Books / எட்டுத் தொகை நூல்கள்


புறநானூறு

புறநானூறு - 51. ஈசலும் எதிர்ந்தோரும் !

பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
திணை: வாகை.
துறை; அரச வாகை.
குறிப்பு; செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர் என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது.

நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
தண் தமிழ் பொது எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,  5
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்க எனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
செம்புற்று ஈயல் போல,  10
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!  

புறநானூறு - 52. ஊன் விரும்பிய புலி !

பாடியவர்: மருதன் இளநாகனார்; மருதிள நாகனார் என்பதும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்
வழுதி. திணை: வாகை.
துறை; அரச வாகை.
குறிப்பு; நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி.

அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்,
ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத்
தான் வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு,
வடபுல மன்னர் வாட, அடல் குறித்து,  5
இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங் கொடி
வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்,  10
பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக்  15
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே!

புறநானூறு - 53. செந்நாவும் சேரன் புகழும்!

பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: வாகை.
துறை: அரசவாகை.
குறிப்பு: கைகோத்து ஆடும் தெற்றி யாட்டம் பற்றிய செய்தி.

முதிர்வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களங்கொள் யானைக், கடுமான், பொறைய!  5
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே; தாழாது  10
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின், நன்றுமன், என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப்
பாடுவன் மன்னால், பகைவரைக் கடப்பே.  15

புறநானூறு - 54. எளிதும் கடிதும்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை.
திணை: வாகை.
துறை : அரசவாகை.

எங்கோன் இருந்த கம்பலை முதூர்,
உடையோர் போல இடையின்று குறுகிச்,
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
இரவலர்க்கு எண்மை யல்லது; புரவு எதிர்ந்து  5
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்,
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி,  10
மாசுண் உடுக்கை, மடிவாய், இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.
 
புறநானூறு - 55. மூன்று அறங்கள்!

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ.

ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல,
 5

வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!
கடுஞ் சினத்த கொல் களிறும்;
கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும்,
நெஞ் சுடைய புகல் மறவரும், என
 10

நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட
அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர் எனக் குணங் கொல்லாது,,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
 15
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்!
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்  20
நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!  

புறநானூறு - 56. கடவுளரும் காவலனும்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை : பூவை நிலை.

ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை,
மாற்றருங் கணிச்சி, மணி மிடற் றோனும்,
கடல் வளர் புரிவளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக்கொடி யோனும்;
மண் ணுறு திருமணி புரையும் மேனி,
 5
விண்ணுயர் புல்கொடி, விறல்வெய் யொனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றிப்,
பிணிமுக ஊர்தி, ஒண்செய் யோனும்சுஎன
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல்இசை, நால்வர் உள்ளும்,  10
கூற்றுஒத் தீயே, மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே, வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே, இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின், யாங்கும்  15
அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா,
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ்சிறந்து,  20
ஆங்கினிது ஒழுகுமதி! ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத்
தண்கதிர் மதியம் போல்வும்,
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!  25

புறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: வஞ்சி.
துறை : துணை வஞ்சி.

வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,
நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு  5
இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;
மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு! நின்  10
நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே  

புறநானூறு - 58. புலியும் கயலும்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும்
பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும்.
குறிப்பு: இருவேந்தரும் ஒருங்கிருந்தபோது பாடியது.
திணை: பாடாண்.
துறை : உடனிலை.

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது.
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ,
 5
இளையது ஆயினும் கிளைஅரா எறியும்,
அருநரை உருமின், பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென,  10
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்,
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே;
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின், நேமியோனும், என்று  15
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே;
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்  20
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பௌவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்,  25
காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்று
அடுகளத்து உயர்க நும் வேலே; கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே.  30

புறநானூறு - 59. பாவலரும் பகைவரும்!

பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை : பூவைநிலை.

ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின்,
தாள்தோய் தடக்கைத், தகைமாண் வழுதி!
வல்லை மன்ற, நீநயந் தளித்தல்!
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்
காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்  5
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை, எம்ம னோர்க்கே.  

புறநானூறு - 60. மதியும் குடையும்!

பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். குடை புறப்பட்டதெனக் இருதித் தொழுதேம் என்று .
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன்.
திணை: பாடாண்.
துறை : குடை மங்கலம்.

முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து,  5
தொழுதனம் அல்லமோ, பலவே! கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்,
வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்,  10
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே?  

புறநானூறு - 61. மலைந்தோரும் பணிந்தோரும்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. திணை; வாகை.
துறை; அரச வாகை.

கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,
மலங்கு மிளிர், செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக,  5
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடுபோர் ஏறி, விசைத் தெழுந்து,  10
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்,
வைகல் யாணர், நன்னாட்டுப் பொருநன்,
எகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி,
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,
தாமறி குவர்தமக்கு உறுதி; யாம் அவன்  15
எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல், அதனினும் இலமே!  

புறநானூறு - 62. போரும் சீரும்!

பாடியவர்: கழாத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பறடக் கைப் பெருவிறற் கிள்ளி.
குறிப்பு: போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது.
திணை: தும்பை.
துறை : தொகை நிலை.

வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது?
பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்,
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்,  5
பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து,
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;
பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்  10
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்,
களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர,
உடன்வீழ்ந் தன்றால், அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,
மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே;  15
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால்; பொலிக, நும் புகழே!  

புறநானூறு - 63. என்னாவது கொல்?

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.
குறிப்பு: இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது.
திணை: தும்பை.
துறை : தொகை நிலை.

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி,
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;
விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;
தேர்தர வந்த சான்றோர் எல்லாம்,  5
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;
விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே;
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென,
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே,  10
என்னா வதுகொல் தானே; கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித், தண்புனல் பாயும்,
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே?  15

புறநானூறு - 64. புற்கை நீத்து வரலாம்!

பாடியவர்: நெடும்பல்லியத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண்.
துறை : விறலியாற்றுப்படை.

அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்,
வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,
படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை,
யாணர் நல்லவை பாணரொடு, ஓராங்கு  5
வருவிருந்து அயரும் விருப்பினள் ; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே.
நல்யாழ்,ஆகுளி, பதலையொடு சுருக்கிச்,  10
செல்லா மோதில் சில்வளை விறலி!
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்பப்,
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு,  15
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

புறநானூறு - 65. நாணமும் பாசமும்!

பாடியவர்: கழாஅத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது.
திணை: பொதுவியல்.
துறை : கையறுநிலை.
சிறப்பு: புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு.

மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்,
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,  5
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து,
இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்  10
வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு,
நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே!

புறநானூறு - 66. நல்லவனோ அவன்!

பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை.
துறை : அரச வாகை.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே  5
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!  

புறநானூறு - 67. அன்னச் சேவலே!

பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்,
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

அன்னச் சேவல் ! அன்னச் சேவல் !
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனையக்,  5
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழ நன்னாட்டுப் படினே, கோழி
உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,
வாயில் விடாது கோயில் புக்கு, எம்  10
பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத், தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.

புறநானூறு - 68. மறவரும் மறக்களிரும்!

பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்; சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண்.
துறை: பாணாற்றுப்படை.

உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது,
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்குஎவன் செய்தியோ? பாண ! பூண்சுமந்து,
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து  5
மென்மையின் மகளிர்க்கு வணங்கி,வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்,  10
உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்கு
ஏவான் ஆகலின், சாவோம் யாம் என,
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்,
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த  15
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்;
பிறன்கடை மறப்ப நல்குவன், செலினே!  

புறநானூறு - 69. காலமும் வேண்டாம்!

பாடியவர்: ஆலந்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:பாடாண்.
துறை: பாணாற்றுப்படை.

கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
பூட்கை இல்லோன் யாக்கை போலப்  5
பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுவதுடன் வளைப், பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்,
குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்.  10
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தை யோனே!
பொருநர்க்கு ஓங்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன் ; தகைத் தார்
ஒள்ளெரி புரையும் உருகெழு புசும்பூண்  15
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர்வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றைப், பூவின்
ஆடுவண்டு இமிராத் தாமரை  20
சூடாய் ஆதல் அதனினும் இலையே.


