சிலப்பதிகாரம்

கடலாடு காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

(விளக்கம்) அஃதாவது - வெள்ளி மால்வரை வியன் பெருஞ் சேடி விச்சாதரனை யுள்ளிட்ட தேவர்களும் கரந்துரு வெய்தி வந்து காண்குறூஉம் இந்திரவிழா நிறைவேறாநின்ற உவா நாளிலே புகார்நகரத்து அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும் ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் கடற்கரை யிடத்தே வந்து கூடிக் கடலாடுதலும் மாதவியும் கோவலனும் அக் கடல் விளையாட்டைக் கண்டு மகிழ்வான் போந்து ஆங்குக் கடற்கரையிலே புன்னை நீழற் புதுமணற் பரப்பில் படவீடமைத்துத் தங்குதலும் பிறவும் கூறும் பகுதி யென்றவாறு.

வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்  5

இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்
கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி
நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட  10

வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ
இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்,
அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத்
தமரில் தந்து தகைசால் சிறப்பின்  15

பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்,
நாரதன் வீணை நயம்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய  20

நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவள்எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும்,  25

துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.
அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்
சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள்  30

காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்
பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
மாயோன் பாணியும் வருணப் பூதர்  35

நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட  40

எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்,  45

கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்த
மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற  50

சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்,  55

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்,
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,
செருவெம் கோலம் அவுணர் நீங்கத்  60

திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்,
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின்  65

பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்
விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்.
தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்எனக்
காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்திய  70

மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்,
அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
வந்துகாண் குறு஡உம் வானவன் விழவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப்  75

பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை  80

வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி,
அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து,  85

குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து,  90

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம்  95

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து,  100

கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து,  105

தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்,  110

உருகெழு மூது஡ர் உவவுத்தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,
பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப  115

வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்
தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக்  120

கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை
மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்
மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு
அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கலத் தாசியர் தம்கலன் ஒலிப்ப  125

இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
மகர வாரி வளம்தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகிக்
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்  130

வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்குசென்று எய்தி,
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,  135

செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,
கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்,
நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்,
இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்,  140

இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்,
விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்,
பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்,
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி  145

இடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல்அம் கானல்  150

பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல் தாரமும் கடல்பல் தாரமும்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
அரசுஇளங் குமரரும் உரிமைச் சுற்றமும்  155

பரத குமரரும் பல்வேறு ஆயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்
தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்
விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாள் போல  160

வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றிக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப,  165

கடல்புலவு கடிந்த மடல்பூந் தாழைச்
சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்
புன்னை நீழல் புதுமணல் பரப்பில்
ஓவிய எழினி சூழஉடன் போக்கி
விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை  170

வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என.

(வெண்பா)

வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக்
களிநறவம் தாதுஊதத் தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.

உரை

1-4 : வெள்ளி.........வீரன்

(இதன்பொருள்) வெள்ளி மால்வரை வியன் பெருஞ்சேடி - வெள்ளிப் பெருமலையின்கண் அகன்றுயர்ந்த வட சேடியின்கண்ணே; கள் அவிழ் பூம்பொழில் - தேன் துளிக்கின்ற மலர்கள் நிறைந்த தொரு பூம்பொழிலிடத்தே; கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு - கரிய கயல் மீன்போன்ற நெடிய கண்களையுடைய தன் காதலியுடனே யிருந்து; காமக் கடவுட்கு விருந்து ஆட்டு அயரும் ஓர் விஞ்சை மறவன் - காமவேளாகிய கடவுளுக்குச் சிறப்புவிழா நிகழ்த்தும் ஒரு விச்சாதர மறவன் என்க.

(விளக்கம்) 1. வெள்ளிப் பெருமலையுச்சியில் விச்சாதரருலகுள தென்றும் அது வடசேடி தென்சேடி என இரு கூறுடைத்து என்றும், ஆங்கு நகரங்கள் பலவுள என்றும், அவற்றை ஆளும் விச்சாதர மன்னரும் பலருளர் என்றும் கொள்வது அமண்சமயத்தினர் கோட்பாடு; ஈண்டு அடிகளார் அவர்தம் மதமே பற்றிக் காப்பியஞ் செய்கின்றனர் ஆதலின் வெள்ளிமால்வரை வியன் பெருஞ் சேடி என்றார். இரண்டு சேடிகளுள் வடசேடியே சிறந்ததாகலின் வியன்பெருஞ்சேடி என விதந்தார்.

விச்சாதரர் காம நுகர்ச்சியையே குறிக்கோளாக வுடையர். அவர்க்குக் காமக்கடவுளே முழுமுதற் கடவுளாவான். ஆதலின் ஈண்டு விச்சாதரவீரன் தன்னாருயிர்க் காதலியோடிருந்து காமக்கடவுட்குச் சிறப்புவிழாச் செய்வானாயினான் என்க. 4. விருந்தாட்டு - நித்தல் விழாவன்றி யாண்டுதோறும் நிகழ்த்துஞ் சிறப்புவிழா. ஆட்டயர்தல் - கொண்டாடுதல்.

விச்சாதரன் காதலிக்கு விளம்புதல்

(26) 5-6: தென்றிசை..........நாளிதுவென

(இதன்பொருள்) (26) துவர் இதழ்ச் செவ்வாய்த் துடியிடை யோயே - பவளம் போன்ற இதழையுடைய சிவந்த வாயினையும் உடுக்கை  போன்ற இடையினையும் உடைய என்னாருயிர்க் காதலியே கேள்; இது - வடசேடிக்கண் யாமெடுத்த காமவேள் விழா நிறைவுற்ற இந்த நன்னாள்; தென்திசை மருங்கின் ஓர் செழும்பதி தன்னுள் - இந்நாவலம் பொழிலின்கண் தென்றிசை யிடத்தே தமிழ் கூறும் நல்லுலகத்தே அமைந்த நகரங்களுள் வைத்து ஒரு வளமிக்க நகரத்தின்கண்ணே; இந்திரவிழவு கொண்டு எடுக்கும் நாள் என - இந்திரவிழாவிற்குக் கால்கொண்டு கொடியெடுக்கும் நாளுமாகும் என்று கூறி என்க.

(விளக்கம்) (5-6) இவ்விரண்டடிகட்கும் அடியார்க்குநல்லார் கூறும் உரை நூலாசிரியர் கருத்தென்று நினைத்தற்கிடனில்லை. ஆயினும் அவர் கூறும் உரையும் அறிந்து கோடற்பாலதேயாம். அது வருமாறு:

வீரன் பங்குனித் திங்கள் இருபத்தொன்பதில் சித்திரை நாளிலே அவ்விழா முடிதலின் தென்றிசைப் பக்கத்து ஒரு வளவிய நகரிடத்து இந்திரவிழாவிற்குக் கால்கொண்டு கொடியெடுக்கும் நாள் மேலைமாதத்து இந்தச் சித்திரை காண் எனச் சொல்லி யென்க.

இதுவெனச் சுட்டினான், அன்றுஞ் சித்திரையாகலின், ஈண்டுத் திங்களும் திதியும் கூறியது என்னையெனின், கோவலனும் மனைவியும் ஊரினின்றும் போந்த திங்களும் திதியும் வாரமும் நாளும் வழிச் செலவும் ஒழிவும், மதுரையிற் சென்று புக்கு இவன் இறந்துபட்ட திங்கள் முதலாயுள்ளவற்றோடு மாறுகொள்ளாது முடிதற்கெனக் கொள்க. அது யாண்டுமோ எனின் வேனிற் காதையினும் நாடுகாண் காதையினும் காடுகாண் காதை கட்டுரை காதை யென்னும் இவற்றுள்ளும் எனக்கொள்க. எனவரும்.

அவ்வுரையாசிரியர் இவ்வாறு தாமே ஒரு கொள்கையுடையராய் அதனை நிலைநிறுத்தற் பொருட்டு, ஈண்டு முன்மொழிந்து கோடல் என்னும் உத்திபற்றி இங்ஙனம் கூறிவைத்துப் பிறாண்டும் இதனை வலியுறுத்துவர். அவற்றை ஆங்காங்குக் காண்க. நூலாசிரியர் இத்தகைய கொள்கையுடையர் என்று நினைதல் மிகையேயாம் என்க.

இனி இளங்கோவடிகளார் இந்திரவிழவின் சிறப்பினைப் பின்னும் கூறுதற்கு இவ்விஞ்சை வீரனை ஒரு கருவியாக்கிக் கொள்கின்றனர் என்பது தேற்றம். என்னை? தென்றிசை மருங்கினுள்ள புகார் நகரத்து இந்திரவிழவினை வெள்ளிமலை யுச்சியில் வாழும் விச்சாதரர் முதலியவரும் வந்து கண்டுகளித்தனர் என்பது இவன் வரவினால் அறிவுறுத்தலும் மேலும் இவன் கூற்றாக அவ்விழாவையும் நகரச் சிறப்பையும் ஆடல் முதலிய கலைச்சிறப்பையும் வெளிப்படுத்துரைப்பதுவுமே அடிகளார் கருத்தென்க.

7-13: கடுவிசை .........காண்கும்

(இதன்பொருள்) கடுவிசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி - மிக்க விரைவினையுடைய அசுரர் கூட்டமாக நெருங்கிவந்து பொரூது; கொடுவரி ஊக்கத்துக் கோ நகர் காத்த தொடுகழல் மன்னற்குத் தோற்றனர் ஆகி - புலியினது மனவெழுச்சிபோலும் மனவெழுச்சியுடனே இந்திரனது தலைநகரைக் காத்துநின்ற வீரக்கழல் கட்டிய முசுகுந்தன் என்னும் சோழமன்னனுக்கு ஆற்றாது புறங்கொடுத்தோடுவோராகிய பின்னரும்; நிகர்த்து நெஞ்சு இருள்கூர மேல்விட்ட வஞ்சம் பெயர்த்த மாபெரும்பூதம்-தம்முள் ஒத்துக்கூடி அம்மன்னனது நெஞ்சம் மம்மர் கொள்ளும் படி ஏவிய இருட்கணையைப் போக்கிய மிகப்பெரிய பூதத்தை; தேவன் - தேவேந்திரன்; திருந்து வேல் அண்ணற்கு ஏவ-அறத்தாற்றிருந்திய போரையுடைய வேற்படையையுடைய தலைவனாகிய அம்முசுகுந்தனுக்குக் கைம்மாறாக ஏவுதலாலே; இருந்து பலி உண்ணும் இடனும் காண்கும் - அப்பூதம் வானுலகினின்றும் வந்து அப்புகார் நகரத்திலே தங்கியிருந்து அவிப்பலி முதலிய அரும்பலி கொள்கின்ற இடமாகிய நாளங்காடியிடத்தையும் கண்டு மகிழ்வேம் என்றான் என்க.

(விளக்கம்) இதன்கட் கூறப்படுகின்ற வரலாறு அடியார்க்கு நல்லார் உரையாலும் அவர் காட்டும் மேற்கோட் செய்யுளானும் அறியப்பட்டது. அது வருமாறு:

முன்னா ளிந்திரன்............
காவ லழித்துச் சேவல்கொண் டெழுந்த
வேட்கை யமுத மீட்க வெழுவோன்
இந்நகர் காப்போர் யாரென நினைதலும்
நேரிய னெழுந்து நீவரு காறும்
தார்கெழு மார்ப தாங்கலென் கடனென
உவந்தனன் கேட்டுப் புகழ்ந்தவிப் பூதம்
நின்வழி யாகென நிறீஇப் பெயர்வுழிக்
கடுவிசை யவுணர் கணங்கொண் டீண்டிப்
பொருதுபோர் தொலைந்தன ராகிப் பெரிதழிந்
தாழ்ந்தநெஞ்சிற் சூழ்ந்தனர் நினைத்து
வஞ்ச மற்றிது வஞ்சத் தல்லது
வேற லரிதெனத் தேறினர் தேறி
வளைத்துத் தொடுத்த வல்வா யம்பின்
அயின்முகங் கான்ற வாரிருள் வெயிலோன்
இருகணும் புதையப் பாய்தலி னொருகணும்
நெஞ்சங் காணா நிற்ப நின்ற
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் எனவும்,

என் சொல்லிய வாறோ வெனின், அங்ஙனம் விட்ட அம்பு முசுகுந்தன் கண்ணையும் மனத்தையும் புதைத்தலாற் போர்த் தொழிலொழிந்து நின்ற முசுகுந்தற்கு அவ்விருளுடைதற்குக் காரணமாயதொரு மந்திரத்தையருள அதனான் வஞ்சம் கடிந்து அவுணரைக் கொன்று குவித்து நின்றானைக் கண்ட இந்திரன் அவரை எங்ஙனம் கொன்று குவித்தா யென்றாற்கு அவன், இப்பூதத்தின் செயலெனக் கேட்ட இந்திரன் அப்பூதத்தை அவன் பொருட்டு மெய்காவலாக ஏவுதலின் ஆங்குநின்றும் போந்து, ஈங்குப் புகாரினுள்ளிருந்து பலியுண்ணும் நாளங்காடியிடமும் காண்பே மென்பதாம் எனவும் வரும்.

8. கொடுவரி - புலி. ஊக்கம் - மனவெழுச்சி. ஊக்கமுடைமையில் புலி தலைசிறந்ததாகலின் அதனை உவமையாக்கினார் திருவள்ளுவனாரும். பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை, வெரூஉம் புலிதாக் குறின் என ஊக்கமுடைமைக்கு அதனை உவமையாக்குத லுணர்க. நகர் - ஈண்டு அமராவதி. மன்னன் - சோழமன்னனாகிய முசுகுந்தன். நிகர்த்தல்-ஒத்தல். வஞ்சம் - இருட்கணை. அஃதாவது உயிர்களின் கண்ணையும் மனத்தையும் மறைப்பதொரு சத்திபடைத்த அம்பு. (இதனைத் தாமசாத்திரம் என்பர் வடநூலோர்) 12. தேவரேவ என்றும் பாடம்.

