Books / பத்துப்பாட்டு நூல்கள்


சிறுபாண் ஆற்றுப்படை


இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது. ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

நூலாசிரியர் வரலாறு

சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டினுள் மூன்றாம் எண்ணுமுறைக்கண் நின்ற சிறுபாணாற்றுப் படை என்னும் சிறந்த இந்நூலை இயற்றியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் நல்லிசைப்புலவர் ஆவர். கல்வி கேள்விகளான் நிறைந்து, புதுமையான் மேம்பட்டு விளங்கிய சான்றோரின் பெயர்முன்னர் ந என்னும் சிறப்புப்பொருளைத் தரும் இடைச்சொல் அடைபெய்து வழங்குதல் பண்டைத் தமிழ்ச்சான்றோர் மரபாம். தத்தனார் என்னும் இப்பெயருடைய இப்புலவர் பெருமான் பெயரும் ந என்னும் அடையடுத்து வழங்கப்படுதலால் இவர் பண்டை நாட் சான்றோரான் நன்கு மதிக்கப்பட்டமை புலனாம். இனி, இவர் பெயர்க்கு அடையாக வரும், இடைக்கழி நாட்டு நல்லூர் என்னும் தொடர், இவர் இடைக்கழிநாட்டின் கண் உள்ள நல்லூர் என்னும் ஊரிற் றோன்றியவர் என்பதனைப் புலப்படுத்தும். இடைக்கழிநாடு என்பது, சென்னைக்குத் தென்மேற்கில் உள்ள ஒரு சிறு நாடு என்றும், இந்நாடு இன்றும் இடைக்கழிநாடென்றே வழங்கப்படுகின்றதென்றும், அந்நாட்டின்கண் நல்லூர் என்னும், பெயருடன் ஓரூரும் உளதென்றும், அவ்வூரே நத்தத்தனார் தோன்றிய ஊராதல் வேண்டும் என்றும் அறிஞர் கூறுகின்றனர். ஓதுதற்கும், உணர்தற்கும் இனிய முறையில் இவர் செய்யுள் யாப்பதில் மிகவும் வல்லுநராவார்.

அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாட் செருந்தி தமனிய மருட்டவும்
கடுஞ்சூன் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்  (சிறுபாண் : 146-9)

என்றும்,

பைந்நனை அவரை பவழங் கோப்பவும்
கருநனைக்க யாக் கணமயில் அவிழவும்
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்  (சிறுபாண் : 164-7)

என்றும் வரும் இன்னோரன்ன அடிகளில் இப்புலவர் பெருமான் சொற்றொடர்களைக் கேட்போர்க்குப் பெரிதும் இன்பம் நல்கும் முறையில் யாத்தமைத்திருத்தல் உணர்க.

