சீவக சிந்தாமணி

2. கோவிந்தையார் இலம்பகம்

கதைச்சுருக்கம்: சீவகன் இவ்வாறிருக்கக் கட்டியங்காரனுடைய ஆனிரைகளை ஆயர் காட்டின்கண் மேய்த்தனராக; அவற்றை வேடர்கள் கவர்ந்து கொண்டு சென்றனர். ஆயர்கள் அவற்றை மீட்கும் மதுகையிலராய் ஓடிவந்து கட்டியங்காரனிடத்தே முறையிட்டனர். கட்டியங்காரன் சினந்து தன் மக்கள் நூற்றுவரையும், தன் மைத்துனன் மதனனையும் ஆனிரையை மீட்டுவரும்படி ஏவினான். அவரெல்லாம் அவ்வேடற்கு எதிர்நிற்றலாற்றாதவராய் வறிதே மீண்டனர். அஃதறிந்த கட்டியங்காரன் வாளா விருந்தனன். ஆயர் தலைவனாகிய நந்தகோன் இச் செய்தியறிந்து பெரிதும் வருந்தி, இந்நிரையை வேடரை வென்று மீட்டு வருகின்றவனுக்கு என் மகளாகிய கோவிந்தையை அளிப்பேன் எனத் தெருத்தோறும் முரசறைவித்தனன். மறவர் பலரும் வேடர்க்கு அஞ்சி வாளா விருந்தனர். அஃதறிந்த சீவகன் சூளுரைத்துப் போர்க் கோலங் கொண்டு சென்று, அவ்வேடரொடு போர் செய்து அவரையெல்லாம் கொல்லாமல் அஞ்சி ஓடும்படி செய்தனன். சீவகன் நிரைமீட்டமை அறிந்த நந்தகோன் கோவிந்தையைச் சீவகனுக்குக் கொடுக்க முன்வந்தான். ஆயினும் சீவகன் அவ்வழகியைத் தான் ஏற்றுக்கொள்ளாமல், தன் தோழனாகிய பதுமுகனுக்கு மணஞ்செய்வித்தனன்.

அச்சணந்தி பிறவி நீத்தல்

409. ஆர்வ வேர் அவிந்து அச்சணந்தி போய்
வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின்
மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழச்
சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான்.  

பொருள் : அச்சணந்தி போய் ஆர்வ வேர் அரிந்து - அச்சணந்தி இராசமா புரத்தினின்றும் போய் ஆசையை வேர்களைந்து; வீரன் தாள் நிழல் விளங்க நோற்றபின் - ஸ்ரீவர்த்தமானரின் திருவடி நிழலில் விளங்குமாறு நோற்ற பிறகு; சோர்வு இல் கொள்கையான் - தளராத அக்கொள்கையால்; விண்தொழ மாரி மொக்குளின் மாய்ந்து - வானவர் தொழுமாறு; மழையிலுண்டாம் நீர்க்குமிழி போல மாய்ந்து; தோற்றம் நீங்கினான் - பிறவியை விட்டான்.

விளக்கம் : ஆர்வவேர்: பிறவிவேர். தாள் நிழலைச் சமவசரணம் என்பர் சைனர். ஸ்ரீ வர்த்தமானர்: சைன நூல்களிற் கூறப்படும் தீர்த்தங்கரர்களில் இருபத்து நான்காவது தீர்த்தங்கரர். இவரை வீரரென்றும் விளம்புவர். மொக்குளின் மாய்தலை வீடுபெறுங்கால் திருமேனியுடனே மறைதல் என்பர் நச்சினார்க்கினியர். ஆர்வம் : ஆகுபெயர். வேர்போறலின் வேர் என்றார். அச்சணந்தி சீவகன் நல்லாசிரியன். விண்: ஆகுபெயர்; அமரர். தோற்றம் - பிறப்பு.

சீவகன் குமரன் ஆதல்

410. நம்பன் இத் தலை நாக நல் நகர்
பைம் பொன் ஓடை சூழ் பரும யானையும்
செம் பொன் நீள் கொடித் தேரும் வாசியும்
வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே.  

பொருள் : இத்தலை நாகம் நல்நகர் - இவ்வுலகில் வானவர் நகர் போலும் அழகிய இராசமா புரத்தே; நம்பன் - சீவகன்; பைம்பொன் ஓடை சூழ் பரும யானையும் - புதிய பொன்னாலான முகபடாம் அணிந்த யானையையும்; செம்பொன் நீள் கொடித் தேரும் - நீண்ட கொடியையுடைய பொற்றேரையும்; வாசியும் - குதிரையையும்; வேனிலானின் வெம்ப ஊர்ந்து உலாம் - காமனைப் போல மகளிர் வேட்கையால் வெதும்ப ஊர்ந்து உலாவுவான்.

விளக்கம் : நம்பன் - எல்லோரானும் விரும்பப்படுபவன்; நம்பு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயர். நம்பும் மேவும் நசையாகும்மே என்பது தொல்காப்பியம் (உரி - 31): நாகம் - பவணலோகம். இஃது இராசமாபுரத்திற்கு உவமை. உருபு தொக்கு நின்றது ஓடை - முகபடாம். மகளிர் ஆசையால் வெதும்ப என்க. வேனிலான் - காமன்.

411. கலையினது அகலமும் காட்சிக்கு இன்பமும்
சிலையினது அகலமும் வீணைச் செல்வமும்
மலையினின் அகலிய மார்பன் அல்லது இவ்
உலகினில் இலை என ஒருவன் ஆயினான்.  

பொருள் : கலையினது அகலமும் - கலையின் பரப்பும்; காட்சிக்கு இன்பமும் - பார்ப்பதற்கு இன்ப மூட்டும் அழகும்; சிலையினது அகலமும் - படைக்கலப் பயிற்சியின் பரப்பும்; வீணைச் செல்வமும் - யாழுடன் பாடும் இசைச் செல்வமும்; மலையினின் அகலிய மார்பன் அல்லது - மலைபோல அகன்ற மார்பனான சீவகனல்லது; இவ்வுலகினின் இலையென - இவ்வுலகில் இல்லை யென்று கூற; ஒருவன் ஆயினான் - ஒப்பற்றவன் ஆயினான்.

விளக்கம் : இவை சீவகற்குப் பதினையாண்டு சென்றபின் நல்வினையான் அமைந்த பண்புகள் என்பர் நச்சினார்க்கினியர். கலையினதகலம் - கல்வி காரணமாகப் பிறப்பதொரு ஞானம். காட்சிக்கின்பம் - அப்பருவத்திலே பிறக்கும் அழகு. சிலையினது அகலம் - படைக்கலப் பயிற்சியால் அப் பருவத்திற் பிறக்கும் வீரம். வீணை - தாளத்துடன் கண்டத்திலும் கருவியினும் பிறக்கும்பாட்டு: இசை நாடகம் காமத்தை விளைத்தலின், அவற்றாற் பிறக்கும் காமத்தை, வீணைச்செல்வம் என்றார். இனி, இவைமுறையே நாமகள்; அழகுத்தெய்வம், வீரமகள் மாதங்கி என்னும் இவர்கள் இவனல்லது வேறுயாங்களென்று இல்லையாம்படி ஆயினான் எனினும் ஆம் - அரசர்க்கு இந்நான்கும் சிறந்தன. இச் செய்யுளை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தே (1-36) மடவாரென்பதற்குப் பூமாதும் கலைமாதும் சாமாதும் புகழ்மாதும் என்று கூறி இவர் அழகிற்கும் அறிவிற்கும் ஆண்மைக்கும் புகழுக்கும் பொறைக்கும் இவனென்று உட்கொண்டு ஏத்தும் கிழமையாள் எனினும் அமையும் என்று பொருள்விரித்துமேற்கோளாகக் காட்டுதலும் உணர்க.

412. நாம வென்றி வேல் நகை கொள் மார்பனைக்
காமனே எனக் கன்னி மங்கையர்
தாமரைக் கணால் பருகத் தாழ்ந்து உலாம்
கோ மகன் திறத்து உற்ற கூறுவாம்.  

பொருள் : நாமம் வென்றி வேல் நகைகொள் மார்பனை - அச்சந்தரும் வெற்றி வேலையும் முத்துவடத்தையுங் கொண்ட மார்பனான சீவகனை; காமனே என - காமனே யென்றெண்ணி; கன்னி மங்கையர் - கன்னித் தன்மையுடைய பெண்கள்; தாமரைக் கணாற் பருகத் தாழ்ந்து உலாம் - தாமரை மலரனைய கண்களாற் பருகுமாறு தங்கி உலாவும்; கோமகன் திறத்து உற்ற கூறுவாம் - அவ்வரச குமாரனிடத்திலே நிகழ்ந்தவற்றைக் கூறுவோம்.

விளக்கம் : நாமம் - அச்சம். நகை - முத்துவடம் என்பர் நச்சினார்க்கினியர். கோமகன் - சீவகன் நூலாசிரியர் கூற்று.

வேடர்கள் ஆநிரை கவர எண்ணுதல்

413. சில்அம் போழ்தின் மேல் திரைந்து தேன் உலாம்
முல்லை கார் எனப் பூப்ப மொய்ந்நிரை
புல்லு கன்று உளிப் பொழிந்து பால் படும்
கல் என் சும்மை ஓர் கடலின் மிக்கதே.  

பொருள் : சில்அம் போதின்மேல் திரைந்து தேன் உலாம் முல்லை - சிலவாகிய அழகிய மலர்களின்மேல் சாய்ந்து தேன் கூட்டம் உலாவும் முல்லை; கார் எனப் பூப்ப - கார்காலம் என்று மலர; மொய் நிரை புல்லு கன்று உளிபால் பொழிந்து - மிக்க ஆவின் திரள், தம்மை அணையும் கன்றுகளை நினைத்துப் பாலைப் பொழிதலால்; படும் கல் என் சும்மை - உண்டாகும் கல் என்னும் ஒலி; ஓர் கடலின் மிக்கது - ஒரு கடலொலியினும் மிக்கது.

விளக்கம் : பின் பனிக்கு அழிதலால் முல்லைக் கொடிகள் சிலவே பூத்தன. ஆனிரைகள் கன்றுகளை நினைத்துத் தாமே பாலைப் பொழிதலாற் கார்காலம் போல முல்லைக்கொடிகள் பூத்தன. பால்பொழியும் ஆநிரையின் ஒலி கடலின் மிக்கது. பால்படும் கல்லென் சும்மை என்றது முல்லை காரெனப் பூத்தற்குக் குறிப்பேதுவாய் நின்றது. உள்ளி - உளி எனக்கெடுதல் விகாரமெய்தி நின்றது. மொய்ந்நிரை: வினைத்தொகை. சும்மை - ஒலி. கல்லென்: ஒலிக்குறிப்பு.

414. மிக்க நாளினால் வேழம் மும் மதம்
உக்க தேனினோடு ஊறி வார் சுனை
ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின் மேல்
மக்கள் ஈண்டினார் மடங்கல் மொய்ம்பினார்.  

பொருள் : மிக்க நாளினால் - (இங்ஙனம்) ஒலி மிக்க நாளிலே; வேழம் மும் மதம் உக்க தேனினோடு ஊறி - வேழத்தின் மும்மதமும் ஆங்குச் சிந்திய தேனுடன் கலந்து பெருகியதால்; வார்சினை ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின்மேல் - பெரிய சுனைகள் தம்மேல் ஒருமிக்க வாய் நிறைந்து பெருகும் மலையின்மேல்; மடங்கல் மொய்ம்பினார் மக்கள் ஈண்டினார் - சிங்கம் போன்ற வலிமையினாராகிய வேடரெல்லோரும் குழுமினர்.

விளக்கம் : குன்றின்மேல் மக்கள் என அடையாக்கி வேடர் எனலுமாம். மடங்கல் - அரிமா. மொய்ம்பு - வலிமை.

வேடர்கள் நிமித்தகனை இகழ்ந்து ஆநிரை கவர எண்ணுதல்

415. மன்னவன் நிரை வந்து கண் உறும்
இன்ன நாளினால் கோடும் நாம் எனச்
சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல்
முன்னம் கூறினான் முது உணர்வினான்.  

பொருள் : இன்ன நாளினால் மன்னவன் நிரை வந்து நண்ணுறும் - இந்த இளவேனிலில் வேந்தனுடைய ஆனிரை வந்து சேரும்; நாம் கோடும் எனச் சொன்ன வாயுளே- நாம் அந்நிரையைப் பற்றுவோம் என்றுரைத்த அப்போதே; புட்குரல் முன்னம் - பறவை ஒன்று கூவிய குரலின் குறிப்பை; முழுது உணர்வினான் ஒருவன் கூறினான் - நிமித்தம் எல்லாவற்றினும் அறிவுடையான் ஒருவன் அறிந்துரைத்தான்.

விளக்கம் : அது மேற்கூறுகின்றார். இன்ன நாள் என்றது இவ்விளவேனிற்குரிய நாள் என்பது பட நின்றது. கோடும்: தன்மைப்பன்மை. சொன்ன வாயுள் - சொல்லிய அப்பொழுதே. முன்னம் - குறிப்பு. முழுதுணர்வினான் என்றது நிமித்தங்கள் முழுதும் நன்குணர்ந்த முதியவன் என்பதுபட நின்றது.

416. அடைதும் நாம் நிரை அடைந்த காலையே
குடையும் பிச்சமும் ஒழியக் கோன் படை
உடையும் பின்னரே ஒருவன் தேரினால்
உடைதும் சுடுவில் தேன் உடைந்த வண்ணமே.  

பொருள் : நாம் நிரை அடைதும் - நாம் பசுத்திரளைப் பற்றுவோம்; அடைந்த காலையே கொன்படை குடையும் பிச்சமும் ஒழிய உடையும் - பற்றிய பொழுதே மன்னன் படை (வந்த பொருது) குடையும் பிச்சமும் பொறாத இடத்திலேயே கிடக்கத் தான் மட்டும் தோற்றோடும்; பின்னர் ஒருவன் தேரினால் சுடுவின் தேன் உடைந்த வண்ணம் உடைதும் - பிறகு ஒருவனுடைய தேராற் சுடுதலால் வண்டின் திரள் ஓடுதல்போல நாம் தோற்றோடுவோம்.

விளக்கம் : பிச்சம் - மயிற்பீலியாற் கட்டுவன. சுடுவின் - சுடுதலால். சுடு: முதனிலைத் தொழிகுபெயர் (சுடுதலென வினைமேல் நின்ற வினைப் பெயரன்றி வினைமாத்திரை உணர்த்தி நின்று உருபு ஏற்றது என்பர் நச்சினார்க்கினியர்.) அடைதும்: தன்மைப் பன்மை; உடைதும் என்பது மது. குன்றவர் தேன் கொள்ளுங்கால் கொள்ளியால் சுட்டு வண்டுகளை ஓட்டுவர்ஆதலின் அந்நிமித்திகன் தாங்கெட்டோடுதற்குத் தன்: அநுபவத்தேகண்டதனையே சுடுவின் தேன் உடைந்தவண்ணம் உடைதும் என்றான் என ஆசிரியர் அமைத்தநயம் இன்புறற் பாலது. தேனினம் போலக் கெடுதும் எனவே தமக்குப் பாடின்மை கூறினான் என நச்சினார்க்கினியர் கூறுவதும் நுணுக்கமானது. பாடு - சாவு.

417. என்று கூறலும் ஏழை வேட்டுவீர்
ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே
என்று கூறினும் ஒருவன் என் செயும்
இன்று கோடும் நாம் எழுக என்று ஏகினார்.  

பொருள் : என்று கூறலும் - என்று அவன் கூறின அளவிலே; ஏழை வேட்டுவீர்! - ஏழை வேடர்களே! ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே என்று கூறினும் - ஒற்றைத் தேருடைய ஒருவனைக் கூற்றுவனே யென உலகம் கூறினும்; ஒருவன் என் செயும்? - அவன் தனியே என்ன செய்ய முடியும்? இன்று நாம் கோடும் எழுக என்று ஏகினார் - (ஆகலின்) நாம் இன்று பற்றி விடுவோம்; எழுக! என்று நிரை நிற்கும் இடத்திற்குச் சென்றனர்.

விளக்கம் : இஃது ஒரு மறவன் கூற்று. ஏழை வேட்டுவீர் என்றது அறிவிலிகளே என்றிகழ்ந்தவாறு. கோடும் - கொள்ளுவேம். கோடும் எழுகென எல்லோரும் ஏகினார் என்க.

418. வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர்
தொண்டகப் பறை துடியோடு ஆர்த்து எழ
விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என
மண்டினார் நிரை மணந்த காலையே.  

பொருள் : அவர்வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்து - அவர்கள் வண்டு மொய்த்தல் நீங்காத மதுவினை நிறையப் பருகி; தொண்டகப்பறை துடியொடு ஆர்த்து எழ - ஏறுகோட் பறையும் துடியும் ஆரவாரத்துடன் ஒலிக்க; வெல்க என விண்டு தெய்வதம் வணங்கி - வெற்றி கிடைப்பதாக என்று வேண்டிக் கூறிக் கொற்றவையை வணங்கி; நிரை மணந்த காலை மண்டினார் - பசுத்திரள் வந்து கூடின அளவிலே முற்பட்டுச் சென்றனர்.

விளக்கம் : விண்டு - அரசனுடன் பகைத்து என்றும், தெய்வதம் - முருகன் என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். ஏறுகோட்பறை ஆநிரை கொள்ளுதலைக் குறித்தடிக்கும் பறை. சிலப்பதிகாரத்திலேயே ஆநிரை கொள்ளும் வேடர் கொற்றவையை வழிபடுதல் வருதலாற் பாலைநிலமக்களாகிய வேடர்கட்கு முருக வணக்கம் பொருந்தாது. மூசு: விகுதிகெட்ட தொழிற்பெயர். நறவம் - கள். தொண்டகப் பறை - ஆகோட்பறை. விண்டு - வாயினால் வாழ்த்தி. தெய்வதம் தெய்வம்.

தீங்கு கருதி ஆயர், காவலுக்குச் செல்லுதல்

419. பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார்
ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான்
கோத்த நித்திலக் கோதை மார்பினான்
வாய்த்த அந் நிரை வள்ளுவன் சொனான்.  

