சிலப்பதிகாரம்

20. வழக்குரை காதை

அஃதாவது - கண்ணகியார் சீற்றத்துடன் சென்று தம் வருகையை வாயில் காவலருக்கு அறிவிப்ப அவரது சீற்றங் கண்டு வாயில் காவலர் அஞ்சி விரைந்தோடி அரசனுக்கு அறிவித்து அவன் பணித்தபடியே கண்ணகியை அரசன்முன் அழைத்துப் போதலும், கண்ணகியார் அம்மன்னன் அவைக்களத்தேறிச் சீறி நின்று வழக்குரைத்தலும் அதன் விளைவுகளும் கூறும் பகுதி என்றவாறு.

ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா  5
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா
கருப்பம்
செங்கோலும் வெண்குடையும்
செறிநிலத்து மறிந்துவீழ்தரும்

நங்கோன்றன் கொற்றவாயில்   10
மணிநடுங்க நடுங்குமுள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
இருநான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு
மன்னவற் கியாம் உரைத்துமென
ஆடியேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்

வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்  15
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்
கூனுங்குறளும் ஊமுங்கூடிய
குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர
நரைவிரைஇய நறுங்கூந்தலர்
உரைவிரைஇய பலர்வாழ்த்திட
ஈண்டுநீர் வையங்காக்கும்
பாண்டியன்பெருந் தேவிவாழ்கென

ஆயமுங் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக்  20
கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப
அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால்,
வாயி லோயே வாயி லோயே

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து  25
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று
அறிவிப் பாயே அறிவிப் பாயே; என

வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி  30
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்வ வாழி
அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி  35
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்   40
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
கணவனை இழந்தாள் கடையகத் தாளே; என

வருக மற்றவள் தருக ஈங்கென   45
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்

தேரா மன்னா செப்புவ துடையேன்  50
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்  55
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு  60
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை  65
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்
தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே

தருகெனத் தந்து தான்முன் வைப்பக்  70
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன்   75
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று  80
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.

வெண்பா

அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும்  1
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் றேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண்.

காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும்  2
ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
கூடலான் கூடாயி னான்.

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்  3
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன்
கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.

உரை

கோப்பெருந்தேவி தான் கண்ட தீக்கனாவினைத் தன் உசாத்துணைத்தோழிக் குரைத்தல்

1-7: ஆங்கு ........... காண்பென் காண்

(இதன்பொருள்.) ஆங்கு - அவ்வாறு கண்ணகி சீற்றம் சிறந்து அம் மன்னவன் செழுங்கோயில் வாயிலை எய்து முன்னர் அவ்வரண்மனையின்கண் கோப்பெருந்தேவி தான் முதல் நாளின் வைகறை யாமத்தே கண்ட தீக்கனாவினால் கலக்கமெய்தித் தன் தோழிக்குக் கூறுபவள்; எல்லா - தோழீ கேள்! குடையொடு கோல் வீழ - நம்மன்னனுடைய கொற்றவெண் குடையோடு செங்கோலும் ஒருசேர வீழாநிற்ப; கடைமணியின் குரல் நின்று நடுங்கும் காண்பென் காண் - அரண்மனை வாயிலின்கண் கட்டப்பட்ட ஆராய்ச்சிமணியின் ஒலி இடையறாது நடுங்கி ஒலிக்கவும், கனவு கண்டேன் காண்; அன்றி - இவையே அன்றி; இரு நான்கு திசையும் அதிர்ந்திடும் - எட்டுத் திசையும் நிலம் அதிரா நிற்கும்; கதிரை இருள் விழுங்க காண்பென்காண் -ஞாயிற்றை இருள் மறைக்கவும் கனவு கண்டேன் காண்! எல்லா - தோழீ! இர கொடிவில் இடும் - இரவின்கண் ஒழுங்குபட்ட இந்திரவில் தோன்றவும்; வெம்பகல் கடுங்கதிர் மீன் வீழும் - வெவ்விய பகற்பொழுதிலே மிக்க ஒளியோடு விண்மீன்கள் விழவும் இவை; காண்பென் காண் - இக்கனவுகளையும் கண்டேன் காண்; என்றாள்; என்க.

(விளக்கம்) கடைமணி - முறைவேண்டி வருவோர் ஒலிப்பித்தற் பொருட்டு அரண்மனை முன்றிலில் கட்டப்படுவதொரு பெரிய மணி. குரல் - ஒலி. ஒலி நடுங்குதலாவது இனிதாக ஒலியாமல் கேட்டற் கின்னாவாக ஒலித்தல். நின்று நடுங்கும் என்றது இடையறாது நெடும் பொழுது ஒலிக்கும் என்றவாறு. கதிர் - ஞாயிறு. இர-இரா; குறிய தன் கீழ் ஆகாரம் குறுகி நின்றது. விண்மீன் வீழுங்கால் மிக்க ஒளியோடு வீழக்கண்டேன் என்பாள், கடுங்கதிர் மீன் என்றாள்.

