சீவக சிந்தாமணி

காலத்தால் முதன்மையான சீவக சிந்தாமணி

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும். வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். சத்திர சூடாமணி, சத்ய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களை தழுவி இக்காப்பியம் எழுதப்பட்டது. சிந்தாமணி ஒரு சமணக் காப்பியமட்டுமன்று; தமிழ்ப் பெருங்காப்பியமட்டும் அன்று. அஃது உலகப் பெருங் காப்பியங்களிலே ஒன்று என்று பிற நாட்டாராலும் பாராட்டப்பட்டது சீவக சிந்தாமணி. இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும். சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம் என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர். சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு பேறு அல்லது மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம். அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும். ஒவ்வொரு இலம்பகமும் காப்பிய பாட்டுடைத் தலைவன் சீவகன் அடைந்த ஒரு பேற்றை விளக்குகிறது. காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை இந்நூலின் கதாநாயகனான சீவகன் மணம் செய்து கொண்டான். அதனால், இதற்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய வாழ்வில் அடைய வேண்டிய முக்கியப் பொருட்களைப் பற்றி இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இதை முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்றும் சொல்வர்.

சீவக சிந்தாமணியின் கதைப்போக்கினைக் கூர்ந்துணரின் அது திருமால் சமயத்தவர் கதைகளில் ஒன்றாகிய கண்ணன் கதையையே பெரும்பாலும் ஒத்திருத்தல் காணலாம். சீவகனைக் கண்ணனாகவும் விசயையைத் தேவகியாகவும் சுநந்தையை யசோதையாகவும் சச்சந்தனை வசுதேவனாகவும் கந்துகனை நந்தகோனாகவும் கட்டியங்காரனைக் கஞ்சனாகவும் கொண்டு கதை நிகழ்ச்சிகளையும் நோக்கின் சீவகன் கதை கண்ணன் கதையையே அடியொற்றி நடத்தல் காணலாம். உலகத்திலே பற்றின்றியே எல்லாத் தொழிலினும் ஈடுபட்டு நல்வாழ்க்கை வாழலாம் என்பதற்குக் கண்ணன் கதை ஓர் எடுத்துக்காட்டாகும். கண்ணன் ஆயமகளிரோடு காம விளையாட்டுப் பல நிகழ்த்தினன்; போர் செய்தான்; அரசாட்சி செய்தான்; அன்பர்க்கு உதவினான்; மன்னுயிர் ஓம்பினான். இத்தனை தொழில்களும் செய்துகொண்டே அவன் பற்றின்றி மெய்வாழ்க்கை நடத்தினன் என்பதுதான் கண்ணன்பால் யாம் காணும் பெருந்தகைமை.

சீவக சிந்தாமணி தோன்றியபின்னர், வடமொழியிலும் இந்தக் கதை நூல்வடிவத்திலே தோன்றிற்று. வடமொழியிலே சீவகன் கதை பொருளாகத் தோன்றிய நூல்கள் சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, சீவந்தர நாடகம், சீவந்தரசம்பு என்பனவாம். மகாபுராணத்திலும், சீபுராணத்திலும் (மணிப்பிரவாள நடையில்) இக்கதை கூறப்பட்டிருக்கின்றது. ஆராய்ச்சியாளர் சிலர் சீவக சிந்தாமணி கத்திய சிந்தாமணியின் வழிவந்தது என்று கருதி, கத்திய சிந்தாமணியின் காலமாகிய ஒன்பதாம் நூற்றாண்டை யடுத்து இந்நூல் தோன்றியிருத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர். சீவகசிந்தாமணியின் செய்யுளிற் சில கத்திய சிந்தாமணியின் சுலோகத்தின் மொழி பெயர்ப்பாகத் தோன்றுவதையே இவர்கள் தங்கருத்திற்கு ஆதாரமாகக் கொள்வர். கத்திய சிந்தாமணியே சீவக சிந்தாமணிச் செய்யுள் சிலவற்றை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கலாம் என்று ஏன் கருதக்கூடாது? மேலும் சிந்தாமணி ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னரே தோன்றியிருத்தல் கூடும் என்பதற்கு வேறு சில சான்றுகளும் உள. அவையாவன:

