Books / எட்டுத் தொகை நூல்கள்


நற்றிணை

நற்றிணை - 151. குறிஞ்சி

நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்கதில்ல- தோழி!- கடுவன்,  5
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி, கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன்  10
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே!  

தோழீ ! மிளகுக் கொடி வளர்ந்து படருகின்ற மலைப்பக்கத்திலே களவுப் புணர்ச்சியிற் கடுவனால் முயங்கப்பட்ட சிவந்த முகத்தையுடைய பெண் குரங்கு; தனக்குப் புணர்ச்சி வேறுபாட்டானுண்டாகிய குறியைத் தளிர்களைத் தின்னுகின்ற தன் பெரிய சுற்றம் அறியுமே என்று அஞ்சி; கரிய அடியையும் பொன் போல்கின்ற பூங்கொத்தினையுமுடைய வேங்கை மரத்தின் அழகிய கிளைமீது சென்று; ஆழமாகிய சுனைநீரை நோக்கித் தலைகவிழ்ந்திருந்து; தன் மெல்லிய தலையில் முன்பு புணர்ச்சியாலே குலைந்த முச்சிமயிரை அக்குலைவு தோன்றாதபடி திருத்தாநிற்கும் மலைநாடன்; நினது நல்ல நெற்றி பசலையூர்ந்து பசந்து காட்டினும் பெரிய தோளின்வளை நெகிழந்தவாயினும்; கொல்லுகின்ற வலிய கரிய புலியை நுழைதற்கரிய முழையகிருல் மோதிக் கொன்றுபோகட்டு அதனிரத்தம் பூசுதலானே சிவந்த மறுவைக்கொண்ட வெளிய கோட்டினையுடைய களிற்றியானை; மலைமேனின்று வருகின்ற அருவியின் கண்ணே சென்று கழுவாநிற்குஞ் சாரல் நெறியில்; இரவில் எஞ்ஞான்றும் வாரா தொழிவானாக;

இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - இளநாகனார்

நற்றிணை - 152. நெய்தல்

மடலே காமம் தந்தது; அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே;
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர,
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்;
எல்லாம் தந்ததன்தலையும் பையென  5
வடந்தை துவலை தூவ, குடம்பைப்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ,
கங்குலும் கையறவு தந்தன்று;
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே?  

யான் கொண்ட காமமோ இந்தப் பனங்கருக்காலே கட்டிய பரியைத் தந்தது; ஊராரெடுக்கும் அலரோ ஆவிரை, பூளை, உழிஞை என்று இன்னன மலர்களை இடையிட்டுக் கட்டிய எருக்கம் பூ மாலையைத் தந்தது; எல்லாம் விரும்புதலைச் செய்கின்ற ஆதித்த மண்டிலமோ தன்னொளி விசும்பின் மேலே செல்லும்படி விளங்கிய கதிர்கள் மழுக்க மடைந்து எனக்குத் துன்பத்தைத் தந்தது; முற்கூறிய யாவும் எல்லாவற்றையுந் தந்தவற்றின் மேலும்; மெல்லென வாடைக்காற்றுப் பனித்துளியைத் தூவுதலாலே; கூட்டிலே தன் பெடையைப் பிரியாது புணர்ந்திருக்கும் அன்றிற் பறவையின் இயங்குகின்ற குரலுடனே அளாவிக்கொண்டு; இராப் பொழுதென்பதும் என் செயலெல்லாம் அழியும்படி கையறவைத் தந்தது; கண்டோர் யாவராலும் இரங்கும்படியாகிய நிலைமையையுடைய யான்; இவ்வளவு துன்பஞ் சூழ்ந்துகொள்ள இவற்றிடையே இனி எவ்வண்ணம் உய்குவேனோ?

மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்

நற்றிணை - 153. பாலை

குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு,  5
நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து,
உண்டல் அளித்து என் உடம்பே- விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி,
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே.  10

கீழ் கடலிலே சென்றிறங்கி நீரை முகந்தெழுந்து மேல்பாலேகி யாங்கும் இருளடையும்படி இருண்டு; அணுத்திணிந்த இவ்வுலகம் அவ் விருளினின்று புலப்படுமாறு; கருமகாரர் செம்பினாலே செய்த பானையைக் கடைந்தாற்போல மின்னி; எங்கும் தனது பெய்யுந் தொழிலை மேற்கொண்ட இனிய இடி முழங்குதலாகிய குரலையுடைய மேகம்; அங்ஙனம் பெய்யுந் தொழில் முடிந்தவுடன் எழுந்து தென்பாலேகி யொழிந்தாற்போல; என் நெஞ்சம் இங்கு வைகுவதொழிந்து அவரிடஞ் சென்று அங்கு வைகி அவ்வண்ணமே ஒழிந்து போனதனாலே; வலிய போர் செய்யவல்ல வெய்ய சினத்தையுடைய பகைவேந்தனது படை அலைத்தலாலே கலங்கி; ஊரில் வாழுங் குடிமக்கள் எல்லாம் குடியோடி அகன்றுவிட்ட பெரிய பாழ் நகரத்தை; காவல் செய்திருந்த ஒரு தனி மகனைப் போன்று உண்ணுதலாலே என்னுடம்பு இங்குக் காக்கப்படுந் தன்மையதாயிராநின்றது;

பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது. - தனிமகனார்

நற்றிணை - 154. குறிஞ்சி

கானமும் கம்மென்றன்றே; வானமும்
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி,
பல் குரல் எழிலி பாடு ஓவாதே;
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை  5
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது
துஞ்சுதியோ- இல, தூவிலாட்டி!-
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே; சாரல்  10
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்,
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே?  

ஏடீ! வலியிலாதாய்!; காடு கம்மென்று ஒலியடங்குவதாயிற்று; ஆகாயமும் மலைமுழைபோன்ற கரிய இருளைப் பரப்பிப் பலவாய இடிமுழக்கத்தையுடைய மேகம் முழங்குவதும் நீங்குகின்றிலது; மேகம் தவழும் குறுங்காட்டினிடத்திலே களிற்றை வலத்தே விழக் கொன்ற வெய்ய சினத்தையும் அகன்ற வாயையுமுடைய புலியேறு; யாவரும் அஞ்சுமாறு முழங்காநிற்கும்; இவ்வோசையனைத்தையும் செவியில் ஏறட்டுக்கொள்ளாது நீ தூங்குகின்றனையோ? பேர் அஞர்பொருத புகர்படு நெஞ்சம் நீர் அடு நெருப்பில் தணிய பெரிய துன்பம் வந்து மோதுதலானே குற்றப்பட்ட நெஞ்சத்தின் கொதிப்பானது நீர் பெய்த நெருப்புப் போலத் தணியும்படி; இன்று அவர் வாராது விட்டாலோ நல்லதாகும்; சாரலிலே குறுக்கிட்ட மலையின்கண்ணே செல்லுநெறியை நினையுந்தோறும்; நிலையில்லாத என் நெஞ்சமானது அந்த நிலத்தின்கண் பரந்து செல்லாநிற்கும்; யான் யாது செய்யமாட்டுவேன்?

இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது. - நல்லாவூர் கிழார்

நற்றிணை - 155. நெய்தல்

ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்,
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்,
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்!
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்:
கண்டோர் தண்டா நலத்தை- தெண் திரைப்  5
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ?
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ?
சொல், இனி, மடந்தை! என்றனென்: அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன;
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே.  10

ஒள்ளிய அணிகலன்களையுடைய ஆயமகளிருடன் கூடிப் பாவையைக்கொண்டு விளையாடும் விளையாட்டையும் ஆடாது; பெரிய இதழையுடைய நெய்தன் மலர் மாலையையும் புனையாது; விரிந்த பூவையுடைய கடலருகுள்ள சோலையின்கண்ணே ஒரு பானின்ற மாதே!; நோக்கினோராலே கெடாத நலத்தினையுடையாய்!, மடந்தை நின் தொழுதனம் வினவுதும் மடந்தாய்! நின்னை வணங்கி வினவுகின்றேம்; தௌபிந்த அலையையுடைய பெரிய கடற் பரப்பின்கண் விரும்பியுறைகின்ற நீரரமகளோ?; கரிய கழியருகிலுள்ள இங்கு நிலைமைகெண்டுறைகின்ற வொருமாதோ?; வேறியாவளோ இப்பொழுது சொல்லுவாயாக! என்று கூறினேன், அங்ஙனம் கூறுதலும்; அதற்கு விடையாக முட்போன்ற கூரிய பற்களினின்று நகையுமுண்டாயின; ஈரிமைகளையுடைய மையுண்ட கண்களும் பனி பரந்தன; ஆதலின் யாம் முன்பு முயங்கிய இவளே இப்பொழுதும் அம் முயங்கற் குறிப்புடையள்காண்;

இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது; உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம். - பராயனார்

நற்றிணை - 156. குறிஞ்சி

நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம்
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்,
பேர் அன்பினையே- பெருங் கல் நாட!-
யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள்
சிறு தினை காக்குவம் சேறும்; அதனால்,  5
பகல் வந்தீமோ, பல் படர் அகல!
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்;
பாடு இமிழ் விடர் முகை முழங்க,
ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே.  10

பெரிய மலை நாடனே! நீ தானும் இரவில் வருநெறி தவறின் அந் நெறியை மெல்ல அடி வைத்து அறிந்து ஒதுங்கிச் செல்லுதற்குங் கூடாத நிரம்பிய இருட்பொழுதினில் வந்து; காவலையுடைய எமது அகன்ற மாளிகையின் உள்ளின்கண்ணதாகிய காவலையுங் கடந்து வந்து கூடி; பெரிய அன்பினையுடையையாயிராநின்றனை; கொறுக்கச்சி முளைத்தடர்ந்த பெரிய மலைப்பக்கத்துள்ள சிறுகுடியின்கண் எமர் கள்ளை மிகுதியாகவே பருகி மயங்கினவராயினும் அவர் தாம் வெகுளியில் மிகப் பெரியவராயிராநின்றார்; அன்றியும் இயங்குகின்ற மேகம் தான் முழங்குகின்ற இடியினொலி பிளவுபட்ட மலைமுழையின்கண்ணும் எதிரொலி முழங்கும்படி எமது கொடுமுடியுயர்ந்த குன்றின்கண்ணே வந்து தங்கியிராநின்றது; மற்றும் யாம் நின்னையும் நின்மலையையும் பாடிப் பற்பல நாளளவும் சிறிய தினைப்புனத்தைக் காக்கும் பொருட்டு நாளையே செல்லாநிற்பேம்; அதனால்எம்முடைய பலவாய துன்பமெல்லாம் தீரும்படியாக நீ பகற்பொழுதிலே ஆங்கு வந்து முயங்குவாயாக !

இரவுக்குறி மறுத்தது. - கண்ணங் கொற்றனார்

நற்றிணை - 157. பாலை

இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து,
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்,
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்,  5
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே- காட்ட
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை
அம் பூந் தாது உக்கன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே.  10

பெரிய இடமகன்ற இவ்வுலகின்கண் உயிர்களுக்குரிய நெருங்கிய தொழிலைக் கொடுத்துப் பெருமழை பெய்துவிட்ட பிற்றைநாட் காலையிலே; பல புள்ளிகளமைந்த பாம்பு ஓடும்போது அதன் முதுகு நௌபியுமாறு போல யாற்றுநீர் நுணுகியோடா நின்ற செவ்வி அமைந்த இளவேனிற் பருவத்திலே; பூங்கொத்துக்கள் நிரம்பிய மாமரத்தின்கண்ணவாகிய பெடையொடு புணர்கின்ற குயில் கூவும்பொழுதெல்லாம்; காட்டின் கணுள்ள சிறிய மலையின்பக்கத்தவாகிய நீண்ட அடியையுடைய வேங்கை மரத்தின் அழகிய பூந்தாது உதிர்ந்தாற்போன்ற; நுண்ணிய பலவாய சுணங்கு பரந்த மாமைநிறத்தையுடையாள்; நம்பால் நினைந்து விடுத்த நெஞ்சுடனே அக்குயில் ஒன்றனையொன்று அழைக்கின்ற ஓசையைக் கேட்டுகுந்தோறும் காமமானது தன்வரம்பு கடந்து மிக அதனாலே பெரிதும் அழுது துன்பமுழவாநிற்குமே!

பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது. - இள வேட்டனார்

நற்றிணை - 158. குறிஞ்சி

அம்ம வாழி, தோழி! நம்வயின்,
யானோ காணேன்- அதுதான் கரந்தே,
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே;
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே-
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி  5
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி,
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே.  

தோழீ! வாழி! யான் கூறுகின்ற இதனைக் கேட்பாயாக!; மலையின்கண்ணுள்ள பிளந்த முழையிலே பதுங்கியிருந்த வெய்ய சினத்தையுடைய கரிய புலியானது புள்ளிகள் அமைந்த முகத்தையுடைய யானை வருந்தும்படி மோதி; அதன் இரத்தத்தைப் பருகிய கொழுவிய கவுளையுடைய பெரிய வாயை வேங்கையின் அடி மரத்தில் உரிஞ்சித் துடைக்கின்ற; உயர்ந்த மலைநாடன் வருகிற நெறியை இன்றளவும் நான் கண்டதேயில்லை; அங்ஙனமிருந்தும் அந் நெறியானது மறைவாக என்பால் வந்து மலைவழியிலே பொருந்தியிருக்கின்ற காட்டின் வடிவங்கொண்டு என்முன் நின்று இதுதான் அவன் வருகின்ற காடென்பதனை நீ காண் என்று என்னைக் கொல்லாநிற்கும்; மிக்க இருள் வடிவமாய் நின்று இதுதான் அவன் வருகின்ற இருட்பொழுதென்று என் கண்களைக் கொல்லா நிற்கும்; இத்தகைய காட்டின்கண் இருட்பொழுதில் அவன் வருவதனைக் குறித்து யான் யாது செய்யமாட்டுவேன் ?

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது. - வெள்ளைக்குடி நாகனார்

நற்றிணை - 159. நெய்தல்

மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை,
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை,
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,
எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல  5
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்,
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய,
எழு எனின், அவளும் ஒல்லாள்; யாமும்,
ஒழி என அல்லம் ஆயினம்; யாமத்து,
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற்  10
சில் குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!  

நீலமணி களங்கமறத் தௌபிந்திருந்தாற்போன்ற கரிய பெரிய கடனீர்ப் பரப்பின் வலிய அலையோங்கி மோதுகின்ற; புன்னை மலர் மிக்க பெரிய துறையின் கண்ணே நிலவைக் குவித்து வைத்தாற் போன்ற உயர்ச்சியையுடைய மணன்மேடு இடிந்து சரிந்த கரையின்கண்ணே நின்று; சங்குகளைக் குலையாகத் தொடுத்தாற் போன்ற குருகுகளின் வரிசையை எண்ணிப் பகற்பொழுதை நின்னொடு போக்குவேமாயின்; மெல்லக் காற்றடித்துப் பெருக்கிக் கோலஞ் செய்த புன்னைமரம் பொருந்திய வாயிலையுடைய; கொழுவிய மீனுணவையுடைய வளப்பமிக்க மனையத்துச் செல்லும்பொருட்டு நீ எழுந்துவருவாயாக! என்றால்; அதற்கு அவள் உடன்படுவாளல்லள்; யாமும் அத்தலைவியை நோக்கி நீ கொண்ட உள்ளக் கருத்தை ஒழிப்பாயாக! என்று கூறும் தகுதிப்பாடுடையேமல்லேம்; சேர்ப்பனே! நடுயாமத்து முரிந்து விழுகின்ற அலையின் ஒலியைக் கேட்டும் துயிலாநின்ற நிரம்பிய கடற்கரையின் கண்ணதாகிய சிலவாகிய குடியிருப்புக்களையுடைய எம்மூரில்; யாவரும் எதிர்கொள்ளும் மகிழ்ச்சியாலே கல்லென்னும் ஒலியுண்டாம்படி நீ விரும்பிய தேர் தங்குவதாக!

தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது. - கண்ணம்புல்லனார்

நற்றிணை - 160. குறிஞ்சி

நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,
நும்மினும் அறிகுவென்மன்னே- கம்மென
எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின்,  5
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி,
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே.  10

மேன்மேலே தோன்றிய தித்தியையும் எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கையின்மேலே அள்ளித் தௌபித்தாற் போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்; ஐம் பகுதியாகப் பகுக்கப்பட்ட சிவந்த விளங்கிய நெற்றிமேலே பொலிவு பெற்ற தேன்பரவிய கூந்தலாகிய ஓதியையும் உடைய இவளுடைய; நாட்பட்ட நீர் பொருந்திய பொய்கையிலே மலர்ந்த குவளை மலரை ஒன்றோடொன்று எதிர்எதிர் வைத்துத் தொடுத்தாற் போன்ற செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணையும் யான் காண்பதன்முன் உவ்விடத்தே; யாருடனும் விளங்கின கலந்த உறவையும், நண்பும் சுற்றந் தழுவலும் பகைவரை வசித்தலுமாகிய இரு வகை நட்பையும்; தன்னோடொவ்வாத தாழ்ந்தார்மாட்டு ஒன்றும் இரவாதவாறு பெற்ற நாணம் நன்றாகவுடைமையையும்; பிறர் இரந்தவழி நன்னெறியிலே கரவாமலீயும் கொடையையும்; தீயசெயல் கண்டவிடத்து அச் செயலில் உள்ளஞ் செல்லாதவாறு மீட்டு நன்னெறிக்கண்ணே நிறுத்தும் பண்பையும்; உலகவொழுக்கமறிந்து ஒழுகுவதனையும்; நும்மினுங்காட்டில் ஆராய்ந்து அவற்றை யானுடையனாகியிருந்தேன்; இப்பொழுது இவள் கண்ணை நோக்கிய வழி அவை யாவும் என்மாட்டு அவ்வண்ணம் இல்லையாகிக் கழிந்து வேறு வண்ணமாயுண்டாயின; இங்ஙனம் வேறுவகை எய்தியபின் நீ இரங்கியாவதென்னை கொலாம்;

கழற்று எதிர்மறை.

நற்றிணை - 161. முல்லை

இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய,
கண் போல் நீலம் சுனைதொறும் மலர,
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்,
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய,
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி,  5
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக்
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப,
தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப்
புள் அறிவுறீஇயினகொல்லோ- தௌளிதின்
காதல் கெழுமிய நலத்தள், ஏதில்  10
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேம் மொழியாட்கே?  

நம்முடைய அரசனுஞ் செய்தற்கரிய போர்த் தொழிலை முற்றுவித்ததனாலே; மலையிலுள்ள சுனைகள் தோறும் மாதர்கண்போலும் குவளைமலரா நிற்ப; மலருதிர்ந்து பரவுகின்ற வேங்கை மரங்களையுடைய அகன்ற நெடிய காட்டின் கண்ணே; இம்மென ஒலிக்கின்ற வண்டுகளின் நெருங்கிய கூட்டம் இரிந்தோடாநிற்ப; சோணாட்டின்கணுள்ள நெடுந்தெரு என்னும் ஊர்போன்ற அழகு பொருந்திய நெடிய வழியிலே நம்முடைய வீரர் ஆங்காங்குத் தங்கிச் செல்லாநிற்ப; வெண்காந்தளின் வளவிய இதழ்கள் சங்கு உடைந்து கிடந்தாற் போலக் கிடக்குமாறு குதிரையின் கவிந்த குளம்பு மிதித்து அறுக்காநிற்ப; தோள்களிலே வலி பிணித்து நின்றாற் போல மிக நெருங்கி வருகின்ற நம்முடைய வருகையை; நம்பால் ஆசைமிக்க நலத்தையுடையளாய் யாதுமில்லாத வேறொன்றனைத் தன் புதல்வனுக்குக் காட்டிப் பொய்ம்மொழி கூறி ஆற்றுவித்து மகிழாநிற்கும்; தித்தி பரந்த அல்குலையும் இனிய மொழியையுமுடைய நங் காதலிக்கு; நிமித்தங் காட்டும் காக்கையாகிய புள்ளினங்கள் கரைந்து அறியும்படி தெரிவித்தனவோ? இங்ஙனம் மகிழ்ந்திருப்பதற்கு வேறு காரணமில்லையே?

வினை முற்றிப் பெயரும்தலைவன், தேர்ப்பாகன் கேட்ப, சொல்லியது.

நற்றிணை - 162. பாலை

மனை உறை புறவின் செங் காற் பேடைக்
காமர் துணையொடு சேவல் சேர,
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன் என்று, நின்
பனி வார் உண்கண் பைதல கலுழ,  5
நும்மொடு வருவல் என்றி; எம்மொடு-
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை!- முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடு வீழ்,
வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும்,  10
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே?  

பெரிய சீர்த்தியையுடைய தந்தையினது நீண்ட புகழ் பொருந்திய நெடிய மாளிகையின்கண்ணே; ஈன்ற தாயொடு பிரியாது வைகும் மிக்க இளமையுடையாய்!; முன்பு மனையிடத்து உறைகின்ற சிவந்த காலையுடைய புறாவின் பேடையாகிய அழகிய தன் துணையொடு அதன் ஆண்புறாவாகிய சேவல் கூடி மகிழாநிற்ப; அவற்றை நோக்கி வருத்தமுடையதாகும்படி எழுகின்ற துன்பஞ் செய்யும் மாலைப்பொழுதிலே தனியே இருப்பதற்கு ஆற்றேனாவேன் என்று; நின் நீர் வடிகின்ற மையுண்ட கண்கள் துன்புற்றனவாய்க் கலுழா நிற்ப எம்மை நோக்கி; யான் நும்முடனே நீயிர் செல்லுமிடத்து வருகிற்பேன் என்று கூறாநின்றனை; வேற்படை போலும் இலையையுடைய இத்தி மரத்தினுடைய நிலத்திலே படாது தொங்குகின்ற நெடிய விழுது; வைகறையில் மேல் காற்று வீசுந்தோறும்; ஊசலாடுதல் போன்று கீழே துயிலுகின்ற பிடியானைமீது புரளா நிற்கும்; பாலையின் கண்ணே செல்லுதல் நினக்குப் பொருந்துவ தொன்றாகுமோ? ஆகாதன்றே! ஆதலின் நீ வரற்பாலை அல்லைகாண்;

உடன் போதுவல் என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.

நற்றிணை - 163. நெய்தல்

உயிர்த்தனவாகுக, அளிய, நாளும்-
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக்
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப,
நிலவுத் தவழ் மணற் கோடு ஏறிச் செலவர,  5
இன்று என் நெஞ்சம் போல, தொன்று, நனி
வருந்துமன்; அளிய தாமே: பெருங் கடல்
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை,
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று  10
வைகுறு வனப்பின், தோன்றும்
கைதைஅம் கானல் துறைவன் மாவே!  

