சீவக சிந்தாமணி

10. மண்மகள் இலம்பகம்

கதைச் சுருக்கம்: ஏமாங்கதத்தினின்றும் புறப்பட்ட சீவகன் விதையநாட்டிற் சென்று தன் மாமனாகிய கோவிந்தனைக் கண்டு வணங்கினன். சீவகன் வருகையாற் கோவிந்தன் அளவிலா மகிழ்ச்சி யெய்தினன். பின்னர்ச் செய்யக்கடவன கருதித் தன் மகனாகிய சீதத்தனுக்குத் திருமுடி கவித்து அரசியலை அவன்பால் அளித்தனன். இங்ஙன மிருக்கும்பொழுது, கட்டியங்காரன் கோவிந்தனுக்கு விடுத்த வோலையை விரிசிகன் என்பான் கோவிந்தனுக்குப் படித்துக்காட்டினன். அதன்கண் கட்டியங்காரன் தன்னை இராசமாபுரத்திற்கு வந்து தன்னோடு கேண்மை கொள்ளும்படி எழுதியிருந்தனன். அதுகேட்ட கோவிந்தன் கட்டியங்காரனோடு போர் செய்தற்கு அவ்வோலையை வாயிலாகக் கொண்டனன். உடனே நால்வகைப் படையோடும் சீவகன் முதலியோரொடும் கோவிந்தன் விதையத்தினின்றும் புறப்பட்டு ஏமாங்கதம் புக்கனன். வழியில் நன்னிமித்தங்கள் தோன்றின. இராசமாபுரத்தின் பக்கத்தே வந்து தங்கினான். அப்பொழுது, கட்டியங்காரன் திறத்தில் தீய நிமித்தங்கள் தோன்றிண.

வஞ்சகத்தால் தன்னை வெல்லக்கருதிய கட்டியங்காரனைக் கோவிந்தனும் வஞ்சகமாகவே கொல்லக் கருதினன். தன்மகள் இலக்கணைக்குச் சுயம்வரம் அமைத்தான். அச் சுயய்வரத்தின்கண் திரிபன்றிப் பொறியொன்று வைத்து. அதனை எய்து வீழ்த்தியவனே இலக்கணைக்குக் கணவனாவன் என்று முரசறைவித்தனன். பலநாட்டு மன்னர் மக்களும் இலக்கணையை எய்த விரும்பிவந்து குழுமினர். திரிபன்றியை வீழ்த்த முயன்று தோற்றனர். சீவகன் யானையின்மேலேறி அச் சுயம்வர மண்டபமெய்தினன். வெளிப்பட்ட சீவகனைக் கண்ட கட்டியங்காரன் புலிகண்ட மானென அஞ்சினான். சீவகன் அத் திரிபன்றியை அம்பேவி வீழ்த்தனன். கோவிந்தன் அவ்வவையோர்க்குச் சீவகன் வரலாற்றை வெளிப்பட விளம்பினன். அப்பொழுது அகல்விசும்பில் ஓர் இயக்கன் தோன்றி, சீவகனாகிய அரிமான் கட்டியங்காரனாகிய யானையைக் கொன்றொழிக்கும் என்று இயம்பினான். அதுகேட்ட கட்டியங்காரன் சீற்றமுற்றவனாய்ச் சீவகனை நோக்கிச், சிறியோய்! நின்னை யான் அஞ்சுவேனல்லேன்! என்னாற்றலை நீ யறியாய்! நின் தந்தை யறிவன்! என்று வெகுண்டான். பின்னர்ச் சீவகன் முதலியோர்க்கும் கட்டியங்காரனுக்கும் பெரும் போர் நிகழ்ந்தது. கட்டியங்காரன் படைஞர் சீவகன் படைக்குத் தோற்றனர் மாண்டனர்: அஞ்சி இரியல் போயினர். சீவகன் கட்டியங்காரனையும் அவன் மக்களையும் அப்போர்க்களத்தே கொன்று நூழிலாட்டினன். இச் செய்தி கேட்டு விசயை மகிழ்ந்தனள்; உலகம் பாராட்டிப் புகழ்ந்தது.

2102. குடம்புரை செருத்தற் குவளைமேய் கயவாய்க்
குவிமுலைப் படர்மருப் பெருமை
நடந்தவா யெல்லா நறுமலர் மரையி
னாகிலைச் சொரிந்தவந் தீம்பா
றடஞ்சிறை யன்னங் குருகொடு நாரைப்
பார்ப்பின மோம்புதண் மருத
மடங்கல்போற் றிறலார் மாமணி கறங்க
வளவயற் புள்ளெனக் கழிந்தார்.

பொருள் : குடம்புரை செருத்தல் - குடம் போன்ற மடியையும்; குவளைமேய் கயவாய் - குவளை மலரை மேயும் பெரிய வாயையும்; குவிமுலை - குவிந்த முலையையும்; படர் மருப்பு - படர்ந்த கொம்புகளையும் உடைய; எருமை - எருமையானது, நடந்த வாய் எல்லாம் - சென்ற இடமெங்கும்; நறுமலர் மரையின் நாகு இலை சொரிந்த அம்தீ பால் - நல்ல மலரையுடைய தாமரையின் இளைய இலையிலே சொரிந்த அழகிய இனிய பால்; தடம் சிறை அன்னம் குரு கொடு நாரைப் பார்ப்பினம் ஓம்பு தண் மருதம் - பெரிய சிறகுகளையுடைய அன்னமும் குருகும் நாரையுமாகிய பார்ப்பின் திரளை வளர்க்கின்ற தண்ணிய மருத நிலத்தை; மாமணி கறங்க - குதிரைகளின் கழுத்திற் கட்டிய கிண்கிணி முதலியனவும் யானையின் பக்கமணிகளும் ஒலித்தலாலே; வளவயல் புள்எழ - வளமிகுங் கழனியில் அமர்ந்திருந்த பறவைகள் எழுந்தோட; மடங்கல் போல் திறலார் கழிந்தார் - சிங்கம் போன்ற வலியினார் கடந்தனர்.

விளக்கம் : அன்னம் முதலியவற்றின் பார்ப்புக்கள் பாலுண்டல் நிலப்பண்பு. புரை : உவமவுருபு. செருத்தல் - மடி. கயவாய் - பெரிய வாய். நடந்தவாய் - நடந்த இடம். மரை - தாமரை; முதற்குறை. நாகிலை - இளமையுடைய இலை. பால் : எழுவாய் ஓம்பும் - பாதுகாக்கும் மடங்கல் - சிங்கம். மாமணி. குதிரைக்குக் கட்டிய மணி. கழிதல் புள்ளெழுதற்குக் காரணம் என்க. குருகு - கொக்கு. பார்ப்புஇனம் - பறவைக் குஞ்சுகளின் கூட்டம் மடங்கல் - சிங்கம். தீம்பால் பார்ப்பினம் ஓம்பும் தண்மருதம் எனக் கூட்டுக. ( 1 )

2103. புரிவளை யலறிப் பூசலிட் டீன்ற
பொழிகதிர் நிலத்தில் முழக்கி
வரிவளை சூழும் வலம்புரி யினத்துட்
சலஞ்சல மேய்வன நோக்கி
யரிதுண ரன்னம் பெடையெனத் தழுவி
யன்மையி னலமர லெய்தித்
திரிதரு நோக்கந் தீதிலார் நோக்கி
நெய்தலுங் கைவலத் தொழிந்தார்.

பொருள் : புரிவளை அலறிப் பூசல் இட்டு ஈன்ற - முறுக்குடைய சங்குகள் சூல்முதிர்ச்சியால் நொந்து முழங்கிப் பெற்ற; பொழிகதிர் நித்திலம் உழக்கி - பெய்யும் ஒளியையுடைய முத்துக்களைக் கலக்கி; வரிவளை சூழும் வலம்புரி இனத்துள் - சங்குகள் சூழத்திரியும் வலம்புரியின் திரளிலே; சலஞ்சலம் மேய்வன நோக்கி - சலஞ்சலங்கள் மேய்வனவற்றைப் பார்த்து; அரிது உணர் அன்னம் பெடையெனத் தழுவி - அரியதை உணரவல்ல அன்னமானது தன் பெடையென்று தழுவி; அன்மையின் அலமரல் எய்தி - அல்லாமையின் மனக்குழப்பம் அடைந்து - திரிதரும் நோக்கம் தீது இலார் நோக்கி - மறித்துப் போகின்ற நோக்கத்தைத் தீமையிலாதார் தாம் பார்த்து; கைவலத்து நெய்தலும் ஒழிந்தார் - ஒழுக்கத்திறனுள்ள நெய்தலையுங் கடந்தனர்.

விளக்கம் : தீது - ஈண்டு வேட்கை என்பர் நச்சினார்க்கினியர். புரிவளை - முறுக்குடைய சங்கு, நித்திலம் - முத்து, வலம்புரிச் சங்கு ஆயிரஞ் சூழச் செல்வது சலஞ்சலம் என்னும் சிறந்த சங்கு என்பது தோன்ற வலம்புரி இனத்துட் சலஞ்சலம் என்றார். பாலையும் நீரையும் பிரித்துணரவல்ல என்பார் அரிதுணர் அன்னம் என்றார். அன்மையின் - அல்லாமையால். அலமரல் - சுழற்சி. தீதிலார் - சீவகன் முதலியோர். ( 2 )

2104. கோட்டிளங் கலையுங் கூடுமென் பிணையுங்
கொழுங்கதிர் மணிவிளக் கெறிப்பச்
சேட்டிளங் கொன்றைத் திருநிழற் றுஞ்சச்
செம்பொறி வண்டவற் றயலே
நாட்டிளம் படியார் நகைமுகம் பருகு
நல்லவர் போன்மலர் பருகு
மோட்டிள முல்லை மொய்ம்மலர்க் கான
முருகுவந் தெதிர்கொள நடந்தார்.

பொருள் : சேடு இளங் கொன்றைத் திருநிழல் - உயர்ந்த இளமை பொருந்திய கொன்றை மரத்தின் அழகிய நிழலிலே;
கொழுங்கதிர் மணிவிளக்கு எறிப்ப - கொழுவிய கதிரையுடைய மணிவிளக்கு ஒளிசெய; கோடு இளங்கலையும் கூடும் மென்பிணையும் துஞ்ச - கொம்பினையுடைய இளங்கலை மானும் அதனுடன் கூடிய மென்மையான பிணைமானும் துயில; அவற்று அயலே - அவற்றின் அருகில்; நாட்டு இளம்படியார் நகை முகம் பருகும் நல்லவர்போல் - நாட்டிலுள்ள இளமங்கையரின் நகைமுகத்தின் எழிலைப் பருகும் ஆடவரைப்போல; செம்பொறி வண்டு மலர் பருகும் மோட்டிள முல்லை மொய்ம்மலர்க்கானம் - செம்புள்ளிகளையுடைய வண்டுகள் மலர்களைப் பருகுவதற்குக் காரணமான மிகுதியான முல்லை மலர்களையுடைய கானத்தை; முருகுவந்து எதிர்கொள நடந்தார் - மணம் வந்து எதிர்கொள்ளக் கடந்தார்.

விளக்கம் : கலை - ஆண்மான். பிணை - பெண்மான். சேடு - பெருமை. திரு நிழல் - அழகிய நிழல். துஞ்சுதல் - துயிலுதல். இளம்படியார் - மகளிர். நல்லவர் என்றது, ஆடவரை. மோடு - மிகுதி; பெருமையுமாம். முருகு - மணம். இது முல்லை நிலத்தை வண்ணித்தது. ( 3 )

2105. குழவிவெண் டிங்கட் கோட்டின்மேற் பாயக்
குளிர்புனல் சடைவிரித் தேற்கு
மழலவிர் சூலத் தண்ணலே போல
வருவிநீர் மருப்பினி னெறியக்
கழைவளர் குன்றிற் களிறுநின் றாடுங்
கடிநறுஞ் சந்தனச் சார
லிழைவளர் முலையார் சாயல்போற் றோகை
யிறைகொள்பூங் குறிஞ்சியு மிறந்தார்.

பொருள் : குழவி வெண் திங்கள் கோட்டின்மேல் பாய - வெண்மையான பிறைத்திங்களின் கோட்டிலே பாயுமாறு; குளிர்புனல் சடைவிரித்து ஏற்கும் - குளிர்ந்த கங்கை நீரைச் சடையை விரித்துத் தாங்குகின்ற; அழல் அவிர் சூலத்து அண்ணலே போல - தழல்விளங்குஞ் சூலத்தை ஏந்திய சிவபெருமானைப் போல; அருவிநீர் மருப்பினின் ஏறிய - அருவி நீர் தன் கொம்பிலே வீழ; கழைவளர் குன்றில் களிறு நின்று ஆடும் - மூங்கில்  வளருங் குன்றிலே யானை நின்று நீராடுகின்ற; கடிநறுஞ் சந்தனச் சாரல் - மணமுடைய நல்ல சந்தன மரங்கள் நிறைந்த சாரலிலே; இழைவளர் முலையார் சாயல்போல் தோகை இறைகொள் - அணி வளரும் முலையாரின் மென்மையான தோற்றம் போல மயில்கள் தங்கிய; பூங்குறிஞ்சியும் இறந்தார் - அழகிய குறிஞ்சி நிலத்தையுங் கடந்தார்.

விளக்கம் : இஃது இல்பொருளுவமை. கங்கைத் தலைப்பாகிய இமவானிற் பதுமையென்னும் பொய்கையில், நீர் விழுகின்ற தாழ்வரையில் உருத்திரப் படிமம் இருத்தலின் சூலத்தண்ணல் என்றார். இது குறிஞ்சி நிலத்தை வண்ணித்தது. சூலத்தண்ணல் : சிவபெருமான். ( 4 )

2106. ஊன்றலைப் பொடித்தாங் கனையசெஞ் சூட்டி
னெளிமயிர் வாரண மொருங்கே
கான்றபூங் கடம்பின் கவட்டிடை வளைவாய்ப்
பருந்தொடு கவர்குரல் பயிற்று
மான்றவெம் பாலை யழன்மிதித் தன்ன
வருஞ்சுரஞ் சுடர்மறை பொழுதி
னூன்றினார் பாய்மா வொளிமதிக் கதிர்போற்
சந்தன மொருங்குமெய் புதைத்தே.

பொருள் : ஊன் தலைப்பொடித்த அனைய செஞ்சூட்டின் ஒளிமயிர் வாரணம் - ஊனைத் தலையிலே தோன்றிவிட்டாற் போன்ற சிவந்த உச்சிக் கொண்டையையுடைய பளபளப்பான மயிர்நிறைந்த கோழி; கான்ற பூங்கடம்பின் கவட்டிடை வளைவாய்ப் பருந்தொடு - உதிர்ந்த மலர்க்கடம்பின் கவட்டிலே வளைந்த அலகினையுடைய பருந்துடன்; ஒருங்கே கவர்குரல் பயிற்றும் - ஒருங்கேயிருந்து இரைகளை விரும்பிக் கவர்ச்சியான குரலுடன் கூப்பிடுகின்ற; ஆன்ற வெம்பாலை அழன் மிதித்தன்ன அருஞ்சுரம் - நிறைந்த கொடிய பாலைநிலத்தில் நெருப்பை மிதித்தாற்போன்ற அரிய காட்டுவழியை; ஒளிமதிக் கதிர்போல் சந்தனமெய் ஒருங்கு புதைத்து - ஒளியுறுந் திங்களின் தண்கதிர்போலச் சந்தனத்தை உடம்பெலாம் பூசியவாறு ; சுடர்மறை பொழுதின் பாய்மா ஊன்றினார் - அந்திக்காலத்தே பரியைச் செலுத்தினார்.

விளக்கம் : ஆங்கென்றது முல்லையுங் குறிஞ்சியும் சேர்ந்த பாலையை. முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப், பாலையென்பதோர் படிவங்கொள்ளும் (சிலப் : 11 : 64-6) என்று வருவது காண்க. வாரணமும் பருந்தும் பாலை நிலத்தினது வெப்பமிகுதியால் நாள்வழியிளைப்பால், ஓரிடத்திருந்தும் ஒன்றையொன்று நலியமாட்டாமையின், ஓரிடத்திருந்து கவர்குரல் பயிற்றும் என்றார். வெம்மை மிகுதியின் அந்திக்காலத்தே போனார். நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப் - படு திரை வையம் பாத்திய பண்பே (தொல். அகத். 2) என்று பாலைக்கு நிலம் இன்று என்றமையானும், நடுவு நிலத்திணையே நண்பகல் வேனிலொடு - முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே (தொல். அகத். 9) என்றமையானும். அக்காலம் அன்றி, இவர் செல்கின்ற காலம் முன்பனி தொடங்குகின்ற காலமாகவும் பாலை கூறியவாறு என்னை யெனின், காலம் பொதுவாய்த் தேயந்தோறும் வேறுபட்டிருக்கும்; சித்திரையும் வைகாசியும் குடகுமலைக்குக் கார்காலத்தை ஆக்கினாற்போல, மார்கழித் திங்களும் இவர் போகின்ற  தேயத்திற்கு முதுவேனிலாய், வெம்மை விளைத்துப் பாலையாக்கிற்று. இனி இமயத்தைச் சூழ்ந்த இடம் தெய்வத்தின் ஆணையால் எக்காலமும் மாறாமல், ஓரிடம் ஒருகாலமாகவே இருக்குமாதலின். அவ்விடத்தே இவர் போகின்றார் என்றுமாம். இவ்வாறு காலத்தைப் பற்றி நச்சினார்க்கினியர் கூறுவர். முல்லையும் குறிஞ்சியும் வெம்மை விளைந்து பாலையாகலாம் என்று முன்னர்ச் சிலப்பதிகார மேற்கோள் காட்டியதாலும், இவர்கள் ஐவகை நிலத்தையுங் கடந்து சென்றனர் என்று கூறவே பாலையைக் கூறினார் ஆதலானும் காலத்தைப் பற்றியே கவலை ஈண்டு வேண்டற்பாற்றன்று. இராசமாபுரத்தே கூதிரானபோது ஓரிரண்டு நாடுகளே யிடையிட்ட விதேக நாட்டில் மார்கழியிற் கோடையாக இருக்குமென்பது பொருந்தாது. ( 5 )   இது பாலை நிலத்தை வண்ணித்தது.

2107. நிலையிலா வுலகி னின்றவண் புகழை
வேட்டவ னிதியமே போன்று
மிலைகுலாம் பைம்பூ ணிளமுலைத் தூதி
னின்கனித் தொண்டையந் துவர்வாய்க்
கலைவலார் நெஞ்சிற் காமமே போன்றுங்
கடவுளர் வெகுளியே போன்று
முலைவிலார் நில்லா தொருபக லுள்ளே
யுருப்பவிர் வெஞ்சுரங் கடந்தார்.

பொருள் : நிலை இலாஉலகில் நின்ற வண்புகழை வேட்டவன் நிதியமே போன்றும் - நிலையற்ற உலகிலே நிலைபெற்ற வளவிய புகழை ரும்பினவன் செல்வம் போமாறு போன்றும்; இலைகுலாம் பைம்பூண் இளமுலைத் தூதின் - இலைவடிவப் பூணணிந்த இளமுலையாகிய தூதினையும்; இன்கனித் தொண்டை அம் துவர்வாய் - இனிய தொண்டைக் கனியனைய செவ்வாயினையும் உடைய; கலைவலார் நெஞ்சின் காமமே போன்றும் - பரத்தையர் உள்ளத்தே காமம் போமாறு போலவும்; கடவுளர் வெகுளியே போன்றும் - முனிவர்களின் சீற்றம் விலகுமாறு போலவும்; உலைவிலார் நில்லாது - சோர்விலாராய் நில்லாமல்; ஒருபகலுள்ளே - ஒரு பகற்பொழுதிலே; உருப்பு அவிர் வெம் சுரம் கடந்தார் - வெம்மை விளங்குங் கொடுஞ்சுரத்தைக் கடந்தார்.

விளக்கம் : கலைகளாவன : வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்துக் - கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும் தண்ணுமைக் கருவியும் தாழ்தீங் குழலும் - கந்துகக்கருத்தும் மடைநூற் செய்தியும் - சுந்தரச் சுண்ணமும் தூ நீராடலும் - பாயற் பள்ளியும் பருவத்தொழுக்கமும் - காயக்கரணமும் கண்ணியது உணர்தலும் - கட்டுரை வகையும் கரந்துறை கணக்கும் வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் கோலம் கோடலும் கோவையின் கோப்பும் - காலக் கணிதமும் கலைகளின் துணிவும் - நாடக  மகளிர்க்கு நன்கனம் வகுத்த - ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் (2 : 101-31) என மணிமேகலையிற் கூறப்பட்டன காண்க. ( 6 )

2108. புதுக்கலம் போலும் பூங்கனி யாலும்
பொன்னிணர்ப் பிண்டியும் பொருந்தி
மதுக்கலந் தூழ்த்துச் சிலம்பிவீழ் வனபோன்
மலர்சொரி வகுளமு மயங்கிக்
கதிர்த்ததண் பூணி கம்புடாழ் பீலிக்
கனைகுர னாரைவண் டான
மெதிர்த்ததண் புனல்சூ ழின்னதிக் கரைமே
லிளையவ ரயாவுயிர்த் தெழுந்தார்.

பொருள் : புதுக்கலம் போலும் பூங்கனி ஆலும் - குயவரின் புதுக்கலம் போன்ற பொலிவுற்ற பழத்தையுடைய ஆலமரமும்; பொன் இணர்ப் பிண்டியும் பொருந்தி - பொன் போன்ற பூங்கொத்துக்களையுடைய அசோக மரமும் பொருந்தி; மதுக் கலந்து ஊழ்த்துச் சிலம்பி வீழ்வனபோல் மலர்சொரி வகுளமும் மயங்கி - முன்னர்த் தேனைச் சொரிந்து, பின்பு காம்பு கழலுதலின் சிலம்பி வீழ்வனபோல மலரைச் சொரிகின்ற மகிழும் மயங்கி; கதிர்த்த தண்பூணி கம்புள் தாழ்பீலிக் கனைகுரல் நாரை வண்டானம் எதிர்த்த - கதிர்ப்பையுடைய தண்ணிய பூணியென்னும் பறவையும் சம்பங்கோழியும், சிறுசின்னம் போலும் செறிந்த குரலையுடைய நாரையும், வண்டானமும் எதிர்கொண்ட; தண்புனல் சூழ் இன் நதிக்கரைமேல் இளையவர் அயாவுயிர்த்து எழுந்தார் - தண்ணிய நீர் சூழ்ந்த ஆற்றங்கரை மேலே சீவகன் முதலான இளையோர் இளைப்பாறிப் போனார்.

விளக்கம் : பூணி, கம்புள் என்பன இறந்த வழக்கென்பர் நச்சினார்க்கினியர். கலம் - ஈண்டுக் குயக்கலம்; இஃது ஆலம்பழத்திற்குவமை, ஆல் - ஆலமரம். சிலம்பி மகிழம்பூவிற்கு உவமை. வகுளம் - மகிழமரம். கம்புள் - சம்பங்கோழி. சிறு சின்னம் - ஒருவகை இசைக்கருவி. வண்டானம் - ஒருவகை நாரை; (கொய்யடி நாரை என்ப.) அயாவுயிர்த்தல் - இளைப்பாறுதல். ஆலும், பிண்டியும், வகுளமும் மயங்கி. பூணி, கம்புள், நாரை வண்டானம் எதிர்த்த தண்புனல்சூழ் இன்னதிக்கரைமேல் அயாவுயிர்த்து எழுந்தார் என வினை முடிபு செய்க. ( 7 )

2109. அள்ளிலைப் பலவி னளிந்து வீழ் சுளையுங்
கனிந்துவீழ் வாழையின் பழனும்
புள்ளிவா ழலவன் பொறிவரிக் கமஞ்சூன்
ஞெண்டினுக் குய்த்துநோய் தணிப்பான்
பள்ளிவாய் நந்து மாமையும் பணித்துப்
பன்மலர் வழிபடக் குறைக்கும்
வெள்ளநீர்ப் படப்பை விதையம்வந் தடைந்தே
வேந்தனுக் குணர்த்தமுன் விடுத்தார்.

பொருள் : அள் இலைப் பலவின் அளிந்து வீழ் சுளையும் - செறிந்த இலையை உடைய பலவின் சுளையையும்; கனிந்து வீழ்வாழையின் பழனும் - கனிந்து வீழும் வாழைப்பழத்தையும்; புள்ளிவாழ் அலவன் பொறிவரிக் கமஞ்சூல் ஞெண்டினுக்கு உய்த்து - புள்ளியை உடையதாய் அங்கே வாழும் நண்டு, புள்ளியையும் வரியையும் உடைய நிறைந்த சூலையுடைய நண்டுக்குக் கொடுத்து; நோய் தணிப்பான் - அதன் வேட்கையைத் தணிப்பதற்கு; பள்ளிவாய் நந்தும் ஆமையும் பணித்து - தம்மிடத்திலே வாழும் நத்தையையும் ஆமையையும் மிதித்துக் கொண்டு; பல்மலர் வழிபடக் குறைக்கும் - பலமலர்களையும் வழியாம்படி குறைக்கின்ற; வெள்ளநீர்ப் படப்பை விதையம் வந்து அடைந்து - நீர்ப் பெருக்கையுடைய, தோட்டங்கள் சூழ்ந்த விதேக நாட்டைச் சேர்ந்து; வேந்தனுக்கு உணர்த்த முன் விடுத்தார் - அரசனுக்கு அறிவிக்க முன்னே ஆள் விட்டனர்.

விளக்கம் : அள் - செறிவு. பலவு - பலாமரம். பழன் - பழம். அலவன் - நண்டு. கமம் - நிறைவு. ஞெண்டு - நண்டு. பணித்து - மிதித்து, விதையம் - விதேகநாடு. வேந்தன் : கோவிந்தராசன்; விசையை உடன்பிறந்தோன். ( 8 )

2110. வீட்டிடந் தோறும் வில்லக விரல்போற்
பொருந்திநின் றொருங்கெதிர் கொள்கென்
றேட்டின்மேற் றீட்டித் திருவெழுத் திட்டாங்
கிறைவனுந் தமர்களைப் பணிப்ப
நாட்டகத் தமிர்து நளிகட லமிர்து
நல்வரை யமிர்தமு மல்லாக்
காட்டகத் தமிர்துங் காண்வரக் குவவிக்
கண்ணகன் புறவெதிர் கொண்டார்.

பொருள் : இறைவனும் - அந்நாட்டு மன்னனும்; வீட்டிடந் தோறும் - வீட்டினிடந்தோறும்; வில்லக விரல்போல பொருந்தி நின்று - விற்பிடித்த விரல்போற் கிட்டி நின்று; ஒருங்கு எதிர் கொள்க என்று - ஒன்று சேர எதிர்கொள்கவென்று; ஏட்டின் மேல் தீட்டித் திருஎழுத்து இட்டுத் தமர்களை ஆங்குப் பணிப்ப - ஏட்டிலே எழுதிக் கைச்சாததிட்டுப் பணிபுரிவோரை ஆங்காங்குத் தெரிவிக்குமாறு கட்டளையிட; நாட்டகத்து அமிர்தும் - நாடுபடு பொருள்களும்; நளிகடல் அமிர்தும் - செறிகடலிற் படும் பொருள்களும்; நல்வரை அமிர்தமும் - நல்ல மலைபடு பொருள்களும்; அல்லா - இவையே அல்லாமல்; காட்டகத்து அமிர்தும் - காடுபடு பொருள்களும்; காண்வரக் குவவி - விளங்குமாறு குவித்து; கண் அகன் புறவு எதிர்கொண்டார் - இடம் பரவிய முல்லை நிலத்தே சீவகன் முதலானோரை எதிர்கொண்டனர்.

விளக்கம் : வீட்டிடம் : விடுதலையுடைய இடம் என்பர் நச்சினார்க்கினியர். வில்லக விரலிற் பொருந்தி (குறுந். 370) என்றார் பிறரும். 

நாட்டிலமிர்து :  செந்நெல் சிறுபயறு செவ்விள நீர்செழுங்
                         கன்னல் கதலியோ டைந்து
கடலமிர்து :  ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்
                    நீர்ப்படும் உப்பினோ டைந்து
வரையமிர்து :  தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம்
                       கர்ப்பூரம் சாதியோ டைந்து
காட்டிலமிர்து :  அரக்கிறால் சந்தேன் அணிமயிற் பீலி
                        திருத்தகு நாவியோ டைந்து
அமிர்து: பொருள். ( 9 )

2111. பொருமத யானைப் புணர்மருப் பேய்ப்பப்
பொன்சுமந் தேந்திய முலையா
ரெரிமலர்ச் செவ்வாய் திறந்துதே னூற
வேத்துவார் பூக்கடூய்த் தொழுவார்
வருகுலைக் கமுகும் வாழையு நடுவார்
வரையுமி ழாவிபோன் மாடத்
தருநறும் புகையு மேந்துவா ரூர்தோ
றமரர்த முலகமொத் ததுவே.

பொருள் : ஊர்தோறு - ஊர்கள் தோறும்; பொருமத யானை புணர்மருப்பு ஏய்ப்பப் பொன் சுமந்து ஏந்திய முலையார் - போர் புரியும் மதக்களிறுகளின் இணைக் கொம்புகளைப் போல, அணிபல சுமந்து நிமிர்ந்த முலையினர்; எரிமலர்ச் செவ்வாய் திறந்து தேன் ஊற ஏத்துவார் - முருக்கிதழ்போலும் சிவந்த வாயைத் திறந்து இனிமைமிக ஏத்துவாரும்; பூக்கள் தூய்த்தொழுவார் - மலர்களைச் சொரிந்து வணங்குவாரும்; வருகுலைக் கமுகும் வாழையும் நடுவார் - வளருங் குலையையுடைய கமுகையும் வாழையையும் நடுவாரும்; வரைஉமிழ் ஆவிபோல் மாடத்து - மலை உமிழும் புகைபோல, மாடங்களிலே; அருநறும் புகையும் ஏந்துவார் - அரிய நல்ல மணமிகும் புகையையும் ஏந்துவாருமாகி இருந்ததால், அமரர் தம் உலகம் ஒத்தது - ஒவ்வோரூரினும் அமரருலகம் ஒத்தது.

விளக்கம் : ஆவி - நெட்டுயிர்ப்பு. இனி நகரின் செய்தி. பொருமதயானை, புணர்மருப்பு என்பன வினைத்தொகைகள், ஏய்ப்ப : உவமவுருபு. பொன் - அணிகலன் : ஆகுபெயர். தூய் - தூவி. வருகுலை:வினைத்தொகை. ( 10 )

வேறு

2112. பாடி னருவிப் பயங்கெழு மாமலை
மாட நகரத்து வாயிலுங் கோயிலு
மாடம் பலமு மரங்கமுஞ் சாலையுஞ்
சேடனைக் காணிய சென்றுதொக் கதுவே.

பொருள் : பாடு இன் அருவி - ஒலிக்கும் இனிய அருவியையுடைய; பயம் கெழு மாமலை - பயன் பொருந்திய பெரிய மலை போலும்; மாட நகரத்து வாயிலும் கோயிலும் - மாடங்களையுடைய நகரத்திலே வாயிலிலும் கோயிலிலும்; ஆடு அம்பலமும் - கூத்தாடும் அம்பலத்திலும்; அரங்கமும் - மேடைகளிலும்; சாலையும் - வழிகளிலும்; சேடனைக் காணிய - சேடனைப் போலும் சீவகனைக் காண; சென்று தொக்கது - (ஊர்) சென்று கூடியது.

விளக்கம் : உலகினைத் தாங்குபவன் ஆதலின் சேடன் என்றார் அம்பலம் - பலருங் கூடும் பொது இடம்; கூத்துக் காணும் இடம் என்றுமாம். அரங்கம் - நாடகம் முதலியன நிகழ்த்தும் மேடை ( 11 )

2113. பல்கதி ராரமும் பூணும் பருமித்துக்
கொல்சின வெந்தொழிற் கோடேந் திளமுலை
நல்லெழின் மங்கையர் நன்னுதற் சூட்டிய
வெல்கதிர்ப் பட்டம் விளங்கிற் றொருபால்.

பொருள் : பல்கதிர் ஆரமும் பூணும் பருமித்து - பல ஒளிவிடும் முத்துவடங்களையும் பிற கலன்களையும் விளங்க அணிந்து; கொல்சின வெம்தொழில் கோடு ஏந்து இளமுலை - கொல்லும் சினமுடைய கொடிய தொழிலையுடைய யானைக் கொம்பென நிமிர்ந்த இளமுலைகளையுடைய; நல் எழில் மங்கையர் - பேரழகினையுடைய மங்கையரின்; நல்நுதல் சூட்டிய அழகிய நெற்றியில் அணிந்த; வெல்கதிர்ப் பட்டம் ஒருபால் விளங்கிற்று - ஒளிவிடும் பட்டம் ஒரு பக்கம் விளங்கியது.

விளக்கம் : ஆரம் - முத்துவடம். பருமித்தல் அணிதல். கொல் சினக்கோடு, வெந்தொழிற்கோடு எனத் தனித்தனியே கூட்டுக. கோடு ஈண்டு யானைக் கொம்பு. மங்கையராகிய யானைகள் என வேண்டாதே உரைத்தார் நச்சினார்க்கினியர் ( 12 )

2114. சுண்ணமுஞ் சூட்டுஞ் சொரிந்து வார்குழற்
கண்ணிம காரொடு காற்சிலம் பார்த்தெழ
வண்ணலைக் காணிய வார்த்திற் போதரும்
வண்ண மகளிர் வனப்பிற் றொருபால்.

பொருள் : சுண்ணமும் சூட்டும் சொரிந்து - சுண்ணத்தையும் நெற்றிச் சூட்டையும் பெய்து; வார்குழல் கண்ணி மகாரொடு - குலைகின்ற குழலிலே கண்ணியையுடைய குழந்தைகளோடு; கால்சிலம்பு ஆர்த்து எழ - காலிற் சிலம்புகள் ஒலித்தெழ; அண்ணலைக் காணிய ஆர்வத்தின் போதரும் - சீவகனைக் காண வேண்டி விருப்புடன் வருகின்ற; வண்ண மகளிர் வனப்பிற்று ஒருபால் - அழகிய மங்கையரின் பொலிவினை ஒருபக்கம் உடையது.

விளக்கம் : தலையிற் சுண்ணம் அணிந்தார் மகார் ஆதலின். சுண்ணம் - நறுமணப்பொடி, சூட்டு - ஒரு நுதலணி. மகார் - மக்கள். அண்ணலை : சீவகனை. காணிய - காணுதற்கு. ( 13 )

2115. எதிர்நலப் பூங்கொடி யெள்ளிய சாயற்
கதிர்நல மங்கையர் காறொடர்ந் தோட
முதிரா விளமுலை முத்தொடு பொங்க
வதிரரிக் கிண்கிணி யார்க்கு மொருபால்.

பொருள் : எதிர்நலப் பூங்கொடி எள்ளிய சாயல் - தோன்றிய நலத்தையுடைய பூங்கொடியை இகழ்ந்த சாயலையும்; கதிர்நலம் மங்கையர் - கதிர்த்த நலனையும் உடைய மாதரார் ; முதிரா இளமுலை முத்தொடு பொங்க - தம் முற்றா இளமுலைகள் முத்துடன் பொங்குமாறு; ஓட - ஓடுதலின்; அதிர் அரிக் கிண்கிணி கால் தொடர்ந்து - ஒலிக்கும் பரல்களையுடைய கிண்கிணிகள் (இங்ஙனம் ஓடன்மின் என்று) காலைக் கட்டிக் கொண்டு; ஒருபால் ஆர்க்கும் - ஒருபக்கம் கூப்பிடும்.

விளக்கம் : முத்தொடு பொங்கல் : முத்துவடம் புடைத்தற்குத் தாமும் புடைத்தல். ( 14 )

2116. கருங்க ணிளமுலை கச்சற வீக்கி
மருங்கு றளர மழைமருண் மாட
நெருங்க விறைகொண்ட நேரிழை யார்தம்
பெருங்க ணலமரும் பெற்றித் தொருபால்.

பொருள் : கருங்கண் இளமுலை கச்சு அற வீக்கி - கரிய கண்களையுடைய இளமுலைகளைக் கச்சினால் இறுகக் கட்டி; மருங்குல் தளர - இடை தளர (வந்து) ; மழைமருள் மாடம் - முகில் மயங்கும் மாடங்களின்மேல்; நெருங்க இறை கொண்ட நேர் இழையார் தம் - நெருங்கத் தங்கியிருக்கும் அழகிய அணியையுடைய மகளிரின்; பெருங்கண் அலமரும் பெற்றித்து ஒருபால் - பெரிய கண்கள் இவனைக் காணாது சுழலும் தன்மையை ஒருபக்கம் உடையது.

விளக்கம் : அற வீக்கி - இறுகக்கட்டி, மருங்குல் - இடை, மழை - முகில். மருளுதற்குக் காரணமான மாடம் என்க. இறைகொண்ட - தங்கிய பெற்றித்து - தன்மையுடையது. ( 15 )

2117. மின்னு குழையினர் கோதையர் மின்னுயர்
பொன்வரை மாடம் புதையப் பொறிமயி
றுன்னிய கோதைக் குழாமெனத் தொக்கவர்
மன்னிய கோல மலிந்த தொருபால்.

பொருள் : மின்னு குழையினர் கோதையர் - மின்னுங் குழையுடனும் கோதையுடனும் (வந்து) ; மின்உயர் பொன்வரை மாடம் புதைய - ஒளியால் உயர்ந்த பொன்மலை போன்ற மாடங்கள் மறையுமாறு; தொக்கவர் மன்னிய கோலம் - கூடிய மகளிர் பொருந்திய ஒப்பனை; துன்னிய தோகைப் பொறிமயில் குழாம் என - பொருந்திய கலவத்தையுடைய புள்ளிமயில்களின் கூட்டம் என்று எண்ணுமாறு; ஒருபால் மலிந்தது - ஒருபக்கம் நிறைந்தது.

விளக்கம் : மின்னுகுழை : வினைத்தொகை. மின்னுயர் பொன் வரை : வினைத்தொகையடுக்கு. பொறிமயில் - புள்ளிமயில். தோகை - மயில் : ஆகுபெயர். ( 16 )

2118. பாடன் மகளிரும் பல்கலை யேந்தல்கு
லாடன் மகளிரு மாவண வீதி தொ
றோட வுதிர்ந்த வணிகல முக்கவை
நீடிருள் போழு நிலைமைத் தொருபால்.

பொருள் : ஒருபால் - ஒருபக்கம்; பாடல் மகளிரும் - பாடும் மங்கையரும்; பல்கலை ஏந்து அல்குல் ஆடல் மகளிரும் - பல மணிகளையுடைய மேகலையைத் தாங்கிய அல்குலையுடைய ஆடும் மங்கையரும்; ஆவண வீதிதோறும் ஓட - கடைத்தெரு வெங்கும் ஓடுதலின்; உதிர்ந்த அணிகலம் உக்கவை - கழன்ற கலங்கள் சிந்தினவை; நீடுஇருள் போழும் நிலைமைத்து பேரிருளையும் நீக்கும் நிலையது.

(விளக்கம்.) குடை முதலியவற்றின் இருளுமாம். ஆடன் மகளிர் - விறலியர். கலை - மேகலை. ஆவணவீதி - கடைத்தெரு. உக்கவை - சிந்தியவை. ( 17 )

2119. கோதையுந் தாரும் பிணங்கக் கொடுங்குழைக்
காதன் மகளிரு மைந்தருங் காணிய
வீதியு மேலும் மிடைந்து மிடைமலர்த்
தாதடுத் தெங்குந் தவிசொத் ததுவே.

பொருள் : கொடுங்குழைக் காதல் மகளிரும் மைந்தரும் காணிய - (சீவகனிடம் அன்புடைய) குழையணிந்த மகளிரும் மைந்தரும் அவனைக் காணும் பொருட்டு; கோதையும் தாரும் பிணங்க - கூந்தல் மாலையும் மார்பின் மாலையும் பிணங்கும்படி : வீதியும் மேலும் மிடைந்து -தெருவிலும் மாடங்களின் மேலும் நெருங்கி நிற்றலின்; மிடைமலர்த் தாது அடுத்து எங்கும் தவிசு ஒத்தது - நெருங்க வீழ்ந்த மலர்களின் மகரந்தம் படிந்து எங்கும் அணையெனப் பொலிவுற்றது.

விளக்கம் : கோதை - ஈண்டு மகளிர் அணிந்த மாலையினையும் - தார், மைந்தர் அணிந்த மாலையினையும் குறித்தன. காணிய - காண. மேல் - மேல்வீடு. தாது - பூந்துகள், தவிசு - இருக்கை. ( 18 )

2120. மானக் கவரி மணிவண் டகற்றவங்
கானை யெருத்தத் தமா குமரனிற்
சேனைக் கடலிடைச் செல்வனைக் கண்டுவந்
தேனை யவரு மெடுத்துரைக் கின்றார்.

பொருள் : அங்கு - அத் தெருவிலே; ஆனை எருத்தத்து - யானையின் பிடரியிலே; அமர குமரனின் - இந்திரன் மகனைப் போல அமர்ந்து; மானக்கவரி மணிவண்டு அகற்ற - சிறந்த கவரிகள் வண்டுகளை ஓட்ட; சேனைக் கடலிடை - படைத்திரளின் நடுவே; செல்வனைக் கண்டு உவந்து சீவகனைக் கண்டு மகிழ்ந்து; ஏனையவரும் எடுத்து உரைக்கின்றார் எல்லோரும் எடுத்துப் புகல்கின்றனர்.

விளக்கம் : மானக்கவரி - மயிர் நீப்பின் வாழாக் கவரிமானின் மயிர் : ஆகுபெயர். ஆனை - யானை. எருத்தம் - பிடரி. செல்வன் : சீவகன். ( 19 )

2121. தேமல ரங்கட் டிருவே புகுதக
மாமலர்க் கோதை மணாளன் புகுதக
காமன் புகுதக காளை புகுதக
நாம வெழில்விஞ்சை நம்பி புகுதக.

பொருள் : தேன்மலர் அம்கண் திருவே! புகுதக! - தேனையுடைய மலரில் வாழும் திருவே! புகுக!; மாமலர்க் கோதை மணாளன் புகுதக! - உயர்ந்த பூங்கோதையாளின் மணாளனே ! புகுக!; காமன் புகுதக - காமனே! புகுக!; காளை புகுதக - காளையே! புகுக!; நாம எழில் விஞ்சை நம்பி புகுதக! - அச்சுறுத்தும் அழகினையுடைய வித்தியாதர மகனே புகுக!

விளக்கம் : திருவே! என்றது உவப்பினால் வந்த பால் வழுவமைதி. மாமலர்க்கோதை : தந்தை : இலக்கணையுமாம்; திருமகளுமாம். தத்தையை மணந்ததனால் விஞ்சை நம்பி ஆயினன். புகுதக : ஒரு கொல் விழுக்காடு ; புகுதுக : என்றவாறு - திரு, மணாளன், காமன்! காளை நம்பி ! என்பன விளிகள். ( 20 )

2122. மின்றோய் வரைகொன்ற வேலோன் புகுதக
வின்றேன் கமழ்தா ரியக்கன் புகுதக
வென்றோன் புகுதக வீரன் புகுதக
வென்றே நகர மெதிர்கொண் டதவே.

பொருள் : மின்தோய் வரைகொன்ற வேலோன் புகுதக! - மின்னையுடைய முகில் தங்கும் மலையைப் பிளந்த வேலேந்திய முருகனே! புகுக!; இன்தேன் கமழ்தார் இயக்கன் புகுதக! - இனிய தேன் மணக்குந் தாரையுடைய இயக்கனே! புகுக!; வென்றோன்! புகுதக! - வென்றியுடையவனே! புகுக. வீரன்! புகுதக! - வீரனே! புகுக!; என்று - என்று கூறியவாறு; நகரம் எதிர்கொண்டது - நகரம் வரவேற்றது.

விளக்கம் : புகுதக : ஒருசொல் நீர்மைத்து. வரைகொன்ற வேலோன் : முருகன். இயக்கன் - தேவரின் ஒரு வகையினன். வென்றோன் : வினையாலணையும் பெயர். நகரம் : ஆகுபெயா ( 21 )

2123. இடிநறுஞ் சுண்ணஞ் சிதறியெச் சாருங்
கடிகமழ் மாலையுங் கண்ணியுஞ் சிந்தித்
துடியடு நுண்ணிடைத் தொண்டையஞ் செவ்வாய்
வடியடு கண்ணியர் வாழ்த்துபு நிற்பார்.

பொருள் : எச்சாரும் - எப்பக்கத்தினும்; இடி நறுஞ் சுண்ணம் சிதறி - இடித்த நல்ல சுண்ணத்தைத் தூவி; கடிகமழ் மாலையும் கண்ணியும் சிந்தி - மணங்கமழும் மாலையும் கண்ணியும் சிதறி; துடி அடு நுண் இடைத் தொண்டை அம் செவ்வாய்வடி அடு கண்ணியர் - துடியை வென்ற நுண்ணிடையையும், கொவ்வைக்கனி போன்ற செவ்வாயையும் மாவடுவை வென்ற கண்ணினையும் உடைய மகளிர்; வாழ்த்துபு நிற்பார் - வாழ்த்தி நிற்பார்கள்.

விளக்கம் : இடி நறுஞ்சுண்ணம் : வினைத்தொகை. சார் - இடம். கடி : மணம். துடி - உடுக்கை. தொண்டை - கொவ்வைக்கனி. வடி - மாம்பிஞ்சு. வாழ்த்துபு - வாழ்த்தி. ( 22 )

2124. சுரும்பிமிர் மாலை தொழுவனர் நீட்டி
யிரும்பிடி நின்னடை கற்ற வெமக்கு
விரும்பினை யாய்விடின் மெல்ல நடமோ
கருங்கணிற் காமனைக் காணமற் றென்பார்.

பொருள் : இரும்பிடி! - கரிய பிடியே!; நின் நடை கற்ற எமக்கு - உன் நடையைக் கற்ற எமக்கு; விரும்பினையாய்விடின் - அன்புற்றாய் ஆயின்; காமனைக் கருங்கணின் காண - இக்காமனை எம் கரிய கண்ணாலே காண; மெல்ல நட - மெல்ல நடப்பாயாக; என்பார் - என்று கூறி; சுரும்பு இமிர் மாலை நீட்டித் தொழுவனர் - வண்டுகள் முரலும் மாலையைக் கொடுத்துத் தொழுதார்கள்.

விளக்கம் : இது பிடிக்குமுன் நின்ற மகளிர் கூற்று. மோ : முன்னிலை அசை. தொழுவனர் தொழுதனர் : இறந்தகால வினைமுற்று. இரும்பிடி. விளி நடமோ நடப்பாயாக! மோ : முன்னிலையசை. கணின் கண்ணால். காமனை : சீவகனை. மற்று : அசை. என்பார் : முற்றெச்சம். ( 23 )

2125. மடநடை பெண்மை வனப்பென்ப தோராய்
கடுநடை கற்றாய் கணவ னிழப்பாய்
பிடியலை பாவி யெனப்பூண் பிறழ்ந்து
புடைமுலை விம்மப் புலந்தனர் நிற்பார்.

பொருள் : மடநடை பெண்மை வனப்பு என்பது ஓராய் - மென்னடையே பெண்மைக்கு அழகு என்பதை அறியாயாய்; கடுநடை கற்றாய்! - கடுநடையைக் கற்ற நீ; கணவன் இழப்பாய் - கணவனை இழப்பாய்; பாவி! பிடி அலை! -பாவியே! நீ பிடி யல்லை; என - என்று கூறி; பூண் பிறழ்ந்து - அணிகலன் பிறழ; முலைபுடை விம்மப் புலந்தனர் நிற்பார் - முலைகள் பக்கத்தே விம்ம வெறுத்து நிற்பார்கள்.

