Books / பத்துப்பாட்டு நூல்கள்


நெடுநல்வாடை


பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு சிவனுடன் வாதம் புரிந்த நக்கீரரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

நூலாசிரியர் நக்கீரனார் வரலாறு: நெடுநல்வாடை என்னும் இச்செந்தமிழ்த் தீம்பனுவலை இயற்றியவர் நக்கீரனார் என்னும் நல்லிசைப் புலவராவர். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எனப்படுதலின், இவர் தந்தையார் மதுரை மாநகரத்தே சிறந்த ஆசிரியத் தொழில் நடத்திய புலமையாளர் என்பது புலனாம். கீரனார் என்பது இவர் இயற்பெயர். ந. என்னும் சிறப்புப் பொருளைத் தரும் இடைச்சொல் அடையடுத்து இப்பெயர் நக்கீரனார் என வழங்கப்பட்டது. இங்ஙனம் அடையடுத்து வழங்கும் வழக்கமுண்மையை நப்பசலையார், நக்கண்ணையார், நச்செள்ளையார், நத்தத்தனார் என்னும் பெயர்களிடத்தும் காண்க. நக்கீரனாரைப்பற்றித் தமிழ்நாட்டிற் பல கதைகள் வழங்கி வருகின்றன. செஞ்சடைக் கடவுள், தருமி என்பானுக்குப் பாடிக் கொடுத்த கொங்குதேர் வாழ்க்கை என்று தொடங்கும் செய்யுள் குற்றமுடைத்தென்று நக்கீரனார் கூறினர் என்றும், அதனால் இறைவனுக்கும் இவர்க்கும் சொற்போர் நிகழ்ந்ததென்றும், இறுதியில் இறைவன் இவரைச் சினந்து தன் நெற்றிக் கண்ணைத் திறக்கவேயும், அஞ்சாது நின்று நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றங் குற்றமே எனக் கூறினர் என்றும் கூறுப. இவ் வரலாறு இவர்தம் புலமை வீரத்தைக் காட்டுகின்றது.

இனி, மதுரைப் பட்டிமண்டபத்தே புகுந்து குயக்கொண்டான் என்பான் ஒருவன், தென்மொழி இழிந்ததென்றும், வடமொழியே உயர்ந்த மொழியாம் என்றும் கூறினானாக, அது பொறாத கீரனார், அவனை இறக்கப் பாடினர் என்றும், பின்னர்ச் சிலர் வேண்டுகோட் கிணங்கிப் பிழைக்கவும் பாடினர் என்றும் கூறுப; இவ் வரலாறு இவருடைய ஆழ்ந்த தமிழ்ப்பற்றையும் இவர் பார்ப்பனர் அல்லர் என்பதையும் நன்கு விளக்கும். இவரைப் பார்ப்பனர் எனக் கூறுவாருமுளர். அங்ஙனம் கூறுதற்குச் சான்றில்லை. கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு கீரர் எனவரும் அருணகிரியார் திருப்புகழைக் காட்டி, நக்கீரர் அந்தணர் என்றே அருணகிரியார் கருதினர் என்ப. அருணகிரியார் திருமுருகாற்றுப்படையையே வேதமொழி எனக் கூறுகின்றனராதலின் இஃது அந்தணர் எனற்குச் சான்றாகாமையறிக.

பத்துப் பாட்டினுள்ளும், முதற்பாட்டாய்த் திகழும் திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும், இப் புலவர் பெருமானே யாவார். மேலும் அகநானூறு முதலிய தொகைகளுள்ளும் இவர் இயற்றிய செய்யுள்கள் பற்பல வுள்ளன. கைலைபாதி காளத்திபாதி யந்தாதி. இறையனார் அகப் பொருளுரை, திருவீங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழு கூற்றிருக்கை, பெருந்தேவ பாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், நாலடி நாற்பது என்னும் நூல்களும் இவர் இயற்றினவே என்ப.

