வராக புராணம்

(பகுதி-1)


1. தோற்றுவாய்:

மகாவிஷ்ணு வராக (பன்றி) வடிவில் அவதாரம் எடுத்து பாதாளத்திலிருந்து தன்னை வெளிக்குக் கொண்டு வந்து காப்பாற்றிய பகவான் விஷ்ணுவை பூதேவி துதி செய்து அவள் கேட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட விடைகள் என்பதால் இது வராக புராணம் எனப்படுகிறது. 24,000 ஸ்லோகங்கள் கொண்ட இது ஒரு சாத்துவிக புராணம். விஷ்ணு புராணம், நாரத புராணம், பாகவத புராணம், கருட புராணம், பதும புராணம் மற்ற சாத்துவிக புராணங்கள். வராஹ புராணம் விஷ்ணுவையும், அவரது வராக அவதாரத்தையும் பற்றிப் பேசுவதால் இது ஒரு வைஷ்ணவ புராணம். இதனை வராகமாயிருந்த விஷ்ணு பூதேவிக்குச் சொன்னதால் இது வராக புராணம் என்று பெயர் பெற்றது. இதில் உற்பத்தி, அரச பரம்பரை வரலாறு, மன்வந்தரங்கள் பற்றிய விரிவான விவரங்கள் கொடுக்கப்படவில்லை. தற்போது கிடைத்துள்ள வராக புராணத்தில் பிரார்த்தனை, விதிமுறைகள், சமயச் சடங்குகள், புனிதத் தல விவரணங்கள் முதலியவை உள்ளன. வைணவ தீர்த்தங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

வர+அஹ=வராஹ. வர என்றால் மூடுபவர் என்றும் அஹ என்றால் எல்லை இல்லாததற்கு எல்லை நிர்ணயித்தல் என்றும் பொருள். எனவே வராஹ என்றால் உருவற்ற ஒன்றுக்கு எல்லை காண்பவர் என்றும் அதற்கு உறை இடுபவர் என்றும் பொருள். பிரளய முடிவில், இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக்கொண்டு வந்தது. உதயகிரி குகையில் கோயிலில் பூமியை ஏந்திய வராகச் சிற்பம் உள்ளது. அதன் இடது பாதம் சேஷ நாகத்தின் மீதும், வலப்புறம் கோரைப் புல்லைப் பிடித்துக் கொண்டு பூதேவியும், பின்னால் கடல், முனிவர்கள் மற்றும் துதி செய்வோர் கூட்டம் காணப்படுகிறது. பாதாமியில் சாளுக்கிய சிற்ப மகாவராஹம் உள்ளது. தலை வராகமும் உடல் முழுவதும் அலங்கரிப்பட்ட மனித வடிவமும் காணப்படுகின்றன. வராகத்துக்கு நான்கு கைகள். அவற்றில் முறையே சங்கு, சக்கரம் உள்ளன. மூன்றாவது கை தொடை மேலும், நான்காவது பிருதிவியை (பூ தேவியை) ஏந்தியவாறும் உள்ளது. மன்னர்களும், முனிவர்களும் சுற்றி உள்ளனர். வராகத்தின் காலடியில் சேஷ நாகம். இதே போன்ற மற்றொரு சிற்பம் எல்லோராவில் தசாவதார குகையில் காணப்படுகிறது.

வடகுஜராத்தில் விஹாரா என்றொரு நகரம் உள்ளது. இவ்விடம் முற்காலத்தில் வராகநகரி எனப்பட்டது. இந்த வடிவில் மனித கால், கைகள் இல்லை. நான்கு கால்கள் கொண்ட வராக வடிவமே உள்ளது. வராக மூர்த்தியைக் கொண்ட நாணயங்களும் காணப்படுகின்றன. மஹாபலிபுரத்திலும் வராஹ மண்டபத்தில் இந்தப் பூவராகனைக் காணலாம். வராக அவதாரத்திற்கு யஜ்ஞ வராகம் என்றும் ஒரு பெயர் சொல்லப்படுகிறது. பூமிதேவி வராகத்தைத் துதி செய்தாள். அதனால் மகிழ்ச்சி கொண்ட நாராயணன் பூமியைக் கடலிலிருந்து மீட்க என்ன வடிவம் கொள்ள வேண்டும் என்று எண்ணிப் பார்த்தார். கடைசியாக யஜ்ஞ வராக வடிவம் எடுக்கத் தீர்மானித்தார். அந்தச் சுலோகங்கள் வாயு, பிரம்மாண்ட, பத்ம, பிரம்ம, மச்ச புராணங்களில் உள்ளன. மேலும் விவரங்கள் விஷ்ணு புராணம், பாகவத புராணங்களிலும் காணலாம். ஆனால் வராக புராணத்தில் அவை காணப்படவில்லை.

2. யஜ்ஞ வராகம்

யஜ்ஞம்=உலகைச் சிருஷ்டிக்கும் சிறந்த சக்தி உடைய எண்ணம். வராகம்=கலவரம். குழப்பங்களிலிருந்து உலகை உயர்த்தும் சக்தி. யஜ்ஞம் என்பது யாகம். அதாவது யஜ்ஞத்தின் மூல சிருஷ்டி சக்தியை வெளிப்படுத்த உதவும் ஒரு சமயச்சடங்கு. யஜ்ஞ வராகத்தை விவரிக்க முப்பத்தைந்து வெவ்வேறு வகை பெயர்கள் விளங்குகின்றன. அவையாவன:

