மணிமேகலை

5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை

ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு

அஃதாவது: பளிக்கறைக் குள்ளிருக்கின்றாள் மணிமேகலை என்றறிந்த உதயகுமரன் அவளைக் கைப்பற்றுதற்கு முயன்றும் மாட்டாமையால் இகழ்ச்சி மொழி சில கூறி இவளை இனி யான் சித்திராபதிவாயிலாய் எய்துவேன் என்று காமத் துன்பத்தோடே அச் சோலையை விட்டுப் போயினன் பின்னர்ப் பளிக்கறையினின்று வெளிவந்த மணிமேகலை தன்னெஞ்சமும் நிறை கடந்து அவன் பின்னே செல்லலுற்றது. காமம் பெருவலியுடைய தொன்று போலும் என்று அதனை வியந்து நிற்கின்ற பொழுது இந்திர விழாக்காண அந் நகரத்திற்கு வந்திருந்த மணிமேகலா தெய்வம் அப் பொழிலில் இருக்கின்ற புத்த பீடிகையைத் தொழுதன் மேலிட்டு (அந் நகரத்தில் வாழுகின்ற மாயவித்தை செய்பவளாய்) மணிமேகலைக்கும் சுதமதிக்கும் அறிமுகமாயிருந்த ஒரு மானிட மகள் வடிவத்தோடு அங்கு புத்த பீடிகையைத் தொழுதமை கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்-பளிக்கறை உள்ளே தாழ்கோல் தாழ்கோல் கோத்திருந்தமையாலேயும் அது தெய்வத் தன்மையை யுடைய பொழில் என்பது கருதியும், தான் பெருங்குடித் தோன்றலாதலானும் மணிமேகலையை வலிந்து கைப்பற்ற முயலாமலே பக்கலிலே நின்ற சுதமதியை நோக்கி மணிமேகலையினியல்புகளை மன்னன் மகன் வினவுதலும்,அவள் மணிமேகலை காமத்தை வென்றவள் சாபமிடும் ஆற்றல் உடையள் ஆதலின் பெருமான் அவளை மறந்தொழிக என்று அறிவுறுத்துதலும், அதுகேட்டு அவன் நகைத்து அவள் அத்தகையளாயினும் யான் கைப்பற்றியே தீர்வேன் என்று கூறிப் பின்னர்ச் சுதமதியின் வரலாறு வினவுதலும், அவள் தன் வரலாற்றைச் சுவைபடச் சொல்லுதலும், பின்னர் உதயகுமரன் அவ்விடம் விட்டகன்று போதலும், மணிமேகலை பளிக்கறையி னின்றும் புறம் போந்து தன்னெஞ்சம் தன்னை இகழ்ந்த அம் மன்னன் மகன் பின்னே சென்றதொன்று கூறிக் காமம் அத்தகைய பெருவலியுடையது போலுமென்று வியந்து நிற்க; மணிமேகலா தெய்வம் மானுடமகள் வடிவத்தோடு அவ்வுவவனத்தே வந்து புத்தபீடிகையைத் தொழுதலும், அந்திமாலை வரவும் அழகாகக் கூறப்பட்டுள்ளன.

இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடி
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப
பொரு முகப் பளிங்கின் எழினி வீழ்த்து
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்து
உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவி அம் கண்ணி ஆகுதல் தௌிந்து
தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி  05-010

சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன!
எத் திறத்தாள் நின் இளங்கொடி? உரை என
குருகு பெயர்க் குன்றம் கொன்றோன் அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள் ஆயின் பைந்தொடி நங்கை
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள் என்றே
தூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?  05-020

செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக! என
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
அம் செஞ் சாயல்! அராந்தாணத்துள் ஓர்
விஞ்சையன் இட்ட விளங்கு இழை என்றே
கல்லென் பேர் ஊர்ப் பல்லோர் உரையினை
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய் இழை!
ஈங்கு இவள் தன்னோடு எய்தியது உரை என
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி!
ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம்  05-030

வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்!
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய
வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு  05-040

யாங்கனம் வந்தனை என் மகள்? என்றே
தாங்காக் கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடலீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில்
பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டென்ன
நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி  05-050

தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர்காள்! நும் சரண் என்றோனை
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு
மை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக்
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
அறவோர் உளீரோ? ஆரும் இலோம்! எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர் சுடும் அமயத்துப் பனி மதி முகத்தோன்  05-060

பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
என் உற்றனிரோ? என்று எமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து
தன் கைப் பாத்திரம் என் கைத் தந்து ஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்பத் தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி
சங்கதருமன் தான் எமக்கு அருளிய  05-070

எம் கோன் இயல் குணன் ஏதம் இல் குணப் பொருள்
உலக நோன்பின் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்
அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க! என
அம் சொல் ஆய் இழை! இன் திறம் அறிந்தேன்  05-080

வஞ்சி நுண் இடை மணிமேகலை தனைச்
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று
அப் பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின்
பளிக்கறை திறந்து பனி மதி முகத்துக்
களிக் கயல் பிறழாக் காட்சியள் ஆகி
கற்புத் தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை?  05-090

இதுவே ஆயின் கெடுக தன் திறம்! என
மது மலர்க் குழலாள் மணிமேகலை தான்
சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்
இந்திர கோடணை விழா அணி விரும்பி
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
மணி அறைப் பீடிகை வலம் கொண்டு ஓங்கி
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்  05-100

முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!
காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ!
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்? என்று
எரி மணிப் பூங் கொடி இரு நில மருங்கு வந்து
ஒரு தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்
புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி
பல் மலர் சிறந்த நல் நீர் அகழிப்  05-110

புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
வாயில் மருங்கு இயன்ற வான் பணைத் தோளி
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
எதிர் எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை
ஆர் புனை வேந்தற்குப் பேர் அளவு இயற்றி
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
ஒரு பெருங் கோயில் திருமுகவாட்டி
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும்  05-120

வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்க
பூம் பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு
ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரிக் குரல் அழைஇ
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவளச் செங் கால் பறவைக் கானத்து
குவளை மேய்ந்த குடக் கண் சேதா  05-130

முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
கன்று நினை குரல மன்று வழிப் படர
அந்தி அந்தணர் செந் தீப் பேண
பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என்  05-141

உரை

பளிக்கறையின் புறந்தோன்றிய மணிமேகலையின் உருவத்தைக் கண்ட உதயகுமரன் ஓவியமென்றே கருதி வியத்தல்

1-7: இளங்கோன்.........வியப்போன்

(இதன் பொருள்) இளங்கோன் கண்ட இளம் பொற்பூங்கொடி விளக்கு ஒளி மேனி- இளவரசனாகிய உதயகுமரன் கண்ட பளிக்கறைப் புறத்தே புறப்படவிட்ட இளமையுடைய பொன்னிறமான காமவல்லி போல்வளாகிய மணிமேகலையின் விளங்குகின்ற ஒளியுடைய திருமேனியை; விண்ணவர் வியப்ப-அமரர்களும் வியங்கும்படி; ஓவியன் பளிங்கின பொருமுக எழினி வீழ்த்து-ஓவியத் துறை கை போகிய ஓவியப் புலவன் ஒருவன் பளிக்குநிறம் உடையதொரு பொருமுக எழினி என்னும் திரைச் சீலையைத் தூங்கவிட்டு அதன்மேல் தான வரையும் ஓவியம்; திருவின் செய்யோள் ஆடிய பாவையின்-செல்வததிற் கியன்ற தெய்வமாகிய திருமகள் மேற்கொண்டு ஆடிய கொல்லிப் பாவையின் உருவம் போன்று; விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப-மணங்கமழும் மலரம்புகளையும் மீனக் கொடியையும் உடைய காமவேளின் குறும்பினாலே தன்னைக் கண்டோருடைய உருவத்தை மாறுபடுத்த வேண்டும் என்று; உள்ளத்து உள்ளியது-தன் உள்ளத்திலே கருதி வரையப்பட்டதோர் ஓவியமே என்று கருதி; வியப்போன்-மருண்டு நோக்குபவன்; என்க.

(விளக்கம்) உதயகுமரன் பளிக்கறையின் உள்ளிருந்து தோன்றும் மணிமேகலையின் விளங்கொளிமேனியை அதனுட்புறத்தே சிறந்த ஓவியனால் வரையப்பட்டதோர் ஓவியமே என்று கருதி அவ்வோவியம் தனது காமத்தைப் பெருக்கி உடம்பை மெலிவித்தலாலே. இதனை எழுதியவன் இவ்வோவியம் தன்னைக் கண்டோரை இவ்வண்ணம் மெலிவித்தல் வேண்டும் என்று கருதியே வரைந்திருத்தல் வேண்டும் என்று துணிந்து பின்னும் அவன் கலைத்திறத்தை வியந்து நிற்கின்றான் என்பதாம்.