பெரிய கடலருகிலுள்ள கரிய நிறத்தையுடைய புன்னையின் பக்கத்தவாகிய தனிமையினிருக்கின்ற தாழையின் ஒள்ளிய மடல்; நெடிய சுடரையுடைய கதிரினாலே இருளைப்போக்கி யெழுந்து உள்ளே கொதித்து ஆகாயத்திலே சென்று விளங்கிய ஒளியையுடைய ஆதித்தனது பாடுசாய்கின்ற அலகுபோலத் தோன்றா நிற்கும்; அத்தகைய தாழஞ்சோலை சூழ்ந்த துறைவனுடைய குதிரைகள்; நாள்தோறும் நுண்மணலாகிய துகளை முகந்தெழுந்த அமையாது வீசும் ஊதைக்காற்றின் கண்ணே; இது பகலென்றும் இஃது இரவென்றும் கருதாமல் ஒலிக்கின்ற இனிய ஒலியையுடைய ஒரு நிகரவாகிய மணிகள்; ஒருசேரக் கோத்துக் கழுத்திலே பூட்டப்பட்டுக் கல்லென வொலிக்கும்படியாகத் தன் வெண்மை நிறத்தினால் நிலவு பரந்தாற்போன்ற மணற் குன்றுகளிலே ஏறிச் செல்லுதலானே; என்னெஞ்சம் இப்பொழுதுபோல முன்பே மிகவும் வருந்தியதாயிருந்தது; அந் நெஞ்சின் தன்மையைக் காணின் மிக இரங்கத் தக்கதாகும்; இன்று துறைவன் வரைவொடு புகுந்ததன் காரணமாக அவனுடைய குதிரைகள் தாம் இனி நாள்தோறும் வருந்துவனவல்ல; ஆதலின் இரங்கத் தக்கனவாகிய அவைகள் இப்பொழுது களைப்பாறுவனவாக !

வரைவு மலிந்து சொல்லியது.

நற்றிணை - 164. பாலை

உறை துறந்திருந்த புறவில், தனாது
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக,
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச்
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர் எனச்
சொல்லின் தௌப்பவும், தௌதல் செல்லாய்-  5
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென,
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ,
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம்,  10
ஊறு இலராகுதல் உள்ளாமாறே.  

தோழீ! மழைபெய்யாதொழிந்த பாலைநிலத்தின்கண் அந் நிலத்தின் தெய்வமாகிய ஆதித்தன் காய்தலானே; நிலம் பிளவுபட அதனால் உலகம் மிகவருந்தித் ன்புற்ற காலத்து; தலைவர் பொருள்வயிற் பிரிந்து அந்நிலத்துள்ள நெறியின்கண்ணே சென்றனராயினும் அவர் பொருள்மேற் சென்றாராதலின்; நல்லதொரு காரியத்தையே செய்தனரென்று என்னுடைய சொற்களால் நின்னைத் தௌபிவித்தகாலையும்; வளைந்த வில்லையுடைய ஆறலைகள்வர் செம்மையுற்ற கோல்வடிவாகிய அம்பினாலே நெறியின்கண்ணே செல்லும் ஏதிலாளரைக் கொன்று உயிரைப் போக்கினமையாலே; இறந்து கிடந்த பிணங்கள் கொடிய மலைநெறியின் மருங்கே இலைகளால் மூடப்பட்டு முடைநாற்ற மிகுதலும்; அவற்றைத் தின்ன வந்த மிக்க பசியையுடைய குறிய நரி அம் முடை நாற்றம் பொறாமையால் அவ்விடத்து நெருங்காது பின்னே மீண்டு செல்லாநிற்கும்; சுரத்தின்கண் யாதுமோர் ஊறுபாடிலராய் வருதலை நினையாமையாலே நீ; யான் கூறிய வார்த்தைகளினாலே தௌபிவடைந்தாயில்லை; அவ்வண்ணம் நீ வருந்தியிருப்பது அறிந்தனர் போலும், அவர் குறித்த இப் பருவத்து இற்றைநாளால் இங்கு வந்தனர்காண்;

பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.

நற்றிணை - 165. குறிஞ்சி

அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன்,
அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க எனக்
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து,
கிளையொடு மகிழும் குன்ற நாடன்  5
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப,
நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக என்னான்;
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே.  

தோழீ! அமர்த்த கண்ணையுடைய ஆமானின் அரிய நெஞ்சிலே பாய்ந்து தங்காது குறிதவறி யொழிந்துபோன அம்பின் போக்கைக் கருதி; கானவன் தன்னுள்ளத்து இம் மலையில் தெய்வம் வெளிப்போந்து நின்றது, மழை பெய்தாலோ அதன் வீறு தணியுமாதலின் மலையை மழைவந்து சூழ்க என்று; அக் கடவுளை உயர்ந்த அம் மலைமேலே சென்று வழிபடும் பொருட்டு விரும்பி யெழுந்து தன் சுற்றத்தாரொடும் போய்; அதற்குப் பலியிட்டு நீர்வளாவிய பின்னர் அப் பலியை உண்ணாநிற்கும் மலைநாட்டினையுடைய நந்தலைவன்; இங்கு வரும்பொழுதெல்லாம் நினது அருமையை அவனுக்கு உரைத்தலால்; நம்மைப் புணர்தலில்லாத அன்பற்றவரது நட்பு அப்படியே அன்பில்லாமல் ஒழிவதாக என்று நீ வெறுத்துக் கூறுவதுபோல அவன் கூறுகின்றிலன்; ஆதலின் நின்பால் மிக்க அன்புடைமையின் இன்னே வரையுமாறு விரைய வாராநிற்பன்; அதன்முன் அன்னையர் என்னை வினவும் பொழுது நீ வருந்தாது என்பால் அறத்தொடு நிற்பாய் காண் !; அயலார் நின்னை மணஞ் செய்து கொள்ளுமாறு விடுக்கின்ற தூது மிகப் பலவாயின; வேற்று வரைவு நமக்குத் தகுதியன்று கண்டாய்;

நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.

நற்றிணை - 166. பாலை

பொன்னும் மணியும் போலும், யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்;
போதும் பணையும் போலும், யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்:
இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும்  5
அறம் நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை,
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்;
வினையும் வேறு புலத்து இலெனே; நினையின்,
யாதனின் பிரிகோ?- மடந்தை!-
காதல் தானும் கடலினும் பெரிதே!  10

மடந்தாய்! பொன்னைப் போலும் ஒளிவீசுகின்ற நினது நல்ல வடிவும், நீலமணியைப் போலும் (நிறமமைந்த) மணங்கமழ்கின்ற நின் கரிய கூந்தலும்; குவளை மலரைப் போலும் அழகிய மையுண்ட நின்கண்களும்; மூங்கிற் போத்தினைப்போலும் அழகையுடைய நின் தோள்களும்; ஆகிய இவற்றைக் காணும் பொழுதெல்லாம் யானும் உள்ளம் மகிழ்ந்து அறத்தின்கண்ணே நிலைபெற்றோர் அடையும் பயனை அடைந்தேன் ஆகின்றேன்; அதன்மேலும் பொன்னாலாகிய தொடியணிந்த புதல்வனும் விளையாட்டயர்தல் கற்றிருக்கின்றனன்; நுங்களைக் கண்டு மகிழ்வதினுங் காட்டிற் சிறந்ததொன்றும் இல்லாமையால் வேற்றிடஞ் சென்று செய்யும் செயல் யாதுமில்லாதேனாகியிராநின்றேன்; நின்பால் எனக்குண்டாகிய ஆசையோ கடலினும் பெரிதாயிராநின்றது; இவற்றை ஆராயின் எக்காரணத்தை முன்னிட்டு நாம் ஒருவரையொருவர் பிரிகிற்பம்; பிரியகில்லமாதலின் நீ வேறுபட்டுக் காட்டி என்னை வருத்தாதே கொள்!;

செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.

நற்றிணை - 167. நெய்தல்

கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை
விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின், ஆஅய்
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண் அமை நெடுந் தேர்ப் பாணியின், ஒலிக்கும்
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த  5
பயன் தெரி பனுவற் பை தீர் பாண!
நின் வாய்ப் பணி மொழி களையா- பல் மாண்
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த
இறை ஏர் எல் வளைக் குறுமகள்  10
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே.  

புன்னையினது மேலோங்கி வளைந்த கரிய அடித்தண்டினையுடைய பெரிய கிளையிலே புதுவதாக வந்து தங்கிய வெளிய நாரை நரலுதல; கடையெழு வள்ளலுள் ஒருவனாகிய ஆஅய் அண்டிரனது பெரிய மகிழ்ச்சியையுடைய நாளோலக்கத்திலே இரவலர் பரிசிலாகப் பெற்ற அலங்காரமமைந்த நெடிய தேரினது ஒலிபோல ஒலியாநிற்கும்; குளிர்ச்சியையுடைய துறையை உடைய கடற்கரைத் தலைவனாகிய காதலன் நின்னைத் தூதாக விடுத்தலினாலே வந்த நீ பெறும் பயனுக்குத் தக்கபடி கூறும் பனுவலையுடைய வருத்தமில்லாத பாணனே !; நின் வாயினாலே கூறப்படுகின்ற மெல்லிய பொய்ம்மொழிகள்; பல மாட்சிமைப்பட்ட புதிய ஞாழன்மலரொடு புன்னைமலரும் உதிர்ந்து பரவிய மணம் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; முன்பு நுகரப்பட்டுப் பின்பு தனது மாட்சிமையுடைய நலத்துடனே கையிலுள்ள அழகிய வளையும் இழந்த இளமை மாறாத மடந்தையினது; பிறை போன்ற அழகிய நெற்றியிலுண்டாகிய பசலையை; நீக்குவனவல்ல காண்; ஆதலின் நீ இங்கு நில்லாது மீண்டு செல்வாயாக!

தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.

நற்றிணை - 168. குறிஞ்சி

சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்,
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்  5
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ-
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்,
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள்,
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
ஆரம் கமழும் மார்பினை,  10
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே?  

வண்டுகள் உண்ணுமாறு மலர் விரிந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கையின் பெரிய கிளையிலே தொடுத்த கொழுவிய கண்களையுடைய தேனடையிலே; தேனீக்கள் மொய்த்தலாலே கசிந்து கல்லின் குழிகளில் வடிந்த இனிய தேன்; குறவரின் இளமகாஅர் வழித்துண்டெஞ்சியதை; மெல்லிய தலையையுடைய மந்தியின் வலிய குட்டிகள் சென்று உண்ணாநிற்கும் நல்ல மலைநாடனே!; நின்னை விரும்பியுறையும் இவளது இனிய உயிர் படுகின்ற துன்பமின்னதென்று கருதாமல்; வருத்துந் தன்மையுடைய பாம்புகள் இயங்குகின்ற வருதற்கரிய இரவின் நடுயாமத்தில் மயக்கந்தருகின்ற சிறிய வழியின் கண்ணே; நின் கையிலேந்திய வேற்படையையே நினக்குரிய துணையாகக் கொண்டு சந்தனம் பூசுதலால் அதன் நறிய மணங்கமழ்கின்ற மார்பினையுடையையாய்; சாரலின்கணுள்ள சிறுகுடியாகிய இவ்விடத்து நீ தனியே வருதல் தகுதிப்பாடுடையதாமோ? ஆதலின் இனி இங்கு இரவில் வரற்பாலை அல்லைமன்!

தோழி இரவுக்குறி மறுத்தது.

