Books / மஹா புராணங்கள்


விஷ்ணு புராணம்

ஆறாவது அம்சம்


1. கலியுக தர்மம்

மைத்ரேய முனிவர், பராசர மகரிஷியை நோக்கி, குரு நாதரே! உலக சிருஷ்டியையும் வமிசங்களையும் மனுவந்திரங்களின் நிலைகளையும் எனக்கு விளக்கமாகக் கூறினீர்கள். இனி கற்பத்தின் முடிவில் மகாப் பிரளயம் என்ற பெயரைக் கொண்ட சங்காரத்தைப் பற்றியும் தாங்கள் கூறவேண்டும்! என்று கேட்டார். கற்பாந்தத்திலும் பிராகிருதத்திலும் பிரளயம் உண்டாகும் விதத்தைச் சொல்கிறேன்; கேளுங்கள். நம்முடைய மாதம் பிதுர்க்களுக்கு ஒரு நாளாகும். நமது வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் சதுர்முகப் பிரம்மனுக்கு ஒருநாள் சதுர்யுகம் என்பது கிருதயுகம். திரேதயுகம் துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கும் சேர்ந்ததாகும். இந்த நான்கு யுகங்களும் தேவமானத்தினால் பன்னீராயிரம் ஆண்டுகளாகும். மைத்ரேயரே! கற்பத்தின் ஆதியான கிருத யுகத்தையும் முடிவான கலியுகத்தையும் தவிர மற்றையச் சதுர் யுகங்கள் யாவும் சமானமானவையே ஆகும். ஆதி கிருத யுகத்திலே பிரம்மா எப்படிப் படைக்கிறாரோ அதுபோலவே கடைசியான கலியுகத்திலே சங்காரஞ் செய்கிறார் என்று பராசரர் சொல்லி வரும்போது மைத்ரேயர் மற்றொரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்பி, ஓ குருநாதா! நான்கு பாதங்களால் நடக்கும் தன்மையுடைய தருமம் அழிந்துவிடத் தக்கதான கலியுகத்தின் சொரூபத்தை நன்றாக விளக்கிக் கூறவேண்டும். என்று கேட்டார். பராசர மகரிஷி கூறலானார்.

மைத்ரேயரே! கலியினுடைய ஸ்வரூபத்தை விவரமாகச் சொல்கிறேன். கேளும் கலியுகத்தில் மனிதரிடத்தில் வர்ணாசிரம ஆசார நடவடிக்கைகள் இராது. அதில்லாததால், ரிக், யஜுர், சாமம் என்ற வேதங்களில் சொல்லப்பட்ட யாகாதி கிரியைகளும் இராது. கலி காலத்தில் தர்மமான திருமணங்கள் நடைபெறாது. குரு மாணவ முறையும் இராது தம்பதிகள் ஒருவருக்கொருவர் நடந்துகொள்ளும் முறைமையும் தர்மமும் இராது. அக்கினியில் செய்யத்தக்க வேத வேள்வி முறைகளும் இல்லை. எந்தக் குலத்தவனாயினும் பலசாலி எவனோ, அவனே எல்லோருக்கும் அரசனாவான். எல்லா ஜாதிகளிலேயும் பொருள் உள்ளவனே கன்னிகாதானம் செய்யத் தகுதியுடைய வனாவானேயன்றி, கல்வி ஒழுக்கங்கள் உடையவன் அத்தகுதியுடையவனாக மாட்டான். பிராமணன் எந்த வழியினாலும் தீக்ஷிதனாவானே தவிர சாஸ்திர விதிப்படியாவதில்லை. கலியில் விதிக்கப்பட்டதே பிராயச்சித்தம் என்பதில்லை. எந்தக் கிரியையும் பிராயச்சித்தமாக ஏற்கப்பட்டு விடும் எவனுக்கு எந்த வாக்கியம் பிரியமோ, அதுவே சாஸ்திரமாகும். காளி முதலான எதுவுமே தெய்வமாகக் கொண்டாடப்படும். இன்னோருக்கு இன்ன ஆசிரமம் என்பதிராது. எவனும் எந்த ஆசிரமத்திலும் பிரவேசிப்பான் ஒருவன் தான் விரும்புவது போலப் பட்டினி கிடப்பதும், வருந்துவதும் தவஞ்செய்வதும் சாஸ்திர ரீதியான தருமமாகக் கருதப்படும். அந்தப் பொருள் இருந்தாலும், தான் தனவான், என்ற செல்வ செறுக்கு ஜனங்களுக்கு உண்டாகும். அதுபோலவே, பெண்களுக்குக் கூந்தல் செவ்வையாக இருந்தாலே அழகி என்ற கர்வம் உண்டாகிவிடும். கலியானது முற்ற முற்றப் பொன்னும் மணியும் நல்லவிதமான ஆடைகளும் அழிந்து போகும்போது, மங்கையர்கள் தங்கள் கூந்தலையே அலங்காரமாகப் பெற்றிருப்பார்கள். மேலும் மங்கையர்கள் பொருளில்லாத கணவனை விட்டு, எவனாயினும் பொருளுடையவனாக இருந்தால் அவனையே புருஷனாகத் தேடிக் கொள்வார்கள். எவன் அதிகமாகப்பொருள் கொடுப்பானோ, அவனையே ஜனங்கள் சுவாமி என்று கொள்வார்களே அன்றி, நற்குலம், நற்பிறவி முதலியவற்றைச் சுவாமி என்பதற்கு ஏதுவாகக் கொள்ள மாட்டார்கள். கலியுகத்திலே புத்திக்குப் பயன் பொருள் சம்பாதிப்பதேயன்றி, ஆன்ம ஞானம் பயனாகக் கொள்ளப்படமாட்டாது. அந்தப் பொருளும் வீடுகட்டப் பயன்படுமேயல்லாது. யாகாதி காரியங்களுக்குப் பயன்படாது. அந்த வீடும் தனது போகத்துக்கே பயன்படுமேயன்றி அதிதிகளுக்கு எவ்வளவும் பயன்படாது. மங்கையர் சளுக்கனாக இருப்பவனிடத்தில் காதல் கொண்டு உடலாலோ மனதாலோ விபசாரிகளாக இருப்பார்கள். ஆடவரோ அநியாயத்தாலாவது பணஞ் சம்பாதிப்பவரிடத்திலேயே மனம் வைத்திருப்பார்கள். எவர்களும் நண்பர்கள் வேண்டிக் கொண்டாலும் மனம் இரங்காமல், தங்கள் காரியத்தையே பெரிதாக நினைத்து அரைக்கால் பணத்திலும் ஆசை வைத்திருப்பார்கள். சூத்திராதிகள், பிராமணரைத் தம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக நினைப்பார்களேயல்லாமல், சிறப்புடையவராக நினைக்க மாட்டார்கள்.

பசு மாடுகளிலும் ஜனங்களுக்குப் பால் கொடுப்பது பற்றியே உயர்வானதாகக் கருதப்படுமேயன்றி அதன் ஜாதியைப் பற்றிப் பெருமை பெறாது. இக்கொடிய காலத்தில் ஜனங்கள் யாவரும் மழையில்லாமையைப் பற்றிய அச்சமுடையவர்களாய்ப் பசிக்குப் பயந்தும், சோர்ந்தும் வானத்திலேயே கண்ணுங்கருத்துமாக இருப்பார்கள். மனிதர்கள் தவமுனிவர்களைப்போலக் காய் கிழங்குகளைப் புசித்துக் கொண்டு மழையில்லாமை முதலியவற்றால் வருந்தித் தம்மைத் தாமே கொலை செய்து கொள்வார்கள். கலிகாலத்தார், சுகம், உல்லாசம் அற்றவராய், திரவியம் க்ஷீணித்தவராய், எப்போதும் பஞ்சத்திலும் துன்பத்திலுமே தவிப்பார்கள். கலி வளர வளர, எவரும் அக்கினி பூஜை, தேவபூஜை, அதிதிபூஜை, பிண்டோதக தானரூபமான பிருது பூஜை முதலியவற்றைச் செய்யாமல், குளிக்காமலுங்கூட உணவருந்திக் காலம் கழிப்பார்கள். ஸ்திரீகள் அதிக ஆசையும் குறுகிய உடலும் கொண்டு பேருண்டி அருந்தி பல பிள்ளைகளைப் பெற்று, செல்வமின்றி வருந்துவார்கள்; மேலும் இரண்டு கைகளாலும் தலையைச் சொறிந்து கொண்டே, கணவன்; மாமனார்; மாமியார் முதலியோரின் கட்டளையை மிகவும் அலட்சியமாய் அவமதித்து வருவார்கள். தேக சுத்தமில்லாமல், தங்களைப் போஷிப்பதிலேயே மனம் ஊன்றி, ஈனமான எண்ணத்துடன் கடினமாயும் பொய்யாயும் பேசுபவர்களாக இருப்பார்கள். குலமங்கையர் தாங்கள் தீய ஒழுக்கமுடையவராகையால், அத்தகையோரிடம் நட்புக் கொண்டு, தங்கள் புருஷனுக்குப் பலவகையான தீமைகளைச் செய்து வருவார்கள். பிரமசாரிகள், விரத அனுஷ்டானம் இன்றியே வேத அத்தியயனஞ் செய்வார்கள். இல்லறத்தானோ, சிறிதும் ஓமஞ் செய்யாதிருப்பதோடு தக்க பொருள்களையும் ஈயார்கள் வானப் பிரஸ்தர், ஊரில் உள்ளவற்றையே புசித்து வருவார்கள். ஆட்சியாளர்கள், மக்களைப் பரிபாலஞ் செய்வதை முக்கியமாக எண்ணாமல் அந்த வரி இந்த வரி என்று எதையாவது சாக்கிட்டு குடிமக்களின் பொருள்களைப் பறிப்போர்கள். எவன் யானை, குதிரை முதலிய சேனைகளை வைத்திருக்கிறானோ, அவனவனே அரசனாவான். பலமற்றவன் சேவகனாவான்.

வைசியர்கள், பயிர் செய்தல், வாணிபஞ் செய்தல் முதலிய தமது தொழிலைவிட்டு, சூத்திரரது தொழிலாகிய பல தொழில்களையும் செய்து பிழைப்பார்கள், சூத்திரரோ தொழிலாகிய பல தொழில்களையும் செய்து பிழைப்பார்கள். சூத்திரரோ சந்நியாசியின் சின்னங்களை அணிந்து, பிøக்ஷ வாங்கி உண்டு அநேகர் தங்களைப் பூசிக்கும் படியான போலிப் பிழைப்பில் ஜீவிப்பார்கள். மக்கள் பஞ்சத்திலும், வரி இறுத்தலாலும் துன்பமடைந்து கோதுமை, யவம் விளையும் நீசத்தேசங்களுக்குப் போய் விடுவார்கள். இவ்விதமாக வர்ணாசிரம தர்மங்கள் கெட்டுப்போய் வேத மார்க்கமே மறைந்து போவதால், மக்கள் பாஷாண்ட மதங்களைப் பின்பற்றி விடுவார்கள், இதனால் அதர்மம் விருத்தியாகும். அதனால் மக்கள் அதர்மமாக நடக்கத் துவங்கிவிடுவார்கள். அதனால் அதர்மம் வளர்ந்து, மக்களின் ஆயுள் அற்பமாய்விடும்; ஆட்சியாளரின் குற்றத்தால், மக்கள் சாஸ்திரங்களுக்கு விரோதமான வீணான தவங்களைச் செய்வார்கள். ஆகையால் இளமையிலேயே மரணமுண்டாகும். பெண்கள் ஆறு ஏழு வயதுக்குள்ளாகவே பிள்ளைகளைப் பெறுவார்கள். ஆண்களோ ஒன்பது பத்து வயதிற்குள் பிள்ளையை உண்டாக்கும் திறமையுடைவர்களாக இருப்பார்கள். பன்னிரண்டு வயதுக்குள்ளாகவே நரை திரை முதலியன உண்டாகும். இந்தக் கலியின் முதிர்ச்சியில் மக்கள் இருபது வயதுக்குமேல் பிழைத்திருப்பதில்லை கலியுகத்தில் மக்கள் அற்ப ஞானமுடையவர்களாகவும் வீணான தவவேடங்களைப் பூண்டு கெட்ட நினைப்புக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதனால் விரைவில் நசித்துப் போவார்கள்.

மைத்ரேயரே! தருமம் எத்தனைக்கெத்தனை இழிவானதாகிறதோ, அத்தனைக்கத்தனை கலி விருத்தியாயிற்று என்று புத்திசாலிகள் தெரிந்து கொள்வார்கள். மேலும் எப்போது பாஷாண்டர் அதிகமாகின்றனரோ, எப்போது வேதம் அறிந்த நல்ல மனிதனுக்குத் தீங்குகள் நேரிடுகின்றனவோ, அப்போது கலி முதிர்ந்துள்ளது என்று அறிந்துகொள்ள வேண்டும். எப்போது யக்ஞங்களுக்கு ஈசுவரனான புரு÷ஷாத்தமனை மக்கள் யக்ஞங்களில் ஆராதிப்பதில்லையோ, எப்போது வேத வாக்கியங்களில் நாட்டமும் பிரீதியுமின்றி, பாஷாண்ட வாக்கியங்களில் இச்சை யுண்டாகுமோ அப்போது கலி மகாபலம் பொருந்தியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கலியுகத்தில் ஜனங்கள் பாஷாண்டரால் கெடுக்கப்பட்டு, படைப்புக் கர்த்தாவாகவும் சர்வேசுவரனாகவும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள் மேலும் மக்கள் பாஷாண்டபுத்தியால் தேவதைகள் எதற்கு? வேதங்கள் ஏன்? பிராமணரால் ஆவதென்னதண்ணீர் விட்டுக்கழுவுவதால் மட்டும் என்ன சுத்தம்? என்று ஏதேதோ பிதற்றுவார்கள். இத்தகைய அதர்மங்களாலேயே, மேகங்கள் அற்பமழையைப் பொழியும், பயிர்கள் அற்பமாகவே பலனளிக்கும். பொருள்கள் சாரங் குறைந்திருக்கும். ஆடைகள் சணற்கோணிகள் போலிருக்கும். மரங்கள், வன்னி மரங்களைப்போல அற்பமாகவே இருக்கும். ஜாதிகள் எல்லாமே சூத்திர ஜாதி போலிருக்கும். மேலும் தானியங்கள் அணுக்கள் போலவும் பால், நெய் போலவும் சந்தனப் பூச்செல்லாம் கோரைக் கிழங்குப் பூச்சைப் போலவும் ஆகிவிடும். முனிவரே! கலியுகத்தில் மக்களுக்கு மாமனார், மைத்துனர், மாமியார், ஆசாரியர், பெண்டாட்டிகள் வேண்டுமளவு தொகையுடையவராக இருப்பார்கள். மேலும் ஜனங்கள் தாய் தந்தையரிடத்தில் அன்பில்லாதவர்களாய் மாமியார் மாமனார்களையே முக்கியமான நினைத்து, தாய் யார்? தகப்பன் யார்? யாருக்கு யார்? அவனவன் தத்தனது கர்மத்தையல்லவோ செய்யவேண்டும்! என்று பேசி வருவார்கள். இந்தக் கலியுகத்தில், மக்கள் அற்பப் புத்தியுடனும் மனம், வாக்கு காயம் ஆகிய மூன்றும் சுத்தமில்லாமல் தினந்தோறும் பாவத்தையே செய்து வருவார்கள். உண்மையில்லாதவர்களாகவும் சவுசம் இல்லாதவர்களாகவும் வெட்கமில்லாதவர்களாகவும், துக்கப்பட்டுத் தவிப்பார்கள். இத்தகைய கலிபலத்தினால் உலகமானது, வேதாத்தியயனம் யாகம், பிதுர்பூஜை, தேவ பூஜை இவைகளினின்று, தருமத்தை ஒளியச் செய்யும் இத்தகைய கலியுகத்தில் எவனாவது ஒருவன் அற்பமான தர்மத்திற்கு முயற்சி செய்வானாகில், அவன் கிருத யுகத்தில், பெருந்தவஞ் செய்து எத்தகைய புண்ணியத்தை அடைவானோ, அவ்வளவு புண்ணியத்தை எளிதில் அடைவான்!