பொற்கொடி-கற்பகத்தின் மேற்படரும் ஒரு வானுலகத்துப் பூங்கொடி. ஈண்டு மணிமேகலையின் நெஞ்சமும் உதயகுமரன் என்னும் கற்பகத்தின் மேற்படர்தலின் அப் பொற்கொடியையே உவமை எடுத்தார். இது கருத்துடை அடைகொளி என்னும் அணியின் பாற்படும். பாவை கொல்லிப்பாவை. அஃதாவது-திருமகள். போர்க்கு வந்தெதிர்ந்த அசுரர் போகித்து மெலிந்து வீழும்படிபுனைந்துகொண்டதொரு பெண்மைக்கோலம். இவ்வுருவம் கொல்லிமலையின் மேற்புறத்திலே வரையப்பட்டுளதென்றும் அதனைக் கண்டோர் அப் பொழுதே மோகித்து மயங்குவர் என்றும் கூறுப. இவ்வோவியனும் அப்பாவையுருவத்தைக் கண்டோரை மயக்குறுத்தும் கருத்தோடு இதனை இங்கு வரைந்துள்ளான் என்று இம்மன்னன் மகன் கருதுகின்றான். என்னை? அதுகானும் தன்னைப் பெரிதும் மோகித்து மயங்கும்படி செய்தலான். பாவையைக் கண்டவுடனே காமவேள் குறும்பும் கண்டோர் உளத்தே தோன்றி அவற்றின் மெய்ப்பாட்டையும்  தோற்றவித்து உருவத்தை மாறுபடுத்துதலின் இங்ஙனம் உடனிகழ்ச்சிப் பொருளுடைய ஒடு உருபு பெய்து கூறியவாறு காமவேளின் செயலும் உடன் தோன்றுதல் பற்றி அவனுடைய மலரம்புகளையும் உடனோதினன். பளிங்கின் நிறமமைந்த படாஅஞ் செய்து அதன்மேல் எழுதியிருத்தலின் அது வியத்தகு செயலாயிற்று. தன்னை அது தன்பாலீர்த்தலின் உருவம் பெயர்ப்ப உள்ளியதிது என்று கருதினன்.

உதயகுமரன் செயலும் சொல்லும்

8-12: காவியம்.......உரையென

(இதன் பொருள்) காவியக் கண்ணி ஆகுதல் தெளிந்து-வியந்து கூர்ந்து நோக்கிய உதயகுமரன் அதன் கண்ணழகிலீடுபட்டு நெடிது நோக்கியவழி அவை இமைத்தலைக் கண்டு நீலமலர் போலும் கண்களையுடைய மணிமேகலையே இவள் ஓவியம்
அல்லள் என்று ஐயந்தெளிந்து அவளைக் கைப்பற்றுதற் பொருட்டு; ஒளி தாழ் மண்டபம் தன் கையின் தடைஇச் சூழ்வோன்-ஒளி தங்கியிருக்கின்ற அப் பளிக்கறை மண்டபத்துள்ளே தானும் புகவிரும்பி அதற்கு வாயில் காணுதற்கு முயன்று அஃதிருக்குமிடம் அறிதற்குத் தன் கையாலே தடவிப் பார்த்தவண்ணம் அதனைச் சுற்றி வருபவன்; சுதமதி தன்முகம் நோக்கி-சுதமதியை நோக்கி நங்காய் இம் மண்டபம் சாலவும் அழகியது காண்; சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன-இதனுள் நான்கு பக்கங்களினும் ஓவியங்களாகிய கலைஞர் செய்தொழிறறிறம் செறிந்துள்ளன ஆதலால் என்று கூறிய பின்னரும் அவளை நோக்கி; எத்திறத்தாள் நின் இளங்கொடி உரை என-இவை கிடக்க; உன் தோழியாகிய மணிமேகலை எத்தன்மையுடையவள் இதற்கு விடைதருதி என்றிரப்ப என்க.

(விளக்கம்) மணிமேகலை ஓவியம் என்று கருதி அதன் உறுப்புநலங்களைக் கூர்ந்து பார்த்து வருங்கால் அவள் தன்னை நோக்கியிருக்கும் அவள் கண்களில் தன்பார்வையை நேருக்கு நேர் செலுத்தியவழி அவள் காணத்தால் இமைகளை இறுக மூடிக்கொண்டனள் ஆதலின் இவ்வுருவம் மணிமேகலையின் உருவமே என்று தெளிந்து கொண்டாள் என்னும் இத்துணையும் குறிப்பாகப் புலப்படுமாறு பிற சொல்லாற் கூறாது காவியங் கண்ணி ஆகுதல் தெளிந்து என குவன் தெளிவிற்குக் காரணமான கண்மேலிட்டு அறிவுறுத்தும் நுணுக்கம் பேரின்பம் பயப்பதொன்றாம்.

பின்னும் பளிக்கறையுள்புகுந்து அவளைக் கைப்பற்றுவதே தன் கருத்தாகவும், உட்புகுதும் வழிநாடி நாற்புறமும் சூழ்வருபவன் அஃதுட் புறம் தாழ்கோத்த பளிங்குக் கதவமாதலின் உட்புகுகவும் இயலாமல் தானுற்ற ஏமாற்றத்தையும் உள்ளிருப்பவள் மணிமேகலை என்று தான் அறிந்து கொண்டமையையும் சுதமதி அறியாவண்ணம் மறைத்தற் பொருட்டு இவ்வரசிளங்குமரன் சுதமதி தன் முகம் நோக்கிச் சித்திரக் கைவினை திசை தொறும் செறிந்தன என்று கூறிக்கொள்கின்றான். என்னை தான் இம் மண்டபத்தினூடே வரைந்துள்ள ஓவியங்களைக் காண்டற்கு விழைந்தே அதனைச் சுற்றி வந்ததாகவும், பளிக்குமண்டபத்தின் நான்கு பக்கங்களினும் மணிமேகலை உருவம் தோன்றுவதனைத் தான் இதன் நாற்புறத்தும் சித்திரச் செய்வினை செறிந்துள்ளதாக நினைப்பதாகவும் அச் சுதமதி நினைப்பாளாக என்பதே அவன் கருத்தாதலின் என்க. இஃது எத்துணை நுணுக்கமான கருத்து நோக்கி மகிழ்மின்.

நன்று, ஓவியக்காட்சி கண்டாயிற்று. இனி, என்னை சுதமதியை மதியுடம்படுவித்து அவள் வாயிலாகலே மணிமேகலையை எய்தக்கருதி அதற்குத் தோற்றுவாய் செய்பவன் தான் அவள் பின்னிற்கும் தன் எளிமைதோன்ற, நின் இளங்கொடி எத்திறத்தாள் என்று நம்மனோரும் அவன் திறத்திலே பரிவுகொள்ளுமாறு வினவிச் செயலற்று நிற்றல் உணர்க. இதன்கண் மணிமேகலையை நின் இளங்கொடி என்றது நீ நினைத்தவண்ணம் அவள் நடப்பாள் அவளை என் முயற்சியால் எய்தவியலாது எனத் தான் அவள் நடப்பாள் அவளை என் முயற்சியால் எய்த வியலாது எனத் தான் அவள் பின்னிற்றலைத் தெற்றென் வுணர்த்துதல் இயலாமையின் குறிப்பாக அவள் உணரும் பொருட்டே இவ்வாறு வினவுகின்றான். இவ்வாற்றால் இக் காதனிகழ்ச்சி அகப்புறமாகி. காட்சி ஐயம் தெளிதல் மதியுடம்படுத்தல் என்னும் துறைகளை யுடையதாதலும் உணர்க

சுதமதியின் பரிவுரை

13-19: குருகு...........உரைப்ப

(இதன் பொருள்) குருகு பெயர்க்குன்றம் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி முகந்து தன கண்ணால் பருகாள் ஆயின் கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயர் கொண்ட மலையைத் தகர்த்தொழித்த முருக வேளையே ஒத்து விளங்குகின்ற நின்னுடைய இவ்விளமைப் பேரழகினை நிரம்ப முகந்து கொண்டு தன் கண்களாகிய வாயால் பருகா தொழிவாளாய்விடின பின்னர்வாய்ச் சொற்கள் என்ன பயனுமில்; பைந்தொடி நங்கை அவளுடைய அத் திட்பம் ஒன்றே அவள்; ஊழ்தரு தவத்திள் சாப சரத்தி காமற் கடந்த வாய்மையள்-பற்பல பிறப்பிலே அடிப்பட்டு வருகின்ற ஊழாலே தரப்பட்ட மாபெருந் தவத்தையுடையாளென்பதும் சாபமாகிய கொல்கணைகளையுடையாள் என்பதும் காம வேளின் குறும்புகளை யெல்லாம் கடந்துயர்ந்த மெய்யுணர்வுடையாள் என்பதும் தேற்றமாம் அன்றோ என்று; தூமலர்ச் சுதமதி உரைப்ப-தூய மலர் போன்ற உள்ளமுடைய அச் சுதமதி அவளுடைய திறம் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் இஃதென்று அறிவியா நிற்ப என்க.

(விளக்கம்) மன்னவன் மகனே உன்னைக் கண்டும் நிலைகலங்காமல் அம் மணிமேகலை இருப்பாளானால் பின்னர் அவளைப்பற்றி நீ கேட்டறிவதற்கே யாதொன்றுமில்லை. உன்னைக் கண்டுவைத்தும் உன் அழகை வாரிப் பருகாத அவள் திட்பமே அவள் மாபெருந் தவவாற்றல் உடையாள் என்பதையும் அவள் சாபமிடும் ஆற்றல் பெற்றிருப்பாள் என் பதையும் மெய்யுணர்வு பெற்றவள் என்பதையும் அறிவுறுத்தும் சான்றாகுமன்றோ என்கின்றாள். இதனால் உன்னை அவள் நேருக்குநேரே பார்த்தும் நிலைகலங்காதிருத்தலை நீயுந்தான் அறிகின்றனை. யானும் நீ மறைத்தாயேனும் அறிகின்றேன். ஆதலால் இதனை நீயே உணர்ந்து கொள்ளலாமே என்னைக் கேட்பது வீண் என்ற இடித்துரையைக் கேட்டற்கினிய மொழிகளாலே கூறும் இவள் நாநலம் வியத்தற் பாலதாம்.

