Books / பத்துப்பாட்டு நூல்கள்


மலைபடுகடாம்


திருமழை தலைஇய இருணிற விசும்பின்
விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவொ டாகுளி நுண்ணுருக்
குற்ற விளங்கடர்ப் பாண்டில் மின்னிரும்
பீலி அணித்தழைக் கோட்டொடு   5

கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ
நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி  10

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்  
கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பில்
படுத்துவைத் தன்ன பாறை மருங்கின்  15

எடுத்துநிறுத் தன்ன இட்டருஞ் சிறுநெறி
தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்
இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும்
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகித  20

தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின்
கடிப்பகை யனைத்தும் கேள்வி போகாக்
குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல்வார்ந் தன்ன நுண்டுளை இரீஇச்  25

சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்குதுளை செறிய ஆணி முடுக்கிப்
புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்துப்
புதுவது போர்த்த பொன்போற் பச்சை
வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால  30

மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து
அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்றுவாங் குந்தி
நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமைக்  35

களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்
வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்  
அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாது
இசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத்
துறைபல முற்றிய பைதீர் பாணரொட  40

உயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின்
மதந்தபு ஞமலி நாவி நன்ன
துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக்
கணங்கொள் தோகையிற் கதுப்பிகுத் தசைஇ
விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்து  45

இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக்
கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல்
புனல்கால் கழீஇய மணல்வார் புறவில்
புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக்
கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ  50

தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்
மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்கு
யாமவ ணின்றும் வருதும் நீயிரும்
கனிபொழி கானம் கிளையொ டுணீஇய
துனைபறை நிவக்கும் புள்ளின மானப்  55

புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை எழின்முலை வாங்கமைத் திரடோள்
மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்
முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்
இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப்  60

புதுநிறை வந்த புனலஞ் சாயல்
மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி
வின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண்
நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயிற் பொழுதெதிர்ந்த  65

புள்ளினிர் மன்ற எற்றாக் குறுதலின்  
ஆற்றின் அளவும் அசையுநற் புலமும்
வீற்றுவளஞ் சுரக்குஅவ நாடுபடு வல்சியும்
மலையும் சோலையும் மாபுகல் கானமும்
தொலையா னல்லிசை உலகமொடு நிற்பப  70

பலர்புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப்
புலவோர்க்குச் சுரக்கும்அவ நீகை மாரியும்
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின்  75

வீயாது சுரக்குமவ நாள்மகி ழிருக்கையும்
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
நல்லிதின் இயக்குமவன் சுற்றத் தொழுக்கமும்  80

நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரிஉண்டிக் கட வுள தியற்கையும்
பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரு
ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும்  85

இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம்படக் கடந்து நூழி லாட்டிப்
புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக்
கொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும்
இரைதேர்ந் திவரும் கொடுந்தாள் முதலையொட  90

திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்
வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி
உரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும்
கேளினி வேளைநீ முன்னிய திசையே  
மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற்  95

புதுவது வந்தன் றிதுவதன் பண்பே
வானமின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட வெல்லாம் பெட்டாங்கு விளையப்
பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து
அகலிரு விசும்பி னாஅல் போல  100

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை
நீலத் தன்ன விதைப்புன மருங்கின்
மகுளி பாயாது மலிதுளி தழாலின்
அகளத் தன்ன நிறைசுனைப் புறவிற்
கெளவை போகிய கருங்காய் பிடியேழ்  105

நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்
பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்பக்
கொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல்
விளைதயிர்ப் பிதிர்வின் வீவுக் கிருவிதொறும்
குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவர  110

மேதி யன்ன கல்பிறங்கு இயலின்
வாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சி
இரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே
பால்வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு
வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்  115

வேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக்
காலுறு துவைப்பிற் கவிழ்க்கனைத் திறைஞ்சிக்
குறையறை வாரா நிவப்பி னறையுற்று
ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே
புயற்புனிறு போகிய பூமலி புறவின்  120

அவற்பதங் கொண்டன அம்பொதித் தோரை
தொய்யாது வித்திய துளர்படு துடவை
ஐயவி யமன்ற வெண்காற் செறுவின்
மையென விரிந்தன நீணறு நெய்தல்
செய்யாப் பாவை வளர்ந்துகவின் முற்றிக்  125

காயங் கொண்டன இஞ்சிமா விருந்து
வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை
காழ்மண் டெஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென
ஊழ்மல ரொழிமுகை உயர்முகந் தோயத்  130

துறுகல் சுற்றிய சோலை வாழை
இறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக்கு
ஊழுற் றலமரும் உந்தூழ் அகலறைக்
கால மன்றியும் மரம்பயன் கொடுத்தலிற்
காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல்  135

மாறுகொள வொழுகின ஊறுநீ ருயவை
நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்து
உண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்து
அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி
விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக்  140

குடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்துக்
கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிக்
கரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி
முரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினைப் பலவே  
தீயி னன்ன ஒண்செங் காந்தள்   145

தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து
அறியா தெடுத்த புன்புறச் சேவல்
ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தென
நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும்  150

மணஇல் கமழு மாமலைச் சாரல்
தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்
சிறுகட் பன்றிப் பழுதுளிப் போக்கிப்
பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத்
தூவொடு மலிந்த காய கானவர்   155

செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே
இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர்  
அன்றவ ணசைஇ அற்சேர்ந் தல்கிக்
கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி  160

அலங்குகழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்றாள்
மான விறல்வேள் வயிரிய மெனினே
நும்மில் போல நில்லாது புக்குக்  165

கிழவிர் போலக் கேளாது கெழீஇச்
சேட்புலம் பகல இனிய கூறிப்
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவிர்  
ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொட  170

வேய்ப்பெயல் விளையுள் தேக்கட் தேறல்
குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப்
பழஞ்செருக் குற்றநும் அனந்தல் தீர
அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை  175

முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்த  180

வழையமை சாரல் கமழத் துழைஇ
நறுமலர் அணிந்த நாறிரு முச்சிக்
குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி
அகமலி உவகை ஆர்வமொ டளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்  185

செருச்செய் முன்பிற் குருசில் முன்னிய
பரிசில் மறப்ப நீடலும் உரியிர்
அனைய தன்றவன் மலைமிசை நாடே
நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும்
வரையர மகளிர் இருக்கை காணினும்  190

உயிர்செல வெம்பிப் பனித்தலும் உரியிர்
பலநா ணில்லாது நிலநாடு படர்மின்  
விளைபுன நிழத்தலிற் கேழல் அஞ்சிப்
புழைதொறு மாட்டிய இருங்கல் அடாடர்
அரும்பொறி உடைய வாறே நள்ளிருள்  195

அலரிவிரிந்த விடியல் வைகினிர் கழிமின்  
நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்
முரம்புகண் உடைந்த பரலவற் போழ்வில்
கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே
குறிக்கொண்டு மரங் கொட்டி நோக்கிச்  200

செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச
வறிதுநெறி ஓரீஇ வலஞ்செயாக் கழிமின்  
புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர்
உயர்நிலை இதணம் ஏறிக் கைபுடையூஉ
அகன்மலை யிறும்பில் துவன்றிய யானைப்  205

பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல்
இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல்லெனக்
கருவிர லூகம் பார்ப்போ டிரிய
உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன
வரும்விசை தவிராது மரமறையாக் கழிமின்  210

உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
இரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின்
குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்
அகழ்இழிந் தன்ன கான்யாற்று நடவை
வழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பிப்  215

பரூஉக்கொடி வலந்த மதலை பற்றித்
துருவி னன்ன புன்றலை மகாரோடு
ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்  
அழுந்துபட் டலமரும் புழகமல் சாரல்
விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா  220

வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
அடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலோடு
எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்  
உயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய  225

மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்
தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்
சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி
ஓரியாற் றியவின் மூத்த புரிசைப்
பராவரு மரபிற் கடவுட் காணிற   230

தொழாஅநிர் கழியின் அல்லது வறிது
நும்மியந் தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி
மாரி தலையுமவன் மல்லல் வெற்பே  
அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்  235

கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன
நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும்
நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த
சூர்புகல் அடுக்கத்துப் பிரசங் காணினும்
ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று  240

நிரைசெலல் மெல்லடி நெறிமாறு படுகுவிர்  
வரைசேர் வகுந்திற் கானத்துப் படினே
கழுதிற் சேணோன் ஏவொடு போகி
இழுதி னன்ன வானிணஞ் செருக்கி
நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின்  245

நெறிக்கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள்துணிந் தன்ன ஏனங் காணின்
முளிகழை இழைந்த காடுபடு தீயின்
நளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து
துகளறத் துணிந்த மணிமருள் தெண்ணீர்  250

குவளையம் பைஞ்சுனை அசைவிடப் பருகி
மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட் பொதியினிர்
புட்கை போகிய புன்றலை மகாரோடு
அற்கிடை கழிதல் ஓம்பி ஆற்றநும்
இல்புக் கன்ன கல்லளை வதிமின்  255

அல்சேர்ந் தல்கி அசைதல் ஓம்பி
வான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்து
கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்  
கயம்கண் டன்ன அகன்பை யங்கண்
மைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும  260

துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி
இகந்துசேட் கமழும் பூவும் உண்டோர்
மறந்தமை கல்லாப் பழனும் ஊழிறந்து
பெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார்
இருங்கால் வீயும் பெருமரக் குழாமும்  265

இடனும் வலனும் நினையினர் நோக்கிக்
குறியறிக் தவையவை குறுகாது கழிமின்
கோடுபல முரஞ்சிய கோளி யாலத்துக்
கூடியத் தன்ன குரல்புணர் புள்ளின்
நாடுகா ணனந்தலை மென்மெல அகன்மின்  270

மாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின்
ஞாயிறு தெறாஅ மாசு நனந்தலைத்
தேஎ மருளும் அமைய மாயினும்
இறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும்
குறவரு மருளுங் குன்றத்துப் படினே  275

அகன்கட் பாறை துவன்றிக் கல்லென
இயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின்  
பாடின் அருவிப் பயங்கெழு மீமிசைக்
காடுகாத் துறையுங் கானவர் உளரே
நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள  280

புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி
உண்டற் கினிய பழனுங் கண்டோர்
மலைதற் கினிய பூவுங் காட்டி
ஊறு நிரம்பிய ஆறவர் முந்துற
நும்மி னெஞ்சத் தவலம் வீட   285

இம்மென் கடும்போ டினியிர் ஆகுவிர்
அறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு
குறியவும் நெடியவும் ஊழிழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து
அலர்தாய வரிநிழல் அசையினிர் இருப்பிற்  290

பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ  
கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்
மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறும்
அருவிய நுகரும் வானர மகளிர்
வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்  295

தெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசை
இலங்கேந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்
சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின்  300

எய்தெற இழுக்கிய கானவர் அழுகை
கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென
அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்
தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை  305

மலைமா ரிடூஉம் ஏமப் பூசல்
கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்குவரம் பாகிய கணவன் ஓம்பலின்
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல்  310

கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை யுற்ற களையாப் பூசல்
கலைகை யற்ற காண்பின் நெடுவரை  315

நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்
பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை
அருங்குறும் பெறிந்த கானவர் உவகை
திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென
நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு  320

மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்றோய் மீமிசை அயருங் குரவை
நல்லெழி னெடுந்தேர் இயவுவந் தன்ன
கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை
நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து  325

உரவுச்சினந் தணித்துப் பெருவெளிற் பிணிமார்
விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளிகடி மகளிர் விளிபடு பூசல்
இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு  330

மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை  335

காந்தள் துடும்பிற் கமழ்மட லோச்சி
வன்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்
கன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதை
மழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரெனக்  340

கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்
சேம்பு மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பும்
என்றிவ் வனைத்தும் இயைந்தொருங் கீண்டி  345

அவலவு மிசையவுந் துவன்றிப் பலவுடன்
அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த
மலைபடு கடாஅ மாதிரத் தியம்பக்  
குரூஉக்கட் பிணையல் கோதை மகளிர்
முழவுத்துயில் அறியா வியலு ளாங்கண்  350

விழவின் அற்றவன் வியன்கண் வெற்பே
கண்ண் டண்ண்னெனக் கண்டுங் கேட்டுங்
உண்டற் கினிய பலபா ராட்டியும்
இன்னும் வருவ தாக நமக்கெனத்
தொன்முறை மரபினி ராகிப் பன்மாண்  355

செருமிக்குப் புகலுந் திருவார் மார்பன்
உருமுரறு கருவிய பெருமலை பிற்பட
இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்
நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்
கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின்  360

மைபடு மாமலை பனுவலிற் பொங்கிக்
கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி
தூஉ யன்ன துவலை தூற்றலின்
தேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு
காஅய்க் கொண்டநும் இயந்தொய் படாமற்  365

கூவல் அன்ன விடரகம் புகுமின்
இருங்கல் இகுப்பத் திறுவரை சேராது
குன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்து
நின்று நோக்கினும் கண்வாள் வெளவும்
மண்கனை முழவின் தலைக்கோல் கொண்டு  370

தண்டுகா லாகத் தளர்தல் ஓம்பி
ஊன்றினிர் கழிமின் ஊறுதவப் பலவே
அயில்காய்ந் தன்ன கூர்ங்கற் பாறை
வெயில்புறந் தரூஉம் இன்னல் இயக்கத்துக்
கதிர்சினந் தணிந்த அமயத்துக் கழிமின்  375

உரைசெல வெறுத்தவவ னீங்காச் சுற்றமொடு
புரைதவ உயரிய மழைமருள் பஃறோல்
அரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும்
முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோல். 380

இன்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி
மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக்
கைபிணி விடாஅது பைபயக் கழிமின்
களிறுமலைந் தன்ன கண்கூடு துறுகல்
தளிபொழி கானந் தலைதவப் பலவே  385

ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
கல்லேசு கவலை எண்ணுமிகப் பலவே
இன்புறு முரற்கைநும் பாட்டுவிருப் பாகத்  390

தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்துத் துனைமின்  
பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர்
சந்து நீவிப் புன்முடிந் திடுமின்  
செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார்
கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்து  395

கடவு ளோங்கிய காடேசு கவலை
ஒட்டா தகன்ற ஒன்னாத் தெவ்வர்
சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவப் பலவே
தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை
ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே  400

மேம்பட வெறுத்தவன் தொஃறிணை மூதூர்
ஆங்கன மற்றே நம்ம னோர்க்கே
அசைவுழி யசைஇ அஞ்சாது கழிமின்  
புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக்
கலைநின்று விளிக்குங் கானம் ஊழிறந்து  405

சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை
தலையிரும்பு கதழும் நாறுகொடிப் புறவின்
வேறுபுலம் படர்ந்த ஏறுடை இனத்த
வளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர்
வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின்  410

பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும்
புலம்புசேண் அகலப் புதுவிர் ஆகுவிர்
பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன
தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்
கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும்  415

பல்யாட் டினநிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்
துய்ம்மயிர் அடக்கிய சேக்கை யன்ன
மெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித்
தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின்  420

கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்
கொடுவிற் கூளியர் கூவை காணிற்
படியோர்த் தேய்த்த பணிவில் ஆண்மைக்
கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே
தடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ  425

ஓம்புநர் அல்ல துடற்றுநர் இல்லை
ஆங்குவியங் கொண்மின் அதுவதன் பண்பே  
தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும்
உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி  430

திரங்குமர னாரிற் பொலியச் சூடி
முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென
உண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழிமின்  
செவ்வீ வேங்கைப் பூவி னன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த  435

சுவல்விளை நெல்லின் அவரையம் பைங்கூழ்
அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட
அகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்
பொன்னறைந் தன்ன நுண்ணேர் அரிசி  440

வெண்ணெறிந் தியற்றிய மாக்கண் அமலை
தண்ணெ ணுண்ணிழு துள்ளீ டாக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்
விசையங் கொழித்த பூழி யன்ன
உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை  445

நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப்
பனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சிப்
புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்  
புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்
மெல்லவ லிருந்த ஊர்தொறு நல்லியாழ்ப்  450

பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும்
பன்னா ணிற்பினும் சேந்தனிர் செலினும்
நன்பல வுடைத்தவன் தண்பணை நாடே  
கண்புமலி பழனங் கமழத் துழைஇ
வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை  455

நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டிற்
பிடிக்கை யன்ன செங்கண் வராஅல்
துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்
ஞெண்டாடு செறுவிற் றாரஅய்க்கண் வைத்த  460

விலங்கல் அன்ன போர்முதற் றொலைஇ
வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்
துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர்
முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு  465

வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணித்
திண்டேர் நன்னற்கும் அயினி சான்மெனக்
கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி
எருதெறி களமர் ஓதையொடு நல்யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழிமின்  470

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச்
செங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல்
கனைசெலல் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி
வனைகலத் திகிரியிற் குமிழி சுழலும்
துனைசெலற் றலைவாய் ஓவிறந் தொலிக்கும்  475

காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்
யாணர் ஒருகரைக் கொண்டனிர் கழிமின்  
நிதியந் துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்
பதியெழ லறியாப் பழங்குடி கெழீஇ
வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து  480

யாறெனக் கிடந்த செருவிற் சாறென
இகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்
கடலெனக் காரென ஒலிக்குஞ் சும்மையொடு
மலையென மழையென மாட மோங்கித்
துனிதீர் காதலின் இனிதமர்ந் துறையும்  485

பனிவார் காவிற் பல்வண் டிமிரும்
நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்  
பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கும் ஒள்வாண் மறவர்
கருங்கடை எஃகஞ் சாத்திய புதவின்  490

அருங்கடி வாயில் அயிராது புகுமின்
மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்
வெல்போர்ச் சேஎய்ப் பெருவிற லுள்ளி
வந்தோர் மன்ற அளியர் தாமெனக்
கண்டோ ரெல்லாம் அமர்ந்தினிது நோக்கி  495

விருந்திறை அவரவர் எதிர்கொளக் குறுகிப்
பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட  
எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத்
தொழுதி போக வலிந்தகப் பட்ட
மடநடை ஆமான் கயமுனிக் குழவி  500

ஊமை எண்கின் குடாவடிக் குருளை
மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்
வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்
அரவுக்குறும் பெறிந்த சிறுகண் தீர்வை
அளைச்செறி உழுவை கோளுற வெறுத்த  505

மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி
அரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற்
பரற்றவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை
வரைப்பொலிந் தியலும் மடக்கண் மஞ்ஞை
கானக் கோழிக் கவர்குரற் சேவல்  510

கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம்
இடிக்கலப் பன்ன நறுவடி மாவின்
வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம்
தூவற் கலித்த இவர்நனை வளர்கொடி
காஅய்க் கொண்ட நுகமரு ணூறை  515

பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி
குரூஉப்புலி பொருத புண்கூர் யானை
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்
வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்
நாகந் திலக நறுங்காழ் ஆரம்     520

கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி
திருந்தமை விளைந்த தேக்கள் தேறல்
கானிலை எருமைக் கழைபெய் தீந்தயிர்
நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை
நேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல்  525

உடம்புணர்வு தழீஇய ஆசினி யனைத்தும்
குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி
கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப
நோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி  
வானத் தன்ன வளமலி யானைத்  530

தாதெருத் ததைந்த முற்ற முன்னி
மழையெதிர் படுகண் முழுவுகண் இகுப்பக்
கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர
மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்
நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக்  535

கடவ தறிந்த இன்குரல் விறலியர்
தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது
அருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை  
விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக்
குன்றா நல்லிசைக் சென்றோர் உம்பல்  540

இன்றிவட் செல்லா துலகமொடு நிற்ப
இடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக்
கொடைக்கட னிறுத்த செம்ம லோயென
வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச்
சென்றது நொடியவும் விடாஅன் நசைதர  545

வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப்  
பொருமுரண் எதிரிய வயவரொடு பொலிந்து
திருநகர் முற்றம் அணுகல் வேண்டி
கல்லென் ஒக்கல் நல்வலத் திரீஇ  
உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து  550

அகன்ற தாயத் தஃகிய நுட்பத்து
இலமென மலர்ந்த கைய ராகித்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவிக்
கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று  555

வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
அதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளெனப்
பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினுந் தான்பெரிது
உவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி  560

இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு
நெடுவெ ணெல்லின் அரிசிமுட் டாது
தலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து  565

பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது
செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென
மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்
தலைவன் தாமரை மலைய விறலியர்
சீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய  570

நீரியக் கன்ன நிரைசெலல் நெடுந்தேர்
வாரிக் கொள்ளா வரைமருள் வேழம்
கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை
பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நிலந்தினக் கிடந்த நிதியமொ டனைத்தும்  575

இலம்படு புலவர் ஏற்றகைந் நிறையக்
கலம்பெயக் கவிழ்ந்த கழறொடித் தடக்கையின்
வளம்பிழைப் பறியாது வாய்வளம் பழுநிக்
கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழைசுரந் தன்ன ஈகை நல்கித்   580

தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்
வென்றெழு கொடியிற் றோன்றும்
குன்றுசூழ் இருக்கை நாடுகிழ வோனே.  

உரை

திணை : பாடாண்  துறை : ஆற்றுப்படை

1-திருமழை என்பது தொடங்கி, 50-தலைவ என்னுந் துணையும் ஒருதொடர். இதன்கண், பரிசில் பெற்றுவரும் கூத்தன் ஆற்றெதிர்ப்பட்ட கூத்தனை விளிக்குமாற்றால், யாழ் முதலிய இசைக்கருவிகளின் இயல்பும், நெறியின் இயல்பும் யாழ் உறுப்புகளின் தன்மையும், விறலியரியல்பும், கூத்தன் இருத்தற் சிறப்பும், பிறவும் கூறப்படும்.

இசைக்கருவிகள்

1-11 : திருமழை ..................... பிறவும்

பொருள் : திருமழை தலைஇய இருள் நிற விசும்பின் விண் அதிர் இமிழ் இசை கடுப்ப - செல்வத்தையுண்டாக்கும் மழையைப் பெய்த இருண்ட நிறத்தையுடைய வானத்தின்கண் முகில் அதிர்ந்து முழங்கும் ஓசையைப் போன்று, பண் அமைத்துத் திண்வார் வசித்த, முழவொடு - பண்கள் தன் கண்களிலே உண்டாக்கப்பட்டுத் திண்ணிய வாராலே இறுக வலித்த மத்தளத்தோடே, ஆகுளி - சிறுபறையும், நுண் உருக்குற்ற விளங்கு அடர்ப் பாண்டில் - கரைய உருக்குதலுற்ற விளங்கின தகடாகத் தட்டின கஞ்சதாளமும், மின் இரும் பீலி அணி தழைக் கோட்டொடு - விளங்குகின்ற கரிய பீலியாகிய அழகினையுடைய தழையைக் கட்டின கொம்போடே, கண் இடை விடுத்த களிறு உயிர் தூம்பின் - கண்களின் நடுவே வெளியாகத் திறந்த யானை நெட்டுயிர்ப்புக் கொண்டாற் போன்ற ஓசையை உடைய நெடுவங்கியத்தோடே, இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு - இளியென்னும் நரம்பினுடைய ஓசையைத் தானொலிக்கும் குறிய மேலாகிய தூம்போடே, விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ - பாட்டைச் சுருதி குன்றாமல் கைக்கொண்டு நிற்கும் இனிய குழலும் நெருங்கப்பட்டு, நடுவு நின்றிசைக்கும் அரிக்குரல் தட்டை - கண்களுக்கு நடுவே நின்று ஒலிக்கும் அரித்தெழுகின்ற ஓசையை யுடைய கரடிகையும், கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி - விளக்கத்தை யுடைத்தாகிய தாளத்தைக் கைக்கொண்டு ஒலிக்கும் வலிய வாயையுடைய சல்லியும், நொடிதரு பாணிய பதலையும் - மாத்திரையைச் சொல்லும் ஒரு கண் மாக்கிணையும், பிறவும் - கூறாத வேறு இசைக் கருவிகளும்;

கருத்துரை : விண்ணிடத்தே நின்று அதிர்ந்து முழங்கும் முகிலின் ஓசையைப் போன்று தன் கண்ணிடத்தே பண்கள் உண்டாக்கப்பட்டதும், திண்ணிய வாராலே இறுக வலித்ததும் ஆகிய மத்தளத்தோடே சிறுபறையும், நன்கு உருக்கி வார்த்த தகடாகத் தட்டின விளக்கமுடைய கஞ்சதாளமும், விளங்குகின்ற கரிய மயிலிறகு சூட்டப்பெற்ற அழகினையுடைய கொம்போடே கண்களின் நடுவே வெளியாகத் திறந்ததும் யானை நெட்டுயிர்ப்புக் கொண்டாற் போன்ற ஓசையை உடையதுமாகிய நெடுவங்கியத்தோடே இனியென்னும் நரம்பினுடைய ஓசையைத் தான் ஒலிக்கும் குறிய மேலாகிய தூம்போடே, பாட்டைச் சுருதி குன்றாமற் கைக்கொண்டு நிற்கும் இனிய குழலும் நெருங்கப்பட்டுக் கண்களுக்கு இடையே நின்றொலிக்கும் அரித்தெழுகின்ற ஓசையை யுடைய கரடிகையும், விளக்கமுடைய தாளத்தைக் கைக்கொண்டொலிக்கும் வலிய வாயையுடைய சல்லியும் மாத்திரையை அறிவிக்கும் தானத்தையுடைய ஒருகண் மாக்கிணையும் ஈண்டுக் கூறாதொழிந்த பிற இசைக் கருவிகளும் என்பதாம்.

அகலவுரை : திருமழை என்னும் மங்கலச் சொல்லானே இந் நூல் தொடங்குதல் காண்க. திருமழை - திருவினை உண்டாக்கும் மழை என்க. உலகமும் அதற்கு உறுதியாகிய அறம் பொருளின்பங்களும் நடத்தற் கேதுவாகும் சிறப்பினைக் கருதித் திருமழை என்றார். தலைஇய - பெய்த. வானிருண்டு மழைபெய்த காலை அவ்வானத்தே முகில் முழங்கினாற் போன்ற ஓசையையுடைய பண்ணமைத்த மத்தளம் என்க. பண்அமைத்தல் என்றது, மத்தளத்தின் வார்க்கட்டினை இறுகவேண்டும் வழி இறுக்கியும், நெகிழ வேண்டும் வழி நெகிழ்த்தும் ஒலித்துப் பார்த்துச் சுருதியோடு ஒன்றுபடுத்தமைத்தல். மத்து - ஓசைப் பெயர்; இசையிடனாகிய கருவிகட் கெல்லாம் தளமாகலான் மத்தளம் என்று பெயராயிற்று. (சிலப்-அரங்-உரை) என்பர் அடியார்க்குநல்லார். பண்-இசை. பெருந்தான மெட்டானும், கிரியைகள் எட்டானும் பண்ணிப் படுத்தலால் பண்ணென்று பெயராயிற்று (சிலப்-அரங்-உரை) என்ப. இடக்கண் இளியா வலக்கண் குரலா நடப்பது தோலியற் கருவியாகும், என்பதால் பண்ணமைத் தென்றார் என்பர், நச்சினார்க்கினியர்.

ஆகுளி - சிறுபறை. கஞ்சம்-வெண்கலம். வெண்கலத்தாற் செய்த தாளக் கருவியும் என்றவாறு. நன்றாக உருக்கித் தகடாகத் தட்டின கஞ்சதாளம் இன்னோசைத்தாதலான், நுண் உருக்குற்ற விளங்கடர்ப் பாண்டில் என்றார். பாண்டில் எனினும், கஞ்சதாளம் எனினும் ஒக்கும். அடர்ப் பாண்டில் : பண்புத்தொகை அடர்த்த -தகடு மயிற்பீலியால் ஒப்பனை செய்யப்பட்ட கொம்பென்க. இது விலங்கின் கோட்டாற் செய்யப்படுதலின், கோடென்னும் பெயர்த்தாயிற்று. மின் இரும் பீலி மின்னுகின்றதும். கருநிற மமைந்ததுமாகிய மயிலிறகு. அணிதழை - அழகிய தழை. தூம்பு நெடுவங்கியம் இடையிடையே துளையிடப் பட்டிருத்தலால் கண் இடைவிடுத்த தூம் பென்றார், இதன் ஒலி யானை நெட்டுயிர்ப்புக் கொள்ளும் ஒலியை ஒத்தலின், களிற்றுயிர்த் தூம் பென்றார். உயிர் - உயிர்த்தல். நெட்டுயிர்ப்புக் கொள்ளல். களிற்றுயிர் என்பதற்கு யானையின் கை எனப் பொருள் கூறுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இப்பொருட்கு உயிர் - ஆகுபெயர்.

இளி - எழுவகைப் பண்களுள் ஒன்று. தூம்பென்னும் கருவி இப்பண்ணோசையை எழுப்புதலின் இளிபயிர் இமிரும் தூம்பென்றார். பயிர் - ஓசை, தழைத்தலுமாம் இமிரும் - ஒலிக்கும். இது குறுகியிருத்தலின் குறுந்தூம்பென்றும் மேலான இன்னிசையுடையமையின் பரம் தூம்பென்றும் கூறினார். பரம்-மேன்மை; வடசொல். விளிப்பது - பாடுவது. கவர்தல் - தன்னிசையோடு உடன்படுத்தல். தீங்குழல் - இனிய வேய்ங்குழல். துதைஇ - நெருங்கி. நடுவு நின்றொலிக்கும் என்றதற்கு, தாள மானத்தின் இடையே நின்றொலிக்கும் எனினுமாம். அரி-யாழ் நரம்பு என்னும் பொருளும் உடைத்தாகலின் நரம்பின் ஓசையையுடைய கரடிகை எனினுமாம். கடி - விளக்கம்; விளக்கத்தைச் செய்யும் தாளத்திற்கு ஆகுபெயர்; வல்வாய் - வலிமையுடைய வாய். அரிக்கூட்டின்னியம் (மதுரைக்-612) என்றார் பிறரும். அரித்தெழும் ஓசையாவது சேவல் கூவும் ஓசை போன்ற ஓசை என்க. இனி அரிக்குரற்றட்டை என்பதற்குத் தவளையினது குரலையுடைய தட்டைப் பறை எனினுமாம். என்னை? இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை, தட்டைப் பறையிற் கறங்கு நாடன் (குறுந்தொகை -193) என்பவாகலின். கரடி கத்துதல் போன்று ஒலித்தலான், இக்கருவி கரடிகை எனப்பட்டது. பதலை-ஒருகண் மாக்கிணை. இது காலவரையறை செய்து காட்டலின் நொடி தரு பாணிய பதலை என்றார். நொடி - கைநொடிப் பொழுது. பிறவும் என்றது ஈண்டுக் கூறாதொழிந்த பிற இசைக் கருவிகளும் என்றவாறு.

அவை : பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாளம், துடுகை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை என்னும் தோலாற் செய்யப்பட்ட கருவிகளுள் ஈண்டுக் கூறாதொழிந்தனவும் குழல் முதலிய துளைக் கருவிகளுட் கூறாதொழிந்தனவும், யாழ் முதலிய நரப்புக் கருவிகளும் கூறாதொழிந்தனவும், கஞ்சதாளம் முதலிய கஞ்சக் கருவிகளுள் கூறாதொழிந்தனவும் ஆம். முழவொடு ஆகுளியும், பாண்டிலும் கோட்டொடும் தூம்பொடும் குறுந்தூம்போடும் தட்டையும், சல்லியும், ஒருகண் மாக்கிணையும் பிறவும் என இயைத்துக் கொள்க.

கூத்தனை எதிர்ப்பட்ட வழியின் இயல்பு

12-20 : கார்கோள் ....................... ஒழுகி

பொருள் : கார் கோள் பலவின் காய்த்துணர் கடுப்ப - கார் காலத்திலே பழுத்தலையுடைய பலாவினது காயை மிகவுடைய கொத்தினை ஒப்ப, நேர் சீர் சுருக்கிக் காய கலப்பையிர் - தம்மில் ஒத்த எடையை உடையனவாய்க் கட்டிக் காவின இசைக்கருவிகளின் முட்டுக்களையுடைய பையை உடையிராய், கடுக் கலித்து எழுந்த கண்ணகன் சிலம்பில் - கடுமரம் மிக்கு வளர்ந்த இடமகன்ற பக்க மலையில், படுத்து வைத்தன்ன பாறை மருங்கில் - பரப்பிவைத்தாற் போன்று ஒத்தநிலமாகிய கற்பாறையின் பக்கத்தே, எடுத்து நிறுத்தன்ன இட்டருஞ் சிறு நெறி - நிலத்தே கிடக்கின்ற வழியை எடுத்துநிறுத்தினாற் போன்ற இட்டிதாகிய அரிய சிறிய வழியை, தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர் - தொடுத்த அம்பினை யுடையராய்த் தம் மனைவியரோடு கூடியிருக்கின்ற கானவர், இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் - வருத்துதலைச் செய்யாமல் வழிப் போவாரைப் போக்கும், அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண்டு ஒழுகி -மலையிடத்து மிக்க உயரத்துள்ள நெறிக்கட் செல்லும் அருமையைக் கருதாதே கல்லை இடித்த சுரத்தின் உச்சியிலே வழியைப் போதக் கடவேம் என்று நெஞ்சாலே கொண்டு நடந்து;

கருத்துரை : கார்காலத்தே பழுத்தலையுடைய பலாவினது காய்கள் நிறைந்த கொத்துப் போன்று, தம்மில் ஒத்த எடையுடையனவாகக் கட்டிய இசைக் கருவிகளின் முட்டுக்களையுடைய பையைக் காவினிராய்க் கடுமரம் மிக்கு வளர்ந்த இடமகன்ற பக்கமலையில் பரப்பிவைத்தாற் போன்ற ஒத்த நிலமாகிய கற்பாறையின் பக்கத்தில், நிலத்தே கிடக்கின்ற வழியை எடுத்து நிறுத்தினாற் போன்ற இட்டிதாகிய அரிய சிறிய வழியைத் தொடுத்த அம்பினையுடையராய்த் தம் மனைவியரோடு கூடியுறையும் கானவர் இயங்குவாரை இடுக்கண் செய்யாது போக்கும் மலையிடத்து உயரத்துள்ள நெறியிற் செல்லும் அருமையைக் கருதாதே கல்லையிடித்த அருஞ்சுர வழியைப் போதக் கடவேம் எனத் துணிந்து அவ்வழியை நடந்து, என்பதாம்.

அகலவுரை : கலப் பையிர் பக்கமலையில் கற்பாறை மருங்கில் சிறு நெறியைக் கானவர் இயங்குநரை இடுக்கண் செய்யாது இயக்கும் அடுக்கன் மீமிசை பேணாது இயவுக்கொண்டு நடந்து எனக் கூட்டுக. கார் - மழை பெய்யும் பருவம். கோள்-மேற்கோடல்: அஃதாவது பழுத்தலை மேற்கொள்ளல். இனி கோள் - குலையுமாம். துணர்-கொத்து. பலாக்காயின் கொத்துப் போன்று பல முட்டுக்களையுடைய பை என்க. கலம்-கருவி. இசைக்கருவிகள் காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை (புறம்- 206:10) என்றார் பிறரும். காய-காவின. காவுதல்-தோளிற் சுமந்து செல்லல். தோட்சுமை எடுப்போர் ஒரு தடியின் இரு நுனியினும் பொருள்களைப் பை உறி முதலியவற்றில் சம எடை உடையனவாகச் சீர்செய்து தூங்கவிட்டு அத் தடியின் நடுவினைத் தோளில் ஏற்றிச் சுமப்பர். இத்தடி - காவுதடி எனப்படும். இக்காலத்தே காவடி என வழங்குவர். காவடிச்சுமை இருதலையும் சம எடை யில்வழி எடுத்தல் இயலாமையான் நேர்சீர் சுருக்கிக் காயகலப்பையிர் என்றார். நேர் சீர். என்றது ஒன்றற் கொன்று நேரிதாகச் (சம எடையினதாக) சீர் செய்து என்றவாறு. நேர் சீர் செய்தவழிப் பெருஞ்சுமையையும் எளிதாகச் சுமத்தல் கூடும். இதனை,

ஒருதலையா னின்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது  (குறள்-1166)

என்னுந் திருக்குறளானும் உணர்க.

கடு-ஒருவகை மரம். கலித்தல்-மிகுதல். படுத்து வைத்தன்ன என்றது சமனாகப் பரப்பி வைத்தாற் போன்று என்றவாறு. மலைமேலேறும் வழி, கீழ்நின்று மேனோக்கிச் செங்குத்தாய் உயர்ந்து செல்லும் தோற்றம் சமநிலத்தே கிடந்த வழியைத் தூக்கிச் செங்குத்தாய் நிறுத்திவைத்தது போலத் தோன்றும் என்றவாறு. இட்டருஞ் சிறுநெறி - ஒடுங்கிய ஏறுதற்கரிய சிறிய வழி என்க. தீமை செய்யும் இயல்புடைய சாதியினராயிருந்தும், தீங்கியற்றுதற்குரிய கருவி அவர் கையகத் திருந்தும், அவ்வழிச் செல்வார்க்கு இடுக்கண் செய்யாமையே அன்றி, அவர் போதற்குரிய நெறிகூறல், உடன்சேறல் முதலிய நலங்களையும் செய்யும் கானவர் என்பார், தொடுத்த வாளியர் கானவர் இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும் என்றார். இதனால் நன்னன் வேண்மானின் செங்கோன்மை கூறப்பட்டது; என்னை?

............. பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமும் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோற் றென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே  (சிலப்-புறஞ்சே: 4-10)

என்னும் இளங்கோவடிகள் கூற்றானும்,

அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக்
கொடியோ ரின்று அவன் கடியுடை வியன்புலம்
உருமும் உரறா தரவுந் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா  (பெரும்பாண் 39-43)

என்னும் உருத்திரங்கண்ணனார் கூற்றானும், செங்கோல் மன்னர் நாட்டில் இடுக்கண் செய்யும் இயல்புடையனவும் இடுக்கண் செய்யா தொழியும் என்பது உணரலாமாகலின் என்க. அருப்பம் - அருமை. நிவப்பு - உயர்ந்த இடம். இயவு - வழி. ஒழுகுதல் - ஆறுபோதல்.

அக்கூத்தர் கைக்கொண்ட பேரியாழின் இயல்பு

21-37 : தொடி ..................... பேரியாழ்

பொருள் : தொடித் திரிவன்ன தொண்டுபடு திவவின் - தொடியினது உறழ்ச்சியை ஒத்த உறழ்ச்சியையுடைய ஒன்பதென்னும் எண் உண்டான வார்க்கட்டியினையும், கடிப்பகையனைத்தும் கேள்வி போகாக் குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின் அரலைதீர உரீஇ - வெண் சிறு கடுகளவும் இசையிற் றவறுதலில்லாதவாறு ஓசையை ஓர்ந்து பார்த்துக் கட்டின வடித்து முறுக்கின நரம்பின்கட் குற்றந்தீரத் தீற்றி, வரகின் குரல் வார்ந்தன்ன நுண்டுளை இரீஇ - வரகின் கதிர் ஒழுகின தன்மைத்தாக நெருங்கின நுண்ணிய துளைகளை இருத்தில சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி - ஒலியமைதற்குக் காரணமான பத்தலினைப் பிசினோடு கூட்டி, இலங்குதுளை செறிய ஆணி முடுக்கி - விளங்குகின்ற துளைகள் நிரம்பும்படி சுள்ளாணிகளை இறுகத் தைத்து, புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து - புதுவதாக யானைக் கொம்பாற் செய்த யாப்பை அமையப்பண்ணி, புதுவது போர்த்த பொன் போற் பச்சை - புதுவதாகப் போர்க்கப்பட்ட பொன்னிறம் போலும் நிறத்தையுடைய தோலினை உடைத்தாய், வண்டு வதுவை நாறும் கமழ் ஐம்பால் மடந்தை - வண்டுகள் புதுமணத்தைத் தோற்றுதற்குக் காரணமான நறுமணம் கமழ்கின்ற மயிரினையுடைய மடந்தையினது, மாண்ட நுடங்கு எழில் ஆகத்து அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப - மாட்சிமைப்பட்ட கட்புலனாகி நின்றசையும் அழகினையுடைய மார்பிடத்தே சென்று பின்பு இல்லையான மயிர் ஒழுங்குபட்டுக் கிடக்கின்ற அழகிய வயிற்றிடத்தை ஒக்க, அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது கவடுபடக் கவைஇய சென்று வாங்கு உந்தி - பொல்லம் பொத்துதல் நடுவே சேரப்பட்டுக் கண்ணுக்கினிதாய்த் தனக்குக் கூறுகின்ற அளவிலே வேறுபடாமல் பகுத்தலுண்டாக அகத்திட்ட உயர்ந்து வளைந்த உந்தினையும், நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமைக் களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ் - நுண்ணிய அரத்தாலே அராவின நுண்ணிய நீர்மையையுடைய கரிய நிறத்தாலே களம்பழத்தின் நிறத்தை ஒத்ததாய்க் கடுகித் தோன்றுகின்ற நிறத்தையுடைய வளைந்து ஏந்தின கோட்டினையும் உடைய பேரியாழ்;

கருத்துரை : தொடியின் உறழ்ச்சியை ஒத்த உறழ்ச்சியையுடைய ஒன்பதென்னும் தொகையுண்டான வார்க் கட்டினையும், வெண்சிறு கடுகளவும் இசையின்பத்தே தவறுதலில்லாமே ஓசையைச் செவியால் ஓர்ந்து பார்த்துக் கட்டின வடித்து முறுக்கின நரம்பின்கண் குற்றந்தீரத் தீற்றி, வரகின் கதிர் ஒழுகின தன்மைத்தாக நெருங்கிய நுண்ணிய துளைகளை இருத்தி ஒலியமைத்தற்குக் காரணமான பத்தலினைப் பசையாலே கூட்டி, துளைகள் நிரம்பும்படி சுள்ளாணிகளை இறுகத் தைத்துப் புதிதாகச் செய்த யானைக் கோட்டாலாய யாப்பினை அமையப் பண்ணிப், புதிய பொன்னிறத் தோலை உடையதாய் வண்டுகள் மணம் புணர்தற்குக் காரணமான நறுமணம் கமழும் கூந்தலையுடைய மடந்தையின் அழகிய மார்பிடத்தே சென்று முடிகின்ற மயிரொழுங்கு கிடந்த அழகிய வயிற்றினை ஒக்கப் பொல்லம் பொத்துதல் நடுவே சேரப்பட்டு, இனிதாய்த் தனக்குரிய அளவிற் றிரிபின்றிப் பிளவுடைத்தாய், அகத்திட்ட உயர்ந்து வளைந்த உந்தியினையும் அரத்தாலே அராவின நுண்ணிய தன்மை வாய்ந்த களங்கனி போன்று விளங்கித் தோன்றும் நிறமமைந்த கோட்டினையும் உடைய பேரியாழை என்பதாம்.

அகலவுரை : தொடி - வளையல். வலித்தல் மெலித்தல் செய்ய வேண்டுதலின் உறழ்ச்சி கூறினார், அங்கோட்டுச் செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் (222) எனச் சிறுபாணாற்றுப் படையினும் திவவிற்கு உறழ்ச்சி கூறுதல் அறிக; உறழ்ச்சியாவது நெகிழ வேண்டுமிடத்து நெகிழ்ந்தும், இறுக வேண்டுமிடத்து இறுகியும் இருத்தல். திவவு - வார்க்கட்டு. தொண்டு - ஒன்பது. தொண்டுபடு திவவின் முண்டக நல்யாழ், (ஆசிரிய மாலை) என்றார் பிறரும். கடிப்பகை -வெண்சிறு கடுகு; பேய்க்குப் பகையாகலின் வெண்சிறுகடுகைக் கடிப்பகை என்றார். கடி-பேய். ஐயவிக் கடிப்பகை (7:73) என்றார் மணிமேகலையினும், கேள்வி - இசை இன்பம். போதல் - தவறுடைத்தாதல் கேள்வி போகா என்றதற்கு. நூற் கேள்வி அடையமுற்றுப் பெற்று, என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். மேலும் கடிப்பகை அனைத்தும் அரலை என இயைத்து வெண்சிறு கடுகளவும் கொடும்பு இல்லையாம்படி என்று கூறி அரலை குற்றமுமாம். இனி வெண்சிறு கடுகளவும் கேள்வி தப்பா தென்பாருமுளர், அது வடிவிற்குவமையாதலிற் பொருந்தா தென்றார். குணமென்னும் குன்றேறி நின்றார் என்புழிக் குன்றின் பெருமை உருவற்ற குணத்தின் பெருமைக்கு உவமையானாற் போன்று இசையின் குற்றத்தின் சிறுமைக்கு வெண்சிறு கடுகின் சிறுமை உவமையாகலின் உருவுவமையாதல் யாண்டைய தென்க.

குரல் - நரம்பினிசை. ஓர்த்தல்-நரம்பின் இசை எழீஇச் செவியானுணர்தல். சுகிர் புரிதல் - முறுக்குதல். குரல் ஓர்த்துத் தொடுத்தென்றது. செம்பகையும் ஆர்ப்பும் கூடமும் அதிர்வுமாகிய பகை நீங்க உழைமுதற் கைக்கிளை இறுதியாக, மெலிவிற் கெல்லை மந்தக் குரலே என்பதனான், உழைகுரலான மந்தமும், வலிவிற்கெல்லை வன்கைக் கிளையே என்பதனான். கைக்கிளை இறுதியான வலிவும், இணை கிளை பகை நட்பின் வழிகளிலே பொருந்தப் பார்த்துக் குரல் நரம்பினையும் யாழிற்கு அகப்பட்ட நரம்பாகிய இளி நரம்பையும் முற்பட ஆராய்ந்து இசையோர்த்துத் தீதின்மையறிந்து, உழைமுதலாகவும், உழையீறாகவும் மந்த முதலாகவும் மந்த மீறாகவும், குரல் நரம்பு மந்தமானபோது குரல் நரம்பே முதலும் முடிவுமாகவும், அகநிலை மருதமும் புறநிலை மருதமும், அருகியன் மருதமும் பெருகியன் மருதமும் என நால்வகைச் சாதிப் பெரும் பண்கள் விளைநிலம் பெற வலிவு மெலிவு சமமென்னும் மூவகை இயக்கும் முறைமையிலே ஆராய்ந்து தொடுத்து என்றவாறு. இவை, சிலப்பதிகாரத்தே அரும்பதவுரையிற் கண்டவை  (சிலப்-வேனிற்).

அரலை - குற்றம். உரீஇ-தீற்றி. கேள்வி போகா ஓர்த்துத் தொடுத்த நரம்பினை உரீஇ என்க. வரகின் குரல் - வரகுக் கதிர். பொல்லம் பொத்துதல்- இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்தல். பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை (8) என்றார் பொருநராற்றுப்படையினும், துளை என்றது. பொல்லம் பொத்துமிடத்திற்றுளையை. பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக், கருவிருந் தன்ன கண்கூடு சிறு துளை (7-8) என்பர் பெரும்பாணாற்றுப்படையில், பசை-பிசின். நரப்பிசை இனிதாதற்குக் காரணம் பத்தலாகலான், சிலம்பமை பத்தல் என்றார். சிலம்பு - ஓசை வெண் கையாப்பு - யானைக் கோட்டாற் செய்த யாப்பு ; இது பத்தலின் குறுக்கே வலிபெறும் பொருட்டு ஓட்டப் படுவது பொன்னிறமமைந்த தோலென்பார், பொன்போற் பச்சை என்றார். கானக்குமிழின் கனிநிறங் கடுப்பப், புகழ்வினைப் பொலிந்த பச்சை (சிறுபா-225-6) என்றார் சிறுபாணாற்றுப்படையினும், பசையொடு சேர்த்தி ஆணி முடுக்கிப் போர்த்த பச்சை என்க. வதுவை நாறும் என்றது வண்டுகள் புணர்ச்சியைத் தோற்றுவிக்கும் என்றவாறு. நாறுதல் - தோன்றுதல், வண்டு வதுவை நாறும் கமழ் ஐம்பால் என மாறுக. இதற்கு தன்னிடத்திருந்த வண்டு கலியாணம் செய்த மகளுடைய நாற்றத்தை நாறுதற்குக் காரணமான மயிரினையுடைய மடந்தை வதுவைக்கு எல்லா மணமும் உளவாதல் பற்றி வதுவை நாறும் என்றார் என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். நுடங்கு எழில் அசைகின்ற சாயல். அஃதாவது அழகு கட்புலனாகி இயங்குவதுபோற் றோன்றும் தோற்றம் என்க. ஆடிய சாயலாள் (சிலப்-18:2) அசை மென்சாயல் (குறிஞ்சிப்பா - 140) எனப் பிறரும் கூறுதல் காண்க. ஐந்துவகையான ஒப்பனை செய்யப்படுதல் பற்றிக் கூந்தலை ஐம்பால் என்ப; அவை; குழல் அளகம் பனிச்சை கொண்டை துஞ்சை என்பனவாம். கமழ் ஐம்பால் - வினைத்தொகை. இதற்கு இயல்பான மணத்தையுடைய ஐம்பால், என்பர் நச்சினார்க்கினியர். மடந்தையின் வயிற்றிடம். உந்திக்கு உவமை; உந்தி - யாழின் கண் ஓருறுப்பு.

எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று
ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை  (6-8)

என்னும் பொருநராற்றுப்படையின் அடிகளை, மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து அடங்கு மயில் ஒழுகிய அவ்வாய் கடுப்ப என்னுமிதனோடு ஒப்புக் காண்க. அளவு- யாழிற்கு நூலோர் கூறிய அளவென்க. இதனை அது கோட்டினதளவு பன்னிருசாணும். வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும் இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும் திவவும் உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்தியல்வது எனவரும் சிலப்பதிகாரத்தில் அடியார்க்குநல்லார் உரையானும் தெளிக. நுணங்கு அரம்- நுண்ணிதாகிய அரம். களங்கனி - யாழின் கோட்டிற்கு நிறவுவமை. நுவறுதல்-அராவுதல். வள்ளுயிர் - பெரிய ஓசை. உயிர் ஆகுபெயர். பேரியாழ் - இருபத்தொரு நரம்புகளையுடையது; பெருங்கலம் எனவும்படும். இதனை யாழ் நால்வகைப்படும். அவை : பேரியாழ், மகரயாழ் சகோடயாழ் செங்கோட்டியாழ் என்பன. இவை நாலும் பெரும்பான்மைய; சிறுபான்மையான் வருவன பிறவு முள. என்னை?

பேரியாழ் பின்னும் மகரஞ் சகோடமுடன்
சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து
மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே
பின்னும் உளவே பிற

என்றாராகலின்,

இந்நால்வகை யாழிற்கும் நரம்பு கொள்ளுங்கால் பேரியாழிற்கு இருபத்தொன்றும், மகரயாழிற்குப் பத்தொன்பதும், சகோடயாழிற்குப் பதினாலும், செங்கோட்டியாழிற்கு ஏழும் கொள்ளப்படும்; என்னை?

ஒன்றும் இருபதும் ஒன்பதும் பத்துடனே
நின்ற பதினான்கும் பின்னேழும் - குன்றாத
நால்வகை யாழிற்கும் நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி

என்றாராகலின் என்னும் அடியார்க்கு நல்லார் உரையானும் (சிலப் அரங். 26) உணர்க.

பாணரும் விறலியரும்

38-46 : அமைவரப்பண்ணி ...................... விறலியர்

பொருள் : அமைவரப் பண்ணி - பொருந்துதல் வரச் சமைத்து, அருள்நெறி திரியாது இசைபெறு திருவின் வேத்து அவை ஏற்பத் துறை பல முற்றிய பைதீர் பாணரொடு - நூலோர் அருளிச் செய்த நெறியிற் பிறழாது இசையை எக்காலமும் கேட்கின்ற செல்வத்தினையுடைய அரசர்களுடைய அவைக்களத்தே அவர்கள் செவிக் கொள்ளும்படி தாம் ஓதி துறைகள் பலவற்றையும் ஓதி முடித்த பசுமையற்ற பாணர்களோடே, உயர்ந்து ஓங்கு பெருமலை ஊறின்று ஏறலின் - உயர்ந்து வளர்ந்த கற்கள் தம்மிற்றொடரும் பெரிய மலைகளை வேறோர் இடையூறின்றாக ஏறிவருகையாலே, மதந் தபு ஞமலி நாவின் அன்ன துளங்கு இயல் மெலிந்தகல் பொரு சீறடி - வலிகெட்ட நாயினது நாவினை ஒத்ததும் அசைகின்ற இயல்பினான் இளைத்ததும் கற்கள் உறுத்தப் பெற்றதும் ஆகிய சிறிய அடியினையும், கணங்கொள் தோகையில் கதுப்பு இகுத்து அசைஇ விலங்கு மலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து - குழாங் கொண்ட மயில் போலே மயிரைத் தாழ்த்து இளைத்து மானோடு மாறுபட்டுப் பொருந்தின செவ்வரியையுடைய கண்ணினையும், இலங்குவளை விறலியர் - விளங்குகின்ற வளையினையும் உடைய விறல்படப் பாடியாடும் மகளிர்களும்;

கருத்துரை : பேரியாழைப் பொருந்துதல் உண்டாக அமைத்து நூலோர் அருளிச் செய்த நெறியிற் பிறழாதவாறு, இசையை எக்காலமும் நுகர்கின்ற செல்வத்தினையுடைய அரசர்களின் அவைக்களத்தே அவர்கள் செவியேற்று மகிழும்படி தாம் பயின்ற துறைகள் எல்லாம் பாடி முடித்தவரும் நல்குரவான் பசுமை தீர்ந்தவரும் ஆகிய பாணரோடே, உயர்ந்தோங்கிய பெரிய மலைகளை ஏறிவருகையாலே நாயின் நாக்கினை ஒத்ததும், கற்கள் உறுத்தப் பெற்று அசைகின்ற இயல்பினான் இளைத்ததும் ஆகிய சிறிய அடியினையுடையாரும், குழாங் கொண்ட மயில் தோகையைத் தாழ்க்குமாறு போலே கூந்தலைத் தாழ்த்து ஆறுசெல் வருத்தத்தாலே இளைத்துத் தோன்றுபவரும், மான் விழியை மாறுகொண்ட செவ்விய வரியமைந்த விழியுடையாரும் விளங்குகின்ற வளையலணிந்த வரும் விறல்படப் பாடியாடுபவரும் ஆகிய மகளிர்களும் என்பதாம்.

அகலவுரை : யாழை அமைவரப்பண்ணி என்றது, பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் செலவு விளையாட்டுக் கையூழ் குறும்போக்கு என்னும் எண்வகையானும் இசையெழீஇ வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் உருட்டல் தெருட்டல் அள்ளல் பட்டடை என்னும் எட்டுவகை இசைச் கரணத்தானும் செவியான் ஓர்ந்து இயக்குதற்குத் தகுதியாக்கி என்றவாறு.

பண்ணல் பரிவட்டணை யாராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇ  (கானல்-5-8)

என்றும்,

வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏருடைப் பட்டடை யென இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகைதன் செவியின் ஓர்த்து  (கானல்-12-16)

எனவும் வரும் சிலப்பதிகாரத்தானும் அதற்கு அரும்பதவுரையாசிரியர் கூறும் விளக்கத்தானும் உணர்க. அருள் நெறி திரியாது அவை ஏற்பத் துறைபல முற்றிய பாணர் எனக் கூட்டுக. அருள்நெறி - நூலோர் அருளிய நெறி. நூலோர் - ஈண்டு இசை நூலோர் அவர் சாரகுமாரனை உள்ளிட்டார் என்க. இசைநூல்கள் இசை நுணுக்கம் என்பது முதலியன என்க. இனி, அருள்நெறி திரியாது இசைபெறு திருவின் வேந்தென, வேந்தர்க்கேற்றி பொருள் நூலோர் இன்னின்ன காலத்தே இன்னின்ன பொழுதில் அரசர் இசையின்பம் நுகரற்பாலார் என வகுத்தோதிய நெறியிற் பிறழாது அவ்வப்பொழுதின் இசையின்பம் நுகர்கின்ற வேந்தர் எனக் கூறினுமாம்.

நுகர்ந்து இன்புறுதற்குரிய பொருள் அனைத்தும் செல்வம் ஆகலின் இசைபெறு திரு என்றார். அரசவையில் இசையறியும் சான்றோர் பலரிருத்தலியல்பாகலின் அவ்வவை விரும்பப் பாடிப் புகழ்பெற்ற சிறப்புடைய பாணர் என்பார், வேத்தவைக்கேற்ப என்றார். துறை-செந்துறையும் வெண்டுறையுமாகிய இருவகைத் துறைகளின் விகற்பங்களும், வலிவு மெலிவு சமமென்னும் மூன்றுதானத்தினும் ஒவ்வொன்றில் ஏழுதானம் முடித்துப்பாடும் இருபத்தொரு பாடற்றுறைகளுமாம்; என்னை? மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி என்பவாகலான். பை-பசுமை ஈண்டுச் செல்வமுடைமையின் மேற்று. செல்வத்தைப் பசுமை என்றும் நல்குரவைக் கருமை என்றும் கூறுதல் மரபு. இனி, பை இளமை எனக் கொண்டு இளமை தீர்ந்த பாணர் எனினுமாம். இளமை தீர்தல் கல்வி முதிர்தலாம். என்னை? பசுங்கதிர் என்ற விடத்துப் பசுமை நிறத்தைக் குறியாது இளமை குறித்தலான் என்க.

பாணர் - இசைபாடுவோர். கூத்திற்கு இசைபாடுவோர் இன்றியமையாமையின் பாணரொடும் என்றார். பாணரும் - இசைப்பாணர் யாழ்ப்பாணர் மண்டைப்பாணர் எனப் பலராவர். இசைப்பாணர் - வாயாற்பாடும் பாணர். யாழ்ப்பாணர் யாழியக்கிப் பாடுவோர். இவருள்ளும் பேரியாழியக்குவோர் பெரும்பாணரும், சீறியாழியக்குவோர் சிறுபாணரும் எனப்படுவர். ஈண்டுக் கூறப்பட்ட பாணர் பேரியாழியக்கும் பெரும்பாணர் என்க. உயர்ந்து ஓங்கு - உயர்ந்து வளர்ந்த. ஊறு-இடையூறு. அவை, விலங்கானும் ஆறலைப்பாரானும் நிகழும் இடையூறு என்க. ஏறலின் கல் பொரு சீறடி எனக் கூட்டுக. மதம் - வலி. தபுதல்-கெடுதல்.

நாயின் நாக்கு விறலியரின் அடிக்கு நிறம் மென்மைகட்கு உவமை. உயங்கு நாய் நாவின் நல்லெழில் அசைஇ (17) எனச் சிறுபாணாற்றுப்படையினும் வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி (42) எனப் பொருநராற்றுப்படையினும் முயல்வேட்டெழுந்த முடுகுவிசைக் கதநாய், நன்னாய் புரையும் சீறடி (252-10-12) என நற்றிணையினும், நாய்நாச் சீறடி (2694) எனச் சிந்தாமணியினும் இளைப்புறு ஞமலி நலத்தகு நாவிற் செம்மையும் மென்மையும் சிறந்து வனப்பெய்தி உறுஞ் சீறடி எனக் கதையினு (2-19: 176-85) இவ்வுவமை பெரிதும் வழங்கப்படுதல் காண்க. கணம்-கூட்டம். மயிற்றோகை ஈண்டு மகளிர் கூந்தலுக்கு உவமை. கதுப்பென மணிவயிற் கலாபம் (சிறுபாண்:14-15) என்றார் பிறரும். இகுத்தல் - தாழ்த்துதல். அசைஇ - வருந்தி; வழிநடந்த வருத்தத்தால் வருந்தி என்றவாறு. விலங்கு - மான். சேயரி - செவ்விய கோடு. நாட்டம் - கண்.

நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்  (தொல் - கள -5)

என்னுமிடத்தும் நாட்டம் இப்பொருட்டாதலறிக. விறலியர் - விறல்பட ஆடுவோர். விறல் சத்துவம். அஃதாவது குறிப்புவரையறை. அச்சத்துவந்தான் பத்துவகைப்படும். என்னை? மெய்ம்மயிர் சிலிர்த்தல் கண்ணீர் வார்தல் நடுக்கமெடுத்தல், வியர்த்தல், தேற்றம் களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற் சிதைவு என இவை. அவைதாம் ஒன்பதுவகைச் சுவைகளில் யாதானும் ஒன்றை நினைத்தால் உடம்பின்கண் தோற்றும்; உடம்பினும் முகத்தின்கண் மிகத் தோற்றும், முகத்தினும் கண்ணின்கண் மிகத்தோற்றும், கண்ணினும் கண்கடையில் நன்கு தோற்றும் என்ப. இத்தகைய சத்துவம் தோன்றப் பாடி ஆடும் மகளிரும் என்றவாறு.

அவர்கட்குத் தலைவனான கூத்தனின் இருக்கை

46-50 : நிற்புறம் ................ தலைவ

பொருள் : நிற்புறம் சுற்ற - நின்னைப் புறத்தே சூழ, கயம் புக்கன்ன பயம்படு தண்ணிழல் புனல் கால் கழீஇய மணல் வார் புறவில் - குளத்திலே புகுந்தாலொத்த பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலிலே பெருகும் நீர் துராலை வாரிக்கொண்டு போன மணல் ஒழுங்குபட்ட இக் காட்டகத்தே, புலம்புவிட்டிருந்த புனிறு இல் காட்சிக் கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ - வழி வந்த வருத்தத்தைக் கைவிட்டிருந்த ஈன்றணிமையில்லாத தோற்றத்தையுடைய கூத்தர்களாகிய சுற்றத்திற்குத் தலைவனே!

கருத்துரை : நின்னைப் புறத்தே சூழக் குளத்திலே புகுந்தாலொத்த பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலிலே பெருகும் நீர் அழுக்கைக் கழுவிப்போன மணல் ஒழுங்குபட்ட இக் காட்டகத்தே வழி வருத்தத்தைக் கைவிட்டிருந்த ஈன்றணிமையில்லாத கூத்தராகிய சுற்றத்திற்குத் தலைவனே என்பதாம்.

அகலவுரை : பாணரொடு விறலியர் நின்னைப் புறஞ்சூழ இருந்த தலைவனே! எனக் கூட்டுக. கயம்-குளம். குளத்தின்கண் நீராடுவார்க்குக் குளிர்ச்சி உண்டாவது போன்று மிகவும் குளிர்ச்சியை உண்டாக்கும் நிழல் என்றவாறு.

இனிப் பொருநராற்றுப்படையில்,

..................................கானத் தல்கி
இலையின் மராத்த எவ்வந் தாங்கி
வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கில்
.................................................
அரசவை இருந்த தோற்றம் போலப்
பாடல் பற்றிய பயனுடை எழாஅல்
கோடியர் தலைவ !  (49-57)

என்றும் சிறுபாணாற்றுப்படையில்,

சுரன் முதன் மராஅத்த வரிநிழல் அசைஇ  (12)

என்றும், பெரும்பாணாற்றுப்படையில்,

பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக்
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்  (19-21)

என்றும் பொருநர் முதலியோரை ஆற்றெதிர்ப்படுவோர் நீரும் நிழலும் வறந்த கொடிய பாலை நிலத்தே எதிர்ப்பட்டாராக ஓதியிருப்ப இந் நூலாசிரியர் மட்டும்,

கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல்
புனல்கால் கழீஇய மணல்வார் புறவில்
புலம்பு விட்டிருந்த புனிறில் காட்சி
கலம்பெறு கண்ணுளர் ஒக்கற் றலைவ

என நீரும் நிழலும் மலிந்த குளிர்ந்த காட்டகத்தே எதிர்ப்பட்டதாக வுரைத்துள்ள வேற்றுமை யுணர்க.

