Books / எட்டுத் தொகை நூல்கள்


நற்றிணை

நற்றிணை - 101. நெய்தல்

முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி,
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி  5

இனிதுமன்; அளிதோ தானே- துனி தீர்ந்து,
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்,
மீன் எறி பரதவர் மட மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே.  

வருத்தமின்றி, அகன்ற அல்குலையும் மெல்லிதாயமைந்த இடையையுமுடைய மீன் பிடிக்கின்ற பரதவர்தம் இள மகளின் மான்போலும் ஒன்றோடொன்று மாறுபட்ட பார்வையைக் காணப்பெறாதமுன் உவ்விடத்தே: முற்றா மஞ்சள் பசும் புறங் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின்முற்றாத இளமஞ்சட் கிழங்கின் பசிய புறத்தைப் போலச் சுற்றியிருக்கின்ற சருச்சரையையுடைய சூழ்ந்த கழியிடத்துள்ள இறாமீனின் கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிகூட்டங் கொண்ட குவியல் காயும் வகையை ஆராய்ந்து; புன்னையினது அழகிய கொழுவிய நிழலின் எதிரே போகட்டுப் பரப்புந் துறைக்கு அணித்தாயிருந்த பாக்கமும; முறையே மிக இனிமையுடையதாயிருந்தது; அஃது இற்றைநாளால் அப்பரதவர் மகளின் நோக்கங் காணப்பெற்றமையாலே கழிந்து போகியதாகலின்; இரங்கத் தக்கதாயிராநின்றது;

பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது. - வெள்ளியந்தின்னனார்

நற்றிணை - 102. குறிஞ்சி

கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!
அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,
நின் குறை முடித்த பின்றை, என் குறை
செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு,  5
நின் கிளை மருங்கின், சேறிஆயின்,
அம் மலை கிழவோற்கு உரைமதி- இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.  

வளைந்த தினைக் கதிர்களைக் கொய்துகொண்டு போகாநின்ற சிவந்த வாயையுடைய பசிய கிள்ளாய்; அஞ்சாதே கொள்! நீ இக்கதிர்களைக் கொய்தல் காரணமாக யாரேனும் நின்னை அச்சுறுத்துவார் கொல்லோ? என்னும் ஐயத்தைப் போக்கி ; வேண்டிய உணவைக் கொண்டுநின் குறையெல்லாம் முடித்த பின்பு; ஒழிவெய்திய காலத்தில் என்னுடைய குறைபாட்டைச் செய்து முடிக்க வேண்டும். இது நின்னை யான் என் கைகளைக் குவித்துத் தொழுது இரந்து கேட்கின்றேன்; அக்குறைபாடுதான் யாதோவெனின் பலவாய காய்களைக் காய்க்கின்ற பலா மரங்கள் மிக்க சாரலையுடைய அவர் நாட்டின்கணுள்ள நின் சுற்றத்தினிடத்து நீ ஒருபொழுது செல்லுவையாயின்; அம்மலைக்கு உரியராகிய எனது காதலரை நோக்கி இந்த மலையைச் சூழ்ந்த காட்டின்கணுள்ள குறவருடைய இளமகள் முன்போலவே; தினைக் கொல்லைக் காவலுக்கு அமைந்து ஆண்டிருக்கின்றாளென்று இவ்வொன்றனை மட்டும் உரைத்து என் இவ்வொரு குறையைச் செய்துமுடிப்பாயாக !

காமம் மிக்க கழிபடர்கிளவி. - செம்பியனார்

நற்றிணை - 103. பாலை

ஒன்று தெரிந்து உரைத்திசின்- நெஞ்சே! புன் கால்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று,
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து,
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்  5

பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே;
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும்,  10
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே.  

என் நெஞ்சமே! புல்லிய காம்பையுடைய சிறிய இலையையுடைய வேப்ப மரத்தின் பெரிய கிளைகளை முறித்துத் தள்ளி மதத்தாற் செருக்குண்ட கடிய சினமும் வலிமையுமுடைய களிற்றியானை; நின்று கழித்தகன்ற நன்னீரல்லாத இழிந்த நீரினாலாகிய ஈரத்துப் பால் வற்றிய தோலாகிய முலையையுடைய வயிற்றை (நிலத்தின்கண்) பொருத்தி; பசி வருத்துதலானே வருந்தி முடங்கிக் கிடந்த பசிய கண்ணையுடைய செந்நாய்ப் பிணவினது; கெடாத வேட்டைமேற் சென்ற கணவனாகிய செந்நாயேற்றை தான் உண்மையாகத் தன்பிணவை முன்பு புணர்ந்த தன்மையைக் கருதி வருந்தாநிற்கும்; இதுகாறும் புக்கறியாத புதுவதாகிய கொடிய காட்டின்கண்ணே வந்து புகுந்து யாம் வருந்துகின்றோம்; பொருள்செய் முயற்சி தலைக்கீடாகச் செல்வோமென்றாலும், அங்ஙனம் செய்யாது மீண்டு ஊர்புகுவோ மென்றாலும் யான் தடுப்பதொன்றுமில்லையாதலின் அவ்விரண்டனுள் நீ துணிந்தவொன்றனை ஆராய்ந்துரைப்பாயாக !;

பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது. - மருதன் இள நாகனார்

நற்றிணை - 104. குறிஞ்சி

பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது  5
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்கொல்- பானாள்,
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர,
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர்  10
போக்கு அற விலங்கிய சாரல்,
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே?  

அழகிய வரியையும் அகன்ற வாயையுமுடைய புலியேற்றை இடமகன்ற மலையின் கண்ணே களிற்றியானையோடு போர் செய்கையில்; அவற்றாலுண்டாகும் துன்பத்துக் கஞ்சாத குறவரின் இளமைந்தர்கள் ஆண்டுள்ள பெரும் பாறையினுச்சியிலே மனச்செருக்கோடு ஏறித் தமது கையிலுள்ள சிறிய தொண்டகப் பறையை ஒலிப்பிக்கும் ஓசையானது; பக்கத்திலுள்ள பசிய அடித்தண்டினையுடைய செவ்விய தினைக் கதிர்களைக் கொய்ய வந்திறங்குகின்ற கிளிகளை அச்சுறுத்தி யோட்டாநிற்கும் நிரம்பிய ஒலியையுடைய மலைநாடனது; மார்பை விரும்பித் தனித்துறைகின்ற யான் ஒருத்தியே யல்லாமல்; இரவு நடுயாமத்திலே பாம்பு உறையும் பிளப்புக்களையுடைய உயர்ந்த கொடுமுடிகள் புரண்டு விழும்படியாகச் சினந்து இடிமுழங்கி மோதுகின்ற இருட்பொழுதையும்; நடந்து செல்லக் கூடாதவாறு பெரு வெள்ளங் குறுக்கிட்டு ஓடுகின்ற சாரலின்கண்ணே நோக்குதற்கரிய சிறிய நெறியையும்; கருதுகின்றவர் பிறர் யாவரேனும் உளரோ?; உளராயின் நம் காதலரை இரவுக் குறிமறுத்து வரைவிடைப் படுத்தாநிற்பர்;

தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது. - பேரி சாத்தனார்

நற்றிணை - 105. பாலை

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்,
கடு நடை யானை கன்றொடு வருந்த,
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்  5
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண்
பட்டனை, வாழிய- நெஞ்சே!- குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே.  10

நெஞ்சே ! காய்ந்த கொடிகள் சுற்றிய முட்கள் பொருந்திய அடியையுடைய இலவமரத்தின் விளங்கிய கிளைகள் நடுங்கும்படி வீசி; அவை முறியுமாறு கொடிய காற்று மோதியடிக்கின்ற மூங்கிற்புதர் நெருங்கிய இடங்களிலே; கடிய செலவினையுடைய பிடிகள் தத்தங் கன்றுகளுடனே சேர வருந்தாநிற்ப நெடிய நெறி முழுதும் நீரில்லாதொழிந்த நிழல் அற்ற செல்லுதற்கரிய சுரத்தின்கணுள்ள கவர்த்த நெறிகளையுடைய அவ்விடமென் றெண்ணாயாய்; குட்டுவன் சேரலது குடமலைச் சுனையிலுள்ள கரிய இதழையுடைய குவளையின் வண்டு மொய்க்கும் பெரிய மலரைச் சூடுதலானே மணங்கமழ்கின்ற அழகிய சிலவாய கூந்தலையுடைய நங் காதலி நீங்குதற்கரிய துன்பத்தாலே வருந்தவிட்டு; நீதான் நெடுந்தூரம் வந்துற்றனை; இங்குப் போந்த பின்பு கருதி மீளலுறாநின்றனையாயின் நின் முயற்சி நனி நன்றாயிரா நின்றது, இத்தகைய முயற்சிகளோடு நீ நீடு வாழ்வாயாக !;

இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது. - முடத்திருமாறன்

நற்றிணை - 106. நெய்தல்

அறிதலும் அறிதியோ- பாக!- பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள,
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது,
அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப,  5

மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி,
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்,
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே?  

பாகனே ! பெரிய கடலின் மோதுகின்ற திரையாலே கொழிக்கப்பட்ட மணன் மேட்டில் நறுமணம் வீசாநிற்ப; விளையாடுகின்ற புள்ளிகளையுடைய ஞெண்டைப் பிடிக்குமாறு சென்றவழி அஞ்ஞெண்டு ஓடுமிடத்தே பின் தொடர்ந்து செல்ல ஆற்றாது களைப்புற்று அதன்மீது சென்ற விருப்பம் நீங்கியிருந்த குற்றமற்ற இளமையுடையாளிடத்து; இப்பொழுது வருந்துகின்றேனாகிய யான் சென்று என் உள்ளத்தின்கண்ணே யுள்ள வினைவயிற் செல்ல வேண்டிய கவற்சியைக் கூறிய அளவிலே; மறுமொழி கூறுதற்கு நாவெழாமையால் ஆற்றாளாய்; நறிய மலரையுடைய ஞாழலினது தாழ்ந்த அழகிய கிளையிலுள்ள பூங்கொத்தைச் கொய்து அதனோடு இளந்தளிரையும் சேரப் பிசைந்து உதிர்த்த கையையுடையளாகி; அறிவு மயக்கமுற்றவளின் அழகிய மடப்பத்தினிலையை நீ; அறிந்திருத்தலையும் உடையையோ? உடையையாயின் அதற்கேற்றபடி கடவுவாயாக!;

பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன், அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச்சொல்லியது. - தொண்டைமான் இளந்திரையன்

நற்றிணை - 107. பாலை

உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்,  5

புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர்வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து,
ஆனாக் கௌவை மலைந்த
யானே, தோழி! நோய்ப்பாலேனே.  10

தோழீ! பெரிய உகிரையுடைய பிடியானை தின்னுதற் பொருட்டு மேலுள்ள தோலைப் பறித்துக் கொண்டதனால் நாரில்லாத வெளிய கிளைகளையும் பற்றுக்குறடு போன்ற காய்களையுமுடைய வெளிய பூங்கொத்துக்களையுடைய வெட்பாலையினுடைய; ஓடுகின்ற காற்று அசைத்தலினால் இலை யுதிர்ந்த கிளையிலுள்ள நெற்றுக்கள் மலையினின்று விழும் அருவியைப் போல ஒல்லென்னும்படி ஒலியாநிற்கும்; புல்லிய இலையையுடைய ஓமையையுடைய புலி இயங்குகின்ற சுரத்து நெறியிலே சென்ற என் காதலர்பால்; அவரை வழிபட்டுப் பின்னே சென்றொழிந்த என்னெஞ்சம் முன்பு செய்த நல்வினையின் பயனை இப்பொழுது துய்ப்பதாயிராநின்றது; அந்த நெஞ்சுபோல நல்வினை செய்திலாதேனாகலின் இங்கே தங்கி ஊரார் தூற்றும் அடங்காத பழிச்சொல்லைச் சூடப்பெற்ற யானே தோழீ ! தீவினையின் பாலேனாகி அதன் பயனை நுகராநின்றேன்; இங்ஙனம் இருவினைப் பயனையும் நுகருமாறு பெற்றதனை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலானே யானே என்னை நகுவது செய்யா நிற்பேன்காண்!;

பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது

நற்றிணை - 108. குறிஞ்சி

மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம் குடிக் குறவர்,
கணையர், கிணையர், கை புனை கவணர்,
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட!  5
பழகிய பகையும் பிரிவு இன்னாதே;
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்ப,
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே!  