இதுவுமது

14-17: அமராவதி ............. காண்குதும்

(இதன்பொருள்) அமராபதி காத்து அமரனின் பெற்று - பண்டு அமரர் கோநகராகிய அமராபதியினை அசுரர் முற்றுகையிட்ட காலத்தே அமரர்க்கு வந்த இடர்நீங்க அவர்க்குத் துணையாய்ச் சென்று அசுரரை நூழிலாட்டிக் காத்தலானே அவ்வ மரர் கோமானால் கைம்மாறாகப் பெறப்பட்டு; தமரில் பெற்று - பின்பு இவன் மரபிலுள்ளாராலே கொண்டுவரப்பட்டு; தகைசால் சிறப்பின் - பெருந்தகைமையுடைய ஒவ்வொரு கடவுட்பண்புடைய சிறப்பினையுடையவாய்; பொய்வகையின்றி - அப் பண்புகள் பொய்க்கும் வகையில்லாமலே; பூமியிற் புணர்த்த - அப்பூம்புகார் நிலத்திலே நிலைபெற வைக்கப்பட்டுள்ள; ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும் - ஐந்து வகையான தன்மைகளையுடைய மன்றங்களின் சிறப்புக்களையும் கண்டு மகிழ்வேம்; என்றான் என்க.

(விளக்கம்) 14. அமரனின் - அமரர்கோமானாலே. தமர் - சோழன் முன்னோர். தகைசால் சிறப்பு - பெருந்தகைமையுடைய கடவுட் பண்பு. அவையாவன: கட்போருளரெனின் கடுப்பத் தலையேற்றிக் கொட்பின் அல்லது கொடுத்த லீயா மை முதலியனவாக முன்னைக் காதை அரங்கேற்று.....115-138யிற் கூறப்பட்டவை. பொய்வகையின்றிப் புணர்த்தலாவது - அக்கடவுட் பண்புகள் பொய்த்துப் போகாவண்ணம் அவற்றிற்குப் பலி கொடுத்தல் முதலிய வழிபாடு செய்வித்து வைத்தல் என்க. ஐவகை மன்றம் - முன்னைக் காதையிற் கூறிய பூதசதுக்க முதலாகப் பாவை மன்றம் ஈறாகவுள்ள மன்றங்கள். அவை வெவ்வேறு வகை ஆற்றலுடையனவாதல் பற்றி ஐந்து மன்றமும் என்னாது ஐவகை மன்றமும் என்றார். அமைதி - சால்புடைமை; இயல்புமாம்.

இதுவுமது

விச்சாதரன் மாதவியின் வரலாறு விளம்புதல்

18-25: நாரதன்.............காண்குதும்

(இதன்பொருள்) உருப்பசி - (காதலியே ஈதொன்று கேள்!) ஒரு காலத்தே வானவர் நாட்டிலே இந்திரன் அவைக்களத்தே நாடகமாடும் அரம்பையருள் வைத்து ஊர்வசி யென்பவள் அவ்விந்திரன் அவைக்களத்தே ஆடுபவள், இந்திரன் மைந்தனாகிய சயந்தனுடைய நோக்கெதிர் நோக்கி நெஞ்சு சுழல்பவளாய்; நாரதன் வீணை நயந்தெரி பாடலும் தோரிய மடந்தை வாரம் பாடலும் - யாழாசிரியனாகிய நாரதமுனிவன் யாழின் ஏழிசையின்பமுந் தெரியப் பாடும் பாடலையும் தோரிய மடந்தை வாரம் பாடலையும் உடைய; நாடகம் - தனது நாடகத்தினை; ஆயிரங் கண்ணோன் செவியகம் (கண்ணகம்) நிறைய நல்காள் ஆகி - ஆயிரங்கண்களையுடைய அவ்விந்திரனுடைய செவிகளாரவும் கண்களாரவும் வழங்கமாட்டாளாய்த் தடுமாறா நிற்ப; வீணை மங்கலம் இழப்ப - (அத்தடுமாற்றம் நன்கு தோன்றும்படி கலகத்தை விரும்புவோனாகிய நாரதன்றானும் தனது யாழிசையைப் பகைநரம்புபட இசைத்தலின்; இவ்விருவர் நிலைமையும் உணர்ந்த) திருமுனிவன் இவ்வியாழ் மங்கலமிழப்பதாக எனவும்; இவள் மண்மிசைத் தங்குக - இவ்வூர்வசி நிலவுலகிலே பிறந்து தங்குவாளாக எனவும் சபித்தலானே; சாபம் பெற்ற மங்கை மாதவி - இங்ஙனம் சாபம் பெற்றமையாலே நிலவுலகத்திலே கணிகையர் மரபிற் பிறந்து மாதவி என்னும் பெயருடையவளான அத்தெய்வ மங்கையின்; வழிமுதல் தோன்றிய அரவு அல்குல் ஆடலும் அங்குக் காண்குதும் - மரபிலே பிறந்த அரவின் பணம்போன்ற அல்குலையுடைய மாதவி யென்னும் நாடகம் ஏத்தும் நாடகக்கணிகையின் காண்டற்கரிய நாடகத்தையும் அவ்விடத்தே கண்டுகளிப்பேம் காண் என்றான் என்க.

(விளக்கம்) 22. வீணை - வடசொல். யாழ் என்னும் பொருட்டு. இஃதறியார் வீணை வேறு யாழ் வேறு என்பர். இவர் கூற்று - சலம் வேறு நீர் வேறு என்பதுபோலும் போலி என்க. ஈண்டு அடியார்க்குநல்லார் வீணை என்பதற்கு யாழ் என்றே பொருள் கூறுதலுமறிக. பாடலொடு ஆடல் இயைபுறாமையால் அவையும் இன்பந் தாரா தொழிதலின் அவை நிறையாமைக்கு உருப்பசி நாடகம் நல்காமையை ஏதுவாக்கினர். நாடகம் கண்ணாற்றுய்க்குங் கலையாகலின், அதனை நுகரும் இந்திரனை ஆயிரங்கண்ணான் என்று விதந்தனர். மேலும் நாடகம் நல்காளாகி எனவே கண்ணகம் நிறையாமை அமைதலின் செவியகம் நிறையாமை மட்டுமே கூறினர். இனி, இதன்கண் வானவர் நாட்டு அரம்பையருள் ஒருத்தியாகிய உருப்பசி மண்ணுலகிலே வந்து பிறந்து மாதவியென்னும் பெயருடையவளா யிருந்தாள் என்பதும் ஈண்டுக் கோவலனாற் காமுறப்பட்ட மாதவி என்பவள் அந்த மாதவியின் வழியிற் றோன்றியவள் என்பதுமாகிய வரலாறு கூறப்படுகின்றது. உருப்பசி அகத்தியமுனிவனாற் சபிக்கப்பெற்றமை அரங்கேற்று காதைக்கண் தெய்வ மால்வரைத் திருமுனி யருள..... சாபம் நீங்கிய என்புழிக் கூறினராதலின் ஈண்டு வாளாது சாபம் பெற்ற என்றொழிந்தார்.

இனி, அடியார்க்குநல்லார் உருப்பசியின் சாப வரலாறு என எடுத்துக் காட்டுகின்ற செய்யுள் வருமாறு:

வயந்த மாமலை நயந்த முனிவரன், எய்திய அவையின் இமையவர் வணங்க, இருந்த இந்திரன் திருந்திழை உருப்பசி, ஆடல் நிகழ்க பாடலோ டீங்கென, ஓவியச் சேனன் மேவின னெழுந்து, கோலமும் கோப்பு நூலொடு புணர்ந்த, இசையு நடமு மிசையத் திருத்திக், கரந்துவரல் எழினியொடு புகுந்தவன் பாடலின், பொருமுக வெழினியிற் புறந்திகழ் தோற்றம், யாவரும் விழையும் பாவனை யாகலின். நயந்த காதற் சயந்தன் முகத்தில், நோக்கெதிர் நோக்கிய பூக்கமழ் கோதை, நாடிய வேட்கையின் ஆடல் நெகிழப், பாடன் முதலிய பல் வகைக் கருவிகள், எல்லா நெகிழ்தலின் ஒல்லா முனிவரன், ஒருதலையின்றி இருவர் நெஞ்சினும், காமக் குறிப்புக் கண்டனன் வெகுண்டு, சுந்தர மணிமுடி யிந்திரன் மகனை, மாணா விறலோய் வேணு வாகென, விட்ட சாபம் பட்ட சயந்தன், சாப விடையருள் தவத்தோய் நீயென, மேவினன், காலை கழையு நீயே யாகி, மலையமால் வரையின் வந்துகண்ணுற்றுத், தலையரங்கேறிச் சார்தி யென்றவன், கலக நாரதன் கைக்கொள் வீணை, அலகி லம்பண மாகெனச் சபித்துத் தந்திரி யுவப்புத் தந்திரி நாரிற், பண்ணிய வீணை மண்மிசைப் பாடி, ஈண்டு வருகெனப் பூண்ட சாபம், இட்டவக் குறுமுனி யாங்கே, விட்டன னென்ப வேத்தவை யகத்தென் எனவரும்.

இனி, இந்திரன் செவியகங் கண்ணகம் நிறைய நாடகம் நல்காளாகிய உருப்பசியையும் அதற்குக் காரணமாகிய சயந்தனையும் சபித்தமை ஒக்கும்; வீணை மண்மிசைத் தங்குக எனச் சபித்தல் ஒவ்வாதென்பார்க்கு அடியார்க்குநல்லார் கூறும் அமைதி வருமாறு:

நாரதன் கலகப்பிரியன் ஆதலால் தனது யாழைப் பகைநரம்புபட இசைத்தலின், தான் இங்ஙனம் இசைத்தற்குக் காரணமின்றாகவும் இவள் கலங்கினமை தான் நமக்கறிவித்து நம்மால் இவளை முனிவிப்பான் வேண்டி நம்மை மதியானாயினானென அவளொடுஞ் சாபமிடுகின்றவன் வீணை மங்கல மிழக்க மண்மிசைத் தங்குக வெனவே இவனை நீங்காவரத்தின் வந்ததாகலான் இவனும் மண்மிசைத் தங்குக வென்ப தாயிற்று; எனவே இவன் மண்ணிற் பிறவானாதல் உணர்க என்பதாம்.

இனி, அவ்வுரையாசிரியர் பின்னும் வீணையைச் சாரீர வீணையாக்கி மங்கல மிழப்ப என்பதற்கு இவள் இக்கடவுள் யாக்கை யொழிந்து மக்கள் யாக்கையில் தங்குகவெனச் சபித்தான் என்பதும் கொள்க, என்பர். இவ்விளக்கம் நூலாசிரியர் கருத்தொடு மாறுபடுதலின் பொருந்தாதாம். என்னை? நூலாசிரியரே நாரதன் வீணையெனத் தெரித்தோதுதலின் என்க.

25. ஆடலும் அங்குக் காண்குதும் எனக் கூட்டுக. அரவல்குல், அன்மொழித்தொகை. மாதவி என்னும் பொருட்டு.

26. துவரிதழ் துடியிடையோயே இவ்வடி முன்னரே எடுக்துக் கூட்டி உரை கூறப்பட்டது.

(26) துடியிடையோயே! தென்றிசை மருங்கில் ஓர் செழும்பதி தன்னுள் இந்திரவிழவு கொண்டு எடுக்கும் நாள் இதுவெனக் கூறியாம் ஆங்குச் சென்று இடனுங் காண்குதும்; அமைதியுங் காண்குதும்; ஆடலும் காண்குதும்; தலைவனை வணங்குதும் என்றுகூறி என இயையும்.

விச்சாதரன் காதலியுடன் புகார்நகர்க்கு வருதல்

28-34 : சிமையத்து..........காண்போன்

(இதன்பொருள்) சிமையத்து இமயமும் - தன்காதலியோடு விசும்பின்வழியாகப் புகார்நகர் நோக்கி வருகின்ற அவ்விச்சாதரன் வழியின் கண்ணுள்ள குவடுகளோடு கூடிய இமயமலையையும்; செழு நீர்க் கங்கையும் - அவ்விமயத்தே பிறந்து உலகுபுரந் தூட்டுகின்ற வளவிய நீரையுடைய கங்கைப் பேரியாற்றினையும்; உஞ்சையம் பதியும் - உஞ்சைமாநகரத்தையும்; விஞ்சத்து அடவியும் - விந்த மலையினையும் அதனைச் சூழ்ந்த காட்டினையும்; வேங்கடமலையும் - வடவேங்கடமாமலையினையும்; தாங்கா விளையுள் காவிரிநாடும் காட்டி - நிலம் பொறாத விளை பொருள்களையுடைய காவிரிப் பேரியாறு புரந்தூட்டும் சோழவளநாட்டையும் தன் காதலிக்கு இஃது இன்னது! இஃது இன்னது என்று சுட்டிக்காட்டிப்; பின்னர் பூவிரி படப்பை புகார் மருங்கு எய்தி - சோழநாட்டுட் புகுந்த பின்னர் மலர்ந்த மலர்களையுடைய தோட்டங்களையுடைய புகார்நகரிடத்தே வந்து; சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி - தான் முன்பு அவட்குக் கூறிய முறைமையினாலே பூதசதுக்கம் முதலியவற்றைத் தான் தொழுமாற்றால் அவளையும் தொழுவித்துக் காட்டி; மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன் - முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளமுடைய பழைய நகரமாகிய அப்பூம்புகாரின்கண் நடக்கின்ற மகிழ்ச்சிதருகின்ற இந்திரவிழாக் காட்சியைக் காதலிக்குக் காட்டித் தானுங் காண்கின்ற அவ்விச்சாதரன் என்க.

(விளக்கம்) 28 - சிமையம் -சிகரம்; குவடு. 29-உஞ்சையம்பதி - உச்சயினி நகரம். விந்தம், விஞ்சம் என மருவிற்று. அடவி - காடு. வேலி ஆயிரம் விளையுட்டு என்பதுபற்றித் தாங்கா விளையுள் காவிரிநாடு என்றார். நிலந்தரங்க மாட்டாதபடி மிகுதியாக விளையும் நாடு என்றவாறு. 32. படப்பை - வாழைத்தோட்டம் மாந்தோட்டம் முதலிய தோட்டக் கூறுகள். தொழுதனன் - தொழுது. 34. மகிழ்விழா - மகிழ்தற்குக் காரணமான விழா.

