Books / எட்டுத் தொகை நூல்கள்


புறநானூறு

புறநானூறு - 151. அடைத்த கதவினை!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: இளவிச்சிக்கோ.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
குறிப்பு: இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தன.அவண் சென்ற புலவர் இளங்கண்டீரக் கோவைபப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லராயினர். என்னை என் செயப் புல்லீராயினர் என அவன் கேட்கப் புலவர் பாடிய செய்யுள் இது. (இருவரது குடியியல்புகளையும் கூறிப் பாடுதலால்
இயன்மொழி ஆயிற்று.)

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து,
புன்தலை மடப்பிடி பரிசிலாகப்,
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்  5
கண்டீ ரக்கோன் ஆகலின், நன்றும்
முயங்கல் ஆன்றிசின், யானே: பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும், நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே: வயங்கு மொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை  10
அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.  

புறநானூறு - 152. பெயர் கேட்க நாணினன்!

பாடியவர்: வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண்.
துறை: பரிசில் விடை.
சிறப்பு: ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது.
( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்)

சூவேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,  5

வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,
 10
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:  15
எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்சூ என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்,  20
சூகோசூவெனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்சூ என,
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்  25
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் கு வையொடும் விரைஇக், சூகொண்ம்சூ எனச்,
சுரத்துஇடை நல்கி யோனே : விடர்ச் சிமை  30
ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!  

புறநானூறு - 153. கூத்தச் சுற்றத்தினர்!

பாடியவர்: வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.

மழையணி குன்றத்துக் கிழவன், நாளும்,
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்,
சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு அமை முன்கை,
அடுபோர் ஆனா, ஆதன் ஓரி
மாரி வண்கொடை காணிய, நன்றும்  5
சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே;
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப்,
பசியார் ஆகல் மாறுகொல்; விசிபிணிக்  10
கூடுகொள் இன்னியம் கறங்க,
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே?  

புறநானூறு - 154. இரத்தல் அரிது! பாடல் எளிது!

பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் துறை.

திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்,
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர், மாந்தர் : அதுபோல்,
அரசர் உழைய ராகவும், புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர், புலவர் ; அதனால்,  5
சூயானும்,சூபெற்றது ஊதியம்; பேறியாது?சூ என்னேன்;
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே;
சூஈயென இரத்தலோ அரிதே! நீ அது
நல்கினும், நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை, அறுவைத்  10
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவி நின்
கொண்டுபெருங்கானம், பாடல் எனக்கு எளிதே.  

புறநானூறு - 155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!

பாடியவர்: மோசி கீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை: பாணாற்றுப்படை

வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ,
சூஉணர்வோர் யார், என் இடும்பை தீர்க்கசூசூஎனக்,
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்;
பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு,  5
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங்காலத்துக் கிழவன்
தண்தார் அகலம் நோக்கின், மலர்ந்தே.

புறநானூறு - 156. இரண்டு நன்கு உடைத்தே!

பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அதான்று
நிறையருந் தானை வேந்தரைத்  5
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.

புறநானூறு - 157. ஏறைக்குத் தகுமே!

பாடியவர்: குறமகள் இளவெயினி.
பாடப்பட்டோன்: ஏறைக் கோன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
சிறப்பு: ஏறைக் கோன் குறவர் குடியினன் என்பது.

தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,
பிறர்கை யறவு தான்நா ணுதலும்,
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்  5
சிலைசெல மலர்ந்த மார்பின், கொலைவேல்,
கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்:
ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை,
எற்படு பொழுதின், இனம்தலை மயங்கிக்,
கட்சி காணாக் கடமான் நல்லேறு  10
மடமான் நாகுபிணை பயிரின், விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே.

புறநானூறு - 158. உள்ளி வந்தெனன் யானே!

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை; பாடாண்.
துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையும் ஆம்.
சிறப்பு : எழுவர் வள்ளல்கள் என்னும் குறிப்பு.

முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;  5
காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,
கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை,  10
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்,
பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்,
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்,  15
கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண்
உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக்  20
கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!  25
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
இசைமேந் தோன்றிய வண்மையொடு,
பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே!  

புறநானூறு - 159. கொள்ளேன்! கொள்வேன்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடாநிலை.
சிறப்பு : வறுமை வாழ்வின் ஒரு கூற்றைக் காட்டும் சொல்லோவியம்.