பயம்-ஈண்டுக் குளிர்தந்து வழிவருத்தந் தீர்த்தல் மூசுவண்டறை பொய்கையும் போன்றதே, ஈசன் எந்தை இணையடி நீழலே என அப்பரும் கூறுதல் காண்க. வதிவோர் மகிழ்ந்து இன்புறற் பாலதாகிய இடம் என்பார். மழைநீர் பெருகிக் குப்பைகளை வாரிக்கொண்டு போய் விட்டமையாற் றூய்தாகிய மணற்பரப்பினையுடைய காட்டகத்தே உண்டான வருத்தம். புனிறு - ஈன்றணிமை. புனிறென்கிளவி ஈன்றணிமைப்பொருட்டே (தொல்.உரி-77) என்பது சூத்திரம். புனிறில் காட்சி என்றது இளங்குழவிகளையுடையார் ஒருவரேனும் வந்திலாத கூட்டம் என்றவாறு. கண்ணுளர் - கூத்தர். ஒக்கல் - சுற்றம், கூத்தராகிய சுற்றம் என்க. இத்தொடரைப் பிரித்து வேறிடத்தே இயைத்துக் கண்ணுளரும் சுற்றமும் என உம்மை விரித்தோதினர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

இனி 1-முதல் 50 வரையுள்ள தொடரின் பொருளை, கலப்பையிராய். இயவுக்கொண்டொழுகி யாழைப் பண்ணித் துறைபல முற்றிய பாணரோடு விறலியர் புறஞ்சுற்றத் தண்ணிழலிலே இருந்த கண்ணுளர் ஒக்கற் றலைவ என இயைத்து முடிவு செய்க. கலப்பையிர் என்னும் பன்மை, தலைவ என்னும் ஒருமையோடு முடிந்தது. இதனை,

ஒருமை சுற்றிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக் காகும் இடனுமா ருண்டே  (எச்ச : 65)

என்னும் தொல்காப்பிய விதியான் அமைத்துக்கொள்க. மேலும், ஒருமைச் சொல் பன்மையொடு முடிதலும் ஆற்றுப்படையில் உண்டு; அவ்வாறு முடிவதனை,

முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே
ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்  (எச்ச : 66)

என்னும் தொல்காப்பிய விதியினால் அமைத்துக்கொள்ளல் வேண்டும். 51-தூ மலர் என்பது தொடங்கி 94-கேள் என்னுந் துணையும் ஒருதொடர்; இதன்கண், யான் நன்னன்பாற் பரிசில் பெற்று வருகின்றேன்; நீயிரும் அந்நன்னன்பாற் சென்று பரிசில்பெற எண்ணுதிராயின் யான் கூறுவதனைக் கேண்மின் என்னுமுகத்தான், நன்னன் சிறப்பும்; அவனைப்பற்றித் தான் கூறற்பாலன இன்னின்ன என்பதும் தொகை வகையாற் கூத்தனாற் கூறப்படும்.

நன்னன்பாற் பரிசில் பெற்றுவரும் கூத்தன் நிலைமை

51-53 : தூமலர் .............................. வருதும்

பொருள் : தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின் மீமிசை நல்யாறு கடல் படர்ந்தாங்கு - தூய பூக்கள் நெருங்கின கரையைப் பொருகின்றதும் உயர்ச்சியினையுடைய மலையுச்சியினின்றும் ஒழுகுவதும் ஆகிய நல்ல யாறு கடலை நோக்கி விரையுமாறு போன்று, யாம் அவணின்றும் வருதும் - யாம் அவ்வள்ளலிடத்தினின்றும் பொருட் பெருக்கத்தோடு வாராநின்றேம்.

கருத்துரை : தூயமலர்கள் செறிந்த கரையை அலைத்திடிக்கின்றதும், மலையுச்சியினின்றும் ஒழுகுவதுமாகிய பேரியாறு கடலை நோக்கி விரைந்தாற்போன்று யாம் அவ்வள்ளல்பாற் பெற்ற பொருட் பெருக்கோடு அவ்விடத்திருந்து வருகின்றேம் என்பதாம்.

அகலவுரை : மலையிடத்துள்ள பொருள்களை வேண்டியாங்கு வாரிக் கொண்டுவரும் வெள்ளம், நன்னன்பால் தான் வேண்டிய பொருள் முழுதும் பரிசிலாகப் பெற்றுவரும் கூத்தனுக்கு உவமை. அவ்வெள்ளம் ஈர்த்தபொருள் அனைத்தும் வரையாது நல்கும் மலை, நன்னற்கு உவமை என்க. இவ்வுவமை பெருமிதம் என்னும் மெய்ப்பாடுபற்றிப் பிறந்தது; என்னை?

நகையே யழுகை இளிவரன் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை  (தொல்-மெய்ப்-3)

என்னும் மெய்ப்பாடு எட்டன் வழித்தாயும் உவமை தோன்று மென்பது பற்றி ஆசிரியர் தொல்காப்பியனார்,

பெருமையுஞ் சிறுமையும் மெய்ப்பா டெட்டன்
வழிமருங் கறியத் தோன்று மென்ப  (உவ-19)

என்றோதுதல் காண்க இவ்விதியின்படி ஈண்டுப் பரிசில் பெற்று வருவோன் செல்வம்பற்றிப் பெருமிதமுடையனாய் அந்நிலைக்கேற்ற உவமை எடுத்தோதுதலின் என்க.

அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே  (நன்னூல்-28)

என்பவாகலான் நன்னனை மலையோடுவமித்தான். மலையுச்சியினின்றும் பற்பல பொருள்களை வாரிக்கொண்டு வரும் யாற்றுப் பெருக்கினை,

மணியும் பொன்னும் மயிற்றழைப் பீலியும்
அணியும் ஆனைவெண் கோடும் அகிலுந்தன்
இணையில் ஆரமும் இன்னகொண் டேகலான்
வணிக மாக்களை ஒத்ததவ் வாரியே  (ஆற்றுப்-7)

எனக் கூறிய கம்பநாடர் தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின், மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாங்கு யாமவ ணின்றும் வருதும் என்னும் இவ்வின்பமிக்க அடியினை மறந்து உவமையிற் பலபடி தாழ்ந்தார். என்னை? வாரி மலையிடத்தே விலைகொடுத்து வாங்குதலும், நாட்டிற் கொணர்ந்து விலைக்கு விற்றலும் இன்மையானும், மலையினின்றும் வேண்டிய வேண்டியாங்கு வாரிக்கொண்டு வந்து ஓம்பாது நாட்டின் கண் வீசும் வெள்ளம் பரிசின் மாக்களை ஒத்ததென்னின் அவ்வுவமை பலபடி உயர்ந்து விளங்குமாகலானும் என்க. தூமலர் - தூய்மைமிக்க மலர். துவன்றிய-நிறைந்த; நெருங்கிய என்க. துவன்று நிறை வாகும் (உரி-34) என்பர் தொல்காப்பியனார். கரையைப் பொருதலாவது, கரையை அலைத்திடித்தல். நிவப்பு - உயர்ச்சி. இது மலையின் உயர்ச்சியைக் குறித்து நின்றது. மீமிசை: ஒருபொருட் பன்மொழி. மிக உயர்ந்த உச்சி என்றவாறு. நல்யாறு என்றது பேரியாறென்னும் குறிப்புடையது. ஆங்கு : உவம உருபு யாம் என்றான் தானும் சுற்றத்தோடு வருதலை உட்கொண்டு அவண் என்னும் சுட்டுச் சிறந்த வள்ளலாகிய அந்நன்னன்பானின்று என்னும் பொருளை யாப்புறுத்தி நின்றது. வருதும் - வருகின்றேம்.

நன்னன் சேய் நன்னன் பெருமை

53-66 : நீயிரும் ....................... எற்றாக் குறுதலின்

பொருள் : நீயிரும் கனிபொழி கானம் கிளையோடுணீ இயதுனை பறை நிவக்கும் புள்ளின மான - நீவிரும் பழங்களைச் சொரிகின்ற காட்டிடத்தே அவற்றைச் சுற்றத்தோடே சென்று தின்றற்கு விரைந்த பறத்தற் றொழிலிலே ஓங்கும் பறவைத்திரளைப் போல, புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின் - கை செய்த மாலையாற் பொலிவுபெற்ற வண்டுகளை உண்டாக்குகின்ற மார்பினையுடையவனும், வனைபுனை எழின்முலை வாங்கு அமைத்திரள்தோள் மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன் - ஓவியங்களிலே முலையாகப் பண்ணின கைசெய்த அழகைத் தன்னிடத்தே யுடைய முலையினையும் மூங்கிலை ஒத்த திரண்ட தோளினையும் பூப்போலும் குளிர்ச்சியுடைய கண்ணினையுமுடைய கற்புடைய மகளிர்க்குக் கணவனும், முனை பாழ் படுக்கும் துன்னருந் துப்பின் - பகைப்புலத்தைப் பாழ்படச் செய்யும் கிட்டுதற்கரிய வலியினையும், இசை நுவல் வித்தின நசை ஏர் உழவர்க்குப் புது நிறை வந்த புனல் அம் சாயல் - பிறர் புகழைக் கூறுதல் என்னும் விதையாலே அவர் தரும் பரிசிலை விரும்புதலாகிய ஏர் உழவினையுடைய பரிசிலர்க்குப் புதுப்பெருக்காய் வந்த நீர்போலும் அழகையும் மென்மையையும், மதிமாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி -தனது அறிவின் ஆக்கத்திற்கு மாறாகிய கேட்டை நினையாது ஆக்கத்தினையே உணரும் நினைவினையும், வில் நவில் தடக்கை - விற்றொழிலிலே பயின்ற பெரிய கையினையும், மேவரு பெரும்பூண் - பொருந்துதல் வரும் பேரணிகலன்களையும் உடையவன் ஆகிய, நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு - நன்னன் மகனாகிய நன்னனை நினைத்த கோட்பாட்டுடனே, உள்ளினிர் சேறிர் ஆயின் - அவன்தரும் பரிசில்கள் இவை என்று அப்பரிசில்களை நினைந்தனிராய்ச் செல்வீராயின், பொழுது எதிர்ந்த புள்ளினிர் மன்ற எற்றாக்குறுதலின் நீயிர் - புறப்படுகின்ற பொழுது நுமக்கு வரும் ஆக்கத்தை முன்னறிவிக்கின்ற நன்னிமித்தத்தைப் பெற்றனிர் ஆகுதிர்; அறுதியாக அஃதெற்றாலெனின் நீயிர் எம்மை ஆற்றெதிர்ப்படுதலான்.

கருத்துரை : நீயிரும் கனிசொரிகின்ற காட்டிடத்தே அவற்றை உண்ணும் பொருட்டுச் சுற்றத்தோடு செல்லும் பறவையைப் போன்று, மலர் மாலையாலே பொலிவு பெற்று வண்டுகள் மிகுதற்குக்காரணமான மார்பையுடையோனும், வனைந்து புனைந்த முலை போன்ற அழகிய முலையை உடையாரும், மூங்கிலை ஒத்துத் திரண்ட தோளினையுடையாரும், தாமரை மலர்போன்ற குளிர்ந்த கண்ணையுடையாரும், கற்பின் மிக்காரும் ஆகிய மகளிர்க்குக் கணவனும், பகைவரைப் பாழ்படுக்கும் பிறராற் கிட்டுதற்கரிய வலியுடையானும், பிறர் புகழ் கூறுதலை வித்தாக வித்தி, அவர் தரும் பரிசிலைப் பயனாகக்கொள்ளும் ஏருழவராகிய பரிசிலர்க்குப் புது நீர்ப் பெருக்கம் போன்று பயன்றரும் அழகினையும் சாயலையும் உடையானும், தனது அறிவிற்கு மாறுபாடின்றி நன்னெறியிலே ஒழுகுபவனும், விற்றொழில் மிக்கானும், பேரணிகலன்களை அணிந்தவனும் ஆகிய நன்னன் மகன் நன்னனை விரும்பிச் செல்லும் கொள்கையோடே, அவன் தரும் பரிசிலை நினைந்து செல்வீராயின், நீர் புறப்படுங்கால் நன்னிமித்தம் பெற்றனிர் ஆவீர்; அஃதெற்றாலெனின், நீர் எம்மை ஆற்றிடை எதிர்ப்படுதலான் என்பதாம்.

அகலவுரை : நீயிரும் புள்ளின்மான நன்னனை நயந்து செல்வீராயின் நீர் புறப்படுங்கால் நன்னிமித்தம் எதிரப்பெற்றனிர் ஆவிர் எம்மை எதிர்ப்பட்டமையான் என்றியைத்துக் கொள்க.

நன்னன்பாற் பரிசில் பெறுதல் திண்ணம் என்றற்குக் காட்சியளவை கூறுவான் மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாங்கு யாமவணின்றும் வருதும் என்று கூறிய கூத்தன், இனி நீயிரும் அவ்வள்ளல்பாற் சென்மின் என்பான் நீயிரும் என்றான். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை பழுத்துச் சொரிகின்ற காட்டகத்தை எய்தும் புட்குழாம் இனிய உண்டி பெறுதல்போல நன்னன்பாற் செல்லும் இரவலர் பரிசில் பெறுதல் திண்ணம் என்பான். அவ்வுவமை எடுத்தோதினன். இரவலரைப் பழுமரம் தேரும் பறவையோ டுவமித்தல் பழுமர முள்ளிய பறவையின் யானுமவன் ........ வாயில் ........ புக்கனன் (64-67) எனப் பொருநராற்றுப் படையினும் பழந்தேர் வாழ்க்கைப் பறவைபோல என (576) மதுரைக் காஞ்சியினும், பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. இனி வள்ளல்களைப் பழுமரத்தோடுவமித்தலை,

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்  (குறள் - 216)

என்னும் வாயுறை வாழ்த்தான் உணர்க.

கிளை-சுற்றம். உணீஇய - உண்ண; செய்யிய என்னும் வினையெச்சம் அளபெடுத்தது. துனை - விரைவு. கதழ்வும் துனைவும் விரைவின் பொருள (உரி-17) என்பது தொல்காப்பியம். பறை - பறத்தற்றொழில். துனை பறை நிவக்கும் புள் என்றது, விரைந்த பறத்தற்றொழிலிலே சிறந்த பறவை என்றவாறு. புனைதார் பொலிந்த என்றது, வாகை மாலையாற் பொலிவுடைத்தாய என நன்னனின் வெற்றிச்சிறப்பிற்குக் குறிப்பேதுவாய்நின்றது. வண்டுபடுதற்குக் காரணமான மலர்மாலையை எப்பொழுதும் உடைய மார்பென்க. வனைபுனை எழின் முலை வாங்கு அமைத்திரள்தோள் மலர்போன் மழைக்கண் மங்கையர் கணவன் என்றது. நன்னனுடைய அகத்துறை வாழ்வின் சிறப்பைக் காட்டும் குறிப்பேதுவாய் நின்றது; என்னை?

மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம் - விழைதக்க
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு  (நாலடி - 361)

என்பவாகலின்; அவ்வள்ளலின் வண்மைக் கியைய ஒழுகும் அவன் மனைவியர் சிறப்பையும் எடுத்தோதினான். இனித் தாளாளர்க் கன்றி வண்மைச் செயல் கடைபோகாமையின், அவ்வள்ளலின் தாளாண்மை கூறுவான், முனைபாழ்படுக்கும் துன்னரும் துப்பின் என்றான். முனை போர்க்களம்; முனைபாழ்படுக்கும் என்றது தான் மேற் சென்ற போர்முனையிற் பகையடர்த்துப் பாழ் செய்யும் என்றும், துன்னரும் துப்பின் என்றது, தன்மேற் போர்செய்ய வருவாரின்மையை உடையான் என்றும் கூறியவாறு. துன்னுதல் - நெருங்குதல். துப்பு - வலி. இசை நுவலுதலையே வித்தாக வித்தி அதன் பயனாகிய பரிசிலை விரும்புவார் என்பான், இசைநுவல் வித்தின் நசையேருழவர் என்றான். வித்தையுடைய என்றதற்குத்தக ஏருழவர் என்றான். வில்லேருழவர் சொல்லேருழவர் எனப் பிறரும் கூறுதல் காண்க.

ஏருழவர்க்குப் புதுப்புனற் பெருக்கு மகிழ்ச்சியை விளைத்துப் பின்னர்ப் பொருளும் நல்குமாப்போல, இரவலர்க்கு. இன்முகமுடைமை. இன்சொலுடைமை முதலியவற்றாற் பேரின்பம் நல்கிப் பின்னர்ப் பெரும் பொருளும் நல்குவான் என்பான், புது நிறை வந்த புனல் அம் சாயல் என்றான். அம்சாயல் என்பது, காண்டற்கினியனாந் தன்மையும் அழகும் உடையான் என்றவாறு. வானி நீரினுந் தீந்தண் சாயலன் (பதிற்- 86:12-13) நீரினும் சாயலுடையன் (கலி-42:20) வேனிற் புனலன்ன நுந்தை (கலி.84;38) நீரினும் இனிய சாயற்பாரி (புறம்-105) எனப் பிறரும் கூறுதல் காண்க.

மதி-அறிவு. அறிவுக்குப் பொருந்திய நன்மைகளையே நினைத்தலன்றி அதற்கு முரணாய தீமைகளை அவற்கியல்பன்றென்பான், மதிமாறு ஓரா நன்றுணர் சூழ்ச்சி என்றான். அறிவு - உண்மையறிவு,

சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு  (குறள், 422)

என்பவாகலின், நன்னனின் மெய்யறிவுடைமையைப் புகழ்வான், அங்ஙனம் கூறினான் என்க. வில்நவில் - விற்றொழிலிலே நன்கு பயின்ற மேவரும் பெரும்பூண் என்றதற்குப் பிறரால் எய்துதற்கரிய சிறந்த அணிகலன் எனக்கொண்டு, அவை;அருளுடைமை, பொறையுடைமை, ஒழுக்கமுடைமை முதலிய அணிகலன் எனினுமாம்; என்னை?

குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி
விழுப்பே ரொழுக்கம் பூண்டு  (ஆசிரியமாலை)

என்றும்,

கண்ணுக்குப் புனைமணிப்பூண் கண்ணோட்டம்  (வில்லிபா-அருச்சுனன்தவ)

என்றும்,

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலன் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக் கழகுசெய் வார்  (நீதிநெறி-13)

என்றும், சான்றோர் பலரும் விழுக்குணங்களையும் விழுப்பே ரொழுக்கத்தினையுமே, முழுமணிப்பூண் எனப் போற்றிக் கூறலான் என்க. நன்னன் சேய் - நன்னனுடைய மகன். எனவே, நன்னன் தந்தையின் பெயரும் நன்னன் என்பது பெற்றாம். படர்தல் - நினைத்தல். தன்னை எதிர்ப்பட்டமையால் உண்டாகும் நலன் நன்னன்பாற் சென்றாலன்றி உண்டாதலின்மையான் சேறிராயின். எற்றாக்குறுதலின் என இரண்டு ஏதுக்களும் உடன் கூறினான். அஃதாவது, என்னை ஆற்றெதிர்ப்பட்டமைக்கு ஏது நீயிர் நன்னிமித்தம் உடையராயினமை என்பேன், நீயிர் நன்னன்பாற் செல்வீராயின் என்றவாறு. பொழுது எதிர்ந்த புள்ளினிர் - நல்ல முழுத்தத்தையும் நன்னிமித்தத்தையும் நன்கு எதிர்ந்தவராயினிர் எனினுமாம். இதற்கு, எதிர்ந்த பொழுது புள்ளினிர் மன்ற என மாறுக. பொழுதும் புள்ளினிரும் என உவமை விரித்தோதுக. புள் - இன்னின்ன பறவை ஆறு செல்வோர் முன்னர் இன்ன திசைக்கண் நின்று இன்ன திசைக்கட் செல்லின் நன்மைவிளையும் அல்லது தீங்குவிளையும் எனக் கூறும் நிமித்த நூல்களில் நலம்விளைதற்கு ஏதுவாகக் கூறப்பட்ட புட்கள் என்க. இனிப்புள் என்பதனை வாய்ப்புள் என்றதன் முதற்குறையாகக் கொண்டு நீயிர் புறப்படும்பொழுது நன்னிமித்தமாகிய வாய்ப்புள் பெற்றனிர் எனினுமாம். வாய்ப் புள்ளாவது: ஒருவன் ஒருவினைமேற் புறப்படும்பொழுது அயலிலுள்ளார் பிறரொடு பேசும் பேச்சின்கண் தனக்கு நலம் விளைத்தற்குக் குறிப்பாகவாதல், வெளிப்படையானாதல் கூறினாற் போன்ற பொருளுடைய சொற்றொடர் அமைதல். இதனை,

பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
இன்னே வருகுவர் தாய ரென்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள்  (11-18)

என்னும் முல்லைப்பாட்டான் உணர்க. மன்ற - என்பது, திண்ணமாக; அறுதியாக என்னும் பொருட்டு. அசைச்சொல் எனினுமாம். இனி, எதிர்வந்த கூத்தனுக்குப் பரிசில் பெற்றுவரும் கூத்தன், நீ நன்னனைக் காண்டற்குச் செல்வாயெனின் அவ்வள்ளலை எய்துவது பற்றியான் இன்னின்ன கூறுவல் அவற்றைக் கேள் என்பான், தான் பின்னர் விரித்துரைக்க எண்ணியவற்றை முன்னர்த் தொகுத்துக் கூறுகின்றான்.

67-76 : ஆற்றின் ........................... இருக்கையும்

பொருள் : ஆற்றின் அளவும் - செல்லும் வழிக்கண் உளவாகிய நன்மையின் அளவும் தீமையின் அளவும், அசையும் நற்புலமும் - நீயிர் தங்குதற் குரிய நன்றாகிய இடங்களும், வீற்று வளம் சுரக்கும் அவன் நாடுபடு வல்சியும் - பிறர்நாட்டிற்கு இல்லாத செல்வத்தை மாறாமற் கொடுக்கும் அவன் நாடுவிளைகின்ற உணவுகளும், மலையும் சோலையும் மாபுகல் கானமும் - அவன் நாட்டின்கண் உள்ள மலைகளின் தன்மையும் பொழில்களின் தன்மையும் விலங்குகள் விரும்பித் திரியும் காட்டின் தன்மையும், தொலையா நல் இசை உலகமொடு நிற்பப் பலர் புறங்கண்டவர் அருங்கலம் தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும் - கெடாத நல்ல புகழ் உலகம் உள்ளளவும் நிற்கும்படியாகப் பகைவர் பலரையும் முதுகுகண்டு அவர் திறையாகத் தந்த பெறுதற்கரிய பேரணிகலன்களைக் கொணர்ந்து அறிவுசால் புலவர்க்குச் சொரியும் வண்மையாகிய மழையும், இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் - தன்னை இகழ்ந்திருக்கும் பகைவரைத் தனது ஆட்சிக்கீழ்ப் படுத்தும் அறிவின் வன்மையும், புகழுநர்க்கு அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு - தன்னைப் புகழும் சூதர்முதலியோர்க்குத் தான் புறங்கண்ட பகைவர் அரசை முற்றுங் கொடுப்பினும் அமைதி பிறவாத அறிவுடனே, தூத் துளி பொழிந்த பொய்யா வானின் வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ இருக்கையும் - தூய துளியைப் பெருகச் சொரிந்த பருவம் பொய்யாத முகில் பின்னரும் பெய்யுமாறு போலப் பின்னரும் மாறாமற் சொரியும் அவனுடைய நாளோலக்கமும்;

கருத்துரை : நன்னன்பால் செல்லும் நெறிக்கண் உளவாகிய நலத் தீங்குகளும் பிறர் நாட்டின்கட் கிடைக்கப் பெறாத செல்வத்தை மாறாமலளிக்கும் அவன் நாட்டின்கட்படும் உணவுகளும் அவன் நாட்டின்கண்ணுள்ள மலையும் சோலையும் விலங்குகள் திரிதரும் காடும், நல்லபுகழ் அழிவில்லாமே உலகம் உள்ளதுணையும் நிற்றற்குரியதாய்ப் பகைவர் பலரையும் புறங்கண்டு அவர் திறைதந்த பொருளை வரையாது புலவோர்க்கு வழங்கும் அவன் வண்மைச் சிறப்பும் தன்னை இகழ்வாரைத் தன் ஆட்சிக்கண் அகப்படுத்தும் அவன் அறிவாற்றலும், தன்னைப் புகழும் சூதர் முதலியோர்க்குத் தான் வென்ற பகைவருடைய அரசு முழுதும் கொடுத்தும் அமையாத உள்ளத்தோடே தூய துளியைப் பெய்யும் பருவம் பொய்யா மழை மேலும் மேலும் பொழியுமாறு போலே பின்னரும் மாறாமற் சொரியும் அவன் நாளோலக்கச் சிறப்பும் (கூறுவல்) என்பதாம்.

அகலவுரை : ஆறு-வழி; அதனளவென்றது, அதன்கட் செல்லுங்கால் உண்டாகும் நன்மை யித்துணை தீமை யித்துணை என்னும் அளவு என்றவாறு. அசைதல்-தங்கியிருத்தல். தங்குதற்குரிய இடம் நீரும் நிழலும் உணவும் உடையவாய்த் தீமைகள் இலவாய் இருத்தல் இன்றியமையாமையின் அசையும் நற்புலம் என்றான். நற்புலம் - நன்மையுடைய இடம். வீறு -வேறொன்றற்கில்லாத சிறப்பு; அஃதாவது நாடாவளத்தது என்றவாறு. சுரக்கும் என்றது, தன்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பாற்றானேயடையும் செல்வமுடையது என்றவாறு. இவ்வாறாதலை,

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு  (739)

என்னுந் திருக்குறளானும்,

கதிர்படு வயலி னுள்ள கடிகமழ் பொழிலி னுள்ள
முதிர்பல மரத்தி னுள்ள முதிரைகள் புறவி னுள்ள
பதிபடு கொடியி னுள்ள படிவளர் குழியி னுள்ள
மதுவன மலரிற் கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார்  (நாட்-22)

என்னும் இராமாவதாரத்தானும் உணர்க. நாடெனவே மலைநாடும், காட்டு நாடும், தண்பணை நாடும் கூறுவல் என்றானாயிற்று; அவையிற்றை விரியிற் காண்க.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு  (குறள் - 737)

என்பவாகலின் மலையும் கூறுவல் என்றான். சோலை - பூம்பொழில்கள். மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே (புறம்-165) என்றாங்கு எப்பொருளும் நிலையுதலில்லாத இவ்வுலகத்தே புகழ் ஒன்றுமே நிலைபேறுடைத்தாகலின், தொலையா நல்லிசை உலகமொடு நிற்ப என்றான். புகழ் அங்ஙனம் நிற்றலை,

ஒருவன திரண்டி யாக்கை யூன்பயின் நரம்பின் யாத்த
உருவமும் புகழும் என்றாங் கவற்றினூழ் காத்து வந்து
மருவிய உருவ மிங்கே மறைந்துபோ மற்றை யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே  (சீய-204)

என்றும்,

பொன்றும் இவ்வுட லின்பொருட்
டென்றும் நிற்கும் இரும்புகழ்
இன்று நீர்கழிந் தீர்களால்
குன்றின் மேற்குடை வேந்திர்காள்  (அர-226)

என்றும் எழுந்த சூளாமணிச் செய்யுள்களான் உணர்க. உலகமொடு நிற்ப என்றதன்கண் ஒடு உருபு உடனிகழ்ச்சிக்கண் வந்தது; உலகம் நிற்குமளவும் அதனுடன் கூடிநிற்கும் புகழ் என்றவாறு.

நல்லிசை நிற்பச் சுரக்கும் ஈகை மாரி என்று கூட்டுக.

உரைப்பா ருரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ்  (குறள் - 232)

என்பதுபற்றிப் புகழ்க்குச் சிறந்த காரணங்களுட் டலைசிறந்தது ஈகையாதலின் அதனையே ஏதுவாக்கினார். சிறந்த வேந்தர்கள் தம்பகைவர்பால் கவர்ந்த பொருளை வழங்கும் வழக்கமுண்மையை,

ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தொழித்த
விசும்புசெல் இவுளியொடு பசும்படை தரீஇ

எனவும்,

செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி அடர்ப்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படைப்பை யாரெயில் பலதந்
தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கி  (புறநா-6-11-6)

எனவும்,

குரிசி லடையாரைக் கொண்டகூட் டெல்லாம்
பரிசில் முகந்தன பாண்  (புற-வெ-51)

எனவும்,

திறல்சால் வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி
விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின்  (சிறுபாண்-246-248)

எனவும் பிற சான்றோரும் கூறுமாற்றான் உணர்க. அருங்கலம் - பெறற்கரிய சிறந்த அணிகலன்கள். புலவர் - அறிவுடையோர். இனி, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்த்துறை போய புலவர்கள் எனினுமாம். ஈகை என்பதற்குப் பொன் எனப் பொருள் கூறினார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இகழுநர் - தன்னை இகழும் பகைவர். பிணித்தலாவது, நால்வகை உபாயங்களில் ஏற்பன கொண்டு அவரை அஞ்சுவித்தாதல் நட்டாதல் தன் ஆணைவழி நிறுத்துதல். இதற்கு அறிவு வன்மையே வேண்டுமாகலின் ஆற்றல் ஈண்டு அறிவின் ஆற்றலைக் குறித்து நின்றது.

புகழ்வோர் சூதர் மாகதர் பாணர் கூத்தர் நட்டோர் முதலியோர். அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு என்றது அவ்வள்ளலின் வண்மையின் மாண்பைச் சிறப்பித்தவாறு; என்னை?

அகமலி உவகையொ டணுகல் வேண்டிக்
கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி
யானது பெயர்த்தனெ னாகத் தானது
சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதுமோர்
பெருங்களிறு நல்கி யோனே  (394)

என்னும் புறப்பாட்டால், சிறந்த வள்ளல் தாம் எத்துணைக் கொடுப்பினும் அக் கொடையான் ஆராமையுடையராதல் அறிக.  நாண் மகிழ் இருக்கை - காலைப்போதின்கண் ஓலக்கத்தே மகிழ்ந்திருக்கும் இருக்கை. இவ்விருக்கையிலிருந்து இரவலர்க்கு வழங்குதல் அரசர்கள் வழக்கம். இதனை,

நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேரீ தல்லே  (123)

என்னும் புறப்பாட்டான் உணர்க.

77-80 : நல்லோர் ..................... ஒழுக்கமும்

பொருள் : நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து - எவ்வாற்றானும் நல்லோரே கூடியிருப்பதும் கற்றோர் தாம் கற்றவைகளை நாவான் உரைத்தற்கேற்றதும் ஆகிய தன் நல்லவைக் களத்தே, வல்லாராயினும் - தாம் கற்றவற்றை மனங்கொள்ளக் கூறமாட்டாராயினும், புறமறைத்து - அவர் மாட்டாமையை மறைத்து, சென்றோரை - தம்மவையிடத்தே சென்றவர்களை, சொல்லிக் காட்டி - தாம் பொருளைச் சொல்லிக் காட்டி, சோர்வின்றி விளக்கி - அதனைத் தப்பின்றாக எல்லார் மனமுங் கொள்ளும்படி அறிவித்து, நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் - நன்றாக நடத்தும் அவனுடைய சுற்றத்தாருடைய பேரொழுக்கமும்;

கருத்துரை : நல்லோர் குழீஇயதும் கற்றோர் தாம் கற்றனவெல்லாம் கூறற்குத் தக்க சான்றோரையுடையதும் ஆகிய தனது நல்லவைக்கண் சென்ற புதியவர் வல்லுநர் அல்லாதவிடத்தும் அவர் மாட்டாமையை மறைத்து அவர் கூறியவற்றை வழிமொழிந்து அவையோர் மனங்கொள அவற்றைச் சொல்லிக் காட்டிப் புகழ்ந்து நன்றாக நடத்தும் இயல்புடைய அவன் சுற்றத்தாருடைய ஒழுக்கமும் (கூறுவல்) என்பதாம்.

அகலவுரை : நல்லோர் என்றது தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவுடைய அறனறிந்து மூத்த அந்தணாளரை. அரசர்க்கும் உறுப்புகட்கும் மானுட தெய்வ குற்றங்கள் வாராமற் காத்தற்குரிய இச்சான்றோரினத்தனாய்த் தானிருக்கும் சிறப்புடையன் நன்னன் என்பதும் இதனாற் போந்தமை காண்க. நாநவில் அமைய மாவது - கல்வியை நன்கு கற்று முதிர்ந்தாரும் தாம் கற்றவற்றை விரித்துரைக்குங்கால் அவ்வுரையின் நுண்பொருளை உணரும் சான்றோருமுடைய அவை என்றவாறு என்னை?

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்  (724)

என்றும்,

உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று  (718)

என்றும் திருவள்ளுவப் பெருந்தகையார் மொழிந்த மெய்ம்மொழி யானும் இதனை உணர்க. வல்லார் வன்மையில்லார்; நாநல மில்லாதார் என்றவாறு. நல்லாரே நிறைந்த அவைக்களத்தே ஒரோவழிப் புதுவராய்ச் சென்றவர் குற்றந்தரும் சொற்களைப் பேசியவிடத்தும் குற்றத்தை எடுத்துக் கூறின் அவர் பல்லாருள் நாணல் பரிந்து அவர் கூறியவற்றையே வழிமொழிவார் போன்று அவர் கூறக் கருதிய பொருளைத் தாம் விளக்கிக் கூறி இத்தகைய சிறப்புடைய பொருளை இப் பெரியார் நமக்கு நுண்ணிதிற் கூறினார் என அப் புதியரைப் புகழ்ந்து நன்றாக நடத்தும் சுற்றத்தையுடையான் என்க? என்னை,

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்  (குறள்-980)

என்பவாகலான். அற்ற மறைக்கும் பெருந்தகைமை கூறியவாறாம். நல்லிதின்-நன்றாக இயக்கும் - செலுத்தும். இனி நல்லோர் அவைக்களத்தின் இயல்பினை.

அவற்றுள்,

நல்லவை என்பது நாடுங் காலை
எத்துறை யானும் இருவரும் இயம்பும்
அத்துறை வல்லோர் அறனொடு புணர்ந்தோர்
மெய்ப்பொருள் கண்டோர் மிக்கவை ஓர்ப்போர்
கற்றவர் கல்விக் கடாவிடை அறிவோர்
செற்றமும் சினமும் சேரா மனத்தோர்
முனிவொன் றில்லோர் மூர்க்கர் அல்லோர்
இனிய முகத்தோர் இருந்துரை கேட்போர்
வேந்தன் ஒருவர்க்குப் பாங்குப் படினும்
தாந்தா மொருவர்கட் பாங்குப் படாதோர்
அன்னோர் முன்னர்க் கூறிய பொழுதில்
தொலையு மாயினும் தொலைவெனப் படாது
வெல்லு மாயினும் மிகச்சிறப் புடைத்தே  (யா-வி-ஒழிபு-3.மேற்)

என்றும்,

நிறையவை என்பது நினையுங் காலை
எல்லாப் பொருளும் தன்னகத் தடக்கி
எதிர்வரு மொழிகளை எடுத்துரைப் பதுவே  (þ)

என்றும்,

புகழுந் தருமநெறி நின்றோர்பொய் காமம்
இகழுஞ் சினஞ்செற்ற மில்லோர் - நிகழ்கலைகள்
எல்லாம் உணர்ந்தோர் இருந்த விடமன்றோ
நல்லாய் அவைக்கு நலம்  (வெண்பாப்பாட்-பொது-9)

என்றும்,

நலனடக்கம் செம்மை நடுவுநிலை ஞானம்
குலனென் றிவையுடையோர் கோதில் - புலனில்லோர்
சென்று மொழிந்தனவும் கேட்போர் செறிந்தவிடம்
அன்றோ நிறைந்த அவை  (வெண்பாப் பாட்டியல்-பொது. 10)

என்றும்,

ஆறுட் பகைசெற் றருங்கலை யோர்ந்து
பாரிற் கீர்த்தி படைத்தோர் வைகுதல்
நல்லவை அடக்கம் வாய்மை நடுநிலை
சொல்லு நன்மை யுடையோர் தொகைஇ
வல்லார் மொழியினும் வல்லுந ராக்கிக்
கேட்போர் உறையவை நிறையவை ஆகும்.  (இ-வி- 936 உரைமேற்)

என்றும் வரும் ஆன்றோர் மொழிகளான் உணர்க.

81-83 : நீரகம் ..................... இயற்கையும்

பொருள் : நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந் திறல் காரியுண்டி - கடல்சூழ்ந்த உலகு நடுங்கும்படி அச்சந்தோன்றும் கடிய வலியையுடைய நஞ்சை ஊணாக உடைய, பேரிசை நவிரம் மேஎய் உறையும் - பெரிய புகழினையுடைய நவிரம் என்னும் மலையைப் பொருந்தியிருக்கும், கடவுளது இயற்கையும் - இறைவனது இயல்பும்;

கருத்துரை : கடல் சூழ்ந்த உலகம் நடுங்குமாறு அச்சத்தைத் தோற்றுவித்த கடிய வலியையுடைய நஞ்சை உண்டருளியவனும், பெரிய புகழை யுடையவனும், நவிரம் என்னும் மலையிற் பொருந்தி வீற்றிருப்பவனுமாகிய முழுமுதற் கடவுளின் இயல்பும் (கூறுவல்) என்பதாம்.

அகலவுரை : நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல் என்னுந்துணையும் காரிக்கு அடையாக்குக. காரி - நஞ்சு. அஃதாவது, வானோர்கள் அமிழ்தம் பெறுவான் வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கிப் பண்டொருநாட் கடல் வயிறு கலக்கினராக, நாணாகிய வாசுகி என்னும் பெரும்பாம்பு, வருத்தம் பொறாதே, தன் மிடற்று நஞ்சினை அமிழ்து திரள் போழ்து, அப் பாற்கடலிடைக் கான்றது. அந்நஞ்சுதான் எல்லா வுலகினையும் எரித்தழிக்கத் தொடங்குதல் கண்ட அமரர் முதலியோர் அஞ்சினராய்ச் செஞ்சடைக் கடவுள் திருவடிக்கண் புகல் புக, அக்கடவுள் அந் நஞ்சினை எஞ்சாது வாரி உண்டருள, அஃது அப்பெருமான் கழுத்திடைக் கருநிறம் காட்டி ஆண்டே உறைந்து புகழ்பெற்றதென்பது; இதனை,

கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை
மறைநவில் அந்தணர் நவிலவும் படுமே  (1:5-6)

என்னும் புறப்பாட்டானும் உணர்க. கடவுளின் பெருமைதோன்ற அவரருட் செயல்களுள் ஒன்றனைக் குறிப்பாக எடுத்துக் காட்டினார். இனி, நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல் என்றதற்குச் சடையகத்தே கங்கை துளும்புதலுடையானும் கடிய ஆற்றல் உடையானும் எனப்பொருள் கூறிக் கடவுளுக்கே அடைகளாக்கினுமாம். இப் பொருட்குக் கடுந்திறல் என்றதனை முடிவிலாற்றலுடைமை என்னும் கடவுட் பண்பு கூறியதாகக் கொள்க. நவிரம் - ஒரு மலை: இம்மலை இக் காலத்தே திரிசூலகிரி எனவும் பருவதமலை எனவும் வழங்கப்படுகின்ற தென்றும் ஆண்டுள்ள கடவுள் காளகண்டேசுவரர் என வழங்கப்படுகின்றனர் என்றும் இது திருவண்ணாமலைக்கு வடமேற்கில் உளதென்றும் கூறுப. மேஎய் உறையும் பொருந்தி இருந்தருளும்; அஃதாவது, தன் திருவருள் விளங்க வீற்றிருக்கும் என்றவாறு.

84-85 : பாயிருள் ................ சிறப்பும்

பொருள் : பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும் - பரந்த இருள் நீங்கும்படி பகற்பொழுதைச் செய்து தோன்றும், ஞாயிறன்ன அவன் வசையில் சிறப்பும் - ஞாயிற்றை ஒத்த அவனுடைய குற்றமில்லாத தலைமையும்;

கருத்துரை : உலகத்தை விழுங்கிய பேரிருளை அகற்றித் தனது பேரொளியாலே பகற்பொழுதை உண்டாக்கித் தோன்றும் ஞாயிற்றை ஒத்த அவன் குற்றமற்ற தலைமைத் தன்மையும் (கூறுவல்) என்பதாம்.

அகலவுரை : இதன்கண் அவ் வள்ளலின் அளியுந் தெறலும் கூறினார். என்னை? கதிரவன் தோன்று முன்னர் உலகம் இருளில் மூழ்கி இடருற்றுக் கிடந்தாற் போன்று நன்னன் தோன்று முன்னர் பகைவராற் பேரிடர் உற்றுக்கிடந்த குடிமக்களை, அஞ்ஞாயிறு தோன்றி இருள் அடர்த்து உயிர்களை விழிப்பூட்டித் தத்தம் வினையிடைச் செலுத்தினாற் போன்று, அந்நன்னன் தோன்றி அப் பகையடர்த்து மக்களை அச்சந் தீர்த்துத் தனது அருளாலே நன்னெறிக்கட் படர்வித்தான் என்றும் வறுமைப் பேரிருளில் மூழ்கிக் கிடந்த உலகினை வண்மைப் பேரொளி வழங்கி இடர்தீர்த்து இன்புறுத்தினான் என்றும், இருவகைப் பொருட்கும் பொதுவுற உவமை எடுத்தோதலான் என்க.

அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி.  (1-2)

எனப் பெரும்பாணாற்றுப்படையினும் ஞாயிற்றின் தெறலும் அளியுங் கூறுதல் காண்க. இனி, ஞாயிறன்ன என்று உவமை எடுத்தோதியவர் அஞ்ஞாயிற்றின் இச்சிறப்புக்களையே உடையனாதல் அன்றி, அஞ்ஞாயிற்றின்கட் கிடந்த வசை சிறிதும் தனக்கில்லான் என்பார், வசையில் சிறப்பும் என்றார். என்னை?

வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச் சொற் பொறாஅ
திடஞ்சிறி தென்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக்
கடந்தடு தானைச் சேர லாதனை
யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்
பொழுதென வரைதி புறங்கொடுத் திறத்தி
மாறி வருதி மலைமறைந் தொளித்தி
அகலிரு விசும்பி னானும்
பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே.  (8)

என்னும் புறப்பாட்டின்கண் ஞாயிற்றின்கட் கிடந்த வசைகளை வரைந்து கூறுதலான் நன்னனும், ஞாயிற்றின் அளியும் தெறலும் ஒத்து ஏனையவசை ஒவ்வான் என்பது ஆசிரியர் கருத்தாகலான் என்க.

86-89 : இகந்தன ............... வரவும்

பொருள் : இகந்தன வாயினும் தெவ்வர் தேஎம் நுகம்படக் கடந்து நூழில் ஆட்டி - தொலைவின்கண் உள்ளனவேனும் தம் பகைவர் நாடு ஆண்டும் சென்று தூசிப்படையை வலியுண்டாக வென்று கொன்று குவித்துப் பின்னர், புரைத்தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்குக் கொடைக்கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவு - உயர்ச்சியுடைய யானை அணிந்து நிற்கின்ற அணியிலே சென்று பொருத வேற்போரின் விளக்கத்தையுடைய அறிவுடையோர்க்குக் கொடுத்தற்குரிய நாடும் ஊரும் முதலியவற்றைக் கொடுத்த அவனுடைய குடியிலுள்ளோர் தோற்றரவும்;

கருத்துரை : தொலைவின்கண் உள்ளன என மடிந்திராதே பகைவர் நாட்டிற்சென்று, அவர் தம் தூசிப்படையை வெற்றியுண்டாகக் கொன்று குவித்துப் பின்னரும் அணிவகுத்து நின்ற உயரிய யானைப் படையையும் சென்று பொருத, வேல் வித்தையில் விளக்கமுடைய அறிவுடையோர்க்குக் கொடுத்தற்குரிய நாடும், ஊரும் முதலியவற்றைக் கொடுத்த அவனது மறக்குடியிலுள்ள மறவர்தம் தோற்றமும் (கூறுவல்) என்பதாம்.

அகலவுரை : இகந்தன -கடந்த; சேய்மைக் கண்ணுள்ளன என்றவாறு. இகந்தனவாயினும் என்றது, நன்னன் போர்மறவரின் ஊக்கமுடைமையைக் காட்டும் குறிப்பேதுவாய் நின்றது. தெவ்வர்- பகைவர். தெவ்வுப் பகையாகும். (தொல்-உரி-48) என்பது தொல்காப்பியச் சூத்திரம். தேஎம்-தேம் எனற்பாலது அளபெடுத்துத் தேஎம் என நின்றது; நாடு என்னும் பொருட்டு. செல்லுந் தேஎத்துக்கு உறுதுணை (சிலப்-வரந்த - 201) என்னும் இடத்தும் தேம் அப் பொருட்டாதல் காண்க.

நூழில் ஆட்டுதல்-கொன்று குவித்தல்; ஒருவற்குப் பல்படை உடைதவின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும். (புறத்-17) என்பது தொல்காப்பியம்.

அறத்திற் பிறழ அரசெறியுந் தானை
மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச்
செல்லுங்காற் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே
பல்படையர் பட்ட படி.

என்பது நூழிலாட்டிற்கு எடுத்துக்காட்டாம். புரைத்தோல்-உயர்ச்சியை உடைய யானை. உருவுட் காகும் புரையுயர் வாகும் (உரி-4) என்பது தொல்காப்பியம். வரைப்பு-அணிவகுப்பு. வேனிழல்-வேலின் கண் விளக்கம். புலவோர் என்றது, நிலையுதலில்லாத உடலை விட்டு நிலையுதலுடைய புகழை எய்த விழைவுடைய காஞ்சி சான்ற போர் மறவரைக் குறித்து நின்றது. போரின்கட் பகைவென்ற பின்னர் மறவர்கட்கு நாடும் ஊரும் பிறவும் வழங்குதன் மரபு. இதனை,

வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும்
கொல்களிறும் மாவும் கொடுத்தளித்தான் - பல்புரவி
நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப்
பன்மணிப் பூணான் படைக்கு.  (புறப்-வெ. தும்பை-2)

என்பதனானும் அறிக. தொல்லோர் என்றது; தொன்றுதொட்டு வந்த பழங்குடி மறவர் என்றவாறு. என்னை?

உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.  (குறள்-762)

என்பவாகலின், தொல்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படையுள்ளும் சிறப்புடையது தொல்படையே ஆகலான், அவன் தொல்லோர் வரவும் என்றார்.

கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தார் என்னையர் - பின்னின்று
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
எய்போற் கிடந்தான்என் ஏறு  (புறப்-வெ-வாகை.22)

என்னும் அரிய வெண்பாவான் தொல்படையின் வன்கண்மை இருந்தவாறு அறிக.

90-94 : இரைதேர்ந்து .................. கேள்

பொருள் : இரை தேர்ந்து இவரும் கொடுந்தாள் முதலையொடு - இரையைத்தேடித் திரியாநின்ற வளைந்த காலினையுடைய முதலையோடே, திரைபடக் குழிந்த கல் அகழ் கிடங்கின் - திரையுண்டாக ஆழ்ந்த கல்லை அகழ்ந்தியற்றிய கிடங்கினையும், வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி - மலையை ஒத்த உயர்ச்சியை உடைய வானைத்தீண்டும் மதிலினையும் உடைய, உரைசெல வெறுத்த அவன் மூதூர் மாலையும் கேள் - புகழ் எங்கும் பரக்கும் படி செறிந்த அவனுடைய பழைய ஊரினதியல்பும் இருக்கும் படியைக் கூறுவல் கேட்பாயாக;

கருத்துரை : இரையைத் தேடித்திரிகின்ற முதலைகளையுடையதாய் அலைகள் உண்டாகுமாறு ஆழ்ந்ததும் கல்லை அகழ்ந்தியற்றியதும் ஆகிய கிடங்கினையும், மலையை ஒத்துயர்ந்து வானைத் தீண்டா நின்ற மதிலையும், உலகெங்கும் பரவுமாறு விரிந்து செறிந்த புகழினையும் உடைய, பழைதாகிய அவன் ஊரின் இயல்பினையும் கூறுவல் நீ கேட்பாயாக, என்பதாம்.

அகலவுரை : இவருதல்-திரிதல். கொடுந்தாள் - வளைந்த கால்.

சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த வாரை சுற்றுமுற்று பாரெலாம்
போழ்ந்தமா கிடங்கிடைக் கிடந்துபொங் கிடங்கர்மா
தாழ்ந்த வங்க வாரியிற் றடுப்பொணா மதத்தினால்
ஆழ்ந்த யானை மீதெழுந் தழுந்துகின்ற போலுமே  (கம்ப-நகரப்-17)

எனப் பிறர் கூறுமாற்றானும் கிடங்கின்கண் முதலைகள் உளவாதலுணர்க. ஆழமுடைமை பேரலை எழுதற்குக் காரணமாதல் பற்றி ஆழ்தலைத் திரைபடுதற்கு ஏது வாக்கினார். குழிதல்-ஆழமுடைத்தாதல். பூமியின் ஆழத்தில் கற்களை அகழ்ந்து தோண்டிய அகழ் என்றது, அதன் திண்மையை உணர்த்தி நின்றது.

உயர்வு அகலந் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.  (குறள்-743)

என்பவாகலின் இந்நான்கின் மிகுதியும் தோன்ற வரைபுரை நிவப்பின் என்று உவமை எடுத்தோதினார். உரைசெல வெறுத்த அவன் மூதூர் என்றது நன்னனின் உயரியதொல் குடிச்சிறப்பை யாப்புறுத்தி நின்றது. வரைபுரை என்பதன்கண், புரை : உவம உருபு. இஞ்சி -மதில். மாலை - இயல்பு.

இனி, 67-ஆற்றின் அளவும் என்பது தொடங்கி. 97-கேள் என்னுந் துணையும் கிடந்த பொருளை, ஆற்றின் அளவும், புலமும் நாடுபடு வல்சியும் மலையும் சோலையும், கானமும், அவன் ஈகைமாரியும், பிணிக்கும் ஆற்றலும், நாண்மகிழ் இருக்கையும், சுற்றத்தொழுக்கமும், காரியுண்டிக் கடவுளதியற்கையும், அவன் வசையில் சிறப்பும், அவன் தொல்லோர் வரவும், அவன் மூதூர் மாலையும் இருந்தபடியை (யாம் கூறுவாம்) கேள் என இயைத்துக் கொள்க. 94-இனி வேளை நீ முன்னிய திசையே என்பது தொடங்கி, 144-முரஞ்சுகொண்டிறைஞ்சின வலங்கு சினைப்பலவே என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண் ஆற்றின்கட்படும் நன்மையின் அளவும் வீற்றுவளஞ் சுரக்கும் அவன் நாடுபடுவல்சியும் விரவக் கூறுகின்றான். ஆற்றினளவு முதல், அவன் மூதூர்மாலை ஈறாக ஈண்டுத் தொகுத்து நிறுத்த முறையானன்றி ஏற்ற பெற்றி பிறழவே கூறுகின்றார் என்க. என்னை? அக் கூத்தர் செல்லும் வழிக்கண் ஆண்டாண்டு உள்ளனவே கூறவேண்டுதலான்.

வீற்றுவளஞ்சுரக்கும் அவன் நாடுபடு வல்சி

(94 முதல் 144 வரை)

94-99 : இனி ................. இரும்புனத்து

பொருள் : இனி வேளை நீ முன்னிய திசையே - அவையிற்றில் இப்பொழுது நீ நன்னன் வேண்மானைக் கருதிச் செல்கின்ற திசைதான், மிகுவளம் பழுநிய யாணர் வைப்பின் புதுவது வந்தன்று - மிகுகின்ற செல்வம் முற்றுப்பெற்ற புதுவருவாயை யுடைய ஊர்களாலே புதிதாகிய தன்மை வந்தது, இது அதன் பண்பே - இத் தன்மைத்து அத்திசையின் பண்பு, வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது இட்டவெல்லாம் பெட்டாங்கு விளைய - மேகம் பிளந்து மின்னாகிய வடுப்படுதலோடே பெய்கையினாலே அமையாதே நிலத்தே இட்ட விதைகள் எல்லாம் இன்னவாறு விளைய வேண்டுமென்று ஆண்டுள்ளார் விரும்பினாற்போலே விளையும்படியாக, பெயலொடு வைகிய வியல்கண் இரும்புனத்து - அம் மழையோடே தங்கின அகன்ற இடங்களையுடைய பெரிய கொல்லை நிலத்தே;

கருத்துரை : ஆற்றின் அளவு முதலாக யாம் கூறியவற்றில் இப்பொழுது நீ நன்னன் வேண்மானை நாடிச் செல்லக் கருதிய திசையின் தன்மை இருந்தபடியைக் கேள். அத் திசைதான் மிகுகின்ற செல்வம் முற்றுப் பெற்ற புதுவருவாயையுடைய ஊர்களாலே புதிதாகிய தன்மை வந்தெய்தப் பெற்றது. இத்தன்மைத்து அத்திசையின் பண்பு; ஆங்கு மேகம் மின்னலோடே பெய்கையினாலே அமையாதே நிலத்தே இட்ட வித்துக்கள் எல்லாம் இன்னவாறு விளைய வேண்டுமென்று ஆண்டுள்ளார் விரும்பினாற்போலே விளையும்படியாக அம்மழையோடே தங்கின அகன்ற கொல்லை நிலத்தே என்பதாம்.

அகலவுரை : இனி-மேலே. நன்னன் வேள்மான் என்பவாகலின் வேள் என்றார். இவன் வேளிர் குலத்திற் றோன்றியவன் என்ப. முன்னுதல்-நினைத்தல். திசை-ஈண்டு வழிக்கு ஆகுபெயராய் நின்றது. எனவே, அவற்றுள் ஆற்றின் அளவு கூறுவல் கேள் என்றவாறு. திசையே என்பதன்கண் ஏகாரம் பிரிநிலை பழுநிய-முற்றுப் பெற்ற. யாணர் - புதிய வருவாய்; புதிதுபடல் பொருட்டே யாணர்க் கிளவி (உரி-81) என்பது தொல்காப்பியம். வைப்பு - ஊர். வந்தன்று - வந்தது.

வானம் - மேகத்திற்கு ஆகுபெயர். இனி வீற்றுவளஞ் சுரக்கும் அவன் நாடுபடு வல்சி கூறத் தொடங்குவான் அவையிற்றிற்குக் காரணமாய், உலகமும் அதற்குறுதியாகிய அறம்பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுகின்றான் என்க. இனி, அம் மழைவளந்தானும்,

இயல்புளிக் கோலோச்சும் மன்னவ னாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு  (குறள்-545)

என்னும் மெய்ம்மொழிபற்றி அந்நாட்டின்கண் பெயலும் விளையுளும் கூறுமாற்றான் நன்னன் வேண்மானின் செங்கோன்மையினைக் குறிப்பாலுணர்த்தினானுமாயிற்று. மின்: உகரச்சாரியை பெற்று மின்னு என நின்றது; மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அந் நாற் சொல்லும் தொழிற்பெய ரியல. (தொல்-புள்ளிமய-50) என்னும் விதியாற் கொள்க. வசிவு-பிளவு. இட்ட பெயர்: பல வறிசொல். எல்லாம் என்பது எஞ்சாமை குறித்து நின்றது. பெட்டாங்கு - உழவர் விரும்பிய படி. இதுவும் நன்னன் செங்கோன்மையைக் குறிப்பான் உணர்த்தியவாறாம். என்னை!

மழைதொழி லுதவ மாதிரங்கொழுக்கத்
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
..........................................................
உலகமாண்ட உயர்ந்தோர் மருக  (10-11-23)

என, மதுரைக்காஞ்சியின்கண் இவையிற்றிற்குச் செங்கோன்மையையே ஏதுவாக்கிக் கூறலானும் உணர்க.

முசுட்டை

100-101 : அகல் .......................... முசுண்டை

பொருள் : அகல் இருவிசும்பின் - ஏனைப் பூதங்கள் விரிதற்குக் காரணமான பெரிய வானத்தின்கண், ஆ அல்போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை - கார்த்திகையாகிய மீன்போன்று வெள்ளிதாக மலர்ந்தன புல்லிய கொடியை உடைய முசுட்டை;

கருத்துரை : முசுட்டைக் கொடி வானத்தே விளங்கும் கார்த்திகை மீன் போன்று வெள்ளிதாக மலர்ந்து விளங்கின என்பதாம்.

அகலவுரை : அகல்-இரு விசும்பு : வினைத்தொகை. நிலம் நீர் தீ வளி வெளி என்னும் ஐம்பூதங்களுள் ஏனைய நான்கு பூதங்களும் தன்பாற் றோன்றி விரிதற்கு இடமாதலின் அகலிரு விசும் பென்றார். இதனை,

மண்கடின மாய்த்தரிக்கும் வாரிகுளிர்ந் தேபதமாம்
ஒண்கனல்சுட் டொன்றுவிக்கும் ஓவாமல் - வண்கால்
பரந்துசலித் துத்திரட்டும் பார்க்கில்ஆ காயம்
நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து.  (உண்மை விள-9)

என்னும் அளவை நூலான் அறிக. ஆஅல் : ஆரல் என்பதன் இடைக்குறை. ஆரல் - கார்த்திகை விண்மீன். மறுவரும் ஆரல் ஆகும் மாதர்மூ விருவர் தாமும், (கந்தபு. திருவவ-116) எனப் பிறர் கூறுமாற்றானும் ஆரல் அப்பொருட்டாதலறிக.

எள்

102-106 : நீலத்தன்ன ....................... பல்கவரீரெண்

பொருள் : நீலத்தன்ன விதைப் புனம் மருங்கின் - தோடுகள் நீலமணியை ஒத்த நிறத்தையுடையவாய் எழும்படி அவையிற்றை விதைத்த கொல்லையின் பக்கத்தே, மகுளி பாயாது - அரக்குப் பாயாமல், மலிதுளி தழாலின் அகளத்தன்ன நிறைசுனைப் புறவில் -மிக்க மழைத்துளியைத் தழுவுகையாலே நீர்ச் சாலை ஒத்து நிறைந்த சுனைகளையுடைய காட்டிடத்தே, கௌவை போகிய கருங்காய் - இளங்காயான தன்மைபோன கரிய காய்கள், பிடி ஏழ் நெய்கொள ஒழுகின பல்கவர் ஈர்எண் - ஒருபிடியிலே ஏழுகாயாக நெய் உள்ளே கொள்ளும்படியாக வளர்ந்தன பலவாகக் கிளைத்த பசிய எள்;

கருத்துரை : பலவாகக் கிளைத்த பசிய எள் தம் தோடுகள் நீலமணி போன்ற நிறமுடையனவாய் வளம்பட வேண்டும் என்று கருதி விதைக்கப்பட்டவை, விதைக்கப்பட்ட கொல்லையின் பக்கத்தே மிக்க மழைத் துளியைத் தழுவி நீர்ச்சால் போல் நிறைந்த சுனைகளையுடைய காட்டின் கண் இளங்காயான தன்மைபோய் அரக்குப் பாயாமல் ஒரு பிடியின் கண் எழு காயாக நெய்மிக்கனவாய் வளர்ந்தன என்பதாம்.

அகலவுரை : நீலம்-நீலமணி - மகுளி எள்ளின்கட் டோன்றும் ஒருநோய் இந்நோய் விழுந்த எள்ளின் நெய் கைப்புடையதாம் என்ப. மழை நீரை ஏற்று நிறைந்த சுனைகட்கு நீர்ச்சால் உவமை. கௌவை-எள்ளின் இளங்காய். இதனை சிறுதினை கொய்யக் கௌவை கறுப்ப (271) என்னும் மதுரைக் காஞ்சியானும் உணர்க. பிடியேழ் நெய்கொள் என்றது. ஒருபிடியளவிற்றாய தண்டில் ஏழ்காய் உடையனவாக நெய்மிக்கு என்றவாறு. இனி, ஒரு கைப்பிடியின்கண் ஏழு காய்களே அடங்கு மளவினவாகப் பருத்து எனினுமாம். ஈர்எண்-பசிய எள்.

தினை, அவரை, வரகு

107-113 : பொய்பொரு ........... வரகே

பொருள் : பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப - தம்மில் விளையாட்டின் பொருட்டுப் பொய்யாகப் போர்புரிகின்ற யானைக்கன்றுகளின் ஒன்றோடொன்று சேர்ந்த கைகளை ஒப்ப, குலவுக் குரல் ஏனல்-பிணையும் கதிர்களையுடைய தினை, கொய்பதம் உற்றன - அறுக்கும் செவ்வியாக முற்றாநின்றன, விளைதயிர்ப் பிதிர்வின் வீ உக்கு - தயிரினது பிதிர்ச்சிபோலும் தம் பூக்களை உதிரச்செய்து, இருவிதொறும் குளிர் புரை கொடுங்காய் கொண்டன அவரை - தினையரி தாள்தோறும் அரிவாளை ஒக்கும் வளைந்த காயைக் கொண்டு திகழ்ந்தன அவரை, மேதியன்ன கல்பிறங்கு இயவின் - எருமை கிடந்தாற் போன்ற கற்கள் பெருத்த வழியிடத்திலே, வாதி கை அன்ன கவைக் கதிர் இறைஞ்சி - தருக்கங் கூறுகின்றவன் கையிடத்து இணைந்த விரல்களை ஒத்த கவர்த்த கதிர்கள் முற்றி வளைந்து, இரும்பு கவர்வுற்றன பெரும்புன வரகு ஏ-அரிவாளாலே அரிதலுற்றன பெரிய புனத்தின்கண் வரகுகள்;

கருத்துரை : விளையாட்டாகப் பொய்ப் போர் நிகழ்த்தும் யானைக் கன்றுகளின் கைகளைப் போன்று ஒன்றோடொன்று பிணைந்து தோன்றும் கதிர்களையுடைய தினைகள் கொய்து கொள்ளும் செவ்வியை உடையவாயின. தயிர் சிதறிக் கிடந்தாற்போன்று தம் மலர்களை உதிர்த்த அவரைகள் தினையரிந்த தாள்கள்தோறும் அரிவாளைப் போன்ற காய்களை உடையவாயின. எருமை கிடந்தாற் போன்று கற்கள் கிடக்கும் வழியின்கண் தருக்கங் கூறுவான் கைவிரல் இணைந்தாற் போன்று இணைந்த கவர்த்த கதிர்கள் முற்றி அறுக்கப்படுகின்றன பெரிய புனத்தின்கண் வரகுகள் என்பதாம்.

அகலவுரை : பொய்பொரு கயமுனி முயங்கு கைகடுப்பக் கொய்பதம் உற்றன குலவுக்குரல் ஏனல் என்றதனோடு,

நெற்கொள் நெடுவெதிர்க்கு அணந்த யானை
முத்தார் மருப்பின் இறங்குகை கடுப்பத்
துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
நற்கோட் சிறுதினை.  (35-38)

என்னும் குறிஞ்சிப்பாட்டின் பகுதியை ஒப்புநோக்குக.

தினையின் கதிர்கட்கு பூம்பொறி யொருத்தல் ஏந்துகை கடுப்பத் தோடுதலை வாங்கிய நீடுகுரற் பைந்தினை. (நற்றிணை. 317-2-3) என்றும், ஏனல் இரும்பிடித் தடக்கையிற் றடைஇய பெரும்புனம் (நற்றிணை 344 : 2-3) என்றும், முறஞ்செவி யானைத் தடக்கையிற் றடைஇ இறைஞ்சிய குரல பைந்தாட் செந்தினை (நற்றிணை - 376-1,2) என்றும், பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல் (குறுந் - 360-5) என்றும் பிற சான்றோரும் யானைக்கையை உவமை கூறுதல் காண்க. கயமுனி - யானைக்கன்று மடநடையாமான் கயமுனிக் குழவி (500) என இவ்வாசிரியரே மீண்டும் ஓதுதல் காண்க. கறையடித் தொகை பிரிதலும் கயமுனி கவர்ந்து, (நகர்பு-99) என்னும் கந்தபுராணச் செய்யுளானும் அஃதப்பொருட்டாதல் உணர்க. பிதிர்வு - சிதறுண்டல். அவரையின் வெண்ணிற மலர் உதிர்ந்து கிடத்தல் தயிர் சிதறிக் கிடத்தலைப் போன்று தோன்றிற் றென்க. வீ-பூ. உக்கு - உதிர்ந்து. தினையரிந்த தாளின்மேல் அவரை படர்ந்து காய்த்தலுண்டென்பதனை, பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற், கொழுங்கொடி அவரை பூக்கும், (12: 4-5) என்னும் குறுந்தொகையானும், சிறுதினை கொய்த இருவி வெண்காற் காய்த்த அவரை (286: 1-2) என்னும் ஐங்குறு நூற்றானும் அறிக.

