சிலப்பதிகாரம்

16. கொலைக்களக் காதை

அஃதாவது - மாதரி என்னும் இடைக்குல மடந்தை கவுந்தியடிகளார் அறிவுறுத்தியபடி கண்ணகியையும் கோவலனையும் தன் மனைக்கு அழைத்துச் சென்று ஆர்வத்துடன் அவர்க்கு வேண்டுவனவெல்லாம் வழங்கக் கண்ணகியும் தனது கைவன்மையால் இனிதுற உணவு சமைத்துக் கணவனுக்கு ஊட்டி அற்றைநாள் இரவின்கண் அங்கிருப்ப; மற்றை நாள் கோவலன் கண்ணகியின் சீறடிச் சிலம்பில் ஒன்றனை விற்றற் பொருட்டுக் கண்ணகியைத் தேற்றுரை பல கூறி வருந்தாதிருவென்று கூறிச் செல்பவன், மதுரை நகரத்துப் பீடிகைத் தெருவிலே பொற் கொல்லர் நூற்றுவர் பின் வரத் தன்னெதிர் வந்த பொற்கொல்லனைக் கண்டு தன் சிலம்பினை அவன்பால் காட்ட, அவன் பண்டு அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்து வைத்துக் கொண்டு இருந்தானாதலால் அச் சிலம்பே இச் சிலம்பென்றும் அதனைக் களவுகொண்ட கள்வனும் இவனே என்றும் அரசனுக்குக் காட்டி அப் பழியைக் கோவலன்மேல் சுமத்தத் துணிந்து கோவலனை நோக்கி இச் சிலம்பு அரசி அணிதற்குத் தகுந்த சிலம்பாதலின் யான் சென்று அரசனுக்கு அறிவுறுத்தி வருமளவும் இவ்விடத்திருப்பீர் என்று கூறிச் சென்றவன், பாண்டியன் நெடுஞ்செழியன் கோப்பெருந் தேவியின் ஊடல் தீர்க்கச் செல்வான் முன்சென்று வணங்கி, அரண்மனைச் சிலம்பைத் திருடிய கள்வன் அடியேன் குடிலில் அச் சிலம்புடன் வந்துளான் என்று சொல்ல, அதுகேட்ட பாண்டியன் ஒரு சிறிதும் ஆராய்தலின்றிக் காவலரைக் கூவி நீவிர் இப் பொற் கொல்லனுடன் சென்று அக் கள்வனைக் கொன்று அச் சிலம்பினை ஈண்டுக் கொணர்க என்று பணிப்ப, அவ்வாறே அக் காவலர் பொற்கொல்லனுடன் சென்று அவனால் காட்டப்பட்ட கோவலனைக் கண்டுழி இத்தகையோன் களவுஞ் செய்வனோ! என்று ஆராயும்பொழுது அக் காவலருள் கல்லாக் களிமகன் ஒருவன் தன் கை வாளால் கோவலனை எறிந்துழி, கோவலன் கொலையுண்ட செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை
அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு
மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப்
பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க்  5

காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச்
செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி
நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக்
கூடல் மகளிர் கோலங் கொள்ளும்
ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்  10

செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள்
ஐயை காணீ ரடித்தொழி லாட்டி
பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை
என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது
மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி  15

ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள்
நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச்
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்  20

நெடியா தளிமின் நீரெனக் கூற
இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா
மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற்
கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்  25

மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி யரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப
மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்  30

திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன
கரிபுற அட்டில் கண்டனள் பெயர
வையெரி மூட்டிய ஐயை தன்னொடு
கையறி மடைமையிற் காதலற் காக்கித்
தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்  35

கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின்
கடிமல ரங்கையிற் காதல னடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்  40

தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுத முண்க அடிக ளீங்கென
அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின்
உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு  45

ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
நல்லமு துண்ணும் நம்பி யீங்குப்
பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத்
தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை  50

விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென
ஐயையுந் தவ்வையும் விம்மிதம் எய்திக்
கண்கொளா நமக் கிவர் காட்சி யீங்கென
உண்டினி திருந்த உயர்பே ராளற்கு
அம்மென் திரையலோ டடைக்கா யீத்த  55

மையீ ரோதியை வருகெனப் பொருந்திக்
கல்லதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென
வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி
எம்முது குரவர் என்னுற் றனர்கொல்  60

மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ
யானுளங் கலங்கி யாவதும் அறியேன்
வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழி கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்  65

நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென  70

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்  75

முந்தை நில்லா முனிவிகந் தனனா
அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி அளைஇ
எற்பா ராட்ட யானகத் தொளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப்  80

போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்
ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூறக்
குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி  85

நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்
நாணின் பாவாய் நீணில விளக்கே   90

கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகெனக்
கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ உழையோ ரில்லா  95

ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி
வருபனி கரந்த கண்ண னாகிப்
பல்லான் கோவல ரில்லம் நீங்கி
வல்லா நடையின் மறுகிற் செல்வோன்
இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான்  100

தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின்
தாதெரு மன்றந் தானுடன் கழிந்து
மாதர் வீதி மறுகிடை நடந்து
பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண்
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய  105

நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக்  110

காவலன் றேவிக் காவதோர் காற்கணி
நீவிலை யிடுதற் காதி யோவென
அடியேன் அறியே னாயினும் வேந்தர்
முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானெனக்
கூற்றத் தூதன் கைதொழு தேத்தப்   115

போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன்
மத்தக மணியோடு வயிரம் கட்டிய
பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற்
சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம்
பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக்  120

கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லை யெனமுன் போந்து
விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென்
சிறுகுடி லங்கண் இருமின் நீரெனக்
கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர்  125

தேவ கோட்டச் சிறையகம் புக்கபின்
கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப்
பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப்
புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக்
கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன்  130

கூடன் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன்
ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக்  135

குலமுதல் தேவி கூடா தேக
மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன்
சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புடை வாயிற் கடைகாண் அகவையின்  140

வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக்
கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும்
துன்னிய மந்திரந் துணையெனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக்
கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்   145

கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென்
சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென
வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரான் ஆகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென்   150

தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்
காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும்
ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத்  155

தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த
கோவலன் றன்னைக் குறுகின னாகி
வலம்படு தானை மன்னவன் ஏவச்
சிலம்பு காணிய வந்தோர் இவரெனச்
செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம்  160

பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படு மகனலன் என்றுகூறும்
அருந்திறல் மாக்களை அகநகைத் துரைத்துக்
கருந்தொழிற் கொல்லன் காட்டின னுரைப்போன்  165

மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திரம் இடனே காலம் கருவியென்று
எட்டுட னன்றே இழுக்குடை மரபிற்
கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது
மருந்திற் பட்டீ ராயின் யாவரும்   170

பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர்
மந்திர நாவிடை வழுத்துவ ராயின்
இந்திர குமரரின் யாங்காண் குவமோ
தெய்வத் தோற்றம் தெளிகுவ ராயின்
கையகத் துறுபொருள் காட்டியும் பெயர்குவர்  175

மருந்தின் நங்கண் மயக்குவ ராயின்
இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ
நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும்
புகற்கிலா அரும்பொருள் வந்துகைப் புகுதினும்
தந்திர கரணம் எண்ணுவ ராயின்   180

இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர்
இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின்
அவ்விடத் தவரை யார்காண் கிற்பார்
காலங் கருதி அவர்பொருள் கையுறின்
மேலோ ராயினும் விலக்கலு முண்டோ  185

கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின்
இருநில மருங்கின் யார்காண் கிற்பார்
இரவே பகலே என்றிரண் டில்லை
கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை
தூதர் கோலத்து வாயிலின் இருந்து  190

மாதர் கோலத்து வல்லிருட் புக்கு
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு
இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்
வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத்
துயில்கண் விழித்தோன் தோளிற் காணான்  195

உடைவாள் உருவ உறைகை வாங்கி
எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான்
மல்லிற் காண மணித்தூண் காட்டிக்
கல்வியிற் பெயர்ந்த கள்வன் றன்னைக்
கண்டோர் உளரெனிற் காட்டும் ஈங்கிவர்க்  200

குண்டோ வுலகத் தொப்போ ரென்றக்
கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர்
திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும்
நிலனகழ் உளியன் நீலத் தானையன்
கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று  205

மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து
ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக்
கைவாள் உருவஎன் கைவாள் வாங்க
எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன்
அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும்  210

உரிய தொன் றுரைமின் உறுபடை யீரெனக்
கல்லாக் களிமக னொருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்றுயர் கூரக்  215
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்.

நேரிசை வெண்பா

நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகி தன் கேள்வன் காரணத்தான்-மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை.

உரை

மாதரி கண்ணகிக்குச் செய்யும் அன்புச் செயல்

1-6: அரும்பெறல் ............ மனைப்படுத்து

(இதன்பொருள்) அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற இரும்பேர் உவகையின் - தனக்கு விருந்தாகப் பெறுதற்கரிய பாவைபோல்வாளாகிய கண்ணகி நல்லாளை மாதவமுடைய கவுந்தியடிகளாலே அடைக்கலம் கொடுக்கப் பெற்றமையால் மிகப் பெரியதாகிய மகிழ்ச்சியை எய்திய; இடைக்குல மடந்தை - கொடும்பாடில்லாத கோவலர் குடியிற் பிறந்த அம் மாதரி தானும்; அளை விலை உணவின் ஆய்ச்சியர் தம்மொடு கோவலர் இருக்கை அன்றி - மோர் விற்ற கூலங்களை உணவாக உடைய ஆய்ச்சியரும் ஆயரும் குடி இருக்கும் பழைய இல்லின்கண் கண்ணகியை வைத்தலின்றி; மிளைசூழ் காவல் புனைமாண் பந்தாப் பூவல் ஊட்டிய சிற்றில் கடி மனைப்படுத்து-கட்டுவேலி சூழ்ந்த காவலையும் அழகு செய்யப்பட்டு மாட்சிமை உடைத்தாகிய பந்தலையும் உடைய செம்மண் பூசப்பட்ட சிறிய இல்லமாகிய புதியதொரு மனையிலே வைத்து; என்க.

(விளக்கம்) அளை - மோர். விலை - விலையாகப் பெற்ற நென் முதலியன. மிளை சூழ் காவல் சிற்றில் எனவும். பூவலூட்டிய சிற்றில் எனவும். பந்தர்ச் சிற்றில் எனவும் தனித்தனி கூட்டுக. மிளை - கட்டு வேலி. பூவல் - செம்மண். பூவற் படுவில் கூவற்றோண்டிய (புறம்: 319-1) என்புழியும் அஃதப் பொருட்டாதல் அறிக. கடி - புதுமை.

7-14: செறி வளை .............. தொழுது

(இதன்பொருள்) செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி நறு மலர்க்கோதையை நாள் நீராட்டி - மாதரி தன் சுற்றத்தினராகிய செறிந்த வளையலணிந்த ஆய்ச்சியர் சிலரோடே தானும் முன்னின்று நறுமணங்கமழும் மலர் மாலையினையுடைய கண்ணகியைப் புதிய நீராலே குளிப்பாட்டிப் பின்னர் அவள் திருமுகம் நோக்கி; புனை பூங்கோதை நங்கை - தொடுத்த மலர் மாலையை யுடைய நங்கையீரே! இனி ஒன்றற்கும் கவலாது! என்னுடன் ஈங்கு இருக்க - அடிச்சியாகிய என்னுடன் இங்கு இருந்தருளுக; கூடல் மகளிர் கோலம் கொள்ளும் ஆடகப் பைம்பூண் அரு விலை அழிப்பச் செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு - இம் மதுரை நகரத்தே வாழுகின்ற பெருங்குடி மகளிர் அணிந்து கொள்ளுகின்ற ஆடகம் என்னும் பொன்னாற் செய்த அணிகலன்களால் ஆகிய அழகை அழித்தற்கு இங்கு இயற்கை அழகோடு எழுந்தருளிய நுமக்குக் குற்றேவற் சிலதியர் இலரே என்று கருத வேண்டா; என் மகள் ஐயை காணீர் அடித்தொழிலாட்டி - உதோ நிற்பவள் என்னுடைய மகளாவள். ஐயை என்னும் இவளை நோக்குமின் இவள் இனி நும்முடைய குற்றேவல் சிலதியாய் நும்முடனே இருப்பள்; பொன்னீற் பொதிந்தேன் - அடிச்சியும் நும்மை பொன்னைப் பொதிந்து வைத்துப் பேணுமாறு போல எனது உள்ளத்தே பொதிந்து வைத்துப் பேணிக்கொள்வேன்; எனத்தொழுது என்று சொல்லிக் கண்ணகியை மகிழ்ச்சியோடு கை கூப்பித் தொழுது என்க.