புறநானூறு - 70. குளிர்நீரும் குறையாத சோறும்

பாடியவர்: கோவூர் கிழார்: (கோவூர் அழகியார் எனவும் பாடம்).
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை : பாடாண்.
துறை: பாணாற்றுப்படை.

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
வினவல் ஆனா முதுவாய் இரவல!  5
தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,  10
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
இன்னகை விறலியொடு மென்மெல இயலிச்  15
செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!  
 
புறநானூறு - 71. இவளையும் பிரிவேன்!

பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
திணை: காஞ்சி
துறை: வஞ்சினக் காஞ்சி

மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருந்தும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த  5
பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்  10
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த  15
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

புறநானூறு - 72. இனியோனின் வஞ்சினம்!

பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை: காஞ்சி
துறை: வஞ்சினக் காஞ்சி

நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையும் யாம் என்று  5
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,  10
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்  15
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.  

புறநானூறு - 73. உயிரும் தருகுவன்!

பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; நல்லுருத்திரன் பாட்டு எனவும் பாடம்.
திணை: காஞ்சி
துறை: வஞ்சினக் காஞ்சி

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்  5
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண்  10
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!  

புறநானூறு - 74. வேந்தனின் உள்ளம்!

பாடியவன்: சேரமான் கணைக்கா லிரும்பொறை
திணை: பொதுவியல்
துறை; முதுமொழிக் காஞ்சி தாமே தாங்கிய
தாங்கரும் பையுள் என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர்

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,  5
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?  

புறநானூறு - 75. அரச பாரம்!

பாடியவன்: சோழன் நலங்கிள்ளி
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்,
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!  5
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே-மையற்று,  10
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே.  

புறநானூறு - 76. அதுதான் புதுமை!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை :வாகை.
துறை: அரச வாகை.

ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,  5
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடிப்,
பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக,
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்,  10
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க,
ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே!

புறநானூறு - 77. யார்? அவன் வாழ்க!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்.
திணை: வாகை.
துறை: அரசவாகை.

கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்,
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்  5
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும்,அதனினும் இலனே.  10

புறநானூறு - 78. அவர் ஊர் சென்று அழித்தவன்!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை:வாகை.
துறை: அரசவாகை.

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்,
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து,
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து,
விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்  5
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர,
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்
மாண்இழை மகளிர் நாணினர் கழியத்,  10
தந்தை தம்மூர் ஆங்கண்,
தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.

புறநானூறு - 79. பகலோ சிறிது!

பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை; அரசவாகை.

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து,
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே;  5
எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே?

புறநானூறு - 80. காணாய் இதனை!

பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: தும்பை.
துறை: எருமை மறம்.

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி,
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே;
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்  5
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
பசித்துப் பணைமுயலும் யானை போல,
இருதலை ஒசிய எற்றிக்,
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே.  

புறநானூறு - 81. யார்கொல் அளியர்?

பாடியவர்: சாத்தந்தையார்
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
திணை:வாகை
துறை: அரசவாகை

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே?  5

புறநானூறு - 82. ஊசி வேகமும் போர் வேகமும்!

பாடியவர் :சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: வாகை.
துறை: அரசவாகை.

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனொடு,  5
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

புறநானூறு - 83. இருபாற்பட்ட ஊர்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை.
துறை: பழிச்சுதல்.

அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
ஒருபால் படாஅது ஆகி  5
இருபாற் பட்ட இம் மையல் ஊரே! 

புறநானூறு - 84. புற்கையும் பெருந்தோளும்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன் : சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை.
துறை: பழிச்சுதல்.

என், புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு  5
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!  

புறநானூறு - 85. யான் கண்டனன்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை
துறை: பழிச்சுதல்.

என்னைக்கு ஊர் இது அன்மை யானும்,
என்னைக்கு நாடு இது அன்மை யானும்,
ஆடுஆடு என்ப, ஒருசா ரோரே;
ஆடன்று என்ப, ஒருசா ரோரே;
நல்ல,பல்லோர் இருநன் மொழியே;  5
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்,
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,
யான்கண் டனன் அவன் ஆடா குதலே.

புறநானூறு - 86. கல்லளை போல வயிறு!