இருவி - தினையின் கதிரைக் கொய்துவிட்ட தாள். குளிர் - அரிவாள்; கிளிகடி கருவி எனினுமாம். கொடுங்காய் -வளைந்த காய். மேதி - எருமை. இது காட்டிடத்தே கிடக்கும் கருங்கற்களுக்கு உவமை. எருமையன்ன கருங்கல் (புறநா-5-1) எனப் பிறரும் கூறுதலறிக. இயவு - வழி; இடிச்சுர நிவப்பின் இயவு (20) என இந்நூலில் முன்னும் இச் சொல் வந்துள்ளது. பிறங்கு - பருத்த. வாதி - அவையிடத்தே தருக்க மெடுத்துரைத்து வாது செய்வோன். வாதிடுவோன் பேசுங்கால் தன் கைவிரல்களைக் குவித்து உயர்த்திப் பேசுதல் காண்டுமன்றே; அவ்வாதியின் விரல் இணைந்தாற் போன்று இணைந்துள்ள வரகின் கதிர் என்றவாறு. கவைக்கதிர் - பிளவுடைய கதிர். இரும்பு - அரிவாள். ஐவனநெல், வெண்ணெல், கரும்பு, தோரை, ஐயவி, நெய்தல், இஞ்சி, கவலைக் கிழங்கு, வாழை, பெருமூங்கில்நெல், நாவற்கனி, உயவைக்கொடி, கூவைக் கிழங்கு, தேமாங்கனி, ஆசினிப்பலாக்கனி, பலாக்கனி.

114-144 : பால்வார்பு ...................... சினைப்பலவே

பொருள் : பால் வார்பு கெழீஇப் பல்கவர் வளி போழ்பு வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் - பால்கட்டிச் சிறிது முற்றிப் பலவாய்க் கவர்த்த காற்று ஊடறுக்கப்பட்டு நன்றாக விளைந்தன ஐவன நெல்லும் வெண்ணெல்லும், வேலீண்டு தொழுதி இரிவுற் றென்னக் காலுறு துவைப்பிற் கவிழ் கனைத்து இறைஞ்சி - வேற்படை திரண்ட தானை கெட்டுப் போதலை உற்ற தென்னும்படி காற்று மிகப் படுகின்ற ஆரவாரத்தாலே கவிழ்ந்து ஒலிபடச் சாய்ந்து, குறை அறை வாரா நிவப்பின் - குறைந்து போதலும் அற்றொழிதலும் உண்டாகாத வளர்ச்சியோடே, அறையுற்று ஆலைக்கு அலமரும் தீங் கழைக் கரும்பே - வெட்டுதலுற்று ஆலையிலே சென்று பயன்படுதற்கு அசையாநிற்கும் இனிய கோலாகிய கரும்பு, புயல் புனிறு போகிய பூமலி புறவின் அவல் பதம் கொண்டன அம் பொதித் தோரை - மழையால் ஈன்றணிமை தீர்ந்து முற்றியவாய்ப் பூக்கள் மிக்க காட்டிடத்தே அவலிடிக்கும் செவ்வியைக் கொண்டன அழகிய குலையினை யுடைய மூங்கில்நெல், தொய்யாது வித்திய துளர்படு துடவை ஐயவி அமன்ற - உழாது விதைக்கப்பட்டுப் பின்னர்க் களைக் கொட்டால் அடிவரைந்து கொத்தும் தோட்டங்களிலே வெண்சிறு கடுகு செறிந்து விளைந்தன, வெண் கால் செறுவில் மையென விரிந்தன நீள் நறு நெய்தல் - வெள்ளிய நெல்லரி தாளை யுடைய வயல்களிலே கருமைதான் வடிவு கொண்ட தென்னும்படியாக நீண்ட நறிய நெய்தல் மலர்ந்தன, செய்யாப்பாவை வளர்ந்து கவின்முற்றிக் காயம் கொண்டன இஞ்சி - ஒருவராற் பண்ணப்படாத பாவைகள் வளரப்பட்டு அழகு முதிர்ந்து உறைப்பைக் கொண்டன இஞ்சிமுதல், மாஇருந்து வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும் விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை - முற்றி மாவாந்தன்மை தம்மிடத்தே உளவாய் வலிய பிடியின் முழந்தாளை ஒக்கும்படி குழிகடோறும் சீரிதாகக் கீழே வளர்ந்தன கொழுவிய கொடியை உடைய கவலைகள், காழ் மண்டு எஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென - காம்பிலே தைத்த வேல் யானையைக் குத்திற்று என்னும்படி, ஊழ் மலர் ஒழிமுகை உயர்முகந் தோயத் துறுகல் சுற்றிய சோலை வாழை - முறைப்பட மலர்தலை ஒழிந்த முகைகளினுடைய உயர்ந்த முகங்கள் சென்று தீண்டும்படியாக நெருங்கின மலைகளைச் சூழ்ந்து நின்ற சோலையாகிய வாழைகள், இறுகு குலை முருகப் பழுத்த பயம் புக்கு ஊழுற்று அலமரும் உந்தூழ் - காய் நெருங்கின குலை மிகவும் நெகிழும்படி பழுத்தனவாய் முற்றுதலுற்றுப் பயன்படும் தன்மையிலே புகுந்து அசையும் பெருமூங்கில் நெல், அகல் அறைக் காலமன்றியும் மரம் பயன் கொடுத்தலில் காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல் - அகன்ற பாறையின் கண் காலத்தானன்றியும் நிலச் சிறப்பானே ஆண்டுள்ள மரங்கள் தாம் பயனைக் கொடுத்தலான் காற்றாலே தம் கரிய கனிகள் உதிரப்பெற்றன நாவன் மரங்கள், மாறுகொள ஒழுகின ஊறுநீர் உயவை - நீரோடே மாறுகொள்ளுமாறு படர்ந்தன விடாய்க் காலத்தே உண்டார்வாய் நீர் ஊறுதற்குக் காரணமான உயவைக் கொடி, நூறொடு குழீஇயன கூவை - நீராந் தன்மையோடே முற்றித் திரண்டன கூவைக்கிழங்கு, சேறு சிறந்து உண்ணுநர்த் தடுத்தன தேமா - தம்பழத்தின்கட் சாறுமிக்கு உண்பாரை வேறொன்றிற் செல்ல வொட்டாமல் தடுத்துக் கொண்டன தேமா மரங்கள், புண்ணரிந்து அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி - புண்ணும்படி வெடித்துத் தம் பழத்தின் உள்ளே உள்ள விதைகள் சிந்தப் பெற்றன நெடிய அடியையுடைய ஆசினிப் பலாமரங்கள், விரல் ஊன்று படுகண் ஆகுளி கடுப்பக் குடிஞை இரட்டும் நெடுமலை அடுக்கத்து - விரல் தீண்டுகின்ற முழங்குங் கண்ணையுடைய சிறுபறையை ஒக்கப் பேராந்தைப் பேடும் சேவலும் மாறிக் கூப்பிடும் நெடிய மலைப்பக்கத்தே, கீழும் மேலும் கார்வாய்த்து எதிரி- கீழும் மேலும் மழைவளம் வாய்க்கப் பெற்றமையால் அதனை ஏற்றுக்கொண்டு, சுரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி - வழி போகின்ற கூத்தருடைய மத்தளங்கள் தூங்குமாறு போலத் தூங்கி, முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினைப் பலவே - முற்றுதல் கொண்டு தாழ்ந்தன அசைகின்ற கொம்பினையுடைய பலாமரங்கள்.

கருத்துரை : ஐவன நெல்லும் வெண்ணெல்லும் பால்கட்டிச் சிறிது முற்றிப் பலவாய்க் கவர்த்த காற்று ஊடறுக்கப்பட்டு நன்றாக விளைந்தன. கரும்பு வேற்படை திரண்ட தானை புறமிட்டாற்போன்று காற்றுமிக்கு வீசுகின்ற ஆரவாரத்தாலே கவிழ்ந்து ஒலிபடச் சாய்ந்து குறைதலும் அற்றொழிதலும் இன்றி வளர்ந்து வெட்டுண்டு ஆலையிற் சென்று பயன்படுதற்கு அசையாநின்றன. மூங்கில்நெல் மழையால் ஈன்றணிமை தீர்ந்து பூக்கள் முற்றினவாய் மிக்க காட்டிடத்தே அவலிடிக்கும் செவ்வியைக் கொண்டன. வெண்சிறு கடுகு உழாதே விதைக்கப்பட்டுக் களைக்கொட்டால் அடிவரைந்து கொத்தப்பட்ட தோட்டங்களில் நெருங்கி விளைந்தன. நீண்ட நறிய நெய்தல் வெள்ளிய நெல்லரிதாள் நின்ற கழனிகளிடத்தே கருமை உருக்கொண்டாற் போன்று மலர்ந்தன. இஞ்சி ஒருவராற் பண்ணப்படாத பாவை வளரப்பெற்று அழகு முதிர்ந்து உறைப்பைக்கொண்டன. கவலைமாவாந் தன்மைபெற்றுப் பிடியானையின் முழந்தாளை ஒக்கும்படி குழிகடோறும் சிரிதாகக் கீழே வளர்ந்தன. மலைகளைச் சூழ்ந்த சோலையாகிய வாழை முறைப்பட மலர் தலை ஒழிந்த முகைகளை யுடையனவாய் வேல் யானையைக் குத்தினாற் போன்று தம்முகை துறுகல்லைப் பொருந்துமாறு நெருங்கின. பெருமூங்கிலின் நெல்காய் நெருங்கின குலை மிகவும் நெருங்கும்படி பழுத்தனவாய் முற்றுதலுற்றுப் பயன்படும் தன்மையிலே புகுந்து அசையாநின்றன. அகன்ற பாறையின்கண் நாவல்மரங்கள் காலமன்றியும் நில நலத்தாற் கனிந்த கரிய கனிகளை உதிர்த்தன. உண்டார் வாயின்கண் நீர் மிக்கு ஊறும் இயல்புடைய உயவைக் கொடி நீரோடே மாறுபட்டுப் படர்ந்தன. கூவைக் கிழங்குகள் நீராந் தன்மையோடே முற்றித் திரண்டன. தேமா மரங்கள் தம் பழத்தின்கண் இனிய சாறு மிகப் பெற்று அவையிற்றை உண்ணுவோர் பிறவற்றை நாடாதவாறு தடுத்துக் கொண்டன. ஆசினிப் பலா தம் பழங்கள் புண்ணாக வெடிக்கப் பெற்று விதைகள் சிதறி நின்றன. விரல் தீண்டுகின்ற கண்ணையுடைய சிறுபறை போன்று பேராந்தைப் பேடும் சேவலும் ஒன்றை ஒன்று மாறிக் கூப்பிடுகின்ற நெடிய மலைப் பக்கத்தே அசைகின்ற கொம்பினையுடைய பலாக்கள் மலைவளம் மிக்கமையால் அதனையேற்று வழிப் போகின்ற கூத்தருடைய மத்தளங்கள் தூங்குதல் போல் கீழும் மேலும் காய் முற்றித் தூங்கப் பெற்றன என்பதாம்.

அகலவுரை : நெல்லின்கண் அரிசி முதிர்தற்கு முன்னர்ப் பால் உருவத்தே இருத்தல் இயல்பு. இப்பால் மிகுதியாக இருந்தால் நெல் பருத்திருக்கும். ஆதலின், பால் மிக்குப் பருத்த நெல்லென்பார் பால் வார்பு என்றார். நெற்கள் நன்கு பருத்து முதிர்தற்கு நல்ல காற்று இன்றியமையாதலின் நான்கு திசைக் காற்றுக்களும் ஊடறுத்து வீசப் பெற்றமையால் நன்றாக விளைந்தன எனக் காற்றின் இயக்கத்தை ஏதுவாக்கி உரைத்தார். இக்காலத்தே உழவுத் தொழிலாளர்க்கு அறிவுரை கூறும் அரசியலார் பயிர்களின் ஊடே காற்று நன்கு புக்கியங்கும்படி நடுகை செய்யுமாறு அறிவுறுத்துதல் காண்க. இத்தகைய நுண்ணறிவு பண்டைத் தமிழர் படைத்திருந்தமை இதனாற் புலனாம்.

வாலிதின் என்றது, ஈண்டு நன்மை குறித்து நின்றது பல்கவர் வளி - பலதிசைகளிலும் மாறிமாறி இயங்கும் காற்று. போழ்தல் - ஊடறுத்தல். ஐவனம் வெண்ணெல் என்பன மலைநெல்லின் வகைகள் என்க. செழித்தோங்கிய கருப்பஞ்சோலை பெரிய காற்று வீசும் பொழுது ஒரு திசையிற் கவிழ்ந்து சாய்தற்குப் புறமிட்டோடும் வேற்படையை உடைய தானை உவமை. இவ்வுவமையின் நுணுக்கமறிந்து மகிழ்க. தொழுதி - கூட்டம்; ஈண்டு வேலாட்படை. இரிவுற்றென - கெட்டாற் போல. கால்-காற்று. துவைப்பு - மோதுதல். கனைத்தல்-ஒலித்தல். இறைஞ்சி-சாய்ந்து.

குறை - நட்ட கரும்புகள் வளம்பட வளராது தேய்ந்திருத்தல். அறை-நட்ட கரும்புகள் உயிரற்று அழிதல். இங்ஙனம் கூறாது, ஆசிரியர் நச்சினார்க்கினியர் அறைகுறை என மாறி, பாத்தி குறைபடுதல் உண்டாகாத எனப் பொருள் கூறினர். குறையறை வாரா நிவப்பின் என்றது குறைந்து தேய்தலும் அழிந்தொழிதலும் உண்டாகாது நட்ட கரும்பெல்லாம் வளம்பட ஓங்கி வளர்ந்து என்றவாறு. தித்தித்தலும் கழியாதலும் உடைமையின் தீங்கழைக் கரும் பென்றார். கழை-கோல்; ஒருவகைக் கரும்பென்பாரும் உளர். அறையுறுதல்-வெட்டுண்ணல். ஆலை - கரும்பினைச் சாறுபிழியும் ஒருவகைப் பொறி. ஆலைக்கு அலமரும் என்றது, ஆலையிலிட்டுப் பயன்கொள்ளத் தகுந்த செவ்வியுடையவாயின என்றவாறு.

இனி, கரும்பின் வேல்போல் வெண்முகை, (நற்றிணை. 366: 7-8) எனவும், தோடுகொள் வேலின் தோற்றம் போல, வாடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும் (புறநா.35:9-10) எனவும் பிறரும் கரும்பிற்கு வேலினை உவமை கூறுதலறிக. புயல் புனிறு - புயல் பெய்தமையால் உண்டாய இளமை. புனிறு - ஈன்றணிமை; ஈண்டு இளமை குறித்து நின்றது. அவற்பதம் - அவலிடித்தற்குரிய செவ்வி. பொதி : ஈண்டுக் குலைக்கு ஆகுபெயர். தோரை - மூங்கில்நெல். தொய்யாது - உழாமல். தொய்யில் என்பது சேறு என்னும் பொருளும் உடையதாகலின் தொய்யாது என்பதற்குச் சேறு செய்யாது எனினுமாம். ஐயவி - வெண் சிறுகடுகு. வெண்சிறு கடுகினை உழாது வித்திப் பின்னர்க் களைக்கொட்டால் கொத்துதல் உண்மையின் தொய்யாது வித்திய துளர்படு துடவை என்றார். துளர்தல்-கிளறுதல். தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை (201)என்றார் பெரும்பாணாற்றுப் படையினும். அமன்ற - நெருங்கின. வெண்காற் செறுவின் மையென விரிந்தன நீள் நறு நெய்தல் என்றது, நெல் அரியப்பெற்று வெண்மையாக நின்ற தாள்களையுடைய கழனிகளில் கருமைபோன்று நெய்தல் மலர்ந்தன என்றவாறு. இது நிலவளம் கூறியவாறு. என்னை?

கண்ணெனக் குவளையும் கட்ட லோம்பினார்
வண்ணவாண் முகமென மரையி னுள்புகார்
பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்
தண்வயல் உழுநர்தம் தன்மை யின்னதே  (51)

எனச் சிந்தாமணியினும்,

குறுநர் இட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை  (10:86-7)

எனச் சிலப்பதிகாரத்தும், தண்பணை நாட்டுக் கழனிகளில் நெய்தல் முதலியன உண்மை கூறலான் அறிக.

ஆசிரியர் நச்சினார்க்கினியர் 123 ஆம் அடிக்கட் கிடந்த இத்தொடரைப் பிரித்தெடுத்து 114 ஆம் அடிக்கட் போந்த பால்வார்பு என்பதனோடு கூட்டினர். இஞ்சிக் கிழங்கினைப் பாவை என்றல் வழக்காகலின் செய்யாப் பாவை என்றார். காயம் - உறைப்பென்னும் சுவை. காயம் கொண்டன என்றது நன்கு முதிர்ந்தன என்றவாறு. உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்தடினும் (நாலடி - 116) என்புழியும் காயம் அப்பொருட்டாதல் அறிக.

மாஇருந்து - மாவாந்தன்மை தம்பால் உளவாகப் பெற்று என்றது, நன்கு முதிர்ந்து என்றவாறு. வயவுப்பிடி - வலிமையுடைய பெண்யானை. வய வலியாகும் (உரி-68) என்பது தொல்காப்பியச் சூத்திரம். விழுமிதின் - சீரிதாக; சிறப்புடையதாக. விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்-உரி-55) என்பது சூத்திரம். பெண்யானையின் முழங்கால் சீரிதாகப் பருத்த கவலைக் கிழங்கிற்கு உவமை என்க. கவலை கிழங்குடைய ஒருவகைக்கொடி. இதனைக் காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும், (காடு -82) என்னும் சிலப்பதிகாரத்தானும் உணர்க. காழ்-கழி; வேலினைத் தைத்த காம்பு. வாழையின் முகை துறுகல்லைத் தீண்டுதல் யானையின் முகத்தே வேல் பாய்ந்திருத்தலை ஒக்கும் என்க. இறுகு குலை-நெருங்கிய குலை உந்தூழ் - பெருமூங்கில். அகலறை - அகன்ற கற்பாறை உயர் மரங்கள் எல்லாம் பருவத்தாலன்றிப் பழாவாயினும் இந்நிலம் மிக்க நலனுடையதாகலின் ஈண்டுள்ள மரங்கள் பருவமன்றியும் பழுப்பன வாயின என்பார் காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின் என்றார். காலமன்றியும் மரம்பயம் பகரும், யாணர் அறாஅ வியன்மலை, (புறநா-116:13-14) எனவும், பருவமன்றியும் பயன்கொடுப் பறாஅப், பலவு மாவும் குலைவளர் வாழையும், இருங்கனி நாவலும் இளமாதுளமும். (பெருங்-2:20:61-2) எனவும் பிற சான்றோரும் கூறுதலுணர்க. காலின் உதிர்ந்தன - காற்றால் உதிர்வன வாயின.

உயவை - ஒருவகைக்கொடி. நீர் வேட்கைமிக்கார் இதன் முதலை வாயிலிட்டு மென்றால் அவர் நாவில் நீரூறுமென்பவாகலின் ஊறுநீர் உயவை என்றார். மாறுகொள - என்றது நீருடனே மாறுபட்டு என்றவாறு. ஒழுகின - படர்ந்தன. கூவை - ஒருவகைக் கிழங்குடைய கொடி. நூறு-நீறு. சேறு - மாங்கனியின்கட் சாறு; தமது சுவை மிகுதியினால் தம்மை உண்பார் பிறகனிகளை விரும்பாதவாறு தடைசெய்யும் தன்மையன என்பார், உண்ணுநர்த் தடுத்தன தேமா என்றார். அரலை - ஈண்டுப் பலாவின் விதை. மிகக் கனிந்து விதைகள் உதிரப் பெற்றன என்பார் புண்ணரிந்து அரலையுக்கன என்றார். கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந்தூறலின் (212) எனப் பிறாண்டும் இவ்வாசிரியர் ஓதுதல் காண்க. பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் (பதிற்-61-1) என்றார் பிறரும். ஆசினி - பலாவகையின் ஒன்று. குடிஞை - பேராந்தை. இரட்டுதலாவது பேடும் சேவலும் தம்முள் மாறிமாறிக் கூவுதல். பேராந்தையின் கூவொலிக்குச் சிறுபறையின் ஓசை உவமை. கீழும் மேலும் முழவிற் றூங்கின எனக் கூட்டுக. பலா அடிமரத்தினும் கிளைகளினும் காய்த்தல் உண்மையின் கீழும் மேலும் தூங்கி என்றார்.

இனி 94 ஆம் அடிமுதல் 144 ஆம் அடியிறுதியாகப் போந்த பொருளை வருமாறு இயைத்துக் கொள்க; அது;

வேளை நீ முன்னிய திசைதான் யாணர் வைப்பிற் புதுவது வந்தது; இது அதன் பண்பு. வானம் பொழிய, இட்டவெல்லாம் விளையப் பெயலொடு வைகிய புனத்து, ஆரல்போல் விரிந்தன முசுண்டை, புறவில், நெய்கொள ஒழுகின எண். கொய்பதமுற்றன ஏனல். கொடுங்காய் கொண்டன அவரை. இயவின் இரும்பு கவர்வுற்றன வரகு. விளைந்தன ஐவனம், வெண்ணெல். அறையுற்று ஆலைக்கு அலமரும் கரும்பு. அவற்பதற்கொண்டன தோரை. துடவை ஐயவி அமன்ற. செறுவில் விரிந்தன நெய்தல். பாவை முற்றிக் காயம் கொண்டன இஞ்சி. விழுமிதின் வீழ்ந்தன சுவலை. துறுகல் சுற்றிய வாழை. அலமரும் உந்தூழ் கருங்கனி உதிர்ந்தன நாவல். ஒழுகின உயவை. தடுத்தன தேமா. உக்கன ஆசினி. அடுக்கத்து முரஞ்சு கொண்டிறைஞ்சின பலா என்பதாம்.

இனி, 145, தீயின் அன்ன ஒண்செங் காந்தள் என்பது தொடங்கி, 192. நில நாடு படர்மின் என்னுந் துணையும் ஒருதொடர்; இதன்கண்: அசையும் நற்புலமும் வல்சியும் விரவக் கூறுமாற்றான், கானவர் சிறுகுடிச் சிறப்பும், ஆங்குக் கூத்தர் பெறும் உணவும், பாக்கம் எய்தின் கூத்தர் பெறுவனவும், குறமகள் சோறு சமைக்கும் சிறப்பும், அவ்விடங்களின் சிறப்பும், பிறவும் கூறப்படும்.

அசையும் நற்புலமும், கூத்தர் பெறும் வல்சியும் கானவர் சிறுகுடியும்

145-157 : தீயின் .................. பெறுகுவிர்

பொருள் : தீயின் அன்ன ஒண் செங்காந்தள் தூவல் கலித்த புதுமுகை ஊன் செந்து - நெருப்பினை ஒத்த ஒள்ளிய செங்காந்தளினது மழையாலே செருக்கி வளர்ந்த புதிய முகையைத் தசையாகக் கருதி, அறியாது எடுத்த புன்புறச் சேவல் ஊன் அன்மையின் உண்ணாது உகுத்தென - முகை என்று அறியாதே எடுத்த புற்கென்ற முதுகினையுடைய பருந்து தசையல்லாமையான் உண்ணாமல் அவையிற்றைச் சிந்திப்போகட்டதாக, நெருப்பின் அன்ன பல்லிதழ் தாஅய் வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும் - நெருப்பினை ஒத்த பலஇதழ்கள் பரந்து வெறியாடுகின்ற களத்தை ஒக்கும் அகன்ற பாறைகள்தோறும், மணஇல் கமழும் மாமலைச் சாரல் - மணம் செய்த மனைபோல மணக்கும் பெரிய மலைப்பக்கத்தே உள்ள, தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் - தேனினை உடையராய்க் கிழங்கினையுடையராய்த் தசை நிறைந்த கடகத்தையுடையராய், சிறுகண் பன்றி பழுதுளி போக்கி - சிறிய கண்ணையுடைய பன்றியிற் பழுதானவற்றைப் போக்கி அதன் தசையையும், பொருது தொலை யானைக்கோடு சீராகத் தூவொடு மலிந்த காயகானவர் - தம்மிற் போர்செய்து பட்ட யானையினது கொம்புகளைக் காவுமரமாக மற்றுமுள்ள தசைகளோடே நிறைந்த வட்டிகளையும் காவிக்கொண்டு வந்த கானவருடைய, செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே - வளவிய பலவாகிய புது வருவாயினையுடைய சிறிய ஊரிலே தங்கினால், இரும் பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர் - கரிய பெரிய சுற்றத்தோடே அவ்வுணவுகளை மிகப் பெறாநிற்பீர்.

கருத்துரை : நெருப்பினை ஒத்த செங்காந்தளினது மழையாலே செருக்கி வளர்ந்த புதிய மொட்டினை ஊன் என்று கருதி அறியாதே எடுத்த புன்புறப் பருந்து அவை ஊனன்மை கண்டு எறிந்து போகட்டதாக; தீயை ஒத்த அம் முகையின் இதழ்கள் சிதறிக் கிடத்தலானே வெறியாட்டயர்ந்த களம்போன்று தோன்றும் அகன்ற பாறையிடமெல்லாம் மணம் நிகழப்பெற்ற இல்லம்போன்று மணக்கும் பெரிய மலைச் சாரலிலே உள்ளனவும், தேன் முதலியவற்றை உடையராய்ச் சிறுகண் பன்றியினது தசையில் பழுதுற்ற தசையைப்போக்கி எஞ்சிய தசையினையும் மற்றுமுள்ள தசைகள் நிறைந்த வட்டியினையும் தம்முட் போர் செய்து பட்ட யானைக் கோடுகளைக் காவு மரமாகக் கொண்டு காவிக் கொணர்ந்த கானவருடையனவும் ஆகிய சிறிய ஊரின்கட் செல்வீராயின் ஆண்டு அவ்வுணவுகளை மிகவும் பெறுவீர் என்பதாம்.

அகலவுரை : செங்காந்தளின் முகைக்குத் தீ உவமை. தீயி னன்ன என்னும் சொல் இயற்பெயர் மருங்கின் மங்கலமழியத் தொழிற்சொல் புணர்ப்பது சொல்லானந்தம் (யா-வி-ஒழிபு) என்னும் விதியுண்மையால் ஆனந்தக்குற்றம் என்னும் குற்றமுடைத்தெனவும் அக் குற்றம்படச் செய்யுள் யாத்தமையானே பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தாரென்றும் பண்டைநாளில் ஆளவந்த பிள்ளை ஆசிரியர் என்பார் குற்றங் கூறினர் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூற்றான் அறியலாம். இதுபற்றி நச்சினார்க்கினியர் கூறுவன வருமாறு :

இதற்கு நன்னன் என்னும் பெயர் தீயோடடுத்தமையின் ஆனந்தமாய், பாடினாரும், பாட்டுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையாசிரியர் குற்றங்கூறினாராலெனின், அவர் அறியாது கூறினார். செய்யுள் செய்த கவுசிகனார், ஆனந்தக் குற்றமென்னும் குற்றமறியாமல் செய்யுள் செய்தாரேல், இவர் நல்லிசைப் புலவராகார்; இவர் செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவர். அங்ஙனம் நீக்காது கோத்தற்குக்காரணம் ஆனந்தக் குற்றம் என்பதொரு குற்றம் இச் செய்யுட்கு உறாமையான் என்றுணர்க.

இச் சொன்னிலை நோக்குமிடத்து ஒரு குற்றமும் இன்று; என்னை? அன்னவென்னும் அகரவீற்றுப் பெயரெச்ச உவமவுருபு தீ யென்னும் பெயரைச் சேர்ந்து நின்று இன் சாரியை இடையே அடுத்து நிற்றலின்; நன்னன் என நகரமுதலும் னகரவொற்றீறுமாய் நிற்கும் சொல்லாயினன்றே அக் குற்றம் உளதாவதென மறுக்க. நன்னவென அண்மைவிளியாய் நின்ற முன்னிலைப் பெயரென்றுகுற்றங் கூறுவார்க்கு இப்பாட்டுப் படர்க்கையேயாய் நிற்றலிற் குற்றமின்றென்க. நூற்குற்றங் கூறுகின்ற பத்துவகைக் குற்றத்தே தன்னானொரு பொருள் கருதிக் கூறல் என்னும் குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றமென்று நூல் செய்ததன்றி அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் இக்குற்றம் கூறாமையின் சான்றோர் செய்யுட்கு இக் குற்றமுண்டாயினும் கொள்ளார் என மறுக்க. என்பதாம். இனிப் பிற்றைநாட் புலவர்கூறிய இக்குற்றங்களைப் பற்றித் தொல்காப்பியத்தே தம் முரையிற் பேராசிரியர் கூறுவன வருமாறு;

ஆனந்தவுவமை என்பன சில குற்றம் அகத்தியனார் செய்தார் எனக் கூறுப ஆகலின் அவையிற்றை எவ்வாறு கோடுமெனின், அவைதாம் அகத்துள்ளும் பிற சான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா. அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்த வோத்தென்பது ஒன்று செய்தாராயின் அகத்தியமும் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யும் செய்யுளும் வேறுபடாஎன்பது என்பதாம். இவ்விரண்டு பேராசிரியர் கூற்றானும், பண்டைநாள், தண்டமிழ்ப்பனுவலின் குணம் உணரும் மதுகையில்லாத போலிப் புலவர் இத்தகைய குற்றங்கூறித் திரிந்ததல்லால் சான்றோர் இங்ஙனம் குற்றங்கூறுவாரல்லர் என்று யாம் அறிகின்றோம்.

தூவல்-மழை. கலித்த - செருக்கி வளர்ந்த. முகை-அரும்பு. செத்து-கருதி. அறியாது என்றது அதனை முகையென்றறியாமல் என்றவாறு. பருந்து செங்காந்தள் முகையினை ஊன் என்று கருதி எடுத்துப் பின்னர் ஊன் அல்லாமை கண்டு சிந்திவிட அம் முகைகள் கற்பாறையிற் பரவிக் கிடக்கும் தோற்றம் வேன்மகன் பூச்சிதறி வெறியாட்டெடுத்த களம்போன்று தோன்றுவதோடு திருமணம் நிகழ்கின்ற மனைபோல நறுமணம் அவ்விடம் கமழ்ந்தது என்க. தாஅய்-பரவி. வியல் அறை-அகன்ற கற்பாறை. மணவில்-திருமணம் நிகழ்கின்ற வீடு. தேனினர் - தேனையுடையோர். கிழங்கினர் - கிழங்கையுடையோர். ஊன்ஆர் வட்டி-ஊன் நிறைந்த கடகம். பழுதுளி என்பதன்கண் உளிபகுதிப் பொருள் விகுதி. பேரியாழ் முறையுளி கழிப்பி (பெரும்பாண் 462) என்புழிப்போல. பழுது - பழுதுடைய தசை. போக்குதல் - நீக்கிவிடுதல். தூவொடு மலிந்த என்பதன்கண், மலிந்த என்பது பலவறி சொல், காட்டிற் போர்செய்து இறந்த யானைக்கோடுகளைக் காவுமரமாகக் கொண்டு கானவர் பன்றி முதலியவற்றின் தசை நிறைந்த வட்டிகளைச் சுமந்து வந்தனர் என்க.

செழும் பல் யாணர்ச் சிறுகுடி என்றது, பல்வேறு வகையாய வளமுடைய காடுபடுபொருள்களும், மலைபடுபொருளுமாகிய புதுவருவாயினை நாள்தோறும் உடைய கானவருடைய சிறிய ஊர் என்றவாறு இதனால் காட்டுவளம் மலைவளம் கானவர் வாழ்க்கைச் சிறப்பு முதலியன கூறினாராயிற்று. இரும்பேர் ஒக்கல் என்றது, நல்குரவுடைய பெரிய சுற்றம் என்றவாறு. பதம் - உணவு. மிகப் பெறுகுவிர் என்றது, கானவர் விருந்தோம்பற் சிறப்பைக் குறிப்பானுணர்த்தியவாறு. இதன்கண் அசையும் நற்புலமும் வல்சியும் கூறியவாறுணர்க.

பாக்கத்திலுள்ளோர் விருந்தோம்பற் சிறப்பு

158-169 : அன்றவண் .............. பெறுகுவிர்

பொருள் : அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி - அற்றை நாள் அவ்விடத்தே அவற்றைப் பெற்று இளைப்பாறி இராப்பொழுதும் அவர்களுடனே பொருந்தி ஆண்டுத் தங்கி, கன்று எரி ஒள் இணர் கடும்பொது மலைந்து - கன்றின நெருப்புப் போன்ற ஒள்ளிய பூங்கொத்துக்களைச் சுற்றத்தோடே சூடி, சேந்த செயலைச் செப்பம் போகி - சிவந்த அசோகமரத்தை யுடைய செவ்விய வழியைப் போய், அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச் சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி - அசைகின்ற மூங்கில் ஒலிக்கும் அரிதாயிழியும் வழிகளையுடைய சிலம்பைச் சேர்ந்திருந்த சீறூர்களைச் சேர்ந்து. நோனாச் செருவின் வலம் படு நோன்றாள் மான விறல் வேள் வயிரியம் எனினே - பகைவரைப் பொறாமல் பொரும் போரினையும் வெற்றியுண்டாகும் வலிய முயற்சியினையும் மானத்தையும் வெற்றியையும் உடைய நன்னனுடைய கூத்தரேம் என்று கூறுவிராயின், நும்மில்போல நில்லாது புக்கு - நும்முடைய மனைபோல வாயிலின் நில்லாதே உள்ளே சென்று. கிழவிர் போலக் கேளாது கெழீஇ - முன்பே கிழமையுடையீர்போல அவரைக் கேளாதே உறவுகொள்கையினாலே, சேண்புலம்பு அகல இனிய கூறி சேணிடை வந்த நுமது வருத்தந் தீரும்படி இனிய மொழிகள் அவர் கூறி, பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையோடு - பரிய தசை மிகச் சொரிந்த நெய்யிடத்தே கிடந்து வெந்த பொரியலோடே, குரூஉக் கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் - நிறம் மிக்குத் தோன்றும் வடிவினையுடைய தினைச் சோற்றைத் தரப் பெறுகுவீர்;

கருத்துரை : அன்று அக் கானவர் சிறுகுடிக்கண் கிடைக்கும் உணவைப் பெற்றுண்டு இளைப்பாறி, இராப்பொழுதும் அக் கானவரோடே பொருந்தி ஆண்டே கழித்து, மற்றைநாள் நெருப்புப்போன்ற ஒண்மையுடைய பூங் கொத்துக்களைச் சுற்றத்தோடே சூடினிராய்ச் சிவந்த அசோகமரத்தையுடைய செவ்விய நெறியே சென்று, அசையும் மூங்கில் ஒலியாநின்ற அரிய வழியையுடைய மலையை அடுத்திருந்த சிறிய ஊர்களைச் சேர்ந்து, யாம்பகைவரைப் பொறாதே பொரும் போரினையும், வெற்றியின் காரணமான வலிய முயற்சியையும் மானத்தையும், வெற்றியையும் உடைய நன்னனுடைய கூத்தரேம் என்று அவர்கட்கு அறிவிப்பீராயின், பின்னர் அவரில்லத்தே நும்மில்லத்தே புகுமாறு போன்று தடையின்றி உள்புகுந்து, பழைய உறவினர் போன்று அவரைக்கேளாதே கேண்மைகொண்டு, தொலைவிலிருந்து வந்த நும் வருத்தந்தீர அவரான் இன்மொழி கூறப் பெற்று, நெய்யிற் கிடந்து வெந்த பரிய தசைப் பொரியலோடே நிறமுடைய வடிவினையுடைய தினைச் சோற்றை அவர் நுமக்குத்தரப் பெறுகுவீர் என்பதாம்.

அகலவுரை : அசைஇ அல்கிப் போகிச் சேர்ந்து வயிரியம் எனின் புக்குக் கெழிஇ வேவையொடு பொம்மல் பெறுகுவிர் எனக் கூட்டுக. அசைஇ-இளைப்பாறி. அல் - இரவு. அல்கி - தங்கி. கன்றெரி : வினைத்தொகை. கன்றுதல் - கனலுதல். எரி-நெருப்பு; இது பூங்கொத்திற்கு நிறஉவமை. சேந்த செயலை எனப் பின்னர்க் கூறலான் பூங்கொத்தென்றது அசோகம் பூங்கொத்தென்க. செந்தீயொண்பூம் பிண்டி (மதுரைக்காஞ்சி 700-701), எரியவிர் உருவின் அங்குழைச் செயலை, (குறிஞ்-105) எனப் பிறரும் கூறுதல் காண்க. இணர் - கொத்து. கடும்பு - சுற்றம், மலைந்து-சூடி, இனிக் கன்றிய நெருப்பை ஒத்த ஒன்னிய பூங்கொத்தைத் தம்மினத்தோடே சூடிச் சிவந்த செயலை எனச் செயலைக் கேற்றினுமாம். செப்பம்-நல்லவழி; பண்பாகுபெயர் அலங்கு - அசைகின்ற. கழை-மூங்கில். நரலும் - ஒலிக்கும். ஆரி - அருமையுடையது. படுகர் : வழிக்கு ஆகுபெயர். சிலம்பு - மலை. சிலம்பு அடைந்திருந்த பாக்கம் என்றது, மலையின் பக்கத்தே இருந்த சிறிய ஊர்கள் என்றவாறு. பாக்கம்-பக்கத்தே உள்ளது என்னும் பொருட்டு.

நோனா : நோன்பு என்றதன் எதிர்மறை. பொறாமல் என்னும் பொருட்டு. நோன்றாள் - வலிய முயற்சி. மானம் - எஞ்ஞான்றும் தந்நிலையிற் றாழாமையும் தெய்வத்தாற் றாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் (குறள் - 961-உரை) என்ப. விறல்-வெற்றி. வேள் - நன்னன்வேள்மான். வயிரியம் : தன்மைப் பன்மை. கூத்தரேம். நும்மில் போல என்றவாறு. வேள்வயிரியம் எனிற்றடை செய்வாரின்மையின், நில்லாது புக்கு என்றார். இதனால் நன்னன் வேண்மான் தன்குடிகளாற் போற்றப்படும் பண்புடையன் என்பது போந்தமை உணர்க. தம்மரசன் விருந்தினரைத் தம் கேளிர் போலப் போற்றுவர் நன்னன் குடிகள் எனக் குடிச் சிறப்பும் போந்தது.

எங்கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடையின்று குறுகிச்
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை இரவலர்க் கெளிதே.  (புறநா-54:1-4)

என்றார் பிறரும்.

கிழவிர் - உரிமையுடையீர். கெழீஇ - உறவுகொண்டு சேட்புலம்பு சேய்மைக்கணின்றும் வந்தமையால் உண்டான வருத்தம். கூறி என்பதனைக் கூற எனத் திரித்துக் கொள்க. பரூஉக் குறை - பருத்த தசைத்துண்டு; குறைக்கப்பட்டது என்பது பொருள். நெய்க்கண் வேவை - நெய்யின்கண் வேகவைத்த பொரியல். குரு-நிறம். குருவும் கெழுவும் நிறனா கும்மே (உரி-5) என்பது தொல்காப்பியச் சூத்திரம். இறடி - தினை. கருந்தினை எனச் சூடாமணி நிகண்டிற் கூறப்படும். (4-40) பொம்மல் - சோறு; பருத்தது என்னும் பொருட்டு. பருக்கை எனலும் அறிக.

குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி

170-185 : ஏறித்தரூஉம் ................ பெறுகுவிர்

பொருள் : ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு - தாங்கள் உச்சிமலையிலே ஏறிக் கொண்டுவரும் விளங்குகின்ற மலையிற் பண்டங்களோடே, வேய்ப் பெயல் விளையுள் தேக்கள் தேறல் குறைவின்று பருகி - மூங்கிற் குழாய்க் குள்ளே பெய்தலையுடைய முற்றிய தேனாற் செய்த கள்ளின் தெளிவைக் குறைவின்றாக நிரம்பவுண்டு, நறவு மகிழ்ந்து வைகறைப் பழஞ் செருக்குற்ற நும் அனந்தல் தீர - பின்னர் நெல்லாற் சமைத்த கள்ளையுண்டு மகிழ்ந்து விடியற்காலத்துக் கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற நும்முடைய மதந்தீரும்படி, அருவி தந்த பழம் சிதை வெண்காழ் - நீர் கொண்டுவந்த பலாப்பழம் உதிர்ந்த வெள்ளிய விதையினையும், வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை - ஓடிவருகின்ற விசையைக் கெடுத்துக் கொன்ற கடமானின் கொழுவிய தசையையும், முளவு மா தொலைச்சிய பைந்நிணப்பிளவை - எய்ப்பன்றியைக் கொன்ற பசுத்த நிணத்தையுடைய பிளக்கப்பட்ட தசையையும், பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ - பெண்ணாகிய நாய் ஓடிக் கடித்த உடும்பின் தடியோடே கலந்து, வெண் புடைகொண்ட துய்த்தலைப் பழனின் இன்புளிக் கலந்து மா மோராக - வெள்ளிய புறத்தைக் கொண்ட ஆரத்தை இடத்தேயுடைய புளியம் பழத்தின் இனிய புளிப்பையும் கலந்து உலையின் நீர் சிறந்த மோராக வார்த்து, கழைவளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து - மூங்கிலிலே நின்று முற்றிய நெல்லின் அரிசியை அவ் வுலையின்கண் பெய்து, வரையமை சாரல் கமழத் துழைஇ - சுரபுன்னை நெருங்கிய மலைச்சாரல் எல்லாம் நாறும்படியாகத் துழாவி, நறுமலர் அணிந்த நாறு இருமுச்சிக் குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி - நறிய மலரைச் சூடின நாறுகின்ற கரிய மயிர் முடியினையுடைய குறவர் குடியிற் பிறந்த மகள் ஆக்கிய வெள்ளிய சோறாகிய உணவை, அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ - நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியை உடையராய் விருந்தினரைப் பெற்றே மென்னும் ஆசையோடே நெஞ்சு கலந்து, மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் - தத்தம் பிள்ளைகளைக் கொண்டு முறை சொல்லித் தடுக்கையினாலே மனைகடோறும் பெறாநிற்பீர்;

கருத்துரை : மேலும் அவ்வூரினர் தாங்கள் மலைமிசை ஏறிக்கொணர்ந்த பல மலைபடு பொருள்களோடே, மூங்கிற் குழாய்க்குள்ளே பெய்யப் பெற்ற முற்றிய தேனாற் செய்த கள்ளின் தெளிவைக் குறையின்றாக நிரம்பவுண்டு, பின்னர் நெல்லாற் சமைத்த கள்ளை யுண்டு மகிழ்ந்த பின்னரும் வைகறைப் போதின் உண்ணும் மரபிற்றாய கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற நும் மதம் தீரும்படி, நீரருவியாற் கொண்டு வரப்பட்ட பலாப் பழத்தின் விதையோடே ஓடி வருகின்ற விசையைக் கெடுத்துக் கொல்லப்பட்ட கடமானின் கொழுத்த தசையினையும், எய்ப்பன்றியைக் கொன்ற பருத்த நிணமிக்க தசையையும் பெண்ணாயை ஏவிப் பெற்ற உடும்பினது தடியோடே கலந்து செய்த கறியினோடே, புளியம் பழத்தின் இனிய புளிப்பையும் கலந்து ஆன் முதலிய விலங்கின் மோர் உலையாக வார்த்து அவ்வுலையின்கண் மூங்கிலின் முற்றிய அரிசியைப் பெய்து, சுரபுன்னை மிக்க காடெல்லாம் மணக்குமாறு, நறிய மலரைச் சூடுகின்ற மணமிக்க கரிய முடியினையுடைய குறமகள் துழாவி ஆக்கிய வெள்ளிய சோற்றை, விருந்தினரைப் பெற்றேம் என்னும் மகிழ்ச்சியை உடையராய் ஆர்வத்தோடே தத்தம் பிள்ளைகளைக் கொண்டு முறைகூறித் தடுத்து நும்மைப் போற்றுகையாலே நீயிர் மனைகள் தோறும் பெறுவீர் என்பதாம்.

அகலவுரை : மலைத் தாரமொடு தேறல் குறைவின்று பருகி நறவு மகிழ்ந்து செருக்குற்ற நும் அனந்தல் தீர, வெண்காழ், கடமான் கொழுங்குறை, முளவுமாப் பிளவை தடி முதலிய கறிகளோடே, புளிகலந்து, மோர் நீராக, கழைநெல் அரிசி பெய்து சாரல் கமழத் துழவிக் குறமகள் ஆக்கிய வல்சி ஆர்வமொடு தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் என்று கூட்டுக. தாரம் - பண்டம்; அவை சந்தனம், அகில், பொன், மணி முதலியன.

மலைப்பஃ றாரமும் கடற்பஃ றாரமும்
வளந்தலை மயங்கிய துளங்குகல விருக்கை  (6:153-4)

என்னும் சிலப்பதிகாரத்தும் தாரம் அப்பொருட்டாதல் அறிக. மலைத்தாரம் என்றது. மலைக்கண் உள்ள பல்வேறு பண்டங்களும் என்றவாறு. கானவர் தாம் ஏறிக் கொணர்ந்த என்றது, அவர் வருந்தி ஈட்டுவதனைத்தும் விருந்தோம்பலாகிய இல்லறத்தின் பொருட்டே என்னும் பொருளை யாப்புறுத்திற்று.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு  (81)

என்னும் வாயுறை வாழ்த்தானும் தமிழ்மக்கள் தலையாய அறம் அன்னதாதலறிக. வேய்ப்பெயல் விளையுள் தேக்கள் தேறல் என்றது, மூங்கிற் குழாய்க் கண் பெய்து வைக்கப்பட்ட முற்றிய தேனாற் செய்த கள்ளினது தெளிவு என்றவாறு. மூங்கிற் குழாயில் தேறல் பெய்து வைப்பதுண்டென்பதை,

கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கட் டேறல்  (194-5)

என்னுந் திருமுருகாற்றுப்படையானும் அறிக. தேம் கள் - தேக்கள் எனப் புணர்ந்தது. குறைவின்று பருகி என்பதன்கண் இன்றி என்னும் குறிப்பு வினையெச்சம் இன்று என உகரமாய்த் திரிந்தது. என்னை?

இன்றி என்னும் வினையெஞ் சிறுதி
நின்ற இகரம் உகரம் ஆதல்
தொன்றியல் மருங்கின் செய்யுளில் உரித்தே  (தொல்.உயிர்மய-35)

என்பது ஒத்தாதலான்.

நறவு - நெல்லாற் சமைத்த கள் என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். நறவு மகிழ்ந்து என்றது, நறவினை உண்டு களித்து என்றவாறு. வைகறைப் பழஞ் செருக்குற்ற என்றது, விடியற் காலத்தே உண்ணுதற்குரிய கள்ளையுண்டு களித்த என்றவாறு. செருக்குதல் என்றது. ஈண்டுக் கள்ளால் களிப்புறுதலை. விடியற் காலத்தே கள்ளுண்டு களித்தலுண்டென்பதை,

நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேரீ தல்லே  (புறநா-123)

எனப் பிறர் கூறுமாற்றானும் உணர்க. அனந்தல்-கள்ளால் உண்டாய மயக்கம். அனந்தல் தீரத் தடியொடு விரைஇ வல்சி பெறுகுவிர் என்க. இவ்வடிகளின் சொற்களைப் பிரித்து வேறு வேறிடங்களிற் பொருத்தி உரைகூறுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். மாமோர் என்பதற்கு விலங்காகிய ஆ, எருமைகளின் மோர் என்க; சிறந்த மோருமாம். மோராக என்றது, உலைநீர் மோர்ஆக என்றவாறு. அருவி தந்த பழம் - அருவிநீர் அடித்துக் கொணர்ந்த பலாப்பழம். இஃது இயற்கை வளம் கூறிற்று.

தண்கமழ் அலர்இறால்சிதைய நன்பல
ஆசினி முதுசுளை கலாவ
........................ சேணின்று
இழும் என இழிதரும் அருவி  (301-16)

என்னும் திருமுருகாற்றுப்படை யானும்,

............. பூநாறு பலவுக்கனி
வரையிழி யருவி உண்டுறைத் தரூஉம்  (904-5)

என்னும் குறுந்தொகையானும் அருவி பலாக்கனி கொணர்தலை அறிக. காழ்-விதை. கழைவளர் நெல் - மூங்கிலின்கண் முதிர்ந்த நெல் என்க. அரி-அரிசி. கடைக்குறை. வழை-சுரபுன்னை. வழையமை சாரல் கமழ என்றது அடிசின் மணம் காட்டகமெங்கும் கமழும்படி என்றவாறு. புதிய மலரணியப் பெற்றதும் இயற்கையாகவே மணமுடையதுமாகிய முச்சி என்க. முச்சி - மயிர்முடி. இருமை - ஈண்டு கருமை என்னும் நிறப்பண்பு குறித்து நின்றது. வாலவிழ் - வெண்சோறு; தூயசோறுமாம். அகமலி உவகை - உளத்தின்கண் மிக்கெழுந்த மகிழ்ச்சி என்க. விருந்தினரைப் பெற்றமையான் எழுந்த உவகை என்பது கருத்து.

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்  (குறள்-93)

எனவும்,

அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்
தின்சொலன் ஆகப் பெறின்  (குறள்-92)

எனவும் எழுந்த மெய்ம்மொழிகளான் விருந்தோம்புவார்க்கு, இப்பண்புகள் இன்றியமையாமை உணர்க. உவகையை ஆர்வமொடு அளைஇ என்க. ஆர்வம் - அன்பு காரணமாக உண்டான விருப்பம்; இதனை,

அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும்
நண்பென்னு நாடாச் சிறப்பு  (குறள்-74)

என்னுந் தமிழ்த் திருமறையான் அறிக. மகமுறைதடுப்ப என்றதற்குத்தான் உள்ளே இருந்து தன் பிள்ளைகளைக் கொண்டு நும்மை அடைவே எல்லாரையும் போகாது விலக்குகையினாலே என்றுமாம். இனித் தம்மக்களைப் பேணுமாறு போலப் பேணித் தடுக்க என்றுமாம். முறை - அண்ணன், அம்மான் என்றாற் போல்வன.

பிடிக்கை, யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
இருங்கா ழுலக்கை இரும்புமுகந் தேய்த்த
அவைப்புமா ணரிசி அமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவிர்  (191-195)

என்னும் சிறுபாணாற்றுப்படையின் அடிகளையும்,

அருங்கடித் தீஞ்சுவை அமுதொடு பிறவும்
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசின்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்
தானா விருப்பிற் றானின் றூட்டி  (475-481)

என்னும் பெரும்பாணாற்றுப்படையின் அடிகளையும் இதனோடு ஒப்புக் காண்க.

அவன் மலைநாட்டின் நலனும், தீங்கும்

186-192 : செருச்செய் ............... நிலநாடுபடர்மின்

பொருள் : செருச் செய் முன்பின் குருசில் முன்னிய பரிசில் மறப்ப நீடலும் உரியிர் - ஆண்டுப் பெற்றவற்றாலே போரைச் செய்கின்ற வலியையுடைய நன்னனிடத்துப் பெறக்கருதிய பரிசிலை மறக்கும்படி நீட்டித்திருத்தலும் உரியீர், அனையது (அன்று) அவன் மலைமிசை நாடே - அத்தகைய மாண்புடையதாம் அவ்வள்ளற் பெருமானின் மலையின்கண் உள்ள நாடு நிரை இதழ்க் குவளை கடிவீ தொடினும் - நிரைத்த இதழையுடைய குவளையில் தெய்வம் விரும்புதலில் கடியவாகிய பூக்களை நீயிர் அறியாதே தொடுவீராயினும், வரை யர மகளிர் இருக்கை காணினும் - ஆங்கு வரையர மகளிருடைய இருப்பைக் காணுவீரேனும், உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர் - நும்முயிர் போம்படி வெதும்பி நடுங்குதலும் உரியீர் ஆதலானே, பலநாள் நில்லாது நிலநாடு படர்மின் - அம் மலைமிசை நாட்டில் நீயிர் பலநாள் நில்லாதே அவன் நிலமிசை நாட்டிற் செல்வீராக;

கருத்துரை : அம் மலைமிசை நாட்டில் நீயிர் பெறுகின்ற நன்மையானே, போராற்றல் மிக்க நன்னன் வேண்மானிடத்தே நீயிர் பெறக் கருதிய பரிசிலை மறந்து அந்நாட்டகத்தே நீண்ட காலம் தங்குதலும் கூடும்; அத்தகைய வளனும், விருந்தோம்பற் சிறப்பு முடைத்து அவ்வள்ளலின் மலைநாடு. இனி ஆண்டுள்ள தீங்கும் கூறக்கேண்மின். தெய்வம் விரும்பியுள்ள நிரல்பட்ட இதழையுடைய குவளை மலரை அஃதறியாதே நீயிர் தொட்டாலும், வரையர மகளிரின் இருக்கையை நீயிர் ஓரோவழிக் காணநேரினும் அச்சத்தாலே உயிர் போம்படி நடுங்குதலும் உரியீராகலான், அந்நாட்டின்கண் பல நாள் உறையற்க! ஆண்டிருந்து அவன் நிலநாட்டிற் செல்க என்பதாம்.

அகலவுரை : செருச்செய் முன்பு - போர் செய்யும் ஆற்றல். ஆற்றலுடையார்க்கன்றி வண்மை கடைபோகாமையின் அவன் ஆற்றலைவிதந்தோதினார். என்னை? வண்மைக்கு முதல்தான் அருள் அன்றே! அவ்வருள் தானும், பொருளானே சிறப்புறற்பாலதாம் இதனை,

அருள்என்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியா லுண்டு  (குறள்-757)

என்றும்,

ஓண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை யிரண்டும் ஒருங்கு  (குறள்-760)

என்றும் எழுந்த மெய்ம்மொழிகளானும் உணர்க. குருசில் முன்னிய பரிசில் என்றது குருசிலின்கண் நீயிர் பெறக்கருதிய பெரும் பரிசிலை என்றவாறு. அத்தகைய பெரும் பரிசிலையும் மறந்தொழியுமாறு அம் மலை நாட்டினர் அன்போடு நும்மை ஓம்புவர் என்பது குறிப்பு. அனையதன்றவன் மலைமிசை நாடே என்பதன்கண் அன்று என்பதனை அசைநிலை யாக்குக.

இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர், அனைய தன்றவன் மலைமிசை நாடே (188) என்னுந் தொடரைப் பிரித்தெடுத்து (170) ஏறித் தரூஉம் என்னுந் தொடர்க்கு முன்னாக இணைத்து, அந்நன்னனுடைய மலையினது உச்சியில் நாடு யான் முற்கூறிய தன்மைத்தன்று; மிகவும் சிறப்புடைத் தெனப் பொருள் விரிப்பாராயினர். நீடலும் உரியிர் என்னுந் துணையும்; வல்சியும், ஆற்றின் நன்மையளவும் அசையும் நற்புலனாம் கூறினார். இனி அம் மலைமிசை நாட்டின் ஆற்றினது தீமையளவு கூறுவார். நிரை இதழ் என்றது நிரல்பட அமைந்த இதழ் என்றவாறு. கடிவீ-கடிய மலர்; இதனானும், தொடின் உயிர் செலப் பனித்தலும் உரியிர் என்பதனாலும் அக்குவளை மலர் தெய்வத்தான் விரும்பப்பட்ட மலர் என்பது பெற்றாம். மலரைத் தெய்வம் விரும்புமென்பதை,

சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்  (43-4)

என்னும் திருமுருகாற்றுப்படையின் அடியில் சுரும்பு மூசாமைக்கு ஏது அதனை முருகன் விரும்புதல் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரைவகுத்தமையானும் கடவுட் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த, பறியாக்குவளை மலரொடு (34) என்னும் நற்றிணையானும் உணர்க. தொடின் அத் தெய்வத்தாற் றீங்குற்று உயிர்செல வெம்பிப்பனித்தலும் உரியிர் என்பது கருத்து. வரையர மகளிர், வரைகளிடத்தே உறையும் தெய்வமகளிர். வரைகளிடத்தே இத்தகைய தெய்வமகளிர் உளராதலையும், அவர்கள் மக்கட்குத் தீங்கியற்றுவர் என்பதையும், தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற நிலைமைக்கண் எம்பெருமான் வரும்வழி எண்கும், வெண்கோட்டியானையும், அரவும், உருமும், புலியும், வரையர மகளிரும் உடைத்து, மற்றும் தெய்வங்கள் வெளவும் வண்ணத்தன; ஏதம் நிகழ்வது கொல்லோ! என வேறுபடும் எனவரும் இறையனார் அகப்பொருள் உரையானும் உணர்க.

தொடினும், காணினும் பனித்தலும் உரியிர் என்பது பலநாள் நில்லாமைக்கு ஏதுக் காட்டியவாறு. நிலநாடு-நிலத்தின்கண்ணதாகிய நாடு. நிலனொடு படர்மின் என்ற பாடத்திற்கு மலைவழிப் படராது நிலத்தின் வழியே சென்மின் என்க. சிலநாள் படர்மின் என்பதும் பாடம். இனி 145-தீயினன்ன என்பது தொடங்கி 192-நிலநாடு படர்மின் என்னுந் துணையும் தொடர்ந்த பொருளை, காந்தட் புதுமுகை ஊன் செத்து எடுத்த சேவல், ஊன் அன்மையின் உகுத்தென, இதழ் தாஅய் வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும் மணவில் நாறும் சாரல், கானவர் சிறுகுடிப் படினே பதம் மிகப் பெறுகுவிர்; அவண் அசைஇ, அல்கி, மலைந்து, செப்பம் போகிப், பாக்கம் எய்தி வேள் வயிரியம் எனினே, புக்குக் கெழீஇ, கூறப்பெற்று, வேவை யொடு, பொம்மல் பெறுகுவிர். மேலும் தாரமொடு தேறல் பருகி, நறவு மகிழ்ந்து, செருக்குற்ற நும் அனந்தல் தீர, காழ் கொழுங்குறைப் பிளவை தடியொடு விரைஇ, புளி கலந்து உலைமோராக நெல்லின் அரிஊழ்த்துச் சாரல் கமழத் துழைஇ, குறமகள் ஆக்கிய வல்சி, தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்! ஆங்குக் குரிசில் முன்னியபரிசில் மறந்து நீடலும் உரியிர்; அனையது அவன் மலைமிசை நாடு, ஆங்குத்தொடினும், காணினும். பனித்தலும் உரியிர்; ஆதலான் பல நாணில்லாது நிலநாடு படர்மின் என அணுகக் கொண்டு காண்க. இனி, 193-விளைபுனம் என்பது தொடங்கி, 403-அஞ்சாது கழிமின் என்னுந் துணையும் ஒரு தொடர். இதன்கண், ஆற்றின் தீங்கினது அளவு கூறுமாற்றாற் பல்வேறு காட்சிகளும், நிகழ்ச்சிகளும் அச்சமும் வியப்பும் தோன்றக் கூறப்படும். அவையிற்றை அவ்வவ் விடங்களிற் காண்க.

கேழற் கற்பொறி

193-196 : விளைபுனம் .............. கழிமின்

பொருள் : விளைபுனம் நிழத்தலில் கேழல் அஞ்சிப் புழைதொறும் மாட்டிய இருங்கல் அரும்பொறி உடைய ஆறே - விளைந்து முற்றிய தினைப்புனத்தை அழித்து விடுகையாலே பன்றிகட்கு அஞ்சிப் புகும் வழிகள்தோறும் கொளுத்திவைத்த பெரிய கற்பொறிகளை உடையவாகும் வழிகள் ஆதலானே, நள்ளிருள் அலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின் - செறிந்த இருள் ஞாயிற்றின் கதிர் விரிதலானே கெட்டு விடியற்பொழுதாந் துணையும் ஆண்டே தங்கினிராய்ப் பின்னர்ப் போவீராக;

கருத்துரை : அவ்வழியின்கண், தம் தினைப்புனத்தைப் பன்றி அழித்தலை நீக்கும் பொருட்டு, புகும் வழிதோறும் அப்பன்றிகளைக் கொல்லுதற்குக் கானவர் கல்லானியற்றிய பெரிய பொறிகளைக் கொளுவியிருப்பர்; ஆகலான், அவ்வழிக்கண் இருளிலே செல்லா தொழிமின், இருள் நீங்கி ஞாயிறு தோன்றிய விடியற்காலம் ஆய பின்னரே செல்வீராக என்பதாம்.

அகலவுரை : விளைபுனம் : வினைத்தொகை. நிழத்தல்-அழித்தல்.

சேம மடிந்த பொழுதின் வாய்மடுத்து
இரும்புனம் நிழத்தலில்  (155-56)

என்னும் குறிஞ்சிப்பாட்டின்கண்ணும் நிழத்தல் இப் பொருட்டாதலறிக. நிழத்தல் என்றற்கு, நொக்குதல் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை கூறுவர்; அஃது அக்கால வழக்குப் போலும். கேழல் - பன்றி. கேழல் அஞ்சி என்றது பன்றி தினைப்பயனை அழித்தற்கு அஞ்சி என்றவாறு. இருங்கல் - கரியகல் என்றுமாம். அரும்பொறி - செய்தற் கரிய நுணுக்கங்களையுடைய இயந்திரம். இனி அதன்கட்பட்ட பன்றிதப்புதற்கரிய பொறி எனினுமாம். மாட்டுதல்-பொறியின் விசையை ஏற்றிச் சமையுமாறு அமைத்தல். புழை-புகுந்து செல்லும் வழி ஏனைய வழிகளையெல்லாம் அடைத்துப் பன்றி வருங்கால் அவ்வழியே வருமாறு தொளைபோன்று வழிவைத்து அதன்கட் பொறிமாட்டியிருப்பர்; நீயிர் அறியாதே அவ்வழியிற் புகுவீராயின். அப் பொறியாற் கொல்லப்படுவீர். ஆதலான், இருளிற் செல்லற்க என்பது கருத்து. நள்ளிருள் - செறிந்த இருள். அலரி - ஞாயிறு. நள்ளிருள் விடியலாந் துணையும் வைகினிராய் என்க. நள்ளிருள் வைகினிர் அலரி விரிந்த விடியல் கழிமின் எனக் கொண்டு கூட்டிச் செறிந்த இருட் காலத்தே தங்கினிராய் ஞாயிற்றின் கதிர் விரிந்த விடியற் போதிலே போவீர் எனப் பொருள் கூறினர் நச்சினார்க்கினியர். கழிமின்-செல்வீராக. இனி, இத்தகைய பொறிகளியற்றி விலங்குகளைப் படுத்தல் பண்டை நாளிலே உண்டென்பதனை இதனானும், சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடார் (நற்றிணை-119:2) எனவும் பொறியறிந்து மாட்டிய பெருங்கல் அடாரும் (புறநா-19: 5-6) எனவும் பிறர் கூறுமாற்றானும் அறிக.

