சிலப்பதிகாரம்

அஃதாவது பாண்டியன் அரசு கட்டிலில் மயங்கி வீழ்ந்த பின்னர்க் கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி, யானும் ஓர் பத்தினியே யாமாகில் ஓட்டேன் அரசோடு மதுரையையும் ஒழிப்பேன் என் பட்டிமையும் நீ காண்பாய் என்று வஞ்சினால் கூறிய தன்மையினைக் கூறும் பகுதி என்றவாறு.

கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்
யாவுந் தெரியா இயல்பினே னாயினும்
முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே
வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக  5

முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள் பொன்னிக்
கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று
உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து
அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற
வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற  10

மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி  15

மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்
கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய
மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்
நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தைத்  20

தானோர் குரக்குமுக மாகென்று போன
கொழுநன் வரவே குரக்குமுக நீத்த
பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய
பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன் 25

வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்
ஒண்டொடி நீயோர் மகற்பெறில் கொண்ட
கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்
கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்
சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத்  30

தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்
கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி
நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த
ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய
மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்  35

பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா
நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்
வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின்  40

யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து  45

விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்  50

பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்
பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய  55

பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்.

வெண்பா

பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும்
விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங்--கற்புண்ணத்
தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும்
மாத்துவத் தான்மறைந்தார் மற்று.

உரை

வஞ்சினங் கூறும் கண்ணகி கோப்பெருந்தேவியை நோக்கிக் கூறுதல்

1-4: கோவேந்தன் ........... பெற்றியகாண்

(இதன்பொருள்.) கோவேந்தன் தேவி -கோப்பெருந்தேவியே கேள்; கொடுவினையாட்டியேன் - கொடிய தீவினையையுடையேனாகிய யான்; யாவும் தெரியா இயல்பினே னாயினும் - இப்பொழுது எவற்றையும் தெரிந்து கொள்ளமாட்டாத தன்மை உடையேனா யிருப்பினும்; பிறன் கேடு முன்பகல் செய்தான் - பிறன் ஒருவனுக்கு முன்பகலிலே தீங்கு செய்தான் ஒருவன்; தன் கேடு - அத் தீமையின் பயனாகத் தனக்கு வரும் தீமைகள் பலவும்; பின்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் - அச் செய்தவனால் அற்றைநாள் பின்பகலிலேயே, காணலுறுகின்ற தன்மையை உடையன காண் என்றாள்; என்க.

(விளக்கம்) தான் கணவனை இழந்து இங்ஙனம் துன்புறுதற்குக் காரணம் தான் முற்பிறப்பிலே செய்த தீவினையே ஆதல்வேண்டும் என்னுங் கருத்தால் கொடுவினையாட்டியேன் எனத் தனக்குப் பெயர் கூறிக்கொண்டனள். என்னை? நோயெல்லா நோய் செய்தார் மேலவாம் (குறள் - 320) என்பதுபற்றி அவ்வாறு கண்ணகி கூறிக்கொள்கின்றனள் என்க. தான் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஆளாகி அறிவு மயங்கி இருத்தலால் யான் இப்பொழுது யாவும் தெரியா இயல்பினேன் என்றாள். அங்ஙனமாயினும் நின் கணவனாகிய வேந்தன் செய்தது தீவினையே என்பதில் ஐயமில்லை ஆதலால் அத் தீவினை தானும் இப்பொழுதே தன் பயனை நுகர்விக்கும், பெருந்தீவினை ஆதலால் அவை இப்பொழுது வந்துறும், அதனை நீ அறிந்துகொள் என்று அறிவுறுத்தியவாறு. ஈண்டு - பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும் (குறள், 319); முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் (கொன்றை வேந்தன்); முற்பகல் செய்வினை பிற்பக லுறுநரின் (பெருங்: 1. 56; 259) என்பன ஒப்பு நோக்கற்பாலன.