2. கலியின் குணபாவம்

மைத்ரேயரே! மாபெரும் அறிஞரான வேத வியாசரும் கலி விஷயத்தில் ஒரு விசேஷத்தைச் சொல்லியிருக்கிறார். அதையும் நான் உமக்குச் சொல்கிறேன்; கேளும்.
ஒரு காலத்தில் தவமுனிவர்களிடையே ஒரு புண்ணிய வாதம் உண்டாயிற்று. அதாவது எந்தக்காலத்தில், கொஞ்சம் தருமம் செய்தாலும் பயன் அதிகமாகக் கிடைக்கும்? எவர் எப்படிப்பட்ட தருமத்தை எளிதில் செய்வதற்கு உரியவர்கள்? என்பதே அவர்களது விவாதமாகிவிட்டது. எனவே இந்த விஷயத்தைப் பற்றி சந்தேகம் நீங்கி, உண்மையை அறிந்து கொள்வதற்காக, முனிவர்கள் அனைவரும் வேத வியாச மகரிஷியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்கள். அப்போது என் மகனான வேதவியாசர், கங்கை நதியிலே நீராடிக் கொண்டிருந்தார்; அதனால் அந்த முனிவர்கள் அவர் நீராடிவிட்டு வரும் வரையில் அவரை எதிர்பார்த்துக் கொண்டு கரையோரமாக இருந்த மரங்களின் நிழல்களில் உட்கார்ந்திருந்தனர். அப்போது கங்கா தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த என் குமாரர் முழுக்கிலிருந்து எழுந்து சூத்திரன் ஸாது; கலி ஸாது என்று அந்தச் சந்தேகம் தெளிவு பெற அவரைத் தேடிவந்த முனிவர்களின் காதுகளில் கேட்கும்படிச் சொல்லிவிட்டு, மீண்டும் நீரில் மூழ்கினார். பிறகு அவர் எழுந்து, ஸாது ஸாது சூத்திரா! நீ மஹா புண்ணியவானாக இருக்கிறாய்? என்று சொன்னார். மறுபடியும் மூழ்கியெழுந்த அவ்வியாசமுனிவர் பெண்களே புண்ணியவதிகள்! அவர்களைவிடப் புண்ணியமுடையவர்கள் யார்தான் இருக்கிறார்கள் என்று சொன்னார். பிறகு அவர் நன்றாக மூழ்கிக் குளித்து நீராடிவிட்டு, ஆசமனாதி சகல அனுஷ்டானங்களையும் செய்துவிட்டு, வீற்றிருந்தார். சந்தேகம் தெளிவுபெற என் மகனைத் தேடி வந்த முனிவர்கள், வேத வியாசரை வணங்கி, நின்றனர். அவர்களை வேத வியாசர் உட்காரச் சொல்லி நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் சுவாமி! நாங்கள் ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவே, உங்களைத் தேடி வந்தோம். அது இருக்கட்டும் கலி ஸாது சூத்திரன் ஸாது; பெண்கள் புண்ணியவதிகள் என்று நீங்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டே நீரில் மூழ்கி எழுந்தீர்களே? அதைப்பற்றி நாங்கள் முதலில் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்! மறைக்க வேண்டாத பக்ஷத்தில், அதை எங்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும். பிறகு நாங்கள் எண்ணி வந்ததைப் பற்றித் தங்களைக் கேட்டு தெரிந்து கொள்கிறோம் என்றார்கள்.

வேத வியாசர் புன்னகை செய்தவண்ணம் அவர்களுக்குக் கூறலானார்; ஓ தவ முனிவர்களே! ஸாது; ஸாது என்று எதனால் சொன்னானோ அதைச் சொல்கிறேன் கேளுங்கள். எந்தப் புண்ணியத்தைத் கிருத யுகத்திலே செய்தால் அது பத்து ஆண்டுகளில் சித்திக்குமோ அதுவே திரேதா யுகத்தில் ஒரே ஆண்டில் சித்திக்கும். அதுவே துவாபர யுகத்தில் ஒரு மாதத்தில் சித்திக்கும். கலியுகத்திலோ ஒரே நாளில் பயன் வந்துவிடும். இது போலவே தவம், பிரமசரியம், ஜபம் முதலிய எதற்கும் உரிய பயனை மனிதன் மூன்று யுகங்களிலும் பெறுவதிலும் மிகவும் எளிதாகப் பெறுவதாலேயே, கலி ஸாது என்று சொன்னேன். இன்னும் கேளுங்கள். கிருத யுகத்தில் யோக நிஷ்டையிலிருந்து தியானஞ் செய்வதனாலும் திரேதா யுகத்தில் யாகஞ் செய்வதனாலும், துவாபர யுகத்தில் அர்ச்சிப்பதனாலும் எந்தப் பயன் உண்டாகுமோ, அது கலியுகத்தில் கேசவனுடைய நாம சங்கீர்த்தனஞ் செய்வதாலேயே கிடைத்துவிடும். தருமம் அறிந்த தவத்தோரே! மனிதன். இந்தக் கலியுகத்தில் சிறிதளவு சிரமத்தினாலேயே பெரும் அளவு தருமத்தை அடைவானாதலால், கலியை நான் கொண்டாடுகிறேன். இனி, சூத்திரன் ஸாது என்று நான் சொன்னதை விளக்கமாகச் சொல்கிறேன். பிராமணாதிகள் விரதம் அனுஷ்டானங்களில் தவறாமல் இருந்துகொண்டு முதலாவதாக வேதங்களை ஓதவேண்டும். பிறகு தரும வழியால் சம்பாதித்த பொருளைக் கொண்டு, யாகங்களை விதிப்படிச் செய்யவேண்டும். பிராமணாதியருக்குப் பகவானைப் பற்றிய பேச்சுக்களைத் தவிர வீண் பேச்சுக்கள் பேசுவதும், எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்காத அன்னாதிகளைப் புசிப்பதும் டம்பத்துக்கும் லாபத்துக்கும் யாகங்களைச் செய்வதும் பாதகமாகும். ஆகையால் அவர்கள் எப்போதும் மனம், வாக்கு, காயங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் இரு பிறப்பாளருக்கு எதையும் விதிப்படிச் செய்யாமற் போனால் அது குற்றமாகும்.

போஜனாதிகளைக்கூட இஷ்டப்படிச் செய்யவொண்ணாமல் விதிப்படிச் செய்ய வேண்டியவையாக இருப்பதால், யாவுமே அவர்களுக்கு பராதீனமானவை அதனால் அவர்கள் எதையும் மிகவும் வருந்தித் தாங்களடைய வேண்டிய உலகங்களை ஜெயிக்கவேண்டும். சூத்திரனோ வேத அத்தியயனம். அக்கினி, யக்ஞம் முதலியவைகளின்றி, பாக யக்ஞாதிகாரமுடையவனாய் முந்திய பிராணா நியருக்குப் பணிவிடை செய்வதனாலேயே அத்தகைய உத்தம உலகங்களை அடைந்துவிட முடிகிறது. ஆகையால் அவனைவிடப் புண்ணியவான் யார் உண்டு? ஓ முனிவர்களே, சூத்திரனுக்கு இன்னது உண்ணத் தக்கது. இன்னது தின்னத் தகாதது. இது குடிக்கத் தக்கது. இது குடிக்கத் தகாதது என்ற நியமம் இல்லாமையால், சூத்திரன் ஸாது என்று நான் சொன்னேன், ஆடவர்கள் தத்தமக்குரிய தருமத்தினால் பொருள் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பொருளை நல்லவைகளுக்குச் செலவு செய்யவேண்டும். நல்லவர்களுக்குச் செலவு செய்ய வேண்டும். இவ்விதமாகப் பொருளை ஈட்டுவதிலும் அதைச் சம்பாதிப்பதிலும், எத்தனைப் பிரயாசைகள் இருக்கின்றன பாருங்கள். இதை நல்ல வழியில் செலவழிப்பதிலோ, இரட்டிப்புச் சிரமம் இருக்கிறது. இவ்விதமான பலவகைக் கிலேசங்களினால் ஆடவர்கள் பிரஜாபத்தியம் முதலிய உலகங்களை வெல்கிறார்கள். பெண்களோ மனோவாக்குக் காயங்களினாலே தம் கணவர்களுக்கு அநுகூலமாக இருந்துகொண்டு சிசுருஷைகளைச் செய்து வந்தாலே கணவன் அடையும் உலகங்களை எளிதில் அடைந்து விடுகிறார்கள். இவ்விதம் அதிகச் சிரமம் இல்லாமல் வருந்திப் பெறும் உலகங்களைப் பெறுவதால், மூன்றாவதாக பெண்கள் ஸாதுக்கள் என்றேன். பிராமண உத்தமர்களே! நீங்கள் கேட்டபடி நான் சொன்னவற்றுக்குக் காரணங்களைச் சொன்னேன். இனி நீங்கள் வந்த காரியத்தைச் சொல்ல வேண்டும். அதற்கும் நான் பதில் சொல்கிறேன் என்றார் வியாசர்.

முனி சிரேஷ்டரே! நாங்கள் கேட்க வந்த சந்தேகங்கள் இப்போது நீங்கள் கூறிய விளக்கவுரைகளிலேயே அடங்கியுள்ளன, இனி நாங்கள் கேட்க வேண்டியவை வேறில்லை என்றார்கள் முனிவர்கள். பிறகு, அந்தக் கிருஷ்ணதுவைபாயனர் சிரித்து, நான் திவ்விய ஞானத்தால் உங்கள் காரியத்தை அறிந்து அதைக் குறித்துத்தான் கலி ஸாது, சூத்திரன் ஸாது ஸ்திரீகள் ஸாதுக்கள் என்று சொன்னேன். அற்ப முயற்சியிலேயே கலியில் தருமம் பலிக்கிறது. தயை சாந்தி முதலிய ஆன்மீக குணங்களாகிய தண்ணீர்களினால் அவர்கள் பாவங்களாகிய மலங்களைக் கழுவிக் கொள்கிறார்கள். சூத்திரர் பிராமணாதியருக்குப் பணிவிடை செய்வதினாலேயே பேறுபெறுகின்றனர். பெண்டிரும் கணவருக்குப் பணிவிடை செய்து, ஆயாசம் இல்லாமலேயே நற்கதியை அடைகிறார்கள்; ஆகையால் இந்த மூவரும் புண்ணியசாலிகள் என்பது என் கருத்து. கிருத யுகாதி காலங்களிலும், அந்தணர் முதலியோருக்குத் தர்மம் சம்பாதிப்பதில் பெரிய ஆயாசமுள்ளது. இதைப்பற்றி நான் பேசியதில் உங்கள் சந்தேகம் தீர்ந்தது அல்லவா? இனி நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என்ன? என்று கேட்க, அவர்கள் சந்தேகம் நீங்கிய மகிழ்ச்சியோடு அவரை வணங்கி, விடைபெற்றுச் சென்றார்கள். மைத்ரேயரே! இந்த இரகசியத்தை நான் உமக்குச் சொன்னேன். மிகவும் துஷ்டனான கலிபுருஷனுக்கு இத்தகைய பெருங்குணமும் இருக்கிறது. நீங்கள் முதலில் லோக சம்ஹாரத்தைப் பற்றி என்னைக் கேட்டீரல்லவா? பிராகிருதம், அவாந்தரம் என்று பிரிந்திருக்கிற அந்தப் பிரளயக் கிரமத்தை இனி உமக்குச் சொல்கிறேன் கேளும்.

3. நைமித்திகப் பிரளயம்

எல்லாப் பூதங்களுக்கும் பிரளயம் மூன்று விதம். அவையாவன; நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம் என்பனவாம். கல்பத்தின் முடிவில் பிரம்மனால் உண்டாகும் பிரளயம் நைமித்திகம். பரம் பொருள் பிரமாணமான விரிஞ்சனுடைய ஆயுளின் முடிவில் வரும் பிரளயம் பிராகிருதம் மோக்ஷமே ஆத்தியந்திகம் எனப்படும். என்று பராசர முனிவர் கூறியதும் மைத்ரேயர், சுவாமி! பிராகிருதப் பிரளயத்தை அறிந்துகொள்வதற்காக பரார்த்தத்தை இரட்டிக்கவேண்டும் ஒழிய, அந்தப் பரார்த்தம் என்ற கணக்கை அடியேனுக்குத் தெரிவிக்க வேண்டும், என்றார். பராசர மகரிஷி கூறலானார்.

கேளும் பிராமணரே! ஏகஸ்தானம் முதல் ஒன்றுக்கு ஒன்று பதின்மடங்கு அதிகமாய் மேலுக்கு மேல் ஸ்தானங்கள் உண்டன்றோ? அவற்றில் பதினெட்டாவது இடமே பரார்த்தம் என்று வழங்கப்படுகிறது. அந்த பரார்த்தம் இரட்டித்த காலத்தில் பிராகிருதப் பிரளயம் உண்டாகும். இப்பொழுது வியக்தம் யாவும் அவியக்தத்தில் லயப்பட்டு விடும். மனிதருக்கு நிமிஷம் என்று எதுவுண்டோ, ஒரு மாத்திரை அளவுள்ளதது. ஆகையால் அது மாத்திரை என்று சொல்லப்படும். அந்த மாத்திரைகள் பதினைந்து கொண்டது ஒரு காஷ்டை. முப்பது காஷ்டைகள் ஒருகலை. பதினைந்து கலைகள் ஒரு நாழிகை. அது பன்னிரண்டரை பல நிரையுள்ள தண்ணீரால் குறிக்கப்படும். இது மகத தேசத்தில் ஒருபடி நீரளவாம். இதை அறியும் முறையைக் கேளும். இருபது குன்றி மணி எடையுள்ள பொன்னால் நான்கு அங்குல அளவாகச் செய்த ஊசிகளைக் கொண்டு துளையிடப்பட்ட மகத தேசத்துப் படியளவான ஒரு பாத்திரத்தைத் தண்ணீரில் மூழ்த்தினால், அந்தப்பாத்திரம் எவ்வளவு காலத்தில் தண்ணீர் நிறையுமோ அத்தனைக்காலம் ஒரு நாழிகை என்று எண்ணப்படும் அல்லது, அந்தப்பாத்திரத்தில் விட்ட தண்ணீர் அதிலிருந்து வெளிப்படும் காலம் ஒரு நாழிகையாகும். இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம். முப்பது முகூர்த்தம் ஒரு நாள் முப்பது நாள் ஒரு மாதம். பன்னிரண்டு மாதம் ஒரு வருடம் இந்த வருஷம் தேவர்களுக்கு ஒரு இராப்பகல் இத்தகைய இராப் பகல்கள் முந்நூற்றறுபது சேர, தேவமானத்தில் ஒரு வருஷமாம் அந்தவருஷம் பன்னீராயிரம் சேர்ந்தால் ஒரு சதுர்யுகமாகும். அந்தச் சதுர்யுகங்கள் ஆயிரம் ஆயின் சதுர்முகனுக்கு ஒரு தினம். அதற்குத்தான் கல்பம் என்றுபெயர். அதன் இறுதியில் வருவதுதான் பிரமசம்பந்தமான நைமித்திகப் பிரளயமாகும் மைத்ரேயரே! அதி உக்கிரமான அந்தப் பிரளயத்தின் சொரூபத்தை முன்னதாகச் சொல்லுகிறேன். பிறகு நைமித்திக பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

ஆயிரம் சதுர்யுகத்தின் முடிவில் பஞ்சம் முதலிய காரணங்களாய், பூலோகம் பெரும்பாலும் க்ஷீணித்திருக்கும்போது, மிகவும் கொடுமையாய் நூற்றாண்டு அளவு மழையே இல்லாமல் இருக்கும். அதனால் அற்ப சக்தியுள்ள ஜந்துக்கள் யாவும் மடிந்து போய்விடும். பிறகு ஸ்ரீவிஷ்ணு பகவான் சங்காரத்துக்காக உருத்திர ரூபம் தரித்தவராய் சகல பிராணிகளையும் தம்மில் லயிக்கும்படிச் செய்யும் திருவுளம் பற்றிச் சூரியனது ஏழு கிரணங்களிலிருந்து கொண்டு சகல ஜலங்களையும் பானஞ்செய்வார். இவ்விதமாகப் பிராணிகளாலும் பூமியிலும் உள்ள தண்ணீரை யெல்லாம் உறிஞ்சிப் பூமியையெல்லாம் வறளச் செய்வார். இவ்வாறு சமுத்திரங்கள், நதிகள் அருவிகள் முதலியவற்றின் தண்ணீரை யெல்லாம் அருந்தியதால் சூரிய கிரணங்கள் ஏழும் மிகவும் பெரிதாகி, ஏழு சூரியர்களாகிக் கீழும் மேலும் ஜொலித்துப் பாதாளங்கள் உட்பட மூன்று உலகங்களையும் எரித்துவிடும். இந்த ஏழு சூரியர்களாலும் எரிக்கப்படவே இந்த பூமியானது மலைகள் கடல்கள் முதலிய எவ்விடத்திலும் ஈரப் பசையென்பதேயில்லாமல் மரஞ்செடி புல் பூண்டு முதலிய யாவும் எரிந்துபோய் ஆமையோடு போலாகிவிடும். பிறகு ஆதிசேடனின் சுவாசத்திலிருந்து உண்டானகாலாக்கினியானது ருத்திரனாகிப் பாதளங்களையெல்லாம் தகித்துக் கொண்டே, பூமிக்கும் வந்து அதையும் கொளுத்திவிடும். இவ்விதமாக அந்தப் பிரளயகாலாக்கினி ஜ்வாலா சக்கரத்தோடு கூடியதாய் புவர்லோக, சுவர்லோகங்களையும் கொளுத்திக் கொண்டே, அங்கேயே சுழன்று கொண்டேயிருக்கும். அப்போது அதன் ஜ்வாலைகளால் சூழபட்ட மூவுலகமும் சராசரங்கள் நசித்ததாய் வறுக்கிற சட்டியைப்போல இருக்கும்.