7-12: எல்லா ................ உரைத்துமென

(இதன்பொருள்.) எல்லா -தோழீ! கருப்பம் -இவை எல்லாம் பின்வரும் கேட்டிற்கு முதலாம்; செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து வீழ்தரும் - மன்னவன் செங்கோலும் வெண்கொற்றக் குடையும் மண்திணிந்த நிலத்தின்கண் சாய்ந்து வீழாநிற்கும்; நம்கோன் தன் கொற்ற வாயில் மணி நடுங்க உள்ளம் நடுங்கும் -நம்மரசனுடைய வெற்றியையுடைய வாயிலின் கண் ஆராய்ச்சி மணி நெடும்பொழுது நடுங்கி ஒலித்தல் கேட்டு என் நெஞ்சமும் அஞ்சி நடுங்கா நின்றது, அன்றியும்; இரவு வில்லிடும் பகல்மீன் விழும் இருநான்கு திசையும் அதிர்ந்திடும்- இரவின்கண் வானத்தே வில் தோன்றும், பகலிலே விண்மீன் வீழும், எட்டுத் திசையும் அதிரா நிற்கும்; இவையெல்லாம் மிகவும் தீய கனாக்களே ஆதலால்; வருவதோர் துன்பமுண்டு - நமக்கு வரவிருக்கின்ற ஒப்பற்ற துன்பம் ஒன்று உளதாதல் தேற்றமாம்; யாம் மன்னவற்கு உரைத்தும் என - யாம் இத் தீக்கனாவீற்குக் கழுவாய் செய்தற்பொருட்டு இப்பொழுது சென்று நம் மன்னவனுக்கு இவற்றை அறிவிப்பாம் என்று கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) கோப்பெருந்தேவி இவற்றைக் கண்டு தான் அஞ்சுவது தோன்றவும் இதனை அரசனுக்குக் கூறுதல் இன்றியமையாமை தோன்றவும் முற்கூறியதனையே மீண்டும் கூறியவாறாம். கருப்பம் - முதல். முளை எனினுமாம், அறிகுறி என்பது கருத்து. தீக்கனாவிற்குக் கழுவாய் செய்தற்பொருட்டு இவற்றை மன்னவனுக்கு யாம் இப்பொழுதே கூறவேண்டும் என்றவாறு. யாம் உரைத்தும் என்றது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. யாமென்றாள் தம்பிராட்டியாதலால் தன்பெருமிதந்தோன்ற என்பது அரும்பதவுரை. அரசரைத் தம்பிரான் என்றும் அரசர் தேவியைத் தம்பிராட்டி என்றும் வழங்குதல் மலைநாட்டில் இப்பொழுதும் உள்ளது என்பர்.

கோப்பெருந்தேவி தீக்கனாத்திறமுரைப்பத் தன் பரிசனத்துடன் அரசன்பாற் செல்லுதல்

13-17: ஆடியேந்தினர் ..........சூழ்தர

(இதன்பொருள்.) அவிர்ந்து விளங்கும் அணியிழையினர் ஆடியேந்தினர் கலன் ஏந்தினர் - ஒளி வீசித் திகழுகின்ற மணி அணிகலன்களை அணிந்த தோழியர் ஆடி ஏந்தியவரும் அணிகலன்களை ஏந்தியவரும்; கோடி ஏந்தினர் பட்டேந்தினர் கொழுந்திரையலின் செப்பேந்தினர் - புத்தாடை ஏந்தியவரும் பட்டாடை ஏந்தியவரும்; கொழுவிய வெற்றிலைச் சுருள் பெய்த செப்பை ஏந்தியவரும்; வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் மான் மதத்தின் சாந்து ஏந்தினர் - பல்வேறு வண்ணமுடைய நறுமணச் சாந்தேந்தியவரும் பொற்சுண்ணம் ஏந்தியவரும் கத்தூரிக் குழம்பேந்தியவரும்; கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் - கண்ணி ஏந்தியவரும் பிணையல் ஏந்தியவரும் சாமரை ஏந்தியவரும் நறுமணப் புகை ஏந்தியவரும்; கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர - கூனுடையோரும் குறளரும் மூங்கையரும் ஆகிய இவரோடுங் கூடிய குற்றேவல் புரியும் இளமையுடைய பணிமகளிர் பலர் தன்னை நெருங்கிச் சூழ்ந்து வருமாறு, என்க.

(விளக்கம்) ஆடி - கண்ணாடி. கலன்-அணிகலன். மணியிழையினர் ஆகிய குறுந்தொழில் இளைஞர் எனவும், கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் எனவும் தனித்தனி கூட்டுக. இளைஞர் ஆடி முதலியவற்றை ஏந்தினராய்ச் செறிந்து சூழ்தர என இயைத்துக் கொள்க. கோடி-புத்தாடை. திரையல் - வெற்றிலைச் சுருள். சுண்ணம் - பொற்சுண்ணம். மான்மதம்-கத்தூரி விரவிய சாந்தென்க. கண்ணி பிணையல் என்பன மலர் மாலையின் வகை. கூன்குறள் மூங்கை முதலிய உறுப்புக் குறைபாடுடையோர் உவளகத்தே பணிபுரிவோராக இருத்தல் மரபு. இதனை:-

கூனுங் குறளும் மாணிழை மகளிரும்
திருநுத லாயத்துத் தேவிய ரேறிய
பெருங்கோட் டூர்திப் பின்பின் பிணங்கிச்
செலவு கண்ணுற்ற பொழுதின்

எனவரும் பெருங்கதையினும் (1-38. 178-81.) காண்க.

18-23: நரைவிரைஇய ............. கோவே

(இதன்பொருள்.) நரை விரைஇய நறுங்கூந்தலர் பலர் - நரை மயிர் கலந்த நறிய கூந்தலையுடைய செம்முது மகளிர் பலர், உரை விரைஇய வாழ்த்திட - புகழ் விரவிய மங்கல மொழிகளாலே வாழ்த்தா நிற்ப; ஆயமும் காவலும் சென்று - தன்னோடு வருகின்ற மகளிர் கூட்டமும் காவல் மகளிரும் தான் செல்லுந் தோறும் தன் எதிர் சென்று தான் அடிபெயர்த்திடுந்தோறும்; ஈண்டு நீர் வையங் காக்கும் பாண்டியன் பெருந்தேவி வாழ்க எனப் பரசி ஏத்த - கடல் சூழ்ந்த நிலவுலகத்தைக் காக்கின்ற நாங்கள் பாண்டி மன்னனுடைய பெருந்தேவியார் நீடூழி வாழ்க என்று வாழ்த்துக் கூறி, வணங்கிப் புகழா நிற்ப; கோப்பெருந்தேவி சென்று - கோப்பெருந்தேவியானவள் மன்னவன்பாற் சென்று அவன் மருங்கிருந்து; தன் தீக்கனா திறமுரைப்ப - தான் கண்ட தீய கனவுகளின் தன்மையை எடுத்துக் கூற அவற்றைச் செவிமடுத்து; திருவீழ் மார்பின் தென்னவர்கோ- திருமகள் விரும்புதற்குக் காரணமான மார்பினையுடைய தென்னாட்டவர் மன்னனாகிய நெடுஞ்செழியன்; அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன் - சிங்கம் சுமந்த அரசு கட்டிலின் மேல் வீற்றிருந்தனன் என்க.