(விளக்கம்) கூடல் மகளிர் என்றது - கூடலின் வாழும் பெருங்குடி மகளிர் என்பதுபட நின்றது. அவரணியும் அணிகலனின் சிறப்புக் கூறுவாள் அரு விலை ஆடகப் பைம்பூண் என்று விதந்தாள். இம் மதுரை நகரத்துத் தான்கண்ட அழகிய மகளிர் அணிகலன்களால் அணிசெய்து கொள்ளும் கோலந்தானும் இவருடைய இயற்கை அழகின் முன் புற்கென்று போம் என்னுங் கருத்தால் கண்ணகியின் அழகினைத் தன்னுள்ளே உவந்து, உவந்து இம் மாதரி வியந்து கூறிய இச் சொற்கள் பெரிதும் இன்பமுடையன ஆதல் உணர்க. செய்யாக் கோலம் - இயற்கை அழகு. நங்கை - நங்கையீர். நங்கை என்பதனை மாமி மருகியை அழைக்கும் முறைப்பெயர் என்பர் அடியார்க்கு நல்லார். (மேலும்) பாதரி கோவலனைத் தனக்கு மகனாகக் கருதி இங்ஙனம் கூறினாள் எனவும் இஃது அக்கால வழக்கு எனவும் விளக்கினர்.

வந்தாய்க்கு எனவும் காணின் எனவும் பாடம் உண்டு.

15 - 21: மாதவத் தாட்டி ......... நீரெனக் கூற

(இதன்பொருள்) மாதவத்தாட்டி வழித்துயர் நீக்கி ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள் நும் மகனார்க்கு இனி நோதகவு உண்டோ - பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளார் வழியின் கண் நும் பொருட்டுச் சிறிதும் நும் கணவனார்க்குத் துயர் உண்டாகாமல் நீக்கியதோடன்றி இங்கும் துன்பம் இல்லாத இடத்திலே நும்மைச் சேர்த்து வைத்தமையாலே நும்முடைய கணவனார்க்கு இனியும் நும் பொருட்டுத் துன்பம் உளதாமோ? ஆகாது காண்! என்று கூறிக் கண்ணகியை நன்கு தேற்றிப் பின்னர் அங்கு நின்ற ஆய்ச்சியரை நோக்கி; அடிகள் சாவக நோன்பிகள் ஆதலின் நாத்தூண் நங்கையொடு நீர் நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - அடிகள் சாவக நோன்பிகள் ஆதலாலே இந் நங்கையாருடைய நாத்தூணாருடனே நீங்களும் சென்று பகற் பொழுதிலே உண்ணும் அடிசில் சமைத்தற்கு; அமைந்த நல் கலங்கள் நெடியாது அளிமின் எனக் கூற - பொருந்திய நல்ல புதுக் கலங்களைக் காலந்தாழ்க்காமல் கொணர்ந்து கொடுப்பீராக என்று ஏவா நிற்ப; என்க.

(விளக்கம்) நும் மகனார் - நும்முடைய கணவனார்; மகன் மகள் என்னும் சொற்கள் கணவன் மனைவி என்னும் பொருளுடையவையாகப் பூண்டு வழங்கப்பட்டன. இதனை நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம், மனக்கினியாற்கு நீ மகளாயதூஉம். பண்டும் பண்டும் பலபிறப்புளவாற், கண்ட பிறவியே அல்ல காரிகை (21: 29-32) எனவரும் மணிமேகலையினும் காண்க. வழி வருங்கால் நும் பொருட்டு நும் கணவனார்க்கு வரும் துன்பத்தை அடிகளார் தாமே நீக்கினர்; இங்கும் எம்மிடத்தே அடைக்கலந் தந்தமையால் நும் பொருட்டு ஈண்டும் நும் கணவனார்க்கு வரும் வருத்தத்தை நீக்கினர் என்பது கருத்து. நோதகவு - துன்பம். உண்டோ - என்புழி ஓகாரம் எதிர்மறை. இல்லை என்றவாறு. அடிகள் என்றது கோவலனை. சாவக நோன்பு - இல்லறத்திலிருந்தே விரதம் காத்தல். நங்கை நாத்தூண் என்க - நாத்தூண் என்றது ஐயையை. கணவனுடன் பிறந்தாளை நாத்துணா என்று இக்காலத்திலும் வழங்குவர்.

இனி, நாத்தூண் நங்கையொடு அடிசில் ஆக்குதற்கு எனச் சொற் கிடந்தவாறே பொருள் கோடலுமாம். கண்ணகி தனக்கு மருகி ஆகிய விடத்தே தன்மகள் அவட்கு நாத்தூண் முறையினள் ஆதல் பற்றி அவ்வாறு கூறினள் என்க. நற்கலம் என்றது நல்லனவும் புதியனவும் ஆகிய கலங்கள் என்பதுபட நின்றது. சாவக நோன்பிகள் பகற் பொழுதிலேயே உண்ணும் விரதமுடையர் ஆதலின் நான் வழிப்படூஉம் அடிசில் எனவும். ஞாயிறு படுவதன் முன்னர் உண்ணல் வேண்டுதலின் நெடியாதளிமின் எனவும் ஓதினாள். தனக்கு அற்றை நாள் அரண்மனைக்கு நெய்யளக்கும் நாளாதலின் நீர் அளிமின் என்றாள். இங்குக் கூறியன இவர்கள் சென்ற பிற்பகலினும் அன்றிரவு செய்தனவுமாம். இனி, மற்றைநாளைச் செய்தி கூறுகின்றார்.

இடைக்குல மகளிர் அடிசிற்கு வேண்டுவன கொடுத்தல்

22-28: இடைக்குல ........... கொடுப்ப

(இதன்பொருள்) இடைக்குல மடந்தையர் இயல்பின் குன்றாமடைக்கலம் தன்னோடு - அது கேட்ட அவ் விடைக்குல மகளிர் மாதரி கூறிய தன்மையில் குறைபாடில்லாத அடிசில் சமைத்தற்குரிய கலங்களோடே; மாண்பு உடை மரபின் கோளிப்பாகல் கொழுங்கனித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் மாவின் கனியொடு வாழைத்தீங்கனி - மாட்சிமையுடையோர் கொடுக்கும் தன்மை போலப் பூவாது காய்க்கும் பலாவினுடைய கொழுவிய திரண்ட முதிர்ந்த காயும் வளைந்த வரிகளையுடைய வெள்ளரிக்காயும் கொம்மட்டி மாதுளையின் இளங்காயும் மாம்பழமும் இனிய வாழைப்பழமும்; சாலி அரிசி - செந்நெல் அரிசியும் ஆகிய இவற்றை; தம் பால் பயனொடு - தம் குலத்திற்குரிய பாலுடனும் தயிருடனும் நெய்யுடனும்; கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப திரண்ட வளையலை யணிந்த மாதே கொள்வாயாக வென்று சொல்லிக்கொடுக்க; என்க.

(விளக்கம்) மாண்புடை மரபின் என்பதற்கு உணவிற்கு மாட்சிமை யுடைய முறைமையுடைய எனலே அமையுமாயினும் அதனைக் கோளிப் பாகல் என்பதற்கு அடையாக்கி அடியார்க்கு நல்லார் மாட்சிமையுடையோர் கொடுக்கும் மரபு போலப் பூவாது காய்க்கும் பாகல் என்றது கீழ்வரும் செய்யுளைக் கருதிக் கூறியபடியாம் அச் செய்யுள்:

சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வார் சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடிற்
பலாமாவைப் பாதிரியைப் பார் 

எனவரும். கோளிப் பாகல் - பலா; வெளிப்படை. கனிந்தாய் - கனிக்கு ஆன காய், முதிர்ந்த காய்; இதனை இக் காலத்துச் செங்காய் என்ப. வால்வரிக் கொடுங்காய் எனப் பாடங் கொண்டு; வெள்ளரிக்காய் என்பர் அரும்பதவுரையாசிரியர். கொம்மட்டி மாதுளங்காய் புளிங்கறி ஆக்குதற்குச் சிறந்தது என்பர். பாற்பயன் - பாலாகிய பயன் எனலுமமையும்.

29-34: மெல் விரல் ............. ஆக்கி

(இதன்பொருள்) பல்வேறு பசுங்காய் கொடுவாய் குயத்து மெல்விரல் சிவப்ப விடுவாய் செய்ய - அவ்வாறு அம்மகளிர் கொடுத்த பல்வேறு வகைப்பட்ட பசிய காய்களை வளைந்த அரிவாளால் கண்ணகி தனது மெல்லிய விரல்கள் சிவக்கும்படி அரியா நிற்ப; திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன - பின்னர் அவற்றைச் சமைக்கும் பொழுது அவளுடைய அழகிய முகம் வியர்த்தது; இயல்பாகவே சிவந்த அவளுடைய கண்கள் பெரிதும் சிவந்தன; வை எரி மூட்டிய ஐயை தன்னொடு - சமைக்கும் பொழுது தனக்கு உதவியாக வைக்கோலால் அடுப்பின்கண் தீ மூட்டித் தந்த ஐயையினோடு; கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி - தனது கை பயின்றறிந்த சமையல் தொழில் வன்மையால் தன் காதலனுக்குத் தான் வல்லவாறு உணவு சமைத்து; கரிபுற அட்டில் கண்டனள் பெயர் - புகையால் கரிந்த இடத்தையுடைய அவ் வடுக்களைத் தொழிலை முடித்து வந்த பின்னர்; என்க.

(விளக்கம்) கொடுவாய் குயம் - வளைந்த அரிவாள். விடுவாய் செய்தல் - அரிந்து துணித்தல். அத் தொழிலில் பலயாண்டுகள் கோவலன் தன்னைக் கைவிட்டுப் போனமையால் பயிற்சி இல்லாமையால் அவளது திருமுகம் வியர்த்தது, செங்கண் சேர்ந்தன என்பதே ஈண்டு அடிகளார் கருத்தென்றுணர்க. அட்டில் சமை குமிடம் ஐயை தீ மூட்டிக் கொடுக்குமளவே கண்ணகிக்கு உதவி செய்தனள் என்பது தோன்றவை எரி மூட்டிய ஐயை தன்னொடு என்றார். மடைமைசமையற் றொழில் திறமை. அது தானும் பண்டு அவள் கை நன்கு பயின்றறிந்த திறமை என்பது போதரக் கையறி மடமையின் ஆக்கி என்றார். ஆக்கி அட்டில் கண்டனள் பெயர என இயைத்திடுக.

கண்ணகி கோவலனை ஊட்டுதல்

35-43: தாலப் புல்லின் ........... அடிகளீங்கென

(இதன்பொருள்) தாலப் புல்லின் வால் வெள் தோட்டுக் கைவல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த செய் வினைத்தவிசின் செல்வன் இருந்தபின் பனையினது தூய வெள்ளிய குருத் தோலையாலே கைத்தொழில் திறம் படைத்த மகளாலே மிகவும் அழகாகப் புனைந்து செய்த தொழில் சிறப்பமைந்த (தடுக்கு) இருக்கையின் கண் தன் காதலன் இருந்த பின்னர்; கடி மலர் அங்கையிற் காதலன் சுடு மண் மண்டையில் அடி நீர் தொழுதனள் மாற்றி மணமுடைய செந்தாமரை மலர் போன்ற தன் கைகளைக் குவித்துத் தன் காதலன் சுட்ட மட் பாண்டத்தின் கண்ணுள்ள நன்னீரால் அடிகளைக் கழுவிய நீரைத் தொழுதனளாய் மாற்றி; மண்ணகமடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல் தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவி நில மகள் எய்திய மயக்கத்தைத் தீர்ப்பவள் போல் நிலத்தில் தண்ணீரைத் தெளித்துத் தன் கையால் வட்டமாக மெழுகி; குமரி வாழையின் குருத்து அகம் விரித்து அடிகள் ஈங்கு அமுதம் உண்க என - குலை ஈனாத இளைய வாழையினது குருத்தை அதன் உள்ளிடம் தோன்ற விரித்திட்டு அதன் அகத்தே அமுதைப் பெய்து அடிகளே அமுது செய்தருளுக என்று வேண்டா நிற்ப; என்க.

(விளக்கம்) தாலப்புல் - பனை; புறக்காழ் உடையதாதலின் புல் என்றார். வால் வெள்தோடு என்றது - பனையின் மிகவும் இளமையான குருத்தோலையை அது சிறந்த வெண்மையுடையதாதலன்றியும் தூய்மையும் உடைத்தாதலின் வால் வெண்டோடு என்றார். மகடூஉ - பெண்பாற் பொதுச் சொல். தவிசு - தடுக்கு. செல்வன் - ஈண்டுக் கணவன் என்னும் பொருட்டு. அடிகழுவிய நீர், அமுதைப் பெய்து என்பன இசை எச்சம். சுடுமண் மண்டை என்றார் புதுக்கலம் என்பது தோன்ற; மண்டை என்றார், பண்டு பொற்கலம் முதலியவற்றால் அடி கழுவும் அவன் இப்பொழுது இழிந்த மண்டையாலும் அது செய்ய நேர்ந்தது என்று புலப்படுத்தற்கு. மண்ணகம்: ஒரு சொல். மாலைப் பொழுதாகலின் நிலமடந்தை மயக்கு ஒழிப்பனள் போல் என்றார். எதிர்வது உணர்ந்து மயங்கினாளை மயக்கொழிப்பாள் போல என்னும் பழையவுரை சிறப்புடைத்தன்று. குமரி வாழை என்பது பெயரின் வந்த சமாதி என்னும் அணி என்பர் (அடியார்க்கு - விரித்தீங்கு என்புழி ஈங்கு அசைச்சொல். ஆக்கி இருந்தபின் மாற்றித் தெளித்துத் தடவி விரித்து அமுதம் உண்க என இயையும்.