கண்ணகி எடுத்துக் காட்டிய புகார்நகரத்துப் பத்தினி மகளிர் எழுவர்

(1) 4-6: நற்பகலே ........... மொய்குழலாள்

(இதன்பொருள்.) நற்பகலே வன்னிமரமும் மடைப்பளியும் சான்று ஆக-பிறரெல்லாம் அறிந்து கொள்ளுதற்குக் காரணமான நல்ல பகற்பொழுதிலேயே சான்று ஆகாத அஃறிணைப் பொருள்களாகிய வன்னிமரமும் மடைப்பள்ளியும் தனக்குச் சான்று கூறும் பொருள்களாகும்படி; முன் நிறுத்திக் காட்டிய மொய்குழலாள் - மக்கள் முன்னர்க் கொணர்ந்து நிறுத்திக் காட்டிய அடர்ந்த கூந்தலை யுடையவளும்; என்க.

(விளக்கம்) மக்களெல்லாம் காண்பதற்குரிய பொழுது என்பாள் நற்பகல் என்றாள். சோழநாட்டிலிருந்த ஒரு கற்புடைய மங்கைக்கு வன்னிமரமும் மடைப்பள்ளியும் சான்று கூறிய வரலாற்றினைத் திருப்புறம்பயத்தும் திருமருகலிலும் இற்றைநாளினும் கூறப்படுகின்றது எனவும், அந்நிகழ்ச்சிக்குரிய அடையாளங்களும் அவ்விடங்களில் இருக்கின்றன எனவும், திருப்புறம்பயத்தில் கோயில் கொண்டருளிய இறைவனுக்குச் சாட்சிநாதர் என்று திருப்பெயருளது எனவும் சான்றோர் கூறுவர். இவ்வரலாறு திருவிளையாடற்புராணத்தும் கூறப்பட்டுள்ளது. திருத்தொண்டர் புராணத்தில் இந்நிகழ்ச்சி திருமருகலில் நிகழ்ந்ததாகச் சிறிது மாறுபாட்டுடன் கூறப்பட்டிருக்கின்றது.

(2) 6-10: பொன்னி .............. மாதர்

(இதன்பொருள்.) கரைப் பொன்னியின் - கரையையுடைய காவிரிப் பேரியாற்றின் நடுவண் சிலமகளிர் விளையாடும்பொழுது; மணற்பாவை நின் கணவன் ஆம் என்று உரைசெய்த - மணற்பாவை செய்து இந்தப் பாவை உன்னுடைய கணவன் ஆகும் என்று ஒருத்திக்கு ஏனைமகளிர் சுட்டிக்கூறி விளையாடா நிற்ப; மாதரொடும் போகான் - அப்பொழுது யாற்றின்கண் புனல் பெருகி வருதல் கண்டு அவ்விடத்தினின்றும் சென்ற அம் மகளிரொடு போகாதவளாய்த் தன் கணவனாகிய அம் மணற்பாவையோடு அவளொருத்தியும் தமியளாய் நின்றாளாக; திரைவந்து அழியாது சூழ்போக - அவளுடைய கற்பிற்கஞ்சி அவ்வியாற்றுநீர் அலையோடு வந்து அம் மணற்பாவையை அழியாமல் அவ்விடத்தை ஒதுக்கிப் பக்கங்களிலே அம் மணற் பாவையைச் சுற்றிப்போகா நிற்றலால்; ஆங்கு - அவ்விடத்தில் உண்டாகிய; உந்தி நின்ற - ஆற்றிடைக் குறையின்மேல் தன் கணவனாகிய அம் மணற் பாவைக்கும் தனக்கும் தீங்கு சிறிதும் இல்லாதபடி நின்ற; வரிஆர் அகல் அல்குல் மாதர் - வரி பொருந்திய அகன்ற அல்குலையுடைய மடந்தையும்; என்க.