(விளக்கம்) ஈண்டு நீர் -கடல். ஆற்று நீரும் ஊற்று நீரும் மழை நீரும் வந்து செறிந்த நீர் நிலையாகிய கடல் என்றவாறு. ஆயம் - மகளிர் குழாம். காவல் - காவல் மகளிர், கஞ்சுகிமாக்களுமாம். தென்னவன் செவிமடுத்து அமளி மிசை இருந்தனன் என்க. திருவீழ் மார்பின் தென்னவர்கோ என்பது திருமகள் கழிகின்ற மார்பையுடைய தென்னவர்கோ எனவும் ஒரு பொருள்தந்து அடிகளார் திருவாயில் தோன்றிய தீய வாய்ப்புள்ளாகவும் நிற்றல் உணர்க.

கண்ணகி தன் வரவினை வாயில் காவலர்க்குக் கூறுதல்

23-29: இப்பால் ............... என

(இதன்பொருள்.) இப்பால் - அரசன் நிலை இங்ஙனமாக முற்கூறிய திருமாபத்தினி அரண்மனை வாயிலை அணுகி ஆங்கு நின்ற வாயில் காவலனை நோக்கி; வாயிலோயே வாயிலோயே -வாயில் காவலனே! வாயில் காவலனே; அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே - தனது நல்லறிவு கீழற்றுப்போன புலங்கெட்ட தீய நெஞ்சத்தாலே செங்கோன்முறைமையின் இழுக்கிய கொடுங்கோன் மன்னனுடைய புல்லிய வாயிலைக் காக்குங் காவலனே! ஈதொன்று கேள்; இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்-இணையாகிய பரலையுடைய சிலம்புகளுள் வைத்து ஒரு சிலம்பினை ஏந்திய கையையுடையளாய்; கணவனை யிழந்தாள் -தன் கணவனை இழந்தவளொருத்தி; கடை அகத்தாள் என்று -அரண்மனை முன்றிலிடத்தே முறைவேண்டி வந்து நிற்கின்றாள் என்று; அறிவிப்பாயே அறிவிப்பாயே என -அக் கொடுங்கோல் மன்னனுக்குச் சென்று சொல்லுதி! அக் கொடுங்கோல் மன்னனுக்குச் சென்று சொல்லுதி! என்று கூறா நிற்ப! என்க.

(விளக்கம்) அறைபோதல் - கீழறுத்துப் போதல். அஃதாவது உற்றுழி உதவாமல் கரந்தொழிதல். பொறி - கட்பொறி. அதன் தன்மையாகிய கண்ணோட்டத்தைக் குறித்து அப் பண்பற்ற நெஞ்சத்தின் மேற்றாய் நின்றது. இனி, பொறி - ஆகூழுமாம். இறைமுறை - செங்கோன்மை. இணையரிச் சிலம்பு ஒன்று என்றது, நீ கவர்ந்து கொண்ட அச் சிலம்பிற்கு இணையாகிய மற்றொரு சிலம்பு என்பதுபட நின்றது. கடை - முன்றில். அடுக்கு - சீற்றம்பற்றி நின்றது.

வாயிலோன் மன்னனுக்கு அறிவித்தல்

30-44: வாயிலோன் .............. கடையகத்தாளே

(இதன்பொருள்.) வாயிலோன் - அவ் வாயில் காவலன்றானும் சீற்றம் சிறந்த கண்ணகியின் தோற்றங் கண்டு அஞ்சியவனாய் விரைந்து மன்னன்பாற் சென்று திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூறுபவன்; வாழி - வாழ்க எம்பெருமான்; எம் கொற்கை வேந்தே வாழி - எம்முடைய கோற்கைத் துறையையுடைய வேந்தனே வாழ்க! தென்னம் பொருப்பின் தலைவ வாழி - தென்றிசைக் கண்ணதாகிய அழகிய பொதியின மலையையுடைய தலைவனே வாழ்க! செழிய வாழி - செழியனே வாழ்க; தென்னவ வாழி - தென்னாட்டை உடைய வேந்தே வாழ்க! பழியொடு படராப் பஞ்சவ வாழி - பழி வருதற்குக் காரணமான நெறியின்கண் செல்லாத பஞ்சவனே வாழ்வாயாக! செற்றனள் போலும் - நம்பால் கறுவுகொண்டவள் போலவும் அதனால் பெரிதும்; செயிர்த்தனள்போலும் - சினங்கொண்டவள் போலவும்; பொன்தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் - பொன்னாலியன்ற சித்திரச் செய்வினை அமைந்த ஒற்றைச் சிலம்பினைப் பற்றிய கையினளாய்; கணவனையிழந்தாள் - தன் கணவனை இழந்தவள் ஒருத்தி, கடையகத்தாளே- நம் அரண்மனை வாயிலிடத்தே வந்து நிற்கின்றனள், அவள்தான் தோற்றத்தால் மானுட மகள் போல்கின்றாளேனும்; அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந்துணிப பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள் - செறிந்து குதிக்கின்ற குருதி அடங்காமையையுடைய பசிய புண்ணையுடைய மயிடாசூரன் என்பானுடைய பிடரோடு கூடிய தலையாகிய பீடத்தின்மேல் ஏறியருளிய இளம் பூங்கொடிபோல்வாளாகிய வெற்றிவேலைப் பற்றிய பெரிய கையினையுடைய கொற்றவை போல்கின்றாள்! ஆயினும் அவளல்லள்; அறுவர்க்கிளைய நங்கை - ஏழு கன்னிகைகளுள் வைத்து ஆறு கன்னிகைகட்கும் இளையவளாகிய பிடாரியோ எனின் அவளும் அல்லள்; இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - முழு முதல்வனாகிய கடவுளைக் கூத்தாடச் செய்தருளிய பத்திரகாளி எனலாமாயினும், அவளும் அல்லள்; சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் - காட்டினை விரும்பி ஏறிய காளியும் தாருகன் என்னும் அசரனுடைய பெரிய மார்பினைப் பிளந்தருளிய கொற்றவையும் ஆகிய இருவருள் ஒருத்தி என்னலாம் ஆயினும் அவர்களும் ஒருத்தியும் அல்லள்; கணவனை இழந்தாள்- கணவனை இழந்ததாகக் கூறிக்கொள்ளும் ஒருத்தி; கடை யகத்தாளே - நம் அரண்மனை வாயிலின்கண் வந்து நிற்கின்றாள்; கடையகத்தாளே -; நம்மரண்மனை வாயிலின்கண் வந்து நிற்கின்றாள் என்று வாழ்த்துந்தோறும் வாழ்த்துந்தோறும் வணங்கி விதுப்புற்று அறிவியா நிற்ப என்க.