44-53: அரசர் ......... ஈங்கென

(இதன்பொருள்) அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் உரிய வெல்லாம் ஒரு முறை கழித்து - வணிகருக்கு ஓதவும் உணரவும் அரிய மறை நூலின்கண் உண்ணுங்கால் செய்தற்குரியனவாக விதிக்கப்பட்ட வாய்ப்பூச்சுப் பலியிடுதல் முதலிய செய்கை எல்லாம் செய்து ஒருவாறு முடித்தபின் கோவலன் அமுதுண்பானாக; ஆங்கு ஐயையும் தவ்வையும் - அவ்விடத்தே புறத்து நின்று நோக்கிய ஐயையும் அவள் அன்னையாகிய மாதரியும் அக் காதலர்களுடைய அழகு கண்டு தம்முள்; ஈங்கு நல் அமுது உண்ணும் நம்பி ஆயர்பாடியின் அசோதை பெற்று எடுத்த பூவை புது மலர் வண்ணன் கொல்லோ - இவ்வாயர்பாடியில் நல்ல அமுதுண்கின்ற இந்நம்பி பண்டு வட மதுரைக்கண் ஆயர்பாடியினிடத்தே யசோதை என்னும் ஆய்ச்சி அருந்தவத்தால் ஈன்று வளர்த்த சாயாவினது புதிய மலர் போன்ற நிறத்தையுடைய கண்ணனோ எனவும்; பல் வளைத்தோளியும் பண்டு நம் குலத்துத் தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக்கொல் என - இங்கு இவனுக்கு நல்லமூதாட்டித் துயர் தீர்க்கின்ற பலவாகிய வளையலணிந்த இந்நங்கைதானும் பழைய காலத்து நமது குலத்தில் தோன்றி ஆங்குக் காளிநதி யாற்றின்கண் தூயநீல மணி போலும் நிறமுடைய அக் கண்ணனுடைய துயரத்தைத் தீர்த்த குலவிளக்குப் போல்வாளாகிய நப்பின்னை தானோ எனவும் வியந்து; விம்மிதம் எய்தி நமக்கு ஈங்கு இவர் காட்சி கண் கொளா என உவகை பொங்கியவராய் இவ்விடத்தே நாம் காணுகின்ற இவருடைய காட்சி நம்முடைய கண்களின்கண் அடங்கமாட்டா என்று புகழ்ந்து கூறாநிற்ப என்க.  
                                      
(விளக்கம்) கண்ணன் வட மதுரையில் ஆயர்பாடியில் பிறந்து நப் பின்னையை மணந்து அவள் அன்பால் துயர் தீர்ந்தனன். இப்பொழுது இம் மதுரையில் இவ்வாயர்பாடியில் அமுதுண்ணும் இந்நம்பியும் அவனுடைய துயர்தீர்க்கும் இந்நங்கையும் அக் கண்ணனையும் நப்பின்னையையும் போலவே நமக்குக் காட்சி தருகின்றனர் என அவர் அழகினை அன்புடைய இவ்வன்னையும் மகளும் தம்முட் கூறி வியக்கின்றனர் என்க. ஆங்கு ஆயர்பாடியில் என்றது அவ்வட மதுரையில் அவ்வாயர்பாடியில் என்றவாறு. ஈங்கு நல்லமுதுண்ணும் நம்பி என்றது இம் மதுரையின் இவ்வாயர்பாடியில் நல்லமுதுண்ணும் நம்பீ என்றவாறு. பூவைப் புதுமலர் வண்ணன் என்பதும், தூமணி வண்ணன் என்பதும் கண்ணனையும் விளக்கு என்பது நப்பின்னையையும் குறித்து நின்றன. நம்பி: கோவலன். தோளி: கண்ணகி நங்குலத்துத் தூமணி வண்ணன் என்க. விம்மிதம் - வியப்பு; உவகை. இவ்விரு பொருளும் ஈண்டுக் கொள்க.

கோவலன் கண்ணகிக்கு இரங்கிக் கூறும் அன்பு மொழிகள்

54-62: உண்டி .............. அறியேன்

(இதன்பொருள்) உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு அம் மெல்திரையலோடு அடைக்காய் ஈத்த மை ஈர் ஓதியை வருக எனப் பொருந்தி - ஐயையும் மாதரியும் இவர் தம்முள் கண்ணனும் நப்பின்னையுமாகிய தம்முடைய வழிபடு தெய்வங்களையே கண்கூடாகக்கண்டு அப்பாற் சென்ற பின்னர் உணவருந்தி இனிதாக இருந்த பெரும் புகழை யுடைய கோவலனுக்கு அழகிய மெல்லிய வெற்றிலைச்சுருளோடே பிளவையும் (பாக்கினையும்) கொடுத்து நின்ற கரிய பெரிய கூந்தலையுடைய கண்ணகியைக் கோவலன் இங்கு வருக என்று அருகில் அழைத்து அணைத்துக் கொண்டவனாய் அன்புடையோய்; எம்முது குரவர் வெம்முனை அடுஞ்சுரம் போந்ததற்கு எம்முடைய தாயுந் தந்தையுமாகிய முதியோரிருவரும் நீ ஆறலைக்கும் கள்வருடைய வெவ்விய முனைகளை யுடைய பாலைநிலத்து அருவழியில் என்னோடு வந்ததனை நினைத்து; மடந்தை மெல்லடி கல் அதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ என இரங்கி -நம் மருகியினது மெல்லிய அடிகள் பருக்கைக் கற்கள் நிறைந்த அருநெறியைக் கடந்துபோதற்குச் சிறிதும் வன்மையுடையன அல்லவே என்று பெரிதும் இரங்கி; என் உற்றனர் கொல் - எத்தகைய துயரத்தை அடைந்தனரோ; யான் உளங்கலங்கி மாயம் கொல்லோ வல் வினை கொல்லோ யாவதும் அறியேன் யான் இப்பொழுது பெரிதும் நெஞ்சம் கலங்கியிருக்கின்றேன் ஆதலால் நாம் இப்பொழுது எய்தியிருக்கும் இந்நிலைமை கனவோ? அன்றெனின் முன் செய்த தீவினையின் விளைவோ? இவற்றின் ஒன்றையும் அறிகின்றிலேன் என்றான்; என்க.

(விளக்கம்) ஐயையும் தவ்வையும் அவ்விடத்தினின்றும் சென்றமை முன்னத்தாற் பெற்றாம். எம்முடைய முதுகுரவர் என்றது தன்னுடைய தாய் தந்தையரை. ஈண்டு உயர்பின் ஆகிய எம் என்னும் பன்மைச் சொல்லால் தொடங்கியவன் தன் கண் இழிவு தோன்றுதலால் யானறிகிலேன் என ஒருமைச் சொல்லால் முடித்தான்.

இனி, உளங்கலங்கி அங்ஙனம் மயங்கக் கூறினான் எனலுமாம். முதுகுரவர் மடந்தை அடி அத்தம் கடக்கவல்லுந கொல்லோ என இரங்கி என்னுற்றனர் கொல் எனக் கூட்டுக. மாயம் - கனவு. அஃதன்றாயின் வல்வினை கொல்லோ என்றவாறு. என்னுற்றனரோ என்றான் கண்ணகி முன்னர் இறந்துபட்டனரோ என்றதற்குத் துணிவின்மையால். யாவதும் - யாதும்.

கோவலன் தனது தீ யொழுக்கத்திற்குத் தானே வருந்திக் கூறுதல்

63-70: வறுமொழி .......... செய்தனை என

(இதன்பொருள்) வறு மொழியாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடு நகைப் புக்கு - யான் பயனில்லாத சொற்களைப் பேசித்திரிகின்ற வீணரோடும் காமுகரோடும் கூடிப் பிறர் பழி கூறும் கயவர் கூட்டத்தின்கண் அவருடைய வெடிச் சிரிப்புக்குள்ளாக்கி; பொச்சாப்பு உண்டு - உவகை மகிழ்ச்சியால் சோர்வுற்று; பொருள் உரையாளர் நச்சுக் கொன்றேற்கு நல்நெறி உண்டோ - உறுதிப்பொருளை அறிவுறுத்தும் சான்றோரால் விரும்பப்படும் நல்லொழுக்கத்தைக் கெடுத்த எனக்கு இனி அத்தீநெறியே அன்றி நன்னெறியும் உளதாமோ? இரு முது குரவர் ஏவலும் பிழைத்தேன் - இவையேயும் அன்றி என்னுடைய தாய்தந்தையர்க்குச் செய்யும் ஏவல் தொழிலையும் செய்யா தொழிந்தேன்; சிறு முதுக குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் - இன்னும் இளமையிலேயே மூதறிவு படைத்த நினக்கும் சிறுமை பலவும் செய்தொழிந்தேன்; வழு எனும் பாரேன் - யான் இங்ஙனம் ஒழுகியும் என்பால் உண்டான குற்றங்களை ஒரு சிறிதும் ஆராய்ந்தறிந்திலேன்; மாநகர் மருங்கின் ஈண்டு எழுக என எழுந்தாய் - யான் நமது புகார் நகரத்தினின்றும் இம் மதுரைக்கு வர நினைத்து எழுக என்று சொல்லிய அளவிலேயே நீ மறுப்பொன்றும் கூறாமலே என்னோடு ஒருப்பட்டு எழுந்தாயே; என் செய்தனை என - நீ என்ன காரியம் செய்து விட்டாய் என்று பெரிதும் இரங்கிக்கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) வறுமொழியாளர் - பயனில்லாத சொற்களைப் பேசித் திரிகின்ற வீணர். வம் பரத்தர் - புதிய புதிய பரத்தை மகளிரைத் தேடி நுகருகின்ற காமுகர். பரத்தர் என்பதற்கு இப்பொருள் உண்மையை பெண்ணியலார் எல்லாருங் கண்ணிற் பொதுவண்பர். நண்ணேன் பரத்த நின் மார்பு (குறள் 1311) என்புழியும் காண்க. குறு மொழிக் கோட்டி - பிறர் பழிதூற்றிச் சிரிப்பதையே இன்பமாகக் கருதும் கயவர் கூட்டம் நெடு நகை வெடிச்சிரிப்பு. அஃதாவது விலா விற (விழுந்து விழுந்து) சிரித்தல். பொச்சாப்பு - உவகை மகிழ்ச்சியால் செய்யத்தகும் அறங்களை மறந்தொழில். நச்சு - விரும்பப்படும் பொருள், அஃதாவது நல்லொழுக்கம் என்க. ஏவலும் பிழைத்தேன். உம்மைசிறப்பு. வழு - குற்றம். எனும் - சிறிதும். நகர் - இல்லமுமாம். நான் எழுக என்றபோது நீ அது முறைமை அலறென மறுத்து இல்லத் திராது என்னோடு எழுந்து ஒரு குற்றம் செய்தனை எனக் கழறியபடியாம்.

முன்னர்ப் புகார் நகரத்தே மாதவியோடு பிணங்கிக் கண்ணகியின்பால்வந்த கோவலன் கண்ணகி வாடிய மேனி வருத்தங் கண்டு யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடி என மாதவியை வைதவன் இங்கே மாதவி தூயள் என்றுணர்ந்துவிட்டபடியால் அவளோடாடிக் கெட்டொழிந்தேன் என்னாமையும், வறுமொழியாளரொடும் வம்பப் பரத்தரொடும் திரிந்தமையும் கண்ணகிக்குச் சிறுமை செய்தமையுமே போற்றா வொழுக்கமாகக் குறிப்பிடுதல் குறிக்கொண்டுணர்தற்பாலதாம். கண்ணகி தானும் மாதவியின் கேண்மையைக் கருதிப் போற்றா வொழுக்கம் என்று கூறிற்றிலள் எனக் கருதலாம்.

கண்ணகி மறுமொழி

71-83: அறவோர்க் களித்தலும் .......... அவள் கூற

(இதன்பொருள்) அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் - சாவக நோன்பிகளை எதிர் கொண்டழைத்து அவர்க்கு வேண்டுவன வழங்குதலும் அந்தணர்களைப் பேணுதலும் துறவறத்தோரை எதிர்கொண்டழைத்து உண்டி முதலியன கொடுத்து வழிபாடு செய்தலும்; தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை - தொன்று தொட்டு இல்லறத்தோர் மேற்கொண்டுள்ள சிறப்பினையுடைய அறமாகிய விருந்தினரை எதிர் கொள்ளுதலும் ஆகிய இவ்வறங்களை எல்லாம் நுமது பிரிவு காரணமாக இழந்திருந்த அடிச்சியை; நும் பெருமகள் தன்னொடு பெரும் பெயர்த் தலைத்தாள் மன் பெருஞ் சிறப்பின் மாநிதிக்கிழவன் - நுமது பெருமைக் குணமிக்க தாயோடும் பெரிய புகழையும் தலையாய முயற்சியினையும் மன்னனால் வழங்கப்பட்ட சிறப்பினையும் உடைய நும் தந்தையும் என்னை ஆற்றுவிக்க வருவாரைக் கண்டு; முந்தை நில்லா முனிவு இகந்தனன் ஆ - யான் நீர் என் முன்பு நில்லாமையாற் றோன்றும் வெறுப்பினை நீங்கினேனாக; அற்பு உளம் சிறந்த அருள் மொழி அளைஇ என் பாராட்ட - அதனை உணர்ந்த அவர்கள்தாம் உள்ளத்து மிக்குத் தோன்றும் அன்போடு அருள் நிறைந்தமொழிகளைக் கலந்து என்னைப் பாராட்ட - யான் அகத்து ஒளித்த நோயும் துன்பமும் நொடிவது போலும் - நான் என்னுள்ளத்து மறைத்த மனக் கவலையையும் மெய்வருத்தத்தினையும் கூறுவது போன்ற; என்வாய் அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த - என் வாய்மையல்லாத புன்முறுவலுக்கு அவர் தம் உள்ளத்தினூடே பெரிதும் வருந்தும்படி; போற்றா ஒழுக்கம் புரிந்தீர் - நீர் பெரியோர் வெறுக்கும் தீய வொழுக்கத்தினை விரும்பி ஒழுகினீர் ஆகவும்; யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் உம்முடைய சொல்லை ஒரு சிறிதும் மாற்ற நினையாத குறிக்கோளுடைய நெஞ்சத்தோடு வாழும் வாழ்க்கையை உடையேனாகலான்; யான் ஏற்று எழுந்தனன் என்று அவள் கூற - நான் நீர் கூறியதனை உடன்பட்டு எழுந்தேன் என்று கண்ணகி கூற; என்க.

