வளையாபதி

சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் இவ்வைந்து நூல்களையும் ஐம்பெருங்காப்பியம் என்று கூறுவர். இவ்வாறு இவற்றைக் கூறுவதனை நன்னூல் மயிலைநாதருரையிற் காணலாம். இவ்வைம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழும் வளையாபதி என்னும் நூல் இக்காலத்தே கிடைத்திலது. அஃது இனிக் கிடைக்கலாம் என்னும் நம்பிக்கையும் இல்லை. ஆயினும் அதனுடைய செய்யுள் சிலவற்றைப் படைக்காலத்து உரையாசிரியப் பெருமக்கள் தத்தம் உரைக்கும் மேற்கோளாக எடுத்தாண்டிருக்கின்றனர். எனவே இவ்வாற்றான் அவ்வளையாபதிச் செய்யுள் ஒரு சில நமக்குக் கிடைத்துள்ளன. இன்னும் புறத்திரட்டு என்னும் நூலைத் தொகுத்த சான்றோர் இவ்வளையாபதிக் காப்பியத்தினின்றும் அறுபத்தாறு செய்யுள்களை அந்நூலின்கட் சேர்த்துள்ளனர். இவ்விருவகையானும் இற்றை நாள் நம் கைக்கெட்டியவை எழுபத்திரண்டு செய்யுள்களேயாம்.

மேற்கூறப்பட்ட செய்யுள்களினின்றும் இந்நூல் ஆருகத சமயம்பற்றி எழுந்த நூல் என்பது புலப்படுகின்றது. இஃதன்றி இந்நூல் இயற்றிய புலவர் பெருமான் யார் என்றாதல், இந்நூலிற் கூறப்பட்ட வரலாறு அல்லது கதை யாது என்றாதல் யாம் அறிந்துகோடற்கு வழியில்லை. கிடைத்திருக்கின்ற செய்யுள்களின் பண்புகொண்டு நோக்குமிடத்து இதனை இயற்றியவர் புலமைப் பண்புமிக்க நல்லிசைப் புலவர் என்று திண்ணமாக விளங்குகின்றது. ஒப்பற்ற புலவராகிய ஒட்டக்கூத்தர் இயற்றியருளிய தக்கயாகப்பரணியின் உரையாசிரியர் ஓரிடத்தே இவர்(ஒட்டக் கூத்தர்) வளையாபதியை நினைத்தார் கவியழகு வேண்டி என்று குறிப்பிட்டிருத்தலும் இவ்வளையாபதி செய்யுளழகு நிரம்பிய இனியதொரு காப்பியம் என்பதனை வலியுறுத்துகின்றது.

இனி, அடியார்க்குநல்லார் இளம்பூரணர் முதலிய உரையாசிரியப் பெருமக்கள் இவ்வளையாபதிச் செய்யுளை மேற்கோளாக எடுத்திருப்பதனாலும் இந்நூல் தமிழ்மரபு இழுக்காதியன்றதொரு நல்லிலக்கியம் என்பதனை அறிவுறுத்துகின்றது; சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இவ்வளையாபதியை ஐந்திடங்களிலே குறிப்பிட்டிருக்கின்றனர். அரும்பதவுரையாசிரியர் கானல்வரியல் 12 ஆம் செய்யுள் அரும்பதவுரையில் நீள்கடலிடை யலவன் வழியழவா என வளையாபதி யினுங் கூறினர், எனவும்,அடியார்க்கு நல்லார் கனாத்திறமுரைத்த காதையில் 14-5: விளக்கத்தில் பாசண்டம்-தொண்ணூற் றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை; என்னை? பண்ணாற் றிறத்திற் பழுதின்றி மேம்பட்ட, தொண்ணூற் றறுவகைக் கோவையும் வல்லவன், விண்ணா றியங்கும் விறலவ ராயினும் கண்ணாறி நோக்கி கடுநகை செய்வான் என்றார், வளையாபதியினுமாகலின் எனவும், ஆய்ச்சியர் குரவையில் 11 ஆம் அடி விளக்கத்தில் கொன்றைப் பழக்குழற் கோதையர் என்றார் வளையாபதியினும் எனவும் 20 ஆம் அடியுரை விளக்கத்தில் அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகல், கன்றின் குரலும் கறவை மணிகறங்கக் கொன்றைப் பழங்குழற் கோவலராம்பலும் ஒன்றல் சுரும்பு நரம்பென வார்ப்பவும் என வளையாபதியுள்ளும் கருவி பண் கூறுதலானும் எனவும் கூறியிருத்தல் உணர்க.

இனி, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இளம்பூரண அடிகளார் 407 ஆம் நூற்பாவிற்கு உலகம்.....என்றியான் என இவ்வளையாபதிச் செய்யுளை மேற்கோளாகக் காட்டுகின்றார். யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர் இச் செய்யுளையும் நீல நிறத்தனவாய்......நெஞ்சே எனவும் வித்தகர்.......நெஞ்சே எனவும் வரும் செய்யுள்களையும் மேற்கோளாக எடுத்துள்ளனர்.

இனி திருக்குறளில் ஆசிரியர் பரிமேலழகரும்,
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல மாறு படும்    (குறள்-822)

என்னுந் திருக்குறள் விளக்கவுரையின்கண் அவர் மனம் வேறுபடுதல் பெண்மனம் பேதின் றொருப்படுப்பே னென்னும், எண்ணிலொருவன், என்பதனானும் அறிக என இவ்வளையாபதிச் செய்யுளை மேற்கோள் காட்டலுமுணர்க.

மேற்கூறியவற்றால் இவ்வளையாபதி என்னும் பெருங்காப்பியத்தைத் தமிழகத்துச் சான்றோர் அனைவரும் பெரிதும் விரும்பிப் பயின்று வந்தனர் என்பது விளங்கும்.

புறத்திரட்டினைத் தொகுத்த புலவர் காலம் வரையில் இவ்வளையாபதி இத்தமிழகத்தில் முழுவுருவத்துடன் இருத்திருத்தல் வேண்டும் என்று தோன்றுகின்றது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நூல் முழுவதும் கிடைக்கப் பெறாமை தமிழரின் தவக்குறைவே என்பதில் ஐயமில்லை. ஆயினும் இற்றை நாள் கிடைத்துள்ள இச் செய்யுள்களையேனும் பாதுகாத்து நந்தம் வழித் தோன்றல்களுக்கு வழங்குவது நமது கடமையாகும் என்பது கருதியும் அரிதுணர் செய்யுள்களாகிய இவற்றிற்கு உரையும் எழுதி வெளியிடுதல் தமிழர்க்கு ஆக்கமாம் என்று கருதியும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் அடியேனைக் கருவியாகக் கொண்டு அப்பணியை இந்நூல் வெளியீட்டின் வாயிலாய் இனிதே நிறைவு செய்கின்றனர்.

மூலமும் உரையும்

கடவுள் வாழ்த்து

உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலகம் ஆய திறல் அறி வன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்.  1

(இச் செய்யுள் தொல்காப்பியத்திற்கு இளம்பூரண வடிகளார் வகுத்த உரையின்கட் கண்டது.)

(இதன் பொருள்) உலகம் மூன்றும்-மூன்றுலகத்துள்ளும் வாழும் சான்றோரனைவரும்; ஒருங்கு உடன் ஏத்தும்-ஒருசேர வாழ்த்தி வணங்குதற்குக் காரணமான; மாண் திலகம் ஆய-மாட்சிமை முற்றிவினையுடைய அருகக் கடவுளின்; அடி-திருவடிகளை; தொல்வினை நீங்குக என்று-என்னுடைய பழவினைகள் துவரக்கெடுவனவாக என்று கருதியும்; யான் வழுவுஇல் நெஞ்சொடு-யான் காம முதலிய குற்றங்களில்லாத தூய நெஞ்சத்தோடிருந்து; வாலிதின் ஆற்றவும்-அதற்குக் காரணமான நோன்பினைத் தூய்தாகப்பண்ணவும்; தொழுவல்-என் மனமொழி மெய்களாலே தொழுது வழிபடுவேன் என்பதாம்.

(விளக்கம்) மூன்றுலகத்தும் வாழும் நல்லோர் ஒருங்கே வாழ்த்தி வணங்குதற்குத் காரணமான பெருஞ் சிறப்புடைய அருகக் கடவுளின் திருவடிகளை அடியேன் பழவினை கெடும் பொருட்டும், அவைகெடும் பொருட்டுக் குற்றந் தீர்ந்த நன்னர் நெஞ்சத்தோடிருந்து தூய்தாக அவன் கூறிய நல்லறங்களை மேற்கொண்டொழுகவும் திருவருள் கூர்தல் வேண்டும் என்று வணங்குகின்றேன் என்றவாறு.

இஃது அருக சரணம்

மூன்றுலகம் என்பது மேலுலகும் நிலவுலகும் கீழுலகுமாம். இவற்றை ஒளியுலகம் நிலவுலகம் இருள் உலகம் என்ப. உலகம் ஈண்டு உயிர்களின் மேற்று என்னை? ஏத்துதற்குரியன அவைகளோயாதலின் என்க.

இருள் உலகத்தாரும் அருகனை வணங்குவரோ என்னின் வணங்குவர். என்னை? நரகவுலமாகிய அதன்கண் வீழ்ந்துழல்வோர்க்கும் அவனடிகளை யன்றிக் களைகண் பிறிதில்லையாகலின், அங்கும் நல்லறிவுபெற்று வணங்குவர் என்க.

நரகத்துழலும் உயிர்கள் நல்லறிவு பெற்றுத் தந் தீவினைக் கிரங்கி அறமுதலியவற்றைச் செய்ய அவாவுவர் என்பதனை,

நகரத்தே கிடந்து நலிவோர் கூற்றாக வருகின்ற,

தேடிப் பொருளைச் சிறுதொழிற்கே
செலுத்தி யுணர்ச்சி தெரியாமல்
பாடிப் பதருக் கிறைத்ததெல்லாம்
பலித்த தெமக்கீங் கென்பர்சிலர்
கேடிப் படிவந் தெமைச்சூழக்
கெடுத்த பாவி யுலகிலின்ன
நாடிப் பிறக்க விடினுமங்ங
னுடோ மென்று சிலர்சொல்வார்

எனவும்,

என்று மிறவோ மென்றிருந்தோ
மிறந்து படுவ தீதறிந்தால்
அன்று படைத்த பொருளையன்றே
யருள்வோ மறையோர்க் கென்பர்சிலர்
சென்று வரவாங் கெம்மையின்னஞ்
செலுத்திற் புதைத்த திரவியத்தை
யொன்று மொழியா தறம்புரிந்திங்
கோடி வருவோ மென்பர்சிலர்

எனவும்,

பிறந்த வுடனே துறந்துசுத்தப்
பிரம முணர்ந்து பிறப்பதனை
மறந்திந் நரகத் தெய்தாமை
வருமோ நமக்கு மென்பர்சிலர்
பிறந்து நிரையத் தழுந்தியிட
ரிவ்வா றுழப்ப தறியாமற்
சிறந்த விவேகர் பெருமான்நற்
செயலைத் தவிர்ந்தோ மென்பர்சிலர்

எனவும் வரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும் உணர்க.

இவ்வாறு தந்தீவினைக் கிரங்கு நரகர் அதன் தீர்வுகருதி இறைவன் அடிகளை ஒருதலையாக ஏத்துவர் என்க.

திலகம்-நெற்றிச்சுட்டி. அறிஞர் தம் நெற்றியிலிடுதற்கியன்ற திலகம் போன்ற அடிகள் எனினுமாம். திறல் அறிவன்-முற்றறிவினை உடைய இறைவன்; இதனைக் கேவலஞானம் என்பர். மூவுலகத்துமுள்ள உயிர் முதலிய பொருள்களின் முக்கால நிகழ்ச்சிகளையும் ஒரே சமயத்தில் ஒருங்கே அறியும் ஆற்றலுடைமையின் இறைவன் அறிவினைத் திறல் அறிவு என்றார்.

உலகுணர் கடவுள் என்று திருத்தக்க தேவரும்(சீவக-2713) உலகம் மூன்று மொருங்குணர் கேவலத் தலகிலாத அநந்த குணக்கடல் என்று (கடவுள் வாழ்த்து) யசோதரகாவியமுடையாரும் ஓதுத்லுணர்க.

இனி, உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் திலகமாயதிறலறிவன் அடி என்று பொதுவினோதியதன்றி அருகன் என்னாமையின் அருக்க கடவுளின் அடிகள் என்றுரை கூறியதென்னையோ? எனிற்(சமண சமயத்துப் பேராசிரியர் உரை கூறுமாறு) கூறுதும்:-

உலகத்துச் சான்றோரால் வணங்கப்படுபவர் இன்னாசெய்யாமையும், பொய் கூறாமையும், கள்ளாமையும் காமமில்லாமையும் பற்றின்மையும் முதலாகிய குணங்கள் உடையார் அல்லரோ. இக்குணங்கள் முழுதும் உடையான் அருகக்கடவுளேயன்றி வேறு சமயக்கணக்கர் கூறும் இறைவர்க் கெல்லாம் இக் குணங்களின்மையான் உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்தும் மாண் திலகம் ஆய திறல் அறிவன் என்பது அருகக் கடவுளுக்கே பொருந்துவதாயிற்று என்க.

இனி, இறைவன் அடிவணங்குதலின் குறிக்கோள்,வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றலே ஆதலின் அதனையே குறித்தார். வழுவில் நெஞ்சம் பெறுதற்கு இருள்சேர் இருவினையும் அகலுதல் இன்றியமையாமையின் தொல்வினை நீங்கவும் என்றார். தொல்வினை நீங்க என்றும் எனல் வேண்டிய எண்ணும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது.     (1)

சாது சரணம்

2. துக்கந் துடைக்கும் துகளறு காட்சிய
நிக்கந்த வேடத் திருடி கணங்களை
ஒக்க வடிவீழ்ந் துலகியல் செய்தபி
னக்கதை யாழ்கொண் டமைவரப் பண்ணி.

(இதன் பொருள்). துக்கந் துடைக்கும் துகள் அறு காட்சிய-பிறவிப் பெருந்துன்பத்தைத் துவரப் போக்குதற்குக் காரணமான குற்றமற்ற மெய்க்காட்சியையுடைய; நிக்கந்த வேடத்து இருடிகணங்களை-பதினேராங்குணத்தானத்து நிற்கு நிக்கந்த குல்லகர் என்னும் துறவோர் குழுவினை, ஒக்க அடிவீழ்ந்து-மன மொழி மெய்கள் ஒருசேரத் திருவடிகளிலே வீழ்ந்து; உலகியல் செய்தபின்-வணங்கி. உலகத்துச் சான்றோர் செய்யும் கடவுள் வாழ்த்து வகையினைச் செய்தபின்னர்; யாழ் கொண்டு-யாழினைக் கைக்கொண்டு; அமைவரப் பண்ணி-அதனை ஆராய்ந்து சுதி கூட்டிய பின்னர் என்க.

(விளக்கம்) இச் செய்யுள் சிலப்பதிகார வரையிற் காணப்பட்டது.
(சிலப்-9;13. அடியார்க்கு நல்லார் உரைமேற்கோள்) துக்கம்-பிறவித்துயர். துகள்-அழுக்கு. அவை, காமவெகுளி மயக்கம். காட்சி-மெய்காட்சி. இருடிகணம்-துறவோர் குழு. உலகியல், உலகோர் செய்யும் முறைமை. இச் செய்யுள் யாழிசைக்கும் ஒருத்தியின் செயலைக் கூறுகின்றது. இவள் வரலாறு யாதும் தெரிந்திலது. அக்கதை என்று ஆசிரியர் சுட்டும் கதையும் இன்னதென்று தெரிந்திலது. யாழைக் கைக் கொண்டு அமைவரப் பண்ணி என்க. அமைவரப் பண்ணுதலாவது.
சுதி கூட்டுதல். இதனை,

...........குற்றநீங்கிய யாழ்கையிற் றொழுது வாங்கிப்
பண்ணல் பரிவட்டணை யாராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
தண்ணிய குறும்போக் கென்று நாட்டிய
எண்வகையா லிசையெழீஇப்
பண்வகையாற் பரிவு தீர்ந்து
மரகத மணித்தாள் செறிந்த மணிக்காந்தண் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்த லுந்த லுறழ்தல்
சீருட னுருட்ட றெருட்ட லள்ளல்
ஏருடைப் பட்டடையென விசையோர் வகுத்த
எட்டுவகையி னிசைக்கர ணத்துப்
பட்ட வகைதன் செவியி னோர்த்து

எனவரும் சிலப்பதிகாரத்தானும் உணர்க(7:4-16)

இனி, இச்சாதுக்களை, பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற. கோதறு குணங்கள் பெய்த கொள்கலம் அனைய ராகிச் சேதியின் நெறியின் வேறு சிறந்தது சிந்தை செய்யாச், சாதுவர் அன்றி யாரே சரணமக் குலகி னாவார் என்று யசோதர காவியமுடையாரும்(56) பாடிப் பரவுதல் உணர்க.      (2)

(கீழ்வருஞ் செய்யுளிரண்டும் யாப்பருங்கல விருத்தியிற் காணப் பட்டன.)

நெஞ்சறிவுறூஉ

3. நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து
கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே
கோலங் குயின்ற குழலுங் கொழுஞ் சிகையுங்
காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே
காலக் கனலெரியின் வேவன கண்டாலுஞ்
சால மயங்குவ தென்வாழி நெஞ்சே.

(இதன் பொருள்) நெஞ்சே-என்னெஞ்சமே நீ; நீல நிறத்தனவாய் நெய்கனிந்து-நீல நிறமுடையனவாய் நெய்ப்புமிக்கு; போது அவிழ்ந்து-சூட்டப்பட்ட மலர்கள் மலரப்பட்டு; கோலம் குயின்ற குழல்-ஒப்பனை செய்யப்பட்ட அழகிய கூந்தல் என்று மகளிர் கூந்தலைப் பாராட்டுகின்றனை; கோலம் குயின்ற குழலும்-அவ்வாறு ஒப்பனை செய்யப்பட்ட அக் கூந்தலும்; கொழுஞ்சிகைழுயும்-அதனாலியன்ற கொழுவிய கொண்டையும்; காலக் கனல் எரியின்வேம்-ஈமத்தீயாகிய நெருப்பின்கண் வெந்தழியு மல்லவோ?; காலக் கனல் எரியன்-அவ்வாறு ஈமத்தீயின்கண்; வேவன கண்டாலும்-வெந்தழிவனவற்றை நீ கண்கூடாகக் கண்டுவைத்தும்; சால மயங்குவது என்-அவற்றினியல்போராது பெரிதும் மயங்குவதற்குக் காரணந்தான் என்னையோ? வாழி நெஞ்சே -நீ வாழ்வாயாக!

(விளக்கம்) நெய்கனிதல்-நெய்ப்புமிகுதல். போது-மலர். கோலம் ஒப்பனை. குயின்ற-செய்த. வாழி: அசை. சிகை-கொண்டை. காலக் கனல்-ஊழித்தீ; ஈண்டு ஈமத்தீ.

நெஞ்சே நீ மகளிருடைய கூந்தலையும் அதன் ஒப்பனையும் கண்டு பெரிதும் காமுற்று மயங்குகின்றனை!; இத்தகைய கூந்தல்களை நாள்தோறும் அழல்வாய்ச் சுடலை தின்னைக் கண்டிருப்பா யல்லையோ? அங்ஙனம் கண்டிருந்தும், அதன்பால் நீ இவ்வளவு மயங்குவானேன்! இம்மயக்கம் கூராரும் வேல்விழியார் கோலாக லங்கள் எல்லாம், தேராதசிந்தையரைச் சித்தகொளும் அல்லாமல் நேராஉள் நிற்கும் நிலையுணர்ந்து நற்கருமம், ஆராய் பவருக்கு அருவருப்ப தாய் விடுமே என்பது குறிப்பு.  (3)

இதுவுமது

4. வித்தகர் செய்த விளக்கு முடிகவித்தார்
மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே
மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்க ணில்வாழி நெஞ்சே
உத்தம நன்னெறிக்கண் நின்றூக்கஞ் செய்தியேல்
சித்தி படர்த றெளிவாழி நெஞ்சே.

(இதன் பொருள்) நெஞ்சே! வாழி-என் நெஞ்சமே நீ நீடு வாழ்வாயாக!; வித்தகர் செய்த-தொழிற்றிறமையுடைய கம்மியராற் செய்யப்பட்ட; விளக்கு முடிகவித்தார்-விளக்கமுடைய முடிக்கலன் அணிந்த மன்னர்களுடைய; மத்தகம்-சிறந்த தலைகளும்; மாண்பு அழிதல் காண்-ஒரு காலத்தே அச்சிறப்பெல்லாம் அழிந்து பிறரால் இகழப்படுதலை நினைத்துக் காண்பாயாக!; மத்தக மாண்பு அழிதல் கண்டால்-அவ்வாறு அரசர்தம் தலை முதலியனவும் சிறப் பழிந்தொழிதலை ஆராய்ந்து மெய்ம்மையுணரின்; மயங்காமல் தலை சிறந்த நன்னெறியிலே நிலைபெற்று நிற்கக் கடவை; உத்தம நல்நெறியிலே நிலைபெற்று நிற்கக் கடவை; உத்தம நல்நெறிக்கண் நின்று ஊக்கஞ் செய்தியேல்-மெய்ம்மையுணர்ந்த வழி,தலைசிறந்த நல்லொழுக்கத்தின்கண் மேலும் முயன்றொழுகுவாயாயின்; சித்தி படர்தல் தெளி-நீ வீட்டுலகத்தினை எய்திய பேரின் புற்றிருத்தல் ஒருதலை என்னெஞ்சமே நீ நீடு வாழ்வாயாக! என்பதாம்.

(விளக்கம்) வித்தகர்-தொழிற்றிறமை மிக்கவர். வித்தகர் செய்த முடி, விளங்கு முடி எனத் தனித் தனி கூட்டுக. மத்தகம்-தலை. உத்தம நன்னெறி என்றது. நல்லொழுக்கத்தினை. சித்தி-வீடு பேறு.

இனி, இவ்விரண்டு செய்யுட் கருத்தோடு,

வண்டவாம் வார்குழலும் வாளெயிறும் பூண்முலையும்
தொண்டைவாய் நன்னலமும் தோளுத் துடியிடையும்
கண்டவாங் காமுகரும் யாமும் கணநரியும்
விண்டவாக் கொண்டுணரின் வேறுவே றாமன்றோ

எனவும்,

கரையவா வாங்குங் கயமகன் கைத்தூண்டில்
இரையவாப் பன்மீ னிடருறுவ தேபோல்
நுறையவா நுண்டுகிலு மேகலையுஞ் சூழ்ந்த
வரையவாய்ப் பட்டார்க்கு மாழ்துயரே கண்டீர்

எனவும்,

மட்டார் மலர்புனைவும் வாணெடுங்கண் மையணிவும்
பட்டார் கலையுடையும் பல்வளையும் பைந்தோடு
நட்டாரை யெல்லா நரகுக்கே யுய்க்குநாய்க்
கொட்டார்த்தார் செய்யுங் கோலங்கள் வண்ணம்

எனவும்,

ஆடினாய் நான மணிந்தாய் கலன்மாலை
சூடினா யேனுஞ் சுணங்கார் வனமுலையா
யூடினா யாக வொழுக்கூற்றைப் பல்பண்டம்
மூடினாய் தோலின் முகம் னுரையேனே

எனவும்,

மின்போ னுடங்கிடையும் வேயேய் திரடோளு
மென்றே யிவைமகிழ்ந்தீங் கென்முன்னே வந்தாயாற்
புன்றோலும் பல்லென்பும் போர்த்த புறங்காட்டு
ளன்றே யுறைவ வவற்றான் மருள்வேனோ
            (தருமவுரை-119-123.)

எனவும் வரும் நீலகேசிச் செய்யுள்களும் நினைவு கூரற்பாலன.

இவ்வாறு உடம்பின் வாலாமையை நினைந்து நினைத்து அதன் பாற் பற்றறுப்பதனைச் சமண சமயத்தினர் அசுசிய நுப்பிரேக்கை என்று கூறுப. பௌத்தர் அசுப பாவனை என்ப.     (4)

(இனி வருகின்ற செய்யுள்கள் புறத்திரட்டிலிருந்தெடுக்கப்பட்டவை)

மக்கள் யாக்கையும் செல்லமும் பெறுதல் அரிதெனல்

5. வினைபல வலியி னாலே வேறுவே றியாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுட் டுன்புறூஉ நல்லு யிர்க்கு
மனிதரி னரிய தாகுந் தோன்றுத றோன்றி னாலு
மினியவை நுகர வெய்துஞ் செல்வமுமன்ன தேயாம்.

(இதன் பொருள்) பலவினை வலியினாலே-பல்வேறு வகைப்பட்ட தீவினைகளின் ஆற்றலாலே; வேறு வேறு யாக்கை ஆகி-பல்வேறு வகைப்பட்ட உடம்புகளை யுடையனவாகி; நனி பல பிறவி தன்னுள்-மிகவும் பலவாகிய பிறப்புக்களிலே புகுந்து அவ்வப் பிறப்புக்களிலெல்லாம்; துன்புறூஉம்-துயர மெய்துகின்ற; நல் உயிர்க்கு நல்ல நம்முயிர்க்கு; மனிதரில் தோன்றுதல் அரியது ஆகும் மக்கட் பிறப்பிலே பிறத்தல்-மிகவும் அரியதொரு செயலேயாம்; தோன்றினாலும்-ஒரோவழி அரிதாய அம்மக்கட் பிறப்பிலே பிறந்தாலும்; இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதே ஆம் அம்மக்கட் பிறப்பின்கண்; இனிய பொருள்களை நுகர்தற்கு இன்றியமையாததாய் வருகின்ற செல்வந்தானும்; அம்மக்கட் பிறப்புப் போன்றே பெறுதற்கரிய தொன்றேயாம். ஆகவே மக்கட் பிறப்பும் மாண்புடைத்தன்று என்பதாம்.

(விளக்கம்) உயிரின் பிறப்புக்கள் வேறுபடுதற்குக் காரணம் வினை வேறுபாடேயாதலின் பலவினை வலியினாலே வேறுவேறு யாக்கையாகி என்றார்; இதனை,

விண்ணோ ருருவி னெய்திய நல்லுயிர்
மண்ணோ ருருவின் மறிக்கினு மறிக்கும்
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய் விலங்கி னெய்தினு மெய்தும்
விலங்கின் யாக்கை விலங்கிய வின்னுயிர்
கலங்கஞர் நரகரைக் காணினும் காணும்
ஆடுங் கூத்தர்போ லாருயி ரொருவழிக்
கூடிய கோலத் தொருங்குநின் றியலாது
செய்வினை வழித்தா யுயிர்செலு மென்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை

எனவரும் இளங்கோவடிகளின் மொழியானு முணர்க.         (28:159-68)

இனி, நரககதி விலங்குகதி மக்கட்கதி தேவகதி என்னும் நால்வகைப் பிறப்பினூடும் ஒவ்வொன்றன்கண்ணும் எண்ணிறந்த பிறப்பு வேறுபாடுகள் உண்மையின், நனிபல பிறவி என்றார். இனி, தேவகதியை யுள்ளிட்ட எல்லாப் பிறப்பும் துன்பத்துக்கே ஏதுவாதல் பற்றி, பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லுயிர் என்றார். இனி,

இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப
முழத்தொறூஉங் காதற் றுயிர்    குறள்,940

என்பவாகலின் துன்புறூஉம் நல்லுயிர் என உயிர்க்கு நன்மையை அடை புணர்த்தார். இனி உயிர்க்குப் பரிந்து நல்லுயிர் என்று இரங்கினார் எனினுமாம்.

இனி, மனிதரிற் றோன்றுதல் அரியதாகும் என மாறுக.

இனி மக்களாய் பிறந்தாலும் செல்வம் பெற்றாலொழிய இவ்வுலகத்தின்பம் யாதொன்றும் எய்துவதின்மையான் அரிதற் பிறந்த அப்பிறப்பும் துன்பத்திற்கே ஏதுவாதலின் பொருளையே விதந்தெடுத்து இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம் என்றார். என்னை?

தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும்; பொருளின் மாண்பினை

அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்     குறள்,754

எனவும்

அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு    குறள்,757

எனவும்

ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியாற்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு   குறள்,760

எனவும்

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு    குறள்,247

எனவும் பாராட்டிக் கூறுதலுணர்க.

பொறிகளா னுகருமின்பமும் அறத்தால் வருமெய்யின்பமும், வீடு பேற்றின்பமும் ஆகிய எல்லா இன்பங்களுக்கும் செல்வம் ஏதுவாதல்பற்றிப் பொதுவாக இனியவை நுகர எய்துஞ் செல்வம் என்றார். அன்னது என்றது முற்கூறியபடி அரிது என்றவாறு.           (5)

இதுவுமது

6. உயிர்குடி நனியுட் டோன்றலூனமில் யாக்கையாதன்
மயிர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்
பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோட லென்றாங்
கரிதிவை பெறுதலேடா பெற்றவர் மக்க ளென்பார்.