இயற்பொருள்களைக் கூர்ந்து நோக்கி, அவற்றிற்குத் தக்க உவமைகளைத் தேர்ந்துரைப்பதில் இவர் பெரிதும் சிறப்புடையராகத் திகழ்கின்றார். யாற்றின் அறலில் உதிர்ந்து கிடக்கும் வாடற்பூவினை நிலமகளின் கூந்தலிற் சூட்டிய மலர் என்றும், மலையினின்றும் வீழும் அருவியினை நிலமடந்தையின் அணிமுலைத் துயல்வரும் நித்திலக்கோவை என்றும், மகளிர் முலையிற் பிதிர்ந்த சுணங்கினை வேங்கை நாண்மலர் என்றுங் கூறியிருப்பது வியக்கற்பாலதே. ஒருகாலிறுகவும் ஒருகால் நெகிழவும் சுற்றப்பட்ட யாழினது வார்க்கட்டிற்குக் கரிய குரங்கு பாம்பினைப் பிடித்தகாலை அதன் கையில் அப்பாம்பு சுற்றுதலையும், யாழின் இசைக்கு அமிழ்தத் துளியினையும், கடலலையால் ஒதுக்கப்பட்டு உலர்ந்துகிடக்கும் அகின்மர விறகிற்கு ஒட்டகம் உறங்கிக் கிடத்தலையும், சான்றோரும் வயவரும் அரிவையரும் பரிசிலரும் சூழ வீற்றிருக்கும் நல்லியக் கோடற்குப் பன்மீன் நடுவண் திகழும் பான்மதியினையும், பிணத்தை உகைத்துச் சிவந்துள்ள யானையின் கால்நகங்கட்கு நிணத்தை உண்டு சிரித்த பேய்மகளின் பற்களையும் உவமையாகக் கூறியிருத்தலும் இன்னோரன்ன பிறவும் காண்க. இனி, ஒருசில சொற்களை இணைக்கும் வாயிலாய், ஓதுவோர் உளத்தே கண்கூடாகப் பொருள் புலப்படுத்தும் ஆற்றலும் இவர் பெரிதும் உடையர் ஆவர். திறவாக் கண்ண காய்செவிக் குருளை என்னுந் தொடரான், கண்விழியாத சிறிய நாய்க் குட்டியின் தோற்றத்தையும், வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின் உரன்கெழு நோன்பகடு என்னும் தொடரால் வலிமைமிக்க எருதுகளையும், பொன்வாய் மணிச்சிரல் என்னுந் தொடரான் மீன்கொத்திப் பறவையினையும், எரிமறிந் தன்ன நாவின் இலங்கெயிற்றுக் கருமறிக் காதிற் கவையடிப் பேய்மகள் என்னுந் தொடரான் அச்சந்தரும் பெண் பேயையும் கற்போருளத்தே தோற்றுவித்தல், ஓதியுணர்க.

இனி இந்நத்தத்தனார் ஏழ் பெரும் வள்ளல்களின் வரலாறு கூறுமாற்றானும், மதுரை உறந்தை வஞ்சி என்னும் மூன்று தமிழ்நாட்டின் தலைநகரைச் சிறப்பிக்குமாற்றால் ஒவ்வொரு நாட்டின் சிறப்பியல்புகளைத் தேர்ந்தெடுத்து விளக்கிப் போதலானும், யாழின் இயல்பினையும் பண்ணியல்பினையும் கிளந்தெடுத்து ஓதுதலானும், நானிலங்களின் இயல்புகளும் ஆண்டு வாழும் மாந்தர்களின் ஒழுகலாறும் அவர்தம் உணவும் தொழிலும் பிறவும் நுணுக்கமாகக் கண்டுரைத்தலானும், நல்லியக்கோட வள்ளலைப் புகழுமாற்றால், உயரிய அறங்களின் சிறப்புக்களை எடுத்துரைத்தலானும், பிறவாற்றானும் விரிகடல் போன்று விரிந்த அறிவுடையார் என்பது புலனாம். சுருங்கிய சொற்றொடரால், விரிந்த பொருளை விளக்குவதிலும் இப்புலவர் வல்லுநர் ஆவார். ஒரு சில நிகழ்ச்சிகளைத் தேர்ந்து கூறுந்துணையானே ஒரு சிறந்த நாட்டின் இயல்பனைத்தும் தோன்றவும், ஒரு சிறந்த வள்ளலின் பெருமையனைத்தும் தோன்றவும், செய்யுள் செய்யும் வன்மையை இந்நூலின்கட் பற்பல விடங்களிலே காணலாம். இதனைக் கருதியே போலும் தக்கயாகப் பரணி உரையாசிரியர் இதனைச் சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை என விதந்து கூறுவாராயினர். பொருளை உவமமாகக்கொண்டு இவர் பல விடங்களில் செய்யுள் செய்துள்ளார். அறம் பொருள்களை அழகுற விளக்கியுள்ளார்.