பாம்பொடுங்கும் பயம்பு

197-202 : நளிந்து ............... கழிமின்

பொருள் : நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின் - செறிந்து பலரும் போகாத வழியைப் போகத் துணிவீராயின் ஆங்கு, முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில் கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பும் உளவே - மேட்டு நிலம் தன்னிடத்தே விண்ட பரலையுடைய பள்ள நிலத்தில் உள்ள பிளப்பில் மறைந்து பாம்புகள் ஒடுங்கியுள்ள குழிகளும் உளவாம், குறிக்கொண்டு மரம் கொட்டி நோக்கி - அக்குழிகளை மனத்தாலே குறித்தல் கொண்டு விலங்கிற்கு மரங்களிலே ஏறிக் கொட்டிப் பார்த்து, செறிதொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச -செறிந்த வளையினையுடைய விறலியர் இறைவனை எம்மைக் காத்தருள்கவெனக் கையாற் றொழுது வாழ்த்தாநிற்ப, வறிது நெறி ஒரீஇ வலம் செயாக் கழிமின் - சிறிது விலங்கு கிடக்கும் நெறியை அகலப்போய் வலப்பக்கத்து வழியை நுமக்கு வழியாகச் செய்து கொண்டு போவீராக;

கருத்துரை : மிகுதியாக மக்கள் வழக்கமில்லாத வழியிற் போக நினைவீரானால் மேட்டு நிலத்தினின்றும் உதிர்ந்த பரல்களையுடைய பள்ள நிலத்தின்கண் உள்ள வெடிப்புகளில் பாம்புகள் மறைந்து ஒடுங்கியுள்ள குழிகளும் உளவாம்; ஆதலின் அவ் விடங்களை மனத்தாற் குறிக்கொண்டு விழிப்புடன் செல்க; மேலும், அந்நெறிகளில் கொடிய விலங்குகள் கிடத்தலும் உளவாகலான், மரங்களிலே ஏறிக் கொட்டிப் பார்த்து விலங்குகளைக் காணப்பெறின் நும் விறலியர் இறைவனைக் கைகுவித்துத் தொழ, அந்நெறியைச் சிறிது அகலப்போய், அதற்கு வலப்பக்கத்தே கிடந்த வழியின்கட் செல்வீராக என்பதாம்.

அகலவுரை : நளிந்து : உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம். செறிந்து என்னும் பொருட்டு. என்னை? நளியென் கிளவி செறிவும் ஆகும் (தொல், உரி-25.) என்பது ஒத்தாகலான். நளிந்து பலர் வழங்காச் செப்பம் என்றது. பெரும்பாலும் மக்கள் வழங்குதலில்லாத வழி என்றவாறு. செப்பம் - வழி. முரம்பு-பரல் செறிந்த மேட்டு நிலம். இதனை, பரற்றலை முரம்பிற் சின்னீர் வறுஞ்சுனைப் பற்றுவிட்ட. (1385) என்னும் சிந்தாமணியானும் அறிக. பரல்-பருக்கைக் கல். அவல்-பள்ளநிலம். இதனை,

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ  (புறநா-187)

என்னும் அவ்வையார் மொழியானும் அறிக.

போழ்வு - பிளப்பு. கரந்தொடுங்கும் என்றமையால் கொடிய நஞ்சுடைய பாம்பென்பது போதரும். என்னை? நஞ்சுடைமைதானறிந்து நாகங் கரந்துறையும். அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு என்பவாகலான். பயம்பு-பள்ளம்; பயம்பில் யானைப் பாகர் ஓதையும், (சிலப்-25:31) என்றார் பிறரும். பாம்பொடுங்கும் பயம்பும் உள என்றதன்கண் உள்ள உம்மையாற் புலி முதலியன உள்ள குழிகளும் கொள்க. குறிக்கொள்ளலாவது அந்நெறிக்கண் பாம்பொடுங்கும் பயம்புளவாதலை மறவாது நினைவுகூர்ந்து அவையிற்றை விழிப்புடன் நோக்கிச் சேறல். மரங்கொட்டி என்றது மரத்தின்மேல் ஏறி ஓசைப்படுத்து என்றவாறு. அங்ஙனம் ஓசை யெழுப்பியவிடத்து விலங்குகள் இருப்பின் அவையிற்றால் தீங்கு நேராமைப் பொருட்டு மரத்தின்கண் ஏறிக் கொட்டிப் பார்மின் என்றான் என்க. மரத்தின் மேலேறி நின்று பார்த்தால் சேய்மைக்கண் உள்ளனவற்றையும் அறிதல்கூடும். நோக்கி என்றான், அங்ஙனம் நீயிர் ஓசைப்படுத்துங்கால் அவ்வழிக்கண் மறைந்து கிடக்கும் விலங்குகள் வெரீஇ அங்குமிங்குமாக இயங்கும் அவற்றை அப்பொழுதே காணா தொழியின் பின்னர்க் காண்டலாகாதென்னும் பொருளை யாப்புறுத்தற்கு மரங்கொட்டி என்றதன்கண் மரம் என்றதன் இறுதியினின்ற குறிலிணைக் கீழ் மகரம் ஙகரமாகத் திரிந்து செய்யுள் ஓசையை நிரப்புதற் பொருட்டு அளபெடுத்தது இதனை,

ங ஞ ண நமன வய லள வாய்தம்
அளபாம் குறிலிணை குறிற்கீ ழிடைகடை
மிகலே யவற்றின் குறியாம் வேறே  (நன்னூல்.92)

என்னும் விதியாற் கொள்க.

செறிதொடி : வினைத்தொகை.

அஞ்சுமுகந் தோன்றின் ஆறுமுகந் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகா னினைக்கின் இருகாலுந் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்  (திருமுரு - வெண்பா-6)

என்பவாகலான், நீயிர் அஞ்சியவிடத்து அறுமுகனை நினைந்து வாழ்த்துவீராக என்பான் விறலியர் கைதொழூஉப் பழிச்ச என்றான். கூத்தர் முதலிய ஆடவர் காக்கள் சுமந்து செல்வாராகலின் தொழுஞ் செயலை வறிதே செல்லும் விறலியர்க் கேற்றிக் கூறினான், கூறினானேனும், அஞ்சுதகு பாம்பும் விலங்கும் கண்டவிடத்தே எல்லீரும் கடவுளை வணங்குமின் என்பது கருத்தென்க. பழிச்சல் - முருகனுடைய புகழை வாயாற் பரவுதல். பழிச்சுக என்றதனான், தெய்வம் என்பதும் மலைநிலமாகலான் முருகன் என்பதும் கொள்க. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (உரி-84) என்பது தொல்காப்பியம். இனி, செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச என்றதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் செறிந்த வளையினையுடைய விறலியர் அப்பாம்பு மனமகிழும்படி கையாற் றொழுது வாழ்த்த எனப் பொருள் விரித்தார். வறிது நெறி ஒரீஇ என்றது, விலங்குகள் உண்மை நீவிர் அறிவீராயின் அப்பொழுது அந்நெறியினின்றும் சிறிது தொலை விலகிச் சென்று என்றவாறு. வறிது-சிறிது; வறிது சிறிதாகும் (உரி-38) என்பது தொல்காப்பியம். வலம் - ஆகுபெயராய் வலப்பக்கத்தே கிடந்த நெறியைக் குறித்து என்றது. வலம் செயாக் கழிமின் என்றது வலப்பக்கத்துக் கிடந்த வழியை நீயிர் செல்லும் வழியாகச் செய்து கொண்டு போமின் என்று விரித்துரைக்கற் பாற்று.

கவண் உமிழ் கடுங்கல்

203-210 : புலந்து ........................ கழிமின்

பொருள் : புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் - முற்றி ஈன்றணிமை தீர்ந்த தினைப்புனத்தைக் காத்தற்குச் சூழ்ந்த குறவர்கள், உயர்நிலை இதணம் ஏறிக் கை புடையூஉ - உயர்ந்த நிலையினையுடைய பரணிலே ஏறிக் கையைக் கொட்டி, அகல் மலை இறும்பில் துவன்றிய யானைப் பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடுங் கல் - அகன்ற மலையிடத்தே குறுங்காட்டில் நிறைந்த யானைகளினுடைய பகற்பொழுதே நிற்கின்ற நிலையைக் கெடுக்கும் கவண் காலுகின்ற கடிய கற்கள், இருவெதிர் ஈர்ங்கழை தத்திக் கல் எனக் கருவிரல் ஊகம் பார்ப்போடு இரிய - பெரிய மூங்கிலினது பசிய கோலைக் கடந்து கல்லென்னும் ஓசையுண்டாகக் கரிய விரலையுடைய குரங்குகள் பார்ப்போடே கெட்டோடும்படி, உயிர் செகு மரபில் கூற்றத்தன்ன வரும்விசை தவிராது - உயிர்களைப் போக்கும் முறையில் கூற்றத்தையே ஒப்பனவாகத் தாம் புறப்பட்ட விசை மாறாதே வருவனவுளவாம் ஆதலான், மரம் மறையாக் கழிமின் - அவையிற்றிற்கு இலக்காகாமல் மரங்களிலே ஒதுங்கி நின்று போவீராக;

கருத்துரை : முற்றி ஈன்றணிமை தீர்ந்த தினைப்புனங் காத்தற் பொருட்டுச் சூழ்ந்த குறவர்கள், உயர்ந்த பரண்களிலே ஏறி நின்று கைகளைக் கொட்டி அகன்ற மலையிடத்தே குறுங்காட்டில் நிறைந்த யானைகளினுடைய நிலையைக் குலைக்கின்ற கவண் காலுகின்ற கடிய கற்கள் பெரிய மூங்கிலின் பசுங்கோலைக் கடந்து அவற்றில் வாழும் கருவிரற் குரங்கும் பார்ப்பும் அலமந்து கெடக் கொலைத் தொழிலிலே கூற்றத்தையே ஒப்பனவாய்த் தாம் வருகின்ற விசை மாறாதே வாரா நிற்கும்; நீவிர் குறிக்கொண்டு அவை அங்ஙனம் வருங்கால் மரத்தின்கண் ஒதுங்கிநின்று பின்னர்ப் போகக் கடவீர் என்பதாம்.

அகலவுரை : புலந்து என்ற பாடத்திற்கு வருந்தி எனக் குறவர்க்கேற்றிப் பொருள் காண்க. புலந்து-பசுமை தீர்ந்து. புனிறு - ஈன்றணிமை. புனம் - ஈண்டுத் தினைப்புனம். இதணம்-பரண். புடையூ : செய்யூ என்னும் எச்சம் அளபெடுத்துப் புடையூஉ என்றாயிற்று. இறும்பு-குறுங்காடு. சின்னரம் முரலும் அணங்குடைச் சாரல். மஞ்ஞையாலும் மரம்பயில் இறும்பில். (பெரும் பாண்- 494-5) என்புழியும் இஃதிப் பொருட்டாதலுணர்க.

பகைநிலை என்றும் பாடம். இதற்குத் தமக்குப் பகையாய்த் தினைப்புனத்தை அழியா நிற்கும் நிலையினை என விரித்தோதுக. உமிழ்தல் - இடையறாமல் வீசுதல். செகுத்தல்-கொல்லுதல். உயிர்செகுமரபிற் கூற்றத்தன்ன என்றது அக்கற்களாற் றாக்குண்டார் மாளுதல் ஒருதலை என்றவாறு. இஃது ஆற்றின்கண் தீமையளவு கூறிற்று. பெரிய மூங்கிற் பசுங் கோலையும் கடந்து என்றது, அக் கவண்கல் செல்லும் உயரப்பெருமை கூறியவாறு. ஊகம் - கருங்குரங்கு. அக்குரங்கின் விரல்கள் பெரிதும் கருநிறமுடையன ஆதலின் கருவிர லூகம் என்றார். கருவிரன் மந்தி என இவ்வாசிரியரே பின்னும் (311) கூறுவர். கருவிரன் மந்தி செம்முகப் பெருங்கிளை (நற்றிணை-334:1) எனவும், கருவிரன் மந்தி கல்லா வன்பறழ் (ஐங்-272:1) எனவும், பிறவும் கூறுதல் காண்க.

கோடுவாழ் குரங்குங் குட்டி கூறுப  (தொல்.மரபு-13)

என்றோதிப் பின்னரும்,

மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்
அவையும் அன்ன அப்பாலான  (தொல்.மரபு-14)

என ஒத்தின்கண் விதித்தமையான் குரங்குக் குட்டியினைப்பார்ப்பென்னும் மரபுண்மை அறிக. ஏற்பனவுண்ணும் பார்ப்புடை மந்தி (குறுந் 278) என்றார் பிறரும். வரும் விசை தவிராது மரம் மறையாக் கழிமின் என்றது, அங்ஙனம் வரும் கடிய கற்களுக்கு இலக்காகாமல் மரத்தின்கண் ஒதுங்கிப் போமின் என அதற்கு உபாயம் கூறியவாறு. இனிப் பண்டைநாள் குறிஞ்சிநிலத்தே வாழ்ந்த மக்கள் தினைமுதலியன விளைத்தமையும், அவையிற்றை அழிக்கும் யானைகளைக் கவண் கற்களால் கடிந்தமையும், அக் கவண்கல் செல்லும் விசையினையும், பின்வரும் இலக்கியங்களான் உணர்க.

இலங்கொளி மருப்பிற் கைம்மா வுளம்புநர்
புலங்கடி கவணையிற் பூஞ்சினை உதிர்க்கும்
விலங்குமலை.  (கலி 21:1-3)

எனவும்,

பிடியொடு மேயும் செய்புன் யானை
அடியொதுங் கியக்கங் கேட்ட கானவன்
நெடுவரை யாசினிப் பணவை ஏறிக்
கடுவிசைக் கவணையிற் கல்கை விடுதலின்
இறுவரை வேங்கையின் ஒள்வீ சிதறி
ஆசினி மென்பழம் அளிந்தவை உதிராத்
தேன்செய் இறாஅல் துளைபடப் போகி
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கிக்
குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப்
பலவின் பழத்துள் தங்கும் மலை  (கலி-41: 7-16)

எனவும் வருவன காண்க.

யானைகளை விழுங்கும் முதலைகள்

211-218 : உரவுக் களிறு ................ கழிமின்

பொருள் : உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பில் - வலிய யானையை விழுங்கும் முதலைகள் தங்கப் பெற்று இராக்காலத்தை ஒத்த இருள் செறியும் காவற் காட்டினையும், குமிழி சுழலும் குண்டு கயம் முடுக்கர் - குமிழிகள் சுழன்று வாராநின்ற ஆழ்ந்த நீரறாத மடுக்களையுடைய முடுக்கரையும் உடைய, அகழ் இழிந்தன்ன கான் மாற்று நடவை - ஏறுதற்கும் இறங்குதற்கும் அரியவாதலான் அகழியில் இழிந்தாற் போன்ற காட்டாற்றுவழி, வழூஉம் மருங்கு உடைய - கால் வழுக்கும் இடங்களை உடையவாகலான், வழாஅல் ஓம்பிப் பரூஉக்கொடி வலந்த மதலை பற்றி - அங்ஙனம் கால் வழுக்கி வீழ்தலைத் தடுத்தற்பொருட்டுப் பரிய கொடிகள் மரங்களிற் சுற்றிக் கிடப்பவற்றைப் பற்றுக்கோடாகப் பிடித்து, துருவின் அன்ன புன் தலை மகாரோடு - செம்மறியாட்டினை ஒத்த புற்கென்ற தலையினையுடைய நும் பிள்ளைகளோடே, ஒருவிர் ஒருவிர் ஓம்பினீர் கழிமின் - ஒருவிரை ஒருவிர் பாதுகாத்துப் போவீராக;

கருத்துரை : வலிய யானைகளையும் விழுங்கும் இயல்புடைய முதலைகள் உறையப் பெற்றனவும், இராக்காலம் போன்று இருள்செறிந்த மிளையையும் குமிழிகள் சுழன்று வருகின்ற ஆழ்ந்த நீரறாத மடுக்கள் பொருந்திய முடுக்கரையும் உடையனவும், ஏறுதற்கும் இழிதற்கும் அரியவாகலான் அகழிலே இழிந்தாற் போன்றனவும் ஆகிய காட்டாற்றின்கண் உள்ள வழிகள், கால்வழுக்கும் இடங்களை உடையவாகலான், அவ்விடத்தே அங்ஙனம் வழுக்கி வீழ்தலைத் தடுத்து மரங்களிலே பின்னிக்கிடக்கின்ற பரிய கொடிகளைப் பற்றுக் கோடாகப் பற்றிக் கொண்டு செம்மறியாட்டினை ஒத்த புன்றலையினையுடைய நும்மக்களோடே நீயிர் ஒருவரை ஒருவர் காத்து அக் காட்டாற்று வழியைக் கடந்து போமின் என்பதாம்.

அகலவுரை : உரவுக்களிறு கரக்கும் என்றது ஆற்றன் மிக்கயானையையும் விழுங்கும் பேராற்றலுடைய முதலை என முதலையின் ஆற்றலைச் சிறப்பித்தற்குக் குறிப்பேதுவாய் நின்றது. களிறும் என்னும் சிறப்பும்மை செய்யுள் விகாரத்தான் தொக்கது. கரக்கும் என்றது விழுங்கும் என்னும் பொருட்டு. இடங்கர் - முதலையினங்களுள் ஒன்று. இதனை, கொடுந்தாண் முதலையும் இடங்கரும் கராமும் (குறிஞ்சி-275) எனக் கபிலர் வேறுபடுத் தோதுமாற்றான் உணர்க. இரவின் அன்ன என்றது, இராக்காலத்தே உள்ள இருள்போன்ற என்றவாறு. இரவு : ஆகுபெயர். தூங்குதல் - இராக்காலத்திருள் போன்று ஒருபொழுது மாறிவிடாதே எப்போதும் வதியும் என்றவாறு. வரைப்பு - ஈண்டுக் காவற் காட்டினை உணர்த்திற்று குண்டு கயம் : பண்புத்தொகை. முடுக்கர் - நீர்குத்தின இடங்கள் : முடுக்கு - முடிக்கர் என நின்றது. இறங்குதற்கும் ஏறுதற்கும் தகுதியின்றிக் கரைகள் செங்குத்தாக உயர்ந்திருத்தலின் அகழியை உவமித்தார். வழுவும் : வழூஉம் என அளபெடுத்தது. இதனை இழுக்கு என ஓதுவர் ஆசிரியர் கபிலனார். நூழிலும் இழுக்கும் ஊழடி முட்டமும் (குறிஞ்-258) என வருதல் காண்க. நடவை - நடத்தற்குரிய வழி. வழால் - வழுக்குதலை ஓம்பி என்றது, தடித்து என்னும் பொருட்டு. நெறியிருங் குஞ்சி நீ வெய் யோளொடு குறியறிந்தவையவை குறுகாது ஓம்பு (சிலப் 10: 96-7) என்புழிப்போல.

பரூஉக் கொடி - பரிய காட்டுக்கொடி. கொடியாகிய வலந்தவற்றை என்க. வலந்த : பலவறி சொல். இனி வலந்த பரூஉக்கொடி என மாறி எச்சமாக்கினுமாம். வலந்த பின்னிய. மதலை - பற்றுக்கோடு முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. (குறள் - 449) என்புழியும் மதலை அப்பொருட்டாதலறிக. துரு - செம்மறியாடு. செம்மறியாட்டின்மயிர் கூத்தரின் தலைமயிர்க் குவமையாய் எண்ணெங் முதலிய நீவிப்போற்ற மாட்டாத அவர் வறுமை நிலையை உணர்த்தற்குக் குறிப்பேதுவாய் நின்றது. புன்றலை - பொலிவிழந்த தலை. மகாஅர் - பிள்ளைகள் இவ்விடையூற்றினை அறிந்து தாமே செல்லுதல் அவர்க்கியல்பன்மையான் இவ்விவ் விடங்களில் விழிப்புடனிருந்து அவரைப் பாதுகாமின் என்பான் மகாரோடென விதந்தோதினான். அவரை நினைந்தவுடன் அவர் வறுமைநிலை தோன்றலின் அவர்க்கு இரங்குவானாய் புன்றலை மகார் என்றான். மிக விழிப்புடன் செல்லக் கடவீர் என்பான் ஒருவிர் ஒருவரை ஓம்புமின் என்றான். ஒருவர் ஒருவரைஓம் புதலாவது வழுக்கிடம் முதலிய இடுக்கண்களை அறிந்தோர் அறியாதார்க்குக்கூறி, விழிப்பூட்டி அழைத்துச் சேறல். இடங்கர் ஒடுங்கி இருள் தூங்குவரைப்பின் முடுக்கர்க் கான்யாற்று நடவை வழூஉ மருங்குடைய ஓம்பிக்கொடி மதலைபற்றி மகாரோடு ஓம்பினிர் கழிமின் எனக் கூட்டுக.

விழுந்தோர் மாய்க்கும் குண்டுகயம்

219-224 : அழுந்துபட்டு ............... கழிமின்

பொருள் : அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல் - கிழங்கு தாழ வீழ்ந்து அசையும் மலையெருக்கு நெருங்கின பக்க மலையில், விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா வழும்பு கண் புதைத்த நுண்ணீர்ப் பாசி - வீழ்ந்தோரைக் கொல்லும் ஆழத்தையுடைய குளங்களுக்கு அருகில் வழுவழுப்பினால் இடம் மறைதற்குக் காரணமான நுண்ணிய நீர்மையுடைய பாசி, அடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய - அடி ஊன்றியிட்ட நிலையை ஓடப்பண்ணும் மேலும் அவ்விடம் போதற்கு அருமையும் உடைய ஆகலான் அதனைக் கடத்தற்கு உபாயமாக, முழுநெறி அணங்கிய நுண்கோல் வேரலோடு எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின் - வழிமுழுதும் பின்னி வளர்ந்த நுண்ணிய கோல்களையுடைய சிறு மூங்கிலோடே வேழத்தினது மெல்லிய கோல்களையும் பற்றுக் கோடாகக் கொண்டு போகக் கடவீர்;

கருத்துரை : கிழங்கு தாழ வீழ்த்து அசையாநின்றமலை யெருக்குகள் செறிந்த பக்கமலைகளில் வீழ்ந்தோரைக் கொல்லும் ஆழமுடைய குளங்களுக்கு அருகாக வழுவழுப்பினால் இடத்தை மறைத்துள்ள பாசி அடி நிலையைப் பெயர்ந்தோடச் செய்யும். மேலும், அவ் விடத்தைப் பற்றுக்கோடின்றிக் கடந்து போதலும் அருமை; ஆதலான், நீயிர் செல்லும் நெற்றிக்கண் பின்னிக் கிடக்கும் சிறு மூங்கிற் கோல்களையும், எருவைக் கோல்களையும் ஊன்று கோலாகக் கொண்டு அவ் வழியைப் போமின் என்பதாம்.

அகலவுரை : அழுங்து-கிழங்கு; ஆகுபெயர். இனி, நீண்டகாலமாக அடிப்பட்டுக்கிடந்து எனினுமாம். என்னை? அழுந்துபட்டிருந்த பெரும் பாணிருக்கையும் (342) என்ற மதுரைக் காஞ்சியில் அழுந்துபட்டிருந்த என்பது இப் பொருட்டாகலான். அலமரும் - அசையும்; சுழலும்; அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (உரி-13) என்பது தொல்காப்பியச் சூத்திரம். புழகு-மலையெருக்கு. அரக்கு விரித்தன்ன பரேரம் புழகு (96) எனக் குறிஞ்சிப்பாட்டினும் வருதல் காண்க. புழகு என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் குறிஞ்சிப் பாட்டினும் மலையெருக்கம்பூ எனத் தம் கருத்தை எழுதி செம்பூவுமாம்; புனமுருங்கையும் என்பர் எனவும் குறித்துப் போந்தார்.

அமல் - நெருக்கம். அமல் சாரல்; வினைத்தொகை. களிறுமாய் செருந்தியொடு கண்பு அமன்று (172) என்னும் மதுரைக் காஞ்சியினும் அமல் என்னுஞ் சொல் எச்சமாகி நிற்றல் காண்க. குண்டுகயம் - ஆழ்ந்த குளம்; இனி வட்டவடிவிற்றாய குளமுமாம். வழுக்கி வீழ்ந்தோரை மாய்த்தே விடும் குண்டுகயம் என்றது. அவ்வழிக்கண்ணுள்ள இடும்பையை எடுத்தோதியவாறு. வழும்பு கண் புதைந்த நுண்ணீர்ப்பாசி அடிநிலை தளர்க்கும் அக்குண்டுகயம், தம்பால் வீழ்ந்தோரைக் கொல்லும் அவ் வழியை ஊன்று கோலின்றிக் கடத்தலும் அரிதாம். ஆதலின் ஊன்றுகோல் கொண்டு கழிக என்றவாறு. வழும்பு - வழுவழுப்பு. இதற்குக் குற்றம் என்றே ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கூறி அதற்கு வழும்பறுக்க கில்லாவாந்தேரை - வழும்பில் சீர் (352) என்னும் நாலடியினை எடுத்துக்காட்டியுள்ளார். ஆண்டும் தேரையின் உடற்கண் அமைந்த வழுவழுப்பினையே வழும்பென்று கூறினமையும் வழும்பில் சீர் என்புழியும் வழும்பு என்பது குற்றத்திற்கு ஆகுபெயரே ஆயினமையும் அறிக.

அடிநிலை தளர்க்கும் என்றது, வழுக்கி வீழச் செய்யும் என்றவாறு. அருப்பம்-அருமை; அந்நெறியை ஊன்று கோலின்றிக் கடத்தல் அருமையேயாம் என்பார் அருப்பமும் உடைய என்றார். வழுக்கு நிலத்தில் நடப்பார் ஊன்றுகோலின் உதவியால் செல்லின் வழுக்கி வீழாது செல்லக்கூடும் என்பதனை,

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
யொழுக்கம் உடையார்வாய்ச் சொல்  (415)

என்னும் திருக்குறளானும் உணர்க. வேரற்கோல் தேடிப் பெறல் வேண்டா எளிதே கிடைக்கும் என்பான் முழுநெறி அணங்கிய நுண்கோல் வேரல் என்றான். வேரல்-பிரம்புமாம். எருவை - கொறுக்கச்சி; பஞ்சாய்க்கோரையுமாம். கொண்டனிர் : முற்றெச்சம். இத்துணையும் ஆற்றினது தீமையளவு கூறிற்று என்க.

பராவரு மரபிற் கடவுட் காட்சி

225-233 : உயர்நிலை ....................... வெற்பே

பொருள் : உயர்நிலை மாக்கல் புகர்முகம் புதைய மாரியின் இகுதரு வில்லுமிழ் கடுங்கணைத் தாரொடு பொலிந்த வினைநவில் யானை - உயர்ந்து நிற்றலையுடைய பெருமைமிக்க நவிர மலையிடத்தே மழைபோன்று புகரையுடைய தம் முகம் மறையும்படி பகைவருடைய வில்பொழியா நின்ற கடிய கணையினை ஏற்று அவர் தம் தூசிப் படையோடே பிறக்கிடாது நின்று பொலிவு பெற்ற போர்த்தொழிலிலே பயின்ற யானைப்படையினையுடையதும், சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ - உச்சியிலே ஒளியையுடைய பூத்தொழில் செய்யப் பெற்றதும், இலஞ்சி ஓரியாற்று இயவின் - மடுக்களையுடைய யாற்றின் வழியின்கண் உள்ளதுமாகிய, மூத்த புரிசைப் பராவரு மரபின் கடவுள் காணின் - பழைய மதிலையுடைய திருக்கோயிலின்கண் அமர்ந்துள்ள பராவுதற்கரிய முறைமையினையுடைய கடவுளைக் கண்டீராயின், தொழா நிர்கழியின் அல்லது - அக் கடவுளை வணங்கி நீயிர் போகும் அத் துணையல்லது, வறிது நும் இயம் தொடுதல் ஓம்புமின் - சிறிது நும்முடைய இசைக்கருவிகளைத் தீண்டுதலைக் காப்பீராக அதற்குக் காரணம் என்னை எனின், மயங்கு துளி மாரிதலையும் அவன் மல்லல் வெற்பே - மயங்கின துளியையுடைய மழை இடையறாது பெய்யாநிற்கும் அவனது வளவிய நவிரம் என்னும் மலையிடத்தே ஆகலான்;

கருத்துரை : உயர்ந்து நிற்றலையுடைய மலையின்கண் மழை சொரிந்தாற்போன்று தம் புகருடைய முகம் புதையும்படி பகைவர் வில்லுமிழ்ந்த கடுங்கணை பட்ட காலத்தும் அதற்கு அஞ்சிப் புறங்கொடாது அப்பகைவரின் தூசிப்படையோடே பொருது பொலிவு பெற்ற யானைப்படைகளையுடையதும், தனது உச்சியிலே பூத்தொழில் செய்யப் பெற்றதும், இலஞ்சியை உடைய யாற்றின் வழியிடத்தே உள்ளதும், பழைமையானதும் ஆகிய மதிலையுடைய திருக்கோயிலின்கண் வீற்றிருந்தருளும் தொழற்கரிய முறைமையினையுடைய கடவுளை நீயிர் காண்பீராயின் அக்கடவுளைத் தொழுது செல்லக்கடவீர்; அவ்வளவேயல்லது நும்முடைய இன்னிசைக் கருவிகளைத் தீண்டாதே கொண்மின்; எற்றுக்கெனின் அந் நன்னவேளுக்குரிய வளமிக்க நவிரமலையில் இடையறாது மழை துளித்தல் உண்மையின் என்பதாம்.

அகலவுரை : உயர்நிலை மாக்கல் என்றது, நவிர மலையை. காரியுண்டிக் கடவுள் விரும்பி உறைதலான் உயர்ந்த நிலையினையும் பெருமையினையும் உடைத்தாகிய நவிரமலை என்க. மா - பெருமை. கல் - மலை. அம் மலையின்கண் நன்னன் வேண்மான் தன் படைகளை வைத்திருந்தான் என்பது இதனால் உணரற்பாலது. யானை ஒன்றே கூறினாரேனும், எடுத்த மொழியின் இனஞ்செப்பி நால்வகைப்படையும் கொள்க. யானைப் படையின் வீறு கூறுவார் புகர்முகம் புதைய மாரியின் இகுதரு வில்லுமிழ் கடுங்கணைத் தாரொடு பொலிந்த வினை நவில் யானை என்றார். அஃதாவது, பகைவருடைய வில்லுமிழும் கடுங்கணை தம்முகம் புதையப் புக்கவிடத்தும் புறங்கொடாது அப் பகைவர் தூசிப்படையிற் புக்குழக்கிப் பொலிவுறும் போர்ப்பயிற்சி மிக்க யானைப் படை என்றவாறு. சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பில் பட்டுப்பா டூன்றுங் களிறு (குறள் - 597) எனத் தேவரும் கூறுதல் காண்க. இனி, இவ்வாறன்றி ஆசிரியர் நச்சினார்க்கினியர் தங்கொண்டு கூட்டு முறையாற் பின்வருமாறு கூறினர் :

புகரையுடைய முகம் மறையும்படி முகபடாத்தாற் பொலிவு பெற்ற உயர்ந்த நிலையினையுடைய பெருமையை உடைய மலைபோலும் போர்த் தொழிலிலே பயின்ற யானையினையும்; மழைபோலத் தாழ்ந்து விழும் வில்லுக்கான்ற கடிய அம்பினையும் உடைய தூசிப்படையோடே பொலிவு பெற்ற பழைய மதில் என்பது. மேலும் அவர் கூறுமாறு : இனி அம்பையுடைய தூசிப்படையோடு பொலிந்த யானை என்று யானைக்கு அடையாக்கி அவ் வியானையினுடைய பூக்கள் எழுதின முகபடாம் போலே உயர்நிலை மாக்கற் புகர்முகம் புதையப் பொலிந்த சுடர்ப்பூவையுடைய புரிசை யென்றுமாம். இன்னும் யானையின் மத்தகம் போலே பொலிந்த சுடர்ப்பூவையுடைய புரிசை யென்றுமாம். இன்னும் யானையின் மத்தகம்போலே பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சியையுடைய உயர்நிலை மாக்கல்லையுடைய புரிசை என்பாரும் உளர். அவர் சுனையிடத்து மேலெழுந்த குவளை முதலியவற்றின் அரும்புகள் தலைசாய்ந்து கற்புதையக் கிடந்ததற்கு யானையின் மத்தகத்துப் புகரை உவமை என்று கொள்வர் என்பது.

தார்-தூசிப்படை. தாரின்கண் நின்றே பொலிவு பெற்ற என்க. சூழி ஈண்டு மதிலின் உச்சி; அது பூத்தொழிலாற் பொலிவு பெற்ற தென்பது கருத்து. இலஞ்சி - மடு; இது யாற்றிற்கு அடை. ஓர் ; அசைச்சொல், அன்றி ஒரு யாற்றின் வழியே நீயிர் செல்லுங்கால் அவ்வழியிற் காணப்படும் புரிசை எனினுமாம். யாறு ஓர் இயவின் என மாறி யாற்றுக் கரையில் ஒருவழி எனவும் ஓராற்றியவு, பாடமாயின், ஒருப்பட்ட வழியென்க எனவும் நச்சினார்க்கினியர் ஓதுவர். பராவுதல் - வாயாற் புகழ்பாடி வாழ்த்துதல். கடவுள் பல்வேறு சமயத்தாரும் பல்வேறு வகையாற் பராவப் படுவாரேனும் அவர்பெருமை எச்சமயத்தாரானும் கண்டுணர்ந்து பரவும் எளிமைத்தன்று என்பார் பராவரும் கடவுள் என்றார்;

அவரவர்தம் உள்ளத்துள் அவ்வுருவா அல்லாத
பிறவுருவு நீயென்னிற் பிறவுருவும் நீயேயாய்
அளப்பரிய நான்மறையான் உணர்த்துதற் கரியோனே
........................................................................
இலன்என இகழ்ந்தோர்க் கிலையு மாயினை
உளன்என உணர்ந்தோர்க்கு உளையும் ஆயினை
அருவுரு வென்போர்க்கு அவையும் ஆயினை
பொருவற விளங்கிய போத மாயினை  (தொல்-செய்- 458.மேற்)

என்றற் றொடக்கத்துச் சான்றோர் மெய்ம்மொழிகளான் இறையின் பெருமை அறிந்து பராவுதற்கு அருமையாயதென்று அறியப்படும். புரிசை-மதில்; கோயிலுக்கு ஆகுபெயர். கடவுள் ஈண்டுக் காரியுண்டிக் கடவுள் என்க. அக்கடவுளைக் காண்க என்று விதிமுறையான் ஓதாது கண்டீராயின் தொழுது போமின் என்பது கருத்து. இனிக் கூத்தர் முதலிய கலைவாணர் தெய்வம் பராவுங்கால் தம் இசைக்கருவிகளைப் பயன்படுத்திப் பாடிப் பரவுதல் வழக்கமாகலின் நவிரமலைக்கண் மட்டும் நும் இசைக்கருவிகளைத் தொடாதொழிமின் என்பான் வறிது நும்மியம் தொடுதல் ஓம்புமின் என்றான். பின்னர் நவிரமலை இடையறாத மழையினையுடைத்து என்னுமாற்றால் நீயிரும் நும்மியங்களும் மழையான் நனைந்து நீயிர் போதல் அரிதாம் என்று தீங்கு கூறப்பட்டமையறிக. தொழாநிர் - தொழுது. நீர் என்பது நிர் என்று குறுகி நின்றது. தொழநீர் கழிமின் என்றும் பாடமுண்டு. இனித் தொழாநிரென்பது மறையன்றித் தொழுதென்று பொருள் தருமேனும் உணர்க என்பர், நச்சினார்க்கினியர். இயம்-இசைக்கருவி. தொடுதல் ஓம்புமின் என்றது, தொடாதே கொண்மின் என்றவாறு. தலையும்-பெய்யும். மயங்குதுளி மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே என்றது மலைவளம் கூறுவார் போன்று நன்னன் வேண்மானின் செங்கோன்மைச் சிறப்பினை வியந்தோதியவாறாம். என்னை?

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு  (குறள்-545)

எனச் சான்றோர் ஓதுப வாகலான்.

வழிப்போக்கர் விரையப் பார்த்தலின் கேடு

234-241 : அலகை .......................... நெறிமாறுபடுகுவிர்

பொருள் : அலகை அன்ன வெள்வேர்ப் பீலிக் கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் - பலகறையை ஒத்த வெள்ளிய வேரினையுடைய பீலிகளாகிய தோகையையுடைய மயில் அக்காட்டிடத்தே ஆடியிளைத்து நிற்பினும், கடும்பறைக் கோடியர் மகாரன்ன நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும் - கரிய பறையினையுடைய கூத்தருடைய பிள்ளைகள்போன்று நெடிய மூங்கிலின் கவடுகளிலே உள்ள கடுவன் பாயினும், நேர்கொள் நெடுவரை நேமியில் தொடுத்த சூர்புகல் அடுக்கத்துப் பிரசங்காணினும் - நேர்மையைத் தன்னிடத்தே கொண்ட நெடிய மலையின்கண் தேருருள்போல் வைத்த தெய்வம் விரும்பின பக்க மலைக்கண் உள்ள தேனிறாலைக் காணினும், ஞெரேல் என நோக்கல் ஓம்புமின் உரித்தன்று - அவையிற்றைக் கடுகப் பார்த்தலை ஒழிமின் அங்ஙனம் பார்த்தல் நுமக்குரிய தொழில் அன்று அதற்குக் காரணம் என்னையோ எனின், நிரை செல்ல மெல்லடி நெறிமாறு படுகுவிர் - நிரைத்துச் செல்லுதலையுடைய மெல்லிய அடியீடு தவறுதலான் வழி தப்புவீர் ஆகலான்,

கருத்துரை : பலகறையை ஒத்த வெள்ளிய முருந்தினையுடைய பீலிகளின் திரட்சியாகிய தோகையுடைய மயில்கள் அக்காட்டிடத்தே ஆடித்தளர்ந்து நின்றாலும், கழைக்கூத்தரின் பிள்ளைகளை ஒத்த கடுவன் நெடிய மூங்கிலிடத்தே பாய்ந்தாலும், செவ்விய மலையிடத்துள்ள பக்கமலைக்கண்ணே தேருருள் போன்று தொடுக்கப்பட்ட தேனிறாலைக் கண்டாலும், அவையிற்றைக் கடுகப் பார்த்தலை ஒழிமின்; அங்ஙனம் பார்த்தல் நுமக்குரிய தொழிலும் அன்று; அதற்குக் காரணம் என்னை? எனின், அங்ஙனம் பார்க்குங்கால் நீயிர் வழிதப்புவீராகலான் என்பதாம்.

அகலவுரை : அலகை - பலகறை; இதனைச் சோழி என்றும் வழங்குப. பறையலகென்பது பலகறை என மருவிற்றென்பர் (சீவக - 2773 ந. உரை) ஆசிரியர் நச்சினார்க்கினியர். பறையலகே யைதாம் பலகறை என்றானவே என்பர் ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது என்னும் நூலின் ஆசிரியர். இது மயிற்பீலியின் அடியிடத்திற்கு உவமை. வேர் - பீலியின் அடியாகிய முருந்து. கலவம் - மயிற்றோகை. மஞ்ஞை-மயில். கட்சி - காடு; வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரல் இசைத்துக் காட்டும் போலும். (சிலப்-வேட்டு-வெட்சி-14) எனவரும் சிலப்பதிகாரத்தும் இச்சொல் இப்பொருட்டாதல் அறிக. தளர்தல் - ஆடியிளைத்தல். கட்சியில் கலவம் தளரினும் எனமாறி அக்காட்டிடத்தே ஆடுதற்கு விரித்த கலாபத்தினது பாரத்தாலே ஆடியிளைத்துநிற்பினும் என்பர் நச்சினார்க்கினியர். கடும்பறைக் கோடியர் என்றது, கழைக் கூத்தரை. கழைக்கூத்தர் பிள்ளைகள் மூங்கிலில் ஏறி ஆடுமாறு போல ஆடுதலானும், கடுவன் அப்பிள்ளைகட்கு உவமமாத லறிக. நேமி-உருள்; வடசொல். தேத்திறாலின் பெருமை கூறியவாறு. பிரசம் - தேன்; வடசொல்: சூர் - தீண்டிவருத்தும் தெய்வம். புகல் விருப்பம். அடுக்கம் - பக்கமலை. ஞெரேர் என்றது விரைவுக்குறிப்பு. உரித்தன்று என்றது செவியறிவுறூஉ. ஆறுசெல்வோர் தாம் செல்லும் நெறியை விழிப்புடன் நோக்குதல் வேண்டுமன்றி அயலிடத்து நிகழ்ச்சிகளைப் பார்த்தல் நன்றன்று என்றவாறு. நிரை செலல் - ஒன்றன்முன் ஒன்றாக நிரல்பட அடியிட்டு நடத்தல். நெறி மாறுபடுதல்- வழிதப்பிப் போதல்.

காட்டின்கட் கிடைக்கும் ஆற்றுணாவும், கல்லளை உறையுளும்

242-255 : வரைசேர் .................. வதிமின்

பொருள் : வரைசேர் வகுந்தின் கானத்துப் படினே - மலையைச் சேர்ந்த வழியினையுடைய காட்டிடத்தே செல்லின், கழுதிற் சேணோன் ஏவொடு போகி - பரணகத்தேறி யானை முதலியவற்றிற் கெட்டாத உயரத்தே இருந்தவன் எய்த அம்போடே போகி, இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி - நெய்விழுதை ஒத்த வெள்ளிய நிணம் நெருக்குற்று, நிறம் புண் கூர்ந்த - மார்பிடத்தே புண் மிக்கதாய், நிலந்தின் மருப்பின் நெறிகெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின் இருள் துணிந்தன்ன ஏனங்காணின் - நிலத்தை அகழ்ந்து கிழங்குகளைத் தின்னலாலே மண் தின்று தேய்ந்த கொம்பினையுடையதாய் நெறிகெட்டு வீழ்ந்து கிடக்கின்ற கரிய சருச்சரையுடைய கழுத்தினை உடைத்தாகிய இருள் அற்றுக் கிடந்தாற்போன்ற பன்றியைக் கண்டீராயின், முளி கழை இழைந்த காடுபடு தீயின் நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து - உலர்ந்த மூங்கில் தம்மில் இழைந்ததனாற் பிறந்த காடெங்கும் உண்டாகிய தீயினாலே செறிந்த புகை நாறாமல் வக்கி மயிர் போகச் சீவித்தின்று, துகள் அறத்தெளிந்த மணிமருள் தெண்ணீர் குவளை அம் பைஞ்சுனை அசைவிடப் பருகி - கலக்கமறத் தெளிந்த பளிங்கென்று மருளும் தெளிந்த நீரைக் குவளையால் அழகிய பசிய நிறத்தவாகிய சுனையிடத்தே வழியின் இளைப்புத் தீரும்படி குடித்து, மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கண், பொதியினிர் - முழுதுங் தின்னாமல் மிகுத்துக் கொண்ட தசையுணவைப் பொதிந்த பருத்த இடத்தையுடைய பொதியின் சுமையினை உடையிராய், புள் கைபோகிய புன் தலை மகாரோடு - வளை கையினின்றும் போதற்குக் காரணமான புற்கென்ற தலையினையுடைய நும் பிள்ளைகளோடே, அற்குஇடை கழிதல் ஓம்பி ஆற்றநும் இல் புக்கன்ன கல் அளைவதிமின் - இராப்பொழுதிற்கு வழிப்போதலை அவ்விடத்தே ஒழித்து வழியிடத்தனவாகிய நும் இல்லிலே புக்காலொத்த கன் முழைஞ்சுகளிலே தங்குவீராக;

கருத்துரை : மலையைச் சேர்ந்த வழியினையுடைய காட்டிடத்தே செல்லுங்கால், பரணகத்தேறி உயர இருக்கும் கானவன் எய்த கணையேறுண்டு - ஓடி நெய்யிழுதை ஒத்த வெள்ளிய நிணம் நெருக்குற்று, மார்பிடத்தே புண்மிக்கதாய், நிலத்தை அகழ்தலாலே மண்ணாற் றேய்க்கப்பட்ட கொம்பினையுடையதாய், நெறிகெட்டு வீழ்ந்து கிடக்கின்ற கரிய பிணரையுடைய கழுத்தினையுடைய இருள் அற்றுக்கிடந்தாலொத்த பன்றியைக் காண்பீராயின், அதனை உலர்ந்த மூங்கில் தம்முள் இழைந்தமையானே தோன்றிக் காடெங்கும் பரவிய தீயினாலே செறிந்த புகை நாறாதவாறு வாட்டி மயிர் போகச் சீவித்தின்று, நன்கு தெளிந்தசுனைக் கண்ணுள்ள நீரை நும் வழி வருத்தம் போம்படி குடித்து எஞ்சியதசையினைப் பொதிந்து கட்டிய சுமையை உடையிராய், நும் புன்றலை மகாரோடு இராக்காலத்தே வழிப்போதல் தவிர்ந்து வழியிடத்தன வாயநும் மில்லத்தை ஒத்த கன்முழைஞ்சுகளிலே இனிதே உறைவீராக என்பதாம்.

அகலவுரை : வகுந்து - வழி. இஃதிப் பொருட்டாதலை கருந்தடங் கண்ணியும் கவுந்தியடிகளும், வகுத்து செல்வருத்தத்து வழிமருங்கிருப்ப (காடு - 166-7) என்னுஞ் சிலப்பதிகாரத்தானும் உணர்க. கழுது - பரண். சேணோன் வானிடத்திருப்போன். மரம் பரண் முதலியவற்றின் மீது ஏறி உயரத்திருப்போன் என்பது கருத்து. கலிகெழு மீமிசைச் சேணோன் (சிலப்-25:40) கலிகெழு மரமிசைச்சேணோன் (குறிஞ்-40) எனப் பிறரும் ஓதுதல் காண்க. ஏவு - அம்பு ஏவொடு போகிய என்றது, கணையேறுண்டு அக்கணை ஏவியவன் கையகப்படாமற் றப்பி ஓடிய என்றவாறு. இழுது-வெண்ணெய். வால்-வெண்ணிறம். அம்புதைத்தவிடத்தே ஊன் நெருக்குண்டதென்பார், வானிணம் செருக்கி என்றார். நிறம்-மார்பு. கூர்ந்த - மிகுந்த நிலந்தின் மருப்பென்றது நிலத்தைத் தோண்டுதலாலே தேய்ந்த கொம்பென்றவாறு. நிலத்தாற் றின்னப்பட்ட மருப்பென்க. நெறிகெடுதலாவது கணையேறுண்டிருத்தலான் வலிகுன்றி மேலும் போதற்கியலாதபடி வழியை விட்டொழிதல். இரும்பிணர் - கரிய சருச்சரை. எருத்து - கழுத்து. இருள் துணிந்தன்ன - இருள் துண்டுபட்டுப் கிடந்தாற் போன்ற இருள் துண்டுபட்டுக் கிடத்தல் மரபன்மையான் இங்ஙனம் மரபு பிறழக்கூறுதல் குற்றமாம் பிறவெனின், அற்றன்று. அவையும் செய்யுளின்பம் மிகுதற் பொருட்டுப் பாடல்சான்ற புலனெறி வழக்கிற் சான்றோராற் கூறப்படுதலுண்டு, என்னை,

அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி  (1-2)

எனப் பெரும்பாணாற்றுப் படையினும்,

நிலவுக் குவித்தன்ன வெண்மணல்  (123)

எனக் குறுந்தொகையினும், பிறசான்றோரும் இங்ஙனம் மரபு பிறழ்ந்தும் செய்யுளின்பம் படக் கூறுதல் காண்க. ஏனம்-பன்றி. காணின் என்றது ஒரோவழிக் காண்டல் கூடும். அவ்வாறு கண்டனிராயின் என்றவாறு. முளிதல்-உலர்தல் பொரியரை யுழிஞ்சிலும் புன் முளி மூங்கிலும் (சிலப்-காடு : 76) என்றார் பிறரும். கழை மூங்கில். உலர்ந்த மூங்கில் ஒன்றனோடு ஒன்று உரிஞ்சுங்கால் தீயுண்டாதல் இயல்பு. இதனை, இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப (302) என்னும் மதுரைக் காஞ்சியானும் உணர்க. நளிபுகை - செறிந்த புகை. புகை கமழ்தலாவது, வாட்டுங்கால் புகை மிக்குத் தசையின் சுவையினைக் கெடச் செய்தல். சுவைகெடாமல் வக்குக என்றவாறு. இறாவுதல்-தீயின் வாட்டி மயிர் போகச் சீவுதல். வக்குதல் - வாட்டுதல். இதனை வதக்குதல் என்று இக் காலத்தார் வழங்குப. துணிந்த - தெளிந்த. தெண்ணீர் என்றது பெயர் மாத்திரையாய் நின்றது. மணி - நீலமணியுமாம். மருள் : உவம உருபு. குவளையம் பைஞ்சுனைத் தெண்ணீர் என்றது பருகற் கினிய நீருண்மை கூறிற்று. அசைவு - அசை என ஈறுகெட்டு நின்றது. அசைவு - வருத்தம். ஈண்டு வழிநடையான் உண்டாய இளைப்பினைக் குறிக்கும். பதம் - உணவு; ஈண்டுப் பன்றியின் தசை.

மகப் பெற்ற மகளிர் வளையலணியாது விடுதல் பண்டைக்கால வழக்கமாகும் ஆதலின் புட்கை போகிய புன்றலை மகாரோடு என்றார். புள்-வளையல். வளையல் தம் தாயர் கையினின்றும் அகலுதற்குக் காரணமான மகார் என்றவாறு. அதற்கு இராப் பொழுதிற்கு. இடைகழிதல்-வழியிடத்தைக் கடத்தல். ஆற்ற : பலவறிசொல். ஆற்றின்கண் உள்ளனவாகிய கல்லளை என்க. இல்புக்கன்ன கல்லளை என்றது உறைதற்கினியவாதல் கூறியவாறு. இதன்கண் வல்சியும் அசையும் நற்புலமும் சேரக் கூறினமை காண்க. வதிதல்-தங்குதல். கானத்துப்படின் மிசைந்து பருகிப் பொதியினிராய் மகாரோடே கழிதல் ஓம்பி அற்கு வதிமின் எனக் கூட்டுக.

களிறு மதனழிக்கும் மாசுணமும், இகந்து சேட்கமழும் பூவும், உண்டோர் மறந்தமைகல்லாப் பழனும்.

256-267 : அல்சேர்ந்து ............... கழிமின்

பொருள் : அல்சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி - இராக்காலத்திற்கு எல்லீரும் கூடியிருந்து இளைப்பாறி, வான் கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து - வானிடத்தே ஞாயிற்றின் கதிர் விரிந்த விடியற்காலத்தே துயிலுணர்ந் தெழுந்து, கான் அகப்பட்ட செந்நெறி கொண்மின் - காட்டிடத்தே கிடந்த செவ்விய நெறியைப் போவீராக, கயங் கண்டன்ன அகன் பை அங்கண் - குளத்தைக் கண்டாலொத்த குளிர்ச்சியையுடைய அகன்ற பசிய அழகிய அக் காட்டிடத்தே, மைந்து வலி சினத்த களிறு மதன் அழிக்கும் - வலிமிகுகின்ற சினத்தையுடையவாகிய யானை வலியைக் கெடுத்து விழுங்குவனவாய், துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி - விழுந்து கிடக்கின்ற பெருமரங்களை ஒக்கும் பெரும் பாம்பு கிடக்கும் வழியை விலங்கி, இகந்து சேட் கமழும் பூவும் உண்டோர் மறைந்தமைகல்லாப் பழனும் - மரபினைக் கடந்து தூரிய நிலத்தே சென்று மணங்கமழாநின்ற பூவும் ஒருகால் நுகர்ந்தவர் மறந்திருத்தற்கியலாத பழங்களும், ஊழ் இறந்து பெரும்பயம் கழியினும் - முறைமை கெட்டு அவற்றாற் கொள்ளும் பெரிய பயனைத் தாம் கொள்ளாது கழியினும், மாந்தர் துன்னார் - அவையிற்றைத் தெய்வங்கள் அன்றி மாந்தர் அணுகாராதலான், இருங்கால் வீயும் பெருமரக் குழாமும் இடனும் வலனும் நினையினிர் நோக்கி - நீளும் காம்பையுடைய அப் பூவினையும் அக் கனிகளையுடைய பெரிய மரக்கூட்டத்தினையும் இடத்தினும் வலத்தினும் விழிப்புடையிராய் நோக்கி, குறி அறிந்து அவை அவை குறுகாது கழிமின் - யான் கூறியவாற்றால் அவையிற்றின் குறிகளை அறிந்து அவையிற்றை அவையிற்றை அணுகாமற் போவீர்;

கருத்துரை : இராப் பொழுதில் அக் கல்லளைக்கண் நீவிர் எல்லீரும் ஒருங்கிருந்து இளைப்பாறி ஞாயிறு தோன்றிய விடியற் காலத்தே துயிலுணர்த் தெழுந்து காட்டிடத்தே கிடந்த செவ்விய நெறியைப் போவீராக. அங்ஙனம் போங்கால், குளத்தைக் கண்டாலொத்த குளிர்ச்சியுடைய பசிய அழகிதாய அக்காட்டிடத்தே வலிய யானையையும் வலிகெடுத்து விழுங்கும் பெரிய மரம் வீழ்ந்து கிடந்தாற் போன்று கிடக்கும் பாம்புகளையும் அணுகாது விலங்கி, இயற்கைக்கு முரணாக நெடுந்தொலை மணங் கமழும் பூக்களையும், உண்டோர் மறத்தற் கியலாச் சுவையுடைய பழங்களையும், தெய்வம் அணுகுதலன்றி மாந்தர் இம்முறைகெட அணுகாராதலான் நீளிய காம்பையுடைய அப் பூவையும், அப்பழங் கனிந்த பெருமரக் கூட்டங்களையும் இடத்தும் வலத்தும் விழிப்புடன் நோக்கி, யான் கூறிய வாற்றானே அவையிற்றின் குறிகளை அறிந்து அவையிற்றைக் கண்டால் அணுகாமல் செல்லக் கடவீர் என்பதாம்.

அகலவுரை : காட்டகத்தே இரவில் பிரிந்துறைதல் கூடாதென்பார் அல்சேர்ந்து அல்கி என்றார். அல்-இரவு. அல்குதல்-தங்குதல். களிறு வழங்கதர்க் கானத்து அல்கி (பொரு-49) என வருதல் காண்க. வான்கண் என்றதற்கு ஆதித்தன் எனச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியரும், உலகிற்குக் கண்ணாகிய ஆதித்தன் என அடியார்க்கு நல்லாரும் உரை கூறினர். விடியல் விடியற்காலம். ஏற்றெழுதல் - உணர்ச்சியை ஏற்றுத் துயிலினின்றும் எழுதல். செந்நெறி - செவ்விய வழி. அகன் பை அம் கண் - அகன்ற பசிய அழகிய காட்டிடம் என்க. (259) கயங் கண்டன்ன என்பதனை, (265) பெருமரக் குழாத்திற்கு அடையாக்கி அகன்பை அங்கண் என்பதனை மாசுணத்திற்கு அடையாக்கி அகன்ற படத்தினையும் அழகிய கண்ணினையும் உடைய பெரும்பாம்பென உரைவகுத்தார் நச்சினார்க்கினியர். மைந்து -வலிமை. மைந்து மலிசினத்த களிறு என்னும் தொடரின் கண் உள்ள அடைமொழிகள் மாசுணத்தின் சிறப்பைக் குறிப்பானுணர்த்தும் ஏதுவாய் நின்றன. துஞ்சுதல் - உறங்குதலாகலான் விழுந்து கிடக்கும் மரத்தைத் துஞ்சுமரம் என்றார். கடுக்கும் : உவமவுருபு. மலர்கள் இயற்கையாகவே மணங் கமழும் தொலைவினன்றி மிக்க தொலைவினும் மணக்கும் மலர் என்பார் இகந்து சேண்கமழும் பூ என்றார். அங்ஙனம் சிறப்பாகக் கமழ்தற்குக் காரணம் அம்மலர்கள் தெய்வத் தன்மையுடையன என்பது கருத்து. உண்டோர் மறந்தமை கல்லாப் பழன் என்றது அப்பழத்தின் இயற்கைக்கு விஞ்சிய சுவை யுடைமை கூறி அதன் காரணம் தெய்வத் தன்மையுடைமை என்பதும் கூறியபடியாம். உண்டோர் மறந்தமை கல்லா என்பதற்கு நுகர்ந்தவர் மறந்து உயிர் வாழ்தல் ஆற்றாத என நச்சினார்க்கினியர் உரைவிரித்தார். ஊழிறந்து என்பதனை மாந்தர் துன்னார் என்றதனோடும் கூட்டுக. பெரும்பயம் கழியினும் என்றது இடைப்பிறவரல். எனவே, தெய்வத் தன்மையுடைய அப்பூவும் பழனும் தெய்வங்கட்கே உரியன. மாந்தர் அவையிற்றை நுகர்தல் கூடாது என்னும் முறையினைக் கடந்து எய்தார். அவற்றானுகரும் பேரின்பம் தமக்கில்லையாய் ஒழியினும் என்றவாறு. இனி அத்தகைய பூவிற்கு அடையாளங் கூறுவான் இருங்கால் வீ என்றான். பழத்திற்கு அவை கனிவன பெருமரக் குழாத்திடை என்பான், பெருமரக் குழாமும் என்றான். அவை நீயிர் செல்லும் வழிக்கண் இருமருங்கும் உள வென்பான், இடனும் வலனும் நோக்கி என்றான். யாம் நுமக்குக் கூறுவதனை மறவாதே கொண்மின் என்பான். நிலையினிர் என்றான். யாம் கூறிய குறிகளால் அறிந்து அவையிற்றைக் குறுகா தொழிமின் என்றது, குறுகின் தெய்வத்தால் தீங்குறுவீர் என்பது குறிப்பு. அத்தகைய பூவும் பழனும் யாண்டும் உளவாகலின் அவை அவை என அடுக்கி மொழிந்தான்.

இதன்கண் சோலை கூறப்பட்டது. சேர்ந்து அல்கி, ஓம்பி, எழுந்து, நெறிக் கொண்மின்; மாசுணம் விலங்கி, பூவும், பழனும் மாந்தர் துன்னார் ஆகலின்; வீயும் மரக்குழாமும் நோக்கி அறிந்து அவை அவை குறுகாது கழிமின் எனக் கூட்டுக.

குறவரும் மருளும் குன்றம்

298-277 : கோடு பல ...................... தொடுமின்

பொருள் : கோடுபல முரஞ்சிய கோளி ஆலத்து - கொம்புகள் பலவும் முற்றிய கோளியாகிய ஆலமரத்திடத்தே, கூடுஇயத்து அன்ன குரல் புணர் புள்ளின் - கூடின பல இசைக் கருவிகளை ஒத்த பல ஓசையும் கூடின பறவைத் திரளையுடைய, நாடுகாண் நனந்தலை மென்மெல அகன்மின் - நாடுகளை எல்லாம் காணலாயிருக்கின்ற அகன்ற இடத்தையுடைய மலையை மெல்ல மெல்லப் போவீர், மாநிழற் பட்ட மரம் பயில் இறும்பின் - பெரிய நிழலுண்டான மரம் நெருங்கின குறுங்காட்டாலே, ஞாயிறு தெறாஅ மாகம் நனந்தலை - ஞாயிற்றால் சுடப்படாத விண்ணைத் தீண்டுகின்ற அகன்ற இடத்தையுடைய, தேஎம் மருளும் அமையம் ஆயினும் - நீயிர் திசை தெரியாமல் மயங்கும் இராக்காலமாயினும் இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் - முறியாத வலிய வில்லையுடையராய் விலங்கு தேர்ந்து நின்று திரியாநின்ற, குறவரும் மருளும் குன்றத்துப் படினே - குறவரேயும் மயங்கும் குன்றத்தே நீயிர் செல்லின், அகன்கண் பாறை துவன்றி - அகன்ற இடத்தையுடைய பாறையிலே கூடி, இயங்கல் ஓம்பிக் கல்லென நும் இயங்கள் தொடுமின் - மேலே செல்லுதலொழிந்து கல்லென்னும் ஓசைபட நும்முடைய இசைக் கருவிகளைப் பயில்வீராக;

கருத்துரை : கொம்புகள் பலவும் முதிர்ந்த கோளியாகிய ஆலமரத்திடத்தே பல்வேறு இசைக் கருவிகள் ஒருங்கு கூடி இசைத்தாற் போன்ற பல்வேறு ஓசையுங் கூடின பறவைக் குழாத்தையுடையதும், தன்பால் ஏறிநின்று காண்பார்க்குத் தூரிய நாடுகள் எல்லாம் காணலாயிருக்கின்ற அகன்ற இடத்தையுடையதுமாகிய மலையை, மெல்ல மெல்லக் கடந்து போமின். பெரிய நிழல்தரும் மரங்கள் நெருங்கின குறுங் காட்டாலே ஞாயிறு சுடப்படாததும், நீயிர் திசைமயங்கும் இரவினும் முறியாத வலிய வில்லையுடையராய் விலங்குகளைத் தேடித் திரியும் குறவர் தாமும் மயங்குகின்ற குன்றத்தே நீயிர் செல்லின், ஆண்டு நின்றும் போதலொழிந்து எல்லீரும் ஒருங்கு கூடிக் கல்லென்னும் ஓசையுண்டாகுமாறு நும்முடைய இசைக் கருவிகளை இயக்குமின் என்பதாம்.

அகலவுரை : கோடு பலவாய் முதிர்ந்த கோளி ஆலம் எனினுமாம். நீண்ட காலம் நின்று முதிர்ந்த தொன்மரம் என்றவாறு. முரஞ்சிய - முதிர்ந்த; முரஞ்சல் முதிர்வே (உரி-35) என்பது தொல்காப்பியம். கோளி - பூவாது காய்க்கு மரம். கோளியாலத்துக் கொழு நிழல் (புறநா-58:2) கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய் (சிலப்-15:24) எனப் பிறரும் கூறுதல் காண்க. கோளி என்றதற்குப் பழத்தைத் தன்னிடத்தே கொண்டுள்ளதாகிய என ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறினர். கொள் என்னும் வினைப்பகுதி கோள் என முதல் நீண்டு இகர விகுதி பெற்றதென்றல் அவர் கொள்கை போலும். ஆலத்துக் கூடு புள் என்க. பழுத்த மரத்திற் பல்வேறு பறவைகளும் குழுமிப் பல்வேறு குரலுடையவாய் ஆரவாரித்தற்குப் பல்வேறு இசைக் கருவிகளும் ஒருங்கே இசைத்தல் உவமை. மலையுச்சியினின்று காண்பார்க்குச் சேய்மைக்கண் உள்ள நாடுகளும் தெரிதல் பற்றி அம்மலை நிலத்தின் உயரம் கூறுவார் நாடுகாண் நனந்தலை என்றார். நந்தலை: ஆகுபெயர்.

மாநிழல் - பெரிய நிழல். இறும்பு குறுங்காடு. ஞாயிற்றால் சுடப்படாததும் மாகத்தைத் தீண்டுவதும் ஆகிய குன்றம் என்க. ஞாயிறுதெறா அமைக்கு மாநிழற்பட்ட மரம்பயில் இறும்பு ஏதுவென்க. தெறுதல் - சுடுதல். தேம் - திசை. மலையிடத்தே பிறந்து அம் மலையிடத்தே விலங்கு தேரும் வன்மையுடைய குறவரும் என்றமையான் அக்குன்றத்தின் சிறப்பு நன்கு விதந்தோதப்பட்டமை அறிக. இறாஅ-இற்றுப்போகாத இனி, இறாமீன் போன்ற வில் எனினுமாம். என்னை?

புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்  (269-70)

எனப் பெரும்பாணாற்றுப்படையினும் இறாமீனை விற்போற் பிறழ்ந்த தென்றலான் என்க.

நனந்தலை மென்மெல அகன்மின் குன்றத்துப்படின் துவன்றி இயங்கல் ஓம்பிக் கல்லென நும் இயங்கள் தொடுமின் எனக் கூட்டுக. இதன்கண் மலையும் சோலையும் மாபுகல் கானமும் கூறியவாறுணர்க.

கானவரோ ! வானவரோ!