பொருள் : பூத்த கோங்குபோல் பொன் சுமந்து உளார் - மலர்ந்த கோங்குமரம் போலப் பொன்னாலான அணிகளைச் சுமந்தவராகிய; ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான் - ஆய்ச்சியரின் நலம் சேர்தற்கு ஆக்கள் உராயும் கட்டை போன்றவனும்; கோத்த நித்திலம் கோதை மார்பினான் - முத்துமாலையும் பூமாலையும் பொருந்திய மார்பினனும் ஆகிய நந்தகோனின்; வாய்த்த அந்நிரை வள்ளுவன் சொன்னான் - தப்பாத அந்த நிரையிலே இருந்த நிமித்திகன் கூறினான்.

விளக்கம் : வாய்த்த வள்ளுவன் என்க. ஆசெல் தூண்: ஆதீண்டு குற்றி எனப்படும். நிமித்திகன் கூறியது மேலே வரும். இதன்கண், அணிகலன் நிரம்ப அணிந்துள்ள ஆய்த்தியர்க்குப் பூத்த கோங்கினையும் நந்தகோன் போகவின்பமிக்க பொலிவுடையன் ஆதற்கு ஆசெல் தூணையும் உவமையாக எடுத்துக் கூறிய அழகு நனி பேரின்பம் நல்குவதாம். சொனான் - சொன்னான். நலக்கு - நலத்திற்கு: சாரியை யின்றி உருபு புணர்ந்தது.

420. பிள்ளை உள் புகுந்து அழித்தது ஆதலால்
எள்ளன்மின் நிரை இன்று நீர் என
வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார்
முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார்.  

பொருள் : பிள்ளை உள்புகுந்து அழித்தது ஆதலால் - காரியென்னும் பறனை ஆனிரையிலே புகுந்து அழிவுக் குறி காட்டியது, ஆகையால்; இன்று நீர் நிரை எள்ளன்மின் என - இன்று நீங்கள் ஆனிரை காவலை நன்கு போற்றுக என்று நிமித்திகன் சொல்ல; வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார் முள்கும் ஆயரும் - வெள்ளி வளையல் விளங்கும் தோளையுடைய புதுமண மகளிரைத் தழுவும் புதுமணவாளப் பிள்ளைகளும்; மொய்ம்பொடு ஏகினார் - ஆற்றலொடு சென்றனர்.

விளக்கம் : அழிவுக்குறி காரி உள்ளே புகுந்து எழுதல் என்பர். எள்ளன்மின் - இகழன்மின்; எனவே நன்கு காக்க என்றான். ஆயரும்: உம்: இழிவு சிறப்பு. புதுமணப் பிள்ளைகள் போருக்குச் செல்லுதல் மரபன்று. எனவே, அவருட்பட எல்லா ஆயரும் ஆனிரை காவலைமேற்கொண்டனர் என்க. பிள்ளை - காரி என்னும் பறவை. எள்ளன்மின் - இகழாதே கொண்மின். வள்ளி - வளையல். முள்குதல் - தழுவுதல். புதுமணம் புணர்ந்த இளைஞர் என்பார் தோணலார்முள்கும் ஆயரும் என்றார்; உம்மை உயர்வு சிறப்பு.

வேடர்கள் ஆநிரை கவர்தல்

421. காய மீன் எனக் கலந்து கான் நிரை
மேய வெம் தொழில் வேடர் ஆர்த்து உடன்
பாய மாரிபோல் பகழி சிந்தினார்
ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார்.  

பொருள் : காயம் மீன் எனக் கலந்து கான் நிரை மேய - வானமும் மீன்களும் எனக் காட்டிற் கலந்து ஆனிரை மேயும் போது; வெந்தொழில் வேடர் ஆர்த்து - கொடுந்தொழில் வேடர் ஆரவாரித்து; பாய மாரிபோல் பகழி உடன் சிந்தினார் - பரவிய மழைத்துளி போலக் கண்களை உடனே சிதறினர்; ஆயர்மத்து எறி தயிரின் ஆயினார் - ஆற்றாத இடையர் மத்தாற் கடையப்பட்ட தயிர்போலச் சிதறினர்.

விளக்கம் : காயம்: ஆகாயம் என்பதன் முதற்குறை. இது காட்டிற் குவமை. மீன் - விண்மீன்; இஃது ஆண்களுக்கு உவமை. ஆயர் உடைந்து சிதறியதற்கு, மத்தெறி தயிர் உவமை.

422. குழலும் நவியமும் ஒழியக் கோவலர்
சுழலக் காடு போய்க் கன்று தாம்பு அரிந்து
உழலை பாய்ந்து உலா முன்றில் பள்ளியுள்
மழலைத் தீம் சொல்லார் மறுக வாய் விட்டார்.  

பொருள் : கோவலர் குழலும் நவியமும் ஒழிய -(அங்ஙனஞ் சிதறிய) ஆயர் தம்மிடமிருந்த குழலும் கோடரியும் கை நீங்க; காடு கழலப் போய் - காடு நீங்க ஓடி; கன்று தாம்பு அரிந்து உழலை பாய்ந்து உலாம் முன்றில் பள்ளியுள் - கன்றுகள் கயிற்றை அறுத்துக்கொண்டு தடைமரத்தின்மேற் பாய்ந்து உலவும் வாயிலையுடைய இடைச் சேரியில்; மழலைத் தீஞ்சொலார் மறுக வாய்விட்டார் - மழலைபோல இனிய மொழியினையுடைய ஆய்ச்சியர் மனம் வருந்திச் சுழல வாய்விட்டுக் கதறினர்.

விளக்கம் : கதறியது மேல் வரும். நவியம் - கோடரி. காடு கழலப்போய் என மாறுக. உழலை - தடை மரம். மழலைத் தீஞ்சொலார் என்றது குறிப்பாக ஆய்த்தியரை உணர்த்தியது.

423. மத்தம் புல்லிய கயிற்றின் மற்று அவர்
அத்தலை விடின் இத்தலை விடார்
உய்த்தனர் என உடை தயிர்ப் புளி
மொய்த்த தோள் நலார் முழுதும் ஈண்டினார்.  

பொருள் : மத்தம் புல்லிய கயிற்றின் அவர் அத்தலைவிடின் இத்தலை விடார் உய்த்தனர் என - மத்தைப் பிணித்திழுக்கும் கயிற்றைப்போல அவ்வேடர் ஒருபக்கத்தை நெகிழவிட்டாராயின் மற்றொரு பக்கத்தை நெகிழவிடாராய் ஆனிரையைக்கொண்டு போயினர் என்று இடையர் வாய்விட்டுக் கதற; உடை தயிர்ப்புளி முழுதும் மொய்த்த தோள் நலார் ஈண்டினார்- கடையும் போது தயிர்ப்புள்ளி தோள் முழுதும் பதிந்த இடைச்சியர் யாவருங் கூடினர்.

விளக்கம் : உய்த்தனர் எனத் தெளிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினர். மத்தம் - தயிர்கடைமத்து. புளி - புள்ளி: கெடுதல் விகாரம். இதன் கண்ணும் ஆயர் தம்மநுபவத்திற் கண்டதனையே உவமையாக எடுத்தோதுதல் உணர்க. தயிர்ப்புள்ளி தோள்முழுதும் மொய்த்த நல்லார் என மாறுக.

424. வலைப் படு மான் என மஞ்ஞை எனத் தம்
முலைப் படு முத்தொடு மொய் குழல் வேய்ந்த
தலைப் படு தண் மலர் மாலை பிணங்க
அலைத்த வயிற்றினர் ஆய் அழுதிட்டார்.  

பொருள் : வலைப்படும் மான் என மஞ்ஞை என - வேடர் வலைப்பட்ட மான் போலவும் மயில்போலவும்; தம் முலைபடும் முத்தொடு மொய் குழல் வேய்ந்த தலைப்படு தண்மலர் மாலை பிணங்க - தம் முலைமீது அணிந்த முத்துமாலையுடன் செறிந்த குழலில் அணிந்த தண்ணிய முல்லை மலரால் ஆன தலைமாலை சிக்குறுமாறு மயிர்குலைய; அலைத்த வயிற்றினராய் அழுதிட்டார் - வயிற்றில் மோதிக்கொண்டு அழுதனர் அவ்விடைச்சியர்.

விளக்கம் : வலைப்படு என்பதனை மஞ்ஞையோடுங் கூட்டுக. மஞ்ஞை - மயில். மார்பில் அணிந்த மாலையோடு தலையிலணிந்த மாலை பிணங்கும்படி வயிற்றிலடித்துக்கொண்டு அழுதார் என்னுமிது மிகவும் அழகிது.

425. எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர்
நும் அனைமார்களை நோவ அதுக்கி
வெம் முனை வேட்டுவர் உய்த்தனரோ எனத்
தம் மனைக் கன்றொடு தாம் புலம்பு உற்றார்.  

பொருள் : எம் அனைமார்! இனி எங்ஙனம் வாழ்குவிர்? எம் அன்னையரே! இனி எவ்வாறு வாழ்வீர்கள்? வெம் முனைவேட்டுவர் நும் அனைமார்களை நோவ அதுக்கி - கொடிய போர் முனையிலே வேடர் நும் அன்னையரை வருந்த அடித்து; உய்த்தனர் ஓ என - கொண்டு போயினார் ஓஓ என்று கதறி; தம் மனைக்கன்றொடு தாம் புலம்புற்றார் - தம் வீட்டில் இருந்து பசுங்கன்றுகளைத் தழுவி அழத் தொடங்கினர்.

விளக்கம் : அன்பினால் அஃறிணையை உயர்திணையாகக் கூறினர். எம்மனைமார் நும்மனைமார் என்னும் ஈரிடத்தும் னகரப்புள்ளி கெட்டது. இஃது ஆய்ச்சியர் கன்றுகளை நோக்கிக் கூறியது. இதனால் அவர் அவற்றின்பாற் கொண்டுள்ள அன்பு புலப்படுதல் உணர்க.

426. பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது
ஆறு மடப் பள்ளி ஆகுலம் ஆக
மாறு பட மலைந்து ஆய்ப்படை நெக்கது
சேறு படு மலர் சிந்த விரைந்தே.  

பொருள் : பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது ஆறுபட - கல்லைப்போல் தோய்ந்த தயிரும் பாலும் நெய்யும் கலந்து ஆறுண்டாகும்படி; பள்ளி ஆகுலம் ஆக - இடைச்சேரி துன்பப்படும் பொழுது; ஆய்ப்படை மாறுபட மலைந்து நெக்கது - (முன்னர்ப் போரிலே கெடாமல் இருந்த ஆயர்படை மாறுபாடுண்டாக வேடருடன் பொருது தானும் கெட்டது; (கெட்ட அப்படை); மலர் சேறுபடச் சிந்த விரைந்து - முல்லை மலர்கள் தம்மிடமுள்ள தேனாற் சேறுண்டாகச் சிந்துமாறு வேகமாக,

விளக்கம் : இப்பாட்டுக் குளகம். ஆய் : சாதிப் பெயர்.

கட்டியங்காரனுக்கு ஆயர்கள் செய்தி உணர்த்தல்

427. புறவு அணி பூ விரி புன் புலம் போகி
நறவு அணி தாமரை நாட்டகம் நீந்திச்
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர்
இறை அணிக் கேட்க உய்த்திட்டனர் பூசல்.  

பொருள் : புறவு அணி பூவிரி புன்புலம் போகி - முல்லை நிலமாகிய அழகிய மலர் விரிந்த புன்னிலத்தைக் கடந்து; நறவு அணி தாமரை நாட்டகம் நீந்தி - தேன் பொருந்திய தாமரை மலர் நிறைந்த மருத நிலத்தை அரிதிற் கடந்து; சுறவு அணி கிடங்குசூழ் எயில் மூதூர் - சுறாமீன் பொருந்திய அகழி சூழ்ந்த மதிலையுடைய மூதூரை அடைந்து; இறை அணிக் கேட்கப்பூசல் உய்த்திட்டனர் - அரசனுக்கு அருகிலுள்ளோர் கேட்குமாறு இக்குழப்பத்தை வெளியிட்டனர்.

விளக்கம் : அருகிலுள்ளோர் ஈண்டு வாயிற் காவலரெனக் கொள்க. இட்டனர் என்றதனால் இப் பழியை அரசன் தலையிலே போட்டனர் என்பதாயிற்று. உய்த்திட்டனர் உய்த்தனர் எனினும் ஆம். மூதூர் எனவே இதுவரை இப்பூசலைக் கேட்டறியாத தென்பது பெறப்பட்டது. பூசல் மேல்வரும். புறவு - முல்லைநிலம்; சிறுகாடுமாம். தாமரை நாட்டகம் என்றது மருத நிலத்தை.

428. கொடு மர எயினர் ஈண்டிக் கோட்டு இமில் ஏறு சூழ்ந்த
படு மணி நிரையை வாரிப் பைந் துகில் அருவி நெற்றி
நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை
வடி மலர் ஆயர் பூசல் வள நகர் பரப்பினாரே.  

பொருள் : கொடுமர எயினர் ஈண்டிக் கோட்டு இமில் ஏறு சூழ்ந்த படுமணி நிரையை வாரி - வில்லேந்திய வேடர் கூடி வந்து கொம்பினையும் இமிலையும் உடைய ஏறுகள் சூழ்ந்த ஒலிக்கும் மணியை உடைய ஆனிரையை வளைத்து; பைந்துகில் அருவி நெற்றி நெடுமலை அத்தம் சென்றார் என்று - புத்தாடைபோல அருவி வீழும் உச்சியை உடைய பெரிய மலையை நாடி அரிய காட்டுவழியிலே போயினர் என; நெய் பொதிந்த பித்தை வடிமலர் ஆயர் - நெய் பூசிய மயிரிலே தெரிந்தெடுத்த மலரை யணிந்த இடையர்; வளநகர் பூசல் பரப்பினர் - வளநகரெங்கும் இக் குழப்பத்தை அறிவித்தனர்.

விளக்கம் : பல்லாக் கொண்டாரொல்லார் என்னும் பூசல் கேட்டுக் கையது மாற்றி (பன்னிரு படலம்) என்றும், நிரைகோள் கேட்டுச் செய்தொழி லொழிய (பு.வெ.23) என்றும் துறை கூறுதலின், கேட்டோரெல்லாம் சென்று மீட்பரெனக் கருதி நகர்க்குணர்த்தினர்.

429. காசு இல் மா மணிச் சாமரை கன்னியர்
வீசு மா மகரக் குழை வில் இட
வாச வான் கழுநீர் பிடித்து ஆங்கு அரி
ஆசனத்து இருந்தான் அடல் மொய்ம்பினான்.  

பொருள் : காசு இல் மாமணிச் சாமரை கன்னியர் வீச - குற்றம் அற்ற பெருமை மிகும் மணிக்கவரி கொண்டு மகளிர் வீசவும்; மா மகரக் குழைவில் இட - பெரிய மகரமீன் வடிவமான குழை ஒளி வீசவும்; வாசவான் கழுநீர் பிடித்து - மணமிகும் உயர்ந்த கழுநீர் மலரைக் கையிலேந்தி; அடல் மொய்ம்பினான் ஆங்கு அரியாசனத்து இருந்தான் - வென்றிதரும் ஆற்றலுடைய கட்டியங்காரன் அரண்மனையிலே அரியணையிலே வீற்றிருந்தான்.

விளக்கம் : மொய்ம்பினான் : இகழ்ச்சி. கழுநீர் மலர் பிடித்திருத்தல் அரசர்க்கியல்பு, (சீவக. 1847, 2358). சச்சந்தன் இருந்த அம்மண்டபத்தே அவனிருந்த அரியணையின் மேல் இருந்தான் என்பதுபட, ஆங்கு அரியாசனத்திருந்தான் என்றார்.

430. கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு
சண்ட மன்னனைத் தாள் தொழுது ஆயிடை
உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் எனக்
கொண்டனர் நிரை போற்று எனக் கூறினான்.  

பொருள் : கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு - எடுத்த வாளொடும் பிரம்பொடும் கையைக் குவித்து; சண்ட மன்னனைத் தாள்தொழுது - கொடிய வேந்தன் அடியை வணங்கி; ஓர்பூசல் உண்டு என்றாற்கு உரையாய் என - அக்காட்டிலே ஒரு குழப்பம் உண்டாயிற்று என்ற வாயில்காவலனை நோக்கி, அதனை உரை என்று வேந்தன் கூற; நிரை கொண்டனர், போற்று எனக் கூறினான் - பசுத்திரளை வேடர் கொண்டனர், திருவுளங் கொள்க என்றுரைத்தான்.

விளக்கம் : கூப்புபு - கூப்பி. சண்டம்-கொடுமை. வாயில் காவலன் என்னும் எழுவாய் வருவித்தோதுக. போற்று - திருவுளம்பற்று.

கட்டியங்காரன் படை தோல்வியுறல்

431. செங் கண் புன் மயிர்த் தோல் திரை செம் முகம்
வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச்
செங் கண் தீ விழியாத் தெழித்தான் கையுள்
அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான்.  

பொருள் : அடு கூற்றானான் கையுள் அம்கண் போது பிசைந்து - கொல்லுங் காலனைப் போன்ற அரசன் தன் கையில் இருந்த அழகிய கண் போன்ற மலரைப் பிசைந்து; செங்கண் புன் மயிர்த்தோல் திரை செம்முகம் வெங்கண் நோக்கின் குப்பாய மிலேச்சனை - சிவந்த கண்களையும் புல்லிய மயிர் நிறைந்த தோலையும் திரைந்த செம்முகத்தையும் கொடிய நோக்கத்தினையும் சட்டையையும் உடைய மிலேச்சனாகிய அவ்வாயில்காவலனை; செங்கண் தீவிழியாத் தெழித்தான் - தன் சிவந்த கண்களிலிருந்து நெருப்பெழ விழித்து நோக்கிச் சீறினான்.

விளக்கம் : இச் செய்யுளில் ஒரு கிழக்காவலன் உருவம் சொல்லோவியமாக்கப்பட்டிருத்தல் காண்க. அவன் அரசன் அன்மையின் கோபம் எளியார் மேற்றாயிற்று என்னும் நச்சினார்க்கினியர் குறிப்பு மிகவும் நுண்ணிது. நூலாசிரியரும் அவ்வெளியானையும் சினத்தற்குத் தகுதியற்ற கிழப்பருவமுடையனாக்கி வைத்தனர். எய்தார் இருக்க அம்பை நோவதுபோன்ற கட்டியங்காரன் பேதைமையை ஆசிரியர் இச்சிறிய சூழ்ச்சியான் வெளிப்படுத்தும் அழகுணர்க. குப்பாயம் - மெய்ப்பை (சட்டை)

432. கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய்
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கிக்
காற்றின் விரைந்து தொறு மீட்க எனக் காவல் மன்னன்
ஏற்றை அரி மான் இடி போல இயம்பினானே.  

