சிலப்பதிகாரம்

15. அடைக்கலக் காதை

அஃதாவது - கோவலன் கண்ணகியைக் கவுந்தியடிகளார் பால் ஓம்படை செய்து மதுரைமூதூர் புகுந்து ஆங்குப் பரத்தையர் வீதியும் அங்காடி வீதியும் பிற வீதிகளும் சந்தியும் சதுக்கமும் மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து அப் பேரூரைக் கண்டு மகிழ்ந்து மீண்டும் கண்ணகியும் அடிகளாரும் இருந்த புறஞ்சேரிக்கு வந்துற்றனனாக; அப்பொழுது, மாடலன் என்னும் மறையவன் குமரியாடி மீண்டு வருபவன் கோவலன் இருக்குமிடத்தை அடைந்தான்; கோவலன் அவனை வணங்க அம் மறையவன் கோவலனை முன்பே நன்கறிந்தவனாதலின் அவன் நிலைமை கண்டு கழிபேரிரக்கங் கொண்டு அவனது பண்டைய நிலையைப் பாரித்துரைத்து வருந்தியிருப்பப் பின்னர், அம் மறையவனும் கவுந்தியும் கோவலனை நோக்கி இவ்விடம் துறந்தோர்க்கே உரியதாகலின், நீ மதுரையில் புகுதுக என்று கூறும்பொழுது ஆயர் முதுமகளாகிய மாதரி என்பாள் அங்கு வந்து கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினள். அதுகண்ட கவுந்தியடிகள் சிறந்த குணம் உடையவளாகிய இம் மாதரியின்பால் கண்ணகியை இருத்துதல் குற்றமின்று என நினைத்து அம் மாதரிக்குக் கண்ணகியின் உயர்வையும் தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளைப் பாதுகாத்தலால் உண்டாகும் பயனையும் எடுத்துக்கூறி அவள்பால் கண்ணகியை அடைக்கலமாக ஒப்புவித்த செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட  5

மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு
அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து
தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழித்  10

தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலங் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து  15

தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண்
வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக்
கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடி வணங்க
நாவ லந்தணன் தானவின் றுரைப்போன்  20

வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு  25

நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறூஉந் தகைமொழி கேட் டாங்கு
இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள்
புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்  30

நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்
உன்பெருந் தானத் துறுதி யொழியாது
துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென  35

விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த
எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென
அணிமே கலையார் ஆயிரங் கணிகையர்
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி தன்னொடு  40

செம்பொன் மாரி செங்கையிற் பொழிய
ஞான நன்னெறி நல்வரம் பாயோன்
தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி
வளைந்த யாக்கை மறையோன் றன்னைப்  45

பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம்
வேக யானை வெம்மையிற் கைக்கொள
ஓய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக்
கையகத் தொழித்ததன் கையகம் புக்குப்
பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி  50

மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களி றடக்கிய கருணை மறவ
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல  55

வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்  60

மாட மறுகின் மனைதொறு மறுகிக்
கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி   65

இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்  70

தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ   75

பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த
மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக்
கறைகெழு பாசத்துக் கையகப் படலும்
பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு  80

கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி
என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
நன்னெடும் பூதம் நல்கா தாகி
நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை   85

ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப
அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்  90

இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவக்
கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்  95

காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும்
பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும்  100

மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து
காமக் கடவுள் கையற் றேங்க
அணிதிகழ் போதி அறவோன் றன்முன்
மணிமேகலையை மாதவி யளிப்பவும்
நனவுபோல நள்ளிருள் யாமத்துக்   105

கனவு கண்டேன் கடிதீங் குறுமென
அறத்துறை மாக்கட் கல்ல திந்தப்
புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின்
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின்
உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக்  110

காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுகென
மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும்
கோவலன் றனக்குக் கூறுங் காலை
அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய  115

புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்
ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்  120

கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை
தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள்
மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணின ளாகி
மாதரி கேளிம் மடந்தைதன் கணவன்  125

தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்
இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன்  130

மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித்
தேமென் கூந்தற் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்  135

தாயும் நீயே யாகித் தாங்கிங்கு
என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித்  140

தன்துயர்காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க் கின்றியமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது  145

நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ
தவத்தோர் அடக்கலம் தான்சிறி தாயினும்
மிகப்பே ரின்பம் தருமது கேளாய்   150

காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள்
பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித்
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன்   155

திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப்
பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச்  160

சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு
யாதிவன் வரவென இறையோன் கூறும்
எட்டி சாயலன் இருந்தோன் றனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்
மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி  165

ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப்
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி
உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி  170

எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்துநின்
மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென
மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக்
காதற் குரங்கு கடைநா ளெய்தவும்   175

தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு
தீதறு கென்றே செய்தன ளாதலின்
மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள்
உத்தர கௌத்தற் கொருமக னாகி
உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப்  180

பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு
எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு
விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின்
பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம்
தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப்  185

பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை
கொண்டொரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த
சாயலன் மனைவி தானந் தன்னால்
ஆயினன் இவ்வடிவு அறிமி னோவெனச்
சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத்  190

தேவ குமரன் தோன்றினன் என்றலும்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
ஆரணங் காக அறந்தலைப் பட்டோர்
அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும்
தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்  195

இட்ட தானத் தெட்டியும் மனைவியும்
முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர்
கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு
நீட்டித் திராது நீபோ கென்றே
கவுந்தி கூற உவந்தன ளேத்தி   200

வளரிள வனமுலை வாங்கமைப் பணைத்தோள்
முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக்
கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப
மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு  205

செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ
மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்  210

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும்  215

கோலும் குந்தமும் வேலும் பிறவும்
ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும்
வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால்
கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென்.

உரை

1-8 : நிலந்தரு .............. புகுந்து

(இதன்பொருள்) நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி கடம் பூண்டு உருட்டும் கவுரியர் - நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு உணவு முதலிய பல்வேறு செல்வங்களையும் தருதற்குக் காரணமான அருளாகிய நிழலிடத்தே நின்று ஆணையாகிய சக்கரத்தைச் செலுத்துகின்ற தமக்குரிய கடமையைச் செவ்விதமாக மேற்கொண்டு செலுத்துகின்ற பண்புடைய பாண்டியருடைய; பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை - பெரிய புகழோடு பொருந்திய செங்கோலினது நடுவுநிலைமையும், குடையினது அளியாகிய குளிர்ச்சியும் வேலினது திறலாகிய வெப்பமும் விளங்குதற்கிடமாகிய கொள்கை காரணமாக; பதி எழுவு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மாநகர் கண்டு ஆங்கு - தன்னிடத்தே வாழும் மக்கள் குடியோடிப்போதலை ஒருபொழுதும் அறியாமைக்குக் காரணமான பண்புடைமையின் மேம்பட்டுத் திகழும் மதுரை மூதூராகிய பெரிய நகரத்தைக் கோவலன் கண்டு மகிழ்ந்து அந்நகரில்; அறம்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து - தமது சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு அறத்தை வழங்குகின்ற நன்னர் நெஞ்சினையுடைய துறவோர் மிகுந்துள்ள மதிலின் புறத்தேயுள்ள பழைய ஊரின்கண் கவுந்தியடிகளும் கண்ணகியும் உறைகின்ற பொழிலின்கண் புகுந்து; என்க.

(விளக்கம்) நிலந்தரு திரு என்றது, உணவு முதலிய பல்வேறு பொருள்களையும்; நிழல் என்றது அருளை, திருவருளின் வழிநின்று நேமி செலுத்தும் அரசனுடைய நாட்டின்கண் உணவு முதலிய பொருள்களெல்லாம் பெருகும் என்பதுபற்றித் திருவிற்கு அருளை ஏதுவாக்கினார்; என்னை? இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட, பெயலும் விளையுளுந் தொக்கு (குறள், 545) எனவரும் வள்ளுவர் பொன்மொழியும் நினைக. நேமி - ஆணை. கடம் - கடமை. கவுரியர் - பாண்டியர். அவர் செங்கோன்மைப் புகழ் உலகெலாம் பரத்தலின் பெருஞ்சீர்க்கோல் என்றான். செம்மை - செங்கோன்மைக்கு இன்றியமையாத நடுவு நிலைமை. குடை - மன்னனின் அளியுடைமைக்கு அறிகுறி ஆதலின், குடையின் தண்மை என்றார். வேல் - தெறலுக்கு அறிகுறி ஆதலின் வேலின் கொற்றம் என்றார். பதி எழுதல் - வாழ்க்கைக்கு வேண்டியன கிடைக்கப் பெறாமல் குடிகள் பிறநாட்டிற்கு ஓடிப்போதல். பண்பு நாடாவளத்ததாதன் முதலியன. பதியெழு வறியாப் பழங்குடி கெழுமிய .... புகார் என முன்னரும் இச் சிறப்புடைமையைப் புகாருக்கும் கூறியது நினைக.

9 - 10: தீதுதீர் ................ கூறுழி

(இதன்பொருள்) தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் - தீங்குகளெல்லாம் நீங்கி நலத்தொடு திகழும் அம் மதுரையின் சிறப்பையும் அதனை ஆளுகின்ற பாண்டியனுடைய வெற்றிச் சிறப்பினையும்; மாதவத்தாட்டிக்குக் கோவலன் கூறுழி - பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளாருக்குக் கோவலன் தான் கண்டாங்கு எடுத்துச் சொல்லும்பொழுது; என்க.

(விளக்கம்) தீது - பழவினை. மதுரை கடவுட் டன்மையுடைய தாய்த் தன்கண் வரும் மக்களுடைய பழவினையெல்லாம் பாறச் செய்வது என்னுங் கருத்தால், தீதுதீர் மதுரை என்றார். இன்னும் கோவலனுடைய பழவினையையும் தீர்த்தருளி அவனைத் தேவனாக்குதலும் குறிப்பால் இது தோற்றுவித்து நிற்றலும் உணர்க. இதற்கு அடியார்க்கு நல்லார் கூறுகின்ற விளக்கம் முன்னரே அமைந்து கிடத்தலின் வேண்டா விளக்கமாதல் அறிக.