(மாதவியின் ஆடல்கள்)

35-37 : மாயோன்.........பின்னர்

(இதன்பொருள்) மாயோன் பாணியும் - திருமாலை வாழ்த்துகின்ற தேவபாணியும்; வருணப்பூதர் நால் வகைப் பாணியும் - வருணப் பூதர் நால்வரையும் வாழ்த்துகின்ற நால்வகைச் சிறுதேவபாணியும்; நலம் தரும் கொள்கை வான் ஊர் மதியமும் பாடி - மன்னுயிர் பலவற்றிற்கும் தன் ஒளியாலே நன்மைதருவதாம் என்கின்ற கோட்பாடு காரணமாக வானின்கண் இயங்குகின்ற திங்கட் கடவுளை வாழ்த்துகின்ற சிறுதேவபாணியும் ஆகிய இசைப்பாடல்களைப் பாடி என்க.

(விளக்கம்) 35. மயோன் பாணி - திருமாலாகிய பெருங்கடவுளைப் பாடுகின்ற தேவபாணி என்னும் பாட்டு. பாணி - பாட்டு. இது முத்தமிழ்க்கும் பொதுவாம். இஃது இசைத்தமிழில் வருங்கால் கொச்சக வொருபோகாய் வரும். ஆசிரியர் தொல்காப்பியனாரும் ஏனை யொன்றே, தேவர்ப்பராய முன்னிலைக் கண்ணே எனச் செய்யுளியலுள் (138) இலக்கணம் ஓதுதலறிக.

தேவபாணி - பெருந் தேவபாணி சிறு தேவபாணியென இரு வகைப்படும் என்ப.

இனி, இசைத்தமிழில் வருங்கால் தரவு முதலியவற்றை முகநிலை கொச்சகம் முரி என இசை நூலாரும் வழங்குவர். இசைப் பாவானது இசைப்பா எனவும் இசையளவுபா எனவும் இருவகைப்படும். இவற்றுள் தேவபாணி இசைப்பா என்பதன் பாற்படும். அவ்விசைப்பா பத்து வகைப்படும் என்பர். அவையாவன: 1 செந்துறை, 2 வெண்டுறை, 3. பெருந்தேவபாணி, 4. சிறு தேவபாணி, 5. முத்தகம், 6. பெருவண்ணம், 7. ஆற்றுவரி, 8. கானல்வரி, 9. விரிமுரண், 10. தலைபோகுமண்டிலம் என்பனவாம். இதனை,

செந்துறை வெண்டுறை தேவபா ணிய்யிரண்டும்
வந்தன முத்தகமே வண்ணமே - கந்தருவத்
தாற்றுவரி கானல் விரிமுரண் மண்டிலமாத்
தோற்று மிசையிசைப்பாச் சுட்டு  (இசை நுணுக்கம்)

எனவரும் (சிகண்டியார்) வெண்பாவா னுணர்க.

இனி, சுத்தம் சாளகம் தமிழ் என்னும் சாதியோசைகள் மூன்றனோடும் தாளக்கிரியைகளோடும் பொருந்தும் இசைப்பாக்கள் ஒன்பது வகைப்படும் எனப் பஞ்சமரபு என்னும் நூல் செய்த அறிவனார் கூறுவர். அவை சிந்து திரிபதை சவலை சமபாதவிருத்தம் செந்துறை வெண்டுறை பெருந்தேவபாணி சிறுதேவபாணி வண்ணம் என்னும் ஒன்பதுமாம்.

இனி, நாடகத் தமிழில் தேவபாணி வருங்கால், பெருந்தேவபாணி பலதேவரையும் சிறுதேவபாணி வருணப்பூதரையும் மூவடிமுக்கால் என்னும் வெண்பாவால் பாடப்படும் எனவும் அங்ஙனம் பாடுங்கால் அவர் அணியும் தாரும் ஆடையும் அவர்தம் நிறனும் கொடியும் வாழ்த்தி அவர்பால் வேண்டுவனவும் கூறிப் பாடப்படும் எனவும் கூறுவர். இதனை,

திருவளர் அரங்கிற் சென்றினி தேறிப்
பரவுந் தேவரைப் பரவுங் காலை
மணிதிகழ் நெடுமுடி மாணிபத் திரனை
அணிதிகழ் பளிங்கின் ஒளியினை யென்றும்
கருந்தா துடுத்த கடவுளை யென்றும்
இரும்பனைத் தனிக்கொடி யேந்தினை யென்றும்
கொடுவாய் நாஞ்சிற் படையோ யென்றும்
கடிமலர் பிணைந்த கண்ணியை யென்றும்
சேவடி போற்றிச் சிலபல வாயினும்
மூவடி முக்கால் வெள்ளையின் மொழிப  (மதிவாணனார்)

எனவரும் நூற்பாவா னறிக.

இனி, கொடு கொட்டி முதலிய பதினோராடற்கும் முகநிலையாகிய தேவபாணி மாயோன் பாணியாம். அது வருமாறு:

மலர்மிசைத் திருவினை வலத்தினி லமைத்தவன் மறிதிரைக் கடலினை மதித்திட அடைத்தவன் - இலகொளித் தடவரை கரத்தினில் எடுத்தவன் இனநிரைத் தொகை கழை இசைத்தலில் அழைத்தவன் - முலையுணத் தருமவள் நலத்தினை முடித்தவன் முடிகள்பத் துடையவ னுரத்தினை யறுத்தவன் - உலகனைத் தையுமொரு பதத்தினில் ஒடுக்கினன் ஒளிமலர்க் கழல்தரு வதற்கினி யழைத்துமே. இஃது எண்சீரான் வந்து கொச்சக வொருபோகு. பண் - கௌசிகம். தாளம் இரண் டொத்துடைத் தடாரம்.

இனி ஆசிரியர் இளங்கோவடிகளார் சிறுதேவபாணி ஈண்டுக் கூறிற்றில ரெனினும் இனஞ்செப்புமாற்றால் அது வருமாறு கூறப்படும். அஃதாவது

வண்ணமலர்ச் சரங்கோத்து மதனவேள் மிகவெய்யக்
கண்ணளவோர் புலனல்லாக் கனல்விழியா லெரித்தனையால்
எண்ணிறந்த தேவர்களு மிருடிகளு மெழுந்தோட
ஓண்ணுதலான் பாகங்கொண் டொருதனியே யிருந்தனையே

எனவரும் என்க.

மாயோன் காவற் கடவுளாதல்பற்றி முதற்கண் வாழ்த்தப்பட்டனன். இனி, வருணப்பூதர் நால்வகைத் தேவபாணி வருமாறு:

அந்தணர் வேள்வியோ டருமறை முற்றுக - வேந்தன் வேள்வியோ டியாண்டுபல வாழ்க - வாணிக ரிருநெறி நீணிதி தழைக்க - பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக - அரங்கியற் கூத்து நிரம்பிவினை முடிக - வாழ்க நெடுமுடி கூர்கவென் வாய்ச் சொலென் - றிப்படிப் பலிகொடுத் திறைவனிற் றொக்குச் - செப்பட வமைத்துச் செழும்புகை காட்டிச் - சேவடி தேவரை யேத்திப் பூதரை - மூவடி முக்கால் வெண்பா மொழிந்து - செவியிழுக் குறாமை வேந்தனை யேத்திக் - கவியொழுக்கத்து நின்றுழி வேந்தன், கொடுப்பன கொடுப்ப வடுக்கு மென்ப எனவரும் (மதிவாணனார்) நூற்பாவாலறிக.

36. மதியமும் பாடி எனவே திங்கட்கடவுளைப் பாடுந்தேவபாணி என்பதாயிற்று. திங்கள் தண்ணிய மண்டில மாதல்பற்றி முற்கூறப்பட்ட தென்பர். இதற்குச் செய்யுள் வருமாறு: குரைகடன் மதிக்கு மதலையை குறுமுயல் ஒளிக்கும் அரணினை - இரவிரு ளகற்று நிலவினை யிறையவன் முடித்த அணியினை - கரியவன் மனத்தின் உதிதனை கயிரவ மலர்த்து மகிணனை - பரவுநர் தமக்கு நினதிரு பதமலர் தபுக்க வினையையே எனவரும். இதற்குப் பண்ணும் தாளமும் முற்கூறப் பட்டனவேயாம்.

திங்கள் மண்டிலம் தனது தண்ணொளியாலே பைங்கூழ் முதலியவற்றை வளர்த்து மன்னுயிர்க்கு நலம் செய்வதாம் என்பதுபற்றி நலம்பெறு கொள்கை (யால்) வானூர் மதியம் பாடி என்றார்.

(37) பாடி.........ஆடும் (69) மாதவி இவள் என ஒருசொற் பெய்து மாதவிக்கு இதனையும் பின்வருவனவற்றையும் அடையாக்குக.

(1) கொடு கொட்டி

37-43: பின்னர் ............. ஆடலும்

(இதன்பொருள்) பின்னர் - இவற்றைப் பாடி முடித்த பின்னர்; நீரல நீங்க சீர் இயல் பொலிய - ஒவ்வாத தாளங்கள் நீங்கவும் பொருத்தமான தாளவியல்பு பொலிவு பெறுமாறும் பதினொரு வகைக் கூத்துக்களையும் (கோவலனுக்கு ஆடிக்காட்டி அவனை மகிழ்விக்கும் மாதவியை விச்சாதரன் அவர்கள் காணாமரபின் நின்று தன்மனைவிக்குச் சுட்டிக்காட்டுகின்றான்) என்க. தேவர் திரிபுரம் எரிய வேண்ட - தேவர்கள் தமக்கின்னல் செய்கின்ற அசுரருடைய முப்புரமும் எரியும்படி வேண்டுதலாலே; எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப-அவ்வேண்டுகோட் கிணங்கிய இறைவனுடைய வடவைத் தீயை நுனியிலுடைய பெரிய அம்பானது அவ்விறைவன் ஏவிய பணியைச் செய்து முடித்தமையாலே; (அசுரர் வெந்து விழுந்த) பாரதி ஆடிய பாரதி அரங்கத்து - பைரவி ஆடியதனால் பாரதியரங்கம் என்னும் பெயர் பெற்ற சுடுகாட்டின் கண்; உமையவள் ஒருதிறன் ஆக- தனது ஒரு கூற்றிலே நின்று உமையன்னை பாணிதூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த; ஓங்கிய இமயவன் - தேவர்கள் யாரினும் உயர்ந்த தேவனாகிய இறைவன்; ஆடிய கொடுகொட்டி ஆடலும் - வெற்றிக் களிப்பாலே ஆடியருளிய கொடுகொட்டி என்னும் ஆடலும் என்க.

(விளக்கம்) 39-பாரதி-பைரவி. அவளாடிய அரங்கு, பாரதியரங்கம். சொற்பொருட் பின்வருநிலை யென்னும் செய்யுளின்பம் கருதி பாரதி யாடிய பாரதி யரங்கத்து என்று விதந்தோதினர். 40. தேவர் வேண்ட அம்பு ஏவல் கேட்ப அதனால் திரிபுரம் எரிய ஆங்குண்டான பாரதி யரங்கம் என்க. பாரதியரங்கம் என்பது வாளாது சுடுகாடு என்னும் பொருட்டாய் நின்றது என்க. 41. எரி - ஈண்டு வடவைத்தீ. முகம் - நுனி. உமையவள் ஒரு திறனாக நின்றாட இமையவன் ஒரு திறனாக நின்று ஆடிய கொடுகொட்டி என்க.

43. திரிபுரம் தீமடுத்தெரியக் கண்டு இரங்காது கைகொட்டி நின்று ஆடிய கொடுமையுடைத்தாகலின் கொடுங்கொட்டி என்பது பெயராயிற்று. கொடுங்கொட்டி கொடுகொட்டி என விகாரமெய்தி நின்றது.

பாணியும் தூக்கும் சீரும் என்றிவை மாணிழை அரிவை கரப்ப எனக் கலியிற் கடவுள் வாழ்த்தில் வருதலை நினைந்து அடியார்க்குநல்லார் பாணி தூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த என வுரை விரித்தார்.

(2) பாண்டரங்கம்

44-45: தேர்முன் .............. பாண்டரங்கமும்

(இதன்பொருள்) தேர்முன் நின்ற திசை முகன் காண - வையகமாகிய தேரின்முன் நின்ற நான்முகன் காணுமாறு; பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும் - பாரதி வடிவமாகிய இறைவன் வெண்ணீற்றை அணிந்தாடிய பெரிய பாண்டரங்கக் கூத்தும் என்க.

(விளக்கம்) தேர் என்றதற்கு வானோராகிய தேர் என்பாருமுளர். வையத் தேர் என்பது பரிபாடல் (5-24.) நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புற மறைத்து வார்துகின் முடித்து கூர் முட் பிடித்துத் தேர் முன்னின்ற திசைமுகன் காணும்படி என்பது பழையவுரை.