மலைப்பக்கத்து முளைத்துத் தழைத்த கரிய நிறமுடைய தினைப்புனத்தைத் தின்னக் கருதித் தன் பிடியை விட்டு நீங்கிய கொடிய களிற்று யானை வந்து புகுந்ததை நோக்கிய; அழகிய குடியிலுள்ள குறவர் கணையுடையவரும் கிணைப்பறையுடையவரும் கை விரலிலே கோத்த கவணுடையவரும் கூவிப் பேரிரைச்சலிடுபவருமாகிக் குடியிருப்பின் புறமெல்லாம் சென்று ஆரவாரித்துச் சூழும் மலைநாடனே! பழகிய பகையும் பிரிவு இன்னாது பழகியிருந்த பகைவராயினாரும் அருகிலிருந்து பிரிவரென்றால் அப்பிரிவுதான் முன்பு பழகினார்க்கு இன்னாமையைத் தருவதொன்றாகுமன்றோ!; அங்ஙனமாக நின்னை யின்றியமையாத முல்லை யரும்பு போன்ற இலங்கிய எயிற்றையும் இனிய நகையையுமுடைய மடந்தையினது சுடர்போன்ற ஒளியையுடைய அழகிய நெற்றியிலே பசலையூருமாறு; நீ அவளது தொடர்ச்சியை எவ்வண்ணம் கைவிட்டனை ? இதனைக் கருதியே யான் வருந்தாநின்றேன் காண்;

வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

நற்றிணை - 109. பாலை

ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின்
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று,
அன்னவோ, இந் நன்னுதல் நிலை? என,
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென  5
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து,
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என, ஒருவேன் ஆகி
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே!  10

நின்னைப் பிரியேமாகி எப்பொழுதும் ஒன்றியிருத்ந்தும் என்று கூறிய பழைமையாகிய நட்பினின்றும் காதலர் பிரிந்தகன்றதனாலே கலங்கி மயங்குற்று; இந்நல்ல நுதலையுடையாளுடைய நிலைமை அப்படிப்பட்டனவோ? என்று வினாவுதல் ஒழியாத அலங்கரித்த அணிகலனையுடையாய் யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக! இனி உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென இப்பொழுது கூறுதற்கியலாத துன்பம் விரைந்துபற்ற; ஒலிக்கும் வாடை வீசுதலையுடைய ஆதித்த மண்டிலம் மேற்கே மறைகின்ற இம் மாலைகாலமானது; இருண் மிக்க இராப்பொழுதிலே சேற்றையுடைய தொழுவத்தினின்று வேற்றிடத்திலே கட்டவேண்டு மற்றத்து அங்ஙனஞ் செய்யாது அத்தொழுவத்துள் கீழினும் படுக்கவிடாது நின்ற நிலையிலே நிற்குமாறு தலைக்கயிற்றை யிழுத்து உச்சியிலே தூக்கி மேற்கை மரத்தில் இறுகப்பிணித்த குறுமையாகிய பசுவினது நிலைமையைப் போல; யான் ஒருத்தியாகியே நின்று உள்ளஞ் சுழன்று வருந்தும் வண்ணம் மெல்ல மெல்ல நீங்கா நிற்கும்; இவ்வேளை யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேனென்று புலம்புவ தன்றி வேறில்லைக்காண்;

பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது. - மீளிப் பெரும்பதுமனார்

நற்றிணை - 110. பாலை

பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி,
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,
உண் என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென,  10
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!  

தேன் கலந்தாலொத்த நல்ல சுவையையுடைய இனிய வெளிய பாலுணவை விரிந்த ஒளியையுடைய பொன்னாலாகிய கலத்திலிட்டு அதனை ஒரு கையிலேந்தி நின்று; புடைப்பாகச் சுற்றிய பூவொத்த மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை ஓச்சி நீ உண்ணுவாய் என்று எறிதலும்; தௌபிந்த ஒளியையுடைய முத்துக்களை உள்ளே பரலாகப் போடப்பட்ட பொன்னாலாகிய சிலம்பு ஒலிக்குமாறு பாய்ந்து; மெல்லியவாய நரைத்த கூந்தலையுடைய செவ்விய முதுமையடைந்த செவிலியர் பின்தொடர்ந்து பற்ற முடியாமல் மெலிந்தொழியுமாறு தான் முன்றிலின்கணுள்ள பந்தரின் கீழோடி நீ உண்ணுவாய் என்றதன் விடையாக; யான் உண்ணேன் காண்! என்று மறுத்து உரையாடும் சிறிய விளையாட்டினையுடைய என் மகள்; நல்ல அறிவும் ஆசாரமும் எப்படி உணர்ந்தனளோ? கொண்டகொழுநன் குடி வறன் உற்றென கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் தன்கை பற்றிய கொழுநன் குடி வறுமையுற்றதாகத் தன்னை ஈன்றுதவிய தந்தையினது செல்வமிக்க உணவை நினைகிலளாகி; ஓடுகின்ற நீரிலே இடையீடுற்றுக் கிடக்கும் நுண்ணிய மணல் போல ஒரு பொழுதின்றி யொருபொழுதுண்ணும் சிறிய வன்மையுடையளாயினாளே, இஃதென்ன வியப்பு; ம்.) அரி பருக்கைக்கல். அரிநரை மெல்லியநரை. பரிதல் ஓடுதல். உவகைக் கலுழ்ச்சி. பயன் ஆற்றாமை நீங்குதல். இஃது உரிப் பொருளாற் பாலை. உவகை. பயன் மகிழ்தல்.(பெரு ரை.) பிரசம் தேன். தேன் கலந்த சுவைமிக்க வெளிய இனிய பால் எனலே சாலும். தேன் கலந்தா லொத்த எனல் வேண்டா கூறலாம். புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் என்பதற்குப் புடைத்துழிப் புடைக்கப்படுவோரைச் சுற்றிக்கொள்ளும் இயல்பு;

மனைமருட்சி; மகள்நிலை உரைத்ததூஉம் ஆம். - போதனார் 

நற்றிணை - 111. நெய்தல்

அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்,
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்,
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு,  5
திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி,
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி,
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்
பெருங் கழிப் பாக்கம் கல்லென
வருமே- தோழி!- கொண்கன் தேரே.  10

தோழீ ! சுரத்தின்கணுள்ள இருப்பைப் பூப்போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களுடனே ஏனைத் திரளாயுள்ள மீன்களையும் பெறுமாறு; பின்னி வரிந்த வலையையுடைய பரதவர்தம் வன்மை மிக்க தொழிலையுடைய சிறுமக்கள்; மரங்களின்மேலேறி நின்று மானினங்களைத் தகைக்கும் பொருட்டு வெய்ய வலியையுடைய வேட்டுவச்சிறுவர் விரும்பி எழுந்தாற்போல; மீன் பிடிக்கும் படகின் மேலேறிக் கொண்டு கடற்பரப்பின்கண்ணே கடந்து சென்று; ஈர்வாள் போன்ற வாயையுடைய சுறாமீனையும் மற்றும் வலிமையுள்ள பிற மீன்களையும் பிடித்து அவற்றைத் துண்டித்து இறைச்சிகளை நிரப்பிய தோணியராய் மீண்டுவந்து காற்று வீசிப் பரப்பிய மணற்பரப்பில் இறக்கியிடும்; பெரியகழி சூழ்ந்த பாக்கம் கல்லென ஒலிக்குமாறு கொண்கனது தேர் வாராநிற்குமாகலின் நீ வருந்தாதே கொள் !

விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.

நற்றிணை - 112. குறிஞ்சி

விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி,  5
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,
மலை இமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?  

தோழீ ! மலைச்சாரலில் அரும்பு முழுதும் ஒருசேர மலர்ந்த கரிய கிளைகளையுடைய வேங்கையின்கண்ணே சுரும்பு முரலுகின்ற பக்கமலையிலுள்ள வெல்லாம் அஞ்சும்படியாக; களிற்றைக் கொன்று அச்சமற்ற உள்ளத்தையுடைய சிங்கம் இயங்கா நிற்கும் பெரிய மலைநாடன்; கார்ப்பருவத்தின்கண் வருவேன் என்று கூறிச் சென்றபடி மீண்டு வருகின்றான் என்பதை அறிந்து விருப்பமுற்று; கரிய கடலின்கண்ணே சென்று நீரையுண்டு மணிபோலும் நிறத்தினையுடைய அருவியினிழிகின்ற நீரையுடைய அகன்ற இடமெல்லாம் மறைபடுமாறு பரவி; மலையானது கண்விழித்து இமைத்தாற் போல மின்னி ஒலிக்கின்ற வலிய இடியேற்றுடனே கலந்து வந்த இந்த மழைக்கு; யான் யாது கைம்மாறு செய்ய மாட்டுவேன் ?

பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. - பெருங்குன்றூர் கிழார்

நற்றிணை - 113. பாலை

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்
பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்-
அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே  5
சேறும், மடந்தை! என்றலின், தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூர,
பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து,
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும்  10
ஆம்பல்அம் குழலின் ஏங்கி,
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே!  

மடந்தாய்! எம்முள்ளம் அருமையாக ஈட்டப்படும் பொருளவாவினாலே பிணிக்கப்பட்டதை எண்ணியாஞ் செல்லுகின்றோம் என்றவுடன்; அவள் தான் தன்னுடைய நெய்தல் மலர் போலும் மையுண்ட கண்கள் வருத்தம் மிகப்பின்னுகின்ற (கரிய) கூந்தலை விரித்து அதனுள்ளே மறைந்து நின்று பெரிதும் கலக்கமடைந்து; உதியஞ் சேரல் சினந்து சென்ற ஒலிக்கின்ற இடத்தையுடைய போர்க்களத்தின்கண்ணே; களம்பாடுநருடன் வாச்சியம் வாசிப்போர் விரைவாக ஊதுகின்ற ஆம்பல் என்னும் பண்ணையுடைய இனிய புல்லாங்குழல் இசையெடுத்தாற் போல; வாய்விட்டழுது கலங்கிய வருத்தமுறுகின்றவளினுடைய துன்பங்கொண்ட பார்வைகள் தாம்; மானினம் நிமிர்ந்து தழையுண்ணுதலினாலே சிறிது வளைந்த உயர்ந்த கிளைகளையும் புல்லிய அடியையுமுடைய இலந்தை மரங்களின் மேலே களியையுடைய பசிய காய்; பரல் பொருந்திய சிறிய நெறியின்கண் உதிர்ந்து நிறையப் பரவாநிற்கும்; பெரிய சுரத்தைக் கடந்தும் ஈங்கு எம்முன்னே அடைய வந்தன; இஃதென்ன வியப்பு !;

இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது. - இளங்கீரனார்

நற்றிணை - 114. குறிஞ்சி

வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்,
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்,
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந்திசினே;
அளிதோ தானே- தோழி!- அல்கல்  5
வந்தோன்மன்ற குன்ற நாடன்;
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்;
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி,  10
மையல் மடப் பிடி இனைய,
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே.  

