Books / பன்னிரு திருமுறைகள்


மூன்றாம் திருமுறை


1,2,3 திருமுறைகளில் திருஞான சம்பந்தர் 4146 பாடல்கள் பாடியுள்ளார். அதில் மூன்றாம்  திருமுறையில் திருஞான சம்பந்தர் பாடிய  1346 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

259. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1. ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்
அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடினாய்இடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய்மறை யோடுபல் கீதமும்
பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாய் அ ருளாய் சுருங்கஎம தொல்வினையே.

தெளிவுரை : நறுமணம் கமழும் பிரணவ புட்பம் என்று சொல்லப்படுகின்ற கொன்றை மலரை விரும்பி அணிந்துள்ள பெருமானே ! நன்மணம் விளங்கும் நெய்யும் பாலும் தயிரும் அபிடேகமாக ஏற்று மகிழ்ந்து விளங்குகின்ற நாதனே ! தில்லைவாழ் அந்தணர் என்னும் சிறப்புப் பொருந்திய அந்தணர்களின் உடனாகிப் பிரியாத நிலையில் திகழும் ஈசனே ! சிற்றம் பலத்தில் மேவும் அம்பலக் கூத்தனே ! வேதங்கள் முதலான, கீதங்களை நவின்றருளிய ஈசனே ! கங்கை தரித்தமையால் பனித்துக் குளிர்ந்து விளங்கும் சடை முடியின்கண், வெண் திங்களைச் சூடிய பரமனே ! எமது தொல்வினையாகிய சஞ்சித, பிராரத்த கன்மத்தை நீக்கி அருள்வீராக.

2. கொட்டமேகம ழும்குழ லாளொடு
கூடினாய்எரு தேறினாய்நுதற்
பட்டமே புனைவாய் இசைபாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய் மறை யோர்தில்லை
நல்லவர்பிரி யாதசிற் றம்பலம்
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னைகொலோ

தெளிவுரை : நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியுடன் இணைந்து, இடபவாகனத்தில் வீற்றிருக்கும் நாதனே ! நெற்றியின்கண் வீரப்பட்டம் புனைந்து, பூதகணங்கள் இசை பாட, நடம் புரியும் நாயகனே ! வேத விற்பன்னராய் விளங்குகின்ற தில்லை வாழ் அந்தணர்கள், பரிவில்லாது மேவும் திருச்சிற்றம்பலத்தில் (விரும்பி) வீற்றிருப்பவனே ! இவற்றினைப் பொருந்தியது தான் எனக்கொல் !

3. நீலத்தார்கரிய மிடற்றார் நல்ல
நெற்றிமேல்உற்ற கண்ணினார் பற்று
சூலத்தார் சுடலைப்பொடி நீறணி வார்சடையார்
சீலத்தார்தொழுது ஏத்துசிற்றம் பலம்
சேர்தலால்கழற் சேவடி கைதொழக்
கோலத்தாய்அரு ளாய்உன காரணம் கூறுதுமே.

தெளிவுரை : ஈசன், நீல வண்ணம் பொருந்திய கரிய கண்டத்தையுடையவர்; அழகிய நெற்றியின் மீது ஒரு கண்ணுடையவர்; சூலப் படையைக் கரத்தில் ஏந்தி விளங்குபவர்; சுடலையின் சாம்பலைத் திருமேனியில் குழையப் பூசியவர்; நீண்ட சடைமுடியுடையவர்; அப்பெருமான், ஆசார ஒழுக்க நெறியால் திகழும் அந்தணர்கள் தொழுது போற்றும் சிற்றம்பலத்தில் விளங்குபவர்; அனைவராலும் ஏத்தி வழிபடும் அத் திருக்கோலத்தையுடையவர்; அவர் எமக்கு அருள்புரிவாராக !

4. கொம்பலைத்தழகு எய்திய நுண்ணிடைக்
கோலவாள்மதி போலமுகத்திரண்டு
அம்பு அலைத்தண்ணாள் முலைமேவிய வார்சடையான்
கம்பலைத்துஎழு காமுறு காளையர்
காதலால் கழற் சேவடிகைதொழ
அம்பலத்துறைவான் அடியார்க்கு அடையா வினையே.

தெளிவுரை : பூங்கொம்பு போன்ற நுண்ணிய இடையுடைய உமாதேவியைப் பாகம் கொண்டு மேவும், சடைமுடியுடைய ஈசனின் அரநாமத்தை, ஆரவரித்துக் காளை போன்ற மிடுக்குடைய தில்லை வாழ் அந்தணர்கள் ஓதுவார்கள். பக்தியுடன் அப்பெருமானை கைதொழும் அடியவர்களுக்கு வினையானது பற்றி நிற்காது.

5. தொல்லையார்அமு துண்ணநஞ் சுண்டதோர்
தூமணி மிடறா பகுவாய தோர்
பல்லையார் தலையிற் பலியேற்றுழல் பண்டரங்கா
தில்லையார்தொழுது ஏத்து சிற்றம்பலம்
சேர்தலால்கழற் சேவடிகைதொழ
இல்லையாம்வினை தான்எரியம் மதில் எய்தவனே.

தெளிவுரை : பண்டைக் காலத்தில் தேவர்கள், அமுது உண்ணும் பொருட்டுத் தானே நஞ்சினை உட்கொண்டு, நீலகண்டனாகத் திகழும் பெருமானே ! பிரம கபாலத்தை ஏந்திப் பலி ஏற்றுப் பாண்டரங்கக் கூத்து ஆடிய நாதனே ! அசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசனே ! தில்லை வாழ் அந்தணர்கள் தொழுது ஏத்துகின்ற சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் தேவரீரே ! உமது கழலிணையைத் தொழுது போற்ற, வினை யாவும் நீங்கும்.

6. ஆகந்தோய்அணி கொன்றை யாய்அனல்
அங்கையாய்அம ரர்க்கம ராவுமை
பாகந்தோய் பகவா பலியேற்றுழல் பண்டரங்கா
மாகந்தோய்பொழில் மல்கு சிற்றம்பலம்
மன்னினாய்மழு வாளினாய் அழல்
நாகந்தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே.

தெளிவுரை : திருமேனியில் அழகிய கொன்றை மாலை திகழ, திருக்கரத்தில் நெருப்பு ஏந்திய தேவாதி தேவனே ! உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் பகவானே ! கபாலம் ஏந்திப் பலியோற்று, வானளாவிய பொழில் மல்கும் தில்லைச் சிற்றம்பலத்தில் விளங்கும் நாதனே ! மழுப் படை உடையவனாய், நாகத்தை அரையில் கட்டி மேவும் ஈசனே ! அடியவர்களுக்கு வினையானது பற்றாதவாறு அருள்பாலிக்கும் இறைவர், நீவிரே ஆவர்.

7. சாதியார்பளிங் கின்னொடு வெள்ளிய
சங்கவார்குழை யாய்திக ழப்படும்
வேதியா விகிர்தா விழவாரணி தில்லை தன்னுள்
ஆதியாய்க்கிடம் ஆயசிற் றம்பலம்
அங்கையால்தொழ வல்லடி யார்களை
வாதியாதகலும் நலியாமலி தீவினையே.

தெளிவுரை : உயர்ந்த வகையான பளிங்குபோன்று, வெண்மையான சங்கினால் ஆகிய குழையைக் காதல் அணிந்துள்ள ஈசனே ! பெருமை திகழும் நான்கு வேதங்களும் ஆகிய விகிர்தனே ! விழாக்கள் மலிந்த தில்லையில், ஆதியாக விளங்கிச் சிற்றம்பலத்தில் மேவும் நாதனே ! தேவரீரைத் தமது கரங்களால் தொழ வல்லவர்களுக்குத் தீவினையானது, துன்புறுத்தாது அகன்று ஏகும்.

8. வேயினார்பணைத் தோளியொ டாடலை
வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமுது
ஆயினாய்இடு காட்டெரி யாடல் அமர்ந்தவனே
தீயினார்கணை யால் புரம்மூன் றெய்த
செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய்கழலே தொழுது எய்துதும் மேலுலகே.

தெளிவுரை : மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியுடன் சேர்ந்து நடனம் ஆடுதலை விரும்பிய விகிர்தனே ! மன்னுயிர்களுக்குப் பேரின்பம் நல்கும் நல்லமுது ஆகிய பரமனே ! மயானத்தில் நெருப்பினை ஏந்தி நின்று ஆடும் இறைவனே ! முப்புரங்களை அக்கினிக் கணை தொடுத்து எரியுமாறு செய்த செம்மையுடையவனே ! சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் நடராசனே ! தேவரீரின் திருக்கழலைத் தொழுது வணங்க, மேலான உலகினில் வாழும் பேறு உண்டாகும்.

9. தாரினார்விரி கொன்றையாய்மதி
தாங்குநீள்சடை யாய்தலைவாநல்ல
தேரினார்மறுகின் திருவாரணி தில்லைதன்னுள்
சீரினால்வழிபாடு ஒழியாத தோர்
செம்மையால்அழ காய சிற்றம்பலம்
ஏரினால் அமர்ந்தாய் உனசீரடி யேத்துதுமே.

தெளிவுரை : கொன்றை மலர் மாலை தரித்து மேவும் பெருமானே ! நீண்ட சடைமுடியில் சந்திரனைத் தரித்த நாதனே ! எம் தலைவனே ! அழகு பொலியும் தேரோடும் வீதிகளையுடைய செல்வத் தில்லையுள், சாத்திரத்தில் விதித்தவாறு வழிபாடு செய்யப்பெறும் சிற்றம்பலத்தில் அழகு மிளிரத் திகழும் பரமனே ! தேவரீரின் சீர் மிக்க திருவடியைப் பரவி ஏத்துகின்றோம்.

10. வெற்றரை யுழல்வார் துவர் ஆடைய
வேடத்தாரவர்கள் உரைகொள்ளன்மின்
மற்றவர் உலகின் வைலம்மவை மாற்றகில்லார்
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம்
காதலால் கழற் சேவடிகை தொழ
உற்றவர் உலகின் உறுதிகொள வல்லவரே.

தெளிவுரை : சமணர்களும், சாக்கியர்களும் சொல்லும் உரைகளை ஒரு பொருட்டாகக் கொள்ள வேண்டாம். மன்னுயிர்களுக்கு, விதியின் வசத்தால் நேரும் துன்பங்களை அவர்களால் தீர்க்க இயலாது. வேதங்களை நன்கு கற்று தேர்ந்து, அவற்றின் மாண்பினை நன்கு உணர்ந்த அந்தணர்கள் தொழுதேத்தும் சிற்றம் பலத்தின் மேன்மையினை அறிந்து, ஆங்கு, ஆடல் புரியும் நடராசப் பெருமானுடைய சேவடியைத் தொழுது போற்றும் அடியவர்கள், மனிதப் பிறவியின் பயனை அடைந்தவர்கள் ஆவார்கள்.

11. நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள்
நான்மறைவல்ல ஞானசம்பந்தன்
ஊறும் இன்தமிழால் உயர்ந்தார்உறை தில்லைதன்னுள்
ஏறுதொல்புகழ் ஏந்துசிற்றம் பலத்து
ஈசனை இசையாற் சொன்ன பத்திவை
கூறு மாறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவரே.

தெளிவுரை : நறுமணம் கமழும் பொழில்கள் திகழும் சீகாழி நகரில் மேவும் நான்கு மறைகளிலும் தேர்ந்த ஞானசம்பந்தன். அன்பினால் திளைக்கச் செய்யும் இனிய தமிழ்ப் பாடல்களால், உயர்ந்த பெருமக்களாகிய வேதங்களில் வல்ல அந்தணர்கள் விளங்குகின்ற தில்லையில், தொன்மையாய் விளங்கும் புகழ் இசையுடன் சொன்ன இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், உயர்ந்து மேவும் பெருமக்களுடன் சேர்ந்து வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

260. திருப்பூந்தராய் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

12. பந்துசேர்விரலாள் பவளத்துவர்
வாயினாள்பனி மாமதிபோல் முகத்து
அந்தமில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எத்திசையும்
நிறைந்துவலம் செய்து மாமலர்
புந்திசெய் திறைஞ்சிப் பொழில்பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : பவளம் போன்ற வாயும், முழுமதி போன்ற திருமுகமும் பந்து அணையும் விரலும் திகழ, எல்லையற்ற புகழுடைய மலைமங்கையாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் ஆதிப் பிரானாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம், தேவர்கள் வலம் வந்து மலர் தூவி ஏத்தி இறைஞ்சும் பூந்தராய் ஆகும். அதனைப் போற்றுவோமாக.

13. காவியங்கருங் கண்ணினான்கனித்
தொண்டைவாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவியம் பெடை அன்னநடைச்சுரி மென்குழலாள்
தேவியுந்திரு மேனியோர் பாகமாய்
ஒன்றிரண் டொரு மூன்றொடு சேர்பதி
பூவிலந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : நீலோற்பவ மலர்போன்ற கண்களும், கனிச் சொல் வழங்கியருளும் திருவாயும், ஒளிதிகழ் முத்தன்ன பற்களும், தூய வெண்மையான அன்னப் பறவை போன்ற நடையும், சுருண்ட மென்மையான கூந்தலும் உடைய, உமாதேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டு, பூந்தராய் என்னும் பதியில் ஈசன் வீற்றிருக்கின்றார். தாமரை மலரில் விளங்கும் பிரமனை ஒத்த வேத விற்பன்னர்களும், ஆசார சீலர்களும் திகழும் அத் திருத்தலத்தைப் போற்றி வணங்குவோமாக.

14. பையராவரும் அல்குல் மெல்லியல்
பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தையலாள்ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம்
செய்யெலாங்கழு நீர்கமலம் மலர்த்
தேறல்ஊறலிற் சேறுல ராதநற்
பொய்யிலா மறை யோர்பயில் பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : பாம்பின் படத்தைப் போன்ற அல்குலும், பஞ்சினை ஒத்த மென்மையான பாதமும், நுண்ணிய மென்மையான இடையும் கொண்டு விளங்குகின்ற உமாதேவியை, ஒரு பாகமாகக் கொண்டு மேவும் எமது ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, வயல்களில் திகழும் தாமரை மலர்களிலிருந்து துளிர்க்கும் தேன், ஊறிப் பாயும் சேறு உலராத பாங்கும், அஞ்ஞானத்தின்பாற்படாத மறையோர் விளங்குகின்ற செம்மையும் கொண்டு திகழ்வது, பூந்தராய் என்னும் பதியாகும். அதனைப் போற்றுவோமாக.

15. முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்பு தேன்கொள் குரும்பை மூவாமருந்து
உள்ளியன்ற பைம்பொற் கலசத்தியல் ஒத்தமுலை
வெள்ளி மால்வரை அன்னதோர் மேனியன்
மேவினார் பதி வீமருதண்பொழிற்
புள்ளினம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : தாமரை மொட்டு, கோங்கின் அரும்பு, குரும்பை என்று பேசப்படுகின்ற தன்மையில் கருணைத் தேன் சொரியும் மூவா மருந்தாகிய  தனங்களுடன் உமாதேவி விளங்குபவள். திருக்கயிலை அனைய தனது திருமேனியில், அத்தேவியைப் பொருந்தித் திகழும் ஈசன் விளங்கும் பதியாவது, மலர்கள் பொருந்திய குளிர்ச்சி மிக்க சோலையில், பறவை இனங்கள் அமைதியாகத் துயில் கொள்ளும் பூந்தராய் ஆகும். அதனைப் போற்றுவோமாக.

16. பண்ணியன்றெழு மென்மொழியாள்பகர்
கோதையேர்திகழ் பைந்தளிர்மேனியோர்
பெண்ணியன்ற மொய்ம்பிற் பெருமாற்கிடம் பெய்வளையார்
கண்ணியன்றெழு காவிச் செழுங்கரு
நீலமல்கிய காமருவாவிநற்
புண்ணியர் உறையும்பதி பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : பண்ணில் இசைபோன்று இனிய மொழி பகரும் தன்மையும், பசுந்தளிர்போன்ற வண்ணத் திருமேனியும் தாங்கித் திகழ்கின்ற உமாதேவியாரை, ஒரு பாகமாகக் கொண்டுள்ள வலிமை மிக்க பெருமானாகிய ஈசனுக்கு உரிய இடமாவது, வளையலை அணிந்த மகளிர் தமது அழகிய நீலோற்பவ மலர் போன்ற கண்களால், விரும்பி நோக்கப் பெறும் புண்ணியர் உறையும் பூந்தராய் என்பதாகும். அதனைப் போற்றுவோமாக.

17. வாணிலாமதி போல் நுதலாள்மட
மாழையொண்கணாள் வண்தரளந்நகை
பாணிலாவிய இன்னிசை யார்மொழிப் பாவையொடும்
சேணிலாத் திகழ் செஞ்சடைஎம் மண்ணல்
சேர்வது சிகரப் பெருங்கோயில்சூழ்
போணிலா நுழையும் பொழிற்பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : உமாதேவியார், ஒளிமிக்க திங்களைப் போன்ற நுதலும், மான் விழியும், முத்துப் பற்களும், பண்ணின் இசை போன்ற இனிய மொழியும் உடையவர். அத்தகைய பிராட்டியை, ஒளி மிக்க நிலவு திகழும் செஞ்சடையுடைய அண்ணலாகிய ஈசன், உடனாகக் கொண்டு விளங்குகின்ற இடமாவது, சிகரம் போன்ற உயர்ந்த பெருங்கோயிலைச் சூழ்ந்து, திங்களின் தண்ணொளி பரவும் பொழில் கொண்ட பூந்தராய் ஆகும். அதனைப் போற்றுவோமாக.

18. காருலாவிய வார்குழலாள்கயற்
கண்ணினாள் புயற் காலொளி மின்னிடை
வாருலாவிய மென்முலை யாள்மலை மாதுடனாய்
நீருலாவிய சென்னியல்மன்னி
நிகரும்நாம முந்நான்குநிகழ்பதி
பேருலாவெயில் சூழ்பொழிற் பூந்தராய் பேற்றதுமே.

தெளிவுரை : மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தலும், கயல் போன்ற கண்களும், மேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்ற இடையும் கொண்டு விளங்கும் உமாதேவியை ஒரு பாகமாக உடைய கங்கை தரித்த திருமுடியுடைய ஈசன், பெருமையுடன் விளங்கும் பதியாவது, பன்னிரண்டு பெயர்களையுடையதாய், மதில்கள் சூழ்ந்து திகழும் பொழில் விளங்கும் பூந்தராய் ஆகும். அதனைப் போற்றுவோமாக.

19. காசைசேர்குழலாள் கயல்ஏர்தடங்
கண்ணிகாம்பன தோள் கதிர்மென்முலைத்
தேசுசேர்மலை மாதுஅமருந்திரு மார்பகலத்து
ஈசன்மேவும் இருங்கயிலை யெடுத்தானை
அன்றடர்த்தான் இணைச்சேவடி
பூசைசெய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : காயாம் பூ போன்ற கரிய கூந்தலும், கயற்கண்ணும், மூங்கிலையன்ன தோளும் உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் ஈசன், கயிலை மலையை எடுத்த இராவணனை அடர்த்திய பெருமான். அவ் இறைவனுடைய திருவடிக் கமலத்தைப் பூசிப்பவர்கள் விளங்குகின்ற பூந்தராய் என்னும் பதியினைப் போற்றுவோமாக.

20. கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகைக்
கொவ்வை வாய்க்கொடி யேரிடையாள் உமை
பங்கு சேர்திரு மார்புடை யார்படர் தீயுருவாய்
மங்குல் வண்ணனும் மாமலரோனும்
மயங்க நீண்டவர் வான்மிசைவந்தெழு
பொங்குநீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : தேன் மணம் கமழும் கூந்தலும், ஒளி மிக்க வெண்பற்களும், கொடி போன்ற இடையும் கொண்டு விளங்கும் உமாதேவியை, ஒரு கூறாகக் கொண்டு விளங்கும் ஈசன், படரும் தீப்பிழம்பாகித் திருமாலும் பிரமனும் காண முடியாதவாறு திகைத்து நிற்க ஓங்கியவர். அப்பெருமான் வீற்றிருக்கும் நகரானது, மகாப் பிரளய காலத்திலும் அழியாது மிதந்து விளங்குகின்ற பூந்தராய். அதனைப் போற்றுவோமாக.

21. கலவமாமயி லார்இயலாள்கரும்பு
அன்னமென்மொழி யாள்கதிர் வாள்நுதற்
குலவுபூங்குழலாள் உமைகூறனை வேறுரையால்
அலவை சொல்லுவார் தேர்அமண் ஆதர்கள்
ஆக்கினான்றனை நண்ணலும் நல்கும்நற்
புலவர்தாம் புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே.

தெளிவுரை : மயில் போன்ற சாயலும், கரும்பு போன்ற இனிமையான மொழியும் ஒளி மிக்க நுதலும் கொண்டு திகழும் மென்மையான பூங் கூந்தலுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ள ஈசனைப் பழித்துக் கூறும் தேரர், சமணர் ஆகியோர் முன்வினைப் பயனால் அவ்வாறு ஆயினர். வினையின் வழியால் அவ்வாறு ஆக்கிய பெருமான் தன்னை நண்ணி வணங்குபவர்களுக்கு அருள் நல்குபவர். அப்பெருமான் வீற்றிருக்கும் அறிஞர்கள் மேவும் பெருமைமிக்க, அப் பதியாகிய பூந்தராய் என்னும் திருத்தலத்தைப் போற்றுவீராக !

22. தேம்பலநுண்ணிடை யாள்செழுஞ்சேலன
கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன்அமர்
பூம்பொழில் திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதும் என்று
ஓம்புதன்மையன் முத்தமிழ் நான்மறை
ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்டு
ஆம்படிஇவை ஏத்தவல்லார்க்கு அடையாவினையே.

தெளிவுரை : மெலிந்த நுண்மையான இடையும், சேல் போன்ற கண்களும் உடைய உமாதேவியுடன் விளங்கும் ஈசன் வீற்றிருக்கும் இடமானது, தேன் மணம் கமழும் பூம்பொழில் திகழும் பொற்பதியாகிய பூந்தராய் ஆகும். அதனைப் போற்றுவீராக என்று, ஓம்புதல் செய்யும் தன்மையினால் நான்கு மறைகளிலும் வல்ல முத்தமிழ் வித்தகனாகிய ஞானசம்பந்தன் உரைத்த தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை வேண்டுதல் கொண்டு ஓதவல்லவர்கள், வினை நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

261. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

23. இயலிசை எனும்பொரு ளின்திறமாம்
புயல்அன மிடறுடைப் புண்ணியனே
கயல்அன வரிநெடுங் கண்ணியொடும்
அயல்உல கடிதொழ அமர்ந்தவனே
கலன்ஆவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
நிலன்நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே

தெளிவுரை : இயல், இசை ஆகிய பொருளின் உறுதி பயக்கும் நிலையாகி, மேகம் போன்ற மிடற்றினை உடைய புண்ணியனே ! கயல் போன்ற நெடுங்கண்ணுடைய உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவனே ! பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி நறுமணம் கமழும் பொழில் விளங்கும் புகலியில் மேவி, இம் மண்ணுலகானது குளிர்ச்சியுடன் விளங்குமாறு சந்திரனுக்கு அருள் நல்கியும் வளர்ச்சியுற்று நிறையுமாறும் நீவிர் அருள் புரிந்தீர்.

24. நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
இலையுறு மலர்கள்கொண்டு ஏத்துதும்யாம்
மலையினில் அரிவையை வெருவவன்தேரல்
அலைவரு மதகரி உரித்தவனே
இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை உயர்திரு வடிஇணையே.

தெளிவுரை : பெருமானே ! தேகத்தைத் தாங்கி நிலை கொள்ளும் இப்பிறவியானது, இடரின்கண் நிலைத்து அழுந்தாதவாறு, மலர் தூவி உமது திருவடியை ஏத்துதல் புரிவோம். உமாதேவி வெருவி நிற்குமாறு, ஆரவாரத்துடன் யானையின் வலிமை மிக்க தோலை உரித்த செம்மையுடைய நாதனே ! தேவர்கள் நின் திருவடியைத் தொழ, எழில் மிக்க புகலியில் உமாதேவியை உடனாகக் கொண்டு நீவிர் விளங்கி மேவினீர்.

25. பாடினை அருமறை வரன்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
நினையேஅடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
தனையேயிட மேவினை தவநெறி அருள்எமக்கே.

தெளிவுரை : வெண்பிறையைச் சடை முடியில் சூடிய நின்மலனே  ! நீவிர் அரிய வேதங்களைத் தோற்றி அருளினீர் ! தாருகாவனத்தில் கூத்து உகந்து ஆடினீர் ! மார்க்கண்டேயரின் உயிரைக் கவரப் போந்த காலனைத் திருப்பாதத்தால் உதைத்து மாயச் செய்தீர் ! புகலி நகரின்கண் மேவி வீற்றிருந்து அடியவர்கள் நின்னையே தொழுமாறு விளங்குபவர் ஆயினீர். இந்நிலையில், எமக்குத் தவநெறியினை அருள்வீராக.

26. நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி அலம்பநல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே
முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே.

தெளிவுரை : ஒளி திகழும் மழுப்படையினையுடைய பெருமானே ! யானையின் தோலை நெருப்புப் போன்ற திருமேனியில் போர்த்தி விளங்கும் நாதனே ! திருக்கழலில், சிலம்பு ஒலிக்க மழுவின் ஓசை முழுங்க அரிய நடம்புரியும் பரமனே ! தேவரீர், திருமுடியின் மீது சந்திரனைச் சூடி, அழகு திகழும் பொழிலுடைய புகலியின்கண் அடியவர்கள் தொழுது ஏத்துமாறு அருள் பாலிக்க வீற்றிருப்பவர் ஆயினீர்.

27. கருமையின் ஒளிர்கடல் நஞ்சம் உண்ட
உரிமையின் உலகுயிர் அளித்த நின்றன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
அருமையில் அளப்பரி தாயவனே
அரவேரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலிப்
பொருள்சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே

தெளிவுரை : கரிய வடிவத்துடன் பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அருந்தி, முழுமுதற் பொருள் என்னும் உரிமை விளங்குமாறு உலகில் உள்ள உயிர்களைப் பாதுகாத்தருளிய தேவரீரின் பெருமையை மண்ணுலகத்தவர் பேசித் தொழுதல் அன்றி வேறுயாது புரிய இயலும் ! அரவம் அன்ன இடையுடைய உமாதேவியாரோடு, கடல் அலைகள் விளங்கும் புகலியின் பெருமை விளங்குமாறு பூவுலகில் பொலிந்து வீற்றிருப்பவர் நீவிரே ஆவர்.

28. அடையரி மாவொடு வேங்கையின்தோல்
புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதிற் பரிசளித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே
விகிர்தாபரமா நின்னை விண்ணவர் தொழப்புகலித்
தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.

தெளிவுரை : நனி அடைந்து மேவிப் பொலியும் அரியின் தோலும், யானையின் தோலொடு புலியின் தோலும் அரையில் பொருந்தப் புனைந்து விளங்கும் நாதனே ! மூன்று மதில்களையுடைய உலோகக் கோட்டைகளைப் படையாகக் கொண்ட அவுணர்களை, அக்கோட்டைகளுடன் எரித்து சாம்பலாகுமாறு அழித்து இடபக்கொடியுடன் திகழும் வேத நாயகனே ! விகிர்தனே ! பரமனே ! தேவர்கள் எல்லாம் தொழுமாறு உமாதேவியுடன் புகலி நகரின்கண் அடியவர்களுக்கு நீவிர் அருள்புரிபவர் ஆயினீர்.

29. அடியவர் தொழுதெழ அமரர் ஏத்தச்
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகல்அல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே
புண்ணியர் புனிதா புகர்ஏற்றினை புகலிந்நகர்
நண்ணியனாய் கழல்ஏத்திட நண்ணகிலா வினையே.

தெளிவுரை : அடியவர்கள் தொழுது போற்றவும், தேவர்கள் ஏத்தி நிற்கவும் மேவும் ஈசனே ! துன்பம் விளைவிக்கும் கொடிய வினையைத் தீர்ப்பவனே ! தூமொழி நவிலும் உமாதேவியைத் திருமார்பில் பொருந்துமாறு வைத்த புண்ணியனே ! புனிதனே ! ஒளிமிக்க அழகிய இடபத்தை உடையவனே ! புகலி நகரில் வீற்றிருக்கும் பெருமானே ! தேவரீருடைய திருவடியைப் போற்றிட, வினைத் துயரானது மன்னுயிரைச் சாராது அருள் புரிபவர் நீவிரே ஆயினீர்.

30. இரவொடு பகலதாம் எம்மான் உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்தகையே
அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
இனமார்தரு தோளடர்ந்து இருந்தனை புகலியுளே.

தெளிவுரை : எம் பெருமானே ! இரவும் பகலும் உன்னைப் பரவிப் போற்றுகின்றேன். நினக்கு வழி வழியாக வந்த அடியவர் மரபில் வந்து, யான் அவ்வழியில் மேவும் அடிமை பூண்டவன். குரா மலரும் நறுங்கொன்றை மலரும் அணிந்த சடைமுடியில் அரவத்தைத் தரித்த ஆண்டகையே ! இராவணனுடைய தோளை நெரித்து, அன்னம் போன்ற மென்மையான நடையழகு பொருந்திய உமாதேவியாரை உடனாகக் கொண்டு, புகலி நகருள் வீற்றிருப்பவர் நீவிர்.

31. உருகிட உவகைதந்து உடலினுள்ளால்
பருகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனும் பூவுளானும்
பெருகிடும் அருள்எனப் பிறங்கெரியாய்
உயர்ந்தாய்இனி நீஎனை ஒண்மலரடி யிணைக்கீழ்
வயந்தாங் குறநல் கிடுமதிற் புகலிமனே.

தெளிவுரை : உள்ளத்தால் உருகிப் போற்றி வணங்கும் அடியவர்பால், அமுதாகச் சுரந்து பேரின்பம் புரிந்தருளும் பண்புடையவன், ஈசன். அப்பெருமான், திருமாலும், பிரமனும் தேடிக் காணும் செயலை முனைந்த ஞான்று பெருகித் தோன்றும் தீப்பிழம்பாய் உயர்ந்து ஓங்கியவன். புகலியின் நாதனாய் விளங்கும் அப்பெருமான், என்னை ஒளி மிக்க மலரடியின் கீழ் நனி விளங்குமாறு விரும்பி அருள் புரிவாராக.

32. கையினில் உண்பவர் கணிகை நோன்பர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவர் உரைகளைப் பொருள்எனாத
மெய்யவர் அடிதொழ விரும்பினனே
வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே.

தெளிவுரை : சாத்திர நெறியினின்று விலகிப் பொய்யுரைகளைப் பொருளாகக் கருதி வாழும் நெறியுடையவர்தம் உரைகளைத் கொள்ளாது, மெய்ம்மையுடைய சிவஞானிகளும், அடியவர்களும் தொழுது போற்ற, விரும்பி அருள் புரிபவனாகிய ஈசன், இடப வாகனத்தைக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், தேவர்கள் தொழுது போற்றும் புகலியின் மேவும் பெருங் கோயிலுள் அருள் திகழ வீற்றிருக்க ஏத்துமின்.

33. புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவர் அடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம் பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
நடலையவை இன்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.

தெளிவுரை : நல்வினைப் பயன் காரணமாகப் பெறும் புண்ணிய விளக்கத்தினால் உயர்ந்து மேவும் பெருமக்கள் தொழுகின்ற புகலி நகரில், தேவர்கள் தொழுகின்ற சிறப்புடன் திகழும் ஈசனை, நண்ணிய ஞானசம்பந்தன் திருவாய் மலர உரைத்த அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதி உரைக்க விளங்கி  மறுமையில் சிவலோகத்தை நண்ணுவார்கள். மற்றும் இப்பிறவியில் இடர் ஏதும் அற்றவராய்த் தவநெறியை எய்துவார்கள்.

திருச்சிற்றம்பலம்

262. திருவாவடுதுறை (அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

34. இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றுஎமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : பாற்கடலின்கண், அமுதத்தை கடைந்தெடுக்கும்போது தோன்றிய நஞ்சினை மிடற்றினில் அடக்கி வைத்துக் காத்தருளிய வேத நாயகனே ! முனைந்து ஆற்றும் செயலில், இடையூறு தோன்றித் துன்பம் நேர்ந்தாலும்; மனம் தடுமாற்றம் கொண்டு அத்தகைய செயலை மேவுதற்குத் தளர்ச்சியுற்றாலும்; எனது தீவினைப் பயன் காரணமாக, இன்னலும் பிணியும் தொடர்ந்து வந்தாலும் நான், உன்னுடைய திருக்கழலைக் தொழுது வணங்குபவன். அவ்வாறு உள்ள தன்மையில், எம்மை ஆட்கொள்ளும் தகைமை இதுவோ ! எமக்குத் தேவைப்படுகின்ற பொருளைத் தந்து அருள்புரியவில்லையானால், அது உமது திருவருளுக்கு அழகு ஆகுமா ! ஆவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே ! அருள்புரிவீராக.

35. வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : இம்மையில், மண்ணுலகத்தின் நன்மைகளை நுகர்ந்து மகிழ்கின்ற காலங்களிலும், மண்ணுலகத்திலிருந்து விடுபட்டுச் சாயும் தன்மையால் மடியும் காலத்திலும், தீவினைப் பயனால் வருந்தித் துன்புறும் காலத்திலும், மனம் போன போக்கில் சென்று, நற்பாதையிலிருந்து விலகிப் பாவக்குழியில் வீழ்கின்ற காலத்திலும், ஒளிமிக்க செஞ்சடையில் கங்கை திகழப் பிறைமதியைத் தரித்து விளங்கும் புண்ணியனே ! நான் உன்னுடைய திருவடியைப் பற்றி இருப்பவனே அன்றி, நின்னை மறப்பவன் அல்லன். ஆவடுதுறையுள் மேவும் அரனே ! எம்மை ஆட்கொண்டு விளங்கும் நீவிர் அருள்புரியும் பாங்கு தான் இதுவோ ! எமக்குத் தந்தருள்வது ஒன்று இல்லையெனில், அதுவோ உனது இனிய அருள் தன்மைக்குப் பொருத்தம் உடையது ! உனது இனிய அருளின் தன்மையானது அடியவர்களுக்கு வேண்டியவற்றை நன்கு ஈவது அல்லவா !

36. நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றுஎமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : கங்கையும், மணம் கமழும் கொன்றை மலரும் தரித்துக் கனன்று எரியும் நெருப்பைக் கையில் கொண்டு விளங்கும் ஈசனே ! ஆவடுதுறையின் அரனே ! நனவின்கண்ணும், கனவின்கண்ணும் உன்னுடைய நம்பிக்கைக்கு உகந்த திருநாமத்தை மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந்திலேன். எனக்குத் தாய்போன்று அன்பு செலுத்தும் பெருமையுடைய ஈசனே ! நமக்கு வேண்டிய பொருளைத் தராமல் இருப்பது உனது இனிய அருள் தன்மைக்குப் பொருந்துமாறு ஆகாது.

37. தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணைஒன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : மேரு மலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கணையாகத் தொடுத்துத் தீயனவாகிய முப்புரங்களை எரியுமாறு செய்த பரமனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! தேகத்தில் தோன்றும் பிணிவகையான தும்மல் போன்ற துயர் வந்துற்ற காலத்திலும், அவற்றின் உபாதைகளால் நலிவுற்ற போதும், சித்தம் கலங்காமல், உனது திருநாமத்தை எனது நாவானது நவிலும் தன்மையுடையது. அங்ஙனம் இருக்க எனக்கு அருள் புரியாது வாளா இருத்தல், உனது இனிய அருள் தன்மையின் மேன்மைக்குச் சிறப்பு ஆகுமோ ! எம்மை ஆட்கொள்ளும் பரிசு இத்தன்மையதோ !

38. கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
கைமயணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவா உனது இன்னருள் ஆவடு துறை அரனே.

தெளிவுரை : கொய்து அணியப் பெறும் நறுமணம் கமழும் மலர்களை, மகிழ்ந்து சடைமுடியில் சூடிய நீல கண்டத்தையுடைய மறையவனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! கையில் உள்ள பொருள்கள் யாவும் இழந்து நைந்த காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருளைப் போன்று குறைவுற்ற போதும், செம்மை விளங்கும் உமது திருவடியை அன்றி யான் சிந்தனை செய்ததில்லை. அங்ஙனமிருக்க, எமக்கு அருள்புரிந்து ஈவது ஒன்று இல்லை என்றால், அதுவோ உமது இனிய அருளுக்கு அழகாவது ! எம்மை ஆண்டு அருள் புரிவதும் இத்தன்மைத்தோ !

39. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் அடியலால் ஏத்தாதுஎன்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : ஐந்து தலைகளையுடைய அரவத்தை அரையில் கட்டி, நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் அணிந்து மேவும் சங்கரனே ! ஆவடுதுறையில் திகழும் அரனே ! கொடிய துன்பத்தால் அச்சம் கொண்டுற்றாலும், எம் தந்தையே ! உன் திருப்பெயரை அன்றி என்னுடைய நாவானது வேறு ஒன்றைச் சொல்லாது. அங்ஙனம் இருக்க, எமக்கு வேண்டியவற்றைத் தந்தருளாத பாங்கு, உனது இனிய அருட்குணத்திற்கு நன்றாகுமோ ! எம்மை ஆட்கொண்டு அருளும் பாங்கும் இதுவோ ! அருள் புரிவீராக.

40. வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாஉன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல்எழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : தனக்கு ஒப்புமையாகத் தன்னையே அன்றிப் பிறரைச் சொல்லுதற்கு இல்லாத சிறப்புக் கொண்ட மன்மதனை, அவனுடைய வடிவமானது அழியுமாறு விழித்து நோக்கி எரித்த ஈசனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! அப்பா ! வெம்மை கலந்து தோன்றித் தாக்குகின்ற கொடிய வினையானது பற்றித் தாக்கினாலும், உன் திருநாமத்தை அன்றி என்னுடைய நாவானது வேறொன்றைச் சொல்லாது. அங்ஙனமிருக்க, எமக்குத் தந்தருள்வது ஒன்றும் இல்லையெனில் உமது இனிய அருட்குணத்திற்கு அதுவோ இயல்பு ! எம்மை ஆட்கொண்டு அருள் புரியும் பெற்றியும் இதுதானோ !

41. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : பெருமையுடைய முடிவேந்தனாகிய இராவணனைக் கயிலை மலையின்கீழ் இருந்து துன்புற்று நலியுமாறு செய்த பெருமானே ! ஆவடுதுறையுள் மேவும் அரனே ! தீவினையின் வயத்தால் பெருந்துன்பமும், தேகத்தின் பிணியும் முன்னுற்று வருத்தினாலும், புகழ் மிக்கதாகவும் நன்மையே வழங்குவதாகவும் உள்ள உமது திருவடியை அல்லாது வேறு எதனையும் நான் சிந்தித்தது இல்லை. அங்ஙனம் இருக்க, எமக்கு எந்த ஒன்றையும் தரவில்லையாயின் அதுவோ உமது இனிய அருட் குணத்திற்கு ஒப்பது ! எம்மை ஆட்கொண்டு அருளும் பாங்கும் இதுவோ !

42. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் அளப்பதற்கு அரிய ஈசனே ! சுவை கொண்டு உணவு கொள்கின்ற நிலையிலும் அதன் கனவுத் தன்மையில் வயப்படாமலும், பசியின் களைப்பில் ஆழ்ந்திருப்பினும், அதன் சோர்வால் மெலியுறாதும், தன்னிலை மறந்து உறங்கும் காலத்திலும் அந்தராத்மாவை வெறுமனே உறங்கச் செய்யாது ஒளிமிக்க உனது திருக்கழலை மறவாதும் எமக்கு ஈந்தருள்வது ஒன்றும் இல்லையேல் அதுவோ உனது இனிய அருட் குணத்திற்கு உரியது ! எம்மை ஆட்கொண்டு அருள்கின்ற வழியும் இதுவோ !

43. பித்தொடு மயங்கியொர் பிணிவரினும்
அத்தாஉன் னடியலால் அரற்றாதுஎன்நாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

தெளிவுரை : புத்தரும் சமணரும் புறம்பான உரைகளை நவின்றாலும், அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், நின்னை வணங்குகின்ற பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தும் வழங்குகின்ற மாண்புடைய நாதனே ! ஆவடுதுறையில் மேவும் அரனே ! பித்தம் முதலான பிணிகளால் மயங்கும் நிலையுற்றாலும், உன்னுடைய திருநாமத்தை அல்லாது எனது நாவானது பிறவற்றைப் பேசாது. அங்ஙனம் இருக்க, அத்தனே ! எமக்கு ஈந்தருள்வது யாதொன்றும் இல்லையேல், அதுவோ உனது இனிய அருள் குணத்திற்கு அழகாவது ? எம்மை ஆட்கொள்ளும் வழியும் இதுவோ !

44. அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை எம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே.

தெளிவுரை : அலைகள் பெருகும் நீர் வளம் பொருந்திய ஆவடுதுறையில் வீற்றிருக்கும் சூலப்படையுடைய எம் ஈசனை, உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தர் மொழிந்த பெருமையுடைய தமிழ் மாலையாகிய  இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், வினை யாவும் நீங்கப் பெற்றவராய், விண்ணவர்தம் மேலான உலகத்தினை நோக்கிச் செல்பவர்கள் ஆவார்கள். கர்ம பூமியாகிய இம்மண்ணுலகில் மீளவும் பிறவியை அடையாது செம்மையுறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

263. திருப்பூந்தராய் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

45. தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன் தானே.

தெளிவுரை : தக்கன் மேற்கொண்ட தீய வேள்வியை, வீரபத்திரர் திருக்கோலம் தாங்கித் தகர்த்த ஈசன், பூந்தராய் மேவிய விமலன் ஆவன். அப்பெருமானுடைய பெருமை தாங்கிய திருவடியை வணங்கிப் போற்ற, மெய்யான கதி வாய்க்கும். அத்தகைய நன்மையைச் செய்பவன் சிவபெருமான்.

46. புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்உயர் வார்உள்கும் நன்னெறி
மூலம் ஆய முதலவன் தானே.

தெளிவுரை : அந்தணர்கள் கூறும் வேதங்களைக் கேட்டுப் பயின்ற கிள்ளைகள், அவ்வேதங்களால் போற்றும் பெருமையுடைய பூந்தராய் என்னும் பதியின்கண் கங்கை தரித்த விகிர்தனாகிய ஈசன் வீற்றிருக்க, அப்பெருமானுடைய திருவடியைத் தொழுது போற்றும் அடியவர்கள், உலகில் உயர்ந்து விளங்குவார்கள். அத்தகைய தன்மையில் தன்னை நினைத்து வணங்குமாறு செய்பவனும், முதற்பொருளாகவும் மூலப் பொருளாக விளங்குபவனும், ஈசனே ஆவன்.

47. வேந்த ராய்உல காள விருப்புறின்
பூந்த ராய்நகர் மேய வன்பொற்கழல்
நீதி யால்நினைந்து ஏத்தி உள்கிடச்
சாதி யாவினை யான தானே.

தெளிவுரை : அரச பதவியைப் பெற வேண்டும் என்று விருப்பம் உடையீராயின், பூந்தராய் நகரில் மேவும் ஈசனின் பொற்கழலை வேதாகம முறைப்படி வணங்கிப் போற்றித் துதிப்பீராக. அது வினையின் தாக்கத்தால் உண்டாகும் பிறவியைக் கெடுத்து பிறவாமையை நல்கும்.

48. பூசு ரர்தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி இறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே.

தெளிவுரை : பூவுலகின் தேவர் என்று சொல்லப்படும் அந்தணர்கள், வேதங்களை ஓதிப் போற்றும் பூந்தராய் மேவிய ஈசனின் திருவடியை ஏத்தி வணங்க, சிந்தையில் ஏற்படும் கலக்கம் முதலான குறைகள் தீரும். அத்தகைய பேற்றினை நல்குகின்ற இறைவன், சந்திரனைச் சடை முடியில் சூடிய எம் ஈசன் ஆவன்.

49. பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
எந்தை யாயஎம் மீசன் தானே

தெளிவுரை : எலும்பினை மாலையாகத் திருமேனியில் கொண்டு விளங்கும் ஈசன், பூந்தராய் என்னும் பதியில் வீற்றிருப்பவன். அப்பெருமானை மனம் ஒன்றி வணங்கிட, இப்பிறவியில் பற்றும் வினை யாவும் நீங்கும். அவ்வாறு வினையை வீழுமாறு செய்பவன் எந்தையாகிய ஈசனே ஆவன்.

50. பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞ கனே.

தெளிவுரை : நிலம், நீர் நெருப்பு ,காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களிலும் பொலிந்து விளங்குகின்ற ஈசன் பூந்தராய் என்னும் நகரில் வீற்றிருக்கும் நாதன் ஆவான். அப்பெருமானுடைய திருவடியை நாள்தோறும் ஏத்தி வணங்குகின்றவர்களுக்குப் பேரின்பம் பெருகும். அத்தகைய வளத்தைப் புரியும் கடவுள், கங்கை தங்கிய நீண்ட சடை முடியுடைய ஈசன் ஆவன்.

51. புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
பாவம் ஆயின தீரப் பணித்திடும்
சேவது ஏறிய செல்வன் தானே.

தெளிவுரை : புற்றில் வாழும் நாகத்தை அணிகலனாகக் கொண்டு, பூந்தராய் என்னும் நகரில் வீற்றிருக்கின்ற பரமனைப் பாடித் துதிக்கப் பாவமானது தீரும். அவ்வாறு தீரப் பணித்திடும் செல்வன் இடப வாகனத்தையுடைய ஈசனே.

52. போத தத்துரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்றஎம் பிஞ்ஞகனே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்த்திய ஈசன், பூந்தராய் என்னும் நகரில் விரும்பி வீற்றிருப்பான். அப்பெருமான், திருப்பாத விரல் ஒன்றினால் இராவணனுடைய வலிமையினை அழித்துப் பின்னர் அருள் செய்து உகந்த பிஞ்ஞகனும் ஆவன்.

53. மத்தம் ஆன இருவர் மருவொணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யும் தானே.

தெளிவுரை : தம்முள் பெரியவர் யார் என்பதை அறிய வேண்டும் என்று செருக்குற்று மேவிய திருமாலும், பிரமனும் காண முடியாதவராகி, உயர்ந்து விளங்கிய ஈசன் வீற்றிருக்கும் பூந்தராய் என்னும் நகரை, அடியவராய்ச் சென்றடைவீராக. உமது தீவினை யாவும் கெடுமாறு செய்தருள்பவன் அப்பெருமானே ஆவன்.

54. பொருத்த மில்சமண் சாக்கியப் பொய்கடிந்து
இருத்தல் செய்தபிரான் இமை யோர்தொழப்
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி எம்இ றையே.

தெளிவுரை : பொருந்துமாறு உரை செய்யாத சமணர் சாக்கியர்களின் பொய்மையைக் கடிந்து ஒதுக்கித் தேவர்கள் தொழுது ஏத்துமாறு எக்காலத்திலும் விளங்குகின்ற கடவுள், பூந்தராய் என்னும் நகரில் இளமையான மானைக் கரத்தில் ஏந்தி விளங்கும் ஈசன். அப்பெருமானைப் போற்றுவீராக.

55. புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல்எம் அடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண்டு ஏத்தி வாழும்நும்
பந்த மார்வினை பாறிடுமே.

தெளிவுரை : இயல்பாகவே அருள் உணர்வு உடையவராய், நன்மைசெய் குணத்தவராய், முடிவில்லாத தன்மையில் எல்லாக் காலத்திலும் விளங்கிப் பூந்தராய் என்னும் நகரில் வீற்றிருக்கும் எம் அடிகளைத் திருஞானசம்பந்தர் ஓதி அருளிய இத்திருப்பதிகத்தைக் கொண்டு ஏத்தி வாழ்வீராக. நும்மைப் பற்றியுள்ள வினை யாவும் தீர்ந்து துன்பம் இல்லாத நல்வாழ்க்கை உண்டாகும்.

திருச்சிற்றம்பலம்

264. திருக்கொள்ளம்பூதூர் (அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

56. கொட்ட மேகமழும் கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள நம்பனே.

தெளிவுரை : நல்லருள் மணம் கமழும் கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலத்தின்கண் திருக்கூத்து ஆடும் ஈசனை நினைத்துப் போற்றுகின்ற தன்மையால் இந்த ஓடமானது தனக்குத் தானே உந்திச் செல்வதாக. ஈசனே ! என் நம்பனே ! உம்மைச் சிந்தனை செய்து தியானித்து மகிழும் அடியவர்கள், நின்னைத் திருக்கோயிலின்கண் கண்டு தொழுமாறு அருள்புரிவீராக.

57. கோட்ட கக்கழநிக் கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : நீர் நிலைகளும் கழனிகளும் கொண்டு மேவும் கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கும் ஈசனை, நெஞ்சமானது நினைத்து மகிழ, இந்த ஓடமானது தனக்குத்தானே உந்தி முன்னோக்கிச் செல்வதாக, ஈசனைத் தொழுது போற்ற, அப்பெருமான் நல்குகின்ற வழியாகும்.

58. குலையினார் தெங்குசூழ் கொள்ளம் பூதூர்
விலையின் ஆட்கொண்ட விகிர்தனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : குலைகள் விளங்கும் தென்னை மரங்கள் சூழ்ந்த கொள்ளம்பூதூரில் பெருமையுடைய பாங்குடன் என்னை ஆட்கொண்ட விகிர்தனாகிய ஈசனை நினைத்துப் போற்ற, இந்த ஓடமானது உந்திச் செல்வதாக. இது ஈசனைச் சிந்திப்பவர்களுக்கு அப்பெருமான் நல்குகின்ற வழியாகும்.

59. குவளை கண்மலரும் கொள்ளம் பூதூர்த்
தவற நீறணி தலைவனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : குவளை மலர் திகழும் கொள்ளம்பூதூரில் திருவெண்ணீறு அணிந்து மேவும் தலைவனாகிய ஈசனை நினைத்து ஏத்த, இந்த ஓடமானது உந்திச் செல்வதாக. இது சிவபெருமானைச் சிந்தித்து வழிபடுகின்றவர்களுக்கு, அப்பெருமான் நல்கும் வழியாகும்.

60. கொன்றைபொன் சொரியும் கொள்ளம் பூதூர்
நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : பொன் நிறம் கொண்ட கொன்றை மலர்கள் மரத்திலிருந்து உதிரும் தன்மையானது, பொன் சொரிந்தாற்போன்று திகழும் சிறப்புடையது கொள்ளம்பூதூர். ஆங்கு வீற்றிருக்கும் மென்மையான சடையை உடைய ஈசனை நினைத்து வணங்க, இந்த ஓடமானது தானாகவே உந்திச் செல்வதாகுக. ஈசன், தன்னைச் சிந்திக்கும் அடியவர்களுக்கு நல்கும் அருள் இத்தகையது ஆகும்.

61. ஓடம்வந் தணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : திருநடம் புரியும் நாதனாகிய ஈசனை நினைக்க, ஓடமானது கொள்ளம்பூதூர் என்னும் ஊரின்கண் வந்து அடைய, உந்திச் செல்லுக. சிவபெருமானைத் தியானிப்பவர்களுக்கு அப்பெருமான் நல்குகின்ற வழியும் அதுவே.

62. ஆறுவந்து அணையும் கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : ஆறு சூழ்ந்துள்ள கொள்ளம்பூதூரில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் இறைவனை எண்ணித் துதிக்க, ஓடமானது உந்திச் செல்வதாக. ஈசன் தமது அடியவர்களுக்கு நல்குகின்ற அருட்பேறும் இஃதே ஆகும்.

63. குரக்கினம் பயிலும் கொள்ளம்பூதூர்
அரக்கனைச் செற்ற ஆதியை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : குரங்குகள் மரங்களில் ஆடிக் குதிகொள்ள, கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற ஈசன், இராவணனைச் செற்று அடர்த்த பெருமான். அப்பரமன், ஆதிமூலமாக விளங்குபவன். அவ் இறைவனை எண்ணித் துதிக்கும் தன்மையில், ஓடமானது உந்திச் செல்வதாக. தமது அடியவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் ஈசன், அருள் புரியும் வழியும் இதுவே.

64. பருவ ரால் உகளும் கொள்ளம் பூதூர்
இருவர் காண்பரி யான்கழல் உள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : மீன்கள் உகளும் கொள்ளம்பூதூரில் திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியவனாகிய ஈசன் திருக்கழலை எண்ணித் தொழும் பாங்கால், ஓடமானது உந்திச் செல்வதாக, அவ்வாறு சிந்தையுடைய அடியவர்களுக்கு அருள் புரியும் ஈசன் நல்குவதும் இதுவே.

65. நீரகக் கழனிக் கொள்ளம் பூதூர்த்
தேரமண் செற்ற செல்வனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

தெளிவுரை : தேரரும் அமணரும் பகைத்துப் பேசும் செல்வனாகிய நீர் வளம் மிக்க கழனிகளையுடைய கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கும் ஈசனை நினைந்து வணங்க, இந்த ஓடமானது தானாகவே உந்திச் செல்வதாக. ஈசனைச் சிந்தையில் கொண்டு மேவும் அடியவர்களுக்கு அப்பெருமான் நல்கும் அருள் வண்ணமும் இதுவே.

66. கொன்றை சேர்சடை யான் கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்று சொல் மாலைகொண்டு ஏத்தவல் லார்போய்
என்றும் வானவ ரோடுஇருப் பாரே.

தெளிவுரை : கொன்றை மலர் தரித்த சடை முடியுடைய ஈசன் வீற்றிருக்கும் கொள்ளம்பூதூரினை, நற்புகழ் இத்திருப்பதிகத்தை ஓதுகின்ற அன்பர்கள், வானவர் பெருமக்களுடன் எஞ்ஞான்றும் மகிழ்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

265. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

67. கண்ணுத லானும்வெண் ணீற்றினானும் கழலார்க்கவே
பண்ணிசை பாடநின்று ஆடினானும் பரஞ்சோதியும்
புண்ணிய நான்மறை யோர்கள்ஏத் தும்புகலிந் நகர்ப்
பெண்ணினல் லாளொடும் வீற்றிருந்த பெருமானன்றே.

தெளிவுரை : ஈசன், நெற்றியில் ஒரு கண்ணுடையவன்; திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி விளங்குபவன்; திருப்பாதத்தில் மேவும் வீரக்கழல் ஒலிக்கப் பண்ணின் வழி காணும் இசைப்பாடல் பாட நின்று திருநடனம் புரிபவன்; யாங்கணும் விளங்கும் சோதியாய்த் திகழ்பவன். அப்பெருமான் புண்ணியம் செய்த தன்மையால் வேதம் பயின்ற மறையவர்கள் ஏத்தும் புகலி நகரில் வீற்றிருக்கும் பெண்ணில் நல்லாளாகிய உமாதேவியோடு மேவும் இறைவனே !

68. சாம்பலோ டுந்தழல் ஆடினானும் சடையின்மிசைப்
பாம்பினோ டும்மதி சூடினானும் பசுவேறியும்
பூம்படு கல்லிள வாளைபாயும் புகலிந்நகர்க்
காம்பன தோளியொ டும்மிருந்த கடவுளன்றே.

தெளிவுரை : ஈசன், மகாப் பிரளய காலத்தில், உலகம் யாவும் நெருப்புமயமாய்த் தோன்றிய நிலையில் அவற்றின் இடையே அழல் ஏந்தி ஆடியவன்; சடை முடியின்மீது அரவத்துடன் சந்திரனும் விளங்குமாறு சூடியவன்; இடப வாகனத்தில் அமர்ந்திருப்பவன். அப்பெருமான், மலர்ப்பொய்கையில் வாளை பாயும் புகலியில், மூங்கிலை ஒத்த தோளுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் கடவுள்.

69. கருப்புநல் லார்சிலைக் காமன்வேவக் கடைக்கண்தானும்
மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங்கும் புகலிந்நகர்
விருப்பினல் லாளொடும் வீற்றிருந்த விமலனன்றே.

தெளிவுரை : ஈசன், கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன் எரியுமாறு நெற்றிக் கண்ணைத் திறந்தவன்; நீண்ட வலிமையான தந்தத்தையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட மணவாளன். அப்பெருமான் மலைபோன்று உயர்ந்து மேவும் மாட மாளிகைகளையுடைய புகலி நகரில் உமாதேவியோடு வீற்றிருக்கும் விமலன் ஆவன்.

70. அங்கையி லங்குஅழல் ஏந்தினானும் அழகாகவே
கங்கையைச் செஞ்சடை சூடினானும் கடலின்னிடைப்
பொங்கிய நஞ்சமுது உண்டவனும்புக லிந்நகர்
மங்கைநல் லாளொடும் வீற்றிருந்த மணவாளனே.

தெளிவுரை : அழகிய கையில் நெருப்பினை ஏந்தியவனாகிய ஈசன், கங்கையை அழகு திகழச் செஞ்சடையில் வைத்துப் பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமென உட்கொண்டு, புகலி நகரில் மங்கை நல்லாளாகிய உமாதேவியோடு வீற்றிருக்கும் மணவாளன் ஆவன்.

71. சாமநல் வேதனும் தக்கன்றன் வேள்வி தகர்த்தானும்
நாமநூ றாயிரம் சொல்லிவா னோர்தொழு நாதனும்
பூமல்கு தண்பொழில் மன்னும்அந் தண்புகலிந்நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந்த குழகனன்றே.

தெளிவுரை : ஈசன், சாம வேதத்தை விரித்த பரமன்; தக்கனின் தீய வேள்வியைத் தகர்த்த தலைவன் ; நூறாயிரம் (இலட்சம்) திருநாமங்களைக் கொண்டு தேவர்களால் தொழப்படுபவன். அப்பெருமான், பூக்கள் மல்கி விளங்கும் பொழில்கள் மேவும் குளிர்ச்சி மிக்க புகலியில் உமாதேவியோடு வீற்றிருக்கும் குழகன்.

72. இரவிடை ஒள்ளெரி ஆடினானும் இமையோர்தொழச்
செருவிடை முப்புரம் தீயெரித்த சிவலோகனும்
பொருவிடை ஒன்றுஉகந்து ஏறினா னும்புக லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழக னன்றே.

தெளிவுரை : நள்ளிரவில் மயானத்தில் திருக்கூத்து புரிந்தவனும், தேவர்கள் தொழுது போற்றுமாறு முப்புரமும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவனும், சிவலோக நாதனும், இடப வாகனத்தில் உகந்து அமர்ந்தவனும், புகலி நகரின்கண்  அரவம் போன்ற இடையுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் அழகனாகிய சிவபெருமானே அல்லவா !

73. சேர்ப்பது திண்சிலை மேவினானும் திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்ப்
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந்த பரம னன்றே.

தெளிவுரை : திண்மையுடன் மேவும் கயிலை மலையில் மேவி விளங்குபவனும், மார்க்கண்டேயர் மீது சினந்து வந்த கொடிய கூற்றுவனை உதைத்தவனும், வேள்விப் புகையானது மேலெழுந்து மாடமாளிகைகளில் சூழ்ந்து ஓங்கும் புகலி நகரில், உமாதேவியுடன் வீற்றிருப்பவனும் ஈசனேயன்றோ !

74. கல்நெடு மால்வரைக் கீழ்அரக்கன் னிடர்கண் டானும்
வில்நெடும் போர்விறல் வேடனாகி விசயறகு ஒரு
பொன்நெடுங் கோல்கொடுத் தானும்அந் தண்புக லிந்நகர்
அன்னமன் னந்நடை மங்கையொடும் அமர்ந் தானன்றே.

தெளிவுரை : பெருமை மிக்க கயிலை மலையின்கீழ் இராவணனை இடம் செய்தவனும், வில்லேந்திப் போர் செய்யும் வீரம்மிக்க வேட்டுவ வடிவம் தாங்கி, அருச்சுனருக்கு உயர்ந்த பாசுபதம் என்னும் கணையைக் கொடுத்தவனும், புகலி நகரில் மேவும் உமாதேவியை உடனாகக் கொண்டு உறைபவன் ஈசன் அல்லவா !

75. பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித்
தன்னைஇன் னான்எனக் காண்பரிய தழற் சோதியும்
புன்னை பொன்றாது உதிர் மல்கும் அந்தண் புகலிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந்த விமலனன்றே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரியவனாகிய நெருப்பின் சோதியும், புன்னை மரத்திலிருந்து பொன் போன்ற தாதுக்கள் உதிர்ந்து மேவும் குளிர்ச்சி மிக்க புகலியில் திகழும் உமாதேவியுடன் வீற்றிருக்கும் விமலனாகிய ஈசன் அல்லவா !

76. பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
தொண்டரும் காதல்செய் சோதியாய சுடர்ச் சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலிந் நகர்
வண்டமர் கோதையொடும் இருந்த மணவாளனே.

தெளிவுரை : அசோக மரத்தையும் அரச மரத்தையும் போற்றும் சமணரும் சாக்கியரும் சொல்லும் உரைகளை ஏற்காது, தொண்டர்கள் விரும்பி ஏத்தும் சோதிச்சுடராய் விளங்குகின்ற ஈசன், தாமரை மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலியில், உமாதேவியோடு வீற்றிருக்கும் மணவாளன் ஆவன்.

77. பூங்கமழ் கோதையொடும் இருந்தான் புகலிந்நகர்ப்
பாங்கனை ஞானசம் பந்தன் சொன்னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய ஆதியாக இசை வல்லவர்
ஓங்கம ராவதியோர் தொழச்செல்வதும் உண்மையே.

தெளிவுரை : பூவின் மணம் கமழ்கின்ற உமாதேவியோடு வீற்றிருக்கும் புகலி நகர் நாதனாகிய ஈசனை, ஞான சம்பந்தன் சொன்ன இத் திருப்பதிகத்தினைத் திருத்தலத்தில் மேவும் ஈசனாகவே பாவித்து, இசையுடன் ஓத வல்லவர்கள், தேவர்களால் தொழுது போற்றப்படுவார்கள். இது உண்மை.

திருச்சிற்றம்பலம்

266. திருக்கடவூர் வீரட்டம் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

78. சடையுடை யானும்நெய் யாடலா னும்சி கோவண
உடையுடை யானும் மையார்ந்த ஒண்கண்உமை கேள்வனும்
கடையுடை நன்னெடு மாடம்ஓங் குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தரன்அல்லனே.

தெளிவுரை : சடை முடியுடையவனும், நெய் முதலான பசுவின் ஐந்து பொருள்களை அபிடேகப் பொருளாகக் கொள்பவனும், சரிந்த கோவண ஆடையுடையவனும், மை திகழும் கண்ணொடு விளங்கும் உமாதேவியின் துணைவனும், நெடிய மாடங்களை உடைய கடவூரில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலாகிய வீரட்டானத்து அரன் அல்லவா !

79. எரிதரு வார்சடை யானும்வெள் ளைஎருது ஏறியும்
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந்து ஏத்தவே
கரிதரு காலனைச் சாடினா னும்கட வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : நெருப்புப் போன்ற சிவந்த நீண்ட சடை முடியுடையவனும், வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனும். சிறப்பான மலராக விளங்கும் கொன்றை மலரைப் புனைந்து ஏத்தி வழிபட்ட மார்க்கண்டேயருக்கு அருள் புரியும் பாங்கில், கரிய கோலத்தையுடைய காலனைக் காலால் உதைத்தவனும் ஆகிய ஈசன், கடவூரின்கண் தொல்புகழ் விளங்கும் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் அரன் அல்லவா !

80. நாதனும் நள்ளிருள் ஆடினா னும்நளிர் போதின்கண்
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியும்
காதலர் தண்கட வூரினா னும்கலந்து ஏத்தவே
வேதம தோதியும் வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : எல்லா உலகங்களுக்கும் நாதனாகவும், நள்ளிருளில் நடனம் புரிபவனாகவும், அடியவர்களின் இதயத் தாமரையில் வீற்றிருப்பவனாகவும், புலித் தோலை உடையாகக் கொண்டு விளங்குபவனாகவும், இடப வாகனத்தில் ஏறி அன்பர்கள் மேவிய கடவூரில் விளங்குபவனாகவும் உள்ள ஈசன், யாவரும் ஏத்தி வணங்குமாறு வேதம் விரித்தோதிய வீரட்டானத்தில் திகழும் அரன் அல்லவா !

81. மழுவமர் செல்வனும் மாசிலாத பல பூதமுன்
முழவொலி யாழ்குழல் மொந்தை கொட்ட முதுகாட்டிடைக்
கழல்வலர் கால்குஞ்சித் தாடினானும் கடவூர்தனுள்
விழவொலி மல்கிய வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : மழுப்படையைக் கரத்தில் கொண்ட மேவும் செல்வனாகிய ஈசனைப் பரவிப் போற்றும் எக்குற்றத்தின்பாலும் மேவாது திகழும் பூதகணங்கள் முழவு ஒலிக்கவும், யாழும் குழலும் இசைக்கவும், மொந்தை என்னும் கருவி கொட்டவும் விளங்குகின்றன. சுடுகாட்டின் இடையில் இருந்து கழல்கள் ஒலிக்கத் திருப்பாதத்தை நன்கு வளைத்து ஆடும் அப்பெருமான் கடவூரின்கண் திருவிழாக்கள் பெருகும் வீரட்டானத்தில் அரன் அல்லவா !

82. சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னும்சுழல் வாயதோர்
படமணி நாகம் அரைக் கசைத்தபர மேட்டியும்
கடமணி மாவுரித் தோலினா னும்கட வூர்தனுள்
விடமணி கண்டனும் வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : சுடர் விடும் மணி போன்ற உருத்திராக்கம் அணிந்து திருவெண்ணீறு தரித்தவனும், படம் கொண்டு விளங்கும் நாகத்தை அரையில் கட்டிய பரமேட்டியும், மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவனும், கடவூரில் மேவி நஞ்சினை மணி போன்று கண்டத்தில் கொண்டு திகழ்பவனும், வீரட்டானத்தில் வீற்றிருக்கும் அரன் அல்லவா !

83. பண்பொலி நான்மறை பாடியாடிப் பலவூர் கள்போய்
உண்பலி கொண்டுழல் வானும் வானின் னொளி மல்கிய
கண்பொலி நெற்றிவெண் திங்க ளானும் கடவூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டானத்தரன் அல்லனே.

தெளிவுரை : நல்ல பண்முறையில் ஓதப் பெறும் நான்கு வேதங்களையும் பாடிப்பல ஊர்களில், கபாலம் ஏந்திப் பிச்சை கொண்டு உழல்பவனும், வானில் ஒளிரும் சந்திரனைத் தரித்தும், நெற்றியில் நெருப்புக் கண் உடையவனும், கடவூரில் திருவெண்ணீறு பூசி விளங்கும் வீரட்டானத்து அரன் அல்லவா !

84.செவ்வழ லாய்நில னாகிநின்ற சிவமூர்த்தியும்
முவ்வழல் நான்மறை ஐந்துமா யமுனி கேள்வனும்
கவ்வழல் வாய்க் கத நாகமார்த் தான்கட வூர்தனுள்
வெவ்வழல் ஏந்துகை வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : ஈசன், செவ்வழலாகிய நெருப்பாகவும் நிலமாகவும் விளங்கும் சிவமூர்த்தியாய் விளங்குபவன்; ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி எனப்படும் மூவகையான நெருப்பாய்த் திகழ்பவன்; இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்களாய் மிளிர்பவன்; ஐவகையான ஞான வேள்வியாகிய ஞானநூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என ஐந்தும் ஆற்றும் முனிசிரேஷ்டர்களின் துணைவனாய் மேவுபவன். அப்பெருமான் கொடிய நஞ்சுடைய நாகத்தை அணிந்தவனாய்க் கடவூரின்கண் வெம்மையான நெருப்பினைக் கரத்தில் ஏந்தி விளங்கும் வீரட்டானத்து அரன் அல்லவா !

85. அடியிரண் டோருடம் பைந்நான்கிரு பதுதோள்தச
முடியுடை வேந்தனை மூர்க்கழித்த முதல் மூர்த்தியும்
கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வூர்தனுள்
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : ஓர் உடலில் இரண்டு கால்களும் இருபது தோள்களும் பத்துத் தலைகளும் உடைய இராவணனுடைய மூர்க்கத் தன்மையினை அழித்த, முதற்பொருளாகிய மூர்த்தி நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த குளிர்ச்சி மிக்க கடவூரில், பிரம கபாலம் ஏந்தி உள்ள அவன், வீரட்டானத்து அரன் அல்லவா !

86. வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண்
புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந்து தேத்தவே
கரைகடல் சூழ்வையம் காக்கின்றா னுங்கட வூர்தனுள்
விரை கமழ் பூம்பொழில் வீரட்டானத்தரன் அல்லனே.

தெளிவுரை : கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களைக் காத்த திருமாலும், குற்றமற்ற தாமரைமலரின் மீது விளங்கும் நான்முகனும் போற்றுமாறு இவ்வுலகத்தைக் காத்தருள்பவனாகிய ஈசன், கடவூரின்கண், பூம்பொழில் மேவும் வீரட்டானத்தில் மேவும் அரன் அல்லவா !

87. தேரரும் மாசுகொள் மேனியா ரும்தெளி யாததோர்
ஆரரும் சொற்பொரு ளாகிநின்ற எமது ஆதியான்
காரிளங் கொன்றைவெண் திங்களானும் கடவூர்தனுள்
வீரமும் சேர்கழல் வீரட்டா னத்தரன் அல்லனே.

தெளிவுரை : தேரர்களும் சமணர்களும் தெளிவு கொண்டு அறிவதற்கு அரிய சொற்பொருளாகிய எமது ஆதிபிரானாகிய ஈசன், கார்காலத்தில் மலரும் கொன்றை மலரைத் தரித்துத் திங்களைச் சடைமுடியில் சூடிக் கடவூரில் வீரக்கழல் விளங்க மேவும் வீரட்டானத்து அரன் அல்லவா !

88. வெந்தöண் ணீறணி வீரட்டானத்துறை வேந்தனை
அந்தணர்தம் கடவூருளா னைஅணி காழியான்
சந்தமெல் லாம்அடிச் சாத்தவல்ல மறைஞானசம்
பந்தன செந்தமிழ் பாடியாடக் கெடும் பாவமே.

தெளிவுரை : வீரட்டானத்தில் உறைகின்ற திருவெண்ணீறு தரித்து மேவும் இறைவன், மறையவர்கள் விளங்கி மேவும் கடவூரில் திகழ்பவன். அப்பெருமானைச் சந்தப் பாடல்களால் உரைக்கவல்ல, காழியில் மேவும் ஞானசம்பந்தன், போற்றி உரைத்த செந்தமிழ்ப் பாமாலையாகிய இத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிப் பக்தியால் கசிந்துருகித் தன்னை மறந்து விளங்கும் அன்பர்களின் பாவம் யாவும் கெடும். இது வினை யாவும் தீரும் என உரைப்பதாயிற்று.

திருச்சிற்றம்பலம்

267. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

89. கேள்வியர் நாள்தொறும் ஓதுதல் வேதத்தர் கேடிலா
வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழி மிழலையார்
வாழியர் தோற்றமும் கேடும்வைப் பாருயிர்கட்கெலாம்
ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட்கு அணியரே.

தெளிவுரை : கேள்வி ஞானத்தால் நாள்தொறும் பயிலும் வேதத்தை ஓதி, ஐவகையான வேள்விகளை ஆற்றிஒழுகுகின்ற அந்தணர்கள் ஏத்துகின்ற வேதநாதனாய், வீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான், மன்னுயிர்க்கு உலகில் பிறந்தும், நீத்தும் அடைகின்ற சரீரத்தைத் தருபவர்; உயிரால் அறியப்படாத தன்மையில் ஆழ்ந்து விளங்குபவர்; தனது திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு நெருக்கமானவர்.

90. கல்லினற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழி மிழலையார்
நல்லினத் தார்செய்த வேள்வி செகுத்தெழு ஞாயிற்றின்
பல்லனைத் தும்தகர்த் தார்அடியார் பாவ நாசரே.

தெளிவுரை : மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழும் ஈசன், மென்மையான இனத்தினராகிய அந்தணர்கள் விரும்பிப் போற்றுகின்ற வீழிமிழலையில் விளங்குபவர். அப்பெருமான் தீய நோக்கில் செய்யப் பெற்ற தக்கனது யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களை வாட்டியவர். அவர், அடியவர்களின் பாவத்தைப் போக்கும் பாவநாசகர்.

91. நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண்டு அந்தகனைச்செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.

தெளிவுரை : ஈசன், நஞ்சினை உட்கொண்ட கருமையான கண்டத்தை உடையவர்; அந்தகா சூரனை வதைத்த சூலப் படையுடையவர்; திருவீழிமிழலையில் வீற்றிருப்பவர்; மை திகழும் கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகம் கொண்டு விளங்குபவர்; கங்கையை அபிடேகமாகக் கொள்ளும் சிறப்புடன் சிவந்த சடை முடியுடையவர். அப்பெருமானைப் போற்றி வணங்கக் கொடிய வினை யாவும் மாயும்.

92. கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடம் சூலம் தமருகம்
அலையிலங் கும்புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே.

தெளிவுரை : மான், மழுப்படை யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் ஆகியன கொண்டு மணிமாடங்கள் திகழும் வீழிமிழலையில் வீற்றிருக்கும் ஈசன், பிறைச் சந்திரன் சடைமுடியில் திகழச் சூலம், எலும்பு மாலை, தமருகம், கங்கை, இடபக் கொடி ஆகியனவும் கொண்டு விளங்குபவர். அப்பெருமான் அடியவர்களுக்கும் அவ்வடிவத்தின் பாங்கினைச் செய்விப்பவர்.

93. பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே
வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழி மிழலையார்
முறைமுறை யாலிசை பாடுவார் ஆடிமுன் தொண்டர்கள்
இறையுறை வாஞ்சியம் அல்லது எப்போதும் என் உள்ளமே.

தெளிவுரை : ஈசன், பிறைச் சந்திரனைச் சூடிய சிவந்த சடை முடியுடையவர்; இடப வாகனத்தை உடையவர்; பிச்சை எடுப்பதை விரும்பித் தெருக்களில் தினந்தோறும் பலியேற்றுத் திரியும் வீழிமிழலையார். அப்பெருமான், பண்முறைப்படி இசைபாடுகின்றவர்கள், தம்மை மறந்து பக்திப் பரவசத்தினால் ஆட, அவர்தம் இதயத் தாமரையில் வீற்றிருப்பவர். அதனை அல்லாது எனது உள்ளம் பிரிதொன்றை நாடாது.

94. வசையறு மாதவங் கண்டு வரிசிலை வேடனாய்
விசையனுக் கன்றருள் செய்தவர் வீழி மிழலையார்
இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்ல வடமிட்டுத்
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே.

தெளிவுரை : குற்றமில்லாத சிறப்பான தவவேடத்தைப் பூண்டு, தவம் மேற்கொண்ட அர்ச்சுனருக்கு, அழகிய வில்லை ஏந்திய வேடனாய்க் கோலம் தாங்கி அருள் நல்கி வீழிமிழலையில் வீற்றிருக்கும் ஈசன், தன்னை வாயாரப் பக்திப் பெருக்கால் பாடுகின்ற அடியவர்கள்; ஈசனின் திருப்புகழை இயற்றமிழால் போற்றி உரைத்தும், கேட்டும் மகிழும் அன்பர்கள்; யோக முத்திரையில் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு புலன்களை அடக்கித் திசை நோக்கித் தொழுது போற்றுபவர்கள் ஆகியோர்தம் சித்தத்தில் வீற்றிருப்பவர்.

95. சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நன் மூவிரு தொன்னூலர்
வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழி மிழலையார்
காடரங் காவுமை காணவுண் டத்துஇமை யோர்தொழ
நாடகம் ஆடியை ஏத்தவல் லார்வினை நாசமே.

தெளிவுரை : ஈசன், தேவர்களால் காண முடியாத தொலைவில் இருப்பவர்; ஆறு அங்கங்களையும் கற்று விளங்கும் பூவுலகின் தேவர்களாகிய அந்தணர் பெருமக்களுக்கு வீட்டுலகத்தை அளிக்கும் பாங்குடையவர்; அவர், மூத்தீயராய், நான்கு வேதத்தினராய் வீழிமிழலையில் விளங்குபவர்; அப்பெருமான், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு, உமாதேவியார் கண்டு மகிழுமாறு எல்லா அண்டங்களிலும் திகழும் தேவர்கள் தொழ, திருநடம்புரிபவர்; அத்தகைய இறைவனை ஏத்தி வணங்கும் அடியவர்கள் வினை யாவும் அழியும்.

96. எடுத்தவன் மாமலைக் கீழஇ ராவணன் வீழ்தர
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழி மிழலையார்
படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்
கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழக்குறைவு இல்லையே.

தெளிவுரை : இராவணன், அவன் எடுத்த கயிலை மலையின்கீழ் கிடந்து அலறுமாறு விடுத்து, அவன் பாடும் இசை கேட்டு அருள் புரிந்த வீழிமிழலையில் வீற்றிருக்கும் ஈசன், காலனைக் காலால் உதைத்து அழித்துத் தன்பால் சார்ந்து திகழ விளங்கும் பாலனாகிய மார்க்கண்டேயருக்குப் பேரின்பத்தைப் கொடுத்தனர். அப் பெருமானைத் தொழுது போற்றும் அடியவர்களுக்கு, நன்மைகளை தவிர குறைவு ஏதும் உண்டாகாது.

97. திக்கமர் நான்முகன் மால்அண்ட மண்டலம் தேடிட
மிக்கமர் தீத்திரளாயவர் வீழி மிழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும்
நக்கர்தந் நாம்ந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.

தெளிவுரை : நான்கு திக்குகளிலும் முகங்கொண்டு மேவும் பிரமனும் திருமாலும் வானத்திலும் பூமிக்கடியிலும் தேடி ஞான்று, மிகுந்து எழும் தீப் பிழம்பு ஆகியவர் வீழிமிழலை நாதர். அப்பெருமான் சொக்கு எனப்படும் ஒருவகைத் திருக்கூத்து ஆடியும், பாடியும் பூதகணங்கள் சூழ விளங்கும் திகம்பரராய்க் காட்சி நல்கியவர். அவர் திருநாமமாவது நமச்சிவாய என்பர், சிவஞானியர்.

98. துற்றரையார்துவர் ஆடையர் துப்புர பொன்றிலா
வெற்றரை யார்அறி யாநெறி வீழி மிழலையார்
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான்
மற்றறி யாஅடி யார்கள்தம் சிந்தையுள் மன்னுமே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் அறியாத நெறியில் விளங்கும் பெருமான் வீழிமிழலையில் வீற்றிருக்கும் நாதர். சொல்லுக்கு அப்பால் விளங்கும் உண்மைப் பொருளை உணர்த்தும் அருள் ஒளியாக விளங்கி, அடியவர்தம் சிந்தையில் நன்கு காணும் வண்ணம் மிகுந்த சோதிச் சுடராய் விளங்குபவரும் அப்பெருமானே ஆவர்.

99. வேதியர் கைதொழு வீழி மிழலைவி ரும்பிய
ஆதியை வாழ்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்ஆய்ந்து
ஓதிய ஒண்தமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
மாதியப் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.

தெளிவுரை : மறையவர்கள் தொழுது போற்றும் வீழி மிழலையில் வீற்றிருக்கும் ஈசனை, பொழில் திகழும் காழியுள் விளங்கும் ஞானசம்பந்தர் ஆய்ந்து ஓதிய செம்மையான இத்தமிழ் மாலையை நன்கு போற்றி உரைப்பவர்கள், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் ஈசனின் திருவடி மலரில் சேர்ந்து மிளிரும் வல்லமை பெற்றவர் ஆவார்கள். இது, முத்திப் பேறு வாய்க்கும் என உணர்த்தப் பெற்றது.

திருச்சிற்றம்பலம்

268. திருஇராமேச்சுரம்

திருச்சிற்றம்பலம்

100. அலைவளம் தண்மதி யோடய லேஅடக் கிஉமை
முலைவளர் பாக முயங்கவல்ல முதல்வன்முனி
இலைவளம் தாழைகள் விம்முகானல் இராமேச்சுரம்
தலைவளர கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.

தெளிவுரை : கங்கையையும் சந்திரனையும் ஒருசேரச் சடை முடியில் இருக்குமாறு செய்து, உமாதேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகப் பொருந்த வைத்த முதல்வன், மடல்களைப் பெருக்கி ஓங்கும் தாழைகள் விளங்கும் சோலை திகழும் இராமேச்சுரத்தில் வீற்றிருந்து, அருளாட்சி செய்தலை மேவுகின்றான்.

101. தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடிபொன்றுவித் தபழி போயற
ஏவிய லும்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தாம் மேல்வினை வீடுமே.

தெளிவுரை : சீதாப் பிராட்டியைக் கவர்ந்த இராவணனின் தலையை அறுத்துக் கொல்வித்த பழியானது நீங்குமாறு, அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ணலாகிய இராமபிரான், நிருமாணித்த இராமேச்சுரத்தை நெஞ்சினால் நினைப்பவர்கள், வினை நீங்கப் பெற்றவராவர்.

102. மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால்
கானதில் வவ்விய கார்அரக் கன்உயிர் செற்றவன்
ஈனமி லாப்புகழ் அண்ணல் செய்தஇ ராமேச்சுரம்
ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொடு நன்மையே.

தெளிவுரை : மான் போன்ற விழியுடைய சீதாப் பிராட்டியை மாயம் செய்து கவர்ந்த அரக்கனாகிய இராவணனை அழித்துப் பெரும் புகழ் கொண்ட இராமபிரான் நிருவிய இராமேச்சுரமானது, சிவஞானமும் அதன் பொருளாகிய முத்தி இன்பமும் நல்கி, மன்னுயிர்களுக்கு நன்மை தரும் ஒண் பொருளாகத் திகழ்கின்றது.

103. உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையால்
வரைபொரு தோளிறச் செற்றவில்லி மகிழ்ந்து ஏத்திய
விரைமரு வுங்கடல் ஓதமல் கும்இரா மேச்சுரத்து
அரைஅர வாடநின்று ஆடல்பே ணும்அம்மா னல்லனே.

தெளிவுரை : பிறருடைய மனைவியைக் கவர்தல் தவறு என்னும் அறவுரையை உணராது, காமத்தால் நலியப்பெற்ற இராவணனுடைய மலை போன்ற தோள் அறுந்து வீழுமாறு போர் செய்து அழித்து விளங்கிய இராமபிரான், மகிழ்ந்து ஏத்திய இராமேச்சுரத்தில் வீற்றிருக்கும் ஈசன், அரையில் அரவத்தைக் கட்டி நின்று திருநடம் புரியும் அழகிய தலைவன் அல்லவா !

104. ஊறுடை வெண்டலை கையில்ஏந்திப் பல வூர்தொறும்
வீறுடை மங்கையர் ஐயம்பெய்ய விறல் ஆர்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி எந்தைமேய இரா மேச்சுரம்
பேறுடை யான்பெயர் ஏத்துமாந்தர் பிணி பேருமே.

தெளிவுரை : பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றினைக் கொய்ததால் அமைந்த கபாலத்தைக் கையில் ஏந்திய ஈசன், ஊர்கள்தொறும் சென்று வீறுடைய மாதர்கள் இட்ட பிச்சையை ஏற்றும், வீரம் மிக்க இடபக் கொடியுடைய எந்தையில் இராமேச்சுரத்தில் வீற்றிருப்பவன். அப்பெருமான் எல்லாப் பேறுகளும் கொண்டு திகழ்பவன். ஆதலினால் பேறு அளிக்கும் அவன் திருப்பெயரை ஓதி ஏத்துகின்ற மாந்தர், பிணி அற்றவராய்த் திகழ்வர்.

105. அணையலை சூழ்கடல் அன்றடைத் துவழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத்த பழி போக்கிய
இணையிலி யென்றும் இருந்தகோ யில்இரா மேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத்தத் துயர் நீங்குமே.

தெளிவுரை : அலைகள் மேவும் கடலின் மீது அணையைக் கட்டிக் கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், பெருமையின்பால் விளங்கும் முடிகள் பத்து கொண்ட இராவணனை அழித்தவன், அதனால் நேர்ந்த பழியைப் போக்கிய ஈசன், இணையற்றவனாய் வீற்றிருக்கும் கோயில் இராமேச்சுரம். அப் பெருமானுக்கு யாருடைய துணையும் தேவையில்லை. ஒப்பற்றவனாய்த் திகழும் இப்பெருமானுடைய திருவடி மலரைப் போற்றி ஏத்துபவர்களின் துயர் யாவும் நீங்கும்.

106. சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கடபல தீயன
முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
இனியருள் நல்கிடு என்று அண்ணல்செய்தஇரா மேச்சுரம்
பனிமதி சூடிநின்று ஆடவல்ல பரமேட்டியே.

தெளிவுரை : நவக் கிரகங்கள் என்று சொல்லப்படுகின்ற சனி, புதன், சூரியன், சுக்கிரன், சந்திரன் மற்றும் உள்ள குரு, அங்காரகன், ராகு, கேது ஆகியவற்றால் தனக்குக் கெடுதல் வரக்கூடாது எனச் சிறையில் வைத்த இராவணனை அழித்து வெற்றி கொண்ட பழியானது தீர வேண்டும் எனவும், அருள் பெருகுதல் வேண்டும் எனவும் இராமபிரானால் அமைக்கப் பெற்றது இராமேச்சுரம். ஆங்கு, குளிர்ச்சி மிக்க சந்திரனைத் தரித்து வீற்றிருப்பவர், முழுமுதற் பரம்பொருளாகிய சிவபெருமானே.

107. பெருவரை யன்றெடுத்து ஏந்தினான் றன்பெயர் சாய்கெட
அருவரை யாலடர்த்து அன்றுநல்கி அயன் மாலெனும்
இருவரு நாடிநின்று ஏத்துகோயில் இரா மேச்சுரத்து
ஒருவனு மேபல வாகிநின்ற தொரு வண்ணமே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணனுடைய புகழ் சாயுமாறு அவனை அம் மலையால் அடர்த்தும், நான்முகனும் திருமாலும் நாடி வந்து ஏத்துகின்றபோது விளங்கியும், திகழும் இராமேச்சுரத்தில் மேவும் ஈசனின் செம்மை ஒருவனே பல வண்ணமாகிக் காட்சி நல்குகின்ற பாங்கினை உடையதாகும்.

108. சாக்கியர் வன்சமண் கையர்மெய் யிற்றடு மாற்றத்தார்
வாக்கிய லும்முரை பற்று விட்டுமதி யொண்மையால்
ஏக்கிய லும்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே.

தெளிவுரை : சாக்கியர்களும் சமணர்களும் உரைக்கும் மெய் இல்லாததும், தடுமாற்றம் கொண்டதுமாகிய உரைகளைப் பற்றி நிற்காது, ஒளி மிகுந்த அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபாடு செய்த இராமேச்சுரத்தின்கண் மேவி விளங்குகின்ற செல்வனை, ஏத்தி வாழ்வீராக. அப்பெருமானை ஏத்தி வழிபட அவன் அருளால் அனைத்தும் கைகூடும்; நன்மைகள் பெருகும் என்பதாம்.

109. பகலவன் மீதுஇயங் காமைக் காத்தபதி யோன்றனை
இகலழி வித்தவன் ஏத்துகோ யில்இரா மேச்சுரம்
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
அகலிடம் எங்குநின்று ஏத்தவல் லார்க்கில்லை அல்லலே.

தெளிவுரை : சூரியனுடைய வெம்மையானது தனது நகரின் மீது இயங்கக் கூடாது என்னும் ஆணையை, வரபலத்தின் வலிமையால் செலுத்திய இராவணனைப் போரில் அழித்த இராமபிரான் ஏத்துகின்ற கோயிலாகிய இராமேச்சுரத்தினைப் போற்றிப் புகலியுள் விளங்கும் ஞானசம்பந்தன் சொன்ன இத்திருப்பதிகத்தை, நன்கு மனத்திருத்தி எல்லா இடங்களிலும் ஓத வல்லவர்களுக்குத் துயரம் என்பது இல்லை.

திருச்சிற்றம்பலம்

269. திருப்புனவாயில் (அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல், புதுக்கோட்டை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

110. மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள் போய்
அன்னமன் னந்நடை யாளொடும் அமரும் இடம்
புன்னை நன் மாமலர் பொன்னுதிர்க்கும் புன வாயிலே.

தெளிவுரை : ஈசன், மின்னலைப் போன்று ஒளிரும் சிவந்த சடை முடியும், வெண்மையான பிறைச் சந்திரனும், விரிந்த மார்பினில் முப்புரி நூலும் கொண்டு விளங்குபவராய் இடைவிடாது திரும்பத் திரும்ப ஓதப் பெறும் வேதங்களை நன்கு இசைத்துத் திருத்தலங்கள் தொறும் சென்றடைந்து உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, புன்னை என்னும் மலர் பொன் போன்ற மகரந்தங்களை உதிர்க்கும் புனவாயில் ஆகும்.

111. விண்டவர் தம்புர மூன்றெரித் துவிடை யேறிப்போய்
வண்டம குங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடம்
கண்டலு ஞாழலு நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.

தெளிவுரை : பகைத்து நின்ற முப்புர அசுரர்களும், அவர்களுடைய கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, இடபவாகனத்தில் ஏறி உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருக்கும் ஈசனின் இடமாவது, தாழையும் புலி நகக் கொன்றையும் கடற்கரைச் சோலையில் திகழ, தாமரை மலர் விளங்கும் பொய்கையும் சூழ்ந்த புனவாயில் ஆகும்.

112. விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்
புடைபட ஆடிய வேடத்தா னும்புன வாயிலில்
தொடைநவில் கொன்றையந் தாரினா னும்சுடர் வெண்மழுப்
படைவல னேந்திய பால்நெய்யா டும்பர மனன்றே.

தெளிவுரை : ஈசன், இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்தியவர்; வீரம் மிக்க பூதகணங்கள் சூழ நடனக் கோலம் தாங்கித் திருநடம் புரிபவர்; புனவாயில் என்னும் தலத்தில் கொன்றை மாலை அணிந்து, சுடர்மிகும் மழுப்படையைத் தாங்கி இருப்பவர். அப்பெருமான், நெய்யும் பாலும் அபிடேகப் பொருளாக ஏற்று, அடியவர்களுக்கு அருள் புரியும் பரம் பொருள் ஆவர்.

113. சங்கவெண் தோடணி காதினா னும்சடை தாழவே
அங்கையி லங்குஅழல் ஏந்தினா னும்அழ காகவே
பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலில்
பைங்கண்வெள் வேற்றண்ண லாகிநின்ற பர மேட்டியே.

தெளிவுரை : காதில் சங்குகளால் ஆன தோடும் நீண்ட சடையும், அழகிய கையில் நெருப்பும் சீறிப் படம் உடைய ஈசன் புனவாயிலின்கண் வெள்ளை இடபத்தின் மீது ஏறி, மேலான பரம்பொருள் ஆகித் திகழ்கின்ற அண்ணல் ஆவார்.

114. கலிபடு  தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்
புலியதன் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்
ஒலிதரு தண்புன லோடு எருக் கும்மத மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.

தெளிவுரை : ஆராவாரம் கொண்டு கடையப் பெற்ற பாற்கடலில் இருந்து தோன்றிய நஞ்சினை உண்டு, அதனால் கரிய கண்டத்தை உடைய ஈசன், புலித் தோலை உடையாகக் கொண்டும், பாம்பினை அரையில் சுற்றிக் கட்டியும் விளங்குபவர். அப்பெருமான், குளிர்ந்த கங்கையோடு எருக்கு, ஊமத்தம் ஆகிய மலர்களும், மெல்லிய கீற்றையுடைய வெண்மையான பிறைச் சந்திரனும் சூடி இடப வாகனத்துடன் புனவாயிலில் வீற்றிருப்பவர்.

115. வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க்
காருறு கொன்றைவெண் திங்களானும் கனல் வாயதோர்
போருறு வெண்மழு ஏந்தினா னும்புன வாயிலில்
சீருறு செல்வமல் கவ்விருந்த சிவலோகனே.

தெளிவுரை : உமாதேவியார் இசை பாட, அவ் இசைக்கு ஏற்ப நடம் புரிந்து, கார்காலத்தில் மலரும் கொன்றை மலரும், வெண்மையான சந்திரனும் சடைமுடியில் தரித்துக் கனல் போன்ற பேரொளி காட்டும் போர்த் தன்மை கொண்ட மழுப்படையுடைய ஈசன், புனவாயிலில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார். அப்பெருமான் சிவலோக நாதனாய்ச் சீரான செல்வத்தை நல்கும் மாண்பில் வீற்றிருப்பவர்.

116. பெருங்கடல் நஞ்சமு துண்டுகந்து பெருங் காட்டிடைத்
திருந்திள மென்முலைத் தேவிபா டநட மாடிப்போய்ப்
பொருந்தலர் தம்புர மூன்றும் எய்து புனவாயிலில்
இருந்தவன் தன்கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே.

தெளிவுரை : பெரிய அளவாகிய பொருட் செல்வத்தை தன்னகத்தே  கொண்ட கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்டு மகிழ்ந்து, தேவர்களையும் உலகங்களையும்  காத்தருளிய ஈசன், மயானத்தின்கண் இருந்து, உமாதேவியார் பாடும் இசைக்கு ஏற்ப நடம் புரிந்தவர். அப்பெருமான், பகைமை கொண்ட முப்புர அசுரர்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; புனவாயிலில் வீற்றிருப்பவர். அவர்தம் திருக்கழலை ஏத்தித் தொழுபவர்களுக்கு எத்தகைய இடையூறும் இல்லை.

117. மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி ஒல்கிட
வனமிகு மால்வரை யால்அடர்த்தான் இட மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடல்ஆ டல்எழில் மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றல்ஆர்ந்த புனவாயிலே.

தெளிவுரை : செருக்கு மிகுந்த மனத்தை உடையவனும் வேல் முதலான படைக்கலன்களைக் கொண்டவனும் ஆகிய அரக்கனாகிய இராவணனுடைய வலிமை அழியுமாறு, சோலைகள் மிகுந்து ஓங்கும் பெருமை உடைய கயிலை மலையால் அடர்த்த இறைவன், சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, சிறந்த கருத்துக்களால் அமைந்த புகழ்ப் பாடல்களும், அவற்றுக்குரிய ஆடல்களும் எழில் கொண்டு மேவி, கொன்றை மலரின் நறுமணம் கமழும் தெய்வீகக் காற்று வீசுகின்ற புனவாயில் ஆகும்.

118. திருவளர் தாமரை மேவினா னும்திகழ் பாற்கடல்
தருநிற வண்ணனும் காண்பரிய கடவுள் இடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நல மல்கிய
பொருகடல் வெண்திரை வந்தெறியும்புன வாயிலே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரியவராகிய கடவுள் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடமாவது, ஒலிக்கப் படுகின்ற சங்குகளும், சிப்பிகளும் அலைகளில் வாயிலாக உந்திக் கடற்கரையில் சேர்த்துச் செல்வத்தைக் கொழிக்கும் புனவாயில் ஆகும்.

119. போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்கும்அந் தண்புன வாயிலில்
வேதனை நாள்தொறும் ஏத்துவார் மேல்வினை வீடுமே.

தெளிவுரை : பௌத்தர் எனப்படுபவர்களும், சமணர்களும் சாதனையாகச் சாதித்துக் கூறும் சொற்களைக் கொண்டு அயர்ந்து தளர்ச்சி அடைய வேண்டாம். மலர்கள் விரிந்து மேவும் பொழில் மல்கும் குளிர்ச்சி மிக்க புனவாயிலில் வீற்றிருக்கும், வேதமாய் மேவும் ஈசனை, நாள்தோறும் சென்று வழிபடுவீராக. அவ்வாறு செய்பவர்களுக்கு, வினை யாவும் விலகிச் செல்ல துன்பம் இல்லாத வாழ்க்கை அமையும்.

120.பொற்றொடி யாளுமை பங்கன் மேவும் புன வாயிலைக்
கற்றவர் தாம்தொழு தேத்த நின் றகடற் காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன தமிழ் நன்மையால்
அற்றமில் பாடல்பத்து ஏத்தவல் லார்அருள் சேர்வரே.

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் ஈசன் வீற்றிருக்கும் புனவாயிலை, வேதம் கற்றவர்கள் தொழுது போற்றுகின்ற காழி நகரில் விளங்கும் நற்றமிழ் ஞானசம்பந்தன் ஏத்திய இத்தமிழ் மாலையை ஓத வல்லவர்கள், ஈசனின் அருளில் திளைத்தவர் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

270. திருக்கோட்டாறு (அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொட்டாரம், திருவாரூர்  மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

121. வேதியன் விண்ணவர் ஏத்தநின்றான் விளங் கும்மறை
ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி
கோதிய தண்பொழில் சூழ்தழ கார்திருக் கோட்டாற்றுள்
ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்லால் இல்லையே.

தெளிவுரை : வேதத்தில் வல்லவராய்த் தேவர்களால் ஏத்தப் பெறுபவராய் விளங்குகின்ற சிவபெருமான், வேதங்களால் போற்றப்படும் உயர்ந்த பொருள் ஆகியவர். அப்பெருமான் பொழில் நிறைந்த அழகிய திருக்கோட்டாற்றில் வீற்றிருப்பவர். அப் பரமனைத் தியானம் செய்து வணங்குபவர்களுக்கு இம்மையில் அல்லல் ஏதும் இல்லை.

122. ஏலமலர்க்குழல் மங்கைநல் லாள்இம வான்மகள்
பால்அமரும் திரு மேனிஎங்கள் பரமேட்டியும்
கோல மலர்ப்பொழில் சூழ்ந்து எழிலார்திருக் கோட்டாற்றுள்
ஆல நீழற்கீழ் இருந்து அறம்சொன்ன அழகனே.

தெளிவுரை : உமாதேவியார், நறுமணம் கமழும் கூந்தலையுடைய மங்கை நல்லாள் எனப்படுபவர்; இமாசல மன்னனின் மகளாகத் தோன்றியவர். அப்பெருமாட்டியை உடனாகிய எங்கள் பரம்பொருள் பொழில் சூழ்ந்து விளங்கும் திருக்கோட்டாற்றுள் வீற்றிருப்பவர். அப்பெருமான் தட்சணாமூர்த்தித் திருக்கோலம் தாங்கிச் சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள் சொன்ன அழகராவர்.

123. இலைமல்கு சூலமொன்று ஏந்தினானும் இமை யோர்தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனாய மணி கண்டனும்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழகார் திருக்கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை யேற்றுகந்த அழகன் அன்றே.

தெளிவுரை : கங்கையைச் சடை முடியில் ஏற்றுகந்த அழகராகிய ஈசன், சூலப் படையினைக் கரத்தில் ஏந்தியவராய்த் தேவர்கள் தொழுது போற்றவும், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டும் நீல கண்டத்தினராகியும், சோலைகளில் காய்களும் கனிகளும் குலைகளுடன் திகழும் பொழில் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாற்றுள் வீற்றிருப்பவர் அல்லவா !

124. ஊனம ரும்உட லுள்ளிருந்த உமை பங்கனும்
வானம ரும்மதி சென்னிவைத்த மறை யோதியும்
தேனம ரும்மலர்ச் சோலை சூழ்ந்திருக் கோட்டாற்றுள்
தானம ரும்விடை யானும் எங்கள் தலைவன் அன்றே.

தெளிவுரை : ஈசன் உயிர்க்கு உயிராய் இருப்பவர்; அப்பெருமான், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; சந்திரனைச் சென்னியில் வைத்தவர்; மறைகளை விரித்து ஓத வல்லவர்; இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து காட்சி தருபவர். அவர், அழகிய சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள் வீற்றிருக்கும் எங்கள் தலைவர் ஆவர்.

125. வம்பல ரும்மலர்க் கோதை பாகம் மகிழ் மைந்தனும்
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனும்
கொம்ப ரும்மலர் வண்டுகொண்டுந் திருக்கோட்டாற்றுள்
நம்பன் எனப் பணிவாரக்கு அருள்செய் எங்கள் நாதனே.

தெளிவுரை : நறுமண மலர் அன்ன உமாதேவியை பாகமாகக் கொண்டு மகிழும் சிவபெருமான், செம்பவளம் போன்ற திருமேனியுடன் விளங்கித் திருவெண்ணீறு அணிந்த செல்வராவர். தேன் துளிர்க்கும் திருக்கோட்டாற்றுள் வீற்றிருக்கும் நம்பனாய் மேவும் அப்பிரான், தன்னைப் பணிந்து ஏத்துகின்றவர்களுக்கு அருள் புரிபவர். அவர் எங்கள் நாதன்.

126. பந்தம ரும்விரல் மங்கைநல் லாள்ஒரு பாகமா
வெந்தமரும்பொடிப் பூசவல்ல விகிர் தன்மிகும்
கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
அந்தண னைநினைந்து ஏத்தவல் லார்க்கில்லை அல்லலே.

தெளிவுரை : பந்து போன்று திரட்சியான விரல்களை உடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திருவெண்ணீறு பூசி விளங்கும் விகிர்தன், கொத்தாகப் பூக்கும் மலர்ச் சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள் வீற்றிருக்கும் அந்தணன் ஆவார். அப் பெருமானை நினைத்து வழிபடும் அடியவர்களுக்கு அல்லல் இல்லை.

127. துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்
வண்டம ருங்குழல் மங்கைநல் லாள்ஒரு பங்கனும்
தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
அண்டமும் எண்டிசை யாகிநின்ற அழகன் அன்றே.

தெளிவுரை : துண்டித்த பிறைபோன்று விளங்கும் சந்திரனைச் சூடிய பெருமான், நீண்டு ஓங்கும் சுடர் வண்ணமாய்த் திகழ்கின்ற பரமன். அவர், வண்டு அமரும் கூந்தலை உடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். நீர் வயல் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாற்றில் எழுந்தருளியுள்ள அவ் இறைவன், அண்டங்களும் ஆகி, எட்டுத் திசைகளும் ஆகி நின்ற அழகன் அல்லவா !

128. இரவம ருந்நிறம் பெற்றுடைய இலங்கைக் கிறை
கரவம ரக்கயி லையெடுத் தான்வலி செற்றவன்
குரவம ரும்மலர்ச் சோலை சூழ்ந்ததிருக் கோட்டாற்றுள்
அரவம் ருஞ்சடை யானடி யார்க்கருள் செய்யுமே.

தெளிவுரை : இருள் கொண்ட இரவு போன்ற கரிய நிறமுடைய இராவணன், கரவு கொண்ட நெஞ்சு உடையவனாய்க் கயிலையை எடுக்க, அவனைச் செற்று அடர்த்த ஈசன், மணம் பொருந்திய குரவ மலர்ச் சோலை திகழும் திருக்கோட்டாற்றுள் வீற்றிருப்பவர். அப் பெருமான், சடை முடியில் அரவம் தரித்து விளங்கியவராய் அடியவர்களுக்கு அருள்புரிபவர்.

129. ஓங்கிய நாரண னான்முகனும் உணரா வகை
நீங்கிய தீயுரு வாகிநின்ற நிமலன் நிழற்
கோங்கம ரும்பொழில் சூழ்ந்து எழிலார்திருக் கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே.

தெளிவுரை : உலகினை அளப்பதற்குத் திரிவிக்கிரமனாய் ஓங்கிய திருமாலும், மற்றும் நான்முகனும் உணராத வகையாய் மறைந்திருந்தும் தீயுருவாகியும் நின்ற ஈசன், ஒளி திகழும் கோங்கு மலர்ப் பொழில் சூழ்ந்துள்ள திருக்கோட்டாற்றில் வீற்றிருக்கும் பெருமான் ஆவர். அப் பெருமான் தேவர்களுக்கெல்லாம் தேவர்.

130. கடுக்கொடுத்த துவர் ஆடையர் காட்சியில் லாததோர்
தடுக் கிடுக்கிச் சமணேதிரி வார்கட்குத் தன்னருள்
கொடுக்ககில்லாக் குழகன் அமரும்திருக் கோட்டாற்றுள்
இடுக்கண் இன்றித் தொழு வார் அமரர்க்குஇறை யாவரே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் ஈசனை நாடாது புறமாக நிற்க, அருள் புரிவதற்கு உரித்தாகாத நிலை மேவிய ஈசன் திருக்கோட்டாற்றில் வீற்றிருக்க, அப்பெருமானை வணங்குபவர்கள் துன்பம் அற்றவர்களாய் வானுலகத்தின் தலைமைப் பதவியைப் பெறுவார்கள்.

131. கொடியுயர் மால்விடை யூர்தி யினான்திருக் கோட்டாற்றுள்
அடிகழ லார்க்கநின் றாடவல்ல அருளாளனைக்
கடிகம ழும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.

தெளிவுரை : இடபத்தைக் கொடியாகவும், வாகனமாகவும் உடைய திருக்கோட்டாற்றில் வீற்றிருக்கும் ஈசன், திருப்பாதத்தில் விளங்கும் கழல் ஆர்க்க நின்று ஆடுகின்ற அருளாளர். அப்பெருமானை நறுமணம் கமழும் பொழில் திகழும் காழியுள் மேவும் ஞானசம்பந்தன் ஏத்திச் சொல்லிய, இத்திருப் பதிகத்தைப் பாடிப் பத்திமையால் தன்னை மறந்து ஏத்த வல்லவர்கள், தம் பாவம் யாவும் நீங்கப் பெற்றவராவர். இது தீவினை நீக்குதலின் சிறப்பு உணர்த்துவதாயிற்று.

திருச்சிற்றம்பலம்

271. திருப்பூந்தராய் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

132. மின்னன எயிறுடை விரவ லோர்கள்தம்
துன்னிய புரமுகச் சுளிந்த தென்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரியவை பங்கரே.

தெளிவுரை : மின்னலைப் போன்ற வளைந்த பற்களை உடைய பகைமை கொண்ட அசுரர்களுடைய மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு சினந்த தொன்மையராகிய ஈசன், புன்னை மரங்களின் பொழிலை அணியாகப் பெற்று விளங்கும் பூந்தராய் நகரில், உமைபங்கராய் வீற்றிருப்பவர்.

133. மூதணி முப்புரத்து எண்ணி லோர்கள்
வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்த்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே.

தெளிவுரை : முதுமைத் தன்மையுடைய முப்புரத்து அசுரர்களை, வெம்மையுடைய அம்பினால் எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசன், மலர்கள் நனிவிளங்கும் பொழி திகழும் பூந்தராய் நகரில் மகரந்தத் தேன் கமழும் கூந்தலையுடைய உமாதேவியின் தலைவராய் வீற்றிருப்பவர். அப் பெருமானைக் கண்டு தரிசித்து ஆனந்தம் அடைவீராக.

134. தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொருகடல் புடைகரு பூந்த ராய்நகர்க்
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.

தெளிவுரை : தருக்கித் திரிந்த முப்புரத்து அசுரர்கள் அழியுமாறு மேரு மலையை வில்லாகக் கொண்ட ஈசன், கடலலைகள் சூழ்ந்த பூந்தராய் நகரின்கண் கரிய கூந்தலையுடைய உமாதேவியின் கணவர் ஆவார். அவரைக் கண்டு தரிசித்து உய்வீராக.

135. நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப்
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.

தெளிவுரை : வாசுகி என்னும் நாகத்தை நாணாகவும், மேருமலையை வில்லாகவும் கொண்டு ஆகாயத்தில் திரிந்த மூன்று புரங்களை அழியச் செய்த மாண்புடைய ஈசன், பாக்கு மரங்கள் திகழும் பூந்தராய் நகரில் இனிமையான பாகு போன்ற மொழியுடைய உமாதேவியை பாகமாக கொண்டு திகழ்பவர். அப்பெருமானைத் தரிசித்து உய்வீராக.

136. வெள்ளெயிறு உடையஅவ் விரவ லார்கள்ஊர்
ஒள்ளெரி யூட்டிய ஒருவ னார்ஒளிர்
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே.

தெளிவுரை : வெண்மையான அகன்ற முன் பற்களுடைய அசுரர்களின் மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசன் ஒளிர்கின்ற பறவைகள் திகழும் பூந்தராய் நகரில், தேன் கமழும் கூந்தலை உடைய அம்பிகையின் கணவர் ஆவர். அப்பெருமானைத் தரிசித்து உய்வீராக !

137. துங்கியல் தானவர் தோற்ற மாநகர்
அங்கியில் வீழ்தர வாய்ந்த வாம்பினர்
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
அங்கய லனகணி அரிவை பங்கரே.

தெளிவுரை : அசுரர்களின் நெடிய வடிவங்களைப் போன்று தோற்றமுடைய பெரிய நகரங்கள் மூன்றும் நெருப்பில் மூழ்கி எரியுமாறு செய்த அக்கினிக் கணையை உடைய ஈசன், கடலின் அணி திகழ மேவும் பூந்தராய் நகரில் எழுந்தருளியுள்ள கயல் போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். அவரை ஏத்துமின் !

138. அண்டர்கள் உயந்திட அவுணர் மாய்தரக்
கண்டவர் கடல்விடம் உண்ட கண்டனார்
பூண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே.

தெளிவுரை : எல்லா அண்டங்களிலும் உள்ள மன்னுயிர்கள் நன்மை அடையும் பொருட்டு முப்புர அவுணர்களை மாயச் செய்தும், கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு கரிய கண்டத்தினராய்க் காத்தும் அருளிய ஈசன், தாமரை மலர்கள் திகழும் வயல்களை உடைய பூந்தராய் என்னும் நகரில் உமாதேவியின் மணாளராக வீற்றிருப்பவர். அப்பெருமானை எத்தித் தரிசித்து உய்வீராக !

139. மாசின அரக்கனை வரையின் வாட்டிய
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.

தெளிவுரை : குற்றத்தை உடைய அரக்கனாகிய இராவணனைக் கயிலை மலையைக் கொண்டு அடர்த்து நலியச் செய்து, மன்னுயிர்களை வதைத்த முப்புரக் கோட்டைகளைக் கனன்று எரியுமாறு புரிந்த நீலகண்டராகிய ஈசன், அந்தணர்கள் பொலிந்து விளங்கும் பூந்தராய் நகரில், கரிய கூந்தலையுடைய உமாதேவியின் கணவர் ஆவர். அப் பெருமானைத் தரிசித்து உய்வீராக !

140. தாமுக மாக்கிய அசுரர் தம்பதி
வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணதும்
பூமகன் அறிகிலாப் பூந்த ராய்நகர்க்
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே.

தெளிவுரை : தமது விருப்பத்தின்படி பெருந்தீங்கைப் புரிந்த அசுரர்களின் மூன்று புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர், ஈசன். திருமாலும் பிரமனும் அறிவதற்கு ஒண்ணாத பூந்தராய் நகரில் வீற்றிருக்கும் அப்பெருமான், எழில் மிக்க உமாதேவியை ஒரு கூறாக உடையவர். அவரைத் தரிசித்து உய்வீராக!

141. முத்தர அசுரர்கண் மொய்த்த முப்புரம்
அத்தகும் அழலிடை வீட்டி னார்அமண்
புத்தரும் அறிவொணாப் பூந்த ராய்நகர்க்
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே.

தெளிவுரை : அசுரர்களிடமுள்ள மூன்று உலோகத்தால் ஆகிய கோட்டைகளை நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசன், சமணர் மற்றும் பௌத்தர்களால் அறியவொண்ணாத பூந்தராய் நகரின்கண், உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு வீற்றிருப்பவர். அப்பெருமானைத் தரிசித்து உய்வீராக !

142. புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப்
பரமலி குழலுமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே.

தெளிவுரை : முப்புரங்களை எரித்த பரமன் பூந்தராய் நகரில் மேவும் பெருமாட்டியாகிய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு திகழ்பவர். அப் பெருமானைப் பரவிய ஞானசம்பந்தரின் மெய்ம்மை நவிலும் இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், தலையானதாகப் போற்றப்படுகின்ற சிவகதியை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

272. திருப்பைஞ்ஞீலி (அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி, திருச்சி மாவட்டம்)


திருச்சிற்றம்பலம்

143. ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
ஓரிடம் குறைவிலர் உடையர் கோவணம்
நீரிடம் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.

தெளிவுரை : ஈசன், பாடலாகப் பாடுவது ஆரிடம் என்னும் வேதமும்; உறைவது சுடுகாடு எனப்படும் இடமும் உடையாகக் கொள்வது கோவண ஆடையும் ஆகும். அப்பெருமான், கங்கையைச் சடை முடியில் ஏந்தி, இடப வாகனராய் மேவி, நித்தமும் பணிகொண்டு மேவும் பூத கணங்கள் சூழத் திருப்பைஞ்ஞீலியில் திகழ்பவர்.

144. மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை
பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை உளங்கொ ளாதஅத்
திருவிலா ரவர்களைத் தெருட்ட லாகுமே.

தெளிவுரை : பகைமை கொண்ட முப்புர அசுரர்களின் புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு, மேரு என்னும் பெருமையுடைய மலையினை  வில்லாக வளைத்த ஈசன், திருப்பைஞ்ஞீலி என்னும் தலத்தில் வீற்றிருப்பவர். வடிவம் அற்றவராய் விளங்கும் அப்பெருமானுடைய பெருமையை உள்ளத்தில் கொண்டு ஏத்தாதவர்கள் திரு இல்லாதவர் ஆவர். அவர்களைத் தெளிவித்து நலம் கொள்ளச் செய்தல் ஆகுமா !

145. அஞ்சுரும்பு அணிமலர் அமத மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேலான்
வெஞ்சுரந் தனில்உமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.

தெளிவுரை : அழகிய வண்டினம், மலரில் துளிர்க்கும்  தேனை அமுதமென அருந்திப் பஞ்சுரம் என்னும் பண்ணிசைத்து விளங்கும் பைஞ்ஞீலியில் வீற்றிருக்கும் ஈசன், உமாதேவி வெருவுமாறு கானகத்தில் வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தித் திருவிளையாடல் புரிந்தவர்.

146. கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
பாடல் வண்டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே.

தெளிவுரை : வெண்காந்தள் மலர்களும், காடுகளில் மேவும் முல்லை மலர்களும் திகழ வண்டுகள் ரீங்காரம் செய்து பாடற் பண்களை ஒலிக்கின்ற பைஞ்ஞீலியில் வீற்றிருக்கும் ஈசன், ஆணும் அல்லர், பெண்ணும் அல்லர்; ஆணும் இல்லாது பெண்ணும் இல்லாத மேவும் அலியும் அல்லர்; ஆடலை விரும்பி மேவும் அடிகள் அல்லர்.

147. விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.

தெளிவுரை : பிரம கபாலத்தை ஏந்தி இளமையான பிறைச் சந்திரனும் கங்கையும் தரித்த ஈசன், வினை நீங்கப் பெற்ற அடியவர்கள் போற்றுகின்ற பைஞ்ஞீலியில், வேதம் விரித்த ஓதும் பரமன் ஆவர். அப்பெருமானை ஏத்தித் தொழுபவர்களின் வறுமையானது கெடும்.

148. விடையுடைக் கொடிவலன் ஏந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள்பைஞ்ஞீலி மேவலான்
துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாகச்
சடையிடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே.

தெளிவுரை : இடபக் கொடியை ஏந்தி மழுப்படை உடைய ஈசன், பைஞ்ஞீலியில் மேவி விளங்குகின்ற பெருமான். அவர் உமாதேவியைத் தனது தேகத்தில் ஒரு பாகமாகக் கொண்டு சடை முடியிலும் கங்கையைத் தரித்த சதுரன் ஆவர்.

149. தூயவன் தூயவெண் ணீறு மேனிமேல்
பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவன் எனைச் செயுந் தன்மை என்கொலோ.

தெளிவுரை : ஈசன், தூய நிலை உடையவர் தூய திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; நன்கு பரவப்படுமாறு பைஞ்ஞீலியில் கோயில் கொண்டு மேவித் திகழ்பவர்; மூங்கிலைப் போன்ற தோளை உடைய உமாதேவியை ஒரு கூறாக ஏற்று இருப்பவர். அப்பெருமான் என்னை ஏற்று ஆட்கொண்டு செய்கின்ற தன்மைதான் என்கொல் !

150. தொத்தின தோள்முடி யுடைய வன்தலை
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருதி வாழ்மினே.

தெளிவுரை : ஒன்றுடன் ஒன்று தொத்திச் சேர்ந்தாற் போன்ற தோள்களைக் கொண்ட இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு செய்த ஈசன், பைஞ்ஞீலியில் மேவி விளங்கும் பெருமான். முத்தன்ன வெண்ணகை உடைய உமாதேவியை ஒரு பாகமாகத் திருமேனியில் வரித்து விளங்கும் அப்பெருமானின் திருவடிமலரைப் பொருந்தி வாழ்வீராக.

151. நீருடைப் போதுறை வானு மாலுமாய்ச்
சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.

தெளிவுரை : நீரில் விளங்கும் தாமரையில் மேவும் பிரமன் சீர் நல்கும் கழல் அணிந்த அடி மலரையும் திருமால் திருமுடியையும் காண்கிலராய் நிற்க, பூவுலகில்  பைஞ்ஞீலி என்னும் இடத்தில் மேவிய ஈசன், கொன்றை மாலை அணிந்த தலைவராய் வீற்றிருக்கின்றனர்.

152. பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும்
சாலியா தவர்களைச் சாதி யாததோர்
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.

தெளிவுரை : மயிற் பீலி கொண்டு பெருமை கொள்ளும் சமணரும் பிடக நூல் கொண்டு மேவும் சாக்கியரும் தாம் கூறியவற்றைச் சாதிக்கும் தன்மையில்லாதவர்கள் மேருவை வில்லாக்கி, அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை எரித்த ஈசன் பைஞ்ஞீலியில் மேவும் பரமன். அப் பெருமானுடைய மலர்களை வணங்கி வாழ்வீராக.

153.கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்
நண்புணர் அருமறை ஞானசம் பந்தன்
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே.

தெளிவுரை : நீரைத் தேக்கி வைத்திருந்து பாய்கின்ற வயல் வளம் உடைய காழியில், கற்பக மரம் போன்று நண்பு கொண்டு நலம் சேர்க்கும் மறைவல்ல ஞானசம்பந்தன், நற்பண்புடையோர் பரவும் பைஞ்ஞீலியில் வீற்றிருக்கும் ஈசனைப் பாடிய இத் திருப்பதிகத்தை உரைப்பவர்கள், கன்ம உலகமாகிய இப்பூவுலகில் ஓங்குகின்ற வாழ்க்கையை உடையவர்கள் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

273. திருவெண்காடு (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

154. மந்திர மறையவை வான வரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்தவெண் ணீற்றார் வெண் காடு மேவிய
அந்தமு முதலுடை அடிகள் அல்லரே.

தெளிவுரை : நன்கு ஏத்தப் பெறும் மந்திரங்களாக உள்ள வேதமும், வானவருடன் சேர்ந்து இந்திரனும் வழிபடுமாறு வீற்றிருக்கும் இந்திரனும் திருவெண்ணீற்றுத் திருமேனியராக வெண்காட்டில் பொருந்தி விளங்குபவர். அப்பெருமான், அந்தமாகவும் ஆதியாகவும் எல்லாக் காலங்களிலும் திகழும் அடிகள் அல்லவா !

155. படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்
விடையுடைக் கொடியர்வெண் காடு மேவிய
சடையிடைப் புனல்வைத்த சதுரர் அல்லரே.

தெளிவுரை : ஈசன், மழுப்படையுடையவர்; புலியின் தோலை உடையாகக் கொண்டு, கோவணத்தை உகந்து தரித்திருப்பவர்; இடபத்தைக் கொடியாக ஏந்தி உடையவர். அவர் வெண்காட்டில் வீற்றிருந்து, சடையின்கண் கங்கையை வைத்து மேவும் சதுரர் அல்லவா !

156. பாலொடு நெய்தயிர் பலவும் ஆடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவுவெண் காடு மேவிய
ஆலம தமர்ந்தஎம் அடிகள் அல்லரே.

தெளிவுரை : ஈசன், பால், நெய், தயிர் மற்றும் முக்கனிகள் முதலான பலவும் பூசையாக ஏற்று மகிழ்பவர்; தோலை மார்பினில் திகழ அணிபவர்; சிவஞானிகள் பரவிப் போற்றும் வெண்காட்டில் வீற்றிருக்கும் அப்பெருமான், கல்லால மரத்தின்கீழ் இருந்து அறப்பொருள் உரைத்தவர். அவர் எம் தலைவர் அல்லவா !

157. ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப் புன்னையும்
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
வேழமது உரித்தவெண் காடு மேவிய
யாழினது இசையுடை இறைவர் அல்லரே.

தெளிவுரை : புலிநகர் கொன்றை, செருந்தி, புன்னை, தாழை ஆகியவற்றுடன், வெண் குருகு ஒளிர்ந்து திகழும் கடற்கரைச் சோலை விளங்கும் வெண்காட்டில், யானையின் தோலை உரித்த ஆற்றல் உடையவராயும், யாழில் இசை போன்ற இனிமை உடையவராயும் ஈசன் வீற்றிருப்பவர் அல்லவா !

158. பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்இறை
வேதங்கள் முதல் வர்வெண் காடு மேவிய
பாதங்கள் தொழநின்ற பரமல் அல்லரே.

தெளிவுரை : பூத கணங்கள் பல உடைய புனிதர் ஆகிய ஈசன், புண்ணியத்தின் வடிவினராய் விளங்கி, மன்னுயிரின் குற்றங்களையும், அதனால் நேரும் இடையூறுகளையும் தீர்த்தருள்கின்ற எமது இறைவன் ஆவர். அப்பெருமான், வேத முதல்வராய் வெண்காட்டில் வீற்றிருப்பவர். அவர்தம் பாதங்கள் அனைவராலும் தொழப் பெறும் தன்மையில் விளங்க, அவர் பரம்பொருளாகத் திகழ்பவர் அல்லவா !

159. மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்இறை
விண்ணமர் பொழில்கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே.

தெளிவுரை : பூவுலக மாந்தர்களும் விண்ணுலகத்தவர்களும் ஈசனை வணங்குகின்றனர். நாள்தோறும் போற்றி வழிபட்டு இறைஞ்சுகின்ற தேவர்களுக்கு இறைவனாகிய அப்பெருமான், உயர்ந்து மேவும் பொழில் கொண்டு விளங்கும் வெண்காட்டில் வீற்றிருப்பவர். அப்பரமனைத் தொழுது போற்றுபவர்களுக்கு அல்லல் இல்லை.

160. நயந்தவர்க்கு அருள்பல நல்கி இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவுவெண் காடு மேவிய
பயந்தரு மழுவுடைப் பரமர் அல்லரே.

தெளிவுரை : இசைந்து வழிபடும் அடியவர்களுக்கு வேண்டியவாறு நல்கியும், யானை வழிபட அருள் புரிந்தும் விளங்கும் நெற்றிக்கண்ணுடைய ஈசன், யோகிகள் பரவிப் போற்றும் வெண்காட்டில் வீற்றிருப்பவர். அப்பெருமான், மழுப்படையைக் கொண்டு மேவும் பரமர் அல்லவா !

161. மலையுடன் எடுத்தவல் லரக்கன் நீள்முடி
தலையுடல் நெரித்தருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய
அலையுடைப் புனல்வைத்த அடிகள் அல்லரே.

தெளிவுரை : கயிலை மலையை எடத்த கொடிய அரக்கனாகிய இராவணனுடைய நீண்ட முடி, தலை, உடல் ஆகியன யாவும் நெரியுமாறு செய்த சங்கரர், பெருமையுடைய திருநீற்றினைப் பூசி விளங்கித் திகழும் வெண்காட்டில் வீற்றிருப்பவர். அப்பெருமான் சடைமுடியில் கங்கையைத் தரித்து விளங்குபவர் அல்லவா !

162. ஏடவிழ் நறுமலர் அயனு மாலுமாய்த்
தேடவும் தெரிந்தவர் தேர கிற்கிலார்
வேடம துடையவெண் காடு மேவிய
ஆடலை அமர்ந்தஎம் அடிகள் அல்லரே.

தெளிவுரை : தாமரை மலரில் விளங்குகின்ற பிரமனும், மற்றும் திருமாலும் தேடிய காலத்தில், அவ்விருவரும் தேடிய தன்மையை நன்கு அறிந்தும், காணுதற்கு அரியவராய் விளங்கிய ஈசன், வெண்காட்டில் இனிது மேவி நடம் புரிதலை விரும்பிய அடிகள் அல்லவா !

163. போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
வேதியர் பிரவுவெண் காடு மேவிய
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் பொருத்தம் இல்லாதவறாய், நன்னெறிகளை ஏற்றுத் தொழாதவர் ஆயினர். வேத வித்தகர்கள் பரவித் தொழும் வெண்காட்டில் வீற்றிருக்கும் ஆதிநாயகனாகிய ஈசனது திருவடியை அன்றி, தொழுது போற்றுவதற்கு வேறு எப்பொருளும் இல்லை.

164. நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எம் சிவனுறை திருவெண் காட்டின்மேல்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே

தெளிவுரை : நல்வினையின் பயனால் வாய்த்துப் புண்ணிய மாந்தர்கள் விளங்குகின்ற புகலியுள் மேவும் ஞானசம்பந்தன், சிவபெருமானாகிய எமது செல்வன் உறையும் திருவெண்காட்டின் மீது சொல்லிய, அரிய தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், அல்லல் அற்றவராயும் வினை நீங்கப் பெற்றவராயும் விளங்குவார்கள். இது ஆணை ஆயிற்று.

திருச்சிற்றம்பலம்

274. திருக்கொள்ளிக்காடு (அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

165. நிணம்படு சுடலையி னீறு பூசிநின்று
இணங்குவர் பேய்களோடு இடுவர் மாடம்
உணங்கல் வெண்டலைதனில் உண்பர் ஆயினும்
குணம்பெரி துடையர்நம் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப் பூசிப் பேய்க் கூட்டத்தோடு நின்று ஆடுகின்ற ஈசன், காய்ந்த மண்டை ஓட்டினைக் கையில் ஏந்திப் பலி ஏற்று உண்பவர். ஆயினும் அப்பெருமான், பெருங்குணத்துடன் உடையவராய்க் கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே.

166. ஆற்றல்நல் லடியிணை அலர்கொண்டு ஏத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
மாற்றல னாகிமுன் னடர்த்து வந்தணை
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : நலம் செய்யும் ஈசனின் திருவடிக் கமலத்தை மலர் தூவிப் போற்றி வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கி கூற்றுவனை, அடர்த்து உதைத்தருளிய ஈசன், கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே.

167. அத்தகு வானவர்க்கு காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : எக்காலத்திலும் குறைவின்றி வழிபடும் தேவர்களின் நலன்களைக் காப்பதற்காகப் பெரியதாகத் திரண்டு எழுந்த விடத்தைக் கண்டத்தில் தேக்கி வைத்து நீலகண்டனாய் விளங்கி ஈசன், ஊமத்தம் பூவும் வன்னியும் மலிந்து மேவும் சடைமுடியில், கொத்தாகக் கொன்றை மலர் சூடியவர். அவர் கொள்ளிக் காட்டில் வீற்றிருப்பவராவர்.

168. பாவண மேவுசொல் மாலை யிற்பல
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினும்
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : பலவாறாகிய சந்தங்களையுடைய பாடல்களின் வண்ணம் மேவும் தமிழ் மாலையால், சொல் வண்ணம் திகழும் கொள்கையில் நவிலுமாறு செய்தவர் ஈசன். அப்பெருமான், எல்லா வகையாலும் ஆகின்ற வண்ணத்தில் எம்மை ஆள்கின்றவர். அவர், கோவண ஆடை உடையவராய்க் கொள்ளிக்காட்டில் வீற்றிருக்கும் பெருமானே.

169. வாரணி வனமுலை மங்கை யாளொடும்
சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுக லார்எயில்
கூர்எரி கொளுவினர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு சிறப்பான அழகிய திருவடிவத்தோடு திகழும் ஈசன், பெருமை மிக்க மேருமலையை வில்லாகக் கொண்டு, பகைவர்களாகிய முப்புர அவுணர்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அவர் கொள்ளிக் காட்டில் வீற்றிருப்பவரே.

170. பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும்
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : பஞ்சு போன்ற மென்மையான அடியை உடைய அம்பிகையை உடனாகக் கொண்டு, மேகங்கள் தோயும் கயிலை மலையின்கண் மகிழ்ந்து, நாள்தொறும் அருள் பாலிக்கும் ஈசன், வெஞ்சினத்துடன் வந்த யானையின் தோலை உரித்தவர். அப்பெருமான், கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே.

171. இறையுறு வரிவளை இசைகள் பாடிட
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : திருக்கரத்தில் விளங்குகின்ற அழகிய வளையல்களையுடைய உமாதேவியார் இசை பாட தமது வீரக்கழல்கள் ஒலிக்கத் திருநடம் புரிபவர், ஈசன். அவர், கங்கையைத் தடுத்துச் சடையில் வைத்துப் பிறைச் சந்திரனையும் உடன்கொண்டு கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவர்.

172. எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
அடர்த்தனர் திருவிர லால் அலறிடப்
படுத்தனர் என்றவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : தனது வர பலத்தின் வலிமையினால் கயிலை மலையை எடுத்த இராவணனைத் திருப்பாத விரலால் அடர்த்து நலியுறச் செய்தவர், ஈசன். அத்துன்பத்தை தாங்க முடியாத அவ்வரக்கன், அலறிச் சாதவேதத்தை இசைத்துப் பாட, இரங்கி அருள் புரிந்த அப்பெருமான், வீரம் மிக்க வாட்படையை அருளிச் செய்தவர். அவர் கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே.

173. தேடினார் அயன்முடி மாலும் சேவடி
நாடினார் அவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : பிரமன், திருமுடியினையும்; திருமால், திருவடியையும் தேடிய கலத்தில், நண்ண முடியாதவாறு விளங்கியவர் ஈசன். அவர், பரிவுடன் விளக்கும் பக்தர் சித்தத்தில் வீற்றிருந்து அருள் புரியும் கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருப்பவரே.

174. நாடிநின்று அறிவில் நாணிலிகள் சாக்கியர்
ஓடிமுன் னோதிய உரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் முனைந்து சொல்லும் உரைகள் யாவும் பொய்யுரைகளாகும். அவற்றை மெய்யென்று கருத வேண்டாம். நான்கு மறைகளை விரித்து ஓதியவரும், அத்தகு மறைகளில் வல்லவராகிய உமாதேவியோடு உடனாகத் திகழ்பவரும் ஆகிய பெருமான் கொள்ளிக்காட்டில் வீற்றிருக்கின்ற இறைவன் ஆவர். அவரை வணங்கி ஏத்துமின்.

175. நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன்
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி காண வல்லரே.

தெளிவுரை : நற்றவத்தை மேவி விளங்கும் காழியுள் திகழும் ஞானசம்பந்தன், குற்றம் அற்ற பெரும்புகழ் மேவும் கொள்ளிக்காட்டில் வீற்றிருக்கும் ஈசனை, இனிய தமிழால் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தை நன்கு கற்று ஓதுபவர்கள், அப்பரமனின் திருவடி நலன் காணும் வல்லமையைப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

275. திருவிசயமங்கை (அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

176. மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே.

தெளிவுரை : நறுமணம், கமழும் கூந்தலை உடைய உமையவள் பங்கராய், நீண்ட சடையின்கண் அரவம் அணிந்த எமது ஈசனின் கோயில் என்பது, குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை ஆகிய மரங்கள் கலந்து விளங்கும் பொழில் திகழும் விசய மங்கை ஆகும்.

177. கீதமுன் னிசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் னியல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே.

தெளிவுரை : கீதத்தின் வாயிலாக எழும்பும் இசையில் விழைந்து வீணை வாசிப்பவர், ஈசன். அப்பெருமான் பூதகணங்கள் புடை சூழ விளங்கும் புனிதர் ஆவர். அப்பெருமானின் பொன்னகர் என்பது பசுவானது வழிபட்டு விளங்கவும், நான்மறை வல்ல வேதியர் தொழுது போற்றத் திகழும் விசய மங்கையே.

178. அக்கர வரையினர் அரிவை பாகமாத்
தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்
தக்கநல் வானவர் தலைவர் நாள்தொறும்
மிக்கவர் தொழுதெழ விசய மங்கையே.

தெளிவுரை : உருத்திராக்கமும் அரவமும் அரையில் கட்டி மேவும் ஈசன், உமாதேவியை ஒரு பாகமாகவும், இடபத்தை வாகனமாகவும் உடைய சோதியாவர். அவர் வீற்றிருக்கும் தொன்மையான நகராவது, வானவர்தம் தலைவராகிய இந்திரனும் மற்றும் பிரமன் திருமால் ஆகியோரும் நாள்தொறும் தொழுது போற்றுகின்ற விசய மங்கையாகும்.

179. தொடைமலி இதழியும் துன்னெ ருக்கொடு
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெற்
விடைமலி கொடியணல் விசய மங்கையே.

தெளிவுரை : கொன்றை மலர் மாலையும், நெருக்கமாகக் கட்டிய எருக்க மாலையும், திகழத் தரித்த சடை முடியுடைய ஈசனின் பொன்னகராவது, மழுப்படை ஏந்திய கையும், இடபக் கொடியும் விளங்கும் ஈசனின் விசய மங்கையே.

180. தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோடு இனிது அமர்விடம்
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
வேடம துடையணல் விசய மங்கையே.

தெளிவுரை : ஈசன், தோடு அமர்ந்த காது உடையவர்; நன்கு குழையத் திருவெண்ணீறு பூசியவர்; மலர் போன்ற கூந்தலையுடைய உமாதேவியோடு இனிது வீற்றிருப்பவர். அப்பெருமானுடைய இடமாவது கானகத்தில் விளங்கிய பெரிய யானையானது கதறுமாறு, அதன் தோலை உரித்துப் போர்த்துத் திகழும் அண்ணலின் விசய மங்கையாகும்.

181. மைப்புரை கண்ணுமை பங்கன் வண்தழல்
ஒப்புரை மேனியெம் முடைய வன்நகர்
அப்பொடு மலர்கொடு அங்கு இறைஞ்சி வானவர்
மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே.

தெளிவுரை : கரிய மை போன்ற கண்ணுடைய உமாதேவியை ஒரு பங்காகக் கொண்டு திகழும் ஈசன், தழலை ஒத்த நன்மை தரும் செம்மேனியராய் எம்மை உடையவர். அப் பெருமானின் நகரானது, நீரும், மலரும் கொண்டு பூசித்துப் பக்தியுடன் வானவர்கள் இறைஞ்சிப் போற்றி வழிபட, மெய்ம்மையுறுமாறு அருள் புரியும் விசய மங்கையாகும்.

182. இரும்பொனின் மலைவில் லின்எரி சரத்தினால்
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடையண்ணல் விசய மங்கையே.