பிறகு அதிகார புருஷர்களாய், புவர்லோக சுவர்லோகங்களிலிருக்கிற மனுவாதிகள் மகாதாபத்தோடு மகர்லோகஞ் செல்வார்கள். பிறகு அங்கும் பெருந்தாபமடைந்து அவ்வுலகத்தாருடன் கூட, அதற்கும் மேலான ஜனலோகத்தை அடைவார்கள். அவர்களுக்குள்ளே யார் பரப்பிரமத்தையடையநின்றவர்களோ, அத்தகையோர் மேலும் கீழும் பத்துத்தரம் சுற்றிச் சுழன்று தவலோக சத்தியலோகங்களிற் சென்று, கடைசியாகப் பரப்பிரமத்தை அடைவார்கள். பூவுலகம் முதலிய மூவுலகங்களிலுமுள்ள மற்றவர் யாரும் ஆன்மாவில் லயப்படுவார்கள். இவ்விதமாக ருத்திர ரூபியாக இருக்கிற ஸ்ரீஜனார்த்தனர்யாவற்றையும் தகித்து தம் சுவாசத்தினின்றும் அநேக மேகங்களை உண்டாக்குவார். அதனால் யானைகளின் கூட்டத்தைப் போன்று மகாபயங்கரமான இடி மின்னல்களுடன் கூடிய பிரளயகால மேகங்கள் கவியலாகும். அவற்றில் சில கருநெய்தல் மலர் போன்றும், சில ஆம்பல்களைப் போலும்; சில கருஞ்சிவப்பாகவும் சில பொன்னிறமாயு சில கழுதை நிறமாயும், சில அரக்கு வர்ணமாயும் சில வைடூரியம் போன்றும்; சில இந்திர நீலத்துக்கு ஒப்பாயும், சில சங்கு முல்லை போலவும் சில மை நிறமாயும், சில தம்பலப் பூச்சிகள் போன்றும் வேறு சில நெருப்புப் போன்றும், சில மனோசிலை போன்றும் சில கூந்தற்பனை போன்றும் விளங்கும். அத்தகைய மாபெரும் மேகங்களின் உருவங்களில் சில பெரிய நகரங்களைப் போலவும், சில மலைகளைப் போலவும் சில தரைக்குச் சமானமாயும் இருக்கும். இத்தகைய மகாமேகங்கள் பயங்கரமாக முழங்கிக் கொண்டு; வான முழுதும் பரவி; பெருந்தாரைகளைப் பொழிந்த வண்ணம் முன்பு சொன்னதுபோல், மூன்று உலகங்களிலும் பற்றிஎரிகின்ற பெருந்தீயை அவிக்கும் அந்தத்தீயானது அவிந்த பிறகும் அம்மேகங்கள் இராப் பகல்கள் ஓயாமல் மழையைப் பொழிந்து அந்தப் பெருந்தாரைகளினாலே பூமி முழுவதையும் ஜலமயமாக்கிப் பின்பு புவர்லோகத்தையும் அப்படியே ஜலமயமாக்கி விடும். இதுபோல் அப்பெரு மேகங்கள் ஸ்தாவர ஜங்கமங்கள்யாவும் அற்று அந்தகாரஞ் சூழ்ந்த உலகில் ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பெருமழையை ஓயாமல் பொழிந்து கொண்டேயிருக்கும். ஓ மைத்ரேயரே! நித்தியனாகவும் பரமாத்துமாவாகவும் இருக்கிற ஸ்ரீ வாசுதேவனுடைய மகிமையினால் கல்ப காலத்தின் முடிவில் இப்படியெல்லாம் நிகழ்கின்றன.

4. பிராகிருதப் பிரளயம்

மைத்ரேயரே! இவ்விதமாகப் பெருமழை பொழிந்து அந்தத் தண்ணீர்ப் பெருக்கானது சப்தரிஷி மண்டலத்தையும் கவர்ந்து நிற்பதால் மூன்று உலகங்களும் ஏகார்ணவமாகிவிடும். அப்போது ஸ்ரீமந் மகாவிஷ்ணுவின் திருமுகத்திலிருந்து ஒரு மூச்சுக் காற்று உண்டாகி, அந்தப் பெரிய மேகங்களையெல்லாம் நாசஞ்செய்து கொண்டு ஒரு நூற்றாண்டளவு வரை பெருங் காற்றாக வீசிக் கொண்டே இருக்கும். பின்னர் சர்வபூதமயனாகவும் நினைத்தற்கும் அரியனாயும் அனாதியாயும் பிரபஞ்சத்துக்கு ஆதியாயும் மகாப்பிரபுவாகவும் இருக்கும். ஸ்ரீஹரி பகவான் அந்தக் காற்றை அமுதுசெய்து பிரமரூபத்தோடு அந்த ஏகார்ணவத்தில், சேஷசயனத்தின்மீது ஜனலோகத்திலுள்ள சனக, சனந்தனர் முதலிய யோகிகளாலும், பிரம லோகத்திலுள்ள, முமூட்சுக்களாலும் தியானிக்கப்பட்டவராய் தமது மாயா ஸ்வரூபமான யோகநித்திரையைக் கைக்கொண்டு வாசுதேவன் என்ற திருநாமமுடன் தம்மையே சிந்தித்தவண்ணம் திருக்கண் வளர்ந்தருள்வார். ஸ்ரீஹரி பகவான் இவ்வாறு பிரம ரூபத்துடன் அந்தக் காலத்தில் துயில்கொள்ளும் காலம் நிமித்தமாக இருப்பதாலேயே, இவ்விதம் நடக்கும் பிரளயத்துக்கு நைமித்திகப் பிரளயம் என்று பெயர். சர்வாத்மாவான ஸ்ரீ அச்சுதன் எப்பொழுது திருக்கண் விழிப்பாரோ, அப்போது தான் இந்த உலகமும் அசைவுபெறும் யோகநித்திரை புரிவாராயின், உலகமும் கண்மூடிப்போம் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமுடைய பிரமதினம் எதுவோ; அவ்வளவு காலமே இரவுமாகும். இந்த இரவின் முடிவில் ஸ்ரீவிஷ்ணு துயில் நீங்கி விழித்துக்கொண்டு பிரமரூபத்தோடு மீண்டும் சிருஷ்டித்து அருளுகின்றான் என்று முன்பே நான் உமக்குச் சொன்னேன் அல்லவா? இந்தக் கல்பத்தின் முடிவில் செய்யும் சங்காரமே அவாந்தரப் பிரளயம் நைமித்திகப் பிரளயத்தைப் பற்றி சொன்னேன். இனிப் பிராகிருதப் பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்; கேளுங்கள்.

முன்பு நான் சொன்னதுபோல அனாவிருஷ்டி முதலியவைகளால், சகல உலகங்களும் பாதாளங்களும் நாசமாகி மகத்தத்துவ முதல் விசேஷம் வரையில் உள்ள யாவும் நசிக்கும்படி எம்பெருமானின் சங்கல்பத்தால் பிரளயம் சம்பவிக்க முதலாவதாக நீரானது நிலத்தின் குணமான கந்தத்தைக் கிரகிக்கிறது. கந்தம் கிரகிக்கப்பட்டவுடன்; நிலமானது லயப்படத் தக்கதாகி கந்ததன் மாத்திரை நசித்து நீராகி விடுகிறது. அந்த நீர் பெருகி மகாவேகமும் மிக முழக்கமுங்கொண்டு, எல்லாவற்றையும் நிரப்பிக்கொண்டு அலைகளுடைய பிரவாகத்தோடு, உலகங்களின் முடிவு வரையில் ஓடி நிற்கும் அந்தத் தண்ணீரின் குணமான ரசத்தைச் சோதியானது கிரகிக்கும்போது அத்தண்ணீர் ரசதன்மாத்திரையற்று, சோதியாகின்றது, இவ்விதமாக நீரானது நெருப்பாகி மகாதேஜசு சூழ்ந்ததாக எங்கும் நிறைந்து வியாபகமாகின்றது. இவ்விதமாக எத்திசையும் ஜ்வாலமயமாய்ச் சூழ்ந்துள்ள அந்த அனலின் குணமாகிய ரூபத்தைக் காற்றானது கிரகித்துக் கொள்கின்றது. ரூபதன்மாத்திரை நசித்ததினால் அனல் அற்று, காற்று மிக அதிகமாக வீசத்துவங்கி ஒளி நீங்கி, காற்றுமட்டுப் பேரிரைச்சலுடன் வானத்தைபற்றி வீசிக்கொண்டிருக்க, அதன் குணமாகிய ஸ்பரிசத்தை வானமானது கிரகித்துக் கொள்கிறது. பிறகு வாயுவானது நாசமாகி ஆகாயம் ஒன்றே ஆவரணமின்றி இருக்கும் ரூப; ரச; கந்த ஸ்பரிசங்கள் அற்றதாய் ஒலியையே இலக்கணமாகக் கொண்டதாய், அவயவமில்லாததாய் மிகப்பெரிதான அந்த ஆகாயமானது யாவையும் நிரப்பிக்கொண்டு நிற்கும் இவ்விதமாக சுற்றிலும் வட்டமாய் யாவுங் கொள்ளும் இடமாய் எல்லாவற்றையும் சூழ்ந்துள்ள அந்த ஆகாயத்தின் குணமாகிய சப்தத்தைப் பூதாதிகள் கிரகிக்கின்றன. பூதங்களும் இந்திரியங்களும் ஒருமிக்க அந்தப் பூதாதியில் லயமடையும் அபிமான ரூபமான இந்தத் பூதாதியானது தமஸ்ஸைப் பிரதானமாகக் கொண்டதனால் தாமசம் என்று வழங்கப்படுகிறது. இந்தப் பூதாதி என்று வழங்கப்பட்ட அகங்காரத்தைப் புத்தியையே லக்ஷணமாகக் கொண்ட மகத்தானது கிரஹிக்கின்றது. அந்த அண்டத்தினுள்ளே பூமியும் மகத்தும் முதல் எல்லையும் கடைசி எல்லையுமாக இருப்பது போலவே, வெளியிலும் முதலும் கடைசியும் எல்லையாகக் கொண்டுள்ளன.

புத்திமானே! இதுபோலவே அண்டத்துக்குப் புறத்தேயுள்ள பிருதிவி முதல் மகத் ஈறாகவுள்ள ஏழு பிரகிருதிகளும் சங்கார கிரமத்திலே முன்பு உரைத்ததுபோல், தத்தமது காரணங்களிலே லயப்படுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தை மூடிக்கொண்டுள்ள அண்ட ரூபமான பிருதிவியானது அதைச் சூழ்ந்த அப்புவிலும் அந்த அப்பு அதைச் சூழ்ந்த தேஜசிலும், அந்தத் தேஜசு, அதைச் சூழ்ந்த வாயுவிலும் அந்த வாயு அதனைச்சூழ்ந்த ஆகாயத்திலும் அந்த ஆகாயம் அஹங்காரத்திலும், அந்த அஹங்காரம் மகத்திலும் லயமடைகின்றன. இவற்றோடும் கூடிய அந்த மகத்தத்துவத்தைப் பிரகிருதி கிரகிக்கின்றது. குறையாமலும் மிகாமலும் முக்குணங்கள் சமமாக இருப்பதுதான் பிரகிருதியாகும். அதுதான் உலகங்களுக்குப் பிரதானமும் காரணமும் ஆகிறது. இப்படியாக, இந்தப் பிரகிருதி வியக்த ஸ்வரூபமாயும் அவ்யக்த ஸ்வரூபமாகவும் இருக்கிறது. ஆகவே, வியக்தம் அவ்யக்தத்தில் லயப்படுகிறது என்றும் ஒருவகைப்பட்டவனாயும் இயல்பில் தீயோனாயும் அக்ஷரனாயும் நித்தியனாயும் சூஷ்ம ரூபியாகையால் பிரகிருதியையும் வியாபிக்கத்தக்க புருஷனும், பிரகிருதியைப் போல் பரமான்மாவின் அம்சமாக இருக்கிறான். பரமான்மாவோ பெயர், இனம் முதலிய கற்பனைகள் இல்லாமல் எப்பொழுதும் இருப்பதையே இயல்பாகக் கொண்டவனாய், அறிய வேண்டியவனாய், சர்வேசுவரனாய், ஞானஸ்வரூபியாய் ஜீவான்மாவுக்கு மேம்பட்டவனாக இருப்பவன் அத்தகைய ஸ்ரீ விஷ்ணுவே பரப்பிரமம்! எல்லாமாக இருப்பவன் அவனே! அவனே யோகியானவன் அவனைச் சேர்ந்தவை மீண்டும் திரும்புவதில்லை! வியக்தாவியக்த சொரூபமான பிரகிருதி யாதுண்டோ, அதுவும் புருஷன் என்று சொல்லப்படும். ஜீவனும் இவ்விரண்டும் அந்தப் பரமாத்மாவிலே லயப்படுகின்றன. அந்தப் பரமாத்மாவே யாவற்றுக்கும் ஆதாரமான பிரமேசுவரன் அவன் வேதத்திலும் வேதாந்தத்திலும் விஷ்ணு முதலிய பெயர்களில் துதிக்கப்பட்டிருக்கிறான்.

பிரவிர்த்தி நிவர்த்தி என்ற இருவகை வைதிக கர்மங்களினால் தேவதா ஸ்வரூபியான ஸ்ரீவிஷ்ணுவே, ரிக், யஜுர் சாமம் என்ற பிரவிர்த்தி மார்க்கங்களிலே யக்ஞேசுவரனாகவும் யக்ஞ புருஷனாயும் ஆராதிக்கப்படுகிறான் நிவர்த்தி மார்க்கத்தில் ஞானஸ்வரூபியாகவும் ஞானமயமான திருமேனியுடையவனாயுமுள்ள ஸ்ரீவிஷ்ணுவே மோக்ஷத்தைக் கொடுக்க வல்லவனாக ஞான யக்ஞத்தால் யோகியரால் போற்றப்படுகிறான். குறில், நெடில், அளபெடை ஆகியவற்றால் சொல்லப்படும் அசித்து யாதோ அதுவும், வாக்குக்கு விஷயமாகாத சித்தும் அந்த ஸ்ரீவிஷ்ணுவின் சொரூபங்களேயாகும்! வியக்தமும் அவ்யக்தமும் புருஷனும் முக்தனும் யாவும் அந்த ஸ்ரீஹரி பகவான்தான்! சகல பிரபஞ்சத்தையும் தமக்குச் சரீரமாகக் கொண்டு விளங்குவதனால் அவை அவனுடைய சொரூபங்களேயாம்! அந்த ஸ்ரீ ஹரியிடத்தில் பிரதானமும் புருஷனும் ஒடுங்குகிறார்களல்லவா? அப்படியாக ஒடுங்குமிடமான அந்தப் பரமாத்மாவுக்கு இரண்டு பரார்த்த காலம் என்று சொன்னது ஒரு பகல் வியக்தமெல்லாம் பிரகிருதியிலும் அந்தப் பிரகிருதி புருஷனிடத்திலும் அந்தப் புருஷன் பரமாத்மாவிலும் லயமாக இருக்க, அவ்வளவு காலம் இரவாம். பிராமண உத்தமரே! நித்தியனான அந்தப் பரமாத்மாவுக்கு பகல் என்பதுமில்லை. இரவு என்பதும் இல்லை. ஆயினும் சிருஷ்டி முதலிய காரியங்களைக் கொண்டு, உபசார வழக்கால் இரவு பகல்கள் சொல்லப்படுகின்றன. இவ்விதமாக பிராகிருதப் பிரளயத்தின் தர்மத்தைச் சொன்னேன். இனி, ஆத்யந்திகப் பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

5. ஆத்யந்திகப் பிரளயம்

மைத்ரேயரே! அறிவுடையவன் ஆத்தியாத்துமிகம் முதலிய தாபங்கள் மூன்றையும் அறிந்து ஞானமும் வைராக்கியமும் உண்டாகப்பெற்று மோக்ஷம் என்ற ஆத்யந்திக லயத்தை அடைகிறான், ஆத்தியாத்துமிக தாபமாவது தன் ஆன்மாவையும் தேகத்தையும் பற்றிய துக்கமாம். அது சரீரத்தைப் பற்றியதும் மனத்தைப் பற்றியதும் ஆகும். தலைவலி, பீனசம், ஜ்வரம், சூலை பகந்தரம், குலமம், ரத்தபேதி, சோகை, சுவாசம், வாந்தி, கண் நோய், அதிசாரம், குஷ்டம், வாயுரோகம் இவைபோன்ற ஏராளமான விஷயங்கள் சரீரத்தைப் பற்றியவை. காமம், குரோதம், பயம்; துவேஷம்; லோபம்; மோகம்; துக்கம்; சோகம், அசூயை, பொறாமை, அவமானம்; பகை பாராட்டுதல், முதலியவை மனது சம்பந்தப்பட்டவை பலவாகும், ஆதிபவுதிகமாவது ஜந்துக்களைப் பற்றியது. மிருக பக்ஷி, மனுஷ்ய பைசாச, சர்ப்ப, ராக்ஷஸாதிகளாலேயே உண்டாவதனால் அதுவும் பல வகைப்பட்டது. ஆதிதைவிதம் என்பது தெய்வத்தால் வருவது. அதுவும் குளிர், காற்று; வெய்யில், மழை, இடி முதலியவற்றால் உண்டாகும் பலவகையாம். இந்தத் தாபங்கள் மூன்றும் கருவினாலும் பிறப்பினாலும் இறப்பினாலும் மூப்பினாலும் நரகத்தாலும் உண்டாக்கப்பட்டு அநேக ஆயிரம் வகைகளாகின்றன அவற்றை விளக்குகிறேன்; கேளும்.