(விளக்கம்) அறவோர் - சாவக நோன்பிகள்; அவர்கள் உண்ணா நோன்பு முதலியவற்றை மோகொண்டொழுகும்பொழுதும் அந்நோன்பினை முடிக்கும்பொழுதும் உறையுளும் ஆடையும் பின்னர் வழங்குதலை அறவோர்க்களித்தலும் என்றார். இவர் இல்லறத்திருந்து முதுமையுற்றோர். இவர்கள் குல்லகர் எனப்படுவர். இவர் ஓராடை மட்டும் உடுத்தி, அணிகலன் முதலியவற்றை நீக்கித் தூய எண்ணத்துடன் தவவேடம் கொண்டவர். ஆயினும் அப்பிறப்பிலேயே முத்திபெறார் ஆதலின் இவரை இல்லறத்தாராகவே கொள்வது சமண சமயத்துக்கொள்கை. இவரைப் பதினான்கு குணத்தானங்களில் பதினொன்றாம் கானத்தவர் என்பர். ஆகலின், இவரை அறவோர் என்றும் முற்றும் துறந்தோரைத் துறவோர் என்றும் பிரித்தோதினர். அறவோர் தாமும் முற்றத் துறந்தோரைப் போலச் சரிகை சென்று முறைப்படி உணவு ஏற்றுண்பர். இனி, முற்றத் துறந்தோர் தம்மை எதிர்கொண்டு அழைப்பவர் இல்லத்திலேயே உணவு கொள்வர். ஆதலின் துறவோர்க்கு எதிர்தலும் என்று கூறினார். அந்தணர் ஈண்டு அருகன் ஓதிய மறைகளைப் பயின்று ஏனையோர்க்கு அறங்கூறும் தொழிலையுடையோர். இவர் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவர் ஆதலின் அந்தணர் என ஓதப்பட்டார். இவரை உபாத்தியாயர் என்பர். இவரை ஓம்புதலும் இல்லறத்தார் கடன் ஆகலின் அந்தணர் ஓம்பலும் என்று சொற்றிறம் தேர்ந்து கூறப்பட்டது என்றுணர்க.

இனி, எந்தச் சமயத்தினும் இல்லறத்தார்க்குப் பொதுவாய அறம் ஆதலின் விருந்தெதிர் கோடலைத் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் என்று விதந்தார். இவ்விழந்தினர் நல்கூர்ந்தவராய் வரும் புதியவர் என்றறிக. பெருமகள் - கோவலன் தாய்; மாநிதிக் கிழவன் - கோவலன் தந்தை. நொடித்தல் - சொல்லுதல். வாயன் முறுவல் - பொய்ந்நகை. ஆற்றா உள்ள வாழ்க்கையீராகலின் என்பதும் பாடம்.

ஈண்டு இசையெச்சமாக ஏற்ற பெற்றி சில சொற்கள் வருவித்துரை கூறப்பட்டது.

கோவலன் கூற்று

84-93: குடி முதல் ........... ஒழிகென

(இதன்பொருள்) குடி முதல் சுற்றமும் குற்றிளையோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி - குடி முதல்வராகிய இருமுது குரவரை யுள்ளிட்ட சுற்றத்தார்களையும் குற்றேவற் சிலதியரையும் அடியார் கூட்டத்தையும் தோழியர் கூட்டத்தையும் துறந்து; நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணை ஆக என்னொடு போந்து ஈங்கு என துயர் களைந்த - நாணமும் மடப்பமும் மகளிரால் ஏத்தப்படுகின்ற அழகும் உன்னால் காக்கப்படுகின்ற நினது கற்பும் ஆகிய இந்த நான்குமே துணையாகும்படி யான் எழுக என்னலும் என்னுடன் எழுந்து வந்து இம்மதுரையின்கண் எனது தனிமைத் துன்பத்தைத் தீர்த்த; பொன்னே கொடியே புனை பூங்கோதாய் நாணின் பாவாய் நீள் நில விளக்கே கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி - பொன் போல்வாய் பூங்கொடி போல்வாய் அணிந்து கொள்ளும் பூமாலை போல்வாய் நாணம் என்னும் பண்பால் இயன்ற பாவை போல்வாய்! நெடிய நிலத்திற்றோன்றிய மகளிர் குலத்திற்கெல்லாம் மணி விளக்கம் போல்வாய்! கற்பின் கொழுந்து போல்வாய்! அழகிற்குச் செல்வம் போல்வாய்; சீறடிச் சிலம்பின் ஒன்று யான் கொண்டுபோய் மாறி வருவன் மயங்காது ஒழிக என - நின் சீறடிக்கு அணியாகிய சிலம்பினுள் யான் ஒன்றனைக் கைக்கொண்டு இந்நகரத்தினுள் சென்று விற்று வருவேன் யான் வருமளவும் நீ தனிமையால் வருந்தாதே கொள்! என்று சொல்லி; என்க.

(விளக்கம்) குடிமுதற் சுற்றம் - தாய் தந்தை முதலியோர். குற்றிளையோர் - குற்றேவல் செய்யும் மகளிர்; இவரை எடுத்துக்கை நீட்டுவார் என்பர். அஃதாவது எப்பொழுதும் தனக்கு அணுக்கராய் இருந்து தான் கூறும் பணிகளை அவ்வப்பொழுது செய்துமுடிக்கும் சிறுபணி மகளிர் என்றவாறு. அடியோர்பாங்கு அடிமைத் தொழில் செய்வோர் கூட்டம். அவர் செவிலித்தாய் முதலிய ஐவர் என்பர். அவராவார் - ஆட்டுவாள் ஊட்டுவாள் ஒலுறுத்துவாள் நொடி பயிற்றுவாள் கைத்தாய் என்னும் ஐவருமாம். பொன் முதலியவற்றிற்கு உவமம் விரித்துரைக்கப்பட்டன.

கோவலன் கண்ணகியைப் பிரிந்து சிலம்பு விற்கச் செல்லுதல்

94-99: கருங் கயல் ............... செல்வோன்

(இதன்பொருள்) கருங் கயல் நெடுங்கண் காதலி தன்னை ஒருங்கு உடன் தழீஇ - கரிய கயல் மீன் போன்று நீண்ட கண்களையுடைய தன் காதலியை அன்புடன் மெய் முழுதும் தழுவிக்கொண்டு; உழையோர் இல்லா ஒரு தனி கண்டு தன் உள் அகம் வெதும்பி வரு பனி காந்த கண்ணன் ஆகி - அவள் பக்கத்திலே துணை யாவார் யாருமின்றித் தனியளாய் இருக்கின்ற நிலைமையைக் கண்டு தனது நெஞ்சின்னுள்ளே துன்புற்று வெதும்புதலாலே பெருகி வருகின்ற கண்ணீரை அவளறியாமல் மறைத்த கண்ணையுடையவனாய் ஒருவாறு பிரிந்து; பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி வல்லா நடையின் மறுகின் செல்வோன் - பலவாகிய பசுக்களையும் எருமைகளையும் உடைய அவ்விடையர் இல்லத்தினின்றும் புறப்பட்டுத் தன் நெஞ்சத்தோடு ஒத்தியங்காத நடையினை யுடையனாய் அத்தெருவிற் செல்கின்றவன்; என்க.

(விளக்கம்) அற்றை நாள் இரவும் கூட்டமின்மை தோன்றக் கருங்கயல் நெடுங்கட் காதலி என்றார். இக்கருத்து ஆசிரியர் உள்ளத்தின் ஆழ்ந்திருக்கும் கருத்தென்பதனைப் பிறாண்டும் இவர் கூட்டமின் மையையும் உண்மையையும் கருங்கயல். நெடுங்கண், செங்கயல், நெடுங்கண், கருங்கண், செங்கண் எனக் குறிக்கொண்டோதுதலான் உணரலாம். ஒருங்குடன் என்றது எஞ்சாமைப் பொருட்டு, உழையோர் - தோழி முதலியோர். இல்லாத என்னும் பெயரெச்சத்தின் ஈறு கெட்டது. தன் கண்ணீரை அவள் காணின் பெரிதும் வருந்துவள் என்று கரந்தனன் என்க. ஆன் - பசு எருமைகளுக்குப் பொதுச் சொல் வல்லா நடை - மாட்டாத நடை. அஃதாவது மனமின்றிப் பிரிதலின் தன் கருத்திற்கு இணங்கமாட்டாத நடை என்றவாறு. தெரு - இடையர் தெரு. ஆய்ச்சியரெல்லாம் குரவை ஆடப் போனமையின் கண்ணகி தனித்திருத்தல் வேண்டிற்று.

கோவலனுக்கு எதிர்ப்பட்ட தீ நிமித்தம்

100-104: இமிலேறு .......... ஆங்கண்

(இதன்பொருள்) இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் - முரிப்பினையுடைய ஆனேறு தன்னை எதிர்ந்து பாய வந்ததனைத் தீய நிமித்தமென்று அறிந்திலன் அது தனதுகுலம் உணரும் தகுதியினை உடைத்தன்று ஆகலான்; தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து மாதர் வீதி மறுகு இடை நடந்து - பூந்துகளாகிய எருவினையுடைய மன்றமெல்லாங் கழிந்து தளிப்பெண்டுகள் தெருவினூடே நடந்து போய்; பீடிகைத் தெருவின் பெயர்வோன் ஆங்கண் - கடைத் தெருவில் செல்கின்றவன் அவ்விடத்தே; என்க.

(விளக்கம்) இமில் - எருதின் பிடருக்கும் முதுகிற்கும் இடையே பருத்துயர்ந்து திரண்ட ஓர் உறுப்பு: முரிப்பு என்பதுமது. இதனைக் குட்டேறு எனவும் திமில் எனவும் வழங்குப. இக்காலத்தார் கொண்டை என்பர். ஏறு - வழியில் எதிர்ந்து பாய வருதல் தீநிமித்தம் என்பது ஆயர்குலத்தினரே நன்கறிந்ததொன்றாம். வணிகர் அறிதற்கு இடனின்மையின் தன்குலம் அறியும் தகுதி அன்றாதலின் என்றார். மன்றம் - ஊரன்பலம். தாது எரு மன்றம் - பூந்தாதுகள் நாள்தோறும் உதிர்ந்து எருவாகிக் கிடக்கும் மன்றம் என்றவாறு. பீடிகைத் தெரு - கடைத் தெரு.

பொன் வினைக் கொல்லன் வரவு

105-112: கண்ணுள் ............... ஆதியோவென

(இதன்பொருள்) கண்ணுள் வினைஞர் கை வினை முற்றிய நுண் வினைக் கொல்லர் நூற்றுவர் பின் வர - உருக்குத்தட்டாரும் சிற்பத் தொழிலெல்லாம் கற்றுத்துறைபோகிய பணித்தட்டாரும் ஆகிய நூறு பொற்கொல்லர் தன் பின்னே வாரா நிற்ப - மெய்ப்பை புக்கு விலங்கு நடை செலவின் கைக்கோல் கொல்லனைக் கண்டனன் ஆகி - அரசன் வரிசையாகிய சட்டையை அணிந்து ஒதுங்கி நடக்கும் நடையை உடையவனாய்க் கையின் கண் பிடித்த கொடிற்றையு முடையவனாய்த் தன் எதிர் போந்த ஒரு கொல்லனைக் கண்டனனாகி; இவன் தென்னவன் பெயரொடு சிறப்புப்பெற்ற பொன்வினைக்கொல்லன் எனப் பொருந்தி - இவன் பாண்டியன் பெயரோடு வரிசை பெற்ற பொற் கொல்லன் ஆதல் வேண்டும் என்று கருதி அவன்பால் அணுக; நீ காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி விலை இடுதற்கு ஆதியோ என - நீ அரசனுடைய தேவி அணியும் தகுதியுடையதொரு காற் சிலம்பை விலை மதித்தற்கு வல்லையோ? என்று வினவ; என்க.