தோழீ! ஈரிய குரலின் மிக்க ஓசையையுடைய இடியேறு பாம்பின் அழகைக் கெடுக்கின்றதாகி உயர்ந்த மலைமேல் மோதி; கரிய நிறத்தையுடைய இளம்பிடி வருந்துமாறு தனது துதிக்கையை ஊன்றி இறங்குகின்ற களிற்றின் மேலே பாய்ந்து அதனைக் கொன்றொழிந்தது; அங்ஙனம் இறந்த யானையை நம் ஐயன்மார் பிளந்து அதன் வெளிய கோடுகளையெடுத்து அகன்ற பாறையின்கண்ணே ஊன்காயுமாறு போகடுவதாகவும் அதன் பசிய ஊனை அழித்து மிகப் பெரிய உகிர்களைப் புதைப்பதாகவும் பேசிக் கொள்ளுகின்ற இவற்றாலே; புலவு மணங் கமழ்கின்ற சிறுகுடியிலுள்ள தெருவுதோறும் உண்டாகும் ஆரவாரத்தை இரவு முழுதும் துயிலாதிருந்து கேட்டு வருந்தினேன்; அத்தகைய இரவிலே குன்ற நாடனும் திண்ணமாக இரவுக்குறி கூடும்படி கருதி வந்தனன்காண் !; அவன் வருநெறியில் மழையின் துளி பெய்தலாலே பொறிக்கப்பட்ட புள்ளிகளையுடைய பழைமையாகிய கரையை மோதுகின்ற உயர்வையுடைய அலைகளோடு வருகின்ற கான்யாற்றினைக் கருதி யான் அஞ்சா நின்றேன்; ஆதலின் அவன் இரவுக்குறி வருதல் இரங்குவதற்குரிய தொன்றாயிரா நின்றது;

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது. - தொல்கபிலர்

நற்றிணை - 115. முல்லை

மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்,
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; இன் நீர்த்
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர் என,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி  5
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ,
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர்
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர்
அன்பினர்- வாழி, தோழி!- நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர்;  10
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?  

தோழீ! வாழி அகன்று விரிந்த பொய்கையின் கண்ணுள்ள மலர்களைக் கொய்து வந்த துவட்சியால் வருந்திய தோழியர் குழாமெல்லாம் தம் மெய்ந்நோவொழிந்து இனிதாக வுறங்கவேண்டி; அன்னையும் நம்மீதுகொண்ட சினம் சிறிது தணிந்து உயிர்ப்புடையளாயினாள்; அவள் அங்ஙனமாகிய பொழுது முகிலும் இனிய நீரையுடைய பெரிய கடலின் நீர் சில என்னும் படியாக வாயினாலுண்டு; மயிலின் அடிபோன்ற கரிய கதிராகிய பூந்துணரையுடைய நொச்சி வேலியின்மீது இல்லின் நடுமுற்றத்தில் முளைகொண்டெழுந்த முல்லை கூரை மேலாலே சென்று படர்ந்து அவ்விரண்டும் முறையே அரும்பவிழ்ந்து மலருமாறு இன்று நாட்காலை எதிர்போந்து கார்ப்பருவம் செய்யலாகியது கண்டாய், அஃது அங்ஙனமாக; இப்பொழுது நங்காதலர் மிக்க சேய்மையின் கண்ணதாகிய நாட்டில் உறைபவராயினும்; நம்பால் மிகப் பெரிய அன்புடையராதலின் அங்கே தாங்கொண்ட வினை முடித்தலால் அளவில்லாத புகழையடைவதாயினும் குறித்த பருவவரவின்கண் வாராது ஆண்டுறைபவரல்லர், அவர் வருமளவும் நீ வருந்தாதே கொள்!; இன்றுதான் பருவந் தொடங்குகின்ற தென்பதன் குறியாக அம்மேக முழங்கு மிடியோசையை யான் கேளாநின்றேனல்லனோ?

பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.

நற்றிணை - 116. குறிஞ்சி

தீமை கண்டோர் திறத்தும்பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்பமாதோ;
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று,
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை,
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும்  5

மலை கெழு நாடன் கேண்மை, பலவின்
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச்
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த  10
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர்
இன்னும் ஓவார், என் திறத்து அலரே!  

கொடிய தீத்தொழிலைச் செய்பவரிடத்து அச்செயலை நேரிலே கண்டு வைத்தும் உள்ளத்தாலாராய்ந்து அத்தொழில் செய்வோர் இனி அதனைச் செய்யா தொழிவாராக என்று பலபடியாக நுவன்று பெரியோர் பொறுத்திருப்பர்; அங்ஙனமுமாகாது சூல் முதிர்ந்த இளம்பிடியானை அறியாமையாலே தன் வயிற்றிலுள்ள சூல் அழிந்து புறம் போந்து விழுமாறு பெரிய மூங்கிலில் முளைத்தெழுந்த இலையில்லாத கொழுவிய முளையை விடியலிலே சென்று தின்னாநிற்கும்; மலைவிளங்கிய நாடன் என்னைக் கை விட்டமை(யால)ந் அவனுடைய கேண்மையானது; பலாவின் கரிய கிளையினின்று கனிந்து கீழே விழுகின்ற காய் முதிர்ந்த பெரிய பழம் பிறர் உண்ணாதபடி மலையின் பிளப்பாகிய அளையினுள் விழுந்தொழிந்தாற்போல தொடர்ச்சியறப் பன்னாளின் முன்னே சென்றொழிந்தது; அதனை அறியாது பெரிய மலைப் பக்கத்திலுள்ள இருள் செறிந்த குவட்டிலிருந்த குறிஞ்சியிலுள்ள நல்ல ஊரின்கணிருக்கும் பெண்டிர்தாம்; என்னிமித்தமாக இன்னும் பழிகூறுதலை ஒழிந்தாரிலர்; இனி யான் அதனை எவ்வண்ணம் ஆற்றுவேன் ?

வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது. - கந்தரத்தனார்

நற்றிணை - 117. நெய்தல்

பெருங் கடல் முழங்க, கானல் மலர,
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர,
வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர,
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்  5

கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க,
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின், பல் நாள்
வாழலென்- வாழி, தோழி!- என்கண்
பிணி பிறிதாகக் கூறுவர்;  10
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே.  

தோழீ ! நீ வாழி; பெரிய கடல் முழங்காநிற்கவும் கடல் அருகிலுள்ள சோலை ஒருங்கே மலர்தலைச் செய்யவும், கரிய கழியின் நீர்வெள்ளம் நமது மனையெல்லை கடந்து நிறைந்து வாராநிற்பவும்; பெரிய இதழையுடைய நெய்தல் மலர் குவியவும்; காக்கைகள் ஒருசேர மணம்வீசும் பூஞ்சோலையிலுள்ள தம்தம் கூடுகளிலே சென்று தங்கா நிற்பவும்; வளைந்த ஆதித்த மண்டிலம் சிவந்து தோன்றி அத்தமனக் குன்றைச் சென்றடைந்து எங்கும் முன்பு பரவிய சுடர் மழுக்கமடையவும்; அவற்றை நோக்கித் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே யான் அடைந்து நடுங்கும்படி அதனையுடன் கொண்டுவந்த புன்கண் செய்யும் மாலைப்பொழுதில்; அத்தலைவர் தாம் என்னை நினையாராகி அகன்றொழிந்தால்; அதனா லென்பாலுண்டாய காமநோயாலாய வேறுபாடு முருகு அணங்கியதால் வந்ததாகுமென்று ஊரிலுள்ளார் கூறுவர், யான் எய்திய நோயை வேறொன்றன் மேலிட்டுந் அங்ஙனம் பழி பிறிதொன்றாக அயலார் கூறுதல் பண்புடையதன்றாதலின்; இனி யான் நெடுநாள்காறும் உயிரேடு வாழ்ந்திரேன் காண் !

வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும்ஆம். - குன்றியனார்

நற்றிணை - 118. பாலை

அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,
அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர் என,  5

இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி,
புது மலர் தெருவுதொறு நுவலும்  10
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!  

யாற்றை அடுத்த கரையின்கணுள்ள மாமரங்கள் நெருங்கிய கிளையெல்லாம் தழையும்படி தளிர் ஈன்று அழகமைந்த தண்ணிய நறிய சோலையின்கண்ணே; சேவலுடனே பொருந்திய சிவந்த கண்ணையுடைய கரிய குயில் ஒன்றனை ஒன்று விரும்பி எதிரெதிரிருந்து ஆரவாரிக்கும்; பூங்கொத்தினையுற்று மலர்கள் மலரும் இளவேனிற்காலத்தும்; முன்பு பிரிந்தகன்ற காதலர் திண்ணமாக நம்மை மறந்தனர் என வருத்தமுறுவதன் மேலும்; தம் தொழிலில் வல்ல ஓவியர் ஒள்ளிய அரக்கினையூட்டிய எழுதுகோல்போன்ற தலையில் நுண்ணிய ப
ஞ்சினையுடைய பாதிரியின் வெளிய இதழையுடைய மலர்களை; வண்டுகள் மொய்க்கும்படி வட்டியிலேந்தி அப்புதிய மலரைத் தெருவுகள் தோறும் விலைகூறிச் செல்லாநின்ற ஏதிலாட்டியாகிய பூவிலைமடந்தையை நோக்குந்தோறும் என்னெஞ்சு நோவாநின்றது; ஆதலின் யான் இனி எவ்வண்ணம் ஆற்றியுளேனாவேன் ?

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நற்றிணை - 119. குறிஞ்சி

தினை உண் கேழல் இரிய, புனவன்
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்,
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்  5

பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்;  10
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே.  

தினைப்புனத்து வந்து மேயும் பன்றி பட்டொழியுமாறு அகத்தினைப்புனத்துக்குத் தலைவன் சிறிய இயந்திரமாக அமைத்து வைத்த பெரிய கல்லின் கீழால்; ஒள்ளிய நிறத்தையும் வலியையுமுடைய புலி புகுந்துபடுகின்ற மலைநாடன் யாராலே தரப்பட்டு வந்தவனாயினும்; கொல்லையின்கண் இனிய முசுவின் பெரியகலை நல்ல உணவை உண்ணாநிற்கும் பலவாய மலரையுடைய கான்யாற்றின் மேலுள்ள; கரையின்கண்ணே பெரிய கலை மான், கூட்டமாகிய மலையாட்டினத்துடனே தாவித் துள்ளிக் குதியாநிற்கும் பெரிய மூங்கிற்புதர் நிழலில்; அவன் குளவியுடனே கூவிளமலரிடையிட்டுக் கட்டிய நெருங்கிய மாலையுடைவனாகி வாராநிற்பன்; வந்தும் யாது பயன்? தலைவியின் முயக்கத்தை இனி எவ்வளவேனும் அடைபவனல்லன்; அது காரணமாகத் தன் மலையினுங்காட்டிற் பெரிதாகப் புலந்து கொள்ளினும் புலந்துகொள்வானாக!;

சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது. - பெருங்குன்றூர்கிழார்


நற்றிணை - 120. மருதம்

தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ,  5
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை-
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று,  10
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.  