ஜந்துவானது மிகவும் மென்மையான உடலையுடையதாய், அநேக மலங்கள் நிறைந்த கர்ப்பத்திலே ஒருவகைத் தோலால் மூடப்பட்டு, மிக வளைந்த முதுகு, கழுத்துகளின் எலும்புகளையுடையதாக இருந்து கொண்டு, தாய் உண்ணும் புளிப்பு கசப்பு கரிப்பு, உப்பு முதலிய உறைகள் தன் மீது படும்போது அளவற்ற வேதனைகளையடைந்து தன்னுடம்பை நீட்டவும் மடக்கவும் வகையற்று மலமூத்திரங்களாகிய சேற்றிலே கிடந்து, எங்கும் துன்பமே பெற்று, மூச்சு விடமாட்டாமல் அறிவு மாத்திரமேயுள்ளதாய் கடந்த காலத்தில் அநேகப் பிறவிகளை நினைத்து, மகா விசனமடைந்ததாய், இப்படித் தன் கருமத்தால் தானே கட்டுண்டு கிடக்கின்றது. பிறகு பிறக்கும்போது பிரமதேவனால் ஏவப்பட்ட ஒருவகைக் காற்றினால் எலும்புகள் யாவும் நுறுங்கிப் போகும்படி பீடிக்கப்பட்டு, மலமூத்திரங்களாலும் சுக்கில சுரோணிதங்களாலும் பூசப்பட்ட முகத்துடன் மிகவும் பலமான பிரசவ வாயுக்களால் தலைகீழாகத் திருப்பப்பட்டு வெகு சிரமத்தோடு தாய் வயிற்றிலிருந்து வெளியே வருகிறது. பிறந்த பிறகு, வெளிப்புறக்காற்று ஸ்பரிசித்தவுடன் பெருமூர்ச்சையற்று முன்பு இருந்த ஞானத்தை இழக்கிறது, விழும்போது முட்களால் குத்தப்பட்டதைப் போன்றும் வாட்களால் அறுக்கப்படுவது போலவும் துர்க்கந்தமான இரணத்துக்கும் ஒப்பான யோனித்துவாரத்திலிருந்து புழுவைப் போலத் தரையில் விழுகின்றது. பின்னர் சொறிந்து கொள்வதற்கும் திரும்புவதற்கும் சக்தியற்றதாய், ஸ்நான பான ஆகாராதிகளைப் பிறரது இச்சைக்கேற்பவே பெறுகின்றது. மேலும் மூத்திராதிகளாலே அசுத்தமான படுக்கையில் படுத்துக்கிடந்து எறும்பு, கொசு முதலியவை கடித்தாலும் அவற்றைத் தடுக்க முடியாமல் தவிக்கின்றது. இவ்விதமாக பிறப்பின் துன்பங்களையும் அதன் பின்புண்டாகும் துக்கங்களையும் ஆதிபவுதிகம் முதலான துன்பங்களையும் மிகவும் இளமையிலேயே அடைகின்றது. பிறகு வளர்ந்து பருவம் அடையும்போது மனிதன் அஞ்ஞானமாகிய இருள் மூடியதாலே, முடனாகவே நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இனி எங்கே போவேன்? எனக்கென்ன பயன்? நான் எந்தப் பந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்? எதற்கு நான் கட்டுப்பட்டவன்? இதற்குக் காரணம் யாது? காரணமல்லாதது எது? செய்யத்தக்கது எது? செய்யத் தகாதது எது? சொல்லத் தக்கது எது? சொல்லத் தகாதது எது? எது தர்மம்? எது அதர்மம்? எங்கே இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? இனி செய்ய வேண்டுவது எது? எது குற்றம்? எது குணமுடையது? என்று ஒன்றையும் அறியமாட்டாதவனாக இருக்கிறான். இவ்வாறு அவன் மிருகங்களைப் போல, உண்பதையும், புணர்வதையுமே முக்கியமாகக் கொண்டு, அஞ்ஞானத்தால் உண்டான அநேக துக்கங்களை அனுபவிக்கிறான். அஞ்ஞானம் என்பது தமோகுணத்தின் விகாரம். அதனாலேயே மனிதன் கெட்ட காரியங்களைச் செய்ய வேண்டி வருகிறது. ஆகவே, வைதீகக் கர்மங்கள் நடப்பதில்லை. 

எனவே அஞ்ஞானிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் அதிகமாகிறது. பிறகு யவ்வனத்தைத் தாண்டி முதுமை வரும்போது உடல் மெலிந்து கட்டுத் தளர்ந்து, பற்கள் ஆடி, உதிர்ந்து திரையும் நரையும் அதிகமாகி, சற்று தூரத்தில் இருப்பதும் தெரியாதவாறு கண்ணின் கருவிழிகள் உள்ளே ஆழ்ந்து, மூக்குத் துவாரத்திலிருந்து மயிர்கள் உதர, உடல் ஒடுங்கி, எலும்புகள் எல்லாம் வெளிப்பட்டுத் தெரிய, முதுகெலும்பு வளைய தீபனம் மந்தமாவதால் உணவு நன்றாகச் செல்லாமலும் செறிக்காமலும் செயல்கள் குறுக, நடப்பதும் எழுவதும் படுப்பதும்கூட வருத்தமாக இருக்க காது கேளாமலும், கண்கள் தெரியாமலும் இருக்க வாயினின்று சாளை வாய்நீர் வடிந்து கொண்டிருக்க மனிதன் தவிக்கிறான். இவ்விதமாகச் சகல இந்திரியங்களும் அஸ்வாதீனப்பட்டு, மரணங்கிட்டும்போது முன்பு தான் அனுபவித்தவற்றை நினைத்து உருகிக் கொண்டு ஒரு வார்த்தை சொல்லக்கூட மிகவும் வருத்தங் கொண்டவனாய், சுவாசகாசம் உண்டாவதால் மிகுந்த ஆயாசமும் துக்கமின்மையும் உடையவனாய் எழுந்திருக்கவும் நடக்கவும் உட்காரவும் பிறருடைய உதவி அவசியப்படுவதாலேயே வேலைக்காரர்கள்; மனைவியர்; பிள்ளைகள் யாவரும் அவமதிக்க ஒரு சக்தியுமின்றி உண்ணவும் உலாவவும் ஆசையுள்ளவனாய்; ஊழியரும் பரிகசிக்க பந்துக்களும் வெறுப்படைய தன்னுடைய வாலிய அநுபவத்தைப் பூர்வ ஜன்மத்தின் அனுபவம்போல் நினைத்து, மனம் வெதும்பி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான், இதுபோல் மூப்பில் அவன் பற்பல துக்கங்களை அனுபவித்து மரணத்தை அடைகிறான்.

இனி அந்த மரணத்தின்போது நேரும் துன்பங்களையும் கேளும் கால், கைகள் கழுத்து இவை கட்டுவிட்டுப் பெற்று பெருநடுக்கமுள்ளவனாய் சிறிது நேரம் அறிவும் சிறிது நேரம் அறிவழிவுமுள்ளவனாய் மக்கள் மனை வீடு மாடு தனம் தானியம் ஆகிய இவையெல்லாம் இனி எப்படிப் போமோ என்று கலங்கியவனாய் இப்படிப்பட்ட நிலையில் இருக்க இரம்பங்கள் போன்ற மிகக் கொடிய இயமனின் அம்புகளான கொடிய பெரும் வியாதிகளால் உயிர் பெயர கண்கள் சுழல கைகால்களை உதறிக் கொண்டு நாக்கும் உதடும் உலர உதானவாயு எழும்பித் துன்புறுத்த கண்டம் அடைத்துக் குருகுருவென்ற சப்தம் செய்ய பெருந்தாபமும் பெரும் பசியும் பெருந்தாகமும் பொருந்திய நிலையில் யமகிங்கரர்களால் பீடிக்கப்பட்டு வெகு பிரயாசைப்பட்டுத் தன் தேகத்தை விட்டுக் கிளம்புகிறான். உடனே யாதனாதேகத்தை அடைகிறான்! இவையும் இவை போன்ற மேலும் பலவிதத் துன்பங்களும் மரணத்தில் உண்டாகின்றன.

இறந்த பின்னர், மனிதர்கள் நரகத்தில் படுகின்ற அவஸ்தைகளையும் சொல்கிறேன், கேளுங்கள். யமகிங்கரர்கள் முதலில் பாசத்தாற் கட்டிப் பிணைப்பதும் பிறகு தடியால் அடிப்பதும், உக்கிரமான யமனைக் காண்பதும் கொடிய வழியைக்காண்பதும் ஆகிய துன்பங்களை அனுபவித்துப் பிறகு காய்ந்த மணலிலும் அக்கினியந்திரம் கத்தி முதலியவற்றால் நரகத்திலே படும் பாடுகள் மிகவும் கொடியவையாகும். பிராமணோத்தமரே; கேளும்! மனிதன் மரணமடைந்த பிறகு யமகிங்கரர்களால் பல்வாளினால் அறுக்கப்பட்டும் மூசையிற் போட்டுக் காய்ச்சப்பட்டும், கோடாரிகளால் பிளக்கப்பட்டும், பூமியில் புதைக்கப்பட்டும், சூலங்களில் ஏற்றப்பட்டும், புலி வாயில் இடப்பட்டும், கழுகுகளால் குத்திப்பிய்க்கப்பட்டும், கொடிய மிருகங்களால் கடிக்கப்பட்டும் காயும் எண்ணெய்க் கொப்பரையில் போடப்பட்டும் பொரிக்கப்பட்டும், உப்புச் சேற்றிலே புரட்டப்பட்டும், உயரத்திலிருந்து குப்புறத் தள்ளப்பட்டும் யந்திரங்களில் ஏற்றி வீசி எறியப்பட்டும், பாபத்தின் பயன்களாய் மனிதர்கள் நரகத்தில் படுகின்ற துன்பங்களை இவ்வளவு தான் என்று சொல்லிவிட முடியாது. இத்தகைய துக்கங்கள் நரகத்தில் மட்டுமல்ல; சுவர்க்கத்திலும் உண்டு சொர்க்கத்தில் சுகானுபவத்தை அனுபவிக்கும் போதே புண்ணியம் க்ஷயித்து, இனி நாம் வீழப்போகிறோம் என்ற நினைப்பினால் பயம் உண்டாகும்போது மனதிலே பெருந்துக்கம் உண்டாகும். இவ்விதமாக நரகத் துன்பங்களை அனுபவித்து, மீண்டும் கர்ப்பத்தில் பிரவேசித்து மனிதன் மீண்டும் பிறக்கிறான். இவ்வாறு பல முறைகள் பிறப்பதும் இறப்பதுமாய் அலைகிறான். மேலும் பிறந்தவுடனே, பால்யத்திலோ, வாலிபத்திலோ; நடுவயதிலோ; முதுமையிலோ எப்போதோ நிச்சயமாக இறக்கிறான். பிழைத்திருக்கும்போதே பலவிதமான துக்கங்களால் சூழப்படுகிறான். பஞ்சு மொய்த்திருக்கும் பருத்திக் கொட்டையைப்போல்! மேலும் பொருளைச் சம்பாதிப்பதிலும் அதைக் காப்பாற்றுவதிலும் அதன் அழிவிலும் இஷ்டமானவருக்குத் துன்பம் நேரும்போதும் அவனுக்குப் பலப்பலத் துன்பங்களே உண்டாகின்றன.

மைத்ரேயரே! எந்தெந்தப் பொருள் மனிதருக்கு இன்பமாக இருக்கிறதோ அதுவே துன்பம் என்னும் மரத்திற்கு விதையாகின்றது மனைவி, மக்கள்; நண்பர்; பொருள்; வீடு நிலம் முதலியவற்றால் எத்தனைக் துக்கம் உண்டாகிறதோ; அந்த அளவுக்கு அவற்றால் அடையும் சுகம் இருப்பதற்கில்லை. இவ்விதமாகச் சம்சாரத்தின் துக்கமாகிய வெய்யிலால் தகிக்கப்பட்டு அலையும் மனிதனுக்கு மோக்ஷம் என்ற மரத்தின் நிழலைத் தவிர, வேறு எங்கே சுகம் கிடைக்க முடியும்? ஆகவே, கர்ப்பம், பிறவி வார்த்திக்யம் முதலானவற்றால் மனிதருக்கு உண்டாகும் தாபங்கள் ஆகிய மூன்றுக்கும் மருந்து யாது என்றால், மற்றொரு சுகத்திலும் அதிசயந் தோன்றாது இருப்பதான மகாசுகரூபமாயும் துக்கத்தின் சம்பந்தமே இல்லாததாயும் நித்தியமாயும் உள்ள பகவத் பிராப்தியே என்பது எனது கருத்து ஆகையால் அறிவுடைய மனிதர் ஈனக் குணங்கள் நிறைந்தவனாகப் பகவானை அடைய முயற்சி செய்யவேண்டும்.

முனிவரே! எந்த எம்பெருமானை அடைவதற்கு ஞானமும் கர்வமும் உபாயங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றனவோ அந்த ஞானம், ஆகமஜம் என்றும் விவேகஜம் என்னும் இரு வகையாகும். சாஸ்திரங்களால் உண்டாவது ஆகமஜம், யோக சிந்தனையில் உண்டாவது விவேகஜம். முந்தியதற்குச் சப்தப் பிரமம் என்றும் பிந்தியதற்குப் பரப்பிரமம் என்றும் பெயர். இந்த இரண்டு ஞானங்களுக்கும் உள்ள பேதமாவது, அஞ்ஞானம் என்ற அந்தகாரமானது பொருள்களை மறைப்பது போல், ஜீவாத்மா, பரமாத்மா, ஸ்வரூபங்களை மறைப்பதால் அது அந்தகாரம் போன்றேயுள்ளது. ஆகமஜஞானம், விளக்கமானது இருளை நீக்கிப்பொருளை விளங்கச்செய்வதுபோல் தேக, ஆன்மாதி மயக்கங்களை நீக்கி ஜீவபரஸ்வரூபங்களை ஒருவாறு விளக்குவதால் இது விளக்குப் போன்றதாகும். பரப்பிரம்மம் என்ற விவேகஜ ஞானம் சூரியனானது இருள் முழுமையும் அழித்து பொருள்கள் யாவற்றையும் தெளிவாக விளக்குவதைப் போல், அஞ்ஞானத்தையும் முழுமையாகப் போக்கி ஸ்வரூபங்களை பிரத்யக்ஷமாய் விளங்கச் செய்வதால், அது சூரியனைப் போன்றதாகும்.

இவ்விஷயத்தில் மநுவும் வேதாந்தத்தை அறிந்து சொல்லியிருப்பதைக் கேட்பீராக, சப்தப்பிரமம் என்றும் பரப்பிரமம் என்றும் இரண்டு பிரமங்கள் உண்டு என்று அறியவேண்டும். மனிதன் சப்தப் பிரமத்தில் தேறினால் பரப் பிரம்மத்தை அடையலாம். அதர்வண வேதம் இப்படியே சொல்கிறது. அக்ஷரம் என்று சொல்லப்படும் பிரமத்தை எந்த வித்தையால் அடையலாமோ, அதற்கு பரவித்தை என்று பெயர். கர்மங்களை அறிவிக்கும் வேதாதிகள் அபரவித்தை எனப்படும், அந்தப் பரவித்தையின் விஷயமான பிரமஸ்வரூபமானது, வேதாந்தத் தாலான்றித் தோன்றாததும், தோன்றல், மறைதல், கெடுதல், வளர்தல், குறைதல் திரிதல்களாகிய விகாரமின்றியும், வாக்குக்கும் மனதுக்கும் எட்டாமலும் தேவ மனுஷ்யாதிரூபங்கள் இல்லாமலும் கைகால் முதலிய உறுப்புக்கள் இல்லாமலும் யாவற்றையும் நியமிப்பதாகவும் எங்குமுள்ளதாகவும் பூதங்களுக்குக் காரணமாகவும் எல்லாவற்றையும் வியாபித்து ஒன்றினாலும் வியாபிக்கப்படாமலும் இருக்கிறது. ஞானிகள் எதைக் காண்கிறார்களோ, அதுவே பிரமம்! அதுதான் மேலான ஞானஜோதி! அதையே விஷ்ணுவின் உத்தம ஸ்வரூபம் என்று சுருதிகளிற் சொல்லப்பட்டுள்ளது. சூக்ஷúமமான அந்தப் பிரமத்தையே மோக்ஷம் பெறவேண்டுவோர் தியானிக்க வேண்டும். பகவான் என்ற சொல், எம்பெருமானின் அளவற்ற ஸ்வரூப, ரூப குண விபவங்களைக் குறையச் சொல்லத் தக்கது. பரமாத்மாவின் தத்துவம் எதனால் விளங்குமோ அத்தகைய துவாதச அக்ஷரத்தை அங்கமாகக் கொண்டேதே பரவித்தையாகும் மற்ற வேதபாகம் யாவும் அபரவித்தையாம் சகலாதாரமாயும் சகலாதேயமாயும் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவையே வாசுதேவபதம் போதிக்கிறது. முன்பு கேசித்வஜன் என்பவரைக் காண்டிக்கிய ஜனகர் வினாவ. அநந்தனான ஸ்ரீவாசுதேவனுடைய திருநாமத்தை நாம் சொன்னது போலவே, அவரும் சொல்லியிருக்கிறார். அதை உமக்குச் சொல்கிறேன்.