விளக்கம் : இது பிடிக்குப் பின் நின்ற மகளிர் கூற்று. மடநடை - மென்னடை; பெண்மைக்கு வனப்பு என்க. பிடியல்லை - பிடியலை என நின்றது. பாவி : விளி. புடை - பக்கம். புலந்தனர் : முற்றெச்சம். ( 24 )

2126. மயிர்வாய்ச் சிறுகட் பெருஞ்செவி மாத்தாட்
செயிர்தீர் திரள்கைச் சிறுபிடி கேள்வ
னயிரா வணத்தொடு சூளுறு மைய
னுயிர்கா வலற்கொண் டுதவநில் வென்பார்.

பொருள் : மயிர்வாய்ச் சிறுகண் பெருஞ்செவி மாத்தாள் செயிர்தீர் திரள்கைச் சிறுபிடி! - மயிர் பொருந்திய வாயையும் சிறு கண்களையும் பெருங் காதுகளையும் பெரிய தாள்களையும் குற்றமற்ற திரண்ட துதிக்கையையும் உடைய சிறுபிடியே!; கேள்வன் அயிராவணத்தொடு சூளுறும் - நின் கணவனாகிய அயிராவணத்தோடே சூள் உறுவேம்; ஐயன் உயிர்காவலற் கொண்டு உதவ நில் என்பார் - ஐயனாகிய உயிர் காவலனைக் கொண்டு அவன் எமக்கு உதவும்படி நிற்பாயாக என்பர்.

விளக்கம் : நில்லாவிடிற் சூளுறுவேம்; சூளுறாதபடிநில் என்றனர். சூளுறும் பன்மைத் தன்மை வினைமுற்று; சேறும் என்றாற் போன்று. ( 25 )

2127. கருனைக் கவளந் தருதுங் கமழ்தா
ரருமை யழகிற் கரசனை நாளைத்
திருமலி வீதியெஞ் சேரிக் கொணர்மோ
வெரிமணி மாலை யிளம்பிடி யென்பார்.

பொருள் : எரி மணி மாலை இளம்பிடி! - ஒளிவிடும் மணி மாலை அணிந்த இளம்பிடியே!; கமழ்தார் அருமை அழகிற்கு அரசனை - மணக்குந்தார் புனைந்த அரிய அழகின் தலைவனை; திருமலி வீதி எம் சேரிக் கொணர் - செல்வம் நிறைந்த தெருவையுடைய எம் சேரிக்குக் கொண்டுவருவாயாக! (கொணர்ந்தால்); கருனைக் கவளம் தருதும் - பொரிக்கறியை உடைய கவளத்தைக் கொடுப்போம்.; என்பர் - என்று வேண்டுவர்.

விளக்கம் : மோ : முன்னிலை அசை. கவளம் - யானை உணவு. கருனை - பொரிக்கறி, தருதும் : தன்மைப்பன்மை. அழகிற்கரசன் என்றது சீவகனை. பிடி : விளி. ( 26 )

2128. என்னோர் மருங்கினு மேத்தி யெரிமணிப்
பொன்னார் கலையினர் பொற்பூஞ் சிலம்பினர்
மின்னார் குழையினர் கோதையர் வீதியுண்
மன்ன குமரனை வாழ்த்தி மகிழ்ந்தார்.

பொருள் : பொன் ஆர் கலையினர் - பொன்னாலாகிய மேகலையினராய்; பொன் பூஞ்சிலம்பினர் - பூவேலை செய்த பொற்சிலம்பினராய்; மின் ஆர் குழையினர் - ஒளி பொருந்திய குழையினராய்; கோதையர் - கோதையராய்; மருங்கின் என்னோரும் - அருகில் நின்ற எல்லோரும்; வீதியுள் மன்ன குமரனை ஏத்தி வாழ்த்தி மகிழ்ந்தார் தெருவிலே வந்த அரசகுமாரனைப் புகழ்ந்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.

விளக்கம் : ஏத்தல் : புகழ்தல், வாழ்த்துதல் : பல்லாண்டு முதலியன கூறல். மருங்கின் என்னோரும் என மாறுக. என்னோரும் : எல்லோரும் : கலை : மேகலை. மன்னகுமரன் : சீவகன். ( 27 )

வேறு

2129. விளங்குபாற் கடலிற் பொங்கி
வெண்டிரை யெழுவ வேபோற்
றுளங்கொளி மாடத் துச்சித்
துகிற்கொடி நுடங்கும் வீதி
யுளங்கழித் துருவப் பைந்தார்
மன்னவன் கோயில் சேர்ந்தா
னிளங்கதிர்ப் பருதி பௌவத்
திறுவரை யிருந்த தொத்தான்.

பொருள் : இளங்கதிர்ப் பருதி பௌவத்து இறுவரை இருந்தது ஒத்தான் - இளங்கதிரையுடைய ஞாயிறு கடலிலே உதயகிரியிலே இருந்த தன்மையைப் போன்றவன்; விளங்கு பாற்கடலின் பொங்கி வெண்திரை எழுவவே போல் விளங்குகின்ற பாற்கடலிலே பொங்கி வெண்மையான அலைகள் எழுவனபோல; துளங்கு ஒளி மாடத்து உச்சித் துகில் கொடி நுடங்கும் வீதி அசையும் ஒளியை யுடைய மாடங்களின் உச்சியிலே கொடியாடை அசையும் தெருவிலே ; உளம் கழித்து - நடுவே சென்று; உருவப் பைந்தார் மன்னவன் கோயில் சேர்ந்தான் - அழகிய பைந்தாரையுடைய வேந்தன் கோயிலை அடைந்தான்.

விளக்கம் : ஒத்தான் : எழுவாய்; வெண்டிரை துகிற்கொடிக் குவமை. உளம் - நடுவிடம். கோயில் - அரண்மனை, பௌவம் : கடல். இறுவரை : தங்கும் மலை; ஈண்டுக் குணக்குன்று. ( 28 )

2130. இழையொளி பரந்த கோயி
லினமலர்க் குவளைப் பொற்பூ
விழைதகு கமல வட்டத்
திடைவிராய்ப் பூத்த வேபோற்
குழையொளி முகமுங் கோலக்
கொழுங்கயற் கண்ணுந் தோன்ற
மழைமின்னுக் குழாத்தின் மாலை
மங்கையர் மயங்கி நின்றார்.

பொருள் : இழை ஒளி பரந்த கோயில் மாலை மங்கையர் - அணிகலனின் ஒளி பரவிய அக்கோயிலில் உள்ள மங்கையர் - விழைதகு கமல வட்டத்திடை - விரும்பத் தகுந்த தாமரை மலரின் வட்டத்திடையே; இனம் மலர்க் குவளைப் பொற்பூ விராய்ப் பூத்தவே போல் - இனமாகிய  மலர்ந்த குவளை பொன் மலர்களுடன் கலந்து, பூத்தன போல; குழை ஒளி முகமும் கோலக் கொழுங்கயல் கண்ணும் தோன்ற - குழையொளிபரவிய முகமும் அழகிய கொழுவிய கயற் கண்ணும் விளங்க; மழை மின்னுக் குழாத்தின் மயங்கி நின்றார் - நின்றார் - முகிலினிடை மின்னுத் திரள் போல மயங்கி நின்றனர்.

விளக்கம் : பொற்பூ : குழை. குவளை; கண். தாமரை : முகம் மழை : கூந்தல். இனமலர்க் கமலப் பொற்பூ விழைதரு குவளை எனவும் பாடம். ( 29 )

2131. எரிக்குழாஞ் சுடரும் வையே
லேந்தலைக் கண்டு கோயிற்
றிருக்குழா மனைய பட்டத்
தேவியர் மகிழ்ந்து செய்ய
வரிக்குழா நெடுங்க ணாரக்
கொப்புளித் துமிழ வம்பூ
விரைக்குழா மாலைத் தேனும்
வண்டுமுண் டொழுக நின்றார்.

பொருள் : எரிக்குழாம் சுடரும் வைவேல் ஏந்தலை - எரியின் திரளென ஒளிரும் கூரிய வேலேந்திய சீவகனை; கோயில் திருக்குழாம் அனையபட்டத் தேவியர் - கோயிலில் உள்ள திருமகளிரின் குழு அனைய பட்டத் தரசிகள்; செய்ய வரிக்குழாம் நெடுங்கண் ஆரக் கண்டு மகிழ்ந்து - செவ்வரித் திரளையுடைய நீண்ட கண்கள் நிறையக் கண்டு களித்தது; அம்பூ குழாம் விரை மாலைத் தேனும் வண்டும் உண்டு கொப்புளித்து உமிழ ஒழுக நின்றார் - அழகிய மலர்த் திரளாகிய மணமுறு மாலையிலே தேனும் வண்டும் தேனைப் பருகிக் கொப்புளித்து உமிழ்தலால் தேன்வடிய (மாலைத்திரளிலே மறைந்து) நின்றார்.

விளக்கம் : இங்ஙனம் ஒரு மகனைப் பெற்றேமே என்று மகிழ்ந்தனர். பூவில் விரை பொழுகுதலாலே தேனும் வண்டும் முதற் கொப்புளித்துப் பின் ஆரவுண்டு உமிழும்படி திரளுதலையுடைத்தாகிய மாலை என்க.( 30 )

2132. அலங்கறா தவிழ்ந்து சோர
வல்குற்பொற் றோரை மின்னச்
சிலம்பின்மேற் பஞ்சி யார்ந்த
சீறடி வலத்த தூன்றி
நலந்துறை போய நங்கை
தோழியைப் புல்லி நின்றா
ளிலங்கொளி மணித்தொத் தீன்ற
வேந்துபொற் கொடியோ டொப்பாள்.

பொருள் : இலக்கு ஒளி மணித்தொத்து ஈன்ற ஏந்து பொன் கொடியோடி ஒப்பாள் - விளங்கும் ஒளியையுடைய மணிக்கொத்துப் பெற்ற விளங்கிய பொற்கொடி போன்றவள் ஆகிய; நலம் துறை போய நங்கை - அழகின் கூறெல்லாம் நிரம்பிய நங்கை : அலங்கல் தாது அவிழ்ந்து சோர - மலர்மாலையிலே தாது சிந்திச் சோர; அல்குல் பொன் தோரை மின்ன - (உடை நெகிழ்தலால்) அல்குலிலே பொன் வடம் மின்ன; சிலம்பின்மேல்-இடக்காலிற் சிலம்பின்மேல்; வலத்தது பஞ்சு ஆர்ந்த சீறடி ஊன்றி - வலத்ததாகிய செம்பஞ்சியூட்டிய சிற்றடியை ஊன்றி; தோழியைப் புல்லி நின்றாள் - தோழியைத் தழுவி நின்றாள்.

விளக்கம் : இவள் இலக்கணை. அலங்கல் - மலர்மாலை. தாது - பூந்துகள். தோரை - வடம் பொற்றேரை, பொற்றாரை என்றும் பாடம், வலத்ததாகிய சீறடி என்க. நலம் - அழகு, துறைபோதல் - நிரம்புதல். கொடியோ டொப்பாளாகிய நங்கை நின்றாள் என்க. ( 31 )
 
2133. தாமரைப் போதிற் பூத்த
தண்ணறுங் குவளைப் பூப்போற்
காமரு முகத்திற் பூத்த
கருமழைத் தடங்கண் டம்மாற்
றேமலர் மார்பி னானை
நோக்கினாள் செல்வன் மற்றப்
பூமலர்க் கோதை நெஞ்ச
மூழ்கிப்புக் கொளித்திட் டானே.

பொருள் : தாமரைப் போதில் பூத்த தண் நறுங் குவளைப் பூப்போல் - தாமரை மலரிலே மலர்ந்த தண்ணிய அழகிய குவளை மலர்போல்; காமரு முகத்திற் பூத்த கருமழைத் தடங்கண் தம்மால் - விருப்பம் வரும் முகத்திலே மலர்ந்த கரிய பெரிய மழைக்கண்களால்; தேன் மலர் மார்பினானை நோக்கினாள் - தேனையுடைய மலர் மார்பினானைப் பார்த்தாள்; செல்வன் அப்பூமலர்க் கோதை நெஞ்சம் புக்கு மூழ்கி ஒளித்திட்டான் - சீவகனும் அந்த அழகிய மலர்க் கோதையாளின் உள்ளத்திலே புகுந்து மூழ்கி மறைந்திட்டான்.

விளக்கம் : அவனை அவள் கண்ணால் நோக்கி நெஞ்சில் அமைத்தாள் என்பதாம். அவனும் அவள் நெஞ்சிலே மறைந்து புக்கு அவ்விடத்தினின்றும் போந்து கட்புலனாகாமையாகயினான் என்று கூறி மூழ்க எனத் திரித்து, நெஞ்சிலே புக்கு மூழ்க ஒளித்தான் என்றும் கூறலாமென்பர் நச்சினார்க்கினியர். ( 32 )

வேறு

2134. விண்ணாறு செல்வார் மனம்பேதுறப் போந்து வீங்கிப்
பண்ணாறு சொல்லாண் முலைபாரித்த வென்று நோக்கக்
கண்ணாறு சென்ற களியைங்கணைக் காம னன்ன
புண்ணாறு வேலான் மனமூழ்கினள் பொன்ன னாளே.

பொருள் : விண்ஆறு செல்வார் மனம் பேது உறப் போந்து - வானுலகிலே வாழ்வோரின் மனம் வருத்தமடைய அமிர்தகலசம் வந்து; வீங்கி - முன்னினும் பருத்து; பண்நாறு சொல்லாள் முலை பாரித்த என்று நோக்க - இசை போன்ற சொல்லாளின் முலையாகத் தோன்றின, என்று சீவகன் அவளை நோக்கின அளவிலே; கண் ஆறு சென்ற களி ஐங் கணைக் காமன் அன்ன புண் நாறு வேலான் - கண்ணுக்குப் புலனாகிய களிப்பையுடைய ஐங்கணைக் காமனைப் போன்ற, புண் பொருந்திய வேலானாகிய சீவகனின்; மனம் பொன்னனாள் மூழ்கினள் - மனத்திலே திருவனையாள் மூழ்கினள்.

விளக்கம் : இனி, வானவருலகிலிருந்து அமிர்த கலசம் போந்து இவள் முலையாகப் பாரித்தன என்றும், அம் முலைகளைக் கண்டு வானவர் வருந்தினாரென்றுங் கூறுதல் குற்றமெனக் கொண்டு நச்சினார்க்கினியர்.  தேவருலகிலே சாசாசரன் என்னும் தேவர்கோவாயிருந்த சீவகன், இவ்வுலகிற்குப் போகின்றானென்று மனம் வருந்தும்படி போந்து, இவ்வுலகிலே கண்ணுக்குப் புலனாதலைப் பொருந்தின காமனைப் போன்றான் என்று நூலாசிரியர் வியந்து கூறினதாகக் கூறுவர். அங்ஙனமாயின், விண்ணாறு சொல்லார் மனம் பேதுறப் போந்து கண்ணாறு சென்ற கனி ஐங்கணைக் காமன் அன்ன புண்ணாறு வேலான், பண்ணாறு சொல்லாள், முலை பாரித்த என்று நோக்கப் பொன்னனாள் மனம் மூழ்கினள் என இயைத்தல் வேண்டும்  சீவகன் முற்பிறப்பில் பதினாறு கற்ப லோகங்களுள் ஒன்றான ஸஹஸ்ரார கற்பத்தில் இந்திரனாக இருந்தான் என்ற கதையை உட்கொண்டு இவர் கூறினாலும் நூலாசிரியர் கருத்து அதுவன்று என்பதற்குச் சொற்கிடக்கையே சான்றாம். மேலம், புனைந்துரைப்பதில் வானவர் வருந்தும்படி அமிர்த கலசம் இவ்வுலகிற் போந்து இவள் மார்பிலே தோன்றின என்பதனாற் குற்றம் என்னோ? ( 33 )

2135. மைதோய் வரையி னிழியும்புலி
போல மைந்தன்
பெய்தாம மாலைப் பிடியின்னிழிந்
தேகி மன்னர்
கொய்தாம மாலைக் கொழும்பொன்முடி
தேய்த்தி லங்குஞ்
செய்பூங் கழலைக் தொழுதான்சென்னி
சோத்தி னானே.

பொருள் : மைந்தன் - சீவகன்; மைதோய் வரையின் இழியும் புலி போல - முகில் தோயும் மலையிலிருந்து இழியும் புலியைப் போல; பெய்தாம மாலைப் பிடியின் இழிந்து ஏகி - பெய்த தாமமாகிய மாலை அணிந்த பிடியினின்றும் இறங்கிச் சென்று; மன்னர் கொய்தாம மாலைக் கொழும்பொன் முடிதேய்த்து இலங்கும் - அரசர்களின் கொய்த ஒழுங்குபட்ட மாலை யணிந்த கொழுவிய பொன்முடிகள் தேய்த்து விளங்கும்; செய் பூங்கழலை - (கோவிந்தனுடைய) பண்ணப்பட்ட அழகிய கழலை; தொழுதான் சென்னி சேர்த்தினான் - தொழுது தன் முடியிலே சேர்த்தான்.

விளக்கம் : கழல் : அடியை உணர்த்தலின் தானி ஆகுபெயர். மை - முகில், வரை - மலை; யானையினின்றும் இறங்கும் சீவகனுக்கு மலையினின்றி றங்கும் புலி உவமை தொழுதான்; முற்றெச்சம். ( 34 )

2136. பொன்னாங் குவட்டிற் பொலிவெய்தித் திரண்ட திண்டோன்
மன்னன் மகிழ்ந்து மருமானை விடாது புல்லித்
தன்னன்பு கூரத் தடந்தாமரைச் செங்கண் முத்த
மின்னும் மணிப்பூண் விரைமார்ப நனைப்ப நின்றான்.

பொருள் : பொன் அம் குவட்டின் பொலிவு எய்தித் திரண்ட திண்தோள் மன்னன் - பொன் மலை யெனப் பொலிவு பெற்றுத் திரண்ட வலிய தோளையுடைய மன்னன்; மகிழ்ந்து - களித்து; மருமானை விடாது புல்லி - மருமகனை விடாது தழுவி; தன் அன்பு கூர - தன் அன்பு மிகுதலால்; தடந் தாமரைச் செங்கண் முத்தம் - பெரிய தாமரை மலரனைய கண்களிலிருந்து வரம் முத்தனைய கண்ணீர்; மின்னும் மணிப்பூண் விரைமார்பம் நனைப்ப நின்றான் - சீவகனுடைய விளங்கும் மணிக்கலன் அணிந்த, மணங் கமழும் மார்பை நனைக்குமாறு நின்றான்.

விளக்கம் : பொன்னங்குவடு - பொன்மலை. மன்னன் - ஈண்டுக் கோவிந்தன். மருமான் என்றது சீவகனை. உடன் பிறந்தாள் மகனாதலின் அங்ஙனம் கூறினர் . செங்கண் முத்தம் - கண்ணீர்த்துளி. விரை - மணம். ( 35 )

2137. ஆனாது வேந்தன் கலுழ்ந்தானெனக் கோயி லெல்லாந்
தானாது மின்றி மயங்கித்தடங் கண்பெய்ம் மாரி
தேனார் மலாபுர்த் தொழுகச்சிலம் பிற்சி லம்புங்
கானார் மயிலின் கணம்போற்கலுழ் வுற்ற தன்றே.

பொருள் : வேந்தன் ஆனாது கலுழ்ந்தான் என - அரசன் அமைவின்றி அழுதான் எனக் கருதி; கோயில் எல்லாம் - அரண்மனை முழுதும்; தான் ஆதும் இன்றி மயங்கி - தானெனுந் தன்மை சிறிதும் இல்லாமல் மயங்கி; தடம் கண் பெய்மாரி தேன் ஆர் மலர் ஈர்த்து ஒழுக - பெரிய கண்கள் பெய்யும் மழை தேன் பொருந்திய மலர்களை யிழுத்து ஒழுகும்படி; சிலம்பில் சிலம்பும் கான் ஆர் மயிலின் கணம்போல் - மலையில் ஆரவாரிக்கும் காட்டு மயிலின் திரள் போல; கலுழ்வுற்றது - அழுதலுற்றது.

விளக்கம் : உற்றது : ஒருமை பன்மை மயக்கம். தான் ஆதும் இன்றி மயங்கி என்பதை வேந்தனுக் காக்குவர் நச்சினார்க்கினியர். கானார் சிலம்பு எனவுங் கூட்டுவர். ( 36 )

வேறு

2138. பகைநரம் பிசையுங் கேளாப் பைங்கதிர்ப் பசும்பொற்கோயில்
வகைநலம் வாடி யெங்கு மழுகுரன் மயங்கி முந்நீ
ரகமடை திறந்த தேபோ லலறக்கோக் கிளைய நங்கை
மிகைநலத் தேவி தானே விலாவணை நீக்கி னாளே.

பொருள் : பகை நரம்பு இசையும் கேளா நரம்பிசையிலே பகையும் கேட்டறியாத; பைங்கதிர்ப் பசும்பொன் கோயில் - ஒளிவிடும் பொற் கோயிலில் உள்ளார்; (சச்சந்தன் தன்மையைக் கேட்டலின்); வகைநலம் வாடி - வகைப்பட்ட அழகு வாடி; எங்கும் அழுகுரல் மயங்கி - எல்லாவிடத்தும் அழுகுரல் கலந்து; முந்நீர் அகமடை திறந்ததே போல் - கடலின் உளமடை திறந்தாற்போல; - அலற - அலறலின்; கோக்கு இளைய நங்கை - அரசனுக்கு இளைய நங்கையாகிய; மிகை நலத் தேவி - மேம்பட்ட பண்பையுடைய விசயை; தானே விலாவணை நீக்கினாள் - தானே அழுகையை நீக்கினாள்.

(விளக்கம்.) பகை நரம்பிசையுங் கேளாக் கோயில் என்றது எக்காலத்தும் பகையால் உண்டாகும் துன்பம் சிறிதும் நுகர்ந்தறியாத அரண்மனை என்றவாறு. என்றது முந்நீர் மடைதிறந்தாற் போன்றலறுதற்குக் குறிப்பேதுவாக நின்றது. விலாவணை - அழுகை. (37)
 
2139. பல்கதிர் மணியும் பொன்னும் பவழமுங் குயிற்றிச் செய்த
செல்வப்பொற் கிடுகு சூழ்ந்த சித்திர கூட மெங்கு
மல்குபூந் தாமந் தாழ்ந்து மணிபுகை கமழ வேந்தன்
வெல்புகழ் பரவ மாதோ விதியுள யெய்தி னானே.

பொருள் : பல்கதிர் மணியும் முத்தும் பவழமும் குயிற்றிச் செய்த - பல்லொளி தவழும் மணியும் முத்தும் பவழமும் அழுத்திச் செய்த; செல்வப் பொன் கிடுகு சூழ்ந்த - செல்வமுடைய பொன்னாலாகிய கிடுகுகள் சூழ்ந்த; சித்திர கூடம் எங்கும் - சித்திர கூடம் முழுதும்; மல்குபூந் தாமம் தாழ்ந்து - நிறைந்த மலர்மாலையாலே தாழப்பட்டு : மணிப்புகை கமழ - அழகிய புகை தவழா நிற்க; வேந்தன் வெல்புகழ் பரவ - அரசன் வென்ற புகழைப்பாட; விதிஉளி எய்தினான் - முறைப்படி அதனை அடைந்தான்.

விளக்கம் : குயிற்றி - பதித்து. கிடுகு - கீற்று. தென்னையோலையாற் செய்யும் கிடுகுபோலப் பொன்னாற் செய்த கிடுகினால் வேயப்பட்ட சித்திரகூடம் என்பது கருத்து. தாழ்ந்து - தாழப்பட்டென்க. மணி - அழகிய. விதியுளி - முறைப்படி. ஏத்தாளிகள் புகழைப் பரவ என்பர் நச்சினார்க்கினியர். ( 38 )

2140. எரிமணி யடைப்பை செம்பொற்
படியக மிலங்கு பொன்வாள்
கருமணி முகடு வேய்ந்த
கஞ்சனை கவரி கொண்ட
வருமுலை மகளிர் வைத்து
வான்றவி சடுத்து நீங்கப்
பெருமக னெண்ணங் கொள்வா
னமைச்சரோ டேறி னானே.

பொருள் : எரி மணி அடைப்பை - ஒளிரும் மணிகளிழைத்த அடைப்பையையும், செம்பொன் படியகம் - செம்பொன்னால் ஆகிய காளாஞ்சியையும்; இலங்கு பொன்வாள் - விளங்கும் பொன் வாளையும்; கருமணி முகடு வேய்ந்த கஞ்சனை - நீல மணியால் வாய் மூடப் பெற்ற கலசப்பானையையும்; கவரி - கவரியையும்; கொண்ட வருமுலை மகளிர் - ஏந்திய, வளரும் முலைகளையுடைய பெண்கள்; வான் தவிசு அடுத்து வைத்து நீங்க - உயர்ந்த தவிசின் அருகே (அவற்றை) வைத்துவிட்டுச் செல்ல; எண்ணம் கொள்வான் - சிந்தித்தற் பொருட்டு; பெருமகன் அமைச்சரோடு ஏறினான் - சீவகனும் மந்திரிகளுடன் கட்டிலில் அமர்ந்தான்.

விளக்கம் : காஞ்சனக் கவரி என்று பாடமாயின் பொற்காம்பிட்ட கவரி என்க. அடைப்பை - வெற்றிலைப்பை. படியகம் - படிக்கம்; காளாஞ்சி. கஞ்சனை - கலசப்பானை. கவரி - சாமரை. தவிசடுத்து வைத்து நீங்க என மாறுக. எண்ணங் கொள்ளல் - எண்ணித் துணிதல். ( 39 )

2141. உலந்தநா ளவர்க்குத் தோன்றா
தொளிக்குமீன் குளிக்குங் கற்பிற்
புலந்தவே னெடுங்கட் செவ்வாய்ப்
புதவிநாட் பயந்த நம்பி
சிலம்புநீர்க் கடலந் தானைச்
சீதத்தற் கரசு நாட்டிக்
குலந்தரு கொற்ற வேலான்
கொடிநகர் காக்க வென்றான்.

பொருள் : உலந்த நாளவர்க்குத் தோன்றாது - முடிந்த வாழ் நாளுடையவர்க்குத் தெரியாமல்; ஒளிக்கும் மீன் குளிக்கும் கற்பின் - மறையும் அருந்ததி என்னும் மீனும் தோற்குங் கற்பினையுடைய; வேல் புலந்த நெடுங்கண் செவ்வாய்ப் புதவி நாள் பயந்த நம்பி - வேலை வெறுத்த நீண்ட கண்களையும் செவ்வாயையும் உடைய புதவி என்னும் அரசி பெற்ற நம்பியாகிய; சிலம்பும் நீர்க் கடல் அம் தானைச் சீதத்தற்கு அரசு நாட்டி - ஒலிக்கும் நீரையுடைய கடல் போன்ற படைகளையுடைய சீதத்தனுக்கு அரசை நல்கி; குலம் தருகொற்ற வேலான் கொடிநகர் காக்க என்றான் - குலத்தைக் காக்கும் வெற்றி வேலானாகிய கோவிந்தன் நீ இந் நகரைக் காத்திடுக என்று பணித்தான்.

விளக்கம் : புதவி; கோவிந்தன் மனைவி. சீதத்தன்; கோவிந்தன் மகன். குலந்தருதல் - மக்களைப் பெற்றுக் குலத்தை வளர்த்தல். தான் அக் கடன் கழித்துப் போர் செய்து படக் கருதுதலின், அதற்கு அமைச்சர் உடன்படார் என்று, அவரை வினவாமல் தானே அரசளித்தான் : வீறு சால் புதல்வற் பெற்றனை யிவணர்க் - கருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப  (பதிற். 77) என்றாற் போல. ( 40 )

2142. மாற்றவ னொற்ற ரொற்றா
வகையினின் மறைய நம்பிக்
காற்றின் தோழர்க் கெல்லா
மணிகல மடிசி லாடை
வேற்றுமை யின்றி வேண்டுட்
டமைத்தன னருளி யிப்பா
லேற்றுரி முரச நாண
வெறிதிரை முழக்கிற் சொன்னான்.

பொருள் : மாற்றவன் ஒற்றர் ஒற்றா வகையினில் - பகைவன் ஒற்றர் ஆராயாத முறையிலே; மறைய நம்பிக்கு ஆற்றின தோழர்க் கெல்லாம் - மறைவாக, சீவகனுக்குத் துணையாகிய தோழர்கட்கெல்லாம்; வேண்டும் ஊட்டு அடிசில் ஆடை அணிகலம் வேற்றுமையின்றி அமைத்தனன் அருளி - தாம் தாம் விரும்பிய பொருள்களையுடைய உணவு உடை அணிகலம் முதலியவற்றைச் சீவகற்கும் அவர்கட்கும் வேறுபாடின்றி அமைத்தனனாகத் தலையளி செய்துவிட்டு; இப்பால் ஏற்றுரி முரசம் நாண எறிதிரை முழக்கில் சொன்னான் - இனி, வெற்றி கொண்ட ஏற்றின் உரிபோர்த்த முரசம் நாணுமாறு மோதும் அலையையுடைய கடல் முழக்குப் போல ஒரு மொழி கூறினான்.

விளக்கம் : வென்ற தன் பச்சை சீவாது போர்த்த - திண்பிணி முரசம் (புறநா. 288) என்றார் பிறரும். நீ கொன்ற சீவகன் தோழர்க்குக் கோவிந்தன் சிறப்புச் செய்தான் என்று ஒற்றர் கட்டியங்காரற்குக் கூறினால், மேல் உறவாகி அவனைக் கொலைசூழ்வது தவறும் என்று கருதி, மறையக் கொடுத்தான். சீவகன் வேறொரு வடிவமாக இருத்திலின், அவனை ஒற்றல் இயலாதென்பர். ( 41 )

2143. கட்டியங் கார னம்மைக்
காண்பதே கரும மாக
வொட்டித் தான் விடுத்த வோலை
யுளபொரு ளுரைமி னென்னத்
தொட்டுமேற் பொறியை நீக்கி
மன்னனைத் தொழுது தோன்ற
விட்டலர் நாகப் பைந்தார்
விரிசிகன் கூறு மன்றே.

பொருள் : கட்டியங்காரன் நம்மைக் காண்பதே கருமம் ஆக ஒட்டி - கட்டியங்காரன் நம் கருத்தறிதலே பொருளாக்கருதி; தான் விடுத்த ஓலை உள பொருள் உரைமின் என்ன - அவன் வரவிட்ட ஓலையில் உள்ள பொருளைக் கூறுமின் என்று அரசன் பணித்தவுடன்; தொட்டுமேல் பொறியை நீக்கி - ஓலையை எடுத்து மேலிட்டிருந்த இலச்சினையை நீக்கியபின்; மன்னனைத் தொழுது - வேந்தனை வணங்கி; விட்டு அலர் நாகப் பைந்தார் விரிசிகன் தோன்றக் கூறும் - முறுக்கு அவிழ்ந்து மலர்ந்த நாக மலர்மாலை யணிந்த விரிசிகன் என்பான் விளங்குமாறு படிக்கின்றான்.

விளக்கம் : கருமம் - குறிக்கோள் - ஒட்டி - துணிந்து, பொறி - இலச்சினை. நாகம் - ஒரு மரம்; ஈண்டு அதன் மலர்க்கு ஆகுபெயர்- விரசிகன் என்றும் பாடம். அன்று, ஏ : அசைகள். ( 42 )

2144. விதையத்தார் வேந்தன் காண்க
கட்டியங் கார னோலை
புதையவிப் பொழிலைப் போர்த்தோர்
பொய்ப்பழி பரந்த தென்மேற்
கதையெனக் கருதல் செய்யான்
மெய்யெனத் தானுங் கொண்டான்
சிதையவென் னெஞ்சம் போழ்ந்து
தெளிப்பினுந் தெளிநர் யாரே.

பொருள் : கட்டியங்காரன் ஓலை விதையத்தார் வேந்தன் காண்க - கட்டியங்காரன் ஓலையை விதைய நாட்டு மன்னன் காண்க; ஓர் பொய்ப்பழி இப்பொழிலைப் புதையப் போர்த்து என்மேற் பரந்தது - ஒரு பொய்ப் பழி இவ்வுலகில் உள்ளோர் அறிவைக் கெடுத்து என் மேற் கிடந்ததனை; தானும் கதை எனக் கருதல் செய்யான் மெய்யெனக் கொண்டான் - தானும் கதை யென்று எண்ணாதவனாகி மெய்யென்றே கொண்டான்; சிதைய என் நெஞ்சம் போழ்ந்து - இனி என் உயிர் கெடும்படி; என் உள்ளத்தைப் பிளந்து காட்டித்தெளிவித்தாலும் தெளிவார் இல்லை.

விளக்கம் : சச்சந்தன் அரச வுரிமையை எய்தக் கூடியவன் கோவிந்தனே ஆதலின், அவனை வரவழைத்து வஞ்சகமாகக் கொல்லக் கருதிக் கட்டியங்காரன் திருமுகம் விட்டான். உலகம் தன் கூற்றைத் தெளியா தெனினும்,. கோவிந்தன் அறிஞனாதலின் தெளிவான் என்று புகழ்ந்து தன் கருத்தை அறிவிப்பதாகக் கூறுகின்றான். ( 43 )

2145. படுமணிப் பைம்பொற் சூழிப் பகட்டின மிரியப் பாய்ந்து
கொடிநெடுந் தோக ணூறிக் கொய்யுளை மாக்கள் குத்தி
யிடுகொடி யணிந்த மார்ப ரிருவிசும் பேறச் சீறி
யடுகளிற் றசனி வேக மலமர வதனை நோனான்.

பொருள் : அடுகளிறு அசனி வேகம் - கொல்களிறாகிய அசனி வேகம்; படுமணிப் பைம்பொன் சூழிப் பகட்டினம் இரியப் பாய்ந்து - ஒலிக்கும் மணியையும் பொற்பட்டத்தையும் உடைய யானைத் திரள் ஓடும்படி பாய்ந்து, கொடிநெடுந் தேர்கள் நூறி - கொடியையுடைய உயர்ந்த தேர்களைப் பொடியாக்கி; கொய் உளை மாக்கள் குத்தி - கத்தரிக்கப்பட்ட பிடரி மயிரையுடைய புரவிக்களை குத்தி; இடு கொடி அணிந்த மார்பர் இருவிசும்பு ஏறச் சீறி - எழுது கொடியணிதற்குக் காரணமான மார்பையுடைய வீரர்கள் வானேறப் பிளிறி; அலமர அதனை நோனான் - அலைய, அதன் செயலைப் பொறாதவனாகி;

விளக்கம் : இப்பாட்டுக் குளகம். இதன் கண்ணும் அடுத்த செய்யுளினும், சச்சந்தன் சாவிற்குக் கட்டியங்காரன் பொய்க்காரணம் காட்டியபடி கூறப்படுகின்றது. அசனிவேகம் சச்சந்தனைக் கொன்றது; அப்பழி என் மேனின்றது என்பது கருத்து. ( 44 )

2146. நூற்றுவர் பாகர் தம்மைப்
பிளந்துயி ருண்ட தென்னு
மாற்றத்தைக் கேட்டுச் சென்று
மதக்களி றடக்கி மேற்கொண்
டாற்றலங் கந்து சோத்தி
யாப்புற வீக்கும் போழ்திற்
கூற்றென முழங்கி வீழ்த்துக்
கொல்லக்கோ லிளகிற் றன்றே.

பொருள் : நூற்றுவர் பாகர் தம்மைப் பிளந்து உயிர் உண்டது என்னும் மாற்றத்தைக் கேட்டு - (மேலும் அது) தான் ஏவிய பாகர் நூற்றுவரைப் பிளந்து கொன்றது என்னும் மொழியைக் கேட்டு; சென்று மத களிறு அடக்கி மேற்கொண்டு - தான் போய் அம் மத யானையை அடக்கி அதன்மேல் அமர்ந்து; ஆற்றல் அம் கந்து சேர்த்தி யாப்பு உற வீக்கும் போழ்தில் - திண்ணிய தூணிலே சேர்த்துத் திறமுறக் கட்டும்போது; கூற்று என முழங்கி வீழ்த்துக் கொல்ல - அசனிவேகம் கூற்றுவன் போலச் சீறி அரசனை வீழ்த்திக் கோறலின்; கோல் இளகிற்று - அரசன் பட்டான்.

விளக்கம் : கோல் இளகிற்று : மங்கல மரபு. பாகர் நூற்றுவர்தம்மை என மாறுக. சச்சந்தன் கேட்டென்க. கந்து - தறி. ( 45 )

2147. தனக்கியா னுயிரு மீவேன்
றான்வரப் பழியு நீங்கு
மெனக்கினி யிறைவன் றானே
யிருநிலக் கிழமை வேண்டி
நினைத்துத்தா னெடிதல் செல்லா
தென்சொலே தெளிந்து நொய்தாச்
சினக்களி யானை மன்னன்
வருகெனச் செப்பி னானே.

பொருள் : தனக்கு யான் உயிரும் ஈவேன் - கோவிந்தனுக்கு யான் உயிரையும் தருவேன்; தான்வரப் பழியும் நீங்கும் அவன் வரின் பழியும் விலகும்; எனக்கு இனி இறைவன் தானே - எனக்கு இனிமேல் அவனே அரசன்; இருநிலக் கிழமை நினைத்து வேண்டி - (ஆதலால்) பெருநில ஆட்சியை ஆராய்ந்து விரும்பி; தான் என் சொலே தெளிந்து - அவன் என் மொழியையே நம்பி : நெடிதல் செல்லாது நொய்துஆ - காலத்தை நீட்டியாமல் விரைவாக ; சினக்களி யானை மன்னன் வருக - சீற்றமுறும் களிற்றையுடைய அரசன் வருக; எனச் செப்பினான் - என்று விரிசிகன் படித்தான்.

விளக்கம் : வருக என்னும் அளவும் ஓலையில் எழுதியிருந்த வாசகம். நெடித்தல் என்பது நெடிதல் என விகாரப்பட்டது. உயிரும் ஈவேன் என்று ஊழ் கூறுவித்தது. ( 46 )

2148. ஓலையுட் பொருளைக் கேட்டே
யொள்ளெயி றிலங்க நக்குக்
காலனை யளியன் றானே
கையினால் விளிக்கு மென்னா
நூல்வலீ ரிவனைக் கொல்லு
நுண்மதிச் சூழ்ச்சி யீதே
போல்வதொன் றில்லை யென்றான்
புனைமணிப் பொன்செய் பூணான்.

பொருள் : ஓலையுள் பொருளைக் கேட்டு - அவ்வோலையில் உள்ள பொருளைக் கேட்டு; புனைமணிப் பொன்செய் பூணான் - மணிகளிழைத்துப் பொன்னாற் செய்யப்பெற்ற அணிபுனைந்த சீவகன்; ஒள்எயிறு இலங்க நக்கு - ஒள்ளிய பற்கள் விளங்க நகைத்து; அளியன் தானே காலனைக் கையினால் விளிக்கும் என்னா - இரங்கத்தக்கான் தானே கூற்றுவனைக் கையினாற் கூப்பிடுகின்றான் என்றெண்ணி; நூல் வலீர்! - நூலுணர்ந்த வர்களே!; இவனைக் கொல்லும் நுண்மதிச் சூழ்ச்சி ஈதேபோல்வது ஒன்று இல்லை என்றான் - இவனைக் கொல்கிற நுண்ணறிவினால் ஆராயும் சூழ்ச்சி இதனைப் போல்வது பிறிதொன்று இல்லை என்றனன்.

விளக்கம் : நட்பாய்ப் போதுதலை, மதியாற் சூழும் சூழ்ச்சி என்றனர்.  நகை - ஈண்டுச் சினம்பற்றி எழுந்தது. கட்டியங்காரன் பேதைமை பற்றியுமாம். கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் என்னுந் திருக்குறளையும் ஈண்டு நினைக. ( 47 )

2149. கள்ளத்தா னம்மைக் கொல்லக்
கருதினா னாமுந் தன்னைக்
கள்ளத்தா லுயிரை யுண்ணக்
கருதினே மிதனை யாரு
முள்ளத்தா லுமிழ வேண்டா
வுறுபடை வந்து கூட
வள்ளுவார் முரச மூதூ
ரறைகென வருளி னானே.

பொருள் : கள்ளத்தால் நம்மைக் கொல்லக் கருதினான் - கட்டியங்காரன் நம்மை வஞ்சகமாகக் கொல்ல நினைத்தான்; நாமும் தன்னைக் கள்ளத்தால் உயிரை உண்ணக் கருதினேம் - நாமும் அவனை வஞ்சகத்தால் உயிரை வாங்க நினைத்தோம்; இதனை யாரும் உள்ளத்தால் உமிழ வேண்டா - இதனை எவரும் உள்ளத்தினின்றும் வெளியிட வேண்டா; மூதூர் உறுபடை வந்து கூட - பழம்பதியிலே மிகுதியான படைகள் வந்து கூடுமாறு; வள்ளுவார் முரசம் அறைக என அருளினான் - வள்ளுவர்கள் முரசு அறைக என்று வேந்தன் அருளிச் செய்தான்.

விளக்கம் : வள்ளுவார்; பெயர்த்திரிசொல் என்பர் நச்சினார்க்கினியர். உள்ளத்தாற்பகைமைக் கருத்தை உமிழ வேண்டா என்றதனால் நட்பென முரசறைந்து வெளியிட்டுக் கூறும்படி மொழிந்தானாயிற்று. ( 48 )

2150. கட்டியங் கார னோடு
காவல னொருவ னானான்
விட்டுநீர் நெல்லும் பொன்னும்
வழங்குமின் விளைவ கூறி
னொட்டல னிறைவன் சொன்னீர்
நாநும வல்ல வென்னக்
கொட்டினான் றடங்கண் வள்வார்க்
குளிறிடி முரச மன்றே.

பொருள் : காவலன் கட்டியங்காரனோடு ஒருவன் ஆனான் - நம் வேந்தன் பகைமையை விட்டுக் கட்டியங்காரனோடு உறவாகினான்; விட்டு நீர் நெல்லும் பொன்னும் வழங்குமின் - (எனவே நீவிர் முன்னிருந்த பகையை) விட்டு நீரும் நெல்லும் பொன்னும் அந் நாட்டுடன் வழங்குவீராக; விளைவ கூறின் இறைவன் ஒட்டலன் - மேல் வருவன இவையென யாவரேனும் உரைத்தால் அரசன் ஒவ்வான்; சொன்னீர் நாநும அல்ல - அவ்வாறு மொழிந்தீராயின் நா நும்முடையன அல்ல; என்ன - என்று; தடம்கண் வள்வவார்க் குளிறு இடி முரசம் கொட்டினான் - பெரிய பக்கத்தினையும் இறுக்கிய வாரையுமுடைய. முழங்கும் இடியனைய ஒலியை உடைய முரசத்தை வள்ளுவன் அறைந்தான்.

விளக்கம் : சொன்னீர் : அறிவுடையார் அறிவிலார்க்கு இதனைக் கூறுவீராக என்று நச்சினார்க்கினியர் கூறுவர். இங்ஙனம் அரசன் ஆணை என்று முரசறைவோன் அறைந்தான். முரசறைவோன் கூற்றெனிற் பகைமையைக் கூறினானாம். ( 49 )

2151. விண்டவ ருடலங் கீறிச்
சுளித்துநின் றழலும் வேழ
மொண்கொடி யுருவத் திண்டே
ரொளிமயிர்ப் புரவி பண்ணி
வண்கழ லணிந்து மள்ளர்
வாள்வலம் பிடித்து நாளைத்
தெண்டிரைப் பரப்பு நாணத்
திருநகர்த் தொகுக வென்றான்.

பொருள் : மள்ளர் - வீரர்கள்; விண்டவர் உடலம் கீறிச் சுளித்து நின்று அழலும் வேழம் - பகைவர் உடலைப் பிளந்து சினந்து நின்று சீறும் வேழமும்; ஒண்கொடி உருவத் திண்தேர் - சிறந்த கொடியை அணிந்த அழகிய திண்ணிய தேரும்; ஒளி மயிர்ப் புரவி - விளங்கும் மயிரையுடைய குதிரையும் ஆகியவற்றை ; பண்ணி - பண்ணுறுத்தி; வண்கழல் அணிந்து - சிறந்த வீரக் கழலை அணிந்து ; வாள்வலம் பிடித்து - வாளை வலக்கையில் ஏந்தி; தெண்திரைப் பரப்பு நாண - தௌளிய அலைகளையுடைய கடலும் வெள்குமாறு; நாளைத் திருநகர்த் தொகுக என்றான் - நாளைக்கு நம் அழகிய நகரிலே திரள்க என்று முரசு அறைந்தான்.

விளக்கம் : விண்டவர் - பகைவர். உடலம் - உடல். சுளித்து - மாறுபட்டு. பண்ணி - பண்ணுறுத்தி; ஒப்பனைசெய்து. ( 50 )

2152. ஏற்றுரி போர்த்த வள்வா
ரிடிமுர சறைந்த பின்னாட்
காற்றெறி கடலிற் சங்கு
முழவமு முரசு மார்ப்பக்
கூற்றுடன் றனைய தானை
கொழுநில நெளிய வீண்டிப்
பாற்கடற் பரப்பின் வெள்வாட்
சுடரொளி பரந்த வன்றே.

பொருள் : ஏற்றுஉரி போர்த்த வள்வார் இடிமுரசு அறைந்த பின்நாள் - விடையின் தோலைப் போர்த்த இறுகிய வாரையுடைய, இடியென முழங்கும் முரசினை அறைந்த மற்றைநாள்; காற்று எறி கடலின் சங்கும் முழவமும் முரசும் ஆர்ப்ப - காற்றினால் மோதப்படும் கடலிலிருந்து கிடைத்த சங்கும் முழவமும் முரசும் ஒலிக்க; கூற்று உடன்ற அனைய தானை கொழுநிலம் நெளிய ஈண்டி - கூற்றுவன் சினந்தாற் போன்ற படை கொழுவிய நிலம் நெளியுமாறு கூடியதனால்; பாற்கடல் பரப்பின் வெள்வாள் சுடர் ஒளி பரந்த - பாற்கடலின் பரப்பைப்போல, வெண்மையான வாளின் சிறந்த ஒளி பரவின.

விளக்கம் : ஏற்றுரி - காளையின் தோல். இடிமுரசம் : வினைத்தொகை : உவமைத்தொகையுமாம். காற்றால் எறியப்பட்ட கடல் போல என்க. தானை - படை. வெள்ளிய வாட்படை பிறழ்தல் பாற்கடல் போல் தோன்றிற்று என்க. ( 51 )

2153. புதையிரு ளிரியப் பொங்கிக்
குங்குமக் கதிர்க ளோக்கி
யுதையத்தி னெற்றி சோந்த
வொண்சுடர்ப் பருதி போலச்
சுதையொளி மாடத் துச்சி
வெண்குடை நீழற் றோன்றி
விதையத்தார் வென்றி வேந்தன்
விழுப்படை காணு மன்றே.

பொருள் : புதை இருள் இரியப் பொங்கி - மிக்க இருள் கெடுமாறு பொங்கி; குங்குமக் கதிர்கள் ஓக்கி - செந்நிறக் கதிர்களை வீசி; உதையத்தின் நெற்றி சேர்ந்த - உதய மலையின் உச்சியிலே எழுந்த; ஒண்சுடர் பருதி போல - சிறந்த ஒளியை வீசும் ஞாயிறு போல; சுதை ஒளி மாடத்து உச்சி - வெண்மையான ஒளியையுடைய மாடத்தின் உச்சியிலே; வெண்குடை நீழல் - வெண்குடையின் நீழலிலே; விதையத்தார் வென்றி வேந்தன் தோன்றி - விதைய நாட்டு வென்றி மன்னன் எழுந்தருளி; விழுப்படை காணும் - தன் சிறந்த படையை நோக்கத் தொடங்கினான்.

விளக்கம் : புதையிருள் : வினைத்தொகை. இரிய - கெட்டோட, குங்குமம் - செந்நிறம். உதையம் - உதயகிரி. சுதை - வெண்சாந்தம். வேந்தன் - கோவிந்தன். விழுப்படை - சிறந்த படை. ( 52 )

வேறு

2154. அரும்பனைத் தடக்கை யபரகாத் திரம்வாய்
வாலெயி றைந்தினுங் கொல்வ
கருங்கடற் சங்குங் கறந்தவான் பாலுங்
கனற்றிய காலுகி ருடைய
பெரும்புலி முழக்கின் மாறெதிர் முழங்கிப்
பெருவரை கீண்டிடுந் திறல
திருந்தியே ழுறுப்புந் திண்ணிலந் தோய்வ
தீயுமிழ் தறுகணிற் சிறந்த.