உதயகுமரன் பின்னும் பின்னிலை முயறல்

19-27: சிறை...........உறையென

(இதன் பொருள்) செழும்புனல் மிக்குழீஇ சிறையும் உண்டோ காமம் காழ கொளின நிறையும் உண்டோ-அது கேட்ட உதயகுமரன் நன்று நங்காய் நீ அறியாது கூறுதி, வளவிய நீர் மிககுப் பெருகினால் அதனைத் தடுத்து நிறுத்தும் அணைதானும் உளதாமோ உளதாகாதன்றே அங்ஙனமே ஆடவராயின் என? பெண்டிர் ஆயினென்? காமப்பண்பு மிக்குப் பெருகியக்கால் அதனைத்தடுத்து நிறுத்தும் நெஞ்சுறுதியும் உளதாமோ? ஆகாது காண்; செவ்வியள ஆயின் என் செவ்வியள் ஆக என-மற்று மணிமேகலை தான் நீ கூறுமாறு காமற் கடந்த வாய்மையளாகும் செம்மையுடையளாயினுலும் அதனால் என்? அவ்வாறே அவள் செம்மையுடைளாகவே இருந்திடுக என்று கூறி; வவ்வி நெஞ்சமொடு அகல்வோன-அவள் திருவுருவத்தைக் கூர்ந்து கொண்டதொரு கள்ளவுள்ளத்தோடே அவ் வுவவனத்தை விட்டுச் செல்லத் தொடங்குபவன்; ஆயிடை-அதற்கிடையிலே மீண்டும் சுதமதியை நோக்கி; அச்செஞ்சாயல்-அழகிய செம்மையுடைய மெல்லியால் நீதானும் அராந்தாணத்துள் ஓர் விஞ்சையன் இட்ட விளங்கிழை என்று-அருகன் கோயின் மருங்கில் யாரோ ஒரு விச்சாதரனால் பற்றிக் கொணர்ந்து விடப்பட்ட பெண் என்று; கல் என பேரூர் பலலோர் உரையினை-கல்லென்று ஆரவாரிக்கும் இப் பெரிய நகரத்திலே பலராலும் கூறப்படும் கூற்றையுடையை அல்லையோ; ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி-அவ்வருகத்தானத்தே அவ்வாருகதர் உறையுமிடத்தினின்றும் விலகி; ஈங்கு ஆயிழை இவள் தன்னோடு எய்தியது உரை என-இங்குப், பௌத்தர் சங்கத்திற் சேர்த்திருக்கின்ற மணிமேகலையாகிய இவளோடு பகவனதாணையில் பன்மரம் பூக்கும் பௌத்தர் உவவனத்திற்கு வந்ததற்கியன்ற காரணம் என்னையோ? கூறுதி என்று பணிப்ப என்க.

(விளக்கம்) சுதமதி மணிமேகலையைக் காமற் கடந்த வாய்மையள் என்றதனை மறுத்து அவட்குப் பேதைமையூட்டுவான் சிறையும் உண்டோ.........செவ்வியள் ஆக என்கின்றான். இதனால் நீ காமப்பண்பின் இயல்பறிவாயல்லை; ஒரோவழி மணிமேகலைக்குக் காமம் இன்னும் காழ் கொண்டிலது போலும் அது காழ்கொள்ளும் பொழுதுதான் அவள் காமற் கடந்த செவ்வயளா அல்லளா? என்பது தெரியவரும்; அது காழ்கொள்ளும் துணையும் செவ்வியளாகவே இருந்திடுக என்று அசதியாடுகின்றான். இவ்வாறு உதயகுமரன் கூறுவதன் கருத்து மணிமேகலை தன்னைக் கண்ணிமையாது பார்த்து நின்றவள் தான் அவள் கண்ணை நோக்கிய பொழுது இமைத்துக் கண்களை மூடிக்கொண்டமையால் அவள் தன்னை பெரிதும் காதலிக்கின்றாள் என்னும் குறிப்புணர்ந்தமை யாலே; யாம் இங்கனமாகவும் அவளியல்பறியாது பேசும் சுதமதியை எள்ளிப்பேசிய பேச்சை இவை என்றுணர்க. வவ்விய நெஞ்சமொடு என்று கொண்டு அனள் உருவத்தை முழுதும் (தன்னுள்ளக் கிழியில் வரைத்து கவர்ந்து கொண்ட நெஞ்சமோடு என்பதே சிறப்பு. அவ்வியம் என்று பிரித்து அழுக்காறு என்று பொருள் கொண்டு பிறர்க்கு இவள் உரியளாதல் கூடுமோ என்பதால் உளதாகிய பொறாமை என்பாருமுளர். இங்ஙனம் கூறுவோர் அக் கூற்று அவனது ஆண்மையையே இழுக்குப்படுத்துதலை அறியார் போலும்.

இழுக்கோடு புணரா விழுக்குடிப்பிறப்பினனாதலின் கடவுள் மலர் வனத்தில் அப்பாலும் காமவிளையாடல் புரியத்துணியாது அகல்வோன் பின்னும் சுதமதியை அவளது உசாஅத்துணைத் தோழியாகவே கருதி அவளைப் பின்னும் மதியுடம்படுத்த வேண்டி அவள் வரலாற்றை நன்கறியும் பொருட்டே நங்காய் உன்னை யான் அராந்தாணத்துவிஞ்சையன் இட்ட விளங்கிழை என்னுந்துணையே அறிவேன்: அங்ஙனமாயின் இவட்கும் உனக்கும் தொடர்பு எவ்வாறுண்டாயது என்றறிய இங்ஙனம் வினவினன் என்க.

அவர் உறைவிடம் என்றது ஆருகதர் உறையும் அருகத்தானத்தை அராந்தாணம் என்பதும் அது.

சுதமதி உதயகுமரன் வினாவிற்கு விடைகூறுதல்

28-38: வார்கழல்..........பெயர்வோன்

(இதன் பொருள்) வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி நெடிய வீரக்கழலணிந்த வேந்தர் பெருமானே நீடுழி வாழ்க நின் ஆரங்கண்ணி; தீ நெறிப்படரா நெஞ்சினை ஆகுமதி-நின முன்னோர் போன்று நீதானும் தீய நெறியிலே செல்லாத நன்னர் நெஞ்சம் உடையையாகுக; வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம் கேட்டருள்-கடல் சூழ்ந்த நிலவுலகத்தை ஆளும் தகுதிமிக்கோய் யான் இவ்வுவவனத்திற்கு இம் மணிமேகலையோடு கூடி வருதற்கியன்ற காரணத்தைக் கூறுவல் திருச்செவியேற்றருள்க; யாப்புஉடை உள்ளத்து எம் அனையிழந்தோன்-என்னை இழந்ததோடன்றிக் கற்புடைமையாற் பெரிதும் தனக்குப் பொருந்திய உள்ளத்தையுடையளாயிருந்த எம் அன்னையாகிய தன் மனைவியையும் இழந்துவிட்டவனாகிய என் தந்தையாகிய; பார்ப்பன முதுமகன் படிமவுண்டியன் பார்ப்பன முதியவறான எத்தகையனோவெனின நோற்றுப் பட்டினி விட்டுண்பவனும்; மழை வளம் தரூஉம் அழலோம்பாளன் உலகிற்கு மழை வளத்தைத் தருதற்குரிய வேள்வித்தீயை முறைப்படி ஓம்புபவனும் ஆவான்காண்; பழவினைப்பயத்தால் பிழை மணம் எய்திய என கெடுத்து இரங்கி-பழவினையின் பயனாகத் தவறான மணம் எய்திய என்னை இழந்து அன்பு மிகுதியால் என பொருட்டுப் பெரிதும் இரக்கமுற்று; தன் தகவு உடைமையின்-தனக்குரிய பெருந்தகைமையை உடையவனாயிருந்தமையாலே; குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை-குரங்குகளாலே இயற்றப்பட்ட திருவணையையுடைய கடலின்கண் அமைந்த பெரிய புண்ணியத் துறையாகிய கன்னியாகுமரித் துறையில் ஆடுதற் பொருட்டு: பரந்து செல் மாக்களொடு-பரவிச் செல்லாநின்ற மாந்தரோடு கூடி; தேடினன் பெயர்வோன் என்னைத் தேடிக் காணுங் குறிக்கோளோடு வருபவன்; என்க.

(விளக்கம்) தீநெறிப்படரா நெஞ்சினையாகுமதி என்றது வாழ்த்துவது போன்று அப் பெருந்தகைக்கு இன்றியமையாத அறிவுரை கூறியவாறாம். நீயோ உலகம் ஆளும் வேந்தன்: யாமோ ஆற்றவும் எளியேமாகிய பிக்குணிகள்; எம்திறத்திலே பெருமான் ஏதம் செய்யா தொழுகுதல்  வேண்டும் என்றுநினைவூட்டுகின்றாள். மதி: முன்னிலையசை காரணம் கூறுவல் கேட்டருள் என்றவாறு.