ஸ்ரீவாசுதேவ பகவான், இயல்பினால் குற்றங்களோடு கலவாத சகல கலியாண குண பரிபூரணன்! சகல பூதங்களையும் தனது சக்தியின் ஒரு சிறிய பங்கினால் சூழ்ந்திருப்பவன் தனது திருவுளப்படி, அந்தந்த தருணத்திற்கு வேண்டிய திவ்ய மங்கள விக்கிரகத்தை எடுப்பவன். அதனால் சகல உலகங்களுக்கும் நலன்களைச் சாதிப்பவன். அளவற்ற தேவை பலம் ஐசுவரியம், ஞானம், வீரியம், சக்தி முதலிய குணங்களின் ராசி போன்றவன் உயர்ந்தோரிலும் உயர்ந்தவன் ஒரு துர்க்குணமும் இல்லாதவன் உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும் ஈச்சுரன். இத்தகைய எம்பெருமான் வியூக விபவாதி ரூபங்களினாலே வியஷ்டி ரூபனாகவும் இந்த ரூபங்களால் விளங்குவதால் வியக்தனாகவும் யாவற்றையும் எல்லாக் காலங்களிலும் எல்லா வகையிலும் ஆள்பவனாகவும், எல்லாவற்றையும் எப்போதும் தான் ஒருங்கே பிரத்யக்ஷமாய்க் காண்பவனாகவும் யாவும் பொருந்தியவனாகவும், சகல சக்திகளும் உள்ளவனாகையால் பரமேசுவரன் என்ற திருநாமத்தையுடையவனாகிறான், இவ்விதமாகச் சகல தோஷரகிதமாய், சுத்தமாய், உத்தமமாய், என்றுமே பிரகிருதிக்கு உட்படாததாய் என்றும் ஒரு படிபட்டதாயுள்ள பகவத் ஸ்வரூபமானது எதனால் அறியப்படுகிறதோ, அந்த ஆகம ஞானமும் எதனாலே காணப்படுகிறதோ அந்த விவேக ஞானமும் எதனால் அடையப்படுகிறதோ அந்தப் பக்தி ரூபமான ஞானமுமே உண்மையான ஞானம் என்று சொல்லப்படும். இதற்குப் புறம்பானதெல்லாம் அஞ்ஞானமேயாகும்!

6. கேசித்வஜ-காண்டிக்ய விவாதம்

முன்பு சொன்னபடி, குணங்களும் விபூதிகளும் விக்கிரகமுமுள்ள பகவான், தத்துவம் உணர்த்தும் சாஸ்திரத்தினாலும் யோகத்தினாலும் காணப்படுவான். இந்த இரண்டு ஞானமும் தான் அவனை அடைவதற்குச் சாதனமாகும். ஆகையால் பிரமம் என்று சொல்லப்படும் சாஸ்திரங்களை நன்கு விசாரித்து, யோகத்தில் அமரவேண்டும். யோகத்தில் இறங்கிய பிறகு அந்தத் தத்துவ சாஸ்திரத்தை நன்றாகத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய ஸ்வாத்தியாய யோகங்கள் இரண்டும் நன்றாய்த் தேர்ந்தால் பரமாத்மா விளக்கமாகக் காணப்படும். அந்தப் பரமாத்மாவைக் காண்பதற்குச் சாஸ்திர ஞானம் ஒரு கண் யோகம் மற்றொரு மேலான கண் பரப்பிரமமான பகவான் இந்தக் கண்களால் காணக்கூடியவனே தவிர இந்த இறைச்சியாலான கண்களால் காணக்கூடியவனல்லன் என்று பராசரர் கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, பராசர மகானே! சகல ஆதார பூதனான பரமேசுவரனை நான் எதனால் காண முடியுமோ அத்தகைய யோகத்தை நான் அறிய விரும்புகிறேன். ஆகையால் அதை அடியேனுக்குச் சொல்லியருள வேண்டும்! என்று கேட்டார். மைத்ரேயரே! பூர்வத்தில் மகாத்மாவான காண்டிக்ய ஜனகருக்கு கேசித்வஜன் சொன்ன வகையில், அந்த யோகத்தை நான் உமக்குச் சொல்கிறேன் என்றார் பராசர மகரிஷி.

பிரமமுனிவரே! காண்டிக்கியர் என்பவர் யார்? கேசித்துவஜர் யார்? யோகத்தைப் பற்றி அவர்களிடையே சம்வாதம் நேர்ந்தது எப்படி? அதைத் தாங்கள் கிருபை கூர்ந்து எனக்குச் சொல்லியருள வேண்டும் என்று கேட்க, பராசரர் சொல்லத் துவங்கினார். தருமத்வஜர் என்ற ஜனகமகா ராஜா இருந்தார். அவருக்கு மிதத்துவஜர் என்றும் கிருதத்துவஜர் என்றும் குமாரர்கள் இருவர் இருந்தார்கள். கிருதத்துவஜர் என்பவர் எப்பொழுதும் வேதாந்த விசாரணை செய்து கொண்டிருப்பார். அவருக்குச் கேசித்துவஜர் என்று புகழ்பெற்ற மைந்தர் உண்டானார். மிதத்துவஜருக்கும் காண்டிக்யஜனகர் என்ற புத்திரர் பிறந்தார். அந்தக் காண்டிக்கியர் கர்மமார்க்கத்தில் நின்று பூமியை ஆண்டு வந்தார். கேசித்துவஜரோ, ஆன்ம வித்தையில் ஊன்றியவராய் ராஜ்ய பரிபாலனஞ் செய்து வந்தார். இப்படியிருக்க அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஜெயிக்க முயன்றனர். கேசித்வஜர் காண்டிக்கியரை, இராஜ்ஜியத்திலிருந்து துரத்திவிட்டார். காண்டிக்கியர் அற்பமான சேனையுடையவராக இருந்ததால், ராஜ்யத்தை விட்டுத் தம்முடைய அமைச்சர், புரோகிதர் ஆகியோருடன் பிறர் வரக்கூடாத ஒரு காட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். ராஜ்ஜியத்திலிருந்த கேசித்துவஜரோ ஞானத்தைப் பற்றியவராய் பிரம வித்தையில் இருந்து கொண்டே, உபாசனைக்கு இடையூறு செய்யும் பாவங்களைப் போக்குவதற்காகப் பல யாகங்களைச் செய்து வந்தார்.

அவ்வாறு அவர் யாகஞ் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு சமயம் பிரவர்க்கியம் என்ற சடங்கில், அவிசுக்கு அவசியமான பாலைக் கொடுத்து வந்த அவரது பசுவை, காட்டில் ஒருபுலி அடித்துக்கொன்றது. அதை அந்த அரசர் கேள்விப்பட்டு, இதற்குப்பிராயச்சத்தம் என்ன? என்று ரித்துவிக்குகளைக் கேட்டார். அவர்கள் எங்களுக்குத் தெரியாது! கசேருவைக்கேளுங்கள்! என்றார்கள். அரசன் அதனால் கசேருவைக் கேட்க, அவர்பார்க்கவரைக்கேளுங்கள் என்றார். அவர் எனக்குத் தெரியாது சுனகரைக் கேளுங்கள்! என்றார். சுனகரை அரசர் கேட்க அவர்; அரசே! இந்தக் காரியம் கசேருக்கோ; எனக்கோ இந்தப்பூமியிலுள்ள மற்றொருவருக்குமோ தெரியாது. ஆனால் உன்னால் ஜயிக்கப்பட்டு உனக்குப் பகைவராக இருக்கும் காண்டிக்கிய ஜனகருக்குத்தான் இந்த விஷயம் தெரியும்! என்றார். அதைக்கேட்ட அரசன் முனிவரே! நான் இதைத் தெரிந்துகொள்வதற்காகவே; என் பகைவனிடம் செல்கிறேன். அவர் என்னைக் கொல்வாராயின் யாகபலன் எனக்கு சித்திக்கும் இல்லையென்று நான் கேட்கும் பிராயச்சித்தத்தை சொன்னால் யாகம் குறைவில்லாமல் நிறைவேற்றப்படும் என்று சொல்லி; கிருஷ்ணாஜினம் தரித்தபடி; ரதத்தில் ஏறி; காண்டிக்கியர் இருக்கும் இடம் தேடிச் சென்றார். காண்டிக்கியரோ; தம் பகைவர் தம்மைத் தேடி வருவதைக் கண்டு; கோபத்தால் கண்கள் சிவக்க; தம் வில்லை வளைத்து நாணேற்றிக் கொண்டு; கேசித்வஜரை நோக்கி, அடா! நீ கிருஷ்ணாஜின கவசத்தை அணிந்துகொண்டு; யோக்கியனைப் போல் இங்கு வந்து என்னைக் கொல்லப் பார்க்கிறாய்! நாம் கிருஷ்ணாஜினம் தரித்திருப்பதால் நம்மை அவன் அடிக்கமாட்டான் என்று எண்ணிவிட்டாய். மூடா! மான்களின் உடலில் இந்தக் கிருஷ்ணாஜின கவசம் இல்லையோ? அத்தகைய மான்களை நீயும் நானும் எத்தனை அம்புகளை எய்து கொன்றிருக்கிறோம்? ஆகையால் உன்னைப் போன்றவனை அடிக்க இந்தக் கிருஷ்ணாஜினம் தடையாகாது. நீ என் அரசைக் கைப்பற்றிய பகைவன்! ஆகையால் நீ யாகத்தில் இருந்தாலும் உன்னைக் கொல்வேன். என்னிடமிருந்து நீ உயிரோடு மீள மாட்டாய்! என்றார் காண்டிக்கியர்.

அதைக் கேட்டதும் கேசித்துவஜர் அமைதியான குரலில் காண்டிக்கியரே! நான் இப்போது உம்மிடம் ஒரு தருமசந்தேகம் கேட்க வந்தேனேயன்றி உம்மைக் கொல்வதற்கு வரவில்லை. இதை நீர் யோசித்து உமது கோபத்தையாவது விட்டுவிடும்; அல்லது என்மீது உமது பாணத்தையாவது விட்டுவிடும்! என்றார். அதைக்கேட்டு காண்டிக்கியரின் அமைச்சர்; புரோகிதர் முதலியோர் இரகசியமாக; சத்துரு கைவசத்தில் வந்தவுடன் அவனைக் கொல்வது அவசியம் அந்தப் பகைவன் அழிந்தால், இந்தப் பூமி முழுவதும் நமது கைவசம் ஆகும் என்றார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்ட காண்டிக்கியர் அவர்களைப் பார்த்து, நீங்கள் சொல்வது சரிதான் பகைவனைக் கொன்றால் பூமி நமக்குச் சுவாதீனமாகும் அவனைக் கொல்லாவிட்டாலோ நமக்கு மேல் உலகம் சுவாதீனப்படும். அவனுக்கு பூமி கைவசத்தில் இருக்கும். இந்த உலக வெற்றியைவிட மேலும் வெற்றியே சிறப்புடையது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்த உலக வாழ்க்கை சிறிது காலம்தான் மேல் உலக வாழ்வோ நீடித்திருப்பது ஆகையால் என் பகைவனை நான் கொல்லாமல், அவன் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்வதே நல்லதாகும்! என்று சொல்லிவிட்டு கேசித்துவஜரை வரவேற்று, நீர் கேட்க வேண்டிய கேள்வியைக் கேளும் எனக்குத் தெரிந்தவரை நான் உமக்குப் பதில் சொல்கிறேன் என்றார்.

கேசித்துவஜர், யாகத்திற்கு உபயோகமான பசு இறந்த செய்தியைச் சொல்லி, அதற்குரிய பிராயச்சித்தத்தைப் பற்றிக் கேட்டார். காண்டிக்கியரும், சாஸ்திர விதிப்படியான பிராயச்சித்தத்தைச் சொன்னார். தமது சந்தேகம் தீர்ந்தவுடன் கேசித்துவஜர்; காண்டிக்கியரிடம் விடைபெற்று; யாகசாலைக்குச் சென்றார். விதிப்படிக் கிரியைகளைச் செய்து யாகத்தை நிறைவேற்றி; அவபிரத ஸ்நானம் செய்து செய்ய வேண்டியவற்றை யெல்லாம் செய்தும் பின்வருமாறு யோசிக்கலானார். நாம் நமது யாகத்துக்கு வந்த பிராமணரையெல்லாம் பூஜித்தோம். இருத்துவிக்குகளுக்குச் சன்மானமளித்தோம். யாசகர்களுக்குத் தானம் செய்தோம். இப்படி உலகத்துக்கு ஒப்புரவான காரியத்தை நாம் தக்கபடி செய்திருந்தும் நம்முடைய மனம் ஏன் செய்ய வேண்டியதைச் செய்யாததைப் போல் குறைகொண்டிருக்கிறது? என்று சிந்தித்தார். பிறகு; ஓஹோ! தாம் எல்லாஞ் செய்தும்; நமக்குப் பிராயச்சித்தத்தை உபதேசித்த காண்டிக்கியருக்குக் குருதக்ஷிணையைக் கொடாமற் போனோம் அல்லவா? என்று நினைத்துக்கொண்டு; கேசித்துவஜர் மீண்டும் தமது தேரில் ஏறி; காண்டிக்கியர் வசிக்கும் காட்டிற்குச் சென்றார். மறுபடியும் தம்முடைய பகைவன் எதிரில் வருவதைக்கண்டதும் காண்டிக்கியர் தம்முடைய ஆயுதத்தைக் கையில் ஏந்தி நின்றார். அதைக்கண்டதும் கேசித்துவஜர்; காண்டிக்கியரை நோக்கி ஓ மகானுபவரே! நான் உமக்குத் தீங்கு செய்ய வரவில்லை. கோபிக்கவேண்டாம் உமக்குக் குருதக்ஷிணை கொடுக்கவே வந்தேன் என்றார். அதனால் காண்டிக்கிய ஜனகர் மறுபடியும் தமது அமைச்சரிடம் எதைக் கேட்கலாம்! என்று ஆலோசித்தார். அதற்கு அமைச்சர் அவனது ராஜ்யம் முழுவதையும் உமக்குக் குருதட்சணையாகக் கொடுத்துவிடும்படிக் கேளும் புத்திசாலிகள் சமயம் வாய்த்தபோது தம்முடைய சேனைகளுக்குத் துன்பமில்லாமல் ராஜ்யத்தைச் சம்பாதிப்பார்கள்! என்றார். ஆனால் காண்டிக்கியர் சிரித்துக்கொண்டே; அமைச்சரே! சிறிது காலமே நிற்கத்தக்க இராஜ்யத்தையா என்னைப் போன்றோர் விரும்புவார்கள்? நீங்கள் அனைவரும் பொருளைச் சம்பாதிக்கும் அமைச்சர்கள் அல்லவா? இந்தச் சம்சாரத்திலேபரமார்த்தம் ஏது? அது எப்படிக் கிடைக்கும் என்ற விஷயத்தில் நீங்கள் ஒன்றுமே அறியாதவர்கள்! ஆகையால் நீங்கள் சொன்னது சரி தான்! என்று அவர்களிடம் சொல்லிவிட்டுக் கேசித்துவஜரிடம் வந்து ஐயா! நீர் அவசியம் குரு தக்ஷிணை கொடுக்கத்தான் வேண்டும் என்று நினைக்கிறீரா? என்றார். அதற்கு அவர், ஆம் என்றவுடன், அவரைப் பார்த்து, அப்படியானால் நீர் ஆன்ம ஞானவித்தையில் தேறிய வராகையால் எனக்கு நீர் குருதக்ஷிணையாக சம்சாரக் கிலேசம் போகத்தக்கதான அந்த ஞானத்தைச் சொல்ல வேண்டும்! என்றார்.

