Books / எட்டுத் தொகை நூல்கள்


புறநானூறு

புறநானூறு - 101. பலநாளும் தலைநாளும்!

பாடியவர்: அவ்வையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடா நிலை.

ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ;
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான்; பரிசில் பெறூஉங் காலம்  5
நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது; பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே!  10

புறநானூறு - 102. சேம அச்சு!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

எருதே இளைய; நுகம் உண ராவே;
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே;
அவல் இழியினும், மிசை ஏறினும்,
அவணது அறியுநர் யார்? என, உமணர்
கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன,  5
இசை விளங்கு கவிகை நெடியோய்! திங்கள்
நாள்நிறை மதியத்து அனையை; இருள்
யாவண தோ, நின் நிழல்வாழ் வோர்க்கே?

புறநானூறு - 103. புரத்தல் வல்லன்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்.
துறை: விறலியாற்றுப்படை.

ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்,
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்? எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!
செல்வை யாயின், சேணோன் அல்லன்;  5
முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்
பகைப்புலத் தோனே, பல் வேல் அஞ்சி;
பொழுது இடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப,  10
வறத்தற் காலை யாயினும்,
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!

புறநானூறு - 104. யானையும் முதலையும்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை: அரசவாகை.

போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது,  5
இளையன் என்று இகழின், பெறல் அரிது, ஆடே.  

புறநானூறு - 105. தேனாறும் கானாறும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை: விறலியாற்றுப்படை.

சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யா தாயினும், அருவி
கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட,  5
மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.

புறநானூறு - 106. தெய்வமும் பாரியும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே.  5

புறநானூறு - 107. மாரியும் பாரியும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்:
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே.  

புறநானூறு - 108. பறம்பும் பாரியும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு,
பாரியும், பரிசிலர் இரப்பின்,  5
வாரேன் என்னான், அவர் வரை யன்னே.  

புறநானூறு - 109. மூவேந்தர் முன் கபிலர்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: மகண் மறுத்தல்.

அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;  5
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,  10
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,  15
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.  

புறநானூறு - 110. யாமும் பாரியும் உளமே!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: ..மகள் மறுத்தல்.
சிறப்பு: மூவிருங்கூடி என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும்.

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும் பாரியும் உளமே;  5
குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே.  

புறநானூறு - 111. விறலிக்கு எளிது!

பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: மகள் மறுத்தல்.
சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.

அளிதோ தானே, பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.

புறநானூறு - 112. உடையேம் இலமே!

பாடியவர்: பாரி மகளிர்
திணை: பொதுவியல்
துறை: கையறு நிலை

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!  5

புறநானூறு - 113. பறம்பு கண்டு புலம்பல்!

பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
சிறப்பு : நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம்.

மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி,
நட்டனை மன்னோ, முன்னே; இனியே,
பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று,  5
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் - வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!
கோல் திரள் முன்கைக் குறுந் தொடி மகளிர்
நாறு இருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.  

புறநானூறு - 114. உயர்ந்தோன் மலை!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
சிறப்பு : மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது.

ஈண்டு நின் றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின் றோர்க்கும் தோன்றும், மன்ற;
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகு முன்றில்,  5
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.

புறநானூறு - 115. அந்தோ பெரும நீயே!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
சிறப்பு : பறம்பின் வளமை.

ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்க உக்க தேக் கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல்,
அண்ணல் யானை, வேந்தர்க்கு  5
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!

புறநானூறு - 116. குதிரையும் உப்புவண்டியும்!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை

தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர்
புன் மூசு கவலைய முள் முடை வேலிப்,
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண்,  5
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ;
நோகோ யானே; தேய்கமா காலை!
பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும்,  10
கலையுங் கொள்ளா வாகப்,பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே
அண்ணல் நெடுவரை ஏறித், தந்தை
பெரிய நறவின், கூர் வேற் பாரியது  15
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம் படைக் கலிமா எண்ணு வோரே.