இதன் பொருள். ஏடா-தோழனே!; நனி உயர் குடியில் தோன்றல் ஒரோவழி மக்கட்பிறப்பிற் பிறந்த வழியும் மிகவுமுயர்ந்த குடியிலே தோன்றலும்; ஊனம் இல் யாக்கை ஆதல்-உயர்குடியிலே தோன்றிய வழியும், கூன் குருடு செவிடு முட முதலிய குறைகளில்லாத நல்லுடம்பு பெறுதலும்; மயர்வு அறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லர் ஆதல்-மயக்கமறுதற்குக் காரணமான கல்வி யறிவும் கேள்வியறிவும் பெறுமாற்றால் வண்மையுடையராதலும்; பெரிது உணர் அறிவே ஆதல்-அவ்வாறு கல்வியானும் கேள்வியானும் அறிவு வலியராய விடத்தும் அவ்வறிவு மெய்யுணரும் அறிவாதலும்; பேர் அறம் கோடல்-அங்ஙனம் அறிவு சிறந்துழியும் சிறந்த நல்லறத்தை மேற்கொண்டொழுகுதலும்; என்று ஆங்கு இவை அரிது-என்று கூறப்படுகின்ற இப்பேறுகள் எல்லாம் எய்துதல் அரிதேயாம்; பெற்றவர் மக்கள் என்பார்-அரியனவாய இவை எல்லாம் ஒருங்கே பெற்றவர்களே மக்கட் பிறப்புடையார் என்று மதிக்கத் தகுந்தவர் ஆவர் என்பதாம்.

(விளக்கம்) நனி உயர் குடியுட் டோன்றல் என மாறுக. செப்பம், நாண், ஒழுக்கம், வாய்மை, நகை, ஈகை, இன்சொல், இகழாமை, ஒழுக்கம் குன்றாமை, பண்பிற்றீராமை, சலம்பற்றிச் சால்பில செய்யாமை, பணிவுடைமை, இன்னோரன்ன மாந்தர்க்கணிகலனாய நலமெல்லாம் உயர்குடிப் பிறப்புடையார்மாட்டு இயல்பாலுளவாகலும் ஏனையோர் மாட்டு இலவாகலும் காண்டலின். அந்நற்பண்புகள் எல்லாம் ஒருங்குடையார்க் கன்றிப் பிறவிப் பயன் எய்துதல் அரிதாகலின், அவ்வுயர்குடிப்பிறப்பும் பெறற்கரும் பேறென்றார்.

ஊனம்-செவிடு குருடு முதலிய உறுப்புக் குறைபாடுகள். மயர்வு-மயக்கம்.

நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
னுண்மை யறிவே மிகும்.     குறள், 373

என்பது பற்றி, கல்வி கேள்வியில் வல்லுநராய விடத்தும் உணர் அறிவுடையராதல் அரிதொன்றார். ஈண்டு உணர் அறிவு என்றது மெய்யுணர்வினை கற்றனர் ஞான மின்றேல் காமத்தைக் கடக்கலாமோ? என்னும் கம்பர் மொழியினும் ஞானம் என்பது மது.

பேரறம் என்றது ஈண்டு ஆருகதசமயவறங்களை, இவை பெற்றவர் மக்கள் எனவே பெறாதார் மக்களாய்ப் பிறந்து வைத்தும் பயன் பெறுதலிலர் என்றாராயிற்று.

மக்களாகப் பிறப்பதன் அருமையை:

பரவை வெண்டிரை வடகடற் படுநுகத் துளையுட்
டிரைசெய் தென்கட லிட்டதோர் நோன்கழி சிவணி
அரச வத்துளை யகவயிற் செறிந்தென வரிதால்
பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே

விண்டு வேய்நர லூன்விளை கானவ ரிடனும்
கொண்டு கூர்ம்பனி குலைத்திடு நிலைக்களக் குறும்பும்
உண்டு நீரென வுரையினு மரியன வொருவி
மண்டு தீம்புனல் வளங்கெழு நாடெய்த லரிதே

வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம் படுத்த
பல்லி னுர்களும் படுகடற் பரதவர் முதலா
எல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி
நல்ல தொல்குலம் பெறுதலு நரபதி யரிதே

கருவி மாமழை கணைபெயல் பொழிந்தென வழிநாள்
அருவி போற்றொடர்ந் தறாதன வரும்பிணி யழலுட்
கருவிற் காயத்திய கட்டளைப் படிமையிற் பிழையா
துருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலு மரிதே

காம னன்னதோர் கழிவனப் பறிவொடு பெறினும்
நாம நாற்கதி நவைதரு நெறிபல வொருவி
வாம னூனெறி வழுவறத் தழுவின ரொழுகல்
ஏம வெண்குடை யிறைவமற் றியாவது மரிதே

எனவரும் சீவகசிந்தாமணியானன்குணர்க.(முத்தி-151-5) (6)

கற்புடை மகளிர்

7.  நாடு மூரு நனிபுகழ்ந் தேத்தலும்
பீடு றும்மழை பெய்கெனப் பெய்தலும்
கூட லாற்றவர் நல்லது கூறுங்காற்
பாடு சான்மிகு பத்தினிக் காவதே.

இதன் பொருள். கூடல் ஆறு அவர் ஒத்த அன்பினான் மன்மியைந்து கூடி வாழுகின்ற இல்லற நெறியினை யுடையோராகிய தலைவன் தலை வியருள்வைத்து; நல்லது கூறுங்கால்-நல்ல சிறப்பினை ஆராய்ந்து கூறுமிடத்து; நாடும் ஊரும் நனி  புகழ்ந்து ஏத்தலும்-தாம் பிறந்த நாடும் தாம் வாழுகின்ற ஊரும் நனி மிகவும் புகழ்ந்து பாராட்டுதலும்; பீடு உறும் மழை-பெருமைமிக்க மழையானது; பெய்க எனப் பெய்தலும்-பெய்க என்று ஏவிய துணையானே பெய்தற்குக் காரணமான தெய்வத்தன்மையும்; பாடுசால் பத்தினிக்கு ஆவது-அவ்விருவருள்ளும் பெருமைமிக்க கற்புடைய தலைவியாலாவனவேயாம் என்பதாகும்.

(விளக்கம்) கூடல். ஆறு. ஆணும் பெண்ணும் அன்பால் இணைந்து வாழுகின்ற இல்வாழ்க்கை நெறி. எனவே, கூடலாற்றவர் என்பது தலைவன் தலைவியர் என்பது பெற்றாம்.

நாடும் ஊரும் புகழ்கின்ற புகழ்ச்சி இருவருக்கும் பொதுவாயினும் அப் புகழுக்குக் காரணமாயிருப்பது தலைவியே யன்றித் தலைவன் அல்லன் என்பது கருத்து. என்னை?

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை      குறள்,59

எனவும்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்     குறள், 56

எனவும்,

இல்லதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
னில்லவண் மாணாக் கடை   குறள், 53

எனவும்,

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்   குறள்,52

எனவும் தெய்வப்புலவர் திருவள்ளுவனாரும் இல்லறத்தாலெய்தும் புகழ்க்குக் காரணம் கற்புடைய வாழ்க்கைத் துணைவியே என்பதுபட ஓதுதலு முணர்க.

இனி, மனையறம் தெய்வத் தன்மையுடையதாய்ப் பொலிவதற்கும் கற்புடைய மகளிரே காரணம். தெய்வத்தன்மை தலைவிக்கே சிறந்துரிமை யுடையதாம். அத்தெய்வத் தன்மையுடைமையாலே அத்தகைய மகளிர் வாழும் நாடே சிறப்புடையதாம் என அவருடைய தெய்வத்தன்மைக்கு ஒன்று எடுத்துக் காட்டுவார்,

மழை பெய்கெனப் பெய்தலும் என்றார். இத்தகைய சிறப்புத் தலைவனுக் கின்மையுமுணர்க. இக்கருத்தினை இந்நூலாசிரியர் திருக்குறளினின்றும் எடுத்தாளுகின்றனர். அது வருமாறு:-

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை    குறள்,55

என்னும் அருமைத் திருக்குறளே அஃதாம். இதற்கு ஆசிரியர் பரிமேலழகர். தெய்வந்தான் ஏவல் செய்யுமென்பதாம், இதனாற் கற்புடையவளதாற்றல் கூறப்பட்டது என்பர்.

இன்னும், இவ்வினிய செய்யுட் கருத்தோடு, கண்ணகியார் மாண்பினை,

என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மக ளறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித்
தன்னுயிர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் கொற்றஞ் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடென்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ

எனக் கூறி அடைக்கலங் கொடுக்கின்ற கவுந்தியடிகளாரின் மணிமொழிகளையும் ஒப்புநோக்குக.

இன்னும் பத்தினிப் பெண்டிரின் தெய்வத்தன்மையை,

அல்லன் மாக்க ளிலங்கைய தாகுமோ
எல்லை நீத்த வுலகங்கள் யாவுமென்
சொல்லினாற் சுடுவே னதுதூ யவன்
வில்லி னாற்றற்கு மாசென்று வீசினேன்    கம்ப-சூளா-18

எனவரும் வைதேகியின் வீரவுரையானும் தெளிக.     (7)

கற்பில் மகளிர்

1.பள்ள முதுநீர்ப் பழகினு மீனினம்
வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉங்
கள்ளவிழ் கோதையர் காமனோ டாயினு
முள்ளம் பிறதா யுருகலுங் கொண்ணீ.

இதன் பொருள். மீன் இனம்-மீன் கூட்டம்; முது பள்ளநீர்ப் பழகினும்-பழைதாகிய ஆழமான நீர்நிலையில் வாழ்ந்தாலும்; புதியது வெள்ளம் காணின்- புதியதாகிய வெள்ளம் வருமிடத்து அதனைக் கண்டால்; விருப்புறூஉம்-தனது பழைய நீர்நிலையை வெறுத்து அப்புதிய வெள்ளத்தே புகுவதற்குப் பெரிதும் விரும்பும்; அங்ஙனமே, கள்அவிழ் கோதையர்-தேன் துளிக்கின்ற மலர் மாலையணிந்த மகளிர்; காமனோடு ஆயினும்-காமவேளையே கணவனாகப் பெற்று அவனோடு வாழ்வாராயினும்; உள்ளம் பிறதா உருகலும்-புதிய ஆடவரைக் காணுமிடத்து மனமாறுபட்டு அவரைத் தழுவ நினைத்து மனமுருகு மியல்புடையராதலும்; நீ கொள்-நீ குறிக்கொண்டு அவரை விரும்புதலொழிக என்பதாம்.

(விளக்கம்) பள்ளமுதுநீர்ப் பொய்கை-சிறப்புடைய கணவனுக்குவமை. மீனினம்-மகளிர்க்குவமை. புதியது காணின் என வுவமைக்குக் கூறியதனை புதியரைக் காணின் எனப் பொருளுக்கும் கொள்க. இது பொதுவாக மகளிரின் மனவியல்பு கூறியபடியாம்.

இனி இச் செய்யுளோடு,

ஏந்தெழின் மிக்கான் இளையா னிசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான்-வாய்ந்த
நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க்
கயலார்மே லாகு மனம்

எனவும்,

முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார்
நிறையும் நெடுநாணும் பேணார்-பிறிதுமொரு
பெற்றிமை பேதைமைக் குண்டோ பெரும்பாவம்
கற்பின் மகளிர் பிறப்பு

எனவும்,

கற்பின்மகளி னலம்விற்றுணவு கொளும்
பொற்றொடி நல்லார் நனிநல்லர்-மற்றுத்தம்
கேள்வற்கு மேதிலர்க்குத் தங்கட்குந் தங்கிளைஞர்
யாவர்க்குங் கேடுசூ ழார்   நீதிநெறி.82,83,84.

எனவும் வரும் குமரகுருபர அடிகளார் அருண்மொழியும்,

அன்புநூ லாக இன்சொ லலர்தொடுத் தமைத்த காத
லின்பஞ் செய் காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
பின்செலும் பிறர்க ணுள்ளம் பிணையனார்க் கடிய தன்றே

எனவும்,

பெண்னெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா
உண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகும்
எண்ணிப்பத் தங்கை யிட்டா லிந்திரன் மகளு மாங்கே
வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போன் மெலிந்துபின் னிற்கு மன்றே

எனவும் வரும், சீவகசிந்தாமணிச் செய்யுள்களும்;  (159-6-7)

மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவும்
துன்னிடும் மனத்தின் றூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும்
பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர்ப் பெருமை பேணா
என்னமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே

எனவரும்,யசோதர காவியச் செய்யுளும்(95) ஒப்புநோக்கற் பாலன.

ஈண்டுக் கூறப்படும் இயல்பு கற்பில்லாத மகளிரினியல்பேயாகும்
மற்றுக் கற்படை மகளிரின் மாண்பு மேலே கூறப்பட்டது.         (8)

இதுவுமது

9. உண்டியுள் காப்புண்டு; உறுபொருள் காப்புண்டு;
கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு;
பெண்டிரைக் காப்பது இலம் என்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே.  

இதன் பொருள். கற்றறிந்தோர்-கற்றுப் பொருளியல்பினை அறிந்த சான்றோர்; உண்டியுள் காப்பு உண்டு-மக்கள் உண்ணும் உணவுகள் கெடாதபடி காத்துக் கோடற்கு வழியுண்டு; உறுபொருள் காப்பு உண்டு-மிக்க பொருள்களைக் கள்வர் கவராதபடி காத்துக் கோடற்கும் வழிகள் உளவாம்; விழுப்பொருள் கண்ட கல்விக்குக் காப்பு உண்டு-செல்வப் பொருளினும் சிறந்ததாக வுணரப்பட்ட கல்வியறிவு மறந்துபோகாதபடி காத்துக் கோடற்கும் வழியுண்டு; பெண்டிரைக் காப்பது இலம்-ஆனால் மகளிர் கற்பழியாமல் யாம் காத்துக் கோடற்கோ யாதொரு வழியுங் கண்டிலம்; என்று, கண்டு மொழிந்தனர்-என்று அம்மகளிரியல்பை ஆராய்ந்து கூறியுள்ளனர் என்பதாம்.

(விளக்கம்) உணவினை மூடியிட்டுக் காத்தல் கூடும். பொருளைக் கருவூலம் முதலியவற்றில் வைத்துக் காத்தல்கூடும்; கற்றவற்றை மீண்டு மீண்டும் ஓதுமாற்றால் மறவாமற் காத்தல் கூடும். இவற்றைப்போல மகளிர் கற்பழியாதபடி கணவன் முதலியோராற் காத்தற்கு வழியில்லை என்று கற்றறிந்தோர் கூறியுள்ளனர் என்றவாறு.

சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை   குறள்,57

என்பது பொய்யாமொழி       (9)

எத்துணை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி
புற்பனி உக்க மரத்து இலை நுண்மயிர்
அத்துணை யும்பிறர் அஞ்சொலி னார்மனம்
புக்கனம் என்று பொதியறைப் பட்டார்.  10

இதன் பொருள். ஆற்றுள் இடுமணல் எத்துணை-ஆற்றினுள்ளே நீராலிடப்பட்ட எக்கரின்கண் உள்ள மணல் எத்தனையுண்டு?; நீர்த்துளிஎத்துணை-அந்த யாற்று வெள்ளத்தின்கண் நீர்த்துளிகள் எத்துனையுண்டு? உக்க புற்பனி எத்துணை-புல்லின்மேற் பெய்த பனித்துளி எத்துனையுண்டு?; மரத்து இலை எத்துணை-மரங்களின் பாலமைந்த இலைகள் எத்துணையுண்டு?; நுண்மயிர் எத்துணை-உயிரினங்களின் உடலிலமைந்த நுண்ணிய மயிர்கள் எத்துனையுண்டு; அத்துணையும்-அத்தனை பேர், பிறர் அஞ்சொலினார் மனம் புக்கனம் என்று-பிறர் மனையாட்டியராகிய அழகிய சொல்லையுடைய கற்பிலா மகளிருடைய; மனம் புக்கனம் என்று பொதியறைப் பட்டார்-மனத்திலே புகுந்தேம் என்று மகிழ்ந்து தீவினைக்காளாகிப் பிறவியாகிய சிறையிலே அகப்பட்டனர் என்பதாம்.

(விளக்கம்) கற்பிலாமகளிர் கண்களாகிய வலையிலகப்பட்டு அவர் தம்மைக் காதலிக்கின்றனம் என்று மகிழ்ந்து அவ்வழி யொழுகித்  தீவினை செய்து பிறவியாகிய சிறையிடைப்பட்டோர் இவ்வுலகின்கண் எண்ணிறந்தோர் என்பதாம்.

எத்துணை என்பதனை யாண்டும் கூட்டுக.

ஆதலால் கற்பில்லா மகளிரைக் காண்டலும் கூடாது என்பது குறிப்பென்க.

இதனாலன்றோ வள்ளுவப் பெருந்தகையார் பிறர்மனை நோக்காமையே பேராண்மையென்று பேசுவாராயினர்      (10)

இதுவுமது

11. தனிப்பெயல் தண்துளி தாமரையின் மேல்
வளிப்பெறு மாத்திரை நின்றற்று ஒருவன்
அளிப்பவன் காணும் சிறுவரை அல்லால்
துளக்கிலர் நில்லார் துணைவனைக் கையார்.

இதன் பொருள். வளை துணைக்கையார்-வளையலணிந்த இரண்டாகிய கைகளையுடைய கற்பிலா மகளிர் நெஞ்சம் ஒருவன்பால் நிலைத்து நிற்பது; தண்பெயல் தனித்துளி-குளிர்ந்த மழையினது ஒரு துளியானது; தாமரையின்மேல்-தாமரையிலையின் மேலே; வளிபெறும் மாத்திரை-காற்று வந்து வீசும்பெறும் வரையில் நின்றற்று-நிலைத்து நின்றாற் போல்வதாம்; அளிப்பவன் ஒருவன் காணும் சிறுவரை அல்லால் என்னை? அம்மகளிர்தாமும் தம்மை அளிசெய்யும் புதியவன் ஒருவனைக் காணப்பெறும் அச்சிறிய பொழுதளவே முன்னர்த் தாம் காமுற்றவன்பால் மனம்வைத்து நிற்பது அல்லாமல்; துளக்கிலர் நில்லார்-மனந்துளங்காது நிற்பதிலர் ஆதலான், என்பதாம்.

(விளக்கம்) தனித்துளி என இயைக்க. தாமரையிலையன் மேல் வீழ்ந்த மழைத்துளி காற்றுவீசப் பெறுமளவும் ஓரிடத்தே நிற்கும். காற்று வீசியவுடன் நிலைபெயர்ந்தியங்குவது போலக் கற்பிலாமகளிர் நெஞ்சமும் தான் காமுற்றவன்பால் புதியவன் ஒருவனைக் காணும் வரையில் நிற்கும், அவனைக் கண்டவுடன் அவன்பாற் சென்றழுந்தும் என்றவாறு. இக் கருத்தினை,

இனம்போன் றின்மல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்    குறள்,822

எனவருந் திருக்குறளினும், அக்குறட்கு ஆசிரியர் பரிமேலழகர் இடம் பெற்றாற் பெண்பாலார் மனம்போல வேறுபடும் என உரை கூறுவதினும் மேலும் அதன் விளக்கவுரையின்கண் அவர் மனம் வேறுபடுதல் பெண் மனம் பேதின் றொருப்படுப்பே னென்னும்-எண்ணில் ஒருவன் என்பதனானும் அறிக என்று இவ் வளையாபதிச் செய்யுள் பிறதொன்றனை எடுத்துக் காட்டுதலினும் காண்க.         (11)

மக்கட் பேறு

12 பொறையிலா அறிவு; போகப் புணர்விலா இளமை; மேவத்
துறையிலா வசன வாவி; துகில் இலாக் கோலத் தூய்மை;
நறையிலா மாலை; கல்வி நலமிலாப் புலமை; நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே.

இதன் பொருள். சேய் இலாச் செல்வம்-மகப்பேறில்லா தவருடைய செல்வம்; பொறை இலர் அறிவும்-பொறுமையில்லா தவருடைய அறிவுடைமையும், போகப்புணர்வு இலா இளமை-இன்பந்தரும் புணர்ச்சிபெறாத இளம் பருவமும்; மேவத்துறை இலா வனச வாவி இறங்குதற்குத் துறையில்லாத தாமரைக் குளமும்; துகில் இலாக் கோலத்தூய்மை-ஆடையில்லாத ஒப்பனையினது தூய தன்மையும்; நறை இலா மாலை-மணமில்லாத மலர்மாலையும்; கல்வி நலமிலாப் புலமை-நூல்கள் பலவும் கற்றிலாத புலமைத் தன்மையும்; நல்நீர்ச் சிறை இலா நகரம்-நல்ல நீர்நிலைகள் இல்லாத நகரமும்; போலும்-போன்று சிறிதும் பயனற்றதாகும் என்பதாம்.

(விளக்கம்) சேய்-மகவு. சேயிலாச் செல்வம் பொறையிலா அறிவு முதலியவற்றைப் போன்று பயனற்றதாம் என்றவாறு.

போகம்-இன்பம். புணர்வு-காதலர்க் கூட்டரவு. வனசம்-தாமரை. ஆடையுடாது அணிகள் மட்டும் அணியப்பட்ட கோலம் என்க. கோலம்-ஒப்பனை. நறை-மணர். கல்வி நலமிலாப் புலமை என்றது,
இயற்கை யினமைந்த நுண்மாணுழை புலத்தினை,

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளா ரறிவுடை யார்    குறள்,404

என்புழி வள்ளுவர் ஒட்பம் என்பதுமது.

இனி, இதனோடு

படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே   புறநா,188

எனவரும் பாண்டியன் அறிவுடைநம்பி அருமைச் செய்யுளும்,

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனு முடையரோ-இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்   நளவெண்பா,246

எனவரும் புகழேந்தியார் பொன்மொழியும்,

கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்கு-மக்கட்பே
றென்பதோர் செல்வமு முண்டாயி னில்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு  நீதிநெறி, 81.

எனவரும் குமர குருபரவடிகளார் அருண்மொழியும்,

மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கல நன்மக்கட் பேறு.      குறள்,60

எனவரும் பொய்யில் புலவன் பொருளுரையும் நினைவிற் கொள்ளற் பாலன.

அடக்கமுடைமை

13.ஆக்கப் படுக்கும்; அருந்தளைவாய்ப் பெய்விக்கும்;
போக்கப் படுக்கும்; புலைநரகத்து உய்விக்கும்;
காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும்
நாக்குஅல்லது இல்லை நனிபேணும் ஆறே.

இதன் பொருள். ஆக்கப் படுக்கும்-ஒருவனுடைய நாவினிற் றோன்றுஞ் சொல் அவனைச் செல்வ முதலிய பேறுகள் உடையவனாக உயர்த்தவும் உயர்த்தும். அருந்தளைவாய்ப் பெய்விக்கும் அல்லது உய்தற்கரிய சிறைக்கோட்டத்துட் செலுத்தினும் செலுத்தும் போகபூமியுட் பிறப்பித்தலும் செய்யும்; புல நரகத்து உய்விக்கும்-அல்லது இழிவுடைய நகரத்தின்கண் செலுத்தினுஞ் செலுத்தும்; காக்கப்படுவன-ஆதலால் மாந்தர் தம்மறிவாற் காத்தற்குரியனவாகிய; இந்திரியம் ஐந்தினும்-பொறிகள் ஐந்தனுள்ளும்; நனி பேணும் ஆறு-மிகவும் விழிப்புடனிருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி; நான்கு அல்லது இல்லை-நாவினையன்றிப் பிறிதொன்றில்லை, என்பதாம்.

(விளக்கம்) மக்கட்கு ஆக்கந்தருவதும் நாவே. அவரைச் சிறைக்கோட்டம் புகுவிப்பதும் அதுவே; துறக்கத்துச் செலுத்துவதும் அதுவே, நகரத்தில் வீழ்த்துவதும் அதுவே ஆதலால், மெய் முதலிய பொறிகளுள் நாவே பெரிதும் விழிப்புடன் பேணற் பாலது என்றவாறு.

யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு   குறள்,127

எனவரும் திருக்குறளும் நோக்குக.

நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
யாநலத் துள்ளதூஉ மன்று   குறள்,641

எனவும்,

திறன்அறிந்து சொல்லுக சொல்லை யறனும்
பொருளு மதனினூஉங் கில்    குறள்,644

எனவும் வரும் அப்பொய்யில் புலவர் பொருளுரையும் காண்க.

கற்பன வூழற்றார் கல்விக் கழகத்தாங்
கொற்கமின் றூத்தைவா யங்காத்தல்-மற்றுத்தம்
வல்லுரு வஞ்சன்மி னென்பவே மாபறவை
புல்லுரு வஞ்சுவ போல்

எனவும்,

தன்னை வியப்பிப்பான் றற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால்-தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம்.

எனவும்,

பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு-பிறர்பிறர்
சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்குத் தாழ்ச்சி சொலல்.

எனவும் வரும் குமரகுருபரர் மணிமொழிகளும்,

படிறும் பயனிலவும் பட்டியுரையும்
வசையும் புறனு முரையாரே யென்று
மசையாத வுள்ளத் தவர்

எனவரும் ஆசாரக்கோவையும்,

இன்னோரன்ன எண்ணிறந்த அறிவுரைகள் நா நலமும் தீங்குப் பற்றி நல்லிசைப் புலவர்களால் ஓதப்பட்டிருத்தல் அந்நா காக்கும் காப்பே தலை என்பதனை உணர்த்துகின்றன. அவையெல்லாம் அறிந்துகொள்க.

இவை யெல்லாம் நாவினது செயல் வகைப்பற்றி எழுந்தன. இனி, இச் செய்யுளில் நாவினை ஐம்பொறிகளுள் ஒன்றென்றலின், நாவினால் நுகரும் சுவை கருதி ஊன் முதலிய நுகர்ந்து நரகத்து வீழ்தலும் நல்லுணவே உண்டு துறக்கம் புகுதலும் பிறவும் நாவான் விளையும் தீமையும் நலங்களுமே யாகலால் இவ்வாற்றானும் நாவடக்கம் இன்றியமையாமையுங் கொள்க.              (13)

அறமனை காத்தல்

14 தாரம் நல்வதம் தாங்கித் தலைநின்மின்
ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரின் ஏத்திச் சிறப்புஎதிர் கொள்பவே.

(இதன் பொருள்) தாரம் தாங்கி-மாந்தர்காள்! நீவிர் நுங்கள் காதன் மனைவிமாரைப் பேணி; நல்வதம் தலை நின்மின்-நல்ல விரதங்களை மேற்கொண்டு வாழுமின்; ஊரும் நாடும் உவத்தல் ஒரு தலை-அவ்வாறு வாழ்வீராயின் நீவிர் வாழும் மூரேயன்றி எல்லா நாட்டு மக்களும் நுங்கள் வாழ்வினைக் கண்டு மகிழ்வது ஒருதலையாம்; வீரவென்றி விறல்மிகு விண்ணவர்-அதுவுமன்றி, வீரத்தாலுண்டாகிய வெற்றிப் பெருமைமிக்க தேவர்களும்; சீரின் ஏத்தி-நுங்கள் புகழ் காரணமாக நும்மைப் பாராட்டித் தொழுது; சிறப் பெதிர் கொளப்-சிறப்ப நும்மை எதிர்கொண்டழைப்பர், என்பதாம்.

(விளக்கம்) தாரம்-மனைவி ஈண்டு அறநெறியால் மணந்துகொண்ட மனைவிமார் என்க. அறமனை காமின் அல்லவை கடிமின் என இளங்கோவடிகளாரும் அறிவுறுத்துதல் உணர்க. நல்வதம்-நல்லவிரதங்கள். அவற்றை ,

பெருகிய கொலையும் பொய்யும் களவொடு பிறன்மனைக்கண்
தெரிவிலாச் செலவு சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும்
மருவிய மனத்து மீட்டி வதமிவை யைந்தோ டொன்றி
ஒருவின புலைசு தேன்க ளொருவுத லொழுக்கமென்றான்

எனவரும் யசோதர காவியத்தா லுணர்க. இவற்றை அணுவிரதம் என்ப, இனி இளங்கோவடிகளார்.

தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!
பரிவு மிடுக்கணும் பாங்குற நீங்குமின் !
தெய்வந் தெளிமின்! தெளிந்தோர்ப் பேணுமின்!
பொய்யுரை யஞ்சுமின்! புறஞ்சொற் போற்றுமின்!
ஊனூண் துறமின்! உயிர்க்கொலை நீங்குமின்!
தானஞ் செய்ம்மின்! தவம்பல தாங்குமின்!
செய்ந்நன்றி கொல்லன்மின்! தீநட் பிகழ்மின்!
பொய்க்கரி போகன்மின்! பொருண்மொழி நீங்கன்மின்!
அறவோ ரவைக்கள மகலா தணுகுமின்!
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்!
பிறர்மனை அஞ்சுமின்! பிழையுயி ரோம்புமின்!
அறமனை காமின்! அல்லவை கடிமின்!
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினி லொழிமின்!
இளமையுஞ் செல்வமும் யாக்கையு நிலையா
உளநாள் வரையா தொல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ரீங்கு.