(3) அல்லியம்

46 - 48: கஞ்சன் ........... தொகுதியும்

(இதன்பொருள்) அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் - கரிய திருமேனியுடைய கண்ணன் ஆடிய பத்துவகை ஆடலுள் வைத்து; கஞ்சன் வஞ்சம் கடத்தற்கு ஆக-கஞ்சன் செய்த வஞ்சனையினின்றும் நீங்குதற் பொருட்டாக; ஆடிய அல்லியத் தொகுதியும்-ஆடப்பட்ட அல்லியத் தொகுதி என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) 45. வஞ்சம் - வஞ்சனையாக ஏவப்பட்ட யானை. கஞ்சனால் ஏவப்பட்ட வஞ்ச யானையின் கொம்பை ஒடித்தற்கு நின்று ஆடிய கூத்து அல்லியக்கூத்து எனப்படும். 46. அஞ்சனவண்ணன் - மாயோன்; கண்ணன். கண்ணன் ஆடிய கூத்துப் பத்துவகைப்படும் என்ப. ஏனைய வந்தவழிக் கண்டுகொள்க. அல்லியக் கூத்து பலதிறப்பட ஆடுதலின் தொகுதி என்றார். முகம் மார்பு கை கால்களின் வட்டணை அவிநயம் முதலியன இருந்தும் தொழில் செய்யாது நிற்றலின் தொகுதி எனப்பட்டது என்பது பழையவுரை. ஆடலின்றி நிற்பவை யெல்லாம் மாயோனாடும் வைணவநிலை எனும் நூற்பாவின்கண் ஆடலின்றி நிற்கும் கூத்துக்கள் பலவுள வென்பது பெறுதுமாகலின் தொகுதி என்றது அல்லியக் கூத்துக்களின் தொகுதி யென்றே கோடல் நேரிது. அடியார்க்குநல்லார் விளக்கம் பொருத்தமாகத் தோன்றாமை யுணர்க. அல்லியம் எனினும் அலிப்பேடு எனினும் ஒன்று.

(4) மல்

48-49: அவுணர் ................ ஆடலும்

(இதன்பொருள்) (அஞ்சனவண்ணன் ஆடலுள் வைத்து;) அவுணன் கடந்த மல்லின் ஆடலும்-வாணன் என்னும் அசுரனை வெல்லுதற்பொருட்டு அவன் மல்லனாகி ஆடிய மற்கூத்தும் என்க.

(விளக்கம்) அஞ்சனவண்ணன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.

(5) துடி

49-51: மாக்கடல் .......... துடியும்

(இதன் பொருள்) மாக்கடல் நடுவண் - கரிய கடலின் நடுவிடத்தே; நீர்த்திரை அரங்கத்து - அக்கடல் நீரின் அலையே அரங்கமாக நின்று; நிகர்த்து முன் நின்ற - நேரொத்து எதிர்நின்ற; சூர்த்திறம் கடந்தோன் - சூரனது வஞ்சகமாகிய சூழ்ச்சித் திறத்தை அறிந்து அவன் போரைக்கடந்த முருகன், ஆடிய துடியும் - அவ்வெற்றிக் களிப்பால் துடிகொட்டியாடிய துடிக்கூத்தும் என்க.

(விளக்கம்) 49. மா - கருமை; பெரிய கடலுமாம். 50. கடல் அலை மேலே நின்றாடுதலின் நீர்த்திரை யரங்கத்து என அதனை அரங்கம் என்றார். நிகர்த்து - நேரொத்து. 51. திறம் - சூழ்ச்சித்திறம். துடிகொட்டி ஆடுதலின் அப்பெயர் பெற்றது.

(6) குடை

52 - 53: படை..............குடையும்

(இதன் பொருள்) அவுணர் படை வீழ்த்துப் பையுள் எய்த - அசுரர்கள் போர் செய்தற்கு ஆற்றாதவராய்த் தம் படைக்கலங்களைக் களத்திலே போகட்டு வருந்தாநிற்ப அம்முருகனே; குடை வீழ்த்து - தனது கொற்ற வெண்குடையைச் சாய்த்துச் சாய்தது; அவர்முன் ஆடிய குடையும் - அவ்வசுரர் முன்னர் ஆடிய குடைக்கூத்தும், என்க.

(விளக்கம்) 52. அவுணர் ஆற்றாமை கண்டு அவரை எள்ளிக் குடையைப் பக்கங்களிலே சாய்த்துச் சாய்த்து ஆடுதலின் அவர் நாணிப் படை வீழ்த்துப் பையுள் எய்தினர் என்பது கருத்து. 53. குவைகொண்டாடலின் அப்பெயர்த்தாயிற்று.

(7) குடம்

54-55 : வாணன் ........... குடம்

(இதன் பொருள்) நீள்நிலம் அளந்தோன் - நெடிய நிலத்தை ஓரடியாலே அளந்த மாயோன்; வாணன் பேரூர் மறுகிடை நடந்து - வாணாகரனுடைய சோ என்னும் பெரிய நகர மறுகிலே சென்று அநிருத்தனைச் சிறைவீடு செய்தற் பொருட்டு; ஆடிய குடமும் - குடங்கொண்டு ஆடிய குடக் கூத்தும் என்க.

(விளக்கம்) காமன் மகன் அநிருத்தன் என்பானை வாணாசுரன் மகள் உழை என்பாள் காமுற்று அவனை உறக்கத்தே எடுத்துப்போய்த் தன் உவளகத்தே சிறைவைத்து அவனோடு கூடியிருந்தனள். இச்செய்தி யறிந்த மாயோன் வாணன் நகரத்தே சென்று போராடி வென்று அவனைச் சிறை மீட்டான் என்பர். அவ்வெற்றி காரணமாக மாயோன் அந்நகர மறுகில் குடங்களைக் கொண்டாடினன் என்க. இக்குடங்கள் உலோகங்களானும் மண்ணாலும் இயற்றப்பட்டன என்ப.

இது விநோதககூத்து ஆறனுள் ஒன்று என்பர். இதனை,

பரவிய சாந்தி யன்றியும் பரதம்
விரவிய விநோதம் விரிக்குங் காலைக்
குரவை கலிநடங் குடக்கூத் தொன்றிய
கரண நோக்குத் தோற்பா வைக்கூத்
தென்றிவை யாறும் நகைத்திறச் சுவையும்
வென்றியும் விநோதக் கூத்தென விசைப்ப

எனவரும் நூற்பாவானுணர்க.

(8) பேடி

56-57 : ஆண்மை..............ஆடலும்

(இதன் பொருள்) ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்து - ஆண்மைத்தன்மை திரிந்து பெண்மைத்தன்மை மிக்க கோலத்தோடே; காமன் ஆடிய பேடி ஆடலும்-காமவேள் ஆடிய பேடு என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) இதுவும் அநிருத்தனைச் சிறை மீட்டற்கு வாணாசுரன் நகரமறுகில் மாயோன் ஆடிய குடக்கூத்தோடு அம்மாயோனொடு சென்ற காமன் பேட்டுருக்கொண்டு ஆடிய கூத்தென வுணர்க. இதனை சுரியற்றாடி மருள்படு பூங்குழல் பவளச் செவ்வாய்த் தவளவொண்ணகை - ஒள்ளரி நெடுங்கண் வெள்ளி வெண் டோட்டுக் - கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதற் - காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை - அகன்ற வல்குல் அந்நுண் மருங்குல் - இகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து - வாணன் பேரூர் மறுகிடை நடந்து - நீணில மளந்தோன் மகன்முன் னாடிய - பேடிக் கோலத்துப் பேடுகாண்குநரும், எனவரும் மணிமேகலையானு முணர்க. (மணி.3:116-25)

தண்டமிழ் ஆசான் சாத்தனார் அடிகளார் மொழிகளைப் பொன்னே போற் போற்றி வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலம் அளந்தோன் என இனிதின் ஓதுதலுணர்க.

(9) மரக்கால்

58-59: காய்சின...........ஆடலும்

(இதன் பொருள்) மாயவள் - கொற்றவை; காய்சின அவுணர் கடுந் தொழில் பொறாஅள் - சுடுகின்ற வெகுளியையுடைய அசுரர் வஞ்சத்தாலே செய்கின்ற கொடிய தொழில் கண்டு பொறாதவளாய்; மரக்கால் ஆடிய ஆடலும் - மரத்தாலியன்ற கால்களின் மேனின்று ஆடிய மரக்கால் என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) 58. காய்சினம் - வினைத்தொகை. கடுந்தொழில் - தேவர்கட்கு இன்னல் செய்தற்குச் செய்த போர் முதலியன. தன்பாலன்புடைய நல்லோர்க்குச் செய்த இன்னல் கண்டு பொறாதவளாய் என்பது கருத்து. 59. மாயவள் - மாமைநிற முடையவள். அவள் கொற்றவை என்க.

ஆங்குக் கொன்றையும்......... அசுரர்வாட அமரர்க்காடிய குமரிக் கோலத்து ....... ஆய்பொன் னரிச்சிலம்பு சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை ஆடும் போலும் என அடிகளாரே வேட்டுவவரிக்கண் ஓதுவர்.

அவுணர் போரிற் காற்றாமல் வஞ்சத்தால் வெல்லக் கருதிப் பாம்பும் தேளும் பிறவுமாய்ப் போர்க்களத்தே புகுந்து மொய்த்தலின் கொற்றவை அவற்றை உழக்கிக் கொல்லுதற் பொருட்டு மரக்கால் கொண்டு ஆடலின் இஃது அப்பெயர்த்தாயிற்று.

(10) பாவை

60-61 : செரு..........பாவையும்

(இதன் பொருள்) செய்யோள் திருவின் சிவந்த திருமேனியையுடைய திருமகளாலே; அவுணர் செருவெம் கோலம் நீங்க - அசுரர்கள் போராற்றுதற்கு மேற்கொண்ட வெவ்விய கோலம் நீங்கி மோகித்து விழும்படி; ஆடிய பாவையும் - கொல்லிப்பாவை வடிவத்தோடே நின்று ஆடப்பட்ட பாவை என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) 60. செருக்கோலம் - போர்க்கோலம், அது நீங்கலாவது சினமவிந்து மோகித்து மயங்கி வீழ்தல். பாவை - கொல்லிப் பாவை. பாவை வடிவாயாடுதலின் அப்பெயர்த்தாயிற்று.

(11) கடையம்

62-64 : வயலுழை..........கடையமும்

(இதன் பொருள்) வடக்குவாயிலுள் வயல் உழை நின்று - வாணன் என்னும் அசுரனது சோ என்னும் நகரத்தே அரண்மனையினது வடக்கு வாயிலின்கண்அமைந்த கழனியினிடத்தே நின்று, அயிராணி மடந்தை ஆடிய கடையமும் - அயிராணி என்னும் தெய்வமடந்தை கடைசி வடிவு கொண்டு ஆடிய கடையம் என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) வடக்குவாயில்-சோவரணினது வடக்குவாயில் என்க. அயிராணி - இந்திராணி. கடையம் - கடைசியர் ஆடுங்கூத்து. உழத்தி வடிவங்கொண்டு ஆடலின் அப்பெயர்த்தாயிற்று. கடைசி - உழத்தி.

விச்சாதரன் மனைவியோடு காணாமரபினின்று மாதவியின் பதினொருவகைக் கூத்தையும் கண்டு பின்னர் இவள்தான் மாதவி என மனைவிக்குக் காட்டுதல்.

64-71:  அவரவர் .......... அன்றியும்

(இதன் பொருள்) அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் - இங்ஙனம் கூறப்பட்ட பதினொருவகைக் கூத்துக்களையும் அவற்றை ஆடிய இறைவன் முதலிய அத்தெய்வக் கூத்தர்கட்கியன்ற அணிகளுடனேயும் அவரவர்தம் கோட்பாட்டிற் கியன்ற மெய்ப்பாடுகளுடனேயும்; நிலையும் படிதமும் நீங்கா மரபின் - நின்றாடலும் வீழ்ந்தாடலுமாகிய அவரவரை நீங்காத மரபினொடும் பொருந்தி; பதினோராடலும் - இம்மடந்தை யாடா நின்ற இப்பதினொரு வகைக் கூத்துக்களையும்; பாட்டின் பகுதியும் - அக்கூத்துக்களுக்கியன்ற பண்களின் கூறுபாடுகளையும்; விதி மாண் கொள்கையின் விளங்கக் காணாய் - அக்கூத்துக்களுக்குக் கூத்தநூலிற் கூறப்பட்டுள்ள விதிகள் மாட்சிமைப்படுகின்ற கோட்பாட்டோடு விளங்கா நிற்றலையும் அன்புடையோய் நீ காணுதி மற்று இவள் தான் யார்? எனின்; இவள் யான் தாது அவிழ் பூம்பொழில் இருந்து கூறிய - இவள்தான் யான் நந்தம் வடசேடிக்கண் கள்ளவிழ் பூம்பொழிற் கண்ணேயிருந்து நினக்குக் கூறிய; மாதவி மரபின் மாதவி என - உருப்பசியாகிய மாதவியின் வழியிற் றோன்றிய மாதவி என்பாள் என்று; காதலிக்கு உரைத்து - அக்கூத்துக்களைக் கண்ணுற்றுக் கழிபேருவகையோடிருக்கும் தன் காதலிக்குக் கூறி; கண்டு மகிழ்வு எய்திய மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் - தானும் கண்டு மகிழ்ச்சியுற்ற மேம்பாடு தக்க சிறப்பினையுடைய அந்த விச்சாதரனும் அவனன்றியும் என்க.

(விளக்கம்) 64. அவரவர் என்றது, இறைவன் முதலியோரை. அவரவர் அணியுடன் என்றது, இறைவன் முதலியோர் கொடுகொட்டி முதலிய கூத்தை நிகழ்த்துங்கால் கொண்டிருந்த கோலத்தைக்கொண்டு என்றவாறு. இவற்றுள் இறைவன் கொடுகொட்டி யாடுங்காற் கொண்ட கோலத்தை உமையவள் ஒருபாலாக ஒருபால் இமையா நாட்டத்து இறைவன் ஆகி எனவரும் நச்சினார்க்கினியர் மேற்கோளானும் (கலி.கடவுள்.உரை) அப்பொழுது அணியும் கோலத்தை அடிகளாரே (கட்டுரை காதைக்கண். 1-10)

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை யுண்கட் டவளவாண் முகத்தி
கடையெயி றரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்
இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்
வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினு மிடக்கால்
தனிச்சிலம் பரற்றுந் தகைமையள்

என உமையவள் மேல்வைத்து அழகுற ஓதுமாற்றானும் அறிக. இங்ஙனமே ஏனையோர் கோலங்களையும் வந்துழிக் கண்டுகொள்க.

அணி-ஆடுங் காலத்துத் தோன்றும் சுவையுடைய அழகு எனினுமாம். கொள்கை - திரிபுரமெரிதல் வேண்டும் என்பது முதலியன.