பொருள் : கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் காவல் மன்னன் - காலனைப்போலச் சீறும் கொலை வேலேந்திய, நாட்டுக் காவலனாகிய வேந்தன்; கோவலர் வாய் மாற்றம் உணர்ந்து - இடையரின் வாய்மொழிப் பொருளை உணர்ந்து; மறம்கூர் கடல் தானை நோக்கி - வீரத்திற் சிறந்த கடலனைய தன் படையைப் பார்த்து; காற்றின் விரைந்து தொறுமீட்க என - காற்றினுங் கடுகி ஆனிரையைத் திருப்பிக் கொணர்க என்று; அரிமான் ஏற்றை இடிபோல இயம்பினான் - ஆண் சிங்கத்தையும் இடியையும் போலக் கூறினான்.

விளக்கம் : அரிமான் ஏற்றை - ஆண் சிங்கம். ஏறும் ஏற்றையும் (தொல்.மரபு.2) என்றது காண்க. இடிக்கும் - சினக்கும். தொறு - ஆனிரை. ஏற்றையரிமானும் இடியும் போன்று முழங்கும் குரலானே கூறினன் என்பது கருத்து.

433. கார் விளை மேகம் அன்ன
கவுள் அழி கடாத்த வேழம்
போர் விளை இவுளித் திண் தேர்
புனைமயிர்ப் புரவி காலாள்
வார் விளை முரசம் விம்ம
வான் உலாப் போந்ததே போல்
நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப
நிலம் நெளி பரந்த அன்றே.  

பொருள் : கார்விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம் - கார்காலத்திற் றோன்றாநின்ற முகிலனைய, கவுளிலிருந்து பெருகும் மதமுடைய களிறுகளும்; போர் விளை இவுளித் திண்தேர் - போருக்குத் தகுதியான குதிரை பூட்டிய தேர்களும்; புனைமயிர்ப் புரவி - அணிசெய் மயிருடைய குதிரைகளும்; காலாள் - காலாட்களும் ஆகிய நாற்படையும்; வார்விளை முரசம் விம்ம நீர்விளை சுரிசங்கு ஆர்ப்ப - வாராற் கட்டப்பட்ட முரசுகள் முழங்கவும், நீரிலிருந்து கிடைத்த சுரிந்த சங்குகள் ஆரவாரிக்கவும்; வான் உலாப் போந்ததேபோல் - முகில் முழங்கி உலா வருவதுபோல்; நிலம் நெளி பரந்த - நிலம் நெளியுமாறு பரவியெழுந்தன.

விளக்கம் : யானையும் பரியும் முழக்கமும் உண்மையின் மேகம் உவமை. இனி, வானுலாய்ப் போந்ததே போலும் நீராவது கடல்; அதில் விளைந்த சங்கு எனலும் ஒன்று. நெளிய என்பது நெளி என வந்தது விகாரம்.

434. கால் அகம் புடைப்ப முந்நீர்க்
கடல் கிளர்ந்து எழுந்ததே போல்
வேல் அகம் மிடைந்த தானை
வெம் சின எயினர் தாக்க
வால் வளை அலற வாய் விட்டு
இரலையும் துடியும் ஆர்ப்பப்
பால் வளைந்து இரவு செற்றுப்
பகலொடு மலைவது ஒத்தார்.  

பொருள் : கால் அகம் புடைப்ப முந்நீர்க் கடல் கிளர்ந்து எழுந்ததேபோல் - காற்று உள்ளே மோதியதால் முந்நீர்மையுடைய கடல் பொங்கி எழுந்ததைப்போல்; வேல் அகம் மிடைந்த தானை - வேலை யேந்திய நெருக்கிய அரசன் படை; வெம்சின எயினர் தாக்க -கொடுஞ்சினமுடைய வேடர்படை எதிர்த்துத் தாக்குமாறு; வால்வளை அலற இரலையும் துடியும் வாய்விட்டு ஆர்ப்ப - வெள்ளிய சங்கு முழங்கவும் துத்தரிக் கொம்பும் துடியும் வாய்விட்டு ஆரவாரிக்கவும்; பால் வளைந்து - ஒரு பக்கத்தே வளைத்துக்கொண்டு; செற்று இரவு பகலொடு மலைவது ஒத்தார் - சினந்து இரவும் பகலும் போரிடுவது போன்று பொருதனர்.

விளக்கம் : முந்நீர்மையுடைய கடல் முன்னர் வந்துளது (சீவக.5) ஒடு: எண் ஒடு. வேடர் அரசர்க்கு எதிர்நிற்றலின் இரவும் பகலும் உவமையாயின. வளை தானைக்கும் எதிர்நிற்றலின் இரவும் பகலும் உவமையாயின. வளை தானைக்கும் துத்தரிக் கொம்பும் துடியும் வேடர்க்குங் கொள்க. நிரனிறை.

435. வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய
வெம் நுனைப் பகழி மைந்தர்
மல் பழுத்து அகன்ற மார்பத்து
இடம் கொண்டு வைகச் செந்நாச்
சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை
சொல்லலாம் தன்மைத்து அன்றிக்
கொல் பழுத்து எரியும் வேலார்
கொடுஞ் சிலை குழைவித்தாரே.  

பொருள் : வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனைப் பகழி - வேடர்கள் வில் குழைத்துச் சிந்தின விருப்பமுடைய கொடிய முனையையுடைய அம்புகள்; மைந்தர் மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைக - அரசனைச் சார்ந்த வீரரின் மற்போரிலே பழகிப் பரந்த மார்பிலே இடம் பெற்றுத் தங்குதலாலே; செந்நாச் சொல் பழுத்தவர்க்கும் ஆண்மைசொல்லலாம் தன்மைத்து அன்றி (அவர்கள்) செவ்விய நாவினாற் சொல்ல வல்லவர்க்கும் கூறவியலாத தன்மையுடன்; கொல்பழுத்து எரியும் வேலார் கொடுஞ்சிலை குழைவித்தார் - கொல்லுத்தொழிலிலே பயின்று ஒளிவிடும் வேலேந்திய வேடர்களின் வளைவான வில்லைக் கெடுத்தார்கள்.

விளக்கம் : இனி, வேலார் தமது வில்லை வளைத்தார். அவ்வளவிலே வேடர் மைந்தரை வீட்டினார் என அடுத்த செய்யுளிலும் முடிக்கலாம்.

436. வாள் படை அனுங்க வேடர்
வண் சிலை வளைய வாங்கிக்
கோள் புலி இனத்தின் மொய்த்தார்
கொதி நுனைப் பகழி தம்மால்
வீட்டினார் மைந்தர் தம்மை
விளிந்த மா கவிழ்ந்த திண் தேர்
பாட்டு அரும் பகடு வீழ்ந்த
பனிவரை குனிவது ஒத்தே.  

பொருள் : வாள் படை அனுங்க - தம்மைக் கெடுத்த வாட்படை கெடுமாறு; வேடர் வண்சிலை வளைய வாங்கி - வேடர்கள் தம் ஆற்றல்மிகும் சேமவில்லை வளைய வளைத்து; கோள்புலி இனத்தின் மொய்த்தார் - கொலையில் வல்லதான புலியின் இனம் போலச் சூழ்ந்தவர்களாய்; கொதிநுனைப் பகழி தம்மால் மைந்தர் தம்மை வீட்டினார் - காய்ச்சிய முனையையுடைய அம்புகளால் அரசன் படைஞரை வீழ்த்தினர்; மாவிளிந்த - குதிரைகள் கெட்டன; திண்தேர் கவிழ்ந்த - வலிய தேர்கள் கவிழ்ந்தன; பாடு அரும்பகடு - அரிய வுழைப்பினையுடைய யானைகள்; பனி வரை குனிவது ஒத்து வீழ்ந்த - பனிமலைகள் தாழ்வதுபோல அழிந்தன.

விளக்கம் : மொய்த்தார் : வினையாலனையும் பெயர். பாட்டு என்பது, பாடு என்பதன் விகாரம்.

437. வென்றி நாம் கோடும் இன்னே
வெள்ளிடைப் படுத்து என்று எண்ணி
ஒன்றி உள் வாங்குக என்ன
ஒலி கடல் உடைந்ததே போல்
பொன் தவழ் களிறு பாய்மா
புன மயில் குஞ்சி பிச்சம்
மின் தவழ் கொடியொடு இட்டு
வேல் படை உடைந்த அன்றே.  

பொருள் : நாம் இன்னே வெள்ளிடைப்படுத்து வென்றி கோடும் என்று எண்ணி - நாம் இப்போதே வேடரை வெளிப்படுத்தி வென்றி கொள்வோம் என்று (அரசன் படையில் மிகுதியானோர்) நினைத்து, ஒன்றி உள் வாங்குக என்று - ஒற்றுமையாக அப்படையுடன் பொருந்தித் தள்ளிச் சிறிது குறைப்பீராக என்று தம் படையை ஊக்க மூட்டியும்; பொன்தவழ் களிறு பாய்மா புனைமயிற் குஞ்சி பிச்சம் மின்தவழ் கொடியொடு இட்டு - பொன் அணிந்த களிறும் பாயும் புரவியும் அணிந்த மயிலிறகாலான சிற்றணுக்கன் என்னும் விருதும் பீலிக்குடையும் ஒளி தவழும் கொடியும் ஆகியவற்றை விட்டுவிட்டு; ஒலிகடல் உடைந்ததேபோல் வேற்படை உடைந்த - ஒலிக்குங் கடல் அணை கடந்து ஓடுவதேபோல அரசனுடைய வேலேந்திய படைகள் முதுகிட்டு ஓடின.

விளக்கம் : சிற்றணுக்கள் : ஒருவகை விருது; மிகவும் அருகிலே பிடித்தற்குரியது போலும்.

438. பல்லினால் சுகிர்ந்த நாரில்
பனிமலர் பயிலப் பெய்த
முல்லை அம் கண்ணி சிந்தக்
கால் விசை முறுக்கி ஆயர்
ஒல் என ஒலிப்ப ஓடிப்
படை உடைந்திட்டது என்ன
அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில்
கட்டியங் காரன் ஆழ்ந்தான்.  

பொருள் : பல்லினால் சுகிர்ந்த நாரில் பனிமலர் பயிலப் பெய்த முல்லை அம் கண்ணி சிந்த - பல்லாற் கிழித்த நாரிலே தண்ணிய மலர்களை நெருங்க வைத்துக் கட்டப்பட்ட அழகிய முல்லைக் கண்ணிகள் சிதறுமாறு; ஆயர் கால்விசை முறுக்கி ஓடி - இடையர்கள் காலில் விசை உண்டாக விரைந்தோடி; ஒல் என ஒலிப்பப் படை உடைந்திட்டது என்ன -ஒல்லெனும் ஆரவாரத்துடன் நம் படை தோற்றது என்று கூற; கட்டியங்காரன் நெஞ்சின் அல்லல் உற்று அழுங்கி ஆழ்ந்தான் - கட்டியங்காரன் உள்ளத்திலே துன்பமுற்று இரங்கி அந் நினைவிலே ஆழ்ந்தான்.

விளக்கம் : என்றார்க்கு என்னும் பாடத்திற்கு என்று வருந்தினார்க்குத் தானும் எதிரே வருந்தினான் என்க. இதனால் ஆயர் தம் பல்லாலே நார்கிழித்துப் பூத்தொடுக்கும் வழக்கமுடையர் ஆதல் காணலாம். பயிலப்பெய்த-செறியவைத்துக் கட்டின.

439. வம்பு கொண்டு இருந்த மாதர்
வன முலை மாலைத் தேன் சோர்
கொம்பு கொண்டு அன்ன நல்லார்
கொழுங் கயல் தடங் கண் போலும்
அம்பு கொண்டு அரசர் மீண்டார்
ஆக் கொண்டு மறவர் போனார்
செம்பு கொண்டு அன்ன இஞ்சித்
திருநகர்ச் செல்வ என்றார்.  

பொருள் : செம்பு கொண்டன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ - செம்பின் தன்மையைக் கொண்டால் ஒத்த மதிலையுடைய அழகிய நகரின் திருவாளனே! வம்பு கொண்டிருந்த மாதர் வனமுலை - கச்சைக் கொண்டு அடிபரந்திருந்த காதலையூட்டும் அழகிய முலைகளை; தேன் சோர்கொம்பு கொண்ட அன்ன - தேன் ஒழுகு மலர்க்கொம்பொன்று தனக்கு உறுப்பாகக் கொண்டாற் போன்ற; நல்லார் கொழுங்கயல் தடங்கண் போலும் - மகளிரின் மதர்த்த கயலனைய பெரிய கண்களைப் போன்ற; அம்பு கொண்டு அரசர் மீண்டார் - அம்பை ஏற்று அரசர்கள் திரும்பினார்கள்; மறவர் ஆக் கொண்டு போனார் - வேடர்கள் ஆனிரையை ஏற்றுச் சென்றனர்; என்றார் - என்றனர் ஆயர்.

விளக்கம் : அரசர் : கட்டியங்காரன் மக்களும், மதனனும். உலகிற்கு அன்றி நகரத்திற்கு அரசனாகிய திருவாளனே என்றதனால் அவர்களுடைய வெகுளி விளங்குகிறது. அரசர் அம்புகொண்டு மீண்டார் மறவர் ஆக்கொண்டு போனார் என்பதன்கண் இகழ்ச்சி தோன்றுதலுணர்க. அம்புகொண்டு மீண்டார் என்புழி அம்பை முதுகிலேற்றுக்கொண்டு மீண்டனர் என்க. செம்புகொண்டு இயற்றினாலனைய மதில் என்க செம்பியன்றன்ன செஞ்சுவர் என்றார் மதுரைக் காஞ்சியினும்.

நந்தகோன், நிரை மீட்பாருக்குத் தன் மகளை மணம்புரிந்து தருவதாக முரசு அறைதல்

440. மன் நிரை பெயர்த்து மைந்தர்
வந்தனர் கொள்க வாள்கண்
பொன் இழை சுடரும் மேனிப்
பூங் கொடி அனைய பொற்பில்
கன்னியைத் தருதும் என்று
கடி முரசு இயம்பக் கொட்டி
நல் நகர் வீதி தோறும்
நந்த கோன் அறை வித்தானே.

பொருள் : வாள்கண் பொன் இழை சுடரும் மேனிப் பூங்கொடி அனைய பொற்பின் கன்னியைத் தருதும் - வாளனைய கண்களையும் பொன்னணி ஒளிவிடும் மெய்யினையும் உடைய பூங்கொம்பு போன்ற அழகிய கன்னியைத் தருகிறோம்; மன்நிரை பெயர்த்து வந்தனர் மைந்தர் கொள்க - அரசனுடைய ஆனிரையைத் திருப்பிக் கொண்டு வரும் வீரர் அவளைக் கொள்க; என்று நல்நகர் வீதிதோறும் கடிமுரசு இயம்பக் கொட்டி - என்று அழகிய நகரின் தெருவிலெல்லாம் மிகுமுரசு முழங்கக் கொட்டி; நந்தகோன் அறைவித்தான் - நந்தகோன் சாற்றுவித்தான்.

விளக்கம் : (மன் நிரை: பெரிய நிரை என்பர் நச்சினார்க்கினியர். முன்னரும் மன்னவன் நிரை (415) என வருதலானும், அரசனாற் காக்கப்படவேண்டிய நிரை என்னுங் கருத்துப்பட நந்தகோன் கூறுதற்குரிய கருத்துண்மையாலும் - அரசன் நிரை யென்றலே பொருந்தும்.) இரண்டு குலத்தோரும் தாழ்வுயர்வு கருதாதிருத்தற்குக், கொள்க என்றும், தருதும் என்றுங் கூறினான். படை நான்கும் மிகப்படைத்துப் பல்லுயிர்க்கும் அருள்புரிந்தோ ருண்மையானும், கன்னியை விரும்புவாருண்மையானும் கொட்டி அறைவித்தான்.

சீவகன் போருக்கு எழுதல்

441. வெதிர்ங் குதைச் சாபம் கான்ற
வெம் நுனைப் பகழி மூழ்க
உதிர்ந்தது சேனை ஈட்டம்
கூற்றொடு பொருது கொள்ளும்
கருந் தடங் கண்ணி அன்றிக்
காயம் ஆறு ஆக ஏகும்
அரும் பெறல் அவளும் ஆகென்று
ஆடவர் தொழுது விட்டார்.  

பொருள் : ஆடவர் - அதுகேட்ட அந்நகரத்து மறவர்; வெதிர்ங்குதைச் சாபம் கான்ற வெம் நுனைப் பகழி மூழ்க - மூங்கிலாலாய குதையையுடைய வில்லுமிழ்ந்த வெவ்விய நுனியையுடைய அம்புகள் மூழ்குதலாலே, சேனையீட்டம் உதிர்ந்தது - நம் வேந்தன் படைத்திரளே சிதறிப் போயிற்று; (இங்ஙனமாகவும்) கூற்றொடு பொருது கொள்ளும் -மறலிபோன்ற இவ்வேடர் படையோடு போர்செய்து கைக்கொள்ளுதற்குரியாள; கருந்தடங்கண்ணி அன்றி - நந்தகோன் கூறிய கரிய பெரிய விழியுடையாளாகிய அவன் மகளேயன்றி, காயம் ஆறு ஆக ஏகும் அரும்பெறல் அவளும் ஆக- வானமே வழியாக இயங்குவாளொரு தெய்வமகளே ஆக அது செய்து கொள்ளவல்லார் இல்லை என்று; தொழுது விட்டார் - வணங்கி அவ்வெண்ணத்தைக் கைவிட்டனர்.

விளக்கம் : வெதிர் - மூங்கில். குதை - வில்லிடத்தோருறுப்பு. கூற்று வேடர் படைக்குவமை. கொள்ளும் என்புழி கொள்ளுதற்குரியாள் என வருவித்தோதுக. காயம் - ஆகாயம். அரும்பெறலவள் என்றது அமரர் மகளை. ஆடவர் - மறவர்.

442. கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சி னோடும்
தேர் பரி கடாவித் தேம் தார்ச் சீவகன் அருளில் போகித்
தார் பொலி புரவி வட்டம் தான் புகக் காட்டு கின்றாற்கு
ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே.  