1. வேத பாதம் : வராகத்தின் நான்கு பாதங்களும் நான்கு வேதங்கள்.
2. யுபதம்ஷ்ட்ரம் : வராகத்தின் இரண்டு தந்தங்கள். விலங்குகளைப் பலியிட உபயோகப்படுத்தும் மேடை போன்றது.
3. கிரது தந்தம் : ஒரு யஜ்ஞத்தில் செய்யப்பட வேண்டிய அறுபத்து நான்கு பலிகளைக் குறிப்பது கிரது. இவை போன்று வராகத்தின் பற்கள் உள்ளவை.
4. சிதி மூலம் : சிதி என்றால் அக்கினிமேடை (அ) பலிபீடம். வராகம் வாய் பிளத்தல் இதை போன்றதாகும்.
5. அக்கினி ஜிஹ்வ : வராகத்தின் நாக்கு அக்கினி போலுள்ளது.
6. தர்ப்பலோமம் : வராகத்தின் உடல் மீதுள்ள உரோமம் மேடை மீது பரப்பப்படும் தர்ப்பைப் புல் போன்றது.
7. பிரம்ம சீர்ஷம் : வராகத்தின் தலை பிரம்மாவைப் போல் உள்ளது.
8. அஹோர திரிக்ஷானாதாரம் : இரவும், பகலும் வராகத்தின் இரண்டு கண்கள் ஆகும்.
9. வேதாங்க ச்ருதி பூஷனம் : அறிவின் பிரிவுகளாகிய ஆறு வேதாங்கங்கள் வராகத்தின் காதணிகள் ஆகும்.
10. ஆஜ்யனசா : நாசித்துவாரங்கள் யாகத்தில் தெளிக்கப்படும் நெய் போன்றுள்ளன.
11. சிருவண் துண்டம் : நீண்டுள்ள மூக்கு யாகத்தில் நெய் ஊற்றப் பயன்படும் கரண்டி போன்றது.
12. சாம கோஷ வன : சாமவேதத்துதிகள் போல் வராகத்தின் குரல்.
13. சத்திய தர்மமாயா : வராகம் முழுவதும் தருமநெறியும், உண்மையும் கொண்டது.
14. கர்மவிகரம் சத்கிருத : புரோகிதர்கள் செய்யும் சடங்குகள் வராகத்தின் சக்தி வாய்ந்த அசைவுகளைப் பெற்றுள்ளன.
15. பிராயச்சித்த நகோகோர : தவத்தின் போது செய்ய வேண்டிய கடினமான சடங்குகளே வராகத்தின் பயங்கர நகங்கள் ஆகும்.
16. பாஷுஜனுரு : பலிகொடுத்த மிருகங்களின் உடைந்த உடல்கள், எலும்புகள் வராகத்தின் முழங்கால் மூட்டுகளுக்கு ஒப்பாகும்.
17. மகாகிரித் : வராகத்தின் தோற்றம் யாகம் அனையது.
18. உத்கத்ரந்தா : நீண்ட சாமச்ருதிகள் வராகத்தின் குடல் போன்றவை.
19. ஹோமாலிங்கா : வராகத்தின் இரகசிய உருப்புக்கு நெய் ஆஹுதி உவமானம்.
20. பிஜோஷதி மாஹாபலா : மூலிகைகள், வேர்கள் வராகத்தின் உற்பத்தி உறுப்பு போன்றவை.
21. வாய்வந்தரத்மா : வராகத்தின் ஆன்மாவுக்கு ஒப்புமை வாயு பகவான்.
22. யஜ்ஞ ஸ்விக்ருதி : யாகத்தில் கூறப்படும் மந்திரங்கள் வராகத்தின் எலும்புகளுக்கு உவமையாகும்.
23. சோம÷ஷானிதா : வராகத்தின் ரத்தம் சோமபானம் போன்றது.
24. வேதிஸ்கந்தம் : வராகத்தின் அகன்ற புஜங்கள் பலிபீடம் ஒத்துள்ளன.
25. ஹவிர் கந்தம் : வராகத்தின் உடல் மணம், யாக நைவேத்தியத்தின் நறுமணம் ஆகும்.
26. ஹவ்யகவ்யதிவேகவனம் : வராகத்தின் அசைவுகளின் ஆர்வம், வேகம் அனையது யாகச் சடங்குகள்.
27. பிரக்வம்சகயம் : வராகத்தின் உடல், யாகசாலை அமைப்பில் குறுக்கு தூலம் போல் உள்ளது.
28. நாநாதிக்ஷ பிரன் விதம் : யாகத்தின் பூர்வாங்கப் பணிகள் வராகத்தின் ஆபரணங்கள் ஆகும்.
29. தக்ஷிணாஹ்ருதயம் : வராகத்தின் இதயம் யாக தக்ஷிணையாம்.
30. மகாசத்திரமாயம் : பெரிய யாகம் போன்றது வராகத்தின் உருவம்.
31. உபாகர்மாமாச்தருசகம் : யாகத்தின் போது படிக்கப்படும் வேதம் வராகத்தின் உதடுகள் ஆம்.
32. பிரவர்க்ய வர்த்த பூஷனம் : பிரவர்க என்பது பெரிய பால் பானை. அதனுள் சூடான வெண்ணெய் ஊற்ற அதிலிருந்து மேலே தீப்பிழம்புகள் எழும். வராகத்தின் மார்பில் உள்ள வளைவுகள் தீப்பிழம்புகள் போல் உள்ளன.
33. நானாசந்தோகதிபதம் : வராகத்தின் பலவித அசைவுகள் மந்திரத்தின் வெவ்வேறு சீர்ப்பிரமாணங்களை ஒக்கும்.
34. குஹ்யோபணிஷடசனம் : உபநிஷத்துகளைக் கற்றறிந்தார் மட்டுமே பங்கு கொள்ளும் விவாதம் போன்றது வராகத்தின் சரீரநிலை.
35. சாயாபத்னிஸஹாயோ : சூரியனை ஒத்துள்ளது வராகம். ஓரியன் (அ) கால புருஷ நட்சத்திரக் கூட்டத்தில் அமைப்பு தேவலோக வராகம் போல் காட்சி அளிக்கின்றது.

3. சிருஷ்டி

சிருஷ்டி 1. ஆதி (அ) மூலசிருஷ்டி சர்க்கம் எனப்படும். 2. அடுத்து பிரளயத்தால் ஏற்படும் அழிவும், அதன் பின் படைக்கப்படும் படைப்பு. இது பிரதி சர்க்கம் எனப்படும். பிருதிவி பெரிய மனக்குழப்பத்துடன் விஷ்ணுவை அடைந்து ஒவ்வொரு கல்ப முடிவிலும் எனக்கு நீர் ரக்ஷகன் ஆகிறீர். நீர் என்னைக் காத்து, அளித்து, புனர்நிர்மாணம் செய்கிறீர். எனினும் உங்களுடைய முழு சக்தியை நான் அறியேன். உமது அடையாளமும் நான் அறியேன். உமது அடையாளமும் நான் அறியேன். உங்களது அதிசயங்களைத் தெரியச் செய்வீர். உம்மை அடைவது எப்படி? சிருஷ்டியின் தோற்றமும், முடிவும் எவ்வாறு நிகழ்கிறது? நான்கு யுகங்களின் குணநலன்கள் எத்தன்மையதாகும்? என்று பிருதிவியாகிய பூமாதேவி கேட்க, வராக அவதார விஷ்ணு ஐயப்பாடுகளை நீக்கும் விதத்தில் விடைகள் தந்தார். வராகம் ஒரு மாயச் சிரிப்பு சிரித்தது. பிருதிவி பிரம்மாண்டம் (முட்டை) தேவர்கள், உலக மன்னர்கள் ஆகியவற்றை அந்த வராகத்தின் வயிற்றில் கண்டாள். அவள் விஷ்ணுவை மனமாரத் துதிக்க அந்த வராகப்பெருமான் பூதேவி வினாக்களுக்கு விடை அளிக்கலானார்.

