சூரிய புராணம்

(பகுதி-5)


சூரிய வழிபாடு: உலகத்தின் உயிராக விளங்கும் சூரியனுடைய வழிபாடு தொன்று தொட்டே இருந்து வருகிறது. வேதங்கள் சூரியனைப் போற்றிக் கொண்டாடுகின்றன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்கினிகளில் ஒருவனாக விவரிக்கிறது. யஜுர்வேத ஜோதியை உண்டாக்குபவன் என்றும் சகல லோகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்றும் வர்ணிக்கிறது. சாமவேதம் உலகம் முழுவதும் ஒளிபவன் என்று போற்றுகின்றது. அதர்வண வேதம் இருதய நோயையும், காமாலை நோயையும் போக்க சூரியனை ஆராதிக்குமாறு கூறுகின்றது. சூரியன் இன்றேல் உலகில்லை; உயிரில்லை. அவனுடைய சக்தியால்தான் பயிர்கள் வளர்கின்றது. ஜீவ ராசிகள் உயிர் வாழ்கின்றன. உலகுக்கு, உயிருக்கு இன்றியமையாத சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபட்டுவரும் மதத்துக்கு சவுரமதம் என்று பெயர். இவ்வழிபாடு வட இந்தியாவில் பெரிதும் பரவியிருந்தது. அம்மதத்தினர் சூரியனுக்கு ரத்த அர்க்கியம் கொடுத்து வந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. ஆதிசங்கரர் அம்மதத்தினரிடையே பரவியிருந்த அவ்வழக்கத்தை நீக்கி ஒழுங்கு செய்தார் என்று சொல்லப்படுகிறது. இவ்வழிபாடு ஆறாம் நுற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரையில் பரந்த அளவில் பரவியுள்ளது. ராஜஸ்தானத்திலும், கூர்ஜரத்திலும், காஷ்மீரத்திலும், வங்கத்திலும் இந்தக் காலத்தில் தான் சூரியனுக்குத் தனிக் கோயில் இருந்தது. அதன் பின்னர் இல்லை. அழிந்து விட்டது எனலாம். காலப்போக்கில் கோயில்களும் சிதலமடைந்து மறைந்துபோயின. இப்போது ஒரு சிலவே நமக்குக் காணக் கிடைக்கின்றன. சூரிய வழிபாடு நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவியிருந்தது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தில் சூரிய உபாசனை இருந்து வந்திருக்கிறது. அந்நாட்டை ஆண்டுவந்த பாரோ எனப்படும் அரசர்கள் தங்களைச் சூரியனுடைய வமிசத்தில் வந்தவர்களாகக் கூறிக் கொள்கின்றனராம். நம் நாட்டைப்போல அவர்களும் பயிர்த்தொழில் பெருகிட சூரியனை அதன் தெய்வமாகக் கொண்டாடினராம்.

பாரஸிகளின் தர்ம கிரந்தமான ஜெந்த் அவெஸ்தானத்திலும் மித்திரனே தெய்வமாகக் கூறப்பட்டுள்ளது. மித்திரன் என்பது சூரியனுடைய பெயர்களுள் ஒன்று. சாம்பன் சூரியனுக்கு கோயில் எடுப்பித்தபோது அவரை ஆராதிக்கத் தகுந்தவர்கள் பாரத நாட்டில் இல்லாத காரணத்தால் சாகத்வீபம் சென்று மாகர்கள் எனப்படும் சூரியனுக்தர்களை அழைத்து வந்தான். மாகர்கள் எனப்படுவோர் இரானியர்கள் அதாவது பாரசீக நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். இரானியர்கள் அணிந்து கொள்ளும் புனித இடுப்பு ஆபரணம் சூரியனுக்காக எழுப்பப்பட்ட கோயில்களில் சூரிய விக்கிரகங்களிலும் காணப்படுகிறது. கிரேக்கர்கள் சூரியனை அபொல்லோ என்ற பெயரில் வழிபடுகின்றனர். ரோமர்கள் ஹைபீரியன் என்ற பெயரில் வழிபட்டனர். வட அமெரிக்காவிலுள்ள மெக்ஸிகோவிலும் சூரிய வழிபாடு இருந்ததாகத் தெரிய வருகிறது. இன்றும் இந்நாட்டில் சூரிய வழிபாட்டின் பழமைச் சின்னங்களைக் காணலாம். அவ்விதமே தென் அமெரிக்காவில் உள்ள பெருநாட்டிலுள்ள இன்காஸ் என்ற இனத்தவரும் சூரியனை வழிபட்டு வந்திருக்கின்றனர். ஆதியில் சூரிய உபாசனை மந்திர ரூபமாகவே இருந்து வந்தது. அவருக்கு உருவம் ஏற்பட்டதெல்லாம் பிற்காலத்தில்தான். புராணங்கள் சூரியனுடைய ரூப லக்ஷணத்தைப் பல விதங்களில் வர்ணிக்கின்றன. நாம் அன்றாடம் மூன்று காலங்களில் செய்யவேண்டிய சந்தியாவந்தனத்தில் சூரியன் மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