எம்மனை-எம் அன்னை என்னையிழந்ததே யன்றியும் எம் மன்னையையும் இழந்தோன் என்பதுபட நிற்றலின் இறந்தது தழீஇய எச்சவும்மை தொக்கது. எம்மனை என்றது எம்மூர் என்றாற் போலத் தன்னுடன் பிறந்தாரையும் உளப்படுத்தபடியாம். உயர்ந்த தாய் தந்தையர்க்குத் தோன்றியும் பழவினைப் பயத்தாற் பிழைமணம் எய்தினே னல்லது என் பிழையன்று என்பாள் தந்தையையும் தாயையும் பெரிதும் பாராட்டுகின்றனள். படிமம்-நோன்பு. தன்தகவு என்றது அந்தணனுக்கியன்ற அருளுடைமையை. குரங்கு செய்கடல் என்றது செய்கடல் என்றது தென்கடல் என்னுமாத்திரையை அறிவித்து நின்றது. குரங்கு அணைசெய்த கடல் என்றவாறு. குமரி-கண்ணியாகுமரி. குமரி ஒரு நதி என்பதும் அஃது கடல் கோட்பட்டமையின் அக் கடலும் குமரிக்கடல் எனப் பெயர் பெற்ற தெனவும் கூறுப. நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் என்பது சிலப்பதிகாரம்.(8:1. என்னைத் தேடியவனாய் என்க. அங்ஙனம் அவன் தகவுடைமையை ஏதுவாக்கினள்

இதுவுமது

39-46: கடல் மண்டு.......திரிவோன்

(இதன் பொருள்) கடல் மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய வடமொழியாளரொடு வருவோன்-கடலிற் புகுதும் பெரிய துறையையுடைய காவிரியில் நீராடுதற் பொருட்டு ஈண்டு வருகின்ற வடமொழியையுடைய ஆரியரொடு கூடி வருபவன்; கண்டு என்மகள் ஈங்கு யாங்கனம் வந்தனை என்றே-என்னைக் கண்டு அந்தோ என் அருமை மகளே நீ இந்நகரத்திற்கு எவ்வாறு வந்துற்றனை என்று சொல்லி வாய்விட்டுக் கதறியழுது; தாங்காக் கண்ணீர் என்தலை உதிர்த்து-தடைசெய்தற்கியலாத அன்புக் கண்ணீரை என்தலைமேல் உதிர்த்து; ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்-பிழை மணம் பட்டமையாலே ஓதற்றொழிலை முதன்மையாகக் கொண்ட பார்ப்பன வாழ்க்கைக்குப் பொருந்தேன் ஆயதனையும் பொருளாகக் கருதாத; காதலன் ஆதலின் ஆங்குக் கைவிடலீயான்-பேரன்புடையவன் ஆதலாலே அவ்விடத்தையே என்னைக் கைவிட்டுப் பிரிதலாற்றானாகி; இரந்தூணதலைக் கொண்டு-அந்தணரில்லத்தே பிச்சை புக்குண்ணும் வாழ்க்கையை மேற்கொண்டு; இந்நகர் மருங்கின பரந்துபடு மனைதொறும் திரிவோன்-பிச்சையின் பொருட்டு இம்மாநகரத்திலே பரவலாக வமைந்துள்ள பார்ப்பனர் இல்லந்தோறும் சென்று திரிபவன்; என்க.

(விளக்கம்) கடல் மண்டு பெருந்துறை என்றது காவிரி கடலொடு கலக்கும் புகாரை. அதனாலேயே அதற்குப் புகார் நகரம் என்பது பெயராயிற்று. புகார்-சங்கமுகம். அது புண்ணியத் தீர்த்தமாதலின் நீராடு பெருந்துறையும்  ஆயிற்று வடமொழியாளர் என்றது ஆரியப்பார்ப்பனரை. என்று கதறியழுதனன் என்பது கருத்து. தாங்காக் கண்ணீர்-தடுத்தலியலாத அன்புக் கண்ணீர் என்றவாறு; ஈண்டு,

அன்பிற்கு முண்டோ அடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்             (குறள்-71)

எனவரும் பொன்மொழி நினைக்கத்  தகும். தகுதி பற்றி, பார்ப்பனர் மனைதொறும் என்றாம்.

இதுவுமது

46-55: ஒருநாள்.........கோடலின்

(இதன் பொருள்) ஒருநாள் புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன-அங்ஙனம் திரிகின்ற நாள்களுள் வைத்து ஒருநாள் அணித்தாக ஈன்ற ஆவொன்று சினந்து பாய்ந்தமையாலே அதன் கோட்டாற் கிழிக்கப்பட்ட பெரியபுண்ணை வயிற்றிலுடையவனாய்; நிணம்நீடு பெருங்குடர் கணவிரமாலை கைக்கொண்டு என்ன கையகத்து ஏந்தி-அப் புண்வழியே நிணத்தோடு கூடிய நீண்ட தனது பெருங்குடர் சரிந்துகுவது அறுந்தொழியா வண்ணம் செவ்வலரிப்பூமாலையைச் சுருட்டிக் கையிலேந்தி வருமாறுபோலே தோன்றும்படி தன் கையகத்தே தாங்கி ஏந்திக் கொண்டு; என்மகள் இருந்த இடம் என்று எண்ணி-இவ்வாரந் தாணம் என்மகள் நெடுநாள் இருந்து பழகியவிடம் என்று நினைந்து அவ்வுரிமைபற்றி; தன் உறுதுன்பம் தாங்காது புகுந்து தனக்குண்டான பெருந்துன்பம் பொறானாய் அவ்வருகத் தானத்திலே புகுத்து; சமணீர்காள் நும்சரண் என்றோனை-சமணச் சான்றோரே! சமணச் சான்றோரே! அளியோன் நுஙகட்கு அடைக்கலம் கண்டீர் என்று கதறியழுதவனைக் கண்டுழி; மை அறுபடிவத்து மாதவர்-குற்றாதீர்ந்த தவவேடந்தாங்கிய மாபெருந்துறவோர் எல்லாம் ஒருங்குகூடி; என்னொடும் வெகுண்டு. அவன் மகள் என்பதுபற்றி அவனையும் என்னையும் ஒருசேரச் சினந்து உரடபுபவர்; இவண் நீர் அல்ல என்று-இத்தகையோரை ஏற்றுக்கோடலும் பரிவுகாட்டலும் தெய்வத் தன்மையுடைய இவ்வராந்தாணத்திற்குப் பொருந்தும் நீர்மைகள் ஆகா என்னும் கருத்தோடு; புறத்துக் கைஉதிர்க்கோடலின்-வாயாற் கூறாமல் தமது கையை அசைக்குமாற்றால் எமைப் புறத்தே துரத்திவிட்டமையாலே; என்றாள் என்க.

(விளக்கம்) புனிற்று ஆ-அணிமையில் கன்றீன்ற ஆ. அதற்கு அணுகியவரைச் சினந்து பாய்தல் இயல்பு. பாய்ந்த என்றது பாய்ந்து வயிறு கிழியக் குத்திய என்பதுபட நின்றது. பாய்ந்தமையாலே பட்ட புண்ணினன் என்க. கணவிர மாலையின் சுருள் கையிலேந்திய குடாச் சுருளிற் குவமை. கணவிரம்-செவ்வலரிப்பூ; ஆகுபெயர். பெருங்குடர் என்றது-மலக்குடரை. என் மகளிருந்து பழகிய இடம் என்று எண்ணி அவ்வுரிமை பற்றி வந்து சரண்புகுந்தான் என்பது கருத்து. இஃது அத் துறவோரின்பால் கண்ணோட்டம் எட்டுணையும் இல்லை என்று காட்டற்குக் கூறியது. என்னை ? கண்ணோட்டம் என்பது தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்க மாட்டாமைக்குக் காரணமான ஒரு பண்புடைமையே யாதலின். கண்ணோட்ட மின்மையையும் வெகுளியுண்மையையும் முற்படக் காட்டிப் பின்னர் மையறுபடிவத்து மாதவர் என்றது முற்றிலும் அவற்றிற்கு எதிர்மறைப் பொருள் பயக்கும் இகழ்ச்சி  மொழியாதல் உணர்க. புற வேடத்திற்குக் குறைவில்லை என்பாள் மையறுபடிவத்து மாதவர் என்கின்றாள். இவன் என்றதும் இகழ்ச்சி. என்னை? கடவுள் உறையுமிடமாகிய அவ்விடத்திற்கு அருளுடைமை நீரல்ல என்பதுபட நிற்றலின். மௌன விரதிகளாதலின் கையுதிர்க் கோடல் வேண்டிற்று. இதுவும் இகழ்ச்சி. இச் சுதமதி வாயிலாய்த் தண்டமிழாசான் சாத்தனார் திறம்பட அவர் காலத்துச் சமணத் துறவோரின் இழிதகைமையை எடுத்துக் காட்டினர். இதனைக் காட்டவே இங்ஙனம் ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கியுள்ளனர்; அவர் ஆருகதரின் இப்புன்மை பொறாது பௌத்த சமயம் புக்கு அச்சமயத்தைப் பரப்பும் நோக்கமடையோராதல் ஈண்டு நினையற்பாலதாம். இனி, அவர் காலத்துப் பௌத்தத் துறவிகளின் சான்றாண்மையும் இவர் இச் சுதமதியின் வாயிலாகவே உணர்த்துவதனைக் காண்பாம்.

இதுவுமது

55-64: கண்ணிறை.......குளிர்ப்பித்து

(இதன் பொருள்) கண் நிறை நீரேம் புறவோர் வீதியில் ஆரும் இலேம அறவோர் உளிரோ என புலம்பொடு சாற்ற-இவ்வாறு அச் சமண சமயத்து மாதவர் எம்மைத் துரத்திவிட்டமையால் உறுதுயர் பொறாமையாலே கண்களில் வெள்ளமாய்ப் பெருகி வீழும் நீரையுடையேமாய் அவ்வராந்தாணத்தின புறத்தே வாழ்வோருடைய தெருவிலே சென்று மாபெருந்துயரத்திற்கு ஆளாயினேம் களைகணாவார் ஒருவரையேனும் உடையேமல்லேம் ஆதலால் அளியேமாகிய எமமிடுக்கண் தீர்க்கும் அறவோர் யாரேனும் உள்ளீரோ உள்ளராயின் எம்மைப் புறந்தம்மின் என்று அரற்றிக் கூவாநிற்ப; மங்குல் தோய் மாடமனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்டபாத்திரம் உடையோன்-அவ்வீதியிலமைந்த முகில் தவழும் மாடங்களையுடைய இல்லந்தோறும் பிச்சைபுகுதற்கியன்ற கோரகை என்னும் அகங்கையிற் கொண்ட பாத்திரத்தையுடையவனும்; கதிர்சுடும் அமயத்துவம் பனி மதமுகத்தோன்- ஞாயிறு சுடுகின்ற அந்த நண்பகற்பொழுதினும் குளிர்ந்த திங்கள் மண்டிலம் போலே அருள்பொழியும் திருமுகத்தையுடையவனும்; பொன்னில் திகழும் பொலம் பூவாடையன்-பொன்போலத் தூய்தாக விளக்குகின்ற பொன்னிற மருதம் பூந்துவரூட்டிய ஆடையையுடையவனும் ஆகிய பௌத்ததுறவோன் ஒருவன் எம்மையணுகி; என உற்றனிரோ-நீயிர் என்ன இடுக்கண் எய்தினிரோ என்று; எமை நோக்கி-எம்மை பரிந்து நோக்கி எமத்திடுக்கணை அறிந்துக்கொண்டபின்; அன்புடன் அளைஇய அருள் மொழியதனால் அஞ்செவி நிறைத்து நெஞ்சம் குளிர்ப்பித்து-அஞ்சன்மின் நீயிர் உற்ற துயரத்தை யாமகற்றுவோம் என்பன போன்ற அன்போடளாவிய அருள்மொழி பலகூறி எமது உட்செவியை நிறைத்து எமதுள்ளத்தையும் குளிர்ப்பண்ணி என்க.