பரமாத்மனிலிருந்து எல்லாம் தோன்றியது பற்றியும், மூன்று குணங்கள், ஐந்து இயற்கை சக்திகளாகிய நிலம், நீர், தீ, காற்று, விண் பற்றியும், பூச்சியத்திலிருந்து தோன்றிய உலகைப் பற்றியும் விவரித்தார். பிரம்மாவின் நாள் ஒரு கல்பம். அப்படி பல கல்பங்கள் முடிய தற்போது வராக கல்பம் நடைபெறுகிறது. இந்தக் கல்பத்தில்தான் விஷ்ணு வராக அவதாரம் எடுத்தார். இதுவரையில் சிருஷ்டியின் மூலப்பகுதி சர்க்கம். அடுத்து, பிரம்ம சிருஷ்டி தொடங்கி நடைபெறுகிறது. அது பிரதி சர்க்கம் எனப்படும். விஷ்ணு தன் யோகுதுயில் நீங்கி கண்விழித்து ஒன்பது நிலைகளில் உலகைப் படைத்தார். தமஸ், மோகம், மகாமோகம், தமிஸ்ரம், அந்தத்தமிஸ்ரம் என ஐந்து பகுதிகள் தோன்றின. இது பிராகிருத சர்க்கம் ஆகும். அடுத்த படைப்பு நாகம் (கம்=போதர்; நா=எதிர்மறை) எனவே அசையாத மரங்கள், மலைகள் படைக்கப்பட்டன. இவை அசையாதன ஆனால் வளர்வன. இது முக்கிய சர்க்கம் ஆகும். அடுத்து வளைவாக எழுதலும், வீழ்தலுமான படைப்பு ஏற்பட்டது. பறவைகள் போன்றவை தோன்றின. இவை திரபதயோனி படைப்பு எனப்பட்டது.

மற்றும், பல சர்க்கங்களில் தேவர்களும், மனிதர்களும், அசுரர்களும் தோன்றினர். தேவர்கள் அன்பும், மகிழ்ச்சியும் கொண்டார்கள். மனிதர்கள் புறப்பொருள்கள் மீது பற்று கொண்டவர்கள், அடிக்கடி மகிழ்ச்சி இழப்பவர், சில சமயம் தீயவர்கள், ஆசைமிக்கவர், நல்லவை உடையவர், அசுரர்கள், அமைதியற்றவர், சண்டை போடுபவர்கள், கொள்ளை, கொலை புரிபவர்கள். இவ்வாறு ஆதியில் விஷ்ணு சிருஷ்டித்தது சர்க்கம் என்றும் பிரம்மாவின் மூலம் படைக்கப்பட்டது பிரதி சர்க்கம் என்றும் அறிய வேண்டும்.

4. வராக அவதாரம்

பூமி பாதாளத்தில் அழுந்திவிட, பூதேவி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். அவள் செய்த துதியே கேசவ துதி எனப்படுகிறது. இதைச் செய்பவர்கள் வறுமை, பாவங்களிலிருந்து விடுபடுவர். புத்திரப்பேறு கிடைக்கும். இறுதியில் விஷ்ணுலோகம் அடைவர். பூமித்தேவியின் முறையீட்டைக் கேட்ட பகவான் விஷ்ணு மிகப்பெரிய வராக (பன்றி) உருவெடுத்தார். இப்படி எடுத்த வராக அவதார பகவான் பூமியைக் காத்திட சமுத்திரத்திற்குள் பிரவேசித்தார். பிரஜாபதிகளில் காசியப முனிவரும் ஒருவர். அவருடைய மனைவியரில் ஒருத்தி திதி. அவள் ராக்ஷசர்களின் தாய். ஜயவிஜயர்கள் அவள் வயிற்றில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்ற இருவர்களாய் உதித்தனர். அவர்களில் இளையவன் ஹிரண்யாக்ஷன். அவன் பிரம்மாவைக் குறித்துக் கோர தவம் செய்தான். அதன் வெப்பம் மூன்று லோகங்களையும் தகித்தது. இதனால் அச்சம் கொண்ட தேவர்கள் சத்தியலோகம் சென்று பிரம்மாவைக் கண்டு இரண்யாக்ஷன் தவம் பற்றிக் கூறித் தங்களுக்கு அருள்புரிய வேண்டினர். அப்போது பிரம்மா தான் சென்று இரணியாக்ஷன் தவத்தை முடிக்கச் செய்வதாகவும், தேவர்களை ரக்ஷிப்பவனாகவும் இருப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் இரணியாக்ஷன் தவம் செய்யுமிடம் அடைந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அவன் சிருஷ்டியில் தோன்றிய யாராலும், எதாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக்கூடாது. தனக்கு மூவுலகத்திற்கும் அதிபதியாகும் வரங்கள் இரண்டும் வேண்டினான். அப்போது பிரம்மா விஷ்ணுவைத் தியானித்து எல்லாம் அவன் செயலே என்று நினைத்து அரக்கன் கேட்ட வரங்களைக் கொடுத்தார். வரம் பெற்ற இரணியாக்ஷன் மூவுலகங்களையும் வென்று தனக்கு எதிரி யாருமின்றி ஆளத் தொடங்கினான். அடுத்து அவன் சத்தியலோகம் அடைந்து பிரம்மனை வெல்ல முயன்றபோது யுக்தியுடன் அவனைச் சமாதானப்படுத்தி உலக நாயகனாகிய விஷ்ணுவை வென்றால் உனக்குச் சமமாக யாரும் இருக்கமாட்டார் என்று கூற விஷ்ணுவின் இருப்பிடம் அடைந்தான் இரணியாக்ஷன். அங்குத் துவாரபாலகர்கள் அவனைத் தடுக்கவில்லை. அவன் வருகை அறிந்து விஷ்ணு பாதாளலோகம் சென்று விட்டார். இரணியாக்ஷன் வைகுந்தத்தில் அனைவரும் விஷ்ணு ஸ்வரூபியாகக் காணப்பட்டனர். செய்வதறியாமல் விஷ்ணுவைத் தேடி பாதாளலோகம் செல்ல முனைந்தவன் வழித்தெரியாமல் தவித்து இறுதியில் தனக்குத் தடையாயிருக்கும் பூமியைப் பாயாகச் சுருட்ட மறைந்தது. அதுகண்டு எல்லோரும் ஸ்ரீஹரியிடம் முறையிட்டனர். பூமாதேவி கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்தாள்.

