Books / பத்துப்பாட்டு நூல்கள்


மலைபடுகடாம்


சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகனார் என்னும் புலவர் ஆவார். நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

நூலாசிரியர் பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகனார் வரலாறு

பத்துப்பாட்டென்னும் செந்தமிழ் இலக்கிய மலையின் குவடாகத் திகழும் மலைபடுகடாம் என்னும் இந்நூலை இயற்றியவர், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகனார் என்னும் நல்லிசைப்புலவர் ஆவார். இரணிய முட்டம் என்பது பாண்டி நாட்டின்கண் உள்ள யானைமலை முதலிய இடங்களைத் தன்பாற் கொண்டதாகிய ஒரு சிறிய நாடாகும். தொல்காப்பியத்தில்,

ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவையவை பெறுமே  (மரபியல்-74)

என்னும் சூத்திரத்திற்குப் பேராசிரியர் கூறிய விளக்கவுரையில், உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகன், கடியலூர் உருத்திரங் கண்ணன் என்பன அந்தணர்க்குரியன எனக் கூறியிருத்தலான், இப் புலவர் பெருமான் அந்தணர் வகுப்பினர் என்ப. குறிஞ்சி நிலத்தைப்பற்றிச் செய்யுள் புனையும் ஆற்றலில் குறிஞ்சி பாடிய கபிலர்க்கும் இவர்க்கும் பெரிதும் ஒற்றுமையுண்டு. ஒரு பொருளைக் கூறப்பகுங்கால், அப் பொருளின் சிறப்புத் தன்மைகளையே எடுத்து அடைமொழிகளாக்கிப் பயில்வோர் உளத்தே அப் பொருளைக் கண்கூடாகத் தோன்றச் செய்வதில் இவர் பெரிதும் வல்லுநர் ஆவர். பத்துப் பாட்டுக்களையும்,

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

என முறைப்படுத்தித் தொகுத்த சான்றோர் திருமுருகாற்றுப் படையை முன்வைத்தமைக்குச் சிறந்த காரணம் இருத்தல் போன்றே மலைபடுகடாத்தினை இறுதியில் வைத்தமைக்கும் சிறந்த காரணம் இருத்தல் வேண்டும். அஃது, இப்பாடல் எவ்வாற்றானும் சிறப்புற்றிருத்தலான் இவ்விலக்கியத்திற்கு முடிக்கலனாகத் திகழ்க என்னும் கருத்தேயாதல் வேண்டும். ஏனெனில், இம்மலைபடுகடாம் ஓதுவார் உளத்தே பொருள் புலப்படுத்தி இன்புறுத்துவதில் இணையற்றதே என்று கருத இடமுளது.

பெருங்குன்றூர்க் கவுசிகனார் சிறந்த இசைத்தமிழ் உணர்ச்சியுடையாரும் அக்காலத்தே இருந்த யாழ் முதலிய இசைக்கருவிகளை நுணுகி யறிந்தவருமாவர் என்பதை, இந்நூலில் யாண்டும் காணப்படும் இசைக்கருவிகளின் இயல்பு பண்ணியல்பு முதலியவற்றால் நன்கு அறியலாகும். பண்டை நாளிலிருந்த தமிழ் நாட்டின் ஐவகை நிலங்களின் இயல்பும், அந்நிலங்களில் வாழும் மக்கள் இயல்பும், அவர் வாழ்க்கையின் இயல்பும், அக்காலத்து மன்னர்களின் இயல்பும் சிறந்த தலைநகரங்களின் தன்மையும், இவர் நூலை ஓதுகின்ற நம் கண் முன்னர் நன்கு தோன்றும்படி இவர் செய்யுள் யாத்துள்ள அருமை பெரிதும் போற்றற்பால தொன்றாம். இவ்வாற்றால், இப் புலவர் பெருமான் இச் செந்தமிழ் நாட்டின் வரலாறொன்றனை இயற்றித் தந்த ஆசிரியராகவும் விளங்குகின்றார். விண்முட்டி வளர்ந்த பெரிய காட்டின்கண் நிகழும் நிகழ்ச்சிகளை இவர் மிக நுண்ணிதின் உணர்ந்து அவற்றைக் கேட்போர் உளமகிழுமாற்றால் நன்கு விரித்தோதிச் செல்கின்றார்.