என விரிவகையாலறிவுறுத்தும் நல்லறங்களையே இச்செய்யுள் தொகை வகையால் தாரம் நல்வதம் தாங்கித் தலைநின்மின்!; என விளம்புகின்ற தென்க. இது முறை நிரனிறை. தார நல்லிதம் என்பதும் பாடம்(14)

விரதத்தின் விரிவகை பிறர்மனை நயவாமை முதலியன

15. பெண்ணின் ஆகிய பேர் அஞர் பூமியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்னது ஆயினும் ஏதில்பெண் நீக்குமின்.

(இதன் பொருள்) பேரஞர்ப் பூமியுள்-பெரிய துன்பமுழத்தற்கிடனான நரகருலகத்தின் கண்ணே; பெண்ணின் ஆகிய எண்ணம் மிக்கவர்-பிறர் மனையாட்டியராகிய மகளிர் காரணமாகத் தீய நினைவுகள் மிகுந்த ஆடவர்கள்; எண்ணினும் எண்ணிலார்-எண்ணுமிடத்தும் எண்ணிலாதவர் ஆவர்; பின்னி நின்ற பெருவினை மேல்வரும் நும்முயிரைப் பிணித்து நின்ற பெரிய தீவினைகள் மேலும் மேலும் வருவனவாம்; என்னதாயினும்-ஆதலால் நுங்கட்கு என்ன நலம் உண்டாவதாயிருந்தாலும்; ஏதில் பெண் நீங்குமின்-பிறமகளிரை விரும்புதல் ஒழிமின் என்பதாம்.

(விளக்கம்) பேரஞர்ப்பூமி என்றது நரகருலகினை; நரகத்தில் வீழ்ந்து நலிபவருள் பிறர் மனைவிமாரை விரும்பித் தீவினை செய்தோரே எண்ணிறந்தவர். பிறர்மனை நயத்தலே மாபெருந்தீவினை; அத்தீவினை மேல் மேல் வருகின்ற பிறவிகளினும் நும்மைத் தொடர்ந்துவந்து நலிவது திண்ணம். ஆதலால் உங்கட்கு இப்பொழுது எத்துணையின்பம் வந்தாலும் பிறர்மணை நயவாதே கொண்மின்! என்றவாறு. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையாரில் என்பது பற்றிக் பிறர்மனை நயத்தலைப் பெருவினை என்றார்.

இனி, இத் தீவினையே எல்லாத் தீவினைகளுக்குங் காரணமாதல் பற்றிப் பெருவினை மேல்வரும் என்றார் எனினுமாம். என்னை?

முடிபொரு ளுணர்ந்தோர் முதுநீ ருலகிற்
கடியப் பட்டன வைந்துள வவற்றிற்
கள்ளும் பொய்யுங் களவுங் கொலையுந்
தள்ளா தாகுங் காமந் தம்பால்
ஆங்கது கடித்தோ ரல்லவை கடிந்தோரென
நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள்
நீங்கா ரன்றே நிணில வேந்தே
தாங்கா நரகந் தன்னிடை யுழப்போர்

எனவரும் மணிமேகலையும் நோக்குக.          (22-169-74)

இனி,

பகைபாவ மச்சம் பழியென நான்கும்
இகவாவா மில்லிறப்பான் கண்   குறள்,149

எனவும்

நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
பிறர்க்குரியா டோடோயா தார்  குறள்,146

எனவும், வரும் திருக்குறள் நினைக.

இனிக் கம்பநாடர், இராமன் கூற்றாக.

ஈர மாவது மிற்பிறப் பாவதும்
வீர மாவதுங் கல்வியின் மெய்ந்நெறி
வார மாவது மற்றொரு வன்புணர்
தார மாவதாத் தாங்குந் தருக்கதோ?

என, ஓதுதலுமுணர்க.

இனி, பிறர்மனை நயத்தற்கண் அறம்பொருளே யன்றி அவர் விரும்பும் இன்பந்தானும் இல்லையே! அஃதொரு நோயேயாம் எனக் குமரகுருபர வடிகளார்;

பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறனன்றே ஆயினு மாக-சிறுவரையும்
நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே
மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய்

எனக் கூறுகின்ற மெய்ம்மொழியும் உளங்கொள்க.                (15)

இதுவுமது

16. பொய்யன் மின்;புறம் கூறன்மின்; யாரையும்
வையன் மின்;வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்;உயிர் கொன்றுஉண்டு வாழும்நாள்
செய்யன் மின்;சிறி யாரொடு தீயன்மின்

(இதன் பொருள்) பொய்யன்மின்-பொய்கூறாதீர்கள்; புறங்கூறன்மின்-புறங்கூறாதீர்கள்; யாரையும் வையன்மின்-எத்தகையோரையும் இகழ்ந்து கூறாதீர்கள்; வடிவு அல்லன சொல்லி நீர் உய்யன்மின் அழகல்லாதனவற்றைக் கூறுமாற்றாலே உடலோம்பாதீர்கள் உயிர்கொன்று உண்டு வாழும் நாள் செய்யன்மின்-பிறவற்றின் உயிரைக் கொன்று அவற்றின் ஊனையுண்டு நுங்கள் வாழ்நாளை ஆக்கிக்கொள்ளாதீர்கள்; சிறியாரொடு-கயமாக்களோடு தீயன்மின்-கேண்மை கொள்ளாதீர்கள் என்பதாம்.

(விளக்கம்) பொய் குறளை கடுஞ்சொல், இழிதகவுடைய சொற்கள் இவற்றைச் சொல்லாதீர். வடிவு-அழகு. சொல்லிற்கழகு-வாய்மையுடைத்தாதல். எனவே, பொய் என்றாயிற்று. பொய்கூறி உய்யன்மின் எனவே பொய்க்கரி கூறி உடலோம்ப வேண்டா! என்றவாறாயிற்றாம். பொய்யாவது. நன்மை பயவாத நிகழாதது கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் ஆமென்க. எனவே பிறிதோருயிர்க்குத் தீங்கு பயக்கும் சொற்களைக் கூறாதொழிக என்றவாறு, என்னை?

வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்.    குறள், 291

எனவும்,

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்     குறள்,261


எனவும் வள்ளுவர் ஓதுமாற்றால் பொய்ம்மையினியல் உணர்க.

இனி, புறங்கூறலாவது-காணாதவழிப் பிறரை யிகழ்ந்துரைத்தல் இது பெருந்தீவினை என்பதன் வள்ளுவர் பெருமான்,


அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினது    குறள்,181

என்பதனால், தீவினை பலவற்றுள்ளும் இது மேம்பட்டது என்பதனாலும்,

அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை    குறள்,182

எனவும்
 
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறங்கூறு மாக்கந் தரும்    குறள்,183

எனவும்

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்   குறள்,184

எனவும் வரும் மூன்று குறள்களானும் அத்தீவினையின் கொடுமையை விளக்குதலானும் உணர்க.

வைதல்-இகழ்ந்துரைத்தல். யாரையும் என்றது-எளியோராயினும் என்பதுபட நின்றது. வாழுநாள் செய்தல்-வாழ்நாளை வளர்த்துக் கோடல். தீயின்மின்-நட்புறாதேகொண்மின். இஃதோர் அருஞ்சொல் ஆயினும். இதன் பொருள் இன்னதே என்பது. சிறியாரொடு தீயின்மின் என்றதனாற் பெற்றாம். தீயின் என்ற பாட வேறுபாடுள்ளது. அதனைக் கொள்ளின் தீயின செய்யன்மின் எனக்கொள்க. சிறியார்-சிற்றினமாக்கள். அவராவார்: நல்லதன் நலனும் தீயிதன் தீமையும் இல்லை யென்பேரரும், விட்ரும்தூர்த்தரும் நடரு முள்ளிட்டகுழு. இத்தகையோர் கேண்மை அறிவைத்திரித்து இருமையுங் கெடுக்குமாகலின் சிறியாரொடு தீயின்மின் என்றார்.

இதனை,

நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு   குறள்,452

எனவும்,

மனத்தானு மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுங் சொல்    குறள்,453

எனவும்

மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு    குறள்,454

எனவும்

நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்

எனவும் வரும் திருக்குறள்களாலுணர்க.        (16)

இதுவுமது

17. கள்ளன் மின், களவு ஆயின யாவையும்;
கொள்ளன் மின், கொலை கூடி வரும்அறம்;
எள்ளன் மின், இலர் என்றெண்னி யாரையும்;
நள்ளன் மின், பிறர் பெண்ணொடு நண்ணன்மின்.

(இதன் பொருள்) களவு ஆயின யாவையுங் கள்ளன்மின்-களவு என்று கருதப்படுகின்ற தொழில் வாயிலாய்  எப்பொருளையும் கவர்தல் செய்யாதொழிமின்; கொலைகூடி வரும் அறம் கொள்ளன் மின்-உயிர்க்கொலையோடு கூடிவருகின்ற அறங்களை மேற் கொள்ளா தொழிமின்; இலர் என்று எண்ணி எள்ளன்மின்-வறியவர் என்று நினைத்து யாரையும் இகழாதிருமின், யாரையும் நள்ளன்மின்-ஆராயாமல் யாரையும் நட்புக்கொள்ளா தொழிமின், பிறர் பெண்ணொடு நண்ணன்மின்-பிறர் மனைவியர்பாற் செல்லாதொழிமின் என்பதாம்.

(விளக்கம்) களவு என்று பிறராற் கருதப்படும்படி எப்பொருளையும் கொள்ளா தொழிக! என்றவாறு. கொலை கூடிவரும் அறம் என்றது வேதியர் வேத வேள்விகளை, சிறு தெய்வங்கட்கு உயிர்ப்பலி செய்து வழிபடுதல் முதலியனவுமாம். யாரையும் நள்ளன்மின் என்றது, ஆராய்ந்து நல்லாரை நட்டலன்றிக் கண்டவரோடெல்லாம் நட்புச் செய்யற்க என்றவாறு.

இனி இதன்கண், கள்ளன்மின் களவாயின யாவையும் என்பதனை,

எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு  குறள்,281

எனவும்,

உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்    குறள்,282

எனவும் வரும் குறள் முதலியவற்றானு முணர்க. கொலை கூடிவரும் அறம் கொள்ளன்மின் என்பதனை,

அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்.  குறள்,321

எனவும்,

அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று    குறள்,259

எனவும் வருந் திருக்குறள்களானும்,

கொலையற மாமெனும் கொடுந்தொயின் மாக்கள்
அவலப் படிற்றுரை    (மணி-6-62-3)

எனவரும் மணிமேகலையானும், ஏனையவற்றை முற்கூறிப் போந்த மேற்கோள்களானு முணர்க. (17)

உண்டி கொடுத்தலின் உயர்வு

17. துற்றுள வாகத் தொகுத்து விரல்வைத்தது
எற்றுக்கு அஃது உன்னின் இதுஅதன் காரணம்
அற்றமில் தானம் எனைப்பல ஆயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணிவு என்னும் ஆறே

(இதன் பொருள்) துற்று உளவாகத் தொகுத்து விரல் வைத்தது-(துறவியாகிய ) நான் சோற்றினை மிகுதியாக ஏற்றுக் கையிலேந்தி வருதல் கண்டு; அஃதெற்றுக்கெனின்-அங்ஙனம் செய்வதற்குக் காரணம் என்னையோ? என்பாயாயின். அற்றம் இல் தானம் எனைப்பல ஆயினும்-குற்றமில்லாத தானப் பொருள்கள் எத்துணையும் பலவாயவிடத்தும்; துற்று அவிழ் ஒவ்வாத் துணிவு என்னும் ஆறே-அவையெல்லாம் உண்ணும் சோற்றிற்கு நிகராகா என்பது தெளிவான முடிவு. இது அதன் காரணம்-இதுவே அங்ஙனம் செய்தற்குக் காரணமாம் என்பதாம்.

(விளக்கம்) வளையாபதி என்னும் பெருங்காப்பியங் கூறும் கதையினையாம் சிறிது மறிகின்றிலேம் ஆயினும் இச் செய்யுள் யார் கூற்று எந்தச் செவ்வியிற் கூறப்பட்டிருக்கலாம் என்று ஊகித்துணர்ந்து இங்ஙனம் உரை கூறினோம்.

துற்று-சோறு. உளவாக-மிகுதியாக. விரல்-ஆகுபெயர், கை, ஒரு துறவி தன் பலிக்கலத்தில் நிரம்பிச் சோறு ஏற்றுவருவானைக் கண்ட ஒருவன் நீ இங்ஙனம் மிகவும் சோறு தொகுத்து வருதற்குக் காரணம் என்னை? என வினவினனாக. அதற்குக் காரணங் கூறுபவன் தானங்களுள் வைத்து உண்டி கொடுத்தலே நனியுயர்ந்தது ஆகலின் யானும் காணார் கேளார் கான்முடப்பட்டோர் முதலியவர்க்குத் தானம் வழங்கவே இவ்வா
று ஏற்று வருகின்றேன் காண்! என விடை கூறினன். என்க(இஃது ஊக்கமாத்திரமே)

அற்றம்-குற்றம். தானப் பொருள்களுள் உண்டியை தலை சிறந்த தென்பதனை,

ஆற்றுநர்க் களிப்போ ரறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்க ளரும்பசி டளைவோர்
மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
                        (மணி-11-92:99)

என்பதனானும், துறவிகள் சோறு மிகவுமிரந்து ஏனையோர்க்கு வழங்கும் வழக்கமுடையர் என்பதனை,

ஐயக் கடிஞை னேந்தி
மையறு சிறப்பின் மனைதொறு மறுகிக்
காணார் கேளார் கான்முடப் பட்டோர்
பேணுந ரில்லோர் பிணிநடுக் குற்றோர்
யாவரும் வருகவென் றிசைத்துட னூட்டி
யுண்டொழி மிச்சிலுண் டோடுதலை மடுத்துக்
கண்படை கொள்ளுங் காவலன் றானென்

எனவரும் ஆபுத்திரன் வரலாற்றானுமுணர்க.            (18)

அருளுடைமை

19. ஆற்று மின், அருள் ஆருயிர் மாட்டெல்லாம்;
தூற்று மின்அறம், தோம்நனி துன்னன்மின்;
மாற்று மின்கழி மாயமும் மானமும்;
போற்று மின்பொரு ளாஇவை கொண்டுநீர்.

(இதன் பொருள்) நீர்ஆர் உயிர் மாட்டெலாம் அருள் ஆற்றுமின்-நீயிர் அரிய உயிரினங்களிடத்தெல்லாம் அருள் செய்வீராக!; அறம் தூற்றுமின்-நல்லறங்களை நாடோறும் மாந்தர்க்குக் கூறுவீராக!; தோம் நனி துன்னன்மின்-தீவினைகளைப் பொருந்தாது மிகவும் ஒழிவீராக!; மாயமும் கழி மானமும் போற்றுமின்-வஞ்சனையையும் மிகையாய மானத்தையும் விலக்குவீராக! இவை பொருளாக் கொண்டு போற்றுமின்-இவ்வறங்களை உறுதிப் பொருளாகக் கருதிப் பேணி வாழ்வீராக!; என்பதாம்.

(விளக்கம்) எவ்வுயிர்க்கும் அருள் செய்க! அறங்களையே யாவர்க்கும் அறிவுறுத்துக! தீவினையை அஞ்சுக! வஞ்சகத்தையும் மாண்பிறந்த மானத்தையும் விலக்குக. இவ்வறங்களையே பொருளாகப் பேணி நல் வாழ்வு வாழ்வீராக! என்றவாறு.

(விளக்கம்) அருள்-தொடர்பு பற்றாது இயல்பாக எல்லாவுயிர்கண் மேலும் செல்வதாகிய இரக்கம்.

அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள   குறள்,241

எனவும்,

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை  குறள், 242

எனவும்,
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல்    குறள்,243

எனவம்,

மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞசும் வினை   குறள்,244

எனவும்,

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி      குறள்,245

எனவும் 

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு   குறள்.247

எனவும் வருகின்ற திருக்குறள்களான் அருளறத்தின் மாண்புணர்க.

தூற்றுமின் என்றது, யாண்டும் யாவர்க்கும் அறிவுறுத்துமின் என்பது பட நின்றது. தோம்-குற்றம்; தீவினை.

இனி, தீவினையை நயந்து செய்யற்க வென்பார் நனிதுன்னன்மின் தீவினை தீயவே பயத்தலான் அதனைக் துன்னாமையே உயிர்க்குறுதியாயிற்று என்றார்.

இதனை,

அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவீனை செய்யா னெனின்    குறள்,210

என்பதனானும் உணர்க.

இன்னும்

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று     குறள்,208

எனவும்,

தன்னைத்தான் காதல னாயி னெøத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்   குறள்.209

எனவும்,

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்    குறள்,208

எனவும் வரும் திருக்குறள்களையும் நினைக.

மாயம்-வஞ்சம்: பொய்யுமாம். கழிமானம் என மாற்றுக. கழி மானம்-மாண்பிறந்த மானம். அஃதாவது

அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாயரென்றிவரை வணங்காமையும். முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. பொருளா: ஆக்கச் சொல்லீறு கெட்டது. செய்யுள் விகாரம்         (19)

இதுவுமது

20 பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லாது
அருளைப் பொருளா அறம்செய்தல் வேண்டும்;
அருளைப் பொருளா அறம்செய்து வான்கண்
இருள் இல் இயல்பு எய்தாது என்னோ நமரங்காள்

(இதன் பொருள்) நமரங்காள்-எஞ்சுற்றத்தீரே!; பொருளைப் பொருளாப் பொதித்து ஓம்பல் செல்லாது-செல்வப் பொருளை மிகவும் ஈட்டுதலே மாந்தர்க்கு உறுதிப் பொருளாவது என்று கருதி அவற்றைக் கட்டிவைத்துக் காத்திராமல்; அருளைப் பொருளா அறஞ்செய்தல் வேண்டும்-அருளையே உறுதிப் பொருளாக்க கருதி அப்பொருளாலே நல்லறங்களைச் செய்தல் வேண்டும். அஃதே அறிவுடைமையாம்; அருளைப் பொருளா அறஞ்செய்து-நீர் பொருளீட்டுகின்றீராயினும், அருளையே உறுதிப் பொருளாக வுணரந்து அப்பொருளாலே அறங்களைச் செய்து; வான்கண்-அவ்வறத்தின் பயனாகிய மேனிலையுலகவாழ்வினைப் பெற்று; இருள்இல் இயல்பு எய்தாதது என்-அங்கு ஒளியுடைய பண்ணினையடைய முயலாமைக்குக் காரணம் என்னையோ? இன்னே அறஞ் செய்மின்! என்பதாம்.

(விளக்கம்) பொருள்-செல்வப் பொருள். அவை பொன் மணி நெல் முதலியன. பொருளாக எனல் வேண்டிய ஆக்கச்சொல் ஈரிடத்தும் ஈறு தொக்கன; செய்யுள் விகாரம். பொருளாக-உறுதிப் பொருளாக. பொதிதல்-மறைத்து வைத்தல். ஓம்பல் செல்லாது-ஓம்பாமல் என்னும் ஒரு சொன்னீர்மைத்து. அருளே மேனிலையுலகில் ஒளியுடைய வாழ்க்கை நல்கும் உறுதிப் பொருளாக வுணர்ந்து என்க. வான்: ஆகு பெயர், மேனிலையுலகம். அறம்: விருந்தோம்பல் ஈதல் முதலியன. இருள்இல் இயல்பு-ஒளியுடைய தன்மையுடைய அமரவாழ்வு. இன்னே அறஞ் செய்மின் என்பது குறிப்பெச்சம்

அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள     குறள்,241

என்பதனால் அருட்செல்வம் பொருட்செல்வம் என்னும் இரண்டனுள் மெய்யாய செல்வம் அருட்செல்வமே என்பதும்,

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை     குறள்,242

என்பதனால் ஆருயிர்த் துணையாவது அருட்செல்வமே ஆகலால் அஃதே பெறற்பாலது என்பதும், உணர்க.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா வுலகம் புகல்    குறள்,243

என்பதனால் அருளுடையோர் வான்கண் இருளில் இயல்பு எய்துதல் ஒருதலை ஆகவும் அத்தகைய பேரின்ப வாழ்க்கையை நீயர் பெற முயலாமை என்னையோ? என்றவாறு. இனி, பொருளால் வரும் பயன் அருளுடையராகி ஈதலே ஆவதனை,

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோற்கும்
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே
பிறவு மெல்லா மோரொக் கும்மே
செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே   புறநா,169

எனவரும் நக்கீரனார் மொழியானுணர்க.       (20)

புலான் மறுத்தல்

21. தகாது உயிர் கொல்வானின் மிகாமைஇலை பாவம்
அவாவிலையில் உண்பான் புலால்பெருகல் வேண்டும்
புகாவலை விலங்காய்ப் பொறாதுபிற ஊன்கொன்று
அவாவிலையில் விற்பானும் ஆண்டு அதுவே வேண்டுமால்.

(இதன் பொருள்) அவா விலையில் உண்பான்-ஊனுண்ணும் அவாவினாலே அதனை விலைகொடுத்து வாங்கித் தின்பவன்றானும்; புலால் பெருகல் வேண்டும்-அந்த ஊனுணவு நாடோறும் மிகுதியாக வருதலையே விரும்புவான்; விலைவிலங்கு புகா ஆய்ப் பொறாது-தான் வலையிற் பிடித்த விலங்குகளே தனக்கு உணவாகவும் அத்துணையின் அமைதியுறாமல்; விலை அவாவில்-மேலும் விலைப்பொருள் பெறுகின்ற அவாக் காரணமாக; பிற கொன்று ஊன் விற்பானும்-பிற வுயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊன்களைக் கொணர்ந்து விற்பவனும்; ஆண்டதுவே வேண்டும்-அவ்விடத்து அவ்வூன் மிகுதியும் கிடைப்பதனையே விரும்புவான்; உயிர்கொல் வானின் பாவம் மிகாமை இலை-ஆதலால் உயிரைக் கொல்பவனிடத்துப் போலவே தீவினை இவர்களிடத்தும் மிகுவதாம். ஆகவே விலைப்பாலின் ஊன் கொண்டுண்ணல் அறவோர்க்குத் தகாத செயலாம் என்றவாறு.

ஊன் உண்ணும் அவாவினாலே ஊன் உண்பவன் அவ்வூன் உணவு மிகுதியாகக் கிடைத்தலையே விரும்புவான். ஆகவே அவன் கொலைக்குடன் பட்டானாகிக் கொன்றவனே ஆகின்றான். என்னை? ஊன் விற்பவனும் அங்ஙனமே ஊன் மிகுதியாகக் கிடைப்பதனையே கொல்கின்றான். ஆதலால் கொல்பவனுக்குத் தீவினை மிகுவது போலவே உண்பவனுக்கும் மிகுதல் ஒருதலை. ஆதலால் ஊனுண்ணல் தகாது என்பதாம். ஆண்டருகல் வேண்டும் என்பது பாட வேறுபாடு.

இனி

தினற்பொறுட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்       குறள்,256

என வள்ளுவனார் கூறுதலும் காண்க. இனி, இக்கருத்தினை,

வெற்றுடம் புண்பதும் வேலின் விளந்தவை
தெற்றென வுணபதுந் தீமை தருமென்னை
யொற்றை நின்றாடுணை யூறு படுத்தவட்
குற்றமன்றோ சென்று கூடுவே தேடா      நீலகேசி,332

என்றற்றொடக்கத்து நீலகேசிச் செய்யுள்களானும் அவற்றிற்கு யாம் வகுத்துள்ள உரைப்பகுதிகளானும் நன்குணர்க.

இன்னும்

உகுநெற் பலகூட்டி யுண்டி முடிப்பான்
மிகுநெல் லுதிர்வதனை வேண்டும்-தகவுடையோ
ருண்ணாப் படுமுடையை யுண்பானுயிர் மரண
மெண்ணாத வாறுண்டே யிங்கு ( þ உரைமேற்கோள்,21

எனவரும் வெண்பாவானும் உணர்க.      (21)

ஊனுண்போரின் இழிதகைமை

22. பிறவிக் கடலகத்து ஆராய்ந்து உணரின்
தெறுவதில் குற்றம் இலார்களும் இல்லை
அறவகை ஓரா விடக்கு மிசைவோர்
குறைவு இன்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவர்.

(இதன் பொருள்) பிறவிக் கடல் அகத்து ஆராய்ந்து உணரின்-உயிரினங்கள் பிறப்புற்றுழலாநின்ற கடல்போன்ற இப்பேருலகத்தின்கண் ஆராய்ந்து காணுமிடத்து; தெறுவதின் குற்றம் இலார்களும் இல்லை பிறவுயிரைக் கொல்வதனாலுண்டாகுந் தீவினையில்லாதவர் ஒருவரேனும் இலராவார்; அறவகை ஓரா விடக்கு மிசைவோர்-ஆயினும், அறமுறைகளை ஆராய்ந்துணராமல் ஊன் தின்பவர்; குறைவு இன்றித் தம் சுற்றம் தின்றனர் ஆவார்-அவருள்ளும் யாதோரவலமுமின்றித் தம்முடைய மனைமக்கள் முதலிய சுற்றத்தாரைக் கொன்றுதின்ற அத்துனைக் கொடுவினையாளரே யாவர் என்பதாம்.

(விளக்கம்) உய்ந்து கரையேற ஒண்ணாதபடி விரித்து கிடத்தலின் பிறவியைக் கடல் என்றார். வள்ளுவனாரும் பிறவாழி என்பதுணர்க.

பிறவியுட்பட்டுழல்வோர் தம் வாழ்நாளில் யாதோருயிரையும் கொல்லாது தூயராகவே வாழ்வது யாவரானும் இயலாததொன்றேயாம். உலகின்கண் கண்ணாற் காணப்படாத சிற்றுயிர்களும் கொதுகு எறும்புபோல் எனவும் யாண்டும் நிறைந்திருத்தலால் தெரிந்தோ தெரியாமலோ இவற்றைக் கொல்லாதவர் யாருமிலர். அங்ஙனமிருப்பினும், ஆறறிவுபடைத்த மாந்தர் அறமுணர்ந்து கொலைவினை ஒரீஇ வாழல் வேண்டும் அன்றோ. ஊன் உண்பவர் யாவரும் கேளிர் என்னும் மெய்யுணர்வின்மையாலே தமக்கு நெருங்கிய உறவுடைய உயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊனைத் தின்கின்றனர். இவ்வாற்றால் இவர் தம் மனைவி மக்களைத் தின்பவர் போன்று பெருந்தீவினையாளரே என்பதில் ஐயமில்லை என்பதாம்.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து     குறள்,309

எனவும்,

அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை   குறள்,318

எனவும்,வரும் திருக்குறள்களையும் நோக்குக.

யாதும் ஊரே யாவருங் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனார் மணிமொழியால் எல்லாவுயிர்களும் நெருங்கிய உறவும் பண்புடையனவே என்பதனை யுணர்க. இம்மெய்யுணர்வின்மையால் மாந்தர் ஊன் தின்கின்றனர் என்றிரங்கியபடியாம்.    (22)

செவியறிவுறூஉ

23. உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன்மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்துஒரீஇக்
கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர்.

(இதன் பொருள்) உயிர்கள் ஓம்புமின்-எல்லாவுயிர்களையும் அருள் கூர்ந்து காப்பாற்றுவீராக!; ஊன் விழைந்து உண்ணன்மின்-பிறவுயிரினங்களின் ஊனை விரும்பி உண்ணற்க; செற்றம் இகந்து ஒரீஇ வெகுளியைத் துவர விலக்கி; செயிர்கள் நீங்குமின்-காமமுதலிய குற்றங்களினின்றும் நீங்கி வாழுவீராக; கதிகள் நல்லுருக் கண்டனிர் இவ்வாறு வாழ்வீராயின் மேல்வரும் பிறப்புக்களிலே மேனிலை யுலகங்களிலே தேவர் முதலியோராய் அழகிய உருவங்களை அடைந்து; கைதொழுமதிகள் போல-உலகத்தார் கை குவித்துக் தொழுகின்ற குளிர்ந்த நிறைத் திங்கள் போன்று; மறுவிலிர் தோன்றுவீர்-குற்றமில்லாதவர்களாய் அருள் நிரம்பிய புகழொடு விளங்குவீர் என்பதாம்.

(விளக்கம்) உயிர்களை ஓம்புதலாவது-சோர்ந்தும் கொலைவாராமல் குறிக்கொண்டு உயிர்களைப் பாதுகாத் தொழுகுதல். இவ்வறமே நூலோர் தொகுத்த அறங்களுள் தலைசிறந்த அறமாதல் பற்றி முற்பட ஓதினர் என்னை?

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை    குறள்,322

எனவரும் திருக்குறளும் நோக்குக. வேள்வி முதலியவற்றிற் கொன்று ஊனுகர்தல் நல்லறமே என்னும் மடவோரும் உளர் ஆகலின் நீயர் விழைந்து எல்லாவற்றானும் ஊனுண்ணுதொழிமின். உண்பீராயின் நரகத்து எவ்வாற்றானும் ஊனுண்ணாதொழிமின். உண்பீராயின் நரகத்து வீழ்ந்து நலிகுவர் என்பார் விழைந்து ஊன் உண்ணன்மின் என்றார்.