உடனே பகவான் விஷ்ணு யஜ்ஞ வராகமாக உருவெடுத்தார். குர்குர் என்று சப்தம் செய்தது வராகம். பூமியைப் பாயாகச் சுருட்டிய இரணியாக்ஷன் மீது பாய்ந்து தன் தந்தத்தால் (கோரைப் பல்லால்) குத்தினார். அவன் அதைத் தாளமுடியாமல் சமுத்திரத்திலே குதித்து மறைந்தான். அவனை வராகம் தனது கால்களால் பற்றிக் கொண்டு மறுபடியும் தந்தத்தால் குத்தியது. அதனால் அவன் உடனே மரணமடைந்தான். அவனால் சுருட்டப்பட்ட பூமியை வராகமூர்த்தி வெளிக்கொணர்ந்து அதனை நிலைப்படுத்தி வைகுண்டம் அடைந்தார். இதுவே வராக அவதாரம்.

5. அஷ்வஷிரன்

பூமித்தாய் வராகத்திடம் நாராயணனும், பிரம்மனும் ஒன்றே என்பது பற்றி விளக்கம் கேட்க எல்லா வகையிலும் ஒத்தவையே. ஆனால், நாராயணனை நேராகப் பார்ப்பது கடினமாகும். அவருடைய அவதாரத்தின் மூலமே காணமுடியும். பிரம்மன் நாராயணனின் ஒரு வடிவமே. அதேபோல் தான் சிவனும். நிலம், நீர் போன்ற ஐம்பூதங்களிலும் நாராயணனைக் காணலாம். விசுவரூபம், விசுவாத்மா நாராயணன் அன்றி வேறில்லை. அஷ்வஷிரன் என்ற தருமநெறி தவறாத மன்னன் கபிலரிடம், நாராயணனைப் பூசிப்பது எவ்வாறு? என்று கேட்டான். இங்கு இரண்டு நாராயணர்கள் உள்ளனர். யாராவது ஒருவரை நீ பூசிக்கலாம் என்றார் (கபிலரும் நாராயணரின் அம்சமே) அப்போது அஷ்வஷிரன் நீ எப்படி நாராயணனாக முடியும். நான்கு கைகளோ கருடனோ இல்லை. இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. திரும்பவும் என்னைப் பார் என்று கபிலர் கூறிட அஷ்வஷிரன் கபிலரில் நான்கு கைகளும், கூடிய நாராயணனைக் கண்டான்.

ஆனால், நாராயணன் கமல மலர் மேல் உட்கார்ந்திருப்பார்; சிவனும், பிரம்மாவும் அவரது பாகங்கள். அவர்கள் எங்கே? இப்போது பார் என்று கபிலர் கூற, அங்கு நாராயணர் தாமரைமீது அமர்ந்திருந்தார். பிரம்மா, சிவன் இருவரும் கமலாசனராய் காணப்பட்டனர். ஏன் எல்லா நேரத்திலும் நாராயணனைக் காணமுடியவில்லை என்று கேட்டான். அதற்குக் கபிலர், நாராயணரை எப்போதுமே காண நினைக்காதே. அவர் தன்னைத் தான் தெளிவாக்குவார். அவதாரம் எடுப்பவர்; அவரைப் பறவை, விலங்குகளிலும் காணலாம். உன்னில் அவரைக் காணலாம். எதிலும், எங்கும் காணலாம். உணரலாம், உண்மையான ஞானம் பெற்றால் எதிலும் நாராயணனைக் காணலாம். அறிவா? செயலா? எது சிறந்தது? உயர்ந்தது? என்று மன்னன் அஷ்வஷிரன் கேட்டான். அதனை உணர்த்த கபிலர் ரைவ்யன், வாசு கதையைக் கூறினார்.

6. ரைவ்யன், வாசு

பிரம்மாவின் வழிவந்தவன் மன்னன் வாசு. வாசு ஒருமுறை தேவகுரு பிரகஸ்பதியைக் காணச் சென்றான். வழியில் சித்திரரதன் என்னும் வித்யாதரன் எதிர்ப்பட்டான். சித்திரரதன் வாசுவிடம் பிரம்மா தேவர்களுக்கான ஒரு சபையை (கூட்டம்) ஏற்பாடு செய்திருப்பதாகவும், முனிவர்களும், பிருகஸ்பதியும் கூட அதில் பங்கு பெறச் சென்றிருப்பதாகவும் கூறினான். வாசுவும் அங்குச் சென்றான். கூட்டம் முடிந்து பிருகஸ்பதி வருவதற்காகக் காத்திருந்தான். ரைவ்ய முனிவரும் பிருகஸ்பதியைக் காண வந்திருந்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த பிரகஸ்பதி இருவரையும் கண்டார். என்ன வேண்டும்! நான் என்ன செய்ய வேண்டும் என்று பிருகஸ்பதி கேட்டார். அப்போது வாசுவும், ரைவ்ய முனிவரும் ஞானமா? செயலா? எது உயர்ந்தது? சிறந்தது? என்று கேட்க, அப்போது பிருகஸ்பதி அதை உணர்த்த ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.

7. சம்யமானனும் வேடன் நிஷ்தூரகனும்

ஒழுங்கான, கட்டுப்பாடுமிக்க, தருமநெறி தவறாத சம்யமானன் என்றொரு அந்தணர் இருந்தான். நிஷ்துரகன் என்றொரு வேடனும் அதே சமயத்தில் வாழ்ந்து வந்தான். சம்யமானன் கங்கையில் நீராடச் சென்றான். கங்கைக் கரையில் நிஷ்துரகன் பறவைகளைப் பிடிப்பதை சம்யமானன் கண்டான். சம்யமானன், நிஷ்துரகனிடம் பறவைகளைக் கொல்லாதே என அறிவுரை கூறினான். பறவைகளைக் கொல்ல நான் யார்? எல்லா உயிர்களிலும் தெய்வீக ஆன்மா உள்ளது. அதை எப்படி என்னால் கொல்ல முடியும்? நான் செய்தேன் என்பது தற்பெருமை, தற்புகழ்ச்சி ஆகும். அப்படிப்பட்டவருக்கு முக்தி ஏற்படாது. பிரம்மன் தான் கர்மா செய்பவன் என்று வேடன் கூறினான். பின்னர் அவன் தீ மூட்டினான். தீயின் நாக்கில் ஏதாவதொன்றை அணைக்குமாறு கூறினான் வேடன். அந்தணன் அதற்கு முயற்சி செய்ய தீ முழுவதும் அணைந்துவிட்டது. தீயும், அதன் பல நாக்குகளும் ஒன்றே என்றான் அந்த வேடன் நிஷ்தூரகன்.