மாடலன் வரவு

11 - 19 : தாழ்நீர் .............. வணங்க

(இதன்பொருள்) தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து நால்மறை முற்றிய நலம் புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் - தாழ்ந்த நீரையுடைய அகழியமைந்த தலைச் செங்காடு என்னும் ஊரில் பிறந்தவனும், நான்கு மறைகளையும் ஓதி முடித்தவனும் தான் ஓதியாங்குப் பிறர் நலமே பேணுதலையே குறிக்கோளாகவுடையவனும் அந்தணருள்ளும் முதல்வனும் ஆகிய மாடலன் என்பவன்; மாதவ முனிவன் மலைவலங்கொண்டு குமரி அம் பெருந்துறை கொள்கையின் படிந்து தமர் முதல் பெயர்வோன் -பெரிய தவத்தையுடைய அகத்தியன் உறைகின்ற பொதியின் மலையை வலங்கொண்டு வணங்கிக் குமரித் தீர்த்தத்தின்கண் தனது குறிக்கோளுக்கிணங்க நீராடித் தன்னுடைய சுற்றத்தார் இருக்கும் இடத்திற்கு மீண்டு வருகின்றவன்; தாழ்பொழில் ஆங்கண்-தாழ்ந்த பொழிலையுடைய அப் புறஞ்சேரியிடத்தே; வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்கக் கவுந்தி இடவயின் புகுந்தோன் தன்னை கோவலன் சென்று சேவடி வணங்க - வழிவந்த வருத்தத்தால் உண்டாய இளைப்புத் தீர்தற் பொருட்டுக் கவுந்தியடிகள் இருந்த பள்ளியிடத்தே வந்து புகுந்தவனை ஆங்கிருந்த கோவலன் கண்டு அவன் எதிர் சென்று சிவந்த அடிகளில் வீழ்ந்து வணங்கா நிற்ப; என்க.

(விளக்கம்) தாழ்ந்த நீர் வேலி - தாழ்ந்த நீர்நிலைகளையுடைய மருத நிலம் சூழ்ந்த எனினுமாம். நலம்புரிதல் - பிறர்க்கு நன்மையே செய்தல். இவன், சோழநாட்டுத் தலைச்செங்காட்டில் பிறந்தவன் ஆதலின் கோவலனுடைய குடும்பத்தாரோடு பெரிதும் கேண்மை யுடையவனாக இருந்தமை பின்னர் இவன் கூற்றால் விளங்கும். இவ்வந்தணர் முதல்வனைக் கோவலன் பண்டே நன்நறிந்தவன் ஆதலின், இவன் வரவு கண்டு மகிழ்ந்து எதிர்சென்று வணங்கினன் என்க. தமர் முதல் - தன் சுற்றத்தார் இருக்குமிடம். வகுந்து - வழி. வரை சேர் வகுந்திற் கானத்துப் படினே (மலைபடுகடாஅம் - 242) என்புழியும் அஃது அப்பொருட்டாதல் அறிக. கோவலன் சென்று சேவடி வணங்க என்றது அவனுக்கு அம் மறையவன்பால் உள்ள அன்பு மிகுதியும் நன்மதிப்பும் ஒருங்கே உணர்த்தி நிற்றல் உணர்க.

மாடலன் கோவலன் நிலைமை கண்டு இரங்கிக் கூறுதல்

(20 - நாவலந்தணன் தான் நவின்றுரைப்போன் என்பது தொடங்கி 94. நீ என வினவ என்பது வரையில் மாடலன் கூற்றாக ஒரு தொடர்.)

20 : நாவல் ................ உரைப்போன்

(இதன்பொருள்) நாவல் அந்தணன் - நாவன்மையுடைய அம் மாடலன் கோவலன் நிலைமை கண்டு; தான் நவின்று - முற்படக் கோவலன் அங்கு வந்துள்ள வரலாற்றை வினவி அறிந்துகொண்டு பின்னர் அவன் நிலைமைக்கு இரங்கி; உரைப்போன் - கூறுகின்றனன்; என்க.

(விளக்கம்) தான் நவின்று அறிந்து இரங்கி எனச் சில சொல் பெய்துரைக்க. நவின்றுரைப்போன் என்பதற்குக் கோவலனது பண்டைய நிலையைப் பாரித்துரைப்பவன் எனலுமாம்.

21 - 27 : வேந்துறு ................... கேட்டாங்கு

(இதன்பொருள்) (94) கோபால - கோவலனே; வேந்து உறு சிறப்பின் விழுச்சீர் எய்திய மாந்தளிர்மேனி மாதவி மடந்தை - சோழ மன்னன் வழங்கிய மிக்க தலைவரிசையால் சிறந்த புகழைப் பெற்ற மாந்தளிர் போன்ற மேனியையுடைய மாதவியாகிய மடந்தை; பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து வாலாமை நாள் நீங்கிய பின்னர் - நினக்கு மகளாகப் பிறத்தற்குரிய ஊழ்வினை வாய்த்ததொரு பெண் மகவினை ஈன்றெடுத்து வாலாமையுடைய நாள்கள் கழிந்தபின்னர்; மாமுது கணிகையர் மாதவி மகட்கு நாம நல்லுரை நாட்டுதும் என்று தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்ட ஆங்கு - மிகவும் முதுமையுடைய கணிகை மகளிர் ஒருங்கு கூடி மாதவி ஈன்ற பெண் மகவிற்குப் பெயராகத் தகுந்த அழகிய சொல்லொன்றனை யாம் இப்பொழுது கண்டு நிலைநாட்டுவேமாக என்று தம்முள் துணிந்து பின்னர் அம் மகளிர் தாம் இன்பம் எய்துதற்குரிய அழகிய மொழி ஒன்றனைக் கூறுக என்று நின்னை அணுகிக் கேட்ட பொழுதே அவரை நோக்கி; என்க.

(விளக்கம்) வேந்து : சோழமன்னன். உறு சிறப்பு என்றது மாதவி ஆடற்கலை அரங்கேறிக் காட்டியபொழுது அம் மன்னன் மகிழ்ந்து அவட்கு வழங்கிய பெரும்பரிசிலை. பால் - ஊழ்வினை; பால் வாய்த்த குழவி என்க. பயந்தனள்; முற்றெச்சம். ஈன்று என்க. வாலாமை நாள் - தீண்டப்படாத நாள் (அழுக்குடைய நாள்). மாமுது கணிகையர் என்றது சித்திராபதியை யுள்ளிட்ட வயது முதிர்ந்த கணிகையரை. அவர்தாம் கோவலனையும் உளப்படுத்தியாம் நாமநல்லுரை நாட்டுதும் என்றாராகக் கொள்க. தகைமொழி என்றது அழகிய பெயர்ச்சொல் என்றவாறு. கேட்ட என்றது அத்தகைய மொழி யொன்றனைத் தேர்ந்து தருக என்று கேட்ட என்பதுபட நின்றது.

28 - 37 : இடைஇருள் ............... இடுகென

(இதன்பொருள்) இடை இருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல் உடை கலப்பட்ட எங்கோன் நள்ளிருள் யாமத்தே சூறைக்காற்று எறியப்பெற்ற அலைகளையுடைய பெரிய கடலின்கண் தன்னுடைய உடைந்த மரக்கலத்தில் அகப்பட்டுக்கொண்ட எமது குலமுதல்வன் ஒருவன்; முன்னாள் புண்ணியதானம் புரிந்தோன் ஆதலின் - அவன்றானும் முற்பிறப்பிலே புண்ணியத்தையும் அப்பிறப்பிலே உத்தம தானத்தையும் செய்த சீரியோனாதலின்; நண்ணு வழியின்றி நாள் சில நீந்த - தன்னுயிர்க்கு இறுதி யுண்டாகும் ஊழ் வந்துறாமயாலே ஒரு சில நாள் அந் நல்வினை கைதருதலாலே அக் கடலின்கண், நீந்துவானாக ஒருநாள் அவன் முன் தோன்றிய ஐய; யான் இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமேகலை - யான் தேவேந்திரனுடைய ஏவலாலே அண்மையிலுள்ள தீவில் வாழ்பவரை அசுரர் துன்புறுத்தாதபடி காத்தற்கு இங்கே வாழ்கின்றேன்காண்! உன்னையும் காத்தற்பொருட்டே வந்துள்ளேன் ஆதலால் அஞ்சாதே கொள்! யான் மணிமேகலை என்னும் தெய்வம்காண்; உன் பெருந்தானத்து உறுதி ஒழியாது - நீ பண்டு செய்த பெரிய தானத்தின் பயனும் உன்னைக் காவாதொழியாது காண்; துன்பம் நீங்கித் துயர்க்கடல் ஒழிகென - நீ இப்பொழுது எய்துகின்ற இத் துன்பத்தினின்றும் நீங்கித் துயரந்தரும் இக் கடலினின்றும் கரை ஏறுவாயாக என்று இனிது தேற்றுரை கூறி; விஞ்சையில் பெயர்த்து - தனது வித்தையினாலே அக் கடலினின்றும் கரை ஏற்றி; விழுமம் தீர்த்த எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக என - அவன் துன்பம் தீர்த்து உய்யக்கொண்ட எங்கள் குலதெய்வமாகிய அத் தெய்வப் பெயரையே இங்கு இம் மகவிற்கு இடுமின் என்று கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) எறி திரை - காற்றால் எறியப்படும் திரை என்க. உடை கலம் - பார்தாக்கி உடைந்துபோன மரக்கலம். எங்கோன் என்றது கோவலனுடைய மரபில் உள்ளான் ஒருவனை. நண்ணுவழி - கரையைக் கிட்டுதற்கு இடனின்றி எனலுமாம். புண்ணியமும் தானமும் புரிந்தமை கடலினிடையே சிலநாள் நீந்தி உயிரோடிருத்தற்கு ஏதுவாய் நின்றது புண்ணியமும் தானமும் என்க. உறுதி - பயன். விஞ்சை - வித்தை. விஞ்சைபோல எனினுமாம். ஈங்கு - இப்பொழுது எனினுமாம். குல முதல்வனை உய்யக்கொண்டு தன் குலத்தை நிலைபெறச் செய்த நன்றி நினைந்து எங் குலதெய்வம் என்றான். அதன் பெயர் அத்தெய்வத்தின் கூற்றாகவே மணிமேகலை என்று அறிவிக்கப்பட்டமையால் வாளாது தெய்வப் பெயர் என்றொழிந்தான்.