இதனை,

நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை      குறள்.328

எனவும்,

உண்ணாமை யுள்ள துயர்நிலை யூனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு    குறள்,255

எனவும் வரும் குறள்களானுமுணர்க.

செற்றம்-வெகுளி.செயிர்-காம முதலிய ஆறுவகைக் குற்றங்களும் ஆம்.தீவினை பிறத்தற்கெல்லாம் வெகுளியே தலைசிறந்த காரணமாகலின். செயிர்கள் நீங்குமின் என்றொழியாது அதனைக் தனித்தெடுத்தும் ஓதினர். இவ்வாறெல்லாம் நாடொறும் நல்லறம் பேணி வாழுதிராயின் நீயிர் ஒளியுலகில் அழகிய தேவயாக்கை பெற்றுக் திகழுவீர் என்று அவற்றின் பயனையும் உடனோதினர். என்னை?

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு    குறள்,31

எனவும்,
அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு    குறள்,32

எனவும் வரும் திருக்குறளையும் நோக்குக.         (23)

தவத்தின் மாண்பு

24. பொருளொடு போகம் புணர்தல் உறினும்
அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின்
இருளில் கதிச்சென்று இனிஇவண் வாரீர்
தெருளல் உறினும் தெருண்மின் அதுவே.

இதன் பொருள். பொருளொடு போகம் புணர்தலுறினும்-நீங்கள் நல்லாற்றினின்று பொருளீட்டுந் தொழிலி லீடுபட்டிருந்தாலும் இல்லறத்திலே மனைவிமாரொடு இன்பம் நுகர்ந்து வாழ்வீராயினும்; ஆகுக!; அருளுதல் சான்ற அருந்தவஞ் செய்ம்மின்-பிறவுயிர்களுக்கு அருள் செய்தலே மிக்க, செயற்கரிய தவவொழுக்கத்தையும் மேற்கொள்ளக் கடவீர்; இருள்இல் கதிச்சென்று-மயக்கமில்லாத உயிர்பிறப்பெய்தி; இவண் இனி வாரீர்-இந்நிலவுலகத்தே இன்னும் வந்து பிறவாப் பெருமையை எய்துவீர்; தெருளல் உறினும் நீங்கள் பல்லாற்றான் ஆராய்ந்து தெளிந்தாலும்; அதுவே-அத்தவமே முடி பொருளாம்; தெருண்மின்-தெரிந்து கொண்மின்; என்பதாம்.

(விளக்கம்) அறநெறி நின்று பொருளீட்டுதலும் மகளிரொடு புணர்ந்தின்புற்றிருத்தலும் தவவொழுக்கத்திற்கு இடையூறுகள் ஆக மாட்டா. பொருள்களின்பால் பற்றின்மையும் காமவின்பத்தின்பால் அழுந்தாமையும், உற்றநோய் நோன்றலும் உயிர்க்குறுகண் செய்யாமையுமே மெய்யாய தவமாகலின் இவ் வொழுக்கமுடையீராய் வாழக்கடவீர் இவ்வாழ்க்கை நும்மை மேன்மேலும் உயர்பிறப்பிற் செலுத்தி வீடு பேற்றினையும் நல்கும் என்றவாறு.

இதனை,

உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு     குறள்,261

எனவும்,

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்    குறள்,261

எனவும்,

மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்      குறள்,280

எனவும் வருந் திருக்குறள்களானும் உணர்க.

இன்னும் சைவர் முதலிய பிற சமயத்தாரும் இங்ஙனமே கூறுதலை

தேசமிடம் காலந்திக் காசனங்க ளின்றிச்
செய்வதொன்று போல்செய்யாச் செயலதனைச் செய்தங்
கூசல்படு மனமின்றி யுலாவ னிற்ற
லுறக்கமுணர் வுண்டிபட் டினியிருத்தல் கிடத்தல்
மாசதனிற் றூய்மையினின் வறுமை வாழ்வின்
வருத்தத்திற் றிருத்தத்தில் மைதுனத்திற் சினத்தி
னாசையினின் வெறுப்பினிவை யல்லாது மெல்லா
மடைந்தாலு ஞானிகடா மரனடியை யகலார்
                                     சிவ-சக்தி,285

எனவும்,

நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்துந் தாகமுதற் றவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்திரா யிருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின்
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே யிடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிட்ந்துமிறை ஞானங்
கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே யிருப்பார்   
                        சிவ-சித்தி,308

எனவும்,

சாக்கிரத்தே யதீதத்தைப் புரிந்தவர்கள்  உலகிற்
சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்க ளிவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுவெ னிம்மையிலே யுயிரின்
பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ.
ஆக்குமுடி கவித்தரசாண் டவர்களிரி வையரோ
டனுபவித்தங் கிருந்திடினு மகப்பற்றற் றிருப்பர்
நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலு
நுழைவர்பிறர் பினின்வினை கள்நுங்கி டாவே.

எனவும் வருகின்ற சிவஞான சித்தியார்(287) முதலியவற்றாலும் உணர்க.  (24)

இதுவுமது

தவத்தின் மேல் உரை தவத்திறை தனக்குஅலது அரிதே
மயக்கு நீங்குதல் மனம்மொழி யொடும்செயல் செறிதல்
உவத்தல் காய்தலொடு இலாதுபல் வகைஉயிர்க்கு அருளை
நயத்து நீங்குதல் பொருள்தனை அனையதும் அறிநீ.

(இதன் பொருள்) தவத்தின்மேல் உறை-தவவொழுக்கத்தின் மட்டுமே நின்று உயிர் வாழ்தல்; தவத்து இறை தனக்கு அலது அரிது அத் தவவொழுக்கத்திற் கெல்லாம் தலைவனாயிருக்கின்ற அருகக் கடவுளுக்குக் கைகூடுவதல்லது நம்மனோர்க்கு மிகவும் அரியதொரு செயலேயாகும்; ஆயினும், நம்மனோர்க்கு தவமாவது; மயக்கு நீங்குதல்-மயக்கம் நீங்கப் பொருளியல் புணர்தலும்; மனம் மொழியொடு மெயில் செறிதல்-மனமும் மொழியும் உடம்புமாகிய மூன்று கருவிகளையும் அடக்கி அறமாகிய சிறைக்கோட்டத்தின் கண்ணிருத்தல்; உவத்தல் காய்தலொடு இலாது-விரும்புதலும் வெறுத்தலுமாகிய குணங்களோடிராமல்; பல்வகை உயிர்க்கு அருளை நயந்து-பல்வேறு வகைப்பட்ட உயிரினங்களிடத்தும் அருள் கூர்தலையே விரும்பி; பொருள்தனை நீங்குதல்-பொய்ப் பொருள்களின்பாற் பற்றுவையாது ஒழிதல்; அனையதும் நீ அறி-ஆகிய இவற்றை மேற்கோடலே யாம். அத்தவத்தினையும் நீ நன்குணர்ந்து கொள்ளக் கடவை! என்பதாம்.

(விளக்கம்) தவம் செயற்கரிய தொன்றெனக் கருதி அதனை விட்டுவிட வேண்டா! தவத்தோர்க்குக் கூறப்பட்ட முழுவிலக்கணங்களும் தவத்தோர்க்கெல்லாம் இறைவனாகிய அருகக் கடவுளுக்கே பொருந்துவதாம் ஆயினும், அஃது அருமையுடையத்தென்று அசாஅவாமை வேண்டும். அத் தவம் நம்மனோர் ஆற்றுமளவிற்கு எளியதூஉமாம். அஃதாவது

பொருளல்லவற்றைப் பொருளாகக் கருதும் மயக்கம் நீங்குதலும் மனமொழி மெய்களை அடக்கித் தீதொரீஇ நன்றின்பாலுய்த்தலும், விருப்பு வெறுப்பற்றிருத்தலும் பொய்ப் பொருள்களைப் பற்றிக் கிடவாமையும் எவ்வுயிர்க்கும் அருளுடையராயிருத்தலும் ஆகிய இவ் வொழுக்கமே நம்மனோர்க்குத் தவமாம். ஆதலால் இவற்றை மேற்கோடல் யாவர்க்கும் கூடும் அன்றோ என்றவாறு.

இவற்றை; நிரலே,

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானா மாணாப் பிறப்பு   குறள்,351

எனவும்,

இருணீங்கி இன்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு        குறள்,352

எனவும்,

அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு   குறள்,343

எனவும்,

நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன்       குறள்,379

எனவும்,

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தாற்குந் துய்த்த லரிது   குறள்,377

எனவும்; (குறிப்பு-இவ்விரண்டும் விருப்பு வெறுப்பினீங்கற்கு வேண்டுவன)

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு
இவ்வுலக மில்லாகி யாங்கு   குறள்,247

எனவும் வரும் திருக்குறளானுமுணர்க.     (25)

இனைவிழைச்சு

26. எண்ணின்றி யேதுணியும்; எவ்வழி யானும் ஓடும்;
உள்நின்று உருக்கும்; உரவோர்உரை கோடல் இன்றாம்
நண்ணின்றி யேயும்; நயவாரை நயந்து நிற்கும்;
கண்ணின்று காமம் நனிகாமுறு வாரை வீழ்க்கும்.

(இதன் பொருள்) காமம்-காமமானது;  எண் இன்றியே துணியும் ஆராய்தல் சிறிது மின்றியே செயல் செய்யத் துணியும்; எவ்வழியானும் ஓடும்-நல்வழி தீயவழி என்று நாடுதலின்றி எந்தவழியினும் விரைந்து செல்லும்; உள் நின்று உருக்கும்-தான் விரும்பியவாறு இன்பத் துய்த்தற் கிடையூறு நேர்ந்தவிடத்து நெஞ்சத்தின் கண்ணின்று நலித்து உள்ளத்தையும் உடம்பினையும் மெலிவிக்கும்; உரவோர் உரைகோடல் இன்று ஆம்-அறிஞர் கூறும் அறவுரைகளைச் சிறிதும் பேணுதலும் இல்லையாகும்; நண்ணின்றியேயும் தன்பால் கேண்மையில்லாமலும் தன்னைச் சிறிதும் விரும்பாமலுமிருப்பவரையும் பெரிதும் விரும்பி அவ்விருப்பத்தை விடாது நிற்கும்; நனி காமுறுவாரை-தன் உந்துதலாலே மிகவும் இணை விழைச்சினை விரும்புவாரை; வீழ்க்கும்-தீவினைக்கண் வீழ்த்திவிடும்; ஆதலால் கண்இன்று-அக்காமத்திற்குக் கண்ணில்லை என்பர் உலகோர் என்பதாம்.

(விளக்கம்) எண்-ஆராய்ச்சி. எண்இன்றியே துணியும் என்றாது இதனைச் செய்தல் அதன் விளைவு இன்னதாகும் என்று ஆராய்ச்சியின்றியாது நிகழுக வென்று காரியஞ் செய்யத் துணியும் என்பதாம்.

காமத்தின் பண்பு இன்னதாதலை இராமாயண முதலிய காப்பியங்களிற் காண்க. உலகியலினும் யாண்டுங் காணலாம். எவ்வழியானும் ஓடும் என்றது முறை நோக்காமல் யாவரிடத்தும் செல்லும் என்றவாறு. காமம் இத்தகைய இழிகுணமுடைத்தென்பது கருதியன்றோ, ஆசிரியர் குமரகுருபர அடிகளார்,

கொலையஞ் பொய்ந்நாணார் மானமு மோம்பார்
களவொன்றோ ஏனையவுஞ் செய்வார்-பழயொடு
பாவமிஃதென்னார் பிறிதுமற் றென் செய்யார்
காமங் கதுவப் பட்டார்     நீதிநெறி விளக்கம்,79

என்றோதுவாராயினர்.

இனி, காமங் கதுவப்பட்ட நெஞ்சம் அறிஞர் அறவுரை கொள்ளாமல் எவ்வழியானும் என்பதனை,

............. .......... நன்னுதன் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத் திளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅ
தொல்கா வுள்ளத் தோடும்  சிலப், 23:35-9

எனவரும் இளங்கோவடிகளார் இன்மொழியானுமுணர்க.

நண்-நண்ணுதல்-அஃதாவது நெருங்கி நட்புக்கொள்ளுதல், தம்மை விரும்பாதவரையும் நயந்து நிற்கும் என்பதனை, கைக்கிளை ஒழுக்கத்தான் உணர்க. அஃதாவது:-

காமஞ் சாலா விளமை யோள்வயி
னேமஞ் சாலா விடும்பை யெய்தி
நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தாற்
றன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல்
புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே

எனவரும் தொல்காப்பியத்தானுணர்க  (அகத்-சூ-50)

இராமாயணம் முதலிய காப்பியங்களில் இராவணன் முதலிய காமுகர் செயல்களாலும்,

உண்ணின்றுருக்கும் என்பதனை,

இணரார் நறுங்கோதை எல்வளையாள் கூட்டம்
புணராமற் பூசல் தரவும்-உணராது
தண்டா விழுப்படர் நலியவும்
உண்டால் என்னுயிர் ஓம்புதற் கரிதே
                               புறப்-வெண்-292

எனவரும் ஆண்பாற் கைக்கிளையானும்;

பிறைபுரை வாணுதல் பீரரும்ப மென்றோள்
இறைபுனை யெல்வளை யேக-நிறைபுணையா
யாம நெடுங்கடல் நீந்துவேன்
காம வெள்ளெரி கனன்றகஞ் சுடமே

எனவரும் பெண்பாற் கைக்கிளையானும்,

கூலத்தா ருலக மெல்லாங் குளிர்ப்பொடு வெதுப்பு நீங்க
நீலத்தா ரரக்கன் மேனி நெய்யின்றி யெரிந்த தன்றே
காலத்தால் வருவதொன்றோ காமத்தாற் கனலும் வெந்தீச்
சீலத்தா லவிவ தன்றிச் செய்யத்தா னாவ துண்டோ

எனவரும் கம்பர் கூற்று முதலிய காவியச் செய்யுள்களாலு முணர்க.

காமத்திற்குக் கண்ணில்லை என்பது ஒரு மூதுரை.

காமுறுவாரை நரகத்தில் வீழ்க்கும் எனினுமாம்.      (26)

இதுவுமது

27. சான்றோர் உவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்;
ஆன்றுஆங்கு அமைந்த குரவர்மொழி கோடல் ஈயார்;
வான்தாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர்; காமன்
தான்தாங்கி விட்ட கணைமெய்ப்படும் ஆயி னக்கால்.

(இதன் பொருள்) காமன் தான் தாங்கிவிட்ட கணை மெய்ப்படும் ஆயின் அக்கால்-காமவேள் தன் கையிலேந்திக் கருப்பவில்லிற் றொடுத்து எய்து விட்ட மலர்க்கணை காமுகர் மார்பிற் பட்டபொழுது; சான்றோர் உவர்ப்ப-பெரியோர்கள் தம்மை வெறுத்தொதுங்காநிற்பவும்; தனி நின்று-மக்குப் பற்றுக்கோடாவாரையும் இழந்து தனித்து நின்று; பழிப்ப காணார்-இவ்வுலகம் தம்மைப் பழிதூற்றலும் அறியாராய்; ஆன்று ஆங்கு அமைந்த குரவர் மொழி கோடலீயார் கல்வி கேள்விகளா னிரம்பி அவற்றிற்கியைய அடங்கிய தம்மாசிரியருடைய மொழிகளையும் ஏற்றுக்கொள்ளாராய்; வான் தாங்கி நின்ற புகழ் மாசுபடுப்பர்-தான் பிறந்த குடியினுடையவும் தம்முடையவுமாகிய பெருமைமிக்க புகழையும் கெடுத்தொழிவர். அத்துணைத் தீயதாம் காமம் என்பதாம்.

(விளக்கம்) இது காமத்தால் வரும் கேட்டினை அறிவுறுத்தியதாம் காமத் தீவினையுடையோரை அவர்க்குப் பற்றுக்கோடாகிய சான்றோர் முதலியவர் வெறுத்தொதுக்கலின் தனித்து நிற்றல் வேண்டிற்று.

ஆன்று-கல்வி கேள்விகளாலே நிரம்பி என்க. குரவர்-நல்லாசிரியர் முதலியவர். கோடலீயார்: ஒரு சொல். (வினைத் திரிசொல்) கொள்ளார் என்னும் பொருட்டு.

தான்றோன்றிய உயர்குடி பெரும்புகழ் என்பது தோன்ற வான்றாங்கி புகழ் என்றார்      (27)

இதுவுமது

28. மாஎன்று உரைத்து மடல்ஏறுப மன்று தோறும்;
பூஎன்று எருக்கின் இணர்சுடுப; புன்மை கொண்டே
பேய்என்று எழுந்து பிறர்ஆர்ப்பவும் நிற்பர்; காம
நோய்நன்கு எழுந்து நனிகாழ்க் கொள்வதாயி னக்கால்.

(இதன் பொருள்) காமநோய் நன்கு எழுந்து நனிகாழ் கொள்வது ஆயின் அக்கால்-மாந்தருக்குக் காமப்பிணி நன்றாகத் தோன்றி மிகவும் முதிர்வதானால் அப்பொழுது; மா என்று உரைத்து மடல் ஏறுப-குதிரை என்று கூறிக்கொண்டு பனைமடலாலே குதிரையுருவஞ் செய்து நாணம் விட்டுப் பலருங் காண அதன்மேல் ஏறா நிற்பர்; பூ என்று எருக்கின் இணர் சூடுப-மணமாலை என்று கூறிக்கொண்டு எருக்கமலர் கொத்தினையும் சூடிக்கொள்வர்; புன்மை கொண்டு-இவ்வாறு இழிதகவுடையன செய்துகொண்டு; பிறர் பேய் என்று எழுந்து ஆர்ப்ப- தம்மை கண்ட பிறரெல்லாம் இஃதொரு பேயென்று கூறி எழுந்து ஆரவாரிக்கும்படி; மன்றுதொறும் நிற்ப-அம்மடன்மாவை ஊர்ச்சிறாராலிழுப்பித்து மன்ற மிருக்குமிடந்தோறும் அதனை யூர்ந்து சென்று ஊரவர் அறிய நிற்பர்; இத்துணையும் செய்விக்கும் காமங் கண்டீர்! என்பதாம்.

(விளக்கம்) ஒரு தலைவன் தான் காமுற்ற தலைவியை மணத்தற்கு அவளுடைய சுற்றத்தார் முதலியோரால் இடையூறு நேர்ந்தவிடத்து இவ்வாறு மடலேறுதல் பண்டைக்காலத்து நந்தமிழகத்து நிகழ்ந்த நிகழ்ச்சியாம். இந்நிகழ்ச்சி இழிதகவுடையதாகலின் காமத்தினிழிதகைமைக்கு இதனை இவ்வாசிரியர் குறிக்கின்றார். காமங் காழ்கொண்டவர் இங்ஙனம் மடன்மாவூரும் வழக்கமுண்மையை,

ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழித்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே
                     தொல்-அகத்-51

எனவும்

மடன்மா கூறும் இடனுமா ருண்டே  þ களவி-11

எனவும் வருந் தொல்காப்பியத்தானும்,

சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும்
பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல்
சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த
சான்றீர் நுமக்கொன் றறிவுறுப்பென் மன்ற
துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி
யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென்
னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டு துஞ்சே
னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்
பிணையலங் காவிரைப் பூவோ டெருக்கின்
பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப
வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தென் னெவ்வநோய்
தாங்குத றோற்றா விடும்பைக் குயிர்ப்பாக
வீங்கிழை மாதர் திறந்தொன்று நீங்காது
பாடுவென் பாய்மா நிறுத்து;
யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப
மாமேலே னென்று மடல்புணையா நீத்துவேன்
றேமொழி மாத ருறாஅ துறீஇய
காமக் கடலகப் பட்டு;
உய்யா வருநோய்க் குயலாகு மைய
லுறீஇயா ளீத்தவிம் மா;
காணுந ரெள்ளக் கலங்கித் தலைவிந்தெ
னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரு
மாணிழை மாதரா ளேஎரெனக் காமன
தாணையால் வந்த படை;
காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம்
மெழினுத லீத்தவிம் மா;
அகையெரி யானாதென் னாருயி ரெஞ்சும்
வகையினா லுள்ளஞ் சுடுதரு மன்னோ
முகையா ரிலங்கெயிற் றின்னகை மாதர்
தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு;
அழன்மன்ற காம வருநோய் நிகன்மன்ற
நேரிழை யீத்தவிம் மா;
ஆங்கதை,
அறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ
மொரீஇ துறக்கத்தின் வழி யான்றோ
ருள்ளிடப்பட்ட வரசனைப் பெயர்த்தவ
ருயர்நிலை யுலக முறீஇ யாங்கென்
றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே

எனவரும் கலித்தொகையானும்(139) நன்குணர்க.

இனி இச் செய்யுளோடு,

மாவென மடலும் ஊர்ப் பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே.

எனவரும் குறுந்தொகைச் செய்யுள்(17) ஒப்பு நோக்கற்பாலது.   (28)

இதுவுமது

29. நக்கே விலாசிறுவர்; நாணுவர்; நாணும் வேண்டார்;
புக்கே கிடப்பர்; கனவும்நினை கையும் ஏற்பர்;
துற்றூண் மறப்பர்; அழுவர்; நனி துஞ்சல் இல்லார்;
நற்றோள் மிகைபெ ரிதுநாடுஅறி துன்பம் ஆக்கும்.

(இதன் பொருள்) நக்கே விலா இறுவர்-காமுகரின் இழிசெயலைக் கண்டு கயமாக்கள் நகைத்து நகைத்துத் தம் விலாவென்பொடிந்து போவர்; நாணுவர்-மற்றுச் சான்றோர் தாமும் அவர்பொருட்டு நாணாநிற்பர்; நாணும் வேண்டார்-மற்று அக் காமுகரோ நாணத்தை ஒரு பொருளாகக் கருதமாட்டார்; (கைவிட்டொழிவர்) புக்கே கிடப்பர்-நாளெல்லாம் கற்பில்லா அம்மகளிர் இல்லத்தே புகுந்து அவ்விடத்தேயே சோம்பித் துயின்று கிடப்பர்; கனவும் நினைகையும் ஏற்பர்-அத்துயிலினூடும் மனவமைதியின்றிக்கனாக் காண்டலையும் துயில் கலைந்துழி அம் மகளிரை நினைதலையுமே தொழிலாகக் கொள்பவராவர்; துற்று ஊண் மறப்பர்-உண்ணும் உணவினையும் மறந்தொழிவர்; அழுவர்-அவரால் கைவிடப்படின் அழாநிற்பர்; நனிதுஞ்சல் இல்லார்-நன்கு துயிலுதல்தானுமிலராவார்; நற்றோள் மிகை பெரிது நாடு அறி துன்பம் ஆக்கும்-இவ்வாறு அம்மகளிருடைய அழகிய தோள்கள் காமுகருக்கு உலகத்தாரெல்லாம் கண்கூடாகக் காணத்தகுந்த மாபெருந் துன்பத்தையுண்டாக்கும்; ஆதலால் அம்மகளிர் கேண்மை கைவிடற்பாலது, என்பதாம்.

(விளக்கம்) காமுகக் கயவருடைய இழிசெயலைக் கண்டுழித் தம்பழி நோக்காக் கயமாக்கள் விலாவிறும்படி விழுந்து விழுந்து சிரிப்பர்; பிறர் பழியும் தம்பழிபோற் கருதும் சான்றோரோ நாணமெய்துவர். இங்ஙனமாகவும் காமுகரோ நாணுதலிலர் என்பார் நக்கே விலாவிறுவர் நாணுவர் நாணும் வேண்டார் என்றார். இவற்றிற்குத் தம்பழி நோக்காக் கயமாக்கள் என்றும் சான்றோர் என்றும், காமுகர் என்றும் ஏற்றபெற்றி எழுவாய்கள் வருவித் தோதுக.

பிறரை எள்ளி விலாவிறச் சிரிப்பர் என்பதனால், கயமாக்கள் என்பதும் நாணுவர் என்றதனால், சான்றோர் என்பதும், நாணும் வேண்டார் என்பதனால் காமுகர் என்பதும் பெற்றாம். கயமாக்கள் தாம் பழியுடையராய் வைத்தும் பிறர்பழி கேட்டுழி நகைத்து நாடறியச் செய்யு மியல் புடைய ரென்பதனை,

அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்    குறள்,1076

என்பதனானும், சான்றோர் பிறர் பழியைத் தம் பழிபோற் கருதி நாணுவர் என்பதனை,

பிறர்பழியுந் தம்பழியும் நாணுவர் நாணுக்
குறைபதி பென்னு முலகு    குறள்,1015

என்பதனானும் உணர்க.

இனி, காமுகர் நாணும் வேண்டார் என்பதனை,

ஒண்டொடீ நாணிலன் மன்ற விவன்,
ஆயின் ஏஎ!
பல்லார் நக்கெள்ளப் படுமடன் மாவேறி
மல்லலூ ராங்கட் படுமே    கலி,61

எனவரும் மடலேறுவார் செயலினும்,

ஏஎ இஃதொத்தன் நாணிலன் தன்னொடு
மேவே மென்பாரையும் மேவினன் கைப்பற்றும்

எனவரும் மிக்க காமத்து மிடலுடையார் ஒழுக்கத்தினும்( கலி 62) காண்க.

இனி, புக்கே கிடப்பர் என்றது, நல்லாடவர்க்குரிய அறக்கடமைகளைக் கைவிட்டுக் அப்புன்மகளிர் இல்லில் நுழைந்து சோம்பித் துயின்று கிடப்பர் என்பதுபடநின்றது. இங்ஙனம் கொள்வதெல்லாம் சொல்லாற்றலாற் போந்த பொருள் என்றுணர்க.

துற்றூண்: வினைத்தொகை. துற்றுதல்-உண்ணல். அழுவர் என்றமையால் அம்மகளிராற் புறக்கணிக்கப்பட்டபொழுது என்பது பெற்றாம்.

நற்றோள் என்றது குறிப்பு மொழி;
இடக்கரடக்கல்;

நாடறி துன்பம் என்றது, அழுதலும் துஞ்சலிலாமையு முதலியன. நாடு:ஆகுபெயர். ஆதலால் அம்மகளிர் கேண்மை பொழிக! என்பது குறிப்பெச்சம். அழிவர் என்பதும் பாடம்.       (29)

இதுவுமது

30 அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி
அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர்
புரிவளை முன்கைப் புனைஇழை நல்லார்
விரகிலர் என்று விடுத்தனர் முன்னே.

(இதன் பொருள்) அரசொடு நட்டவர்-கேண்மை கோடற்கியலாத வேந்தரோடு கேண்மை கொள்வோர், விருத்தி ஆள்ப-அவ்வேந்தர் உவந்து வழங்கும் வாழ்வூதியத்தைப் பெற்றின்புறுதல் கூடும்; அரவொடு நட்டவர்-அஞ்சுதகு பாம்போடு பழகுவோர் தாமும்; ஆட்டியும் உண்பர்- அப்பாம்பினை ஆட்டுந் தொழிலால் வருவாய் பெற்று உண்டு மகிழ்தல் கூடும்; புரிவளை முன்கைப் புனைஇழை நல்லார்-முறுக்குடைய சங்கவளையலணிந்த முன்கையினையும் அணிகின்ற அணிகலன்களையுமுடைய புல்லிய ஒழுக்கமுடைய மகளிரோ; விரகு இலர்-நல்வாழ்க்கைக்குச் சிறிதும் ஊதியமாதலிலர்; என்று முன்னே விடுத்தனர்-என்றுணர்ந்து சான்றோர் பண்தொட்டே அவர் கேண்மையைக் கைவிட்டொழிந்தனர் என்பதாம்.

(விளக்கம்) அரசர்பாலும் பாம்பினிடத்தும் கற்பிலா மகளிர்பாலும் கேண்மை கோடல் தீங்கு பயப்பதாம். ஒரோவழி அரசரோடு கேண்மை கொள்பவர் அகலாது அணுகாது தீக்காய்வார் போல விழிப்புடன் ஒழுகின் அவ்வரசனால் ஊதியம்பெற்று இன்புறுவர். பாம்போடு விழிப்புடன் பழகுவோரும் அதனை ஆட்டி வருவாய் பெற்று வாழ்தல் கூடும். கற்பிலாக் கயமகளிரோடு கேண்மை கொள்வார்க்குக் கேடு விளைவது ஒருதலை. ஒரு சிறிதும் அம்மகளிர் ஆக்கஞ் செய்வாரலர் என்பதாம். இக்கருத்தினை,

பொருட்பெண்டிர் பொய்மை முயக்க மிருட்டறையி
லேதில் பிணந்தழீஇ யற்று    குறள், 193

எனவும்,

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்     குறள், 916

எனவும்,

நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்     குறள், 917

எனவும் வருந் திருக்குறளான் உணர்க.