பொருள் : அரும் பனைத் தடக்கை அபரகாத்திரம் வாய்வால் எயிறு ஐந்தினும் கொல்வ - அரிய பனை போன்ற பெரிய கையும், பின்காலும், வாயும் , வாலும், தந்தமும் என்னும் ஐந்தினுலும் கொல்வன; கருங்கடல் சங்கும் கறந்த ஆன்பாலும் கனற்றிய கால் உகிர் உடைய - கரிய கடலிலே உள்ள சங்கையும் பசுவின் பாலையும் வருத்திய கால் நகங்களை உடையன; பெரும்புலி முழக்கின் மாறு எதிர் முழங்கிப் பெருவரை கீண்டிடும் திறல - பெரிய புலி முழங்கினால் மாறுபட்டு எதிரே முழங்கி. உயர்ந்த மலையைப் பிளக்கும் வலியன; ஏழுறுப்பும் திருந்தித் திண்நிலம் தோய்வ - ஏழுறுப்புக்களும் அழகுற்றுத் திண்ணிய நிலத்திலே தோய்வன; தீ உமிழ் தறுகணின் சிறந்த - நெருப்பை உமிழும் அஞ்சாத கண்களையுடைய சிறப்பின;

விளக்கம் : இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர். ஏழும் திருந்தி என்க. ஏழுறுப்புக்களாவன : கால்கள் நான்கும், துதிக்கையும், வாலும், கோசமும், நச்சினார்க்கினியர், ஏழு முழமும் திருந்தி நிலம்தோயும் உறுப்புமூன்றும் (துதிக்கையும் வாலும் கோசமும்) நிலந்தோய்வன என்பர். ( 53 )

2155. கவிழ்மணிப் புடைய கண்ணிழ னாறிற்
கனன்றுதந் நிழலொடு மலைவ
வவிழ்புயன் மேக மனையமம் மதத்த
வறுபதிற் றறுபதா நாகம்
புகழ்பருந் தார்ப்பப் பூமதம் பொழிவா
னின்றன விராயிரங் கவுள்வண்
டிகழ்மதஞ் செறித்த விராயிரத் தைஞ்ஞா
றிளையவு மத்துணைக் களிறே.

பொருள் : கவிழ் மணிப்புடைய - கவிழ்ந்த மணிகளை இரு பக்கத்தினும் உடையன; கண் நிழல் நாறின் கனன்று தம் நிழலொடு மலைவ - தம் கண்களில் தம் நிழல் தோன்றின் சினந்து தம் நிழலுடன் மலைவன; அவிழ் புயல் மேகம் அனைய மும்மதத்த - சொரிகின்ற நீரையுடைய முகில் போன்ற மும்மதமுடையன; அறுபதிற்று அறுபதாம் நாகம் - (ஆகிய) மூவாயிரத்தறுநூறு யானைகள்; புகழ் பருந்து ஆர்ப்பப் பூமதம் பொழிவான் நின்றன இராயிரம் - புகழும் பருந்தும் ஒலிக்க மதம் பொழிதற்கு நின்றன இரண்டாயிரம் களிறுகள்; கவுள் வண்டு இகழ் மதம் செறித்த இராயிரத்து ஐஞ்ஞாறு - கவுளை வண்டு இகழும்படி மதம் அடைத்தன இரண்டாயிரத்து ஐஞ்ஞாறு - களிறுகள்; இளையவும் அத்துணைக் களிறு - களிற்றுக் கன்றுகளும் இரண்டாயிரத்தைஞ்ஞாறு.

விளக்கம் : ஆக யானை பதினாயிரத்தறுநூறு. கவிழ்மணி : வினைத்தொகை. நாறுதல் - தோன்றுதல். அவிழ்புயல் : வினைத்தொகை. நாகம் - யானை. புகழும் பருந்தும் ஆர்ப்ப என்க. பூமணக்கும் மதம் என்க. ( 54 )

2156. குந்தமே யயில்வாள் குனிசிலை மூன்றுங்
குறைவிலார் கூற்றொடும் பொருவா
ரந்தர மாறா யானைகொண் டேறப்
பறக்கெனிற் பறந்திடுந் திறலார்
முந்தமர் தம்முண் முழுமெயு மிரும்பு
மேய்ந்திட வெஞ்சமம் விளைத்தார்
கொந்தழ லஞ்சாக் குஞ்சர மிவர்ந்தார்
கோடியே விருத்தியா வுடையார்.

பொருள் : கொந்து அழல் அஞ்சாக் குஞ்சரம் இவர்ந்தார் - எரியும் தீக்கும் அஞ்சாத களிறுகளின் மேல் ஏறிச் செலுத்துவோர்; குந்தமே அயில்வாள் குனிசிலை மூன்றும் குறைவிலார் - எறிகோலும் கூரிய வாளும் வளைந்த வில்லும் ஆகிய மூன்றினும் சிறந்த பயிற்சியுடையார்; கூற்றொடும் பொருவார் - கூற்றுவனுடனும் போர் செய்யுந் திறலார்; அந்தரம் ஆறா யானை கொண்டு ஏறப் பறக்க எனின் பறந்திடும் திறலார் - வான வழியாக ஏறும் படி யானையைக் கொண்டு பறக்க என்னின் பறக்கும் ஆற்றலுடையார்; முந்து அமர் தம்முள் முழுமெயும் இரும்பு மேய்ந்திட வெம் சமம் விளைத்தார் - முற்செய்த போர்களிலே மெய்ம் முழுதும் இரும்பு மேயும்படி கொடிய போரை விளைத்தவர்; கோடியே விருத்தியா உடையார் - கோடி பொன்னை வாழ்க்கை ஊதியமாகக் கொண்டவர்.

விளக்கம் : யானை வீரரின் இயல் கூறியவாறு.  குந்தம் - ஒரு படைக்கலன், அயில் - கூர்மை, சிலை - வில். இம்மூன்று படைகளாற் செய்யும் போரின்கட் குறைவிலார் என்க. அந்தரம் - வானம், ஆறா - வழியாக, சமம் - போர், கொந்தழலும் எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. கோடி - ஒரு கோடிபொன். ( 55 )

2157. குங்கும நறுநீர் பந்திநின் றாடுங்
குதிரையா றாயிரத் திரட்டி
பொங்குவெண் மயிர்சூழ் பொற்படை பொலிந்த
வறுபதி னாயிரம் புரவி
வெங்கணை தவிர்ப்ப வெள்ளிவெண் படைய
வாய்விடி னிலவரை நில்லாப்
பைங்கதிர்க் கொட்டைக் கவரிசூழ்ந் தணிந்த
பகரினத் தொகையன பாய்மா.

பொருள் : பந்தி நின்று குங்கும நறுநீர் ஆடும் குதிரை ஆறாயிரத் திரட்டி - பந்தியில் நின்று நறிய குங்கும நீரை ஆடும் குதிரைகள் பன்னீராயிரம்; பொங்கு வெண்மயிர் சூழ் பொன்படை பொலிந்த அறுபதினாயிரம் புரவி - நெருங்கிய வெண்மயிர் சூழ்ந்தனவும் பொன்னாலாகிய கலனையுடையனவும் ஆகியவை அறுபதினாயிரம் குதிரைகள்; வெம் கணை தவிர்ப்ப - தம் மேல் இருந்து விடும் கணை பின்னிடச் செல்வனவும்; வெள்ளி வெண்படைய - வெள்ளியாலாகிய வெள்ளைக் கலனையுடையனவும்; வாய்விடின் நிலவரை நில்லா - வாயிலணிந்த கடிவாளத்தைத் தளர்த்தினாற் பறப்பனவும்; பைங்கதிர்க் கோட்டைக் கவரி சூழ்ந்து அணிந்த - புத்தொளி வீசும் குமிழையுடைய கவரியை நெற்றியில் அணிந்தனவும் ஆகிய ; பாய்மா பகரின் அத்தொகையான - குதிரைகளைக் கூறின் அறுபதினாயிரமே ஆகும்.

விளக்கம் : ஆகக் குதிரை நூறாயிரத்து முப்பத்தீராயிரம். ஆறாயிரத்தை இரட்டித்து அறுபதினாயிரத்தையும் இரட்டித்து ஒருங்கு கூட்டினால் நூறாயிரத்து முப்பத்தீராயிரம் வருவது காண்க. குங்குமங் கலந்த நீராடும் புரவிகளை நம்பிரான் என்பர். பந்தி - குதிரை கட்டுமிடம். படை - மேற்படுப்பது; இது குதிரையின் மேலிடும் தவிசுக்கு ஆயிற்று. ( 56 )

2158. வேய்நிறக் கரும்பின் வெண்ணிறப் பூம்போன்
மிடைந்தொளிர் குந்தமும் வாளுந்
தோநிலை யரவின் றோற்றமே போலுஞ்
சிலைகளும் பிறகளுந் துறைபோ
யூனமொன் றில்லா ருயர்குடிப் பிறந்தா
ராயிர மடுகளங் கண்டார்
பானிலாப் பூணார் படைத்தொழிற் கலிமாப்
பண்ணுறுத் தேறினா ரவரே.

பொருள் : வேய்நிறக் கரும்பின் வெண்ணிறப் பூப்போல் - மூங்கிலின் இயல்புடைய கரும்பின் வெண்ணிறமாகிய பூவைப் போல்; மிடைந்து ஒளிர் குந்தமும் வாளும் - நெருங்கி ஒளிரும் குந்தமும் வாளும்; தோம்நிலை அரவின் தோற்றமே போலும் சிலைகளும் - குற்றம் பொருந்திய பாம்பின் தோற்றம் போன்ற விற்களும்; பிறகளும் - பிறபடைகளும்; துறைபோய் ஊனம் ஒன்று இல்லார் - முற்றக் கற்றுக் குற்றஞ் சிறிதும் இல்லாதவராய்; உயர்குடிப் பிறந்தார் - சிறந்த மரபிலே தோன்றியவராய்; ஆயிரம் அடுகளம் கண்டார் - ஆயிரம் போர்க்களம் பார்த்தவராய்; பால் நிலாப் பூணார் - பாலனைய வெள்ளொளி தவழும் அணிகளையுடையராய்; அவர் படைத் தொழில் கலிமாப் பண் உறுத்து ஏறினார் - உள்ள அவ்வீரர்கள் அக் குதிரைகளைப் பண்ணுறுத்தி ஏறினவர்.

விளக்கம் : குதிரை வீரர்களின் இயல் கூறியவாறு. வேய் - மூங்கில். வேய்நிறக் கரும்பின் வெண்ணிறப்பூ என்புழி வேய் பூவிற்குவமமாகாமையின், அடுக்கிய தோற்றம் என்னும் குற்றமாகாமை உணர்க. தோம் - குற்றம், ஈண்டு வளைவு என்பதுபட நின்றது. உயர்குடி என்றது ஈண்டு உயர்ந்த மறக்குடி என்பதுபட நின்றது. ஆயிரம் அடுகளங் கண்டார் என்றது பயிற்சிமிகுதி குறித்து நின்றது. கலிமா - குதிரை.
( 57 )

வேறு

2159. தறுக ணாண்மைய தாமரை நிறத்தன தகைசான்
மறுவில் வான்குளம் புடையன மாளவத் தகத்த
பறையி னாலுவ படுசினை நாவலின் கனிபோற்
குறைவில் கோலத்த குளிர்புனற் சிந்துவின் கரைய.

பொருள் : மாளவத் தகத்த - மாளவ நாட்டுக் குதிரைகள், தறுகண் ஆண்மைய - அஞ்சாத ஆண்மையுடையன; தாமரை நிறத்தன - தாமரை போலும் நிறமுடையன; தகைசால் மறு இல் வான் குளம்பு உடையன - தகுதி பொருந்திய குற்றம் அற்ற வெண்ணிறக் குளம்புடையன; குளிர்புனல் சிந்துவின் கரைய - குளிர்ந்த நீரையுடைய சிந்துவின் கரையில் வாழ்வனவாகிய குதிரைகள்; பறையின் ஆலுவ - பறையென முழங்குவன; படுசினை நாவலின் கனிபோல் குறைவு இல் கோலத்த - நாவலின் பழம் போலக் குற்றம் அற்ற கோலமுடையன.

விளக்கம் : தறுகண் - அஞ்சாமை. தகை - அழகுமாம். மறுவு - குற்றம். வான்குளம்பு - வெள்ளிய குளம்பு. ஆலுவ - முழங்குவன நாவற்கனி - கருநிறத்திற்குவமை. தாமரை நிறமும் வெண்குளம்புமுடைய மாளவநாட்டுக் குதிரைகளும், பறைபோல முழங்குவனவும் நாவற்கனி போலும் நிறமுடையனவுமாகிய சிந்துநாட்டுக்குதிரைகளும் என்றவாறு. ( 58 )

2160. பார சூரவம் பல்லவ மெனும்பதிப் பிறந்த
வீர வாற்றல விளைகடுந் தேறலி னிறத்த
பாரிற் றோசெலிற் பழிபெரி துடைத்தென நாணிச்
சோரும் வார்புய றுளங்கவிண் புகுவன துரகம்.

பொருள் : பார சூரவம் பல்லவம் எனும் பதிப்பிறந்த துரகம் - பாரசூரவம் பல்லவம் என்னும் நகரங்களிலே பிறந்தனவாகிய குதிரைகள்; வீர ஆற்றல - வீரத்திற்குத் தக்க வலிமையுடையன; விளை கடுந் தேறலின் நிறத்த - விளையும் முதிர்ந்த கள்ளின் நிறமுடையன; பாரில் தேர் செலின் பழி பெரிது உடைத்தென நாணி - நிலத்திலே தேர் சென்றாற் பழி மிகவும் உடையது என்று எண்ணி வெட்கி; சோரும் வார் புயல் துளங்க விண்புகுவன - நீரைச் சொரிகின்ற பெரிய முகில் அசைய வானிற் புகுவன.

விளக்கம் : பாரசூரவம் - ஒரு நாடு. வீரம் ஆற்றுதலும் தேறல்நிறமும் உடைய பாரசூரவக் குதிரைகள் என்றவாறு. துரகம் - குதிரை. ( 59 )

2161. பீலி மாமயி லெருத்தெனப் பெருவனப் புடைய
மாலை மாரட்டத் தகத்தன வளரிளங் கிளியே
போலு மேனிய பொருகடற் கலத்தின்வந் திழிந்த
கோல நீர்ப்பவ ளக்குளம் புடையன குதிரை.

பொருள் : மாலை மாரட்டத்து அகத்தன - ஒழுங்கான மராட்டிரத்துள்ள குதிரைகள்; பீலி மாமயில் எருத்து எனப் பெருவனப்பு உடைய - தோகையையுடைய மயிலின் கழுத்துப் போலும் நிறமுடையன; பொருகடல் கலத்தின் வந்து இழிந்த குதிரை - கடலின் வழியே மரக் கலங்களில் வந்து இறங்கிய குதிரைகள்; வளர் இளங் கிளியே போலும் மேனிய - வளரும் இளங் கிளிகளின் நிறம்போலும் நிறமுடையன; கோலம் நீர்ப் பவளக் குளம்பு உடையன - அழகிய கடனீரிற்றோன்றும் பவளம் போலும் சிவந்த குளம்புகளை உடையன.

விளக்கம் : மயிற் கழுத்துப்போலும் நிறமுடைய மராட்டநாட்டுக் குதிரைகளும் என்றவாறு. கிளிநிறமும் பவளக்குளம்பும் உடையன வாய்க் கலத்தில் வந்திழிந்த குதிரைகளும் என்றவாறு. மராட்டிரம் என்பது செய்யுள் நோக்கி மாரட்டம் என வேறுபட்டு நின்றது. மாரட்டம் + அத்து + அகத்தன எனப் பிரித்து மாரட்டத்தின் இடத்தன வெனக் கொள்க. அத்து, சாரியை. ( 60 )

2162. இன்ன பொங்குளைப் புரவிபண் ணுறுத்தன வியறோ
பொன்னும் வெள்ளியு மணியினும் பொலிந்து வெண் மதியத்
தன்னை யூர்கொண்ட தகையன தொகைசொலி னறுநூ
றென்னு மீறுடை யிருபதி னாயிர மிறையே.

பொருள் : இறையே! - அரசே!; இன்ன பொங்கு உளைப்புரவி பண் உறுத்தன இயல் தேர் - இத் தன்மைய பொங்கும் உளையையுடைய புரவிகளாற் பண்ணுறுத்தப்பட்டன ஆகிய விளங்கும் தேர்கள்; பொன்னும் வெள்ளியும் மணியினும் பொலிந்து - பொன்னாலும் வெள்ளியினாலும் மணியினாலும் பொலிவுற்று; வெண்மதியம் தன்னை ஊர் கொண்ட தகையன - வெண் திங்களை ஊர்கோள் கொண்ட தன்மையன; தொகை சொலின் அறுநூறு என்னும் ஈறு உடை இருபதினாயிரம் எண்ணிக்கை கூறின் இருபதினாயிரத் தறுநூறு.

விளக்கம் : மதி குறட்டிற்கும்; ஊர் கோள் சூட்டிற்கும் உவமம் இன்ன - இத்தன்மையுடையன. உளை - பிடரிமயிர். இறை : விளி. ( 61 )

2163. நொச்சி மாமலர் நிறத்தன நொடிவரு முந்நீ
ருச்சி மாக்கதிர் போற்சுடு மொளிதிக ழயில்வா
ளெச்சத் தல்லவு மெறிபடை பயின்றுதம் மொன்னார்
நிச்சங் கூற்றினுக் கிடுபவர் தேர்மிசை யவரே.

பொருள் : தேர் மிசையவர் - அத் தேரில் உள்ள வீரர்கள் நொச்சி மாமலர் நிறத்தன நொடி வரும் முந்நீர் உச்சி மாக்கதிர் போற் சுடும் - புகரால் நொச்சி மலர் போலும் நிறத்தனவாய்; கூறற்குரிய கடலை உச்சியிலிருந்து சுடுகின்ற ஞாயிறுபோற் சுடுகின்ற; ஒளி திகழ் அயில்வாள் - ஒளியால் விளங்கும் கூரிய வாளையும்; எச்சத்து அல்லவும் எறிபடை பயின்று - கூறாமல் விட்ட பிற எறி படைகளையும் பழகி; தம் ஒன்னார் நிச்சம் கூற்றினுக்கு இடுபவர் - தம் பகைவரை உறுதியாகக் கூற்றுவனுக்குக் கொடுப்பவர்.

விளக்கம் : எச்சத்து நொடிவரும் என இயைப்பர் நச்சினார்க்கினியர். இந்த நான்கு பாட்டுக்களும் தேரையும் தேர்க்குதிரையையும் தேர் வீரரையும் பற்றிக் கூறின. ( 62 )

வேறு

2164. எயிற்றுப்படை யாண்மையினி
னிடிக்கும்புலி யொப்பார்
பயிற்றியவில் வாள்பணிக்கும்
வேலோடுடன் வல்லார்
துயிற்றியபல் கேள்வியினர்
தூற்றிக்கொளப் பட்டா
ரயிற்றுப்படை யார்கண்மத
யானைகத னறுப்பார்.

பொருள் : ஆண்மையினின் எயிற்றுப்படை இடிக்கும் புலி ஒப்பார் - தம் வீரத்தினால், எயிற்றுப்படையையுடைய முழங்கும் புலி போன்றவர் ; பயிற்றிய வில் வாள் பணிக்கும் வேலொடு உடன் வல்லார் - பழகிய வில்லையும் வாளையும் பிறர் தம் பக்கலிலே கற்கும்படி வேலோடு கூட வல்லவர்; துயிற்றிய பல்கேள்வியினர் - தம்மிடத்தே தங்கிய பல நூற் கேள்வியை உடையவர்; தூற்றிக் கொளப்பட்டார் - தெரிந்து கொள்ளப்பட்டவர்; அயில் துப்பு அடையார்கள் மத யானை கதன் அறுப்பார் - வேலின் வலியாலே பகைவரின் மதயானைகளின் சினத்தை அறுப்பவர்;

விளக்கம் : இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர். எயில் துப்பு அடை ஆண்மை - மதிலின் துப்பை அடையும் வீரம் எனினுமாம். எயிற்றப்படை - பல்லாகிய படைக்கலன். இடிக்கும் - முழங்கும். தூற்றுதல் - ஆராய்ந்து கொள்ளல். அயில் துப்பு அடை எனக் கண்ணழித்துக் கொள்க. ( 63 )

2165. காலனொடு சூழ்ந்தகடு நோய்களையு மொப்பா
ராலுங்கட றூர்த்தன்மலை யகழ்தலிவை வல்லார்
ஞாலமறி யாண்டொழிலர் நான்கிலக்க முள்ளார்
மேலுநும ராலுரிமை யுட்சிறப்புப் பெற்றார்.

பொருள் : காலனொடு சூழ்ந்த கடு நோய்களையும் ஒப்பார் - வருத்திக் கொல்வதிற் கூற்றுவனையும் அவனைச் சூழ்ந்த கொடிய நோய்களையும் போன்றவர்; ஆலும் கடல் தூர்த்தல் மலை அகழ்தல் இவை வல்லார் - ஒலிக்குங் கடலைத் தூர்த்தலும் மலையைத் தோண்டுதலும் ஆகிய இவற்றிலே வல்லவர்; ஞாலம் அறி ஆண்தொழிலர் நான்கு இலக்கம் உள்ளார் - உலகறிந்த வீரச் செயலினர் இவர்கள் நான்கு நூறாயிரம் எண்ணிக்கையினர்; மேலும் நுமரால் உரிமையுள் சிறப்புப் பெற்றார் - மற்றும், உம்மவரால் உரிமை பெற்ற சிறப்புடையார்.

விளக்கம் : இவர்கள் காலாட்படையினர். காலன் ஏவின இடத்தே சேர்ந்து அவன் கருதிய செயலை முடித்துக் கொடுத்தலின் நோய்கள் காலனுக்குப் படையாயின. ஆகவே அந்நோய்கள் இம்மறவர்க்கு உவமையாயின. ஆலுங்கடல் - முழங்குங் கடல். மலையகழ்க்குவனே கடல் தூர்க்குவனே (பட்டினப்பாலை) என்றார் பிறரும். ( 64 )

2166. சிங்கத்துரி போர்த்தசெழுங் கேடகமும் வாளும்
பொங்குமயில் வேலும்பொரு வில்லுமுடன் பரப்பி
மங்குலிடை மின்னுமதி யுஞ்சுடரும் போல
வெங்கட்டொழிற் கூற்றுமரண் சேரவிரிந் தன்றே.

பொருள் : சிங்கத்து உரி போர்த்த செழுங் கேடகமும் - சிங்கத்தின் தோலைப் போர்த்த நல்ல கேடகமும்; வாளும் பொங்கும் அயில் வேலும் பொரும் வில்லும் உடன் பரப்பி - வாளும் ஒளி பொங்கும் கூரிய வேலும் போருக்குரியி வில்லும் சேரப் பரப்பி; மங்குலிடை மின்னும் மதியும் சுடரும்போல - முகிலிடையில் மின்னும் பிறைத் திங்களும் ஞாயிறும் போல; வெங்கண் தொழில் கூற்றும் அரண் சேர விரிந்தன்று - கொடுந்தொழிலில் வல்ல கூற்றுவனும் தனக்கு ஓர் அரணை அடையும் படி விரிந்தது;

விளக்கம் : கேடகத்திற்கு ஞாயிறும், வாளிற்கும் வேலிற்கும் மின்னும், வில்லிற்குப் பிறையும் உவமை. ( 65 )

வேறு

2167. செம்பொ னீண்முடித் தேர்மன்னர் மன்னற்குப்
பைம்பொ னாழிதொட் டான்படை காட்டினா
னம்பொ னொண்கழ லானயி ராவணம்
வெம்ப வேறினன் வெல்கென வாழ்த்தினார்.

பொருள் : செம்பொன் நீள் முடித் தேர்மன்னர் மன்னற்கு - செம் பொன்னாலாகிய நீண்ட முடியை உடைய தேர்மன்னர்களின் மன்னனாகிய கோவிந்தனுக்கு; பைம்பொன் ஆழி தொட்டான் படை காட்டினான் - ஏனாதி ஆழியணிந்த படைத் தலைவன் (இவ்வாறு) படைகளைக் காட்டினான்; அம்பொன் ஒண் கழலான் அயிராவணம் வெம்ப ஏறினன் - (பிறகு) அழகிய சிறந்த பொற்கழலானாகிய கோவிந்தன் அயிராவணம் என்னும் யானை மீது கடுக ஏறினான்; வெல்க என வாழ்த்தினார் - (அப்போது) வெல்க! என்று எல்லோரும் வாழ்த்தினர்.

விளக்கம் : மன்னர் மன்னன் : கோவிந்தன் செம்பொன்னாழி என்றது ஏனாதிமோதிரத்தை. அயிராவணம் - கோவிந்தமன்னன் பட்டத்துயானை. வெம்ப - விரைந்து. ( 66 )

2168. சிறுவெண் சங்கு முரன்றன திண்முர
சறையு மாக்கடல் காரென வார்த்தன
நெறியி னல்கின புள்ளு நிமித்தமு
மிறைவன் கண்வல னாடிற் றியைந்தரோ.

பொருள் : சிறு வெண் சங்கு முரன்றன - சிறு வெண்மையான சங்குகள் ஒலித்தன; அறையும் மாக்கடல் கார் எனத் திண்முரசு ஆர்த்தன - ஒலிக்கும் பெரிய கடலெனவும் முகில் எனவும் திண்ணிய முரசுகள் முழங்கின! புள்ளும் நிமித்தமும் நெறியின் நல்கின - பறவைகளின் செலவும் ஒலியும் நிறைகுடம் முதலியனவும் நெறியிலே நன்மையை அறிவித்தன; இறைவன்கண் இயைந்து வலன் ஆடிற்று - அரசனுக்குக் கண் பொருத்தமாக வலப்பக்கத்திலே ஆடிற்று.

விளக்கம் : இயைந்து ஆடிற்று -விடாமல் ஆடியது எனினும் ஆம். ( 67 )

2169. மல்லல் யானைக் கறங்கு மணியொலி
யல்ல தைங்கதி மான்கொழுந் தாரொலி
கல்லெ னார்ப்பொலி மிக்கொளிர் வாண்மினிற்
செல்லு மாக்கடல் போன்றது சேனையே.

பொருள் : மல்லல் யானைக் கறங்கும் மணி ஒலி - வளம் பொருந்திய யானையிடம் ஒலிக்கும் மணியொலியும்; அல்லது - அதுவன்றி; ஐங்கதி மான் கொழும் தார் ஒலி - ஐங்கதியாகச் செல்லும் குதிரையின் கழுத்திற் கட்டிய தாரிலுள்ள கிண்கிணி ஒலியும்; கல் என் ஆர்ப் பொலி - கல்லெனப் படைகளிடையே எழும் ஆரவார ஒலியும்; மிக்கு - மிகுந்து; ஒளிர் வாள் மினின் - விளங்கும் வாள் ஒளியுடன்; செல்லும் மாக்கடல் போன்றது சேனை - செல்கின்ற பெரிய கடல் போன்றது படையின் செலவு.

விளக்கம் : ஐங்கதி : விக்கிதம் வற்கிதம் வெல்லும் உபகண்டம் - மத்திமம் சாரியோடு ஐந்து. ( 68 )

2170. மாலை மாமதி வெண்குடை மல்கிய
கோவக் குஞ்சி நிழற்குளிர் பிச்சமுஞ்
சோலை யாய்ச்சொரி மும்மதத் தானிலம்
பாலை போய்மரு தம்பயந் திட்டதே.

பொருள் : மாலை மாமதி வெண்குடை - மாலையில் தோன்றும் முழுமதி போன்ற வெண்குடையாலும் ; மல்கிய கோலக் குஞ்சி - நிறைந்த அழகிய சிற்றணுக்கன் என்னும் விருதினாலும்; நிழல் குளிர் பிச்சமும் - நிழலைத் தரும் குளிர்ந்த பீலிக் குடையாலும்; சோலையாய் - சோலையாகி; சொரி மும்மதத்தால் - யானை பெய்யும் மும்மதத்தினால்; நிலம் பாலை போய் மருதம் பயந்திட்டது - நிலம் பாலைத் தன்மை நீங்கி மருதநிலத் தன்மை உண்டாக்கிற்று

விளக்கம் : மாலைமாமதி - மாலைப்பொழுதிற் றோன்றும் முழுத் திங்கள். குஞ்சி - சிற்றணுக்கன் என்னும் விருது. பிச்சம் - பீலிக் குடை. குடைமுதலிய இவற்றால் சோலையாய் என்க. பாலை - பாலைத் தன்மை நிலம் பாலைபோய் மருதம் பயந்திட்டது என்க. ( 69 )

2171. மன்றன் மாமயி லார்த்தெழ மானினங்
கன்றி னோடு கலங்கின காற்பெய
வென்றி வேற்படை யஞ்சி வனத்தொடு
குன்றெ லாங்குடி போவன போன்றவே.

பொருள் : மன்றல் மாமயில் ஆர்த்து எழ - பெடையுடன் கூடும் மயில்கள் ஆர்த்தெழுத லானும்; மானினம் கன்றினோடு கலங்கின காற்பெய - மான் திரள் கன்றினுடன் கலங்கி ஓடுதலாலும்; வென்றி வேற்படை அஞ்சி - வெற்றியுறும் வேலேந்திய இப்படையைக் கண்டு நடுங்கி; வனத்தொடு குன்று எலாம் குடிபோவன போன்ற - காடும் மலையும் குடிபோவனபோல இருந்தன.

விளக்கம் : மன்றல் - மணம். பெடையை மணந்த மயில் என்க. கலங்கின : முற்றெச்சம். காற்பெய்தலாவது - ஓடுதல். ( 70 )

வேறு

2172. படுகண் முழவி னிமிழருவி
வரையுங் காடும் பலபோகி
யிடுமண் முழவி னிசையோவா
வேமாங் கதநாட் டெய்தியபி
னெடுவெண் ணிலவி னெற்றிதோய்
நிழலார் செம்பொற் புரிசையே
கடிமண் காவல் கருதினான்
கோயி லாகக் கருதினான்.

பொருள் : படுகண் முழவின் இமிழ் அருவி வரையும் காடும் பல போகி - ஒலிக்கும் கண்ணையுடைய முழவைப்போல ஒலிக்கும் அருவி அசையும் மலைகள் பலவற்றையும் காடுகள் பலவற்றையும் கடந்து; மண் இடு முழவின் இசை ஓவா - மண் இட்ட முழவின் ஒலி மாறாத; ஏமாங்கத நாடு எய்திய பின் - ஏமாங்கத நாட்டை அடைந்த பிறகு; நெடுவெண் நிலவின் நெற்றி தோய் நிழல் ஆர் செம்பொன் புரிசையே - முழு வெண்மதியின் உச்சியில் தோயும் ஒளி பொருந்திய பொன் மதிலையே, கடிமண் காவல் கருதினான் கோயில் ஆகக் கருதினான் - சீவகன் புதுமையாகப் பூமியை யரசுபுரியும்படி செய்யக் கருதிய கோவிந்தன் தன் இருப்பிடமாகக் கொண்டான்.

விளக்கம் : கோவிந்தன் ஏமாங்கதத்திலே இராசமாபுரநகரின் மதிற்புறத்திலே தங்கினான். ( 71 )

2173. போக மகளிர் வலக்கண்க
டுடித்த பொல்லாக் கனாக்கண்டா
ராக மன்னற் கொளிமழுங்கிற்
றஞ்சத் தக்க குரலினாற்
கூகை கோயிற் பகற்குழறக்
கொற்ற முரசம் பாடவிந்து
மாக நெய்த்தோர் சொரிந்தெங்கு
மண்ணும் விண்ணு மதிர்ந்தவே.

பொருள் : போக மகளிர் வலக்கண்கள் துடித்த - கட்டியங்காரனுடைய காமக் கிழத்தியரின் வலக்கண்கள் துடித்தன; பொல்லாக் கனாக் கண்டார் - அவர்கள் தீய கனவுகளைக் கண்டனர்; மன்னற்கு ஆகம் ஒளி மழுங்கிற்று - கட்டியங்காரனுக்கு மேனி ஒளி மயங்கியது; கூகை கோயில் பகல் அஞ்சத்தக்க குரலினாற் குழற - கூகையானது, அரண்மனையிலே பகற் காலத்திலே அஞ்சத் தக்க குரலினாற் குழறிக் கூவ; கொற்றம் முரசம். பாடுஅவிந்து - வெற்றி முரசம் ஒலி அவிய; மாகம் நெய்த்தோர் சொரிந்து - வானத்தினின்றும் குருதி மழை பெய்ய; மண்ணும் விண்ணும் எங்கும் அதிர்ந்த - நிலமும் வானமும் அந்நாடெங்கும் அதிர்ந்தன.

விளக்கம் : கோவிந்தன் மகிற் புறத்தே தங்கியபின் கட்டியங்காரனுக்குற்ற தீய நிமித்தங்கள் கூறப்பட்டன. நிலமதிர்தல், நிலநடுக்கம்; வானதிர்தல் : முகிலின்றி யிடித்தல். ( 72 )

2174. கூற்றம் வந்து புறத்திறுத்த
தறியான் கொழும்பொ னுலகாள்வான்
வீற்றிங் கிருந்தே னெனமகிழ்ந்து
வென்றி வேழ மிருநூறுங்
காற்றிற் பரிக்குந் தோநூறுங்
கடுங்கா லிவுளி யாயிரமும்
போற்றி விடுத்தான் புனைசெம்பொற்
படையே யணிந்து புனைபூணான்.

பொருள் : கூற்றம் வந்து புறத்து இறுத்தது அறியான் - கூற்றுவன் வந்து மதிலின் வெளியே தங்கியதை அறியாத கட்டியங்காரன்; கொழும் பொன் உலகு ஆள்வான் இங்கு வீற்றிருந்தேன் என மகிழ்ந்து - வளமிகும் செல்வம் நிறைந்த உலகை ஆள இங்கு வீற்றிருக்கின்றேன் என்று களித்து; புனை பூணான் - அணிபுனைந்த அவன், வென்றி வேழம் இருநூறும் - வெற்றிக் களிறுகள் இருநூறும்; காற்றின் பரிக்கும் தேர் நூறும் - காற்றென விரையும் தேர்கள் நூறும் ; கடுங்காவல் இவுளி ஆயிரமும் - விரையுங் கால்களையுடைய குதிரைகள் ஆயிரமும்; புனை செம் பொன் படையே அணிந்து - அழகிய பொற்படைகளாலே புனைவித்து ; போற்றி விடுத்தான் - தன்னைப் புகழ்ந்து விடுத்தான்.

விளக்கம் : கோவிந்தனையுங் கொல்லக் கருதியதனால் இங்கு வீற்றிருந்தேன் என்று மகிழ்ந்தான். கூற்றம்: சீவகன், தன்நினைவுமுற்றியதென்று தன்னைப் போற்றினான். கொழும்பொன் உலகு ஆள்வாள் என்பதைக் கட்டியங்காரனுக்குப் பெயராக்கிப், பட்டுப் போய்ப் பொன்னுலகு ஆள்வதற்குரியான் என்றும் பொருள் கூறலாம். ( 73 )

2175. மன்ன னாங்கோர் மதவேழம்
வாரி மணாள னென்பதூஉ
மின்னங் கொடித்தோ விசயமும்
புரவி பவன வேகமும்
பொன்னிற புனைந்து தான்போக்க
நிகழ்வ தோரான் மகிழ்வெய்தி
முன்யான் விட்ட வினக்களிற்றி
னிரட்டி விடுத்தா னெனப்புகழ்ந்தான்.

பொருள் : மன்னன் - கோவிந்தன்; ஆங்கு ஓர் மத வேழம் வாரி மணாளன் என்பதூஉம் - வேழங்களில் ஒரு மத யானை வாரி மணாளன் என்பதையும்; மின்னும் கொடித்தேர் விசயமும் - ஒளிரும் கொடிபறக்கும் விசயம் என்னும் பெயரையுடைய தேரையும்; புரவி பவன வேகமும் - பவன வேகம் என்னும் குதிரையையும்; பொன்னின் புனைந்து - பொன்னால் அணிந்து; தான் போக்க - இவன் விடுத்தவுடன்; நிகழ்வது ஓரான் மகிழ்வு எய்தி - நிகழ்வதை அறியாத கட்டியங்காரன் மகிழ்வடைந்து; முன் யான் விட்ட - இனக் களிற்றின் இரட்டி விடுத்தான் எனப் புகழ்ந்தான் - முன்னர் யான் போக விடுத்த களிறு முதலியவற்றின் இரட்டித்த சிறப்புடையவற்றை வரவிட்டான் என்று புகழ்ந்தான்.

விளக்கம் : நின் பெரும்படை என் சிறுபடைக்கு நிகர்க்கும் என்பது தோன்ற வரவிட்டான் என்று உணராமையின், நிகழ்வதோரான் என்றார். ( 74 )

2176. வீங்குநீர் விதையத் தார்கோன்
கட்டியங் காரன் றன்னோ
டாங்கவ னொருவ னாகி
யன்பெனு மயில்கொள் வாளால்
வாங்கிக்கொண் டுயிரை யுண்பான்
வஞ்சத்தாற் சூழ்ந்த வண்ண
மோங்குநீ ரோத வேலிக்
குணரயா முரைத்து மன்றே.

பொருள் : வீங்குநீர் விதையத்தார் கோன் - பெருநீர்ப் பரப்புடைய விதைய நாட்டு மன்னனாகிய கோவிந்தன்; கட்டியங்காரன் தன்னோடு கட்டியங்காரனோடு; ஆங்கு அவன் ஒருவனாகி - கூடியிருந்து; அன்பு எனும் அயில்கொள் வாளால் - அன்பாகிய கூரிய வாளினால்; உயிரை வாங்கிக்கொண்டு உண்பான் - உயிரை அகப்படுத்திப் பருகுதற்கு; வஞ்சத்தால் சூழ்ந்த வண்ணம் - வஞ்சத்தினாலே ஆராய்ந்த செய்தியை; ஓங்கு நீர் ஓத வேலிக்கு உணர யாம் உரைத்தும் - பெருகும் நீரையுடைய கடலை வேலியாகக் கொண்ட உலகிற்கு விளங்க யாம் கூறுவோம்.

விளக்கம் : அன்பு : சீவகன்; உவமையாகு பெயர். வீங்கு நீர் : வினைத்தொகை. விதையத்தார்கோள் : கோவிந்தன். ஆங்கு - அவ்விடத்தே. ஒருவனாதல் - கூடுதல், அயில் - கூர்மை. உண்பான்; வினையெச்சம் ஓதவேலி - உலகம்: அன்மொழித்தொகை. உரைத்தும் : தன்மைப்பன்மை; இது புலவர் கூற்று. ( 75 )

2177. பெருமகன் காதற் பாவைப் பித்திகைப் பிணையன் மாலை
யொருமக ணோக்கி னாரை யுயிரோடும் போக டாத
திருமக ளவட்குப் பாலா னருந்திரி பன்றி யெய்த
வருமக னாகு மென்றாங் கணிமுர சறைவித் தானே.

பொருள் : பெருமகன் காதல் பாவை - கோவிந்தனின் அன்புக்குரிய பாவையாகிய; பித்திகைப் பிணையல் மாலை ஒரு மகள் - குருக்கத்தியாற் பிணைந்த மாலையை யுடைய ஒப்பற்ற மகள்; நோக்கினாரை உயிரொடும் போகவிடாத-தன்னை நோக்கினாரை உயிருடன் போக விடாத; திருமகள்-திருமகள் போன்றாள்; அவட்குப் பாலான் - அவளுக்குக் கணவனாகத் தக்கான்; அருந் திரிபின்றி எய்த அருமகன் ஆகும் - அரிய திரிபன்றியை அடித்து வீழ்த்திய அரிய மகனாவான்; என்று ஆங்கு அணி முரசு அறைவித்தான் - என்று அங்கெல்லாம் அழகிய முரசைச் சாற்றுவித்தான்.

விளக்கம் : பெருமகன் என்றது கோவிந்தனை. பாவை : இலக்கணை. பித்திகைப் பிணையல் - பிச்சி மலர்மாலை. போகொடாத என்றும் பாடம். திருமகள் : உவமவாகுபெயர். பாலான் - ஊழ்வகையாற் கணவன் ஆகுமவன். திரிபன்றி - பன்றி வடிவமுடையதொரு பொறி. திரிபன்றி எய்தவனுக்கு இலக்கணை மனைவியாவாள் என்றவாறு. ( 76 )

2178. ஆய்மதக் களிறு திண்டே ரணிமணிப் புரவி யம்பொற்
காய்கதிர்ச் சிவிகை செற்றிக் கலந்த வைநுரைக ளாகத்
தோய்மழை யுலக வெள்ளந்தொன்னகர்த் தொக்க தேபோ
லாய்முடி யரச வெள்ள மணிநக ரீண்டிற் றன்றே.

பொருள் : தோய் மழை உலக வெள்ளம் தொல் நகர்த் தொக்கதே போல் - செறிந்த நீரையுடைய, உலகைக் கொள்ளும் வெள்ளம் பழமையான அந்நகரிலே கூடியதைப்போல; ஆய்முடி அரச வெள்ளம் - அழகிய முடியையுடைய அரசரின் வெள்ளம்; ஆய் மதக் களிறு திண்தேர் அணிமணிப் புரவி அம் பொன்காய் கதிர்ச் சிவிகை செற்றி - ஆராய்ந்த மத யானையும் திண்ணிய தேரும் அழகிய மணிகள் ஒலிக்கும் புரவியும் பொன்னாலாகிய ஒளி விடுங் கதிர்களையுடைய சிவிகையும் ஆகியவற்றை நெருக்கி; கலந்தவை நுரைகளாக - கலந்தவற்றை நுரைகளாகக் கொண்டு, அணிநகர் ஈண்டிற்று - அழகிய நகரிலே கூடியது.

விளக்கம் : செற்றி - நெருக்கி. தோய்மழை : வினைத்தொகை; உலகத்தை அழிக்கும் ஊழிவெள்ளம் என்க. தொன்னகர் - ஈண்டு இராசமாபுரம். ( 77 )

2179. நல்லவள் வனப்பு வாங்க
நகைமணி மாலை மார்பர்
வில்லன்றே யுவனிப் பாரும்
வெங்கணை திருத்து வாரும்
சொல்லுமி னெமக்கு மாங்கோர்
சிலைதொட நாளென் பாரும்
பல்சரம் வழங்கு வாரும்
பரிவுகொள் பவரு மானார்.

பொருள் : நல்லவள் வனப்பு வாங்க - இலக்கணையின் அழகு தமது மனத்தைக் கவர்தலால் ; நகை மணிமாலை மார்பர் - ஒளி பொருந்திய மணிமாலை அணிந்த மார்பாகிய அவ்வரசர்கள்; அன்றே வில் உவனிப்பாரும் - அப்போதே வில்லை எய்யத் தொடங்குவாரும்; வெங்கணை திருத்துவாரும் - கொடிய அம்புகளைச் செம்மைப்படுத்துவாரும் ; எமக்கும் ஆங்கு ஓர் சிலைதொட நாள் சொல்லுமின் என்பாரும் - எங்கட்கும் அவ்விடத்தே ஒப்பற்ற அவ்வில்லைத் தொட நாள் கூறுமின் என்பாரும்; பல்சரம் வழங்குவாரும் - பல அம்புகளை விடுப்பாரும்; பரிவு கொள்பவரும் ஆனார் - இவற்றை அறியால் வருந்துவாரும் ஆயினார்.

விளக்கம் : வனப்பு வாங்க - அழகு இழுக்க என்றும் கூறலாம். நல்லவள் - ஈண்டிலக்கணை. வனப்பு - அழகு. நகை - ஒளி. உவனித்தல் குறிபார்த்து எய்தல். நாட்சொல்லுமின் என்று கணிகளைக் கேட்பாரும் என்பது கருத்து. ( 78 )

2180. பிறையெயிற் றெரிகட் பேழ்வாய்ப்
பெருமயிர்ப் பைம்பொற் பன்றி
யறையெனத் திரியு மாய்பொற்
பூமியி னிறைந்து மன்ன
ருறுகணை யொன்றும் வில்லு
முடன்பிடித் துருவ நேமிப்
பொறிதிரி வதனை நோக்கிப்
பூமுடி துளக்கி நின்றார்.

பொருள் : பிறை எயிற்று - பிறை மதியனைய பற்களையும்; எரிகண் - எரியும் கண்ணையும்; பேழ்வாய் - பிளந்த வாயையும்; பெரு மயிர் - பெரிய மயிரையும் உடைய; பைம் பொன் பன்றி - பொன்னாலாகிய பன்றி; அறை எனத் திரியும் ஆய் பொன் பூமியின் - என்னைக் கொல் என்று கூறித் திரியும் அந்தப் பொன்னிலத்தே; மன்னர் நிறைந்து - அரசர்கள் நிறைந்து; உறுகணை ஒன்றும் வில்லும் உடன் பிடித்து - உற்ற அம்பு ஒன்றையும் வில்லையும் சேரப்பற்றி; உருவ நேமிப் பொறி திரிவதனை நோக்கி - அழகிய ஆழியினுள்ளே பன்றி திரிவதைப் பார்த்து; பூ முடி துளக்கி நின்றார் - அழகிய முடியை அசைத்து நின்றனர்.
 
விளக்கம் : பிறை - திரிபன்றியின் எயிற்றிற்குவமை. எரிகண் : வினைத்தொகை. பேழ் - பெரிய. அறை - அறைதல். அடித்தல் - கொல்லுதல். அதன் அருமை நோக்கி முடிதுளக்கினர் என்க. அறை, பத்திராபனம் என்பர் நச்சினார்க்கினியர்; அஃதாவது, தனது ஆக்கத்தை விளம்புதல். ( 79 )

2181. ஏந்தெழி லாகஞ் சாந்தி னிடுகொடி யெழுதிக் காதிற்
காய்ந்தெரி செம்போற் றோடுங் கனமணிக் குழையு மின்ன
வேந்தருள் வினிதை வேந்தன் வெஞ்சிலை தளர வாங்கி
யாய்ந்தபொற் பன்றி நெற்றி யருந்துக ளார்ப்ப வெய்தான்.

பொருள் : வேந்தருள் வினிதை வேந்தன் - அவ்வரசரில் வினிதையின் அரசன்; ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடுகொடி எழுதி - நிமிர்ந்த அழகிய தன்மார்பிலே சாந்தினாலே கொடியாக எழுதி; காதில் காய்ந்து எரி செம்பொன் தோடும் கனமணிக் குழையும் மின்ன -காதுகளில் அழன்று ஒளிவிடும் பொன் தோடும் மணிக் குழையும் விளங்க; வெஞ்சிலை தளர வாங்கி - கொடிய வில்லைத் தளர வளைத்து, ஆய்ந்த பொன் பன்றி நெற்றி அருந்துகள் ஆர்ப்ப எய்தான் - அழகிய அப் பொற் பன்றியின் நெற்றியிலே அம்பு பட்டுத் துகளுண்டாக அடித்தான்;

விளக்கம் : வினிதை - ஒருநாடு. தளர - நன்கு வளைய. அருந்துகள் - நுண்டுகள். ( 80 )

2182. குடர்தொடர் குருதிக் கோட்டுக்
குஞ்சர நகரத் தார்கோன்
சுடர்நுதற் பட்ட மின்னச்
சுரும்பிமிர் கண்ணி சிந்த
வடர்கதிர்ப் பைம்பொற் பூணு
மாரமு மகலத் தொல்கப்
படர்சிலை குழைய வாங்கிப்
பன்றியைப் பதைப்ப வெய்தான்.