இரண்டில் ஒன்றை எப்படி வேறுபடுத்தி அறிய முடியும்? எனவே தீயில் ஒரு பகுதியை எப்படி அணைக்க முடியும்? சிருஷ்டியில் அனைத்தும் பிரம்மன் சொரூபமே. தனி ஆன்மாவுக்கு என்ன நேர்ந்தாலும் பிரம்மன் பாதிக்கப்படுவதில்லை. எனவேதான் நான் செய்கிறேன் என்ற நினைப்பின்றி ஒருவன் தன்கர்மாவைச் செய்ய வேண்டும் என்று கூறினான் வேடன். அப்போது விண்ணிலிருந்து ஒரு விமானம் வந்து அவனை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது. ரைவ்யனுக்கும் வாசுவுக்கும் அவர்களுடைய கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. இவ்வாறு ரைவ்யன், வாசு கதை கேட்ட அஷ்வஷிரன் ஐயமும் தீர்ந்தது. அவன் தன் அரசைத் தன் மகன் ஸ்தாவஷிரனிடம் ஒப்படைத்துவிட்டு தவம் செய்ய நைமிசார வனம் சென்றான். நாராயணனை நோக்கித் தவம் செய்து நாராயணனுடன் கலந்து விட்டான். ரைவ்யனும் யாகங்கள் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

8. ரைவ்ய முனிவர் கேட்ட கதை

ரைவ்ய முனிவர் கயா தீர்த்தத்தை அடைந்து தன் இறந்த மூதாதையர்க்குச் சமயச் சடங்குகளைச் (சிரார்த்தம்) செய்து முடித்துவிட்டுத் தவம் செய்ய முற்பட்டார். ரைவ்ய முனிவர் ஆசிரமத்துக்கு ஒருநாள் முனிவர் சனத்குமாரர் வந்தார். அவர் திடீரென்று தன் உருவை மிகவும் பெரிதாக்கிக் கொண்டு தோற்றம் அளித்தார். நீ ஏன் என்னைப் பாராட்டினீர் என்று ரைவ்ய முனிவர் பிரம்மபுத்திரன் சனத்குமாரரைக் கேட்டார். அதற்கு அவர் நீ கயா சிரார்த்தம் செய்தாயல்லவா அதற்காக என்றார். அடுத்து சனத்குமாரர் கயாசிரார்த்த மகிமை பற்றி ரைவ்ய முனிவருக்கு விளக்க ஒரு கதை கூறினார். இது விசால மன்னனின் கதை.

9. விசால மன்னன்

விசால மன்னன் செல்வ வளங்களுடன் மகிழ்ச்சியாக வாழந்து வந்தான். எனினும், அவனுக்குப் புத்திரப்பேறு ஏற்படாத குறை இருந்தது. அவனுக்குப் பெரியோர்கள், கயாவுக்குச் சென்று மறைந்த முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்யுமாறு அறிவுரை பகர்ந்தனர். அவ்வாறே கயாவுக்குச் சென்று மதச்சடங்குகள் முடிந்தவுடன் அவன் முன் மூன்று உருவங்கள் தோன்றின. ஒன்று வெள்ளையாகவும், மற்ற இரண்டும் சிவப்பு, கருப்பு நிறங்களிலும் தோன்றின. வெள்ளை வண்ண உருவம் ரைவ்யனின் தந்தை; அவர் பாவம் எதுவும் செய்யாததால் தூய வெண்மை நிறத்தில் இருந்தார். சிவப்பு நிற உருவம் அவரது பாட்டன், கருப்பு உருவம் முப்பாட்டன் ஆகும்-அவர்கள் தீய வாழ்க்கை வாழ்ந்ததால் அதன் பலனை அனுபவிக்கின்றனர். ரைவ்யன் கயாசிரார்த்தம் அனுஷ்டித்த உடன் அவனுடைய மூதாதையர்கள் பாவங்கள் விடுபட்டு விடுதலை அடைந்தனர். இதன்மூலம் ஒருவர் கயாசிரார்த்தம் செய்வதன் மூலம் அவரது முன்னோர்கள் பாவபலன்களிலிருந்து விடுபடுகின்றனர். அது மட்டுமின்றி அத்தகைய கர்மாவைச் செய்பவனுக்குப் புண்ணியம் சேர்கிறது. எனவே ரைவ்ய முனிவர் பாராட்டப்பட்டார். சனத்குமாரர் சென்ற பிறகு ரைவ்ய முனிவர் நாராயணனைக் கதாதரன் (கதை ஏந்தியவர்) உருவில் பிரார்த்திக்க பகவான் அவன் முன்தோன்றி அவன் விரும்பிய மோட்சம் அளித்தார்.

10. வாசு மன்னன்

வாசு மன்னன் தன்னரசைத் தன் மகன் விவாசனனுக்கு அளித்து, புஷ்கரத்தீர்த்தம் அடைந்து, அங்கு புண்டரீகாக்ஷனை முன்னிட்டு ஒரு யாகம் செய்ய யாகத்தீயிலிருந்து ஓர் உருவம் தோன்றி வாசுவின் முன் நின்று, உங்கள் ஆணை என்ன எனக்கேட்டது. வாசு அந்த உருவத்தைப் பார்த்து நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என வினவினான். அதற்கு அவ்வுருவம் கூறிய வரலாறு கீழே தரப்பட்டுள்ளது:

முற்பிறவியில் வாசு காசுமீர மன்னனாக இருந்தான். அவன் ஒரு சமயம் வேட்டையாடச் சென்றபோது ஒரு மானைக் கண்டு அதை அம்பெய்தி கொன்று விட்டான். அது உண்மை மானல்ல. ஒரு முனிவர் மான் வடிவில் திரிந்து கொண்டிருந்தார். அதை அறிந்த வாசு தான, தர்மங்களும், மற்ற சமய சடங்குகளும் செய்வதுடன் தவமும் இயற்றினான். முடிவில் வயிற்று வலியால் அவன் மரணமடைந்தான். மரணத்தருவாயில் நாராயணா என்ற பகவான் நாமத்தை உச்சரித்தான். பின்னர் யாகத்தீயிலிருந்து தோன்றிய உருவம் தான் ஒரு பிரம்மாராக்ஷசன் என்றது. வாசு மான் வடிவில் இருந்த மானை அதாவது பிராமணனைக் கொன்றதால் அது வாசு மன்னன் உடலில் புகுந்து இருந்ததாகவும், அதுவே அவனது மரணத்தறுவாயில் தண்டனையாக வயிற்றுவலி கொடுத்ததாகவும் கூறிற்று.