அக நலமாகிய அன்புடைமையும் கற்புடைமையு மின்மை தோன்ற புரிவளை முன்கைப் புனையிழையார் எனப் புறநலத்தையே விதந்தெடுத் தோதினர்         (30)

கள்ளாமை

31. பீடில் செய்திக ளாற்கள விற்பிறர்
வீடில் பல்பொருள் கெண்ட பயனெனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்
தோட லின்றி யுலையக் குறைக்குமே.

(இதன் பொருள்) களவில்-மறைவாக; பிறர் வீடு இல் பல்பொருள்- பிறமாந்தர் கைவிடுதலில்லாத பல்வேறு பொருள்களையும்; பீடு இல் செய்தியில்-பொருமையில்லாத கன்னமிடுதல் முதலிய தொழில்களாலே; கொண்ட பயன் என- நீ களவுகொண்டதன் பயன் இஃதேயாம் என்று சொல்லி; பற்றி-செங்கோன் மன்னவன் கள்வரைத் தன் மறவர்களால் பிடிப்பித்து, ஓடல் இன்றி காலொடு கைகளைக் கூடி- தப்பி ஓடிவிடாதபடி அவர்தம் கால்களையும் கைகளையும் கூட்டித் தளையிட்டு; உலையக் குறைக்கும்-அவர் நெஞ்சம் பதறும்படி துணிப்பன், என்பதாம்.

அன்றைப் பகற்கழிந் தாள் இன்று இராப்பகற்கு
அன்றில் குரலும் கறவை மணிகறங்கக்
கொன்றைப் பழக்குழல் கோவலர் ஆம்பலும்
ஒன்றல் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும்.

(விளக்கம்) களவுசெய்யுங் குற்றத்திற்குக் கைகால்களைக் குறைத்துக் கொல்லுதல் பழையகாலத்து மன்னர் வழக்கம். இதனைச் சிலப்பதிகாரத்தாலும் உணர்க. இனி, வள்ளுவனார்,

கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு   குறள், 260

என்றோதுந் திருக்குறளாலும் பண்டு கள்வரைக் கொல்லுதலே தக்க வொறுப்பென அரசர் கருதிய துணரலாம். மேலும் இக்குறளானும் களவினால் வரும் கேடுணர்க. கள்வனைக் கோறல் கடுங்கோலன்று; வெள்வேற் கொற்றம் என்பது பாண்டியன் நெடுஞ்செழியன் கூற்று. (சிலப்-வழக்குறை-64-5)

இன்னும்,

களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்   குறள், 284

என்பதனானும் களவினால் வருந் தீமையை யுணர்க.    (31)

பொய்யாமை

32. பொய்யி னீங்குமின் பொய்யின்மை பூண்டுகொண்
டைய மின்றி யறநெறி யாற்றுமின்
வைகல் வேதனை வந்துற லொன்றின்றிக்
கௌவை யில்லுல கெய்துதல் கண்டதே.

(இதன் பொருள்) பொய்யில் நீங்குமின்- பொய் கூறுவதினின்றும் அகலுங்கள்; பொய்யின்மை பூண்டு கொண்டு- பொய்யாமை என்னும் அணிகலனை எப்பொழுதும் அணிந்துகொண்டு; வைகல் நெறி அறம் ஆற்றுமின்- நாடோறும் நன்னெறியிலே நின்று நல்லறங்களை ஒல்லுந் துணையும் செய்யக் கடவீர்; வேதனை ஒன்று வந்து உறல் இன்றி- இவ்வாறு அறஞ்செய்து வாழுபவர் தம் வாழ்நாளிற் றமக் கொரு துன்பமேனும் வருதலின்றி இம்மையினும் இனிது வாழ்ந்து மறுமையினும்; கௌவைஇல் உலகு எய்துதல்- துன்பமில்லாத துறக்க நாட்டினை அடைதல் ஒருதலை என்னும் உண்மை; கண்டது- திறவோர்தம் மெய்க் காட்சியாம்; என்பதாம்.

(விளக்கம்) பொய்யின் நீங்குமின் என்றொழியாது அவ்வொழுக்கத்தைக் கடைபிடித் தொழுகுமின் என்பார் மீண்டும் பொய்யின்மை பூண்டு கொண்டென்றார். பொய்யின்மை பூண்டு கொண்டென்றமையான் அதனை அணிகலனாக உருவகித்தமை பெற்றாம். பொய்யின்மை எனினும் வாய்மை எனினும் ஒக்கும். பொய்யாமை அறங்களுட் சிறந்ததென்பதனை,

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற      குறள், 300

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு    குறள், 299

எனவும்,

பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று   குறள், 297

எனவும்,

பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும்   குறள், 296

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களானுமுணர்க.

இனி, பொய்யாமையும் ஓர் அறமாகவும் அஃதின்றி எவ்வறஞ் செய்யினும் பயன்படாமை கருதி அதனைத் தனித்தெடுத்து முற்படவோதி ஏனையவற்றைத் தொகுத்துக் கூறினார். என்னை?

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற    குறள், 34

எனவரும் பொய்யாமொழியும் காண்க.

வைகல் அறநெறி ஆற்றுமின் என மாறுக. என்னை?

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்    குறள், 38

என்பதூஉம் காண்க.

அறம் ஆற்றுமின் என்புழி அறம்- விருந்தோம்பன் முதலியன

மனத்தின்கண் மாசிலராய் அறஞ் செய்து வாழ்வோர் இம்மையினும் இனிது வாழ்வர்; மறுமையினுந் துறக்கம் புகுவர்என்பார், வேதனை வந்துறலின்றிக் கௌவையிலுலகு எய்துதல் கண்டதே என்றார். இதனை,

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு   குறள், 31

எனவருந் திருக்குறளானுமுணர்க.

கண்டது என்றது திறவோராற் காணப்பட்ட உண்மை என்பதுபட நின்றது.   (32)

இதுவுமது

33.

கல்வி இன்மையும் கைப்பொருள் போகலும்
நல்லில் செல்லல்க ளால்நலிவு உண்மையும்
பொய்யில் பொய்யோடு கூடுதற்கு ஆகுதல்
ஐயம் இல்லை அதுகடிந்து ஓம்புமின்.

(இதன் பொருள்) பொய்யொடு கூடுதற்கு- பொய்கூறி உயிர்வாழும் வாழ்க்கையின்கண்; கல்வி இன்மையும்- கல்வியாலுண்டாகும் அறிவுப் பொருளில்லாமையும்; கைப்பொருள் போகலும்-கையிலுள்ள செல்வப் பொருள் அழிவும்; நல்இல் செல்லல்களால் நலிவு உண்மையும்- நன்மையில்லாத துன்பங்களாலே வருந்துதலும்; ஆகுதல்-உண்டாதல்; பொய்இல்-முக்காலும் வாய்மையேயாம்; ஐயம் இல்லை-ஐயஞ் சிறிதும் இல்லை; அது கடிந்து ஓம்புமின்- ஆதலால்- அப் பொய் கூறுதலை ஒழித்து நும்மைப் பாதுகாத்துக் கொள்வீராக! என்பதாம். 

(விளக்கம்) பொய் கூறுமியல்புடையார்க்குக் கல்விநலம் கைகூடாது; கைப்பொருளுக்குங் கேடுவரும்; எப்பொழுதும் துன்பங்கள் வந்தவண்ண மிருக்கும் ஆதலால் பொய்கூறாதொழிமின் என்றவாறு

போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி
மீக்கொ ணகையினார் வாய்ச்சேரா-தாக்கணங்கும்
ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம்
பேடு கொளப்படுவ தில்     நீதிநெறி விளக்கம், 24

என்பதனானும் கல்வி நலம் புலங்கெட்ட புல்லறிவுடைய பொய்யர்பாற் சேராமையுணர்க.

வாய்மை அறங்களுட் சிறந்ததாதல் போன்று பொய்ம்மை தீவினைகளுட் சிறந்ததாதலின், பொய்யராகிய தீவினையாளர்க்கு இடையறாது துன்பங்கள் வந்தவண்ணமிருக்கும் என்பார், நல்லில் செல்லல்களால் நலிவுண்டாம் என்றார். என்னை?

தீயவை தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும்    குறள், 202

எனவரும் பொன்மொழியும் காண்க.    (33)

கொல்லாமை

34. உலகுஉடன் விளங்கஉயர் சீர்த்திநிலை கொள்ளின்
நிலையில்கதி நான்கின் இடை நின்றுதடு மாறும்
அலகில்துயர் அஞ்சின்உயிர் அஞ்சவரும் வஞ்சக்
கொலைஒழிமின் என்றுநனி கூறினர் அறிந்தார்.

(இதன் பொருள்) அறிந்தார்- மெய்யுணர்வுடைய சான்றோர் உலகினரை நோக்கி நமரங்காள்! நீயிர்; உலகு உயர்சீர்த்தி உடன் விளங்க நிலை கொள்ளின்-இவ்வுலகுள்ள துணையும் அதனோடிணைந்து நிற்கும் உயரிய புகழோடு நின்று நிலவுதல் வேண்டுவீராயினும்; நிலை இல் கதி நான்கின் இடை நின்று- அல்லது நிலையுதலில்லாத நால்வகைப் பிறப்பின்கட்பட்டுத் தடுமாறும்; அலகில் துயர் அஞ்சினும்-துன்புற்று நெஞ்சு தடுமாறுதற்குக் காரணமான எண்ணிறந்த துயரங்களை அஞ்சி வீடுபெற விழைதிராயினும்; உயிர் அஞ்ச வரும் வஞ்சக் கொலை ஒழிமின்-உயிரினங்கள் பெரிதும் அஞ்சும்படி நிகழுகின்ற கொலைத்தொழிலை ஒழித்துவிடுவீராக!; என்று நனி கூறினர்-என்று மிகவும் விதந்தெடுத்துக் கூறிப்போந்தனர்; ஆதலால் கொலைவினையை ஒழிப்பீராக! என்பதாம்.

(விளக்கம்)  இம்மைப் பயனையும் வீடு பேற்றினையும் ஒரு சேர அளிக்கவல்லது கொல்லாமை என்னும் நல்லறம் ஒன்றேயாகும்; ஆதலால் எல்லீரும் அவ்வறத்தினைக் கடைப்பிடித் தொழுகுமின்! என்றவாறு.

இனி, கொல்லாமை என்னும் அறமே அறங்களிலெல்லாம் தலைசிறந்த தென்பதனையும் அவ்வறமே இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் வீடு பேற்றினையும் ஒரு சேரத் தரவல்லதென்பதனையும், திருக்குறளின் கொல்லாமை என்னும் அதிகாரத்திற்கு ஆசிரியர் பரிமேலழகர்,

இது (கொல்லாமை) மேற்கூறிய அறங்கள் எல்லாவற்றினுஞ் சிறப்புடையத்தாய்க் கூறாத வறங்களையும் அகப்படுத்து நிற்றலின் இறுதிக் கண் வைக்கப்பட்டது என்று கூறும் முன்னுரையாம் பொன்னுரை யானும்; தெய்வப்புலமைத் திருவள்ளுவனார்.

அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்    குறள்,
321

எனவும்,

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று   குறள், 323

எனவும்,

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி   குறள், 324


எனவும், ஓதுந் திருக்குறள்களானுமுணர்க.

இனி, கொல்லாமை என்னுமிவ்வறம் வீடுபேறும் நல்கும் என்பதனை, அப் பொய்யில் புலவர்,

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று    குறள், 324

என வோதுந் திருக்குறளானும், அதற்கு ஆசிரியர் பரிமேலழகர்

மிகப் பெரிய அறஞ்செய்தாரும் மிகப் பெரிய பாவஞ் செய்தாரும் முறையானன்றி இம்மை தன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பரென்னும் அறநூற் றுணிபு பற்றி, இப் பேரறஞ் செய்தான்றானும், கொல்லப்படான்; படானாகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்துமென்பார். வாழ்நாள்மேற் கூற்றுச் செல்லா தென்றார்; செல்லாதாகவே கால நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர்வீடுபெறுமென்பது. இதனான் அவர்க்கு வருநன்மை கூறப்பட்டது என வகுக்கும் நல்லுரையானும் நன்கு தெளிக.

கதி- பிறப்பு. துயர் அஞ்சின் என்றது துயர் அஞ்சி வீடுபேறு எய்தி நிலைகொள்ளநினையின் என்பதுபட நின்றது. இம்மைப் பயன் கூறினமையின் மறுமையிற் றுறக்கம் புகுதலும் கொள்க.    (34)

செல்வ நிலையாமை

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயம்
கள்வர்என்று இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் ஒருபொருளை ஒட்டாது ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோய் எவ்வம் இகப்பவோ.

(இதன் பொருள்) வெள்ளம் மறவி விறல்வேந்தர் தீ தாயம் கள்வர் என்று- செல்வமானது வெள்ளமும் மறதியும் வெற்றியுடைய வேந்தரும் நெருப்பும் தாயத்தாரும் கள்வரும் என்று கூறப்படுகின்ற; இ ஆறில் கைகரப்பத் தீர்ந்து அகலும்- இந்த ஆறு வழிகளானும் உடையவனது கையினின்றும் மறைவாக ஒழிந்துபோகும் இயல்புடையதாம்; உள் இல்பொருளை ஒட்டாது. ஆதலால் உள்ளீடற்ற பொய்யாகிய பொருளைப் பற்றாமல்; ஒழிந்தவர்- துறந்த சான்றோர்; எள்ளும் பெருந்துயர் நோய் எவ்வம்-பிறர் இகழ்தற்குக் காரணமான பெரிய துயரங்களைச் செய்யும் பிறவிப் பிணியாகிய துன்பத்தை; இகப்ப- நீங்கி உய்வர் என்பதாம்.

(விளக்கம்) பொருள் முயன்றீட்டிய விடத்தும் நம்மை விட்டகலுதற்குப் பலவேறு வழிகளையும் உடைத்தாம் ஆகவே அதனை ஈட்டல் பயனின்றாம் . பொய்யாகிய அப்பொருளின்பாற் பற்று விட்டவர்களே பேரின்பம் எய்துபவர் ஆவர் என்பதாம்.

இனிச் சொல் நிலையாத்தன்மை யுடைத்தென்பதனை

அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்

எனவரும் திருக்குறளானும்

முல்லை முகைசொரிந்தாற் போன்றினிய
பாலடிசின் மகளி ரேந்த
நல்ல கருனையா னாள்வாயும்
பொற்கலத்து நயந்துண் டார்கள்
அல்ல லடைய வடகிடுமி
னோட்டகத்தென் றயில்வார்க் கண்டும்
செல்வ நமரங்கா ணினையன்மின்
செய்தவமே நினைமின் கண்டீர்!

எனவும்

அம்பொற் கலந்து ளடுபா
லமர்ந்துண்ணா வரிவை யந்தோ
வெம்பிப் பசிநலிய வெவ்வினையின்
வேறாயோ ரகல்கை யேந்திக்
கொம்பிற் கொளவொசிந்து பிச்சை
யெனக் கூறிநிற்பாட் கண்டு
நம்பன்மின் செல்வ நமரங்காள்
நல்லறமே நினைமின் கண்டீர்!

எனவும்,

வண்ணத் துகிலுடுப்பின் வாய்விட்
டழுவதுபோல் வருந்து மல்குல்
நண்ணாச் சிறுகூறை யாகமோர்
கைபாக முடுத்து நாளும்
அண்ணாந் தடகுரீஇ யந்தோ
வினையேயென் றழுவாட் கண்டும்
நண்ணன்மின் செல்வ நமரங்காள்
நல்லறமே நினைமின் கண்டீர்!
            (சீவக-2632-4-5)

எனவரும் விசயை கூற்றானும் உணர்க. பொருளல்லனவாகிய பொய்ப் பொருள் என்பார் உள் இல் பொருள் என்றார்.

இதுவுமது

36. ஒழிந்த பிறஅறன் உண்டென்பார் உட்க
அழிந்து பிறர் அவாம் வம்பப் பொருளை
இழந்து சிறிதானும் எய்தாது ஒழிந்தார்
அழிந்து பெருந்துயர்நோய்க்கு அல்லாப் பவரே.

(இதன் பொருள்)  ஒழிந்த பிற அறன் உண்டு என்பார்-பொருளை யீட்டுதலிலேயே முயன்று இனி இப்பொருளால் யாம் செய்யக் கடவனவாய் எஞ்சிய பிற அறச் செயல்களும் உண்டு அவற்றை இனியேனும் செய்குவம் என்று கருதுகின்றவர்; உட்க பெரிதும் அஞ்சும்படி; அழிந்து-அவரிடத்தினின்றும் அழிந்துபோய்; பிறர ஆம்-பிறருடைய கைப்பொருளாய் விடுகின்ற; வம்பப் பொருளை- புதுமையையுடைய செல்வத்தை; இழந்து-போகூழானே இழப்பெய்தி; சிறிதானும் எய்தாது ஒழிந்தார்-அச்செல்வத்தின் பயனைச் சிறிதேனும் எய்தப் பெறாத மாந்தர்; அழிந்து- நெஞ்சழிந்து; பெருந்துயர் நோய்க்கு-அவ்விழப்பாலுண்டான பெரிய துன்பமாகிய வறுமை நோயால்; அல்லாப்பவர்-வாழ்நாள் முழுதும் மனஞ்சுழன்று கிடப்பவரே, ஆவர் என்பதாம்.

(விளக்கம்) பொருளீட்டுந் துணையும் நல்லோரும் அறஞ்செய்யார், யாம் இப்பொருளால் செய்ய வேண்டிய அறங்களும் உள. இனி அவற்றைச் செய்வாம் என்று எண்ணியிருக்கும் போதே அவர் அஞ்சும்படி அப்பொருள் அழிந்து பிறர் பொருளாய்விடும்; இத்தகைய நிலையாமையுடைய பொருளை ஈட்டி அறஞ் சிறிதேனுஞ் செய்யாது அழிந்தொழிந்தவர் பின்னர் வாணாள் முடியும் துணையும் மனம் வருந்திச் சுழன்று கிடப்பர். இத்தகையர் அளியர் என்றிரங்கியபடியாம்.

ஆசிரியர் திருவள்ளுவனாரும்,

நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை   குறள், 331

எனவும்,

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று   குறள், 332

எனவும் அறிவுறுத்தலுணர்க.    (36)

இதுவுமது

37. இன்மை இளிவாம் உடைமை உயிர்க்கு அச்சம்
மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப்
புன்மை உறுக்கும் புரைஇல் அரும்பொருளைத்
துன்னாது ஒழிந்தார் துறவோ விழுமிதே.

(இதன் பொருள்)  இன்மை இளிவாம்-ஒருவனுக்குப் பொருளின்மையாகிய நல்குரவு தானும் பெரிதும் இழிவைத் தருவதாம்; உடைமை-மற்றும் அப்பொருட்பேறுதானும்; உயிர்க்கு அச்சம்-அவனுயிர்க்கே பெரிதும் அச்சத்தைத் தருவதாகும்; மன்னல் சிறிது ஆய்-மேலும் அப்பொருள் ஒருவன்பால் நிலைபெற்றிருக்கும் பொழுதுதானும் மிகவுஞ் சிறியதாகி; மயக்கம் பெரிதாகி-அஃதில்லையாயினும் உண்டாயினும் இரண்டு பொழுதினும் மயக்கம் மிகவுஞ் செய்வதாகி; புன்மையுறுக்கும்-மாந்தர்க்குக் கீழ்மையையே யுண்டாக்கு மியல்புடைய; புரைஇல் பொருளை-மேன்மையில்லாத பொருள்களை; துன்னாது-பற்றிதலின்றி; ஒழிந்தார்- அம்மயக்கொழிந்த சான்றோரது; துறவு விழுமிது-துறவொழுக்கமானது மிகவும் சிறப்புடையதாம், என்பதாம்.

(விளக்கம்) பொருளில்லாவிட்டாலும் இழிவுதரும். அதனைப் பெற்ற பொழுதே உயிர்க்கே அச்சந்தருவதாம். பெற்றுழியும் அது நிலைத்திருத்தலுமில்லை. அதனைப் பெற்றபொழுதும் மாந்தருக்கு மயக்கமே மிகும். இழந்தபொழுதும் மயக்கம் செய்யும். இங்ஙனம் எவ்வாற்றானும் மாந்தர்க்குக் கீழ்மையே தருகின்ற பொய்ப்பொருளைப் பற்றாமல் மயக்கொழிந்த சான்றோருடைய துறவொழுக்கமே உலகின்கண் மிகவும் சிறப்புடைய செயலாம் என்றவாறு.

இன்மை-நல்குரவு. இளிவரவு-இழிவு. உடைமை- பொருட்பேறு. கள்வர் அரசர் முதலியோரால் கொலையுண்ணவும் நலிவுறவும் செய்யுமாகலின், உடைமையுயிர்க்கச்சம் என்றார். மன்னல்- நிலைபெறுதல்- பொருள் சகடக்கால் போன்று மாறி வருதலால் நிலைபேறு சிறிதாய் என்றார். புன்மை- காமவெகுளி மயக்கங்கட்கு கீழ்மை. புரை- உயர்வு.

இனி, இன்மை இளிவாம் என்பதனை,

இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும்   குறள், 1044

எனவும்

இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு   குறள், 752

எனவும் வருந் திருக்குறள்களானும், மன்னல் சிறிதாகி என்பதனை,

அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்   குறள், 333

எனவரும் திருக்குறளானும் உணர்க, துறவோவிழுமிது என்பதனை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு   குறள், 21

எனவும்,

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று குறள், 22

எனவும்,

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு   குறள், 23

எனவும் வருந் திருக்குறள்களானு முணர்க        (37)

இதுவுமது

38. ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்
மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை
வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே.

(இதன் பொருள்)  ஈண்டல் அரிது ஆய்-வந்து சேருவது மிகவும் அரியதாகி; கெடுதல் எளிதாகி-அழிந்துபோவது மிகவும் எளியது ஆகி; நாண்டல் அரிதாய்-நிலைப்பித்துக் கோடலும் அரிதாகி; ஈடுக்கம் பல  தரூஉம் பலவேறு துன்பங்களையும் தருகின்ற; மாண்பு இல் இயல்பு-மாட்சிமையில்லாமையையே இயல்பாக உடைய; மருவு இல்-பொருத்தமற்ற; அரும்பொருளை- பெறுதற்கரிய இவ்வுலகப் பொருள்களை; வேண்டாது ஒழித்தார்-விரும்பாது துறந்த சான்றோருடைய; விறல்-வெற்றியே; விழுமிது-உலகின் கண் பெறக்கிடந்த வெற்றிகளுள் வைத்துத் தலைசிறந்த வெற்றி என்பதாம்.

(விளக்கம்) ஈண்டல்-ஓரிடத்தே குவிதல். நாட்டல் எனற்பாலது எதுகை நோக்கி நாண்டல் என மெலிந்து நின்றது. நாட்டல்-நிலைநிறுத்துதல். நடுக்கம் ஆகுபெயர், மருவு-பொருந்துதல். விறல்-வெற்றி. பொறிகளை- வெல்லுதலே வெற்றிகளிற் றலைசிறந்த வெற்றியாதலின். பொருள்களின்பாற் பற்றெழிந்து துறந்தார் விறலோ விழுமிது என்றார்.    (38)

இதுவுமது

39 இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின்
கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர்
இல்லைஉண் டாய்விடின் இம்மை மறுமைக்கும்
புல்லென்று காட்டும் புணர்வதும் அன்றே.

(இதன் பொருள்) இல் எனின் வாழ்க்கையும் இல்லை-இவ்வுலகின்கண் ஒருவனுக்குப் பொருள் இல்லையானால் அவனுக்கு நல்வாழ்க்கையும் இல்லையாய்விடும்; உண்டு ஆய்விடின்-மற்றுப் பொருள் உண்டாகுமானாலும்; கயவர் கொல்வர்-கள்வர் முதலிய கொடியவர்கள் அதனைக் கைப்பற்றும் பொருட்டு அப் பொருளுடையானைக் கொன்று விடுவர்; கொளப்பட்டும் வீடுவர்-கொல்லாமல் பொருளை மட்டும் கவர்ந்துகொண்ட விடத்தும் பொருளுடையோர் ஏக்கத்தாற் றாமே உயிர் நீப்பர்; இல்லை உண்டாய்விடில்-அல்லதூஉம் ஒருவனுக்குப் பொருள் இல்லாமையாகிய வறுமையுண்டாய் விட்டாலோ; இம்மை மறுமைக்கும் புல் என்று காட்டும்- இம்மையினும் மறுமையினும் அவ்வறியவனுடைய வாழ்க்கை பயனற்றதாய்ப் பொலிவிழந்து காணப்படும்; புணர்வதும் அன்றே-அப்பொருள்தானும் ஒருவன் விரும்பியபொழுது அவன்பால் வந்து சேர்வதுமில்லை; ஆகவே இத்தகைய பொருளின்பாற் பற்றுவையாது துறந்துபோதலே சிறப்பாம் என்பதாம்.

(விளக்கம்) பொருளில்லாமையானும் துன்பம். உண்டாயவிடத்தும் சாதல் முதலிய பெருந்துன்பமே யுண்டாம். அப்பொருளில்லாத வழி இம்மை மறுமை வாழ்க்கைகள் புற்கென்றாகிவிடும். ஆதலால் அதன்கட் பற்றுவையாது துறந்து போதலே நன்று. துறப்போர்க்கு வீட்டின்படி உண்டாதல் ஒருதலை என்பதாம்.

பொருளில்லையாயின் வாழ்க்கையுமில்லை என்பதனை,

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு    குறள், 247

எனவரும் திருக்குறளானுமுணர்க.

பொருளுடையார் கள்வர் முதலியோராற் கொலையுண்ணலும் பொருளையிழந்துழித் தாமே ஏங்கி உயிர் விடுதலும் உலகியலிற் காண்க.

வறுமையுடையோர் உணவின்மை முதலியவற்றாற் றுன்புறுதலும், அறமுதலியன செய்யமாட்டாமையின் துறக்கம் புகமாட்டாமையும் பிறவும்,

இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
னின்மையே யின்னா தது    குறள், 1042

எனவும்,

இன்மை பெனவொரு பாவி மறுமையு
மிம்மையு மின்றி வரும்    குறள், 1042

எனவும் வரும் திருக்குறள்களானும் உணர்க.

ஈதல் முதலிய நல்லறம் பல செய்தார்க்கன்றித் துறக்கவுலக வாழ்வு கிடையாதாகலின் இன்மை மறுமை வாழ்க்கையையும் கெடுக்கும் என்பது கருத்து        (39)

இளமை நிலையாமை

40. வல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக்
கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம்
நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி
நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே

(இதன் பொருள்)  வேல்கண் மடவார் விழைவு ஒழிய- நெஞ்சமே! வேல்போலும் கண்களையும் மடப்பத்தையும் உடைய மகளிர் நம்மை விரும்பாது புறக்கணிப்பவும்; யாம் விழைய- யாம்மட்டும் அம்மகளிரை விரும்பவும்; கோல்கண் நெறிகாட்ட-கோலாகிய கண்ணே இனி நமக்கு வழிகாட்டும் கருவியாகவும்; கொல் கூற்று உழையது ஆம்- கொல்கின்ற கூற்றுவனிடத்திற்கு அணுகியதாகிய; நாற்பது இகந்தாம்-நாற்பதியாட்டை யகவையினையும் கடந்தொழிந்தோம்; நரைத்தூதும் வந்தது-சாக்காட்டினை யறிவிக்கின்ற மறலியின் தூதாகிய நரையும் வந்துற்றது; இளமை நிலையாது-இளமை நிலைத்திராதென்று முணர்ந்து கொண்டோமன்றே? இனி நீத்தல் துணிவாம்-இனியேனும் துறந்துபோதலைத் துணிவோமாக! என்பதாம்.

(விளக்கம்) இது மெய்யுணர்வுடையோனொருவன் தன்னெஞ்சிற்குக் கூறியது. வேற்கண் மடவார் நம்மை விழையாராகவும் யாம்மட்டும் அவரை விழைதல் நாணுதல் தகவுடைத் தென்பான், மடவார் விழைவு ஒழிய யாம் விழைய நாற்பது இகந்தாம் என்றான். கட்பொறி ஒளியிழந்து போயின வென்பான் கோற்கண் நெறிகாட்ட என்றான். நாற்பது-நாற்பதியாட்டை யகவை. நரைசாவினை முற்பட வுணர்த்துமொரு அறிகுறியாகலின், அதனை மறலியின் தூதுவனாக உருவகித்தான். யாம் சாவினை மிகவும் நெருங்கிவந்துவிட்டோம் என்றிரங்குவான், கொல்கூற்றுழையதாம். நாற்பது என்றான். நீத்தல்- துறந்துபோதல். இனி இதனோடு.

மைதிரண்ட வார்குழன்மேல் வண்டார்ப்ப
மல்லிகைமேன் மாலை சூடிக்
கைதிரண்ட வேலேந்திக் காமன்போற்
காரிகையார் மருளச் சென்றார்
ஐதிரண்டு கண்டங் குரைப்பவோர்
தண்டூன்றி அறிவிற் றள்ளி
நெய்திரண் டாற்போலுமிழ்ந்து நிற்கு
மிளைமையோ நிலையாதே காண்!