(விளக்கம்) அறவோர்-எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர். அராந்தாணத்து அறவோர் ஒருவரேனும் இலர் என்பது இதனாற் போந்தமையும் உணர்க. அருகரல்லாத புறவோர் வாழும் வீதி என்றவாறு: காணார் கேளார் கான்முடிடப்பட்கடார் முதலிய ஆதுலர்க்கும் அன்னம் இடவேண்டுதலின் மாடந்தோறும் புகுதல் வேண்டிற்று. அங்கை-அகங்கை; உள்ளங்கை. உள்ளம் எப்பொழுதும் குளிர்ந்திருந்தலின் கதிர் சுடும் அமயத்தும் பனிமதி முகமுடையன் ஆயினன் என்பது கருத்து. பொன்னிற்றிகழும் ஆடையன் என்றது. ஆடையின்றியாதல் பாயுடுத்தாதல் அமண் துறவோர் போல்பவ னல்லன் என்பது குறிப்பாகத் தோற்றுவித்தபடியாம். முன்னர் நாணமும் ஆடையும் நன்கனம் நீத்து மண்ணாமேனியன் என(3:88-91) ஆருகதத்துறவோனை அறிவித்தமையும் நினைக. பொலம்பூ வாடையன்-பொன் போன்ற நிறமுடைய அழகிய துவராடை யுடுத்தோன். அது மஞ்சள் நிறத்தது ஆகலின் வண்ணம் பற்றிக் பொன் உவமமாகிறது. அகனமர்ந்து முகத்தான் அமர்ந்து நோக்கி அன்புடன் அளைஇய அருள்மொழி கேட்ட வளவிலே எம் துன்பம் முழுதும் தீர்ந்தாற் போன்று உள்ளம் குளிர்ந்தோம் என்றது. இங்ஙனம் பேசுவதே மொழியாற் செய்யும் நல்வினை என்னும் புத்தருடைய கொள்கையை அவன் முழுதும் மேற்கொண்டொழுகுபவன் என்பதை புலப்படுத்து நின்றது.

இதுவுமது

65-70: தன்கை........அருளிய

(இதன் பொருள்) தன்கைப் பாத்திரம் என்கைத் தந்து-தன் அங்கையிலேந்திய பிச்சைப் பாத்திரத்தை என்கையிலே கொடுத்துவிட்டு; ஆங்கு எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க-அப்பொழுதே என் தந்தை எய்திய துன்பம் நீங்கும் வண்ணம்; தழீஇ எடுத்தனன் தலை ஏற்றிக் கடுப்ப மாதவர் உறைவிடம் காட்டிய தன்னிருகைகளானும் மகவினை எடுப்பார் போன்று தழுவி எடுத்துத் தன்தலையாலே சுமந்து விரைந்துசென்று தன்னோரனைய சிறந்த துறவோர் உறைவிடத்தை எமக்கு உறையுளாகக் காட்டியவனும்; மறையோன் சாதுயர் நீக்கிய தலைவன்-பார்ப்பனனாகிய எந்தைக்குப் பின்னும் மருத்துவஞ்செய்து அவன்சாதற்குரிய பெருந்துயரத்தை நீக்கியவனும் தலைமையடையவனும்; தவமுனி சங்கதருமன் தான் எமக்கு அருளிய-வினையின் நீங்கி விளங்கி ய அறிவுடையவனுமாகிய சங்கதருமன் என்னும் சிறப்புப் பெயருடைய நல்லாசிரியன் தானே முனைவந்து எந்தையும் யானும் ஆகிய எம்மிருவருக்கும் திருவாய் மலர்ந்தருளிய; என்க.

(விளக்கம்) ஆங்கு-அப்பொழுதே. இரண்டு கைகளானும் தழுவி எடுக்க வேண்டித் தன்கைப் பாத்திரத்தை என் கைத்தந்து என்பது கருத்து. குடர் சரிந்து வீழாதபடி எடுக்க வேண்டுதலின் தழீஇ எடுத்தல் வேண்டிற்று. இரண்டு கைகளானும் அவனை மேனோக்கிய வண்ணம் மகவினை எடுக்குமாறு போலவே எடுத்தத் தலைமிசை ஏற்றிக் கொடு விரையச் சென்றுமாதவர் உறைவிடத்தை எமக் குறையுளாகக் காட்டிப் பின்னும் மருத்துவத்தால் சாதுயர் நீக்கியவன் என்றாள் என்க. தலைவன் என்றது சங்கத் தலைமையுடைமையை, சங்கதருமன் என்றது சிறப்புப் பெயர். சங்கத்தார்க்கு அறம் அறிவுறுத்தும் ஆசான் என்பது சிறப்புப் பெயர். சங்கத்தார்க்கு அறம் அறிவுறுத்தும் ஆசான் என்பது கருத்து. அவன்றானே முன்வந்து எமக்கு அறிவுறுத்தருளிய என்க. இவ்வாற்றால் நூலாசிரியர் பௌத்தத் துறவோரின் சான்றாண்மை புலப்படுத்திய நுணுக்க முணர்க.

இதுவுமது

71-76: எங்கோன்................வாழ்கென

(இதன் பொருள்) எம்கோன்-எம்முடைய இறைவனும்; இயல்குணன்-இயல்பாகவே மெய்யுணர்வு தலைப்பட்டவனும்; ஏதும் இலகுணப் பொருள்-குற்றமில்லாத குணங்கட்கெல்லாம் தானே பொருளானவனும்; உலகநோன்பின் பலகதி உணர்ந்து-துறவாமலே நோன்பு நோற்று உயிர்கள் பிறக்கும் பலவேறு பிறப்புக்களினும் பிறந்து பிறர்க்குரியாளன-தனக்கென முயன்று வாழாமல் பிறர் வாழ்தற் பொருட்டே முயல்பவனும் ஆகிய; இன்பச் செவ்வி மனபதை எய்த-தான் கண்ட வீட்டின்பம் எய்துதற்குரிய செவ்வியை மன்னுயிரெல்லாம் எய்துதறகுரிய; அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்-அருளாகிய அறத்தை மேற்கொண்டொழுகுமொரு பெரிய கோட்பாட்டோடு; அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டி-அறமாகிய ஒளியுடைய சக்கரத்தைச் சிறிதும் சோர்வின்றி உருட்டி; காமன கடந்த வாமன்-காமனை வென்றுயர்ந்த அழகனகிய புத்ததேவனுடைய; தகைபாராட்டுதல் அல்லது-தெய்வத்தன்மையை இடையறாது பாராட்டுகின்ற செந்நாவையுடையேனல்லது; மிகைநாவிலலேன் வேந்தே வாழ்க என வேறு தெய்வங்களைப் பாராட்டற்கியன்ற மிகையான செயலையுடைய நாவல்லேன் அரசே நீடுழி வாழ்க! என்றாள் என்க.

(விளக்கம்) எங்கோன்-எமக்கு ஆத்தனானவன். பௌத்தர்கள் ஆத்தனாகிய புத்தனையே கடவுளாகவும் கொள்வர். இதனை,

முற்றுணர்ந்து புவிமீது கொலையாதிய
தீமை முனிந்து சாந்தம்
உற்றிருந்து கருணையினாற் பரதுக்க
துக்கனா யும்ப ரோடு
கற்றுணர்ந்த முனிவரருங் கண்டுதொழப்
பிடகநூல் கனிவான் முன்னம்
சொற்றருந்த வுரைத்தருளூந் தோன்றலே
கடவுள்அருட் டோன்ற லாவான்

எனவரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும் (சருக்கம் 32-4) உணர்க. குணமாகிய பொருள் என்க. உலக நோன்பு-துறவாமலே மேற்கொள்ளும் நோன்பு. புத்தர் வினையாலன்றி அருள் காரணமாகக் கை வந்த முத்தியைக் கைவிட்டு வாலறிவுடன் விலங்கு முதலிய பிறப்புக்களினும் புக்கும் பிறர்க் குழன்றார் என்பர். இதனை

வானாடும் பரியாயும் மரிணமாயும்
வனக்கேழற் களிறாயு மெண்காற்புண்மான்
றானாயு மனையெருமை ஒருத்தலாயுந்
தடக்கையிளங் களிறாயுஞ் சடங்கமாயு
மீனாயு முயலாயு மன்னமாயு
மயிலாயும் கொலைகளவு கட்பொய்காமம்
வரைந்தவர்தா முறைந்தபதி மானாவூரே

எனவரும் நீலகேசியில்(206) யாமெருத்துக்காட்டிய பழஞ்செய்யுளானு மூணர்க. ஏதமில் குணப் பொருள் என்றதனை

மீனுருவாகி மெய்ம்மையிற் படிந்தனை
மானுருவாகியே வான்குண மியற்றினை

எனவும்

எறும்புகடை அயன்முதலா எண்ணிறந்த வென்றுரைக்கப்
பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி
எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றால் இடரெய்தின்
அவ்வுடம்பி லுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்

எனவும். வரும் பழம் பாடல்களையும் (வீரசோழியம் யாப்பு எடத்துக் காட்டுக்கள்) ஒப்பு நோக்குக. இன்பச் செவ்வி என்றது-வீடுபெறும் நிலைமையை. இதனை 30 ஆம் காதையில் விளங்கக் காணலாம். மன்மதை-மன்னுயிர். தகை-கடவுட்டன்மை யாகிய பெருந்தகைமை. மிகைநா-இதனைக் கடந்து பிற தெய்வங்களை வாழ்த்தும் நா.

