சீவக சிந்தாமணி

9. சுரமஞ்சரியார் இலம்பகம்

கதைச் சுருக்கம்: சீவகனுடைய புதுமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த தோழர்கள் அவனை நோக்கி, ஐய! நீ மணந்த நங்கையின் பெயர் கூறுக ! என்று வினாயினர். சீவகன் அவள் பெயர் விமலை என்றான். அதுகேட்ட தோழர் வியந்து ஐயன் காமனே என்றனர்; அதுகேட்ட புத்திசேனன், இது வியத்தற்குரிய தன்று. இவ்வூரிடத்தே ஆடவர் பெயர் கேட்பினும் வெகுள்வாளொரு நங்கையுளள்; சுரமஞ்சரி என்னும் அவள் காமனே தன்னெதிர் செல்லினும் காணாளாய் வெறுப்பள். அவளை மயக்கிச் சீவகன் மணம் புணர்வான் எனின் இவனை யான் காமதிலகன் என்றே பாராட்டுவேன் என்றனன். அதுகேட்ட சீவகன் புத்திசேன! நாளையே அவளை மயக்கிக் காமன் கோட்டத்தே கொணர்வல். அப்பொழுது நீ அக்கோட்டத்தே காமன் படிவத்தின் பின் மறைந்திருப்பாயாக, என்று கூறிப் புறப்பட்டுச் சென்றான்.

சென்ற சீவகன் கண்டோ ரிரங்கத் தகுந்த முதுபார்ப்பனப் படிவம் கொண்டு, தண்டூன்றி நடை தளர்ந்து கூனிக் குறுவுயிர்ப் புடையனாய்ச் சுரமஞ்சரியின் மாளிகை வாயிலை எய்தினன். இவனது வருகை கண்ட வாயின் மகளிர் இரக்கமுடையராய்ச் சுரமஞ்சரியின்பாற் சென்றுணர்த்தினர். அதுகேட்ட சுரமஞ்சரியும் இரக்கமுடையளாய் அத்தகைய முதுபார்ப்பானைக் காண்டலால் நம் நோன்பிற்கு இழுக்கொன்றுமில்லை யாதலால் அவனை வரவேற்று விருந்தூட்டல் நன்று என எண்ணி விரைந்து வந்து அவ் வேதியனை வரவேற்றனள். முகமன் மொழிந்து, ஐய! நீயிர் இவண் வந்தது யாது கருதியோ? என்று வினவினள்! அவன், யான் திருநீர்க் குமரியாட ஈண்டு வந்தேன், என்றனன். அவள், அதனாற் பயன் என்ன? என்றனள். அவன் இம் மூப்பொழியும், என்றான். அதகேட்ட சுரமஞ்சரி நகைத்து இவர் பித்தர்போலும் என்று இரங்கி இவர் தம் பசி தீர்ப்பது அறமாம் என்று கருதி அம் முதுபார்ப்பானை அன்புடன் அழைத்தேகி அறுசுவை அடிசிலூட்டிப் போற்றி ஆண்டொர் பள்ளிமிசை அயர்வகலப் படுக்கச் செய்தனள்.

படுத்திருந்த பார்ப்பனன் பின்னர் ஓர் அமுத கீதம் பாடினன். அதுகேட்ட மகளிர் வியந்து மயங்கினர். தோழிமார் இவர் கீதம் சீவகசாமியின் இன்னிசையையே ஒத்துளது.என்றனர். அதுகேட்ட சுரமஞ்சரி சீவகன் என்ற பெயர்கேட்ட அளவிலே, தோழியரை நோக்கி, அன்புடையீர்! நாளையே காமன் கோட்டஞ் சென்று வழிபாடு செய்து யான் அக் காளையை விரைவில் எய்த முயல்வேன், என்றனள். அங்ஙனமே மறுநாள் சுரமஞ்சரி தோழியோடும் முதுபார்ப்பனனோடும் காமன் கோட்டத்தை அடைந்தனள். அந்தணனை அயலிலோர் அறையினுள் வைத்தனள்.

காமன் படிவத்தின் பின்புறத்தே புத்திசேனன் முன்னரே சென்று காத்திருந்தான். சுரமஞ்சரி தமியளாய்க் காமன் முன் சென்று, காமதேவா! நீ சீவகனை எனக்குத் தருவாயாயின் யான் நினக்கு மீன் கொடியும், மலரம்பும், கருப்புச் சிலையும் தேரும், ஊருந் தருகுவல்! என வேண்டி நின்றனள். அத் தெய்வப் படிமத்தின் பின்னிருந்த புத்திசேனன், நங்காய்! நீ அச் சீவகனைப் பெற்றாய். விரைந்து சென்று அவனைக் காணுதி! என்று விளம்பினன். அது தெய்வத்தின் தீங்குரலே என்று கருதினள் சுரமஞ்சரி. மீண்டுங் காமனை வணங்கி அந்தணனிருந்த அறைக்குட் சென்றாள். ஆண்டுச் சீவகன் தன்னுண்மை யுருவத்தொடு நின்றான். கண்ட மஞ்சரி துண்ணென மருண்டாள்; நாணினள். காளை அக்காரிகையைக் காதல் கூர்ந்து தழீஇயினான். நாளை மணப்பேன் என்று உறுதி கூறி விடுத்தனன்.

சுரமஞ்சரி விம்மித மெய்தித் தன்னில்லம் புக்கனள். இரு முதுகுரவரும் இந் நிகழ்ச்சியறிந்து மகிழ்ந்தனர்; தமர்க்கெலாம் உணர்த்தினர். சீவகனைத் தோழர்கள் காமதிலகனே என்று வியந்து பாராட்டினர். சுரமஞ்சரியின் தந்தை குபேரமித்திரன் சுரமஞ்சரிக்கும் சீவகனுக்கும் திருமணம் செய்வித்தான். சீவகன் அற்றைநாளிரவு அவளோடு கூடி இன்புற்றிருந்தனன். மறுநாள் தன்னில்லத்திற் சென்று தந்தையுந் தாயுமாகிய கந்துக் கடனையும் சுநந்தையையும் கண்டு வணங்கி மகிழவித்தனன். காந்தருவதத்தையையும் குணமாலையையுங் கண்டு அளவளாவினன். கந்துக்கடனுக்கு மேல் நிகழ்த்தவேண்டியவற்றை உணர்த்தினன். பின்னர் அவன்பால் விடைபெற்றுக் கொண்டு தோழரோடு குதிரை வாணிகர் போன்று உருக்கொண்டு அவ்வேமாங்கதத்தினின்றும் புறப்பட்டனன்.

1995. வாளி ரண்டு மாறு வைத்த
போன்ம ழைக்கண் மாதரார்
நாளி ரண்டு சென்ற வென்று
நைய மொய்கொள் காவினுட்
டோளி ரண்டு மன்ன தோழர்
தோன்ற லைப்பு ணாந்தபின்
றாளி ரண்டு மேத்தி நின்று
தைய னாமம் வேண்டினார்.


பொருள் : வாள் இரண்டு மாறு வைத்த போல் மழைக்கண் மாதரார் - இரண்டு வாட்களை எதிராக வைத்தன போலக் குளிர்ந்த கண்களையுடைய (காவிலுள்ள) மங்கையர்; நாள் இரண்டு சென்ற என்று நைய - நாட்கள் இரண்டு சென்றன என்று வருந்த; மொய் கொள் காவினுள் - மரம் நெருங்கிய பொழிலில்; தோளிரண்டும் அன்ன தோழர் - சீவகனுடைய இரு தோளையும் போன்ற தோழர்; தோன்றலைப் புணர்ந்தபின் - சீவகனைக் கூடியபின்னர்; தாளிரண்டும் ஏத்தி நின்று தையல் நாமம் வேண்டினார் - இரண்டு தாள்களையும் போற்றி நின்று அவன் மணந்த தையலின் பெயரைக் கூறுக என்றனர்.

விளக்கம் : மாதரார் : கூடவந்த போக மாதர்கள். இனி, விமலையிடத்து ஒருநாளைக் கூட்டமே கொள்ளின், மாதரார் இருநாள் நைய, இவர்கள் தையல் யாரென வினவிப் பின்னும் சுரமஞ்சரி  இடம் விடுத்ததாகக் கொள்க. எனவே விமலையிடம் ஒரு நாளும் சுரமஞ்சரியிடம் ஒருநாளும் கணக்காயின. ( 1 )

1996. பாடுவண் டிருந்த வன்ன பல்கலை யகலல்குல்
வீடு பெற்ற வரும் வீழும் வெம்மு லைவி மலையென்
றாடு வான ணிந்த சீர ரம்பை யன்ன வாணுத
லூடி னும்பு ணாந்த தொத்தி னியவளு ளாளரோ.

பொருள் : பாடு வண்டு இருந்த அன்ன பல்கலை அகல் அல்குல் - முரலும் வண்டுகள் தங்கினாற்போலப் பல மணிகளையுடைய மேகலையையுடைய அகன்ற அல்குலையும்; வீடு பெற்ற வரும் வீழும் வெம்முலை - துறந்தவரும் இல்லறம் புக விழையும் வெம்முலைகளையும்; ஆடுவான் அணிந்த சீர் அரம்பை அன்ன - ஆடுவதற்கணி செயப் பெற்றாலன்ன சிறப்பினையுடைய அரம்பையைப் போன்ற; வாணுதல் விமலை என்று - வாணுதலாள் விமலை என்று பெயர் கூறப்பட்டு; ஊடினும் புணர்ந்தது ஒத்து இனியவள் உளாள் - ஊடினாலும் கூடினாற் போன்ற இனியவள் இருக்கின்றனள்.

விளக்கம் : ஊடல் கடிதின் தீர்தலிற் கூடல் போன்றது. வண்டிருப்பன்ன பல்காழ் அல்குல் (பொரு-39) என்றார் பிறரும். வீடு பெற்றவர் - இல்வாழ்வினின்று விடுதலை பெற்றவர் : துறவிகள். பெற்ற வரும் - என்பதிலுள்ள உம்மை உயர்வு சிறப்புப் பொருளது. ஆடுவான் : வான் விகுதிபெற்ற வினையெச்சம். ( 2 )

1997. அம்பொ ரைந்து டைய்ய காம
னைய்ய னென்ன வந்தண
னம்பு நீர ரல்லர் நன்கு
ரங்கு நீர ராயினுந்
தங்கு ரவ்வர் தாங்கொ டுப்பி
னெஞ்சு நோந்து தாழ்வர்தாம்
பொங்க ரவ்வ வல்கு லாரெ
னப்பு கன்று சொல்லினான்.

பொருள் : ஐயன் ஒரைந்து அம்புடைய காமன் என்ன - சீவகன் ஐந்து மலர்க் கணைகளையுடைய காமன் என்று தோழர்கள் வியந்தாராக; அந்தணன் - (அதுகேட்ட) புத்தி சேனன்; நம்பு நீரர் அல்லர் நன் குரங்கு நீரர் ஆயினும் - தம்மால் விரும்பப்படும் தன்மையிலராய் நல்ல குரங்கினியல்பை உடையராயினும்; தம் குரவர் தாம் கொடுப்பின் - தம் பெற்றோர் கொடுப்பாராயின்; பொங்கு அரவ அல்குலார் நெஞ்சு நேர்ந்து தாழ்வர் - சீறும் பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய குடிப்பிறந்த மகளிர் மனம் ஒப்பி அவரை வழிபடுவர்; எனப் புகன்று சொல்லினான் - என்று நகையாடலை விரும்பிக் கூறினான்.

விளக்கம் : நம்பு - விருப்பம், நன்குரங்கு - பொல்லாங்குக்கு நன்றான குரங்கு. பெற்றோர் குரங்கு நீரருக்குத் தம்மைக் கொடுப்பினும் நெஞ்சு நேர்ந்து வழிபடுவர் என்றான். ( 3 )

1998. அற்று மன்று கன்னி யம்ம டந்தை மார ணிநலம்
முற்றி னாரை நீடு வைப்பின் மூள்கும் வந்து பாவமுங்
குற்ற மற்று மாகு மென்று கோதை சூழ்ந்து கூறினார்க்
குற்ற டுத்த யாவு யிர்த்தொழிதல் யார்க்கு மொக்குமே.

பொருள் : அற்றும் அன்று - அத்தன்மையது மட்டும் அன்று; கன்னி அம் மடந்தைமார் - கன்னியராகிய அம் மகளிரை; அணிநலம் முற்றினாரை நீடு வைப்பின் பாவமும் வந்து மூள்கும் - அழகன் நலம் முதிர்ந்தவராக நீண்ட நாள் வைத்திருப்பின், அதனாற் பாவமும் வந்து மிகும்; மற்றும் குற்றம் ஆகும் - மேலும் குடிப் பழியும் உளதாம்; என்று - என்று கருதி; கூறினார்க்கு - பேசினார்க்கு; கோதை சூழ்ந்து உற்று அடுத்து - தாமே தம் மகளைச் சூழ்ந்து கொண்டு சென்று கொடுத்து; அயாவுயிர்த்து ஒழிதல் யார்க்கும் ஒக்கும் - தம்சுமை கழிந்து இளைப்புத் தீர்ந்து விடுதல் குடிப்பிறந்து பழி நாணுவார்க்கெலாம் ஒக்கும்.

விளக்கம் : இதுவும் பழிநாணுதல் கருதி வந்ததாகலின் நீர் வியத்தல் வேண்டா என்று புத்திசேனன் கூறினான். ( 4 )

வேறு

1999. மதுக்குடம் விரிந்தன மாலை யாரொடும்
புதுக்கடி பொருந்துதி புக்க வூரெலாம்
விதிக்கிடை காணலாம் வீதி மாநகர்
மதிக்கிடை முகத்தியோர் மடந்தை யீண்டையாள்.

பொருள் : புக்க ஊரெலாம் - நீ சென்ற ஊர்தொறும் - மதுக்குடம் விரிந்த அன மாலையாரொடும் புதுக்கடி பொருந்துதி - தேன் குடம் விரிந்தாற் போன்ற மாலையாராகிய மங்கையருடன் புதுமணம் பொருந்துகின்றனை; விதிக் கிடை காணலாம் வீதிமாநகர் - சிற்பநூலின் இயலுக்கு ஒப்புக்காணலாகும் தெருக்களையுடைய இப் பெருநகரிலே; மதிக்கிடை முகத்தி ஓர் மடந்தை ஈண்டையாள் - திங்களுக்கு ஒப்பான முகமுடையாள் ஒரு மங்கை இங்குள்ளாள்.

விளக்கம் : ஈண்டையாள் என்றான் நீ மணஞ் செய்து கொண்ட இந்நகரிலேயே என்றற்கு. நகர் - வீடு எனக் கொண்டு தெருக்களையும் வீடுகளையுமுடைய ஈண்டு என்று கூட்டுவர் நச்சினார்க்கினியர். ஈண்டு - இந்நகர். ( 5 )

2000. ஆடவர் தனதிடத் தருகு போகினு
நாடிமற் றவர்பெயர் நயந்து கேட்பினும்
வீடுவ லுயிரென வெகுளு மற்றவள்
சேடியர் வழிபடச் செல்லுஞ் செல்வியே.

பொருள் : சேடியர் வழிபடச் செல்லும் செல்வி அவள் - பணிப்பெண்கள் வழிபாடு செய்ய வாழும் செல்வியாகிய அவள்; ஆடவர் தனது இடத்து அருகு போகினும் - ஆடவர்கள் தாம் வாழும் இல்லத்தின் அருகிலே சென்றாலும்; அவர் பெயர் நாடி நயந்து கேட்பினும் - தன்னருகிலிருப்போர் ஆடவர் பெயரை நாடி விரும்பிக் கூறக் கேட்டாலும்; உயிர் வீடுவல் என வெகுளும் - உயிர் விடுவேன் என்று சீறுவாள்.

விளக்கம் : மற்று : அசை. தனதிடம் - தான் வாழும் இல்லம். அருகு - பக்கம், அவர் பெயர் நாடி நயந்து கேட்பினும் என மாறுக. உயிர்வீடுவல் என மாறுக. வீடுவல் : தன்மையொருமை வினைமுற்று. இதற்கு நான் என்னும் எழுவாய் வருவிக்க. வெகுளும் - செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. இங்குப் பெண்பாற் படர்க்கையில் வந்தது. இதற்கு அவள் என்ற எழுவாயைக் கூட்டுக. போகினும் கேட்பினும் உயிர் வீடுவல் எனவே காணின் உயிர்விடுதல் கூறவேண்டாதாயிற்று. ( 6 )

2001. காமனே செல்லினுங் கனன்று காண்கிலாள்
வேமெனக் குடம்பெனும் வேங்கொ டோளியை
யேமுறுத் தவணல நுகரி னெந்தையை
யாமெலா மநங்கமா திலக னென்றுமே.

பொருள் : காமனே செல்லினும் காண்கிலாள் - காமனேவரினும் அவனைக் காணாதவளாய்; கனன்று வேம் எனக்கு உடம்பு எனும் - கனன்னு வேகும் என்னுடம்பு என்கிற; வேய்கொள் தோளியை ஏமுறுத்து - மூங்கிலனைய தோளியை மயக்குறுத்தி; அவள் நலம் நுகரின் - அவளழகைப் பருகிவரின்; யாம் எலாம் எந்தையை அநங்க மாதிலகன் என்றும் - யாமெல்லோரும் நம் எந்தையைக் காமதிலகனென்று கூறுவோம்.

விளக்கம் : அநங்கமா திலகன் : மா, தட்குமா காலே (புறநா-193) என்றாற் போல அசையாய் நின்றது. எனக்கு உடம்பு வேம் எனும் என மாறுக. வேம் - வேகும். ஏமுறுத்து - மயக்கி. எந்தையை என்றது சீவகனை : முன்னிலைப் படர்க்கை. ( 7 )

வேறு

2002. தாசியர் முலைக டாக்கத்
தளையவிழ்ந் துடைந்த தண்டார்
வாசங்கொண் டிலங்கு முந்நூல்
வலம்படக் கிடந்த மார்ப
பேசிய பெயரி னாளைப்
பேதுறா தொழிவே னாகி
னாசுமன் பிலாத புன்பெண்
கூந்தல்யா னணைவ லென்றான்.

பொருள் : தாசியர் முலைகள் தாக்கத் தளை அவிழ்ந்து உடைந்த - சேடியரின் முலைகள் பொருதலாற் பிணிப்பு நெகிழ்ந்து விரிந்த; தண் தார் வாசம் கொண்டு இலங்கும் முந்நூல் வலம் படக் கிடந்த மார்ப! - தண்ணிய மாலை மணங் கமழ்ந்து, விளங்கும் முந்நூலுடன் வெற்றியுறக் கிடந்த மார்பனே!; பேசிய பெயரினாளைப் பேதுறாது ஒழிவேனாகின் - நீ கூறிய பெயருடையாளை மயக்கமுறுத்தாமல் விடுவேனாகில்; ஆசும் அன்பு இலாத புன் பெண் கூந்தல் மான் அணைக என்றான் - சிறிதும் அன்பு கொள்ளாத இழிந்த பெண்ணின் கூந்தலை யான் தழுவுக என்றான்.

விளக்கம் : அவனைப் போலவே சீவகனும் நகையாடி வஞ்சினங் கூறினான்.  தாசியர் - பணிமகளிர். தாசியர் முலைகள் தாக்க உடைந்த தார் மார்ப என்றது அசதியாடியது. பெயரினாளை என்றது சுரமஞ்சரியை என்றவாறு. பேதுறுத்தாது எனற்பாலது பேதுறாது என நின்றது. ஆசும் - சிறிதும். புன்பெண் - கீழ்மகள். ( 8 )

2003. வண்டுதேன் சிலைகொ ணாணா
மாந்தளிர் மலர்க ளம்பாக்
கொண்டவன் கோட்டந் தன்னுட்
கொடியினைக் கொணர்ந்து நீல
முண்டது காற்றி யாண்பே
ரூட்டுவ லுருவக் காமன்
கண்டபொற் படிவஞ் சார்ந்து
கரந்திரு நாளை யென்றான்.

பொருள் : வண்டு தேன் சிலைகொள் நாணா மலர்கள் அம்பாக் கொண்டவன் - வண்டுந் தேனும் வில்கொண்ட நாணாக, மலர்கள் அம்பாகக் கொண்டவனுடைய, கோட்டந் தன்னுள் மாந்தளிர்க் கொடியினைக் கொணர்ந்து - கோயிலிலே மாந்தளிரைப் போன்ற மேனியையுடைய கொடியைக் கொண்டுவந்து - நீலம் உண்டது காற்றி - வெண்ணூல் நீலமுண்டதனை உமிழ்ந்தாற் போல அவள் புதிதாகக் கொண்ட கோட்பாட்டைப் போக்கி; ஆண்பேர் ஊட்டுவல் - அவள் இயல்பாகக் கோடற்குரிய ஆண் பெயரை ஊட்டுவேன்; உருவக் காமன் கண்ட பொன் படிவம் சார்ந்து - வடிவையுடைய காமனாகப் பொன்னாற் செய்த வடிவத்தைச் சார்ந்து; நாளை கரந்திரு என்றான் - நாளை மறைந்திரு என்றான்.

விளக்கம் : காற்றி யென்றதற் கேற்ப ஊட்டுவேன் என்றான். சிலைகள் என்ற பாடம் இருப்பின் சேமவில்லைக் கூட்டுக. ( 9 )

வேறு

2004. இழைக்கண் வெம்முலை யிட்டிடை யேந்தல்குன்
மழைக்கண் மாதரை மாலுறு நோய்செய்வான்
முழைக்கண் வாளரி யேறன மொய்ம்பினா
னுழைக்க ணாளர்க் குரைத்தெழுந் தானரோ.

பொருள் : முழைக்கண் வாள் அரி யேறு அன மொய்ம்பினான் - குகையிலுள்ள கொடிய சிங்க வேற்றைப் போன்ற வலிமையுடையான்; இழைக்கண் வெம்முலை இட்டிடை ஏந்தல்குல் மழைக்கண் மாதரை - அணிகளைத் தன்னிடத்தே கொண்ட வெவ்விய முலைகளையும் சிற்றிடையையும் ஏந்திய அல்குலையும் குளிர்ந்த கண்களையும் உடைய சுரமஞ்சரியை; மாலுறுநோய் செய்வான் - மயக்கம் பொருந்திய நோயை உண்டாக்குவதற்கு; உழைக்கணாளர்க்கு உரைத்து எழுந்தான் - அருகிலிருக்குங் கண் போன்றவர்களுக்குக் கூறி எழுந்தான்.

விளக்கம் : இழை - அணிகலன். இட்டிடை - சிற்றிடை. மழைக்கண் - குளிர்ச்சியுடைய கண். மாதரை : சுரமஞ்சரியை. மால் - மயக்கம். அரியேறு - ஆண்சிங்கம். உழைக்கணாளர். நண்பர் அரோ : அசை. ( 10 )

2005. சோருங் காரிகை யாள்சுர மஞ்சரி
யாரஞ் சூடிய வம்முலைப் பூந்தடந்
தாகு மார்பமுந் தண்ணெனத் தோய்வதற்
கோரு முள்ள முடன்றெழு கின்றதே.

பொருள் : சோரும் காரிகையாள் சுரமஞ்சரி - ஒழுகும் அழகுடையாளாகிய சுரமஞ்சரியின்; ஆரம் சூடிய அம்முலைப் பூந்தடம் - ஆரம் அணிந்த அழகிய முலைகளாகிய பூந்தடத்திலே; தாரும் மார்பமும் தண் எனத் தோய்வதற்கு - மாலையும் மார்பும் குளிரத் தழுவுதற்கு; ஓரும் - உள்ளம் - அவள் வடிவை இங்ஙனம் இருக்கும் என ஆராயும் உள்ளம்; உடன்று எழுகின்றது - வருந்தி எழுகின்றது.