கோவலன் யானை கோட்பட்ட மறையோனைப் பாதுகாத்தமை

38 - 47 : அணிமேகலையார் .......... கைக்கொள

(இதன்பொருள்) அணிமேகலையார் ஆயிரங் கணிகையர் மணிமேகலை என வாழ்த்திய ஞான்று - நீ விரும்பியவாறே அணிந்த மேகலையையுடைய கணிகை மகளிர் எண்ணிறந்தோர் ஒருங்கு கூடிப் பெயர் சூட்டுதற்குரிய விழா வெடுத்து அம் மகவிற்கு மணிமேகலை என்று பெயர் சூட்டி அம் மகவினையும் அரசனையும் நகரையும் வாழ்த்திய அந்த நாளிலே; மங்கல மடந்தை மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையின் பொழிய - நிறைந்த அழகையுடைய மடந்தையாகிய அம் மாதவியினோடு நீ அம் மகவின் ஆக்கங்கருதிச் செம்பொன் முதலியவற்றை வாரி மழைபோலச் சிவந்த கைகளாலே பொழியா நிற்ப; ஞான நல்நெறி நல்வரம்பு ஆயோன் மறையோன் தானம் கொள்ளும் தகைமையின் வீட்டுலகம் சேர்தற்கு நல்ல நெறியாகிய மெய்யுணர்வுக்குத் தானே எல்லையாகிய மறையவன் ஒருவன் நின்பால் தானம் கொள்ளுகின்ற கருத்தோடு; வளைந்த யாக்கை தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி வருவோன் தன்னை - மூப்பினால் வளைந்த யாக்கையையும் தளர்ந்த நடையையுமுடையவனாய்த் தண்டினையே காலாக ஊன்றி வருகின்றவனை; பாகு கழிந்து யாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையின் கைக்கொள - பாகர் அடக்குமுறைச் செயலுக்கு அடங்காமல் அவரினின்றும் நீங்கித் தான் செல்லுமிடமெல்லாம் பறை முழக்கம் உண்டாகும்படி தன்மனம் போனவாறு வருகின்ற மதச் செருக்கினையுடைய யானையொன்று சினத்தோடே தன் கையாற் பற்றிக்கொள்ள; என்க.

(விளக்கம்) ஞானநன்னெறி என்றது சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நெறிகளுள் வைத்து ஞானநெறியை. அதுவே வீட்டுலகிற்கு நேரிய வழியாதல்பற்றி நன்னெறி என விதந்தோதியவாறு. ஞானம் - மெய்யறிவு. ஐயந்திரிபற்ற மெய்யுணர்வு கைவரப்பெற்றோன் என்பது தோன்ற நல்வரம்பாயோன் என்றார். மறையவன் ஆதலின் தானம் கொள்ளும் தகைமையினால் வருவோன் என்றார். தகைமை - தானம் கொள்ளுதற்குரிய தகுதிப்பாடு. பாகர்க்கு அடங்காமல் கழிந்து என்க. யாங்கணும் பறைபடுதல் யானை இவ்வாறு மதவெறியால் திரியும்போது அதன் வருகையை அறிவித்தற் பொருட்டு. இங்ஙனம் பறை முழக்கி அறிவித்தல் பண்டைக்காலத்து வழக்கமாம். இதனை -

நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
பறைஅறைந் தல்லது செல்லற்க வென்னா
இறையே தவறுடை யான்

எனவரும் குறிஞ்சிக்கலியானு முணர்க. 20. வேகம் - மதச்செருக்கு. வெம்மை - சினம்.

கோவலனுடைய தறுகண்மை

48 - 53: ஒய்என ............... மறவ

(இதன்பொருள்) ஒய் எனத் தெழித்து ஆங்கு உயர்பிறப்பாளனைக் கை அகத்து ஒழித்து - அவ்வாறு அம் மறையோனை அவ்வியானை கைக்கொண்ட வளவிலே அதுகண்ட நீ (கோவலன்) ஞெரேலென அந்த யானையை உரப்பியவனாய் அப்பொழுதே அங்குச் சென்று நின் கையாலே அம் மறையோனை நீக்கி; அதன் கை அகம் புக்குப் பொய் பொரு முடங்கு கை வெள்கோட்டு அடங்கி - அதன் கையில் நீயே புகுந்து அந்த யானையானது நின்னை வளைத்த பொழுதில் உட்டுளையமைந்த அக் கையினின்றும் நீங்கி அதன் வெள்ளிய கோட்டின்கண் அடங்கி அது பற்றுக்கோடாக ஏறி; மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து - கரிய பெரிய ஒரு குன்றின்மேல் இருந்த விச்சாதரனைப்போல் அதன் பிடரின்மேலிருந்து; பெருஞ்சினம் பிறழாக் கடக்களிறு அடக்கிய கருணைமறவ -பெரிய வெகுளி நீங்காத மதவெறி கொண்ட அக் களிற்றியானையை அடக்கிக் கட்டுவித்து அப் பார்ப்பனனை யுள்ளிட்ட மாந்தரை உய்யக்கொண்ட பேரருளுடைய வீரனே; என்றான் என்க.

(விளக்கம்) ஒய் என என்பது விரைவுக் குறிப்பு. இனி, ஒய் என்பது யானைப்பாகர் வையும் ஆரிய மொழி எனினும் அமையும் என்பர் அடியார்க்குநல்லார். தெழித்தல் - உரப்புதல். அஃதாவது - அதட்டுதல். பொய் - உட்டுனை. பொருந்தின என்பது ஈறுகெட்டு, பொரு என நின்றது. இச் செயலால் கோவலனுடைய அருளுடைமையும் மறப்பண்பும் ஒருங்கே வெளிப்படுதலின் கருணைமறவ என்று விளித்தான்.

கைக்கொளத் தெழித்து ஒழித்துப் புக்கு அடங்கி அடக்கிய மறவ என இயையும். அடக்கிய என்றது அடக்கிக் கட்டுவித்த என்பதுபட நின்றது.

கோவலனுடைய பிறர்க்கென வாழும் பெருந்தகைமை

54 - 75 : பிள்ளை ............... செல்லாச் செல்வ

(இதன்பொருள்) பிள்ளை நகுலம் பெரும் பிறிதாக எள்ளிய மனையோள் இணைந்து பின் செல்ல வடதிசைப் பெயரும் மாமறையாளன் - ஒரு பார்ப்பனி தான் வளர்த்த கீரிப்பிள்ளை தன் குழவியைக் காத்திருந்த பொழுது ஒரு பாம்பு அணுக அதனைக் கடித்துத் துணித்தமையால் குருதிதோய்ந்த வாயோடு அப்பார்ப்பனியின் வரவு பார்த்து எதிர்கொண்டதாக அதன் வாயில் குருதி கண்டு அது தன் பிள்ளையைக் கடித்ததென்று கருதித் தன் கையின் மணையால் புடைக்க அக்கீரி இறந்தமையாலே அத் தீவினை பொறாத அவள் கணவனாகிய பார்ப்பனன் அதற்குக் கழுவாயாகக் கங்கையாடுதற் பொருட்டு வடதிசை நோக்கிச் செல்பவன் தன்னால் இகழப்பட்ட மனைவி வருந்தித் தன்னைத் தொடர்தல் கண்டு அவளை நோக்கி, நின் கைத்தூண் வாழ்க்கை கடவது அன்று - ஏடி! தீவினையாட்டியாகிய நின்னுடைய கையதாகிய உணவை உண்டு வாழ்கின்ற வாழ்க்கை இனி எனக்குப் பொருந்துவதன்று எனக் கூறிப் பின்னர்; வடமொழி வாசகம் செய்த நல் ஏடு கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என - வடமொழியாலே செய்யுள் எழுதப்பட்ட நன்மையுடைய ஓரேட்டினை அவள் கையிற் கொடுத்து இதனை நீ தம் கடமையை அறிகின்ற மாந்தருடைய கையில் கொடுப்பாயாக என்று கூறிப்போயினனாக; பீடிகைத் தெருவில் பெருங்குடி வாணிகர் மாட மறுகின் மனைதொறும் மறுகி - அப் பார்ப்பனிதானும் அவ்வேட்டினைக் கைக்கொண்டு பூம்புகார் நகரத்து அங்காடித் தெருவினும் பெருங்குடி வாணிகர் உறையும் மாடமாளிகையையுடைய தெருவினும் வீடுதோறும் சென்று; கருமக் கழிபலம் கொண்மினோ எனும் அருமறையாட்டியை அணுகக் கூஉய் - கருமக் கழிபலம் கொள்ளும் கோள் என்று இரக்கின்ற அப் பார்ப்பனியைக் கண்டுழி நீ தானும் அவளை நின் அருகில்வரக் கூப்பிட்டழைத்து; நீ உற்ற இடர் யாது ஈது என் என - அன்னாய் நீ எய்திய துன்பந்தான் என்னையோ? நீ கைக்கொண்டுள்ள இவ்வேடு என்னையோ? கூறிக் காண்! என வினவினையாக; மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி இப்பொருள் எழுதிய இதழ் இது கைப்பொருள் தந்து வாங்கி என் கடுந்துயர் களைக என -அதுகேட்ட அப் பார்ப்பனி தான் எய்திய பெரிய துயருக்குரிய காரணத்தை நின்னிடத்தே கூறி இச் செய்தியை எழுதிய ஏடு இஃதாம் இதனை நின் கைப்பொருளைத் தந்து வாங்குமாற்றால் என்னுடைய கடிய துன்பத்தைப் போக்கியருள்வாயாக என்று சொல்லி இரவாநிற்ப; அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன் நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று - அது கேட்ட நீ அன்னாய்! நீ அஞ்சாதே கொள்! உனது பொறுத்தற்கரிய துன்பத்தை யானே போக்குவல் ஆதலால் நினது நெஞ்சின்கண் மிக்குள்ள துன்பத்தை விடுக என்று தேற்றுரை கூறி; ஆங்கு ஓத்து உடை அந்தணர் உரைநூல் கிடக்கையின் தீத்திறம் புரிந்தோள் செய் துயர் நீங்கத் தானம் செய்து அவள் தன் துயர் நீக்கி-அப்பொழுதே மறையையுடைய பார்ப்பனருடைய அறநூல் அத் தீவினைக்குக் கழுவாய் கூறியபடியே கொலைத் தீவினை செய்த அப் பார்ப்பனி அச் செய்கையால் உற்ற துன்பம் துவர நீங்கும்படி தானம் செய்து அவளுடைய நெஞ்சுறு துயரத்தையும் போக்கிப் பின்னர்; கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத்து உறு பொருள் கொடுத்து - அவளை இகழ்ந்து காட்டகம் புக்க அவள் கணவனையும் வரவழைத்து அவளொடு சேர்த்து எஞ்சிய காலத்திலும் அவர் தளராமைக்குக் காரணமான பல படைப்பாகிய செல்வத்தோடே மிக்க கைப்பொருளையும் வழங்கி; நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ - அவர்களை நல்லாற்றுப்படுத்த எஞ்ஞான்றும் தொலையாத திருவருட் செல்வனே; என்றான் என்க.