நற்றிணை - 169. முல்லை

முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்!
வருவம் என்னும் பருவரல் தீர,
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி-
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை  5
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லிப் பரீஇ,
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை,
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே.  10

நெஞ்சமே! வினைவயிற் பிரிந்து செல்லும்பொழுது என்று வருவீர்கொலாமென வருந்தி வினவிய தலைவியை நெருங்கி நல்ல நுதலையுடையாய்! யாம் சென்று கருதியதை முடித்தனமாயின் அன்றே வருகின்றோம். என்று கூறியவுடன் உண்டாகிய அவளுடைய துன்பமெல்லாந் தீரும்படி இன்று நாம் வருகின்ற வருகையை; பரல்மிக்க பாலை நிலத்தின்கண் வளர்ந்தோங்கிய சிச்சிலிப் பறவைபோன்ற தலையையுடைய கள்ளியின் மேலே படர்ந்த தழைந்த முல்லையின் நறுமலரை; ஆடுகின்ற தலையையுடைய யாட்டின் தொகுதியை மேய்க்கச் செலுத்துகின்ற வலிய கையையுடைய இடையன்; இரவிலே கொய்து வெளிய பனங்குருத்தின் போழுடனே சேர்த்துத் தொடுத்த அசைகின்ற நறிய மாலையின் நறுமணம் தெருவில் ஒருங்கு கமழாநிற்கும்; இன்று மாலையம் பொழுதிலே சிறிய குடிகளையுடைய பாக்கத்தின்கண் உள்ள எமது பெரிய மாளிகையிடத்து; நெடிய சுவரின்கணிருக்கின்ற பல்லி அறிகுறியாக அடித்துத் தெரிவிக்குங் கொல்லோ?

வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.

நற்றிணை - 170. மருதம்

மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின்,
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;  5
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்,
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?  

மடப்பத்தையுடைய கண்பார்வையையும் மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையும் பருத்த தோளையும்; நேர்மையாகிய வெளிய பற்களையும் திரண்டு நெருங்கிய துடைகளையுமுடைய; ஒப்பில்லாத இவ் விறலி பிணைத்த அழகிய தழையுடையையுடுத்துத் திருவிழாச் செய்யும் இவ்விடனெங்கும் பொலிவெய்துமாறு வந்து நிற்றலாயினள் காணுங்கோள்!; நம் காதலனை இன்னும் வேறொரு பரத்தைபால் இவள் தூது சென்று செலுத்தாதபடி நாம் பாதுகாக்கற் பாலம்; எழுங்கோள்! எழுங்கோள்!, இவள் நன்மை தலைப்படின் இவள் கொண்ட காரியம் கைகூடுமாயினோ!; ஆரியர் நெருங்கிச் செய்த போரின்கண்ணே பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையையுடைய மலையனது; ஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதுபோல; பலர் கூடிய நம்முடைய கூட்டமும் ஒழியவேண்டியதன்றி வேறுயாது பயன்படுங்கண்டீர்?

தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.

நற்றிணை - 171. பாலை

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன்
நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன்  5
பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு,
யாங்கு வல்லுந மற்றே- ஞாங்க
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக்
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்,
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ,  10
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே?  

நீருண்ணும் நசையை மேற்கொண்ட வருத்தத்தையுடைய பிடியானை; வெப்பமிக்க சிறுகுன்றுகளைச் சூழவுடைய வெவ்விய மலைப்பக்கத்திலுள்ள நிலத்தின்கண்ணே செல்லுதலும்; அதனுடன் செல்லமாட்டாத மெல்லிய தலையையுடைய யானைக் கன்று; சேரியிலுள்ள மாதர் தம்முள்ளத்தே துண்ணெனும்படி ஊரிலுள்ள பசுவின் கன்றொடு சேர்ந்து அச் சேரியின் கண்ணே புகுதாநிற்கும்; மலைநாடன் நம்மைக் கைவிட்டுப் பலவாகிய மலைகளிடைப்பட்ட கடத்தற்கரிய சுரநெறியிலே செல்லின்; கட்டிய கம்மத் தொழிலையுடைய தௌபிந்த ஓசையையுடைய மணிகளைக் களையப்பட்ட வேற்படையையொப்ப; பேய்கள் நிலைகொண்டு உலாவுகின்ற பொழுது அமைந்த நடுயாமத்தில்; ஆசையோடு நெஞ்சுகலந்து அவனுடைய மார்பின் மேல் நெருங்கப் படுத்தலைப் பொருந்தின கண்கள்; இனி எவ்வாறு துயிலல் வல்லனவாகும்?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது.

நற்றிணை - 172. நெய்தல்

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும் என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே-  5
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!- நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே.  10

புதியராய் வந்த பாணர் பாடுகின்ற இளைதாய (மெல்லிய) இசைப்பாட்டுப் போல வெளிய வலம்புரிச்சங்கு ஒலியாநிற்கும்; விளங்கிய நீரையுடைய துறைபொருந்திய நெய்தனிலத்தலைவனே!; யாம் எம்மொடு விளையாடுகின்ற தோழியரோடு சென்று ஒருநாள் வெள்ளிய மணலிலூன்றினேமாகி மறந்தொழிந்த புன்னை (யினது முற்றிய) விதையானது வேரூன்றி முளைத்து முளைதோன்றுதலானே; மீண்டும் அதனை நோக்கி மகிழ்ந்து நெய் கலந்த இனிய பாலை நீராக வார்த்து இனிமையொடு வளர்க்கு நாளில்; எம் அன்னை எம்மை நோக்கி நீயிர் வளர்த்துவரும் புன்னையானது நும்மினுஞ் சிறந்ததன்றோ, அது நும்முடன் பிறந்த தங்கையாந் தகுதியுடையது கண்டீர் என்று இதன் சிறப்பினை விளங்கவுரைத்தனள்; ஆதலின் எந் தங்கையாகிய இப் புன்னையின் எதிரில் நும்மொடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் வெட்கமடையாநின்றோம்; அம்மவோ? நீ இவளை அணைந்து நல்குவையோ? நல்குவையாயின் நிறைந்த மரத்தினிழல் பிறவும் ஈங்குள்ளனகாண்; அவ்வயிற் செல்லுதல் நல்லதொன்றாகும்.

பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடும் ஆம்.

நற்றிணை - 173. குறிஞ்சி

சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும்,
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும்,
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி,
வெறி என உணர்ந்த அரிய அன்னையை,
கண்ணினும் கனவினும் காட்டி, இந் நோய்  5
என்னினும் வாராது; மணியின் தோன்றும்
அம் மலை கிழவோன் செய்தனன் இது எனின்,
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின்
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?-
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே.  10

தொடியினையுடையாய் யான் நின்னையொரு செயலை வினவுகின்றேன்; அதுதான் யாதெனிலோ?; கேள்! சுனையின்கணுள்ள மலர் கொய்தும் அவற்றை மாலையாகத் தொடுத்தும் மலையிலுள்ள செங்காந்தள் மலர்கொய்து அம்முருகவேள் போர்க்குச் சூடும் கண்ணியாக அமைத்தும் சார்த்தி; அவனை வழிபாடுசெய்கின்ற நம்மை ஆதரஞ் செய்யுமாறு விரும்பியருளிந்; நாம் இப்பொழுது கொண்டிருக்கிற காமநோய் முருகு அணங்கியது காரணமாக வந்த இவள் மேனியின் வேறுபாடுதான் வெறியயர்ந்தால் நீங்கும் என மாறாக நினைந்துடைய அம் மாறுபாடு எவ்வழியினாலும் நீங்கரிய நம் அன்னைக்கு; கண்ணாலே குறிப்பாகக் காட்டுவதனோடு உறங்கும்பொழுது அவளது கனவின்கண்ணும் வந்து தோன்றித் தன்வடிவு புலப்படக்காட்டி; இக் காமநோய் என்னாலும் வேறுபிற அணங்குகளாலும் எய்தியதொன்றன்றுகண்டாய்; வேறு யாவன் இதனைத் தோற்றுவித்தனன்கொல் என வினவின் நோக்குவோர்க்கு நீலமணி போலத் தோன்றாநிற்கும் அழகிய மலையையுடைய ஒருதோன்றலே இதனைச் செய்தனன் என்று கூறுவானெனின்; அதனாலே பொருந்திய வண்டுக ளாரவாரிக்கும் பசிய மாலையையணிந்த மார்பையுடைய அந் நெடிய முருகவேளுக்கு ஒரு குற்றமுமுண்டாகுமோ?; அதனை ஆராய்ந்து கூறிக்காண்;

தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்.

நற்றிணை - 174. பாலை

கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்,
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி,  5
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து
உயங்கினை, மடந்தை! என்றி- தோழி!-
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே;
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்  10
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?  

தோழீ! ஈந்தினது திரட்சியையுடைய முற்றிய குலைபோன்ற மக்களியங்காத நெறியின்கண்ணமைந்த தாளிப்பனையினது; குலைகளையுடைய நெடிய மடலிலிருந்து ஆண்பறவை தன் பெண்பறவையைக் கூவின்; அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும்படி முழங்காநிற்கும்; கோடைக்காற்று வீசுகின்ற அரிய நெறியிலே சென்ற காதலர்; மீண்டு வந்து இனிதாக நின்னை முயங்கி நீங்காது நீங்களிருவரும் ஓரிடத்தே உறையுங்காலையும்; நீ பெரிதும் நெஞ்சழிந்து மடந்தையே ஏன் வருந்துகின்றனை? என்று கூறாநின்றனை; அவ்வுண்மையை அறியாதவர்க்கு அத்தன்மையாகவேதான் காணப்படும்; நம் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கோட்பாட்டையுடையனாயிருந்து இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையினிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை மடுப்பானாயினான், இங்ஙனம் பிறள் ஒருத்திபால் அன்பு வைத்தால் என்மாட்டு அவனுக்கு எவ்வண்ணம் அன்பு தோன்றும்?; அன்பென்பது இல்லாதவழி என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் யான் அவனைத் தழுவிக் கொள்வதனாலும் யாது பயன்படும்?;

வினை முற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.

நற்றிணை - 175. நெய்தல்

நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ,
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப்
புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை  5
தான் அறிந்தன்றோ இலளே; பானாள்
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி,
சுடுவான் போல நோக்கும்,
அடு பால் அன்ன என் பசலை மெய்யே.  

நெடிய கடலிலே சென்று வலைவீசி ஆங்குள்ள மீன்களை வருத்திப் பிடித்த வளைந்த மீன்படகுகளையுடைய பரதமாக்கள்; தாம் பிடித்துக்கொண்டுவந்த கொழுவிய மீன்களை நெகிழ்ச்சியையுடைய மணற்பரப்பிலே குவித்து; மீன் கொழுப்பாலாகிய நெய்யை வார்த்துக் கிளிஞ்சலில் ஏற்றிய சிறிய சுடர்விளக்கினொளியிலே துயிலுகின்ற; நறிய மலரையுடைய புன்னை மரங்கள் உயர்ந்த துறைவனுடனே நாம் களவிலே புணர்ந்ததனை; நம் அன்னைதான் முன்னரே அறிந்துவைத்தாளும் அல்லள்; அங்ஙனமாக இரவு நடு யாமத்தில் நம்முடைய சேரியின்கணுள்ள அயலுறை மாதர் கூறுங் குறிப்புரையாகிய இழிந்த சில சொற்களை விரும்பிக் கேட்டு; கொதிக்கின்ற பால்போன்ற பசலைபரந்த என் மேனியை; சுடுவது போல நோக்கா நிற்கும்; இதனால் இனி இல்வயிற் செறிக்கும் போலும்;

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

நற்றிணை - 176. குறிஞ்சி

எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின்
சால்பின் அளித்தல் அறியாது, அவட்கு அவள்
காதலள் என்னுமோ? உரைத்திசின்- தோழி!-
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப்  5
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ,
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு,
அருவி முழவின் பாடொடு ஒராங்கு,
மென்மெல இசைக்கும் சாரல்,  10
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.  