(விளக்கம்) இஃதென் சொல்லிய வாறோவெனின்: கன்னி மகளிர் சிலர் காவிரியாற்றின் ஓர் இடத்தே மணற்பரப்பில் சிற்றிலிழைத்தும் சிறு வீடு கட்டியும் மணலால் பாவை செய்தும் விளையாடும்பொழுது ஒருத்தி மற்றொருத்தியை நோக்கி இம் மணற் பாவை உன் கணவன் ஆம் என்றாளாக, அவள் அதற்குடன்பட்டு விளையாடியபொழுது, ஆற்று நீர் பெருகி அவ்விடத்தே ஏறுதல்கண்ட மகளிரெல்லாம் விரைந்தோடிக் கரையில் ஏறினராக மணற்பாவையைக் கணவனாகக் கருதிய ஒருத்திமட்டும் அதனைக் கைவிட்டுப் போகத்துணியாளாய் அவ்விடத்தே நிற்பாளாயினள். அவளுடைய கற்புடைமைக்கு அஞ்சிய நீர் அவ்விடத்தை ஒதுக்கிப் பக்கங்களிலே சூழ்ந்து ஓடலாயிற்று. அதனால் அவ்வாற்றிடைக்குறையில் நின்று மணற்பாவையாகிய தன் கணவனைக் காப்பாற்றிய கற்புத்திண்மை யுடையவளும் என்றவாறு. உந்தி - ஆற்றிடைக்குறை. ஆங்கு உண்டான உந்தி என்க. கரைப்பொன்னி என மாறுக.

(3) 10-15: உரைசான்ற ........... போதந்தாள்

(இதன்பொருள்.) உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் - புகழ்மிக்க சோழமன்னனாகிய கரிகாலன் என்னும் திருமாவளவனுடைய மகள்; வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ள - தன் கணவனாகிய சேரமன்னனை நீராடும்பொழுது காவிரிப்பேரியாற்று நீர் கவர்ந்து கொள்ளாநிற்ப; தான் புனலின் பின்சென்று - தன் கணவனைக் காணாது அலமந்து அக் காவிரி நீரின் பின்னே போய்-கல்நவில் தோளாயோ என்ன - கடற்கரையின்கண் நின்று மலையையொத்த தோளையுடைய எம்பெருமானே! என்று பன்முறையும் கூவி அரற்றா நிற்ப; கடல்வந்து முன் நிறுத்திக் காட்ட - அவளது கற்புடைமைக்கு அஞ்சிய கடலானது அவனைக் கொணர்ந்துவந்து அவள் முன்னர் நிறுத்திக் காட்டுதலாலே; அவனைத் தழீஇக் கொண்டு பொன் அம் கொடிபோலப் போதந்தாள் - அக் கணவனைத் தழுவிக்கொண்டு பொன்னாலியன்ற பூங்கொடிபோல மீண்டு வந்தவளாகிய ஆதிமந்தியும்; என்க.

(விளக்கம்) உரை - புகழ், கரிகாலன் வெற்றிப் புகழை இந்திர விழவூர் எடுத்த காதையில் காண்க. கரிகாலன் மகள் ஆதிமந்தி என்னும் பெயருடையவள். வஞ்சிக்கோன் என்றது, இவள் கணவனாகிய சேரமன்னனை. இவன் பெயர் ஆட்டனத்தி என்பதாம். ஆதிமந்தியார் கழார் என்னும் ஊர் மருங்கே காவிரித்துறையில் தன் கணவனாகிய ஆட்டத்தியுடன் நீராடும் பொழுது அவனைக் காவிரி வெள்ளம் கவர்ந்துகொண்டது. ஆதிமந்தி அவனைக் காணாமல் கரை வழியாகத் தேடிச்சென்று கடற்கரையில் நின்று கல்நவில் தோளாயோ என்று கூவி அழைத்து அரற்றும்பொழுது கடல் ஆட்டனத்தியை அவள்முன் கொணர்ந்து நிறுத்தியது என்பர். ஆதிமந்தியின் வரலாற்றினை மள்ளர் குழீஇய விழவி னானும், மகளிர் தழீஇய துணங்கை யானும், யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோராடுகள மகளே யென்கைக், கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த, பீடுகெழு குருசிலு மோராடுகள மகனே (குறுந் -31) என்பதனானும் அகநானூற்றின்கண் (45, 76, 222, 336, 276, 396) செய்யுள்களினும் பரக்கக் காணலாம்.

(4) 15-17: மன்னி ......... நீத்தான்

(இதன்பொருள்.) மணல் பூங்கானல் மன்னி - மணல் மிகுந்த அழகிய கடற்கரைச் சோலையிடத்தே பொருளீட்டுதற்கு மரக்கலத்தில் தன் கணவன் சென்றானாக அப்பொழுதே அக் கானலின் கண் கல்லுருவமாகச் சமைந்திருந்து; வரு கலன்கள் நோக்கி - கரைநோக்கி வந்தெய்துகின்ற மரக்கலன்கள் தோறும் தன் கணவன் வரவினை நோக்கியிருந்து; கணவன்வரக் கல்உருவம் நீத்தாள் - பின்னொரு காலத்துத் தன் கணவன் மரக்கலத்தில் வந்திறங்கியபொழுது அக் கல்லுருவத்தை நீத்துப் பண்டை உருவம் பெற்றவளும்; என்க.