பொருள் : குடர்தொடர் குருதிக் கோட்டுக் குஞ்சர நகரத்தார் கோன் - குடரைப் பிணித்த குருதிக் கொம்பினையுடைய அத்தினபுர மன்னன்; சுடர்நுதல் பட்டம் மின்ன - ஒளிரும் நெற்றியிலே பட்டம் மின்னவும்; சுரும்பு இமிர் கண்ணி சிந்த - வண்டுகள் முரலும் கண்ணி சிதறவும்; அடர்கதிர்ப் பைம்பொன் பூணும் - செறிந்த கதிரையுடைய பொன்னணியும், ஆரமும் அகலத்து ஒல்க - மாலையும் மார்பில் அசைய; படர்சிலை குழைய வாங்கி துன்பம் ஊட்டும் வில் குழைய வளைத்து; பன்றியைப் பதைப்ப எய்தான் - பன்றி அசைய அடித்தான்.

விளக்கம் : குஞ்சரம் என்ற பெயர்க்கு அடையாகக், குடர்தொடர் குருதிக்கோடு வந்தது; நகரத்திற்கு அன்று. ( 81 )

2183. வார்மதுத் துளிக்கு மாலை
மணிமுடித் தொடுத்து நாலக்
கார்மதங் கடந்த வண்கைக்
காம்பிலிக் காவன் மன்ன
னோமதக் கேழ லெய்வா
னேறலும் பொறியி னேறுண்
டார்மதக் களிற்று வேந்தர்க்
கருநகை யாக வீழ்ந்தான்.

(இதன் பொருள்.) கார்மதம் கடந்த வண்கைக் காம்பிலி காவல் மன்ன - முகிலின் செருக்கை அடக்கிய கொடைக்கையனான காம்பிலி நாட்டுக் காவல் வேந்தன்; வார் மதுத் துளிக்கும் மாலை மணிமுடி தொடுத்து நால - மிகுதியாகத் தேன் துளிக்கும் மாலை மணிமுடியிலிருந்து தொங்கும்படி; ஏர்மதக் கேழல் எய்வான் ஏறலும் - அழகிய செருக்கையுடைய பன்றியை எய்வதற்கு விரைந்து ஆழியின்மேல் ஏறினவுடன்; பொறியின் ஏறுண்டு - அதன் விசையினாலே தாக்கப்பட்டு; ஆர்மதக் களிற்று வேந்தர்க்கு அருநகையாக வீழ்ந்தான் - நிறைந்த மதமுடைய யானை மன்னர்க்குப் பெருநகைப்புண்டாக வீழ்ந்தான்.

விளக்கம் : வார்மது : வினைத்தொகை. நால - தூங்க. கொடையினால் காரின் மதங்கடந்த. காம்பிலி - ஒருநாடு. கேழல் - பன்றி. எய்வான் : வினையெச்சம். பொறி - இயந்திரம். ஒருநகை என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம் என்று கருதவிடனுளது. (82)

2184. முலைவட்டப் பூணு முத்து
முள்கலிற் கிழிந்து பொல்லா
விலைவட்டத் தாம மார்பிற்
கோசலத் திறைவ னெய்த
குலைவட்டக் கருதி யம்பு
வானின்மேற் பூச லுய்ப்பான்
சிலைவட்ட நீங்கி விண்மேற்
செவ்வனே யெழுந்த தன்றே.

பொருள் : முலைவட்டப் பூணும் முத்தும் முள்கலின் கிழிந்து - மங்கையர் முலையிடத்து வளைந்த பூணும் முத்தும் படுதலின் பூக் கிழிந்து; பொல்லா இலைவட்டத் தாமமார்பின் - அழகு சிதைந்த இலைகலந்த வளைந்த மாலையணிந்த மார்பினையுடைய; கோசலத்து இறைவன் - கோசல நாட்டு மன்னன்; எய்த குலைவட்டக் குருதி அம்பு - விட்ட குதையினையுடைய குருதி தோய்ந்த அம்பு; சிலைவட்டம் நீங்கி - வில் வளைவிலிருந்து வெளிப்பட்டு; வானின்மேல் பூசல் உய்ப்பான் - வானிடத்தே போர் செய்வதற்கு; விண்மேல் செவ்வனே எழுந்தது - வானை நோக்கி நேரே எழுந்தது.

விளக்கம் : குறிதப்பி வானிற் சென்றது என்க. மங்கையரைத் தழுவும்போது முத்தும் பூணும் தன் மார்பிலே முழுகுவதாற் கிழிந்த மலர்மாலையான். குலைவட்டம் - அம்பிற்குதை. உய்ப்பான். பான் : விகுதிபெற்ற வினையெச்சம். இஃது உய்ப்பதற்கு எனப் பொருள்படும். பூசல் போர். அன்று, ஏ : அசைகள். ( 83 )

2185. ஊடிய மடந்தை போல
வுறுசிலை வாங்க வாரா
தாடெழு வனைய திண்டோ
ளவந்திய னதனை நோனா
னாடெழுந் தார்ப்ப மற்றந்
நன்சிலை முறித்திட் டம்பை
வாடினன் பிடித்து நின்றான்
மண்மகன் போல நின்றான்.

பொருள் : ஆடி எழுஅனைய திண்தோள் அவந்தியன் - வெற்றியுடைய கணையமரம்போன்ற திண்ணிய தோளையுடைய அவந்தி மன்னன்; உறுசிலை ஊடிய மடந்தைபோல வாங்க வாராது - தன்சிலை ஊடிய மங்கைபோல வளைக்க வளையாததனால்; அதனை நோனான் - அதனைப்பொறானாகி; நாடு எழுந்து ஆர்ப்ப - நாடு ஆரவாரிக்க; அந் நன்சிலை முறித்திட்டு - அந்த அழகிய வில்லை முறித்து; அம்பை பிடித்து வாடினன் நின்றான் - அம்பைக் கையிலேந்திச் சோர்வுற்று நின்றவன்; மணமகன் போல நின்றான் மணமகனைப் போல் காணப்பட்டான்.

விளக்கம் : வாடினன் : முற்றெச்சம். பிடித்து நின்றான் - நின்றான் : வினையாலணையும் பெயர். பின்னது வினைமுற்று. நோனான் : முற்றெச்சம். ( 84 )
 
2186. பில்கித்தே னொழுகுங் கோதைப்
பிறர்மனை யாள்கட் சென்ற
வுள்ளத்தை யுணர்வின் மிக்கா
னொழித்திடப் பெயர்ந்த தேபோன்
மல்லனீர் மகத ராசன்
றுரந்தகோன் மருள வோடிப்
புல்லியப் பொறியை மோந்து
புறக்கொடுத் திட்ட தன்றே.

பொருள் : தேன் பில்கி ஒழுகும் கோதைப் பிற மனையாள் கண் சென்ற - தேன் துளித்து வடியும் மாலையணிந்த பிறன் மனையாளிடம் போன; உள்ளத்தை உணர்வின் மிக்கான் ஒழித்திடப் பெயர்ந்ததேபோல் - மனத்தை அறிவிற் சிறந்தவன் மீட்க அது மீண்டாற்போல; மல்லல் நீர் மகதராசன் துரந்த கோல் - வளமிகுந்த நீர் செறிந்த மகத நாட்டு மன்னன் விட்ட அம்பு; மருள ஓடி அப் பொறியைப் புல்லி மோந்து - கண்டோர்
இது படுமென்று மயங்கும்படி ஓடி அப் பொறியைப் பொருந்தித் தீண்டி; புறக் கொடுத்திட்டது - மீண்டு போயிற்று.

விளக்கம் : தேன்பில்கி யொழுகும் என மாறுக. உணர்வின் மிக்கான் - அறிவு மிக்கவன். மல்லல் - வளம். மகதம் - ஒருநாடு. கோல் - கண்டோர் மருள என்க. பொறி - திரிபன்றி. ( 85 )

2187. தென்வரை பொதியி லார
மகிலொடு தேய்த்த தேய்வை
மன்வரை யகலத் தப்பி
மணிவடந் திருவில் வீச
மின்னென் விட்ட கோலை
விழுங்கக்கண் டழுங்கி வேர்த்துக்
கன்மலிந் திலங்கு திண்டோட்
கலிங்கர்கோன் மெலிந்து மீண்டான்.

பொருள் : கல் மலிந்து இலங்கு திண்தோள் - கல்லெனத் திண்மை மிகுந்து விளங்குந் திண்ணிய தோளையுடைய; கலிங்கர் கோன் - கலிங்க மன்னன்; தென்வரைப் பொதியில் ஆரம் அகிலொடு தேய்த்த தேய்வை - தென் மலையாகிய பொதியத்தின் சந்தனத்தையும் அகிலையும் தேய்த்த குழம்பை; மன்வரை அகலத்து அப்பி - பொருந்திய மலைபோன்ற மார்பிலே அப்பி; மணிவடம் திருவில் வீச - மணியாலான வடம் வானவில்லென ஒளிவிட; மின் என விட்ட கோலை விழுங்கக் கண்டு - மின் போல எய்த அம்பைப் பொறி விழுங்கலைப் பார்த்து; அழுங்கி வேர்த்து மெலிந்து மீண்டான் - வருந்தி வியர்த்துச் சோர்ந்து திரும்பினான்.

விளக்கம் : தென்வரையாகிய பொதியில் என்க. ஆரம் - சந்தனம். தேய்வை - குழம்பு. கலிங்கர்கோன் தான் விட்ட கோலை விழுங்கக் கண்டு அழுங்கி வேர்த்து மெலிந்து மீண்டான் என்க. கலிங்கம் - ஒரு நாடு. ( 86 )

2188. கன்மழைப் பொற்குன்
றேந்திக் கணநிரை யன்றுகாத்து
மன்னுயி ரின்று காக்கும்
வாரண வாசி மன்னன்
மின்னிழை சுடர வாங்கி
விட்டகோ லுற்று றாதாய்
மன்னுயிர் நடுங்க நாணி
மண்புக்கு மறைந்த தன்றே.

பொருள் : அன்று கன்மழைப் பொன் குன்று ஏந்திக் கணநிரை காத்து-முற்காலத்தில் கல்மழையைத் தடுக்க அழகிய மலையைக் குடையாக ஏந்தி ஆனிரையைக் காப்பாற்றி; இன்று மன் உயிர்காக்கும்-இக்காலத்தில் உயிர்க் காவல் செய்கின்ற; வாரணவாசி மன்னன் - காசி வேந்தன்; மின் இழை சுடர வாங்கி விட்ட கோல் - ஒளிரும் அணிகள் விளங்க வில்லை வளைத்து விட்ட அம்பு; உற்று உறாதாய் - சிறிது பொருந்திப் பெரிதும் பொருந்தாததாய்; நாணி - நாணுற்று; மன்உயிர் நடுங்க - (தம்மேல் விழுமோ என்று) உயிர்கள் நடுங்குமாறு; மண் புக்கு மறைந்தது - மண்ணிற் புகுந்து மறைந்தது.

விளக்கம் : இதுவாரணவாசி மன்னனை திருமாலொடு ஒப்பித்தது. உற்றுறாதாய் - பட்டும் படாததாய். உடையான் நாணத்தை உடைமை மேல் ஏற்றிக் கூறினர். ( 87 )

2189. எரிகதிர்ப் பைம்பொற் சுண்ண
மிலங்கமெய்ம் முழுது மப்பிப்
புரிகழ லணிந்த நோன்றாட்
போதன புரத்து வேந்த
னரிதினிற் றிகிரி யேறித்
திரிந்துகண் சுழன்று சோர்ந்து
விரிகதிர்க் கடவுள் போல
வெறுநிலத் தொலிப்ப வீழ்ந்தான்.

பொருள் : எரிகதிர்ப் பைம்பொன் சுண்ணம் மெய்ம்முழுதும் இலங்க அப்பி - விளங்கும் ஒளியையுடைய பொற்சுண்ணத்தை உடம்பு முழுதும் விளங்கப் பூசி; புரிகழல் அணிந்த நோன்தான் - கழலைக் கட்டிய வலிய கால்களையுடைய; போதன புரத்து வேந்தன் - போதன நகர மன்னன்; அரிதினில் திகிரி ஏறி - அரிதின் முயன்று ஆழிமீது ஏறி; திரிந்து கண் சுழன்று சோர்ந்து - அது திரிதலின் கண் சுழன்று சோர்வுற்று; விரிகதிர்க்கடவுள்போல - ஞாயிறுபோல; வெறுநிலத்து ஒலிப்ப வீழ்ந்தான் - வெறு நிலத்திலே பலரும் ஆரவாரிக்க வீழ்ந்தான்.

விளக்கம் : அப்பி - பூசி. புரிகழல் - கட்டிய கழல். நோன்றாள் - வலிய கால். திகிரி - ஆண்டுச் சுழலும் சக்கரம். திரிந்து - திரிதலான். கதிர்க்கடவுள் - ஞாயிறு. ( 88 )

2190. மலையச்செஞ் சாந்து முந்நீர்
வலம்புரி யீன்ற முத்து
மிலைவைத்த கோதை நல்லா
ரிளமுலைப் பொறியு மார்ந்து
சிலைவைத்த மார்பிற் றென்னன்
றிருமணிப் பன்றி நோக்கித்
தலைவைத்த தம்பு தானுந்
தரணிமேற் பாதம் வைத்தான்.

பொருள் : மலையச் செஞ்சாந்தும் முந்நீர் வலம்புரி ஈன்ற முத்தும் - பொதியில் செஞ்சாந்தும், கடலில் வலம்புரிச் சங்கு தந்த முத்தும்; இலை வைத்த கோதை நல்லார் இளமுலைப் பொறியும் ஆர்ந்து - இலையிடையிட்ட மலர் மாலையணிந்த மங்கையரின் இளமுலைச் சுவடும் நிறைந்து; சிலை வைத்த மார்பின் தென்னன் - மலையை உவமையாக வைத்த மார்பினையுடைய பாண்டியன்; திருமணிப் பன்றி நோக்கி - அழகிய மணிகள் இழைத்த பன்றியைப் பார்த்துச் சென்று; அம்பு தலைவைத்தது - அம்பு பட்டது; தானும் தரணிமேல் பாதம் வைத்தான் - அவனும் (ஆழியின் மேல் நிற்றலாற்றாமல்) நிலமிசை அடியை ஊன்றினான்.

விளக்கம் : பாண்டி நாட்டிற் சிறந்த மலையச்சாந்தமும் முத்தும் கூறியவாறு காண்க. ( 89 )

2191. விற்றிறல் விசய னென்பான்
வெங்கணை செவிட்டி நோக்கி
யொற்றுபு திருத்திக் கைம்மே
லுருட்டுபு நேமி சோந்தாங்
குற்றதன் சிலையின் வாய்ப்பெய்
துடுவமை பகழி வாங்க
விற்றுவின் முறிந்து போயிற்
றிமைப்பினி னிலங்கித் திட்டான்.

பொருள் : வில்திறல் விசயன் என்பான் - வில்லேந்திய திறலையுடைய விசயன் எனப்படுவோன்; வெம்கணை செவிட்டி நோக்கி - தன் கொடிய அம்பை ஒருக்கடித்து நோக்கி; கைமேல் ஒற்றுபு திருத்தி உருட்டுபு - இடக்கையின்மேல் அமுக்கித் திருத்தி உருட்டியவாறு; நேமி சேர்ந்து - ஆழியின்மேலே குதித்து ; உற்ற தன் சிலையின் வாய்ப்பெய்து - பொருந்திய தன் வில்லினிடத்தே சேர்த்து; உடு அமை பகழி வாங்க - சிறகமைந்த அப்பகழியை இழுத்தானாக; வில் இற்று முறிந்து போயிற்று - வில் இரண்டாக ஒடிந்து போயிற்று; இமைப்பினில் இலங்கித் திட்டான் - நொடியளவிலே குதித்திட்டான்.

விளக்கம் : வில்வித்தையில் ஆற்றல் மிக்க விசயன் என்க. செவிட்டி நோக்கி - ஒருக்கடித்துப் பார்த்து. ஒருக்கணித்து என்பர் இக்காலத்தார்  உருட்டுபு-உருட்டி. நேமி - சக்கரப்பொறி. உடு - சிறகு. இலங்கித்தல் - குதித்தல். (லங்கநம் - குதித்துப் பாய்தல்.) (90)

2192. குண்டல மிலங்க வாங்கிக்
குனிசிலை யுறையி னீக்கிக்
கொண்டவன் கொழும்பொற் றாரு
மாரமு மிளிர வேறிக்
கண்டுகோ னிறைய வாங்கிக்
காதுற மறித லோடும்
விண்டுநா ணற்ற தாங்கே
விசயனும் வீக்க மற்றான்.

பொருள் : அவன் குண்டலம் இலங்க குனிசிலை வாங்கி - அவன் குண்டலம் விளங்கும்படி சேமவில்லை வாங்கி; உறையின் நீக்கிக் கொண்டு - உறையினின்றும் நீக்கி எடுத்துக் கொண்டு; கொழும்பொன் தாரும் ஆரமும் மிளிர - வளவிய பொன் மாலையும் முத்துமாலையும் பிறழ; ஏறி - ஆழியின்மீது ஏறி; கண்டு - பன்றி மூன்றுங் கூடுங் காலத்தைக் கண்டு; கோல் நிறைய வாங்கி - அம்பினை நன்றாக இழுத்தலாலே; காது உறமறிதலோடும் - அது காதிலே செல்ல மறிகின்ற அளவிலே; நாண் விண்டு அற்றது - நாண் முறுக்கு நீங்கி அறுந்தது; விசயனும் வீக்கம் அற்றான் - அவ்வளவிலே எய்யும் கருத்தைக் கைவிட்ட விசயனும் தன் பெருமையிழந்தான்.

விளக்கம் : விட்டு என்பது விண்டு என விகாரமுற்றது. சீவகனிடத்தே கற்றலின், எய்தற்குரியனாகிய இவற்கு ஊழ் தடையாயிற்று. ( 91 )

2193. உளைவனப் பிருந்த மான்றே
ரொளிமுடி மன்ன ரெல்லாம்
வலைவனப் பிருந்த தோளாள்
வருமுலைப் போகம் வேண்டி
விளைதவப் பெருமை யோரார்
விற்றிறன் மயங்கி யாருங்
களைகலார் பொறியை யாங்கோ
ராறுநாள் கழிந்த வன்றே.

பொருள் : உளை வனப்பு இருந்த மான்தேர் ஒளிமுடி மன்னர் எல்லாம் - உளையின் அழகு தங்கிய புரவி பூட்டிய தேரையுடைய முடிமன்னர்கள் யாவரும்; வளைவனப்பு இருந்த தோளாள் வருமுலைப் போகம் வேண்டி - வேயின் அழகு தங்கிய தோளையுடைய இலக்கணையின் வளரும் முலையின்பத்தை விரும்பி; விளைதவப் பெருமை ஓரார் - விளையும் தவப் பெருமை தமக்கில்லையென அறியாராய்; யாரும் வில்திறல் மயங்கி - எல்லோரும் வில் வலிமை முதலியன கலங்குதலின்; பொறியைக் களைகலார் - பொறியைக் களையாராக; ஆங்கு ஒர் ஆறுநாள் கழிந்த - ஆங்கே ஆறு நாட்கள் கழிவுற்றன.

விளக்கம் : உளைவனப்பு - பிடரிமயிரின் அழகு. வருமுலை : வினைத்தொகை. போகம் - நுகர்ச்சி. நன்மை விளைதற்குக் காரணமான தவத்தின் பெருமை என்க. மயங்கி - மயங்க. ( 92 )

வேறு

2194. பனைக்கை யானை மன்னர்
பணியப் பைம்பொன் முடியிற்
கனைக்குஞ் சுரும்பார் மாலை
கமழ மதுவுந் தேனு
நனைக்குங் கழலோன் சிறுவ
னாம வெள்வேல் வலவ
னினைக்க லாகா வகையா
னேரா ருயிர்மே லெழுந்தான்.

பொருள் : பனைக்கை யானை மன்னர் பணிய - பனைபோலுந் துதிக்கையையுடைய யானையையுடைய வேந்தர்கள் வணங்குதலால்; பைம்பொன் முடியில் கனைக்கும் சுரும்பும் தேனும் ஆர்மாலை கமழ - அம் மன்னரின் பொன் முடியிலே முரலும் சுரும்புகளும் தேனும் நிறைந்த மலர் மாலைகள் மணங்கமழ; மது நனைக்குங் கழலோன் சிறுவன் - தேன் நனைக்குங் கழலையுடையோன் ஆகிய சச்சந்தனின் மகன்; நாம வெள்வேல் வலவன் - அச்சுறுத்தும் வெள்ளிய வேலேந்திய வென்றியன்; நினைக்கல் ஆகா வகையால் நேரார் உயிர்மேல் எழுந்தான் - அவர் நினைக்க ஒண்ணாத வஞ்சனையாலே பகைவர் உயிரைக் கொள்ள எழுந்தான்.

விளக்கம் : மதுவும் என்பதிலுள்ள உம்மையைச், சுரும்பும் என அதனுடன் சேர்க்க. மதுவுந் தேனும், என்னுந் தொடரில், தேனும் என்ற சொல்லை மாற்றிச், சுரும்பும் தேனும் என இயைக்க. ( 93 )

2195. காரின் முழங்குங் களிறுங்
கடலின் முழங்குந் தேரும்
போரின் முழங்கும் புரவிக்
கடலும் புகைவாட் கடலுஞ்
சீரின் முழங்கு முரசு
மலறுஞ் சிறுவெண் சங்கு
நீரின் முழங்க முழங்கு
நீல யானை யிவர்ந்தான்.

பொருள் : காரின் முழங்கும் களிறும் - முகிலெனப் பிளிறும் யானையும்; கடலின் முழங்கும் தேரும் - கடல்போல் ஆரவாரிக்கும் தேரும்; போரின் முழங்கும் புரவிக் கடலும் - போரென முழங்கும் குதிரைக் கடலும்; புகை வாள் கடலும் - சினவும் வாளேந்திய காலாட்படைக் கடலும்; சீரின் முழங்கும் முரசும் - சிறப்புடன் முழங்கும் முரசும்; அலறும் சிறு வெண்சங்கும் - ஒலிக்கும் சிறிய வெண் சங்கும்; நீரின் முழங்க முழங்கும் நீல யானை இவர்ந்தான் - நீர்மையுடன் முழங்க, அவன் பிளிறும் கரிய யானையின் மீது ஏறினான்.

விளக்கம் : முன்னின்ற இரண்டு இன்னும் உவமப் பொருபோரின் : இன் : ஏது ; சீரின் - சீருடன்.  ( 94 )

2196. கல்லார் மணிப்பூண் மார்பிற்
காம னிவனே யென்ன
வில்லார் கடலந் தானை
வேந்தர் குழாத்துட் டோன்றப்
புல்லான் கண்ணி னோக்கிப்
புலிகாண் கலையிற் புலம்பி
யொல்லா னொல்லா னாகி
யுயிர்போ யிருந்தான் மாதோ.

பொருள் : கல்ஆர் மணிப்பூண் மார்பின் காமன் இவனே என்ன - கல்லிழைத்த மணியணிகள் புனைந்த மார்பையுடைய காமன் இவனே என்றுகூற; வில்ஆர் கடல் அம்தானை வேந்தர் குழாத்துள் தோன்றி - வில்லேந்திய கடலைப் போன்ற படையையுடைய வேந்தரின் குழுவிலே தோன்றியவுடன்; புல்லான் கண்ணின் நோக்கி - பகைவனான கட்டியங்காரன் பார்த்து; புலிகாண் கலையின் புலம்பி - புலியைக் கண்ட கலைபோலப் புலம்பி; ஒல்லான் ஒல்லான் ஆகி - தான் நிற்கும் முறையை அறியாத அவன் நிலைகெட்டவனாகி; உயிர்போய் இருந்தான் - உயிரிழந்தவன் போலானான்.

விளக்கம் : கல் - மணி. மணிப்பூண் என்பது பெயர்மாத்திரை, புல்லான் - பகைவன். கலை - மான். ஒல்லான் இரண்டனுள் முன்னையது முறையிலே பொருந்தாதவன், ஏனையது நெஞ்சம் பொருந்தாதவன் என்க. உயிர்போனவன் போன்றிருந்தான் என்க. ( 95 )

2197. புலியாப் புறுத்திக் கொண்டேன்
போக்கி விட்ட பிழைப்பும்
வலியார் திரடோண் மதனன்
னவனைப் பிழைத்த பிழைப்பு
கலியு மென்னை நலியு
மென்னக் களிற்றி னுச்சி
யிலையார் கடகத் தடக்கை
புடைத்து மெய்சோர்ந் திருந்தான்.

பொருள் : புலி யாப்புறுத்திக் கொண்டேன் போக்கிவிட்ட பிழைப்பும் - புலியைக் கைப்பற்றிய யான் அதனை வாலுருவிப் போகவிட்ட தவறும்; வலியார் திரள்தோள் மதனன் அவனைப் பிழைத்த பிழைப்பும் - ஆற்றல் சான்ற திரண்ட தோளையுடைய மதனன் சீவகனை விட்டுவிட்ட தவறும்; என்னை நலியும் நலியும் என்ன - என்னை வருத்தும் வருத்தும் என்று எண்ணி; களிற்றின் உச்சி - களிற்றின் தலைமீது; இலைஆர் கடகம் தடக்கை புடைத்து - இலை வடிவம் பொருந்திய கடகம் அணிந்த கையினால் தாக்கி; மெய் சோர்ந்து இருந்தான் - உடல் தளர்ந்து இருந்தான்.

விளக்கம் : யாப்புறுத்திக் கொண்டேன் என்றது, அநங்கமாலை. கூத்திற் சீவகன் தனியே வந்தமை கருதி. வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே (வில்லி. பா. சூது. 265). ( 96 )

2198. மைபூத் தலர்ந்த மழைக்கண்
மாழை மானோ நோக்கிற்
கொய்பூங் கோதை மடவார்
கொற்றங் கொள்கென் றேத்தப்
பெய்பூங் கழலான் வேழத்
திழிந்து பிறைபோற் குலாய
செய்பூண் சிலைநா ணெறிந்தான்
சேரார் நாளுக் கனவே.

பொருள் : மைபூத்து அலர்ந்த மழைக்கண் மாழை மான் நோக்கின் - மை அழகு பெற்று மலர்ந்த மழைக்கண்ணால் இளமை பொருந்திய மானை நிகர்க்கும் பார்வையையும்; கொய் பூங்கோதை மடவார் - கொய்து தொடுத்த மலர்க் கோதையையும் உடைய மங்கையர்; கொற்றம் கொள்க! என்று ஏத்த - வெற்றி பெறுக எனப் புகழ; பெய்பூங் கழலான் வேழத்து இழிந்து - பூங்கழலணிந்த சீவகன் வேழத்தினின்றும் இறங்கி; பிறைபோல குலாய செய்பூண் சிலைநாண் எறிந்தான் - பிறையைப்போல் வளைந்த, பூண்கட்டிய வில்லின் நாணைத் தட்டி ஒலியெழுப்பினான்; சேரார் நாள் உக்கன - பகைவரின் வாழ்நாட்கள் உதிர்ந்தன.

விளக்கம் : குலாய சிலை, செய்யப்பட்ட சிலை, நாண்பூண்ட சிலை எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். பிள்ளைகளையும் கட்டியங்காரனையும் சேரக் கோறலின் சேரார் என்றார். ( 97 )

வேறு

2199. கனிபடு மொழியி னாடன்
காரிகை கவற்ற வந்து
குனிசிலை தோற்ற மன்னர்
கொங்குகொப் புளிக்கு நீலப்
பனிமலர்க் காடு போன்றார்
படர்சிலை தொடாத வேந்த
ரினிதினின் மலர்ந்த வேரார்
தாமரைக் காடு போன்றார்.

பொருள் : கனிபடு மொழியினாள் தன் காரிகை கவற்ற - கனியனைய இனிய மொழியாளின் அழகு (கேள்வியால்) வருத்துதலினாலே; வந்து குனிசிலை தோற்ற மன்னர் - வந்து வளைந்த வில்வலிமை யிழந்த மன்னர்கள்; கொங்கு கொப்புளிக்குங் பனி நீலமலர்க்காடு போன்றார் - தேனை உமிழும் குளிர்ந்த நீலமலர்ச் செறிவைப் போன்றனர்; படர்சிலை தொடாத வேந்தர் - துன்பந் தரும் அவ்வில்லைத் தொடாத மன்னர்கள்; இனிதினின் மலர்ந்த ஏர் ஆர் தாமரைக் காடு போன்றார் - இனிமையாக மலர்ந்த எழுச்சி நிறைந்த தாமரையின் நெருக்கத்தைப் போன்றனர்.

விளக்கம் : சீவகனைக் கண்ட மன்னர் நிலை கூறியவாறு. வில்லைத் தொட்ட மன்னர் வாடினர்; வில்லைத் தொடாத மன்னர் மகிழ்ந்தனர். ( 98 )

2200. போர்த்தகல் விசும்பில் வந்து
பொறித்திரி பன்றி மூன்று
நீர்த்தகப் புணர்ந்த போதி
னெடுந்தகை மூன்று மற்றுச்
சூர்த்துடன் வீழ நோக்கிச்
சுடுசரஞ் சிதற வல்லா
னோர்த்தொன்றே புணர்ப்ப நாடி
யொருபகல் காறு நின்றான்.

பொருள் : விசும்பில் போர்த்தகல் பொறித்திரி பன்றி மூன்றும் வந்து - வானிலே, போருக்குத் தக்கவையான, பொறியாகிய திரிபன்றி மூன்றும் வந்து; நீர்த்தகப் புணர்ந்த போதில் - நீர்மை பொருந்தக் கூடிய காலத்தில்; மூன்றும் அற்றுச் சூர்த்து உடன்வீழ - மூன்றும் அறுபட்டுச் சுழன்று சேர விழுமாறு ஒன்றே புணர்ப்ப நாடி ஓர்த்து நோக்கி - அவை மூன்றும் ஒன்றாகும்படி சேருங் காலத்தைக் கூர்ந்து நோக்கி; சுடுசரம் சிதற வல்லான் நெடுந்தகை - சுடுகணைகளை வீச வல்லவனாகிய சீவகன்; ஒருபகல் காறும் நின்றான் - ஒரு முழுத்த நேரம்வரை நின்றான்.

விளக்கம் : போருக்குத் தகுதலையுடைய பன்றி என்றது ஒன்று இடந்திரிய ஒன்று வலந்திரிகின்ற மாறுபாட்டினை. இவள் ஆழிமிசைக்குப் புற நிற்குங் காலத்து அவையும் ஒன்றாம். ஆதலின், ஒன்றே புணர்ப்ப என்றார். ( 99 )

2201. பொறியின்மே லேற றேற்றா
னாணினாற் போதல் செய்யா
னெறியின்வில் லூன்றி நிற்ப
நிழன்மணிப் பன்றி யற்று
மறியுமோ வென்று முன்னே
மணிமுடி சிதறி வீழ்ந்த
செறிகழன் மன்னர் நக்குத்
தீயத்தீ விளைத்துக் கொண்டார்.

பொருள் : பொறியின்மேல் ஏறல் தேற்றான் - ஆழியின் மேல் ஏறலையும் அறியானாய்; நாணினால் போதல் செய்யான் - வெட்கத்தினால் திரும்பி வருதலையும் செய்யானாய்; நெறியின் வில் ஊன்றி நிற்ப - ஒழுங்காக வில்லூன்றி நின்ற அளவிலே; நிழல்மணிப் பன்றி அற்று மறியுமோ என்று - ஒளியுறு மணிகள் இழைத்த பன்றி அற்று வீழுமோ என்று, முன்னே மணிமுடி சிதறி வீழ்ந்த செறிகழல் மன்னர் நக்கு - முன்னர் இச் செயலிலே மணிமுடி சிதறுண்டு வீழ்ந்த கட்டிய கழலையுடைய மன்னர்கள் நகைத்து; தீயத் தீ விளைத்துக் கொண்டார் - தாங்களே தீயுமாறு நெருப்பை விளைத்துக் கொண்டனர்.

விளக்கம் : நெறியின் என்றார் அத் தொழிலுக்குப் பொருந்த நின்றநிலை தோன்ற. ( 100 )

2202. சிரற்றலை மணிகள் வேய்ந்த
திருந்துபொற் றிகிரிச் செம்பொ
னுரற்றலை யுருவப் பன்றி
யிடம்வலந் திரிய நம்பன்
விரற்றலைப் புட்டில் வீக்கி
வெஞ்சிலை கணையோ டேந்திக்
குரற்றலை வண்டு பொங்கக்
குப்புற்று நேமி சேர்ந்தான்.

பொருள் : திருந்து பொன் திகிரி - அழகிய பொன்னாழியின் மேல் உண்டாகிய; செம்பொன் உரல்தலை - செம்பொன்னால் ஆகிய உரலிடத்து; சிரல்தலை மணிகள் வேய்ந்த உருவப் பன்றி - சிச்சிலிப் பறவையின் தலை போன்ற நிறமுடைய மணிகள் வேய்ந்த உருவமுடைய பன்றி; இடம் வலம் திரிய - இடத்தினும் வலத்தினும் திரியாநிற்க; நம்பன் விரல் தலைப்புட்டில் வீக்கி - சீவகன் தன்விரலிலே விரற்சரட்டை வீக்கி; வெம்சிலை கணையோடு ஏந்தி - கொடிய வில்லையும் கணையையும் ஏந்தி; குரல் தலை வண்டு பொங்க - தன் முடிமயிரிலே வண்டுகள் பொங்குமாறு; குப்புற்று நேமி சேர்ந்தான் - குதித்து அத் திகிரியை அடைந்தான்.

விளக்கம் : சிரல் - சிச்சிலிப் பறவை; மீன்கொத்திப் பறவை, சிச்சிலியின் தலைபோன்ற நிறத்தையுடைய மணிகள் என்க. புட்டில் - விரற்சரடு. குரல் மயிர், குப்புற்று - குதித்து. ( 101 )

2203. ஒள்ளழல் வைரப் பூணு
மொளிர்மணிக் குழையு மின்ன
வொள்ளழற் கொள்ளி வட்டம்
போற்குலாய்ச் சுழலப் பொன்ஞா
ணொள்ளழ னேமி நக்க
மண்டல மாக நின்றா
னொள்ளழற் பருதி மேலோர்
பருதிநின் றதனை யொத்தான்.

விளக்கம் : ஒள் அழல் நக்க நேமி - ஒள்ளிய அழலைச் சிந்தும் திகிரி : ஒள் அழல் கொள்ளிவட்டம் போல் குலாய்ச் சுழல - அவ்வழலையுடைய கொள்ளி வட்டம்போலக் குலவிச் சுழல; ஒள் அழல் வைரப்பூணும் ஒளிர்மணிக் குழையும் மின்ன - ஒள்ளிய அழல் போன்ற வைர அணியும், விளங்கும் மணிக்குழையும் மின் செய; பொன்ஞாண் - பொன்னாணுடன்; மண்டலம் ஆக நின்றான் - அத் திகிரியின் மேலே மண்டல இருப்பாக இருந்தவன்; ஒள் அழல் பருதிமேல் ஓர் பருதி நின்றதனை ஒத்தான் - ஒள்ளிய அழலையுடைய வட்டத்தின்மேல் மற்றொரு ஞாயிறு நின்ற தன்மையைப் போன்றான்.

விளக்கம் : பருதி - வட்டம், பருதி போகிய புடை கிளைகட்டி (பதிற். 74) என்றார் பிறரும். ( 102 )

2204. அருந்தவக் கிழமை போல
விறாதவில் லறாத நாண்வாய்த்
திருந்தினார் சிந்தை போலுந்
திண்சரஞ் சுருக்கி மாறா
யிருந்தவன் பொறியும் பன்றி
யியற்றரும் பொறியு மற்றாங்
கொருங்குட னுதிர வெய்தா
னூழித்தீ யுருமோ டொப்பான்.

பொருள் : ஊழித்தீ உருமொடு ஒப்பான் - ஊழித் தீயையும் இடியேற்றையும் போன்றவன்; அருந்தவக் கிழமைபோல இறாத வில் அறாத நாண்வாய் - அரிய தவப்பயன் போல இறாத வில்லின் அறாத நாணிலே; திருந்தினார் சிந்தை போலும் திண்சரம் சுருக்கி - முனிவரர் உள்ளம் போலத் திண்ணிய கணையை அடக்கி; மாறாய் இருந்தவன் பொறியும் - மாறுபட்டிருந்தவனாகிய கட்டியங்காரனின் நல்வினையும்; பன்றி இயல் தரும் பொறியும் - பன்றி யிருந்த இலக்கணம் அமைந்த பொறியும்; அற்று ஆங்கு ஒருங்கு உடன் உதிர - அற்று அவ்விடத்தே ஒன்று சேர விழும்படி; எய்தான் - எய்தான்.

விளக்கம் : அதனை எய்த அன்றே கட்டியங்காரனும் படுதலின், உடன் என்றார். தவக்கிழமை வில்லுக்கும் நானுக்கும் உவமை, விசயனுக்கு அவை இற்றும் அற்றும் போனமை கருதி இங்கு அவ்வுவமை கூறினார். ( 103 )

2205. இலங்கெயிற் றேன மேவுண்
டிருநிலத் திடித்து வீழக்
கலங்குதெண் டிரையுங் காருங்
கடுவளி முழக்கு மொப்ப
உலம்புபு முரசங் கொட்டி
யொய்யெனச் சேனை யார்ப்பக்
குலம்பகர்ந் தறைந்து கோமான்
கோவிந்தன் கூறி னானே.

பொருள் : இலங்கு எயிற்று ஏனம் ஏவுண்டு - விளங்கும் எயிற்றையுடைய அப் பன்றி அம்பினால் தாக்கப்பெற்று; இடித்து இருநிலத்து வீழ - முழங்கிப் பெருநிலத்தே விழுந்தபோது; கலங்கு தெண்திரையும் காரும் கடுவளி முழங்கும் ஒப்ப - மோதுகின்ற தௌளிய அலைகடலும் முகிலும் பெருங்காற்றும் ஆகியவற்றின் முழக்குப் போல; சேனை உலம்புபு முரசங்கொட்டி ஒய்என ஆர்ப்ப - படைகள் முழங்கி முரசைக் கொட்டி ஒய்என்று ஆரவாரிக்க; கோமான் கோவிந்தன் குலம் பகர்ந்து அறைந்து கூறினான் - அரசனாகிய கோவிந்தன் சீவகனுடைய குலத்தை முதலிற் கட்டியங்காரனுக்குக் கூறிப் பிறகு யாவரும் அறியச் சாற்றினான்.

விளக்கம் : இனி, குலத்தைப் பகர்ந்து நின்னைக் கொல்வேன் என்று வஞ்சினம் சாற்றினான் என்றுமாம். ஏனம் - பன்றி, ஏ : பண்பு. இடித்து - ழங்கி. கார் முகில். ( 104 )

2206. வானிடை யொருவன் றோன்றி
மழையென முழங்கிச் சொல்லுந்
தேனுடை யலங்கல் வெள்வேற்
சீவக னென்னுஞ் சிங்கங்
கானுடை யலங்கன் மார்பிற்
கட்டியங்கார னென்னும்
வேன்மிடை சோலை வேழத்
தின்னுயிர் விழுங்கு மென்றான்.

பொருள் : வானிடை ஒருவன் தோன்றி மழை என முழங்கிச் சொல்லும் - (அப்போது) வானிலே ஒருவன் வந்து நின்று முகில்போல முழங்கி மொழிவான்; தேன் உடை அலங்கல் வெள்வேல் சீவகன் என்னும் சிங்கம் - தேன் பொருந்திய, மாலையணிந்த வெள்ளிய வேலேந்திய சீவகன் என்னும் சிங்கம்; கான்உடை அலங்கல் மார்பின் கட்டியங்காரன் என்னும் மணமுறும் மாலையணிந்த மார்பையுடைய கட்டியங்காரன் என்கிற,வேல்மிடை சோலை வேழத்து - நெருங்கிய வேலாகிய சோலையில் நிற்கின்ற யானையின்; இன்உயிர் விழுங்கும் என்றான் - இனிய உயிரை விழுங்கும் என்றான்.

விளக்கம் : ஒருவன் : இயக்கன்.  மழை - முகில். அலங்கல்-மாலை. கான் - மணம். வேலாகிய மிடைந்த சோலை என்க. வேழம் - யானை. ( 105 )

வேறு

2207. விஞ்சையர் வெம்படை கொண்டுவந் தாயென
வஞ்சுவ லோவறி யாயென தாற்றலை
வெஞ்சம மாக்கிடின் வீக்கறுத் துன்னொடு
வஞ்சனை வஞ்ச மறுத்திடு கென்றான்.

பொருள் : விஞ்சையர் வெம்படை கொண்டு வந்தாய் என - வித்தியாதாருடைய கொடிய படைக்கலங்கனைக் கொண்டு வந்தாய் என்று; அஞ்சுவலோ? - அஞ்சுவேனா?; எனது ஆற்றலை அறியாய் - என் வலிமையை நீ அறியாய் ( நீன் தந்தை அறிவன்); வெம்சமம் ஆக்கிடின் - இனி யாம் போர் செய்திட்டால்; உன் வீக்கு அறுத்து - உன் பெருமையைக் கெடுத்து; உன்னொடு வஞ்சனை வஞ்சம் அறுத்திடுக என்றான் - உன்னையும் என்னைக் களவாற் கொலைசூழ்ந்த நின் மாமனாகிய கோவிந்தனையும் வஞ்சத்தை நீக்குவேன் என்றான்.  விஞ்சையர் - வித்தியாதரர். அஞ்சுவலோ - அஞ்சேன் என்பதுபட நின்றது. அறியாய் எனதாற்றலை என்றற்கு எனதாற்றலை நின் தந்தையறிவன் நீ அறியாய் என்ற நச்சினார்க்கினியர் நல்லுரை இனிமை மிக்கது. வீக்கு - வீக்கம் : பெருமை. வஞ்சன் என்றது கோவிந்தனை. ( 106 )

2208. சூரியற் காண்டலுஞ் சூரிய காந்தமஃ
தாரழ லெங்ஙனங் கான்றிடு மங்ஙனம்
பேரிசை யானிசை கேட்டலும் பெய்ம்முகிற்
காரிடி போன்மத னன்கனன் றிட்டான்.

பொருள் : சூரியன் காண்டலும் சூரியகாந்தம். அஃது - சூரியனைக் கண்டதும் சூரிய காந்தமாகிய அஃது; ஆர் அழல் எங்ஙனம் கான்றிடும் - நிறைந்த அழலை எவ்வாறு உமிழுமோ; அங்ஙனம் - அவ்வாறே; பேரிசையான் இசை கேட்டலும் - சீவகன் வெற்றியைக் கேட்ட அளவிலே; முகில்பெய் கார் இடி போல் மதனன் கனன்றிட்டான் - மழையைப் பெய்யும் கார்கால இடிபோல மதனன் சினந்தான்.

விளக்கம் : சூரியன் - சூரியனுடைய ஒளிக்கு ஆகுபெயர். அவ்வொளி சீவகனுடைய புகழுக்கு உவமை என்க. பேரிசையான் என்றது சீவகனை. கார் - கார்காலம். ( 107 )

2209. காற்படை யுங்களி றுங்கலி மாவொடு
நூற்படு தேரு நொடிப்பினிற் பண்ணி
நாற்படை யுந்தொகுத் தான்மக்க ணச்சிலை
வேற்படை வீரரொர் நூற்றுவர் தொக்கார்.

பொருள் : கால் படையும் களிறும் கலிமாவொடு நூல்படு தேரும் - (கட்டியங்காரன்) காலாளாகிய படையும் யானையும் குதிரைப் படையோடு நூல்வழிப்பட்ட தேரும்; நொடிப்பினில் பண்ணி - விரைவினில் சமைத்துக் கொண்டு; நாற்படையும் தொகுத்தான் - நால்வகைப் படையையும் கூட்டினான்; மக்கள் நச்சிலை வேல்படை வீரர் ஓர் நூற்றுவர் தொக்கார் - (அப்போது) மக்களாகிய, நஞ்சுடைய இலைவடிவ வேலேந்திய வீரர் நூற்றுவரும் திரண்டனர்.

விளக்கம் : காற்படை - காலாட்படை, கலிமா - குதிரை. நூல் - கம்மநூல். மக்கள் - கட்டியங்காரன் மக்கள் என்க. நச்சிலை - நஞ்சு தோய்த்த இலை (அலகு.) ( 108 )

2210. விற்றிற லான்வெய்ய தானையும் வீங்குபு
செற்றெழுந் தான்படை யுஞ்சின மொய்ம்பொடு
மற்றவர் மண்டிய வாளமர் ஞாட்பினு
ளுற்றவர்க் குற்றதெ லாமுரைக் குற்றேன்.

பொருள் : வில் திறலான் வெய்ய தானையும் - சீவகனுடைய கொடிய படையும்; வீங்குபு செற்று எழுந்தான் படையும் - மிகுந்து சீறி எழுந்த கட்டியங்காரன் படையும்; சினமொய்ம்பொடு அவர் மண்டியவாள் அமர் ஞாட்பினுள் - சினமும் ஆற்றலுங் கொண்டு அவர்கள் மிக்குச்சென்ற வாட்போராகிய போரிலே உற்றவர்க்கு உற்றது எலாம் உரைக்குற்றேன் - கலந்து கொண்டவர்க்கு நேர்ந்ததை எல்லாம் கூறத் தொடங்கினேன்.

விளக்கம் : உற்றது எல்லாம்: ஒருமை பன்மை மயக்கம்  திறலான் : சீவகன். எழுந்தான் : வினையாலணையும் பெயர் ; கட்டியங்காரன். மொய்ம்பு - வலிமை. உரைத்தலருமை தோன்ற உரைக்குற்றேன் என்றார். ( 109 )

வேறு

2211. அத்தமா மணிவரை யனைய தோன்றல
மத்தகத் தருவியின் மணந்த வோடைய
முத்துடை மருப்பின முனைக்கண் போழ்வன
பத்தியிற் பண்ணின பரும யானையே.

பொருள் : அத்தம் ஆம் அணிவரை அனைய தோன்றல - அத்தகிரியை ஒத்த தோற்றத்தை உடையன; மத்தகத்து அருவியின் மணந்த ஓடைய - அதன் அருவிபோல மத்தகத்த மணந்த ஓடையின; முத்து உடை மருப்பின - முத்துக்களையுடைய மருப்பின; முனைக்கண் போழ்வன - பகைப்புலத்தை அங்கேயே பிளப்பன ஆகிய; பரும யானை பத்தியிற் பண்ணின - புனைவுற்ற யானைகள் அணிகளிலே சமைந்தன.

விளக்கம் : தோன்றல - தோற்றத்தையுடைன. மத்தகம் - தலை. ஓடை - முகபடாம். மருப்பின - கொம்பினையுடையன. முனை- போர் முனை. ( 110 )

2212. கோல்பொரு கொடுஞ்சிலை குருதி வெம்படை
மேலவ ரடக்குபு வேழ மேறலின்
மாலிரு விசும்பிடை மணந்த வொண்கொடி
கால்பொரு கதலிகைக் கான மொத்தவே.

பொருள் : மேலவர் - யானையின் மேலாட்கள்; கோல்பொரு கொடுஞ்சிலை - அம்படை எய்யும் வளைந்த வில்லையும்; குருதி வெம்படை - குருதி தோய்ந்த பிற படைகளையும்; அடக்குபு வேழம் ஏறலின் அடக்கிக் கொண்டு யானைமீது ஏறலின்; மால் இரு விசும்பிடை மணந்த ஒண்கொடி - பெரிய வானத்திலே கலந்த சிறந்த கொடிகள்; கால் பொரு கதலிகைக் கானம் ஒத்த காற்றினால் தாக்கப்பட்டு இலை கிழிந்த வாழைக் காட்டைப் போன்றன.

விளக்கம் : இவ்விரண்டு செய்யுட்களும் யானைப் படையைக் கூறின. கோல் - அம்பு. குருதிதோய்ந்த படை என்க. மேலவர் - யானையின் மேல் ஏறும் மறவர். மாலிரு : ஒருபொருட் பன்மொழி. கதலிகை - வாழை. ( 111 )

2213. குடையுடை நிழலின் கோல மார்ந்தன்
கிடுகுடைக் காப்பின கிளர்பொற் பீடிகை
யடிதொடைக் கமைந்தன வரவத் தோத்தொகை
வடிவுடைத் துகின்முடி வலவர் பண்ணினார்.

