைச் செய்து நித்திய வழிபாடு செய்யும் காலத்தில் கை விரல்களால் நீர் கொண்டு அர்க்கியம் செய்தலும், குடகு நாட்டிலிருந்து கொங்கு நாடு முதலாக செம்மையுடன் ஒலித்து வெள்ளப் பெருக்குடன் வரும் காவிரியின் நலம் சேர்தலும் உடைய நனிபள்ளி போலும்

913 மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து
மலையான் மடந்தை மணிபொன்
ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை
பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடுமந்தி உகளும் சிலம்ப
அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரு புனல்வந்து அலைக்கு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : மேகத்தில் சஞ்சரிக்கும் சந்திரனை மலராக அணிந்து, மலையான் மடந்தையாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு நெருப்பினைக் கரத்தில் ஏந்தும் எந்தை பெருமான் வீற்றிருக்கும் நகரானது, குரங்குகள் குதித்து ஒலியெழுப்ப, அகிலும், பொன்னும், நாகமரங்களும் சந்தன மரங்களும் நீரலைகளால் உந்திக் கரையில் சேர விளங்குகின்ற நனிபள்ளி போலும்

914 தகைமலி தண்டுசூலம் அனலுமிழும்நாகம்
கொடுகொட்டி வீணைமுரல
வகைமலி வன்னி கொன்றை மதமத்தம் வைத்த
பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்த மாலை புனைவார்கள் பூசல்
பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ்கிடக்கை
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : தண்டு, சூலம், அனல் உமிழும் கொடிய விடங்கொண்ட நாகம் ஆகியவை கொண்டு வீணையொலி பரவ, கொடுகொட்டி என்னும் கூத்து ஆடி, வன்னிப்பத்திரம், கொன்றை மாலை, ஊமத்த மலர் ஆகியவற்றைச் சூடிய ஈசன் உகந்த மேவும் நகரானது, வேள்வித் தீயின் புகை பெருகவும், மாலை புனைந்து பணி செய்பவர்கள் ஒலிக்கவும், பாடலால் தோத்திரம் செய்பவர்களும் விளங்க, முத்துக்கள் மணலில் விரவிக் கிடந்து வளம் காட்டும் நனிபள்ளி போலும்

915 வலமிகு வாளன் வேலன் வளைவாள்எயிற்று
மதியா அரக்கன் வலியோடு
உலமிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த
பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழு மேலு நிகராதும் இல்லை
யெனநின்ற நீதி யதனை
நலமிகு தொண்டர் நாளும் அடிபரவல்செய்யு
நனி பள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : வல்லமை மிக்க வாட்படையும் சூலப்படையும் உடைய ஈசன், மதியாத இராவணனைத் தோள்கள் மெலியுமாறு விரலால் அடர்த்த பெருமான் ஆவார் அவர் உகந்த நகர் என்பது, இதற்கு நிகராக உள்ள நகரானது கீழுலகிலும் இல்லை மேலுலகிலும் இல்லை என நின்ற முறையினால், தொண்டர்கள் நாள்தோறும் திருவடியைப் பரவிப் போற்றும் நனிபள்ளி போலும்

916 நிறவுரு வொன்று தோன்றி யெரியொன்றி நின்ற
தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுறு வேத நாவன் அயனோடு மாலும்
அறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லை மௌவல் குளிர்பிண்டி புன்னை
புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச பொதுளி
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : நிறம், வடிவம் எனவாம் பேரொளியாய் நின்ற தன்மையினை நினையாதவர்களாகிய பிரமனும் திருமாலும் அறிய முடியாத அண்ணல், ஈசன் அப்பெருமான் வீற்றிருக்கும் நகர் என்பது, மலர்த் தோட்டங்களில் விரிந்து மேவும் முல்லை, மௌவல், புன்னை, கொன்றை முதலான மலர்கள் திகழ அவற்றின்தாதுக்களிலிருந்து தேன் பெருகும் சிறப்புடைய நனிபள்ளி போலும்

917 அனமிகு செல்கு சோறு கொணர்கென்று கையில்
இடவுண்டு பட்ட அமணும்
மனமிகுகஞ்சி மண்டை அதிலுண்டு தொண்டர்
குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேத நான்கும் விரிவித்த நாவின்
விடையானுகந்த நகர்தான்
நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல்செய்யு
நனிபள்ளி போலு நமர்காள்

தெளிவுரை : சமணர்களும், சாக்கியர்களும் தொண்டு செய் தன்மையில் மேவாது நிற்க, அதனைக் குணமாகக் கொள்ளாது, செயற்பாடு மிகுந்த நான்கு வேதங்களையும் விரித்த நாவன்மை மிக்கவனும், இடப வாகனத்தை உடையவனும் ஆகிய ஈசன் உகந்த நகரானது, தெளிவு மிக்க தொண்டர்கள் நாள்தோறும் திருவடியைப் போற்றித் துதிக்கும் நனிபள்ளி போலும்

918 கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல்
கமழ்காழி யென்று கருதப்
படுபொரும் ஆறுநாலும் உளதாக வைத்த
பதியான ஞான முனிவன்
இடுபறை யென்ற அத்தர் பியன்மேலிருந்தின்
இசையால் உரைத்த பனுவல்
நடுஇருள் ஆடும் எந்தை நனிபள்ளிஉள்க
வினைகெடுதல் ஆணை நமதே

தெளிவுரை : கடலின் ஓதம் பெருகிய சோலைகள் சூழ்ந்த நறுமணம் விளங்கும் காழியில், நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் விரித்தவன் பரமன் அப்பதியில் விளங்கும் ஞானமுனிவனாகிய திருஞானசம்பந்தர் தமது தந்தையாரின் திருத்தோளின் மீது வீற்றிருந்து இசை விளங்க உரைத்த இத் திருப்பதிகத்தைக் கொண்டு நள்ளிருளில் நடம் புரியும் எந்தையாகிய ஈசன் வீற்றிருக்கும் நனிபள்ளியினை நினைத்துத் தியானிக்க வினை யாவும் கெடும் இது நமது ஆணையாகும்

திருச்சிற்றம்பலம்

221 பொது

திருச்சிற்றம்பலம்

919 வேயுறு தோளி பங்கன் விடமுண்டகண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம்வெள்ளி
சனிபாம்பி ரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

தெளிவுரை : மூங்கிலை ஒத்த மென்மையான தோள்களையுடைய உமாதேவியைப் பாகம் கொண்டுள்ள ஈசன், விடத்தை உண்டு, தேக்கிய கண்டத்தனாய், மிக நல்ல வீணையை மீட்டும் எழில் இசை காண்பவனாய், மாசில்லாத சந்திரனும் கங்கையும் முடியின் மீது அணிந்து எனது உள்ளத்தில் புகுந்துள்ளனன் அதனால் நவக்கிரகங்களாகிய சூரியன், சந்திரன் , அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றால் உண்டாகும் தீமைகள் இல்லை அவை குற்றமற்ற நல்ல பயன்களைத் தரவல்லன ஈசனின் அடியவர்களுக்கு அவை மிகுதியாக, விளங்கும் நல்லவையே தரக்கூடியவை ஆகும்

920 என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றோடு ஏழு பதினெட்டோடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : எலும்பு, பன்றிக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைச் சேர்த்து மார்பில் ஆரமாகத் திகழ இடப வாகனத்தில் ஏறி, உமா தேவியை உடனாகக் கொண்டு , பொன் போன்ற கொன்றை மாலையும், ஊமத்த மலரும், கங்கையும் சூடி, என் உள்ளத்தில் வந்து புகுந்தனன் ஈசன் அதனால், ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, திருவாதிரை மற்ற நாள்களாக உள்ள பரணி, கிருத்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி ஆகியனவும் அன்புடன் நல்லதாகி, அடியவர்களுக்கு மிகவும் நல்லதாக அமையும்

921 உருவளர்பவளமேனி ஒளிநீறு அணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைதூர்தி செயமாது பூமி
திசைதெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : பவளம் போன்ற அழகு திகழும் திருமேனியில் ஒளிரும் திருநீறு அணிந்து, உமாதேவி உடனாக விளங்க, வெண்மையான இடப வாகனத்தில் ஏறி, அழகிய கொன்றை மலரும் திங்களும் முடியின் மீது தரித்து, என் உள்ளத்தில் ஈசன் புகுந்தனன் அதனால், திருமகள், துர்க்கை, ஜெயமகள், அட்டதிக்குப் பாலகர்கள் மற்றும் பூமியை இயங்கச் செய்யும் அதிதேவதை  தெய்வங்கள், அரியதாகிய செல்வங்கள் யாவும் நன்மை செய்யவல்லன அடியவர்களுக்கு அவை மிக்க நன்மையாய் விளங்குவன

922 மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன் றைமாலை முடிமேல் அணிந்தேன்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : திருமுடியில் சந்திரனைச் சூடி, உமாதேவியை உடனாகக் கொண்டு , கல்லால மரத்தின்கீழ் இருந்து, சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள்களை உபதேசித்த எங்கள் பரமன், கங்கை தரித்துக் கொன்றை மாலையை முடியின்மேல் அணிந்து என் உள்ளத்தில் புகுந்தனன் அதனால் சினம் மிகுந்து உறுகின்ற காலன், அக்கினி, இயமன், இயமனுடைய தூதர்கள், கொடிய நோய்கள் முதலான பலவும் நற்குணத்தின் வயப்பட்டு நல்லனவாகும் அவை அடியவர்களுக்கு மிக்க நல்லனவாகும்

923 நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும்மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : நஞ்சினை அணிபோன்று கண்டத்தில் கொண்ட என் தந்தை உமாதேவியோடு இடப வாகனத்தில் வீற்றிருக்கும் எங்கள் பரமன் ஆவார் அப்பெருமான், கரும்பச்சை வண்ணத்தையுடைய வன்னி, கொன்றை மலர் ஆகியவற்றை முடியின் மீது அணிந்து என் உள்ளம் புகுந்தனன் அதனால், கொடிய சினத்தையுடைய அசுரர்களும், வறுமையாகிய இல்லாமை என்னும் கொடுமையும், மின்னல்போன்று தோன்றுட மிகைகொண்டு செய்யும் பூதங்களும் எமக்குத் தீயது செய்ய அஞ்சும்; அது நன்மையாக உள்ளவற்றைப் புரியும் அடியவர்களுக்கு அவை மிகவும் நன்மையாகும்

924 வாள்வரிய தளதாடை வரிகோவ ணத்தர்
மடவாள்த னோடும் உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல்
கொடு நாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : ஒளிமிக்க வரிகளையுடைய புலியின் தோலை ஆடையாகக் கொண்டு, வரித்த கோவணத்தை உடைய ஈசன், உமையவனைப் பாகங்கொண்டு, வன்னிப் பத்திரம், கொன்றை மலர், கங்கை ஆகியவற்றைத் தரித்து என் உள்ளத்தில் புகுந்தனன் அதனால், சிங்கம், புலி, கொலை யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியன யாவும் நெருக்கமாக உள்ள துணையாள் போன்று, நல்லதானவற்றைச் செய்யவல்லது அவை அடியவர்களுக்கு மிகுந்த நல்லவையாய விளங்கும்

925 செப்பிளமுலைநன் மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்புமுடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு இடப வாகனம் ஏறும் செல்வனாகிய ஈசன், அடைக்கலம் ஆகிய இளைய பிறைச் சந்திரனும் கங்கையும் முடியின் மீது அணிந்து என் உள்ளத்தில் புகுந்தனன் அதனால், வெம்மையுடைய குளிர், வாதம், பித்தம் முதலான நோய்களைத் தரும் வாத பித்த சிலேத்தும நாடிகள், தமது இயல்பிலிருந்து திரியாமல், அத்தகைய நன்மை விளைவிக்கும் அடியவர்களுக்கு அவை மிகுந்த நன்மையினைச் செய்யும்

926 வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : மன்மதனை நெற்றிக்கண்ணால் நோக்கி, இடப வாகனத்தில் உமாதேவியுடன் வீற்றிருந்து ஒளி மிக்க சந்திரனும் வன்னி, கொன்றை மலர் சூடி வந்து, ஈசன் என் உள்ளம் புகுந்தனன் அதனால், கடல் சூழ்ந்த இலங்கையின் வேந்தனாகிய இராவணனோடும் சூழ வரும் இடர் ஏதும், வந்து நலியுறச் செய்யாது ஆழ்கடலும் நல்லதாய் அமையும் அவை அடியறவர்களுக்கு மிகவும் நல்லதாகும்

927 பலபல வேட மாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனு மாலுமறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : பலவாகிய திருவடிவங்களில் தோன்றிய பரமன் உமாதேவியைப் பாகமாக உடையவன் அப்பெருமான் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் எங்கள் பரமன் அவன் கங்கையினையும் எருக்கம் பூவினையும் முடியின்மேல் அணிந்து என் உள்ளம் புகுந்தனன் அதனால், தாமரை மலர் மீது விளங்கும் பிரமனும், திருமாலும், வேதங்களும், தேவர்களும் மற்றும் வருகின்ற காலங்கள் பலவும், அலை கொள்ளும் கடல், நிலைத்து மேவும் மேருமலை என யாவும், நல்லனவே ஆகும் அடியவர்களுக்கு அவை மிகவும் நன்மை உடையனவாகும்

928 கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : கொத்தாக விளங்கும் கூந்தலுடைய உமாதேவியுடனாகி வர, விசயனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரம் வழங்கும் தன்மையில் வேடுவத் திருக்கோலம் பூண்ட விகிர்தனாகிய ஈசன், ஊமத்த மலர், பிறைச்சந்திரன், நாகம் ஆகியன முடியின் மீது அணிந்து, என் உள்ளம் புகுந்தனன் அதனால், புத்தர்களையும் சமணர்களையும் வாதிட்டு அழிக்கும் அண்ணலாகிய பரமனின் திருநீறு, செம்மை மிக்கதும் திடம் கொண்டதும் ஆகி, விளங்குகின்ற அத்தகைய நல்லதாகும் அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லவை யாகும்

929 தேனமர்பொழில் கொள் ஆலை விளைசெந்நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளு நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே

தெளிவுரை : தேன் விளங்கும் பொழிலும், கரும்பாலையும், நெல் விளைச்சலும் வளரும் செம்பொன் பெருக, நான்முகனால் வழிபடப்பெற்ற ஆதியாகிய பிரமாபுரத்தில் விளங்கும், வேதஞானத்தில் வல்ல ஞான முனிவனாகிய திருஞானசம்பந்தர், சூரியன், சந்திரன், அங்காரகன் முதலான ஒன்பது கிரகங்களினாலும், அசுவினி முதல் ரேவதி வரையிலான இருபத்தேழு நட்சத்திரங்களாலாகிய நாளினாலும் அடியவர்கள் தீமையால் நலியாதவண்ணம் உரை செய்தனர் இத்தகைய இத் திருப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசாளும் பேறு பெறுவர் இது நமது ஆணை

திருச்சிற்றம்பலம்

222 திருநாரையூர் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

930 உரையினில்வந்த பாவம் உணர்நோய்களும்ம
செயல்தீங்கு குற்றம் உலகில்
வரையி னிலாமை செய்த அவைதீரும் வண்ண
மிக ஏத்தி நித்த நினைமின்
வரைசிலை யாக அன்று மதில்மூன்று எரித்து
வளர்கங் குல்நங்கை வெருவத்
திரைபொலி நஞ்சம் உண்ட சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : வாக்கால் தீமை பயக்கும் சொற்களைக் கூறி அதனால் வந்த பாவங்கள், மனத்தில் தோன்றுகின்ற தீய எண்ணங்களால் உண்டாகும் பாவங்கள், செயல் ஆற்றுதல் தொடர்பாகப் பிறர்க்குத் தீமை உண்டாகுமாறு செய்யும் குற்றங்கள் எல்லையின்றி செய்தல் என்பது மனிதரின் இயல்பாதலும் உண்டு அதனால் தீவினை பெருகுதல் ஆயின எனவே, மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் சேரும் வினைகள் தீரும் வண்ணம் ஈசனை ஏத்தி நித்தமும் நினைமின் மேரு மலையை வில்லாகக் கொண்டு, மூன்று மதில்களை எரித்து, உமாதேவி வெருவக் கடல் நஞ்சினை உட்கொண்ட சிவபெருமான், மேவி விளங்கும் செல்வச் சிறப்புடைய திருநாரையூரைக் கை தொழுது போற்றுமின்

931 ஊனடைகின்ற குற்றம் முதலாகி யுற்ற
பிணிநோய் ஒருங்கும் உயரும்
வானடை கின்ற வெள்ளை மதிசூடு சென்னி
விதியான வேத விகிர்தன்
கானிடை யாடி பூதப் படையான் இயங்கு
விடையான் இலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : உயர்ந்த வானிடை விளங்குகின்ற திங்களைச் சூடியுள்ள வேத நாயகனாகிய விகிர்தன், மயானத்தில் நடம்புரிபவன்; பூதகணங்களைப் படையாக உடையவன்; இடப வாகனத்தில் விளங்குபவன்; அப்பெருமான், மலர்கள் சூடியுள்ள தன்மையில் வண்டுகள் பாடுகின்ற சடை முடியுடைய அண்ணல் வீற்றிருக்கும் திருநாரையூரைக் கைதொழுது போற்ற, மனிதப் பிறவியின் காரணமாக அழுக்கு தேகத்தின் வயத்தால் விளையும், பிணிகளும் வினைகளும் கெடும்

932 ஊரிடை நின்று வாழும் உயிர்செற்ற காலன்
துயருற்ற தீங்குவிரவிப்
பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை
ஒழிவுற்ற வண்ணம் அகலும்
போரிடை யன்று மூன்று மதில்எய்த ஞான்று
புகழ்வானு ளோர்கள் புணரும்
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : பகைமை கொண்ட முப்புரங்களை எரிசெய்து சாம்பலாக்கிய காலத்தில், தேவர்கள் புகழுமாறு தேரின்மீது நின்ற எந்தை பெருமானாகிய ஈசன் இருந்த திருநாரையூர் என்னும் திருத்தலத்தைத் தொழுது போற்ற, ஊரில் நின்று வாழ்கின்ற உயிர்களைப் பகைத்துத் துன்புறுத்த நேரும் துயரும் பழியும் நீங்கும்

933 தீயுற வாய ஆக்கை யதுபற்றி வாழும்
வினை செற்ற வுற்ற உலகின்
தாயுறு தன்மை யாய தலைவன்தன்நாமம்
நிலையாக நின்று மருவும்
பேயுற வாய கானில் நடமாடி கோல
விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : பேய்கள் விளங்கி உறவு கொள்ளும் மயானத்தில் நடம் புரிந்து மேவும் நீலகண்டன், திருமுடியின் மீது பிறைச் சந்திரனை வைத்து உகந்தவன் சிவபெருமான் அப்பெருமான் மேவியுள்ள செல்வம் மிக்க திருநாரையூர் என்னும் பதியைத் தொழுது போற்ற, தீமையின் உறவாகிய தன்மையில் பற்றிய வினை கழியும்; இவ்வுலகிற்குத் தாயாய் விளங்கும் தலைவனாகிய அப்பரமன், திருநாமத்தை நிலையாகப் பற்றி மருவும்; சிறப்புறும்

934 வசையப ராதமாய உவரோத நீங்கும்
தவமாய தன்மை வரும்வான்
மிசையவர் ஆதியாய திருமார்பிலங்கு
விரிநூலர் விண்ணு நிலனும்
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி
அமையாத காதலொடு சேர்
திசையவர் போற்றநின்ற சிவன் மேயசெல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : வானவர்களின் ஆதிப்பிரான் ஆகியும், திருமார்பில் முப்புரிநூல் அணிந்தவர் ஆகியும், விண்ணுலகமும் பூவுலகமும் புகழ்ந்து போற்ற, தேவர்கள் ஏத்த அன்பின் பெருக்கத்தினால் எண்திசைகளில் உள்ளவர்களெல்லாம் போற்ற நின்று மேவும் சிவபெருமானை வீற்றிருக்கும் செல்வம் மிக்க திருநாரையூரைக் கைதொழுது போற்ற, தீவினையின் ஈட்டமாக உள்ள கடல் போன்ற குற்றமும் தவம் என்னும் செம்மையாக மருவி, வந்து துணை நிற்கும்

935 உறைவளர் ஊனிலாய உயிர்நிற்கும் வண்ணம்
உணர்வாக்கும் உண்மை உலகில்
குறைவுலவாகி நின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன் மாவின் உரிபோர்த்த மெய்யன்
அரவார்த்த அண்ணல் கழலே
திறைவளர் தேவர் தொண்டின் அருள்பேண நின்ற
திருநாரையூர் கை தொழவே

தெளிவுரை : வேதத்தை விரித்தோதிய திருநாவும், யானையின் தோலை உரித்துப் போர்த்திய திருமேனியும் கொண்டு, அரவத்தையுடைய அண்ணலாகியவர் சிவபெருமான் தேவர்கள் எல்லாம் பேணி நிற்கும் அப்பெருமான் வீற்றிருக்கும் திருநாரையூர்க் கை தொழுது போற்ற, இத்தேகத்தில் உறைவிடமாக மேவும் உயிர், நன்கு விளக்கும் அழகிய வடிவம் கொடுக்கும்; மெய்ம்மை உணராது நின்ற அஞ்ஞானத்தைப் போக்கி, மாய இருளை நீக்கும்; நெஞ்சில் நிறைவு  சேரும்; தேசத்தையும் அது வளர்க்கும்

936 தனம்வரும் நன்மையாகும் தகுதிக்குழந்து
வருதிக் குழன்ற உடலின்
இனம்வளர் ஐவர் செய்யும் வினயங்கள் செற்று
நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலமூன்று புரம்வெந்து மங்கச்
சரமுன் றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : முப்புரங்கள் வெந்து சாம்பலாகுமாறு சரம் தொடுத்து அசுரர்களையும் அழித்த சிவபெருமான் மேவி விளங்குகின்ற செல்வம் மல்கும் திருநாரையூரினைத் தொழுது நிற்க, தனம் வரும்; நன்மை யாவும் கைகூடும்; பெருமை உண்டாகும்; உடலில் பதிந்து மேவும் ஐம்புலங்கள் செய்யும் நயம் அல்லாதவற்றை அடக்கி, ஒன்றிய சிந்தனை பெருகி இறையருளைச் சேர்விக்கும்

937 உருவரை கின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்ற
நனியஞ்சு மாதல்உற நீர்
மருமலர்தூவி யென்றும் வழிபாடு செய்ம்மின்
அழிபாடி லாத கடலின்
அருவரை சூழ்இலங்கை அரையன்றன் வீரம்
அழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்து கந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : அழிதல் இல்லாத கடலும், அரிய மலைகளும் சூழ்ந்த இலங்கை வேந்தனின் வீரம் அழிய அவன் வலிமையான கைகளும் முடிகளும் நெரித்துத் திருப்பாத விரலால் கயிலை மலையை ஊன்றிய சிவபெருமான் மேவி விளங்கும் செல்வம் மல்கிய திருநாரையூரைத் தொழ, தேகமானது தளர்ந்து இருக்கும் காலத்திலும் கூற்றுவன் உயிரைக் கவர்ந்து செல்ல அச்சம் கொள்வான் எனவே, மலர் தூவி ஈசனை வழிபாடு செய்ம்மின்; அது நன்மை தரும் என்பதாம்

938 வேறுயர் வாழ்வு தன்மை வினைதுக்க மிக்க
பகைதீர்க்கு மேய உடலில்
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற
கரவைக் கரந்து திகழும்
சேறுயம் பூவின் மேய பெருமானும் மற்றைத்
திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகும் சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : தாமரை மலர்மீது திகழும் பிரமனும், திருமாலும் தேடியபோது சோதிப் பிழம்பாகத் தோன்றிய சிவபெருமான், மேவி விளங்கும் செல்வம் மல்கிய திருநாரையூரைத் தொழுது வணங்க, வேறாகி உயர்ந்து விளங்குகின்ற தன்மையில், பேரின்ப வாழ்வு அமையும்; தீவினையால் நேரும் துயரமும் பகையும் தீரும்; உடற் பிணி தீரும்; சிந்தை தெளிவுண்டாகும்; தெளிவு ஏற்படுவதை மறைக்கும் அஞ்ஞானம் நீங்கும்

939 மிடைபடு துன்பம் இன்பம் உளதாக்கும் உள்ளம்
வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்
ஒலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரும் உடல்போர்த்துளோரும்
உரைமாயும் வண்ணம் அழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே

தெளிவுரை : ஒரு கரத்தில் சூலப் படை கொண்டு, கபாலம் ஏந்திப் பலிகொள்ளும் வண்ணம் பாடியும் ஆடியும் விளங்கி, சமணர் சாக்கியர்தம் வண்ணம் அழியுமாறு செய்த சிவபெருமான் மேவி விளங்குகின்ற செல்வம் மல்கிய திருநாரையூரைத் தொழ, இன்பமும் துன்பமும் கலந்து திகழும் உள்ளத்தை ஞானத்தின் வயமாய் முன்னின்று உணர வைக்கும்

940 எரியொரு வண்ணமாய உருவானை எந்தை
பெருமானை யுள்கி நினையார்
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
உரைமாலை பத்து மொழிவார்
திருவளர் செம்மையாகி அருள்பேறு மிக்க(து)
உளதென்பர் செம்மை யினரே

தெளிவுரை : தீப் பிழம்பாகிய வண்ணத்தில் மேவும் எந்தை பெருமான், நினைத்து வணங்கித் துதியாத முப்புர அசுரர்களைத் செற்ற சிவபெருமான் ஆவார் அப் பெருமான் மேவிய செல்வம் மல்கிய திருநாரையூரினைத் தொழும், புனல் சூழ்ந்த காழிப்பதியில் மேவும், மறைவல்ல ஞானசம்பந்தர் உரை செய்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், பொருட் செல்வப் பேறும் அருள் பேறும் மிகுந்து, யாவும் உடையவர் என்னும் செம்மையில் நிலவுலகில் திகழ்வார்கள்

திருச்சிற்றம்பலம்

223 திருநரையூர்ச்சித்தீச்சரம் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

941 நேரியனாகுமல்லன் ஒருபாலு மேனி
அரியான் முனாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
உறுதீயும் ஆய நிமலன்
ஊரியல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த
நல்குண்டு பண்டு சுடலை
நாரியொர் பாகமாக நடமாட வல்ல
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : எல்லாம் பொருந்தி விளங்குபவனாகவும், அவ்வாறு இல்லாதவனாகவும் திருமேனியை ஒருபால் தோற்றப் பொலிவு செய்யாதவனாயும், பேரொளி உடையவனாயும், நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என ஐம்பூதங்களும் ஆகியவன் ஈசன் அப்பெருமான், நின்மலனாக விளங்குபவன்; ஊர் தோறும் சென்று பிச்சை ஏற்று உண்டு, உலகங்கள் போற்ற, உமாதேவியைப் பாகமாகக் கொண்டு, சுடலையில் நடனம் ஆட வல்லவன் அவன் நறையூரில் வீற்றிருக்கும் சிவனேயாவான்

942 இடமயில் அன்னசாயல் மடமங்கை தன்கை
எதிர்நாணி பூண வரையில்
கடுமயில் அம்பு கோத்து எயில்செற்றுகந்து
அமரர்க்கு அளித்த தலைவன்
மடமயில் ஊர்தி தாதை எனநின்று தொண்டர்
மனநின்ற மைந்தன் மருவும்
நடமயில் ஆலநீடு குயில்கூவு சோலை
நறையூரில் நம்பன் அவனே

தெளிவுரை : மயில் போன்ற சாயலையுடைய உமாதேவி இடப்பாகத்தில் பொருந்தி விளங்க, மேருமலையினை வில்லாகக் கொண்டு வாசுகி என்ற பாம்பினை நாணாகப் பூட்டி, கடுமையான கூரிய அம்பினைக் கோத்து, முப்புர அசுரர்களைச் செற்று அடர்த்துத் தேவர்களுக்கு நல்ல வாழ்க்கையினை அளித்த தலைவன், ஈசன் அவர், மயில் வாகனத்தை உடைய குமரவேளின் தந்தை திருத்தொண்டர் மனத்தில் மகிழ்ந்து மேவும் அழகர் அப்பெருமான் மயில்கள் அசைந்து நடம்புரியக் குயில்கள் கூவும் சோலை திகழும் நறையூரில் வீற்றிருக்கும் சிவனே

943 சூடக முன்கை மங்கை ஒருபாக மாக
அருள்கார ணங்கள் வருவான்
ஈடக மான நோக்கி யிடுபிச்சைகொண்டு
படுபிச்சன் என்று பரவத்
தோடக மாயொர் காதும் ஒருகாதிலங்கு
குழைதாழ வேழ உரியன்
நாடக மாக ஆடி மடவார்கள் பாடு
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : கையில் வளையல் அணிந்துள்ள உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குமாறு வரும் பெருமான், பெருமை மிக்க இல்லங்கள் தோறும் சென்று பிச்சை ஏற்றுப் பிட்சாடனர் எனப் பரவப் படுபவன்; ஒருகாதில் தோடும், மற்றொன்றில் குழையும் அணிந்தவன்; யானையின் தோலை உரித்தவன் அப்பெருமான், மகளிர் புகழ்ப் பாக்களைப் பாடியும் அதற்கேற்ப ஆடியும் விளங்கும் நறையூரில் வீற்றிருக்கும் சிவனே ஆவான்

944 சாயல்நல் மாதொர் பாகன் விதியாய சோதி
கதியாக நின்ற கடவுள்
ஆயகம் என்னுள் வந்த அருளாய செல்வன்
இருளாய கண்டன் அவனித்
தாயென நின்றுகந்த தலைவன்விரும்பு
மலையின்கண் வந்து தொழுவார்
நாயகன் என்றி றைஞ்சி மறையோர்கள் பேணு
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : நற்சாயல் கொண்ட உமாதேவியை பாகமாகக் கொண்டு, விதிக்கும் பரமனாகவும் கதி தரும் நாதனாகவும் விளங்கும் ஈசன், ஆயும் என் உள்ளத்துள் வந்து தங்கிய அருளாகிய செல்வன், நீல கண்டனாகிய அப்பெருமான், உலகத்தின் தாய் என மேவி மகிழும் தலைவன் அவன் விரும்பும் பதியன்கண் தொழுபவர்களுக்கு, நாயகனாய் நின்று நன்கு அருள்பாலிக்க, மறையவர்கள் பேணும் நறையூரில் வீற்றிருக்கும் ஈசன் அவனே

945 நெதிபடு மெய்யெம் ஐயன் நிறைசோலை சுற்றி
நிகழ்அம் பலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன்
எமர்கற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட வந்திவந்து வயல்வாளை பாயும்
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : தியானம் செய்யப்படும் எம் தலைவன், சோலை சூழ்ந்த அம்பலத்தில் திருநடனம் புரியும் தேவர் தலைவனாயும் எமக்குச் சுற்றமாகவும் விளங்கும் இறைவன் அப்பரமன், சந்திரனை, முடியில் ஒளிர்ந்து விளங்கும் சடை முடியில் பொருந்தி, இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து, பலி கொள்பவனாகி, வாளை பாயும் நீர் வளம் கொண்ட நறையூரில் வீற்றிருக்கும் சிவன் ஆவான்

946 கணிகையொர் சென்னி மன்னு மதுவன்னி கொன்றை
மலர்துன்று செஞ்சடையினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேத வோசை அகல்அங்கம் ஆறின்
பொருளான ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர்தூவி யேத்து
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : தலைமுடியில் கங்கையும், தேன் மணக்கும் கொன்றை மலர், வன்னி ஆகியவற்றை விளங்கும் வண்ணம் தரித்த சிவந்த சடையுடைய ஈசன், பணிந்து வணங்குபவர்கள் மகிழுமாறு காட்சி நல்குகின்ற பரமன் அவன் வேதங்களும் அவற்றி விரிவாக்கமாகிய ஆறு அங்கங்களும் புகலும் பொருளாகியும், ஆதியாகியும், அவ்வருள் வயத்தால் தொண்டர் கூடி மலர் தூவி ஏத்திப் பரவுதல் செய்யும் நறையூரில் வீற்றிருக்கும் சிவனே ஆவான்

947 ஒளிர்தரு கின்றமேனி உருவெங்கும் அங்கம்
அவைஆர ஆடல் அரவம்
மிளிர்தரு கையிலங்க அவல்ஏந்தி யாடும்
விகிர்தன் விடங்கொள் மிடறன்
துளிதரு சோலை யாலை தொழில்மேவ வேதம்
எழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேரு மாட மடவார்களாரும்
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : ஈசன் ஒளிர்ந்து மேவும் திருமேனியுடையவாகி விளங்க, அவ்அங்கத்தில் ஆரப் பொருந்திய அரவமானது தவழ விளங்குகின்றது அவ்வாறே ஒளி மிளிரும் திருக்கரத்தில், நெருப்பேந்தி ஆடல் புரியும் விகிர்தனாய், நஞ்சினைக் கண்டத்தில் கொண்டுள்ளவன் அப் பரமன் தேன்மணங்கமழும் சோலைகளும், கரும்பாலையின் தொழில்களும், வேதகீதங்கள் ஓதுதலும், யாவற்றிலும் இறையருள் பதிந்துள்ளதால் சேரும் எழில மிக்க வெற்றியும் கொண்டு விளங்க, திங்கள் ஒளி சேர் மாடங்களில் மகளிர்கள் கூடிமகிழும் நறையூரில் வீற்றிருப்பவன் சிவனே ஆவான்

948 அடல்எரு தேறுகந்த அதிரும் கழல்கள்
எதிரும் சிலம்பொரு இசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
முனிவுற்று இலங்கை அரையன்
உடலொடு தோளனைத்து முடிபத்து இறுத்தும்
இசைகேட்டு இரங்கி ஒருவாள்
நடலைகள் தீர்த்து நல்கி நமையாள வல்ல
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : வலிமை மிகுந்த இடபத்தை வாகனமாகக் கொண்டு ஒலித்து மேவும் கழலும் சிலம்பும் பொருந்திப் பாதங்களில் விளங்க, நஞ்சு உண்டு கருணாலயனாய்த் தேவர்களைக் காத்தருளிய நீலகண்டனாகிய ஈசன், சினங்கொண்ட இராவணனின் உடலும் தோளும் முடியும் துன்புறுமாறு செய்து, பின்னர் அவன் இசைத்துச் சாமவேதத்தால் போற்றி வணங்க, இரக்கம் உற்று ஒப்பற்ற மந்திர வாளை வழங்கித் துன்பம் தீர்த்தவன் அப் பரமன் நம்மை ஆட்கொண்டு அருளவல்ல நறையூரில் வீற்றிருக்கும் சிவன் ஆவார்

949 குலமார் மேவினானு மிகுமாயனாலும்
எதிர்கூடி நேடி நினைவுற்று
இலபல எய்தொணாமை எரியாய் உயர்ந்த
பெரியான் இலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைகள் பேச
வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : பிரமனும் திருமாலும் ஒருவர்க்கொருவர் இணைந்து தேடிச் சென்று காண இயலாது, பின்னர் ஏத்திப போற்ற, இன்னதென்று கூ முடியாதவாறு தீப் பிழம்பாய் உயர்ந்த பெரியோனாகியவன், சடை முடியுடைய ஈசன் அப் பெருமான், அணுக்கத் தொண்டர்களும் வழிபடும் தொண்டர்களும் பெருமை மிக்க புகழ் போற்றும் நெறியில் நிற்க, மேகங்களின் வாசம் மிகவாய் விளங்கும் வீதிகளை உடைய நறையூரில் வீற்றிருக்கும் சிவன் ஆவான்

950 துவருறு கின்றஆடை உடல்போர்த் துழன்ற
அவர்தாமும் அல்ல சமணும்
கவர்உறு சிந்தை யாளர் உரைநீத்துகந்த
பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்று கோயில் ஒளிபொன்செய் மாட
நறையூரின் நம்பன் அவனே

தெளிவுரை : துவராடை பொலிய விளங்குகின்ற சாக்கியரும், சமணரும் சிதறிய மனத்தினராய் ஐயம் கொண்டு நல்லுரைகளை நீத்து நிற்க, ஈசன், ஒளிமிக்க சடையுடையவனாய், தவவேந்தர்களும், பக்தர்களும், சித்தர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் பேணி நிற்க, நெறிமுறையில் விளங்கி மேவும் மாதர்கள் புகழ்ப் பாடல்களைப் பாடிப் போற்ற நவமணிகளால் அலங்கரிக்கப்பட்ட கோயிலும் ஒளிமேவும் அழகிய மாடங்களும் உள்ள நறையூரில் வீற்றிருப்பவன் சிவபெருமான்

951 கானல்உலாவி யோதம் எதிர்மல்கு காழி
மிகுபந்தன் முந்தி யுணர
ஞானம் உலாவு சிந்தை யடிவைத்து கந்த
நறையூரின் நம்பன் அவனை
ஈனம்இலாத வண்ணம் இசையால் உரைத்த
தமிழ்மாலை பத்து நினைவார்
வானநி லாவ வல்லர் நிலமெங்கு நின்று
வழிபாடு செய்யு மிகவே

தெளிவுரை : கடற்கரைச் சோலையில் கடலின் ஓதம் மல்கும் காழியில் மேவும் ஞானசம்பந்தர், ஞானம் திகழும் சிந்தையால், நறையூரில் விளங்கும் சிவபெருமானை நண்ணி மகிழ்ந்து, குறைவு இல்லாதவாறு இசையால் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், இந்நிலவுலகில் எல்லா இடங்களையும் அடைந்து வழிபடும் சிறப்புப் பெறுவர்; மிக்க புகழுடன் விளங்குவர்

திருச்சிற்றம்பலம்

224 தென்திருமுல்லைவாயில் (அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

952 துளிமண்டியுண்டு நிறம்வந்தகண்டன்
நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி உம்பர் உலகம் கடந்த
உமைபங்கன் எங்கள் அரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த
கமலங்கள் தங்கு மதுவில்
தெளிமண்டியுண்டு சிறைவண்டு பாடு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : நஞ்சினை உண்டு கரிய கண்டத்தை உடைய ஈசன், நடம் புரிபவன்; சூரியன் ஒளியையும் விஞ்சிய ஒளி விளங்க, தேவர் உலகத்தையும் கடந்தவன்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவன்; எங்கள் அரன் அப்பெருமானுடைய ஊரானது, மகிழ்வு தரும் சோலையும், கழனிகளில் சேர்ந்து மலரும் தாமரை மலர்களில் உள்ள தேனைத் தெளிவாக உண்டு மகிழும் சிறகுகளை உடைய வண்டுகள் பாடவும் திகழும் திருமுல்லைவாயில் ஆகும்

953 பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்
அயனைப் படைத்த பரமன்
அரவத் தொடுஅங்கம் அவைகட்டி எங்கும்
அரவிக்க நின்ற அரன்ஊர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி
அவை யோதமோத வெருவித்
தெருவத்தில் வந்து மெழுமுத் தலைக்கொள்
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு உரிய காலத்தில் பயனையும் அதன் வழி அமையப் பெறும் பேரின்ப நிலையையும் தரும் ஈசன், பிரமனைப் படைத்த இறைவன் அப் பெருமான் அரவத்தைத் தமது அங்கத்தில் பதியுமாறு பொருந்தக் கட்டி நடம் புரியும் பேராரவாரம் கொண்டவன் அத்தகையவன் விளங்குகின்ற ஊரானது, பெரிய வடிவம் கொண்டு மேவும் சங்குகளும் முத்துக்களும் கடலின் ஓதத்தால் மோதிக் கரை வழியே தெருவில் வந்து செழுமையோடு விளங்கும் திருமுல்லைவாயில் ஆகும்

954 வாராத நாடன் வருவார்தம் வில்லின்
உருமெல்கி நாளும் உருகில்
ஆராத இன்பன் அகலாத அன்பன்
அருள்மேவி நின்ற அரன்ஊர்
பேராத சோதி பிரியாத மார்பின்
அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதிநேர நீடு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : மீண்டும் திரும்ப வருவதற்கு அமையாத பேரின்ப உலகின் நாயகனானவன் ஈசன் வானவில்லைப் போன்று தோன்றி மறையும் தன்மையும் நலிவும் உடையது இவ்வுடம்பு ஆயினும், ஆராத பக்தி பூண்டு, நாளும் கருதி அப் பெருமானைப் போற்றித் துதிக்க இன்பத்தை நல்குபவனாய், அன்பு கெழுமியவனாய், அருளுடன் திகழ்பவன் அவன் வீற்றிருக்கும் ஊரானது, நிரந்தரமாக ஒளி மேவி, திருமாலின் திருமார்பில் பிரியாது விளங்கும் திருமகளானவன், பெரு விருப்பத்துடன் செல்வச் செழிப்பினை நீடு வழங்கும் திருமுல்லைவாயில் என்பது ஆகும்

955 ஒன்றுஒன்றொடு ஒன்றும் ஒருநான்கொடு ஐந்தும்
இருமூன்றொடு ஏழும் உடனாய்
அன்றின்றொடு என்றும் அறிவான வர்க்கும்
அறியாமை நின்ற அரனூர்
குன்று ஒன்றொடு ஒன்று குலையொன்றொடு ஒன்று
கொடி யொன்றொடு ஒன்று குழுமிச்
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : 25 தத்துவங்கள் என்று சொல்லப்படும் தன்மையில் அன்று, இன்று, என்றும்  என, முக்காலத்திலும் அரனுடைய ஊரானது, குன்றொத்த மதில்களும், குலைகளை ஈனும் குமுகு தென்னை போன்ற மரங்களும், தோரணங்கள் உயர்ந்து மேவும் மாட மாளிகைகளும் அழகுடன் ஒன்றுக்கொன்று சிறப்புடன் திகழும் திருமுல்லைவாயில் என்னும்பதியாகும்

956 கொம்பன்ன மின்னின் இடையாளொர் கூறன்
விடைநாளும் ஏறு குழகன்
நம்பன் எம் அன்பன் மறைநாவன் வானின்
மதியேறு சென்னி யரனூர்
அம்பன்ன வொண்கண் அவராட ரங்கின்
அணிகோபு ரங்கள் அழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : பூங்கொம்பு போன்ற மெல்லிய வடிவம், மின்னலைப் போன்ற இடையும் கொண்ட உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு, இடப வாகனத்தில் வீற்றிருக்கும் குழகன், சிவன், எமது அன்பன் அப்பெருமான், வேதம் விரித்த திருநாவை உடையவன்; வானில் விளங்கும் சந்திரனைத் திருமுடியில் தரித்த அரன் அப் பரமனுடைய ஊரானது, அம்பு போன்ற கூரிய நோக்குடைய ஒளி மிக்க கண்களை உடைய மகளிர் அரங்கில் ஆட, அணிமிக்க கோபுரங்கள், செம்பொன் போன்ற செவ்விடையுடைய மாடங்கள் திகழும் திருமுல்லைவாயில் ஆகும்

957 ஊனேறு வேலின் உருவேறு கண்ணி
ஒளியேறு கொண்ட ஒருவன்
ஆனேறது ஏறி அழகேறு நீறன்
அரவேறு பூணும் அரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து
குயிலேறு சோலை மருவித்
தேனேறு மாவின் வளமேறி யாடு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : வேல் போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒளி திகழும் பாகமாக உடைய ஒப்பற்றவனாகிய ஈசன், இடப வாகனத்தில் வீற்றிருப்பவன்; அழகிய தீரு நீற்று மேனியன்; அரவத்தை ஆபரணமாகப் பூணும் அரன் அப்பெருமானுடைய ஊரானது, கொல்லைப் புரத்தில் மான்கள் விளங்கவும், தேன் விளங்கும் பெருமை உடைய வளம் பெருக மேவும் திருமுல்லைவாயில் ஆகும் அழகேறு நீறன்; சுந்தரமாவது நீறு என்பதும் கவினைத் தருவது நீறு என்பதும் இத் திருப்பாட்டில் ஈசனாரின் பெருமைக்கு உரித்தாக்கி உணர்த்தப் பெறுதல் காண்க