(விளக்கம்) கணவன் மரக்கலமேறிப் பொருளீட்டச் செல்ல அத்துறைமுகத்திலேயே தனது கற்பின் சிறப்பினால் தன்னைக் கல்லுருவமாகச் செய்து அவ்விடத்தேயிருந்து கணவன் மீண்டு வந்தெய்தியவுடன் அக் கல்லுருவத்தைக் கைவிட்டுப் பண்டைய உருவம் பெற்றாள் ஒரு பத்தினி என்க.

(5) 17-19: இணையாய ......... வேற்கண்ணாள்

(இதன்பொருள்.) இணையாய மாற்றாள் குழவி கிணற்றுவீழ - தன் குழந்தைக்கு ஒப்பான தன் மாற்றாளுடைய குழந்தை கிணற்றின்கண்விழுந்துவிட்டதாக அப்பொழுது மாற்றாள் வீட்டிலின்மையால் அப்பழி தன் மேலதாகும் என்று அஞ்சி; தன் குழவியும் கிணற்று வீழ்த்து - தனது குழந்தையையும் அக் கிணற்றினுள்ளே போகட்டாளாக அவள் கற்பின் சிறப்பினாலே இறந்தொழிந்த அக் குழந்தைகள் இரண்டும் உயிர்பெற்றுக் கிணற்றினின்றும் எழுந்து மேலே வருதல் கண்டு; ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் - அக் குழவிகளைத் தன் இரு கையிலும் வாங்கிக் கொண்டு வெளியிலெடுத்துக் கொணர்ந்த வேல்போலும் கண்ணையுடையவளும்; என்க.

(விளக்கம்) மாற்றாள் - தன் கணவனின் மற்றொரு மனைவி. இணையாய குழவி என்க. ஆண்டு முதலியவற்றால் ஒத்த குழவிகள் என்றவாறு. இணையாய மாற்றாள் என்பது மிகை. மாற்றாள் இல்லாத பொழுது அவள் குழவி கிணற்றில் வீழ அப் பழி தன்மேலதாம் என்று அஞ்சித் தன் குழவியையும் கிணற்றில் வீழ்த்த அவள் கற்பின் சிறப்பால் இரண்டு குழவியும் உயிர் பெற்று மேலெழுந்து வர அவற்றைக் கையால் ஏற்றுக் கொண்டு எடுத்தாள் என்க.

(6) 19-23: வேற்றொருவன் ...... பூம்பாவை

(இதன்பொருள்.) வேற்று ஒருவன் - தன் கணவன் வேற்று நாட்டிற்குச் சென்றிருந்தபொழுது ஏதிலான் ஒரு காமுகன்; தன் முகத்தின் அழகை; நீள்நோக்கம் கண்டு - நெடிது காமுற்று நோக்குகின்ற நோக்கத்தைப் பார்த்த வளவிலே; நிறைமதி வாள் முகத்தை - முழுத்திங்கள் போன்ற ஒளியுடைய அழகிய தன் முகத்தை; தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று - தானே தன் கற்பின் ஆற்றலால் ஒரு குரங்கின் முகம் ஆவதாக என்று தன்னுட் கருதி அங்ஙனமே யாக்கிக்கொண்டு; போன கொழுநன் வரவே - வேற்று நாட்டிற்குச் சென்ற தன் கணவன் வருமளவும் அக்குரங்கு முகத்தோடே இருந்து அவன் வந்தவுடன்; குரக்குமுகம் நீத்த - அக் குரங்குமுகம் ஒழித்துத் தனக்குரிய பழைய திங்கள்முகத்தைப் பெற்ற; பழுமணி அல்குல் பூம் பாவை - சிவந்த மாணிக்கத்தாலியன்ற மேகலையையுடைய திருமகள் போல்பவளும்; என்க.