சூவாழும் நாளொடு யாண்டுபல உண்மையின்,
தீர்தல்செல் லாது, என் உயிர்சூ எனப் பலபுலந்து,
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,
முன்றிற் போகா முதுர்வினள் யாயும்;
 5
பசந்த மேனியொடு படர்அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று,  10
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,
அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்;
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்  15
கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை.
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என்,  20
பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப-
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!  25
அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

புறநானூறு - 160. புலி வரவும் அம்புலியும்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடாநிலை.
சிறப்பு : வறுமையின் ஒரு சோகமான காட்சி பற்றிய சொல்லோவியம்.
(பரிசிலை விரும்பி, அரசனைப் புகழ்ந்து வேண்டுகின்றார் புலவர்),

உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
முளிபுல் கானம் குழைப்பக், கல்லென
அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
அவிழ்புகுவு அறியா தாகலின், வாடிய
 5
நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக்,
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்,
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
கோடின் றாக, பாடுநர் கடும்பு என,
அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி,  10
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்,
மட்டார் மறுகின், முதிரத் தோனே:
செல்குவை யாயின், நல்குவை, பெரிதுசூ எனப்,
பல்புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து,
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று,  15
இல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலைசுவைத்தனன்பெறாஅன்,
கூழும் சோறும் கடைஇ, ஊழின்
உள்ளில் வருங்கலம் திறந்து, அழக் கண்டு,
மறப்புலி உரைத்தும், மதியங் காட்டியும்,  20
நொந்தனள் ஆகி, சூநுந்தையை உள்ளிப்,
பொடிந்தநின் செவ்வி காட்டுசூ எனப் பலவும்
வினவல் ஆனா ளாகி, நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்,
செல்லாச் செல்வம் மிகுந்தனை, வல்லே  25
விடுதல் வேண்டுவல் அத்தை; படுதிரை
நீர்சூழ் நிலவரை உயர நின்
சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே.  

புறநானூறு - 161. பின் நின்று துரத்தும்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில். குறிப்பு : பாடிப் பகடு பெற்றது.
(பரிசில் பெற்று அரசனைப் பாடிப் போற்றியது.)

நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு,
ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றுதல், சூன்முதிர்பு,
உரும்உரறு கருவியொடு, பெயல்கடன் இறுத்து,
வள்மலை மாறிய என்றூழ்க் காலை,
 5

மன்பதை யெல்லாம் சென்றுணர், கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு,
எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்,
சூஅன்பில் ஆடவர் கொன்று, ஆறு கவரச்,
சென்று தலைவருந அல்ல, அன்பின்று,
 10
வன்கலை தெவிட்டும், அருஞ்சுரம் இறந்தோர்க்கு,
இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயர்சூ எனக்
கண் பொறி போகிய கசிவொடு, உரன்அழிந்து,
அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவி நின்
தாள்படு செல்வம் காண்டொறும் மருளப்,  15
பனைமருள் தடக்கை யொடு முத்துப்படு முற்றிய
உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு,
ஒளிதிகழ் ஓடை பொலிய, மருங்கில்
படுமணி இரட்ட, ஏறிச் செம்மாந்து,
செலல்நசைஇ உற்றனென்-விறல்மிகு குருசில்!  20
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின்
வண்மையில் தொடுத்தஎன் நயந்தினை கேண்மதி!
வல்லினும், வல்லேன் ஆயினும், வல்லே,
என்அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும்  25
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்தருந்திப்
பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்
மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல,
நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்
தாள்நிழல் வாழ்நர் நண்கலம் மிகுப்ப,  30
வாள் அமர் உயர்ந்தநின் தானையும்,
சீர்மிகு செல்வமும் ஏந்துகம் பலவே.  

புறநானூறு - 162. இரவலர்அளித்த பரிசில்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : இளவெளிமான்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் விடை.
சிறப்பு : புலவர் பெருமிதம்.

இரவலர் புரவலை நீயும் அல்லை!
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்,இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின்ஊர்க்
கடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த  5
நெடுநல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

புறநானூறு - 163. தமிழ் உள்ளம்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : புலவரின் மனைவி.
திணை: பாடாண்.
துறை: பரிசில்.

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்,
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,  5
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.  

புறநானூறு - 164. வளைத்தாயினும் கொள்வேன்!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப் பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடாநிலை.
குறிப்பு: தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக் குமணன் காட்டிடத்து மறைந்து வாழ்ந்த காலை, அவனைக் கண்டு-பாடியது.
ங்பரிசில் விரும்பிப் பாடுதலால், பரிசில் கடாநிலை ஆயிற்று. வாகைத் திணையின் பகுதியாகிய, கடைக்கூட்டு நிலைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத்.சூ.30)சி

ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத், தேம்புபசி உழவாப்,
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,
இல்லி தூர்த்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துவம் நோக்கி,  5
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ,
நிற்படர்ந் திசினே-நற்போர்க் குமண!
என்நிலை அறிந்தனை யாயின், இந்நிலைத்
தொடுத்தும் கொள்ளாது அமையலென்-அடுக்கிய  10
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்,
மண்ணமை முழவின், வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே.  