புறநானூறு - 117. தந்தை நாடு!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை

மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்,  5
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;
பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.  10

புறநானூறு - 118. சிறுகுளம் உடைந்துபோம்!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை

அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரி தண் பறம்பு நாடே!  5

புறநானூறு - 119. வேந்தரிற் சிறந்த பாரி!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
சிறப்பு: நிழலில் நீளிடைத் தனிமரம் போல விளங்கிய பாரியது வள்ளன்மை.

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்,
செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து!
மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ;
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்,  5
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

புறநானூறு - 120. கம்பலை கண்ட நாடு!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
கார்ப் பெயர் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப்,
பூழி மயங்கப் பல உழுது, வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி,  5
மென் மயிற் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக்,
கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,
வாலிதின் விளைந்த புது வரகு அரியத்
தினை கொய்யக், கவ்வை கறுப்ப, அவரைக்  10
கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம்ஆக,
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து.
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப்,
பெருந் தோள் தாலம் பூசல் மேவர,  15
வருந்தா யாணர்த்து; நந்துங் கொல்லோ:
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேட் சிமைப், புலவர்
பாடி யானாப் பண்பிற் பகைவர்
ஓடுகழல் கம்பலை கண்ட  20
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!

புறநானூறு - 121. புலவரும் பொதுநோக்கமும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பொதுவியல்.
துறை: பொருண் மொழிக் காஞ்சி.

ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்;
அது நற்கு அறிந்தனை யாயின்,  5
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே!  

புறநானூறு - 122. பெருமிதம் ஏனோ!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.

கடல் கொளப் படாஅது, உடலுநர் ஊக்கார்,
கழல்புனை திருந்துஅடிக் காரி! நின் நாடே;
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே;
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன், துப்பா கியர் என,  5
ஏத்தினர் தரூஉங் கூழே, நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே;
வடமீன் புரையுங் கற்பின், மடமொழி,
அரிவை தோள் அளவு அல்லதை,
நினது என இலைநீ பெருமிதத் தையே.  10

புறநானூறு - 123. மயக்கமும் இயற்கையும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.

நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல்லிசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கிழு முள்ளூர் மீமிசைப்  5
பட்ட மாரி உறையினும் பலவே.  

புறநானூறு - 124. வறிது திரும்பார்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.

நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்,
பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,
வறிது பெயர்குநர் அல்லர்; நெறி கொளப்
பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடி யோரே.  5

புறநானூறு - 125. புகழால் ஒருவன்!

பாடியவர்: வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்.
பாடப்பட்டோன்: தேர்வண் மலையன்.
திணை: வாகை.
துறை: அரச வாகை.
குறிப்பு: சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற்

கிள்ளியும் பொருதவழிச், சோழற்குத் துப்பாகிய
மலையனைப் பாடியது; பேரிசாத்தனார் பாட்டு எனவும் கொள்வர்.
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை,
பரூஉக் கண் மண்டை யொடு, ஊழ்மாறு பெயர  5
உண்கும், எந்தை! நிற் காண்குவந் திசினே,
நள் ளாதார் மிடல் சாய்ந்த
வல்லாள ! நின் மகிழிருக் கையே
உழுத நோன் பகடு அழிதின் றாங்கு
நல்லமிழ்து ஆக, நீ நயந்துண்ணும் நறவே;  10
குன்றத் தன்ன களிறு பெயரக்,
கடந்தட்டு வென்றோனும், நிற் கூறும்மே;
வெலீஇயோன் இவன் எனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு
விரைந்து வந்து, சமந் தாங்கிய,  15
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்கு எனத்,
தோற்றோன் தானும், நிற்கூ றும்மே,
தொலைஇயோன் அவன் என,
ஒருநீ ஆயினை; பெரும! பெரு மழைக்கு  20
இருக்கை சான்ற உயர் மலைத்
திருத்தகு சேஎய் ! நிற் பெற்றிசி னோர்க்கே.  

