Books / மஹா புராணங்கள்


மார்க்கண்டேய புராணம்

(பகுதி-1)


1. தோற்றுவாய்: 18 புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணம் 9000 ஸ்லோகங்கள் கொண்டது. வியாசரின் சீடர்களில் ஒருவர் ஜைமினி. இவர் மனதில் மகாபாரத இதிகாசம் பற்றிச் சில ஐயப்பாடுகள் தோன்றின. அதைக் கேட்டு உண்மை அறிய விரும்பிய அவர் மார்க்கண்டேய முனிவரை அணுகிக் கேட்க, அவர் அவருடைய சந்தேகங்கள் உண்மையானவையே என்றும், அவருக்கு வேறு கடமைகள் இருப்பதால் அவற்றø விளக்க நேரமில்லை என்றும் கூறி, அவர் ஜைமினியை விந்திய மலைக்குச் சென்று அங்கு ஒரு குகையில் வேதங்களை ஓதிக்கொண்டிருக்கும் நான்கு பறவைகளைக் கண்டு கேட்குமாறும், அவர்கள் முக்காலம் உணர்ந்தவர்கள், சகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர்கள் என்றும் அவர்கள் துரோணரின் புதல்வர்கள். எனவே ஜைமினியின் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பர் என்றும் கூறினார். இதைக்கேட்ட ஜைமினி வியப்புற்றார். துரோணரின் புதல்வர்கள் ஏன் பறவைகளாயினர் என்று கேட்க மார்க்கண்டேயர் பறவைகளின் வரலாற்றினைத் தெரிவிக்கலானார்.

வபுஸ் எனும் அப்சரஸ்

முன்னொரு காலத்தில் தேவேந்திரன் அப்ஸரப் பெண்களுடன் நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருக்க, அவ்விடம் நாரதர் வந்து சேர்ந்தார். அவரை வரவேற்ற தேவேந்திரன் அவர் அந்தப்பெண்களை நடனமாட அனுமதிப்பாரா என்று கேட்டார். அப்போது நாரதர் இப்பெண்களில் அழகிலும், ஆடல்களிலும் சிறந்தவள் யாரோ அவள் ஆடட்டும் என்றார். ஒவ்வொருவரும் தானே சிறந்தவள் என்று கூறினர். அவர்களில் யார் சிறந்தவள் என்பதையும் நாரதரே கூறவேண்டும் என தேவேந்திரன் வேண்டினான். நாரதர் அதற்கான தேர்வு ஒன்றைக் கூறினார். வடக்கே இமயமலைச்சாரலில் தவம் செய்து கொண்டிருக்கும் துருவாச முனிவரை மயக்கி மோகவலையில் விழச் செய்பவளே சிறந்த அழகியாவாள் என்றார். துர்வாசர் பெயரைக் கேட்டவுடன் மற்றவர்கள் பின்வாங்க, வபுஸ் என்னும் அப்சரஸ் மட்டும் அதனை ஏற்றுச் சபதம் செய்து கிளம்பினாள். கிளம்பிய வபுஸ் துர்வாச முனிவரின் ஆசிரமத்திற்குச் சற்று தொலைவில் இறங்கி பரிமளத் திரவியங்களைப் பூசிக்கொண்டு, அழகிய ஆடை அணிகளுடன் ஆடிப் பாடலானாள். இதனால் தவம் கலைந்த துர்வாசர் கோபமுற்று அவளைப் பதினாறு ஆண்டுகள் பறவையாகப் பறந்து திரியுமாறு சாபமிட்டார். வபுஸ், முனிவர் திருவடிகளில் விழுந்து வணங்கி, தனக்குச் சாபவிமோசனம் அளிக்க வேண்டிட முனிவர் பாரதப்போரில் அர்ச்சுனன் பாணத்தால் அடிபட்டு பாபவிமோசனம் அடைவாய். என்றும், உனக்கு ஞானிகளான நான்கு புதல்வர்கள் பிறப்பார்கள் என்றும் கூறினார்.

2. ஜைமினியும், பறவைகளும்

கருட வம்சத்தில் பிறந்த ஒரு பறவைக்கு கங்கன், கந்தரன் என்ற இரு புதல்வர்கள் இருந்தனர். ஒரு சமயம் கங்கன் கைலாயத்துக்கு அருகில் உள்ள ஒரு நந்தவனத்துள் சென்றது. அவ்வமயம் அங்கு வித்யுத்ரூபன் என்னும் அசுரன் தன் மனைவியுடன் மகிழ்ந்து இருக்கையில் இப்பறவை மீது கோபம் கொண்டு கங்கன் கழுத்தை வெட்டிக் கொன்றான். அதனால் வருத்தமும், கோபமும் கொண்ட கந்தரன் வித்யுத்ரூபனைக் கொல்லும் உறுதியுடன் சென்று அவனுடன் போர் புரிந்து அவன் மார்பைப் பிளந்து கொன்றது. அசுரன் மனைவி பயந்து கந்தரன் காலில் விழுந்து தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டி, பறவை ரூபமுடன் இருவரும் இன்பம் துய்த்திட அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு தார்ஷி என்று பெயரிட்டு வளர்த்தனர். அதுவே வபுஸ் என்ற அப்ஸரஸ் ஆவாள். அவள் மந்தபாலன் மகன் துரோணனை மணந்தாள்.

ஒருநாள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தபோது அருச்சனன் பகதத்தினை நோக்கி எய்த அம்பினால் அடிபட்டு விழ துர்வாசர் சாபம் நீங்கி வபுஸ் தன் சுயரூபம் பெற்றுத் தேவலோகம் சென்றாள். தார்ஷியின் வயிற்றில் இருந்த நான்கு முட்டைகள் போர்க்களத்தில் வீழ்ந்தன. அப்போது அங்கே தற்செயலாய் ஒரு யானையின் கழுத்திலிருந்த மணி அறுந்து முட்டைகள் மேல் விழுந்து அவற்றை மூடிக்கொண்டது. போர்க்களத்தில் அம்புப்படுக்கையில் இருந்து பீஷ்மரைக் காண பலர் வர, அவர்களில் சமீகர் என்ற ரிஷியும் ஒருவர். அவர் முட்டைகளிலிருந்து வெளிவந்திருந்த பறவைகளைக் கண்டு கருணை உள்ளத்துடன் அவற்றை எடுத்துச் சென்று தன் ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். ஒருநாள் அவை பூவுலகைச் சுற்றித் திரும்பி வந்து மகிழ்ச்சியுடன் இருந்தன.

3. பறவைகள் கூறிய வரலாறு

அதுகண்ட சமீகர் அவர்களை யார் என்று கேட்க அப்பறவைகள் தம் முற்பிறவி வரலாற்றினைக் கூறத்தொடங்கின. விபுஸ்வரன் என்ற ரிஷிக்கு சுக்ருதன், தும்புரு என்ற இரண்டு புதல்வர்கள். சுக்ருதனின் புதல்வர்களாகிய நாங்கள் நான்கு பேரும் ஒருநாள் எங்கள் தந்தையுடன் காட்டில் சென்று சமித்து, தர்ப்பை முதலியவற்றைச் சேகரித்துக் கொண்டிருக்கையில் அங்கே ஒரு மிகப்பெரிய பறவை அடிபட்டு கீழே விழுந்திருப்பதைக் கண்டோம். அது எங்களிடம் வந்து விந்திய மலையின் மீது பறந்து கொண்டிருந்தபோது பெரிய புயல் காற்றினால் அடிபட்டு விழுந்து விட்டேன். சிலநாட்களாக உணவின்றி பட்டினி கிடக்கின்றேன். எனக்கு உணவாக நரமாமிசம் தரவேண்டும் என்று கூற சுக்ருதனும் தருவதாக வாக்களித்து விட்டார். அப்போது அவர் தன் புதல்வர்களில் ஒருவரை அப்பறவைக்கு உணவாகும்படி கேட்டுக்கொள்ள நால்வரும் சம்மதிக்காததால் மனிதப் பிறவிக்குரிய குணங்கள் இல்லாததால் பறவைகளாகப் பிறந்து அலைந்து திரியுமாறு சபித்தார். உடனே நால்வரும் தந்தையின் காலில் விழுந்து வணங்கி மனித உடலாசையை வென்றவர் யாருமில்லை. எனவே கோபம் தணிந்து அவர்களை மன்னிக்க வேண்டினர் நால்வரும்.

இருப்பினும், அவர்களது சாபத்தை மாற்றாமல் பறவைகளாக இருந்தாலும் மனிதர்களைப் போலவே எல்லா அறிவும் பெற்று விந்திய மலையில் தவம் செய்து கொண்டிருப்பீர்களாக என்று கூறிவிட்டு பசித்த பறவைக்குத் தன்னையே இரையாக அளித்துவிட்டார். அப்போது பறவை வடிவில் வந்த தேவேந்திரன் அவரது சத்தியத்தை மெச்சி ஞானோபதேசம் செய்து மறைந்தார். பின்னர் நான்கு பறவைகளும் விந்திய மலைக்குச் சென்று பிரணவத்தை உச்சரித்தபடி தவம் செய்து கொண்டிருக்கின்றன. அவற்றிடம் சென்று ஐயத்தைத் தீர்த்துக் கொள்ளுமாறு கூறியதாக மார்க்கண்டேயர் ஜைமினி முனிவர்க்குக் கூறினார். அடுத்து, ஜைமினி முனிவர் விந்தியமலையை அடைய ஒரு குகையிலிருந்து வேதமுழக்கம் அமுதகானமாய் செவியில் விழுந்தது. அக்குகையில் முனிவர் நுழைய பறவைகளான முனிகுமாரர்கள் அவரை உபசரித்தனர். மகிழ்ச்சியுற்ற முனிவர் அப்பறவைகளிடம் தன் ஐயத்தை ஒவ்வொன்றாக வெளியிட்டார்.

4. முதல் கேள்வி : பாஞ்சாலி ஏன் ஐவரை மணந்தாள்?

பறவைகள் ஒருமுகமாக பரம்பொருளைத் தியானித்து பதில் கூறின.

பதில் : ஒரு சமயம் தேவகுரு பிருகஸ்பதி தேவேந்திரனிடம் கோபம் கொண்டு மறைந்துவிட, தேவேந்திரன் பிரமனிடம் முறையிட, பிரமன் கூறியபடி துவஷ்டாவின் மகனான விசுவரூபனைக் குருவாகக் கொண்டான். விஸ்வரூபன் அசுரர்களிடம் விருப்பமுடையவனாய் அவிர்பாகத்தில் ஒரு பகுதியை அசுரர்களுக்கு அளிக்க, அதனால் கோபம் கொண்ட தேவேந்திரன் அவனைக் கொன்று விட்டான். துவஷ்டி, தன் மகனைத் தேவேந்திரன் கொன்றதால் மிகவும் கோபமடைந்து தனது ஜடாமுடியில் ஒன்றைப் பிடுங்கி ஓமம் செய்ய அதிலிருந்து விருத்ராசுரன் தோன்றினான். விருத்ராசுரனை வெல்ல முடியாது என்று உணர்ந்த தேவேந்திரன் நயவஞ்சகமாய் அவனிடம் நட்பு கொண்டு அரசில் பாதி அளிப்பதாய்க் கூறி சமாதானம் செய்து கொண்டு பின்னர் தந்திரமாய் அவனைக் கொன்றுவிட, தேவேந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. அதன் காரணமாக அவனது பெருமையும், பலமும் எமதருமன், வாயு, அஸ்வினி தேவர்களைச் சென்று விட அவன் பலம் குன்றியது.

இதை அறிந்த அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்த அவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். பூபாரம் குறைக்க பகவான் கிருஷ்ணனாய் அவதரித்தார். தேவேந்திரனையும் தனக்குத் துணையாய் பாண்டவர்களாய் அவதரிக்கச் செய்தார். அவ்வாறு தேவேந்திரன் புவியில் அவனது பெருமை தருமனாகவும், பலம் பீமனாகவும், பாதி அம்சம் அர்ச்சுனனாகவும், அசுவினி தேவர்களின் அழகு நகுல சகாதேவர்களாகவும் தோன்றின. எனவே பாஞ்சாலி ஐவரை மணந்தாலும் தேவேந்திரன் ஒருவனையே மணந்தவளாவாள், என்று பறவைகள் விளக்கின.

இரண்டாவது கேள்வி : பகவானின் அம்சமான பலராமன் ஏன் பிரம்மஹத்தி தோஷத்தைப் பெற்றார்?

பறவைகள் கூறிய விடை : பாரதப்போரில் பலராமனுக்கு எந்தப் பக்கத்திலும் சேரமுடியாத தர்ம சங்கடம் ஏற்பட்டது. அதைத் தவிர்க்க அவர் தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். அவர் நைமிசாரண்யத்திற்குச் சென்ற போது சூதமுனிவரைத் தவிர மற்றவர்கள் அவரை வணங்கினர். சூதர் செருக்குடன் ஆசனத்தை விட்டும் எழுந்திருக்காததைக் கண்ட பலராமன் சினமுற்று ஒரு தர்ப்பையை மந்திரித்து ஏவ அது சூதரைக் கொன்று விட்டது. பலராமரால் கொல்லப்பட்டதால் சூதருக்குப் பிரம்மலோகப்பதவி கிடைத்தது. பலராமர் பிரம்மஹத்தி தோஷம் பெற்றார். உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்ற நியதிக்கு இணங்க பலராமர் பிரம்மஹத்தி தோஷத்திற்குப் பரிகாரம் செய்து கொள்ள பன்னிரண்டு ஆண்டுகள் தீர்த்தயாத்திரை சென்றார்.

5. மூன்றாம் கேள்வியும் பதிலும் : அற்ப ஆயுளில் இளம் பாண்டவர்கள் மடிந்தது ஏன்?