இவருடைய வரலாற்றின் விரிவினைத் திருமுருகாற்றுப் படைக்கு எம்மால் வரையப்பட்ட ஆசிரியர் வரலாற்றினும் காண்க. இந் நெடுநல்வாடை இவர் காலத்தே சிறப்புற்று விளங்கிய புரவலனாகிய தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய வெற்றியைக் குறிப்பாகப் புகழ்ந்ததாம். அகப்பொருள் நெறிநின்று இனிதுறப் பாடி, வேம்புதலையாத்த நோன்காழ் எஃகம் என்னும் ஒரே அடியினால், இந் நெடுநல் வாடையைக் குறிப்பாகச் செழியனுக்கு உரிமையாக்கிச் சூட்டின நுணுக்கம் உணர்ந்து இன்புறற்பாலது. இந் நெடுநல்வாடையில், காடுகள் அடர்ந்து மாரி வளம் மிக்கிருந்த பண்டை நாள் தமிழகத்தின் (கார்ப்பருவந் தொடங்கிக் கூதிர்ப்பருவ முடியுந்துணையும்) காட்சியை ஓதுவோர் உளத்தே கண்கூடாகத் தோன்றுமாறு இவர் செய்கை செய்துள்ள அழகை, அதனை ஓதி ஓதி உணர்தல் வேண்டும். பண்டை நாள் அரசர்களின் அரண்மனையையும், அதன் உட்பகுதிகளையும் இப் பாட்டு நன்கு விளக்குகின்றது. கூதிர்ப்பருவத்தே துணை துறந்து புலம்பொடு வதியும் ஒரு பெண்மையைக் காட்டும் ஒப்பற்ற சொல்லோவியத்தை இதன்கட் காணலாம். செறிந்த வீரர்கள் குழீஇயுள்ள பாசறைக் காட்சியையும் இப்பாடல் நன்கு விளக்கிக் காட்டும்.

பாட்டுடைத்தலைவன் வரலாறு: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்!

முடிகெழு வேந்தர் மூவருள்ளும் படை விளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோருள், தலைசிறந்து விளங்கிய வேந்தன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாவான். இம் மன்னர் பெருந்தகை, இளமைப் பருவத்தே அரசுகட்டில் ஏறினான். அவ் விளம்பருவத்திலேயே இவனை வீழ்த்திவிடக் கருதி முடிவேந்தரும், குறுநில மன்னரும் ஒருங்கு கூடி இவன்பாற் போர் செய்யப் புறப்பட்டனர். அவ் விளம்பருவத்தும் பகைவர் பலர் ஒருங்குகூடி வருதற்கும் அஞ்சாது தலையாலங்கானம் என்னுமிடத்தே அப் பகைவர்களை ஒருங்கே எதிர்த்துப் போர் செய்து, அவ்வரசர் அனைவரையும் கொன்று நூழிலாட்டி வாகை சூடினான். இம்மன்னர் பெருந்தகை நல்லிசைப் புலவனாகவும் விளங்கினான் என்பதனை, நகுதக்கனரே (புறம் : 72) எனத் தொடங்கும் இவன் செய்யுளால் அறியலாம். நல்லிசைப் புலவரிடத்தே நன்கு மதிப்புடையனாய், அவர்களை நன்கு போற்றி வந்தான். இவ் வேந்தனை மாங்குடி மருதனார் முதலிய பல புலவர்களும் மனமுவந்து பாடியிருக்கின்றனர். போரிற் புகழ்பெற்ற வேந்தர் எல்லோரினும், தலைசிறந்தவன் இச் செழியன் என்பதை மதுரைக்காஞ்சி நன்கு விளக்கிக் கூறும்.

மதுரைக் கணக்காயனார் மகனார் தமது ஒப்பற்ற புலமையால் முருகனைப் பாடிய பாட்டு இப்பத்துப்பாட்டின் முதற் பாட்டாகத் திகழ்கின்றது. வல்லோன் தைஇய வரிப்புனை பாவை முருகியன்றன்ன பெற்றியனாகிய செழியனும் முருகனே போல் வான் ஆகலின், முருகன் படை வீட்டைப் பாடியவாறே, செழியன் படை வீட்டையும் பாடிய இந் நெடுநல்வாடையை இவ்வேந்தனுக்குச் சூட்டி மகிழ்ந்தார் போலும். இந் நெடுநல்வாடை அம் மன்னர் பெருமான் பெற்ற வாகை மாலையிற் றலைசிறந்த மாலையாம் என்பது மிகையன்று. இச் செழியனின் விரிந்த வரலாற்றினை மதுரைக்காஞ்சியில் யாம் வரைந்த பாட்டுடைத் தலைவன் வரலாற்றிற் கண்டு கொள்க.