நல்லூர் நத்தத்தனார் காலத்தே உயிர் வாழ்ந்திருந்த புலவர் புறத்திணை நன்னாகனார் என்பவர் ஆவர். இவர் காலத்தே வள்ளன்மையுடையோராய் விளங்கிய புரவலர்கள், இந்நூற்குத் தலைவனாகிய நல்லியக்கோடனும், ஓய்மான் நல்லியாதனும், ஓய்மான் வில்லியாதனும், கரும்பனூர் கிழானும் என்ப. திருவள்ளுவ மாலையில் உள்ள ஆயிரத்து முந்நூற்று என்று தொடங்கும் வெண்பாவை இயற்றியவர் பெயரும் நத்தத்தனார் என்றே காணப்படுகிறது. நத்தத்தம் என்னும் இலக்கண நூலை இயற்றிய புலவர் பெயரும் நத்தத்தனார் என்ப. இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்தாம் இவையிற்றைச் செய்தாரோ அன்றி அந்நத்தத்தனார் வேறோ என்பது ஆராயற்பாலது. நத்தத்தனார் மூன்று தமிழ்நாட்டிடத்தும் நன்மதிப்புடையர் என்பதனையும், தமிழ்மொழியிடத்தே பெரிதும் பற்றுடையர் என்பதனையும் மூன்று தமிழ்நாட்டினையும் சமனிலையில் வைத்துப் புகழ்தலானும், தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மதுரை என்னுந் தொடரானும் நன்கு உணரலாம். இவர் காலத்தே மதுரை, உறந்தை, வஞ்சி, எயிற்பட்டினம், வேலூர், ஆமூர், கிடங்கில், கொற்கை முதலிய ஊர்கள் சிறப்புற்றிருந்தன என்பதை இவர் நூலான் உணரலாம்.

பாட்டுடைத் தலைவன் வரலாறு

சிறுபாணாற்றுப்படை என்னும் இச் சிறந்த செந்தமிழ்ப் பனுவன் மாலையால் அணிசெய்யப்பட்ட வள்ளற் பெருமகன், ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்னும் வேந்தன் என்ப. இவ்வள்ளல், திண்டிவனத்தைச் சார்ந்துள்ளதும், பண்டு ஓய்மானாடென வழங்கப்பட்டதுமாகிய நாட்டினைச் செங்கோலோச்சிய செம்மல் ஆவான். உள்ளி உள்ளவெல்லாம் உவந்தீயும் வள்ளன்மையில், பேகன் முதலிய ஏழு வள்ளல்கட்கும் இவன் ஒருவனே சமனாவான் என, நத்தத்தனார் இப்புரவலனைப் புகழ்ந்து போற்றியுள்ளார். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் பயின்ற புலவர்கட்குத் தாயாகி அவரையும் அவர்தம் கலைகளையும் நன்கு போற்றியவன். மாவிலங்கை என்னும் சிறந்த நகரத்தைத் தலைநகராகக் கொண்டு, செங்கோல் செலுத்திய ஓவியர்குடி என்னும் சிறந்த அரசர் குடியின் றோன்றி, செய்ந்நன்றி அறிதலும், சிற்றினமின்மையும், இன்முகமுடைமையும், இனியனாதலும், அஞ்சினர்க் களித்தலும், வெஞ்சின மின்மையும், ஆணணி புகுதலும், அழிபடை தாங்கலும், கருதியது முடித்தலும், காமுறப் படுதலும், ஒருவழிப்படாமையும், ஓடியதுணர்தலும், அறிவு மடம்படுதலும், அறிவு நன்குடைமையும், பிறவும் உடையனாய்த் திகழ்ந்தான் என நல்லூர் நத்தத்தனார் இவ்வள்ளலின் அருமை பெருமைகளை நன்கு பாராட்டியுள்ளார். நல்லியக்கோடன் காலத்தே, அவன் நாட்டில் கிடங்கில், எயிற்பட்டினம், வேலூர் ஆமூர் என்பன சிறந்து விளங்கிய செய்தியைச் சிறுபாணாற்றுப்படையால் உணரலாம். கிடங்கில் என்னும் ஊர் இப்பொழுதும் அப்பெயராலேயே வழங்கப்படுகின்றதென்றும், ஆங்கு இடிந்த அரண்மனைகளின் அறிகுறிகளும் அகழிகளும் காணப்படுகின்றன என்றும் அறிஞர் கூறுப.