958 நெஞ்சார நீடு நினைவாரை மூடு
வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
அனலாடு மேனி அரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்
உளதென்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர்சோறு அளிக்கொள்
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : நெஞ்சம் நெகிழ்ந்து, பெரிதும் நினைத்துத் துதிக்கின்ற அடியவர்களின் வினையானது கெட்டழியுமாறு அருள் புரிகின்ற நின்மலனாகிய ஈசன், பால், தயிர் முதலான பஞ்ச கவ்வியத்தால் அபிடேகம் கொள்பவன்; அரவத்தைக் கரத்தில் உடையவன்; நெருப்பினைக் கரத்தில் ஏந்தி ஆடல் புரிபவன்; தழல் போன்ற சிவந்த திருமேனியுடைய அரன் அத்தகைய பெருமானுடைய ஊரானது, மேகங்கள் தவழும் மாடங்களும், இல்லங்கள்தோறும் ஐயம் கேட்டுவரினும் செஞ்சாலி நெல்லின் வளம் மிக்க சோறு அளிக்கும் வள்ளல் தன்மை மிகுந்த திருமுல்லைவாயில் ஆகும்

959 வரைவந்து எடுத்த வலிவாள் அரக்கன்
முடிபத்தும் இற்று நெரிய
உரைவந்த பொன்னின் உருவந்தமேனி
உமைபங்கன் எங்கள் அரனூர்
வரைவந்த சந்தொடு அகிலுந்தி வந்து
மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேற லாடு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த வன்மையுடைய அரக்கனான இராவணனுடைய பத்துத் தலைகளும் துன்புற்று நலியுமாறு செய்த பரமன், நன்று உரை செய்யப்பட்ட பொன்போன்ற திருமேனியுடையவன்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவன் அத்தகைய அரனின் ஊரானது, மலையில் திகழும் சந்தனமும் அகிலும் வெள்ளத்தினால் உந்திக் கொண்டு வந்து மிளிர்கின்ற பொன்னி நதியின் வடபால் அலைகள் பெருகி வந்து தெளிந்த தேன் மணக்கச் செய்யும் திருமுல்லைவாயில் ஆகும்

960 மேலோடி நீடு விளையாடல் மேவு
விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானு முன்னி
யவர்தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர்துன்றி நின்ற
கதிரேறு செந்நெல்வயலில்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : திருமேனியில் தவழ்ந்து விளையாடலை மேவும் தன்மையுடைய முப்புரிநூல் அணிந்த மார்பினனாகிய ஈசன், வேதமுதல்வன்; பால் போன்ற வெண்மையான வண்ணம் கொண்ட பிரமனும், கார் வண்ணனாகிய திருமாலும் முனைந்து தேடிய பரமன்; அப் பெருமான் விளங்குகின்ற ஊரானது, காற்றி கருங்குவளை மலர்கள் ஆட, கதிர் முற்றியுள்ள செந்நெல் வயல்களில் சேல் ஓடித் திரியவும் வாளை குதித்துத் துள்ளவும் விளங்கும் திருமுல்லைவாயில் ஆகும்

961 பனைமல்கு திண்கை மதமா உரித்த
பரமன்ன நம்பன் அடியே
நினைவன்ன சிந்தை யடையாத தேரர்
அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்கள் எங்கு
முகுளங்கள் எங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
திருமுல்லை வாயில் இதுவே

தெளிவுரை : பனை போன்ற உறுதியான துதிக்கை உடைய மதம் பொருந்திய யானையின் தோலை உரித்த பரமனாகிய ஈசன் திருவடியை நினைத்துச் சிந்தையில் கொள்ளாத சாக்கியர் சமணர் ஆகியோரை மாயுமாறு செய்து மேவும் அரனது ஊரானது, தாழை, மகிழ மரத்தின் மொட்டுகள் நெருங்கி விளங்கவும் புன்னை திகழவும் நறுமணம் கமழும் திருமுல்லைவாயில் ஆகும்

962 அணிகொண்ட கோதை யவள்நன்றும்ஏத்த
அருள்செய்த எந்தை மருவார்
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி
திருமுல்லை வாயிலிதன் மேல்
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞானி
மிகுபந்தன் ஒண்த மிழ்களின்
அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர்
அகல்வாணம் ஆள்வர் மிகவே

தெளிவுரை : அணிகொண்டு விளங்கும் கோதையம்மை என்னும் திருப்பெயர் தாங்கி இத்திருத்தலத்தில் மேவும் உமாதேவி நன்கு வழிபட்டு ஏத்த அருள் செய்த எந்தை ஈசன், வலிமையான மூன்று புரங்களைக் கணைதொடுத்து எரித்த வில்லாளன் அவன் வீற்றிருக்கும் திருமுல்லைவாயிலின் மீது, தண்மை மிக்க சிந்தை உடையவராகிய காழியில் விளங்கும் ஞானசம்பந்தர் உரைத்த இத்திருப்பதிகத்தை, இசையுடன் பாடவல்லவர்கள், பரந்த வானுலகை அடைந்தவர்களாய் உரிமைமிகு ஆட்சி பெற்றவர்களாவர்

திருச்சிற்றம்பலம்

225 திருக்கொச்சைவயம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

963 அறையும் பூம்புன லோடும்
ஆடர வச்சடை தன்மேல்
பிறையும் சூடுவர் மார்பில்
பெண்ணொரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா
மந்திர வேள்வி யறாத
குறைவில் அந்தணர் வாழும்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : நீர் பெருகிப் பாயும் ஓசையுடைய கங்கையும், ஆடுகின்ற அரவமும், பிறைச் சந்திரனும் சடை முடியில் சூடி, உமாதேவியைத் திருமார்பில் பாகமாக வைத்து, விளங்குகின்றவர் ஈசன் அப்பெருமான், வேதத்தின் ஒலியும் வேள்வி புரியும் மந்திரத்தின் ஒலியும் எழக் குறைவற்ற அந்தணர்கள் வாழும் கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் அமர்ந்துள்ளவர்

964 கண்ணத்தர் தோலொடு நூல்சேர்
மார்பினர் துன்னிய பூத
கண்ணத்தர் வெங்கனல் ஏந்திக்
கங்குல்நின்று ஆடுவர் கேடில்
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி
அறாதவர் மால்எரி ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : ஈசன், திருநீறு அணிந்த திருமேனி உடையவர்; புலித்தோலை ஆடையாகக் கொண்டவர்; முப்புரிநூல் திகழும் மார்பினர்; பூத கணங்கள் சூழ்ந்து விளங்க, வெம்மை பெருகும் நெருப்பைக் கரத்தில் ஏந்தி, இருளில் நின்று நடம் புரிபவர் அப்பெருமான் எத்தகையோருக்கும் கேடு பயக்காத நெஞ்சினராய் வேதங்களை நன்கு கேட்டுக் கனிவுற்ற கேள்வி ஞானமும், நல்வேள்வி ஆற்றும் புனிதமும், பெருமை மிக்க எரியாகிய ஓமப்புகை ஓம்பும் அருள் தன்மையும் மேவி அழகுடன் பொலியும் அந்தணர்கள் வாழும் கொச்சை வயம் என்னும் பதியில் அமர்ந்திருப்பவர்

965 பாலை யன்னவெண் ணீறு
பூசுவர் பல்சடை தாழ
மாலை யாடுவர் கீத
மாமறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கடல் ஓதம்
வெண்திரை கரைமிசை விளங்கும்
கோல மாமணி சிந்தும்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : ஈசன், பால்போன்ற திருவெண்ணீறு பூசுபவர்; பல சடைகள் தாழ்ந்து பரவி, விளங்குமாறு இரவில் நடம்புரிபவர்; வேத கீதங்கள் பாடிப் போற்ற மகிழ்வு கொள்பவர் அப் பெருமான், கடலலைகளின் ஓதம் கரையின் மீது விளங்க, அழகிய முத்துக்களும் சங்கு மணிகளும் சிதறி வளம் கொழிக்கும் கொச்சை வயம் என்னும் பதியில் அமர்ந்திருப்பவர்

966 கடிகொள் கூவிள மத்தம்
கமழ்சடை நெடுமுடிக்கு அணிவர்
பொடிகள் பூசிய மார்பில்
புனைவர்நன் மங்கையொர் பங்கர்
கடிகொள் நீடொலி சங்கின்
ஒலியொடு கலையொலி துதைந்து
கொடிகள் ஓங்கிய மாடக்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : ஈசன், நறுமணம் கமழும் வில்வமும், ஊமத்த மலரும், வாசனை கமழும் நீண்ட முடியில் அணிபவர்; திருநீறு பூசிய திருமார்பில், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு திகழ்பவர் அப்பெருமான், மங்கல மணம் காட்டும் நெடிய சங்கின் ஒலியும் வேதத்தினை ஓதும் ஒலியும் கலந்து மேவி, வண்ணக் கொடிகளும் தோரணங்களும் ஓங்கிய மாட மாளிகைகள் திகழும் கொச்சைவயம் என்னும் பதியில் அமர்ந்திருப்பவர்

967 ஆடல் மாமதி யுடையார்
ஆயின பாரிடம் சூழ
வாடல் வெண்தலை யேந்தி
வையகம் இடுபலிக்கு உழல்வார்
ஆடல் மாமட மஞ்ஞை
அணிதிகழ் பேடையொடு ஆடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : பெருமையான சந்திரனையுடைய ஈசன், ஆடுகின்ற பூத கணங்கள் சூழ, பிரம கபாலத்தைக் கரத்தில் ஏந்தி, உலகத்தவர் இடுகின்ற பிச்சை ஏற்க உழல்பவர் அப்பெருமான், ஆடலில் வல்ல மயில் அணி திகழும் பெடையுடன் ஆடிக் குளிர்ச்சியான பொழில் சூழ்ந்து மேவும் கொச்சைவயம் என்னும் பதியில் அமர்ந்தவர்

968 மண்டு கங்கையும் அரவு
மல்கிய வளர்சடை தன்மேல்
துண்ட வெண்பிறை அணிவர்
தொல்வரை வில்லது வாக
விண்ட தானவர் அரணம்
வெவ் வழல் எரிகொள விடைமேல்
கொண்ட கோலமது உடையார்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : கங்கை தரித்து, அரவு மல்கிய சடை முடியின் மீது வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடியவர், ஈசன் அவர், தொன்மை வழங்கும் மேரு மலையை வில்லாகக் கொண்டு, பகைத்து எழுந்த முப்புர அசுரர்களின் மதில்கள் எரிந்து சாம்பல் ஆகுமாறு புரிந்து, இடபவாகனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலம் உடையவர் அப்பெருமான் கொச்சைவயம் என்னும் பதியில் அமர்ந்திருப்பவர்

969 அன்றவ் ஆல்நிழல் அமர்ந்து
அறவுரை நால்வர்க் கருளிப்
பொன்றி னார்தலை யோட்டில்
உண்பது பொருகடல் இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க
ஊன்றிய விரலினர் வான்தோய்
குன்றம் அன்னபொன் மாடக்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : கல்லால மரத்தின் நிழலில் தட்சிணாமூர்த்தியாகத் திருக்கோலம் தாங்கி வீற்றிருந்து, சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள் உண்மையை அருள்செய்து, பிரம கபாலம் ஏந்திப் பிச்சை கொண்டு உண்டு, வெற்றியே உடைய இராவணனை நுடங்குமாறு திருவிரலால் ஊன்றியவர், ஈசன் அப்பெருமான், வானைப் பரவும் உயர்ந்த, குன்று போன்ற உறுதி மிக்க அழகிய மாட மாளிகையுடைய கொச்சைவயம் என்னும் பதியில் அமர்ந்தவர்

970 சீர்கொள் மாமல ரானும்
செங்கண்மால் என்றிவர் ஏத்த
ஏர்கொள் வெவ்வழல் ஆகி
எங்கும் உறநிமிர்ந் தாரும்
பார்கொள் விண்ணழல் கால்நீர்ப்
பண்பினர் பால்மொழி யோடும்
கூர்கொள் வேல்வலன் ஏந்திக்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : சீர்மிக்க தாமரை மலர்மீது விளங்கும் பிரமனும் திருமாலும் ஆகிய இவர்கள் ஏத்துமாறு, பெருமையுற்று ஓங்கும் அழலாய் விளங்கி, எல்லா இடங்களிலும் பரவி வீற்று விளங்குபவர் ஈசன் அவர், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு, சூலப்படையைத் திருக்கரத்தில் ஏந்திக் கொச்சைவயம் என்னும் பதியில் அமர்ந்தவர்

971 குண்டர் வண்துவர் ஆடை
போர்த்ததொர் கொள்கையி னார்கள்
மிண்டர் பேசிய பேச்சு
மெய்யல மையணி கண்டன்
பண்டை நம்வினை தீர்க்கும்
பண்பினர் ஒண்கொடி யோடும்
கொண்டல் சேர்மணி மாடக்
கொச்சை வயம்அமர்ந் தாரே

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும், முறையற்ற தன்மையில் பேசுகின்ற சொற்கள் மெய்யல்ல கரிய கண்டத்தையுடைய ஈசன், பழைய வினையாகிய சஞ்சித கன்மத்தைத் தீர்த்து அருள் புரியும் கருணைப் பண்பு உடையவர் அப் பெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு மேகம் சூழ விளங்கும் மணி மாடங்களையுடைய கொச்சைவயம் என்னும் பதியின் கண் அமர்ந்தனர்

972 கொந்து அணிபொழில் சூழ்ந்த
கொச்சை வயநகர் மேய
அந்த ணன்அடி யேத்தும்
அருமறை ஞானசம் பந்தன்
சந்தம் ஆர்ந்துஅழ காய
தண்டமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வானவ ரோடும்
புகவலர் முனைகெட வினையே

தெளிவுரை : கொத்தாகப் பூக்கின்ற பொழில் சூழ்ந்த கொச்சைவயம் என்னும் நகரில் மேவிய ஈசன் திருவடி ஏத்துகின்ற, அருமறைவல்ல ஞானசம்பந்தர், சந்தம்பதிந்த அருளழகு மிளிர உரைத்த இத்தண்டமிழ்த் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வானுலகை அடைந்து நலங்கள் யாவும் முந்திப் பெறுவார்கள்; மற்றும் வினை யாவும் நீங்கப் பெற்றவராய் சிவப்பேற்றினையுறுவர்

திருச்சிற்றம்பலம்

226 நெல்வாயில் அரத்துறை (அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

973 எந்தை ஈசன்எம் பெருமான்
ஏறமர் கடவுள்என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால்
சென்றுகை கூடுவது அன்றால்
கந்த மாமலர் உந்திக்
கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : எந்தை ஈசன், எம்பெருமான்; இடப வாகனத்தில் வீற்றிருக்கும் கடவுள் என்று போற்றிச் சிந்தனை செய்து வணங்குபவர்களுக்க அல்லாது, ஏனையோருக்குக் கைகூடி நன்மை பயப்பது இல்லை மணம் மிக்க சிறப்பான மலர்களை உந்திக் கடுமையான வேகத்தில் பெருகி வரும் நீர் உடைய நிவா என்னும் ஆற்றின் கரைமேல் அழகிய குளிர்ச்சியான சோலை விளங்கும் நெல்வாயில்அரத்துறையில் வீற்றிருக்கும் ஈசன் அருளே அத்தகையவற்றைச் செய்விக்கவல்லது

974 ஈர வார்சடை தன்மேல்
இளம்பிறை அணிந்தஎம் பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தாச்
சிதடர்கள் தொழச்செல்வது அன்றால்
வாரி மாமலர் உந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆரும் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள் தம் அருளே

தெளிவுரை : கங்கை தரித்தமையால் தண்மை கொண்டு விளங்கும் ஈரமாக உள்ள சடையின்மீது பிறைச்சந்திரனை அணிந்த எம்பெருமானுடைய பெருமைமிக்க அருளைப் போற்றாத அறிவிலிகளுக்குக் கைகூடுவது யாதும் அன்று மலர்களை வாரிக் குவித்து உந்தி வரும் நீர் மிக்க நிவா என்னும் ஆற்றின் கரைமேல் பொருந்திய சோலை சூழ்ந்த நெல்வாயின் அரத்துறையில் விளங்கும் அடிகள் தம் திருவருளே கருணை பொழிய வல்லது

975 பிணிக லந்தபுன் சடைமேல்
பிறையணி சிவனெனப் பேணிப்
பணிக லந்துசெய் யாத
பாவிகள் தொழச் செல்வது அன்றால்
மணிக லந்துபொன் னுந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணிக லந்தநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : பிணிக்கப்பட்டு மென்மையாக விளங்கும் சடை முடியின்மீது பிறைச் சந்திரனை அணிந்து விளங்கும் சிவபெருமானைப் பணியாதவர்கள், பாவம் மிக்கவர்களாய்த் தொழுது போற்றுபவர் அல்லர் மணியும் பொன்னும் உந்தி வரும் நீர் பெருகும் நிவா என்னும் ஆற்றின் கரைமேல் அணி கலந்து விளங்கும் நெல்வாயின் அரத்துறையில் வீற்றிருக்கும் ஈசன் அருளே யாவும செய்யவல்லது

976 துன்ன ஆடையொன்று உடுத்துத்
தூயவெண் ணீற்றினர் ஆகி
உன்னி நைபவர்க் கல்லார்
ஒன்றுங்கை கூடுவது அன்றால்
பொன்னு மாமணி யுந்திப்
பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்னம் ஆருநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : தைக்கப்பெற்ற ஆடை உடுத்தித் தூயவெண்ணீறு அணிந்தவராய் விளங்குகின்ற ஈசனை, நினைத்து நைந்து, மனம் உருகி நிற்பவர்க்கு அல்லால், மற்றையோருக்குக் கைகூடுவது யாதும் இல்லை பொன்னும் மணியும் உந்திப் பெருகி வரும் நீர்மல்கும் நிவா என்னும் ஆற்றின் கரைமேல், அன்னப் பறவை திகழும் நெல்வாயில் என்னும் பதியில் மேவும் அரத்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் அருளே யாவும் நல்குவது ஆகும்

977 வெருகு உரிஞ்சுவெங் காட்டில்
ஆடிய விமலன்என்று உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால்
ஒன்றும்கை கூடுவது அன்றால்
முருகு உரிஞ்சுபூஞ் சோலை
மொய்மலர் சுமந்திழி நிவாவந்து
அருகு உரிஞ்சுநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : காட்டுப் பூனை வாசம் புரியும் மயானத்தில் ஆடுகின்ற ஈசனை, மனத்தால் உருகி நினைப்பவர்களுக்கு அன்றி, ஏனையோருக்குக் கைகூடுதல் யாதும் இல்லை அழகு பொலியும் பூஞ்சோலையிலிருந்து மலர்கள் சிந்தி நிவா என்னும் ஆற்றில் வந்து அருகில் திகழும் நெல்வாயிலின்கண்  உள்ள அரத்துறையில் வீற்றிருக்கும் பெருமானின் அருளே யாவற்றையும் விளங்கச் செய்ய வல்லது ஆகும்

978 உரவு நீர்ச்சடைக் கரந்த
ஒருவன் என்று உள்குளிர்ந்து ஏத்திப்
பரவி நைபவர்க் கல்லால்
பரிந்துகை கூடுவது அன்றால்
குரவ நீடுயர் சோலைக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாறு நெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : கங்கையைச் சடையில் கரந்த ஒப்பற்ற ஈசனை உள்ளத்தால் குளிர்ந்து ஏத்திப் பரவிக் கசிந்து போற்றுபவர்க்கு அல்லாது, ஏனையோருக்குக் கை கூடுவது யாதும் இல்லை குரவமலர் நீண்டு விளங்கும் சோலை சூழ்ந்த, குளிர்ந்த நீர் பெருகும் நிவா என்னும் ஆற்றின் கரைமேல் ஒலித்து முழங்கும் நெல்வாயிலின் அரத்துறையில் வீற்றிருக்கும் பரமனின் அருளேயாண்டும் கைகூடும் வண்ணத்தைத் தரவல்லது

979 நீல மாமணி மிடற்று
நீறணி சிவனெனப் பேணும்
சீல மாந்தர்கட் கல்லால்
சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமலர் உந்திக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
ஆளும் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : நீலகண்டனாக விளங்குகின்ற, திருவெண்ணீறு அணிந்த சிவனே எனப் போற்றும் சீலம் மிக்க அடியவர்களுக்கு அன்ணி, ஏனையோருக்கு எப்பரிசும் சென்று அடைவது இல்லை பெருமை மிக்க மலர்களை உந்திக் கொண்டுவரும் நீர்மல்கிய நிவா என்னும் ஆற்றின் கரையில் ஆட்சி கொண்டு சிறப்பாக மேவும் சோலை சூழ்ந்து விளங்கும் நெல்வாயின் அரத்துறையில் வீற்றிருக்கும் பெருமானின் இனிய அருளேயாவற்றையும் சேர்க்க வல்லது

980 செழுந்தண் மால்வரை யெடுத்த
செருவலி இராவணன் அலற
அழுந்த வூன்றிய விரலான்
போற்றிஎன் பார்க்கல்லது அருளான்
கொழுங்க னிசுமந்து உந்திக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : பெருமை மிக்க கயிலை மலையை எடுத்த போர் செய்யும் வன்மையுடைய இராவணன் அலறிநையுமாறு அழுந்த ஊன்றிய திருப்பாத விரலுடைய தன்னைப் போற்றித் துதித்து வணங்குபவர்களுக்கு அல்லாது, ஏனையோர்க்கு அருள்புரியாத பெருமான், சிவன் பழுத்த கனிகளை, நீரில் கொண்டு சேர்க்கும் குளிர்ந்த புனல் மேவும் நிவா என்னும் ஆற்றின் கரையில் நன்கு விளங்கும் சோலை சூழ்ந்த நெல்வாயில் என்னும் பதியில் மேவும் அரத்துறையில் வீற்றிருக்கும் எம் இறைவனின் இனிய அருளே யாவும் நிகழச் செய்ய வல்லது ஆகும்

981 நுணங்கு நூலயன் மாலும்
இருவரு நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால்
வந்துதை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துø அடிகள்தம் அருளே

தெளிவுரை : நன்றாக  நுணுக்கமான வேதத்தைக் கற்ற பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும், நோக்குவதற்கு அரியவனாகிய ஈசனை, கசித்துருகித் தோத்திரம் செய்பவர்களுக்கு அன்றி, மற்றையோர்களுக்கு வந்து கூடப்பெறுதல் இல்லை மணங்கமழும் சிறப்பும் பொன்னை உந்தித் தள்ளும் வளமும் உடைய நிவா என்னும் ஆற்றங்கரையில், அண்மையாய் விளங்கும் சோலையுடைய நெல்வாயின்அரத்துறையில் மேவும் ஈசனின் அருளே யாவற்றையும் செய்விக்க வல்லது

982 சாக்கியப் படு வாரும்
சமண்படு வார்களு(ம்) மற்றும்
பாக்கியப் படகில்லாப்
பாவிகள் தொழச்  செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப்
பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை அடிகள்தம் அருளே

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் பாக்கியம் அற்றவர்களாய், பாவத்தை உடையவர்களாய் ஈசனைத் தொழுவது இல்லை பூக்கள் கமழ்ந்து விளங்கும் நிவா என்னும் ஆற்றில் பென்னுந்தி வரச் சோலைகளும் ஆர்த்துமேவும் நெல்வாயின்அரத்துறையில் வீற்றிருக்கும் பெருமானே யாவும் திகழ, விளங்கப் புரிபவன்

983 கறையி னார்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞானசம் பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த
அரத்துறை அடிகள்தம் மருளை
முறைமை யாற்சொன்ன பாடல்
மொழியு மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுற வில்லைப்
பாட்டிவை பத்தும்வல் லார்க்கே

தெளிவுரை : அடர்த்தியான பொழில் சூழ்ந்த காழியில் விளங்கும் ஞானசம்பந்தர், ஒலி மிகும் பூம்புனல் சிறப்பான தன்மையில் விளங்கும் அரத்துறை நாதனின் இனிய அருளை, முறையுடன் சொன்ன இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தமது வினையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர்

திருச்சிற்றம்பலம்

227 திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

984 பொங்கு வெண்மணற் கானல்
பொருகடல் திரைதவழ் முத்தம்
கங்குல் ஆரிருள் போழும்
கலிமறைக் காடமர்ந் தார்தாம்
திங்கள் சூடின ரேனும்
திரிபுரம் எரித்தன ரேனும்
எங்கும் எங்கள் பிரானார்
புகழலது இகழ்பழி யிலரே

தெளிவுரை : வெண் மணலும், கடற்கரைச் சோலைகளும், பொங்கும் அலைகள் கரையைப் பெருது சேரும் கடலும், கரைகளில் ஒளிரும் முத்துக்களும் விளங்க, இரவின் இருளிலும் ஒலிக்கும் வேதங்களை ஓதும் மறைக்காட்டில் அமர்ந்து மேவும் ஈசன், சந்திரனைச் சூடியவராயினும், முப்புரங்களை எரித்தவராயினும், எல்லா இடங்களிலும் புகழுக்கு உரிய தலைவர் ஆவார் அவருக்கு இகழ்ச்சியோ பழியோ இல்லை

985 கூனி ளம்பிறை சூடிக்
கொடுவரித் தோலுடை யாடை
ஆனி லங்கிளர் ஐந்தும்
ஆடுவர் பூண்பதும் அரவம்
கான லங்கழி யோதம்
கரையோடு கதிர்மணி ததும்பத்
தேன லங்கமழ் சோலைத்
திருமறைக் காடமர்ந் தாரே

தெளிவுரை : வளைந்த பிறைச் சந்திரனைச் சூடி, புலியின் தோலை உடுத்தும் ஆடையாகக் கொண்டு, பசுவிலிருந்து தோன்றும் பால் தயிர் முதலான பஞ்சகவ்வியத்தை அபிடேகப் பொருளாக ஏற்று மகிழ்ந்து ஆடுகின்ற ஈசன், ஆபரணமாகப் பூண்பது அரவம் ஆகும் அப்பெருமான், சோலைகளும், உப்பங்கழிகளும் கடல் ஓதத்தில் திகழவும், ஒளிதிகழும் மணிகளும், தேன் மணக்கும் சோலைகளும் மல்கும் திருமறைக்காடு என்னும் பதியில் வீற்றிருப்பவர்

986 நுண்ணி தாய்வெளி தாகி
நூல்கிடந்து இலங்குபொன் மார்பில்
பண்ணி யாழென முரலும்
பணிமொழி உமையொரு பாகன்
தண்ணி தாயவென் ளருவி
சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார்
கலிமறைக் காடமர்ந் தாரே

தெளிவுரை : மென்மையுடையதாகவும் வெண்மை உடையதாகவும் திகழும் முப்புரிநூல் அழகிய மார்வில் விளங்க, யாழின் இசையென மேவும் பண்மொழியுடைய உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர், ஈசன் அப்பெருமான், அருவியானது சலசல எனப் பாய்ந்து நீர்வளத்தைப் பெருகச் செய்ய, பிறைச் சந்திரனைத் தரித்து திருமறைக் காட்டில் வீற்றிருக்கின்றார்

987 ஏழை வெண்குருகு அயலே
இளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்கும்
தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை அங்கயல் ஒண்கண்
மலைமகள் கணவனது அடியின்
நீழ லேசர ணாக
நினைபவர் வினைநலிவு இலரே

தெளிவுரை : அறிவற்ற வெண் நாரையானது, தாழை மடலைத் தனது பெடையெனக் கருதி நாடும் குளிர்ச்சி மிக்க மறைக்காட்டில் வீற்றிருப்பவர், ஈசன் அப்பெருமான் இளமை மிக்க கயல்போன்ற கண்ணுடைய மலைமகளின் நாதன் அவர்தம் திருவடியைச் சரணம் கொண்டு ஏத்தி வழிபடுபவர்களுக்கு வினையால் நேரும் நலிவு இல்லை

988 அரவம் வீக்கிய அரையும்
அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாம் செய்த பாவம்
பறைதர அருளுவர் பதிதான்
மரவ நீடுயர் சோலை
மழலை வண்டு யாழ்செயு மறைகாட்டு
இரவும் எல்லியும் பகலும்
ஏத்துதல் குணமெனல் ஆமே

தெளிவுரை : அரவத்தை இடுப்பில் கட்டி, அதிரும் ஒலி தரும் கழல் திருப்பாதத்தில் அணிந்து மேவி நாம்  செய்த பாவங்களைத் தீர்த்து அருளும் ஈசன் வீற்றிருக்கும் பதியானது, குங்கும மரங்கள் நிறைந்த சோலைகளில் வண்டுகள் யாழிசை செய்யும் திருமறைக்காடு ஆகும் அப் பதியில் இரவும், காலை மாலை ஆகிய சந்திகளிலும், பகற்காலங்களிலும் ஈசனைப் போற்றி வணங்குதல் நற்குண வயம் ஆகும்

989 பல்லில் ஓடுகை யேந்திப்
பாடியும் ஆடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும்
அழகியது அறிவர்எம் அடிகள்
புல்லம் ஏறுவர் பூதம்
புடைசெல வழிதர்வர்க்கு இடமாம்
மல்கு வெண்திரை யோத
மாமறைக் காடது தானே

தெளிவுரை : மண்டை ஓட்டினைக் கையில் ஏந்திப் பாடியும் ஆடியும் பிச்சை ஏற்றுத் திரியும் அல்லல் மிக்க வாழ்க்கை உடையவராயினும், அழகிய ஒன்றாகக் கருதும் ஈசன், இடபத்தில் ஏறி வீற்றிருப்பவர் அப்பெருமான், பூதகணங்கள் புடைசூழப் போந்து விளங்கும் இடமாவது, கடலலைகளின் ஓதம் கொண்டு விளங்கும் பெருமை மிக்க மறைக்காடு ஆகும்

990 நாகந் தான் கயிறாக
நளிர்வரை அதற்கு மத் தாகப்
பாகந் தேவரொடு அசுரர்
படுகடல் அளறெழக் கடைய
வேக நஞ்செழ ஆங்கே
வெருவொடும் இரிந்தெங்கும் ஓட
ஆகந் தன்னில் வைத் தமிர்தம்
ஆக்குவித் தான்மறைக் காடே

தெளிவுரை : வாசுகி என்ற நாகத்தைக் கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் தேவரும் அசுரரும் சரி பாகமாகப் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சைக் கண்டு எல்லாரும் அஞ்சி ஓட, அதனைக் கண்டத்தில் வைத்து அமிர்தத்தை நல்கி அருள்புரிந்த ஈசன் மறைக்காட்டீசர் ஆவார்

991 தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்
தனதொரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை
எடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத் தன்திரு விரலால்
ஊன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும் விட் டலறப்
பரிந்தவன் பதிமறைக் காடே

தெளிவுரை : ஈசன், தக்கனுடைய தீய வேள்வியைத் தகர்த்த பரமன் அப்பெருமையை எண்ணிப் பார்த்துத் துதிக்காது, மேற்சென்று கயிலை மலையை எடுத்து மலைமகளை வெருவுமாறு செய்த அரக்கனாகிய இராவணனை, வாய்விட்டு அலறி அழுமாறு திருப்பாத விரலால் ஊன்றிப் பின்னர் அருள் செய்தவன் ஈசன் அவன் விளங்குகின்ற பதி மறைக்காடு ஆகும்

992 விண்ட மாமல ரோனும்
விளங்கொளி அரவணை யானும்
பண்டும் காண்பரி தாய
பரிசினன் அவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதம்
கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை
மாமறைக் காடது தானே

தெளிவுரை : நன்று மலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், ஒளிமிக்க அரவத்தை அணையாகக் கொண்ட திருமாலும் காண்பதற்கு அரியவனாகிய ஈசன் உறைகின்ற பதியானது, தாழை மடல்கள் உப்பங்கழியின் ஓதம் விளங்கக் கரையில் ஒளி திகழும் சங்கு, முத்து மணிகள் விரவ வண்டுகள் மணம் மிகும் சோலையில் திகழ மேவும் மறைக்காடு ஆகும்

993 பெரிய வாகிய குடையும்
பீலியும் அவைவெயில் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக்
கல்லென வுழிதரும் கழுக்கள்
அரிய வாகவுண் டோதும்
அவர்திறம் ஒழிந்துநம் மடிகள்
பெரிய சீர்மறைக் காடே
பேணுமின் மனமுடை யீரே

தெளிவுரை : பெரி குடையும் மயிற் பீலியும் உடைய சமணர், சாக்கியர்தம் உரைகள் திறமற்றவையாகும் அவற்றைத் தவிர்த்து, நன்மனம் உடையவர்களே ! மறைக்காட்டில் விளங்கும் ஈசனைப் பேணிப் போற்றுவீராக

994 மையு லாம்பொழில் சூழ்ந்த
மாமறைக் காடமர்ந் தாரைக்
கையினாற் றொழு தொழுவான்
காழியுள் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்தும்
சிந்தையுள் சேர்க்கவல் லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும்
புகவலர் கௌவலர் புகழே

தெளிவுரை : மேகம் திகழ்ந்து உலவுகின்ற பொழில் சூழ்ந்த பெருமை மிக்க மறைக்காட்டில் அமர்ந்த நாதரைக் கைகளால் கூப்பித் தொழுகின்ற, காழிப் பதியின் ஞானசம்பந்தன் செய்த இத் திருப்பதிகத்தைச் சிந்தையில் சேர்த்து ஓதவல்லவர்கள், பொய்ம்மையை நீத்த வானவருடன் திகழ வல்லவராகவும் புகழ் மிக்கவராகவும் விளங்குவார்கள்

திருச்சிற்றம்பலம்

228 திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் (அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

995 பட்டம் பால்நிற மதியம்
படர்சடைச் சுடர்விடு பாணி
நட்ட நள்ளிருள் ஆடு
நாதன் நவின்றுறை கோயில்
புட்டன் பேடையொடு ஆடும்
பூம்புக லூர்த் தொண்டர் போற்றி
வட்டம் சூழ்ந்தடி பரவும்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : பட்டுப்போன்ற மென்மையும் பால் போன்ற வெண்மையும் கொண்டு விளங்கும் சந்திரனைப் படர்கின்ற சடை முடியில் சூடிச் சுடர் விட்டு ஒளிரும் செவ்வியாய், நள்ளிருளில் நடனம் ஆடுகின்ற நாதன் அருள் வழங்குகின்ற கோயிலானது, பறவை தன் பேடையுடன் மகிழ்ந்து ஆடும் பூம்புகலூர் ஆகும் ஆங்குத் தொண்டர்கள் குழுமித் திருவடியைப் போற்றிப் பரவத் திகழ்ந்து விளங்குபவர் வர்த்த மானீச்சரத்தார்

996 முயல்வ ளாவிய திங்கள்
வாள்முகத்து அரிவையின் தெரிவை
இயல்வ ளாவிய துடைய
இன்னமுது எந்தைஎம் பெருமான்
கயல்வ ளாவிய கழனிக்
கருநிறக் குவளைகண் மலரும்
வயல்வ ளாவிய புகலூர்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : முயல் வடிவம் காட்டும் நிழல் கொண்ட சந்திரன் போன்ற ஒளிமிக்க முகத்தை உடைய அரிவை மற்றும் தெரிவை ஆகிய இயல்புடைய உமாதேவியை உடனாகக் கொண்டு இனிய அமுதாக விளங்குபவர் எந்தை எம்பெருமான் அப்பெருமான் கயல் பெருகித் திகழும் கழனிகளில் கரிய நிறக் குவளைகள் மலரும் வயல் பரப்புகள் மிக்க புகலூரில் விளங்கும் வர்த்த மானீச்சரத்தார் ஆவார்

997 தொண்டர் தண்கய மூழ்கித்
துணையாலும் சாந்தமும் புகையும்
கொண்டு கொண்டாடி பரவிக்
குறிப்பறி முருகன்செய் கோலம்
கண்டு கண்டுகண் குளிரக்
களிபரந்து ஒளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : குளிர்ந்த தீர்த்தத்தில் நீராடி மாலை சந்தனம், புகை (தூபம்) முதலானவற்றைக் கொண்டு அடிபரவத் தொழுகின்ற முருகநாயனாரின் திருக்கோலத்தையும், திருத்தொண்டும் கண்டு மகிழ்ந்து விளங்குபவர், வண்டுகள் இசைபாடும் புகலூர் வர்த்த மானீச்சரத்தார்

998 பண்ண வண்ணத்த ராகிப்
பாடலொடு ஆடல்அ றாத
விண்ண வண்ணத்தர் ஆய
விரிபுக லூரர்ஓர் பாகம்
பெண்ண வண்ணத்தர் ஆகும்
பெற்றியோடு ஆண்இணை பிணைந்த
வண்ண வண்ணத்தெம் பெருமான்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : பண்ணின் வண்ணத்தினராகவும் பாடலொடு ஆடலும் நிகழ்த்துபவராகவும் அட்ட மூர்த்தங்களில் ஆகாயமாகிய திருக்கோலமும், புகலூரில் உமையொரு கூறாக விளங்கும் அர்த்த நாரியெனும் ஆணும் பெண்ணும் இணையப்பெற்ற பெண் வண்ணம் உடை அம்மையப்பராகவும், கொண்ட வண்ணத்தினர் எம்பெருமானாகிய வர்த்தமானீச்சரத்தார் ஆவார்

999 ஈசன் ஏறமர் கடவுள்
இன்னமுது எந்தையெம் பெருமான்
பூசு மாசில்வெண் ணீற்றர்
பொலிவுடைப் பூம்புக லூரில்
மூசு வண்டறை கொன்றை
முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமலர் உடையார்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : ஈசன் இடப வாகனத்தில் அமரும் கடவுள்; இனிய அமுதம் போன்றவர்; எந்தையாகிய எம் பெருமான்; மாசில் வெண்ணீறு மேனியர்; முப்போதும் முருக நாயனாரால் கொன்றை மலரை முடிமேல் சூட்டப் பெற்றவர் அவர் வர்த்த மானீச்சரத்தார் ஆவார்

1000 தளிரி ளங்கொட்ட வளரத்
தண்கயம் இரியவண் டேறிக்
கிளரி ளம்முழை நுழையக்
கிழிதரு பொழிற்புக லூரில்
உளரி ளஞ்சுனை மலரும்
ஒளிதரு சடைமுடி யதன்மேல்
வளரி ளம்பிறை யுடையார்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : மென்மையான கொடிகள் வளர்ந்து மேவி விளங்கக் குளிர்ந்த நீர் நிலைகளில் சூழ்ந்து வண்டுகள கிளர்ந்து சுற்ற, மான்குட்டிகள் நுழைந்து செல்லும் பொழில் விளங்கும் புகலூரில் விளங்கும் மெல்லிய சுனையின் ஒளி போன்று சடை முடியில் பிறைச் சந்திரனை உடையவர் வர்த்தமானீச்சரத்தார் ஆவார்

1001 தென்சொல் விஞ்சமர் வடசொல்
திசைமொழி எழில்நகரம் பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத்
தொழுதெழ தொல்புக லூரில்
அஞ்ச னம்பிதிர்ந் தனைய
அலைகடல் கடையஅன் றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : அழகிய தமிழ்ச் சொல்லால் விளங்கும் தோத்திரப் பாடலாலும், விஞ்சி விளங்கும் உயர்ந்த சொல்லாகிய வேதத்தினாலும், மற்றும் குறிப்பாகத் தெரிவிக்கப்படும் வட்டாரத்தில் வழங்கப்பெறும் சொற்களாலும் மனத்தின் இருளும் தீங்கும் நீங்குமாறு போற்றித் தொழும் தொன்மையான புகலூரில், மை போன்ற கரிய தன்மையுடன் பாற்கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் அணியாகக் கொண்டவர் வர்த்தமானீச்சரத்தில் கோயில் கொண்டுள்ள ஈசன் ஆவார்

1002 சாம வேதமொர் கீதம்
ஓதியத் தசமுகன் பரவும்
நாம தேயமது உடையார்
நன்குணர்ந்து அடிகள்என்று ஏத்தக்
காம தேவனை வேவக்
கனலெரி கொளுரிய கண்ணார்
வாமதேவர் தண் புகலூர்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : சாமவேதத்தை ஓதிய பத்துத் தலைகளை உடைய இராவணன் பரவும் திருநாமத்தை உடையவர், ஈசன் அவர் அடிகள் என்று நன்குணர்ந்து யாவராலும் ஏத்தப் பெறுபவர்; மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் எரித்தவர்; வாமதேவர் எனப் போற்றப்படுபவர் அப்பெருமான் குளிர்ச்சி மிக்க புகலூரில் வர்த்தமானீச்சரத்தில் வீற்றிருப்பவர்

1003 சீர ணங்குற நின்ற
செருவுறு திசைமுக னோடு
நார ணன்கருத் தழிய
நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர ணங்குறும் உமையை
அஞ்சுவித் தருளுதல் பொருட்டால்
வார ணத்துரி போர்த்தார்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியும் காணாது கருத்தழிய நின்ற சடை முடியுடைய ஈசன், உமாதேவி வெருவுமாறு  யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர் அப்பெருமான் வர்த்தமானீச்சரத்தில் வீற்றிருப்பவர் ஆவார்

1004 கையில் உண்டுழல் வாரும்
கமழ்த்துவர் ஆடையி னால்தம்
மெய்யைப் போர்ததுழல் வாரும்
உரைப்பன மெய்யென விரும்பேல்
செய்யில் வாளைக ளோடு
செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்தெம் பெருமான்
வர்த்தமா னீச்சரத் தாரே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைப்பன மெய்ம்மை என்று கொள்ளற்க வயல்களில் வாளைகளும் கயல்களும் குதித்து விளங்கும் புகலூரில் கரிய கண்டத்தையுடைய எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தில் மேவி விளங்குபவர் அவரைத் தொழுது போற்றுக

1005 பொங்கு தண்புனல் சூழ்ந்து
போதணி பொழில்புக லூரில்
மங்குல் மாமதி தவழும்
வர்த்தமா னீச்சரத் தாரைத்
தங்கு சீர்திகழ் ஞான
சம்பந்தன் தண்டமிழ் பத்தும்
எங்கும் ஏத்தவல் லார்கள்
எய்துவர் இமையவர் உலகே

தெளிவுரை : குளிர்ந்த நீரும், மலர்கள் விளங்கும் பொழில் உடைய புகலூரில், திங்கள் தவழும் வர்த்தமானீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனைச் சீர்திகழும் ஞானசம்பந்தர் போற்றிப் பாடிய இத் திருப்பதிகத்தை ஏத்த வல்லவர்கள், தேவர்களின் உலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள்

திருச்சிற்றம்பலம்

229 திருத்தெங்கூர் (அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தங்கூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1006 புரைசெய் வல்வினை தீர்க்கும்
புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை
உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய்து ஆரழல் ஊட்டி
உழல்பவர் இடுபலிக்கு எழில்சேர்
விரைசெய் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : குற்றத்தை உண்டாக்குகின்ற கொடிய வினையைத் தீர்க்கும் புண்ணியராக விளங்குபவர் சிவபெருமான் அப்பெருமான், தேவர்கள் எல்லாம் போற்றித் துதிக்கப் பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டவர்; பகைத்துத் திரிந்த முப்புரங்களை வெந்து சாம்பலாகுமாறு செய்தவர்; கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர் அவர் நறுமணம் கமழும் அழகிய பொழில் விளங்கும் தெங்கூரில் வெள்ளி மலை அமர்ந்தவர்

1007 சித்தந் தன்னடி நினைவார்
செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின் தாழ்சடை முடிமேல்
கோள்எயிற்று அரவொடு பிறையன்
பத்தர் தாம்பணிந் தேத்தும்
பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : சித்தத்தைத் தன்பால் செலுத்தித் தொழுகின்ற அடியவர்களின் துன்பத்திற்குக் காரணமாகிய கொடிய வினைகளைத் தீர்க்கின்ற சிவபெருமான், சடைமுடியில், வளைந்த பல்லுடைய அரவத்தோடு, பிறைச்சந்திரனைக் கொண்டு விளங்குபவர்; பக்தர்கள் தொழுது போற்றும் பரமன்; கங்கை தரித்த ஈசன் அப்பெருமான் பொழில்சூழ் தெங்கூரில் விளங்கும் வெள்ளிமலையில் வீற்றிருப்பவர்

1008 அடையும் வல்வினை யகல
அருள்பவர் அனலுடை மழுவாள்
படையர் பாய்புலித் தோலர்
பைம்புனல் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித்
தார்மணி யணிதரு தருகண்
விடையர் வீங்கெழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : மன்னுயிரை அடைந்து வருத்தும் கொடிய வினையானது அகலும்படி அருள் புரிபவர், சிவ பெருமான் அவர், கனன்று ஒளிதிகழ் மழுவாட் படை உடையவர்; புலியின் தோலை ஆடையாகக் கொண்டுள்ளவர்; கங்கை தரித்தவர்; கொன்றை மலர் சூடியவர்; படரும் சடை முடியில் வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடியவர்; வலிமை மிக்க இடபத்தை வாகனமாக உடையவர் அப் பெருமான், எழில் மிகுந்த தெங்கூரில் விளங்கும் வெள்ளி மலையில் வீற்றிருக்கும் நாதன் ஆவார்