காடு காத்துறையும் கானவரின் விருந்தோம்பற் சிறப்பு

278-286 : பாடினருவி .................. இனியராகுவிர்

பொருள் : பாடுஇன் அருவிப் பயங்கெழு மீமிசைக் காடு காத்து உறையும் கானவர் உளரே - ஓசையினிதாகிய அருவியின் பயன் பொருந்திய உச்சிமலையிலே காட்டைக் காத்திருக்கும் கானவர் பலரும் உளர், நிலைத்துறை வழீஇய மதன் அழி மாக்கள் புனற்படு பூசலின் விரைந்து வல் எய்தி - நிலையாய்ப் போம் துறையைத் தப்பி ஆழத்திலே புக்க வலியழிந்த மாக்கள் நீரிலே அழுந்துகின்ற அல்லல் கண்டு விரைந்தெடுக்கப் புகுவாரைப் போன்று விரைந்து ஓடிவந்து, உண்டற்கு இனிய பழனும் கண்டோர் மலைதற்கு இனிய பூவும் காட்டி - எல்லோரும் உண்டற்கு இனியவாகிய பழங்களையும் கண்டவர்கள் சூடுதற்கு இனியவாகிய பூக்களையும் நுமக்குக் காட்டி நீர் அவையிற்றை நுகர்ந்த பின்னர், ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற - இடையூறு மிக்க வழியை அவர் நுமக்கு முற்படப் போகையினாலே, நும்மின் நெஞ்சத்து அவலம் வீட இம் என் கடும்போடு இனியிர் ஆகுவிர் - நும்முடைய நெஞ்சில் திசைமயக்கத்தான் எய்திய கேடு போம்படி இம்மென்னும் ஓசையையுடைய சுற்றத்தோடே இனிதே மன மகிழ்வீர்;

கருத்துரை : நீயிர் திசை மயங்கிச் சென்னெறி அறியீராய பொழுது மேலே செல்லுதல் ஒழிந்து ஆண்டுக் குழுமி நும் இசைக் கருவிகளை இயக்குவீராயின், அருவியிசையின் பயன் பொருந்திய அக் குன்றத்தின் மிசைக் காடுகாவல் செய்துறையும் குறவர் யாண்டும் உளராதலான், அவர் நும் இசைக் கருவியின் ஓசையைக் கேட்டவுடனே நிலைக்கும் துறையிற் றப்பி நீரின் அழுந்துவாரின் அவலங் கண்டு அவரை எடுக்க விரைவாரைப் போன்று, விரைந்து நும்பால் எய்தி நீயிர் உண்ணுதற்கினிய பழங்களையும் சூடற்கினிய பூவையும் காட்டி நும்மை அழைத்துக் கொண்டு செவ்விய நெறியிலே தாம் முந்துறப் போகையாலே திசை மயக்கத்தான் வந்த அவலந் தீர்ந்து நீயிர் நும் இசைபயில் சுற்றத்தோடே இனிதாக மனமகிழ்வீர் என்பதாம்.

அகலவுரை : பாடின்னருவி என்றது ஆற்றினது இனிமை கூறியவாறு. என்னை? ஆறு செல்வார்க்குத் தம் இன்னோசையானே இன்பமூட்டி வழிநடை வருத்தம் தோன்றாமற் செய்தலான் என்க. அருவிப் பயன் என்றது, அருள்நீர் பாய்தலால் அம் மலைநிலத்தே படும் பல்வேறு கூலங்களை என்க. அப்பயன் உண்மையால் அங்குக் கானவர் காத்துறைவாராயினர் எனப் பொருள் பயந்து அருவிப் பயங்கெழுமீமிசை என்றது குறிப்பேதுவாய் நிற்றலுணர்க. கானவர் - குறிஞ்சிநில மாக்கள். உளரே என்றதன்கண் ஏகாரம் ஈற்றசை. கானவர் பிறர்க்குதவும் பண்புமிக்கோர் என்பதனை அவர் விரைந்து வருமாற்றான் விளக்குவார், நிலைத்துறை வழிஇய மதனழி மாக்கள் புனற்படு பூசலின் விரைந்து எனத் தகுந்த உவமை எடுத்தோதினார். நீரின் மூழ்கி இறப்பாரைக் கண்டவர் எடுக்க விரையுமாறுபோல விரைந்து வருவர் என்பது கருத்து.

இனிக் கானவர் காட்டினுள் தனித்தனி திரியுங்கால் ஏதேனும் இடையூறு நேர்ந்தால் தம்பாலுள்ள கொம்பு முதலியவற்றை ஒலிப்பர் என்றும், அங்ஙனம் ஒலித்தவுடன் நான்கு திசைகளினும் திரிகின்ற கானவர் எல்லாம் விரைந்து அவ்வொலி யெழுந்த இடத்திற்கு ஓடிவருவர் என்றும்,

கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன் (கம்ப. 1-9)

ஒலியுலாஞ் சேனையை உவந்து கூயினான்
......................................
புலியெலாம் ஒருவழிப் புகுந்த போலவே  (þ.10)

............................................
ஒருங்கடை நெடும்படை ஒல்லென் ஆர்ப்பினோடு
அருங்கடை யுகந்தனில் அசவி மாமழை
கருங்கடல் கிளர்ந்தெனக் கலந்து சூழவே  (þ.11)

எனவரும் இராமாவதாரத்தான் அறியலாம். நிலைத்துறை வழிஇயினார் திசைமயங்கிய கூத்தர்க்குவமை. அவரை எடுக்க விரைவோர் கானவர்க் குவமை என்க. புனற்படு பூசல் நீரின் அழுந்துவோர் செய்யும் ஆரவாரம். இவ்வுவமை,

உடுக்கை இழந்தவன் கைபோல வாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

என்னுந் திருக்குறளை நினைவூட்டுதல் அறிக. இனி அக் கானவர் கூத்தர்க்குச் செய்யும் உதவி கூறுகின்றார். உண்டற் கினிய பழனுங் கண்டோர் மலைதற் கினிய பூவுங்காட்டி ஊறு நிரம்பிய ஆறவர் முந்துற என்னுந் துணையும்,

நெறியிடு நெறிவல்லேன் நேடினன் வழுவாமல்
நறியன கனிகாயும் நறவிவை தரவல்லேன்
உறைவிடம் அமைவிப்பேன் ஒருநொடி வரையும்மைப்
பிறிகில னுடனேகப் பெறுகுவன் எனினாயேன்  (கம்ப-கங்கை-65)

என்பன சொல்லி இராமனை இரக்கும் குகனுடைய அன்பினையும்,

ஊனமுது கல்லையுடன் வைத்திதுமுன் னையினன்றால்
ஏனமொடு மான்கலைகண் மரைகடமை இவையிற்றில்
ஆனவுறுப் பிறையச்சியமு தடியேனும் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்தது இது தித்திக்கும்  (பெரிய : கண்ணப் : 150)

எனத் திருக்காளத்தி இறைவனை இரக்கும் கண்ணப்பன் அன்பினையும் நினைவூட்டும். கானவருள்ளும் வானவர் என்றும் உளர்போலும். அவலம் - திசைமயக்கத்தான் உண்டாய துன்பம். இசைக்கலை வாணர் வழிப்போங்கால் தம் மனதிற்கிசைந்த இசையினை மெல்ல முரன்றுகொண்டு போகும் வழக்கமுடையராதலை நுண்ணிதின் உணர்ந்த புலவர் பெருமான் கூத்தர் சுற்றத்தை இம்மென் கடும்பு என எடுத்தோதியது பெரிதும் இன்பம் பயப்பதாம். இயங்கள் தொடுமின், தொட்டால் கானவர் உளர், அவர் வல்லெய்திக் காட்டி, முந்துற நும் அவலம் வீட இம்மென் கடும்பொடு இனியிராகுவீர் எனக் கூட்டுக.

பலதிறம் பெயர்பவை

287-291 : அறிஞர் ...................... கேட்குவிர் மாதோ

பொருள் : அறிஞர் கூறிய மாதிரம் கைக் கொள்பு - திசை மயக்கம் நாடி யறிவார் கூறிய திசையை உட்கொண்டு, குறியவும் நெடியவும் ஊழ் இழிபு - குறியனவும் நெடியனவுமாகிய குவடுகளை முறைமைப்பட இழிந்து, புதுவோர் நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து - புதிய மாந்தர் கண்ணான் நோக்கினும் தலைநடுக்கும் நோய்மிக்க பக்க மலையிடத்தே, அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் - பூப்பரந்த பல வரிகளையுடைய நிழலிலே இளைத்திருப்பின், பலதிறம் பெயர்பவை கேட்குவிர் - ஆண்டுப் பலகூறுபாடுகளை உடையவாய் எழுகின்ற ஓசைகளைக் கேட்பீர்;

கருத்துரை : திசை மயக்கம் ஆராய்ந்து கூறும் அறிஞர் கூறிய திசையை உட்கொண்டு குறியனவும் நெடியனவுமாகிய குவடுகளை முறையாகக் கடந்துபோய்ப் புதுவதாகக் கண்டோர் தலைநடுக்கும் நோய்மிக்க மலையடுக்கத்தே பூக்கள் பரந்த பல் வரிகளையுடைய நிழலிலே இளைப்பாறுதற் பொருட்டு இருப்பீராயின் அவ்விடத்தே எழும் பலதிறப்பட்ட ஓசையின் கூறுபாடுகளைக் கேட்பீர் என்பதாம்.

அகலவுரை : அறிஞர் - ஈண்டுத் திசைமயக்கம் ஆராய்ந்து கூறும் அறிவோர் மேற்று. திசைமயக்கம் அறிதலாவது, பகலாயின் ஞாயிற்றின் இயக்கத்தை நாடியும் இரவாயின் விண்மீனின் நிலை நாடியும் கிழக்கு முதலிய திசையை உள்ளவாறுணர்தல். மாதிரம்-திசை: மழை தொழில் உதவ மாதிரங் கொழுக்க (மதுரைக்-10) என்றார் பிறரும். குறியவும் நெடியவும் என்பன பலவறிசொற்கள் - குறியவும் நெடியவுமாகிய குவடுகள் என்க. ஊழ் இழிபு என்றது அறிஞர் கூறிய முறையானே கடந்து என்றவாறு. ஊழ்-முறை. குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன உறையுண் முடுக்கர் (27: 153-4) எனச் சிலப்பதிகாரத்தும் குறியவும் நெடியவும் குன்றுகண்டன்ன சுடுமணோங்கிய நெடுநிலைக் கோட்டமும் (6: 58-9) என மணிமேகலையினும் வருதல் காண்க.

புதுவோர் - அம்மலைக்குவடுகளிற் பயின்றறியாது புதிதாகச் சென்றோர். நோக்குதல் - அக்குவட்டின் மிசை நின்று சரிவினைக் காண்டல். அலர்தாய வரிநிழல் என்றதற்குப் பூக்கள் வரிவரியாய்க் கிடக்கும் நறுநிழல் என்று பொருள்கோடல் சிறப்பாம். பொருநராற்றுப்படையினும் (51) சிறுபாணாற்றுப்படையினும் (11-2) வரிநிழல் என்று வருதற்கு இலையுதிர்ந்த மரக்கொம்புகளான் வரிவரியாய்க் கிடந்த நிழல் என்பது பொருளாம். என்னை? அந்நூல்கள் பாலைநிலத்தைப் புனைந்துரைப்பதனான் என்க. ஈண்டுக் கூறும் காடு அங்ஙனமன்றிக் கயம் கண்டன்ன மரம்பயில் வள மிக்கதாகலான். பெயர்பவை : பலவறிசொல். பலதிறம் - பல்வேறுவகை. கைக்கொள்பு இழிபு இருப்பின் கேட்குவிர் எனக் கூட்டுக. இதன் கண் மலையும், அசையுநற்புலனும் கூறப்பட்டமை அறிக. இனி, அக்காட்டகத்தே எழும் பலதிறப்பட்ட ஒலிக்கூறுபாடுகளையும் கேட்போர் கன்னங்கள் அமுதூற இனிதின் எடுத்தோதுவார்.

கானத்தின் கானம்

292-296 : கலை .......................... இன்னிசை

பொருள் : கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந்து ஊறலின் - முசுக்கலை தோண்டின பெரிய பலாப்பழம் புண்மிக்குத் தேன் ஊறுகையினாலே, மலைமுழுதும் கமழும் மாதிரந்தோறும் - மலைமுழுதும் அத்தேன் நாறாநின்ற திசைகடோறும், அருவி நுகரும் வானரமகளிர் - அருவியை ஆடும் தெய்வமகளிர், வரும் விசை தவிராது வாங்குபு குடைதொறும் - அவ்வருவி நீர் வீழ்கின்ற விசையை விடாதே தம் கையில் ஏற்று அதனைக் குடையுந்தோறும், தெரியிமிழ் கொண்ட நும் இயம் போல் இன்னிசை - தாளந்தெரிகின்ற இசையைத் தம்மிடத்தே கொண்ட நும்முடைய இசைக்கருவி போன்று எழும் இனிய ஓசையும்;

கருத்துரை : ஆண் குரங்கு தோண்டிய பலாப்பழம் புண்மிக்குத்தேன் ஊறுதலானே அம்மலைக்கண் அத் தேன்மணம் கமழாநின்ற எல்லாத் திசைகளினும் அருவியாடும் தெய்வமகளிர் அவ்வருவி நீர் விழும் விசையைத் தம் கையின் ஏற்று அதனைக் குடைதலானே எழுகின்ற தாளந்தெரிகின்ற நும்மிசைக் கருவியின் இசையை ஒத்த இன்னிசையையும் (கேட்குவிர்) என்பதாம்.

அகலவுரை : கலை என்பது முசுவென்னும் ஒருவகைக் குரங்கில் ஆண்குரங்கென்ப. தொடுதல் தோண்டுதல். குளம்தொட்டு வளம்பெருக்கி (பட்டினப்-84) என்புழிப்போன்று, இங்ஙனமே புண்ணரிந்து அரலை உக்கன நெடுந்தாளாசினி (138-9) என இவ்வாசிரியர் முன்னும் கூறினமை உணர்க. அருவி நுகர்தலாவது, அருவியின்கண் ஆடி இன்புறுதல் வானரமகளிர் - தேவமகளிர்.

அருவிநீர் வீழுகின்ற விசையை அத்தேவமகளிர் தம் கையான் ஏற்றலான் உண்டாகும் ஒலி, நும் இசைக்கருவிகளின் ஒலியை ஒக்கும் என்றவாறு. வாங்குபு - வாங்கி, ஆவது ஏற்று. தெரிதல் - தாளம் தெரிதல். இமிழ் - இசை. இதனை நச்சினார்க்கினியர், இமிழ்கொண்ட அருவி என அருவிக்கு அடையாக்கி ஒலித்தலைக் கொண்ட அருவி எனக் கூறினர்.

காட்டகத்துள்ளும் காஞ்சித்திணைப்பொருள்

புரிவளைப்பூசலும், கானவர் அழுகையும், கொடிச்சியர் பாடலும்.

297-304 : இலங்கு .................... பாடல்

பொருள் : இலங்கு ஏந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல் - விளங்குகின்ற ஏந்தின கொம்பையுடைய தன்னினத்தைப் பிரிந்த யானைத்தலைவன், விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர் - மலையின் மேலிட்ட பரணில் கானவருடைய, புலம்புக்குண்ணும் புரிவளைப் பூசலும் - தினைப் புனத்தைப் புகுந்து தின்ன அதனைப் பிடித்தற்கு அக்கானவர் விரும்பி வளைத்தலால் உண்டான ஆரவாரமும், சேய்அளைப் பள்ளி எஃகுறு முள்ளின் எய்தெற இழுக்கிய கானவர் அழுகை - நெடிய முறையாகிய இருப்பிடத்தே வதியும் கூர்மை பொருந்திய முள்ளுடைய எய்ப்பன்றி தம்மை வருந்துமாறு தவறிய கானவருடைய அழுகையும், கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பின் நெடு வசி விழுப்புண் தணிமார் - புலி பாய்ந்ததாகத் தங்கணவர் மார்பிலே பட்ட நெடிய பிளத்தலையுடைய சீரிய புண்ணை ஆற்றுதற்கு, காப்பென அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் - காவலென்று கருதி அறல் வீற்றிருந்த மயிரினையுடைய கொடிச்சியர் பாடும் பாட்டால் எழுந்த ஓசையும்;

கருத்துரை : விளங்குகின்ற ஏந்தின கொம்பையுடையதும், தன்னினத்தைப் பிரிந்ததுமாகிய யானைத்தலைவன், மலைமேற் பரணிடத்தே உறையும் கானவருடைய தினைப்புனத்தைப் புகுந்து தின்னாநிற்ப; அதனைப் பிடித்தற்கு விரும்பி அவர் வளைத்தலால் உண்டாகிய ஆரவாரமும், நெடிய முழைஞ்சிலே உறையும் கூர்முள்ளுடைய எய்ப்பன்றி தம்மை வருத்துமாறு தவறுசெய்த கானவருடைய அழுகை ஒலியும், தங்கணவர் மார்பில் புலி பாய்ந்ததனால் உண்டாகிய நெடிய பிளவுடைய சீரிய புண்ணை ஆற்றக் காவலென்று கருதி அறல்பட்ட கூந்தலையுடைய கொடிச்சியர் பாடுகின்ற பாட்டின் ஒலியும் (கேட்குவிர்) என்பதாம்.

அகலவுரை : ஒருத்தல் - ஆண்யானை என்னை?
ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
.......................................................
யாத்த ஆண்பாற் பெயரென மொழிப  (தொல்-மர-2)

என்பது ஒத்தாகலான். இனி, தலைமைவாய்ந்த ஆண்யானையை யானைத் தலைவன் என்று கூறுதல் மரபு. இதனை, ஊதத் தலைவனே ஒத்துப்பொலிந்தது சந்திரசைலம் (வரைக்காட்சிப்-7) என்னும் இராமாவதாரத்தானும் அறிக. பணவை - பரண். பணவையின்கட் கானவர் என்க. புரி-விரும்புதல். வளைப்பூசல் : வினைத்தொகை. வளைப்பதனால் உண்டாய பூசல் என்க. சேயளை- நெடிய முழைஞ்சு. பள்ளி - உறைவிடம். எய் - உடலெங்கும் கூரிய முள்ளையுடைய ஒருவகைப் பன்றி. இதனை, முளவுமா; முள்ளம்பன்றி; முட்பன்றி என்னும் பெயர்களானும் வழங்குப. எய்தெற விழுக்கிய என்றதற்கு, எய்ப்பன்றியை வேட்டையாடப் புகுந்து குறி தவறிவிட்டமையான் அவ்வெய்ப்பன்றி தம்மைத் தன் முள்ளால் வருத்தியதாக அதனால் கானவர் அழுதனர் என்க. இதற்கு எய்ப்பன்றி தனது கூர்மையுறுகின்ற முள்ளால் எய்து கொல்லுகையினாலே பட்டகானவர் அழுகின்ற அழுகையும் என உரைத்தனர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். கொடுவரி - புலி. வசி-பிளவு. மார்பினும் முகத்தினும் பட்டபுண் விழுப்புண் எனப்படும். விழுமம் - சீர்மை; சிறப்புமாம் என்னை? விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (உரி-55) என்பது சூத்திரமாகலான்.

விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை எடுத்து  (திருக்-776)

எனத் தேவரும் ஓதுதல் காண்க. புலியொடு நேர்நின்று பொருதுபட்ட புண் என்பார், விழுப்புண் என்றார். அறல்-கூந்தலின்கண் வரிவரியாய் அமைந்த வடு. அறல்-கருமணலுமாம். தணிமார் - தணிதற்பொருட்டு. காப்பு - காவல். நோய்வாய்ப்பட்டு வருந்துவோர் இன்னிசை கேட்புழித் தம் மனம் நோய்வழிச் செல்லாது, இசைவழிப்படலான் அந்நோய் வருத்தம் உணராது இன்புறுவர் ஆகலான் மருத்துவ விடுதிகளில் இசை கேட்கும்படி கருவிகள் அமைத்தல் வேண்டும் என்று இக்காலத்து அறிஞர் கூறுவதனை விழுப்புண்டணிமார் கொடிச்சியர் பாடல் என்பதனோடு ஒப்புக்காண்க. ஒருத்தல் புரிவளைப் பூசலும், கானவர் அழுகையும், கொடிச்சியர் பாடலும் கேட்குவிர் என்க.

பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே  (புறத்திணை.சூ-23)

எனத் தொல்காப்பியனார் ஓதிய காஞ்சித்திணைப் பொருளை எய்தெற விழுக்கிய கானவர் அழுகை, விழுப்புண் தணிமார் கொடிச்சியர் பாடல் முதலியன நினைவூட்டுதலுணர்க.

பல்வேறுவகைப் பூசல்கள்

305-314 : தலைநாள் .................. பூசல்

பொருள் : தலைநாள் பூத்த பொன்னிணர் மலைமார் இடூஉம் ஏமப்பூசல் - முதல் நாளிலே பூத்த பொன்போலும் கொத்தினையுடைய வேங்கைப் பூவைச் சூடுதற்கு மகளிர் புலிபுலி என்று கூப்பிடும் ஏமத்தையுடைய ஆரவாரமும், கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி - கன்று வயிற்றிலே உண்டான மெல்லிய தலையினையுடைய மடப்பத்தையுடைய பிடியை, வலிக்கு வரம்பாகிய கணவன் ஓம்பலின் - வலிக்கு ஓர் எல்லையாகிய களிறு கவளந் தேடிக் கொடுத்துப் பாதுகாத்துப் போகையினாலே, ஒண் கேழ் வயப்புலி பாய்ந்தென - அப்போக்கினைக் குறித்து ஒளிந்திருந்து ஒள்ளிய நிறத்தையுடைய வலிய புலி பாய்ந்ததாக, கிளையொடு நெடுவரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் - அப்பிடி தன் சுற்றத்தோடே நெடிய மலையிடத்தே கூப்பிடும் இடியோசை போலும் முழங்குங் குரலும், கை கோள் மறந்த கருவிரல் மந்தி - பார்ப்பைத் தன் கையால் தழுவிக் கோடலை மறந்த கரிய விரலையுடைய மந்தி, அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு - எடுத்தற்கரிய ஆழ்ந்த முழையிலே வீழ்ந்திருந்த கல்லாமையுடைய தன் குட்டிக்கு, முறிமேய் யாக்கைக் கிளையொடு துவன்றிச் சிறுமையற்ற களையாப் பூசல் - தளிரை மேய்ந்து வளர்ந்த வடிவினையுடைய சுற்றத்தோடே நெருங்கி நோய்மிக்க விலக்கப்படாத ஆரவாரமும்;

கருத்துரை : முதல் நாளிலே பூத்த பொன்போன்ற கொத்தினையுடைய வேங்கைப் பூவைச் சூடுதற்பொருட்டுக் குறமகளிர் புலிபுலி என்று கூப்பிடும் ஆரவாரமும், சூல்கொண்ட பிடியை கவளங்கொடுத்துப் பாதுகாத்துச் செல்லும், வலிக்கு வரம்பாகிய களிற்றினை ஒளிந்திருந்து ஒள்ளிய நிறமுடைய வலிய புலி பாய்ந்ததாக, அப் பிடி தன் சுற்றத்தோடே கூப்பிடும் இடியோசையை ஒத்த ஆரவாரமும், கரிய விரலையுடைய மந்தி கையால் தழுவிக் கோடலை மறந்தமையான், எடுத்தற்கரிய ஆழ்ந்த முழையிலே வீழ்ந்துவிட்ட கல்லாமையுடைய தன் குட்டியின் பொருட்டுத் தளிர்மேய்ந்து வளர்ந்த உடலையுடைய சுற்றத்தோடே நெருங்கி எடுத்த விலக்கப்படாத ஆரவாரமும் (கேட்குவீர்) என்பதாம்.

அகலவுரை : தலைநாள் - முதன் முதலாக மலர்ந்த நாள், பொன்னிணர் - பொன்னிறமுடைய வேங்கைப் பூங்கொத்து. மலைமார் - சூடுதற்பொருட்டு. ஏமப்பூசல் - அச்சந்தீர்த்த பூசல். வேங்கை வளைந்து பூவைக் கொடுத்தலின் ஏமப்பூசல் என்றார். வேங்கைப் பூக்கொய்யும் மகளிர் புலி புலி என்று கூவினால் வேங்கைமரம் வளைந்து கொடுக்கும் என்று கருதிக் கூவுதல் அக் காலத்து வழக்கமாம்; இதனை,

வலந்த வள்ளி மரனோங்கு சாரல்
கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர் வேண்டிக் குறமகள்
இன்னா விசைய பூசல் பயிற்றலின்
ஏக லடுக்கத் திருளளைச் சிலம்பின்
ஆகொள் வயப்புலி யாகும் அஃதென  (அகம்-52)

என்றும்,

மலிபூஞ் சாரல் என்தோழி மாரோ
டொலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்
புலிபுலி என்னும் பூசல் தோன்ற  (அகம்-48)

என்றும் பிறசான்றோர் கூறுமாற்றானும் உணர்க. அரை - வயிறு. கன்றரைப்பட்ட என்றது, சூல்கொண்ட என்றவாறு. கயந்தலை - மெல்லிய தலை; கயவென் கிளவி மென்மையும் செப்பும் (தொல்-உரி-24) என்பது சூத்திரம். வலிக்கு வரம்பாதலாவது ஆற்றலில் இதனின் விஞ்சியதில்லை என்னும்படி எல்லையாக அமைவது. கணவன் - ஈண்டுக் களிற்றினைக் குறித்து நின்றது. இங்ஙனம் கணவன் என்னும்சொல் அஃறிணை யாண்பாலிற்கும் வழங்குதலுண்மையை,

மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபிற் பிணவுநினைந் திரங்கும்  (நற்-103: 7-8)

எனவும்,

வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது  (குறுந்-151: 1-2)

எனவும்,

சேற்றவளை தன்கணவன் அருகிருப்பச் சினந்திருகி
சூற்றவளை நீருழக்கும் துறைகெழுநீர் வளநாடா  (கம்ப.சூர்ப்-122)

எனவும், வரும் பிற சான்றோர் செய்யுட்களானும் அறிக. ஓம்புதல், சூற்பிடி வருந்தாமே அதற்கு உணவு (கவளம்) தேடி அதன் வாயில் ஊட்டுதல். இங்ஙனம் பிடிக்குக் களிறு கவளங்கொடுத்தலை,

கயந்தலை மடப்பிடி உயங்குபசி களைஇயர்
பெருங்களிறு தொலைத்த முடத்தா ளோமை  (நற் 137: 6-7)

எனவும்,

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பிளக்கும்  (குறுந்-37: 2-3)

எனவும்,

...........................யானைதன்
கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ்சிறந்
தின்னா வேனில் இன்றுணை யார
முளிசினை யாஅத்துப் பொளிபிளந் தூட்ட  (அகம்- 335: 4-7)

எனவும்,

உருகு காதலிற் றழைகொண்டு மழலைவண் டோச்சி
முருகு நாறுசெந் தேனினை முழைநின்றும் வாங்கிப்
பெருகு சூலிளம் பிடிக்கொரு பிறைமருப் பியானை
பருக வாயினிற் கையினின் றளிப்பது பாராய்  (கம்ப-சித்திர-10)

எனவும், பிற சான்றோர் கூறுவதனானும் உணர்க. இடி யுமிழ் தழங்கு குரல் என்றது, இடியோசையை ஒத்த தழங்கு குரல் என உவமை எடுத்தோதியவாறு. உமிழ் : ஓசைக்கு ஆகுபெயர். கைக்கோள் - கையான் அணைத்துக்கோடல். அருவிடர் என்றது, எடுத்தற்கரிய ஆழமுடைய பிளப்பு என்றவாறு. கல்லாப் பார்ப்பு என்றது, தன் தொழிலாகிய ஏறுதல் முதலியவற்றை அறியாத இளங்குட்டி என்றவாறு.

கோடுவாழ் குரங்குங் குட்டி கூறுப  (தொல்.மரபு-13)

மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்
அவையும் அன்ன அப்பா லான  (þ-14)

என்னும் விதியான் குரங்கின் குட்டியைப் பார்ப்பெனல் மரபாதலறிக. முறி-தளிர். சிறுமை-நோய். என்னை? பையுளும் சிறுமையும் நோயின் பொருள (தொல்-உரி-43) என்பவாகலின். மகவிழந்த பூசலாகலின் களையாப் பூசல் என்றார். ஏமப் பூசலும், மடப்பிடி தழங்கு குரலும், மந்தி சிறுமையுற்ற களையாப் பூசலும் கேட்குவிர் என்க. இதுகாறும் இன்னாவோசை கூறி மேலே இனியவோசை இயம்புவர்.

தேங்கொள் கொள்ளையும் கானவர் உவகையும்

315-318 : கலை ...................... கானவருவகை

பொருள் : கலை கையற்ற காண்புஇன் நெடுவரை நிலை பெய்திட்ட மால்பு நெறியாக - முசுக்கலை ஏற முடியாதென்று செயலற்ற காட்சி இனிய உயர்ந்த மலையிலே நிலைபேறுண்டாகக் கூட்டி நட்ட கண்ணேணியே வழியாகச் சென்று, பெரும்பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை - பெரிய பயன் உண்டாகத் தேனீத் திரட்டிவைத்த தேனை அழித்துக் கொண்ட கொள்ளையால், அருங்குறும்பு எறிந்த கானவர் உவகையும் - அத்தேனீக்களின் பிறர் அடைதற்கரிய சிற்றரண்களை அழித்த கானவர் மகிழ்ச்சியாலுண்டான ஆரவாரமும்;

கருத்துரை : முசுக்கலை ஏறமுடியாதெனச் செயலற்ற காண்டற்கினிய நெடிய மலையுச்சியில் கண்ணேணியை நிலைபெற நாட்டி அதன் வழியே ஏறித் தமக்குப் பெரும்பயன் உண்டாகக் கருதித் தேனீக்கள் ஈட்டிவைத்த தேனை அழித்துக்கொண்ட கொள்ளையாலே அவையிற்றின் அரண்களை அழித்த கானவர் மகிழ்ச்சியாலுண்டான ஆரவாரமும் (கேட்குவிர்) என்பதாம்.

அகலவுரை : முசுக்கலை - முசுவென்னும் ஒருவகைக் குரங்கில் ஆண் குரங்கு. ஏறுதற்கியலாத நெடுவரை என வரையின் உயரத்தைச் சிறப்பித்தவாறு, குறவரும் மருளும் குன்றம் என்றாற் போன்று. காண்பு - காண்டல். நிலைபெய்திட்ட - நிலையுறும்படியாக அமைத்த. மால்பு - கண்ணேணி. மால்பு உடை நெடுவரைக்கோடு (புறம். 105-6) பெருந்தேன் கண்படு வரையின் முதுமால்பு அறியாதேறிய மடவோன் போல (குறுந். 273: 5-6) எனவரும் செய்யுட்களினும் காண்க. கண்ணேணியாவது கணுக்களிலே அடியிட்டு ஏறும்படி நெடிய மூங்கிலிலே இயற்றும் ஒருவகை ஏணி. 

பெரும் பயன் தொகுத்த என்றது, தேனீக்கள் தமக்குப் பிற்றை நாள் உதவுவதற்கெனப் பெரிய பயனாகக் கருதி ஈட்டிவைத்த என்றவாறு. இவ்வடி,

உடாஅதும் உண்ணாதுந் தம்முடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாது
வைத்தீட்டி னார்இழப்பர் வான்றோய் மலைநாட
உய்த்தீட்டுந் தேனீக் கரி  (நாலடி-10)

என்னும் நாலடியை நினைவூட்டுதல் அறிக. பிறர் ஈட்டி வைத்த பொருளை அவரை வஞ்சித்துக் கொள்வது கொள்ளை எனப்படும். ஆதலால் தேங்கொள் கொள்ளை என்றார். குறும்பு - சிற்றரண். தேனிறால் சிற்றரண் போறலின் அருங்குறும் பெறிந்த என்றார். ஆசிரியர் நச்சினார்க்கினியர், அருங்குறும்பெறிந்த கானவர் உவகை என்னுமிவ்வடியை (381) திருந்துவேலண்ணற்கு விருந்திறை சான்மென  (319) என்னும் அடிக்குப் பின்னாக இயைத்து, திருந்தும் வேலினையுடைய நன்னனுக்குப் புதிதாகக் கொடுத்தற்கு இவற்றிற் கைக்கொண்ட பொருள்கள் அமையும் எனக் கருதி அழித்தற்கரிய குறும்புகளை அழித்த கானவர் மகிழ்ச்சியாலுண்டான ஆரவாரமும் எனப் பொருள் கூறினர்.

குரவைத் தீம்பாடலும் யாற்றின் கறங்கிசையும்

319-324 : திருந்துவேல் ....................... இரங்கிசை

பொருள் : திருந்துவேல் அண்ணற்கு விருந்து இறை சான்மென - திருந்தும் வேலினையுடைய நன்னனுக்குப் புதிதாகக் கொடுத்தற்கு இப் பொருள்கள் அமையும் எனக் கருதி மலைபடு பொருள்களை நிரம்ப ஈட்டிக் கொண்ட மகிழ்ச்சியாலே, நறவு நாள் செய்த குறவர் - நறவை நாட்காலத்தே குடித்த குறவர்கள், தம் பெண்டிரொடு மான் தோல் சிறு பறை கறங்க - தம் மகளிரோடே கூடி மானினது தோலாற் போர்க்கப்பட்ட சிறுபறை ஒலித்தலாலே, கல்லென வான் தோய் மீமிசை அயரும் குரவை - கல்லென்னும் ஓசையுண்டாக வானைத்தீண்டும் உச்சி மலையிலே ஆடாநின்ற குரவைக் கூத்தின் ஆரவாரமும், நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன நல்ல அழகினையுடைய நெடிய தேர்கள் வழியிலே ஓடிவந்த தன்மையாக, கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை - கல்லின்மேல் வரும் யாறுகள் ஆரவாரித்தலால் முழைஞ்சுகளிலே ஒலிக்கின்ற எதிரொலியின் ஆரவாரமும்;

கருத்துரை : மலைபடு பொருள்களை வேண்டியாங்குத் தொகுத்துக் கொண்ட குறவர்கள் இவை திருந்திய வேலினையுடைய நன்னன்வேண்மானுக்குப் புதுமையுடைய திறைப் பொருளாதற்கு அமையும் என்று மகிழ்ந்து தம் பெண்டிரோடே மான்றோல் போர்த்த சிறுபறை கல்லென முழங்க மலையுச்சியிலே ஆடா நின்ற குரவைக் கூத்தின் தீம்பாடலும், நல்ல தேர் மறுகிலே ஓடிவருமாறு வரும் மலையின்கண் ஆறுகள் எடுக்கும் ஒலியை மலை முழைஞ்சுகள் எதிரொலி செய்தலான் உண்டாகும் இன்னிசையும் (கேட்குவிர்) என்பதாம்.

அகலவுரை : திருந்துவேல் - போர்க்களத்தேயும் அறம் பிறழாது திருந்திய வேல். அஃதாவது புறங் கொடுப்பார்மேல் எறியாமை இதனை,

ஆற்றுவீர் வம்மின் எம்மோ டாண்மை மேம்படீஇய என்பார்
ஏற்றவர் மார்பத் தல்லால் இரும்புமேல் விடாது நிற்பார்  (752)

என்னும் சிந்தாமணியான் உணர்க. அண்ணல் - தலைமைப் பண்பு. விருந்திறை - புதுவதாகிய அரசிறை. அவையாவன :

யானை வெண்கோடும் அகிலின் குப்பையும்
மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும்
சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும்
அஞ்சனத் திரளும் அணிஅரி தாரமும்
ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்
கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும்
தெங்கின் பழனும் தேமாங் கனியும்
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமும் கரும்பும் பூமலி கொடியும்
கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்
ஆளியின் அணங்கும் அரியின் குருளையும்
வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்
குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும்
வரையாடு வருடையும் மடமான் மறியும்
காசறைக் கருவும் மாசறு நகுலமும்
பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்
கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும்  (சிலப்-காட்சி- 37-54)

பொன்னும் மணியும் பிறவுமாகிய மலைப் பஃறாரம் என்க. இத்தகைய பொருள்கள் மலைவாழ்நர்க்கன்றிப் பிறர்க்கின்மையின் இவையிற்றை விருந்திறை என்றார். நறவுநாட் செய்த என்றது நாட்கள்ளுண்டு என்றவாறு. நாட்கள்ளுண்ணலாவது மனமகிழ்ச்சியின் பொருட்டு விடியற் காலத்தே கள்ளுண்ணல். இதனை,

நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேரீ தல்லே  (புறம் 123-1-2)

என்பதனானும் உணர்க. குரவைக் கூத்து ஆடவரும் மகளிரும் விரவியாடுவதாதலான் குறவர் தம் பெண்டிரொடு... அயருங் குரவை என்றார் இதனை,

மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தம் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதேத்தத்
தாதெருமன் றத்தாடும் குரவையோ தகவுடைத்தே  (சிலப்-ஆய்ச்)

எனவும்,

மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும்  (மணி-16: 65-6)

எனவரும் செய்யுட்களானும் அறிக. எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடுங் கூத்தென்றும் வரிக்கூத்தின் ஓருறுப்பென்றும், விநோதக் கூத்து ஆறனுள் ஒன்றென்றும் கூறுப. விநோதக் கூத்து ஆறாவன : குரவை கலிநடம் குடக்கூத்து கரணம் நோக்கு தோற்பாவை என்பனவாம். இயவு - வழி. நல்ல தேர் மறுகின் ஓடிவருமாறு போல வருகின்ற யாறென்க. யாற்றின் நீர் செய்யும் ஒலியை மலை முழைஞ்சுகள் எதிரொலி செய்தலான் உண்டாய ஆரவாரம் என்க ஆசிரியர் நச்சினார்க்கினியர். கல்லின் மேல் வரும் யாறுகள் முழைஞ்சுகளிலே வீழ்ந்து மாறாதொலிக்கும் என்பதனைச் செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்க. யாறொலிக்க விடர் முழங்கும் இரங்கிசை எனக் கூட்டுக.

யானை பயிற்றும் பாகர் ஓதையும், கிளிகடி மகளிர் விளிபடு பூசலும்

325-329 : நெடுஞ்சுழி .................. பூசல்

பொருள் : நெடுஞ் சுழிப்பட்ட கடுங்கண் வேழத்து உரவுச்சினம் தணித்து - காட்டாற்றின் நெடிய சுழியிலே வீழ்ந்து அகப்பட்ட தறுகண்மையை உடைய யானையினது வலிய சினத்தைத் தணியப்பண்ணி, பெரு வெளில் பிணிமார் விரவுமொழி பயிற்றும் பாகர் ஓதை-பெரிய தூணிலே சேர்த்தற்குத் தமதேவற்றொழிலைச் செய்தற்குக் காரணமான வடமொழி விரவிய பேச்சுக்களைப் பேசி அவற்றிலே பயிலச் செய்யும் பாகருடைய ஆரவாரமும், ஒலி கழைத்தட்டை புடையுநர் புனந்தொறும் கிளிகடி மகளிர் விளிபடு பூசல் ஒலிக்கும் மூங்கிலாற் செய்த தட்டையைப் புடைத்துப் புனங்கள் தோறும் கிளியை ஓட்டுகின்ற மகளிர் கூப்பிடுதலால் பிறந்த ஆரவாரமும்;

கருத்துரை : காட்டியாற்றின் நெடிய சுழியிலே வீழ்ந்தமையான் அகப்பட்ட தறுகண் யானையினது சினந்தணியச் செய்து அது தம் ஏவலைக் கேட்குமாறு பிறமொழி விரவிய மொழிகளைப் பேசிப் பயிற்றுகின்ற பாகருடைய ஆரவாரமும், மூங்கிலாற் செய்த தட்டையைப் புடைத்துப் புனங்கள் தோறும் குறத்தியர் கிளியை ஓட்டுகின்றமையாற் பிறந்த ஆரவாரமும் (கேட்குவிர்) என்பதாம்.

அகலவுரை : யாற்று வெள்ளத்தே அடித்துவரப்பட்ட யானை என்பார், நெடுஞ்சுழிப்பட்ட யானை என்றார். யாற்று வெள்ளம் யானை முதலிய விலங்குகளையும் ஈர்த்து வருதலுண்டென்பதனை,

பணைமு கக்களி யானைபன் மாக்களோடு
அணிவ குத்தென ஈர்த்திரைத் தார்த்தலின்
மணியு டைக்கொடி தோன்றவந் தூன்றலாற்
புணரி மேற்பொரப் போவது போன்றதே  (கம்ப-ஆற்று-11)

என்று பிறர் கூறுமாற்றானும் உணர்க. பெருவெளில் - பெரிய தூண், அல்லது தறி. யானையைப் பயிற்றும் பாகர் பயிற்றும் சொல் வடமொழியாகலின், விரவு மொழி என்றார். தந்தமிழ் மொழியின் இடையே வடமொழியை விரவிப் பயிற்றி என்றவாறு. இங்ஙனம் வடமொழி பயிற்றுதலை,

கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக்
கல்லா விளைஞர் கவளம் கைப்ப  (முல்லைப்பா-35-6)

எனவரும் முல்லைப்பாட்டானும் உணர்க. அவ்வடமொழியாவன அப்புது, அப்புது, ஆது ஆது, ஐ ஐ, என்பன. இதனை,

அங்கையந் தலத்தினால் அப்புது, ஆது, ஐ, எனக்
கொங்கலர் கண்ணியான் கொம்மை கொட்டலும்
பொங்கிய வுவகையிற் பொலிந்துமாக் களிறவன்
தங்கிய பயிர்த்தொழி றடக்கையாற் செய்ததே  (சிந்தா-1834)

என்னும் திருத்தக்க முனிவர் செய்யுளானும் உணர்க. ஒலிகழைத் தட்டை: என்றது ஒலிக்கின்ற மூங்கிலாற் செய்த தட்டை என்னும் கிளிகடி கருவி என்றவாறு. தட்டையாவது : மூங்கிலைக் குறுக்கே நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசையுண்டாகும்படி ஒன்றிலே தட்டுங் கருவி என்ப. புடையுநர்: முற்றெச்சம். விளிபடுதல் - இசையுடைத்தாதல், கூவுதலுமாம். கிளிகடியும் மகளிர் ஆயோஓ எனக் கூப்பிடுதல் வழக்கம். இதனை, புனங்காவல் கொண்டு ஆயோ என மொழியும் அம்மழலை இன்னிசையால் (சுயம்-104) என்னும் சூளாமணியானும், ஆயோவென்னும் அண்ணாமலை யாரே என்னும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரத்தானும் அறிக.

நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை

330-335 : இனத்தில் ..................... கம்பலை

பொருள் : இனத்தில் தீர்ந்த துளங்கு இமில் நல்ஏறு - நிரையினின்றும் பெயர்ந்த அசையும் குட்டேற்றினையுடைய ஆனேறும், மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை - மலையிடத்தினின்றும் வந்த மரையானினது விரைந்த ஏறும் ஆகிய, நல்லேறு - நல்ல ஏறுகள், மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி - புறங்கொடாத வலியுடனே புண்ணுண்டாம்படி முட்டி, கோவலர் குறவரோடு ஒருங்கியைந்து ஆர்ப்ப - முல்லை நிலத்திற் கோவலரும் குறிஞ்சி நிலத்திற் குறவரும் சேரக்கூடி வென்றதன் வெற்றி தோன்ற ஆரவாரிப்ப, வள்ளிதழ்க் குளவியும் குறிஞ்சியுங் குழைய - வளவிய இதழையுடைய குளவியும் குறிஞ்சியும் வாடும்படி, நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை - நல்ல ஏற்றைப் போரைப் பொருகின்ற ஆரவாரமும்;

கருத்துரை : நிரையை விட்டகன்ற குட்டேற்றையுடைய ஆனேறும் மலையினின்றும் வந்த மரையானேறுமாகிய நல்லேறுகள் புறங்கொடாத வலியினோடே புண்பட முட்டி, கோவலரும் குறவரும் ஆரவாரிப்பவும் வளவிய இதழையுடைய குளவியும் குறிஞ்சியும் வாடும்படி தம்முட் பொருதலால் உண்டான ஆரவாரமும் (கேட்குவிர்) என்பதாம்.

அகலவுரை : இனம் - ஆநிரை. தீர்தல் - அகலுதல். இமில் ஏற்றின் முன் முதுகிடத்தே உருண்டு பருத்துத் தோன்றும் ஓருறுப்பு. இதனை, குட்டேறு என்றும் வழங்குப. இக் காலத்தே கொண்டை என்று வழங்கப்படுகின்றது. துளங்கிமில் நல்லேறு என்றது ஆனேற்றினையென்க. ஆனேறும் மரையேறும் ஆகிய நல்லேறுகள் என இயைத்துக் கொள்க. ஆனேறு முல்லை நிலத்திற்குரியதும், மரையேறு குறிஞ்சி நிலத்திற் குரியதுமாகலின் இவையிற்றின் வெற்றிதோல்விகளைத் தத்தம் வெற்றி தோல்விகளாகக் காண்பார் அவ் விருநிலத்திற்கும் உரிய கோவலரும் குறவரும் ஒருங்கு கூடி ஆரவாரித்தனர் என்க. இது திணை மயக்கம் கூறிற்று. குளவி - காட்டு மல்லிகை. இவ்வாறு ஏறுகள் தம்மிற் பொருதலை,

சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப் பரந்தொழுகி
ஏறுபொரச் சேறாகி  (பட்டினப்-44-6)

எனப் பிறர் கூறுமாற்றானும் அறிக. இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் மலைத்தலை வந்த மரையான் என்றதற்கு, போர்த்தொழில் கைவந்த மரையான் என்று பொருள் கூறினர். மேலும், துளங்கிமில் நல்லேறு மரையான் கதழ்விடை தாக்கிப்பொரூஉம் ஆரவாரமும், நல்லேறு பொரூஉம் ஆரவாரமும் என இருமுடி பாக்கி உரை விரித்தார். இங்ஙனம் இருமுடி பாக்குங்கால் 332: தாக்கி என்னும் எச்சம் நின்று வற்றுதலான் பொரூஉம் கம்பலை என்னும் தொடர் ஒன்றனையே இரண்டிற்கும் முடிபாக்கி உரைப்பாராயினர். நல்லேறுகள் பொரூஉம் நல்ல ஏற்றைப் போரின் ஆரவாரமும் என முடிபு காண்க. நல்லேறு பொரூஉம் என்றது போர் பொருதும் என்னும் மாத்திரையாய் நின்றது.

கன்று கடாவிடுக்கும் மகார் ஓதையும், கரும்பின் ஏத்தமும்
வள்ளையும் பன்றிப் பறையும், மலையிடத்தே உண்டாம் எதிரொலியும்,

336-344 : காந்தள் ................. சிலம்பும்

பொருள் : காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி - காந்தளினது துடுப்புப் போலும் கமழுகின்ற மடலாலே அடித்து, வண்கோள் பலவின் சுளைவிளை தீம்பழம் உண்டுபடு மிச்சில் காழ்பயன் கொண்மார் - வளவிய குலைகளையுடைய பலாவினது சுளைமுற்றின இனிய பழத்தினை விரும்பினோரெல்லாரும் தின்று கீழ் வீழ்ந்து கிடக்கும் மிகையான பழத்தின் விதையைப் பயன்கோடற்கு, கன்று கடாஅ உறுக்கும் மகார் ஓதை - கன்றுகளைப் பிணைத்துக் கடாவிடும் பிள்ளைகளுடைய ஆரவாரமும், மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேர் எனக் கழைகண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் - மழை பொழிவதைக் கண்டாற் போன்று சாறுபொழிதலையுடைய ஆலைகள் தோறும் விரைவாகக் கோலின் கணுக்களை நுறுக்குதலாற் கரும்பிற்படும் ஆரவாரமும், தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும் - தினையைக் குறுகின்ற மகளிருடைய இசை மிகுகின்ற வள்ளைப் பாட்டும், சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் பன்றிப் பறையும் - சேம்பையும் மஞ்சளையும் விதைத்து வளர்ந்த பின்பு பன்றி கிழங்ககழாமற் காப்போருடைய பன்றிக்குக் கொட்டும் பறையோசையும், குன்றாகச் சிலம்பும் - இவ் வோசைகளால் மலையிடத் தெழும் எதிரொலியும்;

கருத்துரை : வளவிய குலைகளையுடைய பலாமரத்தின் சுளைமுற்றிய பழத்தில் உண்போரெல்லாரும் உண்டு எஞ்சிக் கிடப்பதனை மகார்கள் அவையிற்றின் விதைகளைப் பிரித்துப் பயன் கோடற்குக் காந்தளினது துடுப்பை ஒத்த மணங்கமழும் மடலினைக் கோலாகக் கொண்டு ஓச்சி இளங்கன்றுகளைப் பிணைத்துக் கடாவிடுதலானே உண்டாகும் ஆரவாரமும், மழை பொழிவது போன்று கருப்பஞ்சாற்றினை மிகப் பெய்யும் ஆலைகளிடத்தே விரைந்து கோல்களின் கணுக்களைப்பொறிகள் நுறுக்குதலான் அக் கரும்பினின்றும் எழுந்த ஆரவாரமும், தினையைக் குறுகின்ற மகளிர் பாடும் வள்ளைப்பாட்டும், சேம்பும் மஞ்சளும் விதைத்து அவை வளர்ந்த பின்னர் அவையிற்றைப் பன்றியகழாமற் காப்பதன் பொருட்டுக் கொட்டும் பறையோசையும், இதுகாறும் கூறியவும் பிறவுமாய ஒலிகளானே மலையின்கண் எழும் எதிரொலியின் ஆரவாரமும் (கேட்குவிர்) என்பதாம்.

அகலவுரை : காந்தள் துடுப்பிற் கமழ்மட லோச்சிக் காழ் பயன் கொண்மார் கன்று கடா உறுக்கும் மகார் ஓசை எனக்கூட்டுக. துடுப்பு - அகப்பை. காந்தளம்பூ துடுப்புப் போன்றதென்க. உண்டு எஞ்சிய பலாப் பழத்தினின்றும் விதைகளைப் பிரித்தற்குக் குறவரின் மகார்கள் கன்றுகளைக் கடாக்களாகப் பிணைத்துக் காந்தண் மடலா லடித்தோட்டி ஆரவாரிப்பர் என்றவாறு. கடாவிடுதல்-வைக்கோலினின்றும் நெல்லைப் பிரித்தற்குக் கடாக்களைப் பிணைத்து வைக்கோற் குவையின் மேல் சுற்றி வருமாறு ஓட்டுதல். இதனை,

அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்  (10: 136-7)

எனவரும் சிலப்பதிகாரத்தும் காண்க. மகார் விளையாட்டாகலின் ஓதையுடைத்தாயிற்று என்க. மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரென என்னுந் தொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை கிடைத்திலது. இதற்கு மேகத்தைக் கண்டாலொத்த கொட்டில்கள் தோறும் விரைவாக என, மகாமகோ பாத்தியாய தாக்ஷிணாத்திய கலாநிதி டாக்கடர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் உரை வரைந்துள்ளார்கள். கரும்பாலை இடையறாது கரும்பைப் பிழிதலால் சாறுமிக்குப் பொழிதல் உண்மையின், மழையைக் கண்டாலொத்துச் சாற்றினைப் பொழிகின்ற ஆலை என யாம் பொருள் கூறினாம். இனி, ஆலைகளில் கரும்பின் சாற்றைக் காய்ச்சுதலான் எழுந்த புகை மழைகண்டாலொத்த எனினுமாம். ஏத்தம்-ஓசை: ஆகுபெயர். ஏத்தம்-ஏற்றம். ஈண்டு இயந்திரம் என்னும் பொருட்டு. இயந்திரத்தாலுண்டாகும் ஓசை என்க. தினைக் குறுமகளிர் - தினையை உலக்கையாற் குற்றும் மகளிர். குறுதல் -குற்றுதல். வள்ளைப்பாட்டு - உலக்கைப்பாட்டு. நெல் தினை முதலியன குறும் மகளிர் மாறி மாறிப் பாடிக்கொண்டு குற்றுதல் வழக்கம். இதனை,

தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர்
ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல்
பாவைமா ராரிக்கும் பாடலே பாடல்  (சிலப்- 26.வள்ளை)

என்பதனான் உணர்க. ஓம்பினர் : முற்றெச்சம். குன்றகத்தின்கண் எதிர் எழுந்த சிலம்பும் என்க. சிலம்பு - ஓசை. பன்றிப் பறை - பன்றியைக் கடியும் பறை.

மலைபடு கடாம்

345-348 : என்று ....................... இயம்ப

பொருள் : என்று இவ் அனைத்தும் - என்று யான் கூறிய இவ் வெல்லா ஆரவாரமும், இயைந்து ஒருங்கு ஈண்டி - இயைந்து ஒருசேரப் பொருந்தி, அவலவும் மிசையவும் துவன்றிப் பலவுடன் அலகைத் தவிர்த்த எண்ணரும் திறத்த - தாழ்வரையில் உள்ளனவும் உச்சிமலையிலுள்ளனவும் ஆகிய பிறஆரவாரம் பலவும் ஒன்றுபடுதலான் அளவிறந்தனவும் தனித்துக் காண்டற்கு அரியனவுமாகிய, மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப - மலைகளாகிய யானை உண்டாக்கும் ஒலி திசைகள் எல்லாம் ஒலிப்ப;

கருத்துரை : என யான் இங்குக் கூறிய இவ்வெல்லா ஆரவாரமும் சேர்ந்து திரண்டு தாழ்வரையில் எழுவனவும் உச்சிமலையில் எழுவனவும் ஆகிய பிற ஆரவாரம் நெருங்கிப் பலவும் ஒன்று படுதலான் அளவிறந்தனவும், இன்னின்ன ஓசை எனக் கருதிக் காண்டற்கு இயலாதனவும் பொதுவாக மலையாகிய யானையின் பிளிற்றொலி எனக் கூறத்தக்கனவுமாய்த் திசைகள் தோறும் ஒலிப்பக், (கேட்குவிர்) என்பதாம்.

அகலவுரை : என்றிவ் வனைத்தும், என்றது, இன்னிசையும், பூசலும், அழுகையும், பாடலும், பூசலும், குரலும், பூசலும், உவகையும், குரவையும், இசையும், ஓதையும், பூசலும், கம்பலையும், ஓதையும், ஏத்தமும் வள்ளையும், பறையும், குன்றகச் சிலம்பும் ஒழிந்தனவும் என (292-ஆம் அடி தொடங்கி 344 வரை) யான் கூறிய பலதிறத்த வோசையனைத்தும் என்றவாறு. அவல, மிசைய என்பன பலவறி சொற்கள். அவல-தாழ்நிலத்துள்ளன. மிசைய-உயர்ந்த நிலத்துள்ளன என்னும் பொருள. இவை இப் பொருளவாதலை,

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே  (புறம்-187)

என்னும் செய்யுளினும் காண்க.

துவன்றுதல்-நிறைதல். துவன்று நிறைவாகும் (உரி-34) என்பது தொல்காப்பியச் சூத்திரம். அலகு-அளவு. அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த என்றது, அளவிறந்தனவும் இன்னின்னவொலி இன்னின்னவை என ஆராய்ந்து காண்டற்கு அரியனவும் என்றவாறு. தவிர்த்தனவும் திறத்தனவும் ஆகிய மலைபடுகடாம் என்க. இனி நல்லிசைப் புலவராகிய இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கவுசிகனார் என்னும் பல்கலைக் குரிசில் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தே பிறந்து தமது ஒப்பற்ற கலையுணர்ச்சியால் குறிஞ்சி நில முதலும் கருவுமாகிய பொருள்களின் இயல்பினைப் பெரிதும் கூர்ந்துணர்ந்து இயற்கையின் இன்னோசையை நன்கு நுகர்ந்து மகிழ்ந்தவராவார். தமது நூலின்கண் இசைவாணர்களை மலைவாணர்களின் இனிய விருந்தினராக்கிப் புதுவோர் நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து அலர்தாய வரிநிழற்கண் இருத்தி, அவர்க்கு ஆற்றுப்படுப்போன் கூறுமாற்றான் அம் மலைபடு குறிஞ்சியின்கண் தாம் பன்முறை வழிப்போக்கராய்த் திரிந்து கண்ண் டண்ண் ணெனக் கண்டு கேட்டும்... இன்னும் வருவதாக நமக்கென உவந்து நுகர்ந்த இன்பங்களையெல்லாம், வீறுடைய தமிழ்ச் சொல்லால் கற்போர் அகக்கண் முன்னர் நேரிற் கண்டாங்கு மெய்ப்பட்டுத் தோன்றுமாறு செய்யுள் யாக்கும் உயரிய கலைத்திறனை எம்போல்வார் ஓரளவு உணர்ந்தாலும் எடுத்தோதுதல் எளிதன்று.

இப்புலவர் பெருமான் செய்யுளை உணர்ச்சியோடு ஓதுங்கால் அம்மம்ம எத்துணை மானதக் காட்சிகள் நம் மனக்கண்முன் தோன்றி இன்புறுத்துகின்றன. யாம் எமது சிறுகுடிலில் இருந்தவாறே வளமிக்க காட்டினூடே செல்கின்றேம். ஏறலாகாதென முசுக்கலையும் கைவிட்ட மலையுச்சியினும் ஏறுகின்றேம். நறுமலர் அணிந்த நாறிரு முச்சிக் குறமகள் வழையமை சாரல் கமழத் துழைஇ ஆக்கிய வாலவிழ் வல்சி அகமலி உவகை ஆர்வமொ டளைஇ விருந்தோம்பும் குறவர் குடிலில் அக்கூத்தரோடே விருந்துண்டு மகிழ்கின்றேம். இருள் துணிந்தன்ன ஏனம் கானவன் கணையொடுபட்டு உருண்டு கிடப்பதனைக் கண்டு மருள்கின்றேம். புழைதொறு மாட்டிய இருங்கல் அரும்பொறியைக் கண்டு அஞ்சுகின்றேம். நறவுநாட் செய்த குறவர் தம் பெண்டிரோடு வான்றோய் மீமிசையயரும் குரவைக் கூத்தினும் கலந்து கொள்கின்றேம். ஆ ஆ !  மலையும் காடும் நிறைந்த இக்குறிஞ்சியினூடே எத்தனை இன்பக் காட்சிகள்! எத்தனை இன்னிசைகள்! இவற்றை எல்லாம் ஒன்று திரட்டிப் புலவர் பெருமான் இவையனைத்தும், மலையொலி என ஒரு பெயரானே கூறுங்கால் இவையிற்றை ஒன்றுபடுத்தியும் நுகரும் அவர் மனனுணர்ச்சியின் மாண்பு தெற்றெனப் புலப்படுகின்றது. மலைபடு கடாம் என்றது மலைதரும் ஒலி என்றவாறு. மலையை யானையாக உருவகித்து அதன்கட் பிறந்த ஓசையை ஆகுபெயராற் கடாம் என்றார். கடாம் என்னும் சொல்லை இயம்ப என்னும் வினையால் ஓசையெனத் தெளிவித்தார். கடாம் என்னும் சொல்லானே முன்னின்ற மலையினை யானையாக உருவகித்தமை உணரச் செய்தார். இவ்வருமைப்பாடெல்லாம் உணர்ந்தன்றோ கலைநலமுணர்ந்த நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர் இந் நூலினை மலைபடுகடாம் என்னும் இப் பெயரான் வழங்கினர்.

மலைக்கு யானையை உவமித்து அதன்கட் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்தவதனால், இப் பாட்டிற்கு மலைபடுகடாம் என்று பெயர் கூறினார் என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இந்நூலை ஓதுவார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்த செந்தமிழ் நாட்டினை நேரிற் கண்டு மகிழ்ந்தவரே ஆவர். ஆகலின் இந் நூல் செந்தமிழ் நாட்டின் வரலாற்று நூலுமாம் என்பது மிகையாகாது.

செய்ந்நன்றி பேணல்

349-360 : குரூஉக்கண் ................. கழிமின்

பொருள் : குரூஉக்கண் பிணையல் கோதை மகளிர் - பல நிறம் பொருந்தின இடைத்தையுடைத்தாகிய பிணைத்தலையுடைய மாலையினையுடைய மகளிர் ஆடற்கேற்ற, முழவுத் துயில் அறியாவியலுள் ஆங்கண் விழவின் அற்று - முழவு கண்ணுறக்க மறியாத அகன்ற ஊரிடத்துக் கொண்ட திருநாளை யொத்துச் சிறந்திருக்கும் தன்மைத்து, அவன் வியன்கண் வெற்பே - அந் நன்னனுடைய அகன்ற இடத்தையுடைய மலை, கண் தண் எனக் கண்டும் கேட்டும் - கண்குளிரக் கண்டும் செவிகுளிரக் கேட்டும், உண்டற்கினிய பல பாராட்டியும் - உண்ணுதற்கினிய பல உணவுகளையும் கொண்டாடி உண்டும், இன்னும் வருவதாக நமக்கெனத் தொன்முறை மரபினிராகி - மேலும் இவ்வின்ப நுகர்ச்சி எய்துவதாக நமக்கென்று விரும்பிப் பழைய உறவான மக்களைப் போலும் முறைமையினை உடையராய்ச் சிலநாள் தங்கி, பன்மாண் சேருமிக்குப் புகலும் திரு ஆர் மார்பன் - பலவாய் மாட்சிமைப்பட்ட வஞ்சி முதலிய போர்த்தொழில் மிக்கு நடத்தலாலே உலகம் புகழும் திருமகள் நிறைந்திருந்த மார்பினை யுடைய நன்னனுடைய, உரும் உரறு கருவிய பெருமலை பிற்பட - உருமேறு முழங்கும் தொகுதியை உடைய பெரிய மலை நுமக்குப் பின்னாகும்படி, இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர் நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடி - வியப்பு மிக்க இனிய யாழையுடைய விறல்பட ஆடும் மகளிர் நறிய கரிய பக்கமலையிலே குறிஞ்சி என்னும் பண்ணைப் பாடாநிற்ப, கை தொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின் - நீயிரும் ஆண்டுறையும் தெய்வங்களைக் கையாலே தொழுது எம்குறை முடித்தால் நுமக்கு இவை தருதுமென்று பரவுக் கடன்பூண்டு வாழ்த்திப் போவீர்;

கருத்துரை : பல்வேறு நிறமமைந்த பிணையலாகிய மலர் மாலையை அணிந்த மகளிர் ஆடுதற் கேற்ற முழவின் இசையறாத அகன்ற ஊரிடத்தே கொண்ட திருநாளைப் போன்று சிறந்த தன்மைத்தாம் அந் நன்னனுடைய அகலிதாகிய மலை. ஆதலின் நீயிர் அம்மலைதரும் காட்சியினை நும் கண் குளிரக் கண்டும் அம்மலையினின் றெழூஉம் இசையினைச் செவி குளிரக் கேட்டும் ஆண்டு நீயிர் பெறும் உண்ணற்கினிய உணவினைக் கொண்டாடி யுண்டும், ஆண்டுச் சிலநாள் மலைவாணர் விருந்தினராய்த் தங்கிப் பின்னர் மேலும் இவ்வின்ப நுகர்ச்சி நமக்கு எய்துவதாக என விரும்பிப் பலவாய் மாட்சிமைப்பட்ட போர்த் தொழிலை மிக்கு நடத்தலானே சீர்த்தி பெற்ற திருமகள் உறையும் மார்பையுடைய நன்னன் வேண்மானின் உருமேறு முழங்கும் தொகுதியையுடைய அம்மலை பின்னாம்படி, வியப்புமிக்க இனிய யாழினையுடைய நும் விறலியர் குறிஞ்சிப் பண்ணைப் பாடாநிற்ப, நீயிரும் நறிய கரிய பக்கமலையிலே உறையும் தெய்வங்களைப் பரவுக் கடன் பூண்டு வாழ்த்தி ஆண்டு நின்றும் போவீராக என்பதாம்.