(விளக்கம்) பிள்ளை நகுலம் - கீரிக்குட்டி. பெரும் பிறிது - சாவு. எள்ளிய - எள்ளப்பட்ட. வடதிசைப் பெயரும் என்பதற்கு வடதிசையை நோக்கிக் கங்கையாடப் போகின்றவன் என்பர் அடியார்க்கு நல்லார். பின்னர், அடிகளார் கானம் போன கணவனை என்றோதுதலின் தவம் செய்தற்குக் காட்டகம் புக்கான் என்பதே அவர் கருத்துப் போலும். கைத்தூண் - கையதாகிய உணவு. வடமொழி வாசகம் - வடமொழிச் செய்யுள். அஃதாவது, அபரீக்ஷ்ய நகர்த்தவ்யங் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம், பச்சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹமணீநகுலம்யதா என்பதாகும்.

கடன் அறி மாந்தர் - பிறர்க்குப் பணிசெய்து கிடப்பதே தங்கடன் என்றுணர்ந்த சான்றோர் என்க. கருமக் கழிபலம் - பிறருடைய தீவினையைத் தீர்த்து விடுவதனால் ஒருவனுக்குண்டாகும் புண்ணியம். கூஉய் -கூவி, ஈதென்னென என்புழி ஈது என்றது அவள் கையிற்கொண்டுள்ள ஏட்டினைச் சுட்டியபடியாம். மாதர் என்பது அவள் என்னும் சுட்டு மாத்திரையாக நின்றது. ஒத்து - மறை. உரைநூற் கிடக்கை-அறநூலில் விதித்த விதி. தீத்திறம் -கொலைத் தீவினை. நல்வழிப் படுத்தலாவது -மீண்டும் அந்தணர்க்குரிய நல்வாழ்க்கையில் ஆற்றுப்படை செய்தல். செல்லாச் செல்வம் என்றது அருளுடைமையை.

இதுவுமது

76-90: பத்தினி ........ செம்மல்

(இதன்பொருள்) பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த- கற்புடையாள் ஒருத்தியின் மேல் பொய்யாகிய பழியை யுண்டாக்குதற்கு; வறியோன் ஒருவன் மற்று அவள் கணவற்கு அறியாக்கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கை அகப்படலும் - நல்கூர்ந்தான் ஒருவன் அப் பத்தினியினுடைய கணவனுக்குச் சார்பாகத் தன் நெஞ்சறியாத தொன்றனைப் பொய்யாக்கரியாகக் கூறியதனால் அத்தகையோரை நிலத்தில் அறைந்து தின்னும் பூதத்தினுடைய கரிய கயிற்றிடத்தே அகப்பட்டுக் கொண்டானாக; பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என - அங்ஙனம் அகப்பட்டோனுடைய தாய் மகவன்பினாலே படுகின்ற துன்பத்தைக் கண்டு, நீதானும் பொறாமல் அவனைக் கட்டிய கயிற்றினுள்ளே விரைந்து சென்று புகுந்து அப் பூதத்தை நோக்கிப் பூதமே! நீ எனது உயிரைக் கைக்கொண்டு இவ்வேழையின் உயிரைத் தந்தருள்வாயாக! என்று வேண்டா நிற்ப; நல்நெடும் பூதம் நல்காது ஆகிநரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை ஒழிக நின் கருத்து என முன் உயிர்புடைப்ப - அதுகேட்ட நன்மையுடைய நெடிய அப்பூதம் நின் வேண்டுகோட் கிணங்கி அவனை வழங்காதாகி மேலும் உன்னை நோக்கி இக்கீழ் மகனுடைய உயிருக்கு ஈடாக மேன்மகனாகிய உன்னுயிரைக் கைக்கொண்டு அத் தீவினை காரணமாக மேலான கதியை இழந்து விடுகின்ற அறியாமை என்னிடம் இல்லை, ஆதலால் நினது இக் கருத்தைக் கைவிடுக! என்று சொல்லி, நின் கண்முன்னே அவனை நிலத்தறைந்து உயிருண்டு கழிந்ததாக; அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து அவன் சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறும் கிளைகட்கும் -அதுகண்டு அத் தாயின் பொருட்டுத் துன்புறுகின்ற நெஞ்சத்தோடே நீயும் அவளோடு சென்று அவட்கே யன்றியும் இறந்தொழிந்தவனுடைய சுற்றத்தார்க்கும் அவரோடு தொடர்புபட்ட கிளைஞர்களுக்கும்; பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து நெஞ்சத்தால் நின்னைப்பற்றிய கிளைஞரைப் புரக்குமாறு போல அவர்தம் பசியாகிய நோயைத் தீர்த்து; பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல் -பல ஆண்டுகள் காப்பாற்றி யருளிய வறியோர் தம் புரவலனே! என்றான்; என்க.

(விளக்கம்) வறியோன் -நல்குரவாளன். இது கரிபொய்த்தமைக்குக் குறிப்பேதுவாய் நின்றது. இதற்கு அறிவில்லான் என்பர் பழையவுரையாசிரியர். அறியாக்கரி - அறியாத தொன்றனை அறிந்ததாகக் கூறும் பொய்க்கரி. கரி - சான்று. பொய்க்கரி கூறுவோரையும் இன்னோரன்ன கயவர் பிறரையும் பாசத்தாற் கட்டி அறைந்துண்ணும் பூதம் பூம்புகாரின்கண் சதுக்கத்துண்மையை இந்திரவிழவூரெடுத்த காதையில் (128 -134) காண்க. கறை - கருமை. தவ்வை - தாய். நன்மையான கோட்பாடுடைய பூதம் என்பார் நல்நெடும் பூதம் என்றார். நரகன் - நரகம் புகுதற்குரிய தீவினையாளன். நல்லுயிர் -அறவோன் உயிர். பரகதி - மேலான கதி. இல்லோர் செம்மல்-வறியோரைப் புரக்கும் தலைவன்.

மாடலனின் பரிவுரை

91-94: இம்மைச்செய்தன .......... வினவ

(இதன்பொருள்) விருத்த நீ இம்மைச் செய்தன யான் அறி நல்வினை இத்திருத்தகு மாமணிக்கொழுந்துடன் - மூதறிவுடையோய்! நீ இப் பிறப்பில் செய்தன எல்லாம் இத்தகைய நல்வினைகளே யாகவும் இந்தத் திருத்தக்க சிறந்த மாணிக்கக் கொழுந்து போல்வாளாகிய கண்ணகியோடு; ஒருதனி உழந்து போந்தது -ஒரு தனியே நடைமெலிந்து இங்ஙனம் வந்தது; உம்மைப் பயன்கொல் என வினவ -முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயனாகுமோ என்று வினவிய பொழுது; என்க.

(விளக்கம்) இம்மை-இப்பிறப்பு. உம்மை-முற்பிறப்பு. ஏவலரும் ஊர்தியும் இன்றி நடைமெலிந்து போந்தனை என்பான் ஒருதனி உழந்து போந்து என்றான். திருத்தகு-உனக்குச் செல்வம் எனத்தகுந்த எனினுமாம். திருத்தகுமாமணி என்பதற்கு முழு மாணிக்கம் என்பாருமுளர். விருத்த என்றது-விளி. மூதறிவுடையோய் என்றவாறு. கோபாலன் என்பதே கோவலன் என மருவிற்றாகலின் மாடலன் அதன் இயல்புச் சொல்லால் விளித்தான். இதனால் கோவலன் என்பது கோபாலன் என்பதன் மரூஉச் சொல்லே என்பதும் பெற்றாம்.

கோவலன் தான்கண்ட கனவை மாடலனுக்குக் கூறுதல்

95-106 : கோவலன் .............. கடிதீங்குறுமென

(இதன்பொருள்) கோவலன் கூறும் -அதுகேட்ட கோவலன் கூறுவான்: ஓர் குறுமகன் தன்னால்-ஐயனே! ஒரு கீழ்மகனாலே; காவல் வேந்தன் கடிநகர் தன்னில் நாறு ஐங்கூந்தல் நடுங்குதுயர் எய்த -மன்னுயிர் காவலிற் சிறந்த இப் பாண்டிய மன்னனது தலைநகரமாகிய காவலமைந்த இம் மதுரை நகரத்தில் மணம் பொருந்திய ஐவகைக் கூந்தலையுடைய என்மனைவி நடுங்குதற்குக் காரணமான துன்பத்தை எய்தும்படி; கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும் -யான் உடுத்த ஆடை பிறராற் கொள்ளப்பட்டுக் கொம்பினையுடைய எருமைக் கிடாவின் மேலே ஏறா நிற்பவும்; அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும் பிணிப்பறுத்தோர் தம் பெற்றி எய்தவும்-அழகு பெற வகுக்கத்தக்க புரிந்த கூந்தலையுடைய அழகிய அணிகலன்களையுடைய இவளோடும் பற்றறுத்தோர் பெறும் பேற்றை யாங்கள் பெறவும்; காமக் கடவுள் மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து கையற்று ஏங்க -காமவேளாகிய தெய்வம் வெறுப்பினாலே தனது சிறந்த மலர்க்கணைகளை வறிய நிலத்திலே எறிந்துவிட்டுச் செயலற்று ஏங்கி நிற்கும்படி; மாதவி அணிதிகழ் போதி அறவோன் தன் முன் மணிமேகலையை அளிப்பவும்-மாதவி யானவள் அழகு விளங்குகின்ற போதியினையுடைய அறவோனாகிய புத்தபெருமான் திருமுன்னர்க் கொடுபோய் மணிமேகலையை வழங்கா நிற்பவும்; நள்இருள் யாமத்து நனவு போலக் கனவு கண்டேன் ஈங்கு கடிது உறும் என கழிந்த இரவின் செறிந்த இருளையுடைய வைகறை யாமத்தில் மெய் போலக் கனவு கண்டேன் ஆதலான், அது நன்றன்று! அதன் பயன் இப்பொழுதே வந்துறுதல் வேண்டும் என்று சொல்ல; என்க.