1009 பண்டு நான்செய்த வினைகள்
பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடிக்
குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமலர் ஊதி
மதுஉண இதழ்மறி வெய்தி
விண்ட வார்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : முற்பிறவிகளில் செய்த வினைகள் யாவும் கெட்டு நீங்குமாறு நன்கு ஓர்ந்து தியானம் செய்து உய்கின்ற நெறியினை அருள்புரிபவர் சிவபெருமான் அவர், சந்திரனைச் சூடியவர்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நீலகண்டனாகத் திகழ்பவர் அப் பெருமான் வண்டுகள் தேன் உண்பதற்காக ஊத மலர் விரியும் பொழில் திகழும் தெங்கூரில் வெள்ளி மலையில் அமர்ந்து இருப்பவர்

1010 சுழித்த வார்புனல் கங்கை
சூடியொர் காலனைக் காலால்
தெழித்து வானவர் நடுங்கச்
செற்றவர் சிறையணி பறவை
கழித்த வெண்டலை யேந்திக்
காமனது உடல்பொடி யாக
விழித்த வர்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : நீர்ச்சுழிகள் மிக்க கங்கையைச் சடை முடியில் தரித்து, காலனைக் காலால் உதைத்து வானவர்களையும் அயர்ந்து நடுங்குமாறு செய்தவர், சிவபெருமான் அப் பெருமான், கபாலம் ஏந்தி, மன்மதனுடைய உடலைத் தனது நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கி எரித்துச் சாம்பலாக்கியவர்அவர் திருத்தெங்கூர் வெள்ளிய்கிரியில் அமர்ந்தவர்

1011 தொல்லை வல்வினை தீர்ப்பார்
கடலைவெண் பொடியணி கவண்டர்
எல்லி சூடிநின்று ஆடும்
இறையவர் இமையவர் ஏத்தச்
சில்லை மால்விடை யேறித்
திரிபுரந் தீயெழச் செற்ற
வில்லி னார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : தொல்வினையாகிய சஞ்சிதம், பிராரத்தம் ஆகிய வலிமை மிக்க வினையைத் தீர்த்து அருள் புரியும் சிவபெருமான், சுடலையில் விளங்கும் திருவெண்ணீறு அணிபவர்; சந்திரனைச் சூடி நின்று நடம்புரியும் இறைவர்; தேவர்கள் தொழுது ஏத்த இடப வாகனத்தில் ஏறித் திரிபுரங்களைத் தீயில் கருகிச் சாம்பலாகுமாறு செற்று மேரு மலையை வில்லாகக் கொண்டவர் அப்பெருமான் திருத்தெங்கூரில் உள்ள வெள்ளிமலையில் வீற்றிருப்பவர் ஆவார்

1012 நெறிகொள் சிந்தைய ராகி
நினைபவர் வினைகெட நின்றார்
முறிகொள் மேனிமுக் கண்ணர்
முளைமதி நடுநடுத் திலங்கப்
பொறிகொள் வாளரவு அணிந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : சிவநெறியில் சிந்தையுடையவராகி அவ்வழியில் நின்று ஒழுகி நினைத்துப் போற்றும் அடியவர்களின் வினை யாவையும் கெடுமாறு அருள் புரிபவர் மென்மையான திருமேனியும், முக்கண்ணனும் உடைய சிவபெருமான் அவர் இளம் பிறைச் சந்திரனும், நடுங்கும்படி படம் கொண்டு விளங்கும் அரவமும் அணிந்த புண்ணியர் அப்பெருமான், திருமேனியில் திருவெண்ணீறு திகழ, மணம் கமழும் பூம்பொழில் சூழ்ந்த தெங்கூரில் மேவும் வெள்ளிமலையில் வீற்றிருப்பவர்

1013 எண்ணி லாவிறல் அரக்கன்
எழில்திகழ் மால்வரை எடுக்கக்
கண்ணெ லாம்பொடிந் தலறக்
கால்விரல் ஊன்றிய கருத்தர்
தண்ணு லாம்புனல் கண்ணி
தயங்கிய சடைமுடிச் சதுரர்
விண்ணு லாம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : எண்ணற்ற ஆற்றலையுடைய இராவணன், எழில் திகழும் பெருமை கொண்ட கயிலை மலையைப் பேர்த்து எடுக்க, கனன்று அவன் கலங்கிக் கசிந்து அலறும் தன்மையில் திருப்பாதவிரலை ஊன்றிய சிவபெருமான், தண்மை மிக்க, கங்கை தரித்த சடைமுடியுடைய சர்வ வல்லமையுடையவர் அவர் விண்ணை முட்டும் உயர்ந்த பொழில் உடைய தெங்கூரில் மேவும் வெள்ளிமலையில் வீற்றிருப்பவர்

1014 தேடித் தானயன் மாலும்
திருமுடி யடியினை காணார்
பாடத் தான் பல பூதப்
படையினர் சுடலையில் பலகால்
ஆடத் தான்மிக வல்லர்
அருச்சுனர்க் கருள்செயக் கருதும்
வேடத் தார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்மர்ந்தாரே

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியும், திருமுடியும் திருவடியும் காணாதவராகிய சிவபெருமான், பூதப் படைகள் பா, சுடலையில் பல்கால் ஆடுபவர் அவர், அர்ச்சுனருக்குப் பாசுபதம் என்னும் அத்திரத்தை அருள் செய்யக் கருதி, வேட்டுவ வடிவத்தைக் கொண்டு திருத்தெங்கூரில் மேவும் வெள்ளிமலையில் வீற்றிருப்பவர்

1015 சடங்கொள் சீவரப் போர்வைச்
சாக்கியர் சமணர்சொல் தவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும்
ஏத்துமின் இருமருப் பொருகைக்
கடங்கொள் மால்தளிற்று உரியர்
கடல்கடைந் திடக்கனன்று எழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே

தெளிவுரை : சமணர், சாக்கியர் கூறும் உரைகளைத் தவிர்மின் இப் பிறவியில் சேர்ந்து இடங்கொண்டு விளைவிக்கும் தீவினையைத் தீர்க்கும் ஈசன், மதம் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்தும், பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அருந்தியும் விளங்கும் நீலகண்டர் அப்பெருமான் தெங்கூரில் வெள்ளிமலையில் வீற்றிருப்பவர் ஆவார்

1016 வெந்த நீற்றினர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
கந்தம் ஆர்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞானசம் பந்தன்
சந்தம் ஆயின பாடல்
தண்டமிழ் பத்தும்வல் லார்மேல்
பந்த மாயின பாவம்
பாறுதல் தேறுதல் பயனே

தெளிவுரை : திருநீற்றுத் திருமேனியராகத் தெங்கூர் என்னும் பதியில் வெள்ளிமலையில் வீற்றிருக்கும் நாதரைப் போற்றி, நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த சீகாழியில் விளங்கும் ஞானசம்பந்தர் சந்தப் பாடல்களாகப் பாடிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், தம்பால் பற்றியுள்ள பாவம் ஒழிய மேல் நிலையில் நற்பயனைக் கொள்வர்

திருச்சிற்றம்பலம்

230 திருவாழ்கொளிபுத்தூர் (அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1017 சாகை ஆயிரம் உடையார்
சாமமும் ஓதுவது உடையார்
ஈகை யார்கடை நோக்கி
இரப்பதும் பலபல உடையார்
தோகை மாமயில் அனைய
துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண்துளி வீசும்
வாழ்கொளிபுத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், வேத நூல் பகுதிகள் ஆயிரம் உடையவர்; சாமவேதம் ஓதுபவர்; கையில் கபாலம் பிச்சை கொள்பவர்; தோகை விரித்து ஆடும் சாயலையுடைய மயில் போன்ற உமாதேவியை ஒரு பாகம் கொண்டுள்ளவர் அப்பெருமான் வாகை மரத்தின் மணம் வீசும் வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1018 எண்ணில் ஈரமும் உடையார்
எத்தனை யோர்இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார்
மையுமொர் ஆயிரம் உடையார்
பெண்ணும் ஆயிரம் உடையார்
பெருமையொர் ஆயிரம் உடையார்
வண்ணம் ஆயிரம் உடையார்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், எண்ணத்தால் நினைத்து அறிய முடியாதவாறு அன்பு பூண்டு விளங்குபவர்; கணக்கற்ற அறநெறிகளை உடையவர்; ஆயிரம் கண்ணுடையவர் ஆயிரம் கரங்களுடன் விளங்குபவர்; ஆயிரம் சக்தியைக் கூறாகக் கொண்டு திகழ்பவர்; ஆயிரம் பெரும் புகழ்களை உடையவர்; ஆயிரம் வண்ணங்களை உடையவர் அவர் வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1019 நொடியொர் ஆயிரம் உடையார்
நுண்ணிய ராம்அவர் நோக்கும்
வடிவும் ஆயிரம் உடையார்
வண்ணமும் ஆயிரம் உடையார்
முடியும் ஆயிரம் உடையார்
மொய்குழ லாளையும் உடையார்
வடிவும் ஆயிரம் உடையார்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், ஆயிரம் துகள்களாக உடையவர்; நுண்ணிய நோக்குடையவர்; ஆயிரம் வடிவத்தை உடையவர்; ஆயிரம் வண்ணங்கள் உடையவர்; ஆயிரம் முடிகளை உடையவர்; உமாதேவியைப் பாகங் கொண்டு விளங்குபவர் அவர் வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1020 பஞ்சி நுண்துகில் அன்ன
பைங்கழல் சேவடி யுடையார்
குஞ்சி மேகலை யுடையார்
கொந்தணி வேல்வலன் உடையார்
அஞ்சும் வென்றவர்க்கு அணியார்
ஆனையின் ஈருரி உடையார்
வஞ்சி நுண்ணிடை யுடையவர்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், பஞ்சின் துகில் போன்ற திருவடி உடையவர்; சடைமுடியில் கொத்தாக மலர் சூடி, விளங்கும் துகில் அணிந்து திகழ்பவர்; சூலப் படையுடையவர்; ஐம்புலன்களை வென்ற ஞானிகளுக்கு அண்மையானவர்; யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர்; வஞ்சிக் கொடிபோன்ற நுண்ணிய இடையுடைய உமாதேவியைப் பாகமாக உடையவர் அவர் வாழ்கொளி புத்தூரில் வீற்றிருப்பவர்

1021 பரவு வாரையும் உடையார்
பழித்திகழ் வாரையும் உடையார்
விரவு வாரையும் உடையார்
வெண்டலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பதும் உடையார்
ஆயிரம் பேர்மிக உடையார்
வரமும் ஆயிரம் உடையார்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : பரவிப் போற்றும் தேவர்கள் திகழ விளங்கும் சிவபெருமான், பழித்து இகழ்ச்சியாகப் புகலும் தன்மையுடையவர்களையும் கொண்டுள்ளவர்; கலந்த மனத்துடையவர்களாய் அன்பு பூண்டு விளங்கும் மெய்யடியார்களை உடையவர்; திருநாமம் ஓராயிரம் உடைய அப்பெருமான், ஆயிரம் வரங்களைத் தருபவராய், வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1022 தண்டும் தாளமும் சூழலும்
தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார்
கோலமும் பலபல உடையார்
கண்டு கோடலும் அரியார்
காட்சியும் அரியதொர் கரந்தை
வண்டு வாழ்பதி யுடையார்
வாழ்கொளிபுத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், பூத கணங்கள் சூழ நடம்புரியும் செம்மையில், தண்டு, தாளம், குழல், தண்ணுமை முதலான கருவிகள் கொண்டுள்ளவர் திருக்கோலம் பல உடையவர்; கண்டு தரிசிப்பதற்கும் அரியவர்; திருக்காட்சிக்கு அரியதாகவும் தோற்றமும் கரத்தலும் கொண்டும் திகழ்பவர்; திருநீற்றுப் பச்சை என்னும் பத்திரத்தைக் கொண்டு விளங்கும் அப்பெருமான், வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1023 மான வாழ்க்கையது உடையார்
மலைந்தவர் மதில்பரிசு அறுத்தார்
தான வாழ்க்கையது உடையார்
தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கையது உடையார்
நள்ளிருள் மகளிர்நின் றேத்த
வான வாழ்க்கையது உடையார்
வாழ்கொள் புத்தூர் உளாரே

தெளிவுரை : ஈசன், பெருமை மிக்க மனத்தில் விளங்கி வாசம் புரிபவர்; எதிர்த்துப் பகைகொண்டு மலைத்த முப்புர அசுரர்களை எரித்து அழித்தவர்; திருத்தலங்களில் வீற்றிருந்து வழிபடும் அடியவர்களுக்கு அருள் புரிபவர்; கரணத்தாலும் ஞானத்தாலும் ஆகிய தவ ஒழுக்கம் பூண்டு நாம் புகழ்ந்து ஏத்தி வழிபடப் பெறும் பெருஞானமாகத் திகழ்பவர்; தெய்வ மகளிர் ஏத்தச் சிறப்புடன் விளங்குபவர் அவர் வாழ்கொள்புத்தூரில் வீற்றிருப்பவர்

1024 ஏழு மூன்றுமொர் தலைகள்
உடையவன் இடர்பட அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி
விருப்பவர் பலபல உடையார்
கேழல் வெண்பிறை அன்ன
கெழுமணி மிடறுநின் றிலங்க
வாழி சாந்தமும் உடையார்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : பத்துத் தலைகளையுடைய இராவணன் இடர் கொள்ளுமாறு திருப்பாத விரலால் அடர்த்த ஈசன், தக்கன் செய்த தீய வேள்வியை, விரும்பி அழித்தவர்; பலவிதமான விருப்பும் உடையவர்; பன்றியின் கொம்பும், வெண்பிறையும், நீலமணி மிடறும் கொண்டு விளங்குபவர் சாந்தம் எஞ்ஞான்றும் நிலவ விளங்கும் அப்பெருமான், வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1025 வென்றி மாமல ரோனும்
விரிகடல் துயின்றவன் தானும்
என்றும் ஏத்துகை யுடையார்
இமையவர் துதிசெய விரும்பி
முன்றில் மாமலர் வாச
முதுமதி தவழ் பொழில் தில்லை
மன்றில் ஆடலது உடையார்
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : பெருமை திகழும் மலராகிய தாமரையில் விளங்கும் பிரமனும், பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலும் எக்காலத்திலும் ஏத்தும் சிறப்புடைய ஈசன், தேவர்களும் யோகிகளும் துதித்துப் போற்றி வழிபட வேண்டும் என்னும் விருப்பத்தை நிறைவு செய்யுமாறு, நறுமணமும் பூரண நிலவும் திகழ, பொழில் சூழ்ந்த தில்லையில் நடம்புரிதல் செய்தவர் அப் பெருமான் வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருப்பவர்

1026 மண்டை கொண்டுழல் தேரர்
மாசுடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக்
கொள்ளன்மின் திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச்
கண்ணவெண் பொடியணிந்து எங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த
வாழ்கொளி புத்தூர் உளாரே

தெளிவுரை : தேரர்களும் சமணர்களும் பேசிய பேச்சுக்களைக் கொள்ளற்க ஒளி மிக்க வெண்திங்களைச் சூடித் திருவெண்ணீறு அணிந்து வண்டுகள் வாழும் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருக்கும் ஈசனைப் போற்றி உய்தி பெறுமின்

1027 நலங்கொள் பூம்பொழிற் காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
வலங்கொள் வெண்மழு வாளன்
வாழ்கொளி புத்தூர் உளானை
இலங்கு வெண்பிறை யானை
ஏத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தைய ராகி
நன்னெறி எய்துவர் தாமே

தெளிவுரை : குறைவற்ற மங்கலத்தைக் கொண்டு விளங்குகின்ற பூம்பொழில் சூழ்ந்த சீகாழியில் மேவும் நற்றமிழ் ஞானசம்பந்தர், வலிமை மிக்க மழுப்படை உடைய, வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருக்கும் சிவபெருமானை  இளம் பிறைச் சந்திரனைச் சூடி பரமனை, எத்திய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், குறைவற்ற மங்கலம் நிறைந்த சிந்தை உடையவராய், நன்னெறியாகிய சிவஞானத்தைப் பெறுவார்கள்

திருச்சிற்றம்பலம்

231 திருஅரசிலி (அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு, விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1028 பாடல் வண்டறை கொன்றை
பால்மதி பாய்புனல் கங்கை
கோடல் கூவிள மாலை
மத்தமும் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை
மருவிட வல்லியந் தோள்மேல்
ஆடல் மாகணம் அசைத்த
அடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : வண்டுகள் இசை மணக்க விளங்கும் கொன்றை மலரும், வெண்பிறைச் சந்திரனும், கங்கையும் வெண்காந்தள் மலரும், வில்வமாலையும், ஊமத்த மலரும் செஞ்சடையில் நிலவச் செய்து, மண்டையோடுகளை மாலையாகக் கொண்டு அணிந்து, உமாதேவியை உடனாகக் கொண்டு, பாம்பினை அரையில் அசைத்துக் கட்டிய ஈசன் வீற்றிருக்கும் இடம், அரசிலியாகும்

1029 ஏறு பேணிஅது ஏறி
இளமதக் களிற்றினை எற்றி
வேறு செய்ததன் உரிவை
வெண்புலால் கலக்கமெய் போர்த்த
ஊறு தேனவன் உம்பர்க்கு
ஒருவன்நல் ஒளிகொள்ஒண் சுடராம்
ஆறு சேர்தரு சென்னி
அடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : இடபத்தை மேன்மையாகக் கண்டு அதனை வாகனமாகக் கொண்டு, மதம் கொண்டு பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்துத் திருமேனியில் போர்த்துக் கொண்ட ஈசன், அன்பர்களுக்குத் தேன் போன்று இனிமையானவன்; தேவர்களுக்கு ஒப்பற்ற இறைவன்; நல்லொளியினை வழங்கும் ஒண்சுடரானவன்; திருமுடியில் கங்கை தரித்த பெருமான் அவர் வீற்றிருக்கும் இடம் அரசிலியாகும்

1030 கங்கை நீர்சடை மேலே
கதமிகக் கதிரிள வனமென்
கொங்கை யாளொரு பாக(ம்)
மருவிய கொல்லைவெள் ளேற்றின்
சங்கை யாய்த்திரி யாமே
தன்னடி யார்க்கருள் செய்து
அங்கை யால்அனல் ஏந்தும்
அடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : சடை முடியில்மீது கங்கையைத் தரித்து, ஒளிதிகழும் அழகு மிக்க உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து, அடியவர்கள் மனத்திற்கு ஐயறவு நேராதவாறு எல்லாக் காலத்திலும் இனிய அருளைப் பொழிந்து, அழகிய திருக்கரத்தில் அனலை ஏந்தி விளங்குகின்ற ஈசனுக்கு இடமாக விளங்குவது, அரசிலி ஆகும்

1031 மிக்க காலனை வீட்டி
மெய்கடக் காமனை விழித்துப்
புக்க வூரிவு பிச்சை
உண்பது பொன்திகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில்
தவளவெண் ணீறணிந்து ஆமை
அக்கின் ஆரமும் பூண்ட
அடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : காலனை வீழ்த்தி அடக்கி, மன்மதனை நெற்றிக் கண்ணால் விழித்துப் பொடியாக்கி, ஊர்களில் திரிந்து பிச்சை ஏற்று உண்டு, பொன் போன்ற கொன்றை மலர் தரித்துத் தகுந்த முப்புரி நூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீறு திகழ, ஆமையோடும் எலும்பு மாலையும் பூண்ட ஈசன் வீற்றிருக்கும் இடம், அரசிலியாகும்

1032 மானஞ் சும்மட நோக்கி
மலைமகள் பாகமு மருவித்
தானஞ் சாஅரண் மூன்றும்
தழல்எழச் சரமது துரந்து
வானஞ் சும்பெரு விடத்தை
உண்டவன் மாமறை யோதி
ஆனஞ் சாடிய சென்னி
அடிகளுக் கிடம்அர சிலியே

தெளிவுரை : மானின் விழிபோன்ற நோக்குடைய மலைமகளைப் பாகமாகக் கொண்டு, முப்புர அசுரர்களின் மாயைகளுக்கு அஞ்சாது அவற்றை நெருப்புக்கு இரையாக்கும் தன்மையில் அம்பு எய்தி, தேவர்கள் அஞ்சுமாறு தோன்றிய விடத்தை உண்ட சிவபெருமான், வேதங்களை விரித்துப் பசுவிலிருந்து உண்டாகும் பஞ்ச கவ்வியத்தைப் பூசனைப் பொருளாக ஏற்கின்றவர் அப் பெருமானுக்கு இடமாவது அரசிலி ஆகும்

1033 பரிய மாசுணம் கயிறாப்
பருப்பதம் அதற்குமத் தாகப்
பெரிய வேலையைக் கலங்கப்
பேணிய வானவர் கயைக்
கரிய நஞ்சது தோன்றக்
கலங்கிய அவர்தமைக் கண்டு
அரிய ஆரமுது ஆக்கும்
அடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : பெரிய பாம்பாகிய வாசுகியைக் கயிறாகவும், மேருமலையை மத்தாகவும் பாற்கடலைக் கலங்கக் கடைந்த வானவர்கள், கொடிய நஞ்சு வெளிப்படக் கண்டு கலங்க, அதனை அரிய அமுதாகச் செய்விக்கும் பாங்கில் தான் அருந்தி உய்வித்த ஈசன், வீற்றிருப்பது அரசிலி ஆகும்

1034 வண்ண மால்வரை தன்னை
மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணும் தோளுதல் வாயு
நெரிதரக் கால்விரல் ஊன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பால்
பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாய்அருள் செய்த
அடிகளுக் கிடம்அர சிலியே

தெளிவுரை : வண்ணம் மிக்க  பெருமையுடைய கயிலை மலை குறுக்கிடுவதைக் கண்ட கொடிய அரக்கனாகிய இராவணனுடைய கண்ணும் தோளும் வாயும் நெரியுமாறு திருப்பாத விரல் ஊன்றிய சிவபெருமான், அவ்வரக்கனின் பண் மிக்க பாடலைக் கேட்டு அருள் செய்தவன் அப்பெருமான் வீற்றிருக்கும் இடம் அரசிலியாகும்

1035 குறிய மாணுரு வாகிக்
குவலயம் அளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே
விரும்பிய மெய்த்தவத் தோனும்
செணிவொ ணாவகை யெங்கும்
தேடியும் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம்
மடிகளுக்கு இடம்அர சிலியே

தெளிவுரை : சிறிய வடிவாகிப் பின்னர் திரிவிக்கிரமனகி உலகத்தை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் பிரமனும் பொருந்தாத வகையில் எல்லா இடங்களிலும் தேடியும் காணப்பெறாத உருவத்தை உடைய அடிகளாகிய ஈசனுக்கு இடமாவது, அரசிலி ஆகும்

1036 குறுளை யெய்திய மடவார்
நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவரும்
தேரரும் சொல்லிய தேறல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம்
நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை யார்தர நல்கும்
அடிகளுக் கிடம்அர சிலியே

தெளிவுரை : சமணரும் தேரரும் சொல்லிய கருத்துக்கள் பொருந்துவன அல்ல அவற்றை ஏற்றுக் கொள்ளன்மின் மெய்ப்பொருளாய் விளங்கியும், பொய்ம்மை நீக்கியும் மெய்ம்மையாய்த் திகழும் ஈசனைப் போற்றி அப்பெருமான் திருவடியை வணங்குக அத்தகைய பெருமான் அருள்மிக்கு விளங்கும் அடிகள் ஆவார் அவருக்கு இடமாவது அரசிலியாகும்

1037 அல்லி நீள்வயல் சூழ்ந்த
அரசிலி யடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்தன்
நற்றமிழ் பத்திவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மைச்
சூழ்ந்தம ரர்தொழுது ஏத்த
வல்ல வானுலகு எய்தி
வைகலும் மகிழ்ந்திருப் பாரே

தெளிவுரை : நீண்ட வயல்களில் அல்லி மலர்கள் சூழ்ந்து விளங்க, அரசிலியில் வீற்றிருக்கும் ஈசனை, காழியில் விளக்கும் நல்ல ஞானசம்பந்தர் நற்றமிழால் ஏத்திய இத் திருப்பதிகத்தை நாள்தோறும் சொல்ல வல்லவர்கள் தம்மை வானவர்கள் தொழுது ஏத்த விளங்கி, பின்னர் வானுலகத்தினை அடைந்து எஞ்ஞான்றும் மகிழ்ந்திருப்பார்கள்

திருச்சிற்றம்பலம்

232 சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1038 பொங்கு வெண்புரி வளரும்
பொற்புடை மார்பன்எம் பெருமான்
செங்கண் ஆடரவு ஆட்டும்
செல்வன்எம் சிவன்உறை கோயில்
பங்கம் இல்பல மறைகள்
வல்லவர் பத்தர்கள் பரவும்
தங்கு வெண்திரைக் கானல்
தண்வயல் காழிநன் னகரே

தெளிவுரை : மிளிர்ந்து திகழும் வெண்மையான முப்புரி நூல் விளங்கும் திருமார்பினையுடைய எம்பெருமான், படம் கொண்டு ஆடுகின்ற நாகத்தைத் தரித்து மகிழும் செல்வன்; எமது சிவன் அப் பெருமான் உறையும் கோயில், வேதங்களில் வல்ல மறையவர்களும் பக்தர்களும் போற்றும், கடலலைகளும் குளிர்ச்சி மிக்க வயல்களும் திகழும் காழி என்னும் நல்ல நகரே ஆகும்

1039 தேவர் தானவர் பரந்து
திண்வரை மால்கடல் நிறுவி
நாவ தால்அமிர் துண்ண
நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவ என்றரு நஞ்சம்
உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர்மதில் சூழ்ந்த
கடிபொழில் காழிநன் னகரே

தெளிவுரை : தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை, மேருமலை கொண்டு கடைந்து அமிர்தம் உண்டு நாவால் சுவைக்க வேண்டும் என்று விரும்பிய போது நஞ்சு தோன்ற, அஞ்சிச் சாய, அதனைக் கண்டு இரக்கம் கொண்டு அவ் அரிய நஞ்சினை உண்டு அபயம் நல்கிய சிவபெருமான் வீற்றிருக்கும் தொன்மை யான ஊரானது, காவலாய் நன்கு விளங்கும் மதில்களும் மணம் கமழும் பொழில்களும் சூழ்ந்து திகழும் காழி என்னும் நல்ல நகர் ஆகும்

1040 கரியின் மாமுகம் உடைய
கணபதி தாதைபல் பூதம்
திரிய இல்பலிக்கும் ஏகும்
செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கைநல் மாதர்
சதிபட மாநடம் ஆடி
உரிய நாமங்கள் ஏத்தும்
ஒலிபுனல் காழிநன் னகரே

தெளிவுரை : யானையின் பெருமை மிக்க முகத்தை உடைய கணபதியின் தந்தையாகிய சிவபெருமான், பூத கணங்கள் பல சூழ, இல்லந்தோறும் சென்று திரிந்து பிச்சை ஏற்று விளங்கும், ஒளி திகழும் தொன்மையான ஊரானது, மன் கையில் வளையல் அணிந்த மாதர் இசைத்துப் பாடத், திகழும் நடனம் ஆடி உரிய சிவநாமங்கள் மொழிந்து ஏத்தும், நீர்நிலைகளின் ஒலி மிக்க, காழி என்னும் நன்னகர் ஆகும்

1041 சங்க வெண்குழைச் செவியன்
தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூண்என உடைய
அப்பனுக்கு அழகிய ஊராம்
துங்க மாளிகை உயர்ந்த
தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாள்மதி தடவும்
அணிபொழில் காழிநன் னகரே

தெளிவுரை : ஈசன், சங்கால் ஆகிய வெண்மையான குழையணிந்த செவியுடையவன்; குளிர்ந்த சந்திரனைச் சூடிய சடை முடியுடையவன்; எலும்பு மாலையைப் பூணும் ஆபரணமாகக் கொண்டவன்; தந்தையாக விளங்குபவன் அத்தகைய ஈசனுக்கு இடமாகத் திகழும் அழகிய ஊரானது, நெடிய மாளிகைகளும், உயர்ந்த கொடிகளும், வானில் விளங்கும் வெண்மதியைக் தடவும் பொழிலும் மேவும் காழி என்னும் நல்ல நகராகும்

1042 மங்கை கூறமர் மெய்யான்
மான்மறி யேந்திய கையான்
எங்கள் ஈசன்என்று எழுவார்
இடர்வினை கெடுப்பவர்க்கு ஊராம்
சங்கை யின்றிநல் நியமம்
தாம்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுயர் கீர்த்தி
மறையவர் காழி நன்னகரே

தெளிவுரை : உமாதேவியை ஒரு கூறாகத் கொண்டுள்ள திருமேனியுடைய ஈசன், இளமையான மானைக் கரத்தில் ஏந்திய பெருமான் எங்கள் ஈசனே என்று தொழுது போற்றுபவர்களுக்கு, இடர் தரும் வினையைத் தீர்த்து அருள்புரிபவர் அப்பெருமான் அவனது ஊரானது, நல்ல நியமங்களைக் கைக் கொண்டு, ஆசார சீலத்தில் கங்கை நதித் தீரம் வரை பரவும் புகழ்மிக்க மறையவர்கள் வாழும் காழி என்னும் நன்னகர் ஆகும்

1043 நாறு கூவிள மத்த
நாகமும் சூடிய நம்பன்
ஏறும் ஏறிய ஈசன்
இருந்தினிது அமர்தரு மூதூர்
நீறு பூசிய உருவர்
நெஞ்சினுள் வஞ்சமொன்று இன்றித்
தேறு வார்கள்சென்று ஏத்தும்
சீர்திகழ் காழிநன் னகரே

தெளிவுரை : மணம் மல்கும் வில்வம், ஊமத்தம், நாகம் ஆகியவற்றைச் சூடிய ஈசன், இடபவாகனத்தில் ஏறி வீற்றிருந்து காட்சி நல்குகின்ற தென்மையான ஊரானது, திருநீறு தரித்த வடிவத்தை உடையவராய், வஞ்சமற்ற நெஞ்சினராய்த் தெளிவு மிக்கவராய் விளங்கும் சான்றோர்கள் ஏத்தும் புகழ்மிக்க காழி என்னும் நன்னகர் ஆகும்

1044 நடமது ஆடிய நாதன்
நந்திதன் முழவிடைக் காட்டில்
விடம மர்ந்தொரு காலம்
விரித்தறம் உரைத்தவற்கு ஊராம்
இடம தாமறை பயில்வார்
இருந்தவர் திருந்தியம் போதில்
குடம தார்மணி மாடம்
குலாவிய காழிநன் னகரே

தெளிவுரை : மயானத்தில் நடம் புரியும் நாதனாய் ஈசன், நந்திதேவர் முழவு வாசிக்க விளங்குபவர் அவர், விடத்தைத் தம் கண்டத்தில் இருக்கச் செய்து தேவர்களைக் காத்து, சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தவர் அப்பெருமானுக்கு உரிய ஊரானது, மறை பயில்வதற்கு ஏற்ற இடமாகக் கொண்டும், மாடமாளிகைகள் திகழவும் உள்ள காழி என்னும் நன்னகர் ஆகும்

1045 கார்கொள் மேனியவ் அரக்கன்
தன்கடுந் திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச
எழில்மலை எடுத்தவன் நெரியச்
சீர்கொள் பாதத்தொர் விரலால்
செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினர் சூழ்ந்த
தண்வயல் காழிநன் னகரே

தெளிவுரை : கரிய மேனியுடைய அரக்கனாகிய இராவணனுடைய கடுமையான திறத்தைக் கருதி, சிறப்பு மிக்க உமாதேவியும் அஞ்சுமாறு, எழில் திகழும் கயிலை மலையை எடுத்தபோது, அவ் அரக்கன் நெரியுமாறு, திருப்பாத விரலால் ஊன்றிய சிவபெருமான் உறைகின்ற கோயிலானது, மலர் மாலைகளில் வண்டினங்கள் சூழ்ந்தும், குளிர்ச்சியான வயல்கள் உடையதும் ஆகிய, காழி என்னும் நன்னகர் ஆகும்

1046 மாலும் மாமல ரானு(ம்)
மருவி நின்று இகலிய மனத்தால்
பாலும் காண்பரி தாய
பரஞ்சுடர் தன்பதி யாகும்
சேலும் வாளையும் கயலும்
செறிந்துதன் கிளையொடு மேய
ஆலும் சாலிநற் கதிர்கள்
அணிவயல் காழிநன னகரே

தெளிவுரை : திருமாலும் பிரமனும் மாறுபாடு கொண்ட மனத்தினராய்த் தேட, அண்மைத்தாயினும் காண்பதற்கு அரிதாகிய பரஞ்சுடராக விளங்கும் சிவ பெருமானுடைய பதியாவது, சேலும், வாளையும், கயலும் திளைத்துத் தம் இனத்துடன் திகழ, சாலி எனப்பெறும் நெற்கதிர்கள் செழித்தோங்கும் காழி என்னும் நன்னகராகும்

1047 புத்தர் பொய்மிகு சமணர்
பொலிகழல் அடியிணை காணும்
சித்தம் அற்றவர்க் கிலாமைத்
திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க்கு ஊராம்
சித்த ரோடுநல் லமரர்
செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேஅருள் என்று
முறைமைசெய் காழிநன் னகரே

தெளிவுரை : புத்தரும் சமணரும் ஈசன் திருக்கழலைக் காண வேண்டும் என்னும் சித்தம் இல்லாதவர்கள் அத்தகையோருக்குத் தோன்றாதவராகிய செழுஞ்சுடர் அன்ன ஈசன் வீற்றிருக்கும் ஊரானது, சித்தர்களும் தேவர்களும் நன்கு திகழும் மலர்கொண்டு, முத்தி நலம் நல்கும் பெருமானே, அருள்வீராக ! என்று, முறையிட்டு ஏத்தும் காழி என்னும் நன்னகராகும்

1048 ஊளியானவை பலவும்
ஒழித்திடும் காலத்தில் ஓங்கு

(இப்பாட்டு முழுதும் கிடைக்கவில்லை)

திருச்சிற்றம்பலம்

233 சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1049 நம்பொருள் நம்மக்கள்என்று நச்சியிச்சை செய்துநீர்
அம்பரம் அடைந்துசால அல்லல்உய்ப்ப தன்முனம்
உம்பர்நாதன் உத்தமன் னொளிமிகுந்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே

தெளிவுரை : நம்முடைய பொருள் என்ற சொல்லப்படுவது, நமது மக்கள் என்று இச்சைகொண்டு விரும்பி அதன் வழி நின்று இறைவனைத் துதியாது, இவ்வுலகினின்று பூதஉடல் நீங்கிச் செல்லும் காலத்தில், நரகம் என்னும் அல்லல் தரும் துயருள் அழுந்தாத முன்னம், தேவர்களின் தலைவனாகிய உத்தமனும், ஒளிமிக்க செஞ்சடை கொண்டு மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் நன்நகராகிய நலம் திகழும் காழியை அடைவீராக அது உய்யுமாறு செய்யும்

1050 பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்துசாவ தன்முனம்இ சைந்துநீர்
தீபமாலை தூபமும்செ றிந்தகையர் ஆகிநம்
தேவதேவன் மன்னும்ஊர்தி ருந்துகாழி சேர்மினே

தெளிவுரை : பாவத்தை மேவும் நெஞ்சுடையவராய்ப் பக்தி இன்றி, நித்தமும் பழிக்கப் பெறும் துன்பத் தைச் செய்து இறப்பதற்கு முன்னம், மனம் இசையப் பெற்று ஈசனுக்கு மாலை சாற்றித் தூபங்களும் தீபங் களும் கொண்டு வழிபட்டுப் பொருந்திய தகைமையுடையவராகி விளங்குமின் தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்கும் சிவபெருமான் திகழும் ஊராகிய காழி நகரை அடைமின் அது நலம் தரும்

1051 சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக்கு
ஏறுகற்றும் எள்கவே இடுக்கண்உய்ப்ப தன்முனம்
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே

தெளிவுரை : இம்மையில், வறுமையின் காரணமாக உண்ண உணவும் உடுக்க உடையும் குறைவுற்று, மனம் வருந்தி நெருங்கிய சுற்றத்தினரும் ஏளனம் செய்யும் தன்மையில் துன்பத்தை அடைதன் முன்னம், கங்கை தரித்த சடை கொண்டு விளங்குபவனாகிய ஆதிக் கடவுள், மதம் மிக்க யானையைக் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்தியவனாய், மணம் கமழும் தேன் மலர்ப் பொழிலின் நலங்கொள்ளும் காழிப் பதியில் திகழும் அப் பெருமானை அடைமின் அது நலம் தரும்

1052 நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் மெனும்முரை யுணர்ந்துகேட்ப தன்முனம்
பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே

தெளிவுரை : வறுமை காரணமாகப் பிறர் வாயிலின் கண் சென்று யாசிக்க, நாளை வா எனவும், உச்சிக் காலமாகிய மதியம் வா எனவும் உரை செய்ய, அதனைக் கேட்டு வருத்தம் கொள்வதன் முன்னர், பிட்சாடணராகவும், நஞ்சுடைய நாகத்தை யுடையவராகவும், பெருஞ் சோதியாகவும் விளங்கி, போற்றி வழிபடும் அடியவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்தருளும் எம்பிரானாகிய ஈசன் மேவும் எழில் மிக்க காழி நகரைச் சென்றடைவீராக அது நன்மை தரும்

1053 கண்கள்காண்பு ஒழிந்துமேனி கன்றியொன்ற லாதநோய்
உண்கிலாமை செய்துநும்மை உய்ந்தழிப்ப தன்முனம்
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ்சு அமுதுசெய்
கண்கள்மூன்று உடையஎங் கருத்தர்காழி சேர்மினே

தெளிவுரை : கண்களில் பார்வை குறைந்து, தேகம் நலிந்து, நோய் பெருகி, உணவு கொள்வதற்கும் இயலாது, முதுமை வந்து உய்த்து அழிப்பதன் முன்னர், தேவர்கள் உய்யுமாறு நஞ்சினை அமுது செய்த மகாதேவராய், கண்கள் மூன்றுடைய எம் கருத்தில் பதிந்த பரமன் திகழும் காழி நகரைச் சென்றடைவீராக அது நலம் பயக்கும்

1054 அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடாது எழுமினோ
பல்லில்வெண் தலையினிற் பலிக்குஇயங்கு பான்மையால்
கொல்லையேறது ஏறுவான் கோலக்காழி சேர்மினே

தெளிவுரை : அல்லல் உடைய வாழ்க்கையினை நுகர்வதற்குத் துன்பத்தையுடைய பிறவியைக் கொண்டு, எல்லை யில்லாத பிணக்கில் கிடந்து இழிவு கொள்ளாது, விழித்து எழுமின் பிரமகபாலம் ஏந்திப் பிச்சை ஏற்கும் பாங்கில், இடப வாகனத்தில் ஏறிய ஈசன் அழகிய காழியில் வீற்றிருக்கும் நீவிர் சென்றடைமின் நுமது துன்பமும் பிணக்கும் தீரும்

1055பொய்மிகுந்த வாயாராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்
ஐமிகுந்த கண்டராய் அடுத்திரைப்ப தன்முனம்
மைமிகுந்த மேனிவாள் அரக்கனை நெரித்தவன்
பைமிகுந்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே

தெளிவுரை : பொய் கூறும் வாயால் பொறாமை கொண்டு புன்சொல் கூறுதலும், நெஞ்சில் கோழை மிகுந்து மூச்சு அடைத்தும், பெருமூச்சு கொண்டும் நலிவு கொள்வதற்கு முன், கரிய மேனியுடைய இராவணனை நெரித்துப் படம் கொண்டு விளங்கும் பாம்பை அரையில் கட்டிய பரமர் திகழும் காழிப் பதியைச் சென்றடைமின் அப்பெருமான் உய்தி பெறுமாறு அருள்புரிபவர்

1056 காலினோடு கைகளும் தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே

தெளிவுரை : கால்களும் கைகளும் தளர்ச்சியடைந்து முதுமையைக் காட்டி நிற்க, அன்பொடு உபசாரம் மற்றும் சேவைகள் புரிந்து வந்த மகளிர் இகழ்ந்து உரைப்பதன் முன்னர், திருமாலும் பிரமனும் காண்கிலாத நீலகண்டனாகிய ஈசன் திகழ விளங்கும் காழிப்பதியைச் சென்றடைமின் நற்கதி உண்டாகும்

1057 நிலைவெறுத்த நெஞ்சமொடு நேசமில் புதல்வர்கள்
முலைவறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனம்
தலைபறித்த கையர்தேரர் தாம்தரிப் பரியவன்
சிலைபிடித்து எயில்எய்தான் திருந்துகாழி சேர்மினே

தெளிவுரை : ஒரு காலத்தில் நல்ல தேக சுகத்துடன் விளங்கிய பெற்றோர்களுக்கு உறுதுணையாய் இருந்து, பின்னர் முதுமையாகித் தளர்ச்சி கொள்ளும் காலத்தில், அன்பில்லாத புதல்வர்கள் வெறுத்துக் சினந்து ஒதுக்குவதன் முன்னர், சமணர்களுக்கும் சாக்கியர்களுக்கும் ஏற்பதற்கு அரியவனாய், மேரு மலையை வில்லாகக் கொண்டு மூன்று மதில்களையும் எய்து எரித்த சிவபெருமான் பொருந்தி விளங்கும் காழி நகர் சென்று அடைமின் நன்மையாகும்

1058 தக்கனார் தலையரிந்த சங்கரன் தனதுஅரை
அக்கினோடு அரவுஅசைத்த அந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
மிக்கஇன்பம் எய்திவீற் றிருந்து வாழ்தல் மெய்ம்மையே

தெளிவுரை : தீய வேள்வி செய்த தக்கனுடைய தலையை அரிந்த சங்கரனார், தனது அரையில் எலும்பும் அரவமும் அசைத்துக் கட்டிய செம்மேனியர் அப்பெருமான் திகழ்ந்து விளங்குகின்ற காழிப் பதியைச் சமமாக உரைத்த ஞானசம்பந்தரின் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இம்மையில் மிகுந்த மகிழ்வு எய்திப் பெருமையுடன் வீற்றிருந்து நல்ல வாழ்க்கையைப் பெற்று விளங்குவார்கள் என்பது மெயம்மையாகும்

திருச்சிற்றம்பலம்

234 திருத்துருத்தி (அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1059 வரைத்தலைப் பசும்பொனோடு அருங்கலன்கள் உந்திவந்து
இரைத்தலைச் சுமந்துகொண்டு எறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக்கு இருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக்கு உணர்த்துமாறு வல்லமே

தெளிவுரை : மலையின்கண் தோன்றும் பசும் பொன்னும் மணிகளும் அலைகள்வழி உந்திக் கொண்டும் சுமந்தும் கரையில் சேர்க்கும் காவரியின் கரையில் விளங்கும் துருத்தி என்னும் பதியைச் சார்ந்து மேவும் கருத்துடைய நாதனே ! உமது திருசேர் புகழை உணர்த்துமாறு சொல்ல வல்லது ஆகுமோ !