வளைந்த கொம்பினையுடைய எருமையின் இளநடையையுடைய கன்றுகளைத் தூண்கள்தோறும் கட்டியிருக்கின்ற காட்சி மிகுதியால் யாவரும் காணத்தக்க நல்ல மனையின்கண்; வளைந்த குண்டலத்தைக் காதிலணிந்த செழுவிய செய்ய பேதைமையையுடைய காதலி சிறிய மோதிரஞ் செறித்த மெல்லிய விரல் சிவக்கும்படியாக; வாழையிலையைக் கொய்துவந்து அடிக்காம்பு பருத்திருத்தலின் அதனை வகிர்ந்து பரிகலமமைத்து அடிசிலாக்குதலாலே புகைபடிந்து அமர்த்த கண்களையுடையளாய்; அழகுபெறப் பிறை போன்ற நுதலினுண்டாகிய சிறிய நுணுகிய பலவாய வியர்வை நீரை அழகிய முன்றானையினுனியாலே துடைத்துக்கொண்டு; நம்மீது புலவி மிக்கு அடிசிற்சாலையிடத்திராநின்றாள்; இப்பொழுது விருந்தினராய் வருபவர் எம்முடன் வருவாராக! அங்ஙனம் வரின்; இந்த அழகிய மாமைநிறத்தையுடைய அரிவை சினங்கொண்டு ஒருபொழுதும் கண் சிவப்பதில்லை, அன்றியும் குறுமுறுவல் கொண்ட முகத்தினளாய் இருப்பள்; ஆதலின் நமது முயக்கத்துக்கு இன்றியமையாத இவளது சிறிய முட்போன்ற எயிறு சிறிது தோன்றுமாறு நகை கொண்ட முகத்தையாம் காண்பேமாகி யிராநிற்போம்;

விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது. - மாங்குடி கிழார்

நற்றிணை - 121. முல்லை

விதையர் கொன்ற முதையல் பூழி,
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை,
அரலை அம் காட்டு இரலையொடு, வதியும்
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே:  5
எல்லி விட்டன்று, வேந்து எனச் சொல்லுபு
பரியல்; வாழ்க, நின் கண்ணி!- காண் வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற்
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய,  10
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே!  

அழகு பொருந்த விரிந்த தலையாட்டமமைந்த விரைந்த செலவினையும் கனைத்தலையும் உடைய வளவியபரிமா விளங்க; எழுந்து தண்ணிய மழை பெய்தலாலே பெருகிய கான் யாற்றினருகில் இடப்பட்ட மணலானாகிய கரைபின்னே செல்லும்படி போந்து; நின் புதிய வரவை விரும்பி ஏற்று மகிழும் மனைவியினுடைய மென்மையாயுயர்ந்து பருத்த தோளின் கண்ணவாகிய துயிலை விரும்புகின்ற இறைவனே !; நம் அரசன் நேற்றிரவுதான் போரை முடித்து நின்னைச் செல்லுமாறு விடை கொடுத்தான் என்று கூறி வருந்தாதே கொள் !; நின் மாலை வாடாது நீடு வாழ்வதாக; நீ விரும்பிச் செல்லும் காதலியின் ஊர்; விதை விதைக்கும் ஆயர் பலபடியாக உழுதுபுரட்டிய பழங்கொல்லைப் புழுதியில் நிறைவுற முறையே விதைக்கப்பட்டுள்ள ஈரிய இலை நிரம்பிய வரகின் கவைத்த கதிர்களைத் தின்ற கண்டார்க்கு விருப்பம் வருகின்ற இளைய பிணை மான்; மரல் வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின்கண்ணே கலையொடு மகிழ்ந்து விளையாடாநிற்கும் இப் புறவத்தின்கணுள்ளது கண்டனையாதலின் விரையச் சென்று இன்னே காணுமாறு கதுமெனத் தேரைச் செலுத்துகிற்பேன் காண்!;

வினை முற்றி மறுத்தரும்தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது. - ஒரு சிறைப்பெரியனார்

நற்றிணை - 122. குறிஞ்சி

இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங் கால் செந்தினை கடியுமுண்டென;
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின;
நரை உரும் உரறும் நாம நள் இருள்  5

வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று? என
நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி,
அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்-  10
பூ வேய் கண்ணி!- அது பொருந்துமாறே.  

நீலமலர் போலுங் கண்ணையுடையாய்! இருங் கல் அடுக்கத்து என்னையார் உழுத கருங் கால் செந்தினை கடியும் உண்டன பெரிய மலையின் பக்கத்தில் என்னையன்மார் உழுது விதைத்த கரிய அடித் தண்டினையுடைய செவ்விய தினைக்கதிரெல்லாங் கொய்யப்பட்டன; மலைசூழ்ந்த இடத்திலிருக்கின்ற கானகத்தே பொருந்திய சிறுகுடியின் வளப்பத்தையுடைய பக்கங்களிலுள்ள மல்லிகையும் அரும்புண்டாயின; இன்னதொரு மின்னொளியுடன் கூடிய இடி முழங்குகின்ற அச்சத்தையுடைய இரவு நடு யாமத்து இருளில் மலைசூழ்ந்த நாட்டையுடைய தலைவன் வருவான் என்பது உண்மையோ ? இல்லையோ ? வேறுயாதோ ? என நின்று ஆராயவல்ல உள்ளத்துடனே; அயலார்க்குத் தெரியாதபடி அவற்றைக் கூறிக்கொண்டு அன்னையும் விரும்பாத கொடுமை தோன்றிய முகத்தினளா யிராநின்றாள்; ஆதலால் அவனோடுண்டாகிய களவொழுக்கம் இனி நிகழுமா ? என்பதனை நின் உள்ளத்தாலே நீயே ஆராய்ந்தறியவேண்டுங்காண்!;

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச்சொல்லியது. - செங்கண்ணனார்

நற்றிணை - 123. நெய்தல்

உரையாய்- வாழி, தோழி!- இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை,
கானல் ஆயமொடு காலைக் குற்ற  5
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ,
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி,
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்  10
சிறு விளையாடலும் அழுங்கி,
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே.  

தோழீ வாழி!; கரிய கழியின் கணுள்ள மீனாகிய இரைகளைத் தின்ற குருகுகளின் நிரையாகிய பறவைக் கூட்டம்; வளைந்த பனை மடலின் கண்ணே கட்டிய குடம்பைகளில் நிறைந்த இருட்பொழுது நெருங்கியுறையாநிற்கும்; பனை மரங்கள் உயர்ந்த வெளிய மணற்கொல்லையைச் சூழ்ந்த; கானலிடத்து நின் ஆயத்தாரோடு காலையிலே சென்று கொய்து கொணர்ந்த தேன்மணம் வீசும் மலரையுடைய ஈரிய நறிய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபட்ட நெறிப்பையுடைய தழையை அழகு பொருந்த உடுத்து; கோல மிடுதலையுற்ற சிற்றில் புனைந்து சிறப்ப விரைந்தோடி விளையாடி; புலவு நாற்றத்தையுடைய அலைமோதிய வளைந்த அடியையுடைய கண்டல் மரத்து வேரின் கீழாகச் செல்லுகின்ற சிவந்த பெரிய இரட்டையாக நெருங்கியிருக்கின்ற ஞெண்டுகளை நோக்கி மகிழாநிற்குஞ் சிறிய விளையாட்டும்; இல்லையாம்படி வருத்தம் எய்துமாறு நினக்குத் தானுற்ற பெரிய துயரமாகிய நோயை நீ கூறாய்!

தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - காஞ்சிப் புலவனார்

நற்றிணை - 124. நெய்தல்

ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று-
நீங்கல்; வாழியர்; ஐய!- ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்,  5
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.  

ஒன்று பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற் பறவை ஆற்றாதிறந்தொழிதல்போலத் தனிமையுற்றுறையும் புன்கணமைந்த வாழ்க்கையை; யானும் ஆற்றாமல் இறந்துபடுவேன் ஆவேன்; அங்ஙனம் ஆற்றாமைக்குக் காரணமான ஈங்கையின் அரும்பும் புனமல்லிகை மலரும் மணலாலமைந்த உயர்ந்த திடரிலுதிர்ந்து; மான்களின் வலிய குளம்பினால் மிதிபட் டழுந்துகையினாலே; வெள்ளியை மூசை (குகை)யிலிட்டு உருக்கிச் சாய்த்தாற் போல விருப்பமுறும்படி அவற்றினின்று தௌபிந்த நீர்க் குமிழியாக வடியும்; தண்ணீரைப் பெற்றுநின்ற கூதிர்ப்பருவமாகிய; அதுதானும் வந்திறுத்துவிட்டது; ஆதலின் ஐயனே என்னைக் கைவிட்டு நீங்காதுறைவாயாக!

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது. - மோசி கண்ணத்தனார்

நற்றிணை - 125.குறிஞ்சி

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி,
நல் அரா நடுங்க உரறி, கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும்
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம் என,  5
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று
நம்மொடு செல்வர்மன்- தோழி!- மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை,  10
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே.  

தோழீ! தனக்கு வேண்டும் இரையை நாடுகின்ற அகன்ற வாயையுடைய ஆண்கரடி வளைந்த வரிகளையுடைய புற்றுக் கிடைத்தலும்; அதனைப் பெயர்த்து அதன்கண்ணே உறைகின்ற நல்லபாம்பு நடுங்குமாறு முழங்கி இரும்புசெய் கொல்லன் ஊதுகின்ற உலை மூக்கே போல உள்ளே பெருமூச்செறிந்து பறிக்காநிற்கும்; இரவு நடுயாமத்தில் நீயிர் வருதலையறிந்து யாம் அஞ்சுகின்றோமென்று கூறி இனி வரைந்து எய்தும்படி இரந்து கேட்போமாயின்; நமது மலையின்கண்ணே நாள்நீட்டியாது நல்ல நாளில் நம்மை மணம் புரிந்துகொண்டு; வேங்கை மலர் மாலை சூடுகின்ற குறவர் எருதையோட்டிக் கதிர்ப் போரடிக்கும் மருதநில மாந்தர் களம் செப்பஞ் செய்தாற் போன்ற அகன்ற இடத்தையுடைய பசிய கற்பாறையிலே; மெல்லிய தினையைத் துவைத்து அதன் தாளை நெடிய போராக விடும் பொருட்டு; வைகறையிலெழுமாறு துஞ்சுகின்ற களிறு முழங்கி எழுப்பாநிற்கும்; தமது பெரிய மலை நாட்டகத்தே நம்மொடு மெல்லச் செல்வார்காண்!;

வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

நற்றிணை - 126. பாலை

பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி,
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம்  5
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்,
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்,
இளமையின் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை, வளமை
காமம் தருதலும் இன்றே; அதனால்,  10
நில்லாப் பொருட் பிணிச் சேறி;
வல்லே- நெஞ்சம்!- வாய்க்க நின் வினையே!  