பொருள் : தேம்தார்ச் சீவகன் கார்விரி மின் அனார்மேல் காமுகர் நெஞ்சின் ஓடும் தேர் பரி கடாவி - தேன் துளிக்கும் மாலை அணிந்த சீவகன் முகிலிடை மலரும் மின்னைப் போன்ற மகளிர்மேற் காமுகர் உள்ளம் ஓடுவதுபோல ஓடும்தேரை அதன் செலவிலே செலுத்திப் (பிறகு); தார்பொலி புரவிவட்டம் தான் புகக் காட்டுகின்றாற்கு - தாரினால் விளங்கும் குதிரையை அதன் வட்டத்திலே செல்லுமாறு கற்பிக்கும்போது அவனுக்கு; அருளின் போகி ஒருமகன் - அவன் அருளாலே போய்ச் செய்தி யுணர்ந்து வந்த ஒருவன்; ஊர்பரி வுற்றது எல்லாம் உணர்த்தினான் - ஊர் துன்பப்படுவது முற்றும் தெளிவாகக் கூறினான்.

விளக்கம் : வட்டம் : குதிரை வட்டமாகக் செல்லும் நெறி. இனி, ஒரு மகன் தேர்பரி கடாவிப் போய் வந்து என்றும் ஆம். பரி - செலவு.

443. தன் பால் மனையாள் அயலான் தலைக் கண்டு பின்னும்
இன் பால் அடிசில் இவர்கின்ற கைப் பேடி போலாம்
நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார்
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான்.  

பொருள் : நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார் என்பாரை யான் ஓம்பேன் எனின் - நல்லொழுக்கத்தையும் பசுவையும் துறவிகளையும் மகளிரையும் குழவிகளையும் பார்ப்பாரையும் நான் காப்பாற்றேன் எனின்; தன்பால் மனையாள் அயலான்தலைக் கண்டு பின்னும் இன்பால் அடிசிற்கு இவர்கின்ற கைப் பேடிபோலாம் அவன் ஆக என்றான் - தன்பால் தங்கிய வீரமகள் அயலானிடமாகக் கண்டேயும் மேலும் (உயிர் வாழ) இனிய பாற்சோற்றை விழையும் இழிந்த ஒழுக்கமுடைய பேடி போன்றவனாகும் கட்டியங்காரன் ஆவேன் என்று நினைத்தான் சீவகன்.

விளக்கம் : மனையாள்: இங்கே வீரமகள். நன்பால் - நல்லொழுக்கம்; பலவயினானும் (தொல்.கிளவி.51) என்றதனாற் சிலவயின் திணை விரவி எண்ணி உயர்திணையான் முடிந்தன மற்றுப் பாற்பசு எனினும் பொருந்தும். இஃது சீவகனுடைய உட்கோள். இனி, போலா எனச் செய்யாவென்னும் எச்சவினையாக்கிப் போன்று அவன் ஆக என முடிபு செய்வர் நச்சினார்க்கினியர். போலாம் என்னும் பாடமும் அவருக்கு உடன்பாடே. போல் என்பது உவமையுணர்த்தியது; ஒப்பில் போலி அன்று.

444. போர்ப் பண் அமைத்து நுகம் பூட்டிப்
புரவி பண்ணித்
தேர்ப் பண் அமைத்துச் சிலை கோலிப்
பகழி ஆய்ந்து
கார்க் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலி
மான் குளம்பில்
பார்க் கண் எழுந்த துகளால் பகல்
மாய்ந்தது அன்றே.  

பொருள் : போர்ப்பண் அமைத்து - தன்னைப் போருக்கு ஈடாக்கிக் கொண்டு; புரவி பண்ணி நுகம்பூட்டித் தேர்ப்பண் அமைத்து - குதிரைகளைப் புனைந்து நுகத்திலே பூட்டித் தேரைப் புனைந்து; சிலை கோலிப் பகழி ஆய்ந்து - வில்லை வளைத்துக் கணைகளை ஆராய்ந்து; கார்க் கொண்மு மின்னின் நிமிர்ந்தான் - கரிய முகிலிடையே மின்னெனத் தேரைச் செலுத்தினான்; கலிமான் குளம்பின் பார்க்கண் எழுந்த துகளாற் பகல் மாய்ந்தது - முழங்குங் குதிரைகளினுடைய குளம்பினாலெழுந்த புழுதியால் ஞாயிறு மறைந்தது.

விளக்கம் : கொண்மூ: கொண்மு என ஆனது விகாரம். போர் பண்ணமைத்து என்றது, போருக்குத் தகுதியாகத் தன்னையாக்கிக் கொண்டென்றவாறு. அஃதாவது கழல்கட்டிப் படைக்கலமேந்தி இன்னோரன்ன பிறவும் செய்து கோடல். சிலை - வில். கோலுதல் - அதனை வளைத்துக் காண்டல். கலிமான் - குதிரை. பகல்: ஆகுபெயர்; ஞாயிறு.

நிமித்திகன் வேடரைத் தடுத்தல்

445. இழுது ஒன்று வாள் கண் இளையார் இளை
யார்கண் நோக்கின்
பழுது இன்றி மூழ்கும் பகழித் தொழில்
வல்ல காளை
முழுது ஒன்று திண் தேர் முகம் செய்தவன்
தன்னொடு ஏற்கும்
பொழுது அன்று போதும் எனப் புள் மொழிந்
தான் மொழிந்தான்.  

பொருள் : இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார் கண் நோக்கின் - நெய் பூசிய வாளனைய கண்ணையுடைய மகளிர் காமுகரிடம் நோக்கும் நோக்கைப்போல; பழுதி இன்றி மூழ்கும் பகழித் தொழில் வல்ல காளை - தப்பின்றித் தைக்கும் கணைத் தொழிலில் வல்ல காளையாகிய; முழுது ஒன்று திண்தேர் முகம் செய்தவன் தன்னொடு - எல்லாத் திக்கினும் ஒரு திண்ணிய தேரே எதிர்த்துச் செலுத்தும் வன்மையுடைய இவனொடு; ஏற்கும்பொழுது அன்று, போதும் என - எதிர்க்கும் காலம் இஃதன்று, இப்பொழுது விட்டுப் போவோம் என்று; புள் மொழிந்தான் மொழிந்தான் - முன்னர்ப் புட்குரல் கண்டு மொழிந்த நிமித்திகன் கூறினான்.

விளக்கம் : பின்னரே ஒருவன் தேரினால் உடைதும் சுடுவின் தேனுடைந்த வண்ணமே என்று கூறிய அந்நிமித்திகனே என்பது படப் புண்மொழிந்தான் மொழிந்தான் என்றார். இப்பொழுது இவனோடு யாம் போர்ஏற்பின் சுடுவின்தேன் உடைந்த வண்ணம் உடைதல் திண்ணம் ஆதலால் இப்பொழுது வாளா மீள்வேம் என்பதுகுறிப்பு.

நிமித்திகன் சொல்லை ஏற்காது வேடர் போரிடச் செல்லுதல்

446. மோட்டும் முதுநீர் முதலைக்கு
வலியது உண்டேல்
காட்டுள் நமக்கு வலியாரையும்
காண்டும் நாம் என்று
ஏட்டைப் பசியின் இரை கவ்விய
நாகம் போல்
வேட்டு அந் நிரையை விடல் இன்றி
விரைந்தது அன்றே.  

பொருள் : முதுநீர் மோட்டு முதலைக்கு வலியது உண்டேல் - ஆழமான நீரில் பெரிய முதலையினும் வலிமையானது இருக்குமானால்; காட்டுள் நமக்கு வலியாரையும் நாம் காண்டும் என்று - நம் காட்டில் நம்மினும் வலியாரையும் காண்போம் என்றுகூறி; ஏட்டைப் பசியின் இரை கவ்விய நாகமே போல் - இளைப்பை யுண்டாக்கிய பசியினால் இரையைப் பற்றிய பாம்பு அதனை விடாதவாறு போல; வேடு அந்நிரையை விடல் இன்றி விரைந்தது - வேட்டுவர்குழு தான் பற்றிய ஆவின் திரளை விடாமற் போர்மேல் விரைந்து சென்றது.

விளக்கம் : மோட்டும் முதுநீர் : மகரம் விரித்தல் விகாரம். வேடு - குழுப்பெயர்; எதுகை நோக்கி வேட்டு என விரிந்தது. முதுநீர் என்புழி முதுமை ஆழத்தை உணர்த்தியது; என்னை? ஆழ்ந்த நீரே வற்றாமையான் முதுநீராதல்கூடுமாகலின். நெடும்புனலுள் முதலை (பிறவற்றை) வெல்லும் என்பவாகலின். முதலைக்கு வலிய துண்டேல் என்றார். உண்டேல் என்றது இல்லை என்பதுபட நின்றது. காட்டுள் என்பது நமக்கே உரிய இக்காட்டுள் என்பதுபட நின்றது. ஏட்டை - இளைப்பு.

சீவகன் வேடர்களுடன் போரிடுதல்

447. கடல் படை அனுங்க வென்ற
கானவர் என்னும் கூற்றத்து
இடைப் படாது ஓடிப் போமின்
உய்ய என்று இரலை வாய் வைத்து
எடுத்தனர் விளியும் சங்கும்
வீளையும் பறையும் கோடும்
கடத்து இடை முழங்கக் காரும்
கடலும் ஒத்து எழுந்த அன்றே.  

பொருள் : கடல்படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்திடைப் படாது - அரசனுடைய கடலனைய படைகெடும் படி வென்ற வேடர் என்னும் இக் கூற்றுவனிடம் அகப்படாமல்; உய்ய ஓடிப்போமின் என்று - பிழைக்க ஓடிப்போங்கோள் என்று கூறி; இரலை வாய் வைத்து - துத்தரிக் கொம்பை ஊதி; விளியும் விளையும் எடுத்தனர் - கொக்கரிப்பையும் சீழ்க்கையையும் எழுப்பினர்; கடத்திடை சங்கும் பறையும் கோடும் முழங்க - (அவ்வொலிக்கு எதிரே) காட்டிலே சங்கும் பறையும் கொம்பும் சீவகன் படை முழங்க; காரும் கடலும் ஒத்து எழுந்தது - இரண்டு படையின் ஒலியும் காரையும் கடலையும் ஒத்து எழுந்தன.

விளக்கம் : படை அனுங்க வென்ற என்றது கூற்றம் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. உய்ய ஓடிப் போமின் என மாறுக. இரலை - துத்தரி என்னும் ஒருவகைக் கொம்பு. இது மான் கொம்பாலாயது போலும். விளி - கூக்குரல். விளை - சீழ்க்கை. வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த என்றார் பிறரும் (குறுந்.272)

448. கை விசை முறுக்கி வீசும்
கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப
செய் கழல் குருசில் திண் தேர்
விசையொடு திசைகள் எல்லாம்
ஐ என வளைப்ப வீரர்
ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார்
மொய் அமர் நாள் செய்து ஐயன்
முதல் விளையாடினானே.  

பொருள் : செய்கழல் குருசில் திண்தேர் - புனைகழலையுடைய சீவகனின் திண்ணிய தேர்; கைவிசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப - கையினால் விசை கொண்டு விரைந்து வீசும் கொள்ளிக் கட்டையும் காற்றாடியும் போல; திசைகளெல்லாம் ஐயென விசையொடு வளைப்ப - எல்லாத்திக்கினும் விரைய விசையுடன் வளைப்ப; வீரர் ஆர்த்தனர் - சீவகனைச் சேர்ந்த வீரர் ஆரவாரித்தனர்; அவரும் ஆர்த்தார் - வேடர்களும் ஆரவாரித்தனர்; ஐயன் மொய்அமர் நாள்செய்து முதல் விளையாடினான் - சீவகன் (பின்னர் நடத்தும்) நெருங்கிய போருக்கு (இப்போரினால்) நன்னாள் கொண்டு முதலாவதாக விளையாடினான்.

விளக்கம் : சீவகனுக்கு வேடர் நிகரன்மையானும் பகையன்மையானும் தன் அருளும் வீரமும் மேம்படுதற்குச் சென்றான் ஆகலானும் அவரை அஞ்சப் பண்ணி நிரைமீட்டான் என்ற கருத்தால், நாட்செய்து தம்மிற் படைவகுத்து விளையாடினான் என்றார். மேல் வேடர்களைக் கொல்லாது விடுதலினானும் இது விளங்கும். கட்டியங்காரனுடன் நிகழ்த்தும் போருக்கு இது நாட்கோள் என்றார். இப்போரினாற் கட்டியங்காரன் பொறாமையுற்றுப் பகைகொண்டானாதலின்.

வேடர்கள் போரில் தோற்று ஓடுதல்

449. ஆழியான் ஊர்திப் புள்ளின்
அம் சிறகு ஒலியின் நாகம்
மாழ்கிப் பை அவிந்த வண்ணம்
வள்ளல் தேர் முழக்கினானும்
சூழ்துகள் மயக்கத்தானும்
புளிஞர் உள் சுருங்கிச் சேக்கைக்
கோழி போல் குறைந்து நெஞ்சின்
அறம் என மறமும் விட்டார்.  

பொருள் : ஆழியான் ஊர்திப் புள்ளின் அம் சிறகு ஒலியின் - திருமால் ஊர்தியாகிய கருடனுடைய அழகிய சிறகுகளின் ஓசையால்; நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் - பாம்பு மயங்கிப் படம் ஒடுங்கினாற்போல; வள்ளல் தேர் முழக்கினானும் சூழ்துகள் மயக்கத்தானும் - சீவகனுடைய தேர் முழக்கத்தாலும் தம்மைச் சூழ்ந்த புழுதியின் மயக்கத்தாலும்; புளிஞர் உள் சுருங்கி - வேடர்களின் உள்ளம் குறைந்து; சேக்கைக் கோழிபோல் குறைந்து - வலைப்பட்ட கோழிபோலே செயல் குறைந்து; நெஞ்சின் அறம் என மறமும் விட்டார் - தம் நெஞ்சிலே அறம் புகாமற் கைவிட்டாற்போல ஈண்டு வீரத்தையும் கைவிட்டனர்.

விளக்கம் : அவருயிரைக் கொடுத்தலின் வள்ளல் என்றார். பொராமல் தேரொலியாலே அவரை அச்சுறுத்தி நிரை மீட்கின்றான் என்று கொள்க. ஆழியான் - சக்கரப் படையையுடைய திருமால். புள் - கருடன். புளிஞர் - வேடர். உள் - உள்ளம், ஊக்கம். சிறப்புப் பொருளையே உவமையாக எடுத்து அவ்வுவமையானும் அவ்வேடர் இயல்புணர்த்துவார், அறம் என மறமும் விட்டார் என்றார். சீவகன் வெல்லுதற்கு அவன்பால் அறமுண்மையும் அவர் தோற்றற்கு அறமின்மையும் காரணம் எனக் குறிப்பாக ஏதுக் கூறியவாறு.

450. புள் ஒன்றே சொல்லும் என்று இப்
புன்தலை வேடன் பொய்த்தான்
வெள்ளம் தேர் வளைந்த நம்மை
வென்றி ஈங்கு அரிது வெய்தா
உள்ளம் போல் போது நாம் ஓர்
எடுப்பு எடுத்து உய்ய என்னா
வள்ளல் மேல் அப்பு மாரி
ஆர்ப்பொடு சிதறினாரே.

பொருள் : புள் ஒன்றே சொல்லும் என்று இப் புன்தலை வேடன் பொய்த்தான் - ஆந்தை ஒரு தேரே வரும் என்று சொல்கின்றதென்று நமக்கு இச் சிறு தலையுடைய வேடன் பொய் கூறினான்; நம்மை வெள்ளம் தேர் வளைந்த - நம்மை வெள்ளம்போலத் தேர்கள் வளைந்தன; ஈங்கு வென்றி அரிது - (ஆதலால்) இவ்விடத்தே நமக்கு வெற்றியில்லை; நாம் வெய்தா ஓர் எடுப்பு எடுத்து உள்ளம்போல் உய்யப் போதும் என்னா - நாம் கடிதாக ஒருமுறை உற்றுப் பொருது விலகித் தப்பி ஒருவருள்ளம்போல எல்லோரும் செல்வோம் என்றுரைத்து; வள்ளல் மேல் அப்புமாரி ஆர்ப்பொடு சிதறினார் - சீவகன்மேல் அம்பு மழையை ஆரவாரித்துச் சொரிந்தனர்.

விளக்கம் : உள்ளம்போல் என்பதற்கு, நிமித்திகன் உள்ளம் போல் என்றும் உரைத்துக் கொள்க. இச்செய்யுளின்கண் ஆற்றாது புறமிட்டோட நினைக்கும் வேடர் புள் ஒன்றே சொல்லும்என்று இப்புன்தலை வேடன் சொன்னான் என்று அக்கிழ நிமித்திகன்பாற் குற்றங் கூறமுற்படுதல் நினைக்குந்தோறும் நம்நகைச்சுவையை மிகுதிப்படுத்துதலுணர்க. நாம் ஓர் எடுப்பெடுத்துப் பார்ப்பேம் என்பதும் அவர்தம் ஆற்றாமையையே காட்டுதலறிக.

451. மால் வரைத் தொடுத்து வீழ்ந்த
மணிநிற மாரி தன்னை
கால் இரைத்து எழுந்து பாறக்
கல் எனப் புடைத்ததே போல்
மேல் நிரைத்து எழுந்த வேடர்
வெம் நுனை அப்பு மாரி
கோல் நிரைத்து உமிழும் வில்லால்
கோமகன் விலக்கினானே.  

பொருள் : மால்வரை தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னை - பெரிய மலையில் நிரைத்துச் சூழ்ந்த கருநிற மழையை; கால் இரைத்து எழுந்து பாறக் கல் எனப் புடைத்ததேபோல் - காற்று முழங்கி எழுந்து சிதறுமாறு கல் என்றொலித்துத் தாக்கியது போல; மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம்நுனை அப்பு மாரி - தன்மேல் வரிசையாக எழுந்த வேடரின் கொடிய முனைகளையுடைய அம்பு மழையை; கோல் நிரைத்து உமிழும் வில்லால் கோமகன் விலக்கினான் - கணைகளை வரிசையாகச் சொரியும் வில்லினாற் சீவகன் நீக்கினான்.