தெளிவுரை : மிகப் பெரிய பொன்மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு, அக்கினியை அம்பாக்கித் தொடுத்து, முப்புரங்களைச் சாம்பலாகுமாறு செய்த ஈசனின் ஊரானது. கொன்றை மலரும் தூய்மையான ஊமத்தம் பூவும் விரும்பிச் சடை முடியின்கண் அணிந்த அண்ணலின் விசய மங்கையாகும்.

183. உளங்கைய இருபதோடு ஒருபதும் கொடுஆங்கு
அளந்தரும் வரையெடுத் திடும் அரக்கனைத்
தளர்ந்துடன் நெரிதர அடர்த்த தன்மையன்
விளங்கிழை யெடும்புகும் விசய மங்கையே.

தெளிவுரை : தனது பாதையின் குறுக்கே தடை செய்வதாக உள்ளத்தில் வெறுப்புத் தோன்ற, இருபது தோளும் பத்துத் தலையும் கொண்டு அளப்பதற்கு அரியதாகிய கயிலை மலையை எடுத்த இராவணனைத் தளர்ச்சியுற்று நலியுமாறு, அக்கணமே நெரியும் தன்மையில் அடர்த்த தன்மையுடைய ஈசன், உமாதேவியோடு இனிது மேவுவது விசய மங்கை ஆகும்.

184. மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்குஅளப் பரிய அத்தனூர்
தண்ணுறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஆகிய அண்ணல்களால் அளப்பதற்கு அரியவனாகிய ஈசனின் ஊரானது. குளிர்ச்சி பொருந்திய நறுமணம் கமழும் சந்தனம் கொண்டும், பூக்கள் கொண்டும், நீர் கொண்டும் தேவர்கள் பூசித்துத் தொழுது போற்றும் விசய மங்கையாகும்.

185. கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே.

தெளிவுரை : கஞ்சியாகவும் கவளமாகவும் தமது உணவை வகுத்துக் கொண்ட ஒழுகுகின்ற புறச் சமயத்தார் உரைக்கும் கருத்துக்கள், நஞ்சினும் கொடியனவாகும். அதனை நம்மவர்கள் ஏற்றுக் கொள்ளாதவர் ஆவார்கள். சிவந்த சடைமுடியுடைய தேவன் வீற்றிருக்கும் நன்னகராகிய வித்தியாதரர்கள் போற்றித் தொழுகின்ற விசய மங்கையை ஏத்துமின் ! அது அமிர்தத்தை ஒப்பாகும் என்பது குறிப்பு.

186. விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.

தெளிவுரை : விண்ணவர்கள் தொழுது போற்றும் விசய மங்கையை நண்ணிய, புகலி நகர் மேவும் ஞானசம்பந்தன் பாடிய செந்தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், புண்ணியர்கள் ஆவர். அத்தகையோர் சிவகதியை அடைவது உறுதியாகும்.

திருச்சிற்றம்பலம்

276. வைகல் மாடக் கோயில் (அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், திருவைகல், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

187. துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை எந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைகல் ஓங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே.

தெளிவுரை : ஈசன், துள்ளிக் குதிக்கும் இயல்பான தன்மையுடைய மான் கன்றைத் திருக்கரத்தில் ஏந்தி உள்ளவர்; இளமையான பிறைச் சந்திரனைச் சடை முடியில் அணிந்தவர். எம் தந்தையாகிய அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, சிவஞானம் கொண்டு விளங்கும் பெருமக்கள் திகழும் வைகல் என்னும் ஊரில், வளம் நிறைந்த மதியொளி மேவும் மாடக் கோயில் ஆகும்.

188. மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர்
மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.

தெளிவுரை : ஈசன், திருமேனியில் முப்புரி நூல் கொண்டு விளங்குபவர்; வேதம் விரித்து ஓதுபவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு திகழ்பவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, இப்பூவுலகத்தில் மகிழ்ச்சி அடையுமாறு, வைகல் என்னும் ஊரின் மேற்றிசையில், சிவந்த கண்ணுடைய வளவன் எனப்பெறும் கோச் செங்கட் சோழனால் கட்டப் பெற்ற மாடக் கோயிலாகும்.

189. கணியணி மலர்கொடு காலை மாலையும்
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
தணியணி உமையொடு தாமும் தங்கிடம்
மணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே.

தெளிவுரை : கண்களுக்கு அழகிய மலர்கள் தூவிக் காலையும் மாலையும் பணிபவர்களுக்கு அருள் செய்யும் சிவபெருமான், கருணை வயத்தவராகிய உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, நவமணிகள் முதலான சிறப்புகளுடன் திகழும் வைகல் மாடக் கோயில் ஆகும்.

190. கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பியது உரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.

தெளிவுரை : உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்தி வீரத்தைப் புரிந்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, நறுமணம் கமழும் சோலை சூழ்ந்த வைகலில் மேற்புரத்தில், கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில் ஆகும்.

191. விடமடை மிடற்றினர் வேத நாவினர்
மடமொழி மலைமக ளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக் கோயிலே.

தெளிவுரை : பாற்கடலில், தோன்றிய விடத்தைக் கழுத்தில் தேக்கி வைத்து விளங்கும் நீலகண்டத்தை உடைய ஈசன், வேதத்தை விரித்து ஓதும் நாவினர். அப்பெருமான், உமாதேவியாரோடு வீற்றிருக்கும் இடமாவது, அன்னம் நடை பயிலும் வைகல் என்னும் நகரின் மேற்புரத்தில் நிலவும் மாடக் கோயில் ஆகும்.

192. நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவிடம் இலங்கு மூவெரி
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.

தெளிவுரை : நிறைந்த புனிதம் மிக்க புனலாகிய கங்கையும், பிறைச் சந்திரனும் நீண்ட சடை தரித்த இறைவன் மூன்று வகையாக ஓம்பும் தீயிலும் வேதத்திலும் மேவி விளங்குபவர். அப் பெருமான், திறைப்பொருள் ஈட்டிய நிறை செல்வனாகிய கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலில் வீற்றிருப்பவர்.

193. எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
வருமுகில் அணவிய மாடக் கோயிலே.

தெளிவுரை : அக்கினியைச் சரமாகக் கொண்டு மேரு மலையை வில்லாக வளைத்துத் தொடுத்துத் திரிபுரங்களை எரியுண்ணுமாறு செய்த செல்வராகிய ஈசன் உறையும் இடமாவது, வரிவளையல்கள் அணிந்த மகளிர் பயிலும் வைகலின் மேற்புரத்தில் விளங்கும் மாடக் கோயில் ஆகும்.

194. மலையன இருபது தோளி னான்வலி
தொலைவுசெய்து அருள்செய்த சோதி யார்இடம்
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலையன மாடக் கோயிலே.

தெளிவுரை : மலை போன்ற இருபது தோள் உடைய இராவணனுடைய வலிமையை அழித்துப் பின்னர் அவன் வேதத்தின் வாயிலாகப் போற்றி ஏத்த, அருள் செய்யும் சோதியாகிய ஈசனின் இடமாவது, மலர்ப் பொழில் அணியுடன் விளங்கும் வைகலில் வாழ்கின்றவர்கள், வலம் வரும் மலை போன்ற மாடக் கோயிலாகும்.

195. மாலவன் மலரவன் நேடி மால்கொள
மாலெரி யாகிய வரதர் வைகிடம்
மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
மாலன மணியணி மாடக் கோயிலே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் தேடியும் காணாது மயக்கம் கொள்ள, பெருமை மிக்க நெருப்பு மலையாகிய, வரம் நல்கும் வள்ளலாகிய ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, மாலை கொண்டு அணிந்து வேத விற்பன்னர்கள் வாழும் வைகலில் பெருமை மிக்க மணிகளை அணியாக் கொண்டு மேவும் மாடக் கோயில் ஆகும்.

196. கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்
பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
வடமலை யனையநன் மாடக் கோயிலே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் போற்றும் பிடக நூலைப் பேணாதவர்களாகிய சிவனடியார்கள் போற்றுகின்ற கோயிலாவது, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் நான்கு நற்பண்புகள் நிறைந்த மகளிர் பயிலும் மாநகராகிய வைகலில் மேரு மலையனைய சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும்.

197. மைந்தனது இடம்வைகல் மாடக் கோயிலைச்
சந்தமர் பொழில்அணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.

தெளிவுரை : ஈசனது இடமாகிய வைகல் மாடக் கோயிலைச் சந்தன மரங்கள் கொண்ட பொழில் விளங்கும் சண்பை நகரின் ஞானசம்பந்தன் நவின்ற தமிழ் வழங்கும் இத்திருப்பதிகத்தைச் சிந்தையில் கொள்பவர்கள், சிவலோகம் சேருவார்கள்.

திருச்சிற்றம்பலம்

277. திருஅம்பர் பெருந்திருக்கோயில் (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பர், அம்பல், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

198. எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.

தெளிவுரை : ஈசன், எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்தி நள்ளிருளின்கண், நரிகள் திரிகின்ற மயானத்தில் நடனம் புரிகின்றவர். அவர் அரிசில் ஆற்றின் நீர்ப் பெருக்கம் கொண்ட மேவும் அம்பர் மாநகரில், உயர்ந்தோனாகிய கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலில் பொருந்தி வீற்றிருப்பவர்.

199. மையகண் மலைமகள் பாக மாயிருள்
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே.

தெளிவுரை : உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்கும் ஈசன், இருளின்கண், கையில் எரியும் நெருப்பை ஏந்தி ஆடுகின்றவர்; நீர் வளம் மிக்க அம்பரில், கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருப்பவர்.

200. மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை எழில்வளர் இடமது என்பரே.

தெளிவுரை : வேதங்களை நன்கு விரித்துப் பாட வல்லவராகிய ஈசன், எரியும் நெருப்பானது பெருகவும், பிறைச் சந்திரன் சடை முடியில் அசையவும் நடம் புரிபவர். அப் பெருமான், நீர்வளம் நிறைந்த வயல்களையுடைய அம்பர் மாநகரில் கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலின்கண் வீற்றிருப்பவர்.

201. இரவுமல்கு இளமதி சூடி ஈடுயர்
பரவமல்கு அருமறை பாடி ஆடுவர்
அரவமோடு உயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்
மரவமல்கு எழில்நகர் மருவி வாழ்வரே.

தெளிவுரை : இரவில் ஒளிரும் இளம் பிறைச் சந்திரனைச் சூடிப் பெருமையுடைய அரிய மறைகளைப் பாடி ஆடுகின்ற ஈசன், அரவத்தை அணியாகத் தரித்து உயர்ந்து விளங்கும் செம்மலாய், அம்பர் என்னும் நகரில் வீற்றிருப்பவர்.

202. சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கணல் இறைசெய்த கோயில் சேர்வரே.

தெளிவுரை : ஈசன், சங்கால் ஆன குழையைக் காதில் அணியாகக் கொண்டு விளங்குபவர்; சாமம் என்னும் வேதத்தை ஓதி அருள்பவர்; வெம்மையான நெருப்பினைக் கரத்தில் ஏந்தி வீசி ஆடுபவர். அப்பெருமான், அழகிய திருவிழாக்கள் விளங்கும் அம்பர் மாநகரில் கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய கோயிலாகப் பொருந்தி விளங்குபவர்.

203. கழல்வளர் காலினர் சுடர்கை மல்கஓர்
கழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடமது என்பரே.

தெளிவுரை : ஈசன், திருப்பாதத்தில் நன்கு ஆர்க்கும் வீரக்கழலைக் கொண்டு விளங்குபவர்; சுடர்விட்டு எரியும் நெருப்பானது கையில் விளங்கவும், சுழற்சியை உடைய கங்கையானது சடையில் விளங்கவும் ஆடுபவர். அப் பெருமான், வேள்வித் தீ வளர்த்து அந்தணர்கள் ஓம்பும் அம்பர் என்னும் நகரில், பைம்பொழிலின் ஒளி மேவும் பெருந்திருக் கோயிலின்கண் வீற்றிருப்பவர்.

204. இகலுறு சுடர்எரி இலங்க வீசியே
பகலிடம் பலிகொளப் பாடியாடுவர்
அகலிட மலிபுகழ் அம்பர்வம்பவிழ்
புகலிட நெடுநகர் புகுவர் போலுமே.

தெளிவுரை : வலிமை மிகும் சுடரானது, நன்கு எரியுமாறு வீசிப் பலி ஏற்கும் பொருட்டுப் பாடுவதும் ஆடுவதும் ஆக விளங்குபவர், ஈசன். அவர், புகழ் மலிந்து ஓங்கும் அம்பரில், மணம் கமழும் பெருங்கோயிலைத் தமது இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் போலும்.

205. எரியன மணிமுடி இலங்கைக் கோன்தன
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே.

தெளிவுரை : நெருப்புப் போன்று சுடர்விடும் மணிகளை முடியில் பதித்து மேவிய இராவணனுடைய கரிய நிறங் கொண்ட பெரிய கைகள் நலியுமாறு அடர்த்த திருப்பாதத்தை உடைய ஈசன், அரியவராய், வளமை மிக்க நகராகிய அம்பரில் இனிமையொடு வீற்றிருந்து அருள் புரிபவராய், பூத கணங்கள் சூழத் திகழ்பவர்.

206. வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே.

தெளிவுரை :  நறுமணம் கமழும் தாமரை மலர் மீது திகழும் பிரமனும், கொடிய படத்தை உடைய அரவத்தைப் படுக்கையாகக் கொண்டு மேவும் செல்வனாகிய திருமாலும், அறிவதற்கு அரியவராகிய ஈசன் அம்பரில் கோச்செங்கட் சோழனார் கட்டிய கோயிலில் சேர்ந்து விளங்குகின்றவர்.

207. வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையும் தாமுமே.

தெளிவுரை : சமணரும், சாக்கியரும் கட்டுரையாக மொழிவனவற்றைப் பயனுடையதெனக் கொள்ள வேண்டாம். ஆறுகாங்கு திரிந்து அலையாது நீர் வளம் மிகுந்துள்ள அம்பர் மாநகரில், அம்பிகையோடு வீற்றிருக்கும் ஈசனைத் தரிசித்து அருள் பெற வாருங்கள்.

208. அழகரை அடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொள்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.

தெளிவுரை : அழகரை, அடிகளை, அம்பர் நகரில் மேவிய ஒளி திகழும் சடை முடியுடைய நீலகண்டப் பெருமானைத் தமிழில் சிறந்து விளங்கும் பெரியோனாகிய ஞானசம்பந்தன் சொன்ன தமிழாகிய இத் திருப்பதிகத்தை உலகில் ஓதுவீராக ! நற்கதியுறுவீராக !

திருச்சிற்றம்பலம்

278. திருப்பூவணம் (அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

209. மாதமர் மேனியனாகி வண்டொடு
போதமர் பொழிலணி பூவ ணத்துறை
வேதனை விரவலர் அரண மூன்றெய்த
நாதனை அடிதொழ நன்மை யாகுமே.

தெளிவுரை : உமாதேவியைத் திருமேனியில் பொருந்தியவராகி, வண்டு அமரும் மலர்கள் கொண்டு விளங்கும் பொழில் உடைய பூவணத்தில் உறையும் ஈசன், வேதமாக விளங்குபவர். அப்பெருமான், பகைத்து எழுந்த மூன்று அசுரர்களின் கோட்டைகளை அம்பால் எய்து எரியுமாறு செய்த நாதன். அவ் இறைவனுடைய திருவடியைத் தொழ நன்மை விளையும்.

210. வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு
தேனணி பொழில்திருப் பூவ ணத்துறை
ஆனநல் லருமறை அங்கம் ஓதிய
ஞானனை அடிதொழ நன்மை யாகுமே.

தெளிவுரை : வானில் அணி கொண்டு திகழும் சந்திரனைத் தொடும் அளவு உயர்ந்து ஓங்கிய வண்டு நுகரும் தேன் துளிக்கும் மலர்கள் விளங்கும் பொழிலை உடைய பூவணத்தில் உறையும் ஈசுன், எல்லாருக்கும் நலம் வழங்கும் நான்கு தேவங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் நன்கு ஓதி அருளியவர். அப் பெருமானுடைய திருவடி மலர்களைத் தொழுது போற்ற, எல்லா நன்மைகளும் கைகூடும்.

211. வெந்துயர் உறுபிணி வினைகள் தீர்வதோர்
புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோடு ஆறு சூடிய
நந்தியை அடிதொழ நன்மை யாகுமே.

தெளிவுரை : கொடுமையாகத் தாக்கி விளையும் துன்பங்களுக்கும், அடைகின்ற பிணிகளுக்கும் காரணமாகிய வினைகள் தீரும் வழியாக, ஈசனைத் தொழுது போற்றுகின்றோர் விளங்கும் நகர் பூவணம். ஆங்கு உறைகின்ற இளம்பிறைச் சந்திரனும் கங்கையும் சூடிய ஈசனின் திருவடிக் கமலத்தைத் தொழுது போற்ற, நன்மை யாவும் கைகூடும்.

212. வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்
பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை
ஈசனை மலர்புனைந்து ஏதஅது வார்வினை
நாசனை அடிதொழ நன்மை யாகுமே.

தெளிவுரை : நறுமணம் கொண்ட மலர் மாலைகள் தரித்துத் திருவெண்ணீற்றைக் குழையப் பூசிப் பொழில் திகழ் பூவணத்தில் உறையும் ஈசன், மலர் புனைந்து ஏத்தும் அன்பர்களின் வினையை நாசம் செய்பவன். அப்பெருமானின் திருவடி மலர்களøத் தொழுது போற்ற எல்லா நன்மைகளும் கைகூடும்.

213. குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில்திருப் பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம் அரண மூன்றுஎய்த
பெருந்தகை அடிதொழப் பீடை இல்லையே.

தெளிவுரை : குருந்தம், மாதவி, கோங்கும், மல்லிகை ஆகிய மலர்கள் பொருந்திய பொழில் விளங்கும் திருப்பூவணத்தில், வல்லமையுடைய அசுரர்களின் மூன்று கோட்டை மதில்களையும் எரியுமாறு செய்த ஈசனின் திருவடியைத் தொழுது போற்றப் பற்றியுள்ள தீவினை யாவும் நீங்கும்.

214. வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய
பொறியர் வணிபொழில் பூவ ணத்துறை
கிறிபடும் உடையினன் கேடில் கொள்கையன்
நறுமல ரடிதொழ நன்மை யாகுமே.

தெளிவுரை : மணம் கமழும் புன்னை, புலி நகக் கொன்றை முதலான மரங்கள் பெருகிப் பொழிலின் எழுப்பி அணி கொளத் திகழும் பூவணத்தில், மயக்கள் தரும் உடை தரித்த கொள்கை உடையவராக வீற்றிருக்கும் ஈசனின் மணம் கமழும் திருவடி மலரைத் தொழ, எல்லா நலன்களும் கைகூடும்.

215. பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன்
பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை
மறைமல்கு பாடலன் மாதொர் கூறினன்
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.

தெளிவுரை : பாறையின் ஒலியும் முழவின் ஓசையும் ஆர்க்கப் பாடலும் ஆடலும் கொண்டு விளங்கும் ஈசன், சாந்தம் மல்க வழங்கும் பொழில் திகழும் பூவணத்தில் உறைபவர். அப்பெருமான், வேதங்களை விரித்து ஓதி, உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு அருள் புரிபவர். வீரக் கழல் ஒலிக்க மேவும் அப்பரமனின் திருவடியைத் தொழத் துன்பம் என்பது இல்லை.

216. வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி
விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
பொருபுனல் புடையணி பூவணந்தனைப்
பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த கொடிய அரக்கனாகிய இராவணனுடைய நீண்ட முடிகளைத் தனது திருப்பாத விரல்லா அடர்த்திய ஈசன், தூய்மையான திருவெண்ணீற்றைத் தரித்தவராய்க் கங்கையைச் சடை முடியில் கொண்டு பூவணத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமானைப் பரவிப் போற்றும் அடியவர்களுக்குப் பாவமானது அணுகாது. இது சிவனடியார்களைத் தீவினையானது பற்றி நிற்காது என உணர்த்துவதாயிற்று.

217. நீரமல்கு மலருறை வானும் மாலுமாய்ச்
சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்
போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர்மல்கு மலர்புனைந்து ஏத்தல் இன்பமே.

தெளிவுரை : புகழ் மிகுந்த செல்வமாகி இன்னுயிர்களைத் தன் வயப்படுத்தும் ஈசன், பிரமனும் திருமாலும் மலரடிகளைக் காண முடியாதவாறு செய்தவர் மழுப்படையுடைய அப்பெருமான் மேவிய பூவணம் என்னும் திருத்தலத்தைச் சிறப்பான மலர்கள் கொண்டு ஏத்துதல் இன்பம் தருவதாகும்.

218. மண்டைகொண் டுழிதரு மதியில் தேரரும்
குண்டரும் குணம்பல பேசுங் கோலத்தர்
வண்டமர் வளர்பொழில் மல்கு பூவணம்
கண்டவர் அடிதொழுது ஏத்தல் கன்மமே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் நற்குணம் பயவாத சொற்கள் பல பேசும் தன்மையில் உள்ளவர்கள். அவற்றைப் பொருட்டாகக் கொள்ளாது. வளமான பொழில்களையுடைய ஈசனின் புகழ் மணக்க மேவும் பூவணத்தைக் கண்டவர்தம் பக்தர்களின் அடி மலரைத் தொழுது ஏத்துதல் கடமையாகும்.

219. புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை
அண்ணலை அடிதொழுது அந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞான சம்பந்தன்
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.

தெளிவுரை : புண்ணியம் செய்த மாந்தர்கள் தொழுது போற்றுகின்ற பூவணத்தில் உறையும் ஈசனை, வணங்கிப் போற்றிக் காழி நகரில் மேவும் அருமறை வல்லவராகிய ஞானசம்பந்தன் வழங்கி அருளிய இத்திருத்தமிழ்ப் பாடல்களை ஓத, பாவங்கள் யாவும் விலகும்.

திருச்சிற்றம்பலம்

279. திருக்கருக்குடி (அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், கருக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

220. நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
நினைவிலும் எனக்குவந்து எய்து நின்மலன்
கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
அனலெரி யாடும்எம் அடிகள் காண்மினே.

தெளிவுரை : நனவிலும் கனவிலும், நெஞ்சில் தோன்றும் நினைவிலும் எனக்கு நேரில் காட்சி புரியும் ஈசன், கடலால் சூழப்பெற்ற இவ் உலகம் போற்றும் கருக்குடியில், கரத்தில் நெருப்பேந்தி ஆடுகின்ற எமது அடிகள் ஆவார். அப் பெருமானைக் கண்டு தரிசித்து நலம் கொள்வீராக.

221. வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்
மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
காதியல் குழையினன் கருக்கு டியமர்
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.

தெளிவுரை : வேதத்தின் தலைவனாகவும், இடபக் கொடியுடையவனாகவும், மலமற்ற விமலனாகவும் உள்ள ஈசன், பகைத்த முப்புரு அசுரர்களின் கோட்டை மதில்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அப் பெருமான் காதில் குழை அணிந்தவராய்க் கருக்குடியில் வீற்றிருக்கும் ஆதிக் கடவுள். அப்பரமனின் திருவடி மலரைத் தொழுது போற்றுபவர்களுக்குத் துன்பம் இல்லை.

222. மஞ்சுற பொழில்வள மலிக ருக்குடி
நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
அஞ்சுரும் பார்குழல் அரிவை அஞ்சவே
வெஞ்சுரந் தனில்விளை யாடல் என்கொலோ.

தெளிவுரை : மேகம் சுழும் பொழில் வளம் மிக்க கருக்குடியில் நஞ்சினை அருந்திய மிடறுடைய நீலகண்டராய் விளங்கும் ஈசன், உமாதேவியும் அஞ்சுமாறு கொடிய மயானத்தில் ஆடல் கொண்டு விளங்குவது எனக்கொல் !

223. ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
கானிடை ஆடலான் பயில்க ருக்குடிக்
கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.

தெளிவுரை : புலன்களின் உணர்வுடைய இப்பிறவியை நீக்க வேண்டும் என்று எண்ணும் அன்பரீர் ! மயானத்தில் திருநடம் பயிலும் கருக்குடி நாதரின் திருக்கோயிலை வணங்கியும், வானவர்கள் தொழும் அப் பெருமானின் திருக்கழலை வாழ்த்தியும் வாழ்வீர்களாக. இப் பிறவியில் இத் தன்மையில் வழிபடும் அடியவர்கள், பிறவியை அறுக்கும் பேரருளைப் பெறுவார்கள் என்பது குறிப்பு.

224. சடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்
கூடுவர் உலகிடை ஐயங் கொண்டொலி
பாடுவர் இசைபறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.

தெளிவுரை : ஈசன், சடை முடியில் கங்கையைச் சூடி, உமாதேவியை ஒரு பாகத்தில் சேர வைத்து, உலகில் பிச்சை ஏற்கும் தன்மையில் பாட்டு இசைத்துப் பறையொலி கொட்ட நள்ளிருளில் நடம் புரிபவர். இது கருக்குடியில் வீற்றிருக்கும் அப் பெருமானின் அருள் வண்ணம் ஆகும்.

225. இன்புடை யாரிசை வீணை பூணரா
என்புடை யாரெழில் மேனி மேலெரி
முன்புடை யார்முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்புடை யார்கருக் குடியெம் அண்ணலே.

தெளிவுரை : ஈசன், வரம்பில்லாத இன்பம் உடைய குணப்பாங்கு உடையவர்; வீணை கொண்டு இசை பயில்பவர்; எலும்பினை மாலையாக அணிபவர்; எழில் மிக்கதாகிய தூய உடம்பினர்; திருக்கரத்தில், சுடர் விடும் நெருப்பினை ஏந்தியவர்; யாவற்றுக்கும் மூலப் பொருளாகவும் முதற் பொருளாகவும் திகழ்பவர்; அன்பர்களுக்கு அன்புடையவராக இருப்பவர்; அப்பெருமான், கருக்குடியில் வீற்றிருக்கும் எம் அண்ணல் ஆவார்.

226. காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
கோலமும் முடியரவு அணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் திருக்க ருக்குடிச்
சாலவும் இனிதுஅவ ருடைய தன்மையே.

தெளிவுரை : சிவபெருமான், காலம், நியதி முதலான எல்லையாகவும், சூரியன் முதலான சுடர்களாகவும், நெருப்பு முதலான பூதப் பொருள்களாகவும் விளங்குபவர். அப்பெருமான், சடை முடியில் அரவத்தை அணிந்தவர்; சிறப்பான புகழை உடையவர்; அவருடைய மாண்பு இனிது விளங்குமாறு திருக்கருக்குடியில் வீற்றிருப்பவர்.

227. எறிகடல் புடைதழு இலங்கை மன்னனை
முறிப வரையிடை அடர்தத மூர்த்தியார்
கறைபடு பொழில்மதி தவழ்க ருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணனை, மலையிடையில் வைத்து அடர்த்த சிவமூர்த்தியாகிய ஈசன், சிவனடியார்கள் பக்தி அறிவோடு பரவிப் போற்றும் கருக்குடியில் வீற்றிருப்பவர். அப் பெருமான் யாவர்க்கும் நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றவர்.

228. பூமனும் திசைமுகன் றானும் பொற்பமர்
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்குஎரி
ஆம்என உயர்ந்தவன் அணிக ருக்குடி
நாமன னினில்வர நினைதல் நன்மையே.

தெளிவுரை : திசைமுகனாகிய பிரமனும், பொற்புடைய வாமனாவதாரம் கொண்ட திருமாலும், அறிய முடியாத வண்ணத்தில் ஓங்கி எரியும் தீத்திரளாக உயர்ந்த சிவபெருமான், அணிதிகழ மேவும் கருக்குடியில் வீற்றிருப்பவர். அத்திருத்தலத்தை நாம் மனத்திற் கொண்டு நினைத்தல் நன்மையைத் தரும்.

229. சாக்கியர் சமண்பபடு கையர் பொய்ம்மொழி
ஆக்கிய உரைகொளேல் அருந்திருந்நமக்கு
ஆக்கிய அரனுறை அணிக ருக்குடிப்
பூக்கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் பொய்யான மொழிகளைக் காட்டுரையாக்கிக் கூறுவதனை ஏற்றுக் கொள்ள வேண்டாம். நமக்கு ஆக்கிய அருமையான செல்வமானது அரன் உறைகின்ற அணிதிகழும் கருக்குடி ஆகும். இப்பூவுலகில் நன்கு விளங்கும் இக் கோயிலில் அன்பர் பெருமக்கள் சூழப் போந்து வணங்கி உய்வாராக.

230. கானலில் விரைமலர் விம்மு காழியான்
வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி
ஆனமெய்ஞ் ஞான சம்பந்தன் சொல்லிய
ஊனமில் மொழிவலார்க்கு உயரும் இன்பமே.

தெளிவுரை : கடற் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள், பெருகி ஓங்கும் காழி நகருக்கு உடையவனாகி, மேலானவனாகிய கருக்குடி நாதனின் ஒளியாகி மெய்ஞ்ஞானம் திகழும் ஞானசம்பந்தன் சொல்லிய வினை நீக்கம் செய்யவல்லதாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்குப் பேரின்பம் மிகும்.

திருச்சிற்றம்பலம்

280. பஞ்சாக்கரத் திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்

231. துஞ்சலும் துஞ்சலில் லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த வந்தகூற்று
அஞ்சஉ தைத்தன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : உறங்கும்போதும், உறங்காது விழித்திருக்கும் போதும் நெஞ்சம் கசிந்து உருகுமாறு, அஞ்செழுத்தை நினைத்துப் போற்றுக. இதனை, நாள் தோறும் புரிவீராக. மார்க்கண்டேயர், நெஞ்சிலே வேறு எண்ணம் இன்றி ஈசனையே நினைத்துத் திருவடியை வாழ்த்திப் போற்றிய காலத்தில், உயிரைக் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தது திருவைந்தெழுத்தே.

232. மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : மந்திராக விளங்குகின்ற நான்கு வேதங்களும் ஆகி, தேவர்களின் சிந்தையில் நிலவி இருந்து அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது, திருவைந்தெழுத்து ஆகும். இத்தகைய திருவைந்தெழுத்து வேள்வியை ஓம்பும் செம்மையுடைய அந்தணர் பெருமக்களின் மந்திரமாக இருந்து, காலச் சந்திகள்தோறும் ஓதப் பெற்ற ஆற்ற வல்லதும் ஆகும்.

233. ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்
தேனை வழிதிறந்து ஏத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : இவ் அரிய தேகத்தில் உள்ள உயிர்ப்பு, சக்தியை ஒருமிக்கச் செய்து, நிட்டை கூடப் பெற்று, ஞான விளக்கம் திகழச் செய்வதும், அத்தகைய நல்லறிவை நாடுபவர்களுக்குத் தோன்றும் அறியாமையாகிய இடரைக் கெடுப்பதும், திருடைந்தெழுத்தாகும்.

234. நல்லவர் தீயவர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : புண்ணியப் பெருமக்களாயினும், பாவத்தின் மேலிட்டுக் கொடுமைகள் புரியும் தீயவர்களே என்றாலும், பாகுபாடு இன்றி சிவமுத்தியைக் காட்டுவிக்கும் ஆற்றல் உடையது, திருவைந்தெழுத்து. இயமனுடைய தூதுவர்களால் உயிர் பறிக்கப்படும் காலத்திலும், அதன் துன்பத்தைத் திருவைந் தெழுத்தானது நீக்கிக் காக்கும் நெறியுடையதாகும்.

235. கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்து
அங்குள் பூதமும் அஞ் ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சும் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : மன்மதனின் அம்பானது, தேன் துளிர்க்கும் ஐந்து மலர்களாகிய தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்பனவற்றால் ஆனவை. இவ்வுலகில் உள்ள பூதங்கள் நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து உடையன; பொழில்கள் அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என ஐவகையுண்டு; பாம்பின் படம் ஐந்து ஆகும்; ஈசனின் திருக்கரத்தில் மேவும் விரல்கள் ஐந்தாகும். திருவைந்தெழுத்து ஐந்து ஆகும்.

236. தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையி னும்துணை அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : தும்மலும் இருமலும் உடலின்கண் நேருங்காலத்திலும், கொடிய துயரத்தால் நைந்து வாடுங் காலத்திலும், வினையின் வயத்தால் தீமையானது அடையும் காலத்திலும், இப்பிறவியில் மட்டும் அல்லாது, மறு பிறவியிலும், நாள்தோறும் ஓதப் பெறும் திருவைந்தெழுத்தானது துணையாகி நின்று நலம் பயக்கும்.

237. வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆட உகப்பன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : திருவைந்தெழுத்தானது, சாதலும் பிறத்துலும் நீங்கிய பேறாளர்களாக்கும் ஆற்றல் உடையது. பீடிக்கப்பெற்ற தொல் பிணியைத் தீர்த்து நாள்தொறும் நல்ல செல்வத்தை அளித்து மகிழ்விக்கச் செய்யும் திறம் கொண்டதாகிய இத்திருவைந்தெழுத்து, சிறப்பான நடம் புரிந்து மகிழும் ஈசனால் பெரிதும் உகந்து ஏற்கப்படுவதாகும்.

238. வண்டமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : வண்டு அமரும் கூந்தலை உடைய உமாதேவியால் போற்றப்படுவதும் மற்றும் இராவணன் கசிந்துருகிப் பாடி ஈசனாரின் அருளைப் பெற்று உய்யச் செய்ததும் திருவைந்தெழுத்து ஆகும். திருத்தொண்டர்கள் இத்திருவைந்தெழுத்தினைக் கொண்டு துதிக்க, அவர்களுக்கு அண்டங்களை ஆளுகின்ற பேற்றினை ஆக்க வல்லதும் இதுவே.

239.கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணுதற்கு ஒண்ணாத புகழ் வண்ணமாகிய திருவடி மலர்களின் செவ்வியை, நாள்தோறும் பெருமை கொள்ளுமாறு பேசிப் போற்றுவதற்கு ஆர்வமாக விளங்குவது திருவைந்தெழுத்தாகும்.

240. புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
அத்திரம ஆவன அஞ்செ ழுத்துமே.

தெளிவுரை : புத்தர்களும் சமணர்களும், கூறும் பொய்யுரைகளை ஏற்காத உறுதியான சித்தம் உடையவர்கள், நன்கு தேர்ந்தும் தெறிவும் கொண்டவர்களாய்ச் சிவஞானம் தரவல்ல திருவெண்ணீறு அணியும் பேறுடையவர்கள் ஆவர். அவர்களுடைய தீவினை ஆகிய பகையை மாய்க்கும் அத்திரம் என ஆவது திருவைந்தெழுத்து.

241. நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.

தெளிவுரை : நற்றமிழின் நாயகனாய், நான்கு மறைகள் வல்லவனாய், காழி நகரில் மேவும் பெருமக்களின் மன்னவனாய் மேவும் ஞானசம்பந்தன், நன்கு நினைத்து எத்தகைய குற்றத்தையும் நீக்கிக் காக்க வல்லதாக உரைத்த, திருவைந்தெழுத்துடைய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தேவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

281. திருவிற்கோலம் (அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில், கூவம்,திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

242. உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : ஈசன், அழகிய வடிவத்தில் திகழும் உமாதேவியோடு ஒன்றி நின்று, திருவுடையவராகிச் சடை முடியில் திங்களும் கங்கையும் சூடியவர். அப்பெருமான், வானவர்கள் தொழுது போற்றுமாறு, வெகுண்டெழுந்து போர்க் கோலம் பூண்டவர்; அப் பரமன் உறைகின்ற இடம் திருவிற்கோலம் ஆகும்.

243. சிற்றிடை உமையொடு பங்கன் அங்கையில்
உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : சிறிய இடையுடைய உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு மேவும் ஈசன், அழகிய கையில் எரியும் நெருப்பை கொண்டு விளங்குபவர்; ஓர் அம்பினைக் கொண்டு அசுரர்களின் மூன்று புரங்களையும் எரிந்து சாம்பலாகுமாறு போர் செய்து வெற்றி கொண்டவர். அப் பெருமான் உறைகின்ற இடமாவது, திருவிற் கோலமேயாகும்.

244. ஐயன்நல் லதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ணம் வண்ணவான்
பையரவு அல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : ஈசன், யாவற்றுக்கும் தலைவர்; நல்ல அதிசயமாக விளங்கிப் புதுமைப் பொலிவு தோன்ற அருள் புரிபவ்; பிரமனும் தேவர்கள் முதலானோரும் தொழுகின்ற நீலகண்டர்; நல்வண்ணம் உடையவளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமான் செம்மேனியராய் வீற்றிருக்கும் இடமாவது திருவிற்கோலமே ஆகும்.

245.விதைத்தவன் முனிவருக்கு அறமுன் காலனை
உதைத்தவன் உயிரிழந்து உருண்டு வீழ்தரப்
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : ஈசன், சனகாதி முனிவர்கள் என்று சொல்லப்படுகின்ற சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வருக்கும் அறப் பொருளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கினையும் உபதேசித்து அருளியவர்; காலன் உயிரிழந்து வீழுமாறு திருப்பாதத்தால் உதைத்தவர்; உலகத்தை அழித்த வன்மையுடைய முப்புர அசுரர்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அப்பெருமானின் உறைவிடம் திருவிற்கோலமே ஆகும்.

246. முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : ஈசன், எல்லாப் பொருள்களுக்கும் மூலம் ஆனவர். மும்மூர்த்திகளுள் முன் விளங்கும் தலைமை காணும் முதல்வராகவும் திகழும் ஈசன், கொத்தாகப் பூக்கும் மலர்ப் பொழில் உடைய கூவம் என்னும் ஊரில் மேவியவர்; குறைந்து விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடியவர்; அடியவர்களைப் பற்றியுள்ள வினை யாவும் நீங்குமாறு செய்பவர்; அப்பெருமான் உறைகின்ற இடம், திருவிற்கோலம் ஆகும்.

247. தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : அரிய வேதங்ககளையும் அதன் அங்கமாகிய ஆகமங்களையும் தொகுத்து அளித்த ஈசன், பொழில் திகழும் கூவம் என்னும் ஊரில் மேவிக் கொடுமைகளை மிகுத்துச் செய்த முப்புர அசுரர்களை, எரிந்து சாம்பலாகுமாறு போர் செய்து அழித்து, திருவிற்கோலத்தை உறைவிடமாகக் கொண்டுள்ளவர்.

248. விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளம்
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன் இலங்கையர் கோன்இ டர்படச்
சிரித்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : அரிய வேதங்களை விரித்து ஓதிய சிவபெருமான், விரிந்து சென்ற கங்கையைச் சடைமுடிவில் நிலவுமாறு தரித்தவர்; பகைவராகிய முப்புர அசுரர்களின் கொடுஞ் செயல்கள் யாவும் அற்றொழியுமாறு, அவர்களை எரிந்து சாம்பலாகச் செய்தவர்; இராவணன், கயிலையைப் பெயர்த்த போது அவன் இடர் உற்று நையுமாறு திருவிளையாடல் புரிந்தவர். அப் பெருமானின் உறைவிடமாவது, திருவிற்கோலம் ஆகும்.

249. திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமனது ஆற்ற லால்உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : சிறகுகளைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் திரிந்து சேதங்களையும் தேவர்களுக்குத் தீங்குகளையும் செய்த முப்புரங்களை எரிந்து சாம்பலகுமாறு புரிந்து ஈசன், அரவமும் சந்திரனும் சடை முடியில் வைத்த பெருமான் ஆவார். அப் பெருமான், அரியும் பிரமனும் தமது ஆற்றலைப் பெரிதாகக் கொண்டு முனைந்ததால் காணுதற்கு அரியவனாகியவர். அவரது உறைவிடமானது, திருவிற்கோலம் ஆகும்.

250. சீர்மைஇல் சமணொடு சீவ ரக்கையர்
நீர்மைஇல் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையி னான்இடம் திருவிற் கோலமே.

தெளிவுரை : செம்மையான புகழின்பாற் கொள்ளாத சமணரும் சாக்கியரும் உரைக்கும் அன்பற்ற உரைகளைக் கொள்ளாது, ஈசன்பால் அன்பு கொண்டு, உலகில் பெருஞ் செல்வத்தைப் பரிவுடன் நல்குபவர், ஈசன், அத்தகைழ புகழ் மிகுந்த பெருமான் உறையும் இடமானது, திருவிற்கோலம் ஆகும்.

251. கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல்ல தமிழ்ஞான சம்பந்தன
பாடவல் லார்களுக்கு இல்லை பாவமே.

தெளிவுரை : வளைந்ததும், குறையுடையதும் ஆகிய சந்திரனைச் சடை முடியில் சூடி விளங்குகின்ற சிவபெருமான், கூவம் என்னும் ஊரில் பெருமை கொண்டு மேவும் மதில்களை உடைய திருவிற்கோலத்தை நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தனது பாடலைப் பாட வல்லவர்களுக்குப் பாவமானது விலகிச் செல்லும்.

திருச்சிற்றம்பலம்

282. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

252. மண்ணின்நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல்ல கதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : இப்பூவுலகில் நல்ல வண்ணம் வாழலாம். நற்கதி என வழங்கப் பெறும் முத்தி நலனை அடைய வேண்டும் என எண்ணும் தன்மையிலும், அது கைவரப் பெறும். இப்பேற்றினை அளிக்க வல்லது கழுமலம் எனப்பெறும் வளம் மிகுந்த நகராகும். அத்திருத்தலத்தில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியாரை உடனாகக் கொண்டு பெருந்தகையாகிய ஈசன் நன்கு வீற்றிருப்பவர்.

253. போதையார் பொற்கிண்ணத்து அடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தான்எனை ஆண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : ஞானம் பெருகும் அடிசிலைப் பொற்கிண்ணத்தில் கொண்டு ஈசனின் ஆணைப்படி, உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்டுவித்து அருளிச் செய்தவர். அதுகண்ட சிவபாத இருதயர், பால் அறாவாயராக விளங்கிய ஆளுடைய பிள்ளையாரை முனிந்து நோக்கி, யார் தந்த அடிசில் என வினவ, ஈசன், திருக்காட்சியினை நல்கி ஆட்கொண்டவர். அப்பெருமான், காதில் குழையுடையவர். உமாதேவியை உடனாகக் கொண்டு கழுமலமாகிய வள நகரில் வீற்றிருப்பவர், அவ் இறைவனே.

254. தொண்டணை செய்தொழில் துயரறுத்து உய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை யாகஓர் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : தொன்றுதொட்டு மன்னுயிரைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துயரத்தைக் களைந்து உய்தி அடைவதற்காகக் கொன்றை மலரைச் சடை முடியில் தரித்து, நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் என்னும் வள நகரில், உமாதேவியை உடனாகக் கொண்டு , ஈசன் வீற்றிருக்கின்றார்.

255. அயர்வுளோம் என்றுநீ அசைவுஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : நெஞ்சமே ! வினைத் துன்பத்தால் தளர்வடைந்து எதுவும் கைகூடப் பெறாது ஆயிற்று என்று தளர்ச்சி கொள்ள வேண்டாம். ஒளி மிக்க வளையலை அணிந்த கையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, கயல்கள் குதிக்கும் நீர்வளம் மிகுந்த கழுமலம் என்னும் வளமையான நகரில், பலவாகிய புகழ்மிகும் திருப்பெயர்கள் கொண்டு துதிசெய்யுமாறு ஈசன் வீற்றிருக்கின்றவர் அல்லவா !

256. அடைவிலோம் என்றுநீ அயர்வுஒழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : நெஞ்சமே ! திருவடிப் பேற்றை அடையும் வகை இல்லையே எனத் தளர்வு கொள்ள வேண்டாம். இடபக் கொடியுடைய ஈசன், தேவர்கள் தொழுது போற்றும் கழுமலமாகிய வளம் பொருந்திய நகரில் உமாதேவியரோடு வீற்றிருப்பவர். அப்பெருமானை ஏத்தி வழிபட்டு நலம் கொள்க என்பது குறிப்பு.

257. மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : நெஞ்சமே ! ஈசனைத் தவிர பற்றக் கூடியது வேறு இல்லை. நான்கு மறைகள் அதன் தொடர்புடைய பலவும் கற்று, அதன்படி ஒழுகும் வேதியர்கள், பெருமை சேர்க்கும் கழுமலமாகிய வளநகரில், உமாதேவியை உடனாகக் கொண்டு, என்னை ஆளுடைய ஈசன் விளங்குபவர் அல்லவா !

258. குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவனொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : மனக் குறை கொண்டு மொழியும் சொற்களை, நெஞ்சமே ! விடுவாயாக. நிறைந்த வளையலை முன்கையில் அணிந்து மேவும் உமாதேவியாரை உடனாகக் கொண்டு, பொழில் திகழும் கழுமலத்தில், பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய ஈசன், வீற்றிருப்பவர் அல்லவா !

259. அரக்கனார் அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான் கழுமலவளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : அரக்கனாகிய இராவணன் பொருந்தி மேவும் பெருமையுடைய திருக்கயிலையை எடுத்தவன், அவன் அலறித் துடிக்குமாறு, ஈசன் தனது திருப்பாத விரலால் நெருக்கினார். பின்னர், அவ் அரக்கன் நீண்டு இனிமை தரும் யாழ் மீட்டிப் பாட, கூர்மையான வாளினை அருள் செய்தார். அப்பெருமான் கழுமல வள நகரில் விளங்குபவர். அப்பெருந்தகை, பெருகிச் சேரும் அன்பினனாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு நனி வீற்றிருப்பவர் அல்லவா !

260. நெடியவன் பிரமனும் நினைப்பரி தாய்அவர்
அடியொடு முடியறி யாஅழல் உருவினன்
கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் காணுதற்கு அரியபொருளாய், அடியும் முடியும் அறியாத தன்மையில், அழல் உருவாய் ஓங்கியவர், சிவபெருமான். அப்பெருமான், மணம் கமழும் பொழில் திகழும் கழுமலம் எனப்படும் வளமையான நகரில், பெண் யானையின் நடை போன்று விளங்கும் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவர் அல்லவா ! அப்பெருமானின் இன்னருளால் நலமே நிகழும் என்பது குறிப்பு.

261. தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந்து அடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளம் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை இருந்ததே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உண்மைப் பொருளை நவிலாது, தமக்குப் பொருந்தியவாறு உரைக்க, அவற்றைக் களைந்து, ஈசனின் திருவடி இணை மலரை அடைந்து உய்வீராக. அத்தகைய நற்பேறு அளிக்கும் தன்மையில் பொழில் வளர் கழுமலத்தில், பேரறத்தாளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு, ஈசன் விளங்குபவர் அல்லவா !

262. கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோடு இருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள்போய் விண்ணுலகு ஆள்வரே.

தெளிவுரை : நன்னீர் வளமும் தேன் வளமும் மல்கும் கழு மல நகரில் உமாதேவியோடு வீற்றிருந்த எமது தலைவனைப் பேற்றி அருந்தமிழாய் விளங்கும் ஞானசம்பந்தனது செந்தமிழ் எனப் பெறும் இத்திருப்பதிகத்தை விரும்பி ஏத்தி ஓதவல்லவர்கள், விண்ணுலகில் ஆட்சிமை கொள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

283. திருந்து தேவன்குடி (அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

263. மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள் வேடங்களே.

தெளிவுரை : திருந்து தேவன்குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடப் பொலிவுகள் யாவும் அருந்தவத்தோரால் தொழப் பெறுபவை. அத்தகைய திருப்பொலிவைக் கண்டு தரிசனம் செய்தால், நோய் தீர்க்கும் மருந்து எனத் தோன்றி நலம் தரும்; மந்திர வாசகமாக விளங்கி வெற்றியை நல்கும்; மறுமைக்கு உறுதுணையாக வழங்கப்படும் புராண வராலாறு போன்று புண்ணியத்தை ஈட்டித் தரும்.

264. வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் கப்படாப் பெருளை யோர்விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதிஅந் தம்மிலா அடிகள்வே டங்களே.

தெளிவுரை : மன்னுயிரின் தீவினைகளை இல்லாமை ஆக்கும் தேவன் குடியில் வீற்றிருக்கும் ஆதியும் அந்தமும் இல்லாத ஈசனின் திருவேடப்பொலிவானது, அலங்காரப் பொருள்களை நல்கியும், தீவினைகளை அழித்தும், ஞான நூல்களின் நுண்ணிய பொருள்களை நனி உணருமாறு செய்வித்தும் அருள்புரிய வல்லது.

265. மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வன
வானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே.

தெளிவுரை : தேனின் மணமும், வண்டின் இசையும் பெருகித் திகழும் தேவன் குடியில் வீற்றிருக்கும் ஈசன், பஞ்ச கௌவியத்தைப் பூசனைப் பொருளாகக் கொண்டு விளங்கும் அடிகள் ஆவர். அப்பெருமானின் திருவேடப் பொலிவானது, மன்னுயிர்க்கும் பெருமை தரவல்ல புகழை மேம்படச் செய்யும்; குற்றம் புரிந்து தீவினைகளை வளர்க்கும் அஞ்ஞானமாகிய மாசினை நீக்கும்; உயர்ந்த பதவியாகிய சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ச நிலைகளுக்குச் செல்லுகின்ற வழிகளைக் குருமூர்த்தமாக விளங்கி உணர்த்தியருளும்.

266. செவிகளார் விப்பன சிந்தையுள் சேர்வன
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அவிகள்உய்க் கப்படும் அடிகள்வே டங்களே.

தெளிவுரை : புவியின் வளத்தைப் பெருக்கும் நீர்வளம் மேவும் தேவன்குடியில், வேள்வியின் அவிர்பாகத்தைக் கொண்டு திகழும் அடிகளாகிய ஈசனின் திருவேடப் பொலிவானது, செவிகளுக்கு இனிமை விளங்கிச் சிந்தையில் சேரும் கருத்துக்களை நல்கவல்லது; ஈசனின் நறும்புகழைக் கூறும் கவிகளைப் பாடவைக்கவல்லது; கண்களுக்கு இனிய காட்சியினைக் காட்டியருள் வல்லது.

267. விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறி
மண்ணுலா வும்நெறி மயக்கம்தீர்க் கும்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலான் ஏறுடை அடிகள்வே டங்களே.

தெளிவுரை : தெளிந்த நிலவினைத் தொடும் உயர்ந்த மதில்களை உடைய தேவன்குடியில் வீற்றிருக்கும் அண்ணலாகிய ஈசன், இடப வாகனத்தையுடைய அடிகள் ஆவர். அப்பெருமானின் வேடத் திருப்பொலிவு, தேவர் உலகத்தில் மேவும் நெறியைக் காட்டும்; முத்தி நெறி காட்டும்; இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக் காட்டி அஞ்ஞானத்திலிருந்து தெளிவிக்கும்.

268. பங்கம்என் எப்படர் பழிகள் என்னப்படா
புங்கம்என் னப்படர் புகழ்கள்என் னப்படும்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கம்ஆ றும்சொன்ன அடிகள்வே டங்களே.

தெளிவுரை : உயர்ந்த பொழில் கொண்ட தேவன்குடியில் வீற்றிருக்கும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் விரித்து ஓதிய ஈசனின் திருவேடப் பொலிவு, மன்னுயிர்களுக்கு, ஈனத் தன்மையால் உண்டாகும் பழிகளிலிருந்தும் காக்கும்; புகழும் தரும்.

269. கரைதல்ஒன் றும்மிலை கருதவல் லார்தமக்கு
உரையில் ஊனம்மிலை உலகினில் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத்து அடிகள்வே டங்களே.

தெளிவுரை : அலைகள் பெருகுமாறு பாயும் நீர் வளம் மிகுந்த தேவன்குடியில், ஒளி மிக்க கோவண ஆடை கொண்டு மேவும் ஈசனின் திருவேடப் பொலிவானது, குற்றம் இல்லாத தன்மையில் விளங்குதலும், அதனைக் கருத வல்லவர்களுக்குக் குறை நீங்கப் பெற்று உலகில் பெருமையை நல்குதலும் ஆகும்.

270. உலகமுட் குந்திறல் உடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம் வெருட்டும் வேடத்தின
திலகமா ரும்பொழில் சூழந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி அடிகள்வே டங்களே.

தெளிவுரை : சிறந்து விளங்கும் பொழில் சூழ்ந்த தேவன்குடியில் ஒளி திகழும் மலர் தரித்து மேவும் ஈசனின் திருப்பொலிவானது, உலகத்தைத் தன் திறமைக்கு உட்பட்டுள்ளதாகச் செய்விக்கும் ஆற்றலுடைய இராவணனுக்கு ஈடு கொடுக்கும் ஆற்றலில் குறைந்துள்ள பூதகணங்கள் கூட அவ் அரக்கனை வெருட்டி நோக்கும் பாங்கினை உடையன.

271. துளக்கம்இல் லாதன தூயதோற் றத்தன
விளக்கம்ஆக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந் தேவன்குடித் திசைமுகன் ஓடுமால்
அளக்கஒண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.

தெளிவுரை : நறுமணம் கமழும், வண்டு அமரும் பொழில் சூழ மேவும் தேவன்குடியில், பிரமனும் திருமாலும் காணுதற்கு ஒண்ணாத ஈசனின் திருவேடத் திருப்பொலிவானது, நடுக்கத்தைத் தீர்க்கவல்லதும், தூய்மையான தோற்றம் உடையதும், அஞ்ஞானத்தை நீக்கி ஞான விளக்கும் புரிவதும் ஆகும்.

272. செருமரு தண்துவர்த் தேரம ணாதர்கள்
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே.

தெளிவுரை : துவர் ஆடை கொண்ட சாக்கியரும் சமணரும் கூறும் உரைகளை ஏற்க வேண்டாம். இலக்குமி வாசம் செய்யும் தாமரை மலர் திகழும் பொய்கை சூழ்ந்த தேவன்குடியில் வீற்றிருக்கும் அடிகளாகிய ஈசனின் திருவேடப் பொலிவு, அருமருந்தாகி இன்பத்தை பெருக்கும் பாங்குடையது. இத் திருத்தலத்தின் அம்பிகையின் பெயர் அருமருந்தம்மை என்பதும். அது ஈற்றடியில் குறிப்பால் சுட்டப் பெற்றுள்ளதும் காண்க.

273. சேடர் தேவன்குடித் தேவர்தே வன்றனை
மாடம் ஓங்கும்பொழில் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : பெருமை மிக்க தேவன்குடியில் மேவும் தேவாதி தேவனாகிய ஈசனைப் போற்றி மாடமாளிகைகளும் பொழில்களும் திகழும் காழியில் மேவும் ஞானசம்பந்தன் நன்று நாடவல்ல தமிழால் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இப்பிறவியின்கண் பாவம் இல்லாதவர்களாய் விளங்கி, நல்லின்பத்தை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

284. திருக்கானப்பேர் (அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில், சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

274. பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணலின்
அடியலால் அடைசரண் உடையரோ அடியரே.

தெளிவுரை : பெண் யானைகள் பின்னால் சூழ்ந்து மேவ, பெரிய துதிக்கையுடைய யானையானது மலர் கொண்டு ஏந்தி விடியற் காலையில் நீர் படிந்து, விதி முறைப்படி வழிபடுகின்ற நறுமணம் கமழும் மலர்ப் பொழில் திகழும் கானப் பேயர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அண்ணலாகிய ஈசனின் திருவடியை அன்றி, அடியவர்கள் சரணம் புகுதற்கு யாது உள்ளது !

275. நுண்ணிடைப் பேரல்கு நூபுர மெல்லடிப்
பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்
கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே.

தெளிவுரை : நுண்ணிய இடையும், மென்மையான சிலம்பு அணிந்த பாதமும் உடைய பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் மேவும் ஈசன், நெற்றியில் கண்ணுடையவர். அப்பெருமான், கருதி வீற்றிருக்கும் கானப்பேயர் என்னும் தலத்தை, விண்ணுலகை ஆளும் விருப்பம் கொண்டுள்ளவர்கள் விரும்பி ஏத்துதல் கடமையாகும்.

276. வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம்
காவிவாய்ப் பண்செயும் கானப்பேர் அண்ணலை
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளு ஞானநீர்
தூவிவாய்ப் பெய்துநின்று ஆட்டுவார் தொண்டரே.

தெளிவுரை : பகலில், பொய்கையில் உள்ள தாமரை மலர்களில் தங்கித் தேனைப் பருகிய வண்டினம், இரவில் மலரும் நிலோற்பல மலரை நுகரும் தன்மையில், எஞ்ஞான்றும் பண்ணிசைத்து விளங்கும் சிறப்புடையது கானப் பேர் ஆகும். ஆங்கு எழுந்தருளியுள்ள ஈசனைச் சந்தனம் மற்றும் புனித நீர் கொண்டு பூசித்து மலர் தூவிப் போற்றி அடியவர்கள் விளங்குவர்.

277. நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை அவர்க்கலால் களைகிலார் குற்றமே.

தெளிவுரை : சாந்தம் நிலவும் நிறையுடைய நெஞ்சமும், நீரும், பூவும், ஒலித்து முழக்கும் முழவும், நைவேத்தியமும், திருப்புகழ்பாடல்களும் நன்கு விளங்குகின்ற கானப் பேர் என்னும் தலத்தில், கறைக் கண்டனாக பாங்கால் பூசித்து வழிபடுபவர்களுக்கு அல்லாது ஏனையோருக்குக் குறைகள் தீருமோ !

278. ஏனப்பூண் மார்பின் மேல் என்புபூண்டு ஈறிலா
ஞானப்பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய
கானப்பேர் ஊர்தொழுங் காதலார் தீதிலர்
வானப்பேர் ஊர்புகும் வண்ணமும் வல்லரே.

தெளிவுரை : பன்றியின் கொம்பையும், எலும்பினையும் அணிகலனாகக் கொண்டு, எண்ணற்ற ஞானப் பொலிவுடைய திருநாமம் ஆயிரம் விளங்கப் பெற்று மேவும் ஈசன், நண்ணிய கானப்பேர் என்னும் ஊரினை, விரும்பித் தொழும் அடியவர்கள், தீயவினை அற்றவர் ஆவர்; வானப் பேரூர் என விளங்கும் அமராவதி நகருக்குச் செல்லும் வண்ணத்தைப் பெற்றவராகவும் திகழ்வர்.

279. பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும்என் உள்ளமே.

தெளிவுரை : யாவற்றையும் ஏற்கும் படர்ந்த சடையினில் கங்கையை ஏற்று சிவபெருமான், வெண்மையான சந்திரனைத் தரித்து விளங்குபவர. அஞ்ஞானத்தில் அழுந்தாத மெய்யன்பர்கள் மேவும் கானப் பேர் என்னும் தலத்தில் விளங்கும் மெய்யன்பர்தம் உள்ளத்தில் அப்பெருமான் திகழ, அவ் அடியவர் தம் திருஉள்ளத்தைக் கோயிலாக எண்ணி என் மனம் ஏத்தும்.

280. மானமா மடப்பிடி வன்கையால் அடக்கிடக்
கானமார் கடகரி வழிபடும் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணிகெட எண்ணில்
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.

தெளிவுரை : பெருமையான பெண் யானையை அடக்க வல்ல கானகத்தில் உள்ள பெரிய ஆண் யானையானது வழிபடும் கானப் பேர் என்னும் தலத்தில் டீவற்றிருக்கும் ஈசனை, இத்தேகத்தில் உள்ள பிணி கெட, ஞான மலராகக் கருதப்படுகின்ற அட்ட புட்பங்களாகிய கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, ஆகியவற்றின் பெருக்கத்தால் நண்ணுதல் நன்மையாகும்.

281. வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளுநாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.

தெளிவுரை : வாளும், வேலும் பெருமை மிகுந்த கயிலை மலையை எடுத்த உறுதியான தோளும் உடைய இராவணனின் நீண்ட முடிகளை நலியுமாறு ஊன்றிய திருத்தாளின் சிறப்புடைய ஈசனின் கானப் பேர் என்னும் தலத்தை, முதன்மையாய் வணங்கும் அடியவர்கள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும், உயர்ந்த நிலையினை அடைந்து எல்லா நலன்களையும் பெறுவார்கள்.

282. சிலையினான் முப்புரம் தீயெழச் செற்றவன்
நிலையிலா இருவரை நிலைமைகண்டு ஓங்கினான்
கலையினார் புறவில் தேன்கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; பிரம்மன், திருமால் ஆகியவர்தம் கண்களுக்குத் தோன்றாதவராய்த் தீத்திரட்சியசய் ஓங்கிய ஈசன், அப் பெருமானின் தேன் மணம் கமழத் திகழும் கானப் பேர் என்னும் திருத்தலத்தைத் தொழுது போற்று பவர்கள் தவமுடையவர்கள் ஆவார்கள்.

283. உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
பறித்தலும் போர்த்தலும் பயினிலை பாவிகாள்
மறித்தலை மடப்பிடி வளர்இளங் கொழுங்கொடி
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.

தெளிவுரை : கையில் கமண்டலம் ஏந்தியும், சிகை நீக்கியும் உள்ள சமணர் சாக்கியர்கள் பயனற்றவை மொழிந்து பாவத்தை ஆள்பவர்களாவர். இளம்பிடியன்ன உமாதேவியாரைப் பாகங் கொண்டு மேவும் ஈசனின் கானப்பேர் என்னும் தலத்தினைத் தொழுது ஏத்துதல் கடமையாகும்.

284. காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இளவரால் குதிகொளும் காழியான்
நாட்டகத்து ஓங்குசீர் ஞானசம் பந்தன
பாட்டகத்து இவைவலார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : மயானத்தில் விளங்கி நடம்புரிதலை விரும்பிய ஈசனின் கானப் பேர் என்னும் தலத்தை, நீர்வளம் மிக்க காழியில் சீர்மேவ ஓங்கும் ஞானசம்பந்தன் பாடிய திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

285. திருச்சக்கரப்பள்ளி (அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

285. படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடம் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : படைக்கலனில் சிறப்புடைய வெண்மழு ஏந்திப் பாயும் புலியின் தோலினை உடையாகவும், உமாதேவியாரைத் தனது திருமேனியில் ஒரு கூறாகவும் விளங்கும் சிவபெருமான், இடப வாகனத்தில் வீற்றிருப்பவர்; திருவெண்ணீறு பூசித் திகழ்பவர்; கங்கையைச் சடை முடியில் தரித்தவர். அப் பரமனின் உறைவிடமானது சக்கரப்பள்ளி என்பதாகும்.

286. பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்எருக்கு அதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : ஈசன், சிறப்பாகப் போற்றப் பெறும் வேதங்களை ஓதியருளியவர்; குளிர்ச்சியான சந்திரனைச் சடை முடியின் மீது சூடியவர்; மண்டை ஓட்டு மாலையும், அதனுடன் எருக்கம் பூவும் பொருந்தக் கொண்டு மேவுபவர்; திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர். அவர் அருகில், மார்க்கண்டேயர் அபயமாக வந்து வணங்கிப் போற்றுவதைக் கண்டு உயிரைக் கவரும் தன்மையில் நண்ணிய காலனை உதைத்து வீழ்த்தியவர்; அப்பெருமானின் நகரானது வளமை மிகுந்த சக்கரப்பள்ளியாகும்.

287. மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும்
துன்னினார் உலகெலாம் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : மின்னலைப் போன்று விளங்கும் சிவந்த சடை முடியின்மீது, விரிந்து ஒளிக் கதிரை வீசும் சந்திரனையும், பொன் போன்ற கொன்றை மலரையும், படம் கொண்டு மேவும் அரவத்தையும் பொருந்தத் தரித்துள்ள சிவபெருமான், உலகம் யாவும் தொழுது போற்றுமாறு நான்கு மறைகளின் பொருளாக விளங்குபவர். அப் பெருமானுடைய நகரானது வளம் பொருந்திய சக்கரப்பள்ளியாகும்.

288. நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழும்ஊர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : ஈசன், நலம் தரும் பாங்கினில் கருணை விளங்க அருள்பொழியும் கொள்கை உடையவர்; நான்கு வேதங்களையும் ஓதி விரித்தவர்; வலிமை மிகுந்த மழுப்படையை ஆயுதமாகக் கொண்டுள்ளவர்; அப்பெருமான் மகிழ்ந்து விளங்கும் ஊரானது, வண்டுகள் ஒலிக்கவும், தேன் துளிர்க்கும் மலர்கள் விளங்கவும் காவிரியிலிருந்து மணிகள் கொழிக்கும் சக்கரப்பள்ளியாகும்.

289. வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோடு அமரும்ஊர்
கந்தமார் மலரொடு காரகில் பல்மணி
சந்தினோடு அணைபுனற் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : ஈசன், திருவெண்ணீறு மேனியராய் விளங்கும் வேத நாயகர்; கங்கையைச் சடை முடியில் தாங்கியும், மலை மகளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டும் விளங்குபவர். அப் பெருமான் அமர்ந்து மேவும் ஊர், மணம் கமழும் மலரும், அகிலும், பலவகை மணிகளும், சந்தனமும் சேர்ந்து திகழும் நீர் வளம் மிகுந்த சக்கரப் பள்ளியாகும்.

290. பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடம் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : எத் தன்மையில் அமைய வேண்டுமோ அத்தகைய தன்மையில் முப்புரமானது பாழ்பட்டு எரிந்து சம்பலாகுமாறு, மேரு என்னும் பெரிய மலையைச் சுடர் மிகுந்து மேவும் வில்லாகக் கொண்டு அழித்து, வானவர்களும் தானவர்களும் வணங்கித் தொழ ஓங்கியவர், சிவபெருமான். அவர், உமாதேவியைத் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டும், கங்கையைத் திருமுடியில் வைத்தும் இருப்பவர். அவருடைய உறைவிடம் சக்கரப்பள்ளியாகும்.

291. பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : உலகில் உள்ள மக்களெல்லாம் தொழுது போற்ற விளங்கும் ஈசன், பல்லாயிரக் கணக்கான திருநாமங்களை உடையவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டிருப்பவர்; பேரொலி மேவும் கங்கையைச் சடை முடியில் தரித்து வரிசையாக விளங்கும் கொன்றை மலரை மாலையாகச் சூடி இருப்பவர்; அப்பெருமானின் வளநகர் சக்கரப்பள்ளியாகும்.

292. முதிரிலா வெண்பிறை சூடினார்முன் னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அரிதிலா வல்லரக் கன்வலி வாட்டிய
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : முதிர்வு அடையாத இளமையான வெண் திங்களைச் சூடி மேவும் சிவபெருமான், தம்மை எதிர்த்துப் பொருது வெற்றி பெறுவதற்கு ஒருவரும் இல்லை என்னும் நிலையில் திரிந்த முப்புரங்களை, எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அவர், தனக்கு இணையாகச் சொல்லுவதற்கு அரிதாக விளங்கும் வலிமை உடைய இராவணனை, அவன் பெயர்த்த மலையினாலே அடர்த்திய திறமையான ஆற்றல் உடையவர். அப்பெருமானின் வளநகர், சக்கரப்பள்ளி ஆகும்.

293. துணிபடு கோவணம் சுண்ணவெண் பொடியினர்
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும்
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : ஈசன், கோவணத்தை ஆடையாக அணிந்தவர்; திருவெண்ணீறு தரித்தவர்; பாம்பினை மார்பில் அணியாகக் கொண்டவர்; குளிர்ந்த சந்திரனைச் சடையில் சூடியவர்; தம்முடைய ஆற்றலில் செருக்குற்ற திருமாலும் பிரமனும் தணியுமாறு செய்தவர். அப்பெருமான், சக்கரப்பள்ளி என்னும் அருள் வளம் மேவும் ஊரில் வீற்றிருப்பவர்.

294. உடம்புபோர் சீவரர் ஊண்தொழில் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.

தெளிவுரை : சாக்கியர்களும், சமணர்களும் உரைக்கும் சொற்கள், நஞ்சு போன்று கொடுமையானவை; மெய்ம்மையும் அன்று. அவற்றை ஏற்க வேண்டாம். விரிந்து பரவும் புனித நீர் கொண்டு அபிடேகம் செய்தும், மலர் மாலைகளைச் சாத்தியும், நீர் வளம் மிகுந்த சக்கரப்பள்ளியில் மேவும் ஈசனை வணங்குவீராக.

295. தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம்
கண்ணுதல் அவனடிக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
பண்ணிய இவைசொலப் பறையுமெய்ப் பாவமே.

தெளிவுரை : குளிர்ச்சி மிக்க வயல் வளம் கொண்ட சக்கரப் பள்ளியில் வீற்றிருக்கும் எம்முடைய நெற்றிக் கண்ணுடைய சிவபெருமானின் திருவடியை, கழுமல வள நகரில் விளங்கும் செந்தமிழ் வல் ஞானசம்பந்தன், கனிந்து போற்றிய இத் திருப்பதிகத்தைச் சொல்பவர்களுக்குப் பாவமானது சாராது.

திருச்சிற்றம்பலம்

286. திருமழபாடி (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

296. காலையார் வண்டினம் கிண்டிய காருறும்
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடம்அணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.

தெளிவுரை : காலை வேளையில் வண்டினங்கள் மலர்களைக் கிண்டி விளங்கும் சோலையில் மேவும் கிளிகள், ஈசனின் அரிய பொருளைக் காட்டும் சொற்களைச் சொல்லிப் பயில மேவும் மழபாடி கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தல் தேக்கிய ஈசன் விரும்பி மேவும் இடம் ஆகும்.

297. கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணும் ஊர்
துறையணி குருகினம் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழ பாடியே.

தெளிவுரை : நீலகண்டத்தினராயும், நெற்றியில் கண் உடையவராயும், அடைக்கலம் புகுந்த சந்திரனை ஏற்றுச் சிவந்த சடைமுடியில் கொண்டு விளங்கும் ஈசன், விரும்பி இருக்கின்ற ஊரானது, நீர்த் துறைகளில் மேவும் வெண்ணிறமாகிய பறவைகள் வெண்மலர்களுடன் சேர்ந்து ஒரே வண்ணமாகப் பொலிய விளங்கும் மழபாடியாகும். ஆங்கு எழுந்தருளியுள்ள பெருமான் மறைகளை ஓதி அருளும் பெற்ற உடையவர்.

298. அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும்
செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்
பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம்
மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.

தெளிவுரை : அந்தணர்கள் வேள்வி புரியும் வேதங்கள் ஒலிக்கவும், பக்திப் பாடல்கள் இசைக்கவும் உமா தேவியாரோடு ஈசன் வீற்றிருக்கும் இடமானது, தென்றல் உலவும் புகழ் மிக்க மழபாடியே.

299. அத்தியின் உரிதனை அழகுறப் போர்த்தவன்
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு, முத்தியின் பெருநலமாய், மும்மூர்த்திகளின் முதல்வனாய் விளங்கும் சிவபெருமான், பத்தி கொண்டு பாடிப் போற்றும் அன்புடையவர்களுக்கு அருள் புரியும் அத்தன். அப் பெருமானின் உறைவிடமானது அணிமிகும் மழபாடி.

300. கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன்
வெங்கண்வாள் அரவுடை வேதியன் தீதிலாச்
செங்கயற் கண்உமை யாளொடும் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழ பாடிய.

தெளிவுரை : கங்கை பொருந்தி மேவும் சடை முடியின் இடையில், ஒளி திகழும் சந்திரனை அணிந்த பெருமான், ஒளி மிக்க அரவத்தைக் கொண்டு மேவும் ஈசன் ஆவார். எத்தகைய தீமையும் இல்லாமல் செய்கின்ற உமாதேவியை, உடனாகக் கொண்டு பொருந்தி விளங்கும் இடமாவது, மங்கையர்கள் நடம் பயின்று விளங்கும் சிறப்பு மிக்க மழபாடியே ஆகும்.

301. பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும்
காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடும் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழ பாடியே.

தெளிவுரை : பாலானாகிய மார்க்கண்டேயரின் அரிய உயிரைக் கொண்டு செல்ல வந்த காலனின் உயிரைக் காலால் சாடி உதைத்து, உமாதேவியாரை உடனாகக் கொண்டு பொருந்தி விளங்கும் ஈசனின் இடமாவது, திருமால் முதலான பெருமையுடையோர் வழிபடும் சிறப்பு மிக்க மழபாடியே.

302. விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந்து ஏத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனல்எழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.

தெளிவுரை : விண்ணுலகத்தில் விளங்கும் தேவர்கள் மகிழ்ந்து ஏத்தம் தன்மையில் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு முறுவல் செய்து நெருப்பினை வெளிப்படுத்தி அழித்தும், மன்மதனை நெற்றிக் கண்ணால் நோக்கி, அதன் வாயிலாக நெருப்புக் கொண்டு அழித்தும் வீரம் விளைவித்தவர், சிவ பெருமான். அத்தகைய எமது அண்ணலின் உறைவிடமாவது அணி திகழ் மேவும் மழபாடியே.

303. கரத்தினால் கயிலையை எடுத்தகார் அரக்கன்
சிரத்தினை ஊன்றலும் சிவனடி சரண்எனா
இரத்தினாற் கைந்நரம்பு எடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம மாமழ பாடியே.

தெளிவுரை : தனது கரத்தால் கயிலை மலையினை எடுத்த இராவணனுடைய சிரமானது நலிவுற்றுத் துன்புறுமாறு ஊன்றியவர் சிவபெருமான். அவர் திருவடியைச் சரணம் எனக் கொண்டு தனது இரத்தம் தோய்ந்த கை நரம்பினை எடுத்து வீணையாக மீட்டி, இசை எழுப்பிப் பாட வரம் நல்கிய ஈசன், மருவி விளங்குகின்ற இடமாவது சிறப்புடைய மழபாடியே ஆகும்.

304. ஏடுலா மலர்மிசை அயன்எழல் மாலுமாய்
நாடினார்க்கு அரியசீர் நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடிய காலத்தில் அரியவனாய் விளங்கிய நாதராகிய ஈசனின் உறைவிடமாவது, பனை மரங்களில் காயக்கும் பனம்பழம் பைம் பொழிலில் மல்கி விளங்குகின்ற சிறப்புப் பொருந்திய மழபாடியாகும்.

305. உறிபிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறிபிடித்து அறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
பொறிபிடித்து அரவினம் பூண்எனக் கொண்டுமான்
மறிபிடித் தானிடம் மாமழ பாடியே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் நெறி முறைக்கு ஒவ்வாறு உரைக்கும் சொற்களை ஏற்க வேண்டாம். படம் கொண்டு மேவும் அரவத்தினை அணியாகக் கொண்டு, மானைக் கரத்தினில் ஏந்திய ஈசனின் இடமாவது சிறப்புப் பொருந்திய மழபாடியே ஆகும். அதனை ஏத்துக என்பது குறிப்பு.

306. ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாள்தொறும்
சீலத்தால் மேவிய திருமழ பாடியை
ஞாலத்தால் மிக்கசீர் ஞானசம் பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம்அற் றார்களே.

தெளிவுரை : இப்பூவுலகில் சிறப்பாக விளங்கும் ஆதிரை என்னும் விண் மீனுக்கு உரியவராகிய ஈசன் வீற்றிருக்கும், நாள்தோறும் சிறப்பான ஆகம விதிப்படி பூசைகள் மேவும் திருமழபாடி என்னும் திருத்தலத்தை உலகத்தரால் மிகுந்த சிறப்புடன் போற்றப்படுகின்ற ஞானசம்பந்தன் சொல்லிய திருப்பதிகத்தைச் சிவநெறிக்குரிய தூய பொலிவுடன் பாடுபவர்கள், தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

287. மேலைத்திருக்காட்டுப்பள்ளி (அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

307. வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி உண்பதும் வெண்தலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட்டுப் பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தம் நீர்மையே.

தெளிவுரை : உமாதேவியாரை ஒரு பாகத்தில் கொண்டு விளங்கும் ஈசன், ஊர்தோறும் சென்று பிரம கபாலம் ஏந்திப் பிச்சை கொள்பவர். அப்பெருமான், மேகம் சூழ்ந்த பொழில் மன்னும் காட்டுப்பள்ளியில், கங்கை தரித்த சடை முடியுடைய நிமலராய் விளங்கி இருப்பது அவர்தம் அன்பின் தன்மையே ஆகும்.

308. நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே.

தெளிவுரை : ஈசன், நடனம் புரிபவர்; நீண்ட சடை முடியின் மீது சந்திரனோடு பாம்பும் சேர்ந்து அணியும் கருத்தினை உடையவர்; நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளியின்கண், எப்பொருட்கும் விளக்கமாய் மேவும் மேலான பொன் போன்றவராய்த் திகழ்பவர்; உமாதேவியாரைத் திருமேனியில் பாகம் காண்டு மேவுபவர்; அத்தகைய பரமனின் திருவடி மலரை வணங்கிப் போற்றுதல் ஒன்றே பயன் தர வல்லதாகும்.

309. பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
விண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடி
அண்ணலார் எம்மையாள் உடையஎம் அடிகளே.

தெளிவுரை : ஈசன், வேதங்களை உரிய பண்ணில் விரித்து ஓதியவர்; நெற்றியில் கண் உடையவர்; பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளியில் கங்கையைத் தரித்து விளங்கும் சடை முடியுடையவராய் வீற்றிருப்பவர். அவர் எம்மை ஆளாகக் கொண்டு மேவும் அண்ணல்.

310. பணம்கொள்நா கம்அரைக்கு ஆர்ப்பது பல்பலி
உணங்கலோடு உண்கலன் உறைவது நாட்டிடைக்
கணங்கள் கூடித்தொழுது ஏத்துகாட் டுப்பள்ளி
நிணங்கொள் சூலப்படை நிமலர்தம் நீர்மையே.

தெளிவுரை : ஈசன், படம் கொண்டு ஆடும் நாகத்தை அரையில் ஆர்த்துக் கட்டிப் பிரம கபாலத்தைக் கரத்தில் ஏந்திப் பலி ஏற்று விளங்குபவர். அப்பெருமான் உறைவது, சிவகணத்தோர் தொழுது ஏத்தும் காட்டுப்பள்ளியாகும். அப்பதியில், ஈசன், சூலப் படையைத் திருக்கரத்தில் ஏந்திய நிமலராய் விளங்கும் இயல்புடையவர்.

311. வரையுலாம் சந்தொடு வந்திழி காவிரிக்
கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
திரையுலாம் கங்கையும் திங்களும் சூடியங்கு
அரையுலாம் கோவணத்து அடிகள் வேடங்களே.

தெளிவுரை : மலையில் திகழும் சந்தன மரங்களை, நீரின் வாயிலாக உந்திக் தள்ளிக் கரையினில் சேர்க்கும் காவிரி மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளியில், ஈசன் கங்கையும் சந்திரனும் சடை முடியில் சூடி, அரையில் கோவண ஆடையுடன் காட்சி தருபவர்.

312. வேதனார் வெண்மழு வேந்தினார் அருங்கமுன்
ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும்நின்று ஏத்துமே.

தெளிவுரை : வேதங்களின் நாதராகிய ஈசன், மழுப்படையை ஏந்தியவராய், உமாதேவியை ஒரு கூறு உடையவராய், குழை அணிந்த காதினராய், கடிமணம் கமழும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளியின் தலைவராய் விளங்குபவர். அப் பெருமானின் திருவடியை நாளும் நின்று ஏத்துவீராக.

313. மையினார் மிடறனார் மான்மழு வேந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட்டுப் பள்ளித்
தையலோர் பாகமர்த் தண்மதி சூடிய
ஐயனார் அடிதொழ அல்லல்ஒன்று இல்லையே.

தெளிவுரை : மை போன்ற கரிய கண்டத்தை உடைய ஈசன், மானையும் மழுவையும் ஏந்திய கையினர். அவர் கடிமணம் பரவும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளியில் உமாதேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டு குளிர்ந்த சந்திரனைச் சூடியவராய் வீற்றிருப்பவர். அத்தலைவரின் அருள் வழங்கும் திருவடியைத் தொழுது போற்ற அல்லல் யாவும நீங்கும்.

314. சிலைதனால் முப்புரம் செற்றவன் சீரினார்
மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான்
கலைதனார் புறவணி மல்கு காட்டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.

தெளிவுரை : மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தினை எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசன், சீர் மிகுந்த கயிலை மலையினால் இராவணனுடைய வலிமையை அடக்கியவர். அப் பெருமான், மான்கள் விளங்கும் சோலைகளைக் கொண்டு மேவும் காட்டுப் பள்ளியைச். சிரத்தையாய் வணங்க, நற்றவத்தின் பேறு கைவரப் பெறும்.

315.செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
தங்கையால் தொழுதெழத் தழலுரு ஆயினான்
கங்கையார் சடையினான் கருது காட்டுப்பள்ளி
அங்கையால் தொழும்அவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் தொழுது போற்ற அழல் உருவம் ஆகிய கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான் கருதுகின்ற காட்டுப்பள்ளியை அழகிய கைகளால் கூப்பித் தொழும் அன்பர்களுக்கு, அல்லல் இல்லை.

316. போதியார் பிண்டியர் என்றஅப் பொய்யர்கள்
வாதினால் உரையவை மெய்பல வைகலும்
காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட்டுப் பள்ளி
ஏரினால் தொழுதெழ இன்பம்வந்து எய்துமே.

தெளிவுரை : அரச மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தரின் வழி வந்தவர் எனப் பகரப்படுபவரும், அசோக மரத்தின் நிழலில் அமரும் அருகக் கடவுளின் நெறியுளோர் எனப் பகரப்படுபவரும் கூறும் சொற்கள் வாதத்தால் உரைக்கப் பெற்றவை. அவை மெய்ம்மை ஆகாது. காட்டுப்பள்ளியினை நாள்தோறும் ஏத்தித் தொழுதுபோற்ற இன்பம் வந்து சேரும்.

317. பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
அருமறை யவைவல்ல அணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினான் கருதுகாட்டுப் பள்ளி
பரவிய தமிழ் சொல்லப் பறையுமெய்ப் பாவமே.

தெளிவுரை : நீர் வளம் பெருக அணி பெறும் புறவம் என்னும் பெயர் கொண்ட சீகாழிப் பதியில், சிறப்புடன் விளங்கும், அருமையாகப் போற்றப்பெறும் மறைகளில் வல்ல, அணி திகழ ஓங்கும் ஞானசம்பந்தன், நீல கண்டனாகிய ஈசன் கருதும் காட்டுப்பள்ளியைப் பரவிப் போற்றிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், பாவம் தீரப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

288. அரதைப்பெரும்பாழி (அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

318. நைத்தபாம் போடுஅரைக் கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : பாம்பும் கோவணமும் புலித்தோலும் கட்டிய ஈசன், பேய்கள் சூழ்ந்து முழங்க மயானத்தில் நடனம் ஆடி விளங்குபவர். அப்பெருமான், திருவெண்ணீறு அணிந்தவராய் மேவும் பித்தர் ஆவர். அவர் கோயில் கொண்டு விளங்குபவது அரதைப் பெரும்பாழியே.

319. கயலசே லகருங் கண்ணியர் நாள்தொறும்
பயலை கொள்ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்
இயலைவா னோர் நினைந் தோர்களுக்கு எண்ணரும்
பெயரர் கோயில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : கயல் போன்றும் சேல் போன்றும் அழகிய கருமை வண்ணக் கண்ணுடைய மகளிர் நாள்தோறும் பசலை நோய் கொள்ளுமாறு கவரும் தோற்றம் உடையவராய்ப் பலி ஏற்று உழலும் பாங்கு உடையவர் ஈசன். அப்பெருமான், வானவர்களும் அடியவர்களும் எண்ணுதற்கு அரிய பல திருப் பெயர்களை உடையவராய் விளங்குபவர். அவர், கோயில் கொண்டு இருப்பது அரதைப்பெரும்பாழியே.

320. கோடல் சாலவ் உடையார் கொலை யானையின்
மூடல் சாலவ் உடையார் முனிகானிடை
ஆடல் சாலவ் உடையார் அழகாகிய
பீடர் கோயில் அரதைப் பெரும் பாழியே.

தெளிவுரை : ஈசன், அடியவர்களின் மனத்தை ஏற்றுக் கொண்டு ஆங்கு உறைபவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; வெறுப்புக்கு உரியதாகும் சுடுகாட்டில் நடனம் புரிபவர். அப்பெருமான், அழகு எனச் சொல்லப்படும் பெருமை உடையவராய்க் கோயில் கொண்டு விளங்குவது, அரதைப்பெரும்பாழியே.

321. மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்
விண்ணர்வே தம்விரித்து ஓதுவார் மெய்ப்பொருள்
பண்ணர்பா டல்உடை யார்ஒரு பாகமும்
பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களாக விளங்கும் ஈசன், வேதங்களை விரித்து ஓதி அருள்பவர்; மெய்ப் பொருளாகியவர்; பண்ணில் அமரும் பாடலில் விளங்குபவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; அவர் எழுந்தருளியுள்ள கோயில் அரதைப்பெரும் பாழியே ஆகும்.

322. மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்
கறைகொள்சூ லம்உடைக் கையர்கா ரார்தரும்
நறைகொல் கொன் றைநயந் தார்தரும் சென்னிமேல்
பிறையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : வேதங்களை ஓதும் சிவபெருமான், மானும் மழுவும் கொண்டு சூலப்படை உடையவராய்த் தேன் துளிர்க்கும் கொன்றை மாலையை விருமபித் தரித்துப் பிறைச் சந்திரனைச் சூடிக் கோயில் கொண்டு விளங்குவது அரதைப்பெரும்பாழியே.

323. புற்றரவம்புலித் தோலரைக் கோவணம்
தற்றிர வில்நடம் ஆடுவர் தாழ்தரு
சுற்றமர் பாரிடம் தொல்கொடி யின்மிசைப்
பெற்றர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : அரவம், புலித்தோல், கோவணம் ஆகியவற்றினை இடையில் கட்டி, இரவில் நடம் புரியும் சிவபெருமான், பூத கணங்கள் சூழ விளங்கி இடபக் கொடியை உடையவர். அவர், கோயில் கொண்டு இருப்பது அரதைப்பெரும்பாழி ஆகும்.

324. துணையிறுத்து அம்சுரி சங்குஅமர் வெண்பொடி
இணையிலேற் றையுகந்து ஏறுவ ரும்எரி
கணையினால் முப்புரம் செற்றவர் கையினில்
பிணையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : சங்கினால் ஆகிய வெண்குழை அணிந்து, திருவெண்ணீறு தரித்து மேவும் ஈசன், இடப அக்கினிக் கணையைச் செலுத்தி முப்புரத்தை எரியுமாறு செற்றவர்; அப்பெருமான், மானைக் கையில் ஏந்தி, அரதைப்பெரும்பாழியில் கோயில் கொண்டு விளங்குபவர்.

325. சரிவிலா வல்லரக் கன்தடம் தோள்தலை
நெரிவிலார் அவ்வடர்த் தார்நெறி மென்குழல்
அரிவைபா கம்அமர்ந் தார்அடி யாரொடும்
பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : தளர்ச்சியே இல்லாத அரக்கனாகிய இராவணனின் வலிமையான பெரிய தோளும் தலையும் நெரியுமாறு அடர்த்த ஈசன், உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்து அடியவர்களோடு பிரியாது வீற்றிருக்கும் கோயிலானது, அரதைப்பெரும்பாழியே.

326. வரியரா என்புஅணி மார்பினர் நீர்மல்கும்
எரியரா வும்சடை மேற்பிறை யேற்றவர்
கரியமா லோடுஅயன் காண்பரி தாகிய
பெரியர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : வரிகளையுடைய அரவம், எலும்பு ஆகியவற்றை மார்பில் அணியாகக் கொண்டு, கங்கை திகழும் சிவந்த சடையின் மீது, பிறைச் சந்திரனைச் சூடிய ஈசன், திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியதாக ஓங்கிய பெருமை உடையவர். அவர் மேவி விளங்குகின்ற கோயில், அரதைப்பெரும்பாழியே.

327. நாணிலாத சமண்சாக் கியர் நாள்தொறும்
ஏணிலா தம்மொழியவ் எழிலா யவர்
சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்
பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் நாள்தோறும் உயர்வற்ற சொற்களை மொழிதலுற்றலும், எழில் மிகுந்தவராய், முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செற்றவராய் மேவும் ஈசன் பேணும் கோயில், அரதைப் பெரும்பாழியே.

328. நீரினார் புன்சடை நிமலனுக்கு இடம்எனப்
பாரினார் பரவுஅர தைப்பெரும் பாழியைச்
சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
ஏரினார் தமிழ்வல்லார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : கங்கையை மெல்லிய சடையில் தாங்கும் நின்மலனாகிய ஈசனுக்க இடமாவது எனப் பூவுலகில் நன்கு பரவப்பெறும் அரதைப்பெரும்பாழியைச் சீர்மிகுந்து பொலியும் காழிப் பதியின் ஞானசம்பந்தன் இசைத்த சிறப்புமிக்க இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுக்குப் பாவம் என்பது இல்லை.

திருச்சிற்றம்பலம்

289. திருமயேந்திரப்பள்ளி (அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப் பள்ளி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

329. திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயில்எய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை யழகனை அடியிணை பணிமினே.

தெளிவுரை : கடல் அலைகள் பவளம் கொண்டு வந்து சேர்க்கும் மயேந்திரப்பள்ளியில், சிறப்பான வயிரங்களும் அகில் மரங்களும் கனமான சங்குகளும் விளங்குகின்றன. ஆங்கு, மேருவை வில்லாகக் கொண்டு முப்புரங்கள் எரியுமாறு அம்பு தொடுத்த, அரவத்தை அரையில் கட்டி அழகனாக மேவும் ஈசனின் திருவடியைப் பணிவீராக.

330. கொண்டல்சேர் கோபுரம் கோலமார் மாளிகை
கண்டலும் கைதையும் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினாந் திருந்தடி பணிமினே.

தெளிவுரை : மேகத்தைத் தொடும் உயர்ந்த கோபுரங்களும் அழகிய மாளிகைகளும் விளங்க, நீர்முள்ளியும் தாழையும் தாமரை மலர் பொலியும் பொய்கயும், வண்டுகள் உலவுகின்ற பொழிலும் அணியாகக் கொண்டு மேவும் மயேந்திரப்பள்ளியில், நடையின் மிடுக்குடைய இடபத்தை வாகனமாக உடைய ஈசனின் திருவடியைப் பணிவீராக.

331. கோங்கின வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும்
தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமும்
ஆங்கரும் பும்வயன் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.

தெளிவுரை : கோங்கு, வேங்கை, புன்னை, கொன்றை, குரவம் ஆகியன நன்கு விளங்குகின்ற மயேந்திரப்பள்ளியில் வீற்றிருக்கின்ற இறைவனின் திருவடி மலரைப் பணிவீராக.

332. வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
சங்கமார் ஒலியகில் தருபுகை கமழ்தரு
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கள்நா யகன்றனது இணையடி பணிமினே.

தெளிவுரை : நெடுந்தொலைவிலிருந்து கப்பல் வரும் குறிப்பைத் தெரிவிக்கும் சங்கின் ஒலியும், அகிலின் புகை மிகுந்து கமழும் நறுமணமும் திகழ மேவும் மயேந்திரப்பள்ளியில், உமாதேவியை உடனகக் கொண்டு வீற்றிருக்கும் ஈசன், எங்கள் நாயகன் ஆவார். அப் பெருமானுடைய திருவடியைப் பணிவீராக.

333. நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந்து இருந்தவன்
மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுட்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.

தெளிவுரை : முத்துக்கள் வகை வகையாய்க் குவிக்கப் பெற்று, மலர்கள் போன்று ஒளிர்ந்து விளங்கக் கடல் அலைகளால் பெருகித் திகழ மேவும் மயேந்திரப் பள்ளியில், நீலகண்டனாகிய ஈசன் மழுப்படையை ஏந்தி வீற்றிருக்க, அப் பரமனைத் தரிசித்துப் பணிவீராக.

334. சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்தஎம் இறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடிபணிந்து உய்ம்மினே.

தெளிவுரை : சந்திரன், சூரியன், புகழ் மிகும் பிரமன், இந்திரன் ஆகியோர் வழிபடத் திகழும் எம் இறைவன், வேத மந்திரங்கள் பெருகி ஓங்க அந்தணர்கள் விளங்கும் மயேந்திரப்பள்ளியில் வீற்றிரும் அழகன் ஆவார். அப் பெருமானின் அடி பணிந்து உய்தி அடைமின்.

335. சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடநவில் புரிவினன் நறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவன் அடிபணிந்து உய்ம்மினே.

தெளிவுரை : சடை முடி கொண்டு தவத்தை மேற்கொண்ட விளங்கும் முனிவர்கள், அமைதி பெருகும் பாங்கில் மனம் பொருந்திய வழிபட, ஈசன், நடம் பயின்று மேவுபவராய்ப் படர்ந்து விளங்கும் சடையில் நறுமலரினையும் சந்திரனையும் சூடியவராய், இடப வாகனத்தை உடையவராய், மயேந்திரப்பள்ளியில் வீற்றிருப்பவர். அப்பெருமானின் திருவடியைப் பணிந்து, உய்வீராக.

336. சிரமொரு பதும்உடைச் செருவலி யரக்கனைக்
கரம்இரு பதும்இறக் கனவரை யடர்த்தவன்
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை அடிபணிந்து உய்ம்மினே.

தெளிவுரை : பத்துத் தலைகளை உடைய வலிமை மிகுந்த அரக்கனாகிய இராவணனுடைய இருபது கரங்களும் கெடுமாறு, கனமான மலையாகிய கயிலையைக் கொண்டு அடர்த்த ஈசன், வெண் கடம்ப மரங்கள் கொண்டுள்ள பூம்பொழில், சூழ்ந்த மயேந்திரப் பள்ளியுள், அரவம் சூடிய சடை முடி உடையவராய் வீற்றிருப்பவர். அப் பரமனின் திருவடியைப் பணிந்து உய்வீராக.

337. நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர்
மாகணைந் தலம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருப்பது உய்ம்மினே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் திருக்கழலைக் காண முடியாதவாறு ஓங்கிய ஈசன், மேகத்தைக் தொடுகின்ற உயர்ந்த பொழில் சூழ்ந்த மயேந்திரப் பள்ளியுள், யோகியாய் விளங்கும் பெருமான் ஆவார். அவர் திருக்கழலை உணர்ந்து அத்தன்மையால் தியானம் செய்து இருந்து, உய்வு பெறுவீராக.

338. உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையாரும்
படுபழி யுடையவர் பகர்வன விடுமினீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை ஈசனை இணையடி பணிமினே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் பழிச் சொல் பகர்கின்ற தன்மையில், அவற்றை ஏற்க வேண்டாம். நீர்வளமும் நிலவளமும் கொண்ட மயேந்திரப் பள்ளியில் வீற்றிருக்கும் ஈசனின் திருவடியைப் பணிவீராக; நற்கதி உறுவீராக.

339. வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
நம்பரம் இதுஎன நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.

தெளிவுரை : நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த மயேந்திரப்பள்ளியுள், ஈசனின் திருவடியை ஏத்தி, ஞானசம்பந்தன் உரைத்த இத் திருப்பதிகத்தை, இதுவே நமக்குக் கேடயமாக இருந்து தீய வினைகளால், உண்டாகும் துன்பத்திலிருந்து பாதுகாக்க வல்லது எனக் கொண்டு ஓதி உரைப்பவர்கள், மறுமையில் தேவர்களால் எதிர் கொண்டு வரவேற்கப் பெற்று, உயர்ந்த இருப்பிடத்தைச் சார்ந்து, இனிது விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

290. திருவேடகம் (அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில், திருவேடகம்,மதுரை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

340. வன்னியு மத்தமும் மதிபொதி சடையினன்
பொன்னியல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட அடியவர்
இன்னிசை பாடலர் ஏடகத்து ஒருவனே.

தெளிவுரை : வன்னிப் பத்திரமும், ஊமத்த மலரும், சந்திரனும் சடை முடியில் தரித்து விளங்கும் ஈசனின் பொன்னின் தன்மையில் விளங்கும் திருவடியைப் புது மலர்களால் அந்தணர்கள் போற்றி வழிபடவும், அடியவர்கள் இனிய இசையுடன் பாடிப் போற்றவும் ஏத்தி விளங்குகின்றனர். அவ்வாறு ஏத்தப் பெறுபவன் ஏடகத்தில் மேவும் ஒப்பற்ற இறைவன் ஆவான்.

341. கொடிநெடு மாளிகை கோபுரம் குளிர்மதி
வடிவுற அமைதர மருவிய ஏடகத்து
அடிகளை அடிபணிந்து அரற்றுமின் அன்பினால்
இடிபடும் வினைகள்போய் இல்லையே தாகுமே.

தெளிவுரை : கொடிகளை உடைய நெடிது உயர்ந்து விளங்கும் மாளிகையின் கோபுரத்தில் குளிர்ந்த சந்திரன் மருவும் ஏடகத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை, அடி பணிந்து அரநாமத்தினைக் கூறி அன்பினால் ஏத்துமின் இம்மையில் துன்பத்தைத் தருகின்ற தீய வினைகள் யாவும் அற்று ஒழிந்து இல்லாமை ஆகும்.

342. குண்டலம் திகழ்தரு காதுடைக் குழகனை
வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம் பும்விடைச் சேடனூர் ஏடகம்
கண்டுகை தொழுதலும் கவலைநோய் கழலுமே.

தெளிவுரை : காதில் இரு கந்தருவர்களைக் குண்டலமாகக் கொண்டு திகழும் குழகன், வண்டு உலவும் கொன்றை மலரையும் வானில் விளங்கும் சந்திரனையும் சடை முடியில் தரித்து மேவும் ஈசன் ஆவார். அப்பெருமான், வீரநடையின் சிறப்பினைக் கொள்ளும் இடபத்தின் மீது வீற்றிருப்பவர். அத்தகைய பெருமைக்கு உரியவருடைய ஊர் ஏடகம் ஆகும். அத்தலத்தைத் தரிசித்துக் கைதொழுது போற்ற, மனக் கவலையால் பீடிக்கப்பெற்ற நோய் விலகிச் செல்லும்.

343. ஏலமார் தருகுழல் ஏழையோடு எழில்பெறும்
கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடம்
சாலமா தவிகளும் சந்தனம் சண்பகம்
சீலமார் ஏடகம் சேர்தலாம் செல்வமே.

தெளிவுரை : ஏலவார் குழலி என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையோடு, எழில் மிகுந்த இடப வாகனத்தில் வீற்றிருக்கும் குழகனாரில் உறைவிடமானது. மாதவி, சந்தனம், சண்பகம் ஆகியன மிகுந்து விளங்கும் சிறப்புடைய ஏடகம் ஆகும். அத் தலத்தைச் சென்று அடைந்து, ஈசனை ஏத்துதம் செல்வம் பயக்கும்.

344. வரியணி நயனிநன் மலைமகள் மறுகிடக்
கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோடு ஆண்அலி யாகிய
எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே.

தெளிவுரை : அழகிய கண்களை உடைய மலைமகள் வியந்து நோக்க, யானையின் தோலை உரித்த நீலகண்டனாகிய ஈசன், பெருமை மிகுந்தவர். அப்பெருமான், பெண்ணாகவும் ஆண் ஆகவும் அலியாகவும் விளங்கிச் சோதிமயமாய் மேவும் பரமன். அவர் உறைவிடமானது ஏடகக் கோயில் ஆகும்.

345. பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடிபணிந்து அரற்றுமின் அடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே.

தெளிவுரை : பொய்கையைச் சூழ்ந்து, பைம்பொழில் விளங்க, நறுமண மலர்களின் தென்றல் காற்று வீச, வைகை ஆற்றின் வடகரையில் மேவும் ஏடகத்தில் வீற்றிருக்கும் தலைவனாகிய ஈசனின் திருவடியைப் பணிந்து, அரநாமத்தினை நன்கு வாய் மலரக் கூறுவீராக. அது இம்மையில் கொடிய பிணிகளைத் தீர்த்து, மறுமையில் முத்திப் பேற்றினை எளிதாகக் கிடைக்கச் செய்யும்.

346. தடவரை எடுத்தவன் தருக்கிறத் தோள்அடர்
படவிரல் ஊன்றியே பரிந்தவற்கு அருள்செய்தான்
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத்து இறைவனே.

தெளிவுரை : பெரிய கயிலையை எடுத்த இராவணனுடைய தருக்கினைக் கெடுத்துத் தோள்களை அடர்த்து விரலால் ஊன்ணியும், பின்னர் பரிவுடன் வன்னி, ஊமத்தம் மலர் ஆகியவற்றைச் சடை முடியில் வைத்தவர். அப் பெருமான் ஏடகத்தில் வீற்றிருக்கும் இறைவன்.

347. பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
தன்னுளார் வைகையின் கரைதனில் சமைவுற
அன்னமா மயனுமால் அடிமுடி தேடியும்
இன்னவாறு எனவொணான் ஏடகத்து ஒருவனே.

தெளிவுரை : பொன்னும், மணி வகைகளும், சந்தனம், அகில் ஆகிய மரங்களும் அலைகளின் வாயிலாகக் கொண்டு வந்து சேர்க்கும் வைகையில் கரையில், அன்னப் பறவையாக பிரமனன் திருமுடியையும் பன்றி வடிவாகத் திருமால் திருவடியையும் தேடியும் இன்னதென்று எனக் காணாதவாறு திகழ்ந்திருந்த ஈசன், ஏடகத்தில் வீற்றிருக்கும் பரமனே ஆவான்.

348. குண்டிகைக் கையினர் குணமலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை ஏடகத்து எந்தையே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் கூறும் உரைகள் குணமில்லாதன. அவை அறியாமையால் மொழிவன. அதனைக் கொள்ள வேண்டாம். கொன்றை மலரும் வன்னியும் மாலையாகக் கொண்டு, சடையில் விளங்க மேவும் ஏடகத்தின் எந்தை ஆகிய ஈசனை, ஏத்தி வழிபடுமின்.

349. கோடுசந் தனம்அகில் கொண்டிழி வைகைநீர்
ஏடுசென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை
நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன
பாடல்பத்து இவைவல்லார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : யானையின் தந்தம், சந்தனம், அகில் ஆகியவற்றை அலைகள் வாயிலாகக் கொண்டு வரும் வைகை நீரில் எதிர் நீந்திச் சென்ற திரு ஏடு சேரும் ஏடகத் தீவை நாடி ஏத்திய, அழகிய புகலியின் ஞான சம்பந்தன் பாடிய இத் திருப்பதிகத்தை ஏத்த வல்லவர்கள், தீவினை நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

291. திருஉசாத்தானம் (அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

350. நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீ வன்அநு மான்தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.

தெளிவுரை : திருமாலிõகிய, இராமபிரானும், இலட்சுமணனும், சாம்பவான், சுக்கிரீவன், அநுமன் ஆகியோரும் தொழுது வணங்கக் கரிய நஞ்சினை அருந்திக் காத்தருள் செய்த, எம் பெருமைக்குரிய சிவபெருமான் வாழ்கின்ற இடம், திருஉசாத்தானம் ஆகும்.

351. கொல்லையே றுடையவன் கோவண ஆடையன்
பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்
முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்
தில்லையான் உறைவிடம் திருவுசாத் தானமே.

தெளிவுரை : ஈசன், இடப வாகனத்தை உடையவர்; கோவண ஆடை உடையவர்; பிரம கபாலம் ஏந்திப் பலி கொள்பவர்; தேன் துளிர்க்கும் சோலை சூழ்ந்த தில்லையில் விளங்குபவர்; அப் பெருமானின் உறைவிடம் திருஉசாத்தானம் ஆகும்.

352. தாமலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார் தங்கனா வாக்கினான் ஒருநொடிக்
காமனார் உடல்கெடக் காய்ந்தவெங் கண்ணுதல்
சேமமா உறைவிடம் திருவுசாத் தானமே.

தெளிவுரை : தக்கனின் வேள்வியைப் பயனற்றதாகச் செய்த ஈசன், மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாகுமாறு செய்த நெற்றிக் கண்ணுடைய கடவுள். அவர், அடியவர்களுக்கு நலம் வழங்கும் தன்மையில் உறையும் இடமாவது, திருஉசாத்தானம் ஆகும்.

353. மறிதரு கரத்தினான் மால்விடை ஏறினான்
குறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழ
நெறிதரு வேதியர் தித்தலும் நியமம்செய்
செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே.

தெளிவுரை : மானைக் கரத்தில் ஏந்திய ஈசன், பெருமை உடைய இடப வாகனத்தில் ஏறி, சீலமும் ஆசாரமும் கொண்டு விளங்கும் நற்குணத்தினரான அடியவர்கள் தொழுது போற்றவும், சிவாகம நெறியல் அந்தணர்கள் நாள்தோறும் நியமத்துடன் பூசிக்கவும் விளங்கும் இடம், பொழில் திகழும் திருஉசாத்தானம் ஆகும்.

354. பண்டிரைத்து அயனுமா லும்பல பத்தர்கள்
தொண்டிரைத் தும்மலர்தூவித் தோத் திரம்சொலக்
கொண்டிரைக் கொடியொடும் குருகினில் நல்லினம்
தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே.

தெளிவுரை : பிரமன், திருமால் மற்றும் பக்தர்கள் பண்டைக் காலம் தொட்டு, அரநாமத்தை ஓதி உரைத்தும், மலர் தூவித் தோத்திரங்கள் சொல்லியும் விளங்கி மேவ, அத்தகைய ஈசன் திகழ்வது, நல்லினப் பறவை இனங்களும், நீர் வளம் மிகுந்த கழனிகளும் சூழ்ந்த, திருஉசாத்தானம் ஆகும்.

355. மடவரல் பங்கினன் மலைதனை மதியாது
சடசட எடுத்தவன் தலைபத்து நெரிதர
அடர்தர ஊன்றியங் கேஅவற்கு அருள்செய்தான்
திடமென உழைவிடம் திருவுசாத் தானமே.

தெளிவுரை : உமாதேவியைத் தேகத்தில் பாகமாகக் கொண்டு மேவும் ஈசன், கயிலை மலையை மதியாது பெயர்த்தெடுத்த இராவணனின் பத்துத் தலைகளும் நெரியுமாறு அடர்த்தும், பின்னர் அருளும் செய்து, உறுதியாக வீற்றிருக்கும் இடம் திருஉசாத்தானம் ஆகும்.

356. ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்கும்
காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்
பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடம்
சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே.

தெளிவுரை : ஆணாகவும் இன்றிப் பெண்ணாகவும் இன்றி மேவும் ஈசன், பிரமனும் திருமாலும் காணுதற்கு அரியவர்; அன்பர்தம் மனத்தில் நிறைந்து இருப்பவர்; வணங்கும் அடியவர்தம் உடற் பிணியும் நீக்கிப் பிறவிப் பிணியும் தீர்ப்பவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடம், மாட மாளிகைகள் கொண்ட, திருஉசாத்தானம் ஆகும்.

357. கானமார் வாழ்க்கையான் காரமண் தேரர்சொல்
ஊனமாக் கொண்டுநீர் உரைமின்உய் யஎனில்
வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில்
தேனமா மதியந் தோய் திருவுசாத் தானமே.

தெளிவுரை : சமணர் மற்றும் சாக்கியர் தம் சொற்கள் பயனற்றவை. நீவிர் உய்ய வேண்டும் என்றால், மயானத்தில் நடனம் புரியும் ஈசன் விளங்குகின்ற, உயர்ந்த மதில்களும், மாளிகைகளும், வளர் பொழில்களும் சூழ, இனிய நிலவு தோயும் திருஉசாத்தானத்தை ஏத்துமின்.

358. வரைதிரிந்து இழியுநீர் வளவயற் புகலிமன்
திரைதிரிந்து எறிகடல் திருவுசாத் தானரை
உரைதெரிந்து உணரும்சம் பந்தன்ஒண் தமிழ்வல்லார்
நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே.

தெளிவுரை : நீர் வளமும் வயல் மிகுந் புகலியில் விளங்கும் ஞானசம்பந்தன், திருஉசாத்தானத்தில் வீற்றிருக்கும் நாதரை உரை தெரிந்து உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், நரை திரை என வந்து தாக்கும் மூப்பின் தளர்ச்சியின்றி, இளமை மிடுக்குடன் வாழ்ந்து, நன்னெறியாக விளங்குகின்ற சிவஞான நெறியின்கண் பொருந்தித் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

292. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

359. வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந்து இழியவெள்ளருவி சேர்
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.

தெளிவுரை : வண்ண மலர்களைக் கொண்டு வானவர்கள் வழிபட, ஈசன் உமாதேவியோரோடு இனிது அமர்ந்திருக்கும் இடமாவது, வானத்திலிருந்து மழை பொழிந்து அருவி போன்ற விளங்க, செழுமையான முல்லை நிலத்தின் எழில் பெருக்கும் திருமுதுகுன்றம் ஆகும்.

360. வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு
பொறியுலாம் அரவசைத் தாடியோர் புண்ணியன்
மறியுலாங் கையினான் மங்கையோடு அமர்விடம்
செறியுளார் புறவணி திருமுது குன்றமே.

தெளிவுரை : தேன் கமழும் கொன்றை மாலை உடைவனாய்ப் படம் விளங்கும் அரவத்தை நன்கு அரையில் கட்டி ஆடுகின்ற ஈசன், மான் ஏந்திய கரத்தை உடையவராய் உமாதேவியை உடனாகக் கொண்டு அமருகின்ற இடமாவது, செறிந்த சோலையுடைய திருமுதுகுன்றம் ஆகும்.

361. ஏறினார் விடைமிசை இமையவர் தொழஉமை
கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடம்
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.

தெளிவுரை : ஈசன், இடபவாகனத்தில் ஏறித் தேவர்கள் தொழுது போற்ற, உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு, புலியின் தோலை ஆடையாக அணிந்து, திருமேனியில் திருவெண்ணீறு தரித்து, நிறைந்த புனலாகிய கங்கையைச் சடை முடியின் மீது கொண்டு விளங்குகின்ற இடமாவது, பொழிலின் அணி திகழ மேவும் திருமுதுகுன்றம் ஆகும்.

362. உரையினார் உறுபொருள் ஆயினான் உமையொடும்
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்
உரையினார் ஒலியென ஓங்குமுத் தாறுமெய்த்
திரையினார் எரிபுனல் திருமுது குன்றமே.

தெளிவுரை : ஈசன், உரைக்கப்படும் பொருள்களின் ஒண்பொருளாக விளங்குபவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடை முடியில் தரித்த இருப்பவர். அப் பெருமான் மேவும் இடமாவது, அரநாமத்தின் ஒலியென ஓங்கும் ஓசை எழுப்பும் மணிமுத்தாறு என்னும் ஆற்றின், அலைகள் விளங்கும் திருமுதுகுன்றம் ஆகும்.

363. கடியவா யினகுரற் களிற்றினைப் பிளிறஓர்
இடியவெங் குரலினோடு ஆளிசென் றிடுநெறி
வடியவாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம்
செடிதார் புறவணி திருமுது குன்றமே.

தெளிவுரை : ஆண் யானையானது கனத்த குரலில் பிளிறவும், அவ் ஒலியோடு ஆண் சிங்கம் கர்ச்சிக்கும் ஒலியும் இணைந்து ஓங்கும் நெறியில், மழுப்படை உடைய ஈசன், உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, சோலைவளம் அழுகுடன் பொலியும் திருமுதுகுன்றம் ஆகும்.

364. கானமார கரியின்ஈர் உரிவையார் பெரியதோர்
வானமார் மதியினோடு அரவர்தாம் மருவிடம்
ஊனமா யினபிணி யவைகெடுத்து உமையொடும்
தேமார் பொழிலணி திருமுது குன்றமே.

தெளிவுரை : கானகத்தில் திரியும் யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்ட ஈசன், வானத்தில் பெரியதாகத் திகழும் சந்திரனையும், அரவத்தையும் அணிந்து உமாதேவியுடன் பொருந்த வீற்றிருக்கும் இடமாவது, ஊனங்களை நீக்கிப் பிணியையும் தீர்த்துத் தேன் துளிர்க்கும் பொழில் திகழும் திருமுதுகுன்றம் ஆகும்.

365. மஞ்சர்தா மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே
அஞ்சொலாள் உமையொடும் அமர்விடம் அணிகலைச்
செஞ்சொலார் பயில்தரும் திருமுது குன்றமே.

தெளிவுரை : வலிமை மிகுந்தவராகிய சிவபெருமானைத் தேவர்கள் மலர் தூவிப் போற்றி வணங்குகின்றனர். கொடுந்தொழிலை மேற்கொள்ளும் வேடர்களும், மற்ற மாந்தர்களும் விரும்பித் தொழ, உமாதேவியை உடனாகக் கொண்டு அப்பெருமான் அமரும் இடமாவது, வேதங்களைப் பயில்பவரும், பக்திப் பாக்களைச் சொல்பவர்களும் விளங்கும் திருமுதுகுன்றம் ஆகும்.

366. காரினார் அமர்தரும் கயிலைநன் மலையினை
ஏரினார் முடியிரா வணன்எடுத் தான்இற
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தரும் திருமுது குன்றமே.

தெளிவுரை : கார் மேகம் போன்று குளிர்ச்சியாக விளங்கி மேவும், நன்மை தரும் கயிலை மலையினை இராவணன் எடுத்தபோது, அவனை நலியச் செய்த ஈசன், உமாதேவியோடு விளங்குகின்ற இடமாவது, சிறப்புக்களையுடைய திருமுதுகுன்றம் ஆகும்.

367. ஆடினார் கானகத்து அருமறை யின்பொருள்
பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடி
ஏடினார் மலர்மிசை அயனும்மால் இருவரும்
தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே.

தெளிவுரை : மயானத்தில் ஆடிய ஈசன், வேதங்களை ஓத தலையும், அதன் பொருளை விரித்தலும் செய்பவர். அப் பரமனைத் திருமாலும், பிரமனும் தேடியும் காண முடியாதவாறு இருக்க, அவர் திருமுதுகுன்றத்தில் விளங்குபவர் ஆனார்.

368. மாசுமெய் தூசுகொண்டு உழல்சமண் சாக்கியர்
பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்
வாசமார் தருபொழில் வண்டினம் மிசைசெயத்
தேசமார் புகழ்மிகும் திருமுது குன்றமே.

தெளிவுரை : சமணர்களும், சாக்கியர்களும் பேசும் மொழிகள் செய்ம்மையானதல்ல. வாசனை பெருகும் அழகிய பொழிலில் வண்டுகள் சூழும் புகழ் மிகுந்த திருமுதுகுன்றம் சென்றடைமின். ஈசனை ஏத்துமின்.

369. திண்ணினார் புறவணி திருமுது குன்றரை
நண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாய்
பண்ணினாற் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : செழுமையான சோலையுடைய திருமுதுகுன்றத்தில் மேவும் பெருமானை நண்ணிய காழியின் ஞானசம்பந்தனின் திருப்பதிகத்தை பண்ணின் முறையில் பாடுபவர்களுக்குத் தீவினை நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

293. தென்குடித்திட்டை (அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

370. முன்னைநான் முறையவை மறைமுறை குறையொடும்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : நான்கு மறைகளும், நூல்களில் விதித்த முறையில் தொழுது போற்ற விளங்கும் சிவபெருமானின் இடமாவது, காவிரி நீர் வாய்க்கால்கள் வழி வந்து, வயல்களில் விளையும் செந்நெல்லை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும்.

371. மகரம் ஆடும்கொடி மன்மத வேள்தனை
நிகரலா காநெருப்பு எழவிழித் தானிடம்
பகரவாள் நித்திலம் பன்மக ரத்தொடும்
சிகரமா ளிகைதொகும் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : மீனக் கொடியுடைய மன்மதனை நிகரில்லாதனவாகிய நெற்றிக்கண்ணால் விழித்து நோக்கி எரிந்து சாம்பலாகுமாறு செய்த ஈசனின் இடமாவது, புகழ் மிக்க முத்துக்கள், பல அணி வகைகளுடன் உயர்ந்து பதிக்கப் பெற்று மேவும் மாளிகைகளைக் கொண்ட தென்குடித்திட்டை ஆகும்.

372. கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : ஈசன், கருவினுள் பொருந்தி எத்தன்மையிலும் பிறவியைக் கொள்ளாதவராகி எல்லாவற்றுக்கும் கருப்பொருளாக விளங்குபவர்; இத்தன்மையன் இவ் வண்ணத்தன், இவ் வடிவினன் எனச் சொல்லப் பெறுவதற்கு அரியவராய் எல்லாவற்றையும் தோற்றுவித்து அருள்பவர். அப் பெருமான் விளங்கும் இடமாவது, சிறப்பாகக் கருதப்படும் விழாக் காலங்களில் பாடலும் ஆடலும் நன்கு நிகழ்த்தப்பெறும் திருமேவும் புகழ் மிகுந்த தென்குடித்திட்டையே.

373. உண்ணிலா ஆவியாய் ஓங்குதன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர்
எண்ணிலார் எழில்மணிக் கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : ஈசன், உயிரின்கண் மேவும், ஒண்மையுறும் பொருளாய் ஓங்கி இருப்பவர். அத்தன்மையைத் தேவர்களும் அறிகிலர். வேதமாகவும் அதன் அந்தமாகவும் விளங்கும் அப்பெருமானின் ஊராவது, எண்ணற்ற நவரத்தின் மணிகளால் இழைக்கப் பெற்ற பொன் மாளிகையின்மேல், தெளிந்த நிலவின் ஒளி திகழும் தென்குடித்திட்டை ஆகும்.

374. வருந்திவா னோர்கள்வந்து அடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுதவர்க்கு அருள்செய்தான் அமரும்ஊர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி நஞ்சினை அருந்தி அமுதத்தை அவர்களுக்கு அருளிச் செய்த ஈசன் அமரும் இடமாவது, செருந்திப் பூ, மாதவி, செண்பகம் என வளரும் நீண்ட பொழில் திகழும் தென்குடித்திட்டையாகும்.

375. ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தரும் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர்வு எய்திமெய்
தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : ஈசன், எல்லாப் பொருள்களிலும் ஊறித் தோய்ந்து விளங்குபவர்; ஓசையுள் ஒன்றி நிலவுபவர்; திருமாலை ஒரு கூறாகக் கொண்டு திகழ்பவர்; குமாரக் கடவுளை ஈன்றவர்; அப் பெருமானுடைய ஊராவது, ஆறு பகைகளாகிய காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் (பொறாமை) ஆகியவற்றைக் களைந்து, மனமானது ஐம்புலன் வழிச் செல்லாது மெய்ம்மையை உணர்ந்தோர் வழிபடும் தென்குடித்திட்டை ஆகும்.

376. கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : கானகத்தில் வேட்டை கொள்ளும் மெய்யன்பர், கண் இடந்து அப்பிய ஞான்று வானவர்கள் எல்லாம் போற்றி ஏத்துமாறு, தவத்தின் தேவனாகச் செய்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, தெளிந்த நீர் நிலைகளில் விளங்கும் இடமாவது, தெளிந்த நீர் நிலைகளில் விளங்கும் தாமரையில் திகழும் தேன், பெருகி வயலில் பாயும் வளம் நிறைந்த தென்குடித்திட்டையாகும்.

377. மாலொடும் பொருதிறள் வாளரக் கன்னெரிந்து ஓவிடும்
படிவிரல் ஒன்றுவைத் தான்இடம்
காலொடும் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : பெருமையுடன் யாவரிடத்திலும் போர் செய்யும் திறலையுடைய அரக்கனாகிய இராவணன், ஓலம் கொண்டு அலறும்படி, விரலால் அடர்த்த சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வாய்க்கால்களில் செல்லும் நீரில் பொன் வண்ண முகப்புடைய கயல், வரால், சேல் என்னும் மீன் வகைகள் விளங்கிப் பாயும் வயல்கள் கொண்ட தென்குடித்திட்டையே.

378. நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி காணவொண் ணான் இடம்
ஆரணம் கொண்டுபூ சுரர்கள்வந்து அடிதொழச்
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் யாவற்றுக்கும் காரணனாக மேவும் ஈசனின் அடிமுடியைக் காண ஒண்ணாதவராயினர். அத்தகு சிறப்புடைய அப்பெருமானின் இடமாவது, அந்தணர்கள் வேதம் ஓதித் திருவடியை ஏத்தப் புகழ் கொண்ட மேவும் தென்குடித்திட்டையே.

379. குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் பொய்யுரைகளைப் பற்றி நிற்காதவர்களே ! வண்டு ஒலிக்கும் பொழிலில், மேகங்கள் சூழ்ந்த குளிர்ந்தபுனல் பெருகும் தென்குடித்திட்டை என்னும் திருத்தலத்தைச் சார்ந்து, ஈசனை ஏத்துமின்.

380. தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில் சூழ்தரும் காழியுள்
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : தேன் துளிர்க்கும் மணக்கும் சோலை சூழ்ந்த தென்குடித்திட்டையைப் போற்றிப் பொழில் சூழ்ந்த காழியுள், திகழும் சிவஞானம் பெருகி ஓங்கும் ஞானசம்பந்தன் சொல்லிய, செந்தமிழ்ப் பாடல்களை ஓத வல்லவர்களுக்குப் பாவமானது விலகும்.

திருச்சிற்றம்பலம்

294. திருக்காளத்தி (அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல் மாவட்டம், ஆந்திரா மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

381. சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே.

தெளிவுரை : சந்தனம், அகில், சாதிக்காய், தேக்கு ஆகிய மரங்களை அலைகளால் உந்தித் தள்ளி வரும் சிறப்பான முகலி ஆற்றின் கரையில், தென்றல் வீசும் பொழில் வளர்ந்து பெருக, வள்ளல் தன்மையுடைய எந்தையாகிய காளத்திநாதர் உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருக்கின்றார். அப் பெருமானின் திருவடி என் மனத்தில் பதிந்துள்ளது.

382. ஆலமா மரவமோடு அமைந்தச்சீர்ச் சந்தனம்
சாலமா பீலியும் சண்பகம் உந்தியே
காலமார் முகலிவந்து அணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.

தெளிவுரை : ஆல், மா, மரவம், சந்தனம், ஆகிய மரங்களும், ஏராளமான மயிற் பீலியும் சண்பகமும் உந்தி வரும் முகலி ஆற்றில் கரையில் மேவும் காளத்தியில் விளங்கும் நீலகண்டனாகிய ஈசனை எவ்வகையில் நினைந்து ஏத்துதல் பொருந்துமோ, அத்தன்மையில் நினைந்து ஏத்துதல் கடமை.

383.கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி யடிகளை அடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.

தெளிவுரை : கோங்கு, குரவம், கொன்றை, பாதிரி, மூங்கில் ஆகிய மரங்களை உந்திக் கொண்டு வரும் முகலியின் கரையினில் வீற்றிருக்கும் காளத்தில் நாதரின் திருவடிகளைத் தொழுது போற்ற, வெம்மை தரும் துயர் யாவும் கெடும். முத்திப் பேறு எளிதாகக் கைகூடும்.

384. கரும்புதேன் கட்டியும் கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின் கரையினில் அணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே.

தெளிவுரை : கரும்பு, தேன் கட்டி, வாழைக் கனி ஆகியவற்றை உந்தித் தள்ளி வரும் முகலியின் கரையில் பிறைச்சந்திரனை நீண்ட சடையின்கண் தரித்தவராய் மேவும் காளத்திநாதனை விரும்பிப் பணிபவர்கள், விண்ணுலகை ஆள்வார்கள்.

385. வரைதரும் ஆகிலொடு மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.

தெளிவுரை : மலையில் விளங்கும் அகில் மற்றும் முத்துக்களும் அலைகளால் உந்தித் தள்ளி வருகின்ற முகலியின் கரையினில் சிறந்த மலர்களைச் சடை முடியில் கொண்டு விளங்கும் காளத்திநாதனின் கழல்களை, நித்தமும் தொழுது போற்றி உய்வீராக.

386. முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக்
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.

தெளிவுரை : முத்துக்களும் மணிகளும் மலர்த் திரள்களும் அலைகளின் வாயிலாகக் கொண்ட வரும் முகலி ஆற்றின் கரையினில், இராவணனைத் திருப்பாத விரலால் அடர்த்த இறைவனின் காளத்தியானது எழில் பெற்று விளங்குவதாகும். அத்திருத்தலத்தை அணைந்து ஈசனை வணங்குதலைக் கடமையாகக் கொள்க.

387. மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கணைந்து உய்ம்மினே.

தெளிவுரை : சேற்று மண்ணும், வேங்கை, மருது ஆகிய மரங்களையும் வேரொடு தள்ளி, அலைகளால் உந்திக் கொண்டு செல்லும் முகலியின் கரையில், திருமாலும் பிரமனும் காண்கிலாத அண்ணலார்தம் காளத்தி என்னும் தலம் திகழ, ஆங்கு சென்றணைந்து உய்தி பெறுவீராக.

388. வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி உள்ளமோடு உணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே.

தெளிவுரை : சமணரும், சாக்கியரும் மொழியும் பாங்கில்லாத சொற்களைக் கை விடுக. ஈசன் திருவடியைப் பணிவீராக. வளமுடன் ஓங்கும் வள்ளலாகிய காளத்திநாதனை உள்ளம் ஒன்றி, மனதார உணர்ந்து போற்றுக. வானவர்களுக்கும் நாதனாகிய அப்பெருமான், வினைகளைத் தீர்த்து நலம் புரிபவன்.

389. அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி
வட்டவார் சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : அட்டமாசித்திகள் என்று சொல்லப்படும் ஆற்றல்களைச் சேர்க்கும் காளத்தியில், சடை முடிகளையுடைய ஈசனை ஏத்திய வயல்களின் அணி திகழும் காழியின் ஞானியாய், வேதம் வல்ல ஞான சம்பந்தனின் சொல்லாகிய இத் திருப்பதிகத்தை விரும்பி ஓதவல்லவர்களுக்குத் தீவினை விலகும்.

அட்டமா சித்திகளாவன :

1. அணிமா   சிறியதில் சிறியதாதல்
2. மகிமா  பெரியதில் பெரியதாதல் (அண்டங்கள் அணுவாகவும் அணுக்கள் அண்டங்களாகவும் ஆதல்)
3. லகிமா  உறுதியானவற்றை நுண்மையாக்குதல்
4. கரிமா  சிறியனவற்றைப் பெரியதாக்குதல்
5. பிராத்தி  பாதாளத்தில் இருப்பவர் வானுலகில் இருத்தல்
6. பிராகாமியம்  கூடுவிட்டுக் கூடு பாய்தல்  வேறொரு உடலில் பிரவேசித்தல்
7. ஈசத்துவம்  முத்தொழிலை மேவுதல்
8. வசித்துவம்  யாவற்றையும் தன்வசம் ஆக்குதல்

திருச்சிற்றம்பலம்

295. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

390. கரமுனம்மல ராற்புனல்மலர்
தூவியேகலந்து ஏத்துமின்
பரமனூர்பல பேரினாற்பொலி
பத்தர்சித்தர்கள் தாம்பயில்
வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம்
ஐயன்நாள்தொறு மேயசீர்ப்
பிரமனூர்பிர மாபுரத்துறை
பிஞ்ஞகன்அருள் பேணியே.

தெளிவுரை : பரமனின் ஊரானது, பல திருப்பெயர்களை உடையது; பக்தர் பெருமக்களும், சித்தர்களும் போற்றி ஏத்த, வரங்கள் பல அருள் செய்யவல்ல எம் தலைவன் நாள்தொறும் மேவி விளங்கும் பிரமானூர் எனப்படும் பிரமாபுரம் ஆகும். அப்பதியில் உறையும் ஈசனின் அருளைப் போற்றிக் கரமலர்களால் கூப்பித் தொழுவீராக ! நற்புனல் கொண்டு அபிடேகம் செய்து, மலர்தூவிப் போற்றி, மனம் கலந்து ஒருமை நெஞ்சினராய் ஏத்தித் துதிப்பீராக.

391. விண்ணலார்மதி சூடினான்விரும்
பும்மறையவன் றன்தலை
உண்ணநல்பலி பேணினான்உல
கத்துள்ஊன்உயி ரான்மலைப்
பெண்ணினார்திரு மேனியான்பிர
மாபுரத்துறை கோயிலுள்
அண்ணலார்அரு ளாளனாய்அமர்
கின்றஎம்முடை ஆதியே.

தெளிவுரை : ஈசன், விண்ணில் திகழும் சந்திரனைச் சூடியவர்; விரும்பி ஏத்திய வேதியனாகிய பிரமனின் ஒரு தலையைக் கொய்து உண்ணுகின்ற பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பலி ஏற்றவர்; ஊனாகவும் உயிராகவும் உள்ளவர்; மலை அரசன் மகளாகிய உமா தேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; அப் பெருமான், பிரமாபுரத்தில் விளங்கும் கோயிலுள் மேவிய அண்ணல்; அவர் எம்முடை ஆதிப் பிரானவர்.

392. எல்லையில்புக ழாளனும் இமை
யோர்கணத்துடன் கூடியும்
பல்லையார் தலை யிற்பலியது
கொண்டுகந்த படிறனுந்
தொலைவையகத் தேறுதொண்டர்கள்
தூமலர்சொரிந்து ஏத்தவே
மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர
மாபுரத்துறை மைந்தனே.

தெளிவுரை : ஈசன், எல்லையற்ற புகழ் உடையவர்; தேவர்களெல்லாம் சூழ்ந்து விளங்க பிரம கபாலம் ஏந்திப் பலி கொண்டு மகிழ்ந்தவர். இப்பூவுலகில் தெளிந்த தொண்டர்களை தூய மலர் கொண்டு தூவிச் சொரிந்து இறைவனை ஏத்தி வாழ்த்த, அப்பெருமான் வளம் மிக்க பொழில் திகழும் பிரமாபுரத்தில் வீற்றிருப்பவர்.

393. அடையலார்புரம் சீறிஅந்தணர்
ஏத்தமாமட மாதொடும்
பெடையெலாம்கடற் கானல்புல்கும்பிர
மாபுரத்துஉறை கோயிலான்
தொடையலார்நறுங் கொன்றையான்தொழி
லேபரவிநின்று ஏத்தினால்
இடையிலார்சிவ லோகம் எய்துதற்கு
ஈதுகாரணம் காண்மினே.

தெளிவுரை : நன்மையுறும் அன்பற்கு உரியவராகாது, பகைத்துச் செறுத்தவர்களாகிய முப்புர அசுரர்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, அந்தணர்கள் ஏத்தி வணங்க, உமாதேவியாரோடு பிரமாபுரத்தில் விளங்குபவர், சிவபெருமான். அப் பெருமான் நறுமணம் கமழும் கொன்றை மலரை மாலையாக அணிந்து திகழ்பவர். அப் பரமனைப் பரவி ஏத்துதலைக் கடமையாகக் கொண்டு மேவும் அன்பர்கள், சிவலோகம் அடைவதற்கு அவர்களுடைய வழிபாட்டு நெறிய உரிய சாதனம் ஆகும்.

394. வாயிடைம்மறை யோதிமங்கையர்
வந்திடப்பலி கொண்டுபோய்ப்
போயிடம்எரி கானிடைப்புரி
நாடகம்இனிது ஆடினான்
பேயொடும்குடி வாழ்வினான்பிர
மாபுரத்துறை பிஞ்ஞகன்
தாயிடைப்பொருள் தந்தையாகும்என்று
ஓதுவார்க்குஅருள் தன்மையே.

தெளிவுரை : ஈசன், திருவாயால் வேதங்களை நன்கு ஓதியவர்; தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகள் வந்து இடுமாறு, கபாலம் ஏந்திப் பலி ஏற்றவர்; மயானத்தின் இடையில் இடனது நடனம் ஆடியவர்; பேய்க் கூட்டத்துடன் விளங்குபவர்; அப்பெருமான் பிரமாபுரத்தில் உறையும் பிஞ்ஞகன்; அவனே தாயும் தந்தையுமாய் விளங்கும் பெருமான் என ஓதும் அன்பர்களுக்கு, அவனுடைய அருளிச் செயல் பெருகி ஓங்கும்.

395. ஊடினால்இனி யாவதுஎன்னுயர்
நெஞ்சமேயுறு வல்வினைக்கு
ஓடிநீயுழல் கின்றதென்அழல்
அன்றுதன்கையில் ஏந்தினான்
பீடுநேர்ந்தது கொள்கையான் பிர
மாபுரத்துறை வேதியன்
ஏடு நேர்மதி யோடுஅரவாணி
எந்தையெனாறுநின்று ஏத்திடே.

தெளிவுரை : உயர்ந்த நிலை கொண்டு மேவும் நெஞ்சமே ! வினையினால் உண்டாகும் துன்பத்தைக் கண்டு வருந்தினும் யாது பயன் ! கன்மத்தின்பால் அமையப் பெற்ற வினையை நுகரும் தன்மையில், ஓடி உழல்கின்றதும் எதற்கு ? திருக்கரத்தில் எரியும் நெருப்பை ஏந்திய ஈசன், சிறப்புடைய அருள் தன்மை உடையவராய் பிரமாபுரத்தில் உறையும் வேதியன் ஆவார். கீற்று போன்ற சந்திரனும், அரவமும் அணிந்து மேவும் எந்தையாகிய அவ் இறைவனை, ஒரு மித்த மனத்தால் ஏத்துவாயாக. துன்பம் யாவும் விலகிச் செல்லும்..

396. செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சிலர்
என்றும்ஏத்தி நினைந்திட
ஐயன்ஆண்தகை அந்தணன்அரு
மாமறைப்பொருள் ஆயினான்
பொய்யுமாமழை யானவன்பிர
மாபுரம்இடம் பேணிய
வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந்து
எத்தும்வினை வீடவே.

தெளிவுரை : ஈசன், செம்மேனியர்; வெள்ளி மலை என்பபெறும் கயிலை நாயகர்; ஞானம் மிக்க பெருமக்களால் எக்காலத்திலும் ஏத்தி வணங்கப்படும் தலைவன்; வீரம் மிக்கராகியும் தூயராகியும் அருமையாகப் போற்றப்படும் மறையின் ஒண் பொருளாகவும் ஆகியவர்; வளத்தைப் பெய்து வழங்கும் சிறப்புடைய மழை ஆகியவர். அப் பெருமான் பிரமாபுரத்தை இடமாகக் கொண்டு மழுப்படை ஏந்தியவராய் விளங்க, அவரை ஒன்றி நினைந்து ஏத்துவீராக; வினை யாவும் நீங்கி நலம் பெறுவீராக.

397. கன்றொருக்கையில் ஏந்திநல்விள
வின்கனிபட நூறியும்
சென்றொருக்கிய மாமறைப்பொருள்
தேர்ந்தசெம்மல ரோனுமாய்
அன்றரக்கனைச் செற்றவன்னடி
யும்முடியவை காண்கிலார்
பின்தருக்கிய தண்பொழிற்பிர
மாபுரத்தரன் பெற்றியே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணமுடியாதவாறு ஓங்கிய ஈசன், கயிலை மலையை எடுத்த இராவணனை அடர்த்தியவனாய்ப் பொழில் திகழும் பிரமாபுரத்தில் வீற்றிருக்கும் சிறப்புடைய பெருமான் ஆவார்.