உதயகுமரன் போதலும் மணிமேகலை தன்னிலை சுதமதிக்கு இயம்பலும்

80-90: அஞ்சொல்........நெஞ்சம்

(இதன் பொருள்) அம்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்-அழகிய சொற்றிறமமைந்த சுதமதி நல்லாய் நன்று யான் நின் வரலாறு அறிந்துகொண்டேன்; வஞ்சி நுண்ணிடை மணிமேகலை தனைச் சித்தராபதியால் சேர்தலும் உண்டு என்று அயர்ந்து வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையையுடைய மணிமேகலை யான் சித்திராபதிவாயிலாய்ச் சேர்தற்கும் இடன் உண்டுகாண் அவள் செவ்வியளாயின் செவ்வியளாகுக என்று தன் செயலறவினாற் கூறியவனாய்; ஆங்கு அப் பொழில் அவன் போய்பின்-அவ்வளவின் அம் மலர்ப் பொழிலினின்றும் அவ்வரசிளங்குமரன் அகன்றுபோய் பின்னர்; பளிக்கறை திறந்து மணிமேகலை அப் பளிக்கறையின் தாழ்நீங்கித் திறந்து வந்தவள்; பனிமதி முகத்துக் களிக்கபல் பிறழாக் காட்சியளாகி-குளிர்ந்த திங்கள் மண்டிலம் போன்ற தன் முகத்தின்கண் களிக்கன்ற கயல்மீன் போன்ற கண்கள் அவனைக் கண்டகாட்சி கலங்காமைப் பொருட்டுப் பிறழாது நிலைத்த காட்சியையுடையளாய்ச் சுதமதியை அணுகிக்கூறுபவள்; (60) அன்னாய்-அன்னையே ஈதொன்றுகேள்; புதுவோன்-நமக்குப் புதியவனாகிய இவ்வரசன் மகன் என்னை; கற்புத்தான் இலள் நல் தவ உணர்வு இலள் வருணக் காப்பு இளல் பொருள் விலையாட்டி என்று இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது-இவள் நிறையில்லாதவள், நன்மை மிக்க தவத்திற்குக் காரணமான மெய்யுணர்வு கைவரப் பெறாதவள், வருணத்தாலே தன்னைத்தான காக்கும் குலமகளும் அல்லள்; பொதுமக்கள், பொருட் பொருட்டுத் தன்னையே விற்கு மியல்புடையள் என்று இன்னோரன்ன கூறி இகழ்ந்தவனாய் என அழகின் பொருட்டே காமுறுபவன் என்று தானும் இகழ்ந்து புறக்கணியாமல்; என் நெஞ்சம்(புதுவோன்) பின் போனது-எனது புல்லிய நெஞ்சம் அவ்வேதிலானையும் விரும்பி அவனைத் தொடர்ந்து அவன் பின்னே போயொழிந்தது! என்றாள் என்க.

(விளக்கம்) கண் களிக் கயல்போல் இடையறாது பிறழ்தல் தமக்கியல் பாகவும் அவனைக் கண்ட காட்சி மறையும் என்று அஞ்சிப் பிறழாதிருக்கின்ற காட்சியளாகி என்றவாறு. கற்புத்தானிலள் என்று இகழ்ந்தான் என்றது அவன் நிறையும் உண்டோ காமம் காழ் கொளின் என்றதன் குறிப்புப் பொருளை உட்கொண்டு கூறியபடியாம். நிறை கைகூடாதாகவே தவவுணர்வும் இலள் என்பதும் குலமகள் அல்லள் என்பதும் வருணக் காப்பின்மையும் பொருள் வலையாட்டியாதலும் ஆகிய வசைச் சொற்கள் அனைத்தும் அதன் குறிப்புப் பொருளாக மணிமேகலை கொண்டு கூறுகின்றாள் போலும். இனி அவன் இங்கனம் இகழ்ந்தமையை வழீ மொழிதல் வாயிலாய் பெறவைத்தவாறுமாம். இகழ்ந்தனனாகி நயந்தோன் என்றது அவன் நம்மழகை மட்டுமே நயக்கின்றான் என்றவாறு. என்னெஞ்சம் என்றது என் புல்லிய நெஞ்சம் என்பதுபட நின்றது.

சொற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று                 (1255)

எனவரும் திருக்குறள் ஈண்டு நினைக்கத்தகும். புதுவோன் என்பதனை எழுவாயாகவும் எடுத்துக் கூட்டுக.

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றுதல்

90-96: இதுவோ.........பைந்தொடியாகி

(இதன் பொருள்) அன்னாய் இதுவோ காமத்தியற்கை-அன்புடையோய்! இவ்வாறு உயர்வும் இழிதகைமையும் உன்னிப் பாராமல் சென்றவிடத்தால் நெஞ்சத்தைச் செலுத்தும் இத் தீய பண்புதான் காமத்தின் இயல்பேயோ யான் இதுகாறும் அறிந்திலேன்காண்; அது திறம் இதுவே ஆயின் அதன் திறம் கெடுக என-அக் காமத்தின் தன்மை இவ்விழிதகைமையே ஆயின் அதன் ஆற்றல் ஒழிவதாக! என்று வியந்துகூறி; மதுமலர்க் குழலாள் மணிமேகலைதான்-தேன் பொதுளிய மலரணியும் பருவமுடைய கூந்தலையுடைய அம் மணிமேகலை நல்லாள்; சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்-அன்புடைய சுதமதியோடு சொல்லாடி நின்றபொழுதில்; இந்திரகோடணை விழா அணி விரும்பி தேவேந்திரனுக்கு அந் நகரத்தே நிகழ்கின்ற ஆரவாரமுடைய விழாவின் அழகைக் காண விரும்பி; வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்-வந்து காணுகின்ற மணிமேகலா தெய்வம் என்னும் மணிமேலையின் தந்தைவழிக்குல தெய்வமானது மணிமேகலை நெஞ்சம் காமுற்றுப் புதுவோன் பின்போன செவ்வியறிந்து அவளைத் தடுத்து நன்னெறிப்படுத்துதற் பொருட்டு; பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அந் நகரத்திலே வாழுமொரு பசிய வளையலையுடையா ளொரு மானுடமகள் வடிவந்தாங்கி; என்க.

(விளக்கம்) இதுவோ-இத்தகைய இழிதகவுடையதோ என்புழி ஓகாரம் ஒழியிசை. என்னை? அனையதாயினும் அழிக்குதும் என்பது குறித்து நிற்றலின். கோடணை-ஆரவாரம். அணி-அழகு. காண்குறூஉம்-என்றமையால் அத் தெய்வம் இந்திர விழாக் கால் கொண்ட பொழுதே அங்கு வந்தமை பெற்றாம். ஈண்டு வருதற்குக் காரணம் மணிமேகலைக்கு எதிர்ந்துள ஏது நிகழ்ச்சியை அறிந்து அவ்வழி அவளை ஆற்றுப்படுத்தற்குக் கருதியதாம் என்க. என்னை? அஃது அவட்குக் குல தெய்வமும் ஆகலான். அதனை,

வந்தேன் அஞ்சன் மணிமேகலை யான்
ஆதிசால் முனிவன் அறவழிப் படூஉம்
ஏதுமுதிர்ந் துளது இளங்கொடிக் காதலின்
விஞ்சையிற் பெயர்த்துநின் விளங்கிழை தன்னை
வஞ்சமின் மணிபல் லவத்திடை வைத்தேன்

எனப் பின்னர் அத் தெய்வமே(துயலெழுப்பிய காதையில்) இயம்புதலானும் அறிக. இக் கருத்தை யுட்கொண்டே இக் காதை முகப்பின் (.......உதயகுமரன் பால் உள்ளத்தாள் என மணிமேகலைக்கு மணிமேலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு.) என்று முன்னையோர் வரைந்தனர் என்றுணர்க.