(விளக்கம்) கண்ணுள் வினை - சிற்பத் தொழில்; தமது தொழில் நலத்தைக் காண்போர் கண்ணினுள் நிறுத்துபவர் ஆதலின் இவர் அப்பெயர் பெற்றார் இதரை உருக்குத் தட்டாரும் பணித் தட்டாரும் என இருவகைப்படுத்துவர் அடியார்க்கு நல்லார். இவருள் முன்னையோர் யொன்னை உருக்கி வார்ப்பவர் எனவும் பின்னையோர் அணிகலன் செய்பவர் எனவும் உணர்க. நூற்றுவர் என்றது மிகுதிக்கு ஓரெண் கூறிய படியாம். நூற்றுவர் பின்வர வருதலால் அவர்க்கெல்லாம் இவன் தலைவன் என்பது தோன்றிற்று. மெய்ப்பை - சட்டை. இது அரசன் இவன் சிறப்பிற்கு அறிகுறியாக வழங்கியது. கைக்கோல் - பற்றுக்கொடிறு. இக்காலத்தார் இதனை, கொறடு என்பர். இதுவும் அரசன் வழங்கிய வரிசைப்பொருள் ஆதலின் அதனைக் கைப்பற்றி வருகின்றான் என்க. இவ்வடையாளங்களால் கோவலன் இவன் அரசனால் சிறப்புப் பெற்ற கொல்லன் என்று கருதினன் என்பது கருத்து காவலன் தேவி அணியத் தகுந்த சிறந்த சிலம்பென்பான் தேவிக் காவதோர் காற்கணி என்றான். காலுக்கு அணியும் அணி என்க. ஆதியோ என்றது அத்தொழில் வன்மையும் உடையையோ என்றவாறு. எனவே என்பால் அத்தகைய சிலம்பொன்றுளது வல்லையாயின் அதற்கு விலை மதித்திடுக என்றானுமாயிற்று.

பொற்கொல்லனின் பணிமொழி

113-116: அடியேன் .......... அவிழ்த்தனன்

(இதன்பொருள்) அடியேன் அறியேன் ஆயினும் யான் வேந்தர் முடி முதல் கலன்கள் சமைப்பேன் என - அடியேன் மகளிருடைய காலணி கலன்களை விலை மதித்தற்கு அறியேனாயினும் யான் அரசர்க்கு முடி முதலிய பேரருங் கலன்களைச் செய்கின்ற தொழில் உடையேன் கண்டீர் என்று பணிவுடன் சொல்லி; கூற்றத்தூதன் கை தொழுது ஏத்த - கூற்றனால் விடுக்கப்பட்ட தூதனைப்போல வந்த அப்பொற்கொல்லன் கை குவித்துத் தொழுது புகழ்தலாலே; போற்று அருஞ் சிலம்பின் பொதி வாய் அவிழத்தனன் - யாரானும் புகழ்தற்கரிய சிலம்பினைப் பொதிந்த பொதியினது வாயை அவிழ்த்து அதனை அவனுக்குக் காட்டினன்; என்க.

(விளக்கம்) அடியேன் அறியேன் என்றது தனது பணிவுடைமையைக் காட்டுதற் பொருட்டு, பின்னரும் யான் அத்தொழிலில் மிகவும் வல்லுநன் என்பது தோன்ற, வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப்பேன் என்றான். கூற்றத் தூதன் போல வந்த அப்பொற்கொல்லன் என்க. கைதொழு தேத்தியது தனது அன்பைப் புலப்படுத்த என்க. போற்று - புகழ். பொதி - கட்டு. அவிழ்த்து அதனை அவனுக்குக் காட்டினன் என்க.

பொற்கொல்லன் புன்செயல்

117-120: மத்தகமணி ......... நோக்கி

(இதன்பொருள்) மத்தக மணியோடு வயிரம் கட்டிய பத்திக் கேவணப் பசும் பொன் குடைச்சூல சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம் - தலையான மாணிக்கத்தோடு வயிரத்தையும் நிரல்பட அழுத்திய குழிகளையும் பசிய பொன்னால் செய்யப்பட்டு, புடைபட்டு உட்கருவிகளையும் சித்திரத் தொழிலையும் உடைய அச் சிலம்பினது தொழில் நுணுக்கமெல்லாம்; பொய்த்தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி - பொய் விரவிய தொழிலையுடைய அப்பொற்கொல்லன் அச்சிலம்பு தான் மறைத்து வைத்துள்ள அரண்மனைச் சிலம்போடு ஒத்திருத்தலைக் கண்டு விரும்பி நெஞ்சத்தால் அச்சிலம்போடு இதனை ஒத்துப்பார்த்து; என்க.

(விளக்கம்) மத்தகமணி -சிலம்பின் முகப்பில் பதித்த சிறப்பான மாணிக்கமுமாம். பத்திக் கேவணம்-நிரல்பட்ட குழிகள். (மணி யழுத்துங் குழி) பசும்பொன் என்றது கிளிச்சிறை என்னும் ஒரு வகைப் பொன்னை. உள்ளே பரல் உடைமையின் சூல் சிலம்பு என்றார். குடை -குடைபோன்று புறம் புடைத்திருத்தல். சித்திரம் - பூங்கொடி, பறவை, விலங்கு, முதலிய சித்திரங்கள். கேவணச் சிலம்பு, சூற்சிலம்பு, சித்திரச் சிலம்பு எனத் தனித்தனி கூட்டுக; புரிந்து என்பதற்கு இடுவந்தி கூறுதலைப் புரிந்து என்பர். (அடியார்க்) இடுவந்தி - பழி இல்லாதவன்மேல் பழி ஏற்றுதல். இச்சொல் இக்காலத்தும் தமிழ்நாட்டின் வட பகுதியில் வழங்குகின்றது என்ப. பொய்த்தொழில் - பொய் சொல்லுதலையே தொழிலாக உடைய எனினுமாம்.

121-126: கோப்பெருந் ................ புக்கபின்

(இதன்பொருள்) இச்சிலம்பு கோப்பெருந்தேவிக்கு அல்லதை யாப்புறவு இல்லையென - ஐய! பெருவிலையுடைய இந்தச் சிலம்பானது அரசனுடைய பெருந்தேவியார் அணிதற்குப் பொருந்துவதல்லது ஏனை மகளிர்க்குப் பொருத்தமில்லை என்று சொல்லி; யான் முன் போந்து விறல் மிகு வேந்தற்கு விளம்பிவர -ஆதலால் யான் முற்படச் சென்று வெற்றி மிகுந்த நம்மரசனுக்கு இச்சிலம்பின் சிறப்பினைக் கூறி வருமளவும்; நீர் என் சிறுகுடில் அங்கண் இருமின் என - நீவிர் இதோ இருக்கின்ற அடியேனுடைய புன் குடிலின் பக்கத்தே இருப்பீராக என்று கூற; கோவலன் சென்று அக்குறுமகன் இருக்கை ஓர் தேவகோட்டச் சிறை அகம் புக்கபின - அதுகேட்ட கோவலன் அவ்விடத்தினின்றும் போய் அக்கீழ்மகனுடைய குடிலின் பக்கத்தே யமைந்த ஒரு கோயிலின் மதிலினுள்ளே புகுந்த பின்னர், என்க.

(விளக்கம்) அல்லதை, ஐ - சாரியை. யாப்புறவு - வினா; என்பர் (அடியார்க்) முன்போந்து என்றது - உம்மை உடனழைத்துப் போகாமல் யான் மட்டும் முற்படச் சென்று என்றவாறு. அரசனாதலின் செவ்வி அறிதற் பொருட்டு இங்ஙனம் சொல்கின்றான் எனக் கோவலன் உணர்தற்கு இங்ஙனம் கூறினான், என்க. இனி அவன் முன்போந்து என்றதற்குக் காரணம் கூறுகின்றார்.

127-130: கரந்து .............. செல்வோன்

(இதன்பொருள்) யான் கரந்து கொண்ட காலணி ஈங்குப் பரந்து மன்னற்கு வெளிப்படா முன்னம் - யான் முன்பு வஞ்சித்துக் கைக்கொண்டுள்ள கோப்பெருந்தேவியின் சிலம்பு என்னிடத்துள்ள செய்தி இவ்விடத்துள்ளார்பால் பரவி அரசன் அறியுமளவும் வெளிப்படுவதற்கு முன்னமே; புலம் பெயர் புதுவனின் யான் போக்குவன் எனக் கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்-வேறொரு நாட்டினின்றும் இங்கு வந்துள்ள இந்தப் புதியவனிடத்தே அப்பழியை ஏற்றி என்பழியை இல்லையாக்குவேன் என்று தன்னுள்ளே நினைக்கின்றவன் மாபெருந் தீவினையாகிய இதனை நினைப்பதனால் ஒருசிறிதும் கலக்கமெய்தாத கொடிய தனது நெஞ்சத்தை மெய்ப்பாடு முதலியவற்றால் பிறர் அறியாத படி சிக்கென மறைத்துக் கொண்டு செல்கின்றவன் என்க.

(விளக்கம்) மன்னற்கு வெளிப்படா முன்னம் என மாறுக. புலம் - வேற்றுநாடு என்பது, பெயர் புதுவன் என்பதனால் பெற்றாம். இப்புதுவனைக் கருவியாகக் கொண்டு என் பழியைப் போக்குவன் என்றவாறு. இங்ஙனம் நினைதலும் சான்றோர்க்குச் சாலாதாகலின் இவன் இதனை நினைக்கும்பொழுது இவனுள்ளம் ஒருசிறிதும் கலங்கிற்றில்லை; அத்துணைக் கயமகன் இவன் என வியப்பார், அடிகளார் கலங்கா உள்ளம் கரந்தனன் என்றார். கரத்தல் - இவ்வஞ்சம் மெய்ப்பாடு முதலியவற்றால் முகமுதலியவற்றில் வெளிப்படாதபடி திறம்பட மறைத்தல் என்க.

பொற்கொல்லன் அரசனைக் காணுதல்

131-141: கூடல் மகளிர் ........... ஏத்தி

(இதன்பொருள்) கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் - பாண்டியன் கோப்பெருந் தேவியோடு ஒருங்கிருந்து நாடகம் காணுங்கால் அம்மதுரை நகரத்து நாடகக்கணிகை மகளிருடைய ஆடலின்கண் தோன்றிய அவரது முகத்தின் அழகும் ஆடலின் அழகும் அவ்வாட்டங்களுக்குப் பொருந்திய பாடல்களின் பொருள் அழகும் அப்பாட்டொடு பொருந்திய பண்களினது அழகுமாகிய இன்பங்கள்; காவலன் உள்ளம் கவர்ந்தன என்று - மன்னனுடைய நெஞ்ச முழுவதையும் கவர்ந்து கொண்டன ஆதலான் அவன் தன்னை நோக்கிற்றிலன் என்று தன்னுள் கருதிக் கொண்டமையாலே; குலமுதல் தேவி தன் ஊடல் உள்ளம் உள கரந்து ஒளித்துத் தலை நோய் வருத்தம் தன்மேல் இட்டுக் கூடாது ஏக - குலப்பிறப் பாட்டியாகிய கோப்பெருந்தேவி ஊடிய தன் நெஞ்சத்தை அவ்வூடல் தோன்றாதபடி தன்னுள்ளே திறம்பட மறைத்து ஊடிச் செல்பவள் தன்செலவிற்குத் தலைக்கீடாகத் தனக்குத் தலை நோகின்றது என்று சொல்லி அரசனொடு பொருந்தி இராமல் உவளகத்தே சென்று புகுந்து விட்டமையால்; மன்னவன் மந்திரச் சுற்றம் நீங்கி - அதுகண்ட அரசன் அமைச்சர் முதலிய தனது அரசியல் சுற்றத்தாரினின்றும் நீங்கித் தேவியின்பால் பெரிதும் காமம் உடையவனாய்; சிந்துஅரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு கோப்பெருந்தேவி கோயில் நோக்கி - செவ்வரி பரந்த நெடிய கண்களையுடைய பணிமகளிர் கூட்டத்தோடே ஊடிப் போன அக் கோப்பெருந்தேவியினது உவளக மாளிகையை நோக்கிச் செல்கின்றவனை; காப்பு உடைவாயில் கடைகாண் அகவையின் - காவலையுடைய அம்மாளிகையின் முன்றிலிலே கண்ட பொழுதே; வீழ்ந்தனன் தாழ்ந்து கிடந்து பல ஏத்தி - அம்மன்னனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கியவன் விழுந்தபடியே கிடந்து மன்னனைப் பற்பல புகழ்ந்து ஏத்திக் கூறுபவன், என்க.