7. யோக வழி

கேசித்துவஜர், காண்டிக்கியரை நோக்கி, காண்டியக்கியரே நீங்கள் ஏன் பகைப் பூண்டற்றதான ராஜ்யத்தை விரும்பவில்லை? க்ஷத்திரியர்களுக்கு ராஜ்யத்தைக் காட்டிலும் பிரியமானது வேறொன்றும் இராதே! என்றார். அதற்குக் காண்டிக்கியர் கேசித்துவஜரே! நான் ஏன் உம்முடைய ராஜ்யத்தை வேண்டவில்லையோ அதற்கான காரணத்தைக் கூறுகிறேன். கேளும் இந்த ராஜ்ய விஷயத்தில் விஷயமறியாதவரே ஆசைப்படுகிறார்கள் நீர் சொன்னது போலவே பிரஜைகளைக் காப்பதும் விரோதிகளைத் தர்ம யுத்தஞ் செய்து வதைப்பதும் க்ஷத்திரியருக்குத் தருமம்தான். ஆயினும் ராஜ்யத்தைக் காப்பதில் வல்லமையில்லாதவனாயும் ஆசையற்றவனாயும் இருக்கும் எனக்கு நீர் அபகரித்துக் கொண்ட ராஜ்யத்தை விரும்பாதது குற்றமாகாது. இந்தக் கருமத்தை நடத்தச் சக்தியிருந்தும் நடத்தாமல் விடுவதே குற்றமாகும். இந்த ராஜ்யத்தில் எனக்கு ஜன்மாந்தர கர்மங்களின் பயனான போகங்களை அனுபவித்துக் கழிப்பதிலேயே ஆசையிருந்தது. இது போகத்திலுள்ள ஆசை! ஏனென்றால் இவ்வாசை பொருளை அனுசரித்திருக்கிறதே யல்லாமல் கர்மத்தை அனுசரித்திருக்கவில்லை. மேலும் க்ஷத்திரியர் யாசித்திருப்பதைத் தர்மம் என்று பெரியோர்கள் அங்கீகரிப்பதில்லை. இந்தக் காரணங்களாலேயே நான் கர்மங்களில் சேர்ந்த இந்த ராஜ்யத்தை யாசிக்கவில்லை. பொருள்களின் உண்மையை அறியாதவராய் எனது என்ற வீண் அபிமானத்தால் மனம் இழுக்கப்பெற்று நான் என்னும் அகங்காரமாகிய கொடிய கள்ளையுண்டு மனம் மயங்கியிருப்பவர்களேயல்லாமல் என் போன்றோர் ராஜ்யத்தை விரும்புவதில்லை! என்றார் காண்டிக்கியர். அதைக்கேட்டு மகிழ்ந்த கேசித்துவஜர் காண்டிக்கியரே நீர் சொன்னது எனக்கும் சரியானது! ஆனால் நான்கர்மத்தினால் யோக விரோதிகளான காமக் குரோதாதிகளைப் போக்குவதற்காக, அரசாட்சியையும் யாகங்களையும் செய்து வருகிறேன். போகங்களினால் புண்ணிய க்ஷயத்தையும் செய்து வருகிறேன். நமது குலத்தில் ஆனந்தமானவரே! உமக்கோ, அதிர்ஷ்டவசத்தால் மனம் விவேகம் என்ற ஐசுவரியத்தைப் பொருந்தியுள்ளது. ஆகையால் அவித்தையின் சொரூபத்தைச் சொல்கிறேன் கேளும்.

ஆன்மாவல்லாத தேகாதிகளில் ஆன்மா என்ற நினைப்பும், தனதல்லாத அந்தந்தப் பொருளிலே தனது என்ற நினைப்பும், இந்த இரண்டும் சம்சாரமாகிய மரத்திற்கு விதையாகின்றன. தேஹியானவன் அஞ்ஞானவிருளால் மூடப்பட்டு பஞ்சபூத மயதேகத்தில், நான் எனது என்ற புத்தியைக்கொள்கிறான். ஆகாயம், வாயு, அக்கினி, ஜலம் பிருதிவி என்பவைகளுக்கு வேறானதாக ஆன்மா இருக்க தேகத்தை ஆன்மா என்று எவன் நினைக்கக்கூடும்? அதுவுமின்றி நிலம், வீடு பிறந்த புத்திரர்கள் பேராதிகள் ஆகியவற்றை எப்படித் தன்னதாக நினைக்கலாம்; இப்படி நினைப்பது அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்தினால்தான், இந்த உடலின் போகத்துக்குரிய காரியங்களையே மனிதர்கள் செய்கிறார்களே தவிர ஆத்ம போகத்துக்காக ஒன்றும் செய்கிறார்களில்லை. ஆன்மாவுக்குத் தேகம் வேறானதால் இப்படிச் செய்ததெல்லாம் பந்தத்திற்கே காரணமாகின்றன. மண் வடிவான மாளிகை மண்ணினாலும் நீரினாலும் பூசப்படுவதைப்போலவே, பிருதிவி மயமான இந்த உடலும் அன்னபானங்களாகிய மண் நீர்களினாலே பூசப்படுகிறது. பஞ்சபூத ரூபங்களான போகப் பொருள்களினாலே பஞ்சபூத ரூபமான தேகம் திருப்தி செய்யப்படுமானால் தேகத்தின் வேறான ஆன்மாவுக்கு இந்தப் போகங்களினாலேயே உண்மையான போகம் எப்படியுண்டாகும்? மேலும் இந்த ஆன்மா அநேகவாயிரம் ஜனனங்களில் சம்சாரம் என்ற வழியில் நடந்து, வாசனை என்னும் புழுதி படிந்தவனாய் மயக்கம் என்னும் சிரமத்தை அடைகிறான். இப்படி வருந்திய ஆன்மாவுக்கு எப்பொழுது ஞானம் என்னும் வெந்நீரால் அந்தப் புழுதி கழுவப்படுமோ அப்போது அந்த மயக்க வருத்தம் தீர்ந்து போகும் அது தீர்ந்தால் புருஷனின் மனம் குணப்பட்டு, வேறு அதிசயமில்லாததும் துக்கம் இல்லாததுமான மோக்ஷத்தையடைவான். மோக்ஷபயன்காம பயனைப்போல் வேறாக வரவேண்டுவதென்று இந்த ஆன்மா நிர்மல ஞானரூபியாதலால் இயல்பிலேயே மோக்ஷசுகரூபமாகவே இருக்கிறது. துக்கமான அஞ்ஞான மயங்களான ராகாதிகள் பிரகிருதியின் தன்மைகளே அல்லாமல் கன்ம தர்மங்கள் அல்ல. அது எவ்விதமெனில் தண்ணீருக்கு இயற்கையில் வெப்பம் இல்லாதிருக்க, அக்கினியோடு சேர்ந்த பாத்திர சம்பந்தத்தினால் தண்ணீர் வெப்பம் பெற்று தொனி எழுச்சி முதலியவற்றைச் செய்வதுபோல, தாபத்திரயத்தோடு கூடிய பிரகிருதியின் சம்பந்தத்தினாலே தோஷமுள்ளவனாகி அந்தப் பிரகிருதியின் தர்மங்களான பசி தாகம் முதலியவற்றை அடைகிறான். இந்த ஆன்மாவோ, அந்தப் பிராகிருதங்களுக்கு வேறாய் விகாரமில்லாது இருப்பவன்! அவித்தையின் காரணத்தை நான் உமக்குச் சொன்னேன். இதனால் வரும் கிலேசங்களுக்கு க்ஷயமுண்டாக்குவது யோகமேயன்றி வேறில்லை! என்றார். மகா அறிஞரே! யோகம் அறிந்தவர்களில் சிறந்தவரே! அந்த மகாயோகத்தை நீர் எமக்குச் சொல்லவேண்டும். இந்த நிமி சந்ததியில் நீரே யோக சாஸ்திரப் பொருளறிந்தவராக இருக்கிறீர்! என்று காண்டிக்கியர் கேட்டார்.

கேசித்துவஜர், அவரை நோக்கி, காண்டிக்கியரே! யோக ஸ்வரூபத்தைச் சொல்கிறேன், கேட்பீராக இந்த யோகத்தில் இறங்கியவன், பிரமத்தில் லயத்தை அடைந்து மறுபடியும் திரும்பமாட்டான். மனிதர்களுக்கு மனம் விஷயங்களைப்பற்றி நின்றால், பந்தத்துக்குக் காரணமாகும். அவற்றைப் பற்றாமல் இருந்தால் அது மோக்ஷத்துக்குக் காரணமாகும், ஆகையால் பந்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் காரணம் மனம்தான். ஆகையால் பிரகிருதி புருஷேஸ்வர ஞானமுள்ளவன், மனதை விஷயங்களிலிருந்து திருப்பி அதைக்கொண்டு பரப்பிரமமான சர்வேசுவரனை மோட்சத்துக்காகத் தியானிக்க வேண்டும். அப்படித் தியானிக்கப்பட்ட அந்தப் பிரமம் மாற்றுதலான அந்த யோகியை அயஸ்காந்தம் தன் சக்தியாலே இரும்பைத் தன்னிலைக்குக் கொண்டு வருவதைப் போலவும் அக்கினியானது அழுக்குடைய பொன்னை தனது சக்தியால் சுத்தப்படுத்தித் தன்னைப்போல் விளங்கச் செய்வது போலவும், தனது தன்மையை அடைவிக்கும் தன் முயற்சியை வேண்டிய தாய் இடைவிடாமல் நிற்றலையுடைய யாதொரு மனநிலையுண்டோ அதைப் பிரமத்திற் கூட்டுவதே யோகமாகும். இத்தகைய முமுக்ஷúவே யோகியாவான். இவன் யோகத்திலிருக்கும்போது யுஞ்சானன் அல்லது யோகயுக் என்று வழங்கப்படுவான். பிறகு பரப்பிரம்ம சாக்ஷõத்காரம் பெற்றபோது யுக்தன் அல்லது விநிஷ்பந்நஸமாதி என்று வழங்கப்படுவான். பயிற்சியிலுள்ள முந்தியவனுக்கு அந்தராயங்கள் என்ற இடையூறுகளினால் மனமானது கெடுக்கப்படுமாயின் பின்னுண்டாகும் பல பிறவிகளில் யோகம் தலைக் காட்டியபோது முக்தியுண்டாகும். யோகி மற்றொன்றையும் விரும்பாதவனாகித் தனது மனதுக்கு யோக்கியதை வருவதற்காகப் பிரமசரியம், அஹிம்சை, சத்தியம் திருடாமை ஏற்காமை வேத அத்தியயனம் சுத்தமாக இருத்தல் மகிழ்ச்சியுடனிருத்தல் தவம் செய்தல் ஆகியவற்றைச் செய்து கொண்டு பரப்பிரமத்தினிடத்திலே மனதைப் பற்றச் செய்ய வேண்டும், இயம நியமங்களாகிய இவை ஏதேனுமோர் பயனைக் கருதியவர்களுக்கு அந்தப் பயனைத் தரும் ஒன்றையும் கருதாதோருக்கு மோக்ஷத்துக்கு ஏதுவாகும். இந்த நியம, நியமாதிகளுடன் கூடிய யோகியானவன் பத்திராசனம் முதலிய ஆசனங்களில் ஏதேனும் ஓராசனத்தைக் கைக்கொண்டு பயிலல் வேண்டும். பிராணன் என்ற காற்றை பயிற்சியினாலே வயப்படுத்தவதே பிராணாயாமம் எனப்படும். இது சபீசம் என்றும் நிர்பீசம் என்றும் இருவகையாம். மூர்த்தித் தியானமந்திர ஜபங்களோடு கூடியது சபீசம்! அதற்றது நிர்ப்பீசம்! இந்தப் பிராணாயாமம் பிராணத்தினால் அபானத்தைத் தடுத்தலும் அபானத்தினால் பிராணத்தைத் தடுத்தலும் இரண்டையும் ஒருங்கே தடுத்தலுமாகிய பேதங்களால் ரேசகம் பூரகம் கும்பகம் என்று மூன்று வகைப்படும். அப்யரசியான யோகி செய்யும் சபீசம் அல்லது சரலம்பனம் என்ற பிராணாயாமத்துக்கு ஆலம்பனம் ஸ்ரீ அனந்தனுடைய ஸ்தூலரூபம் என்று அறியும் சப்தாதி விஷயங்களில் நிற்கும் இந்திரியங்களைத் தடுத்துச் சித்தத்தை இசையச் செய்வது பிரத்தியாகாரமாகும். இதனால் சஞ்சலப்படும் இந்திரியங்கள் மிகவும் வயப்படுகின்றன. அவை வசப்படாதபோது யோகியானவன் யோகத்தைச் சாதிக்கமாட்டான். இவ்விதம் பிராணாயாமத்தினால் காற்றும் பிரத்தியாகாரத்தினால் இந்திரியங்களும் வசப்பட்டபிறகு சுப ஆசிரயத்திலே மனதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு கேசித்துவஜர் சொல்லி வரும்போது காண்டிக்கியர் குறுக்கிட்டு மகானே! மனதுக்கு எது சுபாசிரயமோ அதைச் சொல்ல வேண்டும்! எந்தச் சுபாசிரயத்தை பற்றிய மனமானது ராகாதி தோஷங்களால் உண்டாகும் குறைகளைப் போக்குமோ; அத்தகையதை அறிய விரும்புகிறேன் என்று கேட்டார். மனதுக்கு ஆசிரயம் பிரமம். அது மூர்த்தம், அமூர்த்தம் என்று இயல்பால் இருவகைப்படும்! மூர்த்தமாவது சரீரத்தோடு கூடியது; அது ஹிரண்ய கர்ப்பன் முதலான பந்தஸ்வரூபம் அமூர்த்தமாவது சரீரம் அற்றது. அது முக்க ஸ்வரூபம் இந்த ஸ்வரூபம் பரம் என்று சொல்லப்படும். இத்தகைய மூர்த்தா மூர்த்தமயமான பிரபஞ்சம் யாவும் பிரமபாவனை, கர்மபாவனை உபயபாவனை ஆகவுள்ளன பாவனையாவது, பொருள்களை இடைவிடாமல் நினைத்தல்! பிரமபாவனையாவது பிரமத்தைப் பாவித்தல்! கருமபாவனையாவது கர்மத்தைப் பாவித்தல் உபயபாவனையாவது இரண்டையும் பாவித்தலாகும்; சனந்தனர் முதலிய யோகிகள் பிரமபாவனையோடு கூடியவர்கள் தேவர்களாதி யோராகத் தாவரமந்தமாக உள்ளவரனைவரும் கர்மபாவனையோடு கூடியவர்கள் இரணிய கர்ப்பன் முதலியோர் போதமும் அதிகாரமும் உடையவர்களாகையால் உபயபாவனையுடையோராவர். விசேஷமான ஞானகர்மங்கள் யாவும் க்ஷயிக்காமல் இருக்கும் வரையில் முன்பு சொன்ன விஸ்வரூபமான பிரமம் இருக்கிறது. தேவ மனுஷ்யாதி பேத ஞானத்தால் ஞானம் வேறுபட்ட ஜீவர்களைக் காட்டிலும் பரம் என்ற ரூபம் வேறானதாகவுள்ளது. அது ஜாதி முதலிய சகல பேதங்களும் அற்றது. வாக்குக்கும் எட்டாததாய் குறைவு முதலிய விகாரங்களின்றி என்றுமே ஒன்றாக, சுயம் பிரகாசமாயுள்ள ஞானஸ்வ ரூபமான வஸ்து! அதுதான் பரமாத்மாவான ஸ்ரீவிஷ்ணுவின் அமூர்த்த ஸ்வரூபமாகும்! முன்னே சொன்ன விசுவரூபத்தைக் காட்டிலும் விலக்ஷணமாய் மிகவும் உத்தமமாயுள்ளது! அரசே! அது யுஞ்சானாலே சிந்திக்கக்கூடாதது. ஆகையால் அந்த ஸ்ரீஹரியின் ஸ்தூலமான விசுவரூபத்தையே சிந்திக்கவேண்டும். வாசு தேவ அமிசமாய் பிரஜாபதியாக இருக்கும் இரணிய கர்ப்பனும், மருத்துக்களும், வசுக்களும்; ருத்திரர், சூரியர், நக்ஷத்திரங்கள், கிரகங்கள், கந்தர்வர், யக்ஷர், தைத்தியர் முதலியோரும் சகலமான தேவயோனி விசேஷங்களும், மனுஷ்யரும் மிருகங்களும், மலைகளும், மரங்களும், கடல்களும் நதிகளும் மற்றும் உள்ள சகல பூதங்களும் பூதங்களின் காரணங்களும் சேதனாசேதன ரூபமாய் ஏகபாதம்; துவிபாதம் அநேக பாதம் உள்ளதும் பாதமில்லாததும் சகலமும் ஸ்ரீஹரிபகவானின் மூர்த்த ஸ்வரூபமேயாகும்! இது சிந்திக்கக் கூடியது. ஆயினும் மூன்று பாவனைகள் உள்ளத்தால் சுத்தமன்று இத்தகைய இந்த உலகம் எல்லாம் பரப்பிரம சொரூபியான ஸ்ரீவிஷ்ணுவின் சக்தியினாலே வியாபிக்கப்பட்டிருக்கிறது. முன்பு சுத்த ஞான பிரமஸ்வரூபம் என்று சொன்னதே பரமான விஷ்ணு சக்தி இந்த இரண்டும் அல்லாமல் அவித்தை என்றும் கர்மம் என்றும் சொல்லப்பட்ட மூன்றாவது சக்தியும் உண்டு. இதனால் சூழப்பட்டே ÷க்ஷத்திரஞ்ஞன் என்னும் சக்தி; பரவி நிற்கிற சகல சம்சார தாபங்களையும் பெறுகிறது.