விறலீ! தலைமகளானவள் எம்மை விரும்பி உறைபவளாயிருக்கையில் யாமாக அவளை விரும்பி அவள் விரும்பியவாறு நல்கிவிட்டதுதான் என்னவிருக்கின்றது?; நம் நலத்திற்குக் காரணமாயிருக்கும் தலைமகனை அத் தலைவி பால் யாம் சால்பினாலே கொடுத்தது அறியாது; நிரைத்திருக்கின்ற யானையின் முகத்திலுள்ள கோடு போல அரும்புகள் பொதிந்தனவெல்லாம் மலர்ந்த ஒள்ளிய செங்காந்தள்; வாழையையுடைய சிலம்பின்கண் மணங்கமழாநிற்ப; யாழோசையைக் கேட்டாலொத்த இனிய குரலையுடைய கூட்டமாகிய வண்டுகள்; திரண்டு புகுந்து அருவியாகிய முழவொலியோடு ஒருதன்மைப்பட மெல்ல மெல்ல ஒலியாநிற்கும் சாரலிலே; குன்று சூழ்ந்து வேலியாகயுடைய அவர்கள் இருக்கின்ற ஊரிலுள்ளார்; தலைவிபால் அப் பரத்தை மிக்க காதலையுடையளாதலின் அத் தலைவி விருப்பத்தின்படி தலைவனை விடுத்தனள் என்று கூறாநிற்பரோ? ஆராய்ந்து ஒன்றனைக் கூறாய்; அங்ஙனம் ஆயின் மீட்டும் அவனை ஈங்கு நமது ஆற்றலானே கைக்கொண்டு போதுவாங்காண்!.

பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.

நற்றிணை - 177. பாலை

பரந்து படு கூர் எரி கானம் நைப்ப,
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்;
குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட,
வேலும் இலங்கு இலை துடைப்ப; பலகையும்  5
பீலி சூட்டி மணி அணிபவ்வே;
பண்டினும் நனி பல அளிப்ப; இனியே
வந்தன்று போலும்- தோழி!- நொந்து நொந்து,
எழுது எழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே.  10

தோழீ! நம் காதலர் பரந்து பட்ட மிக்க தீ காடு முழுதும் எரிந்து அழித்தலினால் அதனிடையிருந்த மரங்களெல்லாம் தீந்து மகிழ்ச்சி நீங்கலாகிய காட்டகத்து; ஒதுங்கியிருத்தற்கும் நிழலில்லாத கொடிய சுரத்தின்கண்ணே சென்று விட்டனர் என்பது திண்ணம்; அவர் செய்யுஞ் செய்கையின் குறிப்பினால் யான் கண்டறிந்தேன்மன்; யாங்ஙனம் அறிந்தனையென நீ வினவுதியேல் இயம்புவன்கேள் ! ஒழுங்குபட வேலின் இலங்கிய இலையையும் மாசுபோகத் துடையா நிற்பர்; அன்றிக் கிடுகினையும் மயிற்பீலி சூட்டி மணியை அணியாநிற்பர்; மற்றும் முன்போலன்றி என்னையும் பலபடியாகப் பாராட்டி அன்புசெய்யாநிற்பர்; ஆதலின் யான் வருந்தி வருந்தி ஒவியர் எழுதுதற்குத் தகுந்த அழகமைந்த மையுண்ட கண்ணிலே பாவைதோன்றாத வெள்ளம் போன்று கண்ணீர் வடிய அவ் வெள்ளத்தின்கண் விழுந்து நீந்தி யுழலும் நாள்; இன்னே வந்து இறுத்ததுபோலும்; இனி எவ்வாறு ஆற்றுகிற்பேன்;

செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

நற்றிணை - 178. நெய்தல்

ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன
தோடு அமை தூவித் தடந் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது,
கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும்  5
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி
நள்ளென் யாமத்தும் கண் படை பெறேஎன்;
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப,
விளிந்தன்றுமாது, அவர்த் தௌந்த என் நெஞ்சே.  10

அசைகின்ற மூங்கிலினுள்ளே உரிக்கப்படும் உரியை மடித்து மெல்லிதாகப் பிசைந்துவைத்தாலொத்த; தொகுதியமைந்த சிறகுகளையும் நீண்ட கால்களையும் உடைய நாரையினால்; இன்பம் நுகரப் பெற்ற செயலற்ற பேடை; கழிக்கரையிலே பெயருமிடங்களில் பெயர்ந்து சென்று சிறிய மீனையும் உண்ணாது, கைதை படுசினைப் புலம்பொடு வதியும் தண்ணம் துறைவன் தாழையின் பெரிய கிளையின்கண்ணே வருத்தத்துடன் உறையாநிற்கும் மெல்லிய துறைகளையுடைய நம் காதலன்; ஊர்ந்துவரும் தேரானது முன்பு நம்முடைய கண்ணாலேனும் காணுதற்குப் பொருந்தியிருந்தது, இப்பொழுது அது கழிந்தது; ஏதில் மாதரார் ந்கூறுஞ் சிறு சொல்லை நம்பி நம் அன்னை இற்செறித்தலானே நாணமுற்று இரவு நடுயாமத்திலும் கண் துயில்கொளப் பெற்றிலேன்; அயலிலே பறவைகள் ஒலித்தல் அவர் தேரின் மணியொலிபோலிருத்தலால்; அவ்வொலியைக் கேட்டு முன்பு மிகத் தௌபிந்திருந்த பெருமையுடைய என்னெஞ்சமானது; இப்பொழுது அழிவு பொருந்தியதாயிற்று;

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

நற்றிணை - 179. பாலை

இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு,
யானும் தாயும் மடுப்ப, தேனொடு  5
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி,
நெருநலும் அனையள்மன்னே; இன்றே,
மை அணற் காளை பொய் புகலாக,
அருஞ் சுரம் இறந்தனள் என்ப- தன்
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே.  10

மனை யகத்து முளைத்துப் படர்ந்த வயலைக் கொடியை ஆங்குக் கன்றையீன்ற பசுவானது சென்று தின்றதினாலே; அதுகண்டவுடன் தான் விளையாட்டயர்ந்துகொண்டிருந்த பந்தை நிலத்தெறிந்து போகட்டு ஒரையாடும் பாவையையும் அவ்வயின் வைத்துத் தனது அழகிய வயிற்றில் அடித்துக்கொண்ட செய்யுங் காரியங்கள் வல்ல என் இளம்புதல்வி; மானின்பொருந்திய நோக்கம்போன்ற மையலைச் செய்யும் பார்வையுடனே; யானுஞ் செவிலித்தாயும் தேனொடு கலந்த இனிய பாலையருந்துகவென்று ஊட்டவும் உண்ணாது; விம்மி அழுபவளாகி நேற்றும் அத் தன்மையளாயிருந்தனள். அங்ஙனம் செய்வதெல்லாம் கழிந்தது; இன்று கறுத்த அணலையுடைய காளையாவானது பொய்ம் மொழியே தனக்குப் பற்றுக்கோடாகக்கொண்டு; முருந்துபோன்ற தன் வெளிய எயிறுகளிலே தோன்று நகையைத் தோற்றுவித்து உடன்பட்டுச் செல்லுதற்கரிய சுரத்தின் கண்ணே சென்றொழிந்தனள் (என்று கூறுவர்); இத்தகைய இளமையுடையாள் எங்ஙனம் சென்று மனையறம் பூண்டு ஒழுகா நிற்குமென்று அஞ்சுகின்றேன்? எவ்வண்ணம் ஆற்றுவேன்;

மனை மருட்சி

நற்றிணை - 180. மருதம்

பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின், செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே;
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே  5
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல,
என்னொடு கழியும்- இவ் இருவரது இகலே.  

வயலருகிலிருக்கின்ற பலாமரத்திலுள்ள இலைகளைக் கூடாக்கி முயிறுகள் முட்டையிட்டு நெருங்கியுறைகின்ற அக் கூடுகளை; கழனி நாரை உரைத்தலின் கழனியின்கண்ணே இரையுண்ணுமாறு போந்த நாரை சென்றிருந்து உரிஞ்சுதலானே; அம் முயிறுகளும் அவற்றின் முட்டைகளும் மழுக்கியபடியுள்ள சிவந்த நெல்லொடு கலந்த அரிசியுதிர்ந்து பரவினாற்போல உதிர்ந்து பரவாநிற்கும் வயல்சூழ்ந்த ஊரையுடைய தலைவன்; பரத்தை மகளிர் பலரைத் தான் பெற்று முயங்குதலை விரும்பி அதனால் நம்மனையகத்து வருகின்றானலன்; ஒருகால் அவன் வரினும் அப் பொழுது மாமை நிறத்தையுடையளாய தலைவி அவனது நலத்தையுடைய பெருந்தகைமையை விரும்பித் தான் அதன் முன் ஏறட்டுக் கொண்டுடைய துனிவிட் டொழிவாளுமல்லள்; ஆகலின் அன்னிகுடியிலிருந்த அன்னி என்பவனும்; தேரழுந்தூரிலுள்ள பெரிய திதியன் என்பவனும் ஆகிய; சிறப்புற்ற இரண்டு பெரிய அரசர்கள் போர்செய்த குறுக்கையின்கணுள்ள போர்க்களத்தில்; அன்னி வெட்டிச் சாய்த்தலாலே பூவும் மலரும் மிக்க துன்புற்ற புன்னை மரம் விழுதலும் அவ்விருவருடைய பகைமையும் முடிந்தொழிந்தாற்போல; இத் தலைவனும் தலைவியுமாகிய இருவருடைய பகைமையும்; இடையிலுள்ள யான் இறந்துபோனால் என்னொருத்தியொடு நீங்கும் போலும்;

தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.

நற்றிணை - 181. முல்லை

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி,
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்,  5
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து,
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப,
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த  10
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று, பெருவிறல் தேரே;
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே.  

மனையகத்துக் கூரையினுள்ளே உறைகின்ற கரிய தாழ்வாயையுடைய குருவியின் சேவல்; வேற்றுப்புலத்துச்சென்று ஆண்டுள்ள ஒரு குருவிப் பெடையொடு மற்றொரு சார்பிலே புகுந்து புணர்ந்து அங்கே சிறிதுபொழுது தாழ்த்திருந்து வருதலும் வந்ததனுடைய; மெய்யிலே புணர்குறி வாய்த்திருப்பதை நோக்கி அதற்குரிய பேடையானது நெறிப்பு விளங்கிய ஈங்கையின் பூவைப் போன்ற சிறிய பலவாகிய பிள்ளைகளுந் தானும் சேரநின்று; குடம்பையினுள்ளே புகுதாதபடி தடுத்தலினால்; மழையிலே நனைந்த புறத்தினதாகிப் பக்கத்தில் நடுங்கியிருப்பதை நோக்கி நெடும்பொழுது ஆராய்ந்து; அருள் கூர்ந்து இரக்கமுற்ற நெஞ்சத்தோடு தன்பால் வருமாறு அழைப்பக் குருவிச் சேவல் செயலற்று வாராநிற்கும்; மயக்கத்தையுடைய மாலைப்பொழுது வந்திறுத்ததாகலின்; இனிய ஒலியிழந்த மாலை அணிந்த புரவி மெல்லிய பயிர்களை மிதியாநிற்ப; பெரிய வெற்றியையுடைய தலைவரது தேர் வந்திறுத்தது; இனி இவளது சிறிய நெற்றியில் உள்ள அழகானது பசலையால் உண்ணப்படாது உய்ந்ததாகும்;

வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.