ஏழாம் நுற்றாண்டினராகிய திருநாவுக்கரசர் சமணரான வரலாற்றினை யாவரும் அறிகுவர். திருநாவுக்கரசர் தமது தேவாரத்தின்கண் உலகவாழ்வையே பெரிதென நம்பி இறைவனைக் கருதாதரர் வாழ்க்கை பயனிலா வாழ்க்கை என்னும் கருத்தமைய ஒரு பாட்டில் திருத்தக்கதேவர் இயற்றிய நரி விருத்தத்தைக் குறிப்பிடுகின்றனர். அது,

எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன
துருவ ருக்கம தாவது ணர்விலர்
அரிய யற்கரி யானைய யர்த்துப்போய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே

என்பதாம். நரி விருத்தங் கூறியாங்கு வீண் போகுவர் என்பது இதன் கருத்தென்க. திருநாவுக்கரசர் தருமசேனர் என்னும் பெயரோடு ஆருகதசமயத்துத் தலைமை தாங்கியபொழுது நரி விருத்தத்தை நன்கு படித்துச் சுவைத்திருத்தல் கூடும். அங்ஙனமே சீவக சிந்தாமணியையும் திருநாவுக்கரசர் பயின்றிருப்பர் என்பதற்கு அவருடைய தேவாரங்களிலேயும் சீவக சிந்தாமணியின் தமிழ்மணங் கமழ்தலான் உணரலாம்.

குஞ்சி நமைத்த பூந்தாமந் தோய என்பது சிந்தாமணி.
நும்மால் நமைப்புண்ணேன் என்பது தேவாரம்.

இனி நமது சங்க விலக்கியங்களின்கட் காணப்படுன்ற தமிழ்நடைக்குச் சீவக சிந்தாமணி நெருங்கிய தொடர்புடையதாதல் போன்று தேவார முதலியன நெருக்கமுடையனவாகக் காணப்படவில்லை. சீவக சிந்தாமணியைப் பின்பற்றிய நடையுடையனவேயாகும் தேவாரம் திருவாசகம் திவ்வியப் பிரபந்தம் முதலியன என்பதனை நன்கு தமிழ்ப் பயிற்சியுடையோர் உணர்தல் எளிதேயாகும். இவற்றிற்கெல்லாம் பற்பல எடுத்துக்காட்டுகள் கூறலாமாயினும் விரிவஞ்சி விடுகின்றோம். இன்னும் திருநாவுக்கரசர் காலத்திற்குப் பின்னர் ஆருகதசமயம் பெரிதும் அழிநிலை எய்தியதென்பதும் எல்லோருமறிந்த செய்தியே; அழிநிலை எய்தியதொரு சமயச்சார்பாக இத்தகைய அரும்பெருங் காவியம் தோன்றுதல்கூடும் என்று நினைப்பது தகுதியாகாது. ஆருகத சமயத்தின் பொற்காலம் கடைச்சங்க காலத்தின் இறுதியாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னும் தேவாரகாலமாகிய ஏழாம் நூற்றாண்டின் முன்னும் ஆகிய ஏறக்குறைய நானூறு ஐந்நூறு ஆண்டுகளேயாகும். இந்தக் காலத்தைக் காவியக்காலம் என்றும் கூறலாம். பெருங்கதையும் ஒப்பற்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிந்தாமணியும் பிறவுமாகிய மிகச் சிறந்த பெருங்காப்பியங்கள் இந்தக் காலத்திலே தான் தோன்றின. சமணசமயச் சான்றோராகிய கொங்கு வேளிரே முதன்முதலாகக் காவியங்கட்குக் கால்கோள் விழாச் செய்தவர் ஆவர். கொங்குவேளிரும் இளங்கோவடிகளும் சீத்தலைச்சாத்தனாரும் பண்டைய அகப்புற நெறித் தமிழிலக்கிய மரபினின்றும் காவிய நெறியைக் காட்டி ஒரு புரட்சி அல்லது புதுமையைத் தோற்றுவித்தனர். இம் மூவரும் செய்யுள்நடைத் திறத்தில் பண்டைய மரபினையே பின்பற்றிக் காவியம் செய்தனர். திருத்தக்கதேவர் அந்தப் புதுமையின் மேலும் ஒரு புதுமை செய்தனர். பழைய செய்யுட் போக்கையும் மாற்றிப் புதியதொரு நெறியைப் படைத்துக் கொண்டுவிட்டனர். தேவர்க்குப்பின் இற்றைநாள்காறும் நந்தமிழன்னை தேவர் காட்டிய அப்புது நெறிபற்றியே இனிதின் நடப்பாளாயினள்.