வாசுவின் நாராயண நாம உச்சரிப்பால் அவன் விஷ்ணு தூதர்களால் சொர்க்கம் அழைத்துச் செல்லப்பட்டான். விஷ்ணு தூதர்கள் பிரம்ம ராக்ஷசை வாசுவின் உடலிலிருந்து விரட்டி அடித்தனர். வாசு சொர்க்கலோகத்தில் பல ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்தான். மறுபடியும் அவன் காசுமீர் மன்னனாகத் திரும்பவும் அந்த பிரம்மராக்ஷசன் அவன் உடலில் பிரவேசித்தது. எனினும் வாசு, புண்டரீகாக்ஷனை தியானித்து அவன் நாமங்களை உச்சரித்து யாகம் செய்ய அது விலகியது. இப்போது அதன் பாவங்கள் புண்டரீக நாமங்களைக் கேட்டதன் பயனாக விலகிவிட்டன. அது மறுபடியும் ஒரு தர்மவான் ஆயிற்று. வாசு, பிரம்மராக்ஷசனால் தன் முற்பிறவிகளைப் பற்றி அறிய நேர்ந்ததால் அதற்கொரு வரம் அளித்தான். அதாவது அது தர்மவியாதன் என்ற வேடனாகப் (தருமவானான வேடன்) பிறக்கும்படியான வரம். பின்னர் வாசு வைகுந்தப் பிராப்தி அடைந்தான்.

11. நாரதரின் முற்பிறவி

ஒரு சமயம் நாரதர் பிரியவிரதனைக் காணச் சென்றார். அவனும் முனிவரை வரவேற்று உபசரித்துப் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். அவற்றிற்கெல்லாம் அவர் விடை அளித்த பிறகு சில அபூர்வ, அதசிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள் என்று வேண்டினான். நாரதர் கூறலானார். சுவேதத்வீபத்தில் ஓர் ஏரி உள்ளது. நாரதர் அங்குச் சென்றபோது அந்த ஏரி மலர்ந்த கமலங்களுடன் விளங்கியது. மலர்களுக்கு அருகில் ஓர் அழகிய பெண்மணி அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அவளை யாரென்று அவர் கேட்டார். அதற்கு அவள் பதிலளிக்காமல் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பெண்ணின் உடலிலிருந்து மூன்று ஒளி உருவங்கள் தோன்றி மறைந்தன. நாரதர் திகைத்து நின்றார். அவள் யாரென்று நாரதர் மறுபடியும் கேட்டார். அதற்கு அவள் தான் சாவித்திரி என்றும், வேதங்களின் தாய் என்றும் கூறினாள். நாரதரால் அவளை அறிய முடியாதென்றும், அவருடைய அறிவை எல்லாம் தான் கொள்ளை அடித்து விட்டதாகவும் கூறினாள். தன்னிலிருந்து வெளியேறிய மூன்று உருவங்களும் மூன்று வேதங்கள் ஆகும். (மூன்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.)

அப்போது நாரதர் தன் அறிவை எப்படி திரும்பப் பெறுவது, சாவித்திரி நாரதரை அந்த ஏரியில் குளிக்குமாறும், அதனால் அறிவைத் திரும்பப் பெறுவது மட்டுமின்றி, முற்பிறவி செய்திகளும் அறிய முடியும் என்றாள். நாரதர் அவ்வாறே அதில் நீராடி இழந்த அறிவையும், முற்பிறவி பற்றியும் அறிந்திட்டார். பிரியவ்ரதன் அவரை முற்பிறவி வரலாறு கூறுமாறு கேட்டான்.

நாரதர் முற்பிறவியில்...

சத்திய யுகத்தில் நாரதரின் முற்பிறவியில் அவர் பெயர் சாரஸ்வதன் ஆகும். சாரஸ்வதன் அவந்தியில் அமைதியாக வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் அமைதியாக உட்கார்ந்திருந்த போது வாழ்க்கை நிலையில்லாதது, பயனற்றது என்று உணர்ந்தான். அனைத்தையும் புத்திரர்களிடம் ஒப்படைத்துவிட்டு தியானம் செய்ய எண்ணினான். அவ்வாறே செய்து நாராயணனைக் குறித்து தவம் செய்ய பகவான் அவன் முன் தோன்றிட தன்னை அவருள் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டிட, பகவான் நீ இன்னும் வாழ வேண்டும் உன்னுடைய பக்தியும், முன்னோர்களுக்கு அளித்த நீரும் என்னை மகிழ்வித்தன. உனக்கு இன்று நாரதன் என்ற பெயர் அளித்து ஆசிர்வதிக்கிறேன் என்றார். (நாரதர்-நீர் அளித்தவர்)

பகவான் அருளி மறைந்துவிட்டார். சாரஸ்வதன் தவத்தைத் தொடர்ந்தான். அவன் மரணமடைந்து பிறகு பிரம்மலோகத்தில் இருந்து பின்னர் பிரம்ம புத்திரன் நாரதனானான். அடுத்த நாரதர், பிரியவிரதனுக்கு விஷ்ணுவின் புகழ் கொண்ட ஒரு துதியைக் கற்பித்தார். அது பின்வருமாறு.

எண்ணற்ற கண்கள் கொண்டவர்க்கு வணக்கம்!
கணக்கற்ற கைகால்கள் உடையவர்க்கு வணக்கம்!
சத்திய யுகத்தில் வெள்ளை உடையிலும், அடுத்த
திரேதா யுகத்தில் குருதிரத்த வண்ணத்திலும், பிறகு
துவாபரயுகத்தில் மஞ்சள்நிற உருவிலும், பின்னர்
கலியுகத்தில் கரிய நிறம் உடையவனாகும் மாறிய
(வண்ணம் நிறைந்த கண்ணனுக்கு வணக்கம்)
வாயிலிருந்து பிராமணர்களையும்
புஜங்களிலிருந்து க்ஷத்திரியர்களையும்
தொடைகளிலிருந்து வைசியர்களையும்
பாதங்களிலிருந்து மற்ற இனத்தவர்களையும்
(படைத்த பிரம்மனுக்கு வணக்கம்)
வாளும், கேடயமும், கதையும், கமலமும்
நாளும் ஏந்திடும் நாரணர்க்கு வணக்கம்.