1060 அடுத்தடுத்து அகத்தியோடு வன்னிகொன்றை கூவிளம்
தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாய்ஓர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினால் நிறுத்துதைத்த காரணம்
எடுத்தெடுத்து உரைக்குமாறு வல்லமாகி னல்லமே

தெளிவுரை : ஈசன், அடுத்தடுத்து அகத்தி, வன்னி, கொன்றை மலர், வில்வம் ஆகியவற்றைத் தொடுத்துச் சடையில் அணிந்த பெருமான் அப்பெருமான் துருத்தியில் விளங்கிக் காலனைச் சினந்து திருவடியின் புறமாகிய புறந்தாளால் உதைத்த காரணத்தை எடுத்துரைக்கும் வல்லமை உள்ளதா எனில், இல்லை என்றே சொல்லும் தன்மையதாம்

1061 கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூல்உருத்திரா துருத்திபுக்கு
எங்குநின் னிடங்களாஅடங்கி வாழ்வது என்கொலோ

தெளிவுரை : திங்களும் கங்கையும் செஞ்சடையில் தரித்துச் சங்கினால் ஆகிய வெண்குழையைக் காதில் அணிந்து, முப்புரி நூல் மார்பில் திகழ்ந்து விளங்க உருத்திரமூர்த்தியாய்த் திகழும் பெருமானே ! துருத்தி என்னும் தலத்தில் சார்ந்து எல்லா இடங்களிலும் திகழும் ஆற்றல் பொருந்தியவாறு வீற்றிருப்பது என் கொல்

1062 கருத்தினாலொர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியால்தம் அல்லல்சொல்லி ஐயம்ஏற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத்து உடம்புவிட்டி யோகியாய்
இருத்துநீ துருத்திபுக்கு இதென்னமாயம் என்பதே

தெளிவுரை : ஈசனே ! கருத்துடன் காட்டுபவர் இன்றி வளம் உடைய செல்வமும் இன்றி, அடியவர்தம் அன்பினால் அல்லலைச் சொல்லி பிச்சை ஏற்பதும் அல்லாது ஒருத்திபால் பொருந்துமாறு விளங்கிப் பின்னர் யோகியாய்த் துருத்தியில் புகுந்து விளங்குவது என்னே !

1063 துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமாறு இலாத என்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்டு
இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே

தெளிவுரை : துருத்தியில் வீற்றிருக்கும் நாதனே ! துறந்து பற்றற்றவனாகச் சொல்லப்படாமல் வீற்றிருக்கும் பெருமானே ! அடியேனை நின்பால் மறப்பிக்காது, மையல் கொண்டு இவ்வையகத்தில் பிறக்குமாறு காட்டி அருள் புரிந்தனை ! பிணி கொளும் இத் தேகமானது இறப்பதற்குச் செய்கின்றனை ! நான் செய்த இழுக்குதான் என்னே !

1064 வெயிற்குஎதிர்ந்து இடங்கெடாது அகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்குஎதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்திõயாய்
மயிற்குஎதிர்ந்து அணங்குசாயல் மாதொர்பாக மாகமூ
எயிற்குஎதிர்ந்து ஒருஅம்பினால் எரித்தவில்லி யல்லையே

தெளிவுரை : கதிரவனுடைய வெயிலுக்கு இடம் தராமல் குளிர்ந்த பைம்பொழிலில் புள்ளினங்கள் மல்கும் தண்மை விளங்கும் துருத்தியில் வீற்றிருக்கும் பெருமானே ! மயிலினை விஞ்சிய சாயலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழ்ந்து, மூன்று மதில்களை ஓர் அம்பினால் எரித்த மேருமலையை வில்லாகக் கொண்டு திகழ்பவர் நீரே அல்லவா !

1065 கணிச்சியம்ப டைச்செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க்கு அவாவுநல்
மணிப்படும்பைந் நாகநீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே

தெளிவுரை : கூரிய மழுப் படையுடைய பெருமானே ! மேலான செல்வமாக விளங்கும் இறைவனே ! கோடிக் கணக்கான பிரமர்கள் அழிய, தலை மாலையைக் கொண்டு விளங்கும் ஈசனே ! கரந்தையை உடையவனாய்த் துருத்தியில் வீற்றிருக்கும் நாதனே ! அழகிய பிறைச்சந்திரனின் குளிர்ந்த ஒளியை விரும்பும் மாணிக்கத்தையுடைய நாகத்தை நீ மகிழ்ந்து ஏற்ற அண்ணல் அல்லவா !

1066 சுடப்பொடிந்து உடம்பிழ்ந்து அநங்கனாய் மன்மதன்
இடர்ப்படக் கடந்துஇடம் துருத்தியாக எண்ணினாய்
கடற்படை யுடையஅக் கடல்இலங்கை மன்னனை
அடற்பட அடுக்கடலில் அடர்த்தஅண்ணல் அல்லையே

தெளிவுரை : நெற்றிக் கண்ணால் சுட்டு எரிக்கப்பட்டுச் சாம்பலாகி உடல் அற்றவனாக மன்மதனை இடர் கொள்ளுமாறு செய்து, துருத்தியை இடமாகக் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஈசனே ! கடல் துன்பறுமாறு கயிலை மலையின்கீழ் அடர்த்த அண்ணல் நீரே அல்லவா !

1067 களங்குளிர்ந்து இலங்கு போதுகாதலானு மாலுமாய்
வளங்கிளபொன் அங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலாம் உகந்துகந்து ரைப்பனே

தெளிவுரை : குளிர்ச்சி மிக்க தாமரையில் விளங்கும் பிரமனும், திருமாலும் வளம் மிகுந்து பொன் போன்ற அழகிய திருவடியை வணங்கி வந்து காண்கிலராய், இளம் பிறைச் சந்திரனைச் சூடி, துருத்தியில் வீற்றிருக்கும் பெருமானே ! உமது திருக்கழலை உள்ளம் குளிர்ந்து எல்லாக் காலத்திலும் மகிழ்ந்து போற்றுவேன்

1068 புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை
உத்தமம் எனக்கொளாது உகந்துஎழுந்து வண்டினம்
துத்தநின்று பண்செயும் சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித்த னைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே

தெளிவுரை : புத்தர்களும் சமணர்களும் உரைத்த பொய்ம்மொழிகளை உத்தமம் எனக் கொள்ளாது, வண்டுகள் பண் செய்யும் பொழில் விளங்கும் துருத்தியில் வீற்றிருக்கும் எம் பித்தர் பித்தனை, உகந்து எழுந்து தொழுவீராக அது பிறப்பு என்னும் பெரிய பிணைப்பை அறுத்து நன்மை தரும்

1069 கற்றுமுற்றி னார்தொழும் கழுமலத்து அருந்தமிழ்
சுற்றுமுற்றும் ஆயினான் அவன்பகர்ந்த சொற்களால்
பெற்றம்ஒன்று உயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
குற்றுமுற்றும் இன்மையிற் குணங்களிவந்து கூடுமே5

தெளிவுரை : வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் தொழும் கழுமலத்தில், அருந்தமிழ் முற்றும் கற்று அறிந்த ஞானசம்பந்தர், இடபத்தில் உயர்ந்து விளங்கிய பெருமை மிக்க துருத்தியில் வீற்றிருக்கும் ஈசனைச் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், குற்றம் யாவும் நீங்கியவராய் விளங்கி நற்குணங்கள் நாடப் பெற்றவர்களாவார்கள்

திருச்சிற்றம்பலம்

235 திருக்கோடிக்கா (அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1070 இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : இன்று மகிழ்ச்சிதரும் நாள் எனவும், நாளையும் மகிழ்ச்சி பெருகும் எனவும் விருப்பம் கொண்டு பொய்ம்மையாய்க் கழிக்கின்ற வாழ்க்கையை ஒழிமின் மின் போன்ற சோதியுடைய திருமேனியனாகி வெண்மையான பிறைச்சந்திரனும், கங்கையும், கொன்றை மலரும் சென்னியில் தரித்த சிவபெருமான், கோடிக்காவில் வீற்றிருக்கின்றான் அப்பெருமானைச் சென்றடைவீராக அதுவே மெய்யான நன்மை தரும்

1071 அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராதுநீர்
நல்லதோர் நெறியினை நாடுதும் நடமினோ
வில்லையன்ன வாணுதல் வெள்வளையொர் பாகமாம்
கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : துன்பத்தைத் தருகின்ற வாழ்க்கையை விரும்பி நாடாது நல்ல நெறியின்கண் உம்மை ஈடு படுத்திக்கொள்வீராக வில்லை நிகர்த்த ஒளி மிக்க நெற்றியையும் வெண்மையான வளையலும் கொண்ட உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு வெள்ளை இடபத்தில் வீற்றிருக்கும் ஈசன் திகழும் கோடிக்கா சென்றடைவீராக அதுவே நலம் தரும்

1072 துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந்து அரைமிசை ஆறணிந்த சென்னிமேல்
கொக்கிறது அணிந்தவன் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : துக்கம் மிகுதியாக உள்ளதும், சோர்வு தரக் கூடியதும் ஆகிய வாழ்க்கையைத் துறுந்து, நீவிர், தகுந்த ஒரு நெறியினை, சார்ந்து புரிவதற்கு வருக எலும்பு அணிந்து, கங்கை தரித்த திருமுடியின்மீது கொக்கிறகு சூடிய ஈசன் வீற்றிருக்கும் கோடிக்கா சென்றடைவீராக அது துக்கத்தைத் தீர்க்கும்

1073 பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
உண்டுஉமக்கு உரைப்பனால் ஒல்லைநீர் எழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : முற்பிறவிகளில் செய்த கொடிய வினையின் பற்றுகள் யாவும், அற்று வீழும் வகையானது உலகில் உண்டு அதனை உமக்கு உரைகின்றனம் நீர் விரைவில் எழுமின் கங்கையைச் செஞ்சடையில் வைத்து, உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு உகந்த திருமார்பினையுடைய ஈசன், கோடிக்காவில் வீற்றிருக்கின்றான் ஆங்கு சென்றடைந்து இறைவனைத் தொழ, வினை யாவும் கெட்டு நீங்கும்

1074 முன்னே நீர்செய் பாவத்தால் மூர்த்திபாதம் சிந்தியாது
இன்ன நீரிடும்பையில் மூழ்கிறீர் எழுமினோ
பொன்னை வென்ற கொன்றையான பூதம்பாட ஆடலான்
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : முற்பிறவிகளில் செய்த பாவத்தால், மூர்த்தியாக விளங்கும் ஈசனின் திருவடிக் கமலத்தைச் சிந்தனை செய்து போற்றத் துதிக்காது, இப் பிறவியில் நீவிர் துன்பத்தில் மூழ்குகின்றீர் இறைவனை வணங்காது இருக்கும் அஞ்ஞானத்திலிருந்து மீண்டு எழுமின் பொன்னை வெல்லும் ஒளிவண்ணம் உடைய கொன்றை மலரைச் சூடியுள்ள ஈசன், பூதகணங்கள் பாட, ஆடுதல் புரிபவன்; கொல்லும் ஆற்றலுடைய சூலப்படையுடையவன் அப்பெருமான் கோடிக்காவு என்னும் தலத்தில் வீற்றிருக்க, அப்பதியைச் சென்று நன்மை அடைவீராக

1075 ஏவமிக்க சிந்தையோடு இன்பமெய்த லாமெனப்
பாவமெத் தனையுநீர் செய்தொரு பயனிலைக்
காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
கோவமிக்க நெற்றியான் கோடிக்கவு சேர்மினே

தெளிவுரை : ஈசனை வணங்கும் சிந்தையில்லாது இகழ்ச்சியைக் கொண்டு இன்பத்தை எய்துதல் இல்லை பாவம் செய்தமையால் இன்பத்தின் பயனை அடைதலும் ஆகாது மூன்று மதில்கள் கொண்டு காவல் பெற்ற முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்த, நெற்றிக் கண்ணுடைய ஈசன் விளங்கும் கோடிக்காவு சென்றடைமின் அதுவே இன்பத்தை நல்கும்

1076 ஏணழிந்த வாழ்க்கையை யின்பமென்று இருந்துநீர்
மாணழிந்த மூப்பினால் வருந்தல்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான் பொன்திகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினான் கோடிக்காவு சேர்மினே

தெளிவுரை : பெருமையில்லாத வாழ்க்கையை இன்பம் உடையதென்று கருதிச் சிறப்பு அழிந்து மூப்பினால் பின்னர் வருத்தம் அடையும் முன்னர் வம்மின் எலும்பு மாலையைப் பூண்டு, பொன் போன்று திகழும் சடை முடியில் வளைந்த வெண்பிறைச் சந்திரனைச் சூடிய ஈசன் கோடிக்கா என்னும் தலத்தில் வீற்றிருக்க ஆங்கு சென்றடைந்து நல்லின்பம் கொள்வீராக

1077 மற்றிவாழ்க்கை மெய்யெனும் மணத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந்து எழுமினோ
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : பொய் வாழ்க்கையைப் பெரிதாகக் கொண்டு, அதனையே மெய்யென்று கருதும் மனத்தை விடுத்து, ஈசனைப் பற்றி வாழ்வீராக அப்பெருமானின் செம்மை நல்கும் திருவடியைப் பணிந்து, அஞ்ஞானத்திலிருந்து மீண்டு எழுக வீரம் மிக்க இராவணனின் திறத்தை அழித்து விளங்கும் கயிலை மலையில்  வீற்றிருக்கும் ஈசன் திகழும் கோடிக்கா சென்றடைந்து, மெய்ம்மை கொள்வீராக; மகிழ்ச்சியுறுவீராக

1078 மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணம் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்தும் காண்கிலா
வெங்கண்மால் விடையுடைய வேதியன் விரும்பும்ஊர்
கொங்குலாம் வளம்பொழில் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : தேகத்தை மங்கச் செய்கின்ற நோயும் கொண்டு துன்புறும் தன்மையில், அதனை மாயச் செய்யும் வண்ணம் உரைப்பன் திருமாலும், பிரமனும் சென்று அளந்தும் காண்கிலாதவனாகி, பெருமை திகழும் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் வேத நாயகனாகிய பரமன், விரும்பி விளங்கும் ஊரானது தேன் விளங்கும் வளமையான பொழில் கொண்ட கோடிக்கா ஆகும் ஆங்கு சென்றடைந்து நலம் கொள்வீராக

1079 தட்டொடு தழைமயிற் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகும் மழுவொடும்
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கும சொற்கள் பயனற்றவை; சடைமுடி திகழ, முழவு, கொட்டு முதலான வாத்தியங்கள் முழங்க, ஆடல் புரியும் ஈசன் கோடிக்கா வீற்றிருந்து அருள் பாலிக்க, ஆங்கு சென்று அடைந்து நன்மையுறுவீராக

1080 கொந்தணி குளிர்பொழிற் கோடிக்காவு மேவிய
செந்தழல் உருவனைச் சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே

தெளிவுரை : கொத்தாகப் பூக்கும் பூம்பொழில் விளங்கும் கோடிக்கா என்னும் பதியில் மேவிய செந்தழல் போன்ற வண்ணம் உடைய ஈசனை, சீர் மிகுந்த திறமையால் வேதம் வல்ல அந்தணர் விளங்கும் புகலியில் நற்கேள்விகளில் திகழும் ஞானசம்பந்தர் பாடிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பாவம் யாவும் கெட்டழியும்

திருச்சிற்றம்பலம்

236 திருக்கோவலூர்வீரட்டம் (அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1081 படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வார் எமக்கிலை எழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : மிகக் கூரிய படையுடைய கூற்றுவன் மெய்யினைப் பாசக் கயிற்றால் கட்டி உயிரைக் கொண்டு செல்லும்போது, இடையில் தடுத்து நிறுத்தும் வல்லமையுடையவர் எமக்கு யாரும் இல்லை ஆதலால் நெஞ்சமே ! விரைந்து எழுக ! வெண்கொறற்றக்குடையுடைய வேந்தனாகிய அன்பனாய்க் கோவலூரில் இடபக் கொடியுடையவனாய் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் ஈசனைச் சார்ந்து விளங்குக அது பாதுகாப்பாகத் திகழும்

1082 கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறும் கால்நிமிர்ந்து
இரவலாழி நெஞ்சமே யினியதுஎய்து வேண்டில்நீ
குரவமேறி வண்டினம் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : நெஞ்சமே ! கரவு என்னும் குணத்தை உடையவர்கள் இல்லந்தோறும் சென்று கால் கடுக்க நின்று யாசிக்கும் தன்மை நீங்கி, இனிமை கொள்ள வேண்டுமானால், குரவ மலரின்கண் வண்டு யாழ் போன்று இனிய இசையெழுப்பி மகிழ்கின்ற கோவலூரில், மணம் கமழும் கொன்றை மாலை அணிந்து ஈசன் விளங்குகின்ற வீரட்டானம் சார்ந்து இருப்பாயாக அது இனிமை தரும்

1083உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவது அறிதிரேல்
அள்ளற் சேற்றிற காலிட்டிங்கு அவலத்துள் ளழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தால் குழகன்கோவ லூர்தனில்
வெள்ளத்தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : நல்ல உள்ளத்தை உடையவர்களே ! வாருங்கள் உறுதி பயப்பது யாதென அறிந்து கொள்வீராயின், நரகக் குழியில் கால் வைக்காது, அவலத்துள் அழுந்தாதவாறு, நன்றாகப் பாட்டிசைத்து, அன்பனாகிய ஈசன் திகழும் கோவலூரில் உள்ள வீரட்டானம் சென்றடைவீராக கங்கை தாங்கிய சடையுடைய அப் பெருமான் நன்கு காத்தருள்வான்

1084 கனைகொள்இருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
இனைய பலவு(ம்) மூப்பினோடு எய்திவந்து நலியாமுன்
பனைகள்உலவு பைம்பொழில் பழனம்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : கனைத்து வருத்தும் இருமல், சூலை, குளிர் சுரம், குன்மம் போன்ற பலவிதமான பிணிகளும் மூப்புடன் சேர்ந்து வந்து நலியாத முன்னர் பனை மரங்களும், பொழில்களும், வயல்களும் சூழ்ந்த கோவலூரில், நல்வினை, மற்றும் தீய வினைகளைக் கடந்தவனாகிய ஈசன் விளங்கும் வீரட்டானம் சார்ந்து, நன்னலம் பெறுக

1085 உளங்கொள்போகம் உய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாள்தொறும் துயரல்ஆழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றல் உடைய கடல் போல் பரந்து விளங்கும் நெஞ்சமே ! உடம்பு இழந்த பிறகு உள்ளத்தில் தோன்றும் போகத்தை உய்த்திடல் ஆகாது எனவே அசைவு கொண்டு துன்புறுதல் வேண்டாம் பெண்ணை ஆற்றின் வளம் கொழிக்கும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில், விளங்குகின்ற கோவண ஆடையடையவனாய்த் திகழும் ஈசன் வீற்றிருக்கும் வீரட்டானத்தைச் சார்ந்து நலம் கொள்க

1086 கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாள்தொறும்
ஆடுபோல நரைகளா யாக்கைபோக்கது அன்றியும்
கூடிநின்று பைம்பொழில் குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : துன்பம், முதுமை, மரணம் என யாவும் சூழ்ந்து வந்து நாள்தோறும் ஆடுகள்போலக் குழுமி நரைத்துச் சாரும் யாக்கையானது அழியக் கூடியது ஆகும் யாக்கையின் தன்மை இஃது அன்றி வேறு செம்மையன்ற எனவே, பசுமையான பொழில்களை உடைய கோவலூரில், முத்தியைக் காட்டும்நெறி உடையவனாய் ஈசன் வீற்றிருக்க, அப் பெருமானைச் சார்ந்து நற்கதியடைக

1087 உரையும்பாட்டும் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்
நரையும் திரையும் கண்டெள்கி நகுவர் நமர்கள் ஆதலால்
வரைகொள் பெண்ணை வந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர் வெண்ணீற்றினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : பேசி மகிழ்தலும் பாடி மகிழ்தலும் உடல் தளர்வு எய்தி மூப்பு அடைந்த போதும், நரையும் திரையும் காணும் போதும், நம் போன்ற மக்களே நகை செய்து ஏளனம் புரிவார்கள் ஆதலால், பெண்ணை ஆறு பாயும் வழல்கள் சூழ்ந்த கோவலூரில், மணம் கமழும் திருவெண்ணீறு மேனியனாக வீற்றிருக்கும் வீரட்டானத்தைச் சேர்ந்து நற்கதி பெறுவீராக

1088 ஏதமிக்க மூப்பினோடு இருமல்ஈளை என்றிவை
ஊதலாக்கை யோம்புவீர் உறதியாவது அறிதிரேல்
போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்
வேதமோது நெறியினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : தேகத்தில் குறையைத் தந்து துன்புறுத்தும் முதுமையோடு இருமல், ஈளை என்பன போன்ற நோயகளும், நீரும், வாயுவும் சேர்ந்து ஊதலையுடைய உடலை மெய்யென்று கருதுபவர்களே ! உறுதி பயப்பது யாதென்று அறியும் தன்மையற்று இருக்கின்றீர் மலரில் வண்டு இசைக்கும் குளிர்ச்சி மிக்க சோலையுடைய கோவலூரில் வேதம் விரித்தருளும் சீலனாகிய ஈசன் வீற்றிருக்கும் வீரட்டானம் சார்ந்து நற்கதி அடைமின்

1089 ஆறுபட்ட புன்சடை அழகன்ஆயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான் குழகன் கோவ லூர்தனில்
நீறுபட்ட கோலத்தால் நீலகண்டன் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : கங்கை தரித்த சடையுடைய அழகன், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் அன்பனாய்க் கோவலூரில் திருநீறு பூசிய திருமேனியனாய், திருநீலகண்டனாய், திருமால் பிரமன் ஆகிய இருவருக்கும் சிந்தையால் வேறுபட்ட பரமனாய் வீரட்டானத்தில் வீற்றிருக்கின்றான் அப்பெருமானைச் சார்ந்து நற்கதி அடைமின்

1090 குறிகொள்ஆழி நெஞ்சமே கூறைதுவர்இட் டார்களும்
அறிவிலாத அமணர்சொல் லவத்தமாவது அறிதிரேல்
பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவலூர்தனில்
வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : நல்ல குறிக்கோளையுடைய நெஞ்சமே ! சமணர்களும் சாக்கியர்களும் பொய்ம்மொழியினைப் பகவர்வதனை அறிந்துகொள்வீராக குளிர்ச்சி மிக்க பூந்தோட்டங்கள் விளங்கும் கோவலூரில், கங்கை தரித்த ஈசன், வீரட்டானத்தில் வீற்றிருக்க, அப்பெருமானைச் சார்ந்து மெய்ந்நலம் பெற்று உய்வீராக

1091 கழியொடுலாவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால்
அழிவிலீர்கொண்டு ஏத்துமின் னந்தண்கோவலூர்தனில்
விளிகொள்பூதப் படையினான் வீரட்டானம் சேர்துமே

தெளிவுரை : உப்பங்கழிகளும் கடற்கரைச் சோலைகளும் சூழ்ந்த காழிப்பதியில் மேவும் ஞானசம்பந்தர் மக்கள் தன்மையின் குற்றங்கள் தீருமாறு சொல்லிய இச் சொற்கள் யாவும், பாவங்களை நாசம் செய்ய வல்லனவாகும் ஆதலால் அழிதல் இல்லாதவர்கள் ஆகிய நீவிர், இத் திருப்பதிகத்தை ஓதி உரைமின் குளிர்ச்சி மிக்க அழகிய கோவலூரில், நன்கு விழித்து நோக்கும் பூத கணங்களைப் படையாகக் கொண்டு விளங்கும் ஈசன் வீற்றிருக்கும் வீரட்டானம் சேர்ந்து வணங்குமின்

திருச்சிற்றம்பலம்

237 திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

1092 பருக்கையானை மதத்தகத்து அரிக்குலத்து உகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலம் நிராக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள் சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
அருக்கன் மண்ட லத்தணாவும் அந்தண் ஆரூர் என்பதே

தெளிவுரை : பருத்த துதிக்கையுடைய யானையைச் சிங்கத்தின் கூரிய நகங்கள்போன்று நெருக்கி மாய்த்து, முத்துக்கள் விரவும் நீண்ட மலையுடைய ஈசனுக்கு உரிய ஊர், அடர்த்தியான சோலைகளும் உயர்ந்த பெரிய மாட மாளிகைகளும், கொடிகள் சூரிய மண்டலத்தைத் தொடும் தன்மையுடையதும், குளிர்ச்சி மிக்கதும் ஆகிய ஆரூர் என்பதாகும்

1093 விண்டவெள் வெலுக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டை கொண்டசெஞ்சடை முடிச்சிவன் இருந்தஊர்
கெண்டைகொண்டு அலர்ந்தகண்ணி னார்கள்கீதவோசைபோய்
அண்டர் அண்டமூடறுக்கும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : வெள்ளெருக்க மலர், வன்னிப் பத்திரமலர், கொன்றை மலர், ஊமத்தம் பூ, இண்டை மலர் ஆகியவற்றைச் செஞ்சடையில் முடிந்து விளங்கும் சிவபெருமானது ஊர், கெண்டை போன்ற விழியுடைய மகளிர் இசைக்கும் கீதங்களின் ஓசை, மேலுலகத்தில் சென்று ஒலிக்கும் தன்மையில் நிலவும் அழகிய குளிர்ச்சி மிக்க ஆரூர் என்பதாகும்

1094 கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர்
மறுத்தமாணி தன்றன்ஆகம் வண்மைசெய்த மைந்தனூர்
வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி
அறுத்தமண்டி யாவிபாயும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : கரிய நஞ்சை உண்டு கருமையான கண்டத்தினை உடையவராய், காலனுடைய உயிரை மாய்த்து மார்க்கண்டேயரின் தேகமானது நன்னிலையில் விளங்குமாறு செய்த ஈசனது ஊர், எருமையானது வெறிகொண்டு ஓடி வள்ளைக் கொடிகளை அறுத்துக் குளத்தில் பாய்ந்து ஆரூர் என்பதாகும்

1095 அஞ்சும் ஒன்றிஆறுவீசி நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய அஞ்சல்என்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை
அஞ்சொலார்அரங்கெடுக்கும் அந்தண் ஆரூர் என்பதே

தெளிவுரை : ஐம்புலன்களும் ஒன்றி நிற்கக் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் (பொறாமை) என்னும் ஆறு குற்றங்களையும் களைந்து, திருநீறு பூசி, தலையாரக் கும்பிட்டு வாயாரப் போற்றித் துதித்து வழிபட, அஞ்சற்க என்று அருள் புரியும் ஈசன் விளங்குகின்ற ஊர், பஞ்சு போன்ற மென்மையான பாதங்களும் நுண்ணிடையும் உடைய மகளிர் அரங்கத்தில் நடம் பயிலும் அழகிய தண்மை பொருந்திய ஆரூர் என்பது ஆகும்

1096 சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்து
அங்குலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : சங்கனைய வெண்திங்கள் சூடித் தன்னை நினைத்துப் போற்றுபவரின் மனத்தில் அழகுடன் மகிழ்ந்து விளங்கி நின்ற எங்கள் ஆதிதேவன் பெருமையுடன் திகழும் ஊர், தென்னை மரங்களும், சோலைகளும் தேன் துளிர்க்கும் செண்பகம் முதலான மலர்களில் நறுமணம் யாங்கணும் பரவக் குளிர்ச்சியுடன் திகழும் அழகிய ஆரூர் என்பதாகும்

1097 கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட்டு அருத்தியோடு
உள்ளம்ஒன்றி உள்குவார் உளத்துளான் உகந்தவூர்
துள்ளிவானை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ள னாரை ஆரல்வாரும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : சூழ்ச்சியும் கபடமும் உள்ளதும் வஞ்சனை மிக்கதும் ஆகியவற்றை நெஞ்சிலிருந்து களைந்தும், உவகையுடைய வேட்கையால் உள்ளம் ஒன்றி நினைத்து வழிபடுபவரின் உள்ளத்தில் வீற்றிருக்கும் ஈசன் உகந்த ஊரானது, வாளை துள்ளி பாயும் வயல்களில் உள்ள நெய்தற் பூக்களில் வண்டுகள் சுழன்று ரீங்காரம் செய்ய, நாரையானது ஆரல் மீன்களை நோக்கும் தண்மை மிகுந்த ஆரூர் ஆகும்

1098 கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை கொத்திருந்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தண் ஆரூர் என்பதே

தெளிவுரை : கங்கை தரித்த செஞ்சடையுடைய ஈசன் எல்லா இடங்களிலும் வியாபித்து விளங்கும் பெருமான் அவர், மன்மதனை நெற்றியில் விளங்குபவர்; அப் பெருமான் சிறப்புடன் திகழும் ஊரானது, தென்னை மரங்களின் ஊடே சென்று வாழை மரங்களைக் கடித்துச் சாய்த்து, மாமரங்களின் மீது மந்திகள் ஏறும் வளம் காட்டும் அந்தண் ஆரூர் என்பதாகும்

1099 வரைத்தலம் எடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்
நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்
நிரைத்தமா ளிகைத்திருவி னேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடும்ஆரூர் என்பதே

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணனுடைய பத்துத் தலைகளும் அவன் உரத்தொடும் நெரித்த சிவபெருமான், முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவன் அப்பெருமான் விளங்குகின்ற ஊரானது, நன்கு வரிசையுடைய மாளிகைகளில் திருமகளை நிகர்த்த வெண்பற்களும் சிவந்த மேனியும் உடைய மகளிர் நடம் புரியும் ஆரூர் என்பதாகும்

1100 இருந்தவன் கிடந்தவன் இடந்துவிண் பறந்துமெய்
வருந்தியும் அளப்பொணாத வானவன் கிடந்தவூர்
செருந்தி ஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா
அரும்பு சோலை வாசநாறும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : தாமரை மலரில் இருந்து விளங்கும் பிரமனும், பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், விண்ணில் பறந்தும், பூமியில் குடைந்து சென்றும் அளப்பதற்கு ஒண்ணாத நெடிது உயர்ந்தவனாகிய ஈசன் வீற்றிருக்கும் ஊரானது, செருந்தி, கொன்றை, புன்னை, வன்னி, செண்பகம், செழுமையான குரவம் ஆகிய மரங்களின் அரும்புகளும் சோலைகளும் வாசம் மணக்கக் குளிர்ச்சியுடன் மேவும் ஆரூர் என்பதாகும்

1101 பறித்தவெண்டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம்
வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர்
மறித்தமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல்
அறுத்தவாய் அசும்புபாயும் அந்தண்ஆரூர் என்பதே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் மெய்த்தவத்தைப் பேணாதவர் என்னும் தன்மையில் அதனைக் கருதாத ஈசன், பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டகண்டன் அப்பெருமான் மேவும் ஊர், வண்டல் மண் கலந்த நீர் விளங்கும் வயல்களில் செந்நெல் அறுத்த பின், வாய்மடை, நீர் கசிந்து பாயும் அழகிய தண்மை கொண்ட ஆரூர் என்பதாகும்

1102 வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
அல்லிமாது அமர்ந்திருந்த அந்தண்ஆரூர் ஆதியை
நல்லசொல்லு ஞானசம் பந்தனாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானம்ஆள வல்லர் வாய்மை யாகவே

தெளிவுரை : கொடிகள் நிறைந்தும் மாமரங்களும் சிறந்து விளங்கும் வீதிகளும் அல்லியங்கோதை அமர்ந்து விளங்கும் ஆரூரின் ஆதிப்பிரானாகிய ஈசனை, நல்ல சொல்லால் விளம்பும் ஞானசம்பந்தர், நாவின் மணம் கமழும் இன்னுரையாய்த் திகழவல்ல இத்திருப்பதிகத்தை ஓதவல்ல தொண்டவர்கள், வானுலகத்தை ஆள வல்லவர்களாவார்கள்

திருச்சிற்றம்பலம்

238 சிரபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1103 அன்ன மென்னடை அரிவையோடு இனிதுரை
அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்
வைத்தவர் வேதாந்தம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே

தெளிவுரை : அன்னம் போன்ற மென்மையான நடை உடைய உமாதேவியோடு இனிது வேதப் பொருள் உரைக்கும், தேவர்களுடைய பெருமானாகிய ஈசன், மின்னும் செஞ்சடையின்மீது வெள்ளெருக்கம் மலர் சூடியவர்; வேதாந்தம் மொழியும் நல்ல பொருள்களைத் தந்தவர்; அகன்ற மதில்களையுடைய சிரபுரத்தில் வீற்றிருப்பவர் அப் பெருமானின் சிறப்பு மிக்க பொன்னின் மிக்க மாமலர் போன்ற திருவடியைத் தொழும் அடியவர்களுக்கு வினை இல்லை

1104 கோல மாகரி உரித்தவர் அரவொடும்
ஏனக் கொம்பிள ஆமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய
சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்கும் இன்பு அளிப்பவர்
பெருங்கடல் விடமுண்ட
நீலத் தார்மிடற்று அண்ணலார் சிரபுரந்
தொழவினை நில்லாவே

தெளிவுரை : பெரிய யானையின் தோலை உரித்து, அரவமும், பன்றியின் கொம்பும், ஆமையின் ஓடும் பொருந்த ஆபரணமாகப் பூண்டு, குளிர்ந்த சந்திரனைச் சூடிய சங்கரனார், தம்மைப் போன்றே தமது அடியவர்களுக்கும் பேரின்பத்தை அளிப்பவர் அவர், பாற்கடலில் தோன்றி விடத்தை உண்டு நீலகண்டராக விளங்கும் அண்ணல் அப் பெருமான் எழுந்தருளியிருக்கும் சிரபுரத்தைத் தொழ, வினையானது நிற்காது, கெட்டு அழிந்து விலகும்

1105 மானத்திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
தவங்கெட மதித்தன்று
கானத்தேதிரி வேடனாய் அமர்செயக்
கண்டருள் புரிந்தார் பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதரும்
சிரபுரத்து உறைஎங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை
குற்றங்கள் குறுகாவே

தெளிவுரை : பெருமை மிக்க உறுதியான காண்டீபம் என்னும் வில்லையுடைய பார்த்தனின் தவம் கெடுமாறு செய்து, காட்டில் திரிந்துலவும் வேடனாகத் திருக்கோலம் பூண்டு, போர் செய்யுமாறு ஆக்கிப் பின்னர் அருள் புரிந்தவராகிய சிவபெருமான், பூந்தேனைத் தேர்ந்து சேர்க்கும் வண்டுகள் திரியும் சிரபுரத்தில் வீற்றிருப்பவர் அப் பரமனைக் கும்பிடும் அடியவர்களை, கொடுமை செய்யும் வினையின் குற்றங்கள் அணுகாது

1106 மாணி தன்னுயிர் மதித்துண வந்தஅக்
காலனை உதைசெய் தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப்
பிணக்கறுத்து அருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச்
சிரபுரத்து அமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்கு
அருவினை அடையாவே

தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைக் கருதி மதித்துத் கொண்டு செல்ல வந்த காலனை உதைத்த ஈசன், தம்மைப் பேணி உள்ளத்தால் போற்றி விளங்கும் மெய்யடியார்கள் கொண்டுள்ள பெருந் துயரங்களும், அதனால் உண்டாகும் பிணக்குகளும் தீர்ந்து அருள்பவர் அவர் வெண்பிறைச் சந்திரனைச் சூடியவராய், மிகுந்த புகழ் கொண்டு விளங்கும் சிரபுரத்தில் வீற்றிருப்பவர் உயர்ந்த பொன் போன்று பெருமையாக விளங்கி மகிழ்ச்சியை நல்கும் அப்பெருமானை வணங்கும் அடியவர்களுக்கு, அருவினையானது அடையாது

1107 பாரு நீரொடு பல்கதிர் இரவியும்
பனிமதி யாகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்
தலைவனு மாய்நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்திழி
செழும்புனல் கோட்டாறு
வாருந்த தண்புனல் சூழ்சிர புரந்தொழும்
அடியவர் வருந்தாரே

தெளிவுரை : சிவபெருமான், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், வேள்வித் தலைவன் என அட்டமூர்த்தமாய்த் திகழ்ந்து விளங்குபவர் அப்பெருமான், சந்தனம், அகில் கட்டைகள் ஆகியனவற்றை நீரில் அடித்துக்கொண்டு வளைந்து செல்லும் ஆறு சூழும் சிரபுரத்தில் வீற்றிருப்பவர் அப் பதியைத் தொழுது போற்றும் அடியவர்களுக்கு வருத்தம் என்பது இல்லை

1108 ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
வுலகங்கள் அவைமூட
ஆழி யெந்தையென்று அமரர்கள் சரண்புக
அந்தரத்து உயர்ந்தார்தாம்
யாழி னேர்மொழி யேழையோடு இனிதுறை
இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரம் தொழுதெழ
வல்வினை அடையாவே

தெளிவுரை : ஊழிக் காலத்தின் இறுதியில், அலையின் ஒலி கொண்டு எழும் கடலால் உலகங்கள் மூடப்பெற்று இருக்க, தேவர்களெல்லாம், எம் தந்தையே ! என்று சரணம் அடைந்து போற்ற, வானில் தோன்றி விளங்குபவம் சிவபெருமான் அவர் யாழ் போன்ற இனிய மொழியுடைய உமாதேவியோடு இனிது உறையும் இன்பனாகிய எமது பெருமான் ஆவார் அப்பெருமான் வாழ்கின்ற சிறப்புடைய நகர் சிரபுரம் அதனைத் தொழுது வணங்க வல்வினை அணுகாது

1109 பேய்கள் பாடப்பல பூதங்கள் துதிசெயப்
பிணமிடு சுடாகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம்
ஆடும்வித் தகனார்ஒண்
சாய்கள் தான்மிக உடையதண் மறையவர்
தகுசிர புரத்தார்தாம்
தாய்கள் ஆயினார் பல்லுயிர்க் கும்தமைத்
தொழுமவர் தளராரே

தெளிவுரை : பேய்க் கூட்டங்கள் பாடவும், பூத கணஙகள் போற்றித் துதிக்கவும் மயானத்தில் மூங்கில் போன்ற தோள்களையுடைய உமாதேவி நாணுமாறு பெரிழ நடம் ஆடும் வித்தகராகிய ஈசன், புகழ் மிக உடைய குளிர்ந்த மனத்துடைய அந்தணர் விளங்கும் சிரபுரத்தில் வீற்றிருப்பவர் அனைத்துயிர்களுக்கு அன்னையாழ் விளங்கும் அப் பெருமான், தம்மைத் தொழுது வணங்கும் அடடயவர்களுக்குத் தளர்ச்சி அடையாதவாறு தாங்குபவர் ஆவார்

1110 இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
எழில்கொள்வெற்பு எடுத்ததன்று
கலங்கச் செய்தலும் கண்டுதம் கழலடி
நெரியவைத்து அருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன்
றதனிடைப் புகுந்தாரும்
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழுது
எழவினை குறுகாவே

தெளிவுரை : மலை போன்ற உறுதியான தோள்களும், அகன்ற மார்பும் உடைய இராவணன், எழில் மிகுந்த கயிலை மலையை எடுத்தபோது, யாவரும் கல்ங்கி இருக்க, திருப்பாத விரலால் ஊன்றி அவ் அரக்கனை நெரியச் செய்து, பின்னர் அருள் செய்தவர் ஈசன் அப்பெருமான், வயல்களில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்து திகழத் தென்றல் வீசி நறுமணத்தைப் பரப்ப, நற்குலத்தினராகிய அந்தணர்கள் மரபு வழிப்பயிலும் வேதங்கள் ஓதித் தொழுது போற்றும் சிரபுரம் என்னும் பதியில் வீற்றிருப்பவன் அப்பதியைத் தொழுது போற்ற வினை அணுகாது

1111 வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
மாயன்என்று இவர்அன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோடு அன்னமாய்க்
கிளறியும் பறந்தும்தாம்
பண்டுகண்டது காணவே நீண்டஎம்
பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுதுஎழ
வினையவை கூடாவே

தெளிவுரை : மலர்மீது விளங்கும் நான்முகன், அன்னப் பறவையின் வடிவம் தாங்கி வான்வழிப் பறந்தும், மாயனாகிய திருமால், பன்றியின் வடிவம் தாங்கிப் பூமிக்குள் குடைந்தும் சென்று, காண அரியவனாகிய பசுபதியாகும் பரமேஸ்வரன் வீற்றிருக்கும் செல்வம் மிக்க சிரபுரத்தை தொழுது போற்ற, வினை நாடாது

1112 பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும்
பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீரரத் தேரரும் தேர்கிலாத்
தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின்று ஆவியில்
மூழ்கிட இளவாளை
வெறித்துப் பாய்வயல் சிரபுரம் தொழவினை
விட்டிடு மிகத்தானே

தெளிவுரை : சமணரும், சாக்கியரும் தேர்ந்து அறிவதற்கு அரியவராகிய தேவர்களின் பெருமானாகிய சிவபெருமான், எருமைகள் கரும்புகளை முறித்துத் தின்று, குளங்களில் மூழ்கிக் கலக்கிட, வாளை மீன்கள் பாயும் வயல்களையுடைய சிரபுரத்தில் விளங்குபவன் அத் தலத்தை தொழுது போற்ற வினை யாவும் அகலும்

1113 பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப்
பையர வோடுஅக்கு
நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை
நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை
விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ்வல்லவர்
பரமனைப் பணிவாரே

தெளிவுரை : மழுப்படை தரித்தவராய், பத்தர்களின் இறைவனாய், பாம்பும் எலும்பும் வரிசையாய்ப் பூண்ட திருமார்பு உடைய நிமலனாய், முத்துக் குவியலாய் விளங்குகின்ற நறுமணம் கமழும் பூம் பொழில் உடைய சிரபுரத்து அண்ணலாகிய தேவர் பெருமானைப் பரவும் ஞானசம்பந்தர் செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், பரமனைப் பணிந்து ஏத்திய சிறப்பினை அடைந்தவர் ஆவார்கள்

திருச்சிற்றம்பலம்

239 அம்பர்மாகாளம் (அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1114 புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
அல்லு நண்பக லும் தொழும் அடியவர்க்கு
அருவினை அடையாவே

தெளிவுரை : பொன்மயமாகிய சடையில் இளமையான சந்திரனைச் சூடித் தேன் விளங்கும் கொன்றை மலர் மாலை தரித்த ஈசன், அரிசில் ஆற்றி வடகரையில் விளங்கும் மாகாளத்தில் வீற்றிருப்பவர் அப்பெருமானை அல்லும் பகலும் தொழும் அடியவர்களுக்குத் துன்பம் தரும் வினையானது பற்றாது

1115 அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர் இவையிவை சரிதைகள்
இசைவன பலபூதம்
மரவம் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பரவி யும்பணிந்து ஏத்தவல் லார்அவர்
பயன்தலைப் படுவாரே

தெளிவுரை : அரவத்தை அணிந்து, புலித் தோலை உடுத்திப் பூதங்கள் இசைத்துப் போற்ற அழகிய கையில் நெருப்பேந்தி இரவில் ஆடுகின்ற எழில் மிக்க செயல்களை உடையவர் ஈசன் அவர் மரவம் என்னும் மரங்கள் தோயும் பொழில் திகழ அரிசில் ஆற்றின் வடகரையில் விளங்கும் மாகாளத்தில் வீற்றிருப்பவர் அப்பெருமானைப் பரவியும் பணிந்தும் ஏத்த வல்லவர்கள் எல்லாப் பயன்களையும் நனி வாய்க்கப் பெற்றவர்கள் ஆவார்கள்

1116 குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும்
குரைகழல் அடிசேரக
கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும்
கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகைர
வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோடு அணையவல் லார்களை
வல்வினை அடையாவே

தெளிவுரை : ஈசனின் இனிய குணங்களைக் கூறித் துதித்துத் தமது குற்றங்களை எண்ணி வருந்தி, குரைகழல் போற்றி வாழ்த்த, அக் கருத்துக்களை நன்கு அறிந்த ஈசன் மேவி இருப்பது மாகாளம் ஆகும் அப்பெருமானை வணங்கும் உள்ளத்தோடு அத்திருத்தலத்தை நாடுபவர்களுக்கு வல்வினை நாடாது

1117 எங்கும் ஏதுமோர் பிணியிலர் கேடிலர்
இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும்
தாமகிழ்ந்த தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
கங்கு லும்பக லும்தொழும் அடியவர்
காதன்மை யுடையாரே

தெளிவுரை : எத்தகைய பிணியும் இல்லாதவராய், கேடு இல்லாதவராய், நறுமணம் கமழும் கொன்றை மாலை சூடியவராய், எக் காலத்திலும் மகிழ்வுடன் விளங்குபவராய், மேகம் தோயும் பொழில் விளங்கும் அரிசிலின் வடகரையில் மேவும் மாகாளம் என்னும் தலத்தில், இரவும் பகலும் அடியவர்கள் தொழுது போற்ற விருப்பத்துடன் வீற்றிருப்பவர் ஈசன் ஆவார்

1118 நெதியம் என்னுள போகமற் றென்னுள
நிலமிசை நலமாய
கதியம் என்னுளவனவர் என்னுளர்
கருதியே பொருள்கூடில்
மதியம் தோழ்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்டு
ஏத்துதல் புரிந்தோர்க்கே