தேவர்க்குப் பின்னர், காலப்போக்கிலே தோன்றிய நல்லிசைப் புலவர் பலரும் தேவருடைய அடிச்சுவடுபற்றியே பெரிய- சிறிய- வனப்பு நூல்களைப் படைத்தளிப்பாராயினர்; சிந்தாமணிக்குப்பின் தோன்றித் தமிழகத்திலே சிறப்புற்றுத் திகழும் இலக்கியமனைத்தினும் சீவக சிந்தாமணியின் நறுந் தமிழ்மணம் விரவியிருத்தலைக் காணலாம். தேவர் நெறிபற்றிக் காப்பியமியற்றிய நல்லிசைப் புலவர்களில் கம்பநாடரே தலைசிறந்தவர் என்னலாம். கம்பநாடரின் பெரும் புகழுக்குத் திருத்தக்கதேவர் செய்தருளிய சீவக சிந்தாமணியும் ஒரு காரணம் என்பது மிகையன்று. இனி, திருத்தக்கதேவர் தாம் மேற்கொண்டிருந்த துறவு; நெறிக்குத் தகத் தமது இளமையிலேயே இயற்றிய சிறு நூலாகிய நரிவிருத்தம் தன்னகத்தே அரிய மணிகள் பலவற்றைக் கொண்டு திகழ்கின்றது. நரி விருத்தத்திலே ஒரு பாட்டு நந்தேவர் சீவக சிந்தாமணியைச் செய்தருளியதற்குரிய காரணத்தைக் குறிப்பாகத் திறம்பட வுணர்த்துகின்றது. அது,

பற்றுளம் அகல நீக்கிப் பாசிழைப் பரவை யல்குற்
பொற்றொடி மகளிர் தங்கள் புணர்முலைக் குவட்டின் வைகிச்
சுற்றத்தார் சுற்ற வாழ்த லன்றெனின் துறந்து போகி
நற்றவம் புரிவில் லாதார் நடலை நோய்க் கடலுள் ஆழ்ந்தார்

என்பதாம். தேவர் காட்டும் ஆருகத சமயநெறி, பிற்காலத்தே காணப்பட்ட வறட்டுச் சமணநெறி போன்றதன்று. அருளுடைய திருக்குறள் நெறியையே பெரிதும் தழுவியதென்று தெரிகின்றது. பற்றுளம் அகலநீக்குதல் ஒன்றே குறிக்கோள். மனிதன் அரசனாயிருக்கலாம்; அறநெறி பிறழாமல் போரிடலாம்; மகளிரை மணக்கலாம்; குறிக்கோளைமட்டும் மறந்து விடாமே இருத்தல் வேண்டும், காமஞ்சான்ற கடைக்கோட்காலைத் துறந்துபோய் நற்றவம்புரிதல் சாலும் என்பது தேவர் கொள்கை என்று தெரிகிறது. இந்தக் கொள்கையையே தேவர் இம் மாபெருங் காப்பியத்திலே உலகினர்க்கு விரித்து விளம்பியிருக்கின்றனர்.

ஆயர்பாடியிலே கண்ணன் பற்றின்றியே மகளிர் பலரை மணந்து மெய்வாழ்க்கை காட்டினாற்போன்று சீவக சாமியும் எண்மர் மகளிரை மணந்தும் பகையை வென்றும் அருளாட்சி நடத்துகின்றான். கூர்த்த உணர்வுடையோன் ஆகலின் மிக விரைவிலேயே அவன் மெய்யுணர்ந்து விடுகின்றான். தவத்தின் முன்னர் இப் பேருலகம் ஒரு சிறு ஐயவித்துணையும் ஈடாகாது என்றுணர்ந்து விடுகின்றான். உணர்ந்தவுடன் படநாகம் தோலுரித்தாற் போன்று உலகத்தை உதறித் தள்ளி வீடுபேறடைகின்றனன். ஒவ்வொரு மனிதனும் இந்தச் சீவக சாமியைப் போலவே வாழ்ந்து கடைத்தேற வேண்டும் என்பதே அடிகளார் இந்தக் காப்பியத்தாலே உலகினர்க்குச் செய்யும் செவியறிவுறூஉ ஆகும் என்க.