398. உண்டுஉடுக்கைவிட் டார்களும்உயர்
கஞ்சிமண்டைகொள் தேரரும்
பண்டுஅடக்குசொற் பேசும்அப்பரிவு
ஒன்றிலார்கள்சொற் கொள்ளன்மின்
தண்டொடுஅக்குவன் சூலமும்தழல்
மாமழுப்படை தன்கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன்எம்பிர
மாபுரத்துஉறை கூத்தனே.

தெளிவுரை : சமணர்களும் தேரர்களும், தொன்று தொட்டு வரும் சமயக் கருத்துக்களைத் திரித்துச் சொல்லும் தன்மையுடையவர்கள். நலம் பயவாத அச்சொற்களைக் கொள்ள வேண்டாம். ஈசன், யோகதண்டம், உருத்திராக்க மாலை ஆகியன கொண்டு விளங்குபவன்; வலிமையுடைய சூலப்படை உடையவன்; கையில் எரியும் தழலைக் கொண்டிருப்பவன்; சிறந்த மழுப் படையை ஏந்தியவன்; அப்பெருமான் எமது ஊராகிய பிரமாபுரத்தில் உறையும் கூத்தன் ஆவான். அப் பெருமானை ஏத்த உய்வீராக.

399. பித்தனைப் பிர மாபுரத்துஉறை
பிஞ்ஞகன் கழல் பேணியே
மெய்த்தவத்து நின் றோர்களுக்குரை
செய்துநன்பொருள் மேவிட
வைத்தசிந்தையுள் ஞானசம்பந்தன்
வாய்நவின்றெழு மாலைகள்
பொய்த்தவம் பொறி நீங்கஇன்னிசை
போற்றிசெய்யும் மெய்ம மாந்தரே.

தெளிவுரை : பித்தனாய், பிரமாபுரத்தில் உறைகின்ற பிஞ்ஞகனாய் விளங்கும் சிவபெருமான் திருக்கழலைப் பேணி, மெய்த்தவத்தினராய் விளங்கும் சான்றோர்களுக்கு உரை செய்து, ஞானசம் பெறுமாறு செய்வித்த மாலைகளைப் பாடுக. பொய்த் தன்மை வாய்ந்து, அவம் பெருக்கும் புலன்களின் குற்றம் நீங்க, இன்னிசையால் ஏத்துக. இத்தன்மையுடையோரே மெய்ம்மை வழி நிலவும் மாந்தர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

296. திருக்கண்டியூர் வீரட்டம் (அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

400. வினவினேன்அறி யாமையில்உரை
செய்ம்மினீர்அருள் வேண்டுவீர்
கனைவிலார்புனல் காவிரிக்கரை
மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக்கு இன்மையோதமர்
ஆயினார்அண்டம் ஆளத்தான்
வனனில் வாழ்க்கைகொண்ட ஆடிப்பாடிஇவ்
வையமாப்பலி தேர்ந்ததே.

தெளிவுரை : ஈசனைத் தொழுது போற்றி அருளை நாடி நிற்கும் அன்பர்களே ! அறியாமை காரணமாக வினவுகின்றேன். உரை செய்வீராக ! ஆராவாரத்தோடு மிகுதியாகச் செல்லும் நீர் விளங்கும் காவிரியின் கரையில் மேவும் கண்டியூரில் வீற்றிருக்கும் வீரட்டநாதன், தனக்கு முன்னோர்கள் இன்மையாலோ, நெருக்கமாகியவர்களாகிய திருமாலும் பிரமனும் அண்டங்களை ஆளவும், தான் மயானத்தில் ஆடியும் பாடியும் இவ்வுலகத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை கொண்டு விளங்குவது.

401. உள்ளவாறெனக்கு உரைசெய்மின்உயர்
வாயமாதவம் பேணுவீர்
கள்ளவிழிபொழில் சூழும்கண்டியூர்
வீரட்டத்துறை காதலான்
பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை
வைத்ததும்பெரு நீரொலி
வெள்ளந்தாங்கியது என்கொலோமிகு
மங்கையாள் உடனாகவே.

தெளிவுரை : உயர்வாகிய மாதவத்தைப் பேணுகின்றவர்களே ! உள்ளவாறு உரைப்பீராக.

தேன் கமழும் பொழில் சூழும் கண்டியூரில் வீற்றிருக்கும் வீரட்டநாதன் உமாதேவியுடன் கொண்டு மேவ, இளைமையான பிறைச் சந்திரனைச் சிவந்த சடையின் மீது வைத்ததும், பெருநீராகிய கங்கையைத் தாங்கியதும் என்கொல் !

402. அடியர் ஆயினீர் சொல்லுமின்அறி
கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாம் தொழுது ஏத்துகண்டியூர்
வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய்முத லாய்இவ்வைய
முழுதுமாய்அழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி
நூலும்பூண்டெழு பொற்பதே.

தெளிவுரை : அடியவர்கள் ஆகியவர்களே ! அரனின் செய்கையைச் சொல்லுமின் ! உலகமெல்லாம் தொழுது ஏத்துகின்ற கண்டியூரில் வீரட்டானத்தில் உறைகின்ற பெருமான், அந்தமாக இருப்பவர்; முதற்பொருளாய் விளங்குபவர்; இவ் வையம் முழுவதும் ஆகி, நிறைந்து விளங்குபவர். அவர், திருவெண்ணீற்றினைத் திருமார்பில் பூசி, முப்புரி நூலும் அணிந்து மேவும் பொற்புதான் யாது ?

403. பழையதொண்டர்கள் பகருமின்பல
வாயவேதியன் பான்மையைக்
கழையுலாம்புனல் மல்குகாவிரி
மன்னு கண்டியூர் வீரட்டன்
குழையொர் காதினிற் பெய்துகந்தொரு
குன்றின் மங்கை வெருவுறப்
புழைநெடுங்கைநன் மாவுரித்தது
போர்த்துஉகந்த பொலிவதே.

தெளிவுரை : வாழையடி வாழையாக வந்த திருக் கூட்ட மரபில் விளங்குகின்ற பழம் பெரும் திருத்தொண்டர்களே ! பலவாகிய தன்மைகளை உடைய ஈசனின் பாங்கினைப் பகருமின். மலைப்பகுதிகளின் வழியாகப் பெருகி வரும் காவிரியானது, வளத்தைப் பெருக்கி மேவும் கண்டியூரில், வீரட்டநாதன், காதில் குழை அணிந்து மகிழ்ந்து, மலை மகளாகிய உமையவள் வெருவுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்துப் பொலிவது என்கொல் !

404. விரவிலாதுமைக் கேட்கின்றேன்அடி
விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
கரையெலாம்திரை மண்டுகாவிரிக்
கண்டியூர்உறை வீரட்டன்
முரவமொந்தை முழவொலிக்க
முழங்கு பேயொடும் கூடிப்போய்ப்
பரவுவானவர்க் காகவார்கடல்
நஞ்சம்உண்ட பரிசதே.

தெளிவுரை : ஈசனின் திருவடிக் கமலத்தை விரும்பி ஆட்பட்டுப் போற்றி விளங்கும் அடியவர்களே ! விளம்புவீராக! காவிரியின் அலைகள் பெருக மேவும் கண்டியூரில் உறையும் வீரட்டநாதர், மொந்தை, முழவு முதலான வாத்தியங்கள் முழங்க, பேய்க் கணங்களும் பூத கணங்களும் சூழ்ந்து நிற்க, வானவர்களுக்காகக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட பரிசுதான் என்கொல் !

405. இயலுமாறு எனக்கு இயம்பு மின்இறை
வன்னுமாய்நிறை செய்கையைக்
கயல்நெடுங்கண்ணி னார்கள்தம்பொலி
கண்டியூர்உறை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக்
காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயல்நகவ்வது அரிந்து மற்றதில்
ஊணுகந்த அருத்தியே.

தெளிவுரை : ஈசனின் திருவடிக் கமலத்தைப் போற்றி வணங்கும் மெய்யன்பர்களே ! இயம்புவீராக! கயல் போன்ற கண்ணுடைய மகளிர் பொலிந்து விளங்கும் கண்டியூரில் உறையும் வீரட்டநாதன், உலகத்தில் மழை பெய்வித்து நலம் புரியும் தேவர்களுக்காகப் பிரமனுடைய ஐந்தாவதாகிய சிரத்தைக் கொய்து அதனைக் கொண்டு, பிச்சை ஏற்று உண்ணுகின்ற விருப்பத்தைக் கொண்டது என்கொல் !

406 திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச்
செல்வன்றன்னது திறமெலாம்
கருந்தடங்கண்ணி னார்கள்தாம்தொழு
கண்டியூர்உறை வீரட்டன்
இருந்து நால்வரொடு ஆல்நிழல்அறம்
உரைத்ததும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யால்அம்மாமதில்
மூன்றுமாட்டிய வண்ணமே.

தெளிவுரை : நன்று தெளிந்து சிவஞானத்தை உணர்ந்து மேவும் தொண்டர்களே ! மெய்ச் செல்வனாக விளங்கும் சிவபெருமானின் திறம் யாவும் நன்கு உரை செய்வீராக.மகளிர் கூடி இருந்து தொழுகின்ற கண்டியூரில் உறையும் வீரட்டநாதன், சனகாதி முனிவர்களாகிய நால்வருக்குக் கல்லால மரத்தின் நிழலில் இருந்து அறப்பொருள் உரைத்ததுவும், முப்புர அசுரர்களும் அவர்களுடைய மூன்று கோட்டை மதில்களும் எரியுமாறு, மேரு மலையை வலிமையான வில்லாகக் கொண்டு வாட்டிய வண்ணமும் யாதுகொல் !

407. நாவிரித்தரன் தொல்புகழ்பல
பேணுவீர்இறை நல்குமின்
காவிரித்தடம் புனல்செய்கண்டியூர்
வீரட்டத்துறை கண்ணுதல்
கோவிரிப்பயன் ஆன்அஞ்சுஆடிய
கொள்கையும் கொடி வரைபெற
மாவரைத்தலத் தால்அரக்கனை
வலியைவாட்டிய மாண்பதே.

தெளிவுரை : நாவினால் அரனது தொன்மையான புகழ்ச் செயல்களைப் போற்றும் அன்பர்களே ! விடைபகர்வீராக !

காவிரியின் நீர் வளம் பெருகும் கண்டியூரின் வீரட்டானத்தில் உறையும் கண்ணுதலாகிய ஈசன், பசுவிலிருந்து பெறும் பால், தயிர், நெய் முதலான பஞ்ச கௌவியத்தைப் பூசிக்கப்படும் பொருளாக ஏற்று ஆடி மகிழ்ந்து, இராவணன் கயிலை மலையால் நெரியுமாறு திருப்பாத விரலை ஊன்றி, வலிமையை அழித்து விளங்கிய மாண்பு யாதுகொல் !

408. பெருமையேசர ணாகவாழ்வுறு
மாந்தர்காள்இறை பேசுமின்
கருமையார்பொழில் சூழந்தண்வயற்
கண்டியூர்உறை வீரட்டன்
ஒருமையால்உயர் மாலும்மற்றை
மலரவன்உணர்ந்து ஏத்தவே
அருமையால்அவ ருக்குஉயர்ந்துஎரி
யாகிநின்றஅத் தன்மையே.

தெளிவுரை : சிவபெருமானுடைய பெரும் புகழைப் பரவிச் சரண் புகுந்து அருளில் திளைக்கும் மாந்தர்காள் ! விடை பகர்வீராக ! அடர்த்தியான இலைகளுடைய வளமையான பொழில் சூழ்ந்தும் குளிர்ச்சி மிக்க வயல்களும் உடைய கண்டியூரில் உறையும் வீரட்டநாதன், திருமாலும் பிரமனும் ஏத்தி நிற்க, அவர்களுக்கு எட்டாதவனாய் உயர்ந்து, தீத்திரளாய் நின்ற தன்மைதான் யாது !

409. நமர்எழுபிறப்பு அறுக்கு மாந்தர்காள்
நவிலுமின்உமைக் கேட்கின்றேன்
கமரழிவயல் சூழுந்தண்புனற்
கண்டியூர்உறை வீரட்டன்
தமரழிந்தெழு சாக்கியச்சமண்
ஆதர்ஓதும் அதுகொளா
தமரர்ஆனவர் ஏத்த அந்தகன்
தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே.

தெளிவுரை : தம்மைச் சார்ந்து விளங்கும் சுற்றத்தினரின் பிறவிப் பிணியை அறுக்கும் அடியவர்களாகிய மெய்த் தொண்டர்களே ! பூமியில் வெடிப்பு கொண்டு வறட்சி உண்டாகாதவாறு, குளிர்ந்த நீர் பெருகும் வயல்கள் சூழ்ந்த கண்டியூரில் உறையும் வீரட்டநாதன், சமணர் சாக்கியர்தம் சொற்களைக் கருத்துடையதாகக் கொள்ளாததும், அந்தகனைச் சூலத்தால் சம்ஹரித்ததும் என்கொல் !

410. கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர்
வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக்
கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாந்திகழ் காழிஞானசம்
பந்தன்செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
உரைசெய்வார் உயர்ந்தார்களே.

தெளிவுரை : அன்பர்தம் கருத்தாக விளங்கி, கண்டியூரில் வீரட்டானத்தின்கண் உறையும் ஈசன், பிறரால் காணப் பெறாது, மனத்தைக் கவரும் கள்வராகவும், சொல்லின் பொருளாகவும் இருப்பவர். அப் பெருமானின் திறத்தினை அடியவர்களிடம் வினாவுரையாகக் கேட்டு மகிழ்ந்த, திருத்தமாய்த் திகழும் காழியின் ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இதனை, ஒருவராகத் தனித்தும், பலராகச் சேர்ந்தும் பாடுபவர்கள், உயர்ந்தவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

297. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

411. மானினேர்விழி மாதராய்வழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாய்ஒரு பாலன்ஈங்குஇவன்
என்றுநீபரிவு எய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்குஎளி யேன்அலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : மான்போன்ற விழியுடைய மாதரசியே ! பாண்டிய மன்னனின் பட்டத்து அரசியே ! இங்கு என்னைப் பால்மணம் கொண்டு மேவும் பாலன் எனக் கருதி மனம் வருந்த வேண்டாம். மலைப் பகுதிகளில், அல்லல் மேவி விளங்குகின்ற ஈனர்களுக்கு யான் எளியவன் அல்ல. திருஆலவாயின்கண் வீற்றிருக்கும் சிவபெருமான், என் முன் நின்று அருள் செய்பவர். அவர், என்னைக் காத்தருள்பவர்.

412. ஆகமத்தொடு மந்திரங்கள்
அமைந்தசங்கத பங்கமாப்
பாகத்தொடு இரைத்துரைத்த
சனங்கள் வெட்குறு பக்கமா
மாகத்கரி போல்திரிந்து
புரிந்து நின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு
ஆல்வாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : வேத ஆகமங்களையும், மந்திரங்களையும், உயர்ந்த பொருள் தரும் வாசகங்களையும் நன்கு பயின்று ஓதி உரைப்பவர்களாகிய பெருமக்கள், நாணுகின்ற தன்மையில், மதம் பொருந்திய யானையைப் போன்று, தேகத்தில் அழுக்கு சேர இருப்பவர்களுக்கு நான் எளிமையானவன் அல்ல. திருஆலவாயில் விளங்கும் சிவபெருமான் யாவற்றையும் முன்னின்று செய்வதனால் அச்சத்தை விடுக.

413. அத்தகுபொருள் உண்டும்இல்லையும்
என்றுநின்றவர்க்கு அச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்
அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து
சனங்கள் வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : இறைவனின் மேம்பட்ட தன்மையினை உண்டு இல்லை என்னும் தன்மையில் இருப்பவர்களுக்கு நான் அச்சம் தருபவன்.ஒவ்வாத வார்த்தைகளைக் கூறி வாதம் செய்து அழிபவர்களாகிய அத்தகையினருக்கும், பிறர் இகழுமாறு சித்திர வார்த்தைகளை மொழிபவர்களுக்கும் யான் எளியவன் அல்ல. ஆலவாயின்கண் மேவும் அரன் என் முன்னின்று யாவும் புரிபவர்.

414. சந்துசேனனும் இந்துசேனனும்
தருமசேனனும் கருமைசேர்
கந்துசேனனும் கனகசேனனும்
முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந்து ஆரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்குஎளி யேன்அலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : சந்து சேனன், இந்து சேனன், தரும சேனன், கந்து சேனன், கனக சேனன் முதலாகிய பெயர்களைச் சிறப்பாகத் தாங்கி, எல்லா இடங்களிலும் திரிந்து அலைந்தவர்களாகி, வடமொழியும் செந்தமிழும் நவில்கின்ற சிவப் பரம் பொருளையும் அதன் பயனையும் அறியாது, உலகியலில் அகக் குருடர்களாய் விளங்குபவர்களுக்கு, நான் எளியவன் அல்ல. திரு ஆலவாயின் ஈசன் என் முன்னிருந்து நடத்திச் செல்கின்றார். எனவே அச்சத்தை விடுக.

415. கூட்டின்ஆர்கிளி யின்விருத்தம்
உரைத்ததோர்ஒலி யின்தொழில்
பாட்டுமெய் சொலிப் பக்கமே செலும்
எக்கர்தங்களைப் பல்லறம்
காட்டியேவரு மாடெலாங்கவர்
கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : கூண்டில் இருக்கும் கிளி விருத்தம் முதலானவைகளை உரைத்து, அக் கிளியினது ஒலித் தன்மையை மெய்யெனக் கூறி அறங்களைச் சொல்லுகின்றவர்கள் போல் பேசி, இரக்கம் அற்றவராகி, குற்றங்களைப் புரிபவர்களுக்கு நான் எளியவன் அல்ல. ஆலவாயின்கண் உறையும் ஈசன் என் முன்னின்று நன்று அருள் புரிபவர்.

416. கனகநந்தியும் புட்பநந்தியும்
பவணநந்தியும் குமணமா
கனகநந்தியும் குனகநந்தியும்
திவணநந்தியும் மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ
மேதவம்புரி வோம்எனும்
சினகருக்கெளி யேனலேன் திரு
ஆலவாய்அரன் நிற்கவே

தெளிவுரை : கனக நந்தி, புட்ப நந்தி, பவண நந்தி, குமண மாசுனக நந்தி, குனகநந்தி, திவணநந்தி எனப் பலவகையான பெயர்கள் கொண்டு, எண்ணற்றவர்களாய் உலகியல் வாழ்க்கையை ஒதுக்கியவர்களாகி, அவமாகிய நிலையைத் தவம் எனக் கொண்டு, பொய்த் தன்மையைக் காட்டுபவர்களுக்கு நான் எளியவன் அல்ல. திருஆலவாயில் வீற்றிருக்கும் சிவபெருமான் என் முன்னிருந்து அருள்பவர்.

417. பந்தணம்மவை யொன்றிலம்பரி
வொன்றிலம்மென வாசக
மந்தணம்பல பேசிமாசறு
சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மது
புத்தணம்மது சிந்தனச்
சிந்தணர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : பந்தத்தால் கட்டுப்பட்டு, அதற்கு ஏற்ற வகையில் ஈடுபடுத்திக் கொள்வதும், ஒரு பொருளின் கண் பரிவு கொண்டு அதன் இச்சைக்கு உவந்து ஆட்படுதலும், இல்லை எனப் பேசியும், புகழ் இன்றி சமயத்தின் கொள்கை இதுவே என மொழிதலும் உடையவர்களுக்கு, நான் எளியவன் அல்ல. திருஆலவாயில் கோயில் கொண்டு மேவும் ஈசன் என் முன்னின்று யாவற்றையும் திகழ்விப்பவர். எனவே அச்சத்தைக் கைவிடுக.

418. மேலெனக்குஎதிர் இல்லையென்ற
அரக்கனார்மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு
பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாய்இடுக்கி
நடுக்கியேபிறர் பின்செலும்
சீலிகட்குஎளி யேன்அலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை :  தன்னிலும் மேலாக யாரும் இல்லை எனக் கருதிய இராவணனுடைய செருக்கினை அழித்தவர், சிவபெருமான். அப் பெருமானைப் பணிந்து ஏத்தாது, பொய்த் தவத்தைக் கொண்டு, குண்டிகையும் மயிற் பீலியும் விளங்க, ஓலைத் தடுக்கினை உடையவர்களுக்கு, நான் எளியவன் அல்ல. திருஆலவாயின்கண் மேவும் ஈசன், என் முன்னிருந்து யாவற்றையும் புரிபவர்.

419. பூமகற்கும் அரிக்கும்ஓர்வரு
புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போல்தலை
யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
யட்டிவாய்ச கதிக்கு நேர்
ஆமவர்க் கெளியேன லேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் நினைத்தற்கு அரிய பொருளாகிய புண்ணியன், சிவபெருமான். அப்பெருமானைப் போற்றி வணங்காதவர்களாய், ஈமக் கிரியையைப் புரியும் தன்மை உடையவர்கள் போன்று தலையில் திகழும் சிகையைக் களைந்து பொய்த் தவத்தின்பால் பயனின்றித் திளைத்துத் தம்மை வருத்திக் கொண்டு பொருள் அற்ற உரை நவில்பவர்களுக்கு, யான் எளியவன் அல்ல. எனக்குத் திருஆலவாயில் வீற்றிருக்கும் ஈசன் முன்னின்று விளங்குபவர்.

420. தங்களுக்கும்அச் சாக்கியர்க்குந்
தரிப்பொணாதநற் சேவடி
எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக்
கேமடுத்தொரு வாய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல
வோர்களைப் பழிக் கும்பொலா
அங்கதர்க்குஎளி யேனலேன்திரு
ஆலவாய்அரன் நிற்கவே.

தெளிவுரை : சமர் கொண்டு அடர்க்கும் சமணர்களுக்கும் சக்கியர்களுக்கும் அரிதாகிய உயர்பொருளாய் விளங்குபவர், சிவபெருமான். அத்தகைய நாதனின் நல்ல சேவடியை ஏத்தி எங்கள் நாயகனே ! என்று போற்றி வழிபடுதலை விட்டு, உவமாய் தவத்தின் வழியாய், நல்ல நூற்கள் புகலும் வழியும் இன்றி, அறிஞர்களைப் பழிக்கும் பொல்லாத பழிச் சொல் பேசுபவர்களுக்கு நான் எளிமையானவன் அல்ல. எனக்குத் திருஆலவாயில் மேவும் ஈசன் முன் இருந்து யாவற்றையும் செய்பவர் ஆவர்.

421. எக்கராம் அமண் கையருக்குஎளி
யேன்அலேன்திரு ஆலவாய்ச்
சொக்கன்என்னுள் இருக்கவே துளங்
கும்முடித் தென்னன் முன்னிலை
தக்கசீர்புகலிக் குமன்தமிழ்
நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேஉரை செய்தபத்தும்
உரைப்பவர்க்கு இடர் இல்லையே.

தெளிவுரை : திருஆலவாய்க் கடவுளாகிய சொக்கநாதன் என் உள்ளத்தில் இருக்க, செருக்குடைய அமணர்களுக்கு எளியவன் அல்ல எனப் பாண்டிய மன்னன் முன்னிலையில் புகலியின்கண் மேவும் சிறப்புடைய தமிழ் நாதனாகிய ஞானசம்பந்தன், வாய்மலர உரைத்த இத்திருப்பதிகத்தை, ஓத வல்லவர்களுக்கு இடம் இல்லை.

திருச்சிற்றம்பலம்

298. பொது  திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்

422. கல்லாலனீழல், அல்லாத்தேவை
நல்லார் பேணார், அல்லோநாமே.

தெளிவுரை : கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள் உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப் பிற தெய்வத்தைச் சிவஞானிகள் வணங்கி ஏத்த மாட்டார்கள். நாமும் அவ்வாறு சிவபெருமானை அன்றி வேறு தெய்வத்தைக் கொள்ளோம்.

423. கொன்றைசூடி, நின்றதேவை
அன்றியொன்று, நன்றிலோமே.

தெளிவுரை : கொன்றை மலரைச் சூடி விளங்குகின்ற சிவபெருமானை அன்றி பிற தெய்வத்தை நன்மை செய்யும் கடவுளாக யாம் கருதவில்லை.

424. கல்லாநெஞ்சின், நில்லான்ஈசன்
சொல்லாதாரோடு அல்லோநாமே.

தெளிவுரை : ஈசன், சிவஞானத்தை உணராத நெஞ்சத்தில் விளங்கி நிற்காதவர். அப்பெருமானுடைய திருப்புகழை நன்கு சொல்லாதவர்களோடு, யாம் சேர்ந்து இருக்க மாட்டோம்.

425. கூற்றுதைத்த, நீற்றினானைப்
போற்றுவார்கள், தோற்றினாரே

தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த கூற்றுவனைத் திருநீற்று மேனியராக விளங்கும் சிவபெருமான், திருப்பாதத்தால் உதைத்து அழித்தார். அப் பெருமானை, மக்கட் பிறவி எடுத்தவர்கள் போற்றித் துதிப்பார்கள்.

426. காட்டுளாடும், பாட்டுளானை
நாட்டுளாரும், தேட்டுளாரே.

தெளிவுரை : ஈசன், சுடுகாட்டில் விளங்கி நின்று நடனம் புரிபவர்; பெருமை விளங்கும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனப்படும் ஐந்தொழிலையும் தனது சங்கற்பத்தால் ஆற்றுபவர். அப்பரம் பொருளை, நெஞ்சில் தேக்கித் தியானம் செய்பவர்கள் பேரின்பத்தில் திளைப்பவர்கள்.

427. தக்கன்வேள்விப், பொக்கம்தீர்தத
மிக்கதேவர், பக்கத்தோமே.

தெளிவுரை : தக்கன் செய்த வேள்வியால் உண்டாகும் குற்றத்தைத் தீர்த்த வல்லமையும் அருளும் மிகுந்த தேவராகிய சிவபெருமானுடைய பக்கத்தில் யாம் இருக்கின்றனம்.

428. பெண்ணாண்ஆய, விண்ணோர்கோவை
நண்ணாதாரை, எண்ணோநாமே.

தெளிவுரை : பெண்ணாகவும், ஆணாகவும் ஆகி விண்ணோர்கள் போற்றும் தலைவராகிய சிவபெருமானை; மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்களால் அணுகாதவர்களை  நாம் நெஞ்சாலும் எண்ணுவதில்லை.

429. தூர்த்தன்வீரம், தீர்த்தகோவை
ஆத்தமாக, ஏத்தினோமே.

தெளிவுரை : துன்மதியால் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்துத் திருமலையின் பெருமையும் திருவருளும் பொலியுமாறு அவனுக்கு வாளும், வாழ்நாளும் வழங்கிய இறைவனை, விருப்பத்துடன் யாம் ஏத்தி வணங்கினோம்.

430. பூவினானும், தாவினானும்
நாவினாலும், நோவினாரே.

தெளிவுரை : மலர்மேல் விளங்கும் பிரமனும் உலகத்தைத் தாவி அளந்த திருமாலும், ஈசனின் திருமுடியையும் திருவடியையும் உடல் வருத்தித் தேடியும் காண்கிலராய்ப் பின்னர் நாவினால் ஏத்தி உருகி நின்றவராயினர்.

431. மொட்டமணர், கட்டர்தேரர்
பிட்டர்சொல்லை, விட்டுளாமே.

தெளிவுரை : சமணர்களும், தேரர்களும் சமயநெறிக்குப் புறம்பாகச் சொற்களைக் கூறுபவர்கள். அவற்றைப் பொருளாகக் கொள்ளாது விடுத்தன்.

432. அந்தண்காழிப், பந்தனசொல்லைச்
சிந்தைசெய்வோர், உய்ந்துளோரே.

தெளிவுரை : அழகிய குளிர்ச்சி பொருந்திய காழியில் மேவும் ஞானசம்பந்தனது திருச் சொல்லாக மலர்ந்த இத் திருப்பதிகத்தை சிந்தித்தும், வாயாரப் பாடியும் திகழ்பவர்கள், உய்வு பெற்றவர்களாவார்கள்.

திருச்சிற்றம்பலம்

299. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

433. கருவார்கச்சித், திருவேகம்பத்து
ஒருவாஎன்ன, மருவாவினையே

தெளிவுரை : கருப்பொருளாக விளங்கும் சிறப்பு மிக்க கச்சியில் திருவேகம்பத்தில் வீற்றிருக்கும் ஒருவனே ! பெருமானே ! என்று ஏத்தி வணங்க, வினைத் துயர் இல்லை.

434. மதியார்கச்சி, நதியேகம்பம்
விதியால்ஏத்தப், பதியாவாரே.

தெளிவுரை : சிவஞானம் பெருக்கும் தன்மையில் கம்பாநதியின் கரையில் விளங்குகின்ற திருவேகம்பத்தை ஆகம விதிப்படி அன்பர்கள் ஏத்தி வணங்க, சிவ கணங்களுக்குத் தலைமையாய் விளங்குவார்கள்.

435. கலியார்கச்சி, மலியேகம்பம்
பலியாற்போற்ற, நலியாவினையே

தெளிவுரை : விழாக்கள் மலிந்து ஆரவாரத்துடன் எஞ்ஞான்றும் விளங்குகின்ற கச்சியில், பேரருள் வழங்குகின்ற திருத்தலமாகத் திகழும் திருவேகம்பத்தை பூசையின் சிறப்புக் காட்டும் அபிடேகப் பொருள் கொண்டு போற்ற, தீவினையால் நலிவு இல்லை.

436. வரமார்கச்சிப், புரம்ஏகம்பம்
பரவாஏத்த, விராவவினையே.

தெளிவுரை : வணங்கிப் போற்றும் பக்தர்களுக்குப் வேண்டிய வரங்களை நல்கும் தெய்வப் பேறுடைய திருத்தலம், காஞ்சிபுரம். இத் திருத்தலத்தில் திருவேகம்பப் பெருமானைப் பரவி ஏத்த, வினை யாவும் நீங்கும்.

437. படமார்கச்சி, இடமேகம்பத்து
உடையாய்என்ன, அடையாவினையே.

தெளிவுரை : சித்திரங்களின் வேலைப்பாடுகளை உடைய கவின்மிகு கச்சியை இடமாகக் கொண்டு, திருவேகம்பத்தில் வீற்றிருக்கும் நாதனே ! என்று ஏத்த, வினையானது சாராது.

438. நலமார்கச்சி, நிலவேகம்பம்
குலவாஏத்தக் கலவாவினையே

தெளிவுரை : நலம் யாவும் பொருந்தி மேவும் கச்சி நகரில் நிலவுகின்ற திருவேகம்பத்தை, அன்பின் வயத்தால் குலாவி ஏத்த, வினையானது பற்றாது நீங்கும்.

439. கரியின்னுரியன், திருவேகம்பன்
பெரியபுரமூன்று, எரிசெய்தானே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்த்துச் கொண்டவராகிய ஈசன், திருவேகம்பப் பெருமான். அப் பரமன், நன்னெறியிற் பொருந்தி நில்லாது கேடுகளை விளைவித்த மூன்று புரங்களை எரியுமாறு செய்தவர்.

440. இலங்கைஅரசைத் துலங்கஊன்றும்
நலங்கொள்கம்பன் இலங்குசரணே.

தெளிவுரை : இராவணனை கயிலை மலையின்கண் நெரியுமாறு ஊன்றி, அவன் நலத்தை அழித்த திருவேகம்பன் திருவடியைச் சரணம் கொள்ளுதலே சிறந்து விளங்குவதற்கு உரிய செம்மையான வழி.

441. மறையோன்அரியும், அறியாஅனலன்
நெறியேகம்பம், குறியால்தொழுமே

தெளிவுரை : பிரமனும் திருமாலும் அறியமுடியாதவாறு நெருப்பின் திரட்சியாகியவர், சிவபெருமான். அப்பரம்பொருளாகிய அப் பெருமானையே தொழுகின்ற மாண்பினை நோக்கமாகக் கொண்டு, நெஞ்சே ஏத்துமின்.

442. பறியாத்தேரர், நெறியில்கச்சிச்
செறிகொள்கம்பம், குறுகுவோமே.

தெளிவுரை : சாக்கியர்களும் சமணர்களும் கூறும் நெறியின்படி அமையாது, கச்சியில் ஞானம் பெருகும் திருவேகம்பநாதனின் திருக்கோயிலை நண்ணி, ஏத்துவோமாக.

443. கொச்சைவேந்தன் கச்சிக்கம்பம்
மெச்சும்சொல்லை நச்சும்புகழே.

தெளிவுரை : கொச்சைவயம் என்னும் திருப்பெயரை உடைய சீகாழியில் அருள் நாயகனாக விளங்கும் ஞானசம்பந்தன், வேதம் போன்று உயர்வாக மெச்சிக் கச்சிக் கம்பனைப் போற்றிப் பாடுகின்ற இத் திருப்பதிகத்தை ஏத்தி உரைக்க வல்லவர்கள், நிலைத்த புகழுடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

300. திருச்சிற்றேமம் (அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

444. நிறைவெண்திங்கள் வாள்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டுயாழ்செய் பைம்பொழிற் பழனம்சூழ் சிற்றேமத்தான்
இறைவன்என்றே உலகெலாம் ஏத்தநின்ற பெருமானே.

தெளிவுரை : முழு நிலவு போன்ற ஒளி திகழும் முகம் உடைய உமாதேவியார் இசை பாட, நீண்ட சடை முடியில் பிறைச் சந்திரனைச் சூடி நடனம் புரிகின்ற இயல்பினை உடையவராய் சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்று ஒலிக்கும் பைம்பொழிலும், வயல்களும் சூழ்ந்த சிற்றேமத்தில் வீற்றிருக்கின்ற ஈசன், உலகமெல்லாம் ஏத்திப் போற்றுகின்ற இறைவன்.

445. மாகத்திங்கள் வாள்முக மாதர்பாட வார்சடைப்
பாகத் திங்கள் சூடியோர் ஆடல்மேய பண்டங்கள்
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேம மேவினான்
ஆகத்துஏர்கொள் ஆமையைப் பூண்டஅண்ணல் அல்லனே.

தெளிவுரை : ஆகாயத்தில் விளங்கும் சந்திரன் போன்ற ஒளியுடைய முகத்தை உடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடையில் பிறைச் சந்திரனைச் சூடிப் பண்டரங்கம் என்னும் கூத்து மேவும் ஈசன், மேகம் திகழும் சோலை சூழ்ந்த சிற்றேமத்தில் மேவியவர். அப்பெருமான், திருமார்பில் ஆமை ஓட்டினை அணிகலனாகப் பூணும் அண்ணல் அல்லவா !

446. நெடுவெண்திங்கள் வாள்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
படுவண்டியாழ் செய்பைம் பொழில் பழனம்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங் கூற்றைக் காலினாற் காய்ந்த கடவுள் அல்லனே.

தெளிவுரை : முழு நிலவு போன்ற முகங் கொண்ட உமாதேவி பண் இசைத்துப் பாட, நீண்ட சடையில் பிறைச் சந்திரனைச் சூடி நடம் புரிதலையுடைய ஈசன், பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், கொடிய காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுள் அல்லவா !

447. கதிரார்திங்கள் வாள்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோர் ஆடல்மேய முக்கணன்
ஏதிரார்புனலம் புன்சடை எழிலாரும் சிற்றேமத்தான்
அதிரார் பைங்கண் ஏறுடை ஆதிமூர்த்தி அல்லனே.

தெளிவுரை : கதிர்கள் வீசி விளங்கும் சந்திரனைப் போன்ற முகங் கொண்ட உமாதேவியார் பண் இசைத்துப் பாட, நெற்றிக் கண்ணுடைய ஈசன், இளம் பிறைச் சந்திரனைச் சூடி, ஆடலை மேவுகின்ற முக்கண்ணன் ஆவார். அவர், கங்கையும் சடை முடியும் கொண்டவராய் எழில் திகழும் சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், இடபத்தை வாகனமாக உடைய ஆதிமூர்த்தி அல்லவா !

448. வானார்திங்கள் வாள்முகமாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயும் திருவாரும்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே.

தெளிவுரை : வானில் விளங்குகின்ற சந்திரனைப் போன்ற ஒளி திகழும் முகம் உடைய உமாதேவியார் பண் இசைத்துப் பாட, நீண்ட சடைமுடியில் வளைந்த பிறைச் சந்திரனைச் சூடித் திருக்கூத்து மேவும் ஈசன், செல்வம் மிகுந்த சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான் மான் போன்ற விழியாளாகிய மாதொடு மகிழ்ந்து மேவும் மைந்தன் அல்லவா !

449. பனிவெண்திங்கள் வாள்முக மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத் தாமம் சூழ்சிற் றேமத்தான்
முனிவும் மூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே.

தெளிவுரை : குளிர்ச்சியான வெண் திங்களைப் போன்ற முகன் கொண்டு மேவும் உமாதேவியார் பண் இசைத்துப் பாட பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடி ஆடல் மேவும் ஈசன், ஒற்றை இடபத்தை வாகனமாக உடையவராய்ப் பறவை இனங்களும் நறுமண மலர்களும் சூழ்ந்து விளங்கும் சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், விருப்பும் வெறுப்பும் அற்றவராயும் மூப்பினை அடையப் பெறாத வண்ணம் உடையவராயும் மேவும், முக்கண் மூர்த்தி அல்லவா !

450. கிளரும்திங்கள் வாள்முக மாதர்பாடக் கேடிலா
வளரும்திங்கள் சூடியோர் ஆடல்மேய மாதவன்
தளிருங்கொம்பு மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண் ணூல் மார்பன்என் உள்ளத்துள்ளான் அல்லனே.

தெளிவுரை : கிளர்ந்து எழுந்து நிறைவடைந்த சந்திரனைப் போன்ற ஒளி திகழும் முகம் கொண்டு மேவும் உமாதேவியார் பண் இசைத்துப் பாட குறைவிலாத தன்மையில் வளரும் பாங்குடைய பிறைச் சந்திரனைச் சூடி, ஆடலை மேவும் பெருந்தவத்தினராகிய ஈசன், தளிரும் காம்புகளும் தேன் துளிர்க்கும் மலர் மாலைகளும் சூழ விளங்கும் சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப் பரமன் ஒளிர் விடுகின்ற முப்புரி நூலை அணிந்து மேவும் திருமார்பினராய், என் உள்ளத்தில் இருப்பவர் அல்லவா !

451. சூழ்ந்ததிங்கள் வாள்முக மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோர்ஆடல்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்
ஆழ்ந்த அரக்கன் ஒல்கஅன்று அடர்த்தஅண்ணல் அல்லனே.

தெளிவுரை : திங்களைப் போன்ற ஒளி மிக்க முகம் கொண்டு திகழும் உமாதேவியார் பண் இசைத்துப் பாட, சடை முடியில் பிறைச் சந்திரனைச் சூடி, ஆடல் புரியும் புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான், வயல் வளம் நிறைந்த சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், கயிலையாகிய பெரிய மலையைத் தன் திருப்பாத விரலால் ஊன்றி இராவணன் நலியுமாறு அடர்த்தியவர் அல்லவா !

452. தனிவெண்திங்கள் வாள்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேல் அந்தணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே.

தெளிவுரை : தனிப் பெருமை உடைய வெண் திங்கள் போன்ற ஒளி திகழும் முகப்பொலிவு உடைய உமாதேவியார், பண் இசைத்துப் பாட, தாழ்ந்து விளங்கும் சடையின்கண் பிறைச் சந்திரனைச் சூடி, ஆடல் மேவும் தொன்மையராகிய ஈசன், அழகு பொருந்தியவண்ணம் திகழும் சிற்றேமத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான், பிரமனும் திருமாலும் காண முடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற செல்வன் அல்லவா !

453. வெள்ளைத்திங்கள் வாள்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோர் ஆடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தாற்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.

தெளிவுரை : வெண்திங்கள் போன்று ஒளி திகழும் திருமுகப் பொலிவுடைய உமாதேவியார் பண் இசைத்துப் பாட, சடை முடியில் பிறைச் சந்திரனைச் சூடி, ஆடல் மேய ஈசன், விழைவுடன் வீற்றிருப்பது சிற்றேமம் ஆகும். அப்பெருமான், பௌத்தர் சமணர் ஆகியோரைப் படைத்தும், அவர்க்குத் தோன்றாதவராய் ஆங்கு மறைந்து விளங்குபவர் அல்லவா !

454. கல்லில் ஓதமல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய இன்தமிழ் நவிலுஞான சம்பந்தன்
செல்வ னூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவார் அல்லல்இன்றி வாழ்வரே.

தெளிவுரை : கற்களால் ஆகிய மதிலில் கடலலையின் ஓதம் விளங்கும் காழி நகரில், நல்லவை நவிலும் இனிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன், செல்வனாகிய ஈசன் வீற்றிருக்கும் சிற்றேமம் என்னும் தலத்தை, இத்திருப் பதிகத்தை, நாவினால் ஓதவல்லவர்கள் துன்பம் அற்று வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

301. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

455. சந்த மார்முலை யாள்தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யார்அடி என்மனத்து உள்ளவே.

தெளிவுரை : நறுமணம் கமழும் வனப்புடைய உமாதேவியாரை ஒரு கூறாக உடைய ஈசன், திருவெண்ணீற்றைத் திருமேனியில் குழையப் பூசிக் காழிப் பதியில் மேவும் எம் தந்தையாவார். அவருடைய திருவடிகள் என்னுடைய மனத்தில் நன்கு பதிந்துள்ளன.

456. மானி டம்உடை யார்வளர் செஞ்சடைத்
தேநி டங்கொளும் கொன்றையந் தாரினார்
கானி டங்கொளும் தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டேன் உச்சியில் நிற்பரே.

தெளிவுரை : மானைக் கரத்தில் ஏந்திய ஈசன், சிவந்த சடை முடியின் மீது, தேன் துளிர்க்கும் கொன்றை மாலையைத் தரித்து விளங்குபவர், மயானத்தில் இருந்து ஆடுகின்ற, வயல்சூழ் காழியில் மேவும் அப்பெருமான், என் உடலின்கண் விளங்கி உயர்ந்த தன்மையில் ஓங்கி இருப்பவர் ஆவார்.

457. மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
பைகொள் வாளரவுஆட்டும் படிறனார்
கைகொள் மான்மறி யார்கடற் காழியுள்
ஐயன்அந் தணர்போற்ற இருக்குமே.

தெளிவுரை : தேவர்களுடைய வேண்டுகோளுக்கு இரங்கி, மை போன்ற கரிய நஞ்சினை அருந்தி நீல கண்டராகிய சிவபெருமான், வானில் விளங்குகின்ற சந்திரனைச் சடை முடியில் சூடிப் படம் கொண்டு ஆடுகின்ற அரவத்தைத் தரித்து ஆட்டுகின்ற சதுரப்பாடு உடையவர். அப்பெருமான், இளசை பொருந்திய மானைக் கரத்தில் ஏந்திக் காழிப் பதியில் மேவும் தலைவராய், அந்தணர்கள் போற்ற வீற்றிருப்பவர்.

458. புற்றின் நாகமும் பூளையும் வன்னியும்
கற்றை வார்சடை வைத்தவர் காழியுள்
பொற்றொடி யோடுஇருந் தவர்பொற் கழல்
உற்ற போதுடன் ஏத்தி உணருமே.

தெளிவுரை : பாம்பு, பூக்கள், வன்னிப் பத்திரம் ஆகியவற்றை நீண்டு விளங்கும் சடை முடியில் வைத்த சிவபெருமான், காழியில் உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவர். அப் பெருமானுடைய பொன் போன்ற சிறப்புடைய கழலை, அதற்கு உரிய மலர்களால் தூவிப் போற்றி வழிபட்டும், தியானம் செய்தும் நல்லருள் பாங்கினை உணர்ந்து கொள்வீராக.

459. நலியும் குற்றமும் நம்முடல் நோய்வினை
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
அலைகொள் செஞ்சடை யார்அடி போற்றுமே.

தெளிவுரை : மனத்தின்வழி உண்டாகும் குற்றமும், உடலின்கண் நேரும் பிணியும், நம்மை வருத்தாது விலக வேண்டுமாயின், வேள்வி புரிந்து துன்பத்தை நீக்கவல்ல அந்தணர்கள் விளங்கும், காழியில் வீற்றிருக்கும் கங்கை தரித்த செஞ்சடை உடைய சிவபெருமான் திருவடியைப் போற்றுக.

460. பெண்ணொர் கூறினர் பேயுடன் ஆடுவர்
பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
அண்ண லாயஅடிகள் சரிதையே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; பேய்க் கணங்கள் சூழ நின்று ஆடுபவர்; பண்ணுடன் பொருந்திய பாடல்களைப் பாடும் திருவேடத்தைக் கொண்டவர்; மூன்று கண்களை உடையவர். இவை யாவும் காழியில் வீற்றிருக்கும் அண்ணலாகிய அப்பெருமானின் புகழ் விளங்கும் தன்மையதாகும்.

461. பற்று மானும்மழுவும் அழகுற
முற்றும் ஊர்திரிந்து பலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுள்
பெற்றம் ஏறது உகந்தார் பெருமையே.

தெளிவுரை : திருக்கரத்தில் பற்றி மேவும் மானும் மழுவும் அழகுற விளங்க, ஊர்தொறும் திரிந்து பலி ஏற்க விழையும் ஈசன், வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்த மறையவர்கள் விளங்குகின்ற காழிப்பதியில், இடப வாகனத்தில் உகந்து அமர்ந்திருப்பவர். இது அப்பெருமானுக்குரிய பெருமை ஆகும்.

462. எடுத்த வல்லரக் கன்முடி தோளிற
அடர்த்து உகந்தருள் செய்தவர் காழியுள்
கொடித்த யங்குநற் கோயிலுள் இன்புற
இடத்து மாதொடு தாமும் இருப்பரே.

தெளிவுரை : கயிலை மலையைப் பெயர்த் தெடுத்த இராவணனுடைய முடியும் தோளும் நெரியுமாறு அடர்த்தி அருளும் செய்த சிவபெருமான், வண்ணக் கொடிகளும் தோரணங்களும் விளங்குகின்ற காழியின் திருக்கோயிலில் உமாதேவியை உடனாகக் கொண்டு இன்புற வீற்றிருப்பவர் ஆவார்.

463.காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
மாலும் நான்முகன் றானும் வனப்புற
ஒல மிட்டுமுன் தேடி உணர்கிலாச்
சீலம் கொண்டவன் ஊர்திகழ் காழியே.

தெளிவுரை : காலனின் உயிரை வீழ்த்திய ஈசனின் திருவடியைத் திருமாலும் நான்முகனும் வனப்புறும் தோற்றத்தினராய்த் தேடியும் காணாதவர் ஆயினர். அத்தகைய சிறப்புடைய சிவபெருமான் வீற்றிருக்கும் ஊரானது, பெருமையுடன் திகழும் காழியாகும்.

464. உருவ நீத்தவர் தாமும் உறுதுவர்
தருவல் ஆடையி னாரும் தகவிலர்
கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
ஒருவன் சேவடி யேஅடைந்து உய்ம்மினே.

தெளிவுரை : ஆடைகளைப் புறக்கணித்தும் சேர்த்தும் விளங்கும் சமணரும் சாக்கியரும் தகைமையற்றவர்கள். உமக்கு நல்ல செயல் கை கூடுதல் வேண்டுமானால், காழியுள் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடியை அடைந்து, வழிபட்டு உய்தி பெறுமின்.

465. கானல் வந்துல வும்கடற் காழியுள்
ஈனம்இல்லி இணையடி ஏத்திடும்
ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
மானம் ஆக்கும் மகிழ்ந்துரை செய்யவே.

தெளிவுரை : கடற்கரைச் சோலையில் குளிர்க் காற்று வீசும் காழியுள், எத்தன்மையான குறையும் இல்லாத பரம் பொருளாகிய ஈசன் வீற்றிருக்க, அப்பெருமானின் திருவடியை ஏத்திடும் ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகமானது பெருமை உடையதாகும். இதனை மகிழ்ந்து உரைப்பீராக.

திருச்சிற்றம்பலம்

302. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

466. வெந்த குங்கி லியப்புகை விம்மவே
கந்த நின்றுல வும்கழிப் பாலையார்
அந்த மும்அள வும்அறி யாததோர்
சந்த மாலவர் மேவிய சாந்தமே.

தெளிவுரை :  குங்கிலியப் புகையின் நறுமணம் பெருகும் கழிப்பாலையில் வீற்றிருக்கும் ஈசன், அந்தம் இல்லாதவர்; அளவிட்டுச் சொல்ல முடியாத பண்பினர்; அப் பெருமானின் சிறப்பு அவர் மேவும் சாந்தமேயாகும்.

467. வான் இலங்க விளங்கும் இளம்பிறை
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும்கழிப் பாலையார்
மான லம்மட நோக்குடை யாளொடே

தெளிவுரை : வானத்தில் விளங்குகின்ற இளம் பிறைச் சந்திரனை மாலையாக விரும்பிய, என்னுடைய தலைவனாகிய சிவபெருமான், கடற்கரைச் சோலை திகழ மேவும் கழிப்பாலையில் வீற்றிருப்பவர். அப்பெருமான், மன்னுயிர்களுக்குச் சிறப்பான நலங்களை ஆற்றும் நோக்குடைய உமாதேவியாரோடு எஞ்ஞான்றும் பொருந்தி இருப்பவர்.

468. கொடிகொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர்
பொடிகொள் மார்பினற் பூண்டதொர் ஆமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்
அடிகள் செய்வன ஆர்ககுஅறி வொண்ணுமே.

தெளிவுரை : ஈசன், இடபத்தைப் பொறித்த கொடிய உடையவர்; கூற்றுவனை உதைத்தவர்; திருநீறு அணிந்து மார்பில் ஆமையின் ஓட்டினை ஆபரணமாகப் பூண்டு விளங்குபவர்; அப்பெருமான், மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப் பாலையில் வீற்றிருக்கும் அடிகள் ஆவார். அவர் புரியும் திருவிளையாடலை யார்தான் அறிந்து கொள்ள முடியும்.

469. பண்ணலம்பட வண்டறை கொன்றையின்
தண்ணலங்கல் உகந்த தலைவனார்
கண்ண லங்கவ ருங்கழிப் பாலையுள்
அண்ணல் எம்கடவுள் அவன் அல்லனே.

தெளிவுரை : பண்ணின் நலத்தினோடு வண்டு இசைபாடும் கொன்றை மலரின் குளிர்ச்சி மிக்க மாலையை உகந்து அணிந்த தலைவனாகிய ஈசன், கண்களுக்கு இனிய நலத்தை வழங்கும் எழில் மிகுந்த கழிப்பாலையில் வீற்றிருக்கின்ற அண்ணல் ஆவார். அவர் எமது கடவுள் அல்லவா !

470. ஏரினாருல கத்திமை யேரொடும்
பாரி னாருட னேபர வப்படும்
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெம்
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.

தெளிவுரை : சிறப்போடு திகழும் விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள், இப்பூவுலகத்தில் விளங்கும் மாந்தர்களுடன் சேர்ந்து பரவிப் போற்றப்படுகின்ற, மேகம் தவழும் பொழில் சூழும் கழிப்பாலையில் விளங்கும் ஈசனின் செம்மை மிகும் திருக்கழலைத் தியானம் செய்வீராக.

471. துள்ளு மான்மறி அங்கையில் ஏந்தியூர்
கொள்வ னாரிடு வெண்தலை யிற்பலி
கள்வ னார்உறை யும்கழிப் பாலையை
உள்ளு வார்வினை யாயின ஓயுமே.

தெளிவுரை : துள்ளுகின்ற இளமையான மானை, அழகிய கையில் ஏந்தி, ஊர்தொறும் திரிந்து, பிரம கபாலத்தில் பிச்சை ஏற்கும் ஈசன், அன்பர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் கள்வராய் உறையும் கழிப்பாலையை, நினைத்து ஏத்துக. வினை யாவும் விலகும்.

472. மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
எண்ணி நீர்இனிது ஏத்துமின் பாகமும்
பெண்ணி னார்பிறை நெற்றியொடு உற்றமுக்
கண்ணி னார்உறை யும்கழிப் பாலையே.

தெளிவுரை : இப் பூவுலகத்தின் மேவும் செல்வச் செழிப்பும், வானுலகத்தின்கண் மறுமையில் கொள்ளும் செல்வமும் எண்ணி, உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டு, பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய, மூன்று கண்ணுடைய ஈசன், உறையும் கழிப்பாலையை, ஏத்தி நீவிர் வணங்குவீராக.

473. இலங்கை மன்னனை ஈரைந்து இரட்டிதோள்
துலங்க ஊன்றிய தூமழு வாளினார்
கலங்கள் வந்துல வும்கழிப் பாலையை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

தெளிவுரை : இராவணனுடைய இருபது தோள்களும் நன்கு அழுந்துமாறு ஊன்றிய, தூய்மையான மழுப்படையை ஈசன், கப்பல்கள் வந்து உலவும் கடல் துறையில் மேவும் கழிப்பாலை என்னும் தலத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான் விளங்கும் இத் தலத்தை வலம் வருபவர்களின் வினை யாவும் விலகிச் செல்லும்.

474. ஆட்சி யால்அல ராணொடு மாலுமாய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்
காட்சி யால்அறி யான்கழிப் பாலையை
மாட்சி யால்தொழு வார்வினை மாயுமே.

தெளிவுரை : படைத்தல் தொழிலும் காத்தல் தொழிலும் கொண்டு விளங்கும் உரிமை பூண்டவர்களாகிய பிரமனும் திருமாலும், தற்பெருமை கொண்ட தாழ்மையால், முறையே ஈசனின் திருமுடியையும். திருவடியையும் காண முடியாது தளர்ந்தனர். அப்பெருமான் வீற்றிருக்கும் கழிப்பாலையை மனம் ஒன்றுமாறு ஏத்தி வழிபடுவீராக. அது வினையை மாயச் செய்யும்.

475. செய்ய நுண்துவர் ஆடையி னாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
கையர் கேண்மை யெனோ கழிப் பாலைஎம்
ஐயன் சேவடி யேஅடைந்து உய்ம்மினே.

தெளிவுரை : சிவந்த துவராடையுடைய சாக்கியரும், மற்றும் சமணரும் சிறப்பினை நல்காத நெறியில் இருக்க நீவிர் கழிப்பாலையில் வீற்றிருக்கின்ற எம் தலைவனாகிய ஈசனின் திருவடியை அடைந்து, உய்தி பெறுவீராக.

476. அந்தண் காழி அருமறை ஞானசம்
பந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்
சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுலகு ஆடல் முறைமையே.

தெளிவுரை : குளிர்ச்சி மிக்க அழகிய காழியில் மேவும் சிறப்பின் மிக்க மறை வல்ல ஞானசம்பந்தன், நீர்வளம் சூழ்ந்த கழிப்பாலையைச் சிந்தையால் கொண்டு சொன்ன திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வானுலகில் முதன்மையாய் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

303. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

477. அந்த மாய்உலகு ஆதியும் ஆயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்திரு வாரூர்எம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

தெளிவுரை : ஈசன், உலகின்கண் தோற்றமும் பிரளய காலத்தின் அந்தமாகவும் படைக்கப் பெறும் காலத்தில் ஆதியாகவும் விளங்குபவர். அப்பெருமான், திருவெண்ணீறு பூசிய வேதநாயகனாய், என் சிந்தையில் புகுந்து விளங்குபவர். அவர், திருவாரூரில் வீற்றிருக்கும் என் தந்தை அவர் என்னை ஏற்றுக் கொள் வாரோ !

478. கருத்தனே கருதார்புர மூன்றுஎய்த
ஒருத்த னேஉமை யாளொரு கூறனே
திருத்த னேதிரு வாரூர்எந் தீவண்ண
அருத்த என்எனை அஞ்சல் என்னாததே.

தெளிவுரை : ஈசன், எம் உள்ளத்தின் கருத்தாய் விளங்கும் பெருமான்; நின்னைச் கருதிப் போற்றாத முப்புர அசுரர்கள் எரிந்து சாம்பலாகுமாறு கணைதொடுத்தவர்; உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு திகழ்பவர்; தூயவராக மேவும் பரமன்; திருவாரூரில் வீற்றிருக்கும் தீவண்ணர்; எப்பொருட்கும் விளக்க ரூபமாக மேவும் பெரும் பொருள்; என்னை அஞ்சற்க என்று மொழிவீராக.

479. மறையவன் மாமுனி வன்மரு வார்புரம்
இறையின் மாத்திரை யில்எரி யூட்டினான்
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்எம்
இறைவன் தான்எனை யேன்று கொளுங்கொலோ.

தெளிவுரை : ஈசன், வேதமாகியவர்; பெரும் தவவேந்தரானவர்; பகை கொண்ட முப்புர அசுரர்கள் நொடிப் பொழுதில் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; சிறகுகளை உடை வண்டு ஒலிக்கும் பொழில் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவன். அவர் என்னை அடியவனாக ஏற்றுக் கொள்வாரோ !

480. பல்லில் ஓடுகை யேந்திடப் பலிதிரிந்து
எல்லி வந்திடு காட்டெரி  யாடுவான்
செல்வ மல்கிய தென்திரு வாரூரான்
அல்லல் தீர்த்துஎனை அஞ்சல் எனுங்கொலோ.

தெளிவுரை : பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிந்து, இரவில் சுடுகாட்டில் நடம் புரியும் ஈசன், செல்வச் செழிப்பு ஓங்கும் சிறப்புடைய திருவாரூரான். அப்பெருமான், என் துயர் தீர்த்து அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாரோ !

481. குருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி
விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு வாரூரான்
வருந்தும் போது எனை வாடல்எ னும்கொலோ.

தெளிவுரை : குருந்த மரத்தில் ஏறிப் படர்ந்து, மாதவியும், விரிந்து மலர்ந்து நறுமணம் கமழும் கொன்றை மரங்களும் திகழ, மாட மாளிகை சூழப் பொலியும் திருவாரூரில் மேவும் ஈசன், வருத்தம் கொண்டு நலிவுற்று நான் இருக்கும் போது என்னை வருத்தாதே என்று உரைத்து அருள் புரிவாரோ !

482. வார்கொள் மென்முலை யாளொரு பாகமா
ஊர்களார் இடு பிச்சைகொள் உத்தமன்
சீர்கொள் மாடங்கள் சூழ்திரு வாரூரான்
ஆர்கணா எனை அஞ்சல் எனாததே.

தெளிவுரை : மார்பில் கச்சு அணிந்து விளங்குகின்ற உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு ஊரில் உள்ளவர்கள் இடுகின்ற பிச்சையைக் கொள்ளும் உத்தமன், சீர் மிகுந்து மேவும் மாடங்கள் சூழும் திருவாரூரான் எனப்பெறும் ஈசன். அப்பெருமான் என்னை அஞ்சாதே எனச் சொல்லாதது என்கொல் !

483. வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்கும் தண்புனல் சூழ்திரு வாரூரான்
இளைக்கும் போதுஎனை ஏன்று கொளுங்கொலோ.

தெளிவுரை : வளையல் அணிந்து கைகளை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் ஈசன், தன்னை எதிர்த்து வந்து யானையானது கலங்குமாறு அடர்த்து, அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர். அப் பரமன் குளிர்ந்த புனல் சூழ்ந்து மேவும் திருவாரூரான். அவர், இளைத்து வருந்தும் காலத்தில் என்னை ஏற்று அருள் புரிவாரோ !

484. இலங்கை மன்னன் இருபது தோளிறக்
கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன்
வலங்கொள் மாமதில் சூழ்திரு வாரூரான்
அலங்கல் தந்துஎனை அஞ்சல் எனுங்கொலோ.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய இருபது தோளும் நலியுமாறு திருப்பாத விரலால் ஊன்றியவர் ஈசன். அப் பெருமான் வலிமை உடைய சிறப்பான மதில் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருக்கும் பரமன். அவர் எனக்குப் பெருமை சேர்க்கும் மாலை கொண்டு அருளிச் செய்தும், வருந்தும் காலத்தில் அஞ்சாதே என்று அபயம் அளித்தும் காப்பாரோ !

485. நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படிய வன்பனி மாமதிச் சென்னியான்
செடிகள் நீக்கிய தென்திரு வாரூர் எம்
அடிகள் தான்எனை அஞ்சல் எனுங்கொலோ.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காண முடியாத தன்மையராய்ச் சந்திரனைச் சடைமுடியின் மீது தரித்த ஈசன், மன்னுயிரின் பாவங்களை நீக்கிப் பெருமை கொள்ளும் திருவாரூரில் வீற்றிருக்கும் அடிகள் ஆவார். அவர் என்னை அஞ்சாதே என்று அருள் புரிவாரோ !

486. மாசு மெய்யினர் வண்துவர் ஆடைகொள்
காசை போர்க்கும் கலதிகள் சொற்கொளேல்
தேச மல்கிய தென்திரு வாரூர்எம்
ஈசன் தான்எனை யேன்று கொளுங்கொலோ.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் பயனற்ற சொற்களைக் கொள்ளாது, அருளொளி திகழ மேவும் பெருமை உடைய திருவாரூரில் வீற்றிருக்கும் ஈசன், என்னைத் தாங்கி நின்று அருள் புரிவாரோ !

487. வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
சென்னிவைத்த பிரான்திரு வாரூரை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே.

தெளிவுரை : வன்னி, கொன்றை, சந்திரன், வில்வம் ஆகியவற்றைச் சடை முடியில் திகழச் சூடிய பெருமான் விளங்கும் திருவாரூரைப் பொலிவுடன் திகழும், காழிப்பதியில் மேவும் ஞானசம்பந்தன் வாய் மலர்ந்து சொன்ன இத்திருப்பாடல்களை ஓத வல்லவர்களுக்கு, பாவமானது தாமே விலகிச் செல்லும்.

திருச்சிற்றம்பலம்

304. திருக்கருகாவூர் (அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

488. முத்து இலங்குமுறு வல்உமை அஞ்சவே
மத்த யானைமறு கவ்உரி வாங்கியக்
கத்தை போர்த்த கடவுள்கரு காவூர்எம்
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே.

தெளிவுரை : முத்துப் போன்ற முறுவல் கொண்டு மேவும் உமாதேவி காணுமாறு, யானையின் தோலை உரித்துப் போர்த்திய கடவுள் கருகாவூரில் வீற்றிருக்கும் அத்தன். அவர் வண்ணம் நெருப்பின் நிறம் கொண்டதாகும்.

489.விமுத வல்லசடை யான்வினை உள்குவார்க்கு
அமுத நீழல்அக லாததோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.

தெளிவுரை : கங்கை தரித்த சடை முடி உடைய சிவ பெருமானுக்குத் திருத்தொண்டு மேவும் அடியவர்களே ! நும்பணியானது. அமுதத்தின மாண்புடையதாகி நீங்காத செல்வமாக விளங்கும் முல்லை கமழ்கின்ற கருகாவூரில் வீற்றிருக்கும் ஈசன், அமுதம் போன்று இனிமை தருபவர். அவருடைய வண்ணம் அழல் போன்ற செம்மை உடையதாகும்.

490. பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
குழகர் என்றுகுழை யாஅழை யாவரும்
கழல்கொள் பாடல் உடையார் கருகாவூர்எம்
அழகர் வண்ணம் அழலும்அழல் வண்ணமே.

தெளிவுரை : பழகுவதற்குரிய சிறப்புடைய சிறுத் தொண்டரின் இசைக்குக் குழையவும், அதில் உள்ளம் பொருந்தித் திருக்கழலைப் போற்றி வாழ்த்த மகிழவும், உடைய கருகாவூரில் விளங்கும் ஈசன், செவ்வண்ணம் உடையவர்.

491. பொடிமெய் பூசிமலர் கொய்து புணர்ந்துடன்
செடியர் அல்லாஉள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள்முல்லை கமழும் கருகாவூர்எம்
அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே.

தெளிவுரை : திருவெண்ணீற்றை மெய்யில் பூசி, மலர் கொண்டு தூவிப் போற்றி, அடியவர்கள் வழிபட்டு, உள்ளத்தின் குற்றங்களைப் போக்கிக் கொள்ளுமாறு நல்கிய செல்வத்தராகிய சிவபெருமான், மணம் கொள் முல்லை கமழும் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் அடிகள் ஆவார். அவருடைய வண்ணம் அழல் போன்ற செவ் வண்ணம் ஆகும்.

492. மையல் இன்றிமலர் கொய்து வணங்கிடச்
செய்ய உள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லை கமழும் கருகாவூர்எம்
ஐயம் வண்ணம் அழலும்அழல் வண்ணமே.

தெளிவுரை : மயக்க உணர்வின்றி மலர் கொய்து போற்றி வணங்கச் செய்யும் செம்மை உள்ளத்தை அடியவர்களுக்கு நனி நல்கிய செல்வத்தராகிய சிவபெருமான், தாழையும் முல்லையும் கமழும் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் தலைவர் ஆவார். அவருடைய வண்ணம் நெருப்புப் போன்ற செம்மை உடையது.

493. மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட
ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர்
காய்சி னத்த விடையார் கருகாவூர்எம்
ஈசன் வண்ணம் எரியும்எரி வண்ணமே.

தெளிவுரை : மாசில்லாத தொண்டர்கள் மலர் தூவி வணங்கிட, அவர்தம் விருப்பம் மலர, அருள் நல்கும் செல்வத்தராகிய சிவபெருமான், இடப வாகனத்தை உடையவராய்க் கருகாவூரில் வீற்றிருக்கும் எம்பரமன் ஆவார். அவரது வண்ணம் எரியும் நெருப்புப் போன்று செந்நிறமானது.

494. வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல் கமழும் கருகாவூர்எம்
எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே.

தெளிவுரை : திருநீறு பூசிய வேதியனாய், அடியவர்தம் சிந்தையில் விளங்கி நின்று அருள் புரியும் செல்வத்தராகிய சிவபெருமான், வாசனை கமழும் முல்லை விளங்கும் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் தந்தை. அவரது வண்ணமானது, எரியும் நெருப்புப் போன்ற செந்நிறம் ஆகும்.

495. பண்ணி னேர்மொழி யாளையோர் பாகனார்
மண்ணு கோலம் உடை யம்மல ரானொடும்
கண்ணன் நேடஅரி யார்கரு காவூர்எம்
அண்ணல் வண்ணம்அழலும் அழல்வண்ணமே.

தெளிவுரை : பண்ணின் மொழியன்ன உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்கும் ஈசன், பிரமனும் திருமாலும் காணுதற்கு அரியவராய்க் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் அண்ணல் ஆவார். அவரது வண்ணமானது நெருப்புப் போன்ற செந்நிறம் ஆகும்.

496. போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்தம் என்று தெளிவீர் தெளி யோன்மின்
கார்ததண் முல்லை கமழும் கருகாவூர்எம்
ஆத்தர் வண்ணம் அழலும்அழல் வண்ணமே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் கூறும் மொழிகளை உயர்வானதெனக் கொள்ள வேண்டாம். மேகம் சூழ, முல்லை கமழும் கருகாவூரில் வீற்றிருக்கும் எம் விருப்பத்துக்குரிய ஈசனின் வண்ணம் நெருப்புப் போன்ற செந்நிறம் ஆகும். அப்பெருமானை ஏத்துமின் !

497. கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர்
நிலவு பாடல் உடையான்றன் நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லார்அவர் தொல்வினை தீருமே.

தெளிவுரை : மயில், தோலை விரித்து ஆடி விளங்குகின்ற கருகாவூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசன், புகழ்ப் பாக்கள் கொண்டு போற்றி வழிபடப் பெற்றவர். அப் பெருமானுடைய அருளொளி திகழும் திருக்கழலைக் கனிந்த தன்மையால் அன்பு செலுத்திக் குலவும் ஞானசம்பந்தன் ஓதிய இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்களின் தொல்வினை தீரும்.

திருச்சிற்றம்பலம்

305. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

498. காட்டு மாவது உரித்துஉரி போர்த்துடல்
நாட்ட மூன்றுடை யாய்உரை செய்வனான்
வேட்டு வேள்விசெய்யா அமண் கையரை
ஓட்டி வாது செயத்திரு உள்ளமே.

தெளிவுரை : காட்டில் உள்ள யானையின் தோலை உரித்துப் போர்த்திய ஈசனே ! மூன்று கண்ணுடைய பெருமானே ! நல்வேள்வியைப் புரியாதவர்களாகிய அமணர்களுடன் நான் வாதம் செய்வதற்குத் திருவுளக்குறிப்பு யாதுகொல் ! உரை செய்வீராக.

499. மத்த யானையின் ஈருரி மூடிய
அத்த னேஅணி ஆலவா யாய்பணி
பொய்த்த வன்தவ வேடத்த ராம்சமண்
சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.

தெளிவுரை : மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திய அத்தனே ! அழகு மிக்க ஆலவாயில் விளங்கும் நாதனே ! பொய்த்தவ வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்வதற்குத் திருவுள்ளம் யாதோ ! உரைப்பீராக.

500. மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ண கத்திரு ஆலவா யாய்அருள்
பெண்ண கத்தொழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.

தெளிவுரை : இப் பூலகத்திலும் விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கி மேவும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற ஈசனே ! சாக்கியரும் சமணரும் வாதம் புரியும் தன்மையின் அவர்தம் கல்வி நிலையைத் தகுதியற்றதாகும் தன்மையில் அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது ! உரைத்தருள்வீராக.

501. ஓதி யோத்தறி யாவமண் ஆதரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே.
ஆதியேதிரு ஆலவாய் அண்ணலே
நீதி யாக நினைந்தருள் செய்திடே.

தெளிவுரை : வேதங்களை ஓதி உணரும் ஞானம் அற்றவராகிய அமணர்களை வாதம் செய்து வெற்றி கொள்ளத் திருவுள்ளம் யாதுகொல் ! ஆதி மூர்த்தியாய்த் திருஆலவாயில் வீற்றிருக்கும் அண்ணலே ! நடுநிலையில் இருந்து அருள் செய்வீராக.

502. வைய மார்புக ழாய்அடி யார்தொழும்
செய்கை யார்திரு ஆலவா யாய்செப்பாய்
கையில் உண்டுஉழ லும் அமண் கையரைப்
பைய வாது செயத்திரு வுள்ளமே.

தெளிவுரை : உலகம் பொருந்த மேவும் புகழுக்கு உரிய நாதனே ! அடியவர்கள் தொழுது போற்றும் திருஆலவாயில் வீற்றிருக்கும் ஈசனே ! அமணர்பால் சென்று நான் வாதம் புரிவதற்குத் திருஉள்ளம் யாது ! உரைத்தருள்வீராக.

503. நாறு சேர்வயல் தண்டலை மிண்டிய
தேற லார்திரு ஆலவா யாய்செப்பாய்
வீறி லாத்தவ மோட்டுஅமண் வேடரைச்
சீறி வாதுசெ யத்திரு உள்ளமே.

தெளிவுரை : நாற்றுகள் கொண்டு வயல்களில் பயிர் வளம் பெருகவும், தேன் மணம் கமழும் மலர்கள் திகழும் சோலைகள் விளங்கவும் மேவும், திருஆலவாய் என்னும் திருக்கோயிலில் வீற்றிருக்கும் நாதனே ! பெருமை தரும் தவத்தினை நீத்தவராய், வன்மை உடையவராய், உடலை வருத்திக் கொண்டு பொய்த் தன்மையாக வேடம் கொண்டுள்ள அமணர்பால் சென்று நான் வாதம் செய்ய, திருவுள்ளம் யாதுகொல். உரைத்தருள்வீராக.

504. பண்டு அடித்தவத் தார்பயில் வாற்றொழும்
தொண்ட ருக்குஎளி யாய்திரு ஆலவாய்
அண்ட னேஅமண் கையரை வாதினில்
செண்டு அடித்துள றத்திரு வுள்ளமே.

தெளிவுரை : பேரன்பு பூண்டு திருத்தொண்டு மேவும் பழைய அடியவர்களுக்கு எளியவராய் விளங்கும் திருவாலவாய் அண்ணலே ! அண்டப் பொருளாக விளக்கும் பெருமை உடையவரே ! சமணர்களை வாதிட்டு வெற்றி கொண்டு ஆரவாரித்து விளங்குவதற்குத் தேவரீரின் திருவுள்ளம் யாது ? உரைத்தருள் வீராக.

505. அரக்கன் தான்கிரி யேற்றவன் தன்முடிச்
செருக்கி னைத்தவிர்த் தாய்திரு ஆலவாய்
பரக்கு மாண்புடை யாய்அமண் பாவரைக்
கரக்க வாதுசெ யத்திரு உள்ளமே.

தெளிவுரை : கயிலை மலையைத் தன் முடியில் ஏற்றித் தாங்கிய இராவணனின் செருக்கினை அடக்கிய நாதனே ! திருஆலவாயில் பெருமையுடன் அருள் விளக்கம் விரிந்து மேவ வீற்றிருக்கும் ஈசனே ! சமணர் பால் வாதம் புரிந்து அவர்களை அடக்குவதற்குத் திருவுள்ளம் யாது ! உரைத்தருள்வீராக.

506. மாலும் நான்முக னும்அறி யாநெறி
ஆலவா யுறையும் அண்ண லேபணி
மேலை வீடுஉண ராவெற்றரையரைச்
சால வாதுசெயத் திரு உள்ளமே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் அறியாத நெறியினராய் மேவிய பரமனே ! ஆலவாயில் உறையும் அண்ணலே ! முத்தியின் சிறப்பினை உணராது வெற்றுச் சொல் பேசும் சமணர்பால் சென்று வாதம் செய்வதற்குத் தேவரீரின் திருஉள்ளம் யாதுகொல் ! பணித்து அருள்வீராக.

507. கழிக்க ரைப்படும் மீன்கவர் வார்அமண்
அழிப்ப ரைஅழிக் கத்திடு உள்ளவே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய்
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.

தெளிவுரை : கழிகளில் உள்ள மீன்களைக் கவர்ந்து அழிக்கும் தன்மையில், அமணர்களை வாதம் புரிந்து வெற்றி கொள்வதற்குத் திருவுள்ளம் யாதுகொல் ! நீர் வளம் பெருகும் ஆலவாயில், மழுப்படையுடையவராய் வீற்றிருந்து, காத்தருள் புரியும் அழகனே ! உரைத்தருள்வீராக.

508. செந்து எனாமுர லுந்திரு ஆலவாய்
மைந்தனே யென்று வல்அமண் ஆசுஅறச்
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே.

தெளிவுரை : செந்து என்னும் இசை எழுப்பும் வண்டுகள். திகழும் சோலைகளை உடைய ஆலவாயின் மைந்தனே ! என மொழிதல் செய்து, சமணரால் பரவிய குற்றங்கள் நீங்குமாறு சந்தம் பெருகும் தமிழ்ப் பாடல்களால் வாதம் புரிய வேண்டிவினவிய மெய்ஞ்ஞானசம்பந்தனின் இத்திருப்பதிகத்தை ஓதுவீராக. அது பழியிலிருந்து விடுவிக்கும்.

திருச்சிற்றம்பலம்

306. திருமழபாடி (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

509. அங்கை யார்அழ லன்னழ கார்சடைக்
கங்கை யான்கடவுள் இடம் மேவிய
மங்கை யான்உறை யும்மழ பாடியைத்
தங்கை யால்தொழு வார்தக வாளரே.

தெளிவுரை : ஈசன், அழகிய கையில் நெருப்பினைக் கொண்டு விளங்குபவர். அழகிய செஞ்சடையில் கங்கையைத் தரித்தவர். இடப் பாகத்தில் உமா தேவியைப் பாகமாகக் கொண்ட அப் பரமன் உறையும் மழபாடியைக் கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கள் நல்ல தகவுடையவர்கள், ஆவார்கள்.

510. விதியு மாம்விளை வாம்ஒளி யார்ந்ததோர்
கதியு மாம்கசி வாம்வசி யாற்றமா
மதியு மாம்வலி யாமழ பாடியுள்
நதியந் தோய்சடை நாதநற் பாதமே.

தெளிவுரை : மழபாடியில் கங்கை தோய்ந்த சடை முடியுடைய ஈசனின் முத்தி வழங்கும் நற்பாதமானது, மன்னுயிர்களுக்கு வினைவழி மேவும் நல்விதியாக்கும்; அதனை விளைவித்து நுகரச் செய்யும் ஒளிர்ந்து மேவும் நற்கதியாகிய முத்திப் பேறு ஆக்கும்; மனத்தினைக் கசிய வைத்துத் தகுந்தவாறு வயப்படுத்தும்; ஞானம் வழங்கும்; எல்லாவற்றையும் நிகழ்த்துகின்ற பேராற்றல் தரும். அத்தகைய திருக்கழலை ஏத்துவீராக.

511. முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
குழுவி னான்குல வுங்கையிலேந்திய
மழுவி னான்உறை யும்மழ பாடியைத்
தொழுமின் உம்துயர் ஆனவை தீரவே.

தெளிவுரை : ஈசன், முழவு என்னும் வாத்தியம் கொண்டுள்ளவர்; சுடுகாட்டில் உறையும் பேய்க் கணத்துடன் குலவி நடம்புரிபவர்; அழகிய கையில் மழுப் படையை உடையவர். அப் பெருமான், வீற்றிருக்கின்ற மழபாடியைத் தொழுது ஏத்துமின். அது எல்லாத் துன்பங்களையும் நீக்கிக் காக்கும்.

512. கலையி  னான்மறை யான்கதி யாகிய
மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
தலையி னால்வணங் கத்தவம் ஆகுமே.

தெளிவுரை : ஈசன், ஆய கலைகள் அறுபத்து நான்கு ஆகியவர்; நான்கு மறைகள் ஆகியவர்; நற்கதி நல்கும் கயிலை மலையினை உடையவர்; முப்புர அசுரர்களையும் அவர்களுடைய மதில்களையும் எரி செய்யுமாறு ஏவிய மேருவை வில்லாகக் உடையவர். அப் பெருமான், வீற்றிருக்கும் திருமழபாடியை முதன்மையாகக் கருதி வணங்கத் தவப் பயன் கை கூடும்.

513. நல்வி øன்ப்பய னான்மறை யின்பொருள்
கல்வி யாயக ருத்தனு ருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி யேத்தும் அதுபுக ழாகுமே.

தெளிவுரை : ஈசன், நல்வினையின் பயனாகியவர்; மறையின் பொருளாகியவர்; கல்வியாகவும் அதன் கருத்தாகவும் விளங்குபவர்; உருத்திரனாகத் திகழ்பவர். அச் செல்வன் மேவிய திருமழபாடியைச் சார்ந்து ஏத்துமின். அது உமக்குப் புகழை அளிக்கும்.

514. நீடி னார்உல குக்குயிராய் நின்றான்
ஆடி னான்எரி கானிடை மாநடம்
பாடி னார்இசை மாமழ பாடியை
நாடி னார்க்கில்லை நல்குர வானவே.

தெளிவுரை : ஈசன், உலகுக்கு உயிராக விளங்கி இயக்குகின்ற செம்மையானது இவண் கட்டப் பெற்றது. இத்தன்மையின், ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே எனத் திருநாவுக்கரசர் அருளிச் செய்துமையும் காண்க. ஈசனை வணங்கி ஏத்துதல் வறுமைப் பிணியை நீக்கும் என அருளாணை வழங்கப் பெறுதலை நோக்குக. இது இம்மைக்குரிய பெரும் பயனை அளித்தலாயிற்று.

515. மின்னி னார்இடை யாளொரு பாகமாய்
மன்னி னான்உறை மாமழ பாடியைப்
பன்னி னார்இசை யாங்வழி பாடுசெய்
துன்னி னார்வினை யாயின ஓயுமே.

தெளிவுரை : மின்னலைப் போன்ற மெல்லிய இடை உடைய உமாதேவியும், பாகம் கொண்டு மேவும் ஈசன் உறையும் சிறப்பும் மிக்க மழபாடியை, இசைப் பாடலால ஏத்தி வழிபடும் அன்பர்களுக்குத் தீவினை யால் நேரும் துன்பம் இல்லை.

516. தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
தன்னில் அங்குஅ டர்த்தருள் செய்தவன்
மன்னி லங்கிய மாமழ பாடியை
உன்னில் அங்க உறுபிணி இல்லையே.

தெளிவுரை : இராவணனைச் செழுமையான கயிலை மலையினால் அடர்த்து அருள் செய்தவர் சிவபெருமான். அவர் சிறப்பாக வீற்றிருக்கின்ற பெருமைமிகு மழபாடியை நெஞ்சில் பதித்து ஏத்த, தேகத்தில் உறுகின்ற பிணி யாவும் விலகிப் போகும்.

517. திருவி னாய னும்செழுந் தாமரை
மருவி னானும் தொழத்தழல் மாண்பமர்
உருவி னான்உறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.

தெளிவுரை : திருமகளின் நாயகனாகிய திருமாலும், செழுமை மேவும் தாமரையில் மருவிய பிரமனும் தொழுது போற்றப் பெருந்தழல் ஆகிய மாண்புடைய வடிவத்தினராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் மழபாடியைப் பரவி ஏத்தும் அன்பர்கள், வினை நீங்கியவர் ஆவர்.

518. நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
வலிய சொல்லினும் மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திறம் உள்கவே
மெலியும் நம்முடன் மேல்வினை யானவே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் நலியும் சொற்களை வலியும் உரைத்தாலும் அவற்றைப் பொருளாக ஏற்காது, மழபாடியுள் கழல் ஒலிக்க நடம் புரியும் சிவபெருமானின் அருளிச் செயலை நினைந்து ஏத்துக. நம்மைப் பற்றிய வினை யாவும் நலிந்து அழியும்.

519. மந்தம் உந்து பொழில்மழ பாடியுள்
எந்தை சந்தம் இனிதுகந்த ஏத்துவான்
கந்தம் ஆர்கடற் காழியுள் ஞானசம்
பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.

தெளிவுரை : தென்றல் காற்று வீசும் பொழில் சூழ்ந்த மழபாடியுள் மேவும் எம் தந்தையாகிய ஈசனை, சந்தம் பொலியும் இசைப் பாடலால் ஏத்தும் காழியின் ஞான சம்பந்தன் உரைத்த தமிழ் மாலையையை ஓத வல்லவர்களுக்கும் பாவம் அணுகாது. இது துன்பம் அற்ற வாழ்க்கையைத் தரும் என உணர்த்துவதாயிற்று.

திருச்சிற்றம்பலம்

307. பொது நமச்சிவாய்த் திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்

520. காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

தெளிவுரை : நான்கு வேதங்களும் மெய்ப் பொருளாகத் திகழ்ந்து விளங்க, அதன்கண், சிறப்புடைய நாமமாகத் திகழ்வது நமசிவாய என்கிற ஈசனின் திருவைந்தெழுத்தாகும். இத்திருடைந்தெழுத்தை அன்பின் மேலிட்டு மனத்தில் பதித்தும், அதன்வழி, கசிந்து உருகிக் கண்ணீர் மல்கி ஓதியும் ஒழுக, நல்ல நெறியை உய்த்து அருளும் இத்தகைய சிறப்புடைய ஈசனின் திருநாமமாகிய ஐந்தெழுத்தினை ஓதுக.

521. நம்பு வார்அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாள்மலர் வார்மது ஒப்பது
செம்பொ னார்தில கம்உல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.

தெளிவுரை : உயர்ந்ததாக விளங்கும் செம்பொன்னின் திலகம் போன்று, எல்லா உலகமும் பிரதானமாக விளங்கி மேவுவது, ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய் என்னும் ஐந்தெழுத்தாகும். இத் திருநாமத்தை மிகுந்த விருப்பத்துடன் ஓதுபவர்களுக்கு, அது மணம் தரும் புதுமலரில் துளிர்க்கும் தேனின் சுவைக்கும் ஒப்பாகி இனிமை தரும்.

522. நெக்குள் ஆர்வம் மிகப்பெரு கிந்நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவர்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.

தெளிவுரை : ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தானது, உள்ளம் நெகிழ்ந்து உருகி ஓதப் பெறுவதாகும்; மற்றும் உருத்திராக்க மாலை கொண்டு மணிகளை உருட்டிச் செபித்து மொழியப் பெறுதலும், கையில் உள்ள விரண் கோடுகைளக் கொண்டு எண்ணி மொழியப் பெறுதலும் உடையது. இத்தகைய மாண்பில் திருவைந்தெழுத்தினை ஓதுபவர்கள், தேவர்களாகும் தகுதியைப் பெற்றுவிளங்குவார்கள்.

523. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந்து ஓதவல் லார்தமை நண்ணினால்
நியமம் தான்நினை வார்க்குஇனி யான்நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.

தெளிவுரை : நெற்றியில் கண்ணுடைய ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திவைந்தெழுத்தை நியமத்தோடு நினைத்து ஏத்த வல்லவர்களுக்கு அப்பெருமான் இனிமையானவர். அத்தகைய செம்மை உடைய திருவைந்தெழுத்தினை ஓதும் அன்பர்கள் பால் நெருங்கி மேவும் அடியவர்களிடம், இயமனுடைய தூதுவர்களும் அஞ்சி, விலகிச் செல்வார்கள்.

524. கொல்வா ரேனும் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.

தெளிவுரை : பாவச் செயல்களைப் புரிபவராயினும், நற்குணங்களையும் பெறாதவராகவும், நன்மைகள் ஏதும் செய்யாதவராகவும் இருந்தாலும், நன்மை விளைவிக்கும் ஈசனின் நாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தை ஓதுவார்களானால், அவர்கள், எல்லாவிதமான தீமையிலிருந்தும் நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

525. மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செலவமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.

தெளிவுரை : மலை போன்ற பாவங்கள் செய்தவர்களும், பந்த பாசத்தால் பிணைக்கப் பெற்றவர்களும், ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தைப் பகர்வார்களாயின். அவர்களுடைய கொடிய வினைகள் யாவும் நீங்கப் பெற்றுச் செல்வமும் நனி பெறுவர்.

526. நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய் வாயின ராயில் உருத்திரர்
விரவி யேபுகு வித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.

தெளிவுரை : ஏழு நரகங்களில் புகுந்து ஆழும் தன்மையில் பாவங்களைப் புரிந்தாலும், வரந்தரும் ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தை உரை செய்வாராயின், அவர்கள் உருத்திரகணத்தாரொடு சேர்ந்திருக்கும் பேற்றினைப் பெருவார்கள்.

527. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரப் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணனைத் திருப்பாத விரலால் ஊன்றி அடர்த்தவன் ஈசன். அவ்அரக்கன் உய்தற்குக் காரணமாக இருந்தது, நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.

528. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரி தாகி அலந்தவர்
ஓது நாமம் நமச்சி வாயவே

தெளிவுரை : பிரமனும் திருமாலும், முறையே ஈசனின் திருமுடியையும், திருவடியையும் தேடிய பண்பினராகிக் காண முடியாத நிலையில் வருந்தி ஓதிய நாமமானது, நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தாகும்.

529. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட அமுது செய்
நஞ்சுஉள் கண்டன் நமச்சி வாயவே.

தெளிவுரை :  சமணர்களும் சாக்கியர்களும் கொடுமையான சொற்களைக் கூற, அவற்றை ஏற்காதவராயும் தேவர்கள் வேண்டுகோளுக்கும் அருள் செய்து கொடிய நஞ்சினை உட்கொண்டவரும் ஆகிய ஈசனின் திருநாமம். நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தாகும்.

530. நந்தி நாம நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந்து ஏத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.

தெளிவுரை : ஈசனின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு, ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஏத்த வல்லவர்கள் பந்தபாசத்தை அறுக்க வல்லவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

308. திருத்தண்டலை நீள்நெறி (அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோயில், தண்டலச்சேரி,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

531. விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே
சுரும்பும் தும்பியும் சூழ்சடை யார்க்கு இடம்
கரும்பும் செந்நெலும் காய்கமு கின்வளம்
நெருங்கும் தண்டலை நீணெறி காண்மினே.

தெளிவுரை : விரும்பப்படுகின்ற சந்திரனையும், கங்கையையும் திகழத் தரித்து, வண்டுகள் ரீங்காரம் செய்யும் மலர்களைச் சூடி மேவும் சடை முடியுடைய ஈசனுக்கு உரிய இடமாவது, கரும்பும், நெல்லும், பாக்கு மரங்களும் உடைய தண்டலையில் திகழும் நீள்நெறியாகும். இத்தலத்தை நாடி ஈசனை ஏத்துமின்.

532. இகழும் காலன் இதயத்தும் என்னுளும்
திகழும் சேவடி யான்திருந் தும்இடம்
புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
நிகழும் தண்டலை நீணெறி காண்மினே.

தெளிவுரை : மார்க்கண்டேயராகிய சிவபக்தரை மதியாது இகழ்ந்துரைத்த காலனைத் திருப்பாதத்தால் உதைத்து அடர்த்தவர், சிவபெருமான். அப்பெருமான் திருஞானசம்பந்தரின் இதயத் தாமரையில் திகழ்ந்து விளங்கி, யாவும் இயற்றுபவர். அவர் வீற்றிருக்கும் இடமாவது. திருமகளும் அந்தணர்களும் விளங்கும் தண்டலை நீள் நெறியாகும். ஆங்கும் அப் பெருமானைத் தரிசித்து ஏத்துமின்.

533. பரந்த நீலப் படரெரி வல்விடம்
கரந்த கண்டத்தி னான்கரு தும்இடம்
சுரந்த மேதி துறைபடிந்து ஓடையில்
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.

தெளிவுரை : விரிந்து பரந்த எரிபோன்ற கொடிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி, நீலகண்டராகிய ஈசன், கருதி வீற்றிருக்கும் இடமாவது, ஓடையில் எருமை படிந்து பாலைச் சொரிந்து விளங்கும் தண்டலையில் திகழும் நீள்நெறியாகும். ஆங்கு அப் பெருமானைத் தரிசித்து ஏத்துமின்.

534. தவந்த என்பும் தவளப் பொடியுமே
உவந்த மேனி னான்உறை யும்இடம்
சிவந்த பொன்னும் செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.

தெளிவுரை : எலும்பு மாலையும், திருவெண்ணீறும் உவந்து திருமேனியில் தரித்த சிவபெருமான் உறையும் இடமாவது, பொன்னும் முத்தும் பரவி மல்கும், தண்டலை நீள்நெறியாகும். ஆங்கு வீற்றிருக்கும் பெருமானைத் தரிசித்து ஏத்துமின்.

535. இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்க லில்அடர்த் தான்விரும் பும்இடம்
சலங்கொள் இப்பி தரளமும் சங்கமும்
நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.

தெளிவுரை : இராவணனின் இருபது தோளும் நெரியுமாறு கயிலை மலை கொண்டு அடர்த்த ஈசன் விரும்புகின்ற இடமாவது, நீரில் உள்ள சிப்பிகளும் முத்துக்களும் சங்குகளும் அலைகள் வாயிலாகக் கொண்டு நிலத்தின் செல்வமாகப் பெருக்கும் தண்டலை நீள் நெறியாகும். ஆங்கு வீற்றிருக்கும் பெருமானைக் கண்டு தரிசித்து ஏத்துமின்.

536. கருஅரு உந்தியி னான்முகன் கண்ணன்என்று
இருவ ரும்தெரி யாஒருவன் னிடம்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.

தெளிவுரை : படைத்தல் தொழிலைச் செய்யும் நான்முகன் திருமாலின் உந்திக்கமலத்தில் தோன்றியவர். அவரும், திருமாலும் தெரிந்து கொள்ள முடியாத ஒப்பற்றவராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, கோச்செங்கட் சோழ மன்னன் கட்டிய கோயிலாகிய தண்டலை நீள்நெறியாகும். அப்பெருமானைக் கண்டு தரிசித்து ஏத்துமின்.

537. கலவு சீவரத் தார்கையில் உண்பவர்
குலவ மாட்டாக் குழகன் உறைவிடம்
சுலவு மாமதி லும்சுதை மாடமும்
நிலவு தண்டலை நீணெறி காண்மினே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் அன்பு கொண்டு ஏத்துதல் செய்யாதவராய்ப் புறத்தே இருக்க, சிவபெருமான் வீற்றிருக்கும் இடமானது, மதில்களுடன் விளங்கும் மாடமாளிகைகள் கொண்டு விளங்கும் தண்டலையில் மேவும் நீள்நெறி என்னும் திருக்கோயிலாகும். ஆங்கும் அப்பெருமானைக் கண்டு தரிசித்து ஏத்துமின்.

538. நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
தோற்று மேன்மையர் தோணி புரத்துறை
சாற்று ஞானசம் பந்தன் தமிழ்வலார்
மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.

தெளிவுரை : திருநீறு அணியப் பெற்ற அடியவர்கள் வாழும் தண்டலையில் வீற்றிருக்கும் நீள்நெறி நாதனை, அத்தகைய திருநீற்றின் செம்மை திகழும் மேன்மையர் விளங்கும் தோணிபுரத்தில் உறையும் ஞானசம்பந்தன் நவின்ற இத்திருப்பதிகத்தால் ஏத்த வல்லவர்கள், நிலைத்த செல்வத்தை உடையவர்களாய்ப் பிறவிப் பிணியும் நீங்கப் பெற்றவராவார்கள்.

திருச்சிற்றம்பலம்

309. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

539. செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னேஅஞ்சல் என்றருள் செய்எனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வும்சுடர்
பைய வேசென்று பாண்டியற்கு ஆகவே.

தெளிவுரை : எமக்குப் பாதுகாவலாக விளங்கும் பெருமானே ! திருஆவலாயில் கோயில்கொள்ளும் தலைவனே ! அஞ்சாதே என்று அருள் செய்வீராக. பொய்த் தன்மை உடையவராகிய அமணர்கள் என்னை எரிக்குமாறு பற்ற வைத்த நெருப்பானது மெல்லச் சென்று பாண்டிய மன்னனுக்கு ஆகுக.

540. சித்த னேதிரு ஆலவாய் மேவிய
அத்த னேஅஞ்சல் என்றருள் செய்எனை
எத்த ராம்அம ணர்கொளு வும்சுடர்
பத்த மன்தென்னன் பாண்டியற்கு ஆகவே.

தெளிவுரை : ஈசன், எல்லாவிதமான ஆற்றல்களையும் உடைய சித்தர்; திருஆலவாயில் மேவி விளங்கும் அன்பிற்குரியவர். அஞ்சாதே என்று அருள்புரிவீராக. வஞ்சனையுடைய அமணர்கள் என்னை எரிக்குமாறு பற்ற வைத்த நெருப்பானது, சமணப் பற்றுடைய பாண்டிய மன்னனுக்கு ஆகுக.

541. தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்க னேஅஞ்சல் என்றருள் செய்எனை
எக்க ராம்அம ணர்கொளு வும்சுடர்
பக்க மேசென்று பாண்டியற் காகவே.

தெளிவுரை : தக்கன் செய்த தீய வேள்வியைத் தகர்த்து அருள் தன்மையை வழங்கிய ஆலவாயில் மேவும் சொக்கநாதனே ! அஞ்சாதே என உரைத்தருள்வீராக. செருக்குடைய அமணர்கள் என்னை எரிக்குமாறு செய்வித்த தீயானது அத்தகையோர் பக்கமே சார்ந்து சென்று, பாண்டிய மன்னனுக்கு ஆகுக.

542. சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய
அட்ட மூர்த்தியே னேஅஞ்சல் என்றருள்
தட்ட ராம்அம ணர்கொளு வும்சுடர்
பட்டி மன்தென்னன் பாண்டியற்கு ஆகவே.

தெளிவுரை : நன்னெறியாக விளங்கும் பெருமானே ! திருஆலவாயின்கண் மேவிய அட்ட மூர்த்தியே ! அஞ்சாதே என உரைத்தருள்வீராக. தீய குணத்தை உடைய அமணர் என்னை எரிக்கும் தன்மையில் வைத்த நெருப்பானது, கல்வியில் வல்லவனாகிய பாண்டிய மன்னனுக்கு ஆகுக.

543. நண்ண லார்புர மூன்றுஎரி ஆலவாய்
அண்ண லேஅஞ்சல் என்றருள் செய்எனை
எண்ணி லாஅம ணர்கொளு வும்சுடர்
பண்ணி யற்றமிழ் பாண்டியற்கு ஆகவே.

தெளிவுரை : பகைமை கொண்டு திரிந்த அசுரர்களின் மூன்றுபுரங்களை எரி செய்த ஆலவாய் அண்ணலே ! அஞ்சாதே என்று அருள் செய்வீராக. என்னை எரிக்கும் முனைப்புக் கொண்டவராய், நல்ல எண்ணம் இல்லாதவராகிய அமணர் கொளுத்திய நெருப்பானது, பண்ணின் இசையுடன் தமிழ் வழங்கும் பாண்டியற்கு ஆகுக.

544. தஞ்சம் என்றுன் சரண்புகந் தேனையும்
அஞ்சல் என்றருள் ஆலவாய் அண்ணலே
வஞ்சம் செய்துஅம ணர்கொளு வும்சுடர்
பஞ்ச வன்தென்னன் பாண்டியற்கு ஆகவே.

தெளிவுரை : ஆலவாயில் வீற்றிருக்கும் அண்ணலே ! தஞ்சம் என்று உன்னைச் சரண் புகுந்த என்னை அஞ்சாதே என்று உரைத்தருள் புரிவீராக. வஞ்சம் உடையவராகிய அமணர்கள் என்னை எரிக்கும் தன்மையில் கொளுத்திய நெருப்பானது பாண்டிய மன்னனுக்கு ஆகுக.

545. செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்
அங்க ணாஅஞ்சல் என்றருள் செய்எனைக்
கங்கு லார்அமண் கையர் இடும்கனல்
பங்கமில் தென்னவன் பாண்டியற்கு ஆகவே.

தெளிவுரை : கனல் போன்ற விழியுடைய வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவரே ! திருஆலவாயில் வீற்றிருக்கும் அழகிய விழியுடையவனே ! அஞ்சேல் என உரைத்தருள்வீரா. என்னை எரிக்குமாறு இருள் கொண்ட நெஞ்சினராகிய அமணர்கள் வைத்த நெருப்பானது, பங்கம் இல்லாத பாண்டியனுக்கு ஆகுக.

546.தூர்த்தன் வீரம் தொலைத்தருள் ஆலவாய்
ஆத்த னேஅஞ்சல் என்றருள் செய்எனை
ஏத்தி லாஅம ணர்கொளு வும்சுடர்
பார்த்தி வன்தென்னன் பாண்டியற்கு ஆகவே.

தெளிவுரை : தீய பண்புடையவனும் சிந்தை திரிந்தவனும் ஆகிய இராவணனுடைய வீரத்தை அழித்தும், வாளும் வாழ்நாளும் நல்கி அருள் புரிந்தும், திகழும் ஆலவாய் நாதனே ! அஞ்சேல் என்று உரைத்தருள் வீராக. நன்கு ஏத்திப் போற்றுதற்கு உரியவராய் இல்லாத அமணர்கள் என்னை எரிக்குமாறு கொளுத்தி வைத்த நெருப்பானது பாண்டிய மன்னனுக்கு ஆகுக.

547. தூவி னானயன் தானறி யாவகை
மேவி னாய்திரு ஆலவா யாய்அருள்
தூவி லாஅம ணர்கொளு வும்சுடர்
பாவி னான்தென்னன் பாண்டியற்கு ஆகவே.

தெளிவுரை : உலகத்தைத் தாவி அளக்க, நெடிது உயர்ந்தவராகிய திருமாலும், அயனாகிய பிரமனும் அறியாத வகையில் மேவிய நாதனே ! திரு ஆலவாயில் வீற்றிருக்கும் பெருமானே ! அருள் புரிவீராக. தூய்மை இல்லாத அமணர்கள் கொளுத்திய நெருப்பானது பரந்து சென்று பாண்டியனுக்கு ஆகுக.

548. எண்தி சைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்ட னேஅஞ்சல் என்றருள் செய்எனைக்
குண்ட ராம்அம ணர்கொளு வும்சுடர்
பண்டிமன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.

தெளிவுரை : எட்டுத் திசைகளிலும் எழில் பரவும் பெருமை விளங்கும் ஆலவாயில் மேவிய அண்டர் நாயகனே ! அஞ்சேல் என்று அருள் செய்வீராக. சிறுமையுடைய அமணர்கள் என்னை எரிக்குமாறு கொளுத்திய நெருப்பானது, தொன்மையாக விளங்கும் பாண்டிய மன்னனுக்கு ஆகுக.

549. அப்பன் ஆலவாய் ஆதி அருளினால்
வெப்பம் தென்னவன் மேலுற மேதினிக்கு
ஒப்ப ஞானசம் பந்தன் உரைபத்தும்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.

தெளிவுரை : திருஆலவாயில் வீற்றிருக்கும் ஆதி மூர்த்தியாகவும், என் தந்தையாகவும் விளங்கும ஈசனின் திருவருளால், நெருப்பின் வெப்பமானது பாண்டிய மன்னன்மீது பொருந்துமாறு, உலக நியதிக்கு ஏற்ற தன்மையில் ஞானசம்பந்தன் உரைத்த இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள், தீமையினால் பற்றப்படாது செல்வந்தராகத் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

310. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

550. வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.

தெளிவுரை : வீடு பேறு என்று சொல்லப்படும் முத்தி நலத்தை அன்றி வேறு அவா இல்லாத சிறப்புடைய பெருமக்கள், நின்னுடைய புகழ்ப் பாடலைப் பாடுகின்ற புகழின்கண் பரவி விளங்கும் பண்புடைய பெருமானே ! சுடுகாட்டில் விரும்பி ஆடும் நாதனே ! கபாலத்தைக் கையில் ஏந்திய ஈசனே ! நீண்ட பெருமை உடைய மதில் விளங்கும் கூடலில் திகழும் ஆலவாய் என்னும் திருக்கோயிலில் மகிழ்ந்து நிலவும் திருக்கோலந்தான் என்னே !

551. பட்டி சைந்த அல்குலாள் பாவையாள் ஓர்பாகமா
ஓட்டி சைந்த தன்றியும் உச்சியாள்ஒ ருத்தியாக்
கொட்டி சைத்த ஆடலாய் கூடல்ஆல வாயிலாப்
எட்டி சைந்த மூர்த்தியாய் இருந்தவாறுஇது என்னையே.

தெளிவுரை : பட்டுப் போன்ற உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாய் மேவும் பெருமானே ! சடை முடியில் கங்கையாளை உச்சியாய்க் கொண்டு திகழும் நாதனே ! கொடுகொட்டி என்னும் திருக்கூத்தினைப் புரியும் ஈசனே ! கூடலில் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கும் பரமனே ! அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானே ! தேவரீருடைய அருள் வண்ணம் பெருகி இருக்குமாறு மேவிய செம்மைதான் என்னே !

552. குற்றம்நீ குணங்கள்நீ கூடலால வாயிலாய்
சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்றநூற் கருத்துநீ அருந்தமின்பம் என்றிவை
முற்றுநீ புகழ்ந்துமுன் உரைப்பதன்மு கம்மனே.

தெளிவுரை : ஈசனே ! மன்னுயிர்களின்பால் தோன்றிப் பற்றி நிற்கும் குற்றமாகிய வினையும் நீவிர் ! எப்பொருட்கும் இயல்பாய் இருந்து விளங்கும் குணமும் நீவிர் ! கூடலில் திகழும் ஆலவாயிலில் வீற்றிருக்கும் ஈசனே ! எனக்குச் சுற்றமாகி நின்று மேவுபவர் நீவிர் ! தலைவன் நீவிர் ! எப்பொருளுக்கும் அதன் விளக்கமாகவும் அவற்றால் பெறப்படும் இன்பமாக இருக்கும் மெய்ப் பொருளும் நீவிர் ! நீவிரே முற்றுமாய் விளங்கி என்னை ஆழ்த்துபவர். அவ்வாறு இருக்க, நின்னைப் புகழ்ந்து உரைத்து முகமன் உரைப்பது என்பது யாங்ஙனம் !

553. முதிருநீர்ச் சடைமுடி முதல்வநீ முழங்கழல்
அதிரவீசி யாடுவா யழகநீ புயங்கன்நீ
மதுரநீ மணாளநீ மதுரைஆல வாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன் கபாலம்ஏந்து சம்புவே.

தெளிவுரை : ஈசனே ! உயர்ந்ததாகவும் புனிதத் தன்மை உடையதாகவும் உடைய கங்கையைச் சடை முடியில் தரித்து விளங்கும் முதல்வன் நீவிர் ! நெருப்பின் அனல் வீசி ஒலி எழுப்பக் கைகளை வீசி ஆடுகின்ற பாங்குடைய அழகன் நீவிர் ! பாம்பினை அணிந்து விளங்கும் பெருமான் நீவிர் ! மன்னுயிர்களுக்குப் பேரின்பத்தை நல்கும் இனியவர் நீவிர் ! அழகிய மணவாளனாக விளங்குபவர் நீவிர் ! மதுரையின்கண் ஆலவாயில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! சதுரப்பாடு உடையவர் நீவிர் ! பிரமதேவனின் கபாலத்தை ஏந்திச் சுகமளிக்கும் பரம்பொருளே ! நின் கழலை ஏத்திப் போற்றுகின்றோம்.

554. கோல மாய நீள்மதிற்  கூடல்ஆல வாயிலாய்
பால னாய தொண்டு செய்து பண்டும்இன்றும் உன்னையே
நீல மாய கண்டனே நின்னையன்றி நித்தலும்
சீல மாய சிந்தையில் தேவர்வதில்லை தேவரே.

தெளிவுரை : அழகு மிக்க நீண்ட மதில் கொண்டு கூடலில் விளங்கும் ஆலவாயிலில் வீற்றிருக்கும் பெருமானே ! சண்டேசுவரர் பூசைத் தொண்டு புரிந்து உன்னையே போற்றி, யாண்டும் வழிபட மேவும் நீலகண்டனே ! தேவர்கள் நின்னை அன்றி நித்தமும் சிந்தித்து வழிபடத் தக்கவராய் வேறு யார் இருக்கிறார்கள் !

555. பொன்தயங்கு இலங்குஒளிந் நலங்குளிர்ந்த புன்சடை
பின்தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலி
கொன்றையம் முடியினாய் கூடல்ஆல வாயிலாய்
நின்தயங்கி யாடலே நினைப்பதே நியமமே.

தெளிவுரை : பொன்னின் ஒளி விளங்குகின்றதைப் போன்று, நலம் திகழும் குளிர்ந்த சடை முடியானது, ஒளிக் கதிர்கள் வீசுமாறு திரு நடம் புரியும் சிவபெருமானே ! தோற்றம் பெறும் பிறப்பு என்னும் பான்மையில் மேவாத ஈசனே ! திரு முடியில் பிரணவ புஷ்பமாகிய கொன்றை மலரைத் தரித்துள்ள பெருமானே ! கூடல் பதியில் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கும் நாதனே ! தேவரீருடைய ஒளிமயமாகிய திருநடனக் காட்சியினை நினைந்து ஏத்துதலே வழிபடுகின்ற பாங்குடைத்து அல்லவா !

556. ஆதிஅந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே
சோதியந்தம் ஆயினாய் சோதியுள்ளொர் சோதியாய்
கீதம்வந்த வாய்மையால் கிளர்தருக்கி னார்க்கல்லால்
ஓதிவந்த வாய்மையால் உணர்ந்து ரைக்கலாகுமே.

தெளிவுரை : ஆலவாய் என்னும் தலத்தில் வீற்றிருக்கின்ற அண்ணலே ! ஆதியும் அந்தமுமாக இருப்பவர் நீவிர்; சோதியின் எல்லையாக விளங்குபவர் நீவிர்; பெருஞ்சோதிக்குள் சோதியாய் விளங்கி ஒளிரச் செய்பவர் நீவிர்; மெய்ஞ்ஞானமாகிய சிவஞானத்தால் விளங்கி மேம்படுபவர்களுக்கேயன்றி, தேவரீரின் அருள் தன்மையினை உணர்வதற்கும் உரைப்பதற்கும் கூடுமோ !

557. கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்
துறையிலங்கை மன்னதைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.

தெளிவுரை : நீலகண்டத்தை உடைய பெருமானே ! இலங்கையின் மன்னனாகிய இராவணனுடைய தோள் நெரியுமாறு கயிலை மலையால் ஊன்றிய தேவரீர், வேதத்தின் பாடலாக மேவி, மதுரையில் திகழும் ஆலவாய் என்னும் திருக்கோயிலில் வீற்றிருப்பவர். ஒருமித்த மனத்தினால் எண்ணித் துதிப்பதே தேவரீரை வழிபடுவதற்குரிய நியமம் ஆகும்.

558. தாவணவ் விடையினாய் தலைமையாக நாள்தொறும்
கோவணங் வுடையினாய் கூடலால வாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனும் மாலுநின்
தூவணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே.

தெளிவுரை : தாவிச் செல்லும் இடப வாகனத்தை உடைய பெருமானே ! கோவண ஆடையை முதன்மையாகக் கொண்டு விளங்கும் நாதனே ! கூடலில் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கும் பரமனே ! செந்தாமரை மலரில் திகழும் பிரமனும், திருமாலும் தேவரீரை அளந்து அறியும்  தன்மை அற்றவராய், அயர்ச்சி அடைந்தனர் அல்லவா !

559. தேற்றமில் வினைத்தொழிற் றோரும் சமணரும்
போற்றிசைத்து நின்கழல் புகழ்ந்துபுண் ணியங்கொளார்
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
நாற்றி சைக்கும்மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.

தெளிவுரை : தெளிந்த பயனை நல்காத செயலின்கண் மேவும் தேரர்களும் சமணர்களும் நின்னுடைய திருவடியை வணங்கிப் போற்றிப் புண்ணியத்தைக் கொள்ளாதவராயினர். கூற்றுவனை உதைத்த திருப்பாதனே ! கூடலின் ஆலவாயின்கண் வீற்றிருக்கும் ஈசனே ! உலக மூர்த்தியாய் நின்று விளங்கி, உயிர்களுக்கு எல்லா நன்மையும் தருபவர் நீவிரோ அல்லவா !

560. போயநீர் வளங்கொளும் பொருபுனல் புகலியான்
பாயகேள்வி ஞானசம் பந்தனல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண்ட ஆலவாயில் அண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.

தெளிவுரை : நீர் வளம் பெருகும் புகலியில், பரந்த கேள்வி ஞானம் மிக்க, வேதம் வல்ல ஞானசம்பந்தன் சிவபெருமானை ஏத்துதலாகிய நற்பண்பால் விளங்கும் சொல்மாலை கொண்ட ஆலவாய் அண்ணலை ஏத்திய இத்திருப்பதிகத்தை எண்ணத்தில் கொண்டும், சிந்தையில் பதித்தும் ஓதுபவர்கள், தீயவை யாவும் நீங்கப் பெற்றவராய் விளங்குவார்கள். அவர்கள், தேவர்களுக்கு ஒப்பாவார்கள்.

திருச்சிற்றம்பலம்

311. திருவானைக்கா (அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

561. வானைக்காவலில் வெண்மதி மல்குபல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாக மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார் ஏதும்ஏதும் இல்லையே.

தெளிவுரை : வானின் இருளை நீக்கிக் காக்கும் தன்மையதாய் விளங்கும் வெண் மதியைச் சடை முடியில் தரித்து, தேன் அன்ன இனிய மொழியாற்றும் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் சிவபெருமான், ஆனைக்கா என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அண்ணல் ஆவார். அப்பெருமானின் திருவடியை அபயம் கொண்டு வாழ்பவர்களுக்குப் பாதுகாவலாக வேறு எதுவும் தேவையில்லை. அவர்களுக்கு எத்தகைய பாவமும் நேராது.

562. சேறுபட்ட தண்வயல் சென்று சென்று சேண்உலா
ஆறுபட்ட நுண்துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில்பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணில்எண்ண வல்லரே.

தெளிவுரை : வயல்களின் வளம் பெருகுமாறு நெடுந் தொலைவு சென்று உலவி வருகின்ற காவிரி ஆற்றின் துறையில் மேவும் ஆனைக்காவில் வீற்றிருக்கும் அண்ணலாகிய சிவபெருமான். திருவெண்ணீறு பூசிய திருமேனி உடையவர். நிகரில்லாத அப் பெருமானின் திருவடிகளை ஏத்துபவர்கள், உலக மாயையில் சிக்க வைக்கும் அஞ்ஞானத்திலிருந்து வேறுபட்டராய், நற்கதிக்கு ஆளாகப் பெறுகின்ற சிவஞானம் கைவரப் பெற்றவராய் விளங்குபவர்கள் எனத் தேவர்கள் எண்ணி மகிழ்வார்கள்.

563. தாரமாய மாதராள் தானொர்பாகம் ஆயினான்
ஈரமாய புன்சடை ஏற்றதிங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை ஆனைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வவ்வினைகள் மாயுமே.

தெளிவுரை : தாரம் ஆகிய உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு மேவும் சிவபெருமான், கங்கையைச் சடை முடியில் வைத்து விளங்குவதோடு சந்திரனைச் சூடியவர். சோழ மன்னன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்க, விலை உயர்ந்த ஆரத்தைத் திருமார்பில் ஏற்ற அவ் ஆனைக்காவின் அண்ணலை, முறையாக அன்பு பூண்டு வணங்கும் அடியவர்களின் தீவினை யாவும் நீங்கும்.

564. விண்ணில் நண்ணு புல்கிய வீரமாய மால்விடைச்
சுண்ணவெண்ணீறு ஆடினான் சூலமேந்து கையினான்
அண்ணல்கணணொர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம்ஒன்றும் இல்லையே.

தெளிவுரை : வானில் நண்ணிச் சென்று வீரம் விளைவிக்கும் பெருமையுடைய இடபத்தை உடையவராய், திரு வெண்ணீற்று மேனியராய், சூலப்படை ஏந்தும் திருக்கரத்தராய், முக் கண்ணுடைய மூர்த்தியாய் மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் திருவானைக்காவைத் தொழுது போற்ற வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டுள்ள அன்பர்களுக்குத் தீமையானது அணுகாது.

565. வெய்பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்டசீர்
மைகொள்கண்டன் வெய்யதீ மாலையாடு காதலான்
கொய்யவிண்ட நாள்மலர்க் கொன்றைதுன்று சென்னிஎம்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.

தெளிவுரை : கொடிய பாவமானது விலக வேண்டும் என்று விரும்புகின்ற அன்பர்களே ! தேவர்களைக் காத்து அருள் புரிந்தவராய், நீலகண்டனாகிய ஈசன், வெம்மை மிகுந்த நெருப்பினை ஏந்தி ஆடுகின்ற இயல்புடையவராய், எந்நாளும் மலர்ந்து விளங்கும் கொன்றை மலரைச் சடை முடியில் தரித்து வீற்றிருக்கும், பொய்கை சூழ்ந்த ஆனைக்கா என்னும் திருத்தலத்தை அடைவீராக.

566. நாணும்ஓர்வு சார்வுமுன் நகையும்உட்கு நன்மையும்
பேணுறாத செல்வமும் பேசநின்ற பெற்றியான்
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணும் கண்ணு மூன்றுடைக் கறைகொள் மிடறனல்லனே.

தெளிவுரை : அஞ்ஞானத்தால் ஈசனை அறியாத தன்மையினை உணர்ந்து நாணுதலும், பதியை ஓர்ந்து அறிதலும், அறிந்ததன் பின் சார்ந்து இருத்தலும், சார்தலினால் மகிழ்ந்து விளங்குதலும், அத்தன்மையில் மனத்தை அடக்கி உள்கித் தியானம் செய்தலும் ஆகியன நன்மை உடையனவாகும். அத்தகைய நிலையால் காணும் பேறு, வேறு எத் தன்மையாலும் காண முடியாதது. அவ்வாறு பேசப்படுவதற்குக் கர்த்தாவாகிய ஈசன், ஆணும் பெண்ணும் சேர்ந்ததாகிய  அர்த்தநாரி திருக்கோலத்தில், ஆனைக்காவில் வீற்றிருக்கின்ற அண்ணல் ஆவார். அப்பெருமான் மூன்று கண்களையுடையவராய் நஞ்சினையுண்ட கறையுடைய கண்டத்தினராய் விளங்குபவர் அல்லவா !

567. கூருமாலை நண்பகல் கூடிவல்ல தொண்டர்கள்
பேரும்ஊரும் செல்வமும் பேசநின்ற பெற்றியான்
பாரும் விண்ணும் கைதொழப் பாயும்கங்கை செஞ்சடை
ஆரநீரொ டேந்தினான் ஆனைக்காவு சேர்மினே.

தெளிவுரை : மிகுதியாக மாலை மற்றும் பகல் காலங்களில், அன்பின் மிக்கவராயும், சிவஞானப் பொலிவு உடையவராயும் உள்ள திருத்தொண்டர்கள் கூடி இருந்து, ஈசனின் திருநாம மகிமைகளையும், திருத்தலங்களின் சிறப்புக்களையும், அருளிச் செயல்களையும் பேசப்படுகின்ற பெற்றியுடையவராகிய சிவபெருமான், பூவுலகமும் விண்ணுலகமும் கைதொழுது ஏத்தக் கங்கையைச் செஞ்சடையில் பொருந்துமாறு தரித்தவர். அப் பரமன் வீற்றிருக்கின்ற திருவானைக்கா என்னும் தலத்தை அடைவீராக.

568. பொன்னமல்கு தாமரைப் போதுதாது வண்டினம்
அன்னமல்கு தண்டுறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழல் துன்னவல்லர் விண்ணையே.

தெளிவுரை : தாமரை மலரில் வண்டினம் ரீங்காரம் செய்யவும், அன்னப் பறவைகள் குளிர்ந்த துறையில் விளங்கவும் திகழ்கின்ற ஆனைக்காவில் வீற்றிருக்கும் அண்ணலை, நான்கு மறைகளாலும் திரும்பத் திரும்பப்போற்றி நின்று, திருக்கழலை  ஏத்துபவர்கள் மறுமைக் கண் விண்ணுலகத்தில் விளங்கி நிற்பார்கள்.

569. ஊனொடுண்டல் நன்றென ஊனொடுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினால் பேசநின்ற தன்மையான்
வானொடொன்று சூடினான் வாய்மையாக மன்னிநின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே.

தெளிவுரை : ஈசனுக்கு, நல்ல சுவையுடைய இறைச்சி உணவு நனி வழங்குதலை மேற்கொண்டு, அதனை நன்றெனக் கருதி அமுது படைத்தவர், கண்ணப்ப நாயனார். அத்தகைய ஊன் உணவை ஈசனுக்குப் படைத்தல் அபசாரம் எனக் கருதி, அத்தகைய செயல் தீது என மருண்டார் சிவகோசரியார். இவ்விரு தொண்டர்களும் பேரன்பு பூண்ட காரணத்தால் பேசநின்ற தன்மையில் திகழும் சிவபெருமான், வானில் ஒரு கலையுடன், எஞ்சிய சந்திரனைச் சூடி, வளருமாறு செய்தவர். பசுவின் பஞ்ச கௌவியத்தை அபிடேகப் பொருளாக ஏற்று மகிழும் அப்பெருமான் வீற்றிருக்கும் ஆனைக்காவைச் சென்றடைவீராக.

570. கையில்உண்ணும் கையரும் கடுக்கள்தின் கழுக்களும்
மெய்யைப் போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார்
தையல்பாகம் ஆயினான் தழலதுஉருவத் தான்எங்கள்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் பொய் நெறியில் மேவி, வேத நெறியை அறியதவராயினர். ஈசன், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர். சோதி பொரூபமாகத் திகழ்பவர்; எங்கள் தலைவர். அப்பெருமான் வீற்றிருக்கும் பொய்கை சூழ்ந்து விளங்கும் ஆனைக்காவைச் சென்றடைமின்.

571. ஊழியூழி வையகத்து உயிர்கள் தோற்று வானொடும்
ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.

தெளிவுரை : ஊழிக் காலந்தோறும் உயிர்களைப் படைக்கும் தொழில் மேவும் பிரமனுடன், திருமாலும் தேடிச் சென்று காணுதற்கு அரியவராகிய ஈசன், ஆனைக்காவில் வீற்றிருக்கும் அண்ணல் ஆவார். அப்பெருமானைக் காழிப்பதியில் மேவும் ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன இத்திருப்பதிகத்தை, முறையாகக் கற்று ஓதவல்லவர்களின் கொடிய வினை யாவும் மாய்ந்தழியும்.

திருச்சிற்றம்பலம்

312. பொது திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்

572. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதுஎல் லாம்அர நாமமே
சூழ்க வையக மும்துயர் தீர்கவே.

தெளிவுரை : உலகம் வாழும் பொருட்டுச் செய்யும் கேள்விகளைப் புரியும் அந்தணர்கள் வாழ்க ! அவ்வேள்விகள் நடைபெறுவதற்குத் துணையாக மேவும் தேவர்கள் வாழ்க ! அபிடேகம் அர்ச்சனை ஆகியவற்றுக்குப் பஞ்ச கௌவியத்தினை நல்கி உறுதுணையாய் விளங்கும் பசுக் கூட்டங்கள் வாழ்க ! இவ்வகையான வழிபாட்டின் காரணமாகக் குறைவில்லாது வானமானது மழை பொழிவதாகுக ! அத்தன்மையில் மன்னன், ஓங்கும் புகழ் பெற்று விளங்குக ! தீயநெறியில் சென்று அழிவை உண்டாக்கும் அனைத்தும் கெடுவதாக ! எல்லாம் அரன் நாமமாகிய திருவைந்தெழுத்தை ஓதி இருக்க அதுவே உலகில் யாங்கணும் சூழ்ந்து விளங்கி உயிர்களுக்குப் பேரின்பத்தை நல்கும் தன்மையால், உலகத்தில் தீவினையாலும், அஞ்ஞானத்தாலும் உண்டாகும் துயர் யாவும் தீர்க. இது, உலகம் இன்புற்று வாழ, ஓதி அருளிய வாழ்த்தாயிற்று.

573. அரிய காட்சிய ராய்த்தமது அங்கைசேர்
எரியர் ஏறுகந்து ஏறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கையர் ஆயினும்
பெரியர் ஆர்அறிவார் அவர் பெற்றியே.

தெளிவுரை : அரிய காட்சி உடையவராகிய சிவபெருமான், தமது அழகிய கையில் நெருப்பை ஏந்தி, இடப வாகனத்தில் வீற்றிருக்கும், நீலகண்டத்தை உடையவராய், மெய்யன்பின் உரிமை பூண்ட பக்தர்களுக்குக் காட்சி தருபவர். அப்பெருமான், சுடுகாட்டில் மேவி இருந்து, நடம்புரிபவர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர்கள் என அட்ட மூர்த்தமாகியும் அண்டங்கள் யாவையும் பசு ஞானத்தாலும் புலன்களாலும் அறிய முடியாது. அன்பில் திளைத்தவராகிய ஈசனின் தன்மையை யாரோ அறிவர் !

574. வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா எழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யார்அவர் எவ்வகை யார்கொலோ.

தெளிவுரை : திருநீறானது, எல்லா ஒளியினும் விஞ்சிய சிவபெருமானின் திருமேனியின் ஒளியால் மணம் கமழச் செய்யும் பாங்காயிற்று. அத்தகைமையுடைய ஈசன், தாமே உலகின் முதலாகவும், ஈறாகவும் விளங்கிப் பின்னும் தோற்றுவித்தலால் தமக்குத், தோற்றுவிப்பவர் யாரும் இல்லாதவராய்த் தந்தையும் தாயும் அற்றவராய் விளங்கித் தம்மைச் சிந்தை செய்பவர் தம் வினையைத் தீர்த்தருளிப் பொய்ம்மையைப் போக்குபவர் ஆயினார். அத்தகைய எந்தையை எவ்வகையான சொல் கொண்டு உணர்த்த வல்லது !

575. ஆட்பால் அவர்க்குஅருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையும் குறுகாமை எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவைகேட்க தக்கார்

தெளிவுரை : சிவபெருமான், தன்னுடைய அடியவர்களுக்கு அருள் புரிகின்ற வண்ணமும், தொன்மைச் சிறப்புடைய மாண்பும், கேட்கப் புகுங்கால் அவை, ஆய்வுக்குள் அடங்காததும் எல்லையற்றுப் பெருகும் தன்மையுடையதும் ஆகும். எம் தந்தையாகிய அப்பெருமானுடைய திருவடிப் புகழ்ச்சியைச் செவிமடுக்கும் அடியவர்களுக்குக் கோள்களாலும் தீய வினைகளாலும் இடர்கள் உண்டாகாது.

576. ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி
மாதுக்க நீங்கலுறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர்இறையே வந்துசார் மின்களே.

தெளிவுரை : அன்பில் தோய்ந்து குழைந்து சாதுக்கள் எனும் புகுழுக்குரியவர்களே ! காரண காரியங்களைக் காட்டியும், வேதவாக்கியங்கள், மேற்கோள்கள், உவமைகள் முதலான மொழியாலும் ஈசனை ஆய்வு செய்ய வேண்டாம். அப்பெருமான், யாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்; அளந்து அறிய முடியாதவர்; அரிய சோதியாய் விளங்குபவர். அப்பெருமானை, மனத்துக்கண் நிலை நிறுத்திப் பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவீராக.

577. ஆடும்எனவும் மருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும்எனவும் புகழல்லது பாவம்நீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் எனக்கேட்டீ ராகில்
நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்ட லாமே.

தெளிவுரை : சிவபெருமான், திருநடம் புரிவதும், மார்க்கண்டேயருக்காகக் கூற்றுவனைக் காலால் உதைத்து அழித்ததும், வேதங்களைப் பாடியருளியதும் ஆகிய செயல்கள் புகழ் விளங்கும் தன்மையா அல்லது மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா, அன்றிப் பிறப்பினை அறுத்துப் பிறவா நெறியினை அளிப்பதற்கா எனக் கேட்பீராயின், இவை தன்னை நாடியவர்களுக்கு அருள் செய்வதற்கே அன்றி வேறு எக்காரணமும் ஆகாது என உறுதியாகக் கூறலாம்.

578. கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டு அங்குஆட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண்மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டும் அன்றே.

தெளிவுரை : நறுமணம் கொண்ட மலர்தூவிப் போற்றி, உலகினில் உயர்ந்த தன்மையில் விளங்கிப் பால் கொண்டு, மணலால் ஆகிய சிவலிங்கத் திருமேனி குளிருமாறு, சண்டீசர் அபிடேகம் செய்தபோது, அவ்வடியவர்தம் உலகியல் தந்தையானவர் இடம் செய்யலானார். அவ்வாறு இடம் செய்த தந்தையின் காலை வெட்டினாலும், அச்செயலானது பாவமாகக் கருதப்படாத நிலையில், முக்கண் மூர்த்தியான சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப் பேற்றிணை அளித்தருளினார். இத்தன்மையானது, அறிவு சார்ந்த பெரியோர்களால் சொல்லப்படுகின்ற செம்மை அல்லவா !

579. வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை உலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே.

தெளிவுரை : வேத நாயகனாக விளங்கும் சிவபெருமானை முதலாகக் கொண்டு, உலக மக்கள் குற்றத்தில் மேவாது, நன்னெறியை உணர்கின்ற மாண்பால், சூத முனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும், ஒழுக்கத்தைப் போதிப்பதாகும்.

580. பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதுஇடர் கண்டு அருள்செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடம் கொண்டவர்க்குப்
பேராழி ஈந்த புகழும் புகழுற்ற தன்றே.

தெளிவுரை : பகைவர்கள் பெருகியதன் காரணமாக நலிந்து மேவும் உலகத்தைக் காக்கும் தொழில் பேணும் திருமால், கடலில் துயில் கொண்டிருந்ததை விடுத்து, ஈசனைப் பூசித்து வழிபட்டு, அப் பகைவர்களை வெல்லும் வகையில் ஆழிப் படையை வேண்டினார். அவர் வேண்டுகோளுக்கிணங்கிய சிவபெருமான், காத்தல் தொழில் நன்கு திகழப் போர் ஆற்றல் மிகுந்த அப் படையை அளித்தது, மெய்யான புகழ் ஆகும். அல்லவா !

581. மாலா யவனும் மறைவல்ல நான்முகனும்
பாலாய தேவர் பகரில் அமுதூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த
ஆலாலம் உண்டுஅங்கு அமரர்க்கு அருள் செய்த்தாமே.

தெளிவுரை : உலகத்தைக் காக்கும் தொழில் பேணும் திருமாலும், படைக்கும் தொழில் மேவும் பிரமனும் மற்றும் பலராகிய தேவர்களும், அமுதம் கொண்டு மகிழும் விருப்பத்தால் கடலைக் கடைந்தனர். அப்போது அரியதாய் எழுந்த ஆலகால விடத்தை உட்கொண்டு காத்தவர் சிவபெருமான். இது, ஈசன், தேவர்களுக்கு அருள் புரிந்த செம்மையாகும்.

582. அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கி னானும்
தெற்றென்று தெய்வம் தெளியார் கரைக்கு ஒலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்வில் ஊரவும் பண்பு நோக்கில்
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே.

தெளிவுரை : சிவபெருமான், முன்னர் உரைத்த அத்துணைப் புகழுக்கும் உரியவராகியவர். அதுவும் அன்றி, அவர், மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஆக்கித் தமிழ் வளர்த்து அருளிச் செய்தவர். ஈசனே  முழு முதற் பொருள் எனத் தெளிவு பெறாதவர்களுக்குத் தெளிவு பெற, இந்த அரிய ஓலையானது, வைகை ஆற்றில் எதிர் நோக்கிச் செல்லும் மாண்பினை நோக்கில், இடப வாகனத்தில் மீது இவர்ந்து மேவும் பெருமானே, இறைவன் எனத் தக்கவர், என்பதுதானே மெய்ம்மை !

583. நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல
எல்லார்க ளும்பரவும் ஈசனை யேத்துபாடல்
பல்லார்க ளும்மதிக்கப் பாசுரம் சொன்னபத்தும்
வல்லார்கள் வானோர்உல காளவும் வல்லர் அன்றே.

தெளிவுரை : சிவஞானிகள் குழுமி விளங்கும் புகலியின் ஞானசம்பந்தன், மெய்யன்பர்களால் நன்கு பரவப்படும் ஈசனை ஏத்துகின்ற பாடலாவது, இத் திருப்பாசுரம் ஆகும். இதனை ஓத வல்லவர் வானுலகை ஆளும் வல்லமை பெற்றவராவர்.

திருச்சிற்றம்பலம்

313. திருவான்மியூர் (அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

584. விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழாய் உமைநங்கையொர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூர்உறையும்
அரையா உன்னையல்லால் அடையாது எனது ஆதரவே.

தெளிவுரை : ஈசனே ! நீவிர், நறுமணம் கமழும் கென்றை மலரை அணிந்தவர்; விடத்தை உட்கொண்டு அதனால் கரிய நிறத்தினை உடய கண்டத்தினர்; புகழ் பல உடையவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; கடல் சூழ்ந்த திருவான்மியூரில் உறையும் அரசே  உம்மைத் தவிர என் மனம் பிறவற்றை நாடாது.

585. இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய்
கொடியார் மாமதியோடு அரவம்மலர்க் கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ் திருவான்மி யூர்உறையும்
அடிகேள் உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.

தெளிவுரை : இடியைப் போல முழங்கும் இடபத்தை உடைய ஈசனே ! தேவர்களுக்கு வாழ்வளிக்கும் நாதனே ! இடபக் கொடியும், சந்திரனும், அரவமும், கொன்றை மலரும் உடைய இறைவனே ! மாதவி மலரின் மணம் சூழ்ந்த திருவான்மியூரில் உறையும் அடிகளே ! உம்மை அன்றி என்னுடைய மனமானது வேறொன்றை நாடாது.

586. கையார்வெண்மழுவா கனல் போல்திரு மேனியனே
மையார் ஒண்கண் நல்லாள் உமையாள் வளம் மார்பினனே
செய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூர்உறையும்
ஐயா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.

தெளிவுரை : கையில் மழுப்படையுடைய பெருமானே ! நெருப்புப் போன்ற சிவந்த மேனியனே ! ஒளி மிக்க கண்ணுடைய நல்லாள் ஆகிய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் திருமார்பினை உடைய பரமன் ! கயல் பாயும் நீர் வளம் மிகுந்த திருவான்மியூரில் உறையும் தலைவனே ! என்னுடைய மனமானது தேவரீரை அன்றி வேறு எதிலும் சாராது.

587.பொன்போ லுஞ்சடைமேல் புனல்தாங்கிய புண்ணியனே
மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே
தென்பால் வையமெலாம் திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா உன்னையல்லல் அடையாதுஎனது ஆதரவே.

தெளிவுரை : பொன் போன்ற சடை முடியின் மீது கங்கையைத் தரித்து விளங்கும் புண்ணியனே ! மின்னலைப் போன்று ஒளிரும் முப்புரி நூலினைத் தரித்து இடப வாகனத்தில் விளங்கும் வேதியனே ! இவ்வுலகமானது இனிமையுடன் திகழுமாறு திருவான்மியூரில் அன்புடன் விளங்கும் ஈசனே ! தேவரீரை அன்றி யுன் நெஞ்சமானது வேறொன்றையும் நாடாது.

588. கண்ணாரும் நுதலாய் கதிர்சூழ்ஒளி மேனியின்மேல்
எண்ணார் வெண்பொடிநீறு அணிவாய்எழில் வார்பொழில்சூழ்
திண்ணார் வண்புரிசைத் திருவான்மியூர் உறையும்
அண்ணா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.

தெளிவுரை : நெற்றியில் கண்ணுடைய நாதனே ! ஒளி வீசும் திருமேனியுடைய பெருமானே ! எண்ணத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருவெண்ணீற்றைப் பூசி அணியும் பரமனே ! எழில் மிக்க பொழிலும் உறுதியான மதில்களும் உடைய திருவான்மியூரில் வீற்றிருக்கும் அண்ணாவே ! என் மனமானது உன்னை அல்லாது வேறொன்றினைச் சாராது.

589. நீதீ நின்னையல்லால் நெறியாதும் நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள் மறையோன்தலை ஒன்றினையும்
சேதீ சேதமில்லாத் திருவான்மியூர் உறையும்
ஆதீ உன்னையல்லால் அடையாது எனது ஆதரவே.

தெளிவுரை : நடுநிலையில் இருந்து நீதி வழங்கும் நாதனே ! தேவரீரை அன்றி நான் வேறு நெறியினைச் சிந்தித்ததில்லை. வேதங்களை ஓதும் பரமனே ! பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்து, நான்முகனாக விளங்கச் செய்த பெருமானே ! எத்தகைய குறைவும் அடையாது, செழித்து ஓங்கும் திருவான்மியூரில் உறையும் ஆதியே ! உம்மையன்றி என் மனமானது வேறு எதனையும் நாடாது.

590. வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவரும்
கானார் ஆனையின்தோல் உரித்தாய் கறை மாமிடற்றாய்
தேனார் சோலைகள்சூழ் திருவான்மியூர் உறையும்
ஆனாய் உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.