விளக்கம் : வரையில் தொடுத்து என்றார் கால மழை யென்றற்கு. காற்றுத் தான் விரும்பிய திசையிலே மழையைப் போக்குமாறு போல இவன் அம்பு தன் விசையால் அவர்களின் அம்பைத் திருப்பியது. நாமுறக், கணைக்காற்று எடுத்த கண்அகன் பாசறை (புறநா,373) என்றார் பிறரும். இச்சிறப்பினாற் கோமகன் என்றார்.

452. கானவர் இரிய வில்வாய்க்
கடுங் கணை தொடுத்தலோடும்
ஆன்நிரை பெயர்ந்த ஆயர்
ஆர்த்தனர் அணி செய் திண் தோள்
தான் ஒன்று முடங்கிற்று ஒன்று
நிமிர்ந்தது சரம் பெய் மாரி
போல் நின்ற என்ப மற்று
அப் பொருவரு சிலையினார்க்கே.  

பொருள் : கானவர் இரிய வில்வாய்க் கடுங்கணை தொடுத்தலோடும் - வேடர்கள் ஓடுமாறு தன்வில்லிலே கொடிய அம்புகளைத் தொடுத்தவுடன்; ஆன்நிரை பெயர்ந்த -பசுத்திரள்கள் திரும்பின; ஆயர் ஆர்த்தனர் - இடையர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர்; அணிசெய் திண்தோள் தான் ஒன்று முடங்கிற்று, ஒன்று நிமிர்ந்தது - சீவகனின் அழகிய திண்ணிய தோள்களில் ஒன்று முடங்கியது, ஒன்று நிமிர்ந்தது; அப் பொருவரு சிலையினார்க்கு பெய்மாரிபோற் சரம்நின்ற -(அப்போது) அந்த ஒப்பற்ற வில்லேந்திய வேடர்கட்குப் பெய்யும் மழைபோல அம்புகள் தாரையாய் நின்றன.

விளக்கம் : சீவகன் அம்பு தொடுக்குஞ் சிறப்பினைக் கண்டு, இனிப்பொருதல் அரிதென்று ஊக்கங் குறைந்து நிரையைக் கைவிடுதலால், தொடுத்தலோடும் ஆநிரை பெயர்ந்த என்றார். ஆநிரை பெயர்ந்தபிறகு தன்னைச் சூழ்ந்து குவிந்த வேடர்திரள் குலைந்து போமாறு எய்த நிலையை மாரிபோல் நின்றதென்றார். கொல்லாதிருத்தலின், மாரிபோல் என்றார் என்றும், கானவர் இரிய அணிசெய் திண்டோள் முடங்கிற்று என்று கொண்டு கூட்டியும் நச்சினார்க்கினியர் கூறுவர்.

453. ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர்
மெய்ந் நூறு நூறு நுதி வெம் கணை தூவி வேடர்
கைந் நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின்
மைந் நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார்.  

பொருள் : ஐந்நூறு நூறு தலையிட்ட ஆறாயிரவர் - ஐயாயிரத்தைத் தலையிலேயிட்ட ஆறாயிரவர்களின், மெய்நூறு நூறு நுதி வெங்கணை தூவி - உடம்பைத் துகளாக ஆக்கவல்ல முனையையுடைய கொடிய கணைகளைச் சொரிந்து; வேடர் கைநூறு வில்லும் கணையும் அறுத்தான் - வேடரின் கையிலுள்ள நூற்றுக்கணக்கான விற்களையும் அம்புகளையும் வெட்டினான்; மைநூறு வேல்கண் மடவார் மனம்போலக் கணத்தின் மாய்ந்தார் - அஞ்சனம் தீட்டிய வேலனைய கண்களையுடைய பொதுமகளிரின் மனம் போல நிலையின்றி ஒரு நொடியிலே ஓடி மறைந்தனர்.

விளக்கம் : ஐம்பத்தாறாயிரவர் என்றபடி; இவர்கள் வேடர்கள். மெய்யை நூறவல்ல கணையாயினும் அம்பையும் வில்லையுமே நூறுமாறு வெங்கணை தூவினான். இஃது அவனுடைய அருளுள்ளத்தைக் காட்டுகிறது. மையாகிய நூறு - அஞ்சனம். பொது மகளிரின் மனம் நிலையற்றதாகையால் உவமையாயிற்று.

454. வாள் வாயும் இன்றி வடி வெம் கணை
வாயும் இன்றிக்
கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த
ஆங்கு மைந்தன்
தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு
மீட்டு மீள்வான்
நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி
செல்வது ஒத்தான்.  

பொருள் : கோள்வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு - இராகு என்னும் கோளின் வாயிலிருந்து திங்களைத் திருமால் விடவித்தாற்போல; வாள் வாயும் இன்றி வடிவெங்கணை வாயும் இன்றி - வாள் வாய் வடுவும் கூரிய கொடிய அம்பின்வாய் வடுவும் உண்டுபண்ணாமலே; தோள்வாய் சிலையின் ஒலியால் தொறுமீட்டு மீள்வான் மைந்தன்- தோளில் ஏந்திய வில்லின் ஒலியினாலேயே ஆனிரையைத் திருப்பித் திரும்பும் வலிமையுடைய சீவகன்; நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வதொத்தான் - நாள்தொறும் நிறைவெய்திய கலை (ஒளி) யையுடைய முழுமதி செல்வது போன்றான்.

விளக்கம் : வேடர்கட்குத் தீங்கின்றியே மீட்டான் என்பதனைக் கருதியே, சிலையின் ஒலியால் என்றார். நாள்தோறும் நிறைந்த மதி உலகறியக் கலை நிரம்பினமை தோற்றுவித்தலின் உவமையாயிற்று. (காந்தருவ தத்தையின் யாழ்வென்றியின்போது அரசர் தெளிவிக்கவும் தெளியாமற் பொருதுபட்டனரேனும் அவர்கள் பகைவரன்மையிற் சிறிது பாவமுளதென்று கருதிப் பொன்னால் அருகன் உருச்செய்து விழாச் செய்து போர்க்களத்தே பாவம் போக்கினான். ஈண்டு எம்முறையானுங் கொல்லத்தகாதவ ராதலிற் கொலையின் றென்பது தோன்றக் களத்துப் பாவம் போக்கினானென்று கூறாராயினர் என்க என்று நச்சினார்க்கினியர் கூறுவர்.) நெடியான் - திருமால். கோள் - இராகு. இராகு என்னும் பாம்பின் வாய்ப்பட்டதிங்களைத் திருமால் மீட்டனர் என்பது அருக சமயத்தினர் கூறும் கதை. நகை - ஒளி.

455. ஆள் அற்றம் இன்றி அலர் தார் அவன் தோழ ரோடும்
கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற
வாள் உற்ற புண்ணுள் வடி வேல் எறிந்திற்றதே போல்
நாள் உற்று உலந்தான் வெகுண்டான் நகர் ஆர்த்தது அன்றே.  

பொருள் : ஆள் அற்றம் இன்றிக் கோள் உற்ற கோவன் நிரை அலர்தாரவன் தோழரோடும் மீட்டனன் என்று கூற - இரு படையினும் ஓராளுக்குங் குற்றம் இல்லாமல், வேடராற் கொள்ளப்பட்ட மன்னவனின் ஆனிரையைச் சீவகன் தன் தோழருடனே சென்று மீட்டான் என்று கூற; நாள் உற்று உலந்தான் - (அதனைக்கேட்ட) தன் ஆயுள் முடியும் நிலையினனான கட்டியங்காரன்; வாள் உற்ற புண்ணுள் வடிவேல் எறிந்து இற்றதேபோல் - வாளால் நேர்ந்த புண்ணிலே வடிவேல் பட்டு அது முரிந்து நின்றாற்போல (வருந்தி); வெகுண்டான் - சீறினான்; நகர் ஆர்த்தது - நகரமோ மகிழ்ந்து ஆரவாரித்தது.

விளக்கம் : தோழர்க்குப் போரின்றேனும் உடன் சென்றதால், தோழரோடும் என்றார். கோவன்: நந்தகோன் எனினுமாம். தன் படைதோற்றதன்மேல் இவன் வெற்றி நிலைநின்றதனாற் புண்ணிலே வேலேறியுண்டு முரிந்து நின்றாற் போன்றது. நிரை மீட்டதற்கு உவப்புற வேண்டியவன் வெகுண்டதனால், நாளுற்றுலந்தான் என்று ஒரு பெயரிட்டார் தேவர். இனி, அரசுரிமையைச் சீவகன் எய்தும் நாள் வந்துறுதலின் அவ்வாறு கூறினாரெனினும் ஆம். வாள் உற்றபுண் கட்டியங்காரன் தன்படை தோற்றமையால் எய்திய துன்பத்திற்குவமை. வடிவேல் எறிந்து இற்றது; சீவகன் வென்றான் என்று கூறக் கேட்டமையால் கட்டியங்காரன் நெஞ்சத்தே ஆழப்பதிந்து கிடந்த துன்பத்திற்குவமை. நூலாசிரியர் கெடுவான் கேடு நினைப்பான் என்றிரங்குவார் நாளுற்றுலந்தான் என்றொரு பெயர் கூறினர் என்க.

சீவகன் ஆநிரை மீட்டு வருதலும், நகர மாந்தர் மகிழ்ச்சியும்

456. இரவி தோய் கொடி கொள் மாடத்து
இடுபுகை தவழச் சுண்ணம்
விரவிப் பூந் தாமம் நாற்றி
விரை தெளித்து ஆரம் தாங்கி
அரவு உயர் கொடியினான் தன்
அகன் படை அனுங்க வென்ற
புரவித் தேர்க் காளை அன்ன
காளையைப் பொலிக என்றார்.  

பொருள் : இரவி தோய் கொடிகொள் மாடத்து -(சீவகன் செல்லுந் தெருவிலே) ஞாயிறு தோயும் கொடிகளைக் கொண்ட மாடத்திலே (உள்ள கற்புடை மகளிர்); இடு புகை சுண்ணம் விரவித் தவழப் பூந்தாமம் நாற்றி - ஊட்டும் நறுமணப் புகையும் சுண்ணப் பொடியுங் கலந்து தவழ, மலர் மாலையைத் தூக்கி; விரை தெளித்து - நறுமணப் பொடிகளை எங்கும் தெளித்து; ஆரம் தாங்கி - முத்துமாலை (மங்கலமாக) அணிந்து; அரவு உயர் கொடியினான் தன் அகன்படை அனுங்க வென்ற - பாம்பெழுதிய கொடியினையுடைய துரியோதனனின் பெரும் படையைக் கெடுமாறு வென்ற; புரவித் தேர்க்காளை அன்ன காளையை - வெள்ளைப் பரி பூட்டிய தேரின் ஊர்ந்து சென்ற அருச்சுனனைப் போன்ற சீவகனை; பொலிக என்றார் - வாழ்க என்று வாழ்த்தினர்.

விளக்கம் : விராடபுரத்தில் துரியோதனன் கவர்ந்த நிரையை அருச்சுனன் மீட்டது இங்கே குறிக்கப்படுகிறது. அப்போது வில்லுந் தேரும் நிரைமீட்டதும் இங்கே உவமையாயின. மாடங்களை அணிசெய்து ஆரந்தாங்கி என்றதனால் மகளிரென்றும் காமக் குறிப்பின்றி வாழ்த்தினமையின் கற்புடை மகளிரென்றும் கொண்டாம். காளை : உவமையாகு பெயர்.

457. இன் அமுது அனைய செவ்வாய்
இளங் கிளி மழலை அம் சொல்
பொன் அவிர் சுணங்கு பூத்த
பொங்கு இள முலையினார் தம்
மின் இவர் நுசுப்பு நோவ
விடலையைக் காண ஓடி
அன்னமும் மயிலும் போல
அணி நகர் வீதி கொண்டார்.  

பொருள் : இன் அமுது அனைய செவ்வாய் - இனிய அமுது போன்ற செவ்வாயினையும்; இளங் கிளி மழலை அஞ்சொல் - இளங்கிளியின் மொழி போன்ற மழலை பொருந்திய அழகிய மொழியினையும் உடைய; பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் - பொன்னென விளங்கும் தேமல் பொருந்திய பூரிக்கும் இளமுலை மகளிர்; தம் மின் இவர் நுசுப்பு நோவ - தம் மின்னனைய இடை வருந்த; விடலையைக் காண ஓடி - சீவகனைக் காண ஓடிவந்து; அன்னமும் மயிலும் போல அணிநகர் வீதி கொண்டார் - அன்னமெனவும் மயிலெனவும் அழகிய நகரின் தெருக்களை முற்றுகையிட்டனர்.

விளக்கம் : விடலை : பதினாறுக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதினன். இது கற்புடை மகளிரல்லாதாரைக் கூறிற்று.

458. சில்லரிச் சிலம்பின் வள் வார்ச்
சிறுபறை கறங்கச் செம்பொன்
அல்குல் தேர் அணிந்து கொம்மை
முலை எனும் புரவி பூட்டி
நெல் எழில் நெடுங் கண் அம்பாப்
புருவவில் உருவக் கோலிச்
செல்வப் போர்க் காமன் சேனை
செம்மல் மேல் எழுந்தது அன்றே.  

பொருள் : செல்வப் போர்க் காமன் சேனை - செல்வத்தே நின்று போர் செய்யும் காமன் படை; சில் அரிச் சிலம்பின் வள் வார்ச் சிறுபறை கறங்க - சிலவாகிய அரிகளையுடைய சிலம்புகளாகிய சிறிய வாரால் இறுக்கிய சிறுபறை முழங்க; செம்பொன் அல்குல் தேர் அணிந்து - மேகலையால் அல்குலாகிய தேரைப் புனைந்து; கொம்மை முலையெனும் புரவி பூட்டி; பருத்த முலைகளாகிய குதிரைகளைப் பூட்டி; நல் எழில் நெடுங்கண் அம்புஆ - பேரழகினையுடைய நெடுங்கண்களை அம்பாகக் கொண்டு, புருவவில் உருவக் கோலி - புருவமாகிய வில்லை முற்றும் வளைத்து; செம்மல்மேல் எழுந்தது - சீவகன்மேல் போருக்குப் புறப்பட்டது.

விளக்கம் : (சிலம்பின் - இன்: அசை. முலையெனும் புரவி என்றார். புரவியின் பின் தேர் செல்லுமாறு போல முலைசென்று கவர்ந்த பின்னர் அல்குற் பயன் கோடலின். இதனால் கற்புடைய மகளிரல்லாத பிறமகளிரின் வேட்கை புலப்பட்டது கூறினார்.) காமன் சேனை, என்றது மகளிர் கூட்டத்தினை.

459. நூல் பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கிக்
கால் பரந்து இருந்த வெம்கண் கதிர் முலை கச்சின் வீக்கிக்
கோல் பொரச் சிவந்த கோல மணிவிரல் கோதை தாங்கி
மேல் வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார்.  

பொருள் : நூல்பொர அரியநுண்மை நுசுப்பினைஒசிய வீங்கி - நூலும் உவமைக்கொவ்வாத நுண்ணிய இடை ஒடியப் பருத்து; கால் பரந்திருந்த வெங்கண் கதிர்முலை கச்சின் வீக்கி - அடி பரந்திருந்த விருப்பமூட்டும் கரிய கண்களையுடைய ஒளிவிடும் முலைகளைக் கச்சினால் இறுக்கி; கோல் பொரச் சிவந்த கோல மணி விரல் கோதை தாங்கி - யாழ் நரம்பு தாக்கியதாற் சிவந்த அழகிய விரலாற் கூந்தலைத் தாங்கி; மேல்வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார் - சீவகன் வரவை எதிர்நோக்கிய மகளிர் வான மங்கையரைப் போன்றனர்.

விளக்கம் : நுசுப்பின் : இன், ஐ : அசைச் சொற்கள்.

460. ஆகமும் இடையும் அஃக
அடி பரந்து எழுந்து வீங்கிப்
போகமும் பொருளும் ஈன்ற
புணர் முலைத் தடங்கல் தோன்றப்
பாகமே மறைய நின்ற
படை மலர்த் தடங் கண் நல்லார்
நாகம் விட்டு எழுந்து போந்த
நாகர் தம் மகளிர் ஒத்தார்.  

பொருள் : ஆகமும் இடையும் அஃக அடிபரந்து எழுந்து வீங்கி - உடலும் இடையும் சுருங்குமாறு அடிபரந்து வளர்ந்து பருத்து; போகமும் பொருளும் ஈன்ற புணர்முலைத் தடங்கள் தோன்ற இன்பத்தையும் தேமலாகிய பொருளையும் நல்கிய இணைமுலைகள் தெரிய; பாகமே மறைய நின்ற படை மலர்த் தடங்கண் நல்லார் - மெய்யின் அடிப்பாகம் மறைய நின்ற, காமன் படையாகிய மலரனைய பெருங்கண் மங்கையர்; நாகம் விட்டு எழுந்து போந்த நாகர்தம் மகளிர் ஒத்தார் - நாகலோகமாகிய பவணத்தை விட்டு வெளியே வந்த நாகமங்கையரைப் போன்றார்.

விளக்கம் : புணர் முலை : நெருங்கின முலை என்றுமாம். படை : வேற்படையும் ஆம். (முலைத்தடம் ஒருபாதியே தோன்ற ஒரு பாதி மறைய, ஒருவர் பின்பு ஒருவராக நின்ற நல்லார் என்பர் நச்சினார்க்கினியர். பொருந்து மேற் கொள்க.)

461. வாள் அரம் துடைத்த வைவேல்
இரண்டு உடன் மலைந்தவே போல்
ஆள் வழக்கு ஒழிய நீண்ட
அணிமலர்த் தடங்கண் எல்லாம்
நீள் சுடர் நெறியை நோக்கும்
நிரை இதழ் நெருஞ்சிப் பூப் போல்
காளைதன் தேர் செல் வீதி
கலந்து உடன் தொக்கது அன்றே.  

பொருள் : வாள் அரம் துடைத்தவை வேல் இரண்டு உடன் மலைந்தவே போல் - வாளரத்தால் அராவின கூரிய வேல்கள் இரண்டு தம்முட் பொருதன போல; ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணிமலர்த் தடங்கண் எல்லாம் - ஆடவர் வரவினைப் போக்கி நீண்ட அழகிய மலரனைய பெருங்கண் எல்லாம்; நீள் சுடர் நெறியை நோக்கும் நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல் - பெரிய ஞாயிறுபோம் நெறியைப் பார்க்கும் நிரையிதழ்களையுடைய நெருஞ்சி மலர்களைப் போல; காளை தன் தேர்செல் வீதி கலந்து உடன்தொக்க - சீவகனுடைய தேர்செல்லுந் தெருக்களிலே (கொடுமை செய்ய வியலாது) தம்மிற் கலந்து சேர நெருங்கின.