ஒரு காப்பியம் மக்கள் உள்ளத்தை எதனாலே அள்ளிக் கொள்ள வல்லதாகின்றது என்னும் உண்மை ஒன்றனைத் திருத்தக்கதேவர், நன்குணர்ந்தவர். காவியங்களிலே அவலச் சுவைமட்டுமே மாந்தர் நெஞ்சத்தை உருக்கி வார்த்துவிடும் பண்புடையதாகும். மற்றொரு தேவராகிய தோலாமொழித் தேவருந்தாம் பெருங்காப்பியம் செய்திருக்கின்றனர். இந்த நுணுக்கத்தை அவர் சிறிதும் அறிந்திலர் என்றே தோன்றுகின்றது. சூளாமணி முழுவதையும் படித்தாலும் ஒரு துளி கண்ணீர் சுரவாது. இஃது என்னநுபவம். சிந்தாமணியிலோ தேவர் முதலிலம்பகத்திலேயே அவலச் சுவையினாலே கற்போர் நெஞ்சத்தைப் பாகாக உருக்கிவிடுகின்றார். பாவம்! முடிமன்னன் பெருந்தேவியாருந் துணையின்றி உண்டென வுரையிற் கேட்பார் உயிருறு பாவமெல்லாம் கண்டினித் தெளிக வென்று காட்டு வாள்போல ஆகி, நெருநல் வரையில், அரண்மனையிலே தேவர் மகளிர் என மகிழ்ந்திருந்தவள் வெண்டலை பயின்ற சுடுகாட்டிலே தமியளாகிச் சீவக சாமியை ஈன்றெடுக்கும் நிகழ்ச்சிபோன்ற அவலச்சுவைக்கு உறைவிடமான பகுதியை நான் வேறெந்தக் காப்பியத்தினும் கண்டதில்லை. இந்தப் பகுதியை நினைத்தாலே என் கண்ணில் தொடுமணற் கேணியிற் சுரந்து நீர்பாய்வது அநுபவத்தாற் கண்ட வுண்மை. இந்தச் சுவையே கற்போருளத்தே காலூன்றி நின்று இந்தக் காவிய முழுதிற்கும் சுவை பயந்து நிற்கின்றது. பின்னர் யாண்டும் பெரும்பாலும் காமச் சுவையே பேசிக் களிப்பூட்டக் கருதிய தேவர் இந்த நூலின் முதலிலம்பகத்திலேயே ஒப்பற்ற அவலச் சுவையைத் தேக்கி வைத்திருப்பது அவருடைய தெய்வத்தன்மையுடைய புலமைத் திறத்தை நன்கு விளக்குகின்றது. இனி இந்த நூலிலே காமநெறி படர்ந்து கேடுறுவார்க்கு எடுத்துக்காட்டாகக் கதைத் தலைவன் தந்தையாகிய சச்சந்தனே அமைகின்றன. மற்றுச் சுடுகாட்டிலே பிறந்த நம்பியோ பல்வேறு மகளிர்களை மணந்தும் பற்றுள்ளம் அகல நீக்கியே வாழும் திறத்திற்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றான். சீவகன் வரலாற்றிலே அவன் செயல் பலவற்றினும் அவனுடைய இந்த மேதகவு விளங்குவதை அங்கங்கே காணலாம்.