வானத்தின்கண் மிளிரும் கார்த்திகைமீன்கள் போன்று வெள்ளிதாக மலர்ந்து திகழும் முசுண்டை என்றும், விளையாட்டுப் போர் நிகழ்த்தும் யானைக் கன்றுகளின் கைகள் பிணைந்தாற் போன்று பிணைந்து தோன்றின தினைக் கதிர்கள் என்றும் தயிர் சிதறிக் கிடந்தாற் போன்று அவரை மலர்கள் உதிர்ந்து கிடந்தன என்றும், வேற்படைகள் முதுகிட்டாற் போன்று கருப்பங்காடுகள் காற்றாலே ஒருபுறமாய்ச் சாய்ந்து தோன்றின என்றும், பிடியின் முழந்தாள் போன்று கவலைக் கொடிகள் கிழங்கு வீழ்த்தன என்றும், ஆகுளியென்னும் பறை முழங்கினாற்போன்று பேராந்தைப்பேடும் சேவலும் இரட்டும் என்றும், முழவுகள் தூங்கினாற்போன்று பலாக்கனிகள் தூங்கும் என்றும், இருள் துண்டுபட்டுக் கிடந்தாற்போன்று பன்றி கிடக்கும் என்றும், நெடிய மரம் விழுந்து கிடந்தாற்போற் கிடக்கும் பாம்புகள் என்றும், பண்டமாற்றிப் பெற்ற கலப்பு நெல்லின் பன்னிற அரிசிபோன்று பன்னிற யாடுகள் தோன்றும் என்றும், துடிக்கண் போன்ற வரால் மீன்துண்டு என்றும், பண்களை மாறிமாறிப் பாடுங்கால் புதிய புதிய இன்பந் தோன்றச்செய்வது போலப் புதிய இன்பங்களை மாறிமாறித் தரும் பொழில்களும் பள்ளியும் என்றும், நன்னன் நகரத் தெருக்கள் பேரியாறு போற் கிடந்தன என்றும், எஞ்ஞான்றும் திருவிழா நாட்போன்று ஆரவாரமுடைத்து அந்நகர் என்றும், கடலும் முகிலும் சேர்ந்து முழங்கினாற் போன்று முழக்கமுடைத்தென்றும், மலைத்தொடர் போன்றும் முகில் நிரைபோன்றும் அந்நகரத்தே மாடங்கள் ஓங்கி நின்றன என்றும் இன்னோரன்ன அரியபல உவமைகளை இந்நூலில் யாண்டும் கூறியுள்ளார்.

குறிஞ்சி முல்லை மருதம் முதலிய நிலங்களிலே வாழும் மாந்தர் தொழிலும், அவர்கள் விருந்தோம்பற் சிறப்பும், அவர்கள் உணவின் இயல்பும், பழக்க வழக்கங்களும் நன்குநுணுகிய முறையில் ஓதியுள்ளார். காட்டினூடே எழும் பல்வேறு ஓசைகளையும், தனித்தனி விதந்து கூறி, இறுதியாக அவ்வோசைகளைத் தொகுத்து மலைபடுகடாம் என ஓதிய இனிமையுணர்ந்த சான்றோர் அதன் அருமையைப் பாராட்டியே இந் நூற்கு மலைபடுகடாம் எனப் பெயர் சூட்டினர். காட்டினூடே செல்லும் வழிகளின் இயல்பும், அவ்வழிகளிலே உண்டாகும் நன்மை தீமைகளின் இயல்பும், நவிரமலையின் சிறப்பும், சேயாற்றின் எழிலும், நன்னன் வேண்மானின் பெருமையும் அவன் நாடு நகரங்களின் சிறப்பும், குடியோம்பற்சிறப்பும், வண்மைச் சிறப்பும், பிறவும் நன்கு ஓதப்பட்டுள்ளன. மேலும் ஆகுளி எல்லரி குழல் குறும்பரந்தூம்பு சிறுபறை சீறியாழ் தட்டை தண்ணுமை துடி தூம்பு பதலை பன்றிப்பறை பாண்டில் பேரியாழ் முழவு முதலிய இசைக்கருவிகளைப்பற்றியும் ஆங்காங்குக் கூறியுள்ளார். இந் நூலாசிரியர் மலைபடுகடாத்தையன்றி நற்றிணையில் (44: 149) இரண்டு செய்யுள்கள் செய்துள்ளார். இந்நல்லிசைப் புலவரைப் பற்றிய வேறு செய்திகளை அறிதற்குச் சான்றுகள் அகப்படவில்லை.