புறநானூறு - 165. இழத்தலினும் இன்னாது!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் விடை. குறிப்பு: காடு பற்றியிருந்த குமணன், புலவர் பரிசில் வேண்டிப் பாடத், தன் தலையைக் கொய்து கொண்டு தம்பியின் கையிற் கொடுத்துப் பொருள் பெற்றுப் போகுமாறு சொல்லித் தன் வாளைக் கொடுக்கப், பெற்றுப் புலவர் பாடியது.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே;
துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்,
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின்,
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;  5
தாள்தாழ் படுமணி இரட்டும், பூனுதல்,
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றெனன் ஆகக்,சூகொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்  10
நாடுஇழந் ததனினும் நனிஇன் னாதுசூ என,
வாள்தந் தனனே, தலை எனக்கு ஈயத்,
தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்;
ஆடுமலி உவகையோடு வருவல்,
ஓடாப் பூட்கைநிற் கிழமையோன் கண்டே.  15

புறநானூறு - 166. யாமும் செல்வோம்!

பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்.
திணை: வாகை.
துறை: பார்பபன வாகை.

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை
முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
 5

மெய் அன்ன பொய் உணர்ந்து,
பொய் ஓராது மெய் கொளீஇ,
மூவேழ் துறைபும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
வினைக்கு வேண்டி நீ பூண்ட
 10

புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய;
மறம் கடிந்த அருங் கற்பின்,
அறம் புகழ்ந்த வலை சூடிச்,
சிறு நுதல், பேர் அகல் அல்குல்,
 15
சில சொல்லின் பல கூந்தல், நின்
நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்பக்;
காடு என்றா நாடுஎன்று ஆங்கு
ஈரேழின் இடம் முட்டாது,  20
நீர் நாண நெய் வழங்கியும்,
எண் நாணப் பல வேட்டும்,
மண் நாணப் புகழ் பரப்பியும்,
அருங் கடிப் பெருங் காலை,
விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை,  25
என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;  30
செல்வல் அத்தை யானே; செல்லாது,
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம்போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?

புறநானூறு - 167. ஒவ்வொருவரும் இனியர்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் கடுமான் கிள்ளி.
திணை: வாகை.
துறை: அரச வாகை.

நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு,
கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!
அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின்,  5
ஊறுஅறியா மெய் யாக்கை யொடு.
கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே!
அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்;
ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!  10
நின்னை வியக்குமிவ் வுலகம்; அது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.

புறநானூறு - 168. கேழல் உழுத புழுதி!

பாடியவர்: கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்.
பாடப்பட்டோன் : பிட்டங் கொற்றன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக், கிளையொடு,
கடுங்கண் கேழல் உழுத பூழி,
நன்னாள் வருபதம் நோக்கிக், குறவர்
 5
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,  10
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி,  15
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும!
கைவள் ஈகைக் கடுமான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்,
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
பாடுப என்ப பரிசிலர், நாளும்;  20
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்தநின் வசையில் வான் புகழே!

புறநானூறு - 169. தருக பெருமானே!

பாடியவர்: காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடாநிலை.
(பரிசில் வேட்டுப் பாடுதலால் பரிசில் கடாநிலை ஆயிற்று. அரசனின் வென்றிச் சிறப்பைப் போற்றியதும் காண்க.)

நும்படை செல்லுங் காலை, அவர்படை
எறித்தெறி தானை முன்னரை எனாஅ,
அவர்படை வருஉங் காலை, நும்படைக்
கூழை தாங்கிய, அகல் யாற்றுக்
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ,  5
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்;
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை;
இன்னே விடுமதி பரிசில்! வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்,
இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்  10
பெருமரக் கம்பம் போலப்,
பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே!  

புறநானூறு - 170. உலைக்கல்லன்ன வல்லாளன்!

பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம்.

மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்,
பரலுடை முன்றில், அங்குடிச் சீறூர்,
எல்அடிப் படுத்த, கல்லாக் காட்சி
வில்லுழுது உண்மார் நாப்பண், ஒல்லென,
இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப,  5
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி,
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்; அவனே
சிறுகண் யானை வெண்கோடு பயந்த  10
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து,
நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல்
பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி,
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு
இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்  15
விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன, வல்லா ளன்னே.  