12. வைஷ்ணவி தேவி

யுகமுடிவில் அண்டம் அழியும் போது பூலோகத்தில் மக்களும், புவர் லோகத்தில் பறவைகளும், சுவர்லோகத்தில் நெறிமிக்கவர்களும், மெச்சத் தக்கவர்களும், மஹர் லோகத்தில் பெரிய ரிஷிகளும் இருந்தனர். பூமியில் வைஷ்ணவிதேவி மணம் செய்து கொள்ளாமல், மந்தர மலையில் தியானத்தை (தவத்தை) ஆரம்பித்தாள். ஒருநாள் அவளது ஒன்றிய மனவமைதி குலைந்தது. இதனால் லக்ஷக்கணக்கான பெண்கள் தோன்றினர். அவர்களுக்காக தேவி ஓர் அரண்மனையை அமைத்திட அதிலிருந்து, நட்சத்திரங்களிடையே சந்திரன் ஆண்டு வந்தாள். பிரம்மலோகம் சென்று கொண்டிருந்த நாரதன் அழகிய அரண்மனையையும், வைஷ்ணவிதேவி, மற்ற பரிவாரங்களையும் கண்டு நின்றார். அவர் மனதில் மகிஷாசுரன் நினைவு வந்தது. அவனை அழிக்கும் வழியும் தோன்றியது.

நாரதன் மகிஷாசுரன் வசிக்கும் பெருநகர்க்குச் சென்று, அவனைக் கண்டு வைஷ்ணவி தேவியின் அழகைப் பற்றி விவரித்தார். அதுகேட்ட அசுரன் அவளே தனக்கேற்ற மனைவி என்று அவன் அவளை மணக்க விரும்புவதாகக் கூறி சம்மதம் பெற்றுவர, ஒரு தூதுவனை அனுப்பினான். அவனுடன் ஒரு சேனையையும் அனுப்பிவைத்தான். சேனைத்தலைவன் விரூபாஷன். தேவர்களும் வைஷ்ணவி தேவிக்கு உதவியாக வந்தனர். எனினும், அரக்கனே வென்றான். அடுத்து, வித்யுத் பிரமா என்னும் தூதுவன் வைஷ்ணவியிடம் சென்று அரக்கனின் எண்ணத்தைக் கூறினார். அத்துடன் மகிஷாசுரன் வரலாற்றையும் எடுத்துரைத்தான். பயங்கர அசுரன் விப்ரசித்தியின் மகள் மஹிஷ்மதி என்ற அழகி. அவள் ஒரு நாள் ஓர் அழகிய பள்ளத்தாக்கில் உலாவச் சென்றாள். அங்கு ஓர் ஆசிரமத்தைக் கண்டாள். அதைத் தான் பெற எண்ணி அதிலுள்ளவரை வெருளச் செய்து அகற்ற எண்ணி பெண் எருமை வடிவில் அதனுள் நுழைய, உண்மையை அறிந்த முனிவர் அவளை நூறாண்டுகாலம் எருமையாக இருக்கச் சபித்தார்.

மஹிஷ்மதி தன் தவறுக்கு மனம் வருந்தி முனிவரிடம் மன்னிப்புக் கேட்டுச் சாபத்தை நீக்க அருள வேண்டினாள். ஆனால், முனிவர் சாபத்தின் கடுமையைக் குறைத்து அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் வரையில் பெண் எருமையாக இருக்குமாறு செய்தார். இந்தப் பெண் எருமை நர்மதைக் கரையில் வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகள் கழிய அந்நதி நீர் சிந்துத்தீப முனிவரால் சக்தி வாய்ந்ததாயிற்று. இந்தப் பெண் எருமை அந்நதியின் புண்ணிய நீரில் குளித்தது. அதற்கு ஓர் மகன் பிறந்தான். அவனே மகிஷாசுரன். இந்த மகிஷாசுரனே இப்போது வைஷ்ணவி தேவியை அடைய தூது அனுப்பினான். ஆனால், வைஷ்ணவி தேவியோ தானோ, மற்றும் தன் தோழியர்களில் எவருமோ, மஹிஷாசுரனை மணக்கும் பேச்சுக்கு இடமே இல்லை என்றாள். இதனால் வைஷ்ணவி தேவியும் அவள் தோழியரும் அரக்கரின் சேனையை எதிர்க்க மாபெரும் போர் நடந்தது. தேவி பத்து காளிகளும், அவற்றில் ஆயுதங்களும் கொண்டு போரிட்டாள்.

மகிஷாசுரன் தானே போரில் போர் புரியவர, நெடுநாட்கள் வரை போர் நிகழ இறுதியில் மகிஷாசுரன் தோற்று ஓடலாயினான். அத்தேவியும் அவனைத் தொடர்ந்து சென்று ஷதஸ்சிருங்க மலையில் மகிஷாசுரனைப் பணியச் செய்து அவன் தலையை ஈட்டியால் வெட்டினாள். அரக்கன் அருள்மிகு வைஷ்ணவி தேவியால் கொல்லப்பட்டதால் சொர்க்கவாசம் பெற்றான். தேவர்கள் துயர் நீங்கிட தேவியின் புகழைப் பலபடப் பாடித் துதித்தனர். இது தேவி மகிமை கூறும் ஸ்தோத்திரம் அதாவது துதியாகும். இதை தினமும் படித்தால் பாவங்கள் நீங்கி வெற்றி உண்டாகும். இந்த மகிஷாசுரமர்த்தன வரலாறு மார்க்கண்டேய புராணம் போன்றவற்றிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி மகிஷாசுரனைக் கொன்ற தேவி துர்க்கை எனப்படுகிறாள்.

13. ருத்ராணி தேவியும் ருரு அரக்கனும்

தேவி ருத்ராணி (துர்க்கை) நீலகிரி மலையில் தவம் செய்து கொண்டிருந்தாள். அவ்வமயம் கடல் நீருக்கு நடுவில் அரண்மனை கட்டிக் கொண்டு அட்டகாசம் புரிந்து வந்தான் அரக்கன் ருரு. அவன் கடின தவம் செய்து பிரம்மனிடம் ஒரு வரம் பெற்றான். அதன்படி அவன் இறந்தாலும் அவன் தலை தரையில் விழக்கூடாது என்ற வரம்பெற்ற அதன் மூவுலகையும் வென்றான். இந்திரனைத் துரத்தி அமராவதி நகரைக் கைப்பற்றினான். இந்திரனும், மற்ற தேவர்களும் நீலகிரி மலையை அடைந்து தேவி ருத்ராணியைத் துதி செய்தனர். அப்போது அன்னை ருத்ராதேவி, அவர்களைக் காத்திடுவதாக வாக்களித்தாள். அவள் உடனே கர்ச்சித்து பயங்கரமாகச் சிரிக்க பயங்கர தேவதைகள் தோன்றினர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அரக்கர்களுக்கும், தேவியின் தோழியர்களுக்கும் இடையே பயங்கரப் போர் நடந்தது. அரக்கர்கள் எதிர் நிற்க முடியாமல் தோற்று ஓடினர். அன்னை ருத்ராணி அரக்கன் ருருவைத் தானே கொன்றாள். அவனுடைய தலையைத் திரிசூலத்தில் தாங்கி தூக்கி நின்றாள். இவ்வடிவில் தேவிருத்ராணி சாமுண்டி எனப்பட்டாள்.