(விளக்கம்) வேறொருவன் - அயலான் ஒருவன். நீள்போக்கம் - விடாமல் பார்க்கும் பார்வை. கொழுநன் வருமளவும் இருந்து எனவும், பண்டைய நிறைமதி வாள்முகத்தைப் பெற்ற எனவும் விரித்துக் கூறுக. பூம்பாவை - பூம்பாவை போல்பவள்.

(7) 23-34: விழுமிய ........... பாவை அவள்

(இதன்பொருள்.) விழுமிய தாய் - சிறந்த தன் தாயானவள்; தந்தைக்கு - தன் தந்தையை நோக்கி அன்புடையீர்; திருவிலேற்கு - முன்னை நல்வினை இல்லாத எனக்கு எனது பேதைப் பருவத்தே; யான் வண்டல் அயர்விடத்து - யான் என் தோழியருடன் விளையாடும் பொழுது என்தோழி ஒருத்திக்கு; பெண்ணறிவென்பது பேதைமைத்தே என்று உரைத்த நுண்ணறிவினோர் நோக்கம் நோக்காதே - பெண்ணறி வென்பது பேதையையுடையதேயாம் என்று தேற்றமாகக் கூறிவைத்த நுண்ணறிவுடைய சான்றோர் கருத்தினையும் கருதிப் பாராமல்; எண்ணிலேன் - பின்விளைவினையும் எண்ணிப் பார்த்திலேனாய்; ஒள் தொடியான் ஓர் மகள் பெற்றால் - ஏடீ தோழீ! யான் பிற்காலத்தே ஒரு மகளைப் பெற்றால்; நீ ஓர் மகன் பெறின் - அங்ஙனமே நீயும் ஒரு மகனைப் பெறுவாயானால் அவன்; அவளுக்குக் கொண்ட கொழுநன் - என்னுடைய மகளுக்கு நெஞ்சம்கொண்ட கணவன் ஆகுவன்காண்! இஃது என் உறுதிமொழி ஆகும்; என்று யான் உரைத்த மாற்றம் - என்று யான் அவளுக்குச் சொன்ன மொழியைத் தலைக்கீடாகக் கொண்டு அங்ஙனமே மகனைப் பெற்ற; அவள் கெழுமி உரைப்ப - அத் தோழி என்னை அணுகி அம்மொழியை எடுத்துக் கூறாநிற்ப; கேட்ட விழுமத்தால் - அச்செய்தியை யான் கேட்டமையால் உண்டான இடும்பை காரணமாக; சிந்தை நோய் கூரும் - என் நெஞ்சத்தில் துயரம் மிகுகின்றது கண்டீர்; என்று எடுத்து உரைப்பக் கேட்டாளாய் - என்று இங்ஙனம் தனது அறியாமையால் விளைந்த தவற்றினை எடுத்துக்கூற அச் செய்தியைக் கேட்டவளாய்; முந்தி - தன் தாயின் உறுதிமொழியை நிறைவேற்றுதற்குத் தானே முற்பட்டு; ஓர் கோடிக் கலிங்கம் உடுத்து - திருமணக் கூறையாக ஒரு புத்தாடையைத் தானே உடுத்துக்கொண்டு; குழல் கட்டி - கூந்தலையும் மணமகள் போலக் குழலாகக் கட்டி; நீடித் தலையை வணங்கி - மணப்பெண்போலே நெடிது தன் தலையைக் குனிந்துகொண்டு; தலை சுமந்த - தன் தாயினாலே குறிக்கப்பட்ட அவ்வயலாள் ஈன்ற ஆண் குழந்தையைக் கணவனாகக் கைப்பற்றி அவனைத் தன் தலையிலே சுமந்து கொணர்ந்த; ஆடகப் பூம்பாவை அவள் - பொன்னாலியன்ற திருமகள் போல்வாள் ஆகிய அவளும்; என்க.