விளக்கம் : இச் செய்யுள் சீவகன் கூற்றாக அமைந்தது. நூலாசிரியர் கூற்றாகக் கொள்ளினும் அமையும். கனகபதாகை ஆண்டுக் கூறலானும் ஈண்டுப் புத்திசேனன் கூறலானும் ஊழானும் வருந்தி அவன் வடிவை ஓரும் என்றார்.  காரிககை - அழகு; அழகொழுகும் சுரமஞ்சரி என்றவாறு. ஆரம் - முத்துமாலை. தார் - மாலை. தண்ணென - குளிரும்படி. ஓரும் - ஆராயா நிற்கும். ( 11 )

வேறு

2006. கடைந்தபொற் செப்பெனக் கதிர்த்து வீங்கின
வடஞ்சுமந் தெழுந்தன மாக்கண் வெம்முலை
மடந்தைதன் முகத்தவென் மனத்தி னுள்ளன
குடங்கையி னெடியன குவளை யுண்கணே.

பொருள் : கடைந்த பொன் செப்பு எனக் கதிர்த்து வீங்கின - கடைந்த பொற் கிண்ணம் போலக் கதிருடன் பருத்தனவும்; வடம் சுமந்து எழுந்தன மாக்கண் வெம்முலை - வடத்தைச் சுமந்து வளர்ந்தனவும் ஆகும் பெரிய கண்களையுடைய வெம்முலைகள்; குவளை உண்கண் - குவளையனைய மையுண்ட கண்கள்; குடங்கையின் நெடியன - உள்ளங்கையினும் பெரியனவாகி; மடந்தை தன் முகத்த - அம் மங்கையின் முகத்தனவாய்; என் மனத்தில் உள்ளன - என் உள்ளத்தில் உள்ளன

விளக்கம் : மனத்திலுள்ளன என்றது, நங்கைகண் போலும் வேலவனே (சீவக-896) என்று சொன்னதை உட்கொண்டு. ( 12 )

2007. ஏத்தரு மல்லிகை மாலை யேந்திய
பூத்தலைக் கருங்குழற் புரியி னாற்புறம்
யாத்துவைத் தலைக்குமிவ் வகுளி லாணலங்
காய்த்தியென் மனத்தினைக் கலக்கு கின்றதே.

பொருள் : ஏத்த அரும் மல்லிகை மாலை ஏந்திய - புகழ்தற்கரிய மல்லிகை மாலையைச் சூடிய; பூத்தலைக் கருங்குழற் புரியினால் - பூவைத் தலைக்கொண்ட கருங்குழலாகிய கயிற்றினால்; புறம் யாத்து வைத்து அலைக்கும் - என புறத்தைப் பிணித்து வைத்து வருத்துகின்ற; இவ் அருளிலாள் நலம் - இந்த அருளில்லா தவளுடைய அழகு; என் மனத்தினைக் காய்த்திக் கலக்குகின்றது - என் உள்ளத்தைச் சுட்டு வருத்துகின்றது.

விளக்கம் : ஏத்தரும் என்பது, ஏத்துதல் தரும் என்பதன் விகாரம் என்பர் நச்சினார்க்கினியர். காய்த்தி - வெம்மைப்படுத்தி; காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை (பதிற் : 12 : 9). ( 13 )

2008. சில்லரிக் கிண்கிணி சிலம்புஞ் சீறடிச்
செல்விதன் றிருநலஞ் சேரும் வாயிறா
னல்லலங் கிழவனோ ரந்த ணாளனாய்ச்
செல்லல்யான் றெளிதாக வுடைத்தென் றெண்ணினான்.

பொருள் : சில்அரிக் கிண்கிணி சிலம்பும் சீறடிச் செல்விதன் - சிலவாகிய பரல்களையுடைய கிண்கிணி ஒலிக்கும் சிற்றடியை உடைய செல்வியின்; திருநலம் சேரும் வாயில்தான் - அழகிய நலத்தை அடையும் வழிதான் : அல்லல் கிழவன் ஓர் அந்தணளனாய் யான் செல்லல் - பசிப்பிணியையுடைய முதியவனாகிய ஓர் அந்தணனாக யான் செல்வது; தெளிதகவு உடைத்து என்று எண்ணினான் - அவள் ஐயுறாத தெளிவுடையது என்று எண்ணினான்.

விளக்கம் : சில்அரி - சிலவாகிய பரல்கள், சிலம்பும் - ஒலிக்கின்ற. சிறுமை + அடி = சீறடி. யான் செல்வல் என மாறுக. தெளிதகவு - தெளியும் தன்மை. ( 14 )

2009. அணங்கர வுரித்ததோ லனைய மேனியன்
வணங்குநோன் சிலையென வளைந்த யாக்கையன்
பிணங்குநூன் மார்பினன் பெரிதொர் பொத்தக
முணர்ந்துமூப் பெழுதின தொப்பத் தோன்றினான்.

பொருள் : அணங்கு அரவு உரித்த தோல் அனைய மேனியன் - வருத்தும் பாம்பு உரித்த தோல் போன்ற மேனியனும்; வணங்குநோன் சிலையென வளைந்த யாக்கையன் - வளைந்த பெரிய வில்லென வளைந்த யாக்கையனும்; பிணங்கும் நூல் மார்பினன் - மேலாடையுடன் பிணங்கிய நூலணிந்த மார்பினனும் ஆகி; பெரிது ஓர் பொத்தகம் உணர்ந்து - மூப்பிலக்கணத்தையுடைய பெரிய ஒரு நூலை ஆராய்ந்து; மூப்பு எழுதினது ஒப்பத் தோன்றினான் - அம் மூப்பை எழுதியதைப்போலத் தோன்றினான்.

விளக்கம் : அணங்கரவு : வினைத்தொகை மேனியன் - நிறமுடையன். நோன்சிலை - வலிய வில். யாக்கை - உடல். பொத்தகம் - நூல்; ஈண்டு, மூப்பிலக்கண நூல். ( 15 )

2010. வெண்ணரை யுடம்பினன் விதிர்த்த புள்ளிய
னுண்ணவி ரறுலைய னொசிந்த நோக்கினன்
கண்ணவிர் குடையினன் கைத்தண் டூன்றினன்
பெண்ணலங் காதலிற் பேயு மாயினான்.

பொருள் : வெண்நரை உடம்பினர் - வெண்மையான நரை பொருந்திய மெய்யினனாய்; விதிர்த்த புள்ளியன் - தெறித்த புள்ளியனாய்; நுண்நவிர் அறுவையன் - நுண்ணிதாகக் கிழிந்த ஆடையனாய்; நொசிந்த நோக்கினன் - தலை வளைதலின் வளைந்த பார்வையனாய்; கண்நவிர் குடையினன் - கிழிந்த குடையினனாய்; கைத்தண்டு ஊன்றினன் - கையிலே ஒரு தண்டை ஆதரவாக ஊன்றியவனாய் : பெண் நலம் காதலின் பேயும் ஆயினான் - பெண்ணின் நலத்தைக் காதலித்தலின் பேயின் தன்மையும் ஆயினன்.

விளக்கம் : பலிகொண்டு பெயரும் பாசம்போலத் திறைகொண்டு பெயர்தி (பதிற். 78) என்றாற்போல. பெற்றே போதலின் பேயின் தன்மையன் ஆயினன், என்றார். ( 16 )

2011. யாப்புடை யாழ்மிட றென்னுந் தோட்டியாற்
றூப்புடை யவணலந் தொடக்கும் பாகனாய்
மூப்பெனு முகபடாம் புதைந்து முற்றிழை
காப்புடை வளநகர் காளை யெய்தினான்.

பொருள் : யாப்பு உடை யாழ்மிடறு என்னும் தோட்டியால் - பிணிப்பையுடைய யாழையொத்த மிடறு என்னும் தோட்டியாலே; தூப்புடையவள் நலம் தொடக்கும் பாகனாய் - (ஆடவரை நீக்கின) தூய நெஞ்சிடத்தையுடையவள் நலத்தைப் பிணிக்கும் பாகனாய்; மூப்பு எனும் முகபடாம் புதைந்து - முதுமை என்னும் முகபடாத்திலே மறைந்து; முற்றிழை காப்புடை வளநகர் காளை எய்தினான் - சுரமஞ்சரியின் காவலையுடைய வளமனையைச் சீவகன் அடைந்தான்.

விளக்கம் : இவனை அறியாதபடி மறைத்தலின் முகபடாம் என்றார்.  யாப்பு - கட்டு. யாழ்மிடறு - யாழை ஒத்த மிடறு, தூப்புடை - தூய இடம்; என்றது தூய நெஞ்சம் என்றவாறு முற்றிழை : அன்மொழித் தொகை. இச்செய்யுளை யடுத்துச் சிலு பிரதிகளில் கீழ்வரும் செய்யுள் காணப்படுகின்றது. இதற்கு நச். உரை காணப்படவில்லை.

நற்றொடி மகளிரு நகர மைந்தரும்
எற்றிவன் மூப்பென இரங்கி நோக்கவே
பொற்றொடி வளநகர் வாயில் புக்கனன்
பற்றிய தண்டொடு பைய மெல்லவே.

என்பதாம். ( 17 )

வேறு

2012. தண்டுவலி யாகநனி தாழ்ந்துதளர்ந் தேங்கிக்
கண்டுகடை காவலர்கள் கழறமுக நோக்கிப்
பண்டையிளங் காலுவப்பன் பாலடிசி லிந்நாட்
கண்டுநயந் தார்தருவ காதலிப்ப னென்றான்.

பொருள் : தண்டு வலியாக நனி தாழ்ந்து தளர்ந்து ஏங்கி - தன்கையிற் கொண்ட ஊன்றுகோலே பற்றுக்கோடாக மிகவும் தாழ்ந்து தளர்ந்து இளைத்து நின்று; கடைகாவலர்கள் கண்டு கழற - வாயிற் காவலர்கள் பார்த்து வினவ; முகம் நோக்கி - அவர்கள் முகத்தைப் பார்த்து; பண்டை இளங்கால் பாலடிசில் உவப்பன் - முற்காலத்தில் இளம்பருவத்தில் பாற்சோற்றை விரும்புவேன்; இந்நாள் கண்டு நயந்தார் தருவ காதலிப்பன் என்றான் - (ஆனால்) இம் முதுமையிலே என்னைக் கண்டு விருப்புற்றவர் கொடுப்பவற்றை விரும்புவேன் என்றான்.

விளக்கம் : இவன் கூறியதன் உட்கோள் : இளம்பருவத்திலே பாற்சோறு ஒன்றையே விரும்புவேன்; இப்பருவத்தில் யான் கண்டு விரும்பப்பட்ட மகளிர் தருவன யாவற்றையும் காதலிப்பேன் என்பதாம். ( 18 )

2013. கையிற்றொழு தார்கழிய மூப்பிற்செவி கேளார்
மையலவர் போலமனம் பிறந்தவகை சொன்னார்
பையநடக் கென்றுபசிக் கிரங்கியவர் விடுத்தார்
தொய்யின் முலை யவர்கள் கடைத் தோன்றனனி புக்கான்

பொருள் : அவர் கையின் தொழுதார் - (இதுகேட்ட) அவர்கள் கையால் தொழுதவராய்; கழிய மூப்பின் செவிகேளார் -மிகவும் முதுமையாலே செவிகேளார்; மையலவர்போல மனம் பிறந்த வகை சொன்னார் - பித்தரைப்போல மனத்தில் தோன்றிய வகையே கூறினார் என்றெண்ணி; பசிக்கு இரங்கி - பசியுடை மைக்கு மனமிரங்கி; பைய நடக்க என்று விடுத்தார் - மெல்ல நடந்து செல்க என்று உள்ளே செல்ல விட்டார்; தொய்யில் முலையவர்கள் கடை - தொய்யில் எழுதிய முலையவர்கள் காக்கும் வாயிலிலே; தோன்றல் நனிபுக்கான் - சீவகன் விரைந்து சென்றான்.

விளக்கம் : தொழுதார் : வினையாலணையும் பெயர். கழிய - மிகமையலவர் - பித்தர். மனத்திற் றோன்றியவகையே என்க. கடை - வாயில். தோன்றல் : சீவகன். ( 19 )

2014. கோதையொடு தாழ்ந்துகுழல் பொங்கிஞிமி றார்ப்ப
வோதமணி மாலையொடு பூண்பிறழ வோடி
யேதமிது போமினென வென்னுமுரை யீயா
னூதவுகு தன்மையினொ டொல்கியுற நின்றான்.

பொருள் : கோதையொடு சூழல் தாழ்ந்து - கோதையுங் குழலுந் தாழ; ஞிமிறு பொங்கி ஆர்ப்ப - வண்டுகள் பொங்கி முரல; ஓதமணி மாலையொடு பூண்பிறழ் - கடலிற் பிறந்த முத்து மாலையுடன் மற்ற அணிகள் பிறழ; ஓடி - ஓடிவந்து; இது ஏதம் பேர்மின் என - இங்கே நீர் வருவது குற்றம், பேர்மின் என்ன : என்னும் உரை ஈயான் - சிறிதும் மறுமொழி கூறானாய் : ஊதஉகு தன்மையினொடு ஒல்கி உறநின்றான் - ஊதப் பறக்குந் தன்மையுடன் நுடங்கி வந்து நெருங்கி நின்றான்.

விளக்கம் : தாழ்ந்து - தாழ : எச்சத்திரிபு.  ஞிமிறு - வண்டு. ஓதமணிமாலை - முத்துமாலை. என்னும் - சிறிதும். ஊதவுகு தன்மையினொடு என்னு மிதனோடு ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை என வரும் கம்பநாடர் மொழி நினையற்பாலது; (மீட்சிப். 249) ( 20 )

2015. கச்சுவிசித் தியாத்தகதிர் முலையர்மணி யயில்வா
ணச்சுநுனை யம்புசிலை நடுங்கவுட னேந்தி
யச்சமுறுத் தமதுபுளித் தாங்குத்தம தீஞ்சொல்
வெச்சென்றிடச் சொல்லிவிரி கோதையவர் சூழ்ந்தார்.

பொருள் : கக்சு விசித்து யாத்த கதிர்முலையர் - கச்சினால் இறுகக் கட்டிய ஒளிதரும் முலையினராய்; விரி கோதையவர் - மலர்ந்த மாலையணிந்த அம் மங்கையர்; மணி அயில் வாள் - அழகிய கூரிய வாளையும்; நச்சு நுனை அம்பு - நச்சு முனையுடைய அம்புடன்; சிலை - வில்லையும்; உடன் நடுங்க ஏந்தி - ஒன்று சேர இவன் நடுங்குவானென எண்ணி ஏந்தி; அச்சம் உறுத்து - அச்சுறுத்தி; அமுது புளித்தாங்கு - அமுது புளித்தாற்போல; தம தீசொல் வெச்சென்றிடச் சொல்லி - தம்முடைய இனிய சொல் வெவ்விதாகக் கூறி; சூழ்ந்தார் - இவனை வளைந்தனர்.

விளக்கம் : முலையர் என்றது, காவன்மகளிரை, அயில் - வேல். நஞ்சு தோய்த்த நுனையையுடைய அம்பென்க. சிலை - வில். இயல்பாக அமுதை ஒத்து இனிக்கும் தம்முடைய சொல்லை மாற்றி என்க. வெச்சென்றிட வெவ்விதாக. ( 21 )

2016. பாவமிது நோவவுரை யன்மின் முதுபார்ப்பார்
சாவர்தொடி னேகடிது கண்டவகை வண்ண
மோவியர்தம் பாவையினொ டொப்பரிய நங்கை
யேவல்வகை கண்டறிது மென்றுசிலர் சொன்னார்.

பொருள் : முதுபார்ப்பார் நோவ உரையன்மின் இது பாவம் - இவர் முதிய பார்ப்பாராகையால் வருந்த மொழியாதீர், இவ்வாறு மொழிவது பாவம்; தொடினே கடிது சாவர் - தொட்டாற் கடிதே இறப்பர்; ஓவியர் தம் பாவையினொடு வண்ணம் ஒப்பரிய நங்கை - ஓவியரெழுதிய பாவையோடு கூட ஒப்பரிய நங்கைக்கு; கண்ட வகை - கண்ட வகையைக் கூறி; ஏவல் வகை கண்டு அறிதும் என்று - அவளது ஏவல் வகையைக் கண்டு பின்பு இவரை நீக்குவதை அறிவோம் என்று; சிலர் சொன்னார் - அவர்களிற் சிலர் கூறினார்.

விளக்கம் : முதுபார்ப்பார் நோவவுரையன்மின் என மாறுக. முதுபார்ப்பார் என்ற இத பாவம் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. நங்கை : சுரமஞ்சரி. அறிதும் தன்மைப்பன்மை வினைமுற்று. ( 22 )

2017. கையவளை மையகுழ லையரிய வாட்க
ணையுமிடை வெய்யமுலை நங்கையொரு பார்ப்பா
னுய்வதில னூழின்முது மூப்பினொடும் வந்தான்
செய்வதுரை நொய்தினெனச் சேறுமெழு கென்றாள்.

பொருள் : கையவளை - கையிடத்தனவாகிய வளையினையும்; மைய குழல் - கரிய குழலையும்; ஐ அரிய வாள்கண் - வியப்பூட்டும் செவ்வரியோடிய வாளனைய கண்களையும்; நையும் இடை - வருந்தும் இடையினையும்; வெய்ய முலை நங்கை! - விருப்பூட்டும் முலையினையுமுடைய நங்கையே!; ஒரு பார்ப்பான் ஊழின் முதுமூப்பினொடும் வந்தான் - ஓரந்தணன் முறையானே முதிர்ந்த மூப்போடு வந்தான்; உய்வதிலன் - இறந்துபடுவான் போலும்!; நொய்தின் செய்வது உரைஎன - விரைவில் (அவனிறப்பதற்கு முன்னே) யாங்கள் செய்வது என் எனக் கூறு என; சேறும் எழுக என்றாள் - (அவளும்) யாம் அவனிடம் செல்வோம், நீர் முன்னே செல்க என்றாள்.

விளக்கம் : ஊழி முதுமூப்பாயின் காலமாக்குக.  கைய - கையிடத்தனவாகிய. மைய - கருமையுடைய, ஐ - வியப்பு. அரி - கோடு. நங்கை : சுரமஞ்சரி; விளி நொய்தின் - விரைவின். சேறும் : தன்மைப்பன்மை வினைமுற்று. ( 23 )

2018. மாலைபல தாழ்ந்துமதுப் பிலிற்றிமணங் கமழுங்
கோலவகிற் றேய்வைகொழுஞ் சாந்தமுலை மெழுகிப்
பாலைமணி யாழ்மழலை பசும்பொனிலத் திழிவாள்
சோலைவரை மேலிழியுந் தோகைமயி லொத்தாள்.

பொருள் : கொழுஞ்சாந்தம் முலை - நல்ல சந்தனத்தை முலையிலே அப்பிய, பாலை மணியாழ் மழலை - பாலையாழ் போலும் மழலையை உடையாள்; கோல அகில் தேய்வை மெழுகி - அகிற்குழம்பாலே மெழுகப்பட்டு; மாலை பல தாழ்ந்து மதுப்பிலிற்றி - பல மாலைகள் நாற்றித் தேன்துளித்து; மணம் கமழும் பசும்பொன் நிலத்து இழிவாள் - மணம் வீசும் பசிய பொன்மாடத்தினின்றும் இழிகின்றவள்; சோலைவரை மேலிழியும் தோகை மயில் ஒத்தாள் - சோலையையுடைய மலையினின்றும் இழியும் தோகையையுடைய மயில்போன்றாள்.

விளக்கம் : காவிடத்திற் கன்னிமாட மாதலின், சோலைவரை என்றார்.  இழிவாள் : வினையாலணையும் பெயர்; சுரமஞ்சரி. வரை மாடத்திற்கும், தோகைமயில் - சுரமஞ்சரிக்கும் உவமை. ( 24 )

2019. சீறடிய கிண்கிணிசி லம்பொடுசி லம்ப
வேறுபடு மேகலைகண் மெல்லெனமி ழற்றச்
சேறுபடு கோதைமிசை வண்டுதிசை பாட
நாறுமலர்க் கொம்பர்நடை கற்பதென வந்தாள்.

பொருள் : சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப - சிற்றடிகளில் அணிந்த கிண்கிணியும் சிலம்பும் ஒலிக்க; வேறுபடு மேகலைகள் மெல்லென மிழற்ற - வேறுபட்ட மேகலையில் மணிகள் மெல்லென்று இசைப்ப; சேறுபடு கோதைமிசை வண்டு திசைபாட (மகரந்தம் தேனொடு கலந்ததனால்) சேறு பட்ட கோதையின்மேலிருந்த வண்டுகள் தேனை நுகரமுடியாமல் திசைதொறும் எழுந்து பாட; நாறுமலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள் - மணமுடைய மலர்க்கொம்பு நடை கற்பதைப்போல வந்தாள்.

விளக்கம் : துகிலுள்ளும் புறம்பும் கிடத்தலின், வேறுபடு மேகலை என்றார். மிழற்ற - ஒலிப்ப, திசைதொறும் எழுந்து பாட என்க. மலர்க்கொம்பர் - சுரமஞ்சரிக்குவமை. ( 25 )

2020. வந்தவர வென்னையென வாட்கண்மட வாய்கேள்
சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட
வந்திலதி னாயபய னென்னைமொழி கென்றாண்
முந்திநலி கின்றமுது மூப்பொழிவு மென்றான்.
 
பொருள் : வந்த வரவு என்னை என - நீ வந்த வருகையாது கருதி என்று சுரமஞ்சரி வினவ; வாள்கண் மடவாய்! கேள் - வாளனைய கண்களையுடைய மடந்தையே! கேள்; சிந்தை நலிகின்ற திருநீர்க் குமரியாட - உள்ளத்தை வருத்துகின்ற அழகிய நீரையுடைய குமரியிலே ஆட (அழகிய தன்மையையுடைய குமரியாகிய நின்னுடன் ஆட) என்று கூற; அதின் ஆய பயன் என்னை மொழிக என்றாள் - அதனாலாகிய பயன் யாது? கூறுக என்றாட்கு; முந்தி நலிகின்ற முதுமூப்பு ஒழியும் என்றான் - முதனமையாக என்னை வருத்தும் இம் முதிய மூப்பு (தான் வருங்காலத்து வாராமல் முன்னே வந்து வருத்தும் இம் முதிய மூப்பு) நீங்கும் என்றான்.

விளக்கம் : இவன் நின்னுடன் கூடவந்தேன் : கூடுதலின் முன் இம் முதிய மூப்புவேடம் நீங்கும் என்று கருதக் கூறினான். அவளோ, குமரியாட வந்தானென்றும், அந்நீரிலே ஆடினால் முதுமைநோய் நீங்கும் என்றும் கூறினானாகக் கருதினாள். திருநீர்க்குமரி - அழகிய நீரையுடைய குமரியாறு; அழகிய நீர்மையையுடைய கன்னியாகிய நின்னை என இரு பொருளும் காண்க. அந்தில் :  அசை. ( 26 )

2021. நறவிரிய நாறுகுழ லாள்பெரிது நக்குப்
பிறருமுள ரோபெறுநர் பேணிமொழி கென்னத்
துறையறிந்து சேர்ந்துதொழு தாடுநரி லென்றாற்
கறிதிர்பிற நீவிரென வையமிலை யென்றான்.
 