அறிமுகம்

முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை, பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய, கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்பாலை கடாத்தொடும் பத்து என எண்ணப்பட்ட, பத்துப் பாட்டினுள் ஏழாம் பாட்டாகத் திகழ்வது நெடுநல் வாடை என்னும் இப்பண்ணிறைந்த பழம் பனுவல். மருவு இனிய கோல நெடுநல்வாடை என இவ் வெண்பாவினும், இதன் சிறப்பு நன்கு தெரித்தோதப்பட்டது. மருவு இனிய என்றது, பலகாலும் பயிலுந்தோறும் புதிய புதிய மானதக் காட்சிகளைத் தோற்றுவித்து, இனிமை பயப்பதாகிய என்றவாறாம். கேரலம் ஈண்டு அழகு; அஃதாவது சொல்லழகும் பொருளழகும் சுருங்கச் சொல்லல் முதலியனவுமாம். நவில் தொறும் நூனயம் போலும் என்ற வள்ளுவர் மெய்ம்மொழிக்கு எடுத்துக்காட்டாக ஓதுந்தோறும் உளமினிக்கும் பண்பும் அழகு முடைய நெடுநல்வாடை என்பது அத் தொடரின் பொருளாம்.

இனித் தென்றலை நன்றென்றலும், வாடையைத் தீதென்றலும் உலகியல். அங்ஙனமாகவும், இந்நல்லிசைப் புலவர் வாடையை நல்வாடை என்றார். நெடுநல்வாடை என்னும் இப்பாட்டிற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் பின்வருமாறு முன்னுரை கூறுகின்றார்.

இப்பாட்டிற்கு நெடுநல்வாடை என்று பெயர் கூறினார், இப் பெயர் நெடிதாகிய நல்ல வாடை என விரிதலில் பண்புத் தொகையாயிற்று. வாடையென வாடைக் காற்றிற் றோன்றின கூதிர்ப் பாசறையை உணர்த்தலிற் பிறந்த வழிக்கூற லென்னும் ஆகுபெயராய் நின்றது. இப்பாட்டினுள் கூதிர் நின்றன்றாற் போதே எனவும், கூதிர்ப்பானாள் எனவும் கூறுகின்றாராதலின், இது, வாகைதானே பாலையது புறனே எனப் பாலைக்குப் புறனாகக் கூறிய வாகையாய் அதனுள், கூதிர் வேனில் என்றிரு பாசறைக்காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் எனக் கூறிய கூதிர்ப் பாசறையே யாயிற்று. தலைவனைப் பிரிந்திருந்து வருந்துந் தலைவிக்கு, ஒரு பொழுது ஓரூழிபோல நெடிதாகிய வாடையாய்ப் பாலையாகிய உரிப்பொருள் உணர்த்திற்று. அகத்தொடுங்கிப் போகம் நுகர்வார்க்குச் சிறந்த காலமாயினும், அரசன் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறானாய் அப் போகத்தில் மனமற்று வேற்றுப் புலத்துப் போந்திருக்கின்ற இருப்பாகலின் அவற்கு நல்லதாகிய வாடையாயிற்று. எனவே காமத்திடத்து வெற்றி எய்தலின் வாகைத் திணையாயிற்று. இப் பாட்டு சுட்டி ஒருவர்ப் பெயர் கொள்ளாமையின் அகப்பொருளா மேனும், வேம்புதலையாத்த நோன்காழ் எஃகம் என அடையாளப்பூக் கூறினமையின் அகமாகாதாயிற்று என்பதாம்.

ஈண்டு நச்சினார்க்கினியர் கூறிய காரணங்கள் பெரிதும் நுணுக்கமுடையனவே ஆயினும், தலைவனைப் பிரிந்திருந்து வருந்துந் தலைவிக்கு ஒரு பொழுது ஓரூழிபோல நெடிதாகிய வாடையாய் என்பது பொருந்துமாறு போல, அரசன் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறானாய், அப் போகத்தில் மனமற்று வேற்றுப்புலத்துப் போந்திருக்கின்ற இருப்பாகலின் அவற்கு நல்லதாகிய வாடையாயிற்று என்றது, நன்கு பொருந்திற்றோ என்பது ஐயத்திற்கு இடமாகவே உள்ளது. தலைவி வருத்தத்திற்கு வாடை ஏதுவாதல் போன்று, தலைவன் இருப்பிற்கு ஏதுவாயது அவன் வீரமேயன்றி வாடையன்மை உணர்க. இனி இந் நெடிய வாடை நல்ல வாடையாதல் பயில்வோர்க்கே போலும்! வடந்தைத் தண்வளியின் மாபெருங் குளிரால் இவ்வையகம் பனித்துக் கிடக்கும் காட்சியை நன்று நன்று எனப் பன்முறை நாமே ஓதி இன்புறுகின்றோம் அல்லமோ! தீயதாகிய வாடையைக் கலையுணர்வாளர்க்கு நல்லதாக இயற்றித் தந்தமையானும், இவ் வாடை நல் வாடையாகலாம். எங்ஙனமாயினும் நெடுவாடை மருவினிய கோல நல்வாடையே யாதலைப் பயில்வோராகிய யாம் உணர்தல் ஒருதலை யென்க.

இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியவாறு இம் பாடலின்கண் வந்த வேம்பினை யாம் குறிக்கொள்ளாதவழி, இப்பாட்டுச் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாமையால் அகப்பொருட் பகுதியே யாகி, அதன்கண் பிரிதலும் பிரிதல் நிமித்தமுமாகிய பாலைத்திணையின் பாற்படும். இனி, வேம்பு என்னும் சொல்லால் சுட்டி ஒருவர் பெயர் கொண்டதெனக் கொள்ளின், இது வாகைத் திணையாய்ப் புறப்பொருட்பகுதியாகும் என்க. பாலைத்திணையாய்க் கொள்ளுங்காலும், வாகைத்திணையாய்க் கொள்ளுங்காலும் இப்பாட்டு தோழிகூற்றாகவே உள்ளது. பாலைத்திணையாயிற் றலைவியின் துயர்நிலை கண்டாற்றாது. புலம்பொடு வதியும் அரிவைக்கும் இன்னா அரும்படர் தீர விறல் தந்து இன்னே முடிக தில்லம்ம பாசறைத் தொழிலே எனத் தோழி தெய்வம் பராவினாளாகக் கொள்ளலும் இழுக்கன்று. இனிப் புறப்பொருட்படுத்து வாகைத்திணையாய்க் கொள்ளுங்கால் இப்போர் மண்ணசையாற் சென்று பொருதலின் வஞ்சியாகலின் வஞ்சித்திணைக்குக் கொற்றவை நிலையுண்மையின் கொற்றவையை வெற்றிப் பொருட்டுப் பரவியதாகக் கோடல் பொருந்துவதாம்.

இந் நெடுநல்வாடை தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரத்தையே சிறப்பிக்க எழுந்தது என்னும் கருத்தாலே பண்டைநாட் சான்றோர் புறப்பொருள் வெண்பா மாலையின்கண் அமைந்த வாடைப் பாசறை என்னுந் துறைக்கு உதாரணமாகிய,

வாடை நலிய வடிக்கண்ணாள் தோள்நசைஇ
ஓடை மழகளிற்றான் உள்ளான்கொல் - கோடல்
முகையோ டலமர முற்றெரிபோற் பொங்கிப்
பகையோடு பாசறையு ளான்

என்னும் வெண்பாவை இந் நெடுநல்வாடையின் இறுதியிற் பெய்து வைத்தனர். ஒருகால், இக் கொடிய வாடைதான் எத்துணை நலிந்தும் வடிக்கண்ணாள் தோள் நசைஇ உள்ளாது மறமே சிறந்து நின்ற மன்னனின் வெற்றியை இவ் வாடை உலகிற்கு எடுத்து விளக்குதலால் அவனுக்கு நல்லதே செய்தலின் நல்வாடையாயிற்றுப் போலும். இது வீடணன் இராமனை அடைக்கலம் புகுதற்கு இராவணன் காரணமாதல் பற்றி என்முனார் எனக்குச் செய்த வுதவி எனப் போற்றிய முறையை ஒக்கும் என்க. ஈண்டுக் கூறப்படும் அரசன் மண்ணசையால் போர்மேற் சென்றிருத்தலின் இது வஞ்சித்திணையாய், அத்திணையில் கொற்றவை நிலை என்னும் துறையுண்மையின் இதன்கட் கொற்றவையைப் பராவுதல் என்னும் துறை வந்தது; இந் நெடுநல்வாடையின் கருத்து வேந்தனின் வெற்றியைச் சிறப்பிப்பதாகலின் வாகைத்திணையுள் கூதிர்ப் பாசறை என்னும் துறையாயிற்று என்க. பாசறை வெற்றியையே இப் பாடல் கருதிற்று என்னும் கருத்துண்மையால் பண்டைநாட் சான்றோர், இப் பாட்டின் இறுதியில் வாடைப் பாசறை என்னும் துறைக்கு உதாரணமான வெண்பாவை எடுத்து வரையலாயினர். எனவே இந் நெடுநல் வாடை, வஞ்சித்திணை நிலைக்களனாய்ப் பிறந்த வாகைத்திணையிற் கூதிர்ப் பாசறை என்னும் துறை என்க.


© Om Namasivaya. All Rights Reserved.