புறநானூறு - 126. கபிலனும் யாமும்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை: பரிசில்

ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
வல்ல்ஞ்ம் அல்லேம் ஆயினும், வல்லே  5
நின்வயிற் கிளக்குவம் ஆயின், கங்குல்
துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருநர்
தெறலரு மரபின் நின் கிளையொடும் பொலிய,
நிலமிசைப் பரந்த மக்கட்டு எல்லாம்  10
புலன் அழுக்கு அற்ற அந்த ணாளன்,
இரந்து சென் மாக்கட்கு இனி இடன் இன்றிப்,
பரந்து இசை நிறகப் பாடினன், அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்,
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ் வழிப்,  15
பிறகலம் செல்கலாது அனையேம் அத்தை,
இன்மை துரப்ப, அசை தர வந்து, நின்
வண்மையின் தொடுத்தனம், யாமே; முள்ளெயிற்று
அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப,
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய,  20
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே!  

புறநானூறு - 127. உரைசால் புகழ்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: வேள் ஆய் அரண்டின்.
திணை: பாடாண்.
துறை: கடைஇநிலை.

களங் கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ்ப்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தெனக்,
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்,
கான மஞ்ஞை கணனுடு சேப்ப,
ஈகை அரிய இழையணி மகளிரொடு  5
சாயின்று என்ப, ஆஅய் கோயில்;
சுவைக்கு இனி தாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய
முரைசு கெழு செல்வர் நகர்போ லாதே.  10

 புறநானூறு - 128. முழவு அடித்த மந்தி!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்;  5
ஆடு மகள் குறுகின் அல்லது,
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.  

புறநானூறு - 129. வேங்கை முன்றில்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
சிறப்பு : தேறலுண்டு குரவை ஆடுதல்; பரிசிலர்க்கு யானைகளை வழங்கல்.

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீஞ்சுளைப் பலவின், மாமலைக் கிழவன்;
ஆஅய் அண்டிரன், அடுபோர் அண்ணல்;  5
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவின்று,
வானம் மீன்பல பூப்பின், ஆனாது
ஒருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் ளென்னிற், பிழையாது மன்னே.  

புறநானூறு - 130. சூல் பத்து ஈனுமோ?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு,
இன்முகம் கரவாது, உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்  5
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!

புறநானூறு - 131. காடும் பாடினதோ?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி .

மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ;
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?

புறநானூறு - 132. போழ்க என் நாவே!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.

முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே!
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி, அயல  5
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்தோய் இமையம்,
தென்திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே.  

புறநானூறு - 133. காணச் செல்க நீ!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: விறலியாற்றுப்படை.

மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது, காண்பறி யலையே;
காண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்,
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி,  5
மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!  

புறநானூறு - 134. இம்மையும் மறுமையும்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண்
துறை: இயன் மொழி

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.

புறநானூறு - 135. காணவே வந்தேன்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில்.

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை,
அருளிடர்ச் சிறுநெறி ஏறலின், வருந்தித்,
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்,
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்,
பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்  5
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்,
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்,
புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை! யானே: யென்றும்  10
மன்றுபடு பரிசிலர்க் காணின், கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன்! மாவேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே;  15
பாணர், படுநர்,பரிசிலர், ஆங்கவர்,
தமதெனத் தொடுக்குவர் ஆயின், எமதெனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு,
அன்ன வாக, நின் ஊழி; நின்னைக்
காண்டல் வேண்டிய அளவை; வேண்டார்  20
உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!  

புறநானூறு - 136. வாழ்த்தி உண்போம்!

பாடியவர்: துறையூர் ஓடை கிழார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை சிறப்பு: வாழ்வை ஊடறுக்கும் பகைகள் பலவற்றைப் பற்றிய செய்தி.

யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப
இழை வலந்த பறுன்னத்து
இடைப் புரைபற்றிப், பிணி விடாஅ
ஈர்க் குழாத்தொடு இறை கூர்ந்த
பேஎன் பகையென ஒன்று என்கோ?
 5
உண்ணா மையின் ஊன் வாடித்,
தெண் ணீரின் கண் மல்கிக்,
கசிவுற்ற என் பல் கிளையொடு
பசி அலைக்கும் பகைஒன் றென்கோ?
அன்ன தன்மையும் அறிந்து ஈயார்,  10
நின்னது தா என, நிலை தளர,
மரம் பிறங்கிய நளிச் சிலம்பின்,
குரங் கன்ன புன்குறுங் கூளியர்
பரந் தலைக்கும் பகைஒன் றென்கோ?
ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்,  15
எனக் கருதிப், பெயர் ஏத்தி,
வா யாரநின் இசை நம்பிச்,
சுடர் சுட்ட சுரத்து ஏறி,
இவண் வந்த பெரு நசையேம்;
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்;  20
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப வென
அனைத் துரைத்தனன் யான்ஆக,
நினக்கு ஒத்தது நீ நாடி,
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும்,
தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை  25
நுண்பல மணலினும் ஏத்தி,
உண்குவம், பெரும ! நீ நல்கிய வளனே.  

புறநானூறு - 137. நின்பெற்றோரும் வாழ்க!

பாடியவர்: ஒருசிறைப் பெரியனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி; பரிசில் துறையும் ஆம்.

இரங்கு முரசின், இனம் சால் யானை,
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அரியு மோனே! துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது,  5
கழைக் கரும்பின், ஒலிக்குந்து,
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்,
கண் ணன்ன மலர்பூக் குந்து,
கருங்கால் வேங்கை மலரின், நாளும்
பொன் னன்ன வீ சுமந்து,  10
மணி யன்ன நீர் கடற் படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர் நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!  15

புறநானூறு - 138. நின்னை அறிந்தவர் யாரோ?

பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: பாணாற்றுப் படை.

ஆனினம் கலித்த அதர்பல கடந்து,
மானினம் கலித்த மலையின் ஒழிய,
மீளினம் கலித்த துறைபல நீந்தி,
உள்ளி வந்த, வள்ளுயிர்ச் சீறியாழ்,
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண!  5
நீயே, பேரெண் ணலையே; நின்இறை,
மாறி வா என மொழியலன் மாதோ;
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின்,  10
நின்னை வருதல் அறிந்தனர் யாரே!  

புறநானூறு - 139. சாதல் அஞ்சாய் நீயே!

பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடா நிலை.
சிறப்பு: வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல் என்னும் புலவரது உள்ளச் செவ்வி.

சுவல் அழுந்தப் பல காய
சில் லோதிப் பல்இளை ஞருமே,
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலிய ருமே,
வாழ்தல் வேண்டிப்  5
பொய் கூறேன்; மெய் கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்,
கனிபதம் பார்க்கும் காலை யன்றே;  10
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை,
இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு, ஒருநாள்,
அருஞ் சமம் வருகுவ தாயின்,
வருந்தலு முண்டு, என் பைதலங் கடும்பே  15

புறநானூறு - 140. தேற்றா ஈகை!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் விடை.

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன், மன்ற; செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம் சில
அரிசி வேண்டினெம் ஆகத், தான் பிற  5
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி.
இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன ஓர்
பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே?  10

புறநானூறு - 141. மறுமை நோக்கின்று!

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண்.
துறை: பாணாற்று படை; புலவராற்றுப் படையும் ஆம்.

பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்,
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ,
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
யாரீ ரோ? என வனவல் ஆனாக்,  5
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே,
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே,
இன்னேம் ஆயினேம் மன்னே ; என்றும்
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும்  10
படா அம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
கடாஅ யானைக் கலிமான் பேகன்,
எத்துணை ஆயினும் ஈதல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே,
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே.  15

புறநானூறு - 142. கொடைமடமும் படைமடமும்!

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும்,
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரி போலக்,
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது,  5
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.  

புறநானூறு - 143. யார்கொல் அளியள்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
குறிப்பு: துறக்கப்பட்ட கண்ணகி காரணமாகப் பாடியது.