நல்லியக்கோடன், தன் பகைவர்களின் மிகுதி கண்டு அஞ்சிச் செந்தமிழ்க்கடவுளாகிய முருகனை வழிபட்டான் என்றும், அக்கடவுள் அவன் கனவிற்றோன்றி, இவ்வூர்க்கண் உள்ள ஒரு கேணியிற் பூத்த பூவைப் பறித்து நின் பகைவர் மேல் விடுதி எனத் திருவாய்மலர்ந்தருளினர் என்றும், அவ்வாறே இவனும் அப்பூவைப் பறித்துப் பகைவர்மேல் எறிய, அதுவே வேலாகிச் சென்று பகைவரை அழித்ததென்றும், இக்காரணத்தால் அவ்வூர் வேலூர் என வழங்கப்பட்ட தென்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையால் அறியலாம். இவ்வள்ளலின் மரபில், ஓய்மான் வில்லியாதன், ஓய்மான் நல்லியாதன் என்னும் வள்ளல்கள் உளராகப் புறநானூற்றால் அறியலாம்; நல்லூர் நத்தத்தனாரே அன்றிப் புறத்திணை நன்னாகனாரென்னும் நல்லிசைப் புலவரும் இவ்வள்ளலைப் புகழ்ந்து பாடியுள்ளார். அது வருமாறு :

ஓரை யாகத் தொண்டொடி மகளிர்
கேழ லுழுத இருஞ்சேறு கிளைப்பின்
யாமை யீன்ற புலவுநாறு முட்டையைத்
தேனா றாம்பற் கிழங்கொடு பெறூஉம்
இழுமென வொலிக்கும் புனலம் புதவில்
பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழியெற் புணர்ந்த பாலே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஒரூ ருண்மையி னிகந்தோர் போலக்
காணாது கழிந்த வைகல் காணா
வழிநாட் கிரங்குமென் னெஞ்சமவன்
கழிமென் சாயல் காண்டொறும் நினைந்தே  (புறம்: 176)

என்பதாம். ஒருநாட் கண்டோர், காணாது கழிந்த வழிநாட்கிரங்குதற்குக் காரணமான இவ்வள்ளலின் கழிமென் சாயல் முதலிய பெருமைகள் அனைத்தும், சிறுபாணாற்றுப்படையினை ஓதி உணரற்பாலன.

அறிமுகம்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள் : 45)

என்பது பொய்யில் புலவன் பொருளுரை, மக்களுள் முன்னேற்றம் பட வாழ்வோரை அறிதற்கும், அல்லாதாரை அறிதற்கும் அவர் தம் உடையும், ஊணும், உறையுளும், இவையிற்றை இயற்றிக் கோடற்கு அவர் கையாளும் கருவிகள், இன்னோரன்ன பிறவுமே அளவைகளாகக் கொண்டு மதிப்பார் அறிவில்லாதோர். இவையிற்றின் பெருமை சிறுமைகளுக்கேற்ப, நாகரிக வாழ்க்கையுடையோர், நாகரிகமற்றோர் எனவும் நவில்வர். நம் பண்டைநாட் சான்றோர், மக்கள் வாழ்க்கையின் பெருமை சிறுமைகளை அவர்தம் அகத்துறையும் அன்பினது பெருமை சிறுமைகளை அளவையாகக் கொண்டே மதிப்பாராயினர். அன்புமிக்க வாழ்க்கையுடையோரை வாழ்க்கை முன்னேற்றம் வாய்ந்தவர் என்றும், அல்லாதாரை முன்னேற்றம் பெறாதார் என்றும் கருதினர். நிரலே முன்னவர் நாகரிக மிக்கவர், பின்னவர் நாகரிகம் பெறாதார் என்பது அவர் கொள்கையாம்.