(விளக்கம்) கொற்கை - உலகத்திலேயே சிறந்த முத்துப்படும் கடலின் துறைக்கண்ணதாகிய ஒரு பட்டினம். அதன் முத்தினால் அதன் புகழ் அதனையுடைய பாண்டியனுக்காயிற்று. அங்ஙனமே பொதியின் மலையின் சிறப்பும் அவனுக்காயிற்று. ஆதலால் அவற்றை யெடுத்தோதி வாழ்த்தினான், என்க. செழியன் தென்னவன் பஞ்சவன் என்பன அம் மன்னனின் பெயர்கள்.

கண்ணகி உருவத்தாலும் சீற்றத்தாலும் மக்கள் தன்மையில் மிக்கவளாய்க் கொற்றவை முதலிய தெய்வமகளிரே போல்கின்றாள். ஆயினும் பிடர்த்தலைப்பீடம் முதலிய அடையாளங்களின்மையின் அவர்களுள் ஒருத்தி அல்லள் எனத் தெரித்தோதியபடியாம். பசுந்துணி - புதிய புண். பிடர்த்தலை என்றது மயிடாசுரன் தலையை. அறுவர்க்கிளைய நங்கை என்றது பிடாரியை. இறைவன் - அம்பலக் கூத்தன். அணங்கு - பத்திரகாளி. கானக முகந்த காளி - காடுகிழாள். செற்றம் - உட்பகை. செயிர்த்தல் - சினத்தல். கணவனை இழந்தாளாகக் கூறிக்கொள்ளும் ஒருத்தி என்க.

கண்ணகி அரசன் திருமுன் செல்லுதல்

45-47: வருக ........ சென்றுழி

(இதன்பொருள்.) வருக - அங்ஙனமாயின் அவள் இங்கு வருவாளாக! மற்று அவள் தருக ஈங்கு என-அவளை இங்கு அழைத்து வருவாயாக! என்று அரசன் பணித்தமையாலே; வாயில் வந்து கோயில் காட்ட - அவ்வாயிலோன் விரைந்து வந்து கண்ணகியை அழைத்துக் கொண்டுபோய் மன்னவனுடைய அத்தாணி மண்டபத்தைக் காட்டுதலாலே அக்கண்ணகி; கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி - அம் மண்டபத்தின்கண் அரிமானேந்திய அமளிமிசை இருந்த அரசனை அணுகிச் சென்று நின்றபொழுது என்க.

(விளக்கம்) வருக மற்றவன் தருக ஈங்கு என்னுந்தொடர் தனது உடன்பாடும் கட்டளையும் அமைந்த பாண்டியன் மொழி. இவை அம் மன்னன் காட்சிக்கு எளியனும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆதலை நன்குணர்த்துதல் உணர்க. கோயில் என்றது அத்தாணி மண்டபத்தை.