பொருள் : நறவு இரிய நாறுகுழலாள் பெரிது நக்கு - பூமணங்கள் எல்லாம் தோற்க மணக்குங் கூந்தலாள் மிகுதியாக நகைத்து; பிறரும் பெறுநர் உளரோ? பேணி மொழிக என்ன - குமரியாடி இளமை பெறுவார் நின்னையொழியப் பிறரும் உளரோ? ஆராய்ந்து கூறுக என்று வினவ; துறை அறிந்து சேர்ந்து தொழுது ஆடுநர் இல்என்றற்கு - இம் மூப்புப் போம்துறையைக் கண்டு அடைந்து தொழுது ஆடுவார் இலர் (நீ
கொண்ட நோன்பைக் கெடுத்துக் கூடுந்துறை இம் மூப்பால் என்றறிந்து நின்னையணுகிக் கூடுவார் என்னையொழிய இலர்) என்று கூறியவற்கு; பிற நீவிர் அறிதிர் என - உலகத்தார் அறியாத வேறொரு துறையை நீவிர் அறிவீரோ என்று இகழ்ந்து கூற; ஐயம் இலை என்றான் - அதற்கு ஐயம் இல்லை என்றான். ( 27 )
 
2022. செத்தமர மொய்த்தமழை யாற்பெயரு மென்பார்
பித்தரிவ குற்றபிணி தீர்த்துமென வெண்ணி
யத்தமென மிக்கசுட ரங்கதிர்சு ருக்கு
மொய்த்தமணி மாடமிசை யத்தகவ டைந்தாள்.

பொருள் : செத்த மரம் மொய்த்த மழையால் பெயரும் என்பார் - செத்த மரம் ஒன்று பெரிய மழையால் உயிரைப் பெறும் என்பாராகிய; இவர் பித்தர் - இவர் பித்தராவார்; உற்ற பிணி தீர்த்தும் என எண்ணி - இனி இவர் உற்ற பசிநோயை நீக்குவோம் என்று நினைத்து; அத்தம் என மிக்கசுடர் அமகதிர் சுருக்கும் - இஃது அத்தகிரி யென்று ஞாயிறு தன் அழகிய கதிரைச் சுருக்குகின்ற; மொய்த்த மணிமாடமிசை அத்தக அடைந்தாள் - மிகுந்த அழகையுடைய மாடத்தின்மேல் அழகுறச் சென்றாள்.

விளக்கம் : (குமரியாட) முந்தி நலிகின்ற முதுமூப்பு ஒழியும் என்று சீவகன் கூறியதற்கு, செத்தமரம் மொய்த்த மழையாற் பெயரும் என்றல், உவமை. தீர்த்தும் : தன்மைப்பன்மை. எனவே இவனைக் கொண்டு போந்தாளாம். ( 28 )

2023. வடிவமிது மூப்பளிது வார்பவள வல்லிக்
கடிகைதுவர் வாய்கமலங் கண்ணொடடி வண்ணங்
கொடிதுபசி கூர்ந்துளது கோல்வளையி னீரே
யடிசில்கடி தாக்கியிவ ணேகொணர்மி னென்றாள்.

பொருள் : கோல் வளையினீரே! - திரண்ட வளையணிந்த பெண்களே!; துவர்வாய் வார் பவள வல்லிக்கடிகை - சிவந்த வாய் நீண்ட பவளக்கொடி துணித்ததாய்; கண்ணொடு அடி வண்ணம் கமலம் - கண்ணும் அடியும் கமலமாயிருக்கின்ற; இது வடிவம் மூப்பு - இவ் வடிவம் முதுமையுடையது; அளிது - எனவே, நமக்கு அளிக்கத்தக்கது; கொடிது பசி கூர்ந்துளது - கொடியதான பசி மிகுந்துளது; அடிசில் கடிது ஆக்கி இவணே கொணர்மின் என்றாள் - உணவை விரைவாக ஆக்கி இங்கேயே கொண்டு வருக என்றாள்.

விளக்கம் : அளிது - அளிக்கத்தக்கது. வடிவம் என்றதற் கேற்பப் பசிகூர்ந்துளது என்றான். உண்ணுமிடத்திற்குச் செல்லுதலும் இவர்க்கியலாதென்பாள் இவணே கொணர்மின் என்றும், இன்னும் சிறிதுபொழுதும் இவர் பசிபொறுத்தல் அரிதென்பாள் கடிதாக்கி என்றும் கூறினாள். ( 29 )

2024. நானமுரைத் தாங்குநறு நீரவனை யாட்டி
மேனிகிளர் வெண்டுகிலும் விழுப்பொனிய னூலும்
பானலங்கொ டீங்கிளவி பவித்திரமு நல்கத்
தானமர்ந்து தாங்கியமை தவிசின்மிசை யிருந்தான்.

பொருள் : பால் நலம்கொள் தீ கிளவி - பாலின் தன்மையைக் கொண்ட இனிய மொழியினாள்; ஆங்கு அவனை நானம் உரைத்து நறுநீர் ஆட்டி - அப்போதே அவனை மணமுறும் எண்ணெயைத் தேய்த்து நல்ல நீரால் ஆட்டுவித்து; மேனிகிளர். வெண்துகிலும் - மெய்விளங்கும் வெள்ளை ஆடையையும்; விழுப்பொன் இயல் நூலும் - சிறந்த பொன்னால் இயன்ற நூலையும்; பவித்திரமும் - மோதிரத்தையும்; நல்க - கொடுக்க; தான் அமர்ந்து தாங்கி - அவன் அமர்ந்து அவற்றை அணிந்து; அமைதவிசின் மிசை இருந்தான் - இட்ட தவிசின் மேலே இருந்தான்.

விளக்கம் : நானம் - மணவெண்ணெய். ஆங்கு - அப்பொழுதே. மேனி - நிறம், விழுப்பொன் இயல் நூல் - சிறந்த பொன்னாலியற்றிய பூணூல். பாலின் சுவையைத் தன்பாற்கொண்ட இனிய மொழியையுடைய சுரமஞ்சரி என்க. பவித்திரம் - மோதிரம். ( 30 )

2025. திங்கணலஞ் சூழ்ந்ததிரு மீன்களெனச் செம்பொற்
பொங்குகதிர் மின்னுபுகழ்க் கலங்கள்பல பரப்பி
யிங்குசுவை யின்னமுத மேந்தமிகு சான்றோ
னெங்குமிலை யின்னசுவை யென்றுடன யின்றான்.

பொருள் : திங்கள் நலம் சூழ்ந்த திருமீன்களென - திங்களை நலத்தோடு சூழ்ந்த அழகிய விண்மீன்களென்ன; பொங்கு கதிர் மின்னு செம்பொன் புகழ்க்கலங்கள் பரப்பி - மிகுந்த ஒளியை வீசும் பொன்னாலாகிய சிறந்த உண்கலங்களைப் பரப்பி; இங்கு சுவையின் அமுதம் ஏந்த - தங்கிய இடத்தில் அறுசுவையையுடைய உணவை மகளிர் ஏந்த; மிகுசான்றோன் - சீவகன்; இன்ன சுவை எங்கும் இலை என்று உடன் அயின்றான் - இத்தகைய சுவை எங்கும் உண்டதில்லை யென்று வியந்து, வியப்புடனே அயின்றான்.

விளக்கம் : திங்களும் அதனைச் சூழ்ந்த மீன்களும் உண்கலங்கட்குவமை. இங்கு - தங்கிய இடம். சான்றோன் : சீவகன், இன்ன சுவை - இத்தன்மைத்தாய சுவை. அயின்றான் - உண்டான். ( 31 )

2026. தமிழ்தழிய சாயலவர் தங்குமலர்த் தூநீ
ருமிழ்கரக மேந்தவுர வோனமர்ந்து பூசி
யமிழ்தனைய பஞ்சமுக வாசமமைத் தாய்ந்த
கமழ்திரையுங் காட்டவவை கொண்டுகவு ளடுத்தான்.

பொருள் : தமிழ் தழிய சாயலவர் - இனிமை பொருந்திய சாயலையுடையவர்; மலர்தங்கு தூநீர் உமிழ்கரகம் ஏந்த மலர் தங்குந் தூய நீரைவார்க்கும் கரகத்தை ஏந்த; உரவோன் அமர்ந்து பூசி - சீவகன் விரும்பி வாய்பூசி; அமிழ்து அனைய பஞ்சமுக வாசம் அமைத்து ஆய்ந்த - அமிழ்து போன்ற ஐந்து வகைப்பட்ட முகவாசத்தைக் கூட்டி ஆய்ந்த; கமழ்திரையும் காட்ட - மணமிகு வெற்றிலையையும் காட்ட அலை கொண்டு கவுள் அடுத்தான் - அவற்றை வாங்கிக்கொண்டு கவுளில் சேர்த்தான்.

விளக்கம் : தமிழ் - இனிமை. தழிய - தழுவிய. உரவோன் : சீவகன். பூசி - வாய்பூசி. பஞ்சமுகவாசம் - ஐந்துவகைப்பட்ட முகவாசம், திரை - வெற்றிலை. ( 32 )

2027. வல்லதெனை யென்னமறை வல்லன்மட வாயா
னெல்லையெவ னென்னப்பொரு ளெய்திமுடி காறுஞ்
சொல்லுமினு நீவிர்கற்ற காலமெனத் தேன்சோர்
சில்லென்கிளிக் கிளவியது சிந்தையில னென்றான்.

பொருள் : வல்லது எனை என்ன - நீர் கற்று வல்லது என் என்று சுரமஞ்சரி வினவ; மடவாய்! யான மறைவல்லன் - பெண்ணே! யான் மறைவான உருவங்கொள்வதிலே வல்லன் என்று சீவகன் கூற; எல்லைஎன என்ன - (அவள் வேதத்திலே வல்லனென்று கூறுவதாக எண்ணி) நீர் கற்ற அளவு எவ்வளவு என்று வினவ; பொருள் எய்தி முடிகாறும் - நினைத்த பொருளை அடைந்து முடியும் அளவும் என்று அவன் விடைகூற; இனும் நீவிர் கற்றகாலம் சொல்லும் என - (அவள் அதனை வேதம் தான் கருதிய தத்துவத்தை முற்ற உணர்த்தி முடியும் அளவும் என்றானாகக் கருதி) இன்னும் நீவிர் கற்ற காலத்தைக் கூறும் என்று வினவ; தேன்சோர் சில் என் கிளிக் கிளவி! அது சிந்தையிலன் என்றான் - தேன் வழியும் தண்ணெனும் கிளி மொழியாய்! அக்காலங் கூற நினைவிலேன் என்றான்.

விளக்கம் : என்றது : மேலும் வினாவும் விடையும் பெருகுதல் கருதி, அஃது எனக்குக் கருத்தன்றென்றான்; அவள் அதனை நினைத்திருந்திலேன் என்றானாகக் கருதினாள் எனை : என்னை என்னும் வினா, னகர மெய்கெட்டு நின்றது. தொகுத்தல் விகாரம். (33)

2028. இன்னவர்க ளில்லைநிலத் தென்றுவியந் தேத்தி
யன்னமன மென்னடையி னாளமர்ந்து நோக்கப்
பின்னையிவள் போகுதிறம் பேசுமென வெண்ணித்
தன்னஞ்சிறி தேதுயின்று தாழவவ ணக்காள்.

பொருள் : நிலத்து இன்னவர்கள் இல்லை என்று வியந்து ஏத்தி - இந் நிலத்திலே இத் தன்மையுடையவர்கள் இல்லை என்று வியந்து புகழ்ந்து; அன்னம் அனமெல் நடையினாள் அமர்ந்து நோக்க - அன்னம்போலும் மெல்லிய நடையினாள் விரும்பிப் பார்க்க; பின்னை இவள் போகுதிறம் பேசும் என எண்ணி - இனி, இவள் நம்மைப் போமாறு கூறுவாள் என்று கருதி; தன்னம் சிறிதே துயின்று தாழ அவள் நக்காள் - மிகவும் சிறிதே துயின்று தலை தாழ, அவள் அதுகண்டு நகைத்தாள்.

விளக்கம் : இன்னவர்கள் - இத்தன்மையுடையோர். அன்ன - அன என நின்றது. அமர்ந்து - விரும்பி போகுதிறம் - போதற்குரிய சொற்கள். தன்னஞ்சிறிது : ஒருபொருட் பன்மொழி. ( 34 )

2029. கோலமணி வாய்க்குவளை வாட்கண்மட வாளைச்
சாலமுது மூப்புடைய சாமிமுக நோக்கிக்
காலுமிக நோஞ்சிறிது கண்ணுந்துயில் குற்றே
னேலங்கமழ் கோதையிதற் கென்செய்குரை யென்றான்.

பொருள் : கோல மணிவாய் - அழகிய முத்தனைய பற்களையுடைய வாயையும்; குவளை வாட்கண் - குவளைபோலும் ஒளி பொருந்திய கண்களையும் உடைய; மடவாளை - சுரமஞ்சரியை; சாலமுது மூப்பு உடைய சாமி முகம் நோக்கி - மிகவும் முதிய மூப்பினையுடைய சீவகசாமி பார்த்து; காலும் மிகநோம் - (நடையினாற்) கால்களும் மிக நோகின்றன; கண்ணும் துயில் குற்றேன் - கண்களும் உறங்கலுற்றேன்; ஏலம் கமழ்கோதை! - ஏலங்கமழுங் கோதையாய்!; இதற்கு என்செய்கு? உரை என்றான் - இதற்கு யாது செய்வேன்? கூறு என்றான்.

விளக்கம் : காலும் மிகநோம் - வாடைக்காற்றும் மிக வருத்தும்; வாடைக்காற்றைக் கூறியதனால் இத் திங்கள் கார்த்திகையாகும். கண்ணும் துயில்குற்றேன் இறந்துபடும் நிலையை அடைந்தேன் என்ற உட்பொருளுடன் கூறினான். கண்ணிமைப்பளவும் என்றது உயிருடன் இருத்தலை உணர்த்தல் போலக், கண் துயிலுதலும் இறந்துபாட்டை உணர்த்திற்று. சாமி : சீவகசாமி. துயில்குற்றேன் : துயின்றேன் என்னும் ஒரு சொல். ஏலம் - மயிர்ச்சாந்தம். கோதை : விளி. செய்கு : தன்மையொருமை எதிர்கால வினைமுற்று. (35)

2030. மட்டுவிரி கோதைமது வார்குழலி னாடன்
பட்டுநிணர் கட்டில்பரி வின்றியுறை கென்றா
ளிட்டவணை மேலினிது மெல்லெனவ சைந்தான்
கட்டழல்செய் காமக்கட லைக்கடைய லுற்றான்.

பொருள் : மட்டுவிரி கோதை மதுவார் குழலினாள் - மகரந்தம் மிகுந்த கோதையையுடைய தேன்வாருங் கூந்தலாள்; தன் பட்டு நிணர் கட்டில் பரிவு இன்றி உறைக என்றாள் - தன்னுடைய பட்டுக்கச்சால் பிணிக்கப்பட்ட கட்டிலிலே வருத்தமின்றித் தங்குக என்றாள்; கட்டழல் செய் காமக்கடலைக் கடையலுற்றான் - கொடிய நெருப்பைப் போன்ற அலைவின்றி நின்ற காமக்கடலைக் கடையத் தொடங்கினவன்; இட்ட அணைமேல் இனிது மெல் என அசைந்தான் - தனக்கிட்ட பள்ளியின்மேல் மெல் என இனிதாகக் களைப்பாறினான்.

விளக்கம் : நிணர்கட்டில் : வினைத்தொகை. இது நிண என்றே வரும் : ஈண்டு, அண, அணர் என்று வந்தாற்போன்று ரகரமெய் பெற்று வந்தது. நிணத்தல் - பின்னுதல். அசைந்தான் : வினயாலணையும் பெயர். ( 36 )

2031. காலையொடு தாழ்ந்துகதிர் பட்டதுக லங்கி
மாலையொடு வந்துமதி தோன்றமகிழ் தோன்றி
வேலனைய கண்ணியர்தம் வீழ்துணைவர் திண்டோள்
கோலமுலை யாலெழுதக் கூடியதை யன்றே.

பொருள் : கதிர் காலையொடு தாழ்ந்து கலங்கிப்பட்டது - ஞாயிறு பகற்பொழுதுடன் மேற்றிசையிலே வீழ்ந்து கலங்கிப் பட்டது; மாலையொடு மதி வந்து தோன்ற - பிறகு, மாலைக் காலத்தோடே திங்கள் வந்து தோன்றலின்; வேலனைய கண்ணியர் மகிழ்தோன்றி - வேல் போன்ற கண்ணினர் களிப்புத் தோன்றி; தம்வீழ் துணைவர் திண்தோள் - தாம் விரும்பிய கணவரின் திண்ணிய தோளை; கோலமுலையால் எழுதக் கூடியது - அழகிய முலைகளால் எழுதுமாறு இராப்பொழுது வந்து சேர்ந்தது.

விளக்கம் : கூடியதை : ஐ : அசை. காலை - பகல் என்னும் பொருட்டாய் நின்றது. கதிர் காலையொடு தாழ்ந்துபட்டது என மாறுக. கதிர் - ஞாயிறு. மகிழ் - மகிழ்ச்சி. அன்று. ஏ : அசைகள். ( 37 )

2032. ஏந்துமலர்ச் சேக்கையகில் வளர்த்தவிடு புகையு
மாய்ந்தமலர்க் கோதையமிர் துயிர்க்குநறும் புகையுங்
கூந்தலகிற் புகையுந்துகிற் கொழுமெனறும் புகையும்
வாய்ந்தவரை மழையினுயர் மாடத்தெழுந் தனவே.

பொருள் : மலர் ஏந்து சேக்கை - மலர் பொருந்திய அணையிலே; அகில் வளர்த்த இடுபுகையும் - அகில் வளர்த்த புகையும்; ஆய்ந்த மலர்க்கோதை அமிர்து உயிர்க்கும் நறும் புகையும் - அழகிய மலர்மாலைக்கு ஊட்டிய இனிமையுடைய நல்ல அகிற் புகையும்; கூந்தல் அகிற் புகையும் - கூந்தற்குப் புகைத்த அகிற் புகையும்; துகில் கொழுமென் நறும்புகையும் - ஆடைக்கு ஊட்டிக் கொழுவிய மெல்லிய அகிற்புகையும்; வாய்ந்த வரை மழையின் - பொருந்திய மலைமீது தவழும் முகிலென; உயர் மாடத்து எழுந்தன - உயர்ந்த மாடத்தே எழுந்தன.

விளக்கம் : மலரேந்து சேக்கை என்க. சேக்கை - படுக்கை. அமிர்து - இனிமை. வரை - மலை. மழை - முகில். ( 38 )

2033. ஆசிலடு பாலமிர்தஞ் சிறியவயின் றம்பூங்
காசில்படி மாலைகல நொய்யமதி கவற்குந்
தூசுநறுஞ் சாந்தினிய தோடிவைக டாங்கி
மாசின்மட வார்கண்மணி வீணைநரம் புளர்ந்தார்.

பொருள் : ஆசு இல் அடு பால் அமிர்தம் சிறிய அயின்று - குற்றமற்ற காய்ச்சிய பாற்சோற்றைச் சிறிதளவு உண்டு; காசு இல் அம்கடி பூமாலை நொய்ய கலம் - குற்றம் அற்ற அழகிய மலர் மாலையும் திண்மையற்ற அணிகலனும்; மதிகவற்கும் தூசு - அறிவைக் கவலச் செய்யும் ஆடை; நறுஞ்சாந்து - நல்ல சந்தனம்; இனிய தோடு - அழகிய தோடு; இவைகள் தாங்கி - இவற்றை அணிந்து; மாசுஇல் மடவார்கள் - குற்றமற்ற பெண்கள்; மணி வீணை நரம்பு உளர்ந்தார் - அழகிய வீணையின் நரம்பைத் தடவி வாசித்தனர்.

விளக்கம் : கூதிராதலின் பாலடிசில் கூறினார். உண்டிசுருங்குதல் பெண்டிர்க் கழகு ஆதலின், சிறிது அயின்று என்றார். புணர்ச்சித் தொழில் கருதி நொய்ய கலம் அணிந்தனர் என்பது கருத்து. ( 39 )

2034. பூஞ்சதங்கை மாலைபுகழ்க் குஞ்சிப்பொரு வில்லார்
வீங்குதிர டோளுந்தட மார்பும்விரை மெழுகித்
தீங்கரும்பு மென்றனைய வின்பவளச் செவ்வாய்த்
தேங்கொளமிர் தார்ந்துசெழுந் தார்குழையச் சோந்தார்.

பொருள் : பூஞ்சதங்கை மாலை புகழ்க்குஞ்சிப் பொரு இல்லார் - ஒருபுற மாலையினையும் குஞ்சினையுமுடைய ஒப்பற்ற ஆடவர் தமது; வீங்கு திரள் தோளும் தடமார்பும் விரைமெழுகி - பருத்த திரண்ட தோளும் பெரிய மார்பும் பொருந்த மணக் கலவையை மெழுகி; தீ கரும்பு மென்ற அனைய இன்பவளச் செவ்வாய்த் தேன்கொள் அமிர்து ஆர்ந்து - இனிய கரும்பை மென்றாலனைய இனிய பவளமனைய செவ்வாயின் இனிமை கொண்ட அமிர்தத்தைப் பருகி, செழுந்தார் குழையச் சேர்ந்தார் - வளவிய தார் வாடும்படி அணைந்தனர்.

விளக்கம் : பூஞ்சதங்கை மாலை என்பதனை ஒருபுறமாலை என்பர் நச்சினார்க்கினியர். குஞ்சி - ஆடவர் தலைமயிர் - விரை - நறுமணச் சாந்து. கரும்பு மென்றனைய அமிர்து, வாய் அமிர்து எனத் தனித்தனி கூட்டுக. ( 40 )

2035. பொன்னறையு ளின்னமளிப் பூவணையின் மேலான்
முன்னியதன் மன்றலது முந்துறமு டிப்பான்
மன்னுமொரு கீதமது ரம்படமு ரன்றாற்
கின்னமிர்த மாகவிளை யாருமது கேட்டார்.

பொருள் : பொன் அறையுள் இன் அமளிப் பூவணையின் மேலான் - பொன்னாலான அறையிலே இனிய படுக்கையில் மலரணையின்மேலிருந்த சீவகன்; முன்னிய தன் மன்றலது முந்துஉற முடிப்பான் - தான் நினைத்திருந்த தன் மணத்தினை விரைந்து முடிக்க வேண்டி; மன்னும் ஒரு கீதம் மதுரம்பட முரன்றாற்கு - நிலைபெற்றதொரு இசையை இனிமையுறப் பாடினாற்கு; இளையாரும் இன்னமிர்தம் ஆக அதுகேட்டார் - இள மங்கையரும் இனிய அமிர்தமாக அதனைக் கேட்டனர்.

விளக்கம் : நான்காம் உருபிற்கு இவர் கேட்டது கொடைப் பொருட்டாம்.  மேலான் : வினையாலணையும் பெயர்; சீவகன். முன்னிய - கருதிய மன்றல் - திருமணம், ஈண்டு யாழோர் மணம். மன்றலது என்புழி, அது பகுதிப்பொருளது. கீதம் - இசை. ( 41 )

வேறு

2036. மன்ம தன்ம ணிக்கு ரன்ம
ருட்டு மென்று மால்கொள்வா
ரின்ன தின்றி யக்க ரின்னி
யக்க வந்த தென்றுதம்
பின்னு முன்னு நோக்கு வார்
பேது சால வெய்துவார்
கன்னி தன்ம னத்தி ழைத்த
காளை நாமம் வாழ்த்துவார்.