எனவரும் சீவகசிந்தாமணியும்(2626)

நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்-நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளெவ்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று    நீதிநெறி விளக்கம், 1

எனவரும் குமரகுருபரவடிகளார் மணிமொழியும் நினைவு கூரற்பாலன.

இது நெஞ்சிற்குக் கூறும் வாய்பாட்டால். இவ்வாறு அற முதலியவற்றை அறிதலின்றிப் பயன்படாமல் மூப்பதற்கு முன்பே இளமைப் பருவத்தே தவமும் தானமும் நிகழ்த்தி உய்வீராக! வென்று செவியறிவுறுத்தபடியாம்.

இதுவுமது

41. இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றஅல்ல;
வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக்கு என்றும்என்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின்.

(இதன் பொருள்) இளமையும் நிலையா-இன்பநுகர்தற்குரிய இளமைப்பருவமும் நிலைத்திராது(நீரிற் குமிழிபோல அழிந்துபோம்); இன்பமும் நின்ற அல்ல-நுகரும் இன்பங்கள் தாமும் நிலைத்து நிற்கு மியல்புடையனவல்ல; வளமையும் அஃதேபோல்-அவ்வின்பத்திற்குக் காரணமான செல்வங்களும் நிற்பனவல்ல; வைகலுந் துன்ப வெள்ளம்-அவ்வின்பம் நிலையா ததோடு வாழ்க்கையின்கண் நடோறும் துன்பமே மிகுதியாகவும் உள்ளன; உள என நினையாதே-ஆதலால் இளமையும் இன்பமும் வளமையும் நம்பாலுளவென்று செம்மாந்திராமல்; விளைநிலம் உழுவார் போல்-விளைகின்ற நன்செயை உழுகின்ற வேளாண்மாக்கள் எதிரியாண்டிற்கு அவ்விளைவினின்றும் விதை கொள்ளுமாறு போலே; நீர்-நீவிரும்; செல்கதிக்கு என்றும் என்றும்-நாடோறும் இனிச் சென்று பிறக்கின்ற பிறப்பிற்கு ஆக்கமாக வித்து-அறமாகிய வித்தினை; வீழ்நாள் படாமல்; செய்து கொண்மின்- செய்துகொள்ளக் கடவீர்! என்பதாம்.

(விளக்கம்) நீயிரிளமை முதலியவற்றால் மகிழ்ந்து வாளா விருந்து விடாமல் இப்பொழுதே அறமுதலியன செய்து செல்லுந் தேயத்துக்கு ஆக்கஞ் செய்து கொண்மின். அவ்விளமை முதலியன அழிந்துவிடும் என்றவாறு.

இதனோடு,

இளமையுஞ் செல்வமும் யாக்கையு நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்   சிலப், 30-200

எனவரும் இளங்கோவடிகளார் செவியறிவுறூஉவும் நினைக.

இன்னும்,

வேற்றுவர் இல்லா நுமரூர்க்கே
செல்லினும் வெகுண்டீர் போல
ஆற்றுணுக் கொள்ளா தடிபுறத்து
வைப்பிரே யல்லிர் போலும்
கூற்றங் கொண்டோடத் தமியே
கொடுநெறிக்கட் செல்லும் போழ்தின்
ஆற்றுணுக் கொள்ளீர் அழகலா
லறிவொன்று மிலிரே போலும்    சீவக, 1550

எனவருந் திருத்தக்க முனிவர் செய்யுளும் குறிக்கொள்க.       (41)

துறவு

42. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகைஅவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிகள்
அற்றாய் உழலும் அறுத்தற்கு அரிதே.

(இதன் பொருள்) பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு-பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு; உடம்பும் மிகை-அதற்குக் கருவியாகிய உடம்புதானும் மிகையாம்; மற்றும் தொடர்ப்பாடு எவன்-அங்ஙனமானபின் மேலே இயைபில்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னும்; அவை உள்வழி-அவையிற்றின் தொடர்ப்பாடுளவாயவிடத்து; பற்றா வினையாய்-மேலும் மேலும் அவற்றின்பாற் பற்றுண்டாகி அப்பற்றுக் காரணமாக வினைகளுமுண்டாகி; பலப்பல யோனிகள்-உயிர்தானும் அவ்வினைகள் காரணமாக எண்ணிறந்த பிறவிகளிடத்தும்; அற்று ஆய்-முன்போலவே பிறந்து; உழலும்-இன்ப துன்பங்களிற் கிடந்துழலா நிற்கும்; அறுத்தற்கு அரிது- இவ்வாறு வளர்ந்துவிட்ட பற்றினை மீண்டும் அறுத்தற்கு மியலாது கண்டீர்! என்பதாம்.

(விளக்கம்) இச்செய்யுளில் மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை (குறள், 345) என்னும் திருக்குறள் முழுதும் அமைந்திருத்தலுணர்க.

இனி, இத் திருக்குறட்கு, விளக்கம்போல எஞ்சிய அடிகளும் அமைந்திருத்தலுமுணர்க. இனி, இத் திருக்குறட்கு ஆசிரியர் பரிமேலழகர் கூறுகின்ற விளக்கவுரையும் ஈண்டுக் கருதற்பாற்று. அது வருமாறு

உடம்பென்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும் அவற்றுள் அருவுடம்பாவது: பத்துவகை யிந்திரிய வுணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காம வினைவிளைவுகளோடும் கூடிய மனம். இது நுண்ணுடம் பெனவும்படும். இதன்கட் பற்று நிலையாமை யுணர்ந்த துணையான் விடாமையின் விடுதற்குபாயம் முன்னர்க் கூறுப, இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை யுணர்ந்து இவற்றானாய கட்டினை இறைப் பொழுதும் பெறாது வீட்டின்கண் விரைதலின் உடம்புமிகை யென்றார். இன்பத் துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் யானெனப்படும். இதனால் அகப்பற்று விடுதல் கூறப்பட்டது எனவரும்  (42)

இதுவுமது

43  உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
மற்றது தோய்த்துக் கழுவுதல் என்ஒக்கும்
பற்றினால் ஆகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குஉறும் ஆறே.

(இதன் பொருள்) பற்றினான் ஆகிய பாவத்தை மீட்டும் பற்றொடு நின்று பறைக்குறும் ஆறு-ஒருவன் தனது பற்றுடைமை காரணமாக எய்திய தீவினையை மீண்டும் அப்பற்றுடையனாகவே நின்று தேய்த்தொழிக்கும் முயற்சி; என் ஒக்கும்- எதனை ஒக்கும் என்று வினவின்; உற்ற உதிரம் ஒழிப்பான்-ஒருவன் தன்னாடையிலுற்ற குருதிக் கறையினைப் போக்குவதற்கு; கலிங்கத்தை-அந்த ஆடையினை மீண்டும்; அது தோய்த்துக் கழுவுதல் ஒக்கும்-அந்தக் குருதியிலேயே போகட்டுக் கழுவுவதனையே ஒப்பதாம் என்பதாம்.

(விளக்கம்) பற்றுடைமையாலுற்ற துன்பம் போக்க முயல்பவர் மீண்டும் வேறு பொருள்களைப் பற்றுமாற்றாற் போக்கமுற்படுதல் ஆடையிற்பட்ட குருதிக் கறையைப் போக்குபவர் மீண்டும் அவ்வாடையைக் குருதியிலேயே தோய்ப்பது போன்று பேதைமையுடைத்து ஆதலால், பற்றறுப்போர் விடல் வேண்டும் வேண்டியதெல்லாம் ஒருங்கு என்றவாறு.

இதனை

இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து    குறள், 344

என்பதனானும் உணர்க. மேலும், பற்றினைப் பற்றுவார்க்குத் துன்பங்கள் இடையறாதுவரும் என்பதனை,

பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு    குறள், 347

என்பானானும் உணர்க          (44)

44. தானம் செய்திலம் தவமும் அன்னதே
கானம் தோய்நில விற்கு அழிவு எய்தின
நானம் தோய்குழல் நமக்குஉய்தல் உண்டோ
மானம்தீர்ந்தவர் மாற்றம்பொய் அல்லவால்.

(இதன் பொருள்) நானந் தோய்குழல்-புழுகளைந்த கூந்தலையுடைய நங்காய்!; தானம் செய்திலம்-யாமோ கழிந்த நம் வாழ்நாளிலே ஈதல் முதலிய நல்லறங்களைச் செய்திலேம்; தவமம் அன்னது முதுமைப் பருவமெய்தியும் தவவொழுக்கமும் மேற்கொண்டிலேம்; மானம் தீர்ந்தவர்-மாண்பிறந்த மானமுதலிய குற்றங்களினின்றும் விலகிய சான்றோர்; மாற்றம் பொய்யல்ல- கூறிய அந்நல்லறங்கள் பொய்மையுடையன அல்லவே; கானம் தோய் நிலவில் கழிவெய்தினம்-அந்தோ அரிது பெறுமிம் மக்கட் பிறப்பில் நமக்குற்ற வாழ்நாள் எல்லாம் காட்டில் எறிந்த நிலாப்போல வறிதே கழியப்பெற்றேம்; நமக்கு உய்தல் உண்டோ-இனி நமக்கு உய்தியுண்டாகுமோ என்செய்கேம்! என்பதாம்.

(விளக்கம்) இது வாழ்நாளிற் பெரும்பகுதியைக் காமநுகர்ச்சியிலே கழித்துக் காமஞ் சான்ற கடைக்கோட்காலைத் தன் வாழ்க்கைத் துணை வியை நோக்கி ஒரு காமுகன் இருங்கிக் கூறியதென்க.

இல்லிருந்து வாழ்ந்தோம் ஆயினும் அறஞ் செய்திலேம். முதுமையும் வந்து பெரும்பகுதி கழிந்தது. தவமும் செய்திலேம். இப்பொழுதோ இன்ப நுகரும் ஆற்றலும் இழந்தேம். சான்றோர் கூறிய நல்லறம் பொய்யல்ல. அங்ஙனமாகவும் அவற்றையும் மதித்தொழுகினோமல்லேம். சாவு அணுகிவிட்டது இனி; யாம் என் செய்தும். நமக்கு எய்திய வாழ்நாள் காட்டில் பொழிந்தநிலா வொளிபோலப் பயனற்றதாய் முடிந்தது என்று இரங்கிய படியாம்.

இவனுடைய இவ்விரங்கன் மொழிகளோடு.

நட்புநா ரற்றன நல்லாரு மஃகினார்
அற்புத் தளையு மவிழ்ந்தன-உட்காணாய்
வாழ்தலி னூதிய மென்னுண்டாம் வந்ததே
ஆழ்கலத் தன்ன வொலி    (நாலடி)

எனவரும் வெண்பாவையும் நினைக

நிலவிற்கு: உருபுமயக்கம். மானந்தீர் கொள்கையார் என்றும் பாடம்

இனி நல்லோர் கூறிய நல்லறங் கொள்ளாது வாழ்நாள் எல்லாம் வீணாளாக்கி மடிந்து நரகிற் கிடந்துழல்வோர் கூற்றாக வருகின்ற,

பெண்டீர் மக்கள் கிளைஞ ரிவர் பின்னுக் குதவி யென்றெண்ணிக்
கண்டீரறத்தை விட்டவராற் கடன்பட் டிறுத்தோ மென்பர் சிலர்
உண்டீ ருடுத்தீர் சுற்றத்தீ ருற்ற வேளைக் கொருவரும் வந்
தண்டீ ரந்தோ வும்மை நம்பி யான திதுவோ வென்பர் சிலர்

எனவும்,

தேடிப் பொருளைச் சிறுதொழிற்கே
செலுத்தி யுணர்ச்சி தெரியாமற்
பாடிப்பதருக் கிறைத்ததெல்லாம்
பலித்த தெமக்கீங் கென்பர்சிலர்
கேடிப் படிவந் தெமைச்சூழக்
கெடுத்த பாவி யுலகிலின்ன
நாடிப் பிறக்க விடினுமங்ங
னாடோ மென்று சிலர்சொல்வார்

எனவும்,

என்று மிறவோ மென்றிருந்தோ
மிறந்து படுவ தீதறிந்தா
லன்றுபடைத்த பொருளையன்றே
யருள்வோ மறையோர்க் கென்பர்சிலர்
சென்றுவரவாங் கெம்மை யின்னஞ்
செலுத்திற் புதைத்த திரவியத்தை
யொன்று மொழியா தறம்புரிந்திங்
கோடி வருவோ மென்பர்சிலர்

எனவும்,

பிறந்த வுடனேதுறந்து சுத்தப்
பிரம முணர்ந்து பிறப்பதனை
மறந்திந் நரகத் தெய்தாமை
வருமோ நமக்கு மென்பர்சிலர்
இறந்து நிரையத் தழுந்தியிட
ரிவ்வா றுழப்ப தறியாமற்
சிறந்த விவேகர் பெருமான்றன்
செயலைத் தவிர்ந்தோ மென்பர்சிலர்

எனவும் வருகின்ற கையறுநிலைச் செய்யுள்களும் நினைவிற் கொள்ளற் பாலனவாம்(மெய்ஞ்ஞான விளக்கம்-30-3-4-5)

மெய்யுணர்தல்

45. பருவந்து சாலப் பலர்கொல்என்று எண்ணி
ஒருவந்தம் உள்ளத்து உவத்தல் ஒழிமின்
வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன்
ஒருவன் உலகிற்கு உளன்என்னும் ஆறே.

(இதன் பொருள்) வெருவந்த துன்பம்-அச்சம் வருதற்குக் காரணமான துன்பத்தினின்றும்; விடுக்கும் திறலோன் ஒருவன் உளன் என்னும் ஆறு- விடுவிக்கும் பேராற்றலுடைய இறைவன் ஒருவனே உளன் என்னும் மெய்யுணர்வு பெறுமின்: பலர் என்று எண்ணி-உலகிற்கு இறைவராவார் பலர் என்று எண்ணியும்; பருவந்து-துன்பம் வந்துற்ற காலத்தே இவை பிறரால் வந்ததென்று கருதி வருந்தி; உள்ளத்து உவத்தல்-இன்பம் வந்த காலத்து இவை யாம் தேட வந்தனவென்று கருதி உள்ளத்தே மகிழ்ந்தும் வாழ்வதனை; ஒருவந்தம் ஒழிமின்-ஒருதலையாக விட்டொழிவீராக என்பதாம்.

(விளக்கம்) உலகிலுயிர்களைத் துன்பத்தினின்றும் விடுதலை செய்யும் கடவுள் ஒருவனே என்றுணர்மின்! பலர் உளர் என்று கருதி வருந்தா தொழிமின். இன்பம் வந்தகாலத்தே களிப்புறா தொழிமின். எல்லாம் ஊழின் செயலென மெய்யுணர்வோடு வாழக்கடவீர்! என்பதாம்.

இன்பதுன்பங்கள் ஊழால் வருவன ஆதலின் அவை வருங்காலத்து மகிழ்தலும் வருந்துதலும் பேதமை என்பது கருத்து. இறைவன் ஒருவனே உளன்; அவனடி பற்றினவரே இன்ப மெய்துவர்; இறைவர் பலருளர் என்று கருதி. அவ்வழியிலுழல்வோர் துன்பமேயுறுவர் என்பார். சாலப் பலரென்றெண்ணி பருவந்து என்றார். பருவந்தும் உழத்தலும் எனல் வேண்டிய உம்மைகள் தொக்கன. ஒருவந்தம்-ஒருதலையாக.

இனி இச் செய்யுளோடு,

யாது மூரே யாவருங் கேளிர்
தீது நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படுஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்

பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதினினு மிலமே

எனவரும் கணியன் பூங்குன்றனார் செய்யுளும் கருத்துட் பதித்தற்பாலது 
(45)

பழவினை

46. உய்த்து ஒன்றி ஏர்தந்துஉழஉழுது ஆற்றவும்
வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்ஒக்கும்
மெய்த்தவம் இல்லான் பொருளோடு போகங்கட்கு
எய்த்து உழந்தேதான் இடர்ப்படு மாறே.

(இதன் பொருள்)  மெய்த்தவம் இல்லான்-முற்பிறப்பிலே செய்த வாய்மையான தவத்தினை இல்லாதவன்; பொருளொடு போகங்கட்கு-செல்வம் பெறுதற்கும் அவற்றானின்பம் நுகருதற்கும்; உழந்து எய்த்து-பெரிதும் முயன்று இளைத்து; இடர்ப்படும் ஆறு-துன்புறும்வகை; என் ஒக்கும்(என்னின்)-எதனை ஒக்கும் என்னின்; வித்து இன்றி-முற்படச் சேர்த்துக் கொள்ளற்கியன்ற விதை சிறிதுமில்லாமலே; ஏர்தந்து-உழவெருது கலப்பை முதலிய கருவிகளைக் கொணர்ந்து; உழவு ஒன்றி-உழவுத் தொழிலிலே பொருத்தி; உய்த்து-எருதுகளைச் செலுத்தி; ஆற்றவும் உழுது-மிகவும் ஆழமாக உழுது; பைங்கூழ் விளைக்குறல்- பசிய பயிரை விளைக்க முயல்வதனையே ஒக்கும் என்பதாம்.

(விளக்கம்) பொருளும் போகமும் முற்செய் தவமுடையார்க்கே ஆகும். அத்தவமில்லாதார் அவற்றைப் பெற முயல்வது வீணாம் என்றவாறு. எனவே, வீடு பெறுதற்கன்றி இம்மை வாழ்விற்கும் தவமே காரணம் ஆகும். ஆகவே எல்லோரும் தவவொழுக்கம் மேற்கொள்ளல் வேண்டும் என்றாராயிற்று

இதனை,

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணிற் றவத்தான் வரும்   குறள், 264

எனவும்,

வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும்    குறள், 265

எனவும்

இலர்பல ராகிய காரண நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்     குறள்,270

எனவும், வருந்திருக்குறள்களானும்,

மேலைத் தவத்தளவே யாகுந் தான் பெற்ற செல்வம்

என்பதனானுமுணர்க      (46)

பொருள் மாண்பு
47 குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ

(இதன் பொருள்)  குலந்தரும்-பொருளானது மக்கட்கு உயர்ந்த குடிப்பெருமையை யுண்டாக்கும்; கல்விகொணர்ந்து முடிக்கும்- கல்விச் செல்வத்தைப் பிற விடங்களினின்று கொடுவந்து நிறைவுறச் செய்யும்; அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்-வறுமையானலிந்த தம் சுற்றத்தாருடைய மிக்க பசியைத் தீர்த்துய்யக் கொள்ளும்; ஆதலாலே, நிலம்பக வெம்பிய நீள்சுரம்போகி-நிலம் பிளந்து போகும் படி வெப்பமுற்ற நெடிய பாலை நிலத்தினைக் கடந்து சென்றேனும்; புலம்பு இல்பொருள் தர-துயிரின்மைக்குக் காரணமான பொருளை மாந்தர் ஈட்டிக் கொணரின்; புன்கண்மை உண்டோ- பின்னர் அவர் பால் துன்பம் உண்டாகுமோ? ஆகாது. ஆதலின் மாந்தர் அப்பொருளின் இத்தகைய சிறப்புக்களை யுணர்ந்து அதனை நிரம்ப ஈட்டிக் கோடல் வேண்டும் என்பதாம்.

(விளக்கம்) பொருள் மாந்தர்க்கு உயர்குடி பெருமையைத் தரும்; அறிவுச் செல்வத்தையும் வரவழைத்துக் கொடுக்கும்; உற்றார் உறவினர் பசிப்பிணியைப் போக்கி அவரை யுய்விக்கும், ஆதலால் மாந்தர் பாலைநிலங் கடந்தும் திரைகடலோடியும் அப்பொருளை நிரம்ப ஈட்டுதல் வேண்டும் என்றவாறு.

பிறநாடுகளிற் சென்றும் பொருளீட்டல் வேண்டும் என்பார் நிலம்பக வெம்பிய நீள் சுரம் போகிப் புலம்பில் பொருள்தரப் புன்கண்மை யுண்டோ என்றார். போகியும் எனல் வேண்டிய சிறப்பும்மை  தொக்கது.நீள்சுரம் போகி என்றமையால் திரைகடலோடியும் என்றும் கூறிக் கொள்க. இப்பொருள் மாண்பிற்கு,

இம்மியன நுண்பொருள்க ளீட்டிநிதி யாக்கிக்
கம்மியரு மூர்வர்களி றோடை நுதல் சூட்டி
அம்மிமிதந் தாழ்ந்து சுமை வீழ்ந்ததறஞ் சால்கென்
றும்மைவினை நொந்துபுலந் தூடலுணர் வன்றே

எனவும்,

உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே
வெள்ளநிதி வீழும்விளை யாததனி னில்லை
தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லிமடி கிற்பின்
எள்ளுநர்க் கேக்கழுத்தம் போலவினி தன்றே

எனவும்,

செய்கபொருள் யாருஞ் செறுவாரைச் செறுகிற்கும்
எஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணும்
ஐயமில்லை யின்பமற னோடவையு மாக்கும்
பொய்யில்பொரு ளேபொருண்மற் றல்லபிற பொருளே

எனவும்,

தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
ஓங்குதல் நையவத னுட்பிறந்த வீரர்
தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொல்
நீங்கன்மட் வார்கள்கட னென்றெழுந்து போந்தான்

எனவரும் சீதத்தன் நல்லுரைகளையும் இதற்கு ஆசிரியர் நச்சினார்கினியர்

சீதத்தன் தான் போய்ப் பொருள்தரக் கருதினான்; அங்ஙனம் கருதிக் கம்மியருங் களிறேறுவர்; ஆதலால் முயற்சியே நன்றென்று கருதாது வாழாதார் வாழ்க காண்டலின் முயற்சி வேண்டா அறமேயமையுமென்று கருதி முற்பிறப்பில் நல்வினை செய்யப் பெற்றிலே மென்று நொந்து அம் முயற்சியை வெறுத்துக் கலாய்த்திருத்தல் அறிவன்று; அதுவேயுமின்றி உள்ளமுடையான் முயற்சியைச் செய்ய ஒருநாளே நிதிதிரளும்; அந்நிதியாலே எல்லாத் துப்புரவுகளுமுளவாம்; அங்ஙனம் எல்லாமாகின்ற முயற்சியைவிட்டுப் புரைபட்ட உணர்வினவர்கள், வருவது இடைத்தங்கா தென்னுஞ் சொல்லான் மடிந்திருப்பின், அவ்விருப்புப் பகைவர்க்கு ஒரு தலை எடுப்புப் பெற்றாற் போல இனியதாயிருக்கும். அங்ஙனம் அவர் தலையெடாதபடி எல்லாரும் பொருளைத் தேடுக; தேடினாற் பகைவரைக் கொல்லும் படை அதனை யொழிய இல்லை. தான் அவரிடத்திருந்தேயும் பகைவரைக் கொல்லும்; அதுவன்றித் தானுளவாக இன்பத்திற்கு ஐயமில்லை  ஆதலின், அறத்தோடே முற்கூறியவற்றையும் உண்டாகும் மெய்யாகிய பொருளே  நன்கு மதிக்கும் பொருள். ஒழிந்த பொருள் நன்கு மதிக்கும் பொருளல்ல; ஆதலின், இப்பொருளைக் கொண்டு தம் குலம் நைகிறவளவிலே ஆலமரத்தின் வீழ்போலத் தீச்சொற் பிறவாமற் றங்குலத்தைத் தாங்கல் அதனுட் பிறந்தவருடைய கடனாகும். தங்குலத்தைத் தாங்காது போதல் பேதையரது கடனாகும். ஆதலால் யானும் முயன்று பொருள் தேடி என் குலத்தைத் தாங்குவேனென்று கூறி எழுந்திருந்து பண்டசாலையேறப் போந்தானென்க, என வகுத்துள்ள நல்லுரையையும் நனி நோக்குக.

இனி, செல்வார்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்பதுபற்றிச் செல்வம் அலந்த அழிபசி தீர்க்கும் என்றார். புலம்பில் பொருள் தரப் புன் கண் உண்டோ எனபதனை,

ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு    குறள், 760

எனவருந் திருக்குறளானும்

அரிதாய அறனெய்தி அருவியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணுரைத் தெறுதலும்

புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்ற நங்காதலர்    (கலி-11)

எனவருங் கலியானுமுணர்க

இனி இன்பத்தினும் அறமே பெரிதென நந்தமிழகத்து இளைஞர் பண்டைக்காலத்து உயிரன்ன தங் காதலிமாரையும் பிரிந்துபோய் நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப் புலம்பல் பொள்தரும் வழக்கமுடையராயிருந்தனர் என்பதனை,

இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடுநவை யாராற் றறுசுனை முற்றி
யுடங்குநீர் வேட்ட வுடம்புயங் கியானை
கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு
வெறிநிரை வேறாகச் சாரச் சாரலோடி
நெறிமயக் குற்ற நிரம்பாநீ டத்தஞ்
சிறுநனி நீதுஞ்சி யேற்பினு மஞ்சு
நறுநுத னீத்துப் பொருள்வயிற் செல்வோ
யுரனுடை யுள்ளத்தை செய்பொருண் முற்றிய
வளமையா னாகும் பொருளிது வென்பாய்

எனவரும் கலியானுமுணர்க;(12)    (47)

நட்பு

48. கெட்டேம் இதுஎம் நிலைஎன்று சார்தற்கண்
நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம்
பெட்டது சொல்லிப் பெரிதுஇகழ்ந்து ஆற்றவும்
எட்டவந்து ஓர்இடத்து ஏகிநிற்பவே.

(இதன் பொருள்)  கெட்டேம் இது எம் நிலை என்று சார்தற்கண்- ஒருவர் தம் கைப் பொருளிழந்துழி வறுமையுற்று யாம் பெரிதும் கெட்டொழிந்தேம் இப்பொழுது எம்முடைய நிலைமை பெரிதும் இத்தகைய இன்னாமையுடைய வறுமை நிலை கண்டீர் என்று சொல்லி ஏனையோர்பாற் செல்லுமிடத்தே; நட்டவர் அல்லார்-வாய்மையாக நட்புச் செய்துள்ளவரையன்றி ஏனையராகிய; நனி மிகு சுற்றம்- மிக மிக நெருங்கிய சுற்றத்தார் தாமும்; பெட்டது சொல்லி -தாம் விரும்பிய குறிப்பு மொழி கூறி; ஆற்றவும் எட்ட வந்து-மிகவுந் தொலைவிலே சென்று; ஓரிடத்தே ஏகி- ஓரிடத்தே தம்முட் கூடி; பெரிது இகழ்ந்து நிற்ப- மிகவும் இகழ்ந்திருப்பார் என்பதாம்.

(விளக்கம்) நட்டவரும் அல்லாரும் சுற்றமும் என எண்ணும்மை கொடுத்து நட்டவரும் ஏதிலரும் சுற்றத்தாரும் என ஓதினும் ஆம். நட்டவர் அல்லார் என ஓதி இச்செய்யுள் நட்பின் சிறப்பினைக் கூறுவதாகக் கொள்க.

இனி, இதனை,

இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு     குறள், 752

என்னுந் திருக்குறளானும்,

உண்டாய் போழ்தின் உடைந்துழிக் காகம்போற்
றொண்டா யிரவர் சூழ்பவே- வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலி ரோவென்
றுரைதருவா ரிவ்வுலகத் தில்    நாலடி

எனவரும் நாலடியானும்,

இன்சொல்லன் றாழ்நடைய னாயினுமொன் றில்லானேல்
வன்சொல்லி னல்லது வாய்திறவா-என்சொலினுங்
கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன்ஞாலம்
பித்துடைய வல்ல பிற    நீதிநெறிவிளக்கம், 14

எனவரும் குமரகுருபரவடிகளார் மெய்ம்மொழியானும்,

கல்லானே யானுலுங் கைப்பொருளொன் றுண்டாயி
னெல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வார்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்

எனவரும் நல்வழியானும் உணர்க    (48)

பேதைமை

49. தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண்டு ஈட்டற்கு இவறுதல் என்ஒக்கும்
பெண்மனம் பேதித்து ஒருப்படுப்பென் என்னும்
எண்ணில் ஒருவன் இயல்புஎண்ணும் ஆறே.

(இதன் பொருள்) பெண்மனம் பேதித்து-பெண்ணினது மனத்தியல்பினை மாற்றி; ஒருப்படுப்பென் என்னும்-ஒருமுகப்படுத்துவேன் என்று கூறுகின்ற; எண் இல் ஒருவன்- ஆராய்ச்சியில்லாத மடவோனுடைய; இயல்பு எண்ணும் ஆறு- தன்மையை நினையுங் கால்; என்னொக்கும்- அம்முயற்சி எதனை ஒக்குமெனின்; தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க் கெட்ட- தெளிந்த நீரிலே பெய்யப்பட்டு நான்கு திசைகளினும் பரவிச் சென்று அழிந்து போன; எண்ணெய் கொண்டு ஈட்டற்கு இவறுதல்-எண்ணெயை மீண்டும் ஒருசேரக் கொண்டுவந்து சேர்த்தற்கு அவாவுதலையே ஒக்கும் என்பதாம்.