சீவகனுடைய நல்லாசிரியராகிய அச்சணந்தி அவனுடைய மனப்பரிபாகத்தை நன்குணர்ந்தே அவனுடைய இளமைப்பருவத்திலேயே காஞ்சிப் பொருளாகிய நிலையாமையை உணர்த்தி விடுகின்றனர். மேலும், அவன் பகைவனாகிய கட்டியங்காரன்பால் ஓராண்டு முடியுந்துணையும் வெகுளல் கூடாது என்றும் வேண்டிக் கொள்கின்றனர். ஆசிரியரின் வேண்டுகோட்கிணங்கிய சீவகன் சிங்கத்தைக் குறுநரிக்குழாம் வளைந்தாற்போன்று தன்னைச் சூழ்ந்துகொண்ட கட்டியங்காரன் ஏவலர்க்கடங்கிச் செல்கின்றனன். இந் நிகழ்ச்சியால் சீவகன் வெகுளியைத் தன் அறிவின் ஆட்சிக்குள்ளே அடக்கியவன் என்பது புலனாம். மற்றும் சீவகன் ஊழ்தர உழுவலன்போடு வந்த குலமகளிர் பாலன்றி யாண்டும் காமத்தாலே நெஞ்சு நெகிழ்ந்திலன் என்பதையும் இந்நூலில் யாண்டுங் காணலாம். அவன் மிக்க இளமைப் பருவத்திலேயே தனக்குப் பரிசிலாக நந்தகோனால் வழங்கப்பட்ட பேரழகியாகிய கோவிந்தையாரை மனைவியாக ஏற்றுக் கொள்ளாமை அவன் காமத்தையும் தன் அறிவின் ஆட்சிக்குட்படுத்தியவன் என்பதை நன்கு விளக்கும். காட்டகத்தே தன்னைக் கண்டு காமுற்றுக் குறிஞ்சிப்பூங் கோதைபோலும் குங்கும முலையினாளாகிய அநங்கமாவீணை என்பாள், காமனம்பு வீசுமுன்பே கண்ணம்பை வீசியகாலத்தே அவளை நோக்கவும் நடுங்கினான் சீவகன். இஃது அவன் ஒழுக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. சீவகன் மன்னுயிரையும் தன்னுயிரென எண்ணும் அருட்கடல் என்பதற்குக் காட்டுத்தீயால் வளைப்புண்ட யானைகளைக் காப்பாற்றினதும் நாய்க்கு மறைமொழி செவியுறுத்தி நற்கதியுய்த்ததும், கட்டியங்காரன பரிசனங்கட்குப் பரிந்து விருத்தி நல்கியதும்; இன்னோரன்ன பற்பல சான்றுகள் உள்ளன. சீவகனுடைய மொழிகள் பற்பல விடங்களிலே மெய்க்காட்சிகளின் விளக்கமாக விருக்கின்றன. இவ்வாறு இச் சிந்தாமணி, பல்லாற்றானும் ஒப்புயர்வற்ற தலைவனைத் தலைவனாகக் கொண்டு கற்போருக்குக் கழிபேரின்பமும் சிறந்த உறுதிப் பொருளும் வழங்கும் ஒரு சிறந்த வனப்பு நூலாகவே திகழ்கின்றது.

இனி, இச் சீவக சிந்தாமணி தொடக்கத்திலே மழையின்றி மாநிலத்தார்க்கில்லை என்பதுபற்றி மழைவளம் பேசித் தொடங்குகின்றது. சிந்தாமணியிலே காணப்படுகின்ற ஏமாங்கத  நாடு நன்னாட்டிற்கெல்லாம் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. வளமிக்க உழவர் ஆரவாரம் எங்கெங்கும் கேட்கப்படுகிறது. காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகினெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து, தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும் ஏமாந்தகப் பெருநாட்டின் புகழ் திசையெலாம் பரவுகின்றது. அந்நாட்டு மன்னனோ நாவீற்றிருந்த புலமாமகளோடு நன்பொற் பூவீற்றிருந்த திருமகள் புல்ல நாளும் பாவீற்றிருந்த கலை பாரறச்சென்ற கேள்விக் கோவாகத் திகழ்கின்றான். தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச், செல்வருஞ் சேர்வது நாடு என்னுந் திருக்குறட்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது ஏமாங்கதநாடு. இந்த நாடு தரும் இன்பம் எல்லையற்றதாகும். சிந்தாமணிக்குப் பின்னர்க் காப்பியஞ் செய்த நல்லிசைப்புலவர் நாட்டுகின்ற நாடுகள் எல்லாம் இந்த ஏமாங்கதத்தின் வழிவழித் தோன்றிய நாடுகளேயாம்.

நல்வாழ்க்கைக்குக் கல்வியும் செல்வமும் இன்றியமையாதன. இவற்றோடு குடிதழீஇக் கோலோச்சும் கொற்றவனும் வேண்டும் என்னும் உண்மையைச் சீவகசிந்தாமணி தொடக்கச் செய்யுள் ஒன்றிலேயே அறுதியிட்டுக் கூறுகின்றது. நாவீற்றிருந்த புலமாமகள் என்பது அறிவுச் செல்வத்தை உணர்த்துகின்றது. பொற்பூ வீற்றிருந்த திருமாமகள் என்பது செல்வத்தை உணர்த்தும். கேள்விக்கோ என்றது செங்கோன் மன்னனைக் குறிக்கும். இவ்வாறு சிந்தாமணியிலே மாந்தர் வாழ்க்கைக்குச் சிறந்த நன்னாடு மிக அழகாகப் படைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் அரசியல் நெறியும் போர்நெறியும் பிறவும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. காதல் வாழ்க்கையின் மாண்பு விரித்தோதப்பட்டிருக்கின்றது. சுருங்கக் கூறுமிடத்து நல்வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்புவோர்க்கெல்லாம் இன்றியமையாத உறுதிப் பொருள் பலவற்றையும் சிந்தாமணி வழங்கும் மாண்புடையது என்னலாம். அழகாலே பன்னிற மலர்களும் மலர்ந்துள்ளதோர் அழகிய பூம்பொழிலை யொப்பது. பயனாலே பல்வேறு தீஞ்சுவைக் கனிகளும் நல்கும் பழுமரங்கள் செறிந்ததொரு பழத்தோட்டமே இப்பெருங் காப்பியம் என்பேம்.