(விளக்கம்) இத்தகைய நிகழ்ச்சி இயலாத இடம் என்பான் காவல் வேந்தன் கடிநகர் என்று விதந்தான். நாறைங் கூந்தல்: அன்மொழித்தொகை; ஆயிழை என்பதுமது. கூறை -ஆடை. கோட்டுமா என்றது எருமைக்கிடா என்றவாறு. பிணிப்பறுத்தோர்- துறவோர்: அவர்தம் பெற்றியாவது - மேனிலை உலகம் எய்துதல். காமக் கடவுள் தன் வெற்றிக்குத் தலைசிறந்த கருவியாகிய மணிமேகலையை இழந்ததனால் வெறுப்புற்று மலர் வாளியை வறுநிலத்து எறிந்து கையற்று ஏங்க என்பது கருத்து. போதி அறவோன் -புத்த பெருமான். வைகறை யாமத்துக் கண்ட கனவாதலின் அதன் பயன் இப்பொழுதே வந்துறும் என்றான். இனி, கோட்டுமா -பன்றி என்பாரும் உளர். இனி இவை தீக்கனா என்பதனை-

களிறுமேல் கொள்ளவும்
கனவி னரியன காணா

எனவும்,

சொல்லத் தகுமுகட் டொட்டகம் வெட்டுந் துணைமருப்பார்
இல்லத் தெருமை கழுதைக ளென்றவை யேறிநின்றே
மெல்லத் தரையி லிழிவதன் முன்னம் விழித்திடுமேல்
கொல்லத் தலைவரு மாற்றருஞ் சீற்றத்துக் கூற்றுவனே

எனவும்,

படைத்தமுற் சாமமோ ராண்டிற் பலிக்கும் பகரிரண்டே
கிடைத்தபிற் சாம மிகுதிங்க ளெட்டிற் கிடைக்குமென்றும்
இடைப்பட்ட சாமமோர் மூன்றினிற் றிங்களொர் மூன்றென்ப
கடைப்பட்ட சாமமு நாள்பத்து ளேபலங் கைபெறுமே  (வால்)

எனவும் வருவனவற்றால் அறிக.

கவுந்தியும் மாடலனும் கோவலனைக் கண்ணகியோடு அந்நகரின்கண் புகுமாறு அறிவுறுத்தல்

107-114: அறத்துறை ............. கூறுங்காலை

(இதன்பொருள்) அறத்து உறை மாக்கட்கு அல்லது இந்தப் புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின் - துறவறத்தோடு தங்குவோர்க் கல்லது இந்தப் புறஞ்சேரியின்கண் தங்குதல் பொருந்தாது ஆதலால்; அகநகர் மருங்கின் அரைசர் பின்னோர் நின் உரையின் கொள்வர் இங்கு நின் இருப்பு ஒழிக -இந்த அகநகரிடத்தே வாழுகின்ற வாணிகர் நீ மாசாத்துவான் மகன் என்னும் நின் புகழை அறிந்துழியே நின்னை ஆர்வத்துடன் எதிர் கொண்டு ஏற்றுக்கொள்வர் என்பது தேற்றம்; இனி இவ்விடத்தே நினது இருப்பை ஒழிக; காதலி தன்னொடு கதிர் செல்வதன்முன் மாடமதுரை மாநகர் புகுக என-இப்பொழுதே நீ நின் காதலியோடு ஞாயிறு படுவதன் முன்னர் மாடங்களையுடைய இம் மதுரை மாநகரத்தினுள் புகுதலே நன்றென்று; மாதவத்தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் தனக்குக் கூறுங்காலை - கவுந்தியடிகளும் மாடலனும் கோவலனுக்குக் கூறுகின்ற காலத்தே; என்க.

(விளக்கம்) கோவலன் தீக்கனாக் கண்டு அதன் பயன் இப்பொழுதே வந்துறும் என்று கூறக்கேட்டமையால் தீங்குறுதற்குக் காரணமான இப் புறஞ்சேரியில் இவர் சிறிது பொழுதேனும் இருத்தல் வேண்டா என்னுங் கருத்தால் அடிகளாரும் மாடலனும் நீ இனி இங்கிருத்தல் வேண்டா, இற்றைப் பகலிலேயே இவளோடும் அகநகர் புகுதுக என்று அறிவுறுத்தவாறாம். என்னை? தீங்கு நிகழினும் பாதுகாவலான இடத்தில் இருப்பின் அத்தீங்கின் பயனும் சிறிதாய் இருத்தல்கூடும் ஆதலின் என்க. இரவும் தீங்கு நிகழ்தற்கு ஏதுவாம் என்னுங் கருத்தால் கதிர் செல்வதன்முன் புகுக என்றுரைத்தனர், என்க.

மாதரி வரவு

115-119: அறம்புரி .................. தொழலும்

(இதன்பொருள்) ஆயர் முதுமகள் மாதரி என்போள்-ஆயர் குலத்துப் பிறந்த மாதரி என்று பெயர் கூறப்படுகின்ற ஒருமுதுமகள்; அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர் -துறவறத்தைப் பெரிதும் விரும்புகின்ற நெஞ்சினையுடைய துறவிகள் மிகுதியாக உறைகின்ற அப் புறஞ்சேரியாகிய பழைய வூரிடத்தே கோயில் கொண்டருளிய; பூங்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்-மலர் போலும் கண்ணையுடைய இயக்கியாகிய தெய்வத்திற்குப் பாற்சோறு படைத்து வழிபட்ட அன்புள்ளத்தோடு மீண்டு வருபவள்; காவுந்தி ஐயையைக் கண்டு அடிதொழலும்-தான் வரும் வழியில் இருந்த கவுந்தியடிகளாரைக் கண்டு அன்புற்று அவர் திருவடிகளிலே விழுந்து வணங்கி எழுந்து கை கூப்பித் தொழுது நிற்ப; என்க.

(விளக்கம்) இயக்கி - ஒரு பெண் தெய்வம். பால்மடை - பாற்சோறு. பண்பு -ஈண்டு அன்புடைமை. இயக்கி -ஆரியாங்கனை என்பாரும் உளர்.

அடிகளார் தம்முள்ளத்துள் நினைதல்

120-124: ஆகாத்தோம்பி .............. எண்ணினளாகி

(இதன்பொருள்) ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை- அன்புடன் கை தொழுது நின்ற மாதரியை நோக்கிய கவுந்தியடிகளார் தமது நெஞ்சத்துள் நினைபவர் ஆக்களைப் காத்துப் பேணி அவ்வாக்கள் தரும் பயனாகிய பாலைப் பிறருக்கு வழங்கும் தொழிலையுடைய ஆயர்களின் வாழ்க்கையின்கண் யாதொரு தீங்கும் இல்லை; தீது இலன் முதுமகள் செவ்வியள் அளியள் -தீங்கற்ற அவ் ஆயர் குடிப்பிறந்த இம் மாதரியும் தன்னியல்பில் தீதற்றவளும் முதுமையுடையவளும் நடுவு நிலைமையுடையவளும் பிறரை ஓம்பும் தன்மை உடையவளும் ஆதலால்; மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்று என எண்ணினள் ஆகி -இம் மாதரியின்பால் கண்ணகியை அடைக்கலமாக இற்றைக்கு வைப்பதனால் வருந் தீங்கு யாதும் இல்லையாம் என நினைத்தவராய்; என்க.

(விளக்கம்) ஆக்களைக் காத்து ஓம்பி என்றது அவை வெருவும் பிணியும் உற்றுழிக் காத்துப் புல்லுள்ள நிலத்தில் வயிறார மேய்த்து, நீர் நிலைகளில் நீரூட்டி நன்கு பேணி என்றவாறு, ஆப்பயன்-பால், தயிர் முதலியன. அளித்தல் - கன்றருத்தி மிக்கதனை யாவருக்கும் வழங்குதல். அளியள் - அளியுடையள்; யாவரானும் அளிக்கத்தக்காள் என்னும் பழையவுரை ஈண்டுப் பொருந்தாது.

கவுந்தி அடிகளார் மாதரியின்பால் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தல்

125-130: மாதரி ............. தந்தேன்

(இதன்பொருள்) மாதரி கேள் இம் மடந்தை தன் கணவன் தாதையைக் கேட்கின் -இங்ஙனம் நினைந்த அடிகளார் மாதரியை நோக்கி மாதரியே! ஈதொன்று கேள்! இம் மடந்தையின் கணவனுடைய தந்தை பெயரைக் கேட்பாராயின்; தன் குலவாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் அவன் குலத்தினராய் இம் மதுரையில் வாழ்பவர் பெறுதற்கரிய பொருளைப் பெற்றாரைப்போல நல்விருந்தாக எதிர்கொண்டு அழைத்துப் போய்க் கரிய பெரிய கண்ணினையுடைய இவளோடு இவள் கணவனையும் தமது காவலையுடைய மனையகத்தே கொண்டு சென்று பேணி வைத்துக்கொள்வார்கள்; உடைப் பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்- அவ்வாறு இவர்பால் ஆர்வம் உடைய பெரிய செல்வருடைய மனையகத்தே இவர் சென்று புகுமளவும்; இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்- கொடும்பாடில்லாத இடைக்குலத்தே பிறந்த உனக்கு யான் இவளை அடைக்கலமாகத் தந்தேன் என்று சொல்லி; என்க.