நற்றிணை - 182. குறிஞ்சி

நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று;
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்,
பாவை அன்ன நிற் புறங்காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்;
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு,  5
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல,
கண்டனம் வருகம் சென்மோ?- தோழி!-
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந் தலைப் பெருங் களிறு போல,
தமியன் வந்தோன், பனியலை நீயே!  10

தோழீ ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது; சித்திரத்திலமைந்தாலொத்த அகன்ற இடத்தையுடைய வீட்டின் எல்லையிலே பாவைபோன்ற நம்மைப் பாதுகாக்கின்ற; சிறந்த மேம்பாட்டினையுடைய அன்னையுந் துயிலா நின்றனள்; தறியிலே பிணித்துக் காப்பவரும் மீதேறி நடத்துபவரு மொழிந்த சிறிய தலையையுடைய பெரிய களிற்றுயானைபோல; தனியாக வந்த தலைவனது பனியலைத்தலானே கலக்குண்ட நிலையைச் சென்று நோக்கி; கையிலிருந்து தவறுண்டு விழுந்து இழந்து போகிய நல்ல அணிகலனை மீட்டும் கண்டெடுத்தாற்போல நம்மை இற்செறித்தலான் அடையப்படாதிருந்த; அவனுடைய நல்ல மார்பைச் சேரப்புல்லி மகிழ்ந்திருந்து அவனைப் பலகாலும் செவ்விதாக நோக்கிப் பின்னர் மெல்ல மெல்ல வருவமோ? ஆராய்ந்து கூறுவாயாக !

வரைவு நீட்டிப்ப, தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.

நற்றிணை - 183. நெய்தல்

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து,
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி,
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி,
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து,
உமணர் போகலும் இன்னாதாகும்-  5
மடவை மன்ற- கொண்க!- வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே;
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல,  10
வாழாள் ஆதல் சூழாதோயே.  

கொண்கனே ! மருத நிலத்தின்கணுள்ள உப்பு வாணிகர் தமது நாட்டில் விளைந்த வெளிய நெல்லைப் பண்டிகளிலேற்றிச் சென்று கொடுத்து அந்நெல் விலையாக அயனாடாகிய நெய்தனிலத்திலே விளைந்த உப்பைப் பெற்றுக்கொண்டுபோய் விலைகூறி; நீண்டநெறியிலே பண்டிகளுடனே நிலாப்போன்ற மணற்பரப்பைக் கடந்து பிரிந்து போதலாலே; தனியே அவ்விடத்திலிருப்பதை வெறுத்த சுற்றத்துடனே அங்குநின்றும் போந்து அவ்வுப்பு வாணிகர் செல்லுதலும்; அவர் தங் குழுவோடும் பண்டிகளோடும் சென்றொழிந்தமை அவ்வூர்க்கு இன்னாமையைத் தருவதொன்றாயிருக்குமன்றோ? அப்படியே நீயும் எம்மைக் கையிகந்து பெயர்வது எமக்கும் இன்னாமையைத் தருவதொன்றாகும்; அங்ஙனம் துன்பந்தருதற்கு இடங்கள்தோறும் துன்புறுத்தி வருகின்ற கூதிரின் ஊதைக்காற்றுடனே; நீ இல்லாது தமியேமாகிய காலத்துப் போதருகின்ற மாலைப்பொழுதும் ஏதுவாகவுடைத்தாயிராநின்றது; அதனை அறிந்து வைத்தும் நீ பிரியின் மீன் இனத்தை மிகத்தின்ற வெளிய நாரை மிதித்த நீர்வற்றிய குளத்து நெற்தன் மலர்போல; இவள் ஒருநொடிப் பொழுதும் உயிர் வைத்திருப்பவள் அல்லள், அங்ஙனம் இறந்துபடும் இவளது செயலை நினையாத நீ அம்மவோ ! திண்ணமாக அறியாமையுடையையாவாய்;

வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது.

நற்றிணை - 184. பாலை

ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்;
இனியே, தாங்கு நின் அவலம் என்றிர்; அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே!  5
உள்ளின் உள்ளம் வேமே- உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.  

அறிவுடைய அயலிலாட்டியரே ! நுங்களைப் போல பல புதல்வியரைப் பெற்றேனில்லை, யான் ஒரோவொரு புதல்வியையே பெற்றுடையேன்; அவளும் போரின் மிக்க வலிமையும் கூரிய வேற்படையையுமுடைய காளையாவான் ஒருவனொடு நெருநலிரவு பெரிய மலையின்கணுள்ள சென்று சேர்தல் அரிதாகிய சுரநெறியே சென்றொழிந்தனள் கண்டீர்; அங்ஙனம் அவள் போயொழிதலானே அவள் பால் யான் கொண்டிருந்த அவாவும் நீங்கியது ஆயினும்; வேறு புதல்வியரோடு மகிழ்ந்துறையும் பயனெய்திலேனாகலின் அவளொடு பழகியதே காரணமாக இன்று வருந்தும் என்னை நீயிர் இனி நின் அவலத்தை அடக்கிகொள்ளெனக் கூறாநின்றீர்; அதனை அடக்கிக்கொள்ளுதல் எவ்வாறியலும்கொல்?; மையுண்ட கண்ணின் மணியூடு வாழும் பாவை வெளிவந்து நடைபயின்று நடந்தாலன்ன என் அழகிய சாயலையுடைய இளமகள் விளையாடிய; நீல மணிபோன்ற பூவையுடைய நொச்சியையும் திண்ணையையும் நோக்கி நினைந்தால்; அவ்வண்ணம் கருதும் உள்ளமும் வெந்தழியுமன்றே, இனி யான் எவ்வாறு உய்குவேன்?

மனை மருட்சி

நற்றிணை - 185. குறிஞ்சி

ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி,
காமம் கைம்மிக, கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின்- பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நல் மான்
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி,  5
இரவலர் மெலியாது ஏறும், பொறையன்
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்,
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து,
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய  10
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால்- நோகோ யானே.  

பாணர் பரிசிலாகப் பெற்ற விரிந்த புறமயிரையுடைய நல்ல குதிரையின்; கவிந்த குளம்பு மோதுதலாலே செப்பமாகிய மலைமேலுள்ள சிறிய நெறியின்கண்ணே; மெலியாமல் இரவலர் ஏறுகின்ற பொறையனது; புகழமைந்த கொல்லி மலையின் மேல்பால்; அகன்ற இலையையுடைய காந்தளின் அசையும் பூங்குயிலே பாய்ந்து தேனை நுகர்ந்து வந்து வண்டுகளால் வைக்கப்பட்ட பலவாய கண்களையுடைய இறாலின்கண்; மிக்க தேனையுடைய நெடிய அம் மலையிலே; தெய்வத்தாற் செய்துவைத்தலிற் செயற்கை மாட்சிமைப்பட்ட பாவை போன்ற அவள்தான்; என்னைக் கொலைசெய்யும் வண்ணம் ஆராய்ந்து நன்றாக அறிந்து கொண்டனள்; அங்ஙனம் சூழ்ந்தவளது சூழ்ச்சியிலே பட்டு இன்னும் இறவேனாகி அடங்காத நோயுடனே பலபலவாக எண்ணிக் கழிக்கின்ற துன்ப மிகுதலானே கலக்கமெய்தி; காமமானது அளவுகடந்து பெருகுதலானே என் செயலொருங் கழிந்து வருந்துகின்றேன், இங்ஙனம் வருந்தி அழிந்தொழிவதனை நீ கண்ணாலே கண்டுவைத்தும்; அவளுடன் கூட்டுவிக்கு முயற்சியை நீயே செய்யாதொழியின்; அது நின்னால் வந்ததன்று என் ஊழ்வினையால் வந்ததென அவ்வூழினை யான் நோவா நிற்பேன்;

பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.

நற்றிணை - 186. பாலை

கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி,
இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு,
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை,
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து,  5
பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில-
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணி போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே.  10

கல்லின்கண்ணே ஊறுகின்ற ஊற்றிற் சேர்தலையுடைய நீரைப் பெரிய சருச்சரையுடைய நீண்ட துதிக்கையை நீட்டி; அவ் வூற்றுக் குழியில் அற வாங்கி முகந்து கொண்டு; பெரிய கையையுடைய களிற்றியானை தன் பிடியானையினெதிரே ஓடாநிற்கும்; காடு முற்றும் வெப்பமடைந்த வறன் மிக்க கற்சுரத்திலே; தன் வாழ்நாளும் பொருளும் இன்னோரன்ன எல்லாம் பிறர் பொருட்டேயென்று முயன்று முடிக்கும் பெரிய அருள் மிக்க நெஞ்சுடனே; அழகிய பொருளாசை பிணித்தலால்; எம் காதலர் சென்ற அச்சமுடைய நெறி; வேனிலின்கண் மாறி மாறித் தன்னிறம் வேறுபடுகின்ற முதிய ஓந்திப்போத்துத்தான்; ஏற இயலாது வருந்தியவிடத்து ஆண்டுச் செல்லும் பாணர் தம் அசைவு தீரச் சிறிது பொழுது யாழ் வாசிப்ப அதனைக் கேட்டலும் தன் வருத்தந்தீர்ந்து; பக்கத்தில் நீண்டு நிற்றலையுடைய யாமரத்தின் மீது ஏறுந்தொழிலையுடையனவென்பர்; அத்தகைய கொடிய காட்டில் அவர் செல்லுவதனை நினைத்தலான் இனி எவ்வண்ணம் யான் ஆற்றியுளேனாவேன்?

பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.

நற்றிணை - 187. நெய்தல்

நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய,
பல் பூங் கானலும் அல்கின்றன்றே;
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி,
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய,  5
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு
யாங்கு ஆவதுகொல் தானே- தேம் பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்,
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே?  10

நெஞ்சமே! நெய்தலின் மலர் குவிய நிழல்களெல்லாம் கீழைத்திசையைச் சென்றடைய மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றைச் சென்று புகுகின்ற ஆதித்த மண்டிலம் சிவந்த நிறமுற்று நிலத்தின் கண்ணே தான் காட்டிய கொடுமை முற்றும் தணியாநிற்ப; பலவாய மலர்களையுடைய கடற்கரைச் சோலையும் தன் தோற்றப் பொலிவு குறைவதா யிராநின்றதுமன்; இப்பொழுது உடம்பில் மலியப்பெற்ற காமத்தையுடைய யாம் அக் காமத்தைத் தணிக்கும் வகையைப் பெறாது பின்னே நின்று தொழுது ஒழியும்படி; பொழுது படலும் மணியினம் ஒலிப்பக் குதிரைகளைப் பூட்டப்பட்டுத் தேரானது தான் செல்லுகின்ற புறமும் மறையாநிற்கும்; ஆதலால் இவ்வூருடனே; தேனைப் பொருந்த வுண்ணுகின்ற வண்டுகள் ஒலிக்கின்ற மாலையணிந்த மார்பின்கண்ணே மின்னுதல் பொருந்திய வளைந்த கலன்களையுடைய கொண்கனும்; நாமும் இனிய உவகை பொருந்த முயங்கி விளையாடிய சோலையானது நமக்கு எவ்வண்ணமாக அமையப்படுவதாமோ? அறிகிலேன்;

தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது. - அவ்வையார்

நற்றிணை - 188. குறிஞ்சி

படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை,
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல் விரல் மோசை போல, காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப!  5
நன்றி விளைவும் தீதொடு வரும் என,
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே.  