பொருள் : குடையுடைய நிழலின - மேலே நாட்டிய குடையினுடைய நிழலில்; கோலம் ஆர்ந்தன - ஒப்பனை நிறைந்தன; கிடுகு உடைக் காப்பின - அம்புபடாமல் கிடுகினால் காவல் செய்யப்பட்டன; கிளர்பொன் பீடிகை அடிதொடைக்கு அமைந்தன - விளங்கும் பொன் பீடிகைகள் அடிவைத்தற்கும் அம்பு தொடுத்தற்கும், அமைவுற்றன; அரவத்தேர்த் தொகை - ஒலியுறும் தேர்த்திரளை; வடிவுடைத் துகில் முடிவலவர் பண்ணினார் - ஆடையால் அழகிய தலைக்கட்டினையுடைய தேர்வலவர்கள் பண்ணுறுத்தனர்.

விளக்கம் : குடை - மேலே நாட்டியகுடை. கிடுகு - ஒருபடைக்கலன் நடுப்புக்கருவி அடிக்கும் தொடைக்கும் என்க. தொடை - தொடுத்தல். அரவம் - ஆரவாரம். ( 112 )

2214. கொய்யுளைப் புரவிகள் கொளீஇய திண்ணுகம்
பெய்கயி றமைவரப் பிணித்து முள்ளுறீஇச்
செய்கயி றாய்ந்தன சிலையு மல்லவுங்
கையமைத் திளைஞருங் கருவி வீசினார்.

பொருள் : கொய் உளைப் புரவிகள் கொளீஇய திண்நுகம் கத்தரித்த உளையையுடைய புரவிகள் பூட்டிய திண்ணிய நுகத்தில்; பெய்கயிறு அமைவரப் பிணித்து பெய்த கயிற்றைப் பொருந்துதல்வரக் கட்டி முள் உறீஇச் செய்கயிறு ஆய்ந்தன - முள்ளுறுத்தி வாய்க்கயிறும் ஆராய்ந்து பிடிக்கப்பட்டன; இளைஞரும் சிலையும் அல்லவும் கை அமைத்துக் கருவி வீசினார் - அப்போது தேர் வீரரும் வில்லையும் ஒழிந்த படைகளையும் கையிலே அமைத்துக் கவசத்தை அணிந்தனர்.

விளக்கம் : முற்செய்யுளில் வலவர் தேர் பண்ணினர் என்றார். அதனை இச்செய்யுளில் விளக்கி, வீரர் படையமைத்துக் கவசம் அணிந்ததையும் கூறினர். ( 113 )

2215. பறந்திய றருக்கின பரவை ஞாட்பினுட்
கறங்கெனத் திரிவன கவரி நெற்றிய
பிறந்துழி யறிகெனப் பெரிய நூலவர்
குறங்கெழுத் துடையன குதிரை யென்பவே.

பொருள் : பறந்து இயல் தருக்கின - பறந்து செல்வதிலே செருக்குற்றன; பரவை ஞாட்பினுள் கறங்கு எனத் திரிவன - பரவி போரிலே காற்றாடி எனத் திரிவன; கவரி நெற்றிய - கவரி அமைந்த நெற்றியுடையன; பிறந்துழி அறிக எனப் பெரிய நூலவர் குறங்கெழுத்து உடையன - பிறந்த இடத்தை அறிக என்று உயர்ந்த நூலறிஞர் துடையிலே எழுதிய எழுத்தை உடையன; குதிரை - குதிரைகள்.

விளக்கம் : என்ப : அசை. தருக்கின - செருக்குடையன. ஞாட்பு - போர்க்களம். கறங்கு - காற்றாடி. கவரி - சாமரை. பிறந்துழி - பிறந்த இடம். நூல் - குதிரை நூல். ( 114 )

2216. கொன்னுனைக் குந்தமுஞ் சிலையுங் கூர்நுதி
மின்னிலை வாளொடு மிலேச்ச ரேறலிற்
பொன்னரிப் புட்டிலுந் தாரும் பொங்குபு
முன்னுருத் தார்த்தெழப் புரவி மொய்த்தவே.

பொருள் : கொல்நுனைக் குந்தமும் சிலையும் கூர்நுதி மின்நிலை வாளொடு - கொல்லுதற்குரிய முனையையுடைய குந்தமும் வில்லும் கூரிய முனையையுடைய மின்னின் இயல்பையுடைய வாளும் கொண்டு; மிலேச்சர் ஏறலின் - மேலாளராகிய மிலேச்சர் ஏறுதலின்; பொன் அரிப் புட்டிலும் தாரும் பொங்குபு-கொன் பரல்களையுடைய கெச்சையும், கிண்கிணி மாலையும் பொங்கி; முன் உருத்து ஆர்த்து எழ - முன் சினந்து ஆரவாரித்து எழ ; புரவி மொய்த்த - புரவிகள் மொய்த்தன.

விளக்கம் : இரண்டு செய்யுட்களும் குதிரைப் படையைக் கூறின.  கொன்னுனை : வினைத்தொகை. நுதி - நுனை. மின்னிலை - மின்னலின் தன்மை. மிலேச்சர் சோனகர். அரி - பரல். புட்டில் - கெச்சை ; கெச்சையுமாம். பொங்குபு பொங்கி. ( 115 )

2217. மாலையுங் கண்ணியு மணந்த சென்னிய
ராலுபு செறிகழ லார்க்குங் காலினர்
பாலிகை யிடையறப் பிடித்த பாணியர்
சாலிகை யுடம்பினர் தறுக ணாளரே.

பொருள் : மாலையும் கண்ணியும் மணந்த சென்னியர் - மாலையையும் கண்ணியையும் அணிந்த முடியினர்; ஆலுபு செறி கழல் ஆர்க்கும் காலினர் முழங்கிச் செறிந்த காலைக் கட்டினர்; பாலிகை இடைஅறப் பிடித்த பாணியர் வாட்பிடியை இடையறாமற் பிடித்த கையினர்; சாலிகை உடம்பினர் - கவசம் அணிந்த மெய்யினர்; தறுகணாளர் - இவர்கள் அஞ்சாத காலாட்கள்.

விளக்கம் : மாலை, கண்ணி என்பன மாலைவகை. ஆலுபு - ஆலி; முழங்கி என்க. பாலிகை - வாட்பிடி. பாணியர் - கையினர். சாலிகை - கவசம். தறுகணாளர் சென்னியரும் காலினரும் பாணியரும் உடம்பினருமாக இருந்தனர் என்றவாறு. ( 116 )

2218. போர்மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம்
வார்மயிர்க் கிடுகொடு வள்ளித் தண்டையு
நோமரப் பலகையு நிரைத்த தானையோர்
போர்முகப் புலிக்கடல் புகுந்த தொத்ததே.

பொருள் : போர் மயிர்க் கேடகம் - மயிர் போர்த்த பரிசை; புளகத் தோற்பரம் - கண்ணாடி தைத்த கிடுகு; வார் மயிர்க் கிடுகொடு - நீண்ட மயிர்க்கிடுகு; வள்ளித் தண்டையும் - பிரபபங் கொடியாற் பின்னின பரிசை; நேர் மரப்பலகையும் - வலிய பலகை ஆகியவற்றை; நிரைத்த தானை - நிரைத்த அக் காலாளாகிய படை; ஓர் போர்முகப் புலிக்கடல் புகுந்தது ஒத்தது - ஒரு போர்க்களத்திற் புலிக்கடல் புகுந்தது போன்றது.

விளக்கம் : பரந்தது எனவும் பாடம். இவ்விரண்டு செய்யுட்களும் காலாட் படையைக் கூறின. போர்மயிர் ; வினைத்தொகை. கேடகம், தோற்பரம், கிடுகு; தண்டை, பலகை என்பன ஒருபொருள் குறித்த பன்மொழி. ( 117 )

வேறு

2219. பார்நனை மதத்த பல்பேய்
பருந்தொடு பரவச் செல்லும்
போர்மதக் களிறு பொற்றேர்
நான்கரைக் கச்ச மாகு
மோமணிப் புரவி யேழா
மிலக்கமேழ் தேவ கோடி
கார்மலி கடலங் காலாள்
கற்பகத் தாரி னாற்கே.

பொருள் : கற்பகத் தாரினாற்கு - சீவகனுக்கு; பார்நனை மதத்த பல்பேய் பருந்தொடு பரவச் செல்லும் - நிலம் நனையச் சொரியும் மதத்துடன் பல பேய்களும் பருந்தும் பரவச் செல்கின்ற; போர்மதக் களிறு பொன்தேர் நான்கரைக் கச்சம் ஆகும் - போருக்குரிய மதக்களிறுகளும் பொன்தேர்களும் நான்கரைக் கச்சம் என்னும் தொகையின; ஏர்மணிப் புரவி ஏழாம் இலக்கம் - அழகிய மணிகள் கட்டிய குதிரைகள் ஏழுநூறாயிரம்; கார்மலி கடல் அம் காலாள் ஏழ்தேவ கோடி - கருமை பொருந்திய கடலனைய காலாட்படை ஏழுதேவ கோடி ஆகும்.

விளக்கம் : கச்சம், தேவகோடி என்பன எண்ணுப் பெயர்கள். பூமிமுழுதினையும் நனைத்தற்குப் போதிய மதத்தையுடையன என்பது கருத்து. பேயும் பருந்தம் ஊனுண்டன் கருதிப் பரவ என்க. ஏர் - அழகு; எழுச்சியுமாம். இலக்கம் - நூறாயிரம். தேவகோடி - ஓர் எண்ணுப்பெயர். ( 118 )

2220. நிழன்மணிப் புரவித் திண்டேர்
நிழறுழாய்க் குனிந்து குத்து
மழறிகழ் கதத்த யானை
யைந்தரைக் கச்ச மாகு
மெழின்மணிப் புரவி யேழா
மிலக்கமேழ் தேவ கோடி
கழன்மலிந் திலங்குங் காலாள்
கட்டியங் காரற் கன்றே.

பொருள் : கட்டியங்காரற்கு - கட்டியங்காரனுக்கு; நிழல் மணிப் புரவித் திண்தேர் - ஒளிவிடும் மணிகளையுடைய குதிரைகள் பூட்டிய திண்ணிய தேரும்; நிழல் துழாய்க் குனிந்து குத்தும் அழல் திகழ் கதத்த யானை - தன் நிழலைச் சீறித் துழவித் தாழ்ந்து குத்துகின்ற, தழல்போல விளங்கும் சினமுடைய களிறுகளும் ; ஐந்தரைக் கச்சம் ஆகும் - ஐந்தரைக் கச்சம் தொகையின; எழில்மணிப் புரவி ஏழாம் இலக்கம் - அழகிய மணிகட்டிய குதிரைகள் ஏழுநூறாயிரமாகும்; கழல் மலிந்து இலங்கும் காலாள் ஏழ்தேவகோடி - வீரக்கழல் மிகுந்து விளங்கும் காலாட்படை ஏழுதேவ கோடியாகும். ( 119 )

வேறு

2221. குலங்கெழு மகளிர்தங் கோல நீப்பவு
மலங்குளைப் புரவியுங் களிறு மாளவு
நிலமக ணெஞ்சுகை யெறிந்து நையவும்
புலமகன் சீறினன் புகைந்த தெஃகமே.

பொருள் : குலம்கெழு மகளிர் தம் கோலம் நீப்பவும் - நற்குலப் பெண்டிர் தம் ஒப்பனையை விடவும்; அலங்கு உளைப் புரவியும் களிறும் மாளவும் - அசையும் உளையையுடைய குதிரைகளும் களிறுகளும் இறக்கவும்; நிலமகள் கை எறிந்து நெஞ்சு நையவும் - நிலமடைந்தை தன் கையாலே மோதிக்கொண்டு உளம் வருந்தவும்; புலமகன் சீறினன் - அறிவாளியான சீவகன் சினந்தான்; எஃகம் புகைந்தது - அவன் வேலும் புகைந்தது.

விளக்கம் : தன் கணவராகிய மன்னர் படுதலின் நிலமகள் வருந்தினள். நிலமகள் அழுத காஞ்சியும் (புறநா. 365) என்றார் புறத்தினும். புலமகன் என்றார் ஆசிரியன் சொற்படி ஓராண்டுஞ் சென்றே சீறலின். குலமகளிர் கோலநீப்பவும் என்றது மறவர்கள் மாளவும் என்னும் குறிப்பிற்று. ( 120 )

2222. குணில்பொரக் குளிறின முரசம் வெள்வளை
பணைபரந் தார்த்தன பம்பை வெம்பின
விணையில வெழுந்ததாழ் பீலி யெங்கணு
முணையினாற் கடலக முழக்க மொத்தவே.

பொருள் : முரசம் குணில் பொரக் குளிறின - முரசங்கள் குணில் பொருதலின் முழங்கின; வெள்வளை பணைபரந்து ஆர்த்தன - வெள்வளையும் பணைகளும் பரவி ஒலித்தன; பம்பை வெம்பின - பம்பைகள் ஒலித்தன; எங்கணும் இணையில தாழ்பீலி எழுந்த - எங்கும் ஒப்பற்றனவாகிய சிறு சின்னங்கள் எழுந்தன; முணையினால் கடலக முழக்கம் ஒத்த - இவ்வோசை மிகுதியாலே கடலிடத்து முழக்கைப் போன்றன.

விளக்கம் : பணை : முரசில் ஒருவகை. பம்பை : வாச்சியத்தில் ஒன்று. முணை மிகுதி; பெருக்கம். ( 121 )

2223. முடிமன ரெழுதரு பருதி மொய்களி
றுடைதிரை மாக்கல மொளிறு வாட்படை
யடுதிற லெறிசுறா வாகக் காய்ந்தன
கடலிரண் டெதிர்ந்ததோர் கால மொத்ததே.

பொருள் : முடிமனர் எழுதரு பருதி - முடிவேந்தர் எழுகின்ற ஞாயிறாகவும்; மொய்களிறு கலம் - நெருங்கிய களிறுகள் கடலிற் செல்லும் மரக்கலமாகவும்; உடை திரை மா - மோதுகின்ற அலைகள் குதிரைகளாகவும்; ஒளிறு வாட்படை அடுதிறல் எறி சுறா ஆக - விளங்கும் வாட்படை அடுந்திறமுடைய சுறா மீனாகவும்; காய்ந்தன கடல் இரண்டு எதிர்ந்தது ஓர் காலம் ஒத்தது - தம்மிற் காய்ந்தனவாகிய இரண்டு கடல்கள் போர் செய்ய எதிர்ந்த காலம் போன்றது இக்காலம்.

விளக்கம் : மனர் - மன்னர். பருதி - ஞாயிறு. கலம் - கப்பல், சுறா - ஒருவகை மீன். ஒரு காலமுண்டாயின் அதனை ஒத்தது இக்காலம் என்க. மூன்றாம் அடியில் வந்த ஆக என்பதைப் பருதி, கலம் மா என்பவற்றோடுங் கூட்டுக. ( 122 )

2224. அருங்கணை யடக்கிய வாவ நாழிகை
பெரும்புறத் தலமரப் பிணிந்த கச்சினர்
கருங்கழ லாடவர் கருவில் வாய்க்கொளீஇச்
சொரிந்தனர் கணைமழை விசும்பு தூர்ந்ததே.

பொருள் : அருங்கணை அடக்கிய ஆவ நாழிகை - அரிய அம்புகள் அடக்கிய அம்பறாத் தூணி; பெரும்புறத்து அலமரப் பிணித்த கச்சினர் - பெரிய முதுகிலே அசையுமாறு பிணித்த கச்சினராகிய; கருங்கழல் ஆடவர் - கொடிய கழலைக் கட்டிய வீரர்; கருவில் வாய்க் கொளீஇ - பெரிய வில்லிண் வாயில் அமைத்து; கணைமழை சொரிந்தனர் - அப்புமாரி பெய்தனர் விசும்பு தூர்ந்தது - அதனால் வானம் மறைந்தது.

விளக்கம் : கச்சு : இடைக் கச்சுமாம். அருங்கணை - தடுத்தலரியகணை என்க. ஆவநாழிகை - அம்பறாத்தூணி. கருங்கழல் கருவில் என்பவற்றுள் கருமை - கொடுமைப்பண்பு  குறித்தது. ( 123 )

2225. நிணம் பிறங் ககலமுந் தோளு நெற்றியு
மணங்கருஞ் சரங்களி னழுத்தி யையென
மணங்கமழ் வருபுனன் மறலு மாந்தரிற்
பிணங்கமர் மலைந்தனர் பெற்றி யின்னதே.

பொருள் : நிணம் பிறங்கு அகலமும் தோளும் நெற்றியும் - நிணம் விளங்கும் மார்பும் தோளும் நெற்றியும்; அணங்கு அருஞ்சரங்களின் அழுத்தி - வருத்தும் அரிய கணைகளினாலே அழுத்தி (பெருகும் குருதியிலே நின்று); மணம் கமழ் வருபுனல் ஐயென மறலும் மாந்தரின் - மணம் பெருக வரும் புதுநீரிலே விரைந்து பொரும் மக்களைப் போல; பிணங்கு அமர் மலைந்தனர் பெற்றி இன்னது - மாறுபட்ட போரை மேற்கொண்டவரின் தன்மை இத்தகையது.

விளக்கம் : பிறங்குதல் - விளங்குதல். அணங்கு - வருத்துதல். சரம் - அம்பு. அழுத்த அவ்வழிப் பெருகிய குருதியினின்று என விரிந்தோதுக. புதுப்புனல் சிவந்திருத்தலின் குருதிப் பெருக்கிற் குவமையாகக் கொள்ளப்பட்டது. ( 124 )

2226. கழித்தனர் கனலவாள் புகைந்து கண்கடீ
விழித்தன தீந்தன விமைகள் கூற்றெனத்
தெழித்தனர் திறந்தன ரகல மின்னுயி
ரழித்தன ரயிலவ ரரவ மிக்கதே.

பொருள் : கூற்று எனத் தெழித்தனர் - கூற்றுவனைப் போலச் சீறினர்; கண்கள் தீ விழித்தன - கண்கள் நெருப்பெழ விழித்தன; இமைகள் தீந்தன - (அதனால்) இமைகள் கரிந்தன; வாள் புகைந்து கனலக் கழித்தனர் - (ஆகவே) வாள் புகைந்து அழலும்படி உறையிலிருந்து நீக்கினர்; அகலம் திறந்தனர் - மார்பைப் பிளந்தனர்; இன் உயிர் அழித்தனர் - இனிய உயிரைப் போக்கினர் ; அயிலவர் அரவம் மிக்கது - (பின்னர்) வேல்வீரர் ஒலி மிகுந்தது.

விளக்கம் : கூற்று - கூற்றுவன். தெழித்தனர் அதனால் கண் தீ விழித்தன. அதனால் இமைகள் தீந்தன என்க. அயிலவர் - வேல்மறவர். ( 125 )

2227. பொருங்களத் தாடவர் பொருவில் பைந்தலை
யரும்பெறற் கண்ணியோ டற்று வீழ்வன
கருங்கனிப் பெண்ணையங் கானங் கால்பொர
விருங்கனி சொரிவன போன்ற வென்பவே.

பொருள் : பொரும் களத்து ஆடவர் பொருஇல் பைந்தலை - போர் செய்யும் களத்திலே வீரர்களின் ஒப்பற்ற கரிய தலைகள்; அரும்பெறல் கண்ணியோடு அற்று வீழ்வன - பெறுதற்கரிய தும்பை மாலைகளுடன் அற்று வீழ்கின்றவை; கருங்கனிப் பெண்ணை அம் கானம் கால்பொர - கரிய கனிகளையுடைய பனைக்காடு, காற்றடித்தலின், இருங்கனி சொரிவன போன்ற - பெரிய கனிகளைச் சொரிவன போன்றன.

விளக்கம் : அரும் பெறற் கண்ணி என்றது ஈண்டுத் தும்பை மாலையை. பெண்ணை - பனை, தலையிறுபு தாரொடு புரள..... நீள் இரும் பனைமிசைப் பல பதினாயிரங் குலைதரை யுருள்வபோல் (2 : 1-2) என்றார் பரிபாடலினும். ( 126 )

2228. பணைமுனிந் தாலுவ பைம்பொற் றாரின
கணைவிசை தவிர்ப்பன கவரி நெற்றிய
துணையமை யிளமைய தோற்ற மிக்கன
விணைமயிர்ப் புரவியோ டிவுளி யேற்றவே.

பொருள் : பணை முனிந்த ஆலுவ - பந்தியில் நிற்றலை வெறுத்து முழங்குவன; பைம்பொன் தாரின - புதிய பொன் கிண்கிணி மாலையின; கணைவிசை தவிர்ப்பன - தம் மேலிருந்து எய்யும் அம்பின் விரைவை முந்திச் சென்று தடுப்பன; கவரி நெற்றிய - கவரி அணிந்த நெற்றியின; துணை அமை இளமைய - போரிற்கு உதவியான இளமையன; தோற்றம் மிக்கன - வடிவு மிக்கனவாகிய; இணைமயிர்ப் புரவியோடு இவுளி ஏற்ற - ஒத்த மயிரையுடைய புரவியும் புரவியும் தம்மிற் போரைத் தொடங்கின.

விளக்கம் : பணை - குதிரைப்பந்தி. ஆலுவ - முழங்குவன. எய்த கணைக்குமுன் சென்ற அதன் வேகத்தைத் தவிர்ப்பன. ( 127 )

2229. கூருளி முகம்பொரக் குழிசி மாண்டன
வாரொளி யமைந்தன வாய்பொற் சூட்டின
காரொளி மின்னுமிழ் தகைய காலியற்
றேரொடு தேர்தமுட் சிறந்து சேர்ந்தவே.

பொருள் : கூர் உளி முகம்பொர - கூரிய உளியால் தொழிற் படுதலின்; குழிசி மாண்டன - நடுவில் நிற்குங் குறடுகள் சிறப்புற்றவை; ஒளிஆர் அமைந்தன - ஒளியுடைய ஆரக் கால்கள் பொருந்தியவை; ஆய்பொன் சூட்டின - பொன்னாலான சூட்டினை யுடையவை; கார்ஒளி மின்உமிழ் தகைய - காரில் தோன்றும் மின்னொளியைத் தாம் உமிழுந் தகையவை; கால் இயல் தேரொடு தேர் தம்உள் சிறந்து சேர்ந்த - (ஆகிய) உருளையாற் செல்லுதலையுடைய தேரும் தேரும் தம்மின் மிகுந்து போரைத் தொடங்கின.

விளக்கம் : கூருளி - உளியில் ஒருவகை. பொருதல் - ஈண்டுச் செதுக்குதல். குழிசி - குறடு; குடம். மாண்டன - மாட்சிமையுடையன. கால் - உருளை. தமுள் - தம்முள். சேர்ந்த - போர் செய்தற்கு நெருங்கின. ( 128 )

2230. அஞ்சன மெழுதின கவள மார்ந்தன
குஞ்சரங் கூற்றொரு கொம்மை கொட்வே
வஞ்சன வரைசிற குடைய போல்வன
மஞ்சிவர் குன்றென மலைந்த வேழமே.

பொருள் : அஞ்சனம் எழுதின-மையால் எழுதப்பட்டவை; கவளம் ஆர்ந்தன - கவளத்தை நிறைய உண்டவை; கூற்றொடு கொம்மை கொட்டுவ கூற்றை நன்கு மதித்துத் தட்டியழைப்பவை; அஞ்சனவரை சிறகுடைய போல்வன - (செல்லும் விரைவால்) கரிய மலைகள் சிறகு பெற்றவை போன்றன; மஞ்சு இவர் குன்று என - முகில் தவழுங் குன்றுகளைப் போல; வேழம் குஞ்சரம் மலைந்த - யானையும் யானையும் பொருதன.

விளக்கம் : மஞ்சு : கொடிக்குவமை. அஞ்சனம் - மை. ஆர்ந்தன - உண்டவை. குஞ்சரம் - யானை கொம்மை கொட்டுதல் - தட்டியழைத்தல். ஒருகாலத்தே மலைகளுக்குச் சிறகிருந்தன என்பது புராணம். மஞ்சு - முகில். மலைந்தன - போரிட்டன. ( 129 )

2231. மாக்கடற் பெருங்கலங் காலின் மாறுபட்
டாக்கிய கயிறரிந் தோடி யெங்கணும்
போக்கறப் பொருவன போன்று தீப்படத்
தாக்கின வரசுவாத் தம்மு ளென்பவே.

பொருள் : மாக்கடல் பெருங்கலம் - பெரிய கடலிலே செல்லும் பெரிய மரக்கலங்கள்; காலின் மாறுபட்டு காற்றினாலே மோதப்பட்டு; ஆக்கிய கயிறு அரிந்து - நங்குரத்திற் கட்டிய கயிறு அற்று; எங்கணும் போக்கு அற ஓடி - எவ்விடத்தினும் போக்கின்றி ஒடி; பொருவன போன்று - தம்மில் மோதுவன போன்று; அரசு உவாத் தம்முள் தீப்படத் தாக்கின - அரசர் ஏறிய யானைகள் தம்முள் கோடுங் கோடுஞ் சந்தித்துத் தீப்பிறக்கும்படி பொருதன .

விளக்கம் : மாக்கடல் - பெரிய கடல். பெருங்கலம் - பெரிய மரக்கலம்; கால் - காற்று. கயிறரிய என்க. அரசுவா - அரசர் ஏறிய யானை. ( 130 )

2232. விடுசரம் விசும்பிடை மிடைந்து வெய்யவன்
படுகதிர் மறைந்திருள் பரந்த தாயிடை
யடுகதி ரயிலொளி யரசர் மாமுடி
விடுகதிர் மணியொளி வெயிலிற் காய்ந்தவே.

பொருள் : விடுசரம் விசும்பிடை மிடைந்து - விட்ட கணைகள் வானிலே நெருங்குதலின்; வெய்யவன் படுகதிர் மறைந்து இருள் பரந்தது - ஞாயிற்றின் கதிர்கள் மறைந்து இருளும் பரவியது: ஆயிடை - அப்போது; அடுகதிர் அயில் ஒளி - சுடுங் கதிர்களையுடைய படைக்கலங்களின் ஒளியும்; அரசர் மாமுடி மணிவிடு கதிர் ஒளி - அரசரின் முடியிலுள்ள மணிகள் விடும் ஒளியும்; வெயிலின் காய்ந்தன - வெயில் கெடுப்பதைப் போலக் கெடுத்தன.

விளக்கம் : விடுசரம் : வினைத்தொகை. சரம் - அம்பு. வெய்யவன் - ஞாயிறு. ஆயிடை - அப்பொழுது. அடுகதிர் அயில் : வினைத்தொகை. அயில் - வேல். விடுகதிர் : வினைத்தொகை. வெயிலின் - வெயில்போல. ( 131 )

2233. பூண்குலாம் வனமுலைப் பூமி தேவிதான்
காண்கலேன் கடியன கண்ணி னாலெனாச்
சேண்குலாங் கம்பலஞ் செய்ய தொன்றினான்
மாண்குலாங் குணத்தினான் மறைத்திட் டாளரோ.

பொருள் : பூண் குலாம் வனமுலைப் பூமி தேவிதான் - அணி கலந்த அழகிய முலைகளையுடைய நிலமகள்; கடியன கண்ணினாற் காண்கலேன் எனா - இவ்வாறு கடியவற்றை என் கண்களாற் காணமாட்டேன் என்று; மாண்குலாம் குணத்தினால் - பெருமை பொருந்திய தன் பண்பினால் கருதி; சேண்குலாம் கம்பலம் செய்யது ஒன்றினால் - பெரிய நிலமெல்லாம் பரவக்கூடிய கம்பலமாகிய சிவந்த ஒன்றினால்; மறைத்திட்டாள் - மறைத்துக் கொண்டாள்.

விளக்கம் : குணத்தினாள் என்றும் பாடம்.  பூமிதேவி - நிலமகள், தான் : அசை. காண்கலேன் : தன்மையொருமை எதிர்மறை வினைமுற்று. கண்ணினால் கடியன காண்கலேன் என மாறுக. கடியன - கொலைமுதலிய கொடுந்தொழில். ஒரு செய்ய கம்பலத்தால், என்றவாறு. செய்யகம்பலம் குருதிக்குவமை. மாண்குலாம் குணம் காணமாட்டாமைக்கு ஏதுவென்க. ( 132 )

வேறு

2234. கலைக்கோட்ட வகலல்குற்
கணங்குழையார் கதிர்மணிப்பூண்
முலைக்கோட்டா லுழப்பட்ட
மொய்ம்மலர்த்தா ரகன்மார்பர்
மலைக்கோட்ட வெழில்வேழந்
தவநூறி மதயானைக்
கொலைக்கோட்டா லுழப்பட்டுக்
குருதியுட் குளித்தனரே.

பொருள் : கலைக்கோட்ட அகல் அல்குல் கணங்குழையார் - கலையணிந்த பக்கத்தையுடைய பரவிய அல்குலையும் திரண்ட குழையையும் உடைய மகளிரது; கதிர்மணிப் பூண்முலைக் கோட்டால் உழப்பட்ட - ஒளி மணிக்கலன் புனைந்த முலைக்கோட்டினால் உழப்பட்ட ; மொய்ம்மலர்த்தார் அகல் மார்பர் - நெருங்கிய மலர்த்தாரையுடைய அகன்ற மார்பினர்; மலைக்கோட்ட எழில் வேழம் தவநூறி - மலைக் குவடுகளின் தன்மையை உடையனவாகிய அழகிய யானைகளை அழியக் கெடுத்து; மதயானைக் கொலைக் கோட்டால் - அந்த யானைகளின் கொம்பினால், உழப்பட்டு குருதியுள் குளித்தனர் - உழப்படுதலாலே குருதியிலே மூழ்கினர்.

விளக்கம் : கோடு - பக்கம். கலையை உடைய அல்குல். கலை - மேகலை. கணம் - திரட்சி. முலையாகிய கோடு மார்பர் - மறவர். தவ - அழிய. தவ - மிகுதிப்பொருள் குறித்த உரிச்சொல்லுமாம். ( 133 )

2235. மணமாலை மடந்தையர்த
மெல்விரலாற் றொடுத்தணிந்த
விணர்மாலை யிருங்குஞ்சி
யீர்ங்குருதிப் புனலலைப்ப
நிணமாலைக் குடர்சூடி
நெருப்பிமையா நெய்த்தோரிற்
பிணமாலைப் பேய்மகட்குப்
பெருவிருந் தயர்ந்தனரே.

பொருள் : மணமாலை மடந்தையார் - மணம் புரிந்த இயல்பினையுடைய மகளிர்; தம் மெல்விரலால் தொடுத்து அணிந்த தம் மெல்லிய விரல்களால் தொடுத்து அணிந்த; இணர்மாலை இருங்குஞ்சி ஈர்ங் குருதிப் புனல் அலைப்ப பூங்கொத்துகளுடன் கூடிய மாலையையுடைய பெரிய சிகையை, இழுத்தோடும் செந்நீர் அலைத்திட; நிணமாலைக் குடர்சூடி - நிணவொழுங்கையுடைய குடரைச் சூடி; நெய்த்தோரில் நெருப்பு இமையா - அக் குருதிப் பெருக்கிலே நெருப்பென விழித்துக் கிடந்து; பிணமாலைப்; பேய் மகட்கு - பிணந்தின்னும் இயல்பையுடைய பேய்க்கு; பெருவிருந்து அயர்ந்தனர் - தம்மைப் பெருவிருந்தாக்கினர்.

விளக்கம் : ஈர்க்குங் குருதி என்பது, ஈர்ங்குருதி என ஆயிற்று. மணமாலை என்புழி - மாலை, இயல்பு என்னும் பொருட்டு, இருங்குஞ்சி - கரியமயிர். நிணமாலை என்புழி - மாலை ஒழுங்கு என்னும் பொருட்டு. இமையா - இமைத்து. பிணமாலை - பிணம் தின்னும் இயல்புடைய. மாலை என்பது இயல்பு என்ற பொருளில் வந்தது. மண மாலை என்பதில் உள்ள மாலை மணத்திற்குரிய பூமாலையைப் புனைந்த மங்கையர் எனவும் பொருள் கொள்ளலாம். ( 134 )

2236. தோலாப்போர் மறமன்னர்
தொடித்தோள்க ளெடுத்தோச்சி
மேலாண்மே னெருப்புமிழ்ந்து
மின்னிலங்கு மயில்வாளாற்
காலாசோ டறவெறிந்த
கனைகழற்கா லலைகடலு
ணீலநீர்ச் சுறாவினம்போ
னெய்த்தோருட் பிறழ்ந்தனவே.

பொருள் : தோலாப்போர் மறமன்னர் தொடித் தோள்கள் எடுத்து ஒச்சி - தோல்வியடையாத போரைச் செய்த வீரமுடைய வேந்தர்கள் தம்முடைய தொடி அணிந்த தோளை எடுத்து வீசி; நெருப்பு உமிழ்ந்து மின் இலங்கும் அயில் வாளால் - தீயைக் கக்கி ஒளி வீசும் கூரிய வாளால்; கால் ஆசோடுஅற - கால் கவசத்துடன் அறும்படி; மேலாள் மேல் எறிந்த - யானைமீதிருப் போரை வெட்டியபோது; கனைகழல் கால்-ஒலிக்கும் கழலணிந்த அக்கால்கள்; அலைகடலுள் - அலைகடலிலே; நீலநீர்ச் சுறாவினம் போல் - நீலநிறச் சுறாவின் இனம்போல; நெய்த்தோருள் பிறழ்ந்தன - குருதியிலே பிறழ்ந்து கிடந்தன.

விளக்கம் : கவசம் அணிந்த காலுக்கு நீலச்சுறா உவமை  காலாசோ டற்ற கழற்கால் இருங்கடலுள் - நீலச்சுறாப
பிறழ்வ போன்ற புனனாடன் - நேராரை அட்ட களத்து. (களவழி. 9) குன்றத் திறுத்த குரீஇனம் போல - அம்புசென்று இறுத்த அரும்புண் யானை. (புறநா. 19 : 89) யானைமேல் யானை நெறிதர ஆனாது கண்ணேர் கடுங்கணை மெய்ம்மறைப்ப எவ்வாயும்
எண்ணருங் குன்றிற் குரீயினம் போன்றவே. (களவழி. 8) .  தோலா - தோலாத. மேலாள் - யானை மீதிருக்கும் மறவர். அயில் வாள் - கூரிய வாள். ஆசு - கவசம். கால் சுறாவினம்போல் நெய்த்தோருள் பிறழ்ந்தன என்க. நெய்த்தோர் - குருதி. ( 135 )

2237. கருவியூ டுளங்கழிந்து கணைமொய்ப்பக் கதஞ்சிறந்து
குருவிசோ வரைபோன்ற குஞ்சரங் கொடியணிந்த
வுருவத்தே ரிறமுருக்கி யுருணேமி சுமந்தெழுந்து
பருதிசேர் வரைபோலப் பகட்டினம் பரந்தனவே.

பொருள் : கருவியூடு - கருவியினூடே சென்று; கணை மொய்ப்ப - அம்புகள் மொய்த்தலின்; குஞ்சரம் உளங்கழிந்து - சில யானைகள் நினைவு தப்பி; குருவி சேர் வரை போன்ற - குருவி சேர்ந்த மலை போன்றன; கதம் சிறந்து கொடி அணிந்த உருவத் தேர் இறமுருக்கி - சினம் மிகுந்து கொடி கட்டிய அழகிய தேரை அழியுமாறு கெடுத்து; உருள் நேமி சுமந்து எழுந்து - வட்டமான உருளைச் சுமந்து எழுந்து; பருதி சேர் வரைபோலப் பகட்டினம் பரந்தன - ஞாயிறு சேர்ந்த மலைபோலச் சில யானைத் திரள் பரவின.

விளக்கம் : கருவி : யானைக்கு அணியும் ஒரு கருவி. இற முருக்கி - பொடியாகக் கெடுத்து. ( 136 )

2238. மாலைவாய் நெடுங்குடைமேன்
மதயானைக் கைதுணிந்து
கோலநீள் கொழுங்குருதி
கொளவீழ்ந்து கிடந்தன
மேலைநீள் விசும்புறையும்
வெண்மதியம் விசும்பிழுக்கி
நீலமா சுணத்தோடு
நிலத்திழிந்த தொத்தனவே.

பொருள் : மதயானை கோலநீள் கொழுங்குருதி கொள - மதயானையின் கோலம் மிகுதியான செழுவிய குருதியைக் கொள்ளுமாறு; கை துணிந்து - கைகள் அற்று; மாலைவாய் நெடுங் குடைமேல் - மாலையை உடைய பெரிய குடையின்மேல்; வீழ்ந்து கிடந்தன - விழுந்து கிடந்தவை; மேலைநீள் விசும்பு உறையும் வெண்மதியம் - முன்பு நீண்ட வானிலே தங்கிய வெள்ளிய திங்கள்; விசும்பு இழுக்கி - வானத்தினின்றும் நழுவி; நீல மாசுணத்தோடு நிலத்து இழிந்தது ஒத்தன - கரும்பாம்புடன் நிலமிசை வீழ்ந்ததைப் போன்றன.

விளக்கம் : இச் செய்யுளுடன்,

இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல்
ஆடியல் யானைத் தடக்கை ஒளிறுவாள்
ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை
கோடுகொள் ஒண்மதியை நக்கும்பாம் பொக்குமே 

என்னும் களவழிச் (22) செய்யுட் பகுதியை ஒப்பிடுக.  ( 137 )

2239. அஞ்சன நிறநீக்கி யரத்தம்போர்த் தமருழக்கி
யிங்குலிக விறுவரைபோன் றினக்களி றிடைமிடைந்த
குஞ்சரங்கள் பாய்ந்திடலிற் குமிழிவிட் டுமிழ்குருதி
யிங்குலிக வருவிபோன் றெவ்வாயுந் தோன்றினவே.

பொருள் : அஞ்சன நிறம் நீக்கி முற்பட அஞ்சன நிறத்தைப் போக்கி; அரத்தம் போர்த்து - செந்நிறத்தைப் பூசுதலால்; இங்குலிக இறுவரை போன்று - சாதிலிங்கத்தையுடைய பெரிய மலையை ஒத்து. இடைமிடைந்த இனக்களிறு - செறிந்த யானைத் திரள்கள், அமர் உழக்கிக் குஞ்சரங்கள் பாய்ந்திடலின் - போரிலே கலக்கிச் சென்று பகைவரின் யானைகளைத் தாக்குவதால்; குமிழிவிட்டு உமிழ் குருதி - குமிழ் விட்டுப் பாயும் குருதி; இங்குலிக அருவி போன்று - சாதிலிங்க அருவிபோலே; எவ்வாயும் தோன்றின - எப்பக்கமும் காணப்பட்டன.

விளக்கம் : அஞ்சனக் குன்றேய்க்கும் யானை அமருழக்கி 
இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே (களவழி.7) ( 138 )

2240. குஞ்சரந் தலையடுத்துக் கூந்தன்மாக் காலணையாச்
செஞ்சோற்றுக் கடனீங்கிச் சினவுவாள் பிடித்துடுத்த
பஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்கக் கிடந்தாரை
யஞ்சிப்போந் தினநரியோ டோரிநின் றலறுமே.

பொருள் : குஞ்சரம் தலை அடுத்து - குஞ்சரத்தைத் தலை அணையாக அடுத்து; கூந்தல் மாகால் அணையா - குதிரையைக் காலணையாகக் கொண்டு; சினவுவாள் பிடித்து உடுத்த பஞ்சிமேல் - சினத்துக்குரிய வாளைப்பிடித்து, உடுத்த ஆடையின் மேலே; உடைஞாண் கிடந்து பதைத்தது இலங்க - வல்லிக்கயிறு கிடந்து துளங்கியிலங்க; செஞ்சோற்றுக்கடன் நீங்கிக் கிடந்தாரை - செஞ்சோறாகிய கடன் நீங்கும்படி பட்டுக் கிடந்தவரை; அஞ்சிப் போந்து - அஞ்சிச் சென்று : இன நரியோடு ஓரிநின்று அலறும் - இன நரியும் ஓரியும் அலறும்.

விளக்கம் : நீங்கி - நீங்க. பஞ்சி - ஆடை : ஆகுபெயர். தலை - தலையணை : ஆகுபெயர் செஞ்சோற்றுக்கடன் ; தாம் அது காறும் இனிதின் உண்டிருந்த செவ்விய சோற்றுக்கடன். அஃதாவது தம்மைப்புரந்த மன்னர்க்கு உற்றுழித் தம்முயிரைக் கொடுத்தல். சோறுவாய்த் தொழிந்தோர் (72) என்றார் முல்லைப் பாட்டினும். ( 139 )

2241. காதலார்க் கமிர்தீந்த கடற் பவழக் கடிகைவா
யேதிலாப் புள்ளுண்ணக் கொடேமென்று வாய்மடித்துக்
காதணிந்த பொற்றோடுங் குண்டலமு நகநகா
வீததைந்த வரைமார்பர் விஞ்சையர்போற் கிடந்தனரே.

பொருள் : வீததைந்த வரைமார்பர் - மலர் நெருங்கிய மலையனைய மார்பர்; காதலார்க்கு அமிர்து. ஈந்த கடல் பவழக் கடிகை வாய் - தம் மனைவியர்க்கு அமிர்தம் கொடுத்த, கடலில் உண்டாகும் பவழத் துண்டம் அனைய வாயை; ஏது இலாப்புள் உண்ணக் கொடேம் என்று - அவ்வமிர்தத்தை உண்ணத் தகுதியில்லாத பறவைகள் உண்ணக் கொடேம் என்றாற்போல; வாய்மடித்து - வாயை மடித்து; காது அணிந்த பொன் தோடும் குண்டலமும் நக நகா - காதில் அணிந்த பொன்னாலாகிய தோடும் குண்டலமும் நகைக்கத் தாமும் நகைத்து; விஞ்சையர்போல் கிடந்தனர். வித்தியாதரைப்போற் கிடந்தனர்.

விளக்கம் : ஏது - காரணம். உயிர்போகாதாரைப்போற் கிடத்தலின், விஞ்சையர்போல் என்றார். ( 140 )

2242. குடர்வாங்கு குறுநரிகள்
கொழுநிணப் புலாற்சேற்றுட்
டொடர்வாங்கு கதநாய்போற்
றோன்றின தொடித்திண்டோள்
படர்தீரக் கொண்டெழுந்த
பறவைகள் படநாக
முடனேகொண் டெழுகின்ற
வுவணப்பு ளொத்தனவே.

பொருள் : கொழுநிணப் புலாற் சேற்றுள் குடர்வாங்கு குறுநரிகள் - கொழுவிய நிணமாகிய, புலால் நாறும் சேற்றிலிருந்து குடரை வலிக்கும் நரிகள்; தொடர் வாங்கு கதநாய்போல் தோன்றின - சங்கிலியை வலிக்கும் நாய்போல் தோன்றின; படர் தீரத் தொடித் திண்தோள் கொண்டு எழுந்த பறவைகள் - இரைதேடும் நினைவு தீரத். தொடியணிந்த திண்ணிய தோளைக் கொண்டு எழுந்த பறவைகள்; படநாகம் உடனே கொண்டு எழுகின்ற உவணப்புள் ஒத்தன - படநாகத்தைத் தம்முடன் கொண்டு வானில் எழுகின்ற கலுழனைப் போன்றன.

விளக்கம் : குடர்கொண்டு வாங்கும் குறுநரி கந்தில
தொடரொடு கோணாய் புரையும். (களவழி. 34)
எவ்வாயும் ஓடி வயவர் துணித்திட்ட
கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்
ஐவாய் வயநாகம் கவ்வி விசும்பிவரும்
செவ்வாய் உவணத்தில் தோன்றும். (களவழி. 26)
 
2243. வரையோடு முருமிடிப்ப
வளையெயிற்றுக் கொழுங்குருதி
நிரையுளை யரிநன்மா
நிலமிசைப் புரள்வனபோற்
புரையறுபொன் மணியோடைப்
பொடிப்பொங்கப் பொருதழிந்
தரைசோடு மரசுவா
வடுகளத்து ளாழ்ந்தனவே.

பொருள் : வளை எயிற்றுக் கொழுங்குருதி நிறையுளை அரி நன்மா - வளைந்த எயிற்றினையும் கொழுவிய குருதி படிந்த, ஒழுங்குற்ற பிடரி மயிரினையும் உடையனவாகிய சிங்கங்கள்; உரும் இடிப்ப - இடி இடித்தலின்; வரையோடும் நிலமிசைப் புரள்வன போல் - மலைகளோடே வீழ்ந்து குருதியையுடைய நிலமிசைப் புரள்வனபோல்; புரையறு பொன் மணியோடைப் பொடிப் பொங்க - குற்றம் அற்ற மணிகளிழைத்த பொன்னாலாகிய நெற்றிப் பட்டத்தில் மணிகள் பொடியாய்ப் பொங்கும்படி; பொருது அழிந்த அரசுவாவோடு - போர் செய்து வீழ்ந்த அரசு யானைகளுடன்; அரைசு அடுகளத்துள் ஆழ்ந்தன - அரசுகள் களத்தே வீழ்ந்து புரண்டன.

விளக்கம் : குருதி படிந்தனவாதலின் மணிகள் பொடித்துப் பொங்கல் உவமையாக வேண்டும். அரசு என்பது அரைசு எனப் போலியாய் நின்றது எதுகை நோக்கி. அரசு + உவா = அரசுவாஎனக் குற்றியலுகரம் கெட்டுப்புணர்ந்தது. அரசர்கட்குத் தகுதியான இலக்கணம் பொருந்தியிருப்பது அரசுவா எனப்படும். ( 142 )

2244. தடம்பெருங் குவளைக்கட் டாழ்குழலார் சாந்தணிந்து
வடந்திளைப்பப் புல்லிய வரைமார்பம் வாள்புல்ல
நடந்தொழுகு குருதியு ணகாக்கிடந்த வெரிமணிப்பூ
ணிடம்படு செவ்வானத் திளம்பிறைபோற் றோன்றினவே.

பொருள் : தடம் பெருங்குவளைக் கண் தாழ்குழலார் - மிகப் பெரிய குவளைபோலும் கண்களையுடைய, நீண்ட கூந்தல் மகளிர்; சாந்து அணிந்து - தாமே சாந்தைப் பூசி; வடம் திளைப்பப் புல்லிய வரை மார்பம் - முத்துமாலை அழுந்தத் தழுவிய மலையனைய மார்பை; வாள் புல்ல - வாள் தழுவுதலின்; நடந்து ஒழுகு குருதியுள் - வடிந்து போகின்ற குருதியிலே; நகாக் கிடந்த எரிமணிப் பூண் - விளங்கிக் கிடந்த முத்துவடம்; இடம்படு செவ்வானத்து - இடம் பரவிய செவ்வானத்திலே; இளம் பிறைபோல் தோன்றின - இளம்பிறையெனக் காணப்பட்டன.

விளக்கம் : இது வரை இரண்டு படைக்கும் பொது.  தடங்கண் பெருங்குவளைக்கண் எனத் தனித்தனி கூட்டுக. தாழ் குழல். வினைத்தொகை. நகாக்கிடந்த - நக்குகிடந்த. செவ்வானம் குருதிக்குவமை ; பூணுக்குப் பிறையுவமை. ( 143 )

வேறு

2245. காளமா கிருளைப் போழ்ந்து
கதிர்சொரி கடவுட் டிங்கள்
கோளரா விழுங்க முந்நீர்க்
கொழுந்திரைக் குளித்த தேபோ
னீளம ருழக்கி யானை
நெற்றிமேற் றத்தி வெய்ய
வாளின்வாய் மதனன் பட்டான்
விசயன்போர் விசயம் பெற்றான்.