பொருள் : மன்மதன் மணிக்குரல் மருட்டும் என்று மால் கொள்ளார் - காமனது அழகிய குரலே என்றும், அக் குரலை இது மயக்கும் என்றும் மயக்கங்கொள்வார்; இன்னது அன்று இயக்கரின் இயக்க வந்தது என்று தம் பின்னும் முன்னும் நோக்குவார் - இத் தன்மைத்தன்று, இயக்கரால் இசைக்கப்படுதலின் வந்தது என்று தம் பின்னும் முன்னும் நோக்குவார்; பேதுசால எய்துவார் - பேதைமையை மிகவுங் கொள்வார்; கன்னி தன் மனத்து இழைத்த காளை நாமம் வாழ்த்துவார் - சுரமஞ்சரியின் உள்ளத்திலே இழைக்கப்பெற்ற சீவகனே இவ்வாறு பாட வல்லான் என்று அவன் பெயரை வாழ்த்துவார்.

விளக்கம் : மணிக்குரல் - அழகிய குரல், மால் - மயக்கம். சால - மிகவும். கன்னி என்றது சுரமஞ்சரியை. காளை : சீவகன். ( 42 )

2037. கொம்பி னொத்தொ துங்கி யுங்கு
ழங்கன் மாலை தாங்கியு
மம்பி னொத்த கண்ணி னார
டிக்க லம்ம ரற்றவுந்
நம்பி தந்த கீதமேந யந்து
காண வோடினார்
வெம்பு வேட்கை வேனி லானின்
வேற லானு மாயினான்.

பொருள் : கொம்பின் ஒத்து ஒதுங்கியும் - மலர்க்கொத்தென அசைந்தும்; குழங்கல் மாலை தாங்கியும் . மணமுறும் மாலைகளைத் தாங்கியும்; அம்பின் ஒத்த கண்ணினார் - கணையனைய கண்களையுடையார்; அடிக்கலம் அரற்றவும் - அடியில் அணிந்த சிலம்பு முதலியன இடைவருந்துமென ஒலிக்கவும்; நம்பி தந்த கீதமே நயந்து காண ஓடினார்; - சீவகன் தந்த இசையை விரும்பி அவ்விசையுடையானைக் காண ஓடினார்; வெம்பு வேட்கை வேனிலான் வேறலானும் ஆயினான் - மனம் வெம்பும் வேட்கையை விளைத்த சீவகன் இசையினாலும் கட்புலனாகாமையாலும் காமனினும் வேறல்லாதவன் ஆயினான் (காமனே ஆயினான்).

விளக்கம் : நச்சினார்க்கினியர், காண என்பதற்குக் கேட்க என்று பொருளுரைத்துக், கேள்வியும் உணரப்படுதலின் காட்சியே ஆம் என்றார். நாடினார் என்றும் பாடம். ( 43 )

2038. தாம மாலை வார்கு ழற்ற டங்க ணார்க்கி டங்கழி
காம னன்ன காளை தன்க ருத்தொ டொத்த தாகலான்
மாம லர்த்தெ ரியலான்ம ணிமிடற்றி டைக்கிடந்த
சாம கீத மற்று மொன்று சாமி நன்கு பாடினான்.

பொருள் : தாம மாலை வார்குழல் தடங்கணார்க்கு - ஒளியையுடைய மாலையையும் நீண்ட கூந்தலையும் பெரிய கண்களையும் உடைய மகளிர்க்கு; இடம்கழி காமன் அன்ன காளை - தம் வயத்தன் ஆகான் என்று நீக்கப்படுவானாகிய காமனைப் போன்ற காளை; தன் கருத்தொடு ஒத்தது ஆகலான் - தன் நினைவோடு அவர் கருத்தும் ஒத்தது ஆகலின்; மாமலர்த் தெரியலான் மணிமிடற்றிடைக் கிடந்த - கொன்றை மாலையை உடைய இறைவனது நீலமணிபோலும் மிடற்றினிடையே கிடந்த; சாம கீதம் ஒன்று மற்றும் சாமி நன்கு பாடினான் - சாம கீதம் ஒன்றை மேலும் சீவகன் நன்றாகப் பாடினான்.

விளக்கம் : தெரியலானைச் சீவகன் எனின், பின்னர்ச் சாமி என்னும் பெயர் வேண்டாவாம்.  இடங்கழிகாமன் - வரம்பு கடந்து எழுதற்குக் காரணமான காமத்திற்குத் தெய்வமானவன் என்பது நன்று. தம்மிடத்தினின்று நீக்கப்படுவானாகிய காமன் என்பர் நச்சினார்க்கினியர். இடங்கழி காமமொ டடங்கா னாகி என்பர் மணிமேகலையினும் (18-119.) இடங்கழி மான் மாலை என வரும் புறப்பொருள் வெண்பாமாலை (130) அடிக்கு இராக வேகத்தை யுண்டாக்கும் மயக்கமுடைய மாலைக் காலம் என்று பொருள் கூறுவர் அதன் உரையாசிரியர். ( 44 )

2039. கள்ள மூப்பி னந்த ணன்க னிந்தகீத வீதியே
வள்ளி வென்ற நுண்ணி டைம ழைம லர்த்த டங்கணார்
புள்ளு வம்ம திம்ம கன்புணர்த்த வோசை மேற்புகன்
றுள்ளம் வைத்த மாம யிற்கு ழாத்தி னோடி யெய்தினார்.

பொருள் : புள்ளுவம் மதிமகன் புணர்த்த ஓசைமேற் புகன்று - வேட்டுவனாகிய அறிவுடையான், தம் மோசையாக அழைக்கின்ற ஓசையின் மேலே விரும்பி; உள்ளம் வைத்த மாமயில் குழாத்தின் - மனம் வைத்த மயில்திரள் ஓடுமாறு போல; கள்ளமூப்பின் அந்தணன் கனிந்த கீதவீதி - கள்ள முதுமையை உடைய அந்தணனின் முற்றுப்பெற்ற இசையின் வழியே; வள்ளி வென்ற நுண்இடை மழைமலர்த் தடங்கணார் - கொடியை வென்ற நுண்ணிய இடையையுடைய. குளிர்ந்த மலரனைய பெருங்கண்ணார் எல்லோரும்; ஓடி எய்தினார் - ஓடிச் சேர்ந்தார்.
 
விளக்கம் : வள்ளி - வல்லி; கொடி. புள்ளுவ மதி மகன் - புள்ளின் ஓசையைத் தன்னிடத்தே உடைய மகன், புள்ளுவம் - வஞ்சகம். மதி - அறிவு, எனப்பொருள் கொண்டு வஞ்சக வறிவுடைய மனிதன் எனக் கொள்ளினும் பொருந்தும். கள்ள மூப்பு - வாய்மையல்லாதமூப்பு. அந்தணன் : சீவகன். புகன்று விரும்பி. ( 45 )

வேறு

2040. இனிச்சிறி தெழுந்து வீங்கி
யிட்டிடை கோறு நாங்க
ளெனக்கொறு கொறுப்ப போலு
மிளமுலைப் பரவை யல்குற்
கனிப்பொறை மலிந்த காமர்
கற்பக மணிக்கொம் பொப்பாள்
பனிப்பிறைப் பூணி னான்றன்
பாண்வலைச் சென்று பட்டாள்.

பொருள் : இனி நாங்கள் சிறிது எழுந்து வீங்கி இட்டிடை கோறும் என - இந் நிலையில் நாங்கள் சிறிது எழுந்து பருத்துச் சிற்றிடையைக் கொல்வோம் என்று; கொறுகொறுப்ப போலும் இளமுலை - கொறுகொறுப்பன போலும் இளமுலையினையும்; பரவை அல்குல் - பரவிய அல்குலையும் உடைய; கனிப்பொறை மலிந்த காமர் கற்பக மணிக்கொம்பு ஒப்பாள் - பழமாகிய சுமை மிகுந்த அழகிய கற்பகக் கொம்பு போல்வாள்; பனிப்பிறைப் பூணினான் தன் பாண்வலைச் சென்று பட்டாள் - குளிர்ந்த பிறை யனைய பூணையுடைய சீவகனின் இசை வலையிலே போய் அகப்பட்டாள்.

விளக்கம் : கொறுகொறுத்தல் : சினத்தலை உணர்த்தும் குறிப்புச் சொல்லாகிய இரட்டைக் கிளவி. கோறும் : தன்மைப் பன்மை வினைமுற்று. கனிப்பொறை : பண்புத்தொகை. காமர் - அழகு. ஒப்பாள் : சுரமஞ்சரி. பூணினான் : சீவகன். பாண்வலை : பண்புத்தொகை. பாண் - பாட்டு. ( 46 )

2041. அடிக்கல மரற்ற வல்குற்
கலைகலந் தொலிப்ப வந்து
முடிப்பதென் பெரிது மூத்தேன்
முற்றிழை யரிவை யென்ன
வடிக்கணா ணக்கு நாணித்
தோழியை மறைந்து மின்னுக்
கொடிக்குழாத் திடையோர் கோலக்
குளிர்மணிக் கொம்பி னின்றாள்.

பொருள் : முற்றிழை அரிவை! அடிக்கலம் அரற்ற அல்குல் கலை கலந்து ஒலிப்ப வந்து முடிப்பது ஏன்? பெரிதும் மூத்தேன் என்ன - முற்றிழையுடைய அரிவையே! அடியில் அணிந்த சிலம்பு முதலியன ஒலிக்கவும், அல்குலில் அணிந்த கலைகள் கலந்து ஒலிக்கவும் வந்து நீவிர் முடிப்ப தாகிய வேலை என்ன? யான் மிகவும் முதிர்ந்தேன் என்று சீவகன் கூற; வடிக்கணாள் நக்கு நாணி - மாவடுவனைய கண்ணாள் நகைத்து நாணி, தோழியை மறைந்து - தோழிக்குப் பின்னே மறைந்து நின்று; மின்னுக் கொடிக் குழாத்திடை - மின்னுக்கொடித் திரளிடையே; ஓர்கோலம் குளிர் மணிக் கொம்பின் நின்றாள் - ஓர் அழகிய குளிர்ந்த மணிக் கொடிபோல நின்றாள்.

விளக்கம் : அடிக்கலம் - சிலம்பு முதலியன, கலை-மேகலை பெரிது - மிகமிக, அரிவை : விளி. முடிப்பது : இடக்கர்; தோழியை ஏதுவாகக் கொண்டு மறைந்து என்க. மின்னுக்குழாம், தோழியர் குழாத்திற்கும் மணிக்கொம்பு, சுரமஞ்சரிக்கும் உவமைகள். ( 47 )

2042. இளையவற் காணின் மன்னோ
வென்செய்வீர் நீவி ரென்ன
விளைமதுக் கண்ணி மைந்தர்
விளிகெனத் தோழி கூற
முலையெயிற் றிவளை யாரு
மொழிந்தன ரில்லை யென்றோ
வுளைவது பிறிது முண்டோ
வொண்டொடி மாதர்க் கென்றான்.

பொருள் : நீவிர் இளையவன் காணின் மன்னோ என் செய்வீர் என்ன - நீர் என்னையன்றி இளைஞனைக் கண்டால் மிகவும் என்ன செய்வீர் என்று சீவகன் வினவ; விளைமதுக் கண்ணி மைந்தர் விளிக எனத் தோழி கூற - மிகுந்த தேனையுடைய கண்ணியை அணிந்த மைந்தர் பெயரும் இவ்விடத்துக் கெடுக என்று தோழி கூற; முளை எயிற்று இவளை யாரும் மொழிந்தனர் இல்லை என்றோ - கூரிய பற்களையுடைய இவளை யாரும் பெண் பேசினார் இல்லை என்ற காரணத்தாலோ?; ஒண்தொடி மாதர்க்கு உளைவது பிறிதும் உண்டோ? என்றான் - ஒளிரும் வளையணிந்த இவட்கு வருந்தும் பான்மையாக அவர் செய்தது வேறும் உண்டோ? என்று சீவகன் வினவினான்.

விளக்கம் : இளையவன் என்றது பெரிதுமூத்த என்னையன்றி இளையான் ஒருவனை என்பதுபட நின்றது. மன் : ஒழியிசை. ஓ : அசை. ( 48 )

2043. வாய்ந்தவிம் மாதர் சுண்ணஞ்
சீவகன் பழித்த பின்றைக்
காய்ந்தன ளென்று கூறக்
காளைமற் றிவட்குத் தீயான்
மாய்ந்தனன் போலு மென்ன
மாதரா ரொருங்கு வாழ்த்தி
யாய்ந்தன மைய னுய்ந்தா
னறிந்தன மதனை யென்றார்.

பொருள் : இம் மாதர் வாய்ந்த சுண்ணம் சீவகன் பழித்த பின்றை - இம் மாதரின் பொருந்திய சுண்ணத்தைச் சீவகன் பழித்த பிறகு; காய்ந்தனள் என்று கூற - ஆடவரை வெறுத்தனள் என்று கூற; இவட்குத் தீயான் காளை மாய்ந்தனன் போலும் என்ன - (அதனைக் கேட்ட சீவகன்) இவளுக்குத் தீயானாகிய காளை இறந்தான் போலும் என்ன; மாதரார் ஒருங்கு வாழ்த்தி - அங்கிருந்த மகளிரெல்லோரும் சீவகன் நூறும் புகுதுக என்று சேர வாழ்த்தி; ஆய்ந்தனம் ஐயன் உய்ந்தான் - யாங்கள் ஆராய்ந்தோம்; ஐயன் பிழைத்திருக்கின்றான்; அதனை அறிந்தனம் என்றார் - அதனைப் பிறகு விளங்குவதம் செய்தோம் என்றார்.

விளக்கம் : இம் மாதர் வாய்ந்த சுண்ணம் என மாறுக. வாய்ந்த : விகாரம், பின்றை - பின்பு. காய்ந்தனள் - வெறுத்தனன். போலும் : ஒப்பில் போலி ஐயன் : சீவகன். ( 49 )

2044. காலுற்ற காம வல்லிக்
கொடியெனக் கலங்கி நங்கை
மாலுற்று மயங்க யாங்கண்
மடக்கிளி தூது விட்டேஞ்
சேலுற்ற நெடுங்கட் செவ்வாய்த்
தத்தைதன் செல்வங் கண்டே
பாலுற்ற பவளச் செவ்வாய்த்
தத்தையாற் பரிவு தீர்ந்தேம்.

பொருள் : கால்உற்ற காமவல்லிக் கொடியென நங்கை கலங்கி - காற்றிற்பட்ட காமவல்லிக் கொடிபோலச் சுரமஞ்சரி கலங்கி; மால் உற்று மயங்க - பித்தேறி மயங்குதலின்; யாங்கள் மடக்கிளி தூது விட்டோம் - யாங்கள் இளங்கிளி ஒன்றைத் தூது விட்டோம்; சேல்உற்ற நெடுங்கண் செவ்வாய்த் தத்தைதன் செல்வம் கண்டு - கயல்மீன் போன்ற நீண்ட கண்களையும் செவ்வாயையும் உடைய தத்தையின் பொலிவைக் கண்டு; பால் உற்ற பவளச் செவ்வாய்த் தத்தையால் பரிவு தீர்ந்தேம் - பால் உண்ட பவளம் போன்ற சிவந்த வாயையுடைய கிளி வந்து கூறியதால் துன்பம் நீங்கினேம்.

விளக்கம் : கால் - காற்று. காமவல்லி - ஒரு பூங்கொடி. நங்கை : சுரமஞ்சரி, தத்தை : காந்தருவதத்தை. பவளச் செவ்வாய்த்தத்தை என்றது கிளியை. ( 50 )

2045. அன்பொட்டி யெமக்கோர் கீதம்
பாடுமி னடித்தி யாரு
முன்பட்ட தொழிந்து நுங்கண்
மூகவியர் முனிவு தீர்ந்தார்
பொன்றெட்டேம் யாமு நும்மைப்
போகொட்டோம் பாடல் கேளா
தென்பட்டு விடினு மென்றா
ரிலங்குபூங் கொம்பொ டொப்பார்.

பொருள் : இலங்கு பூங்கொம்பொடு ஒப்பார் - விளங்கும் பூங்கொம்பு போன்ற அம் மங்கையர்; அடித்தியாரும் முன்பட்டது. ஒழிந்து நுங்கள் முகவியர் முனிவு தீர்ந்தார் - அடிச்சி யாராகிய சுரமஞ்சரியாரும் முன்னர் நெஞ்சிற் கொண்ட நோன்பு நீங்கி நும்மிடத்து முகம் புகுதலையுடையராய்ச் சீற்றம் ஒழிந்தனர்; அன்பு ஒட்டி எமக்கு ஓர் கீதம் பாடுமின் - (இனி நீரும் எம்மிடம்) அன்பு செய்தலைப் பொருந்தி எமக்கு ஓர் இசையைப் பாடுமின்; என் பட்டு விடினும் - என்ன நேர்ந்தாலும்; யாமும் பாடல் கேளாது நும்மைப் போக ஒட்டோம் - யாங்களும் பாடலைக் கேளாமல் உம்மைப் போகவிடோம்; பொன்தொட்டேம் என்றார் - திருமகள் போலும் இவளைத் தொட்டு ஆணையிட்டோம் என்றனர்.

விளக்கம் : மூத்த அந்தணன் ஆதலின் அடித்தியார் என்றார். அடித்தியார் : ஒருவரைக் கூறும் பன்மை.  அன்பு ஓட்டி - அன்பாலே எம்மைப் பொருந்தி, அடித்தியார் என்றது சுரமஞ்சரியை, முகவியர் - முகம் புகுதலையுடையர். முகவியர் முனிவு தீர்ந்தார் என்பதற்கு முகத்திலுள்ள வியர்வையும் வெறுப்பும் நீங்கினர் எனலும் ஒன்று. பொன் : திருமகள் : ஈண்டுச் சுரமஞ்சரி. போக ஓட்டோம் - போகொட்டோம் என நிலைமொழி ஈறுகெட்டுப் புணர்ந்தது. என்பட்டு விடினும் - என்ன நேரினும். ( 51 )

2046. பாடுதும் பாவை பொற்பே
பற்றிமற் றெமக்கு நல்கி
னாடமைத் தோளி னீரஃ
தொட்டுமேற் கேண்மி னென்ன
நாடியார் பேயைக் காண்பார்
நங்கைகா ளிதுவு மாமே
யாடுவ தொன்று மன்றிவ்
வாண்மக னுரைப்ப தென்றார்.

பொருள் : ஆடு அமைத் தோளினீர் - அசையும் மூங்கிலனைய தோளையுடையீர்!; பாவை பொற்பே பற்றி எமக்கு நல்கின் - இப் பாவையாள் தனது தோற்றப் பொலிவு தொடங்கி ஒழிந்தவற்றையும் எமக்குக் கொடுத்தால்; பாடுதும் - பாடக்கடவேம்; அஃது ஒட்டுமேல் கேண்மின் என்ன - அதனைத் தர உடம்படுவாளாயின் கேளுங்கள் என்று சீவகனுரைக்க; நங்கைகாள்! - பெண்களே!; பேயை நாடிக் காண்பார் யார்? - பொன்னல்லாத பேயைத் தேடிக் காண்பார் யார்?; இவ் ஆண்மகன் உரைப்பது ஆடுவது ஒன்றும் அன்று - (மேலும்) இந்த ஆண் மகன் கூறும்  பொன்னாலாகிய பேய் இவ்வுலகில் நிகழ்வதொன்றும் அன்று; இதுவும் ஆமே என்றார் - (ஆகையால்) இதுவும் நாம் ஒப்புவதற்காகும் என்றார்.

விளக்கம் : உலகில் இல்லாததற்கு உடம்படலாம். அஃது ஒருவனாற் காட்ட முடியாதாகலின். ஒருபொருளிருசொற் பிரிவில் வரையார் (தொல் எச்ச. 94) என்னுஞ் சூத்திரத்து, வரையார் என்றதனால், பொற்பே என்னும் ஏகாரவீற்றுப் பெயர் வேறும் ஒரு பொருள் தந்து நிற்றலின், பேய் என்று யகரவீறுமாய் நின்றது. இதற்கு யகர ஒற்று விகாரத்தால் தொக்கதாம். அருங்கழி காதம் அகலும் என்றூழென்றலந்து கண்ணீர் - வருங்கழி காதல் வனசங்கள் (சிற். 190) என்ற இடத்து, அலர்ந்து என்பது, அலந்து என்று விகாரப்பட்டு நின்றாற் போல. ( 52 )

2047. பட்டுலாய்க் கிடந்த செம்பொன்
பவளமோ டிமைக்கு மல்கு
லொட்டினா ளதனை யோரோ
துலம்பொரு தோளி னானும்
பட்டவா ணுதலி னாய்க்குப்
பாடுவல் காமன் றந்த
தொட்டிமை யுடைய வீணைச்
செவிச்சுமை யமிர்த மென்றான்.

பொருள் : பட்டு உலாய்க் கிடந்த செம்பொன் பவளமோடு இமைக்கும் அல்குல் - பட்டுச் சூழ்ந்து கிடந்த செம்பொன்னும் பவளமும் ஒளிரும் அல்குலையுடையாள்; அதனை ஓராது ஒட்டினாள் - அவன் கருதியதனை அறியாமல் ஒப்பினாள்; உலம்பொரு தோளினானும் - கற்றூணைப் பொருந் தோளையுடையானும்; காமன் தந்த தொட்டிமை உடைய வீணைச் செவிச் சுவை அமிர்தம் - காமன் பாடின - ஒற்றுமையுடைய குரல் வீணையாலாகிய, செவிக்கு இனிமைதரும் அமிர்தத்தை; பட்ட வாள் நுதலினாய்க்குப் பாடுவல் என்றான் - பட்டம் அணிந்த ஒள்ளிய நெற்றியை உடைய நினக்குப் பாடுவேன் என்றான்.

விளக்கம் : இனி, பொன்னாலே பேயைப் பண்ணிக் கொடுப்போம் என்று ஒட்டினாள் என்பாரும் உளர். காமனைக் கூறினான். இவள் வரம் வேண்டப் போதலைக் கருதி. ( 53 )

2048. வயிரவில் லுமிலும் பைம்பூண்
வனமுலை மகளிர் தம்மு
ளுயிர்பெற வெழுதப் பட்ட
வோலியப் பாவை யொப்பாள்
செயிரில்வாண் முகத்தை நோக்கித்
தேன்பொதிந் தமுத மூறப்
பயிரிலா நரம்பிற் கீதம்
பாடிய தொடங்கி னானே.

பொருள் : வயிர வில் உமிழும் பைம்பூண் வனமுலை மகளிர் தம்முள் - வயிரவொளியை வீசும் பைம்பூண் அணிந்த அழகிய முலைகளையுடைய மகளிரிலே; உயிர்பெற எழுதப்பட்ட ஓவியப் பாவை ஒப்பாள் - உயிருண்டாக எழுதப்பட்ட ஓவியப்பாவை போன்ற சுரமஞ்சரியின்; செயிரில் வாள் முகத்தை நோக்கி - குற்றம் அற்ற முகத்தைப் பார்த்து; தேன்பொதிந்து அமுதம் ஊற - இனிமை நிறைந்து அமுதம் பெருக; நரம்பின் பயிரிலாக் கீதம் பாடிய தொடங்கினான் - நரம்புடன் கூடி மறைகின்ற அருவருப்பில்லாத இசையைப் பாடுதற்குத் தொடங்கினான்.