தெளிவுரை : சந்திரனைத் தொடுகின்ற நிலையில் உயர்ந்த பொழில்களையுடைய அரிசில் ஆற்றின் வடகரையில் விளங்கி, நீர்பெருகும் மாகாளம் தன்னில் வீற்றிருக்கும் ஈசனைப் புதிய பூக்கள் தூவி சந்தனமும் அகிற் புகையும் கொண்டு ஏத்தி வழிபடும் அடியவர்களுக்கு, வேறு பெறத்தக்க நிதியம் யாது உள்ளது ! போகம் மற்று என்ன உள்ளது ! நிலவுலகில் வேறு நலந்தரும் வாழ்க்கைதான் யாதும் உள்ளது ! யாவும் ஈசனே நன்கு அருள்புரிந்து இம்மை நலன் யாவையும் குறைவின்றி நல்குகின்றான் என்பது குறிப்பு

1119 கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்
கனல்விடு சுடர்நாகம்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
உண்ணி லாநினைப்பு உடையவர் யாவரிவ்
உலகினில் உயிர் வாரே

தெளிவுரை : ஒளிர்ந்து மேவும் சடை முடியில் கனல் போன்ற நச்சுக் கலந்த சுடர்நாகம், சந்திரனோடு பொருந்துமாறு மண்டை ஓட்டினைத் திகழ வைத்துள்ள சிவபெருமான் மேவியிருப்பது, பொழில் திகழும் அரிசில் ஆற்றின் வடகரையில் உள்ள மாகாளம் ஆகும் அப்பெருமானை உள்ளார்ந்து நினைத்து மகிழ்கின்ற அடியவர்கள் யாவரோ, அவர்கள் இவ்வுலகில் உயர்ந்தவராய்த் திகழ்வார்கள்

1120 தூசு தானரைத் தோலுடைக் கண்ணியம்
சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவது அன்றியும்
புகழ்புரிந்த தவர்மேய
மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினில்
பெருமையைப் பெருவாரே

தெளிவுரை : புலியின் தோலை உடையாகக் கொண்டு நறுங்கொன்றை மலரைத் தரித்து, திருவெண்ணீறு திருமேனியில் பூசி விளங்கிப் புகழ் தருவதும் அஃதே எனக் கொண்டு மேவி, மாகாளம் என்னும் பதியில் பேசுகின்ற அன்பராய் விளங்குகின்றவர், ஈசன் அப் பெருமானைப் புகழ்ந்து போற்றும் அடியவர்கள் பெருமையடைவார்கள்

1121 பவ்வம் ஆர்கடல் இலங்கையர் கோன்றனைப்
பருவரைக் கீழ்ஊன்றி
எவ்வம் தீரஅன்றுஇமையவர்க்கு அருள்செய்த
இறையவன் உறைகோயில்
மவ்வம் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
கவ்வை யால்தொழும் அடியவர் மேல்வினை
கனலிடைச் செதிள் அன்றே

தெளிவுரை : இராவணனை, பெரிய கயிலை மலையின்கீழ், நெரியுமாறு ஊன்றி அடர்த்துத் தேவர்களின் துன்பம் தீர அருள்செய்த இறைவன் உறையும் கோயிலானது, பொழில் திகழும் அரிசில் ஆற்றின் வடகரையில் உள்ள மாகாளம் ஆகும் அப் பெருமானை உள்ளம் கசிந்து தொழும் அடியவர்களின் வினையானது கனலிடை உற்ற துரும்பு என அழியும்

1122 உய்யும் காரணம் உண்டென்று கருதுமின்
ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்
பரவநின் றவர்மேய
மையுலாம் பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
கையி னால்தொழுது அவலமும் பிணியும்தம்
கவலையும் களைவாரே

தெளிவுரை : உலகில் வினையின் வெம்மையால் வாடுதல் அடையாது, உய்யும் வழியொன்று உண்டென்று கருதுக பிரமனும், திருமாலும் போற்றிப் பரவும் பெருமானாகிய சிவபெருமான் மேவி விளங்குகின்ற தலம், பசுமையான பொழில் உடைய அரிசில் ஆற்றின் வடகரையில் உள்ள மாகாளம் ஆகும் அத்தலத்தக் கையினால் தொழுது அவலமும் பிணியும் கவலையும் களைவீராக

1123 பிண்டி பாலரு மண்டைகொள் தேரரும்
பீலிகொண்டு உழல்வாரும்
கண்ட நூலரும் கடுந்தோழி லாளரும்
கழறநின் றவரமேய
வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
பண்டு நாம்செய்த பாவங்கள் பற்றற்ப்
பரவுதல் செய்வோமே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் பலவாறாகச் சொல்லி நிற்க, வண்டு உலவும் பொழில் உள்ள அரிசிலின் வடகரை வருகின்ற நீர் விளங்கும் மாகாளம் மேவிய ஈசனைப் பண்டு நம் செய்த பாவங்களின் பற்று அற்று நீங்குதல் பொருட்டுப் பரவித் தொழுவோமாக

1124 மாறுதன்னொடு மண்மிசை யில்லது
வருபுனல் மாகாளத்து
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை
ஏறமர் பெருமானை
நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
பந்தன தமிழ்மாலை
கூறு வாரையும் கேட்கவல் லாரையும்
குற்றங்கள் குறுகாவே

தெளிவுரை : இப் பூவுலகில் ஒப்புமைக்கு வேறு கூறுவதற்கு இல்லாத சிறப்புடைய மாகாளத்தில் ஆதியும் அந்தமும் ஆகிய சோதியாக விளங்கி இடபத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை, காழியில் திகழும் ஞானசம்பந்தர் திருப்பதிகம் கொண்டு ஓதி உரைப்பவர்களும் குற்றம் அற்றவர்களாய் விளங்குவார்கள்

திருச்சிற்றம்பலம்

240 திருக்கடிக்குளம் (அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர்குளம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1125 பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்
புலியுரி யதளாடை
கொடிகொள் ஏற்டனர் மணிகிணன் எனவரு
குரைகழல் சிலம் பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து
உறையும்கற் பகத்தைத் தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியாரை
முன்வினை மூடாவே

தெளிவுரை : ஈசன், திருநீறு பூசிய திருமேனி கொண்டு வெண்ணூல் அணிந்து விளங்குபவர்; யானைத் தோலைப் போர்த்தும், புலித்தோல் ஆடையும் கொண்டு விளக்குபவர்; இடபக் கொடி உடையவர்; குரைகழலில் உள்ள சிலம்பின் பரல்கள் கிணின் என ஒலிக்குமாறு, மணங்கமழும் பூம்பொழில் சூழ விளங்கும் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் ஆவார் வீழ்ந்து வணங்கும் அடியவர்களுக்கு முன்வினையானது தீமை செய்யாது

1126 விண்க ளார்தொழும் விளக்கினைத் துளக்கிலர்
விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித்து அன்பராய் இன்புறும்
வள்ளலை மருவித்தம்
கண்க ளார்தரக் கண்டுகம் கடிக்குளதது
உறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்
பழியிலர் புகழாமே

தெளிவுரை : சிவபெருமான், தேவர்கள் தொழுகின்ற சோதியானவர்; தளர்வு இல்லாத விகிர்தர்; பூவுலகத்தின் மக்களால் திருவிழாக்கள் செய்து துதிக்கப்படுபவர்; எல்லாருக்கும் அன்பராக விளங்கி இன்பத்தை நல்கும் வள்ளல் அப்பெருமான் கண்கள் ஆரத் தரிசனம் தந்து கடிக்குளத்தில் வீற்றிருக்கின்ற கற்பகநாதர் பண்கள் அமைத்து இசையுடன் அவரைப் பாடுபவர்கள் எவ்விதமான தீமைக்கும் ஆட்படாதவர்களாய்ப் பழிச்சொல் அடையாதவர்களாய்ப் புகழுடன் விளங்குவார்கள்

1127பொங்கு நற்கரி உரியது போர்ப்பது
புலியதள் அழல்நாகம்
தங்க மங்கையைப் பாகமது உடையவர்
தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்து
உறைதரு கற்பகத்தை
எங்கும் ஏத்திநின்று இன்புறும் அடியாரை
இடும்பைவந்து அடையாவே

தெளிவுரை : ஈசன், சினம் பொங்கி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்; புலியின் தோலும், அழல் போன்று விடம் கொண்ட நாகமும் திருமேனியில் திகழ்ந்து விளங்க, உமாதேவியைப் பாகமாக உடையவர்; தழல் போன்ற சிவந்த திருமேனியர்; கங்கை சேர்ந்து விளங்கும் சடைமுடியுடையவர்; கடிக்குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் அப் பெருமானை ஏத்தி இன்புறும் அடியவர்களுக்குத் துன்பம் வந்து அடையாது

1128 நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத்
தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப்
பசும்பொனை விசும்பாரும்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து
உறையும்கற் பகம்தன்னைச்
சீர்கொள் செல்வங்கள் ஏத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே

தெளிவுரை : ஈசன், கங்கை தரித்த நீண்ட சடை முடி உடையவர்; முத்துக் குவியல் போன்ற சிறப்புடையவர்; உலகமக்கள் தொழுகின்ற நிகரற்ற கருணையுடையவர்; பவளம் போன்ற திருமேனியர்; பசும் பொன் போன்ற பெருமையுடையவர் அவர் வானத்தில் விளங்குகின்ற மேகத்தைத் தொடும் பூம்பொழில் சூழ்ந்து விளங்கும் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் அப்பெருமானைச் சீர்மிக்க செல்வங்களாக ஏத்தவல்லவர்களின் வினையானது, தேய்ந்து அழியும் என்பது திண்ணம்

1129 கரும்பு சேர்சடை முடியினன் மதியொடு
துன்னிய தழல்நாகம்
அரும்பு தாதவிழ்ந்து அலர்ந்தன மலர்பல
கொண்டடி யவர்போற்றக்
கரும்பு கார்மலி கொடியிடை கடைக்குளத்து
உறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்டையோடு உளமகிழ்ந்து உரைப்பவர்
விதியுடை யவர்தாமே

தெளிவுரை : ஈசன், மலர்கள் சூடித் திகழும் சடைமுடியின்கண் வண்டுகள் சூழ இருப்பவர்; சந்திரனும் நாகமும் கொண்டு விளங்குபவர்; மகரந்தங்கள் உடைய மலர்கள் பல கொண்டு அடியவர்கள் போற்றித் துதி செய்ய, கரும்பும் கொடிகளும் திகழும் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் அப்பெருமானை விரும்பும் மனத்துடனும் உள்ளம் நெகிழ்ச்சியுற்றும் பேசிப் புகழும் அடியவர்களின், நீண்ட ஆயுற் உடையவர்கள் ஆவார்கள்

1130 மாது இங்கிய பாகத்தன் மதியமொடு
அலைபுனல் அழல்நாகம்
போது இலங்கிய கொன்றையும் மத்தமும்
புரிசடைக்கு அழகாகக்
காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து
உறைதரு கற்பகத்தின்
பாதம் கைதொழுது ஏத்தவல் லார்வினை
பற்றறக் கெடுமன்றே

தெளிவுரை : உமாதேவியைப் பாகம் கொண்டு, சந்திரனும் கங்கையும், நாகமும், கொன்றை, ஊமத்த மலர்களும் சடையின்கண் அழகுடன் பொருந்தச் சூடி, காதில் வெண்குழை அணிந்த பெருமான் கடிக் குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் ஆவார் அப் பெருமானுடைய திருப்பாதத்தைக் கை தொழுது ஏத்த வல்லவர்பால் பற்றியுள்ள வினையானது கெட்டழியும்

1131 குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
குழாம்பல குளிர்கொய்கை
புலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்
பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து
உறையும் கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல்வினை
நிற்ககில்  லாதானே

தெளிவுரை : அழகுடன் விளங்கும் கொடிகளும், நெடிய மாட மாளிகைகளும், குளிர்ந்த பொய்கைகளும், பல வகைப் பறவைகளும் அன்னங்களும் திகழும் தன்மையில் நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு கடிக்குளத்தில் வீற்றிருக்கும் பெருமான் கற்பகநாதர் ஆவார் அவர் புகழைப் போற்றி ஏத்துபவர்களுக்கு வினையானது நின்று  துன்பத்தை நல்காது

1132 மடுத்த வாளரக் கன்னவன் மலைதன் மேல்
மதியிலா மையில்ஓடி
எடுத்த லும்முடி தோள்கர நெரிந்துஇற
இறையவன் விரல்ஊன்றக்
கடுத்து வாயொடு கையெடுத்து அலறிடக்
கடிக்குளம் தனில்மேவிக்
கொடுத்த பேரருட் கூத்தினை யேத்துவார்
குணமுடை யவர்தாமே

தெளிவுரை : இராவணன், அடுத்து வந்து கயிலை மலையின்பால் ஓடி, அறிவிழந்து பேர்த்து எடுக்க, அவன் தலைமுடியும் தோளும் கரமும் நெரியுமாறும் முறியுமாறும் திருப்பாத விரலால் ஊன்றியவர் சிவபெருமான் அஞ்ஞான்று ஆற்றாது நைந்து கையால் தொழுது ஏத்துமாறு செய்து கடிக்குள் மேவி அவ் அரக்கனுக்கு அருள்புரிந்த திருவிளையாடலைப் போற்றும் அடியவர்கள், நற்குணத்தை உடையவர்கள் ஆவார்கள்

1133 நீரினார் கடல் துயின்றவன் அயனொடு
நிகழ்அடி முடிகாணார்
பாரி னார்விசும்பு உறப்பரந்து எழுந்ததோர்
பவளத்தின் படியாகிக்
காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத்து
உறையும்கற் பகத்தின்தன்
சீரி னார்கழல் ஏத்தவல் லார்களைத்
தீவினை அடையாவே

தெளிவுரை : நீர் மலியும் கடலில் அரிதுயில் கொள்ளும் திருமால், பிரமனோடு, அடியும் முடியும் காணப் பூமிக்கு அடியிலும் ஆகாயத்திலும் சென்று முயன்றும், பரந்து ஓங்கிய ஒப்பற்ற பவளத்தின் திருக்கோலமாகியவர் ஈசன் மேகத்தைத் தொடுகின்ற பொழில் சூழ்ந்து விளங்குகின்ற அப்பெருமான் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் கற்பகநாதர் ஆவார் அவர்தம் புகழ் பொருந்திய கழலை ஏத்த வல்லவர்களை, தீய வினைகள் அடையாது

1134 குண்டர் தம்மொடு சாக்கியர் சமணரும்
குறியினில் நெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக்
கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத்து
உறைதரும் எம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்
தூநெறி எளிதாமே

தெளிவுரை : சாக்கியர்களும் சமணர்களும் குறிக்கோளின் நெறியில் நில்லாது, பெருத்தமற்ற வார்த்தைகளைக் கூற, அவற்றை மெய்யெனக் கொள்ளன்மின் ஈசன், விடத்தை உண்டு கண்டத்தில் தங்குமாறு செய்தவர்; செம்மேனியர் அவர் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் எமது நாயகர் அப் பெருமானுடைய தொண்டர்க்குத் தொண்டராக விளங்கும் அடியவர்களைப் பணிந்து எழுமின் உமது அச்செயல், தூயதாகத் திகழும் சிவநெறியை எளிதாகச் சேர்த்து மகிழ்ச்சியை நல்கும்

1135 தனமலிபுகழ் தயங்குபூந் தராயவர்
மன்னனற் சம்பந்தன்
மனமலிபுகழ் வண்டமிழ் மாலைகள்
மாலதாய் மகிழ்வோடும்
கனமலி கடல் ஓதம் வந்துஉலவிய
கடிக்குளத் தமர்வானை
இனமலிந்திசை பாடவல் லார்கள்போய்
இறைவனோடு உறைவாரே

தெளிவுரை : செல்வத்தை விஞ்சும் புகழ்மிக்கு ஒளிரும் பூந்தராய் என்னும் பதியில் விளங்கும் சிறப்புடைய ஞானசம்பந்தர் மனத்திற் பெருகும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகக் கடிக்குளத்தில் வீற்றிருக்கும் நாதனைப் போற்றி உரைத்த இத்திருப்பதிகத்தை இசையுடன் ஓதுபவர்கள், அப் பரமனுடன் உறைவார்கள் இது சிவப் பேற்றினை அளிக்கும் என்பதாம்

திருச்சிற்றம்பலம்

241 கீழ்வேளூர் (அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1136 மின்னு லாவிய சடையினர் விடையினர்
மிளிர்தரும் அரவோடும்
பன்னு லாவிய மறையொலி நாவினர்
கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
ஓடிட வீடாமே

தெளிவுரை : மின்னலைப் போன்று சிவந்த ஒளிமயமான சடையுடைய சிவபெருமான் இடப வாகனத்தை உடையவராய், மிளிரும் அரவமானது திருமேனியில் திகழ, வேதத்தை விரிசெய்யும் திருநாவினர் அப்பெருமான், நீலகண்டத்தின்ராய்ப் பொன்னின் நிகர்த்த கொன்றை மாலையுடையவர் அவர் வீற்றிருக்கும் புகழ் மிக்க கீழ்வேளூர் என்னும் திருத்தலத்தினை உள்ளத்தால் ஒன்றி நினைத்துப் பணியும் அடியவர்களுக்கு வினை யாவும் நீங்கப் பெற்று வீடுபேறு உண்டாகும்

1137 நீரு லாவிய சடையிடை அரவொடு
மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யாவளொடு
மணிசிலம்பு அவைஆர்க்க
ஏரு லாவிய இறைவனது உறைவிடம்
எழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தை செய்து அணைபவர்
பிணியொடு வினைபோமே

தெளிவுரை : கங்கை தரித்த சடையின் இடையில் அரவமும், சந்திரனும் தரித்து, வரிசையாகக் கோத்த தலைமாலையும் கொண்டு விளங்கும் ஈசன், வனமுலை நாயகி என்னும் தேவியோடு நவ மணிகளால் ஆன சிலம்பு ஒலிக்கப் பெருமையுடன் வீற்றிருக்கும் எழில் திகழும் கீழ்வேளூர் என்னும் தலத் தினைச் சிறப்புடன் கருதிச் சார்பவர்கள், பிணியும் வினையும் அற்றவர்கள் ஆவார்கள்

1138 வெண்ணி லாமிகு விரிசடை அரவொடு
வெள்ளெருக்கு அலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோடு ஆடலர்
பயில்வறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்
கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின்று உள்கிய சிந்தையார்
உலகினில் உள்ளாரே

தெளிவுரை : வெண்மையான பிறைச்சந்திரனும், விரிந்த சடைமுடியும், அரவமும், வெள்ளெருக்க மலரும், ஊமத்த மலரும் கொண்டு, பண்ணிலாவிய பாடலும் ஆடலும் உடையவராய்க் கீழ்வேளூர் என்னும் தலத்தில், உமாதேவியை பாகமாகப் பொருந்திப் பெருந் திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஈசனை, உள்ளத்தால் ஒன்றி நினைப்பவர் உலகில் மனிதராக உள்ள சிறப்புடன் திகழ்வார்கள்

1139 சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்
தொங்கவைத்து அழகாக
நாடு லாவிய பலிகொளு நாதனார்
நலமிகு கீழ்வேளூர்ப்
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்
கோயிலுள் பிரியாது
நீடு லாவிய நிமலனைப் பணிபவர்
நிலைமிகப் பெறுவாரே

தெளிவுரை : பெருமையுடைய கங்கையைச் சடை முடியில் திகழ வைத்து, அழகுமிளிரப் பலியேற்கும் நாதன் நலம் மிகுந்து விளங்கும் கீழ்வேளூரில், சிறப்புடன் பொலியும் மாடக்கோயிலாகிய பெருந்திருக்கோயிலுள் வீற்றிருக்கின்றனர் அப் பெருமானைப் பணிபவர்கள் மேலான நிலை பெறுவார்கள்

1140 துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை
வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவர் இனிதியல்
மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலில்
நிமலனை நினைவோடும்
சென்று லாவிநின்று ஏத்தவல் லார்வினை
தேய்வது திணமாமே

தெளிவுரை : நீண்ட சடையில் சுடர்மதி சூடி, கபாலம் ஏந்தி, தலைமாலைகளை வரிசையாகக் கோத்து அணிந்து, மன்றுள் ஆடும் பெருமானாய் இனிய இயல்பினில் நன்மணம் கமழும் கீழ்வேளூரில் விளங்கும் பெருந்திருக்கோயிலில் வீற்றிருக்கும் நிமலனை, ஒரு நிலைப்படுத்திய நெஞ்சினராய்ச் சென்றடைந்து ஏத்த வல்லவர்தம் வினை யாவும் தேய்ந்து அழிவது திண்ணம்

1141 கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக்
கூத்தனை மகிழ்ந்துள்கித்
தொத்து லாவிய நூலணி மார்பினர்
தொழுதெழு கீழ்வேளூர்ப்
பித்து லாவிய பத்தர்கள் பேணிய
பெருந்திருக் கோயில் மன்னு
முத்து லாவிய வித்தினை யேத்துமின்
முடுகிய இடர் போமே

தெளிவுரை : கொத்தாக விளங்கித் திகழும் சடைமுடி உடைய ஈசன், ஆடல் புரிபவர் முப்புரி நூல் அணிந்து ஏத்தும் அடியவர்களும், தொழுது போற்றும் கீழ்வேளூரில் உள்ள பெருந்திருக்கோயிலில் மன்னும் முத்து போன்ற அப்பரமனை ஏத்தி வணங்குமின் முனைந்து வந்து துன்புறுத்தும் இடரானது விலகிப் போகும்

1142  பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்
வன்னியும் துன்னாரும்
கறைநி லாவிய கண்டர்எண் தோளினர்
காதல்செய் கீழ் வேளூர்
மறைநி லாவிய அந்தணர் மலிதரு
பெருந்திருக் கோயில் மன்னு
நிறைநிலாவிய ஈசனை நேசத்தால்
நினைபவர் வினைபோமே

தெளிவுரை : ஈசன், பிறைச் சந்திரன் நிலவும் சடையிடையில், பின்னிய வகையால் வன்னியும் கொண்டு, நீலகண்மும் உடையவராய் எட்டுத் தோள்களுடன் விளங்குபவர் அவர் விரும்புவது கீழ்வேளூர் அங்கு மறையோதும் அந்தணர்கள் நிறைவுடன் ஏத்தும் பெருந்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அப் பரமனைப் பக்தியுடன் வணங்குபவர்களுக்கு வினையேதும் இல்லை

1143 மலைநி லாவிய மைந்தனம் மலையினை
எடுத்தலும் அரக்கன்றன்
தலையெ லாநெரிந்து அலறிட ஊன்றினான்
உறைதரு கீழ்வேளூர்க்
கலைநி லாவிய நாவினர் காதல்செய்
பெருந்திருக் கோயிலுள்
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்
நினையவல் வினைபோமே

தெளிவுரை : மலைபோன்று உயர்ந்து விளங்கும் சிறப்புடையது பரமனின் கயிலை மலை அதனை எடுத்த இராவணனுடைய தலைகளை நெரித்து அலறுமாறு ஊன்றிய ஈசன் உறைவது கீழ்வேளூர் ஆகும் ஆங்கு, வேதம் வல்ல அந்தணர்கள், மறைகளை நன்கு ஓதி அன்புடன் ஏத்தும் பெருந்திருக் கோயிலுள், நிலைத்து மேவும் அப் பரமனைப் பக்தியுடன் வணங்கும் அடியவர்களுக்குக் கொடிய வினையானது இல்லை அதுதானே வீட்டு நீங்கும்

1144 மஞ்சு லாவிய கடற்கிடந்து தவனொடு
மலரவன் காண்பொண்ணாப்
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி
பாகனைப் பரிவொடும்
செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ்
மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
நடலைகள் நணுகாவே

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணவொண்ணாது விளங்குபவன் ஈசன் அப்பெருமான், பஞ்சு போன்ற மென்மையான பாதத்தையுடைய பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்டு, பரிவோடு, செம்மையான சொல்லாகிய வேதத்தால் பரவிய, புகழ்மிக்க கீழ்வேளூரில், நீலகண்டனாக மேவி வீற்றிருப்பவன் அவனை நண்ணி வணங்குமின் துன்பம் எதுவும் நண்ணாது

1145 சீறு லாவிய தலையினர் நிலையிலா
அமணர்கள் சீவரார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
கரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில்
பெருந்திருக் கோயில் மன்னு
பேறு லாவிய பெருமையன் திருவடி
பேணுமின் தவமாமே

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் கூறும் மொழிகள் உறுதியற்றவை அவற்றை விரும்பி ஏற்காதீர்கள் கீழ்வேளூரில் இடபக் கொடி உடையவன் குற்றமில்லாத பெருந்திருக் கோயிலில் வீற்றிருக்கின்றான் எல்லாப் பேறுகளும் நிலவும் பெருமையுடையவனாகிய அப்பெருமான் திருவடியைத் தொழுமின் அதுவே தவம் ஆகும்

1146 குருண்ட வார்குழற் சடையுடைக் குடிகனை
அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்
கோயில்எம் பெருமானை
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு
புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடவல் லாரவர் சிவகதி
பெறுவது திடமாமே

தெளிவுரை : நீண்ட சடையுடைய, கீழ்வேளூரில் மறையவர்கள் தொழும் பெருந்திருக்கோயிலில் வீற்றிருக்கும் எம்பெருமானை, வயல்கள் மல்கும் புகலியில் மன்னும் ஞானசம்பந்தர் சொன்ன தெளிவான இத்திருப்பதிகத்ததை ஓதுபவர்களுக்கு சிவகதி உண்டாகும் இது உறுதி

திருச்சிற்றம்பலம்

242 திருவலஞ்சுழி (அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1147 என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி யாதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே

தெளிவுரை : நெஞ்சமே ! நீ புண்ணியம் செய்தனை ! இவ்வுலகில் முற்பிறவிகளில் புரிந்த நல்வினைப் பயனால் மணிகளும் முத்துக்களும் கலந்து மன்னும் காவிரி சூழ்ந்து விளங்கும் திருவலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசனை, வாயாரப் போற்றித் துதித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் பெருமை உற்றனை

1148 விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
இறைவனை உலகத்தில்
வண்டு வாழ்குழல் மங்கையொர் பங்கனை
வலஞ்சுழி இடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோடு
இனிதிருந் தமையாலே

தெளிவுரை : பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு, வாழ்த்துகின்ற தேவர்களைக் காத்தருளிய இறைவன் உமாதேவியை ஒரு பாகமாக உடையவன் அப்பெருமான், வலஞ்சுழியை இடமாகக் கொண்டு மெய்த் தொண்டு புரியும் அடியவர்களோடு இருந்து அருள் புரிவதால், நமது வல்வினை யாவும் கெட்டு அழிந்தன

1149 திருந்த லார்புரம் தீயெழச் செறுவன
விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன
மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்தும் ஆவன் மந்திரம் ஆவன
வலஞ்சுழி இடமாக
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய
இணையடித் தலந்தானே

தெளிவுரை : திருந்தி நற்கதிக்கு முனையானது பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் மதில்களை எரித்துச் சாம்பலாக்கி, அடியவர்களை நன்கு பெருமை திகழப் பரிவுடன் காப்பதும், பக்தியில் அவர்களைத் திளைக்கச் செய்வதும், மயக்கம் தரும் பிணி முதலான நோயக்கு மருந்தாகி விளங்குவதும், யாவற்றுக்கும் மந்திரமாகி இருந்து பாதுகாப்பதும், தேவர்கள் ஏத்தி வலஞ்சுழியில் நாதனின் திருவடிக் கமலம் ஆகும்

1150 கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தனர்
அறத்திற முனிவர்க்கு அன்று
இறைவ ரால்இடை நீழலில் இருந்துகந்து
இனிதருள் பெருமானார்
மறைகள் ஓதுவர் வருபுனல் வலஞ்சுழி
இடமகிழ்ந்து அருங்கானத்து
அறைகழல் சிலம்பு ஆர்க்கநின்று ஆடிய
அற்புதம் அறியோமே

தெளிவுரை : ஈசன், நீலகண்டத்தை உடையவர்; நன்கு காயும் சூரியனைப் போன்ற செம்மையான நிறத்தை உடையவர்; சனகாதி முனிவர்களுக்கு ஆல் நிழலில் இருந்து, தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் அறப்பொருள் உணர்த்தியவம்; வேதம் விரித்து ஓதுபவர் அப் பெருமான் வலஞ்சுழியில் வீற்றிருந்து ஒலிக்கும் கழலும் சிலம்பும் ஆர்க்க நின்று ஆடிய அற்புதத்தை யாரே அறிவார் !

1151 மண்ணர் நீரர்விண் காற்றினர் ஆற்றலாம்
எரியுரு வொரு பாகம்
பெண்ணர் ஆணெனத் தெரிவரும் வடிவினர்
பெருங்கடல் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்
இணையடி தொழுவாரே

தெளிவுரை : ஈசன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களானவர்; ஆணும் ஆகிப் பெண்ணும் ஆகி அர்த்தநாரியாய் விளங்குபவர்; பவளம் போன்ற செந்நிற வண்ணம் உடையவர் அப் பெருமான் வலஞ்சுழியில் பிரியாது வீற்றிருப்பவர்; அன்போட விளங்கும் அடியவர்களின் எண்ணத்தில் புகுந்து இருப்பவராயினும் திருவடியைத் தொழும் பக்தர்கள் பலவாறு போற்றி இயம்பும் தன்மை உடையவர் ஆவார்

1152 ஒருவரால் உவமிப்பதை அரியதோர்
மேனியர் மடமாதர்
இருவர் ஆதரிப் பார்பல பூதமும்
பேய்களும் அடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்து
அகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி அடிகளே
வரிவளை கவர்ந் தாரே

தெளிவுரை : யாராவது ஒருவரை உவமை கூறவேண்டுமாயினும் அவ்வாறு இயலாத தன்மையில் அரியதோர் திருமேனியுடையவர் சிவபெருமான் அவர் கங்கை என்னும் நங்கையினையும், உமாதேவியையும் விழைந்திருப்பவர் பூதமும் பேய்க்கூட்டங்களும் அடையாளம் காணுமாறு, அருவம் அற்றண பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி, இல்லம்தோறும் சென்று பலி ஏற்று , ஒருவர் வருவர் என்றால், அவர் வலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசனே ஆவார் அப் பெருமான் அழகிய வளையலைக் கவர்ந்தவர் ஆவார்

1153 குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரம்
குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோம்என்றும் இயம்புவர்
இமையவர் பணிகேட்பார்
அன்றியூர் தமக்கு உள்ளன அறிகிலோம்
வலஞ்சுழி அரனார் பால்
சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று
சேயிழை தளர்வாமே

தெளிவுரை : குடமூக்கு, வலம்புரம், நெய்த்தானம் போன்ற ஊர்களில் விளங்கும் பெருமான் என்று போற்றித் தேவர்கள் முதலானோரால் வணங்கப் பெறும் ஈசன், அப்பிரான் இல்லாத ஊர் எதுவும் யாம் அறிகிலோம் உமாதேவியார், திருவலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசன்பால் சென்றணைந்தால், அப்பெருமான் விளங்கும் மற்ற தலங்களிலும் மேவுதல் கொள்ளலாம் என்னும் மாண்பு விரும்பி அடைந்தனர்

1154 குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித்து எடுத்தவன் கதிர்முடி
தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோடு அமர்ந்தவன்
வலஞ்சுழி எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்
அல்லவர் காணாரே

தெளிவுரை : உமாதேவி வெருவுமாறு பரந்து விளங்கும் கயிலை மலையைப் பிடித்து எடுத்த இராவணனுடைய முடிகளும், இருபது தோள்களும் நெரியுமாறு திருப்பாத விரலால் ஊன்றி, தேவியுடன் வீற்றிருக்கும் வலஞ்சுழி நாதனைப் போற்றி ஏத்த வல்லவர்கள் பரகதியைப் பெறுவர் ஏனையோர் அதனைப் பெறாதவர்

1155 அழலது ஓம்பிய அலர்மிசை அண்ணலும்
அரவணைத் துயின்றானும்
கழலும் சென்னியும் காண்பரி தாயவர்
மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினையதனொடு
துன்பங்கள் களைவாரே

தெளிவுரை : தீ வளர்த்து வேள்வியினை ஓம்பும் பிரமனும், பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும் முறையே திருமுடியும் திருவடியும் காண்பதற்கு அரிதாகிய மாண்பினையுடைய ஈசன், வீணை ஏந்தி விளங்குபவர் அப் பெருமான் வீற்றிருக்கும் திருவலஞ்சுழிலை வலம் வந்து வணங்கும் அடியவர்களுக்குச் சஞ்சித கன்மம் எனக் கொண்டுள்ள தொல்வினையும், பிராரத்த கன்மத்தினால் தோன்றும் துன்பங்களும் இல்லை

1156 அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
தவம்புரிந்து அவம்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை
தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
மருவிய பெருமானைப்
பிறவி லாதவர் பெறுகதி பேசிடில்
அளவறுப்பு ஒண்ணாதே

தெளிவுரை : சமணரும் சாக்கியர்களும் தவம் புரிந்து அவம் செய்பவர்களாய் நன்னெறி பயவாத சொற்களைக் கூறுபவர்களாய் உள்ளனர் அவற்றைக் கைவிடுக மாறாக, மானைக் கரத்தில் ஏந்தி, அலைகள் கொண்டு திகழும் காவிரி வலமாக வரும், வலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசனை மறவாது தியானம் செய்யும் அடியவர்கள் பெறுகின்ற நற்கதியைப் பேசுவதென்றால், அதன் அளவு வரையறுத்துக் கூறவொண்ணாத அளவு பெருகும் செம்மையுடையதாகும்

1157 மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
நவிற்றிய தமிழ்மாலை
ஆதரித்து இசை கற்றவல் லார்சொலக்
கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
வருத்தம்வந்து அடையாவே

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாக உடையவன் ஆகிய வலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசனை, வயல்கள் சூழ்ந்த காழியின் நாதனாய், வேதத்தில் வல்லவனாய் மேவும் ஞானசம்பந்தர் திருவாயால் நவிலப்பெற்ற இத் திருப்பதிகத்தை, மனதார இசைந்து ஓதுவா மூர்த்திகள் சொல்லக் கேட்டு மகிழ்ந்தவர்களுக்கு, வினையினால் உண்டாகும் துன்பம் எதுவும் இல்லை; இம்மையிலும் மறுமையிலும் வருத்தம் இல்லை

திருச்சிற்றம்பலம்

243 திருக்கேதீச்சரம் (அருள்மிகு கேத்தீஸ்வரர் திருக்கோயில், கேதீஸ்வரம், இலங்கை)

திருச்சிற்றம்பலம்

1158 விருது குன்றமா மேருவில் நாண்அரவா
அனல்எரி அம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்று
உரைபதி எந்நாளும்
கருது கின்றாவூர் கனைகடல் கடிகமழ்
பொழிலணி மாதோட்டம்
கருத நின்றகே தீச்சரம் கைதொழக்
கடுவினை அடையாவே

தெளிவுரை : மலை போன்ற வெற்றிச் சின்னமாக விளங்கும் மகா மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பினை நாணாகவும், அக்கினையை எரிகின்ற அம்பாகவும் கொண்டு, மூன்று புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கிய ஈசன் உறைகின்ற பதியானது, கடலைகள் ஒலி செய்யவும், மணம் கமழும் பொழில் மிக்கதும் ஆகிய மாதோட்டம் தன்னுள் உள்ள கேதீச்சரம் ஆகும் ஆங்கு எந்நாளும் ஈசனைக் கைதொழுது போற்ற, கடுமையான வினை அணுகாது

1159 பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருது கைத்து அருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்சு
உண்டிருள் கண்டத்தர்
ஈடமாவது இருங்கடற் கரையினில்
எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரம் தொழுதுஎழக்
கெடும்இடர் வினைதானே

தெளிவுரை : ஈசன், வீணை மீட்டிப் பாடும் பாங்குடையவர்; பலவகைப்பட்ட நெறிமுறைகளை உடையவர்; இடப வாகனத்தைச் செலுத்தி வீற்றிருந்து நடம் புரிபவர்; தேவர்கள் துதித்து வணங்கி நிற்க நஞ்சினை உட்கொண்டு கரிய கண்டத்தினராய்க் காட்சி நல்கியவர் அப் பெருமானுக்கு இடமாவது, பெரிய கடற்கரையில் எழில் திகழ மேவும், மாதோட்ட நகரில் சிறப்புடன் விளங்குகின்ற கேதீச்சரம் ஆகும் அதனைத் தொழுது எழ, துன்பத்தைச் செய்யும் தீய வினைகெடும்

1160 பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்புஆர்க்கச்
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர்
அகந்தொறும் இடுபிச்சைக்கு
உண்ணல் ஆவதோர் இச்சையில் உழல்பவர்
உயர்தரு மாதோட்டத்து
அண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்கு
அருவினை அடையாவே

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழ்பவர்; பிறைச் சந்திரன் தவழும் சடை முடியுடையவர்; ஒலிக்கும் கழலும் சிலம்பும் விளங்கத் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் திகழப் பூசுபவர்; பாடுபவர்; இல்லந்தோறும் இடுகின்ற பிச்சைகொண்டு உண்ணும் விருப்பத்தில் உழல்பவர் அப்பெருமான் உயர்ந்த மாண்பில் விளங்கும் மாதோட்டத்தின் அண்ணலாய் நண்ணும் கேதீச்சரத்தை அடைபவர்களுக்குத் துன்பம் தரும் வினை சாராது

1161 பொடிகொள் மேனியர் புலியதள் அரையினர்
விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
மறிகடல் மாதோட்டத்து
அடிகள் ஆதரித்து இருந்தகே தீச்சரம்
பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல்லார் தம்மேல்
மொய்த்தெழும் வினைபோமே

தெளிவுரை : ஈசன், திருநீற்றுத் திருமேனியர்; புலியின் தோலை அரையில் கட்டி உள்ளவர்; நெடிய திருக்கரத்தில் அழகாக வடிக்கப்பெற்ற சூலத்தை ஏந்தியவர்; முப்புரி நூல் அணிந்த திருமார்பினர் அவர், கடல் சூழ்ந்த மாதோட்டத்தில் விளங்கும் அடிகளாய், விரும்பி மேவும் கேதீச்சரத்தில் திகழ்கின்றவர் அப்பெருமானை அன்பு கெழுமிய சிந்தையராய், தலையைத் தாழ்த்தி அட்டாங்கமாக வணங்கிப் போற்றும் அடியவர்பால் உள்ள வினை யாவும் நீங்கிச் செல்லும்

1162 நல்லர் ஆற்றவு(ம்) ஞானநன்கு உடையர்தம்
அடைந்தவர்க்கு அருள்ஈய
வல்லர் பார்மிசை வான்பிறப்பு இறப்பிலர்
மலிகடல் மாதோட்டத்து
எல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்
இராப் பகல் நினைந் தேத்தி
அல்லல் ஆசுஅறுத்து அரனடி இணைதொழும்
அன்பராம் அடியாரே

தெளிவுரை : ஈசன், மிகவும் நல்லவர்; ஞானம் நன்கு கைவரப்பெற்ற சீலர்களுக்குள் அருள் வழங்க வல்லவர்; இப்பூவுலகில் அருள் புரிந்து நன்மை புரியும் காரணத்தினைத் திருக்குறிப்பாக்கினும், பிறப்பதும் இறப்பதும் ஆகிய நிலையினைக் கொள்ளாதவர்; கடல் விளங்கும் மாதோட்டத்தில், எல்லையில்லாத புகழ் மேவிய எந்தையாகிய அப்பெருமானை திகழும் கேதீச்சரத்தினை இரவும் பகலும் நினைத்து வழிபட்டுத் துன்பமும் குற்றமும் நீக்கி அன்புடையவர்களாய் விளங்குபவர்கள் அடியவர்கள் ஆவர்

1163 பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
பொருந்தவைத்து ஒருபாகம்
மாழை அங்கயற் கண்ணிபால் அருளிய
பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப்பு அணிந்த நீள் மார்பர்
கேதீச்சரம் பிரியாரே

தெளிவுரை : ஈசன், பெருமை மிக்க கங்கையைச் சடையில் பொருந்த வைத்து, ஒரு பாகத்தில் இளமை திகழும் அழகிய கயல் போன்ற கண்ணுடைய உமாதேவியை இருக்குமாறு அருள் செய்த ஒண்பொருளாகியவர் பன்றியின் கொம்பு அணிந்த அகன்ற திருமார்பினையுடைய அப் பரமன், வாழைத் தோட்டத்தில் களிப்புற வாழும் மந்திகள் மருவிடும் மாதோட்ட நகரத்தில் மேவும் கேதீச்சரத்தில் பிரியாது விளங்குபவர்

1164 பண்டு நால்வருக்கு அறமுரைத்து அருளிப்பல்
லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடம் கைதொழக்
காதலித்து உறைகோயில்
வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாள்தொறும் துதிசெய அருள்செய்கே
தீச்சரம் அதுதானே

தெளிவுரை : பண்டைய நாளில் சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு அறம் உணர்த்தி அருளிப் பல உலகங்களில் விளங்கும் உயிரினுள்ளம் கோயில் கொண்டு விளங்கி இயக்கும் ஈசன் கடல் பக்கம் யாவரும் தொழுமாறு நிற்க விரும்பி உறைகின்ற கோயில், வண்டு பண் செய்யும் மலர்ப் பொழிலில் மயிலானது நடம் புரியும் மாதோட்ட நகரில் தொண்டர்கள் நாள்தோறும் சென்று துதிசெய்து வணங்க அருள் செய்யும் கேதீச்சரம் ஆகும்

1165 தென்னிலங் கையர்குல பதிமலை நலிந்தெடுத்
தவன்முடி திண்டோள்
தன்னிலங் கெடவடர்த்து அவர்க்கருள் செய்த
தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
பொருந்திய மாதோட்டத்து
உன்னிஅன்பொடும் அடியவர் இறைஞ்சுகே
தீச்சுரத்து உள்ளாரே

தெளிவுரை : தென்னிலங்கையர் தலைவனாகிய இராவணன் வலிந்து எடுத்த கயிலை மலையானது, அவன் முடிகளும் தோள்களும் தம் நிலையிலிருந்த கெடுமாறு அடர்த்து, பின்னர் அருள் செய்த தலைவராகிய சிவபெருமான், கடற்கரையில், பொன்னும் முத்தும் மற்றும் சிறப்பான மணிகளும் பொருந்தி விளங்கும் மாந்தோட்டத்தில், அடியவர்கள் அன்புடன் நினைத்துப் போற்றி வழிபடும் கேதீச்சரத்தில் வீற்றிருப்பவர்

1166 பூவு ளானும்அப் பொருகடல் வண்ணனும்
புவியிழந்து எழுந்தோடி
மேவி நாடிநின் னடியிணை காண்கிலா
வித்தகம் என்னாகும்
மாவும் பூகமும் கதலியு நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடும் திருந்துகே தீச்சரத்து
இருந்தஎம் பெருமானே

தெளிவுரை : பிரமனும், திருமாலும், வானில் பறந்து சென்று பூமியில் குடைந்து சென்றும் நும்மைக் காண்கிலா வித்தகம் புரிந்த பெருமானே ! மா, பாக்கு, வாழை மரங்கள் மிகுந்துள்ள மாதோட்ட நன்னகரில் சிறப்புடன் உமாதேவியோடு கேதீச்சரத்தில் வீற்றிருப்பவர் நீவிர் ஆவீர்

1167 புத்திராய்ச் சில புனைதுகில் உடையவர்
புறனுரைச் சமண்ஆதர்
எத்தர் ஆகிநின்று உண்பவர் இயம்பிய
ஏழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட உரிசெய்து
போர்த்தவர் மாதோட்டத்து
அத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
தீச்சரம் அடைமின்னே

தெளிவுரை : புத்தரும் சமணரும் இயம்பும் சொற்கள் அறியாமையால் விளைவனவாகும் அவற்றைக் கொள்ள வேண்டாம் யானையை மாய்த்து, அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டு மாதோட்டத்தில் விளங்கும் ஈசன் மேவும் பாலாவி என்னும் ஆற்றின் கரையில் உள்ள கேதீச்சரத்தை அடைவீராக அவ்வாறு சென்று தொழுது போற்ற, அறியாமை நீங்கித் தெளிவு உண்டாகும் என்பது குறிப்பு

1168 மாடெ லாமண முரசெனக் கடலினது
ஒலிகவர் மாதோட்டத்து
ஆடல் ஏறுடை அண்ணல் கேதீச்சரத்து
அடிகளை அணிகாழி
நாடு ளார்க்கு இறை ஞானசம் பந்தன்சொல்
நவின்றெழு பாமாலைப்
பாடல் ஆயின பாடுமின் பத்தர்கள்
பரகதி பெறலாமே

தெளிவுரை : கடலின் ஒலியானது மணமுரசு என்று சொல்லுமாறு எல்லா இடங்களிலும் சூழ்ந்து மங்கலம் என ஒலிக்க, மாதோட்டத்தில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலாகிய கேதீச்சாத்தாரை, அணி திகழும் சீகாழிப் பதியை நாடும் அன்பர்களுக்குத் தலைவராகிய ஞானசம்பந்தர் சொற்களால் நவின்று எழுப்பிய பாமாலையாகிய இத் திருப்பதிகத்தைப் பக்தர்கள் பாடுவாராக அது பரகதியைத் தரும்

திருச்சிற்றம்பலம்

244 திருவிற்குடிவீரட்டம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1169 வடிகொள் மேனியர் வானமா மதியினர்
நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையம் சடையினர் கொடியினர்
உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மான்அமர்ந்து இனிதுறை
விற்குடி வீரட்டம்
அடியர் ஆகிநின்று ஏத்தவல் லார்தமை
அருவினை அடையாவே

தெளிவுரை : ஈசன், அழகிய திருமேனியுடையவர்; வானத்தில் மேவும் சந்திரனைச் சூடியவர்; கங்கை தரித்தவர்; கொன்றை மாலையணிந்த சடைமுடியுடையவர்; இடபக் கொடியுடையவர்; புலியின் தோலை உடையாகக் கொண்டு விளங்குபவர்; இடப வாகனத்தில் மேவும் எம்பெருமான் ஆவர் அப்பெருமான் இனிது வீற்றிருக்கும் விற்குடி வீரட்டத்தின் அடியவர்களாய் விளங்கி ஏத்தவல்லவர்களுக்கு தீமை தரும் வினை எதுவும் சாராது

1170 களங்கொள் கொன்றையும் கதிர்விரி மதியமும்
கடிகமழ் சடைக் கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்
பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மான்உறை
விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்
வருத்தமது அறியாரே

தெளிவுரை : öõõன்றை மலரும், சந்திரனும், மணம் கமழும் சடை முடியில் தரித்து, தன்னை நினைத்துப் போற்றுகின்ற பத்தர்களுக்கு அருள்புரியும் பெருமை உடையவராய், யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டு விளங்கும் திருமேனியராகிய எம்பெருமான் வீற்றிருக்கும் விற்குடியில் மேவும் வீரட்டத்தை, மாமலரால் ஏத்துபவர்கள் உலகில் எவ்விதமான துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்

1171 கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்து
ஆடிய வேடத்தர்
விரியு மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோர்எனப்
பேணுவர் உலகத்தே

தெளிவுரை : ஈசன், நஞ்சினை உண்டமையால், விளைந்த கரிய கண்டத்தையுடையவர்; வெண்மையான திருநீறு பூசிய திருமார்பு உடையவர்; வலிமை மிக்க திருக்கரத்தில் நெருப்பு ஏந்தியவர்; புல்லிய சடையுடையவர்; சுடுகாட்டை இடமாகக் கொண்டு நடம்புரியும் திருக்கோலத்தையுடையவர், அப் பெருமான், மலர்கள் பூத்து விளங்கும் பொய்கை சூழ்ந்த விற்குடியில் மேவும் வீரட்டத்தில் யாண்டும் பிரியாது வீற்றிருந்து பெருந்தவத்துடன் விளங்குபவர் எனப் பேணத் தகுந்தவராய் உலகத்தினரால் புகழப் படுபவர் ஆவர்

1172 பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணச் சிலம்பினர் கலம்பெறு
கடலெழு விடமுண்டார்
வேதம் ஓதிய நாவுடை யானிடம்
விற்குடி வீரட்டம்
சேரும் நெஞ்சினார்க்கு அல்லதுண்டோ பிணி
தீவினை கெடுமாறே

தெளிவுரை : பூத கணங்கள் சேர்ந்து இசை பாடவும், ஆடவும் பொலிவு தரும் நலம் தரும் திருப்பாதத்தில் சிலம்பு அணிந்த சிவபெருமான், பாற்கடலில் தோன்றி நஞ்சினை உண்டவர் வேதம் விரிக்கும் திருநாவினராகிய அவர், வீற்றிருக்கும் இடமாகிய விற்குடி வீரட்டானத்தைச் சிந்திக்கும் அன்பர்களுக்கன்றிப் பிறர்க்குத் தீவினையும் பிணியும் கெடும் வழி உள்ளதோ !