தெளிவுரை : வானத்தில் பொருந்துகின்ற சிறந்த சந்திரனைச் சடை முடியில் சேர்த்து வைத்து இருப்பவரே ! காட்டில் உலவும் கரிய யானையின் தோலை உரித்த நீலகண்டனே ! தேன் துளிர்க்கும் மலர்களைக் கொண்ட சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரில் உறையும் நாதனே ! இடப வாகனத்தில் விளங்கும் ஈசனே ! என் மனமாவது தேவரீரை அல்லாது வேறு எதிலும் சார்ந்து நிற்காது.

591. பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்
நெறியார் நீள்கழல்மேல் முடிகாண்பரி தாயவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மியூர் உறையும்
அறிவே உன்னை யல்லால் அடையாதுஎனது ஆதரவே.

தெளிவுரை : படம் கொண்டு விளங்கும் நாகத்தைப் படுக்கையாகக் கொண்டுள்ள திருமாலும், தாமரைப் பூவில் உறையும் பிரமனும், நெறி காட்டும் உமது நீண்ட கழலையும், மேலோங்கும் முடியையும், காண்பதற்கு அரிதாகிய ஈசனே ! மதில் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருக்கின்ற பேர் அறிவே ! தேவரீரையன்றி என் மனமானது வேறொன்றையும் நாடாது.

592. குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்
திண்தேர் வீதியதார் திருவான்மி யூர்உறையும்
அண்டா உன்னை யல்லால் அடையாதுஎனது ஆதரவே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உண்மையான காரண கருத்துக்களை அறியாதவராய், உம்மைப் பேச வீற்றிருந்தீர். தேர் செல்லும் அகன்ற வீதிகளை நன்கு கொண்டு மேவும் திருவான்மியூரில் உறையும் அண்டர் நாயகனே ! தேவரீரையன்றி என் மனமானது வேறு எதனையும் நாடாது.

593. கன்றா ருங்கமுகின் வயல்சூழ்ந்த காழிதனில்
நன்றா னபுகழால் மிகுஞானசம் பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர் திருவான்மியூரதன்மேல்
குன்றாது ஏத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே.

தெளிவுரை : பாக்கு மரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து விளங்குகின்ற காழியில், நன்மைகள் மேவும் சைவ நெறியில் விளங்கிப் புகழ் கொண்டு திகழும் ஞானசம்பந்தன் உரை கொண்டு இடர் தீர்க்கும் திருவான்மியூரின்மேல் செப்பிய இத் திருப்பதிகத்தை ஏத்தி ஓத வல்லவர்களுக்குத் தீவினையானது விலகிச் செல்லும்.

திருச்சிற்றம்பலம்

314. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

594. இறையவன் ஈசன் எந்தை
இமையோர்தொழுது ஏத்த நின்ற
கறையமி கண்டன்வெண் தோடு
அணிகாதினன் காலத்தன்று
மறைமொழி வாய்மையினான்
மலையாளொடு மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான்
பிரமாபுரம் பேணுமினே.

தெளிவுரை : இறைவனாகிய ஈசன், என் தந்தை. அப்பெருமான், தேவர்களால் தொழப்படுபவர்; கழுத்தில் நஞ்சு அருந்திய கறையுடையவர்; சங்கினால் ஆன தோடு என்கிற அணியைக் காதில் கொண்டுள்ளவர்; உரிய காலத்தில் வேதங்களை உபதேசம் செய்தவர்; மலை மகளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; ஒளி தேவித் திகழும் செஞ்சடையில், பிறைச் சந்திரனை அணிந்துள்ளவர். அப்பெருமான், வீற்றிருக்கும் பிரமாபுரத்தை ஏத்துவீராக.

595. சடையினன் சாம வேதன்
சரிகோவண வன்மழுவாள்
படையினன் பாய்புலித்தோல்
உடையான் மறை பல்கலைநூல்
உடையவன் ஊனமில்லி
உடனாய்உமை நங்கையென்னும்
பெடையொடும் பேணும்இடம்
பிரமாபுரம் பேணுமினே.

தெளிவுரை : ஈசன், சடை முடி உடையவர்; சாமவேதன் என்னும் திருப்பெயர் பூண்டவர்; யாவராலும் மாறுபாடற்ற தன்மையில் விளங்கும் வேதத்தைக் கோவணமாகத் தரித்து இருப்பவர்; மழு என்னும் வாட்படை உடையவர்; புலியின் தோலை உடுத்தியவர்; வேதம் முதலான கலை நூல்களின் தலைவர்; எத்தகைய குறைபாடும் இல்லாதவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான் விரும்புகின்ற இடமாகிய பிரமாபுரத்தை ஏத்துக.

596. மாணியை நாடு காலனுயிர்
மாய்தரச் செற்றுக்காளி
காணிய ஆடல் கொண்டான்
கலந்து ஊர்வழி சென்று பிச்சை
ஊணியல் பாகக் கொண்டு அங்கு
உடனே உமைநங்கை யோடும்
பேணிய கோயில் மன்னும்
பிரமாபுரம் பேணுமினே.

தெளிவுரை : ஈசன், மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனின் உயிரை மாய்த்தவர்; காளி தேவி காணுமாறு திருநடனம் புரிந்தவர்; பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி, ஊர்தொறும் சென்று பிச்சை ஏற்று உணவைத் கொண்டவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; அப்பெருமான் விரும்பி இருக்கும் கோயில், சிறப்புடன் திகழும் பிரமாபுரம் ஆகும். அதனை ஏத்துமின்.

597. பாரிடம் விண்ணும் எங்கும்
பயில்நஞ்சு பரந்து மிண்டப்
பேரிடர்த் தேவர் கணம்
பெருமான் இதுகா எனலும்
ஓரிடத் தேகரந்து அங்கு
உமைநங்கை யொடும்உடனே
பேரிட மாகக் கொண்ட
பிரமாபுரம் பேணுமினே.

தெளிவுரை : மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் விரிந்து பரந்து நஞ்சின் வெம்மையால் தேவர்கள் இடர் கொண்டு நலிந்து, பெருமானே ! காப்பாற்றுவீராக என்று வேண்டித் துதிக்க, அந்த விடத்தை ஓரிடத்தில் சாருமாறு தருவித்துக் கொண்டு, கண்டத்தில் கரந்து அருள் புரிந்தவர், சிவபெருமான். அப் பரமன், உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருக்கும் பெருமை மிகுந்த இடமாவது, பிரமாபுரம் ஆகும். அதனை ஏத்துக.

598. நச்சரவச் சடைமேல்
நளிர் திங்களும் ஒன்றவைத்துஅங்கு
அச்சம்எழ விடைமேல்
அழகார் மழு ஏந்திநல்ல
இச்சை பகர்ந்தும டக
இடுமின் பலி என்றுநாளும்
பிச்சைகொள் அண்ணல் நண்ணும்
பிரமாபுரம் பேணுமினே.

தெளிவுரை : ஈசன், நஞ்சு கொண்டு மேவும் அரவத்தைச் சடை முடியின் மீது இருத்திக் குளிர்ச்சி மிக்க சந்திரனை அதனுடன் ஒன்றி இருக்குமாறு செய்தவர்; இடப வாகனத்தின் மீது அமர்ந்து, அச்சம் தரும் மழுப் படையை ஏந்தியவர்; விருப்பத்துடன் பலி இடுமாறு வேண்டு நாள்தோறும் பிச்சை ஏற்பவர். அவ் ஈசன் வீற்றிருக்குமச் பிரமாபுரத்தைப் பேணுவீராக.

599. பெற்றவன் முப்புரங்கள்
பிழையா வண்ணம் வாளியினால்
செற்றவன் செஞ்சடையில்
திகழ்கங்கை தனைத் தரித்திட்டு
ஒற்றை விடையினனாய்
உமை நங்கையொடும் உடனே
பெற்றிமை யால் இருந்தான்
பிரமாபுரம் பேணுமினே.

தெளிவுரை : ஈசன், இடப வாகனத்தை உடையவர்; மூன்று புரங்களைத் தப்பித்துச் செல்லாதவாறு ஒரு அம்பு செலுத்திச் சாம்பலாக்கியவர்; கங்கையைத் தரித்தவர்; ஒற்றை இடபத்தை உடையவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு பெருமையாக விளங்குபவர். அப் பெருமான் வீற்றிருக்கும் பிரமாபுரத்தைப் பேணுவீராக.

600. வேத மலிந்த வொலி
விழவின் னொலி வீணையொலி
கீத மலிந்துடனே
கிளரத்திகழ் பௌவமறை
ஓத மலிந்துயர் வான்
முகடேற வொண் மால்வரையான்
பேதையொடும் இருந்தான்
பிரமாபுரம் பேணுமினே.

தெளிவுரை : வேதங்களை ஓதுகின்ற ஒலியும், திரு விழாக்கள் நடைபெறுகின்ற ஒலியும், வீணையில் கீதங்களை இசைத்து மீட்டுகின்ற ஒலியும், ஒரு சேர எழுந்து கடலின் ஒலியை அடக்குகின்றவாறு, வானில் சென்று ஒலிக்க, பெருமையுடைய கயிலை மலையானாகிய சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருக்கும் பிரமாபுரத்தை ஏத்துவீராக.

601. இமையவர் அஞ்சி யோட
எதிர்வாரவர் தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன்
அடர்த்து மலை அன்று எடுப்பக்
குமையது செய்து பாடக்
கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு
உமையொடு இருந்தபிரான்
பிரமாபுரம் உன்னுமினே.

தெளிவுரை : இராவணனைக் கண்டு தேவர்கள் அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டனர். அவன், தன்னை எதிர்த்து நிற்பவர் இன்றிக் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த காலத்தில், ஈசன் திருப்பாத விரலால் சிறிது ஊன்ற, மலை அழுந்தி அவ் அரக்கனை நெரித்தது. மனம் வெதும்பி. உடல் சோர்ந்து துன்புற்று நலிந்த இராவணன், ஈசனைப் பாடிப் போற்ற, அவனுக்கு வீரவாளும், நீண்ட வாழ்நாளும் வரமாகக் கிடைத்தது. அத்தகைய வரத்தை நல்கிய சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருப்பது பிரமாபுரம் ஆகும். அதனை நினைத்து ஏத்துமின்.

602. ஞாலம் அளித்தவனும்
அரியும் அடி யோடுமுடி
காலம் பலசெலவும்
கண்டிலாமை யினால்கதறி
ஓலம் இடஅருளி
உமைநங்கை யொடும்உடனாய்
ஏல விருந்தபிரான் பிரமாபுரம் ஏத்துமினே.

தெளிவுரை : பூவுலகைப் படைத்த பிரமனும், திருமாலும் பலகாலம் ஈசனின் அடி முடியைத் தேடி அலைந்து, காண முடியாது அயர்ந்து பக்தியால் கதிறி ஓலம் இட்டனர். அத்தன்மையில் அவர்களுக்கு அருள் புரிந்த சிவபெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு பொருந்துமாறு வீற்றிருக்கும் இடம் பிரமாபுரம் ஆகும். அதனை ஏத்துமின்.

603. துவருறும் ஆடையினார்
தொக்க பீலியர் நக்கரையர்
அவரவர் தம்மைகள்கண்டு
அணுகேன்மின் னருள்பெறுவீர்
கவருறு சிந்தை யொன்றிக்
கழிகாலம் எல்லாம் படைத்த
இவர்அவர் என்றுஇறைஞ்சிப்
பிரமாபுரம் ஏத்துமினே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கொண்டுள்ள கொள்கைகளை அணுக வேண்டாம். இறைவனுடைய திருவருளில் நாட்டம் கொண்டு அதனைப் பெறுவதற்கு விரும்புவார்களே ! இக்காலத்தில் மட்டும் அல்லாது சென்ற காலத்திலும் எல்லாவற்றையும் தோற்றுவித்துக் காத்தருள் புரிபவர் சிவபெருமானே என்று சிந்தையில் தோய்ந்த விருப்பம் உடையவராய் வழிபடுவீராக. அப்பெருமான் வீற்றிருக்கின்ற பிரமாபுரத்தை ஏத்துவீராக.

604. உரைதரு நான்மறையோர்
புகழ்ந்து ஏத்த ஒண்மாதினொடும்
வறையென வீற்றிருந்தான்
மலிகின்ற பிரமபுரத்து
அரசினை யேத்தவல்ல
அணிசம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம்
எதிர்கொள்ள விரும்புவரே.

தெளிவுரை : பெரும் புகழுக் உரிய நான்மறை வல்ல பெருமக்களால் புகுழ்ந்து ஏத்த, ஒளி திகழ மேவும் உமாதேவியை உடனாகக் கொண்டு, மலை போன்று உறுதிப் பொருளாக விளங்குபவர் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் பிரமாபுரத்தின் அருளாட்சிச் சிறப்பினை, ஏத்திய ஞானசம்பந்தனின் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், கற்பகத் தரு முதலான நறு மணமலர்கள் பொலிந்து எழில் மேவும் தேவர் உலகத்தவர்களால், எதிர் கொண்டு வரவேற்கப்படுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

315. திருவொற்றியூர் (அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம்)
 
திருச்சிற்றம்பலம்

605. விடையவன் விண்ணு மண்ணும்
தொழநின்றவன் வெண்மழுவாள்
படையவன் பாய்புலித் தோல்
உடைகோவ ணம்பல்கரந்தைச்
சடையவன் சாம வேதன்
சசிதங்கி சங்கவெண்தோடு
உடையவன் ஊனமில்லி
உறையும் இடம் ஒற்றியூரே.

தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனத்தை உடையவர்; தேவர்களும் பூவுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவர்; ஒளி திகழும் மழுப் படையுடையவர்; புலித் தோலும் கோவணமும் உடையாகக் கொண்டவர்; பலவிதமான மலர்களைச் சடையில் சூடியவர்; சாமவேதன் என்னும் திருநாமத்திற்கு உரியவர்; சந்திரனைத் திருமுடியில் தாங்கி, சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் அணியைக் காதில் அணிபவர்; குறையேதும் இல்லாத குணக்குன்றாகிய அப்பெருமான், அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருக்கும் இடம், ஒற்றியூரே.

606. பாரிடம் பாணிசெய்யப்
பறைக்கட் செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடல்ஆடல்
இலயம்சிதை யாதகொள்கைத்
தாரிடும் போர்விடையன்
தலைவன்தலை யேகலனா
ஊரிடும் பிச்சை கொள்வான்
உறையும்இடம் ஒற்றியூரே.

தெளிவுரை : பூத கணங்கள் பண் இசைத்துப் பாடவும், பறைகள் கொட்டவும் பல்வேறு கணங்களையுடைய பேய்கள் பாடி ஆடவும், இலயம் கெடாதவாறு நிகழ்த்தும் திருக்கூத்தனைப் புரிபவர், ஈசன். இடப வாகனத்தை உடைய அப்பெருமான், படைத்தல் தொழில் மேவும் தலைவனாகிய பிரமனின் தலையைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு ஊரார் இடுகின்ற பிச்சை கொள்பவர். அவர் உறைவது ஒற்றியூரே.

607. விளிதரு நீரு மண்ணும்
விசும்போடு அனல் காலும்ஆகி
அளிதரு பேரருளால்
அரனாகிய ஆதிமூர்த்தி
களிதரு வண்டு பண்செய்
கமழ்கொன்றையி னோடுஅணிந்த
ஒளிதரு வெண்பிறையான்
உறையும்இடம் ஒற்றியூரே.

தெளிவுரை : ஈசன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களாக விளங்கி, மன்னுயிர்களுக்கு அன்புடன் அருளும் பேரருளானவர். அப்பெருமான், அரன் என்று சொல்லப்படுகின்ற ஆதிமூர்த்தி. வண்டுகள் பண் செய்யும் நறுமணம் கமழ்கின்ற கொன்றை மலருடன், பிறைச் சந்திரனைச் சூடி அவ் இறைவன் உறையும் இடமாவது ஒற்றியூரே.

608. அரவமே கச்சதாக
அசைத்தான் அலர் கொன்றையந்தார்
விரவிவெண் ணூல்கிடந்த
விரையார்வரை மார்பன் எந்தை
பிரவுவார் பாவம் எல்லாம்
பறைத்துப்படர் புன்சடைமேல்
உரவுநீர் ஏற்ற பெம்மான்
உறையும் இடம் ஒற்றியூரே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தை அரையில் கச்சாகக் கட்டியவர்; கொன்றை மாலை சூடியவர்; முப்புரி நூல் தரித்த மலை போன்ற திரு மார்பினர். எம் தந்தையாகிய அப் பெருமான், பரவி ஏத்தும் அடியவர்களின் பாவத்தைத் தீர்த்தருள்பவர். சடைமுடியில் கங்கையைத் தரித்த அக்கடவுள் உறையும் இடம், ஒற்றியூரே.

609. விலகினார் வெய்ய பாவம்
விதியால் அருள் செய்து நல்ல
பலகினார் மொந்தை தாளம்
தகுணிச் சமும் பாணியாலே
அலகினால் வீசி நீர்கொண்டு
அடிமேல் அலர் இட்டுமுட்டாது
உலகினார் ஏத்த நின்றான்
உறையும் இடம் ஒற்றியூரே.

தெளிவுரை : ஈசன், கொடிய பாவங்களிலிருந்து விடுபட்ட பக்குவப்பட்ட நன் மாந்தர்களுக்கு நல்லுபதேசம் செய்விப்பவராய்ப் பலவிதமான வாத்தியங்களும் சேர்ந்து முழங்க, பாடல்களை இசைத்துத் தூய நீர் கொண்டு அபிடேகம் செய்தும் மலரால் தூவி அருச்சித்தும் ஏத்தியும் வழிபட வீற்றிருக்கும் இடமாவது, ஒற்றியூரே.

610. கமையொடு நின்றசீரான்
கழலும் சிலம்பும் ஒலிப்பச்
சுமையொடு மேலும் வைத்தான்
விரிகொன்றையும் சோம னையும்
அமையொடு நீண்ட திண்டோள்
அழகாய பொற் றோடுஇலங்க
உமையொடும் கூடி நின்றான்
உறையும் இடம் ஒற்றியூரே.

தெளிவுரை : அமைதியும் சாந்தமும் விளங்கப் பொலியும் சிவபெருமான், கழலும் சிலம்பும் ஒலிக்க நடம் புரிபவர். திருமுடியின்கண் சந்திரனையும், கொன்றை மலரையும் தரித்த அப்பெருமான், நீண்ட அழகிய தோளழகு உடையவர்; காதில் அழகிய பொன்மயமான தோடு அணிந்தவர். அவர், உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது ஒற்றியூரே.

611. நன்றியால் வாழ்வதுள்ளம்
உலகுக்குஆரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலும்
கருமால் வரையே சிலையாப்
பொன்றி னார் வார்சுடலைப்
பொடிநீறு அணிந்தார் அழலம்பு
ஒன்றினால் எய்தபெம்மான்
உறையும் இடம் ஒற்றியூரே.

தெளிவுரை : ஈசன், உலகத்தில் உள்ளவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்னும் நற்குணத்தின் சிறப்பினால் மூன்று புரங்களையும் பெருமை வாய்ந்த மேரு மலையை வில்லாகக் கொண்டு, நெருப்பாகிய கணை ஒன்றினால் எய்து அழித்தவர். திருவெண்ணீறு அணிந்து பொலியும் அப்பெருமான் உறையும் இடம் ஒற்றியூரே.

612. பெற்றியால் பித்தன் ஒப்பான்
பெருமான் கரு மானுரி தோல்
சுற்றியான் சுத்தி சூலம்
சுடர்க்கண்ணுதல் மேல்விளங்கத்
தெற்றியாற் செற்றரக்கன்
உடலைச் செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றும் ஆள்வான்
உறையும் இடம் ஒற்றியூரே.

தெளிவுரை : இயல்பால் பித்தனைப் போன்று விளங்கும் சிவபெருமான், மானின் தோலை உடுத்தியிருப்பவர்; நெருப்புக் கண்ணை நெற்றியில் கொண்டு விளங்குபவர்; கயிலை மலையைத் தெற்றிப் பெயர்த்த இராவணனை மலையின்கீழ் நெரியுமாறு நலியச் செய்தவர்; அடியவர்களை முழுமையாக ஆட்கொண்டு  அருள் புரிபவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது ஒற்றியூரே.

613. திருவினார் போதினானும்
திருமாலுமொர் தெய்வம் உன்னித்
தெரிவினாற் காண மாட்டார்
திகழ்சேவடி சிந்தை செய்து
பரவினார் பாவம் எல்லாம்
பறை யப்படர் பேரொளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான்
உறையும் இடம் ஒற்றியூரே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தெய்வத்தைக் காண வேண்டும் என நினைத்துத் தெரிந்தது போலக் கருதிச் சென்று பார்க்க முனைந்த போது, காண முடியாதவர்களாய் அயர்ந்து நிற்க; பின்னர் சிந்தனை செய்து பரவி ஏத்தப் பேரொளியாகக் திகழ்ந்தவர், சிவபெருமான். அத்தகைய பேரொளியாகிய பரமன், பரவும் அடியவர்தம் பாவங்களைக் களைந்து உறையும் இடம் ஒற்றியூரே.

614. தோகையம்பீலி கொள்வார்
துவர்க் கூறைகள் போர்த்து உழல்வார்
ஆகம செல்வணாரை
அலர் தூற்றதல் காரணமாகக்
கூகையம் மாக்கள் சொல்லைக்
குறிக் கொள்ளன்மின் ஏழுலகும்
ஓகை தந்தாள வல்லான்
உறையும்இடம் ஒற்றியூரே.

தெளிவுரை : மயில் தோலை கொண்டுள்ள சமணரும், துவர் ஆடையைப் போர்த்திய சாக்கியரும், ஆகம நெறியில் பூசிக்கப் பெறும் செல்வராகிய சிவபெருமானைப் பழித்துக் கூறும் சொற்களை ஏற்க வேண்டாம். ஏழுலகமும் மகிழுமாறு ஆட்கொள்ள வல்லராகிய அப்பெருமான் வீற்றிருக்கும் இடம், ஒற்றியூரே. அதனை ஏத்துமின்.

615. ஒண்பிறை மல்குசென்னி
இறைவன் உறை ஒற்றியூரைச்
சண்பையர்தம் தலைவன்
தமிழ்ஞான சம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல் பத்தும்
பரவிப் பணிந்து ஏத்தவல்லார்
விண்புனை மேலுலகம்
விருப்பெய்துவர் வீடுஎளிதே.

தெளிவுரை : ஒளிமிக்க பிறைச் சந்திரனைத் திருமுடியில் தரித்த சிவபெருமான் உறைகின்ற ஒற்றியூரைச் சண்பை என்னும் காழியின் தலைவனாகி தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன, பண்ணின் வளம் திகழும் இத் திருப்பதிகத்தைப் பரவியும் பணிந்தும் ஏத்தவல்லவர்கள், மறுமையில் விண்ணுலகத்தில் அழகுடன் விளங்கி இருந்து, முத்திப் பேற்றை எளிதாக எய்துவார்கள்.

திருச்சிற்றம்பலம்

316. திருச்சாத்தமங்கை (அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

616. திருமலர்க் கொன்றைமாலை
திளைக்கும் மதி சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணி தன்னோடு
உடனாவதும் ஏற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேகம்
உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை
அருமலர் ஆதிமூர்த்தி
அயவந்தி அமர்ந்தவனே.

தெளிவுரை : சிறப்பான கொன்றை மலரை மாலையாகக் கொண்டு மகிழும் தேவரீர், சந்திரனைத் தலையில் வைத்து விளங்குபவர்; தாமரை மலர் போன்ற கண்ணுடைய உமாதேவியோடு இணைந்து பாகத்தில் ஏற்று, அர்த்தநாரி திருக்கோலத்திலும் வேறாகத் திகழ, உடன் கொண்டு விளங்குமாறும் வீற்றிருப்பவர். அத்தகைய ஒப்பற்றவராயும் அருமை உடையவராயும் மேவும் ஆதிமூர்த்தி, பெருமையுடைய மலர்களைத் தரும் எழிலுடைய பெருஞ்சாத்த மங்கையில் உள்ள அயவந்தீசத்தில் உறைபவர் ஆவர்.

617. பொடிதனைப் பூசுமார்பில்
புரிநூல் ஒரு பால்பொருந்தக்
கொடியன சாயலாளோடு
உடனாவதும் கூடுவதே
கடிமண மல்கிநாளும்
கமழும் பொழில் சாத்தமங்கை
அடிகள் நக் கன்பரவ
அயவந்தி அமர்ந்தவனே.

தெளிவுரை : சிவபெருமான், திருவெண்ணீறு பூசி, திருமார்பில் முப்புரி நூலை அணிந்த, பூங்கொடி போன்ற மென்மையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, அர்த்தநாரியாகவும் திகழ்பவர். நறுமண பொழில் விளங்கும் சாத்தமங்கையில், அப்பெருமான் திருநீலநக்க நாயனாரால் ஏத்தி வழிபட அயவந்தீசத்தில் அமர்ந்துள்ளவர்.

618. நூல் நலம் தங்குமார்பில்
நுகர் நீறு அணிந்து ஏறதுஏறி
மானன நோக்கி தன்னோடு
உடனாவது மாண்பதுவே
தானலங் கொண்டு மேகம்
தவழும் பொழிற் சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்த எம்மான்
அயவந்தி அமர்ந்தவனே.

தெளிவுரை : முப்புரி நூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீற்றைக் குழையப் பூசி, இடப வாகனத்தில் ஏறி, உமாதேவியை ஒரு பாகத்தில் இணைத்து, அர்த்தநாரியாகவும் உடனாகக் கொண்டு வேறாய் விளங்கியும் திகழ்பவர், சிவபெருமான். அப்பெருமான், பொழில் சூழ்ந்த சாத்த மங்கையில், ஆவின் நலம் பெருகும் பஞ்ச கௌவியத்தைத் திருமஞ்சனமாகக் கொண்டு, அயவந்தீசத்தில் வீற்றிருப்பவர்.

619. மற்றவில் மால்வரையா
மதில்எய்து வெண் ணீறுபூசிப்
புற்றர அல்குலா ளோடு
உடனாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை
நகர் கைதொழச் செய்தபாவம்
அற்றவர் நாளும் ஏத்த
அயவந்தி அமர்ந்தவனே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எய்து சாம்பலாகுமாறு செய்து, தேவர்களைக் காத்தருள் புரிந்த சிவபெருமான், திருவெண்ணீறு அணிந்தவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு, பாகமாகப் பெற்று அர்த்த நாரியாகவும் திகழ்பவர். இவை அப்பெருமானின் சிறப்புடைய செயல்களாகும். அவர், கற்றவர்களும் பாவம் அற்றவர்களும் விளங்குகின்ற சாத்த மங்கையில் மேவும் அயவந்தீசத்தில் வீற்றிருப்பவர்.

620. வெந்தவெண் ணீறுபூசி
விடையேறிய வேதகீதன்
பந்தண வும்விரலாள்
உடனாவதும் பாங்கதுவே
சந்தமா றங்கம் வேதம்
தரித்தார் தொழும் சாத்தமங்கை
அந்தமாய் ஆதியாகிய
அயவந்தி அமர்ந்தவனே.

தெளிவுரை : ஈசன் திருவெண்ணீறு பூசி, இடப வாகனத்தில் அமர்ந்து, உமாதேவியை உடனாகக் கொண்ட வீற்றிருக்கும் வேத கீதனாவார். அவர், வேதமும், அதன் ஆறங்கமும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற சாத்தமங்கையில், ஆதியும் அந்தமும் திகழும் மூர்த்தியாய் விளங்குபவர். அப் பெருமான் அயவந்தி என்னும் இடத்தில் வீற்றிருப்பவர்.

621. வேதமாய் வேள்வியாகி
விளங்கும் பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகம்
நிலைதான் சொல்லல் ஆவதொன்றே
சாதியான் மிக்கசீரால்
தகுவார் தொழும் சாத்தமங்கை
ஆதியாய் நின்ற பெம்மான்
அயவந்தி அமர்ந்தவனே.

தெளிவுரை : ஈசன், வேதமாய் விளங்குபவர்; வேத முறையால் விளங்கும் வேள்வியாகவும், ஞான வேள்வியாகவும் திகழ்பவர்; ஒண் பொருளாகவும் முத்திப் பேறாகவும் உள்ளவர். சோதியாயும், உமாதேவியை ஒரு பாகமாகவும் கொண்ட விளங்குபவர். அப் பெருமானை, இத் தன்மையுடையவர் என்று வாயினால் சொல்வது ஆகக்கூடிய செயலாகுமோ ! அத்தகைய சிறப்புடைய பெருமான், தக்கவர்கள் தொழுகின்ற சாத்தமங்கையில் ஆதிமூர்த்தியாய் அயவந்தியில் அமர்ந்திருப்பவரே.

622. இமயமெல் லாம்இரிய
மதில்எய்துவெண் ணீறுபூசி
உமையையொர் பாகம்வைத்த
நிலை தானுன்னல் ஆவதொன்றே
சமயமா றங்கம் வேதம்
தரித்தார்தொழும் சாத்தமங்கை
அமையவேறு ஓங்குசீரான்
அயவந்தி அமர்ந்தவனே.

தெளிவுரை : இமயம் முதலான பெரிய மலைகளும் நிலை கலங்குமாறு முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மேவும் சிவபெருமானுடைய பெரிய நிலையினைப் பாராட்டிப் பேசுவது என்பது ஆகக்கூடிய செயலாகுமோ ! வேதத்தையும், அதன் ஆறு அங்கங்கள் முதலான சமய நூல்களையும் நன்கு ஆய்ந்து அறிந்த பெருமக்களால் தொழப்படும் சாத்த மங்கையில் ஓங்கும்கின்ற சிறப்புடன் திகழும் ஈசன், அயவந்தியில் வீற்றிருப்பவரே.

623. பண்ணுலாம் பாடல்வீணை
பயில்வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான்
மகள் பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியும்
தவழும்பொழில் சாத்தமங்கை
அண்ணலாய் நின்றஎம்மான்
அயவந்து அமர்ந்தவனே.

தெளிவுரை : சிவபெருமான், பண்ணின் இசை விளங்க வீணை மீட்டிப் பாடுபவர்; பரமயோகியானவர்; மலைக்கு அதிபனாகிய பர்வதராசனின் மகளாகிய பார்வதியை ஒரு பாகமாகக் கொண்டு திகழ்ந்தவர். அப்பெருமான், குளிர்ச்சி பொருந்திய வெண் மதி தோயும் பொழில் சூழ்ந்த சாத்தமங்கையில் தலைவனாய் விளங்கி அயவந்தீசத்தில் அமர்ந்திருப்பவர்.

624. பேரெழில் தோளரக்கன்
வலிசெற்றதும் பெண்ணோர்பாகம்
ஈரெழிற் கோலமாகி
உடனாவதும் ஏற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு
கனகம் அனை யானும் காணா
ஆரழல் வண்ண மங்கை
அயவந்தி அமர்ந்தவனே.

தெளிவுரை : எழில் கொண்ட தோளினால் மலையைப் பெயர்த்த இராவணனுடைய வலிமையை அடக்கிய சிவபெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு, தனித்தனியேயும், பாகத்தில் இணைந்து அர்த்தநாரியாயும் ஆகிய வண்ணத்தில் காட்சி நல்குபவர். அப்பெருமான், திருமாலோடு பிரமனும் தன்னைக் காண முடியாதவாறு, தீத்திரட்சியாய் மேவிச் சாத்த மங்கையில் செவ்வண்ணனாய் அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருப்பவரே.

625. கங்கையோர் வார்சடைமேல்
அடையப்புடை யேகமழும்
மங்கையோடு ஒன்றிநின்றஅம்
மதிதான் சொல்லல் ஆவதொன்றே
சங்கையில் லாமறையோர்
அவர்தாம் தொழு சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தாய்
அயவந்தி அமர்ந்தவனே.

தெளிவுரை : ஈசனே ! கங்கையை நீண்ட சடை முடியில் கொண்டு விளங்குவதும், பக்கத்தில் மணம் மிகும் உமாதேவியை ஒன்ற வைத்து அர்த்தநாரியாய்த் திகழ்வதும் ஆகிய செம்மையுடைய அருஞ்செயல் சொல்லி முடியக்கூடய ஒன்றோ ! வேதங்களை நன்கு தெளிவாகக் கற்ற அந்தணர்கள் தொழுகின்ற சாத்த மங்கையில், கபாலம் ஏந்திய பெருமானாய் விளங்கும் தேவரீர், அயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருப்பவர்.

626. மறையினார் மல்குகாழித்
தமிழ்ஞானசம் பந்தன் மன்னும்
நிறையினார் நீலநக்கன்
நெடுமாநகர் என்று தொண்டர்
அறையும்ஊர் சாத்தமங்கை
அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும்
முறைமையால் ஏத்த வல்லார்
இமையோரிலும் முந்துவாரே.

தெளிவுரை : மறை வல்ல பெரியோர்கள் விளங்கும் காழியின் தமிழ் ஞானசம்பந்தன், சிறப்பின் மிக்க நிறை உடையவராகிய நீல நக்கருடைய திருநகர் என்று திருத்தொண்டர்களால் ஏத்தப் பெறும் சாத்தமங்கையில் மேவும் அயவந்தி என்னும் திருக்கோயிலின்மேல் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓது வல்லவர்கள், தேவர்களைவிட மேலானவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

317. திருக்குடமூக்கு (அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

627. அரவிரி கோடல்நீடல் அணிகாவிரி யாற்றயலே
மரவிரி போது மௌவல் மணமல்லிகை கள்ளவிழும்
குரவிரி சோலைசூழ்ந்த குழகன் குடமூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி இருந்தான்அவன் எம்மிறையே.

தெளிவுரை : கோடல் மலர் விளங்கும் அழகிய காவிரியின் அருகில் முல்லை மல்லிகை மலரும், தேன் துளிர்க்கும் குராமலரும் திகழும் குடமூக்கினை இடமாகக் கொண்டு அழகனாகிய சிவபெருமான், இரவில் திகழும் சந்திரனைச் சூடி வீற்றிருப்பவர். அப்பெருமானே எமது இறைவன்.

628. ஓத்துஅர வங்களோடும் ஒலிகாவிரி யார்த்தயலே
பூத்துஅர வங்களோடும் புகைகொண்டடி போற்றிநல்ல
கூத்துஅர வங்கள்ஓவாக் குழகன்குட மூக்குஇடமா
ஏத்துஅர வங்கள்செய்ய இருந்தான்அவன் எம்இறையே.

தெளிவுரை : வேதங்கள் ஓதும் ஒலியோடு, காவிரி ஆற்று வெள்ளத்தில் ஒலியும் இணைந்து பரவ, மலர்ச் சோலைகளில் பூத்த மலர்களைக் கொண்டு ஏத்தித் தூப தீங்களைக் காட்டி அரநாமத்தை ஓதி உரைத்துப் போற்றித் துதி செய்து விளங்க, ஆரவாரத்துடன் திருக்கூத்து புரியும் அழகனாகய சிவபெருமான், குடமூக்கினை இடமாகக் கொண்டு வீற்றிருக்கின்றார். அப்பெருமானை, எல்லாரும் அர அர என ஓதி ஆரவாரித்தும், மெய்ப் புகழ் கூறியும் வணங்குகின்றனர். அவர் எம் கடவுள் ஆவார்.

629. மயில்பெடை புல்கியால மணல்மேல் மடஅன்னம் மல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழங்கள் விரிப்பைம்பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாடல் உடையாண்குடை மூக்கிடமா
இயலொடு வானம்ஏத்த இருந்தான்அவன் எம்இறையே.

தெளிவுரை : ஆண் மயிலானது, பெண் மயிலோடு சேர்ந்து ஆடவும், அன்னப் பறவைகள் காவிரிக் கரையில் விளங்கும் மணலின் மீது நடை பயிலவும், வண்டினம் பண் செய்யும் பைம்பொழிலின்கண் குயிலானது பெடையோடு சேர்ந்து பாடலை இசைத்து விளங்கவும், குடமூக்கில் ஈசன் வீற்றிருப்பவர். வானவர்கள் ஏத்துமாறு இருக்கும் அப் பெருமானே எம் இறைவன் ஆவார்.

630. மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துஉமை யாள்வெருவ
அக்குஅரவு ஆமை யேன மருப்போடுஅவை பூண்டழகார்
கொக்கரை யோடுபாடல் உடையான்குட மூக்கிடமா
எக்கரை யாரும்ஏத்த இருந்தான் அவன் எம்இறையே.

தெளிவுரை : சிவபெருமான், புலியின் தோலை உரித்து நன்கு தாழ, அரையில் கட்டியவர்; உமாதேவி வெருவுமாறு எலும்பு, பாம்பு, ஆமை ஓடு, பன்றியின் கொம்பு ஆகியவற்றை அணியாகக் பூண்டு, கொக்கரை என்னும் வாத்தியம் பொருந்தப் பாடுபவர். அப்பெருமான், குடமூக்கை இடமாகக் கொண்டு அனைவரும் ஏத்த விளங்குபவர். அவர் எம் இறைவன்.

631. வடிவுடை வாள்தடங்கண் உமையஞ்ச வோர் வாரணத்தைப்
பொடியணி மேனிமூட உரிகொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடம்ஓங்கும் குழகன்குட மூக்கிடமா
இடிபடு வானம்ஏத்த இருந்தான்அவன் எம்இறையே.

தெளிவுரை : அழகிய ஒளி திகழும் அகன்ற கண்ணுடைய உமாதேவியார் அஞ்சுமாறு யானையின் தோலை உரித்துத் தனது திருவெண்ணீறு திகழும் மேனியில் போர்த்திய சிவபிரான், சடை முடியுடையவராய்க் கொடிகள் திகழும் நெடிய மாட மாளிகைகள் விளங்கும் குழகனாய்க் குடமூக்கின்கண், வானவர்கள் ஏத்திப் பரவுமாறு இருப்பவர். அப்பெருமான் எம் இறைவன் ஆவார்.

632. கழைவளம் கவ்வை முத்தம் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளம் மாவின்நல்ல பலவின்கனி கள்தங்கும்
குழைவளம் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தான் அவன் என்இறையே.

தெளிவுரை : முற்றிய மூங்கில்களின் வாயிலாக வெளிப்படும் முத்துக்கள் விரவும் காவிரி ஆற்றின் மருங்கில், மாங்கனிகளும் பலாவின் கனிகளும் பெருகும் சோலைகள் சூடி, சிவபெருமான் குடமூக்கினைத் தலமாகக் கொண்டு உமாதேவி உடனாகித் திகழ் வீற்றிருப்பவர். அப் பெருமான் எம் இறைவன் ஆவார்.

633. மலைமலி மங்கைபாகம் மகிழ்ந்தான்எழில் வையம்உய்யச்
சிலைமலி வெங்கணையாற் சிதைத்தான்புற மூன்றினையும்
குலைமலி தண்பலவின் பழம் வீழ்குட மூக்கிடமா
இலைமலி சூலம்ஏந்தி இருந்தான்அவன் எம்இறையே.

தெளிவுரை : மலை மகளாகிய உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு மகிழ்ந்து விளங்கும் சிவபெருமான், எழில் மிக்க இவ்வுலகம் உய்யுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கணையாக்கித் தொடுத்து, மூன்று புரங்களையும் சிதைத்தவர். பலாக் கனிகள் தாமாகவே கனிந்து வீழும் வளப்பத்தையுடைய குடமூக்கில் மேவும் அப் பெருமான், சூலப்படையை ஏந்தியவர். அவர் எம் இறைவன் ஆவார்.

634.நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக் கன்னுடலைப்
படுமிடர் கண்டயர்ப் பருமால்வரைக் கீழடர்த்தான்
கொடுமடல் தங்குதெங்கு பழமவீழ்குட மூக்கிடமா
இடுமணல் எக்கர்சூழ இருந்தான்அவன் எம்இறையே.

தெளிவுரை : நீண்ட முடிகள் பத்துடைய அரக்கனாகிய இராவணனுடைய உடலானது, இடர் கொண்டு நலியுமாறு கயிலை மலையின்கீழ் அடர்த்து விளங்கிய சிவபெருமான், வளைந்த மடல்களை உடைய தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள் விழும் குட மூக்கில் வீற்றிருப்பவர். அப்பெருமான் எம் இறைவன் ஆவார்.

635. ஆரெரி ஆழியானும் மலரானும் அளப்பரிய
நீரிரி புன்சடைமேல் நிரம்பா மதிசூடிநல்ல
கூரெரி யாகிநீண்ட குழகன்குட மூக்கிடமா
ஈருரி கோவணத்தோடு இருந்தான்அவன் எம்இறையே.

தெளிவுரை : நெருப்பினை உமிழ்ந்து மாற்றாரை அழிக்க வல்ல சக்கரப் படையுடைய திருமாலும், தாமரை மலரின் மீது விளங்கும் பிரமனும், அளப்பதற்கு அரியவராகிய சிவபெருமான், கங்கை திகழும் சடை முடியின் மீது, பிறைச் சந்திரனைச் சூடி விளங்குபவர். அப் பெருமான் உயர்ந்து ஓங்கி எரியும் சோதியாகிய அழகர். அப் பரமன் குடமூக்கினை இடமாகக் கொண்டு தோலும் கோவண ஆடையும் கொண்டு வீற்றிருப்பவர். அவர் எம்

636. மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டமணர்
நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்
கூடிய குன்றம்எல்லாம் உடையான்குட மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி இருந்தான்அவன் எம்இறையே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் கூறுவன பயனற்றவை. தேவர்கள் விரும்பி ஏத்தி வழிபட நன்னலத்தை அருளும் சிவபெருமான், மன்னுயிரைக் குன்றவைக்கும் தீவினையால் வரும் குற்றங்களை நீக்கி அருள் புரிபவர். அப் பெருமான், கொன்றை மலரைச் சூடிக் குடமூக்கினை இடமாகக் கொண்டு விளங்குபவர் அவர் எமது இறைவன்.

637. வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்றசீரான் தமிழ்ஞானசம் பந்தனல்ல
தண்குட மூக்குஅமர்ந்தான் அடிசேர் தமிழ்பத்தும் வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடுஎளிதே.

தெளிவுரை : ஒளி திகழ்கின்ற கொடிகளையுடைய மாட மாளிகைகள் பெருமையுடன் திகழும் வெங்குரு எனப்படும் காழி நகரில் விளங்குபவராகி, அனைவரிடத்திலும் நட்புக் கொண்டு சீர் மி உடையவராகித் தமிழில் வல்லவராய்த் திகழும் ஞானசம்பந்தன், நன்மையும் தண்மையும் உடைய குடமூக்கில் அமர்ந்த ஈசனின் திருவடியைச் சேரும் தமிழாக, இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தனர். இதனை ஓத வல்லவர்கள் உயர்ந்து மேவும் விண்ணுலகத்தை நண்ணுவார்கள். அவர்களுக்கு முத்திப் பேறு எளிதாகக் கைகூடும்.

திருச்சிற்றம்பலம்

318. திருவக்கரை (அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

638. கறையணி மாமிடற்றான் கரிகாடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினான் ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன் றன்தலையில் பலிகொள்பவன் வக்கரையில்
உறைபவன் எங்கள்பிரான் ஒலியார்கழல் உள்குதுமே.

தெளிவுரை : ஈசன், நஞ்சினை அருந்திய கறை பொருந்திய கண்டத்தை உடையவர்; சுடுகாட்டினை, நடம் பயிலும் அரங்காக உடையவர்; பிறைச் சந்திரனையும் கொன்றை மலரையும் அணிந்தவர்; உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு விளங்குபவர்; பிரமனின் தலையினைக் கொய்து கபாலபாக ஏந்திப் பிச்சை கொள்பவர். அப்பெருமான், எங்கள் பிரானாய்த் திருவக்கரையில் வீற்றிருக்க, அவர்தம் திருவடியைக் தியானம் செய்வீராக.

639. பாய்ந்தவன் காலனைமுன் பணைத்தோளியொர் பாகமதா
ஏய்ந்தவன் எண்ணிறந்தவ் இமையோகள் தொழுது இறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடையானடி செப்புதுமே.

தெளிவுரை : ஈசன, காலனைப் பாய்ந்து காலால் உதைத்தவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; எண்ணற்ற தேவர்களால் தொழுது போற்றப்படுபவர்; முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். பிறைச் சந்திரனைச் சடைமுடியில் சூடித் திருவக் கரையில் வீற்றிருக்கும் அப்பெருமானின் திருவடியை ஏத்தி வணங்குவோமாக !

640. சந்திர சேகரனே அருளாய்என்று தண்விசும்பில்
இந்திர னும்முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச
அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓர்அம்பினால்
மந்தர மேருவில்லா வளைத்தான்இடம் வக்கரையே.

தெளிவுரை : சந்திரனைச் சடை முடியின்கண் சூடி மேவும் சிவபெருமானே ! அருள் புரிவீராக ! என்று விண்ணுலகத்தில் விளங்கும் இந்திரன் முதலான தேவர்கள் தொழுது ஏத்தி வேண்டுதல் புரிய, அந்தரத்தில் திரிந்து கேடுகளை விளைவித்த மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு, மேரு மலையை வில்லாகக் கொண்டு வளைத்து ஓர் அன்பினால் எய்தவர், ஈசன். அவருடைய இடமாவது திருவக்கரையாகும்.

641. நெய்யணி சூலமொழி நிறைவெண்மழு வும்மரவும்
கையணி கொள்கையினான் கனல்மேவிய ஆடலினான்
மெய்யணி வெண்பொடியான் விரிகோவண ஆடையின்மேல்
மையணி மாமிடற்றான் உறையும்இடம் வக்கரையே.

தெளிவுரை : நெய் தடவப் பெற்ற சூலமும், மழுவும் படையாகக் கொண்டு திகழும் சிவபெருமான், அரவத்தைக் கையில் ஆபரணமாகக் கொண்டுள்ளவர்; நெருப்புக் கனலைக் கையில் ஏந்தி நடம் புரிபவர்; திருமேனியில் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; விரித்து ஓதப் பெறும் வேதங்களைக் கோவணமாகக் கொண்டுள்ளவர். அப் பெருமான், கரிய கண்டத்தை உடையவராய் வீற்றிருக்கும் இடமாவது, திருவக்கரை ஆகும்.

642. ஏனவெண் கொம்பினொடும் இளவாமையும் பூண்டுகந்து
கூனிள வெண்பிறையும் குளிர்மத்தமும் சூடிநல்ல
மானன மென்விழியா ளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.

தெளிவுரை : பன்றியின் கொம்பும் ஆமையின் ஓடும் அணிகலனாகக் கொண்டு, வளைந்த பிறைச் சந்திரனும், ஊமத்தம் மலரும் மூடி, நல்ல மான் விழியன்ன விழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, வக்கரை என்னும் திருத்தலத்தில் மேவிய பெருமான், அசுரர்களின் முப்புரங்கள் சாம்பலாகுமாறு எரி செய்த முதன்மையானவர் ஆவார்.

643. கார்மலி கொன்றையொடும் கதிர்மத்தமும் வாளரவும்
நீர்மலி யும்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
வார்மலி மென்முலையா ளொடும் வக்கரை மேவியவன்
பார்மலி வெண்தலையிற் பலிகொண்டுழல் பான்மையனே.

தெளிவுரை : கார் காலத்தில் மலர்ந்து பெருகும் கொன்றை மலரும், பாம்பும், கங்கையும் சடை முடியின் மீது விளங்கித் திகழ, அதனுடன் பிறைச்சந்திரனைச் சூடிய சிவபெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு திருவக்கரையில் விளங்குபவர். அவர், பிரம கபாலம் ஏந்திப் பலி ஏற்று உலவும் தன்மை உடையவர்.

644. கான்அண வும்மறியமான ஒரு கையதோர் கைமழுவாள்
தேன்அணவும் குழலாள் உமைசேர்திரு மேனியனான்
வான்அணவும் பொழில்சூழ் திருவக்கரை மேவியவன்
ஊன்அணவும் தலையிற் பலிகொண்டுழல் உத்தமனே.

தெளிவுரை : கானகத்தில் மேவும் மானை ஒரு கையில் ஏந்தி, மழுவாகிய ஒளி திகழும் படையினையும் ஏந்தித் தேன் மணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொள்ளும் சிவபெருமான், வானை அணுகும் உயுர்ந்த பொழில் சூழ்ந்த திருவக்கரையில் வீற்றிருப்பவர். அப் பெருமான் பிரம கபாலத்தை ஏந்திப் பிச்சை ஏற்று உலவும் உத்தமனே.

645. இலங்கையர் மன்னனாகி எழில்பெற்ற இராவணனைக்
கலங்கவோர் கால்விரலாற் கதிர்பொன்முடி பத்துஅலற
நலங்கெழு சிந்தையனாய் அருள் பெற்றுலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவேல் உடையானிடம் வக்கரையே.

தெளிவுரை : இலங்கையின் மன்னனாகிய இராவணன் கலங்குமாறு திருப்பாதத்தில் ஒரு விரலால் கயிலை மலையை அழுத்தி, முடிகள் பத்தும் அலறுமாறு செய்தவர், சிவபெருமான். அவ்வரக்கன் நற்சிந்தை கொண்டு போற்றி ஏத்த நன்கு அருள் செய்த அவர், சூலப் படை கொண்டு வீற்றிருக்கும் இடமாவது, திருவக்கரையே.

646. காமனை ஈடழித்திட்டு அவன்காதலி சென்றிரப்பச்
சேமமே உன்றனக்கு என்று அருள்செய்தவன் தேவர்பிரான்
சாமவெண் தாமரைமேல் அயனும் தரணியளந்த
வாமனனும் அறியா வகையான்இடம் வக்கரையே.

தெளிவுரை : மன்மதனுடைய பெருமை மிக்க தேகத்தை எரித்துச் சாம்பலாக்கி பின்னர் அவனுடைய தேவியானவள் இரந்து வேண்டிப் பிரார்த்திக்க அருள் புரிந்தவர், தேவர்களுக்கெல்லாம் கடவுளாகிய சிவபெருமான், தாமரைமேல் திகழும் சாமம் முதலான வேதங்களை ஓதுகின்ற பிரமனும், உலகினை அளந்த சோதியாகிய அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, திருவக்கரையே.

647. மூடிய சீவரத்தர் முதிர்பிண்டியர் என்றுஇவர்கள்
தேடிய தேவர்தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக்கென்றுபால் வீதிதொறும்
வாடிய வெண்தலை கொண்டு உழல்வான்இடும் வக்கரையே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் தேடுகின்ற தேவராலும் போற்றப்படும் தேவர்தம் தலைவராகிய ஈசன், நான்கு மறைகளையும் அருளிச் செய்து, வீதி தோறும் சென்று, பலி ஏற்றவர். அப்பெருமான், பிரம்மகபாலம் கொண்டு விளங்குகின்ற இடமாவது திருவக்கரையே.

648. தண்புனலும் அரவும் சடைமேலுடை யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகார் இறைவன் உறை வக்கரையைச்
சண்பையர் தம்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல் வல்லார் அவர்தம் வினை பற்றறுமே.

தெளிவுரை : கங்கையும், பாம்பும் சடை முடியில் விளங்கத் திகழும் சிவபெருமான் உறையும் பொழில் சூழ்ந்த திருவக்கரையைச் சண்பை நகர் எனப்படும் சீகாழியின் தலைவனாகிய தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன பண்ணிசை உடைய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வினை அற்றவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

319. திருவெண்துறை (அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

649. ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன்
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்
போதிய லும்முடிமேல் புனலோடுஅர வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும்இடம் வெண்டுறையே.

தெளிவுரை : சிவபெருமான், ஆதிமூர்த்தியானவர்; ஆதிரை என்னும் விண்மீனுக்கு உரியவர்; எரியும் நெருப்பைக் கையில் ஏந்தித் திருநடம் புரியும் மேலான அழகர்; தமது அங்கத்தின் ஒரு பாதியாய் உமாதேவியை ஏற்று மகிழ்ந்து விளங்குகின்ற பரம் பொருள்; கொன்றை முதலான மலர்களைச் சூடிய முடியின் மீது கங்கையும், பாம்பும் அழகுடன் பொருந்துமாறு புனைந்த வேதநாயகர். அப்பெருமான் காதலால் விரும்பி வீற்றிருக்கின்ற இடமாவது, வெண்டுறை ஆகும்.

650. காலனை ஓருதையில் உயிர்வீடுசெய் வார்கழலான்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்
மாலைமதி யொடுநீர் அரவம்புனை வார்சடையான்
வேலன கண்ணியொடும் விரும்பும்இடம் வெண்டுறையே.

தெளிவுரை : கூற்றுவனைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்த சிவபெருமான், பால், நெய், தயிர் ஆகிய பஞ்ச கௌவியத்தால் பூசிக் பெறுபவராய் பண்டரங்கம் என்னும் திருக்கூத்து புரிபவர். அப் பெருமான், சந்திரனையும் கங்கையையும் பாம்பையும் அழகு மிளிரச் சடை முடியில் புனைந்து, வேல் போன்ற கண்ணுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விரும்பி வீற்றிருக்கும் இடமாவது, வெண்துறையே.

651. படைநவில் வெண்மழுவான் பலபூதப் படையுடையான்
கடைநவில் மும்மதிலும் எரியூட்டிய கண்ணுதலான்
உடைநவி லும்புலித்தோல் உடையாடை யினான்கடிய
விடைநவி லும்கொடியான் விரும்பும்இடம் வெண்டுறையே

தெளிவுரை : சிவபெருமான், மழுப்படை உடையவர்; பல வகையான பூதங்களை படை வீரர்களாகக் கொண்டுள்ளவர்; கீழ்த் தன்மையாகக் கருதப்படும் பாவங்களைச் செய்து நெற்றிக் கண்ணுடையவர்; புலித் தோலை உடையாகக் கொண்டு இருப்பவர்; மிகவும் விரைந்து செல்லக்கூடிய ஆற்றல் பொருந்திய இடபத்தைக் கொடியாகக் கொண்டு இருப்பவர். அப்பெருமான் விரும்புகின்ற இடமாவது, வெண்துறையாகும். அதனை ஏத்துமின் என்பது குறிப்பு.

652. பண்ணமர் வீணையினான் பரவிப்பணி தொண்டர்கள்தம்
எண்ணமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவரியான்
பெண்ணமர் கூறுடையான் பிரமன் தலையிற் பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும்பும்இடம் வெண்டுறையே.

தெளிவுரை : ஈசன், பண்ணில் விளங்கும் வீணையினை மீட்டும் மாண்பினர்; பரவித் தொழுகின்ற தொண்டர்களின் மனத்தில் வீற்றிருக்கும் விருப்பம் உடையவர்; தேவர்களுக்கெல்லாம் அறிவதற்கு அரியவராகியவர்; உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; பிரம கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்பவர். தேவர்களின் நாதனாகிய அப்பெருமான் விரும்பி மேவும் இடமாவது வெண்துறையாகும்.

653. பாரிய லும்பலியான் படியார்க்கும் அறிவரியான்
சீரிய லும்மலையாள் ஒருபாதமும் சேரவைத்தான்
போலிய லும்புரமூன்று டம்பொன்மலை யேசிலையா
வீரிய நின்றுசெய்தான் விரும்பும்இடம் வெண்டுறையே.

தெளிவுரை : சிவபெருமான், உலகத்தில் மேவும் எல்லாப் பூசைகளையும் தாமே ஏற்பவர்; உலக மாந்தர்களின் அறிவால் அறிவதற்கு; சீர் மிக்க உமாதேவியை ஒரு பாகத்தில் பொருந்துமாறு வைத்தவர்; போர்த்தன்மை உடையவர்களாயும் பகைமை உடையவர்களாயும் உள்ள மூன்று அசுரர்களின் கோட்டைகளும் எரியுமாறு மேருமலையினை வில்லாகக் கொண்டு வளைத்து வீரம் புரிந்தவர். அப்பெருமான் விரும்பி மேவும் இடமாவது, வெண்துறையே.

654. ஊழிகளாய்உல காய் ஒருவர்க்கும் உணர்வரியான்
போழிள வெண்மதியும் புனலும்அணி புன்சடையான்
யாழின் மொழியுமையாள் வெருவவ் வெழில்வெண் மருப்பின்
வேழம் உரித்தபிரான் விரும்பும்இடம் வெண்டுறையே.

தெளிவுரை : சிவபெருமான், ஊழிக்காலமாக விளங்குபவர்; உலகமாக விளங்குபவர்; யாராலும் உணர்வதற்கு அரியவர்; பிறைச் சந்திரனையும் கங்கையையும் சடைமுடியில் அணிந்து விளங்குபவர்; உமாதேவி வியக்குமாறு; யானையின் தோலை உரித்தவர். அப்பெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடமாவது, வெண்துறையே.

655.கன்றிய காலனையும் உருளக்கனல் வாய்அலறிப்
பொன்றமுன் நின்றபிரான் பொடியாடிய மேனியினான்
சென்றிமை யோர்பரவும் திகழ்சேவடி யான்புலன்கள்
வென்றவன் எம்இறைவன் விரும்பும்இடம் வெண்டுறையே.

தெளிவுரை : சிவபெருமான், மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சினந்து வந்த காலனை அலறி வீழுமாறு அழித்தவர்; திருநீற்றினைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; தேவர்கள் சென்று பரவி ஏத்தும் சிறப்பான மலரடிகளை உடையவர்; புலன்களால் ஈர்க்கப்படாத பரம்பொருளாகவும், புலன்களை வென்று திகழும் சிவஞானிகளின் தலைவனாகவும் விளங்குபவர். அப் பெருமான் விரும்பி உறையும் இடமாவது, வெண்துறையே.

656. கரம்இரு பத்தினாலும் கடுவன்சின மாய்எடுத்த
சிரம்ஒரு பத்தும்உடை அரக்கன்வலி செற்றுகந்தான்
பரவவல் லார்வினைகள் அறுப்பான்ஒரு பாகமுன்பெண்
விரவிய வேடத்தினான் விரும்பும்இடம் வெண்டுறையே.

தெளிவுரை : இருபது கரங்களை உடைய இராவணன், தனது பத்துத் தலைகளாலும் கயிலையைச் சினந்து எடுத்தபோது, அவனுடைய வலிமை அழியுமாறு செய்த சிவபெருமான், தன்னை ஏத்தி வழிபடும் பக்தர்களின் வினைகளை அறுப்பவர். ஒரு பாகத்தில் உமாதேவியைப் பொருந்துமாறு மேவும் திருக்கோலத்தை உடைய அப்பெருமான், விரும்பி உறையும் இடமாவது, வெண்துறையே.

657. கோல மலர்அயனும் குளிர்கொண்டல் நிறத்தவனும்
சீலம் அறிவரிதாய்த் திகழ்ந்தோங்கிய செல்தழலான்
மூலம தாகிநின்றான் முதிர்புன்சடை வெண்பிறையான்
வேலை விடமற்றான் விரும்பும்இடம் வெண்டுறையே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் சிவபெருமானுடைய சீலத்தை அறியதவர்களாய்த் தேடியபோது, அப்பெருமான் செந்தழலாய் ஓங்கி விளங்கியவர். சடை முடியின் மீது வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடிய அவர், கடலில் தோன்றி விடத்தைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டராய் விளங்கித் தேவர்களைக் காத்தவர். அப்பெருமான் விரும்புகின்ற இடமாவது வெண்துறையே.

658. நக்குரு வாயவரும் துவராடை நயந்துடையாம்
பொக்கர்கள் தம்உரைகள் அவைபொய்யென எம்இறைவன்
திக்கு நிறைபுகழார் திருதேவர் பிரான்கனகம்
மிக்குயர் சோதியவன் விரும்பும்இடம் வெண்டுறையே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் கூறுபடை யாவும் பொய்யுரையாய்க் கொள்க. எல்லாத் திக்குகளிலும் புகழ் விளங்கத் திகழும் தேவர் பிரானாகிய எம் இறைவன், பொன் போன்ற சோதியாகிய விளங்குபவர். அப்பெருமான் விரும்பி மேவும் இடமாவது வெண்துறையாகும். இத்திருத்தலத்தைச் சார்ந்து சிவபெருமானைப் பரவுவீராக !

659. திண்ணம ரும்புரிசைத் திருவெண்டுறை மேயவனைத்
தண்ணம ரும்பொழில்சூழ் தருசண்பையர்தம் தலைவன்
எண்ணமர் பல்கலையான் இசைஞானசம் பந்தன் சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினையாயின பற்றறுமே.

தெளிவுரை : உறுதியான மதில்களையுடைய திருவெண்துறையில் மேவிய சிவபெருமானைக் கருதி, குளிர்ச்சி மிக்க பொழில் சூழ்ந்த சண்பை எனப்படும் சீகாழியில் விளங்கும் தலைவனாகிய, பல்கலைகளில் வல்ல ஞானசம்பந்தன் சொல்லிய, பண்ணிசை திகழும் இத் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள், வினையால் பற்றப்பட மாட்டார்கள். இது துன்பமற்ற வாழ்க்கையைப் பெறுவார்கள் என்பதனை உணர்த்திற்று.

320. திருப்பனந்தாள் (அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

660. கண்பொலி நெற்றியினான்திகழ் கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தருசெஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே.

தெளிவுரை : சிவபெருமான், நெற்றியில் கண் விளங்கிப் பொலியப் பெற்றவர்; கையினில் திகழும் வெண் மழுவைப் படையாகக் கொண்டு இருப்பவர்; உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு அர்த்தநாரியாய் உள்ளவர்; பெருமை மிகுந்த திருமாலை இடபமாகக் கொண்டவர்; விண்ணில் பொலியும் சந்திரனைத் தமது சிவந்த சடையின் மீது சூடியவர். வேதங்கள் யாவினும் வல்லராகிய அப்பெருமானுடைய ஊராவது, குளிர்ந்த பொழில் சூழ்ந்த பனந்தாள் ஆகும். ஆங்கு உள்ள திருத்தாடகை ஈச்சரத்தில், அவர் கோயில் கொண்டுள்ளவர். அப் பரமனை ஏத்துமின் என்பது குறிப்பு.

661. விரித்தவன் நான்மறையை மிக்கவிண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயல்ஏழுலகில் உயிரும்
பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத்
தரித்தவன் ஊர்பணந்தாள் திருத்தடாகை ஈச்சரமே.

தெளிவுரை : சிவபெருமான், நான்கு வேதங்களையும் நன்கு விரித்து ஓதியவர்; தேவர்கள் எல்லாம் வந்து இறைஞ்சி ஏத்தப் புரங்கள் மூன்றும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; மன்னுயிர்களைப் பக்குவப்படுத்திப் பிரித்துச் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ச நிலையில் விளங்குமாறு செய்பவர்; செஞ்சடையில் கங்கையைத் தரித்தவர். அப் பெருமான் விளங்குகின்ற ஊராவது, பனந்தாள் ஆகும். ஆங்குத் திருத்தாடகை ஈச்சரத்தில் வீற்றிருக்கும் அப் பரமனை ஏத்துமின்.

662. உடுத்தவன் மானுரிதோல் கழலுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர்கீதமொர் நான்மறையான்
மடுத்தவன் நஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்
தடுத்தவனூர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே.

தெளிவுரை : சிவபெருமான், மான் தோலை உடையாகக் கொண்டுள்ளவர்; தனது திருவடியை நினைத்துப் போற்ற வல்லவர்களுடைய வினைகளை நீக்கி, முத்தி நலம் வாய்ப்பதற்கு உரிமையாக்குபவர்; வளர்ந்து எல்லையற்ற தன்மையில் விரிந்து பொருளை நல்கும் இனிய இசையுடைய நான்கு வேதங்களானவர்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை தான் அருந்தி, அதனைத் தனக்கு அமுதம்போல விளங்குமாறும் அற்புதம் புரிந்தவர்; தக்கனின் தீய நோக்குடைய வேள்வியைத் தடுத்து தகர்த்தவர். அப் பெருமானின் ஊர், திருப்பனந்தாள் ஆகும். ஆங்கு அவர் கோயில் கொண்டிருப்பது தாடகேச்சரம் என்னும் கோயில் ஆகும். அதனை ஏத்துமின்.

663. சூழ்தரு வல்வினையும் உடன் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிகஏத்துமின் பாய்புனலும்
போழிள வெண்மதியும் அனல்பொங்கரவும் புனைந்த
தாழ்சடை யான்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே.

தெளிவுரை : இப் பிறவியில் பிராரத்த கன்மத்தால் விளையும் கொடிய வினைகளும், அதன் வாயிலாகத் தோன்றும் பிணிகளும் கொண்டு, வாடுகின்ற துன்பத்திலிருந்து மீண்டு எழ வேண்டும் எனக் கருதுவீராயின். திருப்பனந்தாளில் மேவும் திருத்தடாகை ஈச்சரத்தை நன்கு ஏத்தி வழிபடுவீராக. கங்கையும் பிறைச் சந்திரனும் நெருப்புப் போன்று கனன்று எழுகின்ற பாம்பும் புனைந்துள்ள சடைமுடியுடைய சிவ பெருமான், அத் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள் புரிபவர்.

664. விடம்படு கண்டத்தினான் இருள்வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினான் அவன்எம்இறை சேரும்இடம்
படம்புரி நாகமொடு திரை பன்மணியுங் கொணரும்
தடம்புனல் சூழ்பனந்தாள் திருதாடகை ஈச்சரமே.

தெளிவுரை : சிவபெருமான், விடத்தைக் கண்டத்தில் தேக்கி வைத்திருப்பவர்; இருள் சூழ்ந்த மயானத்தில் உமாதேவியோடு நடனம் புரிகின்ற தன்மையுடையவர். அப்பெருமான், எம் இறைவன் ஆவர். அவர் பொருந்தி விளங்குகின்ற இடமாவது, நாகம் முதலான பல வகையான மணிகளையும் அலைகளின் வாயிலாகக் கொண்டு வரும் புனல் வளம் சூழ்ந்த பனந்தாளில் மேவும் திருத்தாடகை ஈச்சரமே.

665. விடைஉயர் வெல்கொடியான் அடிவிண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான் மிகு பூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக்கும் அணிந்த
சடையவன் ஊர்பனந்தாள் திருத்தடாகை ஈச்சரமே.

தெளிவுரை : சிவபெருமான், வெற்றியை உடைய இடபத்தைக் கொடியாக உடையவர்; விண்ணுலகத்திலும் மண்ணுலகத்திலும் மற்றும் சூழ்ந்த எல்லா இடங்களிலும் திருவடி பதியுமாறு நடம் புரிய வல்லவர்; பூதகணங்களைக் கொண்டு மேவும் பெரிய படைகளை உடையவர்; கொன்றை மாலையுடன் வன்னி, எருக்கு ஆகியனவும் சேர்ந்து அணிந்து விளங்கும் சடை முடி உடையவர். அப்பெருமானுடைய ஊராவது பனந்தாள் ஆகும். ஆங்கு அவர் திருத்தாடகை ஈச்சரத்தில் கோயில் கொண்டு வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்தி உய்வீராக.

666. மலையவன் முன்பயந்த மடமாதையொர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையால் புரமூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதியாடரவும் அணிந்த
தலையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே.

தெளிவுரை : சிவபெருமான், மலையரசனாகிய இமாவன் பயந்த மலைமகளை ஒரு கூறாக உடையவர்; மேருமலையை வில்லாகக் கொண்டு, வெம்மையுடைய அக்கினியைக் கணையாக்கி, மூன்று புரங்களையும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; திருமுடியில் கங்கையும், சந்திரனும், பாம்பும் தரித்தவர். அப்பெருமானது ஊராவது திருப்பனந்தாள் ஆகும். ஆங்கு மேவும் திருத்தாடகை ஈச்சரத்தில் அவர் வீற்றிருப்பவர். அவரை ஏத்துமின்.

667. செற்றரக் கன்வலியைத் திருமெல்விர லால்அடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திருமேனியன் மும்மையினான்
புற்றர வம்புலியின் உரிதோலொடு கோவணமும்
தற்றவன் ஊர்பனந்தாள் திருதாடகை ஈச்சரமே.

தெளிவுரை : இராவணனுடைய வலிமையைத் திருப்பாத விரலால் அடர்த்து, முற்றும் திருவெண்ணீற்றால் குழையப் பூசிய திருமேனியுடைய சிவபெருமான், மும்மையும் விளங்குபவர்; அரவத்தை அணிந்தவர்; புலியின் தோலை உடுத்தியவர்; வேதங்களைக் கோவணமாக நன்கு பொருந்த அணிந்தவர், அவருடைய ஊராவது, திருப்பனந்தாள் ஆகும். ஆங்கு திகழும் திருத்தாடகை ஈச்சரத்தில் கோயில் கொண்டுள்ள அப்பெருமானை ஏத்தி உய்வீராக.

668. வில்மலை நாணரவம் மிகுவெங்கனல் அம்பதனால்
புன்மைசெய் தானவர்தம் புரம்பொன்றுவித் தான்புனிதன்
நன்மலர் மேலயனும் நண்ணு நாரண னும்அறியாத்
தன்மையன் ஊர்பனந்தாள் திருத் தாடகை ஈச்சரமே.

தெளிவுரை : மேரு மலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் மிகுந்த கனலை உண்டாக்கும் நெருப்பை அம்பாகவும் கொண்டு, தீமை செய்த அசுரர்களின் மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான். பிரமன், திருமால் ஆகியோரால் அறிய முடியாத தன்மையர். அப் பெருமானுடைய ஊர் எனப்படுவது, திருப்பனந்தாள் ஆகும். ஆங்கு அவர் வீற்றிருக்கும் திருத்தாடகை ஈச்சரத்தை ஏத்தி உய்வீராக.

669. ஆதர் சமணரொடும் மடை ஐந்துலகில் போர்த்துழலும்
நீதர் உரைக்குமொழி யவை கொள்ளன்மின் நின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுள் திகழ் புள்ளிரியப் பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் உரைக்கின்ற மொழிகள் பயனற்றவை. அவற்றை ஏற்க வேண்டாம். நின்மலனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் ஊராவது, தாமரை மலர் விளங்கும் பொய்கையும், பறவைகள் மல்கிய வளம் மிக்க பொழில்களும் விளங்கும், திருப்பனந்தாள் ஆகும். ஆங்குத் தடாகைஈச்சரத்தில் மேவும் அப் பரமனை ஏத்துவீராக.

670. தண்வயல் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரத்துக்
கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழால்மிகு ஞானசம் பந்தனல்ல
பண்ணியல் பாடல்வல்லார் அவர்தம் வினை பற்றறுமே.

தெளிவுரை : குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த பனந்தாள் என்னும் ஊரில் திகழும் திருத்தாடகை ஈச்சரத்தின்கண், பிறைசூடிய பெருமானாகிய ஈசனை முன் இருந்து நண்ணி, வணங்கிய காழி நகரின் தமிழ் ஞானசம்பந்தன், பண்ணுடன் இசைத்த இத் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள், வினை நீங்கப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

321. திருச்செங்காட்டங்குடி (அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

671. பைங்கோட்டு மலர்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனல்ஏந்தி விளையாடும் பெருமானே.

தெளிவுரை : பசுமையான புன்னை மரத்தில் திகழும் பறவைகளே ! தலைவனாகிய சிவபெருமான் என்னைப் பிரிந்ததால் பசலை நோய் கண்டு, உணவு இன்றி, என் உடலானது வெளிர்ந்து மெலிந்தது. அப் பெருமான் எனக்கு நீங்கப் பெறாத நோயைத் தந்தனர். அவர் செங்காட்டங்குடியில் விளங்கும் சிறுத் தொண்டர் பணி செய்ய, மயானத்தில் நின்று, கையில் அனலை ஏந்தி நடம் புரிபவர்.

672. பொன்னம்பூங் கழிக்கானல் புணர் துணையோடு உடன்வாழும்
அன்னங்காள் அன்றில்காள் அன்றும்போய் வருவீர்கள்
கல்நவில்தோள் சிறுதொண்டன் கணபதீச் சரமேய
இன்னமுதன் இணையடிக்கீழ் எனது அல்லல் உரையீரே.

தெளிவுரை : அழகிய பூக்களை உடைய கழியருகில் உள்ள சோலைகளில், துணையோடு சேர்ந்து வாழும் அன்னப் பறவைகளே ! அன்றில் பறவைகளே! நீங்கள் இச் சோலையிலிருந்து வெளியிடங்களுக்கும் சென்றும் வரும் இயல்புடையவர்கள். உறுதியான தோள் அழகு பொருந்திய சிறுத் தொண்டருடைய கணபதீச்சரத்தில் வீற்றிருக்கின்ற இனிய அமுதனாகிய சிவபெருமானுடைய திருவடியின்கீழ் இருந்து, என்னுடைய துயரத்தை உரைப்பீரோ ! உரைக்க வேண்டும் என்பது, குறிப்பு விண்ணப்பம் ஆயிற்று.

673. குட்டத்தும் குழிக்கரையும் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வட்டவார் சடையார்க்குஎன் வருத்தம்சென்று உரையாயே.

தெளிவுரை : குட்டை, குழி, குளம் ஆகிய இடங்களில் விருப்பத்திற்கு ஏற்றவாறு இரையைத் தேர்ந்து கொள்ளுகின்ற பெரிய சிறகுகளையுடைய நாரையே ! சிறந்த ஞானியாகிய புகழ் மிகுந்த சிறுத்தொண்டர் விளங்குகின்ற செங்காட்டங்குடியில் வீற்றிருக்கும் நீண்ட சடை முடி உடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைக்க மாட்டாயோ !

674. கானருகும் வயலருகும் கழியருகும் கடலருகும்
மீனிரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமரும் சடையார்க்குஎன் வருத்தம்சென்று உரையாயே.

தெளிவுரை : கடற்கரைச் சோலையின் அருகிலும், மற்றும் வயல், கழி, கடல் ஆகியவற்றின் அருகிலும் பெருகும் நீரில் உள்ள மீன்களை இரையாகத் தேரும் மடப்பம் கொண்டுள்ள நாரையே ! சிறுத்தொண்ட நாயனார் தம் செங்காட்டங்குடியில் மேவிய, கங்கை தரித்த சடையுடைய சிவபெருமானுக்கு, என்னுடைய வருத்தத்தை உரைப்பாயோ !

675. ஆரலாம் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலார்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய்
சீருலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
நீருலாம் சடையார்க்குஎன் நிலைமைசென்று உரையீரே.

தெளிவுரை : ஆரல், சுறவம் ஆகியன பாய்ந்து நிலவும் அகன்ற கழனிகளில் சிறகுகளை விரித்துச் சிறிய பறவைகள் பயில, விளங்கும் நாரையே ! சீரின் மிக்க சிறுத்தொண்டரின் செங்காட்டங்குடியில் வீற்றிருக்கும் கங்கை தரித்த சடையுடைய சிவபெருமானிடம் சென்று, என்னுடைய நிலையினை உரையாயோ !

676. குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச் சென்னிக் கணபதீச் சரமேய
சிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே.

தெளிவுரை : குளிர்ந்த பொய்கையின் துறையில் உள்ள கெண்டை மீன்கள் கவர்ந்து இரையாகக் கொண்டு, துணையைப் பிரியாது இருக்கும் நாரையே ! ஒருவருடைய குறையைக் கூறி, அதனைத் தீர்க்க வேண்டும் என்று வேண்டினால், அதனைத் தீர்த்து வைப்பது கடமை அல்லவா ! நீலகண்டராகியவரும், பிறைச் சந்திரனை முடியில் தரித்துக் கணபதீச்சரத்தில் மேவியவரும், சிறுத் தொண்டரால் வழிபடப் பெறும் ஈசனும் ஆகிய சிவபெருமானுடைய பெருமைக்குரிய அருளை, ஒரு நாள் அடையலாம் அல்லவா ! எனக்காக தூது சென்று என் துன்பத்தை ஈசனுக்கு உரைப்பாயாக, நலம் பெறுவாயாக என்பது குறிப்பு.

677. கருஅடிய பசுங்கால்வெண் குருகே ஒண்கழி நாராய்
ஒருஅடியாள் இரந்தாள்என்று ஒருநாள்சென்று உரையீரே
செருவடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
திருவடிதன் திருவருளே பெறலாமோ திறந்தவர்க்கே.

தெளிவுரை : கரிய சேற்றில் இளைய, பசுங்கால் வெண்குருகே ! ஒரு நாளாவது சென்று ஓர் அடியவள் உம்மை நினைத்து வாடுகின்றாள் என உரைப்பீராக; சிறுத்தொண்டரின் செங்காட்டம்குடி மேவும் சிவபெருமானுடைய திருவடியின் திருவருளைப் பெறலாம்.

678. கூராரல் இரைத் தேர்ந்து குளம்உலவி வயல்வாழும்
தாராவே மடநாராய் தமியேற்கு ஒன்று உரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பேராளன் பெருமான்றன் அருள்ஒருநாள் பெறலாமே.

தெளிவுரை : கூர்மைத் தன்மையுடைய ஆரலை இரையாகத் தேர்ந்து, குளங்களிலும் வயல்களிலும் வாழ்கின்ற பறவையே ! மடப்பம் கொண்ட நாரையே ! எனக்காகச் சிவபெருமானிடம் சென்று ஒரு செய்தியை உரைக்க மாட்டாயா ! சிறப்பான புகழ் கொண்டு விளங்கும் சிறுத்தொண்டர் விளங்கும் செங்காட்டங்குடியில் வீற்றிருக்கும் பேராளராகிய ஈசனுடைய அருள், உனக்கு ஒரு நாள் கிடைக்கும்.

679. நறப்பொலிபூங் கழிக்கானல் நவில்குருகே உலகெல்லாம்
அறப்பலிதேர்ந்து உழல்வார்க்குஎன் அலர்கோடல் அழகியதே
சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின்று இழக்கோஎம் பெருநலமே.

தெளிவுரை : தேன் பொலியும் பூக்களையுடைய கழியின் கரையில் விளங்குகின்ற சோலையில் இருக்கும் பறவையே ! உலகம் முழுவதும் சென்றும் அறம் விளைத்தலை, மன்னுயிர்கள் பெற்று உய்யுமாறு, தான் அரிய பலியினைத் தேர்ந்து உழல்கின்ற பெருமான். ஈசன். அவர், நான் வாடுமாறும், பிறர் என்னைத் தூற்றுமாறும் செய்வது அழகாகுமா ! சிறப்பின் பெருமை எக்காலத்திலும் குறையாக சிறுத்தொண்டர் விளங்குகின்ற செங்காட்டங்குடியில் வீற்றிருக்கும் போற்றித் துதி செய்யும் நான், எல்லா விதமான பெருமைக்குரிய நலங்களையும் இழப்பது முறைமையோ ! எனவே நீ சென்று ஈசன்பால் தூது உரைப்பாயாக என்பது குறிப்பு.

680. செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்தநீறு அணிமார்பன் சிறுத்தொண்டன்
அந்தண்பூங் கலிக்காழி அடிகளையே அடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் தமிழ்உரைப்போர் தக்கோரே.

தெளிவுரை : செம்மையான பூம்புனல் பரந்து மேவும் செங்காட்டங்குடியில் வீற்றிருக்கும் திருநீறு அணிந்த திருமார்பினராகிய சிறுத்தொண்டர் வேண்டியவாறு சீகாழியில் வீற்றிருக்கும் ஈசன் திருவடிகளைப் பரவும் சந்தம் மிகுந்த திருத்தமிழால் உரைத்த ஞான சம்பந்தனின் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், மனிதப் பிறவியின் தகுதிக்கு உரியவர் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

322. திருப்பெருவேளூர் (அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால்ஐயம் பேட்டை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

681. அண்ணாவும் கழுக்குன்றம் ஆயமலை யவைவாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள்செய்வார்
கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரம்எரித்த
பெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

தெளிவுரை : ஈசன், திருவண்ணாமலையும் திருக்கழுக்குன்றமும் ஆகிய மலைகளில் வீற்றிருப்பவர்; விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் வியந்து ஏத்த அருள் செய்பவர்; உலகுக்குக் கண்ணாகவும் விளங்குபவர்; யாவரும் போற்றி வழிபடுவதற்கு உரிய கருத்து ஆனவர்; முப்புரங்களை எரித்தவர்; பெண்ணும் ஆணுமாக விளங்குகின்ற அர்த்தநாரியானவர். அப் பெருமான், பெருவேளூரில் பிரிதல் இன்றி விளங்குபவர். அவர் பிரியநாதர் ஆவார்.

682. கருமானின் உரியுடையர் கரிகாடர் இமவானார்
மருமானார் இவர்என்று மடவாளோடு உடனாவர்
பெருமான விடையூர்வது உடையார்வெண் பொடிப்பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.

தெளிவுரை : பெரு வேளூரில் வீற்றிருக்கும் பிரிய நாதர்; மான் தோலை உடையாகக் கொண்டவர்; சுடுகாட்டில் நடம் புரிபவர்; இமாசல அரசனின் மருமகனாகி, உமாதேவியோடு திகழ்பவர்; பெருமை உடைய இடபவாகனத்தில் ஊர்ந்து செல்பவர்; திருநீறு பூசி விளங்குபவர். அவர் பிஞ்ஞகன் எனப் போற்றப்படும் சிவபெருமான்.

683. குணக்கும்தென் திசைக்கண்ணும் குடபாலும் வடபாலும்
கணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் மொழிந்தோர்க்கும்
வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும்
பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

தெளிவுரை : சிவபெருமான், கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு என எத் திக்கின்படியும், நெறிமுறை மாறுதல் இன்றி அருள் புரிபவர். அறியாமையும் அஞ்ஞானமும் மீதூர நாட்களைக் கழிப்பவர்களுக்கும், பக்தியால் தோத்திரப் பாடல்களை மொழிந்து போற்றுபவர்களுக்கும், காயத்தால் வணங்கி ஏத்தும் அடியவர்களுக்கும் அருள் புரிபவர். வணங்கிப் போற்றாதவர்களுக்கு மாறுபாடாக விளங்குபவர். அவர் பெருவேளூரில் வீற்றிருக்கும் பிரியநாதர் ஆவார்.

684. இறைக்கொண்ட வளையாளோடு இருகூறாய் ஒருகூறு
மறைக்கண்டத்து இறைநாவர் மதில்எய்த சிலைவலவர்
கறைக்கொண்ட மிடறுடையர் கனல்கிளிரும் சடைமுடிமேல்
பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

தெளிவுரை : பெருவேளூரில் வீற்றிருக்கும் பிரிய நாதர் என்னும் திருப்பெயர் தாங்கியுள்ள சிவபெருமான், கையில் வளையல் அணிந்த உமாதேவியை ஒரு கூறாகவும், தாம் ஒரு கூறாகவும் ஆகிய இரு கூறுடைய அர்த்தநாரியாய் விளங்குபவர். ஒருகூறு ஆற்றும் தன்மையில் அவர், வேதங்களை ஓதுபவர்; முப்புரங்களை எய்த மேருமலையை வில்லாக உடையவர்; மிடற்றினில் நஞ்சினை அடக்கிக் கறை கொண்டு விளங்குபவர்; செவ்வொளி படரும் சடை முடியில் மீது பிறைச் சந்திரனைத் தரித்து விளங்குபவர். அப் பெருமானை ஏத்துமின் என்பது குறிப்பு.

685. விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசிக்
குழையாதார் குழைவார்போல் குணநல்ல பலகூறி
அழையாவும் அரற்றாவும் அடிவீழ்வார் தமக்கென்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

தெளிவுரை : உலகப் பொருள்களில் பற்றுக்கொண்டு விழையாமல், ஈசன்பால் விழைந்து, அப்பெருமானுடைய திருவிளையாடல்களாகிய புகழ்ச் செயல்களைப் பேசிப் போற்றியும், மருள் கொண்டு குழையாது, ஈசனின் திருவருளில் தோயப் பெற்ற அன்புடையவராகி ஏத்தியும் விளங்கும் அடியவர்கள், பெருமானே ! அருள் புரிவீராக ! என அழைத்தும், பக்தி உணர்வினால் ஏத்தியும் வாழ்த்தித் துதிக்க, அருள் செய்கின்ற பெருமான் பெருவேளூரில் வீற்றிருக்கும் பிரியநாதர் ஆவார்.

686. விரித்தார்நான் மறைப்பொருளை உமையஞ்ச விறல்வேழம்
உரித்தாராம் உரிபோர்த்து மதில்மூன்றும் ஒருகணையால்
எரித்தாராம் இமைப்பளவில் இமையோர்கள் தொழுதிறைஞ்சப்
பெருத்தார்எம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

தெளிவுரை : சிவபெருமான், நான்கு வேதங்களையும் விரித்துப் பொருள் வழங்கியவர்; யானையின் தோலை உரித்து அதனைத் திருமேனியில் போர்த்துக் கொண்டு, வீரத்தினையும் ஆற்றலையும் காட்டியவர்; மூன்று மதில்களையும் ஒரு கணை கொண்டு, எரிந்து சாம்பலாகுமாறு இமை நேரத்தில் செய்தவர்; தேவர்கள் தொழுது போற்றப் பேருருவமாய் விளங்கியவர். அப்பெருமான் பெருவேளூரில் மேவும் பிரியநாதர் ஆவார்.

687. மறப்பிலா அடிமைக்கண் மனம் வைப்பார்தமக்கெல்லாம்
சிறப்பிலார் மதில்எய்த சிலைவல்லார் ஒருகணையால்
இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றும் கேடிலார்
பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

தெளிவுரை : ஈசன், தன்னை மறவாது, தமக்கு அடியவர் ஆகி உள்ளவர்தம் மனதில் வீற்றிருப்பவர். அப்பெருமான், சிறப்பினை இழந்தவர்களாகிய முப்புரத்து அசுரர்தம் கோட்டைகளை, ஒரு கணை தொடுத்து எரியச் செய்தவர்; அழிவு இல்லாதவர்; நின்மலராய் விளங்கும் பணியற்றவர்; கேடு இல்லாதவர்; பிறப்பு அற்றவர். அப் பெருமான், பெருவேளூரில் வீற்றிருக்கும் பிரியநாதர் ஆவார்.

688. எரியார்வேல் கடல்தானை இலங்கைக்கோன் றனைவீழ
முரியார்ந்த தடந்தோள்கள் அடர்த்துகந்த முதலாளர்
வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை யொருபாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

தெளிவுரை : எரிபோன்ற வேற்படை உடைய சேனைகளைக் கடல்போல் விரிந்து பெற்றுள்ள இராவணன் அலறுமாறு, வலிமையான தோள்களை நெரித்துப் பின்னர், அவன் இசை கேட்டு உகந்த முதல்வனாகிய சிவபெருமான், வில்லேந்திரவராய் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு பிரியாது வீற்றிருப்பவர். அப்பெருமான், பெருவேளூரில் மேவும் பிரியாநாதர் ஆவார்.

689. சேணியலு நெடுமாலும் திசைமுகனும் செருவெய்திக்
காணியல்பை அறிவிலராய்க் கனல்வண்ணர் அடிஇணைக்கீழ்
நாணியவர் தொழுதேத்த நாணாமே அருள்செய்து
பேணியஎம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

தெளிவுரை : உலகினை அளப்பதற்குரிய நெடிய வடிவம் தாங்கிய திருமாலும், நான்முகனும் மாறுபட்டுத் தம்மைத் தாமே பெரியவர் எனக் கருதி, ஈசனை அளக்கும் தன்மையில் காணுதற்கு இயலாதவராய் இருக்க கனல் வண்ணராகிய அப்பெருமானின் திருவடியை நண்ணித் தொழுதனர். அத்தன்மையில் அருள் நல்கிய பெருமான் பெருவேளூரில் பிரிய நாதராய் விளங்குபவர்.

690. புற்றேறி உணங்குவார் புகையார்ந்த துகில் போர்பார்
சொல்தேற வேண்டாநீர் தொழுமின்கள் சுடர்வண்ணம்
மற்றேரும் பரிமாவும் மதகளிறும் இவையொழியப்
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

தெளிவுரை : சமணர், சாக்கியர்தம் உரைகளை ஏற்க வேண்டாம். தேரும் குதிரையும் யானையும் வாகனமாகக் கொள்ளாது, இடபத்தை வாகனமாகக் கொண்டு மேவும் பெருமானாகிய, பெருவேளூரில் வீற்றிருக்கும் பிரிய நாதனை, நீவிர் தொழுது ஏத்துமின்.

691. பைம்பொன்சீர் மணிவாரிப் பலவும்சேர் கனியுந்தி
அம்பொன்செய் மடவரலார் அணிமல்கு பெருவேளூர்
நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான
சம்பந்தன் தமிழ்வல்லார்க்கு அருவினை நோய்சாராவே

தெளிவுரை : அழகிய பொன்னும் சிறப்பான மணிகளும் பல வகையான கனிகளும் பெருகவும், பொன்னாலாகிய அழகிய அணிகளை அணிந்த நங்கையர்கள் விளங்கும் பெருவேளூரில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய கழல் பரவி நவின்ற, வேதம் வல்ல ஞானசம்பந்தனின் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்குத் தீவினையும், அவ்வினையால் பிணிக்கப்படும் பிறவி நோய் முதலானவும் சாராது.

திருச்சிற்றம்பலம்

323. திருக்கச்சி நெறிக்காரைக்காடு (அருள்மிகு சத்யநாதர், திருக்காலீஸ்வரர்  திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

692. வாரணவு முலைமங்கை பங்கினராய் அங்கையினில்
போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
காரணவு மணிமாடம் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

தெளிவுரை : ஈசன், உமா தேவியை ஒரு பாகத்தில் கொண்டு விளங்குபவர்; அழகிய கையில் போர்த் தன்மை உடைய மழுப்படையை ஏந்தி, வெண்ணீற்றினை அணிந்து விளங்குபவர். அப் பெருமான் மேகத்தைத் தொடும் நெடிய மணி மாடங்களும், கடை வீதிகளும் ஒலியைப் பெருக்கி நிலவுகின்ற கச்சியில், நீர் நிறைந்த மலர்ப் பொய்கை உடைய நெறிசேர் காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.

693. காரூரு மணிமிடற்றார் கரிகாடர் உடைதலை கொண்டு
ஊரூரன் பலிக்குழல்வார் உழைமானின் உரியதளர்
தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீரூரு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய மணியைப் போன்ற மிடறு உடையவர்; மயானத்தில் இருந்தும் நடம் புரிபவர்; பிரம கபாலத்தை கையில் ஏந்தி, ஊர்தொறும் சென்று பிச்சை ஏற்பவர்; மான் தோலை உடுத்தி உள்ளவர். அப்பெருமான், தேர் செல்லும் நெடிய வீதிகளையுடைய, வளமையுடன் செழித்து மேவும் கச்சி மாநகரில், நீர்பெருகி விளங்கும் மலர்ப்பொய்கை உடைய நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.

694. கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமேல் இளமதியோடு
ஆறுஅணிந்தார் ஆடரவம் பூண்டுகந்தார் ஆன்வெள்ளை
ஏறணிந்தார் கொடியதன்மேல் என்பணிந்தார் வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

தெளிவுரை : சிவபெருமான், கொடி போன்ற இடை உடைய உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு விளங்குபவர்; குளிர்ச்சி மிக்க சடை முடியின் மீது இளமையான சந்திரனையும், கங்கையையும் அணிந்தவர்; ஆடுகின்ற அரவத்தை ஆபரணமாகப் பூண்டு மகிழ்பவர்; வெள்ளை இடபத்தை வாகனமாகவும், இடபக் கொடியாகவும் உடையவர். மலை போன்ற அகன்ற திருமார்பில் எலும்பு மாலை அணிந்தவர்; திருவெண்ணீற்றினை நன்கு விரவிப் பூசி விளங்குபவர்; அப்பெருமான், பெருமையுடன் திகழும் கச்சியின் நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.

695. பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப் பூதங்கள்
மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழுவேந்திச்
சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

தெளிவுரை : சிறகுகளையுடைய வண்டுகள் தேன் கதுவும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டில் வீற்றிருக்கும் ஈசன், பிறைச்சந்திரனைச் சூடிய சடைகள் பின் பக்கம் நீண்டு தாழ்ந்து இருக்கப் பூத  கணங்கள் மறைகளை ஓதப் பாடலும் ஆடலும் கொண்டும், மழுப்படையை ஏந்தியும் விளங்குபவர்.

696. அன்றாலின் கீழிருந்துஅங்கு அறம்புரிந்த அருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற் கோள்அரவ நாண்கொளுவி
ஒன்றாதார் புரமூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

தெளிவுரை : சிவபெருமான், ஆல மர நீழலில் இருந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தருளிய அருளாளர்; மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கிப் பகைவர்களாகிய மூன்று அசுரர் புரங்களை நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அப்பெருமான், கலிக்கச்சியில் மேவும் நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.

697. பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்றும் ஒரு நொடியில்
வில்மலையின் நாண்கொளுவி வெங்கணையால் எய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

தெளிவுரை : வானவர்கள் பல்வகையான மலர்களைக் கொண்டு போற்றிப் பணிந்து இறைஞ்ச விளங்கும் ஈசன், நன்மை புரியாத வலிய அசுரர்களுடைய மூன்று நகரங்களையும் ஒரு நொடி நேரத்தில், மேரு மலையை வில்லாகக் கொண்டு, நாண் ஏற்றி, அக்கினிக் கணையால் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அப் பெருமான், நின்மலனாய் விளங்குபவர். அவர், கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.

698. புற்றிடைவாள் அரவினொடு புனைகொள் றைமதமத்தம்
எற்றொழியா அலைபுனலோடு இளமதியம் ஏந்தசடைப்
பெற்றுடையார் ஒருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

தெளிவுரை : சிவபெருமான், புற்றில் விளங்கும் ஒளி மிக்க அரவத்தையும், கொன்றை மலரையும், ஊமத்த மலரினையும் ஏற்று, அதனுடன் ஓய்தல் இல்லாத அலைகளையுடைய புனலாகிய கங்கையோடு பிறைச் சந்திரனையும் சடை முடியில் பெற்றிருப்பவர்; உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு இருப்பவர்; நெற்றியில் ஒரு கண்ணுடையவர். அப்பெருமான் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.

699. ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை எழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்கும் சூழ்வயலும் மதில்புல்கி அழகமரும்
நீண்மறுகிற் கலக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

தெளிவுரை : இராவணனை, எழில் மிகுந்த கயிலை மலையினால் அழுந்துமாறு திருப்பாத விரலால் ஊன்றிய சிவபெருமான், அவ்வரக்கன், போற்றி ஏத்திய போது நன்மை செய்தவர். அப்பெருமான், வயல்களும் மதில்களும் நெடிய வீதிகளும் கொண்டு விளங்கும் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.

700. ஊண்தானும் ஒலிகடல்நஞ்சு உடைதலையில் பலிகொள்வர்
மாண்டார்தம் எலும்புஅணிவர் வரியரவோடு எழில்ஆமை
பூண்டாரும் ஓர்இருவர் அறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

தெளிவுரை : சிவபெருமான், கடலில் தோன்றிய நஞ்சினை உணவாகக் கொண்டவர்; உடைந்த தலையாகிய பிரம கபாலம் ஏந்திப் பலி ஏற்றவர்; இறந்தவர்களின் எலும்பினை மாலையாக அணிந்தவர்; பாம்பு ஆமையும் அழகிய ஆபரணமாகக் கொண்டவர்; திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் அறியாத தன்மையில் பொங்கி எழும் நெருப்புப் பிழம்பாய் ஆனவர். அப்பெருமான், கலிக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருப்பவர்.

701. குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
மிண்டாடித் திரிதருவார் உரைப்பனகன் மெய்யல்ல
வண்டாரும் குழலாளை வரைஆகத்து ஒருபாகம்
கண்டாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் உரைக்கும் சொற்கள் மெய் அல்ல. ஈசன் உமாதேவியை மலை போன்ற தனது திருமேனியில் கொண்டுள்ளவர்; பெருமையுடைய கலிக்கச்சியின் நெறிக்காரைக் காட்டில் வீற்றிருப்பவர்.

702. கண்ணாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாரும் திருமேனிப் பெருமானது அடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாருந்த தமிழ்வல்லார் பரலோகத்து இருப்பாரே.

தெளிவுரை : கண்ணுக்கு விருந்தென மகிழ்ச்சி தரும் கலிக்கச்சி நெறிக்காரைக்காட்டில் உறையும் உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ள ஈசனை வாழ்த்தி, குளிர்ச்சி மிக்க பொழில் சூழ்ந்த காழியின் தமிழ் ஞானசம்பந்தன் மொழிந்த, பண்ணிசை விளங்கும் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், பரம் பொருளின் உலகமாகிய ஈசன் உலகில் திகழ்வார்கள். இது சாலோக பதவியை நல்கும் என்பது குறிப்பு.

திருச்சிற்றம்பலம்

324. திருவேட்டக்குடி (அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி, புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

703. வண்டிரைக்கும் மலர்க்கொன்றை
விரிசடைமேல் வரியரவம்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக்
காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத்
துளங்குஒளி நீர்ச் சுடர்ப்பவளம்
தொண்டிரைக்கண் கொணர்ந்தெறியும்
திருவேட்டக் குடியாரே.

தெளிவுரை : ஈசன், வண்டுகள் ரீங்காரம் செய்யும் கொன்றை மலரை விரிந்த சடையின் மீது சூடியவர். அப் பெருமான், சீறி விளங்கும் அரவமும், பிறைச் சந்திரனும் சென்னியில் தரித்துக் கபாலத்தைக் கையில் கொண்டு விளங்குபவர். திருக்கழலைத் தொழுது போற்றித் தொண்டர் இறைஞ்சு, சுடர் விடுகின்ற பவளங்களைக் கொண்டிருக்கும் திருவேட்டக்குடியில் அவர் வீற்றிருப்பவர்.

704. பாய்திமிலர் வலையோடு
மீன்வாரிப் பயின்றுஎங்கும்
காசினியிற் கொணர்ந்துஅட்டும்
கைதல்சூழ் கழிக்கானல்
போய்இரவிற் பேயோடும்
புறங்காட்டிற் புரிந்தழகார்
தீயெரிகை மகிழ்ந்தாரும்
திருவேட்டக் குடியாரே.

தெளிவுரை : பாய்ந்து செல்லும் படகு, வலையுடன் சென்று கடலில் இருந்து மீனவர்கள் மீன்களைக் கரையில் கொணர்ந்து சேர்க்க, தாழை சூழ்ந்த கழி உடைய சோலை திகழச், சிவபெருமான், நள்ளிரவில் மயானத்தில் பேய்க் கூட்டத்தோடு நின்று, கையில் நெருப்பை ஏந்தி, மகிழ்ந்து ஆடுபவர். அப் பெருமான் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர்.

705. தோத்திரமா மணல்இலிங்கம்
தொடங்கியஆன் நிரையின்பால்
பாத்திரமா ஆட்டுதலும்
பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தம்என மறைநால்வர்க்கு
அறம்புரிநூல் அன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாரும்
திருவேட்டக் குடியாரே.

தெளிவுரை : வழிபாடு செய்வதற்காக மணலால் இலிங்கத்தை அமைத்து, பசுவின் பாலை அபிடேகமாகச் செய்து பூசித்த சண்டேச நாயனாருக்குக் கருணை கொண்டு அருள் வழங்கியவர், பரஞ்சோதியாகிய ஈசன். அவர், பேரன்புடன் தவம் பூண்டு ஒழுகிய சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் அறங்களை உபதேசித்தவர். அப் பெருமான் புனித தீர்த்தமாகிய கங்கையைச் சடையில் பொருந்த ஏற்றுத் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர்.

706. கலவம் சேர் கழிக்கானல்
கதிர்முத்தம் கலந்தெங்கும்
அலவம்சேர் அணைவாரிக்
கொணர்ந்தெறியும் அகன்றுறைவாய்
நிலவம் சேர் நுண்ணிடைய
நேரிழையாள் அவளோடும்
திலகம்சேர் நெற்றியினார்
திருவேட்டக் குடியாரே.

தெளிவுரை : கடற்கரைச் சோலைகள் கழியின் பக்கங்களில் சூழ்ந்து விளங்கவும், மயில்கள் தோலை விரித்து ஆடவும், கடல் நண்டுகள் பெருகித் திகழவும் உள்ள அகன்ற துறையில் உமாதேவியோடு திலகம் போன்று சுடர் தரும் நெற்றியை உடைய ஈசன் திரு வேட்டக் குடியில் வீற்றிருப்பவர்.

707. பங்கமார் கடல்அலறப்
பருவரையோடு அரவுஉழலச்
செங்கண்மால் கடையஎழு
நஞ்சருந்தும் சிவமூர்த்தி
அங்கநான் மறைநால்வர்க்கு
அறம்பொருளின் பயனளித்த
திங்கள்சேர் சடையாருந்
திருவேட்டக் குடியாரே.

தெளிவுரை : மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடையப் பெற்ற போது கடல் நீர் அலைப்புண்டு சேறாகியது. ஆங்கும், திருமாலை முன்னிருத்திக் கடையைப் பெற்ற தருணத்தில் எழுந்த நஞ்சினை அருந்தித் தேவர்களைக் காத்தருளிய சிவமூர்த்தி, ஈசனே. அவர் நான்கு வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் கூறும் அறத்தின் பொருளைச் சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்து, அதன் பயனையும் வழங்கியவர். அப்பெருமான், சந்திரன் திகழும் சடை உடையவராய்த் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர்.

708. நாவாய பிறைச்சென்னி
நலந்திகழும் இலங்கிப்பி
கோவத நித்திலங்கள்
கொணர்ந்தெறியும் குளிர்கானல்
ஏவாரும் வெஞ்சிலையால்
எயில்மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார்
திருவேட்டக் குடியாரே.

தெளிவுரை : சிவபெருமான், படகு போன்ற வடிவம் கொண்டு விளங்கும் சந்திரனைத் திருமுடியில் சூடி விளங்குபவர். சிப்பிகளிலிருந்து வெளியே வந்த நல் முத்துக்கள, அலைகள் வாயிலாகக் கொண்டு வந்து எறிந்த குளிர்ச்சி மிக்க கடற்கரைச் சோலை திகழும் திருவேட்டக்குடியில், அப்பெருமான் வெம்மையான கணையினால் மேருமலையை வில்லாகக் கொண்டு, முப்புரங்களை எரி செய்த தேவாதி தேவனாய் வீற்றிருப்பவர்.

709. பானிலவும் பங்கயத்துப்
பைங்கானல் வெண்குருகு
கானிலவு மலர்ப்பொய்கைப்
கைதல்சூழ் கழிக்கானல்
மானின்விழி மலைமகளோடு
ஒருபாகம் பிரிவரியார்
தேனிலவு மலர்ச்சோலைத்
திருவேட்டக் குடியாரே.

தெளிவுரை : வெண்ணிலவின் ஒளி போன்று வெண் தாமரை மலரானது ஒளிரவும், கடற்கரைச் சோலைகளில் வெண்ணிறப் பறவைகள் விளங்கவும், கடற்கழியின் கரைகளில் தாழையானது மணம் கொண்டு திகழவும், மானின் விழியுடைய மலைமகளை ஒரு பாகமாகத் திருமேனியில் பிரியாது இணைந்து மேவும் சிவபெருமான், தேன் துளிர்க்கும் மலர்ச் சோலை விளங்கும் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர்.

710. துறையுலவு கடலோதம்
சுரிசங்கம் இடறிப்போய்
நறையுலவும் பொழிற்புன்னை
நன்னீழற் கீழ்அமரும்
இறைபயிலும் இராவணன்றன்
தலைபத்தும் இருபதுதோள்
திறலழிய அடர்த்தாரும்
திருவேட்டக் குடியாரே.

தெளிவுரை : கடலின் ஓதத்தால் உலவும் சங்குகளும் தேன் துளிர்க்கும் புன்னை மலர்களையுடைய பொழில்களும், விளங்கும் திருவேட்டக்குடியில் வீற்றிருக்கும் சிவபெருமான், இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய தலைகள் பத்தும், தோள்கள் இருபதும் தமது வலிமையை இழக்குமாறு அடர்த்தவர்.

711. அருமறைநான் முகத்தானும்
அகலிடநீர் ஏற்றானும்
இருவருமாய் அளப்பரிய
எரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணியுந்தி
மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார்
திருவேட்டக் குடியாரே.

தெளிவுரை : நான்கு மறைகளையும் ஓதுகின்ற பிரமனும், மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் வேண்டி, நீர்தாரையாய் ஏற்ற திருமாலும் ஆகிய இருவரும் அளந்து பார்ப்பதற்கு முனைந்து செல்ல, அவர்களுக்கு அரியவராய், நெருப்பு வண்ணத்தில் உயர்ந்து ஓங்கிய சிவபெருமான், பெருகும் புனல் வழியாக மணிகள் உந்திச் சேர்ந்து வளப்பத்தை நல்கவும் சுடர் விடும் பவளம் போன்ற திருவண்ணமேனியில் திருநீறு விளங்கப் பெற்றவராய்த் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர்.

712. இகழ்ந்துரைக்கும் சமணர்களும்
இடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்துரையாப் பாவிகள்சொற்
கொள்ளேன்மின் பொருளென்ன
நிகழ்ந்திலங்கு வெண்மணலின்
நிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்திலங்கு செஞ்சடையார்
திருவேட்டக் குடியாரே.

தெளிவுரை : சமணர்களும், சாக்கியர்களும் சிவபெருமானை இகழ்ந்து உரைப்பவர்கள். அவற்றை ஒரு பொருட்டாகக் கொள்ள வேண்டாம். வெண்மையான மணலைப் போன்ற ஒளிக்கற்றையுடைய சந்திரனைச் சிவந்த சடையில் கொண்டு திகழும் அப்பெருமான் திருவேட்டக்குடியில் வீற்றிருப்பவர். அப்பரமனை ஏத்துமின்.

713. தெண்டிரைசேர் வயல்உடுத்த
திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்தமிழ்நூல் இவைபத்தும்
உணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுஉடுப்பில் வானவரோடு
உயர்வானத்து இருப்பாரே.

தெளிவுரை : தெளிந்த நீர் அலைகள் திகழும் வயல்களை உடைய திருவேட்டக் குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானைக் குளிர்ச்சி மிக்க சோலை சூழ்ந்த ஆரவாரம் பெருகிய விழாக்கள் மலிந்தோங்கும் காழியின் ஞானசம்பந்தனது ஒண் தமிழ் ஆகிய இத்திருப்பதிகத்தை, நன்கு பொருளுணர்ந்து ஏத்தியும் ஓதியும் வழிபடுபவர்கள், வானவர்களை நிகர்த்துத் தேவர் உலகத்தில் இருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

325. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

714. சுரர்உலகு நரர்கள்பயில் தரணிதல
முரண்அழிய அரணமதில்முப்
புரம்எரிய விரவுவகை சரவிசைகொள்
கரமுடைய பரமன் இடமாம்
வரம்அருள வரன்முறையின் நிரைநிறைகொள்
வருசுருதி சிரவுரையினாற்
பிரமன்உயர் அரன்எழில்கொள் சரணஇணை
பரவவளர் பிரமபுரமே.

தெளிவுரை : ஈசன், தேவர்கள் உறைகின்ற விண்ணுலகமும், நரர்கள் எனப்படும் மனிதர்கள் வாழும் இப்பூவுலகமும் மாறுபட்டு அழியுமாறு செய்த, கோட்டை மதில்களை உடைய மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு, ஒரு சரத்தை விரைவாகச் செலுத்தும் ஆற்றலுடையவர். அப் பெருமானுடைய இடமாவது, பிரமன், தலையாய வேதவாசங்களால் அரனாரின் எழில் மிகுந்த புகழை ஓதிச் சரணடைந்து இணை மலரடியைப் பரவத் திகழும் பிரமபுரமே.

715. தாணுமிகு ஆணிசைகொடு ஆணுவியர்
பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீள்நயனி கோயில்பிடி
மாணிமது நாணும் வகையே
ஏணுகரி பூணழிய ஆணியல்கொண்
மாணிபதி சேண்அமரர் கோன்
வேணுவினை யேணிநகர் காணிதிவி
காணநடு வேணுபுரமே.

தெளிவுரை : இனிமையாக அன்பு செலுத்தி வணங்கும் தேவர்கள், கொடுமை புரியும் அசுரர்களால் நலிவடைந்து, அஞ்சியும் வியர்த்தும் வணங்கி ஏத்திய நிலையில், ஈசன் வலிமை மிகுந்த ஆண் யானையின் வடிவத்தைக் கொண்டருளினார். வளைந்த நெற்றியும் நீண்ட விழியும் உடைய உமாதேவியானவர் குற்றம் இல்லாத பெண் யானையாகத் தோன்றினார். அந்நிலையில் மது என்னும் அசுரன் நாணுமாறும், வலிமை கொண்டு தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும் ஆற்றல் மிக்க அழகிய விநாயகக் கடவுளைத் தோன்ற செய்வித்த பெருமைக்கு உரிய ஈசன் விளங்கும் பதியாவது, தேவர்களின் தலைவனாகிய இந்திரன் மூங்கிலின் மேலிருந்து தனது பதியை நோக்கும் வேணுபுரமே.

716. பகல்ஒளிசெய் நகமணியை முகைமலரை
நிகழ்சரண அகவு முனிவர்க்கு
அகலமலி சகலகலை மிகவுரைசெய்
முகமுடைய பகவன்இடமாம்
பகைகளையும் வகையில்அறு முகஇறையை
மிகஅருள நிகரில் இமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிகழ்
அலர்பெருகு புகலிநகரே.

தெளிவுரை : சூரியனுடைய ஒளியை நிகர்த்த, மலையில் தோன்றும் மணிகளும், செந்தாமரை மலரின் மணமும் பெருக விளங்கும் ஒளி போன்ற திருவடியைச் சரண் அடைந்த சனகாதி முனிவர்களுக்கு, விரிந்து மேவும் எல்லாக் கலைகளும் நன்கு உணருமாறு உரை செய்தருளிய குருமூர்த்தமாக விளங்குபவர், சிவபெருமான். அத்தகைய பெருமானின் இடமாவது, பகை கொண்ட அசுரர்களை வேரறுக்கும் வகையில் ஆறுமுகமுடைய குமாரக் கடவுளை மிகுந்து விளங்குமாறு முகிழ்த்தருளிய காலத்தில், தேவர்கள் எல்லாம் புகலிடமாக விழைந்து மேவிய எழில் திகழும் புகலி நகரே.

717. அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர
வங்கள்எழில் தங்கும் இதழித்
துங்கமலர் தங்குசடை அங்கிநிகர்
எங்கள்இறை தங்கும் இடமாம்
வெங்கதிர்வி ளங்குலகம் எங்கும்எதிர்
பொங்கெரிபு லன்கள் களைவோர்
வெங்குருவி ளங்கிஉமை பங்கரசர
ணங்கள்பணி வெங்குருவதே.

தெளிவுரை : அழகிய சந்திரனும், கங்கை நதியும், அரவமும், எழில் கொண்டு மேவும் கொன்றை மலரும் நெருப்புப் போன்ற சடைமுடியின்கண் பொருந்த விளங்குகின்றவர் எங்கள் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, இவ்வுலகின் கண், சூரியனை விஞ்சுமாறு வெம்மையைத் தருகின்ற புலன்களால் நேரும் துன்பத்தைக் களைபவர்கள் பணியும் வெங்குரு ஆகும். அது குருபகவான் விருப்பத்துடன் நண்ணி உமை பங்கராகிய பரமனைப் பணிந்து பேறு பெற்ற தலமாகும்.

718. ஆணியல்பு காணவன வாணவியல்
பேணியெதிர் பாண மழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை
பேணியற நாணி விசயன்
பாணியமர் பூணஅருள் மாணுபிர
மாணியிடம் ஏணிமுறையில்
பாணியுல காளமிக ஆணின்மலி
தோணி நிகர் தோணிபுரமே.

தெளிவுரை : ஈசன், வீரம் மிகுந்த ஆண் மகன் என்னும் தன்மையில், யாவரும் காணுமாறு காட்டில் வாழும் வேட்டுவ வடிவத்தைக் கொண்டு, விசயனின் அம்புறாத் தூணியும் வில்லின் நாணும் அறுந்து விழுமாறு செய்து, வளைந்த மூங்கிலால் வடிவமைத்த வில்லையும் துணித்தவர். இவற்றால் நாணம் உற்ற விசயன் மற்போர் செய்ய, அவனுக்கு அருள் புரிந்தவர் அவர். அத்தகைய தெய்வத் தன்மை வாய்ந்தவரின் இடமாவது, பிரளய காலத்தில் நீர் சூழ்ந்து உலகம் யாவும் மூழ்கும் தன்மை கண்டாலும் ஆற்றல் பெருகுமாறு தோணியென விளங்கி, அழியாமை காணும் தோணிபுரமே.

719. நிராமய பராபர புராதன
பராவுசிவ ராகஅரு ளென்று
இராவும்எ திராயது பராநினை
புராணன்அம ராதிபதியாம்
அராமிசை யிராதொழில் தராயர
பராயண வராகஉருவா
தராயனை விராயெரி பராய்மிகு
தராய்மொழி விராய பதியே.

தெளிவுரை : ஈசன். எத்தகைய பிணிக்கும் ஆட்படாதவர்; நோய் அற்றவர்; மேலான கடவுள்; தொன்மைப் பழம் பொருளானவர்; பரவப்படும் சிவநாமத்தை இடையுடன் மொழிதலே அருள் ஈட்டுவதற்கு உரியதென, இரவும் பகலும் தியானத்தால் போற்றப்படும் புராணர். அப்பெருமான் அமரும் ஆதிபதியாவது, பாற்கடலில், அரவணையிலிருந்து எழுந்து அரநாமத்தைப் பாராயணம் செய்து, வெள்ளைப் பன்றியின் வடிவு தாங்கிய திருமால், இரணியாக்கதனைக் கொன்ற பழி தீரும் பொருட்டுப் பரவப்படுகின்ற பூந்தராய் என மொழியப்பெறும் பதியே.

720. அரணையுறும் முரணர்பலர் மரணம்வர
இரணம்மதில் அரமலிபடைக்
கரம்விசிறு விரகன்அமர் கரணனுயர்
பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறும்
அரவை யரி சிரம் அரியஅச்
சிரம்அரன சரணம்அவை பரவஇரு
கிரகம் அமர் சிரபுரம தே.

தெளிவுரை : மும்மதில்களை அரணாகக் கொண்ட அசுரர்கள், பலரும் மாண்டு அழியுமாறும், இரணங்கள் கொண்டு நலியுமாறும் துன்புறுத்தினர். அத்தகைய தீயோரை அழித்துத் தன்னை அடைந்தவர்களைக் காப்பவரும், வலிமையான அரன் படையைக் கொண்டுள்ளவரும் நற்கதி அருளுபவரும் சிவபெருமான் ஆவார். அவர் வீற்றிருக்கும் இடமாவது, எல்லாராலும் போற்றப்படுகின்ற அமுதத்தைப் பாற்கடலில் இருந்து கடைந்து தருவித்த காலத்தில், தனக்கும் வேண்டும் எனப் பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினைத் திருமால் அரிந்து வீச, அச்சிரமானது அரனைச் சரணம் அடைந்து இரண்டு கிரகங்களாகப் பொலியும் சிரபுரம் ஆகும்.

721. அறம் அழிவு பெறஉலகு தெறுபுயவன்
விறல்அழிய நிறுவிவிரல்மா
மறையின்ஒலி முறைமுரல்செய் பிறையெயிறன்
உறஅருளும் இறைவன் இடமாம்
குறைவின் மிக நிறைதையுழி மறையமரர்
நிறையருள முறையொடுவரும்
புறவன் எதிர் நிறைநிலவு பொறையன்உடல்
பெறஅருளும் புறவம் அதுவே.

தெளிவுரை : அறநெறிகள் அழியுமாறு உலகத்தைத் துன்புறுத்திய புயவலிமையுடைய இராவணனது ஆற்றல் அழியுமாறு, திருப்பாத விரலால் கயிலையை ஊன்றி நெரித்துச் சாமகானத்தால் ஏத்திப் போற்ற, அருள் புரிந்தவர் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடமாவது, புறாவின் எடைக்குச் சரி நிகராகத் தனது சதையை வைத்து நிரம்பாது தன்னையே அதற்கு இணையாகக் கொள்ளுமாறு செய்த சிபிச் சக்கரவர்த்தியின் நீதியைப் புகழும் தேவர்கள் போற்றும் பெருமை உடைய புறவமே.

722. விண்பயில மண்பகிரி வண்பிரமன்
எண்பெரிய பண்படைகொள் மால்
கண்பரியும் ஒண்பொழிய நுண்பொருள்கள்
தண்புகழ் கொள் கண்டன் இடமாம்
மண்பரியும் ஒண்பொழிய நுண்புசகர்
புண்பயில விண்படரஅச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய்
பண்புகளை சண்பை நகரே.

தெளிவுரை : பெருமை மிகுந்த பிரமன் விண்ணில் உயர்ந்து சென்றும், எண்ணுவதற்கு அரியதாகிய வலிமை மிகுந்த சக்கரப் படையுடைய திருமால், மண்ணில் குடைந்து சென்றும், தேடியும் ஒளியின் தன்மையினையும் கரந்து நுண்ணிய பொருளாக விளங்கி, அத்தகைய இரு மூர்த்திகளாலும் காணப் பெறாது புகழ் கொண்டு மேவிய நீலகண்டர், சிவபெருமான். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, மண்ணுலகத்தில் தமது பெருமையை அழித்துக் கொள்ளும் தன்மையில், முனிவரை இழிவு செய்து பழி கொண்ட தனது இனத்தவர்களுக்கு, நற்கதி உண்டாகுமாறும், சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும், கண்ணபிரான் போற்றி ஏத்தப் பெயர் பெற்ற சண்பை நகரே.

723. பாழியுரை வேழநிகர் பாழமணர்
சூழும்உடல் ஆளர்உணரா
ஏழில்இசை யாழின்மொழி ஏழையவள்
வாழும்இறை தாழும்இடமாம்
கீழிசை கொள் மேலுலகில் வாழரசு
சூழரசு வாழஅரனுக்கு
ஆழியசில் காழிசெய ஏழுலகில்
ஊழிவளர் காழிநகரே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் ஈசனை உணராதவர்கள். ஏழிசையும், யாழின் இனிமையும் போன்ற மொழி பகரும் உமாதேவியை உடனாகக் கொண்டு மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, கீழ் உலகில் பெருமையுடன் வாழ்பவர்களும், மேல் உலகத்தில் அரச போகத்தில் வாழ்பவர்களும் மற்றும் சூழ்ந்து விளங்குபவர்களும் வாழும் பொருட்டு நடனம் புரிந்த ஈசன்பால், ஆடலில் தோற்று அப்பெருமானைப் பூசித்துத் தன் குற்றமானது நீங்குமாறு ஏத்தி காளி தேவிக்கு அருளிய காழி நகரே.

724. நச்சரவு கச்செனஅ சைச்சுமதி
உச்சியின்மி லைச் சொருகையான்
மெய்ச்சிரம் அணைச்சு உலகில் நிச்சமிடு
பிச்சையமர் பிச்சன்இடமாம்
மச்சமத நச்சிமதம் அச்சிறுமி
யைச்செய்தவ அச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள்
நச்சமிடை கொச்சைநகரே.

தெளிவுரை : நஞ்சு பொருந்திய அரவத்தை இறுக்கமாகக் கட்டிச் சந்திரனைத் திருமுடியில் சூடிப் பிரமனுடைய சிரத்தைக் கையால் கொய்து, அதனைக் கபாலமாகக் கொள்ளும் பித்தராகியவர் சிவபெருமான். அவர் இடமாவது, மீனின் நாற்றத்தை விரும்பிய மீனவர் குலத்து நங்கையை விழைந்த கொச்சை நிலையை நீக்குமாறு ஏத்திய பராசர முனிவரின் செயல் கண்டு, தேவர்கள் விரும்பி நண்ணும் கொச்சைவயமே.

725. ஒழுகலரிது அழிகலியில் உழியுலகு
பழிபெருகு வழியை நினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி
குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை
கழுவும்உரை கழுமலரநகர்ப்
பழுதில்இறை யெழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழி தகையவே.

தெளிவுரை : கலியுகத்தில் ஒழுகத் தகும் அறங்களை மேற்கொள்ளுதல் அரிது என்னும் தன்மையில், உரோமச முனிவர் தமது குழுவினருடன் சார்ந்து சிவபெருமானைத் தொழுது, இழிந்ததாகிய மலத்தொகுதி நீங்கப் பெற்ற கழுமல நகரினைப் பழுதில்லாதவாறு இறைவனால் எழுதப்பெறும் மொழியாகி தமிழ் மொழியால், தமிழ் வல்லராகிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பாசுரங்களை மொழிதல் நற்பயனை விளைவிக்கும்.

திருச்சிற்றம்பலம்

326. திருக்கயிலாயம் (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)

திருச்சிற்றம்பலம்

726. வாளவரி கோளபுலி கீளதுரி
தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில
கோளகளிறு ஆளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ
மீளிமிளிர் தூளிவளர்பொன்
காளமுகில் மூளும்இருள் கீளவிரி
தாளகயி லாய மலையே.

தெளிவுரை : சிவபெருமான், ஒளி மிக்கதும் வரிகளை உடையதும் ஆகிய புலியின் தோலை உடையாகக் கொண்டிருப்பவர்; எக்காலத்திலும் ஆனந்தமாக இருப்பவர்; பக்தர்களை ஆட்கொள்பவர்; கூரிய தந்தங்களையுடைய மதம் பொருந்திய கொடிய யானையை அடக்கி ஆண்டவர்; சிறந்த வில்லினை ஏந்திய தோளினர்; கூளிகள் தாளம் இட, நடம் புரிபவர். அப்பெருமான் திருவெண்ணீற்றினை நன்கு விளங்குமாறு, அணிபவர்; அப்பெருமானின் கயிலை மலையானது மேகம் பதிய மேவும் இருள் விலகுமாறு செய்யும் அடிவாரம் கொண்டதாகும்.

727. புற்றரவு பற்றியகை நெற்றியது
மற்றொருகண் ஒற்றைவிடையன்
செற்றதுஎயில் உற்றதுமை யற்றவர்கள்
நற்றுணைவன் உற்றநகர்தான்
சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு
குற்றம்இல தெற்றென வினாய்க்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றும்ஒளி
பெற்றகயி லாய மலையே.

தெளிவுரை : சிவபெருமான், அரவம் பற்றி விளங்கும் கையுடையவர்; நெற்றியில் ஒரு கண்ணுடையவர்; ஒற்றை இடபத்தை உடையவர்; முப்புரத்தை எரித்தவர்; உமாதேவியாரை ஒரு பாகமாக உடையவர்; உலகப் பற்றினை நீக்கிய அடியவர்களுக்கு நல்ல துணையாக விளங்குபவர். அத்தகைய பெருமான் விளங்கும் தலமாவது, மலையில் தோன்றும் மணிகளின் ஒளியை விஞ்சும் வகையில், கற்றவர்கள் போற்றி ஏத்துதலால் மேலோங்கத் திகழும் கயிலாய மலையாகும். இது, மேன்மையாய்த் திகழும் ஞான ஒளியின் சிறப்பினை உணர்த்துவதாயிற்று.

728. சிங்கவரை மங்கையர்கள் தங்களன
செங்கைநின்ற கொங்கு மலர்தூய்
எங்கள்வினை சங்கையவை இங்குஅகல
அங்கமொழி எங்கும் உளவாய்த்
திங்கள்இருள் நொங்கவொளி விங்கிமிளிர்
தொங்கலொடு தங்கஅயலே
கங்கையொடு பொங்குசடை எங்கள்இறை
தங்குகயி லாய மலையே.

தெளிவுரை : சிங்கம் போன்ற பெருமையுடைய மலைப் பகுதியில் மேவும் மங்கையர்கள், தங்கள் சிவந்த கைகளால் தேன் துளிர்க்கும் நறுமலர் கொண்டு தூவிப் போற்றி, தீவினையைக் களைந்தும் அஞ்ஞானத்தைப் போக்கியும் அருள்வீராக ! எனத் திரிகரண சுத்தியாய் வழிபாடு செய்து விளங்கச் சிவபெருமான், சந்திரனின் குறையைப் போக்கி வளரச் செய்து, மாலை அணிந்தும் கங்கையினைத் தரித்தும் விளங்குபவர். எங்கள் இறைவனாகிய சடைமுடியுடைய அப்பெருமான், தங்கி இருப்பது கயிலாய மலையே.

729. முடியசடை பிடியதொடு வடியமழு
வுடையர்செடி யுடைய தலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி
நொடியமகிழ் அடிகள் இடமாம்
கொடியகுரல் உடையவிடை கடியதுடி
யடியினொடும் இடியின் அதிரக்
கடியகுரல் நெடியமுகில் மடியஅதர்
அடிகொள்கயி லாய மலையே.

தெளிவுரை : திருமுடியில் சடை உடையவராய் கூர்மையான மழுப் படை ஏந்தியும்; கொன்றை வன்னி, ஊமத்தம் முதலானவை சூடியும்; கொடுந் தொழிலால் பிறர்க்குத் தீமை விளைவிக்கும் அசுரர்கள் கெடுமாறு புரிந்தும்; கையில் பிரம கபாலம் ஏந்திப் பலி கொள்ளவும் உடையவர். சிவபெருமானை அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, இடபத்தின் கனத்த குரலும் யானையின் பிளிறலும் இணைந்து மேகத்திலிருந்து தோன்றும் இடி முழக்கத்தை அடங்கச் செய்யும் கயிலாய மலையே.

730. குடங்கையின் நுடங்குஎரி தொடர்ந்துஎழ
விடம்கிளர் படங்கொள் அரவம்
மடங்கொளி படர்ந்திட நடந்தரு
விடங்கனது இடம்தண் முகில்போய்த்
தடங்கடல் தொடர்ந்துடன் நுடங்குவ
இடங்கொள மிடைந்த குரலால்
கடுங்கலின் முடங்களை நுடங்குஅர
வொடுங்கு கயிலாய மலையே.

தெளிவுரை : உள்ளங்கையில் நெருப்பானது எரிந்து விளங்கப் படம் கொண்டு ஆடுகின்ற பாம்பானது ஒளிர்ந்து திருமேனியில் படர, நடம் புரியும் விடங்கராகிய சிவபெருமானுடைய இடமாவது, மேகங்கள் கடல் நீரை முகந்து, எல்லா இடங்களும் பரவி, இடிமுழக்கத்துடன் பொழிய அவ் இடியோசை கேட்ட நாகம், ஒடுங்குகின்ற கயிலாய மலையே.

731. ஏதமில பூதமொடு கோதைதுணை
ஆதிமுதல் வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற
வாதுபயில் நாதன் நகர்தான்
தாதுபொழி போதுவிட வூதுசிறை
மீதுதுளி கூதல் நலியக்
காதல்மிகு சோதிகிளர் மாதுபயில்
கோதுகயி  லாய மலையே.

தெளிவுரை : குற்றம் ஏதும் இல்லாத பூத கணங்கள் விளங்க, உமாதேவியைத் துணையாகக் கொண்டு மேவும் வேதங்களை விரிக்கும் ஆதியாகிய சிவபெருமான், நீதிக் கருத்துக்களை ஓதி, மறவாது ஏத்தப்படும் தலைவனாகியவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, மகரந்தப் பொடிகள் கொண்டுள்ள மலர் அரும்புகளில் வண்டுகள் ஊதி மலர்ந்து அழகு மிளிர மேவும் கயிலாய மலையே.

732. சென்றுபல வென்றுலவு புன்தலையர்
துன்றலொடும் ஒன்றியுடனே
நின்றுஅமரர் என்றும் இறைவன் றன்னடி
சென்று பணிகின்ற நகர்தான்
துன்றுமலர் பொன்திகழ்செய் கொன்றைவிரை
தென்றலொடு சென்றுகமழக்
கன்றுபிடி துன்றுகளிறு என்றிவைமுன்
நின்றகயிலாய மலையே.

தெளிவுரை : நன்மக்கள், புலன்களை வென்றவராயும் பூதகணங்களுடன் சேர்ந்தும், தேவர்கள் உடன் நின்றும், எக்காலமும் இறைவன் திருவடியை பணிகின்றவராயினர். அக் கடவுளின் இடமாவது, கொத்தாகப் பூக்கும் கொன்றை மலரின் நறுமணம் பரப்பும் தென்றல் காற்று வீச, ஆண் யானையும் பெண் யானையும் கன்றும் உலவி மேவும் கயிலாய மலையே.

733. மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு
செருச்செய்த பருத்தகளிறின்
பொருப்பிடை விருப்புற இருக்கையை
ஒருக்குடன் அரக்கன் உணராது
ஒருத்தியை வெருக்குற வெருட்டலும்
நெருக்கென நிருத்தவிரலால்
கருத்தில ஒருத்தனை எருத்துஇற
நெரித்தகயி லாய மலையே.

தெளிவுரை : அனல் கக்கும் வீரத்தின் செருக்குடைய யானையைப் போன்றவன் இராவணன். அவன், ஈசன் விருப்புடன் அமர்ந்திருக்கும் இருக்கையாகிய கயிலை மலையை, உமையவள் அஞ்சுமாறு எடுத்தான். அப்போது அப்பெருமான், நடனம் புரியும் தமது திருப்பாத விரலால் அதனை ஊன்றி, அரக்கனை நெரியுமாறு செய்தார். அத்தகைய சிறப்புடையது கயிலாய மலையே.

734. பரியதிரை எரிய புனல் வரியபுலி
உரியதுடை பரிசை யுடையான்
வரியவளை அரியகணி யுருவினொடு
பெரியஎரி உருவமது தெரியஉரு
பரிவுதரும் அருமை யதனால்
கரியவனும் அரியமறை புரியவனும்
மருவுகயி லாய மலையே.

தெளிவுரை : சிவபெருமான், நெருப்பும் கங்கையும் கொண்டு விளங்கிப் புலித் தோலை ஆடையாகக் கொண்டிருப்பவர். அவர், உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு திகழ்பவர். அப் பெருமான், பிரிதல் இல்லாது வீற்றிருக்கும் இடமாவது; பெரிய சோதி வடிவமாகிப் பின்னர் பரிவு கொண்டு காட்சி தரத் திருமாலும் பிரமனும் மருவி ஏத்தும் கயிலாய மலையே.

735. அண்டர்தொழு சண்டிபணி கண்டடிமை
கொண்டஇறை துண்டமதி யோடு
இண்டபுனை உண்டசடை முண்டதர
சண்டஇருள் கண்டர் இடமாம்
குண்டமண அண்டர்அவர் மண்டைகையில்
உண்டுளறி மிண்டு சமயம்
கண்டவர்கள்  கொண்டவர்கள் பண்டும்அறி
யாதகயி லாய மலையே.

தெளிவுரை : தேவர்கள் தொழுது போற்றும் சண்டேச நாயனாரின் சிவபூசையைக் கண்டு மகிழ்ந்து அடிமை கொண்ட சிவபெருமான், பிறைச் சந்திரனை, இண்டை மாலையால் அலங்கரிக்கப்பட்ட சடை முடியில் தரித்து, மண்டை ஓட்டினை மாலையாகக் கொண்டும், கரிய கண்டத்தினராயும் விளங்குபவர். அப்பெருமான் விளங்கும் இடமாவது, சமணரும் சாக்கியரும் அறியாத கயிலாய மலையே.

736. அந்தண்வரை வந்தபுனல் தந்ததிரை
சந்தனமொடு உந்திஅகிலும்
கந்த மலர் கொந்தினொடு மந்திபல
சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு
செந்தமிழ் இசைந்த புகலிப்
பந்தன்உரை சிந்தைசெய வந்தவினை
நைந்துபர லோகம் எளிதே.

தெளிவுரை : அழகிய குளிர்ச்சி மிக்க மலையிலிருந்து வந்த நீரில் அலைகளால் உந்தித் தள்ளப்படும் சந்தனம், அகில் ஆகியன பெருக, வாசனை வீசும் கொத்தான மரங்களைக் கொண்டு வானரங்கள் பரவி மேவும் கயிலாய மலையின் மீது, ஈசன் திருவடியை அணுகுகின்ற, சந்தம் விளங்கச் செம்மை நலம் வழங்கும் தமிழ் கொண்டு இசைத்த புகலியின் ஞானசம்பந்தனின் இத் திருப்பதிகத்தை ஓதி உரைக்க, வினை யாவும் நீங்கும் பரலோகம் எளிதாகக் கிட்டும்.

திருச்சிற்றம்பலம்

327. திருக்காளத்தி (அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல் மாவட்டம், ஆந்திரா மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

737. வானவர்கள் தானவர்கள் வாதைபட
வந்ததொரு மாகடல்விடம்
தானமுது செய்தருள் புரிந்தசிவன்
மேவுமலை தன்னை வினவில்
ஏனமிள மானினொடு கிள்ளைதினை
கொள்ளஎழி லார்கவணினால்
கானவர்தம் மாமகளிர் கனகமணி
விலகுகா ளத்திமலையே.

தெளிவுரை : தேவர்களும் அசுரர்களும் துன்புற்று வருந்துமாறு பெருகிப் பாற்கடலிலிருந்து வந்த ஆலகால விடத்தைத் தானே அமுதம் போன்று ஏற்று உட்கொண்டு காத்தருளியவர் சிவபெருமான். அப் பெருமான் மேவும் மலையானது யாது என வினவின், அது காளத்தி மலையே ஆகும். அம்மலையானது பன்றி, மான் ஆகியன விளங்கும் இடம். ஆங்குக் கிளிகள், தினையைக் கொள்ளும் நோக்கில் வரக் காவல் மகளிர்கள் பொன் மணிகளைக் கவண் கற்களால் வீசுகின்ற பான்மையுடையது.

738. முதுசினவில் அவுணர்புர மூன்றும்ஒரு
நொடிவரையின் மூளஎரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர்
விரும்புமலை தன்னை வினவில்
எதிர்எதிர வெதிர்பிணைய எழுபொறிகள்
சிதற எழில் ஏனமுழுத
கதிர்மணியின் வளர்ஒளிகள் இருள் அகல
நிலவுகா ளத்தி மலையே.

தெளிவுரை : முதிர்ந்த மேருமலையைப் போர் செய்யும் வில்லாகக் கொண்டு, அசுரர்களின் மூன்று புரங்களும் ஒரு நொடி நேரத்தில் எரிந்து சாம்பலாகுமாறு செய்யவல்ல சதுரர் சிவபெருமான். அவர் சந்திரனைத் தரித்த சடை உடையவர்; உயிர்களுக்கு நன்மை செய்பவர். அப்பெருமான், விரும்புகின்ற மலை யாது என வினவின், அது காளத்தி மலை ஆகும். அது எதிர் எதிராக உள்ள மூங்கில்கள் உராய்ந்து நெருப்பினைத் தோற்றுவித்த ஒளியும், பன்றிகள் மண்ணைக் குடைந்து பள்ளம் ஆக்க ஆங்குப் பொலியும் மணி வகைகளும் இருளை நீக்கி வாழ செய்யும் காளத்தி மலையே.