விளக்கம் : நரம்பிற் பயிர் இல்லாத கீதம் - நரம்பிசையோடு கூடி அதனுள் மறைதலாலே உண்டாகும் அருவருப்பு இல்லாத இசை. பயிர் என்றது ஈண்டு அருவருப்பு என்னும் குற்றத்தின் மேனின்றது. அமுதம் - இனிமை. நரம்போடே பாடினான் என்பாருமுளர் என்று நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். ( 54 )

வேறு

2049. தொடித்தோள் வளைநெகிழத் தொய்யின் முலைமேல்
வடிக்கேழ் மலர்நெடுங்கண் வார்புயலுங் காலும்
வார்புயலுங் காலும் வளைநெகிழு நந்திறத்த
தார்வமுறு நெஞ்ச மழூங்குவிக்கு மாலை.

பொருள் : தொடித்தோள் வளைநெகிழ - வட்டமான தோள்வளை நெகிழாநிற்க; வடிக்கேழ் மலர் நெடுங்கண் - மாவடு போன்ற நிறம் பொருந்திய மலர்ந்த நீண்ட கண்கண்; தொய்யில் முலைமேல் வார்புயலும் காலும் - தொய்யில் எழுதிய முலைமேல் வீழும் நீரைச் சொரியும்; வார்புயலும் காலும் வளைநெகிழும் நம் திறத்தது - அங்ஙனம் காலுதற்கும் நெகிழ்தற்குங் காரண மாகிய நம்மிடத்து உளதாகிய; ஆர்வம் உறும் நெஞ்சம் மாலை அழுங்குவிக்கும் - ஆவல்கொண்ட நெஞ்சினை மாலை வருத்தும்

விளக்கம் : இது முதல் மூன்று செய்யுளும் சீவகன் பாடிய இசைப் பாடல்கள் என்க. தோள் தொடிவளை என மாறுக. தொடி - வட்டம். தொய்யில் எழுதப்பட்ட முலை என்க. வடி - மாவடு, கேழ் - நிறம். மலர் நெடுங்கண் : வீனைத்தொகை. ( 55 )

2050. ஐதேந் தகலல்கு லாவித் தழலுயிராக்
கைசோர்ந் தணலூன்றிக் கண்ணீர் கவுளலைப்பக்
கண்ணீர் கவுளலைப்பக் கையற்றி யாமினையப்
புண்ணீரும் வேலிற் புகுந்ததான் மாலை.

பொருள் : ஐதுஏந்து அகல் அல்குல்! - மெல்லிய காஞ்சியை ஏந்திய அல்குலையுடையாய்!; ஆவித்து அழல் உயிராக் கைசோர்ந்து அணல் ஊன்றி - கொட்டாவி கொண்டு நெருப்பென மூச்செறிந்து கை சோர்வுற்றுக் கன்னத்திலே ஊன்றுதலாலே; கண்ணீர் கவுள் அலைப்ப - கண்ணீர் கன்னத்தை வருத்தி வீழும்; கண்ணீர் கவுள் அலைப்பக் கையற்று யாம் இனைய - அங்ஙனம் அலைத்தலின், யாம் கையற்று அதன்மேலே வருந்தும்படி; புண் ஈரும் வேலின் மாலை புகுந்தது - புண்ணைப் பிளக்கும் வேலைப் போல மாலை புகுந்தது.

விளக்கம் : வீழும் என வருவிக்க.   ஐது - மென்மையுடையது; என்றது ஈண்டுக் காஞ்சி என்னும் ஓரணிகலனை - அல்குல்; விளி, ஆவித்து - கொட்டாவி விட்டு, கையற்று - செயலற்று. இனைய - வருந்தும்படி. வேலின் - வேல்போன்று. ( 56 )

2051. அவிழ்ந்தேந்து பூங்கோதை யாகத் தலர்ந்த
முகிழ்ந்தேந் திளமுலைமேற் பொன்பசலை பூப்பப்
பொன்பசலை பூப்பப் பொருகயற்கண் முத்தரும்ப
வன்புருகு நெஞ்ச மழுங்குவிக்கு மாலை.

பொருள் : அவிழ்ந்து ஏந்து பூங்கோதை! - மலர்ந்து விளங்கும் பூங்கோதாய்!; ஆகத்து அலர்ந்த முகிழ்ந்து ஏந்து இள முலைமேல் பொன்பசலை பூப்ப - மார்பிலே தோன்றி அரும்பி நிமிர்ந்த இளமுலைமேல் பொன் போன்ற பசலை உண்டாகத் தோன்றும்; பொன்பசலை பூப்பப் பொருகயல் கண்முத்து அரும்ப - அங்ஙனம் பொன் பசலையுண்டாகவும் காதொடு பொருங் கயற்கண்கள் முத்தனைய நீரை அரும்பவும்; அன்பு உருகும் நெஞ்சம் மாலை அழுங்குவிக்கும் - அன்பினாலே உருகும் நெஞ்சை மாலை வந்து வருத்தும்.

விளக்கம் : தோன்றும் என வருவிக்க இத்தாழிசை மூன்றும் தனக்கு வேட்கை நிகழ்ந்ததாகக் கூறலாகாமையின் மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி தோழிக்குக் கூறிற்றாகக் கூறினான். இதனைத் தலைவன் ஆற்றானாய்க் கூறிற்றென்பாருமுளர். (57)

வேறு

2052. பாடினான் றேவ கீதம்
பண்ணினுக் கரசன் பாடச்
சூடக மகளிர் சோர்ந்து
செருக்கிய மஞ்ஞை யொத்தா
ராடகச் செம்பொற் பாவை
யந்தணற் புகழ்ந்து செம்பொன்
மாடம்புக் கநங்கற் பேணி
வரங்கொள்வ னாளை யென்றாள்.

பொருள் : பண்ணினுக்கரசன் தேவகீதம் பாடினான்- (இங்ஙனம்) பண்ணினுக்கரசனான சீவகன் வானவனாற் பாடப் பட்ட இசையைப் பாடினான்; பாட-பாடினபோது; சூடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்ஞை ஒத்தார்- வளையணிந்த மகளிர் சோர்ந்து மயங்கிய மயிலைப் போன்றார்; ஆடகச் செம்பொன் பாவை அந்தணற் புகழ்ந்து- ஆடகமென்னும் பொன்னாலியன்ற பாவைபோன்ற சுரமஞ்சரி அந்தணனைப் பாராட்டிக் கூறி; நாளை செம்பொன் மாடம்புக்கு- நாளைக்குக் காமன் கோயிலிலே புக்கு; அநங்கன் பேணி- காமனை வழிபட்டு ; வரம்கொள்வல் என்றார்- (இப் பாட்டையுடைய சீவகனைத் தரல் வேண்டும் என்று) வரம் கேட்பேன் என்று கூறினாள்.

விளக்கம் : அரசன் கீதம் பாடினான் என மாறுக. சூடகம்-ஓரணி கலன். செருக்கிய- மயங்கிய. மஞ்ஞை-மயில் ஆடகச் செம்பொன்- நால்வகைப் பொன்னினொன்று பாவை; சுரமஞ்சரி. அந்தணன்; சீவகன் அநங்கன்- காமன்.கொள்வல். தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று (58)

2053. மடலணி பெண்ணை யீன்ற
மணிமருள் குரும்பை மான
வுடலணி யாவி நைய
வுருத்தெழு முலையி னாளு
மடலணி தோழி மாரு
மார்வத்திற் கழும விப்பாற்
கடலணி திலகம் போலக்
கதிர்திரை முளைத்த தன்றே.

பொருள் : மடல் அணி பெண்ணை ஈன்ற மணிமருள் குரும்பை மான - மடலை அணிந்த பனை பெற்ற நீலமணியை நிறத்தால் மருட்டும் குரும்பை போல; உடல் அணி ஆவி நைய உருத்து எழும் முலையினாளும் - (ஆடவரின்) உடலிற் பொருந்திய உயிர் வருந்தத் தோன்றி வளரும் முலையாளும்; அடல் அணி தோழிமாரும் - பிறரை வருத்தும் அழகினையுடைய தோழியரும்; ஆர்வத்தில் கழும - வரம் வேண்ட எண்ணும் ஆவலிலே திரள; இப்பால் - இனி; கடல் அணி திலகம்போலக் கதிர்திரை முளைத்தது - கடல் அணிந்த பொட்டுப்போல ஞாயிறு கடல்மிசை தோன்றியது.

விளக்கம் : வடிவால் குரும்பையைப் போன்ற முலை, நிறத்தால் மணி மருள்முலை என இயைப்பர் நச்சினார்க்கினியர். மணிமருள் குரும்பைமான என்றே செய்யுள் உள்ளது மற்றும் பனங்குரும்பையின் நிறம், நீலமணி போன்றது; முலைக்கண்கள் மட்டுமே நீலமணியை மருட்டுவன. முலைக்கண்களையே கூறினாரெனின், விதந்து கூறுவார் என்க. ( 59 )

2054. பொன்னியன் மணியுந் தாருங்
கண்ணியும் புனைந்து செம்பொன்
மின்னியற் பட்டஞ் சோத்தி
யானெய்பால் வெறுப்ப வூட்டி
மன்னியற் பாண்டில் பண்ணி
மடந்தைகோல் கொள்ள வைய
மின்னியற் பாவை யேற்பத்
தோழியோ டேறி னாளே.

பொருள் : மன்இயல் பாண்டில் - நிலைபெற்ற செலவினையுடைய எருத்தை; பொன் இயல் மணியும் தாரும் கண்ணியும் புனைந்து - பொன்னால் ஆன மணி, தார், கண்ணி ஆகியவற்றைப் புனைந்து; மின்இயல் பட்டம் சேர்த்தி - மின்னால் இயன்ற பட்டத்தைச் சேர்த்து; ஆன்நெய் பால் வெறுப்ப ஊட்டி - ஆவின் நெய்யையும் பாலையும் தெவிட்ட ஊட்டி; பண்ணி - பண்டியிற் பூட்டி; மடந்தை கோல்கொள்ள - ஒரு மடந்தை எருத்தைச் செலுத்துங் கோலைக் கையில் கொள்ள; இன்னியற் பாவை தோழியோடு ஏற்ப வையம் ஏறினாள் - இனிய இயலையுடைய பாவை தன் தோழியுடன் (ஆடவரைக் காணாமற்போகும் போக்கிற்கு) இயைய வண்டியில் ஏறினாள்.

விளக்கம் : தார் கண்ணி என்பன மாலைவகைகள், வெறுப்ப - மிக. பாண்டில் பண்ணி - எருத்தினைப் பூட்டி. ஒரு மடந்தை கோல் கொள்ள என்றவாறு. ஆடவரை வெறுத்தவளாகலின் மடந்தை கோல் கொளல் வேண்டிற்று. ( 60 )

2055. ஆடவ ரிரிய வேகி
யஞ்சொல்லார் சூழக் காமன்
மாடத்து ளிழிந்து மற்றவ்
வள்ளலை மறைய வைத்துச்
சூடமை மாலை சாந்தம்
விளக்கொடு தூப மேந்திச்
சேடியர் தொழுது நிற்பத்
திருமகள் பரவு மன்றே.

பொருள் : ஆடவர் இரிய அம்சொலார் சூழ ஏகி - (அரசன் ஆணையால்) ஆடவர் விலக, அழகிய மொழியாரான பெண்கள் சூழச் சென்று; மாடத்துள் இழிந்து - காமன் கோட்டத்திலே இறங்கி; அவ் வள்ளலை மறைய வைத்து - சீவகனை மறைய வைத்து; சூடு அமை மாலை சாந்தம் விளக்கொடு தூபம் ஏந்தி - சூடுதற்கான மாலையும் சாந்தமும். விளக்கும் தூபமும் எடுத்துக் கொண்டு; சேடியர் தொழுது நிற்ப - பணிமகளிர் காமனைத் தொழுதவாறு நிற்க; திருமகள் பரவும் - திருமகள் அனையாள் பரவுகின்றாள்.

விளக்கம் : ஆடவர் அரசன் ஆணையால் விலக என்க. காமன் மாடம் - காமன் கோயில், (கோட்டம்). வள்ளல்; சீவகன், சேடியர் - பணிமகளிர். திருமகள் : உவமவாகுபெயர்; சுரமஞ்சரி. அன்று, ஏ : அசைகள். ( 61 )

2056. பொன்னிலஞ் சென்னி புல்ல
விடமுழந் தாளை யூன்றி
மின்னவிர் மாலை மென்பூங்
குழல்வலத் தோளின் வீழக்
கன்னியங் கமுகின் கண்போற்
கலனணி யெருத்தங் கோட்டித்
தன்னிரு கையுங் கூப்பித்
தையலீ துரைக்கு மன்றே.

பொருள் : இட முழந்தாளை ஊன்றி - இட முழந்தாளை ஊன்றி; மின் அவிர் மாலை மென் பூங்குழல் வலத்தோளில் வீழ - ஒளிவீசும் மாலையும் மென்மையான மலர்க்குழலும் வலத் தோளிலே விழ; கன்னிஅம் கமுகின் கண்போல் கலன் அணி எருத்தம் கோட்டி - ஈனாத இளங்கமுகின் கண்போலக் கலனை அணிந்த கழுத்தை வலத்தே சாய்த்து; பொன்நிலம் சென்னி புல்ல - பொன் தரையிலே முடிபொருந்த (வணங்கியெழுந்து); தன் இரு கையும் கூப்பி - தன் இரண்டு கையையுங் குவித்து; தையல் ஈது உரைக்கும் - சுரமஞ்சரி இதனை இயம்புவாள்.

விளக்கம் : பொன்னிலம் - பொற்றகடுபடுத்த நிலம். மாலையும் குழலும் வலத்தோளின் வீழ என்க. கன்னியங்கமுகு - இளமையும் அழகுமுடைய கமுகு. கண்போல் எருத்தம், கலன் அணி எருத்தம் எனத் தனித்தனி கூட்டுக. ( 62 )

2057. தாமரைச் செங்கட் செவ்வாய்த்
தமனியக் குழையி னாயோர்
காமமிங் குடையேன் காளை
சீவக னகலஞ் சோத்தின்
மாமணி மகர மம்பு
வண்சிலைக் கரும்பு மான்றேர்
பூமலி மார்ப வீவ
லூரொடும் பொலிய வென்றாள்.

பொருள் : தாமரைச் செங்கண் செவ்வாய் தமனியக் குழையினாய் - தாமரையனைய கண்களையும் செவ்வாயையும் உடைய, பொற்குழையினாய்!; ஓர் காமம் இங்கு உடையேன் - ஒரு வரம் இங்கு வேண்டுதலையுடையேன்; பூமலி மார்ப! - மலர் நிறைந்த மார்பனே!; காளை சீவகன் அகலம் சேர்த்தின் - காளையாகிய சீவகன் மார்பிலே என்னைச் சேர்ப்பித்தால்; மாமணி மகரம் அம்பு வண்சிலைக் கரும்பு மான்தேர் - பெரிய மகரக் கொடியும், அம்பும், வில்லாகிய கரும்பும் தேரும்; ஊரொடும் பொலிய ஈவல் என்றாள் - ஊருடன் விளங்கத் தருவேன் என்றாள்.

விளக்கம் : காமமிக்குடையேன் என்றும் பாடம். தமனியக்குழை - பொற்குழை. காமம் : ஆகுபெயர். காளைசீவகன் - காளையாகிய சீவகன். அகலம் - மார்பு. மகரம் - ஒரு மீன். காமனுக்கு அது கொடியாகலின், மகரம் ஈவேன் என்றாள், ஈவல் : தன்மை ஒருமை. ( 63 )

2058. மட்டவிழ் கோதை பெற்றாய்
மனமகிழ் காத லானை
யிட்டிடை நோவ நில்லா
தெழுகென வேந்த றோழன்
பட்டிமை யுரைத்த தோராள்
பரவிய தெய்வந் தான்வாய்
விட்டுரைத் திட்ட தென்றே
வேற்கணாள் பரவி மீண்டாள்.

பொருள் : மட்டு அவிழ் கோதை! - தேன் மலருங் கோதையாய்!; மனம்மகிழ் காதலானைப் பெற்றாய் - நின் மனத்திலே மகிழ்ந்த காதலானை அடைந்தாய்; இட்டிடைநோவ நில்லாது எழுக என - இனி, சிற்றிடை வருந்த நில்லாமற் செல்க என்று; ஏந்தல் தோழன் பட்டிமை உரைத்தது ஓராள் - சீவகன் தோழன் வஞ்சனையாகக் கூறியதை அறியாளாய்; பரவிய தெய்வந்தான் வாய்விட்டு உரைத்திட்டது என்றே - தான் வாழ்த்திய தெய்வமே வாய்விட்டுக் கூறியது என்றே; வேற்கணாள் பரவி மீண்டாள் - வேலனைய கண்ணாள் மீட்டும் வாழ்த்தித் திரும்பினாள்.

விளக்கம் : கோதை : விளி. இட்டிடை - சிற்றிடை. தோழன் - ஈண்டுப் புத்திசேனன். பட்டிமை - வஞ்சனை. பரவப்பட்ட தெய்வம் என்க. வேற்கணாள் : சுரமஞ்சரி. ( 64 )

2059. அடியிறை கொண்ட செம்பொ
னாடகச் சிலம்பி னாளக்
கடியறை மருங்கி னின்ற
மைந்தனைக் கண்டு நாணி
வடியுறு கடைக்க ணோக்க
நெஞ்சுதுட் கென்ன வார்பூங்
கொடியுற வொசிந்து நின்றாள்
குழைமுகத் திருவோ டொப்பாள்.

பொருள் : அடிஇறை கொண்ட ஆடகச் செம்பொன் சிலம்பினாள் - அடியிலே தங்குதல் கொண்ட ஆடகப் பொன்னாலான சிலம்பினாளாகிய; குழைமுகத் திருவோடு ஒப்பாள் - குழை முகத்தினையுடைய திருவைப் போன்றவள்; அக் கடி அறை மருங்கில் நின்ற மைந்தனைக் கண்டு நாணி - அந்த மணவறை அருகிலே நின்ற சீவகனைக் கண்டு வெட்கமுற்று; வடியுறு கடைக்கண் நோக்க - மாவடுவனைய கடைக்கண் அவனை நோக்க; நெஞ்சு துட்கு என்ன - நெஞ்சம் திடுக்கிட; வார் பூங்கொடி உற ஒசிந்து நின்றாள் - நீண்ட பூங்கொடிபோல வளைந்து நின்றாள்.

விளக்கம் : கடியறை - மணவறை. சீவகன் அக் கிழ வடிவத்தை விட்டுப் பழைய வடிவத்தோடு நின்றான் என்பது தோன்ற மைந்தனைக் கண்டு என்றார். கொடியுற என்புழி உற என்பது உவமஉருபு. ( 65 )

2060. இலங்குபொன் னோலை மின்ன
வின்முகஞ் சிறிது கோட்டி
யலங்கலுங் குழலுந் தாழ
வருமணிக் குழையோர் காதிற்
கலந்தொளி கான்று நின்று
கதிர்விடு திருவில் வீச
நலங்கனிந் துருகி நின்றா
ணாமவேற் காமர் கண்ணாள்.

பொருள் : நாம வேல் காமர் கண்ணாள் - அச்சந்தரும் வேல் போன்ற விருப்பூட்டுங் கண்ணாள்; அலங்கலும் குழலும் தாழ - மாலையுங் குழலும் தாழவும்; அரு மணிக்குழை ஓர் காதில் கலந்து ஒளி கான்று நின்று கதிர் விடு திருவில் வீச - அரிய மணிக்குழை ஒரு காதிற் கலக்குமாறு ஒளியை உமிழ்ந்து நின்று ஒளியுடைய வான வில்லென வீச; இலங்கு பொன் ஓலை மின்ன - விளங்கும் பொன்னோலை ஒளிவிட; இன்முகம் சிறிது கோட்டி - இனிய முகத்தைச் சிறிதே சாய்த்து; நலம் கனிந்து உருகி நின்றாள் - அன்பு முற்றி நெஞ்சுருகி நின்றாள்.

விளக்கம் : கோட்டி - சாய்த்து, ஒளிகான்று - ஒளிவீசி, நலம் - அன்பு. நாமவேல் - அச்சமுண்டாக்கும் வேல். வேற்கண், காமர்கண் எனத் தனித் தனி கூட்டுக. ( 66 )

2061. எரிமணிக் கலாபத் திட்ட
விந்திர நீல மென்னு
மொருமணி யுந்தி நேரே
யொருகதி ருமிழ்வ தேபோ
லருமணிப் பூணி னாட
னவ்வயி றணிந்த கோலத்
திருமயி ரொழுக்கம் வந்தென்
றிண்ணிறை கவர்ந்த தன்றே.

பொருள் : எரிமணிக் கலாபத்து இட்ட இந்திர நீலம் என்னும் ஒருமணி - விளங்கும் மணிமேகலையில் அழுத்திய, இந்திர நீலம் என்கிற ஒப்பிலாத மணி; உந்தி நேரே ஒரு கதிர் உமிழ்வதே போல் - உந்திக்கு நேராக ஒரு கதிரை உமிழுந் தன்மை போல; அருமணிப் பூணினாள் தன் அவ்வயிறு அணிந்த - அரிய மணிக்கலனுடையாளின் வயிற்றை அழகுசெய்த; கோலத் திரு மயிர் ஒழுக்கம் - அழகிய மயிரொழுங்கு; வந்து என் திண்நிறை கவர்ந்தது - வந்து என் திண்ணிய நிறையைக் கவர்ந்தது.

விளக்கம் : மயிரொழுங் கொன்றே திண்ணிறை கவர்ந்ததாயின் ஒழிந்தன என் செய்யா என்று சீவகன் தன்னுளெண்ணினான். வயிற்றினை அழகு செய்யும் மயிரொழுங்கு மேகலையில் அழுத்திய இந்திர நீலம் என்ற மணி ஒளிவிடுவதுபோல இருந்தது என்பது கருத்து இது தற்குறிப்பேற்றவணி. ( 67 )

2062. தேறினேன் றெய்வ மென்றே
தீண்டிலே னாயி னுய்யேன்
சீறடி பரவ வந்தே
னருளெனத் தொழுது சோந்து
நாறிருங் குழலி னாளை
நாகணை விடையிற் புல்லிக்
கோறொடுத் தநங்க னெய்யக்
குழைந்துதார் திவண்ட தன்றே.

பொருள் : தெய்வம் என்றே தேறினேன் - யான் நின்னைத் தெய்வம் என்றே தெளிந்தேன்; சீறடி பரவ வந்தேன் - நின் சிற்றடியை வழிபட வந்தேன்; தீண்டிலேன் ஆயின் உய்யேன் - இனி நின்னைத் தீண்டே னெனின் வாழ்கிலேன்; அருள் எனத் தொழுது சேர்ந்து - அருள்வாய் என்று வணங்கிச் சேர்ந்து; கோல் தொடுத்து அநங்கண் எய்ய - அம்பெடுத்துக் காமன் செலுத்த; நாறு இருங் குழலினாளை நாகு அணை விடையின் புல்லி - மணமுடைய கருங் குழலாளை நாகைத் தழுவும் விடையெனத் தழுவ; தார் குழைந்து திவண்டது - இவன் அணிந்த தார் குழைந்து வாடியது.