அரிச்சந்திரன் கதை முற்பகுதி. திரேதாயுகத்தில் அரிச்சந்திரன் என்ற மன்னன் சத்தியம், நீதி, நேர்மையுடன் அரசாண்டு புகழ் பெற்றிருந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் செல்ல அபயம், அபயம் என்று அலறும் ஓசை கேட்க அவன் யாரோ ஆபத்திலிருப்பதாகவும், அவரைக் காப்பது தன் கடமை என்றும் எண்ணி அங்குச் சென்று பார்க்க அந்த ஒலி விசுவாமித்திரன் ஆசிரமத்திலிருந்து வருவதை அறிந்து உள்ளே சென்று முனிவரை வணங்கி தன் பிழை பொறுத்தருள வேண்டினான். காப்பாற்றுதல் மன்னன் கடமை என்பதால் அவசரப்பட்டுவிட்டேன் என்றான். உடனே முனிவர் மேலான அரசன் யாரைக் காப்பாற்ற வேண்டும் யாருக்குத் தானம் செய்ய வேண்டும் என்று கூறுமாறு கேட்டார். அப்போது அரிச்சந்திரன் விநயத்துடன் ஆபத்திலுள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும். தங்களைப் போன்ற மகரிஷிகளுக்கு தானம் அளிக்க வேண்டும் என்று கூறிட, முனிவர் யாகதீட்சை கொண்ட தனக்குரிய தக்ஷிணை அளிக்குமாறு கேட்க, மன்னன் தன் பேரரசையும், மனைவி மக்களையும் அவருக்கு அளிப்பதாகக் கூறி ஏற்குமாறு வேண்டினான்.

விசுவாமித்திரன் அரிச்சந்திரனுடன், அவனது மனைவி, மக்கள் தனது அனைவரையும் ஏற்பதாகக் கூறி யாகதட்சணையை ஒரு மாதத்திற்குள் தந்துவிடுமாறு பணிந்தார். மேலும் உடனே நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் கூறினார். மன்னனும் யாவற்றையும், ஆடை அணிகளையும் துறந்து மாநகரத்திலிருந்து மனைவி மகனுடன் கால்நடையாகப் புறப்பட்டுச் சென்று காசிநகரை அடைந்தான். காசியில் தன் மனைவியையும், மகனையும் விற்க முனைந்தான். ஓர் அந்தணர், மனைவி, மகன் இருவரையும் விலைக்கு வாங்கப் பணம் அளித்தார். பின்னர் அரிச்சந்திரன் தன்னையே ஒரு புலையனிடம் விற்று அப்பணத்தை முனிவருக்கு தக்ஷிணையாகச் செலுத்தி விட்டான். இவ்வாறு இந்த விசுவாமித்திரரின் கொடூர செயலைக் கண்டு, அவருடைய சாபத்துக்கு அஞ்சி, அவரைக் குறைகூற யாரும் முன்வரவில்லை. ஆனால், விஸ்வதேவர்கள் ஐவரும், கல்லா! இந்தப் பாவி, என்ன கதி அடைவானோ என்று வாய் விட்டுக் கூறினர். இதைக்கேட்ட விசுவாமித்திரர் கோபம் கொண்டு அவர்கள் நோக்கி தேவர்கள் என்ற அகம்பாவமா? என் தவ வலிமையை நீங்கள் அறியமாட்டீர்கள். உடனே நீங்கள் பூவுலகில் மானிடராய் பிறந்து அற்ப ஆயுளில் சந்ததி இன்றியே மடிவீர்களாக என்று சபித்தார். அந்த விஸ்வதேவர்களே பாஞ்சாலியின் மக்களாய் இளம் பஞ்சபாண்டவர்களாய் பிறக்க, அவர்களை துரோணர் புத்திரன் அசுவத்தாமன் அநியாயமாய்க் கொன்றான்.

அரிச்சந்திரன் கதை (பிற்பகுதி)

புலையனால் விலைக்கு வாங்கப்பட்ட அரிச்சந்திரன் வெட்டியானாகப் பணி புரிந்து வந்தான். இதற்கிடையில் மனைவி, மகனை வாங்கிய அந்தணர் அவர்களைப் பலவாறு கொடுமைப்படுத்தினார். ஒருநாள் மன்னர் மகனாகிய லோகிதாசன் தர்ப்பை சேகரிக்கச் சென்ற இடத்தில் பாம்பு கடிக்க இறந்து விட்டான். தன் மகனின் உடலைத் தூக்கி கொண்டு மன்னன் மனைவி சந்திரமதி சுடலையை நோக்கி நடந்தாள். அங்குச் சுடலையைக் காத்து நின்றவன் அரிச்சந்திரன் என்பதை அவள் அறியாள். அவனும் சுடுகாட்டில் குழந்தையைக் கொண்டுவந்து எரிக்க முற்படும் சந்திரமதியை அறியவில்லை. அதனால் தன் எஜமானனுக்குத் தரவேண்டிய முழத்துண்டு, கால்பணம் தராத அவள் மீது கோபம் கொண்டு ஓடி வந்தான்.

அங்கு வந்ததும் அவனுக்கு உண்மை விளங்கிற்று. குழந்தை இறந்ததைக் கண்டு தானும் உயிர்விட எண்ணினான். எஜமானுக்குத் தெரியாமல் தான் உயிர் விடுவது குற்றம் என எண்ணினான். சந்திரமதியும் வாழ விரும்பாமல் பிள்ளையுடன் தீயில் தன்னை மாய்த்துக் கொள்ள நினைக்க, அந்த நேரத்தில் அங்கு ஹரிஹர பிரம்மாதி தேவர்கள் தோன்றி அரிச்சந்திரன் சத்தியத்தைக் காக்க செய்த தியாகத்தைப் பாராட்டினர். உன்னைச் சோதிக்கவே இத்தனை நிகழ்ச்சிகள் நடந்தன. தர்மதேவதையே சண்டாள உருவத்தில் உன்னை விலைக்கு வாங்கியது. இந்திரனால் அமுதம் புகட்டப்பட்ட உன் குழந்தை எழுந்து வருவதைப் பார் என்று கூறினார். பின்னர் அரிச்சந்திரன் அவன் மகனுக்குப் பட்டம் கட்டிவிட்டு மனைவியுடனும் தன் நகர மக்களுடனும் சொர்க்கத்திற்குச் சென்றான். (இந்த நிகழ்ச்சிகளுக்குக் காரணம் வசிஷ்டர்-விசுவாமித்திரர் இடையில் ஏற்பட்ட போட்டி என்றும், மன்னன் சந்திரமதியைக் கொல்ல கத்திவீச அது மாலையாக விழ, இறைவன் தோன்றிட மகன் உயிர் பெற்று எழுந்ததாகவும் கூறப்படுவதும் உண்டு)

வசிஷ்டர் விசுவாமித்திரர் போர்

தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பிய வசிஷ்டர் அரிச்சந்திரன் பட்ட இன்னல்களுக்குக் காரணமான விசுவாமித்திரரைக் கொக்காகுமாறு சபித்தார். விசுவாமித்திரர் வசிஷ்டரை ஆழி என்னும் பறவையாகச் சபித்தார். இந்த இரண்டு பறவைகளின் போராட்டத்தால் உலகம் அல்லலுறுவதைத் தேவர்கள் அஞ்சி பிரம்மனிடம் முறையிட அவர் இரு பறவைகளுக்கும் சாபவிமோசனம் அளித்து அவர்களின் சுயஉருவை அருளினார். இதனால் வெட்கி அவ்விருவரும் பிரமனை வணங்கித் தவம் செய்யப் புறப்பட்டனர்.

6. தந்தைக்குத் தனயன் தன் வரலாறு கூறுதல்

பிருகு வம்ச அந்தணர்க்குப் பிறந்த மகன் சகல சாஸ்திரங்கள் கற்றும் பித்தனைப் போல் திரிந்தலைய அவனது தந்தை அவனுடைய குருகுல வாசம் முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாகவும் பின்னர் அவன் தேவ, பித்ரு கடன்களை ஆற்றி நற்கதி அடையுமாறும் கூறினார். அதுகேட்ட தனயன் சிரித்ததால் பல பிறவிகள் எடுத்தும், பலவிதமான தருமங்கள் செய்தும் பிறவிக்கடலைக் கடக்கவில்லை. எனவே, இல்லறத்தில் விருப்பமில்லை என்றும் துறவறம் பூண்டு பரம்பொருளை நோக்கித் தவம் செய்ய விரும்புவதாகவும் கூறினார். இவ்வாறு மகன் தீர்க்க ஞானியாய் விளங்குவது கண்ட அவனுடைய தந்தை அவன் அறிந்த இரகசியங்களைக் கூறுமாறு கேட்டார்.

அப்போது தனயன் உலகில் பிறந்த மனிதன் எத்தனை தடவை சுவாசிக்க முடியுமோ அத்தனை தடவை மட்டுமே உயிர் வாழ்கிறான். எனவே ஒருவன் வாழ்நாட்களை அவன் மூச்சுகளைக் கொண்டே கணக்கிட வேண்டும். புண்ணியம் செய்தவன் துன்பம் இன்றி உயிர் விடுகிறான். பாவம் செய்தவன் உயிரை எமதூதர்கள் இழுத்துச் செல்கின்றனர். ஒருவன் இறந்த உடன் அவனது பிண்டசரீர வாழ்க்கை முடிவு பெறுகிறது. பின்னர் ஜீவனின் யாத்திரை தொடங்குகிறது. தானதர்மங்களைச் செய்தவனின் ஜீவன் நரகவேதனை அனுபவிப்பதில்லை. ஆனால், பாவம் செய்தவன் அவன் செயல்களுக்கேற்ற நரக வேதனை (அ) தண்டனை பெறுகிறான். பலவித நரகங்கள் உள்ளன. எனவே, துன்ப நீக்கம் பெற தன் சுமைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஞானம் உதயமாக வேண்டும் என்று பலவாறு தனயன் தந்தைக்கு உபதேசம் செய்தான்.

7. அவன் முற்பிறவி வரலாறு

இதற்கு முன் ஏழாவது பிறவியில் நான் ஒரு வைசியனாய்ப் பிறந்தேன். தாகம் கொண்டு நீர் அருந்த பசுக்களை அடித்து விரட்டிய பாவத்தால் ஜ்வாலாமுகம் என்னும் நரகத்தில் தள்ளப்பட்டுத் துன்பத்தை அனுபவித்தேன். அப்போது தற்செயலாக விபச்சித் ஜனகன் என்னும் அரசன் விமானத்தில் ஏறி அவ்வழியாய் வர, அவன்மேல் பட்ட காற்று என்மேல் பட என் துன்பம் ஓரளவு குறைந்தது. அவ்வரசனை நோக்கிக் கை கூப்பி வணங்கி, அவர் சற்று நேரம் அங்கே தங்கி இருந்தால் பாவிகளான நாங்கள் சுகத்தை அடைவோம் என்று பிராத்திக்க அரசன் விமானத்தை அங்கே நிறுத்தச் சொல்லி எங்கள் அனைவரையும் பார்த்தார். பின்னர் எமதூதர்களிடம் தன்னை அவர்கள் அவ்வழியாக அழைத்துவரக்காரணம் என்ன என்று கேட்டார். அப்போது எமதூதர்கள் அவனிடம் அவருக்குக் கைகேயி, பீலரி என்ற இரண்டு மனைவியர். இளையாள் மீது மோகம் கொண்டு அவர் பீலரியைப் புறக்கணித்ததையும், அந்தப் பாபத்தின் காரணமாகவே தாபஜுவாலை நிரம்பிய அவ்வழியாக வரநேர்ந்தது எனத்தெரிவித்தனர். அப்போது அரசரைச் சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல தேவ தூதர்கள் வர, அரசன் நரகத்தில் துன்பப்படும் எங்களையும் தன்னோடு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று பிடிவாதம் செய்தான். அதற்காகத் தான் செய்திருந்த புண்ணியத்தை பகிர்ந்து எங்களுக்குத் தானமளிக்கவும் சம்மதித்தான். அவன் செய்த உதவியால் நாங்கள் நற்கதி அடைந்தோம் என்று கூறினான்.

8. நரகலோக தண்டனைகள்

தன் மகன் கூறிய செய்திகளைக் கேட்டு வியப்புற்ற அந்தணர் நரகத்தில் என்னென்ன பாவத்திற்கு, என்னென்ன தண்டனை என்று கூறுமாறு கேட்க மகன் தந்தைக்கு நரகலோக தண்டனைகள் பற்றிக் கூறலானான். (நரக லோகங்களின் வகை, தண்டனைகள் பலவிதம் பற்றி அக்னிபுராணம், விஷ்ணு புராணங்களில் கூறிய செய்திகளையும் காண்க)

பாவத்திற்கேற்ற தண்டனைகள் கூறப்பட்டுள்ளன.

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியபின் தந்தையிடம் வாழ்க்கையில் சுகங்கள் அனுபவித்தல் என்றும், தர்மங்களைச் செய்தல் என்றும் கூறி இனி வனம் சென்று வானப்பிரஸ்தா சிரமத்தை அனுசரிக்குமாறு கூறினான். அதுகேட்டு தந்தை, மகனிடம் அவன் ஞானத்தை உபதேசித்ததால் குருவானான் என்றும், மேலும் ஞானமார்க்கத்தை விளக்குமாறும் கேட்டார். அப்போது மகன் கீழ்க்கண்ட முக்கியமானவற்றைக் கூறினான். கணவனைத் தெய்வமாகக் கொள்வது, மற்ற தர்மங்களை விடச் சிறந்தது. கற்புடைய பெண்டிரை மும்மூர்த்திகளும் அறிவர். அவர்கள் பேச்சுக்கும் கட்டுப்படுவர் என்று அதை விளக்க நளாயினி கதையையும், இறுதியில் அனுசூயாவின் சிறப்பையும் கூறினான் மகன்.