1173 கடிய ஏற்றினர் கனலன மேனியர்
அனலெழ ஊர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்தனது
அடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பான்உறை
விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினால்
பற்றறும் அருநோயே

தெளிவுரை : விரைவுத் தன்மையுடைய இடப வாகனத்தையுடைய சிவபெருமான், கனல் போன்ற சிவந்த திருமேனியுடையவர் அவர் முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்குகின்ற அரிய செயலை முன்னிட்டு மேருமலையை வில்லாக வளைத்த பெருமான் அப் பரமன், தனது அடியவரின்மேல் பற்றியுள்ள கொடுமை மிக்க தீவினைகளை வீழ்த்துமாறு வீற்றிருக்கும் விற்குடி மேவும் வீரட்டத்தைப் படிந்து பரவித் தொழுமின் அவ்வாறு தொழுதால் துயர் விளைவிக்கும் நோய் யாவும் நீங்கும்

1174 பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்
கையினர் மெய்யார்ந்த
அண்ணல் அன்புசெய் வார்அவர்க்கு எளியவர்
அரியவர் அல்லார்க்கு
விண்ணில் ஆர்பொழில் மல்கிய மலர்விரி
விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்கு
இடர்கள் வந்து அடையாவே

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகம் கொண்டு விளங்குபவர்; பெருமை வாய்ந்தவர்; சிறிய மானைக் கையினில் கொள்டுள்ளவனர்; யாண்டும் மெய்ம்மையுடைய அண்ணல்; அன்பின் மிக்க தொண்டர்களுக்கு எளிமையாக விளங்கி நல்லருள் புரியும் கருணை வள்ளல்; அன்பில்லாதவர்களுக்கு அரியவர் எனவாகி விளங்குபவர் அப் பெருமான், விண்ணை முட்டும் பொழில் மல்கியும் மலர்கள் பெருகியும் திகழும் விற்குடியில் மேவும் வீரட்டத்தில் வீற்றிருப்பவர்; அப்பதியைச் சிந்தையால் எண்ணித் தொழுகின்ற அடியவர்களுக்கு எவ்விதமான இடரும் சாராது

1175 இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை
இகல்அழி தரஊன்று
திடங்கொள் மால்வரை யான்உரை யார்தரு
பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிடறு உடையவன் உறைபதி
விற்குடி வீரட்டம்
தொடங்குமாறு இசை பாடிடநின் றார்தமைத்
துன்பநோய் அடையாவே

தெளிவுரை : இராவணன் உள்ளத்தில் தோன்றிய பகைமை அழிவுற்று நீங்குமாறு திருப்பாத விரலால் ஊன்றிய உறுதியான கயிலை மலையின் நாதனாகிய ஈசன், உரைக்கப்படும் யாவற்றுக்கும் பொருளாக உடைய பெருமான் இருள் போன்ற கரிய கண்டத்தை உடைய அவன் உறையும் பதியாகிய விற்குடி வீரட்டத்தைப் போற்றி இசையால் பண்ணிசைத்துப் பாடும் அடியவர்களுக்குத் துன்பம் தரும் பிணி எதுவும் அடையாது

1176 செங்கண் மாலொடு நான்முகன் தேடியும்
திருவடி அறியாமை
எங்கும் ஆர்எரி யாகிய இறைவனை
அறைபுனல் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித்து உகந்தவன்
விற்குடி வீரட்டம்
தங்கை யால்தொழுது ஏத்தவல் லார்அவர்
தவமல்கு குணத்தாரே

தெளிவுரை : திருமாலும், பிரமனும் தேடியும் திருவடி அறியாத தன்மையில், மேலும் கீழுமாக யாங்கணும் பேரொளி காட்டும் நெருப்புப் பிழ்ம்பாகியவன் இறைவன் அப்பெருமான், கங்கையைச் சடைமுடியில் பெருந்த வைத்து, மலை போன்ற பெரிய யானையின் தோலை உரித்து உகந்தவர் விற்குடி வீரட்டத்தில் வீற்றிருக்கும் அப்பரமனைத் தமது கையால் தொழுது போற்று அடியவர்கள், தவத்தின் பயன் மிக்கவராய்த் திகழ்வார்கள்

1177 பிண்டம் உண்டுழல் வார்களும் பிரிதுவர்
ஆடையர் அவர் வார்த்தை
பண்டும் இன்றுமோர் பெருளெனக் கருதன்மின்
பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவன் இடம்எனில்
விற்குடி வீரட்டம்
கண்டு கொண்டடி காதல்செய் வார்அவர்
கருத்துறும் குணத்தாரே

தெளிவுரை : உணவிலும் மற்றும் உடையிலும் நாட்டம் கொண்டுள்ள புறச் சமயத்தினரின் வார்த்தைகளைப் பொருட்படுத்தும் கருத்தினைத் தவிர்க ஈசன்பால் அன்பு கொள்வீராக நன்கு மலர்ந்த பெருமையான மலர்களைச் சடையில் சூடிய இறைவனுடைய இடம் யாது எனில், அது விற்குடி வீரட்டம் ஆகும் அதனைக் கண்டு தரிசித்துத் திருவடித் தலத்தை விரும்பித் தொழுகின்றவர், நற்கருத்தினையும் நற்குணத்தினையும் வாய்க்கப் பெற்றவர் ஆவர்

1178 விலங்க லேசிலை யிடமென உடையவன்
விற்குடி வீரட்டத்து
இலங்கு சோதியை எம்பெரு மான்றனை
எழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வார்பொழில் காழியுள் ஞானசம்
பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
மற்றது வரம்ஆமே

தெளிவுரை : மலைகளில் சிறந்த மேருவை வில்லாகக் கொண்டு விளங்குபவன், ஈசன்; மலைகளில் சிறந்த கயிலை மலையை இருப்பிடமாக உடையவன் அப்பெருமான் அவன் விற்குடி வீரட்டத்தில் விளங்குகின்ற சோதியாகிய எம்பெருமான் ஆவார் எழில் திகழும் அப்பெருமானின் திருக்கழலைப் பணிந்து, நலம் யாவும் கொண்டு திகழும் நீண்ட பொழில் உடைய காழியுள் விளங்கும் ஞானசம்பந்தன் ஏத்திப் பரவிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை வலம் செய்து இசையுடன் பாடுமின் அவ்வாறு பாடல் இசைத்துப் போற்ற, அதுவே வரப் பிரசாதமாகும்

திருச்சிற்றம்பலம்

245 கோட்டூர் (அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1179 நீல மார்தரு கண்டனே நெற்றியோர்
கண்ணனே ஓற்றைவிடைச்
சூல மார்தரு கையனே துன்றுபைம்
பொழில்கள்சூழ்ந்த அழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்
கொழுந்தே யென்று எழுவார்கள்
சால நீள்தலம் அதனடைப் புகழ்மிகத்
தாங்குவர் பாங்காவே

தெளிவுரை : நீலகண்டனாக விளங்கம் நாதனே ! நெற்றியில் கண்ணுடையே ஈசனே ! ஒற்றை இடபத்தில அமர்ந்து சூலத்தைக் கரத்தேந்தி விளங்குகின்ற பரமனே ! பசுமையான பொழில்கள் சூழ்ந்து நறுமணம் கமழும் அழகிய மலர்கள் விளங்கும் கோட்டூரில் மேவும் நற்கொழுந்தே ! என்று துதித்து எழுகின்ற தொண்டர்கள், நிலவுலகில் நீண்ட காலம் புகழ் மிகுந்து வாழ்பவர்கள் ஆவார்கள்

1180 பங்கயம்மலர்ச் சீறடிப்பஞ்சுறு
மெல்விரல் அரவல்குல்
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென
மிழற்றிய மொழியார்மென்
கொங்கை யார்குழாம் குணலைசெய் கோட்டூர்நற்
கொழுந் தேயென்று எழுவார்கள்
சங்கை ஒன்றில ராகிச்சங் கரன்திரு
வருள்பெறல் எளிதாமே

தெளிவுரை : தாமரை மலர் போன்று சிறிய கால்களையும் பஞ்சு போன்ற மென்மையான விரல்களும், அரவத்தை ஒத்த அல்குலும் உடைய மகளிர் பலர் மயில் போன்ற சாயலும், குயில் போன்ற குரல் இனிமையும், கிளி போன்ற சொல் நவிலும் பாங்கும் உடையவராய், மென்மையான மொழி பகர்ந்து நடனம் புரிபவராய் விளங்குகின்ற கோட்டூரில் மேவும் நற்கொழுந்தே என்று தொழுது போற்றுபவர் ஆயினர் இத் தன்மையானது சங்கரன் திருவருளை ஐயம் இன்றிப் பெறுதலுக்கு எளிதாகிய வழியாயிற்று

1181 நம்பனார்நல மலர்கொடு தொழுதெம்
அடியவர் தமக்கெல்லாம்
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்
செல்வமல் கியநல்ல
கொம்ப னார்தொழுது ஆடிய கோட்டூர்நற்
கொழுந்தேயென்று எழுவார்கள்
அம்பொ னார்தரும் உலகினில் அமரரோடு
அமர்ந்தினிது இருப்பாரே

தெளிவுரை : நன்மலர் கொண்டு அடியவர்கள் தொழுது போற்ற விளங்குபவர், நம்பன் ஆகிய சிவபெருமான் அவர் செம்பொன் போன்று மகிழ்ச்சியினை நல்குபவர் எழில் மிக்கும், விளங்கும் செல்வம் பெருகவும், பூங்கொம்பு அனைய தேவ மங்கையாகிய அரம்பை பூசித்த நற்கொழுந்தே ! என்று தொழுபவர்கள், தேவர் உலகத்தில் தேவர்களுடன் இனிது மகிழ்ந்திருப்பார்கள்

1182 பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
மாங்கனி பயில்வாய
கலவ மஞ்சைகள் நிலவுசொற் கிள்ளைகள்
அன்னம் சேர்ந்து அழகாய
குலவு நீள்வயற் கயல்உகள் கோட்டூர்நற்
கொழுந்தேயென்று எழுவார்கள்
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
நீடிய புகழாரே

தெளிவுரை : பலவாகிய நீண்ட பொழில்களில் சுவை மிகுந்த கனிகள், தேன் மணக்கும் பலா, மாங்கனிகள் விளங்கவும், தோகை விரித்தாடும் மயில்களும், நற்சொற்களை மொழியும் கிளிகளும் மற்றும் அன்னப் பறவைகளும் சேர்ந்து மேவும் வளம் மிக்க வயல்களில் கயல்கள் திகழும் கோட்டூரில் வீற்றிருக்கும் நற்கொழுந்தே என ஈசனைப் போற்றிப் பரவுபவர்கள்நிலவும் நல்ல செல்வந்தராகியும், புகழ்மிக்கவர்களாயும், இவ் உலகத்தில் நீண்டு விளங்குவார்கள்

1183 உருகு வாருள்ளத்து ஒண்சுடர் தனக்கென்றும்
அன்பாரம் அடியார்கள்
பருகும் ஆரமுது எனநின்று பரிவொடு
பத்திசெய்து எத்திசையும்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென்று எழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
அவன்அருள் பெறலாமே

தெளிவுரை : உள்ளம் ஒன்றி உருகி நின்று போற்றும் அன்பர்களுக்கு ஒண்சுடராகிப் பருகும் ஆரமுதாகி விளங்குகின்ற ஈசன், வயல் சூழ்ந்த கோட்டூரின் நற்கொழுந்தாக இருப்பவனே ! என்று போற்றி வழிபடுபவர்கள், வினை நீங்கப் பெற்றவராய் அப்பெருமானின் அருள் பெறுவார்கள்

1184 துன்று வார்சடைத் தூமதி மத்தமும்
துன்னெருக் கார் வன்னி
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்
புலியுரி உடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
கொழுந்தே யென்று எழுவாரை
என்றும் ஏத்துவார்க்கு இடரிலை கேடிலை
ஏதம்வந்து அடையாவே

தெளிவுரை : நீண்ட சடை முடியில் தூய்மையான சந்திரனும், ஊமத்த லரும், எருக்கம் பூவும், வன்னிப் பத்தரமும் நிலவ, இறந்தவர்களின் மண்டை ஓடும், கபாலமும் கொண்டு, புலித்தோலை ஆடையாக உடுத்திப் பொன்னென மேவும் கொன்றை மலர் தரித்துக் கோட்டூரில் வீற்றிருக்கும் நற்கொழுந்தீசப் பெருமானே ! எனப் பரவித் தொழுபவர்களை ஏத்தும் அடியவர் பெருமக்களுக்கு இடர் இல்லை; கேடு இல்லை; குற்றமும் அவர்கள்பால் அணுகாது

1185 மாட மாளிகை கோபுரம் கூடங்கள்
மணியரங்கு அணிசாலை
பாட சூழ்மதில் பைம்பொன்செய் மண்டபம்
பரிசொடு பயில்வாய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தேயென்று எழுவார்கள்
கேடது ஒன்றில ராகிநல் லுலகினில்
கெழுவுவர் புகழாலே

தெளிவுரை : மாட மாளிகைகள், கோபுரம், கூடங்கள், அரங்குகள், அழகிய சாலைகள், பெரிய மதில்கள், மண்டபங்கள் விளங்கவும், பூம்பொழில்கள் சூழவும் உள்ள கோட்டூரில் வீற்றிருக்கும் நற்கொழுந்தீசனே என்று போற்றுகின்றவர்கள், கேடு எதுவும் இல்லாதவர்களாய் விளங்கிப் புகழ் மிகுந்தும் திகழ்வார்கள்

1186 ஒளிகொள் வாளெயிற்று அரக்கன்அவ் வுயர்வரை
யெடுத்தலும் உமையஞ்சிச்
சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு
நாள்அவற்கு அருள்செய்த
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந்
தவமுடை யவர்தாமே

தெளிவுரை : இராவணன், உயர்ந்ததாகிய கயிலை மலையை எடுத்தபோது, உமாதேவி அஞ்சுதல் கொண்டு சுளியத் தமது திருவிரலால் ஊன்றி அவ்அரக்கனை நலிவு செய்து, பின்னர் மந்திர வாளும் நீண்ட வாழ்நாளும் அருள் புரிந்த பூம்பொழில் சூழ்ந்த கோட்டூரில் மேவும் நற்கொழுந்தீசப் பெருமானைத் தொழுது போற்றுபவர்கள், அப்பெருமானின் திருவடிக் கமலத்தைப் பெறும் தவப் பயனை அடைந்தவர்கள் ஆவார்கள்

1187 பாடி யாடு மெய்ப் பத்தர்கட்கு அருள்செயு
முத்தினைப் பவளத் தைத்
தேடிமாலயன் காண்வொண் ணாதவத்
திருவினைத் தெரிவைமார்
கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற்
கொழுந் தேயென்று எழுவார்கள்
நீடு செல்வத்தர் ஆகிஇவ் வுலகினில்
நிகழ்தரு புக ழாரே

தெளிவுரை : பாடிப் போற்றியும் பக்தியால் தன்னிலை மறந்து ஆடியும் வழிபடும் அடியவர்களுக்கு, முத்தும் பவளமும் போன்ற மேலான பொருளாக விளங்கும் பெருமான், திருமாலும், பிரமனும் தேடிக் காண வெண்ணாத செல்வராக விளங்குபவர் அவரை, மகளிர்கள் கூடிச் சேர்ந்தும் ஆடவர்கள் கைதொழுது கோட்டூரில் வீற்றிருக்கும் நற்கொழுந்தே என்றும் வணங்குகின்றனர் அத்தகையோர் நிலை பெற்ற செல்வம் உடையவராய்ப் புகழுடன் விளங்குவார்கள்

1188 கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற்
கொழுந்தினைச் செழுந்திரளைப்
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா
மெய்ய(ன்)நல் லருள்என்றும்
காணல் ஒன்றிலாக் காரமண் தேரர்குண்
டாக்கர் சொற் கருதாதே
பேணல் செய்துஅர னைத்தொழும் அடியவர்
பெருமையைப் பெறுவாரே

தெளிவுரை : பிறை சந்திரனைச் சூடிய சடை முடிஉடைய, கோட்டூரின் நற்கொழுந்தீசப் பெருமான் செழுமையுடைய திரட்சியாய் விளங்கி நிற்க, பூக்கள் மற்றும் அணி அலங்காரம் செய்து போற்றித் தொழுவீராக சமணர்களும், தேரர்களும் கூறும் சொற்களைக் கருத்திற் கொள்ளாது, அரனைத் தொழும் அடியவர்களுக்கு எல்லாப் பெருமையும் நாடும்

1189 பந்து லாவிரண் பவளவாய்த் தேன்மொழிப்
பாவையோடு உருவாரும்
கொந்து லாமலர் விரிபொழில் கோட்டூர்நற்
கொழுந்தினைச் செழும்பவளம்
வந்து லாவிய காழியுள் ஞானசம்
பந்தன்வாய்ந்து உரைசெய்த
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர்
தாங்குவர் புகழாலே

தெளிவுரை : பந்தார் விரல்களும் பவளவாயும் உடைய தேன் மொழிப் பாவை என்னும் திருநாமம் தாங்கிய உமாதேவியோடு, பொழில்சூழ் கோட்டூரின் நற்கொழுந்தீசப் பெருமானை, செழுமையான பவளம் விளங்கும் காழியுள்மேவும் ஞானசம்பந்தர் உரைசெய்த சந்தம் திகழும் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர் புகழ் மிக்கவராவர்

திருச்சிற்றம்பலம்

246 திருமாந்துறை (அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1190 செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும்
செருந்திசெண் பகம்ஆனைக்
கொம்பும் ஆரமு(ம்) மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொ னேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகின்ற
எம்பி ரான்இமை யோர்தொழு பைங்கழல்
ஏத்துதல் செய்வோமே

தெளிவுரை : செம்பொன் போன்ற வேங்கை மரம், குங்கும மரம், மற்றும் செருந்தி, செண்பகம், ஆனைக் கொம்பு ஆரம், மாதவி, சுரபுன்னை, குருந்த மலர்கள் எனப் பல்வகையான மரங்களும், ஆரங்கள் மற்றும் பூக்களும் உந்திக்கொண்டு வரும் காவிரியின் வடகரை மாந்துறையில் விளங்கும் ஈசன், தேவர்களாய் தொழப் படுபவர் அத்தகைய பெருமானின் இனிய கழல்களை ஏத்திப் பரவுவோமாக

1191 விளவு தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை உறைவானத்
துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச்
சுடவிழித் தவன்நெற்றி
அளக வாள்நுதல் அரிவைதன் பங்கனை
அன்றிமற்று அறியோமே

தெளிவுரை : விளா மரங்களும், தேனும் உயர்ந்த வகையில் பெரும்புகழ் மிக்க முதிர்ந்த மூங்கில்களிலிருந்த தெரித்த சாதிமுத்துக்களும் நீர் அலைகளால் உந்தப பெற்று வரும் காவிரியின் வடகரை மாந்துறையில் உறைகின்ற ஈசன், துளப மாலையுடைய திருமாலின் மகனாகிய, ஐங்கணைகளைக் கொண்டு விளங்கும் மன்மதனை, எரியுமாறு விழித்த நெற்றிக் கண்ணுடையவன் உமாதேவியைத் தனது பாகமாகக் கொண்டு மேவும் அப்பரமனையன்றி மற்ற எதுவும் யாம் அறிவோம்

1192 கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமும்
கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிட வடகரை
மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யில்பலி கொள்பவன்
வானவர் மகிழ்ந்த தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது
கெழுமுதல் அறியோமே

தெளிவுரை : மலைப் பகுதிகளிலிருந்து பாக்கு மரங்களின் குலைகளை நீரின்வழி, கொண்டு வரும் காவிரியின் வடகரை மாந்துறையில் உறையும் ஈசன் பிரம கபாலம் ஏந்திப் பலி கொள்பவன் அப்பெருமான், வானவர்கள் மகிழ்ந்து ஏத்தும் மாசிலாமணியாக விளங்குபவன் அப் பரமன் திருக்கழலைத் தொழுதலை அன்றி வேறு நிறைவான பெருளை யாம் அறியோம் ஈசனையன்றி முழு முதல் வேறு இல்லை என்பது சுட்டப் பெற்றது

1193 இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
இளமருது இலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது
வணங்குதல் அறியோமே

தெளிவுரை : இலவம், குங்குமம், ஈச்சம், சுரபுன்னை, இளமருது, இலவங்கம் என யாவும் கலந்து வரும் காவிரியில் வடகரை மாந்துறையில் உறையும் நீலகண்டனாகிய ஈசன்; கங்கை, சந்திரன், ஊமத்தம், அரவம் ஆகியவற்றைப் பொருந்த வைத்த மலையானவர்; வானவர்தம் கொழுந்தானவர் அப்பெருமானையன்றி வேறு எப்பொருளும் அறியத்தக்கது அல்ல

1194 கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி
குரவிடை மலர்உந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறை வானைப்
பாங்கி னால்இடுந் தூபமும் தீபமும்
பாட்டவிம் மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
தலைப்படும் தவத் தோரே

தெளிவுரை : கோங்கு, செண்பகம், குருந்தை, பாதிரி, குரவம் ஆகிய மலர்களை இடையில் உந்திவரும் காவிரியின் வடகரை மாந்துறையில் உறையும் ஈசனை, சிவாகம விதிப்படி தூப தீபங்கள் மற்றும், தோத்திரப் பாட்டும் மொழிந்து மலர் தூவி வணங்கித் திருநாமங்களை நாவால் ஓதுபவர்கள், தவத்தின் பயனை அடைந்தவர்கள் ஆவார்கள்

1195 பெருகு சந்தனம் காரகில் பீலியும்
பெருமர நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதன்எம் பெருமானைப்
பரிவி னால்இருந்து இரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே

தெளிவுரை : சந்தனம், அகில், மயிற் பீலி ஆகியனவும், பெருமரங்களும் உந்திக் கொண்டு வந்த கரை சேர்க்கும் காவிரியின் வடகரை மாந்துறையில் மேவும் புனிதனாகிய எம்பெருமானைப் பக்திப் பெருக்கினால் சூரியனும், சந்திரனும் மற்றும் பார்மன்னர்களும் ஏத்த, மருத்துக்கள் வழிபட்டுச் சிறந்த மலரடியை, நாம் வணங்குதல் செய்வோமாக

1196 நறவ மல்லிகை முல்லையு மௌவலு
நாள்மலர் அவை வாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
மாந்துறை யிறைஅன்று அங்கு
அறவ னாகிய கூற்றினைச் சாடிய
அந்தணன் வரை வில்லால்
நிறைய வாங்கியே வலித்தெயில் எய்தவ(ன்)
நிரைகழல் பணிவோமே

தெளிவுரை : தேன் துளிர்க்கும் மல்லிகை, முல்லை, மௌவல் ஆகிய மலர்களை வாரி மிகுதியாகத் திகழும் வகையில் உந்தித் தள்ளிக் கொண்டு வரும் காவிரி வடகரை மாந்துறையின் நாதன், அறக் கடவுளாகிய காலனை உதைத்த தூயவனாய், மேருவை வில்லாகக் கொண்டு முப்புரக் கோட்டைகளை எரியுமாறு செய்வன் அப் பெருமான் இணையடியைப் பணிவோமாக

1197 மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
நிந்தி யாஎடுத்து ஆர்த்தவல் லரக்கனை
நெரித்திடு விரலானைச்
சிந்தியாமனத் தார்அவர் சேர்வது
தீநெறி யதுதானே

தெளிவுரை : தென்றல் காற்று வீசும் பொழில்களில் விளங்கும் மாங்கனிகளை மந்திகள் பறித்துத் தின்ன, மாணிக்கங்களை உந்தி தள்ளி நீர் பெருக்கி வரும் காவிரியின் வடகரை மாந்துறையில் உறையும் ஈசனை, நிந்தனை செய்த பாங்கில் ஆர்த்துத் கயிலை மலையை எடுத்த அரக்கனை நெரித்த திருவிரலானைச் சிந்தனை செய்து வணங்காதவர் சேர்வது தீ நெறியேயாகும்

1198 நீல மாமணி நித்திலத் தொத்தொடு
நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
மாந்துறை யமவர்வானை
மாலு நான்முகன் தேடியும் காண்கிலா
மலரடி யிணைநாளும்
கோலம் ஏத்திநின்று ஆடுமின் பாடுமின்
கூற்றுவன் நலியானே

தெளிவுரை : நீல நிற மணிகளும், முத்துக்களும், மலர்க் குவியல்களும் நிரம்ப உந்தித் தள்ளிக் கொண்டு வரும் காவிரியின் வடகரை மாந்துறையில் வீற்றிருக்கும் பெருமான் திருமாலும் பிரமனும் தேடியும் காண்கிலாத மலரடிச் சிறப்புடையவர் அத் திருவடிகளை நாள்தோறும் ஏத்திப் பாடுமின், ஆடுமின் அவ்வாறு செய்தால் கூற்றுவனாய் உமக்கு நலிவு இல்லை

1199 நின்று ணும்சமண் தேரரு நிலையிலர்
நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலன்களு(ம்)
நாணலி னுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யொரு காலம்
அன்றி யுள்ளழிந்து எழும்பரி சழகிது
அதுஅவர்க்கு இடம் ஆமே

தெளிவுரை : சமணரும் தேரரும் நிலையற்ற சொற்களை நவில்பவர் ஆவர் நீண்ட மூங்கில்களும், தேன் மணம் கமழும் மாங்கனி, வாழைப்பழம் ஆகியனவும் நுரையின் வாயிலாக அடித்துத் தள்ளி வரும் காவிரியின் வடகரை மாந்துறையினை எக்காலத்தும் உள்ளம் உருகித் தொழும் அடியவர்களுக்குப் பரிசாவது, அவ்அடியவர் நெஞ்சுள் ஈசன் இடம் கொண்டு வீற்றிருந்து ஆனந்தத்தைப் பொழிதலாம்

1200 வரைவ ளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை உறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
பாவமும் இலர்தாமே

தெளிவுரை : மலைபோன்ற உயர்ந்த வளத்தை ஈர்த்து நல்குகின்ற காவிரியின் வடகரை மாந்துறையில் உறையும் ஈசனை, சிரபுரத்துடைய கவுணியர் குலத்தின் வேதங்களை நவிலும் நாவும், அர அர என நவிலும் பணியில் வல்லமையும் கொண்டு விளங்கும் ஞானசம்பந்தர், அன்புறு மாலையாகச் சாற்றிய இத் திருப்பதிகத்தை ஓதுதலைப் பணியாகக் கொண்டவர்களுக்கு, அல்லல் இல்லை; பாவமும் இல்லை

திருச்சிற்றம்பலம்

247 திருவாய்மூர் (அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1201 தளிர்இள வளர்என உமைபாடத்
தாளம் மிடவோர் தழல்வீசிக்
கிளர்இள மணியர வரையார்த்து
ஆடும் வேடக் கிறிமையார்
விளர் இள முலையவர்க்கு அருள்நல்கி
வெண்ணீறு அணிந்தோர் சென்னியின்மேல்
வளர் இள மதியமொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : உமாதேவியார் தளிர் இள வளர் என எடுத்துப் பாட்டிசைத்துத் தாளம் இட, மாணிக்கத்தையுடைய இளமையான அரவத்தை அரையில் கட்டி விளங்கும் ஈசன், பெசய்ம்மையான வேடத்தால் ஆடல் புரிபவர் அப் பெருமான், தாருக வனத்தில் உள்ள மகளிர்க்கு அருள் நல்கியவர் அவர் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் நன்கு பதியப் பூசி, தலை முடியின் மீது பிறைச் சந்திரனைச் சூடி வாய்மூர் அடிகளாய் வருவார்

1202 வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண உடைமேலோர்
பந்தம் செய்து அரவசைத்து ஒலிபாடிப்
பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக்கு அருள்நல்கிச்
செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை :  ஈசன், வெம்மையான தழல்போன்ற சிவந்த வடிவத்தை உடையவர்; திருமேனியில் திருவெண்றீறு பூசிக் கோவண ஆடை கொண்டு விளங்குபவர்; அரவத்தை அரையில் பொருந்தக் கட்டிப் பாடல்களைப் பாடி இல்லங்கள்தோறும் சென்று பிச்சை கேட்பவர் அப் பெருமான், என் சிந்தையில் புகுந்து எனக்கு அருள் புரிந்தவர் திருவடி பரவி வந்தனை செய்ய மேவும் இவரே வாய்மூர் அடிகள்

1203 பண்ணிற் பொலிந்த வீணையர்
பதினெண் கணமும் உணராநஞ்சு
உண்ணப் பொலிந்த மிடற்றானார்
உள்ளம் உருகில் உடனாவார்
சுண்ணப் பொடிநீறு அணிமார்பர்
சுடர்பொன் சடைமேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : ஈசன், பண்ணற் பொலியுமாறு நல் வீணை மீட்டி வாசிப்பவர்; பதினெட்டு வகையான தேவகணங்கள் அஞ்சி வெருவ அக்கொடிய நஞ்சினை உட்கொண்டு பொலிந்த மிடற்றினையுடையவர்; உள்ளம் கசிந்து உருகிப் போற்றும் அன்பர்களுக்கு உடனாகித் திகழந்து அருள் செய்பவர்; திருவெண்ணீறு குழையப் பூசிய அழகிய மார்பினை உடையவர்; பொன் போன்று சுடர் தரும் சடைமுடியின்மீது வண்ணம் மிக்க பிறைச் சந்திரனைத் தரித்து விளங்குபவர் இவர் வாய்மூர் அடிகள் ஆவார்; கண்டு மகிழ்வீராக

1204 எரிகிளர் மதியமொடு எழில்நுதல்மேல்
எறிபொறி அரவினொடு ஆறுமூழ்க
வெருவந்து இடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருஅகலம்
பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியரவு அரைக்கசைத்து இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : நெற்றியில் சுடர்விடும் சந்திரனும், படத்தை எடுத்து ஆடுகின்ற அரவமும் சூடி, கங்கை தரித்து விளங்கும் சடையுடன் மேவும் ஈசன், இடபவாகனத்தில் ஏறி எம்மைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்ட விகிர்தன் ஆவார் திருநீறு பூசிய அகன்ற திருமார்பு உடைய வாய்மையராய் அழகுடன் மிளிரும் அரவத்தை அரையில் கட்டி விளங்குபவர் இவரே !  இவர் வாய்மூர் அடிகள்

1205 அஞ்சன மணிவணம் எழில்நிறமா
அகம் மிடறு அணிகொள வுடல்திமில
நஞ்சினை அமரர்கள் அமுதமென
நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின் தோல்
வெருவுறப் போர்த்ததன் நிறமுமதே
வஞ்சனை வடிவினொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : நீல மணியின் எழில் வண்ணம் உடைய நஞ்சு, மிடற்றினை அணிபெறச் செய்யுமாறு விளங்க, தேவர்கள் போற்றும் உமாதேவி நடுங்குமாறு, சினமுடன் பாய்ந்த பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்த ஈசன், என்னைக் கவர்ந்தனர் இவரே வாய்மூர் அடிகள்

1206 அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
கழலிணை யடிநிழல் அவைபரவ
எல்லியம் போதுகொண்டு எரியேந்தி
எழிலொடு தொழிலவை இசையவல்லார்
சொல்லிய அருமறை இசைபாடிச்
சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியம் தோலுடுத்து இவராணீர்
வாயமூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : அல்லி மலர் சூடிய நீண்ட கூந்தலையுடைய மகளிர் திருவடி நிழலைப் பரவி, தாமரை போன்ற மலர் கொண்டு தூவி, தூப தீபங்கள் விளங்க, அரியனவாகிய வேதத்தினை விளங்கப் போற்ற, இளம் பிறைச் சந்திரனைச் சூடி தோடு அணிந்தவராய்ப் புலித்தோலை உடுத்திய ஈசன் இவரே இவர் வாய்மூர் அடிகள்

1207 கடிபடு கொன்றைநன் மலர்திகழும்
கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறைபவர் மறுகினல்லார்
முறைமுறை பலிபெய முறுவல் செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம்
பொன்னென மிளிர்வதொர் அரவினொடும்
வடிநுனை மழுவினொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : மணம் கமழும் கொன்றை மலர் சூடித் திகழும் ஈசன் ஒளி திகழும் முடியுடைய தேவர்களின் தலைவர், தெருவில் மகளிர்பால் பிச்சை ற்கும் தன்மையில் முறுவல் செய்பவர் அவர் திருநீறு பூசிய தஇருக்கோலத்தராய், மார்பில் ஒளிதிகழும் அரவம் சஞ்சரிக்க, மழுப்படையுடன் இருப்பவர் இவரே வாய்மூர் அடிகள் ஆவார்

1208 கட்டிணை புதுமலர்க் கமழ் கொன்றைக்
கண்ணியர் வீணையர் தாமும்அஃதே
எட்டுணை சாந்தமொடு உமைதுணையா
இறைவனார் உறைவதொர் இடம் வினவில்
பட்டியணை யகல்அல்குல் விரிகுழலார்
பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை ஆடலொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : கொன்றை மலர்களைத் தொடுத்து மாலையாகக் காட்டிச் சூடிய சிவபெருமான், வீணை மீட்டி விளங்குபவர் எண்ணத்தின் துணையாய் சாந்தம் திகழும் உமாதேவியை உடனாகக் கொண்டு , அப்பரமன் உறையும் இடம் யாது என வினவில், மகளிர், பலி கொண்டு வந்து வழங்கப் பெருமகிழ்வுடன் பெறும் இவர் வீற்றிருக்கும் வாய்மூர் அப்பெருமான் வருவார்

1209 ஏன மருப்பினொடு எழிலாமை
இசையப் பூண்மோர் ஏறுஏறிக்
கானமது இடமா உறைகின்ற
கள்வர் கனவில் துயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித்
திகழ்பொன் சடைமேல் திகழ்கின்ற
வான நன்மதியினொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : பன்றியின் கொம்பும், ஆமையும் பொருந்த அணியாக அணிந்து இடபத்தில் ஏறி, மயானத்தை இடமாகக் கொண்டு உறைகின்ற ஈசன், கனவில் தோன்றிக் கவர்ந்த கள்வன் என்னைக் கொள்ளை கொண்டவன் தேன் மணக்கும் மலர்கள், திகழ்கின்ற பொற்சடையில் விளங்கச் சந்திரனைச் சூடிய இவர், வாய்மூர் அடிகள் ஆவார்

1210 சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவாள்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடல்நல் மகிழ்விரல் கூப்பி நல்லார்
குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித்து இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே

தெளிவுரை : ஈசன், சுடுதல் இல்லாத, குளுமையான பிறைச் சந்திரனையுடையவர்; ஒளி திகழும் சடைமுடி உடையவர்; திருவெண்ணீறு தரித்தவர்; சுடர்விடு மழுவாள் படையும், வண்டு இடைபாடி முரலும் கொன்றை மாலையும், அரவமும், முப்புரி நூலும், பற்றி விளங்கத் திகழ்பவர் மகளிர்கள் கைகூப்பி வழங்கும் பலியினைப் பிரம கபாலத்தில் ஏற்றுக் கொண்ட பெருமான், இவரே வாய்மூர் அடிகள் ஆவார்

1211 திங்ளொடு அருவரைப் பொழிற் சோலைத்
தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமொடு அருமறை யொலிபாடல்
அழல்நிற வண்ணர்தம் அடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே

தெளிவுரை : சந்திரனைத் தழுவும் உயர்ந்த பொழில், தேன் துளிர்க்கும் பூக்கள் நிறைந்த சோலை வனங்கள் உடைய திருவாய்மூரின்கண், வேதங்கள் பாட விளங்கும் செவ்விய அழல் வண்ணராகிய ஈசனின் திருவடி பரவி, நம்வினை கெடுமாறு மொழியவல்ல ஞானசம்பந்தர் உரைத்த இத் தமிழ் மாலையை மனத்தில் நன் இருத்தித் தொழுபவர், தமர் நெறி அடைவர் அதுவே உலகத்திற்கு ஒப்பற்றி தவமாகும்

திருச்சிற்றம்பலம்

248 திருவாடானை (அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை, ராமநாதபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1212 மாதோர் கூறுகந்து ஏறதுஏறிய
ஆதி யானுறை ஆடானை
போதி னாற்புனைந்து ஏத்துவார்தமை
வாதி யாவினை மாயுமே

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு இடப வாகனத்தில் வீற்றிருக்கும் ஆதிப்பிரானாகிய ஈசன் உறையும் ஆடானையை, மலர்களால் புனைந்து ஏத்துவார தமக்கு, வினையானது துன்பத்தைத் தராது அது தானாகவே மாய்ந்து அழியும்

1213 வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்று
ஆட லானுறை ஆடானை
தோடு லாமலர் தூவிக் கைதொழ
வீடு நுங்கள் வினைகளே

தெளிவுரை : கபாலம் கையில் ஏந்தி நின்று ஆடல் புரிகின்ற ஈசன் உறைகின்ற ஆடானையை மலர் தூவிப் போற்றிக் கைதொழும் அடியவர்கள், வினை யாவும் வீழ்த்தியவர்கள் ஆவார்கள்

1214 மங்கை கூறினன் மான்மறி யுடை
அங்கை யான்உறை ஆடானை
தங்கை யால்தொழுது ஏத்தவல்லவர்
மங்கு நோய்பிணி மாயுமே

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகங்கொண்டு விளங்கும் ஈசன் இளமையான மானை அழகிய கரத்தில் ஏந்தி உறையும் ஆடானை என்னும் திருத்தலத்தினைத் தமது கைகளால் தொழுது ஏத்த வல்லவர்களுக்கு, வாழ்க்கையில் துன்புறுத்தி அழிவைத் தரும் நோயும் பிறவி முதலான பிணிக்கப்பட்டுள்ள துன்பந்தரும் வினைகளும் மாயும்

1215 கண்ண நீறணி மார்பில் தோல்புனை
அண்ண லான்உறை ஆடானை
வண்ண மாமலர் தூவிக் கைதொழ
எண்ணு வார்இடர் ஏகுமே

தெளிவுரை : வெண்மையான ஒளி மிக்க திருவெண்ணீறு அணிந்த திருமார்பில் மான் தோல்புனையும் அண்ணலாகிய ஈசன் உறைகின்ற ஆடானை என்னும் தலத்தினை, வண்ணம் மிக்க மலர்கள் கொண்டு தூவிப் போற்றித் தொழும் அன்பர்களுடைய இடர், நீங்கிச் செல்லும்

1216 கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கைய ணிம்மல ரால்வணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே

தெளிவுரை : கொய்து அணியப் பெறுகின்ற கொன்றை மலர் சூடிய ஈசன் மேவி வீற்றிருக்கும் ஆடானை என்னும் தலத்தை மலர் கொண்டு ஏத்தி வணங்கிட, தீமை செய்யும் கொடிய வினையானது கொட்டழியும்

1217 வான்இ ளம்மதி மல்கு வார்சடை
ஆன்அஞ்சு ஆடலன் ஆடானை
தேன் அணிம் மலர்சேர்த்த முன்செய்த
ஊனம் உள்ள ஒழியுமே

தெளிவுரை : வானத்தில் விளங்கும் சந்திரனை நீண்ட சடையின்கண் விளங்கச் செய்து பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கவ்வியத்தினைப் பூசனையாகக் கொள்ளும் ஈசன் வீற்றிருக்கும் ஆடானைத் தலத்தினை, மலர் கொண்டு கைங்கரியம் செய்ய முன் செய்த வினை யாவும் நீங்கும்

1218 துலங்கு வெண்மழு ஏந்திச் சூழ்சடை
அலங்க லான்உறை ஆடானை
நலங்கொள் மாமலர் தூவி நாள்தொறும்
வலங்கொள் வார்வினை மாயுமே

தெளிவுரை : ஒளிமிக்க மழுப்படை ஏந்திச் சடைமுடியில் மாலை தரித்துள்ள ஈசன் உறையும் ஆடானை என்னும் பதியினை, மலர் கொண்டு தூவி நாள் தோறும் வலம் வரும் அடியவர்களுடைய வினையானது மாய்ந்து அழியும்