(விளக்கம்)  பெண்ணின் மனம் இயல்பாகவே பன்முகப்பட்டுச் செல்வதாம், அதனை ஒருமுகப்படுத்த முயலுதல் நீரிற் பெய்யப்பட்டுத் திசையெல்லாம் சிதறிப்போன எண்ணெயை மீண்டும் ஒருசேரக் கூட்டிக் கைக்கோடற்கு விரும்புவது போன்றதொரு பேதைமைத்து என்றவாறு.

பெண்ணின் மனம் ஒருமுகப்படாதது என்னுமிதனை,

ஏந்தெழின் மிக்கா னிளையா னிசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான்- வாய்ந்த
நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க்
கயலார்மே லாகு மனம்   நீதிநெறி விளக்கம், 82

எனபதனானும்,

அன்புநூ லாக வின்சொ லலர்தொடுத் தøத்த காத
லின்பஞ் செய்காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
பின்செலும் பிறர்கணுள்ளம் பிணையனார்க் கடிய தன்றே

எனவும்

பெண்ணெனப் படுவகேண்மோ பீடில
பிறப்பு நோக்கா
உண்ணிறை யுடைய வல்ல வொராயிர
மனத்த வாகும்
எண்ணிப்பத் தங்கையிட்டா லிந்திரன்
மகளு மாங்கே
வெண்ணெய்க்குன் றெரியுற்றாற் போன்
மெலிந்துபின் னிற்குமன்றே

எனவும் வரும் சிந்தாமணியானும் (1596-7)

மாரியுந் திருவு மகளிர் மனமுந்
தக்குழி நில்லாது பட்டுழிப் படும்
        பெருங்கதை, 1-35:156-7

எனவரும் பெருங்கதையானுமுணர்க. இன்னும்,

இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல மாறு படும்     குறள், 822

எனத் திருவள்ளுவனாரும் ஓதுதலும் இத்திருக்குறள் உரையின்கண் ஆசிரியர் பரிமேலழகரும், அவர் மனம் வேறுபடுதல் பெண்மனம் பேதின் றொருப்படுப்பெ னென்னும் எண்ணிலொருவன் என்பதனானும் உணர்க என இவ்வளையாபதிச் செய்யுளையே மேற்கோளாக எடுத்துக் காட்டுதலும் காண்க.

பொது மகளிரியல்பு

50. நீள்முகை கையால் கிழித்து மோக்குமாறு
மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறின்
பேணலும் அன்பும் பிறந்துஉழிப் போதுசெய்து
ஆணைப்பெண் ஐய அணைக்குறு மாறே.

(இதன் பொருள்)  நீள்முகை- தலைவனே! நீண்ட சிற்றரும்பினைக் கொய்து; கையால் கிழித்து-அஃது அலராமையாலே தன் கையாலதனைக் கிழித்து; அது மோக்குறும்-அதன்கண் மணமில்லா திருக்கவும் அதனை மணமுடைய மலர்போல மோக்கின்ற; மாண்வினைப் பாவை மறை- மாண்புடைய வினைத்திறமமைந்த பாவை போல்வாளாகிய இவள் செய்கையின் கருத்து யாதென; நின்று கேட்குறின் அவள் செயலைக் கண்டுநின்று நீ எம்மை வினவுதியாயின் கூறுதும்; பெண்-(அச்செயல்) பெண்ணானவள்; பேணலும்- தகுதியில்லாதாரை விரும்புதலும்; அன்பும்-அவர் விரும்பாத வழியும் அவரை அவாவுதலும்; பிறந்துழி-இவ்வாறு பேணலும் அவாவும் தம்பாற் றோன்றியவழி; ஆணை-அவ்வாடவனை; பேது செய்து- மனமாற்றஞ் செய்து; அணைக்குறும் ஆறு-அவனைத் தழுவிக்கொள்ளும் செயற்கு இஃதறிகுறியாம் என்பதாம்.

(விளக்கம்)  இஃது அரும்பினைக் கொய்து மோக்குமொரு மகளைக் கண்ட தலைவன் அச் செயலின் குறிப்பு யாது எனப் பாங்கினை வினவியவழி வினவப்பட்டான் தற்குறிப்பேற்றமாக அச் செயலின் குறிப்புக் கூறியபடியாம். இனி வளையாபதி என்னுங் காப்பியத்தின்கண் இங்ஙனம் ஒரு நிகழ்ச்சி உளது போலும் என்றூகித்தலும் மிகையன்று.

சிற்றரும்பு, மணமில்லாததாகவும் நுகர்தற்குத் தகுதியில்லாததாகவும் இருக்க அம்மகள் அதனைக் கிள்ளிக் கிழித்து மோக்குமிது அம்மகளிர் தகுதியில்லாதவரையும் தம்மை விரும்பாதவரையும் காமுற்று அவரைத் தழுவுதற்கு ஏற்ற உபாயங்களைச் செய்து வலிந்து தழுவுவதனைக் குறிக்கின்றது எனத் தீய மகளிரின் இயல்பினைக் கூறியபடியாம்.

தீய மகளிர் இயல்பிங்ஙனமாதலைச் சூர்ப்பநகை முதலியோர்பால் காண்க. (50)

இதுவுமது

51.யாறொடு யாழ்ஞெலி கோல்நில வார்கொடிப்
பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்குஇவை
வேறுஓர் இடத்து வெளிப்படல் நன்றாம்.

(இதன் பொருள்) முதிர்ந்தாள் கூத்தி-அகவை முதிர்ந்தவளாகிய கணிகை யொருத்தி; மகட்கு- தன் மகளாகிய இளங்கணிகைக்குச் செவியறிவுறுப்பவள்; ஏடி! யாறொடு யாழ் ஞெலிகோல் நிலவு ஆர்கொடி-யாறு போலவும் யாழ் போலவும் தீக்கடைகோல் போலவும் மலர் நிரம்பிய பூங்கொடி போலவும்; பாறொடு பத்தினிமா போல- மரக்கலம் போலவும் கற்புடை மகளிர் போலவும் விலங்குகள் போலவும்; ஒழுகு என்று- நின்பால் வருகின்ற காமுகரிடத்திலே நீ ஒழுகுவாயாக என்று ; கூறினள்- அறிவுறுத்தினள்; இவை- இவ்வுவமைகளின் பொதுத்தன்மை; நன்று வேறு ஓரிடத்து வெளிப்படல் ஆம்- நன்றாக வேறோரிடத்து (விரிவகை யாற் கூறுதும்) ஆங்கு விளக்கமாகும் என்பதாம்.

(விளக்கம்) ஒரு கிழக்கணிகை தன் மகட்கு அறிவுரை கூறுபவள் ஏடி! நீ நின்னை விரும்பி வருகின்ற காமுகரிடத்தே யாறுபோலவும் யாழ் போலவும் தீக்கடைகோல் போலவும் நிலவு போலவும் மரக்கலம் போலவும் கற்புடை மகளிர் போலவும் விலங்குகள் போலவும் நடந்து கொள்வாயாக என்று கூறினள்; அவ்வுவமைகளின் பொதுத்தன்மையை யாம் வேறிடத்திலே கூறுவோம்; அங்கு அவை நன்கு விளக்கமாகும் என்றவாறு. மேலே அவ்வுவமைகளை விரித்து விளம்புவர்.

நெலிகோல்-தீக்கடைகோல். பாறு-மரக்கலம். பாறு என்னும் சொல் மரக்கலம் என்னும் பொருளுமுடைத்தென்பது இவ்வாசிரியர் இதற்கு அப்பொருளே  பிற் கூறுதலாற் பெற்றாம்.

பின்னும் இரண்டுவமைகள்

52. ஆய்குரங்கு அஞ்சிறை வண்டினம் போல்க என்று
பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்துநின் தோள்நம்பி
யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய.

(இதன் பொருள்)  நின் தோள் நம்பி- என் மகளே! நின்னுடைய தோள்களைப் பெரிதும் விரும்பி; மேவு அரும் வான்பொருள் தந்து- பெறுதற்கரிய சிறந்த பொருள்களையும் வழங்கி; யாவர்- எந்தக் காமுகர்; அடைந்தவர்க்கு- நின்னை எய்தியவர் அவர்கட் கெல்லாம் நீ ஒழுகுவதற்கு; ஆய் குரங்கு- மரங்களிலேறி இரையை ஆராய்கின்ற குரங்கும்; அம் சிறை வண்டு இனம் அவையும் புரைப -அழகிய சிறகுகளையுடைய அளிக்கூட்டமுமாகிய இவைகளும் உவமையாவனவேயாம்; போல்க-ஆதலால் அவற்றைப் போலவும் ஒழுகக் கடவாய்; என்று பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்- என்று இவற்றைப் பற்றிய முன்னுரை யாதுங் கூறாமலே மிகவும் கூறுவாளாயினள் என்பதாம்.

(விளக்கம்) அத் தாயாகிய கூத்தி முற்கூறிய யாறு முதலியனவே யன்றிக் குரங்கும் வண்டினமும்கூட நின்னொழுக்கத்திற்கு ஒப்பன ஆதலின் அவற்றைப் போலவும் ஒழுகு என்றாள் என்றவாறு.

இவ்வாறு உவமை மாத்திரமே குறிப்பாகக் கூறினள் பிறிதொன்றுங் கூறிற்றிலள் என்பார் பாயிரமின்றிப் பயிற்றி மொழிந்தனள் என்றார் இவற்றிற்கு இனி யாம் விளக்கங் கூறுதும் கேண்மின்! என்பது கருத்து.

இனி, நின்னை நயப்பார் பலருளராயினும் நீயோ பொருள் மிகுதியாக நினக்கு வழங்குவோரை மட்டுமே ஏற்றுக்கொள்க என்று குறிப்பாற் கூறுவாள் மேவரும் வான்பொருள் தந்து நின் தோள் நம்பி யாவர் அடைந்தவர்க்கு என்று விதந்தோதினள்

நம்பி- விரும்பி. என்னை? நம்பு மேவும் நசையா கும்மே (தொல் உரி. 31) என்பதனானும் அதற்கு அப்பொருளுண்மையறிக.  தோள்; இடக்கரடக்கு.       (52)

கூத்தி கூறிய உவமைகட்கு விளக்கங் கூறல்

1. ஆறு

53. வாரி பெருகப் பெருகிய காதலை
வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி அறஅறும்
வார்புனல் ஆற்றின் வகையும் புரைப.

(இதன் பொருள்) வாரி பெருகப்  பெருகிய காதலை- இனி, கணிகையர் தம்மை விரும்பி வருகின்ற காமுகர் வழங்கும் பொருள் வரவு பெருகுந்துணையும் பெருகிய தம் காதலை; வாரி சுருங்கச் சுருக்கி விடுதலின் -அப்பொருள் வரவு குறையுமளவு குறைத்துப் பின் பொருள் வரவு நின்றவுடன் தங்கா தலையும் துவர நீத்துவிடுதலாலே; மாரி பெருகப் பெருகி- மழைநீர் வரவு பெருகுந்துணையும் பெருகி; அற அறும்-அம்மழை நீர்வரவு அறவே அற்று வறந்துவிடுகின்ற; வார்புனல் ஆற்றன் வகையும் புரைய- நெடிய நீர்ஒழுகும் யாற்றினது தன்மையையும் நிகர்ப்பர் என்பதாம்.

(விளக்கம்) அம்முது கூத்தி யாறுபோல ஒழுகுக என்றதன் கருத்து, யாறானது மழைநீர் வந்து புகுமளவும் பெருகி அது வறத்தலும் வறந்து போவதுபோல நீயும் நின்னை விரும்பும் காமுகர் நினைக்குப் பொருள் மிகுதியாக வழங்குந்துணையும் மிகவும் காதலுடையாள் போன்று ஒழுகுக; அவர் பொருள் வழக்கம் குறையின் நீ நின் காதலையும் குறைத்துக் கொள்ளக் கடவை. பொருள் கெடாவிடின் நீயும் காதலியாது முகமாறி யொழுகக்கடவை என்பதாம் என்றவாறு.        (53)

2. யாழ்

54. எங்ஙனம் ஆகியது இப்பொருள் அப்பொருட்கு
அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்
எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்கு
அங்ஙனம் ஆகிய யாழும் புரைப.

(இதன் பொருள்)  இப்பொருள் எங்ஙனம் ஆகியது- கணிகை மகளிர் தாம் விரும்புகின்ற இந்தப் பொருள் யாரிடத்தின்ன்றும் தமக்கு வருகின்றதோ?; அப்பொருட்கு-அந்தப் பொருட் பொருட்டாக; அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்-அப்பொருள் தருவாரிடத்து அன்பு காட்டும் இயல்பினராதலாலே; பாண்மகன் எங்ஙனம் பட்டனன் அப்பொழுதே; பாண்மகற்கு அங்ஙனம் ஆகிய- மற்றொரு பாணனுக்கு அவ்வாறே கருவியாகி விடுகின்ற; யாழும் புரைப- யாழையும் ஒப்பாவர் என்பதாம்.

(விளக்கம்) யாழானது தன்னையுடையாள் இறந்து பட்டுழி அவனோடு அழிந்துபடாமல் பின்னும் தன்பால் இசை தருகின்ற பிறனொரு பாண்மகனிடத்தே சேருதல் போன்று, கணிகையாரும் தமக்குப் பொருள் வழங்கியவன் வறியவனாயவிடத்து அவன்பா லன்பு மாறி மற்றுமொரு பொருளுடையான்பாற் சேர்வர் என்றவாறு.

கணிகையாதலின் பாணனையும் யாழையும் உவமையாக எடுத்தனள் என்க.    (54)

3. தீக்கடைகோல்

55. கரணம் பலசெய்து கையுற்று அவர்கட்கு
அரணம் எனும் இலர் ஆற்றிற் கலந்து
திரணி உபாயத்தில் திண்பொருள் கோடற்கு
அரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப.

(இதன் பொருள்) கை உற்றவர்கட்கு -கணிகையர் தம்பாலெய்திய காமுகர் திறத்திலே; பல காரணம் செய்து-அவர் இன்புறு மாற்றாலே பல்வேறு செயல்களையும் செய்து, ஆற்றிற் கலந்து-அவர் விரும்பிய வழியிலே இயங்கி; எனும் அரணம் இலர்-அக் காமுகர்க்குச் சிறிதும் பாதுகாவல் ஆகாதவராய்;  திண் பொருள் கோடற்கு-அவரது திண்ணிய பொருள்களைக் கைக்கொள்ளுமாற்றால் அவரை அழித்துவிடுத லாலே; திரணி உபாயத்தில்- சிறிய துய்யாகிய பஞ்சினை மெல்லக் கடைந்து செய்யுமோருபாயத்தாலே அதன்கண்திணிந்த தீயினைக் கோடற்கு  அப்பஞ்சினையே அழித்து விடுகின்ற; அரணிஞெலிகோல்- தீக்கடை கோலையே; அமைவர-நன்கு பொதுத்தன்மை பொருந்தி வரும்படி; ஒப்ப- ஒப்பாகுவர் எனபதாம்.

(விளக்கம்) திரணி- நொய்ய பொருள். துரும்பு பஞ்சு முதலியன. திரணியுபாயம்- தீப்பிறப்பிப்போர் நொய்ய துரும்பு முதலியவற்றைக் குழிப்பாண்டத்திட்டுக் கடையுமொரு செயல். இவர் கடையுங்கால் அத்துரும்புக்கு நன்மை செய்வார்போற் கடைகுவர். இங்ஙனம் கடையுமாற்றால் துரும்பினுள் நுண்ணிதாக அடங்கியிருக்கும் தீயினை வெளிப்படுப்பர். தீ வெளிப்படவே அத்துரும்பு அழிந் தொழியுமென்க. எனவே, கணிகை மகளிர் தம்மை விரும்பும் காமுகர் வழிநின்று அவர்க்கிதஞ் செய்வார் போன்று செயல்கள் பலவற்றையுஞ் செய்து அவர் கொண்டுள்ள பொருளனைத்தும் கைக்கொண்டுவிடுவர்; பொருளிழப்பாலே அக்காமுகர் அழிந்துபடுவர்; ஆதலால் கணிகையர் தீக்கடைகோலையே நிகர்ப்பர் என்றவாறு.

அரணம் எனும் இலர் என்றது- பாதுகாவல் சிறிதும் ஆதல் இலராய் என்றவாறு. அரணம்- பாதுகாவல். எனும்- சிறிதும். திண்பொருள் கோடற்கு என்பதனைப் பின்னுங் கூட்டுக.

கணிகையர் காமுகர்க்குப் பெரிதும் அரணமாவார் போன்றொழுகினும் அங்ஙனம் அரணம் ஆதல் இலர். அவர் அழிவிற்கே காரணம் ஆவர் என்பதாம். தீக்கடைகோலும் கடையுங்கால் அதற்கு அரணமாவதுபோற்றோன்றி அழிவிற்கே காரணமாதலுணர்க.    (55)

4. திங்கள்

56. நாடொறும் நாடொறும் நந்திய காதலை
நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின்
நாடொறும் நாடொறும் நந்தி உயர்வுஎய்தி
நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப.

(இதன் பொருள்) நாள் தொறும் நாள் தொறும் நந்திய காதலை-இனிக் கணிகை மகளிர்தாம் தம்மை விரும்பிய காமுகர் பொருளீயுந்துணையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற காதலுடையார் போற் காட்டி; நாள்தொறும் நாள்தொறும் நய்ய ஒழுகலின்- பின்னர் அக்காமுகர் பொருளீதல் அருகி வருங்காலத்தே நாளுக்கு நாள் அருகிவருகின்ற காதலுடையராய் அக்காமுகர் வருந்தும்படி ஒழுகுதலாலே; நாள்தொறு நாள்தொறும் நந்தி உயர்வு எய்தி- முதற் பகுதியிலே நாளுக்கு நாள் வளர்ச்சிபெற் றுயர்வினை யடைந்தும்; நாள்தொறும் தேயும்-இறுதிப் பகுதியிலே நாளுக்கு நாள் ஒளிமழுங்கித் தேய்தலுடைய; நகைமதி ஒப்பர்- ஒளியுடைய திங்கள் மண்டிலத்தையும் ஒப்பர் என்பதாம்.

(விளக்கம்) கணிகையர் தம்மை விரும்பும் காமுகர் பொருளீயுந்து துணையும் நாளுக்கு நாள் காதல் மிகுவார் போன்று காட்டி, அவர் பொருளீதல் குறையுங் காலத்தே அன்பினையும் நாளுக்கு நாள் குறைத்துக் கோடலாலே ஒளிப்பக்கத்தே நாளுக்கு நாள் வளர்ந்து இருட்பக்கத்தே நாளுக்கு நாள் தேய்ந்தொழியும் திங்கள் மண்டிலத்தையும் ஒப்பர் என்றவாறு. (56)

5. பூங்கொடி

57. வனப்பிலர் ஆயினும் வளமையு ளோரை
நினைத்தவர் மேவர நிற்பமைக்கு அவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப.

(இதன் பொருள்) அவர்தாம்-இன்னும் அக்கணிகையர்தாம்; வனப்பு இலராயினும்-அழகில்லா தவராயினும்; வன்மையிலோரை நினைத்து- பொருளுடையவரும் அறிவுவன்மை யிலா தவருமாகிய காமுகக் கயவர்கள் தம்மை விரும்பி வரவேண்டும் என்று கருதி, அவர் மேவர நிற்பமைக்கு-அக்காமுகர் தம்மைப் பெரிதும் விரும்பித் தம்பால் வரும்படி தம்மை ஒப்பனைசெய்து கொண்டு அவர் காணும்படி நிற்றலாலே; புனித்திடை- காட்டினூடே; வண்டொடு தேன் இனம்- ஆண் வண்டும் பெடை வண்டுமாகிய அளிக்கூட்டம்; உடன் கனைத்து- ஒருசேர இசை முரன்று; ஆர்ப்ப- தம்பால் தாமே வந்து ஆராவாரித்து மெய்க்கும்படி; பூத்த- அழகாக மலர்ந்து நிற்கும்; பூங்கொடி ஒப்ப- மலர்க்கொடியையும் நிகர்ப்பர் என்பதாம்.

(விளக்கம்) வன்மையிலோர்- நெஞ்சின் திண்மையிலாத நொய்யர் அவர்-அக்காமுகர். நினைத்து என்றது- தம்மை விரும்பித் தம்பால் வருதல் வேண்டும் என்று கருதி என்றவாறு. நிற்பமைக்கு- நிற்றற்கு- கனைத்து- இசைமுரன்று. வண்டு- ஆண் வண்டு. தேன்-பெடைவண்டு என்க.

கணிகை மகளிர், பொருண்மிக்க காமுகக் கயவர் தம்மைக் கண்டு காமுற்றுத் தம்பால் வரும்படி தம்மை மிகவும் ஒப்பனை செய்துகொண்டு அவர் தம்மைக் காணும்படி உலாவி நிற்றலாலே, வண்டுகள் தம்மை விரும்பி வருதற்பொருட்டுக் காட்டின்கண் அழகாக மலர்ந்து அவ்வண்டுகள் காணும்படி அசைந்து நிற்கும் பூங்கொடிகளையும் ஒப்பாவர் என்றவாறு.     (57)

6. மரக்கலம்

58. தம்கண் பிறந்த கழிஅன்பி னார்களை
வன்கண்மை செய்து வலிய விடுதலின்
இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்கு
அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப.

(இதன் பொருள்) தம்கண் பிறந்த கழி அன்பினார்களை-இன்னும் கணிகை மகளிர் தம்மிடத்து முதிர்ந்த காமுடையராகிய ஆடவரை; வன்கண்மைசெய்து- அவர் தமக்கீயுமாற்றால் வறியராய பின்னர்ச் சிறிதும் கண்ணோட்டமில்லாத இகழ்ச்சிகளைச் செய்து; வலிய விடுதலின்- வலிந்து போக்கிவிடுதலாலே; இன்பொருள் ஏற்றி- இனிய பல்வேறு பண்டங்களையும் தம்முள் ஏற்றிக்கொண்டு; எழநின்ற வாணிகர்க்கு- தம்மையே  புகலாகக் கருதிக் கடலிலே தம்மை செலுத்தி வருகின்ற வணிகமாக்கள்பால் சிறிதும் இரக்கமின்றி அவரிறந்தொழியும்படி; அங்கண் பரப்பகத்து-அழகிய இடத்தாற் பெரிதும் பரந்துகிடக்கும் அக்கடலின் நடுவே; ஆழ்கலம் ஒப்ப- அவர் பொருளையெல்லாம் தன்னோடு கொண்டு நீருள் மூழ்கி விடுகின்ற மரக்கலத்தையும் ஒப்பர் என்பதாம்.

(விளக்கம்) தம் என்றது- கணிகையாரை. கழியன்பு என்றது ஈண்டு மிக்க காமம் என்றவாறு. வண்கண்மை- கண்ணோட்ட மின்மை.

கணிகை மகளிர் தம்மை விரும்பிவரும் காமுகக் கயவரின் பொருளெல்லாம் தம்பாலகப்படுத்திக் கொண்டு பின்னர் அவரழிந்தொழியும்படி கண்ணோட்டமின்றித் தள்ளிவிடுதலாலே, வணிகரீட்டிய பொருளையெல்லாம் அகப்படுத்திக்கொண்டு அவரைக் கண்ணோட்டமின்றி அகற்றிவிட்டு அப் பொருளோடு கடலினூடு ஆழ்ந்துவிடுகின்ற மரக்கலத்தையும் ஒப்பர் என்றவாறு.      (58)

7. கற்புடைமகளிர்

59. ஒத்த பொருளால் உறுதிசெய் வார்களை
எத்திறத் தானும் வழிபட்டு ஒழுகலின்
பைத்தரவு அல்குல்பொன் பாவையின் நல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப.

(இதன் பொருள்) பைத்துஅரவு அல்குல் பொன் பாவையின் நல்லவர்- நச்சுப் பையினையுடைய பாம்பினது படம்போன்ற அல்குலையுடைய பொன்னாலியன்ற பாவை போலும் அழகையுடைய கணிகை மகளிர்; ஒத்த பொருளால் உறுதி செய்வார்களை- தம்தகுதிக் கேற்ற பொருள் கொடுத்துத் தமது வாழ்க்கையினை நிலைபெறுத்துகின்ற ஆடவர்களை; எத்திறத்தானும்- எல்லா வழிகளானும்; வழிபட்டு ஒழுகலின்- வழிபட்டு நடத்தலாலே; பத்தினிப் பெண்டிர் படியும் புரைப- கற்புடை மகளிர் தன்மையையும் ஒப்பர் என்பதாம்.

(விளக்கம்) கணிகை மகளிர்- தாம் விரும்புகின்ற பொருளைத் தமது தகுதிக்கேற்ப வழங்குகின்ற ஆடவர்களை எவ்வாற்றானும் வழிபாடுசெய்து பேணி யொழுகுதலாலே அவர்கள் கற்புடை மகளிரையும் ஒப்பர் என்றவாறு     (59)

8. விலங்கு

60. வீபொரு ளானை அகன்று பிறனும் ஓர்
மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு
மாவும் புரைப மலர் அன்ன கண்ணார்.

(இதன் பொருள்) மலர் அன்ன கண்ணார்- தாமரை மலர்போன்ற அழகிய கண்ணையுடைய கணிகை மகளிர்; வீ பொருளானை அகன்று- தம்மை நயந்து தமக்கு வழங்கி அழிந்துபோன பொருளையுடைய ஆடவனைக் கைவிட்டுப்போய்; ஓர் பிறன்மா பொருளான் பக்கம்- மற்றோர் ஏதிலனாகிய பெரிய செல்வன்பால் சென்று; மாண நயத்தலின்- மாட்சிமை யுண்டாக விரும்புதலாலே; மேய்புலம் புல் அற- தாம் தொன்று தொட்டு மேய்கின்ற நிலம் புல் அற்று வறிதாய விடத்தே; மற்று ஓர் புலம்புகு மாவும்- வேறோர் புன்னிரம்பிய நிலத்தைத் தேடிச் செல்லும் விலங்குகளையும்; புரைய ஒப்பர் என்பதாம்.

(விளக்கம்) வீ பொருளான்-அழிந்த பொருளையுடையோன்-வறுமையுற்றவன்.

கணிகை மகளிர் பொருள் அழிந்தவனைக் கைவிட்டுப் புதுவதாக வேறொரு பொருளுடையான்பாற் புகுதலாலே, தாம் மேய்கின்ற நிலம் புல்லற்று வறிதாயவுடன் மற்றுமொரு புல் நிரம்பிய நிலத்திற் புகுகின்ற விலங்குகளையும் ஒப்பரென்றவாறு.   (60)

9. குரங்கு

61. நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள்
நன்குடை யானை நயந்தனர் கோடலின்
வம்புஇள மென்முலை வாள்நெடுங் கண்ணவர்
கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப.

(இதன் பொருள்) வம்பு இளமெல்முலை வாள்நெடு கண்ணவர்- கச்சணிந்த இளமையும் மென்மையுமுடைய முலையினையும் வாள் போன்ற நெடிய கண்களையும் உடைய கணிகை மகளிர்; நுண் பொருளானை நுகர்ந்திட்டு- தேய்ந்தழிகின்ற பொருளையுடையவனை அவன் செல்வந் தேயுந்துணையும் அவனோடு கூடி இன்புற்றிருந்து அப் பொருள் அழிந்த பின்னர்; நன்கு வான் மற்றறொருவனை விரும்பிப் போதலாலே; கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப-மரக் கொம்புகளிலே வாழ்ந்து அவற்றுள் ஒன்றன்கண்ணுள்ள மலர் காய் கனி முதலியவற்றைத் தின்று தீர்த்தபின் மற்றொருகிளையிற் றாவிச் செல்லுகின்ற குரங்கையும் ஒப்பர் என்பதாம்.

(விளக்கம்) நுண்பொருள் தேய்ந்து நுண்ணியதாகிய பொருள் அஃதாவது அழிந்து குறைவுற்ற சிறுபொருள்.

கணிகையர் ஒருவன்பாலுள்ள பொருளைச் கவர்ந்த பின்னர் அவன் வறியனாக மற்றொரு பொருளுடையானைச் சேர்வதனால் ஒரு கொம்பிலுள்ள இரை தீர்ந்த பின்னர் மற்றொரு கிளைக்குத் தாவுகின்ற குரங்கையும் ஒப்பர் என்றவாறு.   (61)

10. வண்டு

62. முருக்குஅலர் போல்சிவந்து ஒள்ளிய ரேனும்
பருக்கொடு இல்லவர் பக்கம் நினையார்
அருப்பிள மென்முலை அம்சொல் அவர்தாம்
வரிச்சிறை வண்டின் வகையும் புரைப.

(இதன் பொருள்) அரும்பு இளமெல் முலைஅம் சொல் அவர்தாம்- கோங்கரும்பு போன்ற இளமையுடைய மெல்லிய முலையினையும் அழகிய சொற்களையுமுடைய அக் கணிகை மகளிர்தாம்; முருக்கு அலர்போல் சிவந்து ஒள்ளியர் ஏனும்-முண்முருக்கமலர் போன்று சிவந்து ஒளியுடைய உடம்பினையுடையரேனும்; பருக்காடு இல்லவர் பக்கம் நினையார்-பொருட் பெருக்கம் இல்லாத வறியவர் பக்கலிலே கருத்து-வைத்தலிலர் ஆகலின், வரிச்சிறை வண்டின் வகையும் புரைப- வரிகளமைந்த சிறகினையுடைய வண்டினங்களையும் ஒப்பாவர்; என்பதாம்.