தேவர்கள் கிரிபிரகாரஸ்துதி கொண்டு தேவியைப் புகழ்ந்து பாடினர். இந்த மந்திரத்தைக் கொண்டு கலைமகள், வைஷ்ணவிதேவி, ருத்ராணி தேவியரைத் துதி செய்து மகிழ்விக்கலாம். அவ்வாறு செய்தால் தடைகள் நீங்கும். பாவங்கள் தொலையும். ருத்ராணி, வைஷ்ணவிதேவி உருவங்களில் சிவபெருமானும் பிரசன்னமாகி இருக்கிறார்.

14. நக்ன கபாலிக விரதம்

ருத்திரனைத் திருப்தி செய்ய மூன்று முக்கிய விரதங்கள் உள்ளன. அவை கபாலிக விரதம், பாப்ரவ்யவிரதம், சுத்த சைவ விரதம் என்பன. கபாலிக விரதம் பற்றி இனிக் காண்போம். பிரம்மா, சிவன் இருவருக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஆனால், பிரம்மா சிவனைத் தோற்றுவித்த பிறகு ருத்திரனைத் தோள்களில் தூக்கிக் கொண்டு ஐந்தாவது தலையில் உள்ள வாயால் ருத்ரனைத் துதி செய்ய அதில் கபாலி என்ற பெயர் இருந்தது. தன்னை அவமதிப்பதற்காகவே பிரம்மா, கபாலி என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்ற கோபம் கொண்ட ருத்திரன் பிரம்மாவின் ஒரு தலையை இடது கைபெருவிரலால் அகற்றினான். பிரம்மா நான்முகன் (சதுர்முகன்) ஆனான். அகற்றப்பட்ட அத்தலை சிவனின் கையிலேயே ஒட்டிக் கொண்டது. பலவகை முயற்சிகளுக்குப் பிறகு ருத்திரன் பிரம்மாவிடமே வந்து தன்கையை விட்டு அத்தலை அகல உபாயம் கேட்டார். பிரம்மா ருத்திரனை கபாலிக விரதம் அனுஷ்டிக்குமாறு கூறினார். (இதனால் சிவன் பிரம்ம ஹத்ய தோஷம் பெற்றார்.)

மந்தர மலைக்கு ருத்திரன் சென்று அத்தலையை மூன்று பகுதியாக்கினார். தலைமுடியை முப்புரியாக்கித் தன் உடலில் பூணூலாகத் தரித்துக் கொண்டார். பல புனிதத் தலங்களுக்குச் சென்று புனித நீராடித் தியானம் செய்யலானார். இறுதியில் அவர் அப்பூணூலையும், மற்ற உடைகளையும் அகற்றி நிர்வாணமானார் (அ) நக்னமானார். இந்நிலையில் ருத்திரன் காசியை (வாரணாசியை) அடைந்தார். அங்கு கங்கை நீரில் மூழ்கி எழ அவர் கையிலிருந்த கபாலம் விடுபட்டது. அத்தகைய பெருமை பெற்றது வாரணாசி நகரம். அப்போது பிரம்மா தோõன்றி ருத்திரன் ஆற்றிய விரதம் இனி நக்ன கபாலி விரதம் எனப்படும் என்றார். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் கோரியவை கிடைக்கும். பிரம்மஹத்ய தோஷமும் நீங்கும்.

15. சத்தியதபன்

வராகம் பிருதிவிக்கு சத்தியரூபன் வரலாற்றைக் கூறியது. இமயமலைக்கு வடபால் சத்தியரூபன் தவம் செய்து கொண்டிருக்கும் போது ஒருநாள் மரத்தைச் செதுக்கிக் கொண்டிருக்கும்போது ஒரு விரல் வெட்டப்பட்டு விட்டது. அதிலிருந்து புகை வந்தது. குருதியில்லை. மேலும் அறுந்த விரலை அதன் இடத்தில் வைத்திட மறுபடியும் ஒட்டிக்கொண்டது. சத்தியதபனின் ஆசிரமம் அருகில் ஒரு கின்னர தம்பதியர் இருந்தனர். சத்தியதபனின் சக்தியை கின்னர தம்பதிகள் இந்திரனிடம் தெரிவித்தனர். அவருடைய பெருமையை, சக்தியை சோதிக்க இந்திரனும், விஷ்ணுவும் அவரிடம் வந்தனர். விஷ்ணு அம்பால் அடிக்கப்பட்டு உடலில் அம்பு செருகி இருக்க சத்தியதபரின் ஆசிரமத்தினருகில் ஒரு பன்றி திரிய ஆரம்பித்தது. இந்திரன் வேடன் வடிவில் அங்கு வந்தடைந்தான். அவன் சத்திய தபரிடம் தான் ஒரு பன்றி மீது அம்பெய்தியதாகவும், அது தப்பி ஓடி வந்ததாகவும், அதனைக் கொன்றால் தான் தன் குடும்பம் வாழும் என்று கூறினான்.

சத்தியதபன் ஒரு குழப்பத்தில் சிக்கினான். பன்றியைக் காப்பாற்றுவதா? வேடனின் குடும்பத்தைக் காப்பாற்றுவதா? என்று குழம்பி, சிந்திக்க ஆரம்பித்தான். கண்கள் பார்க்க பேச அல்ல, வாய் பேச பார்க்க அல்ல தன் கண்கள் பன்றியைக் கண்டன. ஆனால் அது பற்றி அதனால் சொல்ல முடியாது; வாயினால் வராகம் பற்றிக் கூறுவதென்றால் வாய் வராகத்தைக் காணவில்லை. எனவே அவன் வேடனாக வந்த இந்திரன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மவுனம் சாதித்தான். அவனுடைய முடிவை அறிந்த விஷ்ணுவும், இந்திரனும் தமது உண்மை வடிவைக் காட்டி சத்தியதபனை வாழ்த்தினர். சத்திய தபனும் அவனது குரு அருணியும் முத்தியடைந்து பிரம்மனுடன் ஒன்றினர்.


© Om Namasivaya. All Rights Reserved.