பாட்டுடைத்தலைவன் வரலாறு

சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டினுள் இறுதியினின்ற மலைபடுகடாம் என்னும் இப்பாமாலை சூடப்பெற்ற பெருமையுடையான் நன்னன் வேண்மான் என்னும் வள்ளற் பெருமான் ஆவான். இம் மன்னர் பெருமான் ஆட்சிசெய்த நாடு பல்குன்றக் கோட்டம் எனப்படும். பல்குன்றக் கோட்டம் என்பதனை குன்று சூழிருக்கை நாடு என இந்நூலாசிரியர் ஓதியமை யானும், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என இந்நூலில் இறுதியிற் காணப்படும் சொற்றொடரானும் உணரலாம். தொண்டை நாட்டின்கண் உள்ள இருபானான்கு கோட்டங்களுள், பல்குன்றக் கோட்டம் என்பது ஒன்று. இப்பகுதியில், குன்றுகள் மிக்கிருத்தலான் அப் பெயர் பெற்றது. தமிழ்நாட்டின் வடவெல்லையாகிய வேங்கடமலையும், இக்கோட்டத்தே உளதென்பதனை பன்குன்றக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம் என்னும் கல்வெட்டுக்களால் அறியலாம். செங்கண்மா என்னும் நகரிலிருந்து இம் மன்னன் செங்கோ லோச்சினான். இந்நகரின் சிறப்பை,

இரைதேர்ந் திவரும் கொடுந்தாள் முதலையொடு
திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்
வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி
உரைசெல வெறுத்தவவன் மூதூர் மாலையும்  (மலைபடு - 90 - 93)

என்னும் பகுதியானும்,

நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பில்
பதிஎழ லறியாப் பழங்குடி கெழீஇ
வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து
யாறெனக் கிடந்த தெருவிற் சாறென
இகழுநர் வெரூஉம் கவலை மறுகிற்
கடலெனக் காரென ஒலிக்கும் சும்மையொடு
மலையென மழையென மாட மோங்கித்
துனிதீர் காதலின் இனிதமர்ந் துறையும்
பனிவார் காவிற் பல்வண் டிமிரும்
நனிசேய்த் தன்றுஅவன் பழவிறன் மூதூர்  (478-487)

என்னும் பகுதியானும் நன்கறியலாம்.

இந்நகரம், திருவண்ணாமலைக்கு மேற்றிசையில் உளது என்ப. இக்காலத்தே செங்கண்மான் எனவும் செங்கமா எனவும் வழங்கப்படுகின்ற தென்றும் கூறுப. பண்டைக்காலத்தே சிறந்து விளங்கிய, வேள்குடி, ஆய்குடி, எவ்விகுடி, அதியர்குடி முதலிய உயர்குடிகளுள் ஒன்றாகிய வேளிர் குடியிற் பிறந்தவன் ஆதலான், நன்னன் வேண்மான் என்றும் இவ்வள்ளல் பெருமானை வழங்குப. இந்நூலில் வேள் என்றே ஆசிரியர் சிற்சில இடங்களில் ஓதியுள்ளார். இவன் முன்னோர்களும் சிறந்த பண்பும் வண்மையும் புகழும் உடையோர் என்பதனை,

........................... நீண்மொழிக்
குன்றா நல்லிசைச் சென்றோர் உம்பல்  (539-40)

என்றற் றொடக்கத்து அடிகளால் உணரலாம். இந் நன்னனின் தந்தை பெயரும் நன்னன் என்பதேயாம். இதனை, நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு (மலைபடு - 64) என்னுச் அகச்சான்றானும், நூலிறுதியில் நன்னன் சேய் நன்னனைப் பாடிய மலைபடு கடாம் என்றுவரும் தொடரானும் அறியலாம். இவ்வேந்தர் பெருமான், ஈதலிசைபட வாழ்தலே வாழ்தலின் ஊதியம் என்று உணர்ந்து, யான் என் வாழ்நாள் வீழ்நாள் படாமல் அறஞ்செய்தே கழிக்குவன் என்னும் குறிக்கோளும். அக்குறிக்கோளுக் கியைந்த விரிந்த வுள்ளமும் உடையனாய்த் திகழ்ந்தான் என்பதனை,

உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து
அகன்ற தாயத் தஃகிய நுட்பத்து
இலமென மலர்ந்த கைய ராகித்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவிக்
கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று
வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
அதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப்
பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு  (550-58)

என்னும் பகுதியால் இந் நூலாசிரியர் பெரிதும் பாராட்டிக் கூறியுள்ளார். மேலும், மான விறல்வேள் செருச்செய் முன்பிற்குரிசில், திருந்துவே லண்ணல், செருமிக்குப் புகலும் திருவார் மார்பன், தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை ஓம்பாவள்ளல், வண்டுபடக் கமழும் தேம்பாய் கண்ணித் திண்டேர் நன்னன், வெல்போர்ச் சேஎய்ப் பெருவிறல், குன்றா நல்லிசைச் சென்றோரும்பல் எனவரும் இந்நூற்பகுதிகளால் இவ் வள்ளலின் சிறப்புக்கள் நன்கு புலனாம். நன்னன் தன் நாட்டகத்தே அமைந்த நவிரமலையைப் பெரிதும் விரும்பி அம் மலைக்கண் உறையும் காரியுண்டிக் கடவுளாகிய சிவபெருமானிடத்துப் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தான் என்பதும். அம் மலையிடத்தே யானை தேர் குதிரை காலாள் முதலிய நால்வகைப் படைகளையும் வைத்து ஓம்பி வந்தான் என்பதும், மேலும் காட்டினூடும் தன் படைகளை அமைத்திருந்தான் என்பதும், பகைவர் முற்றி நிற்றற்கரிய அரண்களை யுடையவனாய் இருந்தான் என்பதும். அவனுடைய அரண்மனை முன்றிலில் குறிஞ்சிநில மன்னரும் பிறரும் கையுறை பல கொண்டு அவனைக் காண்டற்குக் காத்திருந்தனர் என்பதும், அரண்மனை வாயிலில் எப்பொழுதும் பெரிய படையொன்று வேல் முதலிய கருவிகளோடே காவல் செய்ததென்பதும், அங்ஙனமிருப்பினும் புலவர் முதலிய கலைதேர் வாழ்க்கையர் கேளாதே அரண்மனைக்குச் செல்லுதல் வழக்கம் என்பதும் இந் நூலால் அறியலாம். காரியுண்டிக் கடவுளின் நவிரமலையின் சிறப்பினை,

உயர்நிலை மாக்கல் புகர்முகம் புதைய
மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்
தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்
சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சி
ஓரியாற் றியவின் மூத்த புரிசைப்
பராவரு மரபிற் கடவுட் காணின்  (225.230)

என, ஆண்டுள்ள படை அம்மலையினுறையும் கடவுள் முதலியவற்றைக் கூறுமாற்றால் அழகுற எடுத்தோதினர் நூலாசிரியர்.

மலையில் நவிரமலைபோன்று நன்னன் நாட்டிற் சிறந்த யாறு சேயாறாம். இப் பேரியாறு தன் இருகரைமருங்கும் செழித்தோங்கிய பூம்பொழில்களையும், கனிதரும் துடவைகளையும் உடைத்தாய், பல்காலும் நீர்ப் பெருக்கெடுத் தோடுவதாய்ச் சிறந்து விளங்கிற்று. இதனைக் காணுந்தோறும் காட்சி யின்பத்தான் மெய்ம்மறப் பெய்துவர் போலும் ஆசிரியர் பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகனார்; இருந்தவாற்றால், இருமுறையும் காணுநர் வயா அங்கட்கின் சேயாறு (476), கடுவரற் கலுழிக் கட்கின் சேயாறு (555) என அதன் காட்சியின்பத்தை விதந்தோதுவாராயினர். இப் பேரியாறு நன்னன் நாட்டினை வளம்படுத்தியதாம். இந் நவிரமலையையும் அதன்கண் உறையும் காரியுண்டிக் கடவுளையும் கண்ணுக்கினிய சேயாற்றையும் நிரலே திரிசூலகிரி பர்வதகிரி என்றும், ஸ்ரீ காளகண்டேசுவரர் என்றும், சண்முகநதி என்றும் தமிழின்பந் தேறாதவர் மாற்றியமைத்து வழங்கலாயினர் என்பது கேட்டு யாம் உளம் வருந்துகின்றாம்.