(விளக்கம்) முருக்கு -முண்முருங்கை ஒள்ளியர்-ஒளியுடையர் முருக்கலர்- மேனிக்கு நிறவுவமை. பருக்காடு-பருத்தல். பெருக்கம், பருக்காடு என்பதன்கண் காடு, கொழிற்பெயர் விகுதி. சாக்காடு என்ப தன்கண் அவ்விகுதி வந்தமை காண்க.

கணிகை மகளிர் பொருளில்லாரை அவர்தாம் பேரழகுடையரேனும் கருதியும் பாரார் ஆதலால், பூவாத கொடிகளை நோக்காத வண்டுகளையும் ஒப்பாவர் என்றவாறு.

இனி, கணிகை மகளிரைப் பற்றி வருகின்ற யாறொடு என்னும்(51) செய்யுள் முதலாக முருக்கலர் என்னும்(62) இச் செய்யுள் ஈறாகவுள்ள செய்யுள்களோடு,

ஈற்று மந்தி யிற்றெழு பூங்கொடி
புற்புல முதிரக நற்றுற விக்கே
போல்வ ரென்னும் சால்வுடை யொழுக்கிற்
கலைதுறை போகிய கணிகா சாரத்துப்
பலதுறை பயின்று பல்லுரைக் கேள்வியொடு
படிவங் குறிக்கும் பாவனை மேற்கொண்
டடிமையிற் பொலிந்த வகன்பரி யாளத்துத்
தலைக்கோற் சிறப்பி னலத்தகு மகளிர்
                   பெருங்கதை, 5-8:50-8

எனவும்

அரசர்க் காயினும் அடியவர்க் காயினும்
அன்றை வைகல் சென்றோர்ப் பேணி
பள்ளி மருங்கிற் படிறின் றொழுகும்
செல்வ மகளிர் சேரி    பெருங்கதை, 1-35:88-91

எனவும் வரும் பெருங்கதைப் பகுதிகளும்

ஆடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலு மழகுங் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவி லருப்புக்கணை தூவச்
செருக்கய னெடுங்கட் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப்
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிர்
            மணிமே, 18-103-9

எனவும்,

காதலன் வீயக் கடுந்துய ரெய்திப்
போதல் செய்யா உயிரொடு புலந்து
நளியிரும் பொய்கை யாடுநர் போல
முளியெரிப் புகூஉ முதுகுடிப் பிறந்த
பத்தினிப் பெண்டி ரல்லேம் பலர்தங்
கைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே
பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில்
யாழினம் போலும் மியல்பின மன்றியு
நறுந்தா துண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்
வினையொழி காலைத் திருவின் செவ்வி
யனையே மாகி யாடவர்த் துறப்பேம்   18:11-20

எனவும் வரும், மணிமேகலைப் பகுதிகளும்,

பருகு வாரிற் புல்லிப் பயங்கண் மாறத் துறக்கு
முருகு விம்மு குழலார்போல மொய்கொ டும்பி
யுருவப் பூங்கொம் பொசியப் புல்லித் தீந்தேன்
பருகியருகு வாய்விட் டரர்ப்ப வண்ணன் மெல்லச் சென்றான்

எனவருஞ் சிந்தாமணிச் செய்யுளும்,

புண்ணிய முலந்தபின் பொருளி லார்களைக்
கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல்
எண்ணில ளிகந்திடு மியாவர் தம்மையும்
நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே

எனவருஞ் சூளாமணிச் செய்யுளும் ஒப்புநோக்கற் பாலன.    (62)

இதுவுமது

63. மக்கள் பயந்து மனையறம் ஆற்றுதல்
தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப
பைத்துஅரவு அல்குல் படிற்றுஉரை யாரொடு
துய்த்துக் கழிப்பது தோற்றமொன்று இன்றே.

(இதன் பொருள்) தக்கது அறிந்தார்- மக்கட் பிறப்பிற்குரிய உறுதிப் பொருளை அறிந்த சான்றோர்; பைத்து அரவு அல்குல்- நச்சுப் பையையுடைய பாம்பினது படம் போன்ற அல்குலையும்; படிறு உடையாரொடு- பொய்ம்மொழியையும் உடைய கணிகை மகளிரோடு; துய்த்துக் கழிப்பது- இன்பம் நுகர்ந்து வாழ்நாளைக் கழிக்குஞ் செயல்; தோற்றம் ஒன்று இன்று- சிறிதும் மாண்புடையதொன்றன்று என்றும்; மக்கட் பயந்து-கற்புடை மகளிரோடு கூடி இன்பம் நுகர்ந்து நன்மக்களையும் பெற்று; மனைஅறம் ஆற்றுதல் விருந்தோம்பன் முதலிய இல்லறங்களைச் செய்தலே; தலைமைக் குணம் என்ப-மக்கட்குத் தலைசிறந்த குணமாம் என்று ஓதுவர் என்பதாம்.

(விளக்கம்) கணிகையர் கூட்டரவாலே இன்பம் பெறுதலின் அது தீங்காகா தென்பார்க்கு விடையாக வந்தது இச் செய்யுள். இன்பம் நுகர்தல் மட்டுமே மக்கட் பண்பிற்குச் சிறப்பாகாது. அறஞ் செய்தலே மக்கட் பிறப்பின் பயனை நல்குவதாம். ஆகவே பொதுமகளிர் கூட்டரவால் இன்பமுண்டாயினும் அதனாற் புகழுமில்லை பயனுமில்லை. இன்பந்தானும் கற்புடைய மனைவியோடு கூடி நுகர்தல் வேண்டும். மேலும் நன்மக்களையும் பெற்று விருந்தோம்பன் முதலிய இல்லறங்களைச் செய்தலே மக்கட் குறுதி பயப்பதாம் என்றவாறு. இதனை,

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில        குறள், 39

எனவும்,

அன்பும் அறனும் உடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனும் அது   குறள், 45

எனவும்,

இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை   குறள், 47

எனவும்,

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்    குறள்,916

எனவும்,

இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு   குறள், 920

எனவும் வருந் திருக்குறளானும் உணர்க.      (63)

பண்புடைமை

64. நகைநனி தீது துனிநன்றி யார்க்கும்
பகைநனி தீது பணிந்தீ யாரோடும்
மிகைமிகு பொருள் என்று இறத்தல் இலரே
வகைமிகு வானுலகு எய்திவாழ் பவரே.

(இதன் பொருள்) யார்க்கும்-எத்தகையோர்க்கும்; நனி நகை தீது-மிகையாய நகைப்பும் தீங்கே பயப்பதாகும்; துனி நன்று பகை- துணியே பெரும்பகையுமாம்; ஆதலால், வகை மிகுவான் உலகு எய்தி வாழ்பவர்-பல்வேறு வகையானும் மிக்க மேனிலை யுலகத்தை எய்திவாழுந் தகுதியுடைய மேன்மக்கள்; பணிந்தீயாரோடும்-தம் பகைவரிடத்தும்; மிகுபொருள் மிகை-வரம்பு கடந்தொழுகும் ஒழுக்கம் மிகையாம்; நனிதீது-மிகவும் தீமை பயப்பதாம்; என்று-என்றறிந்து; இறத்தல் இலர்-வரம்பு கடந்து ஒழுகுதலிலர்; என்பதாம்.

(விளக்கம்) நனி நகை தீது எனவும் மிகுபொருள் மிகைநனி தீது என்றும் மாறிக் கூட்டுக. துனி- சிறுபகை. நன்று-பெரிது. பணிந்தீயார்- பணியாதார்; திரிசொல். பகைவர் என்றவாறு. இறத்தல்- வரம்பு கடந்தொழுகுதல்.

மிகையாயவழி நகையும் தீதாம். துனியே பெரும்பகையுமாம். ஆதலால் சான்றோர் பகைவர் மாட்டும் வரம்பு கடந்து ஒழுகுதலிலர். யாவரிடத்தும் அடக்கமாகவே ஒழுகுவர் என்பது கருத்து.

மிகை-அடங்காமை. அஃதாவது செருக்குடைமை காரணமாக எச் செயலினும் மிகுதிதோன்றிச் செய்தல்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்    குறள், 121

என்பது பற்றி, வகைமிகு வானுலகு எய்தி வாழ்பவர் மிகைமிகு பொருளென்றிறத்தலிலர் என்று துறக்கம் புகுமியல்புடைய சான்றோர் மேலிட்டுரைத்தனர் உரைக்கவே செய்வார் ஆரிருள் என்னும் நிரையம் புகுவர் என்றாருமாயிற்று         (64)

நல்குரவு

65. பெண்டிர் மதியார் பெருங்கிளை தான் அது
கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார்.

(இதன் பொருள்) வெள் தறை நின்று-வறிய நிலத்திலுறைந்து; வெறுக்கை இலர் ஆயின்- கைப்பொருள் இல்லா வறியராயவிடத்து; பெண்டிர் மதியார்- மனைவிமாரும் நன்கு மதிப்பதிலர்; பெருங்கிளை தான்-நெருங்கிய சுற்றத்தாரும்; அது-அங்ஙனமே சிறிதும் மதியார்; கொண்ட விரகர் குறிப்பின் அஃகுப-உறுவது சீர்தூக்கி உபாயமாகக் கேண்மை கொண்டுள்ள நண்பர் தாமும் குறிப்பாலுணர்ந்து கேண்மையிற் குறைந்து அயலாராகுவர்; தம் மக்களும் ஒட்டார் மண்டினர் போவர்- தம்முடைய மக்கள் தாமும் ஒருசேர வேறுபட்டகன்று போவர்; என்பதாம்.

(விளக்கம்) இவ்வுலகின்கண் வறுமை வந்துற்றபோது மனைவிமாரும் மதியார்; மக்களுக்கு கைவிட்டுப் போவார்; சுற்றத்தார் மதியார்; நண்பரும் நட்பு நாரற்றுத்தீர்வர். வறுமை பெரிதும் இன்னாகதாம் என்றவாறு.    (65)

இதுவுமது

66. சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நன்மதிப் பார் அல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ.

(இதன் பொருள்) கைப்பொருள் சுருங்குபு இல்லார் சொல்- தம் கையிற் பொருள் குறைந்து இல்லையான நல்குரவாளர் செயற்கரிய செய்து புகழுடையராயினும் அப்புகழை; அவை சொல்லார்-யாரும் அவையின்கண் பாராட்டிப் பேசார்; சூழ்ந்து உணர் நல்  அவையாரும்- பொருளியல்பினை ஆராய்ந்து அறியுமியல்புடைய நல்ல அவையகத்தார் தாமும்; நனி மதிப்பாரல்லர்- மிகவும் மதிப்பாரல்லர்; பயிற்றிய கல்வியும் புல் என்று போதலை- அந் நல்குரவாளர் பலகாலும் பயின்ற கல்விதானும் சிறப்புறாமற் பொலிவற்றுப் போமென்பதனை; நீ மெய் என்று கொள்- நீ வாய்மை யென்றே அறிந்து கொள்வாயாக! என்பதாம்.

(விளக்கம்) சொல்-புகழ். கைப்பொருள் சுருங்குபு இலலார் எனக் கூட்டுக. நல்லவை யாரும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. பொருளியல்புகளை ஆராய்ந்துணரும் நல்லவையார் தாமும் மதியார் எனவே ஏனையோர் மதியாமை கூறவேண்டுமோ? என்றவாறு.

இனி, ஏழை சொல் அம்பல மேறாது என்னும் பழமொழிக்கிணங்க நல்குரவாளர் கூறுகின்ற மொழியை அவையினர் ஏற்று எடுத்துச் சொல்லார் எனினுமாம்.

இக் கருத்தினை,

இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு    குறள், 752

எனவருந் திருக்குறளானும்,

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉங்
கல்லாரே யாயினுஞ் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தி னுழவேபோன் மீதாடிச்
செல்லாவா நல்கூர்ந்தார் சொல்

எனவரும் நாலடியானும் உணர்க.

இனி நல்கூர்ந்தார் கல்வியும் சிறவாதென்பதனை,

எனைத்துணைய வேனு மிலம்பாட்டார் கல்வி
தினைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம்- மனைத்தக்காள்
மாண்பில ளாயின் மணமக னல்லறம்
பூண்ட புலப்படா போல்    நீதிநெறிவிளக்கம், 10

எனவரும் குமரகுருபரவடிகளார் பொன்மொழியானும்,

நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்   குறள், 1046

எனவரும் திருக்குறளானுமுணர்க     (66)

இதுவுமது

67. தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப்
பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால்
பழுமரம் வீழ்ந்த பறவையின் போப.

(இதவ் பொருள்) தொழுமகன் ஆயினும்-பிறரைத் தொழுது பிழைக்கும் கீழ்மகனேயாயினும்; துற்று உடையானை- பொருளுடையானை; பழுமரம் சூழ்ந்த பறவையில் சூழ்ப- உலகமாந்தர் பழுத்த மரத்தைச் சூழ்கின்ற பறவைகள் கூட்டம் போன்று வந்து சூழ்ந்து கொள்வர்; வியுமியரேனும்-மற்று அறிவு குணஞ் செயல்களாலே சிறப்புடைய மேன்மக்களாயினும்; வெறுக்கை உலந்தால்-செல்வம் அழிந்து நல்குரவுடையராய பொழுது; வீழ்ந்த பழுமரம் பறவையின் போப-(உலக மாந்தர்) விழுந்துபோன பழுமரத்தை விட்டுப் போகின்ற பறவைக் கூட்டம் போன்று அகன்று போகா நிற்பர் என்பதாம்.

(விளக்கம்) வீழ்ந்த பழுமரம் என மாறுக.

உலகமாந்தர் கீழ்மகனாயினும் பொருளுடையானைச் சூழ்ந்து கொள்வர். மேன் மக்களாயினும் வறியராயின் அணுகாது விலகிப்போவர் என்றவாறு. துற்று : ஆகுபெயர்.

இதனை,

இவறன்மை கண்டு முடையாரை யாரும்
குறையிரந்துங் குற்றேவல் செய்ப- பெரிதுந்தாம்
முற்பக னோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
கற்பன்றே கல்லாமை யன்று

எனவரும் (நீதிநெறி விளக்கம்-12) குமரகுருபரர் மொழியானும்,

ஆகா தெனினு மகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்-யாதுங்
கெடாஅ ரெனினு முடையாரைப் பற்றி
விடாஅ ருலகத் தவர்

எனவரும் நாலடியானுமுணர்க   (67)

இதுவுமது

68. பொருள்இல் குலனும் பொறைமைஇல் நோன்பும்
அருள்இல் அறனும் அமைச்சுஇல் அரசும்
இருளினுள் இட்ட இருண்மையிது என்றே
மருள்இல் புலவர் மனம்கொண்டு உரைப்ப.

(இதன் பொருள்) பொருள் இல் குணம்- செல்வமில்லா தவருடைய குலப் பெருமையும்; பொறைமைஇல் நோன்பும் -பொறுமைப் பண்பில்லாதவன் மேற்கொண்ட தவமும்; அருள் இல் அறனும்-நெஞ்சத்தின்கண் அருட்பண்பில்லாதவன் செய்த அறச்செயலும் அமைச்சு இல் அரசும்- அமைச்சரில்லாத அரசாட்சியும்; இருளினுள் இட்ட இருள்மையிது என்று-இருளினூடே கண்ணிலெழுதப் பட்ட கரிய மை போல்வனவாம் என்று; மருள் இல் புலவர் மனம் கொண்டு உரைப்ப- மயக்கமில்லாத புலவர்கள் மனத்தினெண்ணிக் கூறாநிற்பர் என்பதாம்.

(விளக்கம்) குலம்- குடிப்பெருமை. நோன்பு -தவம்.

அறத்திற்கு அருளுடைமையே காரணமாகலின், அருளாதான் செய்யும் அறம் அறமாகாதென்பது பற்றி அருளில் அறம் என்றார். இதனை,

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேறி
னருளாதான் செய்யு மறம்    குறள், 249

எனவருந் திருக்குறளானுமுணர்க.

வறுமை குலப்பெருமையை அழித்துவிடும் என்பதனை,

தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்குர வென்னு நசை     குறள், 1013

எனவும்,

இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும்    குறள், 1013

எனவும் வருந் திருக்குறள்களானுமுணர்க.

இன்னும்,

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉ
நாணணி களையு மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி   மணிமே-76-80

எனவரும் மணிமேகலையானும் பொருளில்வழிக் குடிப்பிறப்பழியும் என்பது முதலியனவு முணர்க.

இருளிலே கண்ணிலெழுதப்பட்ட மை இருந்தும் இல்லாதது போறலின் வறுமை முதலியன உள்வழி, குல முதலியன இருந்தும் இல்லாதனவாகும் என்பது கருத்து.

நல்லாசிரிய ரல்லாதார் அறமுரைத்தலின் தன்மை

69. அந்தக னந்தகற் காறு சொலலொக்கு
முந்துசெய் குற்றங் கெடுப்பான் முழுவது
நன்கறி வில்லா னஃதறி யாதவற்
கின்புறு வீட்டி னெறிசொல்லு மாறே.

(இதன் பொருள்) முந்து செய் குற்றம் முழுவதும் கெடுப்பான்- பண்டு செய்த தீவினையை முழுவதும் அழித்தற்குக் காரணமான; இன்பு உறும் வீட்டின் நெறி-இன்பம் நிலையுதலுடைய வீடுபேற்றினையுடையும் நன்னெறியினை; நன்கு அறிவில்லான்- நன்கு அறிதலில்லாத மடவோன் ஒருவன்; அஃது அறியாதவற்கு-அந்நன்னெறியினை முன்பே அறிந்திலாத மற்றொரு மடவோனுக்கு; சொல்லும் ஆறு-அறிவுறுத்தும் வகை; அந்தகன்-ஒரு குருடன்; அந்தகற்கு ஆறு சொலல் ஒக்கும்-மற்றொரு குருடனுக்கு நெறி கூறுதலையே ஒக்கும் என்பதாம்.

(விளக்கம்) அறிவிலார் அறிவில்லாதவர்க்கு நன்னெறி கூறுதல் குருடன் குருடனுக்குச் செல்லும் நெறியினைக் கூறுதலையே ஒக்கும் என்றவாறு. எனவே நல்லறங்களை அறிய முற்படுவோர் நல்லாசிரியர்பாற் சென்று அவர் வாயிலாகவே அறிதல் வேண்டும் என்பது கருத்தாயிற்று.

இச் செய்யுளோடு

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே   திருமந், 1480

என வரும் திருமந்திரச் செய்யுளை நோக்குக.   (69)

நாட்டு வளம்

70. செந்நெற் கரும்பினொ டிகலுப் தீஞ்சுவைக்
கன்னலங் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கில னென்று பூகமு
முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே.

(இதன் பொருள்) செந்நெல் கரும்பினொடு இகலும்- இந்நாட்டு மருத நிலப் பரப்பின்கண் சிவந்த நெல்லையுடைய பயிர்கள் கரும்புகளோடு மாறுபட்டு வளரும்; தீம் சுவை கன்னல் அம் கரும்பு கமுகைக் காய்ந்து எழும்- இனிய சுவையினை யுடைய கன்னல் என்னும் அழகிய அக்கரும்போ கமுகினை நீ எம்மை ஒவ்வாய் என வெகுண்டு வளருவதுபோல் வளரும்; பூகமும்-அந்தக் கமுகோ இக்கரும்பின் செருக்கினை யான் காணப் பொறேன் என்று நாணி, முன்னிய முகில்களால் முகம் புதைக்கும்-ஆங்கு முற்பட்டு வருகின்ற முகில்களாகிய ஆடையாலே தன் முகத்தினை மறைத்துக்கொள்ளும் என்பதாம்.

(விளக்கம்) அந்த நாட்டினது மருத நிலத்திலே செந்நெற் பயிர்கள் கருப்பஞ்சோலைபோல வளரும், கரும்புகளோ கமுகந் தோட்டம்போலக் காணப்படும், கமுகந் தோட்டங்களோ முகில்களைத் தீண்டுமளவு வளமுற வளர்ந்திருக்கும் என்றவாறு.

செந்நெலும் கரும்புஞ் சேரக் கூறலின் மருதநிலம் என்பது பெற்றாம் என்னை? மருதநிலம் புனைந்துரைக்கும் புலவர் மரபு அன்னதாகலின். இதனை,

மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்
பூடு கொண்ட பொதும்பரோ டுள்விராய்த்
தோடு கொண்டபைங் காய்த்துவள் செந்நெலின்
காடு கொண்டுள கண்ணக னாடெலாம்

எனத் தோலாமொழித் தேவரும்,

வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி

எனப் பட்டினப்பாலையும்(240)

கரும்பொடு செந்நெலுங் கவின்கொண் டோங்கிய

எனக் கம்பநாடரும் ஓதுதலுணர்க   (70)

பாசண்டச் சாத்தன்

71. பண்ணால் திறத்தில் பழுதின்றி மேம்பட்ட
தொண்ணூற்று அறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணாறு இயங்கும் விறலவர் ஆயினும்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்.

(இதன் பொருள்) பண்ணால் திறத்தில் பழுது இன்றி மேம்பட்ட பண் திறம் என்று கூறப்படுகின்ற இசையிலக்கணங்களாலே சிறிதும் குற்றமில்லாமல் மேன்மை பொருந்திய; தொண்ணூற்றாறுவகைப்பட்ட சமயத் தருக்க நூற்கோவைகளையும் ஐயந்திரிபறக் கற்று வல்லுநன்(ஆகியசாத்தன் என்னும் தெய்வம்) ; வீண் ஆறு இயக்கும் விறலவர் ஆயினும்- வான்வழியே செல்லும் வெற்றியையுடைய கந்தருவர் முதலிய தேவகணத்தாரேனும்; கண் நாறி நோக்கி- தன் கண் ணொளியை வீசி நோக்கி, அச்சுறுத்தி; கடு நகை செய்வான்-அவர்கள் அஞ்சி நடுங்குதல் கண்டு கடிதாக வெகுளிச் சிரிப்புச் சிரிப்பான் என்பதாம்.

(விளக்கம்) இச்செய்யுளால் வளையாபதி என்னும் பெருங்காப்பியத்தின்கண் மகா சாத்திரன் என்னும் ஐயனாரைப்பற்றிய கதையும் அமைந்திருந்தது என்று ஊகிக்கலாம்.

ஐயனார் என்னும் தெய்வம், தொண்ணூற்றறுவகைச் சமயச் சாத்திரத் தருக்கக் கோவையும் நன்கு கற்றுவல்ல தென்பது பெற்றாம், இதனை, சிலப்பதிகாரத்தில் கனாத்திறமுரைத்த காதையில் (15) பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு எனவரும் அடிக்கு அடியார்க்கு நல்லார். பாசண்டம்- தொண்ணூற்றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை என்னை பண்ணாற்றிறத்தில்... செய்வான் என்றார். வளையாபதியினும் ஆகலின். என இச் செய்யுளைக் காட்டி விளக்குவதானு முணர்க.

இனி, அப்பாசண்ட நூல் பண் திறம் என்னும் இசைவகையாலே பாடப்பெற்றிருந்தன என்பது முணர்க. பண்- நான்கு வகைப்படும். அவையாவன- பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என்பன. திறம்-அப்பண்ணின் திறங்கள். அவையாவன- பாலைக்குப் புறம்- தேவாளி; அருகு. சீர்கோடிகம்: பெருகு-நாகராகம். குறிஞ்சிக்குப் புறம்- செந்து; அருகு- மண்டிலம்;பெருகு-அரி. மருதத்திற்கு புறம்-ஆகரி; அருகு-சாயவேளா கொல்லி;  பெருகு- கின்னரம்; செவ்வழிக்குப்புறம்-வேளாவளி; அருகு- சீராகம்; பெருகு- சந்தி. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க என்பது அடியார்க்கு நல்லார் நல்லுரை (சிலப்- 14:160-67) இன்னும்,

நால்வகை யாழினும் பிறக்கும் பண்ணுக்கும் இன்றியமையாத மூவேழுதிறத்தையும் குற்ற மின்றாக இசைத்து( சிலப்-5-35-7) எனவும் அடியார்க்கு நல்லார் ஓதுதலும் காண்க.

விண்ணாறு இயங்கும் விறலவர் என்றது கந்தருவர் முதலாயினுரை, மகாசாத்தன் பண்ணாற்றிறத்தில் பழுதின்றி மேம்பட்ட தொண்ணூற்றறுவகைக் கோவையும் வல்லவன் ஆகலின் யாழோராகிய கந்தருவர் விண்ணாறியங்குங்கால் கூர்ந்து நோக்கி எள்ளி நகைப்பான் என்றவாறு. நகை- எள்ளலிற் பிறந்தது. கடுநகை-பெருஞ் சிரிப்பு. சினச்சிரிப்புமாம்     (71)

காமுற்று வருந்தும் ஒரு மகள்

72. அன்றைப் பகற்கழிந் தாள் இன்று இராப்பகற்கு
அன்றில் குரலும் கறவை மணிகறங்கக்
கொன்றைப் பழக்குழல் கோவலர் ஆம்பலும்
ஒன்றல் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும்.

(இதன் பொருள்) அன்றைய பகற்கு அழிந்தாள்-அற்றைநாளின்
பகற் பொழுதிற்கே (இவ்வாறு) பெரிதும் துன்புற்றவள்; இன்று இராப்பகற்கு-இப்போது எதிரே வருகின்ற அந்தப் பொல்லாத மலைப்பொழுதிற்கு; அன்றில் குரலும்-அன்றிற் பறவையின் குரலும்; கறவை மணிகறங்க-நல்லான்களின் கழுத்திற் கட்டிய மணிகள் ஒலியாநிற்ப, அவற்றைச் செலுத்தி வருகின்ற; கோவலர் கொன்றைப் பழக்குழல் ஆம்பலும்-கொன்றைப் பழம் போன்ற உருவமுடைய குழலோசையும், ஆம்பற்றண்டுபோன்ற குழலோசையும்; ஒன்றில் சுரும்பு நரம்பென ஆர்ப்பவும்-பலவாகிய வண்டினங்கள் யாழ் நரம்புபோல இனிதாக முரலவும்; என்க.

(விளக்கம்) இதனால் வளையாபதி காதற்சுவை கெழுமிய வரலாறமைந்த பெருங் காப்பியமாம் என்பது ஊகிக்கலாம்.

இனி, கொன்றைப் பழக்குழலும் எனவேண்டிய எண்ணும்மை தொக்கது. கொன்றைப் பழக்குழல் ஆம்பல் என்பன கொன்றைப்பழம் போலவும் ஆம்பற்றண்டு போலவும் உருவமமைந்த குழற்கருவிகள். ஆம்பல் என்பதனை ஒருவகைப் பண் என்பாருமுளர்.

இவற்றை,

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி

எனவும்,

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி

எனவும் வருந் தாழிசைகளானும்   (சிலப்-ஆய்ச்சியர் 19-20)

இவற்றிற்கு ஆம்பல முதலானவை சில கருவி; ஆம்பல் பண்ணுமாம். மொழியாம்பல. வாயாம்பல், முத்தாம்பல் என்று சொல்லுவர் பண்ணுக்கு எனவரும். அரும்பதவுரையாசிரியர் குறிப்பானும்,

கொன்றை ஆம்பல்(முல்லை) என்பன சில கருவி. இனி அவற்றைப் பண்ணென்று கூறுபவெனின், அங்ஙனம் கூறுவாரும் ஆம்பலும் முல்லையுமே பண்ணாதற்குப் பொருந்தக் கூறினல்லது கொன்றையென ஒரு பண் இல்லையாகலானும், கலியுள் முல்லைத் திணைக்கண், ஆறாம் பாட்டினுள் கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண் இமிழிசை மண்டை யுறியொடு தூக்கி, ஒழுகிய கொன்றைத் தீங்குழன் முரற்சியர், வழூஉக் கோவலர் தத்த மினநிரை, பொழுதொடு தோன்றிய கார்நனை வியன்புலத்தார்( கலி-106:1-5) எனக் கருவி கூறினமையானும் அன்றைப் பகற் கழிந்தாள்..... ஆர்ப்பவும் என வளையாபதியுள்ளும் கருவிகூறிப் பண் கூறுதலானும், இவை ஒருபொருண்மேல் மூன்றடுக்கி வந்த வொத் தாழிசை யாதலானும், இரண்டு பண்ணும் ஒன்று கருவியுமாகக் கூறின், செய்யுட்கும் பொருட்கும் வழூஉச் சேரலானும் அங்ஙனம் கூறுதல் அமையாதென்க என வரும் ஆசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்கவுரையானும் உணர்க      (72).

அரிதிற்கிடைத்த வளையாபதி செய்யுள் 72-ஆம். அவற்றிற்குப் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் வகுத்த சொற்பொருள் உரையும் விளக்கவுரையும் முற்றும்.


© Om Namasivaya. All Rights Reserved.