நூல் ஆசிரியர் குறிப்பு: இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார். இவர் திருத்தகு முனிவர் என்றும், திருத்தகு மகா முனிவர் என்றும் அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். இவர் வாழ்ந்த காலமும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர்.

ஒரு சமயம் திருத்தக்கதேவர் மதுரை சென்றிருந்தபோது, அங்கிருந்த புலவர்கள், சமண சமயத்தவர் துறவறம் பற்றிப் பாட இயலுமே ஒழிய அகப்பொருட் சுவை மிக்க இன்பத்துறைப் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துரைத்தனர். இதனால் மனவருத்தமுற்ற இவர் தம் ஆசிரியரிடம் இதுபற்றி கூறினார். இவரின் திறமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஆசிரியர், அப்பொழுது குறுக்கே ஓடிய நரி ஒன்றைப் பற்றி ஒரு நூல் இயற்றுமாறு கூறினார். அப்போதே ஆசிரியர் போற்றும் வண்ணம், செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறும் நரி விருத்தம் என்னும் அற்புதமான ஒரு சிறு நூலை இயற்றினார். திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த ஆசிரியர் சீவகன் வரலாற்றை அகப்பொருள் சுவை மிளிர பெருங்காப்பியமாக பாடுமாறு கட்டளையிட்டார். அதோடு செம்பொன்வரைமேல் என்ற ஒரு பாடலை எழுதி அவரிடம் கொடுத்து, அதனையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு நூலைத் தொடங்குமாறு கூறினார். ஆசிரியர் பாடிய அப்பாடலோடு திருத்தக்கதேவரும், மூவா முதலா எனத் தொடங்கும் சித்தரைத் துதிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார். ஆசிரியர் தாம் பாடிய பாடலைவிட தம் மாணவர் பாடிய பாடல் சிறப்பாக இருப்பது கண்டு, திருத்தக்கதேவரின் பாடலை முதலாகவும், தம் பாடலை இரண்டாவதாகவும் வைக்கும்படி கூறினார். அதனால் தான் இக்காப்பியத்தில் சித்தர் வணக்கம் முதலாவதாகவும், அருகர் வணக்கம் இரண்டாவதாகவும் உள்ளது. திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை எட்டே நாட்களில் பாடி அருளியதாகக் கூறுவர்.

பாண்டியன் அவையிலே திருத்தக்கதேவர் தமது நூலை அரங்கேற்றினார். காப்பியத்தின் நடை, அழகு, அமைப்பு, ஒன்பது சுவைகள் ஆகியவற்றைக் கண்டு புலவர்கள் பலர் வியந்து பாராட்டினர். ஆனால் சில அழுக்காறு கொண்ட புலவர்கள், இன்ப சுவை கொண்ட பாடல்களைப் பாட வேண்டுமாயின் இவருக்கு நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். இது கேட்ட திருத்தக்கதேவர் கையிலே நெருப்பை ஏந்தி தமது அகத் தூய்மையை அனைவரும் அறியச் செய்தார். கிரேக்க மொழியில் உள்ள இலியட், ஒடிசி காப்பியங்களுக்கு இணையானது, என வெளிநாட்டு தமிழ் ஆர்வலர் ஜி.யு.போப் இக்காப்பியத்தை பாராட்டியுள்ளார். தேம்பாவணி என்னும் காவியம் படைத்த வீரமாமுனிவர், இந்நூல் ஆசிரியர் திருத்தக்க தேவரை தமிழ்ப் புலவர்களில் தலைமை சான்றவர் என புகழ்ந்துள்ளார். இக் காப்பியத்திற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் என்னும் புலவர் ஆவார். பின்வந்த கம்பர் போன்ற பெரும் புலவர்களுக்குச் சீவக சிந்தாமணி கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றால் மிகையாகாது.


© Om Namasivaya. All Rights Reserved.