மணிமேகலா தெய்வம் புத்தபீடிகையை வலஞ்செய்து வாழ்த்தி வணங்குதல்

96-108: மணியறை.........நீட்டும்

(இதன் பொருள்) மணி அறைப் பீடிகை வலங்கொண்டு ஓங்கி-உவவனத்தின் கண்ணதாகிய அப் பளிக்கறையின் உள்ளே அமைந்த புத்தபீடிகையை வலமாக வந்து பின்னர் வானத்தின் கண் உயர்ந்துநின்று; புலவன்-எல்லார்க்கும் அறிவாயுள்ளவனே; தீர்த்தன-தூயோனே!; புண்ணியன-அறத்தின் திரு மூர்த்தியே!; புராணன்-பழைமையுடையோனே!; உலகநோன்பின் உயர்ந்தோய் எனகோ-உன்னை, துறவாமலே நோன்பு செய்து உயர்ந்தோன் என்று புகழவேனோ?; குற்றம் கெடுத்தோய்-காம வெகுளிமயக்கமாகிய குற்றங்களை அழித்தவனே என்றும்; செற்றம் செறுத்தோய்-அடிப்பட்ட சினத்தையே சினந்தவனே என்னும்; முற்ற வுணர்ந்த முதல்வா என்கோ-முழுதும் ஓதாமலே உணர்ந்திட்ட முழுமுதல்வனே என்றும் பாராட்டுவேனோ?; காமற் கடந்தோய் ஏம்ம ஆவோய் தீநெறிக்கடும்பகை கடிந்தோய் என்கோ-காமனை வென்றவனே மன்னுயிர்க்கெல்லாம் காவலானவனே  தீமை பயக்கும் வழியிற் செலுத்தும் ஐம்பொறிகளாகிய கடிய பகையை வெனறொழித்தவனே என்று சொல்லிப் புகழவேனோ?;
ஆயிர ஆர்த்து ஆழியம் திருந்து அடி-நின்னுடைய ஆயிரம் ஆரக்கால்களோடு கூடிய சக்கர ரேகையுடைய அழகிய திருவடிகளை; ஆயிரம் நாஇலேன்-ஆயிரம் நாவுகளின்றி ஒரே நாவுடைய யான்; ஏததுவது எவன்-புகழ்ந்து பாராட்டுதல் எங்ஙனமாம்; என்று என்று பலவும் சொல்லிப் புகழ்ந்து; எரிமணிப் பூங்கொடி இருநிலம் மருங்கு வந்து ஒருதனி திரிவது ஒத்து-ஒளிவீசும் அழகிய காமவல்லி என்னும் வான்நாட்டுப் பூங்கொடி ஒன்று தனித்து நிலவுலகத்திலே திரிந்தாற் போன்று; ஓதியின் ஒதுங்கி-ஓதிஞானத்தோடே இயங்கி; நிலவரை இறந்து(ஓர்) முடங்கு நாநீட்டும்-நிலப்பரப்பினைக் கடந்து கானிலந் தோயாமலே நின்று அவன் புகழ் கூறமாட்டாமையால் முடக்கிய தன் நாவினை நிமிர்த்துப் புகழாநிற்கும் என்க.

(விளக்கம்)  மணியறை-பளிக்கறை. வானத்திலோங்கி என்க புண்ணியன்-அறவோன் குற்றம்-காமவெகுளி மயக்கம். என்கோ என்பேனா? புராணம்-பழைமை. ஏமம்-பாதுகாவல்; இன்பமுமாம். தீநெறி-தீயவழியில் ஒழுகும் ஒழுக்கம். தீயநெறியிற் செலுத்தும் கடியபகை. ஆயிரம் ஆரங்களையுடைய சக்கரக் குறி கிடந்த திருந்தடி என்க. நின்னைப் புகழ் நாவாயிரம் வேண்டும் அவையிலேன் எவ்வாறு புகழ்வல்? என்றவாறு. ஓதி-மெய்யறிவு; முக்காலமும் அறியும் முற்றறிவுமாம். ஓர்: அசை. கூற மாட்டாது முடங்கி நாவை மீண்டும் நிமிர்த்து என்க. நிமிர்த்திப் பாராட்ட என்று முடிந்திடுக. நீட்டும் நீட்டிப் பாராட்டிப் பரவுவாள் என்க. நீட்டும்: செய்யும் என்னும் முற்றச் சொல்.

அந்திமாலையின் வரவு

(109 ஆம் அடிமுதலாக,141 ஆம் அடிமுடியப் புகார் நகரத்தே அற்றைநாள் அந்திமாலை வரவின் வண்ணனையாய் ஒரு தொடர்.)

109-122: புலவரை...........பெய்தலும்

(இதன் பொருள்) புலவரை இறந்த புகார் எனும் பூங்கொடி-அறிவினது எல்லையையும் கடந்துதிகழ்கின்ற பேரழகோடு கூடிய பூம்புகார் நகரம் என்னும் மலர்ந்த கொடிபோலும் மடந்தை எத்தகையளோ வெனின் அவள்தான்; பல்மலர் சிறந்த நல்நீர் அகழி அடி-பல்வேறு வண்ணமலர்களாலே நல்ல நீர்மையையுடைய (நீரையுடைய) அகழியாகிய திருவடிகளையும் அவ்வகழியின் கண்ணிருந்து ஆரவாரிக்கின்ற; புள ஒலிசிறந்த தௌஅரிச் சிலம்பு-பறவை இனமாகிய அவ்வடியிற் கிடந்து முரலும் சிறந்த தெளிந்த ஓசையைச் செய்யும் பரல்களையுடைய சிலம்புகளையும்; ஞாயில் இஞ்சி-ஞாயிலென்னும் உறுப்போடு கூடிய மதில்வட்டமாகிய; நகை மணிமேகலை-(அந்நகர் நங்கை இடையிலணிந்த) ஒளிமிக்க மணிகளாலியன்ற மேகலை என்னும் அணிகலனையும் வாயில் மருங்கு இயன்ற வான் டணைத்தோளி-வாயிலின இரு மருங்கும் நடப்பட்டுள்ள உயர்ந்த மூங்கிலாகிய தோள்களையும் உடையாள்; தருநிலை வச்சிரம் என எதிர்எதிர் ஓங்கிய இருகோட்டம்-தருநிலைக் கோட்டம் எனவும் வச்சிரக் கோட்டம் எனவும் கூறப்படுகின்ற ஒன்றற்கொன்று எதிர்எதிராக உயர்ந்து திகழும் இரண்டு கோட்டங்களாகிய; கதிர் இளவனமுலை-ஒளியும் இளைமையும் அழகும் உடைய இரண்டு முலைகளையும்; ஆர்புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி ஊழிஎண்ணி நீடுநின்று ஓங்கிய ஆத்திமாலை சூடிய சோழமன்னனுக் கென்றே உலகத்து அரண்மனைகளுள் வைத்துப் பெரிய அளவுடையதாக இயற்றப்பட்டு ஊழிபலவும் எண்ணியறிந்து நீடூழிகள் நிலைத்து நின்று புகழாலுயர்ந்திருக்கின்ற; ஒரு பெருங்கோயில்-உலகில் ஒப்பற்ற பெரிய அரண்மனையாகிய; திருமுகவாட்டி -அழகிய முகத்தினையும் உடையவளாவாள்; குணதிசை மருங்கின் நாளமுதிர் மதியமும் குடதிசை மருங்கின் சென்றுவீழ் கதிரும்-அற்றை நாள் கீழ்த்திசையினின்றும் எழாநின்ற வளர்பிறைப் பக்கத்து நாளெல்லாம் முதிர்ந்தமையாலே முழுவுருவமும் பெற்ற நிறைத் திங்கள் மண்டிலமும் மேற்றிசையிலே சென்று வீழ்கின்ற ஞாயிற்று மண்டிலமும்; வெள்ளி வெளதோட்டொடு பொன்தோடு ஆக-வெள்ளியாலியன்ற வெள்ளைத் தோடாகவும் பொன்னாலியன்ற செந்தோடாகவும்; எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்-குற்றமற்ற அந் நகர நங்கையின் அழகிய முகமானது மேலும் பொலிவுறும்படி காலம் என்னும் அவளுடைய தோழியானவள் அணிந்து விடாநிற்பவும் என்க.

(விளக்கம்) புலவரை-அறிவின் எல்லை; அழகு அறிவிற்கன்றி உணர்ச்சிக்குப் புலனாதலின் அறிவின் எல்லை இறந்த என்றார். அகழியாகிய அடியையும் அதன்கண் பன்னிற மலரினின்று ஆரவாரிக்கின்ற புள்ளொலியாகிய அவள் தன் சிலம்பையும். இஞ்சியாகிய மேகலையையும், இருமருங்கும் நடப்பட்ட மூலையினையும், அரண்மனையாகிய திருமுகத்தையும் உடைய பூம்புகார் என்னும் நகர் மடந்தைக்கு அற்றைநாள் எழுகின்ற திங்கள் மண்டிலத்தை ஒரு செவியினும், வீழ்கின்ற ஞாயிற்று மண்டிலத்தை ஒரு செவியினும் வெள்ளித் தோடாகவும் பொன் தோடாகவும் அரண்மனையாகிய திருமுகம் பொலியும்படி காலமாகிய அந் நகர் நங்கையின் தோழி அணிந்து விடவும் என்க. இது குறிப்புவமை அணி. காலமாகிய தோழி என வருவித்துக் கூறுக.

தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் என்றது தருநிலைக் கோட்டமும் வச்சிரக் கோட்டமும் ஆகிய இரு கோட்டங்களும் என்றவாறு. தரு-கற்பகம். கற்பசத்தரு நிற்கும் கோட்டமும் வச்சிரப்படை நிறுத்தப்பட்ட கோட்டமும் என்க. கோட்டம்-கோயில். இவை ஒன்றற் கொன்று அணித்தாக ஒன்றுபோல உயர்ந்த கோட்டங்களாதலின் இங்ஙனம் உருவகஞ் செய்தார்.

