விநாயகர் புராணம்

(பகு தி-11)


அது ஒரு எருக்கஞ்செடி. அந்தச் செடியிலுள்ள பூக்களை எனக்கு அணிவித்தால் போதும் என்றார் விநாயகர். இறைவன் நம்மிடம், எதிர்பார்ப்பது பக்தியை மட்டும் தான். அன்புடன் அவனது பாதத்தில் ஒரே ஒரு பூவை வைத்து, அவனது திருநாமத்தை சொன்னால் போதும்! ஓம் கணபதியே நம என தினமும் 108 முறை யார் பக்திப்பூர்வமாக சொல்கிறார்களோ, அவர்களுக்கு விநாயகரின் ஆனந்தலோகம் நிச்சயம் கிடைக்கும். விநாயகப்பெருமானின் எளிய தன்மை பற்றியும், அவர் எதிர்பார்க்கும் எளிய பக்தி பற்றியும் மற்றொரு கதை ஒன்றையும் கேளுங்கள். மிதிலாபுரி மன்னர் ஜனகர் நற்பண்புகளைப் பெற்றவர். ஏராளமான கல்வியறிவுடன் திகழ்ந்தவர். ஆனாலும், தான் என்ற கர்வம் அவரை ஆட்டிப்படைத்தது. மக்களைக் காப்பாற்றும் அவர் தானே தெய்வம் என்று நினைத்துக் கொண்டார். ஒருமுறை நாரத மகரிஷி அவரைக் காண வந்தார். நாரம் என்றால் தண்ணீர். நாரதர் பிதுர் தேவதைகளை அளவுக்கதிகமாக பூஜிப்பவர். அவர்களுக்கு தீர்த்தம் கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருப்பார். இதன் காரணமாகவே நாரதர் என்ற பெயர் அவருக்கு அமைந்தது. நாரதர் எந்த இடத்திலாவது கண நேரம் தங்கிவிட்டால்கூட, அவ்விடத்தில் உள்ளோர் மோட்சத்தை அடைந்து விடுவார்கள். அப்படிப்பட்ட மகான் ஜனகரைக் காண வந்தால் அவருக்கு மோட்சம் உறுதிதானே! ஜனகர், நாரதரை வரவேற்று ஆசனத்தில் அமர வைத்தார். நாரதர் அவரிடம், ஜனகரே! உமது ஆட்சியில் பகவான் கிருபையால் மக்கள் செழிப்புடன் வாழ்கின்றனர். உம்மை வாழ்த்துகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணமான அந்த பகவானுக்கு இங்கு என்ன வேலை? என்றார். நாரதர், ஜனகருக்கு புத்திமதி சொன்னார்.

ஜனகரே! நீர் அறியாமல் பேசுகிறீர். எல்லாவற்றுக்கும் காரணம் பகவான்தான். பகவானை தூஷிக்கும் இடத்தில் நான் அமர மாட்டேன், என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவர் நேராக கவுண்டின்ய முனிவரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றார். அந்த முனிவர் கணபதியை உபாசிப்பவர். அவரிடம் நாரதர், முனிவரே! விநாயகப்பெருமானிடம் சொல்லி ஜனகருக்கு நற்புத்தியை தரச் செய்ய வேண்டும். அவர் தானே பரம்பொருள் என்ற சிந்தனையுடன் இருக்கிறார். அந்த சிந்தனையை அகற்றி அவர் சாதாரண மானிட ஜென்மம் என்பதை உணரும் வகையிலான ஏற்பாட்டைச் செய்யுங்கள், என சொல்லிவிட்டு வைகுண்டம் புறப்பட்டார். கவுண்டின்ய முனிவரும் கணபதியிடம் இதைச் சொல்லி பூஜித்தார். கணபதி அவரது கோரிக்கையை ஏற்று குஷ்ட நோயுள்ள ஒரு அந்தணராக வடிவெடுத்து ஜனகரின் அரண்மனைக்குச் சென்றார். வாசலில் நின்றபடி, தனக்கு பிøக்ஷ இடுமாறு கேட்டார். மிக ஆச்சரியமாக பிராமணர் ஒருவர் அரண்மனை வாசலில் பசியுடன் வந்து நிற்கிறார் என்றால் யாருக்குத்தான் வியப்பிருக்காது! அவர்கள் அவசர, அவசரமாக ஜனக மகாராஜாவிடம் சென்று, பிராமணர் ஒருவர் பிøக்ஷ கேட்டு வந்திருப்பதை அறிவித்தார்கள். ஜனகர் அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். வேதியர் அருவருப்பான தோற்றத்துடன் உள்ளே வந்து நின்றார். பிராமணரே! எனது ஆட்சியில் இப்படி ஒரு நிலைமை தங்களுக்கு எப்படி ஏற்பட்டது? இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? எனக்கேட்டார்.