1219 வெந்த நீறணி மார்பில் தோல்புனை
அந்த மில்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழும்
சிந்தை யார்வினை தேயுமே

தெளிவுரை : திருவெண்ணீறு அணிந்த திருமார்பில் மான் தோல் புனைந்து அந்தம் இல்லாது விளங்கும் ஈசன் மேவும ஆடானை என்னும் தலத்தினை மணம் மிக்க மலர் தூவித் தொழும் அன்பர்களின் வினையானது தேய்ந்து கெடும்

1220 மறைவலாரொடு வானவர் தொழுது
அறையுந் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை யேத்தத் தீவினை
பறையும் நல்வினை பற்றுமே

தெளிவுரை : வேதம் வல்ல அந்தணர்களும், வானவர்களும் தொழுது போற்றும் ஒலிமிகும் தண்புனல் சேர் ஆடானையில் வீற்றிருக்கும் ஈசனை ஏத்தித் துதிக்க, தீவினையானது அழிந்து, நல்வினை யாவும் பற்றி, மகிழ்ச்சியைத் தரும்

1221 மாயனும் மலரானும் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மாமலர் தூவிக் கைதொழத்
தீய வல்வினை தீருமே

தெளிவுரை :  திருமாலும், பிரமனும் கைதொழுகின்ற அந்தணனாகிய ஈசன் விளங்கும் ஆடானை என்னும் பதியைத் தூய்மையான மலர் கொண்டு தூவிப் போற்றிக் கைதொழ, தீமைதரும் வன்மையான வலியவினை தீரும்

1222 வீடினார்மலி வேங்க டத்துநின்று
ஆட லான்உறை ஆடானை
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே

தெளிவுரை :  இறந்தவர்கள் மலிந்த வெம்மையான சுடுகாட்டில் நின்று ஆடுகின்ற ஈசன் உறையும் ஆடானை என்னும் தலத்தை நாடி, ஞானசம்பந்தர் வாய் மலர்ந் இத் திருப்திகத்தைப் பாட, நோயின் பிணிப்பு யாவும் அழிந்து ஏகும்

திருச்சிற்றம்பலம்

249 சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1223 பொடியிலஙல்குந் திருமேனி யாளர் புலியதளினர்
அடியிலங்குங் கழலார்க்க ஆடும் அடிகள்ளிடம்
இடியிலங்குங் குரலோத மல்கவ் வெறிவார்திரைக்
கடியிலங்கும் புனல்முத்து அலைக்கும் கடற்காழியே

தெளிவுரை :  திருநீறு விளங்கும் திருமேனியுடைய ஈசன் புலித்தோலை ஆடையாகக் கொண்டவர்; திருவடியில் திகழும் கழல் ஒலிக்க நடனம் புரிபவர் அப்பெருமான் விளங்குகின்ற இடமாவது, இடியொலி போன்று கடலின் ஒலி முழுங்க, அலைகள் வாயிலாக முத்துக்களைக் கரை சேர்க்கும் சீகாழி ஆகும்

1224 மயல்இலங்கும் துயர்மாசறுப்பான் அருந்தொண்டர்கள்
அயல்இலங்குப் பணிசெய்ய நின்ற அடிகள்ளிடம்
புயல்இலங்கும் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
கயல்இலங்கும் வயற்கழனி குழும்கடற் காழியே

தெளிவுரை :  மயலைத் தரும் துயரமும், மாசாகிய வினையும் தீர்த்து அருள்புரியம் ஈசன், திருத்தொண்டர்கள் நிஷ்காமியமாகப் பணிகளை ஆற்றி நிற்க, மேவி விளங்குகின்ற இடமானது, கைம்மாறு வேண்டாத மழையைப் போன்ற வள்ளல்களும், மறையவர்களின் வேத ஒலியும் விளங்க, கயல்கள் திகழும் வயல்கள் சூழும் காழிப் பதியாகும்

1225 கூர்விளங்கும் திரிசூல வேலர் குழைக்காதினர்
மார்விலங்கும் புரிநூல் உகந்த மணவாளனூர்
நேர்விலங்கல் அனதிரை கள்மோதந் நெடுந்தாரைவாய்க்
கார்விலங்கல் எனக்கலந்து ஒழுகும் கடற்காழியே

தெளிவுரை :  கூர்மை பொருந்திய திரிசூலத்தையுடைய ஈசன், குழை என்னும் அணியைக் காதில் அணிந்திருப்பவர்; திருமார்பினில் முப்புரி நூல் அணிந்து உகந்த மணவாளர் அப் பெருமானுடைய ஊரானது, மலைபோன்ற உயர்ந்த அலைகள் எழும்பி மோதவும், அவ்வாறு எழும்பும் அலைகளின் தன்மை மழையின் தாரைகள் வீழும் பாங்கிலும் பொலிகின்ற சீகாழி ஆகும்

1226 குற்றம்இல்லார் குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்த பெருமானிடம்
மற்றுநல்லார் மனத்தால் இனியார் மறைகலையெலாம்
கற்றுநல்லார் பிழைதெரிந்து அளிக்கும் கடற்காழியே

தெளிவுரை :  மாசிலாமணியாய் விளங்கும் சிவபெருமான், குற்றம் குறை முதலானவற்றால் உண்டாகும் பழி முதலான வினைகளைத் தீர்ப்பவர்; இடபக் கொடியை உடையவர் அப் பெருமானுடைய  இடமாவது, குணத்தால் நன்மையும், மனத்தால் இனிமையும் வேதங்களைக் கற்ற புலமையும், அதன் வழி குற்றங்களை நன்கு கடிந்து நற்பாங்கு உடைமையும் கொண்டு விளங்கும் சான்றோர் வாழும் காழி ஆகும்

1227 விருதுஇலங்கும் சரிதைத் தொழிலார் விரிசடையினார்
எருதுஇலங்கப் பொலிந்தோறும் எந்தைக்கு இடமாவது
பெரிதுஇலங்கும் மறை கிளைஞர்ஓதப் பிழைகேட்டலாற்
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்கும் கடற்காழியே

தெளிவுரை :  அடியவர்களுக்கு அருள் நல்கிய பல பெருமைகளை உடையவராய், அவ்வரிய புகழ் விளங்கும் சடைமுடியுடையவராய், இடபவாகனத்தில் பொலிவுடன் மேவும் ஈசனின் இடமாவது, மிகப் பெரிய பொருளாகிய வேதங்களை இளையவர்கள் சொல்ல அவற்றைச் செவிமடுத்துத் திகழும் கிளிகள், பிழைச் சொல் கேட்டஞான்று திருத்தி மொழியும் பாங்குடன் திகழும் சீகாழியாகும்

1228 தோடுஇலங்கும் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப்
பீடுஇலங்கும் சடைப்பெருமை யாளர்க்கு இடமாவது
கோடுஇலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெரும் செந்நெலின்
காடுஇலங்கும் வயல்பயிலும் அந்தண் கடற்காழியே

தெளிவுரை :  ஈசன், தோடும் குழையும் காதில் அணியாகக் கொண்டு விளங்குபவர்; வேதமாக இருப்பவர்; வண்டுகள் சூழ்ந்த மலர்கள் திகழும் சடையுடையவர் அத்தகைய பெருமையுடைய பெருமானுக்கு இடமாவது, காம்புகள் நிறைந்த பொழில்கள் பெருகவும், அடர்ந்து நெருங்கிய செந்நெற் கதிர்கள் கொண்ட வயல்கள் உடையதாகவும் கொண்ட அழகிய குளிர்ச்சியான கடல் சிறப்பும் உடைய காழி ஆகும்

1229 மலைஇலங்கும் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்து
அலைஇலங்கும் புனல்கங்கை வைத்த அடிகட்குஇடம்
இலைஇலங்கும் மலர்க்கைதை  கண்டல்வெறி விரவலால்
கலைஇலங்கும் கணத்தினம் பொலியும் கடற்காழியே

தெளிவுரை :  மேருமலையினை வில்லாகக் கொண்டு மூன்று மதில்களையும் ஏக காலத்தில் வெந்து சாம்பலாகுமாறு செய்து, கங்கையினைச் சடை முடியில் வைத்த அடிகளாகிய ஈசனார்க்கு உரிய இடமாவது, தாழை மற்றும் நறுமணம் கமழும் மலர்கள் விளங்க, மான் இனம் பொலியும் கடற்கரை வளம் மிகுந்த காழியாகும்

1230 முழுதிலங்கும்பெரும் பாரும் வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதுஇரங்கச் சிரம்உரமொடுங்கவ் அடர்த்து ஆங்கவன்
தொழுதுஇரங்கத் துயர்தீர்த்து உகந்தார்க்கு இடமாவது
கழுதும்புள்ளு மதிற்புறம துஆருங்கடற் காழியே

தெளிவுரை :  இப்பேருலகில் மாறுபாடு கொண்ட இராவணன், அழுது யாசிக்குமாறு, தலை முடியும் வலிமையும் ஒடுங்கும்படி தண்டித்தும், அவன் தொழுது வணங்கத் துயர் தீர்த்து மகிழ்ந்து அருள் செய்த ஈசனுக்கு இடமாவது, வண்டுகளும் பறவைகளும் மதிற்புறத்தில் விளங்கும் காழியாகும்

1231 பூவினானும் விரிபோதின் மல்கும்திரு மகள்தனை
மேவினானும் வியந்தேத்த நீண்டார் அழலாய்நிறைந்து
ஒவியங்கே அவர்க்கருள் புரிந்தவ் ஒருவர்க்குஇடம்
காவியங்கண் மடமங் கையர்சேர் கடற்காழியே

தெளிவுரை :  தாமரைப் பூவில் விளங்கும் பிரமனும், விரிந்த மலரில் விழைந்து மேவும் திருமகளைத் திருமார்பில் பொருந்திய திருமாலும், வியந்து போற்றுமாறு நீண்டு எழும் அழலாய் நிறைந்து, அவர்களுக்கு அருள்புரிந்த ஒப்பற்றவராகிய ஈசனுக்கு இடமாக விளங்குவது, கருங்குவளை போன்ற கண்களையுடைய மகளிர் விளங்கும் கடற் பெருமை சார்ந்த காழியாகும்

1232 உடைநவின்றார் உடைவிட்டுழல்வார் இருந்தவத்தார்
முறைநவின்று அம்மொழி யொழித்து உகந்தம் முதல்வன்னிடம்
மடைநவின்ற புனற்கொண்டை பாயும் வயல்மலிதரக்
கடைநவின்ற நெடுமாடம் ஓங்கும் கடற் காழியே

தெளிவுரை :  சாக்கியர்களும் சமணர்களும் மொழியும் உரைகளை நீக்கிய ஈசன் உகந்து விளங்கும் தலைவனாய் வீற்றிருக்கும் இடமாவது, மடைகளில் உள்ள நீரில் கெண்டைகள் பாயும் வயல்கள் கொண்டு மாட மாளிகைகள் விளங்கும் காழியாகும்

1233 கருகுமுந்நீர் திரையோதம் ஆரும் கடற்காழியுள்
உரகமாரும் சடையடிகள் தம்பால் உணர்ந்துறுதலால்
பெருகமல்கும் புகழ்பேணும் தொண்டர்க்கு இசையார்தமிழ்
விரகன் சொன்ன இவைபாடி ஆடக்கெடும் வினைகளே

தெளிவுரை :  கடலின் அலை மோத, அதன் ஓதம் கொண்டு மேவும் சீகாழியுள், பாம்பினைச் சடை முடியில் வைத்து விளங்கும் ஈசன்பால் பக்தி பூண்டு, அப்பெருமானின் புகழைப் பரவும் திருத்தொண்டர்களுக்கு இசையில் திகழவும் தமிழில் வல்லவனாகவும் உள்ள ஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓத வேண்டும் அவ்வாறு ஓதி மனம் உருகித் தன்னை மறந்து ஆட, வினை யாவும் நம்மை விட்டு நீங்கும்

திருச்சிற்றம்பலம்

250 திருக்கேதாரம் (அருள்மிகு கேதாரநாதர் திருக்கோயில், கேதார்நாத், ரிஷிகேஷ், உத்தராகன்ட்)

திருச்சிற்றம்பலம்

1234 தொண்டர்அஞ்சு களிறும் மடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைக்கட்டி வழிபாடு செய்யும் இடம்என்பரால்
வண்டுபாட மயில்ஆல மான்கன்று துள்ளவ்வரி
கெண்டைபாயச் சுனைநீலமொட்டலரும் கேதாரமே

தெளிவுரை :  திருத்தொண்டர்களின் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, சுரும்பினம் பொருந்தி மேவும் இண்டை மலர்களைக் கட்டி மாலையாக்கி ஈசனை வழிபாடு செய்யப்படும் இடம் என்பது, வண்டுகள் பாட, மயில்கள் ஆட, மான்கள் துள்ளிக்குதிக்க, கெண்டை (மீன்)கள் பாயும் சுனைகளில் நீல மலர்கள் விளங்கும் கேதாரம் ஆகும்

1235 பாதம்விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே
வேதநான்கும் பதினெட்டோடு ஆறும் விரித்தார்க்குஇடம்
தாதுவிண்டம் மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம்பாடம் மடமந்தி கேட்டுகளும் கேதாரமே

தெளிவுரை :  ஈசன் திருவடியைத் தேவர்கள் பலரும் பரவிப் பணிந்து ஏத்த, நான்கு வேதங்களும், பதினெட்டுப் புராணங்களும், ஆறு அங்கங்களும் விரித்து மிளிரும் இடமாவது, மகரந்தத் தாதுக்களிலிருந்து மது உண்ட வண்டினம் கீதங்களை இசைக்க, மந்திகள் கேட்டு மகிழும் கேதாரம் ஆகும்

1236 முந்திவந்து புரோதாய மூழ்கிம் முனிகள்பலர்
எந்தைபெம்மான் எனநின்று இறைஞ்சும் இடம்என்பால்
மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்
கெந்நாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே

தெளிவுரை :  உஷத் காலத்தில் முந்திச் சென்று முனிவர்கள் பலர் நீராடி எந்தை பெருமானே ! என ஈசனை ஏத்தி வணங்குகின்ற இடமாவது, மரங்களில் உள்ள மந்திகள் பாய்ந்து செல்ல பூக்கள் சரேலென உதிர்ந்து மாரிபோல் சொரிய நறுமணம் கமழும் சடையுடைய எந்தையாரின் கேதாரமே ஆகும்

1237 உள்ளமிக்கார் குதிரையும் முகத்தார் ஒருகாலர்கள்
எள்கலில்லா இமையோர்கள் சேரும் இடம்என்பரால்
பிள்ளைதுள்ளிக் கிள்ளைபயில்வகேட்டுப் பிரியாது போய்க்
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யும் கேதாரமே

தெளிவுரை :  ஒன்றிய சிந்தைராய் உள்ளவர்களும், குதிரை முகம் கொண்டு விளங்கும் கின்னரர்களும், ஒற்றைக் காலில் நின்று தவம் செய்பவர்களும், பழியற்றுச் சிறப்புடன் மேவும் தேவர்களும் ஈசனைப் பரவுதல் செய்வதற்குச் சேரும் இடமாவது, கிளிகள் நற்கதிர்களைக் கொண்டு வந்து தம் பிள்ளைகளுக்கு வாயில் ஊட்டும் கேதாரம் ஆகும்

1238 ஊழியூழி உணர்வார்கள் வேதத்தின்ஒண் பொருள்களால்
வாழியெந்தை யெனவந்து இறைஞ்சும் இடம்என்பரால்
மேழிதாங்கி உழுவார்கள் போலல்விரை தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே

தெளிவுரை : ஊழிக் காலத்தை உணர வல்லவர்களாகிய ஞானிகள், வேதத்தின் உயர்ந்த பொருளாக விளங்கும் ஈசனை, வாழி எந்தை ! என வந்து வணங்குகின்ற இடம் என்று சொல்லப்படுவது, கலப்பை கொண்டு உழுதலைப் போன்று, பன்றிகள் புழுதியைக் கிளர, மணிகள் ஒளி திகழ மண்ணில் விளங்கும் கேதாரம் ஆகும்

1239 நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரைதன்மேல்
தேறுசிந்தை யுடையார்கள் சேரும் இடம்என்பரால்
ஏறிமாவின் கனியும் பலாவின் னிருஞ்சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையோடு உண்டுகளும் கேதாரமே

தெளிவுரை :  நன்னீரில் மூழ்கித் திருவெண்ணீறு அணிந்த அடியவர்கள், தெளிந்த சிந்தையுடன் நீண்ட மலையின் மீது சென்று ஈசனைப் பரவுவதற்காகச் சேரும் இடமானது, மந்திகள் தம் இனத்துடன் சேர்ந்து மரத்தில் ஏறி மாங்கனிகளையும், பலாவைக் கீறி அதன் சுளைகளையும் உண்டு மகிழும் கேதாரம்
ஆகும்

1240 மடந்தைபாகத்து அடக்கிம் மறையோதி வானோர்தொழத்
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கு இடம்என்பரால்
உடைந்தகாற்றுக்கு உயர்வேங்கை பூத்துதிரக்கல் லறைகண்மேல்
கிடந்தவேங்கை சினமாமுகம் செய்யும் கேதாரமே

தெளிவுரை :  உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, தேவர்கள் வேதங்களால் ஓதித் தொழ, நம்மீது தொடர்ந்து பற்றி வரும் சஞ்சித, பிராரத்த வினைகளைத் தீர்க்க மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் இடமானது, வேங்கை மரத்தலிருந்து மலர்கள் பெருங்காற்றால் உதிர்ந்து பரவ, அவற்றை கண்ட புலியானது பிறிதொரு வேங்கையோ ! எனச் சினந்து எழுகின்ற கேதாரம் ஆகும்

1241 அரவமுந்நீர் அணிஇலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவ ஊன்றி விரலால்அடர்த் தார்க்குஇடம் என்பரால்
குரவம் கோங்கம் குளிர்பிண்டி ஞாழல் சுரபுன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யும் கேதாரமே

தெளிவுரை :  கடல் சூழ்ந்த இலங்கையின் தலைவனாகிய இராவணனை, கயிலை மலையினால் நெரியுமாறு தமது திருவிரலால் அடர்த்த சிவபெருமானுக்கு உரிய இடம் எனச் சொல்லப்படுவது, குரவம், கோங்கு, அசோகம், குங்கும மரம், சுரபுன்னை ஆகிய மரங்களில் திகழும் பூக்களில் முறையாக வண்டுகள் ரீங்காரம் செய்யும் கேதாரம் ஆகும்

1242 ஆழ்ந்துகாணார் உயர்ந்துஎய்த கில்லார் அலமந்தவர்
தாழ்ந்து தந்தம் முடிசாய நின்றார்க்கு இடம்என்பரால்
வீழ்ந்து செற்றும் நிழற்குஇறங்கும்வேழத்தின் வெண்மருப்பினைக்
கீழ்ந்துசிங்கம் குருகுஉண்ண முத்துஉதிரும் கேதாரமே

தெளிவுரை :  பூமியைக் குடைந்து திருவடியைக் காணாதவராகிய திருமாலும், உயர்ந்து அன்னப் பறவையாய்ப் பறந்தும் திருமுடியைக் காணாதவராகிய  பிரமனும் சோர்வடைந்து தாழ்ந்து தமது முடிகளைச் சாய்த்து வணங்கி நிற்க, ஓங்கிய சிவபெருமானுக்குரிய இடம் எனப்படுவது, யானையின்மேல் விழுந்து அடர்த்து, அதன் தந்தங்களைப் பிளந்து, சிங்கம், திகழச் சிதறிய முத்துக்கள் விரவ விளங்கும் கேதாரம் ஆகும்

1243 கடுக்கள்தின்று கழிமீன் கவர்வார்கள் மாசுடம்பினர்
இடுக்கண்உய்ப்பார் அவர்எய்த வொண்ணா இடம்என்பரால்
அடுக்கநின்றவ் அறவுரைகள் கேட்டாங்கு அவர்வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே

தெளிவுரை : புலால் உண்ணும் மாசுடையவர்கள் மற்றும் துன்பம் செய்பவர்கள் எய்துவதற்கு இயலாத இடம் எனப்படுவது பக்கம் சார்ந்து நின்று, அறவுரைகளை நவிலுமாறு வேண்டிய சனகாதி முனிவர்களுக்கு அறமுரைத்து, வினை நீக்கிய சிவபெருமான் உறைகின்ற கேதாரம் ஆகும்

1244 வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்
ஏய்ந்தநீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்இசை வல்லவர்
வேந்தராகி உலகாண்டு வீடுகதி பெறுவரே

தெளிவுரை : செந்நெல் பெருகும் வயல்வளம் திகழும் சீகாழி நகருடைய ஞானசம்பந்தர், சிறப்புடன் இனிமை தோன்றி விளங்கும் தேவர்கள் வழிபாடு செய்கின்ற கேதாரத்தை ஆய்ந்து சொன்ன அரிய இத் திருப்பாடல்களை, இசையுடன் ஓத வல்லவர்கள், இம்மையில் வேந்தர்கள் என ஆட்சிமை கொண்டு, மறுமையில் வீடுபேறு அடைவார்கள்

திருச்சிற்றம்பலம்

251 திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1245 வெங்கள்விம்மு குழலிளையர் ஆடவ்வெறி விரவுநீர்ப்
பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்
திங்கள்சூடித் திரிபுரம் ஒருஅம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடிபரவ நாளும்இடம் கழியுமே

தெளிவுரை : தேன் கமழும் மலர்களைச் சூடிய மகளிர் நாட்டியம் புரியவும், நறுமணம் கமழும் மலர்களைக் கொண்ட நீரில் கயல்கள் விளங்கி வயல்களை பளப்படுத்தவும் திகழும் புகலூரில், சந்திரனைச் சடையில் தரித்து முப்புரங்களை ஒரே அம்பினால் எரியுமாறு செய்த எங்கள் பெருமானாகிய ஈசன் வீற்றிருக்கின்றார் அப் பெருமானின் திருவடியை நாள்தோறும் பரவிப் போற்ற இடரானது விலகிச் செல்லும்

1246 வாழ்த்தநாளும் இனிவாழு நாளும்இவை அறிதிரேல்
வீழ்த்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிர்காள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன் புகலூரையே
சூழ்த்த உள்ளம் உடையீர்கள் உங்கள்துயர் தீருமே

தெளிவுரை : இதுவரையில் வாழ்ந்த நாளும், இனி வாழ்கின்ற நாளும் யாது என அறிய விரும்புவீராயின், இறைவனை ஏத்தி வணங்காத நாளே வீழ்த்தி வீணாகக் கழிந்த நாள் ஆகும் பிறைச் சந்திரனைப் புரிசடையில் தரித்த ஈசன் விளங்கும் புகலூரை உள்ளமானது சூழ்ந்து பற்றித் தியானம் செய்வீர்களாக உங்கள் துயர் யாவும் தீர்ந்துவிடும்

1247 மடையினெய்தல் கருங்குவளை செய்யம் மலர்த்தாமரை
புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும் புகலூர்தனும்
தொடைகொள்கொன்றை புனைந்தானொர் பாகம் மதிசூடியை
அடையவல்லவர் அமருலகம் ஆளப் பெறுவார்களே

தெளிவுரை : வயல்களுக்குப் பாயும் வாய்க்கால் மடைகளில் நெய்தலும், கருங்குவளையும், செம்மையான தாமரை மலர்களும் சூழ விளங்கச் செந்நெல் விளைகின்ற கழனிகள் மல்கிப் பெருகும் புகலூரில், கொன்றை மலர் மாலை புனைந்த சிவபெருமான், பிறைசூடி விளங்கி வீற்றிருக்கின்றார், அப்பெருமானைச் சார்ந்து வணங்குபவர்கள் தேவலோகத்தினை ஆள்வார்கள்

1248 பூவுந்நீரும் பலியும் சுமந்து புகலூரையே
நாவினாலே நவின்றேத்தல் ஓவார்செவித் துளைகளால்
யாவுங் கேளார் அவன்பெருமை யல்லால் அடியார்கள்தாம்
ஓவும்நாளும் உணர்வொழிந்த நாளென்றுளங் கொள்ளாவே

தெளிவுரை : ஈசனைப் பூசித்துப் போற்றும் தன்மையில், பூவும் நீரும் நைவேத்தியம் செய்வதற்கு உரிய பொருள்களும் கொண்டு புகலூர் என்னும் பதியை நாவினால் நன்று நவின்று ஏத்தி வணங்குபவர்கள், அப்பெருமானுடைய அருட் புகழையன்றி வேறு சொற்களைச் செவியிலும் கொள்ளார்கள் அத்தகையோருக்கு, அவர்கள் நீங்கும் நாள் அப்பெருமானுடைய உணர்வு இல்லாத நாள் என்று கொள்ளப்படும்

1249 அன்னங்கன்னிப் பெடைபுல்கி ஒல்கிஅணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும் புகலூர்தனுள்
முன்னம்மூன்று மதில்எரித்த மூர்த்திதிறம் கருதுங்கால்
இன்னர்என்னப் பெரிதுஅரியர் ஏத்தச் சிறிதெளியரே

தெளிவுரை : அன்னப் பறவை மகளிர் நடை பயில, அழகிய காஞ்சி மலர் விளங்கி மேவும் புகலூரில் வீற்றிருக்கும் முப்புரம் எரித்த ஈசனின் தன்மையினைக் கருதி உரைக்கும் நிலையில், அப் பெருமானை இத் தன்மையுடையவர் என்று சொல்வதற்குப் பெரியதும் ஆகும்; அரியதும் ஆகும் ஆயினும், அப் பெருமான் ஏத்தி வணங்குவதற்கு எளிமையாக விளங்குபவர்

1250 குலவராகக் குலமிலரும் ஆகக்குணம் புகழுங்கால்
உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மலர் ஊறுதேன்
புலவம்எல்லாம் வெறிகமழும் அந்தண் புகலூர்தனுள்
நிலவமல்கு சடையடிகள் பாதம் நினைவார்களே

தெளிவுரை : எத்தகைய குலத்தில் பிறந்தவர்களாயினும், உலகில் நல்லகதியைப் பெற்றுள்ளனர் எனில், தேன் மணம் கமழும் அழகிய குளிர்ச்சி மிக்க புகலூரில், பிறைச் சந்திரனைச் சூடிய சடை முடியுடைய ஈசன் திருப்பாதத்தை நினைத்தவர்கள் ஆவர்

1251 ஆணும்பெண்ணும் எனநிற்ப ரேனும்அரவு ஆரமாப்
பூணுமேனும் புகலூர்தனக்கு ஓர்பொருள் ஆயினான்
ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேலும் பிரான்என்ப ரால்எம்பெரு மானையே

தெளிவுரை : ஈசன், ஆணும் பெண்ணும் என அர்த்த நாரியாய் விளங்குபவர்; அரவத்தை ஆரமாகப் பூண்டு புகலூரில் ஒப்பற்ற பொருளாய் விளங்குபவர்; ஊரார் இடுகின்ற பிச்சையினை உணவாகக் கொள்பவர்; கோவணத்தை உடையாகப் பெற்றவர் அவரே எமது பிரான் என்று, யாவராலும் போற்றி வணங்கப் பெறுபவர்

1252 உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேஉயர் இலங்கைக்கோன்
கைகள்ஒல்கக் கருவரை யெடுத்தானை ஓர்விரலினால்
செய்கைதோன்றச் சிதைத்தருள வல்வசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே

தெளிவுரை : நெஞ்சமே ! நீ உய்தி பெற வேண்டுமானால், இராவணன் தனது கைகள் தளர்ச்சி கொள்ளுமாறு கயிலை மலையை எடுத்தஞான்று, ஒரு விரலால் அவனைச் சிதைத்து, அருள் புரிதலில் வல்லமை உடைய சிவபெருமான் மேவிய புகலூரைப் புகழ்ந்து போற்றுக அது உனக்கு உரிய பொருளாகிக் கைகூடும்

1253நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப் போய்ஆர் அழல் ஆயினான்
சாமிதாதை சரணாகும் என்றுதலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வ மல்கும் புகலூரையே

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேடிக் காணாதவாறு பேர் அழல் ஆகிய ஈசனை, இறைவனே ! தந்தையே ! சரணம் ! என ஏத்தி வணங்குமின் பூவுலகம் எல்லாம் புகழும செல்வச் செழிப்புடைய புகலூரைப் போற்றுமின்

1254 வேர்த்தமெய்யர் உருவத்துஉடைவிட்டு உழல்வார்களும்
போர்த்தகூறைப் போதிநீழ லாரும்புக லூர்தனுள்
தீர்த்தமெல்லாம் சடைக்கரந்த தேவன்திறம் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென்று உணராது பாதம் தொழுது உய்ம்மினே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் புகலூரில் வீற்றிருக்கும் கங்கை தரித்து விளங்கும் ஈசன் திருவருட் பெருமையைக் கருதி ஆராய்ந்து பாராதும், அதனை மெய்யென்று உணராதும் புறத்தில் இருக்க, நெஞ்சமே, அப் பெருமானின் திருவடியைத் தொழுது, நீ உய்தி பெறுவாயாக

1255 புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பல் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை
அந்தம்இல்லா அனலாட லானைஅணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே

தெளிவுரை : நற்சித்தம் கொண்ட பெரியோர்கள் ஏத்தி வழிபடும் புகலூரில் திருநீறு அணிந்த திருமேனியராகி, இடப வாகனம் கொண்டு விளங்கி, முடிவற்ற கனலை ஏந்தி ஆடும் ஈசனை, அணி திகழ் ஞானசம்பந்தர் போற்றிச் சொன்ன இத் தமிழ் மாலையைப் பாடிப் பக்தியால் கசிந்து உருகும் அன்பர்களுக்குப் பாவம் அனைத்தும் கெடும்

திருச்சிற்றம்பலம்

252 திருநாகைக்காரோணம் (அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்)

திருச்சிற்றம்பலம்

1256 கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றநெடு வெண்ணிலா
ஏனல்பூத்தம் மராங்கோதை யோடும் விராவுஞ்சடை
வானநாடன் அமரர்பெரு மாற்குஇடம் ஆவது
கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சூடி விளங்கும் சடை உடைய ஈசன் விளங்கும் இடமாவது, கடற் சோலைகள் வேலியாகவும் உப்பங்கழிகள் சூழ்ந்தும் உள்ள கடலின் கரையில் விளங்கும் நாகையில் உள்ள காரோணம் ஆகும்

1257 விலங்கலென்று சிலையாமதில் மூன்றுடன் வீட்டினான்
இலங்குகண்டத்து எழிலாமை பூண்டாற்கு இடமாவது
மலங்கியோங்கி வருவெண்திரை மல்கிய மால்கடல்
கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு மூன்று மதில்களை வீழ்த்தி எரித்த சிவபெருமான், எழில் ஆமையை அணிகலனாகப் பூண்டு வீற்றிருக்கும் இடமாவது, அலைகள் பெருகி வர, ஓதமும் உப்பங்கழிகளும் பெருகும் நாகையில் மேவும் காரோணம் ஆகும்

1258 வெறிகொளாரும் கடற்கைதை நெய்தல் விரிபூம்பொழில்
முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லை முகைவெண்மலர்
நறைகொள்கொன்றை நயந்தோங்கு நாதற்கிட மாவது
கறைகொள்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : நன்கு மணம் பரப்பும் தாழை மற்றும் நெய்தல் சிறப்புடைய பொழில்களும், கொன்றை புன்னை, முல்லை மலர்கள் விளங்க, கொன்றை மலர் விரும்பி ஓங்கும் ஈசனுக்கு இடமாவது, கடல் சூழ்ந்து உப்பங்கழிகள் உடைய நாகையில் விளங்கும் காரோணம் என்னும் கோயில் ஆகும்

1259 வண்டுபாட வளர்கொன்றை மாலைமதியோடுடன்
கொண்டகோலம் குளிர்கங்கை தங்கும்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் எனவைத்து கந்தவொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : வளம் மிக்க கொன்றை மாலையும் பிறைச் சந்திரனும் சூடிக் குளிர்ச்சி மிக்க கங்கை தங்கும் சடை முடியுடைய ஈசன் விளங்குகின்ற இடமாவது, நீர் முள்ளிச் செடிகளும் கழிகளும் சூழ்ந்து, கடல் விளங்கும் நாகையில் உள்ள காரோணம் ஆகும்

1260வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந்து ஏத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடு வெண்திங்கள் நிகழ்வெய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க்கு இடமாவது
கார்கொள்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : மகளிர் மகிழ்ந்து ஏத்தி வணங்க, நீண்ட சடையில் திங்கள் தரித்துச் சூலப் படையினைக் கரத்தில் கொண்டு விளங்கும் ஈசனுக்கு உரிய இடமானது, கடல் நாகையில் மேவும் காரோணம் ஆகும்

1261 விடையதேறிவ் விடவரவு அசைத்த விகிர்தரவர்
படைகொள் பூதம் பலபாட ஆடும்பரமர் அவர்
உடைகொள் வேங்கை யுரிதோல் உடையார்கிடமாவது
கடைகொள் செல்வம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : இடப வாகனத்தில் ஏறி, விடம் கொண்ட அரவத்தைச் கட்டிய விகிர்தராகிய ஈசன், பூத கணங்கள் பாட ஆடுகின்ற பரமன் ஆவார் அவர் புலியின் தோலை உரித்து உடையாகக் கொண்டு விளங்குபவர் அப் பெருமானுக்கு உரிய இடமாக விளங்குவது, செல்வச் செழிப்பு மிக்க கடல் நாகையில் உள்ள காரோணம் ஆகும்

1262 பொதுவாழ்வார் மனம்பாழ் படுக்கும் மலர்ப்பூசனை
செய்து வாழ்வார் சிவன்சேவடிக்கே செலும்சிந்தையார்
எய்த வாழ்வார் எழில்நக்கர் எம்மாற்கு இடமாவது
கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : பொய்யான தன்மையில்  அழியக் கூடிய கெடுதல் வாழ்க்கையைப் பாழாக்கி நன்னெறிப்படுத்தும் தன்மையில் மலர்கொண்டு பூசித்துப் போற்றிச் சிவபெருமான் திருவடிக்கே செலுத்தும் சிந்தையுடையவர்கள், தம்மை அடையுமாறு விளங்கும் கோவணத்தராகிய ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, கடல் சூழ்ந்த நாகையில் உள்ள காரோணம் ஆகும்

1263 பத்திரட்டி திரள்தோர் உடையான் முடிபத்திற
அத்திரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடமாவது
மைத்திரட்டிவ் வருவெண் திரைமல்கிய மால்கடல்
கத்திரட்டும் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே

தெளிவுரை : இருபது திரண்ட தோள் உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் நலியுமாறு செந்நிற வண்ணமிகும் திருப்பாதவிரலால் அடர்த்த ஈசனுக்கு இடமாக இருப்பது, வெண்மையான கடல் அலைகள் கொண்டு வரும் நாகையில் மேவும் காரோணம் ஆகும்

1264 நல்லபோதில் உறைவானு(ம்) மாலும் நடுக்கத்தினால்
அல்லராவர் எனநின்ற பெம்மாற்க் கிடமாவது
மல்லல்ஓங்கிவ் வருவெண் திரைமல்கிய மால்கடல்
கல்லல் ஓதம் கழிசூழ்கடல் நாகைக் காரோணமே

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடிக் காணப் பெறாதவராக விளங்கிய பெருமானாகிய ஈசனுக்கு உரிய இடமாவது, வளத்தைக் கொண்டு வரும் திரைகள் மல்கிய கடல் சூழ்ந்த நாகையில் மேவும் காரோணம் ஆகும்

1265 உயர்ந்த போதின் னுருவத்து உடைவிட்டு உழல்வார்களும்
பெயர்ந்த மண்டை யிடுபிண்ட மாவுண்டு உழல்வார்களும்
நயந்துகாணா வகைநின்ற நாதர்க்கு இடமாவது
கபங்கொள் ஓதம் கழிசூழ் கடல் நாகைக் காரோணமே

தெளிவுரை : சமணரும், சாக்கியரும் விரும்பிக் காணாதவாறு பிச்சை ஈட்டி உறைகின்ற ஈசனுக்கு உரிய இடமாவது, வளம் மிக்க ஓதம் விளங்கும் கடல் நாகையில் மேவும் காரோணம் எனப்படுவது ஆகும்

1266 மல்குதண்பூம் புனல்வாய்ந்து ஓழுகும்வயற் காழியான்
நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்த னல்லார் கண்முன்
வல்லவாறே புனைந்தேத்தும் காரோணத்து வண்டமிழ்
சொல்லுவார்க்கும் இடை கேட்பவர்க்கும் துயரில்லையே

தெளிவுரை : நல்ல நீர் நிலை வாய்ந்து ஓழுகும் வயல்கள் திகழும் காழிப் பதியில் விளங்கும், நல்ல வேதங்கள் முதலான கேள்வி ஞானம் மிக்க ஞானசம்பந்தர் நல்லோர்கள் முன்னால் காரோணத்தில் மேவும் பெருமானைப் போற்றிப் பாடிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்களுக்கும் அதனைச் செவிமடுத்துக் கேட்பவர்களுக்கும் வாழ்க்கையில் துயர் இல்லை

திருச்சிற்றம்பலம்

253 இரும்பைமாகாளம் (அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை, விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1267 மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரமூன்றெரித்த குழகன்னிடம்
எண்திசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் கலாய்நின்ற மகாளமே

தெளிவுரை : கங்கையைச் சடை முடியில் ஏற்று, சந்திரனைச் சூடி மானைக் கரத்தில் ஏந்தி, முப்புரத்தை எரித்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, எட்டுத் திசைகளும் புகழ் பரவும் இரும்பை என்னும் பதியில், வண்டு கீதம் பாடும் பொழில் சூழ்ந்த மாகாளம் ஆகும்

1268 வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தா நீறெழக் கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க் கும்இடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே

தெளிவுரை : வேதத்தின் வித்திகி, திருவெண்ணீற்றைத் திருமேனியில் குழையப் பூசி, வணங்கிப் போற்றும் அடியவர்களின் வினை யாவையும் நீங்குமாறு புரிந்து, முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, குற்றங்களை எல்லாம் தீர்க்கும் சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் என்பது, இரும்பை என்னும் பதியுள், முனிவர்களும் அந்தணர்களும் தொழுது நிற்கும் மாகாளம் ஆகும்

1269 வெந்தநீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மான் இடம்எழில் கொள்சோலை இரும்பைதனுள்
கந்தமாய பலவின்கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண்டு உகள்கின்ற மாகாளமே

தெளிவுரை : திருவெண்ணீறு தரித்து, எலும்பினை அணிந்து, இடப வாகனம் கொண்டு விளங்கும் எந்தை பெருமானாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, எழில் மிக்க சோலை சூழந்த இரும்பை என்னும் பதியுள் பலாவின் கனிகளையுடைய பொழிலில் மந்திகள் உண்டு உகளும் மாகாளம் ஆகும்

1270 நஞ்சுண்டகத்து அடக்கிந் நடுங்கும் மலையாமன்மகள்
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்இடம்
எஞ்சல்இல்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே

தெளிவுரை : நஞ்சினை கண்டத்தில் அடக்கி, உமா தேவியும் அஞ்சுமாறு, பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்து ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, புகழ் மிகுந்து மேவும் இரும்பையுள் மேகத்தைத் தொடும் நெடிய பொழில் சூழ்ந்த அழகிய மாகாளம் ஆகும்

1271 பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள்
கூசஆனை உரித்தபெரு மான்குறை வெண்மதி
ஈசன்எங்கள் இறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கள் மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே

தெளிவுரை : குற்றங்களை இல்லாமையாக்கும் திருவெண்ணீற்றைத் திருமேனியில் குழைத்துப் பூசிய இடப வாகனத்தையுடைய ஈசன், மலைமகளாகிய உமாதேவி கண்டு கூசுமாறு யானையின் தோலை உரித்தவன் அப்பெருமான், வெண்மையான பிறைச் சந்திரனைத் தரித்து விளங்கும் எங்கள் இறைவன் அவன் இடமாவது, இரும்பையுள் மாசில்லாத உத்தமர்கள் மலர்கொண்டு பூசித்து வழிபடும் மாகாளம் ஆகும்

1272 குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
இறைவன்எங்கள் பெருமாள் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே

தெளிவுரை : குளிர்ச்சியான பிறைச் சந்திரனைச் சூடி ஆடல் புரியும் ஈசன், அடியவர்கள்பால் பற்றியுள்ள வினையை நீக்குபவன்; பரமன்; இறைவன்; பரந்த சடையுடைய எங்கள் பெருமான் அவன் வீற்றிருக்கும் இடம், வேதம் வல்ல அந்தணர்கள் வணங்கித் தொழுகின்ற இரும்பையுள் மேவும் மாகாளம் ஆகும்

1273 பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமான் பெருமான் என நின்றவர் தாழ்விடம்
எங்குமிச்சை அமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல் தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே

தெளிவுரை : சீற்றம் மிகுந்த சிவந்த கண்ணுடைய அரவமும், குளிர்ச்சியான சந்திரனும் சடை முடியில் ஒருசேர விளங்குமாறு வைத்த சிவபெருமான் விழைவுடன் வீற்றிருக்கும் இடமாவது, மேகம் தோயும் நெடிய பொழில் சூழ்ந்த அழகிய இரும்பையுள் திகழும் மாகாளம் ஆகும்

1274 நட்டத்தோடு நரியாடு கானத்துஎரி யாடுவான்
அட்டமூர்த்தி அழல்போல் உருவன் அழகாகவே
இட்டமாக இருக்கும் இடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கு மாகாளமே

தெளிவுரை : நரிகள் உலவும் மயானத்தில் நெருப்பைக் கரத்தில் ஏந்தி நடனம் புரியும் அட்டமூர்த்தியாகிய ஈசன், அழல் போன்ற செந்நிறத்தினை உடைய ஒப்பற்றவன் அப் பெருமான் விருப்பத்துடன் அழகாக வீற்றிருக்கும் இடம் இரும்பையுள் வலம் வந்து பணியும் அன்பர்களுடைய பிணிகளைத் தீர்க்கும் மாகாளம் ஆகும்

1275 அட்டகாலன் றனைவவ் வினான்அவ் அரக்கன்முடி
எட்டுமற்றும் இருபத்திரண் டும்இற ஊன்றினான்
இட்டமாக இருப்பான் அவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந்து எழிலாறு மாகாளமே

தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்வதற்குப் போராடிய காலனை உதைத்து வீழ்த்திய ஈசன், இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது முடிகளும் நலியும்படி ஊன்றிய பரமன் அப் பெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடம், தேன் துளிர்க்கும் பொழில் சூழ்ந்த இரும்பையுள் எழில் மிகுந்து மேவும்  மாகாளம் ஆகும்

1276 அரவம்ஆர்த்தன்று அனல்அங்கை யேந்தி அடியும்முடி
பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே

தெளிவுரை : அரவத்தை அரையில் கட்டி, நெருப்பினை அழகிய கையில் ஏந்திய ஈசன், திருமாலும் பிரமனும் அடியும் முடியும் காண முடியாதவாறு ஓங்கிய பெரியோன் அப் பெருமான் வீற்றிருக்கும் இடம், குராமரம் விளங்கும் பொழிலின்கண் குயில்கள் சேரும் இரும்பையுள் மேவி, வானோரும் மறைவல்லோரும் தொழுகின்ற மாகாளம் ஆகும்

1277 எந்தையெம்மான் இடம்எழில் கொள்சோலை இரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ்ந்து அழகாரு மாகாளத்தில்
அந்தம்இல்லா அனலாடு வானையணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே

தெளிவுரை : எந்தையாகிய ஈசன், எழில் மிக்க சோலை சூழ்ந்த இரும்பையுள், தென்றல் விளங்கும் பொழில் சூழ்ந்த அழகிய மாகாளத்தில் முடிவில்லாத அனல் ஏந்தி ஆடும பரமன் அப் பெருமானை ஏத்தி, ஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகமாகிய தமிழ் மாலையைப் பாட வல்லவர்களின் பழியானது, விலகிப் போகும்

திருச்சிற்றம்பலம்

254 திலதைப்பதி (அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலப்பதி,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1278 பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகள்ஆரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகள்ஓங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள் சோலைம் மலர்மணம் கமழும் மதிமுத்தமே