விளக்கம் : வாளரம், அரங்களில் ஒருவகை. நெருஞ்சிப் பூ ஞாயிற்று மண்டிலம் இயங்குந்தோறும் அதற்கியையத் திரும்பி அதனை நோக்கும் இயல்புடையதாகலின் சீவகன் தேர் இயங்கு தொறும் இயங்கி அவனையே நோக்கும் மகளிர் கண்களுக்கு உவமை எடுத்தார். இதனை,

செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப்
பொன்புனை மலரின் புகற்சி போல

எனவரும் பெருங்கதையானும் உணர்க.

462. வடகமும் துகிலும் தோடும்
மாலையும் மணியும் முத்தும்
கடகமும் குழையும் பூணும்
கதிர் ஒளி கலந்து மூதூர்
இடவகை எல்லை எல்லாம்
மின் நிரைத்து இட்டதே போல்
பட அரவு அல்குலாரைப்
பயந்தன மாடம் எல்லாம்.  

பொருள் : வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும் கடகமும் குழையும் பூணூம் கதிர் ஒளி கலந்து - போர்வை முதலானவற்றின் ஒளி நிலவின் ஒளியும் ஞாயிற்றின் ஒளியும் போலத் தம்மிற் கலக்குமாறு; மூதூர் இடவகை எல்லையெல்லாம் மின் நிரைத்திட்டதேபோல் - அப் பழம்பதியின் பல பகுதிகளிலெல்லாம் மின்னை ஒழுங்குற அமைத்தாற்போல; மாடம் எல்லாம் படஅரவு அல்குலாரைப் பயந்தன - வீடுகளெல்லாம் அரவின்பட மனைய அல்குலையுடைய மகளிரை யீன்றன.

விளக்கம் : வடகத்திற்கு அத்தவாளம் என்றும் பெயர். கலந்து - கலப்ப: வினையெச்சத் திரிபு. வகை குறுந்தெரு. இனி, வடக முதலியன ஒளி தம்மிற் கலக்கும்படி சில மின் நிரைத்தாற்போல என்றுமாம்.

463. மாது உகு மயிலின் நல்லார்
மங்கல மரபு கூறிப்
போதக நம்பி என்பார்
பூமியும் புணர்க என்பார்
தோதகம் ஆக எங்கும்
சுண்ணம் மேல் சொரிந்து தண் என்
தாது உகு பிணையல் வீசிச்
சாந்து கொண்டு எறிந்து நிற்பார்.  

பொருள் : மாதுஉகும் மயிலின் நல்லார் - காதல் ஒழுகும் மயிலனைய பரத்தையர்; மங்கலம் மரபு கூறி - முறைப்படி வாழ்த்துக்கூறி; நம்பி! போதக! என்பார் - நம்பியே! வருக! என்பார்; பூமியும் புணர்க என்பார் - நிலமகளும் கூடுக! என்பார்; தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து - வருந்துமாறு எங்கும் சுண்ணப் பொடியை அவன்மேற் சிதறி; தண் என் தாது உகுபிணையல் வீசி - குளிர்ந்த மகரந்தம் சிந்து மாலைகளை எறிந்து; சாந்து கொண்டு எறிந்து நிற்பார் - சந்தனத்தைக் கையிலெடுத்து வீசி நிற்பார்.

விளக்கம் : மாதுகு நல்லார் எனவே பரத்தையராயினர். போதக - போதுக; திருவே புகுதக (சீவக -2121) என்றாற் போல. இவன் அரசனென்றறியாதிருந்தும் உலகங்காத்தற்குரியானெனக் கொண்டு பூமியும் புணர்க என்றனர். இது முதல் வட்டுடை (468) அளவும் ஒரு தொடர்.

464. கொடையுளும் ஒருவன் கொல்லும்
கூற்றினும் கொடிய வாள் போர்ப்
படையுளும் ஒருவன் என்று
பயம் கெழு பனுவல் நுண் நூல்
நடையுளார் சொல்லிற்று எல்லாம்
நம்பி சீவகன்கண் கண்டாம்
தொடையல் அம் கோதை என்று
சொல்லுபு தொழுது நிற்பார்.  

பொருள் : தொடையல் அம் கோதை! - கட்டிய அழகிய மாலையினாய்; கொடையுளும் ஒருவன் - கொடையிலும் ஒருவனே கொடுப்பான்; கொல்லும் கூற்றினும் கொடிய வாட்போர்ப் படையுளும் ஒருவன் - கொல்கின்ற காலனினும் கொடிய வாளா லியற்றும் போர்ப்படையிலும் ஒருவனே கெடுப்பான்; என்று பயம்கெழு பனுவல் நுண்ணூல் நடையுளார் சொல்லிற்று எல்லாம் - என நலம் பொருந்திய ஆராய்ச்சியுடைய நுண்ணிய நூலின் ஒழுக்கமறிந்தோர் கூறியதை எல்லாம்; நம்பி சீவகன்கண் கண்டாம் என்று சொல்லுபு தொழுது நிற்பார் - நம்பியாகிய சீவகனிடம் கண்டோம் என்று கூறித் தொழுது நிற்பார்கள் சிலமங்கையர்.

விளக்கம் : கொடையுளும், படையுளும்: உம்: உயர்வு சிறப்பும்மை. கொடையிலும் ஒருவனே சிறப்புறுவான்; படையிலும் ஒருவனே சிறப்புறுவான் என்று நூலறிந்தோர் கூறுவர். எனினும், இவ்விரண்டும் இன்று சீவகனிடங் கண்டோம் என்றனர். கொடையிற் சிறந்தோன் கன்னன். படையிற் சிறந்தோன் அருச்சுனன், ஒன்றல்லவை பல என்பது தமிழ் நடை. ஆதலின், எல்லாம் என்றார். சொல்லிற்றெல்லாம் : ஒருமை பன்மை மயக்கம்.

465. செம்மலைப் பயந்த நல் தாய்
செய்தவம் உடையாள் என்பார்
எம் மலைத் தவம் செய்தாள் கொல்
எய்துவம் யாமும் என்பார்
அம் முலை அமுதம் அன்னார்
அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கித்
தம் உறு விழும வெம் நோய்
தம் துணைக்கு உரைத்து நிற்பார்.  

பொருள் : செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவம் உடையள் என்பார் - (சிலர்) இத்தகைய சிறப்புடையானைப் பெற்ற தாய் தவமுடையள் என்பர்; எம்மலைத் தவம் செய்தாள் கொல்? எய்துவம் யாமும் என்பார் -(சிலர்) அவள் எந்த மலையிலே தவம்புரிந்தனளோ, அங்கே யாமும் செல்வோம் என்பர்; அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கி - அழகிய முலைகளையுடைய அமுதம் அனைய சிலர் நெஞ்சு வாடி விரும்பி நோக்கி; தம் உறு விழும வெந்நோய் - தம் மிக்க சீரிய துன்பந்தரும் காம நோயை; தம் துணைக்கு உரைத்து நிற்பார் - தம் தோழிக்குக் கூறி நிற்பர்.

விளக்கம் : எம்மலைத் தவம் செய்தாள்கொல் என்பதற்கு இவனை (கணவனாக)ப் பெற விருப்பவள் எம்மலையிலே நின்று தவஞ்செய் தாளோ என்று விரிப்பர். தவம் செய்தார்கொல் என்றும் பாடம். யாமும் அம் மலையை எய்தித் தவஞ்செய்து இவனை எய்த முயல்வேம் என்பார் எய்துவம் யாமும் என்றனர்.

466. சினவுநர்க் கடந்த செல்வன்
செம் மலர் அகலம் நாளைக்
கனவினில் அருளி வந்து
காட்டி யாம் காண என்பார்
மனவு விரி அல்குலார் தம்
மனத்தொடு மயங்கி ஒன்றும்
வினவுநர் இன்றி நின்று
வேண்டுவ கூறுவாரும்.  

பொருள் : சினவுநர் கடந்த செல்வன்! - பகைவரை வென்ற செல்வனே!; செம்மலர் அகலம் நாளைக் கனவினில் அருளி வந்து யாம் காணக் காட்டி என்பார் - நின் செம்மலர் அணிந்த மார்பினை நாளைக் கனவிலே அருளுடன் வந்து யாம் காணக் காட்டுக என்பார் (சிலர்); மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும் வினவுநர் இன்றி - மேகலையொளி பரவிய அல்குலாராகிய சில மகளிர் தம் உளத்திலே மயங்கியவராய் ஒன்றையும் வினவுவார் இல்லாமலே; நின்று வேண்டுவ கூறுவார் - நின்ற இடத்திலே தாம் சீவகனிடம் விரும்பியவற்றைக் கூறுவார்கள்.

விளக்கம் : உம்: எண்ணும்மை. காட்டி: இகர வீற்று வியங்கோள். இன்று நேரிற் கண்டதுகொண்டு இப் பகற்பொழுதில் ஒருவாறு ஆற்றியிருப்பேம் இரவுப் பொழுதினில் ஆற்றகில்லேம் என்பார் கனவினில் அருளிவந்து காட்டுக என்றார் என்பது கருத்து. வேண்டுவ - தாம் விரும்பியவற்றை.

467. விண் அகத்து உளர் கொல் மற்று இவ்
வென்றி வேல் குருசில் ஒப்பார்
மண் அகத்து இவர்கள் ஒவ்வார்
மழ களிறு அனைய தோன்றல்
பண் அகத்து உறையும் சொல்லார்
நல் நலம் பருக வேண்டி
அண்ணலைத் தவத்தில் தந்தார்
யார் கொலோ அளியர் என்பார்.  

பொருள் : மண்அகத்து இவர்கள் மழகளிறு அனைய தோன்றல் ஒவ்வார் - நிலவுலகத்துள்ள இவர்கள் இளங்களிறு போன்ற இத் தோன்றலுக்கு ஒப்பாகார்; மற்று இவ்வென்றி வேல் குருசில் ஒப்பார் விண் அகத்து உளர்கொல்? - இனி இவ்வெற்றி வேலேந்திய குருசிலை ஒப்பார் வானுலகத்தே உள்ளனரோ? அறியேம்; பண் அகத்து உறையும் சொல்லார் நல்நலம் பருகவேண்டி - பண்ணில் அமைந்த இனிய மொழி மங்கையர் நல்ல அழகை நுகர விரும்பி; அண்ணலைத் தவத்தின் தந்தார் யார்கொலோ? அளியர் என்பார் - இப் பெருந்தகையைத் தவத்தினாலே பெற்றவர் யாவரோ? அவர் அளிக்கத் தக்கார் என்பார் (சிலர்).

விளக்கம் : உலகிலுள்ள இளைஞர் தம் மனத்திற்கு அணியராதலால் இவர் என்று சுட்டினார். யார் கொலோ என்றது மக்களோ தேவரோ என்றையுற்றவாறு.

468. வட்டு உடைப் பொலிந்த தானை
வள்ளலைக் கண்ட போழ்தே
பட்டு உடை சூழ்ந்த காசு
பஞ்சி மெல் அடியைச் சூழ
அட்ட அரக்கு அனைய செவ்வாய்
அணி நலம் கருகிக் காமக்
கட்டு அழல் எறிப்ப நின்றார்
கை வளை கழல நின்றார்.  

பொருள் : வட்டுஉடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே - வட்டுடையோடு அழகுற்றுக் காணப்படும். உடையணிந்த வள்ளலாகிய சீவகனைக் கண்டபொழுதே; அட்ட அரக்கு அனைய செவ்வாய் அணிநலம் கருகி; காய்ச்சிய செவ்வரக்கனைய சிவந்த வாயின் அழகிய நலம் கருகி; பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியைச் சூழ - பட்டாடையிலே சூழ அணிந்த மேகலை பஞ்சி அனைய மெல்லிய அடியைச் சூழவும்; கைவளை கழல நின்றார் - கைவளைகள் கழலவும் (மெய்யிளைத்து) நின்றனர்.

விளக்கம் : வட்டுடை : முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடை. அட்ட அரக்கு: அகரம் தொக்கது.

469. வார் செலச் செல்ல விம்மும்
வனமுலை மகளிர் நோக்கி
ஏர் செலச் செல்ல ஏத்தித்
தொழுது தோள் தூக்க இப்பால்
பார் செலச் செல்லச் சிந்திப்
பைந்தொடி சொரிந்த நம்பன்
தேர் செலச் செல்லும் வீதி
பீர் செலச் செல்லும் அன்றே.  

பொருள் : வார்செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி - கச்சு மேலே போகப்போக விம்முகின்ற அழகிய முலைகளையுடைய பெண்கள் சீவகனை நோக்கி; ஏர் செலச் செல்ல ஏத்தித் தொழுது இப்பால் தோள் தூக்க -(தங்கள்) அழகு மெலிய மெலியக் கும்பிட்டு அவன் சென்ற பிறகு தோள்களைத் தொங்கவிட; செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி பார்சொரிந்த - சிறிது சிறிதாக நழுவிப் பசிய தொடிகள் நிலத்திலே வீழ்ந்தன; நம்பன்தேர் செலச் செல்லும் வீதி பீர்செலச் செல்லும் -(இங்ஙனம்) நம்பனுடைய தேர் சென்றுகொண்டிருக்கும் தெருக்கள் தோறும் மகளிர்க்கு மெய்யிலே பசப்புச் பரவிச் பரவிச் செல்லும்.

விளக்கம் : செல்லும் என்பது நிகழ்காலம் உணர்த்தியது. தொடி மகளிர் தோளில் அணிவது; பலவாதலிற் சொரிந்த என்றார். நீப்ப நீங்காது வரின்வரை யமைந்து, தோட்பழி மறைக்கு முதவிப் போக்கில் பொலந்தொடி (நற்.136) என்பர். முன் வளைகழல நின்றார்க்கு வருத்த மிகுதியால், தொடியும் கழன்றன. தோள் - தூக்க - தோளைத் தூங்கவிட. பீர் - பசப்பு: ஆகுபெயர்.

470. வாள் முகத்து அலர்ந்த போலும்
மழை மலர்த் தடங்கண் கோட்டித்
தோள் முதல் பசலை தீரத்
தோன்றலைப் பருகுவார் போல்
நாள் முதல் பாசம் தட்ப
நடுங்கினார் நிற்ப நில்லான்
கோள் முகப் புலியோடு ஒப்பான்
கொழுநிதிப் புரிசை புக்கான்.  

பொருள் : வாள்முகத்து அலர்ந்த போலும் மழை மலர்த் தடம்கண் கோட்டி - ஒளியுற்ற முகத்திலே மலர்ந்த மலர் போன்ற குளிர்ந்த பெரிய கண்களை வளைத்து; தோள் முதல் பசலை தீர - தோளிலே அமைந்த பசப்பு நீங்குமாறு; தோன்றலைப் பருகுவார்போல்- சீவகனைப் பருகுகின்றவர்கள் போல (நோக்கி); நாண் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப - நாணாகிய முதல் தளை தடுக்க நடுங்கி நிற்கும்போது; நில்லான் - தான் நில்லாதவனாய்; கோள்முகப் புலியோடு ஒப்பான் - கொல்லும் முகத்தையுடைய புலி போன்ற சீவகன்; கொழுநிதிப் புரிசை புக்கான் - வளமிகு செல்வமுடைய தன் மனையக மதிலுக்குள்ளே புகுந்தான்.

விளக்கம் : கோட்டுதல் - வளைத்தல். தோன்றல் - சீவகன். மகளிர்க்குரிய நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் நான்கனுள் முன்னிற்பதாகலின் நாண்முதற் பாசம். புரிசை : தன் மனைமதில்.

471. பொன் நுகம் புரவி பூட்டி
விட்டு உடன் பந்தி புக்க
மன்னுக வென்றி என்று
மணிவள்ளம் நிறைய ஆக்கி
இன்மதுப் பலியும் பூவும்
சாந்தமும் விளக்கும் ஏந்தி
மின் உகு செம் பொன் கொட்டில்
விளங்கு தேர் புக்கது அன்றே.  

பொருள் : புரவி பொன் நுகம் விட்டு உடன் பந்தி புக்க - குதிரைகள் பொன் நுகத்திலிருந்து பூட்டு நீங்கி உடனே தம் பந்தியிலே புகுந்தன; மணி வள்ளம் நிறைய இன்மது வாக்கி - மாணிக்கக் கிண்ணம் நிறைய இனிய மதுவை வார்த்து; பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் - அம் மதுவாகிய பலி முதலியவற்றை; வென்றி மன்னுக என்று ஏந்தி - வென்றி நிலை பெறுக என்று ஏந்த; விளங்குதேர் மின் உகு செம்பொன் கொட்டில் புக்கது - ஒளிவிடும் தேர் விளக்கமான செம்பொன் கொட்டிலே புகுந்தது.

விளக்கம் : விளக்குமேந்தி என்புழி செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.

472. இட்ட உத்தரியம் மெல்லென்று
இடை சுவல் வருத்த ஒல்கி
அட்ட மங்கலமும் ஏந்தி
ஆயிரத்து எண்மர் ஈண்டிப்
பட்டமும் குழையும் மின்னப்
பல்கலன் ஒலிப்பச் சூழ்ந்து
மட்டு அவிழ் கோதை மாதர்
மைந்தனைக் கொண்டு புக்கார்.  

பொருள் : மட்டுஅவிழ் கோதை மாதர் ஆயிரத்தெண்மர் ஈண்டி - தேன் விரியும் மாலையணிந்த மங்கையர் ஆயிரத்தெண்மர் கூடி; அட்ட மங்கலமும் ஏந்தி - எட்டு மங்கலப் பொருளையும் ஏந்தி; இட்ட உத்தரியம் மெல்என்ற இடைசுவல் வருத்த ஒல்கி - அணிந்த மேலாடை மெல் என்ற இடையையும் பிடரையும் அலைக்கச் சென்று; பட்டமும் குழையும் மின்னப் பல்கலன் ஒலிப்ப - பட்டமும் குழையும் ஒளிரப் பல்வகை அணிகளும் ஒலி செய; மைந்தனைக் கொண்டு சூழ்ந்து புக்கார் - சீவகனை எதிர் கொண்டு சூழ்ந்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

விளக்கம் : சாமரை தீபம் தமனியப் பொற்குடம்
காமர் கயலின் இணைமுதலாத் - தேமருவு
கண்ணாடி தோட்டி கதலிகை வெண்முரசம்
எண்ணிய மங்கலங்கள் எட்டு.