(விளக்கம்) இஃது என்சொல்லிய வாறோவெனின்: ஒருத்தி தன் தாயானவள் தன் தந்தையை நோக்கி யான் பேதைப் பருவத்தே விளையாடும்பொழுது விளையாட்டாக என் தோழி ஒருத்திக்கு யான் பிற்காலத்தே மகளைப் பெற்றால் நீ பெறுகின்ற மகனுக்கு அவள் மனைவியாவாள்; இஃது உறுதியென்று கூறியிருந்தேன். நம் மகள் மணப்பருவம் எய்திய பின்னர், அத் தோழி இப்பொழுதுதான் ஒரு மகனைப் பெற்றாள். அவள் என்பால் வந்து அவ் வுறுதிமொழியையும் எனக்கு எடுத்துக்கூறி நினைவூட்டி விட்டாள். அது கருதி யான் வருந்துகின்றேன் என்று கூறினாளாக, அதனைக் கேட்ட அக்கற்புடைய மகள் யான் அச் சிறுவனையே கணவனாகக் கொள்வன் என்று துணிந்து அக் குழந்தையைக் கைப்பற்றித் தான் மணக்கோலம் பூண்டு அக் குழந்தையைத் தன் தலையிலே சுமந்துகொண்டு வந்து புகுந்தனள் என்பதாம்.

ஈண்டுக் கண்ணகியால் எடுத்துக்காட்டிய கற்புடை மகளிரின் வரலாற்றினைக் கீழ்வரும் செய்யுள்களினும் காணலாம். அவை வருமாறு :

கரிகாலன் பெருவளவன் மகள்கேள்வன் கடல் புக்கான்
திருவேயோ எனவழைத்துத் திரைக்கரத்தால் தரக்கொண்டாள்
வரைகேள்வன் கலநோக்கி வருமளவுங் கல்லானாள்
புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
வன்னிமடைப் பளியோடு சான்றாக வரவழைத்தாள்
பன்னியகா விரிமணல்வாய்ப் பாவையை நுன்கேள்வனெனும்
கன்னியர்க ளொடும் போகாள் திரைகரையா வகைகாத்தாள்
பொன்னனையாள் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
கூவலிற்போய் மாற்றாள் குழவிவிழத் தன்குழவி
ஆவலின்வீழ்த் தேற்றெடுத்தாள் அயனோக்கம் வேறென்று
மேவினாள் குரக்குமுகம் வீடுடையோன் வரவிடுத்தாள்
பூவின்மேற் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
முற்றாத முலையிருவர் முத்துவண்ட லயர்விடத்துப்
பெற்றாற்றா மாண்பெண் பிறர்மணஞ்செய் யாவண்ணம்
சொற்றார்கள் பிறந்தபெண் ணாயகனைத் தலைசுமந்தாள்
பொற்றாவி பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.

(இவை - பட்டினத்துப் பிள்ளையார் புராணம் - பூம்புகார்ச் சருக்கத்திற் கண்டவை.)

கண்ணகியின் சூள்மொழி

34-38: போல்வார் நீடிய .......... விட்டகலா

(இதன்பொருள்.) போல்வார் மட்டு ஆர் குழலார் பிறந்த நீடிய பதிப் பிறந்தேன் -ஆகிய இப் பத்தினி மகளிரும் இவர் போல்வாரும் தேன்பொருந்திய கூந்தலையுடைய பத்தினிமகளிர் பலர் பிறந்த நெடிய பூம்புகார் நகரத்தே பிறந்த; யானும் ஓர் பத்தினியே பட்டாங்கு ஆம் ஆகில் -யானும் அவர்போன்று ஒரு பத்தினியே என்பது உண்மையாக இருக்குமானால்; ஒட்டேன் - இனிதிருக்க விடேன்; அரசோடு மதுரையும் ஒழிப்பேன் - இக்கொடுங்கோல் மன்னனோடு அவனிருந்த இம் மதுரை நகரத்தையும் அழிப்பேன்; என் பட்டிமையும் நீ காண்குறுவாய் - என்னுடைய பட்டிமைச் செயலையும் இனி நீ காண்பாய் காண்; என்னா - என்றுகூறி; விட்டு அகலா - அவ்விடத்தினின்றும் நீங்கி அரண்மனை வாயிலில் வந்துநின்று; என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறப்பட்டவரும் இவர் போல்வார் பலரும் பிறந்தபதி என்க. பிறந்தேன்: முற்றெச்சம். பிறந்த யானும் எனவும் பட்டாங்கு ஆமாகில் எனவும் இயைத்துக்கொள்க. இனிதிருக்க என ஒருசொல் வருவித்துக்கொள்க. மதுரையும் என்புழி உம்மை அரசனை ஒழித்ததன்றி மதுரையையும் ஒழிப்பேன் என எச்சப் பொருளுடையது. பட்டிமை - பட்டித்தன்மை. அஃதாவது - அடங்காச் செயல்.