தெளிவுரை : திருநீறு விரவப் பூசிய தொண்டர்கள் விடியற் காலை, ஆரத் தொழுது ஏத்த விளங்குகின்ற அழகனாகிய ஈசன், வீற்றிருக்கும் இடமாவது, கொடிகள் உயர்ந்து, விளங்கவும் விழாக்கள் பொலியும் திலதைப் பதியில், அழகிய சோலைகளில் மணங் கமழும் மலர்கள் திகழ மேவும் மதிமுத்தம் ஆகும்

1279 தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனல்அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகொண்டுற்று இசைபயிலும் சோலைம் மதிமுத்தமே

தெளிவுரை : திருத்தொண்டர்கள் நெகிழ்ந்து நின்று தூப தீங்களுடன் சந்தனம் மற்றும் நறுமணம் கமழும் மலர்மாலையும் கொண்டு ஏத்த, அவ்வன்பர்களுக்கு அருள் செய்யும் தன்மையில், குறிப்பினை அறிந்து விளக்கும் அன்பினனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம், தெளிந்த நீர் விளங்கும் அரிசில் ஆறு சூழ்ந்த திலதைப்பதியில் வண்டானது மலர்களில் இசை பயிலும் சோலை மேவும் மதிமுத்தம் ஆகும்

1280 அடலுளேறுய்த் துகந்தான் அடியார் அமரர்தொழக்
கடலுள்நஞ்சம் அமுதாக உண்ட கடவுள்ளிடம்
திடலடங்கச் செழுங்கனி சூழ்ந்த திலதைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும் மதிமுத்தமே

தெளிவுரை : வீரம் மிக்க இடபவாகனத்தை உகந்த ஈசன், அடியவர்களும், தேவர்களும் தொழுது ஏத்தக் கடல் பெருக்கிய நஞ்சினை அமுதம் என அருந்திய கடவுள் அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வெறுமையாகப் பயிரிடப் பெறாத கரம்பாக உள்ளதென இல்லாது, செழுமையான கழனிகள் சூழப்பெற்ற திலதைப்பதியின்கண் வாழைக் கனியிலிருந்து தேன் சிந்தும் தோட்டப் பொலிவுடைய மதிமுத்தம் எனப்படும் கோயிலாகும்

1281 கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
வெங்கணாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்னிடம்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப் பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்தழகார் மதிமுத்தமே

தெளிவுரை : கங்கை, சந்திரன், வன்னி, எருக்கும் பூ ஆகியவற்றொடு வில்வமும் அரவமும் சடைமுடியில் வைத்துளள விகிர்தனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம், வைத்துள்ள விகிர்தனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம், கயல்கள் பாயும் நீர் பெருகும் அரிசில் ஆறு சூழ்ந்த திலதைப் பதியின்கண், மேகம் தோயும் பொழில் சூழ்ந்த பதியின்கண், மேகம் தோயும் பொழில் சூழ்ந்த அழகு மிளிரும் மதிமுத்தமும் எனப்படும் திருக்கோயில் ஆகும்

1282 புரவியேழும் மணிபூண்டு இயங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைகர புன்னைகள்
மரவமவ்வல் மலரும் திலதைம் மதிமுத்தமே

தெளிவுரை : மணிகள் பூண்ட ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரினையுடைய சூரியன் பரவி நின்று வழிபாடு செய்யும் பரம்பொருளாகிய ஈசன் வீற்றிருக்கும் தலம் என்பது குங்குமம், கோங்கு வேங்கை, சுரபுன்னை, புலிநகக் கொன்றை, கடம்பு முதலான மரங்கள் விரவி மலரும் திலதைப்பதியில் மேவும் மதிமுத்த ஆகும்

1283 விண்ணர்வேதம் வரித்தோத வல்லார் ஒருபாகமும்
பெண்ணார்எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார்வந்து அருள்பேண நின்றம் மதிமுத்தமே

தெளிவுரை : விண்ணென உயர்ந்த ஈசன், வேத்தினை விரித்து ஓத வல்லவர்; ஒரு பாகத்தில் உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; பக்தி நிறைந்து எண்ணிப் போற்றாத அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, தூய நிலவின் ஒளியைத் தீண்டும் நெடிது ஓங்கிய சோலைகளைக் கொண்ட திலதைப்பதியின்கண், மண்ணுலகத்தவர் வந்து அருள் வேண்டி நின்று போற்றும் அழகிய மதிமுத்தம் ஆகும்

1284 ஆறுசூடி அடையார்புரம் செற்றவர் பொற்கொடி
கூறுசேரும் உருவர்க்கு இடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில் சூழ்ந்தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனல்அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே

தெளிவுரை : கங்கையைச் சடையில் தரித்து, பகைவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு புரிந்து, உமாதேவியாரை ஒரு கூறுடைய அர்த்தநாரியாக மேவும் ஈசனுக்கு இடம் ஆவது யாது எனக் கூறும்போது, தேன் விளங்கும் பொழில் சூழ்ந்த அழகிய திலதைப்பதியின்கண், நீர் வளத்தை வரையாது வழங்கும் அரிசில் ஆறு சூழ்ந்த, மதிமுத்தம் என்னும் திருக்கோயில் ஆகும்

1285 கடுத்துவந்த கனல்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோர் அடர்த்தார்க்கு இடமாவது
புடைக்கொள் பூகத்து இளம்பாளை புல்கும் மதுப்பாயவாய்
மடுத்துமந்தி யுகளும் திலதைம் மதிமுத்தமே

தெளிவுரை : கனன்று வந்த கயிலையை எடுத்த இராவணனுடைய முடியும் தோளும் நலியுமாறு அடர்த்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, பக்கங்களில் சூழ்ந்துள்ள பாக்கு மரங்களின் இளம் பாளையிலிருந்து கள்நீர் பாய, மந்திகள் அருந்தித் துள்ளிக் குதிக்கும் திலதைப்பதியில் மேவும் மதிமுத்தம் என்னும் திருக்கோயில் ஆகும்

1286 படங்கொள்நாகத் தணையானும் பைந்தா மரையின்மிசை
இடங்கொள்நால்வே தனும்ஏத்த நின்ற இறைவன்னிடம்
திடங்கொள்நாவின் இசைதொண்டர் பாடும் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே

தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஏத்த நின்ற இறைவன் வீற்றிருக்கும் இடமாவது, உறுதி பயக்கும் ஈசன் புகழ்ப் பாடங்களை, நாவினால் நனி இசைத்துப் பாடுகின்ற அடியவர்கள் பாடிப் போற்றும் திலதைப்பதியில், சிங்கம் வழிபாடு செய்யும் மதிமுத்தம் ஆகும்

1287 புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
பித்தம் சொன்னம் மொழிகேட்கி லாத பெருமானிடம்
பத்தர்சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே

தெளிவுரை : புத்தராகிய தேரரும் சமணரும் சத்தில்லாத மொழிகளைக் கூற, அதனைக் கருத்தெனக் கொள்ளாது மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் இடம், பக்தர்களும், சித்தர்களும் பணிவுடன் இறைஞ்சும் திலதைப் பதியில் யானை வழிபாடு செய்யும் மதிமுத்தம் என்பதாகும்

1288 மந்தமாரும் பொழில் சூழ்திலதைம் மதிமுத்தமேல்
கந்தமாரும் கடற்காழி யுளான் தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர நின்றேத்த வல்லார்கள் போய்ச்
சிந்தை செய்வார் சிவன்சேவடி சேர்வது திண்ணமே

தெளிவுரை : தென்றல் வீசும் பொழில் சூழ்ந்த திலதைப் பதியில் விளங்கும் மதிமுத்தம் என்னும் திருக்கோயிலின்மீது, காழிப்பதியின் தமிழ் ஞானசம்பந்தர் பரவிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், பழீ தீரப் பெறுவார்கள்; சிவன் கழலை நாடிச் சேர்வார்கள்; இது உறுதி

திருச்சிற்றம்பலம்

255 திருநாகேச்சுரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1289  தழைகொள்சந் தும்அகிலும் மயிற்பீலி யும்சாதியின்
பழமும்உந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை
நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதந் தொழுதேத்த வல்லார்க்கு அழகாகுமே

தெளிவுரை : சந்தனர், அகில், மயிற் பீலி, சாதிக்காய் என நறுமணப் பொருட்களை உந்தித் தள்ளி நீர் பாயும் தொன்மையான விரும்பிச் சென்று தொழுதேத்தச் சிறப்புகளை நல்கும் நாகேச்சரத்துள் வீற்றிருக்கும் அழகராகிய ஈசன் திருவடியைத் தொழுது போற்றுபவர்களுக்கு அழகு வாய்க்கப் பெறும்

1290 பெண்ணொர்பாகம் அடையச் சடையிற் புனல்பேணிய
வண்ணமான பெருமான் மருவும்இட மண்ணுளார்
நண்ணிநாளும் தொழுதேத்தி நன்குஎய்து நாகேச்சுரம்
கண்ணினாற் காணவல்லார் அவர்கள் ணுடையார்களே

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகத்தில் ஏற்றுச் சடை முடியில் கங்கை தரித்து, வண்ணம் பொலிய விளங்கும் ஈசன் மருவும் இடமானது, இவ் உலகத்தவர் நண்ணி நாள்தோறும் தொழுது ஏத்தி நல்லன யாவும் அடையப்பெறும் நாகேச்சுரம் ஆகும் அதனைத் தரிசிப்பவர்கள் கண் பெற்ற பயனை அடைந்தவர் ஆவார்கள்

1291 குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும் மணிகுலவுநீர்
பறவையாலப் பரக்கும் பழங்காவிரத் தென்கரை
நறுவநாறும் பொழில்சூழ்ந்து அழகாய நாகேச்சுரத்து
இறைவர்பாதம் தொழுதேத்த வல்லார்க்கு இடம்இல்லையே

தெளிவுரை : குறவர்களின் கொல்லைப் புனத்தில் உள்ள கதிர்களை வெள்ளத்தால் கவர்ந்து கொண்டு வரும் தன்மையில், நீர்ப் பறவைகள் கத்திக் கொண்டு அவற்றைக் கவர வேண்டும் எனும் வேட்கையுடன் பறக்கும் தொன்மையான காவிரியின் தென்கரையில், தேன் மணக்கும் பொழில் சூழ்ந்து அழகுடன் விளங்கும் நாகேச்சுரத்தின் இறைவன் திருப்பாதத்தைத் தொழுது ஏத்தவல்லவர்களுக்கு எத்தகைய துன்பமும் இல்லை

1292 கூசநோக்காதுமுன் சொன்ன பொய்கொடு வினைகுற்றமும்
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சுரம்
தேசமாக்கும் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்
நேசமாக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே

தெளிவுரை : நாணத்தால் சிறுமைக்கும் அஞ்சியும், பின் விளைவினை ஆராயாமலும் சொன்ன பொய்மை கொண்டும், வினையின் குற்றமும் கெடுமாறு வந்து வணங்குகின்ற நாகேச்சுரத்தினில் ஒளிமயமாக்கி அருள் புரியும் கருணையால் திருக்கோயில் கொண்ட செல்வனாகிய ஈசன் கழலைப் பணிந்து, அன்புடன் ஏத்து பாங்குடையவர்கள், அறத்தின்வழி நிற்பவர்கள் ஆவார்கள்; முத்திநெறியில் செல்லும் தன்மையில் இம்மையில் ஒழுகும் உத்தமர்களாய் விளங்குவார்கள்

1293 வம்புநாறும் மலரும்மலைப் பண்டமும் கொண்டுநீர்
பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சுர நண்ணுவார்
உம்பர் வானோர் தொழச் சென்றுடனாவதும் உண்மையே

தெளிவுரை : நல்ல மணம் கமழும் மலரும், மலைப் பகுதியில் விளையும் பண்டங்களும் கொண்டு நீரில் பெருக்கினால் வாரிக் கொழிக்கும் தென்மையான காவிரியின் தென்கரையில் ஈசன் எக்காலத்திலும் வீற்றிருக்கின்ற நாகேச்சுரத்தினை நண்ணி வணங்குபவர்கள், உம்பரும் வானவரும் தொழுது நிற்கத் தாமும் உடனாகி விளங்கி, வணங்குதலும் மகிழ்தலும் கொள்வார்கள்

1294 காளமேகம் நிறக்கால னோடுஅந்தகன் கருடனும்
நீளமாய்நின்று எய்தகாமனும் பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சுர நண்ணுவார்
கோளுநாளும் தீயவேனு(ம்) நான்காம் குறிக்கொள்மினே

தெளிவுரை : கரிய மேகம் போன்ற நிறங் கொண்ட காலனும், அந்தகனும், கருடனும், மன்மதனும் அழிந்து பட்டத்தை நினைவு கொண்டு நோக்குகையில், ஈசன் எக்காலத்திலும் வீற்றிருக்கும் நாகேச்சுரத்தினை அடைபவர்களே ! கோளும், நாளும் மற்றும் தீய வகை உடைய பிறவற்றாலும் நன்மையே உண்டாகும் எனக் கொள்வீராக

1295வேயுதிர்முத் தொடுமத்த யானை மருப்பும்விராய்ப்
பாய்புனல்வந்து அலைக்கும் பழங்காவிரித் தென்கரை
ஞாயிறும் திங்களும்கூடி வந்தாடு நாகேச்சுரும்
மேயவன்றன் னடிபோற்றி யென்பார் வினைவீடுமே

தெளிவுரை : மூங்கில்களிலிருந்து தெரித்த முத்தும் யானையின் தந்தங்களும் விரவிப் பாயும் நீர் வந்து அலைக்க மேவும் தொன்மை விளங்கும் காவிரியின் தென்கரையில், சூரியனும், சந்திரனும் சேர்ந்து வந்து வழிபடும் நாகேச்சுரத்தில் வீற்றிருக்கும் ஈசன் திருவடியைப் போற்றித் துதிப்பவர்களின் வினையாவும் நீங்கி அழியும்

1296 இலங்கைவேந்தன் சிரம்பத்தி ரட்டியெழில் தோள்களும்
மலங்கிவீழம் மலையால் அடர்த்தான் இடமல்கிய
நலங்கொள்சிந்தை யவர்நாள்தொறு(ம்) நண்ணு நாகேச்சுரம்
வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே

தெளிவுரை : இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நலிவுற்றும் கெடுமாறு அழகிய திருக்கயிலை மலையால் அடர்த்த ஈசனின் இடமாவது, நலங்கள் யாவும் பெற்று உய்ய வேண்டும் என்னும் கருத்தினால், அடியவர்கள் எக்காலத்திலும் நண்ணுகின்ற நாகேச்சுரம் ஆகும் அதனை வலம் வரும் சிந்தையுடையவர்களுக்கு இடர் யாவும் தீர்ந்து நன்மை பயக்கும்

1297 கரியமாலும் அயனும் அடியும்முடி காண்பொணா
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்இடம் ஈண்டுகா
விரியின்நீர்வந்து அலைக்கும் கரைமேவு நாகேச்சுரம்
பரிவிலாதுஅவ் வடியார்கள் வானிற் பிரியார்களே

தெளிவுரை : திருமாலும் பிரமனும், திருவடியும் திருமுடியும் காண முடியாதவாறு தீப்பிழம்பாகி ஓங்கி உயர்ந்த ஈசன் அமர்ந்து அருள் செய்யும் இடமாவது, காவிரியின் நீர் அலைகள் பொருந்தும் கரையில் மேவும் திருநாகேச்சுரம் ஆகும் இத் திருக்கோயிலைப் பிரியாது வணங்குகின்ற அடியவர்கள் வானுலகில் வாழ்கின்ற சிறப்பிலிருந்து பிரியாதவர்கள் ஆவார்கள்

1298 தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை
நட்டிருட்கண் ணடமாடிய நாத(ன்) நாகேச்சுர
மட்டிருக்கும் மலரிட்டு அடிவீழ்வது வாய்மையே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் புனைந்துரைக்கும் சொற்களை ஏற்காது, மயானத்தில் நள்ளிருளில் நடம் புரியும் நாதனாகிய நாகேச்சுரனை தேன் துளிர்க்கும் புதுமலர் கொண்டு தூவிப் போற்றித் திருவடியைப் பணிந்து வணங்குவது நல்வழியின் தன்மையாகும்

1299 கந்தநாறும் புனல்காவிரித் தென்கரைக் கண்ணுதல்
நந்திசேரும் திருநாகேச் சுரத்தின் மேல்ஞானசம்
பந்தனாவிற் பனுவல் இவைபத்தும் வல்லார்கள்போய்
எந்தைஈசன் இருக்கும் உலகெய்த வல்லார்களே

தெளிவுரை : நன்மணம் கமழும் நீர் பெருகும் காவிரித் தென்கரையில், திருநுதலில் கண்ணுடைய ஈசன் வீற்றிருக்கும் திருநாகேச்சுரத்தின் மீது ஞானசம்பந்தர் நாவினால் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் ஈசன் விளங்குகின்ற சிவலோகத்தை எய்த வல்லவர்கள் ஆவார்கள்

திருச்சிற்றம்பலம்

256 மூக்கீச்சரம் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்(முக்தீச்சுரம்), திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1300 சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தள் ஆரும் விரல்ஏழை யொடுஆடிய காரணம்
ஆய்ந்து கொண்டாங்கு அறியந் நிறைந்தார் அவர்ஆர்கொலோ
வேந்தன் மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே

தெளிவுரை : நன்மணம் திகழும் சாந்தம் தருவது எனக் கருதி, திருவெண்ணீற்றினைக் குழையப் பூசிக் கங்கையினைச் சடை முடியில் வைத்தவராகிய சிவபெருமான், காந்தள் மலர் போன்ற அழகிய பூ விரல் கொண்டு விளங்கும் உமாதேவியோடு சேர்ந்து திருநடனம் புரிந்த காரணத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டவர் யார்கொல் ! இச் செயல் யாவரையும் நன்கு பாதுகாப்பவராகிய ஈசனாகிய மூக்கீச்சரத்து அடிகள் புரிகின்ற மெய்ம்மையே ஆகும்

1301 வெண்டலைசேர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
கொண்டலாரும் புனல்சேர்த்து உமையாளொடும் கூட்டமா
விண்டவர்தம் மதில்எய்தபின் வேனில்வேள் வெந்தெழக்
கண்டவர் மூக்கீச் சரத்து எம்அடிகள் செய்கன்மமே

தெளிவுரை : பிரம கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்ட பலி கொள்வதை விரும்பிய ஈசன், ஆகாச கங்கையினைச் சடை முடியில் தரித்து, உமாதேவியார் ஒரு பாகத்தில் விளங்கச் சேர்ந்து நின்று பகைத்த முப்புர அவுணர்தம் கோட்டைகள் வெந்து சாம்பல் ஆகுமாறு செய்தவர் அப் பெருமான் மன்மதன் எழுமாறு அருள் புரிந்தவர் இத்தகைய திருவிளையாடல்களை நிகழ்த்துபவர் மூக்கீச்சரத்தில் வீற்றிருக்கும் எம் ஈசன் ஆவார்

1302 மருவலார்தம் மதில்எய் ததுவும்மால் மதலையை
உருவிலார்அவ் எரியூட்டி யதும்முலகு உண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானை யினான்செய்த
பொருவின் மூக்கீச்சரத்து எம்அடிகள் செயும்பூசலே

தெளிவுரை : ஈசன் தன்னை மருவிச் சார்ந்து பணிதல் இன்றிப் பகைத்து நின்ற அசுரர்களையும் அவர்களுடைய மூன்று புரங்களையும் எரிந்து சாம்பலாகுமாறு செய்த பரமன்; திருமாலின் புதல்வனாகிய மன்மதனை, வடிவம் அற்றவனாகத் திகழுமாறு, நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கிய தலைவன்; தென்னவனாய் உலகு ஆண்ட கோச்செங்கட்சோழன் திருப்பணி ஆற்ற மூக்கீச்சரத்தில் எழுந்தருளிய அடிகள் ஆவர் அவ் இறைவன் திருச் செயலே யாவையும ஆற்ற வல்லதும்

1303 அன்னம் அன்னந் நடைச்சாய லாளோடு அழகெய்தவே
மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம்
தென்னன்கோழி எழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன் மூக்கீச்சரத் தடிகள் செய்கின்றது ஓர்மாயமே

தெளிவுரை : அன்னம் போன்ற நடையின் சாயல் கொண்டு விளங்கும் உமாதேவியார் ஒரு பாகத்தில் மேவித் திகழ, அழகு மிளிரும் மின்னலைப் போன்ற சடை முடியின் மீது கங்கை என்னும் நங்கையினைக் கொண்டுள்ள காரணமானது, சேர, சோழ, பாண்டியர் நாதனாகி மூக்கீச்சரத்தில் வீற்றிருக்கும் அடிகள் செய்கின்ற ஓர் மாயமே ஆகும்

1304 விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் அழலாடுவார்பேயொடு நள்ளிருள்
வடமனீடு புகழ்ப்பூமியன் தென்னவன் கோழிமன்
அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே

தெளிவுரை : விடம் பொருந்திய அரவத்தை அரையில் கட்டிக் கையில் நெருப்பினை ஏந்தி நள்ளிருளில் பேய்க் கூட்டத்தோடு நடனம் புரிபவர் ஈசன் ஆல்போல் தழைத்து நீண்ட புகழ் விளங்கும் பாண்டியர்களும் சோழ மன்னர்களும் வணங்கிப் போற்ற ஆற்றல் மிக்கு மேவும் நாதனாகிய மூக்கிச்சரத்து அடிகள் புரிகின்ற இத்தகைய செயல்கள் யாவும் அவ் இறைவனுக்கே எளிமையானதாகும்

1305 வெந்தநீறு மெய்யில் பூசுவர்ஆடுவர் வீங்கிருள்
வந்தென்ஆரவ் வளைகொள்வதும் இங்கொருமாயமாம்
அந்தண்மா மானதன்னேரியன் செம்பியன் ஆக்கிய
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் ஏதமே

தெளிவுரை : ஈசன், திருவெண்ணீற்றைப் பூசி அணிந்து, அடர்த்தியான இருள் சூழ்ந்த மயானத்தில், நின்று நடனம் புரிபவர் அப் பெருமான், என் உள்ளத்தில் புகுந்து, என்னை அப்பெருமானையே நினைத்து உருகுமாறு செய்வித்தும் என் மேனியை இறைத்து மெலியுமாறு செய்தும், என் வளையல்கள் தாமாகவே கழன்று விழுமாறு புரிந்தவர் இது ஒரு விந்தையே ஆகும் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து யானையை வென்ற தன்மையில் கோச்செங்கட்சோழனாக்கிய எந்தை மூக்கீச்சரத்து அடிகளே, இவ்வாறு என்னை உருகச் செய்யும்படி செய்த பெருமான் ஆவார்

1306 அரையிலாருங் கலையில்லவன் ஆணொடு பொண்ணுமாய்
உரையிலார்அவ் அழலாடுவர் ஒன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதில்மூன் றுடன்வெவ்வழல் ஆக்கினான்
அரையன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் அச்சமே

தெளிவுரை : ஈசன், அரையில் துகில் பொருந்திக் கட்டாது கோவணத்தை உடுத்தியவர்; ஆணொடு பெண் வடிவமும் சேர்ந்து மேவும் அர்த்தநாரியாய்த் திகழ்பவர்; சொற்பொருளுக்கும் உரைகளுக்கும் அப்பாற்பட்டவர்; அதனைப் போன்று வரையரையில்லாத நெருப்பினைக் கையில் ஏந்தி திருக்கூத்து புரிபவர்;  எப்பொருளின்மீதும் பற்றிக்கொண்டு ஒன்றுதல் கொள்ளாது விளங்கித் திகழ்பவர் அப்பெருமான், பகைத்த முப்புரத்து அசுரர்களையும், அவர்தம் கோட்டைகளையும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் அவர், தலைவராக விளங்கி, மூக்கிச்சரத்தில் மேவும் அடிகள் ஆவார் இவை யாவும் அவருக்கு மிக எளிமை வாய்ந்த செயலாகும்

1307 ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்றதும் கூற்றை உதைத்ததும்
கூர்க்குநன்மூ விலைவேல்வலன் ஏந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன் உரத்தை நெரித்தவ்வடல்
மூர்க்கன் மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே

தெளிவுரை : கங்கையைச் சடை முடியில் ஏற்றதும் தன்பால் வந்தடைந்த மார்க்கண்டேயரின் உயிரைக் கவர முனைந்த கூற்றுவனை உதைத்து அழித்ததும், கூர்மை விளங்கும் சூலத்தை ஏந்திய கொள்கையும், ஆரவாரம் செய்து வாய்ச் சொல் புகலும் இராவணனுடைய வலிமையை நெரித்து அடர்த்த செயலும், திண்மையுடன் விளங்கும் மூக்கீச்சரத்தில் மேவும் அடிகள் செய்த வலிமையின் பாற்றே ஆகும்

1308 நீருளாரும் மலர்மேல் உறைவா(ன்) நெடுமாலுமாய்ச்
சீருளாரும் கழல்தேடி மெய்த்தீத் திரள்ஆயினான்
சீரினால்அங்கு ஒளிர்தென்னவன் செம்பியன் வில்லவன்
சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே

தெளிவுரை : நீரில் விளங்கும் தாமரை மலரில் உறையும் பிரமனும், திருமாலும், திருக்கழலைத் தேடி நிற்க, மெய்ம்மை மேவும் தீத் திரளாய் ஓங்கிய ஈசன், சீரிய புகழால் ஒளிரும் பாண்டியர், சோழர், சேரர் ஆகிய பெருமன்னர்கள் சேர்ந்து தொழுமாறு விளங்கும் மூக்கீச்சரத்து மேவிய அடிகள் ஆவார் இச்செயல் அப்பெருமான் புரியும் செம்மையாகும்

1309 வெண்புலால் மார்பிடு துகிலினர் வெற்றரை உழல்பவர்
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம தாக்கினான்
ஒண்புலால் வேல் மிகவல்லவன் ஓங்குஎழிற் கிள்ளி
பண்பின் மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே

தெளிவுரை : துவர் ஆடை அணிந்துள்ள சாக்கியரும், திகம்பரராகிய சமணரும் உரைக்கும் மொழிகள் ஊனம் உடைமையாகும் என ஆக்கிய ஈசன், மாற்றாரை வென்று தென்னவனாய் உலகாண்ட கோச் செங்கட்சோழன் திருஉள்ளத்தின் பாங்கால் அமையப் பெற்ற மூக்கிச்சரத்தில் மேவும் அடிகள் ஆவார் இத்தகைய அருமை வாய்ந்த திருப்பணிகள் யாவும் அப் பெருமான் நிகழத்துகின்ற பசுமையான அருட்பேறு ஆகும்

1310 மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத்து அடிகளைச்
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய் வாழ் பவர்காழியுள் ஞான சம்பந்தன்
சொல்லவல்லார் அவர்வானுலகு ஆளவும் வல்லரே

தெளிவுரை : வளமும் வலிமையும் மிக்க மூவேந்தர்களும் மூக்கீச்சரத்தில் மேவும் ஈசனைத் தமது செல்வராக நினையுமாறு புரிந்தனைச் செந்தமிழ் வல்லவராகவும் நல்லவராகவும் வாழ்பவர்கள் திகழும் காழியுள் விளங்கும் ஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள் வானுலகத்தை ஆளும் வல்லமையைப் பெறுவார்கள்

திருச்சிற்றம்பலம்

257 திருப்பாதிரிப்புலியூர் (அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1311 முன்னநின்ற முடக்கால் முயற்குஅருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ் பாதிரிப் புலியூருளான்
தன்னைநின்று வணங்கும் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே

தெளிவுரை : முற்காலத்தில், கால்கள் முடங்கி முயலின் கால்கள் போன்றுள்ள சாபத்தைப் பெற்ற மங்கண முனிவரின் பூசையை ஏற்று, நீடுஅருள் புரிந்த ஈசன், திருப்பாதிரிப்புலியூரில் வீற்றிருக்கும் பரமன் ஈசனை வணங்கும் தவத்தினைப் பெறாதவர்கள் மறுமையில் பிணியுடைய யாக்கையைப் பெறுவார்கள்

1312 கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம்
புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர் தனை
உள்ள நம்மேல் வினையாயி ஒழியுங்களே

தெளிவுரை : பிணத்தினை எரிக்கின்ற இடுகாட்டில் பேய்க் கூட்டங்கள் குழைந்து ஆட்டங்களைப் புரிய விளங்குகின்ற ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, பறவைகள் நனிவிளங்கும் பாதிரிப்புலியூர் ஆகும் அதனை நினைத்து வணங்க, வினையாயின யாவும் நீங்கிச் செல்லும்

1313 மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
பொருளினல்லார் பயில் பாதிரிப் புலியூருளான்
வெருளின் மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்தபின்
அருளியாகத் திடைவைத் ததுவும் அழகாகவே

தெளிவுரை : மருள் வயப்படும் அஞ்ஞானம் முழுமையாக நீங்கிய நல்லோர்கள் வழிபாடு செய்கின்ற, மழுப்படை ஏந்திய ஈசனினும் மேற்பட்ட பொருள் யாதும் இல்லை எனத் தெளிந்தவர்கள் விளங்குகின்ற தலம் பாதிரிப்புலியூர் ஆகும் ஆங்கு மேன்மை திகழும் மான் அன்ன உமாதேவியை நயந்து, தேகத்தில் பொருந்துமாறு வைத்த அருட் பாங்கு மிக அழகிய தன்மை உடையது இது, காட்சிக்கு இனிமையும், பேறும் நல்கும் ஈசன் திருவருளை வியந்து ஏத்தியவாறு ஆயிற்று

1314 போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள்
ஆதிநாலும் அவலம் இலாதஅடி கள்மறை
ஓதிநாளும் இடும்பிச்சை யேற்றுண்டு உணப்பாலதே

தெளிவுரை : மலர்களாலும் தூபங்களாலும் அடியவர்கள் விதித்த காலங்களில் பூசித்து வழிபாடு செய்யும் பாதிரிப் புலியூரில் வீற்றிருக்கும் அடிகளாகிய ஈசன் ஆதிப்பிரா ன் ஆவார் அப் பெருமான் எத்தகைய அவலத்திற்கும் பிணிக்கப்படாதவர் இந்நிலையில் பாடல்களைப் பாடிப் பிறர் இடுகின்ற பிச்சையேற்று உணவு கொண்டு உட்கொள்ள மேவும் பாங்கு, விந்தையே

1315 ஆகநல்லார் அமுதாக்க உண்டான் அழல்ஐந்தலை
நாகநல்லார் பரவந்நயந்து அங்குஅரை ஆர்த்தவன்
போகநல்லார் பயிலும் பாதிரிப் புலியூர்தனுள்
பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே

தெளிவுரை : உமாதேவியார், நன்மையாகுமாறு செய்த நஞ்சினை உண்ட ஈசன், நல்லோர்கள் யாவரும் பரவித் தொழுமாறு ஐந்தலை நாகத்தை அரையில் ஆர்த்துக் கட்டிய பெருமான் ஆவார் அவர் போகம் தரும் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூரில், உமாதேவியாரைப் பாகங் கொண்டு மேவி வீற்றிருக்கும் பரம்பொருள் ஆவார்

1316 மதியமொய்த்த கதிர்போல் ஒளிம்மணற் கானல்வாய்ப்
புதியமுத்தந் திகழ் பாதிரிப் புலியூரெனும்
பதியில் வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்
குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகாகவே

தெளிவுரை : சந்திரனின் வெண்மையான கதிர் போன்று ஒளி தருகின்ற கடற்கரைச் சோலையின் மணல் பரப்பில் புத்தம் புதிய முத்துக்கள் திகழும் பெருமையுடைய பாதிரிப்புலியூர் என்னும் பதியில் வீற்றிருக்கும் எம் தந்தையாகிய ஈசனின் பழந்தொண்டர்கள், பக்திப் பெருக்கில் ஆனந்தக் கூத்தும் ஆடுவார்கள்; சிவாகம விதிப்படி வழிபாடும் குழைந்து விருப்பம் மேலிட்டுச் செய்வார்கள்

1317 கொங்குஅரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்
சங்குஅரவப் பறையின் ஒலியவை சார்ந்தெழப்
பொங்குஅரவம் உயர் பாதிரிப் புலியூர்தனுள்
அங்குஅரவம் அரையில் அசைத்தானை அடைமினே

தெளிவுரை : பூந்தாதுக்களில் தேன் அருந்தும் தன்மையில் ஒலியெழுப்பிக் குளிர்ச்சி மிகுந்த சோலைகளில் ரீங்காரம் செய்யவும், சங்கின் ஒலியும், பறையின் ஒலியும் சார்ந்து எழ, திருவிழாக்கள் நடத்தும் காரணமாகப் பொங்கும் பேரொலி கொண்டு விளங்கும் பாதிரிப்புலியூரில், பாம்பை அரையில் அசைத்துக் கட்டி வீற்றிருக்கும் ஈசனை அடைந்து வணங்கித் தொழுவீராக

1318 வீக்கம்எழும் இலங்கைக்கு இறை விலங்கல்லிடை
ஊக்கம்ஒயிந்து அலறவ் விரல்இறை ஊன்றினான்
பூக்கமழும் புனல் பாதிரிப் புலியூர்தனை
நோக்கமெலிந்து அணுகா வினை நணுகுங்களே

தெளிவுரை : பாராட்டுதற்கு ஒண்ணாத பெருமை உடைய இராவணன், கயிலை மலையின்கீழ், ஆற்றல் அழிந்து அலறுமாறு, திருவிரலை ஊன்றிய ஈசன் வீற்றிருக்கும் பூக்களின் நறுமணம் கமழும் பாதிரிப் புலியூரினை நோக்கி வணங்க, வினையானது நலிவுற்றுத் தன்னிலை கெடும் எனவே அத்தகைய வினையைச் சாய்த்தவர்கள் ஆவீர்கள்

1319 அன்னம்தாவும் மணியார் பொழில் மணியார்புன்னை
பொன்னந்தாது சொரி பாதிரிப் புலியூர்தனுள்
முன்னம்தாவி அடிமூன்று அளந்தவன் நான்முகன்
தன்னம் தாளுற்று உணராத தோர் தவநீதியே

தெளிவுரை : அன்னப் பறவைகள் விளங்கும் அணி மிக்க பொழிலில் அணிதிகழ் புன்னை மரங்கள் பொன் போன்ற தாதுக்களைச் சொரிய, மூன்று அடியால் உலகத்தை அளந்த திருமாலும், நான்முகனும் பாதிரிப்புலியூரில் வீற்றிருக்கும் ஈசனின் திருவடியை உணராத செயல் விந்தையே ஆகும்

1320 உரிந்தகூறை உருவத்தொடு தெருவத் திடைத்
திரிந்துதின்னும் சிறுநோன்பரும் பெருந்தேரரும்
எரிந்துசொன்னவ் உரைகொள்ளாதே யெடுத்து ஏத்துமின்
புரிந்த வெண்ணீற்றண்ணல் பாதிரிப் புலியூரையே

தெளிவுரை : சமணரும், தேரரும் சொல்லும் கருத்துக்கள் மன எரிச்சலால் ஆகியன அவ்வுரைகளை ஏற்காது திருவருளைப் புரிந்த திருவெண்ணீற்றினைத் தரித்த சிவபெருமான் எழுந்தருளி விளங்கும் பாதிரிப் புலியூரை ஏத்தி வழிபடுவீராக

1321 அந்தணல்லார் அகன் காழியுள் ஞானசம்
பந்தனல்லார் பயில் பாதிரிப் புலியூர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத்திவை தரித்தார் கண்மேல்
வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே

தெளிவுரை : அந்தணர் பெருமக்கள் விரிந்து பரந்து விளங்கும் காழி நகரில் மேவும் ஞானசம்பந்தர், நல்லோர்கள் திகழும் பாதிரிப்புலியூரில் சந்தம் பெருகுகின்ற தமிழ் மாலையைப் பாடிய இத் திருப்பதிகத்தினை ஓதி உரைப்பவர்கள்பால், தீயவை வந்து அடையாத தன்மையும் வினை மாய்தலும் உண்டாகும்

திருச்சிற்றம்பலம்

258 திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1322 விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார்
படையதாகப் பரசு தரித்தார்க்கு இடமாவது
கொடையில்ஓவார் குலமும் உயர்ந்தம் மறையோர்கள்தாம்
புடைகொள் வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே

தெளிவுரை : இடப வாகனத்தில் அமர்ந்து, திருக்கரத்தை நன்கு அசைத்து ஆர்க்கும் விமலன் மழுப்படையைத் தரித்துள்ள பெருமான் ஆவர் அவர் வீற்றிருக்கும் இடமாவது, ஓய்வின்றி கொடையில் சிறந்தும், வேதம் ஓதுதலில் திகழ்ந்து விளங்கும் மறையோர்கள் சூழ்ந்தும், வேள்விப் புகை சூழ, அது ஆகாயத்தில் சென்று உலவும் பெருமையுடையதும் ஆகிய புகலியே ஆகும்

1323 வேலைதன்னின் இருநஞ்சினை உண்டிருள் கண்டனர்
ஞாலமெங்கும் பலிகொண்டு உழல்வார் நகராவது
சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்
சோலைமேவும் கிளித்தான் சொற்பயிலும் புகலியே

தெளிவுரை : பாற்கடலில் தோன்றிய, மரணத்தை உண்டாக்கும் கொடிய நஞ்சினை உட்கொண்டு, அதனால் கரிய கண்டத்தைப் பெற்றுத் திருநீலகண்டர் எனப் பெயர் தாங்கிய ஈசன், யாண்டும் சென்று திரிந்து பலிகொண்டு மேவுபவர் அப் பெருமான் வீற்றிருக்கும் நகரானது, நற்குணங்களையுடைய அந்தணர்கள் பயில்கின்ற வேத மொழிகளைக் கேட்டு, அவ்வரிய உயர்ந்த பதங்களைச் சோலையில் மேவும் கிளிகள் பயில்கின்ற புகலியாகும்

1324 வண்டுவாழும் குழல்மங்கையோர் கூறுகந் தார்மதித்
துண்டமேவும் சுடர்த்தொல் சடையார்க்கு இடமாவது
கொண்டைபாய மடுவில் உயர்கேதகை மாதவி
புண்டரீகம் மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே

தெளிவுரை : வண்டு வாழும் மலர்போன்ற கூந்தலை உடைய உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு, பிறைச் சந்திரனைச் சூடி விளங்குகின்ற, சுடர் போன்ற சடை முடியுடைய சிவபெருமானுக்கு இடமாகத் திகழ்வது, கெண்டை (மீன்)கள் பாயும் மடுவில் தாழை, மாதவி, தாமரை ஆகியன விளங்கி மலர்கள் சூழும் பொய்கை நிலவும் புகலியாகும்

1325 திரியுமூன்று புரமும் எரித்துத் திகழ்வானவர்க்கு
அரியபெம்மான் அரவக்குழையார்க்கு இடமாவது
பெரியமாடத்து உயரும் கொடியின் இடைவாய்வெயிற்
புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே

தெளிவுரை : ஆங்காங்கு திரிந்து சென்று தேவர்களையும் மக்களையும் துன்புறுத்திய உலோகத்தாலான மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, பெருமையுடன் திகழவல்ல வானவர்களுக்கும் அரியவனாகிய ஈசன், அரவத்தைக் காதில் குழையாக அணிந்தவர் அப்பெருமானுக்கு இடமாவது, பெரிய மாடங்களில் உயர்ந்து மேவும் கொடியின் நெருக்கத்தால் வெயிலின் வெம்மை தோன்றாதவாறு பெரிய பூம்பொழில் சூழ்ந்த குளிர்ச்சி மிக்க புகலியாகும்

1326 ஏவிலாரும் சிலைப்பார்தனுக்கின் னருள்செய்தவர்
நாவினாள்மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடமாவது
மாவிலாரும் கனிவார் கிடங்கில் விழ வாளைபோய்ப்
பூவிலாரும் புனற்பொய்கையில் வைகும் புகலியே

தெளிவுரை : ஈசன், அம்பு தொடுத்துப் போர் செய்யும் வில்லையுடைய ஒளி மிக்க பார்த்தனுக்கு அருள் செய்தவர்; கலைமகளின் நாசியை அரிவித்தவர்; நம்பும் அடியவர்களுக்கு உரிமையானவர் அப் பெருமானுக்கு இடமாவது, மாமரங்களிலிருந்து கனிகள் நீண்ட அகழியில் விழ, ஆங்கு வைகும் வாளை மீன்கள் வாய்க்கால் வழியாகப் பூக்கள் திகழும் நீர்ப் பெருக்குடைய பொய்கையில் சாரும் புகலியாகும்

1327 தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையாளொடும்
ஒக்கவேயெம் முரவோன் உறையும் இடமாவது
கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்
புக்கவாசப் புன்னை பொன்திரள் காட்டும் புகலியே

தெளிவுரை : ஈசனைப் பகைகொண்டு செய்ய முனைந்தது தக்கன் செய்யத் தொடங்கிய வேள்வியாகும் அத்தகைய வேள்வியைத் தகர்த்த ஈசன், உமா தேவியாரோடு பாகம் கொண்டு விளங்கும் வல்லமை உடைய பெருமான் அப்பெருமான் உறையும் இடமாவது, மா, வாழை, பலா என்னும் முக்கனிகளும் செழித்து ஓங்கவும், கொன்றை மற்றும் புன்னை மரங்களின் மலர்கள் பொன் வண்ணத்தில் பொலியவும் மேவும் பகலியாகும்

1328 தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன்
தலையும்தோளும் நெரித்த சதுரர்க்கு இடமாவது
கலையின்மேவும் மனத்தோர் இருப்போர்க்குக் கரப்பிலார்
பொலியும்அந்தண் பொழில் சூழ்ந்து அழகாரும் புகலியே

தெளிவுரை : எத்தன்மையிலும் தோல்வியும் இழப்பும் இன்றி விளங்கிய இராவணனுடைய வலிமை மிகுந்த தேகத்தை நலியுமாறு செய்வித்து, முடிகளையும் தோள்களையும் நெரித்த சதுரனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, வேதம் முதலான கல்வியில் சிறந்து சிவஞானம் கொண்ட நன்மனத்தையுடைய சீலத்தவர்கள், இரந்து வேண்டுபவர்களுக்கு வரையாது வழங்குகின்ற பொழில் சூழ்ந்த அழகுடன் மிளிரும் புகலியாகும்

1329 கீண்டுபுக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல்அன்னமாய்க்
காண்டும்என்றார் கழல்பணிய நின்றார்க்கு இடமாவது
நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற்
பூண்டு மிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியதே

தெளிவுரை : பூமியைக் கிளறும் பன்றியின் வடிவம் தாங்கிய திருமாலும், மேலே உயர்ந்து பறக்கும் அன்னப் பறவையின் வடிவம் தாங்கிய பிரமனும் கண்டு வணங்க வேண்டும் என்று போற்றித் தொழ, பேரழல் ஆகிய பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, நீண்ட அலகுகளை உடைய நாரை, தனக்கு இரையாகிய ஆரல் மீன் வார, நிறைந்த சேறு கொண்டுள்ள வயல்களையுடைய அழகு மிளிரும் குளிர்ச்சியுடன் திகழும் புகலியாகும்

1330 தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்கண்உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடமாவது
மடுப்படுக்கும் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்
அடத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியதே

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் துன்பத்தை உய்க்கும் தன்மையால் போற்றித் துதியாத எம்பெருமானாகிய ஈசனுக்கு உரிய இடமாவது, வேதத்தில் வல்ல அந்தணர்களும் தேவர்களும் அடுத்தடுத்து நாடி வந்து மேவும் புகலியாகும்

1331 எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக்
கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர்
செய்தபத்தும் இவை செப்பவல்லார் சிவலோ கத்தில்
எய்திநல்ல இறையோர்கள் ஏத்த இருப்பார்களே

தெளிவுரை : புலன்களால் கண்டு அடைவதற்கு அரியவனாகிய இறைவன் உறைகின்ற புகலியைப் பொய்ம்மையில்லாத கவுணியர் கோத்திர மரபுடைய ஞானசம்பந்தர், செம்மை நல்கும் புகழ் மேவச் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓதி உரைக்க வல்லவர்கள், சிவலோகத்தை அடைந்து இமையோர்கள் ஏத்தும் நற்பேறு கொண்டவர்களாய் விளங்குவார்கள்

திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை  மூலமும் தெளிவுரையும் நிறைவுற்றது.

© Om Namasivaya. All Rights Reserved.