65. நிலை - நின்றாடல். படிதம் - வீழ்ந்தாடல்; படிந்தாடல். இவற்றுள் ஒன்றாதல் நீங்காத மரபின் என்றவாறு. 17. விதி - கூத்த நூலிலக்கண முறை. இவளது ஆட்டத்தின்கண் விளங்குதலைக் காண்க என்றவாறு. 70. கண்டு மகிழ்வெய்தி என்றது, காதலிக்குக் காட்டித் தானும் கண்டு மகிழ்வெய்தி என்பது பட நின்றது.

72 - 75 : அந்தரத்து...........இருந்தோனுவப்ப

(இதன் பொருள்) அந்தரத்து உள்ளோர் அறியா மரபின் - வானவர்தாமும் மாந்தர் தம்மைக் காண மாட்டாத முறைமையினாலே; வந்து காண்குறூஉம் - மண்ணுலகிலிழிந்துவந்து காண்டற்குரிய சிறப்பமைந்த; வானவன் விழவும் - இந்திரவிழவும்; ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள - மாதவியாடிய பதினொரு வகைக் கூத்தும் அவ்வாடல்களுக்கமைந்த பல்வேறு வகைக் கோலங்களும்; அணியும் - அவற்றிற்பிறந்த அழகும் முடிதலாலே; ஊடலோடு இருந்த கோவலன் உவப்ப - அவற்றை மேலும் தொடராமல் முடித்து விட்டாள் என்பதனால் சிறிது ஊடினான் போல வாய்வாளாதிருந்த கோவலன் உவக்கும்படி என்க.

(விளக்கம்) 72. அந்தரத்துள்ளோர் - ஏனைய விச்சாதரர் எனினுமாம். வானவர் உருவம் மாந்தர்க்குப் புலப்படாமையினால், அறியா மரபின் வந்து என்றார். இனி, தமதுருவம் ஒளிப்பிழம்பாகலின் அதனை மறைத்து அவர் காணாத அருவுடம்போடு வந்து எனினுமாம்.

ஊடற் கோல மோடிருந்தான் என்றதற்குப் பழையவுரையிற் கூறும் விளக்கங்கள், மாதவி கோவலன் இருவருடைய காதலுக்கும் இழுக்குத் தருவனவாகும். என்னை? திருநாள் முடிதலான் வந்த வெறுப்பு மாதவியோடு ஊடியிருத்தற்கு ஏதுவாகாமை யுணர்க. மேலும் ஆடலிற் காலநீட்டித்தலால் ஊடியிருந்தான் எனின் கலையின் அழகுணராப் பேதையாவான் ஆதலானும், இவளைப் பிறர் பார்த்தலின் வந்த வெறுப்பெனின் அவள் அன்புடைமையில் குறைகண்டவனாவான் இதுவும் ஊடற்கு நிமித்தம் அன்று. பிறர்க்கு இவ்வாறாமென்றூடினனாயின் ஆண்மையிற் குறையுடையன் ஆவன் எனவே அவையெல்லாம் போலி.

அவன் ஊடற்குக் காரணம் தான்இனிது சுவைத்திருந்த ஆடல் முதலியவற்றை அவள் முடித்தமையேயாம். வாய்மையில் இஃதூடலன்று; அவளது கலைச்சிறப்பைப் பாராட்டுமோர் உபாயமே ஆகும் இவ்வூடல். என்னை? இத்துணைப் பேரின்பத்தை இடையறுத்தலால் ஊடவே இவன் தன்னாடலைப் பெரிதும் சுவைக்கின்றனன் என மாதவி மகிழ்வள் ஆதலின் என்க. இஃதுண்மையான ஊடலன்றென் றறிவுறுத்தற்கே அடிகளார் ஊடலோடிருந்தானென் றொழியாது ஊடற் கோலமோடிருந்த என்று நுண்ணிதின் ஓதினர் என்றுணர்க. இனி, இவ்வூடல் தீர்த்தற்கு மாதவி தன்னைக்கூடி முயங்குதலே செய்யற்பாலது. ஆகவே கூட்டத்தை விரும்பும் தனது கருத்துக் குறிப்பாகப் புலப்பட இவ்வூடற் கோலத்தைக் கோவலன் மேற்கொண்டான் எனவும் அறிக.

மாதவியின் கூடற்கோலம்

76-79: பத்துத் துவரினும் ............. ஆட்டி

(இதன் பொருள்) பத்துத் துவரினும் - பத்துவகைப்பட்ட துவரினானும்; ஐந்து விரையினும் - ஐந்துவகைப்பட்ட விரையினானும்; முப்பத்திருவகை ஓமாலிகையினும் - முப்பத்திரண்டுவகைப்பட்ட ஓமாலிகையானும்; ஊறின நன்னீர் - ஊறிக் காயவைத்த நல்ல நீராலே; வாசநெய் உரைத்த நாறு இருங்கூந்தல் - மணநெய் நீவிய மணங் கமழுகின்ற கரிய கூந்தலை; நலம் பெற ஆட்டி - நிறந்திகழும்படி ஆட்டி; என்க.

(விளக்கம்) 76. துவர் பத்தாவன: பூவந்தி திரிபலை புணர் கருங்காலி நாவலொடு நாற்பால் மரமே, எனப்படுவன.

77. முப்பத்திருவகை ஓமாலிகையாவன : இலவங்கம் பச்சிலை கச்சோல மேலம், குலவிய நாகணங் கோட்டம் - நிலவிய நாகமதா வரிசிதக்கோல நன்னாரி வேகமில் வெண்கொட்ட மேவுசீர் - போகாத, கத்தூரி வேரி யிலாமிச்சங் கண்டில்வெண்ணெய், ஒத்தகடு நெல்லி உயர்தான்றி - துத்தமொடு, வண்ணக்கச் சோல மரேணுக மாஞ்சியுடன், எண்ணுஞ் சயிலேக மின்புழுகு - கண்ணுநறும், புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம், பின்னு தமாலம் பெருவகுளம் - பன்னும், பதுமுக நுண்ணேலம் பைங்கொடுவேரி கதிர்நகையா யோமா லிகை என்னும் இவை.

இதுவுமது

80-90: புகையில் ............. அணிந்து

(இதன் பொருள்) புகையின் புலர்த்திய பூ மெல் கூந்தலை - பின்னர் அகிற்புகையூட்டுதலாலே ஈரம் புலர்த்தப்பட்ட பொலிவினை யுடைய மெல்லிய அக் கூந்தலை; வகை தொறும் மான்மதச் சேறு ஊட்டி - ஐந்துவகையாக வகுத்து ஒவ்வொரு வகுப்பினும் மான்மதமாகிய கொழுவிய குழம்பையும் ஊட்டி; அலத்தகம் ஊட்டிய அம்செஞ்சீறடி நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇ - செம்பஞ் செழுதிய அழகிய சிவந்த சீறடிகளின் அழகிற்குத் தகுந்த மெல்லிய விரலிடத்தே அழகிய அணிகலன்களைச் செறித்து; காலுக்கு பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் அமைவுற அணிந்து - கால்களுக்குப் பாதசாலமும் சிலம்பும் பாடகமும் சதங்கையும் காற்சரியும் என்னும் இவ்வணிகலன்களைப் பொருத்த முறும்படி அணிந்து; குறங்குசெறி திரள்குறங்கினில் செறித்து - குறங்கு செறி என்னும் அணிகலனைத் திரண்ட தொடைகளிற் செறித்து; பிறங்கிய முத்து முப்பத்திருகாழ் - பரிய முத்துக் கோவைகள் முப்பத்திரண்டாற் செய்த விரிசிகையென்னும் மேகலையணியை; நிறம் கிளர் பூந்துகில் நீர்மையின் அரை உடீஇ - அவற்றின் நிறம் விளங்குதற்குக் காரணமான அழகிய நீலச் சாதருடையின் மேல் இடையின்கண் பண்புற உடுத்து; காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து - கண்டாரைக் காமுறுத்தும் மாணிக்க வளையுடன் நீங்காமல் பொற்சங்கிலியாலே பிணிக்கப்பட்ட முத்தவளையலைத் தோளுக்கு அணிந்து; என்க.

(விளக்கம்) 80. புகை - அகிற்புகை. பூ - பொலிவு. 81. வகை - வகுப்பு. அஃதாவது ஐம்பாலாக வகுக்கப்படுதல். அவையாவன: முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்பன. மான்மதச் சேறு. கத்தூரிக்குழம்பு; சவாதுமாம். 82. அலத்தகம் - செம்பஞ்சிக் குழம்பு. 83. விரல்நல்லணி - மகரவாய் மோதிரம், பீலி, கான் மோதிரம் முதலியன. 84. பரியகம் என்பது பொன்னிதழ் பொதிந்த பன்னிற மணிவடம், பின்னிய தொடரிற் பெருவிரள் மோதிரம் தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின் புறவாய் சூழ்ந்துபுணர வைப்பதுவே எனவும், என்னை? அவ்வாய் மகரத் தணிகிளர் மோதிரம் பைவாய்ப் பசும்பொற் பரியக நூபுரம் மொய்ம்மணி நாவின் முல்லையங் கிண்கிணி கௌவிய வேனவும் காலுக்கணிந்தாள் எனவும், வரும் மேற்கோள்களானும் உணர்க. 86. குறங்கு - தொடை. அதன் பாற் செறிக்கப்படும் அணிகலன் குறங்குசெறி எனப்படும். இதனை, குறங்கு செறியொடு கொய்யலங்காரம் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇப் பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ் அணிந்த தமைவர வல்குற் கணிந்தாள் எனவரும் மேற்கோளானும் உணர்க. 87 -8. பிறங்கிய முத்து முப்பத் திருகாழ் ......... அரை உடீஇ என மாறுக. 89. காமம் - காமர் என ஈறுதிரிந்து நின்றது. தூமணி - வெண்முத்து. கண்டிகை - முத்தவளை. இதனை, ஆய்மணி கட்டியமைந்த இலைச் செய்கைக் காமர் கண்டிகை வேய்மருள் மென்றோள் விளங்கவணிந்தாள் என்னும் மேற்கோளானும் உணர்க.

இதுவுமது

91-100 : மத்தக ................. அணிந்து

(இதன் பொருள்) மத்தக மணியொடு வயிரங் கட்டிய சித்திரச் சூடகம் - முகப்பிற் கட்டிய மாணிக்கத்தோடே பத்திகளில் வயிரங்கள் அழுத்தப்பட்ட சித்திரத் தொழிலையுடைய சூடகமும்; செம்பொன் கைவளை - சிவந்த பொன்னாலியன்ற கைவளையலும்; பரியகம் வால்வளை பவழப் பல்வளை அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து - ஒன்பான்மணிகளும் பதிக்கப்பட்ட பரியகம் என்னும் மணிவளையலும் சங்கவளையலும் பல்வேறுவகைப்பட்ட பவழ வளையல்களும் அழகிய மயிரையுடைய முன்கைக்குப் பொருத்தமுற அணிந்து; வாளைப்பகுவாய் வணக்குறு மோதிரம் - வாளைமீனினது அங்காந்த வாயைப் போன்று நெளித்தல் செய்த நெளி என்னும் மோதிரமும்; கேள்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் - ஒளி மிகுந்த கதிர்களை வீசுகின்ற சிவந்த மாணிக்கப் பீடம் என்னும் மோதிரமும்; வாங்குவில் வயிரத்துத் தாள்செறி காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து - பக்கத்தே வளைந்து சுருள்கின்ற ஒளியையுடைய வயிரஞ்சூழ்ந்த மரகதக்கடை செறி எனப்படும் தாள் செறியும் ஆகிய இவற்றையெல்லாம் காந்தண் மலர் போன்ற கையினது மெல்லிய விரல்கள் மறையும்படி அணிந்து; அம் கழுத்து - அழகிய கழுத்தின் கண்; சங்கிலி நுண்தொடர் பூண் ஞாண் - வீரசங்கிலியும் நேர்ஞ்சங்கிலியும் பூட்டப்படும் பொன்ஞாணும் என்னும் இவற்றோடு; புனைவினை - கையாற் புனையப்பட்ட தொழில்களையுடைய; சவடி சரப்பளி முதலாயுள்ள; அங்கழுத்து ஆரமொடு அணிந்து - உட்கழுத்து முத்தாரங்களோடு ஒருசேர வணிந்து என்க.

(விளக்கம்) 91. மத்தகம் - தலை. ஈண்டு முகப்பு என்க. மணி - மாணிக்கம். 92-93. பரியகம் - சரியுமாம். வால்வளை என்றதனாற் சங்குவளையல் என்பதாயிற்று. வெள்ளிவளை என்பாருமுளர். பவழத்தாற் பல்வேறு சித்திரத் தொழிலமையச் செய்யப்பட்ட பல வளையல்கள் என்க. இனி, இவற்றிற்கு புரைதபு சித்திரப் பொன்வளை போக்கில் எரியவிர் பொன்மணி யெல்லென் கடகம் பரியகம் வால்வளை பாத்தில் பவழம் அரிமயிர் முன்கைக் கமைய அணிந்தாள் என்னும் மேற்கோள் காட்டப்பட்டது. அரியகை முன்கை என்பதும் பாடம். அரிமயிர் - அழகிய மயிர். 95. வாளை மீனினது பிளந்த வாய்போல் நெளித்த நெளி என்னும் மோதிரம் என்க. இஃது இக்காலத்தும் உளது. வணக்குறுதல் - நெளிக்கப்படுதல். வணங்குதலுறும் என்னும் அடியார்க்கு நல்லார் இதனை உவம உருபின் பொருட்டாய்க் கொண்ட படியாம்.

96. கேழ்கிளர் என்ற பின்னும் அக்கேழ் செங்கேழ் எனற்கு மீண்டு மோதியவாறு. 97. வாங்குவில் - வளைத்துக்கொள்ளும் ஒளி. தாள் செறி - பெயர். 99. நுண்தொடர் - நுண்ணிய சங்கிலி. நேர்ஞ் சங்கிலி என்புழியும் நேர்மை - நுண்மையாம். அங்கழுத்தினும் அகவயினும் என்க. கழுத்து அகவயின் என்றது உட்கழுத்து என்றிக்காலத்தார் வழங்குமிடத்தை.