புறநானூறு - 171. வாழ்க திருவடிகள்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
சிறப்பு: ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே என்னும் வாழ்த்தில், உலகின் தன்மையைக் காணலாம்.

இன்று செலினுந் தருமே; சிறுவரை
நின்று செலினுந் தருமே ; பின்னும்,
முன்னே தந்தனென் என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்;  5
தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
அருந்தொழில் முடியரோ, திருந்துவேல் கொற்றன்;
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்,
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்,
அருங்கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை  10
பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே,
அன்னன் ஆகலின், எந்தை உள்ளடி
முள்ளும் நோவ உற்றாக தில்ல!
ஈவோர் அரியஇவ் உலகத்து,
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!  15

புறநானூறு - 172. பகைவரும் வாழ்க!

பாடியவர்: வடமண்ணக்கன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பலவும் செய்க ; என்னதூஉம்
பரியல் வெண்டா வருபதம் நாடி,  5
ஐவனங் காவல் பெய்தீ நந்தின்.
ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன், வயமான் பிட்டன்;
ஆரமர் கடக்கும் வேலும், அவனிறை
மாவள் ஈகைக் கோதையும்.  10
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!

புறநானூறு - 173. யான் வாழுநாள் வாழிய!

பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி  5
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்;  10
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே,  

புறநானூறு - 174. அவலம் தீரத் தோன்றினாய்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்.
ணை: வாகை.
துறை: அரச வாகை.

அணங்குடை அவுணர் கணம்கொண்டுஒளித்தெனச்,
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்
அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு,  5
அர சிழந்து இருந்த அல்லற் காலை,
முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு, கரைபொருது
இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்,
பொய்யா நாவிற் கபிலன் பாடிய,  10
மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை  15
புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!
விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண்,
சுரும்பார் கண்ணிப், பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்,
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,  20
ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலந் தீர
நீதோன் றினையே-நிரைத்தார் அண்ணல்!
கல்கண் பொடியக், கானம் வெம்ப
மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்,  25
கோடை நீடிய பைதறு காலை,
இருநிலம் நெளிய ஈண்டி,
உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!

புறநானூறு - 175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!

பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.
பாடப்பட்டோன் : ஆதனுங்கன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

எந்தை; வாழி; ஆதனுங்க ! என்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;
நின்யான் மறப்பின், மறக்குங் காலை,
என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்,
என்யான் மறப்பின், மறக்குவென் - வென்வேல்  5
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.  10

புறநானூறு - 176. சாயல் நினைந்தே இரங்கும்!

பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன் : ஓய்மான் நல்லியக் கோடான்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,
இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்,  5
பெருமா விலங்கைத் தலைவன், சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழி, யெற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக்,  10
காணாது கழிந்த வைகல், காணா
வழிநாட்கு இரங்கும், என் நெஞ்சம்-அவன்
கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே.  

புறநானூறு - 177. யானையும் பனங்குடையும்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி. (வந்தார்க்கு மான் கறியும் சோறும்
வாரி வழங்கிய கொடையியல்பைப் பாடுகின்றார் புலவர்.)

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்,
வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்,
பாடிப் பெற்ற பொன்னணி யானை,
தமர்எனின், யாவரும் புகுப; அமர்எனின்,
திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்,  5
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்,
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்,
மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்,  10
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்,
பெரும்பெயர் ஆதி, பிணங்கரில் குடநாட்டு,
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை,
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,  15
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.

புறநானூறு - 178. இன்சாயலன் ஏமமாவான்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம்.
திணை: வாகை
துறை: வல்லாண் முல்லை

கந்துமுனிந்து உயிர்க்கும்யானையொடு,பணைமுனிந்து,
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்,
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று
உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்  5
ஈண்டோர் இன்சா யலனே ; வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்,
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
அஞ்சி நீங்கும் காலை,  10
ஏம மாகத் தான்முந் துறுமே.

புறநானூறு - 179. பருந்து பசி தீர்ப்பான்!

பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
திணை: வாகை
துறை: வல்லாண் முல்லை

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்? என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்,  5
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்,
தோலா நல்லிசை, நாலை கிழவன்,  10
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர், பலரே.  

புறநானூறு - 180. நீயும் வம்மோ!

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்.
திணை: வாகை.
துறை: வல்லாண்முல்லை; பாணாற்றுப் படையும் ஆம்.