நன்னன் கற்புடைமையிற் சிறந்த மனைவியைப் பெற்றிருந்தான் என்றும், அவள் தன் கற்புடைமைக்கு அறிகுறியாகச் சிறந்த கொடியைப் பெற்றிருந்தாள் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.

பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு  (618-9)

என்னும் மதுரைக்காஞ்சி யடிகளால் இந் நன்னன் பிறந்தநாள் தமிழ்மக்களாற் பெரிதும் கொண்டாடப்பட்டதென்று தோன்றுகின்றது. நன்னன் காலத்தே, பரணர், பெருங் குன்றூர்ப் பெருங்கவுசிகனார், மாங்குடி மருதனார், மாமூலனார் முதலிய நல்லிசைப் புலவர்கள் உயிர் வாழ்ந்திருந்தனர் என்ப.

அறிமுகம்

மலைபடுகடாம் என்னும் இந்நூல் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகனார், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன் சேஎய் நன்னனைப் பாடியதாம். இது பாடல்சான்ற புலனெறி வழக்கிற்கென நல்லிசைப் புலவர் வகுத்துக்கொண்ட அகம் புறம் என்னும் பொருட்பகுதி இரண்டனுள், புறப்பொருட் பகுதியிலமைந்த பாடாண் திணையின்கண், ஆற்றுப்படை என்னும் துறைபற்றிப் புனைந்த பனுவலாம்.

தொல்காப்பியத்துட் புறத்திணையியலுள்

தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்கு  (புறத் : 36)

என்று தொடங்கும் நூற்பாவின்கண்,

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்

என்னும் விதியே ஆற்றுப்படை நூல்களுக்கு விதியாகும். இதன்கண் இத்துறையை ஆற்றுப்படை என ஆசிரியர் தொல்காப்பியனார் குறியீடு செய்திற்றிலரேனும் மற்றோரிடத்தே

முன்னிலை சுட்டிய பன்மைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே
ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்  (எச்சவியல்-66)

என்னும் நூற்பாவின்கண் ஆற்றுப்படை என்றே எடுத்தாளுதலான் இத் துறைப்பெயர் தொல்காப்பியர் காலத்தின் முன்பும் பயில வழங்கி வந்தமை உணரலாம்.

நல்லதன் நலனும், தீயதன் தீமையும் உலகிற்குச் சொல்லானுணர்த்தும் கடப்பாடுடைய புலவர் வாழ்தலின் ஊதியம் என்று வள்ளுவனாராற் போற்றப்பட்ட ஈகையினை மேற்கொண்டு வாழ்ந்த வள்ளற் பெருமக்களின் இசையை, உலகமோடொருங்குடன் நிறுத்தக்கருதி வகுத்ததொன்றாம் இத்துறை. இத்துறைபற்றி எழுந்த பாடல் தமிழிலக்கியத்தே அடியளவாற் சிறுமையும், பெருமையும் உடையனவாய்ப் பற்பல உள்ளன. இத் தண்டமிழ்த் தெரியல் பத்துப் பாட்டுள்ளும் இதைப்பற்றி எழுந்த பனுவல் ஐந்துள்ளன :