ஆழ்ந்த சுனையில் நீரையுடைய மலைப்பக்கத்தில் முளைத்த வாழையின் வளைந்த மடலினின்று போந்த கூபபிய நுனியையுடைய குவிந்த முகையானது; ஒள்ளிய கலனையுடைய மாதர்களின் விளங்கிய வளையோடு பிணிப்புற்ற மெல்லிய விரலிலணிந்த விரலணிபோல; செங்காந்தளின் வளவிய இதழிலே தோயாநிற்கும் விசும்பில் நீண்டு பொருந்திய மலையையுடைய தலைவனே!; எம் தலைவி ஒரு காலத்து நன்றாக முடிவதொரு காரியமும் மற்றொரு காலத்துத் தீதாக வரும் என்று நின் இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்தின்கண்ணே இரந்து பின்னிலை நின்ற அக் காலத்து நன்றாக அறிந்தனளாயிருப்பின்; குன்றத்ததாகிய தேன்முற்றிய பக்கமலையில் முளைத்து வளைந்த அடியையுடைய மூங்கில் போலும் பருத்ததோள் இக் காலத்து நெகிழ்வாளல்லள்; அது கழிந்த செயலாகி முடிந்ததாகலின் இனிக் கூறி என்ன பயனாம்?

பகற்குறி மறுத்து வரைவு கடாயது.

நற்றிணை - 189. பாலை

தம் அலது இல்லா நம் நயந்து அருளி
இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர்,
தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ்
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின்
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ-  5
எவ் வினை செய்வர்கொல் தாமே?- வெவ் வினைக்
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம்,
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே?  10

கொடிய கொலைத் தொழிலில் வல்ல வேட்டுவனது வலையை அறுத்துவிட்டோடிய காட்டின்கணுள்ள சேவற்புறாவானது; தன் வாயில் உண்டாகும் நூலாலே கட்டிய சிலம்பியின் கோட்டையைக் கண்டு அஞ்சாநிற்கும்; சுழன்றடிக்கின்ற சூறைக்காற்றையுடைய சுரத்தின் கண்ணே சென்ற தலைவர்; அவரையன்றிச் சிறிதும் பொருந்தியிராத நம்மை விரும்பி அருள்செய்ய இன்னும் வந்திலர்; அங்ஙனம் வாராராயினும் வேறியாண்டைச் சென்றிருப்பர்?; பாணர் தெறுகின்ற சினம் தணிதற்கரிய தெய்வத்தின் முன்பு சென்று அதன் சினமடங்குமாறு சிறிய யாழின் நரம்பினோசையை யெழுப்பிப் பாடினாலொத்த இனிய குரலையுடைய குருகுகளிருக்கின்ற; கங்கையாற்றின்கண் ஓடுகின்ற மரக்கலத்தேறி யாண்டேனுஞ் செல்லுகிற்பர் கொல்?; அவர் பிற எந்தச் செயலைச் செய்கிற்பர் கொல்? ஓரிடத்தும் போகலர் ; ஒரு செயலுஞ் செய்கலர்; ஆதலின் இன்னே வருகுவர் காண்; நீ வருந்தாதே கொள்?

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

நற்றிணை - 190. குறிஞ்சி

நோ, இனி; வாழிய- நெஞ்சே! மேவார்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை,
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்  5
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய,
வலை மான் மழைக் கண், குறுமகள்
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே!  

நெஞ்சமே! பகைவருடைய புகுதற்கரிய அரணங்களை வென்றுகொண்ட மாரி போல்கின்ற கைவண்மையையும் கள்ளுணவையும் திதலை பரந்த வேற்படையையுமுடைய சேந்தன் என்பானுக்கு; தந்தையாகிய தேன்மணங் கமழும் விரிந்த மாலையையுடைய அழகிய தேரினையுடைய அழிசி என்பவனது; நெற்கதிர்களினிடையே வண்டு மூசுகின்ற நெய்தலின் மலர்கின்ற பூவினின்று; தேன் வடிதலையுடைய வயல் சூழ்ந்த ஆர்க்காடு என்னும் ஊரையொத்த; விருப்பம் வருகின்ற பருத்த தோளினழகோடு பெருமையடைந்த வலையிலகப்பட்ட மானினது கண்போன்ற மருண்ட குளிர்ச்சியையுடைய கண்களையுடைய இளமையளாகிய தலைவியின்; சிலவாய் மொழியையுடைய சிவந்த வாயினின்றெழுகின்ற நகைக்கு மகிழ்ந்தோய்; அங்ஙனம் மகிழ்ந்ததனாலே பின்பு கிடைக்கப் பெறாயாய் இனி நீ துன்புறுவாய் காண்; அவ்வகையாகிய துன்பத்துடனே நெடுங்காலம் வாழ்வாயாக;

பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.

நற்றிணை - 191. நெய்தல்

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து,
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி,  5
எல்லி வந்தன்றோ தேர்? எனச் சொல்லி,
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும்
என் நோக்கினளே அன்னை; நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்,
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி  10
நறும் பூங் கானல் வந்து, அவர்
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே.  

சிறிய பூவையுடைய ஞாழலின் தேன் பொருந்திய ஒள்ளிய பூங்கொத்துக்கள்; அழகிய கலன்களையுடைய சிறுமியர் நெடிய மணலில் வண்டலாட்டு அயரும்வழி; வண்டல் மண்ணாலே செய்த பாவையின்; அழகிய கொங்கையில் ஒள்ளிய வரியையுடைய சுணங்குபோல மெல்லிதாகப் படுமாறு பரவாநிற்கும்; கண்டல் மரங்களாகிய வேலி சூழ்ந்த கண்டார்க்கு விருப்பம் வருகின்ற சிறிய குடித்தெருவின் கண்ணே நேற்றிரவில் ஒரு தேர் வந்துளதேயன்றோவென உரையாடி; இவ்வூர் முழுதும் அலரெழுந்ததாக; அவ்வலரைச் செவியில் ஏறட்டுக் கொண்ட நம்மன்னை என் போல்வார் பலருமிருப்ப அவருள் என்னையே குறிப்பாக நோக்கா நின்றனள்மன்; நாளைக் கழிக்கரையிலுள்ள முள்ளியினுடைய நீலமணி போலும் மலரைக் கொய்யேனாயின் என் மிக்க அழகு உளதாவது அரியதாகும்; இஃதிவ்வண்ணமாக, நீலமணி போலும் கரிய கழியிடத்துள்ள நறிய பூஞ்சோலையில் அவர் வந்து எம்மை யணையாது தேர் மேல் வறிதே செல்லுதல்; எம்மை இல்வயிற்செறிக்கும் அதனினுங் காட்டில் அரிய துன்பமுடையதாகும்;

தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 192. குறிஞ்சி

குருதி வேட்கை உரு கெழு வய மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய, பூழியர்
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை,  5
நீ நயந்து வருதல் எவன்? எனப் பல புலந்து,
அழுதனை உறையும் அம் மா அரிவை!
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்  10
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.  

இரத்தத்தை யுண்ணும் விருப்பத்தொடு அச்சத்தைச் செய்யும் வலிய புலி தன் எதிரே வலிமிக்க பெரிய இளைய களிற்றியானை வருதலை நோக்காநிற்கும்; மரங்கள் பொருந்திய சோலை நிரம்பப் பூழியருடைய நல்ல நிறத்தையுடைய யாட்டு மந்தைபோல மாரிக் காலத்து வைகறைப் பொழுதில் மேய்கின்ற கரடிகளையுடைய; மலைச்சுரத்து நீண்ட நெறியில் நீ என்னை விரும்பி வருதல் என்னை கொல்? என; பலவாகப் புலந்துகூறிக் கலுழந்துகொண்டிராநின்ற அழகிய மாமை நிறத்தினையுடைய மடந்தாய்!; பயன் மிக்க பலா மரங்களையுடைய கொல்லிமலையினுள் மேல் பாலாக முன்பு தெய்வத்தாலே செய்துவைக்கப்பட்ட புதுவதான நடைகொண்டு இயங்குகின்ற பாவை; விரிந்த ஞாயிற்றின் இளவெயிலிலே தோன்றி நின்றாலொத்த நினது அழகிய நலத்தைக் கருதி வருங்காலத்து நின்மேனி யொளியே எங்கும் பரவி இருளைப் போக்குவதாகத் தோன்றுதலானே; இம்மலையடியிலுள்ள நெறியானது எமக்குக் காவலையுடையதாகும் கண்டாய்; ஆதலின்; நீ அழுதுறைவதை விட்டொழிப்பாயாக!;

இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.

நற்றிணை - 193. பாலை

அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ,
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய்,
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை!
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே;  5
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக,
யாரும் இல் ஒரு சிறை இருந்து,
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே!  

உருக்கிய அரக்குப் போன்ற சிவந்த வட்டமாகிய முகையையுடைய ஈங்கையினது பஞ்சு போன்ற தலையையுடைய புதிய மலரின் தேன்துளி நின்பாற் கலப்ப; அத் தேன் துளியுடனே புதுவதாக மழை பெய்து நிறைந்த நீர்ததும்பும் புலங்களுட் புகுந்து அவற்றை அளைந்தும்; அங்குத் தங்காமல்; எமது பெரிய அயற்பக்கமெங்கும் சூழ்ந்து வந்து மோதுகின்ற பெரிய குளிர்ச்சியையுடைய வாடையே!; யாம் ஒருபொழுதும் எம் நெஞ்சினுள்ளே நினக்குத் தீதாகிய செயலைக் கருதி யறிந்ததுமில்லையே! அங்ஙனமாக; எம்முடைய பருத்த தோளிலேற்றிய ஒளியையுடைய வளை நெகிழும்படி செய்த எம் காதலர் தாம் ஈட்டுதற்கரிய பொருளீட்டுமாறு உள்ளம் பிணித்தல் காரணமாக அகன்றனராதலினால்; உசாவுந்துணை யாருமில்லாது ஒருபுறத்திருந்து பெரிய துன்பமுறுவேமாகிய எம்மை வருத்தாதே கொள்!;

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.

நற்றிணை - 194. குறிஞ்சி

அம்ம வாழி, தோழி! கைம்மாறு
யாது செய்வாங்கொல் நாமே- கய வாய்க்
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்,
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை,
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத்  5
தனி நிலை இதணம் புலம்பப் போகி,
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை,
குன்ற வெற்பனொடு நாம் விளையாட,
இரும்பு கவர்கொண்ட ஏனற்
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே?  10

தோழீ! வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேள்; மலைமேலே சமைத்த தனியாக நிலைபெற்ற கட்டுப் பரண் வறிதாம்படி விடுத்துச் சென்று; மரமேறுந் தொழிலிலே சிறப்புடைய மந்திகளும் ஒன்றோடொன்று செறிந்திருப்பதால் ஏறியறியாத மரங்கள் நெருங்கிய ஓரிடத்திலே; குன்றுகளையுடைய மலைகிழவனுடன் நாம் முயங்கி விளையாட்டயராநிற்கவும்; அப்பொழுது மிக விருப்பங்கொண்ட புனத்திலுள்ள தினையின பெரிய கதிர்களைத் தின்றழித்துவிடாத; பெரிய வாயையுடைய கன்றினை, மருங்கிலுடைய பிடியானையோடு புணர்ந்து இயங்குகின்ற வலிமை மிக்க மருப்பினையும் நிலத்தின் கண் ஈர்த்தலையுடைய நெடிய துதிக்கையையும் பெருமையையுமுடைய களிற்றியானைக்கு; நாம் யாது கைம்மாறு செய்யக்கடவாநிற்போம்?; அன்றியும் மிக விருப்பங்கொண்ட பெரிய தினைக் கதிரைக்கொண்டு போகாதொழிந்த சிறிய பசிய கிள்ளைக்கு; யாது கைம்மாறு செய்யக் கடவா நிற்போம்; இப்பொழுது நம்மை இல்வயின் செறித்தலானே அவை புனம் புகுந்து அழிக்கலாயின;

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது. - மதுரை மருதன் இளநாகனார்

நற்றிணை - 195. நெய்தல்

அருளாயாகலோ, கொடிதே!- இருங் கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி,
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே-
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி,  5
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல,
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே.  