இதுவுமது

101-108 : கயிற்கடை ............ அணிந்து

(இதன் பொருள்) கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி செயத்தகு கோவையில் சிறுபுறம் மறைத்து அங்கு - கோக்குவாயின்கண் தொடக்கித் தொங்கவிடப்பட்ட முத்தினால் இயற்றத்தகுந்த கோவையாகிய பின்றாலியாலே பிடரை மறைத்து; இந்திர நீலத்து இடை இடை திரண்ட சந்திரபாணி தகை பெறு கடிப்பிணை - முகப்பிற் கட்டின இந்திர நீலத் திடையிடையே பயிலக்கட்டின சந்திரபாணி என்னும் வயிரங்களாலே அழகு பெற்ற நீலக்குதம்பையை; அங்காது அகவயின் அழகுற அணிந்து - வடிந்த காதனிடத்தே அழகுமிகும்படி அணிந்து; தெய்வவுத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி - சீதேவியார் என்னும் அணிகலத்தோடு வலம்புரிச் சங்கும் பூரப்பாளையும் வடபல்லி தென்பல்லி என்னும் இவையும் தம்மில் தொடர்ந்து ஒன்றான தலைக்கோலத்தை; மையீர் ஓதிக்கு மாண்புற அணிந்து - கரிய பெரிய கூந்தலுக்கு அழகுற அணிந்து என்க.

(விளக்கம்) 101. கயிற்கடை - கோக்குவாய்; கொக்கி என இக் காலத்தே வழங்குவதுமது. கொக்கிவாய் என்றும் பழையவுரையிற் பாடவேற்றுமை யுளது. ஒரோவழி அவ்வுரையாசிரியர் காலத்து அங்ஙனம் வழங்கிற்றுப் போலும். ஒழுகுதல் - தொங்குதல். தூக்கமாகச் செய்யப்பட்ட பின்றாலி என்பர் அடியார்க்குநல்லார். அஃதாவது தொங்கலாகச் செய்யப்பட்ட பிடரணியாகிய தாலி என்றவாறு. ஒழுகிய கோவை என இயையும். சிறுபுறம் - பிடர். சங்கிலி நுண்டொடர் பூண்ஞாண் புனைவினைத் தொங்கல் அருத்தித் திருந்துங்கயிலணி, தண்கடன் முத்தின் றகையொரு காழ் எனக்கண்ட பிறவுங் கழுத்துக் கணிந்தாள் எனவரும் மேற்கோளில் தொங்கல் எனவே கூறுதலும் காண்க. 103-104. திரண்ட சந்திரபாணி என்புழிச் சந்திரபாணி என்பது வயிரத்தில் ஒருவகை என்க. 104. கடிப்பு இணை-குதம்பை இணை. நூலவ ராய்ந்து நுவலருங் கைவினைக் கோலங்குயின்ற குணஞ்செய் கடிப்பிணை, மேல ராயினும் மெச்சும் விறலொடு காலமை காதிற் கவின்பெற வணிந்தாள் என்பது மேற்கோள். 106. தெய்வவுத்தி - சீதேவியார் என்னும் ஒருவகைத் தலைக்கோலம். இங்ஙனமே வலம்புரி பூரப்பாளை (தொய்யகம்) தென்பல்லி வடபல்லி (புல்லகம்) என்பனவும் தலைக்கோல அணிகள். கேழ்கிளர் தொய்யகம் வாண்முகப் புல்லகம் சூளாமணியொடு பொன்னரிமாலையும் தாழ்தரு கோதையும் தாங்கி முடிமிசை யாழின் கிளவி அரம்பைய ரொத்தாள் என்பது மேற்கோள்.

இனி அடிகளார் 76 ஆம் அடிமுதலாக 108 ஆம் அடிகாறும் அவர்தம் காலத்து மகளிர் நீராடிக் கோலங் கொள்ளுதற்குரிய அணிகளைத் தமது ஒப்பற்ற சொற்கோவையிலுருவாக்கித் தருதல் அக்காலத்து நந்தமிழகமிருந்த நாகரிகத் தன்மைக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகத் திகழ்வதாம். ஈண்டு அடிகளார் கூறிய சொல்லையும் பொருளையும் பொன்னேபோற் போற்றி அவற்றைச் செய்யுள் வடிவில் தந்த புலவர் பெயரும் நூற்பெயரும் தெரிந்திலவாயினும் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகத் தந்திருக்கின்ற அச்செய்யுளும் புதை பொருள் ஆராய்ச்சி நிகழும் இக்காலத்தே போற்றி வைத்துக் கோடற்பாலனவே என்பது பற்றி அவற்றையும் எழுதலாயிற்று.

இனி, இவற்றை ஊடற் கோலமோ டிருந்தோன் உவப்ப ஆட்டி ஊட்டிச் செறீஇ அணிந்து செறித்து உடீஇத் தோளுக்கணிந்து அமை உற அணிந்து கரப்ப அணிந்து ஆரமோடணிந்து சிறுபுற மறைத்து அழகுற அணிந்து மாண்புற அணிந்து என இயைக்க.

மாதவியும் கோவலனும் கூடியும் ஊடியும் உவந்திருத்தல்

109-110 : கூடலும் ................ இருந்தோள்

(இதன் பொருள்) கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து - இவ்வாறு இனிதின் கோலங்கொண்டு கூடலையும் பின்னர்ச் செவ்வியறிந்து ஊடலையும் ஊடற் கோலத்தோடிருந்த அக்கோவலனுக்கு அளித்து; பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள் - படுக்கை அமைந்த கூடும்பள்ளியின் கண்ணே மகிழ்ந்திருந்தவள் என்க.

(விளக்கம்) (75) ஊடற் கோலத்து இருந்தோன் உவப்பக் (106) கூடலையும் பின்னர் ஊடலையும் அவற்களித்து என்பதுபடக் கோவலன் என்பது சுட்டுமாத்திரையாய் நின்றது. கோவலன் ஊடியிருத்தலின் கூடலை முற்கூறல் வேண்டிற்று. துனியும் புலவியும் இல்லாயின் காமம், கனியும் கருக்காயு மற்று என்பதுபற்றி ஊடலும் அளித்தல் வேண்டிற்று. கூடியபின்னர் ஊடுதற்கு அவன்மாட்டுக் காரணம் இல்லையாகவும், காதல் கைம்மிகுதலால் நுண்ணியதொரு காரணமுளதாக வுட்கொண்டு அதனை அவன்மேலேற்றி அவள் ஊடுதல். இவ்வாறு ஊடுதலைத் திருக்குறளிற் புலவி நுணுக்கம் (132) என்னும் அதிகாரத்தான் உணர்க. மற்று அடியார்க்குநல்லார் எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப் பெண்மையும் நாணும் அழிந்துவந்து குறையுற்றுக் கூடுந்துணையும் நீயிர் பிரிவாற்றியிருந்தீர்; அன்பிலீர் என ஊடுவது என ஈண்டைக் கேற்ப நுண்ணிதின் விளக்கினர். எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப், பெண்ணின் மிக்கது பெண்ணலதில்லையே, எனவரும் சீவகசிந்தாமணிச் செய்யுள் (998) ஈண்டு நினையற்பாலது.

காதலி ஊடுவதே காதலனுக்குப் பேரின்பமாயிருத்தலால் அதனையும் அளித்தல் என்ற சொல்லால் குறித்தனர். என்னை? ஊடலுவகை எனத் திருவள்ளுவனார் குறியீடு செய்தலும் புலத்தலிற் புத்தேணாடுண்டோ என்பதும் காண்க.

இனி அடிகளார் மாதவி கூடற் கோலம் கோடலைப் பரக்கக்கூறினரேனும் மனையறம்படுத்த காதையிற் கூறியதினும் காட்டிற் சுருக்கமாக அவள் (ஈண்டு மாதவி) கூடிய கூட்டத்தை (ப்பற்றி விரித்துக் கற்பார்க்கும் காமவெறி யெழப் பாரித்துரையாமல்) கூடலும் ஊடலும் கோவலற்களித்து என ஒரே அடியிற் கூறியொழிந்த சான்றாண்மையை எத்துணைப் பாராட்டினும் தகும். கண்ணகியின் காதலனை மாதவி கைப்பற்றிக்கொண்டு செய்யுள் களியாட்டம் எல்லாம் கற்போர் நெஞ்சத்து அவள்பால் வெறுப்பையே உண்டாக்கும் என்பது கருதியே அடிகளார் இங்ஙனம் கூறியொழிந்தனர். என்னை! மற்று மாதவியோ ஏனைய பொதுமகளிரைப் போல்வாளல்லளே! ஒருதிறத்தால் அவள் கண்ணகியை ஒக்கும் கற்புடைத் தெய்வமே ஆவள் ஆகவே அவளைப் பொருட் பெண்டிர்க்குரிய கீழ்மை தோன்ற யாதும் கூறுதல் கூடாது. கூறின் ஓதுவார்க்கெல்லாம் அவள்பால் வெறுப்புணர்வே தோன்றுதல் ஒருதலையாம் என்று கருதியே அடிகளார் இவ்வாறு சுருக்கமாகக் கூறுவாராயினர். மற்று அங்ஙனமே கண்ணகியாரைப் பள்ளியறைக்கண் வானளாவப் புகழ்ந்து நலம் பாராட்டிய கோவலன் இந்த மாதவியைப் பற்றி யாண்டும் ஒரு புகழுரையேனும் கூறாதவண்ணம் அவன் பெருந்தகையையும் நுணுக்கமாகப் போற்றிச் செல்வதனையும் காண்கின்றோம். கோவலன் மாதவியை நலம் பாராட்டத் தொடங்கினால் அவன் கயமையே நம்மனோர்க்குப் புலப்படும் என்பதனை நுண்ணிதின் உணர்க.

மாதவி கடல்விளையாட்டைக் காண விரும்பிக் கோவலனுடன் போதல்

111 - 120 : உருகெழு ........... வையமேறி

(இதன் பொருள்) உவவுத் தலைவந்தென - இந்திரவிழாவிற்குக் கொடி எடுத்த நாள் முதலாக இருபத்தெட்டு நாளும் அவ்விழா நடந்த பின்னர்க் கொடியிறக்கி விழாவாற்றுப் படுத்த மறுநாள் உவாவந்தெய்தியதனாலே; உரு கெழு மூதூர் - பகைவர்க்கு அச்சத்தைப் பொருந்துவிக்கும் பழைய ஊராகிய அப்பூம்புகார் நகரத்தினின்றும்; பெருநீர் போகும் இரியல் மாக்களொடு - கடற்கரைக்கண் இடம் பிடித்தற்கு ஒருவரின் ஒருவர் முந்துற்று விரைந்து செல்கின்ற மாக்களோடு; மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டு காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி - இதழ் விரிகின்ற தாழை புன்னை முதலியவற்றையுடைய கழிக்கானல் பொருந்திய கடல் விளையாட்டைக் காண வேண்டும் என்னும் விருப்பத் தோடே கோவலன் உடன்பாட்டையும் வேண்டினளாக அவனும் அதற்குடம்பட்டமையாலே; பொய்கைத்தாமரைப் புள்வாய் புலம்ப-நீர்நிலைகளிலே தாமரைப் பூஞ்சேக்கையில் துயில்கின்ற பறவைகள் அச்சேக்கை நீங்குதலாற்றாமையான் வாய்விட்டுப் புலம்பவும்; வைகறை யாமம் வாரணம் காட்ட - இப்பொழுது வைகறைப் பொழுது என்பதனைக் கோழிச் சேவல்கள் தங்கூக்குரலாலே அறிவியா நிற்பவும்; வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய - அவ் வைகறையிற் செறிந்த இருளை வானத்தே தோன்றிய வெள்ளியாகிய விண்மீனொளி விலக்கவும் அக்காலத்தே; பேர் அணி அணிந்து வான வண்கையன் - மதாணி முதலிய பேரணிகலன்களை அணிந்துகொண்டு முகில் போலும் வண்மையுடைய கைகளையுடைய கோவலன்றானும்; அத்திரி ஏற - கோவேறு கழுதையின் மீதே ஏறாநிற்ப; தாரணி மார்பனொடு - மாலையணிந்த மார்பினையுடைய அக்காதலனோடு போதற்கு; மான் அமர் நோக்கியும் - மானினது நோக்கம் போன்ற நோக்கமுடைய அம்மாதவியும்; வையம் ஏறி - கொல்லாப்பண்டியில் ஏறி என்க.

(விளக்கம்) 111. 25 - அச்சம். நகரத்தின்கண் பன்னாள் நிகழ்ந்த (73) வானவன் விழவும் ஆடலும் அணியும் இழந்திருத்தலாலே அவ்வூர் உருகெழுமூதூர் ஆயிற்றெனினுமாம். உவவு - உவாநாள்; அஃதாவது நிறைமதிநாள். நிறைமதிநாள் கடலாடுதற் குரிய நாள் ஆதலின், 112. பெருநீர் போகும் இரியன் மாக்கள் என்றவாறு. இரியல் - விரைதல். 113. கானலையுடைய கடல் என்க. கானலிலிருந்து காண்டல் விருப்பொடு வேண்டி எனினுமாம். கடலில் மாக்கள் ஆடும் விளையாட்டுக் காண்டல் வேண்டி என்றவாறு. 144. வேண்டினளாக என்க. அதற்கிணங்க (119) வானவண்கையன் அத்திரி ஏற என ஒருசொல் வருவித்தோதுக.