(விளக்கம்) கூடல் மகளிர் என்றது, கூடலிடத்து நாடகக்கணிகை மகளிரை. மகளிர் தோற்றமும், அவர் ஆடல் தோற்றமும் எனத் தோற்றத்தை முன்னுங் கூட்டுக. பாடல் என்றது இசைப்பாட்டுக்களை. பகுதி என்றது அவற்றின் பொருட்பகுதிகளை என்க பண் என்றது - செம்பாலை முதலியனவும் திறம் முதலியனவும் ஆளத்தியும் பிறவும் என்க. பயம் - பயன்; அஃதாவது, இன்பம், இவையெல்லாம் அரசனுடைய உள்ளத்தைக் கவர்ந்து கொண்டமையால் அவன் பக்கத்திலிருந்த தேவியை நோக்காதொழந்தானாக. இவ்வாற்றால் தேவிக்கு ஊடல் பிறந்தது என்க. ஈண்டும், பாண்டியன் நெடுஞ்செழியன் அரசர் காதல் காதல் அறியாமை துய்த்தல் வேண்டும் என்னும் அரசியல் பிழைத்தமை தன்குலமுதற்றேவியும் அறியுமளவில் நுகர்ச்சியுற்றமையால் நுண்ணிதின் உணர்க - இடையே எழுந்துபோகும் தேவி எனக்குத் தலைநோகின்றது என அதனைத் தலைகீடாகச் சொல்லிச் சென்றாள் என்பது கருத்து ஈண்டு அரசன் தவற்றினைக் குறிப்பாக அறிவுறுத்தற்கு அத்தேவியின் சிறப்புக்கூறுவார் அடிகளார் குலமுதற்றேவி என விதந்தனர் என்னை? தேவி தவறிலள் என்பதற்கே, இங்ஙனம் விதந்தனர் என்க. மந்திரச் சுற்றம் நீங்கி என்றது பின்னர் அம் மன்னவன் தவறிழைத்தற்கு ஏதுவாய் நின்றது. இங்கு நிகழ்ந்த கூத்தும் தேவி ஊடிச்சென்றதும் மன்னவன் தேவிபால் காமமுடையவனாய்ச் சிலதியரோடு மந்திரச் சுற்றம் நீங்கி ஊடல் தீர்க்கும் உள்ளத்தோடே சென்றதும், அந்தச் செவ்வியில் பொய்த்தொழில் கொல்லன் அவன் அடிவீழ்ந்து வணங்கியதும் எல்லாம் பின்னர் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு ஏதுவாக ஊழ்வினை முந்துற்றச் செய்த செயல்களேயாம் என்பது உணர்வுடையோர் உணரற்பாலது என்க.

தன்மேல் தவறு சிறிதும் இல்லை என்று மன்னன் அறிந்துகொள்ளவேண்டும் என்று பொற்கொல்லன் அடியில் வீழ்ந்தவன் எழாமல் கிடந்தவாறே பல கூறி ஏத்தினன் என்க. ஊழ்வினை வந்துருத்துங் காலை இவ்வாறே தன் பயனைத் தப்பாமல் நுகர்வித்தற்குரிய சூழ்நிலையைத் தோற்றுவித்துக் கோடல் அதற்கியல்பென்பதும் ஈண்டுணரற்பாற்று.

பொற்கொல்லன் கூற்று

142-147: கன்னகம் ......... இருந்தோன் என

(இதன்பொருள்) கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் துன்னிய மந்திரம் துணையெனக்கொண்டு - மன்னர் மன்ன! அடியேன் விண்ணப்பத்தைத் திருச்செவிக் கொண்டருளுக! கன்னக்கோல் இல்லாமலும்; கவைக்கோல் இல்லாமலும் தனது நெஞ்சின்கண் நிலைபெற்ற மந்திரம் ஒன்றனையே தான் செய்யும் களவுக்குத் துணைகருவியாகக் கொண்டு; வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து - நமது அரண்மனை வாயில் காவலர்களை யாதொன்றும் அறியா வண்ணம் மயக்குகின்ற உறக்கத்தே வீழ்த்திப் பின்னர்; கோயில் சிலம்பு கொண்ட கள்வன் - அரண்மனைக்குட் புகுந்து அங்கிருந்த தேவியாருடைய சிலம்பைக் களவாடிய கள்வன்; கல் என் பேரூர்க் காவலர்க் கரந்து - எப்பொழுதும் கல்லென்னும் ஆரவாரத்தையுடைய இம் மதுரை மாநகரத்துக் காவலருடைய கண்ணிற்படாமல் மறைந்து இற்றை நாள்; என் சில்லைச் சிறுகுடில் அகத்து இருந்தோன் என- அடியேனுடைய புன்குடிலினிடத்தே வந்து பெரிதும் துணிவுடன் இருக்கின்றான் என்று சொல்லா நிற்ப, என்க;

(விளக்கம்) கன்னகம் - சுவர் அகழும் கருவி; கன்னக்கோல். கவைக்கோல் - கொடிற்றுக்கோல் (கொறடு). இது சுவரின் செங்கல், படைக்கல், முதலியவற்றைக் பறிக்குங்கருவி. குத்துக்கோலென்பாருமுளர். உம்மைகள் சிறப்பு. துணை - துணைக்கருவி. நகருக்குள் கரந்து வருதலின் அருமைதோன்றக் கல்லென் பேரூர் என்றான். கல்லென்: ஒலிக்குறிப்பு. தன்பால் அரசனுக்கு இரக்கம் பிறத்தற்கு என் சில்லைச் சிறுகுடில் என்றான். இருந்தோன் என்புழி ஆ, ஓ வாயிற்றுச் செய்யுளாகலின்.

சினையலர் வேம்பன் செயல்

148-153: வினைவிளை .............. கொணர்கவீங்கென

(இதன்பொருள்) சினை அலர்வேம்பன் - கொம்பின்கண் மலருகின்ற வேப்பமலரால் இயன்ற மாலையினையுடைய அப் பாண்டிய மன்னன்தானும், வினைவிளை காலம் ஆதலின் - கோவலன் முற்பிறப்பிற் செய்த தீவினையானது முதிர்ந்து தன்பயனை நுகர்விக்கும் காலம் அதுவாக இருத்தலாலேயும்; தேரான் ஆகி - தான் காமக்காழ் கொண்ட மனததனாய் இருத்தலாலும் அப் பொற்கொல்லன் பொய்ம்மொழியைத் தெளிந்தவனாய், ஊர்காப்பாளரைக் கூவி-அப்பொழுதே அவ்வூரைக் காக்கும் காவலாளர் ஒரு சிலரை அழைத்துக் கூறுபவன், ஈங்கு என் தாழ்பூங் கோதை தன் காற்சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் - இப்பொழுதே நீவிர் இக்கொல்லன் பின் சென்று என்னுடைய தாழ்ந்த மலர் மாலையணிந்த பெருந்தேவியின் காற் சிலம்பு இக் கொல்லனால் காட்டப்படுகின்ற களவின்கண் காழ்த்த அக் கள்வனின் கையின்கண் உளதானால்; கொன்று அச்சிலம்பு ஈங்கு கொணர்க என - அக் கள்வனைக் கொன்று அந்தச் சிலம்பினை இங்குக் கொணர்வீர் ஆக என்று சொல்லி, என்க.

(விளக்கம்) வினை விளை காலம் என்றது கோவலனுடைய பழவினை விளை காலம் எனக் கோவலன் வினையைக் குறித்தபடியை யாம் பதிகத்தும் விளக்கினாம்.

இனி, வேம்பன் காமத்தால் கதுவப்பட்ட நெஞ்சத்தனாய்த் தனக்குரிய செங்கோன்மை முறைமையினின்று வழுவி இங்ஙனம் காவலர்க்குப் பணித்தான் என்பதே அடிகளார் கருத்து என்க. இங்ஙனம் வேம்பன் தேராமைக்கும் அவ் வேம்பன் வினை விளை காலத்தை ஏதுவாகக் கூறுமிடத்து அடிகளார் இக் காப்பியத்திற்குக் கொண்ட அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாம் என்னும் கொள்கை பொருளின்றி நின்று வற்றும் என்பதையும் ஊழ்வினை உருத்து வந்தூட்டுதற்கும் இது கூறியது கூறலாய் மிகையாதலும் நுண்ணிதின் உணர்க. வேம்பன் அப்பொழுதே தன் அரசியல் பிழைத்தான் அதுவே அவனுக்குக் கூற்றாய் முடிந்தது என்பதே அடிகளார் கருத்தென்று துணிக. மேலும், பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்து, ஆள்வினை இன்மை பழி (குறள் 618) என்பதற்கிணங்க ஈண்டுப் பாண்டியன் பழிக்கப்படுதலும் கோவலன் பழிக்கப்படாமையும் நோக்குக. கன்றிய - காழ்கொண்ட; செய்து முதிர்ந்த என்றவாறு. ஈங்குக் கொணர்க என்றது தான் தேவியின் ஊடல் தீர்த்தற்கு அச் சிலம்பும் ஒரு கருவியாம் என்று தன் கையில் கொண்டு போதற் பொருட்டு, என்க.

154-161: காவலன் ............ காட்ட

(இதன்பொருள்) காவலன் ஏவக் கருந்தொழில் கொல்லனும் ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்துஎன - அப் பாண்டிய மன்னன் அக் காவலர்களை ஏவாநிற்பக் கொடிய தொழிலையுடைய அக் கொல்லன்றானும் அரசனால் ஏவப்பட்ட உள்ளத்தை யுடையனாய் யான் நினைத்த காரியத்தைச் செய்து முடித்தேன்; எனத் தன்னுள் கருதியவனாய், அக் காவலர் பின் தொடர; தீவினை முதிர்வலைச் சென்று பட்டு இருந்த கோவலன் தன்னைக் குறுகினன் ஆகி- தான் முற்பிறப்பிலே செய்த தீவினையானது தன்பயனை ஊட்டுமளவு முதிர்ந்திருந்த ஊழாகிய வலையின் அகத்தே புகுந்து அதன்வயப்பட்டிருந்த அக் கோவலனை அணுகி அவனுக்கு அக் காவலரைக் காட்டிக் கூறுபவன்; இவன் வலம்படு தானே மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் என -ஐய! இவர்கள் வெற்றி பொருந்திய படைகளையுடைய மன்னவனுடைய பணியை மேற்கொண்டு அவன் கட்டளையிட்டபடி நும்பாலுள்ள சிலம்பினைக் காண்பதற்கு ஈண்டு வந்தவர் என அறிவித்துப் பின்னர்; செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம் பொய்வினைக்கொல்லன் புரிந்து உடன் காட்ட-அதுகேட்ட கோவலன் தன் சிலம்பினைக் காட்டினனாகப் பின்னர் அக் காவலர்க்குத் தொழிலின் சிறப்பாலே திகழுகின்ற அந்தச் சிலம்பினது அருமை பெருமை முதலியவற்றைக் கூறுபவன் போலே அவரைத் தனியிடத்தே யழைத்துப் போய் அப் பொய்த் தொழிற் கொல்லன் அச் சிலம்பு அரண்மனைச் சிலம்பு என அவர் நம்புதற்கு வேண்டுவன வெல்லாம் ஆராய்ந்து ஒரு சேரக் கூறி இஃது அரண்மனைச் சிலம்பே என்று சொல்லிக் காட்டா நிற்ப என்க.

(விளக்கம்) அரசன் காவலரை இவன் பின்னே போமின் என ஏவிய துணையானே தானும் ஏவப்பட்ட உள்ளத்தையுடையவனாய் என்க. எண்ணியது (127) யான் கொண்ட ....... (139) போக்குவன் என்பது . தீவினை முதிர்ந்த (ஊழாகிய) வலை என்க. இவர் சிலம்பு காணிய வந்தோரெனக் கோவலனுக்கு அறிவித்து அவன் அச் சிலம்பினைக் காட்ட அக் காவலர் அதனைக் கண்ட பின்னர் எனவும் அவரைத் தனியிடத்தே யழைத்துப்போய் எனவும் இன்னோரன்ன பிறவும் இசை எச்சமாக வருவித்துக் கூறப்பட்டன.

162-165: இலக்கண .......... உரைப்போன்

(இதன்பொருள்) இலக்கண முறைமையின் ஈங்கு இருந்தோன் - அப் பொய்த் தொழிற் கொல்லன் அக் காவலர்க்கு ஆவனவெல்லாம் கூறி இவன் தான் கள்வன் என்று காட்டிய பொழுது அவர் தாமும் உளம் துணுக்குற்றவராய் ஏடா! இங்கிருக்கும் இவன் மேன்மக்களுக்கு உரிய இலக்கணம் எல்லாம் உடையனாய் அவர் இருக்குமாறு போலே இருக்கின்றான்; இவன் கொலைப்படும் மகன் அலன - இவன்றான் எம்மால் கொலை செய்தற்குரிய கள்வன் ஆகான், நீ பொய் கூறுதி; என்று கூறும் அருந்திறல் மாக்களை என்று மறுத்துக் கூறுகின்ற வெல்லுதற்கரிய ஆற்றலுடைய அக் காவலரை; கருந் தொழிற் கொல்லன் அகம் நகைத்து உரைத்து அக் கொடுந் தொழிற் கொல்லன் தன்னுள்ளே அவரை இகழ்ந்து நகைத்துக் கூறுவான்போலே பொய் நகை நாட்டிக் கூறுபவன் நீவிர் கள்வர் தன்மை அறிந்திலீர் என்று கடிந்துரைத்து மேலும்; காட்டினன் உரைப்போன் - கள்வர் தம் இயல்பினைக் களவு நூலில் கூறியவற்றை அவர்க்கு எடுத்துக் காட்டிச் சொல்லுபவன், என்க.