(தமனியப் பொற்குடம் - பொன்னாலாகிய அழகிய குடம். காமர் - அழகிய. கயலின் இணை - இரட்டைக் கயல்மீன் தோட்டி - அங்குசம். கதலிகை - கொடி.)

473. தாய் உயர் மிக்க தந்தை
வந்து எதிர் கொண்டு புக்குக்
காய் கதிர் மணி செய் வெள் வேல்
காளையைக் காவல் ஓம்பி
ஆய் கதிர் உமிழும் பைம் பூண்
ஆயிரச் செங் கணான்தன்
சேய் உயர் உலகம் எய்தி
அன்னது ஓர் செல்வம் உற்றார்.  

பொருள் : தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர்கொண்டு புக்கு - தாயும் உயர்வு மிகுந்த தந்தையும் வந்து எதிர்கொண்டு அழைத்துச் சென்று; காய் கதிர்மணி செய்வெள்வேல் காளையைக் காவல் ஓம்பி - ஒளிவீசும் மணிகள் அணிந்த வேலேந்திய சீவகனை ஆலத்தி முதலியவற்றாற் கண் எச்சில் போக்கி; ஆய்கதிர் உமிழும் பைம்பூண் ஆயிரச் செங்கணான் தன்சேய் உயர் உலகம் - ஆய்ந்த ஒளி வீசும் புத்தணி புனைந்த ஆயிரஞ் சிவந்த கண்ணுடைய இந்திரனது மிகவுயர்ந்த வானுலகை; எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார் - அடைந்தாற் போன்ற ஒரு செல்வத்தைத் தாம் அடைந்தவரானார்.

விளக்கம் : உயர்மிக்க தந்தை; என்பதற்கு மகனுயர்ச்சி மிகுதற்குக் காரணமான தந்தை: சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே புறநா. 312 என்றார் பிறரும் - என்று பொருளும் சான்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். காளையை எதிர்கொண்டு எனக் கூட்டுக.

நந்தகோன் தன் வரலாறு கூறித் தன் மகள் கோவிந்தையை மணக்க சீவகனை வேண்டல்

474. தகை மதி எழிலை வாட்டும்
தாமரைப் பூவின் அங்கண்
புகை நுதி அழல வாள் கண்
பொன் அனாள் புல்ல நீண்ட
வகை மலி வரை செய் மார்பின்
வள்ளலைக் கண்டு வண் தார்த்
தொகை மலி தொறுவை ஆளும்
தோன்றல் மற்று இன்ன கூறும்.  

பொருள் : தகைமதி எழிலை வாட்டும் தாமரைப் பூவின் அங்கண் - பெருமை மிக்க திங்களின் எழுச்சியை வருத்தும் பொற்றாமரைப் பூவில் இருக்கும்; புகை நுதி அழல வாள் கண் பொன்னனாள் புல்ல - புகையும் நுனி அனல் வீசும் வாளனைய கண்களையுடைய திருமகள் தழுவுமாறு; நீண்ட வகைமலிவரை செய்மார்பின் வள்ளலைக் கண்டு - அகன்ற அழகின் வகை நிறைந்த மலையனைய மார்பினையுடைய சீவகனைக் கண்டு; வண்தார்த்தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் இன்ன கூறும் - வளவிய மாலை அணிந்த, தொகை நிறைந்த ஆனிரையை ஆளும் நந்தகோன் இவற்றைக் கூறினான்.

475. கேட்டு இது மறக்க நம்பி
கேள் முதல் கேடு சூழ்ந்த
நாட்டு இறை விசையை என்னும்
நாறு பூம் கொம்பு அனாளை
வேட்டு இறைப் பாரம் எல்லாம்
கட்டியங் காரன் தன்னைப்
பூட்டி மற்று அவன் தனாலே
பொறி முதல் அடர்க்கப் பட்டான்.  

பொருள் : நம்பி இது கேட்டு மறக்க - நம்பியே! இதனைக் கேட்டு மறப்பாயாக; கேள் முதல் கேடு சூழ்ந்த நாட்டு இறை-நட்பு முதலாக நாட்டிற்குக் கெடுதியை எண்ணிய சச்சந்தன்; விசயை என்னும் நாறு பூங்கொம்பனாளை வேட்டு - விசயை என்னும் மணமலர்க் கொம்பு போல்வாளை மணந்து; இறைப் பாரம் எல்லாம் கட்டியங்காரன் தன்னைப் பூட்டி - அரசு உரிமை முழுதையும் கட்டியங்காரனுக்குச் சேர்த்து; அவன் தன்னாலே பொறிமுதல் அடர்க்கப் பட்டான் - அவனாலே தன் உயிர் கொள்ளப்பட்டான்.

விளக்கம் : பொறிமுதல் - இருவினையும் செய்தற்குக் காரணமான உயிர். தொழின் முதனிலையே (தொல்.வேற்றுமை மயங்கி. 29) என்றாற் போல. நாட்டையும் அமைச்சர் அறிவுரையையும் நோக்காததனால், கேள்முதற் கேடுசூழ்ந்த நாட்டிறை என்றார். கேள் முதல் என்பதற்கு முதலில் இதனைக் கேள் என்று பொருள் உரைப்பர் நச்சினார்க்கினியர்.

476. கோல் இழுக்கு உற்ற ஞான்றே
கொடு முடி வரை ஒன்று ஏறிக்
கால் இழுக்கு உற்று வீழ்ந்தே
கருந் தலை களையல் உற்றேன்
மால் வழி உளது அன்று ஆயின்
வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம் வித்து அனையது எண்ணி
அழிவினுள் அகன்று நின்றேன்.  

பொருள் : கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடுமுடிவரை ஒன்று ஏறி - அரசன் இறந்த அன்றே நீண்ட முடியை யுடைய மலை ஒன்றில் ஏறி; கால் இழுக்குற்று வீழ்ந்தே கருந்தலை களையல் உற்றேன் - கால்தவறி வீழ்ந்தவன்போல் வீழ்ந்து தலையுடைந்து இறக்க முயன்றேன்; மால் வழி உளதன்றாயின் வாழ்வினை முடிப்பல் என்றே - அரசன் கால்முளை இல்லை யென்றறிந்த பிறகே வாழ்வை முடிப்பேன் என்றே; ஆலம் வித்து அனையது எண்ணி - ஆலம் விதை போன்ற பயனுடைய நினைவு கொண்டு; அழிவினுள் அகன்று நின்றேன் - இறப்பினை நீங்கி நின்றேன்.

விளக்கம் : (நச்சினார்க்கினியர், அரசன்வழி ஆலம்வித்துப் போலத்தெறித்துப்போய் மறைந்தது பின் தோன்றின தில்லையாயின் உயிரைப் போக்குவல் என்றே எண்ணி, வருத்தத்தே மிக்கு நின்றேன் என்று மொழி மாற்றிப் பொருள் கூறுவர்.) கால் இழுக்குற்று வீழ்ந்து என்றது, கட்டியங்காரன், இவன் அரசனோடு இறந்தான் என்று நட்புரிமையறிந்து தன் சுற்றத்தை யழிப்பான் என்று கருதி. அரசிக்கு மகவுண்மை யறிதலின் இங்ஙனங் கூறினான். இதனையே கேட்டு மறக்க என்றான். நன்றல்லது அன்றே மறப்பது நன்றாயினும் நினக்கிதனைக் கூறுதல் நன்றென்று கூறுகின்றேன் என்பான் கேட்டிது மறக்க என்றான்.

477. குலத் தொடு முடிந்த கோன்தன்
குடி வழி வாரா நின்றேன்
நலத் தகு தொறுவின் உள்ளேன்
நாமம் கோவிந்தன் என்பேன்
இலக்கணம் அமைந்த கோதா
வரி என இசையில் போந்த
நலத்தகு மனைவி பெற்ற
நங்கை கோவிந்தை என்பாள்.  

பொருள் : குலத்தொடு முடிந்த கோன்தன் குடிவழி வாராநின்றேன் - குலத்தோடு மடிந்த அரசனுடைய குடிகளின் வழியிலே வருவேன் யான்; நலம்தகு தொறுவின் உள்ளேன் - நன்மையுற்ற ஆனிரை யுடையேன்; நாமம் கோவிந்தன் என்பேன் - கோவிந்தன் என்று பெயர் கூறப்படுவேன்; இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையின் போந்த - மகளிரிலக்கணம் பொருந்திய கோதாவரி என்று புகழப்பெற்ற; நலம்தகும் மனைவி பெற்ற மங்கை கோவிந்தை என்பாள் - நன்மையுடையாள் என் மனைவி யீன்ற மங்கை கோவிந்தை எனப்படுவாள்.

விளக்கம் : குலம் தோன்றுதல் அருமை பற்றிப் பின்னும், முடிந்த என்றான். தன்குல மெல்லாம் இப்போது தானே என்பது தோன்ற, வாராநின்றேன் என்றான். இலக்கணம் - குலமகளிர்க்குரிய இலக்கணம். கோதாவரி என்பது நந்தகோன் மனைவியின் பெயர். தாயைப்போல பிள்ளை என்னும் பழமொழி பற்றிக் கோவிந்தையின் சிறப்புக் கூறுவான் தாய்மேலேற்றிக் கூறினன் என்க.

478. வம்பு உடை முலையினாள் என்
மட மகள் மதர்வை நோக்கம்
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து
அழுத்தி இட்டு அனையது ஒப்பக்
கொம்படு நுசுப்பினாளைக்
குறை இரந்து உழந்து நின்ற
நம்படை தம்முள் எல்லாம்
நகை முகம் அழிந்து நின்றேன்.  

பொருள் : வம்பு உடை முலையினாள் என் மடமகள் மதர்வை போக்கம் - கச்சிறுக்கிய முலையுடையாளாகிய என் மடமகளின் மயக்கத்தை ஊட்டும் நோக்கம்; அம்பு அடி யிருத்தி நெஞ்சத்து அழுத்தியிட்ட அனையது ஒப்ப - அம்பினைத் தோளடியிலே செல்ல ஊன்றி நெஞ்சத்தில் அழுத்தியிட்டாற் போன்றதாலே; கொம்பு அடு நுசுப்பினாளை - மலர்க் கொம்பை வென்ற இடையினாளை; குறை இரந்து உழன்று நின்ற - பெறவேண்டி வருந்தி நின்ற; நம் படை தம்முள் எல்லாம் நகைமுகம் அழிந்து நின்றேன் - நம் ஆயர்குழுவி லெல்லாம் முகச் செவ்வி காட்டாது மறுத்து நின்றேன்.

விளக்கம் : தான் மகட்கொடை விரும்புதலின் நம்படையென்றான். சீவகன் விரும்பிக் கொள்வதற்கு மகளை இங்ஙனம் சிறப்பித்துக் கூறினான். நம்படை என்றது ஆயர்களை. நகைமுகம் என்றது உடம்பாடறிவிக்கும் முகத்தை. எனவே முகங்கொடாதிருந்தேன் என்பதாயிற்று.

479. பாடகம் சுமந்த செம் பொன் சீறடிப் பரவை அல்குல்
சூடகம் அணிந்த முன் கைச் சுடர் மணிப் பூணினாளை
ஆடகச் செம் பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான்.  

பொருள் : ஐய! - ஐயனே! பாடகம் சுமந்த செம்பொன் சீறடி - பாடகம் அணிந்த செம்பொன் அனைய சிற்றடியையும்; பரவை அல்குல் - பரவிய அல்குலையும்; சூடகம் அணிந்த முன் கை - வளையல் அணிந்த முன் கையினையும்; சுடர்மணிப் பூணினாளை - ஒளிவிடும் மணியணியுடைய கோவிந்தையை; ஆடகம் செம்பொன் பாவை ஏழுடன் தருவல் - ஆடகப் பொன்னாலாய பதுமைகள் ஏழுடன் தருவேன்; வாடல் இல் வதுவை கூடி மணமகன் ஆக என்றான் - குறைவற்ற திருமணம் புரிந்துகொண்டு மணமகன் ஆவாயாக என்று வேண்டினான்.

விளக்கம் : இது கேட்பினும் மறக்கத் தகாத மொழி. கேள் முதல் என்பதற்கு முதலிற் கேள் என்று கேட்டிது மறக்க (675) என்னுஞ் செய்யுளுரையில் நச்சினார்க்கினியர் முன்னர்க் கூறப்பட்டதற்குத் தொடர்பு காட்டுகிறார் இங்கே.

480. வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள்
உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள்
வண்ண வனமுலை மாதர் மட நோக்கி
கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய்.  

பொருள் : வண்ணம் வனமுலை மாதர் மடநோக்கி - நிறமும் அழகும் உடைய முலையினையுடைய காதலை யூட்டும் மட நோக்கினாள்; வெண்ணெய் போன்று ஊறு இனியள் - வெண்ணெயைப் போலக் குழைந்து தொடுதற்கு இனியவள்; மேம்பால் போல் தீஞ்சொல்லள் - விரும்பும் பால் போல இனிய மொழியாள்; உண்ண உருக்கிய ஆன் நெய்போல் மேனியள் - வற்ற உருக்கிய பசுவின் நெய்போன்ற மேனியாள்; கண்ணும் கருவிளம்போது இரண்டே கண்டாய் - கண்களும் இரண்டு கருவிளமலர்களே யென அறிவாய்.

விளக்கம் : மேம்பால் : மேவும் பால்: மேவும் என்பதன் ஈற்றயல் நின்ற உகரம் தான் நின்ற மெய்யொடுங் கெட்டது. உண்ண - வற்ற. கண்ணும் : உம் : உயர்வு சிறப்பும்மை. இடையர்க்குற்ற பொருள்களே ஈண்டுவமையாயின நயங்காண்க.

481. சேதா நறு நெய்யும் தீம்பால் சுமைத் தயிரும்
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய்
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான்.  

பொருள் : பைந்தாரோய்! - புதிய மாலையுடையாய்; சேதா நறு நெய்யும் தீம் பால் சுமைத் தயிரும் - செம்மைநிறப் பசுவின் நன்மண முறு நெய்யும் இனியபாலும் ஆடைத் தயிரும்; பாதாலம் எல்லாம் நிறைத்திடுவல் - பாதாலவுலகினும் நிறையச் செய்வேன்; ஆவது யாது எல்லாம் அறிந்தருளி - ஆகக் கடவது யாதோ அதனை முற்றும் ஆராய்ந்தருளி; உன் அடிச்சியைப் போது ஆர்புனை கோதை சூட்டு என்றான் - உன் அடித்தொண்டுக்குரிய கோவிந்தையை மலராற் புனைந்த மலர்மாலையால் அணிவாயாக என்றான்.

விளக்கம் : செம்மை+ஆ=சேதா. யாது ஆவது? - யாது கெடுதியாம்? என்றும் கூறலாம். சேதா - சிவப்புப் பசு. பசுக்களிற் சிவப்புப் பசு சிறந்ததென்பது பற்றிச் சேதா என்றான். சுமைத் தயிர் - ஆடையையுடைய தயிர். மிகுதியாக நிறைப்பேன் என்பான் பாதாலமெல்லாம் நிறைத்திடுவல் என்றான்.

482. குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே.  

பொருள் : நம்பி! - நம்பியே! கொழும் கயல்கண் வள்ளி நலம் நறுந்தார் முருகன் நுகர்ந்தான் அன்றே - கொழுவிய கயல் போன்ற கண்களையுடைய வள்ளியின் நலத்தை நறுமணமாலை அணிந்த முருகன் துய்த்தான் அன்றே? நிலமகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை - நிலமகளின் கணவனான திருமாலும் மிகுதியான ஆனிரையை யுடைய நப்பின்னையின்; இலவு அலர்வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே - இலவ மலரனைய வாயிலுள்ள இனிய அமிர்தத்தை நுகர்ந்தான் அல்லனோ!; (ஆதலால்); குலம் நினையல் - நம் இருவரின் குலவேற்றுமையை நினையாதே (என்றான்)

விளக்கம் : பின்னை: பெயர்; இவள் இடைக்குலப்பெண். ந: சிறப்புப் பெயர் உணர்த்தும் இடைச்சொல். நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்பன காண்க. நம்பின்னை என்பது விகாரப்பட்டது எனினும் ஆம். முதலில் மணமகனாக என்றான். சீவகன் முகத்தே செவ்வி கண்டிலது எனவே, செல்வம் நிறைத்திடுவல் என்றான். பின்னுஞ் செவ்வி காணாமையின் குலம் நினைந்தான் போலும் என்று கருதி யிறுதியிலே குலவேற்றுமை கருதற்க என்றான். நீ அரசர்குலத் தோன்றல் என்மகள் அக்குலத்திற் றாழ்ந்த ஆயர்குலத்துப் பிறந்தாளென்று கருதற்க என்பான் குலம் நினையல் நம்பி என்றான். அங்ஙனம் கருதவேண்டாமைக்குப் பின்னர் ஏதுக் கூறுகின்றான். நறுந்தார் முருகன் என்றது இறைவன் மகனாகிய முருகனும் என்பதுபட நின்றது. கண்ணனின் சிறப்போதுவான் நிலமகட்குப் கேள்வனும் என்று விதந்தான். எங்குலமகள் என்பான் நிரை நப்பின்னை என்றான். நச்சினார்க்கினியர் 480 முதல் 482 வரை உள்ள செய்யுட்களை ஒரு தொடராக்கிக் கூறும் முடிபு: பைந்தாரோய், நம்பி, முலையினையும் காதலினையுமுடைய மடநோக்கி வெண்ணெய்போற் குழைந்து இனியள்: சொல்லள்; மேனியள்; அவையன்றி அவள் கண்களும் பூவிரண்டேகாண்; அவளை வரைந்தால் யாது ஆவது? யாமறிய முருகன் வள்ளிநலம் நுகர்ந்தானன்றே, திருமால் பின்னையைப் புணர்ந்தானன்றே; ஆதலால் குலத்தின் தாழ்வு கருதாது ஒழிக. இனி, யான் கூறியன வெல்லாம் திருவுள்ளம் பற்றி நின் அடிச்சியைக் கோதை சூட்டுவாயாக; சூட்டுமிடத்திற் கலியாணஞ் செய்தற்குச் சிறியேன் அல்லேன்; நெய்யும் பாலும் தயிரும் பாதாளமெல்லாம் நிறைப்பேன் என்றான் என்க.