இதனால் மறைக்கப்பட்டுத்தான் தாரதம்மியமுள்ளதாய் காணப்படுகின்றது. எப்படியெனில், அசேதனங்களிலே இந்தச் சக்தி மிகவும் அற்பமாகவுள்ளது. தாவரங்களில் இது கொஞ்சம் அதிகமாகவும், ஊர்கின்ற ஜந்துக்களில் அதற்கும் அதிகமாயும் மிருகங்கள்; பறவைகள், மனிதர் பக்ஷிகள் கந்தர்வர்கள் தேவதைகள் ஆகிய இடங்களில் இந்தச் சக்தி மிகவும் இருக்கிறது. தேவதைகளிடம் இருப்பதைக் காட்டிலும் தேவேந்திரனிடம் அதிகம். பிரஜாபதியிடமோ அவனைவிட அதிகம். இரணிய கர்ப்பனிடத்தில் அதிலும் மேற்பட்டுள்ளது. அரசே! இந்தச் சகல ரூபங்களும் எம்பெருமானுடைய சரீரங்களேயாம்! இவையெல்லாம் ஆகாயத்தினால் முழுவதும் வியாபிக்கப்பட்டது போல், எம்பெருமானின் சக்தி; சங்கல்பத்தினாலே வியாபிக்கப்பட்டிருக்கிறது! யோகிகளால் தியானிக்கத்தக்கப் பிரமமான அந்த விஷ்ணுவினுடைய ரூபம் வித்வான்களால் சத்து என்று சொல்லப்படும். அமூர்த்த ரூபமாகும். இந்தச் சகல சக்திகளும் நிலைப் பெற்றிருப்பதாயும், விசுவரூப விலக்ஷணமாயும்; குணாதிகளாலே பெருமை பெற்றிருப்பதான ஸ்ரீஹரியின் வேறு ரூபம் ஒன்று உண்டு. எல்லாச் சகதியுமுள்ள அந்த ஸ்வரூபம்தான், லீலா விசேஷத்தினால் தேவதைகள், திரியக்குகள், மனிதர் முதலானோருடைய செய்கைகளுள்ள அவதாரச் சிறப்புக்களைச் செய்கிறது. அப்பிரமேயனான அந்த எம்பெருமானாலே அவதார ரூப வியாபாரமானது, லோகோபகாரத்துக்காகத் திருவுள்ளம் பற்றப்பட்டதேயன்றி மற்றவர்களுக்குப் போலக் கர்மத்தைப் பற்றி அறியப்பட்டதன்று ஆகையால் இது சகல ஜாதிகளிலும் வியாபித்ததாயும் இருக்கிறது. விஸ்வரூபனாகிய அவனுடைய இந்த ரூபம் எல்லாப் பாதகங்களையும் போக்கும்படியானதினால், ஆன்மாவுக்குத் தூய்மையுண்டாகும் பொருட்டு யோகப் பயிற்சி செய்யப்புகுந்வன் இந்த ஸ்வரூபத்தையே தியானிக்க வேண்டும். அக்கினியானது எப்படிக் காற்றுடன் சேர்ந்து, மஹாச் சுவாலைகள் வளரப்பெற்று, ஒரு புதரைக் கொளுத்தி நாசஞ் செய்யவல்லதோ, அப்படியே யோகிகளின் இதயத்தில் இருந்து ஸ்ரீமகாவிஷ்ணு சமஸ்த பாதங்களையும் தகித்து அருள்வார். ஆகையால் சமஸ்த சக்திகளுக்கும் ஆதாரமான அந்தத் திவ்வியத்திருவடிவிலே மனதை நிறுத்தவேண்டும். அது தான் தூய்மையான தாரணை எனப்படும்! அரசே! எங்கும் திரிந்து அலைந்த பிறகு அந்த விஷயத்தைப்பற்றி அசையாமல் இருக்கும் மனதுக்கு மூவகைப்பட்ட பாவப் பாவனைகளைக் கடந்த அந்த ஸ்வரூபந்தான், யோகிகளுக்குரிய மோக்ஷ ஏதுவான சுபாசிரயம் என்று அறிவீராக. அரசே! மற்றும் இதயத்துக்கு ஆசிரயமான தேவாதி ஸ்வரூபம் யாவும் கருமவயப்பட்டவை. ஆகையால் அசுத்தங்களேயாம். ஆகையால் மற்றவற்றை விரும்பாமல், அந்த எம்பெருமானுடைய தூய்மையான மூர்த்தரூபத்தைத் தியானிப்பதே தாரணையாகும். சித்தத்தில் தரிப்பது ஆதாரமின்றித் தாரணை கூடாது. ஆகையால் ஸ்ரீ ஹரியினுடைய எந்தரூபம் சிந்திக்கப்பட வேண்டுமோ அந்தப் பகவத் ஸ்வரூபத்தைச் சொல்கிறேன். கேட்பீராக;

பிரசன்னமான திருமுகமும், அழகிய தாமரையிதழ் போன்ற திருவிழிகளும் சமமான திருச்செவிகளும் விசாலமான பலகை போன்ற திருநெற்றியும், அழகிய செவிகளில் தரித்த அழகிய குண்டலங்களும் வலம்புரிச் சங்கு போன்ற  கண்டமும், பரந்ததும் ஸ்ரீயும் ஸ்ரீவச்சம் என்ற திருமறுவும் பொருந்தியதுமான திருமார்பும், மடிப்புகளால் மூன்று பிரிவுள்ளதும் ஆழ்ந்த கொப்பூழ் உள்ளதுமான திருவுதரமும், நீண்ட எண்புயங்களும் அல்லது நாற்புயங்களும், சமமான திருத்தொடைகளும், கணுக்கால்களும், தாமரை மலர் போன்ற திருத்தாள்களும், நிர்மலமான பீதாம்பரமும், கிரீடஹார கேயூர கடகாதி திவ்வியாபரணங்களும் விளங்குகின்ற ஸ்ரீவிஷ்ணுவாகிய பரப்பிரமத்தைத் தியானிக்க வேண்டும். மேலும் சார்ங்கம், சங்கம் கதை கட்கம் சக்கரம், அக்ஷமாலை ஆகியவற்றை திருக்கரங்களிலே தாங்கி மற்ற விகண்டில் வரஹஸ்தமும், அபய ஹஸ்தமும் விளங்கத் தியானிக்கவேண்டும். சதுர்ப் புஜமாகத் தியானிப்பதானால் சங்கு, சக்கர, கதைகளும், தாமரைமலரும் ஏந்தியுள்ளதாய்த் தியானிக்கவேண்டும். இத்தகைய திவ்விய ஸ்வரூபத்தை நிலை நின்ற மனத்தால் தாரணை உறுதிப்படும் வரையில் தியானிக்க வேண்டும். தாரணை உறுதிப்படுதலாவது நடக்கும்போதும், உட்காரும் போதும் வெறெந்தச் செய்கைசெய்யும் போதும் அந்த ஸ்வரூபம் மறையாமல் தோன்றிக் கொண்டேயிருப்பதேயாகும். அப்படியானால்தான் தாரணை சித்தியானது என்று அறியலாம். இவ்விதம் தியானம் உறுதியான பிறகு, சங்க சக்கராதி ஆயுதங்களில்லாமல் அக்ஷமாலை மட்டுமே உள்ளதாயும் மிகவும் சாந்தமாயும் அந்த ஸ்வரூபத்தைச் சிந்திக்கவேண்டும். இந்தத் தாரணையும் முந்திய தாரணையைப்போல் ஸ்திரப்பட்டவுடன், கிரீடம் முதலிய திவ்விய பூஷணங்களை ஒழித்து, அந்த ரூபத்தைத் தியானிக்க வேண்டும். இவ்விதமாக ஆயுதங்களும் ஆபரணங்களும் திருக்கை முதலிய உறுப்புக்களும் நன்றாகக் கிரகிக்கப்பட்ட பிறகு, அந்தந்த உறுப்புக்குப் பிரதானமான ஒரு திருமேனியோடு கூடியவனாக அந்த எம்பெருமானைச் சிந்திக்க வேண்டும். இவ்விதம் தாரணை செய்த பிறகு, முன்னே சொன்ன அவயவங்களையுடைய அவயவியினிடத்தே மனதைச் செலுத்த வேண்டும். அந்தத் தாரணையிலேயே சித்தம் நிலைப்பதே தியானமாகும்! இது முன்சொன்ன ஆறு அங்கங்களால் ஏற்படுத்தப்படும். அத்தகைய சொரூபத்துக்கே நாமரூபாதி கற்பனைகள் இல்லாத சொரூபத்தைத் தியானங்கொண்ட மனத்தாலே கிரகிப்பது சமாதி எனப்படும்.

காண்டிக்கியரே! அடையத் தக்கதான பரப்பிரமத்தை அடைவிப்பது இந்த விஞ்ஞானமேயாகும். இதைக்கொண்டு அடைவிக்க வேண்டியது மூன்று பாவனைகளையும் கடந்த ஆன்மா! மாயையால் மறைக்கப்பட்ட ஸ்வரூபனாக இருந்த ஆன்மா, இந்தச் சாதனத்தையுடையவன். இந்த ஞானமே சாதனம். இந்த ஞானமானது அவனுக்கு மோக்ஷம் என்ற காரியத்தை உண்டாக்கிப் பிறகு திரும்பிவிடும். அதனால் இந்த ஆன்மா பரமபிரமத்தினுடைய குற்றமின்மை முதலிய தன்மைகள் உண்டாகப் பெற்றவனாய் அந்தப் பரமாத்மாவோடு வாசியற நிற்கும். அவனுக்கு முன்பு இருந்த பேதமானது அஞ்ஞானத்தால் வந்ததேயாம். ஞான ஸ்வரூபமான ஆன்மாவிலே தேவ மனுஷ்யாதி பேதத்தை உண்டாக்கும்படியான அஞ்ஞானமானது வேரற்றுப் போகுமளவில், ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இல்லாத வித்தியாசத்தை எவன்தான் கற்பனை செய்ய இயலும்?

காண்டிக்கியரே! நீர் கேட்ட அஷ்டாங்க யோகத்தை நான் உமக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இன்னும் உமக்கு நான் சொல்ல வேண்டுவதும் செய்யவேண்டுவதும் யாது? என்று கேசித்துவஜர் கேட்டார். அதற்கு காண்டிக்கியர், ஓ கேசித்துவஜரே! யோக சொரூபம் அறியும்படி நீர் செய்த உபதேசத்தால் என் சித்தத்தின் மலம் முழுவதும் அழிந்தது. அதனால் யாவும் எனக்குச் செய்யப்பட்டவையாயின. இப்போது நானும் எனக்கு என்று சொன்னதும் சரியானதல்ல, ஆயினும் பரமாத்தும சாக்ஷõத்தன்மை பெற்றவர்களுக்கும் நான் எனது என்று சொல்லாமல் பேசவே முடிவதில்லையே? நான் எனது என்பது அந்யதா ஞானமாம். இதனால்தான் ஆடு, மாடு, ஆண், பெண் முதலிய வழக்கங்கள் உண்டாகின்றன. பரமார்த்தமான ஆன்ம ஸ்வரூபமோ சொல்லுக்கு எட்டாதது. ஆகையால் சொற்களாலே சொல்லப்படாதது. இனி தேவரீர் தம் இடத்திற்குப் போகலாம் என்று சொல்லி அவருக்குத் தக்கபடி உபசாரம் செய்தார். கேசித்துவஜரும் தம் பட்டணத்துக்குப் போய்விட்டார்.
பிறகு, காண்டிக்கியர் குமாரனை அரசனாக அமர்த்திவிட்டு, ஸ்ரீகோவிந்தனிடம் மனம், வைத்து யோக சிந்தனையின் பொருட்டு, அதற்குத் தகுதியான ஒரு வனத்துக்குச் சென்று, ஒரே பிடிப்புடைய புத்தியுடன் யமாதி குணங்களுடன் கூடி நின்று நிர்மலமான ஸ்ரீவிஷ்ணு என்ற திருநாமமுடைய பிரம்மனிடத்திலே நாம ரூபகர்மங்கள் வேரோடு அற்று நிற்பதாகிய லயத்தையடைந்தார். கேசித்துவஜரும் மோக்ஷத்துக்காகத் தரும கர்மங்களையெல்லாம் போக்கும்படியான முயற்சியுடன் ராஜ்ய சம்பந்தமான விஷயங்களை அனுபவித்துக் கொண்டும், பயனைக் கருதாமலேயே கர்மங்களைச் செய்து, கர்ம பயன்களைக் கழித்ததால், பிரார்த்தம் யாவும் நாசமாக, சகல தாபங்களும் க்ஷயிப்பதாகிய மோக்ஷ சித்தியை அடைந்தார்.

8. நூற் பயன்

மைத்ரேயரே! சாசுவதமான பிரமத்தோடு சேர்வதாகிய மோக்ஷம் என்று சொல்லப்படும் மூன்றாவது பிரளயம் எதுவோ, அந்த ஆத்தியந்திகப் பிரளயத்தை நான் உமக்குச் சொல்லிவிட்டேன். இவ்விதமாக, சர்க்கம், பிரதிசர்க்கம், வம்சம், மனுவந்தரம், லம்சானு சரிதம் முதலியவற்றைத் தெள்ளத் தெளிவாக அறிவித்தேனல்லவா? இந்த ஸ்ரீவிஷ்ணு புராணம் எல்லாவிதமான பாதகங்களையும் நாசஞ்செய்யவல்லது. எல்லாச் சாஸ்திரங்களுக்கும் மேம்பட்டது. புருஷார்த்தங்களை நன்றாக விவரிக்கும் திறனையுடையது. நீங்கள் மிகவும் ஆதரவோடு கேட்டதால் இதை உமக்கு நன்றாகச் சொன்னேன். இன்னும் நீங்கள் கேட்க வேண்டுவது யாதாயினும் இருந்தால் கேளும். நான் அதையும் சொல்கிறேன் என்று பராசரமகரிஷி கூறியதும் மைத்திரேயர் விண்ணப்பஞ் செய்யலானார்.

சுவாமி! அடியேன் கேட்டவைகளையெல்லாம் தாங்கள் கூறியருளினீர்கள்! இனி நான் கேட்க வேண்டுவது ஒன்றுமில்லை எல்லாச் சந்தேகங்களும் நீங்கின மனம் நிர்மலமாயிற்று. தேவரீரது அனுக்கிரகத்தால் உற்பத்தி ஸ்திதி லயங்களை அறிந்தேன். இந்தப் படைப்புக்கு ஏதுவானஎம்பெருமானும் பிரம்மா தக்ஷன் விஷ்ணு மனுமுதலானவர்களும் ருத்திர காலாந்தகாதிகளான நான்கு ராசிகளையும் அறிந்தேன். மேலும் முக்யம் வியத்தம் காலம் என்ற மூன்று விஷ்ணு சத்திகளையும் பிரமபாவனை கர்மபாவனை உபயபாவனை என்ற மூன்று பாவனைகளையும் முழுமையாய் அறிந்தேன் குருநாதரே! தேவரீரது பிரசாதத்தால் முக்கியமாய் அறியவேண்டுவனவற்றை அறிந்தேன். அதாவது யாவும் ஸ்ரீவிஷ்ணுவுக்குத் திருமேனியாய் அவனியில் வேறாகாமல் இருக்கிறது என்பதேயாம். ஆகையால் அடியேன் சந்தேக விபரீதங்கள் இன்றிக் கிருதார்த்தனானேன். தேவரீரது கிருபையால் வர்ணாசிரமாதி சகல தர்மங்களையும் பிரவர்த்தி தர்மம் நிவர்த்தி தர்மம் ஆகியவற்றையும் அறிந்தேன். இனி கேட்க வேண்டியது ஒன்றுமில்லை. அடியேனிடத்தில் தாங்கள் என்றும் பிரசன்னராக எழுந்தருளியிருக்க வேண்டும். சகலார்த்தங்களையும் அருளிச் செய்யும் மகரப்பிரயாசையை அடியேனால் அனுபவித்தீர்களே! அடியேன் செய்த இந்த அபசாரத்தை மன்னித்தருள வேண்டும். பெரியோர் புத்திரனுக்கும் சிஷ்யனுக்கும் வேறுபாட்டை எண்ணமாட்டார்களல்லவா? என்று மிக்க வணக்கத்தோடு மைத்திரேயர் விண்ணப்பிக்க பராசரர் மேலும் கூறலானார்.