அகலவுரை : இது ஆற்றின் நன்மையும் மலைவளனும் சேரக் கூறிற்று. குரூஉ-நிறம். குரூஉக்கண் பிணையற் கோதை என்றது தன்னிடத்தே பல்வேறு நன்னிறங்களை உடைத்தாகிய பிணைக்கப்பட்ட மாலை என்றவாறு. குரூஉக்கண் இறடிப் பொம்மல் (169) என முன்னரும் கூறினர். குரூஉக் குய்ப்புகை (மதுரைக் - 757) என்றும், குரூஉத்தலை நிமிரெரி (நெடுநல்வாடை 103) என்றும், பிற சான்றோரும் கூறுதல் காண்க. முழவு - மத்தளம். துயில் அறியா என்றது இடையறாது ஆடல் பாடல் நிகழும் என்றவாறு. வியல்- அகலம். வியலென் கிளவி அகலப் பொருட்டே (உரி-66) என்பது தொல்காப்பியச் சூத்திரம். வியலுள் ஆங்கண் - அகன்ற இடமுடைத்தாகிய ஊரிடத்தே. அகலுள் ஆங்கண் (குறிஞ்சி-4) எனக் கபிலரும் ஓதுதல் காண்க. விழவின் அற்று - திருவிழாவைப் போலும் சிறப்புடைத்து. இதனால் இயற்கையிலேயே திருவிழாவைக் கண்டு காட்டும் புலமையை அறிந்து மகிழற்பாற்று.

கண், தண் என்னும் குறிற்கீழ் ஒற்றுகள், சீர்நிலை எய்தற்பொருட்டு கண்ண் தண்ண் என அளபெடுத்தன. இங்ஙனம் அளபெடுத்துச் செய்யுள் செய்வதன் வாயிலாய்ப் புலவர் கருதிய தட்பத்திற்கு மேலும் சிறப்புச் செய்தல் அவ்வள பெடையின் பயனாம். கண்ண்டண்ண்ணெனக் கண்டு என்புழி, கண்டண்ணெனக் கண்டு என்று கூறுதலினும், அத்தண்மை ஓதுவோருளத்தே மிக்குத் தோன்றுதலை உணர்வு கருவியாக அறியற்பாற்று. ஓசையானும் இவ்வளபெடைகள் சிறந்த இன்பம் நல்குவதனை அவ்வடியை ஓதி அறிக. இங்ஙனம் பொருளின்பத்தையும் சொல்லின்பத்தையும், அளபெடை முதலியவற்றால் மிகுவித்தல் நல்லிசைப் புலவர்க்கே கைவந்தவொரு வித்தை என்க. தொல்காப்பியத்துள் செய்யுளியலில் அளபெடை வண்ணம் அளபெடை பயிலும் (219) என்னும் நூற்பாவிற்குப் பேராசிரியரும் இருவகையானும் இன்பங் கெழுமிய இவ்வடியையே எடுத்துக் காட்டுவாராயினர்.

தண்மை-ஈண்டு இனிமைப் பண்பின் மேற்று. கண் தண் எனக் கண்டும் என்றதனால், பின் வரும் கேட்டும் என்னும் வினைக் கேற்பச் செவி தண்ண் எனக் கேட்டும் என வருவித்துரைத்துக் கொள்க. இன்னும் வருவதாக நமக்கென என்றது, இத்தகைய இன்பம் மேலும் பன்முறை நமக்கு எய்துவதாக என விரும்பி என்றவாறு. எனவே அக்காடும் மலையும் தரும் இன்பம் ஒருமுறை நுகர்ந்தோர் மறக்கும் எளிமைத்தன்று என்றவாறாம். தொன்முறை மரபினிராகி என்றது, அக்குறிஞ்சி நிலமக்களோடு தொன்று தொட்டு உறவுடையோர்போற் கலந்து ஆண்டுத் தங்கி என்றவாறு. இஃது அக்குறிஞ்சி வாழ் மக்களின் குடிப்பிறப்பும் மேன்மையும் கூறிற்று. என்னை?

செல்வழிக் கண்ணொருநாட் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்துயாப்பர்
நல்வரை நாட சிலநாள் அடிப்படிற்
கல்வரையு முண்டாம் நெறி  (நாலடி-154)

என்றும்,

ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே  (வெற்றிவேற்கை)

என்றும் சான்றோர் கூறியாங்கு ஒருநாட் செல்வழிக் கண்டோரைத் தொன்முறை மரபிற் கேண்மை கொண்டு போற்றல் குடிப்பிறந்த மேன்மக்கட்கே இயல்பாகலான் என்க. செருமிக்குப் புகலும் என்றது செருமிக்கு அதனால் உலகம் புகலும் என விரிக்கற்பாற்று. செரு-போர். அரசியலறம் பிறழாத போர் என்பார் மாண் செரு என்றார். அரசற்கு அறமாக மாட்சிமைப்பட்ட போர் என்றவாறு. அரசற்குப் போர் ஆற்றல் அறச் செயல் என்பதனை, 

ஐவகை மரபின் அரசர் பக்கமும்  (புறத்திணை-20)

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானும்,

நாடுகவி னழிய நாமந் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க
ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்து
உள்ள மழிய ஊக்குநர் மிடறபுத்து
உள்ளுநர்ப் பனிக்கும் பாழா யினவே  (பதிற்று-13)

என்ற செய்யுளான் அறத்திற் றிரிந்த வேந்தனை அழித்து வென்றமையும் அச் செயல் அவற்குப் புகழும் அறமும் நல்கியவாறும்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்  (குறள்-550)

என வள்ளுவனார் கொலையை அரசியலறம் என விதித்தவாறும் கண்டுணர்க. அரசர் போர்த்தொழில் செய்யாது மடிந்திருத்தல் இழுக்காதலான் நன்னன் எப்பொழுதும் போர் முயற்சி யுடையான் என்பார் பன்மாண் செரு என்றார். புகலும் - சான்றோர் புகழும். திருவார் மார்பன் என்றது நன்னனின் செல்வப் பெருமை கூறியவாறு. திருவார் மார்பன் என்றதனைத் திருமகள் உறையும் மார்பினையுடைய திருமாலாகிய நன்னன் எனக் கொள்ளினுமாம். என்னை? உலக பாலர் உருவாய் நின்று உலகங்காத்தலின் இறை என்றார். திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே யென்னும் என்று பெரியாரும் பணித்தார் எனப் பரிமேலழகர் திருக்குறள் இறைமாட்சி என்ற சொற்கு விளக்கங் கூறலான், நற்குண நற்செயல் உடைய மன்னனைத் திருமால் என்றே கூறும் மரபுண்மையும் அறிக.

உரும்-இடியேறு. உரும் உரறு கருவிய என்றது, நன்னனின் மலைக்கண் மழைவளம் கூறி அவன்றன் செங்கோன்மையைச் சிறப்பித்தவாறு. இறும்பூது- வியப்பு. இதனை அதிசயம் என்ப வடநூலோர். கஞலுதல்-நெருங்குதல். குரல் : யாழுக்கு ஆகுபெயர். இனி, இன் குரலையுடைய விறலியர் எனினுமாம். யாழ் இனிமைக்குக் காரணம் காணமாட்டாமையின் இறும்பூதுடையதாயிற்று. ஒலியின்கண் உயிர் உருக்கும் இனிமைப் பண்பு நிறைந்திருத்தல் வியப்புடைய தன்றோ! இனிமைப் பண்புடைத்தாக ஒலியணுக்கள் இருத்தற்குப் பூதநூலோர் காரணங்காட்டும் மதுகையுடையாரல்லர். மழைவளம் மிக்குக் காடுகள் தழைத்துக்கிடத்தலான் நறுங்கார் அடுக்கம் என்றார். குறிஞ்சி-குறிஞ்சிப்பண். பாடி என்னும் எச்சத்தைப் பாட எனச் செயவெனெச்சமாக்குக. விறலியர் பாட நீயிர் பழிச்சினிராய்க் கழிமின் என்க. இத்தகைய இன்பம் நல்கிய குறிஞ்சியை அதற்குரிய பண்ணாலே பாடிப் பரவுவீராய்ச் செய்ந்நன்றியறிதலைப் புலப்படுத்துச் செல்வீர் எனினுமாம். என்னை? செய்ந்நன்றியறிதல் தமிழ்மக்களின் தலைசிறந்த அறமாகலான்.

கூவல் அன்ன விடரகம்

361-366 : மைபடு ............... புகுமின்

பொருள் : மைபடு மாமலை பனுவலிற் பொங்கி - கரிய நிறமுடைத்தாகிய பெரிய மலையின்கண் பஞ்சிபோலப் பொங்கிச் சென்று, கைதோய்வு அன்ன கார் மழைத் தொழுதி - கை சென்று தீண்டும் தன்மையை ஒத்த அணுகுதலையுடைய கார்ப்பருவம் வருந்துணையும் ஆண்டுக்கிடக்கும் முகிற் கூட்டம், தூஉய் அன்ன துவலை தூற்றலின் - வலியத் தூவினாலொத்த நீர்த்துவலைகளைத் தூவுகையினாலே, தேஎம் தேறாக் கடும்பரிக் கடும்பொடு - திசைகளைத் துணிந்து கொள்ளமாட்டாத கடிய செலவினையுடைய சுற்றத்தோடே, காஅய்க் கொண்டநும் இயம் தொய்படாமல் - காவிக்கொண்ட நும்முடைய இசைக் கருவிகள் நனையாதபடி, கூவல் அன்ன விடர் அகம் புகுமின் - கிணறுகள் போன்ற முழைஞ்சுகளிடத்தே புகுமின்கள்;

கருத்துரை : கருநிறமுடைய பெரிய மலையின்கண் பஞ்சி போலப் பொங்கிக் கைசென்று தீண்டலாம் படித்தாய் அணுகிக் கார்ப்பருவம் வருந்துணையும் ஆண்டுக்கிடக்கும் முகிற்கூட்டங்கள் நுங்கள்மேல் தூவ வேண்டும் என்று கருதித் தூவுமாப் போன்று நீர்த்துளிகளைத் தூவா நிற்கும்; அங்ஙனம் தூவுங்கால் தோற்கருவிகள் நனையாதபடி ஆண்டுள்ள கிணறுகளை ஒத்த முழைஞ்சுகளிலே புக்கு ஓம்பக் கடவீர் என்பதாம்.

அகலவுரை : பனுவல் - பஞ்சி நூல். நூலின் பெயர் பஞ்சிக்காதலின் ஆகுபெயர். (பனுவல் இப் பொருட்டாதலைச் சூடாமணி நிகண்டு னகர வெதுகை 9-ல் காண்க.) பனுவல் வெண்மேகத்திற் குவமை. பெய்யாமரபுடைய வெண் மேகமும் ஆண்டுப் பெய்யும் என்றவாறு. தூவாமையுடைய வெண் மேகம் தூவுதல் அசதியாடற் பொருட்டுத் தூவுதல்போறலின் தூஉய் அன்ன துவலை தூற்றலின் என்றார். அசதியாடற் பொருட்டுத் தூவினாற்போலத் தூவலின் என்க. தொய்படுதல் - என்னும் வினைச் சொல்லால் தோற்கருவிகளும் நரப்புக் கருவிகளும் என்க. என்னை? தோலும் நரம்பும் நீரின் நனைந்துழித் தொய்யும் இயல்புடையன ஆதலின். இது உபாயம் கூறி அல்கு நற்புலன் கூறியவாறு. கூவல்-கிணறு. இது மலைக்குகைக்கு உவமை.

ஆற்றின்கண் உள்ள இடையூறுகளும், உபாயங்களும்

367-375 : இருங்கல் ................. கழிமின்

பொருள் : இருங்கல் இகுப்பத்து இறுவரை சேராது - பெரிய கல்லினது திரட்சியினிடத்து முறிந்துநின்ற மலைகளைச் சேராதே, குன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்து -குன்றினிடத்தே உளவாகிய பொறுத்தற்கரிய வருத்தத்தைச் செய்யும் குழிகளிடத்தே, நின்று நோக்கினும் கண்வாள் வவ்வும் - நின்று நோக்கினும் கண்ணின் ஒளியை இல்லையாக அக்குழிகள் கவர்ந்து கொள்வனவாம் ஆண்டுச் செல்லுங்கால், மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு - மார்ச்சனை செறிந்த முழவின் காமரத்தை நும் கையில் வாங்கி, தண்டுகாலாகத் தளர்தல் ஓம்பி - அதனை ஊன்றும் தடியாகக் கொண்டு அடி வழுக்குதலைத் தடுத்து, ஊன்றினிர் கழிமின் - ஊன்றிச் செல்லுக, ஊறு தவப் பல - அந் நெறியிடத்தே உளவாம் இடையூறுகள் மிகப் பலவாம் மேலும், அயில் காய்ந்தன்ன கூர்ங்கல் பாறை - வேல் காய்ந்தாற் போன்ற வெப்பமிக்க குடுமிக் கூர்ங் கல்லையுடைய பாறையில், வெயில் புறந் தரூஉம் இன்னல் இயக்கத்து - குளிர்ச்சி வராமல் வெயில் பாதுகாத்தலையுடைய இன்னாமை செய்யும் வழியிடத்தே போகும்பொழுது, கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின் - ஞாயிறு சினம் மாறின அந்திப்பொழுதிலே செல்வீராக.

கருத்துரை : பெரிய கல்லின் திரட்சியிடத்தே முறிந்து நின்று மலையிடத்தே செல்லுதலொழிமின்; குன்றிடத்தே உளவாகிய குழிகளிடத்தே பொறுத்தற்கரிய வருத்தத்தைச் செய்யும் இடையூறுகள் மிகப் பலவாம். அக்குழிகள் நின்று கண்ணால்நோக்கின் கண்ணின் ஒளியைக் கவரும் தன்மையன அக் குழிகளின் மருங்கே செல்லுங்கால் முழவின் காமரத்தைக் கையிற் கொண்டு அடிநிலை தவறாமல் ஊன்றிச் செல்லக் கடவீர். குளிர் புகுதாமே கடிந்து வெயில் வெப்ப மேற்றிய வேல் போலும் கூர்ங்கற்களையுடைய வழிகளை நண்பகலிற்போகாமல் வெயில் தணிந்துவிட்ட அந்திப்பொழுதிலே போவீராக என்பதாம்.

அகலவுரை : இருங்கல் - பெரிய கல். இகுப்பம் - திரட்சி இறுவரை முறிந்த மலை. முறிந்த மலையிடத்தே செல்லின் அக் கல் உருண்டு நுமக்குப் பெரிதும் ஏதஞ் செய்யும் ஆகலின் செல்லற்க என்றவாறு. குன்றிடம் படுதல் குன்றின்கண் இயற்கையின் உளவாதல். ஆர்இடர் - அருமையான இடர்; பொறுத்தற்கரிய இடர் என்றவாறு. ஊறு - இடையூறு. தவ - மிகுதியாக உறுதவ நனி என வரூஉம் மூன்றும், மிகுதி செய்யும் பொருள (உரி 3) என்பது தொல்காப்பியம். என்னால் கூறியவை கிடக்கக் கூறப்படாத இடையூறுகளும் மிகப்பல என்றவாறு. அவையிற்றைக் குறிக்கொண்டு நோக்கி விழிப்புடன் செல்க என்பது கருத்து. காய்ந்தவேல், கதிரவன் வெப்பம் ஏறிய கூர்ங்கற்களுக்கு உவமை. எரியுந் தீமேல் அயில்போற் செறிபரற் கானில் (திருச்சிற் - 228) வெயில் உருப்புற்ற வெம்பரல் (சிறுபாண்-8) கொல்லடைந்தவேல் அன்ன கூர்ம்பரல் (யா-வி. மேற்) எனப் பிறரும் கூறுதல் காண்க.

வெயில் புறந்தரும் என்றது, வெயில் தன் பகையாகிய தட்பம் ஆண்டுப் புகுதாமே ஓம்பும் என்றவாறு. நிழலற்ற இடம் என்பது குறிப்பு. இன்னல் இயக்கம்-இன்னாமை எய்துதற்குக் காரணமான செலவு. ஈண்டு இயக்கம், இயங்குதற்குரிய வழிக்கு ஆகுபெயர். கதிர் சினந்தணிந்த அமயம் - வெயில் வெப்பம் மாறிய அந்திப்பொழுது. நண்பகலிற் செல்லற்க என்பது குறிப்பு. இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர், குன்றிடம்பட்ட ஆரிடர் அழுவத்து நின்றுநோக்கினும் கண் வாள் வவ்வும், என்னுந் தொடரை நின்று கண் நோக்கினும் வாள் வவ்வும், இடம்பட்ட குன்று ஆரிடர் அழுவத்து எனக் கொண்டு கூட்டி, நின்று கண்ணாற் பார்க்கினும் கண்ணொளியைத் தன் அழகாலே வாங்கிக்கொள்ளும் இடமுண்டாகிய மலையில் பொறுத்தற்கரிய வருத்தத்தைச் செய்யும் குடிகளிடத்து, என உரை கூறினக் யாம் கண்வாள் வவ்வும் என்றதற்குக் கண்ணொளியை இல்லையாம்படி செய்யும் என்று பொருள் கூறினாம். அக்குழிகள் கண்ணொளி செல்லாதவாறு ஆழ்ந்து இருண்டுள்ளன என்பது கருத்து. இங்ஙனம் கூறாக்கால் நோக்கினும் என்றதன்கண் உள்ள உம்மை பொருட் சிறப்பின்றாதலுணர்க.

இசைக்கட் கருவிகட்கு எய்தும் இடையூறு

376-383 : உரைசெல .................... கழிமின்

பொருள் : உரை செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு - புகழ் பரக்கும்படி செறிந்த நன்னனுடைய நீங்காத படைத் தலைவரோடே, புரைதவ உயரிய மழை மருள் பஃறோல் - உயர்ச்சி மிக உயர்ந்த முகில் என்று மருளும் பல யானைத் திரளையுமுடைய, அரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய - பொரவந்த அரசரின் நிலைபேற்றினைக் கெடுக்கும் அரண்களையும் அவ்வழியுடையவாம், பின்னியன்ன பிணங்கு அரில் நுழை தொறும் - அவ் வரண்களில் பின்னி வைத்தா லொத்த கொடி பிணங்கின சிறுகாட்டையுடைய சிறிய வழிகள் தோறும், முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோல் - முன்னர்ச் செல்பவன் முகத்திலடியாமல் வாங்கிவிட்ட கடிய விசையையுடைய திரண்ட கோல், இன் இசை நல்யாழ்ப் பத்தரும் விசிபணி மண்ணார் முழவின் கண்ணும் ஓம்பி - இனிய இசையைத் தன்னிடத்தே கொண்ட நல்ல யாழின் பத்தரையும் வலித்துக் கட்டின மார்ச்சனை செறிந்த முழவின் கண்ணையும் கெடாதபடி காத்து, கைபிணி விடாஅது பைபயக் கழிமின் - அவனைக் கைப்பிடித்துக் கோடலை விடாதே மெல்ல மெல்லப் போவீர்;

கருத்துரை : உலகெலாம் பரவிய நிறைந்த புகழையுடைய நன்னனை நீங்காத படைத்தலைவரோடே, உயர்வற வுயர்ந்த முகில் போன்ற பல யானைத் திரளையும் போர் புரியக் கருதி வந்த பகைமன்னரின் நிலை பேற்றைக் கெடுக்கும் அரண்களையும் அவ்வழியுடையவாம்; பின்னி வைத்தாற்போன்ற கொடிபிணங்கின சிறுகாட்டின்கண் வழியைப் போங்கால் முன்னர்ச் செல்பவன் தன் முகத்திலடியாமல் வளைத்து விட்ட கடிய விசையுடைய திரண்ட கோல் இனிய இசையையுடைய யாழின் பத்தரையும், வலித்துக் கட்டின மத்தளத்தின் கண்ணினையும் கெடாதபடி பாதுகாத்து முன் செல்வானின் கையைவிடாதே பிடித்துக்கொண்டு மெல்ல மெல்லப் போவீராக என்பதாம்.

அகலவுரை : உரை - புகழ். உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன், றீவார்மே னிற்கும் புகழ் (232) என்னும் திருக்குறளானும் புகழ்தான் உரையும் பாட்டுமென இருவகைப்படும். அவற்றுள் உரைப்பார் உரைப்பவை எல்லாம் என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும், இனம்பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும்; படவே, பாடுவார் பாடுவனவெல்லாம் புகழாம் என்பது பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார் தாமெல்லாம் சொல்லுக என அவ்வருமைத் திருக்குறளுக்கு ஆசிரியர், பரிமேலழகர் வரைந்த நுணுக்கத்தானும், உரை என்றது ஈதலின் மேற்றாதலையும் அஃதிருவகைத்தாதலையும் அறிக.

உரைசெல வெறுத்த என்றது புகழ் உலகம் எல்லாம் பரவும்படி மிகுத்த என்றவாறு. வெறுத்த - மிகுத்த. வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் என்புழியும் இஃதிப் பொருட்டாதலறிக. அவன் - அந்நன்னன் வேண்மான். நீங்காச் சுற்றம் என்றது, உறின் நட்டு அறின் ஒரூஉம் பண்பிலார் போலாது அல்லற்காலையும் செல்வக்காலையும் ஒரு படித்தாய அன்புடையராய் அரசனைவிட்டு நீங்காத படைத்தலைவர் என்றவாறு. எனவே வழி வழிவந்த கேண்மையராய தானைத் தலைமக்கள் என்பது பெற்றாம். என்னை?

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்  (திருக்குறள்-807)

என மெய்ந்நூல் ஓதியாங்கு அப் பண்புடைமை அவர்க்கன்றி ஏனையோர்க்கின்மையான் என்க. இனி நீங்காச் சுற்றம் என்றதற்குக் கூற்றுடன்று மேல்வரினும் ஊறஞ்சி அறைபோகாச் சுற்றம் என இரட்டுறவும் மொழிந்து கொள்க. இஃதவன் சுற்றத்தன்மை கூறியவாறாம். புரை-உயர்வு. எனவே புரைதவ உயரிய என்றதற்கு உயர்வின் எல்லையளவும் மிக்கு உயர்ந்த என்க. மழை, யானைக்கு உவமை. மருள் : உவமவுருபு. பஃறோல்-பல்-தோல். குறிலின்கீழ் லகரம் தகரம் வர ஆய்தமாகத் திரிந்து புணர்ந்தது. இதனைத் தகரம் வருவழி ஆய்தல் நிலையலும், புகரின் றென்மனார் புலமை யோரே (தொல்-புள்ளிமயங்-74) என்னும் விதியாற் கொள்க. பலவாகிய யானைகள் என்பது பொருள். உரைசெல வெறுத்த அவன் மூதூர் மாலையும் (மலைபடு-39) என்புழி இத்தொடர் முன்னரும் பயின்றிருத்தல் அறிக.

பகையரசர் தன்னைச் சூழ்ந்து நிலைபெறுதற்கும் அரிய அரண் என்பார் அரசு நிலை தளர்க்கும் அருப்பம் என்றார். அருப்பம் - அரண். பகையரசர் நிலை தளர்தற்குக் காரணம் கொல் பொறிகள் உடைமை அவையாவன :

மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் னுலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்
கவையுங் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்  (சிலப்-அடைக். 207-216)

என்றித் தொடக்கத்தன. அவையிற்றை அறிந்து அணுகாது அகலுமின் என்றவாறு. இனிக் காட்டினூடே வழிபோவார்க்குளதாகிய நுணுகிய இடையூறொன்றனை அரிதின் எடுத்துக் கூறுதல் பெரிதும் இன்பந்தருவதாம். அஃதாவது காட்டின் நுழைவழியூடே முன்செல்வான் தன்முகத்தே படாதவாறு தன்கையால் முன்னிற்கும் வளாறுகளை வளைத்துக் கொண்டு செல்வதும், அவன் அப்பாற் சென்றவுடன் அதனை விட்டு விடுதலும், வளைக்கப்பட்டமையால் அவ்வாறு விசையுடன் பின்வருவாரைத் தாக்கி ஊறு செய்தலும், அத்தகைய வழிகளிற் பயில்வோர் நன்கறிவர். அறிவரேனும் இந்நிகழ்ச்சியை ஓர் இடையூறாக நினைவின் கண் வைத்தலும், அதனை ஏனையோர்க் கறிவுறுத்தலும் அருமையேயாம். இவ்விடையூறு பண்படுத்தப்பட்ட கூத்தருடைய இசைக்கருவிகளைப் பெரிதும் கெடுத்துவிடும் தன்மைத்தாதலை நுண்ணிதின் உணர்ந்து நுணுகிய முறையில் அவ்விடையூற்றை எடுத்து விளக்குதல் நம்மனோர்க்கு எத்துணை இன்பம் நல்குகின்றது காண்மின். பின்னி அன்ன - பின்னிவிட்டாற்போன்ற பிணங்கு அரில் நுழைஎனக் கண்ணழித்துக் கொள்க. அரில்-சிறுகாடு. நுழை-சிறிய வழி. கணைக்கோல் - திரண்ட கொம்பு. முழவின்கண் - மத்தளத்தில் அடிக்கப்படும் பக்கம். கைபிணிவிடாமை - வழிதவறாமைப் பொருட்டு.

மறவர் கல்லும், வழிபோகுநர் வணக்கமும், புன்முடிந்திடலும்

384-393 : களிறு ................. முடிந்திடுமின்

பொருள் : களிறு மலைந்தன்ன கண்கூடு துறுகல் - யானைகள் தம்மிற்சேர்ந்து போர் செய்தாலொத்த ஒன்றனிடத்தே ஒன்று கூடி நெருங்கின கல்லிடத்தே, தளி பொழி கானம் தலை தவப்பலவே - மழைபெய்யாநின்ற காடுகள் அவ்விடத்தே மிகப் பலவாம், ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர் - ஏவல் பொருந்தாத பகைவர் முதுகிட்ட அளவிலே தமது வெற்றிதோன்ற ஆரவாரித்தாராக அது பொறாமல் இவ்விடம் உயிர் கொடுத்தற்கு நல்ல காலமென்று மீண்டு தம் முயிரைக் கொடுத்த நாணத்தையுடைய மறவருடைய, செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே -கெடாத நல்ல புகழினையுடைய பெயர்களை எழுதி நட்ட கற்கள் முதுகிட்டுப்போனவரை இகழாநிற்கும் பலவழிகள் எண்ணுதல் மிகும்படி பலவாயிருக்கும், இன்புறு முரற்கை நும்பாட்டு விருப்பாக - இன்பமிகுகின்ற தாளத்தினையுடைய நும்முடைய பாட்டு அந் நடுகல்லில் மறத்தெய்வத்திற்கு விருப்பமாமாறு, தொன்று ஒழுகும் மரபின் நும்மருப்பு இகுத்துத் துனைமின் - பழைமை நடக்கின்ற முறைமையினையுடைய நும்முடைய யாழை இயக்கி வணங்கி விரைந்து போமின், பண்டு நற்கு அறியாப் புலம்பெயர் புதுவிர் - முற்காலம் நன்மையறியாத தீய நிலத்தை வழியறியாமற்போய் மீண்டு வருவீராயின் புதியவராகிய நீவிர் பின் வருகின்றவர்களும் அவ்வாறு போய் மீளாமற் பொருட்டு சந்து நீவிப் புல்முடிந்திடுமின் - பலவழிகளும் கூடின அச் சந்திகளைக் கையாலே துடைத்து அறிகுறியாக ஊகம்புல்லை முடிந்திட்டு வைப்பீர்;

கருத்துரை : யானைகள் கூடிப் பொருதாற் போன்று ஒன்றனோ டொன்று கூடி நெருங்கின துறுகற்களின் மேல் மழைபெய்யா நின்ற காடுகள் நீயிர் செல்லும் வழியில் மிகப் பலவுள்ளன. ஏவல் பொருந்தாத பகைவரோடு போர்செய்து தம்படை முதுகிட அதுகண்டு அப்பகைவர் தம் வெற்றிக்களிப்பால் ஆரவாரித்தாராக, அதனைப் பொறாதே இவ்விடம் உயர்விடுதற்கேற்ற செவ்வித்தாம் என்று கருதி, மீண்டும் அப்பகைவரோடே போர் ஏற்று உயிர்கொடுத்த நாணமிக்க மறவருடைய அழியாத புகழையுடைய பெயர்களைப் பொறித்து நடப்பட்ட கற்கள் முதுகிட்டோரை இகழ்ந்து நிற்கும் வழிகளும் எண்ணின் மிக்கன. அம்றக்கல்லைக் காண்புழி அக்கல்லிடத்தே நிற்கும் மறத்தெய்வம் மனமகிழும்படி இன்பமிக்க நும்பாட்டாலே ஏத்தி நும் யாழையும் இயக்கிப் பழையமுறை பிறழாது வணங்கி அவணின்றும் விரைந்து போமின். வழியல்லா வழியை அறியாதே சென்று மீண்டுவருவீராயின் நுமக்குப் பின்னர் அவ்வழி வருவோர் வழியறியாமற் போகாமைப் பொருட்டுப் பல வழிகளும் கூடின அச் சந்தியை நுங்கையால் தடவி அடையாளமாக ஊகம்புல்லை முடிந்துவிடக் கடவீர் என்பதாம்.

அகலவுரை : துறுகல் - குண்டுக்கல். இக் கற்கள் ஒன்றோடொன்று நெருங்கிக் கிடத்தற்குத் தம்முள் நெருங்கிப் போரிடும் களிறு உவமை, மாசறக் கழீஇய யானை போலப் பெரும்பெயல் உழந்த விரும்பிணர்த்துறுகல் (குறுந்-13:1-2) கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன கேழிருந் துறுகல் (குறுந்-161 : 4-5) மாயிருந் துறுகள் துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும் (குறுந்- 279: 5-6) எனப் பிறருங் கூறுதல் காண்க. தளி-மழை. தலை-இடம்.

ஒன்னா - ஏவல்வழி நில்லாத. தெவ்வர் - பகைவர். உலைவிடம் - முதுகிட்டோடும் பொழுது. ஆர்த்தல்-தம் வெற்றிக் களிப்பால் ஆரவாரித்தல். அங்ஙனம் ஆரவாரித்தலைப் பொறாது மீண்டும் அப்பகைவர் பாற்சென்று போரேற்று உயிர்நீத்த மறவர் என்க. நல்வழிக் கொடுத்த என்றது, வீரர்க்குரிய நல்லநெறியிலே நின்று தம்முயிரைக் கொடுத்த என்றவாறு. மறவர்க்குத் தம் பகைவரை வெல்லுதலும், இயலாவிடத்துத் தம்முயிரை விடுதலுமே சிறந்த நெறியாகலின் நல்வழி என்றார். உயிர்ப்பொருட்டால் நாண் துறவாது, நாண் பொருட்டால் உயிர்நீத்த மாண்புடை மறவர் என்பார் நாணுடை மறவர் என்றார். இத்தகைய மறவர் போரின்கண் உயிர்நீத்தகாலை அவர்க்குக் கல்நட்டுத் தெய்வமாகக் கொண்டு பலிசெய்து போற்றுதல் பண்டைத்தமிழர் வழக்கம். இதனை,

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல்  (தொல்-புறத்-5)

என்னுந் தொல்காப்பிய விதியானும்,

தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை - யாழிசூழ்
மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக்
கண்டனெ னின்மாட்டோர் கல்

இது மறவர்க்குக் கல் ஆராய்கின்றார் காட்சி.

காப்புநூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப்
பூப்பலி பெய்து புகைகொளீஇ - மீப்படர்ந்த
காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மின்
நாளை வரக்கடவ நாள்

இது நட்டுக் கால் கொண்டது.

பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன்
கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை
வான்வழங்கு நீரினும் தூய்தே அதனால்
கண்ணீர் அருவியும் கழீஇத்
தெண்ணீர் ஆடுமின் தீர்த்தமா மதுவே

இது நாட்டி நீராட்டியது.

கைவினை மாக்கள் கலுழக்க ணோக்கிழந்து
செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார் - மொய்ப்போர்
மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன்
பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது

இது பெயரும் பீடும் பொறித்தது.

ஆவாழ் குழக்கன்று மவித்துக் களத்தவிந்த
நீவாழ வாழிய நின்னடுகல் - ஓவாத
விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபொறித்த
பொற்கோட் டிமயமே போன்று 

இஃது அக் கல்லினை வாழ்த்தியது. இங்ஙனம் வாழ்த்துதல் மரபாகலின் தொன்று ஒழுகும் மரபின் நும்மருப்பு இகுத்துத் துணைமின் என்றார். மருப்பு : யாழ்க்கு ஆகுபெயர். முரற்கை - தாளம்: ஆகுபெயர். முரலுதல் - ஒலித்தல் என்னும் பொருட்டாகலின் ஒலிபடுக்கும் தாளத்திற்கு ஆகுபெயர் ஆயிற்று. இனி முரற்கை என்பதனைப் பாட்டிற்கு அடையாக்கி, இன்புறுத்தும் இசையினையுடைய பாட்டெனினுமாம். செல்லா நல்லிசை - அழியாப்புகழ். கல் ஏசு கவலை என்றது அக்கல்லைக் காண்டொறும், போரிற் புறமிட்டோர் நாணுதலான் அவரை இகழ்வது போன்ற மறக்கல் நிற்கும் வழி என்றவாறு. கவலை - கவர்த்த வழி. துனைமின் - விரைந்து போமின். சந்து - வழிகள் கூடுமிடம். புல்முடிதல் இவ்வழி நல்வழியன்று இதன்கட் செல்லன்மின் என்றற்கு அறிகுறிசெய்தல். இச்செயல் பிறர்க்கு நலஞ்செய்யும் மனப்பான்மையை விளக்குதல் காண்க. கானம் பல, ஆண்டுக் கல் நட்ட கவலையும் பல, அக் கல்லிற்கு மருப்பிகுத்துத் துனைமின்; புதுவிர் புன்முடிந்திடுமின் எனக் கூட்டுக.

கடவுள் ஓங்கிய காடேசு கவலையும் சுட்டினும் பனிக்கும் சுரமும்

394-403 : செல்லுந்தேஎத்து ................ கழிமின்

பொருள் : செல்லுந் தேஎத்து - நீங்கள் போகும் இடத்தின் கண், பெயர் அறிமார் - இவ்வாறே பொருதுபட்ட இன்னான் என்று அம்மறவனின் பெயரை உலகறியும் பொருட்டு, கல்லெறிந்து மருங்கு எழுதிய கல்லை அகழ்ந்து அதன்கண் எழுதப்பட்டதும், நல்வரை மராஅத்த - நல்ல அரையினையுடைய மராத்தின் நீழலிலே இருப்பதுமாகிய, கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை - தெய்வத்தன்மை மிக்க மறக்கல்லையுடைமையால் அதுபெற்றிராத ஏனைய காடுகளை இகழ்கின்ற பலவழிகளில், ஒட்டா தகன்ற ஒன்னாத் தெவ்வர் சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே - நன்னனைப் பொருந்தாதே நீங்கின அவன் ஏவற்குப் பொருந்தாத பகைவரிருக்கும் மனத்தான் நினையினும் தலைநடுங்கும் சுரம் மிகப்பல, தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே - தேன் சொரிகின்ற கண்ணினையும் தேரைச் சிதறுகின்ற கொடுக்கக் கவியும் கையினையும் உடைய தனக்கென்று ஒரு பொருளும் பேணாத நன்னனை நினைத்துச் செல்கின்றோ மென்று கூறுவீராயின், மேம்பட வெறுத்த அவன் தொல்திணை மூதூர் - எல்லா வூர்களினும் மேலாம்படி செல்வமுண்டான நன்னனுடைய பழைதாகிய உயர்ந்த ஒழுக்கத்தினையுடைய பழைய ஊர்கள், ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே - அப்பகைப் புலத்தே வந்திருந்தாற்போல்வனவாம் நம்மை ஒத்த பரிசிலர்க்கு, அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமின் - ஆதலான் நீயிர் இளைப்புற்ற இடத்தே இருந்து இளைப்பாறி அஞ்சாமற் போவீர்;

கருத்துரை : நீங்கள் செல்லும் வழிகளிலே உயிர்கொடுத்துப் புகழ் கொண்ட மறவரின் பெயரும் பீடும் பொறிக்கப்பட்டு, மராஅத்தின் நிழலிலே நடப்பட்ட கடவுட்டன்மையுடைய மறக்கல்லைப் பெற்றுள்ள கையால் பிறகாடுகளை அது பெறாமைக்கு இகழ்கின்ற பலவழிகளினும் நன்னனோடே பொருந்தாதே அவன் ஏவலை மறுத்து அவனுக்கு அஞ்சிய பகைவர் இருக்கும் மனத்தான் நினைப்பினும் தலைநடுங்கும் கொடுஞ்சுரம் பற்பல உளவாம்; அவ்விடங்களிற் செல்லுங்கால் ஆண்டுள்ளார் நும்மை வினாவுமிடத்தே யாம் தேன் சொரிகின்ற மாலையினையுடையானும், தேரினைச் சிதறுபவனும், கொடுக்கக் கவியும் கையினை உடையானும், தனக்கென ஒரு பொருளையும் ஓம்பாதவனுமாகிய நன்னன் வேண்மானை நாடிச் செல்கின்றோம் என்பீராயின், அப் பகைப்புலமும் நன்னனுடைய செல்வமிக்க பழைய ஊர்போன்று நுமக்கு நன்மையே செய்யும்; ஆதலின் நீயிர் அவ்விடத்தே அஞ்சாது வேண்டுழித் தங்கி இளைப்பாறிச் செல்லக்கடவீர் என்பதாம்.

அகலவுரை : தேஎம் - இடம்; திசையுமாம். மருங்கு என்பதனை, கல்லெறிந்து என்பதன் பின்னர்க் கூட்டுக. இறந்த மறவரின் பெயரும் பீடும் உலகு அறியும் பொருட்டு எழுதி மராத்து நீழலிலே நடப்பட்ட கடவுட்டன்மையுடைய கல் என்க. அத்தகைய கடவுட்டன்மையுடைய கல்லைப் பெற்றமையால் அது பெறாத காடுகளையிகழும் காட்டின்கண் வழி என்க. தெவ்வர் சுரம், சுட்டினும் பனிக்கும் சுரம் எனத் தனித்தனி கூட்டுக.

சுட்டுதல் மனத்தான் நினைத்தல். நினையு நெஞ்சமும் சுடுவதோர் நெடுஞ்சுரம் (கம்ப-வனம்புகு: 38) என்றார் பிறரும். தேம்-தேன். தேர் வீசு கவிகை ஓம்பா வள்ளல் என்னுந் துணையும் நன்னன் வேண்மானின் கொடைச்சிறப்போதியவாறு. ஒட்டாதகன்ற ஒன்னாத் தெவ்வர் சுரம் தவப்பல என்றது இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றல் கூறியவாறு. தேர் வீசுதல் என்றது, தேர்களையும் பொருளாகக் கருதாது எளிதின் வழங்கும் வண்மை என்றவாறு. கவிகை - இரவலர்க்குக் கொடுக்கக் கவியும் கை. இசைவிளங்கு கவி கை (புறம் 102-6) என்னுந் தொடர்க்குப் புறநானூற்றின் உரையாசிரியர் இடக்கவிந்த கையென உரை வரைந்திருத்தலும் உணரற்பாற்று. இவ்வாசிரியரே கலம்பெயக் கவிந்த கழறொடித் தடக்கையின் (577) எனப் பின்னரும் ஓதுதல் காண்க. ஓம்பா வள்ளல் என்றது இப்பொருள் தனக்கு வேண்டும் என யாதொன்றையும் கரவாது வழங்கும் வண்மை என்றவாறு. சீர்தூக்காது கொடுக்கும் கொடை (புற-வெண்-164) என்பாருமுளர்.

இனி,

வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோளள வல்லதை
நினதென இலைநீ பெருமிதத் தையே  (122)

என்னும் புறப்பாட்டும் ஓம்பாவள்ளன்மையை விளக்குதல் காண்க. படர்ந்திகும் - நினைத்துப் போகின்றோம். வள்ளற் படர்ந்திகும் எனின், அவன் மூதூர் ஆங்கனம் அற்றே என்றது. அவ்வள்ளலாகிய நன்னனை நினைந்து செல்கின்றோம் எனின் அவ்விடத்துள்ளார் நும்மைப் போற்றுதலன்றித் தீங்கிழையார் ஆதலின், பகைவர் உறைவிடமாயினும் அவ்விடமும் நன்னன் மூதூர் போன்று நுமக்கு நலந்தரும் என்றவாறு. எனவே, இதனான் நன்னனின் ஆணைச்சிறப்புப் போந்தமை அறிக. அங்ஙனமாகலான் நீயிர் அஞ்சற்க என்பான், அஞ்சாது கழிமின் என்றான். தொல்+திணை-தொஃறிணை எனப் புணர்ச்சியில் லகரம் ஆய்தமாய்த் திரிந்தது. பழையதாகிய நல்லொழுக்கம் என்பது பொருள். ஆங்கனம் அற்று - அவ்விடத்துளது போல்வது. நம்மனோர் என்றது, பாணர் பொருநர் புலவர் முதலியோரையும் உளப்படுத்தற்கு. அசைவுழி அசைஇ என்றது, நும் விருப்பம் போன்று எவ்விடத்தேனும் தங்குக; எங்குத் தங்கினும் ஆண்டு நுமக்கு இடும்பை யாதும் நேராது என்றவாறு. காடேசு கவலையில் தெவ்வர் சுரம்பல ஆண்டு வள்ளற் படர்ந்திகும் எனின் அவன் மூதூர் ஆங்கனம் அற்றே ஆதலான் அசைவுழி அஞ்சாது அசைஇக் கழிமின் எனக் கூட்டுக.

கலை நின்று விளிக்கும் கானமும், முல்லை நிலமும்

404-412 : புலி ...................... புதுவிராகுவிர்

பொருள் : புலியுற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி - புலியின் வருகையாலே வெறுத்தோடிய தனது விருப்பத்திற்குக் காரணமான பிணையை நினைத்து, கலைநின்று விளிக்கும் கானம் ஊழிறந்து - கலைநின்று கூப்பிடும் அக்காட்டை முறைமைப்படக் கடந்துபோய், சிலை ஒளி வெரீஇய செங்கண் மரைவிடை - வில்லின் ஓசைக்கு அஞ்சின சிவந்த கண்ணையுடைய மரையேறு, தலை இறும்பு கதழும் - முற்பட்ட குறுங்காட்டிலே விரைந்து ஓடா நின்ற, நாறு கொடிப் புறவின் - நாறுகின்ற கொடிகளையுடைய காட்டிடத்தே, வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த வளை ஆன்தீம்பால் - வேற்றுப் புலங்களிலே சென்று மேய்ந்த ஏற்றையுடைய நிரையிடத்தனவாகிய சங்குபோன்ற வெள்ளிய பசுக்களின் இனிய பாலை, மிளைசூழ் கோவலர் வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின் - நிரையைக் காவல் சூழ்கின்ற இடையருடைய வளையினையுடைய மகளிர் மன மகிழும்படி கொண்டு வந்து சொரிகையினாலே, பலம் பெறு நசையொடு பதிவயின் தீர்ந்த நும் புலம்பு சேண் அகலப் புதுவிர் ஆகுவீர் - பயன் பெற வேண்டும் ஆசையோடே ஊரினின்றும் போந்த நும்முடைய வருத்தம் விட்டு நீங்குகையினாலே விருந்தாந் தன்மையை உடையீர் ஆகுவீர்;

கருத்துரை : புலிவருதலைக் கண்டு அதனை வெறுத்துத் தன்னைப் பிரிந்து வேறு திசையில் ஓடிவிட்ட தன் விருப்பத்திற்குக் காரணமான பிணைமானை மற்றொரு திசைக்கண் ஓடிய கலைமான் நினைந்து நின்று கூப்பிடும் அக் கடுஞ்சுரத்தை முறையாகக் கடந்து, வில்லின் ஓசைக்கு அஞ்சிச் சிவந்த கண்ணையுடைய மரையேறு தனக்கு முற்பட்ட குறுங்காட்டிலே ஓடுதலையுடைய நறுமணங்கமழும் கொடிகள் படர்ந்த காட்டில் நிரைகாக்கும் கோவலருடைய வளையலணிந்த மகளிர் நீயிர் மனமகிழும் படி சங்கு போன்ற வெள்ளிய ஆனின் இனியபாலை நுமக்குத் தருதலாலே ஊரினின்றும் பரிசில் பெறுவான் போந்த நும் வருத்தம் நும்மைவிட்டு நீங்க நீயிர் விருந்தாந்தன்மையுடையீர் ஆவீர் என்பதாம்.

அகலவுரை : புலியுற வெறுத்ததன் வீழ்பிணை உள்ளிக் கலைநின்று விளிக்கும் கானம் என்னுந் தொடரை புலி உற வீழ் தன் பிணை உள்ளிவெறுத்த கலை நின்று விளிக்கும் கானம் எனக் கொண்டு கூட்டிப் புலி பாய்கையினாலே பட்ட தன் பிணையை நினைத்து வெறுத்த கலை நின்று கூப்பிடும் காடு என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

புலியுற - புலி வருதலான் எனச் செயவென் எச்சத்தை ஏதுப் பொருட்டாக்குக. வெறுத்த - அவண் கலையோடு கூடி நிற்றலை வெறுத்த எனினும் பொருந்தும். வீழ்பிணை - விரும்புதற்குக் காரணமான பிணை என்க; வினைத்தொகை. தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் (குறள் 1191) என்புழியும் அஃதப் பொருட்டாதல் காண்க. உள்ளி - நினைந்து. கலை - ஆண்மான். விளித்தல் - துணையை நினைந்து கூப்பிடுதல். இதுகாறும் ஒட்டாத் தெவ்வர் உறைவிடமாகிய சுரத்தியல்பு கூறியவாறு. இனிக் கோவலர் வாழும் முல்லை நிலங் கூறுகின்றார். மரைவிடை - மரையில் ஆண். தலை முற்பட்ட இடம். இறும்பு-குறுங்காடு. கதழும்-விரைந்தோடும். கதழ்வும் துனையும் விரைவின் பொருள (உரி.17) என்பது தொல்காப்பியம். மரையான் கதழ்விடை (331) என்றார் முன்னரும். கோவலர்தம் ஆனிரையை மேய்த்தற் பொருட்டு அயலிடங்கட்கு அவற்றைக் கொண்டு போதல் மரபாகலின் வேறு புலம் படர்ந்த என்றார். கோவலர் ஏறுடை யினநிரை வேறுபுலம் பரப்பி என நெடுநல்வாடையினும் வருதல் காண்க. ஏறுடை யினத்துப் புல்லூர் நல்லான் (குறுந்-275 3-4) ஏறுடை இன நிரை (அகம்-269-3) எனப் பிறரும் கூறுதல் காண்க. வளையான் - சங்கு போன்ற வெண்ணிறமுடைய பசு. கோவலர் வளையோர் என்றது கோவலருடைய மகளிராகிய ஆய்ச்சியர் என்றவாறு. மிளை-காவல். மிளை - கட்டுவேலி (சிலப்-194) என்பர் அடியார்க்கு நல்லார். தருவனர் : முற்றெச்சம் பலம்-பயன். பலம் பெறும்நசை யென்றது, பரிசில் பெற வேண்டுமென்னும் ஆசையோடே என்றவாறு. பதி-ஊர். பதிவயிற் றீர்ந்த புலம்பு-ஊரைவிட்டுப் புறப்பட்டமையாலே உண்டான வருத்தம். புதுவிர் - புதிய தன்மையை உடையீர். வருத்தந் தீர்ந்து இன்புறும் நிலையை ஆண்டு எய்துவீர் என்றவாறு.

கானம் ஊழிறந்து புறவின்கண் போங்கால் கோவலர் வளையோர் நீயிர் உவப்பப் பால்சொரிதலின் புலம்பு அகலப் புதுவிர் ஆகுவீர் என்க.

பல்யாட்டின நிரையிற் பாலும் மிதவையும்

413-417 : பகர்விரவு ................. பெறுகுவிர்

பொருள் : பகர்விரவு நெல்லின் பலவரியன்ன - பண்டம் பகர்ந்து விற்ற கலப்புற்ற பலவாகிய நெல்லின் அரிசியை ஒத்தனவாக, தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ - கிடாய் விரவுகின்ற செம்மறித்திரள் வெள்யாட்டுடனே கலந்து, கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் - கல்லென்கிற ஓசையையுடைய காட்டிடத்தே கடல் போலே ஒலிக்கும், பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே - பல யாட்டினங்களையுடைய திரள்களிலே இராக் காலத்தையுடையீராய்ச் செல்லின், பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவீர் - பாலும் பாற்சோறும் நுமக்கு என்று சமையாமல் தமக்குச் சமைத்திருந்தவற்றைப் பெறுகுவீர்;

கருத்துரை : பண்டம் விற்போர் மாற்றாகப் பெற்ற கலவை நெல்லின் பன்னிற அரிசிபோன்று பன்னிற மமைந்தனவாகிய கிடாய் விரவிய செம்மறித்திரள் வெள்யாட்டோடே கலந்து கல்லென்னும் ஒலியுடைய அம் முல்லை நிலத்தே கடல்போல ஒலியா நிற்கும் பலவாகிய ஆட்டின் திரளிலே இராப் பொழுதின்கண் எய்துவீராயின், அவ்வாட்டிடையர் நும்மைக் கண்ட பின்னர்ச் சமைக்க வேண்டாதே முன்னரே தமக்கெனச் சமைத்துள்ள பாலையும் பாற்சோற்றினையும் நுமக்குத் தருவாராகலான் நீயிர் அவையிற்றைப் பெறுவீர் என்பதாம்.

அகலவுரை : பகர் விரவு நெல் என்றது பண்டங்களை விற்போர் அவையிற்றிற்கு மாற்றாகப் பெற்ற கலப்பு நெல் என்றவாறு. பற்பல இல்லினும் பல்வேறு நெற்களையும் பெற்று ஒன்றாக விரவுதல் பண்டம் விற்போரின் வழக்கம் ஆகும். அவ்விரவு நெல்லினை அரிசியாக்கியபோது அது வெண்மை செம்மை கருமை முதலிய பன்னிறமும் உடையவாகலான் பல்வேறு நிறமுடைய யாட்டின் திரளுக்கு உவமையாயிற்று என்க. பகர்தல் - பண்டங்களை விலைகூறி விற்றல். இதனை,

சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்  (மதுரைக்-506)

என்றும், மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர் (சிலப்-இந்திர-25) என்றும் பிறர் கூறுமாற்றானும் உணர்க. தகர் - கிடாய்; ஆண் யாடு. கடா என்றும் வழங்குப. துருவை - செம்மறி. வெள்ளை - வெள்ளாடு; கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும் (153) எனப் பெரும் பாணாற்றுப்படையினும் வருதல் காண்க. பல்யாட்டின நிரை - பலவகையாடுகளும் சேர்ந்த நிரை. எல்லினிர் - இராக்காலத்தையுடையீராய்; என்றது, இராக்காலத்தே போவீர் ஆயின் என்றவாறு. மனத்தே அக்காலத்தைக் கருதுதலின் உடைமையாயிற்று என விளக்கங் கூறினர் நச்சினார்க்கினியர். மிதவை-பாற்சோறு. ஆய் மகள் அட்ட அம்புளி மிதவை (215) என வரும் புறப்பாட்டின்கண் கூழ் எனப் பொருள் கூறினர் அதன் உரையாசிரியர். இனி மிதவை - வெண்ணெயுமாம். பண்ணாது - சமைக்காமல்; முன்னரே அவர் சமைத்திருப்பர் ஆகலின் நீயிர் சென்றவுடனே தரப்பெறுவீர் என்றவாறு. இனி, பாலும் மிதவையும் பண்ணாது என்பதற்குக் காய்ச்சப்படாத பாலும் ஆடையும் எனினும் ஆம். இது வல்சி கூறிற்று. முல்லைநில மக்கள் விருந்தோம்பற் சிறப்புக் கூறியதூஉம் ஆம்.

அதட் பள்ளி

418-420 : துய்ம்மயிர் .................. கழிமின்

பொருள் : துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன - மெல்லிய தலைமயிரினையுடைய சேணமிட்ட படுக்கையை ஒத்த, மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி-ஆடுகளின் உடலையுரித்து ஒன்றாகத் தைத்த வார் மிதித்த தோற்படுக்கையிலே, தீ துணையாகச் சேந்தனிர் கழிமின் - கொடிய விலங்குகள் வாராதபடி இடையர் கொளுவிய நெருப்புத் துணையாகத் தங்கிப் போவீர்;

கருத்துரை : மெல்லிய தலைமயிர் அடக்கிய சேணமிட்ட படுக்கையை ஒத்ததும் யாட்டின் தோலாலே தைத்து வார் இறுக்கி மிதிக்கப்பட்டதும் ஆகிய தோற்படுக்கையாலே இடையர்கள் கொடிய விலங்கினங்கள் வாராமற்பொருட்டு மூட்டிய தீயைத் துணையாகக் கொண்டு தங்கிச் செல்லுமின் என்பதாம்.

அகலவுரை : பாலும் மிதவையும் தந்து நும்பசியைப் போக்குதலோடமையாது மேலும் தோற்படுக்கையுந் தருவர் ஆகலான், ஆண்டே அவ்விரவிற்குத் தங்குமின் என்றவாறு. இஃது அசையுநற்புலம் கூறிற்று. பண்டைநாள் மக்கள் தோலாற் படுக்கை இயற்றிக் கொண்டனர் என்பதனை இதனானும்,

முன்னிற் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும் பாயுண்டா யினும்
யாதுண் டாயினும் கொடுமின் வல்லே  (புறம், 317: 2-4)

என்பதனானும் உணர்க. இனி இடையர் தம் நிரையில் கொடிய விலங்குகள் புகுதாமல் ஓம்பும் பொருட்டுத் தீ மூட்டி வைத்துக் கோடலை,

கடைகாற் சிறுதீ யடைய மாட்டித்
திண்கா லுறியன் பானையன் அகலன்
நுண்பஃ றுவலை யொருதிற நனைப்பத்
தண்டுகா லூன்றிய தனிநிலை இடையன்  (அகம்-274: 5: 8)

என்பதனான் அறிக. இனி, இடையர் இவ்வாறு தீயுடையராதல் குளிர்காய்தற்குமாம். என்னை?

.................கொடுங்கோற் கோவலர்
......................................
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க  (நெடுநல்வாடை- 3-8)

என ஓதக் காண்டலான் என்க. சேக்கை - படுக்கை. அதட்பள்ளி-தோற்படுக்கை. சேந்தனிர் : முற்றெச்சம். மெய் - யாட்டின் உடல். தீ என்றதற்கு இடையர் ஒளித்த நெருப்பு என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். ஒளித்த என்பது, ஒளியுண்டாக்கிய என்றவாறு.

கூளியர் கூவை

421-427 : கூப்பிடு .................. பண்பே

பொருள் : கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பில் கொடுவில் கூளியர் கூவை காணில் - கூப்பிடு தொலையையும் கடவாநிற்கும் கூரிய நல்ல அம்பினையும் கொடிய வில்லினையும் உடைய நாடுகாக்கும் வேடருடைய திரளைக் கண்டீராயின் அவர்களுக்கு, படியோர்த் தேய்த்த பணிவுஇல் ஆண்மைக் கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே - தன்னை வணங்காதாரை அழித்த தாழ்ச்சியில்லாத பகைவரை ஆளுந் தன்மையுடையவனும் பூங்கொடி போல்வாளின் கணவனும் ஆகிய நன்னன் வேண்மானை நினைத்துப் போகின்றோமென்று கூறின், தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ - தசைகளையும் கிழங்குகளையும் நும்மை நலிந்து தின்னப் பண்ணி, ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை - பாதுகாப்பார் அல்லது வருத்துவார்கள் இல்லை ஆகலின் அவற்றை நுகர்ந்து, ஆங்கு வியம் கொண்மின் அது அதன் பண்பே - அக்காட்டிடத்தே அவர் போகச் சொன்ன வழியை நுமக்கு வழியாகக் கொண்டு போமின் அக்காட்டின் தன்மை அத் தன்மைத்தாம்;

கருத்துரை : கூப்பிடு தொலையையும் கடக்கும் கூரிய அம்பையும் வில்லையும் உடைய நாடுகாக்கும் வேடருடைய கூட்டத்தைக் கண்டீராயின், அவர்களுக்குத் தன்னை வணங்காதவரை அழித்தவனும் தாழ்ச்சி இல்லாதவனும், ஆண்மைமிக்கோனும், பூங்கொடி போல்வாளின் கணவனும் ஆகிய நன்னனை நினைத்துப் போகின்றோம் என்று கூறின், அவர்களில் தசையினையும் கிழங்கையும் நும்மை நலிந்து தின்னப் பண்ணிப் பாதுகாப்பார் அல்லது வருத்துவார்களில்லை; ஆகலான், நீயிர் அவற்றை நுகர்ந்து அவர்காட்டிய வழியில் மேலும் செல்லக்கடவீர் என்பதாம்.

அகலவுரை : கூப்பிடு - ஒருவன் உரத்துக் கூவும் ஒலி செல்லும் தூரம். இத்தூரத்தைக் குரோசம் என்ப. அத்துணைத் தூரம் செல்லும் கூர்நல்லம்பு என அம்பின் மேலேற்றிக் கூறினரேனும், அங்ஙனம் அம்பெய்யும் ஆற்றலுடைய கூளியர் என்பது கருத்தாகக் கொள்க. கூளியர். வேடம்; மறவருமாம். இது நன்னன் வேண்மானின் காட்டுப் படை கூறிற்று. காட்டின்கண் இருந்து பகைவர் நாட்டிற் புகுதாமற் பாதுகாக்கும் படை என்க.

சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின்
கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர்  (23)

எனப் புறத்தினும் இத் தொடர் வருதல் காண்க.

இனி, கூப்பிடு கடக்கும் என்ற தொடர்க்கு, கூப்பிடாத அவ்வெல்லையைக் கூவாநிற்கும் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் உரைத்தார். கூவை-கூட்டம்; திரள். காணில் என்றது கண்டுழி அவர் நும்மை வினவுமிடத்து என்றவாறு. கொடியோள் - பூங்கொடி போல்வாள். சிறந்த வாழ்க்கைத்துணையைப் பெறுதல் பேறுகளும் சிறந்ததாகலின் அத்தகைய பேறுடையான் நன்னன் என்பான், கொடியோள் கணவன் என்றார். பூங்கொடி கொள்கொம்பினைப் பற்றிப் படர்தலுடையதாதலின் கொடியோள் என்னுங் குறிப்பாற் கணவனையே பற்றிப் படரும் கற்பிற் சிறந்த மனைவியையுடையான் என்றல் குறிப்பாற் போந்த கருத்தென்க. ஆடவர்க்குப் பெறற்பால பேறுகளுள் கற்புடைய இல்லாளைப் பெறுதல் தலைசிறந்த தென்பதனை,

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.  (குறள்-54)

என்றெழுந்த மெய்ம்மொழியானும் உணர்க. இப்பேறு சிறந்ததென்னும் கருத்தானன்றே சான்றோர் பலரும், பற்பல செய்யுட்களில் கொடுங்குழை கணவ, வாணுதல் கணவ, நன்னுதல் கணவ, ஆன்றோள் கணவ, நல்லோள் கணவன், சேயிழை கணவ ஒண்டொடி கணவ, என மன்னர்களைச் சிறப்பித்து ஓதுவாராயினர் என்க. இவ்வாசிரியரே முன்னர்,

புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை யெழின்முலை வாங்கமைத் திரடோள்
மலர்போன் மழைக்கண் மங்கையர் கணவ  (56-58)

என நன்னனின் வாழ்க்கைத் துணைநலத்தை அழகுறச் சிறப்பித்தோதிப் போந்தமை ஈண்டும் நினைவுகூர்தற் பாற்று. படியோர் - தனக்குக் கீழ்ப்படியாதார். தேய்த்தல்-கொன்றழித்தல். பணிவு - ஈண்டுச் சிறுமையின்மேற்று. படர்ந்திகும் : தன்மைப்பன்மை. தண்டினர்: முற்றெச்சம்: தண்டம் என்னும் வடமொழியடியாய்ப் பிறந்தது. தண்டித்து என்பது பொருள். வற்புறுத்தி ஊட்டுவர் என்றவாறு. இது நன்னனின் சுற்றத்தொழுக்கமும் வல்சியும் விரவிக்கூறிற்று. தரீஇ-தந்து. ஓம்புநர்-பாதுகாப்போர் உடற்றுநர் - வருத்துவோர். அரசன் எவ்வழி அவ்வழிக் குடிகளும் என்பவாகலான் அவன் அங்கங்கட்கும் வண்மை இயல்பாயிற்று. வியங்கொள்ளல் - ஏவலை மேற்கொள்ளல். அக் கூளியர் ஏவிய வழியே சென்மின் என்பான் ஆங்கு வியம் கொண்மின் என்றான். வியங்கொள்ளல் இப்பொருட்டாதலை,

காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை
வினைகடை கூட்ட வியங்கொண்டான் கங்குற்
கனைசுடர் கால்சீயா முன்  (சிலப்.கனாத். இறுதிவெண்பா)

என்பதனானும் உணர்க. அது என்னும் சுட்டு, ஓம்புநர் அல்லது உடற்றுநர் இன்மையைச் சுட்டி நின்றது. அதன் பண்பென்றது - அக்காட்டின் பண்பு என்றவாறு. கூளியர் கூவை காணின் கணவற் படர்ந்திகும் எனின் தரீஇ ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை ஆங்கு வியங்கொண்மின் அது அதன் பண்பு என இயைத்துக்கொள்க.

428-433 : தேம்பட .............................. கழிமின்

பொருள் : தேம்பட மலர்ந்த மராஅ மெல் இணரும் - தேன் உண்டாக மலர்ந்த மராவினது மெல்லிய பூங்கொத்தும், உம்பல் அகைத்த ஒண்முறி யாவும் - யானை முறித்த ஒள்ளிய தளிர்களை யுடைய யாம் பூவும், தளிரொடு மிடைந்த காமரு கண்ணி - தளிர்களோடே நெருங்கிய விருப்பம் மருவின கண்ணியை, திரங்குமரல் நாரிற் பொலியச் சூடி - உலர்ந்த மரலின் நாரினாலே கட்டி அழகுபெறச் சூடி, முரம்பு கண் உடைந்த நடவை தண் என - பருக்கையையுடைய மேட்டு நிலத்திடம் விண்ட சிறுவழி மழை பெய்து குளிர்கையினாலே, உண்டனிர் ஆடிக்கொண்டனிர் கழிமின் - அந் நீரைக் குடித்துக் குளித்து வழிக்கு முகந்துகொண்டு போமின்;

கருத்துரை : தேனுண்டாக மலர்ந்த மராவினது மெல்லிய பூங்கொத்தும், யானையான் முறிக்கப்பட்ட ஒள்ளிய தளிர்களையுடைய யாம் பூவும், தளிர்களோடே நெருங்க உலர்ந்த மரலின் நாரினான் கண்ணியாகக்கட்டி அழகுபெறச் சூடிக்கொண்டு, பரற்கற்களையுடைய மேட்டு நிலத்தின்கண் விண்டுள்ள சிறுவழி மழையாற் குளிருகையால் அம்மழை நீரினை உண்டும், அதன்கட் குளித்தும், மேலும் வழிப்போங்காற் குடித்தற்பொருட்டு மொண்டுகொண்டும் செல்வீர் என்பதாம்.

அகலவுரை : மராம் - வெண்கடம்பு; ஆச்சாமரமுமாம். உம்பல் - யானை. அகைத்த -முறித்த. யா-ஒருவகை மரம். இதனை யானை முறித்தலைப் பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பிளக்கும் (குறுந் 37: 2-3) என்றும், உரற்கால் யானை ஒடித்துண் டெஞ்சிய யாஅ வரிநிழல் (குறுந் -232 : 4-5) என்றும், அத்த யாஅத்துப் பொரியரை முழுமுதல் உருவக்குத்தி.... தடமருப்பியானை (255: 1-5) என்றும், யானைதன் கொன்மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந் தின்னாவேனில் இன்றுணை யார முளிசினை யாஅத்துப் பொளிபிளந் தூட்ட (335:4-7) என்றும் நல்லிசைப்புலவர் பலரும் கூறுவர்; யாமரத்தின் தழை யானை விரும்பியுண்ணும் உணவு போலும்.