அரசன் வினாவும் கண்ணகியின் விடையும்

48-63: நீர்வார் ............ பெயரே என

(இதன்பொருள்.) நீர்வார் கண்ணே எம்முன் வந்தோய் மடக் கொடியோய் நீ யாரையோ - அரசன் கண்ணகியை நோக்கி நீர் ஒழுகுகின்ற கண்ணை உடையையாய் எம்முன்னர் வந்த இளமகளே நீ யார்; என - என்று வினவா நிற்ப அதற்கு விடை கூறும் கண்ணகி; தேரா மன்னா - ஆராய்ச்சியில்லாத அரசனே; சேப்புவது உடையேன் - நின்பால் கூறவேண்டிய குறை ஒன்றுடையேன் காண் யான்; எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் - சிறிதும் இகழ்தற்கிடனில்லாத சிறப்பினோடே விண்ணவர் தாமும் வியந்து புகழும்படி ஒரு புறாவினது மிக்க துன்பத்தினைத் தீர்த்தருளிய சிபி என்னும் செங்கோல் வேந்தனும் அவனல்லாமலும்; வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன் பெறல் அரும்புதல்வனை ஆழியின் மடித்தோன் - அரண்மனை வாயிலிற் கட்டிய ஆராய்ச்சி மணியினது நடுவில் அமைந்த நாக்கு அசையும்படி ஓர் ஆவானது அசைத்து ஒலித்த அளவிலே விரைந்து அங்குச் சென்று அம்மணியை அசைத்த ஆவினது கடைக்கண்ணினின்றும் ஒழுகுகின்ற துன்பக் கண்ணீர் தனது நெஞ்சினைச் சுடுதல் பொறாது அதற்குற்ற குறையை அறிந்தோர்பால் ஆராயந்துணர்ந்து அதற்கிழைத்த குற்றத்திற்கு முறை செய்வான் பெறற்கரும் செல்வமாகிய தன் ஒரே மகனைத் தன் தேராழியின் அடியிற் கிடத்திக் கொன்ற செங்கோல் வேந்தனாகிய மனு நீதிச் சோழன் என்பானும் அருளாட்சி செய்த; பெரும்பெயர் புகார் - பெரிய புகழ் படைத்த பூம்புகார் என்னும் நகரங்காண்; என் பதி -யான் பிறந்து வளர்ந்த இடமாகும்; யான் அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருந்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி- அம்மூதூரின்கண் பிறரால் எட்டியும் சுட்டியும் பழி கூறப்படாத பழஞ்சிறப்பினோடு திகழும் வாணிகர் குடிகளுள் வைத்து வண்மை காரணமாக எழுந்த தனிப்பெரும் புகழ் திசையெலாம் சென்று திகழ்தலையுடைய கொழுங்குடிச் செல்வனாகிய பெருங் குடியிற் பிறந்தவனும் மாசாத்துவான் என்னும் இயற்பெயரோடு மன்னனால் வழங்கப்பட்ட இருதிதிக் கிழவன் என்னும் சிறப்புப் பெயரையு முடையவனும் ஆகிய வணிகனுடைய ஒரே மகனாகப் பிறந்துவைத்தும்; ஊழ்வினை துரப்ப வாழ்தல் வேண்டி - எமது பழவினை செலுத்துதலாலே எங்குலத் தொழில் செய்து நன்கு வாழ்தலை விரும்பி; சூழ்கழல் மன்னா - சுற்றிக் கட்டிய வீரக் கழலையுடைய மன்னனே; நின் நகர்ப் புகுந்து - உனது கோநகரமாகிய இம் மதுரையின்கண் புகுந்து; இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி - இவ்விடத்தே அத் தொழிலுக்கு முதலாக என்னுடைய காற் சிலம்புகளுள் ஒன்றனை விற்றற்கு வந்து; நின்பால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி - உன்னாலே கொலைக்களத்தின்கண் வெட்டுண்டு ஒழிந்த கோவலன் என்பவனுடைய மனைவியாவேன் காண்; என் பெயர் கண்ணகி என்பது என - என்னுடைய பெயர் கண்ணகி என்பதுகாண் என்று கூறா நிற்ப, என்க.

(விளக்கம்) கண்ணை - கண்ணையுடையாய். யாரையோ என்புழி ஐ -சாரியை. ஓகாரம்: வினா. மடக்கொடியோய் என்றது - இளமகளே என்னுந்துணை. பாண்டியனின் பிழைக்கு அடிப்படையாக அமைந்த ஆராய்ச்சி யின்மையையே அடையாகப் புணர்த்துத் தேரா மன்னா என்ற சொற்றிறம் உணர்க. தேராத எனல் வேண்டிய எச்சம் ஈறுகெட்டது. மன்னா என்றது இகழ்ச்சி. செப்புவது என்றது அறிவிக்கற்பாலது என்பதுபட நின்றது. எள் - எள்ளல்; இகழ்ச்சி. எள்ளறு சிறப்பில் தீர்த்தோன், வியப்பத் தீர்த்தோன், புன்கண் தீர்த்தோன் என அனைத்தையும் தீர்த்தோனுக்கே இணைக்க. புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிபி என்னும் சோழவேந்தன். இதனை:

புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற், சினங்கெழு தானைச் செம்பியன் மருக எனவும், புறவி னல்லல் சொல்லிய கறையடி. யானைவான் மருப்பெறிந்த வெண்கடைக், கோனிறை துலாஅம் புக்கோன் மருக எனவும், கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தினேறு குறித்தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின், தபுதி யஞ்சிச் சீரை புக்க, வரையா வீகை யுரவோன் மருக எனவும், நீயே புறவி னல்ல லன்றியும், பிறவும் பலவும் விடுத்தோன் மருகனை எனவும், (புறநா. 34,39,43,46) உடல் கலக்கற வரிந்து தசையிட்டு மொருவன், ஒருதுலைப் புறவொடொக்க நிறைபுக்க புகழும் எனவும்; (கலிங்க, இராச-93) புக்கான் மறா னிறையென்று சரணடைந்த வஞ்சப்புறா நிறைபுக்க புகழோன் எனவும், பிற சான்றோர் கூறுமாற்றானுமுணர்க. ஆவின் கண்ணீர் நெஞ்சு சுடத்தன் புதல்வனை ஆழியின் மடித்து முறைசெய்தோன் மனுநீதிச் சோழன் என்க. இவ் வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணத்தின்கண் விளக்கமாகக் காணலாம். அன்றியும் சால மறைந்தோம்பிச் சான்றவர் கைகரப்பக், காலை கழிந்ததன் பின்றையு-மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான், முறைமைக்கு மூப்பிளமை யில் (பழமொழி, 3.) எனவரும் வெண்பாவானும் உணர்க. பெரும்பெயர் - பெரிய புகழ். அவ்வூர் என்றது அத்தகைய செங்கோ லரசர் இருந்தினிதாண்ட மூதூர் என்பதுபட நின்றது. ஏசாச் சிறப்பு - பழி கூறப்படாத தொல் சிறப்பு. இசை - கொடையால் வரும் புகழ். மாசாத்து வாணிகன் என்றாள், அவன் புகழ் இம்மன்னன் செவிக்கும் எட்டி இருக்கும் என்னும் கருத்தால், என்னை? அவனுந்தான் மாக வானிகர் வண்கைய னாகலின் என்க. மகனை -ஐ: சாரியை. கோவலன் செல்வம் இல்லாமையால் ஈண்டு வந்தானல்லன்; தன் குல முறைப்படி தானே தொழில் செய்து இனிது வாழ்தல்வேண்டி ஈண்டு வந்தான் என்பது பட, மாசாத்து வாணிகன் மகனையாகியும் வாழ்தல் வேண்டி நின்நகர் புகுந்தான் என்றாள். ஆகியும் எனல் வேண்டிய உயர்வு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. சூழ்ச்சி நின்கழலுக்கே உளது போலும். செங்கோன்மையில் அது சிறிதும் உடையை அல்லை என்பாள், சூழ்கழல் மன்னா என்றாள். அவன் விற்றற்குக் கொணர்ந்து அவன் மனைவியாகிய என்னுடைய காற்சிலம்பில் ஒன்றே என்று தேற்றுவாள், என் கால்சிலம்பு என்று விதந்தாள். நின்பால் என்றது செங்கோற் சிறப்புச் சிறிதுமில்லாத நின்னிடத்தே என்பதுபட நின்றது. நீ என்னை யார் என்று வினவினாற்போல என் கணவனை வினவச் சிறிதும் முயன்றிலை என்றிகழ்வாள், தேரா மன்னா! யான் அவன் மனைவி என்றாள். அவன் பெயரும் நீ அறியாய் ஆதலின் அவன் பெயர் இது என்பாள் கோவலன் மனைவி என்றாள். ஈண்டு இக்கண்ணகி வழக்குரைக்கின்ற இச்சொற்றிறம் எண்ணியெண்ணி வியக்கற்பாலது ஆதல் உணர்க. அரசன் மீண்டும் தன்னை வினவுதற் கிடனின்றிக் கூற வேண்டியவனைத்தும் எஞ்சாது கூறிவிட்டமை எண்ணுக.