9. நளாயினி வரலாறு

பிரதிஷ்டானம் என்ற ஊரில் தொழுநோயால் அவதியுற்ற கவுசிகன் என்னும் அந்தணரும், அவர் மனைவி நளாயினியும் வாழ்ந்து வந்தனர். கணவன் தொழுநோயாளி என்றிருந்தும் அவன் மனைவி கற்புக்கரசியாய் அவருக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்து கணவர் மனம் கோணாமல் வாழ்ந்து வந்தாள். ஆனால், கவுசிகன் மனைவியைத் துன்புறுத்தி வந்ததுடன் ஒருநாள் அவனைத் தான் விரும்பும் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு கூற அவளும் அவனை ஒரு கூடையில் உட்கார வைத்து தூக்கிச் சென்று கொண்டிருந்தாள். வழியில் மாண்டவ்யர் என்ற முனிவர் மன்னன் ஆணையின்படி கழுவேற்றப்பட்ட நிலையில் இருந்தார் என்று மகன் கூறத் தந்தை மாண்டவிய முனிவரின் அந்நிலைக்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு மகன் மாண்டவ்யர் சிறுவயதில் பூச்சிகளைப் பிடித்து இம்சை செய்து வந்ததன் பலன் அது என்று கூறினான். மேலும் திருடர்கள் அவ்வூர் மன்னன் அரண்மனையில் திருடிவிட்டு ஓடிவருகையில் முனிவர் கழுத்தில் ஒரு முத்துமாலையைப் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னால் துரத்தி வந்த அரண்மனை சேவகர்கள் முனிவர் கழுத்தில் முத்துமாலையைக் கண்டு அவரை மன்னன் முன்னிலையில் கொண்டு நிறுத்த, விசாரணையின் போது முனிவர் தவநிலை காரணமாக பேசாதிருக்க அவரைக் கழுவேற்றுமாறு மன்னன் உத்தரவிட, அதன்படி மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டு இருந்தார்.

நளாயினி தன் கணவனைத் தாசியின் வீட்டுக்குக் கூடையில் வைத்து சென்றவள், இருட்டின் காரணமாக, அவளது கூடை மாண்டவ்யர் மீது இடிக்க ஏற்கனவே அவதிப்பட்டுக் கொண்டிருந்த முனிவர் தனக்குத் துன்பம் கொடுத்த அவன் சூரியோதயத்தில் தலைவெடித்து இறக்குமாறு சாபம் கொடுத்தார். இதைக்கேட்ட அந்த பத்தினி தான் பதிவிரதை என்பது உண்மையானால் சூரியன் உதிக்கக்கூடாது என்று பதில் சாபம் விட்டாள். உலகம் இருட்டில் மூழ்கிட அதன் காரணத்தை அறிந்த பிரமன் அத்திரிமுனிவர் ஆசிரமம் அடைந்து அவருடைய மனைவியாகிய அனுசூயை என்னும் பதிவிரதையிடம் நடந்த விவரங்களைக் கூறி நளாயினியைச் சந்தித்து எப்படியாவது சூரியோதயத்திற்கு வழிவகுக்குமாறு வேண்டினார். அனுசூயை அவ்வாறே நளாயினியின் இல்லம் அடைந்து அவளிடம் வந்த காரியத்தைக் கூறி அவள் சாபத்தை விலக்கிக் கொண்டு சூரியோதயம் ஏற்பட்டு உலகம் உய்யுமாறு தெரியுமாறு வேண்டிக்கொண்டாள். ஆனால் நளாயினி சூரியோதயமானால் கணவர் இறப்பார் என்று கூற கற்புக்கரசி அனுசூயை உன் கணவன் இறந்தாலும் நோய் நீங்கி அழகிய ஆண்மகனாய் எழுந்திருப்பார். நீயும் இன்ப வாழ்க்கை அடைவாள் என்று கூறி மகிழ்வித்தாள்.

சாபம் விலக சூரியன் உதிக்க, நளாயினியின் கணவர் இறந்துவிட, அனுசூயை இறந்தவர் ஆணழகனாக உயிர் பெறுமாறு கூற அவ்வாறே நிகழ நளாயினி, கணவருடன் இனிய வாழ்வு பெற்றாள். இதிலிருந்து பதிவிரதையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தேவர்களும், மும்மூர்த்திகளும் அருள்புரிவார்கள் என்று மகன் தந்தைக்குக் கூறினான். இத்துடன் மும்மூர்த்திகள் அனுசூயையின் குழந்தைகளாக அவதரிக்கப்பட்ட வரலாற்றையும் மகன் தந்தைக்குக் கூறினான். (இதன் வரலாறு நாரத புராணத்தில் காண்க.) அனுசூயையின் வேண்டுகோளின்படி பிரம்மன் அம்சமாய் சந்திரனும், விஷ்ணுவின் அம்சமாய் தத்தாத்திரேயரும், சிவனின் அம்சமாய் துர்வாசனும் பிறந்தார்கள். தத்தாத்திரேயர் அஷ்டமா சக்திகளைப் பெற்றவராய் கரை கடந்த ஞானியாய் இருந்தார். அவரைப் பிரியாமல் இருந்த ரிஷிகுமாரர்களைத் தத்தத்திரேயர் ஒரு மாயப் பெண்ணை உண்டாக்கி அவளுடன் காமக்களியாட்டத்தில் இருப்பவராக நடிக்க மற்றவர்கள் அவரைவிட்டு நீங்கினர்.

10. கார்த்தவீரியன் வரலாறு

மன்னன் கிருதவீரியன்

கோசலநாட்டை சூரியவம்ச மன்னன் கிருதவீரியன் ஆண்டு வந்தான். பிள்ளைப் பேறின்மையால் அவன் மனைவி சுனந்தையுடன் கானகம் சென்று தவம் இருக்க தேவர்கள் அருளால் அவன் மனைவிக்கு கருவுற்று குழந்தை பெற்றாள். ஆனால் அது கை கால்கள் அற்ற சதைப் பிண்டமாய் இருந்தது. இதனால் மிக்க துயரம் கொண்ட கணவனும், மனைவியும் அப்பிண்டத்துடன் தீயில் மூழ்கி உயிர்விட யக்தனிக்கையில் ஓர் அசரீரி ஒலித்தது. முற்பிறவி வினையின் காரணமாக அத்தகைய குழந்தை உதித்தது. எனினும் அக்குழந்தை தத்தாத்திரேயரின் அருளால் ஆயிரம் கரங்கள் பெற்று இணையற்ற வீரனாக அரசாள்வான் என்று அசரீரி கூறியது. சிறிது காலத்தில் மன்னன் கிருதவீரியன் இறந்துவிட அமைச்சர்கள் கார்த்தவீரியனுக்குப் பட்டம் கட்ட முனைந்தனர்.

கார்த்தவீரியன் மனநிலை

ஆனால் கார்த்தவீரியன் மக்கள் செய்யும் பாவம் மன்னனையே சாரும் எனக்கூறி மன்னனாக ஒப்பவில்லை. அப்போது அங்கு வந்த கர்க்க முனிவர் குடிமக்கள் அனைவருமே பாவம் செய்யாதவர்களாகி விட்டால் அரசை ஏற்கத் தடை ஏதுமில்லையே என்று கேட்டார். அது எப்படி சாத்தியமாகும் என்று அவன் முனிவரைக் கேட்க, அவர் கார்த்திவீரியனிடம் தத்தாத்திரேயரிடம் சென்று அவர் அருளைப் பெற்று நாட்டுமக்கள் பாவம் செய்யாதவாறு வரம் பெற்று வருமாறு கூறினார். தத்தாத்திரேயருக்கு அத்தகைய வலிமை உண்டா என்று ஐயுற்ற அவன் மனத்தெளிவு குறித்து முன் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறினார் கர்க்க முனிவர்.

தேவேந்திரன் தத்தாத்திரேயரிடம் பெற்ற உதவி

ஒரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்தபோரில் அசுரர்கள் கை ஓங்கி இருந்தது. அதனால் அச்சமுற்ற தேவேந்திரன் தன் குரு பிரகஸ்பதியிடம் தேவர்கள் வாழ்வு அழியாமல் இருக்க ஓர் உபாயத்தைக் கூறுமாறு வேண்ட, அவர் தத்தாத்திரேயரைச் சரணடையுமாறு கூற, தேவேந்திரனும் தத்தாத்திரேயர் திருவடிகளில் விழுந்தான். அப்போது தத்தாத்திரேயர் மது, மங்கைகளால் மயங்கி உள்ள தன்னைச் சரணடைவதால் என்ன லாபம் என்று கேட்டார். தேவேந்திரன், பரம்பொருளோ; அசுரர்களோடு போரிட்டு, அடிபட்டு வந்திருக்கும் எனக்கு நீங்களே துணை. என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான். அதைக்கேட்ட தத்தாத்திரேயர் என் மேல் அத்தனை நம்பிக்கை இருந்தால் அசுரர்களுடன் போருக்குச் செல் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் என்றார். அவ்வாறே இந்திரன் போருக்குச் செல்ல அவர்களை விரட்டிக் கொண்டுவந்த அசுரர்கள் தத்தாத்திரேயர் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கிருந்த அழகியைக் கண்டு மதிமயங்கி அவளைப் பல்லக்கிலேற்றி சுமந்து சென்றனர்.

அதுகண்டு தேவேந்திரன் வியப்புற்று தத்தாத்திரேயர் இந்த நிகழ்ச்சியைக் கண்டும் சும்மா இருப்பது ஏன் என்று கேட்டான். அதற்கு தத்தாத்திரேயர் பெண்ணாசையால் அசுரர்களின் தைரியம், பலம் குறைந்து விட்டன. அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதால் அவள் அவர்களை உதறித் தள்ளிவிட்டு திரும்பி வந்து விடுவாள். மேலும் இலட்சுமியின் பாதத்தை மனதில் வைத்து ஒருவர் தியானம் செய்தால் மோட்சம் அளிப்பாள்; தொடையில் வைத்து தியானிப்பவருக்கு தனத்தை அளிப்பாள்; மடியில் வைத்துத் தியானம் செய்பவர்களுக்குக் குழந்தையும், இதயத்தில் வைத்துத் தியானிப்பவர்களுக்கு காரிய சித்தியும், கழுத்தில் வைத்துத் தியானிப்பவர்களுக்கு இரத்தின ஆபரணங்களையும் அளிப்பாள். ஆனால் தலையில் வைத்துத் தியானம் செய்பவர்களை உதறித்தள்ளுவாள். இப்போது அசுரர்களில் பலம் குறைந்து விட்டது. ராஜ்யலட்சுமி அகன்று விட்டாள். இனி அசுரர்களை எளிதில் வெற்றி கொள்ளலாம். இவ்வாறு தத்தாத்திரேயர் அருள்பெற்ற தேவேந்திரன் அசுரர்களை வென்று ராஜ்ஜியத்தைக் காப்பாற்றினான்.

கார்த்தவீரியனுக்குத் தத்தாத்திரேயர் அருள்

அவ்வாறே நீயும் அருளால் பலம் பெறுவாய் என்று கூறினார். கார்த்தவீரியன் குருவின் ஆசிர்வாதம் பெற்று தத்தாத்திரேயரை அடைந்தான். அவருக்கு உபசாரங்கள் செய்து வந்தான். அப்போது அவர் தீயஒழுக்கம் உள்ள எனக்குப் பணிவிடை செய்து என்ன பயனை அடையப்போகிறாய் என்று கேட்டார். அப்போது கார்த்தவீரியன் பரம்பொருளே தங்களை அணுகியவர் தம் பாவங்கள் நசித்து விடும். அரச பதவியால் குடிமக்கள் செய்யும் பாவம் என்னை அணுகாதிருக்குமாறு தங்களிடம் வரம் பெறவே வந்தேன் என்று கூறினான். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த தத்தாத்திரேயர், கார்த்தவீரியனுக்குச் சிறந்த வரங்களை அளித்தார். அவனது குடிமக்கள் தவறு செய்ய நினைப்பின் அவர்கள் கண்களுக்கு அவன் உருவம் வில்லாளியாகத் தோன்றி மக்களைத் தடுத்துவிடும் சக்தியையும், அவன் விரும்பும் போது ஆயிரம் கரங்களைப் பெற்று எதிரிகளை வெல்லக்கூடிய சக்தியையும் அளித்தார். இவ்வாறு அருள் பெற்றுத் தன் நாட்டிற்குத் திரும்பி வந்த கார்த்தவீரியன் மண்ணிள்ளோர், விண்ணிலுள்ளோர் அனைவரிடமும் நட்பு பூண்டொழுகினான். தத்தர் அருளாலும், செல்வத்தாலும் சிறந்து எங்கும் புகழ் பரப்பி ஆட்சி புரிந்தான்.

11. ரிதத்வஜன் (அ) குவலயாச்சுவன் வரலாறு

முன்னொரு காலத்தில் வீரபராக்கிரமம், தானதர்மங்களால் புகழ்பெற்ற சத்ருஜித் என்றொரு அரசன் இருந்தான். அவனுடைய மகன் ரிதத்வஜன் நற்குணசிகாமணி. அவனுடன் பூவுலக ராஜகுமாரர்கள் மட்டுமின்றி, நாகலோக இராஜகுமாரர்கள் இருவரும் கூட நட்பு கொண்டு பழகி வந்தனர். இதுகண்டு வியப்புற்ற நாகராஜன் தன் புத்திரர்களிடம் அவர்களது நண்பனுக்கு ஒரு பரிசு அளிக்குமாறு கூற, அவனிடம் எல்லாம் இருப்பதால் என்ன கொடுப்பது என்று அறியாதிருக்க அவனுக்கு ஒரு குறை உள்ளது அதை நிவர்த்தி செய்வதே பரிசாகும் என்று கூறினார்.

ஒருநாள் காலவரிஷி சத்ருஜித்தன் அரண்மனைக்கு வர, அவரை மன்னர் முறைப்படி உபசரித்தார். அப்போது காலவர் ஒரு பயங்கர அரக்கன் பாதாள லோகத்திலிருந்து வந்து அவர்களை எல்லாம் துன்புறுத்துவதாகக் கூறி அவனை அழிக்க தவ வலிமையைப் பயன்படுத்தக்கூடாது. ஆகையால், அந்த அரக்கனை அழிக்க என்ன வழி? என்று வருந்துகையில், மகரிஷியே! கவலை வேண்டாம், குவலயாச்சுவன் என்ற ஒரு தேவலோக குதிரை ஒன்று உங்களிடம் வருகிறது. அதன் மேலேறிச் சவாரி செய்யக்கூடியவன் ரிதத்வஜனே ஆவான். அவனிடம் இந்தக் குதிரையைக் கொடுத்தால் அவன் அசுரனைக் கொன்று உங்களைக் காப்பான் என்று ஓர் அசரீரி வாக்கு எழுந்தது.