முதியவர் வடிவில் வந்த கணபதி, எனக்கு பசி தாளவில்லை. முதலில் உணவு கொடு! அதன் பிறகு பேசலாம், என்றார். ஜனகர் தன் மகனிடம், வேதியரை உணவறைக்கு அழைத்து செல்லும்படி கூறினார். அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. கணபதி சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். அவரது தொந்தி வயிறை அவ்வப்போது தடவிக்கொள்வார். சமையல்காரர்கள் இருந்ததையெல்லாம் அவருக்கு வைத்து விட்டனர். அவரோ இலையை விட்டு எழுந்திருப்பது போல் தெரியவில்லை. பின்னர், நூறு சமையற்காரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சமைத்துக் கொண்டிருக்கும் போதே கணபதி பசி தாளாதவர் போல அரற்றினார். இலை முன்பு உட்கார வைத்துவிட்டு, இப்படி என்னை பட்டினி போட்டு துன்புறுத்துகிறீர்களே! என கத்தினார். இளவரசனுக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது. அத்துடன் பயமும் வந்துவிட்டது. அவனது உடல் நடுங்கியது. ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் அவனது அறிவுக்கு புலனாகிவிட்டது. பாதி வெந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. இருக்கிற உணவையெல்லாம் அப்படியே எடுத்து வாருங்கள் என கணபதி சத்தம் போட்டார். சமையல்காரர்களும் அவ்வாறே செய்தனர். அதன் பின்பும் அவர் இலையை விட்டு எழவில்லை. உடனே இளவரசன் அவரிடம், வேதியரே! உம் பசி தீர எங்களது தானியக்களஞ்சியத்தை திறந்து விடுகிறோம். உமது இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளும், எனச் சொல்லி களஞ்சியத்தை திறந்து விட்டான். கண நேரத்தில் களஞ்சியத்தைக் காலி செய்து விட்டார் கணபதி.

ராஜகுமாரனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இவர் நிச்சயமாக மனிதர் இல்லை. தேவராகவோ, பூதமாகவோ இருக்க வேண்டும். அரண்மனையில் இனி சாப்பிடுவதற்கென எந்தப் பொருளும் இல்லை. காவலர்கள் மூலமாக ஊரிலுள்ள எல்லார் வீட்டிலும் இருந்து உணவு கொண்டு வரச்சொல்லுங்கள் எனக் கட்டளையிட்டான் ராஜகுமாரன். விஷயம் ஜனகருக்கும் பறந்தது. அவர் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ஊரார் வரிசையாக உணவுப்பண்டங்களை அடுக்கினர். அந்தணர் வடிவில் இருந்த கணபதிக்கோ அது ஒரு கைப்பிடி அளவே இருந்தது. அதையும் காலி செய்துவிட்டு, பாவிகளே! பெரும் பசியுடன் வந்த எனக்கு கடுகளவு சாப்பாடு போட்டு, மேலும் என் பசியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே! உம்... போடுங்க சாப்பாட்டை, என்று கத்தினார். ஜனகர் அவர் அருகே வந்து, வேதியரே! உமக்கு கொடுக்க எங்கள் நாட்டிலேயே இப்போது ஏதுமில்லை. என்னை மன்னிக்க வேண்டும். உமது பசியைப் போக்கக்கூடியவர் என நீர் யாரை நினைக்கிறீரோ அங்கேயே போய் நீர் பசியாறிக் கொள்ளலாம், என்றார். மன்னனே! நீ தானே பரப்பிரம்மம். அப்படித் தானே ஊரெங்கும் சொல்லிக் கொண்டு திரிகிறாய். கடவுளுக்கு சமமான உனக்கு யாசகம் கேட்டு வந்த அந்தணனின் பசியைத் தீர்க்க முடியவில்லையே. ஒரு சிறு பகுதியை ஆளத்தெரியாத நீ, கடவுளாக இருந்து இந்த பிரபஞ்சத்தையே எப்படி காக்கப் போகிறாய்? என் பசியைத் தீர்ப்பதாக வாக்குறுதி தந்து விட்டு, அதைக்கூட காப்பாற்றாத நீயெல்லாம் தெய்வம் என்று சொல்லிக்கொள்கிறாயே, என்று அவருக்கு உரைக்கிற மாதிரி சொல்லிவிட்டு கோபப்படுவது போல் நடித்து வெளியேறி விட்டார். அவர் சென்ற பிறகு ஜனகர், தன்னைப் பரப்பிரம்மமாக நினைத்து கர்வத்துடன் நடந்து கொண்டதையும், யாசகம் கேட்டவருக்கு கூட உணவிட முடியாத தனது இயலாமையையும் எண்ணி வருந்தினார். அரண்மனையில் இருந்து புறப்பட்ட அந்தணராகிய கணபதி, திரிசுரன் என்ற தன் பக்தனின் வீட்டிற்குச் சென்றார்.

திரிசுரனும் ஒரு அந்தணர். அவரது மனைவி விரோசனை. கணவர் யாசகமாகக் கொண்டு வரும் அரிசியை சமைத்து விநாயகருக்கு படைத்து விட்டு சாப்பிடும் பழக்கமுடையவள். கணவருக்கு பூஜை வேளையில் பணிவிடை செய்பவள். அவர்களின் வீட்டுக்குச் சென்றதும், திரிசுரன் வெளியே வந்து அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, தன் குடிசைக்குள் அழைத்துச் சென்றார். திரிசுரனே! நான் தீர்த்தயாத்திரை செல்கிறேன். வழியில் பசிக்கிறதே என்பதற்காக இந்த நாட்டு மன்னன் ஜனகரிடம் உணவு கேட்டேன். அவர்களோ குறைந்த அளவு தந்து, என் பசியை மேலும் தூண்டி விட்டார்கள். பசியடங்காத நான், உங்களிடம் உணவு கேட்டு வந்துள்ளேன். ஏதாவது கொடுங்களேன், என்றார். விரோசனைக்கு கண்ணீர் முட்டியது. சுவாமி! மற்ற நாட்களில் கூட நெல்லோ, அரிசியோ பிøக்ஷயாக ஏற்று வருவார் என் பர்த்தா. இன்றோ, அவர் ஏதுமில்லாமல் வெறும் கையுடன் திரும்பி விட்டார். விநாயகருக்கு அர்ச்சனை செய்த அருகம்புல் மட்டுமே இங்குள்ளது. வேறு ஏதுமில்லை. நான் என்ன செய்வேன்? பசித்து வந்த தங்களுக்கு ஏதும் தர முடியாமல் தவிக்கிறேனே! என்று தங்கள் நிலைமையை வெளிப்படுத்தினாள். பெண்ணே! இதுபற்றி கவலை வேண்டாம். உன்னிடம் இருப்பதாகச் சொல்கிறாயே, அருகம்புல், அதில் ஒன்றிரண்டைக் கொடுத்தாலே போதும். என் பசி தீர்ந்து போகும், என்றார் சுவாமி. விரோசனையும் அவ்வாறே அவருக்கு இரண்டு அருகம்புல்லைக் கொடுத்தாள். கணபதி அதை வாயில் போட்டாரோ இல்லையோ, அந்த வீடு பொன்மயமாக ஜொலித்தது. அவ்வூரிலுள்ள குடிசைகளெல்லாம் மாளிகைகளாகி விட்டன. ஜனகரின் அரண்மனையில் முன்பையும் விட செல்வம் கொழித்துக் கொட்டிக் கிடந்தது. அவருக்கு பேராச்சரியம். அரண்மனைக்கு வந்த வேதியரே இதற்குக் காரணம் என்பதை அவர் புரிந்து கொண்டார். திரிசுரனின் இல்லத்திற்கு அவர் விரைந்தார்.