மன்னன் கூற்று

64-65: பெண்ணணங்கே ........... கொற்றங்காணென

(இதன்பொருள்.) பெண்ணணங்கே கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று - அதுகேட்ட அரசன், நங்காய்! கள்வனைக் கொல்லுதல் செங்கோல் முறைமைக்கு ஒத்ததே அன்றோ? ஆதலால் என்னால் கள்வன் எனத் துணியப்பட்டவனை யான் கொன்றது கொடுங்கோல் அன்று; வெள்வேல் கொற்றம் காண் என - வெள்ளிய வேலாலியன்ற அரசியல் முறைமையே காண் என்று ஒருவாறு கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) இங்குப் பாண்டியன் கூறிய இச் சொற்கள் கண்ணகி கூற்றை ஆராய்ந்து அதற்கு இயையக் கூறாமல் வேறு வழியின்றி அப்பொழுதைக்குத் தன் வாய் தந்தவற்றைக் கூறியதாதல் உணர்க. கடுங்கோல் - வெம்மை விளைக்கும் கொடுங்கோன்மை. கொற்றம் - அரசு உரிமை.

கண்ணகி கோவலன் கள்வன் அல்லன் எனக் காட்டுதற்குக் கூறும் சான்று

65-67: ஒள்ளிழை ............ அரியேஎன

(இதன்பொருள்.) ஒள்ளிழை - அதுகேட்ட கண்ணகி; நல்திறம் படராக் கொற்கை வேந்தே - நல்ல நெறியிலே ஒழுகாத கொற்கையர் கோமானே! ஈதொன்று கேள்; என்கால் பொன் சிலம்பு மணியுடை அரி என - என்னுடைய காலில் அணியப் பெற்றதும் உன்னால் கைப்பற்றப்பட்டதுமாகிய பொன்னாலியன்ற அந்தச் சிலம்பு தன்னுட் பெய்யப்பட்ட மாணிக்கக் கற்களை உடையது காண் என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) நின்னுடைய கொற்கையில் வாழ்வோர் உயிருடைய சிப்பிகளைக் கைப்பற்றிக் கொன்று அவற்றின் வயிற்றிலுள்ள முத்துக்களைக் கைக்கொள்ளுவர் அல்லரோ! அவர் வேந்தனாகிய நீயும் அங்ஙனமே செய்தனை என்பாள் மதுரை வேந்தே என்னாது நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்றாள். சிலம்பினுள் மாணிக்கப் பரலிடுதல் அரியதொரு நிகழ்ச்சி ஆகலின் அதனையே சான்றாக எடுத்தோதினள்; பாண்டியன் அரண்மனைச் சிலம்பும் அங்ஙனமிராது என்னும் துணிவு பற்றி என்க.

பாண்டியன் கண்ணகி கூறிய சான்றினைப் பாராட்டுதல்

68-70: தேமொழி .......... முன்வைப்ப

(இதன்பொருள்.) தேம்மொழி உரைத்தது செவ்வை நன்மொழி - அதுகேட்ட பாண்டிய மன்னன் நன்று! நன்று! இனிய மொழியையுடைய இந்நங்கை கூறியது செவ்விய நன்மையையுடைய ஒரு மொழியே ஆகும்; யாம் உடைச்சிலம்பு முத்துடைஅரி - எம்முடைய சிலம்பு முத்துக்களைப் பரலாக இடப்பட்டதன்றோ எனத் தன்னுள் கருதிக் கண்ணகியை நன்குமதித்தவனாய் இச் சான்றின் வாயிலாய் உண்மையை உணர விதுப்புற்று; தருக என தந்து தான் முன்வைப்ப - தன் ஏவலரை நோக்கி அச் சிலம்பினை விரைந்து கொணருக என்று பணித்தமையால் அவர் கொணர்ந்து தந்த அச் சிலம்பினை வாங்கித் தானே அதனைக் கண்ணகி முன்னர் வைப்ப; என்க.