(விளக்கம்) இலக்கணம் - மேன்மக்களுக்குரிய (இலக்கணம்) முறைமை. என்றது அவர் இருத்தலும் மொழிதலும் முதலிய முறைமை என்க. இது கோவலன் அவரை அன்புடன் முகமலர்ந்து வரவேற்றதனையும் சிறிதும் ஐயுறாவகை, சிலம்பினை அவர்க்குக் காட்டியதனையும் முருகவேள் போன்ற அவனது தோற்றப் பொலிவினையும் கண்டு அக் காவலர் கூறியவாறாம். இவ்வாற்றால் அடிகளார் அவருடைய நுண்மாண் நுழைபுலனை வியந்து பாராட்டுவார் அருந்திறல் மாக்கள் என்றார். மாக்கள் என்புழித் தன்பொருள் குறியாது மக்கள் என்னும் பொருட்டாய் நின்றது. அகம் நகைத்து என்றது அகத்தே எள்ளல் காரணமாக நகைப்பார் போலே நகைத்து என்பதும் உரைத்து என்றது நீவிர் கள்வர் தன்மை அறிகிலீர் எனக் கடிந்துரைத்து என்பதும் தோன்ற நின்றன. கருந்தொழில் - பொய்யும் களவும் கொலையும் பிறவுமாகிய கொடுந்தொழில், என்க. காட்டினன்: முற்றெச்சம்.

(164) அகநக எனவும் அகநெக எனவும் (அடியார்க்கு) பாடங்கள் உண்டு. அகநகை - இகழ்ச்சிநகை என்பாருமுளர்.

பொற்கொல்லன் கூறிய கள்வர் இலக்கணம்

166-169: மந்திரம் ............ திரிவது

(இதன்பொருள்) இழுக்குடை மரபின் கட்டு உண்மாக்கள் - குற்றமுடைய ஒழுக்கமாகிய களவை மேற்கொண்டு பிறர் பொருளைக் களவு செய்து உண்டு வாழும் கள்வர்கள்; மந்திரம் தெய்வம் மருந்து நிமித்தம் தந்திரம் இடன் காலம் கருவி என்று எட்டு உடன் அன்றே - மந்திரமும், தெய்வமும், மருந்தும், நிமித்தமும், தந்திரமும், இடனும், காலமும், கருவியும் ஆகிய இந்த எட்டினையும் அன்றோ; துணையெனத் திரிவது - எப்பொழுதும் தமக்குத் துணையாகக் கொண்டு திரிவது என்றான், என்க.

(விளக்கம்) மருந்தே இடனேயென்ற ஏகாரமிரண்டும் எண். அன்றேயென்பது தேற்றம். கட்டுண்மாக்கள் எட்டுடனன்றே துணையெனத் திரிவதென்க.

மருந்து

170-171: மருந்தின் .............. நவைப்பட்டீர்

(இதன்பொருள்) மருந்தின் பட்டீராயின் - நீவிர் காலம் தாழ்த்தலின்றி இவனைக் கொல்விராயின், தப்புவதன்றி, இவனுடைய மருந்தில் அகப்படுவிராயின்; யாவரும் பெரும் பெயர் மன்னனின் பெரு நவைப்பட்டீர் - நீவிரெல்லாம் பெரிய புகழையுடைய நம் மன்னவனுடைய ஒறுத்தல் ஆகிய பெரிய துன்பத்தின்கண் இப்பொழுதே அகப்பட்டீர் காண், என்றான் என்க.

(விளக்கம்) தெளிவு பற்றிப் படுவீர் என்னாது பட்டீர் என இறந்த காலத்தில் கூறினான்.

என்னை?

வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும்
இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை

(தொல்-சொல். வினை -48.) என்பது விதியாகலின். பெரும் பெயர்-பெரிய புகழ் பெருநவை-ஒருத்தலாகிய பெருந்துன்பம் என்க.

மந்திரம்

172-173: மந்திரம் ......... காண்குவமோ

(இதன்பொருள்) மந்திரம் நா இடை வழுத்துவர் ஆயின் - தாம் பயின்றுள்ள மந்திரத்தைத் தமது நாவினால் உருவேற்றுவாராயின்; இந்திர குமரரின் - தேவகுமாரரைப் போல; யாம் காண்குவமோ - நாம் நம் கண்ணால் காணவல்லேம் அல்லேம் என்றான் என்க.

(விளக்கம்) வழுத்துதல் - உருவேற்றுதல். இந்திரகுமாரரை நாம் காணமாட்டாமை போல இவரையும் காணமாட்டேம் என்றவாறு.

தெய்வம்

174-175: தெய்வம் .......... பெயர்குவர்

(இதன்பொருள்) தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின் - தாங்கள் வழிபடுகின்ற தெய்வத்தை எப்பொழுதும் தமக்கு முன் நிற்கும்படி நெஞ்சத்தால் தெளிந்து நினைப்பாராயின், கை அகத்து உறுபொருள் காட்டியும் பெயர்குவர் -தாம் களவு செய்து தம் கையின்கண் வைத்துள்ள மிக்க பொருளை நமக்குக் காட்டிய பின்னரும் அப்பொருளோடு தப்புவர் என்றான், என்க.

(விளக்கம்) தெய்வம் - வழிபடு தெய்வம். தோற்றம்-அத் தெய்வத்திற்குத் தாம் தம்நெஞ்சத்தே கற்பித்துக் கொண்ட உருவம். கைப்பொருளை நமக்குக் காட்டிய பின்பும் அத் தெய்வம் அவரைத் தப்புவிக்கும் என்பது கருத்து.

மருந்து

176-177: மருந்தின் ........... உண்டோ

(இதன்பொருள்) நம் கண் மருந்தின் மயக்குவராயின் - இத்தகைய கள்வர் தாம் நம்மிடத்தே தமது மருந்தினாலே மயக்கத்தைச் செய்வாராயின்; இருந்தோம் பெயரும் இடனும் மார் உண்டோ-அவரைக் கண் கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கின்ற யாம் இருந்த விடத்தின் இருப்பதல்லது ஒரு சிறிதும் புடைபெயர்ந்து செல்லுதற்கும் வழி இல்லையாம் என்றான்; என்க.

(விளக்கம்) அவர் கருவிகள் எட்டனுள் மருந்து நும்மை இப்பொழுது மயக்கிற்றுப் போலும் அதனாற்றான் அவனைப் புகழ்கின்றீர் போலும் என்பான் இவ்வெட்டனுள் மருந்தினை முன்னுங் கூறினன். இப்பொழுது அவன் போவானாயின் அவனை நீயிர் தொடர்ந்து பற்றவும் வல்லீர் அல்லீர் என அச்சுறுத்துவான் மீண்டும் அதனை விதந்தெடுத்தோதினன். இதன்பயன் அவர்தம் காரியத்தைச் செய்தற்கு விரைதலாம் என்க. உண்டோ என்னும் வினா. அதன் எதிர் மறைப்பொருளை வற்புறுத்து நின்றது. மார் : இடைச் சொல்.

நிமித்தம்

178-179: நிமித்தம் ................ புகுதினும்

(இதன்பொருள்) நிமித்தம் வாய்த்திடின் அல்லது - நன்னிமித்தம் வாய்க்கப் பெற்றாலன்றி; அரும் பொருள் வந்து கைப்புகுதினும் யாவதும் புகற்கிலர் - பெறுதற்கரிய பொருள் தானே வந்து தம் கையிற் புகுந்தாலும் சிறிதும் தம் தொழிலிடத்தே புகுதமாட்டார்; என்க.

(விளக்கம்) நிமித்தம் - நன்நிமித்தம். யாவதும் - ஒரு சிறிதும். புகற்கிலர் - புகுதார்.

தந்திரகரணம்

180-181: தந்திர .......... எய்துவர்

(இதன்பொருள்) தந்திர கரணம் எண்ணுவர் ஆயின் - தமக்குரிய களவு நூலில் கூறப்பட்டிருக்கின்ற செயல்களை எண்ணி அவ்வாற்றால் களவு கொள்ளப் புகுந்தால்; இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர் - தேவேந்திரனுடைய மார்பிலணிந்த முத்து மாலையையும் அவனறியாமல் களவு செய்வர் என்றான், என்க.

(விளக்கம்) தந்திரகரணம் - நூலில் சொல்லும் செயன் முறை. இந்திரன் தனது சுற்றம்சூழ எப்பொழுதும் கண்ணிமையாது விழித்திருப்பவன் ஆதலால் அத்தகையோனுடைய ஆரத்தையும் அவனறியா வண்ணம் களவு செய்யும் திறமுடையார் என்பது கருத்து. தந்திரம் - ஈண்டுக் களவு நூல்.

இடம்

182-183: இவ்விடம் ............ காண்கிற்பார்

(இதன்பொருள்) இப் பொருள் கோடற்கு இவ்விடம் இடம் எனின்-இந்தப் பொருளைக் களவு கொள்ளுதற்கு இந்த இடமே சிறந்த இடம் எனத் துணிந்து அப் பொருளை அவர் களவு கொண்ட பின்னர்; அவ்விடத்து அவரை யார் காண்கிற்பார் - அவ்விடத்தே அவரை யார் தாம் கண்ணாற் காண வல்லார் என்றான்; என்க.

(விளக்கம்) இடம் எனின் -சிறந்த இடம் என்று துணிந்தால் என்க. காண்கிற்பார்: ஒருசொல். கிற்பார்-செய்வார் என்பாருமுளர்.

காலம்

184-185: காலம் ........... உண்டோ

(இதன்பொருள்) அவர் காலம் கருதி பொருள் கையுறின் - அவர் தாம் களவு செய்தற்குச் சீர்த்த காலம் இஃது என்று துணிந்து அக்காலத்தில் களவு கொள்ள எண்ணிப் பொருளைக் கைப்பற்றிவிடின்; மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ - விண்ணவராயினும் அக் களவினை விலக்குதல் கூடுமோ? களவுகொண்டே விடுவர் என்றான்; என்க.

(விளக்கம்) காலம் - சீர்த்த காலம். மேலோர் - விண்ணவர்.

கருவி

186-187: கருவி ........... காண்கிற்பார்

(இதன்பொருள்) அவர் கருவிகொண்டு அரும்பொருள் கையுறின் - அவர் தாம்; கன்னகம் முதலிய கருவிகளைக் கொண்டு களவு கொள்ளுதற்கும் அரிய பொருள்களைக் கைப்பற்றிக் கொள்வாராயின்; இரு நிலம் மருங்கின் யார் காண்கிற்பார் - பின்னர் பெரிய இந் நிலவுலகத்தின்கண் அவரை யாரே காண்பார், என்றான் என்க.

(விளக்கம்) கருவி - கன்னகமும் கவைக்கோலும் பிறவும் என்க.

188-189: இரவே ...............இல்லை

(இதன்பொருள்) இரவே பகலே என்று இரண்டு இல்லை -இவருக்கு இரவென்றும் பகல் என்றும் கூறப்படுகின்ற கால வேறுபாடு இரண்டும் இல்லையாம்; கரவு இடம் கேட்கின் ஓர் புகல் இடம் இல்லை - அவர் களவு செய்யும் இடத்தைக் கேட்கின் நாம் ஓடி ஒளிக்கலாம் இடம் வேறு இல்லையாம்; என்றான் என்க.

(விளக்கம்) இரவு பகல் என்று இரண்டில்லை எனவே இவர் எப்பொழுதும் களவு செய்ய வல்லுநர் என்றவாறாம். கரவிடம் கேட்பின் இவர் களவு செய்யும் இடம் யாது என்று வினவின் அதற்கு விடை கூறுதற்கு ஓரிடமும் இல்லை என்றான் எனினுமாம். எனனே இவர் எவ்விடத்தும் களவு கொள்ள வல்லுநர் ஆவார் என்றான் ஆயிற்று.

பொற்கொல்லன் கள்வர் ஆற்றலுக்குச் சான்றாக ஒரு வரலாறு புனைந்து கூறுதல்

190-202: தூதர் ................. கொல்லல்

(இதன்பொருள்) தூதர் கோலத்து வாயிலின் இருந்து - காவலர்களே! பண்டு ஒருநாள் ஒரு கள்வன் வேற்று நாட்டரசர் தூதர் போலக் கோலங்கொண்டு வந்து நம் மன்னனுடைய அரண்மனை வாயிலின்கண் பகற்பொழுதின்கண் தங்கியிருந்து; வல் இருள் மாதர் கோலத்துப் புக்கு - அப் பகற்பொழுது கழிந்து வலிய இருளையுடைய இரவு வந்துற்றவுடன் யாரும் அறியாமல் அரண்மனைக்குட் புகுந்து; விளக்கு நிழலில் துளக்கு இலன் சென்று - விளக்கு நீழலிலே பள்ளியறையினுள் சிறிதும் அஞ்சாமல் புகுந்து; ஆங்கு இளங்கோ வேந்தன் வெயிலிடு வயிரத்து துளங்கு ஒளி ஆரம் - அவ்விடத்தே இந்நெடுஞ்செழியன் தம்பியாகிய வேந்தன் துயில் கொள்ளும் பொழுது அவன் மார்பில் அணிந்திருந்த வெயிலிடு வயிரத்தையுடைய ஒளிதிகழும் முத்து மாலையை; மின்னின் வாங்க - மின்னல் போன்று விரைந்து கைக்கொண்டானாக; துயில்கண் விழித்தோன் தோளில் காணான் அப்பொழுது துயில் கலைந்து கண் விழித்துப் பார்த்த அவ்விளங்கோ வேந்தன் ஆரத்தைத் தன் தோளில் காணப்பெறானாய்; உடை வாள் உருக - தனது உடை வாளை உருவினானாக, உறை கை வாங்கி எறிதொறும் செறித்த இயல்பிற்கு ஆற்றான் - அதன் உறையைத் தன் கையிற் பற்றித் தான் குத்துந்தோறும் வாளில் உறையைச் செறித்த அத் தன்மைக்குப் பொறானாய்; மல்லிற்காண மணித்தூண்காட்டிக் கல்வியில் பெயர்ந்த கள்வன் தன்னை மற்போரான் அவன் வலியைக் காண விரும்பிய அளவிலே அவ்விடத்து நின்றதொரு மணித்தூணைத் தானாகக் காட்டித் தன் களவு நூற் பயிற்சியினால் மறைந்த கள்வனை; கண்டோர் உளர் எனில் காட்டும்-கண்டோர் உளராயின் அவர்களைக் காட்டுமின்; ஈங்கு இவர்க்கு உண்டோ உலகத்து ஒப்போர் என்று அக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல - காட்டுவாரிலர் ஆகலான் இக் கள்வர்க்கு ஒப்பாவார் இவ்வுலகத்துப் பிறர் ஒருவரேனும் உண்டோ என்று அக்கொலைத் தொழிலினையுடைய பொற்கொல்லன் கூற; என்க.