பொருள் : காளம் ஆகு இருளைப் போழ்ந்து - கருமை மேலும் மேலும் பெருகா நின்ற இருளைக் கெடுத்து; கதிர் சொரி கடவுள் திங்கள் - கதிரைப் பெய்கின்ற தெய்வத் திங்கள்; கோள் அரா விழுங்க - கொலையில் வல்ல பாம்பு விழுங்குதலின்; முந்நீரக் கொழுந்திரை குளித்ததேபோல் - உயரப்போய்ப் பின்பு கடலின் கொழுவிய அலையிலே குளித்தாற்போல்; மதனன் - மதனன் என்பான்; நீள அமர் உழக்கி - பெரும்போரைச் செய்து; யானை நெற்றிமேல் தத்தி - (விசயனின்) யானை நெற்றியிலே பாய்ந்து; வெய்ய வாளின் வாய்ப்பட்டான் - விசயனுடைய கொடிய வாளின் வாயிலே விழுந்தான்; விசயன் போர் விசயம் பெற்றான் - விசானும் போரிலே வெற்றியுற்றான்.

விளக்கம் : காளம் - கருநிறம். ஆகிருள் : வினைத்தொகை. கடவுளாகிய திங்கள் என்க. கோளரா: பண்புத்தொகை. முந்நீர் - கடல். ( 144 )

2246. மன்மத னென்னுங் காளை
மணியொலிப் புரவித் தேர்மேல்
வின்மழை சொரிந்து கூற்றிற்
றெழித்தனன் றலைப்பெய் தார்ப்பக்
கொன்மலி மார்பன் பொற்றேர்
கொடுஞ்சிலை யறுப்பச் சீறிய
பொன்வரைப் புலியிற் பாய்ந்து
பூமிமேற் றோன்றி னானே.

பொருள் : மன்மதன் என்னும் காளை - அவன் தம்பி மன்மதன் என்பவன்; மணி ஒலிப் புரவித் தேர் மேல் - மணி ஒலியையுடைய குதிரை பூட்டிய தேர்மேல் ஏறி; கூற்றின் தெழித்தனன் - கூற்றுவனைப் போல் முழங்கி; தலைப் பெய்து - விசயனை வளைத்து; வில் மழை சொரிந்து ஆர்ப்ப - வில்லாலே கணை மழை பெய்து ஆரவாரிக்க; கொன்மலி மார்பன் - அச்சம் ஊட்டும் மார்பனாகிய விசயன்; பொன் தேர் கொடுஞ்சிலை அறுப்ப - மன்மதனுடைய அழகிய தேரையும் வளைந்த வில்லையும் துணிக்க; சீறி - அவன் சீறி; பொன்வரை புலியின் பாய்ந்து - பொன் மலையினின்றும் பாயும் புலிபோலத் தேரினின்றும் குதித்து; பூமிமேல் தோன்றினான் - நிலமிசை காணப்பட்டான்.

விளக்கம் : மன்மதன் - இவன் மதனன்தம்பி. மழை - அப்புமாரி. தெழித்தனன் - முழங்கி : முற்றெச்சம். கொன் - அச்சம். மார்பன் - ஈண்டு விசயன். தேரையும் சிலையையும் என விரிக்க. ( 145 )

2247. நெற்றிமேற் கோல்கண் மூன்று
நெருப்புமிழ்ந் தழுந்த வெய்யச்
சுற்றுபு மாலை போலத்
தோன்றறன் னுதலிற் சூடிப்
பொற்றதோர் பவழந் தன்மேற்
புனைமணி யழுத்தி யாங்குச்
செற்றெயி றழுந்தச் செவ்வாய்
கௌவிவா ளுரீஇ னானே.

பொருள் : நெற்றிமேல் கோல்கள் மூன்று - (அம் மன்மதனின்) நெற்றியின்மேல் அம்புகள் மூன்றை; நெருப்பு உமிழ்ந்து அழுந்த எய்ய - தீயைச் சொரிந்து அழுந்து மாறுவிட; தோன்றல் தன் நுதலில் மாலை போலச் சுற்றுபு சூடி - அவன் அவற்றைத் தன் நெற்றியிலே மாலை போலச் சூழ அணிந்து; பொற்றது ஓர் பவழந் தன் மேல் புனைமணி அழுத்தி யாங்கு - அழகிய தாகிய பவழத்திலே ஒப்பனை செய்த முத்தை அழுத்தினாற் போல; செற்று - சினந்து; எயிறு அழுந்தச் செவ்வாய் கௌவி - இதழிலே பற்கள் அழுந்துமாறு செவ்வாயை மடித்து; வாள் உரீ இயினான் - வாளை உருவினான்.

விளக்கம் : கோல் - அம்பு சுற்றுபு-சுற்றி. விசயன் எய்ய என்க. அத்தோன்றல் - அந்த மன்மதன். பொற்றது - பொலிவு பெற்றது. பவழம் வாய்க்கும்,. மணிஎயிற்றிற்கும் உவமை உரீ இனான் - உருவினான். ( 146 )

2248. தோளினா லெஃக மேந்தித்
தும்பிமே லிவரக் கையா
னீளமாப் புடைப்பப் பொங்கி
நிலத்தவன் கவிழ்ந்து வீழக்
கீளிரண் டாகக் குத்தி
யெடுத்திடக் கிளர்பொன் மார்பன்
வாளினாற் றிருகி வீசி
மருப்பின்மேற் றுஞ்சி னானே.

பொருள் : எஃகம் தோளினால் ஏந்தி - அவ் வாளை அவன் கையாலே ஏந்தி; தும்பிமேல் இவர - விசயன் ஏறிய யானைமேற் சென்றானாக; மாப்பொங்கி நீள கையாற் புடைப்ப - அவ்வியானை சினந்து தன் கையாலே அடிக்க; அவன் கவிழ்ந்து நிலத்து வீழ - அவன் கவிழ்ந்து நிலத்தே வீழ; கீள் இரண்டு ஆகக் குத்தி எடுத்திட - (அவ்வியானை) மேலும் அவனைக் கூறு இரண்டாகும்படி குத்திக் கொம்பிலே எடுப்ப; கிளர் பொன் மார்பன் திருகி, வாளினால் வீசி - விளங்கும் பொன் மார்பனான அவன் சிறிது திருகி, வாளாலே வெட்டி; மருப்பின்மேல் துஞ்சினான் - அக் கொம்பிலே இறந்தான்.

விளக்கம் : 144 முதல் இதுவரை விசயனுடன் மதனனும் மன்மதனும் பொருது பட்டமை கூறினர். எஃகம் - வாள். தும்பி - யானை. அவன் கவிழ்ந்து நிலத்து வீழ என மாறுக. இரண்டு கீள் ஆக என் மாறுக. கீள் - கீற்று; கூறு. ( 147 )

2249. நனைகலந் திழியும் பைந்தார்
நான்மறை யாளன் பைம்பொற்
புனைகலக் குப்பை யொப்பான்
புத்திமா சேனன் பொங்கி
வனைகலத் திகிரித் தோமேன்
மன்னரைக் குடுமி கொண்டான்
கனையெரி யழலம் பெய்த
கண்ணுதன் மூர்த்தி யொத்தான்.

பொருள் : நனை கலந்து இழியும் பைந்தார் நான்மறை யாளன் - அரும்புகள் இடையே கலக்கப்பட்டு அலர்ந்தவற்றிலிருந்து தேன் வடியும் பைந்தாரை யணிந்த அந்தணனும்; பைம் பொன் புனைகலக் குப்பை ஒப்பான் புத்திமா சேனன் - அணிந்த பொற்கலன்களின் தொகுதி போன்றவனுமாகிய புத்திசேனன்; பொங்கி - கிளர்ந்து; வனை கலத் திகிரித் தேர்மேல் மன்னரைக் குடுமி கொண்டான் - கலம் வனையும் திகிரிபோல வரும் தேர்மீது உலாவி அரசரை வென்றி கொண்டான்; கனை எரி அழல் அம்பு எய்த கண்ணுதல் மூர்த்தி ஒத்தான் - அப்போது அவன் மிகுதியாக எரிகிற அழலாகிய அம்பினை எய்து முப்புரத்தை எரித்த நெற்றிக்கண் இறைவனைப் போன்றான்.

விளக்கம் : நனை என்பது தேனுமாம். புத்திமா சேனன் : மா : அசை.  நனை-அரும்பு; தேனுமாம். கலந்து-கலக்கப்பட்டென்க. நான்மறை யாளன் என்றது புத்திசேனனை. குப்பை-தொகுதி. திகிரிபோல வட்ட மாக வரும் தேர் என்க. குடுமி கொள்ளல் - வெற்றிகொள்ளுதல். கண்ணுதன் மூர்த்தி - சிவபெருமான். ( 148 )

2250. செண்பகப் பூங்குன் றொப்பான்
றேவமா தத்தன் வெய்தா
விண்புக வுயிரைப் பெய்வான்
வீழ்தரு கடாத்த வேழ
மண்பக விடிக்குஞ் சிங்க
மெனக்கடாய் மகதர் கோமான்
றெண்கடற் றானை யோட
நாணிவேல் செறித்திட் டானே.

பொருள் : செண்பகப் பூங்குன்று ஒப்பான் தேவமா தத்தன் - பொன் அணிதலின் சண்பகம் மலர்ந்த மலையைப் போன்றவனாகிய தேவதத்தன் என்பவன்; வெய்தா விண்புக உயிரைப் பெய்வான் - விரைவிலே வானிற் செல்லும்படி பல் உயிரையும் செலுத்த வேண்டி; வீழ்தரு கடாத்த வேழம் மண்பக இடிக்கும் சிங்கம் எனக் கடாய் பெய்கின்ற மதமுடைய யானையின் மீது, நிலம் பிளக்க முழங்கும் சிங்கம் போல அமர்ந்து அதனைச் செலுத்தியபோது; மகதர் கோமான் தெண்கடல் தானை ஓட - அவனைக் கண்டு மகத மன்னனின் கடலனைய சேனை ஓடக் கண்டு; நாணி வேல் செறித் திட்டான் - வெள்கி, வேலை உறையிலே சேர்த்திட்டான் (மீண்டான்.)

விளக்கம் : செண்பகப்பூ - பொன்னணிகலனுக்குவமை. உயிரை விண்புகப் பெய்வான் என்க. உயிர் - பகைவர் உயிர். இடிக்கும் - முழங்கும். கடாய் - கடாவி; செலுத்தி. வேல்செறித்திட்டான் என்பது மீண்டான் என்பது பட நின்றது. ( 149 )

2251. சின்னப்பூ வணிந்த குஞ்சிச்
சீதத்தன் சினவு பொன்வாண்
மன்னருட் கலிங்கர் கோமான்
மத்தகத் திறுப்ப மன்னன்
பொன்னவிர் குழையும் பூணு
மாரமுஞ் சுடர வீழ்வான்
மின்னவிர் பருதி முந்நீர்க்
கோளொடும் வீழ்வ தொத்தான்.

பொருள் : சின்னப்பூ அணிந்த குஞ்சிச் சீதத்தன் சினவு பொன் வாள் - விடுபூவை அணிந்த சிகையையுடைய சீதத்தன் தன் புகையும் வாளை; மன்னருள் கலிங்கர் கோமான் மத்தகத்து  இறுப்ப அரசர்களிற் சிறந்த கலிங்க மன்னனின் தலைமீது தாக்க; மன்னன் பொன் அவிர் குழையும் பூணும் ஆரமும் சுடர வீழ்வான் - அவன் பொன்னாலாகிய குழையும் பூணும் முத்துமாலையும் ஒளிரப் (படை நடுவே)) வீழ்கின்றவன்; மின் அவிர் பருதி கோளொடு முந்நீர் வீழ்வது ஒத்தான் - ஒளி வீசும் ஞாயிறு கோளுடனே கடலில் வீழ்வதனைப் போன்றான்.

விளக்கம் : கோளிற்குக் குழை முதலியன உவமை. ( 150 )

2252. கொடுஞ்சிலை யுழவன மான்றேர்க்
கோவிந்த னென்னுஞ் சிங்க
மடங்கருஞ் சீற்றத் துப்பின்
மாரட்ட னென்னும் பொற்குன்
றிடத்துபொற் றூளி பொங்கக்
களிற்றொடு மிறங்கி வீழ
வடர்ந்தெரி பொன்செ யம்பி
னழன்றிடித் திட்ட தன்றே.

பொருள் : கொடுஞ்சிலை உழவன் மான்தேர்க் கோவிந்தன் என்னும் சிங்கம் - கொடிய வில்லேந்திய உழவனும் குதிரை பூட்டிய தேரை யுடையவனுமான கோவிந்தன் என்னும் சிங்கம்; மடங்க அருஞ் சீற்றத் துப்பின் மாரட்டன் என்னும் பொன் குன்று - வளைதற் கரிய சீற்றத்தையும் வலிமையையுமுடைய மாரட்டன் என்ற பொன்மலையை; பொன் தூளி பொங்க இடந்து - பொற்றுகள் எழ மார்பைப் பிளந்து; களிற்றொடும் இறங்கி வீழ - யானையுடன் தாழ்ந்து வீழ; அடர்ந்து எரி பொன் செய் அம்பின் - நெருங்கி எரிகின்ற பொன்னாற் செய்த அம்பினாலே; அழன்று இடித்திட்டது - சினந்து இடித்தது.

விளக்கம் : சிங்கமும் மலையும் என்றற் கேற்ப, இடித்திட்டது என்றார். ( 151 )

2253. கோங்குபூத் துதிர்ந்த குன்றிற்
பொன்னணி புளகம் வேய்ந்த
பாங்கமை பரும யானைப்
பல்லவ தேச மன்னன்
றேங்கமழ் தெரியற் றீம்பூந்
தாரவ னூர்ந்த வேழங்
காம்பிலிக் கிறைவ னூர்ந்த
களிற்றொடு மலைந்த தன்றே.

பொருள் : கோங்கு பூத்து உதிர்ந்த குன்றின் - கோங்கு மலர்ந்து உதிர்ந்து கிடந்த குன்று போல; பொன் அணி புளகம் வேய்ந்த - பொன்னாற் செய்த கண்ணாடி தைத்தணிந்த; பாங்கு அமை பரும யானை பல்லவ தேச மன்னன் - உறவமைந்த பரும யானையையுடைய பல்லவ நாட்டரசன்; தேன் கமழ் தெரியல் தீம் பூந்தாரவன் ஊர்ந்த வேழம் - தேன் மணக்கின்ற தெரிதலையுடைய இனிய மலர்மாலை யானாகிய உலோகபாலன் ஏறிய யானை; காம்பிலிக்கு இறைவன் ஊர்ந்த களிற்றொடு மலைந்தது - காம்பிலி வேந்தன் ஏறிய யானையுடன் பொருதது.

விளக்கம் : கோங்கு - கோங்கமரம். புளகத்திற்குக் கோங்குமலர் உவமை. புளகம் - கண்ணாடி. பூந்தாரவன் என்றது, உலோகபாலனை காம்பிலி - ஒருநாடு. ( 152 )

2254. கொந்தழல் பிறப்பத் தாக்கிக்
கோடுகண் மிடைந்த தீயால்
வெந்தன விலையி லாத
சாமரை வீர மன்ன
னந்தரம் புதைய வில்வா
யருஞ்சரம் பெய்த மாரி
குந்தத்தால் விலக்கி வெய்ய
கூற்றென முழங்கி னானே.

பொருள் : கோடுகள் கொந்து அழல் பிறப்பத் தாக்கி மிடைந்த தீயால் - (அப்போது அவற்றின்) கொம்புகள் பொங்கும் அழல் உண்டாகத் தாக்க எழுந்த நெருப்பினால்; விலையிலாத சாமரை வெந்தன - விலைமதிக்க இயலாத சாமரைகள் எரிந்தன; வீர மன்னன் அந்தரம் புதைய வில்வாய் அருஞ்சரம் பெய்த மாரி - அப்போது உலோகபாலன் வானம் மறையுமாறு வில்லிடத்தே அரிய கணைகளைப் பெய்த மழையை; குந்தத்தால் விலக்கி - காம்பிலி மன்னன் தன் குந்த மென்னும் படையாலே தடுத்து; வெய்ய கூற்றென முழங்கினான் - கொடிய எமனைப் போல ஆரவரித்தான்.

விளக்கம் : தாக்கி - தாக்க : எச்சத் திரிபு. மன்னன் : உலோகபாலன். அந்தரம் - வானவெளி. வில்வாயினின்றும் பெய்த சரமாரி என்க. குந்தம் - ஒரு படைக்கலன். ( 153 )

2255. மற்றவ னுலோக பாலன்
வயங்குபொற் பட்ட மார்ந்த
நெற்றிமே லெய்த கோலைப்
பறித்திட வுமிழ்ந்த நெய்த்தோ
ருற்றவன் களிற்றிற் பாயத்
தோன்றுவா னுதயத் துச்சி
யொற்றைமாக் கதிரை நீட்டி
யொண்சுட ரிகுந்த தொத்தான்.

பொருள் : உலோக பாலன் வயங்கு பொன் பட்டம் ஆர்ந்த நெற்றிமேல் - உலோக பாலனுடைய விளங்கும் பொற்பட்டம் பொருந்திய நெற்றியிலே; அவன் எய்த கோலை - காம்பிலி மன்னன் விடுத்த கணையை; பறித்திட உமிழ்ந்த நெய்த்தோர் - உலோகபாலன் பறித்தவுன் அந்த நெற்றி உமிழ்ந்த குருதி; உற்று அவன் களிற்றில் பாயத்தோன்றுவான் - வந்து அவனூர்ந்த யானையின்மேற் பாய்ந்திடக் காணப்படும் உலோகபாலன்; உதயத்து உச்சி ஒண்சுடர் ஒற்றை மாக்கதிரை நீட்டி இருந்தது ஒத்தான் - உதயமலையின் உச்சியிலே ஒளி பொருந்திய ஞாயிறு தன் ஒற்றைக் கதிரை நீட்டி இருந்ததைப் போன்றான்.

விளக்கம் : உலோக பாலனுக்குக் கூறியதைக் காம்பிலி மன்னனுக்கு ஏற்றுவாரும் உளர். மற்று : அசை. அவன் : காம்பிலிமன்னன் - நெய்த்தோர் பாயத்தோன்றுபவன் சுடரை ஒத்தான். நெய்த்தோர் கதிர்க்கும், யானை உதயகிரிக்கும் ஞாயிறு மன்னனுக்கும் உவமை. ( 154 )

2256. கொடுமரங் குழைய வாங்கிக்
கொற்றவ னெய்த கோல்க
ணெடுமொழி மகளிர் கோல
நிழன்மணி முலைக ணோபட்
டுடனுழ வுவந்த மார்ப
மூழ்கலிற் சிங்கம் போலக்
கடன்மருள் சேனை சிந்தக்
காம்பிலி மன்னன் வீழ்ந்தான்.

பொருள் : கொற்றவன் கொடுமரம் குழைய வாங்கி எய்த கோல்கள் - (அப்பொழுது) உலோகபாலன் தன் வில்லைக் குழைய வளைத்து விடுத்த அம்புகள்; நெடுமொழி மகளிர் கோலம் நிழல் மணி முலைகள் நேர்பட்டு - தம் கற்பின் மிகுதியால் வஞ்சினங் கூறுதற்குரிய மகளிரின் ஒப்பனை செய்த ஒளிவிடும் மணிகளைப் புனைந்த முலைகள் எதிர்ந்து; உடன் உழ உவந்த மார்பம் மூழ்கலின் - சேர உழுதலின் மகிழ்ந்த அவன் மார்பிலே மூழ்கியதால்; கடல் மருள் சேனை சிந்த - கடலனைய தன் படை சிதறியோடும்படி; சிங்கம்போலக் காம்பிலி மன்னன் பட்டான் - சிங்கத்தைப் போலக் காம்பிலி வேந்தன் இறந்தான்.

விளக்கம் : உலோகபாலனாற் காம்பிலி மன்னன் இறந்தான். கொடுமரம் - வில். வாங்கி - வளைத்து. கொற்றவன் ; உலோகபாலன். நெடுமொழிமகளிர் - தங்கற்பின் மிகுதியால் வஞ்சினம் கூறுதற்குரிய  மகளிர். மருள் : உவமஉருபு. மன்னர் சிங்கம் போல வீழ்ந்தான் என்க. ( 155 )

2257. பொன்னிறக் கோங்கம் பொற்பூங்
குன்றெனப் பொலிந்த மேனி
நன்னிற மாலின் மேலா
நலங்கொடார் நபுல னென்பான்
மின்னிற வெஃக மேந்தி
வீங்குநீர் மகதை யார்கோன்
கொன்னிறக் களிற்றி னெற்றிக்
கூந்தன்மாப் பாய்வித் தானே.

பொருள் : பொன்நிறக் கோங்கம் பொன் பூங்குன்று என - பொன் நிறக் கோங்கமும் பொலிவினையுடைய மலர்க் குன்றமும் போல; பொலிந்த மேனி - பொலிவுற்ற மெய்யினையுடையவனும்; நன்னிற மாவின் மேலோன் - நல்ல நிறமுடைய குதிரை மேலுள்ளவனுமாகிய; நலங் கொள் தார் நபுலன் என்பான் - அழகிய தாரணிந்த நபுலன் என்பவன்; மின்நிற எஃகம் ஏந்தி - ஒளி வீசும் வாளை ஏந்தி; வீங்கு நீர் மகதையார் கோன் - நீர்வளமுடைய மகதநாட்டு மன்னனின்; கொன் நிறக் களிற்றின் நெற்றி - அச்சுறுத்தும் தோற்றமுடைய களிற்றின் உச்சியிலே; கூந்தல் மா பாய்வித்தான் - அப் புரவியைப் பாயவிட்டான்.

விளக்கம் : நபுலன் : சீவகன் தம்பி. பொன்னிறப் பூங்கோங்கம், பொற்குன்றம் என இயைக்க. நலங்கொள்தார் - ஈண்டுத் தும்பைத்தார் என்க. எஃகம் - வாள். மகதை - மகதநாடு, கூந்தன்மா - குதிரை. அக் கூந்தன்மாவை என்க. ( 156 )

2258. ஏந்தறன் கண்கள் வெய்ய
விமைத்திட வெறித லோம்பி
நாந்தக வுழவ னாணி
நக்குநீ யஞ்சல் கண்டாய்
காய்ந்திலே னென்று வல்லே
கலினமாக் குன்றிற் பொங்கிப்
பாய்ந்ததோர் புலியின் மற்றோர்
பகட்டின்மேற் பாய்வித் தானே.

பொருள் : ஏந்தல்தன் கண்கள் வெய்ய இமைத்திட - (அப்போது) அம் மகத மன்னனின் கண்கள் விரைய இமைத்தலால்; நாந்தக உழவன் நாணி - வாளுழவனாகிய நபுலன் நாண முற்று; எறிதல் ஓம்பி - வாளெறிதலை நிறுத்தி; நக்கு - நகைத்து; காய்ந்திலேன் - நான் உன்னைத் துன்புறுத்தேன்; நீ அஞ்சல் என்று - நீ அஞ்சற்க என்றுரைத்து; குன்றின் பொங்கிப் பாய்ந்ததோர் புலியின் - ஒரு குன்றிலிருந்து மற்றொரு குன்றுக்குப் பொங்கிப் பாய்ந்த புலி போல; மற்றோர் பகட்டின்மேல் - அக் களிற்றினின்றும் வேறொரு களிற்றின்மேல்; கலினமாப் பாய்வித்தான் - கடிவாளம் பூண்ட குதிரையைப் பாய்வித்தான்.

விளக்கம் : வெய்ய இமைத்திட என்னுந் தொடரிலுள்ள வெய்ய என்பதை, மற்றோர் வெய்ய பகட்டின்மேல் என இயைப்பர் நச்சினார்க்கினியர். நாந்தகம் - வாள். பகடு - யானை. விழித்தகண் வேல்கொண்டெறிய வழிந்திமைப்பின், ஓட்டன்றோ வன்கணவர்க்கு என்னும் திருக்குறள் இயைபு காண்க. ( 157 )

2259. கைப்படை யொன்று மின்றிக்
கைகொட்டிக் குமர னார்ப்ப
மெய்ப்படை வீழ்ந்த நாணி
வேழமு மெறிதல் செல்லான்
மைப்பட நெடுங்கண் மாலை
மகளிர்தம் வனப்பிற சூழ்ந்து
கைப்படு பொருளி லாதான்
காமம்போற் காளை மீண்டான்.

பொருள் : குமரன் கைப்படை ஒன்றும் இன்றிக் கைதட்டி ஆர்ப்ப - (அப்போது அக் களிற்றிலிருந்த) குமரன் கையில் ஒரு படையுமில்லாமையால் மற்போர் செய்யக் கருதிக் கைதட்டி முழங்கலின்; மெய்ப்படை வீழ்த்தல் நாணி - அவன் மெய்யைப் படையால் வீழ்த்தற்கு நாணமுற்று; வேழமும் எறிதல் செல்லான் - யானையையும் வீழ்த்தானாகி; மைப்படு நெடுங்கண் மாலை மகளிர்தம் வனப்பின் சூழ்ந்து - மைதீட்டிய நெடுங்கண்களையும் மாலையையும் உடைய பெண்களின் அழகினாலே அவர்களைக் கூட விரும்பியும்; கைப்படு பொருளிலாதான் காமம்போல் - கையிலே பொருள் இல்லாதவனுடைய ஆசையைப்போல; காளை மீண்டான் - நபுலன் திரும்பினான்.

விளக்கம் : கைப்படு பொருளிலாதான் காமம் என்பதற்கு, கைப்படு பொருளில்லாதவனிடம் மகளிர் கொண்ட காமம் என்றும் பொருள் கூறலாம். வறியவன் பரத்தையர் மேற்கொண்ட காமம் என்பது தகுதியுடைய பொருள். மற்போர் - எருமைமறம். ( 158 )

வேறு

2260. மண்காவலை மகிழாதிவ ணுடனேபுக ழொழிய
விண்காவலை மகிழ்வீர்நனி யுளிரோவென விபுலன்
வண்காரிருண் மின்னேயுமிழ் நெய்வாயதொ ரயில்வாள்
கண்காவல கழுகோம்புவ துயராநனி வினவும்.

பொருள் : மண்காவலை மகிழாது இவணுடனே புகழ் ஒழிய - உலகாள்வதிலே விருப்பம் இன்றி, இவ்வுலகுடனே புகழ் நிற்க; விண்காவலை நனி மகிழ்வீர் உளிரோ என - (என்னுடன் பொருது) வானுலகை மிகவும் விரும்பும் வீரர் இருக்கின்றீரோ? என்று; வண்இருள் கார் மின்னே உமிழ் நெய்வாயது - பேரிருளினை யுடைய காரிலே மின்னையே உமிழும் நெய்தோய்ந்த வாயையுடையதும்; கண் காவல் கழுகு ஓம்புவது - கண்ணைக் குத்துவனவாகிய கழுகுகளை ஓம்புவதுமாகிய; ஓர் அயில்வாள் உயரா - ஒரு கூரிய வாளை உயர்த்தி நின்று; விபுலன் நனி வினவும் - விபுலன் நன்கு வினவுவான்.

விளக்கம் : நபுலன் சென்று மீளுதலின். இவன் வினவிச் சென்றான். இவண் - இவ்வுலகத்தின்கண். நும்புகழ் நிற்ப, அஃதொழியச் சென்று விண்காவலை மகிழ்வீர் என்றவாறு. காவல் - குத்துவ. உயரா - உயர்த்து. பகைவரைக் கொன்று அவருடலைக் கழுகுண்ண ஈந்து அதனை ஓம்பும் வாள் என்றவாறு. ( 159 )

2261. வீறின்மையின் விலங்காமென மதவேழமு மெறியா
னேறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சிலென் றெறியான்
மாறன்மையின் மறம்வாடுமென் றிளையாரையு மெறியா
னாறன்மையின் முதியாரையு மெறியானயி லுழவன்.

பொருள் : அயிலுழவன் - வேலேந்திய உழவனாகிய அவ் விபுலன்; மத வேழமும் விலங்காம் என - மத களிற்றை எறிந்தாலும் விலங்கை எறிந்ததாகும் என எண்ணி; வீறு இன்மையின் எறியான் - அதனாலே வென்றியின்மையின் அதனையும் வெட்டாமல்; ஏறு உண்டவர் - முன்பு வெட்டுண்டவர்; நிகராயினும் - சமமானவராயினும் ; பிறர் மிச்சில் என்று எறியான் - பிறர் படை தீண்டிய எச்சில் என்று அவரையும் வெட்டாமல்; இளையாரையும் - தனக் கிளையவரையும்; மாறு அன்மையின் மறம் வாடும் என்று - நிகரன்மையின் வீரம் இழுக்குறுமென்று நினைத்து; எறியான் - வெட்டாமல்; முதியாரையும் ஆறன்மையின் - தன்னின் முதிர்ந்தோரையும் எறிதல் அறமன்மையின்; எறியான் - வெட்டாமல் நின்றான்

விளக்கம் : வீறு - வெற்றி. வேழம் பிறப்பாற் றனக்கு ஒப்பின்மையால் அதனை எறிவது வெற்றி எனப்படாது என்பது கருத்து. ஏறுண்டவர் - பிறரால் எறியப்பட்ட மறவர். மிச்சில் - எஞ்சியது. மாறு - நிகர். ஆறு - அறநெறி. உழவன் : எழுவாய் ( 160 )

2262. ஒன்றாயினும் பலவாயினு
மோரோச்சினு ளெறிய
வென்றாயின மதவேழமு
முளவோவென வினவிப்
பொன்றாழ்வரைப் புலிப்போத்தெனப்
புனை தார்மிஞி றார்ப்பச்
சென்றானிகல் களிறாயிர
மிரியச்சின வேலோன்.

பொருள் : சின வேலோன் - புகையும் வலந்திய விபுலன்; வென்றாயின் மதவேழமும் - முன்னர்ப் பல போரினும் வென்று எனக்குப் போதுவனவாகிய மதவேழங்களிலும்; ஒன்று ஆயினும் பல ஆயினும் - ஒன்றே யெனினும் பலவே எனினும்; ஓர் ஓச்சினுள் எறிய உளவோ என வினவி - ஒரு வெட்டிலே ஒரு களிறு ஆக வெட்டுதற்கு உளவோ என்று வினவியவாறு; புனை தார் மிஞிறு ஆர்ப்ப - அணிந்த மலர்மாலையிலே வண்டுகள் முரல; இகல் களிறு ஆயிரம் இரிய - வலிய களிறுகள் ஆயிரம் சிதறி யோடுமாறு; பொன் தாழ்வரைப் புலிப்போத்து என - பொன்மலையிலே உலவும் புலியேறுபோல; சென்றான் - யானைமீது உலவினான்.

விளக்கம் : முன்னர், அயில் வாள் உயரா (2260) என்று கூறிப் பின்னர். அயிலுழவன் (2261) வேலோன் (2262) என்றது, யானையிலிருந்து பொருமிடத்து வேல் வேண்டும் என்று கருதி. ( 161 )

2263. புடைதாழ்குழை பொருவில்லுயர்
பொன்னோலையொ டெரிய
வுடைநாணொடு கடிவட்டினொ
டொளிர்வாளினொ டொருவ
னடையாநிக ரெறிநீயென
வதுவோவென நக்கான்
கிடையாயின னிவனேயெனக்
கிளராணழ குடையான்.

பொருள் : புடை தாழ் குழை பொரு இல் உயர் பொன் ஓலையொடு எரிய - பக்கத்தே தாழும் குழை ஒப்பற்ற உயர்ந்த பொன் தோடுடன் ஒளிர ; உடை நாணொடு கடி வட்டினொடு ஒளிர் வாளினொடு ஒருவன் - அசை நாணும் மிக்க வட்டுடையும் ஒளிரும் வாளும் கொண்ட ஒருவன்; அடையா, நிகர், நீ எறி என - (விபுலனை) நெருங்கி, நீ எனக்கு நிகர், என்னை வெட்டு என்றானாக ; கிடையாயினன் இவனே எனக் கிளர் ஆண் அழகு உடையான் - இவனே உலகிற் கொப்பானவன் என்னுமாறு விளங்கும் ஆணழகுடைய விபுலன்; அதுவோ என நக்கான் - அப்படியோ என்று நகைத்தான்.

விளக்கம் : முற்படமார்பு கொடுத்தான் என்னும் புகழை நீ எய்தக் கருதியோ இங்ஙனம் உரைத்தாய். அவ்வாறு புகழையடைய ஒவ்வேன் என்பான், அதுவோ? என நக்கான். ( 162 )

2264. இன்னீரின திரைமேலிரண்
டிளவெஞ்சுட ரிகலி
மின்னோடவை சுழன்றாயிடை
விளையாடுகின் றனபோற்
பொன்னாணினர் பொருவில்லியர்
புனைகேடகந் திரியாக்
கொன்வாளினர் கொழுந்தாரினர்
கொடிமார்பினர் திரிந்தார்.

பொருள் : இன் நீரின் திரைமேல் - இனிய நீரையுடைய கடலின் அலைகளின் மேலே; இரண்டு இள வெஞ்சுடர் இகலி - இரண்டு இள ஞாயிறுகள் மாறுபட்டு; அவை மின்னோடு சுழன்று ஆயிடை விளையாடுகின்றன போல் - அவை கையிற் பற்றிய மின்னுடன் சுழன்று ஆங்கே இருந்து விளையாடுகின்றவை போல; பொன் நாணினர் - பொன் நாணினராய், கொன் வாளினர் - அச்சுறுத்தும் வாளினராய், கொழுந்தாரினர் - வளவிய மாலையினராய்; கொடி மார்பினர் - கொடியை எழுதிய மார்பினராய்; பொரு இல் உயர் புனை கேடகம் திரியா - ஒப்பில்லாது உயர்ந்த கேடகத்தைத் திரித்து; திரிந்தார் - (யானைமீது சாரிகையாகத்) திரிந்தார்.

விளக்கம் : மின் : வாளுக்குவமை.  காட்சிக்கினிய நீரையுடைய கடல் என்க. இரண்டிளவெஞ்சுடர் : இல்பொருளுவமை. மின் - படைக்கலனுக்குவமை. கொள் - அச்சம். கொடி - எழுதிய கொடி. ( 163 )

2265. விருந்தாயினை யெறிநீயென
விரைமார்பகங் கொடுத்தாற்
கரும்பூணற வெறிந்தாங்கவ
னினதூழினி யெனவே
யெரிந்தாரயி லிடைபோழ்ந்தமை
யுணராதவ னின்றான்
சொரிந்தார்மல ரரமங்கையர்
தொழுதார்விசும் படைந்தான்.

பொருள் : நீ விருந்து ஆயினை என (அவ்வாறு யானையின் மேலிருந்து சாரிகை திரிதலில் சேர்ந்து வெட்டுதல் கூடாமையின் இருவரும் வேற்போர் செய்யத் துணிந்தனர். துணிந்த பின்னர்) யான் வந்தபின் வந்தமையின் நீ எனக்கு விருந்தினன் ஆயினை என்று கூறி; விர மார்பகம் கொடுத்தாற்கு - விபுலன் மணங்கமழும் தன் மார்பைக் கொடுத்தானாக அங்ஙனம் கொடுத்தவனை; அவன் அரும்பூண் அற எறிந்து இனி நினது ஊழ் என - அம்மறவனும் அரிய கவசத்தளவு அறும்படி எறிந்து இனி எறிவது நின்னுடை முறை என்று கூறினன்; எரிந்து ஆர் அயில் இடை போழந்தமை உணராது விசும்பு அடைந்தான் - விபுலன் ஒளிர்ந்து இலக்கணம் நிரம்பிய வேல் தன் மார்பை ஊடுருவிச் சென்றமையை அதன் நொய்மையாலே உணரமாட்டாது வானுலகத்தை அடைந்தான்; அவன் ஆங்கு நின்றான் - அம்மறவன் அங்கே நின்றான், அரமங்கையர் மலர் சொரிந்தார் தொழுதார் - வானவர் மகளிர் அவ்வீரன் அடிகளிலே மலரைச் சொரிந்து கைகூப்பித் தொழுதனர்.

விளக்கம் : விண்ணுலகை விரும்பிய விபுலன் ஈண்டு நிற்க, நல் வினையால் அவன் விண்ணுலகிலே நின்றான் என்று தேவர் கூறினார். அவன் ஆங்கு நின்றான் என்க. நிலைபெற்றிருந்த நிலையை அவன் அங்கே நின்றானென்றல் உலகவழக்கு. (செய்யுள் வழக்கினுங்கூட) கன்னின்றான் எந்தை எனவரும். இனி அடைந்தார் என்ற பாடத்திற்கு இருவரும் அடைந்தார் என்பார்க்கு, அவனின்றான் என்பதனை யானை மேனின்றான் என்றல் மரபன்மையின், காலாளாய் இருவரும் நின்றார் எனல் வேண்டும் : அது முற்கூறிய உவமங்கட்குப் பொருந்தாதாம். அயிலை வாளாக்குதல் பொருத்தமின்று. இத்துணையும் விபுலன் பொருதபடி கூறினார். இஃது ஆசிரியர் நச்சினார்க்கினியர் தந்த விளக்கம். ( 164 )

வேறு

2266. நித்திலக் குப்பை போல
நிழலுமிழ்ந் திலங்கு மேனிப்
பத்திப்பூ ணணிந்த மார்பிற்
பதுமுகன் பைம்பொற் சூழி
மொய்த்தெறி யோடை நெற்றி
மும்மதக் களிற்றின் மேலான்
கைத்தலத் தெஃக மேந்திக்
காமுகற் கண்டு காய்ந்தான்.

பொருள் : மார்பின் அணிந்த பத்திப்பூண் - மார்பில் அணிந்த பத்திகளையுடைய முத்துப் பூண்களாலே; நித்திலக் குப்பை போல நிழல் உமிழ்ந்து இலங்கும் மேனி - முத்துத் திரள்போலே ஒளி வீசி விளங்கும் மேனியையுடைய; பதுமுகன் - பதுமுகன் என்பவன்; பைம்பொன் சூழி மொய்த்து எறி ஓடை நெற்றி - பசும் பொன்னாலாகிய முகபடாத்தையும் செறிந்த ஒளியை வீசும் பட்டம் அணிந்த நெற்றியையும் உடைய; மும்மதக் களிற்றின் மேலான் - மும்மதமும் பொழியும் களிற்றின் மேல் ஏறியவனாகி; கைத்தலத்து எஃகம் ஏந்தி - கையிலே வேலை ஏந்தி காமுகற் கண்டு காய்ந்தான் - காமுகனைப் பார்த்துச் சீறினான்.

விளக்கம் : நித்திலக்குப்பை - முத்துக்குவியல். சூழி - முகபடாம். எஃகம் - வேல். காமுகன் - கட்டியங்காரன். படைஞருள் ஒருவன். ( 165 )

2267. மாற்றவன் சேனை தாக்கித்
தளர்ந்தபின் வன்கண் மள்ள
ராற்றலொ டாண்மை தோன்ற
வாருயிர் வழங்கி வீழ்ந்தார்
காற்றினாற் புடைக்கப் பட்டுக்
கடலுடைந் தோடக் காம
ரேற்றிளஞ் சுறாக்க ளெங்குங்
கிடந்தவை போல வொத்தார்.

பொருள் : மாற்றவன் சேனை தாக்கி - (அப்போது) காமுகன் சேனை வந்து தாக்கியதால்; தளர்ந்தபின் - பதுமுகன் படை சோர்வுற்றபின்; வன்கண் மள்ளர் - சோர்வின்றி நின்ற வீரர்கள்; ஆற்றலோடு ஆண்மை தோன்ற - வலிமையும் வீரமும் விளங்க; ஆர் உயிர் வழங்கி வீழ்ந்தார் - சிறந்த உயிரைக் கொடுத்து வீழ்ந்தவர்கள்; காற்றினால் புடைக்கப் பட்டுக் கடலுடைந்தோட - காற்றாலே தாக்கப் பெற்றுக் கடல் உடைந்து போக; ஏறு இளஞ்சுறாக்கள் எங்கும் கிடந்தவை போல ஒத்தார் ஏறாகிய சுறாமீன்கள் நிலமெங்கும் கிடந்தவற்றைப் போன்றனர்.

விளக்கம் : காற்றுக் காமுகன் படைக்கும். கடல் பதுமுகன் படைக்கும் உவமை. போல, ஒத்தார் என்ற இரண்டும் உவம உருபாதலின் போல என்பதனை, ஏறாகிய சுறாக்கள் போல வலியும் ஆண்மையும் தோன்ற நின்றுபொருது பட்டுக் கிடந்தவர்கள், பெருங்காற்றாற் கடலுடைந்து போக அச்சுறாக்கள் நிலமெங்கும் கிடந்தவற்றை ஒத்தார்கள் என முன்னே கூட்டி இருமுறை உவமையாக்குவர் நச்சினார்க்கினியர். ( 166 )

2268. தூசுலாம் பரவை யல்குற்
றுணைமுலை மகளி ராடு
மூசல்போற் சேனை யோடப்
பதுமுகன் களிற்றை யுந்தி
மாசில்சீர் மழையி னெற்றி
மாமதி நுழைவ தேபோற்
காய்சினக் களிற்றி னெற்றி
யாழிகொண் டழுத்தி னானே.

பொருள் : தூசு உலாம் பரவை அல்குல் - ஆடை உலவும் பரவிய அல்குலையும்; துணைமுலை மகளிர் ஆடும்-இணை முலைகளையுமுடைய மங்கையர் ஆடுகின்ற; ஊசல்போல் சேனைஓட - ஊசலைப்போற் சேனை ஒடுதலைப் (பொறாத); பதுமுகன் களிற்றை உந்தி - பதுமுகன் தன் யானையைச் செலுத்தி; மாசுஇல் சீர் மழையின் நெற்றிமாமதி நுழைவதேபோல் - குற்றமற்ற சிறப்பினையுடைய முகிலின் உச்சியிலே பெரிய திங்கள் நுழைதலைப்போல; காய் சினக் களிற்றின் நெற்றி - காமுகனூர்ந்த சினமிக்க யானையின் நெற்றியிலே; ஆழிகொண்டு அழுத்தினான் - தன் ஆழியைக் கையில் ஏந்தி அழுத்தினான்.

விளக்கம் : கெட்ட படை மீண்டும் வந்து பொருது கெடுதலின் ஊசலோடு உவமித்தார். ( 167 )

2269. பெருவலி யதனை நோனான்
பிண்டிபா லத்தை யேந்தி
யருவரை நெற்றிப் பாய்ந்த
வாய்மயிற் றோகை போலச்
சொரிமதக் களிற்றின் கும்பத்
தழுத்தலிற் றோன்றல் சீறிக்
கருவலித் தடக்கை வாளிற்
காளையை வெளவி னானே.

பொருள் : பெருவலி அதனை நோனான் - பேராற்றலுடைய காமுகன் அதனைப் பொறாமல்; பிண்டி பாலத்தை ஏந்தி - பிண்டி பாலம் என்னும் படையை எடுத்து; அருவரை நெற்றி பாய்ந்த ஆய் தோகைமயில் போல - பெரிய மலைமீது பாய்ந்த அழகிய தோகையையுடைய மயில்போல; சொரிமதக் களிற்றின் கும்பத் தழுத்தலின் - (பதுமுகனுடைய) மதம் பொழியும் களிற்றின் தலையிலே அழுத்தியதால்; தோன்றல் சீறி - பதுமுகன் சீறி; கருவலித் தடக்கை வாளின் காளையை வெளவினான் - பெருவலியுடைய கையிலேந்திய வாளாற் காமுகனை வெட்டினான்.

விளக்கம் : பிண்டிபாலம் : தலையிலே பீலி கட்டப்பட்டு எறிவதொரு படை. ஆகையால் மயிலோடுவமித்தார். காமுகன் தன் யானைமீது பாய்தலின் வாளாலே வெட்டினான். இன்றேல், யானைமீதிருந்து பொருமிருவர் வாளாற் பொர இயலாது. ( 168 )

2270. தீமுகத் துமிழும் வேற்கட்
சில்லரிச் சிலம்பி னார்தங்
காமுகன் களத்து வீழக்
கைவிர னுதியிற் சுட்டிப்
பூமுக மாலை மார்பன்
பொன்னணி கவச மின்னக்
கோமுகன் கொலைவல் யானை
கூற்றெனக் கடாயி னானே.

பொருள் : தீமுகத்து உமிழும் வேல்கண் - தீயைத் தன்னிடமிருந்து சொரியும் வேலனைய கண்களையுடைய; சில்அரிச் சிலம்பினார் - சிலவாகிய பரல்களையுடைய சிலம்பணிந்த மங்கையருக்குரிய; காமுகன் களத்து வீழ - காமுகன் போர்க்களத்திலே பட்டவுடன்; பூமுக மாலை மார்பன் கோமுகன் - (அவன் தம்பி) மலர் போன்ற முகச் செவ்வியையுடைய, மாலையணிந்த மார்பனாகிய கோமுகன்; பொன் அணி கவசம் மின்ன - பொன்னாலாகிய அழகிய கவசம் ஒளிர ; கைவிரல் நுதியின் சுட்டி - என் தமையனைக் கொன்றவன் இவனென்று கைவிரல் நுனியாற் சுட்டிக் காட்டிய வண்ணம்; கொலைவல் யானை கூற்றெனக் கடாயினான் - கொலையில் வல்ல யானையைக் கூற்றுவனைப் போலச் செலுத்தினான்.

விளக்கம் : காமுகன் என்னும் பெயர்க்கேற்பச் சிலம்பினார்தங் காமுகன் என அடைபுணர்த்தார் பூமுகன் என்றது, போர்கிட்டிய தென்று மகிழ்ந்த அவன் செவ்வியை உணர்த்தி நின்றது. ( 169 )

2271. சாரிகை திரியும் யானை
யுழக்கலிற் றரணி தன்மே
லார்கலிக் குருதி வெள்ள
மருந்துகள் கழுமி யெங்கும்
வீரியக் காற்றிற் பொங்கி
விசும்புபோர்த் தெழுதப் பட்ட
போர்நிலைக் களத்தை யொப்பக்
குருதிவான் போர்த்த தன்றே.

பொருள் : சாரிகை திரியும் யானை உழக்கலின் - (அவ்வாறு கோமுகனால் உந்தப்பட்டு) சாரிகையிலே திரிகின்ற யானை கலக்குதலாலே; ஆர்கலிக் குருதி வெள்ளம் - கடல்போலுங் குருதிப் பெருக்கு; தரணி தன்மேல்அருந்துகள் கழுமி - நிலவுலகிலே அரிய செந்துகளாய்ப் பொருந்தி; எங்கும் வீரியக் காற்றில் பொங்கி - எங்கணும் பெருங்காற்றாலே பொங்கி; விசும்பு போர்த்தது - வானை மூட; எழுதப்பட்ட போர்நிலைக் களத்தை ஒப்ப - எழுதப்பெற்ற போர்க்களத்தைப் போல; குருதி வான் போர்த்தது - செக்கர்வான் போர்த்தது.

விளக்கம் : எழுதப்பட்ட போர்நிலைக் களத்தை ஒப்பர் சாரிகை திரியும் யானை என இயைத்து, யானைகள் என எல்லா யானைகட்கும் ஆக்குவர் நச்சினார்க்கினியர். ( 170 )

2272. சென்றது தடக்கை தூணி
சேந்தகண் புருவங் கோலி
நின்றவிற் குனிந்த தம்பு
நிமிர்ந்தன நீங்கிற் றாவி
வென்றிகொள் சரங்கண் மூழ்கி
மெய்ம்மறைத் திட்டு மின்றோய்
குன்றின்மேற் பவழம் போலக்
கோமுகன் றோன்றி னானே.

பொருள் : தடக்கை தூணி சென்றது - (அது கண்ட பதுமுகனுடைய) கை தூணியிலே சென்றது; கண் சேந்த - கண்கள் சிவந்தன; புருவம் கோலி நின்ற - புருவங்கள் வளைந்தே நின்றன; வில் குனிந்தது - வில் வளைந்தே யிருந்தது; அம்பு நிமிர்ந்தன - அம்புகள் நேரே சென்றன; ஆவி நீங்கிற்று - எதிரே நின்ற படைகளின் உயிர் பிரிந்தது; வென்றி கொள்சரங்கள் மூழ்கி - வென்றியையுடைய அம்புகள் அழுந்தி; மெய்ம்மறைத் திட்டு - உடம்பை மறைத்துச் (சில உருவிப்போயதால்); மின்தோய் குன்றின்மேல் பவழம்போலக் கோமுகன் தோன்றினான் - மின் பொருந்திய குன்றின்மேல் பவழம்போலக் கொமுகன் தோன்றினான்.