739. வல்லைவரு காளியைவ குத்துவலி
யாகிமிகு தாரகனை நீ
கொல்லென விடுத்தருள் புரிந்த சிவன்
மேவுமலை கூறி வினவில்
பல்பலஇ ருங்கனி பருங்கிமிக
உண்டவை நெருங்கி இனமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை
யாடுகா ளத்தி மலையே.

தெளிவுரை : வலிமை உடையவளாய் மேவும் காளி தேவியை நோக்கித் தாருகன் என்னும் அசுரனை அழிப்பாயாக என மொழிந்து அருள் புரிந்த சிவபெருமான் மேவும் மலையானது, பல சுவையான கனிகளை அருந்திய வானரங்கள், கற்கள் அதிருமாறு குதித்து விளையாடும் காளத்தி மலையே.

740. வேய்அனைய தோளுமையொர் பாகமது
வாகவிடை யேறிசடைமேல்
தூயமதி சூடிசுடு காடில்நட
மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெயும்
வேடன் மல ராகுநயனம்
காய்கணையி னால்இடந்து ஈசனடி
கூடுகா ளத்தி மலையே.

தெளிவுரை : மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தில் விளங்கித் தூய சந்திரனைச் சடை முடியில் தரித்துச் சுடுகாட்டில் நடம் புரியும் சிவபெருமானுடைய மலை யாது என வினவினால், அது காளத்தி மலையே. அது, திருவாயைத் தீர்த்தம் விளங்கும் கலசமாகக் கொண்டு வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர் தமது கண் மலரைக் கொடிய அம்பினால் இடந்து அப்பி, ஈசனின் திருவடியைச் சார்ந்த சிறப்புடையது.

741. மலையின்மிசை தனில்முகில்போல் வருவதொரு
மதகரியை மழைபோலலறக்
கொலைசெய்து உமையஞ்சவுரி போர்த்தசிவன்
மேவுமலை கூறிவினவில்
அலைகொள் புனல் அருவிபல சுனைகள்வழி
இழியவயல் நிலவு முதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை
சிந்துகா ளத்தி மலையே.

தெளிவுரை : கருமையுடைய மலையின் மீது தவழும் மேகம் போன்று வந்த மதம் பொருந்திய யானையை வீழ்த்தி, அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட சிவபெருமான் மேவும் மலையானது, நீர் பாயும் அருவியும் பல சுனைகளும், நீர் திகழும் வயல்களும், மூங்கிலில் தோன்றும் முத்துக்களின் ஒளியும் விளங்கும் காளத்தி மலையே.

742. பாரதம் விளங்கிய பகீரதன்
அருந்தவம் முயன்ற பணிகண்டு
ஆரருள் புரிந்து அலைகொள் கங்கைசடை
ஏற்றஅரன் மலையை வினவில்
வார்அதர் குருங்குறவர் சேவலின்
மடுத்தவர் எரித்த விறகில்
கார்அகில் இரும்புகை விசும்புகமழ்
கின்றகா ளத்தி மலையே.

தெளிவுரை : பாரத பூமியில் சிறந்து விளங்கிய பகீரதன் என்னும் அரசன், பிதுரர்களுக்கு நற்கதி உண்டாகுமாறு செய்த அரிய தவத்தை மேற்கொண்டதை ஒட்டி, அருள் புரியும் பான்மையால், கங்கையைத் தமது சடையில் ஏற்றவர் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் மலையானது குறவர்கள் காவலுக்காக நெருப்பை மூட்டி எரித்த விறகில், அகில் கட்டைகளின் புகையானது ஆகாயத்தில் பரவிக் கமழும், காளத்தி மலையே.

743. ஆரும் எதி ராதவலி யாகிய
சலந்தரனை ஆழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவன்
இருந்தமலை தன்னை வினவில்
ஊரும்அரவம் மொளிகொள் மாமணி
உமிழ்ந்தவை உலாவி வரலால்
காரிருள் கடிந்துகன கம்மென
விளங்குகா ளத்தி மலையே.

தெளிவுரை : தன்னை எதிர்த்துப் போர் செய்யும் வலிமையை எவரும் பெற்றிராத சலந்தராசூரனைச் சக்கரப் படையால் வீழ்த்தி, உலகத்தைக் காத்தருள் புரிந்தவர், சிவபெருமான். அப் பரமன் வீற்றிருக்கும் மலையானது, நாகமானது மாணிக்கத்தை உமிழ்ந்து ஒளிபெருக்க இருள் மடியப் பொன்னென ஒளிரும் காளத்தி மலையே.

744. எரியனைய கரிமயிர் இராவணனை
ஈடழிய எழில்கொள் விரலால்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன்
மேவுமலை பெற்றி வினவில்
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள்
நீடுவரை யூடுவரலால்
கரியி னொடு வரியுழுவை அரியினமும்
வெருவுகா ளத்தி மலையே.

தெளிவுரை : நெருப்புப் போன்ற வண்ணமும் சுருண்ட தன்மையும் கொண்ட முடியுடைய இராவணனின் வலிமை அழியுமாறு, திருப்பாத விரலால் கயிலை மலையை ஊன்றிப் பின்னர் அருள் புரிந்தவர், சிவபெருமான். அப் பெருமான் மேவி விளங்குகின்ற மலையானது, வில்லேந்திய வீரர்களாகிய வேடுவர்கள் ஆராவாரித்து மலையின் ஊடே வர, யானையும், புலியும், சிங்கமும், அச்சம் கொண்டு நிலவ மேவும் காளத்தி மலையே.

745. இனதளவில் இவனதடி இணையுமுடி
அறிதும் என இகலும் இருவர்
தனது உருவம் அறிவரிய சகலசிவன்
மேவுமலை தன்னை வினவில்
புனவர்புன மயிலனைய மாதரொடு
மைந்தரும் மணம் புணருநாள்
கனகம்என மலர்கள் அணி வேங்கைகள்
நிலாவுகா ளத்தி மலையே.

தெளிவுரை : இவரது அளவும், திருவடியும், திரு முடியும் அறிய வேண்டும் எனத் தமக்குள் இகல் கொண்ட திருமால், பிரமன் ஆகிய இருவரும் முனைந்து தேடியும் அறிவதற்கு அரியவராகியவர், சிவபெருமான். அப்பெருமான் மேவும் மலையானது, தினைப் புனத்து வேடுவர்கள், திருமணக் காலங்களில் பொன் போன்ற மலர்களை அணிந்து நறுமணம் கொண்டு விளங்குதலைப் போன்று வேங்கை மலர்கள் பூத்துக் குலுங்கும் சிறப்புடைய காளத்தி மலையே.

746. நின்றுகவ ளம்பல கொள் கையரொடு
மெய்யில்இடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன்
மேவுமலை நாடிவினவில்
குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர்
சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை
யாடுகா ளத்தி மலையே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் சிவபெருமானுடைய அருள் வழங்கும் நற்றிறத்தை அறியாதவர்களாய் உள்ளனர். அத்தகைய ஈசன் மேவும் மலையானது, குன்றில் விளங்கும் பொழிலில் குளிர்ச்சி மிக்க சந்தன மரங்களின் தழைகளைத் தனது கன்றுடன் சூழ்ந்து சேர்ந்து தின்றும், விளையாடியும் விளங்கும் பெண் யானைகள் விளங்கும் காளத்தி மலையே.

747. காடதுஇட மாகநட மாடுசிவன்
மேவுகா ளத்தி மலையை
மாடமொடு மாளிகைகள் நீடுவலர்
கொச்சைவயம் மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம்
பந்தனுரை நல்ல தமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்கள்
நல்லர்பர லோகம் எளிதே.

தெளிவுரை : சுடுகாட்டினை இடமாகக் கொண்டு நடனம் புரிகின்ற சிவபெருமான் மேவி வீற்றிருக்கின்ற காளத்தி மலையை, மாட மாளிகைகளை நெடிது விளங்குகின்ற கொச்சை வயம் எனப் பெறும் சீகாழியில், சிறப்புடன் திகழும், புகழில் மிக்க ஞானசம்பந்தன் உரை செய்த நலம் திகழும் இத்திருப்பதிகத்தை இசையுடன் பாட வல்லவர்கள், ஈசனுடைய உலகத்தில் திகழ்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

328. மயிலாடுதுறை (அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

748. ஏனஎயிறு ஆடுஅரவொடு என்புவரி
ஆமைஇவை பூண்டினை ஞராய்க்
கானவரி நீடுழுவை அதளுடைய
படர்சடையர் காணிஎனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின்
மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட
மூசுமயி லாடு துறையே.

தெளிவுரை : சிவபெருமான், பன்றியின் கொம்பும் படம் கொண்டு ஆடுகின்ற பாம்பும், எலும்பும், ஆமை ஓடும் பூண்டு இளைஞராய்ப் புலித்தோலை உடுத்திப் படர்ந்து விரியும் சடைமுடியுடன் விளங்குபவர். அப்பெருமானைக் கண்டு தரிசிப்பதற்கு உரிய இடம் எனப்படுவது, மயிலாடுதுறையே. வேதத்தில் வல்ல புகழ் மிகுந்த அந்தணர்கள் வேள்வி புரிந்து எழுப்பும் புகையானது, ஆகாயத்தில் சென்று தேவலோகத்தில் உள்ள கற்பகச் சோலையில் பதியும் எழில் கொண்டது அத்தலம்.

749. அந்தண்மதி செஞ்சடையார் அங்கண் எழில்
கொன்றையொடு அணிந்தழகராம்
எந்தம் அடிகட்கு இனிய தானமது
வேண்டில்எழி லார் பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும்
வாரிவரு காவிரியு ளால்
வந்ததிரை யுந்திஎதிர் மந்திமலர்
சிந்துமயி லாடு துறையே.

தெளிவுரை : குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சிவந்த சடை முடியின் மீது சூடி, எழில் மிக்க கொன்றை மாலை தரித்த அழகராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இனிய இடமாவது, மயிலாடுதுறையே. அப் பதியானது, மணம் கமழும் சந்தனமும் அகில் மரக் கட்டைகளும் தனது அலைகளால் உந்தித் தள்ளிக் கொண்டு வரும் காவிரி, கரையில் உள்ள சோலைகளில் விளங்கும் மலர்களை, மந்திகள் சிந்துமாறு அசைக்கச் செய்யும் பாங்குடன் திகழ்வதாகும்.

750. தோளின்மிசை வரியரவ நஞ்சழல்
வீக்கிமிகு நோக்கரிய ராய்
மூளைபடு வெண்தலையில் உண்டுமுது
காடுறையும் முதல்வர் இடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி
உதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமண
நாறுமயி லாடு துறையே.

தெளிவுரை : தோளின் மீது அழகிய வரிகளையுடைய அரவமானது, நச்சுக் காற்றைச் சீறி விடுமாறு அதனை நன்கு அரையில் கட்டி, மிகுந்த அழகு உடையவராய்ப் பிரம கபாலம் ஏந்திப் பலி கொண்டு மயானத்தில் உறைபவர், சிவபெருமான். அவருடைய இடம் எனப்படுவது, காவிரியில் விளங்கும் வாளை மீன்கள், கரையோரங்களில் உள்ள கமுக மரங்களில் தாவிப் பாய பாளைகள் உதிர்ந்து கமழும் சிறப்புடைய மயிலாடுதுறையே.

751. ஏதமிலர் அரியமறை மலையர்மகள்
ஆகியஇ லங்கு நுதல் ஒண்
பேதைதட மார்பதுஇட மாகஉறை
கின்றபெரு மானதிடமாம்
காதன்மிகு கவ்வையொடு மவ்வல்அவை
கூடிவரு காவிரியுளால்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி
கமழுமயி லாடு துறையே.

தெளிவுரை : சிவபெருமான், எத்தகைய மலக்குற்றமும் இல்லாதவர்; அரிய வேதமாக விளங்குபவர்; மலைமகளாகிய உமாதேவியை இடப் பாகமாகக் கொண்டு திகழ்கின்றவர். அப் பெருமானுடைய இடமாவது ஆரவாரித்து மேவும் அலைகளின் வாயிலாக மல்லிகை முதலான நறுமலர்கள் கொண்டு திகழும் காவிரி, சிறப்புடன் விளங்குகின்ற மயிலாடுதுறையே.

752. பூவிரி கதுப்பின்மட மங்கையர்
அகந்தொறும் நடந்து பலிதேர்
பாவிரி இசைக்குரிய பாடல்பயி
லும்பரமர் பழமையெனலாம்
காவிரி நுரைத்து இரு கரைக்குமணி
சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி
கொள்ளுமயி லாடு துறையே.

தெளிவுரை : விரிந்த பூக்களைக் கூந்தலில் சூடிய தாருகவனத்து மங்கையர்தம் இல்லம்தோறும் சென்று, கபலாம் ஏந்திப் பலி ஏற்றுப் பாடல் இசைக்கும் பழைமையானவர். அப்பெருமான், காவிரியில் பெருகும் நுரையின் வாயிலாக ஒளிமிக்க மணிகளை வாரி, இரு கரைகளிலும் சிந்த, வண்டுகள் அதனைக் கவரவும் வானரங்கள் மாமரங்களிலிருந்து குதித்து மகிழவும் விளங்கும் மயிலாடுதுறையில், பழம்பொருளாக வீற்றிருப்பவர் ஆவார்.

753. கடந்திகழ் கருங்களிறு உரித்துஉமையும்
அஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழு மூவிலைநல் வேலுடைய
வேதியர் விரும்பும் இடமாம்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு
தொண்டை யெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக
நாறு மயிலாடு துறையே.

தெளிவுரை : மதம் பொருந்திய யானையின் தோலை உரித்து உமாதேவியும் அஞ்சுமாறு கொண்ட திருக்கோலத்தினராகிய சிவபெருமான், ஆற்றல் மிக்க சூலப் படை உடையவராய் விளங்குபவர். வேதத்தை விரிக்கும் அவர் விரும்புகின்ற இடமாவது, இனிமையான எழில் மிக்க தேவமாதர்கள் புனலில் ஆடி மேவும் வாசம் கமழும் சிறப்புடைய மயிலாடுதுறையே.

754. அவ்வ திசை யாரும்அடி யாரும்உள
ராகஅருள் செய்தவர்கண் மேல்
எவ்வம்அற வைகலும் இரங்கிஎரி
யாடும் எமதுஈசன் இடமாம்
கவ்வையொடு காவிரி கலந்துவரு
தென்கரை நிரந்து கமழும்பூ
மவ்வலொடு மாதவி மயங்கிமண
நாறுமயி லாடுதுறையே.

தெளிவுரை : எல்லாத் திக்குகளிலும் விளங்குகின்ற அடியவர்கள், நல்ல வகையில் வாழும் பொருட்டு அருள் புரிந்து, அவர்கள்பால் உள்ள தீய வினைகள் நீங்குமாறு நாள்தோறும் கையில் நெருப்பு ஏந்தி ஆடுகின்ற எமது ஈசன் வீற்றிருக்கின்ற இடமாவது ஆரவாரித்து, மணம் மிகுந்த மல்லிகை, மாதவி முதலான மலர்களை உந்தித் தள்ளி வரும், காவிரியின் தென் கரையில் உள்ள மயிலாடுதுறையே.

755. இலங்கைநகர் மன்னன்முடி ஒருபதினொடு
இருபதுதொள் நெரிய விரலால்
விலங்கலில் அடர்த்தருள் புரிந்தவர்
இருந்தஇடம் வினவுதிர் களேல்
கலங்கல் நுரை யுந்தியெதிர் வந்தகய
மூழ்கிமலர் கொண்டு மகிழா
மலங்கிவரு காவிரி நிரந்துபொழி
கின்றமயி லாடு துறையே.

தெளிவுரை : இராவணனுடைய பத்துத் தலைகளும், இருபது தோள்களும் நெரியுமாறு திருப்பாத விரலால் கயிலை மலையினை ஊன்றி அடர்த்துப் பின்னர் அருள் புரிந்தவராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, யாது என வினவவீர்களானால், அது மயிலாடுதுறையே. அது வேகமாகக் கலங்கிய நுரை கொண்டு வரும் காவிரி நீர், வழியில் குளங்களில் உள்ள மணம் கமழும் பூக்களை எடுத்துக் கொண்டு கரை சேர்க்கும் சிறப்பால், எழில் மிகப் பொருந்திய நகர் ஆகும்.

756. ஒண்திறலி னான்முகனும் மாலுமிக
நேடியுண ராத வகையால்
அண்டமுறை அங்கியுரு வாகிமிக
நீண்டஅர ணாரது இடமாம்
கெண்டை இரை கொண்டுகெளிறு ஆருடன்
இருந்துகிளர் வாயறுதல் சேர்
வண்டல்மணல் கொண்டிமட நாரைவிளை
யாடும்மயி லாடு துறையே.

தெளிவுரை : மிகுந்த வலிமை உடைய பிரமனும், திருமாலும் தேடியும் உணர முடியாத வகையால், அண்டங்கள் யாவும் பொருந்தும் நெருப்பு வண்ணமாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, கெண்டை, கெளிறு, ஆரல் ஆகியவை கிளர்ந்து இருக்கவும், கரையில், உள்ள நாரையானது வண்டல் மணலில் கிளறி ஆடும் மயிலாடுதுறையே.

757. மிண்வுதிறல் அமணரொடு சாக்கியரும்
அலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்சடை எங்கள்பெரு
மானதிடம் என்பர் எழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய
தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை திளைக்கமது வந்தொழுகு
சோலைமயி லாடு துறையே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் பழித்துக் கூறினாலும், ஆற்றல் மிகுந்தவராயும், இண்டை மாலை கொண்ட சடை முடி உடையவராயும் விளங்கும் ஈசனது இடமாவது, தெளிந்த அலைகள் கொண்டு மேவும் காவிரியின் தென்கரையில், நறுமண மலர்கள் விளங்கும் சோலைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்து தேனுண்டு விளங்கும் மயிலாடுதுறையே.

758. நிணந்தரு மயானநில வானமதி
யாததொரு சூலமொடு பேய்க்
கணந் தொழு கபாலிகழல் ஏத்திமிக
வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம்
பந்தன்மயி லாடுதுறை யைப்
புணர்ந்ததமிழ் பத்தும்இசை யால்உறைசெய்
வார்பெறுவர் பொன்னுலகமே.

தெளிவுரை : வானுலகத்தவரும் பூவுலகத்தவரும் போற்றுமாறு சிறப்புடைய சூலப்படை உடைய ஈசன், கபாலம் ஏந்தியவராய்ப் பேய்க் கணங்கள் தொழ மயானத்தில் விளங்குபவர். அப்பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டுள்ள காழியில் மேவும் மறைவல்ல ஞானசம்பந்தன், மயிலாடுதுறையைப் பாடிய இத் தமிழ்ப்பதிகத்தை ஓதவல்லவர்கள், பொன்னுலகம் எனப் போற்றத் தகும் சொர்க்கத்தில் மகிழ்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

329. திருவைகாவூர் (அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில், திருவைகாவூர், தஞ்சாவூர்)

திருச்சிற்றம்பலம்

759. கோழைமிடறு ஆககவி கோளும்இல
வாகஇசை கூடும் வகையால்
ஏழையடி யார்அவர்கள் யாவைசொன
சொல்மகிழும் ஈசன்இடமாம்
தாழைஇள நீர்முதிய காய்கமுகின்
வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல்
சேறுசெயும் வைகாவிலே.

தெளிவுரை : கோழை பொருந்திய கண்டத்தை உடையவராகி, இசைத்துப் பாடும் பான்மை இலராயினும், தமக்குக் கூடுகின்ற இசையால் அன்பின் மிகுந்த அடியவர் எவ்வகையில் சொன்னாலும் அவற்றை ஏற்று மகிழ்பவர் சிவபெருமான். அப் பெருமானின் இடமாவது, தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள் கமுக மரங்களில் விழ, அதன் பாளைகள் வாழையை உதிர்த்து வயல்களில் சேறாகத் திகழும் பெற்றியுடைய வைகாவூர் ஆகும்.

760. அண்டம்உறு மேருவரை அங்கிகணை
நாணரவ தாகஎழிலார்
விண்டவர்தம் முப்புரம்எ ரித்தவிகிர்
தன்னவன் விரும்பும்இடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை
யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டின்இசை பாடஅழகார் குயில்மிழற்று
பொழில் வைகாவிலே.

தெளிவுரை : வானத்தைத் தொடுகின்ற உயர்ந்த மேருமலையை வில்லாகவும் நெருப்பைக் கணையாகவும் கொண்டு, பகைமையுடைய முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, உலகிடை எழில் பெறச் செய்த விகிர்தன், சிவபெருமான். அப்பெருமான் விரும்பும் இடமாவது, வயல்களில் தாமரை மலர்கள் விளங்கவும், வண்டின் இசை பாடவும் அழகிய குயில்கள் அவற்றுக்கேற்ப இசைக்கவும் உள்ள பொழில் சூழ்ந்த வைகாவூர் ஆகும்.

761. ஊனமில ராகியுயர் நற்றவமெய்
கற்றவை உணர்ந்த அடியார்
ஞானமிக நின்றுதொழ நாளும்அருள்
செய்யவல நாதன் இடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு
கேபொழில்கள் தோறும் அழகார்
வானமதி யோடுமழை நீள்முகில்கள்
வந்தணவும் வைகாவிலே.

தெளிவுரை : மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் உண்டாகும் குற்றங்களைக் களைந்து, உயர்ந்தாகப் போற்றப்படுகின்ற நற்றவ நெறியில் நின்று, மெய்யாகிய ஞான நூல்களைக் கற்று உணர்ந்து அவ்வழியில் ஒழுகுகின்ற அடியவர்கள் நாள்தோறும் தொழுது போற்றி ஏத்த அருள் செய்ய வல்லவர், சிவபெருமான். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வளம் மல்கும் நிலவளமும் மேகம் சூழ்ந்த பொழிலும் விளங்குகின்ற வைகாவூர் ஆகும்.

762. இன்னஉரு இன்னநிறம் என்றறிவ
தேல்அரிது நீதிபலவும்
தன்னஉரு வாமெனமி குத்ததவன்
நீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போய்வகையி னான்முழுது
உணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னஇரு போதுமரு வித்தொழுது
சேரும்வயல் வைகாவிலே.

தெளிவுரை : சிவபெருமான், இன்ன வடிவத்தை உடையவர், இன்ன வண்ணத்தைக் கொண்டவர் என்று அறிவது, அரிதாகும். அப்பெருமான் புண்ணியங்கள் பலவும் தன்னுடைய வடிவமாகும் என்னும் கொள்கையில், தவத்தின் நியமத்தொடு விளங்குபவர். அப்பெருமான் அமர்ந்து விளங்குகின்ற இடமாவது, முன் வினைப்பயனால் முனையும் தவத்தை மேற்கொண்டு திகழும் முனிவர்கள், காலை மாலை இருவேளையும் தொழுது போற்ற மருவும் வயல் சூழ்ந்த வைகாவூர் ஆகும்.

763. வேதமொடு வேள்விபல வாயின
மிகுத்துவிதி ஆறுசமயம்
ஓதியும் உணர்ந்தும்உள தேவர்தொழ
நின்றருள்செய் ஒருவன் இடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு
ஞாழலவை மிக்க அழகார்
மாதவிம ணங்கமழ வண்டுபல
பாடுபொழில் வைகாவிலே.

தெளிவுரை : வேதங்களை ஓதி வேள்விகள் பல செய்து விதிக்கப் பெற்ற ஆறு சமயங்களை ஓதியும் உணர்ந்தும் உள்ள பூவுலகின் தேவர்களாகிய அந்தணர்கள் தொழுது போற்ற, அருள் செய்யும் ஒப்பற்றவராகியவர், சிவபெருமான். அவர் வீற்றிருந்து இடமாவது, மேன்மையாக விளங்குகின்ற தாழை, புன்னை, புலி நகக் கொன்றை ஆகியன விளங்கியும், மாதவி மலர்களின் மணம் கமழ வண்டுகள் பாடும் பொழில் கொண்ட வைகாவூர் ஆகும்.

764. நஞ்சமுது செய்தமணி கண்டன் நமை
யாளுடைய ஞான முதல்வன்
செஞ்சடையி டைப் புனல்க ரந்தசிவ
லோகன்அமர் கின்ற இடமாம்
அஞ்சுடரொடு ஆறுபதம் ஏழின்இசை
எண்ணரிய வண்ணமுள வாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது
சேரும்வயல் வைகாவிலே.

தெளிவுரை : நஞ்சினை உட்கொண்டு நீலகண்டனாகியவர். நம்மை ஆட்கொள்ளும் ஞான முதல்வராய். சிவந்த சடை முடியில் கங்கையைத் தரித்து மேவும் சிவலோக நாதராகிய , ஈசன். அப் பெருமான் வீற்றிருக்கின்ற இடமாவது, அழகிய தீபச் சுடரும் மந்திர வாசகங்களாலான தோத்திரங்களும் இசைத்து எண்ணுதற்கு அரியதாக, அளவற்ற தன்மையில் வண்ணமுடன் திகழுமாறு மகளிர்கள் தமது துணைவருடன் தொழுது போற்றுகின்ற வயல் வளம் பெருகி நிலவும் வைகாவூர் ஆகும்.

765.  நாளுமிகு பாடலொடு ஞானமிகு
நல்லமலர் வல்லவகையால்
தோளினொடு கைகுளிர வேதொழும
வர்க் கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறு நாளிபல
துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதி கொள்ளமது நாறமலர்
வரியும்வயல் வைகாவிலே.

தெளிவுரை : நாள்தோறும் பக்தி மிகும் தோத்திரப் பாடலும் ஞானத்தால் மிகுந்து மேவும் அட்ட மலர்களாகிய கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு ஆகியவற்றின் இயல்பினால் மிகுந்து உறுதியுடன், தோளும் கையும் குளிர அட்டாங்க வணக்கம் செய்து ஏத்திடும் பெருமக்களுக்கு அருள் செய்யும் சோதிவடிவாகியவர் சிவபெருமான். அவரது இடமாவது, சோலைகளிலிருந்து கனிகள் தாமே விழ, அந்த அதிர்ச்சியில் வாளை மீன் துள்ளிக் குதித்துத் தேன் துளிர்க்கும் மலர்களை உதிர்க்கத் திகழும் வயல் விளங்கும் வைகாவூர் ஆகும்.

766. கையிருப தோடுமெய்க லங்கிடவி
லங்கலை யெடுத்த கடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடன்
நெரித்த அழ கன்றன் இடமாம்
கையின்மலர் கொண்டுநல காலையொடு
மாலைகரு திப்பலவிதம்
வையகம்எ லாம்மருவி நின்றுதொழுது
ஏத்தும்எழில் வைகாவிலே.

தெளிவுரை : இருபது கைகளும், வலிமையான உடம்பும் கொண்டு கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு செய்த அழகன், சிவபெருமான். அப் பெருமான் விளங்குகின்ற இடமாவது, கையில் மாலை கொண்டு காலையும் மாலையும் அடியவர்கள் தொழுது ஏத்தவும், எண்ணற்ற அன்பர்கள் பலவிதமான பக்தி மிகுந்த தோத்திரங்கள் செய்து போற்றவும், எழில் பெருக மேவும் வைகாவூர் ஆகும்.

767.அந்தம்முதல் ஆதிபெரு மானமரர்
கோனைஅயன் மாலும்இவர்கள்
எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ
நின்றருள்செய் ஈசன்இடமாம்
சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய்
பூசியெழு தொண்டர்அவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை
யும்பதிநல் வைகாவிலே.

தெளிவுரை : அந்தம் முதல் ஆதி என யாவுமாய் நிலவுகின்ற சிவபெருமான், பிரமனும் திருமாலும் போற்றி செய்த இறைவனே ! எனத் தொழுது நிற்கத் தலைவராய் விளங்குபவர். அவர் வீற்றிருந்து அருள் புரியும் இடமாவது, அடியவர்கள் தியானமும் பக்தியும் பெருகத் திருநீறு அணிந்து, நறுமணம் கமழும் மலர்களைத் தூவி, வணங்கும் நற்பதியாகிய வைகாவூர் ஆகும்.

768. ஈசன்எமை யாளுடைய எந்தைபெரு
மான்இறைவன் என்றுதனையே
பேசுதல்செ யாஅமணர் புத்தரவர்
சித்தம்அணை யாஅவன்இடம்
தேசமது எலாம் மருவி நின்றுபர
வித்திகழ நின்ற புகழோன்
வாசமல ரானபல தூவியணை
யும்பதிநல் வைகாவிலே.

தெளிவுரை : சிவபெருமான், எம்மை ஆளுடைய எம்தந்தை அவர் எம் கடவுள் என்று, பேசாத சமணர் மற்றும் சாக்கியரின் சித்தத்தில் சாராதவர். அப் பெருமான் விளங்கும் இடமாவது, தேசமெல்லாம் புகழ்ந்தேத்தும் பெருமானைப் பரவி நன்மலர்கள் கொண்டு தூவிப் போற்றும் பதியாகிய வைகாவூர் ஆகும்.

769. முற்றுநமை யாளுடைய முக்கண்முதல்
வன்திவை காவிலதனை
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன்
ஞானசம் பந்தன் உரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்தும்இவை
வல்லவர் உருத்திரர்எனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பரி
யார்அவர்பெ ரும்புக ழொடே.

தெளிவுரை : முற்றுமாய் ஆட்கொண்டு நம்மைக் காத்து அருள் புரிகின்ற முக்கண்ணனாகிய ஈசன் விளங்குகின்ற திருவைகாவைச் சிரபுரத்தின் தலைவராகிய ஞானசம்பந்தன் உரை செய்த தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள்; உருத்திரர் எனப்படும் சிறப்புடையவர்களாய்ச் சிவலோகத்தில் பெருமையுடன் வாழ்வார்கள். இம்மையில் பெரும் புகழுடன் விளங்குபவர் என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

330. திருமாகறல் (அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல், காஞ்சிபுரம் மாவட்டம்)

770. விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடல் அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணல்அடி சேர்பவர்கள்
தீவினைகள் தீரும் உடனே.

தெளிவுரை : நன்றாக எடுத்து விளையும் கழனியில் பணி செய்யும் பெண்கள், பாடலும் ஆடலும் கொண்டு ஓசை எழுப்பி விளங்க, மேகத்தைத் தொடுகின்ற நீண்ட கொடிகளும் உயர்ந்த மாட மாளிகைகளும் அடர்ந்த பொழில்களும் கொண்டு மாகறல் என்னும் பதி விளங்குகின்றது. ஆங்கு வீற்றிருக்கும் சிவபெருமான், தேன் துளிர்க்கும் கொன்றை மலரும், கங்கையும், சந்திரனும், திகழும் சடையுடன் சிவந்த கண்களையுடைய மால் விடை கொண்டு விளங்குபவர். அப்பெருமான் திருவடியை நெஞ்சில் பதித்து ஏத்துபவர்களுடைய தீய வினைகள் யாவும் உடனே தீரும்.

771. கலையின்ஒலி மங்கையர்கள் பாடல்ஒலி
ஆடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடம்உயர் நீள்கொடிகள்
வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன்
ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புனல் ஏந்துபெரு மானடியை
யேத்தவினை யகலு மிகவே.

தெளிவுரை : வேதங்களைப் பயிலும் ஒலியும், மங்கையர்கள் பாடலும் ஆடலும் கொண்டு அழகு பயிலும் செம்மையும் பொலிய, உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் பறந்து வீசத் திகழ்வது, மாகறல். ஆங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், கூர்மையான சூலப்படை ஏந்தி நெருப்புப் போன்ற சிவந்த சடை முடியின் மீது கங்கையைத் தரித்து உள்ளவர். அப்பெருமானின் இனிய திருவடியை ஏத்தி வழிபட, வினை யாவும் நீங்கும்.

772. காலையொடு துந்துபிகள் சங்குகுழல்
யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள்
ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன்  மேலொர்சுடர்
நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வான்அடியை
யேத்தவினை பறையும் உடனே.

தெளிவுரை : துந்துபி, சங்கு, குழல், யாழ், ஆகிய வாத்தியங்கள் முழங்க, காலை மாலை ஆகிய இருவேளையும் சிறப்பின் மிக்க வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழும் மாகறல் என்னும் பதியில் எழுந்தருளியிருப்பவர் ஈசன். அப்பெருமான், புலித்தோலை உடுத்தி, அதன் மீது நாகத்தை இறுகக் கட்டி, அழகு மிளிறப் பால் போன்று திகழும் திருவெண்ணீறு புனைந்து, விளங்குகின்றவர். அவர் திருவடியை ஏத்திப் பரவ, வினை யாவும் விரைவில் விலகிச் செல்லும்.

773. இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள்
உந்திஎழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபனல்
ஆடிமகிழ் மகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
செஞ்சடையி னான்அடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி
பாடுநுகரா எழுமினே.

தெளிவுரை : ஒளி உமிழும் கெட்டியான முத்தும் பொன்னும், மணியும் பெருக, எழில் மேவும் மேனியில் அணியாகப் பெற்ற மங்கையர், தமது துணைவருடன் மகிழும் பாங்குடைய மாகறலில் வீற்றிருப்பவர், சிவபெருமான். அப் பெருமான், தேன் கமழும் கொன்றை மலரும் குளிர்ந்த சந்திரனும், சிவந்த சடை முடியின்கண் அணிந்துள்ளவர்; அவர்தம் திருவடியை நன்கு பரவி ஏத்தி வழிபாடு செய்வதற்கு எழுவீராக ! அவ்வாறு வழிபட உங்கள் வினை யாவும் நீங்கும்.

774. துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி
தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சமலி பூம்பொழிலின் மயில்கள்நடம்
ஆடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ்
வானொர் மழு வாளன் வளரும்
நஞ்சம்இருள் கண்டம் உடை நாதனடி
யாரைநலி யாவினைகளே.

தெளிவுரை : நீலோற்பலம் மலர்ந்து விளங்கும் நீண்ட கழனிகளும், மேகத்தைத் தொடும் பொழிலின்கண் மயில்கள் நடனம் ஆடி மகிழும் சிறப்புடையது மாகறல் என்னும் பதி. ஆங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்பவர்; ஒப்பற்ற மழுப்படை உடையவர்; நஞ்சினை அருந்தியதால் வளர்ந்த கரிய கண்டத்தை உடையவர். அத்தகைய தலைவரின் அடியவர்களை வினையானது நலிவுறுத்தாது.

775. மன்னுமறை யோர்களொடு பல்படிம
மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யால்இனிது இறைஞ்சிஇமை
யோரில்எழு மாகறல் உளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள்
கங்கையொடு திங்கள்எனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கஉயர்
வானுலகம் ஏறல்எளிதே.

தெளிவுரை : பெருமை பெறும் மறைவல்ல அந்தணர்களும், தவக் கோலம் தாங்கிய முனிவர்களும் இன்ன தன்மையால் இனிது இறைஞ்சித் தேவர்களைப் போன்று விளங்குகின்றனர். அத்தகையோர் மேவும் மாகறலில் வீற்றிருக்கும் சிவபெருமான், மின்னலைப் போன்ற மெல்லிய செஞ்சடைகள் விரிந்து பரவி, அதன் மீது பூவுலக மலர்களாகிய கொன்றை மற்றும் அட்ட புட்பங்களும் வான புட்பங்களாகிய கங்கையும் சந்திரனும் தரித்துள்ளவர். அப்பெருமானை நினைத்து வழிபடுபவர்களுடைய தொல்வினை யாவும் நீங்கும் அவர்கள் எளிதாய் உயர்ந்த உலகத்தை அடைவார்கள். இது சாலோக பதவியை அளிக்கும் என்பது குறிப்பு.

776. வெய்யவினை நெறிகள்செல வந்தணையு
மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானன் மது வார்கழனி
மாகறலு ளான்எழிலதார்
கையகரிகால் வரையின் மேலுதுரி
தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சிடை
யாவினைகள் அகலு மிகவே.

தெளிவுரை : சஞ்சித பிராரத்த வினைகளை வீழ்த்தியும், இப் பிறவியில் அடையக்கூடிய ஆகாமியம் என்னும் வினையைப் பற்றி நிற்காதபடி வீழ்த்தவும் உள்ள அன்பர்களே ! உங்களுக்கு ஒரு மெய்ம்மையை உரைக்கின்றேன். மேகம் தவழும் சோலைகள் சூழ்ந்த கழனிகளை உடைய மாகறல் என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவபெருமான், எழில் மேவ, யானையின் தோலை உரித்துத் திருமேனியில் போர்த்து விளங்குபவர். அவர், யாவற்றுக்கும் தலைவர். அவருடைய திருவடியை நெஞ்சில் பதித்து வணங்குபவர்களைக் கண்டு வினை யாவும் அஞ்சி ஓடும். எனவே நீவிர் அத் திருத்தலத்திற்குச் சென்று திருமாகறலீசரை ஏத்துவீராக !

777. தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு
தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள்
ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
கச்சையுடை பேணிழயழகார்
பூசுபொடி ஈசன்என ஏத்தவினை
நிற்றல்இல் போகும் உடனே.

தெளிவுரை : பொன்னால் ஆகிய மாடங்கள் போன்று அழகிய வண்ணத்தில் உள்ள மாளிகைகளில் வெண்துகிலால் ஆன கொடிகள் புகை மேகத்தில் தோய விளங்கவும், சிறப்புடைய தவ வேந்தர்களால் வேள்வி இயற்றும் பெருமையுடைய மாகறல் என்னும் பதியில் சிவபெருமான் வீற்றிருப்பவர். அப்பெருமான், பாசுபதத் திருக்கோலத்தில், அழகிய  பாம்பினைத் தரித்தும், திருவெண்ணீறு பூசியும், திகழ்பவர். அப்பெருமானை ஏத்தி வழிபட, வினையானது முற்றிலும் விலகிச் செல்லும்.

778. தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு
நீர்குவளை தோன்றமது உண்
பாயவரி வண்டுபல பண்முரலும்
ஓசைபயில் மாகறல் உளான்
சாயவிரல் ஊன்றியஇ ராவணன்
தன்மைகெட நின்றபெரு மான்
ஆயபுகழ் ஏத்தும்அடி யார்வினை
யாயினவும் அகல்வது எளிதே.

தெளிவுரை : தூய்மையான தாமரை மலரும், நெய்தல், குவளை ஆகியனவும் விளங்க, அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிவண்டு பண்ணிசைத்து மகிழும் மாகறல் என்னும் பதியில் விளங்குகின்றவர், ஈசன். அவர் இராவணனுடைய வலிமை கெடுமாறு திருப்பாத விரலால் ஊன்றியவர். அப்பெருமானுடைய புகழ் கூறும் அடியவர்களின் வினை எளிதாக விலகிச் செல்லும்.

779. காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின்
மேலுணர்வு காமுறவி னார்
மாலும்மல ரானும்அறி யாமைஎரி
யாகிஉயர் மாகறல்உளான்
நாலும்எரி தோலும்உரி மாமணிய
நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை அடிகள்அடி
யாரைஅடையா வினைகளே.

தெளிவுரை : அழகிய கழல்களை அணிந்த திருப்பாதத்தையும் நீண்ட திருச்சடையுடைய திரு முடியினையும் காண வேண்டும் என்கிற வேட்கை கொண்ட திருமாலும், பிரமனும் அறிய முடியாதவராய். உயர்ந்தவர், திருமாகறலீசர். எரிகின்ற நெருப்புக் கொண்டு விளங்கியும், யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டும், மாணிக்கத்தையுடைய நாகத்தை அணிந்தும் திகழ, இடபத்தை வாகனமாக உடைய அப்பெருமானுடைய அடியவர்களை, வினையானது சாராது.

780. கடைகொள் நெடு மாடமிக வோங்குகமழ்
வீதிமலி காழியவர்கோன்
அடையும் வகை யால்பரவி அரனைஅடி
கூடுசம் பந்தன்உரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில்
மாகறலுளான் அடியையே
உடையதமிழ் பத்தும்உணர் வார்அவர்கள்
தொல்வினைகள் ஒல்கும் உடனே.

தெளிவுரை : நெடிய மாடங்கள் திகழும் காழியின் தலைவராகி, எவ்வகையால் அடையும் வழியாகுமோ, அவ்வகையால் பரவி ஏத்திச் சிவபெருமானுடைய இனிய திருவடியில் கூடப் பெற்ற ஞானசம்பந்தன் உரைத்த, நீர் வளமும், வயல் வளமும் கூடிய பொழில் சூழ்ந்த மாகறலில் எழுந்தருளி உள்ள ஈசனின் திருவடிப் போதாகிய இத்திருப் பதிகத்தை, உரைப்பவர்களின் தொல்வினை விலகும்.

திருச்சிற்றம்பலம்

331. திருப்பட்டீச்சரம் (அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர்  மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

781. பாடல்மறை சூடல்மதி பல்வளையொர்
பாகம் மதில் மூன்றொர் கணையால்
கூடஎரி யூட்டிஎழில் காட்டிநிழல்
கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர
மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
காட்டி வினை வீடுமவரே.

தெளிவுரை : சிவபெருமான், வேதங்களால் ஓதப் படுபவர்; சந்திரனைச் சூடி இருப்பவர்; பல்வளை என்னும் திருநாமம் கொண்டுள்ள உமாதேவியாரை, ஒரு பாகமாகக் கொண்டு இருப்பவர்; மதில்கள் மூன்றினையும் ஒரு கணை தொடுத்து எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; வீரத்தின் எழிலாய் விளங்குபவர்; பொழில் சூழ்ந்த பழையாறையுள் மாட மாளிகை விளங்கும் மழபாடியுள் பட்டீச்சரத்தில் மேவி வீற்றிருப்பவர்; பாம்பினை அரையில் அசைத்துக் கட்டியவர். அப் பெருமான், சிவனடியார் திருக்கோலத்தில் உள்ளவர்களின் வினைகளை நீக்கி முத்தி நெறியை அருளிச் செய்வராவார்.

782. நீரின்மலி புன்சடையார் நீளரவு
கச்சையது நச்சிலைய தோர்
கூரின்மலி சூலமது ஏந்திஉடை
கோவணமும் மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசரம்
ஏத்தவினை பற்றழியுமே.

தெளிவுரை : சிவபெருமான், சடை முடியில் கங்கை தரித்தவர்; நீண்ட அரவத்தைக் கச்சையாகக் கட்டியவர்; சூலப் படையை ஏந்திக் கோவண உடை கொண்டு விளங்குபவர்; மான் தோல் உடையவர்; கொன்றை மாலை தரித்தவர். அத்தகைய கடவுள், உலகத்தில் சிறப்புடன் விளங்கும் பழையாறையில் மேவும் பட்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அப் பரமனை ஏத்தி வழிபட, வினை நீங்கும்.

783. காலைமட வார்கள்புனல் ஆடுவது
கௌவைகடி யார்மறு கெலாம்
மாலைமண நாறுபழை யாறைமழ
பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பன்உறை
பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போல்öருகி
விண்ணுலகம் ஆளு மலரே.

தெளிவுரை : மகளிர், காலை வேளைகளில் தண்ணீர்த் துறைகளில் நீராடி மகிழும் ஓசையும், மாலை நேரங்களில் வீதிகளில் பாடி விளையாடி விளங்குகின்ற ஓசையும் பழையாறையின் மழபாடியில் திகழ்வதாகும். ஆங்குப் பால் போன்ற திருவெண்ணீறு புனைந்த மார்பினராய்ப் பட்டீச்சரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானைப் பரவி ஏத்துபவர்கள், இம்மையில் கடல் போன்ற செல்வத்தை உடையவர்களாயும் மறுமையில் விண்ணுலகத்தின் வளத்தினில் திளைப் பவர்களாயும் விளங்குவர்.

784. கண்ணின்மிசை நண்ணிஇழி விப்பமுகம்
ஏத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட
ஆடவல பால்மதியினான்
மண்ணின்மிசை நேரின்மழ பாடிமலி
பட்டீசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுஉடன்
ஆதல்அது மேவல் எளிதே.

தெளிவுரை : ஈசனின் கண்களை, உமாதேவியார் தமது திருக்கரத்தால் புதைப்ப, அரும்பிய வியர்வைத் துளிகளைச் செஞ்சடையில் ஏற்றவர், அப்பெருமான். அவர், பண்ணின் இசை பெருகப் பலவகையான பாடல் களைப் பாடவும், ஆடவும் வல்லவர் வெண்மையான சந்திரனைச் சடை முடியில் தரித்தவர். அப் பரமன், மண்ணுலகில், இணையற்ற பெருமையுடைய மழபாடியில் விளங்கும் பட்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அவரை ஏத்துபவர்களுக்குத் தேவலோகத்தில் வாழ்கின்ற தேவர்களுடன் இணைந்து இருத்தலும், தேவர்களாக ஆதலும் எளிதாகும்.

785. மருவமுழவு அதிரமழ பாடிமலி
மத்தவிழவு ஆர்க்க வரைஆர்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர
மேயபடர் புன்சடையினான்
வெருவ மத யானையுரி போர்த்துஉமையை
அஞ்சவரு வெள்விடையினான்
உருவம்எரி கழல்கள் தொழ உள்ளம் உடை
யாரைஅடை யாவினைகளே.

தெளிவுரை : முழவு என்னும் வாத்தியம் அதிர்ந்து ஒலிக்க, மழபாடியில் திருக்கோயில் திருவிழாக்கள் இனிது மேவ, பருவமழையின் காரணமாக வளமைகள் நனி பெருக ஒளி திகழும் பட்டீச்சரத்தில் இனிது வீற்றிருப்பவர், சிவபெருமான். அவர், படர்ந்த சடையுடையவர்; உமாதேவி அஞ்சி வியுப்புறுமாறு, யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்; இடப வாகனத்தை உடையவர். நெருப்புப் போன்ற செம்மேனியராக விளங்கும் அப்பெருமானின் திருக்கழல்களைத் தொழுபவர்களுக்கு, வினையால் உண்டாகும் துன்பம் சாராது.

786. மறையினொலி கீதமொடு பாடுவன
பூதமடி மருவிவிர வார்
பறையினொலி பெரு நிகழ் நட்டம்அமர்
பட்டிசர மேயபனிகூர்
பிறையினொடு மருவியதொர் சடையினிடை
யேற்றபுனல் தோற்ற நிலையாம்
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர்
தீத்தொழில்கள் இல்லர்மிகவே.

தெளிவுரை : வேதங்கள் ஒலிக்கப் பூதகணங்கள் சூழ்ந்து திருவடியைப் போற்ற, பறைகளின் ஒலியைப் பெருக்கித் திருக்கூத்து புரிபவர் சிவபெருமான். அவர், பட்டீச்சரத்தில் மேவிப் பிறைச் சந்திரனையும் கங்கையையும் சடை முடியில் தரித்து விளங்குபவர். அப் பெருமானை நியமமாக ஏத்தி வணங்குபவர்களுக்குத் துன்பத்தைத் தரும் வினைகள் விலகும்.

787. பிறவிபிணி மூப்பினொடு நீங்கிஇமை
யோர்உலகு பேணுலுறுவார்
துறவுயெனும் உள்ளம்உடை யார்கள் கொடி
வீதியழ காயதொகுசீர்
இறைவன்உறை பட்டீச்சரம் ஏத்திஎழு
வார்கள்வினை யேதும்இலவாய்
நறவவிரை யாலும்மொழி யாலும்வழி
பாடு மற வாதஅவரே.

தெளிவுரை : பிறவியாகிய பிணியும் மூப்பும் நீங்கித் தேவர்களால் போற்றப்படுகின்றவர்களும், உள்ளத்தால் உலகப் பற்றினைத் துறந்த சிவஞானிகளும் கொண்டு விளங்குகின்ற வீதிகளை உடைய சிறப்புடன், சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருக்கோயிலாவது, பட்டீச்சரம் ஆகும். அதனை ஏத்தித் தொழுபவர்கள், வினை அற்றவர்களாய் விளங்குவர். அவர்கள், குணத்தாலும் வாக்காலும் ஈசனைப் போன்றவர்கள். இது சாரூப நிலையை அடையும் பெற்றியினை உணர்த்தியது.

788. நேசமிகு தோள்வலவன் ஆகியிறை
வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுஉண
ராத நிரம் பாமதியினான்
ஈசன்உறை பட்டிசரம் ஏத்தியெழு
வார்கள்வினை யேதும்இலவாய்
நாசமற வேண்டுதலின் நண்ணல்எளி
தாம்அமரர் விண்ணுலகமே.

தெளிவுரை : இராவணன், தோள் வலிமையில் விருப்பம் உடையவனாகிக், கயிலையைப் பெயர்த்த போது, அவனுடைய வலிமையை அழித்து விளங்கிய சிவபெருமான், யாராலும் அறியப்படாதவர். அவர், பிறைச் சந்திரனைச் சூடிப் பட்டீச்சரத்தில் உறைபவர். அப் பெருமானை ஏத்தி வணங்குபவர்கள், வினையாவும் நீங்கப் பெற்றவர்களாய், இனியும் பிறத்தலை அடையாதவர்களாய் விளங்கி அமரர்தம் விண்ணுலகத்தை எளிதாக அடைவார்கள்.

789. தூயமல ரானும்நெடி யானும்அறி
யார்அவன தோற்ற நிலையின்
ஏயவகை யானதனை யார்அதுஅறி
வார் அணிகொள் மார்பின் அகலம்
பாயநல நீறதுஅணி வான்உமைத
னோடும் உறை பட்டிசரமே.
மேயவனது ஈரடியும் ஏத்தஎரி
தாகும்நல மேலுலகமே.

தெளிவுரை : சிவபெருமானது திருவண்ணத்தைப் பிரமன் திருமால் மற்றும் எவரும் அறியமாட்டார்கள். அழகு மிக்க அகன்ற திருமார்பில் நலம் திகழும் திருநீற்றைக் குழையப் பூசி விளங்குகின்ற ஈசன், உமாதேவியாரோடு உறையும் இடம் பட்டீச்சரம் ஆகும். அப் பெருமான் திருவடியை ஏத்த, மேன்மையான விண்ணுலக வாழ்க்கை எளிதாகக் கூடும்.

790. தடுக்கினை இடுக்கிமட வார்களிடு
பிண்டமது உண்டு ழல்தரும்
கடுப்பொடி யுடற்கவசர் கத்துமொழி
காதல் செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல் வயற்கொண்மழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசரம்
ஏத்தவினை பற்றறுதலே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கும் அன்பற்ற மொழிகளை ஏற்க வேண்டாம். மடைகளில் கயல்கள் விளங்கும் வளப்பம் மிகுந்த வயல்கள் கொண்ட மழபாடி நகரில் மேவும் பழையாறையுள், கையில் மழுப் படை உடையவராய்ப் பட்டீச்சரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஏத்த, வினை நீங்கும்.

791. மந்தமலி சோலைமழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர
மேயபடர் புன்சடையனை
அந்தண் மறை யோர்இனிது வாழ்புகலி
ஞானசம் பந்தன் அணியார்
செந்தமிழர்கள் கொண்டினிது செப்பவல
தொண்டர்வினை நிற்பதிலவே.

தெளிவுரை : தென்றல் உலாவும் சோலை திகழ் மழபாடி நகரில் பழையாறை என்னும் பகுதியுள் முக்தி நலம் அளிக்கவல்ல பட்டீச்சரத்தில் மேவிய சிவபெருமானை, மறையவர்கள் இனிது வாழும் புகலியில் திகழும் ஞானசம்பந்தன், அணி திகழும் செந்தமிழால் உரைத்த இத்திருப்பதிகத்தை இனிது ஓதவல்ல திருத்தொண்டர்கள், வினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள். இது , துன்பமற்ற இனிய வாழ்க்கையை நல்கிப் பிறவாமையாகிய பேற்றினை அளிக்கும் என்பது குறிப்பு.

திருச்சிற்றம்பலம்

332. திருத்தேவூர் (அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

792. காடுபயில் வீடுமுறை யோடுகலன்
மூடுமுடை யாடைபுலி தோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு
வேதியர்தி ருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடஅரி
கோடல்கைம் மறிப்பநலமார்
சேடுமிகு பேடையன மூடிமகிழ்
மாடமிடை தேவூரது வே.

தெளிவுரை : ஈசன் திகழும் இடம், சுடுகாடு, கையில் உள்ள உண்கலன், பிரமனின் மண்டை ஓடு; உடுத்தும் உடை, புலித்தோல்; உட்கொள்வது, பிச்சை ஏற்ற உணவு. அப்பெருமான், இத்தகைய திருக்கோலத்தில் மேவியவராய், வேதத்தின் தலைவராய் வீற்றிருக்கும் பதியாவது, மயில் ஆடவும், வண்டு பாடவும், காந்தள் மலர் அசைந்து கைத்தாளம் போன்று சலசலக்கவும், அழகிய அன்னம் போன்ற மகளிர், மாடங்களில் நிலவும் தேவூர் ஆகும்.

793. கோளரவு கொன்றைநகு வெண்டலையெ
ருக்குவனி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு
செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள்
குங்குமம் விரைக்குமண மார்
தேளரவு தென்றல்தெரு வெங்குநிறை
வொன்றிவரு தேவூரது வே.

தெளிவுரை : சிவபெருமான், வளைந்த அரவம், கொன்றை மலர், வற்றிய மண்டை ஓடு, வன்னிப் பத்திரம், கொக்கிற்கு, கங்கை இவற்றைச் சடையில் வைத்திருப்பவர்; அத்தகைய இறைவனுடைய ஊரானது, இள மங்கையர்கள் பூசி விளங்கும் குங்குமக் குழம்பின் நறுமணமானது தென்றல் காற்று வருடத் தெருவெங்கும் நிறைந்து பெருகும் தேவூர் ஆகும்.

794. பண்தடவு சொல்லின் மலை வல்லியுமை
பங்கன் எமை யாளும் இறைவன்
எண்தடவு வானவர் இறைஞ்சுகழ
லோன் இனிது இருந்த இடமாம்
விண்தடவு வார்பொழில் உகுத்த நறவு
ஆடிமலர் சூடி விøயார்
செண்டடவு மாளிகை செறிந்துதிரு
வொன்றி வளர்தேவூரது வே.

தெளிவுரை :  பண்ணிசை போன்று இனிய சொல்லருள் பெருகும் மலைமகளாகிய உமாதேவியாரைப் பாகமாக உடைய சிவபெருமான், எம்மை ஆட்கொள்கின்ற இறைவன். எண்ணற்ற தேவர்களால் போற்றப்படுகின்ற அப்பரமன், இனிது வீற்றிருக்கும் இடமாவது விண்ணளவு உயர்ந்து மேவும் பொழிலில் விளங்குகின்ற தேன் துளிர்க்கும் மலர் சூடி மணம் கொண்டு விளங்குகின்ற திருமகள் வாசம் செய்யும் தேவூர் ஆகும்.

795. மாசில்மன நேசர்தமது ஆசைவளர்
சூலதரன் மேலைஇமையோர்
ஈசன்மறை யோதியெரி யாடிமிகு
பாசுபதன் மேவு பதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும்
மாதரவர் பூவைமொழியும்
தேசவொலி வீணையொடு கீதமது
வீதிநிறை தேவூரதுவே.

தெளிவுரை : மாசு இல்லாத மனத்தினராய், அன்பு கொண்டுள்ளவராய் மேவும் அடியவர்கள் மேன் மேலும் பெருகுமாறு, சூலத்தையுடைய சிவபெருமான், வேதங்களை ஓதியும், எரியேந்தி ஆடியும் காட்சி தருபவர். அப் பரமன் மேவும் பதியாவது, வாசம் பொருந்திய மலர்களைக் குயில் கோதியம் கூவியும், நாகணவாய்ப் பறவைகள் மொழிகளைப் பேசியும், ஈசனைப் போற்றுகின்ற அர ஒலியும், இசைத்துப் போற்றும் வீணையின் ஒலியும், கீதமும், வீதி எங்கும் மல்கித் திகழும் தேவூர் ஆகும்.

796. கானமுறு மான்மறியன் ஆனையுரி
போர்வைகனல் ஆடல் புரிவோன்
ஏனஎயிறு ஆமை யிளநாகம் வளர்
மார்பின்இமை யோர்தலைவன்ஊர்
வானணவு சூதம்இள வாழைமகிழ்
மாதவி பலாநிலவி வார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள்
பாடிவரு தேவூரது வே.

தெளிவுரை : சிவபெருமான், கானகத்தில் வாழும் மானைக் கரத்தில் கொண்டுள்ளவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; எரியும் நெருப்பைக் கரத்தி ஏந்தி ஆடல் புரிபவர்; பன்றியின் கொம்பு, ஆமையின் ஓடு, இளமையான நாகம் ஆகியவற்றை மார்பில் திகழப் பெற்றவர்; தேவர்களின் தலைவர். அப் பெருமானுடைய ஊரானது, நெடிது உயர்ந்த வாழை, மகிழ மரம், பலா மரம், மாதவி ஆகியவற்றின் தேனை உண்ட வரி வண்டுகள் மருண்டு மயங்கிய நிலையில் இசை பாடி மருவும் தேவூர் ஆகும்.

797. ஆறினொடு கீறுமதி யேறுசடை
ஏறன்அடை யார்நகர்கள் தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த
நீறனமை யாளும் அரனூர்
வீறுமலர் ஊறுமது வேறிவளர்
வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல் விளிப்பவிள
வாளைவரு தேவூரது வே.

தெளிவுரை : சிவபெருமான், சடையில் கங்கையும் கீற்றுப் போன்ற சந்திரனும் தரித்துள்ளவர்; இடப வாகனத்தை உடையவர்; பகைமை கொண்ட முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்; திருவெண்ணீற்றுத் திருமேனியர்; நம்மை ஆட்கொள்ளும் அரன் ஆவர். அப் பெருமானுடைய ஊராவது, செழிப்பான மலர்களிலிருந்து ஊறுகின்ற தேன், கழனிகளில் பாய்ந்து சேறுபடுத்தக் கயல்கள், வாளைகளை விளித்து அழைக்கும் நீரின் இனிமை திகழும் தேவூர் ஆகும்.

798. கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம்
அன்று அவிய நின்று நகைசெய்
என்றனது சென்று நிலை எந்தைதன
தந்தையமர் இன்ப நகர்தான்
முன்றிமிசை நின்றபல வின்கனிகள்
தின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி யொன்ற விளை
யாடிவலர் தேவூரது வே.

தெளிவுரை : சிவபெருமான் உலகம் எல்லாம் அழியும் படியாகக் கனன்று பகைத்து எழுந்த முப்புரத்து அசுரர்கள், எரிந்து சாம்பலாகுமாறு நகை செய்து நெருப்பினை உதிர்த்தவர்; எனது தந்தைக்குத்  தந்தை ஆனவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இனிய நகரானது, பலாக் கனிகளைத் தின்ற கறவைப் பசுக்களின் கன்றுகள் துள்ளி விளையாடி மகிழும் தேவூர் ஆகும்.

799. ஓதமலி கின்ற தெனி லங்கையரை
யன்மலி புயங்கள் நெரியப்
பாதமலி கின்ற விரல் ஒன்றினில்
அடர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கள்நட
மாடலொடு பொங்கு முரவம்
சேதமலி கின்றகரம் வொன்றிதொழில்
ஆளர்புரி தேவூரது வே.

தெளிவுரை : இலங்கையின் அரசனாகிய இராவணனுடைய இருபது புயங்கள் நெரியுமாறு, திருப்பாத விரல் ஒன்றினால் அடர்த்த சிவபெருமானுடைய இடமாவது, மகிழ்ச்சியுடன் மகளிர் நடனம் புரியவும், வலிமை மிக்க கரங்களால் சேற்றில் நின்று வெற்றித் தொழில் எனத்தக்க உழவுத் தொழிலைப் புரியவும் திகழும் தேவூராகும்.

800. வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு
கண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள்
கண்ணஅ னலங்கொள் பதிதான்
வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய
அன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகை செறிந்தஇசை
யாழ்மருவு தேவூரது வே.

தெளிவுரை : வண்ணமுகில் போன்ற எழில் கொண்டு மேவும் திருமாலும், தாமரை மலரில் விளங்கும் பிரமனும், எண்ணற்ற தேவர்களும் கருதிப் போற்ற அனற் பிழம்பாக ஓங்கிய இறைவனுடைய பதியானது, வண்ண மிகு வனப்பும், நுண்ணிய இடையும், அன்னநடையும், இனிய மொழியும் உடைய, மகளிர் விளங்குகின்ற உறுதியான மாளிகைகளில் செறிந்த இசையுடன் யாழின் இசை மருவும் தேவூர் ஆகும்.

801. பொச்சம்அமர் பிச்சைபயில் அச்சமணும்
மெச்சுமறு போதியருமா
மொச்சை பயில் இச்சைகடி பிச்சன்மிகு
நச்சரவன் மொச்ச நகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் மெச்சுதல் இல்லாத தன்மையில், அவர்கள் சொற்களை விலக்கிப் பித்தன் எனப்படுபவராய், நச்சுப் பொருந்திய அரவத்தை உடையராய், அடியவர்கள் குழுமி இருந்து போற்றுகின்ற சிவபெருமான் வீற்றிருக்கும் நகர் எனப்படுவது முகில் தவழும் தேவூர் ஆகும்.

802. துங்கமிகு பொங்கரவு தங்குசடை
நங்களிறை துன்று குழலார்
செங்கயல்கண் மங்கைஉமை நங்கையொரு
பங்கள்அமர் தேவூ ரதன்மேல்
பைங்கமலம் அங்கணிகொள் திண்புகலி
ஞானசம் பந்தன் உரைசெய்
சங்கமலி செந்தழிழ்கள் பத்தும்இவை
வல்லவர்கள் சங்கையிலரே.

தெளிவுரை : நீண்டு வளர்ந்து, பொங்குகின்ற படம் கொண்டு விளங்கும் அரவத்தைச் சடையில் அணிந்த நம் இறைவன். உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு வீற்றிருக்கும் தேவூரின் மீது, தாமரை மலர்கள் அணிபெறத் திகழும் உறுதி மிக்க புகலியின் ஞானசம்பந்தன் உரை செய்த அருளழகு பொருந்திய இனிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள், ஐயம் அற்றவர்கள் ஆவர். சிவ ஞானத்தைப் பெற்றவர்கள் ஆவார்கள் என்பது குறிப்பு.

திருச்சிற்றம்பலம்

333. திருச்சண்பை நகர் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

803. எந்தமது சிந்தைபிரி யாதபெரு
மான்என இறைஞ்சி இமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு
தீபமலி வாய்மை யதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள்
செய்யஅமர் கின்றஅழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு
மேவுபதி சண்பை நகரே.

தெளிவுரை : எம் சிந்தையிலிருந்து பிரியாத பெருமானே ! என்று தேவர்கள் தொழுது போற்றித் தூப தீங்களால்  காலையும் மாலையும் மற்றும் சந்திக் காலங்களிலும் ஏத்தி அர்ச்சனைகள் செய்ய, வீற்றிருக்கின்ற சிவபெருமான், மணங்கமழும் கூந்தலை உடைய உமாதேவியாரை உடனாகக் கொண்டு விளங்குகின்ற பதியானது சண்பை நகர் ஆகும்.

804. அங்கம்விரி துத்தியரவு ஆமைவிரவு
ஆரம்அமர் மார்பில் அழகன்
பங்கய முகத்தரிவை யோடுபிரி
யாதுபயில் கின்ற பதிதான்
பொங்குபர வத்திரை கொணர்ந்துபவ
ளத்திரள் பொலிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்
பிறங்கொளிகொள் சண்பைநகரே.

தெளிவுரை : சிவபெருமான், படம் கொண்டு விளங்கும் அரவமும், ஆமை விரவும் ஆரமும் மார்பில் அணிந்து விளங்குகின்ற அழகர். அப் பெருமான் தாமரை போன்ற முகப் பொலிவுடய உமாதேவியை உடனாகக் கொண்டு பிரியாது விளங்குகின்ற பதியாவது, அலைகளின் வாயிலாகப் பவளத்தைச் சங்கும் முத்தும் விரவப் பெற்றப் பொலியும் வயல்களில் சேர்ந்து, ஒளியை விளங்கச் செய்யும் சண்பை நகர் ஆகும்.

805. பொழுமதி தாழுநதி பொங்கரவு
தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள
மாதினொடு இருந்த பதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை
துன்னுபொழில் மாடு மடவார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தம்என
உந்துதகு சண்பை நகரே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையும் அரவமும் பிறைச் சந்திரனும் சடையில் கொண்டு விளங்கி, உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருக்கும் பதியானது, வாழை, புலி நகக் கொன்றை, மகிழ மரம், புன்னை ஆகியன உடைய பொழில் சூழ, தாழை அரும்பினை யானையின் தந்தம் எனத் கருதி மயங்கும் சண்பை நகர் ஆகும்.

806. கொட்டமுழ விட்டவடி வட்டணைகள்
கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி
பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்தமது
வாய்மை வழுவாத மொழியார்
சட்டகலை யெட்டுமரு வெட்டும் வளர்
தத்தை பயில் சண்பை நகரே.

தெளிவுரை : முழவுகள் கொட்டி முழங்க, வட்டணை என்னும் நாட்டிய வகையில் நடனம் ஆடி, நெற்றிப் பட்டம் விளங்கும் நுதலும், தேன் மணம் கொண்டு விளங்கும் உமாதேவியை உடனாகக் கொண்ட ஈசன் மேவும் பதியாவது, சந்திரனின் ஒளி உள்ளே செல்ல முடியாதவாறு அடர்த்தியான பொழில் உடையதும், கலைகள் யாவும் நன்கு துலங்கப் பெற்று, அதனைக் கிள்ளைகள் பயிலுகின்ற சிறப்புடையதும் ஆகிய சண்பை நகர் ஆகும்.

807. பணங்கெழு பாடலினொடு ஆடல்பிரி
யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகம்உடை ஆகம்உடை
அன்பர்பெரு மானதுஇடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதில்
நீடுவிரை யார்புறவெலாம்
தணங்கெழுவி ஏடலர்கொள் தாமரையில்
அன்னம்வளர் சண்பைநகரே.

தெளிவுரை : பண்ணின் இசையமைந்த பாடலும் ஆடலும் கொண்டு விளங்குகின்ற பரம்பொருளாகிய சிவபெருமான், உமாதேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாக விளங்குகின்றவராய், அன்புடையவர்களுக்கு நாதனாகத் திகழ்பவர். அவரது இடமாவது, ஒன்றுடன் ஒன்று இணங்கி இருக்குமாறு கொடிகளை உடைய மாடங்களையும் மதில்களையும் கொண்டு, மணங் கமழும் சோலைகளில் குளிர்ந்த தாமரை மலர்கள் விளங்க, அவற்றில் அன்னப் பறவைகள் துயிலும் சண்பை நகர் ஆகும்.

808. பாலனுயிர் மேலணவு கால னுயிர்
பாறஉதை செய்த பரமன்
ஆலுமயில் போல்இயலி யாயிழைத
னோடும் அமர்வு எய்தும்இடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர்
கிண்டிநறவு உண்டுஇசைசெயச்
சாலிவயல் கோலமலி சேல்உகள
நீலம்வளர் சண்பைநகரே.

தெளிவுரை : மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த, காலன் மாயுமாறு, திருப்பாதத்தால் உதைத்த சிவபெருமான், மயில் போலும் சாயலை உடைய உமாதேவியை உடனாகக் கொண்டு இருக்கும் இடமாவது, நறுமணம் கமழும் சோலையில் உள்ள மலர்களின், வண்டு தேனை உண்டு இசைத்துப் பாடவும், சாலி என்னும் நெல் விளையும் வயல்களில் அழகிய சேல் உகள, நீலோற்பல மலர்கள் திகழவும் மேவும் சண்பை நகர் ஆகும்.

809. விண்பொய்அத னால்மழைவிழாது ஒழியி
னும்விளைவு தான்மிகஉடை
மண்பொய்அத னால்வளம்இ லாதுஒழியி
னும்தமது வண்மை வழுவார்
உண்பகர வாருலகில் ஊழிபல
தோறுநிலை யானபதிதான்
சண்பைநகர் ஈசனடி தாழும்அடி
யார்தமது தன்மையது வே.

தெளிவுரை : வானம் பொய்த்து அதனால் மழை பொழியாமலும், நிலம் வறட்சி கொண்டு வளமை இல்லாது போனாலும் தமது வள்ளல் தன்மையிலிருந்து வழுவாது அடியவர்களுக்கு அமுது செய்வித்தலை ஊழிதோறும் குறைவின்றிச் செய்யும் பதியாவது, சண்பை நகர் ஆகும். ஆங்கும் எழுந்தருளியுள்ள ஈசனின் திருவடியை வணங்கி ஏத்தும் அடியவர்கள், அத்தகைய வண்மை உடையவர்களே இது ஈசன் திருவருட் பொலிவை உணர்த்துதலாம்.

810. வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு
வித்தமதி யில்வலியுடை
அரக்கனது உரக்கரசி ரத்துற
அடர்த்தருள் புரிந்த அழகன்
இருக்கையத ருக்கன்முத லான இமை
யோர்குழுமி யேழ்விழவினிற்
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள்
கொண்டலன சண்பை நகரே.

தெளிவுரை : மலை மகளாகிய உமாதேவி கலங்குமாறு, அறிவற்ற நிலையில் துன்பம் செய்த இராவணனது வலிமையான கரங்களும் சிரங்களும் நலியுமாறு அடர்த்த சிவபெருமான், பின்னர் கசிந்து போற்ற அவ் அரக்கனுக்கு வாளும் வாழ்நாளும் ஈந்து அருள் புரிந்தவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, சூரியன் முதலான தேவர்கள் குழுமி, விழாக் காலங்களில் ஏத்தி வழிபடும் சோலைகளும் பொழில்களும் மேவும் சண்பை நகர் ஆகும்.

811. நீலவரை போலநிகழ் கேழலுரு
நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானும்அறி யாமைவளர்
தீயுருவ மானவரதம்
சேலுமின வேலுமன கண்ணியொடு
நண்ணுபதி சூழ்புறவெலாம்
சாலிமலி சோலை குயில் புள்ளினொடு
கிள்ளைபயில் சண்பை நகரே.

தெளிவுரை : நீல மலை போன்ற பெரிய பன்றியின் உருவமும், நீண்ட அன்னப் பறவையின் உருவமும் கொண்ட திருமாலும், பிரமனும் அறிய முடியாத வாறு, வளர்ந்து எழுகின்ற தீயின் வடிவம் ஆகிய வரதனாகிய சிவபெருமான், சேல் போன்றும் வேல் போன்றும் விழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, விளங்குகின்ற பதியாவது, சாலி நெல் வயல்களும், குயில் முதலான பறவைகளுடன், கிளிகள் பயிலும் சோலைகளும் சூழ்ந்த சண்பை நகர் ஆகும்.

812. போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு
வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தென்றும்இலை
நன்றதுணர் வீர்உரைமினோ
ஆதியெமை யாளுடைய அரிவையொடு
பிரிவிலி அமர்ந்த பதிதான்
சாதிமணி தெண்டிரை கொணர்ந்து வயல்
புகஎறிகொள் சண்பை நகரே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் ஓதுகின்ற பொய்யுரைகளைக் கொண்டு ஆற்றத் தகுந்த பயன் உடைய செயல் ஏதும் இல்லை. இதனை நன்கு உணர்வீர்களாக. முதற் கடவுளாகிய சிவபெருமான் எம்மை ஆளுடைய உமாதேவியாரோடு பிரிதல் இன்றி வீற்றிருக்கும் பதி எனப்படுவது, உயர்ந்து விளங்கும் மணிகளைக் கடலலைகள் வயிலாக வயல்களில் கொழிக்கும் வளப்பம் பொருந்திய சண்பை நகர் ஆகும்.

813. வாரின்மலி கொங்கைஉமை நங்கையொடு
சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
சாரின்முரல் தெண்கடல் விசும்புற
முழங்குஒலி கொள் சண்பைநகர்மேல்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ்
ஞானசம் பந்தன் உரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர்
சேர்வர்சிவ லோக நெறியே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு, சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற ஊராகிய தெளிந்த கடலின் ஒலியானது வானில் எழும்பும் தன்மையில் முழங்குகின்ற சண்பை என்னும் நகர் மீது உலகில் புகழ் மிக்கு மேவும் தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், சிவ லோகத்தை அடைவார்கள். இப் பிறப்பில், இனிய வாழ்க்கையும் மறுமையில் சாலோக பதவியும் கைகூடும் என்பது குறிப்பு.

திருச்சிற்றம்பலம்

334. திருவேதவனம்

திருச்சிற்றம்பலம்

814. கற்பொலிசு ரத்தின்எரி கானினிடை
மாநடம தாடிமடவார்
இற்பொலிகொ ளப்புகுதும் எந்தைபெரு
மானதிடம் என்பர்புவிமேல்
மற்பொலிக லிக்கடல் மலைக்குவடு
எனத்திரை கொழித்த மணியை
விற்பொலி நுதற்கொடி யிடைக்கணிகை
மார்கவரும் வேதவனமே.

தெளிவுரை : கற்பொடிகள் மிகுந்தும் வெம்மை பெருகவும் உள்ள மயானத்தின் இடையில் சிறப்பான நடனத்தை ஆடி, மகளிர்தம் இல்லங்களில் பொலிவுடை திருக்கோலம் தாங்கிப் பலி ஏற்கும் எம் தந்தையாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் என்று சொல்லப்படுவது, கடல் அலைகளால் வீசப்படும் பவளம் போன்ற நுதலும் கொடிபோன்ற மெல்லிய இடையும் கொண்ட உருத்திர கணிகையர் மேவும் வேதவனம் ஆகும்.

815. பண்டிரை பவம்புணரி யிற்கனக
மால்வரையை நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிடம்
உண்டகுழ கன்றன் இடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின்
மீதணவு தென்றல் வெறியார்
வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல்
வந்தமொழி வேதவனமே.

தெளிவுரை : மேருமலையை நாட்டி வாசுகி என்கிற நாகத்தைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த போது எழுந்த விடத்தினை உட்கொண்டு சிவபெருமானுடைய இடமாவது, வண்டுகள் பொழில்களில் ரீங்காரம் செய்யவும், இனிய தென்றல் மணம் கமழவும், கடலின் வெண் திரைகள் செம்பவளத்தைக் கொண்டு சேர்க்கவும் புகழ் பெருக்கும் வேத வனம் ஆகும்.

816. காரியன்மெல் லோதிநதி மாதைமுடி
வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பால்மகிழு நம்பர்உறைவு
என்பர்நெடு மாடமறுகில்
தேரியல் விழாவின்ஒலி திண்பணிலம்
ஒண்படக நாளும் இசையால்
வேரிமலி வார்குழல்நன் மாதர்இசை
பாடல்ஒலி வேதவனமே.

தெளிவுரை : மேகம் போன்று கருமையான அடர்ந்த கூந்தலை உடைய கங்கையைச் சடை முடியில் வைத்து மலைமகளை ஒரு பக்கத்தில் மகிழ விளங்குகின்ற சிவபெருமான் உறைகின்ற இடம் எனப்படுவது, நெடிய மாடங்ள் கொண்ட வீதிகளில், தேர் ஓடும் ஒலியும், சங்கின் ஒலியும், முழவின் ஒலியும் நாள்தோறும் இசைப் பாடல்களைப் பாடும் மாதரின் ஒலியும் திகழ, மேவும் வேதவனமே.

817. நீறுதிரு மேனியின் மிசைத் தொளிபெ
றத்தடவி வந்திடபமே
ஏறியுல கங்கள் தொறும் பிச்சைநுகர்
இச்சையர் இருந்த பதியாம்
ஊறுபொரு ளின்தமிழ் இயற்கிளவி
தேருமட மாதருடனார்
வேறுதிசை ஆடவர்கள் கூறஇசை
தேரும்எழில் வேதவனமே.

தெளிவுரை : திருவெண்ணீற்றைத் திருமேனியில் குழைய ஒளிருமாறு தடவி, இடப வாகனத்தில் ஏறி, உலகம் முழுவதும் சென்று பிச்சை ஏற்க விரும்பிய சிவபெருமான் வீற்றிருக்கின்ற பதியாவது, பல அரிய பொருள்களைத் தருகின்ற இனிய தமிழ்ச் சொற்களை மொழியும் மாதர்கள்பால், பிற இடங்களிலிருந்து வந்து மேவு ஆடவர்கள் சொற்பயிலும், எழில் மிகுந்த வேதவனமே.

818. கத்திரிகை துத்திரி கறங்குதுடி
தக்கையொடு இடக்கைபடகம்
எத்தனை உலப்பில்கரு வித்திரள்
அலம்ப இமை யோர்கள் பரச
ஒத்தர மிதித்துநட மிட்டவொரு
வர்க்குஇடமது என்பர்உலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள்
மிடைந்துகளும் வேதவனமே.

தெளிவுரை : கார்த்திகை, துத்திரி, கறங்கு, துடி, தக்கை, இடக்கை, படகம் எனப் பெறும் வாத்தியக் கருவிகள் முழங்க, அதற்கு ஏற்ற வகையில் திருப்பாதத்தை மிதித்து நடம் புரியும் ஒப்பற்ற பெருமானாகிய ஈசனுக்கு இடமாவது, உலகில் மெய்த்தன்மையை உணர்ந்த பக்தர்களும் சித்தர்களும் விளங்கி, மகிழ்ந்து உறையும் வேத வனமே.

819. மாலைமதி வாளரவு கொன்றைமலர்
துன்றுசடை நின்று கழலக்
காலையில் எழுந்தகதிர் தாரகை
மடங்கஅனல் ஆடும் அரனூர்
சோலையின் மரங்கள்தொறும் மிண்டியின
வண்டுமது உண்டு இசைசெய
வேலையொலி சங்குதிரை வங்ககற
வங்கொணரும் வேத வனமே.

தெளிவுரை : மாலைக் காலத்தில் ஒளிர்ந்து தோன்றும் சந்திரனும், அரவமும், கொன்றை மலரும் சடை முடியில் பொருந்த தரித்து; காலையில் தோன்றும் கதிரவனும், நட்சத்திரங்களும் கொண்டுள்ள ஒளியின் வண்ணமும் அடங்குமாறு திருக்கரத்தில் அனலை ஏந்தி நடம் புரியும் சிவபெருமானது பதியானது, மரங்கள் தொறும் உள்ள மலர்களிலுள்ள தேனை உண்ட வண்டு இசை எழுப்பவும், கடல் ஒலி செய்யவும், அலைகள் சங்குகளையும் சுறாமீன்களையும் கொண்டு கரையில் சேர்க்கின்ற சிறப்புப் பொருந்திய இடம் வேத வனமே.

820. வஞ்சகம னத்தவுணர் வல்லரணம்
அன்றவிய வார்சிலை வளைத்து
அஞ்சகம் அவித்தஅம ரர்க்குஅமரன்
ஆதிபெரு மானதிட மாம்
கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறியசெவ்
வாயவர்கள் பாடல்பயில்
விஞ்சக வியக்கர்முனி வக்கண
நிறைந்துமிடை வேதவனமே.

தெளிவுரை : வஞ்சகச் செயலையுடைய அசுரர்களின் வலிமையான கோட்டைகள் மூன்றினையும் மேருமலையை வில்லாகக் கொண்டு ஒரு கணையால் எய்து, எரிந்து சாம்பலாகுமாறு செய்த தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய ஆதிக் கடவுளான சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, கனி இதழ்களால் இனிய பாடல்களைப் பாடும் மகளிர் விளங்கவும், இயக்கர்களும் முனிவர் கணங்களும் நிறைந்து போற்றவும் விளங்கும் வேத வனமே.

821. முடித்தலைகள் பத்துடை முருட்டுரு
அரக்கனை நெருக்கி விரலால்
அடத்தலமுன் வைத்துஅலம ரக்கருணை
வைத்தவன் இடம்பலதுயர்
கெடுத்தலை நனைத்தறம் இயற்றுதல்
கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர்
மல்குபதி வேதவனமே.

தெளிவுரை : கிரீடங்கள் பத்து கொண்ட முரட்டுத் தன்மையுடைய இராவணனைத் திருப்பாத விரலால் நெரித்துத் துன்புறத்திப் பின்னர் கருணை செய்த சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பலதுயரங்கள் வினைப் பயனால் நேர்ந்தாலும், அவற்றை அறச் செயல்கள் கொண்டு களையும் மாந்தர்களும், புலவர்களின் வறுமை கண்டு அவற்றை நீக்கி, நிதி அளித்து உபசரிக்கின்ற கொடை வள்ளல்களும், விளங்குகின்ற வேத வனமே.

822. வாசமலர் மேவியுறை வானுநெடு
மாலும்அறி யாதநெறியைக்
கூசுதல்செ யாதஅம ணாதரொடு
தேரர்குறு காதஅரனூர்
காசுமணி வார்கனக நீடுகட
லோடு திரை வார்து வலைமேல்
வீசுவலை வாணர்அவை வாரிவிலை
பேசும்எழில் வேதவனமே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் அறியாத பாங்கு உடைய ஈசனின் நெறியைச் சமணரும் சாக்கியரும் அறியாதவராய் நிற்க, அப் பரமன் வீற்றிருக்கும் இடமாவது, மீனவர்கள் கடலில் வலை வீசி மணியும் முத்தும் பொன்னும் விலை பேசும் எழில் மிகும் வேதவனமே.

823. மந்தமுர வங்கடல் வளங்கெழுவு
காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவன
மேவுசிவன் இன்னருளினால்
சந்தம்இவை தண்டமிழின் இன்னிசை
யெனப்பரவு பாடல் உலகில்
பந்தன் உரை கொண்டுமொழி வார்கள்பயில்
வார்கள் உயர் வானுலகமே.

தெளிவுரை : கடல் வளம் பெருகும் காழிப்பதியில் சிறப்புடன் விளங்கும் கவுணியர் கோத்திரத்தில் திகழும் ஞானசம்பந்தன், வேதவனத்தில் மேவும் வெண்ணீற்று மேனியானை சிவபெருமானை இனிய அருளால், சந்தம் விளங்கும் தமிழின் இசையாய்ப்பாடிய இத் திருப்பதிகத்தைப் பாடுபவர்கள், உயர்ந்த வானுலகத்தைப் பெறுவார்கள். இது மறுமையில் தோன்று சிறப்பினை உணர்த்துவதாயிற்று.

திருச்சிற்றம்பலம்

335. திருமாணிகுழி (அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

824. பொன்னியல் பொருப்பரையன் மங்கையொடு
பங்கர்புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல்
வித்தகர் மகிழ்ந்துறைஇடம்
கன்னியிள வாளைகுதி கொள்ளஇள
வள்ளைபடர் அள்ளல் வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை
சேர்உதவி மாணி குழியே.

தெளிவுரை : அழகு பொருந்திய இமவான் மகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகவும் கங்கையைச் சடை முடியின் மீதும் வைத்து விளங்குபவர், சிவபெருமான். அவர், வன்னிப்பத்திரம் ஊமத்தம் மலர் ஆகியனவும் முடியில் தரித்த வீரம் பொருந்திய வித்தகர். அப்பரமன் மகிழ்ந்து உறையும் இடமாவது, வாளை என்னும் இனத்தைச் சார்ந்த மீன் குஞ்சுகள் துள்ளிக் குதிக்க எருமைகள் வயல்களில் சேற்றில் படிந்து மனைக்குச் சேரும் நீர் வளமும் நிலவளமும் உடைய மாணி குழியே.

825. சோதிமிகு நீறதுமெய் பூசியொரு
தோலுடை புனைந்து தெருவே
மாதர்மனை தோறும்இசை பாடிவசி
பேசும்அர னார்மகிழ்விடம்
தாதுமலி தாமரை மணங்கமழ
வண்டுமுரல் தண் பழனமிக்கு
ஓதமலி வேலைபுடை சூழுலகில்
நீடுஉதவு மாணிகுழியே.

தெளிவுரை : ஈசன், சோதி வடிவாகிய திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; தோலை உடையாகக் கொண்டு அழகுடன் மிளிர்பவர்; தெருக்கள் தோறும் சென்று மாதர்தம் இல்லம் புகுந்து இசைத்துப் பாடி, வசிய வார்த்தைகளைப் பேசுபவர். அத்தகைய சிவபெருமான் மகிழ்ந்து விளங்குகின்ற இடமாவது, மகரந்தங்களையுடைய தாமரையின் மணங் கமழ வண்டு இசைபாட வயல்கள் மிகுந்தும், கடல் அலைகளின் ஓதம் சூழ்ந்தும் விளங்கும் மாணிகுழியே.

826. அம்பனைய கண்ணுமை மடந்தையவன்
அஞ்சிவெரு வச்சினம் உடைக்
கம்பமத யானையுரி செய்தஅர
னார்கருதி மேயஇடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி
மாடமது நீடி அழகார்
உம்பர்அவர் கோனகரம் என்னமிக
மன்னுஉதவி மாணிகுழியே.

தெளிவுரை : அம்பு போன்ற கூரிய விழியுடைய உமாதேவியை அஞ்சச் செய்யுமாறு வந்த யானையின் தோலை உரித்த சிவபெருமான் கருதி வீற்றிருக்கும் இடமாவது, நறுமணம் கமழும் மலர்ச் சோலை சூழவும், மணிமாடங்கள் உடைய அழகிய தேவ லோகத்து நகரமாகிய அமராவதியை போன்றும், மன்னும் உதவி மாணி குழியே.

827. நித்தநிய மத்தொழில னாகிநெடு
மால்குறள னாகிமிகவும்
சித்தம தொருக்கிவழி பாடுசெய
நின்றசிவ லோகன் இடமாம்
கொத்தலர் மலர்ப்பொழில் நீடுகுல
மஞ்ஞைநட மாடலது கண்டு
ஒத்தவரி வண்டுகள் உலாவிஇசை
பாடுஉதவி  மாணிகுழிய.

தெளிவுரை : நித்தமும் அநுட்டான முறைப்படி வழிபாடு செய்யும் பொருட்டுத் திருமால், குறுகிய வடிவத்தையுடைய வாமன வடிவம் தாங்கி, ஒரு மித்த நிலையில் பூசிக்க ஈசன் மேவும் இடமாவது, கொத்தாகப் பூக்கும் மலர்ப் பொழிலில் மயில் நடனமாட  அதனைக் கண்ட வரி வண்டுகள் உலவி இசைபாடுகின்ற எழில் மேவும் உதவி மாணி குழியே.

828. மாசின்மதி சூடுசடை மாமுடியார்
வல்லசுரர் தொன்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க
ளுக்கருள்செய் நம்பன்இடமாம்
வாசமலி மென்குழல் மடந்தையர்கள்
மாளிகையின் மன்னியழகார்.
ஊசன்மிசை யேறினி தாகஇசை
பாடுஉதவி மாணிகுழியே.

தெளிவுரை : மாசு இல்லாத சந்திரனைச் சூடிய பெருமை பொருந்திய நீண்ட சடை முடி உடைய சிவபெருமான், வன்மையுடைய அசுரர்களின் மூன்று நகரங்களையும் நாசம் செய்து, நற்குண நற்செய்கைகள் உடைய தேவர்களுக்கு அருள் செய்தவர். அப் பரமன், விளங்குகின்ற இடமாவது, நறுமணம் கமழும் மெல்லிய கூந்தலையுடைய மங்கையர்கள், தமது மாளிகையில் உள்ள ஊஞ்சலின் மீது ஏறி அமர்ந்து, இனிமையான இசை பாடும் உதவி மாணி குழியே.

829. மந்த மலர் கொண்டுவழி  பாடுசெயு
மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை
செய்தமணி  கண்டன்இடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட
மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண
மார்உதவி மாணி குழியே.

தெளிவுரை : மலர் தூவி வழிபாடு செய்த மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த காலனுடைய உயிரை மாய்க்கத் திருப்பாதத்தால் உதைத்த, நீலகண்டனாகிய சிவபிரான் வீற்றிருக்கும் இடமாவது, சந்தனம் அகில் ஆகிய மரங்களும் மலர்களும் கொண்டு உந்தித் தள்ளி வரும் கெடில நதியின் நீர் பாயும் வயல்களின் சிறப்புடைய உதவி மாணிகுழியே.

830. எண்பெரிய வானவர்கள் நின்றுதுதி
செய்யஇறை யேகருணையாய்
உண்பரிய நஞ்சுதனை யுண்டுலகம்
உய்யஅருள் உத்தமன்இடம்
பண்பயிலும் வண்டுபல கொண்டிமது
உண்டு நிறை பைம்பொழிலின்வாய்
ஒண்பலவின் இன்கனி சொர்ந்துமண
நாறுஉதவி மாணிகுழியே.

தெளிவுரை :தேவர்கள் வணங்கி நின்று துதி செய்ய, கருணை வயத்தராய் உண்பதற்கு உரியது அல்லாத நஞ்சினை உண்டு, உலகம் யாவும் உய்யுமாறு அருள் செய்த உத்தமன் வீற்றிருக்கும் இடமாவது, பண் இசைத்து உலவும் வண்டு, மலரில் உள்ள மகரந்தங்களைக் குடைந்து தேனை உண்டும், பைம் பொழில்கண் உள்ள பலாவின் இனிய கனியிலிருந்து தேன் மணம் திகழவும் விளங்கும் உதவி மாணி குழியே.

831. எண்ணமது இன்றிஎழிலார் கைலை
மாமலை எடுத்ததிறலார்
திண்ணிய அரக்கனை நெரித்தருள்
புரிந்தசிவ லோகன்இடமாம்
பண்ணமரு மென்மொழியி னார்பணை
முலைப்பவள வாயழக தார்
ஒண்ணுதல் மடந்தையர் குடைந்துபுன
லாடுஉதவி மாணிகுழியே.

தெளிவுரை : முழு முதலாக விளங்குகின்ற சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையின் பெருமையும், அப் பெருமானின் அளவற்ற ஆற்றலையும் ஆராயாது, மலையை எடுத்தான் இராவணன். அவனை நெரித்துப் பின்னர் அவன் கசிந்து அழுது ஏத்தித் துதிக்க அருள் புரிந்தவர், ஈசன். சிவலோக நாதனாகிய அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பண் போன்ற இனிய மொழி உடைய மகளிர் குடைந்து புனலாடும் எழில் கொண்ட உதவி மாணி குழியே.

832. நேடுமய னோடுதிரு மாலும்உண
ராவகை நிமிர்ந்து முடிமேல்
ஏடுலவு திங்கள்மத மத்தம்இத
ழிச்சடைஎம் ஈசன்இடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி
மாதவி செருந்தி குரவின்
ஊடுலவு புன்னைவிரை தாதுமலி
சேர்உதவி மாணிகுழியே.

தெளிவுரை : தேடிச் சென்று மேவும் பிரமனும் திருமாலும் உணராத வகையில் சோதிப் பிழம்பாக வடிவுகொண்டு, சடை முடியின் மீது பிறைச் சந்திரன், ஊமத்தம், கொன்றை ஆகியவற்றைத் தரித்து விளங்குபவர், சிவபெருமான். அவரது இடமாவது, மல்லிகை குருந்தை, மாதவிக் கொடி, செருந்தி, குரவம் புன்னை என விளங்கும் மணம் மிகும் தாதுக்கள் மலிந்த உதவி மாணி குழியே.

833. மொட்டையம ணாதர்முது தேரர்மதி
யில்லிகண் முயன்றனபடும்
முட்டைகண் மொழிந்தமொழி கொண்டருள்செய்
யாதமுதல் வன்றன் இடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய
வாழையில் விழுந்தஅதரில்
ஒட்டமலி பூகநிரை தாறுஉதிர
வேறுஉதவி மாணிகுழியே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் சொல்லும் முரண் கொண்ட சொற்களை ஏற்காத ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, தென்னை மரங்களிலுள்ள இளநீர்,  வாழையிலும் பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதறி மேவும் மாணி குழியே.

834. உந்திவரு தண்கெடில மோடுபுனல்
சூழுதவி மாணி குழி மேல்
அந்திமதி சூடியஎம் மானையடி
சேரும்அணி காழி நகரான்
சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும்
ஞானசம் பந்தனதுசொல்
முந்திஇசை செய்து மொழிவார்களுடை
யார்கள்நெடு வானநிலனே.

தெளிவுரை : நீர்ப் பெருக்குடன் வரும் கெடில நதி சூழ்ந்த உதவி மாணி குழியின் மீது, பிறைச் சந்திரனைச் சூடிய எமது தலைவனாகிய ஈசன் திருவடியைப் பொருந்தி மேவும் காழி நகரினனாய்ச் சந்தம் பெருகும் தண்மை பொருந்திய தமிழ் உணர்ந்த ஞானசம்பந்தன் உரைத்த திருப்பதிகத்தை, முனைந்து விருப்பத்துடன் ஓதுபவர்கள் இந்நிலவுகத்திலும், வானுலகத்திலும் யாவையும் வாய்க்கப் பெறுவார்கள். இது இம்மையில் பதினாறு பேறும் பெறுவர் என்பதும் மறுமையில் உயர்ந்ததாகிய முத்திப் பேறும் பெறுவர் என்பதும் குறிப்பு.

திருச்சிற்றம்பலம்

336. திருவேதிகுடி (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

835. நீறுவரி யாடரவொடு ஆமைமனவு
என்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல்
ஆதியர் இருந்த இடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை
நாரஇணை வாளை மடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவளம்
ஆரும்வயல் வேதிகுடியே.

தெளிவுரை : ஈசன் திருவெண்ணீறு, வரிகளை உடைய அரவம், ஆமை, சங்கு மணி, எலும்பு ஆகியவற்றைத் தரித்து விளங்குபவர்; இடப வாகனத்தை உடையவர்; யாவராலும் போற்றப்படுபவர்; ஆதி முதலாக விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பாக்கு மரங்களும் வாழை மரங்களும் திகழவும், வாளையானது மடுவில் குதித்து விளையாடவும், வளம் பொருந்திய வயல்களும் கொண்ட வேதிகுடியே.

836. சொற்பிரிவி லாதமறை பாடிநடம்
ஆடுவர்தொல் ஆனையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவர்எந்
நாளும் வளர் வானவர் தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமுன்
அயின்றவர் இயன்ற தொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நகர்
என்பர்திரு வேதிகுடியே.

தெளிவுரை : இசையும் சொல்லின் மெய்ப் பொருளும் பிரிதல் இல்லாத வேதத்தைப் பாடி, நடம் புரியும் சிவபெருமான், யானையின் தோலை உரித்து அதனைத் தோளில் தரித்துக் கொண்டவர்; தேவர்கள் தொழுது போற்ற நஞ்சினை பருகிக் கண்டத்தில் தேக்கிக் காத்தருளியவர்; மலையரசன் மகளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு இருப்பவர். அப் பரமனின் இடமாவது, திருவேதிகுடியே.

837. போழுமதி பூணரவு கொன்றைமலர்
துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழும்அரு ளாளர்இரு
ளார்மிடறர் மாதர்இமை யோர்
சூழும் இர வாளர்திரு மார்பில்விரி
நூலர்வரி தோலர் உடைமேல்
வேழஉரி போர்வையினர் மேவுபதி
என்பர்திரு வேதிகுடியே.

தெளிவுரை : ஈசன், பிறை மதியும், நாகமும் பூண்டு இருப்பவர்; கொன்றை மலர் தரித்துள்ள சடை முடியின் மீது கங்கையைக் கொண்டு விளங்கும் அருளாளர்; கரிய மிடற்றினை உடையவர்; தேவர் உலகில் ஆடவரும் மகளிரும் சூழ்ந்து, இரந்து ஏத்தும் அருளாளர்; திருமார்பில் முப்புரி நூல் அணிந்து விளங்குபவர்; அழகிய புலித் தோலை உடையாகக் கொண்டு உடுத்தி, அதன் மீது யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர். அப் பெருமான் மேவும் பதியாவது திருவேதிகுடியே.

838. காடர்கரி காலர்கனல் கையர் அனல்
மெய்யர்உடல் செய்யர் செவியில்
தேடர்தெரி கீளர்சரி கோவணவர்
ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடல் உடை யார்கள் அடி யார்கள் மல
ரோடுபுனல் கொண்டு பணிவார்
வேடம்ஒளி யானபொடி பூசியிசை
மேவுதிரு வேதி குடியே.

தெளிவுரை : சிவபெருமான், மயானத்தை இடமாகக் கொண்டவர்; யானையின் தோலினை உரித்துக் கொன்று காலனாகத் திகழ்ந்தவர்; நெருப்பினைக் கையில் ஏந்தியவர்; நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியின் வண்ணம் உடையவர்; தோடு என்னும் அணியைச் செவியில் அணிந்தவர்; இடபத்தை வாகனமாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமானுடைய தொன்மையான நகராவது, பாடிப் போற்றும் அடியவர்கள், புனித நீரால் அபிடேகம் செய்து மலர் தூவி ஏத்தி ஒளி மிக்க திருவெண்ணீறு அணிந்த திருகோலத்தினராய் அருள் மணம் பெருக விளங்கும் திருவேதிகுடியே.

839. சொக்கர்துணை மிக்கஎயில் உக்குஅற
முனிந்து தொழு மூவர் மகிழத்
தக்கஅருள் பக்கம்உற வைத்தஅர
னார்இனிது தங்கு நகர்தான்
கொக்கரவம் உற்ற பொழில் வெற்றிநிழல்
பற்றிவரி வண்டிசை குலாம்
மிக்கமரர் மெச்சியினிது அச்சம்இடர்
போகநல்கு வேதிகுடியே.

தெளிவுரை : சிவபெருமான், பேரழகு வாய்ந்தவராய் யாவரும் மயங்குமாறு திகழ்பவர்; முப்புரங்களைச் சாம்பலாகுமாறு செய்த நாளில் ஆங்கு இருந்து அசுரர்களின் மூன்று போர் தொழுது போற்ற, அவர்களைக் காத்து அருள் புரிந்தவர். அப் பெருமான், இனிது வீற்றிருக்கின்ற நகரானது, மாமரங்கள் சலசலப்புடன் ஓசை எழுப்பவும், வண்டு இசை எழுப்பவும், தேவர்கள் தமது அச்சமும் இடரும் நீங்குமாறு வந்து ஏத்தும் திருவேதி குடியே.

840. செய்யதிரு மேனிமிசை வெண்பொடி
யணிந்து கரு மானுரிவை போர்த்து
ஐயம்இடும் என்றுமட மங்கையொடும்
அகந்திரியும் அண்ணல் இடமாம்
வையம்விலை மாறிடினும் ஏறுபுகழ்
மிக்கிழிவி லாதவகையார்
வெய்ய மொழி தண்புலவ ருக்குரைசெய்
யாதஅவர் வேதிகுடியே.

தெளிவுரை : ஈசன், சிவந்த திருமேனியின் மீது திருவெண்ணீறு அணிந்து விளங்குபவர்; கரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர். தாருக வனத்து மாதர்கள்பால் சென்று பிச்சை ஏற்றுத் திரியும் அண்ணல். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, உலகில், இயல்பாகிய வளமை குன்றி, மாறுபாடு கொண்டாலும், தமது வள்ளல் தன்மையிலும் புகழிலும் குறைவுபடாது புலவர்களுக்கு நன்மொழி உரைத்து ஆதரிக்கும் பெற்றியுடையவர் விளங்கும் வேதி குடியே.

841. உன்னியிரு போதும்அடி பேணும்அடி
யார்தம் இடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழல்
இருந்ததுணை வன்றன்இடமாம்
கன்னியரொடு ஆடவர்கள் மாமணம்
விரும்பி அரு மங்கலம்மிக
மின்னியலு நுண்ணிடை நன்மங்கையர்
இயற்றுபதி வேதிகுடியே.

தெளிவுரை : காலை மாலை ஆகிய இரு வேளையிலும் தொழுது ஏத்தும் அடியவர்களுடைய இடர்களைத் தீர்த்து அருள் புரியும் சிவபெருமான். சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் கல்லால மரத்தின் கீழ் இருந்து தட்சிணாமூர்த்தி திருக்கோலம் தாங்கி அறப் பொருள்களை உணர்த்தியவர். அப்பெருமான் விளங்குகின்ற இடமாவது, கன்னிப் பெண்களும் ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் கொள்ளும் அரியதொரு மங்கலத் திருநாளில் விளக்கிடுதல், நலங்கிடுதல், சிகை அலங்கரித்தல், பூமுடித்தல், அம்மி மிதித்தல் முதலான சுபச் சடங்குகளை நடத்தி வைக்கும் நுண்ணிய இடையுடைய நன்மங்கையர்கள் திகழ மேவும் வேதி குடி என்னும் பதியே.

842. உரக்கரநெ ருப்புஎழ நெருக்கி வரை
பற்றியவொ ருத்தன்முடி தோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கினிது
நல்கியரும் அங்கணன் இடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும்
ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக்கமழ விண்ணிசை
உலாவுதிரு வேதிகுடியே.

தெளிவுரை : கயிலை மலையைப் பெயர்த்து எடுக்கப் பற்றிய இராவணனுடைய வலிமையான கரங்களும், முடிகளும், தோளும், அனல் கொண்டு வதைபடுமாறு அடர்த்த சிவபெருமான், அவ்வரக்கனுடைய இசைக்கு இரங்கி, இனிது அருள் புரிந்தவர். அப் பெருமானுடைய இடமாவது, குவிந்த இதழ்களையுடைய மங்கையும் ஆடவரும் நறுமணம் கமழும் கலவையைக் கூந்தலில் பொருத்தத் தடவ, அதன் எழில் மணமானது விண்ணில் பரவும் செம்மையுறும் திருவேதி குடியே.

843. பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி
அங்கையானு நேட எரியாய்த்
தேவும்இவர் அல்லர்இனி யாவர்என
நின்றுதிகழ் கின்றவர இடம்
பாவலர்கள் ஓசையியல் கேள்வியது
அறாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர்
வீதிநிகழ் வேதி குடியே.

தெளிவுரை : பிரமனும், திருமாலும் தேவி நிற்கத் தீப்பிழம்பாய் மேவி, இப்பெருமானை அன்றி வேறும் கடவுள் இல்லை என ஏத்தப் பெறும் சிவபெருமான், திகழ்கின்ற இடமாவது, புலவர்கள், நன்கு விளங்கும் இயற்றமிழை உரைக்கவும், கேள்விச் செல்வத்தினை நீங்காத கொடை வள்ளல்கள் செவி மடுக்கவும், செல்வம் மிகுந்த நெடிய மாடமாளிகைகளும், வீதிகளும் திகழ்கின்ற வேதி குடியே.

844. வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்
மனத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென என்றும் உணராதஅடி
யார்கருது சைவன் இடமாம்
அஞ்சுபுலன் வென்று அறு வகைப்பொருள்
தெரிந்துஎழு இசைக்கிளவி யால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ்
கின்றதிரு வேதிகுடியே.

தெளிவுரை : சமணர்களும் தேரர்களும் மொழியும் சொற்கள் பற்றுக் கோடாக அமையாதெனக் கொண்டு, அதனை ஏற்றுக் கொள்ளாத அடியவர்களின் நெஞ்சில் உறைபவர், சிவபெருமான். அப்பெருமான், ஐம்புலன்களை வென்று அடக்கி, அறுவகைச் சமய நெறிகளாகிய பாசுபதம், மகாவிரதம், காபாலிகம், வாமனம், பைரவம், சைவம், என்பனவற்றை நன்கு தெரிந்து, ஏழு வகையான சுரங்களைக் கொண்டு இசை எழுப்பி வெம்மை தரும் சினத்தை ஒழித்த அருளாளர்கள், மேவி விளங்குகின்ற திருவேதிகுடியே.

845. கந்தமலி தண்பொழில்நன் மாடம்இடை
காழிவளர் ஞானம் உணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு
வேதிகுடி யாதி கழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள்
என்னநிகழ் வெய்திஇமை யோர்
அந்த உலகு எய்திஅர சாளும்அது
வேசரதம் ஆணைநமதே.

தெளிவுரை : குளிர்ச்சி மிக்க பொழில் சூழ்ந்த சீகாழி என்னும் பதியில் விளங்குகின்ற ஞானம் திகழப் பெற்ற ஞானசம்பந்தனின் செம்மை மிகும் தமிழ் கொண்டு, வேதி குடியில் வீற்றிருக்கும் ஆதியாகிய ஈசனின் கழலைச் சிந்தித்து ஏத்துபவர்கள், நல்லவர்களாய்த் திகழ்வார்கள்; மறுமையில் தேவர் உலகத்தை அடைந்து அரசபோகத்தைக் கைவரப் பெறுவார்கள் இது நமது ஆணை.

திருச்சிற்றம்பலம்

337. திருக்கோகரணம் (அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம், உத்தர் கன்னடா, கர்நாடகா மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

846. என்றும்அரி யான்அயல வர்க்குஇயல்
இசைப் பொருள்கள் ஆகிஎனதுள்
நன்றும்ஒளி யான்ஒளிசி றந்தபொன்
முடிக்கடவுள் நண்ணும் இடமாம்
ஒன்றியம னத்தடியர் கூடிஇமை
யோர்பரவு நீடரவமார்
குன்றுகள் நெருங்கிவிரி தண்டலை
மிடைந்துவளர் கோகரணமே.

தெளிவுரை : சிவபெருமான், நினையாத பேர்களுக்கு எக்காலத்திலும் அரியவர்; இயற்றமிழும், இசைத் தமிழும் ஆகி எனத உள்ளத்தில் நன்கு ஒளியாகி வீற்றிருப்பவர்; பொன் போன்று ஒளிரும் சடை முடியுடைய கடவுள். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, ஒருமித்த மனத்தை உடைய அடியவர்களுடன் தேவர்கள் கூடி இருந்து பரவுகின்ற குன்றுகளும் சோலைகளும் திகழ மேவும் கோகரணமே.

847. பேதைமட மங்கையொரு பங்கிட
மிகுத்து இடபம் ஏறியமரர்
வாதைபட வண்கடல்எ ழுந்தவிடம்
உண்டசிவன் வாழும் இடமாம்
மாதரொடும் ஆடவர்கள் வந்தடி
இறைஞ்சிநிறை மாமலர்கள்தூய்க்
கோதைவரி வண்டிசை கொள் கீதமுரல்
கின்றவமர் கோகரணமே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியாரை ஒர பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாகி, இடப வாகனத்தில் விளங்கித் தேவர்கள் துன்பத்தில் அழுந்தியபோது கடலில் தோன்றிய விடத்தை உட்கொண்டு காத்தருளியவர். அப் பரமன் வாழ்கின்ற இடமாவது, ஆடவரும் மங்கையரும் வந்து திருவடியை ஏத்தி, நிறைந்த மாமலர்களைத் தூவிப் போற்ற, வண்டுகள் கீதம் இசைக்கும் சோலை வளர் கோகரணமே.

848. முறைத்திறம்உ றப்பொருள்தெ ரிந்துமுனி
வர்க்கருளி ஆலநிழல்வாய்
மறைத்திறம்அ றத்தொகுதி கண்டுசம
யங்களைவ குத்தவன்இடம்
துறைத்துறை மிகுத்தருளி தூமலர்
சுமந்துவரை யுந்திமதகைக்
குறைத்தறை யிடக்கரி புரிந்திடறு
சாரன்மலி கோகரணமே.

தெளிவுரை : அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் மும்மலத் தொகுதி முதலாக உள்ள முறையின் திறங்களையும் பொருத்தமாகத் தெளிவிக்குமாறு, சனகாதி முனிவர்களுக்கு வகுத்துக் கொடுத்து உபதேசித்த சிவபெருமான் இருக்கும் இடமாவது, துறைகள்தோறும் உள்ளஅருவி நீரானது மலர்களைச் சுமந்து, மலையின் மீது உந்தித் தள்ளி யானையின் பிளிறலுக்குப் பொருந்த ஒலி எழுப்பும் சாரலையுடைய கோகரணமே.

849. இலைத்தலை மிகுந்தபடை எண்கரம்
விளங்கஎரி வீசிமுடி மேல்
அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில்
வைத்தஅழ கன்றன் இடமாம்
மலைத் தலை வகுத்தமுழை தோறும்உழை
வாளரிகள் கேழல் களிறு
கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை
யாடிநிகழ் கோகரணமே.

தெளிவுரை : ஈசன், இலை போன்ற அலகுடைய சூலப் படை உடையவர்; எட்டுக் கரங்களை உடையவர்; நெருப்பினைக் கையில் ஏந்தி வீசி நடம் புரிபவர்; சடை முடியின் மீது கங்கையைத் தரித்து விளங்குபவர். அத்தகைய அழகனுடைய இடமாவது, மலைப்பக்கம் உள்ள குகைகளில் மான்களும் சிங்கங்களும் பன்றிகளும் யானைகளும் பெண் யானைகளும் கூடி விளையாடி மகிழும் கோகரணமே.

850. தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய
வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனனெம்
ஆதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடத்துமற வாளரொடு
வேடர்கள் பயின்று குழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி
தீரநல்கு கோகரணமே.

தெளிவுரை : ஈசன், தலை மாலை  அணிந்தவர்; கொன்றை, எருக்கும், வன்னி ஆகியவற்றைச் சடை முடியில் பொருந்தத் தரித்தவர்; தபோதனர்; ஆதிக் கடவுள். அவர் விளங்குகின்ற பதியாவது. படைத் தொழிலை உடைய வீரர்கள் தமது பகைமை ஒழிந்து நன்னீரில் படிய விளங்கும் கோகரணமே.

851. நீறுதிரு மேனிமிசை யாடிநிறை
வார்கழல் சிலம்பொலிசெய
ஏறுவிளை யாடஇசை கொண்டிடு
பலிக்குவரும் ஈசனிடமாம்
ஆறுசம யங்களும் விரும்பியடி
பேணியர னாகமமிக
கூறுமனம் வேறிரதி வந்தடியர்
கம்பம்வரு கோகரணமே.

தெளிவுரை : ஈசன், திருநீற்றினைத் திருமேனியில் பூசி விளங்கித் திகழ்பவர்; திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்யுமாறு தூக்கி ஆடுபவர்; இசை பாடிப் பலி ஏற்று வருபவர். அப்பெருமான் திகழும் இடமாவது, ஆறு சமயங்களும் திருவடியைப் பேணி ஆகம விதிப்படியும், மனத்தில் இனிமை பூரிக்கவும், பக்தியில் திளைக்கவும் மேவும் கோகரணமே.

852. கல்லவட மொந்தைகுழல் தாளமலி
கொக்கரையர் அக்கு அரைமிசை
பல்லபட நாகம்விரி கோவணவர்
ஆளுநகர் என்பர்அயலே
நல்லமட மாதர் அர நாமமும்
நவிற்றிய திருத்தழுழுகக்
கொல்லவிட நோயகல் தரப்புகல்கொ
டுத்தருளு கோகரணமே.

தெளிவுரை : கல்லவடம், மொந்தை, குழல், தாளம் ஆகிய வாத்தியங்களுக்கு ஏற்பத் திருவடியைத் தூக்கி வைத்து தாளமிட்டு, எலும்பினில் அறையில் வைத்துக் கட்டி, நச்சுப் பல்லும், படமும் கொண்டு ஆடும் நாகத்தை அணிந்து, கோவண ஆடை உடையவராய் விளங்குகின்றவர், சிவபெருமான். அவருடைய நகர் எனப்படுவது, நற்குண நற்செய்கைகளை உடைய பெண்கள் அரனுடைய திருநாமத்தை நெஞ்சில் இருத்திப் புனித தீர்த்தத்தில் ஆடி, வினை தீர்க்கும் சிறப்புப் பொருந்திய கோகரணமே.

853. வரைத்தல நெருக்கிய முருட்டிருள்
நிறத்தவன வாய்கள் அலற
விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு
மான்இனிது மேவும் இடமாம்
புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி
வாகிவினை தீரஅதன்மேல்
குரைத்தலை கழற்பணிய ஒமம்வில
கும்புகைசெய் கோகரணமே

தெளிவுரை : முரட்டுத்தனமும், கரிய வண்ணமும் உடைய இராவணன் தலை, கயிலை மலையினால் நெரியுமாறு திருப்பாத விரலைச் சிறிது அழுத்திய சிவபெருமான் இனிது மேவுகின்ற இடமாவது, முனிவர்களும் வேத விற்பன்னர்களும் பணிந்து அரநாமத்தினை ஓதி வேள்வி  புரிய, அப் புகையானது பரவி விளங்கும் கோகரணமே.

854. வில்லிமையி னால்விறல் அரக்கனுயிர்
செற்றவனும் வேதமுதலோன்
இல்லையுளது என்றுஇகலி நேடஎரி
யாகி உயர்கின்ற பரனூர்
எல்லையில் வரைத்தகடல் வட்டமும்
இறைஞ்சி நிறை வாசம் உருவக்
கொல்லையில் இளங்குறவர் தம்மயிர்
புலர்த்திவளர் கோகரணமே.

தெளிவுரை : இராவணனை வில்லாற்றலால் வென்ற திருமாலும், வேதத்தை ஓதும் பிரமனும் தமக்குள் இகல் கொண்டு விளங்கினர். அதனை நீக்கிக் கொள்ளும் தன்மையினால் அரனை நோக்கிச் செல்ல, சோதி வடிவாகி உயர்ந்து விளங்கிய அப் பெருமானுடைய ஊரானது, தேவர்கள் இறைஞ்சி ஏத்தச் சோலைகளில் மேவும் இளம் குற மாதர்கள், நறுமணம் கமழும் தமது கூந்தலை உலர்த்தி வருடும் எழில் மிகுந்த கோகரணமே.

855. நேசமின் மனச்சமணர் தேரர்கள்
நிரந்தமொழி பொய்கள் அகல்வித்து
ஆசைகொள் மனத்தை அடியாரவர்
தமக்கருளும் அங்கணன் இடம்
பாசமது அறுத்துஅவனி யிற்பெயர்கள்
பத்துடைய மன்னவனைக்
கூசவகை கண்டுபின் அவற்குஅருள்கள்
நல்கவல கோகரணமே.

தெளிவுரை : நேசமற்ற சமணரும் தேரரும் கூறும் சொற்களை அகற்றி, அடியவர்கள் கூறும் புகழ் மொழிகளை ஏற்று அருள் புரிகின்ற சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, இவ்வரிய பூவுலகில் பத்துப் பெயர்களையுடைய அர்ச்சுனன், நாணும்படி போர் செய்து, பின்னர் அருள் புரியும் பெற்றியுடைய கோகரணம் ஆகும்.

856. கேடலர வீனும்விரி சாரல்முன்
நெருங்கிவளம் கோகரணமே
ஈடமினி தாகஉறை வானடிகள்
பேணியணி காழி நகரான்
நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய்
ஞானசம் பந்தன் மொழிகள்
பாடவல பத்தரவர் எத்திசையும்
ஆள்பவர்பர லோகம் எளிதே

தெளிவுரை : கோடல் மலர்கள் நெருங்கி மேவும் சாரலையுடைய கோகரணத்தினை இடமாகக் கொண்டு இனிது உறையும் அடிகளாகிய ஈசனைப் பேணி, அணிமிகும் காழி நகரில் மேவும் ஞானசம்பந்தன் நாடிய தமிழ்ச் சொல்லாகிய இசைமிகும் இத்திருப்பதிகத்தைப் பாடவல்ல பக்தர்கள், இவ்வுலகத்தில் எல்லா இடங்களிலும் மேன்மையாக விளங்குவார்கள்; மறுமையில் பரனுடைய உலகமானது எளிதில் கைகூடும். இது இம்மையில் விளங்கும் சிறப்பினையும் மறுமையில் உண்டாகும் மேன்மையையும் ஓதுதல் ஆயிற்று.

திருச்சிற்றம்பலம்

338. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

857. சீர்மருவு தேசினொடு தேசமலி
செல்வமறை யோர்கள் பணியத்
தார்மருவு கொன்றையணி தாழ்சடையி
னான் அமர்ச யங்கொள்பதிதான்
பார்மருவு பங்கயம் உயர்ந்தவயல்
சூழ்பழன நீடஅருகே
கார்மருவு வெண்கனக மாளிகை
கவின்பெருகு வீழிநகரே.

தெளிவுரை : நற்புகழும், அழகின் ஒளியும், தேசமெல்லாம் புகழும் அருள் செல்வமும் உடைய மறையவர்கள் பணிந்து ஏத்தக் கொன்றை மாலை அணிந்து, நீண்ட சடையுடைய சிவபெருமான் உறையும் வெற்றி மிகும் பதியாவது, தாமரை மலர்கள் சூழ்ந்த வயல்களும், மேகம் சூழ்ந்த வெண்மையான கனகம் திகழும் மாளிகைகளும், அழகு பெருக விளங்குகின்ற வீழிநகரே.

858. பட்ட முழவிட்ட பணி லத்தினொடு
பன்மறைகள் ஓதுபணி நல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்யஅருள்
செய்தழல் கொள் மேனியவன்ஊர்
மட்டுலவு செங்கமல வேலிவயல்
செந்நெல்வளம் மன்னுபொழில்வாய்
விட்டுலவு தென்றல்விரை நாறுபதி
வேதியர்கள் வீழிநகரே.

தெளிவுரை : முழவும் சங்கும் ஒலிக்க, விரிந்து பெருகிய வேதங்களை ஓதும் அரிய பணிகளை மேற்கொள்ளும் அந்தணர்கள், வெற்றித் துதிகள் செய்து வணங்க, அருள் புரிபவர், தழல் போன்று செம்மேனியராக விளங்கும் சிவபெருமான். அப் பெருமானுடைய ஊரானது, நறுமணம் கமழும் செந்தாமரை மலர்கள் வேலி போன்று சூழ்ந்து விளங்கச் செந்நெல் பெருகும் வயல் வளம் மிக்கதாய், வளம் பெருகும் பொழில் சூழத் தென்றலின் மணம் கமழும் பதியாகிய வேதியர்கள் நிலவும் வீழிநகரே.

859. மண்ணிழிசு ரர்க்குவள மிக்கபதி
மற்றமுள முன்னுயிர்களுக்கு
எண்ணிழிவில் இன்பநிகழ் வெய்தஎழி
லார்பொழில் இலங்கறுபதம்
பண்ணிழிவி லாதவகை பாடமட
மஞ்ஞைநடம் ஆடஅழகார்
விண்ணிழிவி மானம்உடை விண்ணவர்பி
ரான்மருவு வீழிநகரே.

தெளிவுரை :  தேவலோகத்திலிருந்து பூவுலகத்திற்கு வந்த தேவர்களுக்கு வளம் மிகுந்த பதியாகவும் மன்னுயிர்களுக்கு எண்ணற்ற இன்பங்களைத் தந்து விளங்குவதாகவும், எழில் மிகுந்த பொழில்களில் மேவும் வண்டுகள், பண்ணின் இசை மாறுபடாதவாறு இசைக்க, மயில்கள் ஆட மேன்மையுடன் இலங்குவதாகவும் விளங்குவது அழகு மிக்க விண்ணிலிருந்து  கொண்டு வரப் பெற்று வழிபடப் பெறும் விமானம் மருவும், வீழிநகரே.

860. செந்தழிழர் தெய்வமறை நாவர்செழு
நற்கலை தெரிந்த அவரோடு
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள்
செய்யஅமர் கின்றஅரனூர்
கொந்தலர்பொ ழிற்பழன வேலிகுளிர்
தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்வி
ரும்புபதி வீழிநகரே.

தெளிவுரை : பக்திப் பெருக்கினால் இனியதாகிய தமிழ்த் தோத்திரங்கள் பாடும் அன்பர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும், மெய்ஞ்ஞானம் உணரப் பெற்ற இத்தகைய மாண்பினரோடு நற்குண நற்செய்கைகள் உடைய ஞானிகள், உடன் சேர்ந்து அர்ச்சனை செய்து போற்றி ஏத்த வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய ஊரானது, கொத்தாகப் பூக்கும் பொழில்களும், வயல்களும், குளிர்ந்த நீர் நிலைகளும் வளம் பெருகி விளங்க, அருளாற்றலை மேலும் சிறக்க வைக்கும் வேள்வித் திறத்தை ஆற்றும் வேத விற்பன்னர்களும் விரும்புகின்ற பதியாகிய வீழிநகரே.

861. பூதபதி யாகியபு ராணமுனி
புண்ணியநன் மாதை மருவிப்
பேதமதுஇ லாதவகை பாகமிக
வைத்தபெரு மானதுஇடமாம்
மாதவர்கள் அன்னமறை யாளர்கள்
வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதுஇலா தவகை இன்பம்அமர்
கின்றஎழில் வீழிநகரே.

தெளிவுரை : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என விளங்குகின்ற ஐம்பூதங்களுக்கும் பதியாகிய தொன்மையான தவத்தின் சொரூபமாகிய சிவபெருமான், புண்ணிய தேவியாகிய உமாதேவியை வேறுபாடு இல்லாதவாறு, திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமான் திகழும் இடமாவது, மாதவர்களும் அந்தணர்களும் வளர்த்து மேவும் வேள்வியினால் பிணி, மழையின்மை, வறுமை, அறியாமை முதலான குற்றங்கள் நீங்கப் பெற்று இன்பம் பெருக்குகின்ற எழில் மிக்க வீழிநகர் ஆகும்.

862. மண்ணின்மறை யோர்மருவு வைதிகழும்
மாதவமும் மற்றும் உலகத்து
எண்ணில்பொரு ளாயவை படைத்தஇமை
யோர்கள்பெரு மானது இடமாம்
நண்ணிவரு நாவலர்கள் நாள்தொறும்
வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர்
நீள்புரிசை வீழிநகரே.

தெளிவுரை : இப்பூவுலகத்தில், அந்தணர்கள் ஆற்றி வருகின்ற வைதிக தருமங்களும், மகாமுனிவர்கள் ஒழுகி வரும் தவநெறிகளும், உலகத்தில் ஆங்காங்கு ஒழுகப் பெறும் அறங்களும் வகுத்த இறைவன், இமையோர்களின் தலைவராகிய சிவபெருமான் ஆவார். அப் பெருமானுடைய இடமாவது, புலவர் பெருமக்கள் நாள்தோறும் ஈசனின் புகழைப் போற்றி, அருள் பொலிவினை ஏத்தி மிளிர்கின்றதும், உயர்ந்த மாட மாளிகைகளும் மதில்களும் கொண்டு திகழும் வீழிநகரே.

863. சந்திரநன் மாமறையி னோடுவளர்
வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தரவி சும்பணவி அற்புதம்
எனப்படரும் ஆழியிருள்வாய்
மந்தரநன் மாளிகை நிலாவுமணி
நீடுகதிர் விட்ட ஒளிபோய்
வெந்தழல் விளக்குஎன விரும்பினர்
திருந்துபதி வீழிநகரே.

தெளிவுரை : வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும் வேள்வியின் புகையானது ஆகாயத்தில் சென்று அடைந்து, அற்புதம் போன்று இருளைப் பரப்ப, கடலைக் கடைந்த மந்தர மலையைப் போன்று, உயர்ந்த மணி மாடங்களில் உண்டாகும் ஒளியானது, புகையால் விளைந்த இருளைப் போக்கி, ஒளிக் கதிரை வீசி மிளிரும் தகைமையில் விளங்குவதாகும். அத்தகைய தழலானது விளக்குப் போன்று உள்ள பதி வீழிநகரே.

864. ஆனவலியின் தசமுகன் தலைஅ
ரங்கஅணி ஆழி விரலால்
ஊன்அமர் உயர்ந்த குரு திப்புனலில்
வீழ்தரஉ ணர்ந்த பரன்ஊர்
தேன்அமர் திருந்துபொழில் செங்கனக
மாளிகை திகழ்ந்த மதிலோடு
ஆனதிரு உற்றுவளர் அந்தணர்
நிறைந்த அணி வீழிநகரே.

தெளிவுரை : தன்னுடைய வலிமையைப் பெரிதாகக் கருதிக் கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய தலை அழுந்துமாறு, அணிமிகும் திருப்பாத விரலைப் பதித்து, அவ் அரக்கனின் உடலில் இருந்து குருதி பெருகுமாறு செய்த சிவபெருமான் திகழும் ஊரானது, தேன் மணம் விளங்கும் பொழிலும் செம் பொன் மாளிகைகளும் நெடுமதில்களும் கொண்டு செல்வம் பெருகி வளரும் அந்தணர்கள் நிறைந்த அழகிய வீழிநகர் ஆகும்.

865. ஏனவுரு வாகிமண்இ டந்தஇமை
யோனும் எழில் அன்னஉருவம்
ஆனவனும் ஆதியினோடு அந்தம் அறி
யாதஅழல் மேனியவன் ஊர்
வான்அணவ மாமதில் மருங்கலர்
நெருங்கிய வளங்கொள் பொழில்வாய்
வேனல்அமர்வு எய்திட விளங்குஒளியின்
மிக்க புகழ் வீழிநகரே.

தெளிவுரை : ஏனமாய் வடிவம் கொண்ட திருமாலும் அன்னப் பறவையாய் வடிவு கொண்ட பிரமனும் தோற்றமும் முடிவும் அறிய முடியாதவாறு, அழல் மேனியராகிய சிவபெருமான் திகழும் ஊரானது, உயர்ந்த பொழிலும், நெடிய மதில்களும் கொண்டு வெயிலின் வெம்மைக்கேற்ற வாசம் திகழ விளங்கும் புகழ்மிக்க வீழிநகரே.

866. குண்டமண ராகியொரு கோலமிகு
பீலியொடு குண்டிகை பிடித்து
எண்திசையும் இல்லதொரு தெய்வம்உளது
என்பர்அது என்னபொருளாம்
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை
விரும்பு பரன் மேவுபதிசீர்
வெண்தரள வாணகைநன் மாதர்கள்
விளங்கும் எழில் வீழிநகரே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் மிகுந்த ஆற்றல் உடைய தெய்வம் ஒன்று உளது என்பதால் என்ன பயன் ! வேதத்தை ஓதும் பிரமனைப் போன்ற அறிஞர்கள் விரும்பி ஏத்தும் சிவபெருமான் திகழும் ஊர், முத்தன்ன வெண்ணகையுடைய கற்பின் மாதர்கள் விளங்குகின்ற எழில் மிக்க வீழிநகரே.

867. மத்தமலி கொன்றைவளர் வார்சடையில்
வைத்த பரன் வீழிநகர் சேர்
வித்தகணை வெங்குருவில் வேதியன்
விரும்புதமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம் அமர் செல்வமலி
கின்றசிவ லோக மருவி
அத்தகு குணத்தவர்க ளாகியனு
போகமொடு யோகமவர தே.

தெளிவுரை : ஊமத்த மலர், கொன்றை மலர் முதலானவை விளங்கும் நீண்ட சடை உடைய சிவபெருமான் வீழி நகரில் மேவி விளங்கும் வித்தகர். அப் பரமனை, வெங்குருவில் விளங்கும் ஞான சம்பந்தன் விரும்பி உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், அழகிய விமானம் திகழும் செல்வச் செழிப்புடைய சிவலோகத்தில் சார்ந்து, சத்துவ குணத்தினராய் விளங்கி, சிவபோதம் மிக்கவராகியும், யோக நிலை உடையவராகியும் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

339. திருத்தோணிபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

868. சங்கு அமரு முன்கைமட மாதையொரு
பாலுடன் விரும்பி
அங்குடன் மேலுறஅ ணிந்தபிணி
தீரஅருள் செய்யும்
எங்கள்பெரு மானிடம்எ னத்தகுமு
னைக்கடலின் முத்தம்
துங்கமணி இப்பிகள் கரைக்குவரு
தோணிபுரம் ஆமே.

தெளிவுரை : சங்கு வளையல் அணிந்த உமாதேவியை ஒரு பாகத்தில் விரும்பிப் பொருத்தி, அர்த்தநாரியாய் விளங்கி, எலும்பினைத் திருமேனியில் அணிந்து, மன்னுயிர்களின் எல்லாப் பிணிகளும் தீருமாறு அருள் செய்யும் எங்கள் பெருமான் திகழும் இடம் எனப்படுவது, கடலிலிருந்து முத்துக்களும் இரத்தினங்களும்  சங்குகளும் அலைகள் வாயிலாகக் கரைக்கு நாடிவரும் சிறப்புடைய தோணிபுரம் ஆகும்.

869. சல்லரிய யாழ்முழவ மொந்தைகுழல்
தாளமது இயம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு
பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநடம் ஆடுசடை
அண்ணல்இடம் என்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர்
தோணிபுரும் ஆமே.

தெளிவுரை : பம்பை, யாழ், முழவு, மொந்தை, புல்லாங்குழல், தாளம் முதலான வாத்தியங்கள் ஒலிக்க, இமவான் மகளாகிய உமாதேவியைத் திருமேனியில் ஒருபாகமாக நிலை செய்து நெருப்பினைக் கரத்தில் ஏந்தி, இருளில் நடனம் ஆடுகின்ற சடை முடியுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் என்பது, தொண்டர்கள் துதி செய்து ஏத்த அருள் வளரும் தோணிபுரம் ஆகும்.

870. வண்டரவு கொன்றைவளர் புன்சடையின்
மேல்மதியம் வைத்துப்
பண்டரவு தன்அரையில் ஆர்ததபர
மேட்டிபழி தீரக்
கண்டரவ ஒண்கடலின் நஞ்சம்அமுது
உண்டகட வுள்ஊர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு
தோணிபுரம் ஆமே.

தெளிவுரை : வண்டுகள் ஒலித்து ஆரவாரிக்கும் கொன்றை மலர் விளங்குகின்ற சடை முடியின்மேல் சந்திரனை வைத்துப் பாம்பினை அரையில் அசைத்துக் கட்டிய சிவபெருமான், பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதம் என ஆக்கி உட்கொண்ட இறைவன். அப்பெருமானின் ஊர் என்பது, தொண்டர்கள் சேர்ந்து வழிபடும் எழில் மல்கும் தோணிபுரம் ஆகும்.

871. கொல்லைவிடை யேறுடைய கோவணவன்
நாவணவு மாலை
ஒல்லையுடை யான்அடைய லார்அரணம்
ஒள்ளழல் விளைத்த
வில்லையுடைய யான்மிக விரும்புபதி
மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகஇடர் தீர்த்தருள்செய்
தோணிபுரம் ஆமே.

தெளிவுரை : இடப வாகனத்தில் விளங்குகின்ற சிவபெருமான், கோவணத்தை ஆடையாகக் கொண்டு இருப்பவர்; அடியவர்கள் பாடிப் போற்றித் தொழப்படும் பாமாலைகளை உடையவர்; திருத் தொண்டர்கள் ஆராவாரத்துடன், பக்தியில் திளைத்தவராய், ஒல் என்னும் ஒலிக் குறிப்பு விளங்கும் அரநாமமும், சிவ நாமமும் எழுப்பி ஓதப் பெறும் மாண்பினர்; பகைமை கொண்டு தேவர்களுக்குத் தீங்கு இழைத்த அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு விளைவித்த மேருவை, வில்லாக உடையவர். அப்பெருமான் விருப்புடன் மேவி விளங்குகின்ற பதியாவது, தொண்டர்கள் வேண்டுகோள் செய்து பாராட்டும் சொற்களை முழுமையாக ஏற்று, அவர்களுடைய இடர்களைத் தீர்த்து அருள் வழங்கும் எழில் மிகுந்த தோணிபுரம் ஆகும்.

872. தேயுமதி யஞ்சடையி லங்கிட
விலங்கல்மலி கானில்
காயும்அடு திண்கரியின் ஈருரிவ
போர்த்தவன் நினைப்பார்
தாயென நிறைந்ததொரு தன்மையினர்
நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை
தோணிபுரம் ஆமே.

தெளிவுரை : சிவபெருமான், ஒளிக்கதிர்களை உடைய கலைகள் யாவும் தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரனைச் சடைமுடியில்  வைத்து, மீண்டும் விளங்கி ஒளிருமாறு செய்தவர்; மலைகளும் மரங்களும் விளங்கும் காட்டில் சினத்துடன் போர் செய்ய வந்த வலிமை உடைய யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டு விளங்குபவர்; தன்னை நினைத்துப் போற்றுகின்ற அன்பர்களுக்குத் தாய் போன்று அன்பு காட்டி, அரவணைத்து மகிழ்ச்சி அளித்துப் பாதுகாக்கும் தன்மையுடையவர். அப்பரமன், நல்லருள் புரியும் பாங்கில் விளங்குகின்ற இடமாவது, அந்தணர்கள் வேதங்களால் நியமப்படி ஓதி வழிபடுகின்ற தோணிபுரம் ஆகும்.

873. பற்றலர்தம் முப்புரம் எரித்தடி
பணிந்தவர்கள் மேலைக்
குற்றமது ஒழித்தருளுங்  கெள்கையினன்
வெள்ளின்முது கானில்
பற்றவன் இசைக்கிளவி பாரிடம்
தேத்த நடம் ஆடும்
துற்றசடை அத்தன்உறை கின்றபதி
தோணிபுரம் ஆமே

தெளிவுரை : சிவபெருமானைப் போற்றித் துதி செய்து உய்யும் நெறியினை மேவாதவராய்ப் பகைமை கொண்டு, தீய செயல்களில் முனைந்தவர்கள் அசுரர்கள். அவ் அசுரர்களுடைய மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். ஈசன். இவர், பணிந்து போற்றும் அடியவர்களுடைய வினைகளைக் களைந்து அருள் புரிபவர்; மயானத்தில் பற்றுக் கொண்ட பூதகணங்கள் இசை எழுப்பி ஏத்த, நெருக்கமாக விளங்கும் சடை முடியுடைய அத்தனாய் உறைகின்ற பதியானது, தோணிபுரம் ஆகும்.

874. பண்ணமரு நான்மறையர் நூன்முறை
பயின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை
பேசுமடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள்
செய்தலுடை யானூர்
துண்ணணென விரும்புசரி யைத்தொழிலர்
தோணிபுரம் ஆமே.

தெளிவுரை : ஈசன், பண்ணின் வழி ஓதப் பெறும் நான்கு மறைகளும் ஆனவர்; வேதங்களும் ஆகமங்களும் நூல் முறையில் விரித்து அருளியவர்; மோன நிலையில் சின் முத்திரையினை மார்புப் பாகத்தில் தாங்கி சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தவர்; உமாதேவியாரைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; தமது பெருமையைப் பேசும் அடியவர்கள்பால் மெய்ப் பொருளாக விளங்கித் தீர்ப்பதற்கு அரியதாகிய வலிமை மிகுந்த வினைகளைத் தீர்த்து அருள் செய்பவர். அப் பெருமான் விளங்குகின்ற ஊரானது, அன்பின் வயப்பட்டு விரும்பி, மிக வேகமாகவும் துடிப்பாகவும் அணுக்கத் தொண்டுகள் மேவும் அடியவர்கள் திகழும் தோணிபுரம் ஆகும்.

875. தென்திசைஇலங்கையரையன் திசைகள்
வீரம்விளை வித்து
வென்றிசை புயுங்களை அடர்த்தருளும்
வித்தகன் இடம்சீர்
ஒன்றிசை இயற்கிளவி பாடமயில்
ஆடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுரல்
தோணிபுரம் ஆமே.