நெஞ்சே! நல்ல மேலிடமெல்லாம் பசுங்காய் நிறமாறிச் செங்காயாகிப் பின்னர்க் கருங்களியாய் உதிர்கின்ற கனியையுடைய ஈத்த மரங்கள் மிக்க; வெளிய புறத்தினையுடைய களர்நிலத்திலே பட்ட புழுதிபடிந்த கடிய நடையையுடைய களிற்றியானை; நெறியிலே செல்லுபவரைக் கண்டு கொல்லுவதற்கு விரும்பி விடியற்காலத்தில் சுரத்தின் கண்ணே குறுக்கிட்டுச் சென்று ஆங்கு விரைவில் வரும் அயலார் யாரையும் காணாது; தான் கொண்டிருந்த அச் சினத்தைப் பனைமரத்தின் மோதி அப்பால் அடங்குகின்ற பாழ்த்த நாட்டினையுடைய பாலை நிலத்திலே; சென்று ஈட்டப்படும் பொருளும் ஓரின்பத்தைத் தருமெனில், இளமையின் சிறந்த வளமையும் இல்லை அதுதானும் இளமையில் நுகரும் காமவின்பத்தினுங்காட்டிற் சிறந்த இன்பமாமோ? இல்லையே! அங்ஙனமாக அத்தகைய வின்பத்தைத் தரும் வளமை சிறந்ததாகுமோ? இல்லையன்றோ! இளமை கழிந்தபின்றை வளமை காமந்தருதலும் இன்றே அத்தகைய காமவின்பந்தான் இளமையிலேயே துய்க்கலாவதன்றி முதுமையின் கண்ணே துய்க்கப்படுவ தொன்றாகுமோ? இல்லையே! இளமைப் பருவத்தைப் பொருளீட்டுதலிலே கழித்துவிட்டாலோ அப் பொருள்வளம் முதுமையின்கண்ணே காமவின்பத்தைத் தருதற்கும் இயையுமோ? இல்லையே; ஆதலின் இவற்றை ஒருசேர ஆராய்ந்து நிலைநில்லாப் பொருளாசை நின்னைப் பிணித்தலாலே இக் காமவின்பத்தினைக் கைவிட்டு விரையச் செல்கின்றனை ஆயிற்சென்றுகாண்! நின் செயல் நினக்கு வாய்ப்புடைத்தாவதாக!;

பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.

நற்றிணை - 127. நெய்தல்

இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து,
உவன் வரின், எவனோ?- பாண!- பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்,  5
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்,
மெல்லம் புலம்பன் அன்றியும்,
செல்வாம் என்னும், கானலானே.  

பாணனே! எம் பேதையானவள் கொழுவிய மீனை யுண்ணுதலையுடைய செழுமையுற்ற மாளிகையில் நிறைந்த தன் ஐயன்மார் தமது தொழிலன்றி ஏனைய ஒன்றுங் கல்லாத சினமுடையராயிருப்பவும்; பண்டு தோழியரோடு தான் வண்டல் விளையாட்டு அயர்தற்குத் தான் ஈனாது வைத்த பாவை தலைக்கீடாகக் கொண்டு; அந்த மெல்லிய கடற்கரைச் சேர்ப்பனை அல்லாமலும் கழிக்கரைச் சோலையின்கண் விளையாடச் செல்வோமாக என்று கூறாநிற்பாள்; அதனால் கரிய கழியிலே இரை தேடித் துழாவிய ஈரிய புறத்தையுடைய நாரை தன் சிறகை உதறுகின்ற திவலையாலே குளிர்ந்து நடுங்குகின்ற நமது பாக்கத்தில்; அந்த மெல்லம்புலம்பன் வருதலால் யாது பயனோ? ஆதலின் அவன் இனி வரற்பாலன் அல்லன்காண்!

பாணற்குத் தோழி வாயில் மறுத்தது. - சீத்தலைச் சாத்தனார்

நற்றிணை - 128. குறிஞ்சி

பகல் எரி சுடரின் மேனி சாயவும்,
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்,
அது கண்டிசினால் யானே என்று, நனி  5

அழுதல் ஆன்றிசின்- ஆயிழை!- ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்,
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு  10
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே.  

ஆயிழாய்! பகற் பொழுதில் எரிகின்ற விளக்கு ஒளி மழுங்கிக் காட்டுதல் போல நின் மேனி வாடவும், இராகுவினாலே கவர்ந்து கொள்ளப்பட்ட திங்களின் ஒளி கெடுதல் போல நெற்றியின் ஒளி மறைபடவும் அக்காரணத்தை நீ எனக்கு உரைத்தாயல்லை; நினக்கு யான் ஓருயிரை இரண்டுடம்பின் கண்ணே பகுத்துவைத்தாற் போன்ற நின்னோடு தொடர்ச்சியுற்ற மாட்சிமையுடையேனாதலால் நீ இப்பொழுது மறைத்தொழுகு மதனை யான் அறிந்துளேன் என்று நீ கருதி; யான் நினக்கு அதனை உரையாததன் காரணமாக மிக அழுது வருந்தாநின்றனை; இனி இங்ஙனம் அழாதேகொள்!; தலை சாய்ந்த கதிரையுடைய தினைப்புனத்தே காவல் செய்யுமிடத்துக் கண்ணி சூடிக் கழல் அணிந்து மாலை வேய்ந்துளனாகி ஒருவன் வந்துற்று உள்ளங் குளிர்பூறும்படி என் முதுகை அணைத்துப் புல்லினனாக; அது முதற்கொண்டு அதனையே கருதிய உள்ளத்துடனே இப்பொழுது யான் உற்ற நோய் இத்தன்மையதாய் இராநின்றது;

குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம். - நற்சேந்தனார்

நற்றிணை - 129. குறிஞ்சி

பெரு நகை கேளாய், தோழி! காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்
செல்ப என்ப, தாமே; சென்று,
தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை  5
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.  

தோழீ! காதலர் ஒரு நாள் நின்னைப் பிரியினும் நின் உயிரின் தன்மை வேறுபடுகின்ற பொலிவுற்ற கூந்தலையுடையாய் ! பெரு நகை கேளாய் யாவரும் பெரிதும் நகைக்க வல்ல ஒரு செய்கையைக் கேட்பாயாக!; நம்மை அவர் இங்கு நீங்குமாறு கைவிட்டுத் தாம் ஒருவரே தமியராய் வினைவயிற் செல்லக் கருதியுள்ளார் என்று உழையர் கூறாநிற்பர்; அவர் தனியே சென்று தமது வினை முடித்து வருமளவும்; நிறம் விளங்கிய படப்பொறியையுடைய அரவினது தலை நடுங்கும்படி பெய்கின்ற மழையிடையிட்ட இடியினது முழங்குகின்ற முழக்கத்தை; இரவு நடுயாமத்துந் தமியமாய் இருந்து கேட்டு நாம் நமது மனையின்கண்ணே அதன் மேலும் உயிர் வாழந்திருக்ககடவே மென்றுங் கூறாநிற்பர்; இஃதென்ன கொடுமை காண்!

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது. - அவ்வையார்

நற்றிணை - 130. நெய்தல்

வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப,
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ?  5
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்;
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி, நீடாது,
எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி? என்று
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர்  10
வையக வரையளவு இறந்த,
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே.  

தோழீ ! தௌபிந்த ஓசையையுடைய இடமகன்ற தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமை இடையில் ஒலிப்ப; குற்றமின்றி எல்லா இலக்கணமும் நிறைந்த குதிரைகள் பூட்டிய தேரைக் கோலாலெறிந்து செலுத்தி; விடியற்காலையிலே புறத்தே தோன்றிச் சென்ற செம்மையாகிய நீர்மையையும் பொதுவாகிய செயலையும் உடைய நம் காதலர்; பழைமையாகிய இவ்வூரின்கண்ணே தமதாகச் செய்யப்படுகின்ற இல்வாழ்க்கையினுங்காட்டில் இனியதொரு பொருளும் உண்டோ? அதனை அறியாராய் வேறொரு பொருளுண்டென அகன்று விட்டனர்; எவ்வளவு விருப்புடையவராயினும்; இப்பொழுது எம்மை நினையாதவராயினர்; அன்றியும் அவருக்கு உடன்பட்ட என்னெஞ்சும் நெகிழ்ச்சியுற்ற தோளும் வாடிய எனது நிறமும் பார்த்து; பாணித்தலின்றி இப் பெரிய துன்பம் உற்றவள் என்ன காரியம் செய்து கொண்டனளோ? என்று ஒரு நாளேனும் கூறினாரிலர்; யானடைந்த துன்ப நோயோ விரிந்த கடல் நீர் சூழ்ந்த நிலத்தின் எல்லையளவையும் கடந்தன; இனி உசாவுந் துணை வேறியாதுமில்லை; இனி எவ்வண்ணம் உய்வேன்?

பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது. - நெய்தல்தத்தனார்

நற்றிணை - 131. நெய்தல்

ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும்,
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ- உயர் மணற் சேர்ப்ப!
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய,  5
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்,
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,
கள் கமழ், பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?  

உயர்ந்த மணற் பரப்பினையுடைய நெய்தனிலத் தலைவனே!; திரைத்தல் முதிர்ந்த அரயையுடையவாய வளைந்த அடி மரத்தையுடைய தாழையினது சுறாமீன் கொம்பு போன்ற இருபுறமும் முள்ளையுடைய இலை முறிந்து சாயும்படி; இறாமீனை இரையாகத் தின்ற நாரையின் கூட்டம் தங்குதல் கொள்ள வீற்றிருக்கும்; கள்ளுணவையுண்டலான் மகிழ்ந்திருத்தலையுடைய நல்ல தேரையுடைய பெரிய னென்பானது; கள்ளின் மணங் கமழும் பொறையாறு என்னும் ஊர் போன்ற என்னுடைய நல்ல தோள்கள்; நெகிழும்படி நீயிர் எம்மை மறப்பதற்கு யாம் நும்மையின்றி; வேறு விளையாட்டு அயர்தற்குத் தொழிலையும் நும்மையின்றி வேறு பிரிந்து சென்று தங்கி இருப்பதற்குச் சோலையையும் நும்மை நினைக்கலாகாத வருந்துகின்ற நெஞ்சினையும் நும்பால் ஊடுதலையுமுடையமோ?; அங்ஙனமாயின் நீயிர் மறந்திருப்பீர், இல்லையே; ஆதலின் நீயிர் மறவாமையால் நுமது உள்ளத்தே உள்ளேமன்றோ? அதனால் இவள் தோள் நெகிழ்ந்து வேறுபட்டில; அவ் வேறுபடாமையை யான் ஆற்றினேன் என்பது மிகையன்றோ?;

மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண் என்றாற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார்

நற்றிணை - 132. நெய்தல்

பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரை தொறும் தூவ,
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப்  5
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை,
காப்புடை வாயில் போற்று, ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்;  10
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?  