கரிய கழியின் கணுள்ள நீர்நாயின் குருளை; கொழுவிய மீன்களைப் பிடித்துத் தின்று தில்லை மரப் பொந்துகளிலே பள்ளிகொள்ளா நிற்கும்; மெல்லிய கடற்கரையின் தலைவனே!; கல்லென ஒலிக்கின்ற புள்ளினங்களையுடைய கடற்கரைச் சோலை சூழ்ந்த தொண்டியின் கண்ணதாகிய வயலிலே; நெற்கதிர் அறுக்கும் உழவரினுடைய கூரிய அரிவாளால் அறுபட்டதனாலே; பல இதழ்கள் விளங்கிய குவியாத நெய்தன் மலர்; நீரில் முங்கி அலைகின்ற தோற்றத்தைப்போல; நீ விரும்பிய காதலியின் கண்கள் ஈரியவாய்க் கலுழாநிற்கும் ; அதனை யான் கண்டிருக்கின்றேன்; ஆதலின் நீயும் அவள் கலுழாதிருக்குமாறு வரைந்தருள செய்கின்றாயில்லை; இங்ஙனம் அருளாதிருப்பது ஓஒ கொடிதுகாண்!

களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.

நற்றிணை - 196. நெய்தல்

பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை,
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்,
மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்!
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்,
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்,  5
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்!
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்,
சிறுகுபு சிறுகுபு செரீஇ,
அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே?  

பல கூறுகள் ஒன்றாகச் செறிந்தாற் போன்ற பலவாய கதிர்களின் இடையே இடையே பாலை முகந்து வைத்தாற்போன்ற குளிர்ச்சியையுடைய வெளிய நிலாவினையுடைய: மால் பிடர் அறியா நிறை உறு மதியம் மேகத்தின் பிடர் மேலே தோன்றிப் பிறரால் அறியப்படாத எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே!; நீதானும் நிறைவும் நேர்மையும் உடையை ஆதலானும்; நினக்குத் தெரியாத வணணம் மறைந்து உறையும் உலகமொன்று இன்மையானும்; எனக்குத் தோன்றாது மறைந்தொழுகும் எங்காதலர் இருக்கும் இடத்தினைக் காட்டுவாயாக! என்று இரந்து வேண்டினாள், அவள் அங்ஙனம் இரந்து வேண்டியும் திங்கள் விடை கூறிற்று இல்லையாகாலின் அதன்மேல் வெறுப்புற்று மீட்டும்ந் அதனை நோக்கித்ந் திங்களே!; நீ அறிந்த அளவு சான்று கூறாது பொய்யை மேற்கோடல் காரணமாக; நல்ல அழகிழந்த என் தோள்போல் வாட்டமுற்று; நாடோறும் சிறுகிச் சிறுகிச் குறைந்து நின் விழிப்புலம் மறைபடுதலாலே; நீ காட்டுவதுதான் இயலுமோ ? இயலாதன்றே; என்றாள்,

நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து, ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது. - வெள்ளைக்குடி நாகனார்

நற்றிணை - 197. பாலை

தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே;
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ!
தௌந்தனம் மன்ற; தேயர் என் உயிர் என,
ஆழல், வாழி- தோழி!- நீ; நின்  5
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு,
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய,
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள்
இன் இசை முரசின் இரங்கி, மன்னர்  10
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே.  

தோழீ! தோள்கள் வளைகள் நெகிழ்ந்தன நெற்றி படர்ந்த பீர்க்க மலர் போலப் பசலை பரந்தது; கண்களும் தண்ணிய நீர் பெருகின; இவை இங்ஙனமாதல் திண்ணமாக எம் உயிர் இறந்தொழிதற் பொருட்டே என்பதனை யாம் நன்றாகத் தௌபிந்துகொண்டோம் என்று; அழாதே கொள்! இவ்விடரொழிந்து நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; நினது தாழந்து தழைந்த கூந்தல் போல இறங்கிய காலுடனே; வண்டுகள் பொருந்திய புதிய மலர்களை ஒள்ளிய நீர்த்துறையின்கண்ணே கொய்து கொணர்ந்த; பெரிய மடப்பத்தையுடைய மகளிரின் முன்கையிலணிந்த சிறிய கோற்றொழிலமைந்த பொன்னாலாகிய தொடிபோல மின்னி; கூட்டங்கொண்ட இனிய ஒலியையுடைய முரசுபோல முழங்கி; அரசர்களுடைய அரணாகிய மதில்மேலே பகைவருடைய படைசென்று பாயாதவாறு ஓம்பாநின்ற பலவாகிய கிடுகுபோல விசும்பிலே செல்லும் மேகம்; அவரது நல்ல மலை நாட்டின் கண்ணே தவழாநிற்கும்; அம்மழை நின் கூந்தல் போலிருத்தலானே அதனைக் காண்டலும் நின்னைக் கருதி இன்னே வருகுவர் காண்;

வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது. - நக்கீரர்

நற்றிணை - 198. பாலை

சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம்,
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்
கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தை
தன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல்  5
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை,
வார்ந்து இலங்கு வால் எயிற்று, பொலிந்த தாஅர்,
சில் வளை, பல் கூந்தலளே, அவளே;
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த்  10
தந்தைதன் ஊர் இதுவே;
ஈன்றேன் யானே; பொலிக, நும் பெயரே!  

சேய்மைக் கண்ணிருந்து வாராநின்ற அரசகுமாரனே!; யாமரம் உயர்ந்து ஓமை மரம் நீடிய காடிடையிட்ட சுரத்திலே; நேற்று நெடுந்தூரஞ் சென்ற என் மகள் போல இவள் என்கண் எதிரே படுதலால் என்கண் நீர் நிரம்பப் பெருகாநின்றது; அவள்தான் நுண்ணிய பலவாய வரி பொருந்திய அல்குலும் தோன்றிய சுணங்கும் நேர்மையுற்று விளங்கிய வெள்ளிய பற்களும் பொருந்திய பாதிரி மலர்ப் பிணையலும் சிலவாய வளையும் பலவாய கூந்தலும் உடையாள்; நிற்க, நும்மை அவள் தந்தையினூர் இடத்தில் விருந்தேற்று உபசரித்துத் தொழுகிற்பேன்; அவ்வண்ணம் நும்மை எதிர்கோடற்கு ஏற்ற மைபோன்ற கரிய அணலையும் பிடரியையும் வலிய நெடிய கையையும் வலிய வில்லினையும் அம்பையும் அளந்தறியா வண்மையையும் கள்ளுணவையுமுடைய தந்தையினது ஊர் இதுவே கண்டீர்; யானே அவளை ஈன்று பாதுகாத்தேன்; எனது ஆற்றாமையைக் கண்ட நீயிர் அவளை எதிர்கண்டு பேசிய வகையை நுவலுவீராயின் நுமக்கு அறத்தாலாய புகழ் உண்டாகுக!

பின் சென்ற செவிலி இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது. - கயமனார்

நற்றிணை - 199. நெய்தல்

ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,
உளெனே- வாழி, தோழி! வளை நீர்க்  5
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி,
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர்,
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய,
பைபய இமைக்கும் துறைவன்  10
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே!  

தோழீ! வாழி! சூழ்ந்த கடனீரில் விரைந்து செல்லும் சுறாமீனைப் பிடிக்க வலை வீசி எறிந்த வளைந்த மீன் பிடிக்கும் படகினையுடைய பரதவர்; இழுக்கும் விசையையுடைய தூண்டிலின் இடையிடையே அமைந்து காற்று மோதுதலானே; எரிகின்ற கற்றை சாய்ந்து பரவிய நெருங்கிய விளக்கின் ஒளி நீல நிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே ஒளிரும் மீன்களைப் போல; சிறுகி மெல்ல மெல்ல ஒளி வீசாநிற்கும் துறையையுடைய தலைவனது; உடம்பை அணைந்து முயங்கும் முயக்கத்தை யான் அடையப் பெறாத விடத்து; உயர்ந்த மணல் மிக்க திடாந் சூழ்ந்த நீண்ட கரிய பனையினது; நெருங்கிய மடலிற் கட்டிய குடம்பையின் கண்ணே யிருக்கின்ற பிரிவுற்று வருந்துதலையுடைய வெளிய நாரை ; இரவு நடுயாமத்தே நரலுந்தோறும் உருகி ; அள்ளலாகிய குழம்பு போன்ற என்னுள்ளத்தொடு என் மனமும் உடைந்து இன்னும் உயிர் உடையேனாயிரா நின்றேன்; என் உயிர்தான் எவ்வளவு வன்¬மையுடையது காண் !

வன்புறை எதிரழிந்தது. - பேரி சாத்தனார்

நற்றிணை - 200. மருதம்

கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,
சாறு என நுவலும் முது வாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ-  5
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,
கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று,
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன்  10
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின் எனவே.  

அரும்பு கட்டிய கதிர் போன்ற ஒள்ளிய பூங்கொத்தினையுடைய நொச்சி மாலையைச் சூடி; யாறு கிடந்தாற் போன்ற அகன்ற நெடிய தெருவின்கண்ணே யாவரும் அறிய இற்றை நாளால் இவ்வூரிலே திருவிழா நடவா நின்றது, எல்லீரும் போந்து காணுங்கோள் என்று கூறிச் செல்லுகின்ற; அறிவு வாய்ந்த குயவனே!; ஆம்பல் நெருங்கிய இனிய பெரிய வயலும் பொய்கையுமுடைய ஊரின்கண்ணே நீ செல்வாயாகி; ஆங்குள்ள மகளிரை யழைத்துக் கூரிய எயிற்றினையும் மெல்லிதாயகன்ற அல்குலையுமுடைய மங்கைமீர்!; கை விரும்புதற்குக் காரணமான நரம்பினையுடைய யாழிலே பாடும் இசைப்பாட்டு நுவலவல்ல பாணன் செய்த துன்பங்கள் மிகப் பலவாகி வளர்வன வாயின ஆதலின்; இப் பாணன் உள்ளால் பொய்யை நிரப்பிவைத்து மேலால் மெயம்ந்மையைக் கொண்டு மூடி நுவலுகின்ற கொடிய சொல்லிலே கண்ணருள் செய்யாது நும்மைப் பாதுகாத்துக் கொள்ளுங்கோள்!; என்று முதலில் நீ திருவிழா நடப்பதை நுவன்று கொண்டு போவதுடன் இதனையும் கூட்டி அவ்விடத்துள்ளார்க்குக் கூறிப் போவாயாக!

தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, இங்ஙனம் சொல்லாயோ? என்று குயவற்குச் சொல்லியது. - கூடலூர்ப் பல் கண்ணனார்


© Om Namasivaya. All Rights Reserved.