தெளிவுரை : தென்திசையில் விளங்கிய இலங்கையின் வேந்தனாகிய இராவணன் திக்கு விஜயம் செய்து வீரத்தை நிலை நாட்டிய புயுங்கனை அடர்த்து நெரித்துப் பின்னர் அருள் செய்த வித்தகராகிய சிவபெருமான் விளங்கும் இடமாவது, பொருந்திய இசையில் குயில்பாட, மயில் ஆட, சோலைகளில் உள்ள வண்டும் தும்பியும் சுருதியென ரீங்காரம் செய்யும் எழில் மிகும் தோணிபுரம் ஆகும்.

876. நாற்றமிகு மாமலரின் மேலயனும்
நாராணனும் நாடி
ஆற்றலத னால்மிகவு ளப்பரிய
வண்ணம்எரி யாகி
ஊற்றமிகு கீழுலகு மேலுலகும்
ஓங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளும்அரி யான்உறைவு
தோணிபுரம் ஆமே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தமது ஆற்றலைக் கொண்டு நாடியும், காண ஒண்ணாதவாறு, அரிய வண்ணம் பொருந்திய சோதியாகிக் கீழுலகும் மேலுலகும் ஓங்கி எழுகின்ற சிவபெருமான் உறையும் இடமாவது, தோணிபுரம் ஆகும்.

877. மூடுதுவர் ஆடையினர் வேடநிலை
காட்டுஅம ணாதர்
கேடுபல சொல்லிடுவர் அம்மொழி
கெடுத்தடைவி னான்அக்
காடுபதி யாகநட மாடிமட
மாதொடுஇரு காதில்
தோடுகுழை பெய்தவர்த மக்குஉறைவு
தோணிபுரம் ஆமே.

தெளிவுரை :  சமணரும் சாக்கியரும் கூறும் மொழிகள் பயன் தரத்தக்கன அல்ல என, அதனைக் கொள்ளாது ஈசன், மயானத்தை இடமாகத் தேர்ந்து நடம் புரிந்து, உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். ஒரு காதில் தோடும் மற்றொன்றில் குழையும் அணிந்து மேவும் அப்பெருமான், தமக்கு உறைவிடமாகக் கொள்ளும் இடம், தோணிபுரம் ஆகும்.

878. துஞ்சிருளில் நின்றுநட மாடிமிகு
தோணிபுர மேய
மஞ்சனைவ ணங்குதிரு ஞானசம்
பந்தனசொல் மாலை
தஞ்சம்என நின்றிசைமொ ழிந்தஅடி
யார்கள்தடு மாற்றம்
வஞ்சமலிர் நெஞ்சிருளு நீங்கியருள்
பெற்றுவளர் வாரே.

தெளிவுரை : மயான இருளில் நடம் புரியும் ஈசன், தோணிபுரத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார். அப் பரமனை வணங்குகின்ற திருஞானசம்பந்தர் அருளிய சொல் மாலையாகிய இத் திருப்பதிகத்தைத் தஞ்சம் என்று ஏத்திச் சரண் அடைந்து ஓதும் அடியவர்கள், மனத்தில் தடுமாற்றம் கொண்டு, வறிதே அலையாது, தெளிந்த சிந்தனை உடையவர்களாய்த் திகழ்வார்கள்; நன்னெறியினின்றும் விலகாதவர்களாய், வஞ்சம் இருளானது நெஞ்சில் கொள்ளாத வராய், ஈசனின் அருள் பெற்று வளரும் சீலம் உடையவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

340. அவளிவனல்லூர் (அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

879. கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி
நூலொடுகு லாவித்
தம்பரிசி னோடுகடு நீறுதட
வந்திடபம் ஏறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில்
கல்வரைவி லாக
அம்புஎரிய வெய்தபெரு மான்உறைவது
அவளிவநல் லூரே

தெளிவுரை : ஈசன், வண்டு உலவும் கொன்றை மலர் தரித்துள்ளவர்; முப்புரி நூல் திகழும் திருமார்பினர்; திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; இடப வாகனத்தில் ஏறி விளங்குபவர்; ஆகாயத்தில் திரிந்த பொன், வெள்ளி, இரும்பு ஆகிய கோட்டைகளின் மதில்களை மேருமலையை வில்லாகக் கொண்டு, அம்பு தொடுத்து எய்து எரியுமாறு செய்தவர். அப்பெருமான் உறைவது அவளிவள்நல்லூர் ஆகும்.

880. ஓமையன கள்ளியன வாகையன
கூகைமுரல் ஓசை
ஈமம்எரி சூழ்கடலை வாசமுது
காடுநடம் ஆடித்
தூய்மையுடை அக்கொடுஅர வம்விரவி
மிக்குஒளி துலங்க
ஆமையொடு பூணும்அடி கள்உறைவது
அவள்இவள்நல் லூரே.

தெளிவுரை : மாமரம், கள்ளி, வாகை ஆகிய மரங்களும், கூகைகளின் ஓசையும், கொள்ளி, நெருப்பு சூழ்ந்த சுடலையின் வாடை உடைய மயானத்தில் நடனம் ஆடித் தூய்மையான எலும்பும், அரவமும் விரவி ஒளி துலங்க, ஆமையின் ஓட்டினை அணிகலனாகப் பூண்டு விளங்குகின்ற அடிகள் உறைவது, அவள்இவள் நல்லூரே.

881. நீறுடைய மார்பில்இம வான்மகளொர்
பாகநிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடியழகு
ஆயதொரு கோலம்
ஏறுடைய ரேனும்இடு காடுஇரவில்
நின்றுநடம் ஆடும்
ஆறுடைய வார்சடையி னான்உறைவது
அவள் இவள்நல் லூரே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீறு அணிந்து விளங்கும் திருமார்பில், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழ்பவர்; ஆணும் பெண்ணும் இணைந்த அர்த்தநாரி திருக்கோலத்தில், இடப வாகனத்தில் வீற்றிருப்பவர்; சுடுகாட்டில் மேவி இரவில் நடனம் புரிபவர்; கங்கையைச் சடை முடியில் வைத்து இருப்பவர். அப் பெருமான் உறைவது அவள் இவள் நல்லூரே.

882. பிணியும்இலர் கேடும்இலர் தோற்றம்இலர்
என்றுஉலகு பேணிப்
பணியும்அடி யார்களன பாவமற
இன்னருள்ப யந்து
துணியுடைய தோலும்உடை கோவணமும்
நாகம்உடன் தொங்க
அணியும்அழ காகஉடை யான்உறைவது
அவள்இவள்நல் லூரே.

தெளிவுரை : ஈசன், மன்னுயிர்களுக்கு உள்ளது போன்று பிணியும், அழிவும், தோற்றமும் இல்லாதவர் எனப் போற்றிப் பணியும் அடியவர்களுடைய பாவம் யாவும் நீங்குமாறு செய்து, இனிய அருள் புரிபவர்; தோலை உடையாகக் கொண்டுள்ளவர்; கோவண ஆடை அணிந்துள்ளவர்; நாகத்தை அணியாகக் கொண்டு மேவுபவர். அப்பெருமான் உறையும் இடமாவது அவள்இவள்நல்லூரே.

883. குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன
பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை இண்டை புனைவார் கடவுள்
என்றமரர் கூடித்
தொழலும்வழி பாடும்உடை யார்துயரும்
நோயும்இலர் ஆவர்
அழலும்மழு ஏந்து கையினான் உறைவது
அவள்இவள்நல் லூரே.

தெளிவுரை : குழலின் ஓசை போன்று வரி வண்டு ரீங்காரம் செய்யும் மென்மையான அழகிய மலர்களைக் மாலையாகத் தொடுத்துத் திருக்கழலில் சாத்தி, அமரர்கள், சிவபெருமானைத் தொழுது போற்றுபவர் அமரர்கள், சிவபெருமானைத் தொழுது போற்றுபவர் ஆயினர். அத்தகைய வழிபாட்டைச் செய்பவர்களுக்கு உடலால் ஆகிய நோயும் ஏனையவற்றால் நேரும் துயரும் இல்லை. அவ்வாறு அருள் புரியும் ஈசன் உறைவது, அவள்இவள்நல்லூரே.

884. துஞ்சல்இல ராய்அமரர் நின்றுதொழுது
ஏத்தஅருள் செய்து
நஞ்சுமிட றுண்டுகரி தாயவெளி
தாகியொரு நம்பன்
மஞ்சுநறி மிர்ந்துஉமை நடுங்கஅக
லத்தொடுஅ ளாவி
அஞ்சமத வேழஉரி யான்உறைவது
அவள்இவள்நல் லூரே.

தெளிவுரை : தளர்தல் இன்றித் தேவர்கள் நின்று தொழுது ஏத்த, நஞ்சினை உண்டு அருள் செய்த சிவபெருமான், தமது திருவண்ணத்தை, மிடற்றினில் கரியதாகவும் பிற இடங்களில் வெண்மையாகவும் விளங்கச் செய்தவர்; யானையின் தோலை உரித்து உமாதேவி அதன் தோற்றத்தைக் கண்டு நடுங்கும் எழிலாய், அகன்ற திருமார்பில் பதியுமாறு போர்த்துக் கொண்டவர். அப் பெருமான் உறைவது அவள்இவள் நல்லூரே.

885. கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி
னோடுமிசை செய்யப்
பீடரவ மாகுபடர் அம்புசெய்து
பேரிடப மோடும்
காடரவம் ஆகுகனல் கொண்டிரவி
நின்றுநட மாடி
ஆடரவம் ஆர்த்தபெரு மான்உறைவது
அவள் இவள்நல் லூரே.

தெளிவுரை : மொந்தை, குழல், யாழ், முழவு ஆகிய வாத்தியங்கள் சேர்ந்து இசைக்கவும், நாகத்தை அரையில் கட்டி, இடப வாகனத்தில் இருந்தும், கைகளை நன்கு வீசி ஆடுவதால் கங்கையில் நீர்த்துளிகள் வீசிறவும், இரவில் நடம் புரியும் ஈசன் உறைவது, அவள்இவள்நல்லூரே.

886. ஒருவரையு மேல்வலிகொ டேன்என
எழுந்தவிற லோன்இப்
பெருவரையின் மேலொர்பெரு மானும்உள
னோஎனவெ குண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்னதிறல்
கைகள்உடை யோனை
அருவரையில் ஊன்றியடர்த் தான்உறைவது
அவள் இவள்நல் லூரே.

தெளிவுரை : தனக்கு மேல் யாரும் வலிமையாக இருப்பதற்கு விட மாட்டேன் என வீரத்துடன் எழுந்து, இக் கயிலை மலையின்மேல் ஒரு பெருமான் உளனோ ! என வெகுண்டு, மலையைப் பெயர்த்த, பெரிய மலையைப் போன்ற உறுதியும் கடலைப் போன்ற ஆற்றலும் கொண்ட அரக்கனாகிய இரவணனை, மலையின் கீழ் நெரியுமாறு செய்தவர், சிவபெருமான். அப்பெருமான் உறைவது அவள்இவள் நல்லூரே.

887. பொறிவரிய நாகமுயர் பொங்கணை
அணைந்த புக ழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர்
மேல்விழுமி யோனும்
செறிவரிய தோற்றமொடு ஆற்றல்மிக
நின்றுசிறி தேயும்
அறிவரிய னாயபெரு மானுறைவது
அவள் இவள்நல் லூரே.

தெளிவுரை : நாகத்தை அணையாகக் கொண்டு விளங்குகின்ற புகழ் மிக்க திருமாலும், நறுமணமும் தேனும் உடைய தாமரை மலரின் மேல் விளங்கும் சிறப்புடைய பிரமனும், பிறர்க்கு அரிய வலிமையான தோற்றம் கொண்டு தமது ஆற்றல் முழுவதும் செலுத்தித் தேடியும், சிறிதளவும் அறிவதற்கு அரியவராகிய சிவபெருமான் உறையும் இடமாவது, அவள்இவள் நல்லூரே.

888. கழியருகு பள்ளியிட மாகவரு
மீன்கள்கவர் வாரும்
வழியருகு சாரவெயில் நின்றடிசில்
உள்கிவரு வாரும்
பழியருகி னாரொழிக பான்மையொடு
நின்றுதொழு தேத்தும்
அழியருவி தோய்ந்தபெரு மான்உறைவது
அவள் இவள்நல் லூரே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் சொல்லும் பழிப்புச் சொற்களை ஏற்க வேண்டாம். பக்தி பெருக நின்று தொழுது ஏத்தும் அடியவர்தம் கண்களில் இருந்து தோன்றும் அருவி போன்ற நீரில் தோய்ந்து விளங்குகின்றவர், சிவபெருமான். அப் பெருமான் உறைவது அவள்இவள்நல்லூரே.

889. ஆனமொழி யானதிற லோர்பரவும்
அவள்இவள்நல் லூர்மேல்
போனமொழி நன்மொழிக ளாயபுகழ்
தோணிபுர வூரன்
ஞனாமொழி மாலைபல நாடுபுகழ்
ஞானசம் பந்தன்
தேனமொழி மாலைபுகழ் வார்துயர்கள்
தீயதிலர் தாமே.

தெளிவுரை : நலம் பெருகும் செம்மை மொழி கொண்டு போற்றும் அருளாளர்களால் பரவப்படும் அவள் இவள்நல்லூர்மேல், பெருமையுடைய நன்மொழியால் புகழ் போற்றும் தோணிபுரத்தில் விளங்குகின்ற, ஞான மொழி மாலையாய்ப் பல நாட்டினர் புகழும் ஞான சம்பந்தன் உரைத்த, தேன் போன்ற இத்திருப்பதிகத்தை ஓதிப் போற்றுபவர், துயர் அற்றவர் ஆவர். தீமை, அவர்களை அணுகாது.

திருச்சிற்றம்பலம்

341. திருநல்லூர் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

890. வண்டுஇரிய விண்டமலர் மல்குசடை
தாழவிடை யேறிப்
பண்டுஎரிகை கொண்டபர மன்பதியது
என்பர்அதன் அயலே
நண்டுஇரிய நாரைஇரை தேரவரை
மேல்அருவி முத்தம்
தெண்டிரைகள் மோதவிரி போதுகம
ழும்திருந லூரே.

தெளிவுரை : வண்டு அமரும் மலர் சூடிய சடை முடியுடைய சிவபெருமான், இடப வாகனத்தவராகிக் கையில் நெருப்பு ஏந்திய பரமன். அவர் விளங்கும் பதியாவது, அருவிகள் முத்துக்களைக் கொண்டு சேர்க்கவும், நறுமண அரும்புகள் மலரவும் விளங்கும் திருநல்லூரே.

891. பல்வளரு நாகமரை யார்த்துவரை
மங்கையொரு பாகம்
மல்வளர் புயத்தில்அணை வித்துமகி
ழும்பரமன் இடமாம்
சொல்வளர் இசைக்கிளவி பாடிமட
வார்நடம தாடிச்
செல்வமறை யோர்கள் முறை யேத்தவள
ருந்திருந லூரே.

தெளிவுரை : நச்சுப் பல் வளர்ந்து மேவும் நாகத்தை அரையில் கட்டி, மலை மங்கையாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு, வலிமையான இடப் பாகத்தில் பொருந்தி மகிழும் சிவபெருமான், மகிழ்ந்து விளங்குகின்ற இடமாவது, மகளிர், பொருட் செறிந்த பாடல்களைப் பாடி, அதற்கு இசைய நடனம் ஆடி, வேதம் ஓதவல்ல அந்தணர்கள் நியதிப்படி ஏத்த, வளமை கொண்டும் புகழ் மிக்கும் விளங்கும் திருநல்லூரே.

892. நீடுவரை மேருவில தாகநிகழ்
நாகம்அழல் அம்பால்
கூடலர்கள் மூவெயில் எரித்தசூழ
கன்குலவு சடைமேல்
ஏடுலவு கொன்றைபுனல் நின்றுதிக
ழும் நிமலன் இடமாம்
சேடுலவு தாமரைகள் நீடுவய
லார்திருந லூரே.

தெளிவுரை : பெரிய மலையாகிய மேருவை வில்லாகவும், வாசுகி என்னும் நாகத்தை நாணாகவும், அக்கினியை அம்பாகவும் கொண்டு, பகைவராகிய அசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்த சிவபெருமான், சடை முடியின் மீது கொன்றை மலரும், கங்கையும் திகழத் தரித்துள்ள நிமலன் ஆவார். அப்பெருமானின் இடமாவது, பெருமை மிக்க தாமரை மலர்கள் வயல்களில் நெடிது திகழும் வளப்பம் உடைய திருநல்லூரே.

893. கருகுபுரி மிடற்கரி காடர்எரி
கையதனில் ஏந்தி
அருகுவரு கரியின்உரி அதளர்பட
அரவர்இடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மண நாறமயில்
ஆலமரம் ஏறித்
திருகுசின மாந்திகனி சிந்துமது
வார்திருந லூரே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய மிடற்றினை உடையவர்; மயானத்தில் விளங்கிக் கையில் எரியும் நெருப்பு ஏந்தி நடனம் புரிபவர்; பாய்ந்து, தாக்க வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; படம் கொண்டு ஆடும் நாகத்தை ஆரமாகக் கொண்டு விளங்குபவர். அப்பரமனுடைய இடமாவது. நறுமணம் கமழும் அழகிய பொழிலில், மயில் நடம் புரிய, குரங்குகள் மரத்தின் மீது ஏறிச் சினந்து கனிகளை உதிர்த்து தேன் அருந்தும் எழில் திகழும் திருநல்லூரே.

894. பொடிகொள்திரு மார்பர்புரி நூலர்புனல்
பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுதல்
ஆளர்அவர் இடமாம்
இடிகொள்முழ வோசைஎழிலார் செய்தொழி
லாளர்விழ மல்க
செடிகொள்வினை யகலமனம் இனியவர்கள்
சேர்திருக லூரே.

தெளிவுரை : ஈசன், திருவெண்ணீறு தரித்த திருமார்பினர்; முப்புரி நூல் அணிந்தவர்; கங்கையும், நாகமும் சடை முடியில் தரித்தவர்; இடப வாகனத்தில் ஏறி விளங்கும் முதற் பொருளானவர்; அவரது இடமாவது, இடி போன்ற முழவின் ஓசை ஒலிக்கத் திருவிழாக்களை நடத்தித் தீய வினைகளைத் தீர்த்துக் கொள்ளும் இனியவர்கள் சேர்ந்து விளங்கும் திருநல்லூரே.

895. புற்றரவர் நெற்றியொர்கண் ஒற்றைவிடை
ஊர்வர்அடை யாளம்
சுற்றம்இருள் பற்றியபல் பூதம்இசை
பாடநடை யாலே
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கள்
முற்றும்எயில் மாளச்
செற்றவர் இருப்பிடம் நெருக்குபுன
லார்திருந லூரே.

தெளிவுரை : ஈசன், புற்றில் வசிக்கும் நாகத்தை உடையவர்; நெற்றியில் ஒரு கண் கொண்டு விளங்குபவர்; ஒற்றை இடபத்தை வாகனமாகக் உடையவர்; அடையாளம் காண முடியாத இருளில் பல பூதங்கள் இசை பாட நடனம் ஆடுபவர்; மறையுணர்ந்த அந்தணர்களால் ஏத்தப்படுபவர்; பகைமை கொண்ட அசுரர்களின் முப்புரங்ள் எரியுமாறு செய்தவர். அப் பெருமானுடைய இருப்பிடமாவது, நீர் வளம் நிறைந்த திருநல்லூரே.

896. பொங்கரவர் அங்கமுடன் மேலணிவர்
ஞாலம் இடுபிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய்ச
துலங்கியவெண் ணீற்றர்
கங்கைஅர வம்விரவு திங்கள்சடை
அடிகள்இடம் வினவில்
செங்கயல் வதிக்குதிகொ ளும்புனலது
ஆர்திருந லூரே.

தெளிவுரை : ஈசன், பொங்கி எழுந்து படம் எடுத்து ஆடும் அரவத்தைத் தரித்தவர்; எலும்பினைத் திருமேனியில் அணிபவர்; கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்க ஆரவாரம் செய்த சுற்றித் திரிபவர்; திருமேனியில் வெண்ணீறு பூசியவர்; கங்கையும், அரவமும், சந்திரனும் சடை முடியில் கொண்டு விளங்குபவர். அப் பரமனுடைய இடமானது, செங்கய லானது சேற்றில் குதித்துத் துள்ள, நீர் பெருகும் வளமையுடைய திருநல்லூரே.

897. ஏறுபுகழ் பெற்றதெனி லங்கையவர்
கோனையரு வரையில்
சீறியவ னுக்கருளும் எங்கள்சிவ
லோகன்இட மாகும்
கூறும்அடி யார்கள்இசை பாடிவலம்
வந்தயரும் அருவிச்
சேறுகமரானவழி யத்திகழ்
தருந்திருந லூரே.

தெளிவுரை : புகழ் மிக்க இராவணனைக் கயிலை மலையில் கீழ் நெருக்கி அடர்த்துப் பின்னர் அவனுக்கு அருளும் தன்மையில், வாழ் நாளும் வாளும் அளித்த பெருமான், எங்கள் சிவலோகநாதனாகிய சிவ பெருமான் ஆவார். அப் பெருமானின் இடமாவது. அடியவர்கள் இசை பாடி நகர் வலம் வந்து, பக்திப் பெருக்கால் கண்ணீர் மல்கித் திகழ, அதன் ஆற்றலால் செங்கழனிகள் குளிர்ந்து திகழும் திருநல்லூரே.

898. மாலுமலர் மேலயனு நேடியறி
யாமைஎரி யாய
கோலம்உடை யான்உணர்வு கோதில்புக
ழான்இடம தாகும்
நாலுமறை அங்கமுதல் ஆறும்எரி
மூன்றுதழல் ஓம்பும்
சீலம் உடை யார்கள் நெடு மாடம்வள
ருந்திருந லூரே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேடிச் சென்றும் அறியாத நிலையில், சோதி வடிவாகிய திருக்கோலம் உடையவராய் விளங்குகின்ற ஈசனின் இடமாவது நான்கு வேதமும் ஆறு அங்கமும் மூன்று தழலும் ஓம்புகின்ற சீலம் உடைய தூய் அந்தணர்கள் திகழும் நெடிய மாட மாளிகைகள் கொண்ட திருநல்லூரே.

899. கீறும் உடை கோவணம் இலாமøயில்
ஒல்ஓவியத வத்தர்
பாறும்உடல் மூடுதுவர் ஆடையர்கள்
வேடம் அவை பாரேல்
ஏறுமட வாளொடு இனிதுஏறிமுன்
இருந்தஇடம் என்பர்
தேறுமன வாரம் உடையார்குடி
செயுந்திருந லூரே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் கொண்டு மேவும் கோலத்தைக் கண்டு, அதனை ஒரு பொருட்டாக ஏற்க வேண்டாம். உமாதேவியை உடனாகக் கொண்டு, இடபத்தின் மீது இனிது ஏறி அமர்ந்து விளங்கும். ஈசனின் தொன்மையான இடம் என்பது, அன்புடையவர்களாய், சிவபெருமானே முழுமுதற் பெருமான் எனத் தெளிந்தவர்களாய் மேவும் சிவனடியார்கள் வாசம் செய்யும் திருநல்லூரே.

900. திரைகள்இரு கரையும்வரு பொன்நில
வும்திருந லூர்மேல்
பரசுதரு பாணியை நலந்திகழ்செய்
தோணிபுர நாதம்
உரைசெய் தமிழ் ஞானசம் பந்தன்இசை
மாலைமொழி வார்போய்
விரைந்து செய்மலர் தூவவிதிபேணுகதி
பேறுபெறு வாரே.

தெளிவுரை : காவிரியின் இருகரையும் அலைகள் பெருக நிலவும் திருநல்லூரின் மழுவேந்திய ஈசனை, நலம் திகழும் வயல்களை உடைய தோணிபுர நாதனாகிய தமிழ்ஞான சம்பந்தன் இசைத்த, இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள், பிரமனால் மலர் தூவி ஏத்தப் பெறும் சிவபெருமானுடைய திருவடியைப் பெறும் பேற்றினை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

342. திருப்புறவம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

901. பெண்ணியல் உருவினர் பெருகியபுனல்விர வியபிறைக்
கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்
நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் அர்த்தநாரி வடிவினர்; கங்கையும் பிறைச் சந்திரனும் தரித்துள்ளவர்; மிடுக்காகச் செல்லும் இடபத்தை வாகனமாக உடையவர்; திருவடியைத் தொழுது போற்றும் அடியவர்களின் பிணிகளைத் தீர்த்தருள் புரிபவர். அப் பெருமான் கண்ணி விளங்குகின்ற உயர்ந்த பதியாவது, புண்ணியம் சேர்க்கும் மறைகளை ஓதுகின்ற அந்தணர்கள், நிறைந்த புகழுடன் வேதங்களை நாள்தோறும் ஓதுகின்ற புறவமே ஆகும்.

902. கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்குடை வடமும்ஓர் அரவமு மலரரை மிசையினில்
திக்குடை மருவிய உருவினர் திகழ்மலை மகளொடும்
புக்குடன் உறைவது புதுமலர் விரைகமழ் புறவமே.

தெளிவுரை : ஈசன், கொக்கு வடிவில் தீங்கு செய்த அசுரனை மாய்த்து, அதன் இறகை வெற்றிச் சின்னமாகக் கொண்டவர்; பிறைச் சந்திரனைச் சூடிய குளிர்ச்சி மிக்க சடை முடி உடையவர்; எலும்பு மாலையும், அரவமும் திகழ அரையில் கட்டியவர்; திகம்பரர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமானை உறைவது, நறுமண மலர்கள் திகழும் புறவமே ஆகும்.

903. கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை யுமையொரு
பங்கியல் திருஉரு வுடையவர் பரசுவொடு இரலைமெய்
தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறைபதி
பொங்கிய பொருகடல் கொளஅதன் மிசையுயர் புறவமே.

தெளிவுரை : தேன் மணம் கமழும் கூந்தலும், அழகிய வளையலும் அணிந்து மேவும் உமாதேவியைத் திருமேனியின்கண் அங்கமாகத் திகழும் சிவபெருமான், மழுப்படையுடன் மானைக் கரத்தில் கொண்டு விளங்குபவர்; இடப வாகனத்தை உடையவர். அப் பெருமான் உறையும் பதியாவது, பிரளய காலத்தில், கடலால் சூழப் பெற்றாலும் அதில் மிதந்து அழியாது மேவும் புறவமே ஆகும்.

904. மாதவம் உடைமறை யவன்உயிர்கொளஒரு மறலியை
மேதகு திருவடிஇறையுற உயிரது விலகினார்
சாதக உருவியல் கானிடை உமைவெரு வுறவரு
போதக உரியதன் மருவினர் உறைபதி புறவமே.

தெளிவுரை : சிறப்பான தவத்தையுடைய மறைவராகிய மார்க்கண்டேயருடைய உயிரைக் கொள்ளும் தன்மையில் நின்ற காலனைப் பெருமை மிகுந்த திருப்பாதத்தால் உதைத்து, நொடிப் பொழுதில் அவன் உயிரை விலக்கிய சிவபெருமான், உமாதேவி அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர். அப்பெருமான் உறையும் பதி, புறவமே ஆகும்.

905. காமனை அழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்
தூமம துறவிறல் சுடர்கொளு வியஇறை தொகுபதி
ஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொடு ஒளிகெழு
பூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.

தெளிவுரை : ஈசன், மன்மதனை எரியுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர்; பகைவராகிய அசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து கடவுள்; அவருடைய பதியானது, பிரமன், நீரும் மலரும் கொண்டு வழிபட, வேள்வி இயற்றி வேத மந்திரங்களும் வாத்தியங்களும் திகழத் தூப தீபம் கொண்டு விளங்குகின்ற புறவமே ஆகும்.

906. சொல்நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர் நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறஅருளினர் உறைமுதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி புறவமே.

தெளிவுரை : சிவபெருமான், போற்றிச் சொல்லப்படும் சொல்லின் பொருளில் இனிமையாய் விளங்குபவர். வேதங்களின் கருத்தாக விளங்கிப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என்னும் ஐந்தொழிலை உடையவர்; மகாசங்கார காலத்தில் யாவும் தன்னுள் ஒடுங்கி அடங்கத் தனித்து விளங்குபவர்; இடைப்பட்டு விளங்கும் காலத்தில் மையப் பொருளாய் விளங்கி யாவும் உணர்ந்து ஆட்சி புரியும் பெருமை உடையவர்; திருவடியைப் போற்றி வணங்கும் அடியவர்களின் முன் வினையாகிய சஞ்சித கன்மத்த முற்றிலும் நீக்குபவர். அப் பெருமான் உறையும் தொன்மையான பதியானது, புன்னை மலரின் அரும்புகள் மலர்ந்து மகரந்தத் தாதுக்கள் சிந்தும் பொழில் திகழும் அழகு மிகுந்த புறவமே ஆகும்.

907. வரிதரு புலியதள் உடையினர் மழுஎறி படையினர்
பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்
எரிதரும் உருவினர் இமையவர் தொழுவதொர் இயல்பினர்
புரிதரு குழல்உமை யொடும்இனிது உறைபதி புறவமே.

தெளிவுரை : ஈசன், வரிகளையுடைய புலியின் தோலை உடையாகக் கொண்டுள்ளவர்; மழுப்படையுடையவர்; மண்டை ஓட்டை மாலையாகக் கொண்டு முடியின்மீது அணியும் பெருமை மிகுந்தவர்; நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியுடையவர்; தேவர்களால் தொழப்படுபவர். அப்பெருமான், உமாதேவியோடு இனிது உறையும் பதியாவது புறவமே ஆகும்.

908. வசிதரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடுமுடி யொருபது நெரிவுற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர் ஒளிவளர் வெளிபொடி
பொசிதரு திருஉரு வுடையவர் உறைபதி புறவமே.

தெளிவுரை : வாளேந்திய கோலத்தோடு, உலகில் வன்மைசெய்த இராவணனின் உடலும் பத்துத் தலைகளும் நெரியுமாறு அழுத்தி, ஒரு விரலால் நிறுவிய ஈசன், திருவெண்ணீறு அணிந்த திருவடிவினராய் உறையும் பதி, புறவமே ஆகும்.

909. தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்
வானகம் வரையக மறிகடல் நிலனெனும் எழுவகைப்
போனக மருவினன் அறிவரி யவர்பதி புறவமே.

தெளிவுரை : தேன் கமழும் தாமரை மலரில் விளங்கும், படைத் தொழில் வாயிலாக மன்னுயிர்களுக்குப் பிறப்பினைத் தரும் பிரமனும், ஏழுலகங்களையும் காத்து விளங்கும் திருமாலும், அறிவதற்கு அரியவராக விளங்கும் ஈசன் உறையும் பதியாவது, புறவமே ஆகும்.

910. கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்
நீசரை விடும்இனி நினைவுறு நிமலர்தம் உறைபதி
பூசுரர் மறைபயில் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கும் சொற்கள் பொருளற்றவை. அவற்றை விடுக. இனிமேல் ஈசனைத் தியானம் செய்து வழிபடுக ! அப் பெருமான் உறையும் பதியாவது, அந்தணர்கள் வேதம் ஓத நிறைந்த புகழின் ஒலி மேவும், புறவமே ஆகும்.

911. போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனை
வேதியர் அதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்
ஓதிய ஒருபதும் உரியதொர் இசைகொள உரைசெயும்
நீதியர் அவர்இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே.

தெளிவுரை : மலர்கள் விளங்கும் பொழில் சூழ்ந்த அணிமிகும் புறவம் என்னும் நல்ல நகரில் உறையும் புனிதனாகிய ஈசனை, வேதியர்களின் தலைவராய்த் தமிழில் சிறப்புடையவராய், விருப்பம் உடையவராய் விளங்கும் திருஞானசம்பந்தர் ஓதிய இத்திருப்பதிகத்தை, உரிய இசையுடன் ஓதுபவர்கள், மெய்ம்மையாளர்களாய்ப் பூவுலகில் பிறவியின் நற்பேறு உடையவர்களாய்த் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

343. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

912. மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரால்
பட்டொளி மணியல்குல் உமையமை யுருவொரு பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசை
விட்டொளி உதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே.

தெளிவுரை : நறுமலர் விரிய மணம் தரும் சுருண்ட கூந்தலை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழும் ஈசன், சடை முடியின்கண் கட்டப் பெற்று விளங்கும் கங்கை, அரவம், பிறைச் சந்திரன் ஆகியவற்றுடன் விளங்கும் பதி, வீழிமிழலையே.

913. எண்ணிற வரிவளை நெறிகுழல் எழில்மொழி இளமுலைப்
பெண்ணுறும் உடலினர் பெருகிய கடல்விட மிடறினர்
கண்ணுறு நுதலினர் கடியதொர் விடையினர் கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி மிழலையே.

தெளிவுரை : ஈசன், எண்ணற்ற வளையல்களும், நெறிப் படுத்திப் புனைந்த கூந்தலும், எழில் மொழியும், இளநகிலும் உடைய உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு, அர்த்தநாரியாய் மேவுபவர்; பெருகித் தோன்றிய கடல் விடத்தை மிடற்றில் தேக்கித் தேவர்களைப் பாதுகாத்தவர்; நெற்றியில் கண்ணுடையவர்; விரைவாக நடை பயிலும் இடப வாகனத்தையுடையவர்; நெருப்பினை ஏந்தியவர்; விண்ணில் திகழும் பிறைச் சந்திரனைச் சடை முடியில் கொண்டு விளங்குபவர். அப் பெருமான் விளங்கும் பதியானது, வீழிமிழலையே.

914. மைத்தரு மதர்விழி மலைமகள் உருவொரு பாகமா
வைத்தவர் மதகரி யுரிவை செய்தவர்தமை மருவினார்
தெத்தென இசைமுரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை யுடையவர் இடம்விழி மிழலையே.

தெளிவுரை : மை திகழும் மலைமகளை ஒரு பாகமாக வைத்த சிவபெருமான், மதம் பொருந்திய யானையின் தோலை உரித்தவர்; தம்மை விரும்பித் தாளத்துடன் பாடிப் போற்றும் பக்தர்களுக்குப் பெருமையுடன் விளங்குபவர்; நாகத்தை அணிந்து விளங்குபவர்; மண்டை ஓட்டினைக் கொண்டுள்ளவர். அப் பெருமானுடைய இடம் வீழிமிழலையே.

915. செவ்வழல் எனநனி பெருகிய உருவினர் செறிதரு
கவ்வழல் அரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலா
முவ்வழல் நிசிசரர் விறலவை அழிதர முதுமதிள்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழிமிழலையே.

தெளிவுரை : ஈசன், செந்நிறமாகிய  அழல் போன்று சிவந்த மேனி உடையவர்; கவ்வும் அழல் போன்ற சீற்றம் உடைய அரவத்தை அணிந்துள்ளவர்; சுடர் விடும் மழுப்படை உடையவர்; தொழுது ஏத்தாது, பகைமை கொண்ட, மூன்று சினம் மிகுந்த அசுரர்களையும் அவர்களுடைய வலிமை மிக்க மதில்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர். அப் பெருமானின் பதியாவது, வீழிமிழலையே.

916. பைங்கண தொருபெரு மழலைவெள் ளேற்றினர் பலியெனா
எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுதெழும் இயல்பினர்
அங்கணர் அமரர்கள் அடியிணை தொழுதெழ வாரமா
வெங்கண அரவினர் உறைதரு பதிவிழி மிழலையே.

தெளிவுரை : அழகிய கண்ணும், மென்மையான முழக்கமும் உடைய வெள்ளை இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமான், எல்லா இடங்களிலும் பலிஏற்றுத் திரிந்தவர்; தேவர்களால் தொழுது ஏத்தப்படுபவர். அப்பெருமான், தேவர்களாலும், அன்பின் மிக்க அடியவர்களாலும் தொழுது ஏத்தப் படுபவராயும், அரவத்தை அணிந்தவராயும் உறையும் பதியாவது, வீழிமிழலையே.

917. பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில்
மின்னென மிளிர்வதொர் அரவினர் பதிவிழி மிழலையே.

தெளிவுரை : ஈசன், பொன்போன்று ஒளிரும் சடை முடி உடையவர்; திருவெண்ணீறு அணிந்த திருமேனியர்; தன்னை நினைத்து ஏத்துதல் செய்யும் அடியவரின் வினையைக் களைந்து, முன்னின்று அருள் புரியும் ஒப்பற்றவர்; இனிமையுடன் பாடுகின்ற ஒழுக்க சீலர்; திருமார்பில் அரவத்தைப் பூண்டு விளங்குபவர்; அப் பெருமானின் பதியாவது வீழிமிழலையே.

918. அக்கினொடு அரவுஅரை அணிதிகழ் ஒளியதொர் ஆமைபூண்டு
இக்குஉக மலிதலை கலன்என இடுபலி ஏகுவர்
கொக்கரை குழல்முழ விழவொடும் இசைவதொர் சரிதையர்
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.

தெளிவுரை : எலும்பும் அரவமும் திகழ, ஒளிரும் ஆமை ஓடு பூண்டு, கரும்பு போன்று இனிய சொற்களைப் பேசி, பிரம கபாலம் ஏந்தி, இடுகின்ற பலியை ஏற்கின்ற சிவபெருமான்; கொக்கரை, குழல், முழவு முதலான வாத்தியங்களை விழாக் காலங்களில் அடியவர்கள் இசைக்க, ஏற்று மகிழும் பெற்றி உடையவர். அப் பெருமான் உறைவது, நறுமணம் கமழும் பொழில் விளங்கும் வீழி மிழலையே.

919. பாதமொர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்
பூதமொடு அடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்
ஒதமொடு ஒலிதிரை படுகடல் விடமுடை மிடறினர்
வேதமொடு உறுதொழில் மதியவர் பதிவிழி மிழலையே.

தெளிவுரை : திருப்பாதத்தின் ஒரு விரலைக் கொண்டு கயிலை மலையை அழுத்தி, இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியச் செய்த ஈசன், பூத கணங்களும், அடியவர்களும் தொழுது ஏத்தும் புகழ் மிக்கவர்; கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் தேக்கி வைத்தவர். அப் பெருமான் விளங்கும் பதியாவது, வேதங்களை ஓதுதலும் வேள்விகள் இயற்றுதல், பூசித்தல் முதலான உற்ற தொழில்களைப் பேணும் அந்தணர்கள் மேவும் வீழிமிழலையே.

920. நீரணி மலர்மிசை உறைபவன் நிறைகடல் உறுதியில்
நாரணன் எனஇவர் இருவரு நறுமலர் அடிமுடி
ஒருணர் வினர்செலல் உறலரும் உருவினொடு ஒளிதிகழ்
வீரணர் உறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே.

தெளிவுரை : நீரில் விளங்கும் தாமரையின்மேல் விளங்கும் பிரமனும் திருமாலும் ஆகிய இவர்கள் இருவரும் திருமுடியையும் திருவடி மலரையும் காண வேண்டும் என்னும் ஒரே உணர்வினராய்ச் சென்றும் காணற்கு அரியவராகிய வீரம் விளைவிக்கும் ஆற்றலுடைய சிவபெருமான் உறையும் இடமாவது, நறுமண மலர்ப் பொழில் திகழும் வீழிமிழலையே.

921. இச்சையர் இனிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவென உணர்விலர்
மொச்சைய அமணரும் முடைபடுதுகிலரும் அழிவதோர்
விச்சையர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.

தெளிவுரை : ஈசன், பிச்சை கொண்டு திரிவதில் விருப்பம் உடையவர் என்பதன் பெருமையைச் சிறிதும் அறிய இயலாதவர்கள், சமணரும், சாக்கியரும் ஆவர், அத்தகைய பெருமையுடைய ஈசன் உறையும் இடமாவது, நறுமலர்ப் பொழில் மேவும் வீழிமிழலையே.

922. உன்னிய அருமறை யொலியினை முறைமிகு பாடல்செய்
இன்னிசை யவர்உறை யெழில்திகழ் பொழில்விழி மிழலையை
மன்னிய புகலியுள் ஞானசம் பந்தன வண்தமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுலகு உறுகதி பெறுவரே.

தெளிவுரை : ஈசனால் கருதப்படும் அருமறையின் ஒலியினை முறையாகப் பாடி இசைத்து ஏத்தும், மறையவர்கள் உறைகின்ற எழில் திகழ விளங்குவது, வீழிமிழலை. இத் திருத்தலத்தைப் புகலியில் மேவும் ஞானசம்பந்தன் வண் தமிழால் ஓதிய இத் திருப்பதிகத்தை ஓதி ஏத்துபவர், துயர் அற்றவர் ஆவர்; பெருமை உடைய உயர்ந்த கதியாகிய முத்திப் பேறு அடைவர்.

திருச்சிற்றம்பலம்

344. திருச்சேறை (அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

923. முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட உரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.

தெளிவுரை : உமாதேவி வெருவுமாறு, வெறி கொண்டு வந்த மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டு வீரம் விளைத்த சிவபெருமான், மணம் கமழும் கொன்றை மலரும், கங்கையும், சந்திரனும், மண்டை ஓடும் கொண்டு விளங்குகின்ற சடை முடியுடைய அடிகள் ஆவார். அவருடைய வளநகர் திருச்சேறையே.

924. புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினன்
மனமுடை யடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினொடு அரசிலை யொளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை யடிகள்தம் வளநகர் சேறையே.

தெளிவுரை : நறுமணம் கமழும் மலர்களைப் பறித்துத் தூவித் தொழுகின்ற அடியவர்களுக்கும், மனம் கனிந்து ஏத்தித் தியானம் செய்யும் அன்பர்களுக்கும் துயர் களைந்து அருள் புரியும் பெற்றியுடையவர், சிவபெருமான். அவர், கோர்க்கப் பெற்ற மணிகளும் அரச இலையைப் போன்று புனையப் பெற்ற மாலைகள் உடையதும், முதிர்ந்த சினத்தை உடையதும் ஆகிய இடபத்தை உடைய அடிகள் ஆவார். அப் பெருமானின் வளநகரானது, திருச்சேறையே.

925. புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபமது ஏறுவர் ஈடுலா
வரிதரு வளையினர் அவரவர் மகிழ்தர மனைதொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.

தெளிவுரை : ஈசன், முறுக்கிய சடை முடியுடையவர்; புலியின் தோலை அரையில் கட்டியவர்; நெருப்புப் போன்ற செவ்வண்ணத் திருமேனியில் வெண்மையான திருநீற்றைப் பூசி விளங்குபவர்; இடப வாகனத்தில் ஏறுபவர்; தாருக வனத்தில் உள்ள மகளிர் இல்லம் தோறும் மகிழ்வுடன் திரிந்து பலி ஏற்றவர்; அத்தகைய தன்மையுடைய பெருமான் உறையும் வளநகரானது, திருச்சேறையே.

926. துடிபடும் இடையுடை மடவர லுடன்ஒரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை அரவினர்
பொடிபடும் உருவினர் புலியுரிபொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.

தெளிவுரை : சிறிய இடை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமான், இடி முழக்கம் போன்ற குரலுடைய இடபத்தை உடையவர்; படம் கொண்டு ஆடும் அரவத்தைக் கொண்டுள்ளவர்; திருநீறு அணிந்த திருமேனியர்; புலியின் தோலை உரித்து அரையில் கட்டியவர்; ஒளி மிக்க சடை முடி உடையவர். அப் பெருமான் உறையும் வளநகரானது, திருச்சேறையே.

927. அந்தரம் உழிதரு திரிபுரம் ஒருநொடி யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை அரவுஅரி வாளியால்
வெந்துஅழி தரஎய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழல் நிறம்உடை அடிகள்தம் வளநகர் சேறையே.

தெளிவுரை : ஈசன், ஆகாயத்தில் திரிந்த திரிபுரங்களை ஒரு நொடியின் கால அளவையில், மேரு மலையை வில்லாகக் கொண்டு, அதன் இடையில் வாசுகி என்னும் நாகத்தை நாணாகக் கட்டித் திருமால், அக்கினி, வாயு ஆகியோரை அம்பாகக் கொண்டு செலுத்தி, வெந்து அழியுமாறு செய்து, வனப்புடைய வீரம் காட்டியவர் : அவர், விடத்தை மணி போன்று திகழுமாறு கண்டத்தில் தேக்கியவர். தழல் போன்ற சிவந்த நிறம் உடைய அவ் அடிகள், விளங்கும் இடமாவது, வளமையான நகராகிய திருச்சேறையே.

928. மத்தரம் உறுதிறன் மறவர்தம் வடிவுகொடு உருவுடைப்
பத்தொரு பெயருடைய விசயனை அசைவுசெய் பரிசினால்
அத்திரம் அருளும்நம் அடிகளது அணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

தெளிவுரை : மேருமலையைப் போன்று உறுதியான வலிமையுடைய வேட்டுவ வடிவம் தாங்கிப் பத்துப் பெயர்களைச் சிறப்பாகக் கொண்டுள்ள விசயனைப் பொருது தளரச் செய்தும், அத்திரங்களை அருளிச் செய்த தமது அடிகளாகிய சிவபெருமான், அழகு மிளிர விளங்குகின்ற வளமையான நகரானது, செறிந்த பொழில் சூழ்ந்த திருச்சேறையே.

929. பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடினர் படுதலை இடுபலி யதுகொடு மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

தெளிவுரை : ஈசன், அரிய வேதங்களை ஓதியவர்; ஐந்து தொழில்களை ஆற்றும் திரு நடனம் புரிபவர்; உலகத்தில் அடியவர்கள் மலர் கொண்டு தூவிப் போற்றித் துதிக்க, அருள் புரிபவர்; பிரமனுடைய கபாலத்தை ஏந்திப் பலி ஏற்று மகிழ்பவர்; அப்பெருமான், பெருமையுடன் திகழும் வளமை பொருந்திய நகரானது, செறிந்த பொழில் திகழும் திருச்சேறையே.

930. கட்டுர மதுகொடு கயிலைநன் மலைமலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபது நெரிசெய்தார்
மட்டுர மலரடி அடியவர் தொழுதெழ அருள்செயும்
சிட்டர்தம் வளநகர்செறி பொழில் தழுவிய சேறையே.

தெளிவுரை : நல்ல உறுதியான உடற்கட்டு கொண்டு விளங்கிய அரக்கனாகிய இராவணன், கயிலை மலையைத் தனது பெருகிய கரங்களால் பெயர்த்து எடுக்க, அக் கொடியவனுடைய உடலும் முடிகள் பத்தும் நெரித்தவர், சிவபெருமான். நறுமணம் கமழும் மலரடிகளைத் தொழுது போற்ற அருள் செய்பவர். அத்தகைய ஈசன் வீற்றிருக்கும் வளமையான நகரமாவது, அடர்த்தியான பொழில் விளங்கும் திருச்சேறையே.

931. பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய அவரவர் அடியொடு முடியவை அறிகிலார்
நின்றிரு புடைபட நெடுஎரி நடுவெயொர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய அவர்நகர் சேறையே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும், தாம் இத்தகைய வடிவத்தைக் தாங்கி இறைவனுடைய காட்சியைப் பெறலாம் என்னும் பரிசில் முனைந்து சென்று, திருவடியும் திருமுடியும் தேடியும் காணப் பெறாதவராய் நிற்க, அவர்களுக்கு இடையில், நெடிய சோதிப் பிழம்பாய் வெளிப்பட்டு அருளிய சிவபெருமான் விளங்கும் நகரானது, திருச்சேறையே.

932. துகள்துறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
விகடமது உறுசிறு மொழியவை நலமில வினவிடல்
முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.

தெளிவுரை : சாக்கியரும், சமணரும் நகைப்பிற்கு இடமாகும் சிறுமொழிகளைக் கூறுபவர்களாவர். அவற்றை ஏற்க வேண்டாம். இளம் பிறைச் சந்திரனும், அரவமும், கங்கையும் திகழும் சடை முடியுடைய அடிகளாகிய ஈசன் விளங்கும் வளமையான நகராவது, திருச்சேறையாகும். ஆங்கு வீற்றிருக்கும் இறைவனை ஏத்துமின்.

933. கற்றநன் மறைபயில் அடியவர் அடிதொழு கவினுறு
சிற்றிடை யவளொடும் இடம்என உறைவதொர் சேறைமேல்
குற்றமில் புகலியுள் இகலறு ஞானசம் பந்தன
சொல்தக வுறமொழிபவர் அழிவிலர்துயர் தீருமே.

தெளிவுரை : நன்மையே வழங்கும் வேதங்களை, நன்கு கற்றுப் பயிலும் அடியவர்கள், அடி தொழும், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் ஈசனின் இடமாகிய திருச்சேறையின்மீது, புகலியில் மேவும் ஞானசம்பந்தன் சொல்லிய தகுதியுடைய மொழியாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள், அழிவற்றவர் ஆவர். அவர்கள் துயர் யாவும் விலகும்.

திருச்சிற்றம்பலம்

345. திருநள்ளாறு (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

934. தளிர்இள வளர்ஒளி தனதுஎழில் தருதிகழ் மலைமகள்
குளிர்இள வளர்ஒளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரின வளர்ஒளி மருவுநள் ளாறர்தம் நாமமே
மிளிர்இள வளர்எரி யிடில்இவை பழுதிலை மெய்ம்மை

தெளிவுரை : இளந்தளிர் போன்று பெருகி வளரும் அருளின் எழில் திகழும் உமாதேவியை உடனாகக் கொண்டு. விளங்குகின்ற நள்ளாற்று நாதரின் திருநாமம் தாங்கிய, போகமார்த்த பூண் முலையாள் என்னும் திருப்பதிகம் எழுதப் பெற்ற ஓலையை எரியில் இட்டால், பழுது இல்லாது காக்கும் என்பது மெய்ம்மையே.

935. போதமர் தருபுரி குழல்எழில் மலைமகள் பூணணி
சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின்
நாதம் தெழில்உரு அனையநள் ளாறர்தம் நாமமே
மீதமது எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.

தெளிவுரை : மலர் கொண்டு புனைந்து அலங்கரிக்கப் பெற்ற கூந்தலை உடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குதலின் காரணமாக, எழில் வண்ணம் கொண்டு திகழும் நள்ளாறரின் திருநாமத்தை மேலான தமது தீயினில் இட்டால் பழுதடையாது என்பது மெய்ம்மையே.

திருப்பதிம் எழுதப் பெற்ற ஓலையானது எரியாது. பச்சைத் திருப்பதிகமாகத் திகழும் என்பது குறிப்பு.

936. இட்டுறு மணியணி யிணர்புணர் வளரொளி எழில்வடம்
கட்டுறு கதிரிள வனமுலை இணையொடு கலவலின்
நட்டுறு செறிவயல் மருவுநள் ளாறர்தம் நாமமே
இட்டுறும் எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.

தெளிவுரை : மணிகள், அழகுடன் பதிக்கப் பெற்று விளங்கும் அணிகலன்களும், ஒளி திகழும் மாலைகளும் கொண்டு மேவும் உமாதேவியாருடன், இணைந்து விளங்குகின்ற நள்ளாற்றின் திருநாமத்தைப் பதித்து நெருப்பில் இட்டால், அது எரிந்து பழுதாகாது. இது மெய்ம்மையே.

937. மைச்சணி வரியரி நயனிதொல் மலைமகள் பயனுறு
கச்சணி கதிரின வனமுலை யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை அடிகள்நல்லாறர்தம் நாமமே
மெச்சணி எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.

தெளிவுரை : மை திகழும் அழகிய விழியுடைய தொன்மையாய் நிலவும் உமாதேவி, பரஞானம், அபரஞானம் ஆகியவற்றை உடனாகிய தன்மையில், அப்பெருமாட்டியை உடனாகக் கலந்து, நஞ்சு அணிந்த கண்டத்தை உடைய அடிகளாகிய நள்ளாறரின் திருநாமத்தை, அணி திகழும் நெருப்பில் இட்டால், பழுது ஆகாது. இது மெய்ம்மையே.

938. பண்ணியல் மலைமகள் கதிர்விடு பருபணி யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுதுநள்ளாறர்தம் நாமமே
விண்ணியல் எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.

தெளிவுரை : பெருமையுடன் விளங்குகின்ற உமாதேவியை உடனாகக் கொண்டு அர்த்தநாரியாய் மேவும் சிவபெருமான். குளிர்ந்த நீர் வளம் திகழும் நள்ளாறர் ஆவர். அவருடைய திருநாமத்தை, விண்ணின் இயலாய் விளங்கும் நெருப்பில் இட்டாலும், இவ் ஓலைச் சுவடியில் உள்ள திருப்பதிகமானது பழுதடையாது. இது மெய்ம்மையே.

939. போதுறு புரிகுழல் மலைமகள் இளவளர் பொன்னணி
சூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை யடிகள் நள்ளாறர்தம் நாமமே
மீதுறும் எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.

தெளிவுரை : மலர்களைக் கொண்டு விளங்கும் கூந்தலை உடைய உமாதேவியார், பொன்னை அணியாகக் கொண்டு விளங்கி, மேவ, அப் பெருமாட்டியைப் பொருந்துமாறு பாகம் கொண்டு அர்த்தநாரியாக விளங்குகின்ற நள்ளாறர், அத்தகைய நிறம் கொண்டு விளங்குபவர் ஆயினார். அவருடைய திருநாமத்தை, மிகுந்து எரியும் நெருப்பில் இட்டால் பழுது அடையாது. இது மெய்ம்மையே.

940. கார்மலி நெறிபுரி கரிகுழல் மலைமகள் கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்தம் நாமமே
ஏர்மலி யெரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.

தெளிவுரை : மேகம் போன்ற அடர்த்தியான சுருண்ட கூந்தல் உடைய உமாதேவியைப் பொருந்துமாறு பாகத்தில் கொண்டு, மண்டை ஓட்டை உடைய நள்ளாற்றின் ஈசன் திருப்பெயரைப் பெருகி எரியும் நெருப்பில் இட்டால், பழுது அடையாது. இது மெய்ம்மையே.

941. மன்னிய வளரொளி மலைமகள் தளிர்நிற மதமிகு
பொன்னியல் மணியணி கலசம தனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுகன் நெரியநள் ளாறர்தம் நாமமே
மின்னியல் எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.

தெளிவுரை : சிறந்து விளங்குகின்ற ஒளி போன்று திகழும் உமாதேவியார் பொன் போன்ற உயர்ந்த மணிகளை கொண்டு விளங்க, அப் பெருமாட்டியை உடனாகக் கொண்டு, அர்த்தநாரியாகித் தசமுகனாகிய இராவணனை நெரியுமாறு செய்து மேவுபவர், திருநள்ளாறர். அவருடைய திருநாமமானது எழுதப் பெற்ற ஓலையை மின்னலைப் போன்று எரியும் நெருப்பில் இட்டால் பழுது இல்லை; இது மெய்ம்மையே.

942. கான்முக மயிலியல் மலைமகள் கதிர்விடு கனமிகு
பால்முகம் இயல்பணை இணைமுலை துணையொடு பயில்தலின்
நான்முகன் அரிஅறிவரிய நள்ளாறர்தம் நாமமே
மேன்முக எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.

தெளிவுரை : அடர்ந்த சோலையில் விளங்கும் மயிலின் தன்மையுடைய ஞானாம்பிகையாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு, பிரமனும் திருமாலும் தேடியும் அறிவதற்கு அரியவராகிய நள்ளறாருடைய திருநாமமாவது, மேலோங்கி எரியும் நெருப்பில் இட்டால் பழுது அடையாது; இது மெய்ம்மையே.

943. அத்திர நயனிதொல் மலைமகள் பயனுறும் அதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்
புத்தரொ டுஅமணர்பொய் பெயருநள் ளாறர்தம் நாமமே
மெய்த்திரள் எரியினில் இடில்இவை பழுதிலை மெய்ம்மையே.

தெளிவுரை : அம்பு போன்று கூரிய விழி நோக்குடைய உமாதேவியைப் பொருந்த விளங்குமாறு, சமணர் சாக்கியர்களுக்குத் தோன்றாதவராகிய திருநள்ளாறரின் திருநாமத்தைக் கற்பனைக்கு இடமின்றி, பெரிய எரியின் திரட்சியாய் ஓங்கும் நெருப்பில் இட, இந்தத் திரு ஓலை பழுதடைவதில்லை. இது மெய்ம்மையே.

944. சிற்றிடை அரிவைதன் வனமுலை இணையொடு செறிதரும்
நற்றிறம் உறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவன் எதிரிடை எரியினில்இட இவை கூறிய
சொல்தெரி ஒருபதும் அறிபவர் துயரிலர் தூயரே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு மேவும் நற்றிறம் உடைய ஈசனொடு திருஞானம் பெருகும் மேன்மையில் ஞானசம்பந்தன், கொற்றவன் ஆகிய பாண்டியன் முன்பாக, ஈசனின் புகழ் பாடும் திரு ஓலையை நெருப்பில் இடுகின்றபோது, கூறிய இத் திருப்பதிகத்தை ஓதும் அன்பர்கள், துயர் அற்றவர்கள் ஆவார்கள். அவர்கள், துயவர்களாய் மும்மலம் நீங்கப் பெற்றவர்களாய் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

346. திருவிளமர் (அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், விளமல், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

945. மத்தகம் அணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்
அத்தக வடிதொழ அருள்பெரு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.

தெளிவுரை : ஈசன், திருநுதலின்கண் இருந்து அழகினைக் கொள்ள வேண்டும் என்று விழைந்த சந்திரனை உடையவர்; ஒளிர்ந்து மேவும் மணியைப் பெற்றுத் திகழ வேண்டும் என்னும் நாட்டத்தில் மேவும் அரவத்தை உடையவர். அத்தகைமையில் அருளின் தன்மையானது பெருகும் செம்மையில் திகழும் உமாதேவியாரை உடனாகக் கொண்டு மேவும் வித்தகராகிய சிவபெருமான் உறைவது, விரிந்த பொழில் சூழ்ந்த வளம் மிக்க நகராகிய விளமர் என்பதே.

946. பட்டில கியமுலை அரிவையர் உலகினில் இடுபலி
ஒட்டிலகு இணைமர அடியினர் உமையுறு வடிவினர்
சிட்டிலகு அழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர்
விட்டிலகு அழகுஒளி பெயரவர் உறைவது விளமரே.

தெளிவுரை : ஈசன், பட்டுத் துகில் அணிந்த தாருகவனத்தில் உள்ள மாதர்கள்பால், ஒட்டி இணைந்து, மரத்தால் ஆகிய மிதியடிகளை அணிந்து, பிச்சை ஏற்றவர்; உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு விளங்கும் அர்த்தநாரியானவர்; கைச் சிட்டிகையில் கொள்ளும் திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; இடப வாகனத்தில் அழகுடன் விளங்குபவர், அப் பெருமான் உறைவது விளமர் ஆகும்.

947. அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதொர் அரவொடு
செங்கதிர் எனநிறம் அனையதொர் செழுமணி மார்பினர்
சங்கதிர் பறைகுழல் முழவினொடு இசைதரு சரிதையர்
வெங்கதிர் உறுமழு உடையவர் இடம்எனில் விளமரே.

தெளிவுரை : ஈசன், அழகிய ஒளிக்கதிர்களை வீசுகின்ற சுயம் பிரகாசம் உடையவர்; அரையின் இடையில் ஒளி உமிழும் வெண்மையான அரவத்தைக் கட்டியவர்; செழுமையான மாணிக்கம் முதலான உயர்ந்த மணிகளைச் சிவந்த ஒளி வீசும் திருமார்பில் அணிந்துள்ளவர்; சங்கு ஒலித்து முழக்கவும், அதிர்ந்து ஒலி எழுப்பும் பறையும், குழலின் இசையும், முழவின் ஓசையும் இயம்புதல் செய்ய, நன்கு இசை கூட்டிப் பாடும் சீலம் உடையவர். சுடர் மிகும் தீக்கதிர்களை உடைய வீரம் திகழும் மழுப்படை உடையவர். அத்தகைய சிறப்புடைய பெருமான் வீற்றிருக்கும் இடமாவது யாது எனில், அது விளமர் என்பதே.

948. மாடமது எனவளர் மதிலவை எரிசெய்வர் விரவுசீர்ப்
பீடென வருமறை உரைசெய்வர் பெரியபல் சரிதைகள்
பாடலர் ஆடிய சுடலையில் இடமுறை நடநவில்
வேடமது உடையவர் வியன்நகரதுசொலில் விளமரே.

தெளிவுரை : சிவபெருமான், தீமையை விளைவித்த கொடிய அசுரர்களின் மூன்று புரங்களை எரித்தவர்; வேதத்திற்கு விளக்க உரை செய்தவர்; பெருமையுடன் விளங்கும் ஒழுக்க நெறியைப் பேணிக் காத்து ஒழுகுபவர்; நன்கு இசைத்துப் பாடுபவர்; சுடுகாட்டினை இடமாகக் கொண்டு நடம் புரியும் திருவேடப் பொலிவு உடையவர். அப்பெருமானுடைய பெருமை மிக்க நகரானது விளமர் என்பதே.

949. பண்தலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமாகக்
கொண்டலை குரைகழல் அடிதொழு மவர்வினை குறுகிலர்
விண்தலை அமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
வெண்தலை  பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.

தெளிவுரை : பண்ணின் இசையை நல்கும் யாழ் போன்று மொழி நவிலும் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமான், திருப்பாதத்தில் விளங்கும் கழலானது நன்கு ஒலி கொள்ளுமாறு ஆடி விளங்குபவர். அப்பெருமானுடைய திருவடியைத் தொழுபவர்களுக்கு வினைத் துன்பம் இல்லை, விண்ணுலக தேவர்கள் தோத்திரம் செய்து போற்ற அருள் புரியும் விறல் மிக்கவராகிய அப்பெருமான், பிரம கபாலம் ஏந்திப் பலி ஏற்கும் விமலர். அவருடைய வளமையான நகர் விளமர் என்பதே.

950. மனைகள்தொறு இடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர்
கனைகடல் இடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர்
முனைகெட வருமதிள் எரிசெய்த அவர்கழல் பரவுவார்
வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.

தெளிவுரை : சிவபெருமான், தாருக வனத்தில் மனைகள் தோறும் சென்று பலி ஏற்றவர்; சந்திரனைப் பதித்த சடை உடையவர்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கறையுடைய மிடற்றினை உடையவர்; போர் முனைப்புடன் எழுந்த அசுரர்களின் மூன்று புரங்களின் கோட்டைகளை எரி செய்தவர்; தனது திருக்கழலைப் பரவிப் போற்றும் அடியவர்களுடைய வினையைத் தீர்த்து அருள் புரிவதை இயல்பாக உடையவர்; அப்பெருமான் விளங்குகின்ற நகர், விளநகர் என்பதே.

951. நெறிகமழ் தரும்உரை உணர்வினர் புணர்வுறு மடவரல்
செறிகமழ் தரும்உரு வுடையவர் படைபல பயில்பவர்
பொறிகமழ் தருபட வரவினர் விரவிய சடைமிசை
வெறிகமழ் தருமலர் அடைபவர் இடம்எனில் விளமரே.

தெளிவுரை : சிவபெருமான், சரியை கிரியை முதலான நான்கு மார்க்கங்களையும் ஆகமங்கள் முதலான சாத்திரங்களையும் உரை செய்தவர்; தன்னிற் பிரியாத உமாதேவியாரோடு சிறப்பாக விளங்கி, அர்த்த நாரியாய் மேவித் திகழ்பவர்; பலவகையான படைகளை ஆயுதமாகப் பெற்றுள்ளவர்; படம் கொண்டு ஆடும் அரவத்தை உடையவர்; சடை முடியில் மணம் கமழும் மலர்களைத் தரித்திருப்பவர். அப் பெருமானுடைய இடம் விளமர் என்பதே.

952. தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்
பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர்
திண்கடல் அடைபுனல் திகழ்சடை புகுவதொர் சேர்வினார்
விண்கடல் விடமலி அடிகள்தம் வளநகர் விளமரே.

தெளிவுரை : ஈசன், இராவணனைப் பண்படும் தன்மையில் மலையின்கீழ் நெறியுமாறு செய்தவர்; கடலை அடையும் கங்கையைத் திருமுடியில் சேர்த்து இருத்தியவர்; கடல் நஞ்சினை மிடற்றில் தேக்கி வைத்தவர். அப் பெருமானின் வளநகர் விளமர் என்பதே.

953. தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற
அண்டல்செய்து இருவரை வெருவுற ஆரழல் ஆயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறினர் இடம்எனில் அளிஇனம்
விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.

தெளிவுரை : திருத்தொண்டு செய்யும் அடியவர்களைத் தளர்ச்சியுறுமாறு, துன்பம் புரிந்த காலனை வீழ்த்திப் பின்னர் தமது ஆணையின்படி ஒழுகுமாறு பணித்த சிவபெருமான்; திருமால், பிரமன் ஆகிய இருவரும் அச்சம் கொண்டு நிற்குமாறு பேர் அழல் ஆகியவர். மேகம் போன்ற கரிய கண்டத்தையுடைய அப்பெருமான் விளங்கும் இடம், வண்டினம் இசைக்க, நறுமலர் விளங்கும் பொழில் உடைய விளமர் என்பதே.

954. ஒள்ளியர் தொழுதெழ உலகினில் உரைசெயு மொழிபுல
கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தம் அறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.

தெளிவுரை : அறிஞர்கள், உலகில் ஈசனைத் தொழுது போற்றி வணங்க, சாக்கியரும் சமணரும் அத்தகைய தவத்தை அறியாதவர் ஆயினர். அதனை மெய்யாகக் கருதாது. வெள்ளிய பிறைச்சந்திரனைச் சடை முடியில் மேவிய விளமர் என்னும் நகரில் விளங்கும் ஈசனை ஏத்துமின்.

955. வெந்தவெண் பொடியணி அடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம்
பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.

தெளிவுரை : திருவெண்ணீறு அணிந்து மேவும் விளமர் என்னும் பதியில் விளங்கும் ஈசனைச் சிந்தையுள் இருத்தி, செழுமையான புகலியில் திகழும் ஞானசம்பந்தன் மொழிந்த இத் திருப்பதிகத்தை உரைப்பவர்கள், வினை அற்றவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

347. திருக்கொச்சைவயம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

956. திருந்துமா களிற்றின் மருப்பொடு
திரள்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமும் குடசமும்
பீலியும் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடுகோட்
டாறுசூழ் கொச்சை மேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ்
நெஞ்சமே புகலதாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! யானையின் தந்தமும், திரட்சியான மணிகளும், சந்தன மரங்களும், குருந்தை, மா, குரவம், மலைமல்லிகை , மயிற் பீலி ஆகியனவற்றை உந்திக் கொண்டு வயல்களில் புகும் கோட்டாறு சூழும் கொச்சை வயம் என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவபெருமானைப் போற்றி வாழ்க. அதுவே, ஈசனைச் சரணம் புகுதலாகிய நெறியாகும்.

957. ஏலமார் இலவமோடு இனமலர்த்
தொகுதியாய் எங்குநுந்திக்
கோலமாம் இளகொடு கொழுங்கனி
கொன்றையுங் கொண்டு கோட்டாறு
ஆலியா வயல்புகு மணிதரு
கொச்சையே நச்சி மேவும்
நீலமார் கண்டனை நினைமட
நெஞ்சமே அஞ்சல் நீயே.

தெளிவுரை : மணம் கமழும் ஏலம், இலவங்கம், நறுமணம் மலர்கள், நன்கு பழுத்த கனிகள், கொன்றை மலர்கள் ஆகியவற்றை அலைகள் வாயிலாக உந்தி வரும் கோட்டாறு பாயும் வயல் வளம் திகழும் கொச்சை வயம் என்னும் பதியில், விரும்பி மேவும் நீல கண்டராகிய சிவபெருமானை, நெஞ்சமே ! நினைத்து ஏத்துவாயாக ! உனக்கு ஏத்தகைய துன்பமும் இல்லை, அஞ்சாதே.

958. பொன்னுமா மணிகொழித்து எறிபுனல்
கரைகள்வாய் நுரைகள்உந்திக்
கன்னிமார் முலைநலம் கவரவந்து
ஏறுகோட் டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடம்
கொச்சையே மருவி நாளும்
முன்னைநோய் தொடருமாறு இல்லைகாண்
நெஞ்சமே அஞ்சல் நீயே.

தெளிவுரை : நெஞ்சமே ! பொன்னும், மணியும் கொழித்துப் பெருகிக் கரையில் எறியும் சிறப்புடைய கேட்டாறு சூழ விளங்கும் கொச்சை வயம் என்னும் பதியில், உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருக்க, முன் வினையானது தொடராது; அஞ்சல் வேண்டாம்.

959. கந்தமார் தேதகைச் சந்தனக்
காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையன் பவரளிக்
குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட்
டாறுசூழ் கொச்சை மேய
எந்தையார் அடிநினைத்து உய்யலாம்
நெஞ்சமே ! அஞ்சல் நீயே.

தெளிவுரை : நெஞ்சமே ! இப் பிறவியில் உய்யும் வழி தெரியவில்லையே என்று கவலை கொள்ளாதே ! அஞ்சவும் வேண்டாம். வாசனை மிக்க தாழை, சந்தனம், வாழை, வண்டுகள் சூழ்ந்த குவளை மலர் ஆகியவற்றைச் சுமந்து செல்லும் கோட்டாறு சூழ்ந்த கொச்சை வயம் என்னும் பதியில் வீற்றிருக்கும் எம் தந்தையாகிய சிவபெருமான் திருவடியை, நினைந்து ஏத்துவாயாக. உனக்கு அனைத்தும் கைகூடும்.

960. மறைகொளும் திறலினார் ஆகுதிப்
புகைகள்வான் அண்டமிண்டிச்
சிறைகொளும் புனல்அணி செழும்பதி
திகழ்மதில் கொச்சை தன்பால்
உறைவிடம் எனமன மதுகொளும்
பிரமனார் சிரம்அறுத்த
இறைவனது அடியினை இறைஞ்சிவாழ்
நெஞ்சமே அஞ்சல் நீயே.

தெளிவுரை : நெஞ்சமே ! நீ அஞ்ச வேண்டாம். வேதங்களை ஓதும் மறையவர்கள், வேள்வி இயற்றி அதன் ஆற்றலால் மழை வளம் பெருகி ஓங்கும் சிறப்புடைய கொச்சை வயம் என்னும் பதியைத் தனது இருப்பிடமாகக் கொண்ட சிவபெருமானுடைய திருவடியை ஏத்தி வாழ்வாயாக.

961. சுற்றமும் மக்களும் தொக்கஅத்
தக்கனைச் சாடி அன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப்
பங்கமா உள்கினாய்ஓர்
குற்றமில் அடியவர் குழுமிய
வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவம் அருள்புரி நம்பனை
நம்பிடாய் நாளுநெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! தீய நோக்கத்துடன் இயற்றிய தக்கனது வேள்வியையும் அதற்குத் துணையாக இருந்தவர்களையும் தகர்த்த சிவபெருமான், மலை அரசன் மகளாக அவதரித்த உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், குற்றமற்ற அடியவர்கள் வாழ்கின்ற வீதி சூழ்ந்த கொச்சை வயம் என்னும் நகரில் மேவி நல்ல தவப் பயனை அருளிச் செய்பவன் நம்பன். அப்பெருமானை மனம் உவந்து ஏத்துக. நாள்தோறும் நம்பிக்கையுடன் ஏத்துக.

962. கொண்டலார் வந்திடக் கோலவார்
பொழில்களிற் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித்து ஏறிமா
முகில்தனைக் கதுவு கொச்சை
அண்டவா னவர்களும் அமரரும்
முனிவரும் பணிய ஆலம்
உண்டமா கண்டனார் தம்மையே
உள்குநீ அஞ்சல் நெஞ்சரே.

தெளிவுரை : பொழில்கள் சூழ்ந்து விளங்க, மூங்கில்களைப் பிடித்து உயர்ந்து ஏறிய வானரங்கள் மேகங்களைக் கையால் பற்றும் எழிலை உடையது கொச்சை வயம். அத்தகைய பதியில் விளங்குகின்ற, நீலகண்டராய் மேவும் சிவபெருமானை. இவ்வண்டத்தில் மேவும் தேவர்கள். முனிவர்கள் மற்றும் ஏனைய அண்டங்களில் உள்ளவர்கள் ஆகிய அனைவரும் பணிகின்றனர். நெஞ்சமே ! நீ அஞ்சாதே. அப் பெருமானை ஏத்துக. உனது அச்சம் யாவும் தீரும் என்பது குறிப்பு.

963. அடலெயிற்று அரக்கனார் நெருக்கிமா
மலையெடுத்து ஆர்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிரல் ஊன்றினார்
உறைவிடம் ஒளிகொள் வெள்ளி
மடலிடைப் பவளமும் முத்தமும்
தொத்துவண் புன்னைமாடே
பெடையொடும் குருகினம் பெருகுதண்
கொச்சையே பேணுநெஞ்சே.

தெளிவுரை : இராவணன், ஆரவாரித்துக் கயிலை மலையைப் பெயர்த்த போது, திருப்பாத விரலை ஊன்றி அடர்த்து விளங்கிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பூங்கொடிகளில் வெண் மலர்களும், பவளம் போன்ற செம்மலர்களும், முத்துப் போன்ற அரும்புகளும் கொத்தாக விளங்கப் புன்னை மரங்களில், பறவை இனம் தம் பெடையுடன் மகிழ்ந்துறையும் கொச்சைவயம் ஆகும். நெஞ்சமே ! அந் நகரினைப் பேணுக.

964. அரபினில் துயில்தரும் அரியுநற்
பிரமனும் அன்றயர்ந்து
குரைகழல் திருமுடி அளவிட
அரியவர் கொங்கு செம்பொன்
விரிபொழில் இடைமிகு மலைமகள்
மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார்
கொச்சையே கருது நெஞ்சே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் திருவடியையும் திருமுடியையும் தேடிக் காண முடியாதவாறு அரிய பொருளாகிய சிவபெருமான், தேன் மணக்கும் செம் மலர்கள் விளங்கும் பொழில்களுக்கு இடையில் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருப்பது கொச்சை வயம் ஆகும். அதனை, நெஞ்சமே ! கருதுவாயாக. தலத்தையும் ஆங்கு உறையும் ஈசனையும் ஏத்துக என்பது குறிப்பு.

965. கடுமலி உடலுடை அமணரும்
கஞ்சியுற் சாக்கியரும்
இடும்அற உரைதனை இகழ்பவர்
கருதுநம் ஈசர்வானோர்
நடுவுறை நம்பனை நான்மறை
யவர்பணிந்து ஏத்தஞாலம்
உடையவன் கொச்சையே உள்கிவாழ்
நெஞ்சமே அஞ்சல் நீயே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் இகழ்ந்து உரைக்கும் சிவபெருமான், தேவர்கள் போற்றுகின்ற நாயகராகவும், நான்கு மறைகளும் பயின்ற அந்தணர்கள் ஏத்தும் நாதராகவும் விளங்குபவர். அப் பெருமான் உறையும் இடம் கொச்சைவயம். அதனை, நெஞ்சமே ! ஏத்துக. அச்சத்தை விடுக.

966. காய்ந்துதம் காலினால் காலனைச்
செற்றவர் கடிகொள் கொச்சை
ஆய்ந்துகொண்டு இடம்என இருந்தநல்
அடிகளை ஆதரித்தே
ஏய்ந்தொல் புகழ்மிகும் எழில்மறை
ஞானசம் பந்தன்சொன்ன
வாய்ந்தஇம் மாலைகள் வல்லவர்
நல்லவா னுலகின் மேலே.

தெளிவுரை : காலனைத் திருப்பாதத்தால் மாய்த்த அடிகளாகிய சிவபெருமான். தமது இடமாகத் தேர்ந்து கொண்டது கொச்சை வயம் ஆகும். ஆங்கு எழுந்தருளியுள்ள ஈசனைப் போற்றி உரைத்த புகழ் மிகுந்த ஞானசம்பந்தரின் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், நன்மை வளரும் வானுலகில், மேன்மையாய் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

348. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்

திருச்சிற்றம்பலம்

967. ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனல்
கங்கையை ஒரு சடைமேல்
தாங்கினார் இடுபலி தலைகல
னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினால் உமையொடும் பகலிடம்
புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்திஆர் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.

தெளிவுரை : ஈசன், பேராரவாரத்துடன் பெருகி ஓங்கும் கங்கையைச் சடைமுடியில் வைத்து விளங்குபவர்; பிரம கபாலத்தைப் பிச்சை கொள்ளும் பாத்திரமாக் கொள்பவர்; அவ்வடிகள், உமாதேவியை உடனாகக் கொண்டு பகற் காலத்தில் விளங்கும் இடம், பசுமையான பொழில் சூழ்ந்த, நீர் வளம் மிக்க துருத்தியும், இரவுக் காலத்தில் விளங்கும் இடம் வேள்விக்குடியும் ஆகும்.

968. தூறுசேர் சுடலையிற் சுடர்எரி
யாடுவர் துளங்கொளி சேர்
நீறுசாந்து எனஉகந்து அணிவர்வெண்
பிறைபுல்கு சடைமுடியார்
நாறுசாந்து இளமுனை அரிவையோடு
ஒருபகல் அமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.

தெளிவுரை : ஈசன், மயானத்தில் விளங்கி நின்று எரியும் நெருப்பைக் கையில் ஏந்தி நடனம் புரிபவர்; ஒளி மிகுந்த திருவெண்ணீற்றைக் குழைய அணிபவர்; வெண்மையான பிறைச் சந்திரனைச் சடை முடியில் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், உமாதேவியாரை உடனாகக் கொண்டு, பகற்காலத்தில் துருத்தியில் அமர்ந்தவர். அவர், இரவில் உறைவது வேள்விக் குடியே.

969. மழைவளர் இளமதி மலரொடு
தலைபுல்கு வார்சடைமேல்
கழைவலர் புனல்புகக் கண்டவெங்
கண்ணுதற் கபாலியார் தாம்
இழைவளர் துகில்அல்குல் அரிவையோடு
ஒருபகல் அமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.

தெளிவுரை : ஈசன், குளிர்ந்த பிறைச் சந்திரனையும், மலர்களையும் சடை முடியில் கொண்டு திகழ்பவர்; கங்கையைத் தரித்த எமது கண்ணுதல்; பிரம கபாலம் ஏந்தியவர்; உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். அப்பெருமான் பகலில் துருத்தியில் விளங்குபவர். அவர் இரவுக் காலத்தில் உறையும் இடமாவது வேள்விக் குடியே.

970. கரும்பன வரிசிலைப் பெருந்தகைக்
காமனைக் கவின் அழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க்
கொன்றையஞ் சுடர்ச் சடையார்
அரும்பன வனமுலை அரிவையொடு
ஒருபகல் அமர்ந்தபிரான்
விரும்பிடம் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.

தெளிவுரை : ஈசன், கரும்பு வில்லையுடைய பெருந்தகையாகிய மன்மதனின் அழகிய வடிவத்தை அழித்தவர்; வண்டு ரீங்காரம் செய்கின்ற தேன் மணக்கும் தூய கொன்றை மலரைச் சுடரும் சடை முடியில் சூடியவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், பகலில் அமர்ந்து விளங்கும் இடம் துருத்தி. அவர், இரவில் உறைந்திருப்பது வேள்விக்குடியே.

971. வளம்கிளர் மதியமும் பொன்மலர்க்
கொன்றையும் வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎங்
கண்ணுதற் கபாலியார் தாம்
துளங்குநூல் மார்பினர் அரிவையொடு
ஒருபகல் அமர்ந்த பிரான்
விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.

தெளிவுரை : ஈசன், கிளர்ந்து வளரும் சந்திரனையும், பொன் போன்ற கொன்றை மலரையும், ஒளி மிகும் அரவத்தையும், சடை முடியில் திகழுமாறு வைத்த எமது கண்ணுதல். அவர், கபாலத்தைக் கையில் உடையவர்; முப்புரி நூலைத் திருமார்பில் கொண்டுள்ளவர்; உமாதேவியை ஒரு பாகக் கொண்டு விளங்குபவர்; அப்பெருமான், ஓரு பகலில் நீர் வளம் மிகுந்த துருத்தியில் மேவி, இரவில் உறைவது வேள்விக் குடியே.

972. பொறியுலாம் அடுபுலி உரிவையர்
வரியராப் பூண்டுஇலங்கும்
நெறியுலாம் பலிகொளும் நீர்மையர்
சீர்மையை நினைப்பரியார்
மறியுலாம் கையினர் மங்கையொடு
ஒருபகல் அமர்ந்தபிரான்
வெறியுலாம் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள்விக் குடியே.

தெளிவுரை : ஈசன், புலியின் தோலை உரித்து அதன் தோலை உடையாகக் கொண்டவர்; அரவத்தை ஆபரணமாக உடையவர்; பிச்சை ஏற்பதை நெறியாகக் கொண்ட தன்மையர். இத்தகைய எளிமை உடையவரானாலும், அவருடைய சிறப்பானது நினைப்பதற்கு அரியதாகும். அவர், மான் கன்றைக் கரத்தில் ஏந்தி, உமாதேவியோடு பகலில் அமர்ந்து விளங்கும் இடமாவது மணம் கமழும் துருத்தியாய் இருக்கப் பொருந்திய இரவில் உறையும் இடம், வேள்விக் குடியே.

973. புரிதரு சடையினர் புலியுரி
அரையினர் பொடியணிந்து
திரிதரும் இயல்பினர் திரிபுரம்
மூன்றையும் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொடு
ஒருபகல் அமர்ந்த பிரான்
விரிதரு துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.

தெளிவுரை : ஈசன், முறுக்கேறிய சடையுடையவர்; புலித் தோலை அரையில் கட்டியவர்; திருவெண்ணீறு அணிந்து திரியும் இயல்புடையவர்; மூன்று புரங்களையும் நெருப்பால் சூழுமாறு வளைத்து எரித்தவர்; உமாதேவியோடு வீற்றிருப்பவர். அப்பெருமான், ஒரு பகல் துருத்தியில் வீற்றிருக்க, இரவில் உறைவது வேள்விக் குடியே.

974. நீண்டுஇலங்கு அவிர்ஒளி நெடுமுடி
அரக்கன்இந் நீள்வரையைக்
கீண்டிஇடந் திடுவன்என்று எழுந்தவன்
ஆள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்டநூல் மார்பினர் அரிவையொடு
ஒருபகல் அமர்ந்த பிரான்
வேண்டிடம் துருத்திஆர் இரவிடத்து
உறைவர் வேள் விக்குடியே.

தெளிவுரை : ஒளிமிகும் நீண்ட முடியையுடைய இராவணன் இந்த கொடிய மலையைப் பெயர்த்து வைப்பேன் என முனைந்தபோது, அவ்வலிமையைக் கீழ்மைப்படுத்திய சிவபெருமான், முப்புரி நூல் அணிந்த திருமார்பினர். அவர், உமாதேவியோடு ஒரு பகல் அமர்ந்த இடம் துருத்தி; இரவில் உறைவது வேள்விக்குடியே.

975. கரைகடல் அரவணைக் கடவுளும்
தாமரை நான்முகனும்
குரைகழல் அடிதொழக் கூர்எரி
எனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம்
புகலிடம் வண்பொழில் சூழ்
விரைகமழ் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள்விக் குடியே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும், அடி முடியைத் தொழுது போற்றப் பெரியதாக ஓங்கிய நெருப்பு வடிவு கொண்ட சிவபெருமான், உமாதேவியோடு வீற்றிருப்பவர். அவர், பகலில் விளங்குவது பொழில் சூழ்ந்த துருத்தி; இரவில் உறைவது வேள்விக் குடியே.

976. அயமுக வெயில்நிலை அமணரும்
குண்டரும் சாக்கியரும்
நயமுக உரையினர் நகுவன
சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடும் கண்ணியொடு
ஒருபகல் அமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியார் இரவிடத்து
உறைவர் வேள்விக் குடியே.

தெளிவுரை : பழுக்கக் காய்ச்சிய இரும்பு போன்று சுடுகின்ற வெயில், உடலை வருத்திக் கொள்ளும் சமணரும் சாக்கியரும், நயம் மிகுந்த உரைகளையும், நகைச் சுவை விளங்கும் கதைகளையும் நவில்பவர்கள். அதனை ஏற்க வேண்டாம். உமாதேவியை உடனாகக் கொண்டு மேவுபவர் சிவபெருமான். அவர், பகலில் துருத்தியில் விளங்குபவர்; இரவில் வேள்விக் குடியில் உறைபவர், அவரை ஏத்து மின்.

977. விண்ணுலாம் விரிபொழில் விரைமணல்
துருத்திவேள் விக்குடியும்
ஒண்ணுலாம் ஒலிகழல் ஆடுவார்
அரிவையொடு உறைபதியை
நண்ணுலாம் புகலியுள் அருமறை
ஞானசம் பந்தன் சொன்ன
பண்ணுலாம் அருந்தமிழ் பாடுவார்
ஆடுவார் பழியிலரே.

தெளிவுரை : விண்ணை முட்டும் உயர்ந்து விரிந்த பொழில் திகழவும் நறுமணம் கமழும் காவிரி மணல் சூழவும் மேவும் துருத்தியும் வேள்விக் குடியும் ஒலிக்குமாறு திருநடம் புரியும் சிவபெருமான், உமாதேவியோடு உறைபவர். அப்பெருமானை நண்ணிப் புகலி நகர் மேவும் ஞானசம்பந்தன் சொன்ன பண்ணிசை விளங்கும் அருந்தமிழாகிய இத்திருப்பதிகத்தைப் பாடுபவர்களும், பக்தியில் வயப்படுபவர்களும், பழி பாவம் இல்லாதவர்கள்.

திருச்சிற்றம்பலம்

349. வடகுரங்காடுதுறை (அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில், வடகுரங்காடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

978. கோங்கமே குரவமே கொழுமலர்ப்
புன்னையே கொகுடி முல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா
திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை
யடை குரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி யடிகளார்
இடமென விரும்பினாரே.

தெளிவுரை : கோங்கு, குரவம், புன்னை, முல்லை, வேங்கை, புலி நகக் கொன்றை, பாதிரி ஆகியவை விரவி வரும் காவிரியின் வடகரையில் மேவும் குரங்காடு துறையைச் சிவபெருமான் தமது இடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருப்பவர்.

979. மந்தமா யிழிமதக் களிற்றின
மருப்பொடு பொருப்பினல்ல
சந்தமார் அகிலொடு சாதியின்
பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை
யடை குரங்காடு துறை
எந்தையார் இணையடி இமையவர்
தொழுதெழும் இயல்பினாரே.

தெளிவுரை : யானைத் தந்தங்கள், மலைப் பகுதிகளில் விளங்குகின்ற நல்ல சந்தனம், அகில், சாதிக்காய் முதலான மரங்களும் அலைகள் வாயிலாக உந்திக் கொண்டு வந்து சேர்க்கும் காவிரியின் வடகரையில் கொண்டு வந்து சேர்க்கும் காவிரியின் வடகரையில் குரங்காடு துறை என்னும் தலத்தில் எமது தந்தையாகிய ஈசன், தேவர்கள் தொழுமாறு வீற்றிருப்பவர்.

980. முத்துமா மணியொடு முழைவளர்
ஆரமும் முகந்து நுந்தி
எத்துமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி
சடைமுடி அடிகள்தம் மேல்
சித்தமாம் அடியவர் சிவகதி
பெறுவது திண்ணமன்றே.

தெளிவுரை : முத்தும் மணியும் ஆத்தி மரமும் காவிரியில் உந்தி வர வடகரையில் உள்ள குரங்காடு துறையில், ஊமத்தம் மலரும் பிறைச் சந்திரனும் சடை முடியில் சூடிய சிவபெருமான் வீற்றிருப்பவர். அப்பெருமானைச் சித்தத்தில் பதித்து ஏத்தும் அடியவர் சிவகதியைப் பெறுவது உறுதி.

981. கறியுமா மிளகொடு கதலியின்
பலங்களும் கலந்து நுந்தி
எறியுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி
தொழுதெழ மருவும் உள்ளக்
குறியினார் அவர்மிகக் கூடுவார்
நீடு வானுலகினூரே.

தெளிவுரை : மிளகும் வாழையும் கலந்து காவிரியில் உந்திவர, வடகரையில் விளங்கும் குரங்காடு துறையில், மானைக் கையில் ஏந்திய ஈசன் விளங்குபவர். அப்பெருமானின் திருவடியைத் தொழுது பக்தியுடன் போற்றுபவர்கள், வானுலகில் சேர்ந்து மகிழ்ந்திருப்பர்.

982. கோடிடைச் சொரிந்த தேன தனொடும்
கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியும் கடறுடைப்
பண்டமும் கலந்துநுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளார்
இடமெனப் பேணினாரே.

தெளிவுரை : மரப் பொந்துகளில் விளங்கும் தேனும், மயிற் பீலியும், மலைச் சாரலில் உள்ள பண்டங்களும் கலந்து உந்தி வரும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடுதுறையில் சடைமுடியுடைய அடிகளாகிய சிவபெருமான் இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர்.

983. கோலமா மலரொடு தூபமும்
சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார்
திருந்துமாங் கனிகள்உந்தி
ஆலுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை
நினையவல் வினைகள் வீடே.

தெளிவுரை : அழகிய நறுமலரும், தூபமும், சந்தனமும், கொண்டு போற்றி வாலியார் வழிபட்ட தலமாவது, இனிய மாங்கனிகளை உந்தித் தள்ளிவரும் காவிரியின் வடகரையை அடையும் குரங்காடுதுறை. ஆங்கு எழுந்தருளியுள்ள நீலகண்டராகிய ஈசனை, நினைத்து ஏத்துபவர்களுக்குத் தீவினை யாவும் தீரும்.

984. நீலமா மணிநிறத் தரக்கனை
இருபது கரத்தொடு ஒல்க
வரலினாற் கட்டிய வாலியார்
வழிபட மன்னு கோயில்
ஏலமோடு இலையில் வங்கமே
இஞ்சியே மஞ்சள் உந்தி
ஆலியா வருபுனல வடகரை
யவைகுரங் காடுதுறையே.

தெளிவுரை : கரிய நிறமுடைய இராவணனைத் தனது வாலால் கட்டி வீரம் விளைவித்த வாலியார் வழிபடப் பெருமை பெற்ற கோயிலாவது, ஏலம், இலவங்கம், இஞ்சி, மஞ்சள் ஆகியனவற்றை உந்தித்தள்ளி அசைத்து வரும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடு துறையே.

985. பொரும்திறல் பெருங்கைமா உரித்துஉமை
அஞ்சவே ஒருங்கு நோக்கிப்
பெருந்திறத்து அநங்கனை அநங்கமா
விழித்ததும் பெருமை போலும்
வருந்திறற் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
அருந்திறத்து இருவரை அல்லல்கண்டு
ஓங்கிய அடிகளாரே.

தெளிவுரை : போர் செய்யும் திறல் உடைய பெரிய துதிக்கையுடைய யானையின் தோலை உரித்து, உமாதேவியும் வியக்குமாறு செய்தவர், ஈசன். அவர், திறமை மிக்க மன்மதனை எரித்து, அவன் எழில் உடலை இல்லாமையாகுமாறு செய்தவர். காவிரியின் வடகரையில் மேவும் வடகுரங்காடு துறையில் வீற்றிருக்கும் அப்பெருமான், பிரமனும் திருமாலும் தன்னைத் தேடிப் போற்றும் அல்லலைக் கண்டு இரங்கிப் பெருஞ் சோதியாக ஓங்கி ஒளிர்ந்தவர்.

986. கட்டமண் தேரரும் கடுக்கள்தின்
கழுக்களும் கசிவொன் றில்லாப்
பிட்டர்தம் மறவுரை கொள்ளலும்
பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறைச்
சிட்டனார் அடிதொழச் சிவகதி
பெறுவது திண்ணமே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் மறவுரைகளை இரக்கம் இன்றி உரைப்பவர்கள். அவற்றை ஏற்க வேண்டாம். மலையிலிருந்து பண்டங்களை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையில் உள்ள குரங்காடு துறையில் மேவும் சீலம் மிக்கவராய் விளங்கும் ஈசனை, ஏத்தித் திருவடியைத் தொழ, சிவகதி உறுதியாகக் கைவரப் பெறும்.

987. தாழிளங் காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு
சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம்
பந்தன கருது பாடல்
கோழையா அழைப்பினும் கூடுவார்
நீடுவா னுலகின் ஊடே.

தெளிவுரை : பள்ளத்தில் வேகமாக ஓடிச் சென்று பாயும் காவிரியின் வடகரையில் மேவும் குரங்காடுதுறையில் வீற்றிருக்கும். பிறைச் சந்திரனைச் சூடிய சடை முடியுடைய சிவபெருமானை, காழியில் திகழும் ஞானசம்பந்தன் கருதிப் போற்றிய இத்திருப்பதிகத்தை உரிய பண்ணிசையின்றி ஓதி உரைத்தாலும் அவர்கள் வானுலகின் இடையில் உயர்வாக வைக்கப்படுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

350. திருநெல்வேலி (அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி)

திருச்சிற்றம்பலம்

988. மருந்தவை மந்திர மறுமைநன்
னெறியவை மற்றும்எல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே
சிந்தைசெய் நன்நெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன்
சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி
யுறை செல்வம்தாமே.

தெளிவுரை : நல்ல நெஞ்சமே ! ஈசனின் திருநாமத்தைச் சிந்தித்து இருப்பாயாக. அத் திருநாமமானது மருந்தாக இருந்து பிணியைத் தீர்க்கும்; மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும்; மறுமையின்கண் நற்கதியை விளைவிக்கும்; மற்றும் தோன்றுகின்ற எல்லாத் துயரங்களையும் நீக்கும். அத் திருநாமத்துக்குரிய ஈசன், குளிர்ச்சி மிக்க சோலையில் கொன்றை மலரின் பொன் மகரந்தங்கள் சொரிய மேவும் பொன்மலரைத் தரித்துத் திருநெல்வேலியில் உறையும் செல்வராய் விளங்குபவர். அவரை ஏத்துமின் என்பது குறிப்பு.

989. என்றுமோர் இயல்பினர் எனநினை
வரியவர் ஏறதுஏறிச்
சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும்
பலிகொளும் இயல்பதுவே
துன்றுதண் பொழில் நுழைந்து எழுவிய
கேதகைப் போதளைந்து
தென்றல்வந்து உலவிய திருநெல்வேலி
யுறை செல்வர்தாமே.

தெளிவுரை : குளிர்ச்சி பொருந்திய பொழில்களில் தாழை மணம் கமழத் தென்றல் உலவும் திருநெல்வேலியில் உறையும் செல்வராகிய சிவபெருமான், இத்தன்மையைக் கொண்டு விளங்குபவர் என்று மொழிவதற்கு அரியவர்; இல்லங்கள் தோறும் சென்று பிச்சை ஏற்ற இயல்பினை உடையவர். அப் பெருமானை ஏத்துக என்பது குறிப்பு.

990. பொறிகிளர் அரவமும் போழிள
மதியமும் கங் கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச்
சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி
யவர்மனம் கவர்வர் போலும்
செறிபொழில் தழுவிய திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.

தெளிவுரை : செறிந்த பொழில் திகழும் திருநெல்வேலியில் உறையும் செல்வராகிய சிவபெருமான், படம் கொண்டு ஆடும் அரவமும், பிறைச் சந்திரனும், கங்கை என்கிற நங்கையும் சடையின் மீது விளங்குமாறு பொருந்தியவர்; திருநீறு பூசியும் பிறர் மயங்குமாறு நடை பயிலவும் விளங்குபவர்; தாருகவனத்தில் விளங்கிய மங்கையரின் மனத்தைக் கவர்ந்தவர். அப் பெருமானை ஏத்துக.

991. காண்தகு மலைமகள் கதிர்நிலா
மறுவல்செய்து அருளவேயும்
பூண்டநா கம்புறங் காடுஅரங்
காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை
மீதுஎழு கொடிமதியம்
தீண்டிவந்து உலவிய திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.

தெளிவுரை : மாட மாளிகைகளில் நெடிய வெண்கொடிகள் விளங்க மேவும் திருநெல்வேலியில் வீற்றிருக்கும் சிவபெருமான், முழுநிலவு போன்ற ஒளியுமிழும் முறுவல் காட்டும் தன்மையில் உமாதேவியார் இனிது இருக்க, அதனைப் பேணாது, மயானத்தில் நாகத்தை அணிந்து நடம்புரிதலை உடையவர் ஆனார். அவரை ஏத்துமின் என்பது குறிப்பு.

992. ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ்
மத்தமும் இளஅரவும்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர்
கொல்புலித் தோலுடையார்
ஆனின்நல் ஐந்துஉகந்து ஆடுவர்
பாடுவர் அருமறைகள்
தேனில்வண்டு அமர்பொழில் திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.

தெளிவுரை : தேன் அருந்தும் வண்டு அமரும் பொழில் சூழ்ந்த திருநெல்வேலியில் உறையும் சிவபெருமான், பன்றியின் கொம்பு, ஊமத்த மலர், இளமையான அரவம், வளைந்த பிறைச் சந்திரன் ஆகியவற்றைத் தரித்த சடையுடையவர்; புலித்தோலை உடையாகக் கொண்டவர். அவர், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தை அபிடேகமாகக் கொண்டு மகிழ்ந்து அரிய வேதங்களை ஓதுபவர். அவரை ஏத்துக.

993. வெடிதரு தலையினர் வேனல்வெள்
ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதள்
ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர்
மாதரை மையல்செய்வார்
மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலி
யுறை செல்வர்தாமே.

தெளிவுரை : புதர்களுடைய பொழில் சூழ்ந்த திருநெல்வேலியில் உறையும் செல்வராகிய ஈசன், மண்டை ஓட்டினை மாலையாகக் கொண்டு விளங்குபவர்; சினம் மிகுந்த வெள்ளை இடபத்தை உடையவர்; விரிந்து மேவும் சடையுடையவர்; திருநீறு அணிந்து விளங்கும் மார்பினர்; புலித் தோலை ஆடையாகக் கொண்டு இருப்பவர்; அரவத்தை அணிந்து இருப்பவர்; அழகிய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு திகழ்பவர்; அப்பெருமான் தாருகவனத்து மகளிரை மையல் செய்தவர் ஆவார். அவரை ஏத்துமின்.

994. அக்குஉலாம் அரையினர் திரையுலா
முடியினர் அடிகள் அன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய
சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு
வண்டுபண் முரலும் சோலைத்
திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.

தெளிவுரை : வண்டு, பண்ணிசைக்கும் சோலைகளும், எல்லாத் திசைகளிலும் புகழ் சாற்றும் பெருமையும் உடையது திருநெல்வேலி. ஆங்கு உறையும் ஈசன், எலும்பினை அரையில் கட்டியவர்; கங்கையைச் சடை முடியில் தரித்தவர்; தக்கனின் வேள்வியைத் தகர்த்த சதுரர்; ஒளிர் விடுகின்ற சடையுடையவர். அவரை ஏத்துமின்.

995. முந்திமா விலங்கல் அன்று எடுத்தவன்
முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி ஒருவிரல்
உகிர்நுதி யால்அடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள்
பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.

தெளிவுரை : நறுமணம் கமழும் பொழிலில் மந்திகள் தாவிப்பாய, தேன் விளங்கும் மலர்கள் சிந்து பூந்துறை என்னும் தீர்த்தமானது கமழும் திருநெல்வேலியில் உறையும் செல்வர், சிவபெருமான். அப் பெருமான், கயிலை மலையை எடுத்த இராவணனுடைய முடிகளும் தோளும் நெரியுமாறு திருப்பாத விரலால் அடர்த்தவர். அவரை ஏத்துக.

996. பைங்கண்வாள் அரவணை யவனொடு
பனிமல ரோனும்காணா
அங்கணா அருளென அவரவர்
முறைமுறை இறைஞ்ச நின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர
அரிவையர் ஆடல் பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காணப் பெறாத ஈசனை, அங்கணனே ! அருள் புரிவீராக  ! என அனைவரும் ஏத்தி நிற்கும் தன்மையில், நான்கு மறைகளும் வல்ல அந்தணர்கள் வேதங்களால் போற்றுகின்றனர்; மகளிர் நடனம் புரிகின்றனர். நித்திய விழாக்களும் மாத விழாக்களும் பெருகி ஓங்கும் திருநெல்வேலியில் அப்பெருமான் செல்வராக உறைபவர். அவரை ஏத்துமின்.

997. துவருறு விரிதுகில் ஆடையர்
வேடமில் சமணர் என்னும்
அவர்உறு சிறுசொலை அவம்என
நினையும்எம் அண்ணலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச்
சூளிகை மயில்கள் ஆலத்
திவருறு மதிதவழ் திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் உரைக்கும் சிறுமையான சொற்களைப் பயனற்றது எனக் கொண்டு அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர், எமது அண்ணலாகிய ஈசன். கவரும் தன்மையில் வண்ணக் கொடிகள் மல்கும் மாளிகைகளும், அவற்றின் மேற் புறத்தில், விளங்குகின்ற மயில்கள் ஆடவும், தேவர்கள் திகழ மதி தவழும் திருநெல்வேலியில், அப்பெருமான் உறைபவர். அவரை ஏத்துக.

998. பெருந்தண்மா மலர்மிசை அயனவன்
அனையவர் பேணு கல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வேலி
யுறை செல்வர் தம்மைப்
பொருந்து நீர்த் தடமல்கு புகலியுள்
ஞானசம் பந்தன் சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியடக்
கெடும் அருவினையே.

தெளிவுரை : பெருமைக்குரிய குளிர்ச்சி பொருந்திய தாமரை மலரில் மேவும் பிரமனுக்கு நிகரான அந்தணர்கள் விளங்குகின்ற திருநெல்வேலியில் உறையும் சிவபெருமானை ஏத்தி நீர் வளம் மிகுந்த புகலியுள் விளங்கும் ஞானசம்பந்தன் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதக் கொடிய வினை யாவும் தீரும்.

திருச்சிற்றம்பலம்

351. திருஅம்பர்மாகாளம் (அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

999. படியுளார் விடையினர் பாய்புலித்
தோலினர் பாவநாசர்
பொடிகொள்மா மேனியர் பூதமார்
படையினர் பூண் நூலர்
கடிகொள் மா மலர்இடும் அடியினர்
பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே.

தெளிவுரை : ஈசன் பூவுலகத்தில் பொருந்தி விளங்குகின்ற இடபத்தை வாகனமாக உடையவர்; புலியின் தோலை ஆடையாக உடுத்தியவர்; திருநீற்றினைத் திருமேனியில் தரித்தவர்; மன்னுயிரின் பாவங்களைப் போக்கியவர்; பூதகணங்களைப் படையாக உடையவர்; முப்புரி நூலைத் திருமார்பில் தரித்தவர்; மணம் கமழும் மலர்கள் கொண்டு அடியவர்களால் ஏத்தப் பெறும் திருவடியுடையவர். உமாதேவியை உடனாகக் கொண்டு மேவும் அப்பெருமான், அருள் புரிந்து தமது இருப்பிடமாகக் கொண்டு விளங்குவது, அம்பர் மாகாளமே.

1000. கையின்மா மழுவினர் கடுவிடம்
உண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனியர் ஊனமர்
உடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினில் மறையவர்
தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோடு இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே.

தெளிவுரை : ஈசன், கையில் பெருமையான மழுப் படையுடையவர்; கொடிய விடத்தை உட்கொண்டு கரிய கண்டத்தைப் பெற்றவர்; சிவந்த திருமேனியர்; பிரம கபாலம் ஏந்திப் பலியேற்றுத் திரிந்தவர்; உலகத்தில் பொதுவில் விளங்கி இருந்து, அந்தணர்கள் தொழுது போற்ற நடனம் புரிபவர். தலைவனாகிய அப்பெருமான், உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, அம்பர் மாகாளமே.

1001. பரவின அடியவர் படுதுயர்
கெடுப்பவர் பரிவிலார் பால்
கரவினர் கனல்அன உருவினர்
படுதலைப் பலிகொடு ஏகும்
இரவினர் பகலெரி கானிடை
ஆடிய வேடர் பூணும்
அரவினர் அரிவையோடு இருப்பிடம்
அம்பர்மா காளம் தானே.

தெளிவுரை : ஈசன், தன்னை வணங்கும் அடியவர்களுடைய துயரத்தைத் தீர்ப்பவர்; அன்பில்லாதவர்கள் பால் தோன்றாத நிலையில் மறைந்து இருப்பவர்; நெருப்புப் போன்ற வண்ணம் உடையவர்; பிரமகபாலம் ஏந்திப் பலி ஏற்பவர்; மயானத்தில் இரவில் நெருப்பு ஏந்தி ஆடுபவர்; அரவத்தை ஆபரணமாகக் கொண்டவர். அப்பெருமான் உமாதேவியோடு இருப்பிடமாகக் கொண்டு விளங்குவது, அம்பர் மாகாளமே.

1002. நீற்றினர் நீண்டவார் சடையினர்
படையினர் நிமலர் வெள்ளை
ஏற்றினர் எரிபுரி கரத்தினர்
புரத்துள்ளார் உயிரை வவ்வும்
கூற்றினார் கொடியிடை முனிவுறு
நனிவரும் குலவுகங்கை
ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே

தெளிவுரை : ஈசன், திருநீறு தரித்து மேவுபவர்; நீண்ட சடையுடையவர், மழு, சூலம் முதலான படை உடையவர்; நிமலர்; வெள்ளை இடபத்தை உடையவர்; எரியும் நெருப்பைக் கரத்தில் கொண்டு விளங்குபவர்; முப்புரத்து அசுரர்களை மாய்த்தவர். அப்பெருமான், கொடியிடை உடைய மலைமகள் முனிந்து நிற்குமாறு முடியின்கண் தரித்து விளங்குபவர். அவர் உமாதேவியோடு இருக்கும் இடமாவது, அம்பர் மாகாளமே.

1003. புறத்தினர் அகத்துளர் போற்றிநின்று
அழுதெழும் அன்பர் சிந்தைத்
திறத்தினர் அறிவிலாச் செதுமதித்
தக்கன்றன் வேள்வி செற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக்கு
ஆலின்கீழ் அருள்புரிந்த
அறத்தினர் அரிவையோடு இருப்பிடம்
அம்பர்மா காளம் தானே.

தெளிவுரை : ஈசன், வெளியேயும் இருப்பவர்; சிந்தையிலும் இருப்பவர்; உள்ளம் உருகிப் போற்றிக் கசிந்து கண்ணீர் மல்கும் அன்பருடைய சிந்தையில் விளங்குபவர்; அறிவற்ற தக்கனின் வேள்வியைத் தடுத்து அழித்து வீரம் காட்டியவர்; சனகாதி முனிவர்களாகிய நால்வருக்குக் கல்லாலின் கீழ் இருந்து அறப் பொருள் நல்கி அருள் புரிந்தவர். அப்பெருமான், உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, அம்பர் மாகாளமே.

1004. பழகமா மலர்பறித்து இண்டைகொண்டு
இறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந்து ஏத்துவார்
அவர்பலர் கூட நின்ற
கழகனார் கரியுரித்து ஆடுகங்
காளர்நம் காளியேத்தும்
அழகனார் அரிவையோடு இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே.

தெளிவுரை : ஈசன், நாள்தோறும் மலர் பறித்து இண்டை தொடுத்து ஏத்தும் அடியவர்பால் விளங்கி நிற்பவர்; தொண்டர்கள் புகழ்ந்து ஏத்த, அவர்களுடன் ஒருவராய் விளங்கி நிற்பவர்; யானையின் தோலை உரித்தும் எலும்பு மாலையை அணிந்தும் இருப்பவர்.  காளி பூசித்து வழிபட, அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது அம்பர் மாகாளமே.

1005. சங்கவார் குழையினர் தழல்அன
உருவினர் தமது அருளே
எங்குமா இருந்தவர் அருந்தவ
முனிவருக்கு அளித்துகந்தார்
பொங்குமா புனல்பரந்த அரிசிலின்
வடகரை திருத்தம் பேணி
அங்கமாறு ஓதுவார் இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே.

தெளிவுரை : ஈசன், சங்கினால் ஆகிய குழையைக் காதில் அணிந்தவர்; நெருப்புப் போன்ற சிவந்த வண்ணம் உடையவர்; தமது அருளே எல்லா இடத்திலும் பொலியுமாறு விளங்குபவர்; தவ முனிவர்களுக்குத் தம்மை அளித்து விளங்குபவர். அரிசில் ஆற்றினைத் தீர்த்தமாகக் கொண்டு விளங்கும் அவர், வேதத்தின் ஆறு அங்கங்களை ஓதுபவராய் வீற்றிருக்கும் இடமாவது, அம்பர் மாகாளமே.

1006. பொருசிலை மதனனைப் பொடிபட
விழித்தவர் பொழில் இலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழ்உற
அடர்த்தவர் கோயில் கூறில்
பெருசிலை நவமணி பீலியோடு
ஏலமும் பெருக நுந்தும்
அரிசிலின் வடகரை அழகமர்
அம்பர்மா காளம்தானே.

தெளிவுரை : ஈசன், கரும்பு வில்லைப் போர் வில்லாகக் கொண்ட மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு, நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர்; இலங்கையின் வேந்தனாகிய இராவணனை கயிலை மலையின்கீழ், நெரியுமாறு அடர்த்தவர். அப் பெருமானுடைய கோயிலானது, மயிற் பீலியும்ஏலமும் பெருக நுந்தும் அரிசில் ஆற்றின் வடகரையில், அழகுடன் விளங்கும் அம்பர் மாகாளமே.

1007. வரியரா அதன்மிசைத் துயின்றவன்
தானும்மா மலருளானும்
எரியரா அணிகழல் ஏத்தஒண்
ணாவகை உயர்ந்து பின்னும்
பிரியராம் அடியவர்க்கு அணியராய்ப்
பணிவிலா தவருக்கு என்றும்
அரியராய் அரிவையோடு இருப்பிடம்
அம்பர்மா காளம்தானே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் ஏத்தி நிற்கப் பேரழல் ஆகி உயர்ந்து, அவர்களுக்குத் தோன்றாதவராகிப் பின்னும் அடியவர்களுக்குப் பிரிதல் கொள்ளாத அண்மையுடையவராய் விளங்குபவர், ஈசன் அப் பெருமான், பணியாதவர்களுக்குத் தொலைவில் உள்ளவராய், விளங்குகின்ற அவர் மேவும் இடமாவது அம்பர் மாகாளமே.

1008. சாக்கியக் கயவர்வன் தலைபறிக்
கையரும் பொய்யினா நூல்
ஆக்கிய மொழியவை பிழையவை
ஆதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவுடைக் கச்சையான்
இச்சையா னவர்கட் கெல்லாம்
ஆக்கிய அரன்உறை அம்பர்மா
காளமே அடைமினீரே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் கூறுபவை பிழை ஆகும். அதனை ஏற்க வேண்டாம்.  அரவத்தைக் கச்சையாகக் கொண்டுள்ள சிவபெருமான், தன்னை வழிபடுபவர்களுக்கு அருள் புரிந்து நலம் செய்பவர். அப் பெருமான் உறையும் அம்பர் மாகாளத்தை அடைந்து வழிபடுவீராக.

1009. செம்பொன்மா மணிகொழித்து எழுதிரை
வருபுனல் அரிசில் சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா
அணங்கினோடு இருந்தகோனைக்
கம்பினார் நெடுமதில் காழியுள்
ஞானசம் பந்தன் சொன்ன
நம்பிநாள் மொழிபவர்க்கு இல்லையாம்
வினைநலம் பெறுவர் தாமே.

தெளிவுரை : பொன்னும் மணியும் கொழித்து வரும் நீர்ப் பெருக்குடைய அரிசில் ஆறு சூழ்ந்த அம்பர் மாகாளத்தைக் கோயிலாகக் கொண்டு, உமாதேவியோடு வீற்றிருக்கின்ற தலைவன், சிவபெருமான். அப்பெருமானை ஏத்திச் சுண்ணாம்பு கலந்து கட்டப் பெற்ற நெடிய மதில் உடைய காழி நகரில் மேவும் ஞானசம்பந்தன் சொன்ன இத் திருப்பதிகத்தை, நம்பிக்கையுடன் நாள்தோறும் தொழுபவர்களுக்கு, வினையின் துயர் இல்லை; எல்லா நலன்களும் உண்டாகும். இது உறுதி.

திருச்சிற்றம்பலம்

352. வெங்குரு (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1010. விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீர்உம தொழுகழல்
எண்ணவல் லார்இடர் இலரே.

தெளிவுரை : தேவர்கள் தொழுது போற்றுகின்ற வெங்குரு என்னும் பதியில் திருவெண்ணீறு அணிந்து மேவும் ஈசனே ! யாவராலும் தொழப் பெறும் உமது திருக்கழலை எண்ணித் துதிக்க வல்லவர்கள் இடர் இல்லாதவர்கள் ஆவார்கள்.

1011. வேதியர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆதிய அருமறை யீரே
ஆதிய அருமறையீர்உமை அலர்கொடு
ஓதியர் உணர்வுடை யோரே.

தெளிவுரை : வேத விற்பன்னர்களாகிய வெங்குரு என்னும் பதியில் மேவிய ஆதியும் அருமறையும் ஆகிய ஈசனே ! தேவரீரை மலர்கொண்டு தூவிப் போற்றி வழிபடுகின்றவர்கள், மக்கட் பிறவியின் உணர்வினை உடையவர்கள் ஆவார்கள்.

1012. விளங்குதண் பொழிலணி வெங்குரு மேவிய
இளம்பிறை யணிசடை யீரே
இளம்பிறை யணிசடை யீர்உமது இணையடி
உளங்கொள உறுபிணி இலரே.

தெளிவுரை : தண்பொழில் விளங்கும் வெங்குருவில் இளம்பிறைச் சந்திரனைச் சடையில் சூடி மேவும் ஈசனே ! உமது திருவடியை மனத்தில் கொண்டு விளங்கும் அடியவரின் பிறவிப் பிணியானது விலகும்.

1013. விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீர்உமை வாழ்த்தும்அத்
தொண்டர்கள் துயர்பிணி இலரே.

தெளிவுரை : நன்கு விரிந்து மலரும் பொழில் சூழ்ந்த வெங்குருவில், மலர் மாலை அணிந்த சடை முடி உடையவராய் விளங்கும் ஈசனே ! உம்மைப் போற்றி வாழ்த்தும் திருத்தொண்டர்களுக்குத் துயர் தரும் பிணி எதுவும் இல்லை.

1014. மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினொடு அரவசைத் தீரே
அக்கினொடு அரவசைத் தீர்உமது அடியினை
தக்கவர் உறுவது தவமே.

தெளிவுரை : அன்பும் அறிவும் மிகுந்து விளங்கும் பெருமக்கள் தொழுது ஏத்துகின்ற வெங்குருவில், எலும்பும் அரவமும் கொண்டு மேவும் ஈசனே ! உமது திருவடியை நித்தமும் போற்றி வழிபடுபவர் பெறுவது நல்ல தவமே ஆகும்.

1015. வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
அந்தம்இல் பெருமையி னீரே
அந்தம்இல் பெருமையினீர்உமை அலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே.

தெளிவுரை : எல்லையற்ற பெருமை உடையவராய்த் திருவெண்ணீற்றினைத் தரித்து வெங்குருவில் வீற்றிருக்கும் பெருமானே ! உம்மை மலர் கொண்டு ஏந்திச் சிந்தை குளிரத் தியானம் செய்பவர்களுக்கு வினையானது சிதைந்து விலகும்.

1016. விழமல்கு பொழிலணி வெங்குரு மேவிய
அழல்மல்கும் அங்கையி னீரே
அழல் மல்கும் அங்கையி னீர்உமை அலர்கொடு
தொழஅல்லல் கெடுவது துணிவே.

தெளிவுரை : பொழில் சூழவும், விழாக்கள் மல்கவும் விளங்கும் அணி திகழும் வெங்குருவில் நெருப்பினைக் கையில் ஏந்திய ஈசனே  ! உம்மை, மலர் கொண்டு அருச்சித்து வழிபடத் துயரம் யாவும் தீரும்; இது உறுதி.

1017. வித்தகமறை யவர்வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே
மத்தநன் மலர்புனை வீர்உமது அடிதொழும்
சித்தமது உடையவர் திருவே.

தெளிவுரை : மறைவல்ல அந்தணர்கள் விளங்குகின்ற வெங்குருவில், ஊமத்த நன்மலரைப் புனைந்து மேவும் ஈசனே ! உமது திருவடியைத் தொழும் சிந்தனை உடையவர்கள் எல்லாச் செல்வங்களும் உடையவர்கள் ஆவர்.

1018. மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீர்உமது அடிதொழும்
சீலமது உடையவர் திருவே.

தெளிவுரை : அருள் தன்மையில் சிறந்தோங்கும் மேலோர்கள் தொழுது ஏத்தும் வெங்குருவில், ஆலகால விடத்தை, மணி போன்று ஒளி திகழ, மிடற்றில் தேக்கி அருள் புரிந்த ஈசனே ! உமது திருவடியைத் தொழுகின்ற சீலத்தை உடையவர்கள், செல்வத்திற்கு ஒப்பாவார்கள்.

1019. விரைமல்கு பொழில்அணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலியத ளீரே
அலைமல்கு புலியத ளீர்உமது அடியிணை
உரைமல்கு புகழவர் உயர்வே.

தெளிவுரை : நறுமணம் கமழும் பொழிலின் எழில் மிகுந்த வெங்குருவில் புலித் தோலை அரையில் கட்டிய ஈசனே ! உமது திருவடியைப் புகழ்ந்து ஏத்துபவர் உயர்ந்த நிலையைப் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

353. திருஇன்னம்பர் (அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1020. எண்திசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய
வண்டிசைக் கும்சடை யீரே
வண்டிசைக் கும்சடை யீர்உமை வாழ்த்துவார்
தொண்டிரைக் கும்தொழி லோரே.

தெளிவுரை : எட்டுத் திசைகளிலும் புகழ் பெருகும் இன்னம்பர் என்னும் தலத்தில், வண்டு இசைக்க விளங்கும் சடை முடியுடைய ஈசனே ! உம்மை வாழ்த்தும் அடியவர்கள், திருத்தொண்டின் சிறப்புடன் விளங்கும் பணி செய்த, மேம்படும் தன்மையரே.

1021. யாழ்நரம் பின்இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யிர்உமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை இலரே.

தெளிவுரை : யாழின் இசை போன்று இனிமை உடைய இன்னம்பரில் நீண்டு தாழ்ந்த சடை முடி உடைய ஈசனே ! உம்மைச் சார்ந்து பக்தி செய்பவர்கள் துயரைத் தருகின்ற தீவினை அற்றவர்கள். துயரம் அற்றவர் என்பது குறிப்பு.

1022. இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வளமதி வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீர்உமை வாழ்த்துவார்
உளமதி மிகஉடை யோரே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி உடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, வளர்கின்ற சந்திரனைச் சடைமுடியில் தரித்து இன்னம்பரில் மேவிய ஈசனே ! உம்மை வாழ்த்துபவர்களே மதி மிகுந்தவர் எனப்படுபவர் ஆவர்.

1023. இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீர்உம கழல்தொழும்
அடியவர் அருவினை இலரே.

தெளிவுரை : இடிகுரல் போன்று முரசு, முழவு  முதலான வாத்தியங்கள் முழங்கும் இன்னம்பரில் மணம் கமழும் சடை முடியுடைய ஈசனே ! உமது திருக்கழலைப் போற்றும் அடியவர்களுக்கு வினைத் துன்பம் எதுவும் இல்லை.

1024. இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
உமையொரு கூறுடை யீரே
உமையொரு கூறுடை யீர்உமை உள்குவார்
அமைகில ராகிலர் அன்பே.

தெளிவுரை : தேவர்கள் தொழுது போற்றும் பதியாகிய இன்னம்பரில், உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு அர்த்தநாரியாய் மேவும் ஈசனே ! உம்மை உள்ளத்தில் கொண்டு வழிபடுபவர், அன்பு உடையவராய் விளங்குவர்.

1025. எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய
தண்ணரும் சடைமுடி யீரே
தண்ணரும் சடைமுடி யீர்உமைச் சார்பவர்
விண்ணவர் அடைவுடை யோரே.

தெளிவுரை : எண்ணும்தோறும் பெரும் புகழின் வயத்தராய் மேவிய பேரருளைச் செய்யும் தண்மை மிகும் சடை முடியுடையவராய் இன்னம்பரில் வீற்றிருக்கும் ஈசனே ! உம்மைச் சார்ந்து வழிபடுபவர்கள் தேவர்களுக்குரிய சிறப்பினை அடைபவர்கள் ஆவார்கள்.

1026. எழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய
நிழல்திகழ மேனியி னீரே
நிழல்திகழ் மேனியி னீர்உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே.

தெளிவுரை : எழில் திகழும் குளிர்ந்த பொழில் சூழ்ந்த இன்னம்பரில் ஒளி திகழும் திருமேனியுடைய ஈசனே ! உம்மை நினைப்பவர்களுடைய நெறியற்ற தன்மையில் வாட்டும் குழம்பிய தீவினையானது கெட்டழியும்.

1027. ஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீர்உமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே.

தெளிவுரை : ஏத்துதற்கு அரிய புகழுடைய இன்னம்பரில் மேவிய ஈசனே ! தூர்த்தனாகிய இராவணனை அடர்த்த பரமனே ! உம்மைத் தொழுபவர், பேரறிவும் நற்குணமும் உடையவர் ஆவர்.

1028. இயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
அயனும் மால்அறிவரி யீரே
அயனும் மால்அறி வரி யீர்உமது அடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே.

தெளிவுரை : இயல்பாகவே தொழுது போற்றும் பக்தி உடைய பெருமக்கள் விளங்குகின்ற இன்னம்பரில், திருமாலும் பிரமனும் அறிவதற்கு அரிய ஈசனே ! உமது திருவடியைப் போற்றும் இயல்பு உடையவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.

1029. ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய
தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீர்உமைச் சேர்பவர்
ஆர்துயர் அருவினை யீரே.

தெளிவுரை : எழில் மிக்க பொழில் விளங்கும் இன்னம்பரில் மேவி, சமண் சாக்கிய நெறிகளைப் பயனற்ற தாக்கிய ஈசனே ! உமது திருவடியைப் போற்றி வணங்குபவர்களுக்குத் துயரமும் தீவினையும் இல்லை.

1030. ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை
நாடமர் ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி இலரே.

தெளிவுரை : இதழ் கொண்ட மலர்கள் விளங்கும் பொழில் சூழ்ந்த இன்னம்பரில் வீற்றிருக்கும் ஈசனை, ஏத்திய ஞானசம்பந்தனது நற்றமிழாகிய இத்திருப்பதிகத்தை பாட வல்லவர்கள், பழியற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

354. திருநெல்வெண்ணெய் (அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை, விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1031. நல்வெணெய் விழுதுபெய்து ஆடுதிர் நாள்தொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீர்உமை நாள்தொறும்
சொல்வண்ணம் இடுவது சொல்லே.

தெளிவுரை : நெல்வெண்ணெய் என்னும் தலத்தில் மேவும் ஈசனே ! நல்ல நெய் முதலான பஞ்ச கௌவியத்தை பூசிக்கப் பெறும் பொருளாகக் கொண்டு நாள்தோறும் ஆடுபவர் நீவிர். உம்மைத் தினந்தோறும் போற்றிச் சொல்லும் மந்திரச் சொல்லே காத்தருள் புரியும் சொல்லாகும்.

1032. நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள அரவசைத் தீரே
கச்சிள அரவசைத் தீர்உமைக் காண்பவர்
அச்சமோடு அருவினை இலரே.

தெளிவுரை : அடியவர்கள் தினமும் தொழுது போற்ற நெல்வெண்ணெயில் இளமையான அரவத்தைக் கட்டி வீற்றிருக்கும் ஈசனே ! உம்மைக் கண்டு தரிசிப்பவர்களுக்கு அச்சமும் வினையும் இல்லை.

1033. நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத்தீர் உமை அலர்கெடு
உரைவிரிப் போர் உயர்ந் தோரே.

தெளிவுரை : பெருகி விளங்குகின்ற தொல் புகழை வரிசையாகக் கொண்டு, கோவணத்து ஆடை உடுத்தியவராய் நெல்வெண்ணெயில் மேவும் ஈசனே ! உம்மை மலர் தூவிப் போற்றிப் புகழ்ந்து ஏத்துபவர்கள், யாவற்றிலும் உயர்ந்து விளங்குபவர்கள் ஆவார்கள்.

1034. நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி உறையவல் லீரே
ஊர்மல்கி உறையவல் லீர்உமை உள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே.

தெளிவுரை : நீர் வளம் பெருகும் நெல்வெண்ணெய் மேவி, தலத்தின் சிறப்புத் தோன்ற வீற்றிருக்கும் ஈசனே ! உம்மை நினைத்துப் போற்றுதல், பாரில் புகழ் மிக்கவர்களுடைய பண்பாகும். இது, புகழ் மிகுந்தவர் ஈசனை ஏத்தி வணங்கும் இயல்பினர் ஆவர் என்பதனை உணர்த்திற்று.

1035. நீடுஇளம் பொழில்அணி நெல்வெணெய் மேவிய
ஆடிளம் பாப்பசைத் தீரே
ஆடிளம் பாப்பசைத் தீர்உமை அன்பொடு
பாடுஉளம் உடையவர் பண்பே.

தெளிவுரை : நெடிய பொழில் சூழ்ந்த நெல்வெண்ணெய் மேவிய ஈசனே ! ஆடுகின்ற இளம் அரவத்தைக் கட்டிய பெருமானே ! உம்மை அன்போடு, போற்றிப் பாடுகின்ற உள்ளம் உடைமையே  நற்பண்பாகும். முந்தைய திருப்பாட்டில் புகழ்ந்து உரைத்தலும், இத் திருப்பாட்டில் பாடுதலும் நற்பண்பாதல், உரைத்தருளப் பெற்றது.

1036. நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீர்உமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தம் கடனே.

தெளிவுரை : நெற்றியில் கண்ணும், பெற்றி கொள் பிறைச் சந்திரனும் கொண்டு நெல்வெண்ணெயில் மேவும் ஈசனே ! உம்மைப் போற்றிப் பாராட்டி வழிபட்டு அன்பு கொண்டு நிற்பது, கற்றவர்கள் கடமையாகும்.

1037. நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீர்உமைக் காண்பவர்
உறைவதும் உம்அடிக் கீழே.

தெளிவுரை : நிறைந்த சீலமுடையவர் தொழும் நெல்வெண்ணெயில் நீலகண்டராக விளங்கும் ஈசனே ! உம்மைக் கண்டு தரிசிப்பவர் உறையும் இடமாவது, உமது திருவடியின்கீழ் உள்ள இனிமையான இடமே.

1038. நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவிய
அரக்கனை  அசைவுசெய் தீரே
அரக்கனை அசைவுசெய் தீர்உமை அன்புசெய்து
இருக்கவல் லார்இடர் இலரே.

தெளிவுரை : அடர்த்தியான பொழில் சூழ்ந்த நெல்வெண்ணெயில் இராவணனை நெரித்து வீற்றிருக்கும் ஈசனே ! உம்மை ஏந்தி அன்புடன் வழிபடுபவர்களுக்கு இடர் என்பது இல்லை.

1039. நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்று
இருவரை இடர்கள் செய்தீரே
இருவரை இடர்கள் செய்தீர்உமை இசைவொடு
பரவவல் லார்பழி இலரே.

தெளிவுரை : வரிசையாகச் சடை முடிகளை உடைய ஈசனே ! திருமால், பிரமன் ஆகியோர் காணுதற்கு அரியவராய் விளங்கி நெல்வெண்ணெயில் மேவி விளங்குபவரே ! உம்மை, விருப்பத்துடன் பரவிப் போற்றுபவர்களுக்குத் துன்பம் தரும் வினை எதுவும் இல்லை.

1040. நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கொடுத்தீரே
சாக்கியச் சமண்கொடுத்தீர் உமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே.

தெளிவுரை : வறட்சியை நீக்கிய நீர்வளம் மிகுந்த நெல்வெண்ணெயில் மேவும் ஈசனே ! சாக்கியமும் சமணமும் நீரே கொடுத்தவர். உம்மைச் சார்ந்து வணங்கி அடியவர் ஆக வேண்டுமானால் அதற்குப் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இது, அனைத்தும் ஈசனால் வகுக்கப் பெறுதலை உணர்த்திற்று.

1041. நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை
நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன் செந்தமிழ்
சொலமல்கு வார்துயர் இலரே.

தெளிவுரை : பூவுலகில் தொன்மையான புகழ் கொண்டு மேவும் நெல்வெண்ணெயில் வீற்றிருக்கும் ஈசனை, நலம் மல்கிய ஞானசம்பந்தன் செந்தமிழால் ஏத்திய இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள், துயர் அற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

355. திருச்சிறுகுடி (அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், செருகுடி,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1042. திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி அரவுடை யீரே
படமலி அரவுடை யீர்உமைப் பணிபவர்
அடைவதும் அமருலகு அதுவே.

தெளிவுரை : வலிமையான மதில் கொண்ட சிறுகுடியில், படம் கொண்ட அரவத்தை அணியாகக் கொண்டு மேவும் ஈசனே ! உம்மைப் பணிபவர்கள் அடைவது, பெருமையான தேவர் உலகமே.

1043. சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீர்உம தொழுகழல்
உற்றவர் உறுபிணி இலரே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு சடை முடி திகழச் சிறுகுடியில் மேவும் ஈசனே ! உமது திருக்கழலைச் சார்ந்து பணிபவர்களுக்குப் பணி எதுவும் இல்லை.

1044. தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடை யீரே
துள்ளிய மானுடை யீர்உம தொழுகழல்
உள்ளுதல் செயநலம் உறுமே.

தெளிவுரை : தெளிந்த நீர் வளம் உடைய சிறுகுடியில், மானைக் கரத்தில் ஏந்தி மேவும் ஈசனே ! உமது திருக்கழலை எண்ணிப் பணியும் அடியவர்கள், எல்லா நலன்களையும் பெறுவார்கள்.

1045. செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீர்உமை உள்குவார்
சொல்நலம் உடையவர் தொண்டே.

தெளிவுரை : செந்நெல் விளையும் வயல் வளம் மேவும் சிறுகுடியில் மேவிய ஈசனே ! பகைத்துச் செருத்த முப்புர அசுரர்களை எரித்த பரமனே ! உம்மை நினைத்துப் போற்றும் திருத்தொண்டர்கள் திருவைந்தெழுத்தாகிய நலச் சொல்லை ஓதும் பெருமை உடையவர்கள்.

1046. செற்றினில் மலிபுனல் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடி யீர்உமைப் பேணிநஞ்சு
அற்றவர் அருவினை யிலரே.

தெளிவுரை : சேற்றில் நீர் மல்கி மேவும் சிறுகுடியில் பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய ஈசனே ! உம்மை அன்புடன் போற்றிப் பணி செய்பவர்களின் வினையானது நைந்து விலகும்.

1047. செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை இடம்உடை யீரே
மங்கையை இடம்உடையீர் உமை வாழ்த்துவார்
சங்கையது இலர் நலர்தவமே.

தெளிவுரை : கயல் விளங்கும் நீர் வளம் கொண்ட சிறுகுடியில், உமாதேவியை இடமாகக் கொண்டு மேவும் ஈசனே ! உம்மை வாழ்த்தும் அடியவர்கள், மனத் தெளிவு உடையவராகவும், நலம் மிக்கவராகவும் தவப்பேறு உடையவராகவும் விளங்குவார்கள்.

1048. செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடி யீரே
வெறிகமழ் சடைமுடி யீர்உமை விரும்பிமெய்ந்
நெறியுணர் வோர்உயர்ந் தோரே.

தெளிவுரை : அடர்த்த பொழில் திகழும் சிறுகுடியில், நறுமணம் கமழும் சடை முடியராய் வீற்றிருக்கும் ஈசனே ! உம்மை விரும்பி, மெய்ந்நெறியை உணர்ந்தவர்கள் உயர்வுடையோர் ஆவர். இது சிவநெறியால் உணரப்படும் மெய்ந்நெறியே உயர்வுடையதென உணர்த்தப் பெற்றது.

1049. திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரநெரித் தீரே
தசமுகன் உரநெரித் தீர்உமைச் சார்பவர்
வசையறும் அதுவழி பாடே.

தெளிவுரை : எண் திசையில் உள்ளவர்களும் தொழுது ஏத்தும் சிறுகுடியில் மேவிய ஈசனே ! இராவணனுடைய வலிமையை நெரித்த நாதனே ! உம்மைச் சார்ந்து பக்தியுடன் விளங்கக் குற்றம் யாவும் தீர்ந்து, குணம் பெருகும். அதுவே வழிபடும் முறையும் ஆகும்.

1050. செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவுசெய் தீரே
இருவரை அசைவுசெய் தீர்உமை ஏத்துவார்
அருவினை யொடுதுயர் இலரே.

தெளிவுரை : வயல் வளம் பெருகும் சிறுகுடியில் மேவிய ஈசனே ! திருமால் பிரமன் ஆகிய இரு மூர்த்திகளையும் தளர்வு கொள்ளச் செய்த நாதனே ! உம்மை ஏத்துபவர், வினை அற்றவராயும் துயர் அற்றவராயும் விளங்குவர். இது அடியவர்கள் இம்மை நலனும் மறுமை நலனும் இனிது பெற்று மகிழ்ந்திருப்பார்கள் என்பதாம்.

1051. செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரொடு அமண்புறத் தீரே
புத்தரொடு அமண்புறத் தீர்உமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே.

தெளிவுரை : வயல்களில் நீர் நிலவும் சிறுகுடியில் மேவிய ஈசனே ! புத்தர் அமணர்களுக்குப் புறம்பாக இருப்பவரே ! பக்தர்கள் உம்மை போற்றிப் பரவுதல், அவர்களுடைய செவ்விய இயல்பாகும்.

1052. தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய
மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீர்உமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே.

தெளிவுரை : தேன் மணம் கமழும் பொழில் திகழும் சிறுகுடி, மேவி, மானைக் கரத்தில் கொண்டு விளங்கும் ஈசனே ! உம்மை வாழ்த்தியது ஞானசம்பந்தனது தமிழே. இது, ஞானத் தமிழ் என்பதும், இதனை ஓத, இகபர நலன்கள் கைவரப் பெறும் என்பதும், குறிப்பு.

திருச்சிற்றம்பலம்

356. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1053. வெண்மதி தவழ்மதில் மிழலையு ளீர்சடை
ஒண்மதி யணியுடை யீரே
ஒண்மதி யணியுடை யீர்உமை உணர்பவர்
கண்மதி மிகுவது கடனே.

தெளிவுரை : வெண்மதி தவழும் உயர்ந்த மதிலை உடைய மிழலையில் மேவும் ஈசனே ! சடை முடியில் ஒளி கொண்டு வளரும் சந்திரனை அணிந்த நாதனே ! உம்மைத் தியானம் செய்து உணரும் அடியவர்கள் சிவஞானத்தை பெறுவார்கள்.