காலவர் யாகம் காத்தல்

அடுத்து காலவர் மன்னன் சத்ருஜித்திடம் அக்குதிரையைக் கொண்டு வந்திருப்தாகவும் தேவக்கட்டளையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கூற மன்னன் தன் மகன் ரிதத்வஜனை அழைத்து செய்தியைக் கூறி ஆசிர்வதித்து காலவ ரிஷியுடன் அனுப்பி வைத்தான். செல்லும் வழியில் காலவரிஷி ரிதத்வஜனிடம் அரக்கனைப் பற்றிய முழுவிவரங்களையும் எடுத்துரைத்தார். ரிதத்வஜன், குவலயா என்னும் பரியின் மீதேறி தபோவனத்தைக் காவல் புரியத் தொடங்கினான். மகரிஷி தவத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த அரக்கன் பன்றி உருவில் உறுமிக் கொண்டு வந்து அட்டகாசம் செய்ய முற்பட ரிதத்வஜன் குவலியான் மீதமர்ந்த வண்ணம் பன்றியைப் பின் தொடர்ந்து துரத்தலானான். பன்றி வடிவிலிருந்த அரக்கன் மாயத்தால் மறைந்து ஒரு பிளவின் வழியாக நுழைந்து பாதாளத்தில் பாய்ந்தான். ரிதத்வஜனும் அதைத் தூரத்தில் சென்று வில்லில் சக்தி வாய்ந்த மந்திரத்தால் வலியூட்டப்பட்ட அம்பைத் தொடுத்து எய்தான். அது உடலில் தைத்தது. பிறகு பன்றி சென்ற இடம் தெரியவில்லை.

பன்றியான அரக்கன்

பன்றியைத் தேடிச்சென்ற ரிதத்வஜன் பாதாள உலகில் நுழைந்து தேட ஒரு மாளிகையில் தன் குதிரையை ஓரிடத்தில் நிறுத்திவிட்டுச் சென்றான். அம்மாளிகையில் ஒரு பெண்ணைக் கண்டான். அவள் ரிதத்வஜனைக் கண்டதும் மயக்கமடைந்து விழுந்தாள். அதுபற்றி அவன் தோழியை விசாரிக்க இவள் விஸ்வாசு என்றும் கந்தர்வராஜன் மகள், மதாலசை. இவளை வஜ்ஜிரகேது என்னும் அரக்கனின் மகன் பாதாள கேது மாயமாய் தூக்கி வந்து மணக்க விரும்பி வளர்பிறை திரயோதசி வரை அவகாசம் கொடுத்திருந்தான். இவளோ அரக்கனை மணப்பதை விட உயிரை விடுவது மேலென்று தற்கொலை செய்து கொள்ள முயன்றாள். அப்போது காமதேனு அவளைத் தடுத்து அஞ்சவேண்டாம், அரக்கனின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. பூலோக அரசன் இவனைத் துரத்திவந்து கொல்வான். அவனே உன்னை மணப்பான் என்று கூறிட அந்த நம்பிக்கையில் இவள் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்றான்.

ரிதத்வஜன் சவாரிக்கு வந்த குதிரையின் பெயர் குவலயா. எனவே குதிரையைப் பெற்ற ரிதத்வஜன் குவலயாச்சுவன் எனப்பட்டான். மதாலசை மூர்ச்சை தெளியாதிருப்பதைக் கண்ட குவலயாச்சுவன், தோழியைப் பார்த்து அவளைப் பற்றிய விவரம் கேட்க, அவள் தான் விந்தியவான் மகள் துந்தலா. அவள் கணவன் வீரபுஷ்காமாலியை சும்பன் என்னும் அரக்கன் கொன்றுவிட அவள் தீர்த்தயாத்திரை செய்து ஆயுட்காலத்தைக் கழித்துவிட எண்ணியதாயும், ஆனால் மதாலசையின் நிலையைக் கண்டு அவளுக்கு உதவ அங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறினாள். இன்னும் மதாலசை மூர்ச்சை தெளியவில்லை. தோழி, மறுபடியும் பாதாள கேது என்னும் அரக்கன் பன்றி வடிவில் உடலில் பாணம் தைக்கப்பட்டு வந்தவன் அருகிலுள்ள தடாகத்தில் விழுந்து இறந்தான். அவனைத் தொடர்ந்து வந்த ராஜகுமாரன் தனக்கு கணவன் ஆவான் என்பதை மதாலசை அறிவாள். அதனாலேயே உங்களைப் பார்த்தவுடன் மூர்ச்சையானாள் என்று கூறியவள் குவலயாச்சுவன் வரலாற்றைக் கூறுமாறு கேட்க அவன் தன் வரலாற்றைக் கூறி முடித்தான். அதைச் செவியுற்ற மதாலசை வெட்கத்துடன் எழுந்து குவலயாச்சுவனை வணங்கித் தலைகுனிய அவனும் அவளைக் கண்டு மயங்கினான். எனினும் பெற்றோர்க்குத் தெரியாமல் அவளை மணப்பது முறையல்ல என்று எண்ணினான்.

மதாலசை திருமணம்

அப்போது மதாலசை தன் குருவான தும்புருவை மனதில் நினைக்க அவர் அங்கு தோன்றி மதாலசை கந்தர்வ பெண் என்றும் அவளைக் குவலயாச்சுவன் காந்தர்வமணம் செய்து கொள்வது தவறில்லை என்றும், பின்னர் பெற்றோரிடம் அழைத்துச் சென்று முறைப்படி மணம் செய்து கொள்ளலாம் என்றும் கூற, அரசுகுமாரன் அதை ஏற்றுக்கொள்ள தும்புரு இருவருக்கும் காந்தர்வ விவாகம் செய்து வைத்தார். பின்னர் குவலயாச்சுவன் மதாலசையுடன் குதிரை மீதேறிச் செல்ல அசுரர்கள் அவனை எதிர்த்திட அவன் சக்திவாய்ந்த அம்புகளை விடுத்து அரக்கர்களை அழித்துத் திரும்பி காலவரை வணங்கி, விடைபெற்றுக் கொண்டு தன் ராஜ்ஜியத்தை அடைந்து தாய் தந்தையை வணங்கி நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறி மதாலசையைத் தான் தும்புரு முன்னிலையில் காந்தர்வ விவாகம் செய்து கொண்டதையும் கூறி மகிழ்வித்தான். மன்னன் சத்ருஜித் மகனைப் பாராட்டி முறைப்படி குலவயச் சுவனுக்கும், மதாலசைக்கும் திருமணம் செய்து வைக்க அவர்கள் இருவரும் இன்பமாக வாழ்ந்து வந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு தந்தையின் சொல்படி குவலயாச்சுவன் குதிரை மீதேறி ராஜ்ஜியத்தை சுற்றி வந்து யார்க்கும் எந்தவிதமான குறையுமின்றி பாதுகாத்து வந்தான். ஆனால் அதுவே அவனுக்குச் சங்கடம் ஆயிற்று என்று நாகராஜ குமாரர்கள் அவர்கள் தந்தையிடம் கூறினர்.

12. குவலயாச்சுவன் வருத்தம்

பாதாள கேதுவின் தம்பி தமையனைக் கொன்ற குவலயாச்சுவனைப் பழிவாங்க எண்ணினான். எனவே அவன் பழக்கவழக்கங்கள் பற்றி அறிந்து கொண்டு ஒரு நாள் சந்நியாசி உருவில் யமுனைக்கரையில் காத்திருந்தான். குவலயாச்சுவன் யமுனைக்கரையில் சந்நியாசிகளைச் சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டு ஆவன செய்வதை அறிந்த அரக்கன் தானும் சந்நியாசி வடிவில் காத்திருந்தான். அன்று குவலயாச்சுவன் யமுனை நதிக்கரைக்கு வந்து அங்கிருந்த சாதுக்களை வணங்கினான். சந்நியாசி உருவில் இருந்த அரக்கன் தானகேதுவையும் வணங்கி குறை கேட்க, தானகேது குவலயாச்சுவனிடம் தனக்கொரு குறை உள்ளதாகவும், ஆணையிட்டுச் சொன்னால் தெரிவிப்பதாகவும் சொன்னான். குவலயாச்சுவன் உயிரைக் கொடுத்தேனும் உத்தமர் குறை களைய வேண்டும் என்ற தந்தையின் கட்டளைப்படி எதுவானாலும் செய்வதாகச் சத்தியம் செய்தான்.

தானகேதுவின் சூழ்ச்சி

அப்போது அரக்கன் தான் யமுனையில் மூழ்கி வருண ஜபம் செய்யப்போவதாகவும் அதற்குத் தட்சணையாக குவலயாச்சுவன் கழுத்தில் உள்ள ஆபரணத்தைத் தரவேண்டினான். மேலும் தவம் முடித்து வரும்வரை தவத்திற்குப் பங்கம் வராதவாறு காவல் புரியுமாறும் வேண்டினான். அதனை ஏற்று குவலயாச்சுவன் ஆபரணத்தைக் கழற்றிக் கொடுத்தான். அதனைப் பெற்றுக் கொண்ட அரக்கன் நீரில் மூழ்கி மாயத்தால் வேறொரு பக்கம் கரையேறி குவலயாச்சுவனின் அரண்மனையை அடைந்தான். அங்கு மன்னன் சத்ருஜித்தைக் கண்டு அரசகுமாரனை அரக்கன் கொன்றுவிட்டு, குதிரையையும் அபகரித்துச் சென்று விட்டான் என்று கூறி அதற்கடையாளமாக குவலயாச்சுவன் அளித்த கழுத்தணியைக் கொடுத்துவிட்டுச் சென்றான். அரக்கன் தானகேதுவின் வார்த்தையை அரசன் நம்பி மகனே! என்று கூவி மூர்ச்சையுற்றான். செய்தி கேட்ட மதாலசையும் உயிர்விட்டாள். இதனால் நாடே சோகக் கடலில் மூழ்கியது. மன்னன் மதாலசைக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளைச் செய்து முடித்தான்.

இவ்வாறு மதாலசையை இறக்கச் செய்ததால் அரக்கன் தான் பழிவாங்கியதாக மகிழ்ச்சி அடைந்தான். மறுபடியும் நதியிலிருந்து வெளியே வந்து குவலயாச்சுவனிடம் அவன் உதவியால் வருண ஜபத்தைச் சிறப்பாக முடித்ததாகக் கூறி அவனை நாட்டுக்கு செல்லுமாறு கூறினான். அரசகுமாரன் குதிரை ஏறித் தன் நாட்டை அடைய எல்லோரும் திடுக்கிட்டனர். மக்கள் தம் துயரத்தைப் பலவகையில் வெளிக்காட்டினார். குவலயாச்சுவன் தந்தையின் மூலம் நிகழ்ந்ததை எல்லாம் கேட்டறிந்தான். இவற்றிற்கெல்லாம் காரணம் பாதாள கேதுவே என அறிந்த குவலயாச்சுவன் மனைவியை இழந்ததால் நடைப்பிணமாய் வாழ்ந்து வருவதால் அவனைச் சந்தித்து ஆறுதல் அளிக்க முயல்கிறோம் என்று நாகராஜ குமாரர்கள் இருவரும் தந்தையிடம் கூறினர்.

குவலயாச்சுவன் மனக்குறை

நாகராஜன் அஸ்வதரன் அந்தக்கதையைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு வருத்தம் கொண்டு மக்களிடம் மதாலசையை மீட்டுக் கொடுத்தால் உங்கள் நண்பன் எவ்வளவு ஆனந்தப்படுவான். அதை ஏன் செய்யவில்லை என்றான். அவன் மக்களை இறந்தவரை பிழைப்பிப்பது எங்ஙனம். அதற்கு நாகராஜன் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று கூறிவிட்டு தம்பியாகிய சும்பனனுடன் தவம் செய்யக் கானகம் சென்றான். அவர்கள் வாணியைக் குறித்துத் தியானம் செய்ய, சரசுவதி தோன்றி என்ன வேண்டும் என்று வினவ, சாமகானம் பாடி சிவபெருமான் தரிசனம் பெற அருள்புரியுமாறு வேண்டிட, வாணி அவர்கள் விருப்பம் கைகூடும் எனக்கூறி மறைந்தாள். எல்லோரும் சிவபெருமானைக் குறித்து ஆடிப்பாடி மகிழ்ச்சி ஊட்ட சிவனார் தோன்றி வேண்டிய வரம் யாது என, குவலயாச்சுவன் என்னும் சத்தியசந்தன், தர்மம் தவறாதவன் எங்கள் நண்பன், விதிவசத்தால் தன் மனைவியை இழந்து பரிதவிக்கிறான். அவனுக்கு அவன் மனைவியை மீட்டுப் பெற என் மக்கள் ஆசைப்படுகின்றனர். அதற்கு அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்தித்தான்.

சிவபெருமான் அவனை மெச்சி மதாலசை பிழைத்தெழுவாள் அதற்கான கடன் ஒன்று உண்டு. சிரத்தையுடன் பித்ரு தேவர்களைக் குறித்து ஒரு சிரார்த்தம் செய்து அதன் நடுப்பிண்டத்தை உண்பாயாக. உன் உடம்பின் நடுப்பகுதியிலிருந்து மதாலசை பூர்வ ஞானத்துடனும், அதே அழகுடன் எழுந்து வருவாள் என்று கூறி மறைந்தார்.

மதாலசை உயிர்ப்பெற்று எழல்

அஸ்வதரன் ஊருக்குத் திரும்பி வந்து அவ்வாறே சிரார்த்தம் செய்ய மதாலசை உயிர் பெற்றெழுந்து அவனை வணங்கினாள். அப்போது அஸ்வதரன் அவள் கோரிக்கை என்ன என்று கேட்க கணவனை அடைவதே என்று கூற, அவன் திடீரென்று பார்த்தால் உணர்ச்சி வசப்படுவான். அதுவரையில் அந்த அரண்மனையிலேயே மறைந்திருக்குமாறு கூறி புதல்வர்களிடம் குவலயாச்சுவனை அழைத்து வரும்படி கூறினான். நாகராஜ குமாரர்கள் குவலயாச்சுவனைக் கண்டு தங்கள் இருப்பிடம் வந்து, உபசாரங்களை ஏற்று, கொடுக்கும் சன்மானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டினர். முதலில் குவலயாச்சுவன் அவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால் அது அவருடைய தந்தையின் வேண்டுகோள் என்றும் அதை நிறைவேற்றுவது அவர்கள் கடமை என்றும், எனவே அவசியம் தாங்கள் வரவேண்டும் என்று கூறி சம்மதிக்கச் செய்தனர். அவன் பெற்றோரை வணங்கி அவர்கள் ஆசியுடன் நாகலோகம் சென்றான்.