காமரு விருப்பம் மருவின என்பர் நச்சினார்க்கினியர். காமம் வரும் என்பது விகாரத்தாற் காமருவென நின்று, கண்டார்க்கு விருப்பம் வருவது என்னும் பொருட்டாயிற்று. (சிலப்-அந்திமா-40.உரை) என்பர் ஆசிரியர் அடியார்க்கு நல்லார். கண்ணி-தலையிற் சூடும் மாலை. இதனை,

கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை  (புறம்-1)

என்னும் புறத்தானும், அதன் உரையானும் உணர்க. திரங்குதல் - உள்ளே நீர்வற்றிச் சுருங்குதல்; அஃதாவது உலர்தல். மரல் நாரில் மராம் இணரும் யாம்பூவும் தளிரொடு கட்டிய கண்ணியைச் சூடி என்க. இப்புலவர் பெருமான் இங்ஙனமே முன்னரும் கன்றெரி ஒள்ளிணர் கடும்பொடு மலைந்து, சேர்ந்த செயலைச் செப்பம் போகி (159-160) எனக் கூத்தரை அடிக்கடி பூப்புனைந்து விடுதல் அறிக. இச்செயல் அவர்தம் அழகுணர்ச்சிக்குச் சான்றாம்.

நடவை - வழி. தண்ணென என்றதனால் ஏது வருவித்துக் கூறப்பட்டது. உண்டனிர், கொண்டனிர், என்பன முற்றெச்சங்கள். உண்டு ஆடிக்கொண்டு கழிமின் என்க. கொண்டு என்றது, ஆற்றுணாவாகக் கலங்களிலே முகந்து கொண்டு என்றவாறு.

அவரையம் புளியங்கூழ்

434-439 : செவ்வீ ............. பெறுகுவிர்

பொருள் : செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன - சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினை ஒத்த, வேய் கொள் அரிசி - மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசியினாலாய, மிதவை சொரிந்த - சோற்றின்கண் சொரிந்த, சுவல் விளை நெல்லின் - மேட்டு நிலத்தின் விளைந்த நெல்லின் அரிசியை விரவி, அவரையம் புளிங் கூழ் - அவரை விதையினாற் சமைத்த புளிக்கரைத்த புளியங் கூழை, அற்கிடை உழந்த நும் வருத்தம் வீட - இராக்காலத்தின் உணவிற்குப் பகற்பொழுதின்கண் வந்த நும் வருத்தம் போம்படி, அகலுள் ஆங்கண் கழிமிடைந்து இயற்றிய - அகன்ற உள்ளிடத்தையுடைய அவ்விடத்தேயுள்ள ஊர்களில் கழிகளால் தெற்றிப் பண்ணின, புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவீர் - புல்லான் வேய்ந்த குடிகளில் வதியும் குடிகளிடத்தோறும் பெறுகுவிர்;

கருத்துரை : சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினை ஒத்த மூங்கிலரிசியாலாய சோற்றின்கட் பெய்யப்பட்ட மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லரிசி விரவி அவரை விதையாற் சமைத்த புளியங்கூழை இரவின்கண் உணவாகப் பகற்பொழுதில் உழந்த வருத்தம்போம்படி, அகன்ற இடமுடையவாகிய அவ்விடத்திலுள்ள ஊர்களில் கழியாற் றெற்றிப் புல் வேய்ந்த குடிலில் வதியும் குடிகள் தோறும் பெறுகுவிர் என்பதாம்.

அகலவுரை : மூங்கிலரிசியாலாக்கிய சோற்றின்கட் பெய்யப்பட்ட கூழை இரவுண்டியாகக் குடிதொறும் பெறுகுவிர் என்க. வேங்கைப் பூ, அரும்பு மூங்கிலரிசிக்கு உவமை. இதனை அவரைக்கு உவமை என்பர் நச்சினார்க்கினியர் மேலும் அவரை விதையையும், மூங்கிலரிசியையும் சுவல் விளை நெல்லின் அரிசியையும் கலந்து புளியைக்கரைத்த உலையிலே சொரிந்து ஆக்கின குழைந்த புளியங் கூழ் என அதற்கேற்பக் கொண்டு கூட்டிப் பொருள் விரித்துள்ளார். வேய்-மூங்கில். சுவல்-மேட்டுநிலம். சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி (பெரும்பாண்-131) என வருதல் காண்க. மிதவை-சோறு. இச்சொல் முன்னரும் (417) வந்தது. புளியங்கூழ் - புளியைக் கரைத்து அடுங்கூழ் புளிங்கூழ் எனப்பட்டது. கிணை மகள் அட்ட பாவற் புளிங்கூழ் (புறம் - 399) என்றார் பிறரும். குரம்பை - குடில் தினைத்தாள் நாணல் முதலியவற்றான் வேயப்படுதலின் புல்வேய் குரம்பை என்றார். அற்கு-இரவிற்கு; இரவுப் பொழுதில் உண்ணப்பொருட்டென்க.

புள்ளோர்த்துக் கழிதல்

440-448 : பொன்னறைந்தன்ன ............. கழிமின்

பொருள் : பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி - பொன்னை நறுக்கினாலொத்த நுண்ணிய தம்முள் ஒத்த அரிசியை, வெண்ணெறிந்து இயற்றிய மா கண் அமலை - வெள்ளை எறிந்தாக்கின கரிய இடத்தையுடைய சோற்றுத் தடியை, தண் என் நுண் இழுது உள்ளீடாக - தண்ணென்ற நுண்ணிய நெய் விழுதை உள்ளே இட்டுண்ணும்படி, விசயம் கொழித்த பூழியன்ன - சருக்கரையைக் கொழித்த பொடியை ஒத்த, உண்ணு நர்த்தடுத்த நுண்ணிடி நுவணை - தன்னை நுகர்வாரை வேறொன்றை நுகராமற் றடுத்த நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவினோடு, அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் - இளைப்பாறி அவ்விடத்தே சிலநாள் தங்குவீராயின் நாடோறும் பெறுகுவிர், நோய் மர விறகின் ஞெகிழி மாட்டி - நொய்ய மரமாகிய விறகாலாக்கின கடைக் கொள்ளியை எரித்து, பனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சி - பனி விட்டு நீங்கும்படி இனிதாகச் சேர்ந்து உறங்கி, புலரி விடியல் புள்ளோர்த்துக் கழிமின் இராக்காலம் நீங்குதலையுடைய விடியற்காலத்தே பறவைகளின் குரலைக்கேட்டுப் போவீர்;

கருத்துரை : பொற்றுகள் போன்ற தம்முள் ஒத்த அரிசியை வெள்ளை எறிந்து ஆக்கின கரிய இடத்தையுடைய சோற்றுத் தடியைத் தண்ணென்ற நுண்ணிய நெய் விழுதை உள்ளே இட்டுண்ணும்படி சருக்கரையைக் கொழித்த பொடியை ஒத்த நுண்ணிய தினைமாவோடே நீயிர் அவ்விடத்தே இளைப்பாறுதற் பொருட்டுச் சிலநாள் தங்குவீராயின் நாள்தோறும் (அப் புல்வேய் குரம்பைக் குடி தொறும்) பெறுவீர்; ஆண்டு நொய்ய மரத்தின் விறகாலாகிய கடைக்கொள்ளியை எரித்துப் பனிநீங்கும்படி செய்து எல்லீரும் இனிதே உறங்கி வைகறையில் புறப்பட்டுப் போவீர் என்பதாம்.

அகலவுரை : அறைதல் - நறுக்குதல். நுண்ணேர் அரிசி என்றது, நுண்ணியவாய்த் தம்முள் சிறுமை பெருமையின்றிச் சம அளவினவாய அரிசி என்றவாறு. வெண்ணெறிந்து இயற்றிய - வெள்யாட்டை அரிந்து அதன் தசையோடே சேர்த்துச் சமைத்த என்க. அமலை - கட்டி; ஈண்டுச் சோற்றுத் திரள். தசையோடே கலத்தலான் கரிய நிறமுடைமையின் மாக்கண் அமலை என்றார். கண் - இடம். சிற்சில இடங்களிற் கருநிறமமைந்த அமலை என்க.

இனி வெண் ணெறிந்தென்றற்கு, வெண்ணிற மமைந்த மாவைத் தூவி எனினுமாம். அச்சோற்றைக் குழித்து அதனிடையே உறைந்த நெய்யை இடுதலான். தண்ணென் இழுது உள்ளீடாக என்றார். தண்ணென் இழுது - குளிர்ந்த வெண்ணெயுமாம். அசையினிர்: முற்றெச்சம். தங்கி என்னும் பொருட்டு. சேப்பின் - இருந்தால். அல்கலும் - நாள்தோறும். அசையினிர்ச் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் என்னும் தொடரை, (443) உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை என்ற (445) தொடரின் பின்னாக இயைத்துக் கொள்க. விசயம் - சருக்கரை. அது விசையம் என அகரம் ஐகாரமாயிற்று. சருக்கரையைக் கொழித்த நுண்டுகள் தினைமாவிற்கு உவமை. உண்ணுநர்த் தடுத்தலாவது - தனது சுவைமிகுதியால் தன்னை உண்பார் மற்றொன்றனை விரும்பாமற் றடுத்தல்; உண்ணுநர்த் தடுத்தன தேமா (138) என இவ்வாசிரியர் முன்னும் ஓதியமை காண்க. உண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளை (அகம் 2-2) என்றார் பிறரும்.

நுண்ணிடி - நுண்ணிதாக இடிக்கப்பட்ட மா. இதனை இடி நுண் என மாறி இடித்தலான் நுண்ணிதாகிய என்பர் நச்சினார்க்கினியர் நுவணை - தினைமா. நுவணை - இதற்கு நுட்பம் என்று சூடாமணி நிகண்டினும் (11. வகரவெதுகை.2) மா என்று பிங்கலத்தினும் (1117) பொருள் கூறப்படும். நொய் மரம் - காழ் முற்றாத எளிதில் தீப்பற்றும் இயல்புடைய மரம். ஞெகிழி - தீக்கடைகோல். இதனைக் கடைக்கொள்ளி என்றும் கூறுப. அந்நுண் அவிர்புகை கமழக் கைமுயன்று, ஞெகிலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழி (177-9) எனப் பெரும்பாணாற்றுப்படையினும் வந்தமை காண்க. இரவில் பனி தம்மை வருத்தாமல் தீ எரித்து அதன் வெப்பத்தில் இனிதே உறங்கும் வழக்கமுண்மை இதனான் அறிக. புள் - வாய்ப்புள்ளுமாம். அதாவது நன்னிமித்தம். புள்ஓர்த்துக் கழிமின் என்றது, வைகறையில் பாடும் (கூவும்) புட்களால் பொழுதினை அறிந்து போமின் என்றவாறு. இத்துணையும் கானத்தின்றன்மை கூறினார்.

நன்னன் தண்பணை நாட்டின் நலம் 
(மருதநில நலம்)

449-453 : புல்லரைக்காஞ்சி .................. தண்பணைநாடே

புல்லரைக் காஞ்சி - புற்கென்ற அரையினையுடைய காஞ்சி மரத்தினையும், புனல் பொரு புதவின் - நீர் வந்து பொருகின்ற அறுகுகளையும், மெல் அவல் - மெல்லிய விளைநிலங்களையும் உடையவாய், இருந்த ஊர்தோறும் - இருந்த ஊர்கள்தோறும், நல்லியாழ்ப்பண்ணுப் பெயர்த்தன்ன காவும் பள்ளியும் - நல்ல யாழின் பண்ணை மாறி எழீஇய தன்மையவாக இன்பம் பயக்கும் பொழில்களிடத்தும் சேரிகளிடத்தும், பன்னாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் -பல நாள் தங்கினும் ஒரு நாளே தங்கிச் சென்றாலும், நன்பல உடைத்து அவன் தண்பணை நாடே - நன்றாகிய பல பொருள்களை யுடைத்தாம் நன்னனுடைய குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு;

கருத்துரை : காஞ்சி மரத்தினையும் நீர்பாய்ந்து பொருகின்ற அறுகுகளையும் மெல்லிய விளை நிலங்களையும் உடையவாயிருந்த ஊர்களையுடைய நன்னனுடைய தண்பணை நாடு தன்பாலுள்ள பொழில்களானும் சேரிகளானும் யாழின்கட் பண்ணை மாறி எழீஇயது போன்ற இன்பமுடைத்தாகலின், ஆண்டு நீயிர் பலநாள் தங்கினும், ஒருநாள் தங்கிச் செல்லினும் அந்நாடு நுங்கட்குச் செய்யும் நன்மைகள் பலவற்றை உடையதாம் என்பதாம்.

அகலவுரை : புல் அரை - பொலிவற்ற அடிமரம். மருத நிலவளம் கூறத் தொடங்குவார் அந்நிலத்தின் கருப்பொருளாகிய காஞ்சி கூறினர். புதவு - அறுகு. வாய்த்தலை என்பர் புறநானூற்று உரையாசிரியர். அஃதாவது குளம் முதலியவற்றில் நீர் புகும் வழி நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தன னாகி (புறம்:379) என வருதல் காண்க. இனி, நீர் நாடாகலின் புதவு என்பதனைக் கதவெனக் கொண்டு இல்லங்களிற் கதவுகளை நீர் வந்து பொரூஉம் என நீர்வளங் கூறிற்றாகக் கொள்ளலுமாம். அவல்-நீர் நிற்றற்குரிய பள்ளநிலம்; ஈண்டு விளைநிலத்தின் மேற்று. பண்ணுப் பெயர்த்தன்ன காவும் என்றது, யாழிடத்தே பல்வேறு பண்களையும் மாறி மாறி எழுமிடத்துப் புதிய புதிய இன்பம் பயப்பது போன்று பற்பல வகையவான பொழில்களும் வெவ்வேறு வகைக் காட்சியின்பம் பயக்கும் எனப் பொழில்கட்கே உவமையாக்குதல் அமையும். இதனை நல்யாழ் பண்ணும் பெயர்த்தன்ன நன்பல உடைத்து எனக் கொண்டு கூட்டி நல்ல யாழின் பண்ணை மாறி வாசித்த தன்மையவாக நன்றாகிய பொருள்களையுடைத்து எனப் பொருள் கூறினர். மேலும், பண் ஒன்றை ஒன்றொவ்வாது இனிதாயிருக்குமாறு போல நுகரும் பொருள்களும் ஒன்றை ஒன்றொவ்வா இனிமையுடைய என்றார் எனவும் விளக்கம் கூறினார். இஃது ஒன்றை ஒன்றொவ்வா இனிமையுடைய காட்சிக்கும் ஒத்தல் அறிக. தண்பணை நாடு-குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு.

பலநாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் என்றது, அந்நீர்நாடு நீயிர் பலநாள் நிற்பினும் நுமக்கு இன்பம் பயக்கும் தன்மைத்து; நிற்பினும் நின்மின்; நில்லாது செல்லினும் சென்மின்; நும் விருப்பம் போல் ஆகுக என்றவாறு. பள்ளி - ஈண்டு இருப்பிடம் என்னும் பொருட்டு; எனவே மருதநில மக்களாகிய உழவர் சேரி என்க. இடைச்சேரி என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இருந்த ஊர் என்றதற்குக் குடி நீங்கா திருந்த ஊர் எனக் கொள்ளினுமாம். நன்பல - நன்றாகிய பல பொருள்களும்.

நன்பல் ஊர நாட்டொடு
நன்பல் வெரூஉப் பறை நுவலும்  (170-1)

எனப் பொருநராற்றுப் படையினும் வருதல் காண்க.

பழையர் மகளிரின் பண்புடை விருந்து

454-464 : கண்புமலி ................ பெறுகுவிர்

பொருள் : கண்பு மலி பழனம் கமழத் துழைஇ வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை - கண்பு நெருங்கின மருத நிலத்தைப் பூக்கள் நாற வளைத்து ஆராய்ந்து வலையை வீசுவார் கொண்டு வந்த பெரிய கழுத்தினையுடைய வாளைத் தடியை, நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டில் பிடிக்கையன்ன செங்கண் வரால் துடிக்கண் அன்ன குறையொடு விரைஇ - ஓரிடத்தே நிலை பெற நிற்றலையுடையவர் இட்ட நெடிய கயிற்றையுடைய தூண்டிலிற்பட்ட பிடியின் கையை ஒத்த சிவந்த கண்ணையுடைய வராலினது துடியின் கண்ணை ஒத்த தடியோடே கலந்து, பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர், ஞெண்டு ஆடுசெறுவில் தராஅய்க் கண் வைத்த நண்டுகள் ஆடித்திரியும் செய்க்கு அருகில் மேட்டுநிலத்தே இட்ட, விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ - மலையை ஒத்த போர்களை அடியிலே விழ அழித்துக்கடாவிட்டு, வளம் செய் வினைஞர் வல்சி நல்க - வளப்பத்தை உண்டாக்கும் உழவர் நெல்லை முகந்து தாராநிற்க, துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித்தேறல் - களிப்பு மிகுதியால் அசையும் மிடாவினின்றும் வார்த்தபசிய முளையாலாக்கின கள்தெளிவை, இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும் பெறுகுவிர் - இளங் கதிர்களையுடைத்தாய ஞாயிறு எழும் நாட்காலத்தே களங்கள் தோறும் பெறுகுவிர்;

கருத்துரை : கண்பங் காடடர்ந்த மருத நிலத்தை மலர் மணங்கமழ அலைத்து ஆராய்ந்து வலைவீசுவோர் கொணர்ந்த பெருங்கழுத்தமைந்த வாளைமீனின் தடியை, ஓர் இடத்தே நிலைத்து நிற்போர் எறிந்த நெடிய கயிற்றையுடைய தூண்டிலிற்பட்ட பிடிக்கை போன்றதும், சிவந்த கண்ணையுடையதுமாகிய வரான்மீனின் துடியின் கண்ணை யொத்த தடியோடே கலந்து, பகன்றை மலர் அணிந்த கள்விற்பார் மகளிர் நண்டுகள் ஆடித்திரியும் கழனிகளின் அருமே மேட்டு நிலத்திட்ட மலையை ஒத்த வைக்குவையைக் கீழேவிழத் தள்ளிக் கடாவிடுதல் செய்யும் வளப்பஞ் செய்தலையுடைய உழவர் உணவாகிய நெல்லினை முகந்து தரக் களங்கள் தோறும் நாட்காலத்தே பசிய முளையாலாக்கின கட்டெளிவைப் பெறுகுவீர் என்பதாம்.

அகலவுரை : கண்பு - சண்பங்கோரை. இஃது இக்காலத்தே சம்பு என வழங்குகின்றது. கழுநீர்ப் பொலிந்த கண்ணகல் பொய்கைக் களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர (171-2) எனப் பெரும்பாணாற்றுப்படையினும் கூறப்பட்டிருத்தலான் இது நீர் நிலைகளில் வளரும் இயல்புடையதாதல் அறிக. சண்பங்கோட்டை அலைத்து வலைவீசுதலான் ஆண்டுள்ள மலர்கள் அசைவுற்று மணங் கமழ்ந்தன என்க. பழனம் - வயல்.

இருஞ்சுவல் - பரிய கழுத்து. ஏனைய மீன்களினும் வாளைமீன் பரிய கழுத்துடைத்தாதலறிக. கரும்பி னெந்திரஞ் சிலைப்பின் அயலது, இருஞ்சுவல் வாளை பிறழும் (புறம்-322) என்றார் பிறரும். தூண்டிலிடுவார் ஓரிடத்தே நிலைத்து நிற்றல் இயல்பாகலின் நிலையோர் என்றார். யானையின் கை வரான்மீனுக்கும், துடிக்கண் அதன் துண்டத்திற்கும் உவமை. ஏனை மீன்கள் கண்களினும் வரான் மீனின்கண் மிக்குச் சிவந்திருத்தல் இயல்பு; இங்ஙனம் உலகியற் பொருள்களைக் கூர்ந்து நோக்கி அவையிற்றின் சிறப்பியல்களை விதந்தெடுத்து ஓதிப் பயில்வோர் உளத்தே பொருள் புலப்படுத்தும் நுணுக்கம் இந் நூலின் கண் யாண்டும் கண்டு இன்புறற்பாற்று துடி - உடுக்கை. கண்-அடிக்கும் பக்கம். குறை-துண்டம். பகன்றை-குறிஞ்சிப்பூ; சிவதைக்கொடியுமாம். பழையர் - கள் விற்போர். இதனை, பழையர்த மனையன பழநறை (கம்ப-நாட்டு-50) எனப் பிறர் கூறுமாற்றானும் உணர்க. ஞெண்டு-நண்டு. செறு-வயல். தராஅய்-மேட்டுநிலம். விலங்கல்-மலை; இது நெற்போருக்கு உவமை. போருக்கு மலையை உவமித்தலை,

வையுந் துரும்பும் நீக்கிப் பைதறக்
குடகாற் றெறிந்த குப்பை வடபாற்
செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றும்  (239-41)

எனப் பெரும்பாணாற்றுப்படையினும்,

சூடுகோடாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை  (243-44)

எனப் பொருநராற்றுப்படையினும்,

போரொடு நிகர்வன புணர்மலை  (கம்ப.நாட்டு-46)

என இராமாவாரத்தும் காண்க. உலகம் வளமுடைத்தாதல் உழவரான் நிகழ்தலின் வளம் செய் வினைஞர் என்றார். இதனை,

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர்  (சிலப்.10.149-50)

என்றற் றொடக்கத்து ஆன்றோர் மெய்ம்மொழிகளான் உணர்க. துளங்கு தசும்பு - அசையும் மிடா. பசும் பொதி தேறல் - நெல்லின் பசிய முளையாற் சமைத்த கட்டெளிவு. பழையர் மகளிர், வினைஞர் வல்சி நல்கத் தேறல் தரப்பெறுகுவீர் என்க. பழையர் மகளிர் வாளைத்தடியை வராலின் தடியோடே விரைஇ தேறல் தரப் பெறுவீர்; வினைஞர் வல்சி நல்கப் பெறுவீர் எனத்தனித் தனி முடிவு காண்க. இளங்கதிர் ஞாயிற்றுக் களம் என்றது விடியற்காலத்தே களத்தின்கண் என்றவாறு. இளங்கதிர் என்ற குறிப்பால் விடியற் காலம் என்பது பெறப்படும்.

மருத நிலமக்கள் தரும் உண்டி

465-470 : முள்ளரித்து ............... கழிமின்

பொருள் : முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு - முள்ளைக் கழித்து ஆக்கின கொழுப்பால் வெள்ளிய நிறத்தையுடைய தடிகளையிட்ட வெளிய சோற்றை, வண்டுபடக் கமழும் தேம்பாய் கண்ணி - வண்டுகள் படியும்படி நாறும் தேன் சொரிகின்ற கண்ணியினையும், திண் தேர் நன்னற்கும் அயினி சான்மெனக் கண்டோர் மருள - திண்ணிய தேரினையும் உடைய நன்னன் வேண்மானுக்கும் உணவாதற்கு அமையும் என்று கண்டோர்கள் மருளும்படி, கடும்புடன் அருந்தி - நும் சுற்றத்துடனே உண்டு, எருதுஎறி களமர் ஓதையொடு நல்யாழ் மருதம் பண்ணி - எருத்தை அடிக்கின்ற உழவர் பாடும் ஏர் மங்கலப்பாட்டின் இசையோடே இயையுமாறு நுங்கள் நல்ல யாழிடத்தே மருதப்பண்ணை எழீஇ, அசையினிர் கழிமின் - அவ்விடத்தே இளைப்பாறிப் போவீர்;

கருத்துரை : வண்டுகள் படியும்படி கமழும் தேன் சொரிகின்ற முடி மாலையினையுடைய நன்னன் உண்டற்கும் இது தக்கதாம் என்று கண்டோர் மருளும்படி முள்ளைக் கழித்து ஆக்கின வெள்ளிய தசையோடே கலந்த வெள்ளிய சோற்றை, (உழவர், தருகையாலே) நும் சுற்றத்தோடே உண்டு ஆண்டு வயல்களிலே எருதுகளை அடிக்கின்ற உழவர் பாடும்ஏர் மங்கலப்பாட்டிற்கு இசையும்படி நீயிர் நும் யாழிலே மருதப் பண்ணை எழீஇ ஆண்டிருந்து இளைப்பாறிச் செல்க என்பதாம்.

அகலவுரை : முள் - மீனின் உடற்கண் அமைந்த முள். கயன்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள் (புறம்-195-2) என்றார் பிறரும். முள்ளை முழுதும் போக்கித் தசைமாத்திரையாய் ஆக்கிய என்றவாறு. இயற்றிய - சமைத்த. வெள் அரி -வெண்ணிறமுடைய மீன்துண்டு; அரியப்படுதலான் அரி யென்றார். அரி: ஆகுபெயர். வண்டுபடக் கமழும் தேம் பாய் கண்ணித் திண்டேர் நன்னற்கும் அயினி சான்மென என்றது, அவ்வுணவின் உயர்வினைச் சிறப்பித்தவாறு. நன்னற்கும் என்றதன்கண் உம்மை சிறப்பின்கண் வந்தது. அவ்வுணவு தூய்மையானும் சுவையானும் தோற்றத்தானும் உயர்ந்து சிறந்த உணவினையுண்ணும் நன்னனும் உண்ணத் தக்கதாயிருக்கும் என்பது கருத்து கடும்பு-சுற்றம். அயினி - உணவு; (சூடாமணி நிகண்டு 6: 22-ல் காண்க) அயிலுதல் என்னும் தொழிலடியாய்ப் பிறந்த பெயர் போலும். சாலும், என்பது சான்ம் என நின்றது.

செய்யும் என் எச்ச வீற்றுயிர் மெய் சேறலும்
செய்யுளுள் உம்முந் தாகலும் முற்றேல்

உயிரும் உயிர்மெய்யும் ஏகலும் உளவே (நன்னூல். 341) என்னும் விதியாற் கொள்க.

எருது எறி களமர் - எருதை அடித்து ஓட்டும் உழவர். ஏர் உழுவோர் பாடுதல் மரபு. இப்பாட்டினை ஏர் மங்கலம் என்ப. இதனை.

பாருடைப் பனர்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்  (சிலப்-நாடு-134-5)

எனவரும் சிலப்பதிகாரத்தானும் அறிக. தண்பணை நாடாகலின் மருதப் பண்ணைப் பண்ணுக என்றான். முன் இன்குரல் விறலியர் நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடுக (318-9) என அந்நிலத்திற் கேற்ற பண் கூறியமையும் உணர்க.

சேயாறு

471-477 : வெண்ணெல் ................. கழிமின்

பொருள் : வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ செங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல் - வெள்ளிய நெல்லை யறுப்பார் கொட்டின பறையோசைக்கு வெருவிச் சிவந்த கண்ணையுடைய எருமைத் திரளைப் பிரிந்த கடா, கனைசெலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி - ஆராவாரிக்கும் செலவினையுடைய வலியோடே நும்மேல் விரைந்து வருதலைப் பேணி, வனைகலத் திகிரியின் குமிழி சுழலும் துனைசெலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் - குயவன் வனைகின்ற மட்கலத்தில் உருளை போலக் குமிழி சுழன்று தோன்றும் விரைந்த செலவினையுடைய வாய்த்தலையில் ஓடும், காணுநர் வயா அம் கட்குஇன் சேயாறு - காண்பார் விரும்பும் கண்ணுக்கு இனிய சேயாற்றினது, யாணர் ஒரு கரைகொண்டனிர் கழிமின் - புதுவருவாயையுடைய ஒரு கரையை வழியாகக் கொண்டு போவீர்;

கருத்துரை : மருதநிலத்தே நெல் அரிவார் கொட்டிய பறையோசைக்கு வெருவிச் செங்கண் எருமைத் திரளைப் பிரிந்த கடா ஆரவாரத்தோடே விரைந்து நும்மேல் வருதலைப் பேணி, குயவன் வனைகின்ற உருளைபோன்று குமிழி தோன்றும் விரைந்த செலவினையுடைய வாய்த்தலையில் ஓடும் காண்போர் பெரிதும் விரும்புகின்ற காட்சி இன்பமிக்க சேயாற்றினது புதிய வருவாயையுடைய ஒரு கரையை வழியாகக் கொண்டு செல்வீர் என்பதாம்.

அகலவுரை : வெண்ணெல் அரிநர் - உழவர். தண்ணுமை - ஈண்டு மருதப்பறை என்னும் பொருட்டு, தடாரியுமாம். எருமை மருதநிலக் கருப்பொருள். ஓசையை வெரூஉம் என்றதனால் அக்கடாவின் உடலுரம் குறிப்பான் உணரப்படும். எருமைக்கடா நும்மேற் பாய்ந்து நும்மை இன்னல் செய்யும் ஆதலால் இவ் விடும்பையைக் குறிக்கொண்டு நோக்கி எதிரதாக் காத்துக் கொள்க என்றவாறு.

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ (நற். 350:1) என்றும், வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇக் கண்மடற் கொண்ட தீந்தே னிரிய (புறம்-348) என்றும், வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை (அகம் - 40-13-4) என்றும், வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை, பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ளோப்பும் (அகம் 204: 10-11) என்றும், மருதநிலத்தே நெல்லரிவார் அக் கழனிகளில் வாழும் பறவை முதலிய சிற்றுயிர்கள் ஓடி உய்தற்பொருட்டு அரிதல் தொடங்கும்போது அரிவார் பின்னர்ப் பறை முழக்கும் வழக்கத்தைப் பாடியிருத்தல் காண்க. குயவன் மட்கலஞ் செய்யும் உருளையின் சுழற்சி விரைந்தோடும் நீரின்கட் சுழலுக்கு உவமை வனைகலம் : வினைத்தொகை. துனை - விரைவு. தலைவாய் - என்பதனை வாய்த்தலை என மாறுக. இதனை வாய்க்கால் என்றும் கால்வாய் என்றும் இக்காலத்து வழங்குவர். ஓவிறந்து வரிக்கும் என்ற தொடரை ஓவு இறந்து வரிக்கும் எனக்கண்ணழித்து ஆசிரியர் நச்சினார்க்கினியர், ஒழிவின்றி ஓடும் என்று பொருள் கூறினர். காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை, ஓவிறந்து ஒலிக்கும் ஒலியே யல்லது (நாடுகாண்: 108-9) எனவரும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அரும்பத உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரைத்தாங்கு உரைத்தார். ஆசிரியர் அடியார்க்கு நல்லார் ஓ இறந்து ஒலிக்கும் எனக் கண்ணழித்து வாய்த்தலைக்கிட்ட கதவின் மீதெழுந்து குதிக்கும் என்று பொருள் கூறியுள்ளமையும் ஈண்டுணரற் பாலது.

காணுநர் - அச் சேயாற்றின் கரைக்கண் உள்ள சோலை, யாற்றொழுக்கம் முதலிய காட்சிகளை உணர்ந்து நுகர்வோர் என்றவாறு. ஒருநாட் கண்டோர் மீண்டும் அவ்வின்பக் காட்சியை விரும்பும் தன்மைத்தென்க. கட்கு-கண்ணுக்கு. கட்பொறிக்கு இன்பம் நல்கும் சேயாறு என்க. யாணர் - புதுவருவாய் ஈண்டுச் சேயாற்றின் கரை மருங்குள்ள பொழில் முதலியன மலர்தலானும் கனிதலானும் - புதிய வருவாயை உடையன என்க. அவ் வியாற்றின் ஒரு கரையிற் செல்லு நெறியே நன்னன் ஊர்க்குச் செல்லும் நெறியென்பான், ஒரு கரைக் கொண்டனிர் கழிமின் என்றான். இப்பகுதியில் கூறப்பட்ட மருத நில வளம்,

ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலைபா யமலை ஆலைச்
சாறுபாய் ஓசை வேலைச் சங்குவாய் பொங்கு மேதை
ஏறுபாய் தமரம் நீரில் எருமைபாய் துழனி இன்ன
மாறுமா றாகித் தம்மில் மயங்குமா மருத வேலி  (இராமா-நாட்டு-3)

என்னும் கம்பர் செய்யுளை நினைவுறுத்துகின்றது. 115. தீயின் அன்ன என்பது தொடங்கி 477. யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின் என்னுந்துணையும் ஆற்றின் அளவும் வல்சியும் அசையுநற்புலமும் பிறவும் கூறும் ஒரு தொடர். இனி 478. நிதியந்துஞ்சு என்பது தொடங்கி, 583. நாடு கிழவோனே என நூன் முடியுங்காறும் ஒரு தொடர். இதன்கண், நன்னனுடைய மூதூர்ச் சிறப்பும் ஆண்டுச் செல்லுமாறும் ஆங்கு உபசரிக்கப் படுமாறும் நன்னன் வண்மைச் சிறப்பும் பிறவும் விரித்துக் கூறப்படும்.

நன்னன் மூதூர்ச் சிறப்பு

478-487 : நிதியந்துஞ்சு ............... மூதூர்

பொருள் : நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பிற் பதிஎழல் அறியாப் பழங்குடி கெழீஇய -பொருட்டிரள் தங்கும் மிக ஓங்குதலையுடைய மதிலையும் ஊரினின்றும் பெயர்தலையறியாத பழைய குடிமக்கள் நிறைந்து திரிதற்கு, வியலிடம் பெறா விழுப் பெரு நியமத்து - அகன்றதாயினும் இடம் பெறாத சீரிய பெரிய அங்காடித் தெருவினையும், யாறு எனக்கிடந்த தெருவில் - பேரியாறு என்னும்படி கிடந்த பெருந்தெருக்களையும், சாறென இகழுநர் வெரூஉம் கவலை மறுகில் - திருநாள் என்னும்படி மக்கள் திரண்ட பகைவர்கள் செல்ல அஞ்சும் கவர்த்த தன்மையுடைய குறுந்தெருக்களையும் உடையதாகிய, கடல் எனக் கார் என ஒலிக்கும் சுமையொடு - கடல்போன்றும் முகில் போன்றும் முழங்கும் ஆரவாரத்தோடே, மலையென மழை என மாடம் ஓங்கி - மலைபோன்றும் முகில் போன்றும் மாடங்கள் ஓங்கியதாய், துனி தீர் காதலின் இனிதமர்ந்து உறையும் - தன்பால் உறைவோர் வெறுப்பில்லாத விருப்பத்தோடே இன்புற்றமர்ந்து உறையாநிற்கும், பனிவார் காவில் பல் வண்டிமிரும் அவன் பழவிறல் மூதூர் - குளிர்ந்த நெடிய பொழில்களிடத்தே பல வண்டுகள் இசைபாடும் அந் நன்னன் வேண்மானின் பழைய வெற்றியையுடைய மூதூர், நனிசேய்த்து அன்று - அவ்வியாற்றின் கரையினின்றும் மிகத் தொலைவினுள்ள தன்று (அண்மைத்து;)

கருத்துரை : செல்வம் நிறைந்து மிக ஓங்கிய மதில்களை உடையதாய் ஊரினின்றும் பெயர்தலை அறியாத பழைய குடிமக்கள் நிறைந்ததாய், அகலியவாயினும் மக்கண் மிக்குவழங்கலான் இடம் பெறாத பெரிய அங்காடித் தெருக்களையுடையதாய்ப் பேரியாறுகள் கிடந்தாற்போன்று அகன்று நீண்டு கிடக்கும் பெருந்தெருக்களையும், திருவிழாவிற் போன்று எப்போதும் மக்கள் திரண்டு வழங்குவனவும் நன்னனை இகழுவோர் செல்ல அஞ்சுவனவுமாகிய சந்திகளையுடைய குறுந்தெருக்களையும் உடையதாய், கடல் போன்றும் முகில் போன்றும் முழக்கமுடையதாய், மலைபோன்றனவும், முகில் போன்றனவுமாகிய மாடங்களை உடையதாய், தன்பால் உறைவோர் வெறுப்பின்றி விருப்பத்தோடே எஞ்ஞான்றும் இனிதமர்ந்து வாழ்தற்குரிய பண்புடையதாய், குளிர்ந்த நீண்ட பூம்பொழில்கள் சூழ்ந்து வண்டுகள் இசைபாடப் பெற்றதாய் அமைந்த நன்னன் பழையதாகிய வெற்றிமிக்க மூதூர் அச்சேயாற்றின் கரையினின்றும் மிகத் தொலைவின் உளதன்று அணித்தே உளதாம் என்பதாம்.

அகலவுரை : பத்தே வரிகளில் எல்லாச் சிறப்புக்களும் நிறைந்த ஒருமன்னன் வாழும் தலைநகரத்தைக் கண்கூடாகக் கற்போர் உளத்தே காணுமாறு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கவுசிகனார் என்னும் இந் நல்லிசைப் புலவர் இயற்றித்தந்த இச் செய்யுளின் செறிவையும் அழகையும் உணர்வுடையோர் உள்ளி உள்ளி மகிழ்தல் வேண்டும். இவ்வாற்றான் பண்டைக் காலத்துப் பண்புடைய மூதூர் ஒன்றனை யாம் நேரிற் கண்டு மகிழ்கின்றோம் அல்லமோ! ஆசிரியர் சுருங்கக் கூறி ஆடியின்கண் மலைவளம் முற்றும் காட்டுவார்போன்று காட்டியுள்ள இவ்வரிகளின் நலத்தை விரித்துரைக்கப் புகின் அஃதொரு தனி நூலாய்ச் சிறக்கும் என்பது மிகையன்று. நூல் விரிதற்கஞ்சி ஓரளவே உரைக்கின்றாம்.

எல்லாம் பொருளிற் பிறந்துவிடும் என்பவாகலின் அந் நகரச்சிறப்பிற்கெல்லாம் காரணமாய்ச் சிறந்த எவ்வகை நிதியும் ஆண்டு துயில் கொண்டு கிடப்பன வாயின. துஞ்சுதல் - மிக்குக் கிடத்தல் என்னும் குறிப்புடையதாம். இனி, அந் நகரத்தின்கண் அரசுறுப்புக்களின் ஒன்றாகிய அரணின் சிறப்பினை நிவந்து ஓங்கு என்னும் மீமிசைச் சொல்லால் நன்கு ஓதினர். எடுத்த மொழியின் இனம் செப்பி, அவ்வுயர்வோடே அகலமும் திண்மையும் அருமையும் ஆகிய மூன்றன் மிகுதியையும் கொள்ளற்கே நிவந்தோங்கு வரைப்பு என்றார். என்னை?

உயர்வகலந் திண்மை யருமை யிந்நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்  (குறள்-743)

என வள்ளுவனாரும் கூறினாராகலான் என்க. இனிப் பதி எழல் அறியாப் பழங்குடி என்றது, நன்னனின் செங்கோன்மைச் சிறப்பைக் குடிகளின் மேலேற்றி உரைத்தவாறு. என்னை?

மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு தன்னாற்றன் பரிசனத்தான்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த்து அறங்காப்பான் அல்லனோ  (பெரியபு - மநுநீ- 36)

எனச் சேக்கிழார் பெருமான் இயம்பியவாறு, நன்னன் இவ்வைவகைப் பயந்தீர்த்துச் செங்கோல் செலுத்தலால் ஆண்டு வாழுங்குடிகள் வழி வந்த கேண்மையராய் வதிந்து வாழ்வாராயினர்; இனி,

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு  (குறள்-544)

என்றோதுப வாகலின். அவன் ஆட்சிக்கண் இன்புற்றமர்ந்த குடிகள் அப்பதியை அகன்று போதலை என்றும் அறியாவாயின. பதி எழுவறியாப் பழங்குடி கெழீஇய, பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும் (சிலப்-மங்கல-156) என ஆசிரியர் இளங்கோவடிகளார் இச்சிறப்புடைமையைப் புகார் நகரத்திற்குக் கூறிய அடிகட்கு அடியார்க்கு நல்லார் பதியெழுவறியாப் - பதியினின்றும் பெயர்தலை யறியாத: எனவே பகையின்மை கூறிற்று என விளக்கங் கூறினார். மேலும் வறுமையின்மையும் கூறிற்று எனின், அவர் உரை பெரிதும் சிறந்திருக்கும் என்னை? பகையில்லாத வழியும் வறுமை கடைக் கூட்டவே மக்கள் நாடு விட்டு நாடு சென்று அல்லலுறுதலை யாம் உலகியலில் கண்கூடாகக் காண்கின்றோம் ஆகலின்.

ஆசிரியர் இளங்கோவடிகளார் ஒரு நாடு அல்லது நகரத்தின் சிறப்புடைமைக்குச் சான்று ஆண்டு வாழ்வோர் அப் பதியினின்றும் நீங்குதல் அறியாமையே என்னும் கொள்கையுடையார் போன்று மதுரைக் காண்டத்தும் மறவாமே பதியெழு வறியாப்பண்பு மேம்பட்ட, மதுரை மூதூர் (அடைக்கல - 5.6) என இவ்வினிய அடியையே ஓதுவாராயினர். அவ்விடத்தே, பதியெழுவறியாமைக்கு விரிவுரை கூறுவார் போன்று

நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் றண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை
பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர்  (சிலப்: அடைக் -1.6)

என்று ஓதினாராகலான், ஈண்டும் நேமி கடம் பூண்டுருட்டும் நன்னன் வேண்மானின் கோலின் செம்மையும், குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளக்குதற்குக் குறிப்பேதுவாய் நின்றது, பதி எழல் அறியாப் பழங்குடி கெழீஇய என்னுந் தொடர் என்க. நியமம் - அங்காடித் தெரு. இதனை, வாணிகர் உறையுள் சூழ் நியமம் (திருவிளையாடற்புராணம் நகரப்-69) எனப் பிறர் கூறுமாற்றானும் உணர்க. இனி, நியமம் என்பதனைத் திருக்கோயில் எனக்கொண்டு திருக்கோயில்களின் யாறெனக்கிடந்த தெருவில் சாறெனக் கடல் எனக் கார் என ஒலிக்கும் சும்மையொடு என்றியைத்து அதற்கேற்பவும் உரைத்துக்கொள்க. இதற்குச் சாறென என்பதற்குத் திருநாட்காலம் போன்று எப்பொழுதும் என்க.

இகழுநர் வெரூஉம் கவலை என்றது, நன்னனை உள்ளத்தே இகழும் பகைவர் செல்லுதற்கு அஞ்சும் சதுக்கம் என்றவாறு. என்னை? நகரங்காவலர் சதுக்கங்களில் நின்று போவார் வருவோரைக் கண்காணித்தலான் ஆண்டுச் செல்லின் தம்மகத்ததாகிய பகையை முகத்தே கண்டு சிறை செய்வர் எனக் கருதி இகழுநர் கவலையிற் சேறலை வெருவினர் என்க. ஆசிரியர் நச்சினார்க்கினியர் இத் தொடரைப் பிரித்து நிவந்தோங்கு வரைப்பிற்கு அடையாக்கிச் சிறப்பின்றி உரைத்தார். கவர்த்த நெறிகளிலே காவலர் காக்கும் வழக்கத்தினை சிலையுடைக் கையர் கவலை காப்ப (312) என்னும் மதுரைக் காஞ்சியானும் அறிக. வியல் - அகலம். வியலிடம் பெறாது என்பதனை, அகன்றதாயினும் மக்கள் மிகுதியான் இடம் போதியதாகாத என்க. யாறெனக் கிடந்த தெரு என்றார். தெரு, யாற்றின் உள்ளிடம் போன்றும் இருபக்கத்தும் வீட்டொழுங்கு இருமருங்கும் உள்ள யாற்றின் கரைபோன்றும் தோன்றுதலான். சில் காற்றிசைக்கும் பல்புழை நல்லில், யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவில் (மதுரைக்கா - 368-9) என்றார் பிறரும். சாறு-விழா. கடலெனக் கார் என ஒலிக்கும் சும்மை என்பதனோடு,

கவ்வையுங் கடும்புனல் ஒலியும் காப்பவர்
செவ்வனூ றாயிரஞ் சிலைக்கும் பம்பையும்
எவ்வெலாத் திசைகளும் ஈண்டிக் காரொடு
பவ்வம்நின் றியம்புவ தொத்த வென்பவே  (42)

என்னும் சீவக சிந்தாமணிச் செய்யுளை ஒப்புக் காண்க.

மலைகளும் முகில்களும் அடிவானத்தே ஒழுங்குபட்டுக் குவடுகள் பலவும் உயர்ந்து தோன்றுதலானும் முகில்கள் சில செவ்விகளில் கதிரொளி கலந்து பொன்னிறமாகவும் வெண்ணிறமாகவும் காட்சி தருதலானும் விண்ணுற நிவந்த பன்னிற மாடங்கட்கு உவமையாயின.

பெரியோர் மேஎ யினிதின் உறையும்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்  (474)

என்றும்,

செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற  (485-8)

என்றும்,

குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன
பருந்திருந் துகக்கும் பன்மாண் நல்லில்  (501-2)

என்றும், மதுரைக்காஞ்சியிற் பண்டைநாள் தமிழ்மக்கள் மலைபோன்ற இல்லம் இயற்றிய செய்தி கூறப்பட்டிருத்தலும், மழையென மருளும் மகிழ் செய்மாடம் எனப் பொருநராற்றுப் படையில் முகிலை மாடத்திற்கு உவமை கூறியிருத்தலும் உணர்க. துனி -வருத்தம். காதல், அவ்வூரில், எஞ்ஞான்றும் இருந்து வாழ்தல் வேண்டும் என்னும் அவா. அங்ஙனம் அவாவுதற்குக் காரணம் அரசனும் அல்லவை செய்யாது காத்தலும், ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பலர் இருத்தலும், இயல் இசை நாடகக் கலைகள் இடையறாது நிகழ்தலும் பிறவும் ஆகும் என்க. அமர்ந்துறைதலாவது, அலமருதற்கு ஏதுவின்மையாற் பொருந்தி வாழ்தல். பூம்பொழில்களின் வளங்கூறுவார் பல்வண்டிமிரும் என்றார். பழவிறல் என்றது, நன்னனின் குடிப்பெருமை கூறியவாறு. இது, அவன் மூதூர் மாலை கூறிற்று.

நன்னன் வேண்மானின் கோபுரவாயில் சிறப்பு

488-491 : பொருந்தா ................ புகுமின்

பொருள் : பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப் பருந்துபடக் கடக்கும் ஒள்வாள் மறவர் - நன்னனைப் பொருந்தாத பகைவருடைய கரிய தலைகள் துணியப் பருந்துகள் படியப் போரை வெல்லும் ஒள்ளிய வாளையுடைய மறவர், கருங்கடை எஃகஞ் சாத்திய புதவின் அருங்கடி வாயில் அயிராது புகுமின் - தம்முடைய கரிய காம்பினையுடைய வேலைச் சாத்தி வைத்துக்காத்திருக்கின்ற பல தெற்று வாயில்களையுடைய அரிய கோபுரவாயிலை ஐயுறாமற் புகுவீர்;

கருத்துரை : நன்னனுடைய பகைவர்தம் கரிய தலைகள் துணிபடப் பருந்துகள் அப் போர்க்களத்தே வீழப் போரை வெல்லும் ஒளிவாளையுடைய மறவர்கள் தம்முடைய கருங்காம்புடைய வேல்களைச் சாத்தி வைத்து விழிப்புடன் காவல்செய்து நிற்கும்பல தெற்றுவாயில்களமைந்த அரிய கோபுரவாயிலை எய்துங்கால் அவர் நிலைகண்டு அஞ்சி ஐயுறாமல் நும்மில் போன்று கேளாதே புகுமின் என்பதாம்.

அகலவுரை : பொருந்தாத் தெவ்வர் - நன்னனுடைய ஆணையிற் பொருந்தி நடவாத பகைவர். துமிதல் - துணிபடுதல். கடக்கும் என்றது எத்தகைய ஆற்றலுடைய படையையும் வென்று கடக்கும் என்றவாறு. ஒள்வாள் என்றது, புறக்கொடையின் கண் வீசாப் புகழுடையவாள் எனினுமாம். கருங்கடை - கருநிற மமைந்த காம்பு. எஃகம் - வேல். புதவு - கதவு. வேலினைச் சாத்தி வைத்துவிட்டுக் காத்து நிற்றல் மரபு. அருங்கடி வாயில் என்றது, பகைவர் புகுதற்கு எவ்வாற்றானும் அரிதாகிய காவலுடைய வாயில் என்றவாறு. அத்தகையதாயினும் அது,

பொருநர்க் காயினும் புலவர்க் காயினும்
அருமறை நாவின் அந்தணர்க் காயினும்
அடையா வாயில்  (சிறுபாண் 203-206)

என்பான், அயிராது புகுமின் என்றான்.

நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்கென் இடும்பை தீர  (66-7)

என்றார் பொருநராற்றுப் படையினும்.

ஆண்டுள்ளார் பரிசிலரைப் பரிவுடன் உபசரிக்கும் முறை

492-497 : மன்றில் ................ வீட

பொருள் : மன்றில் வதியுநர் சேண் புலப் பரிசிலர் வெல்போர்ச் சேஎய் பெருவிறல் உள்ளி வந்தோர் மன்ற அளியர் தாமென - அம்பலங்களிலே தங்குவோராய்த் தொலைக்கண் உள்ள நாடுகளினின்றும் வந்த பரிசிலர் போலும் வெல்லும் போரை வல்ல முருகனைப்போலும் நன்னனின் கொடை வென்றியைக் கருதினராய் வந்தனர் போலும் இவர் அளிக்கத் தக்கவரே ஆவர் என்று கருதி, கண்டோர் எல்லாம் - ஆண்டு நும்மைக் கண்டவர் எல்லோரும், அமர்ந்து இனிது நோக்கி - முகம் பொருந்தி இனிதாகப் பார்த்து, விருந்து இறை அவரவர் எதிர்கொளக் குறுகி - நீயிர் தம் விருந்தினராக இருத்தலை ஒவ்வொருவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளுதலாலே அவர்களைச் சேர்ந்திருந்து, பரிபுலம்பு அலைத்த நும் வருத்தம் வீட - தரித்தலால் உண்டான தனிமை வருந்தின நும் வருத்தம் போகும்படி;

கருத்துரை : அக் கோபுரவாயிலின்கண் நும்மைக் கண்டோர் எல்லாம் இவர்கள் அம்பலங்களிலே தங்குவோராய்ச் சேய்த்தாகிய நாட்டினின்றும் வந்த பரிசிலர் போலும்; நன்னனுடைய கொடைச் சிறப்பைக் கேள்வியுற்றுப் பரிசில் பெறக் கருதி வந்தனர் போலும்; இனையராகலின் இவர் நம்மாற் போற்றத் தக்கவர் ஆவார் என விரும்பி ஒவ்வொரு வரும் நும்மைத் தம் விருந்தினராக ஏற்றுக் கொள்ள முனைவர் ஆதலான், நீயிர் அவர்தம் விருந்தினராகி நும் வழிவந்த வருத்தம் வீட அவர்களுடனே அளவளாய்த் தங்கக் கடவீர் என்பதாம்.

அகலவுரை : மன்றில் - ஊரம்பலம். அயலூர்களில் இருந்து வருவோர் ஊர்தோறும் உள்ள அம்பலங்களிலே தங்குதல் பண்டைக்கால வழக்கம். இங்ஙனம் தமக்கென உறையுள் முதலியன இன்றி அம்பலங்களிலே வாழ்பவரைத் தன்றௌல் வாழ்க்கையர் என்பர். ஆசிரியர் இளங்கோவடிகளார் சிலப்பதிகாரத்தில், தன்றௌல் வாழ்க்கைச் சாவக மாக்களும் (15: 195) என்ற அடிக்கு தன்றௌல் வாழ்க்கை - தனதென்னுந் தன்மையில்லாத வாழ்க்கை எனப் பொருள் கூறி மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்வெல்போர்ச் சேஅய் பெருவிற லுள்ளி வந்தோர் மன்ற வளியர் தாமென என்றார் மலைபடு கடாத்தினும் என இவ்வடிகளை மேற்கோள் காட்டியிருத்தல் காண்க. மன்ற - உறுதியாக எனினுமாம்; அசைச்சொல் எனினும் ஆம். அளியர் நம்மாற் போற்றத்தக்கவர்.

அமர்ந்தினிதி னோக்கி என்னும் தொடர்,

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்  (குறள் - 93)

என்னும் திருக்குறளை நினைவூட்டுதலறிக. விருந்தோம்புவார்க்கு இன்முகமும் இனிய நோக்கும் இன்றியமையாச் சிறப்பின் வாகலான் அமர்ந்து இனிதின் நோக்கி என்றார். அமர்ந்தென்றது, முகம் இனியராய் என்றவாறு. விருந்து இறை - விருந்தாக இருத்தல். தத்தம் விருந்தினராக நீயிர் இருத்தலை எதிர்கொள்ள என்க. எதிர்கொள்ள என்றது விருந்தோம்பற்கண் அவர்க்குள்ள ஆர்வத்தை விளக்கி நின்றது. இஃது அவன் சுற்றத்தொழுக்கம் கூறிற்று.

பரிபுலம்பு என்ற தொடர்க்கு தரித்தலான் உண்டான தனிமை என ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கூறினர். சிலப்பதிகாரத்தே வரும் பரிபுலம்பினர் (10:226) என்னுஞ் சொற்கு அதன் அரும்பதவுரையாசிரியர் செலவால் வருந்தினர் என்றும், அடியார்க்கு நல்லார், மிகவும் வருந்தினர் என்றும், பரி-மிகுதி; பரிபுலம்பினர் ஒரு சொல்லுமாம் என்றும் பொருள் கூறியுள்ளார். பரிபரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் என்னும் சூடாமணி நிகண்டில் பரிஎன்ற சொல், வருத்தம் என்னும் பொருளினையும் சுட்டுமெனக் கூறலால், வழி நடந்த வருத்தம் என்று கோடலே பொருந்துவதாம்; இத் தொடர்க்கு ந.மு.வே. நாட்டாரவர்களும் பரி-மிகுதியெனக் கொண்டு மிகவும் வருந்தினர் என்றது நோக்கற்பாற்று. (சிலப்.10: 226.உரை)

நன்னன் வேண்மானின் கோபுரவாயிலில் காணப்படும் பல்வேறுவகைக் கையுறைப் பொருள்கள்

ஆமான்கன்றும், யானைக்கன்றும், கரடிக்குட்டியும், வருடையும் தகரும், கீரியும், மரையான் கன்றும், உடும்பும்

498-508 : எரிகான்றன்ன .................. ஏற்றை

பொருள் : எரிகான்றன்ன பூஞ்சினை மராஅத்து - நெருப்பைக் கான்றாலொத்த பூங்கொம்புகளையுடைய மராமரத்திடத்தே கிடந்த, தொழுதி போக வலிந்து அகப்பட்ட மடம் நடை ஆமான் குழவி - தன் இனமெல்லாம் ஓடிவிட ஓடமாட்டாது வலிய அகப்பட்ட  மடப்பத்தை யுடைய ஆமானினது கன்றும், ஊமை எண்கின் குடாவடிக் குருளை - வாய்திறவாத கரடியின் வளைந்த அடியினையுடைய குட்டியும், மீமிசைக் கொண்ட கவர் பரிக் கொடுந்தாள் வரைவாழ் வருடை - உயர் வினையுடைய நிலத்தைக் கைக்கொள்ளும் செலவினையுடைய வளைந்த காலையுடைய மலையிடத்தே வாழும் வருடையும், வன்றலை மாத்தகர் - வலிய தலையினையுடைய பெரிய தகரும், அரவுக் குறும்பு எறிந்த சிறுகண் தீர்வை -பாம்பினது வலியை அழித்த சிறிய கண்ணையுடைய கீரியும், அளைச் செறி உழுவை கோளுற வெறுத்த மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி - முழையிலே செறிந்திருந்த புலி பாய்தலானே தன் உடலை வெறுத்த மடப்பத்தையுடைய கண்ணினையுடைய மரையானினது பெரிய செவியினையுடைய குழவியும், அரக்கு விரித்தன்ன செந்நில மருங்கின் பரல் தவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை - அரக்கைப் பரப்பினாலொத்த சிவந்த நிலத்திடத்திற் சுக்கான்கல்லில் தவழும் உடும்பினது வளைந்த காலையுடைய ஏறும்;

கருத்துரை : தீப் போன்று மலர்ந்த பூங்கொம்புகளையுடைய மரா மர நீழலிலே கிடந்த தன் இனமெல்லாம் வேடர்கட்கு அகப்படாதே ஓடிப் போக ஓடமாட்டாதே அகப்பட்டுக்கொண்ட ஆமானின் கன்றும், யானையின் சிறுகன்றும், வளைந்த அடியினையுடைய கரடியின் வாய் திறவாக் குட்டியும், மேட்டு நிலத்தேயும் நிலத்தைக் கவர்ந்து கொள்ளுமாறுபோன்று விரைந்தோடவல்ல வளைந்த கால்களையுடைய மலையிடத்தே வாழும் வருடையும், அதன் தகரும், பாம்பின் வலிகெடுக்கும் சிறுகண்ணையுடைய கீரியும், முழைஞ்சிற் கிடக்கும் புலி பாய்தற்குப் பெரிதும் அஞ்சுகின்ற மடப்பம் உடைய கண்ணுடைய மரையான் குழவியும், சாதிலிங்கம் பரப்பினால் ஒத்த செந்நிலத்தே சுக்கான் கல்லில் தவழ்ந்து செல்லும் ஆண் உடும்பும்;

அகலவுரை : தீப் பிழம்பு மராமரத்தின் பூங்கொத்திற்கு உவமை தொழுதி - திரள். போக - வேடர்கட்கு அகப்படாது ஓடிவிட வலிந்தகப்படுதல் - தானே ஓடமாட்டாமையான் அகப்பட்டுக் கொள்ளல். ஆமான் - கன்று - காட்டுப் பசுவின் கன்று. கரடிக் குட்டி இனைமையிற் சின்னாள் வாய்திறவா போலும்; அதனால் ஊமை என்றார். அல்லது கத்தாத சிறுகுட்டி எனினுமாம். கரடியின் கால் அகன்று வளைந்திருத்தலின் குடாவடி என்றார். குடாவடி உளியம் (சிலப்-25:50) (திருமுருகாற்-313) எனப் பிறரும் கூறுதல் காண்க. குடா - வளைவு என்னும் பொருட்டு குடமுழவு போன்ற அடியென்பாரும் உளர்.

இனி, மீமிசை என்றதற்கு மலையுச்சி எனக்கொண்டு மலையுச்சியின் கண் ஏறுதலைக் கொண்ட நிலத்தைக் கவர்ந்து கொள்வது போன்ற செலவினையுடைய வருடை என்றலே பொருத்தமாகத் தோன்றுகின்றது. ஆசிரியர் நச்சினார்க்கினியர் எட்டுக் கால்களையுடைய வருடை எனக் கொண்டு மீமிசைக் கொண்ட என்ற தொடர்க்கு முதுகிடத்தே (கால்களைக்) கொண்ட என்று கூறியுள்ளார். வருடை - மலையாடு. வருடைக்கு எட்டுக் கால்கள் உள்ளனவென்றும், முதுகிலும் கால்கள் உண்டென்றும் நூல்கள் கூறுகின்றன. நீலகேசி - (தரும் செய் 54 உரை) யில் எட்டுக் காலுடையன வருடை, ஆறு காலுடையன கழிப் பாம்பு என்று கூறப்பட்டது. கீரி அரவினை அடர்க்கும் இயல்புடையதாகலின் அரவுக் குறும்பு எறிந்த தீர்வை என்றார். தீர்வை-கீரி (பிங்கல நிகண்டு - 2525 இல் இஃதிப் பொருட்டாதல் காண்க.) மரையான் - ஒருவகைக் காட்டு விலங்கு; காட்டுக் குதிரையுமாம். அரக்கு, சாதிலிங்கம். அரக் குருக்கன்ன செந்நிலம் (பொருநராற்-43) என்றும் அரக்கத்தன்ன செந்நிலப் பெருவழி (அகம் 14:1) என்றும், பிற சான்றோரும் கூறுதல் அறிக.

மயில், கானங்கோழி, பலாப்பழம், தீம்பழத்தாரம், நறைக்கொடி, நூறைக்கிழங்கு, கருப்பூரம், யானைக்கொம்பு, காந்தட்பூ, நாகப்பூ, திலகப்பூ, சந்தனம், பச்சைமிளகு, கள், தயிர், தேனிறால், ஆசினிப்பலா முதலியன.

509-529 : வரை .................... துவன்றி

பொருள் : வரைப் பொலிந்து இயலும் மடம் கண்மஞ்ஞை - மலையிடத்தே அழகுபெற்று ஆடும் மடப்பத்தையுடைய கண்ணினை யுடைய மயில்களும், கானக்கோழிக் கவர் குரற்சேவல் - கானத்திடத்தே வாழும் கோழியினது பெடையை அழைக்கின்ற குரலையுடைய சேவலும், கானப் பலவின் முழவு மருள் பெரும் பழம் - காட்டிடத்துப் பலாவினுடைய முழவென்று மருளும் பெரிய பழமும், இடிக்கலப்பு அன்ன நறுவடி மாவின் - மாவினது பொடி செய்த கண்டின் கலப்பை ஒத்த நறிய வடுக்களையுடைய மாவினது, வடிச் சேறு விளைந்த தீம்பழத் தாரம் - பிழியப்படும் சாறு முற்றின இனிய பழமாகிய பண்டமும், தூவல் கலித்த இவர் நனை வளர்கொடி - மழையாற் செருக்கின பரக்கின்ற அரும்புகளையுடைய மணம் வளருகின்ற நறைக்கொடியும், காஅய்க் கொண்ட நுகம் மருள் நூறை - காவிக்கொண்டு வந்த நுகம் என்று மருளும் நூறைக் கிழங்கும், பரூஉப் பளிங்கு உதிர்த்த - மரத்தினின்றும் உதிர்க்கப்பட்டனவாகிய கருப்பூரமும், பலவுறு திருமணி - பலவிலை பெற்ற அழகிய மணிகளும், குரூஉப் புலி பொருத புண்கூர் யானை முத்துடை மருப்பின் முழுவலி மிகு திரள் - நிறத்தையுடைய புலியாற் கொல்லப்பட்ட புண்மிக்க யானையினது முத்துடைய கொம்புகளினுடைய குறைவில்லா வன்மையுடைய குவியலும், வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள் - சங்கு உடைந்தாற் போன்ற இதழையுடைய வெண் கோடற்பூவும், நாகம் - புன்னைப்பூவும், திலகம்-திலகப்பூவும், நறுங்காழ் ஆரம் - நறிய வயிரத்தையுடைய சந்தனமும், கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கொடி - கரிய கொடிகளையுடைய மிளகினது காயாகிய கொத்தாகவுள்ள பசிய மிளகும், திருந்து அமை விளைந்த தேம் கள் தேறல் - நன்றாகிய மூங்கிற் குழாயிலே முற்றிய தேனாற் செய்த கள்ளின் தெளிவும், கான் நிலை எருமைக் கழை பெய் தீந்தயிர் - காட்டிடத்தே நிலைத்தலையுடைய எருமையினது மூங்கிற் குழாயிலே தோய்த்த இனிய தயிரும், நீல் நிற ஓரி பாய்ந்தென - முற்றுகையினாலே நீல நிறத்தையுடைய ஓரி நிறம் பரந்ததாக, நெடுவரை நேமியில் செல்லும் நெய்க்கண் இறாஅல் - நெடிய மலையின்கண் சக்கரம்போன்று தேன் பாயும் அத்தேனைத் தம்மிடத்தே கொண்ட இறால்களும் உடம்புணர்வு தழீஇய ஆசினி அனைத்தும் - இவையிற்றோடு கூடு தலைக்கொண்ட ஆசினிப் பலாப்பழமும் ஈண்டுக் கூறாதன அனைத்தும், குடமலைப் பிறந்த தண் பெருங் காவிரி - குடகமலையிற் பிறந்த குளிர்ந்த பெரிய காவிரிப் பேரியாறு, கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப - கடலிலே மிக்குச் செல்கின்ற ஆழத்தையுடைய புகார் முகத்தை ஒப்ப, நோனாச் செருவின் நெடுங்கடைத் துவன்றி - பகைவர் பொறுத்தலாற்றாத போரினையுடைய தலைவாசலிலே நிறைந்து;

கருத்துரை : வரையின்கண் ஆடும் மயில் முதல் ஆசினிப் பலாப் பழம் இறுதியாக ஈண்டுக் கூறப்பட்டனவும் கூறப்படாதனவும் குடமலைப் பிறந்த காவிரி கடலிலே கலக்கும் புகார் முகம் போன்று பகைவர் போர் செய்தல் ஆற்றாத போரினையுடைய நன்னனின் தலைவாயிலிலே நிறைந்து என்பதாம்.