கண்ணகியின் பட்டிமை

39-46: நான்மாட ........... விட்டாளெறிந்தாள்

(இதன்பொருள்.) நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் கேட்டீ மின் - நான்மாடக் கூடல் என்னும் இம் மதுரைமா நகரத்தில் வாழ்கின்ற மகளிரும் ஆடவரும் கேளுங்கள்; இங்குள்ள மாதவரும் பெரிய தவத்தோராகிய அறவோரும்! கேளுங்கள்! வானக் கடவுளரும் கேட்டீமின் - வானத்தே சுடரொடு திரிதரும் முனிவரும் கேளுங்கள்; யான் அமர் காதலன் தன்னை தவறு இழைத்த கோநகர் சீறினேன் - யான் என்னால் விரும்பப்பட்ட என்னுடைய கணவனுக்குத் தவறு செய்த கொடுங்கோன் மன்னனையும் அவன் ஆட்சிசெய்த இந்நகரத்தையும் சினந்து ஒறுக்கின்றேன் ஆதலால்; யான் குற்றமிலேன் என்று - யான் தவறுடையேன் அல்லேன் அறிந்து கொள்மின் என்று கூறி; கையால் இடமுலை திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா - தனது கையாலே இடப்பக்கத்துக் கொங்கையைப் பற்றித் திருகிப் பிய்த்துக் கையில் எடுத்துக்கொண்டு அம் மதுரை நகரத்தை மூன்றுமுறை வலஞ்சுற்றி விரைந்து வந்து; அலமந்து மட்டு ஆர் மறுகில் மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள் - மனஞ்சுழன்று வண்டினம் தேன் பருகுதற்குக் காரணமான அவ் வாசமறுகினிடத்தே நின்று கையிற் கொண்டுள்ள அழகிய அக்கொங்கையைச் சீற்றத்துடன் சுழற்றி விட்டெறிந்தாள்; என்க.

(விளக்கம்) நான்மாடங்கள் என்பன: திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்பர்; கண்ணி, கரியமால், காளி, ஆலவாய் என்பனவுமாம். வானக் கடவுளர் என்றது தேவமுனிவர்களை. வானவர் எனினுமாம். மாதவர் என்றது அம் மதுரைக்கண் இருந்த துறவோரை. தவறிழைத்த கோவையும் நகரையும் சீறினேன். ஆதலால் யான் குற்றமிலேன் என்றவாறு. மட்டு - தேன். மணி - அழகு. வட்டித்தல் - சுழற்றுதல். விட்டாள் எறிந்தாள்: ஒருசொல்.

கண்ணகி முன்னர்த் தீக்கடவுள் தோன்றிப் பணி வினாதல்

46-52: விளங்கிழையாள் ......... ஈங்கென்ன

(இதன்பொருள்.) விளங்கிழையாள் - கண்ணகி; வட்டித்த - சீற்றத்தோடு வட்டித் தெறிந்தமையால்; எரி மாலை அங்கி வானவன் - தான் பற்றிய பொருளை எரிக்கின்ற தன்மையை யுடைய நெருப்புக் கடவுள்; நீலநிறத்து செக்கர் வார் திரிசடை பால் புரைவெள் எயிற்று பார்ப்பனக் கோலத்து - நீலநிறத்தினையும் சிவந்த நீண்ட முறுக்குண்ட சடையினையும் பால்போன்ற வெள்ளிய பற்களையும் உடைய ஒரு பார்ப்பன வடிவத்தோடு; தான் தோன்றி - தானே எதிர்வந்து; மாபத்தினி - சிறந்த பத்தினிக் கடவுளே! மாண நின்னைப் பிழைத்த நாள் - பெரிதும் நினக்குத் தவறிழைத்த நாளிலே; இந்தப் பதி - இந்த மாமதுரையை; பாய் எரி ஊட்ட; பரவுகின்ற தீயை ஊட்டும் படி; பண்டே ஓர் ஏவல் உடையேனால் - முன்னரே யான் ஓர் ஏவலைப் பெற்றிருக்கின்றேன் ஆதலால் அங்ஙனம் தீயூட்டுங்கால்; ஈங்குப் பிழைப்பார் யார் என்ன - இந்நகரத்தின்கண் அத் தீயில் படாமல் உய்வதற்குரியார் யார்யார் அவரை அறிவித்தருளுக என்று இரப்ப; என்க.