பதுமுகனுக்கு மணம்புரிவிக்க, சீவகன் இசைந்து கோவிந்தையை ஏற்றல்

483. கன்னியர் குலத்தின் மிக்கார்
கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான்
முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வா
தவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு
என மனத்து எண்ணினானே.  

பொருள் : குலத்தின் மிக்கார் கன்னியர் கதிர்முலைக் கன்னி மார்பம் - தம் குலத்திற் சிறந்தவராகிய கன்னியரின் கதிர்த்த முலைகளையுடைய அழியாத மார்பினை; முன்னினர் முயங்கின் அல்லான் - ஆராய்ந்து தழுவின் அல்லாமல்; முறிமிடை படலை மாலைப் பொன்னிழை மகளிர் ஒவ்வாதவரை - தளிரும் மலருமாகத் தொடுத்த வகை மாலையினையும் பொன்னணியையும் அணிந்த மகளிரில் தம் குலத்திற்கு ஒவ்வாதவரை; முன் புணர்தல் செல்லார் - முதலிலே கூடுதலைக் கொள்ளார்; மாந்தர்க்கு முறைமை இன்னது என மனத்து எண்ணினான்-மக்களுக்குரிய ஒழுங்கு இத்தகையது என்று உள்ளத்திலே (சீவகன்) எண்ணினான்.

விளக்கம் : மக்கட்கு என்றதனால் வானவர்க்குக் குலவேற்றுமையின்றென்று கருதினான் ஆயிற்று. மனத்து எண்ணினான் என்றதனால் தன் தோழன் பதுமுகனுக்குக் கொடுக்க எண்ணினான் என்றுங் கொள்க. இச் செய்யுளால் தேவர் காலத்தே தான் தமிழ்நாட்டில் சாதி வேற்றுமை பாராட்டும் வழக்கம் வேரூன்றித் தழைத்ததுபோலும் என்று ஊகிக்க இடன் உண்டு.

484. கோட்டு இளங் களிறு போல்வான்
நந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டுஇள முலையினாள் நின்
மட மகள் எனக்கு மாமான்
சூட்டொடு ஒடு கண்ணி அன்றே
என் செய்வான் இவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ என்று
நெஞ்சு அகம் குளிர்ப்பச் சொன்னான்.  

பொருள் : கோடு இளங்களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி - கோட்டினையுடைய இளங்களிறு போன்ற சீவகன் நந்தகோனுடைய முகத்தைப் பார்த்து; மாமான்! - மாமா! மோடு இளமுலையினாள் நின் மடமகள் - பெரிய இளமைச் செவ்வியுடைய நின் மகள்; எனக்குச் சூட்டொடு கண்ணி அன்றே? - எனக்கு நெற்றிச் சூட்டுங் கண்ணியும் ஆவாள்; இவைகள் சொல்லி என் செய்வான்? -(ஆகையால்) இவைகளைச் சொல்லி என்ன செய்வது? நீட்டித்தல் குணமோ? -இவ்வாறு வீண்காலம் போக்குதல் பண்புடைமையோ? என்று நெஞ்சகம் குளிர்ப்பச் சொன்னான் - என்று உள்ளம்குளிர இன்மொழிகளையுங் கூட்டிக் கூறினான்.

விளக்கம் : நெஞ்சகங் குளிர்ப்பக் கூறிய வற்றிற் பதுமுகனுக்குக் கொடுக்குமாறு இசைவித்ததையுங் கொள்க. சூட்டொடு கண்ணியன்றே என்றது இடுந்தன்மை யன்றிச் சூட்டுந் தன்மையோடு கூடிய கண்ணியல்லவோ என்றும், நெற்றிச் சூட்டும் கண்ணியு மல்லவோ என்றும் இரண்டு பொருளுணர்த்தும். எனவே, மார்பிற்கு மாலையிடுக வென்றும், தலைமாலை சூட்டுகவென்றும் பெரும்பான்மையும் வழக்கு நடத்தலின், தலைமேல் வைக்கப்படுங் கண்ணியென்றான் என நந்தகோன் கருதினானாம். நெற்றிச் சூட்டு ஆடவர்க்காகாத தன்மையும், கண்ணி ஆடவர்க்கு ஆந்தன்மையும் போலத் தன் குலத்திற்கு ஆகாமையிற் சூட்டின் தன்மையும், பதுமுகன் (வணிகனாதலின்) அவன் குலத்திற்குச் சிறிது பொருந்துதலிற் கண்ணியின் தன்மையும் உடையனென்று சீவகன் கருதினானாம், கோபாலரினும் வாணிகஞ் செய்வாருளராதலின். இனி, மாமான் எனக்குச் சூட்டொடு கண்ணியன்றே என்றது: தனக்கு ஆகாமையிற் புலாலும், பதுமுகற்கு ஆதலிற் பூவுமாகக் கருதினான் என்றுமாம். (சூட்டு - இறைச்சி) இனி, ஆமான் என்று பிரித்து ஆமான் சூட்டு என்றுங் கொள்க. இனி, மா வட சொல்லாகக்கொண்டு ஆகாதென்றும் உரைப்பர்.

485. தேன் சொரி முல்லைக் கண்ணிச்
செந் துவர் ஆடை ஆயர்
கோன் பெரிது உவந்து போகிக்
குடை தயிர் குழுமப் புக்கு
மான் கறி கற்ற கூழை
மௌவல் சூழ் மயிலைப் பந்தர்க்
கான் சொரி முல்லைத் தாரான்
கடிவினை முடிக என்றான்.  

பொருள் : தேன் சொரி முல்லைக்கண்ணிச் செந்துவர் ஆடை ஆயர்கோன் - தேன் வாரும் முல்லைக் கண்ணியை யுடைய சிவந்த துவரூட்டிய ஆடை அணிந்த இடையர் தலைவன்; கான்சொரி முல்லைத் தாரான் - மணங்கமழும் முல்லை மாலையான் ஆகிய நந்தகோன்; பெரிது உவந்து போகிக் குடைதயிர் குழுமப் புக்கு - சாலவும் மகிழ்ந்து சென்று கடையும் தயிர் முழங்கப் புகுந்து; மான் கறி கற்ற கூழை மௌவல் மயிலைச் சூழ்பந்தர் - மான் கறித்துப் பழகியதனாற் கடை குறைந்த செம்முல்லையும் இருவாட்சியும் சூழ்ந்த பந்தரிலே; கடிவினை முடிக என்றான் - மணவினை நடைபெறுக என்று கூறினான்.

விளக்கம் : தயிர் முழங்கப் புகுதல் நன்னிமித்தம். துவரூட்டிய ஆடை அணிதல் இடையர் இயல்பு: துவருண்ணாடைச் சாய்கோல் இடையன் (யா.வி.மேற்.) செந்துவாரடை ஆயர் (கலி.102-37) (இங்குக் கூறிய மணவினை திருமணத்திற்கு முன்பு நடைபெறும் சமாவர்த்தனம் என்னும் சடங்கு என்பர் நச்சினார்க்கினியர்.)

486. கனிவளர் கிளவி காமர்
சிறு நுதல் புருவம் காமன்
குனி வளர் சிலையைக் கொன்ற
குவளைக் கண் கயலைக் கொன்ற
இனி உளர் அல்லர் ஆயர்
எனச் சிலம்பு அரற்றத் தந்து
பனி வளர் கோதை மாதர்
பாவையைப் பரவி வைத்தார்.  

பொருள் : பனிவளர் கோதை மாதர் - குளிர்ச்சி வளரும் மாலையணிந்த மடவார்; கனிவளர் கிளவி - கனிபோன்ற இனிய மொழியாளின்; காமர் சிறு நுதல் புருவம் காமன் குனிவளர் சிலையைக் கொன்ற - அழகிய சிறிய நெற்றியும் புருவமும் காமனுடைய வளைதலில் வளர்ந்த வில்லைக் கொன்றன; குவளைக்கண் கயலைக் கொன்ற - குவளை மலர் போன்ற கண்கள் கயல்மீனைக் கொன்றன; இனி ஆயர் உளர் அல்லர் -(ஆகையால்) இனி ஆயர்கள் இவளைக் கண்டால் உயிருடன் இரார்; எனச் சிலம்பு அரற்ற - என்று சிலம்புகள் வாய்விட்டுப் புலம்ப; பாவையைத் தந்து பரவி வைத்தார் - பாவை போன்ற அவளை அழைத்து வந்து வாழ்த்தி (அப்பந்தரிலே) அமர்த்தினர்.

விளக்கம் : குனிவு என்பது குனி என விகாரப்பட்டது.

487. நாழியுள் இழுது நாகு ஆன்
கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழி தொறு ஆவும் தோழும்
போன்று உடன் மூக்க என்று
தாழ் இரும் குழலினாளை
நெய்தலைப் பெய்து வாழ்த்தி
மூழை நீர் சொரிந்து மொய் கொள்
ஆயத்தியர் ஆட்டினாரே.  

பொருள் : மொய்கொள் ஆய்த்தியர் - குழுமிய இடைச்சியர்; நாழியுள் இழுது நாகும் ஆன் கன்று தின்று ஒழித்த புல் தோய்த்து - நாழியில் உள்ள நெய்யிழுதை இளமையான பசுவின் கன்று தின்று கழித்த புல்லிலே தோய்த்து; தாழ் இருங் குழலினாளை - நீண்ட கரிய கூந்தலையுடைய கோவிந்தையை; ஊழி தோறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று - ஊழிகளெல்லாம் பசுவையும் தொழுவையும் போன்று ஒன்றுபட்டு நீயும் நின் கணவனும் ஒருங்கே மூப்புற்று வாழ்வீராக என்று; தலை நெய் பெய்து வாழ்த்தி - அவள் தலையிலே அந்த நெய்யை வார்த்து வாழ்த்தி; மூழை நீர் சொரிந்து ஆட்டினார் - அகப்பையாலே நீரைச் சொரிந்து ஆட்டினர்.

விளக்கம் : இழுது -நெய். புல் - ஈண்டு அறுகம்புல். மூக்க: வியங்கோள். மூழை - அகப்பை- தோழ்-தொழுவம். ஆவும் தோழும் என்றதனால் நீயும் நின்கணவனும் எனப் பொருளும் இரண்டு கொள்க.

488. நெய் விலைப் பசும் பொன் தோடும்
நிழல் மணிக் குழையும் நீவி
மை விரி குழலினாளை
மங்கலக் கடிப்புச் சேர்த்திப்
பெய்தனர் பிணையல் மாலை
ஓரிலைச் சாந்து பூசிச்
செய்தனர் சிறு புன் கோலம்
தொறுத்தியர் திகைத்து நின்றார்.  

பொருள் : மைவிரி குழலினாளை - கருமை விரிந்த கூந்தலாளை; நெய்விலைப் பசும்பொன் தோடும் நிழல் மணிக்குழையும் நீவி - நெய்விலையாற் கிடைத்த பொன் தோட்டையும், ஒளிவிடும் மணிக் குழையையும் நீக்கிவிட்டு; மங்கலக் கடிப்புச் சேர்த்தி - மங்கலத்துக்குரிய கடிப்பிணையை அணிந்து; பிணையல் மாலை பெய்தனர் - பிணையலாகிய மாலையையும் அணிந்து; ஓர் இலைச் சாந்து பூசி - ஓர் இலையிலே கொணர்ந்த சந்தனத்தையும் பூசி; சிறு புன் கோலம் செய்தனர் - சிற்றணியாகிய மணக்கோலத்தைச் செய்தனர்; தொறுத்தியர் திகைத்து நின்றார் - இடைச்சியர் அக்கோலங்கண்டு திகைப்புற்றனர்.

விளக்கம் : கடிப்பிணை : ஒருவகைக் காதணி. மங்கலக் கடிப்பு - மங்கலங்கருதி இடப்படும் ஓரணிகலன். பெய்தனர்: முற்றெச்சம். தொறுத்தியர் - ஆய்ச்சியர். இங்ஙனம் கோலஞ் செய்து முடித்த அவ்வாய்ச்சியரே அவளழகைக் கண்டு திகைத்து நின்றார் எனினுமாம். இங்ஙனமே சீதையை மணக்கோலஞ் செய்த மகளிர் அவள் அழகை மாந்தித் தகைதடுமாறி நின்றார். மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்ப தொன்றே யன்றோ என்பர் கம்பர்.

489. ஏறம் கோள் முழங்க ஆயர்
எடுத்துக் கொண்டு ஏகி மூதூர்ச்
சாறு எங்கும் அயரப் புக்கு
நந்தகோன் தன்கை ஏந்தி
வீறு உயர் கலசம் நல்நீர்
சொரிந்தனன் வீரன் ஏற்றான்
பாறு கொள் பருதி வைவேல்
பதுமுக குமாரற்கு என்றே.  

பொருள் : ஆயர் ஏறங்கோள் முழங்க எடுத்துக்கொண்டு - இடையர் ஏறுகோட்பறை முழங்க அவளை அழைத்துக் கொண்டு; மூதூர் எங்கும் சாறு அயர ஏகிப் புக்கு - பழம் பதி எங்கும் விழாவயரச் சென்று கந்துகன் மனையிலே புகுந்தபின்; வீறுஉயர் கலசம் நன்னீர் சொரிந்தனன் - அழகினால் மேம்பட்ட கலசத்தில் இருந்து தன் கையாலே நந்தகோன் நீரைச் சொரிய; வீரன் பாறுகொள் பருதி வைவேல் பதுமுக குமரற்கு என்று ஏற்றான் - (அதனைச்) சீவகன், பருந்துகள் சூழும் ஞாயிறு போன்ற கூரிய வேலேந்திய பதுமுகனுக்கு என்று கூறி ஏற்றான்.

விளக்கம் : வீறு - வேறொன்றுக்கும் இல்லாத அழகு. இச்செய்யுளில் மணஞ் செய்தமை கூறினார்.

பதுமுகன் இன்பம் நுகர்தல்

490. நலத் தகை அவட்கு நாகு
ஆன் ஆயிரம் திரட்டி நன்பொன்
இலக்கணப் பாவை ஏழும்
கொடுத்தனன் போல இப்பால்
அலைத்தது காமன் சேனை
அரு நுனை அம்பு மூழ்க
முலைக் குவட்டு இடைப் பட்டு ஆற்றான்
முத்து உக முயங்கினானே.  

பொருள் : நலத்தகையவட்கு நாகுஆன் ஆயிரத்திரட்டி - நலமுற்ற அழகினை யுடையாட்கு இளம்பசுக்கள் இரண்டாயிரமும்; நன்பொன் இலக்கணப் பாவை ஏழும் கொடுத்தனன் போக - நல்ல பொன்னால் ஆகிய தூய இலக்கணம் நிரம்பிய பாவைகள் ஏழும் நந்தகோன் கொடுத்துச் சென்றானாக; இப்பால் அருநுனை அம்பு மூழ்கக் காமன் சேனை அலைத்தது - இங்குப் பதுமுகனைக் கூரியமுனையை உடைய அம்புகள் தைக்கும்படியாகக் காமன் படை வருத்தியது; ஆற்றான் முலைக் குவட்டிடைப் பட்டு முத்து உக முயங்கினான் - அவன் அப்படைக்கு ஆற்றாமல் முலைக் கோடுகளின் இடையே வீழ்ந்து முத்துக்கள் சிந்துமாறு தழுவினான்.

விளக்கம் : காமன் சேனை என்பது கோவிந்தையையும், அருநுனை யம்பு என்பது அவளது கண்ணையும் உணர்த்தின. மன்மதனுக்குச் சேனை மங்கையர் ஆதலால் இங்ஙனம் கூறினர்.

491. கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன வாகி
வெள் வேல் மிளிர்ந்த நெடுங் கண் விரை நாறு கோதை
முள்வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்திக்
கொள்ளாத இன்பக் கடல் பட்டனன் கோதை வேலான்.  

பொருள் : கள்வாய் விரிந்த கழுநீர் பிணைந்த அன்ன ஆகி - (இன்ப மூட்டலின்) தேன் வாயிலே பரந்த கழுநீர் மலர்கள் பிணைந்தாற் போன்றன ஆகி; வெள்வேல் மிளிர்ந்த -(துன்பமூட்டலின்) வெள்ளிய வேல்போல் விளக்கமுற்றனவாகிய; நெடுங்கண் விரை நாறு கோதை - நீண்ட கண்களையுடைய மணங்கமழுங் கோதையாளின்; முள்வாய் எயிறு ஊறு அமுதம் முனியாது மாந்தி - கூரிய பற்களிற் சுரக்கும் அமுதத்தை வெறாமல் அருந்தி; கொள்ளாத இன்பக் கடல் கோதை வேலான் பட்டனன் - கரைபுரண்ட இன்பக் கடலிலே மாலை யணிந்த வேலான் அழுந்தினன்.

492. தீம் பால் கடலைத் திரை பொங்கக் கடைந்து தேவர்
தாம் பால் படுத்த அமிர்தோ? தட மாலை வேய்த் தோள்
ஆம் பால் குடவர் மகளோ? என்று அரிவை நைய
ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே.  

பொருள் : தீ பால் கடலைத் திரை பொங்கக் கடைந்து - இனிய பாற்கடலை அலை பொங்குமாறு கடைந்து; தேவர் தம்பால் படுத்த அமிர்தோ? - வானவர் தம்மிடம் கொண்ட அமிர்தமோ? தடமாலை வேய்த் தோள் ஆம்பால் குடவர் மகளோ? என்று - பெரிய மாலைகளை அணிந்த மூங்கிலனைய தோள்களை உடைய பயன்படும் பாலையுடைய இடையர் மகளோ? என்று மயங்கியவனாகி; அரிவை நைய - கோவிந்தை மெலியுமாறு; ஓம்பா ஒழுக்கத்து - தடை செய்ய முடியாத இன்ப ஒழுக்கத்திலே; உணர்வு ஒன்றிலன் ஆயினான் - தானும் அறிவு மயங்கியவனானான்.

விளக்கம் : தம்பால் என்பது தாம்பால் என விகாரப்பட்டது. ஆம்: ஆகும் - பயன்படுகிற. அம்பால் என்பது ஆம்பால் என விகாரப்பட்டது என்றும், ஆம்பால் எனவே கொண்டு பெரும்பாலும் என்று பொருள் கூறலாமென்றும் கருதுவர் நச்சினார்க்கினியர்.

இவ்விலம்பகம் வீரமகளைச் சேர்ந்தமை கூறிற்று.

கோவிந்தையார் இலம்பகம் முற்றியது.


© Om Namasivaya. All Rights Reserved.