சிவாகமங்கள் சூரிய மண்டலத்தின் நடுவே ஈசன் உறைகிறார் என்று கூறுகின்றன. அதனால் அவருக்கு சிவசூரியன் என்ற பெயரும் வழங்கி வருகிறது. சிவனுடைய அஷ்ட மூர்த்தங்களில் சூரியனும் ஒன்று என்றும் சிவனுடைய வலது கண்ணே சூரியனாகத் திகழ்கிறது என்றும் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டிலே நாம் மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பதைப் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறோம். தை மாதம் முதல் தேதி சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறான். அந்தத் தினத்தை ஸங்கராந்தி எனக் கொண்டாடுகிறோம். கிராமங்களில் புதிதாக அறுவடை செய்து வீட்டுக்குக் கொண்டு வந்த தானியத்தைக் குத்தி அரிசி எடுத்து அதைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்கு நிவேதனம் செய்கிறோம் சாபா, ஸுவர்ச்சலா என்ற இரு தேவியருடன் கூடியவராக சூரியனை அன்று பூஜிக்கிறோம். சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதிலிருந்து உத்தராயணம் தொடங்குகிறது. உத்தராயண காலம் மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்பர். சூரியனுடைய கிரணங்களுக்குச் சில நோய்களைப் போக்கும் சக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். ஸன் பாத் எனப்படும் சூரிய ஒளி ஸ்நானம் சிலவகை நோயாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆராதிப்பதால் முக்கியமாகக் குஷ்டம் எனப்படும் வியாதியிலிருந்து விடுபடலாம். குஷ்ட சம்பந்தமான நோய்களும் தீர்ந்து விடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. தினமும் சூரியனைப் பூஜை செய்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

ஜோதிஷ சாஸ்திரத்தில் சூரியன்: ஜோதிஷ சாஸ்திரம் நவக்கிரகங்களையே ஆதாரமாகக் கொண்டது. முன்னர் ஏழு கிரகங்களே இருந்தனவாம். பின்னர் ராகுவும் கேதுவும் சேர்ந்து ஒன்பது கிரகங்களாயின. சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதி. அவர் ஜீவகாரகனாகவும், தேககாரனாகவும், பித்ருகாரகனாகவும், நேத்ர காரகனாகவும் விளங்குகிறார். சத்துவ குணமுள்ள அவருடைய மேனி தாமிர வர்ணமுள்ளது. கலிங்க தேசத்தை ஆளும் அவர் கச்யப ÷க்ஷத்திரத்தில் பிறந்தவர். கிழக்கு முகமாக இருப்பவர். அவருக்குப் பிடித்த வர்ணம் சிவப்பு. அவருக்கு அதிதேவதை அக்கினி. பிரத்தியதி தேவதை ருத்திரன். அவர் பூஜிப்பது சிவன். அவருக்கு மிகவும் பிடித்த பத்திரம் அர்க்க பத்திரம். அதாவது எருக்க இலை. அவருக்கு விருப்பமான தானியம் கோதுமை, கனமான உடை அணியும் அவர் உறைவிடம் தேவாயதனம். அவருடைய தன்மை பித்தம். அவருடைய மணி சூரிய காந்தம். அவருடைய பாஷை ஸமஸ்கிருதமும், தெலுங்குமாகும். சுக்கிரன், ராகு, கேது இவர்களுக்குச் சத்துரு, புதனுக்குச் சமமானவர், சனியோடு அவருக்குப் பகை. எல்லா கிரகங்களைவிட சூரியன் பலசாலி என்றாலும் ராகு, கேது இருவருக்கும் சற்று வலிமை குறைந்தவரே. அவருடைய தசாகாலம் ஆறு வருஷங்கள். சித்திரை மாதம் மேஷ ராசியில் அவர் இருக்கும்போது மனிதர்களுக்கு சம்பாத்தியம் குறையும். ஆடி கடக ராசியில் சஞ்சரிக்கும் போது சோம்பல் அவிவேகம் ஏற்படும். ஆவணி சிம்ம ராசியில் சஞ்சரிக்கையில் சாமர்த்தியம், நட்பினால் சுகம் முதலான உண்டாகும். கண்நோய் ஏற்படலாம்.

புரட்டாசி கன்னி ராசியில் இருக்கும்போது செல்வம், அதிகாலை, தெய்வபக்தி முதலான விருத்தியாகும். ஐப்பசி துலா ராசியில் இருக்கையில் புத்தி கூர்மை, தெய்வ ஆராய்ச்சியில் ஈடுபாடு, சாதுவாக இருக்கும் சுபாவம், முதலியன உண்டாகும். கார்த்திகை விருச்சிக ராசியில் அவர் இருக்கும்போது வித்தை அபிவிருத்தி, சாந்தமான சுபாவம், பிறரால் கவுரவிக்கப்படும் தன்மை முதலியன ஏற்படும். மார்கழி தனுர் ராசியில் இருக்கையில் வியாபாரத்தில் வருமானம். பெண்களிடம் மோகம் முதலான ஏற்படும். தைமாதம் மகர ராசியில் இருக்கும்போது பொருள் சம்பாதிப்பதில் சாமார்த்தியம் உண்டாகும். மாசி கும்ப ராசியில் இருக்கும்போது புத்திர பாக்கியம் இல்லாமை, பெற்றோரிடம் துவேஷம், ஆசாரக் குறைவு முதலியன ஏற்படும். பங்குனி மீன ராசியில் இருந்தால் புகழ், தன விருத்தி முதலியன கிட்டும்.

பானோ பாஸ்கர மார்த்தாண்ட
சண்டரச் மே திவாகர
ஆயுராரோக்யம் ஐச்வர்யம்
வித்வாம் தேஹி ச்ரியம் பலம்


© Om Namasivaya. All Rights Reserved.