இதுவுமது

123-132: அன்னச்சேவல்.........படர

(இதன் பொருள்) அன்னச் சேவல் அயர்ந்து விளையாடின தன் உறுபெடையைத் தாமரை அடக்க-அன்னப்பறவையினுள் வைத்துச் சேவலன்னமானது பெரிதும் தன்னை மறந்து காதல் விளையாடல் நிகழ்த்திய தனக்குரிய பெடையன்னத்தைக் கதிரவன் மேலைக்கடலில் மறைதலாலே ஆட்டத்திற்குக் களமாயிருந்த தாமரை மலரானது இதழ்குவித்துத் தன்னுள்ளே அடக்கி மறைத்துக் கொள்ளுதலாலே; பூம்பொதி சிதையத் கிழித்துப் பெடைகொண்டு ஓங்கு இரு தெங்கின் உயர்மடல் ஏற-அத் தாமறையின் இதழ்களாலியன்ற பொதி சிதைந்தழியும்படி கிழித்து அச் சேவலன்னம் தன்பெடையன்னத்தை எடுத்துக்கொண்டு உயர்ந்து நிற்கின்ற தெங்கினது உயர்ந்த மடலினூடே ஏறியிருப்பவும் அன்றில் பெடை அரிக்குரல் அழைஇச் சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்ப-பெடையன்றில் தனது அரித்தெழுகின்ற குரலாற் கூவுமாற்றாலே குடகடலிலே கதிரவன் சென்று வீழ்கின்ற அந்திமாலையாகிய பொழுதின் வரவினைத் தன் சேவலன்றிலுக்கு அறிவிப்பவும்; பவளச் செங்கால் பறவைக் கானத்துக் குவளைமேய்ந்த-பவளம் போன்று சிவந்த கால்களையுடைய அன்னப்பறவைகள் செறிந்துள்ள கானகத்தினுதடே குவளை மலர்களை மேய்ந்த; சேதா குடம் முலைக்கண் பொழி தீம்பால் எழுதுகள் அவிப்ப-செவ்விய பசுக்களின் குடம்போன்ற முலையிற் கண்களிற் சுரந்து பொழியாநின்ற இனிய பாலே அவற்றின் இயக்கத்தாலே எழுகின்ற துகளை அடக்கும்படி; கன்று நினை குரல்-தத்தம் கன்றை நினைத்துக் கூப்பிடுகின்ற குரலையுடைய வாய் விரைந்து; மன்றுவழிப் படர-தத்தம் மன்றங்களிற்குச் செல்கின்ற வழியின்மேற் செல்லா நிற்பவும் என்க.

(விளக்கம்) இதன்கண் தனக்குரிய பெடையை, தாமரை பொதிந்து கொள்ள அதுகண்ட அன்னச் சேவலானது அப்பொதியைச் சிதைத்து அப் பெடையை எடுத்துக் கொண்டு தெங்கின் உயர் மடலில் ஏறிற்றாகக் கூறிய இக் கருப்பொருட் புறத்தே உதயகுமரனுடைய உள்ளத் தடத்தில் மலர்ந்துள்ள ஏது நிகழ்ச்சியாகிய தாமரை மலரானது மணிமேகலையாகிய தூய அன்னத்தைத் தன்னுள் வைத்துக் காமமாகிய தன்னிதழ்களாலே மறைந்துக் கொள்ளா நிற்ப அவ் விதழ்கள் சிதையும்படி மணிமேகலா தெய்வம் மணி பல்லவத்திற்கு எடுத்துப் போய் உயரிய துறவு நெறியில் சேர்ப்பித்தலாகிய பொருள் தோன்றி அற்றை நாளிரவு நிகழ்ச்சியை ஒருவாறாக நினைப்பித்து நிற்றலையும் நினைக. இவ்வாறு ஒன்று கூற அதுவே பிறிதொரு பொருளையும் நினைவூட்டுவதாக அமைக்குந் திறம் சாத்தனார் போன்ற மாபெருங் கலைஞர்க்கே இயல்வது போலும். இங்ஙனம் தோன்றுவதனை,(தொனிப் பொருள் என்னும்) குறிப்புப் பொருள் என்க.

காதற்றுணையைப் பிரிந்துறைய நேரின் அன்றிற் பறவை இறந்து படும் ஆதலால் தனக்கிரை கொணரச் சென்றுள்ள சேவலுக்குத் தனது அரிக்குரலாலே கதிரவன் மறைவதனை அறிவிக்கின்றது என்க. அரிக் குரல்-அரித்தெழும் ஒலி; இஃது இழுமென்னும் இனிய வொலிக்கு முரண் ஆய வொலியாம். அழைஇ-அழைத்து. குடக்கண்-குடம்பால் கறக்கும் முலையின்கண் எனலுமாம் இத்தகைய பசுக்களைக் குடச்சுட்டு என்னும் பெயராலும் குறிப்பதுண்டு. இதனை....

புல்லார் நிரைகருதி யாஞ்செல்லப் புண்ணலம்
பல்லார் அறியப் பகர்ந்தார்க்குச்-சொல்லால்
கடஞ்சுட்ட வேண்டா கடுஞ்சுரையா னான்கு
குடஞ்சுட் டினத்தாற் கொடு

எனவரும் புறப்பொருள் வெண்பாமாலை வரலாற்று வெண்பாவானும் அதன் உரையானும் உணர்க(வெட்சி-18).

சேதா-செவ்விய பசு. சிவந்த நிறமுடைய பசு எனலுமாம். பசுக்களில் சிவப்புப் பசுவே சிறந்தது என்பது இதன் கருத்தென்க.

சேதா...........படர என்னுமிதனோடு மதவுநடை நல்லான் வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் மாலையும் எனவும்(அகநா-14) ஆன்கணங் கன்று பயிர் குரல மன்று நிறை புகுகர (குறிஞ்சி-217) எனவும் வரும் பிறநூற் சொற்றொடர்களையும் ஒப்பு நோக்குக.

இதுவுமது

133-141: அந்தியந்தணர்........மருங்கென்

(இதன் பொருள்) அந்தணர் அந்திச் செந்தீப் பேண-மறையவர் தம்மறை விதித்தாங்கு அந்திப் பொழுதிலே வளர்க்க வேண்டிய வேள்வித் தீயை அவிசொரிந்து வளர்ப்பவும்; பைந்தொடி மகளிர் பலர் விளக்கெடுப்ப-பசிய பொன் வளையலணிந்த மங்கலமகளிர் பலரும் தத்தம் மனைதொறும் திருவிளக் கேற்றித் தொழா நிற்பவும்; யாழோர் மருதத்து இன்னரம்பு உளர-யாழ் வாசிக்கும் இசைவாணராகிய பாணரகள் மருதப்பண் எழீஇ இனிய இசை தரும் யாழ் நரம்புகளை வருடாநிற்பவும்; கோவலர் முல்லைக்குழல் மேற் கொள்ள-கோவலராகிய ஆயர்கள் தமக்குரிய முல்லைப் பண்ணை வேய்ங்குழலிடத்தே ஊதாநிற்பவும்; அமரகம் மருங்கில் கண்வனை இழந்து தமர் அகம் புகூஉம் ஒருமகள் போல-போர்க் களத்திடத்தே தன் கணவன் இறந்து படுதலாலே பெருந்துன்பத்தோடே தன் பெற்றோர் இல்லத்திற்குத் தனியே செல்லும் ஒரு மங்கையைப் போல; கதிர் ஆற்றுப்படுத்த முதிராசத்துன்பமோடு அந்தி என்னும் பசலை மெய்யாட்டி-கதிரவனாகிய தன் கணவனை மறைந்தொழியும்படி போக்கி விட்டமையாலே முடிவில்லாத பிரிவுத்துன்பத்தோடே அந்தி மாலை என்னும் பெயரையுடைய பசலை பாய்ந்த மெய்யினையுடைய நங்கை; மாநகர் மருங்கு வந்து இறுத்தனள்-பெரிய அப் பூம்புகார் நகரிடத்தே வந்து தங்குவாளாயினள்; என்பதாம்.

(விளக்கம்) (23-41) இவ்வந்திமாலை வண்ணனையில் அன்னச் சேவல் தாமரை முதலிய மருதக்கருப் பொருளும் அன்றிற் சேவல் பெடை முதலிய நெய்தற் கருப்பொருளும், ஆவும் கோவலருமாகிய முல்லைக்கருப் பொருளும் வந்து மயங்கின.

கதிரவனைப் போக்கிய என்க. பிரிவாற்றாமையால் பசலைபூத்த மெய்யினை உடையளாய் என்றவாறு. செக்கர் வானத்தை அவளுடைய பசலை மெய்யாக உருவகித்த படியாம்.

மணிமேகலை தமரையும் காதலனாகிய உதயகுமரனையும் பிரிந்து போய் வருந்துதலைக் கருத்துட் கொண்டு புலவர் பெருமான் இக் காதையைத் துன்பியல் முடிவுடைத்தாக இயற்றினர். என்னை? அடுத்து வருவன அவலச் சுவையே நிரம்பிய காதைகளாதலால் அச் சுவைக்கு இவ்வாறு கால்கோள் செய்கின்றனர், காப்பியவுத்தி பலவும் கைவந்த தண்டமிழ் ஆசான் சாத்தனார் என்க.

இனி இக் காதையை-இளங்கோன் கண்ட பூங்கொடி உருவம் பெயர்ப்ப வியப்போன் தெளிந்து சூழ்வோன் உரையென, உரைப்ப ஆகென அகல்வோன்,உரையினை உரையென வேந்தே கேட்டருள், இழந்தோன் வருவோன் கண்டு உதிர்த்துத் திரிவோன் புண்ணினன் புகுந்து என்றோனை. என்னொடும் கையுதிர்க் கோடலின், உடையோன் நோக்கித், தந்து ஏற்றிக் காட்டிய சங்கதருமன். அருளிய தகை பாராட்டுதல் அல்லது இல்லேன் என அறிந்தேன் என்று. போயபின் என் நெஞ்சம் போனது கெடுக என, தெய்வம் ஆகி நீட்டும் நீட்ட; அடக்க இசைப்பப் படர எடுப்ப உளரக் கொள்ள இழந்து மெய்யாட்டி  மாநகர் மருங்கு இறுத்தனள் என்று இயைத்திடுக.

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை முற்றிற்று.


© Om Namasivaya. All Rights Reserved.