(விளக்கம்) வட்டித்ததனால் அவள் சீற்றத்திற்கஞ்சி அங்கியங் கடவுள் தானே எதிர்வந்து தோன்றி என்க. எரிமாலை அங்கி என மாறுக. மாலை - தன்மை. அங்கி - நெருப்பு. மாண - பெரிதாக என்றவாறு. திண்ணிதாக என்பாருமுளர். யார் என்னும் வினா, யார் யார் என அறிவித்தருளுக என்பதுபட நின்றது. பண்டு - அப் பதி எரியூட்ட ஏவல் பெற்றமை கட்டுரை காதைக்கண் காணப்படும்.

கண்ணகியின் விடை

53-57: பார்ப்பார் ........... கூடல்நகர்

(இதன்பொருள்.) பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு - தீக்கடவுளே! இந்த நகரத்தே வாழுகின்ற பார்ப்பனரும் அறவோரும் ஆக்களும் கற்புடை மகளிரும் முதுமையுடையோரும் குழந்தைகளும் ஆகிய இவரிருப்பிடங்களை அழியாமல் விட்டு; தீத்திறத்தார் பக்கமே சேர்க என்று - தீவினையாளர் பகுதிகளில் மட்டுமே எய்துவாயாக என்று; காய்த்திய - அந்நகரினைச் சுடுதற்கு; பொற்றொடி ஏவ - அக்கண்ணகி அந்நெருப்புக் கடவுளை ஏவிய அப்பொழுதே; நல்தேரான் கூடல் நகர் - அழகிய தேரையுடைய பாண்டிய மன்னனுடைய கூடல் என்னும் அம் மதுரை நகரத்தை; அழல் மண்டிற்று - தீப்பிழம்பு பற்றி அழித்தது; என்க.

(விளக்கம்) பார்ப்பார் அறவோர் பசு எனத் திணைவிரவி எண்ணி இவரை என உயர்திணையான் முடிந்தது. தீத்திறத்தார் - தீவினையாளர். காய்த்திய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சுடுதற்கு என்றவாறு. பொற்றொடி : கண்ணகி; (அன்மொழித் தொகை.)

வெண்பா

பொற்பு வழுதியும் ............ மற்று

(இதன்பொருள்.) பொற்பு வழுதியும் பூவையரும் மாளிகையும் வில்பொலிவும் சேனையும் மாவேழமும் கற்பு உண்ண - பொலிவுடைய பாண்டியனும் அவனுடைய பெண்டிரும் மாளிகைகளும் வில்லினாலே பொலிவுறு காலாட்படையும் குதிரைப் படையும் யானைப்படையும் ஆகிய இவற்றை யெல்லாம் கண்ணகித் தெய்வத்தின் கற்புத்தீ உண்ணா நிற்ப; தீத்தரு வெம் கூடல் - அக்கினிக் கடவுள் தருகின்ற வெப்பத்தையுடைய அக் கூடல் நகரத்தினின்றும்; தெய்வக் கடவுளரும் - தெய்வங்களும் முனிவர்களும்; மாத்துவத்தால் மறைந்தார் - தம்முடைய சிறப்புத் தன்மையால் அந்நகரத்தினின்றும் மறைந்து போயினார்.

(விளக்கம்) இவ்வெண்பா பொருட் சிறப்பும் சொல்லழகும் பிறவும் இல்லாத வெண்பாவாகக் காணப்படுதலானும், இது பழைய ஏட்டுப் படிவங்கள் சிலவற்றில் காணப்படவில்லை என்பதனானும் இதனை யாரோ எழுதி இறுதியின்கண் சேர்த்துள்ளார் என்று அறிஞர் கூறுகின்றனர்.

வஞ்சினமாலை முற்றிற்று.


© Om Namasivaya. All Rights Reserved.