விளக்கம் : நின்னடியைப் பரவ வந்தேன்; வந்த யான் நின்னைத் தெய்வம் என்றே கருதிப் பிறகு மானிடமென்றே தெளிந்தேன் என்று, கொண்டு கூட்டி விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 68 )

2063. கலைபுறஞ் சூழ்ந்த வல்குற் கார்மயிற் சாய லாளு
மலைபுறங் கண்ட மார்பின் வாங்குவிற் றடக்கை யானு
மிலைபுறங் கண்ட கண்ணி யின்றமி ழியற்கை யின்ப
நிலைபெற நெறியிற் றுய்த்தார் நிகர்தமக் கிலாத நீரார்.

பொருள் : கலை புறம் சூழ்ந்த அல்குல் கார் மயில் சாயலாளும் - கலையைப் புறத்தே சூழக் கொண்ட அல்குலையுடைய காருக்குரிய மயிலனைய சாயலாளும்; இலை புறங்கண்ட கண்ணி மலை புறங் கண்ட மார்பின் வாங்குவில் தடக்கையானும் - பச்சிலையைக் கொண்ட கண்ணியையும், மலைதோற்ற மார்பினையும், தடக்கையையும் உடைய சீவகனும்; ஆகிய தமக்கு நிகர் இலாத நீரார் - தமக்கு உவமையில்லாத தன்மையார்; இன்தமிழ் இயற்கை இன்பம் - இனிய தமிழிற் கூறிய இயற்கைப் புணர்ச்சியாகிய இன்பத்தை; நிலைபெற நெறியின் துய்த்தார் - நிலை பெறும்படி முறையின் நுகர்ந்தார்.

விளக்கம் : இது, சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்படுதலின், உலகியல் வழக்கான காந்தருவமாம். ( 69 )

2064. குங்குமங் குயின்ற கொம்மைக்
குவிமுலை குளிர்ப்பத் தைவந்
தங்கலுழ் மேனி யல்குற்
காசுடன் றிருத்தி யம்பொற்
பொங்குபூஞ் சிலம்பிற் போர்த்த
பூந்துக ளவித்து மாதர்
கொங்கலர் கோதை சூட்டிக்
குழனலந் திருத்தி னானே.

பொருள் : குங்குமம் குயின்ற கொம்மைக் குவிமுலை குளிர்ப்பத் தைவந்து - (வேட்கை தீர நுகராமையிற் பிறந்த வெப்பம் நீங்க) சுரமஞ்சரியின் குங்குமம் பூசிய பருத்த குவிந்த முலைகள் குளிரத் தடவி; அம் கலுழ் மேனி அல்குல் காசு உடன் திருத்தி - அழகு வழியும் மேனியில் உள்ள அணியையும் அல்குலிலுள்ள மணிமேகலையின் காசுகளையும் சேரத் திருத்தி; பொங்கு அம் பொன் பூஞ்சிலம்பில் போர்த்த பூந்துகள் அவித்து - ஒலிக்கும் அழகிய பொற் சிலம்பிலே போர்த்த மகரந்தத் தூளைத் துடைத்து; மாதர் கொங்கு அலர் கோதை சூட்டி - அவளுடைய தேனலரும் மாலையை அணிந்து; சூழல் நலம் திருத்தினான் - குழலையும் நலமுறத் திருத்தினான்.

விளக்கம் : அவ்விடம் மலர் பரப்பிக் கிடத்தலின் பூந்துகள் கூறினார். ( 70 )

வேறு

2065. வானார்கமழ் மதுவுஞ் சாந்து மேந்தி
மதுத்துளித்து வண்டுஞ் சுரும்பு மூசுந்
தேனார்பூங் கோதாய் நினக்குக் காமன்
சிலையிரண்டுஞ் செவ்வனே கோலித் தந்தான்
றானாரப் பண்ணித் தடறு நீக்கித்
தண்குருதி தோய்த்துத் தகைமை சான்ற
வூனார்ந்த வோரிணை யம்புந் தந்தா
னென்னை யுளனாக வேண்டி னானே.

பொருள் : வான் ஆர் கமழ் மதுவும் சாந்தும் ஏந்தி - வானில் நிறைந்து கமழும் மதுவையும் சாந்தையும் ஏந்தி; மதுத் துளித்து - அம்மதுவைத் துளித்தலின்; மூசும் வண்டும் சுரும்பும் தேன் ஆர் பூங்கோதாய்! - மொய்க்கின்ற வண்டுகளும் சுரும்புகளும் தேனினமும் நுகரும் மலர் மாலையாய்!; நினக்குக் காமன் சிலை இரண்டும் செவ்வனே கோலித் தந்தான் - நினக்குக்
காமன் தன் கையில் வில்லையும் சேம வில்லையும் நேரே வளைத்துத் தந்தான்; தான்ஆரப் பண்ணித் தடறு நீக்கி - (அதுவுமன்றி) அவன் தான் தாழ்வறப் பண்ணி உறையை நீக்கி; தண் குருதி தோய்த்து - தண்ணிய குருதியைத் தோய்த்து; தகைமை சான்ற - அழகு நிறைந்த; ஊன் ஆர்ந்த ஓர் இணை அம்பும் தந்தான் - ஊன் பொருந்திய ஒப்பற்ற இரண்டு அம்புகளையும் கொடுத்தான் ; என்னை உளன் ஆக வேண்டினானே! - (அவற்றிற் கிலக்காக) என்னை உயிருடன் இருக்க வேண்டியிருந்தானே!

விளக்கம் : இவ்வாறு காமன் செயலை இகழ்ந்து கூறினான். ஏகாரம் : தேற்றம். நோக்கிய மேனி வாடுதலின், ஊனார்ந்த என்றார். இச்செய்யுளோடு, அடையார் முனையகத் தமர்மேம் படுநர்க்குப், படை வழங்குவதோர் பண்புண் டாகலின்; உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில், இருகரும் புருவ மாக வீக்க என வரும் (2-42-5) சிலப்பதிகாரப் பகுதியும், அதற்கு அடியார்க்கு நல்லார் உரைத்த சேம வில்லையும் கூட்டி என வரும் விளக்கமும் ஒப்புநோக்கற் பாலன. ( 71 )

2066. கண்ணக்க கண்ணிக் கமழ்பூங் குழற்க
ரும்போ தீஞ்சொ லாள்கதிர் முலைகளின்
வண்ணக்கு வானு நிலனுமெல் லாம்விலை
யேமழை மின்னு நுசுப்பி னாளைப்
பெண்ணுக் கணியாக வேண்டி மேலைப்
பெரியோர் பெருமான் படைத்தா னென்று
புண்ணக்க வேலான் புகழ நாணிப்
பூநோக்கிப் பூக்கொசிந்த கொம்பொத் தாளே.

பொருள் : கள் நக்க கண்ணி - தேனைச் சிந்தும் பூமாலை; கமழ்பூங் குழல் - மணக்கும் பூங்குழலும்; கரும்பு ஏர் தீஞ்சொலாள் - கரும்பனைய இனிய மொழியும் உடையாளின்; கதிர் முலைகளின் வண்ணக்கு - ஒளிரும் முலைகளின் அழகுக்கு; வானும் நிலனும் எல்லாம் விலையே - விண்ணும் மண்ணும் யாவும் விலையாகுமா?; மழை மின்னும் நுகப்பினாளை - மழையில் மின்னுப்போலும் இடையினாளை; பெண்ணுக்கு அணியாக வேண்டி - பெண்களுக்கு அணியாக விரும்பி ; மேலைப் பெரியோர் பெருமான் படைத்தான் என்று - மேனாளிற் பெரியோர் பெருமானாகிய பிரமன் படைத்தான் என்று; புண் நக்க வேலான் புகழ நாணி - புண் செய்யும் வேலான் புகழ வெள்கி; பூ நோக்கி பூக்கு ஒசிந்த கொம்பு ஒத்தாள் - குவளை மலர் போலும் பார்வையினாள் மலர்க்கு வாடிய கொம்பு போன்றாள்.

விளக்கம் : இது முன்னிலைப் படர்க்கை. கரும்பேர் - கரும்பை ஒத்த. வண்ணக்கு - வண்ணத்திற்கு. விலையே என்புழி ஏகாரம் வினா. மின்னு - மின்னல். பெரியோர் பெருமான் : பிரமன். பூநோக்கி : பெயர் ; சுரமஞ்சரி. ( 72 )

வேறு

2067. இறங்கிய மாதர் தன்னை
யெரிமணிக் கடகக் கையாற்
குறங்கின்மேற் றழுவி வைத்துக்
கோதையங் குருதி வேலா
னறந்தலை நீங்கக் காக்கு
மரசன்யா னாக நாளைச்
சிறந்தநின் னலத்தைச் சேரே
னாய்விடிற் செல்க வென்றான்.

பொருள் : கோதை அம் குருதி வேலான் - மாலையணிந்த குருதி வேலினான்; இறங்கிய மாதர் தன்னை - நாணிய மங்கையை; எரி மணிக் கடகக் கையால் தழுவிக் குறங்கின்மேல் வைத்து - விளங்கும் மணிகள் இழைத்த கடகமணிந்த கையினால் தழுவித் தன் துடைமேல் வைத்துக்கொண்டு; நாளைச் சிறந்த நின் நலத்தைச் சேரேனாய் விடின் - நாளைப்போதில் சிறப்புற்ற நின் இன்பத்தை அடையாமல் விட்டால்; அறம் தலை நீங்கக் காக்கும் அரசன் யானாக - அறம் கெட ஆளும் கட்டியங்காரனாகக் கடவேன்; செல்க என்றான் - இனி நீ செல்வாயாக என்றான்.

விளக்கம் : இறங்கிய - நாணிய. குறங்கு - துடை. வேலான் : சீவகன். அறந்தலை நீங்கக் காக்கு மரசன் என்றது ஈண்டுக் குறிப்பாற் கட்டியங்காரனை உணர்த்தி நின்றது. ( 73 )

2068. வில்லிடு மணிசெ யாழி மெல்விரல் விதியிற் கூப்பி
நல்லடி பணிந்து நிற்ப நங்கைநீ நடுங்க வேண்டா
செல்கெனச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மிழற்ற வொல்கி
யல்குற்கா சொலிப்ப வாயம் பாவைசென் றெய்தி னாளே.

பொருள் : வில்இடு மணிசெய் ஆழி மெல்விரல் விதியின் கூப்பி - ஒளிவிடும் மணியிழைத்த ஆழியணிந்த மெல்விரலை முறையாக்குவித்து ; நல்அடி பணிந்து நிற்ப - அழகிய அடிகளை வணங்கி நிற்க; நங்கை! நீ நடுங்க வேண்டா, செல்க என - நங்கையே! நீ அஞ்சவேண்டா; செல்க என்று விடுப்ப; பாவை - சுரமஞ்சரி; சிலம்பு செம் பொன் கிண்கிணி மிழற்ற - சிலம்பும் கிண்கிணியும் ஒலிக்க; அல்குல் காசு ஒலிப்ப - அல்குலில் மேகலை மணிகள் ஒலிக்க; ஒல்கி - அசைந்து நடந்து; ஆயம் சென்று எய்தினாள் - ஆயத்தினருடன் சென்று சேர்ந்தாள்.

விளக்கம் : வில் - ஒளி. ஆழி - மோதிரம். நங்கை : விளி, சிலம்பும் கிண்கிணியும் மிழற்ற என்க. காசு - மணி. ஆயம் - தோழியர் கூட்டம் பாவை : சுரமஞ்சரி. ( 74 )

2069. பருமணிப் படங்கொ ணாகப் பையெனப் பரந்த வல்கு
லெரிமணிப் பூணி னானுக் கின்னல மொழிய வேகித்
திருமணிச் சிவிகை யேறிச் செம்பொனீண் மாடம் புக்காள்
விரிமணி விளங்கு மாலை வெம்முலை வேற்க ணாளே.

பொருள் : பருமணிப் படம்கொள் நாகப் பையெனப் பரந்த அல்குல் - பெரிய மணியைப் படத்திற் கொண்ட அரவின் படமெனப் பரவிய அல்குலையும்; விரிமணி விளங்கும் மாலை - மிகுதியான மணி ஒளிரும் மாலையினையும்; வெம்முலை வேற்கணாள் - வெம்முலையையும் உடைய வேற்கண்ணாள்; எரிமணிப் பூணினானுக்கு இன்நலம் ஒழிய ஏகி - விளங்கும் மணிக்கலனுடையான்பால் இனிய அன்பு நிற்கச் சென்று : திரு மணிச் சிவிகை ஏறி - அழகிய மாணிக்கச் சிவிகையிலே அமர்ந்து; செம்பொன் நீள் மாடம்புக்காள் - பொன்னாலியன்ற பெரிய மனையிலே புகுந்தாள்.

விளக்கம் : பருமணி - பரிய மணி பை - படம், அல்குலையும் மாலையையும் முலையையும் உடைய கண்ணாள் எனக் கூட்டுக. (75 )

2070. திருவிற்றான் மாரி கற்பான்
றுவலைநாட் செய்வ தேபோ
லுருவிற்றாய்த் துளிக்குந் தேற
லோங்குதார் மார்பன் றோழர்
பொருவிற்றா நம்பி காம
திலகனென் றிருந்த போழ்திற்
செருவிற்றாழ் நுதலி னாள்கண்
மணத்திறஞ் செப்பு கின்றார்.

பொருள் : திருவில் தான் மாரி கற்பான் துவலை நாள் செய்வதே போல் - இந்திரவில் தான் மழை பெய்யக் கற்பதற்கு நீர்த்துளியை நாட்கொள்வது போல்; உருவிற்றாய் - வடிவுடையதாய்; துளிக்கும் தேறல் ஓங்கு தார் மார்பன் தோழர் - துளிக்கும் தேனையுடைய மேம்பட்ட மார்பையுடைய சீவகனின் தோழர்கள்; பொருவிற்று ஆம் நம்பி - யாம் உவமிக்கத் தகுதியாம் நம்பி; காம திலகன் என்று இருந்தபோதில் - காம திலகன் என ஒரு பெயர் கூறி இருந்த அளவிலே; செருவில் தாழ் நுதலினாள் கண் மணத் திறம் செப்புகின்றார் - போருக்குரிய வில் உவமையில் தோற்கும் புருவத்தினாளிடம் மணத்திறத்தைக் கூறுகின்றார்.

விளக்கம் : திருவில் - வானவில். கற்பான் : வினையெச்சம். துவலை - துளி. உருவிற்றாய் - வடிவுடையதாய். பொருவிற்றா நம்பி - பொரு விற்று ஆம் நம்பி எனக் கண்ணழித்துக் கொள்க. ( 76 )

2071. கனைகடலமுதுந் தேனுங் கலந்துகொண் டெழுதப் பட்ட
புனைகொடி பூத்த தேபோற் பொறுக்கலா நுசுப்பிற் பாவை
நனைகுடைந் துண்டு தேக்கி நன்மணி வண்டு பாடும்
புனைகடி மாலை மாதர் திறத்திது மொழிந்து விட்டார்.

பொருள் : கனை கடல் அமுதும் தேனும் கலந்து கொண்டு எழுதப்பட்ட - ஒலி கடலில் அமுதையும் தேனையும் ஒன்றாகக் கலந்துகொண்டு வரையப்பட்ட; புனை கொடி - ஒப்பனை செய்த கொடி; பூத்ததே போல் பொறுக்கலா நுசுப்பின் பாவை - இரண்டு முகைகளைப் பூத்த தன்மை போல் உள்ள முலைகளைப் பொறாத இடையையுடைய பாவையாலாகிய; நனைகுடைந்து உண்டு தேக்கி நன்மணி வண்டு பாடும் - தேனைக் குடைந்து பருகித் தம் வயிற்றை நிறைத்து அழகிய நீலமணி போலும் வண்டுகள் பாடுகின்ற; புனைகடி மாலை மாதர் திறத்து - அணிந்த மணமுறும் மாலையையுடைய சுரமஞ்சரியின் சுற்றத்தாரிடம்; இது மொழிந்து விட்டார் - இம் மணத்தைச் சொல்லி விடுத்தனர்.

விளக்கம் : திறம் - சுற்றம். எழுதப்பட்ட நனையையுடையதொரு கொடி; கொடி, அமுதையும் தேனையும் தன்னுள்ளே கலந்துகொண்டு இரண்டு முகையைப் பூத்த தன்மைபோலிருக்கின்ற முலைகளைப் பொறாத நுசுப்பினையுடைய பாவைபோலு மாதர், வண்டு குடைந்து உண்டு தன்வயிற்றை நிறைத்துப் பாடும் மாலையையுடைய மாதர் என்க என்பர் நச்சினார்க்கினியர். ( 77 )

2072. ஐயற்கென் றுரைத்த மாற்றங்
கேட்டலு மலங்க னாய்கன்
வெய்யதேன் வாய்க்கொண் டாற்போல்
விழுங்கலோ டுமிழ்த றேற்றான்
செய்வதெ னோற்றி லாதே
னோற்றிலா டிறத்தி னென்று
மையல்கொண் டிருப்ப வப்பாற்
குமரிதன் மதியிற் சூழ்ந்தாள்.

பொருள் : ஐயற்கு என்று உரைத்த மாற்றம் - சீவகற்கு இவளைத் தரவேண்டும் என்று கூறிய மொழியை; அலங்கல் நாய்கன் - மாலையணிந்த வணிகன்; வெய்ய தேன் வாய்க்கொண்டாற்போல் விழுங்கலோடு உமிழ்தல் தேற்றான் - வெப்பம் ஊட்டும் தேனை வாய்க்கொண்டவன் விழுங்கவோ உமிழவோ இயலாது திகைப்பதுபோல உடன்படுதலையும் மறுத்தலையும் அறியாதவனாய்; நோற்றிலாள் திறத்தின் நோற்றிலாதேன் செய்வது என்என்று - நல்வினையில்லாதாள்பால், நல்வினையில்லாத நான் செய்வது என் என்று; மையல்கொண்டிருப்ப - மயங்கியிருப்ப; அப்பால் குமரிதன் மதியின் சூழ்ந்தாள் - அங்கே சுரமஞ்சரி தன் அறிவினாலே அறத்தொடு நிற்றலைச் சிந்தித்தாள்.

விளக்கம் : வெப்பமுடைய தேனை வாயிற்கொண்டால், வெம்மையால் நஞ்சென்று விழுங்காமலும், இனிமையால் உமிழாதேயும் இருப்பதைப்போல, இவள் நோன்பினால் உடம்படாமலும், சீவகனாதலின் மறுக்காமலும் இருந்தான். ( 78 )

2073. பொற்பமை தாமக் கந்து
பொருந்திய மின்னுப் போல
வெற்பக வெரியு மாலைப்
பவளத்தூண் பொருந்தி யின்னீர்க்
கற்பெனு மாலை வீசி
நாணெனுங் களிவண் டோப்பிச்
சொற்புக ரின்றித் தோழிக்
கறத்தினோ டரிவை நின்றாள்.

பொருள் : அரிவை - சுரமஞ்சரி; பொற்புஅமை தாமக்கந்து பொருந்திய மின்னுப்போல - அழகு பொருந்திய தாமத்தையுடைய தூணைச் சார்ந்து நின்ற மின்போல; எல்பக எரியும் மாலைப் பவளத் தூண் பொருந்தி - ஞாயிறு தோற்க ஒளிவிடும். மாலையையுடைய பவளத் தூணைச் சார்ந்து நின்று; இன்நீர்க் கற்பு எனும் மாலை வீசி - இனிய தன்மையையுடைய கற்பு என்னும் மாலையை வீசி; நாண் எனும் களிவண்டு ஒப்பி - நாணம் என்னும் களிப்பையுடைய வண்டை ஒட்டி; சொல்புகர் இன்றித் தோழிக்கு அறத்தினோடு நின்றாள் - சொற்குற்றம் இல்லாமல், தோழிக்கு அறத்தொடு நின்றாள்.

விளக்கம் : மாலையால் ஒட்டவே வண்டு மிகவும் நீங்காதாம், உயிரினுஞ் சிறந்தன்று நாணே; நாணினும் - செய்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று (தொல். களவு. 22) என்றதனாற் சிறிது நாணை விட்டாள். அறத்தினொடு : இன் : அசை. தாமம் - ஒழுங்கு, மாலையும் ஆம். எல் - சூரியன். பக என்பது இங்கு தோற்றுஓட என்னும் பொருளைக் குறித்தது. இன் நீர் - இனிய தன்மை - நாணம் என்பதை வண்டாகவும், கற்பு என்பதைப் பூமாலையாகவும் உருவகித்தார். ( 79 )

2074. வழிவளர் மயிலஞ் சாயற் பவளப்பூம் பாவை யன்ன
கழிவளர் கயற்க ணங்கை கற்பினை யறிந்து தோழி
யழிமது மாலை சோத்தி யடிபணிந் தார வாழ்த்திப்
பொழிமதுப் புயலைங் கூந்தற் செவிலியைப் பொருந்திச் சொன்னாள்.

பொருள் : வழிவளர் மயில்அம் சாயல் பவளப்பூம் பாவை அன்ன - நன்னெறியிலே வளர்ந்த மயிலனைய அழகிய சாயலையுடைய பவளத்தாலாகிய பாவை போன்ற; கழிவளர் கயற்கண் நங்கை கற்பினைத் தோழி அறிந்து - கழியிலே வளரும் கயல் போலுங் கண்களை உடைய நங்கையின் கற்பினைத் தோழி அறிந்து; அழிமதுமாலை சேர்த்தி அடிபணிந்து ஆர வாழ்த்தி - தேன்வழியும் மாலையை அவட்கு அணிந்து, அடியிற் பணிந்து நிறைய வாழ்த்துக் கூறி; மதுமொழி புயல் ஐங்கூந்தல் - தேன் வழியும், முகிலனைய ஐம்பாலையுடைய அத்தோழி; செவிலியைப் பொருந்திச் சொன்னாள் - செவிலியை அடைந்து கூறினாள்.

விளக்கம் : ஐங்கூந்தலைச் செவிலிக்காக்கினும் பொருந்தும். வழி - நல்லவழி, வழி, ஆசாரம் என்பர் நச்சினார்க்கினியர். ஆசாரம் - நல்லொழுக்கம். கழி - உப்பங்கழி. கற்பினை - கற்புக்கடம் பூண்ட தன்மையை என்க. தோழி செவிலியைப் பொருந்தி அறத்தொடு நின்றாள் என்க. ( 80 )

2075. நனைவளர் கோதை நற்றாய் நங்கைக்கீ துள்ள மென்று
சுனைவளர் குவளை யுண்கட் சுமதிக்குச் செவிலி செப்பக்
கனயிருட் கனவிற் கண்டேன் காமர்பூம் பொய்கை வற்ற
வனையதாங் கன்னி நீரின் றற்றதா நங்கைக் கென்றாள்.

பொருள் : நனைவளர் கோதை நற்றாய்! - தேன் பொருந்திய மாலையையுடைய நற்றாயே!; நங்கைக்கு ஈது உள்ளம் என்று - சுரமஞ்சரியின் உள்ளம் இதுவாகும் என்று; சுனைவளர் குவளை உண்கண் சுமதிக்கு - சுனையில் வளருங் குவளை போன்ற மையுண்ட கண்களையுடைய சுமதிக்கு; செவிலிசெப்ப - செவிலி கூற; கனை இருள் கனவில் காமர்பூம் பொய்கை வற்றக் கண்டேன் - நள்ளிரவிற் கனவிலே விருப்பம் ஊட்டும் மலர்ப்பொய்கை வற்றக்கண்டேன்; அனையதுஆம் கன்னிநீர் இன்று நங்கைக்கு அற்றது ஆம் என்றாள் - அத் தன்மையதாகிய கன்னித் தன்மை இன்று நங்கைக்கு நீங்கியபோலும் என்றாள்.