நாகரிக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக அமைபவர் வள்ளல் எனப்படுவோரே ஆவர். அன்பினது தூண்டுதலால், அயலோர் இடுக்கணுறக் கண்டபொழுது உடுக்கையிழந்தவன் கைபோல விரைந்து அவ்வயலார் இடுக்கண் களைந்து அவரை மகிழ்வித்து, அவர் மகிழ்ச்சிகண்டு தாம் மகிழ்வதே இவ்வள்ளல்களின் இயல்பாம். நம்மால் உதவப்படுபவர் இனையர், உதவப்படாதார் இனையர் என்று இவர் வரைந்து கொள்ளவும் அறியார். வழங்கும் பொருளையும் இவர் வரைந்து கொள்ளார். இத்தகையோரையே அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என வள்ளுவப் பெருந்தகை ஓதியதூஉம் என்க. இத்தகைய வள்ளற் பெருமக்கள் இவ்வுலகில் யாண்டும் எப்பொழுதும் காணப்படுபவர் அல்லர்; எனினும் சிற்சில காலங்களில் இவ்வுலகத்தே தோன்றித் தம் அன்பு கெழுமிய வாழ்க்கையானே வாழ்க்கையின் இயல்பினை எல்லோருமறியக் காட்டி மறைவர்; இவர் பருவுடல் மட்டுமே மறைவதல்லால், புகழுடல் என்றும் இந்நிலவுலகில் நின்று நிலவி மக்கட்கு வாழ்க்கையியல்பை அறிவித்துத் திகழா நிற்கும். நல்லதன் நலனும், தீய தன் தீமையும் தம் பாடல்சான்ற புலனெறி வழக்கில் உலகிற்குக் காட்டும் மேற்கோளுடைய நல்லிசைப் புலவர்க்கு நல்லதன் நலனைப் போற்றுமுகத்தானே, உள்ளி உள்ளதெல்லாம் உவந்தீயும் இத்தகைய வள்ளலைப் போற்றிப்புகழ்வதில், அளவில்லாத உவகையும், ஆர்வமும் உண்டு. ஆதலால் இத்தகைய வள்ளலைப் புகழ்தற்கென்றே நல்லிசைப் புலவர்கள், தம் பாடல்சான்ற புலனெறிவழக்கில், ஆற்றுப்படை என்னும் ஒரு துறையினை வகுத்துக் கொள்வாராயினர் என்க. இதனைத் தொல்காப்பியத்துள் புறத்திணைப் பாடாண் திணைப்பகுதியில் தாவினல்லிசை என்று தொடங்கும் நூற்பாவின்கண்,

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீ இச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்  (தொல்.புறத்.36)

என்னும் பகுதியான் அறிக. ஆடன் மாந்தரும், பாடற்பாணரும், கருவிப் பொருநரும், விறலியும் என்னும் நாற்பாலாரும், தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும் என்பது இந் நூற்பாவின் பொருளாம். எனவே, வரையாது நல்கும் வள்ளலைப் பாடும் புலவர்கள், கூத்தர் முதலிய இந்நால்வருள் ஒருவரை உறுப்பினராகக் கொண்டு, அவர் தம் மெதிர்ப்படும் இரவலர்க்குக் கூறும் கூற்றாகத் தம் பாடலை யாக்கக் கடவர் எனத் தொல்காப்பியனார் விதித்தார் ஆயிற்று. இவ்வாற்றான், ஆற்றுப்படை என்னும் அத்துறையே ஆற்றுப்படுப்போர் பெயரை அடையடுத்து நிரலே கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை என நான்காயிற்று. மேலும் பிற்றைநாள், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் வித்தகருள் முன்னின்ற இயற்றமிழ் வித்தகரையும் இனம்பற்றி ஆற்றுப்படுப்போராகக் கொண்டமையான் புலவராற்றுப்படை என்னும் ஒன்றும் தோன்றி ஆற்றுப்படை ஐந்தாயிற்று என்க. இதனை,

புரவலன் பரிசில் கொண்டு மீண்ட
இரவலன் வெயில்தெறும் இருங்கா னகத்திடை
வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர்
பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப்
புரவலன் நாடுஊர் பெயர்கொடை பராஅய்
ஆங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை

எனவரும் பன்னிரு பாட்டியல் நூற்பாவான் உணர்க. இந்நூற்பாவானே, அத்துறைக்கு ஆற்றுப்படை என்னும் குறியீடும் தொல்காப்பியனாராற் கூறப்படாத புலவர் பெயரும், நாடும் ஊரும், பெயரும் கொடையும் பராவுதலும் கூறப்பட்டமையறிக.