அப்போது விரோசனை, சுவாமி! தாங்கள் யார்? எங்கள் வீட்டின் நிலையையே மாற்றி விட்டீர்களே. பசும்புல்லுக்கு பசும்பொன் கொடுத்த புண்ணியரே! தங்களைப் பற்றிச் சொல்லுங்களேன், என்றதும் விநாயகர் தன் சுயரூபத்தை அவளுக்கு காட்டினார். திரிசுரன் அவரிடம், சுவாமி! இந்த ஏழையின் வீட்டுக்கா எழுந்தருளினீர்கள்! நான் அருகம்புல் தவிர தங்களுக்கு ஏதும் தந்ததில்லையே! இனிக்கின்ற மோதகமும், சித்ரான்னங்களும் படைத்து உம்மை வழிபடும் இடங்களுக்கெல்லாம் செல்லாமல், எங்கள் மகாராஜா தங்களுக்கு ஏராளமான உணவிட்டும் அவர் வீட்டில் காட்சி கொடுக்காமல் இங்கு வந்து காட்சி தந்தமைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள அடியேன் விரும்புகிறேன், என்றார். இதற்குள் ஜனகரும் அங்கே வந்து விட, அவர் பரவசம் மேலிட கணபதியை வணங்கி, விநாயகரே! நானே பரம்பொருள் என இறுமாந்திருந்தேன். என் மாயையை தீர்த்த வல்லவரே! உம்மை மதிக்கத்தவறிய எனக்கு இனியும் இவ்வுடலில் உயிர் வேண்டாம். நான் உமது திருவடியை அடைந்து பாக்கியத்தை அருள்வீரா? நான் செய்த தவறுக்குரிய தண்டனை எதுவாயிருந்தாலும் கொடும்! ஆனால், என்னை மீண்டும் பிறவியெடுக்கச் செய்யாமல் தடுக்க வேண்டும், என்றார். கருணைக்கடலான விநாயகர் அவருக்கும் திரிசுரன் தம்பதிக்கும் அருள்செய்து, என்னைத் திருப்திப்படுத்த ஆடம்பரம் ஏதும் தேவையில்லை. ஒரு பூவையையோ,  இலையையோ எனக்கு அர்ப்பணித்தாலே போதும். அதுவும் இல்லாதவர், எனக்கு மந்திரங்கள் கூறியும், என் திருநாமங்களைக் கூறியும் இதயத்தில் இருந்து அருகம்புல்லையும், அதற்கிணையான வன்னி இலைகளையும் தந்தாலே போதும், என்றார். சுவாமி! தங்களுக்கு வன்னி இலை தூவி வழிபடுவதால், நாங்கள் அடையும் நன்மை என்ன என்பதை விளக்க வேண்டும்? என்று கேட்டாள் விரோசனை. விநாயகரும் அதுகுறித்த தனது பிரஸ்தாபத்தை ஆரம்பித்தார்.