(விளக்கம்) மடந்தை என்றது கண்ணகியை. தாதை - கோவலன் தந்தையாகிய மாசாத்துவான். அவன் தானும் பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான் ஆதலோடு வருநிதி பிறர்க்கார்த்தும் வள்ளலும் ஆதலின் அவன் புகழ் உலகெலாம் பரவி நிற்றல் ஒருதலை என்று உட்கொண்டு அடிகளார் ஈண்டு இவன் தாதையைக் கேட்கின் இவன் குலவாணர் எதிர்கொண்டு மனைப்படுத்துவர் என்றார். நீ தானும் சிறந்த குலத்து மடந்தையாதலின் நின்பால் அடைக்கலம் செய்யத்தகும் என்று கருதியே தந்தேன் என்பார், நினக்கு என்னாது இடைக்குல மடந்தைக்கு என விதந்தார்.

அடிகளார் மாதரிக்குக் கண்ணகியின் சிறப்புரைத்தல்

(131-ஆம் அடிமுதல் 200 -ஆம் அடி ஈறாக, அடிகளார் கூற்றாக ஒரு தொடர்.)

131 -136: மங்கல ......... தாங்கு

(இதன்பொருள்) மங்கல மடந்தையை நல் நீராட்டி செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி தேம் மெல் கூந்தல் சில் மலர் பெய்து-இயற்கை யழகுடைய இம் மடந்தையை நீ தூய நீரினால் ஆட்டிச் சிவந்த கயல்மீன் போன்ற இவளது நெடிய கண்ணுக்கு மை தீட்டிக் காண்டற்கினிய கூந்தலிலே சில மலர்களைச் சூட்டி; தூமடி உடீஇ -தூய புதுப்புடைவையை உடுத்து; ஆயிழை தனக்கு -இந் நங்கைக்கு; தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் தாயும் நீயே ஆகி தாங்கு- இவளுக்கு இவளோடு பழகிய பழைய சிறப்பினையுடையவராகிய தோழிமாரும் செவிலித் தாயரும் நற்றாயும் நீயேயாகித் தாங்குவாயாக என்றார்; என்க.

(விளக்கம்) மங்கலம்-இயற்கை யழகு. தேம்-தேன் மணமுமாம்; பன்மலர் பெய்யின் இடைபொறாது என்பார் சின்மலர் பெய்து என்றார். தொல்லோர் - இவளுடைய பழைய தோழிமார். காவல்: ஆகுபெயர்; செவிலித்தாய்.

136-138: ஈங்கு ............ அறிந்திலள்

(இதன்பொருள்) ஈங்கு என்னொடு போந்த இளங்கோடி நங்கை தன் -இவ்விடத்தே துறவியாகிய என்னோடு நடையான் மெலிந்து வந்த இளைய பூங்கொடிபோலும் இந்த நங்கையினது; வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் - அழகிய சிறிய அடியை முன்பு நிலமகளும் கண்டறியாள் காண் என்றார்; என்க.

(விளக்கம்) இவள் இல்லத்தை விட்டுப் புறம் போந்து நடந்தறியாள் ஆதலின் மண்மகள் அறிந்திலள் என்றவாறு.

இனி, இவளுடைய அடியினது மென்மையை நிலமகள் அறிந்திலாமையால் அவற்றைக் கொப்புளங் கொள்ளுமாறு செய்தனள் என்றிரங்கியவாறுமாம்.

139-148: கடுங்கதிர் .......... அறியாயோநீ

(இதன்பொருள்) கடுங்கதிர் வெம்மையின் நாப்புலர வாடி - ஞாயிற்றின் வெப்பத்தாலே தனது நாவும் புலரும்படி தன் திருமேனி வாடாநிற்பவும்; காதலன் தனக்கு நடுங்கு துயர் எய்தி - தன் கணவன் மெய் வருந்தியதே என்று அது பொறாளாய் நடுங்குதற்குக் காரணமான பெருந்துயரத்தை எய்தி; தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி - தன் துயர் என்று வேறு காணாத பெருந்தகைமை பொருந்திய பூங்கொடி போல்வாளாகிய; இன் துணை மகளிர்க்கு இன்றி அமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலம் ஆல் - தம் காதலர்க்கு இனிய வாழ்க்கைத் துணை ஆகிய மகளிருக்கு ஒருதலையாக வேண்டப்படுகின்ற கற்பினைக் கடமையாகப் பூண்டுகொண்ட இத்தெய்வமே வாய்மையான தெய்வமாவதல்லது வேறு இவளினுங்காட்டில் பொலிவினையுடைய தெய்வத்தின் யாம் கண்டிலேம்; வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்னும் - அதுவேயுமன்றிக் காலமழை பொய்த்தறியாது வளம் பிழைத்தலையு மறியாது அரசருடைய வெற்றியும் சிதைந்தறியாது அஃது எந்த நாடெனில்; பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்று நல்லோர் சொல்லும்; அத்தகு நல்உரை நீ அறியாயோ அத்தகைய நன்மையுடைய அறநூலுரையை நீயும் அறிந்திருப்பாய் அல்லையோ என்றார்; என்க.

(விளக்கம்) தன் நெஞ்சம் முழுவதும் காதலன்பாலே பொருந்தி அவன் எய்தும் துயர்க்கு வருந்துதலாலே தனது துயர் காணாள் ஆயினள் என்க. ஈண்டு ஒன்றொழித் தொன்றை உள்ள மற்றொரு மனமுண்டோ? எனவரும் கம்பநாடர் மொழியும் நினைக. (மாரீசன் -84.) கடம் - கடமை.

தவத்தோர் அடைக்கலத்தின் மாண்பு

149-160: தவத்தோர் ............. நின்றோனை

(இதன்பொருள்) தவத்தோர் அடைக்கலம் தான் சிறிது ஆயினும்-தவஞ்செய்யும் சான்றோர் கொடுத்த அடைக்கலம் அப்பொழுது சிறியதாகத் தோன்றினும்; மிகப் பேரின்பம் தரும்- அது பின்னர் மிகவும் பேரின்பத்தைத் தருவதொன்றாம்; அது கேளாய் - மாதரியே அதற்கு எடுத்துக்காட்டாக யாம் கூறுமிதனைக் கேட்பாயாக; படப்பைக் காவிரிப் பட்டினம் தன்னுள் பூவிரி பிண்டிப் பொது நீங்கு திருநிழல் - தோட்டங்களையுடைய காவிரிப்பூம்பட்டினத்தில் மலர்விரிந்த அசோகினது பொதுத்தன்மை நீங்கிய அழகிய நிழலின்கண்; உலக நோன்பிகள் ஒருங்கு உடன் இட்ட இலகு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி தருமம் சாற்றும் சாரணர் தம் முன் சாவகர் ஒருங்குகூடி அமைத்த விளங்குகின்ற ஒளியையுடைய சந்திரகாந்தக் கல்லாலியன்ற மேடையின் மேல் அமர்ந்தருளி அறங்கூறும் சாரணர் முன்னிலையிலே ஒருநாள்; திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் - வானவில்லைப் போல ஒளிவீசித் திகழ்கின்ற திருமேனியையும் தார் மாலை முதலியவற்றையும் பொன்னாலியன்ற அணிகலன்களையும் நில உலகத்தார் கண்ணிற்குப் புலப்படாத தேவர் பலரானும் தொழப்படுகின்ற வடிவத்தையும் உடையவனும்; ஒரு பாகத்துக் கருவிரல் குரங்கின் கை பெருவிறல் வானவன் தனதிரு கைகளுள் வைத்து ஒருபக்கத்துக் கை கரிய விரலையுடைய குரங்கின் கையாக உடையவனாகிய பேராற்றலுடைய தேவனொருவன்; வந்து நின்றோனை - வந்து நின்றானாக அவனைக் கண்டபொழுது; என்க.

(விளக்கம்) கேளாய் என்றது அதற்கு ஒன்று கூறுவேன் அதனைக் கேளாய் என்பதுபட நின்றது. படப்பைக் காவிரி என மாறுக. படப்பை - தோட்டம். பட்டினம் - காவிரிப்பூம்பட்டினம். பிண்டியின் நிழல் ஏனைய நிழல்போலச் சாயாதே நிற்கும் தெய்வத் தன்மையுடைய நிழல் என்பார் பொது நீங்கு திருநிழல் என்றார். உலக நோன்பிகள் - சாவகர்; அமராவார் சமண சமயத்தைச் சார்ந்து தமக்கு விதித்த நோன்புகளை மேற்கொண்ட இல்லறத்தோர் என்க. இவர் புகார் நகரத்தே இட்ட சிலாதலம் உண்மையை:

பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல்
நீரணி விழவினு நெடுந்தேர் விழவினுஞ்
சாரணர் வரூஉந் தகுதியுண் டாமென
உலக நோன்பிக ளொருங்குட னிட்ட
இலகொளிச் சிலாதலந் தொழுது வலங்கொண்டு - நாடுகாண். 21-25.

என்று ஓதியதனானு மறிக. திருவில் - வானவில்; ஒளியிட்டு என்க. தார் - பூமாலை. மாலை - மணிமாலை எனவும் தார மாலையன் எனப் பாடமோதி மந்தார மாலையை யுடையன் எனினும் அமையும். கண்டபொழுது என ஒருசொல் பெய்க.

இதுவுமது

161-162: சாவகர் ............... கூறும்

(இதன்பொருள்) சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது - அவ்விடத்தே அச் சாரணர் கூறிய அறவுரை கேட்டிருந்த சாவகர் எல்லாம் அச் சாரணரைக் கை தொழுது அடிகளே; ஈங்கு இவன் வரவு யாது என-இவ் விடத்தே இவன் இவ்வாறு வருதற்குக் காரணம் யாது? என வினவ அதுகேட்டு; இறையோன் கூறும் -அச் சாரணருள் தலைவன் கூறுவான்; என்க.

(விளக்கம்) இவ்வாறு என ஒருசொல் பெய்க (அஃதாவது குரங்கின் கையோடு இவன் வருதற்குக் காரணம் என்னையோ என்றவாறு.) இறையோன் - தலைவன்.