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;
இறையுறு விழுமம் தாங்கி, அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து,
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி,  5
வடுவின்றி வடிந்த யாக்கையன், கொடையெதிர்ந்து,
ஈர்ந்தை யோனே, பாண்பசிப் பகைஞன்;
இன்மை தீர வேண்டின், எம்மொடு
நீயும் வம்மோ? முதுவாய் இரவல!
யாம்தன் இரக்கும் காலைத், தான்எம்  10
உண்ணா மருங்குல் காட்டித், தன்ஊர்க்
கருங்கைக் கொல்லனை இரக்கும்,
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே.  

புறநானூறு - 181. இன்னே சென்மதி!

பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்.
பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன்.
திணை: வாகை.
துறை: வல்லாண்முல்லை.

மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்,
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு,
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்,
புலாஅல் அம்பின், போர்அருங் கடிமிளை,  5
வலாஅ ரோனே, வாய்வாள் பண்ணன்;
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்,
இன்னே சென்மதி, நீயே; சென்று, அவன்
பகைப்புலம் படரா அளவை, நின்
பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.  10

புறநானூறு - 182. பிறர்க்கென முயலுநர்!

பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி

உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,  5
உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்,
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.  

புறநானூறு - 183. கற்கை நன்றே!

பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,  5
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,  10

புறநானூறு - 184. யானை புக்க புலம்!

பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ.

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,  5
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,  10
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.  

புறநானூறு - 185. ஆறு இனிது படுமே!

பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(இது உலகாளும் முறைமையைக் கூறியதாம்.)

கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக்கூழ் அள்ளற் பட்டு,  5
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

புறநானூறு - 186. வேந்தர்க்குக் கடனே!

பாடியவர்: மோசிகீரனார்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது. ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆம்.)

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.  
 
புறநானூறு - 187. ஆண்கள் உலகம்!

பாடியவர்: அவ்வையார்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்.)

நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!

புறநானூறு - 188. மக்களை இல்லோர்!

பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறம் சிறந்த செய்யுள் இது.)

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,  5
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே.  

புறநானூறு - 189. உண்பதும் உடுப்பதும்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;  5
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

புறநானூறு - 190. எலி முயன் றனையர்!

பாடியவர்: சோழன் நல்லுருத்திரன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(வலியுடையோரின் நடப்பை வலியுறுத்திப் பாடிய செய்யுள் இது.)

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ!  5
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து  10
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ!  

புறநானூறு - 191. நரையில ஆகுதல்!

பாடியவர்: பிசிராந்தையர்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி

யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை  5
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.  

புறநானூறு - 192. பெரியோர் சிறியோர்!

பாடியவர்: கணியன் பூங்குன்றன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,  5
இன்னா தென்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்  10
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

புறநானூறு - 193. ஒக்கல் வாழ்க்கை!

பாடியவர்: ஓரேருழவர்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.  

புறநானூறு - 194. முழவின் பாணி!

194. முழவின் பாணி!
 
ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!  5
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.

புறநானூறு - 195. எல்லாரும் உவப்பது!

பாடியவர்: நரிவெரூஉத் தலையார்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்,
பயனில் மூப்பின், பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;  5
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது ; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.

புறநானூறு - 196. குறுமகள் உள்ளிச் செல்வல்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடா நிலை.

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;  5
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,  10
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!  15

புறநானூறு - 197. நல் குரவு உள்ளுதும்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடா நிலை.

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு  5
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த  10
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்  15
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!

புறநானூறு - 198. மறவாது ஈமே!

பாடியவர்: வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடா நிலை.

சூஅருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்,
கடவுள் சான்ற, கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிக!சூசூ என்று ஏத்தித்,  5
திண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக்,
காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்,
வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,  10
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்,
பணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல்
நின்னோ ரன்னநின் புதல்வர், என்றும்,
ஒன்னார் வாட அருங்கலம் தந்து, நும்  15
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க; இவர் பெருங்கண் ணோட்டம்!
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும், அக்கடல் மணலினும்,
நீண்டுஉயர் வானத்து உறையினும், நன்றும்,  20
இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும்,
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி,
நீடு வாழிய! நெடுந்தகை; யானும்
கேளில் சேஎய் நாட்டின், எந் நாளும்,
துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின்  25
அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே.

புறநானூறு - 199. கலிகொள் புள்ளினன்!

பாடியவர்: பெரும்பதுமனார்
திணை: பாடாண்
துறை: பரிசில் கடா நிலை

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்  5
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.  


© Om Namasivaya. All Rights Reserved.