இனி, ஈண்டு அடிகளார் மாதவியும் கோவலனும் கடல்விளையாட்டுக் காணப்புறப்படும் இக்காலம் அவர்கட்குப் போகூழ் உருத்து வந்தூட்டுங் காலமென்பதைக் குறிப்பாக அறிவுறுத்துவார் தமது சொல்லிலேயே தீயவாய்ப்புள் (தீநிமித்தம்) தோன்றச் செய்யுள் செய்வதனை நுண்ணிதின் உணர்க. என்னை? அவர்கள் 115. புள்வாய் புலம்பவும் 116. காட்டவும், 117. கடியவும் ஏறினர் என்பது காண்க. இவ்வாறு செய்யுள் செய்வது நல்லிசைப் புலவர் மரபு என்பது முன்னும் கூறினாம். 119. அத்திரி - கோவேறு கழுதை. இது குதிரை வகையினுள் ஒன்றென்பர். இதனை மன்னரும் ஊர்தியாகக் கொள்வர் என்பது கோவேறு கழுதை என்னும் அடையடுத்த அதன் பெயரே அறிவுறுத்தலுமறிக. வையம் - கூடாரப்பண்டி என்பாருமுளர்.

இதுவுமது

121-127 : கோடி ............... கழித்து

(இதன் பொருள்) கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடம் மலி மறுகில் - கோடி என்னும் இலக்கத்தைப் பலப்பலவாக அடுக்கிக் கூறுதற்கியன்ற வளவிய நிதிக்குவியலையுடைய மாடங்கள் மிகுந்த தெருக்களையும் அங்காடித் தெருக்களையும் உடைய; மங்கலத்தாசியர் - மங்கலநாணையுடைய பணிமகளிர் சிலர்; மலர் அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்த ஆங்கு - முன்னர் அந்தி மாலைப்பொழுதிலே மலர் அணிந்து ஏற்றி வைத்த நெய்விளக்குகளுடனே மாணிக்க விளக்குகளையும் கையிலெடுத்துப் போக வேறுசிலர் அவ்விடத்தே; அலர் கொடியறுகும் நெல்லும் வீசி - மலரையும் கொடிப்புல்லாகிய அறுகையும் நெல்லையும் சிந்திப்போக; தங்கலன் ஒலிப்ப இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும் - இவ்வாறு அம்மகளிர் தமது சிலம்பு முதலிய அணிகலன்கள் ஒலி செய்யும்படி அத்தெருக்களின் இருபக்கங்களினும் திரிந்து போதற்கிடனான; திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து - திருமகள் வீற்றிருத்தற்கு இடனான பட்டினப் பாக்கத்தை நேராகச் சென்று கடந்து என்க.

(விளக்கம்) (இந்திர - 50) பட்டினப்பாக்கத்தில் அமைந்த ஆடற் கூத்தியர் இருக்கையினின்றும் மாதவியும் கோவலனும் கடற்கரை நோக்கிப் போகின்றார் ஆகலின் அப்பாக்கத்திலேயே அமைந்த பெருங்குடி வாணிகர் மாடமறுகினும் அவர்தம் பீடிகைத் தெருவினும் புக்குப் போக வேண்டுதலின் அவற்றை முற்படக்கூறுவாராயினர். இவ்விரண்டு தெருக்களும் வளைவின்றி மருவூர்ப்பாக்கங்காறும் திசைமுகந்து நேரே கிடத்தல் தோன்றச் செவ்வனம் கழித்து என்றார். 127. செவ்வனம் நேராக. இதற்குப் பிறரெல்லாம் பொருந்தாவுரை கூறினர்.

121-2. இந்திர......காதைக்கண் கூறியதற்கு இஃது எதிர்நிரல் நிறையாகக் கூறப்படுதலறிக. அங்குப் பீடிகைத்தெருவும் மாடமறுகும் கூறிப் பின்னர் ஆடற்கூத்தியர் இருக்கை கூறப்பட்டது. ஆதலின் அவ்விடத்தினின்றுஞ் செல்வோர் மாடமறுகினும் பீடிகைத் தெருவினும் செல்லுவது இன்றியமையாமை காண்க. பெருங்குடி வாணிகர் மாடமாதலின் அம்மாடங்களை, 121. கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடம் என்றார். கோடி, எண்ணுவரம்பறியாக் கொழுநிதி என்றற்கு ஓரெண் குறித்தபடியாம். குப்பை-குவியல். இங்ஙனம் கொழுநிதி குவிந்து கிடத்தலின் இத்தெருக்களிரண்டனையும் ஒருசேரத் (127) திருமகளிருக்கை என்றார். இனி அங்குச் செல்லுங்கால் அவ்விரவின் முற்கூற்றில் மலர் அணிந்து ஏற்றிய நெய்விளக்கங்களையும் மணிவிளக்கங்களையும் சுமங்கலியராகிய பணிமகளிர் அகற்றி அவ்விடத்தே மலரும் பூவும் நெல்லும் தூவிச் செல்வோருடைய கலன்கள் ஒலிப்பனவாயின. ஏவற்சிலதியராகலின் மாடங்களினும் கடைகளினும் அங்குமிங்குச் சென்று மலர் முதலியன இடுவாராயினர் என்க. இதனால் இல்லறம் நிகழாத பண்டசாலைகளினும் அங்காடிகளினும் விளக்கேற்றி வைத்து வைகறைப் பொழுதில் அவ்விளக்கை அகற்றி மலரும் அறுகும் நெல்லும் இடும் வழக்கமுண்மையும் அங்ஙனம் செய்யும் மகளிர் (விதவைகள் அல்லாத) மங்கலமகளிராதல் வேண்டும் என்பதும் அறியற்பாலன.

இதுவுமது

128-133: மகரவாரி .............. மருங்குசென்றெய்தி

(இதன் பொருள்) மகர வாரி வளம் தந்து ஓங்கிய நகரவீதி நடுவண் போகி - கடலினது வளத்தைக் கொணர்தலாலே உயர்ச்சிபெற்ற தாழ்விலாச் செல்வர் வாழ்கின்ற நகரவீதியினூடே சென்று; கலம் தருதிருவின் புலம்பெயர் மாக்கள் வேலை வாலுகத்து - மரக்கலங்கள் தந்த செல்வங்களையுடைய தமது நாட்டைவிட்டு வந்துள்ள வேற்றுநாட்டு வணிகமாக்கள் கடற்கரையிடத்து மணன்மேடுகளிடத்தும்; விரிதிரைப் பரப்பின் - அலைவாய் மருங்கினும்; கூலம் மறுகில் - பல்வகைக் கூலங்களையும் குவித்துள்ள மறுகின் கண்ணும்; கொடி யெடுத்து நுவலும்-இன்ன சரக்கு ஈண்டுளதென்று அவற்றிற்கு அறிகுறியாகிய கொடிகளை உயர்த்துமாற்றால் அறிவித்தலையுடைய; மாலைச் சேரிமருங்கு சென்று எய்தி - ஒழுங்குபட்ட சேரிகளையும் கடந்துபோய் என்க.

(விளக்கம்) 128. மகரவாரி - கடல். அதன் வளம் - முத்தும் பவளமும் சங்கும் பிறவுமாம். கலந்தரு திரு - நீரின்வந்த நிமிர்பரி முதலியனவாகப் பலப்பலவாம். புலம் - நாடு. 131. வாலுகம் - மணன்மேடு. 132. கூலமறுகு - பல்வேறு கூலங்களையும் குவித்த மறுகு. இவையெல்லாம் மருவூர்ப்பாக்கத்துள்ளன என்பதை முன்னைக் காதையாலுணர்க. கொடியெடுத்து நுவலுதல், இன்ன இடத்து இன்ன சரக்குளது என்பதற்கு அறிகுறியாகிய கொடிகளை யுயர்த்துமாற்றால் அறிவித்தல். 133. மாலை - ஒழுங்கு.

இதுவுமது

134 - 150 : வண்ணமும் .......... கானல்

(இதன் பொருள்) வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும் - தொய்யில் முதலியன எழுதுதற்கியன்ற வண்ணக் குழம்புகளும் சந்தனமும் மலர்களும் பொற்சுண்ணமும் பண்ணிகார வகைகளும் என்னும் இவற்றை விற்போர் வைத்த விளக்குக்களும்; செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும் - சித்திரச் செய்தொழில் வல்ல பணித்தட்டார் பணி பண்ணுமிடங்களில் வைத்த விளக்குக்களும்; மோதகத்துக் காழியர் ஊழுறு விளக்கமும் - பிட்டு வாணிகர் நிரல்பட வைத்த விளக்குக்களும்; கார் அகல் கூவியர் குடக்கால் விளக்கமும் - கரிய அகலையுடைய அப்பவாணிகர் குடம்போற் கடைந்த தண்டில் வைத்த விளக்குக்களும்; நொடை நவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும் - பல பண்டங்களையும் விலைகூறி விற்கின்ற மிலேச்சமகளிர் தம் கடைகளில் வைத்த விளக்குக்களும்; இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும் - இடையிடையே மீன்விற்போர் வைத்த விளக்குக்களும்; இலங்குநீர் வரைப்பில் கலங்கரை விளக்கமும் - மொழிமாறுபட்ட வேற்று நாட்டிலிருந்து வருகின்ற மரக்கலங்கள் துறையறியாது ஓடுகின்றவற்றை இது துறையென்று அறிவித்து அழைத்தற்கிட்ட விளக்கும்; விலங்குவலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும் - மீன்களைக் குறுக்கிட்டு மறித்துப் படுக்கும் வலையையுடைய நெய்தனிலமாக்கள் தம் திமிலில் வைத்த விளக்குக்களும்; மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும் - மொழி வேறுபட்ட நாட்டினின்றும் வந்துள்ள மாக்கள் வைத்த அவியா விளக்குக்களும்; கழிபெரும் பண்டங் காவலர் விளக்கமும் - மிகப்பெரிய பண்டங்களையுடைய பண்டசாலைகளைக் காக்கும் காவலர் இட்ட விளக்குக்களும்; எண்ணுவரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி - ஆகிய எண்ணி இத்துணை என்று அறிதற்கியலாத இவ் விளக்குக்களெல்லாம் ஒருங்கே சேர்ந்து ஒளிபரப்புதலாலே; இடிக்கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில் கடிப்பகை காணும் காட்சியது ஆகிய - இடிக்கப்பட்ட மாவைக் கலந்து போகட்டாற் போன்ற மிகவும் நுண்ணிய மணற்பரப்பின்மீதே விழுந்ததொரு வெண்சிறு கடுகையும் காணத்தகுந்த காட்சியை யுடையதாகிய; வீங்கு நீர்ப்பரப்பின் விரை மலர்த் தாமரை மருதவேலியின் மாண்புறத் தோன்றும் - பெருகும் நீர்ப்பரப்பின்கண்ணே மணமுடைய மலராகிய தாமரை பூத்துத் திகழ்கின்ற மருதநிலப் பரப்பினும் அழகுறத் தோன்றா நின்ற; கைதை வேலி நெய்தலங் கானல் - தாழையை வேலியாகவுடைய நெய்தல் நிலத்துக் கழிக்கானலிடத்தே என்க.

(விளக்கம்) 134. சுண்ணம் - பொற்சுண்ணம் முதலியன. 135. பண்ணியம். பண்ணிகாரம் (தின்பண்டம்). பகர்தல் - விற்றல். 138. குடக்கால் - குடம்போன்று கடைந்த தண்டு. நொடை நவிலுதல் - விலை கூறுதல். கேட்போர் இல்வழியும் இப்பண்டம் இன்னவிலை கொண்மின்! என்று கூறுபவர் என்பதுதோன்ற நொடைநவில் மகடூஉ என்றார். மகடூஉ - மகளிர். 141. இலங்கு நீர்ப்பரப்பு - கடல். 142. விலங்குதல் - குறுக்கிடுதல். திமில் - தோணி வகையினுள் ஒன்று. 143. தேத்தோர் - தேயத்தோர். 146. இடி - நென் முதலியவற்றை இடித்த மா. மணலுக்குவமை. மணற்குவமையாதலின் (அடியார்க்) தெள்ளாத மா என்றார். ஈரயிர் மணலுமாம். ஈரயிர் என்புழி இருமை பெருமைப்பண்பும் குறிப்பதனால் அடியார்க்குநல்லார் பெரிதும் நுண்ணிய மணல் என்பார், மிகவும் நுண்ணிய மணல் என்றார்.

148-149. ஈண்டுக் கூறப்பட்ட விளக்குகள் தாமரை மலர்கள் போற்றோன்றுதலின் அந் நெய்தற்பரப்பு மருதப்பரப்புப் போன்றது என உவமையும் பொருளும் காண்க.

கடற்கரைக் கம்பலை

151-165: பொய்தல் ....... ஒலிப்ப

(இதன் பொருள்) பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி - தன் விளையாட்டுமகளிர் கூட்டத்தோடு கூடி மாதவியானவள் இக் காட்சிகளைக் கண்டு; நிரை நிரை எடுத்த புரைதீர் காட்சிய - வரிசை வரிசையாகக் குவிக்கப்பட்ட குற்றமற்ற காட்சியையுடைய; மலை பல் தாரமும் கடல் பல் தாரமும் வளம் தலைமயங்கிய துளங்கு கல இருக்கை - மலை தருகின்ற பல்வேறு பண்டங்களும் கடல் தருகின்ற பல்வேறு பண்டங்களும் ஆகிய வளங்கள் இடந்தோறும் கூடிக் கிடக்கின்ற அசைகின்ற மரக்கலங்களின் இருப்பிடமாகிய கடற் துறைமுகங்களிடமெங்கும்; அரசு இளங்குமரரும் உரிமைச் சுற்றமும் பரதகுமரரும் பல்வேறு ஆயமும் - மன்னர்மக்களாகிய இளங்காளையரும் அவருடைய உரிமைச் சுற்றமாகிய மகளிர் குழுவும் வணிகர் மக்களாகிய இளங்காளையரும் அவருடைய பரத்தை மகளிரும் பணித் தோழியருமாகிய பல்வேறு மகளிர் குழுக்களும்; ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் தோடுகொள் மருங்கில் - ஆடல் மகளிரும் பாடன் மகளிரும் குழூஉக் கொண்டிருக்கின்ற இடங்கள்தோறும்; சூழ்தரல் எழினியும் - சூழவளைத்துக்கட்டிய திரைச்சீலைக் கூடாரங்களும் ஆகிய இவையெல்லாம்; விண்பொரு பெரும் புகழ்க் கரிகால் வளவன்-விசும்பென விரிந்த பெரும்புகழையுடைய கரிகாலன்; தண்பதம் கொள் தலைநாள் போல-காவிரியின்கண் புதுப்புனல் வந்துழி நீராட்டுவிழ வயர்கின்ற முதனாட்போல; வேறு வேறு கோலத்து வேறு வேறு கம்பலை - வேறுவேறு வகைப்பட்ட கோலங்களையுடைய வெவ்வேறு வகைப்பட்ட ஆரவாரங்களும்; சாறு அயர்களத்து - இத்திருவிழா விறுதிபெறும் இவ்விடத்தே; வீறுபெறத் தோன்றி - பெரிதும் சிறப்புற்றுத் தோன்றாநிற்ப; கடல்கரை மெலிக்கும் காவிரிப் பேர்யாற்று இடம்கெட ஈண்டிய - அவையே அன்றிக் கடலினது கரையைக் கரைத்து மெலியச்செய்கின்ற காவிரி என்னும் பேரியாறு கடலொடு கலக்கும் புகார் முகமெங்கும் வறிது இடமின்றாக ஒருசேர வந்து நெருங்கிய; நால்வகை வருணத்து - பால்வேறு தெரிந்த அந்தணர் முதலிய நால்வேறு வகைப்பட்ட வகுப்பினருடைய; அடங்காக் கம்பலை - அடக்க வொண்ணாத ஆரவாரங்கள் எல்லாம்; உடங்கு இயைந்து ஒலிப்ப - ஒருங்கே கூடிப் பேராரவாரமாய் ஒலியா நிற்ப என்க.