பாடியவர்: காவற் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம். பாடப்பட்டோன்
திணை: வாகை
துறை: ஏறாண் முல்லை

சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!  5

புறநானூறு - 87. எம்முளும் உளன்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை; தும்பை.
துறை; தானை மறம்.

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.

புறநானூறு - 88. எவருஞ் சொல்லாதீர்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை; தும்பை.
துறை; தானை மறம்.

யாவிர் அயினும், கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்;
ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.  5

புறநானூறு - 89. என்னையும் உளனே!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை.
துறை: தானை மறம்.

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்,
மடவரல், உண்கண், வாள்நதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன  5
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்னையும் உளனே!  

புறநானூறு - 90. புலியும் மானினமும்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை.
துறை: தானை மறம்.

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்
மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?  5
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய,
விரிமணல் ஞெமரக், கல்பக, நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை  10
வழுவில் வன்கை, மழவர் பெரும!
இருநில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீ களம் புகினே?  

புறநானூறு - 91. எமக்கு ஈத்தனையே!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை.
துறை: வாழ்த்தியல்.

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி  5
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,  10
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

புறநானூறு - 92. மழலையும் பெருமையும்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : தும்பை.
துறை: இயன் மொழி.

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து  5
நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.

புறநானூறு - 93. பெருந்தகை புண்பட்டாய்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை.
துறை: அரச வாகை.

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார், வெடிபட்டு,
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்,  5
காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,
மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என  10
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ;
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய,
அருஞ்சமம் ததைய நூறி, நீ
பெருந் தகை! விழுப்புண் பட்ட மாறே.  15

புறநானூறு - 94. சிறுபிள்ளை பெருங்களிறு!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை.
துறை: அரச வாகை.

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.  5

புறநானூறு - 95. புதியதும் உடைந்ததும்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண்.
துறை: வாண் மங்கலம்,

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்  5
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.  

புறநானூறு - 96. அவன் செல்லும் ஊர்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,
திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,  5
விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,
மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்
கைமான் கொள்ளு மோ? என
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.  

புறநானூறு - 97. மூதூர்க்கு உரிமை!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்,
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,
ஊனுற மூழ்கி, உருவிழந் தனவே;
வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர்
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்,  5
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலைதிரிந் தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,
பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே;  10
மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பரிதலின்,
களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்
பொலந் தும்பைக் கழல் பாண்டில்  15
கணை பொருத துளைத்தோ லன்னே;
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடந்தாள்,
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே; மறிப்பின்,  20
ஒல்வான் அல்லன், வெல்போ ரான் எனச்
சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்,
கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்று; அது அறிந்துஆ டுமினே.  25

புறநானூறு - 98. வளநாடு கெடுவதோ!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை.
துறை: அரச வாகை. திணை: வஞ்சியும், துறை; கொற்றவள்ளையுமாம்.

முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிற் கதவம் எழுச் செல்லவும்,
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்  5
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நன்மாச் செயக் கண்டவர்
கவை முள்ளின் புழை யடைப்பவும்,
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர்  10
தோள் கழியொடு பிடி செறிப்பவும்,
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென,  15
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
சுற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்
இரங்க விளிவது கொல்லோ; வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்,
பெரும்புனல் படப்பை, அவர் அகன்றலை நாடே;  20

புறநானூறு - 99.அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,

99.அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,
 
அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல,
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்,
பூவார் காவின், புனிற்றுப் புலால் நெடுவேல்,  5
எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய், செருவேட்டு,
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும்  10
பரணன் பாடினன் மற்கொல், மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி, நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே!
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு,  15

புறநானூறு - 100. சினமும் சேயும்!

பாடியவர்: அவ்வையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை.
துறை: அரச வாகை.
குறிப்பு: அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது.

கையது வேலே; காலன புழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;னக
வெட்சி மாமலர், வேங்கையொடு விரைஇச்,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரி வயம் பொருத வயக்களிறு போல,  5
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவண் உடற்றி யோரே;
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியுஞ், சிவப்பு ஆனாவே.


© Om Namasivaya. All Rights Reserved.