அஸ்வதரன் குவலயாச்சுவனைக் கண்டு மகிழ்ச்சி உற்றான், அங்கு நடக்கும் உபசாரங்களைக் கண்டு குவலயாச்சுவனுக்கு ஐயமும், வியப்பும் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து அஸ்வதரன் குவலயாச்சுவனிடம் என்ன பரிசு வேண்டும். ஏதாவதொரு பரிசைக் கட்டாயம் ஏற்று மகிழ்விக்க வேண்டும் என்றான். அப்போது குவலயாச்சுவன், அவர்கள் அன்பு ஒன்றே போதும் என்றும், தன் மனம் என்றும் தர்மத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் கூறினான். எது கிடைக்காது என சலித்திருக்கிறாயோ அப்படிப்பட்ட ஒன்றைக் கேள் என்றான் அஸ்வதரன். தன் மனைவி கிடைப்பாளோ என்று எண்ணினான் குவலயாச்சுவன். அது முடியுமா என எண்ணினான். அதுகண்டு நாகராஜ குமாரர்கள் தந்தையிடம் அவர் மனைவி மதாலசையை உயிர்ப்பித்துத் தரமுடியுமா! என்று கேட்டனர். அஸ்வதரன் அப்போது குவலயாச்சுவனிடம் அதுதான் அவன் விருப்பமா என்று கேட்க, அவன் ஒருமுறை மதாலசையைப் பார்க்க முடிந்தாலும் மகிழ்ச்சியே என்றான்.

நாகராஜன் அரண்மனையில் உட்புறம் பார்த்த வண்ணம் மகளே மதாலசை என்று அழைத்தார். அவள் வெளிவர குவலயாச்சுவன் மெய்மறந்து நின்ற பின்னர் அவள் பெயர் கூவி அழைத்தான். அப்போது அஸ்வதரன் அது மாயத்தோற்றம் தொட்டால் மறைந்துவிடும் என்று சொல்ல குவலயாச்சுவன் மூர்ச்சை அடைந்து விழுந்துவிட்டான்.

குவலயாச்சுவன் மதாலசையுடன் நாடு திரும்புதல்

பின்னார் மதாலசை அவனருகில் இருந்து தன் கரத்தால் வருட கண்விழித்த அவன் உண்மையிலேயே மனைவி அருகிலிருப்பதைக் கண்டு வியப்படைந்தான். அப்போது நாகராஜ குமாரர்கள் அவர்கள் தந்தையின் தவம், சிவபெருமானின் வரம் ஆகிய அனைத்தையும் கூற குவலயாச்சுவன் அவர் கால்களில் விழுந்து வணங்கி நன்றி கூறினான். என் குமாரர்களின் உயிர் நண்பனாகிய நீ என்னுடைய மகனே! மகனின் குறையைத் தீர்ப்பது தந்தையின் கடமை அல்லவா என்று கூறி அவனும் மதாலசையும் மகிழ்ச்சியாய் வாழ்ந்திட ஆசிர்வதித்தான். மனைவியுடன் ஊர் திரும்பிய குவலயாச்சுவனை ஊர் மக்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்று மகிழ்ந்தனர். குவலயாச்சுவனுக்கு முடி சூட்டுவித்து சத்ருஜித் வானப்பிரஸ்தாசிரமம் அனுஷ்டிக்க கானகம் சென்றான். அவனாட்சியில் மக்கள் அமைதியுடனும் இன்பமுடனும் வாழ்ந்து வந்தனர்.

13. குவலயாச்சுவன்-மதாலசை குடும்பம்

குவலயாச்சுவன் வாழ்க்கை சகல செல்வங்களையும் பெற்று அமைதியாக நடந்து வந்தது. அவனுக்கு மக்கட்செல்வமும் ஏற்பட்டது. அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அவன் பெயர் விக்ராந்தன். அதைப் பார்த்து மதாலசை சிரித்தாள். குழந்தையைத் தாலாட்டும் போது மாயையை வெல்ல வழி காண்பாயாக என்று உபதேச முறையில் பாடிக்கொண்டே தாலாட்டினாள். பிஞ்சுப் பருவத்திலேயே ஆத்ம உபதேசம் பெற்ற அக்குழந்தை, இளமையிலேயே இல்லற வாழ்வை வெறுத்து, துறவு பூண்டு தவம் செய்யச் சென்றது. இரண்டாவது குழந்தைக்கு சுவாஹு என்றும், மூன்றாவது குழந்தைக்கு சத்ருமர்த்தனன் என்றும் பெயர் சூட்டினாள். மதாலசை இந்த இரண்டு குழந்தைகளையும், முதல் குழந்தையைப் போலவே தர்மோபதேசம் செய்து துறவு வாழ்க்கையை நாடும்படி செய்து விட்டாள். கணவன் காரணம் கேட்டால் மதாலசை பதில் சொல்லவில்லை.

நான்காவது குழந்தை பிறந்தது. அதற்கு மதாலசை அலர்க்கன் என்று பெயர் சூட்டினாள். அதைக் கண்ட குவலயாச்சுவன் குழந்தைக்கு வைத்த பொருளற்ற பெயரைக் குறித்து விளக்கம் கேட்டான். அதற்கு அவன் முதல் குழந்தையின் பெயர் விக்ராந்தன். உயிர் அசைவில்லாதது. எனவே அப்பெயர் பொருத்தமற்றது. இரண்டாவது சுபாஹு, மூன்றாவது சக்ருமார்த்தனன் எனப் பெயரிட்டேன். ஆத்மாவுக்கு உடல் ஏது? உயிருக்குப் பகைவர், நண்பர் ஏது? இதை எல்லாம் எண்ணியே நகைத்தேன் என்றாள். நமக்குத் தெரிய வேண்டுமென்பதற்காக ஒரு குழந்தைக்குப் பெயரிடுகிறோம். அதைப் போலவே இந்தக் குழந்தைக்கு அலர்க்கன் என்று பெயரிட்டேன். அப்போது குவலயாச்சுவன், மதாலசை! மூன்று பிள்ளைகளைத் துறவிகளாக்கி விட்டாய். நாடாள ஒரு வாரிசு வேண்டுமல்லவா! ஆகையால் இந்த நான்காவது குழந்தையையும் அப்படிச் செய்து விடாதே. குலம் விளங்கச் செய்வது உன் கடனை அல்லவா! அதற்கு வேண்டியதைச் செய் எனக் கேட்டுக் கொண்டான்.

நான்காவது மகன் அலர்க்கன்

மதாலசை அதன்படியே குழந்தை அலர்க்கனைத் தாலாட்டிய போது அதற்கு இல்லற தருமத்தை உபதேசித்தாள். மேலும் நல்ல முறையில் அரசாட்சி செய்வதற்கான நெறிமுறைகளையும், அன்பு, தயை, தானம், இரக்கம், தர்மம், உண்மை, நன்னெறி வாழ்க்கை உயர்வளிக்கும் என்றும், யாகம் செய்தல், உறவினர்களைக் காத்தல், பசுக்கள் பிராம்மணர்களைக் காக்க வேண்டிய கடமைகளையும் உபதேசித்தாள். மேலும், அனைத்துத் தர்மங்களையும் எடுத்துரைத்தாள். அலர்க்கன் குருகுலவாசம் செய்து கல்வி கற்றுச் சிறந்த வீரனாய்த் திரும்பி வந்தான். குவலயாச்சுவன் தன் நாட்டை அவனிடம் ஒப்படைத்தான். அவன் நீதி நெறிமுறையுடன் அரசாள்வதைக் கண்டு மகிழ்ச்சியுற்றான். மதாலசையின் மீது அவனுக்கிருந்த மதிப்பு உயர்ந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு குவலயாச்சுவன், தன் மனைவியோடு தவம் செய்யக்காடு சென்றான். விடைபெறும் போது மதாலசை அவர்களிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து அவனுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் மோதிரத்தைத் திறந்து பார்த்தால் ஆபத்திலிருந்து மீள வழியை அதுகாட்டும் என்றாள்.

புகழுடன் அலர்க்கன் வாழ்ந்து வர அவனை மோட்சவழியில் ஈடுபடும்படி செய்ய வேண்டுமென அவன் உடன் பிறந்தான் சுபாஹு எண்ணினான். அதற்காக ஓர் உபாயம் பண்ணினான். சுபாஹு காசிராஜனிடம் சென்று தான் நாடுபெற உதவுமாறு கேட்க அவன் அலர்க்கனிடம் ஒரு தூதுவனை அனுப்பி நாட்டை சுபாஹுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினான். நாட்டை ஒப்படைக்க சம்மதித்த அலர்க்கன் தான் மூன்றாவது மனிதர் தலையீட்டை விரும்பவில்லை என்றும் சுபாஹு வந்து கேட்டால் கொடுத்து விடுவதாகவும் தூதுவனிடம் கூறினான். இந்தப் பதிலைக் கேட்டு சுபாஹு தான் யாரிடத்திலும் எதையும் யாசிக்கமாட்டேன் என்றும், வீரத்தாலே அரசைப் பெறுவதாகவும் கூறிட காசிராஜன் படைகள் அலர்க்கன் நாட்டை முற்றுகையிட்டன. மக்களும் சுபாஹுவை ஆதரித்தனர். இவ்வாறு திடீரென்று ஆபத்து நேர்ந்ததை உணர்ந்த அலர்க்கன் மதாலசை கொடுத்த மோதிரத்தைத் திறந்து பார்க்க அதில் சேர்க்கையை விடு. விட முடியாவிட்டால் சாதுக்களுடன் சேர். இன்பத்தை விடமுடியா விட்டால் வீடுபேறு இன்பம் கொள் என்று எழுதியிருந்தது.

அலர்க்கனும் தத்தாத்திரேயரும்

கண்திறந்த அலர்க்கன் தத்தாத்திரேயர் இருக்குமிடம் சென்று அவர் காலடியில் விழுந்து வணங்க, அவர் அரசனை யார் என்று கேட்க அவன் தன் வரலாற்றைத் தெரிவித்து, நான் என்னும் அகங்காரத்தைப் போக்கி மெய்ப்பொருளை உணர்ந்து, நிலையான வீடுபேற்றை அடைய உதவி புரிய பிரார்த்திக்கிறேன் என்றான். அப்போது தத்தாத்திரேயர் அலர்க்கா! பிறருக்கு உபதேசம் செய்யத் தக்கவனான நீ என்னிடம் ஞானோபதேசம் பெற விரும்புகிறாய். உனக்கு இந்த ஞானம் எப்படி வந்தது என்று கூறு எனக்கேட்டார். அதற்கு அலர்க்கன் நடந்தவற்றைக் கூறி ஐம்புலன்களால் இழுக்கப்பட்டு ஓயாமல் அலைந்து கொண்டிருக்கும் மனத்தை ஒடுக்கி மெய்யறிவு பெற்று உய்யும் வழியைத் தனக்கு உத்தேசிக்க வேண்டும் என்று கோரினான். அலர்க்கனுக்குத் தத்தாத்திரேயர் ஆத்மா கடைதேறும் வழியைக் கூறினார். அரசே ஞானம் என்னும் கத்தியால் , மோகம் என்னும் மரத்தை வெட்டி வீழ்த்தி மோட்சக்கனியைப் பெற வேண்டும் என்றார். அலர்க்கன், மனம் ஒருமுகப்பட்டு ஒரு கணநேரமேனும் பிரம்மத்தில் லயிப்பதில்லை. எனக்கு எங்கே விடுதலை கிடைக்கும் என்று அவதியுறுவதாகக் கூறினான்.

யோகப்பியாசம்

அதற்குத் தத்தாத்திரேயர், மனத்தை ஒருமுகப்படுத்த பயிற்சி அவசியம். பிராணாயாமத்தினால் மனத்தின் மாசு நீங்கி பரிசுத்தமடையும் என்றார். மேலும், பிராணனை அடக்குவது, யோகப்பயிற்சி பற்றிக் கூறினார். மனமாசு நீக்கப்பட்டு தூய்மையாக்குவது துவஸ்தி; இகபர சுகங்களில் பற்றற்ற நிலை பிராப்தி; கிரகங்கள், தேவதைகள் நினைத்த போது தோன்றக்கூடிய நிலைமை ஸம்லித்; பற்றற்ற தூயமனமாகும் நிலை பிரசாதம் என யோகப்பியாசத்தில் நான்கு வகைகள் ஆகும்.

யோக ஆதாரங்கள்

யோகத்திற்கு மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்கள்.

யோகி எப்படிப்பட்டவர்

யோகிக்கு வேத சாஸ்திரப்பொருள்கள் தாமே தோன்றும் நிலை பிரதியை என்றும், ஒலிகள் பொருளுடன் காதில் விழும் நிலை சிராவணம் என்றும், எட்டுவகைத் தேவகணங்களையும் தரிசிக்கும் நிலை தேவம் என்றும், அனைத்து ஆசாரங்களையும் கைவிட்ட நிலை பிரம்மம் என்றும், மனம் தானாய்ச் சுழலும் நிலை ஆவர்த்தம் என்றும் கூறப்படும். யோகி தானம், யாகம் அனுசரிப்பதில்லை. அஷ்டமா சித்திகளைப் பெற ஆசைப்படுவதில்லை. வேதத்தைவிட யஜ்ஞமும், யஜ்ஞத்தை விட ஞானமும், ஞானத்தை விடத் தியானமும் சிறந்தவை.