1054. விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்
சதிவழி வருவதொர் சதிரே
சதிவழி வருவதொர் சதிர்உடையீர்உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.

தெளிவுரை : ஆசார அனுட்டானங்களை விதிப்படி ஒழுகி வரும் அந்தணர்கள் வாழும் மிழலையுள் மேவி, தாள ஒத்து தவறாது திருநடம் புரியும் ஈசனே ! உம்மைச் சத்துவகுணம் உடைய ஞானிகள் போற்றிப் புகழும் சிறப்பானது, தனிப் பெருமை உடையது.

1055. விரைமலி பொழிலணி மிழலையு ளீர்ஒரு
வரைமிசை உறைவதும் வலதே
வரைமிசை உறைவதொர் வலதுடை யீர்உமை
உரைசெயும் அவை மறை யொலியே.

தெளிவுரை : நறுமணம் கமழும் பொழிலை அணி கொள மேவும் மிழலையுள் விளங்கும் ஈசனே ! கயிலை மலையில் வீற்றிருக்கும் பெருமைக்கு உரியவரே ! உம்மைப் போற்றி உரைக்கும் சொற்கள் யாவும் வேத ஒலியே.

1056. விட்டெழில் பெறுபுகழ் மிழலையு ளீர்கையில்
இட்டுஎழில் பெறுகிறது எரியே
இட்டுஎழில் பெறுகிறது எரியுடையீர்புரம்
அட்டது வரைசிலை யாலே.

தெளிவுரை : மிகுந்த எழில் பெறும் புகழுடைய மிழலையுள் வீற்றிருக்கும் ஈசனே ! உமது கையில் பொருந்தப் பெற்ற எரியானது எழில் உடையதே. ஆயினும், மூன்று புரங்களை எரிக்கும் தன்மையில் அவர்களை வீழ்த்துவதற்கு மேருமலையை வில்லாகக் கொண்டதும் அக்கினியைக் கணை தொடுத்ததும் ஆகும்.

1057. வேல்நிகர் கண்ணியர் மிழலையு ளீர்நல
பால்நிகர் உருவுடை யீரே
பால்நிகர் உருவுடை யீர்உம துடன்உமை
தான்மிக உறைவது தவமே.

தெளிவுரை : வேல் போன்ற கண்ணுடைய மகளிர் மேவும் மிழலையுள் பால் போன்ற வண்ணம் கொண்டுள்ள ஈசனே ! தேவரீருடன் உமாதேவி உறைவது தவச்சிறப்பு உடையதாகும்.

1058. விரைமலி பொழிலணி மிழலையு ளீர்செனி
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவதொர் நெறியுடை யீர்உமது
அரையுற அணிவன அரவே.

தெளிவுரை : நறுமணப் பொழில் சூழ்ந்த மிழலையுள் விளங்கும் ஈசனே ! தலை மாலை அணிந்த பரமனே ! உமது அரையில் அசைத்துக் கட்டியது அரவமே.

1059. விசையறு புனல்வயல் மிழலையுளீர்அரவு
அசையுற அணிவுடை யீரே
அசையுற அணிவுடை யீர்உமை அறிபவர்
நசையுறு நாவினர் தாமே.

தெளிவுரை : விரைந்து ஏகி வற்றாத நீர்வளம் கொண்ட வயல்களை உடைய மிழலையுள் அரவத்தை அணியாகக் கொண்டு மேவும் ஈசனே ! உம்மை அறிபவர், விருப்பத்துடன் திருவைந்தெழுத்தை ஓதிப் போற்றும் அடியவரே.

1060. விலங்கல்ஒண் மதிளணி மிழலையு ளீர்அன்றவ்
இலங்கைமன் இடர்கெடுத் தீரே
இலங்கைமன் இடர்கெடுத் தீர்உமை யேத்துவார்
புலன்களை முனிவது பொருளே.

தெளிவுரை : மலை போன்ற உறுதியான மதிலை உடைய மிழலையுள் மேவும் ஈசனே ! இராவணன் கயிலையின்கீழ் நெரிப்பட்டபோது அவன் ஏத்திப் போற்ற, இடர் கொடுத்த நாதனே ! உம்மை ஏத்துபவர்கள், புலன்களை அடக்கி ஆளும் பெற்றி உடையவர்களே.

1061. வெற்பமர் பொழிலணி மிழலையு ளீர்உமை
அற்புதன் அயன்அறி யானே
அற்புதன் அயன்அறி யாவகை நின்றவ
நற்பதம் அறிவது நயமே.

தெளிவுரை : மலை போன்ற மாளிகைகளும், உயர்ந்த பொழில்களும் கொண்ட மிழலையுள் மேவும் ஈசனே ! திருமாலும் பிரமனும் அறிவதற்கு அரியவனே ! உமது திருவடியின் மேன்மை நலன்களை அறிதலே பெருமை உடையது.

1062. வித்தக மறையவர் மிழலையு ளீர்அன்று
புத்தரொடு அமண் அழித்தீரே
புத்தரொடு அமண் அழித் தீர்உமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடை யவரே.

தெளிவுரை : மறைவல்ல அந்தணர்கள் மேவும் மிழலையுள் வீற்றிருக்கும் ஈசனே ! புத்தமும் அமணும் வீழுமாறு செய்த இறைவனே ! உம்மைப் போற்றுபவர்கள் பக்தியுடைய நன் மனம் உடையவர்களே.

1063. விண்பயில் பொழிலணி மிழலையுள் ஈசனைச்
சண்பையுள் ஞானசம் பந்தன்
சண்பையுள் ஞானசம் பந்தன தமிழிவை
ஒண்பொருள் உணர்வதும் உணர்வே.

தெளிவுரை : உயர்ந்து ஓங்கும் பொழில் கொண்ட மிழலையுள் விளங்கும் ஈசனை ஏத்திய சண்பையின் ஞானசம்பந்தனின் தமிழாகிய இத் திருப்பதிகத்தை ஒண்பொருளாக உணர்ந்து ஓதுதல் நல்லுணர்வு ஆகும். இது மக்கட் பிறவியின் பெருமைக்கு உரியதாம் என்பது குறிப்பு.

திருச்சிற்றம்பலம்

357. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1064. முரசதிர்ந்து எழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீர்உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே.

தெளிவுரை : முரசு எழும்ப விழாக்கள் நிகழும் முதுகுன்றத்தில் மழுப்படை ஏந்திய ஈசனே ! உம்மைப் பரவி ஏத்துபவர்கள், உலகத்தில் அரச போகத்தை அடைவார்கள்.

1065. மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய
பையர வம்அசைத் தீரே
பையர வம்அசைத் தீர்உமைப் பாடுவார்
நைவிலர் நாள்தொறு நலமே.

தெளிவுரை : அடர்ந்த கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, முதுகுன்றம் மேவி அரவத்தை அரையில் கட்டி விளங்கும் ஈசனே ! உம்மைப் போற்றிப் பாடுபவர்கள், இகழ்ச்சி அற்றவர்கள்; எல்லா நாளும் நலத்தையே பெறுபவர் ஆவர்.

1066. முடிவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
மழவிடை யதுஉடை யீரே
மழவிடை யதுஉடை யீர்உமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே.

தெளிவுரை : முழவு ஒலிக்கவும், பொழில் சூழவும் விளங்கும் முதுகுன்றத்தில் மேவிய ஈசனே ! இடப வாகனத்தில் வீற்றிருப்பவரே ! உம்மை ஏத்தும் அடியவர்களுக்குப் பழியும் இல்லை, பிறர் பகைமை கொண்டு இடர் செய்வதும் இல்லை.

1067. முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
உருவமர் சடைமுடி யீரே
உருவமர் சடைமுடி யீர்உமை ஓதுவார்
திருவொடு தேசினர் தாமே.

தெளிவுரை : நறுமணம் கமழும் அழகிய பொழிலின் எழில் மேவும் முதுகுன்றத்தில், அழகிய சடை முடி விளங்க வீற்றிருக்கும் ஈசனே ! உம்மை ஓதுபவர்களுக்குச் செல்வமும் அழகிய மேனியும் அமையும்.

1068. முத்தி தரும்உயர் முதுகுன்ற மேவிய
பத்து முடியடர்த் தீரே
பத்து முடியடர்த் தீர்உமைப் பாடுவார்
சித்தநல் லவ்வடி யாரே.

தெளிவுரை : முத்தி நல்கும் உயர்ந்த திருத்தலமாகிய முதுகுன்றத்தில் மேவிய ஈசனே ! இராவணனுடைய பத்துத் தலைகளையும் அடர்த்த பெருமானே ! உம்மைப் பாடிப் போற்றும் அடியவரே நல்ல சித்தம் உடையவர் ஆவர்.

1069. முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன்று
இயன்றவர் அறிவரி யீரே
இயன்றவர் அறிவரி யீர்உமை ஏத்துவார்
பயன்தலை நிற்பவர் தாமே.

தெளிவுரை : தமக்குள் போட்டி வைத்துத் தேடிய திருமாலும் பிரமனும் காணுதற்கு அரியவராகிய ஈசனே ! தவத்தின் வழி முயன்ற முனிவர்களுக்கு அருள் வழங்கிய பெருமானே ! முதுகுன்றம் மேவிய நாதனே ! உம்மை ஏத்தி வழிபடுபவர்கள், மேலான பயனைக் கொண்டு விளங்குவார்கள்.

1070. மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
கட்டமண் தேரைக் காய்ந்தீரே
கட்டமண் தேரைக் காய்ந் தீர்உமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே.

தெளிவுரை : பொழில் திகழும் முதுகுன்றத்தில், அமணும் பௌத்தமும் துன்புறுமாறு செய்து மேவும் ஈசனே ! உம்மைச் சந்தித்து ஏத்தும் முனிவர் முதலான  சீலத்தோர் சிறப்பினை பெறுவார்கள்.

1071. மூடிய சோலைசூழ் முதுகுன்றத்து ஈசனை
நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி இலரே.

தெளிவுரை : அடர்த்தியான சோலை சூழ்ந்த முதுகுன்றத்தில் விளங்கும் ஈசனை நாடிய ஞானசம்பந்தன் ஏத்திய செந்தமிழாகிய இத் திருப்பதிகத்தைப் பாடுபவர்களுக்குப் பழி முதலான துன்பங்கள் எதுவும் அணுகாது.

திருச்சிற்றம்பலம்

358. திருத்தோணிபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1072. கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற்
காரிகை மாட்டு அருளி
அரும்பமர் கொங்கை யோர்பால் மகிழ்ந்த
அற்புதம் செப்பரிதால்
பெரும்பக லேவந்துஎன் பெண்மை கொண்டு
பேர்த்தவர் சேர்ந்த இடம்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத்
தோணி புரந்தானே.

தெளிவுரை : சிவபெருமான், கரும்பு வில்லை உடைய மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து, அவன் மனைவியாகிய இரதிக்கு அருள் புரியும் தன்மையால் உயிர் பெறச் செய்தவர்; உமாதேவியை ஒரு பக்கத்தில் பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாக விளங்குபவர்; யாவரும் அறியுமாறு என் உள்ளத்தைக் கவர்ந்து என்னை ஆட்கொண்டவர். அப்பெருமான் பொருந்தி விளங்குகின்ற இடமாவது, வண்டு அமரும் சோலை சூழ்ந்த செம்மை பெருகும் தோணிபுரமே.

1073. கொங்கியல் பூங்கழல் கொவ்வைச் செவ்வாய்க்
கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனி யெங்கும்
பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோர வந்துஎன்
சாயல்கொண் டார்தமது ஊர்
துங்கியல் மாளிகை சூழ்ந்த செம்மைத்
தோணி புரந்தானே.

தெளிவுரை : ஈசன், தேன் மணம் துளிர்க்கும் மென்மையான கூந்தலும், கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயும் விளங்கும் அழகிய உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, பால் போன்ற திருவெண்ணீற்றை அணிந்து திகழ்பவர். அப் பெருமான், எனது உள்ளத்தில் புகுந்து, எனது வளையலைக் கழன்று விழுமாறு இளைக்கச் செய்தவர். அவரது ஊராவது, உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்து விளங்குகின்ற செம்மையுறு தோணிபுரமே.

1074. மத்தக் களிற்றுரி போர்க்கக் கண்டு
மாதுமை பேதுறலும்
சித்தம் தெளியநின்று ஆடி ஏறூர்
தீவண்ணர் சில்பலிக்கொன்று
ஒத்தபடி வந்து என்உள்ளம் கொண்ட
ஒருவர்க்கு இடம் போலும்
துத்தநல் இன்னிசை வண்டு பாடும்
தோணி புரந்தானே.

தெளிவுரை : ஈசன், யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; உமாதேவி மகிழுமாறு திருநடனம் புரிந்தவர்; இடப வாகனத்தில் ஏறி விளங்கும் தீவண்ணர்; பலி ஏற்கும் தன்மையில் திரிந்து எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். ஒப்பற்ற அத்தகைய ஈசனுக்கு இடமாவது, துத்தம் என இசை எழுப்பி வண்டு பாடும் தோணிபுரமே.

1075. வள்ளல் இருந்த மலை யதனை வலம்
செய்தல் வாய்மையென
உள்ளங் கொள்ளாது கொதித்தெழுந்தன்று
எடுத்தோன் உரநெரிய
மெள்ள விரல் வைத்து என்னுள்ளம் கொண்டார்
மேவும் இடம் போலும்
துள்ளொலி வெள்ளத்தின்மேல் மிதந்த
தோணி புரந்தானே.

தெளிவுரை : கயிலை மலையை வலம் செய்தல் வேண்டும் என நினையாது, உள்ளம் கொதித்தெழ எடுத்த இராவணனின் வலிமையை அடர்த்து, அவன் நெரியுமாறு திருப்பாத விரலால் மெள்ள வைத்த சிவபெருமான், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். அப்பெருமான் மேவும் இடமாவது, மகாப்பிரளய காலத்தில் வெள்ளத்தின்மேல் மிதந்து நிலை பெறும் தோணிபுரமே.

1076. வெல்பற வைக்கொடி மாலும் மற்றை
விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாய்உயர்ந்தும் பன்றிய
தாய்ப் பணிந்தும்
செல்வற நீண்டுஎம் சிந்தை கொண்ட
செல்வர் இடம்போலும்
தொல்பற வைசுமந்து ஓங்கு செம்மைத்
தோணி புரந்தானே.

தெளிவுரை : கருடக் கொடியுடைய திருமாலும், மற்றும் பிரமனும் முறையே பன்றியாய்ப் பூமியில் படிந்து குடைந்தும், அன்னப் பறவையாய் உயர்ந்து சென்றும் காணற்று அரியவராகிய ஈசன், என் சிந்தையைக் கவர்ந்த செல்வர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பிரளய காலத்திலும் அழியாது ஓங்கும் தோணிபுரமே.

1077. குண்டிகை பீலிதட்டோடு நின்று
கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள்கஞ்சி
யூணரும் வாய்மடிய
இண்டை புனைந்து எருது ஏறிவந்துஎன்
எழில் கவர்ந்தார் இடமாம்
தொண்டிசை பாடல் அறாத தொன்மைத்
தோணி புரந்தானே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் வாய்ச் சொற்கள் அடங்குமாறு, இண்டை மாலை புனைந்து, இடபத்தில் ஏறி விளங்கும் சிவபெருமான், என் எழிலைக் கவர்ந்தவர். அவர் வீற்றிருக்கும் இடமாவது, தொண்டர்கள் இசை பாடிப் போற்றும் தொன்மை நகராகிய தோணிபுரமே.

1078. தூமரு மாளிகை மாட நீடு
தோணி புரத்துஇறையை
மாமறை நான்கினொடு அங்கம்ஆறும்
வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும்
ஞானசம்பந் தன் சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும் வல்லார்
பார்முழு தாள்பவரே.

தெளிவுரை : தூய வெள்ளை மருவும் வண்ண மாளிகைகளும் மாடங்களும் நிறைந்த தோணிபுரத்தில் வீற்றிருக்கும் ஈசனை ஏத்தி நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் வல்லவராகி, வாய்மையும் கேள்வி ஞானமும் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இப்பூவுலகை ஆளும் பேறுடையவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

359. திருஇராமேச்சுரம் (அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1079. திருதரு மாமணி நாகமாடத்
திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக்க எரியேந்தி யாடு
நலமே தெரிந்து உணர்வார்
எரிகதிர் முத்தம் இலங்குகானல்
இராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி
விமலர் செயும்செயலே.

தெளிவுரை : மாணிக்கத்தை உடைய நாகம் அசைந்து ஆட, நரிகள் திரியும் மயானத்தில் நெருப்பைக் கையில் ஏந்தி ஆடும் தன்மையுடையவர், சிவபெருமான். அவர், முத்துக்கள் விளங்கும் கடற் சோலையுடைய இராமேச்சுரத்தில், ஒளிக்கதிர் வீசும் வெண்மையான பிறைச் சந்திரனைச் சடை முடியில் தரித்த விமலர்.

1080. பொறிகிளர் பாம்பரை ஆர்த்துஅயலே
புரிவோடு உமைபாடத்
தெறிகிள ரப்பெயர்ந்து எல்லியாடும்
திறமே தெரிந்து உணர்வார்
எறிகிளர் வெண்திரை வந்துபேரும்
இராமேச் சரமேய
மறிகிளர் மான்மழுப் புல்குகைஎம்
மணாளர் செய்யும் செயலே.

தெளிவுரை : படம் கொண்டு விளங்கும் அரவத்தை நன்கு கட்டிய ஈசன், உமாதேவியார் பண்ணிசை பாட, இரவில் நடம் புரிபவர். அவர், கடலலைகள் வீசுகின்ற இராமேச்சுரத்தில் மானும் மழுவும் ஏந்தியவராகிய எமது மணாளர். அவருடைய செயல்கள் யாவும் திருவரும் தன்மையுடையதே.

1081. அலைவலர் தண்புனல் வார்சடைமேல்
அடக்கி ஒரு பாகம்
மலைவளர் காதலி பாடஆடி
மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ் விரியும்
இராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடும்
தலைவர் செயும் செயலே.

தெளிவுரை : கங்கையைச் சடை முடியின்மீது தரித்து, ஒரு பாகத்தில் உமாதேவி திகழ்ந்து மேவி இனிமையாகப் பாடத் திருநடம் புரிந்து மாட்சிமையுடன்  விளங்குபவர், சிவபெருமான். தாழை விரிந்து மேவி மணம் கமழும் இராமேச்சுரத்தில் அப்பெருமான், மண்டை ஓடுகளை மாலையாகக் கொண்டு விளங்குபவர். இத்தன்மையானது தலைவராகிய அப்பரமனின் செயலேயாகும். அதன் காரணம் அறிய ஒண்ணாதது என்பது குறிப்பு.

1082. மாதன நேரிழை ஏர்தடங்கண்
மலையான் மகள் பாடத்
தேதெரி அங்கையில் ஏந்தியாடும்
திறமே தெரிந்து உணர்வார்
ஏதமிலார் தொழுது ஏத்திவாழ்த்தும்
இராமேச்சுர மேயார்
போதுவெண் திங்கள்பைங் கொன்றைசூடும்
புனிதர் செயும் செயலே.

தெளிவுரை : அகன்ற விழியுடைய உமாதேவியார் இசை பாட, எரியும் நெருப்பை அழகிய கையில் ஏந்தி ஆடும் ஈசன், அனைத்தும் வல்லவர். அவர் பாவங்கள் யாவும் தீர்க்கப் பெற்ற அடியவர்களால் ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், பிறைச்சந்திரனும் கொன்றை மலரும் சூடும் புனிதர்.

1083. சூலமோடு ஒண்மழு நின்றிலங்கச்
சுடுகாடு இடமாகக்
கோலநன் மாதுடன் பாடஆடும்
குணமே குறித்து உணர்வார்
ஏல நறும்பொழில் வண்டுபாடும்
இராமேச் சுரமேய
நீலமார் கண்டம் உடையஎங்கள்
நிமலர் செயும் செயலே.

தெளிவுரை : ஈசன், சூலமும் மழுவும் விளங்கச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு, உமாதேவி பண் இசைத்துப் பாட நடனம் புரிபவர். அவர் நறுமணம் கமழும் பொழிலில் வண்டு பாடும் இராமேச்சுரத்தில் மேவி விளங்குபவர். அப் பெருமான் நீலகண்டத்தை உடைய எங்கள் நிமலர்.

1084. கணை யிணை வெஞ்சிலை கையில்ஏந்திக்
காமனைக் காய்ந்தவர் தாம்
இணைபிணை நோக்கிநல் லாளோடுஆடும்
இயல்பின ராகிநல்ல
இணைமலர் மேல்அன்னம் வைகுகாணல்
இராமேச் சுரமேய
அணைபிணை புல்கு கரந்துசூடும்
அடிகள் செயும் செயலே.

தெளிவுரை : ஐந்து மலர்கணைகளை இணைத்துத் தொடுக்க வில்லேந்திய மன்மதனை எரித்த சிவபெருமான், உமாதேவியோடு ஆடுகின்ற இயல்பினராகி, அன்னப் பறவை வைகும் சோலையுடைய இராமேச்சுரத்தில் மேவியவர். அவர் சேர்த்துக் கட்டப் பெற்ற கரந்தை மாலை சூடும் அடிகள் ஆவார்.

1085. நீரினார் புன்சடை பின்புதாழ
நெடுவெண் மதிசூடி
ஊரினார் துஞ்சிருள் பாடியாடும்
உவகை தெரிந்துணர்வார்
ஏறினார் பைம்பொழில் வண்டுபாடும்
இராமேச் சுரமேய
காரினார் கொன்றைவெண் திங்கள் சூடும்
கடவுள் செயும் செயலே.

தெளிவுரை : கங்கை தரித்த புன்சடை பின்புறம் தாழ வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடி இரவில் மயானத்தில் ஆடுகின்ற சிவபெருமான், வண்டு பாடும் பொழில் சூழ்ந்த இராமேச்சுரத்தில் மேவி விளங்குபவர். அப் பெருமான், கார் காலத்தில் விளங்கும் கொன்றை மலருடன் வெண்திங்கள் சூடும் கடவுள் ஆவார்.

1086. பொன்திகழ் சுண்ணவெண் ணீறுபூசிப்
புலித்தோல் உடையாக
மின்திகழ் சோதியர் பாடலாடல்
மிக்கார் வருமாட்சி
என்றுநல் லோர்கள் பரவி யேத்தும்
இராமேச் சுரமேயார்
குன்றினால் அன்று அரக் கன்தடந்தோள்
அடர்த்தார் கொளும் கொள்கையே.

தெளிவுரை : சுடர் பெருகும் திருவெண்ணீறு பூசிப் புலித் தோலை உடையாகக் கொண்டு, மின்னலைப் போன்ற செவ்வண்ணத்தவராகிய சிவபெருமான், பாடலும் ஆடலும் மிகுந்து புரிபவர். அவர், சிறப்புடையோர் பரவி ஏத்தும் இராமேச்சுரத்தில் மேவியவர். அப் பெருமான் கொண்ட கொள்கையானது, இராவணனைக் கயிலை மலையைக் கொண்டு அடர்த்ததாம்.

1087. கோவலன் நான்முகன் நோக்கொணாத
குழகன் அழகாய
மேவலன் ஒள்ளெரி யேந்தியாடும்
இமையோர் இறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும்
இராமேச்சுர மேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம்
இறைவர் செயும் செயலே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் நோக்கிக் காண முடியாத குழகன், சிவபெருமான். அப் பெருமான் அழகிய வடிவுடையவராய் ஒளிகொண்டு எரியும் நெருப்பை விரும்பி ஏந்தி ஆடுபவர்; இமையவர்தம் இறைவன்; அம்பைச் செலுத்துவதில் வல்லவராகிய இராமபிரான் ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரத்தில் மேவியவர்; வலிமையான இடபத்தை வெற்றி தரும் கொடியாகக் கொண்டு விளங்குபவர். இத்தன்மையில் உடையவர் ஈசன்.

1088. பின்னொடு முன்னிடு தட்டைச் சாத்திப்
பிரட்டே திரிவாரும்
பொன்னெடும் சீவரப் போர்வை யார்கள்
புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண்டு யாழ்முரலும்
இராமேச் சுரமேவிய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும்
பரமர் செயும் செயலே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் புறச் சொற்களைக் கேட்க வேண்டாம். நீண்ட சோலையில் வண்டு யாழின் ஓசை போன்று இசை எழுப்பும் இராமேச்சுரத்தில் மேவிய சிவபெருமான், மண்டை ஓட்டினை மாலையாகக் கொண்டு கபாலம் ஏந்தித் திரியும் பரமர் ஆவர். அவரை ஏத்துக என்பது குறிப்பு.

1089. தேவியை வவ்விய தென்னிலங்கை
அரையன் திறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணும்
இராமேச் சுரத்தாரை
நாவியல் ஞானசம் பந்தனல்ல
மொழியால் நவின்றுஏத்தும்
பாவியல் மாலைவல்லார் அவர்தம் வினை
யாயின பற்றறுமே.

தெளிவுரை : சீதாப் பிராட்டியைக் கவர்ந்த இராவணனின் வலிமையை வாட்டி, சிறந்த அம்பினைச் செலுத்தும் வில்லுடைய அண்ணலாகிய இராமபிரான் நண்ணிய இராமேச்சுரத்தில் மேவிய சிவபெருமானை ஏத்தி, ஞானசம்பந்தன் நன்மொழியால் நவின்று ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வினை யாவும் தீரும்.

திருச்சிற்றம்பலம்

360. திருநாரையூர் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1090. காம்பினை வென்றமென் தோளி பாகம்
கலந்தான் நலம்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடுவின்
திருநாரை யூர்மேய
பூம்புனல் சேர்புரி புன்சடை யான்
புலியின் னுரி தோல்மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன்
பாதம் பணி வோமே.

தெளிவுரை : மெல்லிய மூங்கிலினும் மென்மையான தோளுடைய உமாதேவியைப் பாகமாக உடைய சிவபெருமான், நலம் பெருக்கும் தீர்த்த மகிமையுடைய இனிய புனல் சூழ்ந்த திருநாரையூர் மேவியவர். அவர், கங்கையைச் சடை முடியில் வைத்தவர்; புலியின் தோலை ஆடையாக உடையவர்; பாம்பினை அரையில் கட்டிப் பண்டரங்கம் என்னும் திருக்கூத்தினை ஆடுபவர். அப் பெருமானுடைய திருப்பாதத்தைப் பணிவோமாக.

1091. தீவினை யாயின தீர்க்க நின்றான்
திருநாரை யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடி யான்புடை
சூழப் பலபூதம்
ஆவினில் ஐந்துங்கொண்டு ஆட்டுகந்தான்
அடங்கார் மதில்மூன்றும்
ஏவினை எய்துஅழித்தான் கழலே
பரவா எழுவோமே.

தெளிவுரை : சிவபெருமான், மன்னுயிர்களின் தீய வினைகளைத் தீர்த்து அருள்பவர்; திருநாரையூர் என்னும் தலத்தில் மேவுபவர்; பூக்களை மாலையாகத் தொடுத்துச் சடை முடியில் புனைபவர்; பூத கணங்கள் புடை சூழ விளங்குபவர்; பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தைப் பூசையாக ஏற்று மகிழ்பவர். அப்பெருமான், அடங்கி நிற்காது திரிந்து தீமை செய்த மூன்று அசுரர்களுடன், அவர்களுடைய கோட்டைகளும் எரிந்து சாம்பலாகுமாறு, அம்பு தொடுத்து அழித்தவர். அவருடைய திருக்கழலைப் பரவிப் போற்றி நலம் பெறுவோமாக.

1092. மாயவன் சேயவன் வெள்ளியவன்
விடம்சேரு மைமிடற்றன்
ஆயவ னாகியொர் அந்தர மும்அவன்
என்று வரையாகம்
தீயவன் நீரவன் பூமியவன்
திருநாரை யூர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர் மேல்
வினையாயின வீடுமே.

தெளிவுரை : ஈசன், மறைந்து நிற்கும் தன்மை உடையவர்; மிகத் தொலைவிலும் விளங்குபவர்; பேரொளியாய்த் திகழ்பவர்; நஞ்சினை மிடற்றில் தேக்கிக் கறை விளங்குமாறு திருக்காட்சி நல்கி, நீலகண்டன் ஆகியவர்; உயர்ந்த வேள்வி ஆகியவர்; நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்கள் ஆகியவர். திருநாரையூரில் மேவும் அப் பெருமானைத் தொழுபவர்களுடைய வினை யாவும் தீரும்.

1093. துஞ்சிருள் ஆடுவர் தூமுறுவல்
துளங்கும் உடம்பினராய்
அஞ்சுடர் ஆரெரி ஆடுவர்ஆர்
அழலார் விழிக்கண்
நஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர்
நலன் ஓங்கு நாரையூர்
எம்சிவ னார்க்கு அடி மைப்படு வார்க்கு
இனி இல்லை ஏதமே.

தெளிவுரை : சிவபெருமான், நள்ளிருளில் நடம் புரிபவர்; தூய முறுவல் கொண்டு அசைக்கும் திருமேனியராய், அழகிய சுடரானது நன்கு எரியுமாறு கைகளை வீசி ஆடுபவர்; நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; நலம் பெருகச் செய்யும் நாரையூரில் மேவும் எமது சிவனாகிய அப் பெருமானுக்கு அடிமைப்படுபவர்களுக்கு எவ்விதமான துன்பமும் இல்லை.

1094. பொங்கு இளங்கொன்றையினார் கடலில்
விடம்உண்டு இமையோர்கள்
தங்களை ஆரிடர் தீரநின்ற
தலைவர் சடைமே லோர்
திங்களை வைத்து அனல் ஆடலினார்
திரு நாரை யூர்மேய
வெங்கனல் வெண்ணீறு அணியவல்லார்
அவரே விழுமியரே.

தெளிவுரை : சிவபெருமான், பூரித்து விளங்கும் கொன்றை மலரைச் சூடியவர்; பாற்கடலில் தோன்றிய விடத்தை உட்கொண்டு தேவர்களின் பெருந்துயரைத் தீர்த்த தலைவர்; சடை முடியின் மீது சந்திரனைத் தரித்து நெருப்பைக் கையில் கொண்டு ஆடுபவர். திருநாரையூரில் வீற்றிருக்கும், திருவெண்ணீறு அணிந்த அப்பெருமானே யாவற்றிலும் விழுமியர் ஆவார். தேவர் தம் துயர் தீர்த்த தலைவரும் விழுமியரும் ஆகிய ஈசனைத் தொழுது ஏத்துதல் நலம் பயக்கும் என்று உணர்த்துதல் ஆயிற்று.

1095. பாருறு வாய்மையினார் பரவும்
பரமேட்டி பைங்கொன்றைத்
தாருறு மார்புடையான் மலையின்
தலைவன் மலை மகளைச்
சீருறு மாமறுகிற் சிறைவண்டு
அறையும் திரு நாரை
யூர்உறை எம்இறைவர்க்கு இவை
ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே.

தெளிவுரை : சிவபெருமான், பூவுலகத்தில் மெய்யுணர்வு உடையவர்களால் பரவி ஏத்தப் பெறும் பரம் பொருள்; கொன்றை மாலையை மார்பில் தரித்தவர்; கயிலை மலையின் நாதனாக விளங்குபவர்; உமாதேவியைச் சிறப்பாக ஏற்றுப் பாகமாகக் கொண்டு திகழ்பவர். சிறகுகளை உடைய வண்டு, வீதிகளில் உள்ள பூஞ்செடிகளில் வட்டம் இட்டு, ரீங்காரம் செய்யும் திருநாரையூரில் வீற்றிருப்பவர், எம் இறைவனாகிய அப்பெருமான். அவர் ஏற்று விளங்கும் பொருள்கள், ஒன்றுக்கொன்று ஒவ்வாதனவாகும்.

1096. கள்ளி யிடுதலை யேந்துகையர்
கரிகாடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண ஆடைதன்மேல்
மிளிர் ஆடரவு ஆர்த்து
நள்ளிருள் நட்டமது ஆடுவர்
நன்னலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில் எம்மேல்வரு
வல்வினை யாயின ஓடுமே.

தெளிவுரை : சிவபெருமான், கள்ளிச் செடிகள் விளங்கும் மயானத்தில் மண்டை ஓட்டைத் தரித்திருப்பவர்; கோவண ஆடை உடையவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; நள்ளிருளில் நடம் புரிபவர். அப்பெருமான், நல்ல நலன்களை ஓங்கச் செய்யும் நாரையூரில் வீற்றிருப்பவர். அவரை நினைத்த அளவில் கொடிய வினைகள் யாவும் விலகி ஏகும்.

1097. நாமம் எனப்பல வும்உடையான்
நலன்ஓங்கு நாரையூர்
தாமொம் எனப் பறையாழ் குழல்
தாளார் கழல் பயில
ஈமவிளக்குஎரி சூழ்சுடலை
இயம்பும் இடுகாட்டில்
சாமம் உரைக்கநின்று ஆடுவானும்
தழலாய் சங்கரனே.

தெளிவுரை : சிவபெருமான், பல திருநாமங்களைக் கொண்டு விளங்குபவர்; நலம் திகழும் நாரையூரில் பறை, யாழ், குழல் ஒலிக்க, மயானத்தில் எரியும் கொள்ளியை விளக்காகக் கொண்டு நடம் புரிபவர்; அப்பெருமான், நெருப்பு வண்ணத்தில் மேவும் சங்கரனே.

1098. ஊனுடைவெண் தலைகொண்டு உழல்வான்
ஒளிர்புன் சடைமேலோர்
வானிடை வெண் மதிவைத்து உகந்தான்
வரிவண்டு யாழ்முரலத்
தேனுடைமா மலரன்னம் வைகும்
திருநாரை யூர்மேய
ஆனிடை ஐந்து உகந்தான் அடியே
பரவா அடைவோமே.

தெளிவுரை : சிவபெருமான், மண்டை ஓட்டைக் கரத்தில் ஏந்தித் திரிபவர்; ஒளி கொண்டு திகழும் சடை முடியின் மீது வெண்மையான சந்திரனைத் தரித்தவர்; வரிவண்டு யாழ் போன்று இசைத்து ரீங்காரம் செய்யவும், தேன் மணம் கமழும் மலரில் அன்னம் வைகவும் விளங்கும் திருநாரையூரில் மேயவர். பசுவினிட மிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தை விரும்பிப் பூசனை கொள்ளும் அப் பெருமானைப் பரவி, நற்கதியை அடைவோமாக.

1099. தூசுபுனைதுவ ராடை மேவும்
தொழிலார் உடம்பினிலுள்
மாசு புனைந்துஉடை நீத்தவர்கண்
மயல்நீர்மை கேளாதே
தேசுடை யீர்கள் தெளிந்தடைமின்
திருநாரை யூர்தன்னில்
பூசுபொடித் தலைவர் அடியார்
அடியே பொருத்தமே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கின்ற சொற்கள் மயல் கொண்டவை. அவற்றை ஏற்க வேண்டாம். மெய்யுணர்வுடைய அன்பர்களே ! திருவெண்ணீறு பூசி விளங்குகின்ற சிவபெருமான் திருநாரையூரில் வீற்றிருப்பவர். ஆங்கு சென்று அடைவீர்களாக. அப்பெருமான் திருவடியே பொருத்தமான நலன்களை அளிக்க வல்லது. அதனை நாடுவீராக.

1100. தண்மதி தாழ் பொழில்சூழ் புகலித்
தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர் சடையான் உறையும்
திருநாரை யூர்தன்மேல்
பண்மதியாற் சொன்ன பாடல் பத்தும்
பயின்றார் வினைபோகி
மண்மதியாது போய்வான் புகுவர்
வானோர்எதிர் கொளவே.

தெளிவுரை : திங்கள் தவழும் பொழில் சூழ்ந்த புகலியில் விளங்கும் தமிழ் ஞானசம்பந்தன், ஒளி மிக்க சந்திரனைச் சூடிய சடை முடியுடைய ஈசன் உறையும் திருநாரையூரில் மீது பண்ணிசையின் ஞானம் பெருகச் சொன்ன இத் திருப்பதிகத்தை  ஓதுபவர்கள், வினை யாவும் நீங்கப் பெற்றவராவார்கள்; இம் மண்ணுலகத்தின் வாழ்க்கையானது நிலையற்றதென உணர்ந்து தேவர்கள் எதிர் கொண்டு அழைக்க, வானுலகை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

361. திருவலம்புரம் (அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1101. கொடியுடை மும்மதில் ஊடுருவக்
குனிவெஞ்சிலை தாங்கி
இடிபட எய்த அமரர் பிரான்
அடியார் இசைந்து ஏத்தத்
துடிஇடை யானையொர் பாகமாகத்
துதைந்தார் இடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும்
வலம்புர நன்னகரே.

தெளிவுரை : கொடி கட்டிப் பறந்த மூன்று கோட்டை மதில்களும் சிதைந்து அழியுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு அம்பு தொடுத்து எரித்தவர், சிவபெருமான். அப்பெருமான் அடியவர்கள் ஏத்தி வணங்க பொருந்த ஏற்று விளங்குகின்ற இடமாவது, எருமைகள் அழகிய வயல்களில் படியும் வலம்புர நன்னகரே.

1102. கோத்தகல் லாடையும் கோவணமும்
கொடுகொட்டி கொண்டு ஒருகைத்
தேய்த்தன்று அநங்கனைத் தேசழித்துத்
திசையார் தொழுது ஏத்தக்
காய்த்தகல் லாலதன் கீழ் இருந்த
கடவுள் இடம் போலும்
வாய்த் முத் தீத் தொழில் நான்மறையோர்
வலம்புர நன்னகரே.

தெளிவுரை : சிவபெருமான், காவி ஆடை யுடையவர்; கோவணமும் கொண்டு மேவுபவர்; ஒரு கரத்தில் கொடு கொட்டி என்னும் வாத்தியத்தைக் கொண்டு வாசிப்பவர்; மன்மதனுடைய உடலை அழித்தவர்; சனகாதி முனிவர்கள் தொழுது ஏத்தக் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் அமர்ந்திருப்பது அறப் பெருளை உரைத்தருளியவர். அக்கடவுள் வீற்றிருக்கும் இடமாவது, மூவகையான தீயை வளர்க்கும் நான்மறையோர் மேவும் வலம்புர நன்னகரே.

1103. நொய்யதொர் மான்மறி கைவிரலின்
நுனைமேல் நிலையாக்கி
மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி
விரிபுன் சடைதாழ
மையிருஞ் சோலை மணங்கமழ
இருந்தார் இடம் போலும்
வைகலும் மாமுழவம் அதிரும்
வலம்புர நன்னகரே.

தெளிவுரை : ஈசன், மென்மையான மான் கன்றைக் கையின் நுனியில் ஏந்தி, நெருப்பு வண்ணம் போன்ற திருமேனியில் திருவெண்ணீறு பூசி, விரிந்து பரவும் சடை தாழ விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, நாள்தோறும் விழா பெருக, முழவு அதிரும் சிறப்புடையதாய், அடர்ந்த சோலையின் மணம் கமழும் வலம்புர நன்னகரே.

1104. ஊனமர் ஆக்கை உடம்பு தன்னை
உணரிற் பொருளன்று
தேனமர் கொன்றையி னான்அடிக்கே
சிறுகாலை யேத்துமினோ
ஆன்அமர் ஐந்தும் கொண்டு ஆட்டுஉகந்த
அடிகள் இடம் போலும்
வானவர் நாள்தொறும் வந்துஇறைஞ்சும்
வலம்புர நன்னகரே.

தெளிவுரை : ஊன் பெருகி மேவும் யாக்கை எனச் சொல்லப்படும் இவ்வுடம்பை, நன்கு ஆயந்து உணர்ந்தால், இது நிலையுடைய பொருள் ஆகாது என விளங்கும். எனவே, இவ்வுடலைப் பேணும் தன்மையில் வாழ்க்கையைக் கருதாது, தேன் மணம் கமழும் கொன்றை மலர் சூடிய சிவபெருமானின் திருவடியையே இளமை முதற் கொண்டு ஏத்துவீராக. அப்பெருமான், பசுவிலிருந்து பெறப்படும் நஞ்ச அவ்வடிகள் மேவும் இடமாவது, தேவர்கள் நாள்தோறும் வணங்கித் துதிக்கின்ற வலம்புர நன்னகரே.

1105. செற்று எறியும் திரையார் கலுழிச்
செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
அற்றறியாது அனல்ஆடு நட்டம்
அணியார் தடங்கண்ணி
பெற்றறிவார் எருதுஏற வல்ல
பெருமான் இடம் போலும்
வற்றறியாப் புனல்வாய்ப்புஉடைய
வலம்புர நன்னகரே.

தெளிவுரை : அலை வீசும் கங்கையைச் சிவந்த சடை முடியின் மீது வைத்த சிவபெருமான், முடிவு அறியாத அனலைக் கைக் கொண்டு நள்ளிருளில் நடனம் புரிபவர்; அணி கொண்டு திகழும் உமாதேவியை ஒருபால் கொண்டு திகழ்பவர்; இடப வாகனத்தில் ஏறி விளங்குபவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது நீர் வளம் பெருகி மேவும் வலம்புர நன்னகரே.

1106. உண்ணவண் ணத்துஒளி நஞ்சம்உண்டு
உமையோடு உடனாகிச்
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச்
சுடர்ச் சோதி நின்றிலங்கப்
பண்ணவண் ணத்தன பாணி செய்யப்
பயின்றார் இடம் போலும்
வண்ணவண் ணப்பறை  பாணியறா
வலம்புர நன்னகரே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய வண்ணம் பெருகும் நஞ்சினை உண்டு நீலகண்டர் ஆகியவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு வெண்ணீற்றைத் திருமேனியிப் பூசிச் சுடர்விடும் சோதி வண்ணமாய் விளங்குபவர்; பண்ணின் இசை வண்ணம் பெருகப் பாடி ஆடுபவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வண்ண வண்ணமான வாத்திய வகைகளாகிய முழவு, பறை முதலானவை எஞ்ஞான்றும் விளங்கும் வலம்புர நன்னகரே.

1107. புரிதரு புன்சடை பொன்தயங்கப்
புரிநூல புரண்டிலங்க
விரைதரு வேழத்தின் ஈருரி ÷õல்
மேல்மூடி வேய்புரைதோள்
அரைதரு பூத்துகில் ஆரணங்கை
அமர்ந்தார் இடம் போலும்
வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா
வலம்புர நன்னகரே.

தெளிவுரை : சடை முடியானது பொன்போன்று ஒளிர, முப்புரி நூல் திருமார்பில் புரள, யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு விளங்குபவர், சிவபெருமான். அவர், மூங்கிலைப் போன்ற மெல்லிய தோளுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவர். அப்பெருமான் உறையும் இடமாவது, மலை போன்ற உயர்ந்த புகழ் விளங்கும் அடியவர்தம் வாழும் வலம்புர நன்னகரே.

1108.தண்டுஅணை தோள்இருபத்தினொடும்
தலைபத்து உடையானை
ஒண்டுஅணை மாதுஉமைதான்நடுங்க
ஒருகால் விரல்ஊன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல
விகிர்தர்க்கு இடம் போலும்
வண்டு அணை தன்னொடு வைகுபொழில்
வலம்புர நன்னகரே.

தெளிவுரை : தண்டு முதலான ஆயுதங்களை உடைய இருபது தோளும் பத்துத் தலையும் உடைய இராவணன், கயிலையைப் பேர்த்த போது, உமாதேவி வெருவி நடுங்கி நிலையில், சிவபெருமான், தனது திருப்பாத விரல் ஒன்றினால் ஊன்றி அவ்வரக்கனது செருக்கினை அடக்கிப் பின்னர் அருளும் வகையில், வாளும் வாழ்நாளும் அளித்தார்.

1109. தாருறு தாமரை மேலயனும்
தரணி யளந்தானும்
தேர்வுஅறி யாவகை யால்இகலித்
திகைத்துத் திரிந்தேத்தப்
பேர்வுஅறி யாவகை யால்நிமிர்ந்த
பெருமான் இடம்போலும்
வார்உறு சோலை மணம்கமழும்
வலம்புர நன்னகரே.

தெளிவுரை : தாமரை மலரின் மீது விளங்கும் பிரமனும், உலகத்தை அளந்த திருமாலும் அறியாத வகையால் அயர்ந்தும் திகைத்தும் ஏத்தி நிற்கச் சோதி மயமாய் ஓங்கிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, நீண்ட சோலையின் மணம் கமழும் வலம்புர நன்னகரே.

1110. காவிய நற்றுவர் ஆடையினார்
கடுநோன்பு மேல்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றறியாப்
பழந் தொண்டர் உள்ளுருக
ஆவியுள் நின்றருள் செய்யவல்ல
அழகர் இடம்போலும்
வாவியின் நீர்வயல் வாய்ப்புடைய
வலம்புர நன்னகரே.

தெளிவுரை : சாக்கியரும் சமணரும் கடுமையான விரதத்தைச் சொல்பவர்கள். அதனை ஏற்காது விளங்குபவர் பழமையான திருத்தொண்டர்கள். அவர்கள், உள்ளம் உருகி ஏத்த, உயிரிற் கலந்து நின்று அருள் புரிபவர், சிவபெருமான். அத்தகைய அழகராகிய ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, குளங்களிலிருந்து வயல்களுக்குப் பெருகிச் செல்லும் நீர் வளம் உடைய வலம்புர நன்னகரே.

1111. நல்லியல் நான்மறை யோர்புகலித்
தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியந் தோலுடை யாடை யினான்
வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்தும்சொல்ல
வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றணுகிச்
சிவலோகம் சேர்வாரே.

தெளிவுரை : ஆசார சீலங்களைக் கடைப் பிடித்து நன்கு ஒழுகுகின்ற வேத விற்பன்னர்கள் விளங்கும் புகலியின் தமிழ்ஞானசம்பந்தன், புலித் தோலை ஆடையாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருக்கும் வலம்புர நன்னகரைச் சொல்லிய இத் திருப்பதிகத்தை ஓது வல்லவர், தொல்வினை நீங்கப் பெறுவர். அவர்கள் ஈசன் திருவடியைச் சார்ந்து, சிவலோகத்தில் பொருந்தி விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

362. திருப்பரிதி நியமம் (அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1112. விண்கொண்ட தூமதி சூடிநீடு
விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப்
பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொடு ஏர்கவர்ந்த
கள்வர்க்கு இடம் போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும்
பரிதிந் நியமமே.

தெளிவுரை : சிவபெருமான், பிறைச் சந்திரனைச் சூடி மென்மையான சடை முடி தாழ, உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு திகழும் மார்பில் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; பாராட்டுவதற்கு ஒவ்வாத பிச்சையை ஏற்றுக் கண்ணைக் கவரும் எழில் கொண்ட வடிவினராய் வந்து என்னைக் கவர்ந்தவர். அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வண்டினம் பண் இசைத்து மகிழ்ந்து திரியும் பரிதி நியமமே.

1113. அரவொலி வில்லொலி அம்பின்ஒலி
அடங்கார் புரமூன்றும்
நிரவ வல்லார் நிமிர்புன் சடைமேல்
நிரம்பா மதிசூடி
இரவில் புகுந்துஎன் எழில்கவர்ந்த
இறைவர்க்கு இடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும்
பரிதிந் நியமமே

தெளிவுரை : வாசுகி என்னும் அரவம் நாணாக மேவ அதன் ஒலியும்; மேரு என்னும் மலை வில்லாகத் திகழ அதன் ஒலியும்; திருமால், வாயு, அக்கினி ஆகிய மூவரும் அம்பாக விளங்க அவ்வொலியும், மேம்பட்டு ஒலிக்க, அடங்கி நிற்காத மூன்று அசுரர்களின் புரங்களையும் எரித்து சாம்பலாக்கிய வல்லமை கொண்டவர், சிவபெருமான். அவர், சடைமுடியின் மீது பிறைச் சந்தினைச் சூடி, என் எழிலைக் கவர்ந்த இறைவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பரவிப் போற்றும் அடியவர்களின் வினை தீர்க்கும் பரிதி நியமமே.

1114. வாள்முக வார்குழல் வாள்நெடுங்கண்
வளைத்தோள் மாதுஅஞ்ச
நீள்முக மாகிய பைங்களிற்றின்
உரிமேல் நிகழ்வித்து
நாண்முகம் காட்டி நலம்கவர்ந்த
நாதர்க்கு இடம் போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும்
பரிதிந் நியமமே.

தெளிவுரை : ஒளி மிகுந்த திருமுகமும், நீண்ட நறுங் கூந்தலும் ஒளி மிக்க அகன்ற விழியும் சங்கு போன்ற கழுத்தும் விளங்க மேவும் உமாதேவி அஞ்சுமாறு, நீண்ட துதிக்கையுடைய யானையின் தோலை உரித்து அதன் தோலைப் போர்த்திக் கொண்டவர், சிவபெருமான். அப்பெருமான், நான் நாணம் கொண்டு விளங்குமாறு என்னைக் கவர்ந்தவர்; என்னுடைய நலத்தை இழந்து, அவரையே பற்றுமாறு செய்தவர். அத் தலைவர் வீற்றிருக்கும் இடமாவது, வண்டினம் பண் இசை பாடும், பரிதி நியமமே.

1115.வெஞ்சுரம் சேர்விளை யாடல்பேணி
விரிபுன் சடைதாழத்
துஞ்சிருள் மாலையும் நண்பகலும்
துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும்பு ஆர்குழல் சோரஉள்ளம்
கவர்ந்தார்க்கு இடம் போலும்
பஞ்சுரம் பாடிவண்டி யாழ்முரலும்
பரிதிந் நியமமே.

தெளிவுரை : மயானத்தில் நின்று ஆடலை விரும்பிய சிவபெருமான், சடை முடி விரிந்து பரவ, இரவிலும், மாலையிலும், நண்பகலிலும் கபாலம் ஏந்திப் பலி ஏற்றவர். அவர் பூதகணங்கள் சூழ விளங்குபவர்; என் உள்ளத்தைக் கவர்ந்தவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, வண்டினம் யாழ் போன்று பண் இசை முரலும் பரிதி நியமமே.

1116. நீர்புல்கு புன்சடை நின்றிலங்க
நெடுவெண் மதிசூடித்
தார்புல்கு மார்பில் வெண் ணீறணிந்து
தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாயல் எழில் கவர்ந்த
இறைவர்க்கு இடம் போலும்
பார்புல்கு தொல்புக ழால் விளங்கும்
பரிதிந் நியமமே.

தெளிவுரை : ஈசன், மென்மையான சடையில், கங்கையும், வெண்மதியும் தரித்தவர்; மலர் மாலை திகழும் திருமார்பில், திருவெண்ணீறு அணிந்தவர்; பிரம கபாலம் ஏந்திப் பலி ஏற்பவர். அப்பெருமான் எழில் மேவும் வடிவம் கொண்டு என்னைக் கவர்ந்தவர். அவ் இறைவனுக்கு உரிய இடமாவது, தொன்மையான புகழைப் பூ வுலகில் கொண்டு விளங்கும், பரிதி நியமமே.

1117. வெங்கடுங் காட்டகத்து ஆடல்பேணி
விரிபுன் சடைதாழத்
திங்கள் திருமுடிமேல் விளங்கத்
திசையார் பலிதேர்வார்
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த
சைவர்க்கு இடம் போலும்
பைங்கொடி முல்லை படர்புரவிற்
பரிதிந் நியமமே.

தெளிவுரை : ஈசன், மயானத்தில் நடம் புரிந்து, சடை முடியானது விரிந்து விளங்கப் பிறைச் சந்திரனைச் சூடியவர்; எல்லாத் திசைகளிலும் சென்று பலி ஏற்றுத் திரிந்தவர்; என் எழிலைக் கவர்ந்த சைவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது முல்லைக் கொடி பரவும் பரிதி நியமமே.

1118. பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப்
பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி
மனைகள் பலிதேர்வார்
இறைவனை சோர எழில்கவர்ந்த
இறைவர்க்கு இடம் போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும்
பரிதிந் நியமமே.

தெளிவுரை : ஈசன், பிறைச் சந்திரனைச் சூடிய சடை முடியுடையவர்; பெருமையுடன் ஒளி திகழும் மழுப் படையுடையவர்; வேதம் ஓதுபவர்; திருவெண்ணீறு பூசி மனைகள் தோறும் சென்று பலி ஏற்பவர். அப்பெருமான் என் கைவளை நெகிழ்ந்து விழுமாறு என் எழிலைக் கவர்ந்த இறைவர். அவர் வீற்றிருக்கும் இடமாவது பறையொலியும் சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் மலிந்து மேவும் பரிதி நியமமே.

1119. ஆசடை வானவர் தானவரோடு
அடியார் அமர்ந்து ஏத்த
மாசடை யாதவெண் ணீறுபூசி
மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோரஉள்ளம்
கவர்ந்தார்க்கு இடம் போலும்
பாசடைத் தாமரை வைகு பொய்கைப்
பரிதிந் நியமமே.

தெளிவுரை : பற்றுக் கேடாடாக விளங்குகின்ற தேவர்களும் அசுரர் - வித்தியாதரர்களும் உடன் திகழ, அடியவர்கள் அமர்ந்து ஏத்தி வழிபட, மாசு நீக்கும் திருவெண்ணீற்றைப் பூசி மனைகள் தோறும் பலி ஏற்றுத் திரிபவர், சிவபெருமான். அவர் மணிகள் பதிக்கப் பெற்ற மேகலை நழுவி விழுமாறு என்னைத் தளர்ச்சியுறச் செய்து உள்ளத்தைக் கவர்ந்தவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, பசுமை திகழும் இலையும் தாமரையும் விளங்கும் பொய்கையுடைய பரிதி நியமமே.

1120. நாடினர் காண்கிலர் நான்முகனும்
திருமால் நயந்து ஏத்தக்
கூடலர் ஆடலர் ஆகிநாளும்
குழகர் பலிதேர்வார்
ஏடலர் சோர எழில்கவர்ந்த
இறைவர்க்கு இடம் போலும்
பாடலர் ஆடல ராய்வணங்கும்
பரிதிந் நியமமே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியும் காண முடியாது அயர்ந்து நிற்க, ஆடுகின்றவராய் மேவிய அழகராகிய சிவபெருமான், கபாலம் ஏந்திப் பலி ஏற்றவர், அவர் என் எழிலைக் கவர்ந்த இறைவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, அடியவர்கள் பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்ந்து ஆடல் மேவி வணங்கும் பரிதி நியமமே.

1121. கல்வளர் ஆடையர் கையில் உண்ணும்
கழுக்கள் இழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா
சுடுநீ றதுஆடி
நல்வளை சோர நலங்கவர்ந்த
நாதர்க்கு இடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப்
பரிதிந் நியமமே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் சொற்களை வளம் உடையது என நினைக்க வேண்டாம். சிவபெருமான், திருவெண்ணீற்றை நன்கு குழையப் பூசி வளையல் சோர்ந்து விழுமாறு என் எழிலைக் கவர்ந்த தலைவர் ஆவார். அவர் வீற்றிருக்கும் இடமாவது, முல்லை வனம் திகழும் பரிதி நியமமே. அப் பெருமானை ஏத்துவீராக.

1122. பையர வம்விரி காந்தள்விம்மு
பரிதிந் நியமத்துத்
தையலொர் பாகம் அமர்ந்தவனைத்
தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்த பத்தும்
பரவிப் புகழ்ந்து ஏத்த
ஐயுற வில்லை பிறப்பறுத்தல்
அவலம் அடையாவே.

தெளிவுரை : காந்தள் மலர் திகழும் பரிதி நியமத்தில் உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருக்கும் சிவபெருமானைத் தமிழ் ஞானசம்பந்தன், பொய்மை அற்றவாறு ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓதி ஏத்துபவர்களுக்குப் பிறவாமை என்னும் பெரும் பேறு வாய்க்கப் பெறும் என்பதில் ஐயம் இல்லை. இம்மையில் அவர்களுக்குத் துன்பம் இல்லை.

திருச்சிற்றம்பலம்

363. திருக்கலிக்காமூர் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அன்னப்பன்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1123. மடல்வரை யின்மது விம்முசோலை
வயல்சூழ்ந்து அழகாரும்
கடல்வரை யோதம் கலந்து முத்தம்
சொரியும் கலிக்காமூர்
உடல்வரை இன்னுயிர் வாழ்க்கையாய
ஒருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும்
இறைவன் அருளாமே.

தெளிவுரை : அகன்ற பூ இதழ்களும், தேன் மணம் கமழும் சோலைகளும் பெருகி, வயல் சூழ்ந்து அழகிய கடலின் ஓதம் கலந்து, முத்துக்களைச் சொரியும் வளப்பம் உடையது கலிக்காமூர். ஆங்கு வீற்றிருக்கும் சிவபெருமான், உடலின்கண் உள்ள உயிரில் பொருந்தி விளங்கும் தன்மையர். அப் பெருமானுடைய திருக்கழலை ஏத்தி வணங்க, இடர் தரும் வினையானது தொடராது; விலகும். அத்தகைய பாங்கில் இறைவன் திருவருள் கைகூடும்.

1124. மைவரை போல்திரை யோடுகூடிப்
புடையே மலிந்து ஓதம்
கைவரை யால்வளர் சங்கம் எங்கும்
மிகுக்கும் கலிக்காமூர்
மெய்வரை யான்மகள் பாகன்றன்னை
விரும்ப உடல்வாழும்
ஐவரை ஆசறுத்து ஆளும்என்பர்
அதுவும் சரதமே.

தெளிவுரை : கரிய மலை போன்று உயர்ந்து எழும் அலைகளின் வழியாகச் சேரும் சங்குகளின் வளப்பம் உடையது கலிக்காமூர். ஆங்கு எழுந்தருளியுள்ள ஈசன், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப் பெருமானை விரும்பி  ஏத்த, ஐம்புலன்களால் உண்டாகும் குற்றங்கள் விலகும்.

1125. தூவிய நீர்மலர் ஏந்திவையத்
தவர்கள் தொழு தேத்தக்
காவியி னேர்விழி மாதர்என்றும்
கவினார் கலிக்காமூர்
மேவிய ஈசனை எம்பிரானை
விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி
அமரர் பெருமானே.

தெளிவுரை : ஈசனைத் தூய நீரும் மலரும் கொண்டு மண்ணுலகத்தவர் தொழுது ஏத்தவும், மாதர்கள் போற்றித் துதிக்கவும் எழில் கொண்டு விளங்குவது, கலிக்காமூர். அப் பெருமானை விரும்பி ஏத்துபவர் பால் விளங்கித் திகழும் அவர், ஆதிமூர்த்தியாய் விளங்கும் தேவர் பெருமான், ஆவார்.

1126. குன்றுகள் போல்திரை யுந்திஅந்தண்
மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா அம்மனைசூழ்
கவினார் கலிக்காமூர்
என்றுணர் ஊழியும் வாழும்எந்தை
பெருமான் அடி யேத்தி
நின்றுணர் வாரை நினையகில்லார்
நீசர் நமன்தமரே.

தெளிவுரை : குன்றுகளைப் போன்ற உயர்ந்த அலைகளை வீசும் கடலிலிருந்து மணிகளைக் கொண்டு வந்து சேர்க்கவும், எருமையின் கன்றுகள் சேர்ந்து விளங்கும் வளப்பமும் மிக்கது கலிக்காமூர் என உணர்வாயாக. ஆங்கு, ஊழிக் காலத்திலும் வீற்றிருக்கும் எந்தையாகிய சிவபெருமான் திருவடிக் கமலத்தை ஏத்தி நின்று வழிபடும் அடியவர்களை ஏத்துக அவ்வாறு ஏத்தாதவர்கள் கீழ்மக்கள். அத்தகையோர், இம்மண்ணுலகில் பிறப்பும் இறப்பும் கொண்டு உழலுபவர்கள் ஆவர்.

1127. வானிடை வாள்மதி மாடம்தீண்ட
மருங்கே கடலோதம்
கானிடை நீழலிற் கண்டல்வாழும்
கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்துஉகந்து ஆடினானை
அமரர் தொழுதேத்த
நானடை வாம்வணம் அன்புதந்த
நலமே நினைவோமே.

தெளிவுரை : சந்திரனைத் தொடுகின்ற உயர்ந்த மாடங்களும், கடலின் ஓதம் பெருகும் சோலைகளில் தாழை மணம் கமழவும் விளங்குகின்ற பதி, கலிக்காமூர். ஆங்கும் எழுந்தருளியுள்ள ஈசன், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தைப் பூசைப் பொருளாக ஏற்று ஆடியவர்; அமரர்கள் தொழுது ஏத்த, நான் அடைந்த நலன்களைப் போன்று அன்பு செய்து அனைவருக்கும் அருள்பவர். அப்பெருமானின் இத்தகைய கருணையை ஏத்திப் பரவுவோமாக.

1128. துறைவளர் கேதகை மீதுவாசம்
சூழ்வான் மலி தென்றல்
கறைவள ருங்கடல் ஓதம் என்றும்
கலிக்கும் கலிக்காமூர்
மறைவள ரும்பொருள் ஆயினானை
மனத்தால் நினைந்து ஏத்த
நிறைவன ரும்புகழ் எய்தும்வாதை
நினையா வினைபோமே.

தெளிவுரை : கடற்கரைச் சோலைகளில் விளங்குகின்ற தாழையில் தென்றல் படிந்து மணத்தைக் கொண்டு சேர்க்கும் தன்மையுடைய கலிக்காமூரில், வேதங்களால் ஏத்தப் பெறும் சிவபெருமான், விள்கி மேவுபவர். அப் பெருமானை நினைத்து வணங்க நிறை புகழ் வளரும்; நம்மை வருத்தும் துன்பம் எதுவும் இல்லை; வினை யாவும் விலகும்.

1129. கோலநன் மேனியின் மாதர்மைந்தர்
கொணர்மங் கலியத்திற்
காலமும் பொய்க்கினும் தாம்வழுவாது
இயற்றும் கலிக்காமூர்
ஞாலமும் தீவளி ஞாயிறாய
நம்பன் கழலேத்தி
ஓலம் இடாதவர் ஊழியென்றும்
உணர்வைத் துறந்தாரே.

தெளிவுரை : அழகிய மேனியுடைய மகளிரும் ஆடவரும் பூசைக்குரிய மங்கலப் பொருள்களை வழுவாது கொண்டு வந்து சேர்த்துப் பூசை நடத்தும் பெருமை உடையது கலிக்காமூர் என்னும் பதியாகும். ஆங்கு வீற்றிருக்கும் சிவபெருமான், நிலம், நெருப்பு, காற்று, சூரியன் மற்றும் சந்திரன், நீர், ஆகாயம், உயிர் ஆகிய நம்பர். அப் பெருமான் திருக்கழலை ஏத்தி, அரநாமத்தை ஓதி உரைக்காதவர்களுக்கு எந்தக் காலத்திலும் சிவஞானம் கைவரப் பெறாது. இது, அரநாமத்தை ஓதி உரைக்க சிவஞானம் கைகூடும் என உணர்த்தப் பெற்றது.

1130. ஊரா வந்தலை நீள்முடியான்
ஒலிநீர் உலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும்
பதியாம் கலிக்காமூர்
தேரர வல்குல்அம் பேதையஞ்சத்
திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாதம்
உடையான் இடமாமே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தைச் சடை முடியின் மீது திகழ வைத்து, உலகம் யாவையும் ஆட்சி கொண்டு இயக்குபவராய் அருள் புரிபவராகி வீற்றிருக்கும் இடமாவது, ஒலிக்கும் கடல் சூழ விளங்கும் பதியாகிய கலிக்காமூர் ஆகும். அது, உமாதேவி அயருமாறு மலையைப் பெயர்த்த இராவணனைத் திருப்பாதத்தால் அழுத்திய அப் பெருமான் விளங்கும் இடமே.

1131. அருவரை யேந்திய மாலு மற்றை
அலர்மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரியுருவாய்
எழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை யான்மகள் பாகன்றன்னை
உணர்வால் தொழுது ஏத்தத்
திருமரு வும்சிதை வில்லைச் செம்மைத்
தேசுண் டவர்பாலே.

தெளிவுரை : கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய திருமாலும், தாமரை மலர் மீது உறையும் பிரமனும் ஆகிய இருவரும் அஞ்சுமாறு சோதி வடிவாய் விளங்கியவர், சிவபெருமான். அவர் மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டு அர்த்தநாரியாய்க் கலிக்காமூர் என்னும் பதியில் வீற்றிருப்பவர். அப் பெருமானை உள்ளம் ஒன்றி ஏத்தித் தொழுபவர்களுக்குச் செல்வம் பெருகும்; எல்லாச் செயலும் இடரின்றிக் கைகூடும்; செம்மையான புகழும் நல்ல ஆரோக்கியமும் உண்டாகும்.

1132. மாசு பிறக்கிய மேனியாரும்
மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும்
அறியார் அவர் தோற்றம்
காசினி நீர்த்திரள் மண்டியெங்கும்
வளமார் கலிக்காமூர்
ஈசனை எந்தைபி ரானைஏத்தி
நினைவார் வினைபோமே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் ஈசனை அறியாதவர். நீர் வளம் மிகுந்த கலிக்காமூர் என்னும் பதியில் மேவும் ஈசன், எமது தந்தையாவார். அவரை ஏந்திப் பரவுபவர்களுக்கு வினையானது விலகிச் செல்லும்.

1133. ஆழியுள் நஞ்சமுது ஆரஉண்டு அன்று
அமரர்க்குள அமுதுஉண்ண
ஊழிதொறும் உளரா அளித்தான்
உலகத்து உயர்கின்ற
காழியுள் ஞானசம் பந்தன் சொன்ன
தமிழாற் கலிக்காமூர்
வாழிஎம் மானை வணங்கி யேத்த
மருவா பிணிதானே.

தெளிவுரை : கடலில் தோன்றிய நஞ்சினை அமுதம் எனப் பொருந்துமாறு உட்கொண்டு, தேவர்களுக்கு அமுதத்தை அளித்து ஊழிக் காலம் தோறும் நிலைத்திருக்குமாறு அருள் செய்தவர், சிவபெருமான். அப் பரமன் விளங்குகின்ற காழியில் மேவும் ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தைக் கொண்டு, கலிக்காமூரில் வீற்றிருக்கும் எம் தலைவராகிய ஈசனை வணங்கி ஏத்தப் பிணி எதுவும் அணுகாது. இது இம்மையில் உடற்பிணியும், மனப் பிணியும் நீக்கி, மறுமையில் முத்திபேற்றுக்குத் தடையாக உள்ள பிறவிப் பிணியும் தீர்க்கும் என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

364. திருவலஞ்சுழி (அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1134. பள்ளமதாய படர்சடை மேற்
பயிலும் திரைக்கங்கை
வெள்ளமது ஆர விரும்பி நின்ற
விகிர்தன் விடையேறும்
வள்ளல் வலஞ்சுழி வாணன் என்று
மருவி நினைந்தேத்தி
உள்ளம் உருக உணருமின்கள்
உறுநோய் அடையாவே.

தெளிவுரை : ஈசன், படர்ந்து மேவும் சடைமுடியின் மீது, அலைகளையுடைய கங்கையைத் தரித்தவர்; இடப வாகனத்தின் மீது ஏறி அமரும் வள்ளல்; வலஞ்சுழியில் விளங்குபவர். அப் பெருமானை உள்ளம் உருகி நின்று ஏத்துக. உறுநோய் உங்களை அணுகாது. இது இப்பிறவியில் வரும் துன்பமும், மீண்டும் உறுகின்ற பிறவி நோயும் நீங்கும் என்பதாம்.

1135. காரணி வெள்ளை மதியம் சூடிக்
கமழ்புன் சடைதன்மேல்
தாரணி கொன்றையும் தண்ணெருக்கும்
தழைய நுழைவித்து
வாரணி கொங்கைநல் வாள்தன்னொடும்
வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த
உவகை அறியோமே.

தெளிவுரை : ஈசன், வானத்திற்கு அணியாக விளங்குகின்ற வெண்மதியை, கமழ்கின்ற சடைமுடியின் மீது சூடியவர்; கொன்றை மாலையும் குளிர்ந்த எருக்கம் பூவும் தழையத் தரித்தவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு வலஞ்சுழியில் மேவியவர். அவர் கபாலம் ஏந்தி, ஊர்தொறும் அழகு பொலியப் பலி ஏற்று மகிழ்ந்த பெருமையை, யாம் அறிந்து கொள்ளுதல் இயலாது.

1136. பொன்னிய லும்திரு மேனிதன் மேல்
புரிநூல் பொலிவித்து
மின்னிய லும்சடை தாழவேழ
உரிபோர்த்து அரவுஆட
மன்னிய மாமறை யோர்கள் போற்றும்
வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு
உயர்வாம் பிணிபோமே.

தெளிவுரை : ஈசன், பொன்னை ஒத்த அழகிய திருமேனியில் முப்புரி நூல் பொலியுமாறு விளங்குபவர்; மின்னலைப் போன்று ஒளி திகழும் சடை முடியைத் தாழுமாறு விரித்திருப்பவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர்; ஆடுகின்ற அரவத்தை அணியாகப் பெற்றிருப்பவர்; புகழ் மிக்க மறையவர்கள் போற்றும் வலஞ்சுழியில் வீற்றிருப்பவர்; அப்பெருமானைச் சிந்தையால் ஏத்தும் அடியவருக்கு, எல்லா மேன்மையும் உண்டாகும்; பிணி யாவும் நீங்கும்.

1137. விடையொரு பால்ஒரு பால்விரும்பு
மெல்லியல் புல்கிய தோர்
சடையொரு பால்ஒரு பால்இடங்கொள்
தாழ்குழல் போற்றிசைப்ப
நடையொரு பால்ஒரு பால்சிலம்பு
நாளும் வலஞ்சுழி சேர்
அடையொரு பால்அடை யாதசெய்யும்
செய்கை அறியோமே.

தெளிவுரை : ஈசனுக்கு, இடப வாகனம் ஒரு பக்கம் விரும்பிச் சேர்ந்த கங்காதேவி ஒரு பக்கம்; விரிந்து பரந்த சடை ஒரு பக்கம்; தாழ்ந்த கூந்தலை உடைய உமாதேவி ஒரு பக்கம்; திருநடை பயிலும் திருவடி ஒரு பக்கம்; திருப்பாதத்தில் மேவும் சிலம்பு ஒரு பக்கம்; வலஞ்சுழியில் அடைந்து வீற்றிருக்கும் பெற்றி ஒரு பக்கம்; இவை யாவும் வேறிடத்தில் சென்றடையாத பெருமையும் ஒரு பக்கம் என விளங்கும் சிறப்பானது யாம் அறிய இயலாதது.

1138. கையம ரும்மழ நாகம் வீணை
கலைமான் மறி யேந்தி
மெய்யம ரும்பொடிப் பூசிவீசும்
குழையார் தரு தோடும்
பையம ரும்அரவு ஆடஆடும்
படர்சடை யார்க்கு இடமாம்
மையம ரும்பொழில் சூழும் வேலி
வலஞ்சுழி மாநகரே.

தெளிவுரை : ஈசன், கையில் மழு, நாகம், வீணை, மான் ஆகியவற்றை ஏந்தியவர்; மெய்யில் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; வீசியாடுகின்ற குழையும் தோடும் காதில் அணிந்தவர்; ஆடுகின்ற அரவத்தை அணிந்து நடனம் புரிபவர். சடை முடியுடன் விளங்கும் அப் பெருமானுக்கு உரிய இடமாவது, நாற்புறமும் வேலி போன்று பொழிலால் சூழப்பட்ட வலஞ்சுழி மாநகரே.

1139. தண்டொடு சூலம் தழைய ஏந்தித்
தையல் ஒருபாகம்
கண்டிடு பெய்வலி பேணிநாணார்
கரியின் உரிதோலர்
வண்டிடு மொய் பொழில் சூழ்ந்தமாட
வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்து நின்ற
தொடர்பைத் தொடர்வோமே.

தெளிவுரை : ஈசன், சூலப் படையை நன்கு பொருந்த ஏந்தி, உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; கபாலம் ஏந்திப் பலி ஏற்றவர; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; வண்டு மொய்க்கும் பொழில் சூழ்ந்த வலஞ்சுழியில் விளங்குபவர். அப்பெருமான், திருத்தொண்டர்களுடன் விளங்கும் அருளை ஏத்தி, அவ்வாறு விளங்குவோமாக. இது, சிவபெருமானுக்கு உரிய அணுக்கத் தொண்டராகும் அருட் குறிப்பை உணர்த்தியதாயிற்று.

1140. கல்லிய லும்மலை அங்கை நீங்க
வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதில் மூன்றும் செற்ற
சுடரான் இடர்நீங்க
மல்லிய லும்திரள் தோள்எம்ஆதி
வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கியேத்தி
இருப்பவர் புண்ணியரே.

தெளிவுரை : ஈசன், மேரு மலையை வில்லாக வளைத்து மூன்று அசுரர்களின் புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர்; திரண்ட தோள் உடைய எம் ஆதியாகி, வலஞ்சுழியில் வீற்றிருந்து அருள் புரிபவர். அப் பெருமானைச் சார்ந்து ஏத்தி வணங்குபவர், புண்ணியரே.

1141. வெஞ்சின வாளரக்கன் வரையை
விறலால் எடுத்தான் தோள்
அஞ்சும் ஒரு ஆறுஇரு நான்கும் ஒன்றும்
அடர்த்தார் அழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதர் என்று
நணுகும் இடம் போலும்
மஞ்சுஉல வும்பொழில் வண்டுகொண்டும்
வலஞ்சுழி மாநகரே.

தெளிவுரை : சிவபெருமான், கொடிய சினத்தையுடைய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, அவனது இருபது தோளும் நெரியுமாறு அடர்த்தவர்; நஞ்சு அருந்திய அழகிய கண்டத்தை உடைய நாதர் அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, உயர்ந்த பொழில் திகழும் வலஞ்சுழி மாநகரே.

1142. ஏடியல் நான்முகன் சீர் நெடுமால்
என்நின்று அவர் காணார்
கூடிய கூர்எரி யாய்நிமிர்ந்த
குழகர் உலகேத்த
வாடிய வெண்டலை கையில் ஏந்தி
வலஞ்சுழி மேயஎம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யும்
சரிதை பலபலவே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியபோது காண்பதற்கு அரியவராகிய பெருஞ்சேதிப் பிழம்பாய் ஓங்கி சிவபெருமான், உலகம் யாவும் ஏத்துமாறு பிரம கபாலம் ஏந்தி வலஞ்சுழியில் மேவி விளங்குபவர். அப் பெருமானைப் போற்றும் தன்மையில் அவர் புரியும் திருவிளையாடல்கள் பலவாகும்.

1143. குண்டரும் புத்தரும் கூறையின்றிக்
குழுவார் உரைநீத்துத்
தொண்டரும் தன்தொழில் பேணநின்ற
கழலான் அழலாடி
வண்டம ரும்பொழில் மல்கு பொன்னி
வலஞ்சுழி வாணன் எம்மான்
பண்டொரு வேள்வி முனிந்து செற்ற
பரிசே பகர் வோமே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் உரைகளை நீக்கித் தொண்டர் போற்றும் தன்மையில் மேவும் ஈசனாகிய வலஞ்சுழி நாதனை ஏத்துவீராக. அப் பெருமான், தக்கனது தீய வேள்வியை முனிந்து அவனை அழித்து நன்மை புரிந்தவர். அதன் பெருமையைப் பகர்வீராக.

1144. வாழியெம் மான்எனக்கு எந்தைமேய
வலஞ்சுழி மாநகர் மேல்
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன
கருத்தின் தமிழ் மாலை
ஆழிஇவ் வையகத்து ஏத்தவல்லார்
அவர்க்கும் தமருக்கும்
ஊழியொருபெரும் இன்பம்ஓர்க்கும்
உருவும் உயர்வாமே.

தெளிவுரை : வாழ வைக்கும் என் தலைவனும் தந்தையுமாகிய ஈசன் மேவிய வலஞ்சுழி மாநகர்மீது, காழியில் விளங்கும் ஞானசம்பந்தன் சொன்ன, கருத்தின் தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை ஏத்த வல்லவரும், அவருடைய இனத்தவரும் இவ்வையகத்தில் பேரின்பம் கொண்டு விளங்குவர்; அழகிய வடிவம் பெறுவர்; ஊழிக் காலத்திலும் நனி விளங்குவர்.

திருச்சிற்றம்பலம்

365. திருநாரையூர் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1145. கடலிடை வெங்கடு நஞ்சம்உண்ட
கடவுள் விடையேறி
உடலிடை யிற்பொடிப் பூசவல்லான்
உமையோடு ஒரு பாகன்
அடலிடை யிற்சிலை தாங்கிஎய்த
அம்மான் அடியார்மேல்
நடலைவி னைத்தொகை தீர்த்துஉகந்தான் இடம்
நாரை யூர்தானே.

தெளிவுரை : கடலிடை தோன்றிய நஞ்சினை உண்ட கடவுள், இடப வாகனத்தில் ஏற்ற திருமேனியில் திருவெண்ணீறு பூசிய ஈசன் ஆவார். அவர், முப்புர அசுரர் களை அடர்த்தபோது, மேருமலையை வில்லாகத் தாங்கிக் கணை தொடுத்து எரித்தவர். அப் பெருமான், அடியவர்களின் துன்பம் தரும் தீய வினைகளைக் களைந்து அருள் புரிந்து வீற்றிருக்கும் இடமாவது, நாரையூரே.

1146. விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம்
விரிபூ மலர்கொன்றை
பெண்ணின் முன் னேமிக வைத்துகந்த
பெருமான் எரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடும்
திருநாரை யூரான்என்று
எண்ணுமின் நும்வினை போகும்வண்ணம்
இறைஞ்சும் நிறைவாமே.

தெளிவுரை : விண்ணில் ஒளிரும் சந்திரனும், நாகமும், கொன்றை மலரும், கங்கையும் சடை முடியின் மீது திகழுமாறு வைத்த மகிழ்ந்த சிவபெருமான், நெருப்பினைக் கையில் ஏந்தி நடம் புரிபவர். தன் அடியவர்களுடன் மேவும் அப் பெருமானை எண்ணி, ஏத்துமின். உங்கள் வினை விலகும்; எல்லா நலன்களும் நிறைந்து விளங்கும்.

1147. தோடுஒரு காதுஒரு காதுசேர்ந்த
குழையான் இழை தோன்றும்
பீடு ஒரு கால்பிரி யாது நின்ற
பிறையான் மறையோதி
நாடொரு காலமும் சேரநின்றதிரு
நாரை யூரானைப்
பாடுமின் நீர்பழி போகும் வண்ணம்
பயிலும் உயர்வாமே.

தெளிவுரை : சிவபெருமான், ஒரு காதில் தோடு அணிந்திருப்பவர்; ஒரு காதில் குழை அணிந்திருப்பவர்; பெருமை குறையாத பிறைச் சந்திரனைத் தரித்திருப்பவர்; மறைகளை ஓதுபவர்; அப்பெருமான், நாடும் காலத்தில் பொருந்தி மேவும் நாரையூரில் விளங்குபவர். அவரைப் போற்றிப் பாடுவீராக. உமது பழி அகலும்; வண்ணம் திகழும்; உயர்வு கை கூடும்.

1148. வெண்ணிலவு அம்சடை சேர வைத்து
விளங்கும் தலை யேந்திப்
பெண்ணில் அமர்ந்து ஒரு கூறதாய
பெருமான் அருளார்ந்த
அண்ணல் மன்னியுறை கோயிலாகும்
அணிநாரை யூர்தன்னை
நண்ணல் அமர்ந்துஉறை வாக்குமின்கள்
நடலை கரிசு அறுமே.

தெளிவுரை : ஈசன், வெண்மையான சந்திரனைச் சடை முடியில் சேர வைத்துக் கபாலத்தை ஏந்தி, உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான் அருள் புரியும் அண்ணலாய்க் கோயில் கொண்டு உறையும் இடம் அழகு திகழும் நாரையூர் ஆகும். அத் தலத்தை நண்ணி இருந்து, தலவாசம் செய்து ஈசனை ஏத்துமின். உமது துயரம் நீங்கும்.

1149.வானமர் தீவளி நீர் நிலனாய்
வழங்கும் பழியாகும்
ஊனமர் இன்னுயிர் தீங்குற்றம்
உறைவால் பிறிது இன்றி
நானம ரும் பொருளாகி நின்றான்
திருநாரை யூர்எந்தை
கோனவ னைக் குறு கக் குறுகா
கொடுவல் வினைதானே.

தெளிவுரை : நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற இவ்வுடம்பில், உயிரானது இயங்கித் தீங்கும் குற்றமும் புரியும் வயமாகின்றது. அத்தன்மையில் உயிரின்கண் ஒன்றி வேறுபாடு இன்றி விளங்கி, நான் நற்கதிக்கு அடையும் பொருளாகி நிற்பவர், திருநாரையூரில் வீற்றிருக்கும் எந்தையாகிய ஈசன். தலைவனாக மேவும் அப் பெருமானை அடைந்தால், கொடிய வினையானது நம்மை அணுகாது.

1150. கொக்கிற கும்குளிர் சென்னிமத்தம்
குலாய மலர்சூடி
அக்குஅர வோடுஅரை யார்த்து உகந்து
அழகன் குழகாக
நக்கம ரும்திரு மேனியாளன் திரு
நாரையூர் மேவிப்
புக்குஅம ரும்மனத் தோர்கள் தம்மைப்
புணரும் புகல்தானே.

தெளிவுரை : சிவபெருமான், கொக்கிறகைத் தரித்தவர்; கங்கை திகழும் குளிர்ந்த சடை முடியில் ஊமத்தம் மலரைத் தழையச் சூடியவர்; எலும்பை அரவத்துடன் சேர்த்து அரையில் கட்டி மகிழும் அழகர்; இளமை திகழத் திகம்பரனாய் விளங்கும் திருமேனியுடையவர். அப்பெருமான், திருநாரையூரில் வீற்றிருந்து அருள் புரிபவர். அவரைப் போற்றித் துதிப்பவர்கள் உரைக்கும் சொற்களே, நல்லுரை ஆகும்.

1151. ஊழியும் இன்பமும் காலம்ஆகி
உயரும் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை
வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகிநளிர்
நாரையூர் தன்னில்
வாழியர் மேதகு மைந்தர் செய்யும்
வகையின் விளைவாமே.

தெளிவுரை : சிவபெருமான், ஊழிக்காலமாக விளங்குபவர்; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனும் பருவ காலமாகத் திகழ்பவர்; கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் ஞான வகையாகிய உயர்ந்த தவம் ஆகியவர்; ஏழிசையாகவும் அதன் இனிய பயனாகவும் விளங்குபவர்; வாழ்கின்ற வாழ்க்கையில் வினையை உயிரின்பால் சேர்த்துச் சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியர் என வகுக்கும் மெய்ப் பொருளாகத் திகழ்பவர்; நாழிகையும், பலவாகிய நாள்களும் ஆகியவர். அவர் குளிர்ச்சி பொருந்திய நாரையூரில் திகழ்ந்து மேவும் அழகராய் விளங்குபவர். அனைத்தும் அப் பெருமான் புரியும் திருவிளையாடலே ஆகும்.

1152. கூசம்இலாது அரக்கன் வரையைக்
குலுங்க எடுத்தான் தோள்
நாசம தாகி இறஅடர்த்த
விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற
பெரியோன் இடம் போலும்
தேசம் உறுப்புகழ் செம்மைபெற்ற
திருநாரை யூர்தானே.

தெளிவுரை : தவறான செயலைச் செய்வதற்குக் கூச்சம் கொள்ளாது, கயிலை மலையைப் பெயர்த்தவன் இராவணன். அவனுடைய தோள் நெரியுமாறு அடர்த்த திருப்பாத விரல் உடையவர் சிவபெருமான். அப் பெருமான், தூய்மையான அடியவர்கள் போற்றுமாறு வீற்றிருக்கும் இடம், உலகம் போற்றும் புகழின் செம்மை பெற்ற திருநாரையூரே.

1153. பூமகனும் அவ னைப்பயந்த
புயலார் நிறத்தானும்
ஆமள வும்திரிந்து எத்திக்காண்டல்
அறிதற்கு அரியான்ஊர்
பாமருவும் குணத் தோர்கள் ஈண்டிப்
பலவும் பணிசெய்யும்
தேமரு வும்திகழ் சோலைசூழ்ந்த
திருநாரை யூர்தானே.

தெளிவுரை : மேக வண்ணம் உடைய திருமாலும், திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் தம்மால் இயன்ற அளவு திரிந்து ஏத்தியும் கண்டு அறிவதற்கு சிவபெருமான் வீற்றிருக்கும் ஊரானது, புகழ்ப் பாடல்களைப் பாடும் அடியவர்கள் பணி செய்யும், பெருமை திகழும் சோலை சூழ்ந்த திருநாரையூரே.

1154. வெற்றரை யாகிய வேடங்காட்டித்
திரிவார் துவராடை
உற்றரை யோர்கள் உரைக்கும் சொல்லை
உணராது எழுமின்கள்
குற்றம்இ லாததோர் கொள்ளையெம்மான்
குழகன் தொழிலாரப்
பெற்றர வாட்டி வரும் பெருமான்திரு
நாரை யூர்சேர்வே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கும் சொல்லைப் பொருள் உடையதெனக் கொள்ள வேண்டாம். எம் தலைவராகிய ஈசன், குற்றம் இல்லாத கொள்கை உடையவர்; அழகு மிக்கவராய், அன்புக்குக் குழைந்து அருள்பவர். அத்தகைய அருளும் தொழிலைப் புரியும் பாங்கில், அரவத்தை ஆட்டி விளங்குபவர். அவர் வீற்றிருக்கும் திருநாரையூர் சார்ந்து ஏத்தி உய்வீராக.

1155. பாடிய லும்திரை சூழ்புகலித்
திருஞான சம்பந்தன்
சேடிய லும்புகழ் ஓங்குசெம்மைத்
திருநாரை யூரான்மேல்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும்
பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கும்
அவலக் கடல் தானே.

தெளிவுரை : ஓய்தல் இன்றி ஆர்க்கும் அலைகளை உடைய கடல் சூழ்ந்த புகலியில் மேவும் திருஞான சம்பந்தன், பெருமை பொருந்திய புகழ் விளங்கும் செம்மையான திருநாரையூரில் வீற்றிருக்கும் ஈசன் மீது பாடிய தண்டமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தைப் பரவி ஓதுபவர்களுக்குக் கடல் போன்ற பெருந் துன்பமும் விலகிச் செல்லும்.

திருச்சிற்றம்பலம்

366. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

1156. வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லிஅமணொடு தேரரை
வாதில் வென்று அழிக் கத்திரு உள்ளமே
பாதி மாதுடன் ஆயபரமனே.
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு அர்த்தநாரியாய் விளங்கும் பரமனே ! வேதத்தின் வழி நடத்தப் பெறும் வேள்வியை நிந்தனை செய்யும் அமணரொடு தேரர்களை வாதில் வெற்றி கொள்ளத் திருஉள்ளம் யாதுகொல் ! அழகிய ஆலவாயில் உறையும் ஆதி மூர்த்தியே ! இவ் உலகமானது உமது புகழையே பேச வேண்டும் திருவருள் புரிவீராக.

1157. வைதிகத்தின் வழியொழு காதஅக்
கைதவம் உடைக் கார்அமண் தேரரை
எய்தி வாதுசெயத் திருவுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

தெளிவுரை : கருமையான கண்டத்தை உடைய மணிகண்டனே ! வைதிகத்தின் வழி நில்லாத சமணர் சாக்கியர்பால் எய்தி, வாது செய்தவற்குத் திருவுள்ளம் யாது கொல் ! அழகிய ஆலவாயில் உறையும் எம் ஆதியே ! இவ்வுலகம் உமது புகழையே ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.

1158. மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாம்கையின் மாமழு வாளனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

தெளிவுரை : மானைக் கரத்தில் ஏந்திய மழுப் படையாளனே ! வேத நெறியில் கூறப்படும் வழக்கத்தைக் கொண்டிராத சமணர் சாக்கியர்பால் சென்று வாதம் செய்வதற்குத் திருவுள்ளம் யாதுகொல் ! அழகிய ஆலவாயில் உறையும் ஆதியே ! இவ்வுலகம் உமது புகழையே ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.

1159. அறுத்த அங்கம்ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ்அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாதுசெயத்திரு உள்ளமே
முறித்த வாள்மதிக் கண்ணி முதல்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

தெளிவுரை : ஒளி திகழும் பிறைச் சந்திரனைத் தரித்த நாதனே ! வரையறுக்கப்பட்ட வேதத்தின் ஆறு அங்கம் வகுக்கும் கொள்கையை வெறுத்த சமணர் சாக்கியர்பால் சென்று வாதம் செய்வதற்குத் திருவுள்ளம் யாதுகொல் ! அழகிய ஆலவாயில் உறையும் எம் ஆதியே ! இவ்வுலகம் உமது புகழையே ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.

1160. அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாது செயத்திரு வுள்ளமே
வெந்த நீறது அணியும் விகிர்தனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

தெளிவுரை : திருவெண்ணீறு தரித்து மேவும் விகிர்தனே ! அந்தணர்கள் புரியும் அரிய மறை வழி மேவும் செயல்களைச் சிந்தை செய்து ஏத்தாத சமணர்பால் சென்று வாதம் புரிவதற்குத் திருவுள்ளம் யாதுகொல் ! அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் ஆதியே ! இவ்வுலகம் நின்புகழையே ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.

1161. வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டுஅமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு வீரம் விளைவித்து என் உள்ளத்தில் உறையும் ஈசனே ! விரும்பி ஏத்தப்படும் வேள்வியை இகழும் முரட்டுத்தனம் உடைய சமணர்பால் சென்று நான் வாது செய்வதற்குத் திருஉள்ளம் யாதுகொல் ! அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் ஆதியே ! இவ்வுலகில் உமது புகழையே மிக விரும்பி ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.

1162. அழலது ஓம்பும் அருமறை யோர்திறம்
விழலது என்னும் அருகர் திறத்திறம்
கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
தழல் இலங்கு திருவுருச் சைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

தெளிவுரை : தழல் போன்ற திருவடிவம் கொண்ட மேவும் சிவபெருமானே ! வேள்வியினை ஓம்புதல் செய்யும் வேதத்தின் பெருமையைப் பயனற்றது எனக் கூறும் சமணர்களிடம் சென்று நான் வாதம் செய்வதற்குத் திருவுள்ளம் யாதுகொல். அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் எம் ஆதியே ! இவ்வுலகமானது உமது புகழையே மிக விரும்பி ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.

1163. நீற்று மேனியர் ஆயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

தெளிவுரை : ஆற்றல் மிக்க அரக்கனாகிய இராவணனுக்கு அருள் செய்த பரமனே ! திருவெண்ணீறு பூசிய திருமேனியை உடைய தூயவர்களைக் காண்பதற்கும் நாடாத சமணர்பால் சென்று வாதம் செய்வதற்குத் திருவுள்ளம் யாது கொல் ! அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் எம் ஆதியே ! இவ்வுலகமானது உமது புகழையே மிக விரும்பி ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.

1164. நீலமேனி அமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
மாலும் நான்முகனும் காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

தெளிவுரை : திருமாலும், நான்முகனும் காண்பதற்கு அரிய திருக்கோல மேனியராய்ச் சோதிமலை யாகிய ஈசனே ! சமணர்பால் சென்று வாதம் செய்வதற்குத் திருவுள்ளம் யாது கொல் ! அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் எம் ஆதியே ! இவ்வுலகம் உமது புகழையே மிக ஏத்த வேண்டும். அருள் புரிவீராக.

1165. அன்று முப்புரம் செற்ற அழகநின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்று வாதுசெ யத்திரு வுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞால நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.

தெளிவுரை : சிறுமை கொண்ட சாக்கியங்களால் காண முடியாத தலைவனே ! முப்புரத்தை எரித்த அழகனே ! உமது பொற்கழலைப் போற்றாத சமணர்களை வாதி வென்று சிதறும்படி செய்வதற்குத் திருவுள்ளம் யாது கொல் ! அழகிய ஆலவாயில் வீற்றிருக்கும் எம் ஆதியே ! இவ்வுலகம் உமது புகழை ஏத்த வேண்டும்; அருள் புரிவீராக.

1166. கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம் பந்தன் மதித்தஇப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.

தெளிவுரை : கூடல் நகரில் மேவும் ஆலவாயில் வீற்றிருக்கும் தலைவனை ஏத்திச் சமணரை வாதம் புரிந்து வெற்றி கொள்ளும் வகையில், அருள் பெற்றுப் பாடிக் காழியில் மேவும் ஞானசம்பந்தன் ஏத்திய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர், பாக்கியம் பெற்றவராவர்.

திருச்சிற்றம்பலம்

367. திருக்கயிலாயமும், திருவானைக்காவும் - திருமயேந்திரமும், திருவாரூரும்.

திருச்சிற்றம்பலம்

1167. மண்ணது உண்டரி மலரோன் காணா
வெண்ணாவல் விரும்பும் யேந்திரமும்
கண்ணது ஓங்கிய கயிலையாரும்
அண்ணல் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் காணற்கு அரிய சிவபெருமான், வெண்ணாவல் மரத்தின்கீழ், விரும்பிய திருஆனைக்காவில் விளங்குபவர்; மயேந்திரத்தில் திகழ்பவர்; கயிலை மலையில் வீற்றிருப்பவர். அவர் ஆரூர் மேவிய அண்ணலே.

1168. வந்துமால் அயனவர் காண்பரியார்
வெந்தவெண் ணீறுஅணி மயேந்திரமும்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தண் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியவர், சிவபெருமான். அவர், திருவெண்ணீறு பூசியவராய் மயேந்திரத்திலும், மணம் கமழும் சடை உடையவராய்க் கயிலையிலும், குளிர்ச்சி மிக்க ஆரூரிலும், தொன்மை ஆனைக்காவிலும் விளங்குபவர்.

1169. மாலயன் தேடிய மயேந்திரரும்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலையது ஓங்கும்வெண் ணாவலாரும்
ஆலையா ரூர்ஆதி ஆனைக்காவே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேடிய சிவபெருமான், மயேந்திரத்தில் விளங்குபவர்; காலனை மாய்த்த கயிலை நாதர்; பஞ்ச பூதத்தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக மேவும் ஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தின்கீழ் விளங்குபவர்; ஆரூரில் வீற்றிருப்பவர்.

1170. கருடனை யேறுஅரி அயனோர் காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரரும்
கருள்திரு கண்டத்துஎம் கயிலையாரும்
அருளன் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

தெளிவுரை : கருட வாகனம் கொண்ட திருமாலும், மற்றும் பிரமனும் காண முடியாதவராகிய சிவ பெருமான், இடப வாகனத்தில் விளங்குகின்ற மயேந்திரர்; கரிய கண்டத்தையுடைய கயிலைநாதர்; அருளாக மேவும் ஆரூரர்; ஆதியாகிய ஆனைக்காவில் மேவுபவரே.

1171. மதுசூதன நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரரும்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் கண்டு வணங்குவதற்கு அரியவராகிய சிவபெருமான், வேதாகமம் முதலான அறிவு சார்ந்த அறங்களை ஓதி அருளிய மயேந்திரர்; உமாதேவியை உடனாகிய கயிலை நாதர்; யாவர்க்கும் மேலாகிய ஆரூரார்; ஆனைக்காவில் விளங்குபவர்.

1172. சக்கரம் வேண்டுமால் பிரமன்காணா
மிக்கவர் கயிலை மயேந்திரமும்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவர்ஆரூர் ஆனைக்காவே.

தெளிவுரை : சக்கராயுதத்தை நாடிய திருமாலும், பிரமனும் காணாத வகையில் மிகுதியாக உயர்ந்து ஓங்கிய சிவபெருமான், கயிலையிலும் மயேந்திரத்திலும் திகழ்பவர்; தக்கனது தலையை அரிந்தவராய், நெருப்பின் வடிவத்தினராகி, எலும்பு மாலை அணிந்தவர்; ஆரூரிலும் ஆனைக்காவிலும் வீற்றிருப்பவர்.

1173. கண்ணனும்நான் முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை எங்கள்
அண்ணல் ஆரூர்ஆதி ஆனைக்காவே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவராகிய சிவபெருமான், வெண்ணாவல் மரத்தை விரும்பும் மயேந்திரராயும், கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை நாதராயும் விளங்குபவர். எங்கள் அண்ணலாகிய அவர் ஆரூரிலும் ஆனைக் காவிலும் வீற்றிருப்பவர்.

1174. கடல்வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை அரக்கனைத் தலைநெரித்தார்
விடமது உண்டஎம் மயேந்திரரும்
அடல்விடை ஆரூர்ஆதி ஆனைக்காவே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் விளங்கிய சிவபெருமான், இராவணன் தலையை நெரித்த கயிலை நாதர்; நஞ்சினை உண்டு காத்தருளிய மயேந்திரர்; விடையேறும் ஆரூரர்; ஆனைக்காவில் மேவும் ஆதி மூர்த்தி.

1175. ஆதி மால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்
காதிலோர் குழையுடைக் கயிலையாரும்
ஆதிஆ ரூர்எந்தை ஆனைக்காவே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், வேதங்களால் ஏத்தப் பெறும் மயேந்திரரும், காதில் குழையணிந்த கயிலை நாதரும், ஆதியாகிய ஆரூர் எந்தையும் ஆகியவர். அவர் ஆனைக்காவில் வீற்றிருப்பவர்.

1176. அறிவில் அமண்புத்தர் அறிவு கொள்ளேல்
வெறியமான் கரத்து ஆரூர் மயேந்திரரும்
மறிகட லோன்அயன் தேடத்தானும்
அறிவரு கயிலையோன் ஆனைக்காவே.

தெளிவுரை : சமணரும் புத்தரும் கூறும் உரைகளைக் கொள்ள வேண்டாம். திருமாலும், பிரமனும் தேட அறிவதற்கு அரியவராகிய சிவபெருமான், மானைக் கரத்தில் ஏந்தியவராய் ஆரூரிலும், மயேந்திரத்திலும் வீற்றிருந்து கயிலைநாதராய் மேவுபவர்; ஆனைக் காவில் விளங்குபவர்.

1177. ஏனமால் அயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆ ரூர்அதி ஆனைக்காவை
ஞானசம் பந்தன் தமிழ் சொல்லுமே.

தெளிவுரை : ஏனம் உருவு கொண்ட திருமால், மற்றும் பிரமன் ஆகிய இருவரும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், சோலை விளங்கும் கயிலையும், நல்ல மயேந்திரமும், யாவும் கைகூடப் பெறும் திருவாரூரும், திருவானைக்காவும் வீற்றிருந்து, அருள் புரிபவர். இதனை ஓதிய ஞானசம்பந்தரின் இத் தமிழ் மாலையைச் சொல்பவர்கள், பெறலரும் பிறவிப் பயனைப் பெறுவார்கள் என்பது குறிப்பு.

திருச்சிற்றம்பலம்

368. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1178. வரம மே கொளா உரம தேசெயும்
புரமெ ரித்தவன் பிரம நற்புரத்து
அரன்நல் நாமமே பருவுவார்கள்சீர்
விரவு நீள் புவியே.

தெளிவுரை : பெற்ற வரத்தை நன்முறையில் பயன்படுத்தாது, தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த மூன்று அசுரர் புரங்களையும் எரித்தவர், சிவபெருமான். அவர் நன்மை விளங்கும் பிரமபுரத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமானின் நல்ல திருநாமமாக விளங்கும் அரநாமத்தைப் பரவி ஏத்துபவர்கள், பூமியில் புகழுடன் விளங்குவார்கள்.

1179. சேண்உலாமதில் வேணு மண்ணுளோர்
காண மன்றலார் வேணுநற்புரத்
தாணுவின் கயல் பேணுகின்றர்
ஆணிஒத் தவரே.

தெளிவுரை : தேவர்கள் இறங்கி மண்ணுலகத்தைக் காணுமாறு உயர்ந்த மதில்களை உடைய வேணுபுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் திருக்கழலைப் பேணுவார்கள், ஆணிப் பொன் போன்று உயர்வுடையவர்கள் ஆவார்கள்.

1180. அகல மார்தரைப் புகலுநான்மறைக்கு
இகலியோர்கள் வாழ் புகலிமாந்கர்ப்
பகல்செய் வோன் எதிர்ச் சகல சேகரன்
அகில நா யகனே.

தெளிவுரை : இப் பூவுலகில், புகலப்படும் நான்கு மறைகளிலும் ஆய்ந்து தேர்ந்தவர்கள் வாழும் புகலி நகரில் மேவும் சந்திரசேகரனாக விளங்கும் சிவபெருமானே உலக நாயகர் ஆவார்.

1181. துங்க மாகரி பங்க மாஅடும்
செங்கை யான்நிகழ் வெங்குருத் திகழ்
அங்க ணான்அடி தம்மகையால் தொழத்
தங்கு மோ வினையே.

தெளிவுரை : உயர்ந்த யானையானது இழிவுற்று அழியுமாறு, அதனைத் திருக்கரத்தால் அடர்த்து அதன் தோலை உரித்த சிவபெருமான் இருப்பிடமாவது, வெங்குருவாகும். ஆங்கு, அப் பெருமானுடைய திருவடியைத் தமது கைகளால் கூப்பித் தொழ, வினை யாவும் விலகிச் செல்லும்.

1182. காணி ஒண்பொருட் கற்றவர்க்(கு) ஈகை
உடைமையோர்அவர் காதல் செய்யுநல்
தோணி வண்புரத்து ஆணி என்பவர்
தூமதி யினரே.

தெளிவுரை : ஒண் பொருளைக் காட்டும் வேதப் பொருளைக் கற்ற பெருமக்களுக்குப் பொருள் நல்கிப் பாராட்டும் ஈகைக் குணம் உடைய வள்ளல்கள் விரும்பும் பதி, தோணிபுரம். ஆங்கு ஆணிப் பொன் போன்று விளங்குபவர்கள், அத்தகைய அறிவு சார்ந்த கல்வியில் சிறந்து ஒளிரும் தூயவர்களே.

1183. ஏந்து அராவெதிர் வாய்ந்த நுண்ணிடைப்
பூந்தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்தராய் தொழு மாந்தர் மேனிமேற்
சேர்ந்திரா வினையே.

தெளிவுரை : படம் கொண்டு அரவத்தை போன்றும் மூங்கிலை ஒத்த நுண்மையும் கொண்ட இடை உடையவராய் மென்மையான கூந்தலையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்ட சிவபெருமான் விளங்கும், பூந்தராய் என்னும் பதியைத் தொழுபவர்களுக்கு, வினைத் துன்பம் இல்லை.

1184. சுரபுரத்தினைத் துயர்செய் தாரகன்
துஞ்ச வெஞ்சினக் காளியைத் தரும்
சிரபுரத்துளான் என்ன வல்லவர்
சித்தி பெற்றவரே.

தெளிவுரை :  தேவர் உலகத்தைத் துன்புறுத்திய தாருகாசுரனை அழிக்குமாறு வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத் தோற்றுவித்த ஈசன், சிரபுரத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான் திருநாமத்தை ஓத வல்லவர்கள் அட்டமாசித்திகளை வாய்க்கப் பெறுவார்கள்.

1185. உறவும் ஆகி அற் றவர்களுக்குமா
நெதி கொடுத்து நீள் புவி இலங்குசீர்ப்
புறவ மாநகர்க்கு இறைவனே எனத்
தெறகிலா வினையே.

தெளிவுரை : புறவம் என்னும் மாநகரில் விளங்கும் மாந்தர்கள் எல்லாரிடமும் கலந்த அன்பினராய் விளங்கி, அற்றவர்களுக்குத் திரண்ட செல்வத்தை வழங்கிப் பூவுலகில் புகழுடன் திகழ்பவர்கள். ஆங்கு வீற்றிருக்கும் இறைவன் திருநாமத்தை ஓதுபவர்களுக்கு, வினையானது துன்பத்தைக் கொடுக்காது.

1186. பண்புசேர்இலங் கைக்கு நாதனன்
முடிகள் பத்தையும் கெட நெரித்தவன்
சண்பை ஆதியைத் தொழு மவர்களைச்
சாதியா வினையே.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய முடிகள் பத்தும் நெரியுமாறு செய்தவர், சண்பையில் வீற்றிருக்கும் ஆதியாகிய சிவபெருமான். அப்பெருமானைத் தொழுது போற்றும் பக்தர்களுக்கு வினைத் துன்பம் இல்லை.

1187. ஆழிஅங்கையிற் கொண்ட மால்அயன்
அறிவொணாத தோர் வடிவுகொண்டவன்
காழி மாநகர்க் கடவுள் நாமமே
கற்றல் நற் றவமே.

தெளிவுரை : சக்கரப் படை உடைய திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும் அறியாதோர் வடிவு தாங்கிய சிவபெருமான், காழி நகரில் விளங்கும் கடவுள் ஆவார். அப் பெருமானின் திருநாமத்தை ஓதி உரைப்பது நற்றவப் பயனை நல்கும்.

1188. விச்சையொன்றிலாச் சமணர் சாக்கியப்
பிச்சர் தங்களைக் கரிசறுத்தவன்
கொச்சை மாநகர்க்கு அன்புசெய்பவர்
குணங்கள் கூறுமினே.

தெளிவுரை : அன்பில்லாத சமணர் சாக்கியர்களைப் பெருமை இழக்குமாறு செய்த சிவபெருமான், விளங்கும் இடம் கொச்சை மாநகர் ஆகும். அதன்பால் அன்பு கொள்பவர்கள் செம்மையுடையவர்கள், அவர்களை ஏத்துவீராக.

1189. கழுமலத்தினுள் கடவுள் பாதமே
கருதுஞானசம் பந்தனின்தமிழ்
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும்
முக்கண்எம் இறையே.

தெளிவுரை : கழுமலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் பாதத்தைக் கருதும் ஞானசம்பந்தனின் தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுக்கு, முக்கண்நாதனாகிய அப்பெருமான், பேரின்பத்தை அருளிச் செய்பவர்.

திருச்சிற்றம்பலம்

369. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1190. வேலினேர்தரு கண்ணி னாள்உமை
பங்கன் அங்கணன் மிழலைமாநகர்
ஆல நீழலின் மேவினான் அடிக்கு
அன்பர்துன் பிலரே.

தெளிவுரை : வேல் போன்ற விழியுடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்ட சிவபெருமான், ஆலநிழற் கீழ் இருந்து அறம் உரைத்தவர்; மிழலை மாநகரில் வீற்றிருப்பவர். அவர் திருவடியை அன்புடன் ஏத்துபவர்களுக்குத் துன்பம் இல்லை.

1191. விளங்கு நான்மறை வல்ல வேதியர்
மல்குசீர்வளர் மிழலை யான்அடி
உளங்கொள் வார்தமை உளம்கொள்வார் வினை
ஒல்லை ஆசுஅறுமே.

தெளிவுரை : நான்கு மறைகள் வல்ல வேதியர்கள் விளங்கும் புகழ் மிக்க மிழலையில் வீற்றிருக்கும் ஈசன் திருவடியை உள்ளத்தில் பதிப்பவர்கள், சிவனடியார்கள். அவ்வடியார்களை ஏத்தும் அன்பர்களின் குற்றமானது, விரைவில் நீங்கும்; இம்மையும், மறுமையும் நலம் தரும் என்பதாம்.

1192. விசையி னோடுஎழு பசையுநஞ்சினை
அசைவுசெய்தவன் மிழலைமாநகர்
இசையும் ஈசனை நசையின் மேவினால்
மிசையொ வினையே.

தெளிவுரை : யாவரும் நடுங்கிச் கலங்குமாறு எழுந்த நஞ்சினை அருந்திய சிவபெருமான், மிழலை நகரில் புகழ் கொண்டு விளங்கும் பெருமான் ஆவார். அப் பெருமானை விருப்பத்துடன் நாடி வணங்கினால், வினையானது, உயிரின் மீது பற்றி, உடம்பை ஏற்றுப் புரியும் இடரைச் செய்யாது. வினை யாவும் கெட்டழியும் என உணர்த்தப் பெற்றது.

1193. வென்றிசேர் கொடி மூடுமாமதிள்
மிழலை மாநகர் மேவி நாள்தொறும்
நின்ற ஆதிதன் அடி நனைப்பவர்
துன்பம்ஒன்று இலரே.

தெளிவுரை : மன்னுயிர்களுக்கு அருளும் புரிதலாலும் தேவர்களின் துயரங்களைத் தீர்த்தலாலும் பெருமையுடன் அருள் புரியும் தன்மையில், வெற்றிக் கொடிகள் பாலவற்றை உடையவர், ஈசன், அத்தகைய கொடிகள் மலிந்து, மதில்களை மறைக்கப் பெறும் அளவில் உயர்ந்து திகழ்வது, வீழிமிழலை மாநகர். ஆங்கும் எழுந்தருளியுள்ள சிவபெருமானை நினைத்து ஏத்துபவர்களுக்குத் துன்பம் என்று சொல்லப்படுமாறு எதுவும் இல்லை.

1194. போதகந்தனை உரிசெய் தோன்புயல்
நேர்வரும் பொழில் மிழலை மாநகர்
ஆதரம் செய்த அடிகள் பாதம்
அலால்ஓர் பற்று இலமே.

தெளிவுரை : யானையின் தோலை உரித்த ஈசன், மேகம் படியும் பொழில் திகழும் மிழலை மாநகரில் விரும்பி வீற்றிருக்கும் அடிகள் ஆவார். அப் பெருமானின் திருப்பாத மலரை அன்றி, யாம் பற்றுதற்கு உரிய வேறு பொருள் ஒன்றும் இல்லை.

1195. தக்கன் வேள்வியைச் சாடினார் மணி
தொக்கமாளிகை மிழலைமேவிய
நக்கனார்அடி தொழுவார் மேல்வினை
நாள்தொறும் கெடுமே.

தெளிவுரை : தக்கனின் தீய வேள்வியைத் தகர்த்த ஈசன், மணிமாடங்களும் மாளிகைகளும் உடைய மிழலையில் தினமும் தொழுகின்ற அடியவர்கள்பால், வினையானது பற்றி நிற்காது.

1196. போர்அணாவு முப்புரம் எரித்தவன்
பொழில்கள் சூழ்தரு மிழலைமாநகர்ச்
சேரும் ஈசனைச் சிந்தை செய்பவர்
தீவினை கெடுமே.

தெளிவுரை : போர்க் குணத்தை விரும்பி அதனையே மேற்கொண்ட முப்புர அவுணர்களை எரித்த சிவபெருமான், பொழில்கள் சூழ்ந்த மிழலை மாநகரில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார். அவரைச் சிந்தையில் கொண்டு ஏத்தும் அடியவர்கள், தீவினை நீங்கப் பெற்றவர் ஆவர்.

1197. இரக்கம் இல்தொழில் அரக்கனாருடல்
நெருக்கினான்மிகு மிழலை யான்அடி
சிரக்கொள் பூவென ஒருக்கினார் புகழ்
பரக்குநீள் புவியே.

தெளிவுரை : இரக்கம் அற்ற தொழில் புரியும் அரக்கனாகிய இராவணன் உடலானது நெரியுமாறு கயிலை மலையின்கீழ் அடர்த்த சிவபெருமான், மிழலையில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார். அப்பெருமானின் திருவடிக் கமலத்தைச் சிரசின்மேல் வைத்த மலர் போலக் கொண்டு, நெஞ்சில் பதித்து ஏத்துபவர்கள், உலகில் புகழ் மேவி விளங்குவார்கள்.

1198. துறைபூமகன் பன்றியானவன்
ஒன்றும் ஓர்கிலா மிழலையான்அடி
சென்று பூம்புனல் நின்று துவினார்
நன்று சேர் பவரே.

தெளிவுரை : பிரமனும், திருமாலும் தேடியும் அறிவதற்கு அரிய ஈசன், மிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானை அடைந்து தூய நீர் கொண்டு பூசித்தும், மலர் தூவிப் போற்றியும் வணங்குபவர்கள், முத்தி நலனைப் பெறுவார்கள்.

1199. புத்தர்கைச்சமண் பித்தர் பொய்க்குவை
வைத்த வித்தகன் மிழலைமாநகர்
சித்தம் வைத்தவர் இத்தலத்தினுள்
மெய்த்தவத் தவரே.

தெளிவுரை : புத்தரும் சமணரும் கூறும் உரைகளை ஏற்காதவர், சிவபெருமான். அப்பெருமான் விளங்குகின்ற மிழலை மாநகரை நினைத்து ஏத்துபவர், இப்பூவுலகத்தில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர்.

1200. சந்தமார் பொழில் மிழலை ஈசனைச்
சண்பை ஞானசம் பந்தன் வாய்நவில்
பந்தமார்தமிழ் பத்தும் வல்லவர்
பத்தம் ஆகுவரே.

தெளிவுரை : சந்தன மரங்களின் மணம் கமழும் பொழில் திகழும் மிழலையில் வீற்றிருக்கும் ஈசனைச் சண்பையில் மேவும் ஞானசம்பந்தன், திருவாய் மலர்ந்து நவின்ற, திருவருளால் பிணிக்கப்படும் தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓதுவல்லவர்கள், பக்தர் எனப்படும் பெருமை உடையவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

370. திருப்பல்லவனீச்சரம் (அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பூம்புகார், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1201. பரசு பாணியர் பாடல்வீணையர்
பட்டினத்துறை பல்லவ னீச்சரத்து
அரசு பேணி நின்றார்
இவர்தன்மை அறிவார்ஆர்.

தெளிவுரை : ஈசன்,மழுப்படை ஏந்தியும் இசைத்துப் பாடும் வீணையும் கொண்டு, கடற்கரையில் உறையும் பல்வனீச்சரத்தில் ஆட்சி புரிந்து வீற்றிருப்பவர். இப் பெருமான் புரியும் திருவினை யாடலை அறிபவர் யார் !

1202. பட்டநெற்றியர் நட்டம்ஆடுவர்
பட்டினத் துறை பல்லவனீச்சரத்து
இட்டமா இருப்பார்
இவர்தன்மை அறிவார்ஆர்.

தெளிவுரை : சிவபெருமான், போர் வீரர்களுக்குரிய நெற்றிப் பட்டயம் அணிபவர்; இரவில் நடனம் புரிபவர்; இவர், பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருப்பவர்; இவரது தன்மையை அறிபவர் யார் !

1203. பவளமேனியர் திகழு நீற்றினர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அழகரா இருப்பார்
இவர்தன்மை அறிவார் ஆர்.

தெளிவுரை : ஈசன், பவளம் போன்ற செம்மேனியர்; திகழும் திருவெண்ணீறு தரித்தவர்; அவர் பல்லவனீச்சரத்தில் வீற்றிருக்கும் அழகர்; இவர் தன்மையை அறிபவர் யார் !

1204. பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அண்ணலாய் இருப்பார்
இவர்தம்மை அறிவார் ஆர்.

தெளிவுரை : ஈசன், யாழ் மீட்டிப் பண்ணுடன் வாசிப்பவர்; மொந்தை என்னும் வாத்தியத்தை இயக்குபவர்; அவர், கடற்கரைப் பட்டினமாகிய பல்லவனீச்சரத்தில் அண்ணலாய் வீற்றிருப்பவர்; இவர் தன்மையை அறிபவர் யார் !

1205. பல்லில் ஓட்டினர் பலிகொண்டு உண்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
எல்லி ஆட்டு உகந்தார்
இவர்தன்மை அறிவார் ஆர்.

தெளிவுரை : ஈசன், மண்டை ஓட்டைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு, பலி ஏற்று உண்பவர். அவர் பல்லவனீச்சரத்தில் இரவில் நடனம் புரிந்து மகிழ்ந்த பெருமான். இவரது தன்மையை அறிபவர் யார் !

1206. பச்சை மேனியர் பிச்சைகொள்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இச்சையாய் இருப்பார்
இவர்தன்மை அறிரார் ஆர்.

தெளிவுரை : ஈசன், பசுமையான திருமேனி உடையவர்; கபாலம் ஏந்தி பிச்சை கொள்பவர்; அவர் கடற்கரைத் துறைப் பட்டினமாகிய பல்லவனீச்சரத்தில் விருப்பமாக வீற்றிருப்பவர்; இவரது தன்மையை அறிபவர் யார் !

1207. பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர்
பட்டினத்துறை பல்லவநீச்சரத்து
எங்குமாய் இருப்பார்
இவர் தன்மை அறிவார் ஆர்.

தெளிவுரை : ஈசன், இடப வாகனத்தை உடையவர்; சந்திரனைச் சூடியவர்; குரு, இலிங்க, சங்கமங்களில் திகழ்பவராய் விளங்கும் அப்பெருமான், பல்லவனீச்சரத்தில் வீற்றிருப்பவர்; இவர் தன்மையை அறிபவர் யார் !

1208. பாதம் கைதொழ வேதம் ஓதுவார்
பட்டினத் துறை பல்லவனீச்சரத்து
ஆதியாய் இருப்பார்
இவர்தன்மை அறிவார் ஆர்.

தெளிவுரை : ஈசன், யாவரும் கைதொழுது ஏத்தும் தன்மையில் வேதத்தை உபதேசித்து அருள் புரிபவர். அவர், பல்லவனீச்சரத்தின் ஆதிமூர்த்தியாய் வீற்றிருப்பவர். இவர் தன்மையை அறிபவர் யார் !

1209. படிகொள் மேனியர் கடிகொள் கொன்றையர்
பட்டினத்துறை பல்லனீச்சரத்து
அடிகளாய் இருப்பார்
இவர்தன்மை அறிவார் ஆர்.

தெளிவுரை : ஈசன், பல்வேறு திருவடிவங்களில் காட்சி தருபவர்; மணம் கமழும் கொன்றை மலர் மாலை சூடியவர். அவர் பல்லவனீச்சரத்தில் வீற்றிருப்பவர். இவர் தன்மையை அறிபவர் யார் !

1210. பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர்
பட்டினத் துறை பல்லவ னீச்சரத்து
இறைவரா இருப்பார்
இவர்தன்மை அறிவார் ஆர்.

தெளிவுø ர : ஈசன் முழங்கும் பறையைக் கொண்டிருப்பவர்; பிறைச் சந்திரனை முடியில் சூடியவர். அவர் கடல் துறைப் பட்டினமாகிய பல்லவனீச்சரத்தில் வீற்றிருக்கும் இறைவன். இவர் தன்மையை அறிபவர் யார் !

1211. வானம்ஆள்வதற்கு ஊனம் ஒன்றிலை
மாதர்பல்லவ னீச்சரத்தானை
ஞானசம் பந்தன் நற்றமிழ்
சொல்லவல்லவர் நல்லவரே.

தெளிவுரை : அழகிய பல்லவனீச்சரத்தில் மேவும் பெருமானை, ஞானசம்பந்தன் நற்றமிழால் சொல்லிய இத் திருப்பதிகத்தைக் கொண்டு ஏத்த வல்லவர், மறுமையில் உயர்ந்ததாகிய வானுலகில் இருந்து மகிழ்வதற்கும் யாதொரு குறைவும் இல்லை.

திருச்சிற்றம்பலம்

371. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1212. உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னரும் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே
கனல்வழி காய்வது காமனையே
அற்ற மறைப்பதும் உன்பணியே
அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்றம் உகந்தது கந்தனையே
பிரம புரத்தை உகந்தனையே

தெளிவுரை : ஈசனே ! உமாதேவியார் உம்மைப் பிரியாது பொருந்தி இருப்பது உமது திருமேனியையே ! மெய்ஞ் ஞானிகள் உணர்ந்து போற்றுவது உமது மெய்த் தன்மை உடைய பேரருளையே ! கற்றுணர்ந்த ஞானிகள் வெறுப்பது பந்தம் உடைய மனைவி மக்கள் முதலாக மேவும், குடும்ப வாழ்க்கையே ! நீவிர் நெற்றிக் கண்ணால் சினந்தது மன்மதனையே ! உமது திருமேனியில் எழிலை மறைத்து விளங்குவது, பாம்பே ! தேவர்கள் செய்வதும் உமக்குப் பணிவிடையே ! நீவிர் பெற்று, அழகுடன் முகிழ்த்தது முருகப் பெருமானையே ! தேவரீர் பிரமாபுரத்தினை உகந்தவரே !

1213. சதிமிக வந்த சலந்தரனே
தடிசிரம் நேர்கொள் சலந்தரனே
அதிர்ஒளி சேர்திகி ரிப்படையால்
அமர்ந்தனர் உம்பர்து திப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே
மருவிடம் ஏற்பது கைச்சிலையே
விதியினில் இட்ட இரும்பரனே
வேணு புரத்தை விரும்பரனே.

தெளிவுரை : வஞ்சனை கொண்டு வந்தவன் சலந்தராசுரன். அவனைத் தடிந்து அழித்தவர் கங்கையைத் தரித்த ஈசன். கண்டவர்கள் அதிரும்படியான வலிமை மிக்க சக்கரப் படையை (ஈசன் பாதத்தால் வட்டமிக்க சக்கரப் படையாக மாறி சலந்தரனை அழித்தது) வானவர்கள் கண்டு மகிழ்ந்து துதித்து ஏத்தினர். சந்திரனைத் தொடும் உயர்ந்த மேரு மலையை ஈசன், கையில் வில்லாகக் கொண்டவர். அவர், விடத்தினை ஏற்று அருந்தியதில் எத்தகைய கைப்பும் கொள்ளவில்லை. ஆகம விதியில் மிகவும் விருப்பத்துடன் விளங்கும் அவர், வேணுபுரத்தை விரும்பி வீற்றிருக்கும் அரனே.

1214. காதம ரத்திகழ் தோடினனே
கானவ னாய்க்கடிது ஓடினனே
பாதம தால்கூற்று உதைத்தனனே
பார்த்தன் உடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே
சார்ந்த வினையது அரித்தனனே
போதம் அமரும் உரைப்பொருளே
புகலி அமர்ந்த பரம்பொருளே.

தெளிவுரை : ஈசன், காதில் தோடு அணிந்தவர்; காட்டில் வேடுவராய்த் திரிந்தவர், காலனைத் திருப்பாதத்தால் உதைத்தவர்; பார்த்தனுக்கு உடற்கவசமாக அத்திரங்களை அருளியவர்; மகரந்தங்களையுடைய கொன்றை மலர் மாலை தரித்தவர்; அடியவர்களின் தீவினைகளை நீக்கியவர்; ஞானவாசகத்தின் பொருளாக விளங்குபவர். அவர் புகலியில் வீற்றிருக்கும் பரம்பொருளே.

1215. மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே
மகிழ்ந்து அரைசேர்வத மாசுணமே
மெய்த்துடல் பூசுவர் மேல்மதியே
வேதமது ஓதுவர் மேல்மதியே
பொய்த்தலை யோடுஉறு மத்தமதே
புரிசடை வைத்தது மத்தமதே
வித்தகர் ஆகிய எங்குருவே
விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே.

தெளிவுரை : ஈசன், கரிய நஞ்சினை உமிழும் பாம்பை மகிழ்ந்து அரையில் சேர்த்துக் கட்டித் திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர்; சடை முடியின்மீது சந்திரனைத் தரித்தவர்; மேன்மையான ஞானம் அருளும் வகையில் வேதப் பொருளை ஓதுபவர்; மண்டை ஓடு ஏந்தி மயானத்தில் விளங்குபவர்; சடை முடியின்மீது ஊமத்த மலர் சூடியவர்; வித்தகர் ஆகிய அவர், எமது குருவானவர்; அவர், விரும்பி அமர்ந்து இருப்பது வெங்குருவே.

1216. உடன்பயில் கின்றனன் மாதவனே
உறுபொறி காய்ந்துஇசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே
திரிகுண மேவிய கண்டனனே
படங்கொள் அரவுஅரை செய்தனனே
பகடுஉரி கொண்டுஅரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்குஒரு நஞ்சுஇவனே
தோணி புரத்துறை நம்சிவனே.

தெளிவுரை : ஈசன், திருமாலைத் தம்முடன் இருக்கும்படி செய்பவர்; இந்திரியங்களை அடக்கிப் பெருமையுடன் மேவும் சிறந்த தவத்தை உடையவர்; உறுதி பயக்கும் சிறந்த வேதங்களைக் கண்டவர்; முக்குண வயத்ததாய் மேவிக் குற்றத்தைப் பெருக்கும் கொள்கைகளைக் கண்டனம் செய்பவர்; படம் கொண்ட அரவத்தை அரையில் பொருத்திக் கட்டியவர்; யானையின் தோலை உரித்துப் போர்வையாகத் தரித்துக் கொண்டவர்; வினைப் பயனால் நேரும் துன்பங்களால் அடியவர்கள் நலியாதவாறு காப்பவர்; இவர், தோணிபுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானே.

1217. திகழ்கைய தும்புகை தங்குஅழலே
தேவர் தொழுவதும் தங்கழலே
இகழ்பவர் தாம்ஒரு மானிடமே
இருந்தனு வோடு எழில் மானிடமே
மிகவரு நீர்கொளும் அஞ்சடையே
மின்னிகர் கின்றதும் அஞ்சடையே
தகவிர தம்கொள்வர் சுந்தரரே
தக்க தராய்உறை சுந்தரரே.

தெளிவுரை : ஈசன், திகழ்கின்ற கையில் புகை கொண்டு எழும் நெருப்பினை உடையவர்; தேவர்கள் தொழுது ஏத்தும் திருக்கழலை உடையவர்; தம்மை இகழ்ந்த தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை, இடக்கரத்தில் ஏந்தியவர்; தாம் திருவருள் புரியும் தன்மையில் உடல் கொண்டு காட்சி தருவது மானிட உடம்பே; மிகுந்த கங்கையை அழகிய சடை முடியில் ஏற்றவர்; மின்னலைப் போன்று சடை முடியுடையவர்; தகுந்த விரதம் கொண்டு காத்தருளும் சுந்தர வடிவினர். அவர் எக்காலத்திலும் அழியாது நிலைத்து விளங்கும் பூந்தராய் என்னும் பதியில் வீற்றிருக்கும் அழகரே.

1218. ஓர்வரு கண்கள் இணைக்கயலே
உமையவள் கண்கள் இணைக்கயலே
ஏர்மருவும் கழல் நாகமதே
எழில்கொள் உதாசனன் ஆகமதே
நீர்வரு கொந்தள கம்கையதே
நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோகதியம் பகனே
சிரபுர மேய தியம்பகனே.

தெளிவுரை : நெஞ்சே ! ஈசனையன்றிப் பிறவற்றைக் காணுமாறு கண்களைச் செலுத்தற்க. அவ்வாறு செலுத்துதல் புறம்பானது எனக் கொள்க. உமாதேவியின் கண்கள் இரண்டும் இணையாக மேவி, கயல்கள் போன்று தம் குஞ்சுகளைப் பார்வையால் கனிந்து நோக்கும் தன்மையில், மன்னுயிர்களைக் கனிவுடன் நோக்கி வாழவைக்கும் பாங்குடையன. ஈசன், அழகிய கழலில் நாகத்தைக் கட்டி இருப்பவர். அவருடைய திருமேனி யானது நெருப்பு வண்ணம் உடையது. நீர்மயமான ஈசனின் சடை முடியானது, அலங்கரிக்கப்பட்டு ஒழுங்குடன் திகழக்கூடியது. நெடுஞ் சடையில் கங்கையைத் தரித்த அப் பரமன், யோக நிலையில் தட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் தாங்கி, அறப்பொருளை இயம்பியவர். அவர் சிரபுரத்தில் வீற்றிருக்கும் நெருப்புக்கண்ணுடையவரே.

1219. ஈண்டு துயிலமர் அப்பினனே
இருங்கண் இடந்துஅடி அப்பினனே
தீண்டலரும் பரிசு அக்கரமே
திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத் தலையே
மிகைத்தவ ரோடு நகைத்தலையே
பூண்டன சேரலும் மாபதியே
புறவம் அமர்ந்த உமாபதியே.

தெளிவுரை : பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால் தனது அகன்ற தாமரை போன்ற கண்ணை இடந்து ஈசன் திருவடியில் பதித்து அருச்சித்து, நெருங்குவதற்கு அரிய பெருமையுடைய சக்கரப் படையைத் தனது கரத்தில் விளங்கும் ஆயுதமாகப் பெற்றார். அத்தகைய அரிய படையை அளித்த சிவபெருமான், தன்னை ஏளனம் செய்த தாருகவனத்து முனிவர்களை நோக்கி, ஏளனமாக நகை செய்யுமாறு மண்டை ஓடுகளைக் கோர்த்து மாலையாகக் கொண்டவர். அவர் உமாபதியாக வீற்றிருக்கும் சிறப்புடைய பதியாவது புறவமே.

1220. நின்மணி வாயது நீழலையே
நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே
ஒளியத் னோடுரு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே
கடல்விடம் உண்டக ருங்களனே
மன்னிவ ரைப்பதி சண்பையதே
வாரி வயல்மலி சண்பையதே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீருடைய திருவருளைச் சாற்றி விளங்கும் திருக்கோயிலின் மணி வாசலையே தங்கும் அருளிடமாகக் கொண்ட, நேசம் உடைய அடியவர்தம் அடிச்சுவட்டை எண்ணி, மனத்தில் தொழுகின்ற அடியவர்கள் விளங்குகின்ற இடமே, அடியவர் திருக்கூட்டம் எனத் தக்கதாகும். நீவிர், தாருகவனத்தில் மேவிய மகளிரின் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர்; கரிய விடத்தைக் கண்டத்தில் திகழுமாறு செய்தவர். கடல் வளமும் வயல் வளமும் உடைய சண்பை நகரானது, தேவரீர் வீற்றிருக்கும் பதியே.

1221. இலங்கை அரக்கர் தமக்குஇறையே
இடந்து கயிலை எடுக்க இறையே
புலன்கள் கெடஉடன் பாடினனே
பொறிகள் கெடஉடன் பாடினனே
இலங்கிய மேனி இராவணனே
எய்து பெயரும் இராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே
காழி அரனடி மாவசியே.

தெளிவுரை : இலங்கையில் அரக்கர்களின் வேந்தனாகிய இராவணன் கயிலை மலையை இடந்து பெயர்த் தெடுக்க, நொடிப் பொழுதில் இராவணன். தனது புலன்களை அடக்கிப் பாடிப் போற்ற, ஈசன் உடன்பட்டு அருள் செய்தனர். வலிமையாகத் திகழும் உடலைக் கொண்ட அவன், கசிந்து பாடிய தன்மையால் (அழுதவன் - இராவணன்) இராவணன் என்னும் பெயரை அடைந்தனன்; கூர்மையான வாட்படையைக் பெற்றனன். அத்தகைய பெருமான் மேவி விளங்கும் இடம், காழி. ஆங்கு வீற்றிருக்கும் ஈசன் திருவடியே வசீகரம் உடையது.

1222. கண்ணிகழ் புண்டரி கத்தின னே
கலந்து இரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரிசு ஏனமதே
வானகம் ஏய்வகை சேனமதே
நண்ணி அடிமுடி எய்தலரே
நளிர்மலி சோலையில் எய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே
பசுமிக ஊர்வர் பசுபதியே.

தெளிவுரை : தாமரை போன்ற கண்ணுடைய திருமாலும், தாமரை மலரின்மேல் விளங்கும் பிரமனும் பூமியைக் குடைந்து செல்லும் ஏனமாகவும் வானத்தில் பறந்து செல்லும் பருந்தாகவும் முனைந்து சென்றும் ஈசனின் திருவடியும் முடியும் எய்த, இயலாதவராயினர். அத்தகைய பெருமான், குளிர்ந்த சோலையில் பூசைக்குரிய மலர்கள் திகழவும், பண்ணின் இசை பெருகவும் விளங்குகின்ற கொச்சைவயத்தில் உயிர்களின் தலைவராய் வீற்றிருப்பவர். அவர் இடப வாகனத்தில் விளங்கும் ஈசனே.

1223. பருமதில் மதுரைமன் னவை எதிரே
பதிகமது எழுதிலை அவைஎதிரே
வருநதி யிடை மிசை வருகரனே
வசையொடும் அலர்கெட வருகரனே
கருதலில் இசைமுரல்தரும் அருளே
கழுமலம் அமர்இறை தரும்அருளே
மருவிய தமிழ்விர கனமொழியே
வல்லவர் தம்மிடர் திடமொழியே.

தெளிவுரை : அகன்ற மதில்களையுடைய மதுரை நகரின்கண் அரசனது அவையில் திருப்பதிகத்தை ஓலையில் எழுதி வையை நதியின் மீது செலுத்த, அதனை எதர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தை உடையவர் சிவபெருமான். அவர், வசையும் பழியும் கெடுமாறு செய்தவர்; அரிய பெரும் புகழை ஈட்டித் தந்தவர். கழுமலத்தில் வீற்றிருக்கும் அப்பரமனை ஏத்திய தமிழ் வீரகனாகிய ஓத வல்லவர்தம் வினையானது, விலகிச் செல்லும்.

திருச்சிற்றம்பலம்

372. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

1224. பாயுமால் விடை மேலொரு பாகனே
பாவைதன்னுரு மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே
சோதி மால் எரிவேதத் துவனியே
ஆயுநன் பொருள் நுண்பொருள் ஆதியே
ஆலநீழல் அரும்பொருள் ஆதியே
காய வின்மதன் பட்டது கம்பமே
கண்ணுதற் பர மற்கு இடம் கம்பமே.

தெளிவுரை : ஈசன், பாய்ந்து செல்லும் பெருமையுடைய இடபத்தின் மீது அமர்ந்து; உமாதேவியைத் ஒரு கூறாகப் பெற்றிருப்பவர்; வானவர்கள் போற்றுகின்ற வேதத்தின் தொனி (ஓசை) யானவர்; சுடர் விட்டு எரியும் வெம்மையுடைய வேள்வித் தீ ஆனவர். ஆய்வு செய்யப் பெறும் நற்பொருளாயும் மேவும் ஆதியானவர்; ஆல் நிழலின்கீழ் இருந்து தட்சிணாமூர்த்தியாய் விளங்கிச் சனகாதி முனிவர்களுக்கு அரும் பொருள் ஆகிய முதல்வர்; மன்மதனை  எரித்த ஏகம்பர். நெற்றிக் கண்ணுடைய அப் பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, ஏகம்பமே.

1225. சடையணிந்து வெண்டலை மாலையே
தம்மு டம்பிலும் வெண்டலை மாலையே
படையில் அங்கையிற் சூலமது என்பதே
பரந்திலங்கையிற் சூலமது என்பதே
புடைப்பரப்பன பூதக ணங்களே
போற்றி சைப்பன பூதக ணங்களே
கடைகள் தோறும் இரப்பது மிச்சையே
கம்பமேவி இருப்பதும் இச்சையே.

தெளிவுரை : ஈசன், சடை முடியில் அணிந்து இருப்பது வெண்மையான மண்டை ஓடு உடைய தலைமாலை; உடம்பிலும் தலை மாலை அணிந்தவர்; அழகிய கையில் சூலப் படையுடையவர்; பரந்து விளங்கும் கையினைப் படை போன்று கூர்மையாகக் கொண்டு பகையைத் தோண்டி எடுப்பவர்; பூத கணங்கள் பக்கத்தில் சூழப் பரவி நின்றும் போற்றித் துதி செய்யவும் விளங்குபவர்; அப்பெருமான் வாயில்கள் தோறும் சென்று உணவை இரப்பவராய் ஏகம்பத்தில் விரும்பி விருப்புடன் இருப்பவரே.