மலைவான் கொள்க! என, உயர்பலி தூஉய்,
மாரி ஆன்று, மழைமேக்கு உயர்க! எனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்,
பெயல்கண் மாறிய உவகையர், சாரல்
புனைத்தினை அயிலும் நாட! சினப் போர்க்  5
கைவள் ஈகைக் கடுமான் பேக!
யார்கொல் அளியள் தானே; நெருநல்,
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்,
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்.  10
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று,
நின்னும்நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்.
முலையகம் நனைப்ப, விம்மிக்
குழல்இனை வதுபோல் அழுதனள், பெரிதே?  15

புறநானூறு - 144. தோற்பது நும் குடியே!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி.

அருளா யாகலோ கொடிதே; இருள்வரச்,
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்
கார்எதிர் கானம் பாடினே மாக,
நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண்அகம் நனைப்ப,  5
இனைதல் ஆனா ளாக, இளையோய்!
கிளையை மன், எம் கேள்வெய் யோற்கு?என,
யாம்தன் தொழுதனம் வினவக், காந்தள்
முகைபுரை விரலின் கண்ணீர் துடையா,
யாம், அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள்,இனி;  10
எம்போல் ஒருத்தி நலன்நயந்து, என்றும்,
வரூஉம் என்ப; வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு,
முல்லை வேலி, நல்லூ ரானே!  

புறநானூறு - 145. அவள் இடர் களைவாய்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி. பரணர் பாட்டு எனவும் கொள்வர்.

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்,
கடாஅ யானைக் கலிமான் பேக!
பசித்தும் வாரோம்; பாரமும் இலமே ;
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்  5
நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி,
அறம்செய் தீமோ, அருள்வெய் யோய்! என,
இதியாம் இரந்த பரிசில்: அது இருளின்,
இனமணி நெடுந்தேர் ஏறி,
இன்னாது உறைவி அரும்படர் களைமே!  10
 
புறநானூறு - 146. தேர் பூண்க மாவே!

பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி.

அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல
நன்னாடு பாட, என்னை நயந்து
பரிசில் நல்குவை யாயின், குரிசில் ! நீ  5
நல்கா மையின் நைவரச் சாஅய்,
அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன,
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்,
தண்கமழ் கோதை புனைய,  10
வண்பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே!

புறநானூறு - 147. எம் பரிசில்!

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி.

கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்,
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்,
கார்வான் இன்னுறை தமியள் கேளா,
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை  5
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணூறு மணியின் மாசுஅற மண்ணிப்,
புதுமலர் கஞல, இன்று பெயரின்
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!  

புறநானூறு - 148. என் சிறு செந்நா!

பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண்.
துறை: பரிசில்.

கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி! நின்
அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி,
நாடொறும் நன்கலம் கனிற்றொடு கொணர்ந்து,
கூடுவிளங்கு வியன்நகர்ப், பரிசில் முற்று அளிப்பப்;
பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்  5
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று, எம் சிறு செந்நாவே.  

புறநானூறு - 149. வண்மையான் மறந்தனர்!

பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண்.
துறை: பரிசில்.

நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,
வரவுஎமர் மறந்தனர்; அது நீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே  5

புறநானூறு - 150. நளி மலை நாடன்!

பாடியவர்: வன் பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
சிறப்பு:தோட்டி மலைக்கு உரியவன் இவன் என்பதும், இவன் வேட்டுவக் குடியினன் என்பதும்,

கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்,
தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி,
மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்,  5
வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்,
செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்,
தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ,
இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை,
கான்அதர் மயங்கிய இளையர் வல்லே,  10
தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின்,
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,
நல்மரன் நளிய நறுந்தண் சாரல்,  15
கல்மிசை அருவி தண்ணெனப் பருகி,
விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே,
பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டோம் என,
மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்  20
மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்;
எந்நா டோ? என, நாடும் சொல்லான்!
யாரீ ரோ! எனப், பேரும் சொல்லான்;
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;
இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி  25
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
பளிங்கு வகுத் தன்ன தீநீர்,
நளிமலை நாடன் நள்ளிஅவன் எனவே.


© Om Namasivaya. All Rights Reserved.