இனி வள்ளலாவார், இன்னர் உதவப்படுவோர், இன்னர் உதவப்படாதார் என்று வரையாது வழங்கும் இயல்பினராகவும், கூத்தர் முதலிய ஐவகையினர்க்குமே வரைசெய்து வழங்குவோரைப் போன்று, இவர் கூற்றாகவே கூறுக என வரையறுத்தோதுதல் எற்றுக்கு? வழங்கப்பட்டோர் எத்திறத்தாரேனும் கூறுக எனில், அற்றன்று; அங்ஙனம் வரையறுத்தோதியதற்குக் காரணங் கூறுதும். எத்திறத்து மக்களும் வறுமையுறுதல் இயல்பே எனினும், கூத்தர் முதலிய கலைவாணர் நல்கூர்தல் இயற்கைக்கு மிகவும் பொருந்தியதொரு நிகழ்ச்சியாம்; என்னை? இயல் இசை நாடகமென்னும் இம் முத்திறத்துக்கலைகளினும் ஈடுபட்டு இன்புறும் திருவுடையார், தாமின்புறும் இக்கலைச் செல்வங்களையே மேலும்மேலும் ஈட்டிக்கொள்ள முயல்வாரன்றி, ஏனை மாந்தர்போன்று உடல் ஓம்புதற்கு இன்றியமையாத உண்டியே, உடையே, உறையுளே இன்னோரன்ன பொருளை இறப்ப ஈட்டிக்கொள்ள முயல்வாரல்லர். பொருளாட்சி போற்றாதார்க் கில்லை என்பது இயற்கையாகலின், இவர் உண்டி முதலிய பொருட்பேறிலராய், நல்கூர்தல் இயற்கையொடு பொருந்தியதாயிற்று. இவர் உளத்தே நாவின் கிழத்தி உறைதலால், பூவின் கிழத்தி புலந்து புறக்கணித் தொழிவாள். நல்குரவு இவர்கட்கு என்றென்றும் ஒருவாத் தோழனே ஆம். ஆயினும், காய்பசி அஞ்சும் கடையாய மாந்தர்போன்று இவர் பசியஞ்சு வாருமல்லர்.

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும்  (குறள்:412)

என்னும் சீரிய திருக்குறட்குச் சான்றாவார் இக்கலைவாணரே காவியங்களிலே கவிந்த உள்ளமுடையான் ஒருவனுக்கு அவை தரும் இன்பமே உயிர்வாழப் போதியதாம்; அவன் உடலோம்புதற்கோ குளத்து நீரும், புளித்த சோறுமே சாலும்; உடல் உழைப்பை ஒரீஇ மனனுணர்ச்சியாலே வாழப்புகுந்த இக் கலைவாணன் உழைப்பான் மட்டுமே உளவாகும் உண்டி உடைகளில் நல்கூர்ந்தானாதல் இயற்கையே, என மேலைநாட்டு வித்தகன் எமர்சன் உரைத்த மொழிகள் இவர்கள் இயல்பை நன்கு விளக்கும்.

வயிறுகாய் பெரும்பசி வருத்துமாயினும், தம்மையும் தம் கலையின் அருமையினையும் அறியாதார் தலைவாயிலை இவர் மிதிக்கவும் ஒருப்பட்டார்.

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்  (136-40)

இவர்பால் நிலைத்தகாலையும், கலையினை மதியாரை இவர் கண்ணெடுத்தும் பாரார்; மண்ணளவும் மதியார். இக் கலைவாணர்தம் வாழ்க்கைச் சிறப்பினை,

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ இன்றே திறப்பட
நண்ணார் நாண அண்ணாந் தேகி
ஆங்கினி தொழுகின் அல்லது ஓங்குபுகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோ ரன்ன செம்மலும் உடைத்தே  (புறம்:47)

என்னும் இப்புறப்பாட்டானே நன்குணரலாம். இவ்வாற்றாற் கலைவாணர்களே ஏற்றற்கும் நல்கூர்தற்குற்சாலத் தகுதியுடையராயினர். இவரல்லார் கரவாதுவந்து ஈயும் கண்ணன்னார்கட் சென்றிரப்பினும் இழிபே ஆகலான், ஏற்றம் கேற்ற கூத்தர் முதலியோரே உறுப்பினர் ஆதற்குத் தக்கார் எனத் தொல்காப்பியனார் ஓதினர் என்க.