விளக்கம் : தடக்கை தூணிசென்றது என மாறுக. தூணி-அம்பறாத் தூணி. கண்சேந்த என்க. சேந்த : பலவறிசொல். நின்ற-நின்றன. நீங்கிற்று : சாதியொருமை. மறைத்திட்டு; ஒருசொல். மலையானைக்கும் பவழம் கோமுகனுக்கும் உவமை.  ( 171 )

2273. பனிவரை முளைத்த கோலப்
பருப்புடைப் பவழம் போலக்
குனிமருப் புதிரந் தோய்ந்த
குஞ்சரங் கொள்ள வுந்திக்
கனிபடு கிளவி யார்தங்
கதிர்முலை பொருது சேந்த
துனிவரை மார்பன் சீறிச்
சுடுசரஞ் சிதறி னானே.

பொருள் : கனிபடு கிளவியார்தம் கதிர்முலை பொருது சேந்த - கனியனைய மொழியாராகிய மகளிரின் கதிர்த்த முலைகள் தாக்குதலாற் சிவந்த; வரை துனி மார்பன் - மலையை வெறுக்கும் மார்பனாகிய கோமுகன்; சீறி - சினந்து ; பனிவரை முளைத்த கோலப் பருப்பு உடைய பவழம்போல-பனிமலையிலே தோன்றிய அழகிய பருத்த பவழம்போல; குனிமருப்பு உதிரம் தோய்ந்த குஞ்சரம் - வளைந்த கொம்பிடத்தே குருதி தோயப்பட்ட குஞ்சரத்தை; கொள்ள உந்தி - போர் கொள்ளச் செலுத்தி; சுடுசரம் சிதறினான் - சுடுகணைகளைச் சிதறினான்.

விளக்கம் : பவழம் : உதிரத்தோய்ந்த மருப்பிற்குவமை. பருப்பு - பருமை. கொள்ள - போர்த்தொழிலை மேற்கொள்ளும்படி என்க. கனி - கற்பகக்கனி என்க. வரை துனி மார்பன் என்க. சரம் - அம்பு. ( 172 )

2274. பன்னலம் பஞ்சிக் குன்றம்
படரெரி முகந்த தொப்பத்
தன்னிரு கையி னாலுந்
தடக்கைமால் யானை யாலு
மின்னுயிர் பருகிச் சேனை
யெடுத்துக்கொண் டிரிய வோட்டிக்
கொன்முரண் டோன்ற வெம்பிக்
கொலைக்களிற் றுழவ னார்த்தான்.

பொருள் : பன்னல் அம் பஞ்சிக் குன்றம் - எஃகுதலை யுடைய பஞ்சியாகிய மலையை; படர்எரி முகந்தது ஒப்ப - பரவிய எரி பற்றியதைப் போல; தன் இரு கையினாலும் - தன்னுடைய இரண்டு கைகளினாலும்; தடக்கை மால் யானையாலும் - துதிக்கையையுடைய யானையாலும்; சேனை எடுத்துக்கொண்டு இரிய ஒட்டி - (பதுமுகன்) தானை விசையெடுத்து ஓடும்படி ஓட்டி; இன் உயிர் பருகி - போகாதவர் உயிரைப் பருகி; கொன்முரண் தோன்ற - பெரிய வலிமை தோன்ற; வெம்பி - சினந்து; கொலைக் களிற்று உழவன் ஆர்த்தான் - கொல்யானையின்மேல் வந்த கோமுகன் ஆரவாரித்தான்.

விளக்கம் : இதனைப் பதுமுகன்மேல் ஏற்றுவாரும் உளர் என்பர் நச்சினார்க்கினியர். பன்னல் : ஒரு தொழில். இதனை எஃகுதல் என்பர் நச்சினார்க்கினியர். சுகிர்தல் என்றும் கூறுப. பஞ்சி-பஞ்சு. படர்எரி : வினைத்தொகை. மால் - பெரிய. விசை யெடுத்துக் கொண்டென்க. கொன் - பெருமை. முரண்-வலிமை, உழவன் : கோமுகன். ( 173 )

2275. தருக்கொடு குமர னார்ப்பத்
தன்சிலை வளைய வாங்கி
யொருக்கவன் கையும் வாயு
முளங்கிழித் துடுவந் தோன்றச்
சுருக்குக்கொண் டிட்ட வண்ணந்
தோன்றலெய் திடுத லோடு
மருப்பிறக் களிறு குத்தி
வயிரந்தான் கழிந்த தன்றே.

பொருள் : குமரன் தருக்கொடு ஆர்ப்ப - (அவ்வாறு பொருத) களிப்புடன் கோமுகன் சங்கை வாயிலே வைத்து ஆர்த்தானாக; தன்சிலை வளைய வாங்கி - (அது பொறாமல்) தன் வில்லை மிகவும் வளைத்து; அவன் கையும் வாயும் உளம் ஒருக்குக் கிழித்து - அவனுடைய கையையும் வாயையும் உள்ளத்தையும் ஒருங்கே பிளந்து; உடுவம் போன்ற - ஈர்க்குத் தோன்றும்படி; சுருக்குக் கொண்டிட்ட வண்ணம் - சுருக்குக் கோத்தாற்போல; தோன்றல் எய்திடலோடும் - பதுமுகன் பல அம்புகளையும் விடுத்த அளவிலே; களிறு மருப்பு இறக் குத்தி - (கோமுகன்) களிறு தன் மருப்பு ஒடியும்படி பதுமுகன் களிற்றைக் குத்தியதால்; வயிரந் தான் கழிந்தது - அதன் கொள்கை போயிற்று.

விளக்கம் : வயிரத்தால் இழைத்த கோளகை ஆகுபெயர்.  தருக்கு - செருக்கு. குமரன் : கோமுகன். எதுகை நோக்கி ஒருங்கு, ஒருக்கென வலித்து நின்றது. உடுவம் - ஈர்க்கு. தோன்றல் : பதுமுகன். தான் : அசை. ( 174 )

2276. நித்தில மணிவண் டென்னு
நெடுமதக் களிறு பாய
முத்துடை மருப்பு வல்லே
யுடைந்துமுத் தொழுகு குன்றின்
மத்தக யானை வீழ்ந்து
வயிரங்கொண் டொழிந்த தாங்குப்
பத்திரக் கடிப்பு மின்னப்
பதுமுகன் பகடு போர்த்தான்.


பொருள் : நித்தில மணி வண்டு என்னும் நெடுமதக் களிறு பாய - (பதுமுகனுடைய) நித்தில மணிவண்டு என்னும் பெரிய மதயானை (தன்னைக் குத்திய கோமுகன் யானையை) எதிர்த் தாக்காகக் குத்துதலின்; முத்துடை மருப்பு வல்லே உடைந்து - முத்துக்களையுடைய கொம்பு முரிந்து; முத்து ஒழுகு குன்றின் - முத்துகள் ஒழுகும் மலைபோல; மத்தக யானை வீழ்ந்து வயிரம் கொண்டு ஒழிந்தது - அந்த யானை விழுந்து செற்றத்துடன் இறந்தது; ஆங்குப் பத்திரக் கடிப்பு மின்னப் பதுமுகன் பகடு பேர்த்தான் - அப்பொழுது அழகிய குதம்பை என்னும் காதணி ஒளிரப் பதுமுகன் தன் களிற்றை மீட்டனன்.

விளக்கம் : இத்துணையும் பதுமுகன் போர் கூறப்பட்டது.  நித்திலமணிவண் டென்பது பதுமுகன் யானையினுடைய பெயர். வல்லே - விரைவின். வயிரம் - செற்றம். பத்திரம் - நலம். கடிப்பு - குதம்பை. ( 175 )

2277. பத்திரக் கடிப்பு மின்னப்
பங்கியை வம்பிற் கட்டிக்
கொத்தலர்த் தும்பை சூடிக்
கோவிந்தன் வாழ்க வென்னாக்
கைத்தலத் தெஃக மேந்திக்
காளைபோய் வேறு நின்றான்
மத்தக யானை மன்னர்
வயிறெரி தவழ்ந்த தன்றே.

பொருள் : பத்திரக் கடிப்பு மின்ன - அழகிய குதம்பை ஒளிர; பங்கியை வம்பின் கட்டி - தலைமயிரைக் கயிற்றாற் கட்டிக் கொண்டு; கொத்து அலர் தும்பை சூடி - கொத்தாக மலருந் தும்பையை அணிந்து; கைத்தலத்து எஃகம் ஏந்தி - கையிலே வேலை ஏந்தி; கோவிந்தன் வாழ்க என்னா - கோவிந்தன் வாழ்க என்று வாழ்த்தி; காளைபோய் வேறு நின்றான் - சிங்கநாதன் என்னும் காளை சென்று தனியே (பகைவருக்கு எதிரில்) நின்றான்; மத்தக யானை மன்னர் வயிறு எரி தவழ்ந்தது - யானையையுடைய பகையரசரின் வயிற்றிலே (அப்போது) தீ பரவியது.

விளக்கம் : பங்கி - தலைமயிர். வம்பு-கச்சு. தும்பை - போர்புரியுங்காற் சூடும் மாலை. கோவிந்தன் தலைவனாகலின், வாழ்த்தினான், காளை: சிங்கநாதன். வயிறு எரிதவழ்ந்தது என்றது பெரிதும் அஞ்சினார் என்றவாறு. ( 176 )

2278. மேகலைப் பரவை யல்குல்
வெள்வளை மகளிர் செஞ்சாந்
தாகத்தைக் கவர்ந்து கொண்ட
வணிமுலைத் தடத்து வைகிப்
பாகத்தைப் படாத நெஞ்சிற்
பல்லவ தேய மன்னன்
சேவகன் சிங்க நாதன்
செருக்களங் குறுகி னானே.

பொருள் : மேகலைப் பரவை அல்குல் வெள்வளை மகளிர் - மேகலையணிந்த பரப்புற்ற அல்குலையுடைய மாதர்களின்; செஞ்சாந்து ஆகத்தைக் கவர்ந்து கொண்ட அணிமுலைத் தடத்து வைகி - குங்குமச் சாந்தணிந்த மார்பினைக் கவர்ந்து எழுந்த அழகிய முலைகளிலே தங்கியும்; பாகத்தைப் படாத நெஞ்சின் - அவர்கள்பால் செல்லாத நெஞ்சினையுடைய; பல்லவ தேய மன்னன் சேவகன் - பல்லவ நாட்டு வேந்தன் உலோகபாலனுடைய பணியாளாகிய; சிங்கநாதன் செருக்களம் குறுகினான் - சிங்கநாதன் என்பவன் போர்க்களத்தை அடைந்தான்.

விளக்கம் : முற்செய்யுளிற் கூறிய எஃகம் ஏந்திய காளையும், இச்செய்யுளிற் கூறிய சிங்கநாதனும் ஒருவனே, தனியே வந்து நின்றவன் எதிர்ப்பாரின்மையின், தானே செருக்களத்தை அடைந்தான். வைகி : எச்சத்திரிபு. குருகுலத்தை விளக்கலானும், சீவகற்கும் உலோகபாலற்கும் இறைவனாதலானும் கோவிந்தனை வாழ்த்தினான். பாகம் : பங்கம் எனினும் ஆம். ( 177 )

2279. புனைகதிர் மருப்புத் தாடி
மோதிரஞ் செறித்துப் பொன்செய்
கனைகதிர் வாளை யேந்திக்
கால்கழ லணிந்து நம்மை
யினையன பட்ட ஞான்றா
லிறைவர்க ணினைப்ப தென்றே
முனையழன் முளிபுற் கான
மேய்ந்தென நீந்தி னானே.

பொருள் : புனைகதிர் மோதிரம் மருப்புத் தாடி செறித்து - ஒப்பனையும் ஒளியுமுடைய மோதிரத்தை யானைக் கொம்பாற் செய்த கைப்பிடியின் கண்ணே செறித்து; பொன்செய் கனைகதிர் வாளை ஏந்தி - அப் பிடியின்கண்ணே பொன்னிட்ட மிக்க ஒளியையுடைய வாளை ஏந்தி; கழல்கால் அணிந்து - கழலைக் காலில் அணிந்து; நம்மை இறைவர்கள் நினைப்பது இனையனபட்ட ஞான்றால் என்று - நம்மை அரசர்கள் நினைத்துக் கொண்டாடுவது இத்தன்மையவான வெற்றிகள் உண்டான நாள்களாலே என்று கருதி; முனைஅழல் முளிபுல் கானம் மேய்ந்து என நீந்தினான் - பேரழல் காய்ந்த புல்லையுடைய காட்டை மேய்ந்தாற் போலப் போரை அடர்த்துக் கடந்தான்.

விளக்கம் : இறந்துபடுதலைக் குறித்தலின் வாளை வாங்கினான். மருப்புத்தாடி - யானைக்கொம்பாற் செய்த கைப்பிடி. இதனை - ஆசு, என்பர் நச்சினார்க்கினியர். காலிற் கழலணிந்து என்க. இறைவர் - மன்னர். முளிபுல் - உலர்ந்த புல். பரவை - பரப்பு. ஆரம் - முத்துவடம். அருவிலை - கொடுத்தற்கரிய பெருவிலை. விழிப்ப - விளங்க. ( 178 )

2280. தாரணி பரவை மார்பிற்
குங்கும மெழுதித் தாழ்ந்த
வாரமும் பூணு மின்ன
வருவிலைப் பட்டி னங்க
ளோபடக் கிடந்த பொன்ஞா
ணிருள்கெட விழிப்ப வெய்ய
பூரண சேனன் வண்கைப்
பொருசிலை யேந்தி னானே.

பொருள் : தார்அணி பரவை மார்பில் குங்குமம் எழுதி - மாலை அணிந்த அகன்ற மார்பிலே குங்குமத்தை யெழுதி; தாழ்ந்த ஆரமும் பூணும் மின்ன - தங்கிய முத்துவடமும் பூண்களும் மின்ன அணிந்து; அருவிலைப் பட்டுஇனங்கள் ஏர்படக் கிடந்த பொன்ஞாண் - அரிய விலையையுடைய பட்டாடைகளின் மேல் அழகுறக் கிடந்த அரைஞாண்; இருள்கெட விழிப்ப - இருளை நீக்க அணிதலாலே விளங்க; வெய்ய பூரணசேனன் வண்கைப் பொருசிலை ஏந்தினான் - போரிற் கொடியவனான பூரணசேனன் என்பவன் தன் வளம்பொருந்திய கையிலே வில்லை ஏந்தினான்.

விளக்கம் : பூரணசேனன் - ஒரு போர்மறவன். இவன் கட்டியங்காரன் படையிலுள்ளவன். ( 179 )

2281. ஊனமர் குறடு போல
விரும்புண்டு மிகுத்த மார்பிற்
றேனமர் மாலை தாழச்
சிலைகுலாய்க் குனிந்த தாங்கண்
மானமர் நோக்கி னாரு
மைந்தருங் குழீஇய போருட்
கானமர் காம னெய்த
கணையெனச் சிதறி னானே.

பொருள் : ஊன் அமர் குறடு போல - இறைச்சி கொத்தும் பட்டடை மரம்போல; இரும்பு உண்டு மிகுத்த மார்பின் - இரும்பு மேய்ந்து மிகுத்து வைத்த மார்பிலே; தேன் அமர் மாலை தாழ - தேன் பொருந்திய மாலை தாழ குலாய்சிலை குனிந்தது - மெய் வளைதலாலே வில் குனிந்தே நின்றது; ஆங்கண் - அப்போது ; மான் அமர் நோக்கினாரும் மைந்தரும் குழீஇய போருள் - மானனையை பார்வையினரும் இளைஞரும் கலந்த காமப் போரிலே; காமன் எய்த கான் அமர் கணை எனச் சிதறினான் - காமன் விடுத்த மணம் நிறைந்த மலர்க்கணை போலக் கணைகளைச் சிதறினான்.

விளக்கம் : காமன் ஒருவனாக நின்று பலரையும் எய்தலின் உவமம். ( 180 )

2282. வண்டலை மாலை தாழ
மதுவுண்டு களித்து வண்கைப்
புண்டலை வேலை யேந்திப்
போர்க்களங் குறுகி வாழ்த்திக்
கண்படு காறு மெந்தை
கட்டியங் கார னென்றே
யுண்டொலை யார்க வேலென்
றுறுவலி தாக்கி னானே.

பொருள் : மது உண்டு களித்து வண்டு அலை மாலை தாழ - தேனைப் பருகி மகிழ்ந்து வண்டுகள் அலையும் மாலைதாழ; வண்கைப் புண்தலை வேலை ஏந்தி - வளவிய கையிலே (வில்லை நீக்கி) ஊன் பொருந்திய வேலை ஏந்தி; போர்க்களம் குறுகி - போர்க்களத்தை அடைந்து; எந்தை கட்டியங்காரன் கண்படு காறும் வாழ்க என்று - எந்தையாகிய கட்டியங்காரன் உலகெலாந் துஞ்சும் ஊழியளவும் வாழ்க என்று வாழ்த்தி; வேல் ஒலை உண்டு ஆர்க என்று - இவ்வேல் உயிர்களைக் கடுகவுண்டு வயிறு நிறைவதாக என்று கூறி; உறுவலி தாக்கினான் - மிகுவலியுடைய அப் பூரணசேனன் பொருதான்.

விளக்கம் : களித்த என்பது பாடமாயின் அகரத்தைச் சுட்டாக்கிக்கொண்டு அவ்வுறுவலி என்க என்பர் நச்சினார்க்கினியர். பெயரெச்சமாக்குதலே அமைவுடைத்து. ஒல்லை, விரைவு; இஃது ஒலை என இடை குறைந்து நின்றது. ( 181 )

2283. கூற்றென வேழம் வீழாக்
கொடிநெடுந் தோக ணூறா
வேற்றவர் தம்மைச் சீறா
வேந்திர நூழில் செய்யா
வாற்றலங் குமரன் செல்வா
னலைகடற் றிரையி னெற்றி
யேற்றுமீ னிரியப் பாய்ந்த
வெறிசுறா வேறு போன்றான்.

பொருள் : கூற்று என வேழம் வீழா - கூற்றுவனைப் போல யானைகளை வீழ்த்தி; கொடிநெடுந் தேர்கள் நூறா - கொடிகளை உடைய நீண்ட தேர்களைப் பிளந்து; ஏற்றவர் தம்மைச் சீறா - எதிர்ந்தவரைச் சினந்து தாக்கி; ஏந்திர நூழில் செய்யா - எந்திரம் போலக் கொன்று குவித்து; ஆற்றல் அம் குமரன் செல்வான் - வலிமையுறும் அப் பூரணசேனன் செல்கின்றவன்; அலைகடல் திரையின் நெற்றி - கடலலையின் முகட்டிலே; ஏற்று மீன் இரியப் பாய்ந்த - ஏறாகிய மீன்கள் ஓடும்படி பாய்ந்த; எறி சுறா ஏறு போன்றான் - தாக்கும் வன்மையுடைய சுறாமீனைப் போன்றான்.

விளக்கம் : வீழா, நூறா, சீறா, செய்யா, என்பன செய்யா என்னும் வாய்பாட்டெச்சங்கள். வீழ்த்தி, நூறி, சீறி, செய்து என்க. ஏந்திரம் - இயந்திரம், நூழில் - கொன்று குவித்தல். ( 182 )

2284. மாலைக்க ணாம்பல் போல
மகளிர்தங் குழாத்திற் பட்டார்
கோலவாட் போருட் பட்டாற்
குறுமுயற் கூடு கண்டு
சாலத்தாம் பனிக்கும் பொய்கைத்
தாமரை நீர ராயின்
ஞாலத்தா ராண்மை யென்னா
மெனநகா வருகின் றானே.

பொருள் : மகளிர்தம் குழாத்தில் மாலைக்கண் ஆம்பல் போலப் பட்டார் - மங்கையரின் திரளிலே மாலைக்கால அல்லிப் பூப்போல மகிழ்ச்சியிற் பட்டவர்கள்; கோல வாள் போருள் பட்டால் - அழகிய வாட் போரிலே சென்றால்; குறுமுயல் கூடு கண்டு - திங்களைக் கண்டு; சாலத் தாம் பனிக்கும் பொய்கைத் தாமரை நீரர் ஆயின் - மிகவும் வருந்துகின்ற, பொய்கையிலுள்ள தாமரைப் பூவின் தன்மையராயின்; ஞாலத்தார் ஆண்மை என்னாம் என நகா வருகின்றான் - உலகிலுள்ளோரின் வீரம் என்னாய் முடியும் என்று நகைத்தவாறு வருகின்றான்.

விளக்கம் : மகளிர் குழாத்தின் புகும்பொழுது மாலைக்காலத்து ஆம்பல்போல் மகிழுமியல்புடைய மறவர் போர்க்களத்தே அம்மாலைப் பொழுதில் பனிக்கும் தாமரைப்போலத் துன்புறின் ஆண்மைத் தன்மை  என்னாம் என்றவாறு. இது தன்னைக் கண்டஞ்சிய மறவர்க்குக் கூறிய தென்க. ( 183 )

2285. முடிச்சடை முனிவ னன்று
வேள்வியிற் கொண்ட வேற்கண்
மடத்தகை மகளிர் கோல
வருமுலை யுழக்கச் சேந்து
கொடிப்பல வணிந்த மார்பிற்
கோவிந்தன் வாழ்க வென்று
நடத்துவா னவனை நோக்கி
நகாச்சிலை பாரித் தானே.

பொருள் : முடிச்சடை முனிவன் அன்று வேள்வியில் கொண்ட வேல் - சடை முடியுடைய வீரபத்திரன் அக் காலத்துத் தக்கன் வேள்வியிலே ஏந்திய வேலைப் போன்ற; கண் மடத்தகை மகளிர் - கண்களையுடைய இளமையும் அழகுடைய மாதர்களின்; வருமுலை உழக்கச் சேந்து - வளரும் முலைகள் உழக்குதலாற் சிவந்து; கொடிப் பல அணிந்த மார்பின் - பல கொடிகளை அணிதற்குக் காரணமான மார்பினையுடைய; கோவிந்தன் வாழ்க என்று - கோவிந்தன் வாழ்வானாக என்று கூறி; நடத்துவான் - போரைச் செய்யும் சிங்கநாதன்; அவனை நோக்கி நகா - அப்பூரணசேனனைப் பார்த்து நகைத்து; சிலை பாரித்தான் - வில்லை வளைத்தான்.

விளக்கம் : இறைவன் தன்னைப் போலப் படைத்தலின் வீரபத்திரதேவனை, முனிவன் என்றார் அன்று தக்கன் வேள்வியைத் தவிர்ப்பான் வேண்டி இறைவன் தானாகப் படைத்துக் கொண்ட முனிவனைப் போலுங் கேவிந்தன்; வேற்கண் மகளிர் முலையுழக்குதலின் சிவக்கப் பட்டுக் கொடியணிதற்குக் காரணமான மார்பினையுடைய கோவிந்தன், என்றுரைப்பார் நச்சினார்க்கினியர். ( 184 )

2286. போர்த்தநெய்த் தோர னாகிப்
புலாற்பருந் தார்ப்பச் செல்வான்
சீர்த்தகை யவனைக் கண்டென்
சினவுவே லின்னு மார்ந்தின்
றூர்த்துயி ருன்னை யுண்ணக்
குறைவயி றாரு மென்றாங்
கார்த்தவாய் நிறைய வெய்தா
னம்புபெய் தூணி யொத்தான்.

பொருள் : போர்த்த நெய்த்தோரன் ஆகி - மெய்யை மூடிய குருதியுடன்; புலால் பருந்து ஆர்ப்பச் செல்வான் - புலாலுக்காகப் பருந்து ஆரவாரிக்கச் செல்லும் பூரணசேனன்; சீர்த்தகையவனைக் கண்டு - சிறந்த தகுதியுடைய சிங்கநாதனைக் கண்டு; என் சினவு வேல் இன்னும் ஆர்ந்தின்று - என்னுடைய சினமிகும் வேல் இன்னும் வயிறு நிறைந்திலது; உன்னை உயிர் ஊர்த்து உண்ணக் குறைவயிறு ஆரும் என்று - உன் உயிரை ஊற்றிப் பருகினாற் குறைவயிறு நிறையும் என்று; ஆங்கு ஆர்த்தவாய் நிறைய எய்தான் - அப்பொழுதே, ஆரவாரித்தவாய் நிறையும்படி அம்புகளை விடுத்தான்; அம்பு பெய்தூணி ஒத்தான் - (அதனாற்) பூரணசேனன் அம்பு வைக்கும் தூணியைப் போன்றான்.

விளக்கம் : நெய்த்தோரன் - குருதியையுடையவன். புலாலுக்காகப் பருந்து ஆர்ப்ப என்க. செல்வான்; வினையாலணையும் பெயர். சிங்கநாதன் என்க. சீர்த்தகையவன் என்றது சிங்கநாதனை. ஆர்ந்தின்று - நிறைந்ததில்லை. ஊர்த்து - ஊற்றி. ( 185 )

2287. மொய்ப்படு சரங்கண் மூழ்க
முனையெயிற் றாளி போல
வப்பணைக் கிடந்த மைந்த
னருமணித் திருவில் வீசுஞ்
செப்பிள முலையி னார்கண்
சென்றுலாய்ப் பிறழச் சிந்திக்
கைப்பட வெடுத்திட் டாடும்
பொலங்கழற் காயு மொத்தான்.

பொருள் : மொய்ப்படு சரங்கள் மூழ்க - மேலும் சிங்கநாதன் தொடர்ந்து செலுத்திய அம்புகள் நெருங்கச் சென்று மெய்யெலாம் மூழ்குதலின்; முனை எயிற்று ஆளிபோல - கூரிய பற்களையுடைய ஆளியைப்போல; அப்பு அணைக்கிடந்த மைந்தன் - கணைப் படுக்கையிலே கிடந்த பூரணசேனன்; அருமணித் திருவில் வீசும் செப்பு இளமுலையினர் கண் - அரிய மணிக்கலன்கள் வானவில்லென ஒளியைப் பரப்பும், செப்பையொத்த இளமுலையாரின் கண்கள்; சென்று உலாய்ப் பிறழ - சென்று உலவிப் பிறழும்படி; கைப்பட எடுத்திட்டுச் சிந்தி ஆடும் - கையினாலெடுத்துப் பரப்பி ஆடுகின்ற; பொலம் கழற்காயும் ஒத்தான் - பொன்னொளி தவழும் கழற்காயையும் போன்றான்.

விளக்கம் : பொலஞ் செப்பு என்பர் நச்சினார்க்கினியர். பொற்பே பொலிவு (தொல் - உரி - 37) என்றும், பொன்னென். கிளவி ஈறுகெட (தொல் - புள்ளிமயங் - 69) என்றுஞ் சூத்திரஞ் செய்தமையின் பொலம் என்பது பொலிவு என்று பொருள்தராது என்று விளக்கங் கூறுவர். பொருந்துமேற் கொள்க. பூரணசேனன் - பொருதுபட்டான். ( 186 )

2288. புனைகதிர்ப் பொன்செய் நாணிற்
குஞ்சியைக் கட்டி நெய்த்தோர்
நனைகதி ரெஃக மேந்தி
நந்தன்வாழ் கென்ன நின்ற
வினையொளிர் காளை வேலைக்
கடக்கலார் வேந்தர் நின்றார்
கனைகடல் வேலை யெல்லை
கடக்கலா வண்ண நின்றார்.

பொருள் : புனைகதிர்ப் பொன்செய் நாணின் - அழகிய கதிரையுடைய பொன்னாலான கயிற்றால்; குஞ்சியை கட்டி - தன் சிகையைக் கட்டி; நெய்த்தோர் நனை கதிர் எஃகம் ஏந்தி - குருதியால் நனைந்த வேலை ஏந்தி; நந்தன் வாழ்க என்ன - நந்தட்டன் வாழ்வானாக என்று; நின்ற வினையொளிர் காளை வேலைக் கடக்கலார் - நின்ற போரில் விளங்கும் காளையின் கையில் உள்ள வேலைக் கடக்க இயலாதவராய்; வேந்தர் நின்றார் - மன்னர்கள் நின்றவர்கள்; கனைகடல் வேலை எல்லை கடக்கலா வண்ணம் நின்றார் - ஒலிக்கும் கடற்கரையின் எல்லைக் கடக்கமாட்டாத தன்மைபோல் நின்றார்.

விளக்கம் : இவன், நந்தட்டன் பணியாள். வினையொளிர்காளை - போர்த் தொழிலிடத்தே வெற்றியெய்திப் புகழ்படைத்த காளை. இவன் நந்தட்டனுடைய மறவன். வேலைக் கடவாது நின்ற மன்னர்க்குக் கரைகடவா தடங்கிய கடலுவமை. ( 187 )

2289. நின்றவப் படையு ளானே
யொருமக னீலக் குஞ்சி
மன்றல மாலை நெற்றி
மழகளி றன்றி வீழான்
வென்றியங் கொளிறும் வெள்வேன்
மின்னென வெகுண்டு விட்டான்
சென்றவேல் விருந்து செங்கண்
மறவனக் கெதிர்கொண் டானே.

பொருள் : அப்படையுளானே - கட்டியங்காரன் படையில் உள்ளவனேயான; மன்றல் மாலை நெற்றி மழகளிறு அன்றி வீழான் - மணத்தையுடைய மாலை அணிந்த நெற்றியையுடைய மழகளிற்றையன்றி வீழ்த்தாதவனாய்; நின்ற நீலக்குஞ்சி ஒரு மகன் - நின்ற கரிய முடியை உடைய ஒரு வீரன்; வென்று இயங்கு ஒளிறும் வெள் வேல் - வென்றி கொண்டு புகழ் பரவி விளங்கும். வெள் வேலை; வெகுண்டு மின்என விட்டான்-சினந்து மின்போல எறிந்தான்; சென்ற வேல் விருந்து . அங்ஙனம் சென்ற வேலாகிய விருந்தை; செங்கண் மறவன் நக்கு எதிர்கொண்டான் - செங்கண் மறவனான நந்தட்டன் சேவகன் மகிழ்வுடன் எதிர்கொண்டான்.

விளக்கம் : மன்றல; குறிப்பு வினைமுற்று. இது பெயரெச்சப் பொருள் தந்தது. அப்படை என்றது கட்டியங்காரன் படையை. படையுளான் ஒரு மகன், நீலக்குஞ்சி யொருமகன் எனக்கூட்டுக. மழகளிறு - இளங்களிறு, வீழான்-வீழ்த்தாதவன். செங்கண் மறவன் என்றது நந்தட்டன் மறவனை. ( 188 )

2290. மான்வயி றார்ந்து நோக்கும்
வெருவுறு மருளி னோக்கிற்
றேன்வயி றார்ந்த கோதைத்
தீஞ்சொலார் கண்கள் போலு
மூன்வயி றார்ந்த வெள்வே
லொய்யெனப் பறித்து நக்கான்
கான்வயி றார்ந்து தேக்கிக்
களிவண்டு கனைக்குந் தாரான்.

பொருள் : கான் வயிறு ஆர்ந்து தேக்கிக் களிவண்டு கனைக்கும் தாரான் - மணத்தை வயிறு நிறையத் தேக்கி மகிழும் வண்டு முரலுந் தாரையுடைய, நந்தட்டன் சேவகன்; மான் வயிறு ஆர்ந்து நோக்கும் வெருவுறும் மருள் நோக்கின் - மான் வயிறு நிறைந்தபொழுது நோக்கும் அச்சமுற்ற மருண்ட பார்வையையும்; தேன் வயிறு ஆர்ந்த கோதை - வண்டுகள் தேனை வயிறு நிறையப் பருகும் மாலையையும் உடைய; தீ சொலார் - இனிய மொழிகளைப் பேசும் மகளிரின்; கண்கள் போலும் - கண்களைப்போன்ற; ஊன் வயிறு ஆர்ந்த வெள் வேல் - ஊனை வயிறு நிறையக்கொண்ட வெள்ளிய வேலை; ஒய் எனப் பறித்து நக்கான் - விரைந்து பறித்து நகைத்தான்.

விளக்கம் : வேல் பெற்றேம் என்று நகைத்தான் கண்கள் போலும் வேல், ஊன் வயிறு ஆர்ந்த வேல் என இயைக்க. மருளின், இன் : அசை. ( 189 )

2291. விட்டழல் சிந்தி வெள்வேல்
விசும்பின்வீழ் மின்னி னொய்தாக்
கட்டழ னெடுங்கண் யாது
மிமைத்திலன் மகளி ரோச்சு
மட்டவிழ் மாலை போல
மகிழ்ந்துபூண் மார்பத் தேற்றுக்
கட்டழ லெஃகஞ் செல்லக்
கானெறி யாயி னானே.

பொருள் : வெள்வேல் அழல் விட்டுச் சிந்தி - நந்தட்டன் சேவகன் கையில் வேல் நெருப்பைவிட்டுச் சிந்தி; விசும்பின் வீழ் மின்னின் நொய்தா - வானிலிருந்து வீழும் மின்போல விரைந்துசெல்ல; கட்டழல் நெடுங்கண் யாதும் இமைத்திலன் - பேரழல்போலும் பெருங்கண்களைச் சிறிதும் இமைத்திலன்; கட்டழல் எஃகம் செல்ல - மேலும் வந்த அழல் போலும் வேல்கள் வர, (அவற்றையும்). மகளிர் ஓச்சும் மட்டு அவிழ் மாலை போல - பெண்கள் வீசிய தேன் விரியும் மலர்மாலையை ஏற்பதுபோல; மகிழ்ந்து பூண் மார்பத்து ஏற்று - மகிழ்வுடன் அணிகலனுடைய மார்பிலே ஏற்று; கால் நெறி ஆயினான் - சாளரம் ஆகி நின்றான்.

விளக்கம் : சாளரம் ஆகிநின்றவன் கட்டியங்காரன் சேவகன். காற்றுப் போம் வழி சாளரம்; மான்கண் காலதர் மாளிகை யிடங்களும் (சிலப். 5 - 8) என்றார் பிறரும். நந்தட்டன் சேவகன் விட்ட வேலை மகிழ்வுடன் ஏற்றுப் பட்டவன் கட்டியங்காரன் வீரன். ( 190 )

2292. கவிமதங் கடந்து காமர்
வனப்புவீற் றிருந்த கண்ணார்
குவிமுலை நெற்றித் தீந்தேன்
கொப்புளித் திட்ட பைந்தார்ச்
செவிமதக் கடலங் கேள்விச்
சீவகன் கழல்கள் வாழ்த்திச்
சவிமதுத் தாம மார்பிற்
சலநிதி தாக்கி னானே.

பொருள் : சவி மதுத் தாம மார்பின் சலநிதி - செவ்வித் தேனையுடைய - மாலை மார்பனான சலநிதி யென்பவன்; கவிமதம் கடந்து காமர் வனப்பு வீற்றிருந்த கண்ணார் - கவிஞர் கொள்கையைக் கடந்து விருப்பூட்டும் அழகு தங்கியிருந்த கண்ணாருடைய; குவிமுலை நெற்றி - குவிந்த முலைத் தலையிலே; தீ தேன் கொப்புளித்திட்ட பைந்தார் - இனிய தேனைக் கொப்புளித்திட்ட பசிய தாரினையும்; செவி மதக் கடல் அம் கேள்வி - கேட்டோர் செவிக்குப் பொருந்துவதாகிய கடல் போலும் கேள்வியையும் உடைய; சீவகன் கழல்கள் வாழ்த்தி - சீவகனுடைய, கழலணிந்த அடிகளை வாழ்த்தி; தாக்கினான் - போரைத் தொடங்கினான்.

விளக்கம் : கவிமதம் - புலவர் புனைந்துரை. புலவரானும் புனைந்துரைத்தற் கியலாத கண் என்றவாறு. வனப்பு - அழகு. செவிமதக் கேள்வி; கடன் அம்கேள்வி எனக் கூட்டுக. சவி - செவ்வி. சலநிதி : சீவகன் தோழருள் ஒருவன். ( 191 )

2293. குஞ்சரங் குனிய நூறித்
தடாயின குருதி வாடன்
னெஞ்சக நுழைந்த வேலைப்
பறித்துவான் புண்ணு ணீட்டி
வெஞ்சம நோக்கி நின்று
மிறைக்கொளி திருத்து வாற்கண்
டஞ்சிமற் றரசர் யானைக்
குழாத்தொடு மிரிந்திட் டாரே.

பொருள் : குஞ்சரம் குனிய நூறித் தடாயின குருதி வாள் - (அவன்) யானைகள் வீழுமாறு வெட்டி வளைந்த குருதி படிந்த வாளை; தன் நெஞ்சகம் நுழைந்த வேலைப் பறித்து - தன் மார்பிலே முன் நுழைத்திருந்த வேலைப் பறித்து; வான் புண்ணுள் நீட்டி - அப் புண்ணிலே செருகி; வெஞ்சமம் நோக்கி நின்று - யாம் பொர வரும் போர் இனி இல்லை யென்று கருதி நின்று; மிறைக்கொளி திருத்துவாற் கண்டு - அவ் வாளின் வளைவுக்கு இளக்கத்தைப் போக்குகின்றவனைக் கண்டு; அரசர் அஞ்சி யானைக் குழாத்தொடும் இரிந்திட்டார் - மன்னர்கள் நடுங்கிக் களிற்றுத் திரளொடும் ஓடினர்.

விளக்கம் : நுழைந்த வேல் - நுழைந்தும் உருவாத வேல். வேலைப் பறித்துக் கொண்டு, அவ் வேல் நுழைந்த சந்திலே வாளைச் செலுத்தி, வாளின் வளைவைப் போக்கினான். இப்போரே யாம் பொரத்தகும் பெரிய போரென்று கருதினான். ( 192 )

2294. தோட்டுவண் டொலியன் மாலைத்
துடியிடை மகளி ராய்ந்த
மோட்டுவெண் முத்த மின்னு
முகிழ்முலை யுழுது சாந்தம்
கோட்டுமண் கொண்ட மார்பங்
கோதைவாள் குளித்து மூழ்கிக்
கோட்டுமண் கொள்ள நின்றான்
குருசின்மண் கொள்ள நின்றான்.

பொருள் : தோட்டு வண்டு ஒலியால் மாலைத் துடிஇடை மகளிர் ஆய்ந்த - தொகுதியான வண்டுகள் மொய்த்து ஒலிக்கின்ற மாலையையும், துடிபோலும் இடையினையும் உடைய மகளிர் ஆராய்ந்த; மோட்டு வெண் முத்தம் மின்னும் முகிழ் முலை - பெருமை மிக்க வெள்ளிய முத்துக்கள் ஒளிரும் அரும்பனைய முலைகள்; உழுது சாந்தம் கோட்டு மண் கொண்ட மார்பம் - உழுது, சாந்தைத் தலையிலே அழகாகக் கொண்ட மார்பில்; கோதை வாள் குளித்து மூழ்கி - மாலையணிந்த வாள் நுழைந்து முழுகி; கோட்டு மண் கொள்ள - தன் நுனியிலே தசையைக் குத்தியெடுக்குமாறு; குருசில் மண் கொள்ள நின்றான் நின்றான் - சீவகன் மண் கொள்ளுமாறு நின்ற சலநிதி என்பவன் நின்றான்.

விளக்கம் : போரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்த சலநிதி தன்னினைவின்றி வாளைப் பலகாலும் நுழைத்து ஊன் கொள்ள நின்றான். வெஞ்சமம் நோக்கி நின்று என்பதனை இச் செய்யுளிற் கொணர்ந்து, அரசர் அஞ்சியோடுதலின் இனி நமக்குப் போரில்லையென்ற சலநிதி நினைத்தா னென்று கூறுவர் நச்சினார்க்கினியர். வாள் உருவாதிருத்தலின், தசையைக் குத்தி யெடுத்துக் குருதியிலே குளித்து நின்ற தென்க. ( 193 )

2295. எரிமணிக் குப்பை போல விருளற விளங்கு மேனித்
திருமணிச் செம்பொன் மார்பிற் சீவகன் சிலைகை யேந்தி
யருமணி யரச ராவி யழலம்பிற் கொள்ளை சாற்றி
விரிமணி விளங்கு மான்றோ விண்டொழ வேறி னானே.

பொருள் : எரி மணிக் குப்பைபோல இருள் அற விளங்கும் மேனி - ஒளிரும் மணித்திரள் போல இருள் நீங்க இலங்கும் மெய்மையும்; திருமணிச் செம்பொன் மார்பின் - அழகிய மணிகளிழைத்த பொன் அணி விளங்கும் மார்பினையும் உடைய; சீவகன் சிலை கை ஏந்தி - சீவகன் கையிலே வில்லை ஏந்தி; அருமணி அரசர் ஆவி அழல் அம்பின் கொள்ளை சாற்றி - அரிய மணி அணிந்த வேந்தரின் உயிரைத் தன் தழற் கணையாலே கொள்ளை யிடுவதைத் தன் நெஞ்சிலே அமையச் செய்து; விண் தொழ - விண்ணவர் தொழ; விரிமணி விளங்கும் மான் தேர் ஏறினான் - ஒளி பரவும் மணிகளிழைத்து விளங்கும் புரவிபூட்டிய தேரிலே ஏறினான்.

விளக்கம் : செம்பொன் : பொன்னாலான அணிகட்கு ஆகுபெயர். விண்ணவர் - ஈண்டு விஞ்சையர். விண் : இடவாகு பெயர். (194)

2296. கருவளி முழக்குங் காருங்
கனைகட லொலியுங் கூடி
யருவலிச் சிங்க வார்ப்பு
மாங்குடன் கூடிற் றென்னச்
செருவிளை கழனி மள்ள
ரார்ப்போடு சிவணிச் செம்பொற்
புரிவளை முரச மார்ப்பப்
போர்த்தொழி றொடங்கி னானே.

பொருள் : கருவளி முழக்கும் - பெருங்காற்றின் ஒலியும்; காரும் கனை கடல் ஒலியும் கூடி - காரின் ஒலியும் கடல் ஒலியும் கூடியதோடு; அருவலிச் சிங்க ஆர்ப்பும் ஆங்கு உடன் கூடிற்று என்ன - அரிய ஆற்றலையுடைய சிங்கத்தின் முழக்கும் அவ்விடத்தே சேரக் கூடியது என்னும்படி; செருவிளை கழனி மள்ளர் ஆர்ப்பொடு சிவணி - போர்விளையும் நிலத்திலே போருழவர் ஆரவாரத்துடன் பொருந்தி; செம்பொன் புரிவளை முரசம் ஆர்ப்ப - செம்பொன்னாலணியப்பட்ட சங்கும் முரசும் முழங்க; போர்த் தொழில் தொடங்கினான் - போர்த் தொழிலை மேற்கொண்டான்.

விளக்கம் : கருவளி - பெருங்காற்று. கார் - முகில். கனைகடல் : வினைத்தொகை. செருவிளைகழனி என்றது போர்க்களத்தை. சிவணி - பொருந்தி. ( 195 )

2297. அரசர்த முடியும் பூணு
மாரமும் வரன்றி யார்க்கு
முரசமுங் குடையுந் தாரும்
பிச்சமுஞ் சுமந்து மாவும்
விரைபரித் தேரு மீர்த்து
வேழங்கொண் டொழுகி வெள்ளக்
குரைபுனற் குருதி செல்லக்
குமரன்விற் குனிந்த தன்றே.

பொருள் : குரைபுனல் குருதி வெள்ளம் - ஒலிக்கும் நீர் போலும் குருதிப் பெருக்கு; அரசர் தம் முடியும் பூணும் ஆரமும் வரன்றி - அரசருடைய முடியையும் அணிகலனையும் ஆரத்தையும் வாரிக்கொண்டு; ஆர்க்கும் முரசமும் குடையும் தாரும் பிச்சமும் சுமந்து-முரசையும் குடையையும் மாலையையும் பிச்சத்தையும் சுமந்து; மாவும் விரைபரித் தேரும் ஈர்த்து - குதிரையையும் விரைந்து செல்லும் குதிரை பூட்டிய தேரையும் இழுத்துக் கொண்டு; வேழம் கொண்டு ஒழுகி - களிற்றையும் மெல்லக் கொண்டு சென்று; செல்ல - நடக்கும்படி; குமரன் வில் குனிந்தது - சீவகன் வில் வளைந்தது.

விளக்கம் : இது பொருகின்ற முறைமை கூறிற்று. குருதி வரன்றிச் சுமந்து ஈர்த்து ஒழுகிக் செல்லும்படி, குமரன் வில் வளைந்தது என்க. ( 196 )

2298. கேழ்கிள ரெரிகட் பேழ்வாய்க்
கிளர்பெரும் பாம்பி னோடுஞ்
சூழ்கதிர்க் குழவித் திங்க
டுறுவரை வீழ்வ தேபோற்
றாழிருந் தடக்கை யோடுந்
தடமருப் பிரண்டு மற்று
வீழ்தரப் பரந்த வப்பு
நிழலிற்போர் மயங்கி னாரே.

பொருள் : கேழ் கிளர் எரிகண் பேழ்வாய் கிளர் பெரும் பாம்பினோடும் - நிறம் விளங்கும் எரியுங் கண்ணையும் பெரிய வாயையுமுடைய பெரிய பாம்பினுடன்; சூழ் கதிர்க் குழவித் திங்கள் துறுவரை வீழ்வதே போல் - சூழ்ந்த ஒளியை யுடைய பிறைத் திங்கள் பெரிய மலையினின்றும் வீழ்தல் போல; தாழ் இருந் தடக்கையோடும் தடமருப்பு இரண்டும் அற்று - நீண்ட பெரிய துதிக்கையுடன் பெரிய கொம்புகள் இரண்டும் அற்று; வீழ்தர - யானையினின்றும் விழ; பரந்த அப்பு நிழலில் போர் மயங்கினார் - பரவிய அம்பு நிழலாலே அரசர் மனங் கலங்கிப் போரை அறிந்திலர்.

விளக்கம் : கேழ் - நிறம். எரிகண்: வினைத்தொகை. பேழ் - பெரிய. குழவித் திங்கள் - பிறை, துறுவரை - பெரிய மலை, தடமருப்பு - பெரிய கொம்பு, அப்பு நிழல் - வானின்கட் பரவிய அம்புகளாலுண்டான நீழல். மயங்கினார் - கலங்கினர். ( 197 )

2299. ஆடவ ராண்மை தோற்று
மணிகிளர் பவழத் திண்கை
நீடெரி நிலைக்கண் ணாடிப்
போர்க்களத் துடைந்த மைந்தர்
காடெரி கவரக் கலலென்
கவரிமா விரிந்த வண்ண
மோடக்கண் டுருவப் பைந்தா
ரரிச்சந்த னுரைக்கின் றானே.

பொருள் : ஆடவர் ஆண்மை தோற்றும் - ஆடவரின் வீரம் விளங்குகின்ற; அணிகிளர் பவழத் திண்கை நீடு எரி நிலைக் கண்ணாடி - அழகு விளங்கும் பவழத்தாலாகிய கையையுடைய பெரிய ஒளியையுடைய நிலைக் கண்ணாடியாகிய; போர்க்களத்து உடைந்த மைந்தர் - போர்க்களத்தே நெஞ்சு உடைந்த மக்கள்; காடு எரி கவர; காட்டைத் தீப்பற்றியதனால்; கல்லென் கவரி மா இரிந்த வண்ணம் - கல்லென்னும் ஒலியுடன் கவரி மா ஓடினாற் போல; ஓடக் கண்டு - ஓடுவதைப் பார்த்து; உருவப் பைந்தார் அரிச்சந்தன் உரைக்கின்றான் - அழகிய பைந்தார் புனைந்த அரிச்சந்தன் கூறுகின்றான்.

விளக்கம் : அரிச்சந்தன் : கட்டியங்காரன் அமைச்சன், கண்ணாடியில் அழகும் அழகின்மையுந் தோன்றுமாறு போலப் போர்களத்திலும் ஆண்மையும் ஆண்மையின்மையுந் தோன்றுதலின், அதனை உவமித்தார், மிக்க வீரரன்மையின், கவரிமா உவமையாயிற்று. ( 198 )

2300. மஞ்சிவர் மின்ன னார்தம் வாலரிச் சிலம்பு சூழ்ந்து
பஞ்சிகொண் டெழுதப் பட்ட சீறடிப் பாய்த லுண்ட
குஞ்சியங் குமரர் தங்கண் மறம்பிறர் கவர்ந்து கொள்ள
வஞ்சியிட் டோடிப் போகி னாண்மையார் கண்ண தம்மா.