(விளக்கம்) இதன்கண் - உண்மை உணர்தற்குத் தகுதியான சான்று கூறிய கண்ணகியை இம்மன்னவன் தன்னுள் பெரிதும் பாராட்டி அச் சான்று கொண்டு உண்மை யுணர்தற்கு விதுப்புறுதல் அவனுடைய நடுவு நிலைமையை நன்கு விளக்குதல் உணர்க. உரைத்தது தேமொழி செவ்வை நன்மொழி என மாறி இவள் இப்பொழுது கூறியது இனியமொழி! செவ்விய அழகிய மொழி! எனப் பாராட்டினன் எனலுமாம். உண்மையை உணர்தற்கு அவன் ஆர்வம் உடையதனாலே தான் முன் வைப்ப என்ற இச் சிறு சொற்றொடரே விளக்குதல் உணர்க. அவனுடைய நெஞ்சின் விரைவு நம்மனோர்க்குத் தோன்ற அடிகளார் தருகென தந்து எனச் சொற்சுருங்கச் செய்யுள் செய்தமையுமுணர்க. இன்னும் இவ்வேந்தர் பெருமான் கண்ணகியின் சுடுசொற்களால் சிறிதேனும் சினவாது அமைதியுடையனாய் இருத்தல்தானும் இவன் செவி கைப்பச் சொற்பொறுக்கும் சிறப்புப் பண்புடைய வேந்தன் ஆதலையும் உணர்த்துகின்றது.

கண்ணகி சிலம்பை உடைத்தல்

71-72: கண்ணகி ............ மணியே

(இதன்பொருள்.) கண்ணகி அணிமணி கால் சிலம்பு உடைப்ப - அச் சிலம்பினைத் தன் முன்னர் வைக்கக் கண்டகண்ணகி தானும் விரைந்து தனது அணிகலனாகிய மணிப்பரலைத் தன்னகத்தே யுடைய அச்சிலம்பினைக் கையிலெடுத்து அரசன் முன்னிலையிலேயே பீடத்தில் புடைத்தலாலே; மணி மன்னவன் வாய்முதல் தெறித்தது - அச் சிலம்பினுள் பெய்யப்பட்டிருந்த மணி சிதறுண்டு அரசனுடைய முகத்தினும் பட்டு வீழ்ந்தது என்க.

(விளக்கம்) மணி காற்சிலம்பு-கால் ஈண்டு இடம். மணியைத் தன்னிடத்தே கொண்ட சிலம்பு என்க. இனி மணி பெய்யப் பெற்ற கால் சிலம்பு எனினுமாம். மணி: சாதி ஒருமை.

உண்மையுணர்ந்த பாண்டியன் நிலைமை

72-78: மணிகண்டு .............. வீழ்ந்தனனே

(இதன்பொருள்.) மன்னவன் மணி கண்டு - அப் பாண்டிய மன்னன் அவ்வாறு சிதறிய அம் மாணிக்கப் பரல்களைக் கண்ணுற்ற பொழுதே; தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் - தனது வெண்கொற்றக் குடை ஒருபால் தாழ்ந்து வீழா நிற்பவும், பிடி தளர்ந்து தனது செங்கோல் ஒருபால் சாயா நிற்பவும்; பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் - பொற்றொழில் செய்யும் அவ் வஞ்சகப் பொய்க்கொல்லனுடைய சொல்லைக் கேட்டு அதனை உண்மையென்று துணிந்த அறிவிலியாகிய யானும் ஓர் அரசன் ஆவேனோ? வாய்மையே நோக்கின் இப்பொழுது யானே கோவலனுடைய சிலம்பினைக் கவர்ந்த கள்வன் ஆகின்றேன்; மன்பதை காக்குந் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது - அந்தோ! மக்கள் தொகுதியைப் பாதுகாக்கின்ற இத் தென்றமிழ் நாட்டுச் செங்கோன்முறைமையின் சிறப்பு அறிவிலியாகிய என்னாலே பிழைபட்டொழிந்ததே; என் ஆயுள் கெடுக என - என் வாழ்நாள் இன்னே முடிவதாக! என்று கூறி, மயங்கி வீழ்ந்தனன் - அறிவு மயக்கமுற்று அரசு கட்டிலினின்றும் வீழ்ந்தனன்; என்க.

(விளக்கம்) தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் என்றது குடை தாழவும் கோல் தளரவும் என்பதுபட நின்றது. கோவலனுக்குரிய சிலம்பைக் கவர்ந்து கொண்டமையின் யானே கள்வன் என்றான். தென்புலம் காவல் என்புழிக் காவல் செங்கோன்மை மேற்று. என்முதல் - என்னோடு. (என்னால்)

கோப்பெருந்தேவியின் செயல்

78-81: தென்னவன் .......... மடமொழி

(இதன்பொருள்.) தென்னவன் கோப்பெருந்தேவி - பாண்டியன் மருங்கிருந்த கோப்பெருந்தேவி தானும் அவன் மயங்கி வீழ்ந்தமை கண்டு உள்ளங்குலைந்து மெய் நடுங்கியவளாய்; மடமொழி - அவள் தானும் அந்தோ; கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று - தந்தை தாய் முதலாயினோரை இழந்தார்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் கூடும்; கணவனை இழந்த கற்புடை மகளிர்க்கு அவ்வாறு சொல்லிக் காட்டுதலும் இயலாமையின் அவ்விழப்பிற்கு ஈடாகக் காட்டுவதற்கு இவ்வுலகின்கண் யாதொரு பொருளும் இல்லையே! என் செய்தும்! என்று இரங்கியவளாய்; இணையடி தொழுது வீழ்ந்தனள் - தன் கணவனுடைய இரண்டாகிய திருவடிகளைக் கை கூப்பித் தொழுது வீழ்ந்து வணங்குவாளாயினள் என்க.

(விளக்கம்) தென்னவன் என்பது அவன் என்னும் சுட்டுப்பொருட்டாய் நின்றது. மருங்கிருந்த கோப்பெருந்தேவி என ஒருசொல் பெய்து கொள்க. கோப்பெருந்தேவி: பெயர். குலைந்தனள்: முற்றெச்சம். குலைந்து நடுங்கிக் காட்டுவது இல் என்று சொல்லிக் கணவன் அடிதொழுது அம் மடமொழி வீழ்ந்தனள் என மடமொழியையும் சுட்டுப்பெயராக்குக.