இதுவுமது

163-191: எட்டி சாயலன் ......... என்றலும்

(இதன்பொருள்) எட்டி சாயலன் இருந்தோன் தனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையில் -எட்டி என்னும் பட்டம் பெற்ற சாயலன் என்னும் வாணிகனொருவன் துறந்தோர்க்குத் துப்புரவு வேண்டிக் காமம் சான்ற கடைக்கோள் காலையும் இல்லறத்தின் கண் இருந்தானாக அவனுடைய, உண்ணாவிரதத்தை யுடையோர் பலரும் (அவ் விரதம் முடிந்துழி உண்ணுதற்கு வந்து) புகுதும் மனையின்கண் ஒருநாள்; ஓர் மாதவ முதல்வனை மனைப்பெருங்கிழத்தி ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து -பெரிய தவத்தையுடைய முதல்வன் வரக்கண்டு அவனை அம்மனைத் தலைவியாகிய மூதாட்டி தனது தீவினை நீங்கும் பொருட்டு அன்புடன் எதிர்கொள்ளும் பொழுது; ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள்புக்கு பால்படு மாதவன் பாதம் பொருந்தி - அவ்வூர் மாக்களாலே அலைக்கப்பட்ட சிறிய குரங்கு ஒன்று அச்சத்தால் ஒதுங்கிவந்து அம் மனையினுள் புகுந்து அங்கிருந்து அருளறத்தின் பாற்பட்ட அம் முனிவனுடைய திருவடிகளிலே விழுந்து; உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை அம் முனிவன் உண்டு கழித்த சோற்றினையும் கைகழுவிய நீரையும் தணியாத விருப்பத்தாலே சிறிது அருந்தியதனால் உண்டான மகிழ்ச்சியோடு முனிவன் எதிரே சென்று தனது நன்றியறிவு புலப்பட அம் முனிவனுடைய முகத்தை நோக்கிய இன்பத்திற்குக் காரணமான அதன் முகச்செவ்வியை; அதிராக் கொள்கை அறிவனும் நயந்து மனைக்கிழத்தி நின் மக்களின் ஓம்பு என நடுங்காத கோட்பாட்டினையுடைய மெய்யறிவுடைய அம் முனிவனும் விரும்பி அவ்வில்லத் தலைவியை அழைத்து அன்னாய் இக் குரங்கினை நின்னுடைய மக்களைப் பேணுமாறு பேணிக்கொள்க என்று கூறி ஓம்படை செய்துபோக; மிக்கோன் கூறிய மெய்ம் மொழி ஓம்பி காதல் குரங்கு கடை நாள் எய்தவும் - அதுகேட்ட அம் மனைக்கிழத்தி தானும் அம்முனிவன் கூறிய வாய்மொழியை ஒருபொழுதும் தப்பாமல் நினைவிற்கொண்டு அக் குரங்கினைப் பேணி வரும் பொழுது தன் அன்பிற்குரிய அக் குரங்கு தானும் முதுமை எய்தி இறந்ததாக; தானம் செய்வுழி அதற்குத் தீது அறுக என்றே ஒரு கூறு செய்தனள் ஆதலின் இறந்த அக் குரங்கிற்கு இறுதிச் சடங்கு செய்து அச் சடங்கில் தானஞ் செய்யுங்கால் தனது பொருளில் அதற்கும் ஒருகூறு செய்து அவற்றை எல்லாம் அதற்குத் தீவினை கெடுக என்று உட்கொண்டு தானஞ் செய்தனள் ஆதலால்; மத்திம நல் நாட்டு வாரணம் தன்னுள் உத்தர கவுத்தற்கு ஒரு மகன் ஆகி உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி - அக் குரங்கு நடு நாட்டகத்தில் வாரணவாசி என்னும் நகரத்தின்கண் உத்தரகவுத்தன் என்னும் அரசனுக்கு ஒரே மகனாக அழகினோடும் திருவோடும் உணர்வினோடும் பிறந்து; பெருவிறல் தானம் பலவும் செய்து ஆங்கு எண் நால் ஆண்டின் இறந்த பிற்பாடு விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின் வள்ளன்மையில் பெரிய வெற்றியுடையவனாய்த் தானங்கள் பற்பலவுஞ் செய்து அவ் வரசுரிமையில் முப்பத்திரண்டாண்டு கழிந்த பின்னர்த் தெய்வ வடிவம் பெற்றனன் ஆதலாலே; பெற்ற செல்வப் பெரும்பயன் எல்லாம் தன்காத்து அளித்தோள் தானச் சிறப்பு என பண்டைப் பிறப்பின் குரங்கின் சிறு கை ஒருபாகத்து கொண்டு அவ்வாறு தான்பெற்ற செல்வமும் அச் செல்வத்தால் தான் எய்திய பெரிய பயன்களும் எல்லாம் முன்னர்த் தன்னைப் பாதுகாத்தருளியவள் செய்த தானத்தின் சிறப்புகள் என்று கருதி முற்பிறப்பிலே கருங்குரங்கான வடிவத்திற்கியன்ற சிறிய கையைத் தனது ஒரு பாகத்திற்கொண்டு; கொள்கையின் புணர்ந்த சாயலன் மனைவி தானம் தன்னால் இவ்வடிவு ஆயினன் அறிமினோ என - முனிவர் சொல்லைப் பேணவேண்டும் என்னும் கொள்கையினோடு பொருந்திய சாயலன் என்னும் வணிகன் மனைவி என்பொருட்டுப் பண்டு செய்த தானத்தின் விளைவால் இந்தத் தெய்வ வடிவத்தை யான் பெறுவேனாயினேன் எல்லீரும் அறிந்துகொள்ளுங்கோள் என்று; சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்டத் தேவகுமரன் தோன்றினன் என்றலும் - உலக நோன்பிகளாகிய உங்களுக்கு எல்லாம் விளக்கிக் காட்டுதற்கே இத் தேவகுமரன் இவ்வாறு இவ்விடத்தே தோன்றினன் என்று கூறவும்; என்க.

(விளக்கம்) எட்டி - பட்டப்பெயர். சாயலன் ஒரு வணிகன் இருந்தான் என்றது துறந்தோர்க்குத் துப்புரவு வேண்டித் தான் துறவாமல் இல்லத்திருந்தோன் என்பதுபட நின்றது. இக் கருத்து பட்டினி நோன்பிகள் பலர்புகும் மனை என அவன் மனையை அடிகளார் விதந்தமையால் பெற்றாம். ஏதம் - தீவினை. ஒதுங்கி என்றமையால் அலைக்கப்பட்டு ஆற்றாது என்பது பெற்றாம். பாற்படு மாதவன் - துறவறத்தின் பாற்படும் மாதவன் என்க. முகச் செவ்வி - முகம் மலர்ந்த தன்மை. மனைக்கிழத்தீ: விளி. விகாரமெனினும் அமையும். ஒரு கூறு: தன் மக்களுக்குக் கூறு செய்து கொடுக்குமாறு போலே அக்குரங்கிற்கும் கொடுத்த ஒரு கூறு என்க.

இனி, உத்தரன் கவிப்பதற்கு ஒரு மகனாகி எனப் பாடமோதி இக்குரங்கு உத்தரனென்னும் பெயரோடு கவிப்பனென்னும் வாணிகனுக்கு ஒரு மகனாகப் பிறந்ததென்பாருமுளர் என்பது பழைய உரை. உணர்வு - பழம் பிறப்புணர்ச்சி. எண்ணாலாண்டு என்றது அவன் அரசாட்சி செய்த காலத்தை. சாற்றினன் -சாற்றி.

இதுவுமது

192-197: சாரணர் .............. எய்தினர்

(இதன்பொருள்) சாரணர் கூறிய தகைசால் நல்மொழி ஆர் அணங்குஆக என்று அப்பதியுள் அறந்தலைப்பட்டோர் அருந்தவமாக்களும் - சாரணர் மொழிந்த தகுதியமைந்த நல்ல அறவுரையை அந்நாளில் தெய்வ மொழியாகக் கொண்டு அறத்து வழி நின்றோராகிய அந்நகரத்துக்கண் அரிய தவமுடையோரும்; தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் தனக்கெனவாழாது பிறர்க்கென வாழும் வாழ்க்கையினையுடைய உலக நோன்பிகளும்; இட்ட தானத்து எட்டியும் மனைவியும் - தானம் செய்த சாயலனும் அவன் மனைவியும்; முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர்-குறைவில்லாத இன்பத்தினையுடைய வீட்டுலகத்தினை அடைந்தனர்; என்க.

(விளக்கம்) தகை - ஈண்டு வாய்மை. அணங்காக - தெய்வமொழியாக. அறந்தலைப் பட்டோர்: அச் சாரணர் கூறிய அடைக்கலம் பேணும் அறத்தை மேற்கொண்டவர் என்க. தன்தெறல் வாழ்க்கை -தன்னலம் பேணாது பிறர்க்கென வாழும் வாழ்க்கை. இனி உண்ணா நோன்பு முதலியவற்றால் தன்னையே ஒறுக்கும் வாழ்க்கை எனினுமாம். முட்டா இன்பம்: குறைபாடில்லாத வின்பம். முடிவுலகு-வீட்டுலகம்.

தவத்தோர் அடைக்கலம் தான் சிறிதாயினும் மிகப்பேரின்பம் தரும் என்று கூறியதற்கு எடுத்துக்காட்டாக இவ் வரலாற்றினை அடிகளார் ஓதினர் என்க.

இதுவுமது

198-200: கேட்டனை ........... ஏத்தி

(இதன்பொருள்) கேட்டனை ஆயின் நீ தோட்டு ஆர் குழலியொடு நீட்டித்து இராது-இவ்வாற்றால் அடைக்கலத்தின் பயனை நீ கூர்ந்து கேட்டனை எனின் இந்த மலர் பொருந்திய கூந்தலை யுடைய கண்ணகி நல்லாளோடு இனி இவ்விடத்தே காலம் தாழ்த்திராது; நீ போக என்று கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி - நீ விரைந்து போவாயாக! என்று கவுந்தியடிகளார் ஏவா நிற்ப, அதுகேட்ட மாதரி தான் பெற்ற சிறந்த அடைக்கலப் பொருள் பற்றிப் பெரிதும் மகிழ்ந்து அடிகளாரைத் தொழுது அவ்விடத்தினின்றும்; என்க.