விளக்கம் : நனை - அரும்பு, நற்றாய் : சுமதி, விளி, நங்கை என்றது சுரமஞ்சரியை. கனையிருள் - மிக்க இருள். கனவில் பொய்கை வற்றக் கண்டேன் என மாறுக. அக் கனவின்பயன் இஃதே போலும் என்றாள் என்பது கருத்து. ( 81 )

2076. கெண்டையுஞ் சிலையுந் திங்க
ளிளமையுங் கிடந்து தேங்கொ
டொண்டையங் கனியு முத்துந்
தொழதக வணிந்து தூங்குங்
குண்டல முடைய திங்க
ளிதுவெனு முகத்தி தாதை
வண்புகழ்க் குபேர தத்தன்
கேட்டனன் மனைவி சொன்னாள்.

பொருள் : கெண்டையும் சிலையும் இளமைத் திங்களும் கிடந்து - கயல் மீனும் வில்லும் பிறைத்திங்களும் கிடந்து; தேன்கொள் தொண்டைஅம் கனியும் முத்தும் தொழுதக அணிந்து - இனிமை கொண்ட கொவ்வைக் கனியையும் முத்தையும் நன்கு மதிப்பு அணிந்து; தூங்கும் குண்டலம் உடைய திங்கள் இது எனும் - அசையுங் குண்டலத்தையுடைய முழுமதி இதுவென்கிற; முகத்தி தாதை கேட்டனன் - முகமுடைய சுரமஞ்சரியின் தந்தை என்னென்று கேட்டனன்; மனைவி சொன்னாள் - மனைவியாகிய சுமதி இதனைக் கூறினள்.

விளக்கம் : இங்குக் கூறிய முழுமதி இல்பொருளுவமை. கெண்டை கண்களுக்கும் சிலை புருவங்களுக்கும் பிறை நெற்றிக்கும் தொண்டைக்கனி உதடுகட்கும் முத்து பற்களுக்கும் உவமைகள். நற்றாய் தந்தைக்கு அறத்தொடு நின்றாள் என்க. ( 82 )

2077. செருவிளைத் தனலும் வேலோய்
சிறுமுதுக் குறைவி தானே
பெருவளைப் பிட்டுக் காத்த
கற்பிது போலு மையன்
கரிவிளைத் தாய்ந்த சுண்ணம்
வாட்டின னென்று கண்டாய்
திருவிளை தேம்பெய் மாரி
பாற்கடற் பெய்த தென்றாள்.

பொருள் : செருவிளைத்து அனலும் வேலோய்! - போரை விளைத்துக் கனலும் வேலுடையாய்; சிறுமுதுக் குறைவிதானே பெருவளைப் பிட்டுக் காத்த கற்பு இது - சிறுவயதிலே பேரறிவு பெற்ற சுரமஞ்சரிதானே பெரிய வேலியிட்டுக் காத்த கற்பாகிய இது; ஐயன் கரிவிளைத்து ஆய்ந்த சுண்ணம் காட்டினன் என்று போலும் - சீவகன் சான்று காட்டி ஆராய்ந்த சுண்ணத்தைத் தீதெனக் காட்டினானென்று கருதிப்போலும்; என்று கண்டாய் -என்று அறிக; திருவிளை தேன்பெய் மாரி பாற்கடல் பெய்தது என்றாள் - மற்றும் இது செல்வம் விளையும் தேன்பெய்கின்ற மழை பாற்கடலிலே பெய்தது ஆயிற்று என்றாள்.

விளக்கம் : நச்சினார்க்கினியர் இரண்டு செய்யுளையும் ஒன்றாக்கிக் குபேரதத்தன் கேட்டனன் என்பதை யிறுதியிற் சேர்ப்பர்.   வேலோய் என்றது குபேரதத்தனை. சிறுமுதுக்குறைவி - இளமையிலேயே பேரறிவு படைத்தவள். ஈண்டுச் சுரமஞ்சரி. வளைப்பு - காவல். கற்பு என்றது ஆடவரைக் காணேன் எனக் கொண்ட மனத்திட்பத்தை. கரி - சான்று. பாற்கடலில் தேன்மாரி பெய்ததுபோல என்பதொரு பழமொழி. ( 83 )

2078. கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கெலா முணர்த்தி யார்க்கும்
வேட்பன வடிசி லாடை விழுக்கலன் மாலை சாந்தங்
கோட்குறை வின்றி யாக்கிக் குழுமியங் கறங்கி யார்ப்ப
நாட்கடி மாலை யாற்கு நங்கையை நல்கி னானே.

பொருள் : நாய்கன் கேட்பது விரும்பி - குபேரதத்தன் அதனைக் கேட்பதிலே விருப்பங்காட்டி; கிளைக்கெலாம் உணர்த்தி - உறவினர்க்கெல்லாம் அறிவித்து; யார்க்கும் வேட்பன அடிசில் ஆடை விழுக்கலன் மாலை சாந்தம் கோள குறைவு இன்றி ஆக்கி - யாவருக்கும் விரும்பப்படுவனவாகிய உணவும் ஆடையும் சிறந்த பூணும் மாலையும் சாந்தமும் கொள்ளுதலிற் குறைவில்லாமற் செய்து; குழும் இயம் கறங்கி ஆர்ப்ப - கூடிய மணவியங்கள் எழுந்தொலிக்க; நாள் - நல்ல நாளிலே; கடிமாலையாற்கு - மணமுறு மாலையணிந்த சீவகனுக்கு; நங்கையை நல்கினான் - சுரமஞ்சரியைக் கொடுத்தான்.

விளக்கம் : கேட்டலும் என்றும் பாடம். இதுவே நல்ல பாடம். கேட்பது - கேட்கற்பாலது நாய்கன்; குபேரதத்தன். யார்க்கும் கோள் குறைவின்றி ஆக்கி என்க. குழும் இயம் : வினைத்தொகை. நாள் - நன்னாளில். மாலையான் : சீவகன். ( 84 )

2079. பரியகஞ் சிலம்பு பைம்பொற்
கிண்கிணி யார்ந்த பாதத்
தரிவைய ராடன் மிக்கா
ரருமணி வீணை வல்லா
ருரியநூற் றெண்மர் செம்பொ
னொன்றரைக் கோடி மூன்று
ரெரியழன் முன்னர் நோந்தே
னென்மகட் கென்று சொன்னான்.

பொருள் : பரியகம் சிலம்பு பைம்பொன் கிண்கிணி ஆர்ந்த பாதத்து அரிவையர் - காற்சரியும் சிலம்பும் கிண்கிணியும் பொருந்திய அடிகளையுடைய அரிவையர்; ஆடல்மிக்கார் அருமணி வீணைவல்லார் உரிய நூற்றெண்மர் - ஆடலிற் சிறந்தாரும் அரிய மணிகளிழைத்த யாழில் வல்லாருமாக உரியவராய் நூற்றெண்மரும்; ஒன்றரைக்கோடி செம்பொன் - ஒன்றரைக் கோடி பொன்னும்; மூன்று ஊர் - மூன்று ஊர்களையும்; என்மகட்கு எரி அழல் முன்னர் நேர்ந்தேன் என்று சொன்னான் - என் மகளுக்கு எரியும் தீயின்முன்னர்க் கொடுத்தேன் என்று கூறினான்.

விளக்கம் : பரியகம் - காற்சரி என்னுமோ ரணிகலம். ஆடன்மிக்காரும் வீணை வல்லாரும் ஆகிய அரிவையர்; பரியக முதலியவற்றையுடைய பாதத்தராகிய அரிவையர் எனத் தனித்தனி கூட்டுக. ( 85 )

2080. மாசறு மணியு முத்தும் வயிரமு மொளிரு மேனி
யாசறு செம்பொ னார்ந்த வலங்கலங் குன்ற னானுந்
தூசுறு பரவை யல்குற் றூமணிக் கொம்ப னாளுங்
காசறக் கலந்த வின்பக் கடலகத் தழுந்தி னாரே.

பொருள் : மாசு அறு மணியும் முத்தும் வயிரமும் ஒளிரும் மேனி - குற்றமில்லாத மணியும் முத்தும் வயிரமும் விளங்கும் மேனியில்; ஆசு அறு செம்பொன் ஆர்ந்த அலங்கல் அம்குன்று அனானும் - துரிசற்ற சிவந்த பொன்னாலாகிய மாலையணிந்த அழகிய குன்று போன்றவனும்; தூசு உறு பரவை அல்குல் தூமணிக்கொம்பு அனாளும் - ஆடை புனைந்த பரவிய அல்குலையுடைய தூய மணிக்கொடி போன்றவளும்; காசு அறக் கலந்த இன்பக் கடலகத்து அழுந்தினார் - தூயதாகக் கூடிய இன்பக் கடலிலே முழுகினார்.

விளக்கம் : இவ்வாசிரியர் காதலரைக் குன்றனானும் கொம்பனாளும் என்றே பற்பல இடங்களினும் கூறும் இயல்புடையராதலை உணர்க. காசு - குற்றம். ( 86 )

2081. பொன்வரை பொருத யானைப்
புணர்மருப் பனைய வாகித்
தென்வரைச் சாந்து மூழ்கித்
திரள்வடஞ் சுமந்து வீங்கி
மின்வளர் மருங்குல் செற்ற
வெம்முலை மணிக்கண் சேப்பத்
தொன்னலம் பருகித் தோன்ற
றுறக்கம்புக் கவர்க ளொத்தான்.

பொருள் : பொன்வரை பொருத - பொன் மலையொடு போர் செய்த; யானைப்புணர் மருப்பு அனைய ஆகி - யானையின் இரண்டு கொம்புகளைப் போன்றனவாகி; தென்வரைச் சாந்து மூழ்கி - பொதியமலையின் சந்தனத்திலே முழுகி; திரள்வடம் சுமந்து வீங்கி - திரண்ட முத்தாரத்தைச் சுமந்து பருத்து; மின்வளர் மருங்குல் செற்ற - மின் கொடியென வளர்ந்த இடையை வருத்திய; வெம்முலை மணிக்கண் சேப்ப - வெவ்விய முலைகளின் நீலமணி போன்ற கண்கள் சிவக்க; தொல்நலம் பருகி - பழமையான நலத்தை நுகர்ந்து; தோன்றல் - சீவகன்; துறக்கம் புக்கவர்கள் ஒத்தான் - துறக்கத்தைச் சேர்ந்தவர்களைப் போன்றான்.

விளக்கம் : பொன்வரை சீவகன் மார்புக்குவமை. தென்வரை - பொதியமலை, வெம்முலை - விரும்புதற்குக் காரணமான முலை. மணிக்கண் - நீலமணி போன்று கறுத்த கண். சேப்ப - சிவப்ப. தோன்றல் பருகித் துறக்கம் புக்கவரை ஒத்தான் என மாறுக. துறக்கத்திற் புகுந்தவர் அரம்பையர் போகத்தையே நுகர்ந்திருப்பதால் ஒத்தான் என்றார். ( 87 )

2082. வரிக்கழற் குருசின் மார்பு
மடந்தைவெம் முலையுந் தம்முட்
செருச்செய்து திளைத்துப் போரிற்
சிலம்பொலி கலந்த பாணி
யரிப்பறை யனுங்க வார்க்கு
மேகலைக் குரலோ டீண்டிப்
புரிக்குழல் புலம்ப வைகிப்
பூவணை விடுக்க லானே.

பொருள் : வரிக்கழல் குருசில் மார்பும் - வரிகளமைந்த கழலையுடைய சீவகன் மார்பும்; மடந்தை வெம்முலையும் - சுரமஞ்சரியின் வெவ்விய முலையும்; தம்முள் செருச்செய்து போரில் திளைத்து - தம்மிலே போர்புரிந்து அதிலே பயிறலின்; பாணி கலந்த அரி பறை அனுங்க ஆர்க்கும் மேகலைக் குரலோடு சிலம்பொலி ஈண்டி - தாளத்தோடு கலந்த பறைகெட ஒலிக்கும் மேகலைக் குரலோடே சிலம்பொலியுங் கூட; புரிக்குழல் புலம்ப வைகி - முறுக்குடைய குழல் குலைந்து தனிப்பத் தங்கி; பூவணை விடுக்கலான் - மலரணையை விடா தவனானான்.

விளக்கம் : திளைத்து - திளைக்க. ஈண்டி - ஈண்ட. திளைத்த போர் எனவும் பாடம். வரிக்கழல் - வரியையுடைய கழல். குருசில் : சீவகன். மடந்தை : சுரமஞ்சரி. திளைத்து - திளைப்ப. பாணி - தாளம். அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை என்க. அனுங்க - கெட. ( 88 )

2083. மணியியல் வள்ளத் தேந்த
மதுமகிழ்ந் தனந்தர் கூர
வணிமலர்க் குவளைப் பைம்போ
தொருகையி னருளி யம்பொற்
பிணையனா ளருகு சேரிற்
பேதுறு நுசுப்பென் றெண்ணித்
துணையமை தோள்க டம்மாற்
றோன்றறான் புல்லி னானே.

பொருள் : மணி இயல் வள்ளத்து மது ஏந்த - (மேலும் கூட்டத்தை விழைந்து) மணிகள் இழைத்த கிண்ணத்திலே மதுவை ஏந்த; மகிழ்ந்து அனந்தர் கூர - அதனை அவள் பருகி மகிழ்ந்து மயக்கம் மிகுதலின்; பிணை அனாள் அருகுசேரின் பேது உறும் நுசுப்பு என்று எண்ணி - மான் போன்றவளை நெருங்கித் தழுவின் இடைவருந்தும் என்று எண்ணி; அணி மலர்க்குவளைப் பைம்போது ஒரு கையின் அருளி - அழகிய மலராகிய குவளை மலரை ஒரு கையாலே கூந்தலுக்கு நல்கி; துணை அமை தோள்கள் தம்மால் தோன்றல்தான் புல்லினான் - இணையாகப் பொருந்திய தோள்களாற் சீவகன் தன் மார்பினால் நெகிழத் தழுவினான்.

விளக்கம் : அஞ்சொற் பிணையலும் நறிய சேர்த்தி என்பது பாடமாயின் புகழ்மாலை சூட்டி என்க.  மது ஏந்த அதனை மகிழ்ந்தென்க. அனந்தர் - மயக்கம். பிணையனாள் - பெண்மான் போன்ற சுரமஞ்சரி. நுசுப்புப் பேதுஉறும் என மாறுக. ( 89 )

2084. மல்லலங் கங்கை போலும் பலர்முயங் கார மார்பிற்
புல்லன்மின் போமின் வேண்டா வென்றவள் புலந்து நீங்க
முல்லையங் கோதை யொன்றும் பிழைப்பிலேன் முனிய னீயென்
றல்லலுற் றரத்த மார்ந்த சீறடி தொழுதிட் டானே.

பொருள் : மல்லல்அம் கங்கைபோலும் பலர் முயங்கு ஆர மார்பின் - வளமிகு கங்கைபோலப் பலரும் பலமுகமாக முயங்கும் மார்பினால்; புல்லன்மின், போமின், வேண்டா என்று - இனித் தழுவற்க, செல்லுமின், தீண்ட வேண்டா என்று கூறி; அவள் புலந்து நீங்க - அவள் ஊடி நீங்கி நிற்க; முல்லை அம் கோதை! ஒன்றும் பிழைப்பிலேன், நீ முனியல் என்று - முல்லை மலர்க்கோதையே! யான் ஏதும் பிழை செய்திலேன், நீ முனியாதே என்று; அல்லல் உற்று - வருத்தமுற்று; அரத்தம் ஆர்ந்த சீறடி தொழுதிட்டான் - செந்நிறம் பொருந்திய சிற்றடியை வணங்கினான்.

விளக்கம் : அவன் மார்பு உற முயங்காமையின் பிறர் முயங்க வைத்தான் என்று கருதிப் பிணங்கினாள். மல்லலங் கங்கை போலும் பலர்முயங் காரமார்பிற் புல்லன்மின் போமின் என்னுமிதனோடு பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு என்னும் திருக்குறளை (1311) ஒப்பு நோக்குக. ஊடன் மிகுதி தோன்றப் புல்லன்மின் போமின் வேண்டா என்று வற்புறுத்தோதினள். ( 90 )

2085. வட்டிகைப் பாவை நோக்கி
மகிழ்ந்திருந் திலிரோ வென்னாத்
தொட்டிமை யுருவந் தோன்றச்
சுவரையே பொருந்தி நின்றாய்
கட்டழ குடைய நங்கை
நீயெனக் கருதிக் கண்ணா
னொட்டியா னோக்கிற் றென்றா
னொருபிடி நுசுப்பி னாட்கே.

பொருள் : வட்டிகைப் பாவை நோக்கி மகிழ்ந்திருந்திலிரோ என்னா - வட்டிகையால் சுவரில் எழுதிய பாவையை நோக்கி மகிழ்வுடன் இருந்திலிரோ என்று வினவ; ஒரு பிடி நுசுப்பினாட்கு - ஒரு பிடியளவு இடையாளுக்கு; தொட்டிமை உருவம் தோன்றச் சுவரையே பொருந்தி நின்றாய் - ஒற்றுமையாக நின்உருவம் விளங்கச் சுவரிலே பொருந்தி நின்றனை; கட்டழகுடைய நங்கை நீ எனக் கருதி - பேரழகுடைய நங்கையாகிய நீயே அவ்வுருவம் என்று நினைத்து; கண்ணால் ஒட்டி யான் நோக்கிற்று என்றான் - கண்ணால் ஒப்பிட்டு நோக்கினேன் என்றான்.

விளக்கம் : அவன்மார்புற முயங்காமையின் ஊடியவள் சுவரிலே பொருந்தி நின்றாளாக, அச் சுவரிலெழுதிய பாவை இவள் போலவே இருத்தலின் மயங்கிய அவன் இரண்டுருவினையும் ஒப்பிட்டுப்பார்த்தான். ஒப்பிட்டு நோக்கியபோது அவ்வோவியம் அழகுற இருப்பதாக எண்ணி நோக்கினானென்று மேலும் ஊடினாள். நச்சினார்க்கினியர் அவளுருவம் பளிங்குச் சுவரிலே பொறித்ததனை யிவளென்று கருதி வணங்கினானென்றும், அதுகண்டு புலந்தாளென்றுங் கூறுவர். வட்டிகைப் பாவை என்றும், சுவரையே பொருந்தி நின்றாய் என்றும் வருவதால் அவர் உரை பொருந்தாது. ( 91 )

2086. நுண்டுகி னெகிழ்ந்த வல்குன்
மணிபரந் திமைப்ப நொந்து
கண்களை யிடுகக் கோட்டிக்
காமத்திற் செயிர்த்து நோக்கிக்
குண்டல மிலங்கக் கோதை
கூந்தலோ டவிழ்ந்து சோர
வொண்டொடி யூடி நின்றா
ளொளிமணிப் பூங்கொம் பொப்பாள்.

பொருள் : நுண் துகில் நெகிழ்ந்த அல்குல் மணிபரந்து இமைப்ப நொந்து - நுண்ணிய ஆடை நெகிழ்ந்ததனால் அல்குலின் மேல் மேகலை மணி பரவி ஒளிர வருந்தி; கண்களை இடுகக் கோட்டி - கண்களைச் சுருக்கிச் சாய்த்து; காமத்தால் செயிர்த்து நோக்கி - காமத்தினாற் சினந்து பார்த்து; குண்டலம் இலங்க கோதை கூந்தலோடு அவிழ்ந்து சோர - குண்டலம் விளங்கவும், கூந்தலுடன் மாலை அவிழ்ந்து சோரவும்; ஒளிமணிப் பூங்கொம்பு ஒப்பாள் - ஒளிவிடும் மணிக்கொடி போன்றாளாகிய; ஒண்தொடி ஊடி நின்றாள் - ஒள்ளிய வளையினாள் பிணங்கி நின்றாள்.

விளக்கம் : ஒப்பிட்டுப் பார்த்தேன் என்று காரணத்துடன் கூறியும் தன்னினும் அவ்வுருவம் அழகுற இருப்பதாக எண்ணியே நோக்கினான் என்று ஊடினாள். அது மேற்செய்யுளில் வரும். ( 92 )

2087. கிழவனாய்ப் பாடி வந்தென்
கீழ்ச்சிறை யிருப்பக் கண்டே
னெழுதிய பாவை நோக்கி
யிமையவித் திருப்பக் கண்டே
னொழிகவிக் காம மோரூ
ரிரண்டஃக மாயிற் றென்றாங்
கழுதகண் ணீர்கண் மைந்த
னாவிபோழ்ந் திட்ட வன்றே.

பொருள் : கிழவனாய் என் சிறைக்கீழ் வந்து பாடி இருப்பக் கண்டேன் - கிழவனாய் என் காவலிடத்தே வந்து பாடி இருப்ப அதுகண்டேன்; எழுதிய பாவை நோக்கி இமை அவித்து இருப்பக் கண்டேன் - சுவரில் எழுதிய பாவையைப் பார்த்து இமையாமல் இருக்கவும் பார்த்தேன்; ஓர் ஊர் இரண்டு அஃகம் ஆயிற்று - ஓர் ஊரிலே இரண்டு முறைமை நிகழ்ந்தது (ஆதலால்); இக்காமம் ஒழிக என்று - ஈண்டு நிகழ்த்துகின்ற காமத்தை ஒழிக என்று; ஆங்கு அழுத கண்ணீர்கள் மைந்தன் ஆவி போழ்ந்திட்ட - அப்போது அவள் அழுத கண்ணீர்கள் சீவகன் உயிரை வருத்தின.

விளக்கம் : நீர்கள் என்றதனை, என், பாராட்டைப்பாலோ சில (கலி. 85) என்றாற்போலக் கொள்க. நச்சினார்க்கினியர் முற்செய்யுட்களிற் பளிக்குச் சுவரும் நிழலும் அமைத்துக் கொண்டதற்குத் தக, ஈண்டு, எழுதிய என்பதற்கு ஒரு படத்திலே எழுத வேண்டி என்று கூறுவர். இவ்வாறே தம் விடாப்பிடியைக் காட்டுவது அவர் வழக்கம். ( 93 )

2088. அலங்கறா தவிழ வஞ்செஞ்
சீறடி யணிந்த வம்பூஞ்
சிலம்பின்மேற் சென்னி சோத்திச்
சிறியவர் செய்த தீமை
புலம்பலர் பொறுப்ப ரன்றே
பெரியவ ரென்று கூறி
யிலங்குவேற் கண்ணி யூட
லிளையவ னீக்கி னானே.

பொருள் : இளையவன் - சீவகன்; இலங்குவேல் கண்ணி ஊடல் - விளங்கும் வேலனைய கண்ணியின் ஊடலை; சிறியவர் செய்த தீமை பெரியவர் புலம்பலர் பொறுப்பர் அன்றே என்று கூறி - சிறியோர் செய்த பிழையைப் பெரியோர் வெறாராய்ப் பொறுப்பர் அல்லரோ என்று கூறி; அலங்கல் தாது அவிழ - மாலையின் மகரந்தம் சிந்த; அம் செஞ்சீறடி அணிந்த அம்பூஞ் சிலம்பின்மேற் சென்னி சேர்த்தி - அழகிய சிவந்த சிற்றடியில் - அணிந்த அழகிய சிலம்பின்மேல் முடியைச் சேர்த்து; நீக்கினான் - அவளுடலை நீக்கினான்.