விரோசனா! வன்னி இலையின் முக்கியத்துவத்தைக் கேள்.அருகம்புல்லை மாலையாகவும், வன்னியை எனக்கு அர்ச்சனை செய்வதற்காகவும் நீ பயன்படுத்தலாம். ஒரு காலத்தில், விதர்ப்ப தேசத்தை புண்ணிய கீர்த்தி என்பவன் ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை இல்லை. எனவே, அவனது காலத்துக்குப் பின் மந்திரிகள் ஒன்று கூடி, மன்னனின் உறவுக்காரனான சாம்பன் என்பவனை அரசனாக்கினர். ஆனால், அவன் எதிர்பார்த்ததைப் போல் நல்லாட்சி தராமல் கொடுமைகள் பலவற்றை அரங்கேற்றினான். பெண் பித்தனான அவன், பிறர் மனைவியரைக் கூட விட்டு வைக்கவில்லை. இவனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம், தனக்கு பதவியளித்த மந்திரிகளையே நீக்கி விட்டு, துர்மதி என்பவனை மந்திரியாக்கிக் கொண்டான். அவன் அரசனுக்கு எல்லா வகைகளிலும் உதவியதுடன், தானும் அவனைப் போலவே லீலைகளில் ஈடுபட்டான். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க பாவங்களையே சேர்த்துக் கொண்டிருக்க, ஒருமுறை காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார்கள். வரும் வழியில், எனது கோயில் ஒன்றைக் கண்டனர். அங்கு பக்தர்கள் ஒன்றுகூடி பூஜை செய்து கொண்டிருந்தனர். அங்கே வந்த ஒரு பக்தையிடமிருந்த மாங்கனிகளைப் பிடுங்கி, என் முன்னால் வைத்து, பிள்ளையாரே! இவங்க கொடுக்கறதையெல்லாம் நீ ஏத்துக்கிறே இல்லே! இதோ! நாங்க கொடுக்கிற இந்த கனிகளையும் ஏத்துக்கோ! என விளையாட்டாகச் சொன்னார்கள். பின்னர் அங்கிருந்து போய்விட்டார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகும், அவர்கள் கொடிய பல பாவங்களைச் செய்து இறந்தும் போனார்கள். எமதூதர்கள் அவர்களைக் கொடிய சாட்டைகளால் அடித்து இழுத்துச் சென்றனர். இங்கே, அனுபவித்த இன்பத்திற்கு பல மடங்கு ஈடான துன்பத்தை அவர்கள் அனுபவித்தனர். நரக <உலகத்தில் வாட்டி வதைபட்ட அவர்கள் பூச்சி, புழு, கரப்பான், நண்டு என பல இழிபிறவிகளை எடுத்தனர். மீண்டும் ஒரு பிறவியில் சாம்பன் மானிடனாகவும், துர்மதி அசுரனாகவும் பிறந்தனர்.

மானிடனாகப் பிறந்த சாம்பனுக்கு அப்பிறவியில் வீமன் என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. வீமன் அப்பிறவியிலும் திருடனாகவே இருந்தான். ஒரு முறை, பல பிராமணர்கள் யாகம் முடித்து விட்டு, அதற்குரிய தட்சணையாக தங்கம், பசுக்கள் முதலானவற்றை பெற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கொள்ளையனான வீமன், அவர்களை வழிமறித்தான். தங்கத்தையும், பசுக்களையும் தன்னிடம் தந்து விடும்படி மிரட்டினான். அந்தணர்கள் அவனுக்கு நற்புத்தி சொல்லவே, ஆத்திரமடைந்த அவன், அவர்களைக் கொலை செய்து அத்தனைப் பொருளையும் அபகரித்துக் கொண்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. செய்த பாவத்திற்கு பலன் கிடைக்க வேண்டாமா? சாம்பனின் மந்திரியாக இருந்த துர்மதி, அந்தப் பிறவியில் ராட்சதனாகப் பிறந்திருந்தான். அவன், பசுக்களையும், பெரும் செல்வத்தையும் திருடிக் கொண்டு வந்த வீமன் முன்னால் வந்து நின்றான். பசுக்களைப் பிடித்துத் தின்றான். வீமனையும் விழுங்க எண்ணம் கொண்டு அவனைப் பிடிக்க கையை நீட்டவும், வீமன் அலறியடித்து ஓடினான். அசுரனும் விடவில்லை. வீமன் பயந்து போய் ஒரு மரத்தில் ஏறினான். அப்போது அதில் இருந்த இலைகள் உதிர்ந்தன. அந்த மரத்தின் கீழே யாரோ சிலர் எனது சிலையை பிரதிஷ்டை செய்திருந்தனர். அந்த சிலையின் மீது அந்த இலைகள் உதிர்ந்தன. அசுரன் மரத்தருகே வந்து, வீமனைக் கீழே விழச் செய்வதற்காக மரத்தை உலுக்கினான். அப்போதும், என் சிலை மீது இலைகள் உதிர்ந்தன. ஒரு வழியாக அசுரன் வீமனைப் பிடிக்க, வீமன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தாக்கி சண்டை போட்டான். ஒரு கட்டத்தில் அசுரனை ஒரு பாதாளத்தருகே சமயோசிதமாக வரச்செய்த வீமன், அவனை உள்ளே விழும்படிச் செய்து விட்டான். அவன் உள்ளே விழுந்ததும், மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பிய அவன் நின்ற பாறையில் திடீரென கால் வழுக்கவே, அவனும் அதே பாதாளத்தில் விழுந்து இறந்தான். இவர்கள் இருவரும் மீண்டும் எமலோகம் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களுக்கு மீண்டும் கொடிய தண்டனை கிடைத்தது. இருப்பினும், அந்தப்பிறவியில் இவர்கள் தங்களை அறியாமலே என்னை வன்னி இலை கொண்டு அர்ச்சித்த பலன் கிடைத்தது. தண்டனை காலம் முடிந்ததும், புண்ணியத்தை அனுபவிக்கும் பாக்கியகாலம் வரவே, அவர்கள் தங்க விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு எனது லோகத்தை வந்தடைந்தனர். பாவிகளுக்கும் கூட மங்களத்தை அருளும் சக்தி வன்னி இலைக்கு உண்டு, என்றார். விரோசனை இந்த சம்பவம் கேட்டு உளம் மகிழ்ந்து, அங்கு நின்ற விநாயகருக்கு அர்ச்சனை செய்து கணவருடன் ஆனந்தலோகம் அடைந்தாள்.