பெரிய இவ்வூரின்கணுள்ளார் யாருந் துயிலாநிற்பர், விழித்தியங்குபவர் ஒருவரும் இல்லை; இக்காலத்து நாம் அவரை யடையப் பெறாதபடி திருந்திய வாயையுடைய சுறாமீன் நீரைக் கக்குதலால் அந் நீர் விரைவிலே பெரிய தெருவின்கண் உதிர்கின்ற; மழையாக அம் மழையோடு பொருந்திய தண்ணிய காற்று தம்மின் ஒன்றோடொன்று பொருந்துதலமைந்த வாயிற்கதவிலுள்ள துளைகள்தோறும் அந் நீரைக் கொணர்ந்து தூவாநிற்ப; அத் தூவலாலே கூரிய பற்களையுடைய நாய்கள் நடுங்குகின்ற இவ்விராப்பொழுதில் நல்ல மாளிகையின்கண்ணே; துயிலுமாறு உயர்ந்த பலவாய மலர்களாலமைந்த படுக்கையின் பக்கத்திலும்; மாட்சிமைப்பட்ட சிறைப்படுத்திய காவலையுடைத்தாயிராநின்றது; அதன் மேலும் காவலையுடைய தலைக்கடை புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஓ! என்று கூறாநின்ற; யாமந்தோறும் காவல் செய்தலை மேற்கொள்ளும் காவலரின் நெடிய நா அமைந்த ஒள்ளிய மணி ஒன்றுகின்ற தாளத்தில் மோதி எழுப்பும் ஒலி போல ஒலியாநிற்கும்; ஆதலின் யாவராலும் இரங்கத்தகுந்த யான் இறந்தொழியும் நாள் இன்று தானோ?

காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.

நற்றிணை - 133. குறிஞ்சி

தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே;
நுதலும் பசலை பாயின்று- திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று,  5

வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற,
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்-
காமுறு தோழி!- காதல்அம் கிளவி,
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தௌத்த
தோய் மடற் சில் நீர் போல,  10
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே.  

என்பால் விருப்ப மிக்க தோழீ! தித்தியின் சிலவாய புள்ளிகளமைந்த பலவாய வடங்களையுடைய காஞ்சி யணிந்த அல்குலையும் நீலமணி போன்ற கூந்தலையும் உடைய இம் மாமை நிறம் உடையாட்கு; தோள்கள் தாம் அணியப் பெற்ற வளை சுழன்று கழலுதலை நீங்கிற்றில, கண்களும் வாளாற் பிளந்த மாவடுப் போன்ற வடிவை இழந்தன நெற்றியும் பசலை பரவியது என்று; கொடிய வாயையுடைய ஏதிலாட்டியர் பழிச்சொல் எடுத்துத் தூற்றாநிற்கும்படி; நங் காதலர் அச்சமிகுகின்ற துன்பத்தை நமக்குச் செய்குபவர் அல்லர் ஆதலால் அவர் விரைய வருகுவர் என்று நீ என்னைத் தேற்றிக் கூறுகின்ற என்பால் அன்பு மிக்க இச் சொல்லானது; இரும்பு வேலை செய்கின்ற கொல்லன் தான் வெய்ய உலையிலே தௌபித்த பனைமடலாலே தோய்த்தலையுடைய சிலவாய நீர் அவ்வுலை நெருப்பைச் சிறிது அவிக்குமாறு போல; காமநோய் மிக்க என் நெஞ்சில் அந் நோயைச் சிறிது தணித்து எனக்குப்ந் பாதுகாவலராயிராநின்றது காண் !

வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது. - நற்றமனார்

நற்றிணை - 134. குறிஞ்சி

இனிதின் இனிது தலைப்படும் என்பது
இதுகொல்?- வாழி, தோழி!- காதலர்
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், கொடிச்சி!
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக! என,  5
ஏயள்மன் யாயும்; நுந்தை, வாழியர்,
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்!
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு என,
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது
ஒல்லேன் போல உரையாடுவலே!  10

தோழீ! வாழ்வாயாக!; நம் காதலர் வருதற்குக் குறி செய்த மலையிடத்துள்ள சிறிய தினைப்புனத்தே விழுகின்ற சிவந்த வாயையுடைய பசுங்கிளியின் கூட்டங்களை ஓட்டும் பொருட்டு; என்னை நோக்கிக் கொடிச்சீ! நீ அழகமைந்த கிளிகடி கருவியாகிய தட்டையைக் கைக்கொண்டு அத் தினைப் புனத்துக்குச் செல்வாயாக! என்று அன்னையும் பல முறை மிகுதியாக ஏவினள்; அன்றியம் நுந்தை என்னைக் கூவி அழகிய மாந்தளிர் போன்ற மேனியையும் நிரைத்த வளையையும் உடைய இளமடந்தாய்!; நீ புனத்தின்கண்ணே சென்றிலையோ? விரைவிலே சென்று காண்! நின் முள் எயிற்றை முத்தங்கொள்வல், என்று; மெல்லியவாகிய இனிய வார்த்தை கூறுதலினால்; யான் இன்னும் பலகால் நம்மை வேண்டி அவர்களே புனத்தின்கண்ணே கொண்டு சென்று காவலின் உய்க்குமாறு கருதி அங்ஙனம்ந் காவலுக்குச் செல்லமாட்டேன் போலச் சில வார்த்தையாடுவே னாயினேன்; ஆதலின் இனித் தினைக்கொல்லையிலே சென்று காதலனைக் கூடியிருப்பாம் என்பதற்கு அறிகுறி இதுதானோ! இங்ஙனம் நிகழ்ந்த இஃது இனிய வொரு பொருளினுங்காட்டில் இனியதாயிராநின்றது;

இற்செறிப்பார் என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.

நற்றிணை - 135. நெய்தல்

தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்,
வரையாத் தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
இனிது மன்றம்ம தானே- பனி படு  5
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய,
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்,
வால் உளைப் பொலிந்த, புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.  

குளிர்ச்சி பொருந்திய பலவாய கடத்தற்கரிய நிலத்து வருந்தி வருதலாலுண்டாகிய குறைந்த செலவினையுடையவாய் ஒலிக்கின்ற அலைமோதிக் கொழிப்பக் கிடந்த புதிய மணலிலே தேருருள் அழுந்துதலானே செல்லமாட்டாது சுழலாநிற்கும்; வெளிய பிடரிமயிர் பொலிவு பெற்ற புரவிபூட்டிய தேரினையுடைய தலைவரொடு மகிழ்ந்து ஊடாடாத முன் உவ்விடத்தே; தொங்குகின்ற ஓலையையும் நீண்ட மடலையும் உடைய பனையினது கரிய அடி மரம் புதைபடுமாறு மூடப்பட்ட மணல் மிக்க முற்றத்தின்கணிருந்து; அளவுபடாத உணவுப் பொருளை வருகின்ற விருந்தினர்க்குப் பகுத்துக்கொடா நிற்கும்; மெல்லிய குடிவாழ்க்கை யுடையராயிராநின்ற அழகிய குடியிருப்பையுடைய சீறூர் மிக இனிமையாயிருந்தது; அவரொடு மகிழ்ந்து ஊடாடிய பின் அவர் நமது அருகிலின்மையாலே சீறூர் வருத்தமுடையதாய்த் தோன்றாநின்றது;

வரைவு நீட்டிப்ப அலர்ஆம் எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது. - கதப்பிள்ளையார்

நற்றிணை - 136. குறிஞ்சி

திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என்னை- வாழிய, பலவே!- பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய  5
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,
நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து,
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே.  10

திருந்திய கோற்றெழில் அமைந்த ஒளி பொருந்திய தோள்வளையை விரும்பி அது பெறாமையாலே யான் அழுதலும்; என் தந்தை தீர்த்தற்கரிய நோயை அடைந்தவர்க்கு அவர் விரும்பியதைக் கொடாது ஆராய்ந்து அந் நோய்க்குத் தக்க மருந்துகொடுத்த அறவாளன் போல; யாவராலும் புகழப்படுகின்ற மலையையுடைய நாட்டையுடைய நங் காதலனும் நாமும் ஒருவரையொருவர் இடையிடை விட்டுப் பிரிகின்றதன் உண்மை சிறிதளவுதானும் அறிந்தவன் போல; யான் வேண்டாமென்று கழற்றினாலும் கழன்று நீங்காது ஒருபொழுது கழன்றாலும் தன்னெல்லை கடவாமே தங்கி எனக்குண்டாகிய தோளின் பழியை மறைக்கின்ற; உதவியையுடைய கெடாத பொன்னாலாகிய தோள்வளை செய்து தந்து செறிக்கச் செய்தனன்; ஆதலின் அவன் நெடுநாள்காறும் வாழ்வானாக;

சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது. - நற்றங் கொற்றனார்

நற்றிணை - 137. பாலை

தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்,
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று
எய்தினை, வாழிய- நெஞ்சே!- செவ் வரை
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை,  5
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்,
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே!  10

நெஞ்சே! செவ்விய மலையருவியின்கண்ணே அமைந்த நீர் இல்லாத நீண்ட நெறியிடத்தில்; மெல்லிய தலையையுடைய இளைய பிடியானையின் வருந்திய பசியைப் போக்குமாறு; பெரிய களிற்று யானை முறித்துத் தள்ளிய வளைந்த அடியையுடைய ஓமைமரம் செல்லுதற்கரிய சுரத்தின்கண்ணே செல்லுபவருக்குத் தங்கும் நிழல் ஆகாநிற்கும்; குன்றங்களை இடையிடையே கொண்ட கானத்துட் புகுந்து நெடுந்தூரம் அகன்று போதலைக் கருதிய நீ; மெல்லியவாய்க் கமழ்கின்ற பிடரியிலே தாழ்ந்த கரிய கூந்தலையும் அகன்ற மென்மையாகிய பருத்த தோளையும் மடப்பத்தையும் உடைய நல்ல நங் காதலியை; கைவிட்டுப் பிரிதற்கு எண்ணா நின்றனை, அதனை ஆராயுமிடத்து; இதுகாறும் அடைதற்கு அரியதும் இவளினுங்காட்டிற் சிறந்ததுமாகிய ஒருபொருளை அடைந்து விட்டனைமன்; நீ அங்ஙனம் அடைந்த பொருளோடு நீடு வாழ்வாயாக! யான் இவளொழிய வாரலேன்காண்!

தலைவன் செலவு அழுங்கியது. - பெருங்கண்ணனார்

நற்றிணை - 138. நெய்தல்

உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை,
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்
தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு  5
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ,
கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும்  10
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.  

உவர் நிலத்து விளைகின்ற குன்றுபோலும் உப்பின் குவியலை மலைநாட்டகத்தே கொண்டுபோய் விலைகூறி விற்கின்ற; ஓரிடத்திலும் நிலைத்தலில்லாத வாழ்வினையுடைய கூட்டங்கொண்ட உப்பு வாணிகர்; தங்கள் பண்டி முறிந்த விடத்திலே போகட்டொழிந்த இயல்பு அழிந்த பழைய பாரின்கண் வெளிய நாரை தன் சினையை ஈனாநிற்கும்; தண்ணிய கடலினது துறையையுடைய தலைமகன்; முன்னை நாளிலே பசிய இலையிடைநின்றும் வெளியில் வந்த திரண்ட தண்டினையுடைய நெய்தன் மலருடன்; நெறிக்கின்ற இலையை இடையிடையிட்டுத் தொடுத்த மாலையை நினக்குச்சூட்ட; அதனைக் கண்ணால் அறியக் கிடந்த தொன்றன்றி; நுண்ணிய கம்மத் தொழிலான் ஆக்கிய கலனையணிந்த அல்குலையுடைய விழாக் களத்துத் துணங்கையாடு மகளிரினுடைய; இனிய தாள அறுதி முழங்கும் கடல் ஓசை போலே பரவா நிற்கும்; ஒலியையுடைய இவ்வூர் பிறிது ஒன்றனையும் அறிந்ததில்லை; அங்ஙனமாக நீ ஆற்றாது வருந்துகின்ற தென்னையோ?