மரணத்தை முன்கூட்டி அறிதல்

துருவநட்சத்திரம், சுக்கிரன் கண்களுக்குத் தெரியாவிட்டால் ஓராண்டில் மரணம். கிரணங்களின்றி சூரியன் கண்ணுக்குத் தெரிந்தால் பதினாரு மாதத்திலும், மல ஜலங்கள் சொர்ணமயமாய் கனவில் காணப்பட்டால் பத்து மாதத்திலும், பூதம், பிரேதம், யாசகம் சொர்ணமயமான மரங்களைக் கனவில் கண்டால் ஒன்பது மாதத்திலும், பருமனானவன் திடீரென இளைத்தலும், இளைத்தவன் பருமனானாலும் எட்டு மாதத்திலும், சேற்றில் காலடி பாதியாகத் தெரிந்தால் ஏழு மாதத்திலும், தலையில் காக்கை, கழுகு உட்கார்ந்தால் ஆறு மாதத்திலும், காக்கை (அ) குருவிக்கூட்டம் தலைமேல் விழுந்தால் ஐந்து மாதத்திலும், தனது நிழல் வேறாய் காணப்பட்டால் நான்கு மாதத்திலும், மேகமின்றி மின்னல் தோன்றினாலும், இரவில் வானவில் தோன்றினாலும், இரவில் வானவில் தெரிந்தாலும் மூன்று மாதத்திலும், கண்ணாடி (அ) நீரில் தலையில்லாமல் நிழல் தெரிந்தால் ஒரு மாதத்திலும், உடலில் பிணவாடை வீசினால் பதினைந்து நாட்களிலும், குளித்தவுடன் உலர்ந்தாலும், பருகியவுடன் நாக்கு உலர்ந்தாலும் பத்து நாட்களிலும், காதை மூடிக்கொண்டால் உள்ளிருந்த ஒலி கேட்காதபோதும் விரைவில் மரணம் ஏற்படும்.

உபதேசம் பெற்ற பலன்

இத்தகைய உபதேசத்தைக் கேட்ட அலர்க்கன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் தங்களால் நான் பிறவிப்பயனை அடைந்தேன். இதைவிடச் சிறந்த பேறு வேறெதுவும் இல்லை என்று கூறி வணங்கி ஆசிபெற்றுத் தன் நாடு திரும்பினான். அவன் அண்ணன் சுபாஹுவையும், காசிராஜனையும் கண்டு வணங்கி நாட்டை அவர்களையே எடுத்துக்கொள்ளுமாறும் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும் கூற, அவர்கள் அலர்க்கனிடம் எதிர்த்துப் போர் செய், வென்றால் நாடு, வீழ்ந்தால் வீரசொர்க்கம் என்று பரிகாசப்படுத்தினர். அதற்கு அவர்களால், தான் மேலான ஆத்ம சாம்ராஜ்ஜியத்தை அடைய வழிதெரிந்து கொண்டதாகவும், இனி எதுவும் தேவையில்லை என்றும் கூறினான். அதுகேட்ட சுபாஹு மகிழ்ச்சிக் கொண்டு தம்பியைத் தழுவிக்கொண்டு தான் வந்த காரியம் முடிந்தது என, காசிராஜன் வியப்படைந்து தனக்கும் அவ்வாறே உபதேசம் செய்யுமாறு சுபாஹுவை வேண்டினான். பின்னர் அலர்க்கன் தன் மகனுக்கு பட்டம் கட்டிவிட்டுத் தமையனோடு தானும் சேர்ந்து தவம் செய்து முக்தி அடைந்தான். இவ்வாறு பிராமணகுமாரன் தன் தந்தைக்குக் கூற அதைக்கேட்ட அந்தப் பிராமணனும் மனம் தெளிவுற்று வனம் சென்று தவம் செய்து தக்க காலத்தில் இருவரும் முக்தி அடைந்தார்கள். விந்திய மலைப் பகுதியில் குகையில் வசித்து வந்த நான்கு பறவைகளும் இந்த அரிய கதைகளை ஜைமினி மகரிஷிக்குக் கூறின.

14. படைப்புகளின் துவக்கம்

ஒவ்வொரு யுக முடிவிலும் பேரழிவு ஏற்பட, அனைத்து உயிரும் அழிந்து பரமாத்மாவில் இலயமாகின்றன. பரமாத்மா யோகுதுயில் கொள்கிறார். பகவானின் துயில் கலைய அவர் உந்தியிலிருந்து ஒரு கமலம் எழ, அதில் பிரம்மா தோன்றுகிறார். படைப்புக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்படுகிறது. படைப்பினால் பிரகிருதியும், அதிலிருந்து மஹத்தும், மஹத்திலிருந்து அகங்காரமும், அதிலிருந்து பஞ்ச தன்மாத்திகளும் தோன்றி அனுகூலமாகின்றன. பின்னர் வேதங்கள், அவற்றின் ஒலியிலிருந்து தேவர், அசுரர், பித்ருக்கள், வணிகர் என்னும் நால்வகைப் படைப்பையும் ஏற்படுத்த ஆரம்பித்தார். அடுத்து கந்தர்வர்கள், பாம்புகள், பசுக்கள், யஜ்ஞங்கள், அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் ஆகியோர் தோன்றினர். மனித ஆயுள் கிருதயுகத்தில் நானூறாகவும், திரேதாயுகத்தில் முந்நூறாகவும், துவாபரயுகத்தில் இருநூறாகவும் கலியுகத்தில் நூறாகவும் அமைகின்றது.

பலவகைப் படைப்புகள்

பிருத்தியு அலக்ஷ்மியை மணந்து பதினாறு தீயசக்திகள் பிறந்தன. அவர்களுள் துஷ்சகன் என்பவன் மிகவும் கொடியவன். அவன் மனிதர்கள், பிராணிகள் ஆகியவற்றைப் பிடித்துத் தின்ன ஆரம்பிக்கவே அவனைப் பிரம்மன் அகங்காரத்தை அடக்கி பணியவைக்கவே அவன் தனக்கு இருக்க இடமும், உண்ண உணவும் தரவேண்டும் என்று வேண்டினான். அதற்குப் பிரம்மன் அதர்ம மனிதன், உரோமம், புழு, பூச்சி, எச்சில், நாய் ஆகியவற்றால் அசுத்தப்பட்ட உணவு போன்றவை பல உணவாகும் எனக் கூறினான். இருக்க இடமாக சண்டை சச்சரவு உள்ள வீடு, சாஸ்திர நிந்தையாளர், பக்தியில்லாத பூஜை நடக்கும் இடம், காரணமின்றி உபவாசம், தக்க கல்வி யோக்கியதை இல்லாமல் யாகம் செய்பவன், இருக்கும் இடங்கள் உனக்கு. முறத்தால் வீசப்படும் காற்றை அனுபவிப்பவர், துணி பிழிந்தவர், நகக்கால் நீர், ஐந்து ஆண், மூன்று பெண், மூன்று பசு, ஐந்து எருமை, ஆறு குதிரை, ஏழு யானை, ஓர் ஆடு சேர்ந்து வசிக்கும் இடங்கள் உனக்கான இருப்பிடங்கள்.
துஷ்சகன் மனைவி நிர்மாஷ்டி. அவருக்கு எட்டுப் பிள்ளைகள், எட்டுப் பெண்கள். இவர்களால் உலகில் எல்லார்க்கும் தொல்லைகள். அவர்களுள்

1. தந்தக் கிருஷ்டி-பற்களில் வசித்துக் குழந்தையைப் பீடிப்பான்.
பரிகாரம் : அரக்கர்களைக் கொல்லும் மந்திரத்தைச் செபித்து வெள்ளைக்கடுகை இறைத்தால் இப்பீடை விலகும்.
2. உத்தி என்பவன் வாக்கினால் வெளிப்பட்டு சிசுக்களைப் பீடிப்பான். பகவான் நாம சங்கீர்த்தனத்தாலும், மங்கல வார்த்தைகளாலும் அவனை வெல்லலாம்.
3. பரிவர்த்தகன் என்பவன் கருவில் பிறந்த குழந்தையைப் பீடிப்பான். வெள்ளைக் கடுகினால் இவனையும் வெல்லலாம்.
4. அங்கத்ருகன் வாயுவைப் போல் பீடிப்பான். தர்ப்பைகளால் வெல்ல வேண்டும்.
5. சகுனி பறவைகளால் கெடுதலைச் செய்வான். ஆரம்பித்த காரியத்தை கைவிடுதலே நல்லது.
6. கண்ட ப்ராந்தாதி-கழுத்திலிருந்து தொல்லை கொடுப்பான். தெய்வ பிரார்த்தனை, பிராம்மணர்கள் ஆசிமூலம் இதை விலக்கலாம்.
7. கர்ப்பஹா என்பவன் கர்ப்பத்தைக் கலைப்பவன். சிவ, ராம (அ) கிருஷ்ண நாமங்களால் இவனை விரட்டலாம்.
8. சம்சயஹா எட்டாவது மகன், பயிர் பச்சைகளை அழிப்பவன், பழைய செருப்பைத் தொங்க விடுவதால் இவனை விரட்டலாம்.

1. நியோஜிஜா என்பவள், பிற ஆண் (அ) பெண் மீது ஆசையை உண்டாக்குவாள். சாஸ்திர உபதேசத்தால் இவளை விரட்டலாம்.
2. விரோகினி-குடும்ப அங்கத்தினர்களிடையே பகைமை உண்டாக்குவாள். நல்ல எண்ணம் கொள்ளுதல், பொறுமையால் இவளை வெல்லலாம்.
3. சுவயம்ஹரி-பண்டங்களைக் கெடுப்பவள். ஹோமத்தினால் அவள் பீடை அகலும்.
4. பிராமணி-சித்த சஞ்சலம் உண்டாக்குவாள். வெள்ளைக் கடுகால் இவளை அடக்கலாம்.
5. ருதுகாரிகா-ருதுமூலம் பெண்களைக் கெடுப்பவள். நதியில் நீராடுவதால் இவளை வெல்லலாம்.
6. ஸ்மிருதிஷா-நினைவை மறக்கச் செய்வாள். தியானத்தால் வெல்லலாம்.
7. பீஜஹாரிணி-ஆண்களின் பீஜத்தைக் கெடுப்பவள். புனித நீராடல், தூய்மை, குறைவான உணவு பழக்கங்கள் மூலம் இவளை வெல்ல வேண்டும்.
8. துவேஷினி-எல்லோரும் வெறுக்கக் கூடிய காரியங்களைச் செய்யக்கூடியவள் ஹோமம், பூஜை ஆகியவற்றால் இவளை வெல்லலாம்.
இவ்வாறு துஷ்சனுடைய சந்ததியினால் ஏற்படும் தொல்லைகளும் அவற்றிற்கான பரிகாரமும் சொல்லப்பட்டன. இயமன் கழுகு உருவையும், காலன் காக்கையின் உருவையும், நிருதி கோட்டான் உருவையும், வியாதி பெருங்கழுகின் உருவையும் எடுத்தால் அவை உட்கார்ந்த வீட்டில் வசிக்கலாகாது.

பெண்கள் கவனத்துக்குரிய சில செய்திகள்

1. கரண்டியில் நெருப்பை எடுத்தால் வீட்டில் சண்டை ஏற்படும்.
2. கோள் சொல்லுபவள் வீட்டில் இலட்சுமி தங்கமாட்டாள்.
3. சுத்தமாய் கால் கழுவாமல் சமையலறையும் நுழைந்தாள் மூதேவி தொடர்வாள்.
4. குளிக்காமல் உணவு உண்டால் நோய் ஏற்படும்.
5. கர்ப்பிணிகள் சம்போகத்தை விரும்பக்கூடாது.
6. இரவில் மரத்தின் நிழல், மயானம் போன்ற இடத்தை அணுகக்கூடாது.
7. குழந்தை இருக்கும்(அ)பிறக்கும் அறையில் தூபதீபம் அவசியம். இன்றேல் ஆபத்து உண்டாகும்.

உருத்திரன் தோற்றம்

படைப்பின் துவக்கத்தில் பிரம்மன் தன்னைப்போல் ஒரு தேவன் தேவை என எண்ண, அவர் மடியில் ஒரு குழந்தை அழுதுகொண்டே தோன்றியது. அக்குழந்தை அழுதுகொண்டே பிறந்ததால் உருத்திரன் என்று பெயர் பெற்றது. ஒவ்வொரு முறை அழும்போதும் ஒரு பெயர் பெற்றார். அவை முறையே பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்ரன், மகான் என்பவை. கீழ்க்கண்ட எட்டு ஆலயங்களைக் காட்டில் அவற்றில் எட்டு மனைவிகளுடன் வசிக்கும்படி ஏற்பாடு செய்தார். சூரியன், சந்திரன், பஞ்சபூதங்கள், தீட்சிதர் ஆகிய எட்டு ஆலயங்கள்.

15. மந்வந்தரங்கள் வரலாறு (ஸ்வரோசிஸ் மந்வந்தரம்)

தானே சுயமாக தோன்றிய பிரம்மன் சுவயம்பு எனப்பட்டான். அவனது அருளால் தோன்றிய பிரியவிரதன் ஸ்வயம்பு மனுவானான். ஸ்வயம்பு மனுவிலிருந்து துவங்கி ஸ்வரோசிஸ, உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷúஷ மனுக்கள் காலம் அதே பெயரில் மந்வந்தரங்கள் எனப்பட்டன. அடுத்து வைவஸ்வத மந்வந்தரம், ரௌச்ய மந்வந்தரம், பௌத்ய மந்வந்தரம் என்று மந்வந்தரங்கள் பல.

ஸ்வரோசிஸ மனு

வருணை நதிக்கரையில் ஓர் உத்தம பிராம்மண கிரகஸ்தர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் ஒரு விருந்தினர் வந்தார். அவரை நன்கு உபசரித்து அவருடைய தேஜஸைக் கொண்டு வியப்புற்று அவரிடம் இளம் வயதில் அவர் பூலோகம் முழுவதும் சுற்றிவருவது எவ்வாறு சாத்தியமாயிற்று, தனக்கும் உலகம் சுற்றும் ஆசை இருப்பதாகக் கூறினான்.

அந்தணரும் விருந்தினரும்

அதற்கு விருந்தினர் தன்னிடம் உள்ள மந்திர சக்தியால் அது முடிந்தது என்றும், அந்த மந்திரத்தை அந்தணருக்கு உபதேசிப்பதாகவும் அது குறுகிய காலத்தில் முழுவதும் பலிக்காது என்றும் கூறி, அவரது காலில் சித்தாஞ்சனம் என்னும் மையைத் தடவுவதாகவும் அதன் உதவியால் விரும்பிய இடம் செல்லலாம் என்றும் கூறி, ஆனால் மை கரைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்துவிட்டு சென்று விட்டார் அந்த விருந்தினர்.