விளக்கம் : அலங்கல் தாது சிலம்பின்மேல் அவிழ என இயைப்பர் நச்சினார்க்கினியர். சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராயிற் பொறுப்பது கடனே என வரும் வெற்றிவேற்கையும் காண்க. ( 94 )

2089. யாழ்கொன்ற கிளவி யாட
னழிழ்துறழ் புலவி நீக்கிக்
காழின்றிக் கனிந்த காமக்
கொழுங்கனி நுகர்ந்து காதற்
றாழ்கின்ற தாம மார்பன்
றையலோ டாடி விள்ளா
னூழ்சென்ற மதியம் வெய்யோ
னொட்டியொன் றாய தொத்தான்.

பொருள் : காதல் தாழ்கின்ற தாம மார்பன் - காதலால் தங்குகின்ற சீவகன்; யாழ் கொன்ற கிளவியாள் தன் - யாழை வென்ற மொழியாளின்; அமிழ்து உறழ் புலவி நீக்கி - அமிர்தை வென்ற புலவியைப் போக்கி; காழ் இன்றிக் கனிந்த காமக் கொழுங்கனி நுகர்ந்து - விதையின்றிப் பழுத்த கொழுவிய காமக் கனியை அயின்று; தையலோடு ஆடி விள்ளான் - சுரமஞ்சரியுடன் ஆடி நீங்கானாய்; ஊழ் சென்ற மதியம் வெய்யோன் ஒட்டி ஒன்றாயது ஒத்தான் - முறையால் நிறைந்த உவவுமதியைக் கதிரவன் பொருந்தி ஒன்றாய இயல்பை ஒத்தான்.

விளக்கம் : கிளவியாள் : சுரமஞ்சரி. காமம் புணர்தலின் உடல் இனி தென்பது பற்றி அமிழ்துறழ் புலவி என்றார். காழின்றிக் கனிந்த காமக் கொழுங்கனி என்பதனோடு காமத்துக் காழில் கனி என்னும் வள்ளுவர் மொழியையும் நினைக. ஊழ்சென்ற மதியம் - முறையே நிரம்பிய முழுத் திங்கள். ( 95 )

2090. பச்சிலைப் பட்டு முத்தும்
பவளமு மிமைக்கு மல்கு
னச்சிலை வேற்கண் மாதர்
நகைமுக முறுவன் மாந்தி
யிச்சையுங் குறிப்பு நோக்கி
யெய்வதே கரும மாகக்
கைச்சிலை கணையோ டேந்திக்
காமனிக் கடையைக் காப்பான்.

பொருள் : பச்சிலைப் பட்டும் முத்தும் பவளமும் இமைக்கும் அல்குல் - பசிய இலைத் தொழிலையுடைய பட்டும் முத்தும் பவளமும் ஒளிரும் அல்குலையும்; நச்சு இலை வேற்கண் மாதர் - நஞ்சு பொருந்திய இலைவடிவான வேலனைய கண்ணையும் உடைய மாதரது; நகைமுக முறுவல் மாந்தி - நகைமுகத்தின் முறுவலை நுகர; இச்சையும் குறிப்பும் நோக்கி - அவள் நினைவையும் அவள் குறிப்பையும் பார்த்து; எய்வதே கருமம் ஆக - அம்பை விடுவதே தொழிலாக; காமன் கைச்சிலை கணையோடு ஏந்தி - காமனானவன் கைவில்லையும் அம்பையும் ஏந்தியவாறு; இக்கடையைக் காப்பான் - இவ் வாயிலை இப்போது காப்பானாயினான்; வேறு காவலர் இலர்.

விளக்கம் : பச்சிலைப்பட்டு - பசிய இலைத்தொழிலையுடைய பட்டு. நச்சிலை - நஞ்சு தோய்த்த இலை. மாதர் : சுரமஞ்சரி. மாந்தி - மாந்த. இச்சை - வேட்கை. இக்கடையைக் காப்பான் காமனே என்றது பண்டு ஆடவர் அணுகாதபடி காக்கப்பட்ட இக்கடையை இப்பொழுது ஆடவன் பிரியாதபடி காமன் ஒருவனே காப்பவன் ஆயினான் என்பதுபட நின்றது. கடை - வாயில். காமனிக் கடையைக் காப்பான் என்பது காமன் போர்விளைத்துச் சுரமஞ்சரிக்கும் சீவகனுக்கும் காதலை யுண்டாக்கிப் புணர்ச்சியை மேலும் மேலும் விரும்புமாறு செய்தான் என்ற கருத்தை யுள்ளடக்கி நின்றது. ( 96 )

2091. கடிப்பிணை காது சோத்திச்
சிகழிகை காத நாறத்
தொடுத்தலர் மாலை சூட்டிக்
கிம்புரி முத்த மென்றோ
ளடுத்தணிந் தாகஞ் சாந்தி
னணிபெற வெழுதி யல்கு
லுடுத்தபொற் கலாபந் தைவந்
தொளிவளை திருத்தி னானே.

பொருள் : கடிப்பினை காது சேர்த்தி - கடிப்பிணை என்னும் அணியைக் காதில் அணிந்து; சிகழிகை காதம் நாற - மயிர் முடியின் கண் மணம் காதவழி நாறுமாறு; தொடுத்து அலர்மாலை சூட்டி தொடுக்கப்பட்டு அலர்ந்த மலர் மாலையை அணிந்து; கிம்புரி முத்தம் மென் தோள் அடுத்து அணிந்து ; கிம்புரி வடிவம் உள்ள முத்துமாலையை மெல்லிய தோளிலே அணிந்து ; ஆகம் சாந்தின் அணிபெற எழுதி - மார்பைச் சந்தனத்தாலே அழகுற எழுதி; அல்குல் உடுத்த பொன் கலாபம் தைவந்து - அல்குலிலே அணிந்திருந்த பொன்மேகலையைத் தடவி; ஒளிவளை திருத்தினான் - ஒளிபொருந்திய வளையைத் திருந்த அணிந்தான்.

விளக்கம் : கடிப்பு இணை எனக் கண்ணழித்துக் கொள்க. கடிப்பு - ஒருவகைச் செவியணிகலன். சிகழிகை - முடி. முத்தம் - முத்தமாலை. பொற்கலாபம் - பொன்னாலியன்ற மேகலை. தைவந்து - தடவி. ( 97 )

2092. இலங்குவெள் ளருவிக் குன்றத்
தெழுந்ததண் டகரச் செந்தீ
நலங்கிள ரகிலுந் தேனுங்
கட்டியு நன்கு கூட்டிப்
புலம்பற வளர்த்த வம்மென்
பூம்புகை யமளி யங்கண்
விலங்கர சனைய காளை
வெள்வளைக் கிதனைச் சொன்னான்.

பொருள் : இலங்கு வெள் அருவிக் குன்றத்து - விளங்கும் வெள்ளருவி வீழுங் குன்றிலே; எழுந்த தண் தகரச் செந்நீ - தோன்றிய தண்ணிய தகரவிறகின் செந்தீயிலே; நலம்கிளர் அகிலும் தேனும் கட்டியும் நன்கு கூட்டி - அழகு விளங்கும் அகிலும் தேனும் நேர்கட்டியும் நன்றாகக் கூட்டி; புலம்பு அற வளர்த்த அம்மென் பூம்புகை அமளி அங்கண் - குற்றமின்றி வளர்த்த புகையினையுடைய அமளிக்கண்ணே; விலங்கரசு அனைய காளை வெள்வளைக்கு இதனைச் சொன்னான் - சிங்கத்தைப் போன்ற காளையாகிய சீவகன் வெள்வளையுடைய சுரமஞ்சரியை நோக்கி இதனை இயம்பினான்.

விளக்கம் : தகரம் - தகர விறகு. கட்டி - நேர்கட்டி என்னுமொரு மணப்பொருள். புலம்பு - குற்றம். அமளி - படுக்கை. விலங்கரசு - சிங்கம். ( 98 )

2093. கருமநீ கவல வேண்டா
கயற்கணாய் பிரிவல் சின்னா
ளருமைநின் கவினைத் தாங்க
லதுபொரு ளென்று கூறப்
பெருமநீ வேண்டிற் றல்லால்
வேண்டுவ பிறிதொன் றுண்டோ
வொருமைநின் மனத்திற் சென்றே
னுவப்பதே யுவப்ப தென்றாள்.

பொருள் : கயற்கணாய்! - கயலனைய கண்ணாய்!; கருமம் - ஒரு காரியமுளது; நீ கவல வேண்டா - நீ வருந்த வேண்டா, சில்நாள் பிரிவல் - சில நாட்கள் நின்னைப் பிரிவேன்; அருமை நின் கவினைத் தாங்கல் - (அப்போது நீ) அருமையாகிய நின் அழகைத் தாங்யிருப்பாயாக; அது பொருள் - அதுவே நின் கடமையான பொருளாகும்; என்று கூற - என்றுரைக்க; பெரும! - பெரியோனே!; நீ வேண்டிற்று அல்லால் - நீ விரும்புவதனை யல்லாமல்; வேண்டுவ பிறிது ஒன்று உண்டோ? - வேண்டுவது வேறொன்றுண்டோ?; ஒருமை நின்மனத்தின் சென்றேன் - யான் ஒரு தன்மையான நின்னுடைய மனம்போல ஒழுகினேன் (ஆதலின்); உவப்பதே உவப்பது என்றான் - நின் மனவிருப்பமே என் விருப்பம் என்றாள்.

விளக்கம் : தாங்கல் : அல்லீற்று வியங்கோள். வேண்டுவ பிறிதொன்றுண்டோ : பன்மையொருமை மயக்கம். ( 99 )

2094. நாணொடு மிடைந்த தேங்கொ
ணடுக்குறு கிளவி கேட்டே
பூண்வடுப் பொறிப்பப் புல்லிப்
புனைநலம் புலம்ப வைகேன்
றேன்மிடை கோதை யென்று
திருமக னெழுந்து போகி
வாண்மிடை தோழர் சூழத்
தன்மனை மகிழ்ந்து புக்கான்.

பொருள் : நாணொடு மிடைந்த தேன்கொள் நடுக்குஉறு கிளவி கேட்டு - நாணுடன் கலந்த இனிமை கொண்ட அச்சம் பொருந்திய மொழியைக் கேட்டு; தேன்மிடை கோதை - தேன் மிகுந்த கோதாய்!; புனைநலம் புலம்ப வைகேன் - ஒப்பனையுறும் நின் அழகு வருந்தத் தங்கியிரேன்; என்று - எனக் கூறி; பூண்வடு பொறிப்பப் புல்லி - தன் மார்பில் அணிந்த பூணின் வடு அவள் மார்பில் பொருந்தத் தழுவி; திருமகன் எழுந்து போகி - சீவகன் எழுந்து சென்று; வாள்மிடை தோழர் சூழத் தன்மனை மகிழ்ந்து புக்கான் - வாள் நெருங்கிய தோழர் சூழ்ந்துவரத் தன் இல்லத்தே மகிழ்வுடன் புகுந்தான்.

விளக்கம் : மிடைந்த - கலந்த. தேம் - இனிமை. வைகேன் : தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று. திருமகன் : சீவகன். ( 100 )

2095. புரவியுங் களிறு நோக்கிப்
பொன்னெடுந் தேரு நோக்கி
யிரவினும் பகலு மோவா
தென்மகன் யாண்டை யானென்
றழுதகண் ணீரி னாலே
கைகழீஇ யவலிக் கின்ற
மெழுகெரி முகந்த தொக்குந்
தாய்மெலி வகற்றி னானே.

பொருள் : புரவியும் களிறும் நோக்கி - குதிரைகளையும் யானைகளையும் பார்த்து; பொன் நெடுந்தேரும் நேக்கி-பொன்னாலாகிய நீண்ட தேரையும் பார்த்து; இரவினும் பகலும் ஓவாது என் மகன் யாண்டையான் என்ற - இரவும் பகலும் ஒழிவின்றி என் மகன் எங்கேயுளான் என்று; அழுத கண்ணீரினாலே கைகழீஇ அவலிக்கின்ற - அழுத கண்ணீரைக் கொண்டு கையைக் கழுவி வருந்துகின்ற; மெழுகு எரிமுகந்தது ஒக்கும் தாய் மெலிவு அகற்றினான் - மெழுகு நெருப்பை அணைந்தாற் போல நெஞ்சுருகுகின்ற அன்னையின் வருத்தத்தை அகற்றினான்.

விளக்கம் : இருடிகூற்றைச் சிந்தித்திருத்தலின் கந்துகன் மெலிவையகற்றினானெனல் வேண்டாவாயிற்று என்னும் நச்சினார்க்கினியர் குறிப்பு நுணுக்கமிக்கது. ( 101 )

2096. ஒற்றரு முணர்த லின்றி
யுரையவித் துறுப்பி னாலே
சுற்றத்தார்க் குரைப்ப வேண்டித்
தொக்குடன் றழுவிக் கொள்வா
ரெற்றுவா ரினைந்து சோர்வார்
நம்பியோ நம்பி யென்னா
வுற்றுடன் றழுத கண்ணீர்
காலலைத் தொழுகிற் றன்றே.

பொருள் : ஒற்றரும் உணர்தல் இன்றி உரை அவித்து - ஒற்றரும் உணராதவாறு மொழியை நீக்கி ; உறுப்பினாலே சுற்றத்தார்க்குரைப்ப - உறுப்பின் குறிப்பாலே உறவினர்க்கெல்லாம் அறிவித்தலின்; ஈண்டித் தொக்கு உடன் தழுவிக்கொள்வார் - அவர்கள் செறிந்து திரண்டு சேரத் தழுவிக்கொள்வாராய்; நம்பியோ! நம்பி! என்னா - நம்பியே! நம்பியே! என்று; எற்றுவார் - அடித்துக்கொள்வாரும்; இனைந்து சோர்வார் - வருந்திச் சோர்வாருமாய் : உற்று உடன்று அழுத கண்ணீர் - வந்த வருந்தி அழுத கண்ணீர்; கால் அலைத்து ஒழுகிற்று - காலையிழுத்து ஒழுகியது.

விளக்கம் : இஃது உவகைக்கலுழ்ச்சி. ஒற்றரும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. உறுப்பினாலே உரைத்தலாவது இங்கிதத்தான் உணர்த்துதல். ( 102 )

2097. கந்துகண் கழறக் கல்லென்
கடற்றிரை யவிந்த வண்ணம்
வந்தவர் புலம்பு நீங்க
மறைபுறப் படுமென் றெண்ணி
யெந்தைதா னிறந்த நாளின்
றெனநக ரியம்பி யாரு
மந்தமி லுவகை தன்னா
லகங்குளிர்ப் பெய்தி னாரே.

பொருள் : மறை புறப்படும் என்று எண்ணி - இவ்வுவகையால் இம்மறை வெளியாகும் என்று நினைத்து; கந்துகன் கழற - கந்துகன் கூற; கடல் திரை அவிந்த வண்ணம் வந்தவர் புலம்பு நீங்க - கடல்அலை ஓய்ந்ததுபோல வந்தவர் அழுகையை நிறுத்த; எந்தைதான் இறந்த நாள் இன்று என நகர் இயம்பி - (உண்டான அழுகையையும் மறைக்க) கந்துகனின் தந்தை இறந்த நாள் இது என நகரத்தார்க்குக் கூறி; அந்தம்இல் உவகை தன்னால் யாரும் அகம் குளிர்ப்பு எய்தினார் - அளவற்ற மகிழ்ச்சியால் எல்லோரும் மனம் அமைதி அடைந்தனர்.

விளக்கம் : கடலில் அலையொலி யடங்கியதுபோல. இஃது இல்பொருள் உவமை, அலையொலியடங்குவது உலகில் இல்லை அதனை உவமை கூறியதால், ( 103 )

2098. செங்கயன் மழைக்கட் செவ்வாய்த்
தத்தையு மகிழ்ந்து தீஞ்சொ
லெங்கையைச் சென்று காண்மி
னடிகளென் றிரந்து கூற
மங்கல வகையிற் சோந்து
மதுத்துளி யறாத மாலை
கொங்கலர் கண்ணி சோத்திக்
குங்கும மெழுதி னானே.

பொருள் : செங்கயல் மழைக்கண் செவ்வாய்த் தத்தையும் மகிழ்ந்து - செங்கயல் போலும் தண்ணிய கண்களையும் செவ்வாயையும் உடைய தத்தை (இவனைக்கண்டு) மகிழ்ந்து; அடிகள்! - அடிகளே!; தீசொல் எங்கையைச் சென்று காண்மின் என்று இரந்து கூற - இனிய மொழியையுடைய என் தங்கையைச் சென்று காண்மின் என்று வேண்ட; சேர்ந்து - அவனும் அடைந்து; மங்கல வகையில் - மங்கல முறைமையால்; மதுத்துளி அறாத மாலை கொங்கு அலர் கண்ணி சேர்த்தி - தேன்துளி நீங்காத மாலையையும் மணம் கமழும் கண்ணியையும் முதலில் அணிந்து; குங்குமம் எழுதினான் - குங்குமமும் அணிந்தான்.

விளக்கம் : சுதஞ்சணன் பன்னிருமதியின் என்றதனைத் தத்தை உணர்தலால் தனக்குக் கூட்டமின்மை உணர்தலானும், அவள் வருத்த மிகுதியானும் இங்ஙனம் இரந்து கூறினாள். குணமாலை, கணவன் வருதலின், மங்கல அணிக்கு உடம்பட்டாள். எனினும் கூட்டத்திற்கு உடம்படாமற் கூறுவது அடுத்த செய்யுளில் விளங்கும். ( 104 )

2099. தீவினை யுடைய வென்னைத்
தீண்டன்மி னடிகள் வேண்டா
பாவியே னென்று நொந்து
பரிந்தழு துருகி நையக்
காவியங் கண்ணி யொன்றுங்
கவலல்யா னுய்ந்த தெல்லா
நாவியே நாறு மேனி
நங்கைநின் றவத்தி னென்றான்.

பொருள் : தீவினை உடைய என்னை அடிகள்! தீண்டன்மின்! வேண்டா - தீவினை பொருந்திய என்னை அடிகளே தீண்டாதீர்! தீண்ட வேண்டா!; பாவியேன் - ஏனெனில் நான் பாவியேன்; என்று நொந்து பரிந்து அழுது உருகி நைய - என்றுரைத்து வருந்தி அன்புற்று அழுது உருகி நையாநிற்க; காவிஅம் கண்ணி! ஒன்றும் கவலல் - காவியனைய கண்ணியே ! நீ எதற்கும் வருந்தற்க; யான் உய்ந்தது எல்லாம் - யான் எல்லாவற்றினும் பிழைத்தது; நாவியே நாறும் மேனி நங்கை! நின் தவத்தின் என்றான் - புழுகே மணக்கும் மேனியையுடைய நங்கையே! நின் தவத்தினாலே என்றான்.

விளக்கம் : இவளைத் தீண்டிச் சீவகன் கொலையுண்டானென்று உலகம் குணமாலையைக் கூறலின், தீவினையுடைய என்றாள். தான் விலக்கவும் இவன் தீண்டலின் பின்னும், வேண்டா என்றாள். இவனை அடைந்து வைத்தும் இங்ஙனம் நீக்கிக் கூற வேண்டலின், பாவியேன் என்றான். நந்த திண்தேர் - பண் (சீவக. 1088) என, ஆசிரியனைத் தப்பப் புகுந்ததனையும், பெண்ணிடர் விடுப்ப (சீவக. 1752) என வந்த தன்மையையும், தான் கட்டியங்காரன் தொழிற் பகுதியோரைக் கொல்வோம் என்று நினைத்ததனையும் கருதி, எல்லாம் என்றான். கவலல் : அல்விகுதி பெற்ற எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. ( 105 )

2100. அன்னமென் னடையு நோக்குஞ்
சாயலு மணியு மேரு
மின்னினுண் ணுசுப்பும் வெய்ய
முலைகளு முகமுந் தோன்ற
வென்மனத் தெழுதப் பட்டா
யாயினு மரிவை கேளா
யுன்னையான் பிரிந்த நாளோ
ரூழியே போன்ற தென்றான்.

பொருள் : அரிவை! கேளாய்! - அரிவையே! கேட்பாயாக!; அன்னம் மெல்நடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும் மின்னின் நுண் நுசுப்பும் வெய்ய முலைகளும் முகமும் தோன்ற - அன்னம் போன்ற மெல்லிய நடையையும் பார்வையையும் மென்மையையும் அழகையும் எழுச்சியையும் மின் போன்ற இடையையும் வெவ்விய முலைகளையும் விளங்க; என் மனத்து எழுதப்பட்டாய் - என் மனத்திலே எழுதப்பட்டு நீங்காதிருந்தாய்; ஆயினும் - என்றாலும்; உன்னை யான் பிரிந்த ஓர் நாள் ஊழியே போன்றது என்றான் - நின்னை மெய்யுறு புணர்ச்சியின்றி நான் பிரிந்த ஒருநாள் ஒரூழிக்காலம் போலேயிருந்தது என்றான்.

விளக்கம் : நின்னடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும் நுசுப்பும் முலைகளும் முகமும் என்னெஞ்சத்தே நன்கு பதிந்துள்ளன ஆகலின் நின்னையான் ஒரு சிறிதும் மறந்திலேன், அப்படியிருந்தும் பிரிந்த ஒருநாள் ஊழிபோல என்னை வருத்தியது என்பதாம். இன்னும் என்னை வருத்தாதே என்பது குறிப்பெச்சம். ( 106 )

2101. இளையவண் மகிழ்வ கூறி
யின்றுயி லமர்ந்து பின்னாள்
விளைபொரு ளாய வெல்லாந்
தாதைக்கே வேறு கூறிக்
கிளையவர் சூழ வாமான்
வாணிக னாகிக் கேடி
றளையவிழ் தாம மார்பன்
றன்னகர் நீங்கி னானே.

பொருள் : கேடுஇல் தளை அவிழ் தாமம் மார்பன் - குற்ற மில்லாத முறுக்கவிழ்ந்த மாலையணிந்த மார்பன்; இளையவன் மகிழ்வ கூறி - குணமாலை மகிழ்வனவற்றை இவ்வாறு உரைத்து; இன்துயில் அமர்ந்து - (அவளுடன்) இனிய துயிலைக் கொண்டு; பின்நாள் தாதைக்கே விளைபொருள் ஆய எல்லாம் வேறு கூறி - மற்றைநாள் தந்தையிடமே மேல்வரும் பொருளாக உள்ளவற்றையெல்லாம் தனியே எடுத்துச் சொல்லி; கிளையவர் சூழ - தோழர் சூழ்ந்துவர; வாம்மான் வாணிகன் ஆகி - தாவுங்குதிரையை வாங்கும் வணிகனாகப் புனைந்துகொண்டு; தன்நகர் நீங்கினான் - தன் மனையை விடுத்துச் சென்றான்.

விளக்கம் : பின்னாள் என்று ஈண்டுக் கூறலின், அன்றைப் பகலே வந்தடைவன் (சீவக. 1932) என்றல் ஆகாதென்றுணர்க. மற்றும், நச்சினார்க்கினியர் கூற்றுப்போல, விமலை மணம் ஒருநாளினும். சுரமஞ்சரி மணம் ஒரு நாளினும் முடியாமல் நான்குநாள் வரையாயிருக்க வேண்டும் என்றும் உணர்தல்வேண்டும். சுரமஞ்சரியின் மனையில் மணத்திற்கு ஓரிரவு தங்கினதாக உணரப்படுதலானும், நச்சினார்க்கினியர் உரையின் வண்ணமே விமலையின் மனையிலே இருநாள் தங்கினதாக உணர்வதாலும் என்க. ( 107 )

சுரமஞ்சரியார் இலம்பகம் முற்றிற்று.


© Om Namasivaya. All Rights Reserved.