(விளக்கம்) 151. பொய்தலாயம் - விளையாட்டு மகளிர் குழு. பூங்கொடி - மாதவி. 152. புரை - குற்றம். 153. பல்தாரம், என்னுந்தொடர்நிலைமொழியீறு ஆய்தமாய்த் திரிந்து பஃறாரம் என்றாயிற்று; புணர்ச்சி விகாரம். இதனை, தகரம் வரும்வழி ஆய்தம் நிலையலும், புகரின் றென்மனார் புலமை யோரே எனவரும் தொல்காப்பியத்தான் (எழுத்து - புள்ளிமயங் - 74) அறிக. தாரம் - பல்வேறு பண்டம். பல்தாரம் என்புழி பல் என்னும் அடைமொழி மிகப்பல என்பதுகுறித்து நின்றது. 134. துளங்குதல் - அசைதல். கலவிருக்கை - மரக்கலம் நிற்குமிடம். அஃதாவது துறைமுகம். ஆகுபெயரால் துறைமுகத்துச் சோலையிடத்தைக் குறித்து நின்றது. 156. அரசகுமரர்க்கு உரிமைச் சுற்றம் கூறியாங்குப் பரதர் உரிமைச்சுற்றம் நீராடல் மரபன்மையிற் கூறாராயினர் என்பர் (அடியார்க்) ஆகவே, பரதகுமரர் ஆயமகளிருடன் சென்றனர் என்பது தோன்ற ஆயமகளிரும் என்றார். அவராவார் பரத்தை மகளிரும் அவர் தம் தோழிமாரும் பணிமகளிரும் என்க. இப்பரதகுமரரையே முன்னைக் காதையில் அடிகளார் நகையாடாயத்து நன்மொழி திளைத்து நகரப் பரத்தரொடு கோவலன் மறுகிற் றிரிந்தான் என்றோதினர். ஈண்டும் கோவலன் ஆயமகளிரோடே வருதலுமுணர்க. ஆயமும் பரத்தையரும் தோழியரும் குற்றேவன் மகளிரும் எனப் பலவகைப்படுதலின் பல்வேறாயமும் என்றார். 157. ஆடுகளமகளிர் - களத்தில் ஆடும் விறலிபர். பாடுகளமகளிர் - களத்தால் பாடும் பாடினமார். களம் - மிடறு. 158. தோடு -தொகுதி. 155-58 அரசிளங்குமரரும் உரிமைச் சுற்றமும் குமரரும் ஆயமும் ஆடுகள மகளிரும் தனித்தனியே தோடுகொண்டுள்ள இடங்களில் சூழ்தரு எழினி என்க. எழினி - திரைச்சீலையால் மறைக்கப்பட்ட கூடாரங்கள். அரசிளங்குமரர் முதலியோர் வேறு வேறு கோலமுடையராக - இவர்தம் குழுவினின்றும் எழும் கம்பலையும் வேறு வேறாக வீறுபெறத் தோன்றா நிற்ப. இத் தோற்றத்திற்குக் கரிகாலன் காவிரிப் புதுப்புனலாடும் நீராட்டுவிழவின் தோற்றம் உவமை என்க.

159. விண்பொரு பெரும்புகழ் - விசும்பை ஒத்த பெரும்புகழ்; (விரிந்த விசும்பு போல விரிந்த பெரும்புகழ்) இதற்கு இங்ஙனம் பொருள் காணமாட்டாது பிறரெல்லாம் பொருந்தா வுரை கூறினர். சாறயர் களம் - கடலாட்டுவிழா நிகழ்த்தும் இந்நெய்தற் பரப்பு. 160. தலை நாட்போல வீறுபெறத் தோன்றி என இயையும். சாறு அயர் களத்து என்பதனை உவமை யென்பாருமுளர். தண்பதம் கொள்ளும் - புதுப் புனலாடும்; வேறு வேறு கோலத்தோடு செய்யும் வேறு வேறு கம்பலை வீறுபெறத் தோன்றாநிற்ப அவை நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை யுடங்கியைந்து ஒலிப்ப என இயையும்.

மாதவி கோவலனொடு கடற்கரையில் வீற்றிருத்தல்

166-174 : கடற் புலவு ............. மாதவிதானென்

(இதன் பொருள்) கடல் புலவு கடிந்த மடல் பூ தாழை - கடலினது புலால் நாற்றத்தையும் மாற்றி நறுமணம் பரப்புகின்ற மடல்கள் விரிகின்ற மலரையுடைய தாழைகளாலே; சிறை செய் வேலி அகவயின் - சிறையாகச் சூழப்பட்ட வேலியை யுடையதொரு தனியிடத்தினடுவே; ஆங்கு ஓர் புன்னை நீழல் புதுமணல் பரப்பில் - அவ்விடத்தே நிற்குமொரு புன்னையின் நீழலில் புதுமை செய்யப்பட்ட மணற் பரப்பிலே; ஓவிய எழினி சூழ உடன் போக்கி - சித்திரம் வரையப்பட்ட திரையைச் சுற்றி வளைத்து; விதானித்துப் படுத்த வெள்கால் அமளிமிசை - மேற்கட்டுங் கட்டியிடப்பட்ட யானைக் கோட்டாலியன்ற வெள்ளிய கால்களையுடைய கட்டிலின் மேலே; வருந்துபு நின்ற வசந்த மாலை கை-மெல்லிடை வருந்தப் பக்கலிலே நின்ற வசந்த மாலை என்னும் தோழி தன் கையிலேந்திய; திருந்து கோல் நல்யாழ் செவ்வனம் வாங்கி - திருத்தமுற்ற நரம்புகளையுடைய ஈரேழ் கோவை என்னும் இசை நலமுடைய யாழினை வாங்கு முறைமையோடு வாங்கி; கோவலன் தன்னொடு - ஆங்கு முன்னரே அமர்ந்திருந்த கோவலனோடு; கொள்கையின் இருந்தனள் - தானும் ஒரு கோட்பாட்டுடனே இனிதின் வீற்றிருந்தனள்; மாமலர் நெடுங்கண் மாதவி - அவள் யாரெனின் பெரிய மலர் போலும் கண்ணையுடையாள் என்று முன் கூறப்பட்ட அம் மாதவி என்னும் நாடகக் கணிகை என்றவாறு.

(விளக்கம்) 966. கடற்புலவு கடிந்த பூந்தாழை எனவே புலால் நாற்றத்தையும் மாற்றும் மாண்புடைய நறுமணம் பரப்பும் மலரை யுடைய தாழை என்பதாயிற்று. புலவும் எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை தொக்கது. 167. சிறைசெய்தல் - தனிமைப் படுத்துதல். புதுமணற் பரப்பு என்றது முன்னரே பணிமாக்கள் பழமணன் மாற்றிப் புதுமணலாம்படி திருத்திய இடம் என்பது தோன்ற நின்றது. 169. கொள்கை - குறிக்கோள். அஃதாவது அந்த அழகிய சூழ்நிலையினூடே தனது செல்வமாகிய இசைக்கலையின் இன்பத்தைத் தன் காதலனோடு கூட்டுண்ணவேண்டும் என்னும் குறிக்கோள். அதற்குக் குறிப்பாகக் கால்கோள் செய்தற்கே வசந்தமாலையின் கையிலிருந்த திருந்துகோல் நல்லியாழைச் செவ்வனம் வாங்கினள் என்க. செவ்வனம் வாங்கியென்றது யாழை வாங்குமுன் அதனைக் கைகுவித்து வணங்கி வாங்கி என்றவாறு. என்னை? கலைவாணர் தங்கள் கருவியைக் கைக்கொள்ளுங்கால் அதனைக் கடவுட்டன்மை யுடையதாகக் கருதித் தொழுது கைக்கொள்ளுதல் மரபு. அம்மரபு இற்றை நாளினும் அருகிக் காணப்படும்.

இனி, அரங்கேற்று காதையில் பூம்புகார்ப் பொற்றொடி மாதவி தன் வாக்கினால் ஆடரங்கின்மிசை வந்து பாடி ஆடியபொழுது அவள் தன் கண்வலைப்பட்டு கோவலன் மாலை வாங்கி அவள் மனைபுகுந்தான் என்பார் அடிகளார், அங்கும் அவளை மாமலர் நெடுங்கண் மாதவி என்றே அழைத்தனர். அக் கண்வலையறுத்துப் புறப்படும் இற்றை நாளினும் அவள் மாமலர்க்கண் மாதவியாகவே இருந்தாள் என்பார். மாமலர்க்கண் மாதவி என்றேகுறித்தார். இருந்தும் என்செய, இன்று அவள் ஊழ்வினை வந்துருத்து ஊட்டும் என்றறிவுறுத்தல் இதனாற் போந்த பயன். முன்னர்க்கூடிய நாளின் அந்திமாலையைச் சிறப்பித்து இறுதியில் வெண்பாப் பாடியவர் இற்றை நாள் பிரிவு நாளாகலின் வெங்கதிரோன் வருகையை விதந்து ஈண்டும் ஒரு வெண்பா ஓதியருள்கின்றார் என்றுணர்க.

இனி இக்காதையை,

வெள்ளிமால்வரைக்கண் சேடிக்கண் விருந்தாட்டயரும் விஞ்சை வீரன், இடனுங் காண்குதும்; அமைதியுங் காண்குதும்; ஆடலுங் காண்குதும்; வணங்குதும் யாம் எனக் காட்டிக் காண்போன் காணாய்! மாதவி யிவளென வுரைத்து மகிழ்வெய்திய அவ் விஞ்சையனன்றியும் அந்தரத்துள்ளோர் வந்து காண்குறூஉம் விழவும் ஆடலும் கோலமும் கடைக்கொள இருந்தோன் உவப்ப ஆட்டி ஊட்டிச் செறீஇ அணிந்து செறித்து உடீஇத் தோளுக்கணிந்து அமைவுற அணிந்து கரப்ப அணிந்து ஆரமோடணிந்து சிறுபுறம் மறைத்து அழகுற அணிந்து மாண்புற அணிந்து அளித்து இருந்தோள்; உவவு வந்தென வேண்டினளாகிப் புலம்பக் காட்டக் கடிய அணிந்து ஏற ஏறிச் செவ்வனங்கழிந்து நடுவட்போகி மருங்கு சென்றெய்திப் பொருந்தி வாங்கிக் கோவலன் றன்னொடும் மாதவி வெண்கால் அமளிமிசை யிருந்தனள் என வினை யியைபு செய்க.

வெண்பாவுரை

வேலை மடற்றாழை ............. வெங்கதிரோன் தேர்

(இதன் பொருள்) காமர் தெளிநிற வெம் கதிரோன் தேர் - அழகிய தெளிந்த நிறமுடைய வெவ்விய சுடர்களையுடைய ஞாயிற்றுத் தேவனுடைய ஒற்றை ஆழித் தேரானது; வேலைத் தாழை மடலுள் பொதிந்த வெள் தோட்டு மாலைத் துயின்ற மணி வண்டு - கடற்கரையிலுள்ள தாழையினது புறவிதழ்களாகிய மடல்கள் தம்முள்ளே பொதிந்துள்ள அகவிதழ்களாகிய வெள்ளிய மடல்களினூடே முதல் நாள் அந்தி மாலையில் இன்றுயில் கொண்டிருந்த நீலமணி போலும் நிறமுடைய வண்டானது, காலை களிநறவம் தாதூத அற்றை நாள் விடியற் காலத்தே அவ்விடத்தை நீங்கிக் காலைப்பொழுதில் முகமலர்ந்து தன்னை வரவேற்கும் செந்தாமரை மலர் பிலிற்றும் மகிழ்ச்சி தருகின்ற தேனையும் தாதையும் நுகரும்படி; தோன்றிற்று - கீழ்த்திசையிலே தோன்றா நின்றது.

(விளக்கம்) அடிகளார் இவ்வெண்பாவினாலே, முன்னர் ஊழ்வினையான் மயங்கி மாமலர்க்கண் மாதவி மாலை வாங்கி அவள் மனைக்கட் சென்று இற்றைநாள் காறும் தன் தவறு காணாதவனாய்க் கிடந்தவன் இற்றைநாள் தன் தவறுணர்ந்து மாதவியைக் கைவிட்டுக் கண்ணகியின்பாற் சென்று அவள்தன் புன்முறுவல் பெற்று மகிழ்வதனைக் குறிப்பாக வோதியவாறாகக் கொள்க. காலைக் களிநறவம் தாதூத என்றதனால் செந்தாமரை மலரின்கண் சென்றென்பது பெற்றாம்.

கடலாடு காதை முற்றிற்று.


© Om Namasivaya. All Rights Reserved.