வர்தினி என்னும் அப்சரஸ்

முதலில் அந்தணர் விந்திய மலைக்குச் சென்று சுற்றித் திரிந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட எண்ணியபோது மை கரைந்து விட்டதைக் கவனித்து இனி எங்கும் செல்ல முடியாதென்று அங்கேயே தங்கிவிட அங்கு வந்த வர்தினி என்ற அப்சரஸ் அந்தணரிடம் ஏற்பட்ட காதலால் உள்ளம் உருகி அவரை அடைய எண்ணினாள். அதற்குள் அந்த அந்தணர் அக்கினி பகவானைப் பிரார்த்தித்து காருக பத்தியம் என்னும் சோதியை தம்முள் வளரச் செய்ய அவளால் அவரை நெருங்க முடியவில்லை. அந்தணரும் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். அப்சரஸ் அந்த அந்தணரை மறக்க முடியாமல் அவர் நினைவிலேயே இருக்கையில் அங்கு வந்த கந்தர்வன் அவள் மனநிலையை அறிந்து அந்த அந்தணர் உருவில் அவளுடன் சேர இருவரும் உல்லாசமாய் இன்பவாழ்க்கை நடத்தினர். அவள் கருவுற்றதை அறிந்த கந்தர்வன் மறைந்து விட்டான்.

ஸ்வரோசிஸ்

சில நாட்களுக்குப்பின் அவளுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதற்குத் தேவர்கள் ஸ்வரோசிஸ் என்று பெயரிட்டனர். அவன் சகல கலைகளையும் குருகுலத்தில் கற்றான். தந்தை கந்தர்வனை போல் சஸ்திர வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான். அவன் ஒருநாள் மந்திர மலைச்சாரலில் உலாவுகையில் ஓர் அபலை அபயம், அபயம் என்று அலற, அவளை அணுகி அவளுடைய துன்பம் என்ன என்று கேட்டான்.

ஸ்வரோசிஸ், மனோரமை

அப்போது அவள் தன் பெயர் மனோரமா என்றும், ஒரு வித்தியாதரன் மகள் என்றும், தோழிகள் விபாவரி, கலாவதி ஆகியோருடன் சிவனைத் தரிசிக்க கயிலை செல்லும் வழியில் அவர்கள் ஒரு மெலிந்த அந்தணரைக் கண்டு சிரித்ததால் கோபம் கொண்டு அவர் மனோரமாவை உடல் பருத்த ஓர் அரக்கனால் துன்பப்படக் கடவாய் என்றும், மற்ற இருவரையும் தொழுநோயாளிகளாகவும் சபித்தார். அவர் சாபப்படி தன்னைப் பூதம் போன்ற ஓர் கரிய அரக்கன் தூக்கி வந்து விட்டதாகவும், அவன் குளிக்கச் சென்றிருப்பதாகவும் திரும்பி வந்து தன்னைத் தின்று விடுவான் என்றும் கூறினாள். ஸ்வரோசிஸ் அவளைக் காப்பதாகக் கூற, அவன் கந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த இரகசிய மந்திரங்களை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். சற்று நேரத்தில் அங்கு வந்த அரக்கனுக்கும் ஸ்வரோசிஸுக்கும் நடந்த கடுமையான போரின் இறுதியில் கூரிய அம்பினால் துளைக்கப்பட்ட உடலுடன் அரக்கன் கீழே விழுந்து இறந்தான். அவன் உடலிலிருந்து ஓர் அழகிய வித்தியாதரன் வெளிப்பட அவனை மனோரமை தகப்பனெனக் கண்டு தந்தையும், மகளும் மகிழ்ச்சியுடன் இணைந்தனர். அப்போது ஸ்வரோசிஸ் அந்த விந்தியாதரனாகிய அவன் அரக்கனானக் காரணத்தைக் கேட்க அவன் அந்த வரலாற்றைக் கூறினான்.

விந்தீரவன் என்னும் அந்த வித்யாதரனின் மகள் மனோரமை. அவன் பிரம்மபுத்திரர் என்னும் ரிஷியிடம் ஆயுர்வேத வித்தையைக் கற்பிக்க வேண்ட, அதற்கு ரிஷி மறுக்க, ஆறுமாத காலம் அவள் மறைந்திருந்தே மற்ற சீடர்களுக்குக் கற்பிப்பதைக் கற்றுக் கொண்டாள். அவரிடம் தன் செயலைக் கூறி நகைக்க ரிஷி கோபம் கொண்டு அவளை அரக்கனாகுமாறு சபித்தார். அவரை வணங்கித் தனக்கு மன்னிப்பு அருள வேண்ட அவர், என் மகளையே தின்ன முயலும்போது ஓர் அரசனால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். என்று கூறிய விந்தீரவன் தன் மகள் மனோரமையையும், ஆயுர்வேத வித்தையையும் அளிப்பதாகக் கூறி அவற்றை கற்றிடச் செய்தான்.

விபாவரி

ஸ்வரோசிஸ், மனோரமை இருவரும் காட்டில் சுற்றிவருகையில் தொழுநோயால் வருந்திக் கொண்டிருந்த விபாவரியைக் கண்டனர். மனோரமை வேண்டியபடி மன்னன் அவள் நோயைத் தீர்த்திட, அவள் அழகியாக மாறிட, மந்தாரன் என்னும் வித்தியாதரன் மகளான அவளை ஸ்வரோசிஸ் மணந்தான்.

கலாவதி

அடுத்து அம்மூவரும் ஒருநாள் கலாவதியைக் கண்டிட, அவளும் மன்னனால் உடல்நோய் குணமாகிவிட அவனையும் மன்னன் மணந்திட்டான். கலாவதி, பாரன் என்னும் முனிவருக்கு புஞ்சிகஸ்தவை என்னும் முனிவருக்கு புஞ்சிகஸ்தவை என்னும் அப்சரஸ் மூலமாகப் பிறந்தவள். ஏற்கனவே அம்பிகை கூறியபடி மன்னனுக்கும், கலாவதிக்கும் திருமணம் நடந்தது. இவ்வாறு மூன்று மனைவியருடன் ஸ்வரோசிஸ் ஒரு நாள் ஒரு தடாகத்தில் நீந்திக் கொண்டிருக்க, அங்கிருந்த இரண்டு அன்னங்களில் பெண் அன்னம், ஆண் அன்னத்திடம் ஸ்வரோசிஸ் மன்னனைப் போல் பல பெண்களிடம் ஆசையில்லாமல் என்னிடமே ஆசை வைத்திருப்பது என்னுடைய பாக்கியம் என்றது. அதைக்கேட்டு வெட்கப்பட்ட மன்னன் வேறிடம் சென்றான். அவ்வாறே பின்னர் இரண்டு மான்கள் ஒன்றாக இருப்பதைக் கண்ட மன்னன் அவை பேசுவதையும் கேட்டான். அதில் ஆண்மான், பெண் மானிடம் நான் ஸ்வரோசிஸ் அல்ல. வேறொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன் என்றது.

மனதில் சஞ்சலம் ஏற்பட்ட மன்னன் தன் மனைவிகளிடம் பாராபட்சமின்றி நடந்து கொண்டான். சிறிது காலம் சென்றபின், மனோரமைக்கு விஜயனும், விபாவர்க்கு பேருநந்தனும், கலாவதிக்கு பிராபவனும் பிறந்தனர். அவர்களுக்குத் தக்க வயது வந்தவுடன் அவர்களுக்குக் கல்வி கற்பித்து யுக்த வயதில் மூன்று பேர்க்கும், மூன்று நாட்டை அளித்து ஆட்சி செய்ய அனுப்பி வைத்தான்.

ஸ்வரோசிஸ் வனதேவதை

ஒரு நாள் ஸ்வரோசிஸ் காட்டில் ஒரு பன்றியைக் குறிவைக்க, அப்போது ஒரு பெண் மான் குறுக்கே வந்து துயரக்கடலில் இருக்கும் தன்னை முதலில் கொல்லுமாறும், தன்னைக் கணவன் விட்டு விட்டு வேறு மனைவிகளுடன் உல்லாசமாய் திரிவதே தன் துயரத்துக்குக் காரணம் என்றும் கூறியது. அப்போது மன்னன் அதன் கணவர் யார் என்று கேட்க, அது மன்னனைத் தனது முதுகைத் தொட்டுப் பார்க்க கூற, மன்னன் தொட, அது பெண்ணாக மாறி, தான் வனதேவதை என்றும், மன்னனால் தான் ஒரு மகனைப் பெற தேவர்களின் விருப்பப்படி வந்திருப்பதாகக் கூறிற்று. ஸ்வரோசிஸ் அவளை மணந்து தியுதிமான் என்னும் மகனைப் பெற்றான். இந்நிலையில் ஒருநாள் ஒரு பெண் அன்னம், தன் புருஷனாகிய ஆண் அன்னத்திடம் இவ்வளவு காலமாகியும் இல்லற வாழ்வில் ஆசை விடாத இவன் என்ன மனிதன் என்று ஏளனமாய்க் கூறியது. மன்னன் அக்கணமே தன் தவறை உணர்ந்து, தன் மகனுக்குப் பட்டம் வைத்துவிட்டுத் தவம் செய்வதற்காகக் கானகம் சென்றான். ஸ்வரோசிஸும், அவன் சந்ததியாரும் புவியை ஆண்ட காலம் ஸ்வரோசிஸ் மந்வந்தரம் எனப்பெயர் பெற்றது.

16. உத்தம மந்வந்தரம் உத்தமன் மனைவி

உத்தானபாதன் மகன் உத்தமன் நீதி தவறாமல் ஆண்டு வந்தான். அவன் மனைவி பகுளை, அவனை மதிக்காமல் நடந்து வந்தாள். ஒருநாள் விருந்து ஒன்றின் மன்னன் மனைவிக்கு மதுவை கொடுத்து அருந்தச் சொல்ல, அவள் மறுத்ததால் மற்றவர்கள் சிரித்தனர். அதனால் கோபமடைந்த உத்தமன் தன் மனைவி பகுளையை மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் விட்டு விட்டு வந்தான்.

பிராம்மணன் வேண்டுகோள்

சில காலத்திற்குப்பின் ஓர் அந்தணன் மன்னனிடம் வந்து தன் மனைவியை யாரோ ஒருவன் வலியத் தூக்கிச் சென்று விட்டதாகவும் அவளைக் கண்டுபிடித்து மீட்டுத் தரவேண்டும் என்றான். அப்போது மன்னன் அவள் அடையாளங்கள் பற்றிக் கேட்க, அப்பிராமணன் தன் மனைவி, கறுப்பாக, கட்டையாக, கழுகைப் போன்ற கொடூர பார்வை, ஒருகை நீளமாகவும், மற்றொன்று குட்டையாகவும், உடல் பருத்தும், தலை சிறுத்தும், அவலட்சணமாக இருப்பாள் என்று கூறினான். அதுகேட்ட மன்னன் அந்தணனிடம், அழகான அவன், அவலட்சணமான அவளை விட்டுவிட்டு வேறொருத்தியை மணந்து கொள்ளுமாறு கூறிட, அந்தணர் தர்மத்தின் வழியைப் பின்பற்றுபவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். தன் மனைவியை வேறொருவன் அடைய நேர்ந்தால் அதனால் குலநாசம் ஏற்படும். அதைத் தவிர்ப்பது தன் கடமை என்று கூறி அதனால் விரைவில் மனைவியை மீட்க விரும்புவதாகக் கூறினான்.

உத்தமனும், முனிவரும்

மன்னன், அந்தணன் மனைவியைத் தேடித் தேரேறி புறப்பட்டவன் காட்டில் ஒரு முனிவர் ஆசிரமத்தை அடைய, அவனை உபசரிக்க அர்க்கிய பாத்திரங்களை முனிவரின் சீடன் கொண்டுவர முனிவர் அரசனுக்கு அர்க்கியம் அளிக்கவில்லை. மன்னன் அதற்கான காரணத்தைக் கேட்க, முனிவர் அரசன் தன் மனைவியைத் தியாகம் செய்ததால் அர்க்கியம் பெறத் தகுதி இல்லாதவன் என்று கூறினார். அப்போது மன்னன் முனிவரிடம், தான் தேடி வந்த பிராம்மணனின் மனைவி எங்கிருக்கிறாள் என்று ஞான திருஷ்டியால் அறிந்து கூறுமாறு வேண்டினார்.

உத்தமன் அந்தணர்க்குச் செய்த உதவி

முனிவர் ஞான திருஷ்டியால் உணர்ந்து, பிராமணன் மனைவியைப் பாலகன் என்னும் அரக்கன் வேறொரு வனத்தில் வைத்து இருப்பதைக் கூற மன்னர் விரைந்து சென்று அந்தணர் மனைவியைக் கண்டு கொண்டான். அப்போது அங்கு வந்த அரக்கன், மன்னனிடம் தான் அவரை வரவேற்று உபசரித்தான். வியப்புற்ற அரக்கனிடம் மன்னன் அந்தணன் மனைவியை எடுத்து வரக்காரணம் என்ன? என்று கேட்டான். அப்போது அரக்கன் பிராமணன் சாஸ்திர விதிகளின்படி யாகங்களைச் செய்து முடிப்பதால் அவ்விடங்கள் வாழ இயலவில்லை என்றும், அவர் மனைவியைப் பிரித்து விட்டால், அவன் யாகம் செய்தால் பலனளிக்காது என்றும் கூறினான். அரசன் அவளைக் கொண்டுபோய் அந்தணனிடம் சேர்க்குமாறு கட்டளையிட்டான். அரக்கன் அவர்கள் உணவுக்கு வழி யாது என்று கேட்க, அவனிடமுள்ள துராசாரத்தை ஆகாரமாய் ஏற்று இவளை விட்டு விடுமாறு கூறினான். அதனால் தன்னிடம் வந்து சேர்ந்த மனைவியைக் கண்டு அந்தணன் ஆனந்தமடைந்தான்.