வெண்பா

1: அல்லவை .......... காண்

(இதன்பொருள்.) பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் தேவி - பொல்லாங்குடைய பழியையே தருகின்ற தீவினையைச் செய்த வலிமை மிக்க பாண்டிய மன்னனின் பெருந்தேவியே கேள்; பல் அவையோர் - பல்வேறு அவைகளிடத்தும் சான்றோர்; அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் - தீவினைகளைச் செய்தவர்களுக்கு அறக்கடவுளே கூற்றமாய் நின்று ஒறுக்கும் என்று விதந்தெடுத்துக் கூறுகின்ற; சொல்லும் பழுது அன்று-செவி அறிவுறூஉவாகிய சொல்லும் பொய்யன்றுகாண்; வாய்மையே! கடுவினையேன் செய்வதூஉம் காண் - இனித் தீவினையாட்டியாகிய யான் செய்கின்ற செயலையும் காண்பாயாக; என்க.

(விளக்கம்) அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம் என்பது (நான்மணிக்கடிகை. 83) அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் என்பது மூதுரை. (27) அல்லவை - தீயவை. அவையோர் - அவையிடத்துச் சான்றோர். பழுது - பொய்ம்மை. வடு - பழி. வயவேந்தன் என்றது, வலிமை மட்டும் உடையன் அறமிலாதவன் என்பதுபட நின்றது. கடுவினையேன் என்றது, தான் எய்திய துயரங்களைக் கருதிக் கூறியவாறு. இது கண்ணகியின் கூற்று. பின்வருவன இரண்டும் கண்டோர் கூற்றென்க.

2: காவி .................. கூடாயினான்

(இதன்பொருள்.) காவி உகுநீரும் கையில் தனிச் சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும் - கண்ணகியின் கருங்குவளை மலர் போன்ற கண்களினின்றும் சொரிகின்ற துன்பக் கண்ணீரையும், அவள் கையிலேந்தி வந்த ஒற்றைச் சிலம்பினையும் உயிர்நீத்த உடம்பு போன்ற அவள் தன் உருவத்தையும்; காடு எல்லாம் சூழ்ந்த கருங்குழலும் - காடு போன்று அடர்ந்து அவிழ்ந்து சரிநது அவள் உடம்பெல்லாம் சூழ்ந்த அவளது கரிய கூந்தலையும்; கண்டு அஞ்சி - கண்டு அச்சமுற்று; கூடலான் கூடாயினான் - அக் கூடல் நகரத்துக் கோமகன் வறுங்கூடாய்க் கிடந்தான்; பாவியேன் - தீவினையுடையேன் இந்நிகழ்ச்சியைக் கண்கூடாய்க் கண்டேன்; என்க.

(விளக்கம்) இவ்வெண்பா இந்நிகழ்ச்சியை நேரிற் கண்டாரொருவர் கூற்றாக்குக. இந்நிகழ்ச்சியைக் கண்கூடாகக் கண்டேன் என அவாய் நிலைபற்றி இசை எச்சமாகச் சில சொல் வருவித்து முடித்துக்கொள்க. காவி - கருங்குவளை மலர். கண்ணுக்கு உவமவாகு பெயர். உடம்பெல்லாம் சூழ்ந்த கருங்குழல். காடுபோலச் சூழ்ந்த கருங்குழல் எனத் தனித்தனி கூட்டுக. கூடாயினான் என்றது அமங்கலத்தை வேறு வாய்பாட்டால் கூறியவாறு.

3: மெய்யில் ............. உயிர்

(இதன்பொருள்.) காரிகை தன் மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் - கண்ணகியினுடைய உடம்பிற் படிந்த புழுதியையும் அவளது விரிந்து கிடந்த கரிய கூந்தலையும்; கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் - அவளது கையிலேந்தி வந்த ஒற்றைச் சிலம்பையும் அவள் கண்கள் உகுத்த நீரையும்; கண்டளவே - கண்டபொழுதே; வையைக்கோன் - வையையாறு புரக்கும் பாண்டி நாட்டு மன்னன்; தோற்றான் - வழக்கின்கண் தோல்வியுற்றான்; சொல் செவியில் உண்டளவே - அக்கண்ணகி வழக்குரைத்த சொற்கள் தன் செவியிற் புகுந்தபொழுதே; உயிர் தோற்றான் - உயிரையும் நீத்தான்; என்க.

(விளக்கம்) இதனால், கண்ணகி தன்முன்னர் வந்துற்றபோதே பாண்டியன் நெஞ்சழிந்து போனமையின் அவள் வழக்குரைத்த பின்னரும், கள்வனைக் கோறல் கடுங் கோலன்று வெள்வேல் கொற்றங்காண்! என விளம்பியது வேறு வழியில்லாமையால் ஏதோ ஒன்றனைக் கூறியவாறாதலுணர்க. என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே என்ற பொழுதே அவன் உயிர் நிலைபெயர்ந்தது. உடைத்துழி மணிகண்டு உயிர் போகும் நிலையில் அவன் தன் தவற்றினைத் தானே அரற்றிக்கொண்டு விழுந்து உயிர் நீத்தான் என்றுணர்க. காட்சிக் காதையின்கண்,

செஞ்சிலம்பு எறிந்து தேவி முன்னர்
வஞ்சினஞ் சாற்றிய மாபெரும் பத்தினி

என (73-4) வருதலை யுட்கொண்டு போலும். அரசன் விழ்ந்த பின்னர்க் கண்ணகி தான் ஏந்திச்சென்ற ஒற்றைச் சிலம்பைத் தேவி முன்னே எறிந்தாள் என அரும்பத வுரையாசிரியர் ஈண்டுக் கூறினர்.

வழக்குரை காதை முற்றிற்று.


© Om Namasivaya. All Rights Reserved.