ஓ, பிராமண உத்தமரே! உமக்குச் சொன்ன இந்தப் புராணம் வேதத்துக்குச் சமமானது. இதைக் கேட்பதால், ராகாதிதோஷங்களால் உண்டான பாபவகைகள் நசித்துப் போகும். இதில் சொன்ன சிருஷ்டி முதலிய ஐந்து அங்கங்களில், தேவதைகள், தைத்தியர் கந்தருவர் உரகர் ராக்ஷசர் யக்ஷர் வித்தியாதரர் சித்தர் அட்சரசுகள் பிரமத் தியானிளான மாமுனிவர்கள் ஆகியவர்களைப் பற்றிச் சொன்னேன். மேலும் பிராமணாதி வர்ணங்கள் நான்கும், புருஷருடைய உயர்ந்த சரிதங்களும், பூமியிலுள்ள புண்ணியமான பிரதேசங்கள், புண்ணிய நதிகள், புண்ணிய சமுத்திரங்கள், புண்ணிய மலைகள். ஞானவான்களின் சரிதங்கள், வர்ண தர்மங்கள், வேத சாஸ்திரங்கள் ஆகிய இவையெல்லாம் ஸ்மரணத்தாலேயே பாவம் நீக்கத்தக்கவை. இதுமட்டுமல்ல. ஜகத்தின் உற்பத்தி ஸ்திதி, நாசங்களுக்கு ஏதுவாயும் அவியயனாயும் சர்வ சொரூபியாகவும் யாவற்றுக்கும் ஆத்மாவாயும் ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களும் நிறைந்தவனாகவுமுள்ள ஸ்ரீஹரியும் இந்தப் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறான். யாருடைய திருநாமத்தைத் தற்செயலாய் ஒருவன் உச்சரித்தாலும், அவனுடைய சர்வ பாதகங்களும் சிங்கத்தைக் கண்ட அற்ப மிருகங்களைப்போல் விரைந்து ஓடுமோ பக்தியுடன் செய்யப்படுகின்ற எவனுடைய நாம ஸங்கீர்த்தனங்களால் சகலபாவங்களும் பெருநெருப்பில் விழுந்த தாதுக்களைப் போல லயப்பட்டுப் போகுமோ, எவனை ஒருமுறை நினைத்தவுடனேயே, அது உக்கிரமாயும் நரகதுக்கத்தைக் கொடுக்கத் தக்கதாகவும் இருக்கின்ற கலிகல்மஷமானது உடனே அழியுமோ, எவனுக்கு பிருமா, ருத்திரன், ஆதித்தர், வசுக்கள், சாத்தியர், அவிசுகள் விசுவதேவர் முதலான தேவ யோனிகளோடும் அஸ்வினி முதலிய நட்சத்திரங்களோடும், சூரியாதி சகல கிரகங்களோடும் சப்தரிஷிகளோடும் மற்றுமுள்ள அந்தந்த லோகங்களோடும் அந்தந்தலோகாதிபதிகளோடும் பிராமணாதி மனுஷ்யர்களோடும் பறவைகள் சிங்கம் முதலிய கொடிய மிருகங்களோடும் பாம்பு முதலிய ஊர்வனவற்றோடும், பலாசு முதலிய மரங்களோடும் அவற்றிலுள்ள பெருங் கடல்கள் நதிகள் பாதாளங்களோடும் அவற்றிலுள்ள ஜந்துக்களோடும் சப்தாதி விஷயங்களோடும் ஆவரணங்களோடும் கூடிய இந்தப் பிரமாண்டம் மேருவுக்கு ஓரணுப்போல எவனுக்கு ஏகதேசமாக இருக்கிறதோ யாவும் அறிந்தவனாய் எல்லாமும் உள்ளவனாய் எல்லாச் சொரூபமும் உடையவனாய் யாதொரு சொரூபமும் இல்லாதவனாய் சகல பாபநாசனாயுள்ள அந்த ஸ்ரீவிஷ்ணு பகவான் இந்தப் புராணத்தில் முக்கியமாகத்துதிக்கப் பட்டிருக்கிறார். இத்தகைய இந்தப் புராணத்தைக் கேட்பவன் அஸ்வமேதயாகத்தின் அவபிரதத்தில் ஸ்நானம் செய்தபயனை அடைவான்.

பிரயாகையிலும் புஷ்கரத்திலும் குரு ÷க்ஷத்திரத்திலும் சேதுபந்தன மகா சமுத்திரத்திலும் உபவாச விரத அனுஷ்டானஞ்செய்தவன் எந்த பயனை யடைவானோ, அந்தப்பயனை இந்தப் புராணத்தைக் கேட்டவன் அடைகிறான். மைத்ரேயரே! ஒருவன் அக்கினியை ஓராண்டுக்காலம் நன்றாக ஓமத்தால் ஆராதனை செய்துவந்தால் எந்தப் பயனை அடைவானோ அந்த நற்பயனை இதனை ஒருக்கால் கேட்டால்பெறுவான். ஒருவன் ஜ்யேஷ்டமாதத்தில் சுக்கிலபட்ச துவாதசியில் யமுனா நதியில் குளித்து நீராடி ஸ்ரீமதுராபுரியில் ஸ்ரீகிருஷ்ணனை ஆராதித்தால் உண்டாகும் பயனை கேசவனிடத்திலே மனம்வைத்து இப்புராணத்தில் ஒரு அத்தியாயத்தைக் கேட்பதனால் பெறுவான். ஜ்யேஷ்டமாதத்துச் சுக்கிலபக்ஷத் துவாதசியில் முன்னதாக உபவாசம் இருந்து யமுனையில் நீராடி மதுரையில் ஸ்ரீ மாதவனை ஆராதிப்பவனுக்கு குறைவற்ற அசுவமேத யாகப்பலன் கிடைக்கும். இத்தகைய புண்ணியவான்களான தங்கள் குலத்தாராலே, மேன்மையடைவிக்கப்பட்ட சிலருடைய செல்வத்தைக் கண்டு, பிதுர்க்கள் சொல்லியதாவது, நமது குலத்தில் பிறந்த எவனாவது யமுனா நதியில் நீராடி, உபவாசம் இருந்து ஜ்யேஷ்ட சுக்கில துவாதசியிலே மதுரையில் ஸ்ரீஜனார்த்தனனை அர்ச்சிப்பானானால் நாமும் பிறரைப் போலவே கரையேறினவர்களாய், மோக்ஷம் என்ற மேலான செல்வத்தைப் பெறுவோம். அல்லவா? ஜ்யேஷ்ட சுக்கில துவாதசியில் சுவாமியை ஆராதனை செய்து, பிதுர்க்களுக்கு யமுனையில் பிண்டத்தை எவன் போடுவான் என்றால், புண்ணியஞ் செய்தவர்களின் குலத்தில் பிறந்தவன்தான் போடுவான் என்று பிதுர்க்கள் ஆசைப்படுகின்றனர். இவ்விதமாக அந்தப்புண்ணிய தினத்திலே, யமுனா ஸ்நானம் செய்து ஸ்ரீகிருஷ்ண பகவானை ஆராதித்து, பிதுர்க்களுக்குப் பிண்டம் இடுவதனால் எந்தப்பயன் உண்டோ, அந்தப் பயனை இந்தப் புராணத்தின் அத்தியாய சிரவணத்தால் பெற்றுப் பிதுர்க்களைக் கடைத்தேற்றுவான். இந்தப்புராணம் சம்சாரத்திற்கு அஞ்சியவருக்கு ரக்ஷகமாயும் கேட்கத் தக்கவைகளில் மேம்பட்டதாயும், தூய்மையானவற்றிலெல்லாம் பரிசுத்தமாயும், தீயகனவுகளை அழிக்கவல்லதாயும் சகல தோஷங்களையும் போக்க வல்லதாயும், மக்களுக்கெல்லாம் மேலான மங்களமாயும் புத்திர சம்பத்தைத் தரத்தக்கதாகவும் விளங்குகிறது.

ஆதியில் ஸ்ரீமந் நாராயண மகாமுனிவரால் செய்யப்பட்ட இந்தப் புராணத்தை கமலோற்பவர் ருபு என்பவருக்கு உபதேசித்தார். அந்த ருபு இந்தப் புராணத்தைப் பிரியவிரதருக்குச் சொன்னார். அவர் பாகுரிக்கும் அந்தப் பாகுரி ஸ்தம்பமித்திரருக்கும் சொன்னார். அவர் ததீசருக்கும்; அவர் சாரஸ்வதிக்கும் அந்தச் சாரஸ்வதர்பிருதுவுக்கும் அவர் புருகுச்சருக்கும் அவர் நர்மதைக்கும் அவள் திருதராஷ்டிரர் விபூரணன் என்ற நாகர்களுக்கும்; அந்த இருவரும் நாகராஜனான வாசுகிக்கும் அந்த வாசுகி வச்சருக்கும் அவர் அசுவத்தாமருக்கும் அவர் கம்பளருக்கும் அவர் ஏலா புத்திரருக்கும் சொன்னார்கள். இவ்விதமாகப் பாதாள லோகத்தில் பரவியிருந்த இந்தப் புராணத்தைப் பாதாள லோகத்துக்குப் போயிருந்த வேதசிரசு என்ற முனிவர் பெற்று வந்து பூலோகத்தில் பிரமதி என்பவருக்குக் கொடுத்தார். அவர் இதனை ஜாதுகர்ணருக்குக் கொடுத்தார். அவர் இதனை அநேகப் புண்ணியசாலிகளுக்குச் சொன்னார். புலஸ்திய மாமுனிவருடைய வரப்பிரசாதத்தால் இந்தப் புராணம் எனக்கும் ஞாபகத்துக்கு வந்தது மைத்திரேயரே நானும் உமக்கு உள்ளபடி இந்தப் புராணத்தை அறிவித்தேன். நீரும் இதை இந்தக் கலியுகத்தின் முடிவிலே சினீகர் என்பவருக்குச் சொல்லுவீர்.

இந்த மகாபுராணம் பரம இரகசியமாயும் கலிதோஷ நாசனமாயும் இருப்பதை எவன் பக்தியுடன் கேட்பானோ, அவனுக்குப் பாபங்கள் யாவும் தீரும் தினந்தோறும் இந்தப் புராணத்தைக் கேட்பவனுக்குச் சகல தீர்த்த ஸ்நான பலனும் சகல தேவதா ஸ்தோத்திரப் பலனும் கிடைக்கும். இந்தப் புராணத்தில் பத்து அத்தியாயத்தைக் கேட்டவுடன் காராம் பசுவைத் தானஞ் செய்வதால் உண்டாகும் அருமையான புண்ணியம் கிடைக்கும். இதில் ஐயமில்லை எவன், சகல சரீரகனாய், சர்வ வியாபியாய் சகல லோகத்துக்கும் ஆதாரமாய் தன்னிலேதான் இருப்பவனாய், ஞானத்தினாலேயே அறியத்தக்கவனாய், ஆதியந்தம் இல்லாதவனாய்ச் சகல தேவதைகளுக்கும் இதனாயுமுள்ள ஸ்ரீ அச்சுதனை நினைத்துக்கொண்டே இந்தப் புராணத்தை முழுமையாகக் கேட்பானோ அவன் பக்தியோடு அசுவமேத யாகம் செய்த பயனை அடைவான். எந்தப் புராணத்தின் ஆரம்பத்திலும் நடுவிலும் முடிவிலும் சராசர குருவாயும் பிரமஞான சொரூபியாயும் சகல ஜகத்துக்கும் சிருஷ்டி, ஸ்திதி, சங்கார கர்த்தாவாகவுமுள்ள அச்சுத பகவான் துதிக்கப்பட்டிருக்கிறானோ அத்தகைய புராணத்தை முழுதும் கேட்பவனும், படிப்பவனும், சொல்பவனாயும் இருப்பவனுக்கும் வருகிற பயனை இப்படிப்பட்டதென்று சொல்வதற்கு மூவுலகத்திலும் ஒப்பில்லை ஒப்பற்ற மோக்ஷ சாம்ராஜ்யத்தைத் தரவல்ல ஸ்ரீஹரி பகவானே; பயனாகிறானன்றோ? எவனிடத்தில் மனம் வைத்தவன் நரகத்தில் புகமாட்டானோ எவனைத் தியானிக்கச் சுவர்க்கமும் இடையூறாக இருக்குமோ; எவனிடத்தில் மனம் பற்றியவர்க்கு பிரம லோகமும் அற்பமாகத் தோன்றுமோ; எவன் நிர்மல ஞானியருக்கு இதயத்தில் இருந்து கொண்டு; முக்தியை அளிக்கிறானோ அத்தகைய அச்சுதனைத் துதிப்பதனால் பாவம் தீரும் என்பது ஒரு விந்தையா? யக்ஞேசுவரனான எவனை யக்ஞமறிந்தவர்களான கர்மிகள் யக்ஞங்களினால ஆராதிக்கிறார்களோ; ஞானியர் எவனைப் பரம சொரூபியாகவும் தியானிக்கிறார்களோ; எவனை நினைப்பவன் பிறப்பு இறப்புக்களையும்; அறிவு, தேய்வு; வளர்ச்சிகளையும், காரிய காரணங்களாக இருத்தலையும் அடைவதில்லையோ; அத்தகைய ஸ்ரீஹரியைக் காட்டிலும் கேட்கத்தக்க பொருள் வேறு எதுவுண்டு?

ஆதியந்தங்கள் இல்லாதவனாய்ப் பிரபுவான எவன் பிதுர்ரூபியாக இருந்து விதிப்படி இடப்பட்ட கவியத்தையும் தேவ ரூபியாக இருந்து ஓமஞ் செய்யப்பட்ட அவியத்தையும் புசிக்கிறானோ; பிராமணமுடையவருக்கு எந்தப் பிரமாணமும் சகல சக்தி ஸ்தானமாயும் பிரமமாயும் இருக்கிற எவன் விஷயத்தில் ஒரு பரிச்சேதம் செய்யவொண்ணாதோ அத்தகைய ஸ்ரீஹரி பகவான்; காதிற்பட்டவுடன் சகல பாவத்தையும் போக்கி விடுவான் எவனுக்கு முடிவும் உற்பத்தியும் இல்லையோ; பரிணாமம் இல்லாத எவனுக்கு விருத்தி யக்ஷங்களில்லையோ; எவன் விகாரமற்ற வஸ்துவாக இருக்கிறானோ; புரு÷ஷாத்தமனாயும் துதிக்கத் தக்கவனாயுமுள்ள அந்த சர்வேசுவரனின் திருவடியைத் தொழுகிறேன். எவன் அந்தப்பரமபுருஷனுக்கு அநுகுணமானதையே அனுபவிக்கும் படியான சேஷபூதனாக இருக்கிறானோ, எவன்தேவாதி பேதங்களின்றி ஞானமே வடிவாகக்கொண்டு, ஒருவனாக இருந்தும் தேவதை முதலான தேகங்களைக்கொண்டு, அவற்றில் தான் என்னும் மயக்கமுற்றதனாலே, அநேகனாய், அசுத்தனாய் தோன்றுகிறானோ, எவன் ஞானத்தோடுங் கூடியவனாய் மஹத் முதலிய சகல தத்துவங்களையும் பரவச் செய்வதற்குக் கர்ம மூலத்தால் கர்த்தாவாக இருக்கிறானோ எப்பொழுதும் அவியயனாயுள்ள எம்பெருமானுடைய ஸ்வரூபமான அந்தப் பரம புருஷனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கின்றேன்.

எது, அறிவு பரவுதலும் அசையாது நிற்றலும் சேர்ந்து லயப்பட்ட ஸ்தானமாக இருக்கின்றதோ, எது ஆன்மாவுக்குப் பாவ புண்ணிய அனுபவயோக்கியமான தேகாதிகளைத் தரவல்லதாய் முக்குண வடிவாக இருக்கின்றதே மகத்து முதலிய அவஸ்தைகளை அடையாததாயும் சம்சார உற்பத்திக்குக் காரணமாயும் தானே உண்டானதாயும் எப்போதும் அழியாததாயும் உள்ள பிரதானமானது எது உண்டோ, எம்பெருமானுடைய ஸ்வரூபமான அதனைத் தொழுகின்றேன். வான், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகியவற்றின் செயல் வடிவமாயும் சப்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் கந்தம் என்ற விஷயங்களாகிய போக்கிய பதார்த்தங்களைக் கொடுத்து வருவதாயும் ஆன்மாவுக்கு ஞானேந்திரிய கர்மேந்திரியங்களைக் கொண்டு உபகாரஞ் செய்வதாயும் சூக்ஷ்மமும் ஸ்தூலமுமான சொரூபமும் உடையதாயுமுள்ள வியக்தம் என்கின்ற பகவானுடைய சொரூபத்தைப் பணிகிறேன். இவ்விதம் பலவகைப்பட்ட வியக்தாவியக்த பிரகிருதிகளும் அப்பிராகிருத திவ்விய மங்கள விக்கிரமும் ஆத்துமாவும் அஜனாய் எப்போதும் உள்ளவனான எவனுக்கு ஸ்வரூபமோ அந்த ஞானாதி ஐசுவரியம் உள்ள ஸ்ரீஹரி பகவான் சகல ஆன்மாக்களுக்கும் பிறப்பு இறப்பு மூப்பு முதலிய குற்றங்கள் இல்லாத மோக்ஷ சம்பத்தைத் தந்தருள வேண்டும் என்று பராசர மகரிஷி மைத்திரேய முனிவருக்கு இந்த ஸ்ரீவிஷ்ணு புராணத்தையும் சொல்லி இந்த நூற்பயனையும் சொல்லி பகவானைப் பிரார்த்தித்து இதனை அருளிச் செய்தார்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் சம்பூரணம்
ஓம் நமோ ஸ்ரீவாசுதேவாய

ஆறாவது அம்சம் முடிந்தது. விஷ்ணு புராணம் முற்றிற்று.


© Om Namasivaya. All Rights Reserved.