முனிவர் உத்தமனுக்கு உதவியது

உத்தமன் மறுபடியும் முனிவரை அடைந்து தன் மனைவி இருக்கும் இடத்தை ஞானதிருஷ்டியால் அறிந்து கூறுமாறு வேண்ட அவர் அறிந்து கூறினார். உத்தமன் மனைவி பகுளையை கபோதன் என்னும் நாகராஜன் கண்டு மோகித்து அவளைப் பாதாள லோகத்திற்குத் தூக்கிச் சென்றதாகவும் ஆனால் அந்த நாகராஜன் மனைவியும், மகளும் அவள் கற்பைக் காப்பதற்காக ஏகாந்தமான இடத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும் கூறினார். உத்தமன் மறுபடியும் முனிவரிடம் அவள் மனைவி குற்றமெதுவும் செய்யாதவளாக இருந்தும் தன்னை மதியாமல் நடந்ததேனோ! என்று வினவ முனிவர் ஞானதிருஷ்டியால் அறிந்து அவர்கள் திருமண காலத்தில் கிரகங்கள் சரியான நிலையில் இல்லாததே அதற்குக் காரணம் என்றார்.

உத்தமன் நாட்டிற்குத் திரும்பி பிராமணனிடம் தன் மனைவியின் நிலையை எடுத்துக்கூறி தனக்கு உதவ வேண்ட, அந்தணர் அரசன் மனைவி மனம் மாறி அனுகூலமாய் இருப்பதற்காக ஏழு முறை ஒரு யாகம் செய்து வைத்தான். பிறகு மன்னன் தனது மனைவியை அழைத்து வருமாறு அரக்கனிடம் கூற, அவனும் பாதாள லோகம் சென்று பகுளையை மீட்டுக் கொண்டு வந்து மன்னனிடம் சேர்ப்பித்தான்.

பகுளையும் நாந்தியும்

பகுளை மன்னனிடம் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டியதுடன், தனக்காக நாகராஜன் மகள் நாந்தை ஊமையாகி இருப்பதைக் கூறி அவளுக்கு மீண்டும் பேசும் சக்திவரச் செய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டான். இதனை மன்னன் பிராமணனிடம் கூற அவன் கலைமகளைக் குறித்து ஒரு யாகம் செய்ய, கலைமகள் அருளால் நாந்தை மீண்டும் பேசும் சக்தியைப் பெற்றான். நாந்தை பூலோகம் வந்து தனக்குப் பேச்சுச் சக்தி அளித்ததற்கு பிரதி உபகாரமாய் உத்தமன், மந்வந்தர கர்த்தாவாக விளங்கத்தக்க புத்திரன் வேண்டும் என்று சொல்ல நாககன்னியின் அருளால் உத்தமனுக்குப் பகுளையிடம் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. உத்தம மந்வந்தரம் அவனால் துவங்கியது.

17. தாமஸ மந்வந்தரம் மன்னன் ஸ்வராஷ்டிரன்

ஸ்வராஷ்டிரன் என்ற ஒரு மன்னன் முன்னொரு காலத்தில் ஆண்டு வந்தான். அவன் சூரியனை நோக்கித் தவம் செய்து ஆயிரம் ஆண்டு காலம் வாழும் வரம் பெற்றான். அது அவனுக்கு மகிழ்ச்சி தரவில்லை. ஏனென்றால் அவனது உற்றார் உறவினர் அனைவரும் இறந்து போக அவன் மட்டுமே தன்னந்தனியாய் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு அவன் துயருற்ற சமயத்தில் அண்டை நாட்டு மன்னன் விமர்த்தன் என்பவன் படைஎடுத்து வந்து நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.

வெள்ளத்தின் நடுவில்

அனைத்தையும் இழந்த அவன் மரணபயம் இன்றி அக்கினியின் நடுவிலும், நீரின் நடுவிலும் இருந்து தவம் செய்து வந்தான். இவ்வாறு ஒருநாள் நீரின் நடுவில் தவம் செய்கையில் பெரிய வெள்ளம் வந்து அவனை அடித்துச் செல்லலாயிற்று. கும்மிருட்டு, அப்போது அவன் கையில் கயிறு போன்ற ஒன்று அகப்பட அதைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு கரையேற முயல்கையில் அது மான் என்று அறிந்தான்.

மனைவியே மானானது

வெகுநேரம் அவனும் மானும் இழுத்துச் செல்லப்பட வெள்ளம் குறைந்தது. அந்த மான் ஸ்வராஷ்டிரனிடம், மானாகிய தன்மீது ஆசை வைக்கலாமா? அதை வயிற்றிலுள்ள மகன் லோலன் ஏற்றுக் கொள்வானா? என்று கேட்க, மன்னன் மானாக இருந்தும் மனிதர் போல் பேசும் அது யார்? என்று கேட்டான். அப்போது மான் மன்னனின் முதலாவது மனைவியாகிய உத்பலாவதி என்றும், தான் இளமையில் ஆணும் பெண்ணுமாய் கூடிக் குலாவிக் கொண்டிருந்த மான்களில் ஒன்றை அம்பால் அடித்துவிட்டதாகக் கூறினாள். மேலும் ஓர் அழகிய பெண்மானைக் கண்டு ஒரு முனிவர் ஆண்மான் வடிவில் மகிழ்ந்து கொண்டிருக்க அதை அடித்து விட்டேன்.

அவள் பெற்ற சாபமும், சாபவிமோசனமும்

அதனால் கோபம் கொண்ட முனிவர் தன்னை மானாகச் சபித்ததாகவும் நான் என் கணவரால் தொடப்படும் போது மனித உடலும், ஒரு பிள்ளையும் பெற்றிடுவாய் என்று சாபவிமோசனம் அளித்ததையும் கூறினாள். மேலும் அப்பிள்ளை என் கணவனின் எதிரிகளை வென்று பேராட்சி புரிவான் என்றும் அருளினார். பலகாலம் காட்டில் மானாய் அலைந்து வந்த தான் வெள்ளத்தின் காரணத்தால் கணவனால் தொடப்பட்டு சாபவிமோசனம் அடைந்ததாகக் கூறினாள். இருட்டில் பிறந்த குழந்தைக்கு முனிவர்கள் தாமஸன் எனப்பெயரிட்டனர். அவன் சூரியனைக் குறித்து தவம் செய்து, பகைவரை வென்று பேரரசனானான். அவன் பெயரால் தாமஸ மந்வந்தரம் ஏற்பட்டது.

18. ரைவத மன்வந்தரம் முனிவர் ரித்வாக்

இமயமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்த ரித்வாக் என்னும் முனிவர் ஓர் அரசகுமாரியை மணந்தார். நீண்ட நாட்கள் கழித்து அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த உடன் தாய் இறந்து விட்டாள். இதனால் துன்புற்ற முனிவர் மகனை மறக்க முயன்றார்.

ரேவதி மண்ணில் வீழ்தல்

முனிவரின் மகன் தீயோனாகி அக்கிரம காரியங்களைச் செய்து வந்து கொண்டிருப்பதை வயோதிக நிலையில், நோயினால் பீடிக்கப்பட்டிருந்த முனிவர் கேட்டு மிகவும் வருந்தினார். அவர் கர்க்காச்சாரியரிடம் சென்று தன் மகன் தீயவனாய் மாறக்காரணம் என்ன என்று கேட்டார். அப்போது கர்க்காச்சாரியார் பிள்ளை ரேவதி நட்சத்திரத்தில் நான்காம் பாகத்தில் பிறந்ததால் தீயவனாகி விட்டான். விதியை மாற்ற முடியாதே என்றார். உடனே முனிவர் மகனைக் கெடுத்த ரேவதி மண்ணில் வீழ்ந்து மண்ணாய் போகுமாறு சபித்தார். அவ்வாறே ரேவதி விண்மீன் பூமியில் விழும்போது அதனிடமிருந்து ஓர் அழகிய பெண் தோன்றியது. அதனை பிரமுகி என்னும் முனிவர் ரேவதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். வயது வந்த ரேவதிக்குத் திருமணம் செய்ய எண்ணிய முனிவர் அவளுக்கேற்ற கணவர் யார்? என்று அக்கினி பகவானிடம் வேண்டிட, அக்கினி கிரமசீலன் என்ற அரசனுக்கு காளிந்தியிடம் பிறந்த மகன் துர்க்க மகாராஜனே அவள் கணவனாவான் என்று கூறிற்று.

ஒரு சமயம் துர்க்க மகாராஜன் வேட்டைக்குச் சென்றபோது பிரமுகியின் ஆசிரமத்தில் ரேவதியைக் கண்டு அன்பானவளே! முனிவர் எங்கே!? என்று கேட்டதைக் காதில் கேட்டவண்ணம் அங்கு வந்த முனிவர் மகாராஜனிடம், அரசே நலமா? நாட்டில் எல்லோரும் நலமா? உன் மனைவி சுகமா? என்று நலம் விசாரிக்க, மன்னன் தனக்குப் பல மனைவியர்  என்றும் யாரைப் பற்றி விசாரிக்கிறார் என்றும் கேட்க முனிவர் சற்றுமுன் அன்பானவளே என்று அழைத்தாயே அந்த மனைவியைப் பற்றிக் கேட்டதாகக் கூறினார்.

ரேவதியின் திருமணம்

அப்போது மன்னன் தற்செயலாக அவளை அவ்வாறு அழைத்தது குற்றமா என்று வினவ முனிவர் அது குற்றமல்ல அது விதி. அக்கினி பகவான் மன்னன் துர்க்கனே ரேவதிக்கு ஏற்ற பதி, என்று கூறினார். இப்போது நீயும் அவளை அன்பானவளே என்று அழைத்தது அதனை உறுதி செய்துவிட்டது என்று கூறி ரேவதியின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யலானார். அப்போது அவள் ரேவதி நட்சத்திரத்திலேயே திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று கூறினாள். ரிஷி சாபம் பெற்ற ரேவதியால் செய்யப்படுவது நல்லதல்ல என்றார் முனிவர். ஆனால் ரேவதி முனிவரிடம் அவரது தவவலிமையால் தனது தாய்க்கு மீண்டும் நட்சத்திரப்பதவி கிட்டச் செய்தால்தான் விவாகத்துக்குச் சம்மதிக்க முடியும் என்றாள்.

முனிவரும் அவ்வாறே செய்ய ரேவதி நட்சத்திரம் கூடிய சுபமுகூர்த்தத்திலேயே ரேவதி, துர்க்கமன் திருமணத்தை முனிவர் நடத்திவைத்தார். அவர்கள் இருவரும் முனிவரைக் காலில் விழுந்து வணங்கிட அவர்களுக்கு என்ன வரம் வேண்டுமென்றார் முனிவர். தங்களுக்கு மந்வந்தரக் கர்த்தாவாகிய புதல்வன் பிறக்குமாறு அருள்புரிய வேண்டிட அவ்வாறே அவரும் வரம் அளித்தார். ரேவதியின் மகனாகிய ரைவதன் பெயரால் ரைவத மந்வந்தரம் உண்டாயிற்று.

19. சாக்ஷúஷ மந்வந்தரம் குழந்தைகள் மாற்றப்படல்

அநமித்திரன் மனைவி பத்ரை பிறந்து பத்து நாட்களே ஆன குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்க, அது அவளைப் பார்த்துச் சிரிக்க, அவள் அதற்கான காரணத்தைக் கேட்க குழந்தை வெளியில் மார்ஜாரி, ஜாதக ராணி என்ற இரு பூதங்கள் தன்னைத் தூக்கிச் செல்லக் காத்திருப்பதைக் கூறிற்று. இதனால் பயமடைந்த பத்ரை உதவிக்குத் தாதிகளை அழைத்து வெளியே செல்ல ஜாதகராணி (பூதம்) அந்தக் குழந்தையைத் தூக்கிச் சென்று விக்ராந்தன் என்னும் மன்னன் மனைவி ஹைமினியின் பக்கத்தில் வைத்து விட்டு, அவள் குழந்தையை எடுத்துப்போய் ஒரு பிராமணன் மனைவியின் பக்கத்தில் வைத்துவிட்டு பிராமணன் குழந்தையைக் கொன்று தின்று விட்டது.

மன்னன் விக்ராந்தனும், ஆனந்தனும்

மன்னன் விக்ராந்தன் அக்குழந்தைக்கு ஆனந்தன் எனப்பெயரிட்டு வளர்த்து உரிய பருவத்தில் பூணூல் அணிவிக்கும் சமயம் குரு தாயை வணங்கிவிட்டு வருமாறு கூற அவன் பெற்ற தாயையா! வளர்த்த தாயையா! என்று கேட்டான். இதைக்கேட்ட குரு வியப்பில் ஆழ்ந்தார். அப்போது ஆனந்தன் குழந்தைகள் மாற்றப்பட்ட விவரங்களைக் கூறி, போதன் என்னும் பிராமணனிடம் பிராமணக் குழந்தை போல் வளர்ந்து கொண்டிருக்கும் அதை அழைத்துக் கொண்டு வந்து வைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி தவம் செய்யச் சென்று விட்டான் அவன்.

அந்தணன் போதன்

விக்ராந்தன், போதன் என்னும் பிராமணனைத் தேடிக் கண்டுபிடித்து, அந்தப் பிராமண தம்பதியருக்குப் பொன்னும் பொருளும் தந்து தன் குழந்தையை வாங்கிக்கொண்டு வந்து தன்னுடனேயே வைத்துக் கொண்டு அரச தர்மப்படி வளர்க்கத் தொடங்கினான். தவம் செய்யச் சென்ற ஆனந்தன் பிரம்மனைக் குறித்த தவம் செய்ய பிரம்மன் தோன்றி வேண்டிய வரம் யாது? என்று வினவ அவர் முக்தி அடைவதே தன் நோக்கம் என்றான். அதுகேட்டு மகிழ்ச்சியுற்ற பிரம்மன் கிருதயுகத்தில் அவன் முக்தி பெறுவான் என்றும், எனவே இல்லறம் ஏற்று, மந்வந்தரத்துக் காரணமாகி நற்புதல்வர்களை ஈன்று பூவுலகு செழிப்படையச் செய்யுமாறு கூறினார். அதற்குப் பின் ஆனந்தனுக்கு சாக்ஷúஷன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் உக்ரராகன் மகள் சாதையை மணந்து மக்களைப் பெற்று ஆட்சி புரிந்து வந்தான். அவன் பெயரால் சாக்ஷú மந்வந்தரம் ஏற்பட்டது.


© Om Namasivaya. All Rights Reserved.