விநாயகப்பெருமானை சதுர்த்தி நாளில் அவதரித்ததாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம். இந்நாளில் சந்திர தரிசனம் கூடாது. இது ஏன் தெரியுமா? யாராவது ஒருவர் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டால், அவரை ஏளனம் செய்யக்கூடாது என்பது நியதி. பிரம்மதேவன் இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டார். நாரதர் மூவுலகும் சஞ்சரிப்பவர். தினமும் சிவலோகம் வந்து ஒரு மாங்கனியை காணிக்கையாக வைத்து இசை பாடி சிவசக்தியைப் பரவசப்படுத்துவார். ஒருநாள், காணிக்கையாக கொடுத்த மாங்கனியை யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் கேட்டார். வழக்கமாக அப்பழம், விநாயகருக்கே கிடைக்கும். இப்போது முருகனுக்கு அப்பழத்தைக் கொடுக்கலாமே என பிரம்மா கூற, கணபதிக்கு கோபம் வந்து விட்டது. அவரது கோபத்துக்கு ஆளானால், பெரும் தண்டனைக்கு ஆளோவேமே என நடுங்கிய பிரம்மா அவரருகே சென்றார். கணேசரும் அவரை மன்னிக்க முடிவு செய்த வேளையில், பிரம்மாவின் நடுக்கத்தைப் பார்த்து சந்திரன் சிரித்தான். விநாயகரின் கோபம் சந்திரன் மீது திரும்பி விட்டது. ஒருவன் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அவனைக் காப்பாற்ற முயல வேண்டுமே தவிர, அவனது வேதனையை எண்ணி சந்தோஷப்படக்கூடாது, என சந்திரனைக் கடிந்து கொண்டதுடன், இப்படிப்பட்ட உனக்கு உலகுக்கு ஒளி கொடுக்க தகுதியில்லை, என சபித்து விட்டார். சந்திரன் ஒளியிழந்ததால் தேவர்களுக்கு அமுத கிரணம் கிடைக்கவில்லை. அவர்கள் வாடி வதங்கினர். சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவன் சந்திரனுக்கு சாபவிமோசனம் தந்து ஒருநாள் தவிர மற்ற நாட்கள் சந்திரன் வளர்ந்து தேய்ந்து கிரணங்களைப் பொழிவான், என்றார். அதனால் தான் அமாவாசையன்று தேவர்கள் உபவாசம் இருப்பது போல, நாமும் உபவாசம் இருப்பது நல்லது. கணபதியின் பேரருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

© Om Namasivaya. All Rights Reserved.