பசியோடே பறந்துழலும் ஒரு வண்டினைப் படைத்தபோதே, அதன் பசிதீர்த்து மகிழ்விக்கும்பொருட்டுத் தேன் நிறைந்த மலர் ஒன்றனையும் இறைவன் படைக்கின்றான், என யாரோ ஒரு புலவன் உரைத்த மொழி இப்போது என் நினைவில் எழுகின்றது. இத்தகைய மானம்போற்றும் இயல்போடும், நல்குரவோடும் இக்கலைவாணரைப் படைத்தபோதே, இவரையும் இவர் கலையையும் ஓம்பற்பொருட்டேபோலும் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்த் திகழும் வள்ளற் பெருமக்களையும் இறைவன் படைத்தளிக்கின்றான்; இப்புலவரும், புரவலரும் இவ்வுலகில் தோன்றாரெனின் இம் மண்ணுலகில் மக்கள் உயர்திணை என்னும் சிறப்பிற்கு உரியராதல் எங்ஙனம்? எனவே, உலகியலில் எந்நிலத்தினும் நிகழும் புணர்ச்சி முதலிய ஐவகை அகத்திணைகளையும் கலையுணர்ச்சியால் நிலத்தின்றன்மையை உணர்ந்து இவ்வொழுக்கம் இந்நிலத்தே நிகழ்ந்ததெனப் பாடல் புனைவதே சிறப்பென வரையறைசெய்து கொண்டாற்போன்றே இவ்வாற்றுப்படை செய்வோர் செயப்படுவோர் கூத்தர் முதலியோர் ஆயகாலை பாடல்சான்ற புலனெறி வழக்கம் சிறப்புற்றுத் திகழும் என நுண்ணிதின் உணர்ந்தே இவ்வாறு வரையறுத் தோதியதென்க.

நூல்களானே போற்றி உரைக்கப்படும் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள், அகத்திற்கே சிறந்த இன்பம் ஒழிய, அறம்பொருள்களின் இயல்களை எடுத்தோதி மக்களை அறிஞராக்கி, அவ்வறம் பொருள்களின்பால் ஆற்றுப்படை செய்தற்கும் இத்துறைபற்றிய பனுவல் சாலச் சிறப்புடையன ஆதலானும், ஆற்றுப்படை என்னும் பெயர் பின்னும் பொருந்துவதாம். எனவே இத்துறை பற்றிச் சிறந்த பாடல்களை நல்லிசைப் புலவர் பலர் யாப்பாராயினர். சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டினுள்ளும், ஐந்து பாட்டுக்கள் ஆற்றுப் படைகளாம். அவ்வைந்தனுள்ளும் பாணாற்றுப்படை இரண்டுள்ளன. இவ்விரண்டற்கும் இடைதெரிதற் பொருட்டுச் சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை, (சிறுமை-பெருமை) என்னும் பண்படைமொழி அடுத்து அவை வழங்கப்படுகின்றன. இச் சிறுமை பெருமைகள் அந்நூலிற் பேசப்படும் பாணர்கள், சீறியாழ் உடையரும் பேரியாழ் உடையரும் ஆய்க் கூறப்படுதலானும் அடியளவின் பெருமை சிறுமைகளானும் பெய்து வழங்கப்பட்டன என்ப. இச் சிறுபாணாற்றுப்படையாற் பாடப்பெற்றோன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்னும் வள்ளலாவான். இந்நூலினைப் பாடிய நல்லிசைப்புலவர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்ப.


© Om Namasivaya. All Rights Reserved.