அகலவுரை : மலையின்கண் ஆடும் மயில் காண்டற் கினிதாகலின் பொலிந்து இயலும் மயில் என்றார். இயலுதல்-ஆடுதல். கானக்கோழி - காட்டுக்கோழி. கவர் குரல் என்றது, தன் இனிமையால் பெடையின் உளத்தைக் கவரும் குரல் என்றவாறு. கானப் பல - காட்டுப் பலா. குறியதன் கீழ் ஆக்குறுகலும் என்னும் விதியான் பல என நின்றது. முழவு-மத்தளம். பலாப்பழத்திற்கு உவமை. பழங்களுள் பலாப்பழமே பெரியதாகலின் பெரும் பழம் என்றார். இடி-மா. கலப்பு - சருக்கரையிடியாலாய கற்கண்டு. நறுவடி - நறிய மாம்பிஞ்சு. வடிச்சேறு - பிழிந்த சாறு; தேமாவின் பழம் பிழிந்தியற்றிய பண்டம் என்க. தாரம் - பண்டம். இச் சொல் இலங்கு மலைத்தாரமொடு (170) என முன்னரும் இந்நூலில் வந்திருத்தலறிக. தூவல் -மழை மழையாற்செழித்த என்றவாறு. இவர் - இவர்தல்; படர்தல் என்க. நனை-அரும்பு, தளிருமாம். வளர்-மணம் வளர்கின்ற கொடி-இது மணங்கமழும் ஒருவகைக் கொடி என்ப. காஅய்-காவி; அஃதாவது தோளிற் சுமந்து என்றபடி. நூறை-ஒருவகைக் கிழங்கு. இதனை மலங்கென்பாருமுளர் என நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். நுகம்-நுகத்தடி இது நூறைக் கிழங்கிற்கு உவமை. பரூஉப் பளிங் குதிர்த்த என்ற தொடரை உதிர்த்த பரூஉ பளிங்கு என மாறி மரத்தினின்றும் சிதறி உதிர்த்த பருத்த நிகரமாகிய கருப்பூரம் என்பர் நச்சினார்க்கினியர். நிகரம் - திரள். பளிங்கு - கற்பூரம். பலவுறு திருமணி என்றற்குப் பலவாகிய அழகிய மணிகள் எனினும் பொருந்தும். அவை முத்து முதலியன. குரு - நிறம். நிறமுடைய புலி என்க. காடுகளில் புலியாற் கொல்லப்பட்ட யானையின் கொம்புகள் என்றவாறு. முழுவலி என்றது, மிக வன்மையுடைய என்றவாறு. இது மருப்பிற்கு அடை. யானைக் கேற்றியுரைப்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். யானையின் மருப்பில் முத்து விளைதல் இயற்கையாகலின் முத்துடை மருப்பு என்றார். இதனை, முத்துடை மருப்பின் மழகளிறு. (பதிற்றுப் - 32:3) என்றும், முத்தார் மருப்பின் (கலி-40:4) என்றும் வைந்நுதி வான் மருப்பு ஒடிய வுக்க தெண்ணீராலி கடுக்கும் முத்தமொடு (அகம் 282: 6-7) என்றும் பிறர் கூறுமாற்றானும் அறிக.

வளை - சங்கு; வளையலுமாம். வளைக்குக் கோடற்பூவை உவமையாகக் கூறுதலுண்டு கோடல் வீ உகுபவை போல் இலங்கேர் எல்வளை (7: 15-6) எனக் கலியின்கண் வருதல் காண்க. உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் (90-1) எனப் புறத்தினும் வந்தது. நாகம் - புன்னை மரம். திலகம் - மஞ்சாடி மரம்.

காழ்-வயிரம். ஆரம் - சந்தனம். கருங்கொடி மிளகின் பைங்கறி என்றதன்கண் முன்னின்ற மிளகு முதலையும் பின்னின்ற கறிசினையையும் உணர்த்தின. கறி எனினும் மிளகெனினும் ஒக்கும். அமை-மூங்கில். ஈண்டு மூங்கிற்குழாயை உணர்த்திற்று. மூங்கிற் குழாயிலே தேனை விட்டுக் கள் சமைத்தல் பண்டைக்கால வழக்கம். இதனை,

கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கட் டேறல்
குன்றகச் சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து  (194)

என்னும் திருமுருகாற்றுப் படையானும் தெளிக.

தேம்கள் தேறல் என்பன தேக்கட்டேறல் எனப் புணர்ந்தன; இனிய கள்ளின் தெளிவு என்க. காட்டிலேயே நிலைபெற்று வாழும் எருமை என்பார், கானிலை எருமை என்றார். எருமைப்பாலை மூங்கிற் குழாயிலே இட்டுத் தோய்த்த தயிர் என்க. கழை-மூங்கில். நீலநிறம்பாய்தல் தேனின் முதிர்வால் உண்டாவது. ஓரி என்பது தேன் முதிர்ந்தாற் பிறக்கும் நீலநிறம் எனவும் ஓரி முசுக்கலை யெனினும் அமையும் எனவும் புறநானூற்று உரையாசிரியர் குறித்துள்ளார். (அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து திணி நெடுங்குன்றம் தேன்சொரியும்மே (109) என்னும் புறப்பாட்டடிக்கு நேமி-உருளை. உருளை வடிவமைந்த தேனிறால் என்க. செல்லும் ஒழுகும். நெய்க்கண் இறாஅல் என்றது தேனைத் தன்னிடத்தே உடைய தேனடை என்றவாறாம். இறால் - தேனடை, உடம்புணர்வு தழீஇய ஆசினி என்றது, இப்பொருள்களோடே கூடிய ஆசினிப் பலாப்பழம் என்றவாறு. குடகமலையில் உள்ள பண்டமெல்லாம் கொண்டு மண்டிய காவிரிநீர் கடலொடு கலக்குமிடத்தே அப்பண்டங்கள் நிறைந்து தோன்றுமாறு போல, நன்னன் கோபுரவாயிலின் கண் இப் பண்டங்கள் நிறைந்து தோன்றும் என்க. குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு, கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரி என்ற சிலப்பதிகாரத் தொடர்க்கும் இதற்கும் உள்ள சொற்பொருள் ஒற்றுமை உணர்க. மண்டுதல் - மிக்குச் செல்லுதல். கயவாய் - அகன்ற இடம்; ஈண்டுக் கடலிற் காவிரி கலக்கும் அகன்ற கூடல்வாய். நோனா - பொறுக்கலாற்றாத. செரு : ஈண்டுப் படைகட்கு ஆகுபெயர்.

கூத்தர் நன்னன்பாற் செல்லும் முறை

530-538 : வானத்தன்ன .................. பின்றை

பொருள் : வானத்தன்ன வளமலி யானை தாது எருத்ததைந்த முற்றம் முன்னி - முகில்களை ஒத்த வளப்பம் மிக்க யானைகளையுடைய தாதாகிய எருக்கள் செறிந்த முன்றிலை அடைந்து, மழையெதிர் படுகண் முழவு கண் இகுப்ப - மழை முழக்கத்திற்கு எதிராக முழங்கும் கண்ணையுடைய முழவின் கண்கள் ஒலியாநிற்ப, கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர - மூங்கிலாகிய இசைவளரும் பெருவங்கியத்தினது திறந்த கண்ணிடம் ஒலியாநிற்ப, மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் நரம்பு மீது இறவாது உடன் புணர்ந்து ஒன்றி - மருதத்தை வாசித்த கரிய தண்டினையுடைய சிறிய யாழின் நரம்பினுடைய ஓசைக்கு மேலே போகாது அவ் வோசையுடனே கூடி ஒன்றுபட்டு, கடவது அறிந்த இன்குரல் விறலியர் - தாம் செய்யக்கடவ கடமைகளனைத்தும் நன்கு அறிந்த இனிய பாட்டினையுடைய விறல்பட ஆடும் மகளிர், தொன்று ஒழுகு மரபின் தம் இயல் வழாஅது - பழையதாய் நடக்கும் முறைமையினையுடைய தம் இலக்கணத்தில் தப்பாமல், அருந்திறல் கடவுள் பழிச்சிய பின்றை - அளத்தற்கரிய வலியையுடைய கடவுளை முதலில் வாழ்த்திய பின்பு;

கருத்துரை : முகில்கள் நின்றாற் போன்று வளமுடைய யானைகள் நிற்கும் தாது செறிந்த முன்றிலை எய்தி மழையென முழங்கும் நுங்கள் மத்தளம் முழங்காநிற்ப, பெருவங்கியமென்னும் வேய்ங்குழலிசைப்ப, மருதப்பண்ணை எழீஇ அவ் வின்னிசைக்கு மிகாமல் அதனோடு ஒன்றுபட்டு நடக்குமாறு தங்கடமைகளை நன்கறிந்தவரும் இனிய பாட்டினைப் பாடுபவரும் விறல்பட ஆடுபவரும் ஆகிய மகளிர் தொன்று தொட்டு நடக்கும் முறையிற் பிறழாமை முன்னர் வரம்பிலாற்றலுடைய இறையை வாழ்த்திப் பின்பு என்பதாம்.

அகலவுரை : வானம் : முகிலுக்கு ஆகுபெயர். வளம் - யானையின் நல்லிலக்கணம். மலி - மிகுதல். தாதெருத் ததைந்த முற்றம் என்றது, துகளாகிய எருக்கள் செறிந்த வாயில் என்றவாறு. தாதெருத் ததைந்த முற்ற (குறுந்-46-3) என்றும் தாதெரு மன்றத்தாடும் (சிலப்பதி-ஆய்ச்சியர் குரவை - 28) என்றும் பிறரும் கூறுதல் காண்க. ததைதல் - செறிதல். முன்னி - அடைந்து. மழை : முகிலுக்கு ஆகுபெயர். முகில் முழங்கினாற் போன்று முழங்கும் கண்ணையுடைய முழவு என்க. முழவு எழுவகைப்படும் : அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு என அவையிற்றுள் ஈண்டுக் கூறப்பட்டது பண்ணமை முழவென்க; அதுதானும், முரசு நிசாளம் துடுமை திமிலை என நால்வகைப்படும் என்ப. இவையிற்றை மத்தளம் என்று வழங்குப. மத்து - ஓசையென்னும் பொருட்டு. இசையிடனாகிய கருவிகட்கெல்லாம் தளமாகலான் மத்தளம் எனப் பெயராயிற்று என்பது அடியார்க்கு நல்லார் உரை. (சிலப்-அரங்கே) இக்கருவி பல கூத்துகளுக்கும் உரித்தாகலானும் பாடல் எழுத்தான் உள்ளே பிறத்தலானும், முழவுகள் எல்லாம் இதனுள்ளே பிறத்தலானும், இதனை நான்முகன் என்பர் (சிலப்-அரங்) என்று அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார்.

இகுத்தல் - ஒலித்தல். கழை வளர் தூம்பின் என்றது, மூங்கிலாற் செய்து இசைவளர்தற்குக் காரணமான பெருவங்கியத்தை; இதனைக் குழல் என்றும் வழங்குப. இது மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி என ஐந்தானும் இயற்றப்படும். இவையிற்றுள் மூங்கிலாற் செய்த வங்கியமே இன்னோசையிற் சிறந்ததென்ப வாகலின் கழை வளர் தூம்பின் என்றார். கண் - குழலின்கட்டுளை. இத்துளையின் இலக்கணம்,

இருவிரல்கள் நீக்கி முதல்வாய் ஏழ்நீக்கி
பருவு துளையிட்டு மன்னும் - பெருவிரல்கள்
நாலஞ்சு கொள்க பரப்பென்ப நன்னுதலாய்
கோலஞ்செய் வங்கியத்தின் கூறு  (சிலப்.அரங்-உரை)

என்னும் வெண்பாவான் அறிக. இத் துளைகள் ஏழினும் ஏழு இசை பிறந்து இல்விசையிற் பண்பிறத்தலான் வளர் தூம்பின் கண்ணிடம் இமிர என்றார். இதனை,

சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை  (சிலப்-அரங்-உரைமேற்)

என்பதனான் அறிக.

மருதம் - மருதப்பண். பண், நான்கு வகைப்படும். அவை : பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என்பன. இதனை,

தாரத் துழை தோன்றப் பாலையாழ் தண்குரல்
ஒருமுழை தோன்றக் குறிஞ்சியாழ் - நேரே
இளிகுரலிற் றோன்ற மருதயாழ் துத்தம்
இளியிற் பிறக்கநெய்த லியாழ்.  (சிலப்-ஆய்ச்சி-உரை மேற்கோள்)

என்பதனான் அறிக. கடவதறிந்த விறலியர் என்றது, ஆடற் கூத்தியர்க்கியன்ற கடமைகளனைத்தும் நன்கு அறிந்த மகளிர் என்றவாறு. அவையினிடத்தே நடக்கும் முறையை அறிந்த விறலியர் என்றுமாம். இன்குரல் விறலியர் - இனிய மிடற்றுப்பாடலைப்பாடி ஆடவல்ல விறலியர் தொன்றுதொட்டு நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த முறையில் பிறழாதவர் என்பார், தொன்று ஒழுகு மரபிற் றம்மியல்பு வழாது என்றார். இனிப்பாடி ஆடத்தொடங்கும் பொழுது முன்னர்க் கடவுளை வாழ்த்துதல் தம் போன்ற விறலியர் மரபாகலின் அத்தொன்று தொட்ட மரபினின் வழாது கடவுட் பழிச்சிய பின்றை என இயைப்பினுமாம். என்னை? நன்மையுண்டாகவும், தீமைநீங்கவும் வேண்டித் தெய்வப் பாடல்களைப் பாடுதல் கூத்தியர் மரபாகலின் என்க. அக் கடவுள் வாழ்த்து வருமாறு :

மலர்மிசைத் திருவினை வலத்தினில் அமைத்தவன்
மறிதிரைக் கடலினை மதித்திட அடைத்தவன்
இலகொளித் தடவரை கரத்தினில் எடுத்தவன்
இனநிரைத் தொகைகழை இசைத்தலின் அழைத்தவன்
முலையுணத் தருமவள் நலத்தினை முடித்தவன்
முடிகள்பத் துடையவன் உரத்தினை அறுத்தவன்
உலகனைத் தையுமொரு பதத்தினில் ஒடுக்கினன்
ஒளிமலர்க் கழறரு வதற்கினி யழைத்துமே.  (சிலப்-அரங்-உரை-மேற்)

இது, காவற் கடவுளாகிய திருமாலை வாழ்த்தியது.

வண்ணமலர்ச் சரங்கோத்து மதனவேள் மிகவெய்யக்
கண்ணளவோர் புலனல்லாக் கனல்விழியா லெரித்தனையால்
எண்ணிறந்த தேவர்களும் இருடிகளும் எழுந்தோடே
ஒண்ணுதலான் பாகங்கொண்டு ஒருதனியே இருந்தனையே.  (þ)

இது, பிறவாயாக்கைப் பெரியோனாகிய முழுமுதற்கடவுளை வாழ்த்தியது.

அந்தணர் வேள்வியோ டருமறை முற்றுக
வேந்தன் வேள்வியோ டியாண்டுபல வாழ்க
வாணிகர் இருநெறி நீணிதி தழைக்க
பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக. (þ)

என்றின்னணம் வாழ்த்துவது, பொதுவியல் வாழ்த்து என்க. இறைவற்குரிய எண்குணங்களுள் ஒன்றனை விதந்து கூறுவார் அருந்திறல் கடவுள் என்றார். என்றது, முடிவிலாற்றலுடைமை முதலிய எண் குணங்களையும் உடைய முழுமுதற் கடவுளை வாழ்த்தி என்றவாறு. எண்குணங்களாவன : தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல் இயற்கை யுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்னும் இவ்வெட்டுமாம்.

நன்னன் வேண்மானைப் புகழும் முறை

539-545 : விருந்திற்பாணி .............. விடாஅன்

பொருள் : விருந்தின் பாணி கழிப்பி - புதுவதாகப் பாடும் பாட்டுக்களைப் பாடி, நீள் மொழி குன்றா நல்இசை சென்றோர் உம்பல் - வாய்மையிற் குன்றுதலில்லாத நல்ல புகழையுடைய வழியிலே சென்றோருடைய வழியில் வந்தவனே, இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தெனக் கொடைக் கடன் இறுத்த செம்மலோய் என - தம் பெயர் இக்காலத்திலே இவ்வுலகத்து நடத்தலோ டொழியாது உலகம் உள்ளளவும் நிற்கும்படி நன்று இது தீது இஃதென்று ஆராய்ந்துணரும் வள்ளல்கள் இறந்தனராக அவர்கள் மேற்கொண்டிருந்த கொடையாகிய கடனை முடித்த தலைமையுடையோனே என்று கூறி, வென்றிப் பல்புகழ் விறலோ ஏத்தி - மேலும் அவனது வெற்றியாலுண்டான பல புகழ்களை ஐம்பொறிகளையும் அடக்கிய வெற்றியோடே சேரப் புகழ்ந்து, சென்றது நொடியவும் விடாஅன் - நும்மனத்தின்கட் சென்ற ஏனைப் புகழ்களை முற்றக் கூறவும் பொறாஅதவனாய்;

கருத்துரை : (முன்னர்க் கடவுளை முறைமையின் வணங்கிப் பின்னர்) புதுவதாக அமைந்த இசைப் பாடல்களையும் இனிதே பாடியபின்னர் வாய்மையிற் பிறழாதவரும் நன்னெறியிலே ஒழுகியவரும் நல்ல புகழுடையோருமாகிய சான்றோர் குடியிற் றோன்றிய தலைவனே; தம் பெயர் இக்காலத்தே இவ் வுலகத்தே நின்று அழிந்தொழியாதபடி நன்மை தீமைகளை அறிந்து நன்றின்பானின்ற வள்ளல் பலரும் இறந்து விட்டாராக, அவர் பூண்டு நடத்திய கொடையாகிய கடனை மேற்கொண்டு நடத்தி முடித்த பெருமானே! எனக்கூறி மேலும் அவனுடைய பல்வேறு வெற்றியாலுண்டான புகழையும் ஐம்பொறிகளையும் அடக்கிய பெருமையையும் புகழ்ந்து எஞ்சாது மேலும் மேலும் நும் மனத்தின்கட் டோன்றும் அவனது ஏனைப் புகழ்களை நீயிர் முற்றக் கூறுந்துணையும் பொறாதவனாகி என்பதாம்.

அகலவுரை : விருந்திற் பாணி என்றது, தம் பாடலில் புதுமையுண்டாகப் பாடும் பாட்டு என்றவாறு.

செங்கயல் நெடுங்கட் சின்மொழிக் கடைசியர்
வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணியும்  (சிலப், 10- 130-1)

என்றார், ஆசிரியர் இளங்கோவடிகளாரும், பொய்மை போலாது வாய்மை நிலைத்து நிற்றலின் நீண்மொழிகுன்றா என்றார்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லா முளன்  (குறள்-294)

என்றும்,

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்  (குறள்-296)

என்றும்,

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு  (குறள்-299)

என்றும் சான்றோர் எல்லாப் பெருமைக்கும் முதலாகும் சிறப்புடையது வாய்மையே என்றோதுதலான், அவ்வாய்மையிற் குன்றாத சான்றோரின் வழித் தோன்றல் என்பார் நீண்மொழி குன்றா நல்லிசைச் சென்றோர் உம்பல் என்றார். நல்லிசை - நன்னெறிக்கு ஆகுபெயராய் நின்றது. ஆன்றவிந் தடங்கிய சான்றோர் இசைபடவே நடப்பர் ஆதலான் இசைச் சென்றோர் என்றார். இனிப் புகழ்பட வாழ்தலாவது ஈதன் மேற்கொள்ளலே ஆதலின், அவர் முன்னோருடைய கொடைச் சிறப்பும் போதரக் கூறியவாறுணர்க. இவ்வாற்றான் இஃது அவன் கொடைக்கடன் இறுத்த தொல்லோர் வரவு கூறிற்றாதல் (89) காண்க. உம்பல் - யானை. யானை போல்வாய் என உவமவாகுபெயராய் நின்றது. இனி, அவன் வண்மைச் சிறப்பு ஓதுகின்றார். இன்றிவட் செல்லாதுலகமொடு நிற்ப இடைத் தெரிந்துணரும் பெரியோர் என்றது. செந்தமிழ் நாட்டு ஏழு வள்ளற்பெருமக்களை என்க. அவ்வெழுவராவார்,

பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக்
கொல்லி யாண்ட வல்வி லோரியும்
காரி யூர்ந்து பேரமர்க் கடந்த
மாரி யீகை மறப்போர் மலையனும்
ஊரா தேந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கு நளிமுழை
அருந்திறற் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும் திருந்துமொழி
மோசி பாடிய ஆயும் ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவு நனிதீரத்
தள்ளா தீயும் தகைசால் நள்ளியும்  (புறம். 158)

ஆகிய வள்ளற் பெருமக்கள் என்க. இன்று இவண் செல்லாது என்றது, இக்காலத்தில் மட்டும் இவ்வுலகத்தில் மட்டும் நடத்தலன்றி என்றவாறு. ஒருவனுடைய கொடைப்புகழ் மட்டுமே அழிதலின்றி உலகம் உள்ள துணையும் உள்ளதாகும் சிறப்பிற்று என்பதனை,

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே
துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க் கீஇ யாமையின்
தொன்மை மாக்களிற் றொடர் பறி யலரே  (புறம்-165)

என்பதனானும் ஏனைச் சிறப்புக்கள் உடையோர் உளராயவரை உளவாய் அவர் மாய்ந்தவுடன் அவரோடு மாய்வன என்பதனை,

சுவைக்கினி தாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய
முரைசுகெழு செல்வர்  (புறம்-127)

என்பதனானும் அறிக. உலகத்தின்கண் நின்று நிலவுவது ஈதலான் உண்டாகும் இசையேயன்றிப் பிறிதில்லை என்றும்,

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில  (குறள்-39)

என்றும் இடைதெரிந்து உணர்ந்து அவ்வழி ஒழுகிய பெரியோர் என்பார் இடைதெரிந்துணரும் பெரியோர் என்றார். நிற்ப என்னும் எச்சத்திற்கு மாய்ந்தென என்பது முடிவாக அமையுமாறு கூறினார், அவர் புகழுடல் பூதவுடல் இரண்டனுள் ஒன்று உலகத்தோடு நிற்ப அழிதன் மாலைத்தாகிய பொய்யுடன் மாத்திரையான் மாய்ந்தவர் என்னும் பொருள் தோன்ற. என்னை,

நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது  (குறள் - 235)

என்றோதுபவாகலான்.

பாரிமுதல் நள்ளி ஈறாக முற்படக் கிளந்த எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் ஒருதான் றாங்கிய உரனுடையான் என்பார், பெரியோர் மாய்ந்தெனக் கொடைக் கடனிறுத்த செம்மல் என்றார். இது அவன் ஈகை வண்புகழ் கூறிற்று. இனி வென்றிப் பல்புகழ் விறலோடேத்தி என்றது தொலையா நல்லிசை உலகமொடு நிற்பப் பலர் புறங்கண்டு (70-71) இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலாகிய தெறற்சிறப்பை என்க. வென்றிப் பல்புகழென்றொழியாது மீண்டும் விறலோடென்றது தான் பொறிவயத்தனாகாமல் ஐம்பொறியையும் தன்வயங் கொண்ட அடக்கமுடைமையாகிய வெற்றியை என்க. ஒன்னார் முதலிய புறப்பகை கடத்தலினும் பொறியடர்த்து வெல்லுதலே செயற்கரிய செயலாகலின்.

சென்றது - மேலும் நும்மனத்தே தோன்றிய ஏனைப்புகழ். நொடிதல் - கூறுதல். பரிசிலர்க்கு உதவி அவர் இன்முகங் கண்டின் புறுதற்கண் நன்னனுடைய ஆர்வமுடைமையின் மிகுதியும் தற்புகழ் கேட்டலின் அவனுடைய நாணமும் தோன்ற, நொடியவும் விடாஅன் என்றார். இங்ஙனம் நீயிர் சில தொடங்கு முன்னரே நும்மைத் தலையளி செய்ய விரைதல் அவன் இயல்பு என்றவாறு. இவ்வாறே சிறுபாணாற்றுப்படையினும்,

நீசில மொழியா அளவை மாசில்
காம்புசொலித் தன்ன அறுவை உடீஇ  (235-6)

என, நல்லூர் நத்தத்தனாரும் வள்ளலின் பண்பை விதந்தோதுதல் காண்க.

நன்னன் வேண்மானின் உட்கோளும், உளப்பண்பும், இன்முகமும், இனிய நோக்கும், இன்சொல்லும் பிறவுமாகிய வண்மைச் சிறப்பு

545-560 : நசைதர ............. நோக்கி

பொருள் : நசைதர வந்தது சாலும் வருத்தமும் பெரிது என - என்பால் உள்ள விருப்பம் கொண்டுவருகையாலே நீயிர் என்பால் வந்ததே அமையும் வழிவந்த வருத்தமும் பெரிது என முகமன் மொழிந்து, பொருமுரண் எதிரிய வயவரொடு பொலிந்து திருநகர் முற்றம் அணுகல் வேண்டி - பொருகின்ற மாறுபாட்டினை எதிர்கொண்டிருக்கும் படைத்தலைவரோடே பொலிவுபெற்றுச் செல்வத்தினையுடைய தன் மனையின் முற்றத்தினை நீங்கள் எய்துதலைப் பெரிதும் விரும்பி, கல்லென் ஒக்கல் நல்வலத்து இரீஇ - கல்லென்னும் ஆரவாரத்தையுடைய சான்றோர் இருக்கின்ற நன்றாகிய அமயத்தே வீற்றிருக்கும் பேரத்தாணிக்கண்ணே இருந்து, உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து அகன்றதாயத்து அஃகிய நுட்பத்து - உயர்ந்த அரசஉரிமையினையும் கொடுமையில்லாத அமைச்சர் முதலியோரையும் அகன்ற நாட்டினையும் சுருங்கிய அறிவினையும் உடையோராய், இலம் என மலர்ந்த கையராகி - தம்பால் இரந்து வந்தோர்க்கு யாம் இல்லேம் என்று கூறி விரித்த கையினை உடையராய், தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் - தம் பெயரை உலகிடை நிறுத்தாமல் தம்முடனே கொண்டு பொன்றக் கெட்டுப்போன அரசர், நெடுவரை இழிதரு நீத்தம் சால் அருவிக் கடுவரல் கலுழிக்கட்கு இன் சேயாற்று வடுவாழ் எக்கர் மணலினும் பலரே - நெடிய மலையினின்றும் குதிக்கும் பெருக்கு நிறைந்த அருவியினது கடிய வரத்தினை உடையதாகிய வெள்ளம் மிக்க கண்ணுக்கு இனிய சேயாற்றின் அறல்பட்டுக் கிடந்த இடுமணலாகிய மணலிலும் பலர் ஆவர், அதனால் புகழொடுங் கழிக நம், வரைந்த நாள் என - அதனால் புகழோடே கழிந்து போவதாக நமக்கு இத்துணைக்கால மிருக்கவென ஊழான் எல்லையிட்டு விட்ட நாள் என்று கருதி, பரந்து இடம் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு - கொடுத்தற் றொழிலிலே விரிந்து அதற்கே இடங்கொடுக்கும் வானத்தை ஒத்த பெரிய உள்ளத்தோடே, நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது உவந்த உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி - பரிசில் பெறுதற்கு விரும்பிச் சென்ற நும்மினுங் காட்டில் தான் பெரிதும் மகிழ்ந்த நெஞ்சத்தோடே முகத்தான் அமர்ந்து இனிதாகப் பார்த்து;

கருத்துரை : என்பால் உள்ள விருப்பத்தால் நீயிர் வந்ததே அமையும் ஈண்டு வருதற்கு வழி நடத்தற்பொருட்டு நுமக்கு உண்டாகிய வருத்தமும் பெரிதாகுமே என முகமன் மொழிந்து, போர்செய்தற்குரிய இகலை எதிர்நோக்கி இருக்கும் படைத்தலைவரோடே, பொலிவுற்று விளங்கும் செல்வத்தினையுடைய தன் மனைமுற்றத்தே நீயிர் எய்துதலைத்தான் பெரிதும் விரும்பியவனாய், சான்றோர் குழுமிய தன் பேரவைக்கண்ணே வீற்றிருந்து, உயரிய அரச உரிமையினையும், சிறந்த அமைச்சர் முதலிய சுற்றத்தாரையும், அகன்ற நாட்டினையும் உடையராய் இருந்தேயும், விரிந்த அறிவின்மை காரணமாகத் தம்பால் வந்தபரி சிலர்க்கு யாம் நுங்கட்குத்தர யாதும் இலம் என்று கையை விரிப்பவராகித் தம் பெயரைத் தம்முடனே கொண்டு மாண்டொழிந்த மன்னர் சேயாற்றின் எக்கர் மணலினும் எண்ணின் மிக்காராவார். ஆதலாலே, அவர்போலாது நமக்கென ஊழ்வரையறை யிட்டுவைத்த நாட்கள் என்றும் நின்று நிலவும் புகழோடு கழிந்து தீர்வதாக என்று கருதி, விரிந்த விசும்புபோன்று அகன்ற உள்ளத்தோடே தன்பாற் பரிசில் நயந்துவந்த நும்மினும் நுமது வருகையாற்றான் பெரிதும் மகிழ்ந்தவனாய் நும்மை முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி, என்பதாம்.

அகலவுரை : வந்தது சாலும் என்றது நீயிர் என்பால் வந்தசெயலே எனக்குப் பெரிதும் மகிழ்ச்சியளிக்க வல்லதாம். மேலும், என்னைப் புகழ்தல் வேண்டற்பாற்றன்று என்னும் பொருளை யாப்புறுத்தி நின்றது. வருத்தமும் பெரிது என்றது. என்பால் வருதற்பொருட்டு நீயிர் வருந்தலாயிற்றே என இரங்கிக் கூறுவன் என்றபடி. பொரு முரண் எதிர்தலாவது போர் எப்பொழுது நிகழும் என்று அதற்குரிய இகலை ஆர்வத்தோடே எதிர்பார்த்திருத்தல்.

விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து  (குறள்-776)

என்பவாகலின், போர்முரண் தோன்றாதநாள் மறவர்க்கும் பயனிலா நாளாகப் பயனுடைய அந்நாளை எதிர்பார்ப்பர் என்பதாம். மறவர் இப்பண்புடையராதலை,

நானில மதனி னுண்டு போரென நவிலின் அச்சொல்
தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையர் தெரித்து மென்னின்
கானினும் பெரியர் ஓசைக் கடலினும் பெரியர் கீர்த்தி
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ.  (கிங்கரர் - செய்-4)

என்னும் கம்பராமாயணச் செய்யுளானும் அறிக. திருநகர் - அரண்மனை பொலிந்து என்னும் எச்சத்தை, திருநகர் என்பதன்கண் தொக்க உடைய என்பதனோடு முடித்திடுக. பொலிந்து திருவுடைய நகர் என்க. கல்லென் நல்வலத்து, ஒக்கல் நல்வலத்து எனத் தனித்தனி கூட்டுக. கல்லென்னும் ஓசையுடைய மண்டபம் ஒக்கல் சூழ்ந்த மண்டபம் என்றவாறு. ஒக்கல் : ஈண்டுச் சான்றோர் மேற்று. என்னை? மூவிரு குற்றமும் முறைமையிற் கடிதலிற் காவற்சாகாடு உதைத்தற் குரியனாய அரசன் தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவுடையாரை (குறள் அதி - 45: முன்னுரை) ஒக்கலாகக் கொண்டொழுகுதல் இன்றியமையாதாகலின் என்க.

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்  (443)

என்னும் திருக்குறளானும் பெரியாரே தமராதற்குரியராதல் காண்க. நல்வலம் என்றது, நல்ல இடம் என்னும் பொருட்டாய் அத்தாணி மண்டபத்தைக் குறித்து நின்றது. இதனால், நல்லிதின் இயக்கும் அவன் சுற்றமும், நாண்மகிழ் இருக்கையும் கூறியவாறறிக.

இனி, நன்னன் வேண்மானின் உளப்பண்பு கூறுவார் முதற்கண் அவன் குறிக்கோள் கூறுகின்றார். கட்டில் என்பதனை ஆகுபெயராக்கி அரசவுரிமை என்று கூறினார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். கட்டில் என்றதனை அரசுகட்டில் (அரியணை) எனினுமாம். உரும்பு-கொடுமை உரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகி (447) என்றார் பெரும்பாணாற்றுப் படையினும். அகன்ற தாயம் என்றது, அகன்ற நாட்டினை என்றவாறு. தாயம் என்றது தாம் தேடாதே தம் முன்னோர் தேடித்தந்த நாடென்னும் பொருளை யாப்புறுத்தியது. நுந்தை தாயம் நிறைவுற வெய்திய, ஒலியற் கண்ணிப் புலிகடிமால் (புறம்- 202) என்றார் பிறரும். தான் வருந்தித் தேடிய பொருளையே ஈதல் கடமையாயிருக்கத் தான் தேடாது தாயத்தானெய்திய பொருளை ஈயவும் துணியாப் பேதைமை என்னாம் என்றவாறு. ஈதல் ஒன்றே வாழ்தலின் ஊதியம் எனச் சான்றோர் கூறாநிற்பவும், ஈதற்கு வேண்டியன யாவும் தம்பால் உள்ளனவாகவும், அந் நற்செயலைச் செய்யாததற்குக் காரணம் அவர்தம் அறிவின்மையே என்பார், அஃகிய நுட்பம் என்றார். அஃகுதல் - குறைதல். நுட்பம் அறிவிற்கு ஆகுபெயர். இஃது அறிவின்மை எல்லா நலங்களையும் கெடுக்கும் தன்மையை விளக்குதல் காண்க.

உயர்ந்த கட்டில் முதலியவற்றை உடையராயிருந்தும் அறிவில்லாமையால் வாழ்வின் ஊதியமாகிய ஈதலையும் செய்யாது அதன்பயனாகிய புகழையும் இகழ்ந்து தாம்பெற்ற கட்டில் முதலியவற்றையும் இழந்து மாய்கின்ற அறிவிலிகள் போலாது யான்வறியோர் முதலியோர்க் கீந்து என்நாட்களை ஊதியம் உடைத்தாகச் செய்வேன் என்னும் ஓர் உயரிய மேற்கோளுடையனாய் அதற்கேற்ற விரிவுடைய உள்ளமும் உடையனாய் என்றபடி. விசும்பு தன்கண் எண்ணிலாத அண்டங்கள் தோன்றினும் இல்லை என்னாது இடங்கொடுத்தளிக்குமாப்போல், தன்கண் வரும் இரவலர் பலராய காலையும் பன்முறை வந்துழியும் இல்லை என்னாது நல்கும் உள்ளமுடையான் என்பார், பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளம் என்றார். விசும்புதோய் என்றது, விசும்பு இருக்குமிடமெல்லாம் சென்று தோய்தற்குரிய விரிவுடைய உள்ளம் என்றவாறு. இவ்வுவமையின் அருமையை உள்ளி உள்ளி உவப்பர் நல்லோர். இரவலர் புரவலரைக் காண்டலால் உண்டாகும் இன்பத்தினும் இரவலரைக் கண்டவழிப் புரவலர் உள்ளத்தே உண்டாம் இன்பம் சாலப் பெரிதாம். தாயைக் கண்ட கன்றினும் கன்றைக் கண்டதாயின் உவகையே பெரிதாம் அன்றோ? இங்ஙனம் மகிழ்தல்தான் மெய்ம்மையான வள்ளற் பண்பாம்; இதனை,

இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை - விரகின்றி
வல்லவர் ஊன்ற வடியாபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாம் கீழ்  (279)

என்னும் நாலடியானும் உணர்க.

செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி இல்லெனின்
மாறிப் பிறப்பின் இன்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினும் இமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே  (புறம்-214)

என்னும் அரசர் பெருமான் கோப்பெருஞ் சோழனின் அருள்மொழியும் ஈண்டு நினைவுறற் பாலது. ஒவ்வொருவற்கும் வாழ்தற்குரிய நாள் முன்னரே பால்வரை தெய்வத்தான் வரையறை செய்யப்பட்டுள்ளது என்பவாகலின், நம் வரைந்த நாள் என்றான்; நமது ஊழான் வரையறை செய்யப்பட்டநம் வாழ்நாள் உள்ள துணையும் என்றவாறு. இதனால் வீழ்நாள் படாமல் நன்றாற்றுவல் என்னும் குறிக்கோளுடையன் என்பது போந்தது.

உவந்த உள்ளமொ டமர்ந்தினிது நோக்கி

என்னும் தொடர்,

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்  (குறள்-93)

என்னும் அருமைத் திருக்குறளை நினைவூட்டுதலறிக.

நன்னன் வேண்மானின் விருந்தோம்பற் சிறப்பு

561-566 : இழை மருங்கு ............. பெறுகுவிர்

பொருள் : இழை மருங்கு அறியா நுழை நூற்கலிங்கம் எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ - இழை போனவிடம் கட்பொறியால் அறிய வாராத நுண்ணிய நூலான் நெய்த புடைவைகளை இகழ்ச்சியற்ற சிறப்புண்டாமாறு நுமது வெள்ளிதாகிய அரையிலே உடுத்தி, முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது - பெண் நாய் கடித்துக் கொண்டு வந்த பசிய நிணத்தையுடைய தசைகளோடே நெடிய வெள்ளிய நெல்லின் அரிசியும் முட்டுப்படாதவாறு, தலைநாள் அன்ன புகலொடு வழிசிறந்த பலநாள் நிற்பினும் பெறுகுவிர் - முதல்நாட் போன்ற விருப்பத்தோடே அவ்விடம் நும் நெஞ்சிற்குச் சிறப்பெய்திப் பலநாள் வதிவீராயினும் பெறாநிற்பீர்;

கருத்துரை : தம்பால் இழைபோன இடம் காண்பார்க்குத் தெரியவராத நுண்ணிய நூலால் இயன்ற ஆடைகளை நுமது வறிய அரையின்கண் உடுத்தி நீர் நும்மனதிற் கிசைதலான் ஆண்டுப் பலநாள் உறைவீரேனும் முதல்நாள் தந்த விருப்பம் குறையாமல் நாடோறும் தசைகளுடனே நெடிய வெண்ணெல்லின் அரிசியும் முட்டின்றி வழங்கப் பெறுவீர் என்பதாம்.

அகலவுரை : அவ்வள்ளல் அளிக்கும் ஆடையின் சிறப்புணர்த்துவான் இழை மருங்கறியா நுழைநூற் கலிங்கம் என்றான். இங்ஙனமே.

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை நல்கி  (பொருநர் - 82-83)

என்றும்,

கொட்டைக் கரைய பட்டுடை நல்கி  (பொருநர்-155)

என்றும்,

நீசில மொழியா அளவை மாசில்
காம்புசொலித் தன்ன அறுவை உடீஇ (சிறுபாண்-235-6)

என்றும்,

ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் உடீஇ  (பெரும்பா-469-70)

என்றும் பிற சான்றோரும் வள்ளல்கள் முதல் முதலாக இரவலர்க்கு ஆடையுடுத்துதலையே மேற்கோடலும் அவர் நல்கும் ஆடையின் சிறப்பும் கூறுதல் காண்க. இனி வறுமையுடையான் ஒருவனைப் பிறர் எள்ளற்குக் காரணமாவது அவன் எய்திய பசியினும் பார்க்க அவன் உடுத்திய கந்தலே ஆதலின், அவ்வறுமைத் தோற்றத்தைப் பிறர் கண்டு எள்ளாவாறு உடுத்தியவுடனே மாற்றியமைக்கும் சிறப்புடைய ஆடை யென்பார், எள்ளறு சிறப்பின் என்றார். முடுவல் - பெண்ணாய்; நாய் எனினுமாம். பிணவு நாய் முடுக்கிய தடியொடும் (177) என முன்னும் கூறினர். மனிதர் உள்ளம் முக்குணவயத்தான் மாறுபடுதல் உண்டன்றே? அங்ஙனம் மாறுபடாது என்றும் விருப்பங் குறையாதே போற்றும் இயல்புடையான் நன்னன் என மாறுபாடில்லாத வண்மையைச் சிறப்பிப்பான், தலை நாள் அன்ன புகலொடு என்றான்.

அன்றை யன்ன விருப்போ டென்றும்
இரவரன் மாலையன்  (238-9)

என்றார் குறிஞ்சிப்பாட்டினும். இத்தொடர்,

பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ  (101)

என்னும் புறப்பாட்டடிகளையும்,

பன்னாளும் சென்றக்காற் பண்பிலோர் தம் முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்டொறும் செய்வர் சிறப்பு  (159)

என்னும் நாலடியையும் நினைவூட்டுதல் அறிக. தசையும் அரிசியும் சிறப்புப்பற்றிக் கூறினராதலான், இனம் செப்புமாற்றால் இருதிறத்தும் அறுசுவையுமுடைய அடிசிற்குரிய அனைத்தும் பலநாள் நிற்பினும் பெறுவீர் என்பது கருத்தாகக் கொள்க.

நன்னனின் பரிசிற் சிறப்பு

566-575 : நில்லாது .................. அனைத்தும்

பொருள் : நில்லாது செல்வேம் தில்ல எம் தொல்பதிப் பெயர்ந்தென - அங்ஙனம் அவ்விடத்தே பலநாள் நீயிர்நில்லாதே யாங்கள் போக நினைக்கின்றேம் எம்முடைய பழைய ஊர்க்கு மீண்டும் என்று, மெல் எனக் கூறிவிடுப்பின் - அவன் நெஞ்சு பொறுக்குமாற்றால் மெல்லெனக் கூறி அவனை விட்டுப் புறப்படுவீராயின், நும்முள் தலைவன் தாமரை மலைய விறலியர் சீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய - நுங்களில் தலைவனானவன் பொற்றாமரையைச் சூடாநிற்பவும் விறல்பட ஆடும் மகளிர் அழகு பொருந்தின தலைமையினை உடைய விளங்குகின்ற பேரணிகலன்களைப் பூணவும் செய்து, நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடுந்தேர் - நீர் இயங்குமாறுபோல நிரைத்து இயங்கா நின்ற நெடிய தேர்களையும், வாரிக் கொள்ளா வரை மருள் வேழம் - யானை படுகின்றவிடத்தே பிடித்துக் கொள்ளாத மலை யென்று மயங்குதற்குக் காரணமான யானைகளையும், கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை -ஒலிக்கும் மணிகள் ஆரவாரிக்கும் ஏறுகளையுடைய பெரிய ஆன் கூட்டங்களையும், பொலம் படைப்பொலிந்த கொய்சுவல் புரவி - பொன்னாற்செய்த கலனை முதலியவற்றால் பொலிவுபெற்ற மயிரைப் பலகாலும் கொய்யும் கழுத்தினையுடைய குதிரைகளையும், நிலம் தினக்கிடந்த நிதியமொடு - மண் தின்னும்படி பழையதாய்க் கிடந்த பொருட்குவியலோடே, அனைத்தும் - எல்லாவற்றையும்;

கருத்துரை : இனி, நீயிர் ஆண்டுப் பலநாள் நில்லாது நும் ஊர்க்குச் செல்ல நினைவீராயின் அச் செய்தியை அந் நன்னன் வேண்மானின் நெஞ்சு பொறுக்கும் முறையில் மெல்லெனச் சொல்க. சொன்னவுடன் நும்மில் தலைவனானவன் பொற்றாமரை மலர் சூடவும், விறலியர் விளங்கிய உயர்ந்த அணிகலன்களை அணியவும் செய்து, பின்னரும் ஒலியின்றி நீர் ஒழுக்குப் போன்று இயங்கும் தேர்களையும் மலை போன்ற வேழங்களையும் ஒலிக்கும் மணிகள் ஆரவாரிக்கும் ஏறுகளையுடைய பசு நிரைகளையும், பொன்னாலாய கலனை முதலியவற்றை அணிந்த மயிர் கொய்த கழுத்தையுடைய குதிரைகளையும், மண் தின்னுமாறு கிடந்த பொருள்களோடே எல்லாப் பொருளையும் (நல்கி-580) என்பதாம்.

அகலவுரை : செல்வேம் தில்ல என்பதன்கண் தில்ல என்னும் இடைச்சொல் விழைவு குறித்து நின்றது : என்னை?

விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்
றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே  (தொல்.இடை-5)

என்பதோத்தாகலான் எனவே, தில்ல என்னும் சொல் இஃது எங்கள் மனவிருப்பம் என்னும் பொருட்டாய் நின்றதென்க. இனிப் பல நாள் நில்லாது செல்வேம் தில்ல என்றமையால் ஒழியிசை குறித்த தெனினுமாம். நன்னன் நும் பிரிவாற்றாமையான் வருந்துவனாகலின், அவன் வருந்தாவகையிற் கூறுக என்பான் மெல்லெனக் கூறி விடுப்பின் என்றான். மெல்லெனக் கூறுதல் வெளிப்படையான் நேர் நின்று கூறாதே தம் மெண்ணத்தைக் குறிப்பான் உணர்ந்து கொள்ளுமாறு சில கூறுதல். விடுப்பின் என்றது, புறப்பட்டால் என்றவாறு. தாமரை - பொன்னாற் செய்த தாமரை மலர். பண்டைக் காலத்து மன்னர்கள் பொற்றாமரைமலர் முதலியவற்றைக் கலைவாணர்க்குப் பரிசிலாக அளித்தல் மரபு; இதனை,

மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழுக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே

எனவாங்கு

ஒள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே. (புறம்-11)

எனவும்,

அழல்புரிந்த அடர்தாமரை
ஐதடர்ந்த நூற்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலநறுந் தெரியல்
பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப்
பாண்முற் றுகநின் நாண்மகிழ் இருக்கை.  (புறம்-29)

எனவும்,

ஆடும்வண் டிமிராத் தாமரை
சூடா யாத லதனினும் இலையே.  (புறம்-69)

எனவும்,

ஒன்னார் யானை யோடை ப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக  (புறம்-126)

எனவும்,

இன்றொடை நல்லிசை யாழ்ப்பாண எம்மைப்போற்
கன்றுடை வேழத்த கான்கடந்து - சென்றடையில்
காமரு சாயலாள் கேள்வன் கயமலராத்
தாமரை சென்னி தரும்.  (புறப்பொருள் வெண்- 216)

எனவும்,

பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி
ஒண்ணுதல் விறலியர்க் காரம் பூட்டி  (பதிற்று -88)

எனவும்,

எரியகைந் தன்ன ஏடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
நூலின் வலவா நுணங்கரின் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணிய, (பொருநர்-159-162)

எனவும்,

புனையிரும் கதுப்பகம் பொலியப் பொன்னின்
தொடையமை மாலை விறலியர் மலைய.  (பெரும்பாண் 485-6)

எனவும் பிற சான்றோர் கூறுமாற்றானும் தெளிக.

பேரியாற்றுநீர் இழுமென இயங்குமாறுபோல ஆடுதலும் குலுங்குதலும் இன்றி இயங்கும் சிறந்த தேர் என்பான் நீரியக் கன்ன நிரை செலல் நெடுந்தே ரென்றான். நிரைசெலல் - நிரல்படச் செல்லுதல். வாரி - யானைபிடிக்குமிடம் : வாரிக்கொள்ளா என்றது, தாமே காட்டினின்றும் பிடித்துக்கொள்ளாத என்றவாறு. எனவே பகைவர் படையினின்றும் பற்றிக்கொண்ட அல்லது திறையாகப் பெற்ற யானைகள் என்றவாறு. மருள் : உவமவுருபு. ஆனிரைகளில் பசுக்களுக்கு மணி கட்டுதல் மரபு. பொலம்-பொன் படை கலனை முதலிய குதிரை அணிகலன். கொய் சுவல் - மயிர் கத்தரிக்கப்பட்ட கழுத்து. இம் மயிர்செருக்குடைய குதிரைக்கு மிக வளரும் என்பது நச்சினார்க்கினியர் கொள்கை போலும் ! அவர், மனச் செருக்கால் மயிரைப் பலகாலும் கொய்யும் கழுத்தினையுடைய குதிரைகள், என உரை கூறியுள்ளார். பொருள் மிகுதி கூறுவார், நிலந்தினக் கிடந்த நிதியம் என்றார். நுகர்தற்கு மிகையாகப் பொருள் குவிந்து கிடந்தது என்க. அனைத்தும் - இவை போல்வன அனைத்தும்.

இதுவுமது

576-583 : இலம்படுபுலவர் .................. நாடுகிழவோனே

பொருள் : இலம்படு புலவர் ஏற்ற கை நிறையக் கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்கையின் - இல்லாமையுண்டான புலவர் ஏற்ற கை நிறையும்படி பேரணிகலன்களைச் சொரிகையினாலே கீழ்நோக்கின உழலும் தொடியணிந்த பெரிய கையினிடத்துண்டாகிய, வளம் பிழைப்பு அறியாது - தான் கொடுத்த செல்வம் கெடுதலை அறியாதபடி, வாய் வளம் பழுநி கழைவளர் நவிரத்து மீமிசை - வாய்த்த வளப்பம் முற்றுப்பெற்று மூங்கில் வளர்ந்த நவிரம் என்னும் பெயருடைய மலையிடத்துச்சியிலே, ஞெரேரென மழை சுரந்தன்ன ஈகை - கடுக மழை சொரிந்தாற் போன்ற கொடையாலே, பரிசில் நல்கித் தலைநாள் விடுக்கும் - பரிசில் வழங்கு முதனாளிலே போகவிடுவன் அவன் யாரெனின், மலைநீர் வென்றெழு கொடியில் தோன்றும் குன்றுசூழ் இருக்கை நாடு கிழவோனே - மலையினின்றும் விழுகின்ற அருவிகள் வென்றுயர்கின்ற கொடிகள்போலத் தோன்றும் மலைகள் சூழ்ந்த பரப்பினையுடைய நாட்டிற்கு உரிமையுடையோனாகிய நன்னன் சேய் நன்னன் என்பான்;

கருத்துரை : நல்கூர்ந்த புலவருடைய ஏற்ற கைநிறையும்படி உயரிய அணிகலன்களைச் சொரியும் பொருட்டுக் கவிழ்ந்த கையிடத்துண்டாகிய தான் கொடுத்த செல்வம் கெடாதபடி வளம் வாய்த்த மூங்கில் வளர்ந்த நவிரமலையின் உச்சியிலே ஞெரேலென மழை பெய்தாற் போன்ற தன் கொடையாலே பரிசில் வழங்கி நும்மை முதனாளேபோகவிடுவன். அவன் யாரெனில்? மலையின்கண் வீழும் அருவிகள் வெற்றிக் கொடி உயர்த்தினாற்போல் தோன்றும் மலைகள்சூழ்ந்த பரப்பினையுடைய நாட்டிற்கு உரிமையுடையோனாகிய நன்னன் சேய் நன்னன் என்பான் என்பதாம்.

அகலவுரை : இலம்பாடு - வறுமை; வறுமையுற்ற புலவர் என்றவாறு. இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை (உரி-62) என்பது தொல்காப்பியச் சூத்திரம். கழல்தொடி - ஏறியிறங்கி உழலும் தொடி. தடக்கை-பெரிய கை. கைக்குப்பெருமையானது ஈதல் ஒன்றேயாதலின் தடக்கை என்றார். தடக்கையின் வளம் என்க. தடவும் கயவும் நளியும் பெருமை (உரி-22) என்பது தொல்காப்பியச் சூத்திரம். அது பிழைப்பறியாது என்றது, தான் வழங்கிய பொருள் குறையாது என்றும் நிலைத்திருக்கும்படி என்றவாறு. எனவே, தன்பால் பரிசில் பெற்றோர் மீண்டும் ஒருவரிடத்து ஏற்கவேண்டாதபடி நிறைய வழங்குவன் என்பதாம்.

இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்னும் திருக்குறளுக்குப் பின்னும் பிறனொருவன்பாற் சென்று அவன் உரையா வகையாற் கொடுத்தல் எனப் பொருள் கூறுவார் கருத்தை இஃதொத்தல் காண்க. வாய் வளம் : வினைத்தொகை; வாய்த்த வளம் என்க. எனவே வளம் வாய்த்தல் செங்கோன்மை வாய்த்த வழியே ஆதலின், நன்னனின் செங்கோன்மைச் சிறப்பாலே வாய்த்த வளமுடைய என்றவாறு. என்னை?

மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்கத்
தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன்எதிர்பு நந்த
.....................................................
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக.  (மதுரைக் - 10-23)

எனச் சான்றோர் வளம் வாய்த்தற்குச் செங்கோன்மையை ஏதுவாகக் கூறலான் என்க. நவிரமலை நன்னனுடைய மலையாகலின் அதன் வளத்தை எடுத்தோதினார். அம் மலைக்கண் ஞெரேலென முகில் பொழிவதுபோல நன்னன் பொருள் வழங்குவன் என்க. கைம்மாறு வேண்டாத நன்கொடையே நன்னன் கொடை என்பார், கைம்மாறு வேண்டாது உலகோம்பும் மழையையே உவமை கூறினார்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு  (குறள்-211)

என்றார் வள்ளுவனாரும். முன் நவிரமலையை நன்னன் தன் படைகளாற் போற்றி வந்தமையும், அம் மலைக்கண் காரியுண்டிக் கடவுளர் திருக்கோயில் உண்மையும் (80-226-30) முதலிய அடிகளால் கூறப்பட்டதும் காண்க.

இதனால் புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகைமாரி கூறப்பட்டது. தலைநாள் விடுக்கும் என்றது, பரிசில் நீட்டியாது நும் விருப்பம்போல் விடுப்பன் என்றவாறு. நன்னனது கொடைவென்றியை மலையின்மேல் ஏற்றி மலையருவி வெற்றிக்கொடி போற் றோன்றும் என்றார். இங்ஙனமே. பல்வேறுகுழூஉக் கொடி பதாகை நிலைஇப். பெருவரை மருங்கின் அருவி நுடங்க (மதுரைக் 373-4) என்றும், பெருவரை இழிதரும் நெடுவெள்ளருவி ஓடையானை உயர்மிசை எடுத்த ஆடுகொடி கடுப்பத் தோன்றும் கோடுயர் வெற்பன், (அகம்-358: 12 -5) என்றும் பிறரும் மலையருவிக்குக் கொடியை உவமை கூறுதல் காண்க. பன்குன்றக் கோட்டமாகலின் குன்று சூழ் இருக்கை நாடு என்றார். இது தொண்டைமண்டலத்துள்ள 24 கோட்டங்களுள் ஒன்று என்ப.

கிழவோன் - உரிமையுடையோன். இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்சோலை மலைகிழவோனே (316-7) என்றார் திருமுருகாற்றுப்படையினும். ஏ : ஈற்றசை. இதனால் வீயாது சுரக்கும் அவன் வியன்மகிழ் இருக்கை கூறினார். இனி, இந்நூலின் தொடக்க முதல்; இறுதிவரை கிடந்த பொருளியைபும், வினைமுடிவும் வருமாறு : கலப்பையிராய், ஒழுகிச் சுற்ற இருந்த தலைவ ! யாறு கடற்படர்ந்தாங்கு யாம் அவணின்றும் வருதும்; நீயிரும் நன்னன் சேய் நன்னற் படர்ந்த கொள்கையோடு சேறிராயின், எற்றாக் குறுதலின் பொழுதெதிர்ந்த புள்ளினிர் மன்ற. இனி யாற்றினதளவும், புலமும், வல்சியும், மலையும், சோலையும், கானமும், ஈகை மாரியும், ஆற்றலும், இருக்கையும், சுற்றத்து ஒழுக்கமும், கடவுளதியற்கையும், அவன் சிறப்பும் தொல்லோர் வரவும், மூதூர் மாலையும் இருக்கும்படி கேள். அவற்றுள் வேளை முன்னிய திசை பெட்டாங்கு விளைய வானம் பொழிகையாலே, முசுண்டை முதலாகப் பல ஈறாக எண்ணிய இம் மிகுவளம் பழுநிய வைப்பாலே புதுவது வந்தன்று; அது அதன் பண்பு.

அவற்றைக் கண்டு, கானவர் சிறுகுடிப் படின், ஒக்கலொடும் பதமிகப் பெறுகுவீர், அசைஇ, அன்று அற்சேர்ந்து, அல்கிப் போகிப் பாக்கம் எய்தி, விறல் வேள் வயிரியம் எனில், பொம்மல் பெறுகுவிர். ஆண்டுத் தேக்கட்டேறல் பருகி, நறவு மகிழ்ந்து அனந்தல் தீர, மகமுறை தடுப்ப மனைதொறும் தாரத்தோடே வல்சி பெறுகுவிர்; பரிசில் மறப்ப நீடலும் உரியீர்; நீட்டிப்பிற் பனித்தலும் உரியிர். ஆதலால், பலநாள் நில்லாது நாடு படர்மின் படருங்கால் அவ்வழி அரும்பொறி உடையவாகலின், நள்ளிருள் வைகினிர் கழிமின்; கழியுங்கால், செப்பந் துணியின் வலம் செயாக் கழிமின்; கழிந்து, குறவர் ஏறித் தளர்க்குங்கல் கூற்றத்தன்ன; அவைதாம் இரியத் தத்தி விசை தவிராது வரும்; மரம் மறையாக் கழிமின்; கழிந்து, கான் யாற்று நடவை வழூஉம் மருங்குடைய; அவ்விடத்திற்கு வலந்த பரூஉக்கொடி மதலைபற்றி வழாஅல் ஓம்பி ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்.

கழிந்து, நுண்ணீர்ப்பாசி வழும்பு அடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய; அதற்கு. வேரலொடு மென்கோல் பற்றினிர் கழிமின்; கழிந்து, கடவுட்காணின் வெற்பு மாரிதலையுமாதலின். நும் இயம்தொடுதல் ஓம்புமின்; ஓம்பி, மஞ்ஞை தளரினும், கடுவன் உகளினும் பிரசம் காணினும், ஞெரேலென நோக்கல் உரித்தன்று; நெறி மாறுபடுகுவிர்; அங்ஙனம் மாறுபடாமற் போய்க் கானத்துப்படின் ஏனம் காணின் மிசைந்து பருகிப் பொதியினிராய் மகாஅரோடே கழிதல் ஓம்பி அற்குக் கல்லளை வதிமின்.

வதிந்து, விடியல் எழுந்து, செந்நெறிக் கொண்மின்; கொண்டு, விலங்கி, நோக்கிக் குறுகாது கழிமின்; கழிந்து, நாடுகாண் நனந்தலை மென்மெல அகன்மின்; அகன்று, குன்றத்துப் படின் இயந்தொடுமின்; இயந் தொட்டால் கானவர் உளர்; அவர் எய்திக் காட்டி முந்துற இனியிர் ஆகுவிர்; இனியிராய், அவர் கூறிய மாதிரம் கைக்கொண்டு இழிந்து இருப்பின் பலதிறம் பெயர்பவை மலைபடுகடாம் கேட்குவிர்; கேட்டபின், அவன் வெற்பு விழவின் அற்று; ஆண்டுத் தொன்முறை மரபினிர் ஆகிப் பாடிப் பழிச்சி மலை பிற்படக் கழிமின்; கழிந்து, துவலை துவற்றலின் விடரகம் புகுமின்; புகுந்து குன்றில் ஆரிடர் அழுவத்து ஊறு தவப்பல; அவற்றைக் கோல்கொண்டு ஊன்றினிர் கழிமின்; கழிந்து இன்னலியக்கத்து அமயத்துக் கழிமின்; கழிந்து அவ்விடம் அருப்பமும் உடைய, அவ்வரண்களிற் போயின் நுழைதொறும் கைபிணி விடாது கழிமின்; கழிந்தால் கானம் பல கல்நட்ட கவலைகள் பல; அக் கல்லிற்கு மருப்பு இகுத்துத் துனைமின்; அப்பொழுது புதுவிர் புன்முடிந்திடுமின்;

இட்டுப் போனால், சுரம் தவப் பல, ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனின், நம்மனோர்க்கு ஆங்கனம் அவன் மூதூர் அற்று; அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமின்; அக் கானத்தை இறந்து கோவலர் பாலைச் சொரிகையாலே அவர்க்கு விருந்தாவிர்; அங்ஙனம் விருந்தாய் ஆட்டின் நிரையிலே புகின், பாலும் மிதவையும் பெறுகுவிர்; அவற்றைப் பெற்று, அதட்பள்ளியில் சேந்தனிர் கழிமின்; கழிந்து கூளியர் கூவை காணின் படர்ந்திகும் எனினே, தடியும் கிழங்கும் தரீஇ ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை; அவற்றை அருந்தி வியங்கொண்மின்; அதன் பண்பு அது; அப் பண்பைக் கண்டு கண்ணியைச் சூடித் தண்ணென உண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழிமின்; கழிந்தால் புளிங் கூழை அற்குக் குடிதொறும் பெறுகுவிர்; பெற்று அசையினிர் சேப்பின் நுவணையொடு அமலையை இழுது உள்ளீடாக அல்கலும் பெறுகுவிர்;

அவற்றைப் பெற்று, ஞெகிழிமாட்டித் துஞ்சிப் புள்ளோர்த்துக் கழிமின்; கழிந்தால். அவன் தண்பணைநாடு நன்பலவுடைத்து; அதனை அடைந்தால் வினைஞர் வல்சி நல்கப் பழையர் மகளிர் விரைஇத்தேறலை நல்க, அவற்றைப் பெறுகுவிர்; பின்னர் அவரிட்ட வெண்சோற்றை அருந்தி மருதம் பண்ணிக் கழிமின்: கழிந்து, எருமை யொருத்தல் கதழ்ந்து வரல் போற்றிச் சேயாற்றின் ஒருகரைக் கொண்டனிர் கழிமின்; கழிந்தால் அவன் மூதூர் சேய்த்தன்று; அவ்வூரிற் சென்றால் அருங்கடி வாயிலை அயிராது புகுமின் புக்காற் பரிசிலர் அளியர் எனக் கண்டோர் எல்லாம் எதிர் கொளக் குறுகிப் பின்னர் முற்றம் முன்னி, கடவுள் வாழ்த்திய பின்னர் விருந்திற் பாணி கழிப்பிச் செம்மலோய்! எனக் கூறி ஏத்திச் சென்றது நொடியவும் விடான்;

வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனக்கூறி, அணுகல் வேண்டி, நல்வலத்து இரீஇ, மாயந்தோர் மணலினும் பலர்; அதனால் நம்வரைந்த நாள் புகழொடும் கழிக என்று கருதிப் பரந்து இடங் கொடுக்கும் உள்ளத்தோடே அமர்ந்து நோக்கிக் கலிங்கம் வெள்ளரைக் கொளீஇப் பலநாள் நிற்பினும், தடியொடு அரிசி முட்டாது தலைநாள் அன்ன புகலொடு தரப் பெறுகுவிர்; நில்லாது செல்வேம் என விடுப்பின், நும்முள் தலைவன் தாமரை மலைய, விறலியர் இழையணிய, தேர், வேழம், நிரை, புரவி, நிதியத்தோடே அனைத்தும் நவிரத்து மழை சுரந்தன்ன ஈகை நல்கி தலைநாள் விடுக்கும்; அவன் யாரெனின்? அருவி கொடியிற்றோன்றும் குன்றுசூழ் இருக்கை நாடுகிழவோன் என்பதாம்.

வெண்பா

தனிப் பாடல்

தூஉஉத் தீம் புகை தொல் விசும்பு போர்த்ததுகொல்?
பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்?
மாஅ மிசையான் கோன் நன்னன் நறு நுதலார்
மாஅமை எல்லாம் பசப்பு!
   
மலைபடுகடாம் முற்றிற்று.

மலைபடுகடாத்திற்குப் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய உரை முற்றும்.


© Om Namasivaya. All Rights Reserved.