1226. வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சையே
வேறுமுன் செலத் தும்பை மிலைச்சையே
அள்ளி நீறது பூசுவ தாகமே
ஆன மாசுண மூசுவது ஆகமே
புள்ளியாடை உடுப்பது கத்துமே
போனஊழி உடுப்பது கத்துமே
கள்ளுலா மலர்க்கம்பம் இருப்பதே
காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே.

தெளிவுரை : வெள்ளெருக்கமும் தும்பையும் சூடிய ஈசன், தும்புக் கயிற்றைக் கொண்டு இடபத்தைக் கட்டியவர்; திருநீற்றினை விரும்பிப் பூசுபவர்; விரும்பிச் சூழும் பாம்புகளால் தேகத்தை மறைக்குமாறு விளங்குபவர்; புள்ளிகளை உடைய ஆடையை உடுத்துபவர்; ஊழிதோறும் உயிர்களைத் தமது திருமேனியில் பொருந்திக் கொள்பவர். அப் பெருமான், தேன் கமழும் நறுமண மலர்கள் கொண்ட காஞ்சி மாநகரில் மேவும் திருவேகம்பத்தில்  வீற்றிருப்பவர்.

1227. முற்றலாமை யணிந்த முதல்வரே
மூரியாமை அணிந்த முதல்வரே
பற்றி வாளரவு ஆட்டும் பரிசரே
பாலு நெய்யுகந்து ஆட்டும் பரிசரே
வற்றல் ஓடு கலம் பலி தேவர்வதே
வானினோடு கலம்பலி தேவர்வதே
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே
காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே.

தெளிவுரை : ஈசன், முற்றிய ஆமை ஓட்டை அணிந்த முதற் பொருள்; வலிமையாகிக் கரியதாகிய நஞ்சினை மிடற்றில் அணிந்த ஆதியானவர்; அரவத்தைப் பற்றி ஆட்டுகின்ற தன்மையுடையவர்; பாலும் நெய்யும் கொண்டு பூசிக்கப் பெறும் பெருமையுடையவர்; பிரம கபாலத்தைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்பவர்; தேவர்களால் போற்றி ஏத்தப் பெறுபவர்; அப் பெருமானை ஏத்திப் போற்றுவதற்கு அறியா தவர்கள், கம்பத்திற்கு ஒப்பானவர்கள். அவர் வீற்றிருக்கும் இடமாவது, காஞ்சி மாநகரில் விளங்குகின்ற திருவேகம்பமே.

1228. வேடனாகி விசையற்கு அருளியே
வேலை நஞ்சமிசையற் கருளியே
ஆடும் பாம்பரை ஆர்த்தது டையது
அஞ்சு பூதமும் ஆர்த்த துடையது
கோடு வன் மதிக் கண்ணி ஆழகிதே
குற்றமில் மதிக் கண்ணி அழகிதே
காடுவாழ்பதி யாவதும் உம்மதே
கம்பமா பதி யாவதும் உம்மதே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் வேட்டுவ வடிவம் தாங்கி அருச்சுனருக்கு அருள் புரிந்தவர்; கடலில் தோன்றிய நஞ்சை உண்டு கண்டம் கருமை கொண்டவர்; ஆடும் பாம்பை அரையில் ஆர்த்து உடையாகக் கட்டியவர். ஐம்பூதங்களாகி விளங்கும் உலகத்தைப் பிரளய காலத்தில் அழியுமாறு செய்பவர்; வளைந்த பிறைச் சந்திரனை அழகு மிளிரத் தரித்தவர்; குற்றமில் ஞானத்தின் வயமாய் விளங்குபவர். சுடுகாட்டினை உமது வாழும் பதியாக உடைய தேவரீர்; திருவேகம்பத்தை உமது பதியாகவும் கொண்டு மேவுபவரே.

1229. இரும்பு கைக்கொடி தங்குஅழல் கையதே
இமய மாமகள் தம்கழல் கையதே
அரும்பு மொய்த்த மலர்ப் பொறை தாங்கியே
ஆழியான்றன் மலர்ப்பொறை தாங்கியே
பெரும்பகல் நட மாடுதல் செய்துமே
பேதைமார் மனம் வாடுதல் செய்துமே
கரும்பு மொய்த்தெழு கம்பம் இருப்பதே
காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே.

தெளிவுரை : ஈசன் கொடி போன்று பெரிய புகையுடன் எழும் நெருப்பைக் கையில் கொண்டிருப்பவர்; உமாதேவியாரால் பூசித்து வழிபடப் பெறுபவர்; அடியவர்களால் அரும்பும் மலரும் கொண்டு பூசிக்கப் படுபவர்; சக்கரப் படையுடைய திருமாலால் பூசிக்கப் படுபவர்; தாருக வனத்தில் நடனம் புரிந்து, மங்கையரின் மனத்தைக் கவர்ந்தவர். அவர் உமாதேவியாரால் பூசிக்கப் பெற்று, கரும்பின் இனியராய்க் காஞ்சி மாநகரில் மேவும் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவரே.

1230. முதிரமங்கை தவம்செய்த காலமே
முன்புமங்கை தவம்செய்த காலமே
வெதிர்க ளோடகில் சந்த முருட்டியே
வேழமோடு அகில் சந்தம்உருட்டியே
அதிரஆறு வரத்துஅழு வத்தொடே
யானையாடு வரத்தழு வத்தொடே
கதிர்கொள் பூண்முலைதக் கம்பம்இருப்பதே
காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே.

தெளிவுரை : உமாதேவியார், ஈசனை நோக்கித் தவம் செய்த காலத்தில், மூங்கில், அகில், சந்தனம் மற்றும் உறுதியான காட்டு மரங்கள், கரும்பு, நாணல் முதலானவை அதிருமாறு கம்பை ஆற்றில் ஆரவாரத்தின் ஒலியோடு அடித்து வர, பூசைக்குரிய இலிங்க மூர்த்தியைத் தழுவிக் கொண்டார் அத் தன்மையில் தேவி தழுவிய சுவடு விளங்கக் குழைந்த ஈசன் காஞ்சி மாநகரில் மேவும் ஏகம்பத்தில் வீற்றிருப்பவரே.

1231. பண்டரக்கன் எடுத்த பலத்தையே
பாய்ந்தரக்கன் எடுத்த பலத்தையே
கொண்டரக்கிய துங்கால் விரலையே
கோளரக்கிய துங்கால் விரலையே
உண்டுழன்றது முண்டர் தலையிலே
உடுபதிக்கிடம் உண்டத் தலையிலே
கண்ட நஞ்சம் அடக்கினை கம்பமே
கடவுள்நீ இடம் கொண்டது கம்பமே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் இராவணன், மலை எடுத்த பலத்தை அவ்வரக்கன் பலமற்றவன் எனக் காட்டும் தன்மையில் உமது திருப்பாத விரலால் அழுத்தியவர்; தாருக வனத்து முனிவர்கள், கொல்வதற்காக ஏவிய மானை ஏந்திக் கொண்டவர்; மண்டை ஓட்டைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்று உணவு கொண்டவர்; சந்திரனைத் தலையில் சூடி, இடம் அருளியவர்; நஞ்சினைக் கண்டத்தில் அடக்கித் தூண் போன்று உறுதியாய்க் காத்தவர். நீவிர் கடவுளாக இடும் கொண்டு விளங்குவது, ஏகம்பமே.

1232. தூணியான சுடர்விடு சோதியே
சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே
பித்தனான் பிரமப் பறவையே
சேணினோடு கீழூழி திரிந்துமே
சித்தமோடு கீழூழி திரிந்துமே
காண நின்றனர் உற்றது கம்பமே
கடவுள்நீ யிடம் உற்றது கம்பமே.

தெளிவுரை : தேவரீரின் நெற்றிக் கண்ணிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பொறிகளால் தூய்மையான ஞானச் சுடராகக் கந்தக் கடவுள் தோன்றியவர். உம்மைப் பேணும் பிரமன் பெரிய பறவை வடிவம் தாங்கி ஆகாயத்திலும், திருமால் பன்றி வடிவில் பாதாளத்திலும் முறையே செருக்கின் கீழ்மையுடன் திரிந்தும் உம்மைக் கண்டுற்றது அக்கினிக் கம்பமே. பரம்பொருளாகிய நீவிர் இடமாகக் கொண்டு விளங்குவது ஏகம்பமே.

1233. ஓருடம்பினை ஈருரு வாகவே
உன்பொருள் திறம் ஈருரு ஆகவே
ஆரும்எய்தற் கரிது பெரிதுமே
ஆற்றல் எய்தற்குஅரிது பெரிதுமே
தேரரும் மறியாது திகைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே
கடவுள்நீ இடம் கொண்டது கம்பமே.

தெளிவுரை : தேவரீர், யானையின் தோலை உரித்து உமது பொருளும் திறமும் இரண்டாக விளங்குமாறு சிவமும் சக்தியாகியவர்; எய்துதற்கு அரிய கரிய நிறமுடைய தேவி விளங்க, உம்மை எய்துதற்கு அரியவராகியவர். தேரரும் சமணரும் உம்மை அறியாது திகைப்பவர். அவர்கள் சித்தமும் மாறாதவராய்த் திகைத்திருப்பார்கள். அத்தகையோர் உம்மைத் துதிப்பதற்குக் கைப்பர் (வெறுப்பவர்); உம்மைக் கண்டு நடுங்குவர். கடவுளாகிய நீவிர் இடம் கொண்டு விளங்குவது திருவேகம்பமே.

1234. கந்தமார் பொழில் சூழ்தரு கம்பமே
காதல் செய்பவர் தீர்த்திடு கம்பமே
புந்திசெய்வது விரும்பிப் புகலியே
பூசுரன்றன் விரும்பிப் புகலியே
அந்தமில் பொருள் ஆயின கொண்டுமே
அண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
பந்தனின் னியல் பாடிய பத்துமே
பாட வல்லவர் ஆயின பத்துமே.

தெளிவுரை : மணம் கமழும் பொழில் சூழ்ந்து விளங்கும் திருவேகம்பத்தை விரும்பி ஏத்துபவர்களுக்குத் துன்பம்யாவும் தீரும் எனப் புந்தியில் ஈசன் செயலாகக் கொண்டு, புகலியில் விளங்கும் பூசுரனாகிய திருஞானசம்பந்தர் விரும்பிப் புகன்ற இத் திருப்பதிகத்தை, ஈசனின் மெய்ப் பொருளாக ஏற்று ஓதுபவர்கள், பத்தியின் வயப்பட்டவராய் விளங்கி, எல்லாம் கைவரப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

373. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

1235. ஆலநீழல் உகந்தது இருக்கையே
ஆனபாடல் உகந்தது இருக்கையே
பாலினேர் மொழி யாளொரு பங்கனே
பாதமோதலர் சேர்புர பங்கனே
கோல நீறணி மேதகு பூதனே
கோதிலார் மனமேவிய பூதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே
ஆலவாய் உறை அண்டர் களத்தனே.

தெளிவுரை : ஈசன், ஆல் நிழலில் உகந்து இருப்பிடமாகக் கொண்டவர்; வேதபாடல்களில் இருக்கு வேதத்தை உகந்தவர்; பால் போன்ற இனிய மொழி பகரும் உமாதேவியை ஒரு பாகமாக உடையவர்; தனது திருவடியைப் பணியாத முப்புர அசுரர்களை எரித்தவர்; அழகிய திருநீறு அணிந்தவராய் மேன்மை உடைய பூதகணங்களைப் படையாக உடையவர்; குற்றமற்ற மனத்தின்கண் பூதப் பொருளாய் விளங்குபவர்; ஆலகால விடத்தைக் கண்டத்தில் கொண்டு விளங்குபவர். அவர் ஆலவாயின்கண் வீற்றிருக்கும் தேவர்களின் தலைவரே.

1236. பாதியா உடல் கொண்டது மாலையே
பாம்புதார் மலர்க் கொன்றைநன் மாலையே
கோதிநீறது பூசிடும் ஆகனே
கொண்டநற் கையின் மானிடம் ஆதனே
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆனையே
நாடிஅன்று உரி செய்ததும் ஆனையே
வேதநூல் பயில் கின்றது வாயிலே
விகிர்தன் ஊர் திருஆலநல் வாயிலே.

தெளிவுரை : ஈசன் திருமாலைத் தமது உடம்பில் ஒரு பாதியாகக் கொண்டு சங்கர நாராயணராக விளங்குபவர்; பாம்பும் கொன்றை மலரும் மாலையாகக் கொண்டவர்; திருநீற்றினை நன்கு தேகத்தில் பதியப் பூசுபவர்; திருக்கையில் மான் விளங்கி நிற்குமாறு ஆக்கியவர்; தலைவராய் விளங்கி, நாள்தொறும் பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தைப் பூசையாக ஏற்று மகிழ்பவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; வேத நூல்களைத் திருவாயால் ஓதும் பண்பினர். விகிர்தராகிய அவர் நன்மை விளங்கும் திரு ஆலவாய் என்னும் பதியைத் தமது ஊராகக் கொண்டு திகழ்பவர்.

1237. காடுநீட துறப்பல கத்தனே
காதலால் நினை வார்தம் அகத்தனே
பாடுபேயொடு பூதம சிக்கவ
பல்பிணத் தசை நாடிய சிக்கவ
நீடுமாநட மாடவி ருப்பனே
நின்னடித்தொழ நாளுமிருப்பனே
ஆடநீள் சடை மேவிய அப்பனே
ஆலவாயினின் மேவிய அப்பனே.

தெளிவுரை : ஈசன, மயானத்தில் விளங்கி எல்லாவற்றுக்கும் தலைவனாய் இருப்பவர்; விரும்பிப் போற்றும் அடியவர்களின் உள்ளத்தில் இருப்பவர்; பாடுகின்ற பேய் மற்றும் பூதகணங்களுடன் உண்ண, நடனம் ஆடிக் கொண்டு இருப்பவர்; அதில் எப்போதும் விருப்பம் உடையவர். திருவடியைத் தொழுபவர்களுக்கு இருந்து அருள் வழங்குபவர்; ஆடுகின்ற சடை முடியில் கங்கையைத் தரித்திருப்பவர்; அவர் ஆலவாயினில் விளங்கும் தந்தையே.

1238. பண்டயன்தலை யொன்று மறுத்தியே
பாதமோதினர் பாவ மறுத்தியே
துண்டவெண்பிறை சென்னி இருத்தியே
தூயவெள்ளெரு தேறிஇ ருத்தியே
கண்டு காமனை வேவ விழித்தியே
காதலில்லவர் தம்மை இழித்தியே
அண்ட நாயகனேமிகு கண்டனே
ஆலவாயினில் மேவிய கண்டனே.

தெளிவுரை : ஈசன், பிரமன் தலைகள் ஐந்தில் ஒன்றை அறுத்து நான்முகனாகச் செய்தவர்; தனது திருப்பாதங்களைத் தொழும் அன்பர்களின் பாவங்களை நீக்கியவர்; பிறைச் சந்திரனைச் தலை முடியில் சூடியவர்; தூய வெள்ளை இடபத்தின் மீது ஏறி இருப்பவர்; மன்மதனைச் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர்; அன்பு இல்லாதவர்களை இழிவு கொள்ளுமாறு செய்பவர்; உலகம் பல திகழும் அண்டங்களுக்கெல்லாம் நாயகனாய் விளங்கிக் கறையுடைய நீலகண்டனாகத் திகழ்பவர். அவர் ஆலவாயில் விரிந்து மேவுபவரே.

1239. சென்றுதாதை உகுத்தனன் பாலையே
சீறிஅன்பு செகுத்தனன் பாலையே
வென்றி சேர் மழுக் கொண்டுமுன் காலையே
வீடவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்ற மாணியை யோடின கங்கையால்
நிலவமல்கி உதித்தன கங்கையால்
அன்று நின்னுரு ஆகத் தடவியே
ஆலவாய்அர னாகத் தடவியே.

தெளிவுரை : தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசைக்கு உரிய பாலைக் கவிழ்த்துவிட, அச் செயலைக் கண்ட அவன் புதல்வராகிய விசாரசருமர் சினந்து, தந்தையின்பால் வெகுண்டு, வெற்றியுடைய மழுவைக் கொண்டு முன் கால்களை வீழுமாறு வெட்டினார். அந்த ஞான்று, ஆங்கு சிவபூசை ஆற்றிய பிரமச்சாரிய யாகிய அவ் விசாரசருமருக்கு கங்கை முதலானவற்றை அணிந்த திருக்கோலத்தோடு தோன்றிக் காட்சி நல்கியவர் சிவபெருமான். அப் பரமன், தனது தந்தையாகிய எச்சதத்தனை வீழ்த்திய அடியவரின் பாவத்தை நீக்கித் தமது திருக்கையால் வருடிச் சிவமயமாய் விளங்கச் செய்து, அருள் புரிந்தவர். அவர் தமது தேகத்தில் பூசிக்கப் பெறும் மலர் முதலான நைவேத்தியங்களை, அவ் அடியாருக்கு உரியதாகச் செய்தவர். அப்பெருமான் ஆலவாயின்கண் வீற்றிருக்கும் அரனே.

1240. நக்கம் ஏகுவர் நாடுஓர் ஊருமே
நாதன் மேனியின் மாசுணம் ஊருமே
தக்க பூமனைச் சுற்றக் கருளொடே
தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே
மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே
மெல்ல நல்கிய தொண்டர்க் கணியையே
அக்கினாரமு துண்கலன் ஓடுமே
ஆலவாய் அரனார் உமை யோடுமே.

தெளிவுரை : ஈசன், பலி ஏற்கும் பாங்கில் ஊர்தொறும் ஆடையற்றவராய்த் திரிபவர்; திருமேனியில் பாம்பு ஊர்ந்து விளங்குமாறு நிகழ்பவர்; திருநீலகண்ட யாழ்ப்பாணரை அழைத்து வரும் பொருட்டு அடியவர்களின் கனவில் தோன்றி அருள் செய்து பின்னர் அப்பாணர் பாடும் போது பொற்பலகை அருளி அமரச் செய்தவர்; தென்னவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருக்கு மங்கிலியம் முதலான மங்களகரமான அணிகளை அருளியவர்; திருத்தொண்டர்களுக்கு, அண்மையாய் விளங்குபவர்; எலும்பு மாலை அணிந்தவர்; திரு ஓட்டினை உண்ணும் கலனாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான் ஆலவாயின்கண் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவரே.

1241. வெய்யவன் பல் லுகுத்தது குட்டியே
வெங்கண் மாசுணம் கையது குட்டியே
ஐயனேஅனல் ஆடிய மெய்யனே
அன்பினால் நினை வார்க்கு அருள் மெய்யனே
வையம்உய்ய அன்று உண்டது காளமே
வள்ளல் கையது மேவுகங் காளமே
ஐயமேற்பது உரைப்பது வீணையே
ஆலவாய் அரன் கையது வீணையே.

தெளிவுரை : ஈசன், சூரியனுடைய பல்லை உதிருமாறு கையால் புடைத்துக் குட்டி அடர்த்தவர்; கையில் பாம்புக் குட்டியை அணிந்து விளங்குபவர்; தலைவராக விளங்குபவர்; அனலில் மேவி ஆடும் திருமேனியுடையவர்; அன்பு கொண்டு ஏத்தும் அடியவர்களுக்கு அருள் வழங்கும் மெய்மையானவர்; உலகமானது உய்யும் பொருட்டு விடத்தை உட் கொண்டவர்; வரையாது வள்ளலாய் விளங்குபவர்; எலும்புக் கூட்டைப் பொருந்த வைத்திருப்பவர்; பிச்சை ஏற்பவர்; இசை போன்று இனிமையாக உரைப்பவர். அப்öருமான், ஆலவாயின் கண் கையில் வீணையேந்தி வீற்றிருப்பவரே.

1242. தோள்கள் பத்தொடு பத்து மயக்கியே
தொக்கதேவர் செருக்கை மயக்கியே
வாளரக்கன் நிலத்துக் களித்துமே
நீள்பொருப்பை எடுத்தஉன் மத்தனே
ஆளும் ஆதி முறித்தது மெய்கொலோ
ஆலவாய் அரன் உய்த்தது மெய்கொலோ.

தெளிவுரை : தனது இருபது தோள்கள் விளங்குகின்ற வலிமையால் திகழத் தேவர்களின் வலிமையை அழித்த அரக்கனாகிய இராவணன், பூவுலகத்தில் களித்து நிற்க, எதிர் நின்ற பெரிய கயிலை மலையைக் கண்டு வெகுண்டு, பாய்ந்து சென்று, அதனைப் பெயர்த்து எடுத்த உன்மத்தன் ஆகினான். அந்த நிலையில் அவ்வரக்கனுடைய செருக்கை, அழியச் செய்தவராய்த் திருப்பாத விரலை ஊன்றி நெரித்தவர் ஈசன். அவ்வரக்கனை அழியுமாறு செய்தது மெய்கொல் ! ஆலவாயில் வீற்றிருக்கும் அரனே ! அவ்வரக்கனை உய்யுமாறு செய்து வாளும் அருளியது மெய்கொல் !

1243. பங்கயத்துள நான்மகன் மாலொடே
பாதநீள்முடி நேடிட மாலொடே
துங்க நற்றழலினனுரு வாயுமே
தூய பாடல் பயின்றது வாயுமே
செங்கயற்கி னார்இடு பிச்சையே
சென்று கொண்டுரை செய்வது பிச்சையே
அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே
ஆலவாய் அரனார திடக்கையே.

தெளிவுரை : பிரமன் திருமாலோடு அடிமுடி தேடிய போது, மயங்கிய நிலையில் தளர்ந்து தூய பாடல்களால் ஏத்திப்பாட, உயர்ந்த சோதிப் பிழம்பாகியவர், சிவபெருமான். அப்பெருமான், மகளிர் இட்ட பிச்சைப் பொருள்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குப் பித்தினை உண்டாக்கியவர். அவர் நெருப்பை இடதுகையில் கொண்டு விளங்குபவராய், ஆலவாயில் திடமாக வீற்றிருப்பவரே.

1244. தேரரோடு அமணர்க்குநல் கானையே
தேவர்நாள்தொறும் சேர்வது கானையே
கோரமட்டது புண்டரி கத்தையே
கொண்ட நீள்கழல் புண்ட ரிகத்தையே
நேரிலூர்கள் அழித்தது நாகமே
நீள்சடைத் திகழ்கின்றது நாகமே
ஆரமாக உகந்ததும் என்பதே
ஆலவாய்அர னாரிடம் என்பதே

தெளிவுரை : ஈசன் தன்னை ஏத்தாத தேரர்களுக்கும் அமணர்களுக்கும் அருள் நல்காதவரே ! தேவர்கள் நாள்தொறும் சென்று வணங்குவது கடம்ப வனத்தையே ! சிவபெருமான், வெற்றி கொண்டு வீழ்த்தியது புலியையே ! திருமால் ஈசனைப் பூசித்துத் திருவடியில் சேர்த்தது தாமரையையே ! பகைமை கொண்ட மூன்று புரங்களை அழித்தது ஈசனின் மேருமலை வில்லே ! பெருமானின் நீண்ட சடை முடியில் திகழ்வது நாகமே ! ஈசன் மாலையாகக் கொண்டு விளங்குவது எலும்பே ! அப்பெருமான் வீற்றிருக்கும் இடம் ஆலவாய் எனப்படுவதே !

1245. ஈனஞானிகள் தம்மொடு விரகனே
ஏறுபல்பொருள் முத்தமிழ் விரகனே
ஆனகாழியுள் ஞானசம் பந்தனே
ஆலவாயினில் மேயசம் பந்தனே
ஆனவானவர் வாயினுள் அத்தனே
அன்பர்ஆனவர் வாயினுளத்தனே
வல்லவர்க்குஇவை நற்றமிழ் பத்துமே.

தெளிவுரை : ஈசன், நல்லறிவு அற்றவர் பால் பொருந்தாத கொள்கையுடையவர். முத்தமிழின் கண் வல்லவரான காழியில் மேவும் ஞான சம்பந்தன், ஆலவாயில் மேவிப் பொருந்தி விளங்கும், தேவர்களின் போற்றுதற்கு உரிய அன்பராகியும், அடியவர்கள் வாயால் பாடித் துதிக்க இனிய உள்ளத்தில் மேவியவருமாகிய ஈசனை, உரைத்த செந்தமிழாகிய இத் திருப்பதிகத்தை ஓதுவல்லவர்களுக்கு, எல்லா நன்மையும் உண்டாகும்.

திருச்சிற்றம்பலம்

374. திருவீழிமிழலை  (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1246. துன்று கென்றைநஞ் சடையதே
தூய கண்டநஞ் சடையதே
கன்றின் மானிடக் கையதே
கல்லின் மானிடக் கையதே
என்றும் ஏறுவது இடவமே
என்னி டைப்பலி இடவமே
நின்றதும் மிழலை யுள்ளுமே
நீர்எனைச் சிறிதும் உள்ளுமே.

தெளிவுரை : சிவபெருமான் ! கொன்றை மலர் மலையைத் தேவரீர் சடைமுடியில் சூடி இருப்பவர்; தூய்மையான கண்டத்தில் நஞ்சினை அடைவாகக் கொண்டிருப்பவர்; மான் கன்றினை இடக்கையில் வைத்திருப்பவர்; மலைமகளாகிய உமாதேவியை இடப் பாகத்தில் கொண்டிருப்பவர்; அக்காலத்திலும் இடபத்தை வாகனமாகக் கொண்டிருப்பவர்; எனக்கு அருள் செய்யும் பொருட்டு வருவதற்கு நின்ற இடமாகிய வீழி மிழலையை உள்ளம் கொள்வீர் ! என்னையும் உள்ளுவீராக !

1247. ஓதிவாயதும் மறைகளே
உரைப்பதும்பல மறைகளே
பாதிகொண்டதும் மாதையே
பணிகின்றேன் மிகமாதையே
காதுசேர்கனம் குழையரே
காதலார்கனங் குழையரே
வீதிவாய்மிகும் வேதியா
மிழலை மேவிய வேதியா.

தெளிவுரை : ஈசன், வாயானது வேதங்களை ஓதும்; உரைப்பதும் வேத உரைகள்; பாகமாகப் பெற்றது உமாதேவியையே. அத்திருவழகு மிக்க காட்சியைப் பணிகிறேன். காதில் குழை யணிந்த தேவரீர் மகளிர் விரும்புமாறு வீதியில் வேதம் பாடித் திரிந்தவர். வேதங்களாகிய தேவரீர் மிழலையில் வீற்றிருப்பவர்.

1248. பாடுகின்ற பண் டாரமே
பத்த ரன்னபண் டாரமே
சூடுகின்றது மத்தமேய
தொழுத என்னையுன் மத்தமே
நீடுசெய்வதும் தக்கதே
நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே
நாக நஞ்சழலை யூருமே

தெளிவுரை : சிவபெருமான், வேதம் ஓதுகின்ற பண்டார சன்னதியாவர்; பக்தர்களின் பெரு மகிழ்ச்சிக்குரியவராயும் தேவைக்குரியவராயும் உரியவர்; ஊமத்த மலர் சூடுபவர்; என்னைப் பித்தனாக்கி நீண்டு நினைத்துத் தியானித்தும், போற்றுமாறும், செய்பவர்; அரையில் அக்குமணி தரித்தவர். மிழலையில் நாகமும். கண்டத்தில் நஞ்சும், கரத்தில் நெருப்பும் பொருந்தி நிலவும்.

1249. கட்டுகின்ற கழல்நாகமே
காய்ந்ததும் மதனன் ஆகமே
இட்டமாவது இசை பாடலே
இசைந்த நூலின்அமர் பாடலே
கொட்டுவான் முழவம் வாணனே
குலாயசீர் மிழலை வாணனே
நட்டம் ஆடுவது சந்தியே
நான்உய்தற்கு இரவு சந்தியே.

தெளிவுரை : ஈசன், திருப்பாதத்தில் வீரக்கழலாக நாகத்தைக் கட்டுபவர்; மன்மதனுடைய தேகத்தை எரித்துச் சாம்பலாக்கியவர்; அடியவர்கள் பாடும் இசைப் பாடலில் விருப்பம் உடையவர்; நூல்களில் கூறியவாறு இசைந்து ஆடல் புரிபவர்; கொட்டும் முழவு விளங்க மிழலையின்கண் வாழ்பவர்; நள்ளிரவில் மயானத்தில் நடம்புரிபவர். அவர் நான் உய்வதற்கு, என்னை ஆட்கொண்டு சேர்ந்தவரே.

1250. ஓவி லாதிடும் கரணமே
உன்னும் என்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் னாணையே
அருளி னின்னபொற் றாள்நையே
பாவி யாதுரை மெய்யில்
பயின்ற நின்னடி மெய்யில்
மேவி னான்விறற் கண்ணனே
மிழலை மேயமுக் கண்ணனே.

தெளிவுரை : ஈசனே ! ஓய்வின்றி இயக்கும் கருவியாய் விளங்குபவரே ! நினைத்து ஏத்தும் என் பொறிகளாகியவரே ! அருளாணையால் யாவற்றையும் ஏவிச் சேர்ப்பவரே ! அருளின் வண்ணமாகிய தேவரீரின் பொற்றாள், என் துன்பத்தை நீக்கும்; உம்மைக் கருதாது உரைப்பது மெய்ம்மையாகாது; வலிமையுடைய திருமால் உமது திருவடியைப் போற்றிப் பேறு பெற்றவர். நீவிர் மிழலையில் வீற்றிருக்கும் முக்கண்ணரே.

1251. வாய்ந்த மேனியெரி வண்ணமே
மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே
கடுநடம் செயும் காலனே
போந்தது எம்மிடை இரவிலே
புகுமிடைக் கள்வம் இரவிலே
வேய்ந்ததும் மிழலை என்பதே
விரும்பி யேஅணிவது என்பதே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் திருமேனி, நெருப்பின் வண்ணம் உடையது ! நீவிர் மகிழ்ந்து பாடுவது பல வண்ணம் உடைய பாடல்கள் ! உம்மால் உதையுண்டு வீழ்ந்தவன் காலன் ! தேவரீர் உயர்ந்து விளங்கும் திருநடம் புரியும் பாதங்களை யுடையவர்; எம்மை இரவில் போந்து உள்ளம் புகுந்து கவர்ந்தவர், மிழலையில் வீற்றிருக்கும் நீவிர் விரும்பி அணிவது எலும்பு மாலையே.

1252. அப்புஇ யன்றகண் ணயனுமே
அமரர் கோமானும் அயனுமே
ஒப்பிலின் றமரர் தருவதே
ஒண்கையால் அமரர் தருவதே
மெய்ப்ப யின்றவர் இருக்கையே
மிழலை யூர்உமது இருக்கையே
செப்புமின் எருது மேயுமே
சேர்வுமக் கெருது மேயுமே.

தெளிவுரை : ஈசனே ! பாற்கடலில் துயிலும் கண் நயனம் உடைய திருமாலும், தேவேந்திரனும், பிரமனும், ஒப்பற்ற தேவ தருவாகிய கற்பக மரமும் ஆகியவற்றுக் கெல்லாம் ஒளி மிக்கு வழங்கும் தன்மையால் தேவரீரின் திருக்கரம் கற்பகத்தருவாகும். மெய்த்தவம் உடையவர்கள் தம் உள்ளக் கோயிலில் வீற்றிருக்கும் நீவிர் மிழலை என்னும் ஊரில் வீற்றிருப்பவர். ஐயனே ! செப்பு மின் விளை நிலமாகிய என் மன நலத்தில் எருது புகுந்து கேடு விளைவித்தல் நன்றோ ! தேவரீரிடம் எருதினை ஆட் கொள்ளும் தன்மை உண்டல்லவா !

1253. தானவக்குலம் விளக்கியே
தாரகைச் செலவு இளக்கியே
வான டர்த்த கயிலாயமே
வந்து மேவும் கயிலாயமே.
தானெ டுத்தவல் லரக்கனே
தடமுடித் திரள ரக்கனே
மேன டைச்செல விருப்பனே
மிழலை நற்பதி விருப்பனே.

தெளிவுரை : சிவபெருமான், பகைத்து நிற்கும் அசுரர்கள் அழிவர் என்பதனை விளக்கியவர்; ஒளி திகழும் தாரகை முதலானவற்றைத் தனது பேரொளியால் ஒளியிழக்கச் செய்தவர்; வானை முட்டும் உயர்ந்த மலையாகிய கயிலையைத் தனது வல்லமையால் எடுத்த அரக்கனாகிய இராவணனுடைய பெரிய முடிகளைத் திருப்பாத விரலால் அழுத்தியவர். அவர், நடை கொண்டு திரிந்து மனை தொறும் செல்லும் விருப்பம் உடையவர். அப்பெருமான் மிழலை என்னும் நற்பதியில் விரும்பி வீற்றிருப்பவரே.

1254. காய மிக்கதொரு பன்றியே
கலந்த நின்னவுரு பன்றியே
ஏய இப்புவி மயங்கவே
இருவர் நாமன மயங்கவே
தூய மெய்த்திரள் அகண்டனே
தோன்றி நின்றமணி கண்டனே
மேய இத்துயில் விலக்கணா
மிழலை மேவிய இலக்கணா

தெளிவுரை : ஈசனே ! பன்றியின் உடம்பையுடைய திருமால், பிரமன் ஆகிய இருவரும் சேர்ந்து தேடவும், உருவத் திருமேனியைக் காணுதற்கு இயலாதவராய் இப் புவியில் மயங்கி நின்று, மனம் கலங்கிய நிலையில் நீவிர் தூய்மையாகிய சோதித் திரளாக அகண்ட திருமேனியராய்த் தேன்றியவர். எம் தலைவனே ! அஞ்ஞான நிலையை நீக்கி அருள் புரிவீராக ! நீர் மிழலையில் மேவி விளங்கும் அழகரே !

1255. கஞ்சியைக் குவு கையரே
கலக்கமார் அமணர் கையரே
அஞ்ச வாதில்அருள் செய்யநீ
அணைந்திடும் பரிசு செய்யநீ
வஞ்ச னேவரவும் வல்லையே
மதித்து எனைச்சிறிதும் வல்லையே
எஞ்சல் இன்றிவரு வித்தகா
மிழலை சேரும்விறல் வித்தகா.

தெளிவுரை : சிவபெருமானே ! சமணர் அஞ்சுமாறு வாதில் வெற்றி கொள்ள அருள் செய்தவர் நீவிர். பிறர் செய்யும் சூழ்ச்சியை அறிய வல்லவரும் நீவிர். என் உரையை மதித்து வருவதற்கு இல்லையாயில் இது தகாது. தேவரீர் மிழலையில் வீற்றிருக்கும் வலிமை மிக்க வித்தகரே !

1256. மேய செஞ்சடையின் அப்பனே
மிழலை மேவியஎன் அப்பனே
ஏயு மாசெய விருப்பனே
இசைந்த வாசெய விருப்பனே
காய வர்க்கசம் பந்தனே
காழிஞானசம் பந்தனே
வாயுரைத்த தமிழ் பத்துமே
வல்லவர்க்கும் இவை பத்துமே.

தெளிவுரை : ஈசன் சிவந்த சடை முடியின் கண் கங்கை தரித்தவர்; மிழலையில் வீற்றிருக்கும் என் தந்தையானவர்; ஐந்தொழில் ஆற்றும் தன்மையில் வீற்றிருப்பவர்; தனக்கு இசைந்தவாறு போற்றித் துதிக்கும் பக்தர்களுக்கு விருப்பமானவர்; பஞ்ச பூதங்களின் வாயிலாகக் கலந்து விளங்குபவர். அப்பெருமானை ஏத்திக் காழியின் ஞானசம்பந்தன் திருவாய் மலர்ந்து உரைத்த இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், பத்து நற்குணங்களையும் பெறுவார்கள். இது போதும் குறிப்பு.

திருச்சிற்றம்பலம்

375. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1257. யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

தெளிவுரை : ஈசனே ! யாம் உயிர்கள்; நீவிரே தலைவர்; நீவிர் இனிமையான யாழ் கொண்டு மீட்டி எம்மை வசீகரிப்பவர். தேவரிர், மன்மதனைக் கண்களுக்குப் புலனாகாதவாறு செய்தவர்; நாகத்தைக் காணுமாறு ஆபரணமாகப் பூண்டவர்; பெருமையுடைய காழிப்பதியில் விளங்குபவர்; உயிர்களுக்கு, யாவும் மெய்யென்று தோன்றுமாறு மாயத்தைப் புரிபவர். நீவிர், எக்காலத்திலும் மாயையில் சாராத மாண்பு உடைய வராய்ப் பெருமையுடன் திகழ்பவரே.

1258. யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், வேதத்தால் ஏத்தப் பெறும் வேள்வியாய் விளங்குபவர்; யாழ் வாசித்து இனிமை யருள்பவர்; ஏத்திப் போற்றும் அடியவர்களுக்குத் துன்பத்தின் வடு காணாதவாறு காக்கும் தாயாகியவர்; உயிர்களுக்கு ஆதாயம் செய்து நற்கதிக்கு உரித்தாகச் செய்பவர்; ஆய்ந்து அறிவதற்கு அப்பாற்பட்ட உயர்பொருளாய் விளங்குபவர்; மணம் கமழும் மாலையணிந்து மேவுபவர்; எல்லா வடிவங்களிலும் தோய்ந்து விளங்குபராகிக் காழிப் பதியில் நிலையாக வீற்றிருப்பவரே.

1259. தாடரமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், நெருப்புப் போன்ற திருமேனியுடையவர்; எக்காலத்திலும் மூப்புக் கொள்ளாத தன்மையுடையவர்; குருமூர்த்தமாய் விளங்குகின்ற ஆசானாய்த் திகழ்பவர்; காழிப் பதியின் நாதராகியவர்; தேவரீர் மன்னுயிர்களின் தாயாய் விளங்குபவர்; மதம் கொண்டு வந்த பெரிய விலங்காகிய யானையை அடர்த்து, அதன் தோலைப் போர்த்திக் கொண்டவர்; எவ்விதமான குற்றமும் யாராலும் சொல்லப்படாத தூய்மையானவர். நீவிர், பிணக்குக் கொண்ட குற்றம் புரிந்த மூன்று அசுரர் புரங்களை அழித்து விளங்கியவரே.

1260. நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழியாகாயா வாவாநீ

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், எக்காலத்திலும் நீக்கப் பெறாத மெய்த் தன்மையுடைய பொருளாக விளங்குபவர்; யாழ் கொண்டு இசைத்து இனிமை புரிபவர்; வானவர்கள் துன்புற்று வருந்தாது, மேரு மலையை வில்லாகக் கொண்டு, பெருந் துயரைத் தீர்த்தருளும் பாங்கில், முப்புரங்களை அழித்தவர்; ஆக்கும் தன்மையில் விளங்கும் காழிப் பதியின் கண், விமானத்தில் வீற்றிருக்கும் நாதனே நீவிர் விரைவில் வருகை புரிவீராக ! அருள் புரிவீராக !

1261. மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா மேலாகா ழீதேமேகா போலேமே.

தெளிவுரை : ஈசனே ! மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சென்ற காலனைத் தடுத்து எழில் மிகுந்த திருப்பாதத்தால் உதைத்து அழித்துக் காலனுக்குக் காலனாக விளங்கிய தேவரீர், சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கு, மெய்ப் பொருளை உபதசம் செய்து அருளியவர். பிரளய காலத்திலும் அழியாது மேவும் காழிப் பதியில் வீற்றிருக்கும் கடவுளாகிய நீவிர், மேகம் போன்று குளிர்ச்சியாக விளங்கி, உயிர்களுக்கு இனிமை செய்பவரே.

1262. மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா மீதேமேகா போலேமே.

தெளிவுரை : ஈசனே ! மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சென்ற காலனைத் தடுத்து எழில் மிகுந்த திருப்பாதத்தால் உதைத்து அழித்துக் காலனுக்குக் காலனாக விளங்கிய தேவரீர், சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கு, மெய்ப் பொருளை உபதேசம் செய்து அருளியவர். பிரளய காலத்திலும் அழியாது மேவும் காழிப் பதியில் வீற்றிருக்கும் கடவுளாகிய நீவிர், மேகம் போன்று குளிர்ச்சியாக விளங்கி, உயிர்களுக்கு இனிமை செய்பவரே.

1263. நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ

தெளிவுரை : ஈசனே ! நீவிர், பிரிந்து செல்லாதவாறு மானைக் கரத்தில் வைத்திருப்பவர்; எல்லா உயிர்களுக்கும் பொருந்திய தாயாய் விளங்கிக் காப்பவர்; ஏழேழு உலகங்களையும் காப்பவர்; காழிப் பதியில் விளங்கும் வேத நாயகர்; எம்மை வாட்டுகின்ற பிறவி முதலான பெருந் துன்பத்தை மாய்த்தருள்பவர். எனவே தேவரீர் உம்மீது அன்பு செலுத்தும் பாங்கினை அருளிச் செய்வீராக !

1264. நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசை யாழவி ராவணனே.

தெளிவுரை : ஈசனே ! அன்பின் மிக்க அடியவர்கள் தேவரீருடைய திருவடியின்கண் இருந்து ஆசை முதலான குற்றங்களைத் துறந்து விளங்குகின்றனர். வேகமாக ஓடுகின்ற மான் தோலின் மீது வீற்றிருக்கும் பெருமானே ! ஓடுகின்ற மான் தோலின் மீது வீற்றிருக்கும் பெருமானே ! எம்பால் போந்து காத்தருள் வீராக. காழிப் பதியில் வீற்றிருக்கும் நாதனே ! மிக இழிந்ததாகவும், குற்றத்தின் வயத்ததாகவும், செய்த இராவணனுடைய ஏழிசையும் ஏற்று அருள் புரிந்த பரமனே ! எமக்கு அருள் புரிவீராக.

1265. காலேமேலே காணீகா ழிகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலாகா

தெளிவுரை : ஈசன், மகாப்பிரளய காலத்திலும் அழியாது கடலின் மீது மிதந்து விளங்குகின்ற காழியில் வீற்றிருப்பவர்; காற்றுப் போல் எங்கும் பரவி நிற்பவர்; பெருமையுடன் விளங்கி மேவுபவர். அப்பெருமான், பூவின் மேல் திகழும் பிரமனும் மற்றும் பெருமையுடைய திருமாலும் ஆகாயத்திலும் பாதாளத்திலும் ஏகிச் சென்று தேடியும், காணுதற்கு அரியவர். அப்பெருமானை ஏத்துக என்பது குறிப்பு.

1266. வேரிபுமேணவ காழியொயே யேனைநிணேமடளோ காதே
தேரக ளோடம ணேநினையே யேயொழி காவண மேயுரிவே

தெளிவுரை : தேரர்களும் சமணர்களும் கூறும் சொற்களில் மனத்தைச் செலுத்த வேண்டாம். நறுமணமும் பெருமையும் திகழும் காழிப்பதியை ஏத்துவீராக. அதுவே அன்பு நெறியும், யோக நெறியும் பெறுவதற்கு உரியதாகும்.

1267. நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளாளின யேனினயே தாமிசயாதமி ழாகரனே.

தெளிவுரை : நேர்மையை அகழ்ந்து எடுக்கும் மனத்தின் கண் எழுகின்ற குற்றத்தைப் போக்குபவராகி, நன்மை புரிவதில் மிகுந்து விளங்கும் பரமனாகிக் காழியுள் வீற்றிருக்கும் நாதனை, நினைத்துப் பாடிய ஞான சம்பந்தனின் இத்திருப்பதிகத்தை ஓதுபவர்களுக்கு, எத்தகைய தாழ்வும் நாடாது.

திருச்சிற்றம்பலம்

376. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1268. மடல்மலி கொன்றை துன்றுவாள் எருக்கும்
வன்னியும் மத்தமும் சடைமேல்
படல்ஒலி திரைகள் மோதிய கங்கைத்
தலைவனார் தம்மிடம் பகரில்
விடல்ஒலி பரந்த வெண்திரை முத்தம்
இப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடல்ஒலி யோத மோதவந்து அலைக்கும்
கழுமல நகர்என லாமே.

தெளிவுரை : ஈசன் கொன்றை மலர், எருக்கம் பூ, வன்னிப் பத்திரம், ஊமத்த மலர் என விளங்கின்ற சடை முடியின் மீது, கங்கை சூடிய தலைவர் ஆவார். அப்பெருமான், வீற்றிருக்கும் இடமாவது, கடல் அலைகள், வெண் முத்துக்களைச் சிப்பிகளுடன் கொண்டு சேர்க்கவும், ஒதம் வந்து அலைக்கவும் உள்ள, கழுமல நகர் என்பதாகும்.

1269. மின்னிய அரவும் வெறிமலர் பலவும்
விரும்பிய திங்களும் தங்கு
சென்னியது உடையான் தேவர்தம் பெருமான்
பொன்னியல் மணியும் உரிகரிமருப்பும்
சந்தமும் உந்துவன் திரைகள்
கன்னியர் ஆடக் கடலொலி மலியும்
கழுமல நகரென லாமே.

தெளிவுரை : ஈசன், மின்னல் போன்று ஒளி திகழும் அரவத்தைத் தரித்தவர்; நறுமணம் கமழும் மலர்கள் பலவற்றைச் சூடியவர்; விரும்பிய சந்திரனைத் திருமுடியின் கண் வைத்து விளங்குபவர்; தேவர்களைக் காத்தருள்பவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருக்கும் இடமாவது, பொன்னும், மணியும், யானையின் தந்தமும், சந்தனமும் திரைகள் வாயிலாகக் கரையில் உந்திச் சேர்க்கவும், கன்னியர் நீராடவும், கடலின் ஒலி பெருகி யோங்கும் கழுமல நகர் என்பதே.

1270. சீருறு தொண்டர் கொண்டடி போற்றச்
செழுமலர் புனலொடு தூபம்
தாருறு கொன்றை தம்முடி வைத்த
சைவனார் தங்கிடம் எங்கும்
ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி
ஒலிபுனல் கௌவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையான் மிக்க
கழுமல நகரென லாமே.

தெளிவுரை : செம்மையான புகழும் பிறவியின் நற்பயனும் கொண்டு மேவும், திருத்தொண்டர்கள் திருவடியைப் போற்றிச் செழுமையான மலர் தூவி, நன்னீர் ஆட்டித் தூபம் சேர்த்து வழிபடப் பெற்ற சிவபெருமான், கொன்றை மாலையைச் சடை முடியில் சூடியவர். அவர் வீற்றிருக்கும் இடமாவது, மகாப்பிரளய காலத்தில், நீரால் சூழப் பெற்றாலும் நீரில் மிதந்து விளங்குகின்ற சிறப்புடையதும், வறுமைக் காலத்திலும் செம்மையான மழை வளம் நன்மையாய்க் காணும் சிறப்புடையதும் ஆகிய கழுமல நகர் ஆகும்.

1271. மண்ணினார் ஏத்த வானுளார் பரச
அந்தரத்து அமரர்கள் போற்றப்
பண்ணினார் எல்லாம் பலபல வேடம்
உடையவர் பயில்விடம் எங்கும்
எண்ணினான் மிக்கார் இயல்பினால் நிறைந்தார்
ஏந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டுஒளி பரக்கும்
கழுமல நகர்என லாமே.

தெளிவுரை : ஈசன், பூவுலகத்தில் உள்ளவர்களால் ஏத்தப் படுபவர். உயர்ந்த உலகத்தில் உள்ளவர்களால் துதிக்கப் படுபவர்; தேவர்களால் போற்றப் படுபவர; பலவாகிய திருவேடப் பொலிவு உடையவர். அவர் வீற்றிருக்கும் இடமாவது, ஈசன் என்னும் இயல்பினில் அப்பெருமானை ஆடவரும் மகளிரும் சென்று தரிசித்து மகிழும் கழுமல நகர் ஆகும்.

1272. கருதியான் தலையும் நாமகள் மூக்கும்
சுடரவன் கரமும்முன் னியங்கு
பரிதியான் பல்லும் இறுத்தவர்க்கு அருளும்
பரமனார் பயின்றுஇனிது இருக்கை
விருதினான் மறையும் அங்கமோர்ஆறும்
வேள்வியும் வேட்டவர் ஞானம்
கருதினார் உலகில் கருத்துடை யார்சேர்
கழுமல நகர்என லாமே.

தெளிவுரை : ஈசன், வேதனாகிய பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் களைந்தவர்; நாமகள் மூக்கை அரிந்தவர்; அக்கினித் தேவன் கரங்களை வெட்டியவர்; சூரியன் பற்களைச் சிதற வைத்தவர். அவ்வாறு புரிந்த அப்பெருமான் இனிது வீற்றிருக்கும் இடமாவது நால்வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் சாற்றும் நெறியில் வேள்விகள் புரிந்து விளங்கவும் சிவஞானிகள் சேர்ந்து திகழவும் உள்ள கழுமல நகர் ஆகும்.

1273. புற்றில்வாள் அரவும் ஆமையும் பூண்ட
புனிதனார் பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியம் சடையிடை வைத்த
படிறனார் பயின்றுஇனிது இருக்கை
செற்றுவன் திரைகள் ஒன்றொடுஒன்று ஓடிச்
செயிர்த்து வண்சங்கொடு வங்கம்
கற்றுறை வரைகள் கரைக்குவந்து உரைக்கும்
கழுமல நகரெனலாமே.

தெளிவுரை : ஈசன், அரவத்தையும் ஆமை ஓட்டினையும் ஆபரணமாகப் பூண்டவர்; கொன்றை மலரையும் சந்திரனையும் சடை முடியில் வைத்தவர்; என் உள்ளத்தைக் கவர்ந்தவர். அவர் இருப்பிடமாவது, அலைகள் மோதிக் கரையில் சேர்க்கவும், கப்பல்கள் நாடவும் விளங்கும் கழுமலம் ஆகும்.

1274. அலைபுனல் கங்கைதங்கிய சடையார்
அடல்நெடு மதிலொரு மூன்று
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட
குழகனார் கோயிலது என்பர்
மலையின்மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு
மற்றுமற் றிடையிடை எங்கும்
கலைகளித் தேறிக் கானலில் வாழும்
கழுமல நகரென லாமே.

தெளிவுரை : ஈசன், கங்கை தங்கிய சடை உடையவர்; முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். அவ் அழகிய பெருமான் விளங்கும் கோயில் என்பது, உயர்ந்த மரக்கலங்களில் சரக்குகள் வந்து சேரவும், கடற் சோலைகளில் மான்கள் மகிழ்ந்து ஆடவும் விளங்குகின்ற கழுமல நகராகும்.

1275. ஒருக்கமுன் னினையாத் தக்கன்றன் வேள்வி
உடைதர உழறிய படையார்
அரக்கனை வரையால் ஆற்றல்அன்று அழித்த
அழகனார் அமர்ந்துஉறை கோயில்
பரக்குவண் புகழார் பழியவை பார்த்துப்
பலபல அறங்களே பயிற்றிக்
கரக்குமாறு அறியா வண்மையால் வாழும்
கழுமல நகர்என லாமே.

தெளிவுரை : ஈசன், தக்கன் செய்த தீய வேள்வியைக் கெடுமாறு செய்தவர்; இராவணனுடைய வலிமையைக் கயிலை மலையின் மீது, திருப்பாத விரலால் ஊன்றி அழித்த அழகர். அப் பெருமான் அமர்ந்து விளங்கும் கோயிலாவது, வள்ளல் தன்மையும், பழிக்கு அப்பாற்கட்ட புகழ் கொண்ட அறங்களையும் ஆற்றிக் கரத்தல் அறியாத பெருமக்கள் மேவும் கழுமல நகர் ஆகும்.

1276. அருவரை பொறுத்த ஆற்றலி னானும்
அணிகளர் தாமரை யானும்
இருவரும் ஏத்த எரியுறு வான
இறைவனார் உறைவிடம் வினவில்
ஒருவர்இவ் வுலகில் வாழ்கிலா வண்ணம்
ஒலிபுனல் வெள்ளமுன் பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்கும்
கழுமல நகர்என லாமே.

தெளிவுரை : கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து விளங்கியவர் திருமால், தாமரை மலர்மீது வீற்றிருப்பவர், பிரமன். இருவரும் ஏத்தி நிற்கச் சோதிப் பிழம்பாகத் தோன்றி, அடியும் முடியும் காணுதற்கு அரியவராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, மகாப் பிரளயத்தில் யாவும் கடலில் மூழ்கினாலும், தான் அழுந்தாது மதிக்கும் பெருமையுடைய கழுமல நகர் ஆகும்.

1277. உரிந்துயர் உருவில் உடைதவிர்ந் தாரும்
அத்துகில் போர்த்துழல் வாரும்
தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச்
செம்மையார் நன்மையால் உறைவாம்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை
மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும்
கழுமல நகர்என லாமே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் சொல்கின்ற புன் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவராகிய சிவபெருமான், செம்மையுடன் நல்லருள் புரியும் பாங்கில் வீற்றிருக்கும் இடமாவது, கோங்கு, முல்லை, மல்லிகை சண்பகம், வேங்கை ஆகிய மலர்களைக் கொய்து மகிழும் மங்கையர்கள் விளங்குகின்ற, கழுமல நகர் என்பதாகும்.

1278. கானலங் கழனி ஓதம்வந்து உலவும்
கழுமல நகர்உறை வார்மேல்
ஞானசம் பந்தன் நற்றமிழ் மாலை
நன்மையால் உரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத்து உறுபிணி நீங்கி
உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வானிடை வாழ்வார் மண்மிசைப் பிறவார்
மற்றுஇதற்கு ஆணையும் நமதே.

தெளிவுரை : கழனிகளில் ஓதமான கடற்கரைச் சோலைகளில் உலவும் கழுமல நகரில் உறையும் ஈசன் மீது, ஞானசம்பந்தன் நன்மை விளங்குமாறு உரைத்த நற்றமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், உடற் பிணி அற்றவர்கள் ஆவர்; உள்ளம் ஒருமித்து ஈசனைப் போற்றி வாழ்வார்; உயர்ந்த வானுலகத்தில் மறுமையில் இன்புற்று விளங்குவர்; மண்ணுலகில் மீண்டும் பிறப்பை அடையாதவர். இது நமது ஆணை.

திருச்சிற்றம்பலம்

377. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1279. புள்ளித்தோல் ஆடை பூண்பது நாகம்
பூசுசாந் தம்பொடி நீறு
கொள்ளித்தீ விளக்கக் கூளிகள் கூட்டம்
காளியைக் குணம்செய்கூத் துடையோன்
அள்ளற்கார் ஆமைஅகடுவான் மதியம்
ஏய்க்கமுள் தாழைகள் ஆனை
வெள்ளைக் கொம்பீனும் விரிபொழில்வீழி
மிழலையான் எனவினை கெடுமே.

தெளிவுரை : ஈசன், புலித் தோலை ஆடையாக உடையவர்; நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர்; மணம் கமழும் திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர்; மயானத்தில் கொள்ளிக் கட்டையினை விளக்காகக் கொண்டு கூளிகள் கூட்டத்தில் காளியுடன் நடனம் புரிந்தவர். அவர், சேற்றில் விளங்கும் கரிய ஆமையின் வயிறு போன்ற சந்திரனும், யானையின் கொம்பு போன்ற தாழையும் விளங்கும் விரிந்த பொழில் மேவும் வீழிமிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானின் திருநாமத்தை ஓத, வினை யாவும் கெடும்.

1280. இசைந்தவாறு அடியார் இடுதுவல் வானோர்
இழுகுசந் தனத்திளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய் கரப்பாய்
பத்திசெய் யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி அலர்கயன் முதலோடு
அடுத்தரிந்து எடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மியவீழி
மிழலையான் எனவினை கெடுமே.

தெளிவுரை : அடியவர்கள், பக்திப் பெருக்குடன் மலர் தூவிப் போற்றவும், தேவர்கள் நறுமணம் கமழும் பொற்றாமரை மாலைகளைச் சாத்தவும், அன்பர்கள் நிஷ்காமியமாகப் பத்தி செய்யும் விளங்க ஊற்று நீர் பாயும் கழனிகளில், மலர்களும் கயல்களும் திகழ, அரிந்த கதிர்களிலிருந்து தூற்றும் நெல்லானது வானத்திலிருந்து உதிர்வன போன்று, வளம் பெருக விளங்குவது வீழிமிழலை. அத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருநாமத்தை ஓதவினை தீரும்.

1281. நிருத்தன்ஆ றங்கள் நீற்றன்நான் மறையன்
நீலமார் மிடற்றன் நெற் றிக்கண்
ஒருத்தன் மற் றெல்லா உயிர்கட்கும் உயிராய்
உளனிலன் கேடிலி உமைகோள்
திருத்தமாய் நாளும் ஆடுநீர்ப் பொய்கை
சிறியவர் அறிவினின் மிக்க
விருத்தரை அடிவீழ்ந்து இடம்புகும்வீழி
மிழலையான் எனவினை கெடுமே.

தெளிவுரை : சிவபெருமான், நடம்புரிபவர்; வேதத்தின் அங்கமாக விளங்குபவர்; திருவெண்ணீறு தரித்தவர்; நான்கு மறைகளாகுபவர்; நீலகண்டத்தை உடையவர்; நெற்றியில் கண்ணுடையவர்; ஒப்பற்ற ஒருவராக இருப்பவர்; எல்லா உயிர்களுக்கும் உயிராக இருந்து காத்து இயக்குபவர்; கெடுதிகளை நீக்குபவர்; உமாதேவியின் தலைவர்; புனித தீர்த்தத்தால் நாள்தோறும் பூசிக்கப்படுபவர். அப்பெருமான், இளைஞர்கள் அறிவுசால் சான்றோரின் திருப்பாதத்தை அட்டாங்க நமஸ்காரமாக வணங்கிப் போற்றச் சீலம் மிக்கவர்கள் வாழும் வீழிமிழலையில் வீற்றிருப்பவர். அவருடைய திருநாமத்தை ஓத வினைதீரும்.

1282. தாங்கரும் காலம் தவிரவந்து இருவர்
தம்மொடும் கூடினார் அங்கம்
பாங்கினால் தரித்துப் பண்டுபோல்எல்லாம்
பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச்
செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயிற் புகா வீழி
மிழலையான் எனவினை கெடுமே.

தெளிவுரை : மகாசங்கார காலத்தில், திருமால், பிரமன் ஆகிய இருவரையும் தமது காயத்தில் ஏற்றுப் பின்னர், முன் போன்று அவ்விருவரையும் தம்தம் தொழில்களைப் புரியுமாறு செய்விப்பவர், சிவபெருமான். அவர், பாக்கு, தென்னை, செண்பகம், பலா, இலுப்பை, வேங்கை, மகிழம் ஆல் ஆகியன சேர்ந்த, வெயில் புகாத பொழில் சூழும் வீழிமிழலையில் விளங்குபவர். அப்பெருமானுடைய திருநாமத்தை ஓத, வினை யாவும் நீங்கும்.

1283. கூசுமா கோயில்வா யிற்கண்
குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூசிமெல் லோதி
பாதிநற் பொங்கரவு அரையோன்
வாசமாம் புன்னை மௌவல் செங்கழுநீர்
மலரணைந்து எழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழிற் றேன் துவலைசேர் வீழி
மிழலையான் எனவினை கெடுமே.

தெளிவுரை : எவரும் அடைவதற்குக் கூச்சப்படுகின்ற மயானத்தில், பெரிய வயிற்றையுடைய பூதங்கள் நறுமணம கமழும் சாந்துகளைப் பூசியும், கூந்தலில் தடவியும் விளங்க, ஆடுகின்ற பாம்பினை அரையில் கட்டி மேவுபவர், சிவபெருமான். அவர், நறுமணம் கமழும் புன்னை, முல்லை செங்கழு நீர் மலர் ஆகிய மணங் கமழும் மலர்களதில் தென்றல் கலந்து வீசும் பொழில்களிலிருந்து தேன் துளிகள் சிதறும் வீழிமிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானுடைய திருநாமத்தை ஓத,வினை யாவும் தீரும்.

1284. பாதிஓர் மாதர் மாலும்ஓர் பாதர்
பங்கயத்து அயனும்ஓர் பாகர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற
அடிகளார் அமரர்கட்கு அமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய்
பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத்து ஒலியறா வீழி
மிழலையான் எனவினை கெடுமே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; திருமாலும் பிரமனும் ஒருபாகமாகக் கொண்டு ஏகபாத திரி மூர்த்தியாய் விளங்குபவர்; ஆதியாகவும் அந்தமாகவும் விளங்கி, இடை நின்றும் விளங்குபவர்; தேவர்களின் கடவுளாய் விளங்குபவர். புரூரச்சக்கர வர்த்தியால் திருப்பணி செய்யப் பெற்றுப் பிரமனை நிகர்த்த வேதியர்கள் வேதம் ஓதுகின்ற வீழி மிழலையில், அப்பெருமான் வீற்றிருப்பவர். அவருடைய இனிய திருநாமத்தை ஓத, வினை யாவும் கெட்டழியும். இது, அடியவர்கள், இனிமையான வாழ்க்கையினை இம்மையிலும், முத்திப் பேற்றை மறுமையிலும் பெறுவார்கள், என்பது குறிப்பதாயிற்று.

1285. தன்றவம் பெரிய சலந்தரன் உடலம்
தடிந்தசக் கரம்எனக்கு அருள்என்று
அன்றுஅரி வழிபட்டு இழிச்சிய விமானத்து
இறைவன் பிறையணி சடையன்
நின்ற நாள் காலை இருந்தநாள் மாலை
கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவ÷ தியர்கள் விழவறா வீழி
மிழலையான் என்வினை கெடுமே.

தெளிவுரை : சிவபெருமான் திருவருளால் தோன்றி சக்கரப்படை, சலந்தராசூரனை அழித்த செயலினைக் கண்ட திருமால், அத்தகைய சக்கரப் படையைப் பெறுவதன் பொருட்டுத் தேவலோகத்திலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து பூசித்தவர். அச்சிறப்புடைய பதியானது, எல்லாக் காலத்திலும் மண்ணுலகத்தின் சேர்க்கையால் உண்டாகும் துன்பத்தை வென்ற அந்தணர்கள் விளங்குகின்ற விழவு அறா வீழிமிழலையாகும். அத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனுடைய திருநாமத்தை ஓத, வினை யாவும் தீரும்.

1286. கடுத்தவாள் அரக்கன் கைலையன் றெடுத்த
கரமுரஞ் சிரநெரிந்து அலற
அடுத்ததோர் விரலால் அஞ்செழுத்து உரைக்க
அருளினன் தடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட்டு இருந்தபைங் கிளிகள்
பதங்களை ஓதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில்வீழி
மிழலையான் எனவினை கெடுமே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணன், கரமும் சிரமும் நெரிந்து அலறக் திருவைந்தெழுத்து ஓதி, ஈசனிடமிருந்து நெடிய வாளைப் பெற்றான். அத்தகைய மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்கள் ஓதக் கேட்ட கிளிகள், அப்பதங்களை ஓத விளங்கும் விரிந்த பொழில்களை உடையது வீழிமிழலை. ஆங்கு வீற்றிருக்கும் ஈசனின் திருநாமத்தை ஓத, வினை யாவும் தீரும்.

1287. அளவிடலுற்ற அயனொடு மாலும்
அண்டமண் கெண்டியும் காணா
முளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த
முக்கண்எம் முதல்வனை முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னம்
தன்னினம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரிவீசவீற் றிருக்கும்
மிழலையான் எனவினை கெடுமே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் அளந்து பார்க்கும் தன்மையில் மேவ, அறிவரியவராய்ச் சோதிப் பிழம்பாகியவர், ஈசன். அப்பெருமான், யாவர்க்கும் முதல்வனாகத் திகழ்பவர். அவர், தாமரை மலரின் மீது அன்னப் பறவை தனது பெடையுடன் இருக்க, நெற் கதிர்கள் கவரி வீசுவதைப் போன்று விளங்கும் வயல்களை உடைய மிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானுடைய நாமத்தை ஓத, வினை தீரும்.

1288. கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக்
கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய எழுந்தநஞ் சதனை
உண்டுஅம ரர்க்குஅமுது அருளி
இஞ்சிக்கே, கதலிக் கனிவிழக் கமுகின்
குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி
மிழலையான் என்வினை கெடுமே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் உரைக்கும் மொழிகளை ஏற்க வேண்டாம். தேவர்கள் அச்சம் கொள்ளுமாறு தோன்றிய நஞ்சினை உண்டு, அவர்களுக்கு அமுதத்தை வழங்கியவர், ஈசன். உயர்ந்து ஓங்கிய வாழைக் கனிகள், மதிலின் மீது விழ, அது, கமுகின் குலையொடு விழ, உயர்ந்த தென்னையில் மேகம் பதியும் வீழிமிழலையில் அப்பெருமான் வீற்றிருப்பவர். அவர்தம் திருநாமத்தை ஓத, வினை தீரும்.

1289. வேந்தர்வந்து இறைஞ்ச வேதியர் வீழி
மிழலையுள் விண்ணிழி விமானத்து
ஏய்ந்ததன் தேவியோடு உறை கின்ற
ஈசனை எம்பெரு மானைத்
தோய்ந்த நீர்த் தோணிபுரத்துஉறை மறையோன்
தூமொழி ஞானசம்பந்தன்
வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை
வானவர் வழிபடு வாரே.

தெளிவுரை : தேவேந்திரன் முதலானோர் வந்து ஏத்த மறையவர்கள் வாழும் வீழிமிழலையும், விண்ணிழி விமானத்தில் உமாதேவியோடு வீற்றிருக்கும் எம்பெருமானாகிய ஈசனை, நீர்வளம் மிகுந்த தோணிபுரத்தில் மேவும் தூயமொழி சாற்றும் ஞானசம்பந்தன் ஏத்தி உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், வானவர்களால் போற்றப்படுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

378. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

1290. மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே.

தெளிவுரை : மங்கையர்க்கரசி என்பவர், சோழர் குலத்தில் தோன்றிய நங்கை; கையில் வளையல் அணிந்தவராய், மடப்பம் என்னும் பண்பும் பெருமையும் உடையவர்; தாமரை மலரில் மேவும் திருமகளுக்கு ஒப்பானவர்; பாண்டிய மன்னனின் பட்டத்தரசியானவர். அத்தகையவர், நாள்தோறும்போற்றிப் பணி செய்யும் பெற்றியுடைய அப்பெருமான், எரியும் நெருப்பின் வண்ணத்தவர்; பூத கணங்களின் தலைவர்; நான்கு வேதங்களையும் அதன் பொருள்களையும் அருளிச் செய்த பரமன்; அங்கயற்கண்ணியாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அவர் வீற்றிருக்கும் ஆலவாய் எனப்படுவது, இதுவே !

1291. வெற்றவே அடியார் அடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளைநீறு அணியும்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய
குலச்சிறை குலாவிநின்று ஏத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்
உலகினில் இயற்கையை ஒழித்திட்
டற்றவர்க்கு அற்ற சிவனுறை கின்ற
ஆலவா யாவதும் இதுவே.

தெளிவுரை : பாண்டிய மன்னனின் மந்திரியாகிய குலச்சிறை எத்தகைய புறப்பற்றும் இல்லாதவராய், வெற்று உள்ளத்தினர்; சிவனடியார்களின் திருவடியில் வீழ்ந்து வணங்கும் மாண்புடையவர்; திருவெண்ணீறு அணிபவர். அத்தகைய பாங்குடையவர் மகிழ்ந்து ஏத்தும் சிவபெருமான், வெள்ளை இடபத்தின் மீது வீற்றிருப்பவர்; தேவர்களுடைய தலைவர். உலகத்தில் தோன்றும் பந்த பாசத்தை நீக்கிய, உற்ற மெய்யடியார்களுக்கு உரியவராகிய அப்பெருமான் உறைகின்ற ஆலவாய் என்பதும் இதுவே.

1292.செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்
சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி
பணிசெயப் பாரிட நிலவும்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தம்
தண்ணெரும் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.

தெளிவுரை : திருநீற்றுச் செந்நெறியை வளர்க்கும் பாண்டிமாதேவி, நாள்தொறும் ஈசனின் இனிய பணி செய்து போற்றி வருபவர். பூதகணங்கள் நிலவ, முத்து, பாம்பு, கங்கை, ஊமத்தம் பூ, எருக்கம் மலர், வன்னி, பிறைச் சந்திரன் ஆகியவற்றைச் சடை முடியில் கொண்டு மேவ, சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலவாய் என்பது, இதுவே.

1293. கணங்களாய் வரினும் தமியராய் வரினும்
அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியும் குலச்சிறை குலாவும்
கோபுரம் சூழ்மணிக் கோயில்
மணங்குமழ் கொன்றை வாளரா மதியம்
வன்னிவன் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.

தெளிவுரை : ஈசனின் அடியவர்கள் ஒருமித்துத் திருக்கூட்டமாக வந்தாலும், தனித்தவராய் வந்தாலும் மகிழ்ந்து பணிந்து ஏத்தும் பெருங் குணத்தவர், குலச்சிறையார். அவர் ஏத்துகின்ற ஈசன், உயர்ந்த கோபுரம் கொண்டு மேவும் மணிக் கோயிலில், கொன்றை மலர், நாகம், வன்னி, வில்வம், கங்கை ஆகியவற்றைச் சடை முடியில் ஏற்று, வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.

1294. செய்யதா மரைமேல் அன்னமே அனைய
சேயிழை திருநுதற் செல்வி
பையரா அல்குல் பாண்டிமா தேவி
நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த
வெய்யவேல் சூலம் பாசம்அங் குசமான்
விரிகதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற
ஆலவா யாவதும் இதுவே.

தெளிவுரை : பாண்டிமாதேவியார், செந்தாமரையில் மேவும் திருமகளைப் போன்றவர்; ஞானம் விளங்கப் பெற்றவர். அவர் நாள்தோறும் பணிந்து ஏத்தச் சூலம், பாசம், அங்குசம், மான், மழு ஆகியவற்றைத் தரித்த ஈசன். உமாதேவியோடு வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.

1295.நலமில ராக நலமதுஉண் டாக
நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுஉண் டாக
தவம்பணி குலச்சிறை பரவுக்
கலிமலி கரத்தன் மூவிலை வேலன்
கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.

தெளிவுரை : நலமற்றவர், நலம் உண்டாக நாடுதலும்; குலமற்றவர், குல மேன்மையடைத் தவம் செய்தலும் ஆகிய சத்துவ குணத்தாரைப் பரவும் குலச்சிறை ஏத்த, மான், சூலம், யானையின் தோல், நீலகண்டர், கங்கை சேர் சடைமுடி ஆகியன மேவிய ஈசன் வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.

1296. முத்தின்தாழ் வடமும் சந்தனக் குழம்பு
நீறும் தன் மார்பினில் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி
பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே
சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனார் உமையோடு இன்புறு கின்ற
ஆலவா யாவதும் இதுவே.

தெளிவுரை : முத்து மாலையும், சந்தனப் பூச்சும், திருநீற்றின் வண்ணமும் விளங்கப் பத்தியுடன் திகழும் பாண்டிமாதேவி, பாங்கோடு பணி செய்கின்ற, பளிங்கின் பெருமலை போன்ற ஈசன், சுடர் விடும் மரகதம் போன்ற உமாதேவியாருடன் வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.

1297. நாவணங்கு இயல்பால் அஞ்செழுத் தோதி
நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால்
தொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங்கு இயல்பாம் இராவணன் திண்தோள்
இருபது நெரிதர ஊன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.

தெளிவுரை : நாவில் பொருந்தச் சேரும் இயல்பினை உடைய, திருவைந்தெழுத்தை, முறைப்படி ஓதிச் சிவஞானம் கைவரப் பெற்றவராகி, ஈசன் திருவடிவமாகிய கோவண ஆடை, திருநீறு, உருத்திராக்கம், சடைமுடி முதலிய சாதனங்கள் கொண்டு மேவும் அடியவர்களைக் கண்டால், தொழுது போற்றுபவராய் விளங்குபவர், குலச்சிறை. அவர் போற்றுகின்ற ஈசன், இராவணனை நெரியுமாறு விரலால் ஊன்றி அடர்த்துப் பின்னர் நன்மையாகும் வண்ணம் செய்து, வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.

1298. மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னும்
மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினோர் மொழியாள் பாண்டிமா தேவி
பாங்கினால் பணிசெய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும்
அளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்புறு கின்ற
ஆலவா யாவதும் இதுவே.

தெளிவுரை : இப் பூவுலகமெல்லாம் பெருமை கொள்ளும் மன்னனாய் விளங்கிய, சோழப் பேரரசின் மகளாகிய பண் போன்ற உயர்ந்த சொல் வழங்கும் பாண்டிமாதேவி பணி செய்து பரவ, திருமாலும், பிரமனும் அளப்பரிதாக நின்ற ஈசன், உமாதேவியோடு இனிது வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.

1299. தொண்டராய் உள்ளோர் திசைதிசை தோறும்
தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டு நாள்தோறும் இன்புறு கின்ற
குலச்சிறை கருதி நின்று ஏத்தக்
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள்
குறியின்கண் நெறியிடை வாரா
அண்டநா யகன்றான் அமர்ந்சதுவீற் றிருந்த
ஆலவா யாவதும் இதுவே.

தெளிவுரை : திருத் தொண்டர்கள் எல்லா இடங்களிலும் சென்று ஈசனைத் தொழுது போற்றி, அப்பெருமானுடைய அருட் செயல்களை மகிழ்ந்து கூறக் கேட்டு, நாள்தோறும் இன்புறும் பெற்றியுடையவர், குலச்சிறை. அவர், பக்திச் சிரத்தையுடன் ஏத்தச் சமணரும் சாக்கியரும் அப் பண்பின்பால் வாரா நிலையில், அண்ட நாயகன் அமர்ந்து வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.

1300. பன்னலம் புணரும் பாண்டிமா தேவி
குலச்சிறை யெனும்இவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன்
திருவடி ஆங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான
சம்பந்தன் செந்தமிழ் இவைகொண்டு
இன்னலம் பாட வல்லவர் இமையோர்
ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.

தெளிவுரை : இப் பூவுலகமெல்லாம் பெருமை கொள்ளும் மன்னனாய் விளங்கிய, சோழப் பேரரசனின் மகளாகிய பண் போன்ற உயர்ந்த சொல் வழங்கும் பாண்டிமாதேவி பணி செய்து பரவ, திருமாலும், பிரமனும் அளப்பரிதாக நின்ற ஈசன், உமாதேவியோடு இனிது வீற்றிருக்கும் ஆலவாய் என்பதும் இதுவே.

திருச்சிற்றம்பலம்

379. திருப்பந்தணைநல்லூர் (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1301. இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மகிமை
இவைசொல்லி உலகெழுந்து ஏத்தக்
கடறினார் ஆவர் காற்றுளார் ஆவர்
காதலித்து உறைதரு கோயில்
கொடிறனார் யாதும்குறைவில்லார் தாம்போய்க்
கோவணம் கொண்டுகூத் தாடும்
படிறனார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.

தெளிவுரை : சிவபெருமான், காலனை உதைத்து அழித்தவர்; அசுரர்களுடைய முப்புரங்களை எரித்தவர்; உலகத்தவர் ஏத்த மயானத்தில் விளங்குபவர்; காற்றாகி, உயிர்ப்புச் சக்தியாக விளங்குபவர்; உலகத்தவர் விரும்பி ஏத்தும் பூச நாளுக்கு உரியவர்; குறைவற்றவராக விளங்குபவராயினும், கோவணத்தை அணிந்த பிறர் பழிக்குமாறு ஆடுவர் போலும். அவர் பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் எம் பசுபதியாரே.

1302. காழியுளார் எனவும் கடலுளார் எனவும்
காட்டுளார் நாட்டுளார் எனவும்
வழியுளார் எனவு மலையுளார் எனவும்
மண்ணுளார் விண்ணுளார் எனவும்
சுழியுளார் எனவும் சுவடுதாம் அறியார்
தொண்டர்வாழ் வந்தன சொல்லும்
பழியுளார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.

தெளிவுரை : ஈசன், மிகுந்திருப்பவர்; கடலில் இருப்பவர்; சுடுகாட்டில் இருப்பவர்; ஊரின்கண் இருப்பவர்; நிலவும் வழியில் இருப்பவர்; மலையில் இருப்பவர்; விண்ணில் இருப்பவர்; சுழலும் தன்மையில் இருப்பவர். அப்பெருமான் இவ்வாறு  எல்லா இடத்திலும் இருப்பவர் எனச் சொல்லப் பெற்றாலும், அதன் சுவட்டினை அறிவது அரியதாய், தொண்டர் பெருமக்களால், வாழ்த்தும் வணக்கமும் சொல்லப்படுபவர். அவர் பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் எம் பசுபதீஸ்வரரே.

1303. காட்டினார் எனவும் நாட்டினார் எனவும்
கடுந் தொழில் காலனைக் காலால்
வீட்டினார் எனவும் சாந்தவெண் ணீறு
பூசியோர் வெண்பதி சடைமேல்
சூட்டினார் எனவும் சுவடுதாம் அறியார்
சொல்லுள சொல்லுநால் வேதப்
பாட்டினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.

தெளிவுரை : ஈசன், காட்டில் உள்ளவர்; நாட்டில் உள்ளவர்; காலனைக் காலால் மாய்த்தவர்; நறுமணம் கமழும் திருவெண்ணீறு பூசியவர்; வெண்மையான சந்திரனைச் சடை முடியின் மீது சூடியவர். அப்பெருமானை இவ்வாறு ஏத்தப் பெற்றாலும் அதன் சுவட்டினை அறிவதற்கு அரியவராய் எல்லாக் காலத்திலும் நிலைத்தும் மேவும் நான்கு வேதங்களையும் சொல்பவர். அவர் பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் எம் பசுபதீஸ்வரரே.

1304. முருகினார் பொழில்சூழ் உலகினார் ஏத்த
மொய்த்தபல் கணங்களின் துயர்கண்டு
உருகினார்ஆகி உறுதிபோந் துள்ளம்
ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்தத்
கடலுள்நஞ்சு அமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.

தெளிவுரை : அழகிய பொழில் சூழ்ந்து விளங்கும் உலகத்தவர் ஏத்தச் சூழ்ந்து விளங்கிய பலகணத்தவர்களின் துயரம் கண்டு இரக்கம் உற்றுத் தனது திருமிடறானது கருகுமாறு, கடலில் தோன்றிய நஞ்சினை வாங்கிப் பருகிய ஈசன், பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் எம் பசுபதியாரே.

1305. பொன்னினார் கொன்றை இருவடம் கிடந்து
பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவ
மேவுவெண் ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க்கு அறம்அமர்ந்து அருளித்
தொன்மையார் தோற்றமும் கேடும்
பன்னினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.

தெளிவுரை : ஈசன், பொன்ற போன்ற பெருமையுடைய பெரிய கொன்றை மாலை அணிந்தவர்; திருமார்பில் முப்புரி நூல் திகழ, ஒளி கொண்டு மேவும் அரவத்தை மாலையாக உடையவர்; திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கும் அறப்பொருளை உபதேசித்தவர். தொன்மைக் கோலத்தை உடைய அப்பெருமான், பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் பசுபதியாரே.

1306. ஒண்பொனார் அனைய அண்ணல் வாழ்கஎனவும்
உமையவள் கணவன் வாழ்க எனவும்
அண்பினார் பிரியார் அல்லு நன்பகலும்
அடியவர் அடியிணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லர் என்றுஏத்த
அல்லவர் தீயர்என்று ஏத்தும்
பண்பினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.

தெளிவுரை : ஒளி மிக்க பொன் போன்று திகழும் அண்ணலாகிய ஈசன் வாழ்க என்வும், உமாதேவியின் கணவர் வாழ்க எனவும், அன்பிலிருந்து மாறுபடாத கொள்கையுடைய அடியவர்கள் ஏத்தித் தொழுவார்கள். இடையறாத அன்பும் பக்தியும் உடையவர்கள், ஈசன் எல்லார்க்கும் நல்லவர் என்று ஏத்தி மகிழ்வார்கள். அவ்வாறு இல்லாதவர்கள், தீயம் என்று ஏத்தும் பண்பினராவர். இத்தகைய மாண்புடையவர், பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் பசுபதியாரே.

1307. எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை
இருநிலம் வானுலகு எல்லை
தெற்றினார் தங்கள் காரண மாகச்
செருமலைந்து அடியிணை சேர்வான்
முற்றினார் வாழும் மும்மதில் வேவ
மூவிலைச் சூலமும் மழுவும்
பற்றினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.

தெளிவுரை : தமக்கு எத்தகைய துன்பமும் செய்யாத தேவர்களையும் மண்ணுலக மாந்தர்களையும் துன்புறுத்திய முப்புர அசுரர்கள், எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் சிவபெருமான். அவர் சூலமும் மழுப் படையும் ஏந்திப் பந்தணைநல்லூரில் மேவும் பசுபதியாரே.

1308. ஒலிசெய்த குழலின் முழவமது இயம்ப
ஓசையால் ஆடல்அறாத
கலிசெய்த பூதம் கையினால் இடவே
காலினால் பாய்தலும் அரக்கன்
வலிகொள்வர் புலியின் உரிகொள்வர் ஏனை
வாழ்வுநன் றானுமோர் தலையில்
பலிகொள்வர் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.

தெளிவுரை : குழலும் முழவும் ஒலிக்கும்படி ஆரவாரம் உடைய இராவணன், குயிலை மலையைக் கையால் எடுக்க, திருப்பாத விரலால் அவனுடைய செருக்கினை அடக்கியவர் புலித் தோலையுடைய சிவபெருமான். அவர், நற்றிறத்தைப் பெற்றிருப்பினும் பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலி கொள்பவராகிப் பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் பசுபதியாரே.

1309. சேற்றினார் பொய்கைத் தாமரையானும்
செங்கண்மால் இவர்இரு கூறாத்
தோற்றினார் தோற்றத் தொன்மையை அறியார்
துணைமையும் பெருமையும் தம்மில்
சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்னச்
சரண்கொடுத்து அவர்செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றஎம் பசுபதி யாரே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் இரு பக்கமாக மேல்நோக்கி வானிலும், கீழ்நோக்கிப் பாதாளத்திலும் சென்று தம்தம் பெருமையும்  வலிமையும் காட்டுமாறு புரியச் சிவபெருமானுடைய தொன்மைத் தன்மையை அறியாது இருந்தனர். பின்னர், அவர்கள் தமது பிழையை உணர்ந்து வேண்டித் துதிக்க, அக்குற்றத்தைப் போக்கியவர் பந்தணை நல்லூரில் வீற்றிருக்கும் பசுபதியாரே.

1310. கல்லிசை பூணக் கலையொலி யோவாக்
கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன் புல்லிசை கேளர
நற்றமிழ் ஞானசம் பந்தன்
பல்லிசை பகுவாயப் படுதலை யேந்தி
மேவிய பந்தணை நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல்
தொல்வினை சூழ்கி லாவே.

தெளிவுரை : வேதத்தை ஓதும் ஒலியும், வேள்வி முதலான கிரியைகளும், திருவிழாக்களும் இடையறாது நிகழும் கழுமல நகரில், நற்புகழுக்குரியவராகவும், புன்மை தரக்கூடிய சொற்களை கேளாதவராகவும் விளங்கும், நற்றமிழின் வயலாகிய ஞானசம்பந்தன், மண்டை ஓட்டினை ஏந்தி மேவிய ஈசன் வீற்றிருக்கும் பந்தணைநல்லூரினைச் சொல்லிய, இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள்பால், தொல்வினை அடையாது.

திருச்சிற்றம்பலம்

380. திருஓமாம்புலியூர் (அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1311. பூங்கொடி மடவாள் உமையொரு பாகம்
புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடும்எம் விகிர்தர்
விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலில் செழுமலர் கோதிச்
செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; சடை முடி உடையவர்; அடர்ந்த இருளில் நடனம் ஆடுபவர். எமது விகிர்தர். அவர் விருப்பத்துடன் வீற்றிருக்கும் இடமாவது, யாது என வினவினால், அது தேன் மணம் கமழும் பொழிலில் செழுமையான மலர்களைக் கோதி, வண்டு இசை பாட, புகழின்மிக்கு ஓங்கியும் உள்ள  ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.

1312. சம்பரற்கு அருளிச் சலந்தரன் வீயத்
தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானார் இமையவர் ஏத்த
இனிதின் அங்கு உறைவிடம் வினவில்
அம்பர மாகி அழல்உமிழ் புகையின்
ஆகுதி யால்மழை பொழியும்
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.

தெளிவுரை : ஈசன், சலந்தரனை அழியச் செய்த சக்கரப் படையைத் திருமாலுக்கு வழங்கி அருளியவர்; தேவர்களால் ஏத்தப் பெறுபவர். அப் பெருமான் இனிது வீற்றிருக்கும் இடமாவது, வேள்வி ஆற்றி அதன் புகை மண்டலமானது வானில் சென்று மழை பொழியவும் தேவர்களால் ஏத்தப் பெறவும் விளங்கும் ஓமாம் புலியூர் உடையவர் வடதளியே.

1313. பாங்குடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப்
படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத்து இழித்த
தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்குஎரி மூன்றும் அமர்ந்துஉடன் இருந்த
அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.

தெளிவுரை : பகீரதச் சக்கரவர்த்தி, தனது மூதாதையர்களுக்குப் பிதுர்க்கடன் ஆற்றும் தன்மையில் தவம் புரியப் பெருகி வந்த கங்கையைத் தன் சடை முடியில் ஏற்றும், மண்ணுலகம் தாங்கிக் கொள்ளும் வகையில் அதனை அருளிச் செய்த ஈசன் உறையும் இடமாவது, மூன்று வகையான தீயை வளர்ந்து வேதங்களை ஓதி வேள்வியைப் புரிந்து மேவும் மறையவர்கள் திகழும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.

1314. புற்றரவு அணிந்து நீறுமெய் பூசிப்
பூதங்கள் சூழ்தர ஊரூர்
பெற்றம்ஒன்று ஏறிப் பெய்பலி கெள்ளும்
பிரானவன் உறைவிடம் வினவில்
கற்றநால் வேதம் அங்கம்ஓர் ஆறும்
கருத்தினார் அருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.

தெளிவுரை : அரவத்தை அணிந்து, திருநீறு பூசிப் பூதகணங்கள் சூழ்ந்து வர, இடப வாகனத்தில் ஏறி ஊர்கள் தோறும் ஏகிப் பலிகெள்ளும் சிவபெருமான் உறையும் இடமாவது, நான்கு வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் நன்கு கற்றுத் தேர்ந்து அதன் கருத்தினை அறிந்த புகழ் மிகுந்த மறையவர்கள் விளங்கும் ஓமாம் புலியூர் உடையவர் வடதளியே.

1315. நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர்
துயர்கெட நெடியமாற்கு அருளால்
அலைத்தவல் லசுரர் ஆசற ஆழி
அளித்தவன் உறைவிடம் வினவில்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்
தன்மையார் நன்மையால் மிக்க
உலப்பில்பல புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.

தெளிவுரை : பூவுலகத்தவர்களும் தேவலோகத்தில் விளங்குபவர்களும் பாதாளலோகத்தில் இருப்பவர்களும் காக்கப்படுமாறும், கொடிய அசுரர்கள் புரியும் தீமைகளை அழிக்குமாறும் காத்தல் தொழில் மேவும் திருமாலுக்குச் சக்கரப் படையை அருளிச் செய்தவர் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடமாவது, குற்றம் பொருந்திய செயலால் பொருளை ஈட்டுதல் செய்யாத நல்லொழுக்கச் சீலர்களும், பெரும்புகழ் மிக்க செயல் மேவும் சான்றோர்களும் விளங்குகின்ற ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.

1316. மணந்திகழ் திசைகள் எட்டும்ஏ ழிசையும்
மலியும்ஆறு அங்கம்ஐ வேள்வி
இணைந்தநால் வேதம் மூன்றுஎரி இரண்டும்
பிறப்பென ஒருமையால் உணரும்
குணங்களும் அவற்றின் கொள்பொருள்குற்றம்
அற்றவை யுற்றதும் எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.

தெளிவுரை : எண் திசையாகவும், ஏழிசையாகவும், ஆறு அங்கமாகவும் ஐந்து வேள்வியாகவும், நான்கு வேதமாகவும், மூன்று வகையான நெருப்பாகவும், இரு பிறப்பெனவும் ஒருமை மனத்தால் உணரும் குணங்களும், அவற்றின் பொருளும், குற்றம் அற்றனவும் உற்றனவும் என யாவும் உணர்ந்த ஈசன் வீற்றிருக்கும் இடம் ஓமாம்புலியூரில் உடைய அவர்தம் வடதளியே.

1317. தலையொரு பத்தும் தடக்கையது இரட்டி
தானுடை அரக்கன்ஒண் கயிலை
அலைவது செய்த அவன்திறல் கெடுத்த
ஆதியார் உறைவிடம் வினவில்
மலையென ஓங்கு மாளிகை நிலவு
மாமதில் மாற்றலர் என்றும்
உலவுபல் புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.

தெளிவுரை : பத்துத் தலையும் இருபது பெரிய கையும் கொண்டு ஒளி மிகுந்த கயிலயை அசைத்த இராவணனுடைய செருக்கினையும் வலிமையையும் அழித்த ஆதி நாயகராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, உயர்ந்த மாட மாளிகைகள் விளங்கும் புகழ் மிக்க ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.

1318. கள்ளவிழ் மலர்மேல் இருந்தவன் கரியோன்
என்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி உருவர் உமையவ ளோடும்
உகந்துஇனிது உறைவிடம் வினவில்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப்
பனிசலர்ச் சோலைசூழ் ஆலை
ஒள்ளிய புகழார் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் என இவர்கள், காண்பதற்கு அரிதாய்ச் சோதிப் பிழம்பின் வண்ணத்தராகிய சிவபெருமான், உமாதேவியோடு மகிழ்ந்து இனிது வீற்றிருக்கின்ற இடமாவது, பள்ளத்தில் மேவும் நீரில் வாளை பாய, கழனிகளில் பனி மலர் விளங்கச் சோலை சூழ்ந்து மேவும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.

1319. தெள்ளியர் அல்லாத் தேரரோடு அமணர்
தடுக்கொடு சீவரம் உடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட்கு அருளாக்
கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து
நலந்திகழ் மூன்றுஎரி யோம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி யதுவே.

தெளிவுரை : தேரரும் சமணரும் உரைப்பனவாகிய பொய்யுரைகளை ஏற்காதவராகிய ஈசன் உறையும் இடமாவது, நான்கு மறைகளை நன்கு ஓதி, நலம் திகழும் மூவகையான தீயை வளர்ந்து வேள்விகளைப் புரியும் பெருமை மிக்கவர் வாழும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளியே.

1320. விளைதரு வயலுள் வெயில்செறி பவள
மேதிகள் மேய்புலத்து இடறி
ஒளிதர மல்கும் ஓமமாம் புலியூர்
உடையவர் வடதளி அரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக்
காழியுள் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள்
அமரலோ கத்திருப் பாரே.

தெளிவுரை : நல்ல விளைச்சல்கள் உடைய நிலத்தில் பவளம் போன்று சுடர் மிகும் வெயிலின் ஒளி மலர, எருமைகள் படிந்து மேய்ந்து இடற விளங்கும் ஓமாம் புலியூர் உடையவர், வடதளியில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஏத்தித் களிப்பை உண்டாக்கும் செல்வக் காழியுள் மேவும் ஞானசம்பந்தன், அன்பினால் வழங்கிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தேவ லோகத்தில் திகழ வீற்றிருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

381. திருக்கோணமலை (அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், திருக்கோணமலை, இலங்கை)

திருச்சிற்றம்பலம்

1321. நிரைகழல் அரவம் சிலம்பொலி யலம்பு
நிமலர்நிறு அணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர கொடியணி விடையர்
கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்
அளப்பரும் கனமணி வரன்றிக்
குறைகடல் ஓத நித்திலம் கொழிக்கும்
கேணமா மலையமர்ந்தாரே.

தெளிவுரை : ஈசன், ஒலிக்கும் கழலும், அரவமும், சிலம்பும் திருப்பாதத்தில் திகழும் வண்ணம் அணிந்தவர்; திருநீறு அணிந்த திருமேனியராகிய நிமலர்; மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; இடபக் கொடி உடையவர். அவர், கடற்கரையில் சந்தனம், அகில் கட்டைகள், மதிப்பு மிக்க மணிகள் வரம்பின்றிப் பெருகி மேவ, முத்துக்கள் கொழிக்கும் கோணமா மலையில் அமர்ந்து இருப்பவர். அப்பெருமானை ஏத்துக என்பது குறிப்பு.

1322. கடிதென வந்த கரிதனை உரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநு தலவளொடும் உடனாய்க்
கொடிதெனக் கதறும் குரைகடல் சூழ்ந்து
கொள்ளமுன் நித்திலம் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும்
கோணமா மலையமர்ந் தாரே.

தெளிவுரை : வேகமாகப் பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்துத் திருமேனியில் போர்த்திக் கொண்ட ஈசன், பெண் யானை போன்ற நடையும் பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியும் உடைய உமாதேவியை உடனாகக் கொண்டவர். பிறர், கொடியதெனக் கண்டு அச்சம் தரக்தக்க கடல் சூழ்ந்து விளங்க, முத்துக்களைச் சுமந்து மக்களுக்கு வழங்கும் கடல் அலைகள் பெருகித் தோன்றும் கோணமா மலையில், அப் பெருமான் வீற்றிருப்பவரே.

1323. பனித்து இளம் திங்கள் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளம் துவர்வாய்க் காரி கைபாக
மாகமுன் கலந்தவர் மதில்மேல்
தனித்தபேர் உருவ விழித்தழல் நாகம்
தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரகைடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், குளிர்ச்சியான பிறைச் சந்திரனையும், நாகத்தையும் படர்ந்த சடைமுடியின் மீது வைத்தவர்; உமாதேவியைப் பாகமாக உடையவர்; மேரு மலையை வில்லாகக் கொண்டு வாசுகி என்னும் நாகத்தை நாணாகப் பூட்டி, அக்கினித் தழலைக் கணையாகக் கொண்டு முப்புரத்தை அழித்த ஆற்றுலுடையவர் அவர், கடல் சூழ்ந்த கோண மலையில் வீற்றிருப்பவர்.

1324. பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப்
பாங்குடை மானனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் அரற்றும் செழுங்கடல் தரளம்
செம்பொனும் இப்பியும் சுமந்து
கொழித்துவன் திரைகள் கரையிடைச்
சேர்க்கும் கேணமா மலையமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், பெருக்கெடுத்து வரும் கங்கையைச் சடை முடியில் வைத்தவர்; மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிச் பின்னர், அவனுடைய மனைவியாகிய இரதிதேவி வேண்ட உய்யுமாறு செய்த விமலர்; தாமரை போன்ற மலரடிகளை உடையவர். அப் பெருமான், ஆரவாரம் செய்து அலைகளின் வாயிலாக முத்தும் மணியும் பொன்னும் சிப்பியும் சேர்க்கும் கரையில் விளங்கும் கோணமா மலையில் வீற்றிருப்பவர்.

1325. தாயினும் நல்ல தலைவர்என்று அடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்றுஅகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பணியும் தொழில்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், அடியவர்களால், தாயிலும் இனிய நன்மையைச் செய்பவர் என ஏத்தப்படுபவர்; அடியவர்களின் உள்ளத்தில் உறைந்து அவர்களின் சொல்லாகவும், எண்ணமாகவும் மருவி விளங்குபவர்; பல வடிவங்களைப் பெற்று விளங்குபவர்; பிணி நீக்கி அருள்பவர்; முப்புரி நூல் அணிந்த திருமார்பினர். அப் பெருமான், கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்து மேவும் கோணமா மலையில் வீற்றிருப்பவர்.

1326. பரிந்துநன் மனத்தால் வழிபடு மாணி
தன்னுயிர் மேல்வரும் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்த வற்கு அருளும்
செம்மையார் நம்மையாளுடையார்
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை
வேங்கைவண் செருந்தி செண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமா மலையமர்ந் தாரே.

தெளிவுரை : பக்தி பெருகும் நன்மனத்தால், அன்பு பெருக வழிபடும் மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனை, உதைத்து அழித்துப் பாலனைக் காத்தருளும் செம்மை உடையவர், நம்மை ஆளும் சிவபெருமான். அவர் மல்லிகை, மாதவி, புன்னை, வேங்கை, செருந்தி, செண்பகம், முல்லை ஆகியவை விளங்கும் பொழில் சூழ்ந்த கோணமா மலையில் வீற்றிருப்பவர்.

1327. எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால்
ஏத்திட ஆத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும்
இறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர்
கோணமா மலையமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன், கயிலையை எடுத்த இராவணனுடைய செருக்கத்தை திருப்பாத விரலால் அழித்து, அவன் ஏத்திப் போற்ற, அன்பு மிகுந்த நிலையில் விருப்பத்துடன் வாளும் வாழ்நாளும் அருளியவர்; ஆதியும் அந்தமும் அற்றவர்; தக்கன் புரிந்த வேள்வியைத் தடுத்தவர்; வனப்பு மிகுந்த உமாதேவியைக் கருணையுடன் பாகம் வைத்தவர். பெருமையுடன் தமது புகழைக் கூறும் அடியவர்களுக்கு அருள் புரியும் அப்பெருமான், கோண மலையில் வீற்றிருப்பவர்.

1328. அருவரை தொருகை வெண்டலை யேந்தி
அகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரும் அறியா வண்ணம் ஒள் ளெரியாய்
உயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக்
கோணமா மலையமர்ந் தாரே.

தெளிவுரை : ஈசன் அருவருப்பு இன்றி, வெண்மையான மண்டை ஓட்டினை ஏந்தி, மனைதோறும் சென்று பலி ஏற்றவர்; பாற்கடலில் அரவணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் அறியாத வண்ணம் பெரிய சோதிப் பிழம்பு ஆகி, மேலே உயர்ந்தவர்; உலகளந்த மாலுக்கும் குருவாய் விளங்கியவர். அப்பெருமான், தமது திருக்கழலை அடியவர்கள் வணங்கி அருள் பெறும் தன்மையில், கோணமா மலையில் வீற்றிருப்பவர்.

1329. நின்றுணும்சமணும் இருந்தணும் தேரும்
நெறியலா தனபுறம் கூற
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால்
மெல்லிய லொடும்உட னாகித்
துன்றும்ஒண் பௌவ மவ்வலும் சூழ்ந்து
தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றும்ஒண் கானல் வாசம்வந்து உலவும்
கோணமா மலையமர்ந் தாரே.

தெளிவுரை : சமணரும் தேரரும் கூறும் புறமொழிகளை ஏற்க வேண்டாம். நஞ்சினை உண்ட பெருமையுடைய ஈசன், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கி, கடலும் மல்லிகைச் சோலையும் கடற்சோலையும் திகழும் கோண மலையில் வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்துக என்பது குறிப்பு.

1330. குற்றமிலாதார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்
கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்தும்
உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல்வினை யடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.

தெளிவுரை : மன்னுயிரின் குற்றங்களை இல்லாமையாக்கும் பாங்கினராய்க் கடல் சூழ்ந்த கோணமா மலையில் வீற்றிருக்கும் ஈசனை ஏந்தி, கற்று நன்கு உணர்ந்தும், கேள்வி ஞானம் பெற்றும், காழியில் மேவும் ஈசனின் திருக்குறிப்பையுடைய ஞானசம்பந்தன் சொல்லிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் - ஓதக் கேட்பவர்கள் உயர்ந்தோர் ஆவார்கள்; அத்தகையவர்தம் தொல்வினை நீங்கப் பெற்றவராய் விளங்கித் தேவர் உலகத்தில் பொலிந்து விளங்குவர். இது, ஓதுபவர்கள் சுற்றத்துடன் இம்மை, மறுமை நலனைப் பெறுவார்கள் என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

382. திருக்குருகாவூர் வெள்ளடை (அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில், திருக்குருகாவூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1331. சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்து
எண்ணரும் பல்கணம் ஏத்தநின்று ஆடுவர்
விண்ணவர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.

தெளிவுரை : ஈசன், திருவெண்ணீறு அணிந்த திருமார்பில் தோலாடை புனைந்து விளங்குபவர்; எண்ணுதற்கு அரிய புகழ் உடைய பல்வேறு கணத்தவரும் ஏத்தும் பாங்கில் நின்று நடனம் புரிபவர்; தேவர்கள் வந்து சேர்ந்து மேவும் பசுமையான பொழில் சூழ்ந்த வெள்ளடை என்னும் திருக்கோயிலுள் மேவியவர். அப்பெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்கும் பிஞ்ஞகனாரே.

1332. திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
வரைமக ளோடுடன் ஆடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரைமல்கு வாளரவு ஆட்டுகந் தீரே.

தெளிவுரை : ஈசனே, நீவிர் கங்கையைச் சடைமுடியின் மீது வைத்தவர்; மலைமகளாகிய உமாதேவியோடு உடன் நின்று ஆடுபவர்; மணம் கமழும் தண்பொழில் சூழ்ந்த வெள்ளடை என்னும் கோயிலில் மேவியவர். தேவரீர், அரவத்தை அரையில் கட்டி ஆடும் நடனத்தை விரும்பியவரே.

1333. அடையலர் தொன்னகர் மூன்று எரித்து அன்ன
நடைமட மங்கையொர் பாகம் நயந்து
விடையுகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், பகைமை கொண்டு எதிர்த்த மூன்று அசுரர்களையும், புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியவர்; அன்னம் போன்ற நடை உடைய உமாதேவியை விரும்பி ஒரு பாகமாகப் பெற்றுத் திகழ்பவர்; இடபத்தை உகந்து ஏறி வாகனமாகக் கொண்டவர்; வெள்ளடை என்னும் கோயிலில் மேவி வீற்றிருப்பவர்; தேவரீர், வெற்பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய சங்கரனே.

1334. வளம்கிளர் கங்கை மடவர லோடு
களம்பட ஆடுதிர் காடரங் காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை எம்பெரு மானே.

தெளிவுரை : வளமையைக் கிளர்ந்து வழங்குகின்ற கங்கை அன்னையைச் சடை முடியில் பதிய வைத்து, மயானத்தை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற பெருமானே ! தேவரீர், குளிர்ச்சியான பொழில் சூழ்ந்த வெள்ளடையில், இளமையான பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிய எமது பெருமானே.

1335. கரிகுழல் நல்ல துடியிடை யோடு
பொரிபுல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை எந்தை பிரானே.

தெளிவுரை : சுருண்ட கூந்தலை உடைய உமாதேவியோடு சேர்ந்து, வெப்பம் மிகுந்த மயானத்தில் நடம் புரிகின்ற ஈசனே ! தேவரீர், பைம்பொழில் விரிந்து சூழ்ந்த வெள்ளடை என்னும் கோயிலில், மழுப்படை மேவிய எந்தை பெருமானே !

1336. காவியங் கண்மட வாளொடும் காட்டிடைத்
தீயக லேந்தி நின்று ஆடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்துகொண்டு ஆட்டுஉகந் தீரே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு சுடுகாட்டின் இடையில் எரியும் நெருப்பைங் பரவ ஏந்தி நின்று ஆடுகின்ற தேவரீர், தேன் விளங்கும் மலர்கள் கொண்ட தண் பொழில் சூழ்ந்த வெள்ளடையில், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கௌவியத்தைப் பூசனையாக ஏற்று மகிழந்து மேவுபவரே.

திருச்சிற்றம்பலம்

383. திருநல்லூர்ப்பெருமணம் (அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில், ஆச்சாள்புரம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1337. கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் காட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.

தெளிவுரை : திருத்தொண்டர்கள் சூழ விளங்குகின்ற நல்லூர்ப் பெருமணத்தில் மேவிய சிவபெருமானே ! அம்மிக் கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பல உடைய திருமணம் எனக்கும் வேண்டாம்; கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய மணம் மிகுந்த புகழ்ப் பாடல்களின் வாயிலாக என்னுடைய விருப்பமானது மெய்யாகத் தெரியவில்லையோ ! தேவரீர் எனது சொல்லாகிய பாடல்கள் காட்டும் பெருமணத்தினை நீர் ஏற்றுக் கொள்ளடவில்லையோ ! அருள் புரிவீராக ! என்பது குறிப்பு.

1338. தருமணல் ஓதம்சேர் தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு பாவைநல் நல்லார்கள்
வருமணம் கூட்டி மணம்செயு நல்லூர்ப்
பெருமணத் தான்பெண் ணோர்பாகம் கொண்டானே.

தெளிவுரை : ஈசனே ! கடலின் ஓதம் காணும் மணலின் முத்துக்கள் சேர்ந்து விரவச் சிறுமியர்கள் மணம் கட்டி விளையாடும் மணம் பெருக விளங்குவது, நல்லூர்ப் பெருமணம். அத்தகைய பெருமை மிக்க பெருமணத்தில் உமாதேவியைப் பாகம் கொண்டு விளங்கும் தேவரீர் ! அருள் புரிவீராக.

1339. அன்புறு சிந்தைய ராகி அடியவர்
நன்புறு  நல்லூர்ப் பெருமண மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.

தெளிவுரை : ஈசன்பால் அன்பு செலுத்தும் சிந்தை உடைய அடியவர்கள், நன்மையே உறுகின்ற நல்லூர்ப் பெருமணத்தில் மேவி விளங்கும் எம் தந்தையாகிய ஈசனின் திருவடியை ஏத்துபவர்கள் ஆவர். அத்தகைய சீலத்தை உடையவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் ஈசனுக்குத் தொண்டு புரியும் திருத்தொண்டர்களாக விளங்குவார்கள்.

1340. வல்லியம் தோலுடை ஆர்ப்பது போர்ப்பது
கொல்லியர் வேழத்து உரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கைஎம் புண்ணிய னார்க்கே.

தெளிவுரை : சிவபெருமான், புலித்தோலை உடையாகக் கொண்டு விளங்குபவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; கோவணத்தை அணிந்து இருப்பவர்; அப்பெருமான், ஆசார சீலங்களை உடையவர்களாய் எல்லாக் காலங்களிலும் அன்புறு சிந்தை உடையவர்களாய், ஈசன் திருப்புகழை ஏத்தும் பெருமை உடையவர்களாய் விளங்கும் மெய்யடியார்கள் தொழுது ஏத்தும் நல்லூர்ப் பெருமணத்தில், பொருந்தி விளங்குபவர். இதுவே எம் புண்ணியனாராகிய பரமனின் இயல்பாகும். புண்ணியனார் - ஈசன், போக்கும் வரவும் புணர்வம் இலாப் புண்ணியனே ! என்னும் திருவாசக வாக்கினைக் காண்க.

1341. ஏறுகந் தீர்இடு காட் டெரியாடிவெண்
ணீறுகந் தீர்திரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீர்உமை கூறுகந் தீரே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், இடப வாகனத்தை உகந்து ஏறி வாகனமாகக் கொண்டவர்; சுடுகாட்டில் உகந்து நின்று நெருப்பினைக் கையில் ஏந்தி நடனம் புரிபவர்; திருவெண்ணீற்றை உகந்து திருமேனியில் பூசி விளங்குபவர்; வரிசையாக அழகுடன் விளங்குகின்ற தேன் கமழும் கொன்றை மலரின் நறுமணத்தை உகந்தவர். செல்வம் பெருகும் நல்லூர்ப் பெருமணத்தை உகந்த நீவிர், உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு உகந்தவரே.

1342. சிட்டப்பட் டார்க்குஎளி யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட்டும் சென்னி யான்பதி யாவது
நாட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்து
இட்டப்பட் டால்ஒத்தி ரால்எம்பி ரானிரே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், ஆசார சீலத்தையுடைய சிவஞானிகளுக்கு எளியவர்; வேட்டுவ கோலத்தை மேற்கொண்டவராய்த் தலையில் பட்டம் கட்டிக் கொண்டு திகழ்பவர். உமது பதியாவது நடனம் புரிவதற்கு உரிய கொட்டு வாத்தியம் ஓயாது விளங்கும் நல்லூர்ப் பெருமணம். நீவிர், விரும்பினால் பிற இடங்களிலும் தோன்றி விளங்குபவர். நீரே எமது பெருமான்.

1343. மேகத்த கண்டன்எண் தோளன் வெண்ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.

தெளிவுரை : ஈசன், மேகம் போன்ற அருள் வழங்கும் கரிய கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களை உடையவர்; வெண்ணீற்று உமையாள் என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; புலித் தோலை உடையாகக் கொண்டவர்; நாகத்தை இறுகக் கட்டி உள்ளவர். அப்பெருமான் நல்லூர்ப் பெருமணத்தில் நல்ல போகம் உடையவராகி, மன்னுயிர்களுக்கு யோகத்தை புரிந்து விளங்குபவரே.

1344. தக்கிருந் தீர்அன்று தாளால் அரக்கனை
உக்கிருந்துஒல்க உயர்வாரைக் கீழிட்டு
நக்கிருதீர்இன்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீர்எமைப் போக்கரு ளீரே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், அடியவர்களுக்குத் திருக்காட்சி நல்கித் தகவாய் வீற்றிருந்தபோது, கயிலையை எடுத்த இராவணனைத் திருப்பாத விரலால் கலங்குமாறு செய்து, நகை கொண்டு விளங்கியவர், இப்போது நல்லூர்ப் பெருமணத்தில் வீற்றிருந்து அருள் புரியும் பெருமானே ! உமது திருப்பாத மலரின்கண் சேர்வதற்கு அருள் புரிவீராக.

1345. ஏலும்தண் தாமரையானும் இயல்புடை
மாலும்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலும்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலும்தம் கோயில் புரிசடை யார்க்கே.

தெளிவுரை : பிரமனும், திருமாலும் தமது ஆற்றலை அறியாதவராகி, ஈசனைத் தேடி நைந்தனம். அத்தகைய பெருமையுடைய சடை முடியுடன் மேவும் ஈசன் பாடிய நான்கு வேதங்களும் அவருடையனவே; நல்லூர்ப்பெருமணம் என்னும் திருக்கோயிலும் அவருடையதே.

1346. ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமண மேவிய
வேதன தாள்தொழ வீடெளி தாமே.

தெளிவுரை :  சமணரும் சாக்கியரும் சொல்லும் உரைகள் பொருத்தமற்றவை, அவற்றைக் கொள்ள வேண்டாம். நாதனாகியும் நல்லூர்ப்பெருமணத்தில் மேவும் வேத நாயகனாகவும் விளங்கும் ஈசனின் தாள் தொழ, முத்திப் பேறு எளிதாகக் கைகூடும். அனைவரும் வருக.

1347. நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும்பழி பாவம் அவலம் இலரே.

தெளிவுரை :  நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த காழியுள் மேவும் ஞானசம்பந்தன், பெறுதற்கரிய முத்தி வழங்குகின்ற நல்லூர்ப்பெருமணத்தில் வீற்றிருக்கும் ஈசனைப் போற்றி, அத்தகைய பதத்தை உறுமாறு பொருளாகச் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்குப் பழியும் பாவமும் அறும்; துயரமும் இல்லை. இது, இம்மையில் இனிய வாழ்க்கையும் மறுமையில் முத்தி நலனையும் அருளிச் செய்யும் என்பதாம்.

திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் மூன்றாம் திருமுறை மூலமும் உரையும் முற்றிற்று

பிற்சேர்வு

1. திருமறைக்காடு - காவிரித் தென்கரைத்தலம் (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1. விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனியவாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரமயோகீ
கடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறைக் காடமர்ந்தீர்
அடைத்திடுங் கதவு தன்னை யப்படித் தாளினாலே

தெளிவுரை : பகை கொண்ட முப்புர அசுரர்களை அழித்த பரமனே ! பரம யோகி ! மறைக் காட்டில் அமர்ந்த பெருமானே ! உமது வாயிலில் புகுந்து நின்றோம் தாள் இட்டுத் திருக்கதவை அடைத்திடுவீராக.

2. முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்கமூர்த்தி
மடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல் வறைக்காமர்ந்தாய்
அடைத்திடும் கதவை என்றிங்கு அடியனேன் சொல்லவல்லே
அடைத்தனை தேவி தன்னோடுஎம்மையாள் உகக்குமாறே.

தெளிவுரை : பிரம கபாலம் ஏந்திப் பலி கொள்ளும் முக்கண்ணுடைய ஈசனே ! தாமரை மலர் திகழ்ந் தோங்கும் வயல் உடைய மறைக் காட்டில் வீற்றிருக்கும் நாதனே ! கதவை அடைத்துக் கொள்க என அடியேன் சொல்ல அவ்வாறே அடைத்துக் கொண்ட பெருமானே ! உமாதேவியார் உடனாக மேவி விளங்க, எம்மை உகந்து அருள் புரிபவர், தேவரீரே அன்றோ !

3. கொங்கணா மலர்கள் மேவும் குளிர்பொழில் இமயப்பாவை
பங்கணா வுருவினாலே பருமணி யுமிழும் வெம்மைச்
செங்கணார் அரவம் பூண்டதிகழ் மறைக் காடமர்ந்தாய்
அங்கணா இதுவன்றோதான் எம்மையாள் உகக்குமாறே.

தெளிவுரை : தேன் மணம் கமழும் மலர்மேவும் குளிர்ந்த பொழில் சூழ்ந்த இமய மலையின் பாவையாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட ஈசனே ! பெரிய மணி போன்ற மாணிக்கத்தை உமிழும் அரவத்தை ஆபரணமாகப் பூண்டு மறைக் காட்டில் அமர்ந்து விளங்கும் பெருமானே ! யாம் வேண்டியவாறு கதவை அடைத்த செயலன்றோ எம்மை உகந்து ஆட்கொண்ட பாங்காயிற்று.

4. இருளுடை மிடற்றினானே எழில்மறைப் பொருள்கள் எல்லாம்
தெருள்பட முனிவர்க்கு ஈந்த திகழ் மறைக்காடமர்ந்தாய்
மருள்உடை மனத்தனேனும் வந்தடிபணிந்து நின்றேற்கு
அருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்குமாற.

தெளிவுரை : கரிய கண்டத்தையுடைய பெருமானே ! எழில் மிகுந்த வேதப் பொருள்களை ஓதியருளி மறைக் காட்டில் அமர்ந்த வேத நாயகனே ! மருள் கொண்ட மனத்தினால் அடி பணிந்த அடியேற்கு அருள் புரிந்த பரிசன்றோ எம்மை ஆளாகக் கொண்டு உகந்த செய்கை யாயிற்று.

5. பெருத்தகை வேழந்தன்னைப் பிளிறிட உரிசெய்தானே
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காடமர்ந்தாய்
கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்
அருத்தியை அறிவதன்றோ எம்மையாள் உகக்குமாறே.

தெளிவுரை : பெருத்த கையாகிய துதிக்கை உடைய யானையின் தோலை உரித்த நாதனே ! நறுமணம் கமழும் பொழில்கள் சூழும் பெருமை உடைய மறைக்காட்டில் வீற்றிருக்கும் பரமனே ! மெய்க் கருத்தின்றித் தேவரீரைப் பணிந்து நின்ற என்னை நன்கு அறிந்து உகந்து அருள் புரிந்தீர் !

6. செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளும் தேசோடு
ஒப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக்காட மர்ந்தாய்
அப்பமர் சடையினானே அடியனேன் பணியுகந்த
அப்பனே அளவில் சோதீ அடிமையை உகக்கு மாறே.

தெளிவுரை : தாருகவனத்தில் உள்ள மங்கையரைக் கவர்ந்து வளையல்களைக் கொள்ளும் எண்ணத்தில் ஒப்பற்ற பலியேற்கும் பரமனே ! ஒளி திகழ்கின்ற மறைக்காட்டில்  வீற்றிருக்கும் ஈசனே ! கங்கையைத் தரித்த சடை முடியுடைய பெருமானே ! அடியவனின் பணியை உகந்து அருள் புரிந்த எம் தந்தையே ! அளவு காண்பதற்கு அரிய சோதிப் பொருளாய் விளங்கும் நீவிர், எம்மை உகந்தவரே யாவர்.

7. மதிதுன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னியானே
கதியொன்றும் ஏற்றினானே கலிமறைக் காடமர்ந்தாய்
விதியொன்று பாவின்மாலை கேட்டருள் வியக்குந்தன்மை
இதுவன்றோ உலகின்நம்பி எம்மையாள் உகக்குமாறே.

தெளிவுரை : சந்திரன், பொருந்திய கொன்றை மலர், ஊமத்தம்பூ ஆகியவற்றை ஒளி திகழும் சென்னியில் மேவிய ஈசனே ! தாள நடை கொண்டு மேவும் இடபத்தையுடைய நாதனே ! ஆர்த்தெழும் ஒலி மேவும் மறைக் காட்டில் வீற்றிருக்கும் பெருமானே ! விதிக்கப்பட்ட மரபும், இலக்கணமும் கொள்ள, ஓதும் பாடல்களைக் கேட்டு மகிழும் தன்மையானது, இக்கதவினைத் தாளிடுமாறு அடைத்த செயல் அல்லவா ! உலகின் கண் எம்மை உகந்து ஆட்கொள்ளும் தன்மையும் இதுவே அன்றோ !

8. நீசனாம் அரக்கன் திண்டோள் நெரிதர விரலால் ஊன்றும்
தேசனே ஞானமூர்த்தீ திருமறைக் காடமர்ந்தாய்
ஆசையை யறுக்க உய்ந்திட்டு அவனடி பரவமெய்யே
ஈசனார்க்கு ஆளதானான் என்பதை அறிவித்தாயே.

தெளிவுரை : இராவணன் தோளை நெரியுமாறு திருப்பாத விரலால் ஊன்றும் ஒளிமயமாகிய ஞான மூர்த்தீ ! திருமறைக்காட்டில் வீற்றிருக்கும் ஈசனே ! பிற பொருள்கள் மீது பற்றின்றி, ஈசனையே பற்றும் வகையானவன் எனவும், ஈசனுக்கு ஆளாகியவன் எனவும் என்னை அறிவித்தது தேவரீரின் திருவருளே அல்லவா !

9. மைதிகழ் உருவினானும் மலரவன் தானும் மெய்ம்மை
எய்துமாறு அறிய மாட்டார் எழில் மறைக் காடமர்ந்தாய்
பொய்தனை இன்றி நின்னைப் போற்றினார்க்கு அருளைச் சேரச்
செய்தனை எனக்கு நீஇன்று அருளிய திறத்தினாலே.

தெளிவுரை : ஈசனே ! திருமாலும் பிரமனும் மெய்ம்மையான தேவரீரைக் காணாதவராய் நிற்க, நீவிர் மறைக் காட்டில் வீற்றிருந்நீர். எனக்கு இன்று அருள் செய்த திறனாவது, பொய்ம்மையில்லாது, உண்மையாகப் போற்றுபவர்களுக்கு, நீவிர் அருள்புரிபவர் என்பது, வெளிப்படை யாயிற்று.

10. மண்டலத் தமணர்பொய்யும் தேரர்கள் மொழியும் மாறக்
கண்டனைய களஎன்றும் கலிமறைக் காடமர்ந்தாய்
தண்டியைத் தானாவைத்தான் என்னும் அத்தன்மையாலே
எண்டிசைக்குஅறிய வைத்தாய் இக்கதவு அடைப்பித்தன்றே.

தெளிவுரை : மண்ணுலகத்தில் சமணரும் சாக்கியரும் சொல்லும் உரைகள் அகற்றப்படுபவை எனக் கொண்டு, மறைக் காட்டில் வீற்றிருக்கும் பெருமானே ! கதவைத் தானாகவே அடைப்பித்துத் தேவரீர், உமது பெருமையை எட்டுத் திசைகளிலும் பரவச் செய்தீர்.

11. மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டுளானைக்
கதவடைத் திறமும் செப்பிக் கடிபொழிற்காழி வேந்தன்
தகவுடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்ன
பதமுடைப் பத்தும் வல்லார் பரமனுக்கு அடியர் தாமே.

தெளிவுரை : மதம் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்ட பெருமைக்குரிய மறைக்காட்டில் வீற்றிருக்கும் ஈசனை ஏத்திக் கதவு அடைக்கப் பெற்ற திறத்தைச் செப்பிக் காழி வேந்தனும் தமிழ் விரகனும் ஆகிய திருஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், பரமனின் அடியவர்கள் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

2. திருவிடைவாய் (அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

12. மறியார் கரத்து எந்தையம் மாதுஉமை யோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடம்என்பர்
பொறிவாய் வரிவண்டு தன்பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.

தெளிவுரை : மான் ஏந்திய கரத்துடைய எந்தை சிவபெருமான், உமையம்மையோடு வேறுபாடு இல்லாதவாறு உடனாகி உறையும் இடமாவது, தேன் அருந்திய வண்டு தன் பெடையோடும் சேர்ந்து நறுமணம் கமழும் மலரில் துயிலும் வளப்பம் உடைய விடைவாயே.

13. ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
செல்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர்
எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது
வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.

தெளிவுரை : பொருந்த வைத்துக் கொள்வதற்கு ஒவ்வாத எலும்பும், திங்களும் சடை முடியில் வைத்த சிவபெருமான் வீற்றிருக்கின்ற இடமாவது, எல்லாப் பக்கங்களிலும் கோடல் மலரும் எழில் மிகுந்த விடைவாயே.

14. கரையார் கடல் நஞ்சமுது உண்டவர் கங்கைத்
திரையார் சடைத் தீ வண்ணர் சேர்விடம் என்பர்
குரையார் மணியும் குளிர் சந்தமும் கொண்டு
விரையார் புனல் வந்திழியும் விடைவாயே.

தெளிவுரை : பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு, கங்கையைச் சடை முடியின் மீது வைத்த தீவண்ணம் உடைய ஈசன் வீற்றிருக்கும் இடம் என்பது, மணியும் சந்தனமும் கொண்டு உந்தித்தள்ளிவரும் நறுமணம் கமழப் புனல் வளம் மிகுந்த ஆற்றின் நலம் பெருகும், விடைவாயே.

15. கூசத்தழல்போல் விழியா வரு கூற்றைப்
பாசத் தொடும் வீழஉதைத்தவர் பற்றாம்
வாசக் கதிர்ச்சாலி வெண்சாமரை யேபோல்
வீசக் களியன்ன மல்கும் விடைவாயே.

தெளிவுரை : யாவரும் கண்டு நடுக்கம் கொள்ளுமாறு மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனை அவனுடன் உள்ள பாசக் கயிற்றோடும் மாய்ந்து வீழும் படித் திருப்பாதத்தால் உதைத்தவர், சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடமாவது, சாலி என்னும் வளம் மிக்க நெற்கதிர்கள், வெண் சாமரம் போன்று வீச மகிழ்ந்த அன்னப் பறவை, அவ் வயலில் களித்து மகிழ்ந்திருக்கும் விடைவாயே.

16. திரிபுரம் புரமூன்றையும் செந்தழல் உண்ண
எரியம்பு எய்த குன்ற வில்லிஇடம் என்பர்
கிரியும் தரு மாளிகைச் சூளிகைதன் மேல்
விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே.

தெளிவுரை : எல்லாப் பக்கங்களிலும், வரையறை இல்லாது திரிந்து மூன்று புரங்களும், எரிந்து சாம்பலாகுமாறு, மேருமலையை வில்லாகவும் அக்கினியைக் கணையாகவும் கொண்டு எய்தவர் சிவபெருமான். அவர் வீற்றிருக்கும் இடம் என்பது மலை போன்று உயர்ந்த மாளிகையின் மேல் தளத்தில் வானளவு உயர்ந்த கொடி மேவி அழைக்கும் விடைவாயே.

17. கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்
தள்ளி தலைதக்கனைக் கொண்டவர் சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச் செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடம்செய் விடைவாயே.

தெளிவுரை : உமாதேவியானவர் தாட்சாயணி என்னும் நங்கையாய்த் தோன்றித் தக்கனின் புதல்வியாக விளங்கி, ஈசனைத் திருமணம் கொண்டனர். தனது தந்தை ஆற்றும் தீய, யாகத்தைக் கைவிடுமாறு புகன்ற தாட்சாயணியின் அறிவுரையைக் கேளாது, இகழந்தனன் தக்கன். அவனை வேள்வித் தீயில் தள்ளி அழித்த ஈசன், சார்ந்து மேவும் இடமாவது, விடைவாயே.

18. பாதத் தொலி பாரிடம் பாட நடம்செய்
நாதத் தொலியர் நவிலும் இடம்என்பர்
கீதத்த தொலியும் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே.

தெளிவுரை : நடம் செய்யும் பாதத்தில் விளங்கும் கழல் ஒலியும், பூதகணங்கள் பாட நடம் செய்யும் நாதத்தின் ஒலியும் விளங்க மேவும் ஈசன், வீற்றிருக்கும் இடமாவது, யாழின் இசையொலியும் முழவத்தின் ஒலியும், வேதம் ஓதும் ஒலியும் விளங்கும், விடைவாயே.

19. எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
பண்மார் தருபாடல் உகந்தவற் பற்றாம்
கண்ணமார் விழவிற் கடிவீதிகள் தோறும்
விண்ணோர் களும் வந்திறைஞ்சும் விடைவாயே.

தெளிவுரை : ஈசனின் பேராற்றலையும் தனது இயல்பினையும் எண்ணாத இராவணனுடைய வலிமையை அழித்து அவனுடைய தோளும் தலையும் நெரித்தப் பின்னர், அவன் பண்ணிசை பெருக ஏத்திய பாடலுக்கு உகந்து அருள் புரிந்தவர் எம்பெருமான். அவர், பற்றி வாழும் இடமாவது, கண்ணுக்கு இனிய திருவிழாக்களைக் காணும் தேவர்கள், வீதிகள் தோறும் வந்து ஈசனை ஏத்தும் விடைவாயே.

20. புள்வாய் பிளந்தான் அயனபூ முடிபாதம்
ஒள்வான் நிலந்தேடும் ஒருவர்க்கு இடமாம்
தெள்வார் புனற்செங்கழு நீர்முகை தன்னில்
விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் திருவடியும் திருமுடியும் முறையே நிலத்திலும் வானிலும் தேடியும் காண முடியாதவாறு விளங்கி, ஒப்பற்றவராகிய ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, தெளிந்த நீரில் உள்ள மலரில் தேனை உண்டு உலவும் விடைவாயே.

21. உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார்புரும் வேவ மூவர்க்கு அருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே.

தெளிவுரை : சமணர் சாக்கியர் ஆகியோருக்கு அறியப்படாதவரின் இடமாவது, முப்புர அசுரர்களை எரித்த காலத்தில், அக்கோட்டைகளில் இருந்து பக்தியுடன் ஏத்திய மூன்று அசுரர்களைக் காத்தருளிய இடக் கொடியுடைய ஈசனின் அழகிய விடைவாயே.

22. ஆறும் மதியும் பொதிவேணியன் ஊரா
மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை
நாறும் பொழிற்காழியர் ஞானசம்பந்தன்
கூறும் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே.

தெளிவுரை : கங்கையும் சந்திரனும் சடை முடியில் தரித்து மேவும் ஈசனின் ஊராகிய மாறுதல் இல்லாத பெருஞ் செல்வம் மல்கும் விடைவாயைக் காழியில் மேவும் ஞானசம்பந்தன் ஏத்திய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் குற்றம் அற்றவரே.

திருச்சிற்றம்பலம்

3. திருக்கிளியன்னவூர் (அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

23. தார்சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்
சீர்சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர்
பேர்சிறக்கும் பெருமொழி உய்வகை
ஏர்சிறக்கும் கிளியன்ன வூரனே.

தெளிவுரை : ஈசனின், சடை முடிக்கு, அணியாக மேவும் மாலை சிறப்புறும் வள்ளலாகிய அப்பெருமானின் திருப்பாதத்தை ஏத்தச் சீரும் செல்வமும் சிறப்புறும். அவ் இறைவனை நினைத்துப் போற்றுவோர்க்குப் பேரும் புகழும் சிறப்புறும். அவர்தம் பெருமொழியாகிய திருவைந் தெழுத்தானது, பிறவிப் பயனை அடையும் பெரும் புகழைச் சிறப்புறச் சேர்க்கும். இவ்வாறு சிறப்புக் கெல்லாம் தலைவராகி அருள் புரிபவர், கிளியன்னவூரில் வீற்றிருக்கும் சிவபெருமானே.

24. வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே
தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே
புன்மைக் கன்னியர் பூசல்உற் றாலுமே
நன்மை உற்ற கிளியன்ன வூரனே.

தெளிவுரை : நன்மையே உற்ற கிளியன்னவூரில் வீற்றிருக்கும் ஈசன், வறுமைக் காலத்தை அதனைக் கெடுத்து அருள்பவர்; பகைவர்களை அழித்து நட்பை விளைவிப்பவர்; பூசலும் புன்மையும் தீர்த்து இல்லத்தில் இனிமை சேர்ப்பவர்.

25. பன்னி நின்ற பனுவல் அகத்தியன்
உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்
மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்
முன்னில் நின்ற கிளியன்ன வூரனே.

தெளிவுரை : கிளியன்னவூரில் மேவும் பரமன், சிவஞானம் நல்கும் கருத்துக்களை உள்ளத்தில் நின்று ஓதியருள்பவர்; நினைத்து ஏத்தப் பேரின்பத்தை வழங்குபவர்.

26. அன்பர் வேண்டும் அவைஅளி சோதியான்
வன்பர் நெஞ்சில் மருவல்இல் லாமுதல்
துன்பம் தீர்த்துச் சுகம்கொடு கண்ணுதல்
இன்பம் தேக்கும் கிளியன்ன வூரனே.

தெளிவுரை : இன்பத்தை நிலைக்கச் செய்தருளும் கிளியன்னவூரில் மேவும் ஈசன், சோதிப் பொருளாய் விளங்கி அன்பர்களுக்கு வேண்டிய யாவும் அளிப்பவர்; வன்மையடையவர் நெஞ்சில் மருவாதவர்; துன்பத்தைத் தீர்த்தருள்பவர்; சுகம் தரும் கண்ணுதலே.

27. செய்யும் வண்ணம் சிரித்துப் புரம்மிசை
பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்
உய்யும் வண்ணம் இங்குஉன் அருள்நோக்கிட
மெய்யும் வண்ணக் கிளியன்ந வூரனே.

தெளிவுரை : கிளியன்னவூரில் மேவும் ஈசன், முப்புரத்தைப் புன்முறுவலால் அழித்தவர்; அழகிய பெருந்தகையானவர், அனைவரும் உய்யுமாறு அருள்பவரும், அப்பெருமானே.

28. எண்பெறா வினைக்கு ஏதுசெய் நின்னருள்
நண்பு உருப்பவம் இயற்றிடில் அந்நெறி
மண்பொரு முழுச் செல்வமும் மல்குமால்
புண்பொருத கிளியன்ன வூரனே.

தெளிவுரை : துன்பத்தைத் தீர்க்கும் கிளியன்னவூரில் மேவும் ஈசனே ! எண்ணில் அடங்காத வினைகளைத் தீர்த்து அழித்து உயிர்களைக் காப்பது தேவரீரின் இன்னருளே ஆகும். அது அன்பு கொண்டு இனிது ஏத்த இப்பூவுலகத்துச் செல்வங்களை இனிதாகச் சேர்க்க வல்லது. இது, இம்மை நலனையும் மறுமை நலனையும் அடையும் உபாயத்தை ஓதுதலாயிற்று.

29. மூவர் ஆயினும் முக்கண்ண நின்னருள்
மேவு றாது விலக்கிடற் பாலரோ
தாஉறாது உனது ஐந்தெழுத்து உன்னிட
தேவர் ஆக்கும் கிளியன்ன வூரனே.

தெளிவுரை : கிளியன்னவூரில் வீற்றிருக்கும் ஈசனே ! தேவரீருடைய திருவைந்தெழுத்தை மனத்தில் இருத்தி ஏத்தத் தேவராக உயர்வளிக்கும். தேவரீருடைய அருளால் கிடைக்கக் கூடிய பயனை அடைய முடியாதபடி தடுப்பதற்கு யார் உளர் ? யாரும் இல்லை என்பது குறிப்பு.

30. திரம் மிகுத்த சடைமுடி யான்வரை
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால்
வரம் மிகுத்த கிளியன்ன வூரனே.

தெளிவுரை : கிளியன்னவூரில் எழுந்தருளியுள்ள ஈசன், ஒளியும் உறுதியும் உடைய சடைமுடி உடையவர்; வலிமை மிகுந்த இராவணன், மலையைப் பெயர்க்க, அவனைத் திருப்பாதத்தால் நெரித்துப் பின்னர் திருநாமத்தை ஓதி ஏத்தித் துதிக்க வரம் அருளியவர். அப்பெருமானை ஏத்தும் என்பது குறிப்பு.

31. நீதி உற்றிடும் நான்முகன் நாரணன்
பேதம் உற்றுப் பிரிந்து அழலாய்நிமிர்
நாதன் உற்றன நல்மலர் பாய்இருக்
கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே.

தெளிவுரை : நான்முகனும் திருமாலும் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடு கொண்டு போட்டியை ஏற்படுத்தி ஈசனைத் தேடிச் சென்றனர். அப்பெருமான், சோதிப் பெரும் பிழம்பால் ஓங்கி, நாதன் எனப் பலரும் ஏத்துமாறு இருப்பவர். அவர் கிளியன்னவூரில் மேவும், பரமனே.

32. மங்கையர்க்கு அரசோடு குலச்சிறை
பொங்கு அழல்சுரம் போக்குஎன பூழியன்
சங்கை மாற்றிச் சமணரைத் தாழ்த்தவும்
இங்கு உரைத்த கிளியன்ன வூரனே.

தெளிவுரை : மங்கையர்க்கு அரசியும் குலச்சிறையாரும், பாண்டிய மன்னனைப் பீடித்துள்ள வெப்பு நோயைப் போக்கி அருளுமாறு வேண்ட அவ்வாறே அதனைத் தீர்த்துச் சமணரின் எழிலைத் தாழ்த்திய ஈசன், கிளியன்னவூரில் வீற்றிருக்கும், அரனே.

33. நிறைய வாழ் கிளியன்னவூர் ஈசனை
உறையும் ஞானசம்பந்தன் சொல் சீரினை
அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே
குறையிலாது கொடுமை தவிர்வரே.

தெளிவுரை : வளம் நிறைந்து மேவும் கிளியன்னவூரில் மேவும் ஈசனை ஏத்திய ஞானசம்பந்தன் சொல்லிய சீர்மிக்க இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்குக் கொடுமை முதலான வன்செயல்கள் அணுகாது; அவர்கள் குறைவற்ற வாழ்க்கையை உடையவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

பிற்சேர்வு முற்றிற்று.

திருஞானசம்பந்தர் தேவாரம் முற்றுப் பெற்றது.

© Om Namasivaya. All Rights Reserved.