(விளக்கம்) தூதர் - வேற்று நாட்டு அரசரால் விடப்பட்ட தூதர். வாயிலினிருந்து என்பதற்கு மேலே வல்லிருட்புக்கு என்றமையால் வாயிலின்கண் பகல் முடியுந்துணையும் இருந்தான் என்பது பெற்றாம். இளங்கோ நெடுஞ்செழியனுக்குத் தம்பியாகிய அரசன் என்க. வெயிலிடு - வெயில் போல ஒளிவிடுகின்ற; வயிரத்தின் ஒளியால் ஆரத்தைக் கண்டு வாங்க எனினுமாம். பண்டு துயின்றவன் என்பது தோன்ற துயில் கண் என்றார். அரசன் உடைவாளை உருவியவுடன் கள்வன் அவ்வுறையைக் கைப்பற்றி என்றவாறு. அரசன் வாளால் குத்துந்தோறும் கள்வன் தன் கையிலிருந்த உறையின்கண் அவ்வாளை ஏற்றான் என்னும் இஃது அக் கள்வனின் வியத்தகு செயலை உணர்த்துதலுணர்க. மல்லிற்காண என்றது அரசன்தன் வாள் பயன்படாமை கண்டு அதனை ஒழித்து மற்போரினாலே அக் கள்வன் வலியைக் காண்டற்கெழ என்றவாறு. எழுந்த உடன் கள்வன் எதிர்நின்ற தூணின் மறைந்து தப்பினன்; அவ்வழி மன்னன் அக்கள்வன் மறைந்த தூணையன்றிப் பின்னர்க் கள்வனைக் கண்டிலன் என்பது கருத்து. இது, முன்னர் மந்திரம் நாவிடை வழுத்துவராயின் இந்திரகுமரரின் யாங் காண்குவமோ என்பதற்கு எடுத்துக் காட்டாயிற்று.

202-203: ஆங்கோர் .......... கூறும்

(இதன்பொருள்) ஆங்கு ஓர் திருந்து வேல் தடக்கை இளையோன் - அவ்விடத்தே அக்காவலர் தம்முள் வைத்துத் திருந்திய வேலையுடைய பெரிய கையையுடைய ஆண்டால் இளையவனாகிய ஒரு காவலன், கூறும் - தனது பட்டறிவு கொண்டு சொல்லுவான் அஃது யாதெனின் என்க.

(விளக்கம்) ஆங்கு, என்றது அங்ஙனம் அக்கொல்லன் கூறி முடித்த பொழுது எனக் காலத்தின் மேற்று. அக் கள்வன் கூற்றெல்லாம் உண்மை என்றே அக் காவலன் கொண்டனன் என அவன் பேதைமை தோன்ற இளையோன் என்றார்.

இளங்காவலன் எடுத்துக்காட்டு

204-211: நிலனகழ் .................. படையிரென

(இதன்பொருள்) நிலன் அகழ் உளியன் நீலத் தானையன் கலன் நசை வேட்கையின் - நிலத்தை அகழுகின்ற உளிளை யுடையவனாய் நீல நிறமுடைய ஆடையை உடுத்தியவனாய் அணிகலன்களை விரும்பிய விருப்பத்தாலே; கடும் புலி போன்று - இரைதேடி இருளிலே திரிகின்ற கடிய புலியைப்போல; மாரி நடு நாள் வல்இருள் மயக்கத்து ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற - மழையையுடைய கார்காலத்தில் அரையாமத்தில் வலிய இருளால் கண்களை மயக்குவதும் ஊரிலுள்ள மாந்தரெல்லாம் துயில்வதற்கு இடனானதும் ஆகிய ஓர் இரவிலே ஊர் காவல் மேற்கொண்டு செல்லும் என்னெதிரே ஒரு கள்வன் தோன்றினான் அப்பொழுது, கைவாள் உருவ என் கைவாள் வாங்க - யான் அவனை எறிதற் பொருட்டு என் உடை வாளை உருவினேனாக உருவியவுடன் அக்கள்வன் அவ்வாளைத் தன் கையில் பற்றினன்; யான் அவன் எவ்வாய் மருங்கினும் கண்டிலேன் - வாளைப்பற்றிய கள்வன் அப்பொழுதே அவ்வாளோடு மறைந்தொழிந்தானைப் பின்னர் யான் எல்லா இடங்களினும் தேடிப்பார்த்தும் கண்டிலேன்; இவர் செய்தி அரிது - ஆதலால் இவருடைய செய்கையை நம்மனோர் அறிதலும் அரிதேயாம்; வேந்தனும் அலைக்கும் - யாம் செய்யக்கடவ செயலைச் செய்யாது தப்பின் நம்மரசனும் நம்மை ஒறுப்பன் எனவே இங்ஙனம் காலந் தாழ்த்தல் நன்றன்று; உறுபடையீர் - மிக்க படைக்கலத்தை யுடையீர்; உரியது ஒன்று உரைமின் - யாம் இப்பொழுது செய்தற்குரிய செயலொன்றனைத் துணிந்து விரைந்து சொல்லுமின்; என - என்று கூறா நிற்ப என்க.

(விளக்கம்) இதனோடு நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர், மென்னூலேணிப் பன்மாண் சுற்றினர், நிலனகழுளியர் கலனசைஇக்கொட்கும், கண்மாறாடவ ரொடுக்க மொற்றி எனவரும் மதுரைக் காஞ்சியையும் ஒப்பு நோக்குக. கோவலனையும் கள்வனாகக் கொண்டு இவர் செய்கை என்றான்.

உளியனாய்த் தானையனாய்ப் புலி போன்ற ஒருவன் தோன்ற என்க.

கல்லாக் களிமகன் செயல்

212-217: கல்லாக் களிமகன் ............. உருத்தென்

(இதன்பொருள்) கல்லாக் களிமகன் ஒருவன் - திருந்து வேல் தடக்கை இளையோன் வேந்தனும் அலைக்கும் என்று கூறக்கேட்டபொழுது அக் காவலருள் வைத்துக் கல்லாமையை யுடைய களிமகன் ஒருவன் பிறிதொன்றும் நினையானாய் அரசன் அலைக்கும் என்றஞ்சி; கையில் வெள்வாள் எறிந்தனன் - ஞெரேலெனத் தன்கையிற் பற்றி யிருந்த வெள்ளிய வாளால் கோவலனை வெட்டினன்; விலங்கு ஊடு அறுத்தது - அவ்வெட்டுக் குறுக்காகத் துணித்தது; புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப -துணிபட்ட அவ் உடற்குறைப் புண்ணினின்றும் கொப்புளிக்கின்ற குருதி குதித்து எங்கும் பரவா நிற்ப; மண் அக மடந்தை வான் துயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய - நிலமகள் தானும் பொறுமை இழந்து பெரிதும் துன்புறா நிற்பவும், அரசனுடைய செங்கோல் வளையவும்; கோவலன் பண்டை ஊழ் வினை உருத்து வீழ்ந்தனன் - கோவலன் இங்ஙனம் தனது முற்பிறப்பிலே செய்த தீவினையானது முதிர்ந்து வந்து ஊட்டுதலாலே வெட்டுண்டு விழுந்தான் என்பதாம்.

(விளக்கம்) ஏனைக் காவலர் கோவலனைக் கண்டபொழுது இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் கொலைப்படு மகன் அலன் என்று தம் கருத்தினைக் கூறியவர் அக்கருந்தொழிற் கொல்லன் கூறியவற்றைக் கேட்டும் கோவலனைக் கொலை செய்யத் துணியாமை கண்டு அவருள் இளையோன் கள்வரைப்பற்றித் தானும் ஒன்று கூறி இப்பொழுது செய்தற்குரியது யாது - அஃதாவது - இவனைக் கொல்வதோ விட்டுச்செல்வதோ என வினவவும் முன்னர் இவன் கொலைப்படுமகனலன் என்றவர் அவ்விளைஞன் வினாவிற்கு விடை கூறுமுன்பே அவருள் ஒருவன் வெட்டினன் என்ற அடிகளார் அங்ஙனம் அவன் வெட்டுதற்கு ஏதுக் கூறுவார் -அவனைக் கல்லாக் களிமகன் என விதந்தெடுத்து ஓதுவாராயினர். அக்கல்லாக் களிமகன் தானும் அங்ஙனம் விரைந்து வெட்டியதற்கும் ஓர் ஏதுவினை முற்கூறிய திருந்து வேல் இளையோன் கூற்றில் காட்டினர். அஃதாவது வேந்தனும் அலைக்கும் என்றது அதற்குக் குறிப்பேதுவாம் என்க. அதுகேட்டு அஞ்சிய இக் கல்லாக்களிமகன் இங்ஙனம் செய்தனன் என்பது அடிகளார் கருத்து. என்னை? அச்சமே கீழ்களது ஆசார மாகலின்.

இன்னும் கோவலனது தீய பழவினையானது உருத்துவந்து ஊட்டுங் காலை இக்கருந்தொழிற் கொல்லனும் இக்கல்லாக் களிமகனும் காம மயக்கங் காரணமாக யாவதும் தேறா மன்னனாகிய நெடுஞ்செழியனும் போல்வாரைத் தனக்குக் கருவியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டமையும் நினைக. தீவினையாளரை ஊழ் ஊட்டுங்கால் இங்ஙனமே ஊட்டும் இயல்புடையது என்பதும் இங்கு உணர்தற்குரியது; இவ்விடத்தே,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

எனவரும் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் பொன்மொழியும் நெஞ்சத்தே பதித்துக் கொள்ளற் பாலதாம்.

இனி நிலமகள் பொறுமைக்கு எடுத்துக் காட்டு ஆவாள் எனினும் இத்தகைய தீவினை நிகழுங்கால் அவள் தானும் பொறுமையிழந்து அவலமுறுவள் என்பார் மண்ணக மடந்தை வான்றுயர் கூர என்றோதினர். உருத்து என்னும் எச்சத்தை உருப்ப எனத்திரித்துக் கொள்க.

பா - நிலைமண்டில ஆசிரியப்பா.

நூலாசிரியர் செவியறிவுறூஉ நேரிசை வெண்பா

நண்ணு ............. வினை

(இதன்பொருள்) பண்டை விளைவு ஆகி வந்த வினை - மக்களே! முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயனாகி அப்பயனை நுகர்விக்க வந்த ஊழ்வினையால்; மண்ணில் வளையாத செங்கோல் - இந்நிலவுலகத்தே ஒரு காலத்தும் வளைந்தறியாத செங்கோலும்; கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் வளைந்தது - கண்ணகியின் கணவனாகிய கோவலன் கருவியாக வளையுங்கால் வளைவதாயிற்று ஆதலால்; இருவினையும் நண்ணும் - தீவினையும் நல்வினையுமாகிய இரண்டு வினைகளின் பயனும் அவற்றைச் செய்தவர்பால் வந்து எய்துதல் ஒருதலை; நல்லறமே நண்ணுமின்கள் - இங்ஙனமிருந்தலால் எல்லோரும் நல்வினையையே செய்யுங்கள்! தீவினையைச் செய்யாதொழியுங்கள்! என்றவாறு.

(விளக்கம்) பாண்டியன் முற்பகலில் தன் அரசியலிற் பிழைத்துச் செய்த தீவினை பிற்பகலே வந்தெய்தி அவன் செங்கோலை வளைத்தது; கண்ணகிகேள்வன் முன்பிறப்பில் செய்த தீவினை இப் பிறப்பில் வந்து அவனைக் கொலைக் களத்தே வீழ்த்தியது. வீழ்த்தும் பொழுது அதற்குக் கருவியாக அப்பொழுது பிழைத்த பாண்டியனைக் கருவியாக்கிக் கொண்டது. பாண்டியன் கோலை வளைக்கக் கோவலனைக் கருவியாக்கிக் கொண்டது. இங்ஙனம் கோடல் ஊழினியல்பு என்றவாறு. இவ்வுண்மையை உணர்ந்து கொள்மின்! தீவினையை விட்டொழிமின் ! இங்ஙனமே நல்வினையின் பயன் நன்மையாகவே வந்தெய்தும் ஆதலால் நல்லறமே நண்ணுமின் என்றவாறு.

கொலைக்களக்காதை முற்றிற்று.


© Om Namasivaya. All Rights Reserved.