(விளக்கம்) தோடு - தோட்டு என விகாரமெய்தியது, அடைக்கலம் பெற்றமை கருதி உவந்தனள் என்க.

மாதரி செயல்

201-206: வளரிள .......... புறஞ்சூழ

(இதன்பொருள்) வளர் இள வனமுலை வாங்கு அமைப்பணைத் தோள் முளை இள வெள்பல் முதுக்குறை நங்கையொடு -வளர்கின்ற இளைய அழகிய முலையினையும் வளைந்த மூங்கில் போன்ற பருத்த தோள்களையும் முளைபோன்ற வெள்ளிய எயிறுகளையும் சிறு பருவத்திலேயே வாய்க்கப்பெற்ற பேரறிவினையும் உடைய மாதர்களுள் தலை சிறந்த கண்ணகி நல்லாளோடு; சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமையத்து மேற்றிசையின்கண் சென்று வீழ்கின்ற ஞாயிற்றினது அடங்கிய சுடரையுடைய மாலைப் பொழுதிலே; கன்று தேர்ஆவின் கனைகுரல் இயம்ப - மடிபால் சுரந்து தம் கன்றைத் தேடி வருகின்ற ஆக்களின் மிக்க குரல்கள் ஒலிப்பவும்; மறி நவியத்துத் தோள் உறிக் கா வாளரொடு செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறம்சூழ - ஆட்டுக்குட்டியையும் கோடரியையும் சுமந்த தோளிலே உறிகட்டின காவையுமுடைய இடையருடனே கூடச் செறிந்த வளையலணிந்த இடைச்சியரிற் சிலர் இவள் அழகு கண்டு வியப்போடு புறஞ்சூழ்ந்து வாராநிற்பவும்; என்க.

(விளக்கம்) வனம் - அழகு. அமைவாங்கு பணைத்தோள் என மாறி மூங்கிலின் அழகை வாங்கிக்கொண்டு பூரித்த தோள் என்பாருமுளர். முதுக்குறை -பேரறிவு. நங்கை-மகளிருள் தலை சிறந்தவள். செல்சுடர்-உலகினின்றும் தமது மண்டிலத்திற்குச் சென்றடங்கிய சுடர் எனினுமாம். கனை குரல் - பெருங்குரல். நவியம் - கோடரி. கா-காவுதடி. அதன் இரு நுனியிலும் உறி கட்டப்படுதலின் உறிக்கா என்றார். காவுதடி என்பது இக்காலத்தே காவடி என வழங்கப்படும். ஆய்ச்சியர் நங்கைக்குப் பாது காவலாகப் புறஞ்சூழ என்றுமாம்.

இதுவுமது

207-219: மிளையும் ............ புணர்ந்தென்

(இதன்பொருள்) மிளையும் - காவற்காடும்; கிடங்கும் - அகழியும்; வளைவில் பொறியும் - தானே வளைந்து அம்பெய்யும் விற்பொறியும்; கருவிரல் ஊகமும் - கரிய விரலையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறியும்; கல்உமிழ் கவணும் -கல்லை எறிகின்ற கவணும்; பரிவுஉறு வெந்நெய்யும் - காய்ந்து சேர்ந்தார் மேல் இறைத்தால் வருந்துகின்ற நெய்யையுடைய மிடாவும்; பாகுஅடு குழிசியும் - செம்புருக்கிப் பகைவர்மேல் இறைக்கும் மிடாவும்; பொன்காய் உலையும் -இரும்பை உருகக் காய்ச்சிவீசும் உலைப் பொறியும்; கல் இடு கூடையும் - கல்லிட்டு வைக்கப்பட்ட கூடைகளும்; தூண்டிலும் - தூண்டில் வடிவாகப் பண்ணிப் போகட்டு வைத்து அகழியை நீந்திவந்து மதில் பற்றுவாரைக் கோத்திழுக்கும் கருவியும்; தொடக்கும் - கழுக்கோல்போலக் கழுத்திற் பூட்டி முறுக்குஞ் சங்கிலியும்; ஆண்டலை அடுப்பும்- ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிடப் பகைவர் உச்சியிற் கொத்தி மூளையைக் குடிக்கும் பொறிநிரலும்; கவையும் - அகழியினின்றும் ஏறின் தள்ளிவிடும் இரும்பாலியன்ற கவைக்கோலும்; கழுவும் - கழுக்கோலும்; புதையும் - அம்புக் கட்டும்; புழையும் -அம்பேவும் அறைகளும்; ஐயவித்துலாமும் - பற்றாக்கை தூக்கிப் போகட்ட விட்டமும், கையெபர் ஊசியும் - மதிற்றலையைப் பற்றுவார் கையைத் துளைக்கும் ஊசிப்பொறிகளும்; சென்று எறி சிரலும் - பகைவர்மேல் பாய்ந்து கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறியும்; பன்றியும் - மதில் உச்சியில் ஏறினார் உடலைக் கொம்பால் கிழிக்க இரும்பாற் செய்துவைத்த பன்றிப் பொறியும்; பணையும் - பகைவரை அடித்தற்கு மூங்கில் வடிவாகப் பண்ணிவைத்த பொறியும்; எழுவும் சீப்பும் - கதவுக்கு வலியாக உள்வாயிற் படியிலே நிலத்திலே விழும்படி விடும் மரங்களும்; முழு விறல் கணையமும் - கணைய மரமும்; கோலும் - விட்டேறும்; குந்தமும் - சிறுசவளமும்; வேலும் -வல்லையமும்; ஞாயிலும் - குருவித்தலைகளும்; பிறவும் - சதக்கினி தள்ளி வெட்டி களிற்றுப்பொறி விழுங்கும் பாம்பு கழுகுப்பொறி புலிப்பொறி குடப்பாம்பு சகடப்பொறி தகர்ப்பொறி அரிநூற் பொறி என்பனவும்; சிறந்து - ஆகிய இப் பொறிகளால் சிறப்புற்று; நாள் கொடி நுடங்கும் - நல்ல நாளிலே உயர்த்திய கொடி அசைகின்ற; வாயில் கழிந்து-மதில் வாயிலைக் கடந்து; கோவலர் மடந்தை - கோவலர் குலத்து முதுமகளாகிய அம் மாதரி; கொள்கையில் புணர்ந்து - தனது கொள்கையினோடு உள்ளம் ஒன்றி; தன் மனைபுக்கனளால் - தன்னுடைய மனையின்கண் புகுந்தனள்; என்பதாம்.

(விளக்கம்) வளைவிற்பொறி முதலாகப் பிறவும் என்னும் வரையில் மதில் அரண்மேல் அமைத்துள்ள பொறிகள் என்றுணர்க. 208. கருவிறல் எனவும் பாடம்: ஊகம்-குரங்கு. 209. பாகு - செப்புக் குழம்பு; குழிசி - மிடா; சாணகம் கரைத்துக் காய்கிற மிடாக்களுமாம் என்பாருமுளர். 210: பொன் - இருப்பு வட்டுக்கள். கல்லிடு கூடை - இடங்கணிக்கல் வீசும் கூடை என்றும் கூறுவர். தொடக்கு - கயிற்றுத் தொடக்குமாம். ஆண்டலை - ஆண்மகனது தலைபோல வடிவமுள்ள ஒருவகைப் பறவை. அடுப்பு - அடுக்கு. 212. கழுகும் எனவும் பாடம். புதை மண்ணிற்புதைத்த இருப்பாணியும் என்பர். 213. ஐயவித்துலாம் - கதவை அணுகாதபடி கற்கவி தொடங்கி நாற்றும் துலாம்; சிற்றம்புகளை வைத்து எய்யும் இயந்திரமுமாம். பொய்யூசி என்றும் பாடம். சிரல் - சிச்சிலி (மீன் கொத்திப் பறவை). பணை - முரசுமாம். குதிரைப்பந்தியுமாம். எழுவுஞ்சீப்பு - எழுப்பும் சீப்பு என்க. 217: நாள்தோறும் செய்த வெற்றிக்குக் கட்டின கொடியுமாம். 219: கோவலர் மடந்தை என்றது மாதரியை. கோவலர் மடந்தை தவத்தோராகிய கவுந்தியடிகள் தந்த அடைக்கலத்தைப் பேணவேண்டும் என்னும் கொள்கையொடு உள்ளம் பொருந்தி வாயில் கடந்து தன் மனை புக்காள் என்க.

இனி, இதனை மாநகர் கண்டு பொழிலிடம் புகுந்து கோவலன் கூறுழி, மாடலன் என்போன் புகுந்தோன் றன்னைக் கோவலன் வணங்க, அந்தணன் உரைப்போன் கருணை மறவ, செல்லாச்செல்வ, இல்லோர் செம்மல், உம்மைப் பயன் கொல்? போந்தது நீயென வினவ, கோவலன் கனவு கண்டேன் கடிதீங்குறும் என, இங்கு ஒழிக நின் இருப்பு, மதுரை மாநகர் புகுக என, மாதவத்தாட்டியும் மாமறை முதல்வனும் கூறுங்காலை மாதரி என்போள் ஐயையைக் கண்டு அடி தொழலும், எண்ணினளாகி, அடைக்கலம் தந்தேன் மடந்தையைத் தாயும் நீயே ஆகித்தாங்கு, அடைக்கலம் சிறிதாயினும் பேரின்பம் தரும், அது கேளாய், பட்டினந் தன்னுள் சாரணர் முன் குரங்கின் கை யொரு பாகத்து வானவன் வந்து நின்றோன் யாதுஇவன் வரவு என, இறையோன் தேவகுமரன் தோன்றினன் என்றலும், அறந்தலைப்பட்டோர் முடிவுலகெய்தினர்; கேட்டனை யாயின் நீ போகென்று கவுந்தி கூற, நங்கையொடு கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்து, மனைபுக்கனள் என முடிக்க.

பா-நிலை மண்டில ஆசிரியப்பா.

அடைக்கலக் காதை முற்றிற்று.


© Om Namasivaya. All Rights Reserved.