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

எனப் பத்துப் பாட்டுகள் இவ்விவையெனக் காட்டுதற்கு முன்னோர் கட்டுரைத் தமைத்துள பழைய வெண்பாவாற் பத்துப் பாட்டின் பெயரும் வைப்பு முறையும் அறியலாம். இப்பத்தனுள்ளும் முன்னின்ற திருமுருகாற்றுப்படையும், பொருநராற்றுப்படையும், சிறுபாணாற்றுப்படையும், பெரும்பாணாற்றுப்படையும், இத் துறைபற்றி எழுந்த பாடல்களாகவும், பத்துப் பாட்டின் இறுதியினின்ற மலைபடுகடாத்தையும் இனம் பற்றி ஐந்தாவதாகக் கோவாமல் நிறுத்தி, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்னும் பலதுறைபற்றி எழுந்த செய்யுட்களைக் கோவை செய்து இறுதியினும் ஓர் ஆற்றுப்படையைக் கோத்தமைக்கு ஏதோ ஒரு காரணம் இருத்தல் வேண்டும். அது பத்துப்பாட்டென்னும் இச் சிறந்த இலக்கியத்தின்கண் இவ்வாற்றுப்படைகளையே அவர்கள் மிகச் சிறந்தனவாகக் கருதிய கருத்தாதல் வேண்டும் என்று கருத இடமுண்டு. ஆற்றுப்படை ஐந்தனுள்ளும் முன்னர்த் திருமுருகாற்றுப்படையை நிறுத்தியதற்குரிய காரணம் வெளிப்படை. நூற்றொடக்கத்தே இறைவன்பால் ஆற்றுப்படுத்து முகமாக இறைவணக்கம் - அஃதாவது கடவுள் வாழ்த்தாகவும் இப் பேரிலக்கியத்திற்குத் திருமுருகாற்றுப்படை அமைந்துள்ளது. அங்ஙனமே, மலைபடுகடாத்தை நூலின் இறுதியின் நிறுத்த எண்ணியதற்கும் ஒரு காரணம் வேண்டும். அக்காரணம் இவ்வாற்றுப்படை பொருநராற்றுப்படை முதலிய ஏனை மூன்று ஆற்றுப்படை நூல்களைக் காட்டினும் சிறந்ததென்னும் கருத்துண்மையும், நூலின் இறுதிவரை இனிமை தோன்ற வேண்டுமாயின் மலைபடுகடாத்தையே இறுதியினிறுத்தல் வேண்டும் என்று எண்ணிய எண்ணமுமே யாதல் வேண்டும் என்பது எம் கருத்து.

இனித் தொல்காப்பியனார் தம் நூலினுள் செய்யுளியலில் செய்யுட்குரிய அம்மை முதலிய எண்வகை வனப்பினை வகுத்தோதுமிடத்து, இழுமென் மொழியான் விழுமியது நுவலினும், பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும், தோலென மொழிப தொன்மொழிப் புலவர், (238) எனத்தோலென்னும் வனப்பிற்கு இலக்கணங் கூறிப் போந்தார். இவ் விலக்கணத்தில் பரந்த மொழியான் அடி நிமிர்ந்தொழுகியதற்கு மலைபடுகடாத்தையே உரையாசிரியர் இளம்பூரண அடிகளார் எடுத்துக் காட்டுவாராயினர் இவர் கருத்தும் மேற்கூறிய கருத்திற்கு உறுதுணையாக அமையும். மேலும் பரந்த மொழியான் அடி நிமிர்ந்தொழுகும் இத் தீஞ்சுவைப் பனுவலின் சொற் பொருளின்பங்களிற் பெரிதும் அழுந்தி நுகர்ந்த நம் முன்னையோர் இதன் இயற்பெயரை விட்டு இந்நூல் சொற்பொருள் இன்பத்தே ஒப்பற்றதென்றற்கு ஓர் அடையாளமிடுவார் போன்று இந் நூலிற் பயின்றதொரு புதுமை விஞ்சிய தொடரையே இந் நூலின் பெயராக அமைத்து வழங்குவாராயினர்; அத்தொடர் (378) மலைபடுகடாம் என்பதாம்.

மலைக்கு யானையை உவமித்து அதன்கட் பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்த அதனால், இப்பாட்டு மலைபடுகடாம் என்று பெயர்பெற்ற தென்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். தொல்காப்பியத்தே கூறப்பட்ட ஆற்றுப்படை என்னும் துறைபற்றிச் செய்யுள் செய்யுங்கால் ஆற்றுப்படுத்துவோர் கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் என்னும் நால்வருள்ளும், இந்நூல் முன்னின்ற கூத்தரைக் கூத்தர் ஆற்றுப்படுத்தியதாக வருதலான், இது கூத்தராற்றுப்படை என்றும் வழங்கப்படும். இப் பெயர் இதன் ஆசிரியர் இதற்கிட்ட பெயராதல் வேண்டும். இந்நூலின்கண்,

கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ  (50)

எனக் கூத்தர் விளிக்கப்படுதல் காண்க. அக் கூத்தர் தாமும் பாரசவரும், வேளாளரும், பிறரும், அவ்வாடற் றொழிற்குரியோரும், பாரதி விருத்தியும், விலக்கியற் கூத்தும், கானகக் கூத்தும், கழாஅய்க் கூத்தும், ஆடுபவராகச் சாதிவரையறையிலர். என்ப, மேலும் கூத்தராயினார், எண்வகைச் சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவோர்; அது விறலாகலின் அவ்விறல்பட ஆடுவாளை விறலி என்றார் எனக் கூறிப் போந்தார் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

மலைபடுகடாத்தில் ஆற்றுப்படுத்தும் கூத்தன் எதிர்ப்பட்ட கூத்தனை விளித்து யாம் இவ்விடத்தே சென்று இன்ன வளம் பெற்று வருகின்றோம்; நீயும் அவ் வள்ளல்பாற் சென்று வளம் பெற்று வாழுதி! எனத் தோற்றுவாய் செய்த பின்னர், யான் இன்னின்னவற்றைக் கூறுவல் என முன்னர்த் தொகுத்துக் கூறிப் பின்னர் விரித்தோதும் முறை சிறப்பாக வுள்ளது. இனி, மானிடவாழ்க்கையின் ஊதியம்பட வாழுமொரு வள்ளலைப் புகழ்தலைத் தலைக்கீடாகக் கொண்டு, தமிழ்மக்களின் வாழ்க்கைக் குறிக்கோளையும், அவர்தம் பண்பாட்டையும், அறம் பொருள்களின் இயல்புகளையும், நிலத்தின் இயற்கை அழகுகளையும், காடு மலையாறு விலங்கு பறவை இவையிற்றின் ஓசை முதலிய அழகுகளையும், சொல்லோவியமாகப் புனைந்து என்றென்றும் நிலைத்து நிற்கச்செய்தவொரு செயலே இச் செய்யுள் என்னலாம்.

இன்பமே வடிவாக அமைந்த இவ்விலக்கிய வுலகத்தே நம் மனப்பறவை தன் சிறகுகளை விரித்து வேண்டியவாறே விண்ணுறவோங்கிய மலையின் குவடுகளினும், மலைத்தலைத் தோன்றி மண்டிக் கடலிலே புகுதும் பேரியாற்றின் வெள்ளத்தின் மேலும் பறந்து, நெடிய மரம் வீழ்ந்து கிடந்தன்ன பாம்புகளையும், முகில் முழங்குமாறு முழங்கும் யானைத்திரளினையும், கண்ணிருண்டு காண்போர் தலைநடுங்கும் மலைச்சரிவுகளையும், அழகே ஓருருக் கொண்டு ஆடினாற் போன்றாடும் மஞ்ஞையின் கூத்தினையும், விரைந்து ஓடும் மானினங்களையும், இடியென முரலும் புலி முழக்கத்தையும், முச்சியில் நறுமலர் அணிந்து, பொற்றுகள் போலும் அரிசியை உலையிற்பெய்து அடிசில் சமைக்கும் குறமகள் எழிலையும், மலைமிசைக் குறவர் தம் பெண்டிரொடு ஆடும் இன்னிசைக் குரவைக் கூத்தையும், அமிழ்தின் துளி உளத்தே சிதறித் தெளித்தாற் போன்ற இன்னிசை தெறிக்கும் யாழ் நரம்போசையையும், இன்னோரன்ன எண்ணிறந்த காட்சிகளையும், கேள்விகளையும் கண்ண்டண்ண் எனக் கண்டும் கேட்டும் நுகரும் பேரின்பப்பேற்றை எய்துதற்கு ஆற்றவும் தவம் ஆற்றினோமாதல் வேண்டும். இத்தகைய இலக்கியங்களை இருக்க வைத்த இறைவனை யாம் எப்போதும் இறைஞ்சி நன்றி தெரிவிப்போமாக.


© Om Namasivaya. All Rights Reserved.