அலர் ஆயிற்று என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - அம்மூவனார்

நற்றிணை - 139. முல்லை

உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ,
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு
ஏயினை, உரைஇயரோ!- பெருங் கலி எழிலி!
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇயன்ன உறையினை! முழவின்  5
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்-
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்,
விரவு மலர் உதிர வீசி-
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே!  10

பெரிய ஓசையையுடைய மேகமே!; மத்தளத்தின் மார்ச்சனை வைத்த கண்போல இம்மென முழங்குகின்ற இடிகளுடனே; கடைகுழன்று தாழ்ந்த கூந்தலையுடைய மாமைநிறத்தையுடைய காதலியுடனே முயங்கி அவளது நலனை இனிதாக நுகர்ந்து யான் உறைகின்ற சாரலிலுள்ள நல்ல ஊரின்கண்ணே; கலந்த மலர்கள் உதிரும்படி மோதி இரவில் மழை பொழிந்த உதவியையுடையாய்; நீ நிலைபெறுதலையுடைய நல்ல யாழின் முறுக்கிய நரம்பினின்று படுமலை என்னும் பண்ணினை எழுப்பினாற் போன்ற ஒலியொடு பெய்யும் மழையினை உடையையாகி; இவ்வுலகத்துக்கோர் ஆதாரமாக யாவருந் தொழுமாறு ஆங்காங்குள்ள நிலைநின்ற பலவாகிய குன்றின் கொடுமுடிகள் தோறும்; பொருந்தி உலாவுவாயாக;

தலைவன் வினைமுற்றி வந்து பள்ளியிடத்தானாக, பெய்த மழையை வாழ்த்தியது. - பெருங்கௌசிகனார்

நற்றிணை - 140. குறிஞ்சி

கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி,
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை  5
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து,
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே!- என்னதூஉம்
அருந் துயர் அவலம் தீர்க்கும்  10
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.  

எனது பெருமையுற்ற நெஞ்சமே! நீரை முகந்து கொள்ளுதலையுடைய கரிய மேகம் மேல்பாலுள்ள மலையிலே எழுந்து மழை பெய்து தழையச் செய்த; சிறிய கிளைகளிலே பூங்கொத்துக்களையுடைய பெரிய குளிர்ச்சி பொருந்திய சந்தனமரத்தின் குறையோடு; பலவாய பொருள்களையும் சேர்த்து அமைக்கப்பெற்ற சாந்தம்பூசிய கூந்தலை அழகு பெற வாரி; அச்சாந்தம் காய்ந்தவழி உதிர்க்கப்பட்ட துகள் பொருந்திய ஐவகையாக வகுக்கப்பட்ட கூந்தலையும பெரிய கண்ணையுமுடைய தோழியர் மகிழுமாறு; தன் தந்தையின் நெடிய தேர் இயங்குகின்ற நிலவு போன்ற வெளிய மணல் பரவிய முன்றிலின்கண்; விளையாடும் வண்ணம் பந்தோடு செல்லுகின்ற நம்பால் அன்பில்லாத இளமகள்; நம்மை அருள் செய்தாலும் அங்ஙனம் அருள்செய்யாளாய் அகன்று போனாலும்; நீ பெரிதும் மனமழிந்து இரந்து வழிபட்டு நிற்றலை வெறாதே கொள்; யான் அடைந்துடைய காமநோயொடு கலந்த துன்பமாகிய அவலத்தை ஒழிக்குமருந்தாவாள் அந்த அன்பில்லாத இளமகள் ஒருத்தியேயன்றி வேறொன்று சிறிதளவேனும மருந்தாகும் தன்மையதில்லைகாண்!

குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது. - பூதங்கண்ணனார்

நற்றிணை - 141. பாலை

இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய்,
மாரி யானையின் மருங்குல் தீண்டி,
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை,
நீடிய சடையோடு ஆடா மேனிக்
குன்று உறை தவசியர் போல, பல உடன்  5
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட,
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த  10
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே.  

நெஞ்சமே! பெரிய செவ்விய மத்தகத்தையுடைய வளைந்த கவுளையும் அகன்ற வாயையுமுடைய கரிய மேகம் போன்ற யானையின்; விலா வுரிஞ்சுதலானே பொரிந்துள்ள அடிபரந்த உள்ளே துளைபொருந்திய காய்களையுடைய கொன்றை மரங்கள்; குன்றின்கண்ணே யுறைகின்ற நீண்ட சடையையும் அசையாத மெய்யையுமுடைய தவஞ்செய்பவர் போலே பலவும் வெயில் நிலைபெற்ற இடங்களில் அழகுபெறத் தோன்றாநிற்கும்; செல்லுதற்கரிய சுரம் நினக்கு மிக எளிய ஆகும் ஆதலின் நீயே சென்றுகாண்; கொல்லும் பிணங்களிலே பருந்து விழுந்து அலைக்குமாறு பகைவருடைய தேர்ப்படையோடு போர் செய்து வென்ற பலவாய சருச்சரையுடைய நீண்ட கையையும் தலையேந்திய கோட்டினையுமுடைய யானைப்படையையுடைய புகழ்விரும்பிய கிள்ளி வயளவனது; புதுவதாக அலங்கரித்த உயர்ந்த கொடி கட்டிய அம்பர் நகரைச் சூழ்ந்த அரிசிலாற்றின் தௌபிந்த கருமணல் போன்ற; இவளுடைய விரிந்த தழைந்த கூந்தலின்கண்ணே துயிலுவதனைக் கைவிட்டுச் சிறிது பொழுதேனும் அமைகுவேன் அல்லேன்;

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது. - சல்லியங்குமரனார்

நற்றிணை - 142. முல்லை

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி,
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,  5
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே- பொய்யா யாணர்,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,
முல்லை சான்ற கற்பின்,  10
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே.  

இராப்பொழுதாயிருப்பினும் வந்த விருந்தைக் கண்டு மகிழா நிற்கும் யான் கூறிய சொற்பிழையாதபடி இல்லிலிருந்து நல்லறஞ் செய்யும் கற்பினையும்; மென்மையாகிய சாயலையும் உடைய இளைய மாறாத நங் காதலி உறைகின்ற பொய்யாத புது வருவாயினையுடைய ஊரானது; மழை காலிறங்கிப் பொழிந்த விளங்கிய பெயலின்ந் இறுதி நாளிலே; கையிற் கொண்ட பலவாகிய காலிட்டுப் பின்னிய மெல்லிய உறியுடனே தீக்கடைகோல் முதலாய கருவிகளை இட்டு வைத்த தோற்பையை ஒருசேரச் சுருக்கிக்கட்டி; பனையோலைப் பாயோடு முதுகிற் கட்டியிட்ட பால் விலைகூறி ஏகும் இடையன்; நுண்ணிய பலவாய மழைத்துளி தன்னுடம்பிலொருபுறம் நனைத்தலைச் செய்யக் கையின் சோலையின்றி அதன்மேல் ஒருகாலை வைத்த ஒடுங்கிய நிலையோடு நின்று வாயைக் குவித்து ஊதும் வீளை எனப்படுகிற அழைத்தலாகிய குறிப்பொலியை அறிந்து; சிறிய தலையையுடைய யாட்டின் தொகுதி பிறபுலம் புகுதாது மயங்கி அவ்வண்ணமே தங்காநிற்கும் ஈண்டுள்ள புறவின் கண்ணதாயிரா நின்றது; ஆதலின் நமது தேர் விரைந்து செல்லின் அவளை இன்னே மகிழ்ந்து முயங்கலாகும்;

வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்

நற்றிணை - 143. பாலை

ஐதே கம்ம யானே; ஒய்யென,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து,
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்,
கிள்ளையும், கிளை எனக் கூஉம்; இளையோள்  5
வழு இலள் அம்ம, தானே; குழீஇ,
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்;
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே.  10

உழையர் கொணர்ந்த மணல் பரப்பிய அழகிய மாளிகையின் முன்றிலின்கண்; ஓரையாடுகின்ற தோழியர் கூட்டத்தையும் ஆடிடமாகிய நொச்சி வேலியையும் காணுந்தோறும்; யான் விரைய நீர் வடிகின்ற கண்ணையுடையேனாகி அழுகின்ற என்னினுங்காட்டில்; அவள் வளர்த்த கிளியும் அன்னாய்! துயிலுணர்தி எனக் கூவா நிற்கும்; இவை நிற்ப என் இளம் புதல்விதானும் குற்றமே உடையள் அல்லள்; அவள் கொண்ட காமம் மிகவியப்புடையதாய் இராநின்றது; அம்பல் மிக்க இப் பழைய ஊரின்கணுள்ள அலர்தூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியர் பலரும் ஒருசேரக்கூடிக் கூறுகின்ற கொடிய இனிய உரைகேட்ட சில நாளளவும்; யாதொன்றனையும் அறியாதேன் போல மூச்சுவிட்டேனுமில்லேன்; பின்னும் மிக அலர் எழுதலாலே ஒரோவொருகால் என்மகளை நோக்கி நின் கூந்தல் பண்டைமணமின்றி வேறு புதுமணம் கமழாநின்றதே அஃதென்ன காரணமென்று வினாவினேன்; தகுதியான விடை கூறினாளுமல்லள்; முன்னரே அவளது இயல்பை அறிந்து வைத்தும் பாதுகாவாமையின் யானே வழுவுடையேன் ஆயினேன்மன்;

மனை மருட்சி. - கண்ணகாரன் கொற்றனார்

நற்றிணை - 144. குறிஞ்சி

பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு,
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்கு ஆகின்றால்- தோழி!- பகுவாய்ப்  5
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை,
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக்
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி,
விரவு மலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியாதேற்கே.  10

தோழீ! பிளந்த வாயையுடைய பெண் புலி இரைதேடி இயங்குகின்ற துன்பம் நீங்குதற்கரிய கவர்த்த வழியில்; விளங்கிய விரைந்த செலவையுடைய நீரோடுகின்ற கரை காண்பதரிதாகிய கான்யாற்றில் ஆழமுடைய புனலின்கண்ணே; தமியராய் நீந்தி அந் நீரிலே கலந்த மலர்கள் பொருந்திய தோளோடு; நங்காதலர் இரவில் வருதலை எண்ணி அறியாமையுடையேனாகிய எனக்கு; அந் நெறியின்கண்ணே புலி பெரிய களிற்றியானையை மோதிக் கொல்லுதலால் அதனை அறிந்த கரிய பிடியானை மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகம் முழங்குவது போன்று பிளிற்றுகின்ற ஓசையைக் கேட்டு நடுங்கி; நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நீரை வடியவிடவும் யாதுமில்லாத பேதைமையுடைய என்னெஞ்சம் கவலையால் வருந்தவும்; என்னிலைமை இவ்வண்ணமா யிராநின்றது காண்!

ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது. - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

நற்றிணை - 145. நெய்தல்

இருங் கழி பொருத ஈர வெண் மணல்
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு  5
புணர்ந்தனன் போல உணரக் கூறி,
தான் யாங்கு? என்னும் அறன் இல் அன்னை;
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம்
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல,
நள்ளென் கங்குலும், வருமரோ-  10
அம்ம வாழி!- தோழி அவர் தேர் மணிக் குரலே!  

தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக்கேள்!; கரிய கழியின் கண்ணுள்ள நீர் அலையினால் மோதுதலானே ஈரமாகிய வெளிய மணலிலே படர்ந்த வலிய கொடி அடும்பின் பெரிய இதழையுடைய மலர்; மகளிரின் கூந்தலிலிடுகின்ற மாலைக்குக் கூட்டாநிற்கும்; கண்டோர் விரும்புந் தன்மையுடைய கடல் நாடனாகிய நங்காதலனுடைய; அச்சந்தரும் வெய்ய நட்பானது; பண்டு பொருந்தியிருந்து இப்பொழுது யாதொரு தொடர்பும் நம்பால் இல்லாதிருந்தும்; நம் அறன் இல்லாத அன்னையானவள்; நம்மொடு அவன் புணர்ந்தனன் போல வெளிப்படையாகச் சொல்லி; அவன் தான் இப்பொழுது யாங்குளன் என்று கூறாநிற்கும்; அன்றி நீயும் நின் எழுச்சி முதலியன என்னால் அறிதற்கும் உரியள்; நம்முடைய பருத்த அடியையுடைய புன்னை மரங்களையுடைய சேரியின்கண்; இரவில் நடுயாமத்திடையிருளிலும் அவர் தேரிலுள்ள மணியினோசை மெல்லவந்தொலியாநிற்கும்; இதற்கு யான் யாது செய்ய வல்லேன்? யாதாகி முடியுமோ;

இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது. - நம்பி குட்டுவன்

நற்றிணை - 146. குறிஞ்சி

வில்லாப் பூவின் கண்ணி சூடி,
நல் ஏமுறுவல் என, பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!-
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப்
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து,  5
இருந்தனை சென்மோ- வழங்குக சுடர்! என,
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண் தகு வனப்பின்
ஐயள், மாயோள், அணங்கிய  10
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே!  

அன்போடு நெருங்கிய மகிழ்ச்சியையுடைய மாந்தர் நெருங்கிக்கூறு மீக்கூற்றால் யாம் நல்லேம் என்னும் புகழ்ச்சொல் அடையப்பெற்ற சித்திரந்தீட்டுவதில் வல்ல ஓவியன்; எழுதிவைத்தாலொத்த காட்சி தக்க அழகினையுடைய மெல்லியளாகிய மாமை நிறத்தையுடையவளால் வருத்தம் ஏறட்டுக்கொண்ட; மயக்கத்தையுடைய நெஞ்சமே!; விலைக்கு விற்றற்கியலாத பூளைமலரையும் உழிஞைப்பூவையும் எருக்கம்பூவையும் ஆவிரம்பூவோடு கலந்து கட்டிய மாலையைச் சூடி; யான் நல்ல பித்தேறினேன் என்னும் படி பல ஊர்களிலுஞ் சென்று திரிகின்ற; நெடிய கரிய பனைமடலாலே கட்டிய குதிரையையுடையாய்; நீ என் வார்த்தையை ஏற்றுக்கொள்ள விரும்புவையாயின்; ஞாயிறுதான் வெயில் வீசி ஒடுங்குவதாக என்று அவ்வெயிலின் வெம்மை அடங்குமளவும்; முறை தெரிந்து உலகைப் பாதுகாக்கும் அரசரின் குடைநிழல் குளிர்ச்சியுறுமாறுபோலே பெரிய தண்ணென்ற மரத்தின் நிழலின்கண்ணே; குதிரையினின்றிழிந்து சிறிது பொழுது தங்கியிருந்து பின்பு செல்வாயாக!

பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது. - கந்தரத்தனார்

நற்றிணை - 147. குறிஞ்சி

யாங்கு ஆகுவமோ- அணி நுதற் குறுமகள்!
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை, அவண்? எனக் கூறி,
அன்னை ஆனாள் கழற, முன் நின்று,  5
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து,
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவிலை
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு,  10
தலை இறைஞ்சினளே அன்னை;
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே?  

தோழீ! அன்னையானவள் என்னை நோக்கி அழகிய நெற்றியையுடைய இளமகளே! இடமகன்ற மலைச் சாரலின்கணுள்ள சிறிய தினையின் பெரிய கதிரை; சிவந்த வாயையுடைய பசிய கிளி கொய்துகொண்டு போகின்ற அளவும் நீ அதனைக் காவாது ஆங்குநின்று எவ்விடத்திற்குச் சென்றனை? என்று கூறி; அமையாளாகிப் பலபடியாக வினாவுதலும் நீ அச்சமுற்று, அவள்முன் நின்று மூங்கிற் பிளவாற் செய்த கிளிகடி கருவியாகிய தட்டையையுடைய யான் அருவி யொலிக்கும் பெரிய மலைநாடனைக் காதாலே கேட்டறிதலுஞ் செய்திலேன்; கண்ணாலே காண்டலுஞ் செய்திலேன்; மலர்ந்த பூக்களைப் பறித்து அவனோடு சுனையிலே பாய்ந்து ஆடியதுஞ் செய்திலேன் என்று; நினைவில்லாது பொய்யுஞ் சொல்லாயாய் ஐயோ! உண்மையை யுரைத்துவிட்டனையே!; அதனைக் கேட்டு அன்னை சினத்தோடு வெள்கித் தலையிறைஞ்சி நின்றனள் கண்டாய்!; ஆதலின் நீ தினைப்புனத்தின் கண்ணே செல்லுதலைப் போக்கிக்கொண்டனை மன்!; இவ்வளவு அறியாமையையுடைய நீ இனி எங்ஙனம் குடிமை பூண்டொழுகவல்லாய் என்று எவரும் இரங்கத் தக்கனையாயினை; அவளது முனிவினுள்ளே படிதலால் இனி யாம் எவ்வண்ணம் உய்யவல்லேமோ?

சிறைப்புறமாகத்தோழி சொல்லியது. - கொள்ளம்பக்கனார்

நற்றிணை - 148. பாலை

வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும்,
நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே,
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை,
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி,  5
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது,
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து,
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்  10
அருஞ் சுரம் இறப்ப என்ப;
வருந்தேன்- தோழி!- வாய்க்க, அவர் செலவே!  

தோழீ ! நின்னுடைய நிறத்தின் மென்மையைப் பார்த்தும் மெல்லிய இனிய சொல்லால் யாம் சென்று வினைமுடிக்கும் சுரத்தின்கண் நீ வருவதற்கு ஆற்றாய் எனப் பலபடக் கூறியும்; தாம் தொடங்கிப் பொருளீட்டும் முயற்சியை மேற்கொண்டு அதனிற் பொருந்தியொழுகுபவர்; இற்றை நாளால் நெடிய பொய்கையின்கண்ணே பொருந்திய நீரில்லாத நீண்ட வழியிலே; சிவந்த அடியினையுடைய மரா மரத்தின்அழகிய பக்கத்திலே பொருந்தி வளைந்த வில்லையுடைய வீரர் மிக்கிருக்கின்ற நிலைமையைநோக்கியும் அச்சங்கொள்ளாது; மலைமுழையிலே கிடந்த பெரிய உகிரையுடைய பெண்புலியின் இனிய குட்டிகளை ஈன்றதனாலாகிய நோயும் பசியும் தீரும்படியாக; சினமிகுத்துச் சிவந்த கண்ணையுடைய கொல்லவல்ல பெரிய புலியேற்றை; ஓங்கிய கொம்பினையுடைய களிற்றியானையின் புள்ளி யமைந்த முகத்திலே சென்று பாயாநிற்கும் செல்லுதற்கரிய சுரத்தின்கண்ணே செல்லாநிற்பர்; அவர் செல்லுவதனை அறிந்த யான் சிறிதும் வருந்துவேனல்லேன், நீயும் அவ்வண்ணம் வருந்தாதே கொள்; அவர் செல்லுங் காரியம் அவர்க்குக் கைகூடுவதாக!

பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது. - கள்ளம்பாளனார்

நற்றிணை - 149. நெய்தல்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி,
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற,
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப,
அலந்தனென் வாழி- தோழி!- கானல்  5
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ,
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால், யானே;
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!  10

தோழீ! வாழி! நம்மூர்த் தெருவிலுள்ள மாதர்களுள் ஓரோ வோரிடத்திற் சிற்சிலரும் ஒரோ வோரிடத்திற் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி; வியப்புடையார்போலத் தம்தம் மூக்கினுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றாநிற்கவும்; அப் பழிமொழியை நம் அன்னை கேட்டறிந்து மெய்ம்மையாகுமெனக் கொண்டு சிறிய கோல் ஒன்றனை ஏந்தி அது சுழலும்படி வீசி அடிப்பவும்; இவையிற்றால் யான் மிக்க துன்பமுடையேன் ஆயினேன் காண்; ஆதலின் இத் துன்ப மெல்லாம் தீரும்படி கழியருகின் கண்ணதாகிய சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரிமயிரையுடைய விரைந்து செல்லும் குதிரைபூண்ட நெடிய தேரைச் செலுத்தி, நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு இரவு நடு யாமம் நள்ளிருளில் வருகின்ற இயன்ற தேரையுடைய கொண்கனொடு; நீ செல்லுமாறு யான் உடன்படாநின்றேன் நீ எழுவாயாக!; அங்ஙனம் சென்றொழிந்தால் பேரொலியையுடைய இவ்வூர் யாதுதான் செய்யற்பாலது? வேண்டுமேல் அலர் தூற்றிக் கொண்டு போகக் கடவதாக!;

தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம். - உலோச்சனார்

நற்றிணை - 150. மருதம்

நகை நன்கு உடையன்- பாண!- நும் பெருமகன்:
மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி,
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு
மன் எயில் உடையோர் போல, அஃது யாம்  5
என்னதும் பரியலோ இலம் எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து, எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச,
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக்  10
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே.  

பாணனே ! நும் பெருமகனாவான் பலராலும் நகுதற்படுதலை நன்றாகவுடையனாயிராநின்றான; காவலரண் சிதையும்படி பலவாய யானைப் படைகளைப் பரக்கவிட்டுச் சென்று பலபல அரணங்களை வென்று கொண்ட வலிமைமிக்க சேனைகளையுடைய பாண்டியன் மாறன் வழுதி பன்னெடு நாள் வாழ்வானாக! என்று வணங்கி; அடைகின்ற நிலைபெற்ற மதில்களையுடைய குறுநில மன்னர்களைப்போல அதற்காக யாம் சிறிதேனும் வருந்துதலைச் செய்யோம் என்று கூறி; மென்மையான நடையையுடைய கனைக்கின்ற குதிரையைச் செலுத்தி எமது சேரியின்கண் வந்து; கொண்டை மாலையையும் அழகுக் கிடுங் கண்ணியையுங் காட்டி; ஒருமைப்பாட்டையுடைய எமது நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டமை இனி விடுவதமையுமோ? அமையாது காண்!; நீ அஞ்சுமாறு எம் அன்னை நெருங்கிய கணுக்களையுடைய சிறிய மூங்கிற்கோலைக் கையிலேந்தி வெகுளி பெரிதும் உடையளாயிராநின்றாள்; சிறிதும் வருந்துகிலள், அவளால் ஒறுக்கப்படுவதுண்டு போலும்; ஆதலின் நீ இங்கே வாராதே கொள்!;

தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது. - கடுவன் இளமள்ளனார்


© Om Namasivaya. All Rights Reserved.