பொருள் : மஞ்சு இவர் மின் அனார் தம் வால் அரிச் சிலம்பு சூழ்ந்து - முகிலிடை எழும் மின் போன்ற மங்கையரின் தூய பரல்களமைந்த சிலம்பினாற் சூழப்பட்டு; பஞ்சி கொண்டு எழுதப்பட்ட சீறடி - செம் பஞ்சினைக் கொண்டு எழுதப்பட்ட சிற்றடிகள்; பாய்தல் உண்ட குஞ்சி அம் குமரர் - பாய்தலைக் கொண்ட குஞ்சியை யுடைய மைந்தர்கள்; தம் மறம் பிறர் கவர்ந்து கொள்ள - தங்கள் வீரத்தை மற்றவர்கள் அகப்படுத்திக் கொள்ள; அஞ்சி இட்டு ஓடிப் போகின் - அச்சத்துடன் விட்டு ஓடுவாராயின்; ஆண்மை யார்கண்ணது - வீரம் யாவரிடத்தது

விளக்கம் : நீர் மகளிரிடத்தன்றிப் போரிலும் ஆடவராகவேண்டும் என்றான். குமரர்: முன்னிலைப் படர்க்கை, கேட்பிக்கும் இடத்தே வருகின்ற அம்ம என்னும் அசைச்சொல், உரைப்பொருட்கிளவி நீட்டமும் வரையார் (தொல். உயிர் மயங். 10) என்றதனால், அம்மா என நீண்டு, அது, விளியொடு கொள்ப (தொல்-விளிமரபு. 34) என்றதனால் அம்மா மைந்தீர் என நின்றது; முற்கூரிய மைந்தரை விளித்தானாம், அம்ம வாழி கேளிர் (அகநா. 130) என்றாற் போல ஈண்டும் பன்மை யுணர்த்திற்று. ( 199 )

2301. உழையின முச்சிக் கோடு கலங்குத லுற்ற போதே
விழைவற விதிர்த்து வீசி விட்டெறிந் திடுவ தொப்பக்
கழலவ ருள்ள மஞ்சிக் கலங்குமே லதனை வல்லே
மழைமினி னீக்கி யிட்டு வன்கண்ண ராப வன்றே.

பொருள் : உழையினம் உச்சிக்கோடு கலங்குதல் உற்ற போதே - உழை மான்கள் தம் உச்சியிலுள்ள கொம்புகள் (கழலுங் காலத்து அதன்மேல் வேட்கையால்) மனம் கலங்குதல் கொண்ட பொழுதே; விழைவு அற விதிர்த்து வீசி விட்டு எறிந்திடுவது ஒப்ப அதன் மேல் கொண்ட வேட்கை அறும்படி விட்டு அதனை அசைத்து வீசி யெறியுந் தன்மை போல; கழலவர் உள்ளம் அஞ்சிக் கலங்குமேல் - கழலணிந்த வீரரின் மனம் (தம் உடம்பின்மேல் உள்ள வேட்கையாலே) அச்சுற்றுக் கலங்கு மெனின்; அதனை வல்லே மழைமினின் நீக்கியிட்டு - அவ்வேட்கையை விரைந்து முகிலிடை மின்போல் (தோன்றியவாய் தெரியாமல்) நீக்கி மறைத்திட்டு; வன்கண்ணர் ஆப - அஞ்சாமையை உடையராவர்.

விளக்கம் : அது நுமக்கும் வேண்டும் என்றான்  உழையினம், கழலவர் : எழுவாய்கள்.  உழையினம் - மான்கூட்டம். கோடு - உச்சிக்கோடு கலங்குதல் உற்றபோதே என்றற்கு, உச்சியிலுள்ள கொம்பு அசைதலுற்ற பொழுதே எனினும் அமையும். விழைவு - பற்று. வீசிவிட்டெறிதல் : ஒருசொல். கழலவர் - மறவர் ஆப - ஆகுவர். அன்று, ஏ : அசைகள் ( 200 )

2302. தற்புறந் தந்து வைத்த தலைமகற் குதவி வீந்தாற்
கற்பக மாலை சூட்டிக் கடியர மகளிர்த் தோய்வர்
பொற்றசொன் மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கன்மே
னிற்பர்தம் வீரந் தோன்ற நெடும்புகழ் பரப்பி யென்றான்.

பொருள் : தன் புறம் தந்து வைத்த தலைமகற்கு - தம்மைப் பாதுகாத்து (இவர் இடுக்கண் வரின் உதவுவர் என்று) வைத்த தம் தலைவனுக்கு; உதவி வீந்தால் - அங்ஙனம் உதவி செய்து இறந்தால்; கற்பக மாலை சூட்டிக் கடி அரமகளிர்த் தோய்வர் - (சுவர்க்கம் புகுந்து) கற்பக மாலை சூட்டப்பெற்று, மணமுறும் வான மங்கையரைத் தழுவுவர்; தம் வீரம் தோன்ற நெடும் புகழ் பரப்பி - (இவ்வுலகிலும்) தம் வீரம் விளங்கப் பெறும் புகழைப் பரப்பி; பெற்ற சொல்மாலை சூட்டிப் புலவர்கள் புகழ - பொலிவுற்ற சொல்மாலையை அணிந்து புலவர்கள் புகழும்படியாக; கல்மேல் நிற்பர் - வீரக் கல்லிலே நிலைபெறுவர்.

விளக்கம் : புறந்தருதல் - உண்டி உறையுள் உடைமுதலியன வீந்து பாதுகாத்தல், தலைமகன் - அரசன், புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு, இரந்துகோள் தக்க துடைத்து என்றார் வள்ளுவர், அச் சாக்காட்டால் எய்தும் பயன் இச்செய்யுளில் அழகுறக் கூறப்பட்டுள்ளது.
( 201 )

2303. பச்சிரும் பெஃகிட் டாங்குப்
படையைக்கூர்ப் பிடுத லோடுங்
கச்சையுங் கழலும் வீக்கிக்
காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்
டச்சுற முழங்கி யாரா
வண்ணலங் குமரன் கையு
ணச்செயிற் றம்பு தின்ன
நாளிரை யாக லுற்றார்.

பொருள் : பச்சிரும்பு எஃகு இட்டாங்கு - உருகின இரும்பிலே எஃகு வைத்தாற் போல; படையைக் கூர்ப்பு இடுதலோடும் - அரிச்சந்தன் படைவீரரைக் கூர்மையிட்ட அளவிலே; கச்சையும் கழலும் வீக்கி-(அவ் வீரர்கள்) அரைக் கச்சையையும் வீரக் கழலையும் கட்டி; காஞ்சனத் தளிவம் வாய்க்கு இட்டு - பொற் சின்னம் வாயில் இட்டி; அச்சு உற முழங்கி ஆரா - அச்சம் உண்டாக முழங்கி ஆர்த்து; அண்ணல் குமரன் கையுள் - பெருமை மிக்க சீவகன் கையில்; நஞ்சு எயிற்று அம்பு தின்ன - நஞ்சு போன்ற பற்கள் உள்ள அம்புகளால் தின்னப்பட்ட; நாள் இரையாகல் உற்றார் - தம் வாழ்நாள் இரையாகலை மேற்கொண்டனர்.

விளக்கம் : பொற் சின்னத்தை வாயிலிட்டும் போரிடல் மரபு. அண்ணல் அம் குமரன் : அம் : அசை.  பச்சிரும்பு - உருகிய இரும்பு. கூர்ப்பிடுதல் - தூண்டுதல். காஞ்சனத் தளிவம் - பொன்னாலாகிய சின்னம். அச்சுற -அச்சம் உண்டாகும்படி. ஆரா - ஆர்த்து, குமரன் : சீவகன், நாளிரை - நாட்காலத்துத் தின்னுமிரையுமாம். எயிறு - பல் . இது : இங்கு அம்பின் முனையை யுணர்த்தியது. (202)

2304. வடதிசை யெழுந்த மேகம்
வலனுராய் மின்னுச் சூடிக்
குடதிசைச் சோந்து மாரி
குளிறுபு சொரிவ தேபோற்
படர்கதிர்ப் பைம்பொற் றிண்டோ
பாங்குற விமைப்பி னூர்ந்தா
னடர்சிலை யப்பு மாரி
தாரைநின் றிட்ட தன்றே.

பொருள் : வடதிசை எழுந்த மேகம் - வடதிசையில் எழுந்த முகில்; வலன் உராய் - வலமாகச் சென்று; மின்னுச் சூடி - மின்னை அணிந்து; குடதிசைச் சேர்ந்து - மேலைத் திசையை அடைந்து; குளிறுபு மாரி சொரிவதே போல் - முழங்கி மழை பெய்வதைப் போல; படர் கதிர் பைம் பொன் திண்தேர் - பரவிய கதிரையுடைய பொன்னாலாகிய திண்ணிய தேரை; இமைப்பின் பாங்கு உற ஊர்ந்தான் - நொடியளவிலே அழகுற ஏறினான்; அடர்சிலை அப்பு மாரி தாரை நின்றிட்டது - (அப்போது) பொருதற்குரிய வில்லிலே அம்புமழை தாரை சொரிதல்போல மாறாது நின்றது.

விளக்கம் : உராய் - உலவி. முகில் வலமேறிச் சென்றால் மழைமிகும் . மின்னு - மின்னல். குடதிசை - மேற்றிசை. குளிறுபு - முழங்கி, பாங்கு - அழகு. ( 203 )

2305. அற்றுவீழ் தலைகள் யானை யுடலின்மே லழுந்தி நின்ற
பொற்றதிண் சரத்திற் கோத்த பொருசரந் தாள்க ளாகத்
தெற்றிமேற் பூத்த செந்தா மரைமலர் போன்ற செங்கண்
மற்றத்தா துரிஞ்சி யுண்ணும் வண்டின் மொத்த வன்றே.

பொருள் : அற்று வீழ் தலைகள் - அவ் வம்புகளால் அற்று வீழ்கின்ற தலைகள்; யானை உடலின் மேல் அழுந்தி நின்ற பொற்ற திண் சரத்திற் கோத்த - பட்ட யானைகளின் மெய்யின் மேல் அழுந்தி நின்ற பொலிவையுடைய அம்புகளிற் கோத்தவை; பொருசரம் தாள்களாக - அந்த அம்புகள் தாள்களாக; தெற்றி மேல் பூத்த செந்தாமரை மலர் போன்ற - திண்ணைகளிலே மலர்ந்த செந்தாமரை மலர்களைப் போன்றன; செங்கண் அத்தாது உரிஞ்சி உண்ணும் வண்டினம் ஒத்த - அவற்றின் செங்கண்கள் அம் மலரின் தேனை உரிஞ்சிப் பருகும் வண்டுகளைப் போன்றன.

விளக்கம் : வில் வன்மையாற் கணையிற் கோக்க எய்தான். மற்று, அன்று, ஏ : அசைகள். ( 204 )

வேறு

2306. திங்க ளோடுடன் குன்றெலாந்
துளங்கி மாநிலஞ் சோவபோற்
சங்க மத்தகத் தலமரத்
தரணி மேற்களி றழியவும்
பொங்கு மாநிரை புரளவும்
பொலங்கொ டோபல முறியவுஞ்
சிங்கம் போற்றொழித் தார்த்தவன்
சிறுவர் தோமிசைத் தோன்றினார்.

பொருள் : திங்களோடு உடன் குன்று எலாம் துளங்கி மாநிலம் சேர்வபோல் - திங்களுடன் சேரக் குன்றுகள் யாவும் அசைந்து பெருநிலத்தே வீழ்வனபோல; களிறு மத்தகத்து சங்கம் அலமத் தரணிமேல் அழியவும் - (சீவகன் படையிலுள்ள) களிறுகள் தம் மத்தகத்திலே சங்குகள் அசைய நிலமிசை விழுந்து அழியவும்; பொங்கும் மாநிரை புரளவும் - கிளரும் குதிரைத் திரள் நிலமிசை வீழ்ந்து புரளவும்; பொலம்கொள் தேர்பல முறியவும் - பொன்னாலான தேர்கள் பல முறியவும்; சிங்கம் போல் தொழித்து ஆர்த்து - சிங்கம்போற் சினந்து முழங்கி; அவன் சிறுவர் தேர்மிசைத் தோன்றினார் - கட்டியங்காரனின் மக்கள் தேர்மீது காணப்பட்டனர்.

விளக்கம் : துளங்கு - அசைந்து. அலமர - அசைய. யானைகட்குக் குன்றுகள் உவமை. சங்கிற்குத் திங்கள் உவமை. மாநிரை குதிரையணி. தொழித்தல் - சினத்தல், அவன் என்றது கட்டியங்காரனை. ( 205 )

2307. சந்த னஞ்சொரி தண்கதிர்த்
திங்க ளந்தொகை தாம்பல
குங்கு மக்கதிர்க் குழவியஞ்
செல்வ னோடுடன் பொருவபோன்
மங்குன் மின்னென வள்ளறேர்
மைந்தர் தேரொடு மயங்கலின்
வெங்கண் வில்லுமிழ் வெஞ்சர
மிடைந்து வெங்கதிர் மறைந்ததே.

பொருள் : குங்குமக் கதிர்க் குழவி அம் செல்வனோடு - குங்குமம் போலச் சிவந்த கதிர்களையுடைய இளஞாயிற்றுடன்; சந்தனம் சொரிதண் கதிர்த் திங்கள் அம் தொகை தாம்பல உடன் பொருவபோல் - சந்தனம் போலச் சொரியும் தண்ணிய கதிரையுடைய திங்களின் திரள்கள் தாம் பலவும் சேரப் பொருவன போல; மங்குல் மின்னென மைந்தர் தேரொடு வள்ளல் தேர் மயங்கலின் - முகிலிடை மின்போல மைந்தர்களின் தேருடன் சீவகன் தேரும் மயங்குதலின்; வெங்கண் வில்உமிழ் வெஞ்சரம் மிடைந்து - கொடிய வில் உமிழ்கின்ற கொடுங் கணைகள் நெருங்கலாலே; வெங்கதிர் மறைந்தது - ஞாயிறு மறைந்தது.

விளக்கம் : தண்கதிர்த் திங்கள் தொகை கட்டியங்காரன் மக்களுக்கு உவமை. கதிர்க்குழவியஞ் செல்வன் - (ஞாயிறு) சீவகனுக்குவமை. வள்ளல் : சீவகன். வெங்கதிர் - ஞாயிறு. ( 206 )

2308. குருதி வாளொளி யரவினாற்
கொள்ளப் பட்டவெண் டிங்கள்போற்
றிருவ நீர்த்திகழ் வலம்புரி
வாய்வைத் தாங்கவன் றெழித்தலும்
பொருவில் கீழ்வளி முழக்கினாற்
பூமி மேற்சன நடுங்கிற்றே
யரவ வெஞ்சிலை வளைந்ததே
யண்ணல் கண்ணழ லுமிழ்ந்ததே.

பொருள் : குருதி வாள் ஒளி அரவினால் - குருதியைப் போலும் மிக்க ஒளியையுடைய செம் பாம்பினாலே; கொள்ளப் பட்ட வெண் திங்கள் போல் - பற்றப்பட்ட வெள்ளைத் திங்கள் போலே; திருவ நீர்த் திகழ் வலம்புரி வாய் வைத்து ஆங்கு அவன் தெழித்தலும் - அழகிய நீர்மையுடைய வலம்புரியைக் கையிற் பற்றி வாயில் வைத்துச் சீவகன் முழக்கின அளவிலே; பொரு இல் கீழ் வளி முழக்கினால் - உவமையில்லாத, கீழ் நோக்கி யெழுந்த காற்றின் முழக்காலே; பூமிமேல் சனம் நடுங்கிற்று - நிலவுலகில் மக்கள் கூட்டம் நடுங்கியது; அரவ வெஞ்சிலை வளைந்தது - அரவ மனைய கொடிய வில்லும் வளைந்தது; அண்ணல் கண் அழல் உமிழ்ந்தது - சீவனுடைய கண்களும் தீயைச் சொரிந்தன.

விளக்கம் : திருவ: அ: அசை. திருத்திகழ்ந்த அக்கடலும் ஆம்.  குருதிவாளொளியரவு என்றது கேதுவினை. சீவகன் கைக்குச் செம்பாம்பும் சங்கத்திற்குத் திங்களும் உவமை. அவன்:சீவகன். சனம் - மக்கட்டிரள். அரவம் போன்ற வெஞ்சிலை என்க. அண்ணல் : சீவகன். ( 207 )

2309. கங்கை மாக்கடற் பாய்வதே
போன்று காளைதன் கார்முக
மைந்த ரார்த்தவர் வாயெலா
நிறைய வெஞ்சரங் கான்றபி
னெஞ்சம போழ்ந்தழ லம்புண
நீங்கி னாருயிர் நீண்முழைச்
சிங்க வேறுகள் கிடந்தபோற்
சிறுவர் தோமிசைத் இஞ்சினார்.

பொருள் : கங்கை மாக்கடல் பாய்வதே போன்று - கங்கை பெரிய கடலிலே பல முகமாகப் பாய்வதைப் போல; காளை தன் கார்முகம் மைந்தர் ஆர்த்தவர் வாய்எலாம் நிறைய - சீவகனுடைய வில்லானது வீரர்களாக ஆரவாரித்தவர் வாய்களிலெல்லாம் நிறையுமாறு; வெஞ்சரம் கான்றபின் - கொடிய கணைகளைச் சொரிந்தபின்; நெஞ்சம் போழ்ந்து அழல் அம்பு உண - (சில அம்புகள்) அவர்களின் நெஞ்சத்தைப் பிளந்து அழற் கணைகள் உண்டதனால்; உயிர் நீங்கினார் - உயிர் நீங்கியவர்களாய், நீள் முழைச் சிங்க ஏறுகள் கிடந்த போல் - நீண்ட குகைகளிலே ஆண் சிங்கங்கள் கிடந்தனபோல; சிறுவர் தேர்மிசைத் துஞ்சினர் - கட்டியங்காரன் மக்கள் தேரிலே பட்டுக் கிடந்தனர்.

விளக்கம் : நீங்கினார் : வினையெச்ச முற்று. இதுவரை கட்டியங்காரற்குத் துணைவந்த அரசருடனும், அவன் படைத்தலைவருடனும்  அவன் புதல்வர் அணி வகுத்து வந்தவருடனும் சீவகன் பொருதவடி கூறினார். ( 208 )

2310. நிவந்த வெண்குடை வீழவும்
வேந்தர் நீள்விசும் பேறவு
முவந்து பேய்க்கண மாடவு
மோரி கொள்ளைகொண் டுண்ணவுங்
கவந்த மெங்கணு மாடவுங்
களிறு மாவொடு கவிழவுஞ்
சிவந்த சீவக சாமிகண்
புருவ மும்முரி முரிந்தவே.

பொருள் : நிவந்த வெண்குடை வீழவும் - உயர்ந்த வெண்குடை வீழவும்; வேந்தர் நீள் விசும்பு ஏறவும் - அரசர்கள் பெரிய வானிலே செல்லவும்; உவந்து பேய்க்கணம் ஆடவும் - மகிழ்ந்து பேய்க்கூட்டம் ஆடவும்; ஓரி கொள்ளை கொண்டு உண்ணவும் - ஆண் நரி கொள்ளையாகக் கொண்டு உண்ணவும்; கவந்தம் எங்கணும் ஆடவும் - குறைத்தலைகள் எங்கும் ஆடவும்; களிறு மாவொடு கவிழவும் - யானைகள் குதிரைகளுடன் கவிழவும்; சிவந்த சீவக சாமிகண் புருவமும் முரிமுரிந்த - சீவக சாமியின் கண்களும் சிவந்தன; புருவங்களும் வளைந்தன.

விளக்கம் : இது முதலாகப் பதுமயூகம் வகுத்து நின்ற கட்டியங்காரனுடன் சீவகன் பொருதமை கூறுகின்றார். எச்சங்கள் எதிர் காலம் நோக்கின; குறையாகிய தலையை உடையதனைக் குறைத்தலை என்றது ஆகுபெயர். அவன் படை வகுப்பைக் கண்டு சீவகற்குக் கோபம் நிகழ்ந்தமை கூறினார். முரிமுரிந்த என்பதனை, அணியலும் அணிந்தன்று (புறநா. - கடவுள் வாழ்த்து) என்றாற் போலக் கொள்க. ( 209 )

2311. பொய்கை போர்க்களம் புறவிதழ்
புலவு வாட்படை புல்லித
ழைய கொல்களி றகவித
ழரச ரல்லிதன் மக்களா
மையில் கொட்டையம் மன்னனா
மலர்ந்த தாமரை வரிசையாற்
பைய வுண்டபின் கொட்டைமேற்
பவித்திரத் தும்பி பறந்ததே.

பொருள் : பொய்கை போர்க்களம் - பொய்கை பொருங் களமாகவும்; புறஇதழ் புலவு வாள்படை - புறவிதழ் வாட்படை யாகவும்; புல் இதழ் ஐய கொல் களிறு - அதற்குள் ளிருக்கும் புல்லிதழ் வியத்தகு கொல்களிறாகவும்; அகஇதழ் அரசர் - அகவிதழ் அரசராகவும்; அல்லி தன் மக்கள் ஆ - அல்லி யிதழ் அவன் மக்களாகவும்; மைஇல் கொட்டை அம் மன்னன் ஆ - குற்றமற்ற கொட்டை அக் கட்டியங்காரனாகவும்; மலர்ந்த தாமரை வரிசையால் - விரிவுற்ற ஒரு பதும வியூகத்தை; பைய உண்ட பின் - முறையே மெல்ல உண்டதன் பிறகு; கொட்டைமேல் பவித்திரத் தும்பி பறந்தது - அக் கொட்டை மேலே தும்பி பறந்தது.

விளக்கம் : குலனும் குணனும் முதலியன தூயன் என்பது தோன்றப், பவித்திரத் தும்பி என்றார். ( 210 )

வேறு

2312. கலைமுத்தங் கொள்ளு மல்குற்
கார்மழை மின்ன னார்த
முலைமுத்தங் கொள்ளச் சாந்த
மழிந்துதார் முருகு விம்மு
மலைமுத்தங் கொள்ளு மார்பின்
மன்னனுங் கண்டு காய்ந்தான்
சிலைமுத்தங் கொள்ளுந் திண்டோட்
செம்மலுந் தீயிற் சேந்தான்.

பொருள் : கலைமுத்தம் கொள்ளும் அல்குல் - மேகலை முத்தம் கொள்ளும் அல்குலையுடைய; கார்மழை மின்னனார்தம் முலை முத்தம் கொள்ள - கரிய முகிலிலே தோன்றும் மின் போன்ற மகளிரின் முலைகள் தழுவுதலால்; சாந்தம் அழிந்து தார் முருகு விம்மும் - சந்தனம் அழிந்து தாரில் தேன் பொங்குகின்ற; மலைமுத்தம் கொள்ளும் மார்பின் - மலைபோன்ற மார்பினையுடைய; மன்னனும் கண்டு காய்ந்தான் - கட்டியங்காரனும் சீவகனைக் கண்டு சீறினான்; சிலைமுத்தம் கொள்ளும் திண் தோள் செம்மலும் தீயின் சேந்தான் - வில்பொருந்தும் தோளையுடைய சீவகனும் அவனைக் கண்டு தீயைப் போலச் சினந்தான்.

விளக்கம் : கலை - மேகலையணி. தார் - மாலை. முருகு - மணம். மலைமுத்தங்கொள்ளும் மார்பின் என்புழி முத்தங்கோடல் - பொருந்துதல் என்பதுபட நின்றது. மன்னன் : கட்டியங்காரன். செம்மல் : சீவகன். ( 211 )

2313. தன்மதந் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம்
பின்மதஞ் செறித்திட்டு டஞ்சிப் பிடிமறந் திரிந்து போகும்
வென்மதக் களிற்று வெய்ய வசனிவே கத்தின் மேலான்
மின்னுமிழ் மாலை வேந்தன் வீரற்கு விளம்பி னானே.

பொருள் : தன் மதம் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம் - தன் மதத்திலே திளைத்த வண்டின் திரள் சென்று தங்கிய காட்டிலே உள்ள யானைகள்; பின் மதம் செறித்திட்டு அஞ்சிப் பிடிமறந்து - பின்னர் அவற்றின் நாற்றித்தாலே அஞ்சி மதத்தை அடக்கிப் பிடியை மறந்து; இரிந்து போகும் - கெட்டுப் போதற்குக் காரணமான; வெல் மதக் களிற்று வெய்ய அசனி வேகத்தின் மேலான் - வென்றியை யுடைய மதயானையாகிய கொடிய அசனி வேகத்தின் மேலமர்ந்துள்ள; மின் உமிழ் மாலை வேந்தன் - ஒளியை உமிழும் மாலையை யுடைய கட்டியங்காரன்; வீரற்கு விளம்பினான் - சீவகனை நோக்கிக் கூறினான்.

விளக்கம் : இதனால் அசனிவேகத்தின் வலிமை கூறினார். ( 212 )

2314. நல்வினை யுடைய நீரார்
நஞ்சுணி னமுத மாகு
மில்லையே லமுது நஞ்சா
மின்னதால் வினையி னாக்கங்
கொல்வல்யா னிவனை யென்று
மிவன்கொல்லு மென்னை யென்று
மல்லன நினைத்தல் செல்லா
ரறிவினாற் பெரிய நீரார்.

பொருள் : நல்வினை உடைய நீரார் நஞ்சு உணின் அமுதம் ஆகும் - நல்லூழ் கொண்ட தன்மையார் நஞ்சினைப் பருகினும் அமுதம் ஆகும்; இல்லையேல் அமுதும் நஞ்சாம் - அந் நல்வினையின்றேல் (அழியாதிருத்தற்குப் பருகின) அமுதமும் நஞ்சாகும்; வினையின் ஆக்கம் இன்னது - இருவினைகளின் ஆக்கமும் இத்தன்மையாக இருந்தது; யான் இவனைக் கொல்வல் என்றும் - நான் இவனைக் கொல்வேன் என்றும்; இவன் என்னைக் கொல்லும் என்றும் - இவன் என்னைக் கொல்வான் என்றும்; அறிவினால் பெரிய நீரார் அல்லன நினைத்தல் செல்லார் - அறிவினாற் சிறந்த இயல்பினார் பொருளல்லவற்றை எண்ணமாட்டார்.

விளக்கம் : எனவே, இது நின் செயலென்று கருதவேண்டா என்றான். தன் சிறையை அவன் நீங்கின தன்மையையும் தனக்கு அரணாக இட்ட வியூகம் கேட்ட தன்மையையும் எண்ணி இங்ஙனம் கூறினான். (213)

2315. அகப்படு பொறியி னாரை யாக்குவா ரியாவ ரம்மா
மிகப்படு பொறியி னாரை வெறியராச் செய்ய லாமோ
நகைக்கதிர் மதியம் வெய்தா நடுங்கச்சுட்டிடுத லுண்டே
பகைக்கதிர்ப் பருதி சந்து மாலியும் பயத்த லுண்டே.

பொருள் : அகப்படு பொறியினாரை ஆக்குவார் யாவர்? - நின் கையிலே அகப்படுதற்குக் காரணமான தீவினையுடையாரை ஆக்குவார் எவர்?; மிகப்படு பொறியி னாரை வெறியராச் செய்யல் ஆமோ? - அதற்கு வேண்டும் நல்வினை உடையாரை வீணராக ஆக்கல் ஒவ்வுமோ?; நகைக் கதிர் மதியம் வெய்துஆ நடுங்கச் சுட்டிடுதல் உண்டே? - ஒளியுறுங் கதிரையுடைய திங்கள் வெப்பமுடையதாகி வருந்தச் சுடுதல் ஆமோ!; பகைக் கதிர்ப் பருதி சந்தும் ஆலியும் பயத்தல் உண்டே? - வெங்கதிரையுடைய ஞாயிறு சந்தனமும் பனிக் கட்டியும் கொத்தல் உண்டோ?

விளக்கம் : தன் மக்கள் சீவனிடம் அகப்பட்டதும், சீவகன் ஆக்கமுடைய னாதலின் தன் கையிலகப்படாததும், தன் மக்களாற் கொல்லப் படாததும் கருதி இங்ஙனங் கூறினான். ஞாயிறும் திங்களும் தம் தன்மை திரியாமையின் நல்வினை தீவினைகளும் தம் பயனைப் பயந்தேவிடும் என்றான். பகைக் கதிர் என்றது திங்களுக்குப் பகையென்று கருதி. ( 214 )

2316. புரிமுத்த மாலைப் பொற்கோல்
விளக்கினுட் பெய்த நெய்யுந்
திரியுஞ்சென் றற்ற போழ்தே
திருச்சுடர் தேம்பி னல்லா
லெரிமொய்த்துப் பெருக லுண்டோ
விருவினை சென்று தேய்ந்தாற்
பரிவுற்றுக் கெடாமற் செல்வம்
பற்றியா ரதனை வைப்பார்.

பொருள் : புரிமுத்த மாலைப் பொன்கோல் விளக்கினுள் - கட்டிய முத்து மாலையையுடைய பொன்னாலாகிய தண்டையுடைய விளக்கிலே; பெய்த நெய்யும் திரியும் சென்று அற்ற போழ்தே - வார்த்த நெய்யும் திரியும் வற்றி மாண்டபொழுதிலேயே; திருச்சுடர் தேம்பின் அல்லால் எரி மொய்த்துப் பெருகல் உண்டோ? - அழகிய விளக்கு அவிதல் அன்றி நெருப்புச் செறிந்து மிகுதல் உண்டோ? (அதுபோல); இருவினை சென்று தேய்ந்தால் - பெரிய நல்வினை வற்றி மாண்டால்; செல்வம் பரிவு உற்றுக் கெடாமல் - செல்வம் வருந்திக் கெடாதபடி; அதனை யார் பற்றி வைப்பார் - அதைப் பிடித்து வைப்பவர் எவரும் இல்லை.

விளக்கம் : முன்னே, மொய்யமர் பலவும் வென்றான் (சீவக. 205) தன் புதல்வர் தன்னைச் சூழப்பட்டுக் கிடக்கின்றமை கண்டும் செற்றம் மிகுந்து மேற்செல்லாது இங்ஙனம் கூறினான் தான் அரச மரபு அன்மையின். ( 215 )

2317. நல்லொளிப் பவளச் செவ்வாய்
நன்மணி யெயிறு கோலி
வில்லிட நக்கு வீர
னஞ்சினா யென்ன வேந்தன்
வெல்வது விதியி னாகும்
வேல்வரி னிமைப்பே னாயிற்
சொல்லிநீ நகவும் பெற்றாய்
தோன்றன்மற் றென்னை யென்றான்.

பொருள் : வீரன் (அதுகேட்ட) சீவகன்; நல் ஒளிப் பவளச் செவ்வாய் நல்மணி எயிறு கோலி வில்லிட நக்கு - அழகிய ஒளியை உடைய பவளம் அனைய செவ்வாயில் அழகிய முத்தனைய பற்கள் வரிசையாக ஒளிவிட நகைத்து; அஞ்சினாய் என்ன - நீ அஞ்சினை என்று கூற; வேந்தன் - (அதற்குக்) கட்டியங்காரன்; வெல்வது விதியின் ஆகும் - வென்றி கொள்வது ஊழினாலே உண்டாகும்; தோன்றல் - தோன்றலே!; வேல்வரின் இமைப்பேன் ஆயின் - நின் கையில் வேல் என்மேல் வரும்போது இமைத்தேன் எனின்; சொல்லி நீ என்னை நகவும் பெற்றாய் என்றான் - (அப்போது) இம் மொழியைக் கூறி நீ என்னை நகைக்கக் கடவை என்று கூறினான்.

விளக்கம் : கட்டியங்காரன் ஊழ்வலியை எண்ணிக் குறைந்தே நின்றால், கொல்வது அரிது என்று கருதிச் செற்றமுண்டாக்கக் கருதி அஞ்சினாய் என்றான். பெற்றாய் : கால வழுவமைதி. ( 216 )

2318. பஞ்சிமெல் லடியி னார்தம்
பாடகந் திருத்திச் சேந்து
நெஞ்சுநொந் தழுத கண்ணீர்
துடைத்தலி னிறைந்த கோல
வஞ்சனக் கலுழி யஞ்சே
றாடிய கடக வண்கை
வெஞ்சிலை கொண்டு வெய்ய
வுருமென முழங்கிச் சொன்னான்.

பொருள் : பஞ்சி மெல்லடியினார் தம் பாடகம் திருத்திச் சேந்து - பஞ்சு போன்ற மெல்லிய அடியையுடைய மகளிரின் பாடகம் என்னும் காலணியைத் திருத்திச் சிவந்து; நெஞ்சு நொந்து அழுத கண்ணீர் துடைத்தலின் - மனம் வருந்தி அழுத கண்ணீரைத் துடைப்பதால்; நிறைந்த கோல அஞ்சனக் கலுழி அம் சேறு ஆடிய கடக வண்கை - அவர்கள் கண்ணில் நிறைந்த அழகிய மையாகிய சேற்றை ஆடிய, கடகம் இட்ட கையிலே; வெம்சிலை கொண்டு - கொடிய வில்லை எடுத்து; வெய்ய உரும் என முழங்கிச் சொல்வான் - கொடிய இடிபோல ஆர்த்துக் கூறுவான்.

விளக்கம் : மகளிரின் காலணியைத் திருத்திச் சிவந்த கை - அம் மகளிரின் கண்ணீரை மாற்றும்போது கண்ணிலுள்ள மை கண்ணீருடன் கலந்து சேறானதைத் துடைத்த கை - எனக் கூட்டுக. கட்டியங்காரன் கூறுகிறான். ( 217 )

வேறு

2319. இல்லாளை யஞ்சி விருந்தின்முகங்
கொன்ற நெஞ்சிற்
புல்லாள னாக மறந்தோற்பி
னெனப்பு கைந்து
வில்வா ளழுவம் பிளந்திட்டு
வெகுண்டு நோக்கிக்
கொல்யானை யுந்திக் கடைமேலுமொர்
கோறொ டுத்தான்.

பொருள் : மறம் தோற்பின் - வீரத்தை யிழந்தேனெனின்; இல்லானை அஞ்சி விருந்தின் முகம் கொன்ற நெஞ்சின் - மனைவிக்கு அஞ்சி விருந்தினரின் முகத்தை மகிழச் செய்யாமல் விட்ட நெஞ்சையுடைய; புல்லாளன் ஆக என - இழிஞன் ஆகக் கடவேனென்று கூறி; புகைந்து - சீறி; வில்லாள் அழுவம் பிளந்திட்டு - வில்லாளர் நிறைந்த பரப்பைப் பிளந்து; வெகுண்டு நோக்கி - சினந்து பார்த்து; கொல்யானை உந்தி - கொல் களிற்றைச் செலுத்தி; குடைமேலும் ஓர் கோல் தொடுத்தான் - சச்சந்தனைக் கொன்ற பிழையின் மேலும் (பிழையாகச் சீவகனைக் கொல்லக் கருதி) ஒரு கணையைத் தொடுத்தான்.

விளக்கம் : சச்சந்தனைக் கொன்று குடை கவித்தலின், குடையிட்டு நிற்பதன் மேலும் எனவே, அவனைக் கொன்றமை கூறிற்றாம். இனி, மேலும் வழங்கினானே என்று பாடம் ஓதிச் சீவகன் எய்தமை பொறாது கட்டியங்காரன் அம்பு தொடுத்தான் என்பாரும் உளர். ( 218 )

2320. தொடுத்தாங்க வம்பு தொடைவாங்கி
விடாத முன்ன
மடுத்தாங்க வம்புஞ் சிலையும்மத
னாணு மற்றுக்
கடுத்தாங்கு வீழக் கதிர்வான்பிறை
யம்பி னெய்தான்
வடித்தாரை வெள்வேல் வயிரம்மணிப்
பூணி னானே.

பொருள் : ஆங்குத் தொடுத்த அவ் அம்பு தொடை வாங்கி - ஆங்குத் தொடுத்த அந்த அம்பைத் தொடையை நிரம்ப வாங்கி; விடாத முன்னம் விடுவதற்கு முன்னே; அடுத்து ஆங்கு அவ்வம்பும் சிலையும் அதன் நாணும் அற்று - உடனே அங்கே அந்த அம்பும் வில்லும் வில்லின் நாணும் அறுபட்டு; கடுத்து ஆங்கு வீழக் கதிர் வான்பிறை அம்பின் - சினந்தாற்போல விழும்படி ஒளி பொருந்திய சிறந்த பிறைக்கணையால்; வடிதாரை வெள்வேல் வயிரம் மணிப் பூணினான் - வடித்த நீண்ட வெள்வே லேந்திய வயிர மணிக்கலன் அணிந்த சீவகன்; எய்தான் - அடித்தான்.

விளக்கம் : வடித்த தாரை என்பது, வடித்தாரை என விகாரப் பட்டது என்பர் நச்சினார்க்கினியர். கடுத்து - கடுகி எனலுமாம். ( 219 )

2321. அம்புஞ் சிலையு மறுத்தானென்
றழன்று பொன்வாள்
வெம்பப் பிடித்து வெகுண்டாங்கவன்
தேரின் மேலே
பைம்பொன் முடியான் படப்பாய்ந்திடு
கென்று பாய்வான்
செம்பொன் னுலகி னிழிகின்றவொர்
தேவ னொத்தான்.

பொருள் : அம்பும் சிலையும் அறுத்தான் என்று - அம்பையும் வில்லையும் சீவகன் அறுத்தான் என்று; பைம்பொன் முடியான் அழன்று - பொன்முடியணிந்த கட்டியங்காரன் சினந்து; பொன்வாள் வெகுண்டு வெம்பப் பிடித்து - பொன்வாளை அழன்று வெம்பும்படி ஏந்தி, ஆங்கு அவன் தேரின்மேலே படப் பாய்ந்திடுகு என்று - அங்கே சீவகன் தன் தேரின் மேலேயே பட்டுக்கிடக்கப் பாய்ந்திடுவேன் என்று; பாய்வான் - பாயுங் கட்டியங்காரன்; செம்பொன் உலகின் இழிகின்ற ஒர்தேவன் ஒத்தான் - பொன்னாட்டிலிருந்து இறங்கி வருகின்ற ஒரு வானவனைப் போன்றான்.

விளக்கம் : யானையினின்றும் கீழே பாய்கின்றவன், நல்வினைகெட்டு, வானினின்றும் தள்ளப்படுகின்றவன் போன்றான். ( 220 )

2322. மொய்வார் குழலார் முலைப்போர்க்கள
மாய மார்பிற்
செய்யோன் செழும்பொற் சரஞ்சென்றன
சென்ற தாவி
வெய்தா விழியா வெகுவத்துவர்
வாய்ம டியா
மையார் விசும்பின் மதிவீழ்வது
போல வீழ்ந்தான்.

பொருள் : மொய்வார் குழலார் முலைப் போர்க்களம் ஆய மார்பில் - நெருங்கிய நீண்ட குழலையுடைய மங்கையரின் முலைகளுக்குப் போர்க்களமான மார்பிலே; செய்யோன் செழும் பொன் சரம் சென்றன - ஞாயிறு போன்ற சீவகனுடைய செழுவிய பொற்கணைகள் சென்று பாய்ந்தன; ஆவி சென்றது - (அதனால்) கட்டியங்காரனுடைய உயிர் நீக்கியது; வெய்தா விழியா வெருவத்துவர் வாய் மடியா - வெப்பமுற விழித்துக் கண்டார் அச்சமுறச் செவ்வாயை மடித்து; மை ஆர் விசும்பின் மதி வீழ்வது போல வீழ்ந்தான் - முகில் நிறைந்த வானிலிருந்து திங்கள் வீழ்வதுபோல வீழ்ந்தான்.

விளக்கம் : சச்சந்தனை, வெஞ்சுடரின் ஆண்டகை அவிந்தான் (சீவக. 289) என்று ஞாயிற்றினோடு உவமை கூறிப் போந்து, அவன் புதல்வன் அவனேயாமாதலின், ஈண்டும் சீவகனைச் செய்யோன் என்று ஞாயிறாக்கி, அஞ்ஞாயிற்றின் முன்னே மதி நில்லாது கெடும் என்பது தோன்ற, மதி வீழ்வதுபோல வீழ்ந்தான் என்றார். மேகத்தை யானைக்குவமை, கூறினார். இதனால், சச்சந்தன் பட்ட அன்றுதொட்டு இன்றளவும் கட்டியங்காரன் கொடுங்கோலிருள் பரப்ப அரசாண்ட தன்மையும், அதுதான் இராக் காலத்தே இருள் பரந்து நிற்ப மதியாண்ட தன்மைத்தென்றும் கூறினாராயிற்று. ( 221 )

வேறு

2323. கட்டியங் கார னென்னுங்
கலியர சழிந்த தாங்குப்
பட்டவிப் பகைமை நீங்கிப்
படைத்தொழி லொழிக வென்னாக்
கொட்டினர் முரச மள்ள
ரார்த்தனர் குருதிக் கண்ணீர்
விட்டமு தவன்க ணார்வ
மண்மக ணீக்கி னாளே.

பொருள் : கட்டியங்காரன் என்னும் கலி அரசு அழிந்தது - கட்டியங்காரனென்கிற கலியாகிய அரசு வீழ்ந்தது; ஆங்குப் பட்ட இப் பகைமை நீங்கிப் படைத்தொழில் ஒழிக என்னா - (ஆகையால்) அப்போது உண்டான இம் மாறுபாடு விலகிப் போர்த்தொழிலை ஒழிக என்று; முரசம் கொட்டினர் - வெற்றி முரசு அறைந்தனர்; மள்ளர் ஆர்த்தனர் - (அது கேட்டு) வீரர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர்; மண்மகள் குருதிக்கண்ணீர் விட்டு அழுது - நிலமகளும் குருதியாகிய கண்ணீரைப் பெய்து அழுது; அவன்கண் ஆர்வம் நீக்கினாள் - அவனிடம் உள்ள காதலைக் கைவிட்டாள்.

விளக்கம் : கலியாகிய அரசு என்க. அரசு-அரசன்: கட்டியங்காரன். என்னா - என்று. முரசங்கொட்டியனர் என்க. சிறிது காலம் தான் அவனுக்குத் தேவியாயிருந்தமையால் நிலமகள் அழுதனள். நிலமகள் அழத காஞ்சியுமுண்டே என்றார் பிறரும். ( 222 )

2324. ஒல்லைநீ ருலக மஞ்ச
வொளியுமிழ் பருதி தன்னைக்
கல்லெனக் கடலி னெற்றிக்
கவுட்படுத் திட்டு நாகம்
பல்பகல் கழிந்த பின்றைப்
பன்மணி நாகந் தன்னை
வல்லைவாய் போழ்ந்து போந்தொர்
மழகதிர் நின்ற தொத்தான்.

பொருள் : நாகம் ஒளி உமிழ் பருதி தன்னை - கேது என்னும் பாம்பானது ஒளியைச் சொரியும் ஞாயிற்றை; நீர் உலகம் அஞ்சக் கடலின் நெற்றி - கடல் சூழ்ந்த உலகம் அஞ்சுமாறு கடலின் முகட்டிலே; கல்லென ஒல்லைக் கவுள்படுத்திட்டு - கல்லென்னும் ஒலியுண்டாகக் கடுக வாய்க்கொண்டதனாலே; பல்பகல் கழிந்த பின்றை - பல நாட்கள் கழிந்த பிறகு; பல்மணி நாகந்தன்னை - பல மணிகளையுடைய அந்த நாகத்தை; வல்லை வாய் போழ்ந்து போந்து - விரைந்து வாயைப் பிளந்து வந்து; ஓர் மழகதிர் நின்றது ஒத்தான் - ஓர் இளஞாயிறு நின்றது போன்றான்.

விளக்கம் : தன் புதல்வர்களுடன் பட்டான் என்பது தோன்றப் பல்மணி நாகம் என்றார். மந்திரி மாநாகம் உடன் விழுங்கிற்று (சீவக. 290) என்ற முன்னர்க் கூறியதனால், தந்தை புதல்வனாகப் பிறப்பான் என்னும் விதிபற்றி இவ்வாறு கூறினார். ( 223 )

2325. கோட்டுமீன் குழாத்தின் மள்ள
ரீண்டினர் மன்னர் சூழ்ந்தார்
மோட்டுமீன் சூழாத்தி னெங்குந்
தீவிகை மொய்த்த முத்த
மாட்டுநீர்க் கடலி னார்த்த
தணிநகர் வென்றி மாலை
கேட்டுநீர் நிறைந்து கேடில்
விசயைகண் குளிர்ந்த வன்றே.

பொருள் : கோட்டுமீன் குழாத்தின் மள்ளர் ஈண்டினார் - சுறா மீனின் குழாம்போல வீரர்கள் கூடினர்; மன்னர் ஈண்டினர் - அரசர்கள் சூழ்ந்தனர்; மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த - பெருமையுடைய விண்மீன் திரள்போல எங்கும் விளக்குகள் மொய்த்தன; முத்தம் ஆட்டும் நீர்க்கடலின் அணிநகர் ஆர்த்தது - முத்துக்களைத் தாலாட்டும் நீரையுடைய கடல்போல அழகிய நகர் ஆரவாரித்தது; வென்றிமாலை கேட்டு கேடு இல் விசயை கண் - வெற்றிமாலையைக் கேட்டுக் குற்றமற்ற விசயையின் கண்கள்; நீர் நிறைந்து குளிர்ந்த - நீர் நிறைந்து குளிர்ந்தன.

விளக்கம் : கனவு புணையாக இறந்துபடாது இருத்தலின், கேடு இல் விசயை என்றார். அவன் புதல்வரைக் கொன்று அவனைக் கொல்வதால் ஒழுங்கு என்றார். ( 224 )

2326. அணிமுடி யரசர் மாலை
யழனுதி வாள்க ளென்னு
மணிபுனை குடத்தி னெய்த்தோர்
மண்ணுநீர் மருள வாட்டிப்
பணைமுலைப் பைம்பொன் மாலைப்
பாசிழைப் பூமி தேவி
யிணைமுலை யேக மாக
நுகரிய வெய்தி னானே.

பொருள் : அணிமுடி அரசர் மாலை அழல்நுதி வாள்கள் என்னும் - அழகிய முடியையுடைய அரசர்களின் மாலையணிந்த அழல் பொருந்திய நுனியை உடைய வாட்கள் என்கிற; மணி புனை குடத்தின் - மணிகள் இழைத்த குடத்தினாலே; நெய்த்தோர் மண்ணுநீர் மருள ஆட்டி - குருதியாகிய மஞ்சன நீரை நன்றாக ஆட்டி ; பணைமுலைப் பைம்பொன் மாலைப் பாசிழைப் பூமிதேவி - பருத்த முலைகளையும் பைம்பொன் மாலையையும் பசிய அணிகலன் களையும் உடைய நிலமகளின்; இணைமுலை ஏகம்ஆக நுகரிய எய்தினான் - இணைமுலைகளைத் தனியே தழுவுதற்குப் பொருந்தினான்.

விளக்கம் : முடியினையும் மாலையினையும் குருதி தோய்ந்த வாள்களையும் உடைய நெருப்பினது கொழுந்தென்னும் அரசர் சீவகனை மணிபுனை குடத்தின் மண்ணும் நீராலே ஆட்ட என்று பொருளுரைத்து இது வீராபிடேகம் என்பர் நச்சினார்க்கினியர். மற்றும், அரசரைக் கொண்டு வாள்களென்னும் குடத்தின் நெய்த்தோராகிய மண்ணும் நீராலே மண்மகளை யாட்டுவித்து அவளை எய்தினான் என்பாரும் உளர் என்றும் உரைப்பர். இப்பொருட்கு, ஆட்டி என்பதை, ஆட்ட எனத்திரிப்பர். ( 225 )

மண்மகள் இலம்பகம் முற்றும்.


© Om Namasivaya. All Rights Reserved.